All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘கண்ணில் கனவாக நீ!!!’ கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
அத்தியாயம் : 5

உதயரேகா அந்தத் தொண்டு நிறுவனத்தின் வாயிற்கதவை திறந்ததும் அத்தனை நாய்கள் எங்கே இருந்து தான் ஓடி வந்ததோ! சொல்லி வைத்தார் போன்று அனைத்தும் வேகமாகப் பாய்ந்தோடி வந்து அவளது காலடியில் நல்ல பிள்ளை போன்று வாலை ஆட்டி கொண்டிருந்தது. அதில் சேட்டை பிடித்த வீரன் மட்டும் அவள் மீது துள்ளி குதித்து அவளை வரவேற்று தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தான்.

"ஹேய், வீரா... என்னைய தேடினியா?" என்று அவள் கேட்க... அவன் ஆமென்பது போல் வாலை ஆட்டினான்.

அதற்குள் அங்கு வேலை பார்க்கும் சேகர் அங்கு வந்து அவளைக் கண்டு சிநேகமாகப் புன்னகைத்தார்.

"வாம்மா, உனக்காகத் தான் எல்லாம் குளிக்காம காத்துக்கிட்டு இருக்கு. நாங்க குளிக்கக் கூப்பிட்டாலும் வராம அடம்பிடிக்குதுங்க. அப்படி என்ன தான் சொக்கு பொடி போட்டியோ தெரியலை." அவர் சலித்துக் கொள்வது போல் பேசினாலும் அதில் அதிகம் சந்தோசம் இருந்தது. இந்தக் காலத்தில் யார் இந்த ஐந்தறிவு ஜீவன்கள் மீதுஇந்தளவிற்கு அக்கறை, பாசம் காட்டுகிறார்கள். அதனாலேயே அவருக்கு உதயரேகா மீது சற்றுப் பிரமிப்பு கலந்த பாசம் தான்.

"அண்ணா, நீங்க அவங்க கூடப் பேசி பழகுங்க. அப்போ தான் அவங்க உங்க கூடவும் ஈசியா பழகுவாங்க." உதயரேகா வீரனை தடவி கொடுத்தபடி புன்னகைத்தாள். கன்று குட்டி போன்ற தோற்றத்தில் இருக்கும் வீரன் அவளிடம் மட்டும் பூனை குட்டி போன்று பதுங்கி நின்றான்.

"என்னமோம்மா, நானும் இத்தனை வருசமா இங்கே வேலை செய்றேன். எனக்கு இன்னும் இதுங்க பாசை புரிய மாட்டேங்குது. நீ உன் வேலையைப் பார். நான் என் வேலையைப் பார்க்க போறேன்." சேகர் அங்கிருந்து நகர்ந்து விட்டார்.

உதயரேகா எல்லா நாய்களையும் குளிக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றாள். நாய்களுக்கு என்று தனியே சோப், ஷாம்பூ எல்லாம் இருந்தது. அதை வைத்து அவள் நாய்களைக் குளிக்க வைத்து கொண்டிருந்தாள். அவள் அதைச் செய்யும் போது அவளது முகத்தில் அத்தனை சந்தோசம் தெரிந்தது. அவள் நாய்கள் அனைத்தையும் குளிக்க வைத்து அவைகளுக்கு உணவு வைக்க... அவைகளும் வாலை ஆட்டி கொண்டு உண்ண ஆரம்பித்தது. இதை எல்லாம் அவள் தாயின் வாஞ்சையுடன் பார்த்து கொண்டிருந்தாள்.

உதயரேகா இங்கே வந்து சேர்ந்து ஒரு மாத காலமாகி விட்டது சர்வேஸ்வரன் தான் அவளை 'ப்ளூ கிராஸ்' நிறுவனத்தில் உறுப்பினராகச் சேர்த்து விட்டான். அவன் தான் இந்தத் தொண்டு நிறுவனத்தையும் பார்த்துக் கொடுத்தது. அவர்களின் வீடு இருந்த பகுதியில் வெகு அருகாமையில் இது இருந்தது. அதே போன்று அவள் ஐந்தறிவு ஜீவன்களைப் பார்த்து கொள்வதற்காகத் தினமும் மாலை மூன்று மணியிலிருந்து ஐந்து மணி வரை அவளுக்கு என்று நேரம் ஒதுக்கி கொடுத்து இருந்தான். மந்தாகினி முணுமுணுத்த போதும் அது எல்லாம் மகனின் முன் எடுபடாது போனது. அதைவிட உதயரேகா அனைத்து வேலைகளையும் முடித்து விட்டே செல்வதால் அவரால் ஒன்றும் கூற முடியவில்லை.

மதிய உணவு நேரம் முடிந்ததும் பட்டம்மாளை உறங்க அனுப்பி விட்டு உதயரேகா கிளம்பி இங்கே வந்து விடுவாள். இங்கு வரும் முன்னரே மாலை நேர சிற்றுண்டிக்கு தேவையானவற்றைத் தயார் செய்து வைத்து விட்டே வருவாள். அப்போது தான் அவள் அங்குச் சென்றதும் காபி, சிற்றுண்டி செய்ய நேரம் சரியாக இருக்கும். அவள் தனது பணியைச் செவ்வனே செய்வதால் யாரும் ஒரு குறையும் காண முடியாது போயிற்று. தனக்காகச் சலுகைகள் கொடுக்கும் சர்வேஸ்வரனுக்குத் தன்னால் எந்தத் தலைகுனிவும் வந்துவிடக் கூடாது என்பதில் அவள் கவனமாக இருந்தாள்.

"ரேகா, அங்கே ஜூலி குட்டி போட்டு இருக்கிறாள். வா, வந்து பார்." சேகர் வந்து அழைக்கவும்... உதயரேகா முகம் மலர அவருடன் இணைந்து நடந்தாள்.

ஜூலி மக்களைப் பெற்ற சோர்வில் படுத்திருக்க... அதன் அருகே அதன் குட்டிகள் ஆறும் படுத்திருந்தது. பழுப்பு, வெள்ளை, கருப்பு, பழுப்பும் வெள்ளையும், கருப்பும் வெள்ளையும், பழுப்பும் கருப்பும் கலந்த நிறத்தில் ஆறு நாய்க்குட்டிகளும் இருந்தது. பட்டு போன்ற தேகத்துடன் விழிகளை மூடியபடி இருந்த குட்டி நாய்களைக் காண காண உதயரேகாவுக்குத் தெவிட்டவில்லை. அவள் தனது அலைப்பேசியில் அவைகளைப் புகைப்படம் எடுத்து கொண்டாள்.

மாலை ஐந்தானதும் உதயரேகா வீட்டிற்குக் கிளம்பினாள். வீடு வந்து சேர்ந்ததும் அவள் முதல் வேலையாகத் தான் வாங்கி வந்த சாக்லேட்டை மீனம்மாள், பட்டம்மாளுக்குக் கொடுத்தாள். அவர்கள் ஏனென்று கேட்க... நாய்க்குட்டி பிறந்ததை அவள் சந்தோசத்துடன் சொன்னாள். அவளது மகிழ்ச்சி கண்டு அவர்களும் மகிழ்ந்தனர். அதன் பிறகு அவளை வேலைகள் ஆக்கிரமித்துக் கொண்டது. வீட்டு உறுப்பினர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். எல்லோருக்கும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றார் போன்று காபி, தேநீர் மற்றும் சிற்றுண்டி கொண்டு வந்து கொடுத்தாள். அவளது கைகள் அதுபாட்டிற்கு வேலை செய்தாலும் அவளது விழிகள் சர்வேஸ்வரனை தான் எதிர்பார்த்தது.

உதயரேகா எதிர்பார்த்தது போன்று சர்வேஸ்வரன் வீடு வந்து சேர்ந்தான். அவன் அறைக்குச் சென்று முகம் கழுவி, உடை மாற்றி விட்டுப் பால்கனியில் வந்து அமர்ந்த போது மிகச் சரியாக உதயரேகா அறை கதவினை தட்டினாள். அவன் உள்ளே வர அனுமதி கொடுத்ததும் அவள் காபி, சிற்றுண்டியோடு உள்ளே நுழைந்தாள். பால்கனிக்கு வந்த உதயரேகா அவனிடம் காபியை நீட்டினாள். அவன் அவளையே பார்த்தபடி காபியை வாங்கிப் பருகலானான்.

"என்ன ரொம்பச் சந்தோசமா இருக்கிற மாதிரி இருக்கு?" அவளது முகத்தை வைத்தே அவளது மனதினை அவன் கண்டுபிடித்து விட்டான்.

"ஆமா பிரின்ஸ். இன்னைக்கு ஜூலி குட்டி போட்டு இருக்கிறாள். எத்தனை தெரியுமா? மொத்தம் ஆறு..." அவள் உற்சாகமாகக் கைவிரல் ஆறினை அவனிடம் காட்டினாள்.

"இரு, இரு... யார் அந்த ஜூலி?" அவன் புரியாது கேட்டான்.

