All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘கண்ணில் கனவாக நீ!!!’ கதை திரி

Status
Not open for further replies.

Sasimukesh

Administrator
சர்வேஸ்வரன் பால்கனியில் அமர்ந்தபடி ஏதோ யோசனையில் வானத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தான். அப்போது அவனது அறை கதவு தட்டும் சத்தம் கேட்டது. கதவு தட்டும் ஒலியிலேயே வந்திருப்பது யாரென்று அவனுக்குத் தெரிந்தது. அவன் புன்னகையுடன், "கம்மின்..." என்று உரக்க குரல் கொடுக்க... அடுத்த நொடி உதயரேகா விரைந்து வந்து அவன் முன் மூச்சிரைக்க நின்றாள்.



"ஓடி வந்தியா?" அவன் அவளைக் கண்டு கேட்க... அவள் பேச இயலாது ஆமென்று தலையை ஆட்ட... அவன் அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளிடம் நீட்டினான்.



"இல்லை வேண்டாம்." என்றவள் அவன் முன்னே மண்டியிட்டு அமர்ந்தாள். அவன் இரு விழிகளைச் சுருக்கியபடி அவளையே பார்த்திருந்தான்.



உதயரேகா கையிலிருந்த புகைப்படத்தை எடுத்து அவனது முகத்திற்குப் பக்கவாட்டுப் பகுதியில் வைத்து அவனையும், புகைப்படத்தையும் மாறி மாறி பார்த்தாள். அவனுக்கோ அவளது செய்கை புரியவில்லை. ஏனெனில் அவனுக்கு அந்தப் புகைப்படத்தில் இருப்பது யாரென்று தெரியவில்லை.



"ஏய், லூசு... என்னடி பண்ணிட்டு இருக்க?" அவன் கோபத்தோடு கேட்க...



"ஜோடி பொருத்தம் சூப்பர்." அவள் வலக்கை ஆள்காட்டி விரல், கட்டை விரலை சேர்த்து மகிழ்ச்சியோடு தலையை ஆட்டி சொல்ல... அவளைப் புரியாது பார்த்தவன் வெடுக்கென்று அவளது கரத்தில் இருந்த புகைப்படத்தைப் பறித்தான். அதைப் பார்த்ததும் தான் அவள் சொன்னதன் அர்த்தம் அவனுக்குப் புரிந்தது. அவனையும் அறியாது அவனது உதடுகள் புன்னகைத்தது.



"இதற்குத் தான் இத்தனை ஆர்ப்பாட்டமா?" அவன் அவளைக் கண்டு கேட்க...



"இல்லையா பின்னே... எத்தனை முக்கியமானவங்க அவங்க." என்றவள் அவனிடம், "அந்த ஃபோட்டோவை எனக்குக் கொடுங்களேன். நான் வச்சிக்கிறேன்." என்று கேட்க... அவன் ஒன்றும் பேசாது அந்தப் புகைப்படத்தை அவளிடம் திருப்பிக் கொடுத்தான். அவளும் அதைப் பத்திரமாக வாங்கி வைத்து கொண்டாள்.



"வாழ்த்துகள் பிரின்ஸ். உங்களுக்கு ஏத்த இளவரசி கிடைத்து விட்டாள்." என்றவளை அவன் பார்த்தபடி அமர்ந்திருந்தவன் பதில் பேசவில்லை. அது அவளுக்குத் தேவையும் இல்லை போலும்.



"எவ்வளவு நிறமா இருக்காங்க பாருங்க. சுண்டினால் ரத்தம் வரும் போலிருக்கு. அழகுன்னா அப்படி ஒரு அழகு." என்று அவள் சொல்லி கொண்டே போக... அவள் சொன்னதை மனக்கண்ணில் நினைத்து பார்த்தவனின் புன்னகை விரிந்தது. ஆமென்பது போல் அவன் தலையசைத்தான்.



"சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கிட்டு வீடு நிறையக் குழந்தைகளைப் பெத்து போடுங்க பிரின்ஸ்." என்றவளை ஒரு மார்க்கமாய்ப் பார்த்தவன்,



"ஏன் நர்சரி நடத்த போறியா?" என்று கேட்க...



"ச்சேச்சே... அன்னைக்கு நான் உங்க கிட்ட சொன்னனேல்ல. நான் உங்க குழந்தைகளைக் கவனிச்சுக்குவேன்னு. அதைத் தான் செய்யப் போகிறேன்." அவளது வார்த்தைகளில் அத்தனை ஆனந்தம்.



"அப்போ பரணியை என்ன பண்ணுவதாய் உத்தேசம்?" அவன் கதை கேட்பது போன்று நாடியில் கையைப் பதித்து அவளைப் பார்த்திருந்தான்.



"ஏன் பரணி சாருக்கு என்ன?" அவள் புரியாது பார்க்க...



"நீ அவனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டால்... என் குழந்தைகளை நீ எப்படிப் பார்த்துக் கொள்ள முடியும்?" அவன் அழுத்தம் திருத்தமாய் ஒரு மாதிரி குரலில் கேட்க... அதைக் கேட்டு அவள் வாய்விட்டு சிரித்தாள். அவன் சிரிக்காது அவளையே பார்த்திருக்க... அவளது சிரிப்பு சட்டென்று நின்றது.



"மன்னிச்சுக்கோங்க பிரின்ஸ்." என்றவள், "பரணி சார் இங்கே தான் டிரைவரா இருக்கப் போகிறார். நானும் இங்கே தான் வேலை பார்த்துக்கிட்டு இருக்கப் போகிறேன். அப்புறம் என்ன?" அவள் விளக்கம் கொடுக்க...



"காலம் முழுவதும் இங்கேயே வேலைக்காரியா இருக்கப் போறேன்னு சொல்லுற... அப்படித்தானே?"



"ஆமா பிரின்ஸ்... நான் உங்க குழந்தைகளைப் பத்திரமா பார்த்துக்கிறேன். நீங்க எந்தக் கவலையும் இல்லாம உங்க மனைவி கூட உலகத்தைச் சுத்தி வாங்க." அவள் மலர்ந்த முகத்துடன் கூற... அவன் அவளையே பார்த்தபடி எதையோ வாய்க்குள் முணுமுணுத்தான்.



"என்ன பிரின்ஸ்?" அவள் புரியாது அவனைப் பார்த்தாள்.



"உன் அன்பை கண்டு எனக்குப் புல்லரிச்சு போச்சு." என்றவன் புன்னகைத்தான்.



"எனக்குக் கல்யாணமானாலும் நான் அதே உதயரேகா தான். அதே உங்கள் அன்பு அடிமை உதயரேகா தான்." அவள் வலக்கையை மடக்கி நெஞ்சில் வைத்து தலைகுனிந்து பணிவுடன் சொல்ல...



சர்வேஸ்வரனின் கரம் அவளை நோக்கி நீண்டது. பின்பு என்ன நினைத்தானோ தனது கரத்தினைப் பின்னால் இழுத்துக் கொண்டான்.



"அப்போ காலையில் எனக்குப் பெட்காபி கொடுப்பதில் இருந்து... ராத்திரி எனக்குத் தண்ணீர் பாட்டில் எடுத்து வைக்கும் வேலை வரை... நீ எனக்குச் செய்யும் வேலைகளை யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன்னு சொல்லு." அவன் அவளைக் கேலி செய்ய...



