All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
[Sticky] ஶ்ரீகலாவின் ‘தீயாய் தீண்டும் காதலே!’ - கதை திரி
அத்தியாயம் : 5
கிருஷ்ணபிரசாத் முன்னே நின்று கொண்டிருந்த ரதிதேவி கால் மாற்றி, மாற்றி நின்று கொண்டிருந்தாள். அவன் அழைத்தான் என்று மதுரன் வந்து அவளிடம் சொன்னதும்... அதை நம்பி அவளும் கிருஷ்ணபிரசாத்தை காண வந்தாள். இதோ அவள் இங்கு வந்து இரண்டு மணி நேரமாகிறது. இன்னமும் அவன் அவளிடம் என்ன விசயம்? என்று பேசவில்லை. பேசவில்லை என்றால் போகட்டும். நிமிர்ந்து ஒரு பார்வை? அது கூட இல்லாது அவன் தனது வேலையில் கவனமாக இருந்தான். அதிலும் அவன் அவளை அமர கூடச் சொல்லவில்லை. அவள் கால் வலிக்க நின்று கொண்டிருந்தாள்.
இதற்கு மேல் அமைதியாக இருந்தால் வேலைக்காகாது என்று நினைத்தவள் தொண்டையைச் செருமி கொண்டு, “சார்...” என்று அவனை அழைத்தாள்.
என்னமோ அவள் அப்போது தான் வந்து நின்றது போன்றதொரு பாவனையுடன் அவன் அவளை நிமிர்ந்து பார்த்து, “எஸ், மிஸ்...?” என்று கேள்வியாகப் பார்த்தான்.
அதாவது அவனுக்கு அவளது பெயர் தெரியாதாம். என்ன ஒரு பில்டப்? அதான் மதுரன் வந்து தெளிவாக அழைத்தானே... ‘ரதிதேவி உங்களைச் சார் கூப்பிடுகிறார்.’ என்று... அவள் சந்தேகமாக 'என்னையா?' என்று கேட்க... 'உங்க பெயரை தான் சார் சொன்னார்.' என்று மதுரன் தெளிவாகச் சொன்னானே.
‘உனக்கு என் பெயர் தெரியாது? இதை நான் நம்பணும்? என்னை ஞாபகம் இல்லாமலா... என்னை அழைத்து இருப்பாய்?’ அவளுக்கு உள்ளுக்குள் பற்றிக் கொண்டு வந்தது. ஆனால் அதை வெளிக்காட்டவில்லை. தந்தையிடம் பேசும் போது மனதிற்குள் குமைந்து போவது போன்று... இப்போதும் அவள் மனதிற்குள் குமைந்து கொண்டிருந்தாள்.
“மிஸ்?” அவன் மீண்டும் அவளைக் கேள்வியாகப் பார்த்தான்.
‘இவன் வேற படுத்துறானே முருகா...’ மனதிற்குள் கடவுளிடம் அரற்றியவள் வெளியில், “ரதிதேவி...” என்று இளித்து வைத்தாள்.
“ஆங், மிஸ். ரதிதேவி... இன்னையில் இருந்து நீங்க என்னுடைய பிஏவா ப்ரோமோட் ஆகுறீங்க.” அவன் சொல்லவும் அவள் திகைப்பாய் அவனைப் பார்த்தவள்,
“சார், நான் எம்பிஏ டிகிரி ஹோல்டர் சார். நான் போய்... போயும், போயும் பிஏவா?” அவள் பிடித்தமின்மையுடன் முகத்தைச் சுளித்தாள்.
“நீ எம்பி எம்பி எம்பிஏ படிச்ச கதை எல்லாம் எனக்குத் தெரியும். உனக்கு இந்தப் பிஏ போஸ்ட்டே அதிகம் தான்.” அவன் நக்கலாய் அவளைப் பார்த்தான்.
‘இவனுக்கு எப்படி நம்மளை பத்தி தெரியும்?’ அவள் புடவை தலைப்பை திருகி கொண்டே யோசித்தாள்.
“ரொம்ப யோசிக்காதீங்க மிஸ். இருக்கிற கொஞ்ச மூளையும் உருகிற போகுது.” அவன் கேலியாய் சிரிக்க...
“சார், நான் ஒண்ணும் பணத்துக்காக வேலைக்கு வரலை. எக்ஸ்பீரியன்ஸ்க்காகத் தான் வேலைக்கு வர்றேன். உங்களுக்குப் பிஏவா வேலை பார்க்க எனக்கு விருப்பம் இல்லை.” அவள் தைரியமாகச் சொன்னாள்.
‘இவருக்குப் பிஏவா வேலை பார்க்கணுமா? ஆத்தாடி, அப்படியொரு வேலை வேண்டவே வேண்டாம்.’ அவள் வேகமாக அங்கிருந்து செல்ல முயன்றாள்.
“அம்மாடி ரதிதேவி...” கிருஷ்ணபிரசாத் சொடக்கிட்டு அவளை அழைத்தான்.
“இன்னும் என்னங்க சார்?” அவள் சலிப்புடன் திரும்பி பார்த்தாள்.
“கொஞ்சம் இந்தப் பேப்பரை படிச்சு பார்த்துட்டு போங்க.” அவன் ஒரு பேப்பரை தூக்கி மேசை மீது வீசினான்.
ரதிதேவி அந்தக் காகிதத்தை எடுத்துப் படித்துப் பார்த்தாள். வேலைக்குச் சேரும் போது ஒப்பந்தத்தில் அவள் கையெழுத்து போட்ட காகிதம் அது. ஒரு வருடம் கண்டிப்பாக வேலை செய்ய வேண்டும் என்று அதில இருந்தது. அவள் திகைப்பாய் அவனைப் பார்த்தாள். அவனது முகம் இறுகி போயிருந்தது.
“நீங்க இன் அன்ட் அவுட்ன்னு விளையாடுறதுக்கு இது ஒண்ணும் பிளேகிரவுண்ட் கிடையாது. இது கம்பெனி... அதுவும் என்னுடைய கம்பெனி. இங்கே நான் வச்சது தான் சட்டம்.” என்று கடுமையுடன் கூறியவனைக் கண்டு அவளுக்குப் பயமாக இருந்தது. அவளது தைரியம் அவளிடம் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் விடைபெற்றுச் சென்றிருந்தது.
ரதிதேவி கிருஷ்ணபிரசாத்தை பயத்துடன் பார்த்துக் கொண்டிருக்க... அவனோ அவளது பதிலை எதிர்பார்த்து அழுத்தமாய் அவளைப் பார்த்திருந்தான். அவனது பார்வையில் அத்தனை கடுமை...
“சரிங்க சார்." வேறுவழியின்றி அவள் அவன் கூறியதற்குப் பதில் கூற...
“குட்...” என்றவன், “போய் உன்னுடைய திங்க்சை எடுத்துட்டு இங்கே வா.” என்று கூற...
“இங்கேயா?” அவள் அந்த அறையைச் சுற்றிலும் விழிகளை ஓட்டினாள்.
அந்த அறையில் கிருஷ்ணபிரசாத்திற்கு மட்டும் மேசை போட்டு இருந்த்து. வேறு மேசை, நாற்காலி எதுவும் இல்லை. இங்கே அவள் என்ன வேலை செய்யக் கூடும்? அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
“இதுக்கு என்ன குறைச்சல்? வேணும்ன்னா உனக்கும் இது போல் ஒரு ரூம் ரெடி பண்ணி கொடுக்கட்டுமா?” அவன் கிண்டல் தொனியில் கூற...
ரதிதேவி முகம் கருத்து போனவளாய் அங்கிருந்து சென்றாள். அடுத்தச் சில நிமிடங்களில் அவள் தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு அவனது அறைக்குள் வந்தாள். அவளைக் கண்டதும் நிமிர்ந்து பார்த்த கிருஷ்ணபிரசாத் பெரிய மனது செய்து,
“உட்கார்...” என்று தன் முன்னே இருந்த நாற்காலியை காட்டினான்.
‘இங்கே உட்கார்ந்துட்டு நான் என்ன வேலை பார்க்கிறது? இவர் முகத்தைத் தான் பார்க்கணும்.’ அவள் தனக்குள் புலம்பி கொண்டு அவனது முகத்தைப் பாவமாகப் பார்த்தாள்.
“எஸ், அதே வேலை தான். நாள் முழுவதும் என்னுடைய முகத்தைப் பார்ப்பது மட்டுமே உன் வேலை.” அவளது எண்ணம் புரிந்தார் போன்று அவன் கூறியதும்...
“சார்...” அவள் திகைப்புடன் எழும்பி விட்டாள்.
“என்னைப் பார்க்கும் போது எல்லாம் அருவருப்புடன் என்னைப் பார்த்தல்ல. அதான் என்னைப் பார்க்கிறது மட்டுமே உன் வேலையாகக் கொடுத்துட்டேன். என்ஜாய்...” என்று அவன் கண்சிமிட்டி சிரிக்க...
‘முருகா, இந்தக் கிறுக்கன் கிட்ட மாட்டி விட்டுட்டியே. உனக்கு எல்லாம் மனசாட்சின்னு ஒண்ணு இருக்கா?’ அவளால் மனதிற்குள் புலம்ப மட்டும் தான் முடிந்தது.