"ஜூலி... அந்தத் தொண்டு நிறுவனத்தில் வளரும் நாய்..." அவள் எடுத்து சொல்ல...

"ஓ, எஸ், எஸ்... ஏற்கெனவே சொல்லி இருக்கல்ல. மறந்துட்டேன்." என்று கூறி அவன் புன்னகைக்க... அவளும் பதிலுக்குப் புன்னகைத்தாள்.

"அப்புறம் இன்னைக்கு என்ன பண்ணின?" அவன் கேட்டதும் தாமதம் அவள் மடை திறந்த வெள்ளமாய்ப் பேச ஆரம்பித்தாள்.

அவனுக்குத் தெரியும், அவள் வேறு எதுவாக இருந்தாலும் அவனிடம் வாயை திறக்க மாட்டாள். ஆனால் கடந்த ஒரு மாத காலமாக அவள் ஐந்தறிவு ஜீவன்களைப் பற்றி அவனிடம் பேசுவதற்குத் தயக்கம் காட்டவில்லை. ஏனெனில் அவன் தானே அவளுக்கு இந்த வழி காட்டி விட்டது. அதனால் வந்த நன்றியுணர்வு இது...

கீழே நின்றிருந்த பரணி மேலே பால்கனியில் இருந்த இருவரையும் பார்த்திருந்தான். உதயரேகா பாவனையுடன் சொல்லும் கதைகளைச் சர்வேஸ்வரன் புன்னகையுடன் கேட்டு கொண்டிருப்பதைக் கண்டு அவனுக்கு எதுவோ சரியில்லை என்று தோன்றியது. வெகு சீக்கிரமே தனது வீட்டாருடன் வந்து பட்டம்மாளிடம் பேச வேண்டும் என்று அவன் ஒரு முடிவுக்கு வந்தான். முடிவு எடுத்த பின்பே அவன் அங்கிருந்து அகன்றான்.

"இந்தா..." சர்வேஸ்வரன் காலி காபி கோப்பை மற்றும் சிற்றுண்டி தட்டை உதயரேகாவிடம் கொடுத்தான்.

"அச்சோ, இவ்வளவு நேரமாவா பேசிக்கிட்டு இருந்தேன்." அதை வாங்கியபடி அவள் அவசரமாகச் சென்றவள் பின்பு ஏதோ நினைத்தவளாய் அவன் முன் வந்து நின்றாள்.

"இப்போது என்னவாம்?" அவனது புன்னகை விரிந்தது.

"சாக்லேட்..." என்றவள் தனது கையில் மறைத்து வைத்திருந்த சாக்லேட்டை நீட்டினாள்.

"எதுக்கு?"

"நாய்க்குட்டி பிறந்ததுக்கு..." என்றவளை கண்டு அவனது புன்னகை மேலும் விரிந்தது.

"இங்கே மனுசனுக்குப் பிறந்தநாள் கொண்டாடவே ஆளில்லாது இருக்கு. ஆனா நீ நாய்க்கு கொண்டாடுற..." அவன் வாய் அவளை வம்பிழுத்தாலும் அவனது கை சாக்லேட்டை எடுத்துக் கொண்டது. அதைக் கண்டு முகம் மலர்ந்தவளாய் அவள் மகிழ்ச்சியோடு அங்கிருந்து சென்றாள்.

சர்வேஸ்வரன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனது புன்னகை முகம் மெல்ல மெல்ல வில்லத்தனத்திற்கு மாறியது. உதயரேகா பரணியுடன் பேசுவது அவனுக்குப் பிடிக்கவில்லை. அதுவும் நாய்களுக்கு உணவு வைக்கும் சாக்கில் பரணி தினமும் அவளோடு சுற்றுவது அவனுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. அதனால் தான் அவன் அடுத்த இரண்டாவது நாள் உதயரேகாவை அங்கே செல்வதைத் தடுத்து விட்டான். அவள் ஏனென்று கேட்டதற்கு...

"அந்தக் காலி மனையோட உரிமையாளர் எனக்கு ஃபோன் பண்ணி சத்தம் போடுறார். நீ தினமும் வைக்கும் சாப்பாட்டிற்காக அங்கு வரும் நாய்களாலும், பூனைகளாலும் அக்கம்பக்கத்தில் இருக்கிறவங்களுக்குத் தொந்தரவா இருக்கிறதாம். அவங்க எல்லாம் அவருக்கு ஃபோன் போட்டுச் சத்தம் போட்டு இருக்காங்க. அவர் என்னடான்னா என்னைப் பிடித்துத் திட்டுகிறார். எல்லாம் உன்னால்..." என்று அவன் அவளைக் கடுமையாகச் சாடினான். அதைக் கேட்டு அவளுக்குக் கண்ணீரே வந்து விட்டது.

"என்னால தான் நீங்க திட்டு வாங்கி இருக்கீங்க. என்னைய மன்னிச்சிருங்க பிரின்ஸ். என்னைய மன்னிச்சிருங்க. இனி இப்படிப் பண்ண மாட்டேன்." அவள் அழுது கரைய... ஏனோ அவளது கண்ணீர் கூட அவனுக்குச் சந்தோசத்தைக் கொடுத்தது என்றால் மிகையில்லை.

என்ன தான் அவளைச் சாடினாலும் மறுநாளே அவன் அவளை 'ப்ளூ கிராஸ்'இல் உறுப்பினராகச் சேர்த்து விட்டான். அவன் அவளுக்கு நல்லதும் செய்தான், தீமையும் செய்தான். நன்மையோ, தீமையோ எதுவாக இருந்தாலும் அவளுக்கு அவன் மட்டுமே செய்ய வேண்டும். அதில் அவன் உறுதியாக இருந்தான்.

*********************************

"இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் பாட்டி." உதயரேகா பட்டம்மாள் பாட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினாள். இன்று அவருக்கு எழுபதாவது பிறந்தநாள்.

"ஒவ்வொரு வருசமும் ஒரு வயசு கூடுது. இதுக்குப் போய் இப்படி ஆர்ப்பாட்டம் பண்ணிக்கிட்டு இருக்கியே." பட்டம்மாள் பேத்தியை கண்டு கேட்டார். பின்னே அவரது பேத்தி பாட்டிக்காகப் பட்டுப்புடவை வாங்கி வைத்திருக்கிறாளே.

"இருக்கட்டுமே... என்னோட பாட்டிக்கு நான் வாங்கிக் கொடுக்கிறேன். முதல்ல புதுப் புடவை கட்டுங்க. நாம கோவிலுக்குப் போயிட்டு வந்திரலாம். இன்னைக்குப் பெரிய வீட்டில் யாரும் இல்லை. பெரியம்மாவும், பிரின்சும் தான் இருக்காங்க. அதனால் பிரச்சினை இல்லை." அவள் அவரை அவரசப்படுத்தினாள்.

"பட்டு..." வாசலில் நின்றபடி மீனம்மாள் குரல் கொடுத்தார்.

"உள்ளே வாங்க பெரியம்மா." உதயரேகா வெளியில் வந்து அவரை வரவேற்க...

"வாங்க மீனாம்மா..." என்று பட்டம்மாளும் வரவேற்றார்.

"வர்றேன், வர்றேன்..." என்றபடி உள்ள வந்த மீனம்மாள் பட்டம்மாளை அணைத்துக் கொண்டு,

"இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பட்டு." என்று தனது வாழ்த்தினைச் சொல்லிவிட்டு பட்டம்மாளுக்கு அழகிய ஸ்படிக மாலையைப் பரிசாக அளித்தார். பட்டம்மாள் அதை நன்றியோடு வாங்கிக் கொண்டார்.

"ரொம்ப நன்றி மீனாம்மா. ரேகா தான் சின்னப் புள்ளை மாதிரி நடந்துக்கிறாள்ன்னா... நீங்களுமா?" பட்டம்மாள் அழகாய் வெட்கப்பட்டார்.

"இந்த வயதில் ஆரோக்கியமா வாழ கொடுப்பினை வேண்டும். அது நமக்குக் கிடைச்சிருக்கு. அதனால் நம்ம பிறந்தநாளை கோலாகலமா கொண்டாடலாம் தப்பில்லை." என்றபடி மீனம்மாள் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தார்.

அதற்குள் உதயரேகா அவருக்குக் காபி கலந்து கொண்டு வந்து கொடுத்தாள். அதைப் பருகியவாறு மீனம்மாள், "பட்டு, நீ போய்க் கிளம்பி வா. உன்னோட பிறந்தநாளுக்கு நான் புரோக்ராம் பண்ணிட்டேன்." என்று உற்சாகமாகச் சொல்ல...

"என்ன புரோக்ராம் பெரியம்மா?" உதயரேகா ஆர்வத்துடன் கேட்க... மீனம்மாள் அவளிடம் விளக்கி சொல்ல... இருவரையும் சிரித்தபடி பார்த்த பட்டம்மாள் அறைக்குள் சென்றார்.

