All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிலா ஶ்ரீதரின் "எங்கேயும் நீயடி.. போகுதே உயிரடி..!!!" - கதை திரி

Status
Not open for further replies.

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 9

அன்பரசி தங்களறை கட்டிலில் அமர்ந்து துணிகளை மடித்துக் கொண்டிருந்தாள்.


அப்போது அவளிடம் வந்த அபிஷேக் “நீ எதிர்பார்த்த நாள், இல்லல்ல நான் எதிர்பார்த்த நாள் வந்திடுச்சு” என்று அவளிடம் ஒரு மரப்பெட்டியை நீட்டினான்.

அதை திறந்து பார்த்தால், அவன் புதிதாக தொடங்க போகும் தொழிலின் பெயர் கிரானைட் கல்லில் பதிக்கப்பட்டிருந்தது. பெயரை பார்த்த அன்புவின் கண்களில் நீர் சூழ, அவன் நிமிர்ந்து பார்த்தாள்.

“ஹேய்.. இதுக்கே இவ்ளோ ஷாக் ஆனா எப்படி. நான் ஒரு கதை சொல்லட்டுமா அரசி” அதுவரை அமுல் பேபி போல் குழைந்து பேசி கொண்டிருப்பவனின் முகத்தில் முதல் முறையாக வன்மத்தை கண்டாள்.

“எங்க அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட்.. பணம் இருக்குனு தான் பேர், ஆனா பையனுக்கு நல்லது செஞ்சி பார்க்கணும்ங்கிற எண்ணம் சுத்தமா கிடையாது. அவரோட தொல்லை தாங்க முடியாம தான் நான் யு.எஸ்க்கே படிக்க போனேன். உலகம் அது.. என் வாழ்க்கையை வாழ கிடைச்ச உலகம் தான் அது. அங்க நான் சந்திச்ச பொண்ணு தான் ரேச்சல்” முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு தந்தையை பற்றி சொல்லியிருந்தவன் சட்டென ரெமோவாக மாறி ரேச்சலை பற்றி சொல்ல ஆரம்பித்தான்.

“நானும் ரேச்சலும் ஒரு தனி உலகம். அன்புன்னா என்ன, காதல்னா என்ன, சந்தோஷம்னா என்னனு எனக்கு காட்டினவ அவ தான். படிப்பை முடிச்சதும் ஒரு கார்ப்பரேட் கம்பெனியில எங்க ரெண்டு பேருக்கும் வேலை கிடைச்சது. ரெண்டு பேரும் ஒண்ணா, சந்தோசமா காதலிச்சிட்டு இருந்தோம்” என்றவனின் முகம் மீண்டும் கோபத்தை தத்தெடுத்தது.

“ரேச்சல் எனக்கு லைஃப் லாங் வேணும்னு தோணுச்சு. அவ மேல இருந்த காதல் எங்க அப்பாவையும் பேஸ் பண்ற தைரியத்தை கொடுத்துச்சு. நானும் ரேச்சலும் சென்னை வந்தோம்” என்றவனின் தாடை இறுக, கண்கள் ஆக்ரோசத்தை பிரதிபலித்தது.

மகன் ஒரு அயல்நாட்டு பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்துபோது நமசிவாயம் கொதிநிலைக்கு சென்றார். அத்தோடு அவள் அவனுக்கு யாரென்று சொன்ன நொடி யாரும் தன்னை கட்டுப்படுத்தும் நிலையை கடந்திருந்தார்.

வீட்டிற்கு புதிதாக வந்திருப்பவள் முன், தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளையென்றும் பாராமல் நமசிவாயம் அபிஷேக்கை அறைந்திருந்தார்.

“அறிவிருக்காடா உனக்கு. படிக்க போன இடத்துல படிப்பை மட்டும் பார்க்காம இதை தான் பார்த்துட்டு இருந்தியாக்கும்” என்றுவிட்டு ரேச்சலை ஏற இறங்க எளாக்காரமாக பார்த்தவர் “எனக்கெல்லாம் காலையில எழுந்து குளிச்சதும் கோவிலுக்கு போயிட்டு வந்தா தான் மனசே நிறைவு பெரும். நீ என்னனா வேற கடவுளை கும்பிடுற பொண்ண கூட்டிட்டு வந்து நிக்கற. இந்த புள்ளையும் பெத்தவங்க கிட்ட சொல்லுச்சோ என்னவோ உன்னோட கிளம்பி வந்திருக்கு.. தூ.. இதெல்லாம் ஒரு பொண்ணா” என்று நிலத்தில் காரி துப்பினார்.

அவர் என்ன பேசினார் என்பது புரியாத போதிலும், அவரது உமிழ் நீர் ரேச்சலில் பாதத்திலும் பட, அவள் அருவருப்பாக இரண்டடி பின்னுக்கு சென்றாள்.

அதற்குள் அபிஷேக் “அம்மா, ப்ளீஸ் மா.. எனக்கு ரேச்சல்னா உயிர். அவளும் என்னை லவ் பண்றா. இத்தனை வருஷமா நீங்க சொன்ன ஸ்கூல், காலேஜ், கோர்ஸ்ன்னு எல்லாம் உங்க இஷ்டம் தானே. யு.எஸ்ல மேல படிக்கறது மட்டும் தான் நானா அடம்பிடிச்சி செஞ்சது. அப்படி செஞ்சதுனால தான் எனக்கு என் மேல உயிரையே வச்சிருக்கிற ரே கிடைச்சிருக்கா. ப்ளீஸ்ம்மா, அப்பாவ எங்க கல்யாணத்துக்கு ஒத்துக்க சொல்லுங்கம்மா” தந்தையை விட்டு தாய் பத்மாவிடம் அபிஷேக் கெஞ்ச, அவருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

“போதும் நிறுத்துடா. ஏன் இந்த ஊருல யாருமே அன்பு வைக்கறவங்க இல்லையா.. எல்லாம் கிடைக்கும்.. இத பாரு, நெத்தியில ஒரு பொட்டு இல்ல, என்னமோ உறிச்சி வச்ச கோழி மாதிரி இருக்கு. இந்த பொண்ண தல மூழ்கிட்டு வா. நான் உனக்கு மஹாலஷ்மி மாதிரி ஒரு பெண்ணை கட்டி வைக்கிறேன். அது தான் எனக்கும் கெளரவம்” என்றவர் அங்கு எதுவும் புரியாமல் விழித்துக் கொண்டு நின்றிருந்த ரேச்சலை தரதரவென இழுத்து வந்து வீட்டின் வெளியே தள்ளினார்.

சட்டென நிகழ்ந்துவிட்டதில் ரேச்சல் அதிர்ந்து தரையில் இருந்த படியே சுற்றும் முற்றும் பார்க்க, சாலையில் நடந்து போன ஒன்றிருவர் அவளை இழிவாக பார்த்துவிட்டு சென்றனர்.

தந்தையை தடுக்க முயற்சி செய்தும் முடியாமல் போன அபிஷேக், துடித்துப் போய் அவளை தூக்க போனான்.

“அபி, இதுக்கு மேல அந்த பொண்ணு தான் வேணும்னு போனா, என் சொத்துல ஒரு பைசா உனக்கு கிடையாது. அப்புறம் இந்த வெள்ளைக்காரி எப்படி உன் கூட சுத்துறானானு நானும் பார்க்கிறேன்” என்றவர் மகன் மறுக்க மறுக்க அவனை உள்ளே இழுத்து சென்றார்.

தான் கேட்ட விசயத்தில் அன்பரசி இமைக்க கூட மறந்து அபியை பார்த்து கொண்டிருக்க “எவ்வளவு அவமானம், எவ்வளவு வலி. காதலிக்கறது அவ்ளோ பெரிய தப்பா. அப்போ தான் முடிவு பண்ணேன், எங்க அப்பாவை அவர் வழியில போய் தான் சரி கட்டணும்னு. உடனே எல்லாம் எங்க அப்பா யு.எஸ் அனுப்பல. கொஞ்சநாள் இங்கயே இருந்தேன். அப்புறம் யு.எஸ் அனுப்பினப்பவும் அவர் சொத்து வேணும்னா, நான் அவர் சொல்ற பொண்ண தான் கல்யாணம் பண்ணனும்னும் சொன்னார்” என்று அடிப்பட்ட குரலில் சொன்னான்.

அன்பு எதுவும் பேசாமல் அவனையே பார்த்திருக்க “இதெல்லாம் என்ன இவரே கஷ்டப்பட்டு சம்பாதிச்ச சொத்தா. இவர் தொழில் பண்றேன்னு கேட்டதும் என் தாத்தா தன் சொத்தையெல்லாம் வித்து கொடுத்திருக்கார். அதை எனக்கு கொடுக்க இவர் ரூல்ஸ் பேசுவாரா. அதான் நாடகம் ஆட ஆரம்பிச்சேன்” என்று ஒரு வில்லனை போல் சிரித்தவன்..

“யு நோ ஒன் திங் அரசி.. மைசெஃல்ப் அண்ட் ரேச்சல் ஆர் ஹஸ்பெண்ட் அண்ட் வைஃப். யெஸ், எங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சு” என்று அந்த அறை முழுதும் எதிரொலிக்க உரக்க சொன்னான்.

தான் வாழ்க்கை கை நழுவி கொண்டிருப்பதை உணர்ந்த அன்பு அதுவரை அவன் சொல்வதை சிலையாய் சமைந்து கேட்டிருக்க. இப்போது அவன் சொன்னதை கேட்டு கையிலிருந்த பெயர் பகலையை கை நழுவவிட்டு பொத்தென தரையில் விழுந்தாள். அதில் பெயர் பதிந்திருந்த அந்த கிரானைட் கல் இரண்டாக பிளந்தது. அவளது மனமும் தான்.

அதை கண்ட அபி “அறிவிருக்கா உனக்கு. இது என் பெயரும் ரே பேரும் சேர்ந்து, ரேஷக் சொலுஷன்ஸ்னு வைச்ச பேர். அதை போய் போட்டு உடைச்சிட்ட” என்று அவளை கடிய, அவளோ தலையை கூட நிமிர்த்தாமல் தரையை பார்த்து கண்ணீர் உகுத்திருந்தாள்.

“திடீர்னு ஒரு நாள் உன் போட்டோவை எனக்கு அனுப்பி, இது தான் எனக்கு பார்த்த பொண்ணுன்னு சொன்னார். நான் கூட ஒரு செகண்ட் சொத்தாவது மண்ணாவதுனு எங்களுக்கு கல்யாணம் ஆன விஷயத்தை சொல்லிடலாம்னு தான் பார்த்தேன். ஆனா ரே எப்படி விடுவா.. அவளை தான் உன் மாமனார் அவமானப்படுத்தி இருக்காரே. அன்னைக்கு அவளை ரோட்ல பிடிச்சி தள்ளினப்போ, எத்தனை பேர் பார்த்திருப்பாங்க. அதான்.. அதான் கேம் விளையாடி சொத்தையெல்லாம் பிடிங்கிக்கிட்டு அப்புறம் சொல்லிக்கலாம்னு முடிவு பண்ணோம்”

“சும்மா சொல்ல கூடாது, நீயும் நல்லாவே கோஆப்பரேட் பண்ண. வேஷம் கட்டியாச்சு, ஒழுங்கா நடிக்கணும்ல. அதனால பிடிக்காம உன்கூட ஒவ்வொரு நாளும் வாழ்ந்தேன். அப்ப தானே உன் சோ கால்ட் அப்பா நம்புவார். ரே கூட நீ என்ஜாய் பண்ணிக்கோ ஹனினு சொல்லிட்டா. ஆனா குழந்தை எதாவது உருவாகிட்டா. அதான், நீ டெய்லி கொண்டு வர பால்ல உனக்கே தெரியாம கர்ப்பத்தடை மாத்திரைய கலந்து உன்னை குடிக்க வச்சேன்” என்று சிரித்தவனை நிமிர்ந்து ஓர் அடிபட்ட பார்வை பார்த்தாள் அன்பு.

பேசிக் கொண்டே தன் துணிமணிகளை எடுத்து அடுக்கியவன் “அப்புறம் அரசி, நம்ப பிசினஸ் கூட இந்த நாடகத்துல ஒரு பங்கு தான். இல்லைனா உங்க அப்பாகிட்ட இருந்து சொத்தயெல்லாம் எப்படி வாங்க முடியும். நான் யு.எஸ்ல தான் சாப்ட்வேர் கம்பெனி தொடங்க போறேன்.. ரேஷக் சொலுஷன்ஸ். அப்புறம் எதுக்கு உங்கிட்ட பக்கம் பக்கமா சைன் வாங்கினேன்னு யோசிக்கிறியா” என்றவன் அவள் முன் வந்து நின்று,

“அது என்னன்னா.. ஊரறிய கல்யாணம் பண்ணிருக்கேன். நாளைக்கு நீ சேனல் சேனலா போய் என் பேர்ல புகார் வாசிச்சு மூக்கை சிந்தினேனா.. அதான், எனக்கு ஏற்கனவே கல்யாணமாகிடுச்சுனு தெரிஞ்சி தான் நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட.. உனக்கும் என்னை கல்யாணம் பண்ணிக்கிறதுல எந்த விருப்பமும் இல்ல. வசதியில்லாத நீ, என் வசதி, வாய்ப்புக்காக தான் என் ஆசை நாயகியா இருக்க ஒத்துக்கிட்டனு நீயே சைன் போட்டு கொடுத்திருக்க” என்ற நொடி அவள் கண்களில் விடாமல் வழிந்திருந்த கண்ணீரும் ஸ்தம்பித்து நின்றது.

அதன் பின் எதற்கும் அவள் கண்ணிலிருந்து கண்ணீர் வரவில்லை. தன் பெட்டிகளை அடுக்கி முடித்தவன் போகும் போது “உன் மாமனாரை பழிவாங்கறதுல நீ எனக்கு உதவியா இருந்திருக்க.. உனக்கு நான் எதாவது செய்யனும்னு ஆசைப்படறேன். இந்தா, இது எங்க நுங்கம்பாக்கம் ப்ரொபெர்ட்டி டாக்குமெண்ட்.. உன் பேர்ல மாத்தியிருக்கேன். ஹார்ட் ஆஃப் தி சிட்டில இருக்க ப்ரொபெர்ட்டி. இது நீ செஞ்ச எல்லாத்துக்கும். எல்லாத்துக்கும்” மீண்டும் ஒருமுறை அந்த வார்த்தையை அழுத்தி சொல்ல, அவன் எதை சொல்கிறான் என்பதை புரிந்தவளின் உடல் கூச, கண்களை மூடிக் கொண்டாள்.

கீழே வந்த அபிஷேக் தந்தையிடமும் அனைத்தையும் கூறினான். அவற்றை கேட்ட நமசிவாயம், மகனது சட்டையை பிடித்து “உனக்கு எவளோ திமிர் இருந்தா, இப்படி ஏமாத்தி இருப்ப. ராஸ்கல்” என்று மகனை அறைய போக, அவரது கரத்தை தடுத்து பிடித்தான் அபிஷேக்.

நமசிவாயம் மகனது கையிலிருந்து தன் கையை விடுவிக்க முயற்சித்து கொண்டே அவனை முறைக்க “பெத்தவங்க பிள்ளைங்க விருப்பு வெறுப்புக்கு மதிப்பு தரணும். என்னமோ நீங்க வளர்கிற ஐஞ்சு அறிவு பிராணி மாதிரி என்னை நடத்துறீங்க. இத்தனை வருஷமும் சொத்தை வச்சி தான மிரட்டுனீங்க. அதுவும் இப்போ முடியாது. இனிமேலாவது உங்க திமிரை மூட்ட கட்டிக்கிட்டு அடங்கி இருங்க” என்றுவிட்டு அவன் அங்கிருந்த நகர, தளர்ந்து போனார் நமசிவாயம்.

இப்போது அவர்கள் இருக்கும் வீடு, பேக்டரி மற்றும் சில நிலப்புலன்களை தவிர மற்றது அனைத்தையும் எழுதி வாங்கியிருந்தான் அபிஷேக். அத்தோடு ஒரு பெண்ணை திருமணம் செய்துவிட்டு வந்து, இங்கே தன் சுயலாபத்திற்காக அன்புவின் வாழ்க்கையையும் அழித்திருக்கிறான். இப்படியொரு மகனை பெற்றதை எண்ணி நமசிவாயமும், பத்மாவும் கூனி குறுகி தான் போயினர்.

நான்கு நாட்கள் கடந்திருந்தது. இழவு வீடு போல் தான் அன்பரசியின் வீடு காட்சியளித்து.

அபிஷேக் சென்றதும் அவரவர் இருந்த இடத்திலேயே தளர்ந்து அமர்ந்திருந்தவர்கள் அன்றைய நாளை அப்படியே தான் கழித்தனர். வேலையாட்களும் எதுவும் செய்யமுடியாமல் அமைதியாக இருந்துவிட்டு அவர்களது வேலை முடிந்ததும் கிளம்பி சென்றார்கள்.

அதில் ஒரு பெண்மணி அன்புவின் அம்மாவை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோவிலில் பார்ப்பார். அவ்வாறே அடுத்தநாள் கோவிலில் சந்தித்தவர், தன் காதுகளில் அரைகுறையாக விழுந்த விசயங்களை சரிதாவிடம் சொன்னார்.

கேட்டவர் தலையில் இடியே இறங்கி இருக்க, ஆட்டோ பிடிக்கவேண்டும் என்பதையும் மறந்து, பித்து பிடித்தவர் போல் எதையெதையோ பேசிக் கொண்டும் அழுதுக் கொண்டும் வீட்டிற்கு வந்தவர், வீட்டிலிருந்த அனைவரிடமும் விசயத்தை சொன்னார். அனைத்தையும் கேட்ட விநாயகம் ஒருபுறம் தளர்ந்து விட, கலைக்கு அவனை தேடி கொன்றுவிடும் ஆவேசம் வந்தது. இருந்தும் இது தங்கள் வருத்தத்தையும் கோபத்தையும் காட்டும் நேரமல்ல என்பதை உணர்ந்து, அன்புவை காண நமசிவாயத்தின் வீட்டிற்கு சென்றனர்.

அதுவரை அபிஷேக் பேசி சென்ற இடத்திலேயே கிடந்த அன்பு, தாய், தந்தை, அண்ணனை பார்த்தும் கூட துளி கண்ணீர் விடவில்லை. அவளிருந்த நிலையை கண்டு அவர்களுக்கு பயம் தொற்றி கொண்டது.

அவளை அணைத்தாற்போல் பிடித்து கீழிறக்கி வந்தவர்கள், நமசிவாயம், பத்மா முன் வந்து நிற்க, இருவரும் அவமானத்தில் தலை கவிழ்ந்து கொண்டனர்.

மகளை பிடித்திருந்த சரிதா, வாய் பொத்தி அழுது கொண்டிருக்க, விநாயகமும் கலையும் தான் நமசிவாயத்திடம் கேட்காத கேள்வியெல்லாம் கேட்டு சண்டையிட்டு விட்டு, இனி தங்களுக்கும் அவர்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும் சொல்லிவிட்டு அன்புவை அங்கிருந்து அழைத்து கொண்டு கிளம்பினர்.

நான்கு நாட்களும் அந்த வீடு களை இழந்து, இருள் சூழ்ந்து தான் இருந்தது. பித்து பிடித்தவள் போல் இருந்தாள் அன்பு. சாப்பிடுகிறாளா, தூங்குகிறாளா எதுவும் அவளது கருத்தில் பதியவில்லை.

சரிதா தான் ஒவ்வொரு நிமிடமும் மகளுடன் இருந்து அவளை பார்த்துக் கொண்டார். விநாயகமும் கலையும் அவளது நிலையை கண்டு உள்ளுக்குள் மருகிக் கொண்டிருந்தனர். அவ்வீட்டில் நந்தனா மட்டுமே தனக்கென்னவென்று இருந்த ஒரே ஆள். அவளை பொறுத்தவரை அன்புவின் இந்நிலை அவளுக்கு வருத்தத்தை கொடுக்கவில்லை. மாறாக சந்தோஷப்பட்டாளா என்றும் தெரியவில்லை. ஆனால் அவளுக்கு கிடைத்த வசதியாக வாழ்க்கை பறிபோனதில் ஓர்வித நிம்மதி. அதே நேரம் ஏதோ ஓர் வருத்தமும்.

மகளது நிலையை எண்ணி விட்டத்தை வெறித்திருந்த விநாயகத்தை அலைபேசி அழைப்பு கலைக்கவும், அதையெடுத்து பேசியவர் அனைவரையும் அழைத்துக் கொண்டு நமசிவாயத்தின் வீட்டிற்கு சென்றார்.

அவர்கள் அந்த வீட்டு வாசலில் இறங்கும் போதே வாசலில் கேட்டு கொண்டிருந்த சங்கு சத்தமும், தப்பு சத்தமும் ஏதோ அசம்பாவிதம் நிகழ்விட்டிருப்பதை சொல்ல, ஒவ்வொரு அடியையும் நடுக்கத்துடன் எடுத்து வைத்தாள் அன்பு.

ஒருகட்டத்தில் உடல் நடுங்க அவள் அங்கேயே தேங்கி நிற்க, அவளை அவ்வீட்டிலிருந்து வெளியே அழைத்து வந்த விநாயகமும் கலையும் தான் மீண்டும் உள்ளே அழைத்து சென்றனர்.

உள்ளே நடுக்கூடத்தில் அபிஷேக் சடலமாக கிடந்தான். அவனுக்கு அருகில் பத்மா அழுது அழுது ஓய்ந்திருப்பார் போல், தலையில் கைவைத்து கொண்டு மகனையே வெறித்து பார்த்து அமர்ந்திருந்தார். அதை பார்த்தவளது உடல் இறுகி போனது. அவளது மனமும் தான்.

தந்தை செய்த தவறிற்கு தன்னிடம் ஆவேசமாக பேசிவிட்டு சென்றவன் இன்று அவள் முன் சடலமாக கிடக்கிறான். இது எப்படி நிகழ்ந்தது என்று எதுவும் புரியாமல் அவள் நமசிவாயத்தை பார்த்தாள்.

அவரும் அவளது பார்வையை புரிந்தவராக “பாவி.. கொஞ்சமா பாவம் பண்ணான். உனக்கு பண்ண பாவம் தான்மா இன்னைக்கு இப்படி கிடக்குறான். போனவன் எங்க கண்ணுல படாம போய் தொலைஞ்சிருக்க வேண்டியது தானே. இப்படி பிணமாவா திரும்பி வரணும். தொழில் தொடங்க இடத்தை விக்க போறேன்னு, பைபாஸ்ல மேஜர் ஆக்சிடென்ட், ஸ்பாட் அவுட்னு ஃபோன் பண்ணாங்க. இதுக்கா உன்னை தேடி கல்யாணம் பண்ணி வைச்சேன். காதலிச்சவன் எல்லாம் கல்யாணம் பண்ணிக்கிறானா. உன்னை கட்டி வைச்சா நிச்சயம் உன் நற்பண்புகள் இவனையும் உன் பக்கம் திருப்பிடும்னு தானே நினைச்சேன். இப்போ போய்ட்டானே மா” என்று மருமகளின் கைகளில் முகத்தை புதைத்துக் கொண்டு கதறினார்.

அவர் பேசும் வரை எதுவும் பேசாமல், அசையாமல் நின்றிருந்தவள் அதன் பிறகு அபிஷேக் அருகில் வந்து அவனது முகத்தை பார்த்தாள். ஆயிரம் இருந்தாலும் அவனோடு வாழ்ந்திருக்கிறாளே. மனது துடித்தது.

அதேநேரம், நான்கு நாட்களுக்கு முன் எத்தனை ஆங்காரமாக வார்த்தைகளை உதிர்த்தான். நிலையில்லாத இவ்வாழ்க்கைக்காக, அதை மகிழ்வாக கழிக்க தேவைப்படும் சொத்துக்காக, உரிமையில்லாத தன் வாழ்க்கையை பகடை ஆக்கினான். இன்றோ உயிரில்லாத வெறும் உடல் ஆனான்.

மனித வாழ்க்கை இவ்வளவு தான் என்பதை அறியாமல் எத்தனை வேஷங்கள், பொய், பித்தலாட்டங்கள். யோசித்தவாறே அவனது தலைமாட்டில் அமர்ந்துவிட்டாள்.

அரைமணி நேரத்திற்கும் மேல் அன்பு அப்படியே அமர்ந்துவிட, அப்போதே அதிர்ச்சியில் இருந்து மீண்ட சரிதா விறுவிறுவென மகளின் அருகில் வந்து அவளது கையை பிடித்து இழுக்க, என்ன என்பதாய் தாயை நிமிர்ந்து பார்த்தாள் அன்பு.

“கிளம்பு அன்பு போகலாம்” என்று சரிதா அவளை எழுப்ப, அவள் எங்கே என்பதாய் தாயை பார்த்தாள்.

அதற்குள் விநாயகமும், கலையுமே அவர் அருகில் வர, விநாயகம் தான் “என்ன சரிதா பண்ற” என்று கேட்டார்.

சரிதா பதில் சொல்வதற்குள், மகனது சடலத்திற்கு அருகில் அமர்ந்திருந்த பத்மா “எங்க கூட்டிட்டு போறீங்க. அவ என் பையனுக்கு மனைவி. அவன் செத்து பிணமா கிடக்குறான். நீங்க கூட்டிட்டு போனா எப்படி” என்று குரலை சற்று உயர்த்தியே சொன்னார்.

“இங்க எங்க பண்ணுவாங்கனு தெரிஞ்சி தான் கூட்டிட்டு போறேன். என் பொண்ணு மட்டும் உங்க பையனுக்கு பொண்டாட்டி இல்ல. சொல்லப்போனா உங்க பையனோட சுயநலத்துக்கு என் பொண்ணு வாழ்க்கை போனது வரை போதும். அவளுக்கு என்னென்னமோ பண்ணி அத எங்களை பார்க்க வைக்கலாம்னு மட்டும் நினைக்காதீங்க” என்று சத்தம் போட்டார்.

பதிலுக்கு பத்மாவும் பேச வாய் திறக்க “வேண்டாம் பத்மா..” என்று தடுத்தார் நமசிவாயம்.

கணவர் சொன்னதை கேட்டவருக்கு அழுகை விம்மி கொண்டு வர “ஒத்த புள்ளையை பெத்தேன். அவனோட விருப்பத்துக்கே நீங்க விட்டிருந்தா, இன்னைக்கு என் பையன் எனக்கு இருந்திருப்பானே. இப்போ என் புள்ள..” என்று கணவரது தோளில் முகம் புதைத்து கதறினார்.

மனைவியை ஒரு கையால் தேற்றி கொண்டே, மறுகையால் அன்புவின் தலையை ஆசீர்வதிப்பது போல் வருடிவிட்டு “போ மா, போற வழியில உன் கழுத்தை பாம்பா சுத்திக்கிட்டு இருக்க இந்த தாலியை ஏதாவது கோவில்ல போட்டுடு” என்றார் நமசிவாயம்.

மூன்று மாதங்களுக்கு வீட்டிலேயே முடங்கி கிடந்த அன்பு, பின்பு மீண்டும் வேலைக்கு போக தொடங்கினாள். ஆனால், எப்போதும் வளவளவென்று எதையாவது பேசி கொண்டிருக்கும் பெண் இப்போது பேசா மடந்தையாகி போனாள்.

இடையில் ஒரு முறை நமசிவாயம் வந்து அவளை பார்த்தார். தன் சொத்துகளை இரண்டு பங்குகளாக பிரித்து, ஒன்றை ரேச்சல் பெயரிலும், மற்றொன்றை அன்பு பெயரிலும் எழுதி வைத்திருந்தார். அன்று அன்பு அங்கிருந்து கிளம்பவும் ரேச்சல் அங்கு வந்திருந்தாள்.

முன்னரே அபிஷேக் அவளை இந்தியா வர சொல்லியிருக்க, அவனிடம் பேசிவிட்டு தான் அவள் விமானம் ஏறி இருந்தாள்.

விமானம் தரையிறங்குவதற்குள் அவள் தலையில் இடி இறங்கியிருந்தது. விமான நிலையத்திற்கு அபி வராததால், விலாசத்தை வைத்து அவளே அவன் தங்கியிருந்த வீட்டிற்கு வந்துவிட்டாள். அதுவும் நமசிவாயத்திடமிருந்து அபிஷேக் எழுதி வாங்கிய வீடு தான் என்பதால், அங்கிருந்த வேலையாள் மூலம் விசயம் அறிந்து இங்கு வந்தாள்.

மகன் இருந்தபோது அவளிடம் காட்டிய கோபத்தை, அவன் போன பின் காட்ட முடியவில்லை. ரேச்சலை ஏற்றுக்கொண்டதோடு, அவள் பெயரில் சொத்துக்களும் எழுதி வைத்து, அவளுக்கு பிடித்த வாழ்க்கையை அமைத்து கொள்ளவும் சொன்னார்.

அன்புவிடம் அதையே சொல்லி பத்திரங்களை அவள் கையில் கொடுக்க “வேண்டாம் சார். இந்த சொத்துனால நான் இழந்தது ஏராளம்” என்று மறுத்து விட்டாள்.

நமசிவாயத்தின் மூலம் எப்படியாவது ஒரு தொழில் தொடங்கி விடலாம் என்றிருந்த நந்தனாவிற்கு அபிஷேக் இறந்ததுமே இனி என்ன செய்வது என்ற குழப்பம் வந்திருக்க, இப்போது வலிய வந்த லஷ்மியை வேண்டாமென்று அன்பு மறுத்ததில் அவளுக்கு கோபம் வந்தது.

ஏற்கனவே தன் தோழிகள் அனைவருக்கும் திருமணம் நடந்த பின்னும், அன்புவால் தான் தன் திருமணம் தள்ளிப் போய் கொண்டிக்கிறது என்று முன்பிலிருந்தே அன்புவின் மீது நந்தனாவிற்கு ஒரு வெறுப்புணர்ச்சி இருக்க தான் செய்தது.

அதோடு தங்கையின் மீது உயிரையே வைத்திருக்கும் கணவன், அவள் முன் நெருக்கத்தை தவிர்ப்பது, தங்கள் எதிர்காலத்தை பற்றி யோசிக்காமல் அவளது திருமணத்திற்கு லோன் பெற்றிருப்பது என்று விதவிதமாக பொருமி கொண்டிருந்தவளுக்கு இப்போது தனக்காக கடன் வாங்கி தினமும் சிரமப்படும் அண்ணனுக்கு ஒரு நல்லது செய்யக்கூட தோன்றவில்லையே என்று பெருங்கோபம் மூண்டது.

அதை கலையிடமும் கொண்டு போனாள்.

“உங்க தங்கச்சிக்கு அந்த சொத்து வேண்டாம்ன்னா போகட்டும். நீங்க அவ கல்யாணத்துக்காக கடனை வாங்கிட்டு டெய்லியும் வேலையில இருந்து எவ்ளோ லேட்டா வர்றீங்க. அட்லீஸ்ட் உங்களுக்கு கொடுத்திருக்கலாம்ல. உங்க தங்கச்சி சரியான சுயநலக்காரி. உங்க மேல அவளுக்கு அன்பே இல்ல” என்று கோபமாக வெடித்தாள்.

அப்போதைக்கு “அதெல்லாம் என் தங்கச்சிக்கு என் மேல பாசம் இருக்க தான் செய்யுது. நீ தேவையில்லாம பேசாத” என்று மனைவியிடம் மறுத்தாலும், நமசிவாயத்தின் மூலம் தனக்கு கிடைக்க போகும் பணத்தால் அரும்பியிருந்த கலையின் தொழில் கனவு இப்போது கனவாகவே போய்விட, முதல் முறையாக அவன் மனதிலும் ஓர் நெருடல் உருவானது.

அதற்கு வலுவூட்டம் படியாக, தன் நண்பன் ஒருவன் அவன் மனைவியை இழந்து கை குழந்தையுடன் தனியாக சிரமப்படுவதை பற்றி நந்தனாவிடம் சொல்லி வருத்த பட, அதை தனக்கு சாதகமாக்கி கொண்டு “பேசாம அவருக்கு நம்ப அன்புவை கட்டி வைச்சா என்ன” என்று கேட்க, நண்பனின் குணங்களை நன்கு அறிந்தவனும் அன்புவிடம் பேசினான்.

அபிஷேக்கை விட்டு வந்து இன்னும் ஒரு வருடம் கூட ஆகாத நிலையில், அவளால் எப்படி இன்னொரு திருமணத்தை பற்றி யோசிக்க முடியும். சொல்லப்போனால், இனி வாழ்க்கைக்கும் திருமணம் வேண்டாமென்றே அவளுக்கு தோன்றியது.

அதையே அண்ணனிடம் சொல்ல, அதில் கோபம் வந்த கலை அவளது திருமணத்திற்காக கடன் வாங்கி தான் கஷ்டப்படுவதை பற்றி பேசிவிட்டான்.

அண்ணனுக்கு சிரமம் வேண்டாமென்று அன்பு நல்ல மனதோடே தன்னிடமிருந்த நகைகளை விற்றும், பர்சனல் லோன் போட்டும் அண்ணனின் கடனை திருப்பி கொடுக்க, கணவனை உதாசினப்படுத்தியது போல் திரித்துவிட்ட நந்தனா, அவனை ஓரேயடியாக தன் பிறந்தவீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டாள்.

வெகு வருடங்களுக்கு பிறகு நந்தனா கர்ப்பமாகியிருக்க, இதில் தான் சொன்ன மாப்பிள்ளையை திருமணம் செய்ய மறுத்ததோடு, அவள் நன்றாக வாழவேண்டும் என்பதற்காக தான் வாங்கிய கடனையும் அலட்சியமாக திருப்பி கொடுத்த தங்கையின் மீதிருந்த கோபத்தில் கலை அத்தோடு அவளுடன் அனைத்து தொடர்பையும் துண்டித்துவிட்டான். அவளுக்கு துணையாக நின்ற தாய், தந்தையுடனுமே..


சோகமா முடிச்சிட்டேனேனு என்னை திட்டாதீங்க. அடுத்த எபில இருந்து நீங்க எதிர்பார்க்கற மாதிரி இருக்கும். மறக்காமல் உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..

 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 10

அன்பரசி அயர்வாக கோயில் தூணில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். நேற்று சிபி வந்து பேசிவிட்டு போன பிறகு, ஆறாதென்று தெரிந்து மறைத்து வைத்திருந்த ரணங்கள் யாவிலும் மீண்டும் ரத்தம் கசிய தொடங்கியது.

வாழ்க்கைக்கும் வர போகும் உறவென்றே அபிஷேக்கை எண்ணினாள். தனக்கு மனைவி என்ற ஸ்தானத்தை தர கூட மறுத்து, அவனது ஆசை நாயகி என்று வாய் கூசாமல் சொன்னான்.

தன் தாய், தந்தையை போல் தான் நமசிவாயத்தையும் பத்மாவையும் பார்த்தாள். மகனது வாழ்க்கையை சீர் செய்ய இவளது வாழ்க்கையை முற்சந்தியில் நிறுத்திவிட்டனர். அதன் பிறகும் நமசிவாயம் பலமுறை அன்புவை காண வந்திருக்கிறார். மன்னிப்பும் கேட்டிருக்கிறார். அப்பாவென்று அவள் வாயால் ஒருமுறை அழைத்துவிட மாட்டாளா என்று ஏங்கியிருக்கிறார். அன்பு அறவே மாட்டென்று பிடிவாதமாக மறுத்துவிட்டாள்.

பெற்ற பிள்ளை தடம் புரளும் நேரம் தந்தையை காட்டிலும் ஓர் அன்னையே அதிக பொறுப்பாகிறார். அந்த ரீதியில் மகனது தீய குணங்கள், அவனது இழப்பு, இரண்டும் பத்மாவை வீட்டிலேயே முடங்க செய்தது. இருந்தும் அவர் மனதில் அவளுக்கான பாசம் அதே நிலையில் தான் இருந்தது. ஓரிரு முறை கணவருடன் அன்புவை காணவும் வந்திருக்கிறார். அவள் நன்றாக இருக்கட்டும் என்று இன்றளவும் நினைக்க தான் செய்கிறார்.

அன்புவால் அவர்கள் அவளுக்கு இழைத்த துரோகத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் போக, இருவர் மீதும் கோபத்தில் இருக்கிறாள்.

அண்ணன் மீது கொள்ளை அன்பு வைத்திருந்தாள். அவனும் விட்டு சென்றுவிட்டான். மற்றவர்கள் இரத்த சொந்தமில்லையே, ஆனால் கலை தன்னுடன் பிறந்து, தன்னை இத்தனை ஆண்டுகளும் அடைக்காத்த அண்ணனாயிற்றே. அபிஷேக் கொடுத்த மரண அடியில் மனம் மரத்து போன போதிலும் அண்ணனின் செயல் ஆறா வலியை கொடுக்க தான் செய்தது.

வாழ்க்கை வாழ்பவர்களை வாழ வைக்கிறதோ இல்லையோ, நொந்துப் போனவர்களை மேலும் மேலும் நோகடித்து விடுகிறது.

ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தவள் வெகுநேரமாக இங்கிருப்பதை உணர்ந்து கர்ப்பகிரகத்தில் இருக்கும் தேவியை பார்த்துவிட்டு வீட்டிற்கு செல்லலாம் என்று கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டு கடவுள் முன் போய் நின்றாள்.

தனக்கென்று ஒன்றும் வேண்டாமல் எப்போதும் போல் அம்பாளையே இமைக்காது பார்த்திருக்க, ஆரத்தி காட்டி எடுத்து வந்த அர்ச்சகர் அவள் முன் தீபாராதனை தட்டை நீட்டவும், கண்களில் ஒற்றி கொண்டாள். அவர் விபூதியும் குங்குமமும் கொடுக்க, அதை அவள் வாங்கவும், அவளுக்கு அருகில் ஓர் வலிய கரம் நீண்டது.

அவள் சட்டென தன் இயல்பை மறந்து திரும்பி பார்க்க, அங்கே சிபி தான் மலர்ந்த முகமாக நின்றிருந்தான். அவனை கண்டதும் தன் பார்வையை தழைத்து கொண்டவள் அங்கிருந்து நகர, சிபியும் தீபாராதனையை மட்டும் கண்ணில் ஒற்றி கொண்டு அவள் பின்னே ஓடினான்.

“ராசி, ப்ளீஸ் நான் சொல்றத கேளு” அவளிடம் மன்றாடி கொண்டே உடன் நடக்க

“ப்ளீஸ் சிபி. என்னை ஏன் இப்படி பண்றீங்க. தயவு செஞ்சி புரிஞ்சிக்கோங்க. நான் வாழ்க்கைல தோற்று போன பொண்ணு. எதுக்குன்னு தெரியாமயே ஒரு தாலியை ஆறு மாசம் கழுத்துல சுமந்துக்கிட்டு இருந்தேன், அது என் கழுத்தை விட்டு போனப்போ எனக்கு கைம்பெண்ங்கிற பேரை கொடுத்துட்டு போச்சு” இறுக்கமாக பேச ஆரம்பித்தவள், இறுதியான வார்த்தைகளை சொல்லும் போது அவளையும் மீறி கண்களிலிருந்து கண்ணீர் துளிர்க்க, தன் நெஞ்சை அழுத்தமாக பிடித்திருந்தவளின் கை நடுங்கியது.

அவளை பார்த்திருந்தவனது நெஞ்சில் இரத்தம் கசிய, தன் கை முஷ்டியை இறுக்கி “நல்லவேளை அவன் செத்துட்டான். அவன் மட்டும் உயிரோட இருந்திருந்தா, என் ராசியை இப்படி பண்ணவனை நானே கொன்னுருப்பேன்” என்று பற்களை நறநறத்தான்.

அன்பரசி அவனையே கசிந்த விழிகளோடு பார்த்திருக்க “நாம கல்யாணம் பண்ணிக்கலாம் ராசி. நான் இருக்கிறவரைக்கும் நீ உன் வாழ்க்கைல எதையும் இழக்க மாட்ட” என்று அவளுக்கு உறுதி கொடுத்தான்.