"அது எனது பிறப்புரிமை." என்று அவள் பெருமையாக மார்தட்ட...



"உன் பக்தியை கண்டு யாம் மெச்சினோம் பக்தையே." அவன் குறும்புடன் ஆசிர்வதிப்பது போன்று கையை வைத்துக் கொண்டு சொல்ல... அவனை நிமிர்ந்து பார்த்தவள் கலகலவெனச் சிரிக்க... அவளது புன்னகை அவனையும் தொற்றிக் கொண்டது.



"அப்புறம் உன்னோட வீரன், ஜூலி, ஜூலி பெத்த ஆறு குட்டிங்க எல்லாம் நல்லாயிருக்கா?" அவன் சன்னச்சிரிப்புடன் கேட்க...



"உங்களுக்கு ஞாபகம் இருக்கா பிரின்ஸ்?" அவளது விழிகள் வியப்பில் விரிந்தது.



"மறக்குமா?" என்றவனது புன்னகை அத்தனை வசீகரமாக இருந்தது.



"அவங்க எல்லாம் ரொம்ப நல்லா இருக்காங்க." என்றவள் ஐந்தறிவு கொண்ட அன்பு ஜீவன்களைப் பற்றிப் பக்கம் பக்கமாய்ப் பேச தொடங்க... அவன் புன்னகை மாறாது அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.



"பாருங்க, பேசி பேசியே உங்களைக் கொல்றேன். நீங்க ரெஸ்ட் எடுங்க." என்ற உதயரேகா எழுந்து செல்ல போக...



"பப்ளிமாஸ்..." அவனது குரலில் அவள் திரும்பி பார்த்தாள்.



"இந்தா... உனக்குத் தான்." அவன் பால்கனி ரோஜா செடியில் இருந்து ஒரு ரோஜாவை பறித்து அவளிடம் கொடுத்தான். அதைக் கண்டதும் அவளது விழிகள் ஆச்சிரியத்தில் விரிந்தது. தனது பால்கனி பூக்களைப் பறிக்க யாரையும் விடாதவன் இப்போது பறித்து அதுவும் தனக்காகப் பறித்துக் கொடுப்பது ஏன்?



"நன்றி பிரின்ஸ்." என்றபடி அவள் சந்தோசமாய் வாங்கிக் கொண்டாள்.



"ரோஸ் கலர் பிடிச்சிருக்கா?" அவனது கேள்வியில் அவள் ரோஜாப்பூவை பார்த்தாள். நல்ல சிவப்பு நிறத்தில் ரோஜாப்பூ அழகாக இருந்தது.



"நிறத்தில் என்ன இருக்கிறது பிரின்ஸ். பூவை கொடுத்தது நீங்க. எனக்கு உங்களைப் பிடிக்கும். அதே போல் நீங்க கொடுத்த பூவையும் பிடிக்கும்." என்றவளை அவன் இமைக்காது பார்த்தான்.



"தலையில் வச்சுக்கோ." அவன் சொன்னதும் அதை அவள் தட்டாது செய்தவள் அங்கிருந்து சென்றிருந்தாள். அவள் தலையில் இருக்கும் பூவை பார்த்தபடி அவன் அமர்ந்திருந்தான்.



**************************



சில நாட்கள் கழித்து ஒருநாள் மாலை வேளையில் சர்வேஸ்வரன் வழக்கம் போல் வீட்டிற்கு வந்த போது அவனுக்கு உதயரேகா காபி, டிபன் கொடுத்துவிட்டு செல்ல... அவனும் உண்டு விட்டு தனது அறைக்கு வந்தவன் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு பால்கனியில் வந்து நின்றான். அங்கிருந்த ரோஜா பூக்களைக் கண்டவன் அதன் இதழ்களை மென்மையாக வருடி கொடுத்தான். அப்போது கீழே பேச்சு குரல் கேட்டது. அவன் என்னவென்று நிமிர்ந்து பார்த்தான். அங்கே உதயரேகா வீட்டின் முன் பரணி, பரணியின் பெற்றோர் நின்றிருந்தனர். எதற்காக வந்திருக்கிறார்கள்? என்று தெரியாது அவனுக்குத் தலை வெடிப்பது போலிருந்தது. அப்போது பட்டம்மாள், ரேகா இருவரும் அவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர். இந்தக் காட்சியைக் கண்டு சர்வேஸ்வரனின் முகம் இறுகி போனது.



சிறிது நேரம் சென்று பரணி மட்டும் வீட்டில் இருந்து வெளியில் வந்தான். சர்வேஸ்வரன் அவனைக் கூர்மையாகப் பார்க்க... பரணியும் இவனைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தான். பிறகு பரணி தனது அலைப்பேசியை எடுத்து வேண்டுமென்றே உரக்க கத்தி பேசலானான்.



"டேய், உனக்கு ஒரு விசயம் தெரியுமாடா? எனக்குக் கல்யாணம் முடிவு பண்ணியிருக்கோம். இப்போ தான் தேதி குறிச்சோம். ஆமான்டா, எல்லாம் பொண்ணு வந்த அதிர்ஷ்டம். சாதாரண டிரைவரா இருந்த நான் இப்போ பேங்க் மானேஜர் வேலைக்குத் தேர்வாகி இருக்கேன். அது அப்படி இல்லைடா. இதுக்கு முன்னாடி எத்தனையோ தடவை எக்சாம் எழுதி இருக்கிறேன். ஆனா ஒரு தடவை கூட நான் தேர்வானது இல்லை. இப்போ தேர்வாகி இருக்கிறேன் என்றால்... அதுக்கு முழுக்காரணம் ரேகா தான்டா. அவள் தேவதை, என்னோட அதிர்ஷ்ட தேவதை." பரணி வேறு எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றினான்.



பரணி சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்த சர்வேஸ்வரனின் முகம் உணர்வுகளை இழந்து இறுகி போனது.



அதேநேரம் சர்வேஸ்வரனின் பெற்றோர் மற்றும் தாரிகாவின் பெற்றோர் பிரபல சோதிடர் முன்னே அமர்ந்து இருந்தனர். தாமோதரனுக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. ஆனால் நடேசனுக்கு ஜோசியத்தில் நம்பிக்கை இருக்கின்றது. இந்தச் சோதிடர் அவரது ஆஸ்தான சோதிடர். அதனால் தான் நடேசன் தாமோதரனை இங்கே அழைத்து வந்துவிட்டார். மகள் மற்றும் வருங்கால மாப்பிள்ளையின் ஜாதகப் பொருத்தத்தைக் கண்டறிய வேண்டியே அவர் அனைவரையும் இங்கே அழைத்து வந்தது. நடேசனும், அவரது மனைவியும் பயபக்தியுடன் அமர்ந்து இருந்தனர்.



"என்னங்க இது? இந்தக் காலத்தில் போய் ஜோசியம் பார்க்கிறது நல்லாவா இருக்கு. சுத்த ஹம்பக்கா இல்லை. சோசியர் பொருத்தம் இல்லைன்னு சொன்னால் நம்ம சர்வாவை வேண்டாம்ன்னு சொல்லிருவாங்களா? சர்வாவை விட நல்ல மாப்பிள்ளையை அவங்களால் பார்க்க முடியுமா?" மந்தாகினி மகனது பெருமை பாட...