பட்டம்மாள் கிளம்பி வந்ததும் மூவரும் வீட்டின் முன் வாசலுக்கு வந்தனர். அங்குச் சர்வேஸ்வரன் அவர்களுக்காகக் காத்திருந்தான். பட்டம்மாளை கண்டதும் அவனும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தவன் பின்பு அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டான். பிறகு அவன் அவருக்காக வாங்கி வந்திருந்த பரிசினை அவரிடம் கொடுத்தான். அதி உயர்தரப் பேரீச்சம்பழங்கள் அடங்கிய பெட்டி அது. பேரீச்சம்பழம் என்றால் பட்டம்மாளுக்கு மிகவும் பிடிக்கும். அதனால் தான் அவன் அதையே அவருக்குப் பரிசாக வாங்கிக் கொடுத்திருந்தான். அவர் நன்றி சொல்லி வாங்கிக் கொண்டார்.

"இது மீனுக்குட்டிக்கு..." என்றபடி அவன் மற்றொரு பெட்டியை தனது பாட்டியிடம் நீட்டினான். அவருக்கும் பேரீச்சம்பழம் பிடிக்கும். மீனம்மாள் சந்தோசத்துடன் பேரனை அணைத்துக் கொண்டார்.

"உங்களுக்கான எல்லா ஏற்பாடும் பண்ணியிருக்கு." என்று பாட்டியிடம் சொன்னவன் உதயரேகா புறம் திரும்பி, "பெரியவங்க ரெண்டு பேரும் பத்திரம்." என்று அவளுக்கு அறிவுறுத்திவிட்டு கிளம்பி சென்று விட்டான்.
 

ஶ்ரீகலா

Administrator
முதலில் மூவரும் கோவிலுக்குச் சென்றனர். அங்குப் பட்டம்மாள் பெயரில் பூஜைக்குக் கொடுத்திருந்தது. நிறைவாகக் கடவுளை தரிசித்து விட்டு மூவரும் நேரே ஆதரவற்றோர் இல்லத்திற்கு வந்தனர். அங்கிருந்த எல்லோரும் பட்டம்மாளுக்கு வாழ்த்து கூறினர். பிறகு மூவரும் அவர்களோடு காலை உணவு உண்டனர். மதிய உணவும் அங்கே தான். உதயரேகா சமையலுக்கு உதவியாகச் சென்றுவிட... மீனம்மாள், பட்டம்மாள் இருவரும் அங்கிருந்த முதியவர்களுடன் பேசி கொண்டிருந்தனர்.

"பட்டு, இங்கே உள்ளவங்க கதையைக் கேட்கும் போது நம்ம கதை பரவாயில்லை போல. பாவமா இருக்கு." அங்கிருந்த மரத்தடியில் அமர்ந்து கொண்டு மீனம்மாள் சொல்ல...

"ஆமா மீனாம்மா, நமக்கு ஏதோ உறவுன்னு சொல்லிக்க ஆள் இருக்காங்க. அந்த விதத்தில் கடவுள் நம் மீது கருணையோடு இருக்கின்றான்." பட்டம்மாளும் அதை ஆமோதித்தார்.

அப்போது ஒரு இளம் தம்பதியினர் தங்களது குழந்தையோடு அங்கு வருகை தந்திருந்தனர். அவர்களைக் கண்டதும் பட்டம்மாளுக்குத் தனது பேத்தியின் ஞாபகம் வந்தது.

"இந்நேரம் ரேகாவுக்கும் கல்யாணமாகி இருந்தால் இப்படித்தான் கணவன், குழந்தை என்று வந்திருப்பாள்." பட்டம்மாள் கவலை குரலில் சொல்ல...

அவரது கரத்தினை ஆதரவாய் பற்றிக் கொண்ட மீனம்மாள், "ரேகாவுக்குச் சீக்கிரமே நல்லது நடக்கும். நீயும் பார்க்கத்தானே போற." என்று ஆறுதல் படுத்தினார்.

மீனம்மாளுக்கும் கவலையாகத் தான் இருந்தது. உதயரேகாவுக்கு வயது ஏறிக் கொண்டே போகின்றதே... இன்னும் மூன்று வருடங்கள் போனால் அவளுக்கு முப்பது வயதாகி விடும். பெண்களுக்கு முப்பது வயதிற்குப் பிறகு வரன் தேடுவது என்பது மிகவும் கடினமான காரியம் அல்லவா! பெரியவர்கள் இருவரும் கவலையில் ஆழ்ந்திருக்க... உதயரேகா இருவரையும் உணவு அருந்த அழைத்தாள். இருவரும் எழுந்து சென்றனர். மதிய உணவு உண்டதும் மூவரும் வீட்டிற்குத் திரும்பி வந்தனர். பிறந்தநாள் சிறப்பாகச் சென்றதில் பட்டம்மாளுக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவர் மனநிறைவோடு ஓய்வு எடுக்கச் சென்றார்.

மாலையில் வேறு புதிய புடவை கட்டி கொண்டு பாட்டியை கிளம்பச் சொன்ன உதயரேகா வீட்டின் முன்னிருந்த தோட்டத்திற்கு அழைத்துச் சென்றாள். அங்குப் பட்டம்மாளுக்காகச் 'சர்ப்ரைஸ் பார்ட்டி' ஏற்பாடு செய்திருந்தார்கள் மீனம்மாளும், சர்வேஸ்வரனும். அவனும் அலுவலகம் முடிந்து வந்து இதில் கலந்து கொண்டான். உடன் வீட்டில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் அங்குக் கூடியிருந்தனர்.

முதலில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய பிறகு எல்லோரும் சிரித்துப் பேசியபடி அமர்ந்திருக்க... சர்வேஸ்வரன் மட்டும் புன்னகையுடன் வீட்டினுள் சென்று அமர்ந்தான். அங்கிருந்து பார்த்தால் தோட்டத்தில் நடப்பது தெரியும். உதயரேகா பட்டம்மாள், மீனம்மாள் இருவரின் கரங்களையும் பிடித்தபடி ஏதோ பேசி சிரித்துக் கொண்டு இருந்தாள். அவளது முகத்தில் இருந்த மகிழ்ச்சி கண்டு அவனது முகமும் மலர்ந்திருந்தது.

அப்போது அவனது பெற்றோர் இருவரும் அவன் முன் வந்து நின்றனர். அவன் ஒன்றும் பேசாது அவர்களைப் பார்த்தான்.

"இங்கே என்ன நடக்குது சர்வா? வேலைக்காரங்களுக்கு நம்ம வீட்டுத் தோட்டத்தில் பார்ட்டியா? இது எல்லாம் நல்லாவா இருக்கு? நீ தானே இதை ஏற்பாடு செய்தது? உனக்கு ரொம்ப இடம் கொடுத்துட்டோம் சர்வா. அதான் நீ உன் இஷ்டத்துக்கு ஆடிட்டு இருக்க. கேட்க ஆள் இல்லைன்னு நினைச்சியா?" தமோதரன் மகனை கண்டு கத்தினார்.

"ஷ், எதுக்கு இப்போ இந்தச் சத்தம்? அங்கே இருக்கிறவங்க காதில் விழுந்திர போகுது. இந்தப் பார்ட்டி ஏற்பாடு செய்ததால் உங்க சொத்தில் எதுவும் குறைந்து போய்விட்டதா? இருக்காதே... இதற்கு எனது பணத்தில் இருந்து தானே செலவு செய்தேன்." சர்வேஸ்வரன் தாடையை வருடியபடி தந்தையை ஒரு மாதிரியாகப் பார்த்தான்.

"எல்லாம் பணம் இருக்கும் திமிர்." தாமோதரன் மகனை சாட...

"அதே தான் உங்களுக்கும்..." மகன் சளைக்காது பதில் கொடுத்தான். இருவரும் அவனை முறைத்து விட்டு சென்று விட்டனர்.

உதயரேகா பெரியவர்களுக்கு உணவினை எடுத்து கொடுத்து விட்டு பின்பு சர்வேஸ்வரனுக்கு என்று தனித் தட்டில் அவனுக்கான உணவினை எடுத்துக் கொண்டு சென்றாள். வரவேற்பறையில் அமர்ந்திருந்த சர்வேஸ்வரனிடம் உணவினை கொடுத்தவள் அப்போது தான் கவனித்தாள் தாமோதரன், மந்தாகினி இருவரும் அங்கு அமர்ந்திருப்பதை...

"உங்களுக்கும் ஏதாவது..." அவள் ஆரம்பிக்கும் முன்,

"அவங்க சாப்பிட்டாங்க." சர்வேஸ்வரன் இடையிட்டு கூற... அதற்கு ஆமோதிப்பாய் தலையசைத்தவள்,

"தூங்கிறாதீங்க பிரின்ஸ்... இன்னைக்கு உங்களுக்குச் சுத்தி போடணும்." என்று அவள் அறிவுறுத்த...

"ஹேய் பப்ளிமாஸ், பேர்த்டே பட்டு பாட்டிக்கு தான். எனக்கு இல்லை. முதல்ல அவங்களுக்குச் சுத்தி போடு." அவன் சிரித்தபடி கூற...

