அத்தியாயம்- 04
ஆதித்யா நேற்று முழுவதும் நடைபெற்ற நிகழ்ச்சியாலும் இன்று நடைபெற்ற திருமணத்தாலும் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியிருந்தால் படுத்தவுடன் உறங்கியும் விட்டான்.
அப்பொழுது அறைக்கு வந்த மதுமிதா அவன் உறங்குவதைப் பார்த்து, அவளும் அமைதியாக அங்கிருந்த சோபாவில் அமர்ந்து தான் இத்திருமணத்திற்கு சம்மதித்த நினைவில் முழ்கினாள்.
அவளுக்கு வீட்டிலிருந்து போன் வரவும், “சொல்லுங்கப்பா, எதுக்கு கால் பண்ணிங்க, தாத்தா உடம்புக்கு ஏதும் பிரச்சன்னையில்லைதான?”..
அதுல எதுவும் இல்ல மது, நீ உடனடியாக புறப்பட்டு ஊருக்கு வா, அப்பறமா நான் எல்லா விவரமும் சொல்றேன்... என்றுக் கூறி அழைப்பை துண்டித்தார்.
என்னவாக இருக்கும் என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, அவளது ஓட்டுனர் வந்து, “அம்மா!! ஐயா உங்கள கூட்டிட்டு ஊருக்கு வர சொன்னாங்க இப்பவே.. நீங்க தயாராமா? “ என்றார்.
அவளுக்கோ என்னடா இவ்வளவு சிக்கிரமா வர சொல்றாரே, என்னன்னு தெரியலயே? என்று தனக்குள் குழம்பியவள் “ஒரு 5 நிமிஷம் வெயிட் செய்யுங்க.. நானே வரேன்” என்றுக் கூறி அனுப்பியவள். தன்னறைக்கு சென்று ஒரு புடவையை அணிந்துக்கொண்டு கிளம்பினாள் அவசரமாக.
வரும்வழியில் எல்லாம் என்னவாக இருக்கும் என்று யோசித்துக்கொண்டே வந்தாள். அவளுக்கு நன்கு தெரியும் தனது தாத்தா உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அனைவரும் அங்கு ஊருக்கு சென்றுள்ளனர்.
அவரும் நன்றாக இருக்கும் பட்சத்தில் அப்படி என்ன முக்கியமான விஷயம் என தனக்குள் கேள்வி எழுப்பினாள். சரி, எதுவாக இருந்தாலும் அங்கு போய் தெரிந்து கொள்ளலாம் என முடிவெடுத்தவள். அங்குள்ள வயல்வெளிகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே சென்றாள்.
வீட்டை அடைந்தவளுக்கோ மிகுந்த ஆச்சரியம், ஏனெனில் வீட்டில் அனைத்து உறவினர்களும் குழுமி இருந்தனர்.
அங்கு இருந்த தன் தமையனிடம், “ஹேய் !! விக்ரம் !! என்னடா நடக்குது இங்க, எல்லா சொந்தக்காரங்களும் வந்து இருக்காங்க” என்றாள்.
“உள்ள வா மது சொல்றேன்” என்று கைப்பிடித்து அழைத்துச் சென்றான். அங்கு அவள் கெட்ட செய்தியில் அவள் தலையில் இடியை இறக்கியது போல உணர்ந்தாள்.
“முடியாது !! முடியாது !! என்னால எந்தக் காரணத்துக்காகவும் இந்தக் கல்யாணத்தை ஏத்துக்க மாட்டேன். என்னோட வாழ்க்கை தாத்தா இது. நான் உங்களோட ப்ரிண்டுக்காக இத ஏத்துக்க முடியாது. ப்ளீஸ் என்ன கட்டாய படுத்தாதிங்க” என்றாள்.
“எனக்கும் இதுல விருப்பம் இல்ல” என்றான் விக்ரம்.
அவர்களின் தாத்தா அவர்களை அருகில் அழைத்து, “எனக்கு புரியுது உங்களோட நிலைமை. ஆனால், நான் சொல்றதும் கண்டிப்பா நீங்க கேட்டுட்டு ஒரு முடிவு எடுங்க.” என்றார்.
இவர்களும் அதற்கு ஒத்துக்கொண்டு அவர் கூறுவதை கேட்க ஆரம்பித்தனர்.
