All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

SMS பொங்கல் விழா - கருத்துப் பட்டிமன்றம் & பாடல் முடிவு

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்...😍

முதல் நிகழ்ச்சியான கருத்து பட்டிமன்ற தொகுப்பு இங்கு பதியப்படும் 🎉🎊

பட்டிமன்ற விவரம் :


இன்றைய நாளில் வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப புரட்சியில் நம் வாழ்க்கை முறை பெரிதும் மாறிவிட்டது என்பது மறுக்கமுடியாத உண்மை.

அப்படியானால் இந்த வளர்ச்சியால் (தொழில்நுட்ப ) சாமானியர்களுக்கு பெரிதும் நன்மையா.. இல்லை தீமையா.. என்பதே எங்களது தலைப்பு


தலைப்பு : இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் சாமானியர்களுக்கு நன்மையே ! தீமையே !


நிகழ்ச்சியின் நடக்கும் நேரம் : காலை 10 மணி

நடுவர் : @Mithravaruna மா

ஒருங்கிணைப்பாளர் : ஸ்ரீஷா

நடைமுறை :

இந்த கருத்து பட்டிமன்றத்தில் மொத்தம் 6 பங்கேற்பாளர்கள் ,அதில் நன்மையே என்ற தலைப்பில் 3 பேரும் ,தீமையே என்ற தலைப்பில் 3 பேரும் அவர்களது கருத்துகளை பதிவார்கள்...

அதும் ஒவ்வொருவரின் கருத்தும் வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக பதியப்படும்..

விதிமுறை :

1. ஒரு பங்கேற்பாளர் அவரது கருத்தை ஒரு முறை , அதாவது அவரது முறையில் மட்டுமே பதிவு செய்ய முடியும்..

2. அவரவர் கருத்துகளை முன்பே தயார்படுத்தி வைத்திருக்க வேண்டும்..

3. நீள் கருத்தாக இல்லாது சுலபமாக புரியும் வகையில் அமைந்து இருக்க வேண்டும்...

4 .மேலும் நீங்கள் சொல்லும் கருத்து மொழி ,இன ,அரசியல், சாதி போன்ற விஷயங்களை எங்கும் விமர்சிக்க கூடாது...
எந்த ஒரு தனிப்பட்ட மனிதரையும் விமர்சிக்க க்கூடாது.
கூடுதலாக பங்கேற்பாளர்கள் புரிந்துணர்வோடு தங்களுக்குள் நட்பு பாராட்டி கொள்ள வேண்டும்...

5.உங்களது கருத்து, பட்டிமன்ற தலைப்போடு ஒத்து போக வேண்டும்..


இதுவரை பட்டிமன்ற நிகழ்சியில் பங்கேற்றவர்கள் :


1. @Samvaithi007 sis
2. @தாமரை sis
3. @Chitra Balaji sis
4. @RamyaRaj sis
5. @gnanavani sis
6. @Preethi pavi sis


கருத்துகளை பகிர இருக்கும் அனைத்து தோழிகளுக்கும் என் நன்றிகள் ,கருத்துப் பட்டிமன்றத்தில் கருத்தை வாசிக்க வரும் பார்வையாளர்களுக்கு என் நன்றிகள் மற்றும் வரவேற்புகள் 🙏🙏
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதி காலத்தில் மனிதன் இரு கற்களை உரசி, " தீ" வர வைத்தான் என்பது நான் அறிந்த முதல் தொழில்நுட்பம்...

கால வேகத்தில் ,எத்தனை எத்தனையோ தொழில்நுட்பங்கள் ,அனைத்தையும் , " now the technology is improved so much " என்ற வார்த்தையில் கடந்து விடுகிறோம்...


இந்த ஒற்றை வாக்கியத்தில் , எத்தனை எத்தனை விஷயங்கள், இந்த விஷயங்களில் சாதனையாளர்கள் உருவானாலும் , அதை தாண்டிய சாமனியர்களின் பார்வை இதில் என்ன ? எப்படி என்பதே எங்கள் தலைப்பு...


முதலில், " இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் சாமனியர்களுக்கு நன்மையே " என்ற தலைப்பில் பேச இருப்போர்

1. @Preethi pavi sis
2. @Samvaithi007 sis
3. @gnanavani sis

அதே , " இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் தீமையே " என்ற தலைப்பில் பேச இருப்போர்,

1. @Chitra Balaji sis
2. @RamyaRaj sis
3. @தாமரை sis

அனைவருக்கும் வாழ்த்துகளும் ,வணக்கங்களும்...

10 மணிக்கு மேல் உங்கள் கருத்துகளை பதியலாம்

நன்றி
ஸ்ரீஷா 😍
 
Last edited:

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முதல் கருத்து :

சகோதரி @Samvaithi007 சார்பாக



அனைவருக்கும் வணக்கம்,

இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியால் சாமனியர்களுக்கு நன்மையா!...தீமையா!!...

தொழில் நுட்ப வளர்ச்சியால் நன்மைகள் தான் ஏராளமாக இருக்கலாம்....இருக்கலாம் என்ன இருக்கு.... என் கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது நன்மைகளின் பக்கமான தராசே உயர்ந்து நிற்கிறது....

எழுத்து அறிவித்தவன் இறைவனாவன்...

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் நன்மைகளாய் நான் காண்பது சாமன்ய மக்களின் தன்னம்பிக்கையை .... இந்த சமுகத்தினால் புறந்தள்ளப்பட்டு வாழ்க்கையில் வாழ்வதற்கே என்ற நிலை மாறி செய்யும் தொழிலை அவர்களை பின்னுக்கு தள்ளி அவர்களின் உழைப்பின் மூலம் சுகமாக வாழும்... குள்ள நரிகளின் கொடுரப் பக்கங்களை புரட்டி பார்க்கிறேன்....

அவர்கள் முகம் சுளிக்காமல் செய்யும் செயலே நாம் முழு சுகாதாரமாக வாழவும்....நாசுக்காக பேசி நைச்சியமாக உலா வர உதவுகிறது என்பதை மறந்து விடுகிறோம்....

ஆனால் இன்றைய சாமனிய மக்களின் தலைமுறை எங்களுக்கான அடிப்படைகளை வேலைகளை நாங்களே செய்து பழகி விட்டோம்....எங்களுக்கான உயர்ந்த கட்டமைப்பை எங்களின் உழைப்பின் மூலம் நாங்களே தலைநிமர்ந்து உருவாக்கி தலை நிமிர்த்தி பார்க்க வைப்போம் என்னும் இந்த தன்னம்பிக்கையையும் உத்வேகத்தையும் உருவாக்கி உந்துசக்தியாக விளங்குவது இத்தொழில்நுட்பமே....

ஆழமான பள்ளத்தில் அமிழ்ந்து அவலங்களை அவர்களின் வாழ்க்கையை வர்ணங்களை வாரியிரைத்து நந்தவனமாக மாற்றி நைந்து போனவர்களின் வாழ்க்கையில் வெளிச்ச தீபத்தை வெகு அழகாக ஏற்றி வைத்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்து அவர்களின் அறிவுசுடரை இந்த பாரெல்லாம் அறிய செய்தது இந்த தொழில்நுட்பமே...