அவனது தூய அன்பில் எங்கே தன் கட்டுப்பாடெல்லாம் தளர்ந்து விடுமோ என்று அவளுக்கு பயந்து வர “எல்லாரையும் போல எனக்கும் வாழ்க்கையை சந்தோசமா வாழனும்னு தான் ஆசை. ஆனா நான் அதுக்கு கொடுத்து வைக்கல. அஞ்சு வருஷத்துக்கு முன்ன என் வாழ்க்கை இப்படியாகும்னு எனக்கே தெரியாது. இன்னைக்கு சிதைஞ்சி சின்னாபின்னமாகியிருக்கிற என் வாழ்க்கையை நானே நினைச்சா கூட சரி பண்ண முடியாது. உங்களுக்கு நல்ல விதி இருக்கிற பொண்ணே கிடைப்பாங்க. ப்ளீஸ், நான் வேண்டாம். என்னால முடியாது சிபி. வாழ்க்கையோட போராட எனக்கு தெம்பு இல்ல” கண்களில் மன்றாடலோடு அவன் முன் கை கூப்பி கண்ணீர் வடித்தாள்.

முதல் முறையாக தன் வேதனைகளை அவனிடம் பகிர்கிறாள். வாழ பிடித்தமில்லை என்று சொல்லியிருந்தாலே அவளுக்கு பூவுலகில் சொர்க்கத்தை காட்டாமல் ஓய்ந்திருக்க மாட்டான். இவள் வாழ ஆசை இருந்தும் வாழ முடியவில்லை என்றல்லவா சொல்கிறாள்.

அவளுக்கு வாழ்வின் இன்பத்தை காட்டா விட்டால் அவளை அவன் நேசிப்பதற்கு என்ன அர்த்தம் இருக்கிறது.

அவள் தனது நெஞ்சோடு இறுகி பிடித்திருந்த கையை பிடித்திழுத்து உள்ளங்கையிலிருந்த குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியில் வைத்துவிட்டான்.

தன் நெற்றியை தொட்டு பார்த்த அன்பு, நொடியில் நடந்துவிட்டதில் கலங்கிய கண்களோடு அதிர்ந்து விழிக்க “நீ தான்டி என் ராசி. உன்னை விட நல்ல விதி இருக்கிற பொண்ணு எனக்கு தெரியாது. என்னோட சந்தோசம், ராசி, நீ சொல்ற விதி எல்லாம் உன்னோட தான் பிணைக்க பட்டிருக்கு. அன்னைக்கு எங்க வீட்டுல வச்சி பூ கொடுத்தேன். இப்போ பொட்டும் கொடுத்தாச்சு. இப்பவே நம்ப கல்யாணம் கடவுள் சாட்சியா முடிஞ்சிருச்சு. இனி ஊருக்காக மட்டும் தான் கல்யாணம் பண்ணனும்” என்றவன் அவளது திகைப்பை ரசித்து கொண்டே அவள் தோள் மீது கைபோட்ட படியே வாசலுக்கு அழைத்து வந்தவன், தன் காரில் அவளை ஏற்றி அவளது வீட்டிற்கு அழைத்து சென்றான்.

நேற்று அவளது கண்ணீரை பார்த்த பின்பு அவனால் ஒரு நொடியும் கண்மூட முடியவில்லை. சூரியன் எப்போது தன் வேலையை துவங்க இரதத்தில் ஏறுவார் என்று உறங்காமல் காத்திருந்தவன் தானும் தன் வண்டியை எடுத்துக் கொண்டு அன்பரசி வீட்டிற்கு வந்துவிட்டான்.

அன்பரசியும் விடிய விடிய உண்ணாமல் உறங்காமல் அழுதிருந்தவள், விடிந்ததும் குளித்து அப்போதே கோவிலுக்கு சென்றிருந்தாள்.

ஏற்கனவே விநாயகத்திடமும் சரிதாவிடமும் வீட்டில் ஒரு கச்சேரி வைத்துவிட்டு தான், அவள் எங்கே என்பதை அறிந்து அவனும் கோவிலுக்கு வந்ததே.

மீண்டும் அன்புவை அவளது வீட்டிற்கு அழைத்து சென்றவன் கூடிய விரைவில் தன் பெற்றோரோடு வந்து அவளை பெண் கேட்டு திருமணம் செய்து கொள்வதாகவும் சொன்னான்.

விநாயகமும் சரிதாவுமே காலையில் அவன் பேசியதில் சற்று தெளிந்திருக்க, இப்போது சரியென்று சொல்வதை தவிர அவர்களுக்கு வேறு வழி இருக்கவில்லை. மனம் நிறைய மகிழ்ச்சியோடு வீட்டிற்கு திரும்பினான் சிபி.

அதுவரை அன்புவை சரி கட்டுவது, அவளது பெற்றோர்களை சரி கட்டுவதென்றே அந்த நாள் கடந்திருக்க, இப்போது வீட்டு வாசலில் காரை நிறுத்தும் போதே அன்னையின் காளி அவதாரம் கண்முன் தெரிந்தது.

இத்தனைக்கும் தெய்வநாயகி வீட்டிலிருப்பதை அண்ணியின் மூலம் அறிந்து கொண்டவன், தன் அப்பாவிற்கும், அண்ணனுக்கும் அழைத்து அவர்களையும் வீட்டிற்கு வர சொல்லிவிட்டான்.

அனைவரும் நடுக்கூடத்தில் கூடியிருக்க, அபர்ணா மட்டும் குழந்தைக்கு பார்முலா கலக்குகிறேன் என்று சமையலறையில் புகுந்து கொண்டாள்.

மகனது முகத்தை வைத்தே ஏதோ ஒன்று பெரிதாக வர போகிறது என்பதை உணர்ந்துவிட்ட தெய்வா, தன் காதை பட்டை தீட்டி அவனை கூர்மையாக பார்த்திருந்தார்.

“என்ன சிபி எல்லாரையும் வர சொல்லியிருக்க, எதாவது முக்கியமா பேசணுமா” என்று அசோக் தான் முதலில் ஆரம்பித்தான்.

“சொல்றேன் டா” என்று அண்ணனுக்கு சொன்னவன் “அம்மா, நேத்தைக்கு முந்தன நாள் என் கல்யாணத்தை பத்தி பேசினீங்கல, எனக்கு அந்த பொண்ணு வேண்டாம் மா” என்று மெதுவாக ஆரம்பித்தவன்..

“எனக்கு ஒரு பொண்ண பிடிச்சிருக்கு. அவ பேரு அன்பரசி. என் லைஃப் அவ கூட தான்னு நான் முடிவு பண்ணிட்டேன் ம்மா” என்றது தான் மகனை உக்கிரமாக முறைத்தவர், நேராக சமையலறைக்கு சென்று அங்கு பால் புட்டியை மூடி கொண்டிருந்த அபர்ணாவை பிடித்திழுக்க, கையிலிருந்த பால் புட்டி கீழே விழுந்து அதிலிருந்த பார்முலாவெல்லாம் கீழே சிந்தியது.

அபர்ணாவை தரதரவென கூடத்திற்கு இழுத்து வந்த தெய்வா, அனைவரும் சுதாரிப்பதற்குள் அவளது கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டிருந்தார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத அபர்ணா கன்னத்தை பிடித்துக் கொண்டு அத்தையை விழித்து பார்த்தாள். தன்னை இழுத்து சென்று திட்ட போகிறார் என்றே அவள் நினைத்திருந்தாள். இப்படி அனைவர் முன்பும் அறைந்து விடுவார் என்று அவள் துளியும் எண்ணவில்லை. தன் பார்வையை மட்டும் திருப்பி கணவனை பார்த்தாள்.

அசோக் அன்னையின் செயலில் அதிர்ந்திருந்தாலும் அவரை தடுத்து ஒரு வார்த்தையும் கேட்காது, எதற்கென்றும் கேட்காது அமைதியாக கைகட்டி நின்றிருந்தான். அதுவரை வராத கண்ணீர் அவளுக்கு அப்போது வந்தது.

சிபி தான் முன்னே வந்து “என்னம்மா பண்றீங்க. இப்போ அண்ணிய எதுக்கு அடிச்சீங்க” என்று குரல் கொடுத்தான்.

“என்ன பண்ணல இவ. அன்னைக்கே தராதரம் பார்த்து நட்பு வச்சிக்கோன்னு சொன்னேன். கண்டவளை வீட்டுக்குள்ள கூட்டிட்டு வந்து இன்னைக்கு நீ அவளை காதலிக்கிறேன், கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொல்லிக்கிட்டு நிற்கறீயே” என்று கோபமாக கத்தினார் தெய்வா.

“அன்பரசியை தேவையில்லாம பேசாதீங்க மா”

“அப்படி தான் பேசுவேன். அடுத்த வேளை சாப்பிட இருக்குதா, உடுத்த இருக்குதான்னு வாழறவ என் வீட்டு மருமகளா. இதுக்கு நான் ஒத்துக்கமாட்டேன்” தெய்வா ஆவேசமாக சத்தமிட

“என்னப்பா சிபி நடக்குது இங்க. கல்யாணம்ங்கிறது பெத்தவங்க பார்த்து முடிவு செய்ய வேண்டிய விஷயம். உனக்காக உங்க அம்மா மூணு மாசமா பொண்ணு பார்த்திக்கிட்டு இருக்காங்க. நீ என்னன்னா திடீர்னு காதலிக்கிறேன்னு சொல்ற” என்று அவன் தந்தை பூபதி கேசவனும் இம்முறை மனைவிக்கு ஆதரவாக பேசினார்.

அவரே அப்படியென்றால் அவரது மூத்த மகன் என்ன சொல்வான். அவன் தான் அன்னையின் பிரதி பிம்பமாயிற்றே.

“என்னடா சிபி சொல்ற. காதலிக்கிறது தப்புனு சொல்லல. அம்மாவுக்கு பிடிச்ச மாதிரி பொண்ண காதலிச்சிருக்கலாம்ல. ஏன்டா உன் புத்தி எப்பவும் இப்படியே போகுது. அவனவன் ஹை-பை ஜாப், பிசினஸ்ஸ்னு இருக்கணும் நினைக்கறப்போ, நீ லோகோ பைலட் ஆகணும்னு சொன்ன. மழைலயும் வெயில்லயும் கஷ்டப்படுறது போதாதுன்னு இப்போ அன்பரசியை லவ் பண்றேன்னு சொல்ற” என்று அசோக் கடிய, அண்ணனை சிபி பார்த்த பார்வையில்..

“நான் அந்த பொண்ண தப்பு சொல்லல. அபர் ப்ரண்ட், நல்ல மாதிரியா தான் நடந்துப்பாங்க. ஆனா ஸ்டேட்டஸ்னு ஒண்ணு இருக்குல்ல” என்றான்.

வேறு நேரமாக இருந்திருந்தால் ‘இந்த ஆளுக்கு கொஞ்சமாவது பேச தெரியுதா. அம்மாவுக்கு பிடிச்ச மாதிரி லவ் பண்ணணுமாம்’ என்று அபர்ணா கவுண்டர் கொடுத்திருப்பாள். இன்றோ அத்தையிடம் வாங்கியதில் யோசிக்க மறந்தவளாய் அமைதியாக நின்றிருந்தாள்.

இதில் அழையாத அழைப்பாக “என்ன சிபி இப்படி பண்ணிட்ட.. நம்ப அழகு ரதிய காதலிச்சிருந்தாலும், தெய்வா காலுல, கையில விழுந்தாவது உனக்கு அவளையே கல்யாணம் பண்ணி வச்சிருப்பேன். இப்படி ஏதோ ஒரு ஊர், பேரு தெரியாதவளை போய் காதலிக்கிறேன்னு சொல்றியே” என்று பானுமதி அம்மா குறுக்கே வந்து கடுப்படிக்க, சிபி பேசுவதற்குள்..

“பெரியம்மா, இப்போ உள்ள போறீங்களா.. இல்ல, இந்த வீட்டை விட்டு வெளியே போறீங்களா” என்று எரிச்சலில் கத்தினார் தெய்வா.

வழக்கம் போல் பேத்தியின் வாழ்க்கையை காட்டிலும் தன் பிழைப்பே பெரிதாக பட அமைதியாக தனதறைக்குள் சென்று புகுந்து கொண்டார்.

பெரியம்மா செல்ல காத்திருந்தவர் மகனிடம் திரும்பி “இங்க பாரு சிபி, நீ என்ன சொன்னாலும் நான் உன் காதலுக்கும் சம்மதிக்க மாட்டேன். அந்த பொண்ண உனக்கு கல்யாணமும் பண்ணி வைக்க மாட்டேன்” என்று அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டார்.

இதற்கே அன்புவை வேண்டாமென்கிறார்களே, இதில் அவளது முந்தைய வாழ்க்கையை பற்றி தெரிந்தால், ஆடி தீர்த்து விடுவார்கள் என்று திகிலடைந்த சிபி, அவனுக்கே அவளது முந்தைய வாழ்க்கை ஒரு பொருட்டு இல்லை என்ற போது அதை பற்றி யாருக்கும், எக்காலத்திலும் தெரிய வேண்டாம் என்ற முடிவை எடுத்தான்.

அதோடு காலையில் தலையால் தண்ணீர் குடித்து தான் அன்புவின் குடும்பத்தை சம்மதிக்க வைத்திருக்கிறான். அதிலும் அன்பு, அவள் இன்னும் சரியென்று சொல்லவில்லை. இவனாக தான் அதட்டி உருட்டிவிட்டு வந்திருக்கிறான்.

அதனால் முதலில் அன்புவை திருமணம் செய்துவிட வேண்டும் என்ற முடிவோடு “நீங்க ஒத்துக்கலனாலும் நான் அன்புவை கல்யாணம் பண்ணிக்க தான் மா போறேன்” என்று தாய்க்கு சற்றும் குறையாத அழுத்தத்துடனே தனையனும் பதில் தந்தான்.

அதில் கோபத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்ட தெய்வா “என்ன கல்யாணம் பண்ணிப்ப. கல்யாணம் பண்ணிக்கிட்டு அவளுக்கு ரெண்டாவது புருஷன் ஆகப்போறியா” என்று சீற, சிபி அன்னைக்கு இந்த விசயம் தெரியுமா என்பதில் ஸ்தம்பித்துவிட்டான்.

அபர்ணாவோ அதிர்ச்சியில் வாயில் கைவைத்து கொண்டாள்.

தாங்கள் கேட்டதை மறுமுறை கேட்டு உறுதி செய்ய “என்னமா சொல்றீங்க” என்று அசோக்கும், “என்ன தெய்வா சொல்ற” என்று பூபதி கேசவனும் ஒரே நேரத்தில் ஒன்றாக அலறினர்.

“நம்ப வருண் பெயர் சூட்டு விழாவுல இவன் அந்த பெண்ணை பார்த்த பார்வையே சரியில்லை. அப்பவே எனக்கு சந்தேகம். இதோ இருக்கிறாளே” என்று அபர்ணா ஒரு இடி இடித்தவர் “இவகிட்ட கூட கண்டிச்சு விட்டேன். இத அப்படியே விடக்கூடாதுனு அந்த பொண்ண பத்தி ஆள் வச்சி விசாரிச்சேன். அவளுக்கு ஏற்கனவே கல்யாணமாகிடுச்சு. அந்த வாழ்க்கையும் அவளுக்கு தங்கலை. புருஷனை பறிகொடுத்துட்டு நிக்கறவளை தான் உன் தம்பி காதலிக்கிறான்” என்று சிபியை ஏளனமாக பார்த்தார்.

அன்னை பேசியதனைத்தையும் கூர்ந்து கேட்டிருந்த சிபி “அப்போ நீங்க தான் அன்புவை மிரட்டுனீங்களா” என்று புருவம் உயர்த்தி கேட்டான்.

அனைவரும் என்ன இது என்பதாய் அவனை பார்க்க “இல்லல்ல. அன்புவை மிரட்டி இருந்தா, அவ என் கூட பேசறதையே நிறுத்தியிருப்பா. நீங்க அவங்க அப்பாவை மிரட்டி இருக்கீங்க. அதான் அவர் அந்தஸ்து, கெளரவம், தராதரம்னு உங்கள மாதிரியே பேசியிருக்கார்” என்று சரியாக கணித்து சொன்னான்.

மகனது சாதுரியத்தை அந்நேரத்திலும் மெச்சி கொண்டவர் “இந்த தெய்வா யாரையும் மிரட்டணும்னு இல்ல. என் பக்க நியாயத்தை தான் அந்த மனுஷர் கிட்ட சொன்னேன். அவரும் என் பொண்ணு அப்படியெல்லாம் செய்யமாட்டா, அது இதுன்னு பேசிட்டு இன்னைக்கு அவளை வச்சி உன்னை வளைச்சி போட பார்க்கிறாரா” என்று பற்களை கடித்தார்.

“தப்பா பேசாதீங்க ம்மா. அன்புவும், அவ குடும்பமும் அப்படிப்பட்டவங்க இல்ல”

“என்ன அப்படிப்பட்டவங்க இல்ல. முள்ளங்கி பத்தை மாதிரி நான் புள்ளையை பெத்து வச்சா, இவங்க ரெண்டாவதா கல்யாணம் பண்ணிக்க பார்ப்பாங்களாம். தெய்வா பையன் ஒருத்திக்கு ரெண்டாவது புருஷனா. நெவர், நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன்” என்று கத்தினார்.

“அவ பாவம் மா, அவளோட முதல் வாழ்க்கைல அவ இழந்தது தான் அதிகம்” ஆற்றாமையில் சிபியும் கத்த

“அதுவும் எனக்கு தெரியும். எல்லார் முன்னாடியும் சொல்லவேண்டாம்னு தான் சொல்லல. இங்க பாரு சிபி, என்னால உன்னை அப்படியொரு வாழ்க்கையில நினைச்சு கூட பார்க்க முடியாது. நான் பட்ட கஷ்டமே போதும். நீயும் அத அனுபவிக்க கூடாதுனு தான் சொல்றேன். நீ ஏன் புரிஞ்சிக்க மாட்ற. அடுத்த வேளை கஞ்சிக்கு கஷ்டப்படுற அம்மா கூட தன் மகனுக்கு ரெண்டாம் தரமா ஒரு வாழ்க்கையை அமைக்க பார்க்க மாட்டா. நான் எப்படி இந்த கல்யாணத்துக்கு ஒத்துப்பேன். நிச்சயம் மாட்டேன்” ஆணித்தரமாக தெய்வா சொல்ல, அவரது கூற்றுக்கு மறுத்து பேச வந்தான் சிபி.

அவனுக்கு முன்னே “போதும் சிபி. இந்த விஷயத்துல அம்மா என்ன, எனக்கே விருப்பம் இல்ல. அப்படி என்னடா குறைஞ்சி போயிட்ட ஏற்கனவே கல்யாணமான பொண்ண நீ கல்யாணம் பண்ணிக்க. இதுக்கு மேல இத பத்தி பேசாதே. அம்மா இல்ல, நான், அப்பா யாருமே ஒத்துக்க மாட்டோம்” என்று அசோக் அழுத்தம் திருத்தமாக சொல்ல, அதை ஆமோதிப்பது போல் பூபதி கேசவனும் அமைதி காத்தார்.

பேச்சு முடிந்ததென தெய்வநாயகி தன்னறைக்கு செல்ல, அவர் பின்னே பூபதி கேசவனும் சென்றுவிட, “எல்லாம் உன்னால தான்” என்று மனைவியின் கையை பிடித்து தன்னறைக்கு இழுத்து சென்றான் அசோக்.

தனித்து விடப்பட்ட சிபி அங்கேயே தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.

இங்கே, கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்த்திருந்த அன்புவிற்கு உள்ளுக்குள் ஓர் இனம் புரியா பரவசம் தோன்றியது.

அபிஷேக் இறந்த பின் அவள் பூவோ, குங்குமமோ வைப்பதில்லை. கணவன் இறந்துவிட்டான் என்பதால் அல்ல. தன் உணர்வுகள் அனைத்தும் மரித்துவிட்டதால். இன்றோ அவள் எதிர்பாராத வண்ணம் அவன் அவள் நெற்றியில் குங்குமத்தை வைத்துவிட்டான்.

இது பிடித்திருக்கிறதா, இல்லை சிபியை பிடித்திருக்கிறதா என்று கேட்டால், இல்லை என்று தான் சொல்வாள். ஆனால் தன்னை மீறி மனதிற்குள் ஓர் அமைதியும், பாதுகாப்பு உணர்வும் ஏற்பட்டிருந்தது.

அதேநேரம் இது சரியா என்ற பயமும் இருக்க தான் செய்தது. அபர்ணாவிடம் பேசினால் கொஞ்சம் மனம் நிம்மதியடையும் என்று தோழிக்கு அழைத்தாள்.

அவள் அபர்ணாவாயிற்றே. அத்தனை கோபமாக இழுத்து சென்று அறையில் தள்ளிய கணவனுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு அன்பரசியிடம் பேசினாள்.

“ஹலோ அன்பு. கங்க்ராட்ஸ் டி. சிபி எல்லாம் சொன்னார்” கணவனுக்கு கேட்க கூடாதென்று குளியலறையில் தண்ணீரை திறந்து விட்டு, ஹஸ்கி வாய்ஸில் பேசினாள்.

“ஹலோ அபர்ணா.. நான் உங்களுக்கு முன்னாடி சிபிக்கு தான் கால் பண்ணேன். அவர் எடுக்கல. இதெல்லாம் சரிப்பட்டு வருமா அபர்ணா. எனக்கு பயமா இருக்கு. சிபி என்னனா புரிஞ்சிக்க மாட்டேங்கிறார். இன்னொரு அடியை என்னால தாங்கவே முடியாது அபர்ணா. இது வேண்டாம்ன்னு சிபி ஏத்துக்கிட்டு போயிடலாம்ல. ஏன் இப்படி பண்றார்” என்று அன்பரசி தன் மனக் குழப்பங்களை வார்த்தைகளாய் உதிர்த்தாள்.

அதில் கோபம் வர பெற்ற அபர் “என்ன பேசற அன்பு. இங்க மொத்த குடும்பமும் சிபிக்கு எதிரா நின்னும், அவர் உனக்காக அவ்ளோ வாதாடிட்டு இருக்கார். நீ என்னனா வேண்டாம்னு அவர் ஏத்துக்கிட்டு போகலனு குறைபட்டுக்கிட்டு இருக்க” என்று வார்த்தையை விட்டாள்.

“என்னாச்சு அபர்ணா.. வீட்ல பெரிய பிரச்சனை ஆகிடுச்சா” என்று அன்பு கேட்கவுமே, தலையில் அடித்துக் கொண்டாள் அபர்ணா.

அபர்ணா ஒன்றுமில்லை என்று எவ்வளவோ மறுத்தும் அதை ஏற்காமல் அன்பு மீண்டும் மீண்டும் கேட்ட, வேறு வழியில்லாமல் தன் மாமியார் தன்னை அறைந்ததில் ஆரம்பித்து அனைத்தையும் தோழியிடம் சொல்லிவிட்டாள்.

அனைத்தையும் கேட்டு கொண்டவளுக்கு கண்கள் கலங்கிவிட, தனக்காக அடிவாங்கிய அபர்ணாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அழைப்பை துண்டித்தவள் அடுத்து சிபிக்கு தான் அழைத்தாள்.

இம்முறை அவன் அழைப்பை ஏற்றதும் “இது சரியா வராது சிபி. இனி என்னை பார்க்கவோ, பேசவோ முயற்சி பண்ணாதீங்க” என்றுவிட்டு அழைப்பை துண்டித்திருந்தாள்.


உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..
 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 11

விநாயகரை முதலில் வணங்க செய்து, அக்னியை வளர்த்த ஐயர் மந்திரங்களை ஓத, அவர் எதிரே அமர்ந்திருந்த சிபி மாலையும் கழுத்துமாய் அவர் சொல்வதை ஸ்திரமாய் செய்திருந்தான்.

ஆம், மூன்று நாட்களுக்கு முன் அன்பரசி அழைத்து, இனி தன்னை பார்க்கவோ, பேசவோ முயற்சி செய்யவேண்டாம் என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்ததும், அது கொடுத்த கோபத்தோடு தன் இருசக்கர வாகனத்தை எடுத்தவன் நேராக அன்புவின் வீட்டில் தான் நிறுத்தினான்.

சரிதா வந்து கதவை திறக்க, நேராக அன்பு இருந்த அறைக்கு சென்றவன் “என்னை பார்த்தா எப்படிடி தெரியுது. வேலை, வெட்டி எதுவும் இல்லாதவன் மாதிரியா. உன் கண்ணீரை பார்த்ததுல இருந்து எதுவும் ஓடாம, இன்னைக்கே எமர்ஜென்சி லீவ் போட்ருக்கேன். நாளைக்கு காலைல 4.20க்கு கும்மிடிப்பூண்டி டிரைனை எடுக்கணும். இதோ நைட் ஒன்பது மணிக்கு உன் கூட போராடிகிட்டு இருக்கேன்” என்று அவளிடம் சீற, தன் குண்டு கண்கள் மிரள அவனை பார்த்திருந்தாள்.

“காலையிலேயே நமக்கு கல்யாணமாகிடுச்சு சொன்னேன் தானே. அப்புறம் பார்க்க முயற்சி பண்ணாதே, பேசாதேனு சொன்னா என்ன அர்த்தம்” என்று அவன் உறும, அவள் எதுவும் சொல்லாமல் தலை கவிழ்ந்தாள்.

அவள் தாடையை பிடித்து முகத்தை நிமிர்த்தியவன் “இங்க பாரு, காதல்னா எல்லாரும் உடனே ஏத்துக்க மாட்டாங்க. ஒண்ணு கல்யாணம் பண்ணிக்கிட்டு பெத்தவங்க மன்னிக்கிற வரைக்கும் காத்திருக்கணும். இல்ல, அவங்க சம்மதிக்கிற வரைக்கும் வைராக்யமா காதலை பிடிச்சிட்டு இருக்கணும். அதைவிட்டுட்டு காதலே வேண்டாம்னு தூக்கி போட்டுடுவியா” என்று ஆவேசப்பட்டான்.

‘நான் எப்போது உங்களை காதலித்தேன்’ என்பதாய் அவளது பார்வை இருக்க, அதை சரியாக கணித்தவனும் “கரெக்ட்.. நீ என்னை காதலிக்கல. ஆனா உனக்கும் சேர்த்து நான் உன்னை காதலிச்சிட்டு இருக்கேன். அந்த காதல் வாழணும்னு உனக்கு தோணலையா ராசி” என்று ஆதங்கமாக அவளிடம் கேட்டான்.

அனைத்திற்கும் அன்புவிடமிருந்து மௌனம் மட்டுமே பதிலாக வந்தது.

விநாயகத்திடம் திரும்பியவன் “எங்க வீட்டுல சம்மதிக்க கொஞ்சம் டைம் எடுக்கலாம். அதுவரைக்கும் உங்க பெண்ணால காதலா பேச முடியலனாலும் பரவாயில்ல, பேசாம இருக்க சொல்லுங்க. அதவிட்டுட்டு சரிப்பட்டு வராது, அது இதுன்னு சொல்லிட்டு திரிய வேண்டாம்” சற்றும் குறையாத கோபத்துடன் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

அடுத்தநாள் அதிகாலையில் பணிக்கு சென்றவன் முன்மாலையில் அயர்ந்து வீட்டிற்கு திரும்ப, அங்கே வெண்பாவின் மொத்த குடும்பமும் இருந்தது.

அவளின் பெற்றோரையோ அல்லது உறவினர்களையோ யாரென்று தெரியவில்லை என்றாலும், தெய்வநாயகி காட்டிய வெண்பாவின் புகைப்படத்தினை வைத்து அது அவள் தான் என்பதை சிபியால் அடையாளம் காண முடிந்தது.

இருக்கும் பிரச்சனையில் இது வேறா என்று நெற்றியை தேய்த்தவன், அவளிடம் சென்று “ஹலோ வெண்பா. ஐ ஆம் சிபி” என்று கைக்கொடுக்க, அவனது உடையை பார்த்தவள் முகம் சுளித்தாள்.

“என்ன, அம்மா வேற ட்ரெஸ்ல போட்டோ காட்டினாங்களா. பட் இது தான் நான். என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா டெய்லி என்னை இப்படி தான் பார்க்கணும்” என்றும் சொல்ல, வெண்பாவிற்கு ஒருநிமிடம் தூக்கி வாரி தான் போட்டது. இருந்தும் திருமணமானால் அவனை மாற்றிவிடலாம் என்ற எண்ணம்.

முகத்தை இயல்பாக்கி கொண்டு “நோ ப்ராப்ளம் சிபி” என்றாள் ஓர் ஒட்ட வைத்த புன்னகையோடு.

“அட, நீங்க ஏன் நோ ப்ராப்ளம் சொல்றீங்க. இதை என்னை கல்யாணம் பண்ணிக்க போற அன்பு தானே சொல்லணும்” என்று அவளை மூக்குடைத்தான்.

மகன் இப்படி வெண்பாவுடன் வெகு இயல்பாக பேசியதிலேயே அவனை சந்தேகமாக பார்த்திருந்த தெய்வநாயகி, அவன் கடைசியாக சொன்ன வார்த்தைகளில் பற்களை கடித்தார். அதோடு வெண்பா தன் இருப்பிடத்திலிருந்து குதித்து எழுந்தாள்.

வெண்பாவின் பெற்றோரும், உறவினர்களும் அவனை கலவரமாக பார்க்க, முதலில் சுதாரித்த வெண்பா தான் “ஆண்ட்டி இவர் என்ன சொல்றார். யாரது அன்பு” என்று சிபியை விட்டு தெய்வாவை கேட்டாள்.

“அவங்கள ஏன் கேக்குறீங்க மிஸ். நான் சொல்றேன். எங்கம்மாவுக்கு நான் லவ் பண்ற விஷயம் தெரியாது. அதான், உங்க கூட அலையன்ஸ் பேசிட்டாங்க. அவங்க சார்பா நான் சாரி கேட்டுக்கிறேன். நீங்க இப்போ..” என்று வாசலை பார்த்தான்.

“நீங்க என்னை ரொம்ப இன்சல்ட் பண்றீங்க சிபி” அவன் முன் அவள் விரல் உயர்த்த

“மிஸ், நீங்க ஹர்ட் ஆகிட கூடாதுனு உண்மைய சொன்னா, அதை தப்பா புரிஞ்சிக்கறீங்க..” என்று தன் அன்னையை கூர்மையாக பார்த்தவன் “பேமிலி விஷயம், எங்களுக்குள்ள இருக்கட்டுமேனு பார்த்தேன். இட்ஸ் ஒகே. அவங்க கூட சேர்ந்து உங்க பேமிலியும் தெரிஞ்சிக்கிட்டும். எனக்கும் அன்புவுக்கும் இந்த ஃப்ரைடே மேரேஜ்” என்று தன் வீட்டாட்களிடம் ஒருமுறை பார்வையை ஓட்டியவன், அவர்களது உக்கிர பார்வைகளை சளைக்காமல் சந்தித்துவிட்டு அறைக்கு சென்றான்.

மகனுக்கு பின்னே தெய்வநாயகியும் கோபமாக தன்னறைக்கு சென்றுவிட, வந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டு அவர்களை அனுப்பிவைப்பது அசோக் மற்றும் பூபதி கேசவனின் வேலையாகி போனது.

இரவுவேளை வந்தும் அன்னை, இளையமகன் இருவருமே வெளியே வராமல் இருக்க, அன்றைய இரவு அனைவருக்கும் உண்ணா இரவாகி போனது.

அடுத்தநாள் காலை தன் திருமணத்திற்கு தேவையான ஜவுளி மற்றும் தாலி வாங்க அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்துவிட்டு வெளியே செல்ல கிளம்பினான் சிபி.

மகனுக்காகவே காலையிலிருந்து பல்லில் ஒரு பொட்டு தண்ணீரும் படாமல் சோபாவில் ஒய்யாரமாக அமர்ந்து காத்திருந்த தெய்வா “நான் அவ்ளோ சொல்லியும் நீ அவளை தான் கல்யாணம் பண்ணிக்க போறியா சிபி” என்று நிதானமாக கேட்டார்.

அவனும் ஆம் என்பதாய் தலையாட்ட, “ஒகே” என்று தன் இடத்திலிருந்து எழுந்தவர் “எப்போ நீயே நாங்க முக்கியம் இல்லைனு முடிவு பண்ணியோ, இனி நாங்களும் ஒதுங்கிக்கிறது தானே சரி. இனி உனக்கு அம்மா இல்ல. உன் இஷ்டப்படி என்ன வேணா பண்ணலாம்” என்றுவிட்டு அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டார்.

அதுவரை அங்கு ஒரு பார்வையாளராக நின்றிருந்த அவன் தந்தை, மகனை தடுக்கவும் செய்யாது, அவனுக்கு ஆதரவாகவும் பேசாது, அங்கிருந்த பானுமதியிடம் “அத்தை. அவளை எப்படியாவது சாப்பிட வைங்க” என்றுவிட்டு அலுவலகத்திற்கு கிளம்பிவிட்டார்.

தம்பியை முறைத்து விட்டு அசோக்கும் அங்கிருந்து நகர, கணவனுக்கு பின்னால் அபர்ணாவும் சென்றுவிட்டாள்.

அன்னை பேசிவிட்டு சென்றதிலேயே துடித்துப் போன சிபி, இப்போது மற்றவர்களும் விட்டு சென்றதில் தனித்து விடப்பட்டது போல் உணர, தளர்ந்து சோபாவில் அமர்ந்துவிட்டேன்.

வீட்டிலிருப்பவர்களை எதிர்த்து, அவர்கள் யார் சம்மதமும் இல்லாமல் திருமணம் செய்வது சிபிக்கும் அவ்வளவு எளிதல்ல. இந்த முடிவை எடுப்பதற்குள் தாயா, தாரமா என்று மனதிற்குள் ஒரு பட்டிமன்றமுமே நிகழ்த்திவிட்டான்.

அம்மாவை என்றைக்கேனும் சமாதானம் செய்து கொள்ளலாம், ஆனால் அன்பு. நிலையில்லாமல் இருக்கிறாளே. தெய்வநாயகியின் மனதை மாற்றுவதற்குள் அன்பரசி மனம் மாறிவிட்டால், அனைத்தும் வீணாகி போகும். இப்போது அன்புவை திருமணம் செய்து, அவளை தனக்கு உரிமையாக்கி கொள்வதே முதன்மையாக பட, வெள்ளிக்கிழமை திருமணத்தை நடத்த விநாயகத்திடம் பேசிவிட்டான்.

அவரும் ஒருமுறை அவனது தாய், தந்தையிடம் பேசி பார்ப்பதாக கேட்ட போதும் வேண்டாமென்று தடுத்துவிட்டான்.

வெகுநேரம் தொய்வாக அமர்ந்திருந்தவன், அடுத்த செய்ய வேண்டிய வேலைகள் வரிசைக்கட்டி நிற்பதை எண்ணி கிளம்பி சென்றான்.

“பொண்ணை அழைச்சிண்டு வாங்கோ” என்று ஐயர் சொல்லவும், அங்கு நின்றிருந்தவரின் கண்ணசைவை புரிந்து மகனை அவரிடம் கொடுத்துவிட்டு, அன்பரசியை அழைத்து வர கோவிலுக்கு பின் புறம் இருக்கும் உடை மாற்றும் அறைக்குள் நுழைந்தாள் அபர்ணா.

“அன்பு, ரொம்ப அழகா இருக்க” சிபி வாங்கி கொடுத்த கூரை பட்டுடுத்தி, தலை வாரி பின்னலிட்டு, மூன்றில் இருந்து நாலு முழம் மல்லி பூவை தன் நீண்ட கூந்ததில் சூடியிருந்தாள் அன்பு. கழுத்து, கை, காதிலும் அளவாக ஒரு ஆரம், இரண்டிரண்டு வளையல்கள், ஜிமிக்கி தோடு அணிந்திருந்தாள்.

அதற்கே தேவதை போல் மிளிரும் தோழியின் தலையை அன்பாய் வருடிவிட்ட அபர்ணா, தன் கண்ணிலிருந்து மை வழித்து அதை அவளது கன்னத்தில் திருஷ்டி பொட்டு வைத்து மகிழ்ந்தாள்.

அன்புவோ அதற்கு நேர் மாறாக, கண்களில் நீர் வழிய “ஏன் அபர்ணா. ஏற்கனவே என்னால நீங்க அடி வாங்கியிருக்கீங்க. இப்போ கல்யாணத்துக்கும் வந்திருக்கிறது தெரிஞ்சா, சிபிவுடைய அண்ணா உங்க மேல கோபப்பட போறாங்க” வருத்தம் தோய்ந்த குரலில் கேட்டாள்.

“ஹலோ கல்யாண பொண்ணு, இனி உங்க எண்ணமெல்லாம் சிபியை சுத்தி மட்டுமே இருக்கணும். நான் அசோக் கிட்ட பேசி பெர்மிஷன் வாங்கிட்டு தான் வந்திருக்கேன்” என்று சொன்னதும், அப்படியா என்று அன்பு பார்க்க..

“ஆமா. அத்தைக்காக தான் அவர் யோசிக்கிறார். மத்தபடி தம்பி மேல ரொம்ப பாசம். நீ எதையும் யோசிக்காத. ஏற்கனவே கண்ணுக்கு மையை தவிர வேற எதுவும் போடல. அதுவும் அழுது கலைஞ்சிட போகுது. உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையுறத நினைச்சி நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன். நீ என்னனா அழுது வடிஞ்சிக்கிட்டு இருக்க. வா வா, மாப்ள வைடிங்” என்று உற்சாகமாக தோழியை அழைத்து சென்றவளது நினைவுகள் நேற்றைய இரவுக்கு சென்றது.

வீட்டிலிருந்த ஒவ்வொருவரையும் திருமணத்திற்கு வரும்படி வருந்தி அழைத்தான் சிபி. தெய்வா அவன் யாரோ என்பது போல எழுந்து சென்றுவிட, பூபதி கேசவனும் மனைவிக்கு பின்னால் சென்றுவிட்டார்.

பானுமதி அம்மாவோ, எங்கே சிபி கூப்பிட்டு விட போகிறானோ என்று அறையை விட்டு வெளியே வரவே இல்லை.

அண்ணனிடம் சொல்ல “சாரி சிபி. கண்டிப்பா வரமாட்டேன்” என்றுவிட்டு மேலே தன்னறைக்கு செல்ல, அங்கே மகனை அவனது பேபி காட் க்ரேடிலில் விட்டு, அவனுக்கு விளையாட பொம்மைகளையும் கொடுத்துவிட்டு, நாளை திருமணத்திற்கு செல்ல புடவைகளையும், நகைகளையும் கட்டிலில் கடைப்பரப்பி வைத்திருந்தாள் அபர்ணா.

இதில் “வருண், இங்க பாரு.. குட்டி பாப்பாவுக்கு குட்டி தோத்தி.. சித்தப்பா வாங்கி கொடுத்திருக்காங்க. இத போட்டுக்கிட்டு நாளைக்கு சித்தப்பா கல்யாணத்துக்கு போலாமா” என்று மகனிடம் காட்டி கேட்க, அவனும் தன் பொக்கை வாயை காட்டி சிரித்தான்.

தான் கேட்டதில் சுள்ளென்று கோபம் வரப்பெற்ற அசோக், வேகமாக உள்ளே வந்து மனைவியை தன் பக்கம் திருப்பி “திமிரு கூடிடுச்சா டி உனக்கு. இந்த வீட்டுல யாரும் கல்யாணத்துக்கு போக போறதில்ல. நீ என்னமோ சந்தோஷமா எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டு இருக்க. நான் சொல்றேன் நீ போகக்கூடாது” அவளை முறைத்துக் கொண்டு வார்த்தைகளை மென்று துப்பினான்.

அவனது பார்வையை துளியும் பயமில்லாமல் சந்தித்தவள் “சாரி அச்சு. நான் போவேன்” என்றாள் ஆணித்தரமாக.

“என்னை விட உனக்கு உன் ப்ரண்ட் தான் முக்கியமா அபர்” தாடை இறுக அவன் கேட்க

“நான் அன்புக்காக மட்டும் போகணும்னு சொல்லல. சிபிக்காகவும் தான்” என, இருவருக்கும் இடையில் சூடான வாக்குவாதம் ஆரம்பித்தது.