அன்று முழுவதும் கிருஷ்ணபிரசாத் சொன்னது போன்று அவனது முகத்தை மட்டும் பார்க்க வைத்து ரதிதேவியைப் பழிவாங்கி விட்டான். அவனது எண்ணம் புரிந்தவளாய் அவளும் அவளது வேலையில் இருந்து பின்வாங்கவில்லை.
வீட்டிற்குக் கிளம்பும் போது கிருஷ்ணபிரசாத் மீண்டும் அவளைச் சொடக்கிட்டு அழைத்தான்.
“எஸ் சார்.” அவள் விரைப்பாகப் பதில் கூற...
“உன்னைப் பத்தி எனக்குத் தெரியும். இந்த விரைப்பு, மரியாதை எல்லாம் மனசில் இருந்தால் போதும்.” அப்போதும் அவன் அவளுக்குக் கொட்டு வைத்தான்.
‘மிடியலைடா முருகா...’ அவள் நொந்து போய் நின்றாள்.
“என்னுடைய பிஏ இப்படிப் புடவையைச் சுத்திக்கிட்டு பாட்டி மாதிரி இருக்கிறது... எனக்குத் தான் கௌரவக் குறைச்சல்.” என்றவனை அவள் திகைப்புடன் பார்த்தாள்,
கட்டியிருக்கும் புடவைக்கும் வேட்டா? அவளது தந்தையை அவளால் சமாளிக்க முடியுமா? அவளுக்குக் கண்ணைக் கட்டி கொண்டு வந்தது.
“நான் சொல்ற டிரெஸ் கோட் தான் ஃபாலோ பண்ணணும். மதுரன் கிட்ட மத்த டீடெயில்ஸ் கேட்டுக்கோ.”
“சார், எங்க வீட்டில் மாடர்ன் டிரெஸ் போட எல்லாம் அனுமதி இல்லை.” அவள் மெல்ல கூற...
“யார் அனுமதி கொடுக்கணும்?” அவன் புரியாது விழிகளைச் சுருக்கினான்.
“என்னுடைய அப்பா... அவருக்கு மாடர்ன் டிரெஸ் பிடிக்காது.” அவள் தயக்கத்துடன் சொல்ல...
“டிரெஸ் போட போறது நீயா? உங்கப்பாவா? என்னுடைய பிஏ எப்படி இருக்கணும்ன்னு நான் தான் முடிவு பண்ணணும். உங்கப்பா இல்லை. புரிஞ்சதா?” அவனது குரலில் கடுமை ஏறியது.
“சரிங்க சார்...” அவள் தளர்ந்த நடையுடன் அங்கிருந்து அகன்றாள்.
ரதிதேவி மதுரனிடம் வந்து எல்லா விபரங்களையும் கேட்டு கொண்டாள். அன்றே மதுரன் சொன்ன இடத்தில் உடையைத் தைக்கக் கொடுத்து விட்டாள். உடையை ஒரே இரவில் தயார் செய்வதாகத் தைப்பவர் கூறிவிட... அவள் வீட்டிற்குக் கிளம்பி வந்தாள்.
மறுநாளில் இருந்து ரதிதேவி வீட்டில் இருந்து புடவையோடு கிளம்புகிறவள்... அலுவலகம் வந்ததும் கிருஷ்ணபிரசாத் கூறியது போல் நாகரீக உடையை உடுத்தி கொள்வாள். நாகரீக உடை தான். ஆனால் அநாகரீகமாக இல்லை. இன்னும் சொல்ல போனால் அந்த உடை அவளுக்குப் பாந்தமாகப் பொருந்தி தனிக்கம்பீரத்தை கொடுத்தது. வெள்ளை சட்டை, அதன் மீது கருப்புக் கோட், முட்டி வரையுள்ள கருப்பு திற ஸ்கர்ட் என்று அந்த உடை அவளுக்கு அத்தனை அழகாக இருந்தது. இதில் அவள் தனது நீண்ட கூந்தலை விரித்துப் போட்டதில் அவளது அழகு இன்னமும் கூடுதலாக ஜொலித்தது.
அலுவலகத்தில் இருந்த ஆண்கள், பெண்கள் என்று பேதமில்லாமல் அனைவரும் ரதிதேவியைக் கடந்து செல்லும் போது அவளது நீண்ட கூந்தலை பிரமிப்பாய் பார்த்துவிட்டு கடந்து சென்றனர். கிருஷ்ணபிரசாத் கூட அவளை மேலும் கீழுமாய்ப் பார்த்துவிட்டு,
“நாட் பேட்...” என்று உதடுகளைச் சுழித்தான்.
‘எனக்கு நான் அழகா தெரிந்தால் போதும்.’ அவள் வெடுக்கென்று மனதில் அவனுக்குப் பதில் கொடுத்து கொண்டாள்.
இப்படியாக ரதிதேவியின் வேலை இனிதே தொடங்கியது. அதாவது அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் வேலை... அவளுக்குச் சில சமயம் எரிச்சல் வந்தது. சில சமயம் அவன் வேலை செய்யும் பாங்கு, அவனது சுறுசுறுப்பு, அவனது திறமை என்று எல்லாம் பார்க்கும் போது அவளுக்குப் பிரமிப்பாக இருந்தது.
‘மண்டையில மசாலா கொஞ்சம் கூடத்தான். அதான் கனம் தாங்காம ரொம்ப ஆடுறான்,’ அதற்கும் அவள் மனதிற்குள் நொடித்துக் கொண்டாள்.
********************************
“அம்மா, ப்ளீஸ்ம்மா... எப்படியாவது அப்பாவை சமாளிச்சிக்கோங்க. வேலை செஞ்சு, செஞ்சு ஒரே மண்ட சூடா இருக்கு. கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு வர்றேன். ப்ளீஸ்ம்மா...” ரதிதேவி அன்னையிடம் கெஞ்சி கொண்டிருந்தாள்.
‘நீ வேலையா செய்ற? சும்மா உட்கார்ந்துட்டு தானே வர்ற.’ அவளது மனசாட்சி அவளைக் காறி துப்பியதை வழிந்து கொண்டே துடைத்து கொண்டவள், வெளியில் அன்னையைப் பாவமாகப் பார்த்தாள். உண்மையில் அவள் பாவப்பட்ட ஜீவன் தான். கிருஷ்ணபிரசாத் படுத்தும் பாட்டில் அவளுக்கு மண்டை சூடானது தான் மிச்சம். அதைத் தணிக்கத் தான் பார்ட்டிக்கு செல்ல கேட்டது.
ரதிதேவியின் தோழி ஒருத்திக்கு பிறந்தநாள் விழா. அதற்குச் செல்ல தான் ரதிதேவி அன்னையிடம் கெஞ்சி கொண்டிருந்தாள்.
“அப்பாவை பத்தி தெரிஞ்சு இருந்தும் இப்படிக் கேட்கிறியே?” புவனா பயத்துடன் மகளைப் பார்த்தார்.
இருவரும் கிசுகிசுவென்று பேசி கொண்டிருக்க... அப்போது மற்ற இரு மருமகன்களும் வேலை முடித்து வந்தனர். வந்தவர்கள் விசயம் என்னவென்று கேட்க... புவனா விசயத்தைக் கூறினார்.
“மாமா, இப்போ பிசினஸ் விசயமா மும்பை கிளம்புறாங்க. நீ போயிட்டு வா ரதி.” என்று மூத்த மருமகன் மகேஷ் சொல்லவும்...
“அப்படியா மாமா?” என்ற ரதிதேவிக்கு வாயெல்லாம் பல்லானது.
“அப்படியே தான்.” மகேஷ் சிரிக்க...
குடும்பமே ரதிதேவியைப் பார்ட்டிக்கு அனுப்பி வைத்தது. ரதிதேவி சந்தோசமாகப் பார்ட்டிக்கு கிளம்பி சென்றாள்.
அங்கே சென்ற பிறகு தான் ஏன்டா இங்கே வந்தோம்? என்று ரதிதேவிக்கு ஒரு மாதிரியாய் ஆகி போனது. ஏனெனில் இளசுகளுக்கான பார்ட்டி என்பதால்... ஆடல், பாடல், மது என்று விருந்து அமர்க்களப்பட்டது.
எப்போதடா கிளம்பலாம்? என்று ரதிதேவி தவிப்புடன் அமர்ந்து இருக்கும் போது தான்... கிருஷ்ணபிரசாத் அங்கே வந்தான். அவன் விழா நாயகிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிவிட்டு, பரிசு கொடுத்துவிட்டு வந்தவன் கண்ணில் ரதிதேவி தென்பட்டாள். அவளைக் கண்டதும் அவனது விழிகளில் சுவாரசியம் தோன்றியது. அவன் நேரே அவள் முன் வந்து நின்றான். எதிர்பாராது அவனைக் கண்ட ரதிதேவி திருதிருவென விழித்தபடி எழுந்து நின்றாள்.
“நான் போகிற இடம் எல்லாம் நீ வர்றியே? என்ன, என்னை ஃபாலோ பண்றீயா?” அவன் ஒரு மாதிரி குரலில் கேட்க...
“அவள் என்னோட பிரெண்ட்.” அவள் முறைப்பாய் பதிலளித்தாள்.
“ஓஹோ...” என்றவன் பின்பு அவளைக் கண்டு கொள்ளாது மதுபானங்களைத் தேடி சென்றான்.
