All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
நிலா ஶ்ரீதரின் "உன்னில் சரணடைந்தேன்...!" - கதை திரி
ஹாய் ப்ரண்ட்ஸ்,
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? முதலில் அனைவருக்கும் என் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இதோ அடுத்த கதையோடு வந்துவிட்டேன். யதார்த்தமான இன்னொரு கதை. கதையோட நாயகன் நாயகி ரொம்ப ஜாலியான ஜோடி. டாம் ஜெர்ரி லவ். மை ஃபேவேரேட். உங்களுக்கும் பிடிக்கும்னு நம்பறேன்.
கதையை படித்து உங்கள் பிடித்தங்களையும் கமென்ட்களையும் பகிர்ந்து என்னை ஊக்குவியுங்கள் ப்ரண்ட்ஸ்.
நன்றி,
நிலா ஶ்ரீதர்✒️
அந்த வணிக வளாகத்திற்குள் நுழைந்தவன் சுற்றும் முற்றும் பார்த்தான். உடனிருந்த பெண்ணிற்கு சிறு புன்னகையை கொடுத்தவன், கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக எந்தவொரு சேதமும் இல்லாமல் பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கும் தன் கைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்தான்.
தொடரும்..
முதல் அத்தியாயம் எப்படி இருந்தது நண்பர்களே..?
உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..
விமானத்தில், வணிக வகுப்பில் அமர்ந்திருந்த ரகுவரனை எண்ணற்ற சிந்தனைகள் ஆட்கொண்டிருந்தது. இத்தனை ஆண்டுகளாக அணிந்திருந்த கோபம் என்ற முக மூடியை தூக்கி தூர வீசிவிட்டு இந்தியா கிளம்பியிருக்கிறார்.
அவர் லண்டனில் குடியமர்ந்து இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிறது. அதற்கு முன்னும் மும்பையில் தான் வாசம். சென்னைக்கு வந்தே இருபத்தேழு ஆண்டுகள் இருக்கும்.
சோலையப்பனுக்கும் முனியம்மாளுக்கும் மூத்த மகனாக பிறந்தவர் தான் ரகுவரன். அவருக்கு பின் கனிமொழி. ஒரு நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றும் சோலையப்பனுக்கு மகனும் மகளும் தான் உயிர்.
சோலைக்கு பின் பிறந்த அனைத்தும் பெண் பிள்ளைகள். ஆம், அவருக்கு ஐந்து தங்கைகள். ஐந்து பெண்ணை பெற்றால் அரசனும் ஆண்டி என்பார்கள். சோலையின் தந்தை மட்டும் விதிவிலக்கா என்ன. அவரால் முடிந்ததெல்லாம் அவர்கள் வயிற்றுக்கு உணவு மட்டுமே. அதனால் தங்கள் வசதிக்கு சோலைக்கும், முதல் இரண்டு மகள்களுக்கும் திருமணமும் செய்து வைத்துவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் அவரது தந்தை.
மற்ற தங்கைகளின் திருமண பொறுப்பிற்கும், தங்கை பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய சீருக்கே சோலையின் வருமானம் பெரும்பாலும் சென்றுவிடும். முனியாம்மாளும் நான்கைந்து தெருக்களுக்கு முறைவாசல் செய்ய அவர்கள் குடும்பம் மற்றவரிடம் கையேந்தாமல் ஓடி கொண்டிருந்தது.
இரண்டு பிள்ளைகளையும் ஆங்கில வழி பள்ளியில் சேர்க்க போதுமான பண வசதி இல்லாததால், ரகுவரனை தனியார் பள்ளியிலும், கனிமொழியை அரசு பள்ளியிலும் சேர்த்திருந்தனர்.
ரகுவரன் நன்றாக படிப்பார். பள்ளி படிப்பில் நன்மதிப்பெண்கள் பெற்று அக்காலத்திலேயே பொறியியல் படிப்பில் சேர்ந்தார். இருந்தும் அவர் வீட்டுக்கும் கல்லூரிக்கும் வெகுதூரம். வந்து போக என்று தினமும் மூன்றில் இருந்து நான்கு மணிநேரம் ஆகும். அதனால் கல்லூரி விடுதியில் தங்கி படித்தார்.
கனிமொழியும் நன்றாக படித்தாலும் ஒருகட்டத்தில் ரகுவரனின் விடுதி கட்டணத்திற்கும் இதர செலவிற்கும் பணம் தேவைப்பட்டதால் எட்டாவதோடு படிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டு இரண்டு மூன்று வீடுகளில் பாத்திரம் கழுவும் மற்றும் துணி துவைக்கும் வேலைக்கு சென்றுவிட்டார்.
ஒருவழியாக படிப்பை முடித்த ரகுவரன் ஒரு நல்ல வேலையில் சென்றமர்ந்தார். அதன் மூலம் குடும்ப நிதிநிலை உயர்ந்ததை எண்ணி சோலை நிம்மதியடைந்திருந்த நேரத்தில் தான் கனிக்கு ஒரு வரன் தானாக வந்தது.
அன்றிரவு நால்வரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தி கொண்டிருக்க.. “நம்ப கனியை கேட்டு வந்த இடத்துல பிடிச்சிருக்குனு சொல்லிருக்காங்க ரகு” என்றார் சோலை.
“நல்லது ப்பா. மாப்பிள்ளை வீடு நம்மள விட ரொம்ப வசதி. அவங்க கேக்கறதுக்கு முன்ன நம்ம கனிக்கு எல்லாமே சிறப்பா பண்ணிடனும் ப்பா” தங்கையின் தலையை வாஞ்சையாக வருடி கொடுத்து சொன்ன மகனை பெருமிதமாக பார்த்தார்கள் சோலையும் முனியம்மாளும்.
மேலும் தங்கையின் திருமண ஏற்பாடுகளை பற்றி ரகு ஆர்வமாக விவரித்து கொண்டிருக்க.. “மாப்ள வீட்டுல பெருசா எதுவும் எதிர்பார்க்கல ரகு. மாப்பிள்ளைக்கு அக்கா ஒருத்தங்க கல்யாணமாகாம இருக்காங்க. அவங்கள உனக்கு முடிச்சி பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கணும்னு மட்டும் பார்க்கறாங்க” என்ற சோலை,
“நம்ப கனிய பொண்ணு பார்த்தன்னைக்கே உன்னையும் பார்த்துட்டாங்களாம். அவங்களுக்கு திருப்தியாம். உனக்கும் சரின்னா அவங்க வீட்டுக்கு வந்து பொண்ணு பார்க்க சொன்னாங்க” என்றும் சொன்னதும் அதுவரை தங்கையின் திருமணத்தை பற்றி ஆரவாரமாக பேசிக் கொண்டிருந்த ரகுவின் முகம் வாடி போனது.
அமைதியாக உண்டு முடித்து வந்தமர்ந்த மகனிடம், “ரொம்ப வருஷமா எந்த வரனும் பொருந்தலையாம். என்னமோ உன்னை பார்த்ததும் மனசுக்கு புடிச்சி சோசியரை கேட்க, உங்க பேர் பொருத்தமும் நல்லா இருக்காம். நீ என்ன ரகு சொல்ற?” என்று தந்தை கேட்க..
“அப்பா, இத நான் முன்னாடியே சொல்லிருக்கனும்” என்று நெற்றியை தேய்த்தவர், “நான் என் கூட படிச்ச பொண்ண விரும்பறேன் ப்பா. அவங்க வீட்டுல எல்லாருக்கும் சம்மதம். நம்ம வீட்டுல வந்து பேச தயாரா இருக்காங்க. நானும் அவளும் நம்ப கனி கல்யாணத்துக்காக தான் காத்திருக்கோம்” என்றதும் தாய், தந்தை இருவரின் முகத்திலும் அதிர்ச்சி.
“என்ன ரகு சொல்ற? இதெல்லாம் நம்மள மாதிரி ஏழை பாலைக்கு தேவையா? நம்ம வீட்டை பத்தி நீ யோசிக்கவே இல்லையா?” என்று சோலை கொதித்தெழ
“யோசிச்சதுனால தான்ப்பா கல்யாண வயசாகியும் அவ எனக்காக பொறுமையா காத்திட்டிருக்கா” என்று ரகுவும் சொன்னதும் சட்டென்று எழுந்து வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார் சோலை.
இரண்டு மூன்று நாட்கள் தந்தைக்கும் மகனுக்கும் பேச்சு வார்த்தையே இல்லாமல் இருந்தது. மாப்பிள்ளை வீட்டிலிருந்து தரகர் மூலமாக தகவல் கேட்டு அனுப்பியிருக்க, இதற்கு மேல் தள்ள முடியாதென்று தந்தை, மகன் இருவரும் ஒரே போல் முடிவு செய்தனர்.
அதன் விளைவு சோலை அடுத்து மகனிடம் பேச வருவதற்கு முன்னே தந்தையின் பிடிவாத குணத்தை நன்கு அறிந்த ரகு, தான் நேசித்த மைதிலியை திருமணம் செய்தே அழைத்து வந்துவிட்டிருந்தார்.
மாலையும் கழுத்துமாக வீட்டினுள்ளே வரவிருந்த ரகுவையும் மைதிலியையும் “அங்கேயே நில்லுங்க” என்றவர், “நான் அவ்ளோ சொல்லியும் உன் தங்கச்சி வாழ்க்கையை கெடுக்கற மாதிரி ஒரு காரியத்தை பண்ணிட்டு வந்து நிக்கிறீயேடா” என்று சோலை ஆவேசப்பட
“உங்க பிடிவாதத்தை பத்தி தெரியும் ப்பா” என்றார் ரகு.