“அவன் என் தம்பி டி. உனக்கு என்னடி அக்கறை”

“சிபி உங்க தம்பிங்கிறதுக்காக மட்டும் இல்ல. அவர் எனக்கும் தம்பி தான். அதோட ஒரு பெண்ணோட வாழ்க்கையை சரி செய்யணும்னு நினைக்கிற உன்னதமான மனிதர். அவர் பக்கம் நிக்கிறத நான் பெருமையா தான் நினைக்கிறேன்”

“என் பேச்சை மீறி நீ போனா, நமக்குள்ள பெரிய பிளவே ஏற்படும் அபர்” அவளை எச்சரிப்பதாக சொன்னான்.

இவ்வளவு தூரம் வந்துவிட்டதா என்று கணவனை ஒரு நொடி ஆழ்ந்து பார்த்தவள் “இந்த ஊருக்கு ஒரு பொண்ணுக்கு கல்யாணமாகியிருக்கா, அவளுக்கு குழந்தை இருக்காங்கிறது மட்டும் தான் முக்கியம். அவ புருஷன் நல்லவனா, அவன் கூட அவ சந்தோஷமா இருக்காளா, இல்ல அடிய உதைய வாங்கறாளானு எதுவும் முக்கியமில்ல. எனக்கு கல்யாணமும் ஆகிடுச்சு.. பாப்பாவும் இருக்கான். இனி உங்க முடிவு எதுவோ, அதை நான் ஏத்துக்கிறேன் அச்சு” அவளும் தன் முடிவை ஸ்திரமாக கணவனிடம் சொன்னாள்.

அவளை எரித்து விடும் கோபம் வர “அப்போ என் குழந்தையை இங்க விட்டுட்டு நீ உன் அம்மா வீட்டுக்கு கிளம்பு” என்று சீறினான்.

“நான் ஏன் என் குழந்தையை விடணும். உங்கள விட எனக்கு தான் அவன் மேல உரிமை அதிகம். போனா என் பையன் கூட தான் போவேன்” அபர்ணாவும் பதிலுக்கு பதில் பேசியவள், மகனது பக்கம் திரும்பி,

“நாம தூங்கலாமா பட்டுக்குட்டி, அப்போ தான சித்தப்பா கல்யாணத்துக்கு போக முடியும். வீட்டுக்கு ஆம்பளையா நீ தான முன்ன நிக்கணும்” என்று குழந்தையை தோளில் போட்டு தட்டிக் கொடுத்தவள் கணவனை குற்றம் சாட்டுவதாக பார்த்தாள்.

அதில் பற்களை கடித்தவன் “தாராளமா போ, ஆனா திரும்ப இந்த வீட்டுக்கு வராத” என்றுவிட்டு மெத்தையில் அவன் பக்கமிருந்த புடவை, நகை பெட்டிகளை தூக்கி அவளது பக்கம் வீசிவிட்டு அவன் பக்கம் படுத்து கண்களை மூடி கொண்டான்.

கணவனது பேச்சுக்களை எண்ணிப் பார்த்த அபர்ணாவிற்கு கண்களில் நீர் துளிர்க்க, அதை அன்புவிற்கு தெரியாமல் துடைத்துக் கொண்டு, அவளை மணமேடைக்கு அழைத்து சென்றாள்.

சிபி பட்டு வேட்டி, சட்டையில் கம்பீரமும் அழகும் ஒருசேர இருந்தான். அன்பரசி நடந்து வருவதை தூரத்திலே பார்த்ததும், பார்வையை க்ஷணமும் அவளிடமிருந்து அகற்றாது மெய்மறந்து பார்த்திருந்தவன், அவளை அருகில் அமர வைத்ததும் “தேங்க்ஸ்” என்றான்.

அன்புவிற்கு எதற்கு என்று புரிந்ததா, இல்லையா என்று தெரியவில்லை. அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை, ஏன் என்றும் கேட்கவில்லை. அமைதியாக ஐயர் சொன்னதை செய்தாள்

விநாயகம், சரிதாவின் முக்கிய சொந்தங்கள் திருமணத்திற்கு வந்திருந்தனர். கலைக்கு அவன் வீடு சென்று அழைத்தும் வரவில்லை. சிபி தரப்பு ஆட்கள் என்று பார்த்தால், அபர்ணா வந்திருந்தாள். சித்தப்பாவின் திருமணத்திற்கு அவனது மகனும் உடனிருந்தான். சிபியின் நண்பர்கள் இருந்தார்கள். முக்கியமாக பூபதி கேசவன் பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக நின்றிருந்தார்.

ஆம், பூபதி கேசவன் தான் மகனின் திருமணத்திற்கு வருகை தந்திருந்தார்.

திருமணத்திற்கு தயாராகி படியிறங்கிய அபர்ணா, அங்கே மாமியார் நடுநாயகமாக அமர்ந்திருப்பதை பார்த்து, என்ன செய்வதென்று புரியாமல் திகைத்து நின்றிருந்தாள். அப்போது பட்டு வேட்டி, சட்டையில் நேர்த்தியாக தயாராகி வெளியே வந்த மாமனாரை கண்டு தன்னை இன்னமும் மறைத்து கொண்டு நிகழ்வனவற்றை கவனித்தாள்.

கணவரது தோற்றத்தை கண்ட தெய்வநாயகி, அவரை தன் பார்வையால் துளைக்கும் படி பார்க்க “சிபி கல்யாணத்துக்கு போயிட்டு வரேன் தெய்வா” என்றார்.

அபர்ணாவிற்கு ‘அட’ என்றிருக்க, அவர்களது உரையாடலை இன்னும் கூர்ந்து கவனித்தாள்.

“சிபி இப்படியொரு கல்யாணம் பண்ணிக்கிறதுல எனக்கும் சம்மதம் இல்ல தான். அதுக்காக அவனை அப்படியே விட்டுட முடியாது. நாளைக்கு பூபதி பையன் அவங்க வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டான்ங்கற பேச்சு தான் வரும். அத நான் விரும்பல. நான் முன்ன நின்னு அவன் கல்யாணத்தை பண்ணி வைக்க போறேன் தெய்வா.. உனக்கு விருப்பம் இல்லனா நான் உன்னை வற்புறுத்தல” என்றுவிட்டு அவர் சிபி சொன்ன கோவிலுக்கு கிளம்ப,

“மாமா, இருங்க. நானும் கூட வரேன்” என்று குழந்தையை தூக்கிக் கொண்டு கீழே ஓடிவந்தாள் அபர்ணா.

இவளும் செல்கிறாளா என்று அடுத்து மருமகளை தெய்வாவின் பார்வை சுட்டெரிக்க, அவரை பார்த்தால் தானே அபர்ணாவிற்கு அது தெரியும். தெரிந்தே மாமியாரை பார்ப்பதை தவிர்த்து கிளம்பினாள்.

ஐயர் கொடுத்த மாங்கல்ய தட்டை அபர்ணா அனைவரிடமும் எடுத்து சென்று ஆசீர்வாதம் வாங்கி மீண்டும் அதை அவரிடம் கொடுத்தாள். அதிலிருந்த மாங்கல்யத்தை எடுத்து அவர் சிபியிடம் கொடுத்து கட்ட சொல்ல, ஒரு நொடி நிமிர்ந்து தந்தையை பார்த்தான். அவர் கட்டு என்று கண்மூடி திறக்க, அடுத்த நொடி விநாயகத்தையும் சரிதாவையும் பார்த்தான். மனம் நிறையை சந்தோசத்துடன் மகளது திருமணத்தை காண காத்திருந்தனர்.

“ராசி” என்று தன்னவளை அழைக்க, கைகளை பிசைந்திருந்தவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“உனக்கு இந்த கல்யாணத்துல முழு விருப்பம் இல்லைனு எனக்கு தெரியும். இருந்தும் எனக்காக இவ்ளோ தூரம் வந்திருக்கேனா, அது என்மேல இருக்கிற நம்பிக்கைல தான்னு புரியுது. அந்த நம்பிக்கையை நான் என்னைக்கும் இழக்க விடமாட்டேன். இந்த தாலிய உன் கழுத்துல கட்டுறதுல உனக்கு சம்மதம் தானே” என்று கேட்க, ஆமென்று அவள் தலையை மெல்ல அசைத்தாள்.

சிபி மனநிறைவோடு அன்பரசியின் சங்கு கழுத்தில் மங்கல நாணை பூட்டினான்.

திருமணம் முடிந்து தந்தையின் காலில் இருவரும் விழுந்து ஆசீர்வாதம் வாங்க “நல்லா இருங்க” என்று வாழ்த்தினார் பூபதி.

பின் மணமக்கள் மற்றவர்களிடமும் ஆசீர்வாதம் வாங்க செல்ல, “நீ கிட்ட இருந்து பொண்ணு பையனை வீட்டுக்கு கூட்டிட்டு வாம்மா” என்று அபர்ணாவிடம் சொல்லியவர், தான் கிளம்புவதாக சொல்லி நகர்ந்தார்.

தந்தையின் பின்னால் ஓடிய சிபி அவரை பின்னிருந்து அணைத்து “தேங்க்ஸ் ப்பா” என்று இன்னும் இறுக கட்டிக் கொண்டான்.

மகனை பூபதி முன்னுக்கு இழுக்க “நிச்சயம் நாங்க நல்லா இருப்போம் ப்பா. அம்மா, அசோக் வராதது தான் கஷ்டமா இருக்கு” என்று வருத்தப்பட்டான்.

மகனது தோளில் தட்டி கொடுத்தவர் தான் கிளம்புவதாக சொல்ல “அப்பா, ஹோட்டல்ல ஃபுட் அரேன்ஞ் பண்ணிருக்கேன்.. சாப்பிட்டுட்டு போங்க ப்பா” என்றான்.

“உங்க அம்மாகிட்ட கெளரவம் போயிடக்கூடாதுனு கல்யாணத்துக்கு போறதா தான் சொல்லிட்டு வந்தேன். உண்மை அது மட்டும் இல்ல. என் பையன் கல்யாணத்தை பார்க்கலங்கிற குறை எனக்கு இருக்க கூடாதுனும் தான். சிபியோட அப்பாவா உன் கல்யாணத்துக்கு வந்துட்டேன்.. தெய்வாவோட புருஷனா சாரி சிபி, என்னால சாப்பிட முடியாது” என்றவர்

“போராடி கல்யாணம் பண்ணினதோட முடிஞ்சிடாது சிபி. இனி தான் ஆரம்பம். உன் அம்மா, வைஃப் ரெண்டு பேரையும் நீ தான் பேலன்ஸ் பண்ணனும். ரெண்டு பேருக்கும் உன்னை ரொம்ப பிடிக்கலாம். ஆனா, ரெண்டு பேருக்கும் பிடிக்க வைக்கறது உன் கையில தான் இருக்கு” என்று புன்னகைத்து விட்டு பூபதி அங்கிருந்து நகர, ஓர் ஆழ மூச்சை வெளிவிட்டவன் தந்தை செல்வதையே பார்த்து நின்றிருந்தான்.


உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்.
 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 12

கோவிலில் இருந்து உணவகத்திற்கு சென்றவர்கள் அங்கே திருமண உணவை முடித்து கொண்டு அன்பரசியின் வீட்டிற்கு சென்றனர். அங்கு சிறிது நேரம் இருந்துவிட்டு மூவரும் சிபியின் வீட்டிற்கு கிளம்பினர்.

பெண் வீட்டு சார்பாக யாரையேனும் உடன் அனுப்புவதாக விநாயகம் சொன்ன போதும், தன் அம்மா அங்கே எந்த நிலையில் இருக்கிறார்களோ? வந்தவர்களை அவமானப்படுத்தி அனுப்பிவிட்டால், அது காலத்திற்கும் அழியாத வடுவாய் மாறும். அதனால் வேண்டாமென்று மறுத்துவிட்டான் சிபி.

இருந்தும் யாருமில்லாதவள் போல் பெண்ணை அனுப்புவதில் விநாயகமும் சரிதாவும் வேதனை கொள்ள, “கவலையே படாதீங்கம்மா. சிவாஜிவும் நான் தான், எம்ஜிஆரும் நான் தான்னு சிவாஜி படத்துல தலைவர் சொல்லுவாரே. அந்த மாதிரி சிபியோட சொந்தமும் நாங்க தான். அன்புவோட சொந்தமும் நாங்க தான்” என்று தன்னையும் மகனையும் காட்டினாள் அபர்.

காரில் சிபி ஓட்டுனர் இருக்கையில் அமர, “இருங்க சிபி, நான் டிரைவ் பண்றேன். நீங்க பக்கத்து பக்கத்துல உட்காருங்க” என்று அபர்ணா மைத்துனனிடம் சாவி கேட்க

“இல்ல அண்ணி, நீங்க அன்பு கூட உட்காருங்க. இப்போ நான் கார் ஓடுறது தான் சரி. இந்த பழியில நான் யாருக்கும் பங்கு தர்றதா இல்ல” என்று புன்னகைத்தான். இதிகாசத்தில் கண்ணன் ருக்மணியை தேரோட்ட சொன்னதே ஓர் சாதுர்யம் தானே.

அவளும் அவன் எதற்காக சொல்கிறான் என்பதை புரிந்து பின் இருக்கையில் அன்புவுடன் அமர்ந்தாள்.

சிபி சாலையை பார்த்து வண்டியை செலுத்த, அன்பரசி தன் கரங்களை வெறித்து அமர்ந்திருந்தாள். அங்கே திருமணம் முடிந்து வீட்டிற்கு செல்லும் கலகலப்பு இல்லை. அரட்டைகள் இல்லை. சிரிப்பு சத்தம் இல்லை. அவ்விடம் மிகவும் அமைதியாக இருந்தது.

சிறிது நேரம் ஆ, ஊவென்று பேசி கொண்டிருந்த குழந்தை வருணும் சற்று நேரத்துக்கு முன் கண்ணயர்ந்திருக்க, இப்போது அவனது சத்தமும் இல்லை.

அஷோக்கிற்கும் அபர்ணாவிற்கும் திருமணமான போது, சிபி தான் அவர்கள் வந்த காரை இயக்கினான். வழியெங்கும் அண்ணனையும் அண்ணியையும் கலாய்த்து கொண்டும் வந்தான். அதுமட்டுமா திருமணம் முழுவதும் ஓடியாடி பாடெடுத்ததோடு, அண்ணனுக்கு தேவையான ஒவ்வொன்றையும் உடனிருந்து பார்த்துக் கொண்டான்.

இன்று சிபியின் முக்கியமான நாளில், அசோக் உடனிருந்திருக்க வேண்டும் என்றே அபர்ணாவிற்கு தோன்ற கணவன் மீது கோபமாக வந்தது.

கண்களை மூடி தன்னை நிதானித்தவள் “நீ ஹாப்பிய இருந்தா தான் அபர் மத்தவங்கள ஹாப்பிய வச்சிக்க முடியும்” தனக்கு தானே சொல்லிக் கொண்டவளுக்கு அதுவரை இருந்த திருமண டென்ஷனில் அது மறந்தே போயிருந்தது.

அப்போதே நினைவு வந்தவளாக அன்புவை தன் பக்கம் திருப்ப, அவள் என்னவென்று புரியாமல் விழித்தாள்.

“இதுவரைக்கும் உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய போகுது, சிபிக்கு அவர் மனசுக்கு பிடிச்ச பொண்ணு கிடைக்கிறானு இப்படியே யோசிச்சிட்டு இருந்த எனக்கு இது சுத்தமா ஞாபகம் இல்ல பாரேன்” என்று புதிராய் நிறுத்தியவள்

“இனி நீயும் நானும் கோ-சிஸ்டர்ஸ் அன்பு” என்று உற்சாகமாக சொன்னவள் தனக்கு ஓரகத்தியான தோழியை உளமகிழ்ந்து அணைத்துக் கொண்டாள்.

அதோடு விட்டிருக்கலாம். ஆனால் “இதுவரைக்கும் என் மாமியார் இப்படி, அப்படினு உங்கிட்ட குறைப்பட்டது போய், இனி நம்ம மாமியாரை பத்தி பேசிக்கலாம்” என்றாள் சிபி இருப்பதை மறந்தவளாய்.

அன்பு தான் “அபர்ணா” என்று தாழ்ந்த குரலில் அவளுக்கு புரியவைக்க குரல் கொடுத்தாள். அதுவெல்லாம் அபர்ணாவின் பேச்சு ஸ்வாரஸ்யத்தில் அவள் காதில் விழக் கூட இல்லை.

“கல்யாணமான புதுசுல ஒரே பயமா இருக்கும். அடமண்ட் அத்தை.. அவங்க என்ன சொன்னாலும் அவங்க கட்டளையே சாசனம்னு சிவகாமி தேவிக்கு கட்டப்பா மாதிரி இருக்கிற மாமா. இதுல அசோக்..” என்றவள் விழுந்து விழுந்து சிரித்தாள்..

“முதல்ல அவனுக்கு யார் அஷோக்னு பேர் வச்சது. கார்டென்ல இருக்கிற செடிக்கு கூட தண்ணி ஊத்தமாட்டான், இதுல பேர் மட்டும் அசோக் சக்கரவர்த்தியாம். இது அந்த அசோக சக்கரவர்த்திக்கு எவ்ளோ பெரிய அவமானம்” தன் குடும்பத்தை சேதாரம் செய்ய வெளி ஆட்கள் தேவையில்லை என்பதாய் பேசினாள்.

“இவங்களுக்கு நடுவுல சிபி மட்டும் தான் அந்த வீட்டுல எனக்கிருந்த ஒரே ஆறுதல். எப்பவும் சொல்றமாதிரி ஹி இஸ் ஜெம். இல்லனா அந்த ஜுராசிக் பார்க் வீட்டுல..” என்று பேசிக் கொண்டே போக, அன்பு அவளது தொடையை சுரண்டி முன்னிருக்கையில் இருக்கும் சிபியை கண்களால் காட்டினாள்.

அப்போதே தான் இருப்பது கார் என்றும், முன்னிருப்பது அவளது மைத்துனன் என்றும் நினைவு வந்தது.

அவள் அசடு வழிய சிபியை பார்க்க “ஆக, என் மொத்த குடும்பத்தையும் டேமேஜ் பண்ணிட்டீங்க. நல்லவேளை, நான் இங்க இருக்கனால என்னை மட்டும் விட்டீங்க. இல்ல, தன் பிளேட்ல இருந்து ஒரு பருக்கை சாப்பாட்டை கூட கொடுக்க மாட்டான். இவனுக்கு புறாவும் இரையாக கூடாது, அதே நேரம் பருந்தும் பசியாறணும்னு புறாவுடைய எடைக்கு தன் உடலை அரிந்து பருந்துக்கு இரையாக தந்த சிபி சக்கரவர்த்தி பேரை வச்சிருக்காங்கனு சொல்லிருப்பீங்க” முகத்தை இறுக்கமாக வைத்து கொண்டு சிபி கூறினான்.

அதில் பயந்துவிட்ட அபர் “இல்ல சிபி.. சாரி, எப்பவும் போல பேசிட்டேன். ஆனா நீங்க இல்லைனாலும் நான் உங்கள பத்தி உயர்வா தான் பேசுவேன்” என்று வேகமாக மறுத்தாள்.

அவளது முகத்தில் தெரிந்த பயத்தை கண்டு சத்தமாக சிரித்த சிபி “உங்க கூட விளையாடினேன் அண்ணி. அம்மா நல்லவங்க தான். கொஞ்சம் இல்ல ரொம்பவே அவங்க சொல்றது போல தான் நடக்கணும்னு நினைப்பாங்க. அப்புறம் நம்ம கட்டப்பா. அவர் உண்மையிலேயே ஜெம். பொண்டாட்டி பேச்ச கேக்கறதுல தப்பில்லயே. நான் நம்பறேன், அப்பா எப்பவும் தப்பான விஷயத்துக்கு துணை போகமாட்டார். சரினு படறதுக்கு குரலும் கொடுப்பார். அதுக்கு சான்று எங்க கல்யாணம் தான். அசோக் தான் கொஞ்சம் மாறணும். இன்னும் அம்மா சொல்றதையே கேட்டுட்டு இருக்கான்” அவர்கள் வீட்டின் நிறை குறைகளை எந்த ஒளிவு மறைவும் இன்றி சொல்லியவன், அண்ணன் இன்னும் சரியாகவே அண்ணியை நடத்தி இருக்கலாம் என்றே தோன்றவே,

“உங்க அன்பு அவனை மாத்தும். நான் உங்களுக்கும் தம்பி தான். இதுல உங்களுக்கு என்ன ஹெல்ப் வேணும்னாலும் அத பண்ண தயாரா இருக்கேன். நான் மட்டும் இல்ல, ராசியும் உங்க கூட இருப்பா” என்று அண்ணிக்கு ஆதரவாய் பேசியவன்

“உனக்கும் தான் ராசி. நம்ப குடும்பம் எதாவது தப்பு பண்ணாலோ, இல்ல நான் அவங்க கூட சேர்ந்து தப்பு பண்ணாலோ, தட்டி கேளு. திருத்திப்பேன். பொறுத்து போய்டலாம்னு மட்டும் இருக்காத” என்று மனைவிக்கும் நல்ல கணவன் என்பதை நிரூபித்தான்.

இவ்வாறே அவர்களது வீடு வந்துவிட, வீட்டு வாசலில் குழந்தையோடு இறங்கிய அபர்ணா மணமக்களை அங்கேயே நிற்க சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.

அபர்ணாவிற்கு தெரிந்தவரை தெய்வா வீட்டில் தான் இருக்கிறார். ஆனால் அறையை விட்டு வெளியே வரவில்லை. வாசலில் கணவது காரையும் கண்டாள். அவனும் கீழிறங்கி வராமல் தங்களறையிலேயே இருக்கிறான் என்பது புரிந்தது.

இதில் வயதில் மூத்தவர் என்று தான் பெயர், பானுமதி அம்மாவும் வெளியே வரவில்லை. என்ன மனுசியோ என்று எரிச்சலாக இருந்தது.

முதல் வேலையாக உறங்கிக் கொண்டிருந்த மகனை கீழிருந்த ஓர் அறையில் படுக்க வைத்துவிட்டு, பார்வதி அம்மாவின் உதவியோடு ஆரத்தி கரைத்து எடுத்து வந்தாள்.

தெய்வநாயகியை மீறி அந்த வீட்டில் யாரும் எதுவும் செய்யமாட்டார்கள். காலை திருமணத்திற்கு கிளம்பும் போதே பூபதி தான் சிபியும் அன்புவும் வீட்டிற்கு வந்தால், யாரும் எந்த பிரச்சனையும் செய்யாமல் அவர்களை வீட்டிற்குள் விடவேண்டும் என்று சொல்லியிருந்தார்.

பார்வதியிடமும் வயதில் மூத்தவராக முன் நின்று பார்த்துக் கொள்ள சொல்லியிருந்தார். அதனாலே அவரும் அபர்ணாவுடன் இணைந்து அனைத்தும் செய்தார்.

திருமணம் முடிந்து அலுவலகத்திற்கு சென்ற போது அங்கிருந்த அஷோக்கிடமும், தெய்வா மனதுடைந்து இருப்பார். அதனால் இன்று வீட்டிலிருந்தே வேலை பார்க்க சொன்னார். அதோடு திருமணம் சென்று வரும் அபர்ணாவிடமும் எந்த சச்சரவும் வைத்து கொள்ளக் கூடாது என்றும் அழுத்தமாக வலிவுறுத்தி இருந்தார்.

ஆரத்தி எடுத்து மணமக்களை உள்ளே அழைத்து சென்று பூஜை அறையில் விளக்கேற்ற சொன்னதில் ஆரம்பித்து புதுமண தம்பதிகள் செய்ய வேண்டிய அனைத்து சம்பிரதாயங்களையும் அபர்ணாவும் பார்வதியும் அவர்களை செய்ய வைத்தனர்.

மணமக்களை அவர்களது அறை அல்லாது வேறொரு அறையில் ஓய்வெடுக்க சொல்ல, சிபியும் தன் மனைவியோடு அந்த அறைக்குள் நுழையவும் தன்னறையிலிருந்து வெளியே வந்தான் அசோக்.

தம்பியின் திருமணத்தை காணததில் அவனுக்கும் வருத்தம் தான். அதிலும் அவனை பட்டுடையில் கண்டதில் சிறிது நேரம் அங்கேயே தேங்கி நின்றான் அசோக்.

அதே நேரம் அவனருகில் நின்றிருந்த அன்புவை பார்க்க பார்க்க, இவனுக்கு என்ன விதி இப்படியொரு திருமணத்தை செய்துக் கொள்ள என்று கோபம் மேலும் வலுப்பட மீண்டும் உள்ளே செல்ல போனான்.

“அட இரு ப்ரோ. எங்க ஓடறீங்க” சிபி குரல் கொடுக்கவும் அவனை முறைத்துக் கொண்டு அசோக் திரும்ப

“அசோக், இந்த நாளை உன் காலெண்டர்ல குறிச்சி வச்சிக்கோ.. இன்னைக்கு நான் வா வா கூப்பிட்டும் நீ என் கல்யாணத்துக்கு வராம இருந்துட்ட. ஒரு நாள் நீயாவே உன் கல்யாணத்தை பார்க்க ஆசையா இருக்குடா. வீடியோவாச்சும் காட்டுடானு என்கிட்ட கெஞ்சல..” என்று தன் வலக்காலை தூக்கி தொடையை தட்டி, “என் பேரு அண்ணாமலை.. ச்சே.. சிபி இல்லடா” அதுவரை கைக்கட்டி கேட்டிருந்தவன், பேசி முடித்தாகிவிட்டதா என்பதாய் புருவம் உயர்த்திவிட்டு மீண்டும் உள்ளே போக

“ம்ச்.. இருடா” என்றவன் ஒரு கையில் அண்ணனை பிடித்து நிறுத்தி, மறுகையால் மனைவியின் கரம் பிடித்திழுத்து, அவளோடு சேர்ந்து அண்ணனின் காலில் விழுந்தான்.

இதை சற்றும் எதிர்பார்த்திராத அசோக் “டேய் என்னடா பண்ற.. எழுந்திரு” என்று பதற

“நீ என் அண்ணன் தானே, ஆசீர்வாதம் பண்ணு” தலையை மட்டும் உயர்த்தி சிபி சொன்னான்.

“நல்லா இருங்க” தம்பிக்காக சொல்லவில்லை.. தப்பிப்பதற்காகவும் சொல்லவில்லை. அவன் தம்பி அவனுக்கு நன்றாக வாழவேண்டும். அதற்காக இருவரையும் வாழ்த்தினான்.

மனமகிழ்ந்து எழுந்த சிபி “ச்சே தெரிஞ்சிருந்தா காலையிலேயே கால்ல விழுந்து கல்யாணத்துக்கு கூப்பிட்டிருப்பேனே” என்று யோசிப்பது போல் சொல்ல, அவனை முறைத்த அசோக்

“அம்மா இன்னும் கோபமா தான் இருக்காங்க” என்று பாதி சொல்லி நிறுத்த..

“சரி பண்றேன், எல்லாத்தையும் சரி பண்றேன்” என்று உறுதியளித்த சிபி.. “அப்புறம் அண்ணி பாவம். எங்க கல்யாணத்துக்கு வந்ததுக்கு நீ அவங்க மேல கோபப்பட கூடாது” என்றும் கேட்டுக் கொண்டான்.

காலையில் இருந்து மாமியார் இல்லாத குறையே தெரியாத அளவிற்கு அந்த வீட்டின் மூத்த மருமகளாக பம்பரமாய் சுழன்ற அபர்ணா, அவர்களது முதல் தனிமைக்கான அறையை தயார் செய்ததோடு, அன்பரசியையும் தயார் செய்து உள்ளே அனுப்பிய பின்னே ஓய்ந்தாள்.

அசோக், சிபி இருவரது அறையுமே இரண்டு அறைகளாக பிரிந்து இருக்கும். முன்னே ஓர் சிறிய அறை, அதற்கடுத்து உடைமாற்றும் அறையோடு சேர்ந்து மிக பெரிய படுக்கை அறை.

பொதுவாக வெளியறையில் தான் அமர்ந்து எப்போதும் அலுவலக பணிகளை பார்ப்பான் அசோக். இன்றோ மனம் அயர்ச்சியை காட்ட, கட்டிலில் அமர்ந்து வேலைகளை பார்த்திருந்தான்.

குழந்தையை தூக்கி கொண்டு வெளியறை வரை வந்த அபர்ணா, மகனோடு அங்கேயே தேங்கி நின்றாள்.

அதை கவனியாத அசோக் தன் மடிக்கணினியில் மூழ்கி இருக்க, தொண்டையை செருமி “ம்க்கும்” என்று கணைத்தாள்.

நிமிர்த்து மனைவியை பார்த்தவன், ஒன்றும் பேசாமல் அமைதியாய் இருக்க “இல்ல அச்சு, நீங்க சொல்ல சொல்ல கேட்காம கல்யாணத்துக்கு போய்ட்டேன். நீங்க திரும்ப வீட்டுக்கு வராத தான் சொன்னீங்க. மாமா தான் சிபியையும் அன்புவையும் வீட்டுக்கு கூட்டிட்டு போக சொன்னாரு. இப்போ இந்த ரூமுக்குள்ள வரலாமா இல்லயானு தெரியல.. அதான் இங்கயே நிக்கறேன்” என்று மனசாட்சியே இல்லாமல் நடித்தால் அவளது கணவனும் தான் என்ன செய்வான்.

“நீ கல்யாணத்துக்கு போயிட்டு வந்ததை கூட பொறுத்துக்குவேன். ஆனா இப்போ உள்ள வராம என்னமோ என் வார்த்தைக்கு கட்டு படறவ மாதிரி ஆக்ட் விடறியே, அத தான்டி என்னால தாங்கிக்க முடியல. காலைல இருந்து இந்த வீட்டுல நீ என்னென்ன ஆட்டம் போட்டேனு நானும் பார்த்துக்கிட்டு தான் இருந்தேன்” அவளை ஏற்றம் இறக்கமாக பார்த்து சொன்னான்.

“சும்மா என்னையே குறை சொல்லாதீங்க அச்சு” கணவனை கடிவது போல் அறைக்குள் வந்தவள் “மாமா தான் கிட்ட இருந்து எல்லாம் பண்ண சொன்னார். அத்தை எதுக்கும் வராதப்போ, மூத்த மருமகளா நான் தானே பண்ணனும்” குழந்தையை அவனது தொட்டிலில் படுக்க வைத்துவிட்டு கணவனுக்கு அருகில் அமர்ந்து சொன்னாள்.

“அப்பா சொல்லலைனா நீ எதுவும் செஞ்சிருக்க மாட்ட, இத நான் நம்பணும். சின்ன குழந்தையை திருட்டு கல்யாணத்துக்கு தூக்கிட்டு போறியே. நாளைக்கு என் பையன் அதையே கத்துக்கமாட்டான்?”

“அது எப்படி அச்சு திருட்டு கல்யாணம் ஆகும். அன்புவுடைய அப்பா, அம்மா இருந்தாங்க. மாமாவும் வந்திருந்தாங்க. நீங்களும் அத்தையும் திமிருல வரலனா அது திருட்டு கல்யாணமா” திமிர் என்ற வார்த்தையை மட்டும் தனக்குள்ளேயே விழுங்கி அவள் சொல்ல

“போதும் அபர். வார்த்தைக்கு வார்த்தை பேசாத.. அப்பா, சிபி எல்லாரும் கேட்டுக்கிட்டனால தான் நீ இங்க இருக்க. என் பையன் வளர்ந்ததும் அவனை போர்டிங் ஸ்கூல்ல சேர்த்திடனும். இல்லனா உன்னுடைய கேரக்டரிஸ்டிக்ஸ் தான் அவனுக்கும் வரும்”

“கரெக்ட் அச்சு, சேர்த்திடுங்க. இல்லனா அம்மா செய்யுறது கரெக்ட், தப்புனு கூட பார்க்காம சப்போர்ட் பண்ணுவான்” என்று கணவனை இடித்து சொன்னாள்.

“அபர்ணா” அவள் பெயரை சினத்தில் உச்சரித்தவன், குழந்தை உறங்குவதை நினைவில் கொண்டு கண்களை மூடி தன்னை நிதானித்து “உன்னை ஏன் தான் கல்யாணம் பண்ணேன்னு யோசிக்கிறேன்” என்றுவிட்டு மடிக்கணினியை தூக்கி கொண்டு வெளியறைக்கு சென்றுவிட்டான்.

‘ஓ. இவருக்கு இப்ப தான் தோணுதா. எனக்கெல்லாம் கல்யாணமான ஒரு வாரத்துலயே ஏன் இந்த கல்யாணத்தை பண்ணோம்னு தோண ஆரம்பிச்சிடுச்சு’ என்று விரக்தியாக புன்னகைத்தவள் கண்ணிலிருந்து வழிந்த கண்ணீரை துடைத்து, குழந்தையை தூக்கி கட்டிலில் படுக்க வைத்து அவனை அணைத்தாற்போல் தானும் படுத்துக் கொண்டாள்.

சிபி அவர்கள் அறையில் செய்யப்பட்டிருந்த அலங்காரங்களை பார்த்தப்படி அமர்ந்திருக்க, அன்பரசியும் ஒரு முடிவோடு தான் உள்ளே நுழைந்தாள்.

அதை அறியாத சிபி அவளை தானே எழுந்து சென்று வரவேற்றவன் “நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் ராசி. இத்தனை வருஷமும் இந்த ரூமுக்குள்ளயும் ஒரு பொண்ணு வருவா, அவ கூட இப்படி வாழணும் அப்படி வாழணும்னு கனவெல்லாம் எதுவும் இருந்ததில்ல” என்றவன்

“ஆனா உன்னை லவ் பண்ண ஆரம்பிச்ச நாள்ல இருந்து, உன்னை இந்த ரூம்ல நினைச்சி பார்க்காத நாளே இல்ல. நீயும் நானும் ஒண்ணா ஒரே மஃக்ல காஃபி குடிச்சு நம்ப டேவே ஸ்டார்ட் பண்ற மாதிரி, நான் புல்லப்ஸ் எடுக்கறப்போ நீ என் மேல உட்கார்ந்து உன்னோட சேர்த்து புல்லப்ஸ் எடுக்கிற மாதிரி. டூட்டிக்கு கிளம்பறப்போ என் ஷர்ட் பட்டனை நீ காதலோட போட்டு விடற மாதிரினு நிறைய கனவுகள்” அவன் பேசிக் கொண்டே போக, அவனது அன்பின் ஆழத்தை கண்டவளுக்கு, தான் எடுத்த முடிவு சரியென்றே தோன்றியது.

“அதுவும் இன்னைக்கு உன்னை எப்படி எனக்கே எனக்காகவளா ஆக்கிறதுனு ஒரே டென்ஷன். அதுல ஒரு வாரமா சரியா கூட தூங்கல. இப்போ எல்லாத்துக்கும் சேர்த்து என் தேவதை பெண் என்னோட ரூம்ல” மாட்டேன் மாட்டேனென்று அவளும், முடியாதென்று வீம்பாய் அவன் அம்மாவும் முரண்டு பிடித்ததை எல்லாம் முறியடித்து அவளை மணமுடித்திருக்கிறான். சிபிக்கு தன் உணர்வை சொல்ல வார்த்தைகள் போதவில்லை.

காலையில் திருமணத்திற்கு தயாராகி இருந்ததை விட இப்போது நன்றாகவே தயாராகி இருந்தாள் என்று சொல்வதை விட, அத்தனை அழகாக அபர்ணா தயார் செய்திருக்கிறாள் என்று தான் சொல்லவேண்டும். காலைக்கு இப்போது அன்புவின் முகத்திலும் ஓர் தெளிவும், பொலிவும் தெரிந்தது.

அதிலும் அந்த அறை முழுவதும் இருக்கும் விதவிதமான பூக்களின் மணத்தை விட, அவள் கூந்தல் பூக்களின் மணம் அறை முழுதும் கமழ்ந்து அவனை மொத்தமாக கவிழ்த்தது.

வார்த்தைகளால் வரையறுக்க முடியாத உணர்வுகளோடு அவளை அணு அணுவாய் ரசித்திருந்தவன் தன் நெஞ்சோடு அவளை சேர்த்துவாரி அணைத்துக் கொண்டான்.

தோழியே காதலியானால், அந்த காதலியே மனைவியானால், அதை விட பெரிது வேறென்ன.

“ஐ லவ் யு ராசி.. ஐ லவ் யு” அவளது காதருகில், கழுத்திடுக்கில் முகம் புதைத்து பிதற்றினான்.

வாழ்நாள் முழுவதும் வாழ வேண்டிய வாழ்க்கையை ஒரே நாளில் வாழ்ந்திட முடியுமா.. அந்த உத்வேகத்துடன் தான் அவன் அவளோடு வெகுதூரத்தில் பயணித்து கொண்டிருந்தான். அப்போது வேகத்தடையாய் ஓர் நினைவு தோன்றியது.

ஆம், அன்புவிற்கு இது பிடிக்குமோ என்னவோ என்று தீ சுட்டாற்போல் அவளிடமிருந்து விலகியவன் “ஐ.. ஐ ஆம்.. ஐ ஆம் சாரி ராசி” அவளது முகத்தை கூட பார்க்க முடியாது, அவளிடம் தான் நடந்து கொண்டதற்கு என்ன சொல்வாளோ என்று அஞ்சி மன்னிப்பு கேட்டான்.

அவளோ தான் சொல்ல போவது அவனை எந்தளவு பாதிக்கும் என்பதை உணராமல் “இல்ல சிபி.. எனக்கு.. எனக்கு இதுக்கு ஓகே தான்” என்றவளது பதில் அவனை மின்சாரமாய் தாக்கியது.

முதலில் அவள் சொன்னதை கேட்டு புரியாமல் முகம் சுருக்கியவன், பின் புரிந்தவனாக “அப்போ, நான் உன்னை இதுக்கு தான் கல்யாணம் பண்ணினேன்னு நினைக்கிறியா ராசி” அவளது பதிலுக்கான சரியான கேள்வியை கேட்டான்.

அவள் கண்ணீரோடு தலை குனிய “முன்ன பேசாம கொன்ன, இப்போ பேசி கொல்லலாம்ங்கிற முடிவுல இருக்கியா” என்று சிவந்த கண்களோடு தாடை இறுக கேட்டான்.

“இல்ல சிபி. அது.. அது” அவள் தன்னை நியாயப்படுத்த வார்த்தைகளை தேடி கொண்டிருக்க..

“வேண்டாம் ராசி” என்று அவள் முன் கைநீட்டி தடுத்த சிபி “உன்னுடைய காதலுக்காக கடைசி வரைக்கும் பிரம்மச்சாரியா வேணும்னாலும் இருப்பேனே தவிர, உன்னோட காதல் இல்லாத ஒரு வாழ்க்கையை வாழமாட்டேன்” என்றவன் வேகவேகமாக உடைமாற்றும் அறைக்குள் சென்று இரவு உடைக்கு மாறி வெளியே வந்தவன் கட்டிலில் படுத்து கண்களை மூடிக் கொண்டான்.


உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்.

 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 13

வாழ்க்கை, தீயில் கை வைக்கும் குழந்தை போல் தான். முதல் முறை அஞ்சாது கை வைக்கும். அதுவே ஒரு முறை தீ சுட்டால் அதன் பின் அந்த பக்கம் செல்லவும் பயப்படும்.

அது போன்ற ஓர் நிலையில் தான் அன்புவும் இருந்தாள். முதல் வாழ்க்கையில் சரியாக இருக்குமென்று அனைத்தையும் கண்ணை மூடிக் கொண்டு நம்பினாள்.

அதனாலே திருமண நாள் இரவே அபிஷேக்கின் விருப்பத்திற்கு அவனோடு இணைந்தாள்.

அது தவறாக முடிந்த போது சிறு அடி முன்னெடுத்து வைப்பதற்கும் பயந்தாள். இன்னொருவரை நம்ப பயம், இன்னொரு வாழ்க்கை அமைத்துக் கொள்ள பயம், அந்த வாழ்க்கை நிலைக்குமா என்ற பயம்.. இப்படி பயத்தின் பிடியில் சிக்கி தவித்தவளுக்கு சிபியின் அன்பு அதீத நம்பிக்கையை கொடுப்பதற்கு பதில் அதீத பயத்தையே கொடுத்தது.

ஒருபுறம் இந்த வாழ்க்கையை தக்கவைத்து கொள்ள வேண்டும், மறுபுறம் தனக்காக தன் மொத்த குடும்பத்தையும் எதிர்த்து தன்னை திருமணம் செய்யும் சிபிக்கு நியாயம் செய்ய வேண்டும்.