"வாயை மூடு மந்தாகினி. ஏதாவது அபசகுனமா பேசாதே." தாமோதரன் மனைவியைக் கடிய...



"சம்பந்தி காற்று இந்தப் பக்கம் வீசுது போலையே." மந்தாகினி நக்கலாய் சொல்ல... தாமோதரன் மனைவியை முறைத்தார். அதைக் கண்டு மந்தாகினி வாயை மூடி கொண்டார்.



சோதிடர் சர்வேஸ்வரன், தாரிகா இருவரது ஜாதகங்களையும் முன்னே வைத்து பார்த்துக் கொண்டு இருந்தார். இருவரின் ஜாதகத்தையும் தனித்தனியே எடுத்துப் பார்ப்பதும் பின்னே கீழே வைப்பதுமாய் இருந்தார். பிறகு அவர் விழிகளை மூடி தீவிர ஆலோசனையில் ஆழ்ந்தார். திடுமென விழிகளைத் திறந்தவர் அங்கிருந்த கடவுளின் படத்தை வெறித்துப் பார்த்தார். அவரது செயல்கள் எதுவும் யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. எல்லோருமே குழம்பி போயினர்.



"எதுவும் பிரச்சினையா?" தாமோதரன் தைரியமாகக் கேள்வி கேட்டுவிட... சோதிடர் அவரைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தார். அப்படியே தாமோதரன் அடங்கி விட்டார்.



"எதுவாக இருந்தாலும் சொல்லுங்க சாமி." நடேசன் பயபக்தியுடன் கேட்டார்.



"ரெண்டு பேரோட ஜாதகமும் ஆமோகமா பொருந்தி இருக்கிறது." சோதிடர் சொன்னதும் எல்லோரின் மனதிலும் நிம்மதி பரவியது.



"ஆனா ஒரு சின்னச் சிக்கல்..." என்றவரை கண்டு,



"என்ன சிக்கல் சாமி?" நடேசன் கவலையுடன் கேட்டார்.



"பையனுக்கு இரு தாரம் தோசம் இருக்கு. அவனுடைய முதல் மனைவி அல்ப ஆயுசில் போயிருவாள். இரண்டாவது மனைவி தான் நிலைத்து இருப்பாள்."



"ஐயோ, இதற்குப் பரிகாரம் இல்லையா?" நடேசனின் மனைவி கலக்கத்துடன் கேட்டார். தாமோதரன், மந்தாகினிக்கும் உள்ளுக்குள் சற்றுக் கலவரமாகத் தான் இருந்தது.



"வாழை மரத்துக்குத் தாலி கட்டி பரிகாரம் பண்ணுவாங்களே. அது மாதிரி பண்ணலாமா?" நடேசன் யோசனை சொல்ல...



"ம்ஹூம், அதுக்கு எல்லாம் அடங்கும் தோசம் இது இல்லை. வேணும்ன்னா ஒண்ணு செய்யலாம். தோசம் பத்தி வெளியில் சொல்லாமல் வேறு ஒரு பொண்ணைப் பார்த்து அவருக்குத் திருமணம் செய்து வையுங்கள். தோசத்தின் படி அவள் இறந்ததும் உங்க மகளை அவருக்கு இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்து வையுங்கள்."



"அதுக்காக ஒருத்தி எப்போ சாவாள்ன்னு காத்துக்கிட்டு இருக்கச் சொல்றீங்களா?" மந்தாகினி வெடுக்கென்று கேட்டு விட்டார். அவருக்குக் கோபம் வந்தது. என்ன இது என்று...



"நான் சொல்றது சொல்லிட்டேன். அதுக்கு மேல் உங்கள் விருப்பம்." என்ற சோதிடர் ஜாதகத்தை மூடி வைத்து விட்டார்.



பெற்றோர் நால்வரும் திகைப்பு நீங்காது அமர்ந்திருந்தனர்.



தொடரும்...!!!

 

Sasimukesh

Administrator
அத்தியாயம் : 10



காரிலேறி அமர்ந்த தாமோதரன், மந்தாகினி இருவரது காதுகளிலும் சோதிடர் இறுதியாகக் கூறிய வார்த்தைகள் இன்னமும் ஒலித்துக் கொண்டிருந்தது. 'இந்தப் பையனுக்கு இப்போ ஒரு கண்டம் இருக்கிறது. அது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக இருக்கும்' என்று சோதிடர் எச்சரிக்கை விடுப்பது போல் கூறியிருந்தார். அது தான் இருவரது மனதினையும் போட்டு உறுத்தி கொண்டிருந்தது. சோதிடத்தின் மீது நம்பிக்கை இல்லாத இருவரும் சட்டென்று தங்களை மீட்டு கொண்டனர். இப்படித் தேவையில்லாதது யோசித்துக் கொண்டிருந்தால் வாழ்க்கை நரகமாகி விடும் என்று சோதிடர் கூறியதை இருவரும் கண்டு கொள்ளாது விட்டு விட்டனர்.



தாமோதரன் அருகில் அமர்ந்து காரை ஓட்டி கொண்டிருந்த நடேசனை பார்த்தார். அவர்கள் இருவரும் நடேசனுடன் தான் இங்கு வந்திருந்தனர். நடேசனின் முகம் தெளிவில்லாது இருப்பதைக் கண்டு தாமோதரன் அவர் பக்கம் திரும்பி,



"சோசியர் சொன்னதை நாம தீவிரமா எடுத்துக்க வேண்டாம்." என்று சமாதானமாய்ச் சொல்ல...



"ஆமாங்க சம்பந்தி." என்று மந்தாகினியும் அதையே சொன்னார்.



"உங்களுக்கு என்ன? போகப் போவது என் மகள் உயிர் தானே. பொண்டாட்டி செத்தால் புது மாப்பிள்ளைங்கிற மாதிரி உங்க மகன் என் மகளின் இழப்பை மறந்து விட்டு அடுத்தக் கல்யாணத்துக்குத் தயாராகி விடுவார். ஆனால் எங்கள் நிலைமை? வாழும் காலம் முழுவதும் எங்கள் மகளை நினைச்சு நினைச்சு நாங்க தான் வேதனைப்படணும்." நடேசன் படபடவெனப் பொரிந்து தள்ளி விட்டார். பின்னே ஒரே மகளின் உயிருக்கு ஆபத்து என்றால் எந்தத் தகப்பனுக்குத் தான் வேதனை இருக்காது.



"உங்க வேதனை புரியுது சம்பந்தி." தமோதரன் வருத்தத்துடன் சொல்ல... அங்கே சிறிது நேரம் கனத்த அமைதி நிலவியது.



"என்னை மன்னிச்சுருங்க சம்பந்தி. ஏதோ ஒரு கோபத்தில்." நடேசன் தாமோதரனிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.



"உங்கள் நிலையில் இருந்தால் நானும் இப்படித்தான் பேசியிருப்பேன். மன்னிப்பு எல்லாம் வேண்டாம்." தாமோதரன் பெருந்தன்மையாகக் கூற... எல்லோரின் மனதும் சமாதானமானது.