“ஓ.. இப்போ மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கிட்ட நான் என்னடா பதில் சொல்லுவேன். உனக்காக தன் படிப்பை விட்டுட்டு வேலைக்கு போன அவளுக்கு நீ செஞ்சது இதுதானா? இனி யாருடா என் பொண்ண கட்டுவாங்க?” என்று மகனின் சட்டையை பிடித்து உலுக்க
“அங்கிள் ப்ளீஸ்.. ரகு மேல எந்த தப்பும் இல்ல” என்று குறுக்கே வந்த மைதிலியை கண்கள் தெறிக்க பார்த்தவர்..
“நான் என் புள்ளைய தான் கேட்க முடியும்” என்றார்.
அதோடு மைதிலியின் வாய் பூட்டு போட, ரகுவோ “அப்பா, என்னை மன்னிச்சிடுங்க. நான் பண்ணது தப்பு தான். அதுக்காக கனி வாழ்க்கையை அழிய விட்டுட மாட்டேன். மாப்பிள்ளை வீட்டுல பேசிப் பார்க்கலாம். அப்பவும் அவங்களுக்கு சம்மதம் இல்லைனா, நானே நம்ப கனிக்கு வேற நல்ல மாப்பிள்ளைய பார்க்கிறேன்” என்றார்.
“எப்படிடா பார்ப்ப.. எப்படி பார்ப்ப? நமக்கு வசதியும் இல்ல. உன்னால என் பொண்ணு படிக்கவும் இல்ல. இந்த சம்மந்தமே பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்குற நோக்கத்துல தான், வசதி, படிப்புனு எதையும் பார்க்காம வந்தது. அதையும் கெடுத்துட்டியே டா” ஓர் தந்தையாக மகளின் வாழ்க்கையை எண்ணி தொண்டையை அடைந்த துக்கத்தை அடக்கி கொண்டு..
“இதுக்கு மேல என் பொண்ணு வாழ்க்கைய எனக்கு பார்க்க தெரியும். இனி எனக்கு பொண்ணு மட்டும் தான், பையன் செத்து போயிட்டான். வெளிய போ” என்று வாசலை காண்பித்தார். முனியம்மாளும் கனியும் அவரின் பேச்சை மீறி பேச முடியாமல் நடப்பதை கலங்கி பார்த்திருந்தனர்.
ரகுவும் மைதிலியும் வீட்டை விட்டு வெளியே வந்தவர்கள், ஒருவாரம் மைதிலியின் சொந்தக்காரர் வீட்டில் தங்கியிருந்தனர். அங்கிருந்து தான் மைதிலி கல்லூரி படிப்பை படித்தார். மற்றபடி அவர் குடும்பமெல்லாம் மும்பையில் வசிக்கின்றனர். அதற்குள் கனிக்கு வந்த வரனும் முறிந்து விட, தந்தையின் மனம் கரைய வாய்ப்பில்லை என்பதை புரிந்த ரகு, மனைவியுடன் மும்பை சென்றுவிட்டார்.
இரண்டு வருடம் ஓடிவிட்டிருக்க, ரகுவரனுக்கும் மைதிலிக்கும் ஒரு வயதில் மகன் இருக்கிறான். ரகுவும் இப்போது மாமனாரின் குடும்ப தொழிலை பார்த்துக் கொண்டிருந்தார். சொல்லப்போனால் மகனை காட்டிலும் மருமகனை அதிகம் நம்பினார் அவரது மாமனார்.
அப்போது கனிக்கு ஒரு நல்ல வரன் வர, அதை குறித்து பேச அவர் மட்டும் தனியாக வீட்டிற்கு வந்திருந்தார்.
வழக்கம் போல் மகனை வீட்டிற்குள் விடாமல் சோலை முறைத்திருக்க, “உங்க கோவம் என்னோட போகட்டும் ப்பா. நம்ம கனிக்கு ஒரு நல்ல வரன் வந்திருக்கு. உங்க எல்லாருக்கும் விருப்பம்ன்னா பேசி முடிச்சிடலாம்” என்றார் ரகு.
“பேசி முடிக்க தான் போறேன். ஆனா, நான் பார்த்த வரனை. பையன் பேரு பாலமுருகன். நான் வாட்ச்மேனா இருக்க ஃபேக்டரில டெம்பரரி ஸ்டாஃப்பா இருக்காரு. சீக்கிரம் பெர்மனெண்ட் பண்ணிடுவாங்க. பிக்கல், பிடுங்கல் இல்லாத எங்களுக்கு ஏத்த இடம்” என்று அழுத்தமாக கூறினார்.
“என்னது ஃபேக்டரில வேலை செய்யறவனா? அதுவும் பெர்மனெண்ட் கூட இல்ல”
“எங்க வசதிக்கு என்னமோ அத தானப்பா நாங்க பார்த்துக்க முடியும். ஒரு தடவை புள்ளைனு நம்பி அகலக்கால் வச்சி அவமானப்பட்டது போதாதா?”
“ஐயோ.. அப்போ என்னால எதுவும் பண்ணமுடியாத நிலை. இப்போ நான் என் மாமனார் கம்பெனிக்கு எம்.டி. என்னால என் தங்கச்சிக்கு பெரிய சம்மந்தத்தை கூட முடிக்க முடியும்”
“அது உன் காசு இல்லயே பா, உன் மாமனார் காசு. அடுத்தவங்க காசுல பொண்ணுக்கு கல்யாணம் பண்ணுற அளவுக்கு சோலை தாழ்ந்து போய்டல. நாங்க பார்த்துகிறோம், நீ கிளம்பு”
“இது எப்படிப்பா நம்ம கனிக்கு நல்ல இடமா இருக்கும்?” ரகு மீண்டும் அதிலே நிற்க..
“என்ன பண்றது, பிள்ளை படிச்சி தலை தூக்கினா, அவன் இந்த குடும்ப பாரத்தை சுமப்பான்னு பார்த்தோம். அது இல்லங்கிற போது எங்க வசதிக்கு என்னமோ அத தான பார்த்துக்கணும். அதுக்குன்னு என் பொண்ணுக்கு ஏதோ ஒரு வரனை பார்த்திடல. பையன் தங்கம். எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. என் பொண்ணுக்கு மட்டுமில்ல, இந்த வீட்டுக்கும் மகனுக்கு மகனா இருப்பாரு. இவ்ளோ ஏன், நாளைக்கு நாங்க செத்தா கூட நீ வர கூடாது. எங்களுக்கு எங்க மாப்பிள்ளை தான் கொள்ளி போடுவாரு” தந்தை பேசியதை கேட்டு ரகுவரன் அதிர்ந்து தாயையும் தங்கையையும் திரும்பி பார்த்தார்.
இருவரும் கண்ணீர் விட்டு கொண்டிருந்தார்களே தவிர மறுத்து ஒரு வார்த்தையும் பேசவில்லை.
“கனி.. அண்ணன் உனக்கு நல்ல வாழ்க்கைய தான் அமைச்சு தர பார்க்கறேன். அப்பா சொல்ற வரன் உனக்கு வேண்டாம் டா” தங்கையிடம் பரிவாக சொல்ல, அவர் பதிலேதும் சொல்லாது தலைகுனிந்து நின்றிருந்தார்.
“என் பொண்ணு யார் பேச்சையும் கேட்க மாட்டா. திரும்பி இந்த வீட்டு பக்கம் வந்துடாத” என்று கதவை அறைந்து சாற்றிவிட்டார்.
பெருத்த மனவேதனையுடனும் அவமானத்துடனும் ரகுவரன் அங்கிருந்து கிளம்ப, பின்வாசல் வழியாக ஓடி வந்த கனி அண்ணனின் காரின் குறுக்கே கையை போட்டார்.
தங்கையை பார்த்ததும் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி வந்த ரகு “கனி.. அண்ணன் உன் மேல வச்சிருக்க பாசம் பொய் இல்லடா. அப்பா பார்த்திருக்க மாப்ள உனக்கு வேண்டாம்” தன் கோட்டின் உட்புறமிருந்து ஒரு புகைப்படத்தை எடுத்தவர், “இங்க பாரு. நான் உனக்காக பார்த்த மாப்பிள்ளை. உன்னை நல்லா பார்த்துப்பார் கனி. சரின்னு சொல்லு, அப்பாவை எதிர்த்து நான் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கறேன்” என்றார்.
“எனக்கு நீ வேணும் ண்ணா. ஆனா இந்த கல்யாண விஷயத்தை அப்பா போக்குல விட்டுடேன்” என்று கலங்கி கேட்க, ஏனோ ரகுவிற்கு கோபம் தான் வந்தது.
“அப்போ நீ, அம்மா எல்லாரும் அவரோட சேர்ந்து என்னை ஒதுக்கிட்டீங்கல?”
“அப்படி இல்லண்ணா.. என் கல்யாணம் நம்ம அப்பா இஷ்ட..”
“இஷ்டபடியே நடக்கட்டும், நீ தலையிடாதடானு சொல்ற. அப்படி தான? சரி, இனி உனக்கு அண்ணன் இல்லைனு நினைச்சிக்கோ” கோபமாக பொரிந்துவிட்டு, கனி கண்ணீரோடு நிற்பதையும் பொறுப்படுத்தாது வேகமாக காரில் ஏறி கிளம்பிவிட்டார்.
அதன்பின் தொழில் சம்மந்தமாக கூட சென்னை வரவில்லை. இருபத்தியேழு ஆண்டுகளுக்கு பிறகு இன்று தான் சென்னையில் காலெடுத்து வைக்கிறார்.