கழுத்தில் தொங்கிய தாலிக்கும், கணவனென்ற வார்த்தைக்கும் மதிப்பளித்தே அவன் நாடகம் நடத்துக்கிறான் என்றும் தெரியாமல் அபிஷேக்குடன் ஒன்றாய் கலந்த போது, இன்றோ அவன் அன்பிற்கு எதை நிகராய் வைத்துவிட முடியும் என்னும் அளவிற்கு அன்பு காட்டும் சிபியிடம் தன்னை ஒப்புவித்தால் தான் என்ன என்று தான் அன்புவிற்கு தோன்றியது.

தனக்கு பிடிக்காவிட்டாலும் அவனுக்கு விருப்பமென்றால் உடன்படுவது என்ற முடிவோடு தான் அறைக்குள்ளும் நுழைந்தாள்.

அதில் சிபியின் காதல் கீழிறக்க படும் என்பதை மறந்தவளாய் தவறு செய்துவிட்டாள் அன்பு.

இப்போது அவன் கண்மூடி படுத்து உறங்கி விட, அன்பு தான் இரவெல்லாம் உறங்காமல் அவனருகில் அவனையே பார்த்தப்படி அமர்ந்திருந்தாள்.

அப்படியே பொழுதும் விடிந்து விட எழுந்து குளித்து வந்தவள், தவிப்பாய் அவனருகில் வந்தமர்ந்து, தயக்கத்துடனே அவன் தலை வருடி “சிபி” என்று அவனை எழுப்பினாள்.

மனைவியின் குரல் எங்கோ தூரத்தில் கேட்க, கண்களை அழுத்தி அழுத்தி திறந்த சிபி, நேற்றைய விஷயங்கள் நினைவில்லாதவனாய் அவளை பார்த்து புன்னகைக்க, அதை பார்த்த அன்புவிற்கு அழுகை முட்டி கொண்டு வந்தது. “சாரி சிபி.. நான் தப்பா எதுவும் சொல்லல. என்னால உங்களுடைய ஆசை கெட கூடாதுனு தான் பார்த்தேன். அதான் எனக்கு விருப்பமில்லாதப்பவும் உங்களுக்காக சரின்னு சொன்னேன்.. என் முதல் வாழ்க்கைல..” தன் முதல் வாழ்க்கையை பற்றி அவள் பேச வரும் போதே அவளது வாயை பொத்தியவன்,

“அது ஒரு வாழ்க்கையே இல்ல. இனி அத பத்தி பேசாதே. நாம வாழ போற வாழ்க்கை தான் வாழ்க்கை ராசி” என்று தன் விரல் கொண்டு அவளது கண்ணீரை துடைத்தான்.

அப்போதும் அவளது அழுகை நின்றபாடில்லை. விசும்பி கொண்டிருந்தவளது முகத்தை கைகளில் ஏந்தி “என்னை பாரு. நேத்து நீ பேசினப்போ எங்கிருந்தோ ஒரு கோவம் வந்தது உண்மை தான். இப்போ யோசிச்சு பார்த்தா உன்னோட மனநிலையை என்னால புரிஞ்சிக்க முடியுது. ஆனா, எனக்கு என்னோட அன்பை மட்டும் பார்த்து வர கலவி வேண்டாம். உன்னோட அன்பை நான் பார்த்ததுக்கு அப்புறம் உன்னை நான் முழு மனசோட ஆளணும். என்னைக்கு உன் மனசும் சேர்ந்து எனக்கு கிடைக்குமோ, அந்த நாள் வரைக்கும் பிரம்மச்சாரிய விரதத்தை கடைப்பிடிக்கிறதுல எனக்கு எந்த ப்ராப்ளமும் இல்ல” என்று புன்னகை சிந்தினான்.

அன்புவிற்கு அவனது அன்பில் தேகம் சிலிர்த்தது. உடன் கண்ணீரும் பெருகி வந்தது. அவளது கண்ணீரை கண்டவன் “எனக்கு இந்த அழுமூஞ்சி பேபி பிடிக்கல. எங்க சிரி பார்ப்போம்” என்று அன்பு கட்டளையிட, கண்களில் நீர் வழிய அவனை பார்த்து முறுவலித்தாள்.

“தட்ஸ் மை ராசி..” என்றவன் அவளை அணைத்தாற்போல் அவள் தோளை வளைத்து கை போட்டான்.

அவள் அவனை நிமிர்ந்து பார்க்க “இது மட்டும் இல்லனு சொல்லிடாத ராசி. ப்ரண்ட்லி ஹக்ன்னு நினைச்சிக்கோ” என்று தன் பிடியை இறுக்க, கூச்சத்தில் அவன் முகத்தை பார்க்க முடியாது சம்மதம் என்பதாய் தலையை மட்டும் அசைத்தாள்.

“பல தடைகளை தாண்டி நாம கல்யாணம் பண்ணிருக்கோம். எனக்கு நம்மக்குள்ள இந்த மாதிரி சண்டைகள் வர்றதுல விருப்பமில்ல. நம்மளுக்கிடைய ஏற்படுற சின்ன முகத்திருப்பல் கூட அவங்க பேசறதுக்கு ஒரு சான்ஸ்ஸா இருந்திட கூடாது. மத்தபடி இந்த ரூமுக்குள்ள நீ என்னை முட்டி போட சொன்னாலும் செய்யறேன், காலுல விழ சொன்னாலும் விழறேன்” மனைவியிடத்தில் சிறிதும் தானென்ற ஆதிக்கம் இல்லாமல் சொன்னான்.

வழக்கம் போல் இதற்கும் அவள் சரியென்று தலையாட்ட, “அப்போ காலுல விழ வைப்பியா” என்று அதிர்வது போல் பாவனை செய்தவன் “மொத்தமா உங்கிட்டயே விழுந்துட்டேன், காலுல விழறதுல என்ன” என்றான்.

“சரி, இது தான் நீயும் நானும் ஒண்ணா தொடங்குற முதல் நாள். ஒரு காஃபியோட ஆரம்பிப்போமா” என்று குதூகலித்தவன் அங்கிருந்த அலங்காரங்களை காட்டி “நான் இதையெல்லாம் க்ளீன் பண்ணிட்டு குளிச்சிட்டு வந்திடுறேன், அதுக்குள்ள காஃபி போட்டு கொண்டு வரியா ராசி” ஆசையாய் கேட்டான்.

முறுவலோடு அவள் தலையாட்ட “இன்னைக்கு மட்டும் தான் லீவ் எடுத்திருக்கேன். நாளையில இருந்து நீயும் ஆபீஸ் போகணும்ல” என்று கேட்க அதற்கும் ஓர் தலையசைப்பு.

“தலையாட்டி பொம்மை தோத்திடும்” என்று அவள் தலையை பிடித்து தானும் செல்லமாய் ஆட்டி சிரித்தவன் “நேத்து முழுக்க அம்மா வெளியில வரல. குளிச்சி தயாராகிட்டு அவங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்கிக்கலாம்” என்றான்.

அதற்கும் தலையாட்டிவிட்டு அங்கிருந்து நகர “ஹே ராசி, மறந்துராத. ஒரே மஃக்ல” என்று உற்சாகமாக சொன்னான்.

அவனது உற்சாகம் அவளையும் தொற்றி கொள்ள, சிரித்த முகமாக சமையலறைக்குள் நுழைந்தாள் அன்பு.

அங்கே பார்வதி காலை சிற்றுண்டியை தயார் செய்துக் கொண்டிருந்தார். அபர்ணா அவளுக்கும் கணவனுக்கும் சத்து பானம் தயார் செய்துக் கொண்டிருந்தாள்.

அன்பு உள்ளே நுழைவதை பார்த்தவள் “வாங்க ஓரகத்தி. என்ன இந்த பக்கம்” என்று வாயிலுக்கே சென்று அவளை உள்ளே அழைத்து வந்தாள் அபர்ணா.

“அது.. சிபிக்கு காஃபி போடலாம்னு வந்தேன்” என்று தாழ்ந்த குரலில் அவள் தயங்கி சொன்னாள். இதில் எங்கிருந்தோ தெரியவில்லை, வெட்கம் வேறு வந்து தொற்றி கொண்டது.

தோழியின் முகத்தில் தெரிந்த நாணத்தில் மகிழ்ந்து போன அபர் “பார்த்தீங்களா அக்கா, நேத்து வரை மணிக்கணக்கா ஒர்கவுட் பண்ணிட்டு காஃபி, டீ வேணுமானு கேட்டாலும் இல்ல வேண்டாம் சப்பிலிமென்ட் எடுத்துப்பேன்னு சொல்ற என் மச்சினர், இன்னைக்கு காப்பி குடிக்க போறாராம்” என்று ஏற்றி இறக்கி சொல்லி மைத்துனனை நக்கல் செய்ய, அதை கேட்ட பார்வதியும் வாய் பொத்தி சிரித்தார்.

இங்கேயே தொடர்ந்திருந்தால் கேலி செய்துக் கொண்டே இருப்பார்கள், காப்பியை போட்டு கொண்டு இடத்தை காலி செய்வோம் என்று எதுயெது எங்கெங்கு இருக்கிறது என்று கேட்டு கணவனுக்கு காப்பி போட துவங்கினாள் அன்பு.

நறுமணம் வீச காப்பி போட்டு முடித்தவள் அதை அவனது கோப்பையில் ஊற்றி ட்ரேவில் வைத்து எடுத்து கொள்ள, சட்டென ஒரு கை அவள் கையிலிருந்த தட்டை தட்டிவிட, தட்டோடு சேர்ந்து கோப்பையும் கீழே விழுந்து உடைந்து காப்பியெல்லாம் கீழே சிதறியது.

நிமிர்ந்த பார்த்த அன்புவின் முன் கோபமாக நின்றிருந்தார் தெய்வநாயகி. அவர் தான் அன்பரசியின் காப்பியை தட்டிவிட்டிருந்தார். அவள் அவரை கலவரத்தோடு பார்கக, அவளை உக்கிரமாக மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க முறைத்திருந்தார் தெய்வா.

“பார்வதி, இங்க என்ன நடக்குது. இவளை யார் கிச்சன் உள்ள விட்டது” என்று அன்புவை விட்டு பார்வதியிடம் கேட்க

“அது சின்னம்மா சிபி தம்பிக்கு காப்பி போட வந்தாங்கம்மா” என்றவரின் குரல் பயத்தில் பிசறியது.

“யார் சின்னம்மா.. இவளா..” என்றவர் இழிவாக அன்புவை பார்த்துவிட்டு, “இவ சின்னம்மானா..” அபர்ணாவை கை காட்டி “இந்த மகாராணி பெரியம்மாவா. அப்போ நான் யாரு இந்த வீட்டு வேலைக்காரியா. பேசாம நீ வேலையை விட்டு நின்னுடு.. நான் இந்த ரெண்டு மகாராணிகளுக்கும் சேவகம் பண்ணி என் காலத்தை கழிச்சிக்கிறேன்” என்றார்.

“இல்லம்மா. அன்புமா” என்று எதுவோ சொல்ல வர, அவரை மேலே பேசவிடாமல் தடுத்தது தெய்வாவின் அறை.

“என்ன அன்புமா, ஆட்டுக்குட்டி அம்மானு. நேத்து என் இடத்துல இருந்து ஆரத்தி எடுத்துட்டா நீ தெய்வநாயகி ஆகிடுவியா” தெய்வநாயகி உச்சஸ்தானியில் கத்த, பார்வதி கன்னத்தை பிடித்து நின்றிருந்தார்.

பழக்கப்பட்ட அபர்ணாவிற்கே மாமியார் பார்வதியை அடித்ததில் ஒருமாதிரி ஆகிவிட, அவள் எரிச்சலாய் மாமியார் செய்வதை பார்த்திருக்க, முதன்முதலாக தெய்வநாயகியின் ருத்ரதாண்டவத்தை பார்க்கும் அன்புவிற்கு அவளை கேட்காமல் கண்கள் கண்ணீரை உகுத்து கொண்டிருந்தது. அதுவும் அவர் வாங்கும் திட்டு தன்னால் என்ற குற்றவுணர்ச்சி வேறு.

வேலையாளை காய்ச்சியவர் அடுத்து அன்புவின் பக்கம் திரும்பி “ஹேய், நீ முதல்ல வெளியே போ. சமையல்கட்டுங்கிறது பூஜை அறைக்கு சமம். மனசும் உடம்பும் தூய்மையா இருந்தா தான் வீடு நல்லா இருக்கும். போய்யும் போய்யும் நீ உள்ளே நிக்கறீயே” என்று முகத்தை சுளிக்க, அன்புவிற்கு அவரது கூற்றில் உடல் கூசி போனது.

அவரது பார்வையே அன்புவை வெளியே துரத்த, அவளும் அழுதுக் கொண்டே சமையலறை வாயிலுக்கு சென்றுவிட்டாள்.

அடுத்து பார்வதியின் பக்கம் திரும்பியவர் “இந்த கிச்சனை பினாயில் போட்டு அலம்பற” என்று கட்டளையிட்டு, தன் கைபேசியில் யாருக்கோ அழைத்து “ஹலோ தெய்வநாயகி பேசறேன். கிச்சன்ல இருக்கிற க்ரனைட்ட எல்லாம் மாத்தணும். உடனே வந்து பண்ணி கொடுங்க. அப்போ தான் எங்களால கிச்சனை யூஸ் பண்ணமுடியும்” என்றார்.

மேலே செல்ல இருந்த அன்பு, மாமியாரின் வார்த்தைகளில் புழுவாய் தன்னை உணர, அருவருத்து அங்கேயே காலூன்றி நின்றுவிட்டாள்.

பேசிக் கொண்டே ‘வெளியே செல்’ என்று அபர்ணாவையும் கையசைவில் வெளியே விரட்ட, அவளும் மனதில் மாமியாரை வறுத்தெடுத்தாலும் வெளியில் எதுவும் செய்யமுடியாதவளாய் அமைதியாக வெளியே செல்ல, அங்கு அன்பு கலங்கி நின்றிருப்பதை பார்த்து ஆறுதலாய் அவள் தோள் பற்றினாள்.

மேலே குளித்து முடித்து தயாரான சிபி விசிலடித்து கொண்டே தலை வாரி கொண்டிருந்தான். அறை வாசல் வரை வந்துவிட்ட அன்பு, கண்ணீரை துடைத்து, முகத்தையும் இயல்பாக்கி கொண்டு, ஒட்டிவைத்த புன்னகையுடன் உள்ளே வந்தாள்.

தலை கவிழ்ந்து உள்ளே நுழைந்த மனைவியை கண்ணாடியின் வழியே பார்த்தவன் “வந்துட்டியா” என்று திரும்ப, அவள் வெறும் கையோடு வந்ததை பார்த்து “வேர் இஸ் மை காஃபி லவ்” என்று கேட்டான்.

அவள் அவனை திகைத்து பார்க்க “லவ்னு சொல்றேன்னு பார்க்கறீயா. அன்புனா லவ் தானே. அதை தான் சொன்னேன்” அவளது திகைப்பின் பின்னணி அறியாமல் சொல்லி புன்னகைத்தான்.

அன்பு அமைதியாகவே நிற்க “காஃபி எங்கங்க மேடம்” என்று அவளருகில் வர

“அது சிபி.. எனக்கு.. எனக்கு காஃபி போட தெரியாது” என்றாள் சமாளிப்பதாக.

தலை குனிந்திருந்த மனைவியை புதிராய் பார்த்தான் சிபி. அதுவரை அவன் முகத்தை பார்க்காது, நிலத்தை பார்த்து சொல்லியிருந்தவளின் தலையை நிமிர்த்தி, அவளையே ஆராய்வதாக பார்த்தான்.

அறையிலேயே அவள் அழுதுக் கொண்டு தான் இருந்ததால், அவனால் அவளது சிவந்த கண்களை வைத்து வித்தியாசம் காண முடியவில்லை.

ஆனால் முகவாட்டம், அது கீழே சென்றபோது இல்லையே.

வேதனை அப்பிய முகத்தோடு என்னவென்று அவன் கேட்க “நிஜம் சிபி. எனக்கு காஃபி போட தெரியாது. நீங்க கேட்டதும் எனக்கு போட தெரியாதுனே மறந்து கீழ போய்ட்டேன். சாரி” இம்முறை எந்த தடுமாற்றமும் இன்றி அவனிடம் பொய்யுரைத்தவள் அவ்விடம் விட்டு அகல,

அவளது கரத்தை தன் வலிய கரங்களால் பிடித்தவன் “நமக்கிடையே பொய் என்னைக்கும் வரக்கூடாது. என்னனு சொல்லு” என்று அழுத்தி கேட்டான்.

அப்போதும் ஒன்றுமில்லை என்று தலையை மட்டும் ஆட்டிவிட்டு அமைதியாக அவள் தலை கவிழ்ந்து நிற்க, அவளை அழைத்து கொண்டு கீழே வந்தான் சிபி.

கீழே தெய்வா சோபாவில் கால் மேல் கால் போட்டமர்ந்து ஆங்கில நாளிதழ் படித்து கொண்டிருந்தார். அபர்ணா உணவு மேசையில் அமர்ந்து குழந்தைக்கு மட்டும் பால் கலந்து கொண்டிருந்தாள். மற்றவர்களுக்கு தான் மீண்டும் சமையலறை தயாராகி வரும் வரை வெளியே ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ள சொல்லிவிட்டார் தெய்வா.

சமையலறையில் சிதறி கிடந்த பீங்கான் துண்டுகளை ஒன்று விடாமல் அகற்றிய பார்வதி, அடுத்து கீழே சிந்திய காப்பியையும் சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

கீழே வந்தவன் “இங்க என்ன நடக்குது” என்று எந்த விளிப்பும் இல்லாமல் பொதுவாக கேட்க, காதில் விழாதது போல் தெய்வா தன் நாளிதழில் மூழ்கியது போல் இருந்தார்.

பல்லை கடித்தவன், திரும்பி தன் அண்ணியை பார்க்க, ஏற்கனவே செய்ததற்கே மாமியார் என்னென்ன வைத்திருக்கிறார் என்று தெரியாது. இதில் முந்திரி கொட்டை போல் வாயை விட்டு உடம்பை புண்ணாக்கி கொள்ள வேண்டாமென்று என்னை எதுவும் கேட்காதே என்று கண்களாலேயே கெஞ்சினாள்.

பொறுமை போனவன், உள்ளே எட்டி பார்த்து “பார்வதி அக்கா” என்று அழைக்க, அவரும் தயக்கத்துடன் வெளியே வந்தார்.

“அன்பு காஃபி போட கீழ வந்தப்போ என்ன நடந்தது. அவளுக்கு காஃபி போட தெரியாதுன்னு சொல்றா. நீங்க என்னனு கேக்கலையா” என்று அவரை கூர்மையாக பார்த்து கேட்டான்.

அவர் என்ன சொல்வதென பார்வையால் முதலாளி அம்மாவை தொட்டு தொட்டு மீண்டார்.

அப்போது தன் இருக்கையில் இருந்து எழுந்த தெய்வநாயகி “நீ எங்களுக்கு தான் வேலைக்காரி. எல்லாருக்கும் பதில் சொல்லனும்னு இல்ல. பசிக்குது போய் தோட்டத்துல இருக்குற பழங்களை ப்ரஷா பறிச்சிட்டு வா” என்று கட்டளையிட்டார்.

அவரும் சரியென்று தலையாட்டி விட்டு அங்கிருந்து நகர, அவர் செல்வதற்காகவே காத்திருந்தவர் “முதல்ல யாரை கேக்கணும்னு தெரிஞ்சிக்கோ. இவங்களுக்கு எல்லாம் அவ்ளோ தான் தைரியம். நான் தான் இவளை சமையல்கட்டுக்குள்ள வரக்கூடாதுன்னு சொன்னேன். அவ நின்ன சமையல்கட்ட பினாயில் ஊத்தி கழுவவும் சொன்னேன். க்ரனைட் மாத்தவும் ஆளுக்கு சொல்லிருக்கேன். போதுமா விளக்கம்” என்றுவிட்டு எனக்கென்ன பயமா என்று ஆங்காரமாய் நின்றிருந்தார்.

அன்னை சொன்னதை கேட்டவனுக்கு தன் நாடி, நரம்பெல்லாம் கோபத்தில் புடைக்க “அன்பு என் வைஃப். அவளை கிச்சன் உள்ள போக கூடாதுன்னு சொல்றதுக்கு உங்களுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு மா” என்று பற்களை கடித்தான்.

“இது என் வீடுங்கிற ரைட்ஸ் போதும்”

“ஹா ஹா உங்க வீடா. இது தாத்தா வீடு. அங்க நீங்க இருக்கீங்க, அப்பா இருக்கார், நாங்களும் இருக்கோம். இனி என் வைஃப்பும் இருப்பா. தாத்தா சொத்துல மகன்னு அப்பாவுக்கு என்ன உரிமை இருக்கோ, அதேமாதிரி அவரோட மகன்னு எனக்கும் உரிமை இருக்கு. வேணும்னா நான் உங்க பையன் இல்லைனு கோட்டுல போய் நிருபீங்க. அப்போ சமையல்கட்டு என்ன, இந்த வீட்டுல கூட எங்க கால் படாது” என்று திமிராய் அவருக்கு பதில் கொடுத்தான்.

“சிபி..” மகன் பேசியதில் அவருக்கு கண்மூடி தனமான கோபம் வர, அவனை அடிக்க கைகள் பரபரத்த போதிலும் தன் செல்ல மகன் என்று அடக்கி, அவன் பெயரை மட்டும் உரக்க அழைத்து எரிச்சரித்தார்.

அதேநேரம் உடற்பயிற்சி கூடத்தில் இருந்த அசோக் “என்ன பேச்சு இது சிபி” என்று கேட்டுக் கொண்டே கீழறங்கி வந்தான்.

அருகிலிருக்கும் கடற்கரைக்கு பூபதி கேசவன் நடைபயிற்சிக்கு சென்றிருக்க, நிலைமை கையை மீறி சென்றுக் கொண்டிருப்பதை கண்ட அபர்ணா தான் கணவனை ஓடி சென்று அழைத்து வந்தாள்.

“அவ யாரு என் வைஃப். அவளுக்கு இந்த வீட்ல உரிமையில்லையா. அவ காஃபி போட வந்தா, என்னமோ சமையல்கட்ட கழுவ சொல்லி இருக்காங்க, ஃப்ளோரிங்கயும் மாத்த போறாங்களாம். அப்படி என்னடா அவ குறைவு”

“அதுக்காக நீ அம்மாவை பார்த்து அப்படியொரு வார்த்தை சொல்லுவியா. அவங்கள எதிர்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்திருக்க. அந்த கோவத்துல ஒண்ணு ரெண்டு வார்த்தை தடிக்க தான் செய்யும். பொறுத்து போறத விட்டுட்டு பதிலுக்கு நீ என்ன பேசற”

“ரொம்ப நல்லவன்டா அசோக் நீ. இவங்க எப்படி இந்த வீட்டுக்கு மருமகளா வந்தாங்களோ, அப்படி தான் அண்ணியும் வந்திருக்காங்க, என் பொண்டாட்டியும் வந்திருக்கா. இவங்க உரிமை தந்து யாரும் வாழவேண்டிய நிலை இல்ல” கொதி நிலையில் பேசினான்.

“என்ன, என்னையும் இந்த ஒண்ணுமில்லாதவளையும் கம்பேர் பண்றியா.. எத்தனை விலை கொடுத்து வாங்கினாலும் செருப்பை காலுல தான் போட முடியும். கீரிடம் தான் தலைக்கு ஏறும்” என்று கர்வமாய் மகனுக்கு பதில் கொடுத்தார்.

“நீங்க கீரிடமாவே இருங்க.. ஆனா அந்த கீரிடத்துக்கே மதிப்பை கொடுக்குற அரிய வைரம் என் ராசி. இதுக்கு மேல நீங்களே சொன்னாலும் நாங்க இந்த கிச்சனுக்குள்ள காலெடுத்து வைக்க மாட்டோம்” என்றவன், தந்தையை நினைவில் கொண்டவனாய் “அதுக்குன்னு வீட்டை விட்டு போய்டுவேன்னு நினைக்காதீங்க. இனி நாங்க இந்த வீட்டுலயே தனி குடுத்தனம் செய்ய போறோம்” என்றுவிட்டு மனைவியை கையோடு அழைத்து கொண்டு மேலே தங்களறைக்கு சென்றுவிட்டான்.


உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்.
 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 14

நேத்து தான் சிபி அன்னையிடம் சண்டையிட்டது போல் இருந்தது, அதற்குள் அவர்கள் தனி குடித்தனம் வந்து மூன்று மாதங்கள் ஆகிறது.

அன்று தெய்வாவிடம் தன் முடிவை சொல்லிவிட்டு மேலே வந்த சிபி, அவர்களது அறையையே புதிதாக காட்டி “இது தான் நம்ப ஒன் ஆர்கே வீடு” என்று புன்னகைத்தவன், அவளை அவர்களுக்கே அவர்களுக்கான புது உலகத்திற்குள் கைகோர்த்து அழைத்து சென்றான்.

இன்றே முதல் முறையாக அறையை பார்ப்பவன் போல் தங்களது புது வீட்டை சுற்றி கண்களை சுழலவிட்டவன் “அட.. ராசி, நம்ப வீட்டிற்கு பால்கனி கூட இருக்கு” என்று குதூகலித்தான்.

அவன் மிகவும் இயல்பாக இருந்தான். இவன் தான் கீழே அன்னையிடம் சத்தமிட்டு விட்டு வந்தான் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். அந்தளவிற்கு முகம் மலர்ந்து அவளிடம் பேசிக் கொண்டிருந்தான்.

அன்பு தான் வேதனையில் தவித்தாள். தன்னால் ஒரு குடும்பம் பிரிந்துவிட கூடாதென்ற குற்றவுணர்வில் அவள் எதுவோ சொல்ல வாய் திறக்க “நீ என்னை நம்பி வந்திருக்க. உன்னோட தன்மானத்துக்கு ஒரு இழுக்கு வர்றத நான் என்னைக்கும் அனுமதிக்க மாட்டேன். கிளம்பு கிளம்பு, வெளியில சாப்பிட்டுட்டு ஷாப்பிங் போயிட்டு வரலாம்” முதலில் இறுக்கமாக பதிலளித்தவன் பின் தன்னை இயல்பாக்கி கொண்டு உற்சாமாக சொன்னான்.

அவளோ எதற்கு என்பதாய் விழி சுருக்க “நாளைக்கு நாம ஆபீஸ் போயிடுவோம். அதுக்கு முன்னாடி கிச்சனுக்கு தேவையான அப்ளையன்ஸை அண்ட் கிராசரிஸ் வாங்கிட்டு வந்து பாலை காய்ச்சிடலாம்” என்றவன்,

“அவங்க வேணும்னா இருக்கிற கல்லையெல்லாம் பேத்து எடுத்திட்டு, வேற வச்சி சமைச்சிக்கிட்டும். நாம இன்னையிலிருந்தே நம்ம வீட்டுல சமைக்கிறோம். உன் சமையலோட வாசம் இந்த வீட்டோட மூலை முடுக்கெல்லாம் போய் இருக்குற எல்லாருக்கும் ஸ்டெமக் பர்ன் ஆகணும்” என்று மனைவியை வெளியே அழைத்து சென்றான்.

அசோக்கிற்கு அன்னை அன்புவிடம் நடந்துக் கொண்டது தவறென்று புரிய தான் செய்தது. அதேநேரம் சிபி பேசியதும் சரியில்லை என்றே எண்ணினான். தெய்வா இல்லை, இக்காலத்தில் பிறந்த தனக்கே தன் முதல் திருமணத்தில் தோல்விவுற்றிருக்கும் ஒரு பெண்ணை அவன் மணமுடிப்பதில் விருப்பம் இல்லாத போது, தெய்வா அவனை பெற்றவர். அவர் தன் ஆற்றாமையை வெளிப்படுத்தும் போது தம்பி பொறுத்து போனால் தான் என்ன என்றே நினைத்தான்.

பானுமதி அம்மாவோ திருமணம் நிகழும் இறுதி நிமிடம் வரை தெய்வநாயகி எதையாவது செய்து திருமணத்தை நிறுத்திவிடுவார் என்றே நம்பியிருந்தார். எப்போது அது நடக்காமல் போனதோ, அப்போதே தன் முந்தைய குரோதத்தையும் மனதில் கொண்டு தெய்வாவின் குடும்பம் பற்றி எரிவதை திருப்தியாக பார்க்க தொடங்கினார்.

இதில் பூபதி கேசவன் தான் வீட்டிற்கு வந்ததும் மனைவியின் செயலை அறிந்து முதல் முறையாக அவர் மீது கோபம் கொண்டார்.

நமக்கு பிடிக்காவிட்டாலும், மகனுக்கு பிடித்திருக்கிறது. அப்போது அதை பெரிது படுத்தாமல் இருக்கலாமே. அதைவிட்டு அவனை சீண்டி எதற்கு பிரச்சனையை உண்டாக்க வேண்டும் என்று நடுநிலையாக யோசித்தவர், அதை மனைவியிடம் கேட்கவும் செய்தார்.

“நான் ஏன் இப்படி பண்றேன்னு உங்களுக்கு தெரியாதா. அவமானப்பட்டிருக்கேன்ங்க. வாழ்க்கை முழுக்க என்னை விட்டு போகாத கரை அது. அது அவனுக்கும் வேணுமா. நாளைக்கு அவ மூலமா ஒரு வாரிசு வந்தா, என் பேரனையோ, பேத்தியையோ என்ன சொல்லுவாங்க” என்று பதிலுக்கு ஆவேசப்பட்டார் தெய்வா.

அதை கேட்டவருக்கு மனைவியின் மனதும் நன்றாகவே புரிய, அதற்கு மேல் அவரால் எதுவும் பேச முடியவில்லை. அமைதியாக அங்கிருந்து சென்றுவிட்டார்.

அடுத்து மகனிடமும் பேசி பார்த்தார். அவன் “என் பொண்டாட்டிய அம்மா இந்த வீட்டுல ஒருத்தியா நடத்துவாங்கனா, நான் இப்பவே நம்ப வீட்டோட சேர்ந்திடுறேன்” என்றான்.

அப்படியொரு உத்திரவாதத்தை அவரால் கொடுக்க முடியாதென்பதை நன்கு அறிந்தவர், ஆவது ஆகட்டும், அனைத்தும் தெய்வம்(தெய்வா) விட்ட வழியென்று அமைதியாக நகர்ந்துவிட்டார்.

கீழே தெய்வா கணவன் பேசிவிட்டு சென்றதில் கனன்று கொண்டிருந்தார். அவரால் எப்படி தன் மகன் இன்னொருத்திக்கு இரண்டாவது கணவனாக இருப்பதை ஏற்று கொள்ள முடிந்தது. அதனால் அவன் பட போகும் அவமானத்தை மகன் அறியாமல் இருக்கலாம். ஆனால், தன் கடந்த காலத்தை நன்கு அறிந்த கணவர் எப்படி அறியாமல் போனார்.

ஆம், தெய்வா மனதில் இன்றும் ஆறாத ரணமாக இருப்பது, எதிலும் முதன்மை பெறவே விரும்பும் அவர், அவரது தந்தையின் இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர் என்பதாயிற்றே.

தெய்வாவின் அம்மா வசுமதிக்கு, பானுமதி என்ற ஓர் அக்காவுடன் சேர்த்து கனகவதி, திலகவதி, சத்யவதி, சுகவதி என்று ஐந்து சகோதரிகள்.

ஆறு மகளையும் எப்படி கரை சேர்ப்பது என்று வசுமதியின் பெற்றோர்கள் வருந்தி கொண்டிருந்த வேளையில் தான், அவர்களது வீட்டுக்கே தூரத்து சொந்தமான நாராயணனின் வரன் வந்தது.

நாராயணனை முதலில் பானுமதிக்கு தான் மணமுடிக்க எண்ணினர். அவரும் பல கனவுகளோடு திருமணத்திற்கு காத்திருந்தார். அப்போது அவர் எதிர்பாராத திருப்பமாக நாராயணன் தன் மகன் லோகநாதனை அழைத்துக் கொண்டு பெண் பார்க்க வந்தார்.

பெற்றோருக்கும் தெரிந்து தான் இச்சம்மந்தம் வந்திருக்கிறது என்பதை அறிந்த பானுமதி, தன்னால் அவரை திருமணம் செய்யவும் முடியாது, அதேநேரம் பெற்றோரையும் எதிர்க்க முடியாது என்று அரளிவிதையை அரைத்து குடிக்க சென்றுவிட்டார்.

அதை சரியான நேரத்தில் கவனித்துவிட்ட வசுமதி, அக்காவை இந்த திருமணத்தில் இருந்து காப்பாற்ற தான் நாராயணனை திருமணம் செய்ய சம்மதம் சொல்ல, ஐந்து வயது சிறுவனான லோகநாதனுக்கும் வசுவை பிடித்துவிட நாராயணனுக்கும் வசுமதிக்கும் திருமணம் நடந்தது. அதேமேடையில் நாராயணனின் செலவிலேயே பானுமதிக்கும் அவரது அத்தை மகனோடு அவர்கள் கேட்ட வரதட்சணை கொடுத்து திருமணம் நடந்தது.

பானுமதிக்கு மட்டுமா, வசுமதியின் உடன்பிறந்த மற்ற சகோதரிகளுக்கும் நாராயணன் தான் செலவு செய்து திருமணத்தை நடத்தி வைத்தார். அவர் அத்தனை பெரிய செல்வந்தர்.

நாராயணன், வசுமதி, லோகநாதன் என்று அவர்களது குடும்பம் நன்றாக தான் இருந்தது.

அப்போது காசி, ராமேஷ்வரம் என்று ஊர் ஊராக சுற்றி புண்ணிய ஸ்தலங்களை தரிசித்து விட்டு வந்த அவரது அம்மா தையல்நாயகி அப்போதே மகனுடன் இருக்க தொடங்கினார்.

அங்கே ஆரம்பித்தது அவர்களது வாழ்வின் கெட்ட நேரம்.

தையல்நாயகிக்கு மகன் வசுமதியை திருமணம் செய்த நாளிலிருந்தே பிடிக்கவில்லை. மூத்தவள் மிராசு வீட்டு பெண், இவளோ பிச்சைக்கார குடும்பத்திலிருந்து வந்தவர் என்று இழிவாக பார்ப்பார்.

அது தெய்வநாயகி பிறந்த போது அவர் மீதும் காட்டினார்.

யாராவது வீட்டிற்கு வந்தால், அவரை தன் பேத்தியென்று கூட யாரிடமும் சொல்லமாட்டார். வீட்டு வேலைக்காரியின் மகள் என்றே சொல்லுவார். வசுமதியையும் நாராயணன் மற்றும் லோகநாதன் இல்லாத நேரத்தில் மிகவும் தாழ்வாக நடத்துவார்.

அதேநேரம் நாராயணன் மகள் மீதும், மனைவி மீதும் கொள்ளை அன்பு வைத்திருந்தார். லோகநாதனை சொல்லவும் வேண்டாம். தெய்வா மீது பாப்பா பாப்பா என்று உயிரே விடுவார். வசுமதியையும் அம்மா என்று தான் அழைப்பார்.

தெய்வநாயகியால் பாட்டி தன் அம்மாவையும் தன்னையும் நடத்தும் விதத்தை அப்பா, அண்ணனிடமும் சொல்ல முடியவில்லை. சொன்னால், பாட்டி அம்மாவை கொன்றுவிடுவேன் என்று பயமுறுத்தி வைத்திருந்தார்.

அந்த வயதில் அவரும் அதை நம்பி பயந்து போனார். அவரது பயம் கரைந்த வயதில் அவரது அம்மாவும் அஸ்தியாக கரைந்து போனார்.

வசுமதியின் மறைவிற்கு பின் மீண்டும் நாராயணன் தன் இரு பிள்ளைகளோடு தனிமரம் ஆனார். அப்போதும் தையல்நாயகியின் அட்டகாசம் குறையவில்லை. பேத்தியை வீட்டு வேலைக்காரியை போல் சமையலறையில் முடக்கி வைக்க எண்ணினார்.

அவையனைத்தையும் தாங்கி கொண்டு, வீட்டு வேலைகளையும் செய்துவிட்டு, பள்ளிக்கு சென்றார் தெய்வா. மாநிலத்தில் முதலாம் மாணவியாகவும் வந்தார்.

அந்த வெற்றி கொடுத்த புகழ், திமிர் வாழ்வில் முதலாவதாக மட்டும் தான் வரவேண்டும் என்ற எண்ணத்தை கொடுத்தது. எண்ணியதை நடத்தி கொள்ளவும் செய்தார்.

தனக்கு முட்டுக்கட்டையாக இருந்த பாட்டியும் மூப்பின் காரணமாக படுக்கையில் விழ, அந்த வீட்டின் ஒரே இராணியாக தெய்வா மாறினார். இன்று வரையும் அப்படி தான் வாழ்கிறார். முதல் என்ற தாரக மந்திரத்தையும் விடாமல் ஜெபித்துக் கொண்டிருக்கிறார்.

தன் கடந்த காலத்தை நினைத்து பார்த்த தெய்வாவிற்கு, தான் மறக்க நினைத்த கசடுகளை நினைவு கூற வைத்த அன்புவின் மீது தான் கோபம் திரும்பியது.

“என் மகனோட வாழ்க்கைல வந்து அவனுக்கு நீங்காத களங்கத்தை உண்டு பண்ணிட்டா” என்று பற்களை நறநறத்தவர் “நான் அவளை மன்னிக்கவும் மாட்டேன், என் மருமகளா ஏத்துக்கவும் மாட்டேன்” என்று சூளுரைத்தும் கொண்டார்.

முன்பகலில் மனைவியோடு வீட்டிற்கு வந்த சிபி வீட்டாட்களின் கண்முன்னேயே தங்களது வீட்டிற்கு தேவையான பொருட்களை ஏந்தி கொண்டு மேலேறினான். உடன் அவன் பொருள் வாங்கிய கடையில் வேலை செய்யும் வாலிபர்களும்.

பெரிதாக ஒன்றுமில்லை. ஏற்கனவே அவனின் அறையில் கட்டில், சோபா, ரிக்லைனர், டிவி, ட்ரெஸ்ஸிங் டேபிள் என்று அனைத்தும் இருந்தது. ஏன், அவனது அறையில் சிறியதாக குளிர்சாதன பெட்டியும் இருந்தது.

அதனால் சமையலுக்கு தேவையான பிற உபகரணங்களும், பால் காய்ச்சி வைத்து சாமி கும்பிட பூஜை அறையும் வேண்டுமென்று அன்பு கேட்டு கொண்டதால், சிறியதாக சாமி மாடமும் வாங்கினர்.

அனைத்தையும் ஆட்களின் உதவியோடு மகன் மேலே எடுத்து செல்வதையும், அவனோடு குடும்பத்தை பிரித்து விட்டு எதுவும் தெரியாதவள் போல் அன்பு செல்வதையும் தான் முறைத்து பார்த்திருந்தார் தெய்வா. உண்மையில் அவள் பயத்துடனும், பெருத்த வேதனையுடனும் செல்கிறாள் என்பது அவருக்கு எப்படி தெரியும்.

உடனே அறைக்குள் சென்று தன் கைப்பையை எடுத்து வந்தவர் இங்கிருக்க பிடிக்காதவராய் வெளியில் செல்ல காரை நோக்கி சென்றார். அவருக்கு பின் பானுமதி அம்மா, தானும் வருகிறேன் என்று உடன் ஏறி கொண்டார்.

இருவரும் பால் காய்ச்சி சாமி கும்பிட்டு, அப்போதைக்கு சாதாரணமாக ஒரு கிச்சடியும் சட்டினியும் செய்து சாப்பிட்டனர். முதல் முறையாக புகுந்த வீட்டில் சமைக்கிறாள் என்பதால் கேசரியும் செய்திருந்தாள் அன்பு.

கேசரியின் மணம் அபர்ணாவின் அறை வரை கமழ்ந்து செல்ல “எங்களை உங்க வீட்டுக்கு கூப்பிட மாட்டிங்களா” என்று மகனோடு அவர்களது அறை வாசலில் மலர்ந்த முகமாக நின்றிருந்தாள் அவள்.