"அவங்களுக்கும், பெரியம்மாவுக்கும் சேர்த்து தான். அதைவிட முக்கியமாய் உங்களுக்கு..."

"அப்படி என்ன நான் மட்டும் விசேசமாம்?" அவன் சிரித்தபடி கேட்க...

"இல்லையா பின்னே... சாதாரண நாளை இப்படி ஸ்பெசல் நாளா மாத்திட்டீங்களே. அதுக்கு நன்றி சொல்ல வேண்டாமா?"

"அப்போ வெறும் நன்றிக்காக மட்டும் தானா?"

"இல்லை, இல்லை... உங்க நலனும் முக்கியம். யாரும் உங்களைக் கண் வச்சிட கூடாது இல்லையா? அதுக்குத் தான்."

"அப்படின்னா நல்லா திருஷ்டி சுத்து." என்றவனின் பார்வை தனது பெற்றோர் மீது அழுத்தமாய்ப் படிந்தது. அதைக் கண்டு அவர்களது முகம் கடுகடுத்தது. உதயரேகா அங்கிருந்து சென்று விட்டாள்.

அவள் சென்றதும் சர்வேஸ்வரன் தனது பெற்றோரை பார்த்து, "இந்த அக்கறை எல்லாம் உங்க பணத்தால் சம்பாதிக்க முடியாது. இந்த அன்பு, அக்கறை முன் என்னோட பணம் எல்லாம் தூசி தான். இதெல்லாம் சொன்னால் உங்களுக்குப் புரியாது." என்று அழுத்தி சொன்னவன் கையிலிருந்த உணவினை ரசித்து உண்ண ஆரம்பித்தான்.

தாமோதரன், மந்தாகினி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். மகன் தங்களை விட்டு விலகி செல்வது போல் ஒரு தோற்றம் அவர்களுள்...

****************************

நள்ளிரவில் உறக்கத்தில் ஆழ்ந்திருந்த சர்வேஸ்வரன் தனது அலைப்பேசி சத்தத்தில் உறக்கம் கலைந்து எழுந்து அமர்ந்தான். யாரது? என்று யோசித்தபடி அலைப்பேசியை எடுத்தவன் அதில் ஒளிர்ந்த எண்ணை கண்டு எடுப்பதா? வேண்டாமா? என்று யோசித்தான். ஏனெனில் அழைத்தது அவனது இரண்டாவது அக்காவின் நாத்தனார் கவிதா. அதுவே அவனது தயக்கத்திற்குக் காரணம். அவன் அழைப்பை எடுக்காததால் அடுத்த நொடி குறுஞ்செய்தி ஒன்று வந்து குதித்தது. 'எமெர்ஜென்சி... ரக்சி அட்மிட்டெட் இன் த ஹாஸ்பிட்டல்' என்று... அடுத்தக் கணம் அவன் எதையும் யோசிக்காது கவிதாவிற்கு அழைப்பை எடுத்திருந்தான்.

"சர்வா, சீக்கிரம் வாங்களேன். எனக்குப் பயமாயிருக்கு." என்று கவிதா அழுதபடி கூற...

"ரக்சிக்கு என்னவாயிற்று?" அவன் உடையை மாற்றிக் கொண்டே அவளிடம் கேட்டான்.

"அவள் பாத்ரூமில் வழுக்கி விழுந்து தலையில் அடிப்பட்டு..." மேலே பேச முடியாது கவிதா அழ...

"அக்கா, மாமா எங்கே?" என்று கேட்டபடி அவன் காரிலேறி அமர்ந்தான்.

"அவங்க ரெண்டு பேரும் ஏதோ அவார்டு ஃபங்க்சன்னு டெல்லி போயிருக்காங்க." அவள் கூறவும் தான் அவனுக்குமே அந்த விசயம் ஞாபகத்தில் வந்தது. அவனது பெற்றோர் கூட அங்குத் தான் சென்றிருக்கின்றனர்.

"சரி, இதோ நான் வந்துட்டே இருக்கேன்." எந்த மருத்துவமனை என்று விசாரித்தவன் அடுத்த நொடி அழைப்பை துண்டித்து விட்டு காரை வேகத்தோடு கிளப்பினான்.

சர்வேஸ்வரன் மருத்துவமனையில் வந்து பார்க்கும் போது ரக்சி ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு இருந்தாள். அங்கிருந்த கதவின் வழியே அவன் எட்டிப்பார்த்தான். சின்னக் குழந்தை தலையில் பெரிய கட்டு போட்டுப் படுத்திருப்பது கண்டு அவனுக்கு வேதனையாக இருந்தது. அவன் கவிதாவை கூடக் கண்டு கொள்ளாது மருத்துவரை காண சென்றான். அவர் ரக்சியின் நிலையைத் தெளிவாக எடுத்துரைத்தார்.

"குழந்தைக்கு அடிப்பட்டு ரொம்ப நேரமாகிருக்கு. ஹெவி பிளட் லாஸ் சார். பிளட் ஏத்திக்கிட்டு இருக்கோம்."

"உயிருக்கு ஒண்ணும் ஆபத்து இல்லையே."

"அதெல்லாம் ஒண்ணும் இல்லை. ஆனா நாளை வரை குழந்தை ஐசியூவில் தான் இருக்கணும். எல்லாம் நார்மலான பிறகு தான் ரூமுக்கு அனுப்புவோம்." என்றுரைத்தவர், "குழந்தைக்கு அடிப்பட்டு அவ்வளவு நேரமாகியும் கவனிக்காம என்ன பண்ணிட்டு இருந்தீங்க?" என்று கேள்வி கேட்க... அவன் பதில் கூற இயலாது தலையைக் குனிந்து கொண்டு வெளியில் வந்தான்.

நேரே கவிதாவிடம் சென்றவன் அவளைக் காய்ச்சி எடுத்து விட்டான். மருத்துவரிடம் பதில் கூறாத முடியாத தனது நிலையைக் கண்டு வருந்தியவன் தனது கோபத்தை எல்லாம் அவளிடம் காட்டினான்.

"ரக்சியை உன்னை நம்பி தானே விட்டுட்டு போனாங்க. அவளைக் கவனிக்கக் கூட முடியாம நீ என்ன பண்ணிட்டு இருந்த?" அவன் கோபத்தோடு கேட்க...

"நான் என்னோட பிரெண்ட் பேர்த்டே பார்ட்டிக்கு போயிருந்தேன்." அவள் தயங்கி தயங்கி சொன்னதும் அவன் தனது அலைப்பேசியில் மணியைப் பார்த்தான். அதிகாலை ஒன்றரை மணியாகி இருந்தது.

"ரக்சியை இங்கே சேர்த்து அரை மணி நேரமாகி இருக்காது? அப்போ நீ ஒரு மணி வரை பார்ட்டிக்கு போயிட்டு கூத்தடிச்சு வர்ற. உன்னை எல்லாம்?" அவன் அருவருப்புடன் அவளைப் பார்த்தவன் அவளை விட்டு விலகி நின்றான். அவன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு நிற்பது அவனது உடல் இறுக்கத்திலேயே தெரிந்தது.

"நீங்க ரக்சியைப் பார்த்துக்கோங்க. நான் வீட்டுக்கு போயிட்டுக் காலையில் வர்றேன்." என்று நழுவிய கவிதாவை பார்த்தவன்,

"ரக்சியின் இந்த நிலைக்கு நீ தான் காரணம். அப்போ நீ தான் அவளைப் பார்த்துக்கணும்." என்று முறைக்க...

"எனக்கு ஹாஸ்பிட்டல் அலர்ஜி. என்னால் இங்கே இருக்க முடியாது." என்றவள் அவனது பதிலை எதிர்பாராது அங்கிருந்து சென்று விட்டாள்.

சர்வேஸ்வரனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அடுத்த நொடி அவனது கரம் அவனையும் அறியாது அவனது பப்ளிமாசுக்கு அழைத்திருந்தது. உதயரேகா தான் எந்த உறக்கத்தில் இருந்தாலும் அவனது அழைப்பை எடுப்பாளே! அவன் நினைத்தது போல் அவள் உடனே அழைப்பை எடுத்தாள். அவன் உடனே அவளை மருத்துவமனைக்கு வர சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான். அடுத்த நொடி உதயரேகா பாட்டியிடம் கூறிவிட்டு வீட்டில் இருந்த ஓட்டுநரை அழைத்துக் கொண்டு பதட்டத்துடன் மருத்துவமனை வந்து சேர்ந்தாள். சர்வேஸ்வரன் உதயரேகாவை பார்த்த பிறகு தான் பலம் வந்தது போல் உணர்ந்தான். அங்கு வந்த பிறகு தான் அவளுக்கு விசயம் தெரிந்தது. ரக்சியின் நிலை கண்டு அவளுக்கு வருத்தமாக இருந்தது.

"ரக்சிக்கு ஒண்ணுமாகாது. நீங்க கவலைப்படாதீங்க." என்று அவனுக்கு ஆறுதல் அளித்தவள் அங்கே மருத்துவமனை வளாகத்தில் இருந்த கோவிலுக்குச் சென்று வேண்டி கொண்டாள்.