ஏனோ சிலவருடங்களாக தங்கை மற்றும் குடும்பத்தின் நினைவு அதிகமாக வர, அவர்கள் இருந்த பழைய வீட்டிற்கு ஆள் அனுப்பி பார்க்க சொல்ல, அங்கே யாருமில்லை, மாறி சென்றுவிட்டார்கள் என்று தகவல் வந்தது. தந்தையும் தங்கை கணவரும் வேலை செய்யும் தொழிற்சாலையை பற்றி விசாரித்த போது, அது இருபது ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்டதாக தெரியவர, தன் குடும்பத்தையும் தங்கை குடும்பத்தையும் வலை வீசி தேடிய பலன், இரண்டு நாட்களுக்கு முன் தாய், தந்தை இறந்து ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும், தங்கையின் குடும்பம் மட்டும் சென்னையில் தான் வசிப்பதாகவும் செய்தி வர, உடனே சென்னை கிளம்பிவிட்டார்.
தங்கையின் வீட்டு வாசலில் வந்து நின்றவரை பிரமித்து பார்த்த கனி, அமர்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்து ஓடிவந்து “அண்ணா.. இப்போ தான் இந்த தங்கச்சிய ஞாபகம் வந்துசா ண்ணா?” என்று அவர் தோளில் சாய்ந்து அழ, ரகுவும் உணர்ச்சி பெருக்கில் ஒன்றும் பேசாமல் தங்கையின் தலையை வருடி கொடுத்து கொண்டிருந்தார்.
சில நிமிட பாச பிணைப்பிற்கு பிறகே அண்ணனை இன்னும் வாசலிலேயே நிறுத்தி வைத்திருக்கிறோம் என்பதை உணர்ந்தவர் “நான் பாரு. உள்ள வா ண்ணா” என்று அங்கிருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு அமர சொன்னவர், “என்னங்க.. யார் வந்திருக்காங்கனு பாருங்களேன்” என்று அறையிலிருந்த கணவரை அழைத்தார்.
பாலமுருகனும் எழுந்து வெளியே வர, அதற்குள் அண்ணனுக்கு தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தவர் “என் வீட்டுக்காரர் ண்ணா. நீ தான் கல்யாணத்துல இல்லாம போய்ட்டியே. இந்த நேரத்துல கடையில தான் இருப்பார். இன்னைக்கு உடம்பு முடியலன்னு வீட்டுல இருக்கார்” என்று கணவரை பற்றி கனி சொல்ல..
‘கடையா?’ என்று ரகு புருவம் சுருக்க.. “அது ஃபேக்டரிய மூடிட்டாங்க ண்ணா. அதுல அப்பாவுக்கும் இவருக்கும் வேலை போய்டுச்சு. வேற இடத்துலயெல்லாம் அப்பாவுக்கு வயசாகிடுச்சுனு வேலை தரல. இவரும் டெம்பரரி தான. குடும்ப பொருளாதாரம் ரொம்ப இறங்கி போச்சு. அந்த கவலையிலேயே அப்பா முன்னயும், அவருக்கு பின்ன அம்மாவும் போய்ட்டாங்க” என்றவர் நெஞ்சை அடைத்த துக்கத்தை இழுத்து பிடித்து,
“உனக்கு சொல்லலாம்னா, நீ எங்க இருக்கனு எதுவும் விவரம் தெரியல. இவர் தான் எல்லாம் பண்ணார். நாங்க பசியோட இருக்கலாம், பசங்களால இருக்க முடியாதுல. அதான் இவரே ரோட்டுல கடை போட்டுட்டார். நானும் ஒரு வீட்டுல சமையல் பண்ணி, பாத்திரம் கழுவி, கூட்டி பெருக்குறதுனு மொத்த வேலையும் பார்த்துக்கிறேன். அது தவிர இன்னும் மூணு வீடுங்கள்ல பாத்திரம் துலக்கி, வீடு பெருக்கி, தொடைச்சி சுத்தம் செஞ்சி தருவேன். பொண்ணும் வேலைக்கு போறா. பையன் காலேஜ் முடிஞ்சதும் சாயந்திரத்துல அவன் அப்பாவுக்கு உதவி பண்ணுவான்” தன் குடும்பத்தை பற்றிய அனைத்தையும் எந்தவொரு சஞ்சலமும் இன்றி சொல்லியிருந்த தங்கையை தான் இமைக்காது பார்த்திருந்தார் ரகு.
“கடைன்னா?” அமைதியை உடைத்து அவர் கேட்க..
“அது சீசனுக்கு ஏத்த மாதிரி. வெயில் காலத்துல லெமன் ஜூஸ், ரோஸ் மில்க், சர்பத்.. குளிர் காலத்துல சூப் அப்படினு போடுவோம் ண்ணா. நான் தான் எல்லாம் போட்டு கேன்ல ஊத்தி கொடுத்து விடுவேன். அவர் கொண்டு போய் வித்துட்டு வந்திடுவார்” என்றார்.
அந்நேரம் மாடியிலிருந்து காய்ந்த துணிகளை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்த மகளை காட்டி “இதோ. என் பொண்ணு சுசி.. சுசித்ரா” என்று மகளை அண்ணனுக்கு அறிமுகப்படுத்தியவர் “சுசி, மாமா. சின்ன வயசுல கோச்சிக்கிட்டு போய்டுச்சுன்னு சொன்னேன்ல என் அண்ணன். இப்ப தான் திரும்ப வந்திருக்கு” என்று மகளிடம் பெருமிதமாக சொன்னார்.
அவரும் மருமகளை பார்த்து புன்னகைக்க, சுசிக்கு தான் என்ன செய்யவேண்டும் என்று புரியாமல் திகைத்து விழித்திருந்தாள்.
“ஏங்க, அண்ணனுக்கு கசகசன்னு இருக்கும். நீங்க மெத்தை வீட்டு அக்காகிட்ட கூலர் வாங்கிட்டு வர்றீங்களா. கொஞ்ச நேரத்துல தந்திடுறோம்னு சொல்லுங்க” என்று சொல்ல, மனைவி பேச்சுக்கு மறுப்பு சொல்லாமல் பாலமுருகனும் சென்றார்.
“சுசி, மாமாக்கு குளிர்ச்சியா ஏதாவது கலந்து கொண்டு வா” என்று மகளையும் விரட்ட, தங்கையின் தோற்றத்தையும், அவரின் குடும்பத்தின் நிலையையும் தான் ஒன்றும் பேசாமல் அமைதியாக பார்த்திருந்தார் ரகு.
தன் வசதியென்ன.. கடல் போல் அங்கிருக்கும் வீடு என்ன.. இங்கு தங்கை இருக்கும் நிலை தான் என்ன.. இந்த வயதிலும் ஆரோக்கியமான உணவாலும், செல்வ செழிப்பாலும் அவருக்கு ஐம்பத்திநான்கு வயது என்று சொல்ல முடியாத இளம் தோற்றத்தில் இருந்தார். ஆனால், தன்னை விட ஐந்து வயதிற்கும் சிறியவரான தன் தங்கையின் தோற்றமோ பின் ஐம்பதுகளில் இருப்பவர் போல் முகமெல்லாம் களையிழந்து பொலிவில்லாமல் இருந்தார்.
சுசியையும் பார்த்தார். அந்த வயதிற்குரிய அழகியே அவள். இருந்தும் மிகவும் ஒடிசலாக சோர்ந்த முகத்துடன் தெரிந்தாள். அங்கே தன் பிள்ளைகள் செல்வந்தர் வீட்டு வாரிசாக செழுமையோடு மிளிர்ந்துக் கொண்டு தானே இருக்கிறார்கள்.
ஒரு தாய் வயிற்று பிள்ளைகளான தனக்கும் தன் தங்கை வீட்டுக்கும் இடையே எத்தனை பெரிய எட்டமுடியாத இடைவெளி. எங்கோ தான் சரியென்று நினைத்தது, இங்கு தவறாக முடிந்துவிட்டதோ என்று யோசித்திருந்தவரால் எதுவும் பேச முடியாமல் போக, அந்த வீட்டையும் அங்கிருந்தவர்களையும் அமைதியாக பார்த்திருந்தார்.
தொடரும்..
உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..
வீடே கல்யாண களை கட்டி இருந்தது. காலில் சக்கரத்தை கட்டி கொண்டு இங்கும் அங்கும் ஓடியாடி வேலை செய்துக் கொண்டிருக்கும் கனியின் மனம் முழுவதும் மகிழ்ச்சியே. அதற்கு நேர்மாறாக பாலமுருகனோ மிகவும் மன குழப்பத்துடன் காணப்பட்டார்.
“அட.. நிச்சயம் தான ஆக போகுது. இதுக்கு நேத்தே அக்காவும் தம்பியும் அழுது தீர்த்துட்டாங்க. இன்னைக்கு நீங்களா..” என்று நொந்துக் கொண்ட கனி..
“நான் எவ்ளோ சந்தோசமா இருக்கேன் தெரியுமா. நம்ப சுசி வாழ்க்கைய பத்தி என்னென்ன கனவு கண்டிருப்போம். என் பொண்ணு என் அண்ணனுக்கு மருமகளாக போறா. நான் பொறந்த வீட்டுக்கு என் பொண்ணு போக போறான்னு நினைச்சாலே மனசுக்கு அவ்ளோ நிறைவா இருக்கு” என்று உளமகிழ்ந்து சொன்னார்.