நேரம் செல்ல செல்ல பார்ட்டி அமர்க்களப்பட்டது. இதற்கு மேல் இங்கிருந்தால் சரி வராது என்று நினைத்த ரதிதேவி எழுந்து தனது தோழியிடம் சொல்லிவிட்டு கிளம்ப எண்ணி, அவளைத் தேடி வந்தாள். அந்தப் பெண்ணோ மற்றவர்களுடன் இணைந்து நடனமாடி கொண்டிருந்தாள். கூட்டத்தின் ஊடே சென்று தோழியிடம் விடைபெற்று வந்த ரதிதேவி கண்ணில் பட்டது அந்தக் காட்சி.
கிருஷ்ணபிரசாத்தும், ஒரு பெண்ணும் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுக்கும் காட்சி. அதைக் கண்டதும் அவள் முகத்தை அருவருப்பாகச் சுளித்தாள். அவள் வேண்டுமென்று அதைச் செய்யவில்லை. தன்னிச்சை செயல் போல் அது நடந்து முடிந்தது. ஆனால் அவளது முகச்சுளிப்பை கிருஷ்ணபிரசாத் கண்டுவிட்டான். அவன் நேரே அவளை நோக்கி வந்தான். மதுபோதையில் அவனது விழிகள் இரண்டும் சிவந்து இருந்தது.
திடுமெனத் தன் முன் வந்து நின்ற கிருஷ்ணபிரசாத்தை கண்டு ரதிதேவி திகைத்து நிற்க... அவன் அவளது கரத்தினைப் பிடித்திழுத்துக் கொண்டு அங்கே இருந்து அழைத்துச் சென்றான். அவள் அவன் கூடச் செல்ல இயலாது முரண்டு பிடித்தாள். ஆனால் அவனது இரும்பு பிடியின் முன்பு அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவன் அழைத்து வந்த இடம் சற்று இருளான ஒதுக்குப்புறம்... அவள் பயத்துடன் அவனைப் பார்த்தாள்.
அடுத்த நொடி என்ன நடந்தது என்பதை ரதிதேவி உணரும் முன் அவளது இதழ்களில் அவன் அழுத்தமாய் முத்தமிட்டு இருந்தான். அவளால் என்ன முயன்றும் அவனைத் தடுக்க முடியவில்லை. அவனை விலக்க முடியவில்லை. அந்தளவிற்கு அவனது பிடி அழுத்தமாய் இருந்தது. அவள் இயலாமையுடன் கண்ணீரோடு அவனைப் பார்த்தாள்.
திடுமெனக் கிருஷ்ணபிரசாத் அவளை விட்டு விலகி நின்றான். அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ரதிதேவி அவனை ஓங்கி அறைய எண்ணி தனது கையைத் தூக்க... அடுத்த நொடி அவன் அவளது கரத்தினை முறுக்கி வளைத்துப் பிடித்திருந்தான்.
“ச்சீய், விடுங்க என்னை...” அவள் திமிற...
அடுத்து அவள் பேச முடியாதபடி அவன் அவளது உதட்டினை பஞ்சு மிட்டாய் போன்று சுவைத்து இருந்தான். முதலில் கொடுத்த முத்தம் எல்லாம் முத்தத்தில் சேராது. இதோ இப்போது அவன் கொடுத்த முத்தம் தான் உண்மையான முத்தம். அவனது நா அவளது நாவோடு சண்டை போட்டு பின்பு சமாதானப்படுத்திப் பின்னி பிணைந்து உறவு கொண்டது. அவளுக்கு மிகுந்த அவமானமாக இருந்தது. அவளது விழிகளில் இருந்து கண்ணீர் பொலபொலவென்று வழிய தொடங்கியது,
இந்த முறை கிருஷ்ணபிரசாத் பாவம் பார்த்து அவளை விடவில்லை. அவன் இன்னும் ஆழமாய் அவளுள் புதைந்து போனான்.
தொடரும்...!!!
சனி, ஞாயிறு விடுமுறை. திங்கள் கிழமை மீண்டும் சந்திப்போம்.
கருத்துத் திரி :
அத்தியாயம் : 6
மறுநாளே ரதிதேவி கிருஷ்ணபிரசாத் முன்னே பரிதாபமாய் விழித்துக் கொண்டிருந்தாள். அவனோ அவளைக் கோபமாய் முறைத்துக் கொண்டிருந்தான். நியாயத்திற்கு அவன் நடந்து கொண்ட முறைக்கு அவள் தான் அவன் மீது கோபம் கொள்ள வேண்டும். அது தானே நியாயம். ஆனால் இங்கே எல்லாமே தலைகீழாய் நடந்து கொண்டிருந்தது. அவளுக்குள் கோபம் கனன்று கொண்டிருந்த போதும், அவள் வெளியில் அவனைப் பாவம் போல் பார்த்து வைத்தாள். இத்தனை நாட்களில் அவளுக்கு ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. அது, அவனிடம் முறைத்துக் கொண்டால் வேலைக்காகாது என்று...
நேற்று கிருஷ்ணபிரசாத் நடந்து கொண்ட முறைக்கு ரதிதேவி கோபம் கொண்டு இன்று வேலைக்கு வராது வீட்டில் படுத்து கிடந்தாள். அதுவும் அவளது தந்தை அலுவலகம் சென்ற பிறகே... குமாரசுவாமியை வைத்துக் கொண்டு அவளால் நிம்மதியாய் படுத்து கிடந்து கவலைப்படக் கூட முடியாது. ஏன், எதற்கு இந்நேரம் படுத்துக் கொண்டு இருக்கின்றாய்? என்று ஆயிரம் கேள்விகள் அவரிடம் இருந்து அம்பாய்ப் புறப்படும். அந்தத் தொல்லையைத் தவிர்க்கவே, தந்தை கிளம்பும் வரை பல்லை கடித்துக் கொண்டிருந்த ரதிதேவி அதன் பிறகு அறைக்குள் சென்று முடங்கிக் கொண்டாள்.
‘உன் அப்பாவுக்கு மட்டும் பயப்பட்டால் போதுமா? எனக்கும் நீ பயப்படணும். எனக்கும் நீ அடிமை.’ என்பது போல் அடுத்த நொடி கிருஷ்ணபிரசாத் அவளுக்கு அழைப்பு எடுத்து விட்டான். அவள் அழைப்பை எடுக்காது அலைப்பேசியைப் பார்த்துக் கொண்டிருக்க... அடுத்த நொடி அவனிடம் இருந்து ‘வாய்ஸ் மெசேஜ்’ ஒன்று வந்து அவளது அலைப்பேசியில் குதித்தது. அவள் அதைத் திறந்து பார்த்தாள்.
“மணி என்னவாகுது? இன்னும் நீ வேலைக்கு வரலை, உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க? உனக்குச் சம்பளம் யார் கொடுக்கிறது? உங்கப்பனா? நான் தான் கொடுக்கிறேன்... என்னோட பணம் எல்லாம் உன்னால் வேஸ்ட்டா போகுது. போயும் போயும் உன்னைப் போய் வேலைக்கு எடுத்தேன் பாரு. என்னைச் சொல்லணும்.’ அவனது குரல் அலைப்பேசி வழியே கோபத்தைக் கொட்ட...
“உன் கிட்ட போய் நான் வேலைக்குச் சேர்ந்தேன் பார். என்னைச் சொல்லணும்.” ரதிதேவி கத்தி சொல்லியவள் கோபத்தில் வெளிப்படையாய் தலையில் அடித்துக் கொண்டாள்.
‘எதுக்குத் தலையில் அடிச்சிக்கிற?’ அவனது குரலில் அவளது கை அப்படியே அந்தரத்தில் நின்றது. அவள் திகைப்பாய் அலைப்பேசியைப் பார்த்தாள்.
‘அதுக்குப் பதிலா என் தலையில் கல்லை தூக்கி போடு.’ அவனது குரல் கடுமையுடன் ஒலித்தது.
“இப்படியே பண்ணிட்டு இருந்தா... அதைத் தான் பண்ண போறேன்.” அவள் கோபமாய்த் தனது இரு கரங்களையும் அலைப்பேசியை அருகே கொண்டு செல்ல... அதாவது அவனது கழுத்தை இறுக்கி பிடிப்பது போல் அவள் கற்பனை செய்து கொண்டாள்.
'இங்கே ஆயிரம் வேலை குவிஞ்சு கிடக்கு. நீ என்னடான்னா ஹாயா வீட்டில் இருக்க.’ அவன் சொன்னது கேட்டு அவள் வாயில் கை வைத்தாள்.
“அச்சோ, இது உனக்கே அடுக்குமா? ஆயிரம் வேலையா? அதில் ஒண்ணைச் சொல்லு பார்ப்போம். உன்னைப் பார்க்கிறதை தவிர எனக்கு வேறு என்ன வேலை கொடுத்திருக்க? பிராடு, பிராடு...” அவள் வாயில் படபடவென்று அடித்துக் கொண்டாள்.
‘ஒழுங்கு மரியாதையா கிளம்பி வா.’ அவனது குரல் அவளுக்குக் கட்டளையிட...
“முடியாது, போடா...” அவள் கோபமாய் முறுக்கி கொண்டாள்.
