எதை நான் கேட்பின் உனையே தருவாய்
இந்த கதையில் பயணித்தது ஒரு இனிமையான அனுபவம் என்று சொன்னால் அது மிகையாகாது. முதலில் இந்த தலைப்பே என்னை ஈர்த்துவிட்டது. அதே போல் கதையும் தொடக்கம் முதல் இறுதி வரை சுவாரசியம் மிக்கதாகவே இருந்தது. மதுரையில் தொடங்கி மீண்டும் மதுரையில் அழகரின் தரிசனத்தோடு முடித்திருந்தது மனநிறைவை தந்தது.
என்னை கவர்ந்தவை
பெரும்பாலான கதைகளில் நாயகனும் நாயகியும் எதிர் எதிர் எண்ணங்கள் உடையவர்களாகவே இருப்பர். ஆனால் இதில் நீங்கள் எதிர் எதிர் துருவம் தான் ஈர்க்கும் என்னும் விதியை மாற்றி ஒத்த குணம் உடையவர்களுக்கும் ஈர்ப்பு ஏற்படும் என்று அழகாக காட்டிய விதம் அருமை
மூன்று ஜோடிகளுக்கும் சரிவிகிதத்தில் முக்கியத்துவம் கொடுத்தது
அன்பான குடும்பத்தோடு பயணிக்க வைத்தது. அண்ணன் - தம்பிகள், அக்காள் - தங்கைகள் ஒற்றுமை மற்றும் பாசத்தை காட்டிய விதம்
காளிராஜ் - வசுந்தரா அன்பான அப்பா, அம்மாவாக தங்கள் பெண்களையும் மாப்பிள்ளையையும் வழிநடத்தினார்கள் என்றால் சங்கர் - நண்பனின் துரோகத்தால் அனைத்தையும் இழந்த போதிலும் நற்பண்புகளை இழக்காமல் அப்பண்புகளை தனயன்களுக்கும் கொடுத்து விட்டே சென்றிருக்கிறார்
கல்யாண வைபோகத்தில் திருமண அழைப்பிதழ் தொடங்கி சடங்கு, சம்பிரதாயங்கள் அதற்குரிய விளக்கங்கள், மணமேடை அலங்காரங்கள், மாப்பிள்ளை - பெண் உடை வர்ணனை, பெண்ணின் அலங்காரம் என ஒன்றையும் விட்டுவிடாமல், அவர்கள் திருமணத்தை நான் அருகில் இருந்து பார்த்தது போல் ஒரு அனுபவம்
மதுரையையும் ஸ்விஸையும் சுற்றி காட்டிய விதம். மதுரை நகர் சிறப்பை அழகாக காட்டியிருந்தீர்கள்
குறிப்பாக ஸ்விஸ் பயணதின் போது உங்கள் வர்ணனை அனைத்தும் அற்புதம்
இரயில் பயணம், ஷுரிச் ஏரியில் படகு சவாரி, ரோப் கார் பயணம், தோட்டம், சுவர் சித்திரங்கள், சிங்கத்தின் சிற்பம், பனிக்கட்டிகளில் விளையாடியது என அனைத்தும் மறக்க முடியாதது. புகைப்படங்களும் கூடுதல் சிறப்பு சேர்த்தது. அங்குள்ள உணவு வகைகளையும் நீங்கள் விட்டு வைக்கவில்லை. மொத்தத்தில் உங்கள் வர்ணனையே என்னையும் அவர்களோடு ஸ்விஸ் பயணத்தை அனுபவிக்க வைத்து விட்டது
மூன்று ஜோடிகளும் ஒவ்வொரு வகையில் ஈர்த்தாலும், கார்த்தி - சைத்து இவர்கள் செய்த சேட்டைகளை மறக்கவே முடியாது. ஒன்றிரண்டு காட்சிகளை தவிர்த்து அனைத்து காட்சிகளிலும் சிரிக்க வைத்தவர்கள்
கார்த்தி - இப்படியொரு தம்பி நமக்கும் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியவன். சேட்டை ஒருபக்கம் என்றாலும் இன்னொரு புறம் அவனின் முதிர்ச்சியான பேச்சாலும் செயலாலும் பெரிதும் கவர்ந்தவன்
பெரிய முற்கள் சின்ன முற்களை போட்டி போட்டு துரத்தி விளையாடியதில், வெற்றி பரிசாக சூரியன் மலர்ந்திருக்க
என பொழுது புலர்வதை குறிக்கும் இந்த வரிகள் என்னை மிகவும் ஈர்த்தவை
இணைப்பு தகவல்கள் - நான் அறியா பல தகவல்களை என்னிடம் சேர்த்தவை
நெகிழ்வு பலகை தொடங்கி வம்மி நிறம், பட்டியலட்டை, நிரலாக்கம், ஆளரி அட்டை, இயங்கலை, ......... சுயமி வரை நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கில சொற்களுக்கு அழகான தமிழ் வார்த்தையை கொண்டு சேர்த்தது
விக்ரமின் வலி
இந்த இடத்திற்கு தகுதியானவன் நீ,
இது உன்னுடைய இடம்.