நடேசனின் வீட்டிற்கு வந்து இறங்கியவர்களை வாயிலுக்கே வந்து வரவேற்றாள் தாரிகா. அவளுமே சோதிடரின் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்தாள். ஆனால் அவள் எதிர்பார்த்தது போல் நால்வரின் முகமும் மகிழ்ச்சியாக இல்லை. ஏதோ ஒரு குழப்பத்தில் ஆழ்ந்திருப்பதைக் கண்டு அவள் யோசனையானாள். வீட்டின் உள்ளே வந்து அமர்ந்தவர்கள் தாரிகாவிடம் மெதுவே விசயத்தைக் கூறினர். அதைக் கேட்டு தாரிகாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் அந்தச் சோதிடர் சொன்னது அனைத்தும் அவர்களது வாழ்க்கையில் நடந்து இருக்கின்றது. அதனால் தான் இப்போது சோதிடர் சொன்னதை அவளால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. அதேசமயம் சர்வேஸ்வரனை விட்டு விடவும் அவளுக்கு மனமில்லை. ஒரு நொடி விழிகளை மூடி யோசித்தவள் பின்பு விழிகளைத் திறந்து தந்தையைப் பார்த்து,



"எது நடந்தாலும் பரவாயில்லை. எனக்குச் சர்வா வேண்டும்." என்றவளை நடேசன் கோபத்துடன் முறைத்தார்.



"உனக்கு என்ன புத்தி கெட்டு போச்சா? உயிரை பணயம் வச்சு இந்தக் கல்யாணத்தை நீ முடிக்கணுமா? அப்படி என்ன தேவை இருக்கு? சர்வாவுக்கு உன்னைக் கட்டி வச்சு உன்னை இழக்க சொல்றியா? தெரிஞ்சே படுகுழியில் விழ எனக்கு விருப்பம் இல்லை." நடேசன் கத்த தொடங்கினார்.



"சர்வாவை கல்யாணம் பண்ணி வைக்கிறதா இருந்தால் நான் கல்யாணம் பண்ணிக்கிறேன். இல்லைன்னா எனக்குக் கல்யாணமே வேண்டாம்." தாரிகா இறுதியாய் தனது முடிவினை சொல்ல...



"தாரிகா..." நடேசன் மகளைக் கண்டு கோபமாய்க் கத்த...



"கொஞ்சம் பொறுமையா இருங்க." நடேசன் மனைவி அவரைச் சமாதானம் செய்யத் தொடங்கினார். தாமோதரன், மந்தாகினி இருவரும் சங்கடத்துடன் அமர்ந்து இருந்தனர்.



"தாரிகா, அப்பா சொல்றதை நல்லா கேளு. நீ சர்வாவை கல்யாணம் பண்ணிக்கிறதா இருந்தால் இரண்டாம் தாரமாகப் பண்ணிக்கோ." இறுதியில் நடேசன் தனது ஒப்புதலை தெரிவித்து விட்டார். அதைக் கேட்டு அவரது மனைவியும், மகளும் மகிழ்ந்தனர் என்றால்... தாமோதரன், மந்தாகினி இருவரும் விழித்தனர்.



"நோப்பா... ஊரு உலகத்துக்கு முன்னாடி நான் தான் சர்வாவோட முதல் மனைவியா இருக்கணும்." என்றவளை அனைவரும் புரியாது பார்த்தனர்.



"என்ன சொல்ற தாரிகா?" நடேசன் குழப்பத்துடன் மகளைப் பார்த்தார்.



"முதல் கல்யாணத்தைக் காதும் காதும் வச்ச மாதிரி முடிச்சிருங்க. விசயம் வெளியில் போகாது பார்த்துக்கலாம்." என்றவளை கண்டு எல்லோருமே விழித்தனர். இது நடைமுறைக்குச் சாத்தியமா? என்று...



"அதுக்குன்னு முதல் பொண்டாட்டி எப்போ சாவாள்ன்னு காத்துக்கிட்டு இருக்கச் சொல்றியா?" அவளது அன்னை கோபமாகக் கேட்க...



"அப்போ ஜோசியத்தை நம்பாம எங்க கல்யாணத்தைப் பண்ணுங்க. இதுவும் இல்லாம, அதுவும் இல்லாம என்ன தான் என்னைப் பண்ண சொல்றீங்க?" தாரிகாவிற்குக் கோபம் வந்தது. அதற்கு நால்வரிடமும் பதில் இல்லை.



"என்னால் உங்களை நம்ப முடியாது. முதலில் எங்களுக்கு நிச்சயத்தை முடிங்க. அதுக்குப் பிறகு மத்ததைப் பார்த்துக்கலாம்." என்று தாரிகா முடிவாகக் கூறிவிட்டு எழுந்து சென்று விட்டாள்.



வீட்டிற்கு வரும் வழியில் தாமோதரன் மனைவியிடம் இது பற்றி யாரிடமும் குறிப்பாகச் சர்வேஸ்வனிடம் எதுவும் பேச வேண்டாம் என்று கூறி விட்டார். மந்தாகினியும் அமைதியாகத் தலையை ஆட்டி கொண்டார். அதனால் இந்த விசயம் அவர்களது வீட்டினருக்குத் தெரியாது போனது.



சர்வேஸ்வரன் தனது பாட்டி மீனம்மாள், உதயரேகா மற்றும் பட்டம்மாளுடன் நேற்று தான் தனது சொந்த ஊருக்கு வந்திருந்தான். அவனுக்குப் பெண் அமைந்ததுமே குலதெய்வத்தைக் கும்பிட வேண்டும் என்று மீனம்மாள் பிடிவாதம் பிடித்தார்.



"மீனுக்குட்டி, இன்னும் கல்யாணமே நடக்கலை. அதற்குள் வேண்டுதலா? கல்யாணம் முடிச்சிட்டு பார்க்கலாம்." அவன் அதைத் தட்டிக்கழிக்க நினைத்தான்.



"உன்னை யார் உடன் வர சொன்னது? நான் மட்டும் போயிட்டு வர்றேன்." மீனம்மாள் நிலையாய் நிற்க...



பாட்டியின் பிடிவாதம் தாங்காது பேரனும் அவருடன் கிளம்பி விட்டான். உதயரேகா மற்றும் பட்டம்மாளும் உடன் கிளம்பினர். அங்கே வேலைகள் இருக்கும். அதனால் உதயரேகாவை அழைத்துச் சென்றனர். பட்டம்மாள் மீனம்மாளுக்குப் பேச்சு துணையாவார் என்று அவரையும் அழைத்துக் கொண்டனர். முதலில் மந்தாகினி இதற்குச் சம்மதிக்கவில்லை.



"இவங்க ரெண்டு பேரும் போய்விட்டால் இங்கே இருக்கும் வேலைகளை யார் பார்ப்பது?" என்று மந்தாகினி சிடுசிடுக்க...