‘வரலைன்னா, நான் பேச மாட்டேன். அக்ரீமெண்ட் பேப்பர் பேசும்.’ என்று அவன் அதிகாரமாய் முடித்திருக்க...
அடுத்த நொடி ரதிதேவி உடையை மாற்றிக் கொண்டு தனது ஸ்கூட்டியில் அலுவலகம் நோக்கி பறந்தாள்.
சரியாக அரை மணி நேரத்தில் ரதிதேவி கிருஷ்ணபிரசாத் முன்னே போய் நின்றாள். அவனோ அவளது சின்சியரை பாராட்டி பேசாது, அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.
‘ஐயோ, எதைப் பேசினாலும் கேட் போடுவானே. அதனால் வாயை மூடிட்டு இரு ரதி’ என்று அவள் அமைதி காத்தாள்.
“நல்லா தானே இருக்க... எதுக்கு லீவு போட்ட?” அவன் அவளை மேலிருந்து கீழாகப் பார்த்தபடி கேட்க...
“அது வந்து... ஆங், தலைவலி.” என்று அவள் சமாளிக்க...
“யார் நானா?” அவன் கேலி குரலில் கேட்க...
“ஆமா...” என்று அவள் வாய் தவறி கூற...
“என்னது?” அவன் அவளைக் கண்டு முறைத்தான்.
“இல்லை, இல்லை... டங் ஸ்லிப்பாகிருச்சு.” அவள் ஈயென்று பல்லை ஈளித்தாள்.
“மனசில் இருக்கிறது தான் வார்த்தையா வரும்.” அவன் அமர்த்தலாகச் சொல்ல...
“சார், இப்படியே பேசிக்கிட்டு இருந்தா... என்ன அர்த்தம் சார்? அதான் வந்துட்டேன்ல்ல. நான் என் வேலையைப் பார்க்கவா?” அவள் பவ்யமாகக் கேட்க...
அவன் மீண்டும் அவளை மேலும் கீழுமாக ஒரு மார்க்கமாய்ப் பார்த்துவிட்டு, “ம்...” என்ற உறுமலுடன் தனது வேலையைப் பார்க்கலானான்.
ரதிதேவி கிருஷ்ணபிரசாத் முன்னிருந்த இருக்கையில் அமர்ந்து அவனைப் பார்த்துக் கொண்டு இருந்தாள். வழக்கம் போல் அவனைப் பார்த்து கொண்டிருந்தவளின் பார்வை, அலைப்பேசியில் பேசி கொண்டிருந்தவனின் உதடுகளின் மீது விழுந்தது. நேற்று இந்த உதடுகள் தானே அவளை முத்தமிட்டது. அதைப் பற்றி நினைக்கும் போதே அவளுக்கு வியர்த்து வழிந்தது. அவள் வியர்வையைத் துடைத்துக் கொண்டே தனது பார்வையைத் தழைத்து கொண்டாள்.
“ரதி...” அவள் பார்வையைத் தன்னிடம் இருந்து விலக்கி கொண்டதை அவன் அறிந்து கொண்டானோ! அடுத்த நொடி அவன் அவளை அழைத்து விட்டான்.
“எஸ், சார்...” அவள் எழுந்து அட்டென்சில் நிற்க...
மீண்டும் அவளை ஒரு மார்க்கமாய்ப் பார்த்தவன், “இப்போ நான் ஃபோனில் டெண்டருக்கு எவ்வளவு அமவுண்ட் கோட் பண்ணினேன்.?” அவன் கேட்கவும்...
அவள் பேவென விழித்தாள். அவள் எங்கே அவன் பேசியதை கேட்டாள்? அவள் அவனை அல்லவா பார்த்து கொண்டிருந்தாள். வேலைக்குச் சேர்ந்த நாளில் இருந்து அதைத் தானே செய்து கொண்டிருக்கிறாள். இப்போது என்ன புதிதாய் கேள்விகள் எல்லாம் கேட்டே கொண்டு? அவள் புரியாது தலையைச் சொறிந்தாள்.
“ஓ மை காட்... நான் பண்ற வேலைகளை அப்சர்வ் பண்ண சொல்லித்தானே...உன்னை என் முன்னால் உட்கார சொன்னது. நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க?” அவன் கோபத்தில் கையிலிருந்த பேனாவை தூக்கி மேசை மீது எறிந்தான்.
‘ஓ, இதுக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கா? இது தெரியாம என்ன பண்ணி வச்சிருக்க ரதி?’ மனதிற்குள் புலம்பியவள் வெளியில், “இல்லை சார்.” என்று மழுப்ப...
“அப்போ இத்தனை நாளா நீ என்ன பண்ணிக்கிட்டு இருந்த?” அவன் சந்தேகமாய் அவளைப் பார்த்தான்.
“அது...” அவள் பேய் முழி முழித்தாள்.
“எனக்கு உண்மையான பதில் வேணும்.” அவன் கடுமையுடன் கேட்க...
“சும்மா பார்த்துட்டு இருந்தேன்.”
“வாட்.? இத்தனை நாளா நீ சும்மா உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்ததுக்கு... நான் சம்பளம் கொடுத்துட்டு இருந்தேனா? என்னை என்ன இளிச்சிவாயின்னு நினைச்சியா?” அவன் மேசையை ஓங்கி தட்ட... இங்கே அவளுக்கு உடல் தூக்கிவாரி போட்டது.
“சாரி சார்...” அவள் தப்பு செய்ததால் அவள் மனமுவந்து அவனிடம் மன்னிப்பு கேட்டாள். அதில் அவன் சற்று மலையிறங்கினான்.
அதன் பிறகு ரதிதேவி தவறு செய்யவில்லை. கிருஷ்ணபிரசாத்தின் செயல்களை உன்னிப்பாய் கவனிக்க ஆரம்பித்தாள்.
மாலையில் ரதிதேவி வீட்டிற்குக் கிளம்பும் போது கிருஷ்ணபிரசாத் அவளைத் தடுத்து நிறுத்தினான்.
“இப்போ ஒரு மீட்டிங் போகணும். கிளம்பு...” என்க...
“இப்பவா? வீட்டுக்கு போகணுமே.” என்று அவள் அங்கிருந்த கடிகாரத்தைப் பார்த்தாள்.
“நீ என்ன சின்னக் குழந்தையா? கரெக்ட் டைம்முக்கு வீட்டுக்கு போக... வேலைக்கு வந்தால் முன்னே பின்னே ஆகத்தான் செய்யும். இப்போ நீ வந்தால் நல்லது. இல்லைன்னா...?” அவன் முடிக்காது அவளைப் பார்த்தான். அவன் கூற வருவது புரிந்து,
“வர்றேன் சார்.” என்று அவள் கூற...
“இப்படியே அழுது வடிஞ்சிட்டு வராதே. ரெப்ரெஷ் பண்ணிட்டு வா.” அவன் சொன்னதும்... அவள் முனங்கி கொண்டே அறை கதவை நோக்கி நடந்தாள்.
கிருஷ்ணபிரசாத், ரதிதேவி, மதுரன் மூவரும் தான் கூட்டத்திற்குச் சென்றது. கூட்டம் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. கிருஷ்ணபிரசாத் கூட்டத்தில் ஆளுமையுடன் பேச... ரதிதேவி வழக்கம் போல் அவனது பேச்சினை ஆவென வாயை பிளந்து கொண்டு கேட்டு கொண்டிருந்தாள். கிருஷ்ணபிரசாத் பேச பேச மதுரன் குறிப்பு எடுத்துக் கொண்டிருந்தான். எல்லாம் நல்லபடியாக முடிந்து மூவரும் ஹாலை விட்டு வெளியில் வந்தனர்.
அதே சமயம் குமாரசுவாமி அந்த விடுதிக்குள் நுழைந்தார். ரதிதேவி தந்தையைக் கவனிக்கவில்லை. அவள் தான் மதுரனுடன் பேசியபடி நடந்து வந்து கொண்டிருந்த கிருஷ்ணபிரசாத்தை கவனித்துக் கொண்டு இருந்தாளே. குமாரசுவாமிக்கு அந்த நேரத்தில், அந்த இடத்தில் மகளை அங்குக் காணவும் அப்படியொரு கோபம். அதைவிட மகளது நாகரீக உடை அவரது ஆத்திரத்தை அதிகப்படுத்தியது.
குமாரசுவாமி நேரே மகள் முன்னே சென்றவர் சிறிதும் யோசிக்காது அவளது தலைமுடியை கொத்தாக பற்றி, “என்ன வேலை பண்ணிக்கிட்டு இருக்க? அவு... வேலை பார்க்கிறியா?” என்று கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாது கூசாது வார்த்தைகளை விட்டார்.
ரதிதேவி அதிர்ந்து போய்த் தந்தையைப் பார்த்தாள். அவரது வார்த்தைகளில் அவளது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
கிருஷண்பிரசாத் வேகமாகக் குமாரசுவாமியின் கையைப் பிடித்து இழுத்து முறுக்கி, ரதிதேவியை விலக்கினான். அதற்குள் அங்குக் கூடிய கூட்டத்தை மதுரன் கலைத்து விட்டான்.
“என்னோட பிஏ மேல் கை வைக்க நீ யாரு?” அவன் அதிகாரமாய் அவரைக் கண்டு கேட்டான்.