“அண்ணாமலை, அவன் பையன் அமரனுக்கு ஒரு நல்ல பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணனும்னு நினச்சு, ஒரு ஏழை பொண்ணான ஜானவிய கல்யாணம் பண்ணி வைச்சான். அவள கல்யாணம் பண்ணிக் கொடுத்த மூன்று மாசத்துல, அவளோட அப்பா இறந்துட்டாரு.
பார்வதி அவளோட சித்திதான். அவளோட அம்மா இறந்த கொஞ்சம் வருஷத்துல அவள கல்யாணம் பண்ணிகிட்டாறு அவளோட அப்பா. அவங்க ரெண்டு பேருக்கும் குழந்தை இல்லை. அதுனால பார்வதியும் அவள தன்னோட பொண்ணாவே பார்த்துக்கிட்டாங்க.
ஆனாலும் பார்வதி எதிர்பார்த்த மாதிரி வசதி வாய்ப்பு அங்க கிடைக்கலதான். அப்போ ஜானவிக்கு இவ்வளவு பெரிய வீட்ல கல்யாணம் நடக்கவும் அத பார்வதியால ஜீரணிக்க முடியல.
அவளோட வீட்டுக்கறாரும் இறந்ததால, அவங்கள ஜானவி தன்னோடவே வெச்சிக்க சொல்லி அவ அமரன்கிட்ட கேட்டா, அவனும் அவனோட அப்பா கிட்ட கேட்டான். அதுக்கு அண்ணாமலை வேண்டாம்டா, அப்போ அப்போ போய் பார்த்துகோங்க அப்படின்னு சொல்லிட்டான்.
ஜானவிக்கு வருத்தம் இருந்தாலும் அவ அப்போதைக்கு ஒத்துகிட்ட. ஆனா, பார்வதிக்கு அது பெரிய அவமானம போயிடுச்சு. அவ மனசுல வன்மத்த வெச்சுகிட்டு, ஜானவிகிட்ட நடிச்சு அழுது, அவளும் அமர வற்புறுத்தவும் ஒருக் கட்டத்துல முடியாம அவன் ஒத்துகிட்டான்.
அதுதான் அவன் பண்ண பெரிய தப்பு, அப்போ வீட்டுக்கு வந்த பார்வதி, ஜானவிய பெரிய இடத்து வீட்டு மருமகங்க எப்படி இருக்கணும் அப்படி இப்படின்னு சொல்லி அவள கெடுக்க ஆரம்பிச்சா. அவளுக்கு புரிஞ்சது இவள வெச்சியே இந்த குடும்பத்தைக் கலைச்சிடலாம்னு ஒரு முடிவெடுத்தா. ஆனா இது எல்லாம் அமரோட அப்பாவும் அம்மாவும் கண்டுபுடிக்கும்போது ரொம்ப நாள் ஆயிடுச்சு.
ஜானவி கர்ப்பம் ஆயிட்டா. எல்லாரும் சந்தோஷமா இருந்தாலும். பார்வதி தனக்கு கிடைக்காத பாக்கியம் இவளுக்கு கிடைச்சிடுச்சேன்னு இன்னும் ஜானவியா கெடுக்க ஆரம்பிச்சா. அது வந்து குழந்த பொறந்து 3 மாசம் மட்டுமே குழந்தைக்கு பால் கொடுத்தா, அதுக்கப்பறம் கொடுக்கமாட்டேனும், குழந்தையா யாராவது ஆயாகிட்ட கொடுத்து வளர்க்க ஆரம்பிக்கவும் பிரச்சனை புரிய ஆரம்பிச்சது அமரனுக்கு.
அவன் எல்லாரையும் என்ன? ஏதுனு? கேட்டு கண்டுபுடிச்சான். இதுக்கு எல்லாம் காரணம் பார்வதிதான். அதனால அவங்களுக்கு வீடு வாங்கி தந்து அவங்கள அனுப்பிடலாம்னு ஜானவிகிட்ட சொன்னான்.
ஆனா, எல்லாரும் ஆச்சரியபடர மாதிரி ஜானவி ஒன்னு பண்ணா, அதப் பார்வதி கூட எதிர்பார்கல. என்னோட சித்திய நீங்க வெளிய அனுப்பனிங்கனா நானும் அவங்களோட போறேன். உங்க குழந்தைய நீங்களே பார்த்துகோங்க. எனக்கு ஜீவனமாசம் தந்துடுங்கனு.