வீட்டு வேலைக்கு வேறொரு ஆளை நியமித்து விட்டே சர்வேஸ்வரன் மூவரையும் அழைத்து வந்திருந்தான். நேற்றிரவு வந்து ஓய்வு எடுத்துவிட்டு இதோ கோவிலுக்கு மூவரும் கிளம்பி விட்டனர். பட்டம்மாளுக்கு மூட்டுவலி இருப்பதால் அவர் வரவில்லை. மீனம்மாளுக்கும் மூட்டுவலி உண்டு. இருந்தாலும் பேரனுக்காக அவர் வந்திருந்தார். அவர்களது குலதெய்வம் சிறு குன்றின் மீது இருந்தது. அதன் அடிவாரத்தில் காரை நிறுத்தியவன் கோவிலை அண்ணாந்து பார்த்தான்.



"எப்படியும் ஐம்பது படிகளாவது இருக்கும். எப்படி ஏற போறீங்க மீனுக்குட்டி?" அவனுக்குக் கவலையாக இருந்தது.



"கடவுளை மனசில் வேண்டியபடி நடந்தால் வலி தெரியாது." என்ற மீனம்மாள் முதல் படியில் காலை வைக்க எத்தனிக்க... அடுத்த நொடி அவர் அந்தரத்தில் மிதந்தார். அவரது பேரன் தனது கரங்களில் அவரைத் தாங்கி இருந்தான்.



"எதுக்குச் சர்வா? உனக்குத் தான் கை வலிக்கும். என்னை இறக்கி விடு." மீனம்மாள் பேரனிடம் சொல்ல...



"உங்களை மட்டும் இல்லை. இந்தப் பப்ளிமாசையும் தூக்கிட்டு போகிற அளவுக்கு உங்க பேரன் உடலில் வலு இருக்கு." என்றவன் படியேற தொடங்க... அவனுடன் இணைந்து நடந்தாள் உதயரேகா.



மேலே வந்ததும் தான் சர்வேஸ்வரன் பாட்டியை கீழே இறக்கி விட்டான். முன்னரே பூஜைக்குச் சொல்லியிருந்ததால் அர்ச்சகர் எல்லா ஏற்பாட்டையும் செய்து வைத்து அவர்களுக்காகக் காத்திருந்தார்.



"வாங்கோ..." என்று வரவேற்ற அர்ச்சகர் முதலில் உதயரேகா மீது மஞ்சள் நீரை ஊற்ற...



"எதுக்கு?" என்று சர்வேஸ்வரன் பாட்டியை கேள்வியாகப் பார்த்தான்.



"உனக்கு நல்லபடியா கல்யாணம் கூடி வந்தால் அங்கபிரதட்சணம் செய்றதா ரேகா வேண்டி இருக்கிறாள்." என்று மீனம்மாள் விளக்கம் கொடுக்க...



"பப்ளிமாஸ், அதெல்லாம் ஒண்ணும் தேவையில்லை." அவன் உதயரேகாவிடம் மறுத்து சொல்ல...



"வேண்டுதலை செய்யாது இருக்கக் கூடாது." என்ற உதயரேகா விழிகளை மூடி கடவுளை வேண்டி கொண்டவள் கொடி கம்பத்தில் ஆரம்பித்துப் பிரகாரத்தில் உருள ஆரம்பித்தாள்.



மீனம்மாள் உதயரேகாவின் புடவையைச் சரி செய்தபடி உடன் நடந்தார். முதியவர் அவரால் எத்தனை முறை தான் குனிந்து நிமிர முடியும்? அதைக் கண்ட பேரன் பாட்டியை தடுத்து நிறுத்திவிட்டு, "நான் பார்த்துக்கிறேன்." என்றவன் அவளது கால் புறம் லேசாக விலகிய புடவையைச் சரியாக இழுத்து விட்டபடி நடந்தான். கடவுள் சந்நிதானத்தில் ஆணவன் மனதில் எந்தத் தவறான எண்ணமும் தோன்றவில்லை. மீனம்மாளுக்குப் பேரனை பற்றி நன்கு தெரியும். அதனால் அவர் அவனைத் தவறாக எண்ணாது கடவுளை வேண்டியபடி உடன் நடந்தார்.



உதயரேகா இதை எதையும் அறியவில்லை. அவள் தான் விழிகளை மூடி கடவுளை பிரார்த்தித்துக் கொண்டு இருந்தாளே. பிரகாரம் சுற்றி முடித்து மீண்டும் கொடி கம்பம் அருகே வந்தவள் எழுந்து நின்றாள். அவள் விழிகளைத் திறந்தும் சர்வேஸ்வரன் விலகி நின்று கொண்டான். அதனால் அவளுக்கு அவன் புடவையைச் சரி செய்து விட்டது தெரியாது போனது. தெரிந்திருந்தால் பெண்ணவள் மிகவும் சங்கடப்பட்டுப் போயிருந்திருப்பாள்.



கண்குளிர கடவுளை தரிச்சித்து விட்டு வேண்டுதலை முடித்து விட்டு வந்தனர். கீழே இறங்கும் போதும் சர்வேஸ்வரன் பாட்டியை தூக்கி கொண்டே கீழே இறங்கினான். பாட்டி வீட்டிற்கு வந்ததும் உதயரேகாவிடம் தைலத்தை எடுத்து வர சொல்லி பேரனின் கால்களில் தேய்க்க போனார்.



"கொடுங்க பெரியம்மா. நான் தேய்ச்சு விடுறேன்." உதயரேகா தைலத்தை வாங்கியவள் சர்வேஸ்வரன் கால் அருகில் வந்தமர்ந்தாள்.



"இல்லை வேண்டாம்." என்றவன் காலை தூக்கி மடக்கி அமர்ந்து கொண்டான்.



"பாட்டியை தூக்கிட்டு படியேறி இருக்கீங்க. நிச்சயம் வலி இருக்கும். கொண்டாங்க." என்று அவள் கூற...



"அதெல்லாம் வலி இல்லை. அத்தோடு எனக்குக் கூச்சமாக இருக்கு." என்று அவன் லஜ்ஜையுற்றபடி தயக்கத்துடன் சொல்ல... அதைக் கேட்டு உதயரேகா சிரிக்க... மீனம்மாளும் சேர்ந்து சிரித்தார். பட்டம்மாளுக்கும் சிரிப்பு வந்தது,



"இன்னைக்குச் சர்வா தான் உன்னோட புடவையைச் சரி செய்தது. பெண் பிள்ளை நீ அப்படிச் சொன்னியா என்ன? பாரேன் இவனை..." மீனம்மாள் பேரனை கேலி செய்ய...



"அப்படியா?" உதயரேகா திகைப்புடன் அவனைக் கண்டு கேட்க... அவன் குறும்பு சிரிப்புடன் ஆமென்று தலையசைத்தான். அவனது பார்வை அவளைச் சுவாரசியத்துடன் பார்த்தது.



"ஆத்தி..." என்றவள் புடவை வழியே முயல்குட்டி போன்று தெரிந்த தனது பாதங்களை வேகமாக உள்ளே இழுத்து கொண்டாள். அவளது செயலில் அவனுக்குச் சிரிப்புப் பொங்கியது. அவன் வாய்விட்டுச் சிரித்தான்.



"போங்க பிரின்ஸ்... நான் உங்க கூடச் சண்டை." அவள் முகத்தைத் திருப்பிக் கொள்ள...



அவன் தனது கால்களைத் தொங்க போட்டுக் கொண்டு அமர்ந்து, "சண்டை வேண்டாம். சமாதானம்... தைலத்தைத் தேய்ச்சு விடு." என்க...



