அற்புதமான பதிவு சிவா மா. குழந்தையை கண்டவுடன் அபயனின் உணர்வு, ஆரா தன் குழந்தையை மாமனிடம் கொடுத்துவிட்டு, இது இனி உங்கள் குழந்தை நீங்களே வளர்த்துக்கொள்ளுங்கள், உங்களின் வலி எனக்கு புரியும், ஒவ்வொரு முறை என்னை பார்க்கும் போதும் நீங்கள் அக்காவை ஏக்கத்தோடு பார்ப்பதை பார்த்திருக்கிறேன். அக்கா இருக்கும் மனநிலையில் அவளால் குழந்தையை பெற்று கொடுக்க முடியுமா தெரியாது. அதனால் இவளை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்பதும், அதற்கு சித்தார்த் மனமுவந்து சம்மதிப்பதும் மெய் சிலிர்க்க வைக்கிறது. அதற்கு அபயன் மறுப்பு தெரிவித்து நாங்களும் இன்னும் ஒரு வருடத்தில் பெற்றுக்கொள்வோம் எனும் போது அங்குள்ளவர்கள் ஒவ்வொருவரின் உணர்ச்சியும் மிகவும் அற்புதமாக உணர்த்திவிட்டீர்கள்.இதுவல்லவா உண்மையான அன்பு. இப்படியல்லவா ஒரு குடும்பம் இருக்க வேண்டும். இக்குடும்பம் கிடைக்க அபயன் கொடுத்துவைத்திருக்க வேண்டும் என்று சொல்வதா இல்லை அபயன் கிடைக்க அந்த குடும்பம் கொடுத்துவைத்திருக்க வேண்டும் என்று சொல்வதா தெரியவில்லை. இவர்களின் அன்பின் மிகுதியில் படிக்க படிக்க என் கண்கள் கலங்கிவிட்டது. அபயன் நரகத்திற்கே அழைத்தாலும் நான் வருவேன் என்று மிளிர் சொல்வதிலிருந்தே அவன் நீக்கமற அவள் மனதில் நிலைபெற்று விட்டான் என்றல்லவா காட்டுகிறது. கண்டியில் அவர்கள் இருந்த நேரங்கள் அனைத்தும் பொன்னானவையே. இருவரும் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட அன்பில் முக்குளித்தனர் என்று தான் சொல்லவேண்டும். இருவரும் தாங்கள் இழந்த சொர்க்கத்தை மீட்டெடுத்து விட்டனர். உலகத்திலே மிகவும் சந்தோஷமாக இருக்கும் நபர் நான் தான் என்று மிளிர் சொல்வதும், பின் என் காதல் பொய்க்கவில்லை தவறான ஒருவர் மீது அன்பு வைத்துவிட்டேனே என்று அழுகாத நாளில்லை என்பதும் பின்னர் அபயனை சமாதான படுத்தும் பேச்சிலும் அவள் கடந்து வந்த துன்பமெல்லாம் இந்நொடியில் கரைந்துவிட்டது என்பதையே உணர்த்துகிறது.அவன் பாடும் பாடல் அவர்களுக்கு அப்படியே பொருந்தும் அருமை. செம ரொமான்டிக் பதிவு. 5 வருடங்கள் கடந்து அவன் தேவதை மண்ணில் உதிக்கிறாள், அபயனின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவன் மகிழ்ச்சி நம்மையும் தொற்றிக்கொள்கிறது. அவனின் ஏக்கம் தீர்ந்து விட்டதல்லவா. குழந்தையை வெளியே கொண்டு வந்து காட்டவும் அவர்களுக்கும் பேரானந்தமே. நான்கு சகோதர்களும் சகோதரியை தன் தந்தையை போல் தாங்குகிறார்கள். ஆத்வியும், சாத்வியும் வளர்ந்து விட்டார்கள். எவ்வளவு பொறுப்பாக இருக்கிறார்கள். பின் தந்தையை போல் அல்லவா இருப்பார்கள். ஆரா தன் மகனுக்கு மாமனின் பெயரையல்லவா வைத்திருக்கிறாள், அருமை. அவர்கள் அனைவரின் மகிழ்ச்சியையும் காண கண் கோடி வேண்டும் என்று தான் சொல்ல வேண்டும். அபயனை போல் நம் மனதும் நிறைந்து போனது.
ஆரம்பத்தில் நீங்கள் இதன் 2ம் பாகம் என்ற போது இருவரும் தான் சேர்ந்து விட்டார்களே இதை அடுத்து எப்படி நகர்த்த போகிறீர்கள் என்ற ஆர்வம் எழுந்தது, ஒருவேளை சின்ன பதிவுகளாக கொண்டு செல்வீர்களோ என்று கூட தோன்றியது. ஆனால் நீங்கள் கொடுத்ததோ மிகவும் அற்புதமான இன்னொரு கதையை என்றே சொல்லவேண்டும். இன்னும் சொல்லப்போனால் முதல் பாகத்தை காட்டிலும் அபயனை நம் மனதில் ஆழமாக புதைத்தது இந்த பாகம் என்றே சொல்ல வேண்டும். இந்த பாகத்தில் காதல், அன்பு, பாசம், ஆக்ஷன், ரொமான்ஸ் என்று எதற்கும் பஞ்சமில்லை. அபயனை நல்ல காதலனாக, சகோதரனாக, தந்தையாக, மாமனாக, ( இதில் தந்தை, தாய் இரண்டும் அடக்கம் ) நண்பனாக, வீரனாக, பாதுகாவலனாக, சிறந்த கணவனாக என அணைத்து பரிமாணங்களிலும் காட்டிவிட்டீர்கள். இதில் அவனுக்கு பயத்தை கூட காட்டிவிட்டீர்கள், ஒன்றையும் விட்டு வைக்கவில்லை. அனைத்திலும் அபயன் மிளிர்ந்தான் என்றே சொல்ல வேண்டும். கதை முடிந்தவுடன் அபயனை ரொம்பவே மிஸ் செய்ய போகிறோம் என்ற எண்ணம் தான் மேலோங்கியது. அபயன் நீக்கமற நம் மனதில் நிலைபெற்று விட்டான். இது எனக்கு உங்களுடைய 4ம் கதை (1பாகம் சேர்த்து ). இதுவரை படித்ததில் மற்ற இரு நாயகர்களை காட்டிலும் அபயனுடைய பாதிப்பே அதிகம் என்று சொல்ல வேண்டும். மிஸ் யூ அ லாட் அபயன்.