அதன்பின் அன்பு அசைவம் சமைத்தாலோ, இல்லை புதிதாக என்ன சமைத்தாலும், மாமியாரும் கூனி கிழவியும் இல்லையென்பதை உறுதி செய்துக் கொண்டு அபர்ணாவின் மூக்கு இந்த மூன்று மாதங்களாக அவர்களது அறைக்கு வழி காட்டி அழைத்து வந்துவிடுகிறது.

அன்றொரு நாள் அஷோக் அலுவலகத்திற்கு கிளம்பி வெளியே வர, மனைவியின் பின்னால் வந்த சிபி “ஒரு வாய் ராசி, ஒரே ஒரு வாய் டா ராசி” என்று அவளுக்கு கொஞ்சி கொஞ்சி இல்லாமல், கெஞ்சி கெஞ்சி ஊட்டி கொண்டிருந்தான்.

“சிபி, இதுக்கு மேல முடியாது. நான் கிளம்புறேன் ப்ளீஸ்” சொல்லிக் கொண்டே அவள் திரும்ப, அங்கே மூத்தார் நிற்பதை கண்டு பயத்தில் உறைந்துப் போனாள்.

அவளது பார்வை நிலைத்து நின்ற இடத்தை சிபியும் பார்க்க, அங்கே அசோக் நின்றிருப்பதை கண்டவன் சிறிதும் கண்டுகொள்ளாது தோள்களை குலுக்கி கையில் வைத்திருந்த கவளத்தை அவளுக்கு ஊட்டி “பை பொண்டாட்டி, பத்திரமா போயிட்டு வா” என்று அவளை தோளோடு அணைத்து விடுத்தான்.

அன்புவோ கணவன் ஊட்டி அவள் வாங்கியதையோ, அவன் அவளை அணைத்து விடுத்ததையோ கவனத்தில் கொள்ளாதவளாய் விட்டால் போதும் என்று ஓடியே விட்டாள்.

அவளை கீழிறங்கி சென்று வழியனுப்பி விட்டு சிபி மேலே வந்த போதும், அசோக் அங்கிருந்த படிக்கட்டு கைப்பிடியை பிடித்து கொண்டு தம்பிக்காக காத்திருந்தான்.

அண்ணனை கண்டதும் சிபி தயங்கி நிற்க ‘எப்போடா இவ்ளோ கேவலமா இறங்கி போக ஆரம்பிச்ச’ என்பதாய் புருவம் உயர்த்தி தம்பியை மேலிருந்து கீழ் பார்த்தான்.

அது சரியாக சிபியை சென்றடைய “அவளுக்கு இன்னைக்கு ஆபீஸ்ல க்ளையண்ட் விசிட். 9.30 மணிக்கு ஆபீஸ்ல இருக்கணும். இருந்தும் எனக்காக சமைச்சி வச்சிட்டு எதுவும் சாப்பிடாம போறா. எனக்காக பார்த்த என் பொண்டாட்டிக்கு நான் செய்யறதுல என்னடா தப்பு இருக்கு” என்றவன்,

“நமக்காக அப்பா, அம்மா எல்லாரையும் விட்டுட்டு நம்ம வீட்டுக்கு வராங்க. நம்மளோட ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து செய்யறாங்க. அவங்களுடைய தேவை என்ன, சந்தோசம் என்ன, இந்த வீட்டுல அவங்க சந்தோஷமா இருக்காங்களா, நம்ப கூட சந்தோஷமா இருக்காங்களான்னு கூட தெரிஞ்சிக்கலனா நாம என்னடா அசோக் ஹஸ்பெண்ட்” என்று நெற்றி பொட்டில் அடித்தார் போன்று கேட்டுவிட்டு அண்ணனது தோளில் தட்டி கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் சிபி.

அசோக் தான் தம்பி சென்ற பின்னும் அவன் கேட்ட கேள்வியில் அங்கேயே சமைந்து நின்றுவிட்டான். தம்பி எடுத்த பாடம் அந்த அண்ணனுக்கு புரிந்திருக்குமா?

இன்னும் ஒரு மாதம் சென்றிருந்தது. சிபியும் தன் பிரம்மச்சரிய விரதத்தை ஸ்திரமாய் கடை பிடித்திருந்தான். அவனுக்கு இன்னும் பல மாதங்கள், ஏன் வருடங்கள் கடைபிடிக்க சொன்னாலும் அவளுக்காக, அவளது காதலுக்காக காத்திருப்பான்.

அதேநேரம் தினமும் எழுவது, ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்து கொள்வது, ஒன்றாக சமைத்து சாப்பிடுவது, மாலை அவரவரது அலுவலக கதைகளை பகிர்வது, இரவு ஒன்றாக உறங்குவது, நேரம் கிடைத்தால் என்றேனும் வெளியில் செல்வது. திருமணம் அதற்கு இல்லையே. ஏதோ ஒரே அறையில் இருக்கும் நண்பர்களை போல் தான் அவனுக்கு தோன்றியது.

காதல், கூடல், ஊடல் எல்லாம் பிறகு வரட்டும். குறைந்த பட்சம் கணவனென்ற எண்ணமாவது வரவேண்டாமா?

அவளிடம் காதலை சொல்வதற்கு முன் இருந்து அன்புவிற்கும், இப்போது இருக்கும் அன்புவிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. என்ன, முன்பு அவள் அவனது மனைவி கிடையாது, இப்போது சட்டப்படி அவனது மனைவியாக அவன் கட்டிய தாலியை சுமந்து கொண்டு இருக்கிறாள். அவ்வளவே..

தன்னை அவளது கணவனாக உணர வேண்டும், தன் மீது உரிமை எடுத்து பேச வேண்டும், எதற்கும் தான் இருக்கிறேன் என்ற நம்பிக்கை அவளுக்கு வரவேண்டும் என்று எண்ணினான்.

இதுவெல்லாம் அவளுக்காக வரும் என்று இனியும் காத்திருக்காது, பொறுப்பை தன் கையில் எடுத்தான் சிபி. அன்றிரவே அவளிடம் பேசவும் செய்தான்.

“ராசி, உன்னால ஒரு பதினைஞ்சு நாள் லீவு போட முடியுமா” என்று அவன் கேட்க, அவள் எதற்கு என்பதாய் புருவம் சுருக்கினாள்.

“நாம வெளியில போக போறோம். நம்மளோட உலகத்தை எக்ஸ்ப்ளோர் பண்ண போறோம். அது நம்மள நாம புரிஞ்சிக்க உதவி பண்ணும்” என்று அவளுக்கு விளக்கினான்.

அன்பிற்கும் ஒன்றும் அவனோடு ஒன்ற கூடாது என்றெல்லாம் இல்லை. ஒன்ற முடியாமல் தான் தவிக்கிறாள்.

தன்னை அனுதினமும் தாங்கும் கணவனுக்கு தன்னால் நியாயம் செய்ய முடியவில்லையே என்று அவளுக்குள்ளும் குத்தி குடைந்து கொண்டு தான் இருக்கிறது. இருந்தும் அவள் வேண்டாமென்று ஒதுக்கி வைத்தாலும், அவளது முந்தைய வாழ்க்கை அவளை எதையும் செய்யவிடாமல் தடுக்கிறது.

இப்போது சிபி சொன்னதை ஒரு சந்தர்ப்பமாக ஏற்று அவளும் அலுவலகத்தில் விடுப்பு சொல்லிவிட்டாள். அதுவும் மூன்று வார விடுப்பு.

சிபியும் அன்பரசியும் தீவிரமாக தங்களது பயணத்திற்கு தயாராகி கொண்டிருந்தனர். அதுவரையும் தன்னையும் மீறிய ஆர்வத்தில் எங்கே செல்கிறோம், ரயிலிலா, பேருந்திலா, இல்லை விமானத்திலா. எந்த மாதிரியான உடைகளை எடுத்து கொள்வது என்று வழக்கத்திற்கு மாறாக ஓயாமல் கேள்வி கேட்ட அன்புவிற்கு மௌனமே பதிலாக வர ஓய்ந்து போனாள்.

தனக்கு தெரிந்த வரை எடுத்து வைத்து கொள்ளலாம் என்று தேவையாக துணி மணிகளை எடுத்து பெட்டியில் அடுக்கி கொண்டிருந்தாள் அன்பு.

அப்போது இரு பைகளுடன் வந்தவன் “இது நம்ம வழக்கமான ட்ரிப் கிடையாது. நாம பைக்ல ரோடு ட்ரிப் போறோம். அதைவிட முக்கியமான விஷயம் இந்த ட்ரிப் முழுக்க நீயும் நானும் ஹஸ்பெண்ட் அண்ட் வைஃப் கிடையாது. நீயும் நானும் மச்சான், மச்சி தான்.. யெஸ், நாம ப்ரண்ட்ஸ்ஸா தான் இந்த ட்ரிப்பை ஸ்டார்ட் பண்ண போறோம். திரும்ப வரப்போ நான் உன் மனசை ஜெயிச்சு கணவன், மனைவியா திரும்ப வர்றோம்” என்றதும், அவனுக்கு இருக்கும் நம்பிக்கை அவளுக்கு இல்லையோ, திகைத்து விழித்தாள்.

“அப்புறம் எனக்கிந்த யூஸ்வல் அன்பரசி வேண்டாம். என் கூட வைப் பண்ற என்னோட மச்சியா நீ வரணும்” என்றவன் பைகளை அவள் கைகளில் திணித்து பிரித்து பார் என்றான்.

அவளும் அவன் சொல் கேட்டு பிரித்து பார்க்க, ஒரு பையில் இருந்த அனைத்தும் ஜீன்ஸ், டீ-ஷர்ட், ஷர்ட், ஜாக்கெட், ஜெர்கின், கையுறை என இருந்தது. மற்றொரு பையில் அவளுக்கு ஷூ, கண் கண்ணாடி, மழை கோட் என பிற உபகரணங்கள் இருந்தது.

அதை பார்த்து பதறியவள் “சிபி, இத நான் எப்படி போடுவேன்” என்று மறுத்து தலையாட்டினாள்.

“நீ இத தான் போடுற. அண்ட் தாலியை, மெட்டியை மறைச்சிடு. மத்தபடி நெற்றியில், வகுட்டுல பொட்டு வேண்டாம். லூஸ் ஹேரோ, போனி டைலோ உன் இஷ்டம்” என்றுவிட்டு அவளுக்கு ஒரு பயண முதுக்கு பையை கொடுத்துவிட்டு, தானும் தனது பயண பையில் தங்களுக்கு தேவையான பொருட்களை அடுக்கலானான்.

அடுத்தநாள் அதிகாலையிலேயே இருவரும் கிளம்பினர். அன்பு வழக்கத்திற்கு மாறாக ஜீன்ஸும், டெனிம் சட்டையும் அணிந்து, அதற்கு மேல் ஓர் ஜாக்கெட்டும் அணிந்து தயங்கி தயங்கி இறங்கி வந்தாள். அவளது தயக்கத்தை புரிந்தவன் அவளை தன்னோடு கைகோர்த்து வேகமாக அழைத்து செல்ல, அவளது போனி டையிலிட்ட நீண்ட கூந்தல் இங்கும் அங்குமென ஆடியது.

கணவன் கேட்டு கொண்டதால் நெற்றியிலும் வகிட்டலும் அன்பு குங்குமம் வைக்கவில்லை. ஆம், அவனை திருமண செய்த நாளிலிருந்து தனக்கு கிடைத்த வாழ்க்கையை போற்றும் வகையாக நெற்றியிலும், வகிட்டலும் குங்குமம் தான் வைக்கிறாள். இன்று அவன் கேட்டுக் கொண்டதால் நெற்றியில் மட்டும் சின்ன ஒட்டும் பொட்டு.

இருவரது பயணப்பையையும் வண்டியின் இருபக்கம் மாட்டியவன், தானும் ஏறி மனைவியையும் ஏற சொன்னான்.

அவள் ஏறியதும் “கிளம்பலாமா மச்சி” என்று திரும்பி பார்த்து புன்னகை வழிய கேட்டான்.

அவளும் ஆமென்று தலையசைக்க “இத இப்படி சொல்லக்கூடாது மச்சி.. கிளம்பலாம் மச்சான்னு எனெர்ஜிடிக்கா சொல்லு, பைக் பறக்கும்” என்றான் குதூகலமாய்.

அன்புவும் முதலில் தயங்கியவள், பின் தாழ்ந்த குரலில் “கிளம்ப..லாம் மச்..சான்” என்றது தான், ரெடி ஜூட் என்று சிபியின் இரும்பு குதிரை வேகமிட்டு பறந்தது.

கணவரின் வாயிலாக அனைத்து விபரமும் கிடைக்க பெற்ற தெய்வாவிற்கு அவர்கள் செல்வதை பார்த்து தங்களறை பால்கனியிலிருந்து கொண்டு பற்களை கடிப்பதை தவிர வேறு வழியிருக்கவில்லை.

முதலில் இங்கிருந்து சிபி அவளை அழைத்து சென்றது என்னவோ காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு தான். இது என்னடா ரோடு ட்ரிப்க்கு வந்த சோதனை என்று எண்ணிய போதும் அவள் கேட்டுக்கொண்டதால் அழைத்து சென்றான்.

இருவரும் காமாட்சியின் அருளாசியை பெற்று கொண்டு தங்களது பயணத்தை இனிதே தொடங்கினர்.

வழியில் ஆற்காடு பிரியாணி வாங்கி கொடுத்து மனைவியின் வயிற்றை நிரப்பியவன் அடுத்த மூன்றரை மணிநேரத்தில் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் கொண்டு வந்து நிறுத்தினான்.

போகும் வழியிலேயே பாறை மீனையும், ஆற்று மீனையும் கையோடு பிடித்துக் கொண்டவன், அதை அங்கிருப்பவர்களிடம் சமைத்து தர சொல்லிவிட்டு நீர்வீழ்ச்சிக்கு பரிசலில் சென்றார்கள்.

அங்கே அவர்களை போல் ஓர் புதுமண தம்பதி அவர்களுக்கு அறிமுகமானார்கள். அந்த பெண்ணுக்கு திருமணமாகி சிலவாரங்களே இருக்கும் போல். இன்னும் தாலி பிரித்து போடாமல் புது கயிறுடனே இருந்தாள். இவர்களோடு சேர்ந்து அவர்களும் பரிசலில் வந்தனர்.

மாமரத்துக்கடவு பரிசல் துறையில் ஆரம்பித்து மெயின் பால்ஸை பார்த்து விட்டு அங்கிருந்து மணல் மேடு வரையும் பரிசலில் சென்றனர்.

நீர் ஊற்றும் இடத்திற்கு மிக அருகில் செல்லும் போது அந்த பரிசல் ஓட்டுனர் அன்பு அமர்ந்திருக்கும் பக்கமாக பரிசலை அருவியை நோக்கி செலுத்த, நீர்மணி துளிகள் படபடவென அவளின் மீது தெறிக்க, பயத்தில் நடுங்கி கணவனது சட்டைக்குள் புகுந்து கொண்டாள் அன்பு.

அதில் அவனும் அவளை அணைவாய் பிடித்துக் கொண்டான். இதை பார்த்திருந்த அந்த புதுமண தம்பதி ஒருவரை ஒருவர் பார்த்து அர்த்தமாய் சிரித்துக் கொண்டனர்.

ஒருவழியாக பரிசல் சவாரியை முடித்து கொண்டு மேலே வந்தவர்கள் சாப்பிட செல்ல, புதுமண தம்பதியையும் சிபி சாப்பிட உடனழைத்தான்.

நால்வரும் மீனை சூடு பறக்க ருசித்திருந்தனர். அப்போது அன்புவிடம் பேசிக் கொண்டே சாப்பிட்டிருந்தாலும் அவளை ரகசியமாக ஆராய்ந்த அப்பெண், அன்புவின் கழுத்திலும், வகுட்டிலும் தாலியோ, குங்குமமோ இல்லாததை கண்டு “நீங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸா” என்று கேட்டவும் செய்தாள்.

அப்பெண்ணின் கணவரிடம் பேசிக் கொண்டிருந்த சிபியும் அவள் என்ன பதில் சொல்ல போகிகிறாள் என்று காதுகளை ஆர்வமாக அவளது வார்த்தைகளுக்கு கொடுத்துவிட்டு அவரோடு பேசுவது போல் நடிக்க, கணவனை ஓர கண்ணால் பார்த்த அன்பு “நாங்க.. ப்ர.ண்.. ப்ரண்ட்ஸ்” என்றாள்.

மனைவியின் பதிலில் அதுவரை மீனை ரசித்து சாப்பிட்டிருந்த சிபியின் மனம் சில்லு சில்லுலாக உடைந்து போக, ஊன்றி எழுந்ததில் கைகளில் இருந்த மண்ணை தட்டியவன் “கிளம்பலாம் ஜி.. லேட்டாகுது” அவள் பக்கம் பார்வையை திருப்பாது சொன்னான்.

அவர்களும் அவனுக்கு பின்னால் எழ, கணவனது கோபத்தை புரிந்த அன்பரசி தான் நடுநடுங்கி போனாள்.


உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்.
 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 15

அன்பரசியால் அவனை கணவனென்று இயல்பாக சொல்ல முடியவில்லை. இதுவரை கழுத்தில் இருக்கும் தாலியை வைத்தே பார்ப்பவர்கள் இருவரையும் கணவன் மனைவி என்று புரிந்து கொள்வார்கள். இப்போது அதற்கும் வழியில்லாத நிலையில், யாராவது கேட்டால் “இவர் என் கணவர்” என உரிமையாக அவளுக்கு சொல்ல வரவில்லை.

அதோடு அவன் தானே நண்பர்களாக ஊர் சுற்ற போகிறோம் என்று சொன்னான். அதனால் அதையே சொல்லி இப்போது சிபியிடம் வசமாக மாட்டிக் கொண்டாள் அன்பு.

நால்வரும் வண்டி நிறுத்தியிருக்கும் இடத்திற்கு வந்ததும், அப்புதுமண தம்பதியிடம் இவர்கள் இருச்சக்கர வாகனத்தில் வந்திருப்பதாக சொல்லி, தங்கள் சாலை வழி பயணத்தை பற்றியும் சிபி கூறவே “ஓகே ஜி.. பார்த்து போயிட்டு வாங்க. எங்களுக்கு மேட்டூர் தான். மேட்டூர் வந்தா வீட்டுக்கு வரணும்” என்று தன் கைபேசி எண்ணை கொடுத்துவிட்டு இருவரும் விடை பெற்று கிளம்பினர்.

சிபியும் ஒன்றும் பேசாது தன் வண்டியின் அருகே செல்ல “எனக்கு உங்க கோபம் புரியுது சிபி.. என்னால.. எனக்கு சொல்ல வரல” என்று தடுமாறி சொன்னவளின் கண்களிலிருந்து மடைதிறந்த வெள்ளமாய் நீர்மணி துளிகள் சரசரவென கீழே இறங்க, அதை தன் உள்ளங்கையில் பிடித்தவன்..

“ராசி.. எதுக்கு பேபி அழற. நீ சொன்னதும் சுர்னு கோபம் வந்தது என்னவோ உண்மை தான். அப்புறம் பொறுமையா யோசிச்சு பார்த்தா, உன்னால என்னை ஹஸ்பெண்டா பார்க்கவோ, உரிமையா பேசவோ முடியலன்னு என்னாலயும் புரிஞ்சிக்க முடியுது” என்று சொல்லி ஆதூரமாய் அவள் கைகளை அழுத்தி கொடுத்தான்.

பல போராட்டங்களை கடந்து திருமணம் புரிந்தவனை நண்பனென்று சொன்னதில் அவனுக்கும் முதலில் கோபம் கொப்பளித்தது உண்மை தான். அதே நேரம், அன்பரசியின் மனதை அடையும் வழி கண்ணாடி பாலம் என்பதையும் அவன் நன்கு அறிவான். அதுவும் விரிசல் கண்ட பாலம் அது. சிறு அதிர்வும் அந்த பாதையை இல்லாமலே செய்து விடும்.

இப்போதும் மனைவி என்ற ஸ்தானத்தில் இருந்து அவனுக்கு விருந்து படைக்க அவள் தயார் தான். அது காலத்திற்கும் கிடைக்கும் என்பதிலும் அவனுக்கு ஐயமில்லை. ஆனால், அவளை ஒரு சதை பிண்டமாக பார்ப்பதில் அவனுக்கு மனமில்லை. அவள் மனதை வென்று அவளை ஆளவே விரும்பினான். அவளை மிகவும் பொறுமையாகவும் கையாண்டான்.

தனக்கும் சேர்த்து யோசிக்கும் கணவனது தூய அன்பிலும் குற்றவுணர்விலும் அன்பரசியின் கண்கள் கண்ணீரை உகுத்தது.

அவளது கண்ணீரை துடைத்தவன் “அதுக்கு தான் இந்த ட்ரிப்பே.. ட்ரிப் முடிஞ்சி ஊருக்கு போறப்போ அத்தான், பிராண நாதா, பிரபு, ஸ்வாமினு எப்படி உரிமையா கூப்பிடறேனு பாரு” என்று சிரித்தான்.

தன்னை இயல்பிற்கு கொண்டுவர அவன் கேலியை கையிலெடுத்தாலும் தன் மீது அவன் கொண்டுள்ள நம்பிக்கை அவளுக்கு தெளிவாக புரிந்தது. அதில் நெகிழ்ந்து போனவள் இவனுக்காகவாவது தன் உணர்ச்சிகள் மீள கூடாதா என்று ஏக்கம் கொண்டாள்.

ஒகேனக்கலில் இருந்து பெங்களூரு, நந்தி ஹில்ஸ், அங்கிருந்து ஹைதராபாத், அங்கிருந்து நாக்பூர் வழியாக குவாலியர் என்று அவர்களது சாலை வழி பயணம் தொடர்ந்தது.

சிபியின் வண்டி அவன் கைகளில் காற்றை கிழித்துக் கொண்டு பறக்க, வழியில் வரும் மலைத்தொடர்களை ரசிப்பதும், மலையேறுவதும், அருவிகளில் குளித்து மகிழ்வதும், கோட்டைகளையும் அரண்மணைகளையும் பிரம்மிப்பாய் காண்பதும் என ஒவ்வொரு நிமிடத்தையும் இயற்கையோடு பிணைத்து மனைவிக்கு பரிசாக கொடுத்தான் சிபி.

அவனுக்குள்ளும் பலவித உணர்வுகளை அவனவள் கொடுக்க தவறவில்லை. ஆம், அன்பரசி தனக்கே தெரியாமல் அவனோடு ஒன்ற தொடங்கினாள். எப்போதும் அவனது இடையை இறுக பற்றி, முதுகோடு ஒட்டி தன் மூச்சுக்காற்றோடு சேர்த்து அவளது வாசத்தையும் அவனுள் பரப்பினாள்.

சிபி இது போல் பல சாலை வழி பயணங்களை மேற்கொண்டிருக்கிறான். இப்போது பார்த்த இடங்களில் பல அவன் தனியாகவும், நண்பர்களுடனும் கண்டுகளித்தும் இருக்கிறான். அவனை பொறுத்தவரை சுற்றுலாக்கள் என்பது மகிழ்ச்சி. அயர்வை போக்கி புத்துணர்வை கொடுக்கும் ஓர் மார்க்கம்.

இன்றோ வானுக்கும் மண்ணுக்கும் இடையே இருக்கும் அனைத்தும் அவர்களுக்கே சொந்தமென தோன்றியது. இந்த பயணம் முடியாது நீண்டு கொண்டே இருக்க ஆசை கொண்டான்.

பயணம் தொடங்கி பதினோரு நாட்கள் ஆனது. இருசக்கர வாகனத்திலேயே தெற்கிலிருந்து இந்தியாவின் வட திசைக்கு வந்துவிட்டார்கள்.

அன்புவிற்கு கியர் வண்டியெல்லாம் ஓட்ட தெரியாது. அதனால் சிபி தனி ஆளாகவே வண்டியை ஓட்டினான். அதிகாலையிலேயே பயணத்தை தொடங்கிவிடுபவர்கள் இரவு பத்து மணிக்குள் ஏதாவது ஓர் நல்ல விடுதியில் அறை எடுத்து தங்கிவிடுவர்.

சிபி மட்டும் தனியாக செல்லும் போது பெரும்பாலும் டென்ட் அமைத்து தங்கி கொள்வான். இப்போது மனைவியை உடன்வைத்து கொண்டு, அவளது பாதுகாப்பு முக்கியமாயிற்றே. அதனால் எப்போதும் விடுதி அல்லது தனி வீடு தான். அதுவும் நல்ல மதிப்பீடும், விமர்சங்களும் இருக்கும் இடத்தையே தேர்வு செய்வான்.

தான் ஒற்றை ஆளாக வண்டியை இயக்குவதில் சிபிக்கு எந்த ஒரு பிரச்சனையும் இருக்கவில்லை. தெரிந்து தானே இப்பயணத்தை ஏற்பாடு செய்தான். சிரமம் பார்க்காமல் முழுமனதோடே வண்டியை ஓட்டினான்.

ஆனால், அன்பிற்கு தான் பெருத்த மனவேதனையாக இருந்தது.

இப்படியே வண்டி ஓட்டினால் உடம்பு என்னவாகும் என்று கவலை கொண்டவள் தினமும் இரவில் அவன் கேட்காமலே அவன் தோள்பட்டையில் தொடங்கி கெண்டை கால் வரை ஏறி மிதித்து விடுவாள்.

தன் உடல் வலியை புரிந்து மருந்து தரும் தாயாகவும், வெண்பஞ்சு பாதங்களால் அவன் மீது ஏறி நின்று எங்கே விழுந்து விடுவோமா என்ற பயத்தோடு அவன் மீது நடைபயலும் சேயாகவும் இருக்கும் தன்னவளின் பாசத்தில் உருகி போனான் சிபி.

உடல் வலியை சொல்லாமல் புரிந்து கொள்பவள் மனவலியையும் புரிந்து மனைவி ஆகமாட்டாளா என்று ஏக்கமும் கொண்டான்.

அப்படியே ஆக்ரா வந்தாயிற்று. ஆக்ரா வந்து காதல் சின்னத்தை பார்க்காமல் செல்வது முறையல்லவே. தூய அன்பின் பிரதிபிம்பமாக பளிங்கு கற்களில் யமுனை நதிக்கரையோரம் மிளிர்ந்த தாஜ்மஹாலை பார்த்து மெய்மறந்து நின்றாள் அன்பரசி.

இருவரும் அங்கேயே சிறிது நேரத்தை செலவழிக்க “ராசி, எனக்கு ஒரு ஆசை” என்று அவன் சொல்ல, அதேநேரம் சற்று தொலைவில் ஒருவர் இதழை இன்னொருவர் உறிஞ்சிய படி தங்களை மறந்து இதழ் யுத்தத்தில் திளைத்திருந்த காதல் ஜோடியை, அவர்கள் கேட்டுக் கொண்டதின் படி அந்த புகைப்பதிவாளரும் தன் கருவியில் பதிவு செய்துக் கொண்டிருந்தார்.

மனைவியின் திகைத்த பார்வை சென்ற திசையை கண்ட சிபி “இல்லல்ல.. அப்படியெல்லாம் இல்ல. ஆனா இங்க ஒரு போட்டோ வேணும்” என்றுரைத்தான்.

அவள் வேறெப்படி என்று யோசிக்கும் நேரத்தில், அவளை புகைப்படம் எடுத்து கொடுப்பவரிடம் அழைத்து சென்றவன் தங்களையும் ஓர் புகைப்படம் எடுத்து தருமாறு ஹிந்தியில் சொல்லி, எப்படியென்றும் அவருக்கு விளக்கினான்.

அவன் பேசியது புரியாது அன்பரசி விழித்து நிற்க, அவளை அங்கிருந்த அமரும் மேடையில் ஸ்டைலாக அமர்த்தி, அவள் போட்டிருந்த ஆம்ரெல்லா வடிவான முட்டிக்கு கீழிருக்கும் கவுனையும் அழகாக சரி செய்துவிட்டு, முகத்தை புகைப்பதிவாளரின் பக்கம் திருப்பி, அவளை சிரிக்கவும் சொல்லி இதழ்களை லேசாக விரித்து காண்பித்தான்.

அன்பிற்கு தான் சிரிப்பு வருவேனா என்றிருந்தது.

அது சிபியின் செயலாலோ, இல்லை அவனது அருகாமையாலோ நேர்ந்தது இல்லை. இப்படி அவளை அமர்த்திவிட்டு அவன் புகைப்பதிவாளர் அருகில் நின்று திரையில் அவள் எப்படியிருக்கிறாள் என்று பார்த்திருந்தால், அவளால் எப்படி இன்பம் கொள்ளமுடியும்.

அவள் பார்த்தது போல் அதீத நெருக்கம் கொண்டு எடுக்காவிட்டாலும், இருவரும் அருகருகே நின்றோ, அமர்ந்தோ புகைப்படம் எடுத்துக் கொள்ள அவள் மனமும் துடிக்க தானே செய்தது. தன்னவன் இப்படி சொதப்பினால் அவள் முகம் வாடாமல் என்ன செய்யும்.

திரையில் அவளை பார்த்தவன், அவளது உம்மென்ற முகத்தை கண்டு “சிரி ராசி.. அப்போ தான் நம்ப போட்டோ நல்லா வரும்” என்றான்.

‘என்ன சொன்னான் இவன்’ என்று அவள் சுதாரிப்பதற்குள், அவளருகில் இருந்த சிறு இடத்தில் அவளை உரசி அமர்ந்தவன், அவளது வயிற்று பகுதியில் கைவைத்து அவளை தன் மீது சாய்த்துக் கொண்டான்.

அவன் தொடுகையில் கூச்சத்தில் குறுகுறுத்தாலும், அவளது மனம் மகிழ்ச்சியில் நிரம்ப தவறவில்லை. அவள் நெளிவது அவனுக்கு நடுங்குவது போல் இருக்க, தன் கரம் கொண்டு வயிற்றில் மேலும் அழுத்தம் கொடுத்த சிபி, அவள் முகத்தருகே நெருங்கி தன் மூச்சுகாற்று அவள் முகத்தில் விழ வசீகரமாக புன்னைகைத்தான்.

அப்போது அன்புவும் ‘இது என்னடா அவஸ்த்தை’ என்று நாணத்தில் முகம் சிவக்க, அதை அழகாக பதிந்துக் கொண்டார் புகைப்பதிவாளர்.

ஆக்ராவிலிருந்து ஹரித்துவார் சென்றார்கள். அங்கிருந்து ரிஷிகேஷ்.

சிபி என்னவோ ரிஷிகேஷ் செல்ல ஆசைப்பட்டது ரிவர் ராஃப்டிங் செய்ய தான். ஆனால் அன்புவோ, தனக்கு ஹரித்துவார் பார்க்க வேண்டும் என்று ஆசை என்று சொல்லவும், இத்தனை உரிமையாக கேட்பதே பெரிது என்று எண்ணியவன், ஹரித்துவாரின் சலசலவென பாய்த்தோடும் நீரோடையாவது அவள் மனதின் துன்பத்தை தங்கு தடையின்றி அடித்து செல்லட்டும் என்று உடனே அழைத்து சென்றுவிட்டான்.

ஹரித்துவாரில் கங்கை ஆற்றின் பூஜையை பார்த்ததோடு, அங்கே இருவரும் ஒன்றாக விளக்கேற்றி தண்ணீரிலும் விட, அந்த தீபம் அவர்களது வாழ்க்கையை பறைசாற்றும் விதமாக ஒளியை ஏந்திக் கொண்டு வெகு தூரம் சென்றது.

எங்கே சென்றாலும் கோவில்களை எதிர்நோக்கும் அன்னைகளை போல் ரிஷிகேஷில் கங்கா ஆரத்தி, ராம, லஷ்மண பாலம், கோவில்கள் என்று ஆன்மீக சுற்றுலாவாகவே மாற்றவிருந்த தன்னவளுக்கு பாதுகாப்பு கவசம் அணிவித்து அவளை நதியில் சறுக்குப்படகு பயணம் செய்ய வைத்தே ஓய்ந்தான் சிபி.

அவர்களது பயணத்தில் இன்னும் ஒரு வாரமே மிஞ்சியிருக்க, ஏற்கனவே திட்டமிட்ட படி இருவரும் மணாலி பயணப்பட்டனர்.

பனி நிறைந்த மலை மாகாணமாகிய இமாச்சல பிரதேச மாநிலத்தின் எல்லைக்குள் நுழைந்து அந்த நீண்ட நெடிய சாலையில் பயணித்துக் கொண்டிருந்தனர் சிபியும் அன்பரசியும். நேரம் பின்மாலையை நெருங்கி கொண்டிருந்தது. டிசம்பர் மாதம் என்பதால் உறைந்து போகும் அளவிற்கு குளிர் அவர்களை தீண்டி திணறடித்தது.

அன்பரசியோ விட்டால் சிபிக்குள்ளேயே புதைந்து போவாள் என்னும் அளவிற்கு அவனது வயிற்றை சுற்றி கைகளை வளைத்து அவன் முதுகில் அட்டை போல் ஒட்டிக் கொண்டு வந்தாள்.

சிபியும் மனைவியின் தன்னிச்சையான நெருக்கத்தை சுகித்துக் கொண்டே வண்டியை இயக்கி கொண்டிருக்க, அப்போது தொலைவில் ஒரு பெண் வண்டியை டார்ச் வெளிச்சம் கொண்டு சரிசெய்து கொண்டிருந்தாள்.

அவளுக்கு உதவி தேவைப்படுவதை உணர்ந்த சிபி அவளுக்கருகே வண்டியை நிறுத்தினான். அவளோ செல்லும் படி கையசைக்க அவளை விசித்திரமாக பார்த்தவன், மறுப்பை பொருட்படுத்தாது அவளருகில் சென்று “மேம், ஐ கேன் ஹெல்ப் யு” என்றான்.

அப்பெண்ணோ “ஐ செட் ஐ டோன்’ட் நீட் யுவர் ஹெல்ப். யு மே கோ” என்று முகத்தில் அடித்தாற் போன்று பேசினாள். இன்று பெண்கள் இருக்கும் நிலையில் நன்மனதுடன் உதவ வருபவர்களையும் சந்தேகித்து தான் ஆகவேண்டும்.

அப்போதும் சிபி பொறுமையாக “மேம், ஐ டூ ஹேவ் எ ஃபீமேல் வித் மீ. ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட் யுவர் ஃபியர். ப்ளீஸ் அலோ மீ. ஐ ஆம் சிபி சக்கிரவர்த்தி, லோகா பைலட் இன் சதர்ன் ரயில்வேஸ்” தன் அடையாள அட்டையை எடுத்து காட்டினான்.

அதோடு அவளது அனுமதிக்கும் காத்திருக்காது வண்டியை பார்வையிட்டான். சாலை வழி பயணத்திற்கு கிளம்பும் போதே வழியில் ஏற்படும் இன்னல்களுக்கு தயாராக தான் வந்திருந்தான் சிபி. தன்னிடம் இருந்த டூல்ஸ் பெட்டியை எடுத்து அவளது வண்டியை ஆராய தொடங்கினான்.

அன்புவிற்கு அவன் தன் பெயரையும், உத்யோகத்தையும் சொன்ன விதத்தில் அவர்களது முதல் சந்திப்பும், நடுசாமத்தில் ஆளில்லாத சாலையில் அவள் தனியாக நின்ற போது அவன் உதவியதும் நினைவில் வந்தது.

அன்றிரவு சிபி தன் கைபேசியில் எடுத்த அவர்களது செல்ஃபியை திருமணமான புதிதில் சமூக வலைதளம் ஒன்றில் பதிவிட்டு, தங்கள் திருமணத்தின் முதல் மாதத்தை கொண்டாடினான். அப்போது அதை ரகசியமாய் தான் கைபேசியில் சேமித்து கொண்டாள் அன்பு. இப்போது கைபேசியை எடுத்து அப்படத்தை பார்த்தாள்.

அதில் சிபி துறுதுறுப்பாக இருப்பான். புகைப்படம் எடுக்கின்றான் என்பதை உணர்ந்து அவளது முகம் அதிர்ச்சியை காண்பிப்பதற்குள் அவன் எடுத்துவிட்டிருந்ததால் அன்பரசியும் அழகாக தான் இருந்தாள்.

இருவரது ஜோடி பொருத்தத்தையும் அன்பரசி கண்கொட்டாது பார்த்து ரசித்திருக்க, “யூ ஆர் ரெடி டூ கோ மேம்” வண்டியை சரி செய்தவன் அதை ஸ்டார்ட் செய்து பார்த்துவிட்டு, அவளிடம் வண்டியை ஒப்படைத்துவிட்டு தன் வண்டி நோக்கி போனான்.

அன்புவும் நிஜத்திற்கு வந்தவள் அவன் பின்னால் போனாள்.

அப்போது அப்பெண் “தேங்க் யு சோ மச் சிபி” என்று அவன் முன் கை நீட்டினாள். பதிலுக்கு சிபியும் கை கொடுக்க “நான் மஹதி. கராத்தேல பிளாக் பெல்ட் ஹோல்டர். இருந்தும் தனியா பயணம் செய்யற ஒரு பெண்ணா யாரையும் நம்பறதில்ல. எனிவேஸ், உங்க உதவிக்கு நன்றி” என்று பிசிறில்லாத ஆங்கிலத்தில் சொன்னாள்.

சிறு தலையசைப்பை மட்டும் சிபி கொடுக்க, அருகிலிருந்த அன்பரசியை ஆராய்ச்சி பார்வை பார்த்தவள் “நீங்க கப்பில்ஸா. ஹனிமூனுக்கு மணாலி போறீங்களா” என்றும் கேட்டாள்.

இப்போது அன்பு அவனை கணவனென்று சொல்ல தயாராக தான் இருந்தாள். அவள் வாய் திறப்பதற்குள் “இல்ல, நாங்க நண்பர்கள்” என்று பதிலளித்தான் சிபி. அதில் அன்பு குற்றவுணர்வில் துடித்தாள்.

சிபி நண்பர்கள் என்றதும், அவர்களை மஹதி பார்த்த பார்வையில் பெருமையா, பொறாமையா, இல்லை பெரும்நிம்மதியா என்று அவனால் கணிக்க முடியவில்லை. அன்பு தான் கணவன் சொன்னதில் வேதனையில் உழன்றுக் கொண்டிருந்தாளே. அவள் மஹதியின் பார்வையை கவனிக்கவே இல்லை.

“பை தி வே, நானும் மணாலி தான் போறேன்” என்றாள் மஹதி.

அதற்கும் சரியென்று புன்னைகைத்த படி தலையாட்டிய சிபி அங்கிருந்து கிளம்பும் முடிவை எடுத்தான்.

மஹதி எப்படி புதியவன் என்று சிபியை பார்த்து பயந்தாலோ, அது போல் தானே மஹதியும் சிபிக்கு. அதுவும் ஒரு பெண்ணை உடன் வைத்து கொண்டு இருக்க, அவன் ஒவ்வொரு விசயத்திலும் கவனமாகவே இருந்தான்.

சிபி அவளிடமிருந்து விடைபெற்று நகர, எந்தவித விகல்பமும் தோன்றாத அன்பு தான் “சிபி, நாமளும் மணாலி தானே போறோம். அவங்க தனியா இருக்காங்க, நம்ப கூட கூப்பிட்டுக்கலாமே” என்று அவன் காதை கடித்தாள். ஒரு பெண் மனம் இன்னொரு பெண்ணை தனியாக விட்டு செல்ல இடம் கொடுக்கவில்லை.

அதை கேட்ட சிபி, ராசி என்று சொல்ல வந்து, மஹதி இருப்பதை நினைவில் கொண்டு “மச்சி, அவங்க தனியா இருக்காங்கனு உனக்கு எப்படி தெரியும். மே பி, அவங்க ப்ரண்ட்ஸ் பின்னாடி ஜாயின் பண்ணிக்கலாம்” என்றான்.

அன்பு பேசியது கேட்கவில்லை, ஆனால் சிபி பேசியது தெளிவாக மஹதியின் காதில் விழ “ஹே, நீங்க தமிழா” என்று குதூகலித்தாள்.

அவள் குரலுக்கு இருவரும் திரும்ப “நானும் தமிழ் தான். ஆனா வீட்டுல ஹிந்தி தான் பேசுவோம்” என்றவள் அவர்கள் விசித்திரம் என்று புருவம் வளைப்பதை புரிந்து “பேரண்ட்ஸ் லவ் மேரேஜ். அம்மா நார்த். அப்பா தமிழ். டெல்லில வேற செட்டில்ட். அதான் தமிழும் கொஞ்சம் கொஞ்சமா போச்சு. நான் சென்னையில தான் காலேஜ் படிச்சேன். அப்போ தான் தமிழ் கத்துகிட்டேன்” என்று நீண்ட விளக்கம் தந்தாள்.

சிறிது நேரத்திற்கு முன் தன் உதவியை ஏற்பதற்கும் தயங்கிய பெண்ணா இப்போது தன் குடும்ப வரலாற்றையே சொல்லிக் கொண்டிருக்கிறாள் என்று சிபி அவளை ஆச்சரியமாக பார்த்தான்.

இது தான் மொழி பற்றோ. ஒரு ஊரில் இருக்கும் வரை அடித்து கொள்வோம். ஆனால், எங்கோ நம் மொழி பேசுபவரை கண்டால் அண்ணன், தம்பி என்று பாசத்தை பொழிவோம்.

மீண்டும் மஹதியே “நீங்க ப்ரண்ட்ஸ் தானே. இஃப் யூ டோன்ட் மைன், நானும் உங்க கூட ஜாயின் பண்ணிக்கலாமா” என்று கேட்க, சிபியாலும் ஒரு பெண்ணை தனியாக விட மனமில்லாமல் “யெஸ் ப்ளீஸ்” என்றான்.

இரண்டு வாகனமும் சீறி கொண்டு சென்றது. மஹதி நன்றாகவே வண்டியை இயக்கினாள். சிபியும் அவளது வேகத்திற்கு ஏற்ப, தன் வேகத்தை சற்று குறைத்தான். அடுத்த நான்கைந்து மணிநேரத்தில் மூவரும் மணாலியை வந்தடைந்தனர்.

இடையில் இரு இடங்களில் நிறுத்தி டீயும், சிற்றுண்டியும் சாப்பிட்டனர். இந்த பயணத்தில் மஹதியின் மீது சிபிக்கு தொன்னூறு சதவிகிதம் சந்தேகம் கலைந்திருந்தது. மஹதிக்கும் அப்படி தான் போலும். இருவரிடமும் பேசிக் கொண்டே இருந்தாள்.

அன்பரசி திரும்ப பேசியிருந்தால் அவளோடு ஒன்றியிருப்பாளோ என்னவோ.

அவள் எதற்கும் தலையை மட்டும் ஆட்டி வைக்க, சிபியுடன் நெருக்கமாகி போனாள். அவளுக்கு என்ன தெரியும் அவள் கணவனிடமே அப்படி தான் பேசுவாள் என்று.

சிபி முன்பே ஓர் தங்கும் விடுதியை ஏற்பாடு செய்திருந்தான். அந்த விடுதி அவர்களுக்கென பிரத்யேகமான ஓர் தனி வீடு. ஏனோ, ஒரு வயது பெண்ணை எப்படியோ போ என்று சொல்ல அவனுக்கு மனம் வரவில்லை. மஹதியையும் அவர்களுடன் தங்க அழைக்க, அவள் தான் பதிவு செய்து வைத்திருந்த அறையை கான்செல் செய்துவிட்டு அவர்களுடன் தங்கி கொள்ள முடிவு செய்தாள்.

அந்த வீட்டில் ஓர் வரவேற்பறை, சமையலறை, இரு அறைகள் என்று இருந்தது. அதோடு பின்புறம் நீச்சல்குளமும், சுடரொளிக் களியாட்டத்திற்கு இடமும் இருந்தது. மொட்டை மாடியிலும் புல் தரையில் அமர்ந்து அளவளாவும் படி மேல் கூரையும் போட்டு ஊஞ்சலும் இருந்தது.

சிபி ஓர் அறையை நோக்கியும், மஹதி இன்னொரு அறை நோக்கியும் செல்ல, அன்பு சிபியை பின் தொடர்ந்தாள்.

அதை கண்ட மஹதி “ஹேய் அன்பு, எங்க போறீங்க. நாம கேர்ல்ஸ் ஒரு ரூம்ல தங்கிக்கலாம். மச்சான் தனியா இருந்துப்பான்” என்றாள்.

அன்புவிற்கு மொத்தம் இரண்டு அதிர்ச்சி. தன்னை கணவன் அறைக்கு போகக்கூடாது என்று சொன்னது ஒன்றென்றால், இன்னொன்று தன்னவனை வேறொருத்தி உரிமையாய் மச்சான் என்று அழைத்தது.

உண்மையில் மஹதி எந்தவொரு விகல்பமும் இல்லாது, சிபியும் அன்புவும் ஒருவரை ஒருவர் மச்சான், மச்சி என்று அழைப்பதை பார்த்து அவளும் அப்படி அழைத்தாள்.

ஆனால் அன்புவிற்கு கோபம் தலைக்கேறியது. இவள் யார் என் கணவன் அறைக்குள் என்னை போக வேண்டாமென்று சொல்வது என்று காளி அவதாரம் எடுத்து சிபியை முறைத்து நின்றாள்.

அவனோ இவையனைத்தும் நீயாய் தேடி கொண்டது என்பதாய் அவளை பார்த்து நின்றான்.

சரி தானே, அவனிடம் உரிமை எடுக்காதிருந்தது யார் தவறு? இல்லை, மஹதியை தங்களுடன் அழைத்தது யார்? இப்படி ஒரு சிக்கல் இருப்பதை அவள் முன்பே அறிந்திருக்க வேண்டாமா?

கணவன் பக்கமிருக்கும் நியாயத்தை எல்லாம் அறியும் நிலையில் அன்பு இல்லை. விழிகள் வெளியே பிதுங்க அவனை முறைத்து விட்டு, மஹதிக்கு என ஒதுக்கப்பட்ட அறைக்குள் சென்று புகுந்து கொண்டாள்.

அவன் தன்னவன், தனக்கு மட்டுமே சொந்தமானவன் என்ற உரிமை உணர்வு அன்பிற்குள் பிரவாகிக்க தொடங்கிவிட்டதா? அவளுக்குள்ளும் அவன் வந்து விட்டானா?

மஹதியும் அவள் பின்னால் அவனிடம் விடைபெற்று செல்ல, சிபி தான் அங்கேயே தேங்கி நிற்பதாக போயிற்று. இதற்கே இப்படியென்றால் மஹதி அவனிடம் தன் காதலை சொல்லும் நாள், என்ன ஆவாள் அன்பரசி..?


உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 16

முந்தைய நாள் அவர்கள் மணாலியை வந்தடைந்தபோது இரவாகிவிட்டதால் ஆளை உறைய செய்யும் குளிரை உணர்ந்தாலும் அடர் இருட்டில் அதான் ரம்மியமான அழகை காண முடியவில்லை.

அதிகாலையில் எழுந்தவர்கள் மணாலியில் காலநிலைக்கு ஏற்ப உடைகளை அணிந்து தயாரானவர்கள் அருகிலிருக்கும் இடங்களை சுற்றி பார்ப்பதாக முடிவு செய்தனர்.

அதன்படி அவர்களது வண்டியிலேயே ஊர் சுற்ற கிளம்பினர். முதலில் இடும்பி கோவிலுக்கும், வசிஷ்டர் கோவிலுக்கும் போனார்கள். வசிஷ்டர் கோவிலுக்கு அருகில் ஓர் குளமிருக்க. அங்கிருக்கும் நீர் அடியிலிருந்து வரும் போதே சூடாக வரும். மணாலியிலிருக்கும் குளிருக்கு அந்த நீர் இதம் தந்தனவோ.

அங்கிருந்து கிளப் ஹவுஸ், மியூசியம், இயற்கை காட்சிகள் என்று பொழுதை கழித்தவர்கள், மாலை மார்க்கெட்டிற்கு சென்று ஷாப்பிங் செய்தார்களோ என்னவோ கண்கள் பனிக்க சுற்றி பார்த்து நேரத்தை செலவழித்தனர்.

என்ன தான் அங்கு உணவு கிடைத்தாலும், இவர்களே சமைத்து சாப்பிடும் முடிவை எடுத்ததோடு, மார்க்கெட்டில் இருந்து வரும் போதே தேவையான காய்கறிகளையும் பழங்களையும் கையோடு பிடித்துக் கொண்டு வந்துவிட்டனர்.

அன்பரசி சமையலறையில் சமைத்து கொண்டிருக்க, அதுவரை அவளுக்கு சமையலில் உதவி செய்து கொண்டிருந்த சிபியும் மஹதியும் உணவு மேசையில் வந்தமர்ந்து அளவளாவி கொண்டிருந்தனர்.

“மச்சான் உன் கான்ஃபிடென்ஸ் எனக்கு பிடிச்சிருக்கு. அதுவும் புதுசா பார்த்த ஆண்கிட்ட நான் தைரியசாலின்னு காட்டிக்க, கராத்தேல ப்ளாக் பெல்ட்னு சொன்னியே.. அங்க நிக்கற மச்சான் நீ” என்று சிபி மஹதியை புகழ்ந்து கொண்டிருக்க, சப்பாத்தியோடு சேர்ந்து தானும் கருகினாள் அன்பு.

“நான் மச்சி. இவ மட்டும் மச்சானா. இவ வந்ததுல இருந்து இந்த சிபி ஓவரா தான் பண்றாங்க. எப்ப பாரு மச்சான், மாஹினு” சப்பாத்தி கட்டையால் அவனை இரண்டு போடும் கோபமிருந்தாலும் அதை செயல்படுத்தாது தனக்குள்ளேயே கறுவி கொண்டிருந்தாள்.

வெளியே சிபியோ “அதேநேரம் தைரியம் இருக்குறதுல தப்பில்ல. ஆனா அசட்டு தைரியம் எப்பவும் நம்மள ஆபத்துல சிக்க வச்சிடும். உன் ப்ரண்ட்ஸ் தான் லாஸ்ட் டைம்ல வரலன்னு சொல்லிட்டாங்கல, அப்புறம் எதுக்கு நீ மட்டும் தனியா கிளம்பி வந்த. இது எவ்ளோ பெரிய ரிஸ்க் தெரியுமா” தோழியை உரிமையாக கடிந்தும் கொண்டிருந்தான்.

“பின்ன என்ன மச்சான். நான் அவங்க கூட பைக்ல பின்னாடி உட்கார்ந்துட்டு வருவேன்னு நினைச்சிருக்கானுங்க. நானும் அவங்க கூட பைக் ஓட்டிட்டு வரேன்னு சொன்னதும் என்னால அவங்க ஸ்பீட்க்கு கம்பீட் பண்ண முடியாதாம். ட்ரிப்பையே கான்செல் பண்ணிட்டாங்க. நான் விடுவேனா, நீங்க கான்செல் பண்ண அதே ட்ரிப்க்கு நான் தனியா போய் காட்டறேன்னு கிளம்பி வந்துட்டேன்” டெல்லியில் வளர்ந்தாலும் தான் வீர தமிழச்சி என்பதை நிரூபித்து கொண்டிருந்தாள் மஹதி.

சிபி அவளை பெருமையாக பார்த்திருக்க “ஆனா நீ அப்படி இல்லடா. எந்த ஒரு ஈகோவும் இல்லாம எனக்காக ஸ்பீடை குறைச்சு ஓட்டின. தட்ஸ் வை ஐ லைக் யு டா” என்று தன்னிடத்திலிருந்து எழுந்து வந்து அவனை அணைத்துக் கொண்டாள்.

அப்போது ‘டங்’ என்ற ஒலியோடு எதுவோ கீழே விழும் சத்தம் கேட்டவும் இருவரும் திரும்ப, தான் கண்ட காட்சியில் அன்பு தான் எடுத்து வந்த சப்பாத்தியை தட்டோடு கீழே போட்டிருந்தாள்.

“ரா..” என்ற ஆரம்பித்த சிபி, அதை பாதியிலேயே விழுங்கி மஹதியிடமிருந்து தன்னை பிரித்து கொண்டு மனைவியிடம் ஓட, மஹதியும் அவன் பின்னால் சென்றாள்.

அதற்குள் தன்னை நிதானித்து கொண்ட அன்பரசி “ஒன்னுமில்ல.. ஸ்லிப் ஆகிடுமோனு பயந்துட்டேன்” ஒரு மாதிரி குரலில் சொன்னவள் “சாப்பிடலாமா மச்சான்” மச்சானில் அழுத்தம் கொடுத்து கணவனை தன் தீ பார்வையால் சுட்டெரித்தவள் உணவு மேசை நோக்கி நடந்தாள்.

மூவரும் சாப்பிட்டு முடித்து நீச்சல் குளத்திற்கு அருகிலிருந்த இடத்தில் தீ மூட்டி குளிர் காய்ந்து கொண்டிருந்தனர். ஏனோ கேம்ப் பையர் முன்பு சிறிது நேரம் அமர்ந்திருந்த அன்பு, அவளுக்கு அதில் விருப்பம் இல்லாது போகவே அருகிலிருந்த வெது நீர் நீச்சல் குளத்தில் கால்களை விட்டு கொண்டு அமர்ந்திருந்தாள்.

நெருப்பிற்கு நேராக கைகளை நீட்டி எடுத்து கன்னத்தில் வைத்த மஹதி “மச்சான், டூ யு ட்ரின்க்?” என்று சிபியிடம் கேட்டாள்.

“எப்போவாவது அகேஷனலா, ப்ரண்ட்ங்க ஒன்னு கூடினா குடிப்பேன்” சிபியும் பதிலளித்தான்.

“சூப்பர் மச்சான். மார்க்கெட்ல பீர் கேன் வாங்கினேன். இப்போ பிரிட்ஜ்ல தான் இருக்கு. இந்த க்ளைமெட்க்கு செமையா இருக்கும். குடிக்கலாமா” என்று ஆர்வமாக கேட்டாள் மஹதி.

“யாரு சாமி நீ” என்று வியந்து கேட்பது போல் கேட்டவன் திரும்பி சம்மதத்திற்காக மனைவியை பார்த்தான்.

இவர்களது சம்பாஷனங்களை கேட்டிருந்த அன்பரசியும் கணவனை தான் பார்த்திருக்க, சிபியின் பார்வையும் அன்புவின் பார்வையும் ஒன்றோடு ஒன்று கலக்கும் நேரத்தில், அவளையும் உடன் அழைக்கிறான் என்று நினைத்து கொண்ட மஹதி “அட, அவங்கள பார்த்தாலே பழம் மாதிரி தெரியுது. அவங்கள போய் கேட்டுட்டு. வாங்க சிபி நாம ட்ரின்க் பண்ணலாம்” அவனுக்கு பேசவும் நேரம் கொடுக்காமல் சிபி கதையை மனைவியிடம் முடித்து வைத்தாள்.

அதில் அன்புவிற்கு சுர்ரென்று ஆகிவிட, அவள் ஏதாவது சொல்வாள் என்று சிபியும் எதிர்பார்த்திருந்த நேரத்தில் ஒன்றும் பேசாது வெடுக்கென்று தண்ணீரிலிருந்து எழுந்தவள் பற்களை கடித்து கொண்டு அவனை முறைத்து விட்டு உள்ளே சென்றுவிட்டாள்.

சிபியும் அவளை சமாதானம் செய்ய எழ, அவன் கையை பிடித்து நிறுத்திய மஹதி “அவங்க அவங்களோட பாய் ப்ரண்ட்கிட்ட பேச போறாங்க. அதான் சீன் க்ரீயேட் பண்ணிட்டு போனா நமக்கு டவுட் வராதுன்னு அப்படி நடந்துக்கறாங்க” என்று சொல்ல, சிபி கோபத்தில் விழி விரித்தான்.

அவளோ அதிர்ச்சியில் விழி விரிப்பதாக எண்ணி “ஆமா, நானும் நேத்துல இருந்து பார்க்கறேன், எப்பவும் ஃபோனையே பார்த்துட்டு இருக்க வேண்டியது. இத்தனைக்கும் இங்க டவர் கூட சரியா கிடைக்கல. வைஃப்பை தான் யூஸ் பண்ணனும்” என்றும் சொன்னாள்.

கை முஷ்டியை இறுக்கி எதுவும் சொல்லமுடியாத தன் நிலையை நிந்தித்து கொண்டவன் “ப்ளீஸ், தெரியாம எதுவும் சொல்லாத மாஹி” சற்று அழுத்தமாகவே உரைத்தான்.

“சரி, அவங்களுக்கு தூக்கம் வந்திடுச்சு போல, போய்ட்டாங்க. நாம ஆரம்பிக்கலாமா. ஆனா இங்க இல்ல, டெர்ரஸ்ல” என்று உற்சாகமாக கூறினால் மஹதி.

சிபிக்கு தன்னவளின் கோபம் நன்றாக புரிந்தது. ஆனால் அது அவன் மீதிருக்கும் உரிமை உணர்வு என்று எண்ணவில்லை. அவன் மது அருந்துவதற்கான கோபம் என்று நினைத்துவிட்டான். அதோடு நண்பர்கள் என்று சொல்லியாயிற்று. இப்போது என்ன சொல்லி அவளிடம் செல்லமுடியும். அது மஹதிக்கு தேவையில்லாத சந்தேகத்தை உண்டு பண்ணும் என்று “சாரிடி, நேர்ல வந்து பேச முடியல. அளவா தான் குடிப்பேன். ப்ளீஸ் அலோ பண்ணு” என்று ஓர் குறுஞ்செய்தியை மட்டும் அனுப்பி வைத்தான்.

அதற்கு அவள் பதிலளிக்காமல், குறுஞ்செய்திக்கு மட்டும் பெருவிரல் நீட்டும் ஸ்மைலி அனுப்பி ரியாக்ட் செய்யவும் அவனும் அதை சம்மதமாய் ஏற்றான்.

பனி சிந்தும் முகிலிரவில், மொட்டை மாடி புள் தரையில் குளிர் உடம்பிற்குள் ஏற “சியர்ஸ்” என்று பீர் டின்களை முட்டிக் கொண்டு சிபியும் மாஹியும் மதுவருந்த தொடங்கினர்.

கீழே அன்பு தான் இருப்பு கொள்ள முடியாமல் தவித்தாள். கைபேசியை எடுத்து சிபியின் வாட்ஸ்அப் ப்ரொஃபலை திறப்பதும், அவனுக்கு அழைக்கலாமா, வேண்டாமா என்ற யோசனைக்கு பின் மீண்டும் அலைபேசியை எடுத்து தூரம் வைத்துப்பதுமாய் இருந்தாள்.

சிபி கீழே வந்தால் மஹதியும் வந்துவிடுவாள். இன்னும் மஹதி அறைக்கு வரவில்லை என்றால் இருவரும் மேலே தான் இருக்கிறார்கள் என்ற எரிச்சலோடு அறையில் நடைபயின்று கொண்டிருந்தாள்.

மேலே அவள் நினைவிற்குறியவர்களோ..

“கள்ளுர பார்க்கும் பார்வை உள்ளுர பாயுமே
துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே
வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே
பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே..

முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே
என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே
தேனோடை ஓரமே நீராடும் நேரமே
புல்லாங்குழல் தள்ளாடுமே பொன் மேனி கேளாய் ராணி”

பனி பொழியும் இரவு, அதிரடியாய் முத்தமிட்டு செல்லும் பேய்காற்று, மோகத்தை தூண்டும் உடல், இதில் தண்ணீர் வேறு உள்ளே போனதும் தானாக வெளியே வந்தார் இளையராஜா.

“ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீதான்
பூவே காதல் தீவே
மண் மீது சொர்க்கம் வந்து பெண்ணாக ஆனதே
உல்லாச பூமி இங்கு உண்டானதே”

சிபி தன்னவளை எண்ணி உருக, உடன் மஹதியும் சேர்த்து கொள்ள இருவரும் சேர்ந்து கானமிசைத்து கொண்டிருந்தனர்.

வெகுநேரமாகியும் அவர்கள் வரும் அறிகுறியே இல்லாமல் போக, மஹதிக்கு அழைத்தாள் அன்பரசி.

இருவரும் தங்களை மறந்து பாடி கொண்டிருக்கும் வேளையில், தன் அலைபேசி ஆந்தை போல் அலற, எடுத்த பார்த்தால் அன்பரசியின் பெயர் திரையில் தெரிந்தது.

ஓர் இதமான மனநிலை கலைந்துவிட்ட எரிச்சலில் அழைப்பை உயிர்பித்தவள் “அன்பு, தூக்கம் வந்தா தூங்க வேண்டியது தானே. இப்போ எதுக்கு கால் பண்ணி டிஸ்டர்ப் பண்றீங்க. இப்போ தான் எங்களுக்கே மூட் வந்து நல்லா போயிட்டு இருந்தது. இப்படி கெடுத்து விட்டீங்களே” படபடவென பொரிந்தவள் எதிர்முனையில் இருந்தவளது பதிலுக்கும் காத்திருக்காது அழைப்பை துண்டித்திருந்தாள்.

அதை கேட்டிருந்த சிபிக்கு ஏறிய போதையெல்லாம் இறங்கியது. “பத்த வச்சிட்டியே பரட்ட. யாராவது அவன் பொண்டாட்டிகிட்ட போய் எனக்கும் உங்க ஹஸ்பெண்டுக்கும் இப்போ தான் மூட் வந்து நல்லா போயிட்டு இருக்குனு சொல்லுவாங்களா” என்று பதறியவன் அன்பரசிக்கு அழைத்தான்.

முழுதாக மணி அடித்து ஓய்ந்தது. அவள் தான் மஹதி பேசியதும் கோபத்தில் கைபேசியை மெத்தையில் வீசிவிட்டு முகத்தை மூடி அழுது கொண்டிருக்கிறாளே, பின் எப்படி ஏற்பாள்.

மனைவி அழைப்பை ஏற்காத பதட்டத்தில் சிபி இருக்க, அவனது முகத்தை தன் பக்கம் திருப்பிய மஹதி “எப்படி மச்சான் உனக்கு இப்படி ஒரு மூடியான ப்ரண்ட்” என்று ஆயாசமாக வினவ, அவனோ அவளை வெட்டவா, குத்தவா என்று பார்த்தான்.

“அப்படி சொல்லல மச்சான். அதிகம் பேசமாட்றாங்க. எதுலயும் கலந்துக்க மாட்றாங்க. எப்படி உன் கூட ரோட் ட்ரிப் வர சம்மதிச்சாங்கன்னு யோசிக்கிறேன்” என்று விளக்கம் கொடுத்தவள் “பட் ஒன் திங் இஸ் ஃபார் ஸ்யூர். அவங்களுக்கு கண்டிப்பா ஆள் இருக்கு” என்றாள்.

அவளுக்கு என்ன தெரியும், அன்பினால் சிபிக்கு அழைக்கவும் முடியாமல், அதேநேரம் அவனை விட்டு தள்ளியிருக்கவும் முடியாமல் கணவனுக்கு அழைப்பதா, வேண்டாமா என்று கைபேசியை வைத்து பட்டிமன்றம் நடத்தி கொண்டிருந்தாள் என்று. அவளுக்கு வந்த அழைப்பும் கணவனுக்கு செல்ல வேண்டியது தான் என்றும்.

அவள் புரிந்து கொள்ளவில்லை என்றால் என்ன. உற்றவன் புரிந்து கொண்டானே.

“நீ என்கிட்ட நெருங்கி வர வரைக்கும் இது போல ப்ராப்ளம்ஸை நாம பேஸ் பண்ணிக்கிட்டு தான் இருக்க போறோம் ராசி” தனக்குள்ளேயே அவளிடம் சொல்லிக் கொண்டான்.

இரண்டாம் நாள் காலை சுற்றி பார்க்க போகும் இடங்கள் சற்று தூரமாக இருந்ததால், அவர்களது வண்டியை எடுக்காமல், ஓட்டுனரோடு வாடகை மகிழுந்தை ஏற்பாடு செய்து கொண்டார்கள். அதோடு அவர்களே ஒரு பேக்கேஜாக இவர்களை எங்கெங்கு அழைத்து செல்ல வேண்டும், அங்கு தேவைபடும் உபகரணங்கள் என்று அனைத்தையும் ஏற்பாடு செய்து விடுவார்கள்.

மணாலியை சுற்றி பார்க்க சரியான நேரம் என்றால் அது மார்ச் மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம். இவர்களோ குளிரும், பனி பொழிவும் அதிமாக இருக்கும் டிசம்பர் மாதத்தில் சென்றிருந்ததால் செல்லும் வழியெங்கும் பனி மூடிய சாலைகளே அவர்களை வரவேற்றது. சிறிது நேரம் நிறுத்திவிட்டு சென்றால் வாகனத்தை கூட பனிகள் மூடிவிடும்.

வெள்ளை பனி பூக்கள் பூத்து குலுங்கும் மரங்களும், பனியை முத்தங்கியாய் அணிந்திருக்கும் மலைகளையும் பார்க்க கண்கள் கோடி வேண்டும். இயற்கையின் ஓவியத்திற்கு முன் அனைத்து மனித ஓவியமும் பின்னுக்கு தான் என்னும் அளவிற்கு மணாலி ஓர் அழகோவியமாய் காட்சி தந்தது.

ரோதங் கணவாய், இது குலு பள்ளத்தாக்கையும் லாஹௌல் மற்றும் ஸ்பிடி பள்ளத்தாக்கையும் இணைக்கும் ஒரு கணவாய் ஆகும். இந்த கணவாய் மே முதல் நவம்பர் வரை திறந்திருக்கும். இப்போதோ டிசம்பர் என்பதால் அதற்கு முன்னாள் இருக்கும் குலாபா ஸ்னோ பாயிண்ட் வரை வண்டியில் அழைத்து சென்றார்கள்.

அங்கே குழந்தைகளை போல் பனியில் சறுக்கி கொண்டு வந்தும், உருண்டு விளையாடியும், கையில் அள்ளி மாறி மாறி மற்றவர் மீது வீசியும் விளையாடினார்கள்.

அங்கிருந்து சோலாங் வேலிக்கு சென்றவர்கள் ரோப் காரின் மூலம் மிகவும் உயரமான இடத்திற்கு சென்றனர். அங்கேயோ பனி ஒரு ஆள் உயரத்திற்கு நிரம்பி இருந்தது.

அங்கே தான் ஸ்கையிங், ஸ்லைடிங் என அனைத்து பனி சறுக்கு விளையாட்டுகளும் இருந்தன. சிபி ஏற்கனவே இங்கு வந்த போது ஸ்கையிங் செய்ய முறையான பயிற்சி எடுத்திருந்தான். அதனால் ஆரம்பித்தால் துடுப்பை பிடித்து கொண்டு காட்டாறு வெள்ளம் போல் நிற்காது சறுக்கி கொண்டு சென்றான். மஹதியும் ஓரிரு முறை வந்த அனுபவத்தை வைத்து மெதுவாக ஸ்கையிங் செய்தாள். அன்பு தான் தமால் தமால் என்று விழுந்து வைத்தாள்.

அதன்பின் சிபி அவளுக்கு சொல்லி கொடுத்ததோடு உடனிருந்து அவளை வழி நடத்த, அவனை பற்றுகோளாய் வைத்து அவளும் முயற்சி செய்து ஓரளவு சிறப்பாகவே செய்தாள்.

அடுத்து ஸ்லைடிங் செய்த போதும், மஹதி கேட்டதற்கு எதையோ சொல்லி சமாளித்து மனைவியை தன்னுடனே வைத்து கொண்டான் சிபி. மஹதி தனியாக பனியில் வழுக்கி கொண்டு வர, சிபியும் அன்புவும் ஒன்றாக அமர்ந்து சறுக்கி கொண்டு வந்தனர்.

பின் ஹம்டா கணவாய்க்கும் சென்று கண்டுகளித்து ஒரு வழியாக ஊர் சுற்றி முடித்து தங்குமிடத்திற்கு திரும்பினார்கள்.

அன்பு குளிக்க செல்ல, அவளுக்கு முன்னே அவசர அவசரமாக குளித்து முடித்திருந்த மஹதி, அவள் வெளியே வந்த போது சமையலறையில் எதையோ உருட்டி கொண்டிருந்தாள்.

மஹதி அருகில் வந்த அன்பரசி, அவள் வாங்கி வந்த பொட்டலங்களை எல்லாம் பிரித்தெடுத்து தனி தனி பாத்திரத்தில் போட்டு கொண்டிருப்பவளை கண்டு “பசிக்குதா மஹதி. எங்கிட்ட சொல்லிருந்தா சமைச்சிட்டு போய் குளிச்சிருப்பேனே” என்றாள்.

குதூகலமான மனநிலையில் இருந்த மஹதி “நோ அன்பு.. இத நான் தான் தயார் பண்ணனும். இன்பேக்ட் நானே தான் குக் பண்ணிருக்கணும். அது மச்சானுக்கு..” என்று நாக்கை கடித்தவள் “சிபி.. அவருக்கு பிடிக்குமான்னு தெரியல.. அதான் ஒரே ஒரு டிஷ் மட்டும் நான் பண்ணிட்டு, மத்ததை ஆர்டர் பண்ணிட்டேன்” கன்னங்கள் சிவக்க சொன்னாள்.

‘என் கணவனுக்கு இவள் எதற்கு சமைத்து கொண்டிருக்கிறாள். இதில் வெட்கம் வேறு’ பற்களை கடித்து கொண்டு அன்பு நின்றிருக்க, அனைத்தையும் உணவு மேசையில் கொண்டு வைத்த மஹதி அவளிடம் வந்து “அன்பு எனக்கு ஆல் தி பெஸ்ட் சொல்லுங்க. நான் சிபிக்கு ப்ரொபோஸ் பண்ண போறேன்” பட்டு தெறித்தார் போல் விசயத்தை சொல்லி முறுவலித்தாள்.

அதில் கண்கள் கலங்கிவிட்ட அன்பரசி அவளை பரிதாபமாக பார்க்க, அவளது பார்வையிலிருந்த தவிப்பு மஹதிக்கு புரியவில்லையோ? அவளே தன் கையை அன்புவின் கரத்தில் புகுத்தி வாழ்த்தை பெற்று கொண்டவள், அவளை அணைத்து விடுத்து “அன்பு, ப்ளீஸ்.. நீங்க கொஞ்சம் நேரம் வெளிய வராதீங்க. நான் மச்சான்கிட்ட பேசிட்டு உங்கள கூப்பிடுறேன்” என்று உற்சாமாக ஓடினாள்.

அன்பரசியோ கண்களில் நீர் நிறைய, செல்பவளையே அடிபட்ட பார்வை பார்த்திருந்தாள்.

அப்போதே குளித்து முடித்து தயாராகி வெளியே வந்த சிபி உணவு மேசை நட்சத்திர விடுதி அளவிற்கு வெள்ளை துணி விரித்து, மெகுழுவார்த்தைகள் எல்லாம் ஏற்றி ஒரு கான்டில் லைட் டின்னருக்கு தயாராகி இருப்பதை கண்டு பிரமித்தான்.

தன்னவள் தனக்காக ஏற்பாடு செய்திருப்பாளோ என்று மனதினோரம் ஓர் எண்ணம் வேறு.

சுற்றும் முற்றும் பார்த்து கொண்டே சிபி அங்கு வந்து அமரவும், நேர்த்தியாக தயாராகியிருந்த மஹதி கையில் கேக்கோடு அவன் முன் தோன்றினாள்.

“ஹேய் லூசு, என்னடி இது. என் பர்த்டே இப்ப இல்ல” என்றவன் பின் யோசித்து “அவ பர்த்டேவும் இல்ல. ஓ.. உன் பர்த்டேவா” என்று அவளுக்கு கைகொடுக்க எழுந்தான்.

அவளோ கேக்கை மேசை மீது வைத்துவிட்டு அவனை அணைத்து “ஐ லவ் யு சிபி. வில் யு மேரி மீ?” முகம் மலர கேட்டவள் அவனது பதிலுக்காக ஆவலாக காத்திருந்தாள்.

சிபி ஒருநிமிடம் தான் கேட்டதில் ஸ்தம்பித்து நின்றுவிட்டான். அவனுக்கு எங்கே தவறு நடந்ததென புரியவில்லை. இதுவரை அவன் மஹதியை அப்படியொரு எண்ணத்தில் பார்த்ததில்லை, தவறாக நடந்து கொண்டதும் இல்லை. அப்படியிருக்க, இவளுக்கு எப்படி இப்படியோர் எண்ணம் என்று அவன் குழம்பி தவித்தான்.

அந்நேரம் புயலென அங்கே வந்த அன்பரசி கண்களில் காதலோடு சிபி முகத்தை பார்த்து நின்றிருந்த மஹதியை ஒரு தள்ளு தள்ளினாள்.

நல்லவேளை அவள் அங்கிருந்த நாற்காலியை பிடித்து சுதாரித்து நிற்க, இதுநாள் வரை மறைத்து வைத்திருந்த தன் தாலி கொடியை வெளியே எடுத்து “இவர் என் புருஷன். நீ காதலை சொல்லி விளையாட இவர் ஒன்னும் உன் விளையாட்டு பொம்மை இல்ல” மஹதியிடம் பொரிந்தவள், அவள் இருக்கிறாள் என்றும் பாராது கணவனது இடையே பற்றி இறுக அணைத்து கொண்டவள் அவனது மார்பில் முகம் புதைத்து “ஐ ஆம் சாரி சிபி.. ஐ ஆம் சாரி” என்று கதறினாள்.

மனைவியின் அதிரடியில் ஆனந்த அதிர்ச்சியடைந்த அந்த கணவன் அவளை நெஞ்சோடு இறுக்கி அவள் தலையை வருடி கொடுத்தான்.

அன்பரசியின் உரிமை உணர்வில் நெகிழ்ந்தவனின் மனம் அதேநேரம் மஹதிக்காக வருந்தியது. மனைவியின் அழுகை சற்று ஓய்ந்து கேவலாக மாறவும் அவளை தன் தோளோடு வளைத்து நிறுத்தி கொண்டவன் “மாஹி, நான் உன்னை ஒரு ப்ரண்ட்டா தான் பார்த்தேன். என்னுடைய எந்த செயல் உனக்குள்ள இப்படி ஒரு உணர்வை உருவாக்குச்சுன்னு எனக்கு தெரியல. எது எப்படியிருந்தாலும் என்னால நீ டிஸ்ட்ராக்ட் ஆனதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்” சிபி வருந்தி அவளிடம் மன்னிப்பு கேட்க, பக்கென்று சிரித்தாள் மஹதி.

அன்பு புரியாமல் கணவனை பார்க்க, சிபியும் மஹதிய புரியாமல் தான் பார்த்திருந்தான்.

“மச்சான், இந்த ப்ரொபோஸலே ஒரு ட்ராமா. பார்த்தியா நம்ப சைலண்ட் கில்லர் எப்படி உன் கூட கம் மாதிரி ஒட்டிக்கிட்டு இருக்கிறத” என்று அவர்களது நெருக்கத்தை சுட்டி காட்டி சத்தமாக சிரித்தாள்.

இருவரும் புரியாமல் மஹதியை பார்க்க “நேத்து ட்ரின்க் பண்ணிட்டு ரூமுக்கு போனா உங்க ஆளு தாலி வெளியே வந்தது கூட தெரியாம தூங்கிட்டு இருக்காங்க. இவங்களுக்கு கல்யாணமாகிடுச்சா, இது முதல்ல உனக்கு தெரியுமான்னு ஒரே குழப்பம். சரி கண்டுபிடிப்போம்னு எனக்கு நானே சொல்லிட்டு தூங்கிட்டேன்” என்று நிகழ்ந்ததை விவரித்தாள்.

மஹதி கூறியதை கேட்டு அன்பரசி அசடு வழிய, மஹதி மனதில் தன் மீது எந்த தவறான எண்ணமும் இல்லை என்ற திருப்தியோடு சிபியும் தோழியோடு சேர்ந்து இப்போது மனைவியை கண்டு சிரித்தான்.

“ஹலோ.. ஹலோ.. நீ ஒன்னுமே பண்ணாத மாதிரி சிரிக்கிற.. நேத்து இன்ஸ்டாகிராம்ல ரிக்வெஸ்ட் அக்ஸ்செப்ட் பண்ணியே, அதுல போட்ட போஸ்ட்ட எல்லாம் மறந்துட்டியா.. எப்படியெப்படி, வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நான் உனக்கா” என்று தன் புருவம் உயர்த்தி அவனிடம் கேட்டாள்.

‘வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நானுனக்கு
பூணும் வடம் நீ எனக்கு புது வைரம் நான் உனக்கு
காணுமிடந்தோறும் நின்றான் கண்ணினொளி வீசுதடி
மானுடைய பேரரசே வாழ்வு நிலையே கண்ணம்மா...’

சிபி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவன் அன்பரசியின் சங்கு கழுத்தில் மங்கல நாணை பூட்டும் புகைப்படத்தை பதிந்து, அதற்கு கீழ் பாரதியின் வரிகளை போட்டிருந்தான்.

அதை உணராதவன் மஹதி ரிக்வெஸ்ட் கொடுத்ததும் அதை ஏற்றும் விட்டான். அவனது பக்கத்திற்குள் சென்ற மஹதியோ இருவரும் கணவன், மனைவி என்பதை அறிந்தே, அவர்கள் வாயாலே உண்மை வெளிவரட்டும் என்று காதலை சொல்வதாய் நாடகமாடினாள்.

உண்மையில் மஹதியின் மனதில் ஆசை துளிர்க்கும் நேரத்தில் தான் அவள் உண்மையை அறிந்தது. முளையிலேயே கிள்ளி எறிவது நல்லதாயிற்றே. தன் காதலை யாரும் அறிவதற்கு முன் கிள்ளி எறிந்து விட்டாள் மஹதி.

சிபி மீது தனக்கு உண்டான எண்ணத்தை தவிர மற்றது அனைத்தையும் அவள் இருவரிடமும் விளக்கி சொல்ல “மண்ட மேல இருந்த கொண்டைய மறந்துட்டேனே” என்று பாவம் போல் சிபி சொல்ல, அங்கே ஓர் சிரிப்பலை வெடித்தது.

“மணிரத்னம் மூவில கூட மேரேஜ் பண்ணிகிட்டத பேரண்ட்ஸ்கிட்ட தான் மறைப்பாங்க. நீங்க என்னடானா ஊருக்கே மறைச்சிக்கிட்டு இருக்கீங்க” மஹதி தன் இடுப்பில் கைவைத்து இருவரையும் முறைத்தாள்.

“அது மச்சான், நீ எப்படி சேலஞ்சா எடுத்துக்கிட்டு யாருமில்லாம தனியா வந்தியோ, அந்த மாதிரி நானும் இவளும் ஹஸ்பெண்ட் அண்ட் வைஃப்ங்கற ஐடென்டிடிய மறைச்சிகிட்டு ஒரு ட்ரிப் போகணும்னு ஆசைப்பட்டோம்” தங்களுக்குள் இருப்பதை தோழியானாலும் அவளிடம் பகிர்வதில் அவனுக்கு விருப்பமில்லை.

சிபியின் பதிலில் மஹதியும் ஓரளவிற்கு சமாதானமாக மூவரும் ஒன்றாக அமர்ந்து அவள் வாங்கி வந்த உணவை ருசித்தனர்.

சாப்பிடும் போதும் கணவனின் கையை விடாது பிடித்துக் கொண்டே அன்பு உண்ண, சிபிக்கு தான் கூச்சமாகி போனது.

இவர்களது செயல்களை கண்டும் காணாதது போல் சாப்பிட்டிருந்த மாஹி “பார்க்கல பார்க்கல. டைனிங் டேபிள் கீழ நடக்கிறத நான் பார்க்கல” என்று சொல்ல, மீண்டும் அங்கு சிரிப்பு சரவெடி வெடித்தது.

உறங்கும் நேரம் அன்புவும் மஹதிக்கு பின்னால் அவளது அறைக்கு செல்ல “ஹலோ மேடம், எங்க வர்றீங்க. உங்க ரூமுக்கு போங்க. ஏற்கனவே என்னை பிடிச்சு தள்ளியாச்சு. நல்லவேளை நானே எக்ஸ்பெக்ட் பண்ணி ஸ்டராங்கா நின்னேன்” புலம்புவது போல் சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.

அறைக்குள் தயங்கி தயங்கி வந்த மனைவியை பார்க்க பார்க்க அவள் பதறியடித்து ஓடி வந்து ‘இவன் என் கணவன்’ என்று சொன்னதே அவன் நினைவிலாட, வெடித்து சிரித்தான் சிபி.

“சிபி சிரிக்காதீங்க” என்று அவள் சிணுங்க, அவன் இருகைகளையும் விரிக்க அவள் பஞ்சு பொதியாய் அவன் நெஞ்சில் மோதி அவனுள் புதைத்து கொண்டாள்.

“நான் உன்னை மிஸ் பண்ணேன் ராசி” என்று அவள் உச்சந்தலையில் முத்தமிட்டவன் “உன் பூ பாதம் படாம எனக்கு இந்த ரெண்டு நாளா சாபவிமோசனமே கிடைக்கல தெரியுமா. ஒரே உடம்பு வலி” என்று சிரிக்காமல் நக்கலடித்தான்.

கணவன் காதலில் கசிந்து உருகுகிறான் என்று நினைத்திருந்தவள் அவன் இறுதியாக சொன்னதில் கோபம் வர பெற்றவளாக அவனிடமிருந்து விலகி அவனை முறைத்தாள்.

“நிஜமாவே நீ மிதிச்சு விடாம உடம்பெல்லாம் வலிக்குது” இப்போது சிரித்து கொண்டே சொல்ல..

“போங்க நீங்க” அவளுக்கு கோபம் பொத்திக் கொண்டு வர, அங்கிருந்த ஜன்னல் கம்பிகளை பிடித்துக் கொண்டு பனி பொழிவை உம்மென்று பார்த்திருந்தாள்.

மனைவியின் குழந்தை தனமான செயலை முதல் முறையாக பார்க்கின்றவன் அவளது இயல்பு குணம் திரும்புவதில் தனக்குள் நிம்மதி கொண்டான்.

அவளை நெருங்கியவன் பின்னோடு அணைத்தவாறு கைகோர்த்து நின்று அவள் கன்னத்தில் தன் அச்சாரத்தை பதித்தவன் “என் இதழ்கள் என் பொண்டாட்டியோட இதழ் சுவையை ருசிக்காம மரித்து போச்சு ராசி, அதுக்கு மீண்டும் உயிர் கொடுப்பியா லவ்” கிறக்கம் கொண்ட குரலில் அவன் கேட்க, அவளோ அவனை திரும்பி அணைத்து தன் சம்மதத்தை தெரிவித்தாள்.

அவளுக்கு பின்னால் கைவைத்து திரைசீலையை இழுத்துவிட்டவன் அவளது முகத்தை நிமிர்த்தி இதழில் கவி எழுத துவங்கினான்.


இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆஆஆஆ….
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான் விழி மயங்குது ஆஆஆஆ…..
மனதில் சுகம் மலரும் மாலையிது..


ஹலோ ப்ரண்ட்ஸ்,

இந்த டிரிப்பை லைவ்லினெஸ்ஸோட உங்களுக்கு கொடுக்க நிறைய கஷ்டப்பட்டிருக்கேன். ஐ ஹோப், உங்களுக்கும் பிடிக்கும். அப்படியே விருப்பங்களையும், கருத்துக்களையும் சொன்னால் நான் ரொம்ப ஹாப்பியா ஃபீல் பண்ணுவேன்.

உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 17

பணிக்கு செல்லும் கணவனுக்கு சமைத்து கொண்டிருந்தாள் அன்பரசி. எங்கே முன்னறையில் சமைக்கும் சத்தமோ, புகையோ அவனது தூக்கத்தை கலைத்து விடுமோ என்று படுக்கையறையின் கதவை சாற்றிவிட்டு செய்திருந்தாள்.

“என்ன ராசி பண்ணிட்டு இருக்க. நான் தான் வெளில சாப்பிட்டுகிறேன் சொன்னேன்ல” மனைவி அருகில் இல்லாததை உணர்ந்து குளியலறையில் பார்த்தவன், அவள் அங்கும் இல்லாததை கண்டு அறை கதவை திறக்க, அவன் பார்த்த காட்சியில் குரலை சற்று உயர்த்தியே கேட்டான் சிபி.

அவளோ அவனது கேள்விக்கு பதிலளிக்காமல் “அச்சோ சிபி கத்தாதீங்க. எல்லாரும் தூங்கறாங்க” என்று அவன் வாயை பொத்தினாள்.

அன்று காலை நாலரை மணிக்கெல்லாம் சிபிக்கு பணி இருந்தது. அதற்கு பின்னிரவு இரண்டு மணிக்கெல்லாம் எழுந்து குளித்து பருத்தி சுடிதார் அணிந்து, நெற்றியிலும் வகிட்டிலும் குங்கும பொட்டிட்டு, தலையிலும் பூவென தயாராகி அவனுக்காக சமைத்திருந்த அன்பரசியின் தோற்றமே அவள் தனக்காக நேரத்தில் எழுந்து இதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறாள் என்பதை சிபிக்கு விவரித்தது.

அவளிடமிருந்து எந்த பதிலும் வராமல் போகவே, வாயிலிருந்து அவள் கையை எடுத்தவன் நின்ற இடத்திலிருந்தே எட்டி பார்க்க, அனைத்தையும் சமைத்து முடித்திருந்தவள் அதை அவனுக்கு கட்டியும் வைத்து விட்டிருந்தாள்.

“இப்போ நீ இந்த அர்த்தராத்திரியில எழுந்து எனக்கு சமைச்சி சாப்பிடுங்க சாப்பிடுங்கனு சொல்லலைனா என்னனு கேக்கறேன்” என்று பற்களை கடித்தவன், அவள் கைபிடித்து அழைத்து வந்து கட்டிலில் அமர்த்தி, தூங்கு என்பதாய் கண்களை மூடி திறந்தான்.

“இல்ல சிபி.. நீங்க கிளம்பறப்போ..” அவள் இழுக்க

“அதெல்லாம் நான் மதியம் ஷிப்ட் போறப்போ வழியனுப்பிக்கலாம். இப்போ காலை நீட்டி நல்லா படுத்து நிம்மதியா தூங்கும்மா” என்றான்.

அப்போதும் அவள் தயங்க “சரி, கிளம்பறப்போ எழுப்புறேன். இப்ப படு மா” என்றதும்

“என் காஃபி கிச்சன்ல இருக்கு. அதை மட்டும் குடிச்சிட்டு தூங்குறேனே” என்று கேட்டவள் வேகம் வேகமாக கட்டிலிலிருந்து இறங்க, அவளை தடுத்து அமர்த்தியவன் தானே அங்கு சென்று காப்பியை எடுத்து வந்தான்.

அன்பரசி ஆசையாக கைகளை நீட்ட “காஃபி குடிச்சா வர தூக்கமெல்லாம் ஓடியே போயிடும்” என்றவன் அவளது காப்பியை ஒரே மடக்கில் குடித்துவிட்டு, அவளை படுக்க சொல்லி பணித்துவிட்டு குளிக்க சென்றான்.

அன்பரசிக்கு தான் தூக்கம் வருவேனா என்றிருந்தது.

அப்போது கட்டில் சைடு டேபிளில் இருந்த புகைப்படத்தை பார்த்தாள். இருவரும் லாடக்கில் பனி கொஞ்சும் மலைகளுக்கு முன் நின்று எடுத்து கொண்ட அழகிய படம் அது.

சிபிக்கு அவர்களது திருமண புகைப்படத்தை காட்டிலும் இப்படம் தான் மிகவும் பிடிக்கும். திருமண படத்தில் கூட உயிர்ப்பில்லாத முகத்தோடு, சற்று இடைவெளி விட்டே நின்றிருப்பாள் அன்பு. அவளை அவனோடு நிற்க வைத்து புகைப்படம் எடுப்பதற்குள் புகைப்பதிவாளர் ஓய்ந்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

இதிலோ லாடக்கின் குளிருக்கு இருவரும் ஜெர்கின், கையுறை, ஷூஸ் எல்லாம் அணிந்து, அவள் அவனோடு மிகவும் நெருக்கமாக அவனை இறுக்க பிடித்து மார்பில் தலை சாய்த்து நின்றிருப்பதை அழகாக பதிவு செய்திருந்தாள் மஹதி.

அன்று மணாலியில் மனைவியின் இதழ் தேனை ஆசை தீர பருகியவன் அவளது செவ்விதழை விட்டு பிரிந்து தன் கேசத்தை கோதி கொண்டே “நீ மாஹி ரூம்லயே தங்கிக்கோ ராசி” என்றான்.

அன்பரசி கேள்வி நிறைந்த விழிகளோடு அவனை ஏக்கமாக பார்க்க, “நாம தான் எங்க கூட இருனு அவளை கூட்டிட்டு வந்திருக்கோம். அப்போ அதேமாதிரி பார்த்துக்கவும் செய்யணும்” என்றவன் “இந்த நாலு நாள்ல நம்ப வாழ்க்கை முடிஞ்சிடாது ராசி. வீட்டுக்கு போய் பார்த்துக்கலாம்” என்றுவிட, கணவனை பெருமிதமாக பார்த்தவள் மஹதியின் அறைக்கு சென்று அவளுடனே தங்கி கொண்டாள்.

இன்னும் மூன்று நாட்களே அவர்களது பயணத்தில் மீதம் இருந்தது. சிபியின் திட்டப்படி நாளை மாலைக்குள் மணிகரண் சென்று அதன் அருகிலிருக்கும் கசோல் என்ற கிராமத்தில் தங்கிவிட்டால், அடுத்தநாள் காலை எழுந்து டெல்லி சென்றுவிடலாம்.

அங்கே மஹதியை அவள் வீட்டில் விட்டுவிட்டு அங்கிருந்து ஒன்றிரண்டு நாட்கள் அதிகமானாலும் மூன்றிலிருந்து நான்கு நாட்களில் எப்படியாவது சென்னை சென்றுவிடலாம் என்று எண்ணியிருந்தான்.

ஆனால் டெல்லி செல்வதற்குள் என்ன எண்ணம் மாறியதோ, லே செல்வதாக முடிவு செய்தனர். அதற்கு மஹதி ஓர் காரணம் என்றால், அன்பரசியே முழுமுதற்காரணமாக திகழ்ந்தாள்.

சிபியுடன் மேற்கொண்ட பயணத்தை மிகவும் பாதுகாப்பாக உணர்ந்த மதி, அதை உடனே முடித்து கொள்ள மனமில்லாமல், வழியில் ஓர் தாபாவில் உணவருந்தி கொண்டிருந்த நேரத்தில் ‘நாம ஏன் லடாக் செல்ல கூடாது’ என்ற கேள்வியை எழுப்பினாள்.

அதேநேரம் சிபியும் இப்பொழுதே தன்னிடம் சகஜமாகியிருக்கும் மனைவியுடன் இன்னும் சிறிது நாட்கள் பயணப்பட விரும்பினான். அவள் மீது அவன் கொண்டிருந்த காதல் இந்தியாவின் கடை கிராமம் வரை அவளை அழைத்து சென்று காண்பிக்க உத்வேகித்தது.

அவனும் மஹதி கேட்டதற்கு சரியென்று சொல்லிவிட மூவரும் லேவிற்கு கிளம்பினார்கள்.

லேவிற்கு சாலை வழியாக செல்ல வேண்டும் என்றால் ஒன்று காஷ்மீரிலிருந்து ஸ்ரீநகர் வழியாக செல்ல வேண்டும், இல்லை மணாலியிலிருந்து செல்ல வேண்டும். ஆனால் இரு வழியிலும் பனி பொழிவின் காரணமாக போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருப்பதால் விமானம் மூலம் லே செல்வதே ஒரே வழியாக இருந்தது.

அது சரியும் கூட. லடாக் ஓர் யூனியன் பிரதேசம். அதன் தலைநகரமே லே. லே நகரமானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 11500 அடிக்கு மேல் உள்ளது. அதனால் அங்கே ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கும். அதன் காரணமாக அங்கே செல்பவர்களுக்கு ஏஎம்எஸ் எனப்படும் அக்யூட் மௌண்டைன் சிக்னஸ் வரக்கூடும். அதாவது தலைவலி, மூச்சு திணறல், வாந்தி, குமட்டல், தலைசுற்றல் போன்ற பிரச்சனைகள் வரும். அது சிலருக்கு கடுமையாகவும் இருந்து செயற்கை சுவாசமும், மருத்துவ உதவியுமே தேவைப்படலாம்.

அதுவுமில்லாமல் அங்கே அவர்கள் சுற்றி பார்க்க போகும் மலைகளும், ஏரிகளும், கணவாய்களும் 18000 அடிவரையும், அதற்கு மேலும் இருக்கும் என்பதால் லே சென்றதும் ஒன்றிரண்டு நாள் ஓய்வெடுப்பது இன்றியமையாதது. விமானத்தில் சென்றால் பயண நேரத்தை ஓய்விற்கு செலவழிக்கலாம் என்பதால் பணமொரு பிரச்சனையில்லை என்றால் விமானமே சிறந்தது.

அடுத்த நாள் காலையிலே அவர்களது விமானம் இருக்க, டெல்லி சென்றதும் மஹதியின் வேண்டுகோளுக்கு இணங்க அவளது வீட்டிலே சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு அருகிலிருந்த மருத்துவரிடம் சென்று ஆலோசித்து பயணத்திற்கு தேவையான மருந்துகளையும் வாங்கி கொண்டனர்.

டிசம்பர் மாதம் என்பதால் அங்கே தட்பவெப்ப நிலை மைனசில் இருக்கும் என்பதை அனுமானித்து அதற்கு தேவையான கூடுதல் ஜாக்கெட்ஸ், கையுறை, குல்லா போன்றவைகளையும் வாங்கினர். உடன் லேவிலேயே வாடகைக்கு ஆக்சிஜன் சிலிண்டர் கிடைத்தாலும், தன் மன திருப்திக்காக பையில் வைத்து எடுத்து செல்லும் போர்டபில் ஆக்சிஜன் கேன்களையும் வாங்கி கொண்டான் சிபி.

அதன்படி அடுத்த நாள் காலை மஹதியின் வீட்டில் தன் வண்டியை விட்டுவிட்ட சிபி மனைவியையும் தோழியையும் தன் பொறுப்பென ஏற்று அவர்களோடு லேவிற்கு பயணப்பட்டான்.

லேவில் இறங்கி மதியம் போல் லே மார்க்கெட் சென்று, அதன் அருகில் அறைகள் எடுத்து தங்கி கொண்டவர்கள் அன்று முழுவதும் ஓய்வெடுத்தனர். இரவு போல் உடல்நிலை நன்றாக இருப்பதை உறுதி செய்து கொண்டு வெளியே வந்த சிபி இங்கே பயணங்ளுக்கு தேவையான பேகேஜ் அனைத்தையும் பேசி தயார் செய்துவிட்டான்.

அதன்படி இரண்டாம் நாள் காலை சான்சுகர், இண்டஸ் என இரு நதிகளை இணைக்கும் சங்கம் வியூ பாயிண்ட் சென்றவர்கள் அது செல்லும் வழியில் இருக்கும் மேக்னெட்டிக் ஹில், நதியில் டிராஃப்டிங், சாந்தி ஸ்தூபா, மோனஸ்ட்ரிஸ், அருகிலிருக்கும் இன்னும் சில இடங்களை என பார்த்துவிட்டு அறைக்கு வந்துவிட்டார்கள்.

அடுத்த நாள் கார்துங்க் லா பாஸ் என்ற கணவாய் வழியாக நூப்ரா பள்ளத்தாக்கு சென்றவர்கள் அங்கே சுற்றி பார்த்து விட்டு, அங்கிருந்து துர்துக் என்ற கிராமத்தையும் பார்வையிட்டு விட்டு இரவு அங்கேயே தங்கிகொண்டார்கள்.

நான்காம் நாள் ஜுரோ பாயிண்ட் என்ற இடத்திற்கு சென்றார்கள். இது தான் இந்தியாவின் கடைசி கிராமமான தாங். அங்கு வரை சென்றவர்கள் அங்கிருந்து பாகிஸ்தான் எல்லையையும் பார்த்துக் கொண்டு ஹுண்டர் வந்துவிட்டனர்.

ஹுண்டர் என்பது ஓர் பாலைவனம். அங்கே மூவரும் ஒட்டக சவாரி மேற்கொண்டனர். சிபியும் அன்பரசியும் ஒன்றாக ஒரு ஒட்டகத்திலும், மஹதி இன்னொரு ஒட்டகத்திலும் சவாரி செய்து மகிழ்ந்தனர். ஒட்டக சவாரியோடு வேறு சில விளையாட்டுகளும் விளையாடி முடித்து அன்றைய இரவை ஹுண்டரிலேயே கழித்தனர்.

ஐந்தாம் நாள் பாங்கோங் ட்சோ என்ற ஏரிக்கு சென்றனர். அங்கு தான் ஹிந்தி திரைபடமான 3 இடியட்ஸ் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி எடுத்தது. அதன் நினைவாக அங்கிருக்கும் வினோதமான நாற்காலியில் படத்தின் மூன்று நாயகர்களை போலவே மூவரும் அமர்ந்து போஸ் கொடுத்து மகிழ்ந்தனர். இதோடு கரீனா கபூர் ஒட்டியது போல வண்டியும் இருக்க, அதிலும் புகைப்படம் எடுத்து நேரத்தை செலவழித்து மகிழ்ந்தனர். அத்துடன் சாங் லா என்ற கணவாய்க்கும் சென்றவர்கள் பார்க்க இன்னும் நிறைய இடங்கள் இருந்தும் நேரமின்மையால் அறைக்கு திரும்பினர்.

அவர்களது லே பயணம் மனம் நிறைய மகிழ்ச்சியை கொடுத்திருக்க, அடுத்தநாள் விமானம் என்ற நிலையில் வீட்டிலிருப்பவர்களுக்கு ஏதாவது வாங்க வேண்டும் என்று அன்பரசி விருப்பப்பட, அவளை அழைத்து கொண்டு மார்க்கெட் சென்றிருந்தான் சிபி.

மஹதியை உடன் அழைத்ததற்கு தன் உடல் ஓய்விற்கு கெஞ்சுகிறது என்று சொல்லி அவர்களுக்கு தனிமை கொடுத்து ஒதுங்கி கொண்டாள்.

சிபியும் அன்பரசியும் திரும்பி வந்ததும் மூவரும் ஒன்றாக உணவருந்திவிட்டு அவரவர் அறைக்கு செல்ல, அன்பரசியை தடுத்த மஹதி “ஹலோ மேடம், எங்க வர்றீங்க.. உங்க ஹஸ்பெண்ட் கூட போங்க” என்றாள்.

சிபி எதையோ சொல்ல வாய் திறக்க “ப்ளீஸ் மச்சான், நான் தான் அன்னைக்கு உன் ரூமுக்கு போக இருந்த அன்புவை போகவிடாம பண்ணேன். எனக்கு அப்போ ஹஸ்பெண்ட் அண்ட் வைஃப்னு தெரியாது. ஆனா தெரிஞ்ச அப்புறமும் நீ அவளை என் கூடவே இருக்க விட்டுட்ட. நம்ப ட்ரிப்பே முடிய போகுது, என்னை இதுக்கு மேல கில்ட் ஆக்காத. ப்ளீஸ் டேக் டைம் பர்சனல் டைம். நான் சேஃப்பா என் ரூம்ல தூங்குவேன்” என்ற உத்திரவாததுடன் புன்னக்கத்து விட்டு அவளது அறைக்குள் சென்றாள் மாஹி.

குளித்து முடித்து வெளியே வந்த அன்பரசி அங்கிருந்த ஜன்னல் வழியாக பனி பொழிவை ரசித்து கொண்டிருந்தாள்.

வானிற்கும் பூமிக்கும் வெள்ளை கம்பளம் விரித்தது போல், நில வானத்தை மூடிய வெண்பனி மேகங்கள், பவளமல்லி மரத்தை அசைத்துவிட்டது போல் பொல பொலவென கொட்டும் பனி சாரல்கள். பார்க்கவே ரம்மியமாக இருந்தது.

அப்போது குளித்து முடித்து வந்திருந்த சிபி அவளுக்கு பின்னால் நின்று..

“புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது..”

அவள் காதருகே மோகம் கொண்டு குரலில் கிறங்கி பாட, அவனது குரலுக்கு உதடுகள் துடிக்க திரும்பி பார்த்தாள் அன்பரசி.

தன்னை மொத்தமாக வீழ்த்தும் அவளது துடிக்கும் இதழை நொடியும் தாமதிக்காமல் சிறை செய்த சிபி, அவளுக்கு அதிகம் மூச்சு முட்ட செய்யாது மென்மையாய் அவள் மெல்லிதழை சுவைத்து விடுத்தான்.

அதில் ரோஜா பூவாய் மேனி சிவந்து போனவள் அவனிடமே தஞ்சம் புக, அவளது மலர் முகத்தை நிமிர்த்தி சம்மதமா என்று கண்களோடு கண்கள் வினவ, அரை மாத்திரைக்கும் குறைவாக அவனை பார்த்தவள் தலையசைத்து கொண்டே சூரியகாந்தியாய் தலை கவிழ்ந்தாள்.

அவளை கைகளில் ஏந்தி வந்து மஞ்சத்தில் கிடத்தியவன், அன்பெனும் சொல் அவனுள் ஏற்படுத்திய மென்மையை அவளை கையாள்வதிலும் காட்டினான். உடலால் அல்லாது தன் காதலால், நேசத்தால் சிறை பட்ட அவளது உணர்வுகளை விலங்கறுக்க செய்ய, தேகம் சிலிர்த்து போனாள் அன்பு.

வெளியே வானம் தன் வெள்ளை மழைகளை பொழிய, சிபியும் தன் காதலை சொட்டு சொட்டுக்காக அன்பிற்குள் நிரப்ப, தாம்பத்ய பூ அங்கே அழகாய் மலர்ந்தது.

லே லடாக் செல்லலாம் என்று முடிவெடுத்த உடனே அன்பரசி தன் அலுவலகத்திற்கு அழைத்து பேசிவிட்டாள். அது டிசம்பர் மாதத்தின் இறுதி வாரம் என்பதால் அவர்களது க்ளையண்ட்ஸ் கிறிஸ்துமஸ்க்காகவும் வருடப்பிறப்புக்காகவும் விடுப்பில் சென்றுவிடுவதால் இவளுக்கும் பெரிய வேலை இருக்காது. அதனால் அவளது மேலாளரும் ஒத்துக் கொண்டார்.

சிபிக்கு தான் கொஞ்சம் சிரமமாக இருந்தது. அதுவும் பணி உயர்வை எதிர்பார்த்திருக்கும் நேரத்தில் இதுவெல்லாம் கணக்கில் சேர்க்கப்படும் என்று தெரிந்தும் விடுப்பு எடுத்தான். அவனுக்கு அன்புவின் முன் தான் உயிரென கருதும் வேலையும் இரண்டாம் பட்சமாகவே பட்டது.

மூன்று நாட்களில் சென்னை வரவேண்டும் என்று இருக்க, வெள்ளிக்கிழமை மதியம் மஹதியை டெல்லியில் விட்டு அங்கேயே மதிய உணவை முடித்து ஓய்வெடுத்தவர்கள் மாலை ஏழு மணி போல் கிளம்பினர்.

திங்கட்கிழமை புது வருடப்பிறப்பாக இருக்க இன்னொரு நாளும் அவர்களுக்கு கிடைக்க, தன் பைக்கர்ஸ் கம்யூனிட்டியோடு அடிக்கடி பைக்கில் செல்வதன் அனுபவத்தை கொண்டு எப்படியோ செவ்வாய்கிழமை காலையில் அவள் வேலைக்கு பாதிப்பில்லாமல் வீட்டில் கொண்டு வந்து விட்டான்.

பயணம் ஆரம்பித்த நாளிலிருந்து ஒவ்வொரு நிமிடமும் அவளை அவன் பார்த்து கொண்ட விதம். அதுபோல் ஒருபொழுதும் அவன் அவளை கடிந்ததில்லை, முகம் சுளித்ததில்லை, சிரமமாக எண்ணியதில்லை. மாத பிரச்சனைகளின் போதும் தாயாய் உடனிருந்து அரவணைத்தான். அதையெல்லாம் எண்ணி மெய் சிலிர்த்தாள் அன்பரசி.

தோழனாய், பாதுகாவலனாய், காதலனாய்.. இறுதியாக பெயருக்கு ஏற்றார் போல் பேரரசனாய் அவளை ஆட்சியும் செய்தான்.

தாய், மனைவி, சகோதரி, மகளென தன்னை சுற்றியிருக்கும் பெண்களை மதித்து, அரவணைப்பது ஓர் நல்ல ஆண்மகனின் குணத்தில் ஒன்று தான் என்று சொல்லி கூட ஒதுக்கி தள்ளிவிடலாம்.

ஆனால் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற கணியன் பூங்குன்றனார் சொல்லிற்கேற்ப வழியில் சந்தித்தவர்களையும் தன்னவர்களாக பார்த்து அன்பு பாராட்டும் மாண்பு தலை சிறந்த ஆண்மகனுக்கே உரித்தானது.

அதுவும் மஹதியிடம் எத்தனை கண்ணியத்துடன் நடந்து கொண்டான். அவளை தன்வீட்டு பெண் போல் எத்தனை பாதுகாப்பாக உணர வைத்தான்.

அவர்கள் கடைசியாக டெல்லியிலிருந்து கிளம்பும் போதும் “உன்னை பார்க்கறப்போ கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசை வருதுடா. சீரியஸ்லி, நான் உன்னை மிஸ் பண்ணிட்டேன். பட் இனி பண்ணா உன்னை மாதிரி ஒருத்தனை தான் பண்ணிப்பேன்” என்று அவள் சொன்னதும் அன்பரசியின் முகம் சுருங்குவதை கண்டு..

“மச்சானை மாதிரி தான் சொல்றேன். மச்சானையேனு சொல்லலடி” என்று அவளை அணைத்து விடுத்தாள்.

ஊரே போற்றுபவன் தன் கணவன், ஓர் மனைவியாக அன்பரசி அப்போது எப்படி உணர்ந்தாள் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஒன்று மட்டும் புரிந்தது, தான் என்றோ செய்த ஏதோ ஒரு புண்ணியம் தான் சிபியின் ரூபத்தில் வந்திருக்கிறது என்று..

“ராசி.. ராசி..” என்று அவன் குரல் இப்போதும் அவள் காதில் ஒலித்து கொண்டே இருக்க, அவள் முகத்தில் பனி சாரல்களும் தெறிக்கவும் தான் அவர்களது பயணத்தை அசை போட்டிருந்தவள் அசந்து விழிக்க, சிபி தான் அவள் முகத்திற்கு நேரே குனிந்து தன் ஈர தலையை ஆட்டியிருந்தான்.

முகத்திலிருந்த நீரை அவள் துடைக்க, “என்ன ராசி கண்ண திறந்துகிட்டே தூக்கமா” என்று புன்னக்கத்தவன் கண்ணாடி முன் நின்று அலுவலகத்திற்கு தயாராக துவங்கினான்.

அவளும் எழுந்து வந்து அவனுக்கு சட்டை பொத்தான் போட்டுவிட்டவள், இன்னும் ஈரமாக இருந்த அவள் தலையை துவட்டி விட்டு தலைமுடியை சிலுப்பி ரசித்தாள். அவனும் பதிலுக்கு மீசை ரோமத்தால் அவளுக்கு கிசுகிசுப்பு மூட்டினான்.

‘காலையிலேயேவா’ என்று கணவனது கன்னத்தில் இதழ் பதித்து வேகமாக அங்கிருந்து நகர்ந்தவள் அவனுக்கு செய்து வைத்திருந்த சத்து மாவு கஞ்சியில் பால் சுட செய்து ஊற்றி எடுத்து வந்தாள். அதை அவனுக்கு ஊட்டி விட அவனும் சாப்பிட்டு கொண்டே அலுவலகத்திற்கு தேவையானதை எடுத்து வைத்திருந்தான்.

அப்போது அவனை சீருடையில் பார்த்தவள் “சிபி எனக்கொரு டவுட்..” என்று அவனிடம் கேட்க, அலமாரியில் எதையோ எடுத்து கொண்டிருந்தவன் வேகமாக அவளிடம் வந்து “ஐயோ.. உனக்கு இப்ப தானா சந்தேகம் வரணும். டூட்டி இருக்கே, நைட் தானே எதுவானாலும் எக்ஸ்ப்ளைன் பண்ண முடியும்” குழந்தையின் சருமத்தை போல் மிருதுவாக இருந்த அவளது கன்னத்தை உதட்டால் வட்டமிட்டு கொண்டே சொன்னான்.

அவனது பதிலில் திகைத்த அன்பரசி, கணவனை தன்னிடமிருந்து பிரித்து நிறுத்தி “நான் அதை சொல்லல. இது வேற டவுட்..” என்று சிணுங்கினாள்.

அவன் கேள் என்பதாய் கண்களை மூடி திறக்க, அவள் பேச வரும் நேரம் “ஆனா இப்படி” என்று அவளை தன்னோடு இறுக்கி கொண்டான்.

“நீங்க ஏன் லோகோ பைலட் ஆனீங்க” என்றதும் அவன் முகம் சுருங்க, “அது.. நீங்க முதல்ல இருந்தே லோக்கல் டிரைன் தான் ஓட்டுறீங்களா. திடீர்னு உங்கள ரொம்ப தூரம் போகற எக்ஸ்பிரஸ் டிரைன் ஓட்ட சொல்லிட்டா, நீங்க கன்டினியூஸா ரெண்டு நாளைக்கு டிரைன் ஓட்டணுமா. அப்போ உடம்பு என்னத்துக்கு ஆகும். அதுவுமில்லாம ஒருவாரம் கழித்து தான் வீட்டுக்கு வருவீங்களா” எங்கே ஒரு வாரம் அவன் முகம் பார்க்காமல் இருக்க வேண்டிவருமோ என்ற ஏக்கத்தில் கேட்டாள்.

“அம்மாடி..” அவள் கேட்டதிலும் அவளது முகபாவனையிலும் பூரித்து சிரித்தவன் “இப்பவாவது என் வேலையை பத்தி கேக்கணும் தோணிச்சே” என்று அவளை அழைத்து வந்து கட்டிலில் அமர்த்தியவன் அவள் உள்ளங்கையை வருடிக் கொண்டே..

“எங்க அம்மா எங்கள ஃப்ளைட்ல கூட்டிட்டு போவாங்க. ஒருநாள் அடம்பிடிச்சு டிரைன்ல போனப்போ தான் இது மேல காதல் வந்தது” என்றவன் “முதல்ல எக்ஸாம் எழுதி, டிரைனிங்கெல்லாம் முடிஞ்சி ஏஎல்பி, அசிஸ்டன்ட் லோகோ பைலட்டா தான் சேர்ந்தேன். மூணு வருஷம் ஏஎல்பியா இருந்தேன். கூட்ஸ் டிரைனுக்கு இருந்திருக்கேன்.. அப்புறம் எக்ஸ்பிரஸ் டிரைனுக்கும் ஏஎல்பியா இருந்திருக்கேன்.. வீட்டுல செம்ம திட்டு விழும். இந்த சம்பளத்துக்கு இவ்ளோ கஷ்டப்படணுமா.. பிசினஸை பார்த்திருந்தா பல நூறு கோடியா பெருக்கியிருக்கலாம்னு..” என்று அவனது அக்மார்க் புன்னகையை வீசியவன்..

“அப்புறம் ஷண்டர் லோகோ பைலட்.. அதாவது இந்த கூட்ஸ் இல்லாத வேகன்ஸ எல்லாம் யார்ட்ல இருந்து பிளாட்ஃபார்முக்கும், பிளாட்ஃபார்ம்ல இருந்து யார்ட்டுக்கும் கொண்டு போகணும். அதுக்கு அப்புறம் ரெண்டு வருஷம் கழித்து தான் நான் கூட்ஸ் டிரைன் எல்பி ஆனேன். அங்க இரண்டரை வருஷம் இருந்துட்டு இப்போ ஒன்னே முக்கால் வருஷமா தான் பேசஞ்ஜர்ஸ் டிரைன் எல்பி” என்று அனைத்தையும் அவளுக்கு விளங்கும் படி கூறினான்.

உடன் அவனுக்கு இதன் மேல் இருக்கும் காதல், அவனது வேலையில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்கள் என அனைத்தையும் உயிர்போடு சொல்லி கொண்டிருந்தவனை இமைக்க மறந்து ஆசையாக பார்த்திருந்தாள் அன்பரசி.

“எக்ஸ்பிரஸ் டிரைனுக்கு மூவ் ஆயிட்டேனா நீ நினைக்கிற மாதிரி ஒன்றரை, ரெண்டு நாளுக்கெல்லாம் கன்டினியஸா ஓட்ட மாட்டேன் ராசி மா. ஒரு பர்டிகுலர் டிரைக்கு அதோட ஆரிஜினேடிங் ஸ்டேஷன்ல இருந்து எல்பி, ஏஎல்பினு ஒரு க்ரூ புக் பண்ணுவாங்க. அந்த க்ரூ அங்கிருந்து நெக்ஸ்ட் டிப்போ வரைக்கும் ஓட்டுவோம். அதாவது நாங்க இந்த டிப்போல எடுத்தோம்னா கிட்டத்தட்ட மூன்னூறு கிலோமீட்டருக்கு தள்ளியிருக்க நெக்ஸ்ட் டிப்போ வரைக்கும் போவோம், அங்க இன்னொரு க்ரூ காத்துட்டு இருப்பாங்க. அவங்ககிட்ட கொடுத்துட்டு நாங்க சைன்ஆஃப் பண்ணிடுவோம். அவங்க அங்க இருந்து அடுத்த டிப்போ வரைக்கும் போவாங்க” என்று ஒவ்வொன்றாக அவளது கையில் கோலம் போட்டு சொல்ல அவள் மலைத்து கேட்டிருந்தாள்.

ரயிலில் செல்லும் நாம் அந்த ரயில் எப்படி இயங்குகிறது, யார் இயக்குகிறார்கள், எத்தனை தூரம் இயக்குவார்கள் என்பதெல்லாம் யோசிப்பதில்லையே. அதே நிலை தான் அன்புவிற்கும். ஒரே ஓட்டுனரே சென்னையில் தொடங்கி டெல்லி வரை ஓட்டுவார் என்று நினைத்த தன் அறியாமையை எண்ணி நொந்துக் கொண்டாள் அன்பு.

“அந்த டிப்போல இறங்கிடுற நாங்க அங்க இருக்க லான்ஞ்ல ரெஸ்ட் எடுத்துக்கலாம். ப்ரீ அக்காமடேஷன் தான். எயிட் ஹவர்ஸ் ரெஸ்ட்க்கு பிறகு நெக்ஸ்ட் டே அந்த டிப்போல இருந்து ஹோம் டிப்போக்கு போகற டிரைனுக்கு எங்களை புக் பண்ணுவாங்க. டிரைனோட சேர்ந்து நாங்களும் இங்க வந்து வீட்டுக்கு வந்திடுவோம்” என்று சிரித்தவன்,

“சோ, முப்பது மணிநேரம் தான் நீ என்னை பார்க்காம இருக்கணும். அப்புறம் நான் வந்திடுவேன்” அவள் கேட்காத கேள்விக்கும் அவள் மனதை படித்தவனாய் பதிலளித்தான்.

அனைத்தையும் கேட்ட அன்பரசி அவன் இடையை பற்றி அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள். இப்போதே பிரிவு துயரை உணர தொடங்கிவிட்டாளோ?

அவளை நிமிர்த்தியவன் “எனக்கு சக்கரவர்த்தினிய பெத்து தர்றீயா ராசி” என்று சட்டென கேட்க, அவள் முகம் மின்னலாய் பிரகாசித்தது. உடன் நாணமும் தொற்றி கொண்டது.

“என்ன.. திடீர்னு.. உங்களுக்கு பையன் வேண்டாமா” தடுமாறி கேட்டாள்.

“அதான் வருண் குட்டி இருக்கானே.. நாம பொண்ணு பெத்துக்கலாம். பேர் கூட யோசிச்சி வச்சிட்டேன். நவீனா சக்கரவர்த்தினி. எனக்கு ப்ரோமோஷன் வந்து நான் மெயில், எக்ஸ்பிரஸ்னு ஓட்ட போறதுக்கு முன்னாடி என் பொண்ணு கூட ஆசை தீர டைம் ஸ்பென்ட் பண்ணனும். எனக்கு பொண்ணு பெத்து தருவ தானே” அவன் ஆசையாக கேட்க..

‘பொண்ணு கூட மட்டும் தானா’ அவள் மனதிற்குள் நொடித்து கொண்டு முகம் திருப்பிக் கொண்டாள்.

அதை புரிந்தவன் அடக்கப்பட்ட புன்னகையுடன் “உனக்கும் சேர்த்து தான். இங்க உன்னை நான் தானே கண்ணுல வச்சி பார்த்துக்கணும்” என்று அவளை அணைத்து விடுத்தவன்..

“டூட்டிக்கு டைமாச்சு டி. பேசஞ்ஜர்ஸ் லேட்டா போகலாம். எல்பியே லேட்டா போகலாமா? இப்போ பிளான் மட்டும் தான் சொல்லிருக்கேன். நைட் எக்ஸிக்யூஷனை வச்சிப்போம்” என்று அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு விட்டு கிளம்பினான்.

அன்று அன்பரசி வீட்டிலிருந்தே வேலை பார்த்து கொண்டாள். கணவனின் வரவை எதிர்பார்த்து கொண்டே தன் வேலைகளை முடித்திருந்தவள் அவன் வரும் வரை டிவியாவது பார்க்கலாம் என்று தொலைக்காட்சியை உயிர்ப்பிக்க, அதில் செய்திகள் வந்தது.

அன்பு சலிப்புடன் அலைவரிசையை மாற்றும் நேரத்தில், ‘தொடரும் ரயில் விபத்துக்கள். ரயில்வே ஊழியர்களில் மற்றுமொரு கவனக்குறைவால் சென்னையிலிருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயிலும், எதிரே சூளுர்பேட்டையிலிருந்து வந்த ரயிலும் ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே முட்டி நின்றது’ என்று செய்தி போக அதிர்ச்சியில் அன்பரசிக்கு உலகம் தட்டாமாலை சுற்றியது.

கால்கள் நிற்க மறுக்க தரையில் பொத்தென அமர்ந்தவள் என்ன செய்வதென புரியாமல் எட்டி மெத்தையிலிருந்த கைபேசியை எடுத்து கணவனுக்கு அழைக்க அவனது எண் ‘சுவிட்ச் ஆஃப்’ என்று செய்தி சொன்னது.

கண்களில் நீர் நிறைய, ஒரு வேளை கணவனுக்கு ஏதேனும் ஆகியிருக்குமோ என்ற எண்ணமே அவளுக்கு கண்களை இருட்டி கொண்டு வர “சிபி..” என்று ஓலமிட்டு கதறினாள்.


உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்.

 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 18

அன்பரசிக்கு தன் உலகமே கை நழுவியது போல் இருந்தது. இப்போது யாரை அழைத்து என்னவென்று கேட்பது. அவளுக்கு சிபியின் எண்ணை தவிர வேறெதுவும் தெரியாதே. அதுவும் இப்போது அணைக்கப்பட்டிருக்கிறதே.

வீட்டிலும் அவள் அபர்ணாவை தவிர வேறு யாருடனும் பேசியதில்லை. தெய்வநாயகியை கண்டாளே பயமென்பதால், அவர் வெளியே இருக்கும் நேரத்தில் அறையை விட்டு வெளியிலும் வரமாட்டாள். பானுமதி அம்மா எப்போதும் தெய்வாவுடனே இருப்பதால் அவரை அவள் இதுவரை நேருக்கு நேராக பார்த்தது கூட இல்லை.

பூபதி கேசவனையும் அசோக்கையும் அவ்வப்போது பார்த்தாலும் குனிந்த தலையாகவே கடந்து விடுவாள்.

வழிந்தோடிய கண்ணீரை துடைத்து கொண்டு அபர்ணாவின் அறைக்கு ஓடினாள் அன்பரசி.

அபர்ணா மகனுக்கு பசியாற்றி உறங்க வைத்து கொண்டிருந்தாள். அசோக்கோ அப்போதே வீட்டிற்கு வந்திருந்தவன் தன்னை சுத்தப்படுத்தி கொண்டு குளியலறையில் இருந்து வெளியே வந்தான்.

அன்பரசியை முதலில் அசோக் தான் பார்த்தான். இப்படி அவள் இதுவரை அவர்கள் அறைக்கெல்லாம் வந்ததில்லை. யோசனையோடே அபர்ணாவின் தோளில் கைவைத்து அன்பரசியை காட்ட, “அன்பு” என்றவள் அவளிடம் எழுந்து வருவதற்குள் தானே உள்ளே வந்த அன்பரசி,

“மாமா, சிபி இன்னும் வீட்டுக்கு வரல. டிவில.. டிவில டிரைன் ஆக்சி.. ஆக்சிடென்ட்னு சொல்றாங்க..” அபர்ணாவை விடுத்து அசோக்கிடம் சொல்லியவள் கதறி அழுதாள்.

அவளது அழுகையில் தானும் பதறிவிட்டவன் தம்பிக்கு என்ன ஆயிற்றோ என்று துடித்து அவனுக்கு அழைத்தான். கைபேசி அணைக்கப்பட்டிக்க பற்களை கடித்தவன் “சொல்ற எதையும் கேக்கறதில்ல” என்று எரிச்சல் கொண்டான்.

“அழாத மா” அழும் அன்பரசியிடம் சொன்னவன் மனைவியிடம் கண்ணை காட்ட, அவளும் அன்பரசியை தாங்கி பிடித்து சமாதானம் செய்தாள்.

“கவலைப்படாத மா. அந்த டிரைன்ல தான் சிபி போயிருக்கணும்னு இல்லயே. நான் என்னனு போய் பார்த்துட்டு வரேன்” என்றவன் இரவு உடையிலேயே வண்டி சாவியை எடுத்து கொண்டு கிளம்பினான்.

“நானும் வரேன் மாமா, ப்ளீஸ்” என்று அன்பு கெஞ்ச, அவளது தவிப்பை புரிந்த அசோக் சம்மதமாய் தலையசைத்து விட்டு “அபர், நாங்க போயிட்டு வரோம். அம்மா, அப்பாவுக்கு எதுவும் தெரிய வேண்டாம். பயந்திடுவாங்க” என்று அன்பரசியையும் அழைத்துக் கொண்டு ரயில் நிலையத்திற்கு கிளம்பினான்.

வழியெங்கும் அன்பரசி அழுதுக் கொண்டே வர, அவளை கண்ணாடியின் வழியாக பார்த்த அசோக்கினால் அவளது வேதனையை புரிந்து கொள்ள முடிந்தது.

“அழாத மா. அவனுக்கு ஒன்னும் ஆகிருக்காது. எல்லாத்துலயும் அடம். நீயாவது சொல்லலாம்ல. நம்ப குடும்பத்துக்கு இந்த வேலை தேவை தானா. இப்படி அவன் வீட்டுக்கு வர வரை தினம் தினம் நாம செத்துக்கிட்டு இருக்கணுமா” அவளிடம் கேட்டு கொண்டே வண்டியை இயக்க, அன்பரசி எதுவும் சொல்லாமல் அழுது கொண்டே இருந்தாள்.

இருவரும் ரயில் நிலையம் வந்தடைந்ததும் உள்ளே சென்று சிபியின் பெயரையும் தாங்கள் செய்தி வாயிலாக அறிந்த ரயில் விபத்தை பற்றியும் சொல்லி விபரம் கேட்டனர்.

அங்கிருப்பவர்களும் அவர்களுக்கு பதிலளித்து கொண்டிருந்த வேளையில் “ராசி..” என்ற தன்னவனின் குரலில் சுற்றம் மறந்து, சூழ்நிலையும் மறந்து, கண்ணீர் சக்கரையாய் இனிக்க அவனை திரும்பி பார்த்தவள் “சிபி..” என்று அவனிடம் ஓடியதோடு யாரை பற்றியும் கவலை கொள்ளாது அவனை அணைத்துக் கொண்டாள்.

“எங்க போய்ட்டிங்க நீங்க. ஆக்சிடென்ட்னு போட்டிருந்தாங்க. உங்களுக்கு தானோ நினைச்சி செத்துட்டேன் தெரியுமா. இனி என்னை விட்டுட்டு எங்கயும் போகாதீங்க. நான் உயிரோடவே இருக்கமாட்டேன்” என்று அவன் மார்பில் முகம் புதைத்து கதறி அழுதாள் அன்பரசி.

அவளது முதுகை வருடி கொடுத்து சமாதானப்படுத்தியவன் “ராசி ஒண்ணும் இல்ல டா. நான் நல்லா தானே இருக்கேன். ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ்..” என்று அவளுக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினான்.

அதுவரை இருவரது பிணைப்பையும் கண்கள் பளிச்சிட பார்த்திருந்த அசோக், அன்பரசியின் அழுகை குறைந்து அவள் சிபியை விட்டு விலகி வந்ததும் தானும் தம்பியை அணைத்துக் கொண்டான்.

அண்ணனது அணைப்பில் அவன் எத்தனை பயந்திருக்கிறான் என்பதை சிபியால் புரிந்து கொள்ள முடிந்தது. தன் அணைப்பை இறுக்கி அண்ணனுக்கும் ஆறுதல் தந்தவன் “ஒண்ணுமில்லடா. சின்ன ஆக்சிடென்ட் தான். இன்டர்லாக்கிங் சிக்னல் கொடுத்து எடுத்திட்டு இருக்காங்க. அது தெரியாம அவரும் வர, நானும் போக கிட்டத்தட்ட கொலிஷன்ல இருந்து ஜஸ்ட் சேவ். இதுக்கெல்லாம் டிரைனிங் எடுத்திட்டு தான வரோம். பேசஞ்ஜர்ஸ் சேஃப்ட்டி முக்கியம்ல. லாஸ்ட் மினிட்ல எப்படியோ முட்டி நீக்காத குறையா சமாளிச்சிட்டோம்” என்று நடந்ததனைத்தையும் சொல்லி முடித்தான்.

வழக்கமாக தைரியத்தை மனதில் கொண்டு இது போன்ற சூழ்நிலைகளை கையாள்பவன் தான். இன்றோ முதல் முறையாக பயந்தான். அவனுக்காக இல்லை, அவனது ராசிக்காக. அவளுக்காக பிழைத்து செல்லவேண்டும் என்ற பயமே தன்னையும் காத்து, ரயிலில் இருப்பவர்களையும் காக்க செய்தது. இதில் எதிர்புறம் வந்த ரயில் ஓட்டுனரின் பங்கும் உண்டு. அவரும் இதுபோன்ற நிலையில் தானே தன் வண்டியை முயன்று நிறுத்தியிருப்பார்.

தம்பி சொன்னதை கேட்ட அசோக்கிற்கு ஏனோ கோபம் தான் வந்தது. ‘இவனுக்கு என்ன தலையெழுத்தா, இப்படி ஆபத்துடன் விளையாட’ என்று உள்ளுக்குள் கொதித்தான்.

“அவ எங்க நியூஸ் பார்க்க போறானு ராசிக்கு தெரியாம மறைச்சிடலாம்னு பார்த்தேன். இன்னைக்குனு பார்த்து பார்த்துட்டா” என்று மெலிதாக புன்னகையும் சிந்தி மேலும் அண்ணனின் கோபத்தை கிளப்பினான்.

அன்பரசியோ “நீங்க இனி கிளம்பிறதுக்கு முன்னாடி எந்த டிரைன், எங்க போறீங்க எல்லாம் என்கிட்ட சொல்லணும். நான் நீங்க நல்ல படியா போயிட்டு வரவரைக்கும் ப்ரே பண்ணிக்கிட்டே இருப்பேன்” என்றாள் விசும்பிக் கொண்டே.

“நல்ல பொண்ணு மா நீ. என்னாலயெல்லாம் வயித்துல நெருப்பை கட்டிக்கிட்டு இருக்க முடியாது. இனி இந்த வேலைக்கு போக கூடாதுனு அவன் சட்டையை பிடிச்சி சொல்லுவனு பார்த்தா, அவனுக்கு சப்போர்ட் பண்ற” என்று ஆற்றாமையாய் பேசிய அசோக் “அம்மா, அப்பா, என்னால தான் ஒண்ணும் பண்ண முடியல. நீயாவது இந்த வேலை வேண்டாம்னு சொல்ல கூடாதா” என்றும் கேட்டான்.

“அவங்களுக்கு இந்த வேலை எவ்வளவு பிடிக்கும்னு தெரிஞ்சும் என்னால அப்படி சொல்ல முடியாது மாமா” அவளுக்கும் வலி தான். இருந்தும் தன் பயத்தை மறைத்து கணவனுக்காக கொண்டு மூத்தாருக்கு பதிலளிக்க, இவர்களை திருத்த முடியாது என்று அசோக் பற்களை கடித்தான்.

மூவரும் காரில் வீட்டிற்கு கிளம்பினர். அசோக் வண்டியை ஓட்டி கொண்டிருக்க, சிபியும் அன்புவும் பின்னிருக்கையில் அமர்ந்திருந்தனர்.

அன்புவின் பதிலில் நெகிழ்ந்து தான் போயிருந்தான் சிபி. இருந்தும் அவள் பயமும் தவிப்பும் அவனுக்கும் புரியாமல் இல்லை. ஜன்னல் வழியே சாலையை வெறித்திருந்தவளின் கைகள் இன்னமும் நடுக்கத்தை காட்டியது.

அவளை தன்னை நோக்கி இழுத்து கைகளை அழுத்தி பிடித்து அவள் படபடப்பை குறைக்க முயற்சி செய்தான். அவளோ யார் இருக்கிறார்கள் என்றும் பாராது அவன் நெஞ்சில் தாயை தேடும் சேயாய் தஞ்சம் புகுந்துக் கொண்டாள்.

அண்ணனை சங்கோஜமாக பார்த்த சிபி “டேய் அண்ணா, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு நேரா மட்டும் பார்த்து வண்டி ஓட்டிக்கோடா” என்று கெஞ்சலாக சொல்லிவிட்டு தன்னவளை தனக்குள் முழுவதுமாக இறுக்கி கொண்டான்.

சிபியும் அன்பரசியும் அவர்களது உலகத்தில் சஞ்சரித்து கொண்டிருந்தனர். அவர்களது அன்பில் நெகிழ்ந்த அசோக் வண்டியை வீட்டை நோக்கி செலுத்தி கொண்டிருந்தான்.

அப்போது அவனது அலைபேசி கார் ப்ளூடூத் வாயிலாக அலற, முதலில் யோசித்தவன் பின் அழைப்பை ஏற்று “சொல்லுங்க ப்பா” என்றான்.

“எங்க இருக்க அசோக். ரெண்டு யூனிட் டிரைன் ஏதோ மோதிக்கிச்சாமே. உங்க மாமா ஃபோன் பண்ணி சொன்னார். சிபிக்கு ஃபோன் பண்ணா அவன் ஃபோன் ஸ்விச்ட் ஆஃப்.. அபர்ணா தான் நீயும், அன்புவும் போயிருக்கீங்கன்னு எங்களையும் எங்கயும் போகவிடல. அவனை பார்த்துட்டீங்களா. நல்லா தானே இருக்கான். உங்க அம்மாவை தான் சமாளிக்க முடியல.. சிபிக்கு ஒண்ணுமில்லல. என் பையன் நல்லா தானே இருக்கான்” அவனை பேசவும் விடாது சிபிக்கு ஒன்றுமில்லை என்பதை தவிர வேறெதுவும் கேட்க விரும்பாதவராக தானே பேசியிருந்தார் பூபதி.

“அப்பா ப்ளீஸ், காம் டௌன். அவனுக்கு ஒண்ணுமில்ல. நல்லா இருக்கான். நாங்க வீட்டுக்கு தான் வந்துட்டு இருக்கோம். வந்துட்டு பேசிக்கலாம்” என்று அசோக் பதில் சொல்லி கொண்டு இருப்பதற்கும் கணவரிடமிருந்து கைபேசியை பிடுங்கிய தெய்வநாயகி,

“நம்ப பேச்ச கேக்கவே கூடாதுனு கங்கணம் கட்டிக்கிட்டு என்னெல்லாம் பண்றான் பாரு உன் தம்பி. அவன் நல்லா இருக்கான்னு சொன்னதும் தான் உயிரே வருது. ஊர்ல இருக்குற எல்லாம் தெய்வத்துக்கும் வேண்டுதல் வச்சிருக்கேன். எதையும் கேக்காத புள்ளைய வச்சிக்கிட்டு கடவுள் கிட்ட தான மன்றாடணும்” மகன் மீதிருக்கும் அன்பையும் வன்சொற்களாலே வெளிப்படுத்தி கொண்டிருந்தார்.

அவரது அன்பு வண்டியிலிருந்த மூவருக்குமே புரிய அமைதியாக கேட்டிருந்தனர்.

“அப்பவே நான் சொன்னேன் அந்த ராசி கெட்டவள கல்யாணம் பண்ண வேண்டாம்னு. கல்யாணம் பண்ண ஆறே மாசத்துல இப்படி ஒண்ணு நடக்குது. இதுல ராசி கெட்டவளை ராசி ராசின்னு வேற கூப்பிட்டுட்டு திரியறான் உன் தம்பி” நடந்ததற்கு அன்பரசியை பொறுப்பாக்கி தெய்வா பேச, கேட்டிருந்தவளுக்கு கண்கள் கலங்கிவிட்டது.

சிபி மனைவியை ஆறுதலாய் பிடித்து கொண்டதோடு, அன்னையை அடக்க இருக்கையிலிருந்து முன்னால் வர, “அம்மா..” தம்பிக்கு முன் அன்னையை தடுக்கும் படியாக குரல் கொடுத்த அசோக் “நூலிழைல பிழைச்சி வந்திருக்கான். இப்போ இந்த மாதிரி பேசணுமா” என்று அழுத்தி சொன்னான்.

வீட்டிற்கு வந்ததும் மகனை கண்ட தெய்வாவிற்கு அன்பரசி மீதிருந்த வெறுப்புணர்ச்சி எல்லாம் பின்னுக்கு போக, இத்தனை மாதங்களாக சிபியிடம் பேசாதிருந்தவர் அவனை கட்டியணைத்துக் கொண்டு அழுதார். சிபிக்கும் அதற்கு மேல் அவர் மீது கோபம் பாராட்ட மனமில்லாமல் தனக்கு ஒன்றுமில்லை என்று எடுத்து சொல்லி அவரை சமாதானம் செய்தான்.

ஒருவழியாக வீட்டிலிருப்பவர்களை சமாளித்து அறைக்கு வந்தால், அங்கே அன்பரசி அவனை விட்டு நொடியும் பிரியாது கணவணுக்கு தேவையானவற்றை கவனித்து கொண்டிருந்தாள்.

இருவரும் சாப்பிட்டு முடித்து வந்து படுக்க, இரவிலும் அவனோடு அதிகம் ஒன்றி அவனது மேல் சட்டையை கையில் இறுக்கமாக பிடித்தவாறே உறங்கினாள்.

அடுத்த நாள் காலையிலும் அன்பரசி எதுவும் பேசாது, இயந்திர கதியில் அன்றைய வேலைகளை செய்திருந்தாள். அவளை பார்த்திருந்த சிபிக்கு தான் நேற்றைய சம்பவம் அவள் மனதில் உண்டு செய்திருக்கும் பாதிப்பை எண்ணி நெஞ்சில் பாரம் கூடி போனது.

மனைவியை அழைத்து வந்து கட்டிலில் அமர்த்தியவன், தானும் உடனமர்ந்து “நான் வேணா இந்த வேலையை விட்டிடட்டுமா” என்று கேட்டான்.

அவனை அவள் சட்டென நிமிர்ந்து பார்க்க “நீ பயந்துகிட்டே இருக்க வேண்டாம். நான் ரிசைன் பண்ணிடுறேன்” என்று மீண்டும் சொன்னான்.

அதை கேட்டு மறுப்பாய் தலையாட்டிய அன்பரசி, அவன் கன்னம் தாங்கி “பயமா தான் இருக்கு. அதுக்காக உங்க சந்தோஷத்தை பறிக்க சொல்றீங்களா” என்றவளது பதிலில் அவனது மனமும், உடலும் சிலிர்த்துவிட்டது.

அவளை தன்னோடு அணைத்து கொண்டவன் “தேங்க் யு ஃபார் அண்டர்ஸ்டாண்டிங் மீ ராசி. ஒண்ணு மட்டும் சொல்றேன். நான் எங்க போனாலும், எவ்ளோ தூரம் போனாலும் உனக்காக பத்திரமா திரும்ப வருவேன். உன்னை நிர்கதியா என்னைக்கும் விட்டுட்டு போகமாட்டேன்” என்று அவள் கரம் மீது கரம் பதித்து சொன்னான்.

அவன் கவனமாக தான் இருப்பான். அதில் எந்த ஐயமுமில்லை. ஆனால் மனித தவறுகளாலும் தொழில்நுட்ப கோளாறுகளாலும் ஏற்படும் விபத்தை யாராலும் தடுக்க முடியாதே. அவனுக்காக சரியென்று தலையசைத்தாள். தினம் தினம் அவன் பணி சென்று திரும்பும் வரை மனதில் பய பந்தை சுமந்து கொண்டு தான் இருக்க போகிறாள். அதையும் அவனுக்காக தாங்கிக் கொள்ள தயாராகிவிட்டாள்.

மனைவியின் மனநிலையை மாற்றும் விதமாக “அச்சச்சோ ராசி, நேத்து நடந்த ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேன்” வாயில் கை வைத்து பாவனையெல்லாம் பெரிதாக கொடுத்து ஆரம்பித்தான்.

அவளும் என்ன என்பதாய் தன் குண்டு கண்களை விரிக்க, அவள் கரத்தை தன் கைகளுக்குள் வைத்து கொண்டவன் “நேத்து காலையில பட்டாபிராம் டிரைன் எடுத்தேன். அப்போ ஒரு பையன். அவன் எதோ எக்ஸாம்க்கு போயிட்டு இருக்கான் போல. டிரைன் எடுக்குறதுக்குள்ள காஃபி வாங்கலாம்னு இறங்கி இருக்கான். அவன் வாங்கிட்டு வர்றதுக்குள்ள கார்டு சிக்னல் கொடுத்துட்டாரு, நானும் டிரைனை எடுத்துட்டேன்” என்றதும் ஆர்வமாக கேட்டிருந்தவளும் அதிர்ந்து..

“அச்சச்சோ, அந்த பையனை விட்டுட்டு போய்ட்டிங்களா சிபி. எக்ஸாம் இருக்குனு சொன்னீங்களே. பாவம் அவன்” என்று கதைக்குள் மூழ்கி அந்த மாணவனுக்கங்க வருத்தப்பட்டாள்.

“டிரைன் மூவ் ஆக ஆரம்பிச்சதும் கையில இருந்த காப்பியோடவே ஓடி வந்தவன் ஸ்பீட் எடுத்ததும் என்ன பண்ணணு தெரியாம காஃபிய கூட கீழே போட்டுட்டு ஓடி வந்தான். அப்புறம் ஐயா தான் அவரோட ரதத்தை ஸ்லோ பண்ணி அவனை ஏத்திக்கிட்டாரு” சாதித்தவன் போல் சட்டை காலரை எல்லாம் தூக்கிவிட்டு கொண்டு சொல்லி சிரித்தான்.

அன்புவிற்கு சிரிக்கும் அவன் கன்னங்களை கிள்ளி முத்தமிட ஆசை எழுந்தது. தன் உணர்வுகளை கட்டுப்படுத்தி கொண்டு கணவன் சிறுபிள்ளை போல் சொல்லும் கதையை கேட்டிருந்தாள்.

“நான் திரும்ப வந்த போது அந்த பையன் என்னை பார்த்து எக்ஸாமுக்கு டைமுக்கு போய்ட்டேன்னு சொல்லி தேங்க்ஸ் சொன்னான் ராசிமா. நானும் இந்த ரிஸ்க் எடுத்தெல்லாம் வண்டி பின்னாடி ஓட கூடாது. இது இல்லனா அடுத்த டிரைன். அதுக்கு நாம நேரத்துல கிளம்பணும்னு அட்வைஸ் பண்ணிட்டு வந்தேன்” என்று பூரித்து சொன்னான்.

இம்முறை ஆசையாக அவனது கன்னத்தை செல்லமாக கிள்ளியவள் “ஏன் சிபி சார், இந்த அட்வைஸெல்லாம் ஊருக்கு மட்டும் தானா” என்று குறும்பு வழிய கேட்டாள்.

அவள் எதை பற்றி சொல்கிறாள் என்று கண்களில் பேராவல் கொண்டு அவளை பார்க்க, “எனக்கு ஒரு பையனை தெரியும். இப்படி தான் எக்ஸாம் எழுத போறேன்னு கூட்டமான பஸ்ல வவ்வால் மாதிரி தொங்கிகிட்டே வந்தான்” என்றதுமே அவள் யாரை சொல்கிறாள் என்பது அவனுக்கு அவளது குறும்பு சிரிப்பிலேயே புரிந்தது.

சிபி ஆனந்த அதிர்ச்சியில் வாயில் கைவைத்து கொண்டான். அவனது முக பாவனைகளை தனக்குள் பதித்துக் கொண்டே மேலும் தொடர்ந்தாள் அன்பரசி.

“முதல்ல அவனை பார்த்தப்போ இதுக்கு முன்ன இவன் பஸ்ல எல்லாம் ஏறி இருக்கானானு தான் பார்த்தேன். அத்தனை தடுமாற்றம். நான் அவன் கையையும், கையில இருந்த ரிங்கையும் தான் பார்த்துட்டே இருந்தேன். அப்புறம் அவனுடைய பைலை என்கிட்ட கொடுத்து வச்சிக்க சொன்னான்” அவள் சொல்ல சொல்ல வரையறுக்க முடியாத உணர்வுகளின் சங்கமத்தோடு தன்னவளை பார்த்திருந்தான் சிபி.

‘கள்ளி, இத்தனை நாட்களாக இதையெல்லாம் சொல்லவில்லையே’ என்று மானசீகமாக அவள் தலையில் ஒரு குட்டும் வைத்தான்.

“என்னமோ தெரியல அவன் பேர் தெரிஞ்சிக்கணும்னு அப்படி ஒரு ஆவல். அவன் பார்த்திட கூடாதுனு வேண்டிகிட்டே மெல்லமா பைல் ஃபோல்டரோட ஜிப்பை திறந்தேன். லைட்டா தூக்கி பர்ஸ்ட் ரேக்கிலேயே இருந்த அவன் ஹால் டிக்கெட்டை பார்த்தேன். அழகான தமிழ் பெயர். கூடவே டேட் ஆஃப் பர்த்தும் பார்த்தேன்” இப்போது தானே அவள் ஏன் ஒவ்வொரு முறையும் அவன் பெயரை நீட்டி முழக்கி அழைத்தாள் என்பது புரிகிறது. அவன் சொல்லவில்லை, அபர்ணாவும் சொல்லவில்லை. அவளாகவே பார்த்து தெரிந்து கொண்டது அல்லவா அவன் பெயர்.

“எல்லாத்தையும் ஆசையா மனசுக்குள்ள சேவ் பண்ணிக்கிட்டு, அடுத்து ஃபோன் நம்பருக்கு போனப்போ தான் அந்த அசம்பாவிதம் நடக்க இருந்தது” என்றவளுக்கு இன்றும் அதை எண்ணி குலை நடுங்கியது.

“பார்த்து பிடிக்க மாட்டீங்களா. ஒரு நிமிஷம் இதயம் நின்னு துடிச்ச மாதிரி இருந்துச்சு” இதுவரை மூன்றாம் மனிதனை பற்றி சொல்வது போல் சொல்லிக் கொண்டிருந்தவள் இப்போது நேரடியாக அவனை கண்டித்தாள்.

“எக்ஸாமுக்கு ஒரு மணி நேரம் முன்னாடியே கிளம்பினா இது மாதிரி சூழ்நிலைகளை தவிர்க்கலாம் தானே” என்னவோ இன்று தான் அவனது தேர்வு போல் தன் குண்டு கண்கள் வெளியே வர அவனை அதட்டவும் செய்தாள்.

“அப்போ மேடமுக்கு என்னை ஞாபகம் இருந்திருக்கு. இத்தனை நாள் எதுவும் தெரியாத மாதிரி நடிச்சிட்டு இருந்திருக்கீங்க” சொல்லவில்லை என்ற கோபமா, இல்லை அவளுக்கும் தன்னை நினைவுள்ளது என்ற சந்தோசமா என்று பிரித்தெடுக்க முடியா குரலில் கேட்டான்.

“ஏன் சொல்லணும். எத்தனை ஆசையா நான் உங்கள பார்த்திட்டு இருந்தேன். உங்க ஸ்டாப் வந்ததும் இறங்கி போய்ட்டிங்க. அட்லீஸ்ட் திரும்பியாவது பார்த்திருப்பீங்களா. ஆனா நான், ஒரு நாளாவது நீங்க அந்த பஸ்ல வந்திட மாட்டீங்களானு கிட்டதட்ட ரெண்டு மாசம் அதே பஸ்ல வந்தேன்” என்றவள் அவன் சட்டையை கொத்தாக பிடித்து,

“நீ வந்தியா டா. அப்பா, அண்ணன்னு எல்லாரும் காலேஜ் பஸ்ஸுக்கும் காசு கட்டிட்டு வெளி பஸ்ல போறியேனு எவ்வளவோ திட்டினாங்க. நீங்க வருவீங்கன்னு நம்பினேன். ஆனா நீங்க வரல சிபி. இப்போ உன்னை தான் லவ் பண்றேன், கல்யாணம் பண்ணா உன்னை தான் பண்ணுவேன்னு உறுதியா நின்னு என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களே. அன்னைக்கே வந்திருந்தா என் வாழ்க்கை அந்த அபிஷேக் கிட்ட நாசமாகி இருக்காதே. ஏன் சிபி வரல. நீ ஏன் என்னை தேடி வரல” என்று விரக்தியாக அவன் சட்டையிலிருந்து கையெடுத்தவள்,

“ஒன் சைடு லவ்வுக்கு என்ன மரியாதை இருக்கும். நீ மட்டும் என்னை தேடி வந்து இப்போ பிடிச்சிருக்குனு சொன்னதை அப்போ சொல்லிருந்தா, நான் இன்னைக்கு இந்த நிலைமைல இருந்திருக்க மாட்டேனே. அப்பா அபிஷேக்கை பத்தி சொல்லி உனக்கு கல்யாணத்துக்கு சம்மதமானு கேட்ட நிமிஷம் கூட உன் முகம் தான ஞாபகம் வந்து தொலைச்சுச்சு. இதுக்கு மேலயும் கனவை நம்பினா இந்த ஊர் என்னை பைத்தியக்காரின்னு தானே சொல்லும். நீ தானே சிபி என்னை பைத்தியம் ஆக்கின. உன் மேல என்னை பைத்தியமாக்கி ஒரேடியா பைத்தியகாரி ஆக்கிட்ட” என்று முகத்தை மூடி கொண்டு அழுதாள்.

அவள் கண்ணீரை அவனால் சகித்து கொள்ள முடியவில்லை. அவளை நெருங்கி அமர்ந்தவன், அவளை அணைத்து ஆசுவாசப்படுத்த முயற்சித்தான்.

அவளோ அவன் மார்பில் குத்தி “நீ போ. விடு என்னை. நீ போ.. போ நீ” என்று அவனிடமிருந்து திமிறினாள்.

இதுவரை அவனை அவள் ஒருமையிலெல்லாம் அழைத்ததே இல்லை. அவன் மீது அவள் வைத்திருந்த காதலும் நம்பிக்கையும் புரிந்தது. தான் தவறு செய்தோம் என்று சொல்லிவிட முடியாது. விதி விளையாடியது என்பது தான் சரியாக இருக்கும்.

ஆனால், அனைத்தையும் சரி செய்து கொண்டிருக்கிறான். ஒருநாள் முழுவதையும் மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையும் அவனுக்கிருந்தது.

ஒரு கையால் அவள் கைகள் இரண்டையும் பிடித்தவன், மற்றொரு கையால் அவள் தாடையை பிடித்து அவள் இதழோடு தன்னிதழை பொருத்தி அவள் வாயை அடைத்தான்.

தன்னை விட்டு விலக முயற்சி செய்பவளை விலக விடாது இதழ் பூட்டிட்டவன், ஆழந்த, அழகான முத்தத்திற்கு பிறகே அவளை விடுவிக்க, அதுவரை அமைதியாக இருந்தவள் மீண்டும் எதையோ சொல்ல வந்தாள்.

இம்முறை அவளை மொத்தமாக மூடி தன் தேடலை அவளிடம் தொடங்கினான். வலியில் துடிப்பவளை தன்னிடம் மயங்க செய்து மருந்தளிக்க பார்த்தான்.

ம்ஹும்.. அழுத்தி பிடித்த கோழி குஞ்சாய் “என்ன பண்றீங்க.. நான் கோவத்துல இருக்கேன்” என்று கொக்கரித்தாள்.

“அட, சும்மா இருடி. நேத்தே ஒரு எக்ஸிக்யூஷன் நடக்காம போய்டுச்சு” சோகம் போல் சொன்னவன் “எனக்கு எந்த விஷயத்தையும் ஒடப்புல போடுற பழக்கமே இல்ல. சக்கரவர்த்தினி சீக்கிரம் வீட்டுக்கு வர வேணா” என்றவன் அவளை ஆள தொடங்கினான்.

இத்தனை நாட்களாக இந்த காதலை தானே அவளிடம் வேண்டினான். இன்று அது பல வருடங்களாக அவனுக்காக காத்திருந்திருக்கிறது என்று தெரிந்தால் விடுவானா அவன். காதல் சுகம் எப்படி இருக்குமென்று அவளுள் தேடி தேடி அவளிடமே தொலைந்தான் அவன்.

அவன் மார்பு முடிகளை அளவெடுந்திருந்தவளை நிமிர்த்தியவன் “உனக்கு என் மேல கோபம் இல்லையே ராசி” என்றான்.

அவள் அமைதியாக அவனை பார்த்திருக்க “அப்போ எக்ஸாம் க்ளியர் பண்ணனும், எல்லார் முன்னாடியும் ஜெயிக்கணும்னு மட்டும் தான் இருந்துச்சு. அது லவ் தான்னு கூட உணராம இருந்திருக்கேன். லவ் விஷயத்துல நான் மக்கு பையன்னு இப்போ தான் புரியுது. சாரி டி” என்று அவள் பிஞ்சு விரல்களில் முத்தம் பதித்து கெஞ்சுதலாய் கேட்க, ஆத்தா மலையிறங்கி விட்டது போல், அவனது பழைய ராசியாக தலையசைத்தாள்.

“ஆனா எப்பவுமே நீ தான் என் ராசி. உன்னால தான் நான், என் வேலை எல்லாம். அதுமட்டுமில்ல, உன்னை தேடி நானும் ரெண்டு மாசம் கழித்து அந்த பஸ்ல டிராவல் பண்ணிருக்கேன். ஒருவேளை நீ என் கண்ணுல பட்டிருந்தா அன்னைக்கே அது காதல்னு புரிஞ்சிகிட்டு இருந்திருப்பேனோ என்னவோ” என்று மீண்டும் “சா..” சாரி என்று அவன் மன்னிப்பு கேட்க வருவதற்குள் தன் இதழ்களால் அவன் வாயை மூடினாள்.

நாட்கள் நகர்ந்தோடியது..

அன்றொரு நாள் அபர்ணாவை அசோக் ஏதோ கையொப்பம் இடவேண்டுமென்று அலுவலகத்திற்கு வர சொல்லியிருந்தான். அன்பரசி அலுவலக அழைப்பில் இருந்ததால் மகனை மாமியாரிடம் விட்டு சென்றாள் அவள்.

கணவர், மகன்கள், பேரப்பிள்ளை என்று வந்துவிட்டால் தெய்வநாயகி சிறந்த பெண்மணியே. யாரையும் நம்பியும் அவர்களது பொறுப்பை விடமாட்டார்.

இன்றும் பேரனை கண்ணும் கருத்தமாக பார்த்து கொண்டிருந்தார்.

குழந்தை வருணோ சிறிது நேரம் பாட்டியிடம் விளையாடி கொண்டிருந்தவன், பின் “அம்மா.. அம்மா..” என்று அழ தொடங்கிவிட்டான்.

அபர்ணாவிற்கு அழைத்து கேட்டதற்கு தான் வருவதற்கு இன்னும் சிறிது நேரமாகும், அதுவரை வேண்டுமென்றால் அன்பரசியிடம் விட சொன்னாள். தெய்வநாயகியும் வீம்பிற்கென பேரனை அன்புவிடம் விடாமல், தானே சமாளிக்க முயற்சி செய்தார். அவரது பேரனாயிற்றே, அவரை தலையால் தண்ணீர் குடிக்க வைத்தான்.

வேறு வழியில்லாமல் பேரனை தூக்கி கொண்டு மின்தூக்கி வாயிலாக முதல் தளத்திற்கு சென்றவர், சிபி, அன்பரசியின் அறைக்கு செல்லும் வழியில் கால் வழுக்கி பேரனையும் போட்டு தானும் கீழே விழுந்தார்.

குழந்தை அலறும் சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்த அன்பு, அங்கே வருணும் தெய்வநாயகியும் விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ந்து போனாள்.

“ஐயோ வரு குட்டி.. அத்தை” விரைந்து வந்து குழந்தையை தூக்கியவள், ஒரு கையால் தெய்வநாயகியையும் எழுப்ப முயற்சிக்க, அவரிடமிருந்து அவளுக்கு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.

தன்னை பிடிக்காததால் தான் தன் உதவியோடு எழ மறுக்கிறார் என்று நினைத்தவள் மேலிருந்தே கீழிருக்கும் வேலையாட்களுக்கு குரல் கொடுத்தாள்.

“அவங்கள எதுக்கு கூப்பிடற. முதல்ல குழந்தைக்கு என்னனு பாரு. அடி ஏதாவது பட்டிருக்கா, ரத்தம் ஏதாவது வருதான்னு பாரு. அவனை கொஞ்சம் சமாதானம் படுத்திட்டு வந்து என்னை தூக்கு” அந்நேரத்திலும் கம்பிர குரலிலே சொன்னார் தெய்வா.

குழந்தையை தூக்கி ஆராய, அவனுக்கு அடி எதுவும் பட்டது போலோ, இல்லை இரத்த காயமோ எதுவும் இருப்பது போலோ தெரியவில்லை.

வருணை சமாதானம் செய்து அவனது நடைவண்டியில் அமர்த்திவிட்டு வந்து மாமியாரை தூக்கினாள் அன்பு. அவளால் அவரை தூக்க முடியவில்லை என்பதை விட, தெய்வநாயகியால் தன் வலது காலை அசைக்க கூட முடியவில்லை என்பது தான் உண்மை.

எப்படியோ வேலையாட்களின் உதவியோடு போராடி மாமியாரையும் வருணையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றாள்.

விசயம் அறிந்து பூபதி கேசவன், அசோக், அபர்ணா என மூவரும் மருத்துவமனைக்கு விரைந்தனர். சிபியின் கைபேசி தான் அணைக்க பட்டிருந்ததால் அவனுக்கு தகவல் சொல்ல முடியவில்லை.

மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்ததில் வருணுக்கு ஒன்றுமில்லை. குழந்தை கீழே விழுந்த அதிர்ச்சியில் தான் அழுதிருக்கிறான். தெய்வா தான் பேரனை கீழே விழும் கடைசி மட்டும் அவனுக்கு அடி எதுவும் படாதவாறு தானே பிடித்திருந்தார். இருந்தும் அனைத்து டெஸ்ட்களையும் எடுத்து ஒன்றுமில்லை என்று தெரிந்தவுடன் தான் அபர்ணா தன் அழுகையை நிறுத்தினாள்.

தெய்வநாயகிக்கு தான் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு காலில் கட்டு போட்டிருந்தனர். தலையிலும் ஓர் இடத்தில் வெட்டி தையல் போட்டிருக்கிறார்கள்.

தன் பணி முடிந்து கைபேசியை உயிர்ப்பித்த சிபி, விசயமறிந்து மருத்துவமனைக்கு அடித்து பிடித்து வந்தான். அம்மாவை இந்நிலையில் கண்டதும் அவனுக்கு கண்களெல்லாம் கலங்கி விட்டது.

அன்று மாலையே ஒரு மாத ஓய்வென்று அறிவுறுத்தி தெய்வாவை வீட்டிற்கு அனுப்பிவிட, அன்றைய நாள் எப்படியோ கடந்து விட்டது.

அடுத்த நாளில் இருந்து முன்பை போலவே பானுமதி அம்மாவே அவரை பார்த்து கொள்வதாக இருந்தது.

அப்போது தான் அபர்ணாவிற்கு அந்த யோசனை தோன்ற, அதை அன்புவிடமும் சொன்னாள்.

“அச்சோ.. வேண்டாம் அபர்ணா. எதுக்கு ரிஸ்க்” என்று பயந்தாள் அன்பு.

ஆனால் அபர்ணா விடுவாளா. அவளை கையோடு அழைத்துக் கொண்டு பானுமதிக்கு அறைக்கு வந்தவள் “பாட்டி, வரு குட்டி அடிப்பட்டதுல இருந்து சிடுசிடுன்னு அழுதுகிட்டே இருக்கான். ரொம்ப பயந்து இருக்கான் போல. யாராவது கூடவே இருக்கணும். உங்களுக்கும் வயசாகிடுச்சி. இப்போ போய் அத்தையோட தேவைக்கெல்லாம் நீங்க அவங்கள தூக்கி நிறுத்தி ரெஸ்ட்ரூமுக்கு கூட்டிட்டு போயிட்டு வர முடியுமா. இல்லை, அவங்கள எழுப்பி உட்கார வச்சி சாப்பாடு தான் ஊட்ட முடியுமா” முகத்தை பரிதாபமாக வைத்துக் கொண்டு சொன்னவள்,

“அதனால, நான் குழந்தை கூட இருக்கேன். எனக்கு உதவியா நீங்களும் ஏசிக்கு ரூம்ல, டிவி பார்த்துகிட்டே வருணையும் பார்த்துக்கோங்க. அன்பு அத்தையை பார்த்துக்கிட்டும். அத விட அவளுக்கு வேறு என்ன வேலை இருக்கு. இந்த வீட்டு மூத்த மருமகளா இப்ப கூட பொறுப்பா யோசிக்கலனா எப்படி..?” என்று மூச்சுவிடாமல் பேசி முடித்தாள்.

அதை கேட்ட பானுமதி ‘தெய்வாவோட ரெண்டு மருமகள்களுமே சரியான ஜித்துக்காரிங்களா தான் இருக்காளுங்க. ஆனா இதெல்லாம் தெய்வா கிட்ட பலிக்குமா. அவ உடம்பு சரியில்லாம இருந்தப்போ தான் நானே இந்த வீட்டுக்கு வந்தேன். இதுவரை ஒரு சங்கிலி வாங்கி கொடுத்திருப்பாளா. இதுல வாம்மா சின்ன மருமகளேனு இந்த ஒண்ணுமில்லாதவள ஏத்துப்பாளா.. நல்லா நடக்கும்.. அப்படினு மனக்கோட்டை தான் கட்டணும்’ என்று மனதிற்குள்ளேயே கறுவியவர்,

‘எது எப்படியோ, என்னாலயும் பழைய மாதிரி இப்ப தெய்வாவ தூக்கி, கொண்டு அவளுக்கு பணிவிடை செய்ய முடியாது’ என்று யோசித்து அபர்ணாவிடம் சரி என்றார்.

அதே போல் தெய்வாவிடமும் “உனக்கு சேவகம் பண்றதுக்கு எனக்கு கசக்கவா போகுது. என்ன பண்றது, எனக்கு வயசாகிடுச்சுடி மா. திடீர்னு தூக்கறேன்னு கீழ போட்டுடேனா உனக்கு தானே வலி, வேதனை” என்று வராத நீலி கண்ணீரை துடைத்து..

“உனக்கு தான் இப்போ ரெண்டு மருமகள்கள் இருக்காங்களே. அவங்களை மாமியாரா கெத்தா வேலை வாங்கு” என்றும் சொல்லி கொடுத்தார்.

தெய்வாவிற்கும் வேறு வழியின்றி அதை ஏற்க, அன்றிலிருந்து அவரை பார்த்து கொள்ளும் பொறுப்பு அன்பரசியை சேர்ந்தது.


உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்...

 
Status
Not open for further replies.
Top