உதயரேகா மலர்ந்த முகத்துடன் அவனது கால்களில் தைலத்தைத் தேய்த்து நீவி விட ஆரம்பித்தாள். அவன் அவளையே பார்த்தபடி அமர்ந்து இருந்தான்.



அன்றிரவே மூவரும் சென்னைக்குக் கிளம்பி விட்டனர். முதியவர்கள் இருவரும் காரில் ஏறியதும் களைப்பில் உறங்கிவிட... சர்வேஸ்வரன் அருகில் அமர்ந்திருந்த உதயரேகா விழித்திருந்தாள். சிறிது நேரம் சென்றதும் அவளும் களைப்பில் உறங்கி விட்டாள். கொஞ்சம் நேரம் தான் அவள் உறங்கி இருப்பாள். சர்வேஸ்வரன் அவளை எழுப்பி விட்டான். அவளோ பேந்த பேந்தவென விழித்தாள்.



"நான் கஷ்டப்பட்டு வண்டி ஓட்டிட்டு வர்றேன். நீ சுகமாய்த் தூங்கிட்டு வர்றியா? உன்னைப் பார்த்து எனக்கும் தூக்கம் வருது." என்று அவன் சிடுசிடுக்க...



"சாரி பிரின்ஸ். இனி தூங்கலை." என்றவள் முகத்தை அழுந்த துடைத்து கொண்டாள்.



அப்போது காரில் 'பனிவிழும் மலர்வனம், உன் பார்வை ஒரு வரம்' பாடல் ஒலிக்க ஆரம்பித்தது. சர்வேஸ்வரன் கைவிரல்களால் ஸ்டியரிங் வீலில் தாளம் போட்டபடி பாடல் வரிகளை விசிலடித்தான். பின்பு ஏதோ நினைத்தவனாய் அவள் புறம் திரும்பி,



"உனக்குப் பரணி ஞாபகம் வரலையா?" என்று கேட்க...



"இப்போ அவர் ஞாபகம் எனக்கு எதுக்கு வரணும்?" அவள் புரியாது அவனைப் பார்த்தாள்.



"இந்தப் பாட்டைக் கேட்கும் போது அவன் நினைவு வரலையா?"



"இல்லையே..." என்று அவள் சொல்ல...



"சரியான மக்கு நீ..." அவன் அவளைக் கேலி செய்ய...



"உங்க வருங்கால மனைவி ஞாபகம் உங்களுக்கு வருதா?" அவளுக்குத் தாரிகாவின் பெயர் சட்டென்று ஞாபகம் வரவில்லை.



"ஞாபகம் வராது இருக்குமா?" அவன் அவளைக் கண்டு சிமிட்டியவன் பாடலை முணுமுணுத்தான்.



அப்போது சரியாக வேறு பாடல் ஒலித்தது. 'பனிவிழும் இரவு, நனைந்தது நிலவு' என்று மோகத்துடன் பாடல் ஆரம்பிக்க... உதயரேகா விழிகளை மூடி இருக்கையில் சாய்ந்து கொண்டாள்.



"ஏய், உன்னைத் தூங்க கூடாதுன்னு சொன்னேன்ல." அவன் கோபத்துடன் உரும...



"ஐயோ தூங்கலை. நீங்க தானே பரணி சாரை நினைக்கச் சொன்னீங்க. அதான் கண்ணை மூடிட்டு அவரை நினைச்சு பார்த்தேன்." அவள் பாவமாகச் சொல்ல...



"நினைவில் வந்தானா?" அவன் பல்லை கடித்துக் கொண்டு கேட்க...



"இல்லையே..." அவள் பரிதாபமாகக் கூற...



"ரொம்ப நல்லது, தூங்கு..." கடுப்புடன் சொன்னவன் காரின் வேகத்தை அதிகப்படுத்தினான். கார் வேகமாய்ச் சீறிப் பாய்ந்தது, அவனது மனதினை போன்று... அவன் மனதிற்குள் 'மக்கு, மக்கு' என்று அவளைத் திட்டவும் மறக்கவில்லை.



********************************
 

Sasimukesh

Administrator
அன்று எப்போதும் போல் சர்வேஸ்வரன் அலுவலகம் கிளம்பி கீழே வந்தவன் பூஜையறையை நோட்டமிட... அவன் எதிர்பார்த்தவள் அங்கே இல்லை. மாறாக மீனம்மாள் பூஜை செய்து கொண்டிருந்தார். பாட்டியை கண்டதும் அவன் பூஜையறைக்கு விரைந்து சென்றான்.



"நீங்க எதுக்கு இதை எல்லாம் செய்றீங்க? பப்ளிமாஸ் எங்கே?" அவன் விழிகளை வீட்டினுள் துளாவி அவளைத் தேடியபடி கேட்டான்.



"ரேகா பரணி கூடக் கோவிலுக்குப் போயிருக்கிறாள். கூடவே பட்டுவும் போயிருக்கிறாள்." என்று மீனம்மாள் சொல்லிவிட்டு தீபாராதனையைப் பேரனிடம் காட்டினார். அதைத் தொட்டு கும்பிட்டவன் நெற்றியில் மீனம்மாள் திருநீறு பூசி விட்டார்.



"என்ன விசயமாம்?" அவனுக்கு ஏனென்று விசயம் தெரிய வேண்டும். இல்லை என்றால் அவனுக்குத் தலை வெடித்து விடும்.



"மாங்கல்யம் செய்யக் கொடுக்கப் போறாங்களாம். அதுக்கு வாங்கிய தங்கத்தைக் கடவுள் பாதத்தில் வைத்து பூஜை செய்யணுமாம். அதுக்காகத் தான் பரணி அவளை அழைச்சிட்டு போயிருக்கான்." என்றவர் அவனது கன்னத்தை வாஞ்சையுடன் வருடியபடி, "தாரிகாவுக்கும் இப்படித்தான் பூஜை செய்து மாங்கல்யம் செய்யணும். உன் கல்யாணம் சீக்கிரமே நல்லபடியா நடக்கணும்." என்றவரது வார்த்தையில் அத்தனை ஆசை இருந்தது. ஆகாஷை விடச் சர்வேஸ்வரனின் திருமணத்தை அவர் வெகுவாக எதிர்பார்த்தார்.



"நிச்சயம் இது போன்று செய்து விடலாம்." என்று புன்னகையுடன் சொல்லி அவரை மகிழ்த்தவன் அவரிடம் விடைபெற்று வெளியில் வந்தான்.



காரில் செல்லும் போது சர்வேஸ்வரன் உதயரேகாவுக்கு அழைத்தான். அவளது அலைப்பேசி சைலண்ட்டில் இருந்ததால் அவள் அவனது அழைப்பை கவனிக்கவில்லை. இல்லை என்றால் அவள் முதல் ஆளாக அழைப்பை எடுத்து இருப்பாளே! அவள் அழைப்பை எடுக்காதது கண்டு சர்வேஸ்வரனுக்குக் கோபம் வந்தது. அவன் அந்தக் கோபத்துடன் சென்று அன்றைய வேலைகளைச் செய்யலானான். அவன் என்ன தான் வேலைகளில் தன்னை மூழ்கடித்துக் கொண்ட போதும் அவளது எண்ணம் அவனது மனதின் மூலையை அரித்துக் கொண்டிருந்தது என்னவோ உண்மையே.