தங்கையையும் அவர் வீட்டையும் பார்த்த ரகுவரனுக்கு அனைத்தும் தன்னால் நிகழ்ந்ததென்ற குற்றவுணர்வு. அன்று தன் காதல் திருமணத்தால் திசை மாறிப் போன தங்கையின் வாழ்க்கைக்கு ஏதேனும் செய்யமுடியுமென்றால், அது அவர் மகளை தன் மகனுக்கு திருமணம் முடித்து மருமகளாக இல்லாமல் மகளாக பார்த்து கொள்வதே ஆகும் என்றெண்ணினார்.
அதை தங்கையிடமும் சொல்ல, தான் உயிரையே வைத்திருக்கும் அண்ணனுக்கும் தனக்குமான உறவு முறிந்தே விட்டதென எண்ணியிருந்த நேரத்தில், இன்று அண்ணனுக்கு சம்மந்தகாரி ஆகும் பாக்கியம் கிடைக்கும் போது விடவா செய்வார். உடனே சம்மதம் தெரிவித்துவிட்டார்.
இதுவரை மனைவி பேச்சுக்கு மறு பேச்சு பேசாத பாலமுருகனும் சரியென்று தலையாட்டி விட, இப்போது விஷேசம் நெருங்க நெருங்க, மகளை அத்தனை தூரத்தில் கட்டி கொடுத்துவிட்டு எப்படி இருப்பதென்று விசனப்பட்டு கொண்டு இருக்கிறார்.
கனிக்கு அதுபோல் எந்த வருத்தமும் இல்லை. பெண்பிள்ளையை பெறும் போதே என்றைக்கானாலும் இன்னொரு வீட்டிற்கு செல்ல தான் போகிறாள் என்று மனதை திட படுத்திவிட்டவருக்கு, இன்றோ அண்ணன் வீட்டிற்கே செல்வதில் அளவுக்கடந்த மகிழ்ச்சி தான்.
இருந்தும் “விடியறவரைக்கும் ரெண்டு பேரும் தூங்கல. அக்கா போய்டுவானு இவனும், எல்லாரையும் விட்டுட்டு அவ்ளோ தூரம் போறோமேனு அவளும் சமையல் கட்டுல உட்காந்துட்டு ஒரே அழுகை” மகளையும் மகனையும் பற்றி பகிர்ந்தார்.
“இப்போ தான் நம்ப குமுதாவை கூப்பிட்டுக்கிட்டு இவ பார்லருக்கு போனா, அவன் சமையலுக்கு தேவையான காய்கறி, மளிகை பொருளை மண்டபத்துல இறக்க போயிருக்கான்” என்று மனைவி சொன்னதை அமைதியாக கேட்டிருந்தார் பாலன்.
“உங்க பையனுக்கு என்ன கோவம் வருதுங்க. எங்க அண்ணன் வந்து மனோஜுக்கு நம்ப சுசியை கேட்டார்னு சொன்னதுல இருந்து அவன் முகத்துல எள்ளும் கொள்ளும் வெடிக்குது. இத்தனை வருஷம் வராதவரு, இப்போ மட்டும் எதுக்கு வந்தார்னு கேக்கறான். காதல் கல்யாணம் பண்றதென்ன அவ்ளோ பெரிய தப்பா. இத்தனைக்கும் என் கல்யாணத்துக்காக அண்ணன், அண்ணி ரெண்டு பேரும் காத்திட்டு தான் இருந்திருக்காங்க. அத எங்க அப்பா தான் புரிஞ்சிக்காம பெத்த புள்ளையவே ஒதுக்கி வச்சாருன்னா, இவன் தாத்தனுக்கு தப்பாம இருக்கான். சின்ன வயசுல அவர் கூட அதிகம் இருந்து அவர் குணம் வந்திடுச்சி போல” அப்போதும் தன் அண்ணனை விட்டு கொடுக்காமல் பேசினார் கனி.
“அவனுக்கு மாமாவை பிடிக்காதுனுயெல்லாம் இல்ல. அந்த நேரத்துக்கு பேசிட்டு இருப்பான்” பாலனோ மகனுக்கு பரிந்து பேச
“அட, இவர் தான் தாய்மாமானு ஒண்ணும் செஞ்சதில்ல. நான் எங்க அக்காவுக்கும், அவ குழந்தைகளுக்கும் செய்யலாம்னு பார்த்தா, அதையும் பண்ணவிடாம லண்டன் கூட்டிட்டு போறேன்னு சொல்றாருனு ஒரே கலாட்டா பண்ணிட்டான்” என்று கனி புலம்ப, அனைத்தையும் அமைதியாக கேட்டுக் கொண்டார் பாலன். இன்னுமே மகள் செல்லும் கவலையில் தான் இருந்தார். பின் இருவரும் வீட்டில் இருப்பவர்களை கவனிக்க சென்றனர்.
நிச்சயம் நடக்கவிருக்கும் மண்டபத்தில் பொறுப்பான தம்பியாக வேலைகளை செய்திருந்தவனை அவனது நண்பனின் குரல் கலைத்தது.
“மச்சான், நாங்க வந்துட்டோம்” என்று கமலியுடன் நின்றிருந்த வினோத் சொல்ல, அவர்களை திரும்பி பார்த்தான் சரண்.
“வா டா. வா கமலி” என்று நண்பர்களை உபசரித்தவன் “நீங்க ரெண்டு பேரும் அங்க உட்காருங்க. கொஞ்சம் வேலை இருக்கு. முடிச்சிட்டு வந்திடறேன்” என்று அங்கே போடப்பட்டிருத்த நாற்காலியை காட்ட
“அடேய்.. நாங்க கெஸ்ட் இல்ல. உன்னோட ப்ரண்ட்ஸ்.. என்ன வேலை செய்யணும்னு சொல்லு, செய்யறோம்” என்றான் வினோத்.
“அதெல்லாம் வேண்டாம் டா” என்றவனை அவன் நண்பனும் தோழியும் முறைக்க..
“சரி, நீ என் கூட இரு. கமலி, நீ சுசி கூட இருக்கியா? ரூம்ல ரெடி பண்ணிட்டு இருக்காங்க. அம்மா வேற அவங்க அண்ணன் பேமிலிய கவனிக்க மாப்ள ரூம்ல இருக்காங்க” என்று கேட்டு கொள்ள, அவர்களும் அதையே செய்தனர்.
ஒருபுறம் உறவினர்கள் வர தொடங்க, பாலனும் வீட்டிலிருந்த உறவினர்களை ஆம்னி வண்டியில் அழைத்து வந்திருந்தார். அவர் அவர்களை கவனிப்பதில் மும்முரமாகி விட, சரண் சொன்னது போல், கனி மாப்பிள்ளை அறையில் அவர் அண்ணன் குடும்பத்திற்கு உபச்சரணை செய்துக் கொண்டிருந்தார்.
நண்பர்கள் இருவரும் வந்த விருந்தினர்களுக்கு குடிக்க ஜூஸ் கொடுத்துக் கொண்டிருக்க, அப்போது தான் சரணின் கண்ணில் அது பட்டது.
“டேய்.. அந்த பொண்ணுடா” என்றான் உற்சாக குரலில் சரண்.
“எந்த பொண்ணு?” என்று கடமையே கண்ணாக வேலையில் மூழ்கியிருந்த வினோத் கேட்க
“அவ டா. அன்னைக்கு மால்ல பார்த்தேனே. அவளை இங்க பார்த்தேன்டா” என்று மலர்ந்த முகமாக தன்னவளை கண்டுவிட்ட மகிழ்ச்சியில் சொன்னான் சரண்.
“டேய் என்ன சொல்ற.. எங்க?” என்று வினோத்தும் தன் பார்வையை சுழலவிட
“அங்க டா” என்று அவளை நோக்கி சரண் கையை காட்ட, அவள் அங்கே இல்லை.
வினோத்தும் யாரை சொல்கிறான் என்று தேடிவிட்டு நண்பனை பார்க்க “காணோம் டா” என்றவனின் முகம் விழுந்துப் போனது.
நண்பனை ஏற இறங்க பார்த்த வினோத் “பகல் கனவு காணறதே தப்பு. அதுலயும் அக்கா நிச்சயதார்த்தத்தை வச்சிக்கிட்டு கனவு காணறியே” என்று கடுப்படித்தான்.
அதில் கடுப்பான சரண் “நான் பொய் சொல்லல. எத்தனை பேர் இருந்தாலும் அவளை எனக்கு தெரியும். அவ இந்த நிச்சயத்துக்கு வந்திருக்கா” என்று அழுத்தமான குரலில் சொல்ல
நண்பனை ஆழ்ந்து பார்த்தவனுக்கு, உண்மைதானோ என்று தோன்ற “அவ இங்க இருக்கானா, ஒண்ணு உங்க சொந்தமா இருக்கணும். இல்ல, உங்க மாமா சைடா இருக்கலாம். அந்த ட்ரேவ இங்க கொடு. நீ போய் அவளை தேடு” என்று சொல்லி சரணை அனுப்பி வைக்க, அவனும் வினோத்தை பின்னிருந்து அணைத்துக் கொண்டான்.
“அட இவன் ஒருத்தன். ஆனா ஓனா தோஸ்தானா பண்ணிடுவான். கமலி அப்பா வர்றாருடா. என் வாழ்க்கையே உன் கையில தான் இருக்கு” என்று பாவமாக சொல்ல
அதை சிறிதும் கண்டுக் கொள்ளாதவன் “தேங்க் யூ டா. நான் சட்டுனு போய் அவளை கண்டுபிடிச்சிட்டு வந்திடுறேன். அதுவரைக்கும் நீ தனியா கஷ்டப்பட வேண்டாம். இரு என் அத்தை பையன் உனக்கு ஹெல்ப் பண்ணுவான்” என்று வாயெல்லாம் பல்லாக சொன்னான்.