“நான் யாரா? நான் அவளைப் பெத்தவன். நீ யாருடா என்னைக் கேள்வி கேட்க?” குமாரசுவாமி தன்மானம் அடிப்பட்டதில் சீறிக் கொண்டு வந்தார்.
“ஆனா நீங்க அப்பா மாதிரி நடந்துக்கலையே? தேர்ட் கிரேட் ஆள் மாதிரியில்ல அசிங்கமா பேசுறீங்க?” கிருஷ்ணபிரசாத் அவரை அலட்சியமாகப் பார்த்தான்.
“ஒரு பொம்பளை புள்ளைக்கு ஹோட்டல்ல என்ன வேலை? அதுவும் இந்த நேரத்தில்?” அவர் அடங்குவதாய் இல்லை.
“தப்பு பண்ணணும்ன்னு நினைச்சா... அதை நைட் தான் பண்ணணும்ன்னு இல்லை. பகல்லயும் பண்ணலாம்.” அவன் ஒரு மாதிரியாய் அவரைப் பார்த்துக் கொண்டு கூறினான். அதைக் கேட்டு அவரது விழிகள் சுருங்கியது. அவன் நக்கலாய் அவரைப் பார்க்க... அவருக்குப் புரிந்து போனதுவோ! அவருக்கு வியர்க்க ஆரம்பித்தது. ஆனாலும் அவர் பணியவில்லை.
“ரதி என்னோட பொண்ணு. அவளைக் கண்டிக்க எனக்கு உரிமை இருக்கு.” குமாரசுவாமி விடாது வாதாட...
“நான் அவளோட முதலாளி.” கிருஷ்ணபிரசாத்தும் விடவில்லை.
“முதலாளின்னா அதை உன் ஆபிசில் வச்சிக்கோ. இப்போ அவளோட வேலை நேரம் முடிஞ்சு போச்சு.” என்று திமிராய் சொன்ன குமாரசுவாமி மகளை இழுத்துக் கொண்டு செல்ல...
ரதிதேவி கிருஷ்ணபிரசாத்தை ஏறிட்டு பார்க்க முடியாது, அவமானத்தில் தலையைக் குனிந்து கொண்டு சென்றாள். அவள் அவனைப் பார்க்கவில்லை என்றாலும்... அவளது விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருப்பதை அவனால் உணர முடிந்தது.
***********************************
மறுநாள் ரதிதேவி வீடே அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. இன்று அவளைப் பெண் பார்க்க வருகின்றனர். அதற்குத் தான் இந்தத் தடபுடல். ஆனால் அந்த மகிழ்ச்சி சிறிதுமின்றி ரதிதேவி தனது அறையில் அசோகவனத்து சீதை போன்று அமர்ந்து இருந்தாள். அவளது கன்னங்கள் இரண்டிலும் குமாரசுவாமியின் கைத்தடம் அச்சில் வார்த்தார் போன்று அழுத்தமாய்ப் பதிந்து இருந்தது. அது மட்டுமில்லை, அவளது உடல் முழுவதும் அவரது பெல்ட்டினால் உண்டான காயங்கள் இருந்தது.
நேற்று நட்சத்திர விடுதியில் இருந்து அவளை அழைத்து வந்த அவளது தந்தை அவளை அடி வெளுத்து கட்டி விட்டார். கிருஷ்ணபிரசாத் பேசிய பேச்சுக்கும் சேர்த்து அவளுக்கு அடி விழுந்தது. புவனா தடுக்கும் வழியறியாது அழுது கொண்டே இருந்தார். இரண்டு அக்காள்களும், இரண்டு மாமன்மகளும் இந்தக் கொடுமையைக் காண இயலாது தங்களது அறைக்குள் முடங்கிக் கொண்டனர்.
ரதிதேவிக்காக வீட்டினர் அனைவரும் பதறி போக... ரதிதேவி மட்டும் அழுத்தமாக நின்றிருந்தாள். அவளது விழிகளில் இருந்து கண்ணீர் மட்டும் வழிந்து கொண்டிருந்தது. தந்தை பேசிய பேச்சிற்கே அவளது உயிர் போய்விட்டது. இப்போது இருப்பது வெறும் கூடு தான். அவள் மனம் மரத்து போய் நின்றிருந்தாள். குமாரசுவாமி தனது கை வலிக்கவும் தான் அவளை அடிப்பதை நிறுத்தினார்.
அன்றைய நினைவில் இன்று தந்தையை நினைத்து மனம் வெறுத்து போய் ரதிதேவி நின்றிருந்தாள்.
“ரதி, மாப்பிள்ளை வீட்டார் வரும் நேரமாச்சு. வா...” கண்மணி தங்கையை அழைத்தாள். இளவரசி அவளுக்கு வேண்டிய பட்டுப்புடவை, நகைகளைக் கையில் வைத்திருந்தாள்.
“இதெல்லாம் வேண்டாம்க்கா.” ரதிதேவி கண்ணீர் மல்க அக்காள்களைப் பார்த்தாள்.
“அப்பா குணம் தெரிஞ்சும் இப்படிப் பேசுறியே.” என்ற கண்மணி, “நீ சீக்கிரமே கல்யாணம் கட்டி இந்த வீட்டை விட்டு போகணும்ன்னா... இதுக்கு நீ சம்மதிச்சு தான் ஆகணும்.” என்று கூற...
“வீட்டோட மாப்பிள்ளைக்கு எதுக்குக்கா இத்தனை பில்டப்?” ரதிதேவி விரக்தியாய் சிரிக்க...
“இல்லை ரதி... மாப்பிள்ளை நம்மை விட நல்ல வசதி. அதனால் இந்தத் தேவை வரவே வராது. இந்த ஜெயிலில் இருந்து நீயாவது தப்பிச்சு போயிரு.” இளவரசி தங்கையைத் தேற்றினாள்.
“எனக்கு எதுவுமே வேண்டாம்.” ரதிதேவி சோகமாய்க் கூற...
“இதை நீ அப்பா கிட்ட சொல்ல முடியுமா?” கண்மணி கேட்கவும்... ரதிதேவி அமைதியாக அலங்காரம் செய்ய அமர்ந்தாள்.
ரதிதேவிக்கு அலங்காரம் செய்து முடிக்கவும்... மாப்பிள்ளை வீட்டார் வரவும் சரியாக இருந்தது.
ரதிதேவி அமைதியாகத் தனது அறைக்குள் அமர்ந்து இருந்தாள். கண்மணியும், இளவரசியும் அவளது கன்னத்தில் இருந்த கைத்தடத்தை ஒப்பனை செய்து ஓரளவு மறைத்து இருந்தனர். ஆனாலும் அவளது முகத்தில் இருந்த சோகத்தினை மறைக்க எந்த ஒப்பனையாலும் இயலவில்லை.
சிறிது நேரத்தில் கண்மணி வந்து அவளை அழைத்துச் சென்றாள். ரதிதேவி விருப்பம் இல்லாது அக்காவுடன் சென்றாள். அவளை நோக்கி காபி கோப்பைகள் அடங்கிய தட்டை இளவரசி நீட்ட... ரதிதேவி பதுமை போன்று அதை வாங்கிக் கொண்டு நடந்தாள்.
மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் வரவேற்பறையில் அமர்ந்து இருந்தனர். ரதிதேவி யாருடைய முகத்தினையும் பாராது காபி கோப்பைகளை எல்லோருக்கும் கொடுத்துவிட்டு வந்தாள். யாரும் ஒரு வார்த்தை பேசவில்லை. தான் வந்த வேலை முடிந்ததும் ரதிதேவி கண்மணியைப் பார்க்க... கண்மணி ‘உள்ளே போ’ என்று கண்ணால் சைகை காட்டினாள். தப்பித்தோம் பிழைத்தோம் என்று ரதிதேவி தனது அறையை நோக்கி ஓடினாள்.
“நான் பொண்ணு கிட்ட பேசணும்.” கிருஷ்ணபிரசாத்தின் குரல் வரவேற்பறையின் அமைதியை கலைத்தது.
ஆம், கிருஷ்ணபிரசாத் தான் தனது பெற்றோர், தங்கைகளுடன் ரதிதேவியைப் பெண் பார்க்க வந்தது. எல்லோருக்கும் இது பெற்றோர் பார்த்து வைக்கும் ‘அரேன்ஜ்டு மேரேஜ்’. ஆனால் கிருஷ்ணபிரசாத்துக்கும், குமாரசுவாமிக்கும் மட்டுமே தெரியும், இது கிருஷ்ணபிரசாத்தின் ஏற்பாடு என்று...
இன்று காலையில் தான் கிருஷ்ணபிரசாத் ரதிதேவியைத் தான் மணக்க விரும்புவதை அவரிடம் கூற... அவர் யோசிக்கக் கூடயில்லாது உடனே மறுத்தார்.
“உங்க விருப்பமோ, உங்க சம்மதமோ எனக்குத் தேவையில்லை. ஜஸ்ட் இன்ஃபார்ம் பண்ணினேன். நீங்க சம்மதிச்சாலும் எங்க கல்யாணம் நடக்கும். இல்லைன்னாலும் நடக்கும்.” அவன் அசால்ட்டாகச் சொன்னான்.
“எப்படின்னு பார்க்கிறேன்?” குமாரசுவாமி சவால் விட்டவர் அடுத்த ஒரு மணி நேரத்தில் மகளுக்கு மணமகனை பார்த்துவிட...