இந்த தொழில்நுட்ப உலகில் அறிவு மட்டுமே அடையலாம்....பித்தலாட்ட பெருமைகள் எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டார்கள்....

கையை தட்டி விட்டு.... முகம் சுழிந்து நின்றவர்கள் எல்லாம் கை கொடுத்து கரம் குவித்து வரவேற்க தயாராக இருப்பதே சான்று....

சல்லி வேராய் நினைத்து சாய்த்து விட துடித்தவர்களையெல்லாம் ஆணிவேராய் மாறி அசையாமல் நிற்க உதவியதே இந்த தொழில் நுட்பமே....

இன்னாருக்கு இன்ன தொழில் என்று பிரித்து பிரிவினையை விதைத்த காலம் மாறி மனதில் வரித்த தொழிலை மனம் போல் செய்திட வித்திட்டது இந்த தொழில்நுட்ப வளர்ச்சியே....

எள்ளி நகையாடிய தொழிலெல்லாம் தொழில்நுட்ப புரட்சியினால் வரையறுக்க முடியாத வானளவ வளர்ச்சியடிந்து இந்த தொழில்நுட்பமே...

கலையே தொழிலாக கொண்டவர்களை கூத்தாடிகளாக பார்த்த காலம மாறி் அண்ணார்ந்து பார்க்கும் விண்மீன்களாக மாற்றியது தொழிநுட்பமே...

பட்டணத்து பகட்டில் கிரமத்து வாழ்க்கையா என்று ஏளனமாக பார்த்தவர்கள் இன்று கிராமத்தின் ஒவ்வொரு அணுவையும் இரசிக்க ருசிக்க ஏக்கம் கொள்ள உதவியது தொழில்நுட்பமே....

இன்னும் எத்தனையே எத்தனையே உதாரணங்கள் எண்ண(ன்னி)லடங்கா இருந்தாலும் எடுத்து சொல்ல இந்த தருணம் எனக்கு போதாது.....

பார்க்கும் பார்வை நமதே....நல்லவைகளை அலசி ஆராய்ந்து அல்லவைகளை ஒதுக்கி தள்ளும் அன்னபட்சியாக மாறிட நாம் கற்றிட வேண்டும்...அதனையே நம் சந்ததியினர் கற்று தெரிந்திட உறுதுணையாய் நின்றே உதவிட வேண்டும்...

அச்சம் அகற்றி...நெஞ்சம் நிமிர்த்தி...புத்தொளி பாய்ச்சி புது தெம்புடன் நடை பயின்றிடவே நித்தமும் நம் வாழ்வில் வழி வகுத்திட்ட இந்த புரட்சியின் கைப்பற்றியே நம் வாழ்க்கையின் வளம் பெற்றிடவும்....நன்மைகளை நாடியும் தீமைகளை களைந்தும் வாழ்திடவும் இத்திருநாளில் நாம் அனைவரும் ஒன்று கூடி ஒவ்வொருவருக்கும் வாழ்த்து கூருவோமே அதுவும் தொழில்நுட்பமே


சாமனியர்களை சாதிக்க வல்லவர்களாக மட்டுமல்லாமல் சரித்திரம் படைக்க கூடியவர்களாக வும் மாற்றிய பெருமை தொழிநுட்பத்திற்கு உண்டு....

எடுத்துகாட்டாக கூற வேண்டுமென்றால்
யூ ட்டியூப் உதவியுடன் கலக்கும் my country foods aananthi....

தொலைக்காட்சி உதவியுடன் கலக்கும் நிஷா....

இன்னும் எத்தனையே கூறலாம்....
இவர்களை கூறுவதற்கான காரணம் தன் உழைப்பின் பலம் தொழில் நுட்பத்தின் துணைக்க கொண்டு இன்று உலகளாவிய புகழ் அடைந்தவர்கள்.....

நமது இளம் குழந்தைகளின் அளப்பறிய ஆற்றலை மெய்பிக்கும் வகையில் ஆன்லைனில் பரிட்சை எழுதி NASAவில் கால் பதிப்பது இதன் மகத்துவமன்றோ....

மொழி கடந்து மதம் கடந்து நாடு கடந்து இன்று தனக்கென்று தனியே ஒரு சொந்தம் உருவாக்கி வைத்திருப்பதும் இதன் உன்னதமன்றோ...இதற்கு நாமே சான்று அன்றோ....



ஏன் நமது எழுத்தாள சொந்தங்கள் தம் ஆசைகளை கனவுகளையும் நனவாக்கி கொண்டதோடு ...இதோ நமது பந்தமாக நாமெல்லாம் ஒன்றாக ...ஒரே குடும்பமாக உணர இந்த தொழில் நுட்ப தூணின் துணை கொண்டே என்பது நாம் மறுக்க முடியாத உண்மை...
எல்லைகளை கடந்து நேசிக்கவும் கற்று கொடுத்தது இதன் உச்ச பட்ச சாதனையென்றால் மறுத்துகூறுவருமுண்டோ!!!!

நட்போடு நாம் கூடிடும் இந்நான்னாளை நமக்கு அளித்ததும் இந்த தொழிநுட்பமன்றோ!!!!

முகத்தால் இல்லாது அகத்தில் இணைந்திட்ட என் அன்பு உள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த தை திருநாள் வாழ்த்துக்கள்🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷



நன்றி 🙏
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரெண்டாம் கருத்து..

சகோதரி @RamyaRaj சார்பாக இந்த பதிவு....



அனைவருக்கும் வணக்கம்....

நான் ரம்யா ராஜ்..

தொழில்நுட்ப புரட்சியில் நம் வாழ்க்கை முறை முற்றிலும் மாறிவிட்டது என்பது அசைக்க முடியாத உண்மை.. அதில் நான் எடுத்துக்கொண்டது “தீமையே”..

நம் தொழில் புரட்ச்சியில் செலுத்தும் கவனத்தை அதனால் ஏற்படும் பாதிப்புகளில் செலுத்த மறுக்கிறோம்..

ஒரு நன்மை என்றால் அதில் பல தீமைகள் இருக்கிறது.. அது இப்போது என்று இல்லை.. ஆதி காலம் தொட்டு சர்க்கரம் தான் அனைத்திற்கும் காரணமாய் இருக்கிறது.

மனிதனின் கால் தடம் பதியாத இடங்கள் மட்டுமே சுவர்க்கம் என்று சொல்கிற அளவுக்கு வந்துவிட்டது நிலை...

இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த வாழ்க்கை யாரையும் அதிகமாக பாதிக்கவில்லை. ஆனால் எப்போது மனிதன் சிந்திக்க ஆரம்பித்தானோ அப்போதிருந்தே ஐந்து பூதங்களும்க்கும் அழிவு ஆரம்பமாகிவிட்டது. முப்போகம் விளையும் நிலம் மலட்டு தன்மையாகி போனது. இனிப்பான ஊற்று நீர் இன்று இருக்கும் இடம் தெரியாமல் தூர்ந்து போய் குடிநீர் என்று விஷத்தை பணம் கொடுத்து வாங்கி குடிக்கும் நிலையாகி போனது. மூச்சு திணறல் இல்லா அருமையான காற்று இன்று பல நோய்களை கொடுத்து மனிதனின் எதிரியாகி போனது. ஆகாயம் தன் நிலையில் இருந்து மாறி மழையை தவறி பெய்வித்து புற ஊதா கதிர்களை பூமியில் ஊடுருவ செய்து இன்னும் எத்தனையோ பாதிப்புகளுக்கு காரணமாய் நிற்கிறது.. நெருப்பு.... மனிதர்கள் தங்களது சுய நலத்துக்காக வனத்தை எரித்து வனவிலங்குகளை சாகடித்து இடத்தை இது அத்தனைக்கும் காரணம் நாம் அறிவியலின் மூலம் கண்டு பிடித்த தொழில் புரட்ச்சியே ஆகும்..

நூறு பேர் செய்ய கூடிய வேலையை ஒரு இயந்திரம் செய்கிறது.. அதில் தொன்னத்தி ஒன்பது பேரும் அவர்களுடைய குடும்பமும் வறுமையின் பிடியில் சிக்கி தடுமாறி போகிறார்கள்..

தனி மனித வேலையை கூட செய்ய இயந்திரம் அத்தியாவசியமாகி விட்டது... குனிந்து நிமிர்ந்து வேலை செய்த காலம் மாறி போய் இன்று எல்லாமே இயந்திரமாயமாகி போய்விட்டது.

தேவையான உடல் உழைப்பு இல்லாமல் பொம்மை போல உடலை வளர்த்துவிட்டு காலை மாலை நடை பயிற்ச்சியும், பல கடுமையனா கருவிகளை இயக்கி உடல் எடையை குறைக்க முயர்ச்சியிலும் ஈடு பட்டு வருகிறோம்..

தேவையானவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு தேவை இல்லாததை பணம் கொடுத்து வாங்கி செய்துக்கொண்டு இருக்கிறோம்..

தேவைகள் நிறமாறி போனதிலிருந்தே அழிவுகளை பெரும்பாலும் சந்திக்க ஆரம்பித்துவிட்டோம்.

தேவை என்பது ஆசை பேராசை என்றாகி விட்டதில் இருந்து நாடுகளின் அழிவு, ஒரு தனி மனித இனத்தின் அழிவு, வனங்களின் அழிவு, காடுகளை வசிப்பிடமாக கொண்ட மிருகங்களின் அழிவு என்று எல்லாமே முற்றும் முழுதாய் மாறி போய் இன்று எல்லாமே மாறி போய் கிடைக்கிறது..

எல்லாவற்றிலும் போலிகளின் ஆக்கிரமிப்பு.. எதிலும் நேர்மை இன்றி அடுத்தவரை அடுத்தவர் எக்கவே பார்கிறார்கள்... கடவுளை கூட பணத்தை கொண்டு தரிசிக்கிறார்கள்..

பெண்களின் ஒழுக்கங்களை போலியாக சிதைத்து அதை ஊரே நம்பும் படியாக்கி மனதளவில் அவர்களை தளர வைக்கிறார்கள்.. எவ்வளவு தொலைவில் இருந்தாலும் நொடி நேரத்தில் கருத்து பரிமாற்றம்... ஐம்பது ஆண்டு சேர்ந்து வாழும் வாழ்க்கைக்குரிய உணர்வுகளை ஓரிரவில் பேசி முடித்து அடுத்த நாள் இவரோடு வாழ்க்கை தோது படாது என்று திருமணம் நிச்சயிக்கும் முன்பே முறிந்து போய்விடுகிறது..

ஐந்து வயதுக்குரிய விளையாட்டு தனங்கள் காணமல் போய் கையளவு உள்ள கருவியே உலகாமாகி போய்விட்டது.

பத்து வயதில் தெரிந்து கொள்ள கூடாததை தெரிந்து கொள்ள வைக்கிறது இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி.

தொழில்புரட்ச்சி மனிதனின் சோம்பேறி தனத்தை உச்சத்தில் கொண்டு செல்ல வைத்து அழிவுக்கு வழி வகுக்குத்து முற்றிலும் இயற்க்கைக்கு எதிராக நிற்கிறது..

பல நாட்டு மக்கள் இன்று அமைதியை தான் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்...

நிம்மதியாக ஒரு வாய் உணவை கூட சாப்பிட முடியவில்லை. அம்மா சமையலில் அவளை பற்றி பிள்ளைகள் தெரிந்துக்கொள்ளலாம். சற்று காரமாக இருந்தாள் அவள் கோவமாக இருக்கிறாள் என்றும், சுவை சற்று தூக்கலாக இருந்தால் அவள் மகிழ்வாக இருக்கிறாள் என்றும். உப்பு சுவை கூடுதலாய் இருக்கிறது என்றால் அவள் அழுகிறாள் என்று தெரிந்துக்கொள்ளலாம். ஆனால் நாம் தான் அவள் இடும் உணவை கூட என்ன நிறத்தில் இருக்கிறது என்று தெரியாமல் தொலைகாட்சியோடும் அலை பேசியோடும் குடும்பம் நடத்துகிறோமே பின் எங்கே நமக்காக உருகும் அவளை பற்றி அறிந்து கொள்ள முடியும். அப்படியும் இல்லை என்றால் கடைகளில் சாப்பிட்டு கொள்கிறேன் என்று அவள் சமைத்ததை கண்களால் கூட காணாமல் போகிறோம்..

தொழில் நுட்ப வளர்ச்சி சாமானியர்களுக்கு தீமை தான். எல்லோரும் மிகவும் கூடி விளையாடி கழிக்கும் பொழுதுகள் எல்லாமே இன்று தனித்தனியாய் போய்விட்டது.

பல்லாங்குழி, தாயம், ஆடுபுலி ஆட்டம், ஓடிபிடித்து விளையாடுவது, கிட்டி புள், குண்டு அடித்தல், கண்ணாமூச்சி என்று இப்படி ஏகப்பட்ட விளையாட்டுகள் காணமால் போய்விட்டது.

ஒரு பிரச்சனை என்றால் ஒன்னு கூடும் உணர்வு போய்விட்டது. ஜல்லிகட்டை உதாரணமா சொல்லலாம் தான். ஆனா அது மட்டுமே இங்கு எல்லாவற்றையும் சரி செய்ய முடியாது. கண்ணுக்கு தெரியாத பல பிரச்சனைகள் இங்கு நிலவி வருகிறது.

ஓடும் பேருந்தில் நடக்கும் அவலங்களுக்கு பாதி பேர் அவர்களது அலைபேசியில் தான் கவனமே தவிர ஒரு பெண் பாதிக்க படுகிறாள் என்கிற எண்ணம் யாருக்கும் வருவது இல்லை.