மாப்பிள்ளை வீட்டார் இருந்த அறையை விடுத்து மற்ற இடங்களில் ஒன்று விடாமல் சரண் அவளை தேடினான். இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்தில் தேடினால் அவள் கிடைத்துவிடுவாளா என்ன. அவனது மாமன் மகளான அவள், மாப்பிள்ளை வீட்டிற்கென்று ஒதுக்கியிருந்த அறையில் தான் இருந்தாள்.
தேடி களைத்தவனுக்கு வழக்கம் போல் தமக்கையின் நிச்சய வேலை அழைக்க, கீழே செல்ல மாப்பிள்ளை வீட்டார் இருந்த அறையின் வழியாக செல்லவும், அவள் அறையை விட்டு வெளியே வரவும் சரியாக இருந்தது.
லாவெண்டர் நிற இண்டோ வெஸ்டன் உடையணிந்து, லாவெண்டர் மலராகவே அவனை வருடி சென்றவளை பார்த்த திகைப்பில் சரண் அங்கேயே உறைந்து நின்றுவிட, அவனை கவனிக்காதவளோ அங்கிருந்த நாற்காலியில் சென்று அமர்ந்துக் கொண்டாள்.
அவளை தொடர்ந்து அவளது அண்ணனும் மாப்பிள்ளையுமாகிய மனோஜும், அன்னை மைதிலியும் வெளியே வந்தனர். வந்தவர்கள் யாரும் சரணை கவனிக்கவில்லை. அவனுக்கு எதிர்புறமாக அமர்ந்தும் விட்டனர். அவன் மனம் கவர்ந்தவள் அவன் வீட்டிற்கு வந்ததில்லை என்றாலும், ரகுவும் மைதிலியும் வந்த போது அவன் வீட்டிலில்லை என்றாலும், உடன் இருக்கும் மனோஜை அவனுக்கு நன்கு தெரியுமே. சுசித்ராவை காண ரகுவுடன் அவன் வீட்டிற்கு வந்த போது பார்த்திருக்கின்றானே.
அவள் யாரென்று மனம் உணர்த்தினாலும், அதை பெரிதுபடுத்தும் எண்ணமில்லாமல் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தவனின் சிந்தையை அவளது குரலே கலைத்தது.
“வாட் தி ஹெல் இஸ் திஸ், மாம்?” சொன்னவளின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது.
“வாட் ஹேப்பன்ட், டியர்?” என்று மைதிலி மகளின் தலை வருடி கேட்க
“ரூம்ல ஏசி இருக்குனு சொல்றாங்க. ஐ டோன்ட் திங்க் இட்ஸ் ஒர்கிங். இட்ஸ் வெரி ஹாட் மாம்” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்க, அவள் முகத்தில் பூத்திருந்த வியர்வை துளிகளை கண்டு துடித்துப் போனவன், பெண் வீட்டுக்காரனாக அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு செய்ய இரண்டடி முன்னெடுத்து வைக்க..
“ஐ டோன்ட் லைக் திஸ் கண்ட்ரி, மாம். ஆல் ஆஃப் எ சடன், எங்க இருந்து ஒரு தங்கச்சி குடும்பம் இந்த டேட்க்கு வந்தாங்க. ஐயம் கோய்ங் பேக் டூமார்ரோ” தன் கையிலிருந்த அண்ணனின் நிச்சய அழைப்பிதழை வைத்து விசிறி கொண்டே சொன்னாள். அவள் வர்ணிகா..
அதை கேட்டவனின் கால்கள் அதற்கு மேல் செல்லாமல் அங்கேயே வேரூன்றி நின்றுவிட்டது.
“பெரிய கல்யாணம். அவனை பாருங்க. டிட் யு சி எனி ஹேப்பினஸ் ஆன் ஹிஸ் ஃபேஸ்?” தன் அண்ணனை காட்டி அன்னையிடம் சொன்னவள், மனோஜை பார்த்து “இஃப் யு டோன்ட் லைக் திஸ் மேரேஜ், யு சுட் ஸ்பீக் அவுட். வை டு யு ஸ்பாயில் யுவர் லைஃப்?” என்று கைகளை உயர்த்தி அதிருப்தியாக கேட்டாள்.
அத்தோடு விட்டாளா.. அவள் அடுத்து பேசிய வார்த்தைகள் சரணின் மனதில் நீங்காத ரணமாகவே பதிந்து விட்டது.
“ஐயம் டெல்லிங் யு திஸ். இன்னும் என்கேஜ்மெண்ட் ஆகல. ஸ்டில், யு ஹேவ் டைம். பிடிக்கலனு வாய திறந்து சொல்லு. வி வில் கால் ஆஃப் திஸ் என்கேஜ்மெண்ட் அண்ட் கோ பேக் டூ லண்டன்” என்றது தான், அதுவரை அனைத்தையும் ஸ்தம்பித்து கேட்டிருந்தவன்
“என்ன சொன்னீங்க? ஃபங்க்ஷனை நிறுத்துவீங்களா?” என்றவனின் குரலில் மூவரும் அது வந்த திசை நோக்கி திரும்ப, அதற்குள் அவன் அவர்களை நோக்கி வந்திருந்தான்.
நேராக வர்ணிகாவின் எதிரில் வந்து நின்ற சரண் “அக்காக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையும்னு தான் இதெல்லாம். உங்க அப்பா கூட கல்யாண செலவை மொத்தமா அவரே ஏத்துகிறதா சொன்னாரு. அப்படி கல்யாணம் பண்ண எங்களுக்கு விருப்பம் இல்ல. அதுக்காக எங்க அப்பாம்மா வட்டிக்கு காசு வாங்கி தான் இந்த நிச்சயத்தை பண்ணிட்டு இருக்காங்க. நீ என்னனா கொஞ்சம் கூட யோசிக்காம நிச்சயத்தை நிறுத்திடலாம்னு சொல்ற” என்று அவளிடம் சீறி பாய, அவளோ திகைத்து அவனையே பார்த்திருந்தாள். உடனிருந்தவர்களின் நிலையும் அதுவே.
“நாங்க ஒண்ணும் கேக்கல, உங்க அண்ணனுக்கு எங்க அக்காவை கல்யாணம் பண்ணிக்கோங்கனு. உங்க அப்பா தான் சொன்னாரு. அவரை நம்பி இவ்ளோ பெரிய காரியத்துல இறங்கின இந்த அம்மாவை சொல்லணும். குடும்பமா என்ன விளையாட்டு காட்டிட்டு இருக்கீங்களா?” சரண் அவன் பாட்டிற்கு வர்ணிகாவிடம் சத்தமிட்டு கொண்டிருக்க, முதலில் சுதாரித்தது என்னவோ மனோஜ் தான்.
“சரண். சரண்.. கோபப்படாத. அவ சொன்னா என்கேஜ்மென்ட்டை நிறுத்திடுவோமா. அவ பிறந்துல இருந்தே லண்டன்ல தான் இருக்கா. இந்த மாதிரி வெதரெல்லாம் அவளுக்கு புதுசு. அந்த டென்ஷன்ல பேசிட்டா” மனோஜ் மைத்துனனை சமாதானம் செய்ய, அவனும் நிச்சயம் வரை வந்துவிட்ட தன் அக்காவின் வாழ்க்கையை நினைவில் வைத்து தன்னை நிதானப்படுத்தினான்.
அதற்குள் மைதிலியும் “சாரி சரண். வரு அத மீன் பண்ணல. இதை பெருசு பண்ணாத. உங்க மாமாவுக்கு தெரிஞ்சா கோபப்படுவார்” என்று சொல்ல, அவன் பார்வை என்னமோ இன்னும் வர்ணிகாவிடம் தான் இருந்தது.
தான் பேசியதற்கு வருத்தப்பட்டது போல் இல்லை. சொல்லப்போனால் இப்போது அவளும் அவனை முறைத்து கொண்டு தான் இருந்தாள்.
மைதிலியும் மனோஜும் பேசியதில் சற்று தணிந்திருந்தாலும், தன் மனம் முழுக்க நிறைந்திருந்தவள் தந்த ஏமாற்றத்தில் உள்ளுக்குள் கலங்கியிருந்தவன், அதுவும் தன் அக்காவின் நிச்சயத்தை நிறுத்துவதை பற்றி பேசிவிட்டாளே என்று கோபம் இன்னமும் இருக்க, “நாங்க ஒண்ணும் இல்லாதவங்களா இருக்கலாம். ஆனா, பிடிக்காத இடத்துல பணமிருக்குனு பொண்ணை கட்டி கொடுக்கறவங்க இல்ல. உங்க அண்ணனும் அப்பாவும் என் அக்காவை பார்த்து பிடிச்சிருக்குனு சொன்னதால தான், இதுக்கு சம்மதமே சொன்னோம். ஒரு பொண்ணா இருந்துட்டு இன்னொரு பொண்ணோட கல்யாணத்தை நிறுத்த பார்க்கற. இது தான் நீ வளர்ந்த கலாச்சாரமா?” என்று அவளிடம் கேட்டவன், அவளுடைய பதிலுக்கும் காத்திருக்காமல் வேகமாக அங்கிருந்து அகன்றுவிட்டான்.
சரண் இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அதுவும் தன் மனம் கவர்ந்தவளிடம் இருந்து. உடைந்து போனவனாய், இறுகிய முகமும் தளர்ந்த நடையுமாய் கீழே இறங்கி வர, அவனை அங்கேயே பிடித்துக் கொண்டனர் வினோத்தும் கமலியும்.
