All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
இரண்டு நாட்களாய் வேலைக்கார அம்மாளைக் காணவில்லை. கடைசியாக புகழ் வீட்டிற்கு வந்த அன்று இரவு கண்டவரை மறு நாள் முதல் காணவே இல்லை. ஆனால் புகழோ இரண்டு நாட்களாய் வீட்டில் தான் தங்கினான். ஏதாவது வேலை விஷயமாய் வெளியே செல்வான். ஆனால் இராத் தங்கலுக்கு விட்டிற்கு வந்தான். வைதேகிக்கு என்ன நடக்கிறது? ஏன் இந்த திடீர் மாற்றம்? என்றே தெரியவில்லை.
புகழிடம் தயங்கித் தயங்கி வேலைக்காரம்மாளைப் பற்றிக் கேட்டாள்.
“அது வந்து வைதேகி… அவங்க கிராமத்துல ஏதோ திருவிழாவாம்… அதுக்காக போறேன்னாங்க… நானும் வைதேகியை இந்த நிலைமையில விட்டுட்டு போறீங்களேன்னன்… ஆனாலும் போனும்னு ஒரே புடியா நின்னாங்க… போறேங்கறாவங்களை புடிச்சு வைக்கவா முடியும்?? அனுப்பிட்டேன்…”
“எங்கிட்ட அப்படி எதுவும் அவங்க சொல்ல இல்லையே….”
“நீ அசதியா தூங்கி கிட்டு இருந்த வைதேகி… உன்னை எழுப்ப வேணாம்னு நான் தான் சொன்னேன்…”
“எப்ப திரும்பி வருவாங்க???”
“திருவிழா முடிஞ்சதும் வருவேன்னு சொன்னாங்க…”
“ஓஹ்ஹ்ஹ்…” கவலையுடன் திரும்பினாள் வைதேகி.
அவளுக்கு பெரும் கவலையாய் இருந்தது. தாய் போல் இருந்தவர் சொல்லாமல் கொள்ளாமல் போனதைத் தான் அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தங்கள் ஊர்த் திருவிழாவைப் பற்றி ஒரு வார்த்தை கூட அவர் வைதேகியிடம் தெரிவித்திருக்கவும் இல்லை.
இப்படித்தான் வைதேகிக்கு மணமான புதிதில் அன்னாம்மாள் என ஒருவர் வேலைக்கு இருந்தார். அவருடன் வைதேகி சற்று இணக்கமாய் வரும் போது திடீரென வேலையை விட்டுப் போய் விட்டார். பின் வந்த இவரும் அதையே செய்தார். வைதேகிக்குத் தான் திடீர் திடீரென நிறம் மாறும் மனிதர்களைப் பற்றி விளங்க முடியாமல் இருந்தது.
ஆறுதலுக்கு இருந்த ஒரே ஒரு பற்றுக் கோடும் அறுந்து விட்டதைப் போல் ஆயாசமாய் இருந்தது. மன அலைப்புறுதலைக் குறைப்பதற்க்காய் கோய்லுக்குச் செல்ல முடிவெடுத்துத் தயாரானாள்.
வைதேகி பூக்கூடையுடன் வருவதைக் கண்டு,
“என்ன வைதேகி? இந்த வெயில் நேரத்துல எங்க கிளம்பிட்ட???” எனக் கேட்டான் புகழ்.
“உனக்கு என்ன தான் ஆச்சு… இந்த வெயில் நேரத்துலல கோவில்லுக்கு போறங்கற??”
“மனசு சரியில்லை… அதான் கொஞ்சம் கோவிலுக்கு போனா நல்லா இருக்கும்..” அவள் கூற,
“மனசு சரியில்லைன்னா கோவிலுக்கு போவியா???” இதென்ன புதுப்பழக்கம்???” அதை விட நான் பக்கத்துல இருக்கும் போதும் உனக்கு ஏன் மனசு சரியில்லாம போகுது???” புகழ் கிண்டலாய் வினவினான்,
வைதேகியின் மனதிற்கோ ‘நீ இருப்பது தான் பிரச்சனை’ எனக் கத்த வேண்டும் போல் இருந்தது. அவள் எதுவும் பேசாமல் நிர்மலமாய் அவன் முகத்தையே பார்த்த படி நின்றாள். அவளது தோற்றம் தான் இப்போது போக வேண்டும் எனச் சொல்லாமல் சொல்வது போல் இருந்தது.