அவன் அவளையே பார்த்தபடி தனது அக்காவிற்கு அழைத்தான். உறக்க கலக்கத்தில் அழைப்பை எடுத்த அமலா அவன் விசயத்தைக் கூறியதும் சிறிதும் பதட்டப்படாமல்,

"மார்னிங், மினிஸ்ட்ரியில் ஒரு பார்ட்டி இருக்கு. முடிச்சிட்டு வந்துர்றோம் சர்வா. இது எல்லாம் எப்போதாவது ஒரு தடவை கிடைக்கும் வாய்ப்பு. அதை மிஸ் பண்ண விரும்பலை. நீ ரேகாவை கூப்பிட்டு கூட வச்சுக்கோ. என்னை விட அவள் ரக்சியை நல்லா பார்த்து கொள்வாள்." என்றவள் அவனது பதிலை எதிர்பாராது அழைப்பை துண்டித்து விட்டாள்.

அந்தக் கணம் அவனுக்கு ஒன்று புரிந்தது. பணக்கார வீட்டில் குழந்தை கூட "ஸ்டேட்டஸ் சிம்பள்' தான் என்று... தானும் அதில் ஒருவன் என்ற நினைவே அவனுக்கு அத்தனை கசப்பாக இருந்தது.

சர்வேஸ்வரன் மீண்டும் ஐசியூ பக்கம் வந்த போது உதயரேகா ஐசியூ கதவினை பார்த்தபடி கவலையுடன் அமர்ந்திருந்தாள். அவளது அக்கறையைக் கண்டவனுக்குப் பணத்திற்கும், பாசத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பது புரிந்தது. உதயரேகாவை போன்று ஒரு பெண் தனக்குத் தாயாக அமையவில்லையே என்கிற எண்ணம் அவனையும் அறியாது அவனுள் எழுந்தது. அதைக் கண்டு அவன் திகைத்து விழித்தான்.

தொடரும்...!!!
 

ஶ்ரீகலா

Administrator
அத்தியாயம் : 6

"சர்வா..." ஆங்கார குரலில் திடுக்கிட்டு விழித்தான் சர்வேஸ்வரன். அவன் எதிரே அவனது பெரியக்கா மஞ்சரி கோபத்தோடு நின்றிருந்தாள்.

"அக்கா, நீங்க எப்போ வந்தீங்க?" அவன் உறக்கம் கலைந்தவனாய் அவளைக் கண்டு கேட்டான். இப்போது பொழுது நன்றாக விடிந்திருந்தது.

"என்னடா இதெல்லாம்?" அவளோ அவனது கேள்விக்குப் பதில் அளிக்காது அவனைச் சுட்டிக்காட்டினாள்.

"என்னவாம்?" என்று கேட்டவனுக்கு அப்போதும் புரியவில்லை.

"வேலைக்காரியை தோளில் போட்டு தாலாட்டும் அளவுக்கு வந்துட்டியா?" மஞ்சரியின் குரலில் இன்னமும் கோபம் அடங்கவில்லை.

அப்போது தான் சர்வேஸ்வரனுக்குத் தான் மருத்துவமனையில் இருப்பது நினைவுக்கு வந்தது. அருகில் இருந்த உதயரேகாவை திரும்பி பார்த்தான். அவள் அவனது தோளில் தலைசாய்ந்து உறங்கி கொண்டிருந்தாள். அருகருகே அமர்ந்திருந்த இருவரும் எப்போதும் உறங்கினார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. அதுவும் இவ்வளவு நெருக்கமாக உறங்கியதை கூட அவனால் உணர முடியவில்லை.

"அவள் உன் தோளில் சாய... நீ அவள் தலை மீது சாய்ந்து நல்ல உறக்கம். அதுவும் பப்ளிக் பிளேசில் நாலு பேர் பார்க்கும்படி... ரொம்ப நல்லாயிருக்குடா. குடும்ப மானத்தை நல்லா காப்பாத்துற." மஞ்சரி ஏகத்துக்கும் எகிறினாள்.

"ப்ச், உடல் அசதியில் தூங்கி விட்டோம். இதுக்கு ஏன் இப்படிக் கத்துறீங்க?" அவனுக்கு எரிச்சல் வந்தது.

"இன்னமும் நீ அவளை எழுப்பி விடலை?" மஞ்சரி குற்றம் சாட்டும் பார்வையைத் தம்பி மீது செலுத்த...

அதை உணர்ந்தார் போன்று சர்வேஸ்வரன் உதயரேகாவை எழுப்பினான். உறக்கத்தில் இருந்து எழுந்த உதயரேகா எதிரில் மஞ்சரி நிற்பதை கண்டு உடனே எழுந்து நின்றாள்.

"வாங்க மேடம்..." என்றுரைத்தவள் அங்கிருந்து அகன்று தள்ளி சென்று நின்று கொண்டாள். அவளுக்குத் தான் சர்வேஸ்வரன் தோளில் சாய்ந்து உறங்கியது கூட நினைவில்லை. அதனால் அவள் சாதாரணமாக இருந்தாள்.

"நீங்க உட்காருங்க. ரக்சி விசயம் உங்களுக்கு எப்படித் தெரியும்? யார் சொன்னா? மாமா கூட வரலையா?" தம்பி அக்காவிடம் கேட்க...

"அமலா தான் ஃபோன் பண்ணி சொன்னாள். அதான் ஓடி வந்தேன். மாமாவுக்கு வேறு ஒரு முக்கியமான வேலை இருக்கு." மஞ்சரி கவலையுடன் சொல்ல...

அமலா போன்று கண்டு கொள்ளாது இருக்காது மனம் பதைத்து ஓடி வந்த பெரியக்காவை அந்தக் கணம் அவனுக்கு மிகவும் பிடித்தது. அதுவும் பெங்களூரில் இருந்து வந்திருக்கிறாள். பெரிய விசயம் இல்லையா!

"ரக்சிக்கு ஒண்ணும் இல்லையே?"

"பயப்படுற மாதிரி ஒண்ணும் இல்லை. இன்னைக்கு ரூமுக்கு மாத்திருவாங்க." அவன் ஆறுதல் கூற...

"இந்தக் கவிதாவுக்குக் கொஞ்சமும் பொறுப்புங்கிறதே இல்லை. இதே எங்க நிலாவா இருந்தால் கரணை அப்படிப் பார்த்து கொள்வாள்." சந்தடி சாக்கில் மஞ்சரி தனது நாத்தனாருக்குப் 'பிராண்ட் அம்பாசிடர்' ஆனாள். அதை அவன் உணர்ந்தாலும் அமைதி காத்தான்.

உதயரேகா வீட்டிற்குச் சென்று சமைத்து எடுத்துக் கொண்டு வந்தாள். அத்தோடு சர்வேஸ்வரனுக்கு உடையும் கொண்டு வந்தாள். அவளுடன் மீனம்மாளும் அங்கு வந்து விட்டார். ரக்சி நிலை கண்டு அவரும் கண்கலங்கி அமர்ந்து விட்டார்.

"என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்ல." அவர் பேரனையும், உதயரேகாவையும் ஆதங்கத்துடன் சத்தம் போட்டார்.

"அந்நேரத்தில் உங்களை எப்படி எழுப்புறது? அதனால் தான் எழுப்பலை. அதான் ரக்சிக்கு ஒண்ணுமாகலையே. கவலைப்படாதீங்க." சர்வேஸ்வரன் அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு அங்கிருந்த அறைக்குக் குளிக்கச் சென்று விட்டான்.

மதிய பொழுதில் ரக்சி கண்விழித்தாள். எல்லோரும் உள்ளே சென்று பார்த்து விட்டு வந்தனர். யாரிடமும் எதுவும் சொல்லாத குழந்தை தாய்மாமனிடம் என்ன நடந்தது? என்று கூறியது.

"மார்னிங் ஸ்கூல் போகும் அவசரத்தில் கீழே விழுந்த சோப்பை எடுத்து வைக்க மறந்துட்டேன். நான் ஈவினிங் திரும்பி வந்த போதும் சோப் அப்படியே கீழேயே இருந்திருக்கு. அதை நான் கவனிக்காம காலை வைத்து வழுக்கி விழுந்துட்டேன். அங்கிருந்த ஸ்ன்க்கில் தலை பட்டது மட்டும் தான் எனக்குத் தெரியும்." ரக்சி சொல்ல சொல்ல சர்வேஸ்வரன் திகைத்துப் போனான்.

பள்ளி முடிந்து வந்த பிறகு நடந்த சம்பவம் என்றால் மாலை ஐந்து அல்லது ஆறு மணிக்குள் நடந்திருக்க வேண்டும். கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் குழந்தை இரத்த வெள்ளத்தில் மயக்கத்தில் இருந்திருக்கிறாள். அவன் மனம் பதைபதைக்க மருமகளை அணைத்துக் கொண்டான். அவன் இதை யாரிடம் சொல்ல முடியும்? அவனது அக்காவிடமா? அவளோ மகளின் நலனை விடத் தன்னலன் முக்கியம் என்றல்லவா இருக்கின்றாள். அவனுக்கு மனம் வெறுத்துப் போனது.