இதக்கேட்டு எல்லாரும் வருத்தபட்டாங்க. அமரனோ ரொம்ப மனசு உடஞ்சி போய்ட்டான். சேராதவங்களோட சேர்ந்து அவளும் மாற ஆரம்பிச்சுட்டானு மட்டும் தெரிஞ்சது. அப்பறம் பையன் வாழ்க்கைக் கெட்டு போக கூடாதுன்ற காரணத்தால, அண்ணாமலையும் பார்வதி நமக்கூடவே இருக்கட்டும்னு சொல்லிட்டான்.
அப்போ இருந்து ஆதித்யாவோட பொறுப்பு அண்ணாமலைக்கும் என்னோட தங்கச்சிக்கும் வந்துடுச்சு. ஒரு ரெண்டு வருஷம் கழிச்சு என் தங்கச்சி எல்லாரையும் விட்டுட்டு போயிட்டா. ஆதிக்கு எல்லாமே அண்ணாமலை தான் எப்பொழுதும். எல்லாத்துக்கும் அவன்தான் வேணும்.
அவனுக்கு எட்டு வயசாகும்போது, இங்க என்ன பார்க்க வந்தான். அப்போதான் எல்லாமே சொன்னான். எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. அப்போ உங்க ரெண்டுபேரோட அம்மா எப்படி குடும்பத்தையும் வேலையையும் சமமா நடக்கறதப் பார்த்துட்டு இந்த மாதிரிதான் என்னோட ஆதிக்கும் பொண்டாட்டி வேணும்னு சொன்னான்.
அவனுக்கு சின்ன வயசுல இருந்து அம்மாவோட பாசத்த குடுக்காதா அவனோட அம்மா மாதிரி அவனோட மனைவி வந்துற கூடாதுனு சொன்னான். அப்பறம் போகும்போது அந்த பெட்டியைக் கொடுத்துட்டு போய்ட்டான். இப்போதான் அதுல என்ன இருந்ததுன்னு தெரியுது.
இங்க பாரு மது, ஆதித்யா அண்ணாமலை வளர்த்த பையன். அவன் அவனோட அம்மா மாதிரி இல்ல. நல்லா படிச்சிருக்கான் அவங்க தொழில எடுத்து நடத்துறான் நம்ம விக்ரம் மாதிரி.
அதனால நீ வேண்டாம்னு சொல்லாத. நீ அவனுக்கு ஒரு பொண்டாட்டியா மட்டும் போக போறதில்ல. ஆதித்யாவுக்கும் அவனோட தங்கச்சிக்கும் எல்லாமுமாக இருக்கப்போற.
உன்னால அந்த வீட்ல சந்தோஷமும் பாசமும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில தான் அண்ணாமலை இப்படி ஒரு முடிவ எடுத்து இருக்கான். இது என்னோட விருப்பமும் கூட. என்னோட ஆசைய நிறைவேத்தறது உன் கையில இருக்கு” என்று சொல்லிவிட்டு கண்மூடி தூங்க முயன்றார்.
அங்கு அவரைப் பார்த்துக் கொள்ளும் நர்ஸ், “அவருக்கு உடம்பு முடியாம இருக்கு, அவரு இவ்வளவு நேரம் பேசறதே பெருசு. இதுல நீங்க அவங்கள மேலும் கேள்விகேட்காம வெளிய போங்க.” என்று அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டார்.
தனது தாத்தாவும் அவரது பெற்றோரின் விருப்பமும் ஆதித்யாவின் தகுதியும் திறமையும் அறிந்துக்கொண்டவள். இந்த இக்கட்டான சூழலில் அவளால் ஒத்துக்கொள்வதைத் தவிர வேறொரு முடிவும் இல்லை என்பதால் ஆதித்யாவை திருமணம் செய்வதில் ஒப்புக்கொண்டாள்.
இவ்வாறாக பழைய நினைவில் இருந்தவள் எப்படி உறங்கினால் என தெரியவில்லை. இருவரையும் மதிய விருந்துக்கு அழைக்க வந்த விக்ரமும் அவர்கள் உறங்குவதைப் பார்த்துவிட்டு, சோபாவில் இக்கட்டாக தூங்கிக் கொண்டிருந்தவளை தூக்கி ஆதித்யா அருகில் படுக்க வைத்துவிட்டு அறையை சாற்றிவிட்டு சென்றான்.