வைதேகியை ஒரு வித வியப்புடன் நோக்கின அவனது விழிகள். அவளது இந்தப் பார்வை அவனுக்கு புதிது. சற்று யோசித்தவன்,
“கொஞ்சம் இரு… தனிய போகாத… நானும் வர்றன்…” என்று அறைக்குள் நுழையவும், அவன் வரவிற்காய் அமைதியாய்க் காத்திருந்தாள் அவள்.
இருவரும் இணைந்து கோவிலுக்குச் சென்றனர்.
வைதேகி நேரே அம்மனின் சந்நிதியின் முன் போய் நின்றாள். கருவறையில் வீற்றிருந்த அந்த உலகாளும் தாயிடம் ஆயிரம் கேள்விகள் கேட்க வேண்டும் போலிருந்தது. ஆனாலும் கலங்கிய விழிகளுடன் மாரியம்மனை நோக்கிய படி நின்றிருந்தாள். அவளின் அருகே தான் புகழும் நின்றிருந்தான்.
“அடடே!! என்ன வைதேகி ரொம்ப நாளைக்கப்பறம் உன் ஆம்படையானோட வந்திருக்க.. அதுவும் இந்நேரத்துல???” கோயில் அர்ச்சகர் வினவ,
“அது ஆத்தாவைப் பார்க்கணும் போல இருந்துது சாமி… கோவிலுக்கு புறப்பட்டேன்… அவரும் வாரேன்னாரு….”
“ஓஹ்ஹ்… மாசமாகிறதோன்னோ.. அதான் மனசு கண்டபடி அலை பாயுது உனக்கு….” என்றவர், “ஆத்துக்காரியை தனிய விட பிள்ளையாண்டானுக்கு மனசு வரல்லை போல….” என அர்ச்சகர் சிரிக்க,
“சாமி… உங்க பொண்ணுக்கு கல்யாணம்னு சொன்னீங்க… சரி பத்திரிகை வைப்பீங்கன்னு பார்த்து பார்த்து என் கண்ணு பூத்து போனது தான் மிச்சம். இன்னும் பத்திரிகை வரவே இல்லை???” என வைதேகி அர்ச்சகரை நக்கல் செய்தாள்.
“உனக்கில்லாததா வைதேகி…. பத்திரிகை வைக்கும் போது உனக்கு கட்டாயம் வைக்கறன்…. உன்னை மாதிரி மகாலட்சுமி… நிறைஞ்ச பொண்ணு….. குழந்தை மனசுக்காரி என் பொண்ணை வாழ்த்தினா அவ நூறு வருஷம் நல்லா வாழ்வா…” என்ற அர்ச்சகர், வைதேகியின் கையிலிருந்த பூக்கூடையை வாங்கிக் கொண்டு, “வழக்கம் போல உன் ஆம்படையான் பெயருல தானே அர்ச்சனை??” என்ற படி கர்ப்பக்கிரகத்தினுள் நுழைந்தார்.
இவர்களின் சம்பாஷணையில் நுழையாது புகழ் வைதேகியையே புதிதாய் பார்த்த படி நின்றான் புகழ். வைதேகி இப்படி வெள்ளந்தியாய் கலகலத்து பேசி அவன் பார்த்தே இல்லையே. இந்த வைதேகி அவனுக்கு புதிதாய் இருந்தாள்.
கலகலத்து பேசும் வைதேகி… தான் கூறியதற்கு எதிராய் தன் செய்கையாலேயே மறுப்பைத் தெரிவித்த வைதேகி என இன்று அவன் கண்ட அவளது இரு புதிய பரிமாணங்கள் அவனுக்கு அடிவயிற்றில் அமிலத்தை சுரக்கச் செய்தன. அவனது மனதில் இனம்புரியா ஒரு கலக்கம்.
பூஜை முடியவும் வைதேகி அமைதியாய் போய் அம்மனை நோக்கிய படி ஒரு தூணில் சாய்ந்து கண் மூடி அமர்ந்து விட்டாள்.
புகழும் அவளின் அருகிலேயே அமர்ந்திருக்க, திடீரென்று ஒரு குரல்,
“ஐயா!!! உங்களை எங்க எல்லாம் தேடுறது?… தலைவர் அவசரமா உங்களைக் கூட்டியாந்து வரச் சொன்னார்….” என் பதற்றத்துடன் கூறினான்.