விபத்து நடக்கும் வேலையில் கூட விபத்துக்கு உள்ளான உயிருக்கு போராடும் உடல்களோடு தன்னை இணைத்து புகை படம் எடுத்து உடனடியாக சமுக வலை தளங்களுக்கு பதிவேற்றம் செய்து எத்தனை பேர் தன்னை கவனிக்கிறார்கள், எத்தனை பேர் அதை விரும்புகிறார்கள். யார் யாரெல்லாம் அவர்களுக்கு பதில் போடுகிறார்கள் என்கிறதில் தான் இருக்கிறது கவனம். தனக்கு முன் ஒரு உயிர் போராடுகிறது அவசர ஊர்திக்கு தகவல் சொல்ல தோணவில்லை.

இது தான் மிக பெரிய தீமை இந்த தொழில் நுட்பத்தால். அருகில் இருப்பவர்களிடம் மனம் விட்டு பேசாத இவர்கள் சமுக வலை தளங்களில் தேவையற்று தங்களை பற்றிய தகவல்களை பரிமாறி தேவையற்ற உறவுகளை உள் நுழைத்து அவமான படுகிறார்கள்.

முகம் கொடுத்து பேசி பழகுங்கள்... மதராசி மனைவி மார்களிடம் கேட்டு பாருங்கள் எது சுவர்க்கம் என்று... அடை மழை நாளில் எல்லா வசதியும் இழந்து மின் இணைப்பு அற்று அலை பேசிக்கு வேலை இல்லாத, உணவுக்கு பஞ்சம் என்கிற அந்த நிலையை தான் சொல்லுவார்கள் சுவர்க்கம் என்று.

ஒரு அறையில் இருந்தாலும் பேச்சுக்கள் அங்கு பஞ்சமாகி போய்விட்டது.. நெருங்கிய சொந்தத்திடமே முகம் கொடுத்து பேசி பலவருடங்கள் ஆனது போல தான் இருக்கிறது இந்த தொழில் நுட்பம் வளர்ச்சியில்..

இப்படி பாதிப்பை கொடுக்கும் தொழில் நுட்பங்கள் நமக்கு தேவை தானா... கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் தோழமைகளே... தொழில் நுட்பம் தேவை தான். நாம் தான் அதை பயன் படுத்த வேண்டும்.. அது நம்மை பயன்படுத்த அனுமத்திக்காதீர்கள்... வாழ்க வளமுடன்.

இதில் யாருடைய மனதும் புண் படி பேசி இருந்தாள் மன்னிக்கவும்... அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள். வாய்ப்பு கொடுத்த தோழமைகளுக்கு நன்றி...
 

Preethi pavi

Well-known member
அனைவருக்கும் வணக்கம்..

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது.அதனால் நன்மையா? தீமையா? என்றால் எனது வாதம் நன்மையே.

என்னென்ன நன்மைகளை செய்திருக்கிறது இந்த தொழில்நுட்பம் மருத்துவம்,அறிவியல்,கலை என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகள் கட்டைகள் உதவியின்றி செயற்கைக்கால்கள் பொருத்தப்பட்டு ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு பதக்கம் பெற்றனரே
தொழில்நுட்பவளர்ச்சியின் நன்மைக்கு இது ஒரு சான்றல்லவா? முன்னரெல்லாம் தங்கள் படைப்புகள்
பத்திரிக்கைகளில் பிரசுரமாகாதா? என்று பலர் ஏங்கிய படி இருக்க,
இன்றோ நமக்கென்று ஒரு வலைப்பக்கத்தை உருவாக்கி நம்
எண்ணங்களை பதிவு செய்ய முடிகிறதே?அது நன்மையல்லவோ?
விண்வெளியில் மனிதன் ஆராய்ச்சி செய்ய ஒரு கூடத்தை அமைத்தது
தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சமல்லவா? நாம் ஒரு இடத்தில் இருந்தபடியே இணையத்தில் சுயமாக பணி செய்து வருமானம் ஈட்டுகிறோம். நாம் தயாரித்த பொருட்களை இணைய சந்தையின் மூலம் நாடு விட்டு நாடுவி ற்கிறோம்,வாங்குகிறோம்.பண்டிகை காலங்களில் பயணச்சீட்டு கிடைக்காமல் அவதியுறும் இன்னல்களின்றி, பயணச்சீட்டு
முன்பதிவு செய்து சொகுசான பயணத்தை மேற்கொள்கிறோம்.

எங்கோ உலகத்தின் மூலையில் இருக்கும் நம் உறவினர்களிடம் முகம்
பார்த்து காணொலியில் கதைக்கிறோமே எதனால்? தொழில்நுட்பவளர்ச்சியின் பயனால். வீட்டிலிருந்த படியே மின்சாரம்,வாடகை,வங்கிக்கடன்கள் அனைத்தையும் செலுத்துகிறோமே எப்படி?தொழில்நுட்பம் வேலை செய்வது அப்படி.

எங்கோ,எப்பொழுதோ நமது
முன்னோர்கள் இப்படி வாழ்ந்தார்கள்,அப்படி உண்டார்கள், உடை உடுத்தினார்கள் என புகைப்பட ஆதரங்களுடன் நாம் தேடும்
நேரத்தில் கைக்குள்ளே விசயங்களை தெரிந்து கொள்கிறோம்..நாம் தேடும் தலைப்புகளில் எல்லாம் தகவல்களை வாரி வழங்குகிறது கணினி தொழில்நுட்பம். முன்பு தொலைக்காட்சியிலோ, வானொலியிலோ
ஒரு நிகழ்ச்சியை பார்க்கத் தவறிவிட்டால் மீண்டும் எப்போது
ஒளிபரப்புவார்கள் என்று காத்திருக்க வேண்டும். ஆனால் இன்று நாம் நமக்கு சவுகரியமான நேரத்தில் அந்த நிகழ்ச்சிகளை
சவுகரியமான இடத்தில் பார்த்துக் கொள்கிறோம்.

நேர்முகத்தேர்வுகள் கூட இப்பொழுதெல்லாம் இணையத்தில்
சுலபமாக நடக்கிறது. வங்கிகளில் பணம் போட,எடுக்க,புத்தகத்தை
அச்சிட என இயந்திரங்கள் நமது நேரத்தை குறைக்கிறது.

இணையத்தில் “ஹேக்கிங்” என்று ஒன்று உள்ளது போல “எத்திக்கல்
ஹேக்கிங்” என்று உள்ளது தெரியுமா? இதனை பயன்படுத்தி
இணையத்தில் நடக்கும் கிரிமினல் குற்றங்களை தடுக்கலாம்.
எனது வாதப்படி இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி நன்மையையே அளிக்கிறது என்பேன்.

“தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்ற கணியன் பூங்குன்றனார் வாக்கின் படி, தொழில்நுட்பத்தை சரியான வழியில்,சரியான செயல்களை செய்ய பயன்படுத்தினால் தொழில்நுட்பம் தரும் நன்மைகள் ஏராளம்! ஆகையால்
நன்மை வழியில் செல்வோம். நன்மைக்கு துணையிருப்போம்

நன்றி!
 
Last edited:

Chitra Balaji

Bronze Winner
அனைவருக்கும் வணக்கம் தொழமைகளே.... பொங்கல் நல்வாழ்த்துக்கள்......... நான் chitra Balaji.....
தொழில்நுட்ப வளர்ச்சியின் பாதகமான விளைவுகள்! என்னது வாதம்....

விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக நவீன சாதனங்கள் கண்டுபிடிக்கப்படுவது ஒருபுறமிருக்க, அதன் விளைவாக மனித குலத்துக்கு தீங்குகளும் பெருகிக் கொண்டே செல்கின்றன. மக்களுக்கு இன்றைய காலத்தில் பெரும் தீங்குகளை விளைவித்துக் கொண்டிருக்கும் நவீன சாதனங்களில் ஒன்றாக ‘ஸ்மாட் போன்’ மாறியிருக்கின்றது.

‘ஸ்மாட் போன்’ கைத்தொலைபேசியின் வாயிலாக இன்றைய நவீன யுகத்தில் மக்களுக்குக் கிடைக்கின்ற அனுகூலங்களைப் பார்க்கிலும் பிரதிகூலங்களே கூடுதலாக ஏற்படுவது தெரியவந்துள்ளது. ஸ்மாட்போன்களின் பயன்பாட்டினால் தற்காலத்தில் ஏற்படுகின்ற விபத்துகளும், மரணங்களும் இதற்கு சான்றாக அமைகின்றன.

வீதியில் நடந்து செல்லும் போது கைத்தொலைபேசியைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால், வீதிவிபத்துகள் பெருகியுள்ளன. பலர் காயமடைவதையும், மரணங்கள் சம்பவிப்பதையும் நாம் காண்கிறோம். கைத்தொலைபேசியைப் பயன்படுத்தியபடி தண்டவாளத்தின் மீது நடந்து சென்ற வேளையில் புகையிரதத்தால் மோதுண்டு உடல் சிதறிப் பலியாகிப் போனோரின் எண்ணிக்கையும் ஏராளம்.

இவ்வாறான மரணங்கள் துரதிர்ஷ்டமும் பரிதாபமும் மிகுந்தவையாகும். கைத்தொலைபேசிப் பாவனையில் காணப்படுகின்ற ஆபத்துகள் தொடர்பாக ஊடகங்களில் எச்சரிக்கை விளம்பரங்கள் வெளிவருகின்ற போதிலும் இவ்விடயத்தில் எதுவித பலனும் ஏற்பட்டதாக இல்லை. ‘ஸ்மாட் போன்’ பாவனையினால் விபத்துகளும் மரணங்களும் அதிகரித்தபடியே செல்கின்றன.

கல்வியறிவற்றோர் மாத்திரமன்றி நன்கு கற்றவர்களும் கூட கைத்தொலைபேசியின் பாவனையினால் அநியாயமாக உயிரை மாய்த்துக் கொள்கின்றனர் என்பதுதான் இங்கு வியப்புக்குரிய விடயம். சமீப காலமாக கைத்தொலைபேசியின் விளைவாக சம்பவித்துள்ள மரணங்களை எடுத்து நோக்கும் போது இந்த உண்மையை அறிந்து கொள்ளலாம். நீர்வீழ்ச்சி ஒன்றின் அருகே நின்றபடி ‘செல்பி’ எடுத்துக் கொண்ட வேளையில், நீருக்குள் தவறி விழுந்து வைத்தியர் ஒருவர் மரணமான சம்பவம் பதிவாகியிருக்கின்றது. ‘செல்பி ‘ மோகம் என்பது எவரையுமே விட்டு வைக்கவில்லையென்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

புதிய இடங்களுக்கு சுற்றுலா செல்வோர், விந்தைமிகு இடங்களில் நின்றபடி தங்களைப் ஒளிப்படம் எடுத்துக் கொள்ள விரும்புவது இன்று நேற்றுத் தோன்றிய அவா அல்ல. ஒளிப்படக் கருவி கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இருந்தே மனிதனைப் பீடித்துள்ள ஆசை இது. ஆனால் ஒருவரை மற்றவர் ஒளிப்படம் எடுப்பதனால் விபத்தோ மரணமோ சம்பவித்தது கிடையாது.

தன்னைத் தானே ஒளிப்படம் எடுத்துக் கொள்வதற்கான ‘ஸ்மாட்போன்’ என்ற சாதனம் அறிமுகமானதன் பின்னரே விபரீதமும் வந்து சேர்ந்தது. புகையிரதப் பாதை, உயர்ந்த கட்டடங்களின் உச்சிகள், கடலோரம், நீர்வீழ்ச்சி, மலையுச்சிகள் என்றெல்லாம் பல்வேறு இடங்களுக்கும் மனிதனின் ‘ஷெல்பி’ ஆசை பரந்து விரிந்ததனால் பலர் அநியாயமாக உயிரிழந்து போயிருக்கிறார்கள்


லண்டன் மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனைக்கு வந்த 20 மற்றும் 40 வயதுடைய இரு பெண்கள், கடந்த சில நாட்களாக தங்களது கண்பார்வை மங்கி வருவதாக மருத்துவரிடம் கவலையுடன் தெரிவித்தனர்.

இருவரிடமும் நீண்ட நேரம் விசாரித்தார் மருத்துவர். விசாரணையில் 20வயது இளம்பெண், தினமும் இரவில் தூங்கும் முன் படுத்தபடியே ஸ்மார்ட்போனில் தகவல்களை பார்ப்பது, நட்புகளுடன் அரட்டை என்று செலவிடுபவர் என்றும், 40வயது பெண்மணி தினம் அதிகாலையிலேயே, அதாவது சூரிய உதயத்துக்கு முன்பே விழித்து படுக்கையில் இருந்த நிலையிலேயே ஸ்மார்ட்போனில் செய்தி மற்றும் தகவல்களை பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளவர் என்பது தெரியவந்தது. அவர்களின் பார்வை குறைபாட்டுக்கு இதுவே காரணம் என்று உறுதி செய்தனர் மருத்துவர்கள்.

லண்டன் மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனைக்கு வந்த இந்த இரண்டு இளம்பெண்கள் மட்டுமல்ல; இன்று உலகம் முழுவதும் இந்தப் பிரச்னை விஸ்வரூபமெடுத்துள்ளது. 'ஒளி மாசு' என்ற வார்த்தை, உலகை அச்சுறுத்தும் விஷயமாக உருவெடுத்துள்ளது. தகவல் தொழில்நுட்பத்தின் அபரித வளர்ச்சி காரணமாக, இன்று ஸ்மார்ட்போன்கள் இல்லாதவர்கள் அரிதாகிவிட்டனர். நம் வேலை நேரத்தில் மட்டுமல்ல; அதைத்தாண்டியும் இன்று நாம் செல்போன்களிலேயே உழன்று வருகிறோம். இரவு நேரமும் இதற்கு விதிவிலக்கல்ல. இப்படி தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை ஆதரித்து, அதற்கு நம் கண் பார்வையை தியாகம் செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.