ஆனால் உனக்கில்லை.
என அவனின் மொத்த வலிகளையும் மூன்று வரிகளில் ஆழமாக உணர்த்திய விதத்தை பாராட்டாமல் இருக்க முடியாது
அடுத்து என்னை பெரிதும் கவர்ந்த உங்கள் கவிதை வரிகளை எப்படி மறக்க முடியும்........
தந்தை
அவர் !
உடல் தந்த உயிர்.
உயிர் காத்த மனிதன்
மனிதம் சொல்லி தந்த ஆத்மா
ஆத்மார்த்தமாக நேசிக்க கற்று தந்த
அவர்.. !
எங்கள் தந்தை
........
நோய் பிணி என்றால் அன்னையை
தேட வேண்டுமா?
அவர் தான் எங்களுக்கு
தாயுமானவனாக
இருக்கிறா(ந்தா)ரே !
என முடியும் வரிகள்
விக்ரம் - அதிதி
அதீதங்களும்
அடிபட்டு போகும்
அன்பனின் ஆர்ப்பரிக்கும்
காதல் முன்!
கார்த்தி - சைத்து
விழிநீர் தாங்காத நான்
உனக்கான கண்ணீரிலும் ஆனந்தம் கொண்டு நிற்கிறேன்
..........................
அனைத்தும் வேண்டுமெனும் நேரம்
அத்தனையும் தந்து
ஆதி அந்தமாய் நின்றாய்
இப்பொழுது வேண்டுமென கேட்கிறேன்
உன் கவனத்தை...
உன் சுவாசத்தை...
உன் காதலை...
உன் தீவிரத்தை...
என முடியும் வரிகள்
...........
இனி ஒரு பிறவியென்றாலும்
உன்னில் நான்.. நான் மட்டுமே
காதலாகவும் உன் உடமையாகவும்
என முடியும் வரிகள்
......
சிக்கி தவிக்கும் என்னை, அன்பால்
வதம் செய்யும் வசியக்காரன் நீ..!
என முடியும் வரிகள்
கெளதம் - சைத்து
என்னை பிடிவாத காதல்
செய்யடி பெண்ணே.. !
உன் காதலின் சுவாசத்தில்,
நொடி நொடியும் புதிதாய்
உயிர்த்தெழுந்து காதல் மோட்சம்
பெறுகிறேன்...
கடற்கரை மணலில் அவன் கரம்
பிடித்து நடக்க ஆசைப்படும் அதே
பழைய கால காதல் பெண் தானே நான்!
........
கண்ணீர் அவனுக்காக எனும் போதும்,
அதன் முதல் துளியை அவன் உதட்டின்
ஈரத்தில் மறந்திட துடிக்கும்
பேராசைக்காரி தானே நான் !
......
காதல் பித்தம் தலைக்கேற்ற
செய்கிறாய் அன்பே... !
உனது நொடி நொடி ரசிப்பும், சிறு சிறு
லயிப்பும் எனக்காக மட்டுமாக
இருந்திட கேட்கும் காதல் பித்தம்
தலைக்கேற்றுகிறாய் என் ஆருயிரே.. !
என முடியும் வரிகள்
.......
ஆழமாய் பதிந்து போன உன் நெற்றி
பொட்டின் அழுத்தத்தில் சொல்லிவிடு
இனி நான் மட்டுமே அங்கு தஞ்சம்
கொள்வேனென....