அடுத்தச் சில நிமிடங்களில் ரக்சியை அறைக்கு மாற்றினார்கள். என்ன தான் மஞ்சரி உடனிருந்த போதும் உதயரேகா தான் ரக்சியைக் கவனித்துக் கொண்டாள். நள்ளிரவில் அமலா, சந்துரு, தமோதரன், மந்தாகினி அனைவரும் மருத்துவமனைக்கு வந்தனர். அவர்களைக் கண்டு சர்வேஸ்வரன் எதுவும் பேசாது கோபத்தைக் கட்டுப்படுத்தியவன் அங்கிருந்து சென்று விட்டான். உதயரேகா மட்டும் உள்ளிருக்க... மற்றவர்களை வெளியில் அழைத்துக் கொண்டு வந்தாள் மஞ்சரி.

"உங்களுக்கு எல்லாம் ஒரு விசயம் தெரியுமா? நான் இங்கே வந்தப்போ?" என்றவள் சர்வேஸ்வரனும், உதயரேகாவும் ஒருவர் மீது ஒருவர் தலை சாய்ந்து உறங்கி கொண்டிருந்ததைப் பெரிய விசயமாக எடுத்து கூறினாள். அந்தக் கிசுகிசு செய்தியில் ரக்சிக்கு அடிப்பட்டது, கவிதா அவளைக் கவனிக்காது கேளிக்கை விருந்திற்குச் சென்றது எல்லாம் அடிப்பட்டுப் போனது.

"அப்பா, என்னதிது? நீங்க என்னமோ சொன்னீங்க? ஆனா இங்கே நடப்பது என்ன?" அமலா கோபத்தோடு எகிறினாள்.

"இப்பவும் சொல்றேன். சின்ன விசயத்தை ஊதி பெருசாக்காதீங்க. கண்டுக்காம விடுங்க. இல்லைன்னா சர்வா வீம்புக்குன்னு ரேகா கழுத்தில் தாலி கட்டி விடுவான். அதுக்குப் பிறகு நம்மால் ஒண்ணும் செய்ய முடியாது." தாமோதரன் வழக்கம் போல் பெண்களை அடக்கியவர் வீட்டிற்குச் சென்று விட்டார்.

"எனக்கு என்னமோ இது சரியாப்படலை. அவ்வளவு தான் சொல்லுவேன்." அமலா கோபத்தோடு சொல்ல...

"நீங்க ரெண்டு பேரும் சொன்ன மாதிரி நான் அவன் கிட்ட பேசினேன். அவனுக்கு நிலா, கவிதா, ரஞ்சனி யாரும் வேண்டாமாம். வெளியில் இருந்து வேறு ஒரு பெண்ணைப் பார்க்க சொல்றான். அவன் கல்யாணத்துக்குத் தயார்ன்னு சொன்ன மாதிரி தான் இருந்தது." மந்தாகினி மெல்ல விசயத்தைப் போட்டு உடைத்தார்.

"என்னது எங்க நாத்தனார்கள் வேண்டாம்மா?" மஞ்சரி, அமலா இருவரும் நெற்றிக்கண் திறந்தனர்.

"ஆமாம்... அதுக்குச் சர்வா சொன்ன காரணமும் ஏத்துக்கக் கூடியதா தான் இருக்கு." மந்தாகினி காரணத்தைச் சொல்ல...

"அம்மா, நீங்க சொல்றதும் சரி தான். நிச்சயம் யாருக்காவது ஒருத்தருக்கு மனத்தாங்கல் வரத்தான் செய்யும்." அக்கா, தங்கை இருவருமே ஒப்பு கொண்டனர்.

"அவன் தான் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டான்ல. நாம சீக்கிரமே பொண்ணு பார்த்து சர்வாவோட கல்யாணத்தை முடிப்போம். கவலையை விடுங்க." மந்தாகினி சொல்லவும் இருவரது முகமும் தெளிந்தது.

அவர்களுக்கு உதயரேகா மீது பகை ஒன்றும் இல்லை. மாறாகப் பணம், புகழ், அந்தஸ்து மீதிருந்த வெறியே இதற்குக் காரணம்.

*******************************

ஆகாஷ் வெளியூர் பயணம் மேற்கொண்டு இருந்ததால் பரணிக்கு வேலை இல்லை. அதனால் அவன் இன்று மீனம்மாளிடம் உதயரேகா பற்றிப் பேச நினைத்தான். மீனம்மாள் மூலம் பட்டம்மாளின் காதிற்கு விசயத்தைக் கொண்டு செல்ல எண்ணினான். அவனது அதிர்ஷ்டம் இருவரும் சேர்ந்து அமர்ந்து ஏதோ பேசி கொண்டிருந்தனர். உதயரேகா தொண்டு நிறுவனத்திற்குச் சென்றிருந்தாள். இது தான் நல்ல சந்தர்ப்பம் என்றெண்ணி பரணி அவர்களை நோக்கி சென்றான்.

"என்னப்பா பரணி? வேலை எல்லாம் முடிஞ்சிருச்சா?" மீனம்மாள் தன் முன் நின்ற பரணியைக் கண்டு கேட்க...

"ஆமாம், பெரியம்மா..." பணிவுடன் சொன்னவன் தயக்கத்துடன் அவரது முகத்தினைப் பார்த்தான்.

"வீட்டுக்கு போகணுமா? போப்பா." மீனம்மாள் கூற...

"சரிங்க பெரியம்மா." என்றவன் பின் தயங்கி, "உங்க கிட்ட ஒரு விசயம் பேசணும்." என்று கூற...

"சொல்லுப்பா..." மீனம்மாள் அவனைக் காண... பட்டம்மாள் இருவரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

"எனக்கு ரேகான்னா ரொம்பப் பிடிக்கும். தப்பான நோக்கத்தில் இல்லை." என்று அவசரமாகச் சொன்னவன் பின்பு நிதானத்துடன், "நான் ரேகாவை கல்யாணம் பண்ணிக்க விரும்புறேன். எனக்கு அவளைக் கட்டி வைப்பீங்களா? காலம் பூராவும் ரேகாவையும், பாட்டியையும் நான் நல்லா பார்த்துக்குவேன்." என்று தனது மனதில் இருந்ததைக் கூறினான்.

பரணி கூறியவிதம் பெரியவர்கள் இருவருக்கும் மிகவும் பிடித்துப் போனது. அதுவும் அவன் பட்டம்மாளையும் சேர்த்து பார்த்துக் கொள்வதாகக் கூறியது கேட்டு மீனம்மாளுக்கு மிகவும் நிறைவாக இருந்தது. பரணி இங்கே வேலைக்குச் சேர்ந்து மூன்று மாதங்களாகி விட்டது. மீனம்மாள் அவனைப் பார்த்துக் கொண்டு தானே இருக்கின்றார். அவன் மிகவும் நல்ல பையன் என்பதை. அவருக்குச் சம்மதமே. மீனம்மாள் பட்டம்மாள் முகத்தைப் பார்க்க... அவரோ சிறிது யோசித்தார்.

"என்ன யோசிக்கிற பட்டு?"

"மீனாம்மா, கல்யாணம் சின்னப் பிள்ளைங்க விளையாட்டு இல்லை. வீட்டில் இருக்கும் பெரியவங்களை வந்து பேச சொல்லுங்க." மறைமுகமாகப் பட்டம்மாள் பரணிக்குச் சம்மதம் தெரிவித்தார். அதைக் கேட்டு மீனம்மாள், பரணி இருவரது முகமும் மலர்ந்தது.

"பரணி, பட்டு சொன்னதைக் கேட்ட தானே. உன்னோட அப்பா, அம்மாவை வந்து பேச சொல்லு." மீனம்மாள் அவனிடம் சொல்ல...

"கட்டாயம் பெரியம்மா. இதோ என்னோட அட்ரஸ். என்னைப் பத்தி, என் குடும்பத்தைப் பத்தி நல்லா விசாரிச்சிக்கோங்க." என்றவன் காரியம் கை கூடியதில் மிகுந்த சந்தோசத்துடன் அங்கிருந்து அகன்றான்.

அன்றே மீனம்மாள் பேரனிடம் பரணி உதயரேகாவை பெண் கேட்ட விசயத்தைச் சொல்லி விட்டார். போன முறை பேரன் கோபித்துக் கொண்டானோ என்கிற எண்ணம் இருந்ததால்... இந்த முறை அவராக அவனிடம் விசயத்தைக் கூறி விட்டார். சர்வேஸ்வரனோ வெளியில் சிரித்தபடி கேட்டாலும் உள்ளுக்குள் உலைகளமாய்க் கொதித்துக் கொண்டிருந்தான்.

"இது பரணி வீட்டு அட்ரஸ். அவங்க குடும்பத்தைப் பத்தி கொஞ்சம் விசாரிச்சு சொல்லு சர்வா. ரேகா நம்ம வீட்டு பொண்ணு. அவளை நல்லவன் ஒருத்தன் கையில் பிடிச்சு கொடுக்கணும்." மீனம்மாள் கவலையுடன் கூற...