உதயரேகா வீட்டிற்கு வந்து தான் அலைப்பேசியில் அவனது அழைப்பை பார்த்தாள். பார்த்ததும் அவள் பதறித்தான் போனாள். எதற்கு இத்தனை அழைப்பு? அவள் உடனே அவனுக்கு அழைக்க... அவனோ அழைப்பை எடுக்கவில்லை.



'பிசியா இருப்பாங்களா இருக்கும்?' என்று நினைத்தவள் அழைப்பதை நிறுத்திவிட்டு தனது வேலைகளைப் பார்க்கலானாள்.



உதயரேகா நினைத்தது போல் சர்வேஸ்வரன் வேலை பரபரப்பில் இல்லை. அவன் தனது அலைப்பேசியைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தான். அவன் வேண்டுமென்றே தான் அவளது அழைப்பை எடுக்கவில்லை. அவன் அழைத்த போது அவள் எடுக்கவில்லை அல்லவா! அந்தக் கோபம் அவனுக்கு... அதனால் அவனும் அவளது அழைப்பை எடுக்கவில்லை. சிறிது நேரம் சென்று அவளிடம் பேசி இருக்கலாமோ? என்று அவனது மனதில் சஞ்சலம் தோன்றியது. ஆனால் மீண்டும் அவளுக்கு அழைக்க அவனது தன்னகங்காரம் தடுத்தது. 'விடு பார்த்துக்கலாம்' என்று மனதினை சமாதானப்படுத்தியவன் தொழிற்சாலையைச் சுற்றி பார்க்க சென்று விட்டான்.



சர்வேஸ்வரன் நேரே குடோனிற்குச் சென்று உற்பத்தி செய்த பொருட்கள் மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தான். எல்லோரும் மதிய உணவிற்காகச் சென்று இருந்தனர். அவனது செயலாளரும் வெளியில் சென்றிருந்தார். அவனுக்கு இருந்த மனநிலையில் வேலையில் மூழ்க நினைத்தவன் அங்கேயே தேங்கி விட்டான். அப்போது தான் எதிர்பாராத விதமாக அங்கே தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவினால் ஏற்பட்ட தீப்பொறி மளமளவென உற்பத்தி பொருட்கள் மீது பரவ ஆரம்பித்தது. எல்லாமே துணி வகைகள் என்பதால்... தீ பரவ ஏதுவாகி போனது. தீ பரவியதை உள்ளே இருந்த சர்வேஸ்வரனும் கவனிக்கவில்லை. வெளியில் இருந்த தொழிலாளர்களும் கவனிக்கவில்லை.



தீ கொழுந்துவிட்டு எரிந்து அலாரம் அடிக்கும் சத்தத்தில் தான் அனைவரும் அங்கு ஓடி வந்தனர். சர்வேஸ்வரன் சுதாரித்துக் கொண்டு வெளியில் செல்ல முற்பட்ட போது அவனது பாதையில் இருந்த துணி மூட்டைகளில் தீ பரவ ஆரம்பிக்க... அவனால் மேலே செல்ல முடியவில்லை. நாலாப்புறமும் தீ அவனைச் சூழ்ந்து கொண்டது. வெளியில் இருந்து தொழிலாளிகள் அவனைக் காப்பாற்ற முனைந்தனர். அந்தோ பரிதாபம் யாராலும் உடனே உள்ளே செல்ல முயலவில்லை. சர்வேஸ்வரனுக்கு இரண்டே இரண்டு வழி மட்டுமே இருந்தது. ஒன்று தீயில் அகப்பட்டு இறந்து போக வேண்டும். இன்னொன்று தீக்குள் பாய்ந்து மறுபக்கம் செல்ல வேண்டும்.



சர்வேஸ்வரன் இரண்டாவது வழியைத் தேர்ந்தெடுத்தான். தீக்காயம் பட்டாலும் பரவாயில்லை. உயிர் தப்பினால் போதுமென்று... அதே போன்று அவன் தீக்குள் பாய்ந்து மறுபக்கம், அதாவது வெளியில் சென்று விழுந்த போது... அவனது உடலின் சில பகுதிகளைத் தீ ஆங்காங்கே சுட்டு பொசுக்கி இருந்தது. அவன் உயிர் பிழைத்து வந்ததே போதுமானதாக இருந்தது. தாமோதரன், ஆகாஷ் இருவரும் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தீயணைக்கும் வண்டி வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தது. பொருட்சேதம் இருந்த போதும் உயிர் சேதம் எதுவும் இல்லாது போனது அதிர்ஷ்டமே.



விசயம் கேள்விப்பட்டு மீனம்மாள் பதறி போய் மருத்துவமனைக்குக் கிளம்ப ஆயத்தமானார். உதயரேகா கண்ணீரோடு தானும் வருவதாகக் கூறினாள். அவரும் சரியென்று அவளை அழைத்துக் கொண்டு சென்றார். பட்டம்மாள் வீட்டினை பார்த்துக் கொள்வதாக வீட்டில் இருந்து கொண்டார்.



"பெரியம்மா, பிரின்சுக்கு ஒண்ணும் ஆகாதுல்ல?" உதயரேகா கண்ணீர் மல்க மீனம்மாளை கண்டு கேட்க...



"ஒண்ணும் ஆகாது. கவலைப்படாதே." என்றவருக்கு மனதினுள் பெரும் கலக்கமாக இருந்தது. செல்ல பேரனுக்கு ஒன்று என்றால் அவரது அன்பு மனம் தாங்குமா?



அங்கே மருத்துவமனையில் மருத்துவர் சர்வேஸ்வரனுக்கு உள்ளே சிகிச்சை அளித்துக் கொண்டிருக்க... வெளியில் தாமோதரன், ஆகாஷ் இருவரும் நின்றிருந்தனர். விசயம் கேள்விப்பட்டு அப்போது தான் மந்தாகினி மருமகள் வித்யாவுடன் ஓடி வந்தார்.



"என்னாச்சுங்க?" என்று அவர் கணவரிடம் விசாரித்தார்.



"சின்ன ஆக்சிடெண்ட்..." என்ற தாமோதரன் நடந்ததை விவரித்தார்.



"பயப்படுற மாதிரி ஒண்ணும் இல்லையே." மந்தாகினியின் குரல் கலங்கி ஒலித்தது. என்ன தான் இருந்தாலும் தாய் அல்லவா!



"அதெல்லாம் ஒண்ணும் இல்லை. காயம் ஆற நாளாகும். அவ்வளவு தான்..." அவர் மனைவியைச் சமாதானப்படுத்தினார்.



"என்னங்க எனக்கு என்னமோ பயமா இருக்குங்க." மந்தாகினி கணவரிடம் மெல்லமாய்ச் சொல்ல...



"ஏன்? என்ன பயம்?"



"ஜோசியர் சொன்னது பலிச்சிருமோ?" மனைவி சொன்னதும் தான் அவருக்குமே சோதிடர் சொன்னது ஞாபகம் வந்தது. அவருக்குமே சற்றுப் பயமாக இருந்தது.