“எங்கண்ணா போயிருந்த? அக்கா உன்னை பார்க்கணும்னு சொல்லிட்டே இருக்காங்க” என்று கமலி சரணை பிடித்திழுக்க
அவன் கேட்டதிலிருந்தே தானும் புரிந்து கொண்ட கமலி “நிஜமாவா ண்ணா?. அவங்களை பார்த்தியா?” என்று ஆவலாக அவளும் கேட்க, இவனோ அவர்களை நேராக பார்க்காமல் இல்லையென்று தலையாட்டினான்.
அதை கேட்டு வினோத் அதிருப்தியாக தலையாட்ட, கமலியோ “சரி வா, நாம இன்னொரு டைம் தேடி பார்க்கலாம். வினு, நீ போய் வந்தவங்கள பாரு” என்று சரணை இழுத்து செல்ல, கால்கள் வேரூன்றி போனவன் இருந்த இடத்தை விட்டு நகரவில்லை.
அவன் வராததை பார்த்து கமலியும் வினோத்தும் புரியாமல் விழிக்க “நீ சொன்னது கரெக்ட் தான் டா. பகல் கனவு காண்றது தப்பு. கனவு கலைஞ்சு போச்சு” என்றுவிட்டு “நீங்க போங்க. நான் சுசியை பார்த்துட்டு வரேன்” என்று நண்பர்களை அங்கிருந்து அனுப்பினான்.
அவர்கள் சென்றதும் அங்கிருந்த சமையற்கூடத்திற்கு சென்றவன், தன் கலங்கிய கண்களை அழுந்த துடைத்து “எனக்கானவ என் அக்கா வாழ்க்கை கெடுற மாதிரி பேசமாட்டா. நீ எனக்கானவ இல்ல. வேண்டாம், நீ எனக்கு வேண்டாம்” என்று திடமாக ஒரு முடிவை எடுத்தான்.
அத்தோடு அங்கிருந்த குழாயில் தண்ணீர் பிடித்து தன் முகத்தை கழுவியவன், தலையை கோதி சரி செய்துக் கொண்டு தமக்கையை காண அவளறை நோக்கி சென்றான்.
தொடரும்..
உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..
இதோ சுசி, மனோஜின் வரவேற்பு நடந்துக் கொண்டிருக்கிறது. ரகுவரன் எவ்வளவு சொல்லியும் திருமண செலவை தாங்கள் தான் ஏற்போம் என்று விடாப்பிடியாக சொல்லிவிட்டார்கள் கனியும் அவரது கணவர் பாலனும்.
வழக்கம் போல் சரணை திருமண வேலைகள் பிடித்துக் கொள்ள, வர்ணிகா அன்று அவன் வணிக வளாகத்தில் பார்த்த மோவ் நிற லெஹெங்கா அணிந்து, அழகு பதுமையாக வலம் வந்து கொண்டிருந்தாள். அவள் கைதேர்ந்த சிற்பி செதுக்கிய சிற்பமென இருக்க, சரண் தான் அவளை பார்ப்பதை அறவே தவிர்த்தான்.
“ஏன்டா, இப்படி ஒரு மாமா பொண்ண வச்சிக்கிட்டா எதோ ஒரு பொண்ண மால், கல்யாண மண்டபம்னு தேடிக்கிட்டு இருந்த? உங்க மாமாவுக்கு நம்ப அக்காவை பையனுக்கு கட்டுற மாதிரி, பொண்ண உனக்கு கட்டுற ஐடியா இல்லாமலா இருக்கும்” என்ற வினோத், என்னமோ தனக்கே தன் மாமன் மகள் தயாராக இருப்பது போல் வெட்கத்தில் சிணுங்கிக் கொண்டிருந்தான்.
சரணோ எதற்கும் எதிர் வினையாற்றாமல் “வரவங்களுக்கு தாம்பூல பை கொடுக்கணும். அந்த தேங்காய் மூட்டையை வாசல்ல கொண்டு போய் வைக்கலாம் வா” என்றான்.
“இவனை வச்சிக்கிட்டு” என்று தலையில் அடிக்காத குறையாக வினோத் நண்பனுடன் சென்றான்.
மணமக்கள் மேடையில் நின்றிருக்க, உறவினர்களும் நண்பர்களும் பரிசு பொருட்களோடு மேடையேறி வந்து அவர்களை வாழ்த்தி விட்டு சென்றிருந்தனர். இத்திருமணத்தை நினைத்து அனைவருக்கும் மகிழ்ச்சி என்றாலும், தங்கைக்கு ஏதோ ஒரு வகையில் நியாயம் செய்து விட்டதாக ரகுவரனும், அண்ணனுக்கும் தனக்குமான உறவு வாழையடி வாழையாக தொடர போகும் மகிழ்ச்சியில் கனிமொழியும் பூரித்து தான் போயிருந்தனர்.
அப்போது முப்பது வயதிற்குரியவன் மேடையேறி சுசித்ராவிடம் செல்ல, “வாங்க சார். வாங்க..” என்று அவனை மரியாதையுடன் வரவேற்று, அருகில் இருந்த மனோஜிடமும் “மாமா.. இது எங்க மேனேஜர்” என்று சிரித்த முகமாக அறிமுகம் செய்தாள் சுசித்ரா.
அதை கேட்ட மனோஜும் மரியாதை நிமித்தமாக தலையசைத்து “ஹலோ.. ஐ ஆம் மனோஜ்” என்று கை கொடுத்து புன்னகைக்க, பதிலுக்கு அவனும் “பார்த்திபன்” என்று கை கொடுத்து புன்னகைத்தான்.
“அம்மா, அப்பாவை கூட்டிட்டு வரலையா சார்?” சுசி பார்த்திபனிடம் கேட்க
“முஹுர்த்தத்துக்கு வருவாங்க” என்று மென்னகைத்தவன், பரிசை இருவரிடமும் கொடுத்துவிட்டு..
“கங்கிரஜுலேஷன்ஸ்” என்று மனோஜிடம் சொல்லிவிட்டு “பெஸ்ட் விஷஸ் சுசித்ரா” என்று அருகில் இருந்தவளிடமும் சொல்லிவிட்டு அங்கிருந்து நகரப் பார்த்தான்.
“தேங்க் யு சார். கண்டிப்பா சாப்பிட்டுட்டு தான் போகணும்” என்றவள் தன் தம்பியை தேடி கண்களை சுழல விட, சரண் மேடையில் நின்று தாயிடம் எதுவோ பேசி கொண்டிருந்தான்.
“சரண்” என்று அருகில் அழைத்தவள், “எங்க மேனேஜர். அவரை கிட்ட இருந்து சாப்பிட வச்சி தான் அனுப்பனும்” என்று தம்பியிடம் சொல்ல..
அவனும் “வாங்க சார்” என்று பார்த்திபனை கையோடு அழைத்து சென்றான்.
“ரகுவரா.. பார்த்து எத்தனை வருஷம் ஆச்சு.. எங்களை எல்லாம் ஞாபகம் இருக்கா?” என்றார் கனி அழைத்து திருமணத்திற்கு வந்திருந்த ரகுவரன் மற்றும் கனியின் தூரத்து சொந்த பெரியம்மா.
“பெரியம்மா, எப்படி இருக்கீங்க?” என்று நலம் விசாரிக்க, அவரும் நன்றாக இருக்கிறேன் என்று சொன்னதும், “என்ன பண்றது பெரியம்மா, அப்பாவோட குணம் தான் உங்களுக்கு தெரியுமே. எங்களை அவர் சுத்தமா ஏத்துக்கல. நானும் எவ்ளோ நாள் தான் அவர் சம்மதத்துக்காக காத்திருக்கிறது” என்று இன்றும் வேதனை நிரம்பிய குரலில் சொன்னார்.
“எது எப்படியோ, கூட பொறந்தவள பார்க்காம விட்டுட்டியேனு எனக்கு உன்மேல வருத்தம் தான். இப்போ அவ பொண்ண உன் வீட்டு மருமகளா எடுத்து என் மனசை தணிச்சிட்ட” என்று மனம் குளிர்ந்து சொல்ல, ரகுவரன் மனதும் இப்போது தானே குளிர்ந்திருக்கிறது, அவரும் ஆமோதிப்பாக தலையசைத்து புன்னகைத்துக் கொண்டார்.
“அங்க முதல் வரிசைல உட்கார்ந்துட்டு இருக்கறது உன் பொண்ணுன்னு கனி சொன்னா”
“ஆமா பெரியம்மா. வரு.. வர்ணிகா.. லண்டன் பிசினஸ் ஸ்கூல்ல மேனேஜ்மெண்ட் முடிச்சிருக்கா” என்று தானும் மகளை பற்றி கண்களில் பெருமிதத்தோடு சொல்ல..
பதிலுக்கு பெரியம்மாவும் “லக்ஷனமா இருக்கா” என்றவர் “தங்கச்சி பொண்ண பையனுக்கு முடிச்சிக்கிட்ட. நம்ப கனி பையனும் ஏதோ கம்ப்யூட்டருக்கு படிச்சிட்டு வேலை தேடிட்டு இருக்கானாமே.. ஆளும் நல்லா இருக்கான். பொண்ண அவனுக்கு முடிச்சா என்ன ரகு” என்று தன் ஆசையை சொன்னார்.
