“ஹலோ! ஹலோ!! . சேர்! நில்லுங்க…….. அதுக்குள்ள எல்லாம் போகக்கூடாது…... தொப்பிக்காரன் மட்டும் கண்டானெண்டா ரெண்டு பேருக்கும் கைலாசம் தான்……. சேர்……..” கத்திக்கொண்டு அவன் பின்னே அவள் ஓட, அவளது கத்தல்கள் எல்லாம் காற்றோடு கரைந்தன. சிவப்பு வர்ண பின்னணியில் வெள்ளை நிற மண்டையோட்டின் குறுக்கே இரு எலும்புத் துண்டுகளாலான பிழை அடையாளத்துடன் 'அபாயம்' என்ற எழுத்துக்களைத் தாங்கிய இரும்புத் தட்டுக்கள் தொங்கிய முள்ளு வேலியினால் அடைக்கப்பட்ட பற்றைக்காட்டினுள் நுழைய முற்பட்டவன் அவளது சத்தம் அவன் காதுகளை எட்ட அப்படியே நின்றான்.
அவனது முயற்சியை தடை செய்தது அவள் இத்தனை நேரம் மூச்சு வாங்கக் கத்தியது அல்ல.. “ஆஆஆஆஆஆ………… ஜயோ!!! என்டம்மா……..” என்ற அவளது அலறலே……….
முள்வேலிக்குள் கடப்பதற்காக கால்களைத் தூக்கியவன் அவளது சத்தத்தில் சத்தம் வந்த திசையில் திரும்பிப் பார்த்தான். அங்கே அவள் கால்கள் அடம்பன் கொடியில் சிக்கியிருக்க முகம், வாய், கழுத்தெல்லாம் மண்ணாக குப்புற விழுந்து கிடந்தாள்.
தூக்கிய கால்கள் அந்தரத்திலேயே நிற்க அப்படியே சாவகாசமாய் திரும்பிப் பார்த்தவனைக் கண்டு எரிச்சலுற்றவள் எழும்ப முயல அவளால் முடியவில்லை. கால்கள் நன்றாக கொடியில் சிக்கியிருந்தன. ' அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு ' என்பது போல் அடர்ந்து திரண்டு நன்றாக இறுக்கிக் சுற்றியிருந்த கொடியில் இருந்து கால்களை மீட்க முடியாமல் அவனை நோக்கி ஒற்றைக் கையைத் தூக்கியவள் “ ப்ளீஸ் சேர்… இஞ்ச கொஞ்சம் வந்து ஒரு கை தாங்கோ……. ….. “ என்றாள்.
அவள் பேசுவது விளங்கா விட்டாலும், அவளுக்குத் தன் உதவி தேவை எனப் புரிந்து கொண்டானோ என்னவோ தூக்கிய கால்களை மெது மெதுவாய் இறக்கி அவளை நோக்கி அடி வைத்தவனை பார்த்தவளாலோ ' நல்லகாலம் மண்ணுல விழுந்தன்.. இது மட்டும் புதை குழியா இருந்துது…. . இந்த மனுசன்ட ஸ்பீடுக்கு நான் புதைஞ்சே போயிருப்பன்...” என நினைக்க மட்டுமே முடிந்தது. காரணம் அவளது வேலையே அவன் கொடுக்கும் அறிக்கையில் தான் தங்கியுள்ளது. அத்துடன் இவள் நாராசமாய்த் திட்டினாலும் அவனுக்கு விளங்கப்போவது இல்லை. அப்படி அதிசயமாய் விளங்கினாலும் அவன் அதனை சட்டை செய்யப் போவதும் இல்லை.
கைகளைக் கோர்த்த படி அவளை நோக்கி வந்தவன் அவளின் அருகே வந்ததும் மீண்டும் மெது மெதுவாய் கோர்த்த கைகளைப் பிரிக்க, ' பிள்ளையாரே!! டேய் மேனகா!!!! உனக்கு இருக்குடா…. .' நூறாவது தடவையாய் தன்னை இவனுடன் கோர்த்து விட்ட நண்பனைத் திட்டியவள்,பற்களைக் கடித்துக் கொண்டு“ சேர்! கொஞ்சம் கெதிப்பண்ணுங்க” முடியாமல் கூறியே விட்டாள். அவன் கண்களைச் சுழற்றி யோசிப்பதைப் பார்த்து அவனுக்கு விளங்கவில்லை என்பதை புரிந்தவள் “ ஸ்பீட்…. ஸ்பீட்…..” எனக் கத்தினாள்.
அவனுக்கு கைடாகச் சுற்றும் மூன்று நாட்களில் அவனது அசைவுகள் நடவடிக்கைகளைக் கொஞ்சமே கொஞ்சம் புரிந்து வைத்திருந்தாள். ஆனால் அவனோ பல வேளைகளில் அவள நினையாததையே செய்து அவளை எப்போதும் கடுப்பாகவே வைத்திருந்தான்.
அவளை நோக்கி அவன் கைகளை நீட்ட கை கொடுக்கப் போகிறான் என்று அவளும் அவனை நோக்கி கைகளைத் நீட்ட அவனோ குனிந்து அவளது இடையை பற்றி தூக்க முயல முதன்முதலில் ஒரு ஆடவன் தன் இடுப்புப் பற்றியதில் பயத்தில் அவள் திமிரவும் மேலும் இறுக்கமாய்ப் பற்றித் தூக்கி நிறுத்த, கால்கள் சிக்கிய நிலையில் அவள் நிலை தடுமாறி விழப்போனாள். விழப்போனவளின் இடையை மீண்டும் பற்றி தன்னுடன் சேர்த்தணைத்தவனது பார்வை அவளது தலைக்கு மேல் அலைபாய “ம்ம்ம்ம்………” என்றான்.
எப்போதும் போல் இப்போதும் அவன் இப்படி ராகம் பாடினால் எதுவா பேசப் போகிறான் என உணர்ந்தவள் அவனின் கண்களை நோக்கினாள். அவனால் தான் ஒருவரது கண்களைப் பார்த்து பேச முடியாதே, அவளது தலைக்கு மேல் கண்கள் மேய்ந்தபடி இருக்க “ ம்ம்ம்ம்…. You…..are….obese…. You should reduce your weight……” இழுத்து இழுத்து இயந்திரத்தனமாய்க் கூறினான்.
அவன் தன் பாரத்தைப் பற்றிக் கூறவும் கோபமடைந்தவள் அவ்வேளை அவனுடன் நெருங்கி நிற்பதும் உறைக்க வேண்டுமென்றே அவனைத் தள்ளி விட்டாள். அந்தோ பரிதாபம்! அவன் ஸ்டெடியாகத்தான் நின்றான். இவள் தான் மறுபடியும் விழுந்திருந்தாள், ஆனால் மல்லாக்காய்.