கிருஷ்ணபிரசாத் அலட்டி கொள்ளாது குமாரசுவாமியை பற்றித் தான் கண்டுபிடித்த உண்மையை அவரிடம் கூறினான். அதாவது அவருக்கு இருக்கும் இன்னொரு குடும்பம் பற்றி... அதைக் கேட்டதும் மனுசன் அரண்டு போய் விட்டார். அதற்குப் பின் அவர் வாயை திறப்பார். அவர் திண்டுக்கல் பூட்டு போட்டு தனது வாயை இறுக மூடி கொண்டார். கிருஷ்ணபிரசாத் வைத்த ஆப்பு அப்படி...
அதை எல்லாம் நினைத்து பார்த்த குமாரசுவாமி கடுப்புடன் கிருஷ்ணபிரசாத்தை பார்த்தார்.
“அதுக்கு என்ன கிருஷ்? தாராளமா போய்ப் பேசு.” கோகுல்நாத் மகனிடம் கூற...
“ஏங்க, இவன் ஏதாவது பேசி இந்த வரனை தட்டிவிடப் போறான்.” சாம்பவி கணவனிடம் கிசுகிசுக்க...
“அதெல்லாம் கிருஷ் பார்த்து கொள்வான்.” கோகுல்நாத் அழுத்தமாய்க் கூறவும்... சாம்பவி வாயை மூடி கொண்டார். வெளியிடத்தில் கணவனை எதிர்த்து பேச முடியாதே.
புன்னகை முகத்துடன் செல்லும் மகனை கோகுல்நாத் யோசனையுடன் பார்த்தார். மகன் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காது பெண் பார்க்க சம்மதித்ததில் இருந்து அவருள் யோசனை ஓடி கொண்டே இருக்கிறது.
கிருஷ்ணபிரசாத் ரதிதேவி சென்ற திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அவன் பின்னே வால் பிடித்துக் கொண்டு குமாரசுவாமி வந்தார். அவன் திறந்து கிடந்த ரதிதேவியின் அறையை அடையாளம் கண்டு கொண்டு அதன் வாயிலில் நின்றான். அவனைப் பின்தொடர்ந்து வந்த குமாரசுவாமியும் அப்படியே நின்றார்.
கிருஷ்ணபிரசாத் அவரை நோக்கி திரும்பியவன், “இந்தக் கதவு வரை மட்டுமே நீங்க வர முடியும். இதற்கு மேல் இதைத் தாண்டி நான் மட்டுமே போக முடியும். இப்போ தெரியுதா, என்னோட உரிமை?” என்று நக்கல் தொனியில் கூற...
‘அடப்பாவி, நான் சொன்ன ஒரு வார்த்தைக்காகவா?’ குமாரசுவாமி திகைத்து நின்றார்.
பேச்சுச் சத்தத்தில் திரும்பி பார்த்த ரதிதேவி அங்குக் கிருஷ்ணபிரசாத் நிற்பதை கண்டு திகைத்து நின்றாள்.
“சார், நீங்க எங்கே இங்கே?” அவள் திகைத்தபடி கேட்க...
“உன் மீதான என் உரிமையைக் காட்ட வந்தேன்.” என்றவனை அவள் பேவென விழித்துப் பார்த்தாள்.
“உன்னைப் பெண் பார்க்க வந்தவன் நானே. நீ கொஞ்சம் நிமிர்ந்து பார்த்திருந்தால்... உனக்கு உண்மை தெரிந்து இருக்கும்.” என்றவனை அவள் இன்னமும் திகைப்பு நீங்காது பார்த்தாள்.
“என்ன?” அவன் அவள் கண் முன்னே சொடக்கிட... அவள் ‘ஒன்றுமில்லை’ என்பது போல் தலையசைத்தாள்.
“உங்கப்பா இங்கே பார்த்துட்டு இருக்கிறாரா?” அவன் அவளிடம் கேட்க... அவள் ஆமென்று தலையசைக்க...
அடுத்த நொடி கிருஷ்ணபிரசாத் குனிந்து ரதிதேவியின் இதழ்களைச் சிறை செய்ய... அவனது அதிரடியில் அவள் அதிர்ந்து அப்படியே நின்றாள். அவளது விழிகள் தானாக மூடி கொண்டது. அவன் அவளை மறுபக்கம் திருப்பியவன் தான் எதிர்பக்கம் வந்தான். இப்போது தனக்கு எதிரே நின்றிருந்த குமாரசுவாமியை கண்டு அவன் கேலியாய் கண்ணடிக்க... குமாரசுவாமி அதிர்ந்து போனவராய் லஜ்ஜையுற்று அங்கிருந்து வேகமாய் அகன்றார். அவரது இயலாமையைக் கண்டு அவனது விழிகள் இரண்டும் கிண்டலாய்ச் சிரித்தது.
பிறகு கிருஷ்ணபிரசாத்தின் உதடுகள் ரதிதேவியின் கன்னங்கள் இரண்டிலும் அழுத்தமாய்ப் பதிந்தது. அதன் அழுத்தம் குமாரசுவாமி அடித்த தடத்தினை மறைக்கச் செய்தது. இப்போது ரதிதேவியின் கன்னங்கள் இரண்டும் அவனது அடாவடி செயலால் செம்மையுற்றுக் காணப்பட்டது.
தொடரும்...!!!
கருத்துத் திரி :
அத்தியாயம் : 7
இன்று...
காலையில் ரதிதேவி எழுந்தவள் காலை கடன்களை முடித்துவிட்டு அறையை விட்டு வெளியில் வந்தாள். அப்போது எதிர்ப்பட்ட இளவரசி அவளைக் கண்டு,
“ம், ம்...” என்று நமட்டு சிரிப்போடு கூற...
“என்ன ம், ம்?” ரதிதேவி புரியாது அக்காவை பார்த்தாள்.
“ஒரே ரொமான்ஸ் தான் போல... எங்க முன்னாடியே இத்தனை ரொமான்ஸ் பண்றவர்... நாங்க இல்லாத நேரம் எப்படி எல்லாம் ரொமான்ஸ் பண்ணுவார்? ஆமா, கேட்கணும்ன்னு நினைச்சேன்... நேத்து எங்கேடி போனீங்க?” இளவரசி ஆர்வமாகக் கேட்டாள்.
“ப்ச், ஓடி போனேன்.” ரதிதேவி சலித்துக் கொண்டே சொல்ல...
“உன்னவர் கூடத் தானே... தாராளமா ஓடி போகலாம். அதுக்கு உனக்கு ரைட்ஸ் இருக்கு.” இளவரசி கண்சிமிட்டியபடி செல்ல...
அதைக் கண்டு ரதிதேவி தலையில் அடித்துக் கொண்டு தனது அன்னையைத் தேடி சென்றாள். புவனா காலை நேர பரபரப்பு முடிந்து மதிய உணவுக்கான வேலைகளை நிதானமாகப் பார்த்துக் கொண்டு இருந்தார். மகளைக் கண்டதும் திரும்பி பார்த்தவர்,
“காபி குடிக்கிறியா? இல்லை டிபன் எடுத்து வைக்கட்டுமா?” என்று கேட்க...
“காபி கொடுங்கம்மா... ஒரேடியா மதியமே சாப்பிட்டுக்கிறேன்.”
“சரி...” என்ற புவனா மகளுக்குக் காபி கலக்கி கொடுக்க... ரதிதேவியும் காபியை வாங்கி மெல்ல உறிஞ்சலானாள்.
“ரதி...” அவர் மெல்ல அவளை அழைக்க...
“சொல்லுங்கம்மா...” அவள் அன்னை முகத்தைப் பார்த்தாள்.
“இனி இப்படி நைட் நேரம் வெளியில் போறது எல்லாம் வேண்டாம். கல்யாணம் வரைக்கும் கட்டுப்பாடா இருக்கிறது நல்லது.” என்று அவர் சிறிது சங்கடத்துடன் கூறினார்.
“இதை யார் சொல்ல சொன்னது? அப்பாவா?” ரதிதேவி கோபத்தோடு கேட்க...
“இல்லைடி, நானா தான் சொல்றேன். உங்கப்பா காலையிலேயே கிளம்பி போயிட்டாரு. நேத்து நடந்தது பத்தி அவர் ஒரு வார்த்தை பேசலை.”
‘அவர் பேசினால்... அவரது வண்டவாளம் தண்டவாளம் ஏறிடுமே. அந்தப் பயம்... கிருஷ்ணபிரசாத்தை கண்டு பயப்படும் போதே தெரியுதே, அவரோட லட்சணம்.’ ரதிதேவி மனதிற்குள் கோபத்தில் படபடத்தாள்.
“ஒரு பெண்ணோட அம்மாவா எனக்குப் பயம், கவலை இருக்கக் கூடாதா?” புவனா வருத்தத்துடன் கேட்க...
ரதிதேவிக்கு ‘ஐயோ’வென்றாகி போனது. அவள் காபி கோப்பையைக் கீழே வைத்து விட்டு அன்னையை அணைத்து கொண்டாள். அன்னையை நினைத்து அவளது விழிகள் கசிந்தது. அவருக்குத் தெரிந்தது எல்லாம் அன்பு காட்டுவது மட்டுமே. அது தான் அவர் செய்த பிழையோ?