"நிச்சயம் விசாரித்துச் சொல்கிறேன் மீனுக்குட்டி. நீங்க கவலைப்படாம போங்க." என்று அவன் பாட்டியை அனுப்பி வைத்து விட்டுக் கையிலிருந்த துண்டு காகிதத்தை எடுத்துப் பார்த்தான். அடுத்த நொடி அவனது முகம் செந்தணலாய் மாறிப் போனது.

பரணியை எப்படிச் சமாளிப்பது? என்று சர்வேஸ்வரனுக்குத் தெரியவில்லை. அவனிடம் வேலை பார்ப்பவனாக இருந்தால் தனக்குக் கீழே பணிபுரிபவர்களைக் கொண்டு காரியத்தைக் கச்சிதமாக முடித்து விடுவான். இதே இது தெரியாதவர்களாக இருந்தால் அவனே நேரிடையாகக் களத்தில் இறங்கி ஆட்டத்தைக் கலைத்து விடுவான். ஆனால் பரணி வீட்டிற்குத் தெரிந்தவன்... யாரின் மூலமாவது அவன் செயலாற்றினாலும் வீட்டினருக்கு தெரிந்து விடும்.

"பரணி..." அவன் செய்வதறியாது கோபத்தில் பல்லை கடித்தான்.
 

ஶ்ரீகலா

Administrator
வெகுநேரம் யோசித்தவனுக்கு அந்த யோசனை தோன்றியதும் முகம் மலர்ந்தது. உடனே அதைச் செயலாற்றித் தொடங்கினான். ஒரு தரகர் மூலம் பரணிக்கு நல்ல வசதியான பெண்களின் வரன்களை அவனது பெற்றோரிடம் அனுப்பி வைத்தான். எந்தப் பெற்றோருக்கு தான் மகனுக்கு நல்ல வசதியான வரன் வந்தால் பிடிக்காது போகும். பரணியின் பெற்றோரும் ஆசை கொண்டு அவனிடம் வசதியான வரன்களைப் பற்றிப் பேச... அவனோ கோபத்துடன் வெடித்துச் சிதறி விட்டான்.

"எனக்கு ரேகா தான் வேண்டும். இதில் மாற்று கருத்து இல்லை. நாளைக்கே நாம ரேகாவை பெண் பார்க்க போகின்றோம். பெண் பார்க்க செல்வது கூட வெறும் கண்துடைப்பு தான். அங்கே போய் உறுதி பண்ணிட்டு தான் வர்றோம்." பரணி திட்டவட்டமாகக் கூற... அவனது பெற்றோரால் எதுவும் செய்ய இயலாத நிலை.

இது எதுவும் சர்வேஸ்வரனுக்குத் தெரியாது. உதயரேகாவுக்கும் இது தெரியாது. ஆகாஷ் இன்னமும் வராததால் பரணி வேலைக்கு வரவில்லை. அதனால் அவளுக்கும் பரணியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

மீனம்மாள் வந்து விசயத்தைச் சொன்ன போது உதயரேகா திகைத்து போனாள். அதுவும் பரணி அவளை விருப்பப்பட்டு மணக்க கேட்டதாகச் சொன்ன செய்தி அவளுக்குப் புதிதே. அவளையும், பாட்டியையும் நன்றாகப் பார்த்துக் கொள்வதாகப் பரணி கூறியதாக மீனம்மாள் சொன்னதைக் கேட்டவளுக்கு வியப்பாய் இருந்தது. மீனம்மாள் தன்னுடைய பட்டுப்புடவையை அவளிடம் கொடுத்து கட்ட சொன்னார். கட்டி கொண்டு வந்தவளை கண்டு பிரம்மித்தவர்,

"நீ ரொம்ப அதிர்ஷ்டமான பொண்ணு ரேகா. உன் மனசுக்கு ஏத்த மாதிரி நல்ல ராஜா மாதிரி மாப்பிள்ளை கிடைச்சிருக்கான். நீ கொடுத்து வச்சிருக்கணும்ன்னு நான் சொல்ல மாட்டேன். உன்னைக் கட்டிக்கப் பரணி தான் கொடுத்து வச்சிருக்கணும்." என்றவர் தனது கழுத்தில் இருந்த இரட்டை வட சங்கிலியை கழற்றி அவளது கழுத்தில் அணிவித்தார்.

"எதுக்குப் பெரியம்மா?" அவள் சங்கடத்துடன் அவரைப் பார்த்தாள்.

"பெண்ணுக்கு பொன் நகை போட்டால் தனி அழகு வந்துவிடும். நீ சும்மாயிரு." என்ற மீனம்மாள் மேலும் தனது கரங்களில் இருந்த வளையல்களைக் கழற்றி அவளது கரத்தில் அணிவித்தவர், "பட்டு, இப்போ ரேகா எப்படி இருக்கிறாள்?" என்று அவளுக்குத் திருஷ்டி கழித்தபடி கேட்க...

"ரேகா மனசு மாதிரி அவளும் அழகு." பேத்தியின் அழகு கண்டு பட்டம்மாளின் விழிகளில் ஆனந்த கண்ணீர் நிறைந்தது.

சிறிது நேரத்தில் பரணி தனது பெற்றோருடன் அங்கு வந்து விட்டான். அவர்களை வரவேற்று அமர வைத்த மீனம்மாள் உள்ளே சென்று உதயரேகாவிடம் காபி கொண்டு வர சொன்னார். பிறகு அவர் மட்டும் வெளியில் வந்து மூவரிடமும் பேசி கொண்டிருந்தார். பட்டம்மாள் அனைத்தையும் புன்னகையுடன் வேடிக்கை பார்த்திருந்தார். உதயரேகா காபியை கொண்டு வந்து மூவரிடமும் கொடுத்தாள்.

பரணியின் பெற்றோருக்கு உதயரேகாவின் தோற்றம் அதிருப்தியை தந்தது. அவள் பரணியை விடச் சற்று குண்டாக, வயது முதிர்ந்த தோற்றத்தில் இருப்பது போல் அவர்களுக்குத் தோன்றியது. இதற்குத் தான் மகன் இத்தனை ஆர்ப்பாட்டம் செய்தானா? என்று அவர்களால் நினைக்காது இருக்க முடியவில்லை. ஆனால் அவர்கள் பிடித்தமின்மையை வெளிப்படையாகக் கூறாது அமைதி காத்தனர். அவர்கள் எதுவும் கூறினால் மகன் சாமியாடி விடுவானே! பரணியோ உதயரேகாவை காபி பருகுவது போல் விழிகளால் பருகு பருகு என்று பருகினான். அவனுக்கு அவளது புற அழகு எதுவுமே கண்ணுக்கு புலப்படவில்லை. மாறாகப் புடம் போட்ட பொன்னாக ஜொலித்த அவளது அக அழகு மட்டுமே அவனது விழிகளுக்குத் தெரிந்தது. அதனால் அவள் அவனது விழிகளுக்கு உலகப் பேரழகியாகத் தெரிந்தாள்.

உதயரேகாவோ குனிந்த தலை நிமிரவில்லை. உறுதியான முடிவு எடுப்பதற்கு முன் மனதில் தேவையில்லாத எண்ணங்களை வளர்த்துக் கொள்ளக் கூடாது என்பதில் அவள் உறுதியாக இருந்தாள். அதிலும் பரணியின் பெற்றோர் அவளைப் பார்த்த பார்வையே அவர்களது பிடித்தமின்மையைத் தெளிவாகக் கூறியது. ஆனாலும் அவள் மீனம்மாள் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அமைதியாக நின்றாள்.

இந்த விசயம் அறியாத சர்வேஸ்வரன் மாலையில் எப்போதும் போல் வீட்டிற்கு வந்தவன் உதயரேகாவை தேடினான். வீட்டில் அவள் இருப்பது போன்று தெரியவில்லை. அவள் இருந்திருந்தால் அவனது வரவினை அறிந்ததும் காபி எடுத்துக் கொண்டு வந்திருப்பாளே! அவன் யோசனையுடன் சமையலறைக்குச் செல்ல... அது சுத்தமாகத் துடைத்து வைக்கப்பட்டு இருந்தது. அங்கும் அவள் இல்லை. அவன் பின்கட்டு வழியாக அவளது வீடு நோக்கி சென்றான். அவளது வீட்டின் முன் புதியதாய் மூன்று ஜோடி செருப்புகள் இருப்பதைக் கண்டு அவனது விழிகள் சுருங்கியது. ஒருவேளை பரணி பெண் கேட்டு வந்திருப்பானோ! அந்த எண்ணம் எழுந்ததும் அவன் வேகமாக அவளது வீட்டினை நோக்கி நடையை எட்டி போட்டான். அங்கே வேலை செய்து கொண்டிருந்தவர்கள் அவனை அதிசயமாகப் பார்த்தனர். அவன் இதற்கு முன்பு இங்கு எல்லாம் வந்தது இல்லையே!

உதயரேகா வீட்டின் வாயிலில் வந்த சர்வேஸ்வரன் அங்கு அவள் சர்வ அலங்காரத்துடன் கையில் தட்டை பிடித்தபடி தலைகுனிந்து நின்றிருப்பதைக் கண்டான். அதைக் கண்டதும் அவனது கோபம் அதிகரித்தது. அதைவிடப் பரணி அவளை ரசித்துப் பார்த்திருப்பது கண்டு அவனது இரத்த அழுத்தம் ஏகத்துக்கும் எகிறியது. அதற்கு மேல் தாமதிக்காது அவன் பல்லை கடித்தபடி வீட்டினுள் சென்றான். பேரனின் எதிர்பாராத வருகையைக் கண்ட மீனம்மாள் முகம் மலர்ந்தார். பரணியோ அவனை ஆராய்ச்சியாய் பார்த்தான். உதயரேகா என்ன? என்பது போல் அவனைக் கேள்வியாகப் பார்த்தாள்.

"சர்வா..." மீனம்மாள் மேலே கூற வரும் முன்...

சர்வேஸ்வரன் உதயரேகாவின் கரத்தினை உரிமையுடன் பற்றியபடி, "பப்ளிமாஸ், எனக்கு ஒரே தலைவலி. வந்து காபி போட்டு கொடு." என்க...

உதயரேகாவோ திகைத்துப் போய்ப் பார்த்தாள். அவனுக்குத் தலைவலி என்றால் அவள் காபி போட்டு தருவது அவளது கடமை தான். ஆனால் இப்போது அவள் இருக்கும் நிலை என்ன? அதை மீறி அவன் தன்னை உரிமையாக அழைக்கின்றானே! என்னவானது அவனுக்கு! அவளது விழிகளில் திகைப்பு தேங்கி நின்றது. அதை எல்லாம் சர்வேஸ்வரன் கண்டு கொள்ளவில்லை.

"வா..." என்றவன் அவளது கரத்தினை இழுத்துக் கொண்டு அவளது வீட்டை விட்டு வெளியேறினான். அவளும் திகைத்தபடி அவன் இழுத்த இழுப்பிற்கு அவனின் பின்னேயே சென்றாள்.

"சர்வா, என்ன பண்ணுற?" மீனம்மாள் கத்த... பட்டம்மாளுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவரால் சர்வேஸ்வரனை தவறாக நினைக்கவும் முடியவில்லை.

"நீங்க இருங்க பெரியம்மா. நான் போய் என்னன்னு பார்க்கிறேன்." பரணி எழுந்து கொண்டான்.

"என்னதிது பரணி? அந்தப் பையன் பாட்டுக்கு வந்து இந்தப் பொண்ணோட கையைப் பிடிச்சு இழுத்துட்டுப் போறான். இது எல்லாம் பார்க்கிறதுக்கு நல்லாவா இருக்கு?" பரணியின் பெற்றோர் இது தான் சாக்கு என்று அவனிடம் காய்ந்தனர். அவன் அவர்களைச் சமாதானப்படுத்த ஆரம்பித்தான்.

சர்வேஸ்வரன் தனது வீட்டிற்கு வந்த பிறகே உதயரேகாவின் கரங்களை விடுவித்தான். என்றுமே அவனது நடத்தையைச் சந்தேகமாகப் பார்க்காத உதயரேகாவிற்கு இன்று ஏனோ அவனது நடத்தை வித்தியாசமாகத் தோன்றியது. அவளது முகம் பிடித்தமின்மையைக் காட்டியது. அவனோ அதை உணர கூட இல்லை.

"பப்ளிமாஸ், தலைவலி உயிர் போகிறது. சீக்கிரம் காபி போடு." என்றவன் சமையல் மேடையில் சாய்ந்து நின்று கொண்டு வேண்டுமென்றே தலையைப் பிடித்தான்.

அதைக் கண்டு பெண்ணவளின் இயல்பான தாய்மை உள்ளம் பதறித்தான் போனது. அவள் ஒன்றும் பேசாது வேகமாகப் பாலை எடுத்துப் பாத்திரத்தில் ஊற்றி காய்ச்ச துவங்கினாள்.

"காபி வேண்டாம். இஞ்சி, ஏலக்காய் தட்டி போட்டு டீ போட்டு தர முடியுமா?" அவன் சிறு பிள்ளை போன்று நேரத்தை கடத்த எண்ணினான். நேரமானால் பரணி வீட்டார் கிளம்பி சென்றுவிடுவர் என்று அவன் சின்னப்பிள்ளைத்தனமாய் யோசித்தான்.

"சரி பிரின்ஸ்... நீங்க உட்காருங்க." அவள் அங்கே இருந்த சிறிய உணவு மேசையைக் காட்டினாள்.

"இல்லை, பரவாயில்லை." என்றவன் நின்றபடி அவளைப் பார்த்தான். இன்று அவள் பட்டுச்சேலை கட்டி, நகைகள் அணிந்து சற்று அழகாகத் தான் இருந்தாள். அவள் பரணிக்காகப் பார்த்து பார்த்து அலங்கரித்து இருக்கிறாள் என்கிற உணர்வே அவனை நெருப்பாய்ப் பொசுக்கியது. உள்ளுக்குள் கோபம் கரைபுரண்டு ஓடினாலும் வெளியில் அவன் அமைதியாகக் காட்டி கொண்டான்.

"இந்தாங்க நீங்க கேட்ட டீ." அவள் சுட சுட தேநீரை ஊற்றி அவனிடம் கொடுத்தாள்.

அதை வாங்கி ஒரு வாய் பருகியவன், "வாவ், உன்னோட டீ குடிச்சதும் தலைவலி கூட மாயமாகி விட்டது பாரேன்." என்று கூறி புன்னகைக்க...

அவளோ வலுக்கட்டாயமாக உதடுகளை இழுத்து வைத்தாள். எப்போதும் தவறாகத் தோன்றாத சர்வேஸ்வரனின் செயல்கள் எல்லாம் இன்று தவறாகத் தோன்றியது. ஏதோ சரியில்லை என்று அவளது சிறிய மூளை அவளுக்கு அறிவுறுத்தியது.

"சார்க்கு டீ போட்டு கொடுத்தாச்சா ரேகா?" இவ்வளவு நேரம் அமைதியாக இருவரையும் பார்த்திருந்த பரணி கேட்டான்.

அவனது குரலில் அவள் தூக்கிவாரி போட திரும்பினாள். சர்வேஸ்வரனோ பரணியைத் தீயென எரித்தான்.

"பதில் சொல்லு ரேகா?" அவன் கேட்கவும்...

"கொடுத்தாச்சு." அவள் மெல்ல சொல்லவும்...

"அப்போ நாம போகலாம்." என்றவன் ஓரடி எடுத்து வைத்தவன் பின்பு திரும்பி, "டீ போட்ட பாத்திரங்களைக் கழுவி வைத்து விட்டு வா. இல்லை என்றால் சார் பாதியில் வந்து உன்னைக் கூட்டிட்டு போயிருவார்." இதைச் சொல்லும் போதே பரணியின் விழிகள் சர்வேஸ்வரனை கேலி செய்தது.

சர்வேஸ்வரன் பல்லை கடித்தபடி நின்றிருந்தான். இந்த நொடி பரணியை ஒன்றும் செய்ய இயலாத தனது நிலையை எண்ணி அவன் உள்ளுக்குள் குமைந்தான். அதற்குள் உதயரேகா பாத்திரங்களைக் கழுவி வைத்து விட்டு வந்தாள்.

"வேலை முடிஞ்சது. நாங்க கிளம்பறோம்." என்ற பரணி உதயரேகாவை அழைத்துக் கொண்டு சென்றான்.

அதைத் தடுக்க முடியாத ஆத்திரத்தில் சர்வேஸ்வரன் நின்றிருந்தான். பின்பு அவன் வேகமாய் வெளியில் சென்று அவளது வீட்டினை பார்க்க... பரணியின் பெற்றோர் தாம்பாள தட்டில் பழம், பூ வைத்து மீனம்மாள், பட்டம்மாளிடம் நீட்டினர். பெரியவர்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் தட்டை வாங்கிக் கொண்டனர். சர்வேஸ்வரனுக்கு அந்தத் தட்டை எட்டி உதைக்கும் ஆத்திரம் வந்தது. அதைச் செய்ய இயலாது அவனது பாட்டி இடைஞ்சலாக இருந்தார்.

சர்வேஸ்வரன் தட்டினை வெறித்தபடி இருக்க... பரணி அவனை நக்கலாய் பார்த்தான். பரணியின் நக்கல் பார்வையைக் கண்டு அவன் சினம் தலைக்கேற நின்றிருந்தான். முதல் முறையாகச் சர்வேஸ்வரனிடத்தில் வித்தியாசத்தைக் கண்டு உதயரேகா உறைந்து நின்றாள்.

தொடரும்...!!!
 
Status
Not open for further replies.
Top