அதை கேட்டு சிரித்த ரகுவரன் “என் பையன் மாதிரி பொண்ணு இல்ல பெரியம்மா. மனு நான் என்ன சொன்னாலும் கேட்டுப்பான். வருவுக்கு அவ இஷ்டம் தான். இப்படி தான் இருக்கணும், இத தான் படிக்கணும்னு எல்லாம் அவ இஷ்டப்படி தான். இவ்ளோ ஏன், பையனை வற்புறுத்தி பிசினஸுக்கு கூப்பிட்டேன். பொண்ணு, அவளாவே கம்பெனில ஜாயின் பண்ணி எனக்கு ஹெல்ப்பும் பண்ணிட்டு இருக்கா. ஆபீஸ்ல அவளை கேக்காம ஒரு டெஸிஷன் எடுத்துட்டேன்னு மூணு மாசம் வீட்டுல தங்காம வெளில தங்கி இருந்தா. இப்போ கூட அவளுக்கு இந்த ஊரு சுத்தமா பிடிக்கல. எனக்காகவும் மனுக்காகவும் தான் பல்லை கடிச்சிட்டு இருக்கா” என்று மகளின் குணத்தை பற்றி சொன்னவர்,
“என் பொண்ண கட்டி கொடுத்தா தான் என் தங்கச்சி பையனுக்கு செய்யணும்னு இல்ல. அவன் இப்பவே என் பையன் தான்” என்று மனதிலிருந்தும் சொன்னார்.
“அதுவும் சரி தான். ஒத்து வராதவங்கள கட்டி வச்சிட்டு நாளைக்கு நாமளா கஷ்டப்பட போறோம். அவங்க தானே. சரி ரகு, நீ பாரு. தங்கச்சிய மட்டும் என்னைக்கும் விட்டுடாதப்பா. அவ நிறைய கஷ்டப்பட்டுட்டா” பெரியம்மா சொல்ல, ரகுவும் ஆமோதிப்பாய் தலையாட்டினார்.
அதன்பின் இருவரும் அவரவர் குடும்ப சமாச்சாரங்களை பேசியிருந்தனர். பின் ரகுவே உடனிருந்து அவரை சாப்பிட வைத்து அழைத்து வந்து, மகளுக்கும் அவரை அறிமுகம் செய்து அவளருகில் அமரவைத்துவிட்டு சென்றார்.
நேரம் இரவை நெருங்க, கூட்டம் சற்று குறைந்திருந்தது. சரணுக்கும் அவனது மற்ற நண்பர்களுடன் அமர்ந்து பேச சற்று நேரம் கிடைக்க, அவர்கள் அவனை ஆடச் சொன்னார்கள். அதற்கேற்றாற் போல் முதலில் மெல்லிசைகளாக பாடி கொண்டிருந்த இன்னிசை குழுவும் இப்போது வேக மெட்டுகளை பாட ஆரம்பித்திருக்க, நண்பர்கள் ஒருபுறம் ஆடி பாடி விழாவை களைகட்ட செய்ய, என்ன தான் நண்பர்கள் வற்புறுத்தியது ஓருபுறம் இருந்தாலும் தமக்கைக்கு திருமணமாக போகும் சந்தோசத்தில் தானாகவே அவர்களுடன் இணைந்துக் கொண்டான் சரண்.
ஆஹா ஆஹா கல்யாணம்..
ஆஹா ஆஹா கல்யாணம்.. ஆச நூறு..
ஆஹா ஆஹா கல்யாணம்
ஆஹா ஆஹா கல்யாணம்.. கூத்த பாரு..
பொண்ணு மாப்பிள்ளை ஜோரூ
ஒண்ணா சேருது ஊரு
மைக் செட்டுல பாட்டு
சேருது மனசு மாலையை போட்டு
மைய பூசுன கண்ணு
வெட்கம் பேசுது நின்னு
பையன் பாக்குற பார்வை
உள்ள இருக்கு ஏதோ ஒன்னு
ஆஹா ஆஹா கல்யாணம்..
ஆஹா ஆஹா கல்யாணம்.. ஆச நூறு..
ஆஹா ஆஹா கல்யாணம்
ஆஹா ஆஹா கல்யாணம்.. கூத்த பாரு..
முதலில் மிதமாக ஆரம்பித்தவன் பின் யாரும் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு ஆர்ப்பரித்து ஆடி கொண்டிருந்தான். முதல் வரிசையில் அமர்ந்து அமைதியாக விழாவை பார்த்திருந்த வர்ணிகா, ஓர் திசையிலிருந்து அதீத சத்தம் வரவே அனிச்சை செயலாக திரும்பி பார்க்க, அங்கே சரண் தன் நண்பர்களுக்கு மத்தியில் நடுநாயகமாக ஆடிக் கொண்டிருந்தான்.
அவனை சிலநிமிடங்கள் எந்தவொரு உணர்வுமின்றி வெறித்து கொண்டிருந்தவள் பின் மணமேடையின் பக்கம் தன் பார்வையை திருப்பி கொண்டாள்.
வரவேற்பு அனைவரின் மனதிலும் நல்ல நினைவுகளை கொடுத்துவிட்டு இனிதே முடிவடைந்திருக்க, நேரம் இப்போது அதிகாலை நான்கு இருக்கும்.
வரவேற்பிற்கு பின் பெண், மாப்பிள்ளையை வைத்து புகைப்பதிவாளர்கள் பிரத்யேக புகைப்படங்களை எடுக்க, அது முடியும் வரை தம்பியை உடனிருக்க சொல்லிவிட்டிருந்தாள் சுசி. அவனும் தமக்கை சொல்லை கேட்டு நள்ளிரவு ஒன்றரை மணி வரை அவளுடன் இருந்துவிட்டு பின் மணமேடை ஜோடிப்பவர்களுடன் இருந்து மேற்பார்வையும் பார்த்தான்.
அதற்குள் மணி நாலரையாகிவிட காலை உணவுக்கான சமையல் வேலையை மேற்பார்வை பார்க்க சென்றான்.
அப்போது ஏனோ தூக்கம் வராமல் தவித்திருந்த வர்ணிகா கீழே இறங்கி வந்தாள்.
அந்நேரம் அடுப்படியில் இருந்து வெளியே வந்த சரணும் அவளை கண்டான். பாக்ஸர் ஷார்ட்ஸ் நைட் சூட்டில் காட்சி தந்தவள் அவனை கண்டும் காணாதது போல் கடந்து சென்று அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்துவிட, இந்நேரத்தில் இவள் எதற்கு இங்கு வந்திருக்கிறாள் என்று புருவம் சுருக்கியவன் மீண்டும் அடுப்படிக்கு சென்றுவிட்டான்.
அவளோ அதை பொருட்படுத்தாதவளாய் மேடை அலங்காரங்களையும், நாற்காலிகளை ஒழுங்கு படுத்தி போடுவதையும் ஒரு வித யோசனையோடு பார்த்திருந்தாள்.
அப்போது ஒரு கை அவள் முன் பால் குவளையை நீட்டியது. என்னவென்று நிமிர்ந்து பார்க்க, சரண் தான் கையில் பாலோடு நின்றிருந்தான்.
“இந்த ஊரு உனக்கு பிடிக்கலனு புரியுது. இன்னும் ஒரு நாள் தான். பால் குடிச்சிட்டு போய் தூங்கு. முஹுர்த்தத்துக்கு இன்னும் டைம் இருக்கு” என்றான்.
இவனால் எப்படி தன்னை புரிந்துக் கொள்ள முடிந்தது என்ற ஆச்சர்யத்துடன் புருவங்கள் இடுங்க அவளும் அதை வாங்கி கொள்ள “எல்லாரும் தூங்கிட்டு இருக்க நேரத்துல இப்படி தனியா வராத. சேஃப் இல்ல” என்றுவிட்டு தன் வேலை முடிந்ததென அவள் பதிலுக்கும் காத்திருக்காது அங்கிருந்து நகர்ந்தான்.
திருமண நாளன்று காலை அழகாக விடிந்திருக்க, சுசியை மணமகள் அறையில் தயார் செய்துக் கொண்டிருந்தனர். வர்ணிகாவும் தயாராகி வந்து வழக்கம் போல் முன் இருக்கையில் அமர்ந்துக் கொண்டாள். அவளை பார்த்த சரண், தான் அவளை வெறுத்து கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து ரசித்தான்.
பின்னே அவன் தேர்ந்தெடுத்த புடவையில் அவள் தான் ஒளிரும் நட்சத்திரமாகவே ஜொலித்தாளே.
ஆம், திருமணத்திற்கு புடவை எடுக்க கனி, சுசி மற்றும் சரண் காஞ்சிபுரம் சென்றிருந்த போது மகளுக்கு அனைத்தையும் வாங்கிவிட்ட கனி “சரண், இன்னொரு புடவை செலக்ட் பண்ணேன். சுசியை விட நீ நல்லா தேர்ந்தேடுக்கிற” என்று மகனிடம் சொன்னார்.
“சுசிக்கு எல்லாம் எடுத்தாச்சுனு சொன்னீங்களே ம்மா. இது உங்களுக்கா? இருங்க செலக்ட் பண்றேன்” என்றவன் அங்கிருப்பவரிடம் சொல்லி புடவைகளை எடுத்துக் காட்ட சொல்ல..
“எனக்கில்ல சரண், வருவுக்கு” என்றார்.
அதை கேட்டவன், ஆர்வம் அனைத்தும் வடிந்துவிட்டவனாக “அவளுக்கு நாம எதுக்கு எடுத்து தரணும். அவ அப்பா தான் பெரிய பணக்காரராச்சே. அதெல்லாம் தேவைன்னா கடையவே கொண்டு வந்து இறக்குவார் அவ அப்பா” என்று முரண்டு பிடித்தான்.