“ம்மா, நேத்து நைட் நான் அவர் கூடப் போகலை. தனியா தான் ஓடி போனேன்.” என்று அவள் சமாதானமாகக் கூற...
“என்னது? ஓடி போனியா?” புவனா அதிர்ந்து போய் மகளைப் பார்த்தார்.
“ஆமா, எனக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இல்லை.” அவள் அன்னையை விட்டு விலகி நின்று முகத்தைத் தொங்க போட்டுக் கொண்டே பதிலளித்தாள்.
“என்னடி இப்படிச் சொல்ற?” புவனா அதிர்ச்சியுடன் கேட்க...
“அப்பா ஒரு ரகம்ன்னா... அவர் வேற ரகம். எரியற அடுப்புக்கு பயந்து வாணலியில் விழுந்த கதை தான் என் கதை. அதனால் எனக்குக் கல்யாணம் வேண்டாம்.” அவள் அழுத்தமாய்ச் சொன்னாள்.
“மாப்பிள்ளக்கு என்னடி குறை? அவர் உங்கப்பாவையே ஆட்டி படைக்கிறாரு. அது எனக்கு வருத்தம் தான். ஆனால் எல்லாம் என் பொண்ணுக்காகத் தான் என்னும் போது... எனக்குச் சந்தோசமா தான் இருக்கு. நிச்சயம் அவர் உன்னை உள்ளங்கையில் வைத்து தாங்குவார். எனக்கு நம்பிக்கை இருக்கு.” புவனா கிருஷ்ணபிரசாத்தை பற்றிச் சிலாகித்துக் கூறினார்.
ரதிதேவி மௌனமாக இருந்தாள். கிருஷ்ணபிரசாத் ஒரு பெண் பித்தன் என்று அன்னையிடம் சொல்ல அவளுக்கு ஒரு நொடியாகாது. ஏனோ அவள் அதைச் சொல்ல விரும்பாது அமைதியானாள்.
“அவர் உனக்குச் சப்போர்ட் பண்ணி உங்கப்பாவையே எதிர்க்கிறார். அவருக்கு என்ன தலையெழுத்தா? மாமானரை பகைச்சுக்கணும்ன்னு... எல்லாம் உனக்கா தான்.”
“ப்ச், எனக்குப் பிடிக்கலைம்மா.”
“தத்து பித்துன்னு ஏதாவது உளறிக்கிட்டு இருக்காதே. நிச்சயம் பண்ணிய திருமணத்தை நிறுத்த முடியாது.” புவனா கண்டிப்புடன் கூற...
ரதிதேவி ஒன்றும் பேசாது அங்கிருந்து அகன்றாள். எப்படியும் கிருஷ்ணபிரசாத் இந்தத் திருமணத்தை நடத்தி விடுவான். எதற்கு அன்னையிடம் தர்க்கம் பண்ணி நேரத்தை வீணாக்க வேண்டும் என்றெண்ணி அவள் அமைதியாகி போனாள்.
****************************
“கிருஷ்...” கோகுல்நாத் அழைக்கவும் கிருஷ்ணபிரசாத் அவர் முன்னே வந்து நின்றான். அவனது கையில் பெரிய பார்சல் ஒன்று இருந்தது.
“இந்த மூணு டேட்டில் உனக்கு எது வசதிப்படும்ன்னு பார்த்து சொல்லு?” என்று மேலே பேச போன கோகுல்நாத்தை கை நீட்டி தடுத்தவன்... தனது கைகளில் இருந்த பார்சலை அங்கிருந்த மேசை மீது வைத்தான்.
“என்னது?” தந்தை மகனை புரியாது பார்த்தார்.
“திருமண அழைப்பிதழ்...” அவன் அலட்டி கொள்ளாது கூற...
“அப்போ நீயே டேட் முடிவு பண்ணிட்டியா?” சாம்பவி பெருங்குரலெடுத்து கத்த...
“ப்ச், டேட் முடிவு பண்ணாம எப்படி இன்விடேசன் அடிக்க முடியும்?” அவன் அலட்சியமாகப் பதிலளித்தான்.
“அப்பா, அம்மாங்கிற மரியாதை கொஞ்சமாவது உனக்கு இருக்கா? உன் இஷ்டத்துக்கு நடந்துக்கிற? பெரியவங்கன்னு நாங்க எதுக்கு இருக்கோம்?” சாம்பவி மீண்டும் கத்த...
“பவி, அமைதியா இரு.” கோகுல்நாத் குரலை உயர்த்தி மனைவியை அடக்கியவர்... அந்தப் பார்சலை பிரித்து அழைப்பிதழை எடுத்து பார்த்தார்.
“ரொம்ப அழகா இருக்கு.” என்று மகனை பார்த்து கூறிய கோகுல்நாத், “ஆசிர்வாதம் பண்ண நாங்க வரலாம் தானே?” என்று வலியுடன் கேட்க...
“விருப்பம் இருந்தால் வரலாம். இல்லைன்னா? உங்க விருப்பம்.” பட்டும் படாமல் பேசிய மகனை கண்டு அவருக்கு உள்ளம் வலித்தது. தவறு என்று தெரிந்தும் சில தவறுகளைத் தட்டி கேட்காததால் வந்த வினையோ இது?
“அது எப்படி எங்களை வர வேண்டாம்ன்னு சொல்லுவ? பெத்தவங்க நாங்க இல்லாம கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாவில் இருக்கிறியா? திருமணச் சடங்கில் ஒன்று, பெத்தவங்களுக்குப் பாத பூஜை பண்றது. அதுக்கு இந்த அப்பா, அம்மா தான் வரணும்.” சாம்பவி கர்வத்துடன் கூற...
“அப்படியொரு சடங்கு தேவையே இல்லை. என்னோட திருமணத்தில் அது கிடையவும் கிடையாது.” அவன் அழுத்தம் திருத்தமாய்க் கூறினான்.
“என்ன பேசுறான்னு பாருங்க?” சாம்பவி கணவனிடம் புகார் படிக்க...
“அவனுடைய கல்யாணம், அவனுடைய முடிவு. இதில் நான் என்ன செய்ய?” கோகுல்நாத் தோல்வியுற்ற மனதோடு வேதனையுடன் கூறினார்.
“நீங்க அவனோட அப்பாங்க...” சாம்பவி எடுத்து கூற...
“இப்பத்தான் நான் அவனுக்கு அப்பாங்கிறது உனக்குத் தெரியுதா?” கோகுல்நாத் மனைவியை ஆழ்ந்து பார்த்தார்.
“அது வந்துங்க...” சாம்பவி பதில் கூற இயலாது திணறினார்.
“கிருஷ் விருப்பம் தான் என்னுடைய விருப்பம். அவனுடைய கல்யாணம் அவனுடைய விருப்பப்படி நடக்கட்டும்.” கோகுல்நாத் உறுதியான குரலில் சொல்ல...
“அப்படின்னா என்ன அர்த்தம்? அந்தப் பெண்...?” சாம்பவி கேள்வியாக அவரைப் பார்த்தார்.
கோகுல்நாத் மகனை அர்த்தத்துடன் பார்க்க... கிருஷ்ணபிரசாத் அமைதியாக அங்கிருந்து அகன்றான்.
“நான் கேட்கிறதுக்குப் பதில் சொல்லுங்க?” சாம்பவி கணவனை உலுக்க...
“இதுக்கு எல்லாம் உன் மகன் தான் பதில் சொல்லணும். நானில்லை...” என்ற கோகுல்நாத்தும் எழுந்து சென்று விட்டார்.
சாம்பவி திக்பிரம்மை பிடித்தார் போன்று அமர்ந்து இருந்தார்.
ரதிதேவி வீட்டிற்குக் கிருஷ்ணபிரசாத் மதுரனிடம் திருமண அழைப்பிதழை கொடுத்து விட்டான். கிருஷ்ணபிரசாத் தன்னைக் கேட்காது திருமணத் தேதியை குறித்தது கண்டு குமாரசுவாமி கோபத்தில் குதித்தார். ரதிதேவி வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். இருவருமே அவளுக்குத் தலைவலியை தான் கொடுத்தனர். உடனே மதுரன் கிருஷ்ணபிரசாத்திற்கு அழைப்பை எடுத்தான்.
“சார் லைன்ல இருக்காங்க.” என்று மதுரன் தனது அலைப்பேசியைக் குமாரசுவாமியிடம் நீட்ட... அவர் வேண்டாவெறுப்பாய் அலைப்பேசியை வாங்கிக் காதில் வைத்தார்.
“என்ன மாமா? என்ன பிரச்சினை?” ஏதாவது பிரச்சினை என்றால் தான் மதுரன் அழைப்பை எடுத்து இருப்பான் என்று கிருஷ்ணபிரசாத் தானாக ஊகித்துக் கேட்டான்.
“கல்யாண தேதி முடிவு பண்ணும் முன்னே... என் கிட்ட கேட்கணுமா இல்லையா? நான் தான் பொண்ணைப் பெத்தவன்.” குமாரசுவாமி கோபத்தில் படபடத்தார்.
“நீங்க பொண்ணை மட்டுமா பெத்தீங்க?” அவன் நக்கல் குரலில் இழுக்க...