என முடியும் வரிகள்..
மொத்தமாய், மிக மொத்தமாய்
உன் பார்வையில் என்னை
ஆயுள் கைதியாக சிறையெடு !
வாழ்ந்து பார்க்கிறேன் உன் விழிகளுடனாவது!
..........
நான் நீயாக
நீ என்பது நானாக
நாம் என்பது மட்டும் வாழ்வாக
எதை நான் கேட்பின் உனையே தருவாய்
என் மொத்த பிரதிபலிப்பே... !
இவ்வாறு உங்கள் அனைத்து கவிதை வரிகளையும் குறிப்பிட்டு சொல்லிக்கொண்டே போகலாம்......
உங்கள் கவிதைகள் அனைத்தையும் தொகுத்து போட்டாலே கதையும் அதனுள் அடங்கிவிடும். எளிமையான அந்த வரிகளிலேயே அவர்களின் உணர்வுகளை நாம் புரிந்து கொள்ளலாம்.....
*********
விக்ரம் - அதிதி ஒவ்வொரு நொடியையும் வீணாக்காமல் காதலில் மூழ்கி திளைத்தவர்கள் என்று சொல்லலாம் ( காதல் பறவைகள் ) ஊடல் ஏற்பட்ட போதும் அதை விரைவில் சரி செய்து கொண்டவர்கள். விட்டுக்கொடுத்தல், மற்றவரின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தல், தவறு செய்தால் உடனே தங்கள் இணையிடம் சரணடைவது என இவர்கள் புரிந்துணர்வால் மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாகவே திகழ்ந்தனர்
கார்த்தி - சைத்து திருமணம் இப்போது வேண்டாம் என்ற ஒத்த கருத்தினால் இணைந்தவர்கள். வாழ்க்கையை இலகுவாக கடப்பவர்கள். விளையாட்டு பிள்ளைகள் போல் தெரிந்தாலும் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள அன்பும், அக்கறையும் அளப்பரியது. ஒரு சின்ன பிரிவால் அவர்கள் அறியாமல் உள்ளத்தில் புகுந்திருந்த காதலை உணர்ந்தவர்கள். அதன்பின் பிரிவு என்ற வார்த்தையே அறியாதவர்கள் (இணைபிரியா பறவைகள்) அவர்கள் சேட்டைகளை போல் அவர்களின் காதலையும் நம்மை இரசிக்க வைத்தவர்கள்
கெளதம் - உதயா அழுத்தமான தம்பதிகள். உள்ளம் முழுதும் நிறைந்த தீவிர காதலை தங்கள் இணையிடம் வெளிப்படுத்தாமல் தங்களுக்குள் சிக்கலை ஏற்படுத்தி கொண்டவர்கள். அவர்கள் வார்த்தையில் சொல்லாத அவர்கள் காதலை உங்கள் கவிதை வரிகள் சொல்லிவிடும். மீண்டும் உங்கள் கவிதை வரிகளை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. பிடித்தம், பேராசை, ஆழமான அன்பு, பித்தம் என அவர்கள் சொல்லா காதலை உங்கள் வரிகள் சொல்லிவிட்டது
உணர்வுகளை அடக்கிவைத்து அது ஒரு நாள் வெடித்து சிதறி அவர்களை பிரித்து வைத்து இன்னும் அவர்களை காதல் பித்தம் கொள்ள வைத்தது எனலாம். அதன்பின்னே அவர்கள் உணர்வுகளை இணையிடம் வெளிப்படுத்தி தெளிவு அடைந்தார்கள்
( காதல் தீவிரவாதிகள் இவர்கள் ) சொல்லா காதல் செல்லாது என்பதற்கும் இவர்கள் உதாரணம்.
" எதை நான் கேட்பின் உனையே தருவாய் " இந்த தலைப்பு இவர்களுக்கே பெரிதும் பொருந்தும் என்று நினைக்கிறேன். முந்தைய ஒரு பதிவில் நீங்கள் போட்ட புகைப்படமும் அதன் வாசகமும் இவர்கள் இருவருக்குமே பொருந்தும் என நினைக்கிறேன். ( இவை இரண்டிலும் என் புரிதல் சரியா இல்லை தவறா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும் சிஸ் )