ராதைகேற்ற ராவணன்...! - எழுத்தரசி ஸ்ரீ கலாவின் எதிர் மறை காட்டும் நேர் நிலைக் காவியம்!
இனிய தோழி,
இந்த கருத்து, கதை முடியும் வேளையில் வித்தியாசமாக கொடுக்க ஆசை. அதுவும் கட்டாயம் கொடுப்பேன். இது நம் தாமரையின் ஆசைக்காக இடையிலே உரை நடையில் கொடுக்க வந்தேன் தோழி. இது உங்கள் எழுத்தில் மயங்கிய மனத்தின் விமர்சனம் என்ற பெருமையுடன் சொல்ல விழைகிறேன்.
ராதைக்கேற்ற ராவணன், எதிர்மறை நிலையில் நின்று நேர்மறையாய் ஒரு செயலை நிலை நிறுத்த வந்த காவியம் இது என்பது திண்ணம்.
கிருஷ்ணன் என்றதும் குழல் ஊதும் கண்ணனும், காதல் கனியும் காருண்யமும் காட்டும் புன்னகை முகமும் மட்டுமே என்றும் மனதில் இசை பாடும் நேரத்தில், அர்ஜுனன் அவன் என்று வில்லவன் குறி தப்பாத வேகத்தில், வியூகம் உடைக்கும் காண்டீபன் அவன், மன்மத ராகத்தில் மகத்துவம் சொன்ன காதல் மன்னனும் அவனே என்று பெயர் பாடி, ராதைக்கேற்ற ராவணன் என்றால், இவன் காதலில் கிறுக்கன் என்றும் கொள்ளலாமோ? சீதையைக் கவர்ந்ததைத் தவிர ராவண நீதியில் எல்லாம் நேர்மையின் இலக்கணம் என்றால், இவன் எப்படிப்பட்டவன்? என்ற பெரிய கேள்வியுடன் ஆரம்பித்த கதையில்...
ராதேகிருஷ்ணா என்ற மோகனராகம் பாடுபவள் யார் என்ற கேள்வியில் ஆரம்பித்த நடையில் திகைத்து, தேடித் தேடி அனுதினம் கண்ணனை ஆலாபனை செய்பவள், திருமதி கிருஷ்ணன் என்று சொல்லி, திருப்பிய பாதையில், ராதையவள் பேதையாய், பரிதாபமாய் வாழ்க்கையில் சறுக்கிய பத்தினியவள் என்ற வழக்குடன், பழிக்குப் பழி என பலியாடாய் வீழ்ந்தாலும், நித்திய சிந்தையில் ராதையின் கிருஷ்ணன் நிர்மல சித்தனாய், சித்தம் கலக்கிய அழகில்...
ராவணனவன் ராமனாய், ஏக பத்தினி விரதனாய், அவதார புருஷனாய், அரங்கத்தில் அமர, அரங்கனின் நாயகி அவள், படி தாண்டிய பத்தினியாய், சித்தினி அவள் சித்தம் சிதைந்த மகள் ஊனப்பட்டு நிற்க, கை கொண்ட ராமனவன் நிற்கதியாய், மனம் குமுற, ருத்திர தாண்டவத்தில் சக்தியை அழித்த சிவனாய் ராவண அவதாரம் எடுக்க,
தப்பிப் பிழைத்த மகள், உயிர் காக்கும் உத்தமியாய், உரிமையுள்ள பத்தினியாய், மறுபடியும் உயிர்க்க, உணர்வில்லா கோமகனை, உயிர்ப்பிக்க ராதை அவள் தன்னையே கொடுக்க, பழியாய் ஏற்றாலும் பத்தினி அவள் பகுமானம் காத்து விட்ட ராமன் அவன் ஜெயிக்க, காவிய இலக்கணம் கருத்தாய் கவர்ந்தாலும்,
உற்றவரே, மற்றவராய் உயிர் குடித்த கரு கண்டு, ராவணன் அரிதாரம், ராதையே அவன் தாரம் என்பதனை விளக்க, ராமன் அவன் அவதாரம் என்பதனை முழக்க, ஊர்கூடி உத்தமியை, சதிபதியாய் கைபிடித்து, ஆண் என்ற கம்பீரம் காத்துவிட்ட காதல் மகன்.
அன்பனாய், அண்ணனாய், தனயனாய், நண்பனாய், பித்தனாய், அரக்கனாய், நக்கீரனாய், பண்பாளனாய், பகுமானனாய் நவரூபம் காட்டி நின்ற எழிலில், கிருஷ்ணனின் பாவங்கள் கம்பீர கானங்களாய் ஒலிக்க,
பாவப்பட்ட பத்தினியவள், பலியாடாய் மாற்றிய வழக்கில்... ராவணனவன் ருத்திர தாண்டவம் காண ஆவலுடன் காத்திருக்கும் வேளையிலே...
மற்றைய பாத்திரப் படைப்பில், மனதை புரட்டிய நடையின் சிறப்பில் எழுத்தரசியின் கம்பீரம்... காணக் காண பேரழகு!
கண்ணன் அவன் கம்பீரம் என்றால்
காருண்யத்தில் மன்னன் என்றும்,
பாண்டியன் அவன் காதல் பித்தன் என்றால்
பரிணாமத்தில் வித்தகன் என்றும்,
அன்பும் பண்பும் எங்கும் எப்போதும் வழுவாத எழுத்தரசியின் நடையில் சிலிர்த்து, லயித்து ரசித்து, மனம் தடுமாறிய நிலையில், மையக் கருவை எதிர் நோக்கிக் காத்திருக்கும் ஒரு அன்புத் தோழியின் மனமார்ந்த விமர்சனம் இது.
வாழ்த்துக்கள் தோழி, நன்றி.