"நல்ல பிரகாசமான சூரிய வெளிச்சத்தை பார்த்துக்கொண்டிருந்து விட்டு, நாம் திடீரென நம் அறைக்குள் நுழையும்போது, சில நொடிகள் கண் இருண்டுவிட்டது போன்று போல் தோன்றும். நம் விழித்திரை பளீர் வெளிச்சத்தை எந்தளவுக்கு சந்திக்கின்றதோ அதே அளவுக்கு சாதாரண நிலையில் குருட்டுத் தன்மை நீடிக்கும் என்பது அறிவியல்.

அதேபோல் ஸ்மார்ட்போனின் பிரகாசமான ஸ்கீரீனை தொடர்ந்து பார்த்தபடி இருந்துவிட்டு, வெளியில் சாதாரண வெளிச்சத்தில் காட்சிகளை நாம் பார்க்கும்போது தெளிவாக தெரியாது, சில வினாடிகளுக்குப் பின்னர்தான் நம் கண்கள் இயல்பான பார்வையைப் பெற்று பொருட்களை பார்க்கநேரிடும். ஆனால் இதுவே தொடர்ந்தால் ஒருகட்டத்தில் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படும்” என்கிறார் மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவர் ஓமர் மஹ்ரு.


அண்மையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், பெற்றோரில் 27% க்கும் மேற்பட்டவர்களும், குழந்தைகளில் 50% க்கும் மேலானவர்களும் மொபைல் போனுக்கு அடிமையானவர்கள் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இன்று பல வீடுகளில், குழந்தைகளை ஒரே இடத்தில் உட்காரவைக்க கூடிய கருவியாக ஸ்மார்ட்போன்கள் மாறிவிட்டன. குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவதை தவிர்த்து, வீட்டிலேயே ஸ்மார்ட்போன்களில் பல மணிநேரம் விளையாடுவது, ரைம்ஸ் பாடல்கள் பார்க்க வைப்பது என்ற அளவுக்கு நிலைமை ஆகிவிட்டது.

இதை ஸ்மார்ட் மெத்தடாக கருதும் பெற்றோர்கள், குழந்தையின் கண்களையும் அவர்கள் உடல்நலனிலும் அக்கறைக்கொள்வதில் கொஞ்சம் ஸ்மார்ட்டாக இருந்தால் நலம்.


செல்போன்களை முழுமையாக பயன்படுத்தும் முதல்தலைமுறை நாம்தான் என்பதை பெற்றோர்கள் புரிந்துகொள்வது நலம். செல்போன்களால் ஏற்படும் தீமைகள் இன்னும் முற்றாக வெளியுலகிற்கு கொண்டுவரப்படவில்லை. ஒளி மாசைத் தொடர்ந்து செல்போன் கதிர்வீச்சுகளால் ஏற்படும் பாதிப்புகளையும் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள். இதனால் செல்போன் உபயோகத்தில் கட்டற்ற சுதந்திரத்தை கொஞ்சம் குறைத்து, கண்களை பாதுகாத்துக்கொள்வது நலம்.
கைதொலைபேசியில் குழந்தைகளின் பாதிப்பு....
மொபைல் விளையாட்டில் குழந்தைகளின் வெறித்தனம் அதிகரிக்க படிப்பு உள்பட்ட அவர்களது அன்றாட செயல்கள் அனைத்தையும் அது பாதிக்கும்

பஸ்சிலும், வகுப்பறையிலும், படுக்கை அறையிலும் மறைத்து வைத்து விளையாடும் வசதி மொபைல் போனில் இருக்கிறது. அதனால் அதற்கு அடிமையாகும் வாய்ப்பு அதிகம். கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுகள் அதில் இருந்தாலும் அந்த விளையாட்டுக்கு தேவையான உடல் சக்தியும், மனோபவமும் மொபைல் கேம்ஸ்க்கு தேவையில்லை. அதனால் அந்த விளையாட்டுகளை விளையாடும்போது உடலுக்கோ, மனதுக்கோ எந்த சக்தியும் கிடைக்கப்போவதில்லை. மாறாக அடிமையாகும் எண்ணம்தான் அதில் அதிகம் வளருகிறது.

அவர்களை அடிமைப்படுத்தும் விதத்தில்தான் ஒவ்வொரு விளையாட்டும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வெற்றிபெற வேண்டும் என்ற வெறியை உருவாக்கும் விதத்தில் அது உள்ளது. மதுவுக்கு அடிமையாவது போன்ற சூழல் இல்லை என்றாலும், சில குழந்தைகளிடம் அதைவிட மோசமான பாதிப்பையும் இந்த விளையாட்டுகள் ஏற்படுத்தியிருக்கின்றன.

விளையாட்டில் அவர்களுக்கு வெறித்தனம் அதிகரிக்க அதிகரிக்க படிப்பு உள்பட்ட அவர்களது அன்றாட செயல்கள் அனைத்தையும் அது பாதிக்கும். முழு கவனமும் விளையாட்டை நோக்கி சென்று குழந்தைகளை அடிமையாக்கும் முன்பு அவர்களை காப்பாற்றியாக வேண்டும்.

‘எனது குழந்தை சமர்த்து. அவன் ஒருபோதும் மொபைல் கேம்ஸ்க்கு அடிமையாகமாட்டான்’ என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

தவறு!. அப்படி நினைக்காதீர்கள். எவ்வளவு புத்திசாலியான குழந்தை என்றாலும் இந்த விளையாட்டுக்கு அடிமையாகிவிடும். எப்போதும் துறுதுறுவென்று இருக்கும் ‘ஹைப்பர் ஆக்டிவிட்டி’ குழந்தைகள் எளிதாக இந்த விளையாட்டுக்கு அடிமையாகிவிடுவார்கள். பெற்றோர் அருகில் இல்லாத குழந்தைகளும், பெற்றோரின் கண்காணிப்பு குறைவாக உள்ள குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்படும். மூளைப்பகுதியில் ‘டோபாமின்’ என்ற ஹார்மோன் சில குழந்தைகளுக்கு அதிகம் சுரக்கும். அவர்கள் இந்த விளையாட்டுக்கு எளிதாக அடிமையாகிவிடுவார்கள்.



‘ஆன்லைனில்’ குழந்தைகள் அதிக நேரம் விளையாடுவதும் ஆபத்துதான். அவை குழந்தைகளை தொடர்ச்சியாக விளையாடவைக்கும். பிரச்சினைக்குரிய பெரியவர்களோடு தொடர்பினை ஏற்படுத்தி புதிய தொந்தரவுகளையும் உருவாக்கும்.

உங்கள் குழந்தைகள் தினமும் 1 - 2 மணி நேரத்துக்கு மேல் மொபைலில் கேம்ஸ் விளையாடினால் உடனே அதை கட்டுப்படுத்துங்கள். ஒரு மணி நேரத்துக்கு மேல் விளையாட அனுமதிக்காதீர்கள்.

உங்கள் குழந்தை இந்த விளையாட்டுக்கு அடிமையாகி இருந்தால் உடனே விளையாட்டில் இருந்து விடுபடச்செய்ய முயற்சிக்க வேண்டாம். படிப்படியாக விளையாடும் நேரத்தின் அளவை குறைத்துக்கொண்டே, அதற்கு பதிலாக நல்ல பொழுதுபோக்குகளில் ஈடுபட ஏற்பாடு செய்யுங்கள். ‘விளையாட்டில் இருந்து விலகி, முழு நேரமும் படிக்க வேண்டும்’ என்பதுபோல் வற்புறுத்த வேண்டாம். ‘அந்த விளையாட்டில் இருந்து விடுபட்டால் பார்க், பீச், நல்ல சினிமாக்களுக்கு கூட்டி செல்வேன். நீச்சல் போன்ற பயிற்சிகளுக்கு அனுமதிப்பேன்’ என்று கூறி, குழந்தைகளை ஊக்குவியுங்கள்.

உங்கள் குழந்தை மொபைல் கேம்ஸ்களுக்கு அடிமையாகிவிட்டால் குழந்தைக்கு மட்டுமல்ல, பெற்றோர்களுக்கும் கவுன்சலிங் அவசியம். அதற்காக மனோதத்துவ நிபுணர்களின் ஆலோசனையை பெறவேண்டும்....
ஒழுக்க விழுமியங்களையும் கலாசார பண்பாடுகளையும் முகநூல் துடைத்தெறிந்து கொண்டிருப்பதையிட்டு சமூக ஆர்வலர்களும் கவலைப்படுவதைக் காண முடியவில்லை.

‘ஸ்மாட்போன்’ பாவனை மனிதனுக்குத் தீங்கு தருவதாக இன்றைய இளைஞர்கள் மத்தியில் எவராவது பேசுவது முடியாத காரியம். அக்கருத்தை ஏற்றுக் கொள்வதற்கு இளைஞர், யுவதிகள் தயாராக இல்லை.

சாதாரண தர வகுப்பு மாணவருக்கே அவர்களது பெற்றோர் ‘ஸ்மாட்போன்’ சாதனத்தை கட்டாயமாக வாங்கிக் கொடுக்க வேண்டுமென்ற நிலைமை இப்போது உருவாகி விட்டது. அதனை பெற்றோரிடம் வலிந்து கேட்கும்படியாக இன்றைய எமது சமூகக் கட்டமைப்பு மாற்றம் பெற்றுவிட்டதென்பது புரிகின்றது.

‘ஸ்மாட்போன்’ சாதனத்துக்குள் இன்றைய இளைய தலைமுறையினருக்குத் தேவையான பயனுள்ள ஏராளமான விடயங்கள் பொதிந்துள்ளன. அதேசமயம் இளைய தலைமுறையினரின் எதிர்காலத்தைச் சீரழிக்கக் கூடிய ஏராளமான ஆபத்துகள் அதற்குள் மறைந்துள்ளன. மனித சமுதாயத்துக்கு ஆக்கத்தைத் தந்துள்ள அறிவியல் வளர்ச்சியானது, அழிவுக்கும் வழிகோலும் போது யாரால்தான் அதனைத் தடுத்து நிறுத்த முடியும்? நன்றி....
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சகோதரி @gnanavani சார்பாக இந்த பதிவு,


ஐந்தாம் கருத்து :


இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் சாமணியருக்கு நன்மையே:



சாமானியர்கள் நா யாரு வேற யாரு கையில செல் ஓட இருக்க நம்ம எல்லாரும் தான் . செல் ஆங்கில சொல் அதுக்கு தமிழ்ல கைபேசி , அலைபேசி னு சொல்லுவோம் , எப்பவுமே கையிலேயே வச்சிகிட்டு அத பாது தான் எல்லாரும் வீணா போரங்கனு நமக்கு நாமே சொல்லுகிறோம் . ஆனா அது இல்லனா நமக்கு ஒரு நாள் இல்ல ஒருமணி நேரம் கூட ஓடாது சும்மா இல்ல காலையில எழுந்திரிக்க அலாரம் என்னென்ன வேல இருக்குனு ஞாபக படுத்தநு எல்லாத்துக்கும் செல் தான் அது மட்டுமா சமைக்க தெரியாதவங்க சமைக்க வரய தெரியாதவங்க வரைய எல்லாத்துக்கும் செல் வேண்டி இருக்கு . அதுல கூட புது புது விசியத்த சேத்து வருசத்துக்கு நாலு மொபைல் launch panranga .

சரி செல் தான்னு இல்லாம வேற என்ன தொழில் நுட்பம்னு பாத்தா விவசாயம் பெருசா எதுவும் இல்ல, நம்ம வீட்டுலயே பயிர் செய்ய என்னென்ன செய்யணும்னு இன்றைய தொழில்நுட்பம் சொல்லிதருது, ரசாயனம் இல்லாத காய்கறிகள், மண் இல்லாத செடி வளர்புநு எல்லாமே சொல்லி தர தான் கூகிள் இருக்கே, அதுபடி செஞ்சா தோட்டாக்களை தெரியாதுன்னு யாரையும் சொல்ல முடியாத நிலை , உறகுழி மறுசுழற்சி எல்லாமே சொல்லி தர வீட்ல பெரியவங்கலுக்கு எங்க அவங்களுக்கு நேரம் இருக்கு ...

அவங்களுக்கு பதில் தான் எல்லாத்துக்கும் தொழில்நுட்பம் இருக்கே வேலைக்கு போற தாய்மார்கள் தாய்ப்பால கூட பதபடுத்தி குழந்தைக்கு கொடுக்க முடியும்...

இப்ப பொண்ணுங்களுக்கு பாதுகாப்புக்கு புது புது செயலி (app) எல்லாமே நல்லதுக்கு தான செயலி நதும் தான் ஞாபகம் வருது பொண்ணுங்க மாதவிடாய் நாள் கூட அப்ல சேவ் பன்னா அதுவே மாசா மாசம் ஞாபக படுதுமாம்.


இப்ப நம்ம வாழ்கையே தொழில் நுட்பத்த சார்ந்து தான் இருக்கு.படிக்கிற பசங்க ஏன் எப்ப பார்த்தாலும், செல் ஓட இருக்காங்க அதுல கூட படிக்கிறாங்க வாட்ஸ்அப் யூடியூப் எல்லாமே படிக்க அவ்ளோ பயன் படுது அது மட்டுமா யாருக்கோ ?எங்கயோ ஏதாவது தேவனா தானா ?
பதில் தர செல் இருக்கு , உண்ம தான் பல பிரச்சினையும் இருக்கு ..


ஆனா எல்லா இடத்துலயும் நன்மையை மட்டும் பாக்குற நம்மக்கு செல்நு ஓடனே ஏன் கேட்டது மட்டும் ஞாபகம் வருது இதுல நம்ம அண்ணபரவைய போல இருப்போமே தீதும் நன்றும் பிறர்தர வாரா நு சும்மாவா சொன்னாங்க நால்லத யோசிச்சா நல்லது தான் நடக்குமாம் நான் சொல்ல பெரியவங்க சொள்ளிருக்கங்க . எனக்கு கூட தொழில் நுட்பம் னு சொன்னதும் செல் தான் தோணுது அதுக்கு மட்டுமா இப்பலாம் சப்பாத்தி கு மாவு பிசைய கூட மெஷின் இருக்கு.கற்பனா சக்தி இப்ப உள்ள பசங்களுக்கு அதிகமா இருக்க தொழில்நுட்பம் தான காரணமாக இருக்கமுடியும்.


இவ்வளவு ஏன் இப்பகூட என்னோட கருத்த எல்லாருக்கும் தெரிவிக்க இணையம்னு ஒன்னு இருக்குரரதுநால தான் நானும் சரியோ தப்போ தோனுறதெல்லாம் சொல்லிகிட்டே இருக்கேன் என்ன சரியா சொல்ல நெனகிறத சொன்னானு தான் தெரியல , நல்லதே நினைப்போம் நல்லது தான் நடக்கும் .


நன்றி
Gnanavani
 

தாமரை

தாமரை
நடுவர் மித்ரவருணா@செல்வி மா அவர்களுக்கு வணக்கம்.

சக கருத்துப் பகிர்வாளர்களுக்கு என் வந்தனம். இந்த பட்டிமன்றத்தை வடிவமைத்து எஸ் எம் எஸ் தளத்தின் பொங்கல் கொண்டாட்ட விழாவினை சிறப்பாக நடத்தும் ஸ்ரீஷா, வரதுளசி, நவ்யா, சரண்யா மற்றும் குழுவினருககு அன்பும் வாழ்த்துகளும்..


தொழில்நுட்பம்
ஆக்கமா அழிவா.. நன்மையா தீமையா.. இதில் தீமையே எனும் தலைப்பின் கீழ் பதிவிடுகிறேன்.
இந்தக் கேள்வி ஆதி காலம் தொட்டு இருந்திட்டே தான் இருக்கு.. தொழில் நுட்ப வளர்ச்சிகள் எல்லாமே.. மனிதர்களின் நன்மைக்கு கண்டுபிடிக்கப்பட்டது அப்படின்னு சொல்றது விட வசதிக்காக கண்டுபிடிக்கப்பட்டதுன்னு சொல்லலாம்..


கூட்டைப் பார்த்தான் ..

வீடு கட்டினான்..


பறவையப் பாத்தான்..

தானும் பறக்க நினைத்தான்..


மீனப் பாத்தான் தானும் நீந்த.. மிதக்க நினைத்தான்..


மொத்தத்தில பூமிய மட்டுமில்ல.. தன் கண்ணுல பட்டதெல்லாம் தனக்கு வேணும்னு மனிதனுக்கு ஆசை பேராசை.. அதற்கு தான் தொழில் நுட்பங்கள்..


அதே போல போட்டி, பொறாமை, சண்டை இதுதான் மனிதனின் அடிப்படை குணம். நம்ம இப்போ வசதிக்காக பயன்படுத்தும் அனைத்து பொருட்களும்.. மனிதன் போர் புரிய கண்டு பிடிச்சதுதான். தொலைதொடர்பு சாதனங்கள்.. வாகனங்கள்.. உபயோகப் பொருட்கள் எல்லாமும். அவை நன்மை தர்றது விட தீமைகளைத் தான் அதிகமா கொடுக்கின்றன.. என்னதான் இருந்தாலும் போர்க் கருவிகள் தானே.


வாகனங்கள்.. நேரத்தை மிச்சம் பண்ணிவிட்டன. தூரத்தை குறைத்து விட்டன.. உலகமே ஒரு சிறிய கிராமமா சுருங்கிடுச்சு. சரிதான். ஆனா.. மனிதனின் ஆடம்பரம் அதிகமாகிடுச்சு. பணத்தேவை.. சுயநலம், ஆசைகள் அதிகமாகிடுச்சு. வாகனங்களால் சுற்றுச்சூழலுக்கு எவ்ளோ சீர்கேடு.. சொல்லவே தேவையில்ல சின்ன குழந்தை கூட சொல்லும். உலகஉருண்டைய இயந்திரங்கள் மற்றும் வாகனச் சூட்டில போட்டு வறுத்துட்டு இருக்கோம்.. அது பற்றி தெரிந்தும் கவலைப் பட்டும் அதே தான் செய்யறோம்.. நாளை பற்றி என்ன கவலை.. இன்று வாழ்ந்தால் போதும்னு எண்ணம்.. இதைக் கொடுத்தது தொழில்நுட்பங்கள் எனும் போதை..


அலைபேசிகள்.. அவற்றின் தீமைகள் கணக்கில் அடங்காது.. தகவல் தொடர்பு சாதனமா நம்ம கையில் கொடுக்கப் பட்டது.. இன்று கேமராவா.. செய்திகள் அறிவதா, அனுப்புவதா பல வேலைகள் செய்யுது.. அதே நேரம் தேவையற்ற ஆபத்தான விஷயங்களையும் கைக்குள்ளயே வச்சிருக்கோம்னு பதற்றத்தையும் கொடுக்குது.


செல்ஃபீ எடுக்க உயிரைக் கொடுத்த எவ்வளவு இளைஞர்கள்.. பாலியல் பற்றிய ஆபத்தான முறைகேடான தகவல்களால் திசைமாறும் இளைய தலைமுறை.. ஏன்.. இளம் பெண்களின் உடலுக்கும் உயிருக்கும் ஆபத்து விளைவித்த நிர்பயா..ப்ரியங்கா ரெட்டி.. பொள்ளாச்சி சம்பவங்கள் பற்றி ஆராய்ச்சிக்குப் போனா அதுல அடிப்படை அலைபேசியா தான் இருக்கும்..


இது போல பல தொழில் நுட்பங்களும் நன்மை விட தீமை தான் அதிகம்.


இயந்திரங்கள் உடலுழைப்பைக் குறைத்து நோயாளிகளா மாற்றுது.. நோயாளிகளை வளர்க்குது.. மருத்துவமனைகள் மருந்துகள் எனும் பெயரில் தொழில்நுடபங்கள் அவங்கள நோயாளிகளாகவே தக்க வச்சுக்குது..


இயற்கையை அழித்து செயற்கை.. செயற்கையின் பிடியில் இருந்து விடுபட்டு.. இயற்கை மீட்டு எடுக்கவே இயலாத நிலைக்கு இந்த தொழில் நுட்பங்கள் நம்மை தள்ளிக் கொண்டு போகின்றன.. என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.


மொத்தத்தில் தொழில்நுட்பங்கள் நமக்கு தருவது.. நன்மையை விட அதிகமாக தீமைகள் தான் என்று கூறி விடைபெற்றுக் கொள்கிறேன்.


இவ்விழாவில் என்னையும் பங்கு கொள்ள அன்போடு ஏற்றுக் கொண்ட அனைவருக்கும் என் நன்றிகள்.வணக்கம்.

அன்புடன்,
தாமரை...🙏
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நடுவரின் ( @Mithravaruna மா )
முடிவுரை நாளை வழங்கப்படும்,

நிகழ்ச்சியில் பங்கேற்க அனைவருக்கும் மிக்க நன்றி...

கருத்துகள் , கோணங்கள் மாறுபடினும்,அனைவரது முயற்சியும் அருமை ...

இனி பார்வையாளர்கள் உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்


நன்றி
ஸ்ரீஷா😍
 
Top