"சோசியர் உயிருக்கு ஆபத்துன்னு தானே சொன்னார். இது அப்படி இல்லையே. லேசான தீக்காயம் தானே." தாமோதரன் சுதாரித்துக் கொண்டு மனைவியைச் சமாதானப்படுத்தினார்.



"இருந்தாலும்..." மந்தாகினி தயக்கத்துடன் இழுக்க...



"பயந்தால் எதைப் பார்த்தாலும் பூதமாகத் தான் தெரியும். முதலில் பயத்தை விடு." தாமோதரன் மனைவியிடம் கூறிக் கொண்டிருக்கும் போதே மீனம்மாள், உதயரேகா அங்கு வந்து சேர்ந்தனர்.



"சர்வா எப்படி இருக்கிறான்?" மீனம்மாள் தழுதழுத்த குரலில் கேட்டார். உதயரேகா வாய்விட்டு கேட்கவில்லை. ஆனால் அவளது விழிகள் அதையே தான் யாசித்துக் கேட்டது.



"பயப்படுற அளவுக்கு ஒண்ணும் இல்லைம்மா." மனைவிக்குக் கூறிய அதே சமாதானத்தைத் தாமோதரன் அன்னையிடமும் கூறினார்.



சர்வேஸ்வரனுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர் அவர்களிடம் வந்து அவனைக் காண்பதற்கு அனுமதி அளித்தார். எல்லோரும் உள்ளே நுழைந்தனர். எல்லோரும் அவனைக் கண்டு வருத்தம் கொண்டனர். சர்வேஸ்வரன் உடல் முழுவதும் தீக்காயங்கள் இருந்தது. நல்லவேளையாக அவன் நொடிப்பொழுதில் தீக்குள் பாய்ந்து வெளியேறியதால் தீ அவனது உடலை ஆழமாய்த் தீண்டவில்லை. லேசான காயங்கள் தான். ஆனால் தீக்காயங்கள் என்பதால் அது ஆற சற்று நாளாகும். இளைஞன் என்பதால் வலியை தாங்கும் வலிமை அவனிடத்தில் இயல்பாக இருந்தது. அவன் சாதாரணமாகத் தான் அமர்ந்து இருந்தான்.



வீட்டு உறுப்பினர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டு நின்று அவனது நலன் விசாரித்தனர். உதயரேகா சற்று தள்ளி கண்ணில் கண்ணீரோடு அவனைப் பார்த்தபடி நின்றிருந்தாள். அவனும் அவளைக் கண்டு விட்டான். அவனுக்கு அவள் மேல் கோபம். அதனால் அவன் அவளைக் கண்டும் காணாது இருந்தான். அவள் அவனைத் தவிப்புடன் பார்த்தாலும் நெருங்கி சென்று பேச முடியவில்லை. அவள் தவிப்பை அடக்கி கொண்டு அமைதியாக இருந்தாள்.



மீனம்மாள் கண்ணீர் வடிப்பதை கண்டு சர்வேஸ்வரன் அவரது கன்னத்தைப் பற்றி, "மீனுக்குட்டி, எனக்கு ஒண்ணும் இல்லை." என்று சொல்லி சிரித்தான்.



"என்ன ஒண்ணும் இல்லை? பாரு, தீ எப்படிப் பொசுக்கிருக்கு." மீனம்மாளுக்குச் சொல்லும் போதே கண்ணீர் வந்தது.



"ஏய் பப்ளிமாஸ், மீனுக்குட்டியை வீட்டுக்கு கூட்டிட்டு போ." அவன் கட்டளையாகச் சொல்ல...



"நான் போக மாட்டேன்." மீனம்மாள் அடம்பிடித்தார்.



"அப்போ அழாம இருக்கணும்." அவன் கண்டிப்புடன் கூற... அவர் சம்மதமாய்த் தலையை ஆட்டினார்.



அமலா தனது கணவன், மகளுடன் வந்து தம்பியை பார்த்துவிட்டு சென்றாள். தாரிகாவும் தனது குடும்பத்துடன் வந்து அவனைப் பார்த்தாள். கையில் பூங்கொத்துடன் வந்தவள் அவனது நலன் விசாரித்துவிட்டு சென்று விட்டாள். அவளுக்குத் தெரிந்தது அது மட்டுமே... உடனிருந்து அவனைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவளுக்குத் தோன்றவே இல்லை. அவள் வளர்ந்தவிதம் அப்படி... அவளது செயல் மீனம்மாளுக்கு ஒருமாதிரி இருந்த போதும் பேரன் ஒன்றும் கூறாததால் அவர் அதைக் கண்டு கொள்ளாது விட்டு விட்டார்.



இரவு மீனம்மாள் பேரனுக்குத் துணையாய் மருத்துவமனையில் இருக்கிறதாய் சொல்லவும் மற்றவர்கள் சரியென்று கூறிவிட்டு சென்று விட்டனர். அவருடன் உதயரேகாவும் இருந்து கொண்டாள். மூதாட்டிக்கு தனியே எதுவும் செய்ய இயலாது என்பதற்காக... இரவு உணவு முடிந்ததும் பாட்டி மாத்திரையை உண்டு விட்டு பேரனுடன் பேசி கொண்டிருந்தார். உதயரேகா அமைதியாக அமர்ந்து இருந்தாள்.



"பாட்டி, உங்களுக்குத் தூக்கம் வந்தால் தூங்குங்க." சர்வேஸ்வரன் சொல்ல...



"உனக்கு எதுவும் தேவைப்பட்டால்?" மீனம்மாள் தயங்க...



"அதான் உங்க அசிஸ்டெண்ட் இருக்கிறாளே. அவள் பார்த்து கொள்வாள்." அவன் கூறவும் மீனம்மாள் சரியென்று விட்டு அங்கிருந்த மற்றொரு படுக்கையில் படுத்து விட்டார். எதுவும் தேவைப்பட்டால் தன்னை எழுப்பும்படி உதயரேகாவிடம் கூறிவிட்டு தான் படுத்தார்.



மீனம்மாள் உறங்கும் வரை உதயரேகா அமைதியாக இருந்தாள். அவர் உறங்கியதும் அவள் மெல்ல அவன் அருகே செல்ல... அவனோ அவளது முகம் பார்க்காது அலைப்பேசியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.



"மன்னிச்சுக்கோங்க பிரின்ஸ்..." அவள் மன்னிப்பு கேட்க... அவனிடம் பதில் இல்லை.



"என் கூடப் பேச மாட்டீங்களா? என்னைப் பார்க்க மாட்டீங்களா?" அவள் கேட்டதற்கு அவன் பதில் சொல்லாது அமர்ந்திருந்தான்.



அவள் சட்டென்று அவனது கரத்தினைப் பற்றியவள், "நான் செஞ்சது தப்பு தான். இனி இப்படி நடக்காது. தயவுசெய்து என்னை மன்னிச்சிருங்க." என்றவளது கண்களில் இருந்து கண்ணீர் பெருகி வழிந்தது.



அவளது கண்ணீரை அவன் உள்ளத்தில் பெருகிய உவகையோடு கண்கள் மின்ன பார்த்திருந்தான். ஏனென்றால் அவளது கண்ணீருக்கு சொந்தக்காரன் அவனல்லவா!!!



தொடரும்...!!!

 
Status
Not open for further replies.
Top