வைதேகி கண்களைத் திறந்து புகழைப் பார்க்க, அவனோ ஒருவித எரிச்சலான முகபாவத்துடன்,
“சரி வாறன்… நீ போ…”
“கையோட கூட்டியாந்து வரச் சொன்னாருங்க… அங்க வீட்டுல அம்மா..…” என்று அவன் தொடரும் முன்,
“சரி சரி வாறன்…” என அவனின் பேச்சை இடையிட்டவன், வைதேகியை தயக்கமாய் ஏறிட்டான். முன்பென்றால் உடனே கிளம்பியிருப்பான். ஆனால் இன்று அவன் கண்ட அவளது புதிய பரிமாணம் அவனிடம் தானாக ஒரு தயக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.
வைதேகியின் முகமோ எதுவித உணர்வுகளையும் பிரதிபலிக்கவில்லை. அந்த அடியாள் பேசும் போதே புகழ் கிளம்பப் போகிறான் என அவளுக்கு விளங்கி விட்டது.
“நான் கிளம்பறான் வைதேகி… நீ பத்திரமா வீட்டுக்கு போவ தானே…??” என புகழ் தயக்கமாய் கேட்க,
வைதகியோ ஆம் என மேலும் கீழுமாய் தலையை மட்டும் ஆட்டினாள். அதற்கு மேல் புகழ் அங்கு இருக்கவில்லை. கிளம்பி விட்டான்.
அவன் போவதையே பார்த்திருந்தவள், அவனது தலை தன் கண்பார்வையில் இருந்து மறையவும், ஒரு ஏக்கப் பெருமூச்சொன்றினை வெளியிட்டாள்.
பின் திரும்பி தன்னப் பார்த்தபடியிருந்த அம்மனை நோக்கியபடி, பின்னிருந்த தூணில் தலையைச் சாய்த்து மீண்டும் கண்களை மூடினாள்.
அப்போது மீண்டும் ஒரு குரல். நன்கு பரீட்சயமான குரல். ஆவலுடன் திரும்பினாள். அங்கே நின்றிருந்தார் அந்த வேலைக்காரம்மாள்.
“வைதேகி!!!” என அவரது குரல் தளதளக்க,
“என்னம்மா?? அவரை மாதிரி நீங்களும் சொல்லாமக் கொள்ளாம போயிட்டீங்க??? எனக்குன்னு என் கூட நிரந்தரமா யாருமே இருக்க மாட்டீங்களா??? உங்களை என் அம்மா மாதிரி நினைச்சிருக்கன் தெரியுமா??” வைதேகி பேசிக் கொண்டே செல்ல, அவரும் கலங்கிய விழிகளுடன் அவளைப் பார்த்தபடியே நின்றார். அவரின் வாய் அவளிடம் ஏதோ சொல்ல விழைந்து துடித்துக் கொண்டே இருந்தது. ஆனாலும் அமைதியாய் அவளைப் பார்த்தவர். அவளின் தலை மேல் கை வைத்து வாஞ்சையாய்த் தடவினார்.
வணக்கம் மக்காஸ்!!!
தாபங்களே!! ரூபங்களாய்!!!
அத்தியாயம் 15
இந்த எபில ஒரு பாட்டு வரும்... அந்தப்பாட்டு இந்த லிங்க்ல இருக்கு பாருங்க... அப்போ புரியும் நான் ஏன் பர்ட்டிகுலரா இந்தப்பாட்டு சூஸ் பண்ணேன்னு.... நன்றி... எஞ்சாய்ய்ய்ய்ய்ய்....
கலங்கிய விழிகளுடன் வாஞ்சையாய் தன் தலை கோதியவரை புரியாத பார்வை பார்த்தாள் வைதேகி.
“என்னம்மா??? நான் பாட்டுக்கு கேட்டுகிட்டே இருக்கன்… சொல்லாமக் கொள்ளாம எங்க போனீங்க?? ஊர்ல திருவிழான்னு சொன்னீங்கன்னு அவர் சொன்னார்… என் கிட்ட ஒரு வார்த்தை கூட அதைப் பத்தி சொல்லவே இல்லை. சொன்னா போக விடமாட்டேன்னு நினைச்சிட்டீங்களா??? சொல்லியிருந்தா நானும் உங்க கூட வந்திருப்பேனே… இங்க நான் மட்டும் தனியா இருந்து என்ன செய்ய???” பட படவெனப் பேசினாள். வைதேகிக்கு அவர் மீது இருந்த வருத்தம் எல்லாம் அவரைக் கண்ட மாத்திரத்திலேயே காணாமற் போயிருந்தது.
“ஊர்ல திருவிழான்னு யார் சொன்னா?? உன் புருஷனா???”
“ஆமா….”
“அப்போ அவர் சொன்னதை நீ நம்பிட்டியா???”
“ஆமா… ரெண்டு நாளா நீங்க ஆளையே காணலை…. அதுவும் இல்லாம இதுல போய் அவர் எதுக்கும்மா பொய் சொல்லப் போறார்??? அவரும் என்னைப் பார்த்துக்க யாரும் இல்லைன்னு வேலை எல்லாம் விட்டுப் போட்டு என் கூடத் தான் இருந்தார். இந்த நேரத்துல என்னை தனியா விட மனசில்லாம என் கூட கோவிலுக்கும் வந்தார். இப்ப தான் ஒருத்தர் வந்து தலைவர் வீட்டுல ஏதோ பிரச்சனையாம்… வரச் சொன்னார்னு அவரைக் கூட்டுக் கொண்டு போறான்.”
பேசிக் கொண்டே இருந்த வைதேகியை கவலையாய் நோக்கினார் அவர். சில நாள் கணவன தனக்காக தன்னுடன் இருந்தவுடன் இத்தனை நாள் அவன் செய்ததை எல்லாம் மறந்து விட்டு அவனைத் தாங்கிப் பேசும் வைதேகியை பாவமாய்ப் பார்த்தார்.
அவரின் பார்வையின் அர்த்தம் புரியாமல், “என்னம்மா??? ஏதோ இதுக்கு முன்னை என்ன பார்த்ததே இல்லையா?? இப்படிப் பார்க்குறீங்க???” எனக் கேட்கவும்,
“ஹ்ம்ம்ம்ம்….. உன் மனசு பால் மாதிரிம்மா… அதுல நான் விஷத்தை கலக்க விரும்பலை… ஒரு பொஞ்சாதியா நீ உன் புருஷனை நம்பறது சரி…. ஆனா ஒரு பொண்ணா நீ இப்படி வெள்ளந்தியா இருக்கக் கூடாது வைதேகி…” என்றவும்,
“அவர் இப்படித்தான்னு தெரியும். தெரிஞ்சும் அவர் கிட்ட என்ன கேள்வி கேட்கச் சொல்றீங்க??” சலித்துக் கொண்டாள் வைதேகி.
“இப்படி வீட்டுல தங்காம அப்படி என்ன வேலைன்னு எப்பயாவது உன் புருஷனை நீ கேள்வி கேட்டிருக்கியா???”
“ம்ம்ம்… ஒரு வாட்டி கேட்டேனே…. ஏதோ அரசியல்னார்… லாபம்னார்… அவர் என்னைக் கட்டினதே அந்த அரசியல் லாபத்துக்காகத் தானே…” பெருமூச்சினை விட்டாள் வைதேகி.
“அந்த அரசியல் லாபத்தால உன் வாழ்க்கையே நஷ்டமாகப் போகுதுன்னு தெரியுமா வைதேகி உனக்கு???”
“இது வரைக்கும் என் வாழ்க்கை என்ன லாபத்துலயாம்மா போச்சு???” வைதேகி கேட்க,
“ஏன் இப்படி விட்டேற்றியா இருக்க வைதேகி??” அவர் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
“பின்ன எப்படிம்மா இருக்க?? எனக்குன்னு ஒரு வாழ்க்கை எப்பவுமே இருந்ததில்லை… ஏதோ காலம் போற போக்குல அதுவும் போகுது….”
“காலம் முழுக்க இப்படியே இருக்கப் போறியா வைதேகி??”
“இதுவரைக்கும் இப்படித் தான் இருந்தேன்….” என்றவும்,
“அப்போ இனி மேல???” அவர் கேள்வியாய் நோக்க,
“இனி மேல் தான் எனக்குன்னு என் குழந்தை இருக்கே….” ஒற்றைக்கை வயிற்றினைப் பற்றியிருக்க நம்பிக்கையாய் வந்தது அவளது வார்த்தைகள். நம்பிக்கை ஒளி அவள் கண்களில் வெள்ளமாய்ப் பாய்ந்தது.
அந்த ஒளி அவரையும் மகிழ்விக்க, “நீ இப்படி நம்பிக்கையா பேசுறதைப் பார்க்க எனக்கும் சந்தோஷமா இருக்கு வைதேகி…. ஆனால் நான் உன் கூட பேசுறதுக்காக இரண்டு நாளா காத்திருக்கேன்னு உனக்கு தெரியுமா??”
“என் கிட்ட பேசறதுக்காக ஏன் ரெண்டு நாளா காத்திருந்தீங்க?? வீடுக்கே வந்திருக்கலாமே…”
“அங்க தான் உன் புருஷன் இருந்தாரே….”
“அவர் இருந்தா என்ன?? நீங்க வழக்கம் போல வந்திருக்கலாமே…” என்றவும் அவர் சிரித்தார்.
“நான் அன்னைக்கு சந்தையில இருந்து வந்து உன்கிட்ட பேசினதை உன் புருஷன் கேட்டுட்டார் வைதேகி… உன் மனசை நான் கெடுக்கப் பார்க்குறனாம்னு என்னை வேலையை விட்டு போகச் சொல்லிட்டார்…”
வைதேகி அதிர்ச்சியுடன் “ஆனா அவர் என் கிட்ட வேற மாதிரி….” அவள் முடிக்கும் முன்,
“இனி மேல் உன் கூட பேசினால் அவர் என்னை அணுகற விதம் பயங்கரமா இருக்கும்னார்.. ஆனாலும் உன் கிட்ட சில உண்மைகளைச் சொல்லலாம்னு தான் நான் ஒளிஞ்சி மறைஞ்சு வந்தன்… ஆனா இப்போ வேணாம்னு தோணுது…”
“அதென்னம்மா உண்மை???” வைதேகி புரியாமல் கேட்க,
“அது…” யோசித்தவர், “இப்ப வேணாம்… எல்லாத்துக்கும் காலம் வரும்… அப்ப நீ எடுக்கற முடிவுல தான் எல்லாமே தங்கியிருக்கு….”
“புரியும் வைதேகி… உனக்குப் புரியுற காலம் ரொம்ப தொலைவுல இல்லை… ஆனா ஒன்னை நினைவு வைச்சுக் கொள்… நான் உன்னை என் பொண்ணு மாதிரித்தான் நினைக்குறேன்… எப்பயாவது… எந்த சன்ந்தர்ப்பத்துலயாவது நீ நிர்கதியா நிக்கறதா உணர்ந்தா அப்போ நீ நினைச்சுக் கொள் நீ தனிய இல்லை. உனக்காக நான் இருக்கேன்….” என்றவர் கூறவும் வைதேகியோ கண் கலங்கி நின்றாள்.
‘உனக்காக நான் இருக்கிறேன்’ எனும் வார்த்தை அவளுக்காய் ஒருவர் வாயிலிருந்து முதன் முறை கேட்கிறாள். அது அவளை உணர்ச்சிக் கடலில் தத்தளிக்கச் செய்தது. எட்டி அவரை அணைத்துக் கொண்டாள். நன்றி கூடச் சொல்லமுடியாது நின்றவளின் தலையைக் கோதி, அவளின் கைகளினுள் ஒரு காகித்தைத் திணித்தார்.
வைதேகி அந்தக் காகிதத்தைப் பிரித்துப் பார்க்க அதில் ஒரு தொலைபேசி இலக்கம் எழுதியிருந்தது.
“உனக்கு என் உதவி தேவைப்படும் போது இந்த நம்பருக்கு கால் பண்ணு வைதேகி… இப்ப நான் வர்றேன்…” என்றவர், வைதேகி பார்த்திருக்கும் போதே ஆலயத்தின் பின்பக்கமாய் சென்று விட்டார்.
வைதேகியோ மந்திரித்து விட்டதைப் போல அந்த காகிதத்தைப் பார்த்திருந்தவள், திடீரென நடப்பிற்கு வந்து யோசனையுடன் அந்தக் காகிதத்தை தன் மாராப்பினுள் மறைத்துக் கொண்டாள்.
திரும்பி தன்னைப் பார்த்தபடியிருந்த அம்மனை நோக்கி, ‘ஆத்தா என் வாழ்க்கையில என்ன நடக்குது ஏது நடக்குதுன்னு எனக்கு எதுவுமே புரியலை… இந்தம்மாவை அவரே வேலையை விட்டு நிறுத்திட்டு எதுக்காக என் கிட்ட பொய் சொல்லனும்??? எதுவுமே புரியலைம்மா... ஏதோ காலம் போற போக்குல போய்க் கிட்டு இருக்கன்… நீ தான்மா எனக்கும் என் குழந்தைக்கும் துணையாக இருக்கணும் தாயி…’ என மானசீகமாய் வேண்டிக் கொண்டவள் மனத்தாங்கலுடன் வீட்டிற்குப் புறப்பட்டுச் சென்றாள்.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.