அதன் பின் குமாரசுவாமி வாயை திறப்பார்? அவர் அமைதியாகி விட்டார். வீட்டினர் எல்லோரும் அவரை ஆச்சரியமாய்ப் பார்த்தனர். ரதிதேவிக்கு மட்டும் இதன் உள்குத்து நன்றாகப் புரிந்தது. அவள் தந்தையைக் கண்டு கோபமுற்றவள் தனது அறைக்குச் சென்று விட்டாள்.
*****************************
“பேபி, ஐயம் வெயிட்டிங். கம் ஃபாஸ்ட்.” கிருஷ்ணபிரசாத் ரதிதேவி வீட்டின் வாயிலில் காரில் இருந்தபடி அவளுக்கு அழைத்துப் பேசி கொண்டிருந்தான்.
“வர்றேன், வர்றேன்...” ரதிதேவி அலைப்பேசி வழியே கத்தி கொண்டிருக்க... புவனா மகளது தலையில் பூ சூடி கொண்டிருந்தார்.
“ம்மா, போதும்மா... நேரமாச்சு.” என்றவள் அன்னையிடம் விடைபெற்று வெளியில் வந்தாள்.
ரதிதேவி வெளியில் வந்து கிருஷ்ணபிரசாத் காரிலேறி அமர்ந்தவள், “உள்ளே வந்திருக்கலாமே.” என்று கேட்க...
“வந்து...?” அவன் கேள்வியாகப் பார்த்தபடி காரை கிளப்பினான்.
“வந்து?” அவளும் கேள்வியாய் அவனைப் பார்த்தாள்.
“உங்கப்பா வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டாரு. எனக்குக் கோபம் வரும். நானும் பதிலுக்குப் பேசுவேன். பேச்சு தடிக்கும். எதுக்கு? அதான் வரலை.” அவன் விளக்கவும்... அவள் அமைதியாகி போனாள்.
“இப்போ எதுக்கு என்னை வெளியில் கூட்டிட்டு போறீங்க? நான் தான் எங்கேயும் வரலைன்னு சொன்னேனே.” அவள் கோபத்தில் சிடுசிடுத்தாள்.
“நீ சொல்லி நான் கேட்கணுமா? நான் சொல்லி தான் நீ கேட்கணும்.” அவன் கேலி செய்ய...
அவள் அவனை முறைத்து விட்டு திரும்பி கொண்டாள்.
கிருஷ்ணபிரசாத் ஒன்றும் பேசாது காரை ஓட்டியவன் அடுத்து காரை நிறுத்திய இடம் நகை கடையின் முன்னே. ரதிதேவி அவனைப் புரியாது பார்த்தபடி கீழே இறங்கினாள்.
“இங்கே எதுக்கு?”
“நகை கடைக்கு எதுக்கு வருவாங்க? நகை வாங்க தான்.” அவன் சொல்லி கொண்டே அவளை அழைத்துக் கொண்டு கடையினுள் நுழைந்தான்.
“என் கிட்ட ஏகப்பட்ட நகை இருக்கு. இப்ப எதுக்கு நகை?” ரதிதேவி மறுத்துக் கொண்டே வர...
“அதெல்லாம் உங்கப்பன் வாங்கிக் கொடுத்தது. அது எல்லாம் உனக்குத் தேவையில்லை. எல்லாத்தையும் உங்க அக்காங்க கிட்ட கொடுத்துரு.” என்றவனைக் கண்டு அவள் திகைப்பாய் பார்த்தாள். பின்பு சமாளித்துக் கொண்டு,
“நீங்க ஒண்ணும் எனக்கு வாங்கிக் கொடுக்க வேண்டாம்.” அவள் முறுக்கி கொள்ள...
“பின்னே யார் உனக்கு வாங்கிக் கொடுக்கணும்?” அவன் நாற்காலியில் அமர்ந்தபடி கேட்க...
“எதுக்கு வாங்கிக் கொடுக்கிறீங்க? இதுக்கான விலை என்ன?” அவள் கோபத்தில் இருந்தாலும் தாழ்ந்த குரலில் அவனிடம் வழக்கடித்துக் கொண்டிருந்தாள்.
கிருஷ்ணபிரசாத் கடையில் இருந்தவரிடம் நகைகளைக் கொண்டு வர சொன்னவன்... பின்பு அவள் புறம் திரும்பி அவளைக் கூர்ந்து பார்த்தான்.
“இதுக்கான விலை என்னன்னு உனக்குத் தெரியாதா? தெரியாத அளவுக்கு நீ ஒண்ணும் பேபி இல்லை.” அவன் கண்சிமிட்ட...
முதலில் புரியாது முழித்த ரதிதேவி பின்பு புரிந்து கொண்டு அவனை முறைத்து பார்த்தாள்.
“ஹா ஹா, பேபிக்கு புரிஞ்சு போச்சா...” என்று அவன் வாய்விட்டுச் சிரித்தான். அவள் அவனைக் காண பிடிக்காது திரும்பி அமர்ந்து கொண்டாள்.
அதற்குள் நகைகள் வந்துவிட... கிருஷ்ணபிரசாத் ரதிதேவியிடம் பிடித்திருக்கிறதா? என்று கூடக் கேட்கவில்லை. அவனே எல்லாவற்றையும் எடுத்தான்.
“நகைகள் போட போறது நான். என் கிட்ட கேட்கணும்ன்னு தோணலையா? அப்புறம் எதுக்கு என்ன கூட்டிட்டு வந்தீங்க?” அவள் ஆற்றாமையில் படபடக்க...
“இப்போதைக்கு நீ செல்க்ட் பண்ண போறது இல்லை. அதான் நானே செலக்ட் பண்ணிட்டேன். அப்புறம் உன்னை எதுக்குக் கூட்டிட்டு வந்தேன்னா... கொஞ்சம் வெயிட் பண்ணு, உனக்கே புரியும்.”
அவன் பேசியது அவளுக்கு என்று புரிந்தது, இன்று புரிய... அதனால் அவள் அமைதி காத்தாள்.
இறுதியாகக் கிருஷ்ணபிரசாத் ரதிதேவியை மூக்குத்தி குத்த அழைத்துச் சென்றான்.
“ஐயோ, வலிக்குமே... வேண்டாம்.” என்று அலறியவளை கண்டு,
“பேபி, இங்கே என்னைப் பார்...” என்று அவன் கூற... அவள் அவனது வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு அவனைப் பார்த்தாள்.
அவளது கண்ணோடு கண் நோக்கி, “ஜஸ்ட் எறும்பு கடிச்ச மாதிரி தான் இருக்கும். பொறுத்துக்கோ பேபி...” என்று அவன் கூற...
அவனது வார்த்தைகளில் ரதிதேவி என்ன நினைத்தாளோ... அவள் அமைதியாக அமர்ந்தாள். ஆசாரி அவளுக்கு மூக்கு குத்தி விட்டு அகன்று சென்றுவிட... ரதிதேவி வலி பொறுக்காது விழிகளை மூடி கொள்ள... அவளது விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தது.
“வலிக்குதா?” கிருஷ்ணபிரசாத்தின் மென்மையான குரலில் அவள் விழிகளைத் திறக்க...
கிருஷ்ணபிரசாத் ரதிதேவியின் தலை மீது தனது நாடியை பதித்துக் குனிந்து அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது கைவிரல்கள் அவளது நாசியில் இருந்த மூக்குத்தியை மென்மையாய் வருடியது. ஏனோ அவள் அவனைத் திகைப்பாய் பார்த்தாள்.
“என்னைப் பார்த்தது போதும். அங்கே பார்.” என்றவன் எதிரில் இருந்த சிறிய கை கண்ணாடியை காட்டினான்.
ரதிதேவி தனது முகத்தினைக் கண்ணாடியில் பார்த்தாள். அவளது நாசியில் அழகான மூக்குத்தி வீற்றிருந்தது. ஒற்றை வைரக்கல் பதித்து, அதன் கீழே தங்க முத்துக்கள் மூன்று அழகுற தொங்கியது. கிருஷ்ணபிரசாத்தின் கை விரல்கள் அந்தத் தங்க முத்துகளைச் சுழற்றி விளையாடியது.
“இது என்ன அந்தக் கால டிசைன் மாதிரி இருக்கு?” அவளது குரல் சிணுங்கலாய் ஒலித்ததுவோ!
“அந்தக் கால டிசைன் தான். ஆனா உனக்கு ரொம்ப அழகா இருக்கு.” என்றவன் குனிந்து அவளது முன்நெற்றியில் மென்மையாய் முத்தமிட்டான்.
கிருஷ்ணபிரசாத் எத்தனையோ முறை அவளுக்கு இதழ் முத்தம் கொடுத்திருக்கிறான். அதுவும் வன்மையாக... ஆனால் அது எல்லாம் செய்யாத மாயத்தை இந்த மென்மையான முத்தம் செய்தது. ரதிதேவி அவளையும் அறியாது விழிகளை மூடி கொண்டாள்.
ஆணவன் மென்மையான இதழ் ஒற்றலில் பெண்ணவளின் உடலும், உள்ளமும் சிலிர்த்தது.
தொடரும்...!!!
கருத்துத் திரி :
Currently viewing this topic 1 guest.
Recently viewed by users: Annam Meyyappan 58 minutes ago, Bhuvana 47 minutes ago, zasar 55 minutes ago.
Our newest member: Dhanalaxmi Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed