பாகம் 22
சிறிது நேரத்தில் தன்னை சரி செய்து கொண்ட ராதா தனது கவனத்தை வேலையில் திருப்பினாள். கணினியில் தனக்கு வந்த மெயில்களை பார்வையிட்டு வந்தவள் வருண் அனுப்பிய திருமண ஆர்டர் மெயில் திறந்தாள். அதில் வாடிக்கையாளரின் தேவைகளை படிக்க தொடங்கினாள். ராதையும் கிருஷ்ணரும் ஒன்றாக இருப்பது போன்று டிசைன் வேண்டும் என்று அவர்கள் விரும்பி இருந்தனர்.
மனம் வேலையில் செல்வேனா என அடம் பிடித்தது, ஆனாலும் அதில் இருந்த ராதா கிருஷ்ணா டிசைன் சற்றே வேலை செய்ய கை தன்னால் வரைய ஆரம்பித்தது. அவள் முடித்தபோது அழகிய மயிலிறகிற்க்குள் ராதாவும் கிருஷ்ணனும் ஒருவரை ஒருவர் சிருங்காரமாய் பார்த்து கொண்டு நின்றனர். அதற்கு அவள் சேர்த்திருந்த வண்ணங்களில் கிருஷ்ணா நீல நிறத்திலுள், ராதா பச்சை நிறத்திலும் இரு நிறமும் சேர்ந்து பின்புலம் மயிலிறகாய் பச்சையும் நீளமும் ஒன்றிணைந்து பார்ப்பவர் கண்களை மட்டுமல்லாமல் மனதையும் நிறைக்கும் விதமாக உயிரோட்டமாக இருந்தது.
ஓவியத்தை முடித்து பார்த்த பிறகு ராதாவின் மனம் சற்றே தெளிந்தது, அந்த ஓவியம் தன்னையும் தன் மாமாவையும் இணைத்து விட்டதை போன்று நினைத்து கொண்டாள். எப்பொழுதெல்லாம் அவளது மனம் அலைப்பாய்கிறதோ அப்போதெல்லாம் ராதாகிருஷ்ணா ஓவியத்தை வரைவது அவளது பொழுதுபோக்கு. எந்த நாளிலும் ராதையும் கிருஷ்ணாவும் பிரிக்க முடியாதவர்கள் என்று அவளுக்கு அவளே சொல்லி கொண்டாள்.
ராதையும் கிருஷ்ணாவும் பிரிக்க முடியாதவர்கள் என்றால் அவர்கள் ஏன் ஒன்று சேரவில்லை, அவர்களது வாழ்கை போல தான் தன்னுடையதும், தன்னவனை நினைத்து கொண்டு வாழ்ந்து விட வேண்டும். ஆனா மாமா என்னை மறந்துட்டு இருப்பாங்களா? நான் வேண்டாம்னு வந்துட்டா மறந்துடுவங்களா?? என்னை தேட மாட்டாங்களா?? இனிமே நான் அவங்களை பார்க்க முடியாதா?? நான் என்ன செய்வது எனக்கு அவங்களை பார்க்கணும் போல இருக்கே....என மனதின் ஒரு புறம் அவளுக்கு உண்மையை கூற, வேண்டாம் உன்னை மாதிரி ஒருத்தி அவங்களுக்கு வேண்டாம் நீ ஓர் அதிர்ஷ்டம் கெட்டவ என்று சிவகாமி சொன்ன அனைத்தையும் (ஏம்மா அது சஷ்டி கவசமா தினமும் நினைக்க) மறுபுறம் உரைக்க அவளுக்குள் போராடி வாதாடி ஓய்ந்தாள். தீவிரமாக போராடி முடித்தவளுக்கு தலைவலியும் தீவிரமாக வந்தது. வருணுக்கு லீவ் கேட்டு மெயில் அனுப்பியவள் உடனே வீட்டிற்க்கு கிளம்பியும் விட்டாள். தன் அறைக்கு சென்று ஒரு பாட்டம் அழுது தீர்த்தவள் கிருஷ்ணாவின் படத்தை அணைத்து கொண்டு உறங்கினாள்.
மாலை வேலை முடிந்த பிறகு சுஹாசினிக்கு தெரிந்தது அவள் முன்பே கிளம்பி விட்டாள் என்று. வேகமாக வீட்டிற்க்கு வந்தவள் அவளது அறைக்கதவை தட்ட அது உள்ளே தாளிடப்பட்டிருந்தது. இருவரும் ஒன்றாக இருந்தாலும் ராதா அவளது அறைக்குள் சுஹாவை அனுமதித்ததில்லை. தன் கிருஷ்ணாவை யாருக்கும் காட்டியதில்லை. சரி அவள் உள்ளே நிம்மதியாக உறங்கட்டும் என்று நிதானமாக தன் வேலைகளை பார்க்க தொடங்கினாள். வெகு நேரமாகியும் கதவு திறக்கத்ததால் சுஹா மீண்டும் கதவை தட்ட அழுது வீங்கிய முகத்துடன் வந்து கதவை திறந்தாள் ராதா.
“ஏய் என்னமா முகம் இப்படி வீங்கி இருக்கு, உடம்புக்கு ரொம்ப முடியலையா?”
“ஒண்ணுமில்லை சரியாகிடும்”
“என்ன விளையாடுறியா? ஒழுங்கா டாக்டர்கிட்ட கிளம்பு....”
“வேண்டாம்”
“அதெல்லாம் முடியாது வா என்கூட” பிடிவாதமாக அருகிலிருந்த டாக்டரிடம் அழைத்து சென்றாள் சுஹா
இவர்கள் வரிசையில் காத்திருக்க வருண் தன் பாட்டியுடன் டாக்டர் அறையிலிருந்து வெளியே வந்தான். இவர்களை பார்த்தவன் அருகில் வந்து “என்னாச்சு சுஹாசினி, ராதாவுக்கு என்ன உடம்புக்கு???”
“பீவர் சார்”
“ஒஹ்...ரொம்ப டல்லா இருக்காங்க...என்னோட பாட்டி எப்பவும் இந்த டாக்டர்கிட்ட வருவாங்க. பாட்டி இவங்க சுஹாசினி ராதா நம்ம ஆபிஸுல வேலை செய்யுறாங்க.”
“அப்படியாப்பா, உடம்பு சுகமானதும் வீட்டுக்கு வாங்கம்மா” அன்புடன் அழைத்தார் பாட்டி.
பாட்டியின் அன்பான வார்த்தைகள் தனது பாட்டிகளை நினைவுபடுத்த மீண்டும் கண்ணீர் பெருகியது, அதை மறைக்க தலையை குனிந்து அமர்ந்து கொண்டாள். ராதாவின் முகத்தை திரும்ப பார்த்து கொண்டே வருண் சென்றான்.
டாக்டர் அவளை பரிசோதித்துவிட்டு ஜுரம் ரொம்ப அதிகம் இல்லை, ஆனா ஏதோ மன உளைச்சல் போல இருக்கு....என்னம்மா ஆபிஸ்ல மேனேஜர் ரொம்ப திட்டிட்டறா??
“இல்லை”
“சரி, பசிச்சு நல்லா சாப்பிடுறீங்களா??”
ம்ம்ம் என்று ராதா தலையாட்ட, “இல்லை டாக்டர், இவ நல்லா சாப்பிட்டு நான் பார்த்ததே இல்லை”. என்றாள் சுஹா
“நீங்க யாரும்மா?? இவங்க பாமிலி ஆளுங்க எங்க??”
“நாங்க இங்க தனியா தங்கி வேலை செய்யுறோம். பாமிலி எல்லாம் ஊர்ல இருக்காங்க.”
“எல்லாத்துக்கும் நீங்க பதில் சொல்றீங்க இவங்க பேச மாட்டாங்களா??”
“அவளால பேச முடியாது, ஒரு விபத்துல பேச்சு போய்டதா சொன்னா???”
“சரி என்னதான் சாப்பிடுவாங்க???”
“வெறும் காய்கறி, பழம், சுண்டல் இதுதான். வேக வச்சது சாப்பிட்டு பார்த்ததில்லை.”
“குட் ரொம்ப நல்ல டயட்....சரி ராதா, இதுவரைக்கும் நீங்க எப்படி சாப்பிட்டு இருந்தாலும் பரவாயில்லை, ஜுரம் சரியாகிற வரைக்கும் கொஞ்சம் கஞ்சி, இட்லி, ப்ரெட் இது மாதிரி சாப்பிட்டு மெடிசின் எடுத்துகோங்க.....புரியுதா??”
ம்ம்ம்....தலையை பலமாய் ஆட்டிவிட்டு வெளியே வந்தாள்.
அவர் கூறியபடி மருந்துகளை கொடுத்து நன்றாக பார்த்து கொண்டாள் சுஹா.
இரண்டு நாட்கள் மருந்துகளுடன் ஓய்வெடுக்க அவளின் உடல் ஓரளவு தேறியது.
மூன்றாவது நாள் ஆபிசுக்கு கிளம்பினாள் ராதா. வேண்டாம் நாளைக்கு வா என்று சுஹாசினி எவ்வளவு கூறியும் கேட்காமல் கிளம்பி விட்டாள். ராதாவின் உடல் ஓய்வு கேட்க மனதுடன் போராட முடியாமல் அவள் வேலைக்கு கிளம்பினாள்.
முயன்று வேலையில் தன் கவனத்தை செலுத்தி கொண்டு அதில் வெற்றியும் பெற்றாள். வேலையை ஆரம்பித்த நேரம் தொலைபேசி அழைக்க, அதில் வருண் அவளை அவனது அறைக்கு வருமாறு அழைத்தான். இவருக்கு வேற வேலை இல்லை மனதிற்குள் திட்டி கொண்டே அவனது அறைக்கு சென்றாள்.
கதவை தட்டி உள்ளே நுழைந்தவள் அமைதியாக நின்றாள்.
“குட் மார்னிங் ராதா”
இவளுக்கு முதுகு காட்டியபடி ஒருவன் அவனுக்கு எதிரில் அமர்ந்திருக்க இவள் தயங்கியபடி கதவருகே நின்றாள்.
உள்ளே வாங்க ராதா, நம்ம கம்பெனியின் முக்கியமான பாட்னரை உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்க உங்களை கூப்பிட்டேன்.
நமக்கு எதற்கு அறிமுகபடுத்தணும் யோசித்து கொண்டே நிற்க
“மீட் மிஸ்டர் கிருஷ்ணச்சந்திரன் எங்களுக்கு செல்லமா KC”
கோடி மின்னல் தன் மேல் விழுவதை போன்று உணர்ந்தவள் சட்டென்று புதியவன் பக்கம் திரும்ப
அவனோ இவள் யார் என்றே தெரியாதவன் போன்ற இறுக்கமான முகத்துடன் இவள் புறம் திரும்பினான்.
தன்னவனை கண்டதும் அது உண்மைதானா என்று புரியாமல் ஒரு குழந்தை போல திரு திருவென விழித்தவள், காலையில் சரியாக உண்ணாதது, இரண்டு நாள் உடல்நலக்குறைவு, மன உளைச்சல் அனைத்தும் சேர மாமா என முனகியபடி அப்படியே மயங்கி சரிந்தாள்.
தன்னவள் மீது அடுக்கடுக்கான கோபக்கோட்டையை கட்டி வைத்து கொண்டு அவளை இங்கு வந்து வச்சு செய்யனும் என்று நினைத்து கொண்டு வந்த கோபக்கார கிருஷ்ணா அவள் மயங்கியதும் செலக்டிவ் அம்னிஷியா நோயாளியாக மாறி அவனது பாப்புவின் மாமாவாக மாறி விட்டான்.
“பாப்புபுபுபு” ஓடி சென்று அவளை தாங்கி பிடித்தான்.
“என்னடா இவ்ளோ மெலிஞ்சு போய்ட்டா, இது என்ன சோதனை” வருண் சீக்கிரம் வண்டியை எடு ஹாஸ்பிடல் போகணும்.
உடனே கிளம்பி மருத்துவமனையில் அவளை சேர்த்தனர். கிருஷ்ணாவிற்கு அவளை முதலில் விபத்தின் போது ஹாஸ்பிடலில் சேர்த்தது அனைத்தும் ஞாபகம் வந்து அலைகழித்தது. அவனின் வருத்தமான முகத்தை பார்த்த வருண், “அவங்க நல்லாத்தான் இருந்தாங்கடா இப்போ ரெண்டு நாளா பீவர் வேற ஒண்ணுமில்லை பயப்படாதே”
“இல்லைடா எனக்கு ரொம்ப பயமா இருக்கு, அவ ரொம்ப மெலிஞ்சு போய் இருக்கா, எப்படிடா ஆறு மாசத்துல இவ்ளோ எடை குறைய முடியும், அவளுக்கு உடம்புக்கு என்னன்னு புரியல, டாக்டர்கிட்ட பேசினாத்தான் எனக்கு நிம்மதி.”
“டாக்டர் பார்த்துட்டு நம்மளை கூப்பிடுவாங்க, கவலைப்படாதே...”
மிஸ்டர் வருண், பேஷன்ட் கூட வந்தது யாரு???
“இவர்தான் டாக்டர்”
“கொஞ்சம் உள்ள வாங்க”
ஆயிரத்தெட்டு தெய்வங்களை வேண்டி கொண்டு டாக்டர் அறைக்குள் நுழைந்தான் கிருஷ்ணா.
பாப்புக்கு இப்போ எப்படி இருக்கு???
“ஷி இஸ் பைன் (she is fine) உட்காருங்க, நீங்க பதட்டப்படாதீங்க, அவங்களுக்கு ஒன்னும் பயப்படுற மாதிரி இல்லை. பீவர் அதிகமா இருந்தது, சரியா சாப்பிடாம மருந்து சாப்பிட்டு இருப்பாங்க அதனால ஏற்பட்ட மயக்கம்...வேற ஒண்ணுமில்லை.
எல்லா டெஸ்டும் ஒரு தடவை செய்துடலாமா?? எனக்கு நிம்மதியா இருக்கும்.
“நீங்க விரும்பினா செய்துடலாம்”
“தேங்க்ஸ் டாக்டர்”
மருத்துவமனையில் இரண்டு மணி நேரம் கழித்து அவள் கண் விழிக்க, எதிரில் சுஹா மங்கலாக தெரிய, வேகமாக எழுந்தவள் முதலில் கேட்டது, “மாமா எங்கே??”
“மாமா யாரு???”
“ப்ச்....திரும்பியவள் கண்ணில் வருண் பட, மாமா எங்கே??
“யாரு?”
“சார் உங்க கூட ரூம்ல இருந்தாரே...”இழுத்து பிடித்த பொறுமையுடன் அவள் கூற,
“அவன் அப்போவே கிளம்பிட்டானே, என் கூட பேசிக்கிட்டு இருந்தான், நீங்க வந்தீங்க மயக்கம் போட்டீங்க, சரி உன் ஸ்டாப் நீ பாருன்னு அவன் கிளம்பிட்டான்.”
“பொய், மாமா இந்த நிலைமைல என்னை விட்டுட்டு போக மாட்டாங்க.”
“ஆமா... நீங்க பேசுறீங்க” ஆச்சர்யமாக கேட்டான் வருண்.
“இனிமே என் மாமா வர வரைக்கும் பேச மாட்டேன்”
இவர்கள் பேசியதை எல்லாம் வெளியில் இருந்து கேட்டு கொண்டு இருந்த கிருஷ்ணாவிற்கு கோபம் அதிகரித்தது. எல்லாம் இந்த மேடம் இஷ்டமா??? புருஷன் என்கிற மரியாதை இல்லை என்ன நினைச்சுகிட்டு இருக்கா மனசில, இருக்கு அவளுக்கு இந்த கிருஷ்ணகிட்ட, இந்தம்மாவா பேசுவாங்க, சிரிப்பாங்க, முடிவெடுப்பாங்க, கிளம்பி வந்துதுடுவாங்க, இப்போவும் நான் வர வரைக்கும் பேச மாட்டாளா?? இவளை என்ன செய்வது??? இவளை கிட்ட இருந்தே வச்சு செய்யனும் செய்யுறேன், தீர்க்கமான முடிவிற்கு பிறகு அறைக்குள் நுழைந்தான்.
தன் மாமா சென்று விட்டான் என்று சோகத்தில் மீண்டும் படுத்து கொண்டாள் ராதா.
கிருஷ்ணா உள்ளே வர ராதா, “மாமா வந்துட்டீங்களா, எப்படி இருக்கீங்க??? வீட்ல தாத்தா பாட்டி, அம்மா அப்பா, பலராம் மாமா கவுசி அக்கா, குட்டி பாப்பா எல்லாரும் எப்படி இருக்காங்க???” என்று எழ முயற்ச்சித்தவள் தோல்வியடைந்து பின்புறமாக சாய்ந்தாள்.
கிருஷ்ணா நிதானமாக அவள் அருகில் வந்தவன், நீங்க யாரு?? எதற்கு என்னை மாமான்னு கூப்பிடுறீங்க???
“மாமா”....என்றவளின் தொண்டையிலிருந்து காத்துதான் வந்தது.
“வருண் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் பாதி தூரம் போனதும் ஞாபகம் வந்தது அதுதான் திரும்பி வந்தேன். இங்க வேலை முடிஞ்சுதுன்னா வரியா ஆபீஸ் போகலாம்.” (நீ வருண் கிட்டதான் பேச வந்த நாங்க நம்பிட்டோம்)
“ம்ம் சரி நாம கிளம்பலாம். சுஹாசினி யூ ஜஸ்ட் டேக் கேர் ஆப் ஹர் (you just take care of her)...ஓகே ராதா நாங்க கிளம்பறோம் நீங்க உடம்பு சுகமானதும் ஆபிஸ் வந்தா போதும் அது வரைக்கும் ரெஸ்ட் எடுங்க”.