அனைவரிடமும் யாரும் அவர்களை தொந்தரவு செய்யாதிர்கள் என்றுக் கூறியவன் அவர்கள் எழும் போது உணவுக் கொடுங்கள் எனக் கூறி வெளியே சென்றான்.
ஆதித்யா தான் முதலில் தன் உறக்கம் கலைந்தான். யாரையோ அணைத்துக் கொண்டு தூங்குவதுபோல் தோன்றியது அவனுக்கு. கண் விழித்த அவன், தன் அருகில் உறங்கிக் கொண்டிருந்த அவனின் மனைவியைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தான்.
அதைவிட தான் அவளின் இடையை பற்றியவாறு படுத்திருப்பதைப் பார்த்து, நான் எப்படி? இவள் அருகில்? இவ்வாறு அவளை நெருங்கினேன்? என்ற யோசனையில் இருந்தான்.
அவன் அவளை விட்டு விலகுவதற்குமுன், அதற்குள் அவள் அவன்புறம் திரும்பி, அவள் தலையை அவன் மார்பில் பதித்தாள் தலையணை எனக் கருதி, அதில் அவன் விறுவிறுத்து போனான்.
அவன் ஒரு ஆண் அல்லவா, அவனுக்கு அவளிடம் தோன்றும் உணர்ச்சிகள் புதிதாக இருந்தது. அவன் மனது ஒருபுறம் விலக நினைத்தாலும், மறுபுறம் கணவன் என்ற உரிமையை எடுக்கவும் விழைந்தது.
அதுவும் ஒரு நிமிடம் மட்டுமே, பின்பு தனக்கு நடைபெற்றது ஒரு கட்டாயத் திருமணம் மட்டுமே என்ற நினைவு வந்து அவளை விலக்கினான். பின்பு எழுந்து ரெப்ரெஷ் செய்துக்கொண்டு வெளியே வந்தவனை மீண்டும் உபசரிக்க பிடித்துக் கொண்டனர்.
அப்பொழுது அங்குவந்த பிரியா அவளைபற்றி கேட்கவும், அவள் இன்னும் உறங்குகிறாள் என்று தெரிவித்தான்.
“என்ன அண்ணா !! அவங்களும் சாப்பிடல, இப்பவே 2.3௦ ஆச்சு, இரு நான் போய் அண்ணிய எழுப்பிக் கூப்பிட்டு வரேன், ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடுங்க...” என்று மது அறைக்கு சென்றாள்.
அவளை எழுப்பியவள் சாப்பிட வருமாறு அழைத்தாள்.
“அண்ணி !! அண்ணா உங்களுக்காக வெயிட் செய்கிறார்கள் வாங்க சீக்கிரம்” என்றாள்.
“ஒரு 5 மினிட்ஸ் இரு பிரியா வந்துடறேன். நீ சாப்பிட்டியா?”
“ஆச்சு அண்ணி, எல்லாரும் சூப்பரா கவனிக்கராங்க.” என்றாள்.
அவள் அவ்வாறுக் கூறியதும் பிரியா அன்புக்காக ஏங்குகிறாள் என்பதை நன்கு அறிந்துக்கொண்டாள். தன் வீட்டில் உள்ளவர்களின் சிறிய கவனிப்பிற்கும் மகிழ்பவள் உண்மையான பாசத்தைக் காட்டினால் அவள் என்ன கூறுவாள் என்று. அப்பொழுது மது ஒரு முடிவு எடுத்தாள் தன் மனதில் அவளுக்கு தான் ஒரு அன்னையாக மாற வேண்டும் என்று.
ஆனால் அவள் மறந்து போனாள் ஒன்றை ப்ரியாவைவிட ஆதித்யாவிற்கு அன்பின் தேவை அதிகம் என்று. ஏனெனில் ப்ரியாவிற்கு அவர்களின் அன்னை குணம் அறிந்து அவளின் தந்தையும் அண்ணனும் அவளுக்கு பாசத்தை அள்ளி தந்தனர். ஆனால் ஆதித்யாவிற்கு அன்பிற்காக ஏங்கும் ஒரு வளர்ந்த குழந்தை என்பதை மறந்து போனாள்.
இவ்வாறு இவளும், எதிர்பாராத திருமணம் என்ற இவனும் ஒருவரை ஒருவர் விலகியிருந்தனர். இவர்களை இணைக்கும் பாலமாக ப்ரியாவே இருப்பாள் என்பது முன்பே முடிவெடுக்கபட்டிருந்தது என்பதை அறியவில்லை போலும்.