“அண்ணன் எடுத்து கொடுக்கலைனு யார் சொன்னா. இது என் மருமகளுக்கு நான் எடுத்து தரணும்னு ஆசைப்படறது. நல்லா செலக்ட் பண்றேன்னு சொன்னா பிகு பண்ணிக்கிற”
“ஆமா ஆமா, நான் பிகு பண்றேன். ஊருல இருக்க மொத்த சீனும் இவங்க அண்ணன் பொண்ணு தான் போடுறா” என்று பல்லை கடித்துக் கொண்டு தேர்வு செய்தாலும் அவள் மீதிருக்கும் நேசம் மனதின் ஏதோ ஒரு மூலையில் இன்னும் அகற்றப்படாமல் இருக்க, பீச்(Peach) நிறத்தில் இளஞ்பச்சை கரை கொண்ட புடவையை அவளுக்கு தேர்வு செய்தான்.
அதை அண்ணன் இப்போது தற்காலிகமாக தங்கியிருக்கும் வீட்டிற்கு சென்ற போது கனி தன் அண்ணியிடம் கொடுக்க, “அவ புடவையெல்லாம் கட்டமாட்டா கனி. நான் வற்புறுத்தினதால தான் முஹுர்த்தத்துக்கு மட்டும் சாரீ எடுத்திருக்கா” மகளின் குணமறிந்து வேண்டாம் என்பதை நேரடியாக சொல்ல முடியாமல் நாசுக்காக சொன்னார்.
அதை கேட்ட கனியின் மனம் சுணக்கம் கொள்ள, அருகில் இருந்த சரண் தன் தாயை முறைத்தான்.
“இருக்கட்டும் அண்ணி. அத்தைனு எதுவும் செஞ்சதில்ல. வரு சடங்காகி இருக்கிறப்போ புடவை, வரிசையெல்லாம் வச்சிருப்பேன் தான. அப்படி இருக்கட்டும். என்னைக்கு வருவுக்கு பிடிக்குதோ, அப்போ கட்டிக்கட்டும்” என்று அவர் புடவையை திரும்ப வாங்க மறுக்க, மைதிலிக்கு மகளை என்ன அவர்கள் அன்றாடம் பார்க்க போகிறார்களா, அவர்களது மனதிருப்திக்காகவாவது மகளுக்கு தெரியாமல் புடவை இங்கேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டார்.
கனியும் சரணும் கிளம்பியிருக்க, அதுவரை அலுவலக காணொளி அழைப்பில் இருந்துவிட்டு கீழிறங்கி வந்த வர்ணிகாவின் கண்களில் அப்புடவை படவும், அதை கையில் எடுத்து பார்த்தவள்
“இத வாங்கினீங்களா மாம்?” என்று கேட்டாள்.
அவரும் “இல்ல வரு” என்று நிகழ்ந்ததை கூற “டேட் சிஸ்டருக்கு இவ்ளோ நல்ல டேஸ்ட்டா. மாம், இந்த சாரீ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இதையே நான் மனு மேரேஜ்ல வேர் பண்ணிக்கிறேன்” என்றவள் “ப்ளௌஸ் ஸ்டிட்ச் பண்ண கொடுத்த இடத்துல இந்த சாரீயோட ப்ளௌஸை பர்ஸ்ட் ஸ்டிட்ச் பண்ண சொல்லுங்க மாம்” என்று விட்டிருந்தாள்.
இப்போது அந்த புடவையில் அவள் தேவதையாய் மிளிர, சரணின் மனம் மீண்டும் அவள் பால் சாய துடிக்க, அன்று அவள் பேசியதை நினைவுப்படுத்தி அவள் தனக்கானவள் இல்லை என்பதை மனதில் நிறுத்தி கடிவாளமிட்டு, வந்தவர்களை கவனிக்கும் வேலையில் இறங்கினான்.
முஹுர்த்தத்திற்கு நேரமாவதை சுட்டிக்காட்டி புரோகிதர் மாப்பிள்ளையை வர சொல்ல, அப்போது பதற்றமாக அங்கே வந்த மைதிலி கணவரிடம் எதையோ சொன்னார். அதை கேட்டவரின் முகம் அதிர்ச்சியில் இறுகியது. பின் சுதாரித்தவராய் மனைவியிடம் எதையோ கேட்க, அதற்கு அவர் கலங்கிய கண்களாக இல்லையென்று தலையாட்டினார்.
இப்போது என்ன செய்வதென்று புரியாத ரகு தன் நெற்றியை நீவி கொண்டிருக்கவும், சரியாக அவரது கைபேசி தன் இருப்பை காட்டும் வண்ணமாக அதிர்ந்தது. அதையெடுத்து பார்த்தவரின் கண்கள் சிவப்பை தத்தெடுக்கவும், கால்கள் ஆட்டம் கண்டு அங்கிருந்த தூணை பிடிக்க, அவரது முகமாற்றங்களை கவனித்த கனியின் குடும்பத்தினர் எதுவோ சரியில்லை என்பதை உணர்ந்தனர்.
பதற்றமடைந்த தாய், தந்தையை அமைதி காக்க சொல்லிவிட்டு “ஏதாவது பிரச்சனையா? ஏன் மாமா இன்னும் மணமேடைக்கு வரல..” என்று ரகுவரனை பார்த்து சரண் கேட்க, அவனது பார்வையின் திண்மையை தாளமுடியாதவராய் தலை கவிழ்ந்தவர்,
“அது.. அது மனு.. மனோஜ்” என்று தன் கைபேசியை அவனிடம் நீட்டினார்.
அதை வாங்கி பார்த்தவனுக்கு உலகமே கை நழுவி விட்டது போல் இருந்தது.
மண்டபத்தை விட்டு வெளியேறி இருந்த மனோஜ் தான் ‘ஐ ஆம் நாட் இன்ட்ரெஸ்ட்டெட் இன் திஸ் மேரேஜ் டேட். ஐ லவ் மித்ரா. ஐ ஆம் கோயிங் பேக் டூ லண்டன். சாரி ஃபார் எவரிதிங் டேட்’ என்று தந்தைக்கு செய்தி அனுப்பியிருந்தான்.
அதே சமயம் தாய், தந்தையின் முகமாற்றத்தை கவனித்து கீழே அமர்ந்திருந்த வர்ணிகா மேடையேறி அவர்கள் அருகில் வரவும் மேள வாத்தியத்தை கை காட்டி நிறுத்தியிருந்த சரண் “உங்க பையன் போய்ட்டார். இப்ப எங்க அக்காவுக்கு என்ன வழி?” என்று உரக்க கத்தியிருந்தான்.
அதை கேட்டு அதிர்ந்துவிட்ட கனி “என்ன சொல்ற சரண்?” என்று தழுதழுத்த குரலில் கேட்க, பாலனும் “பையன் போயிட்டார்னா என்ன அர்த்தம் சரண்? எனக்கு படபடப்பா வருது” என்று பதறினார்.
“கனி.. பாலா.. பதற்றப்படாதீங்க ப்ளீஸ். நான் ஃபோன் பண்ணி அவனை உடனே வர சொல்றேன்” என்று சரணிடமிருந்து கைபேசியை வாங்கி ரகு மகனுக்கு அழைக்க போக..
“அவர் வந்தா மட்டும். இன்னைக்கு ஓடி போனவர் நாளைக்கு கல்யாணத்துக்கு அப்புறம் ஓடி போகமாட்டாருன்னு என்ன நிச்சயம்” என்று ஆவேசப்பட்டவன் தலையை பிடித்துக் கொண்டான்.
“கஷ்டமோ, நஷ்டமோ நாங்க எங்க வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருந்தோம். உங்க பையனுக்கு எங்க அக்காவை முடிக்கிறேன்னு வந்து இப்ப என் அக்கா மணக்கோலத்துல நிக்கிறாளே. அவளுக்கு என்ன பதில் சொல்ல. அண்ணன் அண்ணன்னு எங்க அம்மா உங்க மேல உயிரா இருந்ததுக்கு இப்படி நம்ப வச்சி கழுத்தை அறுத்துட்டீங்களே” சரண் ரகுவரன் முன்பு விஷ்வரூபம் எடுத்து நின்று சத்தமிட்டு கொண்டிருந்தான்.
கனிக்கோ மகளின் திருமணம் நின்றுவிட்ட வேதனையோடு மகன் அண்ணனிடம் வழக்காடி கொண்டிருக்கிறான் என்ற பயமும் சேர்ந்து கொள்ள, கண்களில் இருந்து கண்ணீர் சரசரவென வழிந்து கொண்டிருந்தது. பாலனுக்கோ மகளது வாழ்க்கையை எண்ணி மனிதர் ஸ்தம்பித்தே விட்டார்.
அந்நேரத்தில் “என் டேட் மேல எந்த மிஸ்டேட்க்கும் இல்ல. அவரை எதுவும் சொல்லாத” என்று அவன் முன் விரல் நீட்டியிருந்தாள் வர்ணிகா.
அதில் உச்சஸ்தான கோபத்திற்கு சென்றிருந்தவனுக்கு முகம் இறுக, மூக்கு விடைக்க “அவர் மேல தப்பு இல்லன்னா, அப்போ நீ தான் காரணமா?” புருவம் உயர்த்தி அவளிடம் கூர்மையாக கேட்டவன், தன் நெற்றியை தேய்த்து “உனக்கு வேற இந்த கல்யாணத்துல முதல்ல இருந்தே விருப்பம் இல்லல. நீ தான் உன் அண்ணனை அனுப்பி வச்சியா?” என்றிருந்தான் கண்களில் கனல் தெறிக்க சரண்.
அதை கேட்டு வர்ணிகா உட்பட அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் விழி விரித்திருந்தனர்.
தொருடம்..
உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..
Recently viewed by users: Indhumathisubbu 2 minutes ago, Nandhini prithvi 13 minutes ago.
Our newest member: Priyavijay Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed