All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் ANAN ரீரன் - கதை திரி

Status
Not open for further replies.

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதி – 1

துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில்


பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும்

நிஷ்டையும் கைகூடும் நிமலனருள்

கந்தர் சஷ்டி கவசம் தனை..

என அந்த மாளிகையின் பூஜையறையிலிருந்து சன்னமாகச் சூரமங்களம் சகோதரிகள் பாடிக் கொண்டு இருக்க... அவர்களோடே சேர்ந்து தன் இனிமையான குரலில் பாடியவாறே தீப ஆராதனை காட்டிக் கொண்டிருந்தாள் மது வர்ஷா.


அவளின் கைவண்ணத்தில் அலங்கரிக்கப்பட்டு இருந்த சாமி படங்களும், சாம்பிராணி மணம் கமழ்ந்துக் கொண்டிருந்த அந்த அறையும் அந்தக் காலை பொழுதை தெய்வீக மணம் கமழ செய்துக் கொண்டிருந்தது.


ஆரத்தி தட்டுடன் வெளியில் வந்தவள் ஹாலில் இருந்த அந்தப் பெரிய அறைக்குள் நுழையவும், அவளைப் புன்னகை முகமாக வரவேற்றார் மதுவின் மாமியாரும் பத்மதேவ்வின் தாயுமான லலிதா.


"பூஜை... முடிஞ்சிதா... மது..." என்றவருக்கு, "முடிஞ்சது மாமி..." எனப் பதிலுக்கு அவரைப் பார்த்து புன்னகைத்தவாறே பதிலளித்தவள் ஆரத்தி தட்டை அவர் அருகில் கொண்டு சென்று மதுவே ஆரத்தியை தொட்டு அவருக்கு வைத்து விட... கனிவோடு மதுவை பார்த்திருந்தார் லலிதா.


அவருக்குக் கை கால்கள் செயலற்று போயின... பேசுவதில் எந்த ஒரு தடையுமில்லை... ஆனால் வேகமாகப் பேச முடியாது... எப்போதுமே அதிகம் பேச மாட்டார் என்பதால் அது அவருக்குப் பெரிதாகத் தெரியவில்லை.


அடுத்து அவருக்கு அருகில் படுத்து வாயில் விரல் வைத்து உறங்கி கொண்டிருந்த குழந்தை மிதுனை வாஞ்சையாய் பார்த்து புன்னகைத்தவள் ஆரத்தியை தொட்டு அவனுக்கும் வைத்தபடியே அவன் தலையை வருடிக் கொண்டே "பாருங்கோ மாமி நானும் எவ்வளவோ முயற்சி செய்யறேன்... இந்தப் பழக்கத்தை மாத்தவே முடியல..." எனக் குறைப்பட்டுக் கொள்ள...


"குழந்தை தானேம்மா... வளர வளர சரியாகிடும்..." என்று நிறுத்தி நிதானமாகப் பதிலளித்தவரை கண்டு தலையசைத்தவள் "உங்களுக்குக் கஞ்சி கொண்டு வரட்டுமா...? குடிக்கறேளா...? என்றவளை பார்த்து முகத்தைச் சுழித்தவர்.


"கொஞ்ச நேரம் போகட்டுமே..." எனவும், "மருந்து எடுத்துக்கணுமோ இல்லையோ... அப்புறம் நேரம் தவறி போகும்..." என்றவளை கண்டு பாவமாக முகத்தை வைத்துக் கொண்ட லலிதா "குட்டி பையன் எழுந்ததும் அவனோட சேர்ந்து சாப்பிடறேன்..." எனக் கூற, "மித்துப் போலவே அடம் பிடிக்கறேள் மாமி..." எனச் செல்லமாக மிரட்டி விட்டு வெளியேறினாள்.


தன்னை அன்போடு மிரட்டி விட்டு செல்பவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த லலிதாவிற்குத் தன் தேர்வு கொஞ்சமும் தப்பாகவில்லை என்ற நிம்மதி எப்போதும் போல் இப்போதும் மனதில் எழுந்தது.


லலிதாவின் அறையில் இருந்து மது வெளியில் வரவும் பத்மதேவ் தன் காலை நேர ஜாகிங் முடித்து வீட்டிற்குள் நுழையவும் சரியாக இருந்தது. எதிரில் ஆரத்தி தட்டுடன் நிற்பவளின் மேல் பார்வை பதிய...


ஆரஞ்சும் மஞ்சளும் கலந்த ஷிப்பான் சேலையில் எந்த வித ஒப்பணையும் இன்றித் தலையில் கட்டிய ஈர துண்டுடனும் கையில் ஏந்திய தீபாராதனை தட்டுடனும் முகத்தில் விபுதி குங்குமத்தோடு அழகு சிலையாக நின்று கொண்டிருந்தவளின் மேல் பார்வையைப் பதித்தவன் தலை முதல் கால் வரை ஒரு அளவிடும் பார்வை பார்க்க...


அந்தப் பார்வையில் இருந்தது என்ன என்பது எப்போதும் போல் இப்போதும் மதுவிற்குப் புரியவில்லை. தேவ்வின் பார்வைக்கான அர்த்தத்தை மொழிப் பெயர்க்க இனி தான் ஒருவன் பிறந்து வர வேண்டும்... இல்லை இப்படிச் சொல்ல வேண்டுமோ...? இதுவரை தன்னை யாரும் புரிந்துக் கொள்ள தேவ் அனுமதிக்கவில்லை என்பதே சரி.


அந்தப் பார்வையில் மதுவிற்கு உள்ளுக்குள் குளிர் பரவியது. அதை வெளிகாட்டிக் கொள்ளாமல் இருக்கப் பெரும் பிரயத்தனம் மது செய்து கொண்டிருக்க... அதற்கு எந்த அவசியமும் இன்றி மதுவின் பதட்டத்தை அவளின் உடல் மொழியே தேவ்விற்குக் காட்டி கொடுத்தது.


அந்த நொடி தாமதமே வீண் என்பது போல விறுவிறுவெனப் படி ஏறி செல்பவனைப் பார்த்து கொண்டிருந்தவளுக்கு அவனின் அருகாமையில் ஏற்பட்ட நடுக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய... இப்போது அடுத்தக் கட்டமாகக் குழப்பம் வந்து சேர்ந்தது.


'இப்போது தேவ்வின் பின்னே செல்ல வேண்டுமா...? இல்லை வேண்டாமா...?' என எப்போதும் போலவே முழித்துக் கொண்டு நின்றிருந்தாள். ஏனெனில் அவளின் அனுபவம் அப்படி... தேவ் வீட்டிற்கு வந்தவுடன் அவன் பின்னாலேயே சென்றால், 'இப்போ எதுக்கு இங்க வந்தே...?' எனக் காய்பவன், சரி சென்றால் தான் திட்டுகிறானே என்று செல்லாமல் இருந்தால் அதற்கும், 'மகாராணியை ஒவ்வொரு முறையும் கூப்பிடணுமோ..?' என்று தீய்வான்.


குழப்பத்தோடே நின்றுக் கொண்டிருப்பதை விடச் சென்று திட்டு வாங்கிக் கொள்வதே மேல் என்ற முடிவுக்கு வந்து பத்ம தேவ்விற்காக கிரீன் டீ தயாரிக்க உள்ளே சென்றாள்.


சரியாக மது கிரீன் டீயை டிரேயில் வைத்துக் கொண்டு மாடி படியை நெருங்கவும், மேலிருந்து "மதுதுதுது...." என்ற அழுத்தமான குரல் கேட்டது.


அதில் பதட்டமானவள், 'இன்னைக்கு என்ன ஆச்சோ தெரியலையே...' என எண்ணியபடியே தங்கள் அறைக்குள் நுழைய...


அங்கு அப்போதே குளித்து விட்டு வந்து ஈரம் சொட்ட சொட்ட தன் எயிட் பேக் உடல் தெரிய வெள்ளை நிற டவலோடு கண்ணாடி முன் நின்று கொண்டிருந்தான் தேவ். தினமும் பார்க்கும் காட்சி தான் என்றாலும் ஒவ்வொரு முறையும் ஏனோ ஏறிட்டு பார்க்க ஒரு தயக்கம் வந்து தடுக்க அருகில் செல்ல கால்கள் தயங்க கதவருகிலேயே நின்றிருந்தாள் மது.


கண்ணாடி வழியாக மதுவையும் அவள் கைகளில் இருந்த டிரேவையும் பார்த்தவன் ஏதுவும் சொல்லாமல் தன் வேலையைத் தொடர... 'இப்போ எதுக்குக் கூப்பிட்டு இருப்பாங்க...' என்று தனக்குள்ளேயே யோசித்துக் கொண்டு நின்றிருந்தவளின் முகத்தின் வழியே அகத்தைப் படித்தவன், "ம்ம்... டுயட் பாடலாம்னு... சாங் எப்படி நீ செலக்ட் செய்யறீயா...? இல்ல நான் செய்யவா...?" எனவும்


திடீரென்று எதற்கு இப்படிப் பேசுகிறார்...!!! எனப் புரியாமல் "ஙே..." என விழித்துக் கொண்டு நின்றிருந்தவளை கண்டவன் தன் வேலையை நிறுத்தி விட்டு அவளை அடி மேல் அடி வைத்து நெருங்க...


இப்போது என்ன தவறு செய்தோம்...? எனப் பயத்தோடு விழி விரிய அச்சத்தோடு அவனையே இமைக்காமல் பார்த்தபடி நின்றிருந்தவளை நெருங்கியவன் எதுவும் பேசாமல் அவள் கைகளில் இருந்த டீயை எடுத்து பருக தொடங்க... அதுவரை இழுத்து பிடித்து வைத்திருந்த மூச்சை "ஊப்ப்ப்ப்...." என வெளியிட்டாள் மது.


டீயை பருகி கொண்டிருந்தாலும் மதுவின் ஒவ்வொரு அசைவும் தேவ்வின் கண்களில் படத் தவரவில்லை. ஆனால் அதைக் கண்டு கொள்ளாமல் "மித்து எங்கே...?" என்றவனின் கேள்விக்கு "மா.. மி... யா... ண்ட... இருக்... கான்..." எனக் காற்றாகி போன குரலில் திக்கி திக்கி பதிலளித்தாள்.


அதற்கு ஒரு தலையசைப்பை மட்டுமே பதிலாகத் தந்தவன், நீ போகலாம் என்பது போல விரலை அசைக்க, அதற்குச் சம்மதமாக அவசரமாக ஒரு தலையசைப்பை தந்தவள் அறையிலிருந்து உடனே வெளியேறினாள்.


படிகளில் இறங்கும் போதே தேவ் தன்னை அழைத்தது நினைவு வர... 'எதுக்குக் கூப்பிட்டார்ன்னு சொல்லவே இல்லையே...' என்று நினைத்தவளின் மனசாட்சி 'ஏன் போய் நீ தான் கேளேன்...' என எடுத்துக் கொடுக்க....


'ஈஸ்வரா... நானா !!! அவரை பார்த்தாளே காத்து தான் வரது...' என்று தனக்குத் தானே கேள்வி கேட்டுக் கொண்டும் பதிலளித்துக் கொண்டும் சென்றவளுக்கு எப்போது தான் தன் கணவனிடம் நேருக்கு நேராகப் பேச தைரியம் வருமோ...!!!


மித்து எழுந்துவிட்டானா எனச் சென்று பார்த்தவள், அவன் இன்னும் உறங்கி கொண்டிருக்கவே லலிதாவிற்கு அவர் மறுப்பையும் மீறி கஞ்சியை ஊட்டி விட்டு முகத்தைத் துடைத்து விட்டாள்.


லலிதாவை பார்த்து கொள்வதற்காகவே இரண்டு நர்ஸ்கள் எப்போதும் அவர் அறையிலேயே இருப்பர். அவர்களே அவரின் தேவைகளைப் பார்த்து பார்த்துச் செய்தாலும் மதுவிற்கு உணவு விஷயத்தில் இவர் அவர்களை ஏமாற்றுகிறாறோ என்று ஒரு சந்தேகம் உண்டு. அதற்காக அவளே அதை அருகில் இருந்து கொடுக்கத் தொடங்கினாள்.


அடுத்து அவர் போட வேண்டிய மாத்திரைகளை மது சரி பார்த்து எடுத்து வைத்துக் கொண்டு இருக்க... அலுவலகத்திற்குச் செல்ல தயாராகத் தேவ் தன் அன்னையின் அறைக்குள் நுழைந்தான். இது தினப்படி வழக்கம் தான் காலை உணவிற்கு முன் லலிதாவோடு சிறிது நேரம் பேசிக் கொண்டிருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.


இரவில் எப்போது வீடு திரும்புவான் என்பது அவனுக்கே தெரியாதென்பதால் காலையில் அன்னையோடும் பிள்ளையோடும் நேரம் செலவழிப்பதை நாள் தவறாமல் செய்வான்.


"குட்மார்னிங் மா..." என்றபடியே அறைக்குள் நுழைந்தவன் நர்ஸ்களிடம் தன் அன்னையின் உடல் நலனை பற்றி விசாரித்து முடித்ததும் அவர்கள் அறையிலிருந்து வெளியேறிவிட... "அப்பறம் மா... என்ன சொல்றான் உங்க பேரன்..." எனக் குழந்தையின் தலையைப் பாசத்தோடு வருடியவாறே அருகில் பேசிக் கொண்டு அமர்ந்திருந்தவனின் குரலில் இருந்த வித்தியாசம் மட்டுமே அவன் லலிதாவின் மேல் கொண்டுள்ள அன்பிற்குச் சாட்சி.


இதே போன்ற குரலில் அவன் பேசும் மற்றொரு நபர் மிதுன் மட்டுமே. "இன்னும் பிள்ளை எழுந்துக்கவே இல்லைடா..." என அவர் குறைப்பட்டுக் கொள்ள, "ராத்திரி பிள்ளை ரொம்ப நாழி முழிச்சிண்டு இருந்தான் மாமி..." என மது பதிலளித்தாள் .


"ஏன்... மா... உடம்பு... எதாவது..." என லலிதா கவலை கொள்ள, "அப்பாவும் பிள்ளையும் அத்தனை ஆட்டம்..." என்று புன்னகைத்தவளை கண்டு அவரும் புன்னகைக்க, இருவரையும் பார்த்தபடியே அவர்கள் பேச்சை கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்தான்.


தேவ்வை திரும்பி பார்த்தவர், "விக்ரமா..." என அழைக்க, அன்னையின் அந்தப் பிரத்யேக அழைப்பில் அவரைத் திரும்பி பார்த்தவன், "சொல்லுங்கம்மா..." எனக் கனிவோடு கேட்க... "உன் பொண்டாட்டி என்னைக் கொடுமைப்படுத்தறாப்பா..." என்று புகார் பத்திரம் வாசிக்க...


சும்மாவே தன்னிடம் காய்பவன் இப்போது என்ன செய்வானோ...? என்று அதிர்ந்த மது தேவ்வை திரும்பி பார்க்க... "நீங்க செலக்ட் செஞ்ச மருமக தானே... என்ஜாய்..." என்றவாறே எழுந்து சென்றவனின் பார்வை மதுவின் பக்கமாகக் கூடத் திரும்பவில்லை.


மாமியும் மருமகளும் செல்பவனின் முதுகையே பார்த்துக் கொண்டு இருக்க... தேவ் கதவை நெருங்கவும் "டாடா..." என்ற மழலை குரல் அழைக்க... அதில் புன்னகையோடு திரும்பியவன் தன் வேக நடையில் நெருங்கி அந்தப் பிஞ்சை தன் நெஞ்சோடு அள்ளி கொண்டு அறையில் இருந்து வெளியேறினான்.


அடுத்து அவன் டைனிங் டேபிளுக்கே செல்வான் என்று தெரிந்து லலிதா "நீ போ மா... " எனக் கூறவும்... வேகமாக டைனிங் டேபிளை நோக்கி விரைந்தாள் மது. அங்குத் தேவ் தன் மடியில் மித்துவை அமர்த்திக் கொண்டு கொஞ்சி கொண்டிருக்க...


அதைப் பார்த்துக் கொண்டே வழக்கமாகத் தேவ் உண்ணும் வீட் பிரட் டோஸ்ட்டையும் பட்டரையும் எடுத்து அவன் முன் வைத்தவளுக்கு லலிதாவின் புன்னகை முகமும் அதற்கு நேரதிராக எப்போதும் உர்ரென்று இருக்கும் தேவ்வின் முகமும் மன கண்ணில் வர...


நேரம் காலம் தெரியாமல் கருணாஸின் காமெடி நினைவு வந்து தொலைத்தது 'ஆஹ... அந்த அழகு தெய்வத்தின் மகனா இவன்...' என்ற அதே மாடுலேஷனோடு மனதிற்குள் சொல்லி பார்த்தவளுக்கு இதழோரம் சிரிப்பில் துடிக்க... அது வெளியே தெரிவதற்குள் இதழை பற்களால் கடித்துக் கட்டுபடுத்தியவள் நிமிரவும்...


தேவ் தன் கூர்மையான கண்களோடு மதுவையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அந்த பார்வையைக் கண்டவளுக்கு இதயம் நின்று துடித்தது. மதுவின் இத்தனை நாள் அனுபவத்தில் அவள் மனதில் நினைப்பதைக் கூடக் கண்டறிந்து பதிலளிப்பவனின் நினைவு வர... திக்கென்றது.


அதில் எழுந்த படபடப்போடு தட்டில் ஆம்லெட்டை எடுத்து வைத்துத் தேவ் முன் கொண்டு வந்து வைத்தவளின் முகத்தையே தேவ் ஆராய்ச்சியாகப் பார்க்க... அதில் எப்போதும் போல எந்த ஒரு அருவருப்போ முகச்சுளிப்போ தெரியவில்லை.


எதையோ நினைத்து கொண்டவன் "எனக்கு ஆப்பாயில் வேணும்..." எனவும் "ம்ம்..." என்ற தலையசைப்போடு நகர்ந்தவளை "டபுள் ஆப்பாயில் வித் எக்ஸ்ட்ரா பெப்பர்..." என்ற தேவ்வின் குரல் தடுத்து நிறுத்த... திரும்பி மீண்டும் ஒரு தலையசைப்போடு உள்ளே சென்றாள்.


மது கிட்சனில் இருந்து திரும்ப வரும் போது மித்துத் தன் மழலையில் ஆயிரத்து எட்டு டாடா போட்டுக் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான்.


"டாடா... இடு அன்ன...?"


"இது பிரட்..."


"டாடா... அப்பூ இடு..."


"இது பட்டர்..."


"ம்ம்...இடு டாடா..."


"இது எஃக்..."


எனக் கொஞ்சமும் சலிக்காமல் மித்துவின் அத்தனை கேள்விகளுக்கும் தேவ் பதிலளித்துக் கொண்டிருந்தான்.


இவை அனைத்துமே தினமும் கேட்கப்படும் கேள்விகள் தான்... ஆனால் ஒரு நாளும் தேவ் பதிலளிக்கச் சலித்துக் கொள்ளவோ பதிலளிக்கத் தவறியதோ இல்லை. ஒவ்வொரு முறையும் முதல் முறையாகக் கேட்கப்படும் கேள்வியைப் போலவே பதிலளிப்பவனின் இந்த முகம் மதுவை என்றும் போல இன்றும் ஆச்சர்யப்படுத்தியது.


மது தன் கையால் செய்த ஆப்பாயில் தட்டை கொண்டு வந்து வைக்கவும் மீண்டும் அவள் முகத்தையே ஆராய்ச்சியாகப் பார்த்து அமைதியாக உண்ண துவங்கியவன் ஆம்லெட்டை போர்க்கில் குத்தி மித்துவின் வாயருகே கொண்டு செல்ல...


"ம்ஹூம்... மிட்டுத் தர்த்திப் பாய் ஈ பண்லா..." எனத் தான் இன்னும் பல் விளக்கவில்லை என்பதைத் தந்தைக்கு நினைவுபடுத்த... "நோ ஒர்ரிஸ் டியர்..." என்றவாறே மீண்டும் கொடுக்க முயன்ற தந்தையைத் தடுத்தவன்...


"துத் பாய் அல்லாம் ஈ பண்ணி சாப்பும்... மிட்டு துத் பாய் இல்ல மா..." என மதுவையும் துணைக்கழைக்க... அதில் வியப்பாக ஒற்றைப் புருவத்தை உயர்த்தி இறக்கினானே தவிர, எதுவும் கூறவில்லை தேவ்.


மது இந்தப் பக்கம் நின்று கொண்டு மித்துவின் கேள்விக்கு ஆம் என்பது போல் தலையசைக்க டேபிள் மேல் தேவ்வை நோக்கி திரும்பி அமர்ந்திருந்தவனுக்கு அது தெரியாததால் "ம்மா தொல்லு..." என்றான்.


"ஆமா கண்ணா... என் மித்து இந்த வேர்ல்ட்லயே ரொம்ப ரொம்ப குட் பாய்..." என்றவள் "வா நாம போய்ப் பிரஷ் ஆயிண்டு வந்துடலாம்..." எனக் கைகளை நீட்டி அழைக்க...


"போ... வம்மாத்தே..." எனத் தந்தையின் கழுத்தை கட்டி கொண்டவனைக் கண்டவளுக்குக் கொஞ்சமும் கோபம் வரவில்லை, அவளுக்கு நன்றாகத் தெரியும் தேவ் வீட்டில் இருந்தால் அவனே மித்துவின் உலகம்... தேவ்விடம் இருந்து கொஞ்சமும் நகர மாட்டான்.


'வாடா படவா உன்னைக் கவனிச்சுக்கறேன்...' என மனதிற்குள் கொஞ்சி கொண்டிருந்த வேலையில் டேபிள் மேல் இருந்த தேவ்வின் போன் ஒலிக்க... ஒரு கையில் குழந்தையைப் பற்றிக் கொண்டு மறு கையால் சாப்பிட்டு கொண்டிருந்தவன் "யாருன்னு கேளு..." என மதுவை பார்த்து கூற...


ஏதோ கிடைப்பதற்கு அரிய பொருளை போல் இரு கைகளில் பத்திரமாக எடுத்து ஆன் செய்து காதில் வைத்தவள் "ஹலோ.." என்பதற்குள் "தேவ் டியர்... நைட் உங்க பிரீப் கேஸ் இங்கே என் ரூம்லயே விட்டுட்டீங்க..." என்ற குரல் கொஞ்சலாக ஒலித்தது.


பார்வையை மட்டும் திருப்பி மது தேவ்வை பார்க்க... அவனோ மித்துவோடு கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தான்.


தொடரும்..


இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 
Last edited:

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதி – 2

போன் வழியே காதில் வந்து விழுந்த செய்திக்கு எப்படி ரியாக்ட் செய்வது...!? என்ன பதிலளிப்பது...?! என்று கூடத் தெரியாமல் விழித்த மது, இதை எப்படித் தேவ்விடம் என்னவென்று சொல்வது என்ற தயக்கத்தோடு அவனைப் பார்க்க...


தேவ்வோ எதைப் பற்றியும் கொஞ்சமும் கவலையில்லாமல் மித்துவோடு கொஞ்சிக் கொண்டிருந்தான். அதற்குள் அந்தப் பக்கம் இருந்து கொஞ்சலான வார்த்தைகள் தொடர்ந்து வந்து மதுவின் காதை ஒரு வழியாக்க...


ஒரு வழியாக மது தன்னையே பார்த்துக் கொண்டு இருப்பதை உணர்ந்து அவள் பக்கம் தன் பார்வையைத் திருப்பியவன், ‘போனில் யார்...?’ என்பது போலப் பார்க்க... இதை எப்படிச் சொல்வது எனப் புரியாமல் தயங்கியவள் "ப்ரீ... ப்... கேஸ்..." எனத் தடுமாறத்தோடு பேச முயலவும், ஒரு நொடி புருவத்தைச் சுருக்கியவனுக்கு அவள் சொல்லவருவது புரிந்து போக "போனை ஸ்பீக்கரில் போடு..." என்றான்.


தேவ் சொன்னபடியே செய்தவள் தன் கைகளில் இருந்த போனை சற்று எஃகி தேவ் அருகே நீட்டவும், அதைக் கீழே மேஜை மேல் வைக்கும் படி அவன் விரல் அசைக்க... மதுவும் அப்படியே செய்து விட்டு தேவ் சாப்பிட்ட பொருட்களை எடுத்து சுத்தப்படுத்தி மேஜையைத் துடைக்கத் தொடங்கினாள்.


அந்தப் பக்கம் இருந்து மதுவின் பேச்சை கேட்டு "ஹலோ ஹூ இஸ் தட்... தேவ் பேபி எங்கே..." என்று கத்தும் குரல் கேட்டது. இதில் தான் தான் ஏதோ செய்யக் கூடாத தவறை செய்துவிட்டது போல மது தேவ்வை கண்களில் பயத்தோடு பார்க்க... அவனோ மதுவை கொஞ்சமும் கண்டுக் கொள்ளாமல் தன் கவனம் முழுவதையும் போனில் வைத்திருந்தான்.


அந்தப் பக்கம் இருந்து தொடர்ந்து கத்தும் குரல் கேட்டுக் கொண்டே இருக்க... "கிளாரா..." என அழுத்தமாகத் தேவ் அழைக்கவும், சட்டென அந்தப் பக்கம் அமைதியானது. "கதிர் வருவான் கொடுத்து விடு..." எனத் தேவ் கூறவும்,.


"கதிரா..." என்ற குரலில் ஸ்ருதி இறங்க... "நீங்க வரலையா...?" என ஆசையும் ஆவலும் கலந்து கொஞ்சலோடு குரல் குழைய கேட்க... அதற்கு எந்தப் பதிலும் அளிக்காமல் அடுத்த நொடி தன் கையில் இருந்த போர்க்கை இரு விரல்களுக்கிடையே ஸ்டைலாகச் சுழற்றியவன் அதன் பின் பாகத்தைக் கொண்டு போனை அணைத்திருந்தான்.


அடுத்த நொடி மீண்டும் போன் ஒலிக்க... மதுவின் கைகள் தானாக வேலை நிறுத்தம் செய்ய... தயக்கத்தோடு நிமிர்ந்து தேவ்வை மெல்ல ஏறிட்டாள். அதே நேரம் தேவ்வும் திரும்பி மதுவை தான் பாரரத்தான்.


இருவரின் கண்களும் ஒரு நொடி நேருக்கு நேராகப் பார்த்துக் கொள்ள... உடனே மது தன் பார்வையைத் தாழ்த்தி கொண்டாள். அதன் பிறகே தன் பார்வையைத் திருப்பி அழைப்பது ‘யார்?’ என்று பார்த்தவன், அதை ஆன் செய்து காதில் வைத்தான்.


"எஸ் கதிர்..." என்ற தேவ்வின் குரலில் அப்படியே நின்றிருந்த மதுவின் கைகள் தானாகத் தன் வேலையைத் தொடர... அந்தப் பக்கம் இருந்து தேவ்வின் அந்தரங்க உதவியாளனாகிய கதிர் இன்றைய பணிகளைப் பட்டியலிட்டுக் கொண்டிருந்தான்.


அனைத்தையும் கேட்டுக் கொண்டு சில பல கட்டளைகளைக் கொடுத்து விட்டுப் போனை அணைத்துச் சட்டை பையில் போட்டவன் மித்துவை தூக்கிக் கொண்டு மதுவை நெருங்கினான். மித்துவை அவளிடம் கொடுத்தபடியே "அம்மாகிட்ட மித்துக்கு ஏதோ வாங்கணும்னு சொன்ன இல்ல... ஈவ்னிங் வரேன் ரெடியா இரு..." எனவும்,


'என்னது நானா...?' என மனதிற்குள் அதிர்ந்தவள் விழி விரிய பார்த்தபடியே ஏதோ சொல்ல வர... "நீ வரியான்னு நான் கேக்கலை... நீ வர..." என்றவாறே அங்கிருந்து நகர்ந்தவனை "டாடா..." என்ற குரல் தடுத்து நிறுத்தியது.


அப்போதே அவனுக்கு வழக்கமாகத் தருவதைத் தர மறந்து கிளம்பியது நினைவு வர... மீண்டும் இரண்டெட்டில் மித்துவை நெருங்கியவன் குனிந்து அழுத்தமாக அவன் கன்னத்தில் இதழ் பதித்தான்.


அப்படிக் குனிந்து இதழ் பதிக்கையில் தேவ்வின் தலை முடி மதுவின் கன்னத்தை உரச... அவளோ சங்கடமாக நெளிந்தாள். தேவ் இவற்றைக் கவனித்தாலும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் அங்கிருந்து வெளியேறினான்.


தன் நினைவில் மூழ்கியிருந்த மது மித்துவின் பிஞ்சு கைகள் கன்னத்தைத் தடவியதில் சுய உணர்வுக்கு வந்தவள், "மா... டாடா... டாத்தா..." என வாசலை காட்டி பிள்ளை கேட்கவும் தான், அப்படியே நின்று விட்டது புரிய குழந்தையுடன் வாசலுக்கு விரைந்தாள்.


தேவ் காரை ஸ்டார்ட் செய்யவும், "டாடா... டாத்தா..." எனத் தன் அரிசி பற்கள் தெரிய கைகளை அசைத்து உற்சாகமாகக் கை அசைத்தவனைக் கண்டு தன் அபூர்வ சிரிப்பை உதிர்த்தவன், ஒரு பறக்கும் முத்தத்தைப் பறக்க விட்டு விட்டு வேகம் எடுத்தான்.


மித்து எத்தனைக்கு எத்தனை அப்பா பிள்ளையோ அத்தனைக்கு அத்தனை அவன் வேலை சுமைகளைப் புரிந்தும் நடந்து கொள்வான். வீட்டில் இருக்கும் போது தேவ்விடமே ஒட்டிக் கொண்டு இருப்பவன் தான், ஆனால் தேவ் வெளியே கிளம்பினால் அழுது ஆர்ப்பாட்டம் எல்லாம் செய்யாமல் சமர்த்தாக விடைக் கொடுப்பான்.


மித்துவை தங்கள் அறைக்கு அழைத்துச் சென்று குளிக்க வைத்து தயார் செய்தவளின் கைகள் தன் பாட்டுக்கு வழக்கமான பணியைச் செய்து கொண்டு இருக்க... மனமோ தேவ்வின் வார்த்தைகளில் உழன்று கொண்டிருந்தது.


'நானா...? அவரோடயா...?' என மீண்டும் மீண்டும் இதே கேள்வியில் மனம் செக்கு மாடு போலச் சுற்றி சுற்றி வர, இவையெல்லாம் இனி தவிர்க்க முடியாதது என்று புரிந்தாலும், அதை உடனே ஏற்றுக் கொண்டு செயல் படுத்த முரண்டிய அதே வேளையில் இத்தனை நாட்கள் போல இனி விட்டிற்குள்ளேயே இருக்க முடியாது என்பதும் புரிந்தது.


யாருக்காக இல்லை என்றாலும் குழந்தைக்காக இதைச் செய்து தான் ஆக வேண்டும்...!!! என்று முடிவெடுத்தவள், 'அவர் அழைச்சதும் பிள்ளைக்காகத் தானே... அவரே இறங்கி வரச்சே நாமும் பிள்ளைக்காகச் செய்யணும்...' என ஒரு வழியாக மனதை தேவ்வோடு வெளியே செல்ல தயார்படுத்திக் கொண்டாள்.


மாலை தேவ் வீட்டிற்கு வரும் போது மித்துவை தயார் செய்து அவனுக்குத் தேவையானவற்றையெல்லாம் எடுத்துக் கொண்டு தானும் தயாராக இருந்தாள் மது. அவர்களை ஒரு பார்வை பார்த்தவன், "பைவ் மினிட்ஸ்... லிட்டில் சாம்ப்..." என மித்துவை பார்த்து சொன்னவன் இரண்டு இரண்டு படிகளாகத் தாவி ஏறி அறைக்குச் சென்றான்.


மது அதற்குள் மீண்டும் ஒரு முறை லலிதாவை சென்று பார்த்து "உங்களுக்கு ஏதேனும் தேவைபடறதா மாமி..." எனக் கேட்க, அவரோ "எனக்கு... எதுவும்... வேண்டாம்... இவங்க... தான்... இருக்காங்களே... என்னை பார்க்க... நீ நிம்மதியா... கிளம்பி... போய்ட்டு வா மா..." என மெல்லிய புன்னகையோடே கூறினார்.


பின்னே காலையில் குழந்தைக்கு டிபன் கொடுக்கும் போது லலிதாவிடம் இதைப் பற்றிக் கூறியவள், அப்போது முதற்கொண்டு இதே கேள்வியை வேறு வேறு விதத்தில் வேறு வேறு நேரத்தில் கேட்டுக் கொண்டே இருந்தால் அவரும் என்ன தான் செய்வார்.


அப்போது அங்கு வந்த தேவ் மதுவின் கைகளில் இருந்த மித்துவை வாங்கிக் கொண்டு "பை மா... எதாவதுன்னா உடனே கால் செய்ங்க..." என்றவாறே வெளியேற, அவசரமாக லலிதாவை பார்த்து தலையசைத்தபடியே ஓட்டமும் நடையுமாகத் தேவ்வை பின் தொடர்ந்தாள் மது.


அவர்கள் செல்வதை மன நிறைவோடும் முகத்தில் தோன்றிய புன்னகையோடும் பார்த்திருந்தார் லலிதா. 'எங்கே மித்து மட்டுமே தனக்குப் போதும் என்று வாழ்க்கையில் இப்படி ஒதுங்கியே இருந்து விடுவானோ...!!! என அவர் வருந்தாத நாளில்லை. இன்று மதுவை வெளியே தன்னோடு அழைத்துச் செல்லும் அளவிற்கு மகன் இறங்கி வந்திருப்பதை நினைத்து அவருக்கு நிம்மதி எழுந்தது.


தேவ் காரை ஓட்ட... பக்கத்து இருக்கையில் மித்துவை மடியில் வைத்துக் கொண்டு மது அமர்ந்திருந்தாள். அந்தக் குட்டி கண்ணனோ அமைதியாக அமராமல் அந்தக் கண்ணனின் குறும்பு தனத்தோடு அதற்குக் கொஞ்சமும் குறைவில்லாத சேட்டைகளைச் செய்து கொண்டிருந்தான்.


மதுவின் மடியில் இருந்தபடியே எக்கி தேவ்வின் ஸ்டேரிங்கில் அழுத்தமாகப் பதிந்திருந்த கைகளைப் பிடிப்பதும், அவன் கைகளில் கட்டி இருக்கும் வாட்சை பற்றி இழுப்பதும், "டாடா... தூத்து..." எனத் தேவ்விடம் தாவ முயல்வதுமாக மித்துச் சேட்டை செய்து கொண்டிருந்தான்.


ஒவ்வொரு முறையும் மித்து இப்படிச் செய்யும் போதெல்லாம் மதுவிற்குத் தான் திண்டாட்டமாகப் போனது. மித்துவை பிடிக்க முயலுகையில் எல்லாம் தேவ்வின் மீது மது மோதவோ உரசவோ வேண்டி வர... ‘எங்கே திட்டி விடுவானோ...?! அடித்துவிடுவானோ...?!’ என்று பயந்து பயந்து அமர்ந்திருந்தாள்.


இதற்கு முன் அனுபவம் வேறு இப்படி மதுவிற்கு இருப்பதால் எழுந்த பயம் அது. ஆனால் முதல் முறை மோதிய போது திரும்பி மதுவை பார்த்ததைத் தவிர வேறு எந்த எதிர்வினையும் இல்லை தேவ்விடமிருந்து... அதன் பிறகு திரும்பி கூடப் பார்க்காமல் வண்டியை ஓட்டிக் கொண்டு இருந்தான்.


அந்த ஷாப்பிங் மாலில் குழந்தையைத் தூக்கி கொண்டு தேவ் வேகமாக முன்னே செல்ல... அவனை ஓட்டமும் நடையுமாகப் பின் தொடர்ந்து கொண்டிருந்தாள் மது.


முதலில் மித்துவிற்குத் தேவையானவற்றை வாங்குவதற்காக அதற்கான பிரத்யேக கடைக்குள் நுழைந்தான். இன்னும் பத்து நாட்களில் வர போகும் மித்துவின் இரண்டாவது பிறந்த நாளுக்காகத் தான் இந்த ஷாப்பிங்.


இருவருக்குள்ளும் பெரிதாக எந்தப் பேச்சும் இல்லை என்று சொல்வதை விடச் சுத்தமாகவே பேச்சு இல்லை என்பதே சரி. விழி மொழிகளோ பார்வை பரிமாற்றங்களோ கூட எதுவும் நடக்கவில்லை. ஆனால் அங்கு நடக்க வேண்டிய வேலை மட்டும் சரியாக நடந்துக் கொண்டிருந்தது.


மித்துவிற்கான ஷாப்பிங் முடியவும், அடுத்துத் தேவ் ஆண்கள் ஆடைகள் பிரிவிற்குச் சென்றான். மதுவும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறாள். தேவ்விற்குச் செல்லும் இடங்களில் எல்லாம் கிடைக்கும் மரியாதையை, அதே போல இங்கும் முதலாளியே எழுந்து வந்து வரவேற்று அவன் தேவையைக் கவனிக்க இரு பணியாளர்களை நியமித்தார்.


வலது கையைப் பேண்ட் பாக்கெட்டில் விட்டபடி இடது கையில் மித்துவை தூக்கி கொண்டு நின்றபடியே விற்பனை பிரதிநிதி எடுத்து காட்டும் ஆடைகளைத் தேவ் பார்த்துக் கொண்டு இருக்க... "ஹலோ மிஸ்டர் தேவ்..." என்ற குரல் பின்னாலிருந்து ஒலித்தது.


அந்தப் பக்கம் தன் கவனத்தைத் திருப்பியவன், அங்குத் தொழிலில் பல முறை தன்னிடம் அடி வாங்கிய பலருள் ஒருவரான ரத்தன் வாயெல்லாம் பல்லாகக் கைகளைத் தன்னை நோக்கி நீட்டிய படி நிற்பதை கண்டான்.


ஆனால் பதிலுக்கு அவருக்குக் கை கொடுக்காமல், கைகளைப் பாக்கெட்டில் இருந்து எடுக்காமல் நின்றிருந்தவனைக் கண்டவருக்கு, சமூகத்தில் பெயர் சொல்லும் இடத்தில் இருக்கும் தன்னைத் தொழில் முறையில் எத்தனையோ முறை தேவ் அவமானப்படுத்தியிருந்தாலும் இன்று தன் மனைவி முன்பு இப்படி நடந்து கொண்டதில் முகம் சிறுத்துப் போனது.


அப்போதே தேவ்வின் கையில் இருந்த குழந்தையும் அருகில் நின்றிருந்த மதுவும் கண்களில் பட... 'தேவ் திருமணம் ஆனவனா...!?' என்ற கேள்வி மனதில் எழுந்ததில் யோசித்துப் பார்த்தவருக்கு அப்போதே இது மட்டுமல்ல, அவனைப் பற்றி எதுவுமே யாருக்கும் தெரியாது என்பது நினைவு வந்தது.


இதுவரை இவன் பெயர் பத்மதேவ் என்பதைத் தவிர, அவனைப் பற்றி வேறு எந்தத் தகவலும் யாருக்கும் தெரியாது. இந்த தேவ் என்பவன் யார்...? அவனுக்குத் திருமணம் ஆனதா...? கூடப் பிறந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா...? குடும்பத்தில் மொத்தம் எத்தனை பேர்...? எங்கிருந்து வந்தான்...? எந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவன்...? "ம்ஹூம்... எதுவும் தெரியாது... யாருக்கும் தெரியாது..."


இப்போது தன் மனைவி முன்பு தன்னை அவமானப்படுத்தியவனை அவன் மனைவி முன்பு அவமானப்படுத்தும் வேகம் எழ, தேவ்வின் பழக்கவழக்கங்களைப் பற்றி நினைவு வர... அதை வைத்துக் கொஞ்சம் விளையாடி பார்க்க நினைத்தவர்.


"இது யாரு மிஸ்டர் தேவ்... உங்க ஓய்ப்பாஆஆஆ..." என அந்த ஒய்ப்பில் தேவைக்கு அதிகமாகவே அழுத்தம் கொடுத்து கேட்க... அவருக்குப் பதில் அளிக்காமல் அவருக்கு அருகில் நின்றபடியே இவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்தவாறே கண்களில் கேள்வியோடும் சற்று நக்கலோடும் நின்றிருந்த ரத்தனின் மனைவியைக் கண்களால் சுட்டி காட்டியவன்,


"வொய் ஆர் யூ இயர் வித் யுவர் நெய்பர்ஸ் வொய்ப்... மிஸ்டர் ரத்தன்..." எனக் குரலில் போலியான வியப்போடு கேட்க, இப்படி ஒரு கேள்வியைக் கொஞ்சமும் எதிர்பாராததால் அப்பட்டமாக அதிர்ந்தவர், தன் மனைவியைத் திரும்பி பார்க்க...


அவரோ கண்களில் கனலோடு புசு புசுவென மூச்சுவிட்டபடி ரத்தனை முறைத்துக் கொண்டு இருந்தார். அதில் பதட்டமாகிய ரத்தன் "என்ன... என்ன உளறல் இது...? நான் ஏன் யார் மனைவியோடோ வர வேண்டும்...! இது என்னுடைய மனைவி மிஸ்டர் தேவ்..." என எங்கே அவனை அசிங்கப்படுத்த தான் எரிந்த அம்பு பூமராங் போலத் தன்னையே திருப்பித் தாக்கிவிடுமோ என்ற படபடப்போடும் இவனுக்கு எப்படி அந்தப் பக்கத்து வீட்டு விஷயம் பற்றித் தெரிய வந்தது என்ற பதட்டத்தோடும் ரத்தன் பதிலளித்தார்.


"மீ டூ..." என இலகுவாகத் தோளை குலுக்கியபடி பதிலளித்துவிட்டு தன் பணியைத் தேவ் தொடர, அவமானத்தால் கன்றிய முகத்தோடு அதற்கு மேல் அங்கு நிற்காமல் வேகமாக மனைவியோடு வெளியேறினார் ரத்தன்.


பாதி ஷாப்பிங் முடிந்த நிலையில் குழந்தை களைத்து உறங்கி விழ, குழந்தையைத் தன்னிடம் தர சொல்லி கேட்க நினைத்தவள் அவனின் நடையை எப்படித் தடுத்து நிறுத்துவது எனப் புரியாமல் முகத்தை நிமிர்ந்து நிமிர்ந்து பார்த்தபடியே நடந்து கொண்டிருக்க... சட்டென்று தேவ் தன் நடையை நிறுத்தவும் இதை எதிர்பார்க்காதவள் அவன் மேல் மோதி நின்றாள்.


ஏற்கனவே அவள் மேல் பொங்கிய ஆத்திரம் மது தன் மேல் வந்து மோதவும் ஜிவ்வென்று ஏற, "என்ன...?" என்று எரிந்து விழுந்தான். சும்மாவே அவன் முன்னால் இயல்பாகப் பேச்சு வராமல் தடுமாறுபவள் சுத்தமாக வார்த்தை வராமல் போக, விரல் நீட்டி குழந்தையைக் காட்டியபடியே தன்னிடம் தருமாறு கையை நீட்ட... அவளை முறைத்துக் கொண்டே குழந்தையைக் கொடுத்தான்.


அடுத்த நொடி "தேவ் டார்லிங்..." என்ற அழைப்போடு வந்து அவனை அணைத்திருந்தாள் ஒரு அழகி. அவளை ஒற்றை விரலில் தள்ளி நிறுத்தியவன் என்ன என்பது போல் பார்க்க, "டார்லிங்... நான் உங்களை இங்கே எதிர்பார்க்கவே இல்லை... ஒரு வாரமா உங்களைக் கான்டெக்ட் பண்ண டிரை பண்றேன், பட் முடியலை... அந்த கதிர் உங்ககிட்ட பேசக் கூட விடலை... இரண்டு நாள் முன்னே ஆபிஸ்க்கு கூட வந்தேன்... ஆனா நீங்க மீட்டிங்ல பிஸின்னு சொல்லிட்டான்... அவனுக்கு என்னைப் பற்றித் தெரியலை... சொல்லி வைங்க டியர்... நாளைக்கு வரை சென்னையில் தான் இருப்பேன்... இன்றைக்கு நைட் நீங்க ப்ரீயா..." என்றாள் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல்.


"செகண்ட் டைம் உன்னோட ஸ்பெண்ட் பண்ற அளவுக்கு நீ ஒண்ணும் பெருசா ஸ்பெஷலா தெரியலையே..." என அவள் காதோரம் குனிந்து உதட்டோரம் ஏளனமாக வளைய, கதிரிடம் இவளை பார்க்க மறுத்தது தான் தான் என்ற நினைவில் கிசுகிசுத்தவனை நம்ப முடியாமல் அதிர்ந்து பார்த்து கொண்டிருந்தாள் இந்தியாவின் டாப் மாடல் நத்தாஷா ஷர்மா.


நத்தாஷா வந்து அணைத்ததிலிருந்து அவள் கேட்டது வரை என அணைத்தையும் அருகில் இருந்து கண்ட மது குனிந்த தலையை நிமிர்த்தாமல் நின்றிருக்க... தேவ் பேசியதில் எழுந்த வன்மத்தோடு பார்வையைத் திருப்பியவள் மதுவை ஏற இறங்க பார்க்க சிம்பிளான ஒரு மஞ்சள் நிற டிசைனர் சுடிதாரில் நெற்றியில் குங்குமத்தோடு உறங்கும் குழந்தையை இறுக அணைத்தப்படி அவ்வளவு அருகில் நின்றிருந்தவள் யார் என்று புரிந்து போனது. "என்னை இண்டர்டியூஸ் பண்ண மாட்டீங்களா உங்க ஒய்ப்க்கு..." என்றாள் நக்கல் புன்னகையை உதட்டில் நெளியவிட்டவாறே.


அதில் ஒற்றைப் புருவத்தை மட்டும் உயர்த்தி அவளைப் பார்த்தவன் பின் ஒரு சிறு தோள் குலுக்கலோடு, "இவங்க நாத்தாஷா ஷர்மா... இந்தியாவோட டாப் ஒன் மாடல்..." என்றான் மதுவிடம். "உங்களுக்கு நான் யாருன்னு சொல்லவே இல்லையே..." என மீண்டும் நக்கல் சிரிப்பு சிரித்தவளை கண்டவனுக்கு அவள் முயற்சி புரியவும், "ஒரு நைட் எனக்குப் பெட் ரூம் கம்பெனியனா இருந்து இருக்கா... ஐ அம் நாட் இம்ப்ரஸ்ட். தட் மச்..." என்றான் அதே நக்கல் வழியும் புன்னகையை அவளை நோக்கி சிந்தியபடி.



இதில் நதாஷாவின் முகம் தான் கறுத்து இருண்டு போனது. அவனை அவமானப்படுத்த நினைத்து செய்த செயல் அவளுக்கே திரும்ப விறுவிறுவென அங்கிருந்து நகர்ந்தாள். செல்லும் அவளையே உதட்டில் வழியும் எள்ளல் புன்னகையோடு தேவ் பார்த்திருக்க... மெல்ல இமைகளை மட்டும் உயர்த்தி அவனைப் பார்த்திருந்தாள் மது.

தொடரும்..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 
Last edited:

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை என்னோடு இங்கு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..

ANAN - 1 & 2


இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 
Last edited:

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதி – 3

அதன் பிறகு எதுவுமே நடக்காது போலத் தேவ் தன் நடையைத் தொடர... மதுவும் அவனைப் பின் தொடர்ந்தாள். அடுத்துத் தேவ் நுழைந்தது பெண்களுக்கான பிரத்யேக ஆடை பிரிவில், அவனைப் பின் தொடர்ந்து சென்றாள். தேவ் அங்கிருந்த விற்பனை பிரதிநிதியிடம் ஏதோ சொல்லி விட்டு, மதுவிடம் இருந்து மித்துவை வாங்கிக் கொண்டு சேலையைத் தேர்ந்தெடுக்கும்படி கண்களைக் காட்டி விட்டு சற்று தள்ளி நின்று கொண்டான்.


மதுவும் தேவ் சொன்ன பிரிவில் அவர்கள் எடுத்து போடுவதை எல்லாம் முதலில் தள்ளி வைத்துக் கொண்டே வந்தவள், தொடர்ந்து அவர்கள் அதே போலச் சேலையே எடுத்து போட்டுக் கொண்டு இருக்கவும் குழம்பியவள், திருதிருவென விழித்தப்படி விற்பனை பிரதிநிதியை பார்ப்பதும் கையில் இருக்கும் சேலையைப் பார்ப்பதுமாக இருந்தாள்.


மெல்ல திரும்பி தேவ்வை தயக்கத்தோடு ஏறிட்டு பார்த்தவள், அவன் மித்துவை தோளோடு அணைத்து பிடித்தபடி மற்றொரு கையில் இருந்த போனில் கவனமாக இருப்பதைக் கண்டு, எப்படிச் சொல்வது எனத் தயங்கி தன் பார்வையைத் திருப்ப...


"என்ன சொல்லணும்...?" என்றான் தேவ், பார்வையைக் கூட நிமிர்த்தாமல் போனையே பார்த்தவாறே. எப்போதும் போலவே இன்றும் 'ஹப்பா... இவருக்கென்ன உடம்பெல்லாம் கண்ணா...' என வியப்பு தோன்ற, தான் சொல்ல வந்ததைக் கூட மறந்து மது அப்படியே பார்த்துக் கொண்டு இருந்தாள்.


அதில் தன் பார்வையைத் திருப்பி மதுவை பார்த்தவன், "இங்க உன்னைப் பார்க்க சொன்னது சேலையை... என்னை இல்ல..." என்று எரிந்து விழுந்தான். அப்போதே நினைவு வந்தவள், "இல்... ல மாமி... இது போலெல்லாம்... கட்டமாட்டா..." எனப் பயத்தோடே ஒரு வழியாகத் தயங்கி தயங்கி சொல்லி முடிக்கவும்.


தன் கையில் இருந்த போனை பாக்கெட்டில் போட்டபடியே தேவ் நன்றாகத் திரும்பி நின்று மதுவை கூர்மையாகப் பார்க்க... அவளோ 'இவர் நாம சொன்னதை நம்பலையா...' என்ற யோசனையோடே, "நிஜமா....மாமி இதெல்லாம் கட்டிண்டு நான் பார்த்ததில்லை... அவா எப்பவும் ஜரிகை அதிகம் இல்லாத பட்டு கலந்த அதிகம் வேலைப்பாடு இல்லாத வகைச் சேலையைத் தான் கட்டுவா..." என எங்கே தான் சொல்வதைத் தேவ் நம்பவில்லையோ என்ற பதட்டத்தில் படபடவெனப் பேசி முடித்தாள்.


அப்போதும் தேவ் மதுவை பார்த்த பார்வையிலோ நின்று கொண்டிருந்த விதத்திலோ கொஞ்சமும் மாற்றம் இல்லை. அப்படியே அசையாமல் நின்று கொண்டு அதே கூரிய பார்வையில் மதுவை துளைக்க... இப்போது தான் மதுவிற்கு, ‘நாம எதுனா தப்பு செஞ்சிட்டோமா...?’ என்றே யோசனை சென்றது.


தனக்குள்ளேயே யோசித்தவளுக்கு என்ன விஷயம் என்று பிடிபடவில்லை. குழப்பமான முகத்தோடு தேவ்வை பாவமாக ஏறிட்டு பார்த்தவளுக்கு, அவன் பார்வை என்ன என்று கேட்கும் தைரியத்தைக் கொடுக்கவில்லை.


எச்சில் கூட்டி விழுங்கியபடியே தேவ்வையையும் சேலையையும் மாறி மாறி மது பார்க்க... எப்போதுமே பொறுமையா என்ன விலை என்று கேட்டு தனக்கும் பொறுமைக்கும் இருக்கும் தூரத்தின் அளவை ஒவ்வொரு முறையும் நிருபிப்பவன், "சாரி செலக்ட் செய்யச் சொன்னது உனக்கு..." என்றான் சீறலாக.


அதில் கண்கள் இரண்டும் தெறித்து விடுவது போல நிலை குத்தி நிற்க... "நேக்கா...?" என நம்ப முடியாமல் மீண்டும் ஒரு முறை கேட்டவள், இதைக் கொஞ்சமும் எதிர்பார்த்து இருக்கவில்லை என்பதை அவளின் அதிர்வே பறைசாற்றியது. மதுவின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தானே தவிர தேவ் எந்தப் பதிலும் அளிக்கவில்லை.


சில நொடியில் தன்னை மீட்டுக் கொண்ட மது "இல்ல... நேக்கு..." என மேலும் ஏதோ சொல்ல போகவும், "உனக்குச் சாரி எடுத்து கொடுக்க வேணும்னா உங்க கேசவ்வை வர சொல்லவா...?" என்று தேவ் குறி பார்த்து எரிந்த வார்த்தை, அவன் நினைத்தபடியே சரியாகச் சென்று இலக்கை தாக்கியது.


தேவ்வின் வார்த்தைகளில் அடிபட்ட வலியோடு நிமிர்ந்து அவனைக் கண்டவளின் கண்களில் நீர் பளபளக்க... பொங்கி வரும் அழுகையை இதழ் கடித்து கட்டுபடுத்த முயன்று கொண்டிருந்தவளின் செவி அருகே குனிந்து, "டென் மின்ட்ஸ்ல செலக்ஷன் முடிஞ்சிருக்கணும்..." என்றவன் மீண்டும் தன் அலைப்பேசியில் மூழ்கி போனான்.


தேவ்வை நிமிர்ந்து ஒரு முறை பார்த்தவள், இனி வேறு வழி இல்லை என்பது புரிய... அந்த விலை உயர்ந்த வகை டிசைனர் சேலைகளின் பளபளப்பையும் விலையையும் கண்டே அதிகம் மிரண்டாள்.


ஆனால் தேவ் சொன்ன நேரத்திற்குள் எப்படியோ ஒரு வழியாக அவள் பார்த்ததிலேயே விலை சற்று குறைவாகக் கண்ணில்பட்ட ஒரு சேலையைத் தேர்வு செய்துவிட்டு நிமிர்ந்து அவனைப் பார்க்கவும், அதே நேரம் கொடுத்த அவகாசம் முடிந்தது என்பது போலத் தேவ்வும் தன் கையில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தவாறே நிமிர்ந்தான்.


மதுவின் கைகளில் இருக்கும் சேலையையும் மதுவையும் ஒரு பொருட்டாகக் கூட மதிக்காமல் அங்குத் தன் கண்களில் பட்டதை எல்லாம் செலக்ட் செய்து அங்கிருந்த பெண்ணிடம் கொடுத்தவன், "பில் பண்ணிடுங்க..." என்று விட்டு விறு விறுவென நடக்கவும், "ஙே" என விழித்தப்படி தான் பார்த்து பார்த்துச் செலக்ட் செய்த சேலையோடு நின்றிருந்தவள், ‘எங்கே தன் மேல் உள்ள கோவத்தில் விட்டுவிட்டு சென்றுவிடுவானோ...?!!’ என்ற பயம் தோன்றவும், தேவ்வின் பின்னாலேயே ஓடினாள்.


கிட்டத்தட்ட அனைத்தும் முடிந்து கிளம்ப இருந்த போது மித்து விழித்துக் கொண்டு சிணுங்கவும், "ஹே... லிட்டில் சாம்ப்..." என மித்துவின் முதுகை தேவ் தடவி தர... தேவ்வின் கழுத்து வளைவில் இருந்து தலையை நிமிர்த்திப் பார்த்தவன், "டாடா..." என இன்னும் இறுக்கமாக அவன் கழுத்தை கட்டி கொண்டு சிணுங்க தொடங்கினான்.


"குட்டி செல்லத்துக்குப் பசி வந்தாச்சா.." என மது மித்துவின் தலையை வருடிக் கொண்டே கேட்கவும், தேவ் அங்கு இருந்த புட் கோர்ட்டை நோக்கி செல்ல முயல... தன் சிறு தோள் பையில் இருந்து ஒரு ஹாட் பேக்கை வெளியே எடுத்த மது, "குழந்தையை என்னான்ட தரேளா..." என்றாள்.


அதில் மதுவையும் அவள் கையில்.இருந்த பொருளையும் பார்த்தவன், "மித்துப் பாய்க்கு பசியா... நாம அங்கே போய் உட்கார்ந்து சாப்பிடுவோமா..." என்றபடியே மது கேட்ட கேள்விக்கு மித்துவிடம் பதில் சொல்லிக் கொண்டே அங்குச் சென்றவனை வழக்கம் போலவே அமைதியாகப் பின் தொடர்ந்தாள் மது.


புட் கோர்ட்டை நெருங்கவும், திடீரென்று தன் நடையின் வேகத்தைக் குறைத்த தேவ், தன் அருகில் வந்து கொண்டிருந்த மதுவின் தோளில் வலது கையைப் போட்டு தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.


தேவ்வின் இந்தத் திடீர் செய்கையில் அதிர்ந்து அவன் முகத்தை மது நிமிர்ந்து பார்க்க... அவனோ எங்கோ கண்கள் சிவக்க வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். கண்களில் கேள்வியோடு தேவ்வின் பார்வையைப் பின்பற்றி அங்கே பார்த்தவளுக்குத் தேவ்வின் செய்கைக்குக் காரணம் விளங்கியது.



அங்கே கைகளில் ஷாப்பிங் பைகளோடு எஸ்களேட்டரில் கேசவ் ஏறிக் கொண்டு இருந்தான். முதலில் இவர்களைக் கவனிக்காதவன் அந்தத் தளத்தை அடைந்து இறங்கும் கடைசி நேரத்தில் தான் கவனித்தான்.


இருவரும் ஜோடியாக நெருக்கமாக நெருங்கி நின்றிருந்த காட்சியைக் கண்டவனின் முகம் ஆத்திரத்தில் சிவந்தது. மித்து வேறு அப்போது தேவ்வின் முகத்தைத் தன் பக்கம் திருப்பிக் கன்னத்தில் முத்தமிடவும், மூவரையும் இப்படிக் குடும்பச் சகிதமாகக் கண்டவன் கோபம் தலைக்கேற விருட்டென்று நகர்ந்தான்.


கேசவ் தங்களைக் கண்ட நொடியில் இருந்து அவன் முகத்தில் வந்த ஒவ்வொரு உணர்வையும் கூர்மையாகப் படித்துக் கொண்டிருந்தவன், விலகி செல்பவனின் முதுகையே ஒரு சிறு கேலி கலந்த வெற்றி புன்னகையோடு பார்த்திருந்தான்.


தேவ்வின் இறுக்கமான முகத்தில் புன்னகையைக் காண்பதென்பதே அபூர்வம். அவை இது போல எப்போதாவது தோன்றும் போதே பார்த்தால் தான் உண்டு. ஆனால் அந்த அரிய வாய்ப்பை காண இன்று தவறவிட்டாள் மது. அவள் தான் இங்கு கேசவ்வை கண்ட நொடி குனிந்த தலையை இந்த நிமிடம் வரை நிமிர்த்தவே இல்லையே.


கேசவ் அந்தப் பாதையில் சென்று திரும்பும் வரை மதுவை அணைத்து பிடித்தபடி நின்றிருந்தவன், பிறகு கைகளை விலக்கி கொண்டு வழமை போல் முன்னால் செல்ல... எப்போதும் போலவே மது அவனைப் பின் தொடர்ந்தாள்.


உணவகத்தினுள் ஓரமாகச் சோபா போன்று இருந்த இருக்கைக்கு அருகில் சென்று தேவ் நிற்கவும், அவன் குறிப்புணர்ந்து மது அந்த இருக்கையில் சென்று அமர... மித்துவை மேஜை மேல் அமர வைத்தவன், மதுவின் அருகில் நெருங்கி அமர்ந்தான்.


இதை மது கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்பது அவள் முகத்தின் அதிர்விலேயே தெரியந்தது. அதைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் மெனு கார்டை மேய்ந்துக் கொண்டிருந்தான் தேவ். முதலில் அதிர்ந்த மதுவிற்கும் தேவ்வின் செய்கைக்கான காரணம் தெளிவாக... இது இயல்பு தான் என்பதைப் போல மித்துவிற்கு உணவை ஊட்ட தொடங்கினாள்.


மித்துச் சமர்த்தாக அமர்ந்து மதுவிடம் பப்புப் புவ்வா சாப்பிட்டுக் கொண்டிருக்க... தேவ் தனக்கு ஒரு ஹாப் சிக்கன் தந்தூரியை ஆர்டர் செய்தவன், மெனு கார்டை மது பக்கம் நகர்த்தினான். கொஞ்சமும் யோசிக்காமல் "நேக்கு எதுவும் வேண்டாம்..." என்றாள் மது.


அதில் மதுவின் முகத்தைத் திரும்பி பார்த்தவன், பதிலேதும் சொல்லாமல் தன் கையில் இருக்கும் வாட்சை பார்க்க... அது அவர்கள் வழக்கமாக இரவு உணவு சாப்பிடும் நேரத்தையும் கடந்திருந்தது. அவன் சொல்ல வருவது புரிந்து "நேக்கு பசி இல்ல..." என மது மெல்ல முணுமுணுத்தாள்.


"ஏன்...? அந்த அளவு மனசு நெறைஞ்சு இருக்கா..." எனக் குத்தலாகத் தேவ் கேட்க, அதில் அடிபட்ட பார்வை ஒன்றை அவனைப் பார்த்தவள், தன் கண்களைச் சுழற்ற அங்கு அதிகமாக அசைவ உணவுகளே அணி வகுத்திருந்தன.


இதைச் சொல்லி வேண்டாம் என்று மறுத்தால், நிச்சயம் அதற்கு வேறு ஏதேனும் சொல்வான் எனப் புரிந்து பழச்சாறு மட்டும் போதுமெனக் கூறினாள் மது. மித்து அழகாக மேஜையில் இருவருக்கும் இடையில் அமர்ந்துக் கொண்டு ஒரு வாய் அம்மா கொடுக்கும் பப்பு புவ்வாவும் ஒரு வாய் அப்பா கொடுக்கும் சிக்கன் துண்டும் என உண்டபடி... இவர்கள் இருவரும் சேர்ந்த கலவையாகத் தயாராகிக் கொண்டிருந்தான்.


தேவ் வாஷ்ரூம் எழுந்து சென்ற இடைவெளியில் தனக்கு மிக அருகாமையில் கேட்ட "வர்ஷூ...." என்ற குரலில் தலை நிமிர்த்திய மது அங்கு கேசவ் நிற்பதை கண்டு அதிர்ந்ததை விட அவனுக்குப் பின்னால் தேவ் நின்றிருப்பதைக் கண்டே அதிர்ந்தாள்.


ஆனால் கேசவ்வோ இதை எதையும் அறியாமல். "வர்ஷூ... எவ்வளவு நாள் ஆச்சு உன்னை பார்த்து, நன்னா இருக்கியா...? நீ ஒண்ணும் கவலைப்படாதே... அந்த ராட்சசனான்ட இருந்து நான்..." எனக் கண்களில் .ஆர்வத்துடன் பேசி கொண்டே செல்ல... மதுவோ பயத்தில் மருண்டு விழித்துக் கொண்டு இருந்தாள்.


"அவளுக்கென்ன... பத்மதேவ் ஆம்படையாளா நன்னா ஷேமமா இருக்கா... எங்காத்து மாட்டு பொண்ணை அப்படியெல்லாம் விட்ற மாட்டோம் பாருங்கோ..." என அவன் பேசுவதைப் போலவே பேசி தேவ் நக்கல் செய்தான்.


தேவ் எழுந்து செல்வதற்காகவே காத்திருந்து பேச வந்தவன், தன் கேள்விக்கு முதுகுக்குப் பின்னால் இருந்து பதில் வரவே எரிச்சல் அடைந்தான். "அடுத்தவா ஆம்படையாளோட இப்படித் திருட்டுத் தனமா பேசறது சரியில்ல தெரியுமோ...?" என மேலும் நக்கல் அடித்தபடியே மதுவின் அருகில் அமர்ந்தவனைக் கண்ட கேசவ்விற்குக் கோபம் தலைக்கேறியது.


"நான் ஒண்ணும் அடுத்தவா..." என்று வீராப்பாகக் கேசவ் பேச தொடங்கவும், "நீங்க பேசிண்டிருந்தது மிஸஸ் மது வர்ஷா விக்ரம பத்மதேவ்வாண்ட மிஸ்டர்..." என அவன் பேசி முடிக்கக் கூடச் சந்தர்ப்பம் தராமல் பதில் அளித்தான் தேவ்.


அதில் ரோஷமாக "அவ... எங்காத்து..." என மீண்டும் விட்டுக் கொடுக்காமல் படபடவென ஏதோ பேச முயன்றவனை மறுபடியும் தடுத்தவன், "பொண்ணா இருந்தா... ஆனா பாருங்கோ இப்ப அவ முழுசா சந்திரமுகியா மாறி இருக்கக் கங்கா போல, முழுசா எங்காத்து மாட்டு பொண்ணா மாறி இருக்க மது..." என வேண்டும் என்றே வெறி ஏற்றுவது போலப் பேசி கொண்டே சென்றவனை முறைத்துக் கொண்டே அங்கிருந்து விலகி சென்றான் கேசவ்.


கேசவ் இருந்த வரை தேவ்விடம் இருந்த கிண்டல் நக்கல் எல்லாம் அவன் சென்ற உடன் விடை பெற்று செல்ல... மீண்டும் முகம் வழக்கம் போல இறுகி போனது. மித்துவை தூக்கி கொண்டு எதுவுமே நடக்காதது போலக் கிளம்பி சென்றான்.


இரவு நேரம் கழித்தே வீடு வந்து சேர்ந்தவர்கள், லலிதாவை சென்று பார்க்க... அவரோ மருந்தின் உதவியோடு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.


தேவ் குளித்து இரவு உடைக்கு மாறியவன், உறங்க தயாராக... மது மித்துவை குளிக்க வைத்து தானும் குளித்து இலகுவான காட்டன் சுடிதாரோடு மித்துவை இருவருக்கும் நடுவில் படுக்க வைத்து விட்டு மறு பக்கம் படுத்து கொண்டாள்.


ஷாப்பிங் சென்று இருந்த போது வெகு நேரம் உறங்கிவிட்டதால் மித்து விளையாட்டு மூடிற்கு மாறி கொட்டம் அடித்துக் கொண்டு இருந்தான். மித்து தேவ்வின் மீது ஏறி குதித்துக் குதித்துக் கொட்டம் அடித்துக் கொண்டு இருக்க...


தேவ் தன் களைப்பையும் மீறி மித்துவின் விளையாட்டிற்கு அரைத் தூக்கத்தோடு பதில் அளித்துக் கொண்டிருந்தான். முதலில் மித்துவை தூக்கி கொள்வோமா என எண்ணியவள், பிறகு எங்கே தேவ் கோபப்படப் போகிறானோ...!!! எனத் தோன்ற அமைதி காத்தாள்.


ஆனால் நேரம் செல்ல செல்ல... மித்துவின் ஆட்டம் கொஞ்சமும் குறையவில்லை. தேவ்வையும் தூங்கவிடவில்லை, பொறுத்து பொறுத்து பார்த்தவள், "மித்துக் குட்டி இப்போ தூங்குவானாம்... காலம்பற எழுந்து டாடா கூட விளையாடுவானாம் குட்டி..." என்று குழந்தையைத் தூக்க முயல...


"இல... இல... இப்போ..." என மித்துச் சிணுங்கவும், "அப்போ... காலம்பற மித்துக் குட்டி டாடா கிளம்பறச்சே தூங்கிண்டே இருப்ப பரவாயில்லையா..." எனச் செல்லமாக மிரட்ட... "ஆனா... ஆனா..." என்றவாறே உடனே தலையணையில் மித்து முகம் புதைத்துக் கொண்டான்.


மது மெல்ல ஒரு புன் சிரிப்போடு அருகில் படுத்துக் கொண்டு மித்துவை தட்டி தூங்க வைக்க முயல, "மா... பாத்து..." எனக் கேட்ட குழந்தையை ஏதேதோ சொல்லி சமாளித்து உறங்க வைக்க மது எடுத்த எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.


அவனோ நீ பாடியே ஆக வேண்டும் என்று அடம் பிடிக்க தொடங்கினான். ஏற்கனவே சரிவர உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்த தேவ்வை ஒர விழியால் மது சங்கடமாகப் பார்க்க... கண்மூடி ஒருக்களித்துப் படுத்திருந்தவனோ அவளின் பார்வை உணர்ந்து விழி திறக்காமலே பாடு என்பது போலக் கையசைத்தான்.


தேவ்விடம் எப்போதும் தோன்றும் வியப்பே இப்போதும் தோன்றியது மதுவிற்கு, "ஹப்பா உடம்பெல்லாம் கண்ணு..." என மெல்ல முணுமுணுத்தவள், மித்துவை தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டு


ஆராரோ ஆரிராரோ அம்புலிக்கு நேர் இவரோ...


தாயான தாய் இவரோ தங்க ரதத் தேர் இவரோ...

மூச்சுபட்டா நோகுமுன்னு மூச்சடக்கி முத்தமிட்டேன்

நிழலுப்பட்டா நோகுமுன்னு நிலவடங்க முத்தமிட்டேன்

தூங்காமணி விளக்கே தூங்காம தூங்கு கண்ணே...

ஆச அகல் விளக்கே அசையாமல் தூங்கு கண்ணே...

ஆராரோ ஆரிராரோ... ஆராரோ ஆரிராரோ...


ஆராரோ ஆரிராரோ... ஆராரோ ஆரிராரோ...


என்று தன் இனிமையான குரலில் மெல்ல பாடிக் கொண்டே தட்டி கொடுக்க துவங்கவும்... சமர்த்தாக உறங்கி இருந்தான் மித்து.


அதைக் கண்டு புன்னகைத்தவள் மெல்ல குனிந்து நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டு, உறங்கும் குழந்தையைச் சில நொடிகள் ரசித்திருந்தாள், பிறகு அவனைத் தூக்கி தங்களுக்கு இடையே படுக்க வைத்து விட்டு நிமிர்ந்தவளின் பார்வையில்...


தேவ்வும் உறங்கிவிட்டிருந்தது சீராக ஏறி இறங்கும் மார்பிலும் அவன் மூச்சு காற்றிலும் தெரிந்தது. அவன் அருகாமையில் எப்போதும் தன்னைத் துளைத்து பார்க்கும் கூரிய பார்வையில் ஏற்படும் நடுக்கம் எதுவும் இல்லாமல், சற்றுத் தைரியம் வர பெற்றவள்... தன்னை மறந்து உறங்கி கொண்டிருப்பவனையே சில நொடிகள் பார்த்திருந்தாள் மது.


அலை அலையான கேசம் காற்றில் அலைபாய, பரந்த நெற்றி, கூர் நாசி, எதிரில் இருப்பவர்கள் மனதில் நினைப்பதைக் கூட அவர்கள் விழி வழி மனதிற்குள் ஊடுருவி அறியும் குத்தீட்டி பார்வை கொண்ட கண்கள் இமை கொண்டு மூடியிருக்க, அடர்த்தியான அளவாகக் கத்தரிக்கபட்ட மீசை, அதன் கீழ் இறுக்கமாக மூடி இருக்கும் உதடுகள், எனப் பார்வையால் வலம் வந்தவளுக்கு, உறங்கும் போதே ஒருவர் தன்னை மறந்து இறுக்கம் தொலைந்து அவர்களின் உண்மை முகம் வெளிப்படும் என்பதைப் பொய்யாக்கும் வகையில் அழுந்த மூடி படுத்திருந்தவனைக் கண்டவளுக்கு, 'யாரின் கணிப்பையும் பொய்யாக்கும் வல்லமைபடைத்தவன்...' என்றே தோன்றியது.


தினம் தினம் விடாது செய்யும் உடற்பயிற்சியின் பலனாக முறுக்கேறிக் கச்சிதமாக இருந்த உடல், எனத் தலை முதல் பார்வையாலேயே அளவெடுத்துக் கொண்டு வந்தவளுக்கு உறங்கும் வடிவில் கிரேக்க சிற்பம் ஒன்றை செதுக்கி வைத்திருப்பதைப் போன்றே தோன்றியது .


மீண்டும் தன் பார்வையை தேவ்வின் முகத்தில் நிலைக்க விட்டவள் கொஞ்சமும் எதிர்பாராத வகையில் விழி விரித்துப் பார்க்கும் படி தேவ்வின் இதழ்கள் ஒரு ரசனையான புன்னகையைச் சிந்தியது.


அதை இது உண்மை தானா என்று நம்ப முடியாமல் மது பார்த்திருக்க... தேவ்வின் புன்னகை கொஞ்சம் கொஞ்சமாக விரிந்துக் கொண்டே சென்றது. சட்டென்று நிமிர்ந்து தேவ்வின் முகத்தை மது பார்க்கவும், அது அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை நிச்சயம் செய்தது.


ஏதோ கனவு என்று புரிய... அரிதாகக் காண கிடைத்த தேவ்வின் புன்னகையையே மது பார்த்துக் கொண்டிருந்தாள். "ஓ மை ஏஞ்சல் ஆப் டார்க்னஸ்..." என உச்சரித்தவன் சிறு இடைவெளி விட்டு "மாஷா..." எனக் கனவில் தன் எதிரில் நிற்பவளை கண்டு குரலில் அத்தனை காதலை தேக்கி கொஞ்சலோடு கூறியவாறே, தன் உதடு குவித்து முத்தத்தை இச்சென்ற சத்தத்தோடு பறக்க விட... அருகில் இருந்து இதைக் கண்டு உறைந்து போய் அமர்ந்திருந்தாள் மது.


தொடரும்..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 
Last edited:

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதி – 4

தேவ்வின் வார்த்தைகளிலும் முகப் பாவத்திலும் உறைந்து போய் அவனைப் பார்த்த மதுவிற்கு இந்த தேவ் முற்றிலும் புதிது. இதுவரை தேவ்விடம் அவள் பார்க்காத முகம் இது. லலிதாவிடம் வெளிபடும் அன்பும் பாசமுமான முகமும், மித்துவிடம் வெளிப்படும் கொஞ்சலும் குறும்புமான முகமும், தன்னிடம் வெளிப்படும் கோபமும் எரிச்சலான முகமும் மற்றவர்களிடத்தில் வெளிப்படும் அதிகாரமும் மிடுக்கான முகமுமே இதுவரை அவள் பார்த்தது.


இப்போது அவள் கண்ட ரசனையும் புன்னகையுமான இந்த முகமும், காதல் ததும்பும் அந்தக் குரலும் மதுவை அப்படியே அதிர்வில் உறைய செய்தது. கடைசியில் அவன் உதிர்த்த "மாஷா..." என்ற வார்த்தையே அவளை யோசிக்கச் செய்தது.


மதுவின் இத்தனை நாள் அனுபவத்தில் தேவ்வுக்குப் பெண்களுடனான தொடர்பை பற்றித் தெள்ள தெளிவாக நன்கு அறிந்து வைத்திருந்தவள் இதுவரை எந்தப் பெண்ணின் பெயரையும் தேவ் இப்படி எல்லாம் உச்சரித்து அவள் பார்த்தில்லை. இதே யோசனை மனதில் ஓட... விலுக்கென்று நிமிர்ந்தாள் மது.


அப்போதே இதே பெயரை தேவ் இதற்கு முன்பும் உச்சரித்தது அவளுக்கு நினைவு வந்தது. மதுவின் கழுத்தில் தேவ் மாங்கல்யத்தை அணிவித்த அந்த நொடியில் மிக நெருக்கமாக அவன் முகம் மதுவின் காதருகில் குனிந்திருக்க... தேவ் முகம் கசங்க வேதனையான குரலில் உச்சரித்த "ஐ ம் சாரி மாஷா..." என்ற வார்த்தைகள் இப்போது சரியாக நினைவு வந்து கண்களைக் கலங்க செய்தது.


கண்கள் கலங்க இன்னுமும் தன் மனங்கவர்ந்தவளோடு கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருப்பதின் அடையாளமாக முகத்தில் இன்னும் புன்னகை மிச்சமிருக்க உறக்கத்தில் ஆழ்ந்திருந்தவனின் முகத்தையே வெகு நேரம் பார்த்தபடி அமர்ந்திருந்தவளின் கன்னங்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.


சிறிது நேரத்தில் தேவ்விடம் அசைவு தெரியவும் சட்டென்று திரும்பி உறங்குவது போலத் தன் இடத்தில் படுத்துக் கொண்டாள் மது. இரவெல்லாம் மௌனமாக அழுதுக் கொண்டே படுத்திருந்தவள் வெகு நேரம் கழித்தே உறங்க தொடங்கினாள்.


எவ்வளவு தாமதமாக உறங்கிய போதும் வழக்கமான நேரத்திற்குக் கண் விழித்தெழுந்தவள், தன் தினசரி வேலைகளைத் தொடர... லலிதாவின் அறைக்குள் நுழைந்தவளை புன்னகை முகமாக வரவேற்றவர், ஆராய்ச்சி பார்வை பார்க்க...


"என்னாச்சு மாமி..." என அவர் பார்வைக்கு அர்த்தம் புரியாமல் குழப்பத்தோடு கேட்டவளை தன் அருகில் அமரும்படி சைகை செய்தவர், அங்கிருந்த நர்ஸ்கள் புறம் திரும்பி அவர்களைச் சிறிது வெளியே இருக்குமாறு கூற, அவர்களும் ஒரு தலையசைப்போடு வெளியேறினர்.


அதற்காகவே காத்திருந்தவர், "என்ன... ஆச்சு மா...? தேவ் உன்னை... எதாவது...?" எனத் தன் உடல் நிலையையும் மீறிய பரபரப்போடு கேட்டவாறே மதுவின் உடல் முழுவதும் பார்வையால் வருடியவர், எங்காவது அடித்த தடமோ அடிபட்ட தடயமோ இருக்கிறதா...? என ஆராய்ந்தார்.


லலிதா எதைப் பற்றிக் கேட்கிறார் என்று புரியாமல் விழித்த மது, அவருக்குப் பதில் அளிக்க எடுத்துக் கொண்ட அந்தச் சில வினாடிகளுக்குள் லலிதாவின் மனம் பரிதவித்துப் போனது. இப்போது இருக்கும் தேவ் எப்போது எப்படி நடந்து கொள்வான் என்றே கூற முடியாது மாறி போய் இருப்பதை நினைத்து...


"மாமி நேக்கு நீங்கோ என்ன கேக்கறேள்னே புரியல..." எனக் குழப்பத்தோடே மது கேட்க, அவளின் சிவந்து வீங்கியிருந்த கண்களும், பால் வண்ண முகத்தில் கோவைபழம் போலச் சிவந்திருந்த மூக்கும், தூக்கம் போதாமல் சோர்ந்திருந்த முகமும் என இருந்தவளை ஆராய்ச்சியாக அவளின் முகத்தையே பார்த்தவாறே "நைட்... அழுதியா மது... தேவ்...?" என மேலும் கேட்பதற்ள் அவர் எதைப் பற்றிப் பேசுகிறார் என்று புரிந்து கொண்டாள் மது.


"அவர் எதுவும் செய்யலை மாமி..." எனத் தலை குனிந்தவாறே மெல்லிய குரலில் மது பதிலளிக்க... "அப்போ ஏன்மா அழுத...?" என்று கேட்டவர், "நான் அவனுக்கு அம்மா... அதனால அவனுக்குத் தான் சப்போர்ட் செய்வேன்னு நினைச்சு எதையும் மறைக்காதே மது மா..." எனத் தன் உடல் நிலையையும் மீறி தொடர்ந்து பேசியவரின் கைகளைப் பற்றிக் கொண்டவள்,


"நேக்கு உங்களை நன்னா தெரியும் மாமி..." எனச் சொல்லும் போதே அழுகை வர... அவரின் தோளில் சாய்ந்துக் கொண்டு மன பாரம் தாங்காது அழ துவங்கியவளை ஆறுதலாக அணைத்துக் கூடத் தேற்ற முடியாமல் கைகள் அசைவற்று அமர்ந்திருந்தவர், "அழாத மா... என்ன பிரச்சனைன்னு சொன்னா தானே தெரியும்...?" என்றவருக்கு அப்போதே நேற்று இவர்கள் வெளியே சென்றது நினைவு வந்தது.


"நேத்து... வெளியே போன இடத்தில..." எனக் கேட்க தொடங்கியவருக்கு அதற்கு மேல் எப்படிக் கேட்பது என்று புரியவில்லை, தேவ் தான் எதையும் எவருக்கும் மூடி மறைத்துச் செய்யக் கூடியவன் அல்லவே...!!! திறந்த புத்தகமாகத் தான் சொல்ல நினைப்பதை மட்டும் மற்றவர் அறியும் படி செய்பவனாயிற்றே...!!!


தேவ்வின் பெண்களுடனான பழக்கவழக்கங்கள் இவருக்கும் தெரியும் ஆதலால் நேற்று சென்ற இடத்தில் எதாவது நிகழ்ந்திருக்குமோ...? என்று தோன்ற, திருமணத்திற்குப் பிறகு தன் மகன் அப்படியெல்லாம் இருக்க மாட்டான் என்ற நம்பிக்கையோடு இருந்தவர், ஒருவேளை அப்படி இல்லையோ...?! இன்னும் அதெல்லாம் தொடர்கிறதோ...?! என்ற பயம் மனதை அழுத்த, கேட்க வந்ததைக் கேட்க முடியாமல் தயங்கினர்.


லலிதா ஒன்றை கேட்க நினைத்து நேற்றைய சம்பவத்தை நினைவுப்படுத்த, ஆனால் மதுவிற்கோ அது வேறு ஒன்றை நினைவுப்படுத்தியது. கேசவ்வின் முகம் நினைவில் வந்து மதுவிற்கு அழுகையைத் தான் அதிகப்படுத்தியது.


அவன் தான் இப்போது நடந்துக் கொண்டிருக்கும் அனைத்திற்கும் காரணம் என்று எண்ணம் எழ... கேசவ்விற்கும் தேவ்விற்கும் இடையில் நிகழ்ந்த யாவும் நினைவு வந்து, 'இதை எப்படிச் சரி செய்யப் போகிறோம்...?' என்ற கவலை மனதை பிசைய, அழுகை நிற்காமல் தொடர்ந்தது.


மது இப்படித் தனக்குள் உழன்றுக் கொண்டிருக்க... இங்கு லலிதாவோ பல்வேறு வார்த்தைகளில் நடந்தது என்னவென்றே தெரியாமல் மதுவை தேற்ற முயன்று கொண்டிருந்தார்.


அப்போது படார் எனக் கதவு திறக்கபட... புயல் போல உள்ளே நுழைந்த தேவ், "என்ன மா... என்னாச்சு...?" எனக் கேட்டபடி லலிதாவை நெருங்கினான்.


தன் வழக்கமான ஜாகிங் முடித்து வீடு திரும்பிய தேவ் லலிதாவின் அறைக்கு வெளியே மூடிய கதவையே பார்த்த படி நர்ஸ்கள் நிற்பதை கண்டு பதட்டமாக அவர்களை நெருங்கவும், அவனைக் கண்ட பதட்டத்தில் நின்றிருந்தவர்களின் முகப் பாவமே ஏதோ சரியில்லை என்று சொல்லாமல் சொல்ல...


ஒருவேளை லலிதாவின் உடல் நிலையில் எதாவது பிரச்சினையா...? மருத்துவர் வரவழைக்கப்பட்டு இருக்கிறாறோ...! என்ற பதட்டத்தோடு தேவ் உள்ளே நுழைய, ஆனால் அவரோ வழக்கம் போலக் காலை வேளையில் பெல்ட்டின் உதவியோடு எப்போதும் போலச் சாய்ந்து அமர்ந்திருந்தார்.


"என்னாச்சு மா..." என்று கேட்டுக் கொண்டே லலிதாவை நெருங்கியவனை ஏறிட்டு பார்த்தவர், "நானும் அதே தான் கேட்கிறேன்... என்ன ஆச்சு...?" எனவும், புரியாமல் நின்றவன் அவர் உடல் நிலையில் ஏதும் பிரச்சினையோ என்ற பதட்டத்தில் இருந்ததனால் அவர் சொல்ல வருவது புரியாமல் "மா..." என்று தொடங்கவும்


"என் மருமகளுக்கு என்ன ஆச்சு விக்ரம்..." என்று தன் உடல் நிலையையும் மீறி வார்த்தைகளில் அழுத்தம் கொடுத்து கேட்கவும் தான் அங்கு அவரருகில் அமர்ந்திருந்த மதுவின் பக்கம் தன் பார்வையைத் திருப்பினான் தேவ்.


அழதழுது சிவந்த முகமும் சற்றே வீங்கிய கண்களுமாக இருந்தவளை கண்டு ஒற்றைப் புருவத்தைக் கேள்வியாக உயர்த்தியவன், அவளையே பார்க்க... "என்ன செஞ்ச என் மருமகளை..." என்ற லலிதாவின் கேள்வியில் அவர் பக்கம் திரும்பியவன், "நானா...?" எனப் போலி வியப்போடு கேட்டான்.


"ஆமா... நேத்து நீ தான் பிள்ளையை ஏதோ செஞ்சிருக்க..." என அவர் குற்றம் சாட்ட, “மா இதெல்லாம் அநியாயம்” என்றவனின் வார்த்தைகளை கேட்க கூட அவர் தயாராக இல்லை.


“என்ன செஞ்ச விக்ரம்?” என மீண்டும் அவர் அதிலேயே நிலையாக நிற்க, "நானா...?! உங்க மருமகளையா...?! எதுவும் செய்யலை மா...!! அதுவும் நேத்து நைட் எதுவுமேமேமே செய்யலையேஏஏஏ மா...!!!" என அந்த எதுவுமேவில் அழுத்தம் கொடுத்து சொன்னவனை மது நிமிர்ந்து பார்க்க... அவனோ லலிதாவையே பார்த்துக் கொண்டு இருந்தான்.


"அப்பறம் ஏன் குழந்தை அழறா..." என அவர் தேவ்வை நம்பாமல் கேள்வி கேட்க, திரும்பி மதுவின் முகத்தை ஒரு பார்வை பார்த்தவன், "ம்ம்... உங்க குழந்தைக்கு அவங்க அம்மா ஞாபகம் வந்திருக்கும்..." என்றான் சற்று கிண்டல் குரலில்.


குரலில் மட்டுமே கிண்டல் தொணிக்க... கண்களோ அழுத்தமான பார்வையை மதுவின் முகத்தில் பதித்திருந்தது. மதுவும் அந்தப் பார்வையின் பொருள் புரிந்து, "ஆமா மாமி... நேக்கு அம்மா ஞாபகம் வந்துடுச்சு..." என முந்தானையில் முகத்தைத் துடைத்தவாறே கூறியவளுக்கு எப்போது இந்த அறைக்குள் தேவ் நுழைந்தானோ அப்போதே சுவிட்ச் போட்டது போல அழுகை நின்றிருந்தது.


உண்மையைத் தான் சொல்கிறாயா...? என்பது போல லலிதா பார்க்க, "நிஜமா மாமி..." எனத் தன் வெண்பற்கள் தெரிய சிரித்தவளை அருகில் வருமாறு சைகை செய்தவர், "அம்மாவை போய்ப் பார்த்துட்டு வரீயா...?" என்று கேட்டார்.


"அதெல்லாம் வேண்டாம் மாமி... இப்போ நேக்கு பரவாயில்லை..." என்று மது புன்னகைக்க, "பார்த்தீங்களா மா... அதுக்குள்ள உங்க அப்பாவி பிள்ளை மேல இப்படிச் சந்தேகப்பட்டீங்களே...!!" என வருந்துவது போன்ற குரலில் டன் டன்னாக முகத்தில் குறும்பு கூத்தாட கேட்டவனைப் போலியாக முறைத்தவர், "யாரு நீயா அப்பாவி...! நீ அடப்பாவி...!!" என்றார்.


“நீயா பேசியது, என் தாயே நீயா பேசியது...?!!” என்று போலியாக அதிர்ந்து நெஞ்சை பிடித்துக் கொண்டு வருந்துவது போல தேவ் நடிக்கவும், “போடா அரட்டை” என அவனை பார்த்து சிரித்தார் லலிதா. இப்படியே பேச்சை தேவ் திசை மாற்ற அவரும் அதில் மூழ்கி போனார்.


அன்று மதியம் மித்துவை உறங்க வைக்க மது முயன்று கொண்டிருந்த வேளையில் அவள் போன் ஒலித்தது. அதை ஆன் செய்தவள் அந்தப் பக்கம் இருந்து வந்த தன் தாய் பார்வதியின் குரலில் இன்பமாக அதிர்ந்தாள்.


"எப்படி மா இருக்கேள்..." எனச் சிறு அழுகை குரலில் கேட்டவளை, அன்பாகக் கடிந்து கொண்டவர், "ச்சீ அசடு எதுக்கு இப்போ இந்த அழுகை..." எனவும், "ஒண்ணுமில்ல..." என்று அவள் சமாளிப்பாக கூறவும், "மாப்பிள்ளை சரியா தான் சொல்லியிருக்கிறார்...!!" என்றார் அவர்.


"அவ... ரா...?அவர் என்ன சொன்னார்...?" எனப் பயத்தோடு மது கேட்க, "ம்ம்... உங்க பொண்ணு உங்களைப் பார்க்காம அழறா... ஒரு பீடிங் பாட்டில் மறக்காம வாங்கிண்டு வந்துடுங்கோன்னு சொன்னார்.." எனச் சிரித்துக் கொண்டே கூறினார் அவர்.


இந்தப் பதிலில் மது விழி விரிய திறந்த வாய் மூடாது அமர்ந்திருந்தாள், ‘இவர் இப்படியெல்லாம் கூடப் பேசுவாரா...? அதுவும் அம்மாண்ட...!!’ என்ற அதிர்வோடு யோசித்துக் கொண்டு இருந்தாள். அதன் பிறகு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவர், பிறகு அழைப்பதாகச் சொல்லி போனை வைக்க முயலவும், "நேக்கு உன்னை பார்க்கணும் போல இருக்கு மா..." என்று ஏக்கமாகக் கேட்டவளின் குரலில் இருந்தே அவள் மனதை புரிந்து கொண்டவர், "அப்போ சீக்கிரம் மித்துக்கு ஒரு தம்பியோ தங்கையோ ரெடின்னு நல்ல செய்தியை சொல்லு... ஓடோடி வரேன்..." என்றார்.


இப்போது இங்கு தன் நிலையை என்னவென்று இவருக்கு எப்படிச் சொல்லி புரிய வைப்பது என்று எண்ணியவள், வேறு பேசி அவரைத் திசை திருப்பி விட்டு மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு மனமே இல்லாமல் இணைப்பை துண்டித்தாள்.


ஏனோ அவரோடு பேசியதற்குப் பிறகு மனம் சற்று அமைதியானது போல் தோன்றியது. மாலை வரை அதே இதமான மன நிலையில் இருந்தவள், மித்துவோடு தினசரி வழக்கமாகத் தோட்டத்தில் உலாவி கொண்டு இருக்க... வழக்கத்திற்கு மாறாக விரைவாக வீடு திரும்பினான் தேவ்.


காரின் சத்தத்திலேயே நெற்றியை சுருக்கி யோசிக்கத் தொடங்கிய மது தேவ் நேராக மித்துவை காண இங்கு வருவது தெரிந்து எழுந்து நின்றாள். தேவ்வை இந்த நேரத்தில் கண்ட குஷியில் குதித்துத் தன் மகிழ்ச்சியை மித்து வெளிப்படுத்த... சிறிது நேரம் அவனோடு விளையாடியவன், அறைக்குச் செல்லும் முன் மதுவின் முகத்தை ஒரு ஆராய்ச்சி பார்வை பார்த்தபடியே கடந்து சென்றான்.


அரைமணி நேரம் கழித்து வெளியே செல்ல தயாராகக் கேஷ்வல் உடையில் தயாராகி வந்தவன், மித்துவோடு அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்துக் கொண்டு "டாடா... பை போய்ட்டு வரேன்... மித்துப் பாய் குட் பாய்யா விளையாடிட்டு இருப்பானாம்..." எனப் பேசவும், "ம்ஹூம்..." எனத் தேவ் அலுவலகம் கிளம்பும் உடையில் இல்லாமல் வேறு உடையில் இருப்பதைக் கண்டு மறுப்பாகத் தலையசைத்தான்.


ஒரு சிறு புன்னகையோடு மித்துவை தேவ் பார்க்கவும் அவன் போன் அலறவும் சரியாக இருந்தது. அதை எடுத்துத் தேவ் காதிற்குக் கொடுக்கவும், தன்னை விட்டுவிட்டுத் தேவ் வெளியே கிளம்பவது பிடிக்காமல் "ஆனா... ஆனா..." என்றபடியே மித்துப் போனை பிடித்து இழுக்க தொடங்கியதில் அவன் கைபட்டு ஸ்பீக்கர் ஆன் ஆனது.


அந்தப் பக்கம் இருந்து ஒரு இனிமையான பெண் குரல், "ஐ ம் வைட்டிங் பார் யூ தேவ்..." எனக் கொஞ்சலாகக் கேட்க, "ஐ வில் பி தேர் இன் ஹாப் அன் ஆர் பேப்ஸ்..." என்றவாறே போனை அணைத்துச் சட்டைபையில் போட்டவன், மித்துவை ஏதேதோ சொல்லி சமாதானம் செய்து விட்டு இவற்றையெல்லாம் கேட்டு கொண்டும் பார்த்து கொண்டும் அருகில் நின்றிருந்த மதுவிடம், "டின்னர் வேண்டாம்... நைட் வர மாட்டேன்.." எனச் சொல்லிக் கொண்டே வெளியேறி சென்றான். செல்பவனின் முதுகையே பார்த்தபடி நின்றிருந்தாள் மது.


ஒரு வாரம் சென்றிருக்க... அன்று ஞாயிறு என்பதால் வீட்டில் ஓய்வாக இருந்தான் தேவ். அப்போது அவனுடைய முன் அனுமதியின் பேரில் அவனைக் காண வந்திருந்தான் தேவ்வின் உதவியாளன் கதிர்.


பெரும்பாலும் அலுவலகம் தொடர்பான வேலைகள் எதையும் வீட்டிற்குக் கொண்டு வருபவன் இல்லை தேவ். ஆனால் இந்த வாரம் கிடைத்த மிகப்பெரிய தொழில் வெற்றியை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பார்ட்டிக்குச் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் பற்றித் திட்டமிட வேண்டியே வர அனுமதித்திருந்தான்.


இருவரும் கலந்தாலோசித்து முடித்த வேளையில் கதிர் தேவ்வின் முகம் பார்ப்பதும் சொல்ல வந்ததைச் சொல்ல தயங்குவதுமாக இருந்தான். பின்னே தேவ்வின் அத்தனை முகங்களும் பார்த்தவன் ஆயிற்றே.


எப்போது எப்படி நடந்துக் கொள்வான் என்று கணிக்கவே முடியாது... அதிலும் இப்போது சொல்ல போகும் விஷயத்தைக் கேட்டால் எப்படி ரியாக்ட் செய்வானோ என்ற பயம் வர... தயங்கி நின்றவனை என்ன என்பது போல தேவ் பார்த்தான்.


"சார் அது... பார்டிக்கு..." எனக் கதிர் சொல்ல வந்ததைச் சொல்ல தயங்கி இழுக்கவும், "என்ன எல்லோரும் பார்டிக்கு பேமிலியோட வர மாதிரி... பார்ட்டி கொடுக்கற நானும் பேமிலியோட வரணும் ரைட்..." எனச் சிறு கிண்டலோடு கேட்கவும்,


இதைக் கொஞ்சமும் எதிர்பார்காத கதிர், "சார்... எப்படி சார்...?" என்றான் அதிர்வோடு, "ரத்தன்..." என ஒரே வார்த்தையில் பதில் அளித்தவன், "இதை நான் எதிர்பார்த்தேன்.." எனச் சிறு நக்கல் தொனியில் பதிலளித்தவன், "அதுக்கேத்த அரென்ஜ்மென்ட்ஸ் தான் செஞ்சிருக்கேன்..." என்றும் அதற்கு மேல் எதுவும் பேசாமல் முடித்துக் கொண்டான்.



பார்ட்டிக்கான ஏற்பாடுகளில் பல ஏன் என்று அப்போது புரியாததெல்லாம் இப்போது கதிருக்குத் தெளிவாகியது. இத்தனை வருடங்களாக உடன் இருந்தும் ஒவ்வொரு முறையும் தேவ்விடம் வெளிப்படும் முகங்கள் எப்போதும் போல இப்போதும் கதிரை மலைக்கச் செய்தது.

தொடரும்..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 
Last edited:

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை என்னோடு இங்கு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..

ANAN - 3 & 4


இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 
Last edited:

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

ஆதி – 5

தேவ் தன் தொழில் வெற்றியைக் கொண்டாட அந்தப் பெரிய நட்சத்திர விடுதியில் ஏற்பாடு செய்திருந்த பார்ட்டிக்கு முதல்முறையாக மனைவியையும், மகனையும் அழைத்து வந்திருந்தான்.


இது போன்ற இடங்களுக்கெல்லாம் வந்து பழக்கம் இல்லாத மது, தேவ் தேர்ந்தெடுத்துக் கொடுத்த ஆடைகளை அணிந்துக் கொண்டு ஒரு அசௌகரியமான மனநிலையிலேயே அவ்வளவு பெரிய இடத்தில் நின்றிருந்தாள்.


காலையில் இந்தப் பார்டியை பற்றிக் கூறி மாலை அவளையும் மித்துவையும் தயாராகும் படி தேவ் லலிதாவின் முன்னிலையில் கூற, மது இதெல்லாம் தனக்குச் சரிப்பட்டு வராது என்று கூறி மறுக்க முயன்றாள்.


அதற்கு முன் இந்தச் செய்தியை கேட்ட உடன் லலிதா சந்தோஷத்தில் மதுவும் மித்துவும் அணிந்துக் கொள்ள வேண்டிய ஆடைகள் பற்றியெல்லாம் பேச துவங்கவும், என்ன செய்வது என்று தெரியாமல் சங்கடமாக நெளிந்தாள் மது.


அவளுக்கு இது போல எல்லாம் சென்று பழக்கம் இல்லை என்பதை விட... தேவ்வோடு இப்படிச் செல்லவே அவளுக்குத் தயக்கம். இதை எப்படிச் சொல்வது என்று மது தயங்கி கொண்டு இருந்தாள்.


மதுவிற்கு அதற்கான சந்தர்ப்பத்தைக் கொடுக்கக் கூடாது என்பதற்காகவே இதைப் பற்றிய பேச்சை லலிதாவின் முன்னிலையில் தேவ் எடுத்திருந்தான். அவனுக்கு நினைத்ததைச் சாதித்தே பழக்கம். யாரையும் எப்போதும் பொறுமையாகக் கையாண்டோ, இல்லை எடுத்து சொல்லி புரிய வைத்தோ பழக்கம் இல்லை. அதற்காகவே லலிதாவின் முன்னிலையில் இந்த பேச்சை துவங்கினால் மதுவை சம்மதிக்க வைக்கும் பொறுப்பை அவர் பார்த்து கொள்வார் என்பதே தேவ்வின் திட்டம்.


எப்படி இதில் இருந்து தப்பிப்பது எனத் தன் சிறு மூளையைக் கசக்கி யோசித்த மதுவிற்கு ஒரு யோசனை தோன்றிய உடன் சட்டென்று முகம் பிரகாசம் அடைய லலிதாவை பார்த்து "அந்த மாதிரி இடத்துக்கு எல்லாம் போட்டு போக என்கிட்ட சேலை எதுவும் இல்லையே மாமி..." என்று சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல...


லலிதாவோ "அதெல்லாம் தேவ் பாத்துக்குவான் மா... டிசைனர் வீட்டுகே வந்து ஒரு மணி நேரத்தில ரெடி செஞ்சி கொடுத்துடுவாங்க..." என்று கூற, இவர் இப்படிச் சொல்வார் என்று கொஞ்சமும் எதிர்பார்க்காத மது திருதிருவென விழித்தாள்.


மது எப்படித் தப்பிக்கலாம் என்று யோசிக்கத் தொடங்கியதில் இருந்து அவள் முகத்தையே ஆராய்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருந்த தேவ் அவளின் முகம் பிரகாசமாகவும் ஏதோ திட்டமிட்டுவிட்டாள் என்பது புரிய...


அது என்னவென்று அறிய அவளையே கூர்மையாகப் பாரத்துக் கொண்டிருந்தவன் அவள் சொன்ன காரணத்தைக் கேட்டு தன் இதழை ஏளனமாக வளைத்தான். அதற்கேற்றாற் போல் லலிதாவும் பேச...


"அதுக்கு எந்த அவசியமும் இல்லை மா..." எனப் பதிலளித்தவனைக் கேள்வியாக லலிதா பார்க்க... 'அச்சோ என்ன சொல்ல போறாறோ...!?' என்ற பதட்டத்தோடு மது பார்த்திருந்தாள்.


"அன்னைக்கு ஷாப்பிங் போன போதே இந்தப் பார்டிக்கும் சேர்த்துப் பர்சேஸ் முடிச்சாச்சு... உங்க மருமக அதை மறந்துட்டு பேசிட்டு இருக்கா...!!" என விளக்கமளித்தவனைக் கண்டு நிறைவாகப் புன்னகைத்தவர் "மது... சாயந்திரம் அழகா தயாராகிப் போடா... எல்லாரும் என் மருமக அழகை பார்த்து அப்படியே மயங்கிடணும்..." என லலிதா ஆசையாக சொல்லி கொண்டிருந்தார்.


"பயத்தில மயங்கி விழாம இருந்தா சரி..." என்றவாறே தேவ் அங்கிருந்து எழுந்து செல்ல... முகம் சுணங்க அவன் சென்ற திசையையே மது பார்த்திருந்தாள். "அவன் கெடக்கான் விடுமா... நீ நான் சொன்னப்படி தயாராகணும் சரியா..." என்ற லலிதாவின் கேள்விக்குச் சம்மதமாகத் தலையசைத்தாள் மது.


தேவ் கொஞ்சம் கொஞ்சமாக மதுவை தன் வாழ்க்கையோடு முதுமையாக இணைத்துக் கொள்ளத் தொடங்கிவிட்டான் என்றே நினைத்து அந்தத் தாய் உள்ளம் சந்தோஷித்தது. ஆனால் அவன் இதையுமே தொழிலோடு சம்பந்தப்படுத்தியே செய்கிறான் எனத் தெரிய வரும் போது பாவம் எப்படித் தாங்கிக் கொள்வாரோ...!!!


லலிதாவின் அறையில் இருந்து வெளியே வந்த மது தங்கள் அறைக்குள் நுழையவும் அங்கிருந்த சோபாவில் அன்று வாங்கியிருந்த சேலைகளில் இருந்து அடர் சிகப்பு நிற அதிக வேலைப்பாடுகள் கொண்ட ஒரு டிசைனர் சேலையும், அதற்குப் பொருத்தமான அணிகலன்களும் எடுத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டவளுக்கு, இதிலிருந்து இனி தப்பிக்க முடியாது என்பது தெளிவாகப் புரிந்தது.


தேவ் சொல்லி சென்றபடியே உரிய நேரத்திற்குத் தயாராகி மித்துவோடு காத்திருந்தாள் மது. விறுவிறுவென அறைக்குள் நுழைந்த தேவ் அங்கு நின்றிருந்தவளை தலை முதல் கால் வரை பார்வையில் அளந்தான்.


தான் எடுத்து வைத்து விட்டு சென்றதை எல்லாம் அணிந்துக் கொண்டு மிதமான அலங்காரத்திலேயே ஜொலித்துக் கொண்டிருந்தவளை கண்டு ஒரு திருப்தியோடு குளியலறைக்குள் நுழைந்தான்.


அதுவரை அழகிய துணிக்கடை பொம்மை என அசைவற்று நின்றிருந்தவள், 'ஹப்பா... எடுத்து வெச்சதெல்லாம் சரியா போட்டுண்டு இருக்கேனான்னு செக்கிங் வேற...' என மனதிற்குள் புலம்பி கொண்டே லலிதாவை கண்டு அவரிடம் விடை பெற சென்றாள்.


தேவ் கருப்பு நிற பிளாசர் அணிந்து அதற்குப் பொருத்தமான பேண்ட்டும் சட்டையுமாகத் தன் கம்பீர நடையோடு லலிதாவின் அறைக்குள் நுழைவதை கண்ட மது இமைக்கக் கூட மறந்து அப்படியே பார்த்தது பார்த்தபடி நின்றிருந்தாள்.


அந்த உடை அதன் நிறம் ஆகியவை எல்லாம் அவனின் உயரத்திற்கும் உடல் அமைப்பிற்கும் கச்சிதமாகப் பொருந்தி இருந்ததோடு மட்டுமல்லாமல் அவன் தயாராகி இருந்த விதமும் அத்தனை பொருத்தமாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் தேவ் அணிந்திருந்த அதே உடையைத் தான் மித்துவும் அணிந்து இருந்தான்.


மது தன்னையே இமைக்க மறந்து பார்த்துக் கொண்டு இருப்பதைக் கண்டு சுள்ளென்று கோபம் எழ, "என்ன பார்வையெல்லாம் பலமா இருக்கு... உன்னை என் கூடக் கூட்டி போறது என் தேவைக்காக தான், வேறு எந்தக் கற்பனையும் வளர்த்துக்கும் முன்னே அதுக்கான தகுதி இருக்கான்னு முதல்ல யோசி..." என்று கடித்த பற்களுக்கிடையே மதுவிற்கு மட்டும் கேட்கும் குரலில் அவளை நெருங்கி குனிந்து சொல்ல...


அதில் கலங்கிய கண்களை மற்றவர் அறியாமல் மறைக்க மது தன் தலையைக் குனிந்து கொண்டாள். தேவ் அறைக்குள் நுழைந்ததிலிருந்து மது அவனைப் பார்த்த பார்வையும் தேவ்வும் நேராக அவளருகில் சென்று காதில் கிசுகிசுத்ததையும் கண்ட லலிதாவிற்கு இது கணவன் மனைவி அன்னியோன்யமாகத் தோன்ற... ஒரு மெல்லிய புன்னகையோடு தன் பார்வையைத் திருப்பிக் கொண்டார்.


அதனால் மதுவின் கண்ணீர் அவருக்குத் தெரியாமலே போனது. ஒரு வழியாக அங்கிருந்து கிளம்பி தேவ் தன் தொழில் சம்பந்தப்பட்ட திட்டத்தோடும், மது மனம் முழுவதும் பயத்தோடும் பார்ட்டி ஹால் வந்து சேர்ந்தனர்.


பார்ட்டியை ஏற்பாடு செய்து இருந்தவன் என்ற முறையில் வருபவர்களை வரவேற்கும் படி நுழைவாயிலின் எதிர்ப்புறமாகக் கருப்பு நிற சூட் அணிந்து வலது கையைப் பேண்ட் பாக்கெட்டில் விட்டபடி இடது கையால் மதுவின் இடையை வளைத்து பிடித்தபடி கம்பீரமாக நின்றிருந்தவனின் அருகில் பயத்தை முகத்தில் தெரியாதவாறு மறைத்தபடி குழந்தையைத் தூக்கி வைத்து கொண்டு சிகப்பு நிற டிசைனர் சேலையில் வானத்து தேவதை என ஜொலித்துக் கொண்டு நின்றிருந்தாள் மது.


அங்கு வந்திருந்த ஆண்கள் அனைவரின் பார்வையும் வயது வித்தியாசம் இல்லாமல் மதுவின் மேல் ‘இத்தனை அழகும் அமைதியும், அடக்கமும் நிறைந்த பெண் இவனுக்கு மனைவியா...?!’ என்பது போல ஒருவித பொறாமையோடு தேவ்வின் மேல் படிந்து கொண்டிருந்தது.


அதற்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் வந்திருந்தவர்களில் வயது வித்தியாசமில்லாமல் பெண்களின் பார்வை ‘இவளுக்கு இப்படி ஒரு ஆளுமையும், கம்பீரமும், வசதியும் படைத்த கணவனா...!?’ என ஏக்கத்தோடு தேவ்வின் மேல் படிந்தது.


அமைதியாக நிற்பது போல் தோன்றினாலும் அனைவரின் பார்வைகளும் அதில் பதிந்திருந்த பொருளும் நன்றாகவே தேவ்விற்குப் புரிந்திருந்தது. அவற்றைக் கண்டும் காணாத படி நின்று கொண்டிருந்த வேளையில் அதிக மேக்கப்பும் அபாயகரமான உடை அலங்காரமும் கொண்ட அதிநவீன யுவதி ஒருத்தி அந்த ஹாலுக்குள் பிரவேசித்தாள்.


தன் தந்தை மற்றும் தாயோடு பார்ட்டிக்கு வந்தவள் இன்று தேவ் தன் மனைவியோடு கலந்துக் கொள்கிறான் எனத் தெரிந்து மதுவை பார்ப்பதற்காகவே வந்திருந்தாள்.


தேவ்வுடைய பெண்கள் பழக்கம் பற்றி நன்கு தெரிந்து இருந்தவள் எல்லா வகையிலும் முயற்சி செய்தும் அவனை வீழ்த்தி மணந்து கொள்ள முடியாத தன் கோபம் முழுவதும் மதுவை பார்த்த நொடியில் வஞ்சமாக மாற மதுவை உதாசீனப்படுத்த நினைத்து அவர்களை நெருங்கினாள்.


ரிஷிகா தன் முன் வந்து நின்ற பிறகும் அவளை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காமல் நின்றிருந்த தேவ்வை கண்டவளுக்கு ஆத்திரம் தலைக்கேறியதில் பக்கத்தில் நின்றிருந்த மதுவின் மேல் அதைக் காட்ட நினைத்தவள் “இந்த உலக அழகிக்காகத் தான் என்னை வேணான்னு சொன்னீங்களா...?” என ஏகத்துக்கும் குரலில் கிண்டலோடு கேட்கவளை அலட்சியமாகப் பார்த்தானே தவிர, அப்போதும் எந்தவித பதிலும் அவளுக்குத் தேவ் கொடுக்கவில்லை.


அதில் மேலும் ஆத்திரம் தலைக்கேற மதுவின் முன்பு தன்னை அவமானப்படுத்தி விட்டதாக நினைத்தவள் மதுவை அசிங்கப்படுத்த நினைத்து அங்கு வந்திருந்தவர்களில் மது மட்டுமே சேலை அணிந்திருக்கப் பார்வையால் அவள் உடையை அளந்தவள் மற்றவர்களையும் சுற்றி ஒரு பார்வை பார்த்தபடியே, “அப்படி எந்த விதத்துல என்னை விட இவ ஸ்பெஷல்னு நான் தெரிஞ்சுக்கலாமா...”என ஏளனமாகக் கேட்டாள்.


“அவ எந்த வகையில ஸ்பெஷல்னு எனக்கு மட்டும் தெரிஞ்சா போதும்...” என்று குரலில் ஒரு ரசனையோடு ஹஸ்கி வாய்ஸில் ரிஷிகாவின் காதருகில் குனிந்து மெல்ல முணுமுணுத்தவனின் வார்த்தையில் இருந்த பொருள் புரிய ரிஷிகாவின் முகம் கருத்துப் போனது.


ஆனாலும் அதோடு விடாது, “அந்த வகையில் நான் எவ்வளவு ஸ்பெஷல்னே தெரிஞ்சுக்காம முடிவெடுத்து நீங்க தப்பு பண்ணிட்டீங்க தேவ்வ்வ்...” எனத் தானே எத்தனையோ முறை வலியச் சென்றும் தன்னை ஒதுக்கி தள்ளியவனை எப்படியாவது அவமானப்படுத்த நினைத்து, தானே தன்னை அசிங்கப்படுத்தி கொள்வது கூடத் தெரியாமல் பேசுபவளை ஒரு அற்ப புழுவை போலப் பார்த்தவன் “நான் அதைத் தெரிஞ்சுக்கனும்னா கூட அதுக்கு ஒரு தகுதி வேணும் மிஸ்.ரிஷிகா...“ என்று அந்த மிஸ்ஸில் அதிக அழுத்தம் கொடுத்துப் பதிலளித்தான்.


தேவ்வின் இந்தப் பதிலில் அவன் சொல்ல வந்ததன் உட்பொருள் புரிய அவமானத்தில் கன்றிப் போன முகத்துடன் ரிஷிகா நின்றிருக்க... தெனாவட்டான ஒரு பார்வையோடு அவளைப் பார்த்திருந்தான் தேவ்.


இவர்கள் இருவரும் பேசுவது மற்றவர்களுக்குக் கேட்காமல் போனாலும் மிக அருகில் நின்றிருந்த மதுவிற்கு அட்சரம் பிசகாமல் ஒவ்வொரு எழுத்தும் காதில் விழுந்த போதும் முகத்தில் எந்த ஒரு உணர்வும் வெளிக்காட்டாமல் தூங்கி கொண்டிருந்த குழந்தையை அணைத்து பிடித்தபடி நின்றிருந்தாள்.


ரிஷிகாவின் பெற்றோர் சற்று தள்ளி நின்று இவர்கள் பேசுவதைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தனர். ரிஷிகாவின் தாய் ரேஷ்மாவிற்கு தேவ்வின் பணம் அதிகாரம் ஆளுமையின் மீது ஒரு கண்.


எப்படியாவது தன் மகளைக் கொண்டு அதை அடைய அவர் திட்டமிட்டு கொண்டிருக்க... அதற்கு எந்தத் தேவையையும் வைக்காமல் தேவ்வின் பின்னால் சுற்றிக் கொண்டு இருந்தாள் மகள்.


தன் மகளின் அழகின் மீதும் சாமர்த்தியத்தின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து இருந்த ரேஷ்மா, மனதிற்குள் பெரிய கற்பனை கோட்டை கட்டி தேவ்வின் ராஜ்ஜியம் முழுமைக்கும் தன் மகளே ராணி என்றும் அதன் அத்தனை அதிகாரங்களையும் கை பற்றி அரசாள போவது தானே என்றும் நினைத்திருந்தார்.


அவரின் இந்த அசைக்க முடியாத நம்பிக்கைக்கு முக்கியக் காரணம் தேவ்வின் பெண்களுடனான பழக்கமும், தேவை என்று வந்தால் மகள் எந்த அளவிற்கும் வளைந்து கொடுத்து தன் காரியத்தைச் சாதித்துக் கொள்ளக் கூடியவள் என்ற தைரியமுமே.


மகளும் தாயின் இந்த நம்பிக்கையைக் காப்பாற்றும் முயற்சியில் கொஞ்சமும் வெட்கம் மானம் பார்க்காது இறங்கி தன்னாலான அத்தனை முயற்சிகளையும் செய்து பார்த்தும் பலன் என்னவோ பூஜ்ஜியம் தான்.


ஆனால் இதை எதையும் ரிஷிகா தாயிடம் காட்டி கொள்ளாமல் மீண்டும் மீண்டும் தன் முயற்சிகளைத் தொடர்ந்துக் கொண்டே இருக்க... திடீரென்று சென்ற வாரம் தொழில் துறை வட்டாரத்தில் பரவிய தேவ் திருமணம் ஆனவன் என்ற செய்தியும் அவனுக்கு மகன் இருக்கிறான் என்ற செய்தியும் ரிஷிகாவால் முதலில் கொஞ்சமும் நம்ப முடியவில்லை.


அவளால் மட்டும் அல்ல, ரிஷிகாவை போல இன்னும் பலர் இதே போன்ற மன கோட்டையுடன் இதே முயற்சியில் இறங்கி இருந்த யாராலும் நம்ப முடியவில்லை. அந்த நேரத்தில் தான் தேவ் தான் கொடுக்கும் பார்ட்டிக்கு குடும்பத்தோடு வர போவது தெரிய வர, வழக்கமாகத் தேவ்வின் பார்டிகளுக்கு அவனின் கவனத்தைக் கவருவதற்காகவே வருபவர்கள் அனைவரும் இந்த முறை அவன் மனைவியையும், மகனையும் பார்ப்பதற்காகவே வந்தனர்.


அதிலும் ரிஷிகா உள்ளே நுழையும் போதே எதிரில் குடும்பச் சகிதமாக நின்றிருந்தவனை கண்ட நொடி, தன் முயற்சி பலிக்காத கோபமும், மித்துவின் வயதை வைத்து பார்க்கும் போது குறைந்தது திருமணமாகி மூன்றாண்டுகள் ஆகியிருக்க வேண்டும் என்பதும் புரிய... இரண்டரை வருடங்களாக அவன் பின் சுற்றி வந்த போது கூடத் தான் மணமானவன் என்று கூறாமல் இருந்தவனின் மேல் பொங்கிய ஆத்திரத்தை இதற்கெல்லாம் காரணம் இவள் தான் என்பது போல் மதுவின் மேல் காட்ட நினைத்தாள்.


அதற்குக் கொஞ்சமும் வாய்ப்புத் தராமல் இவள் போடும் அனைத்து பாலையும் சிக்ஸராக மாற்றி அடித்து ஆடி கொண்டிருந்தான் தேவ்.


ரிஷிகாவின் தந்தை வாசனுக்கு தேவ்வின் தொழில் முறை நட்பும் உதவியும் தேவைப்பட்டது என்றாலும் மனைவியும் மகளும் கட்டும் கற்பனை கோட்டைகளும் அதற்காக எடுக்கும் முயற்சிகளிலும் சுத்தமாக உடன்பாடு இல்லை. ஆனால் அதைச் சொன்னால் தன் பேச்சை கொஞ்சமும் மதிக்கப் போவதில்லை இவர்கள் என்பதால் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.


இதோ இப்போதும் கூட மகள் சென்ற வேகத்திற்கும் அவளின் முகப் பாவத்திற்கும் மகளே அவர்களை அவமானபடுத்துவதாக நினைத்து ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த ரேஷ்மாவிற்கு மதுவை பார்க்க, பார்க்க அவர் கண்களில் அத்தனை குரோதம் வழிந்தது .


ஆனால் அருகில் நின்றிருந்த வாசனுக்கு நன்றாகவே தெரியும் பல்வேறு உணர்வுகளை முகத்தில் காட்டும் மகளை விட, எந்த ஒரு உணர்வுவையும் முகத்தில் காட்டாமல் அசால்ட்டாக நின்றபடி பேசிக் கொண்டிருக்கும் தேவ்வே தன் மகளை அவமானப்படுத்திக் கொண்டு இருப்பான் என்பது.



இதற்கு மேலும் மகளை அங்கு நின்று பேச விட்டுக் கொண்டு இருந்தால் நிச்சயம் இதன் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்று தேவ்வின் குணத்தைப் பற்றி அவருக்குத் தெரிந்த வரை அறிந்து கொண்டவர், விரைந்து வந்து ரிஷிகாவின் மறுப்பையும் மீறி அவளை அங்கிருந்து இழுத்து செல்ல... அதையும் ஒரு அலட்சிய புன்னகையோடு பார்த்திருந்தான் தேவ்.

தொடரும்..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 
Last edited:

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

ஆதி – 6

தேவ் எதிர்பார்த்ததைப் போலவே பார்ட்டியில் சிலபல சலசலப்புகளை ஏற்படுத்த முயற்சிகள் நடக்க... அவற்றை முளையிலேயே கிள்ளி எறிந்து தன்னை மீறி தன் இடத்திலும், தன் வாழ்க்கையிலும் யாராலும் அணுவைக் கூட அசைக்க முடியாது என்பதை நேரிடையாகவோ, மறைமுகமாகவோ இது போன்ற செயல்களில் ஈடுபட்ட ஒவ்வொருவருக்கும் மீண்டும் நெற்றியில் அடித்துப் புரிய வைத்தான் தேவ்.


அங்கு வந்திருந்தவர்களில் பலர் நிச்சயமாகத் தேவ் தன் லீலைகளை எல்லாம் குடும்பத்தினருக்குத் தெரியாமல் மறைத்து இருப்பான் என்ற கண்ணோட்டத்தோடு அதை வைத்துப் பிரச்சினை செய்ய முயல...


ஆனால் அவனோ அப்படி ஒரு சந்தர்ப்பத்தை அவர்களுக்குக் கொடுக்காதபடி திறந்த புத்தகமாகத் தன் வாழ்க்கையைக் குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தி இருப்பதைக் கண்டு இப்படி ஒரு கோணத்தில் யோசிக்காதவர்கள் அடுத்து என்ன செய்வது என்று சிந்தித்து முடிப்பதற்குள் தேவ் தன் குடும்பத்தோடு அங்கிருந்து கிளம்பி இருந்தான்.


தொழிலிலோ மற்ற எந்த வகையிலோ அவனை எதிர்க்க முடியாமலும் எதிர்த்து வெற்றி அடைய முடியாமலும் அவமானப்பட்டவர்கள் அனைவரும் தேவுக்குத் திருமணமான ஆகிவிட்டது என்ற செய்தியையும், குடும்பம் இருப்பதையும் கேள்விப்பட்டு இதுவரை எந்த வகையிலும் வீழ்த்தவோ ஜெயிக்கவோ முடியாதவனை இதை வைத்து என்ன செய்ய முடியும் எப்படி அவமானப்படுத்த முடியும் என்று சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்க...


அவர்களுக்கான சந்தர்ப்பத்தைத் தேவ்வே அமைத்துக் கொடுத்தது போல் இந்தப் பார்ட்டியை ஏற்பாடு செய்திருந்தான். இந்தச் சந்தர்ப்பத்தை ஒவ்வொருவரும் அவரவர் பாணியில் எப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனப் பல்வேறு திட்டம் தீட்டிக் கொண்டு வந்திருந்தவர்கள் அனைவரும் மண்ணைக் கவ்வி இருந்தனர்.


கார் நிறுத்தும் இடத்திற்கு மதுவோடு வந்து சேரும் வரை அவளின் வெற்றிடையில் பார்ட்டி ஹாலுக்குள் நுழைந்த போது அழுந்த பதித்திருந்த தன் கைகளைக் கொஞ்சமும் விலக்காமல் இருந்தவன் காரில் ஏறும் கடைசி நொடியிலேயே கைகளை விலக்கி அவளையும் தன் பிடியில் இருந்து விடுவித்தான்.


மதுவை இடையோடு இறுக்கி அணைத்துப் பிடித்தபடி தேவ் நின்றிருந்த காட்சி மற்றவர்களுக்கு வேண்டுமானால் இவர்களின் அந்நியோன்யத்தைப் பறைசாற்றுவது போல இருந்தாலும் அவளை அங்குத் தன் பிடியிலேயே வைத்திருப்பதற்கான முயற்சி அது என்பது இவர்கள் மட்டுமே அறிந்த நிஜம்.


இருவரையும் வீட்டில் இறக்கி விட்டு வாசலோடு காரை புயல் வேகத்தில் கிளப்பிக் கொண்டு சென்றவன் மீண்டும் எப்போது வீடு வந்து சேர்ந்தான் என்பது யாருக்குமே தெரியாது.


கொஞ்சமும் விருப்பமின்றியே தேவ்வோடு செல்ல தயாரானவள் கிளம்பும் நேரத்தில் அவன் உதிர்த்த சுடு சொற்களின் தாக்கத்தினால் தனக்குள்ளேயே சுருண்டு கொண்டாள்.


அதே மனநிலையோடு அங்குச் சென்றவளின் மனதை சோதிப்பது போல அடுத்தடுத்து நிகழ்ந்த நிகழ்வுகளின் தாக்கமும் சேர, எப்போது இதெல்லாம் முடியும்...? இங்கிருந்து தப்பித்தால் போதும்..! என்ற மன நிலைக்கு வெகு சீக்கிரமே வந்து விட்டிருந்தாள் மது.


எப்போதும் மித்துவோடு நேரத்தை செலவிடுவதன் மூலம் மற்ற எந்த நினைவுகளும் தன்னை அண்ட விடாது பார்த்துக் கொள்பவள் இன்று அதுவும் முடியாது போகத் தவித்துப் போனாள். ஆரம்பத்தில் சிறிது நேரம் உறங்கியதோடு சரி மித்து அதன் பிறகு முழித்துக் கொண்டவன் வழக்கம் போல் தன் டாடாவின் தோளில் தொற்றிக் கொண்டதோடு அவனுடனேயே ஐக்கியமாகி விட அவனைக் காரணம் காட்டி கூட அங்கு இருந்து விலகவும் நகரவும் முடியாமல் தேவ்வின் கை சிறையில் சிக்கி கொண்டாள் மது.


வீடு வந்து சேர்ந்த பிறகும் அங்கே அனைவரின் துளைக்கும் பார்வைகள் ஏளனமாகத் தன் மீது படிந்ததையும் தான் தேவ்விற்கு கொஞ்சமும் பொருத்தம் இல்லை என்பது போல ஜாடைமாடையாகப் பேசியதையும் நினைவு கூர்ந்தபடி இரவின் இருளில் வெகு நேரம் படுக்கையில் அமர்ந்தபடி இருந்தவள் எப்போது உறங்கினாள் என்று அவளுக்கே தெரியவில்லை.


காலையில் தன் வழக்கமான நேரத்திற்குக் கண்விழித்த போது அருகில் உறங்கிக் கொண்டிருந்த தேவ்வை கண்டு வியப்பாக ஒரு நொடி பார்த்தவள் பிறகு தன் பணிகளைக் கவனிக்கத் தொடங்கினாள். மது எழுவதற்கு முன்பே எழுந்து தன் உடற்பயிற்சியைத் தொடங்கும் தேவ் அன்று ஏனோ வெகு நேரம் உறங்கிக் கொண்டிருந்தான்.


மது தன் கடமைகளை எல்லாம் முடித்துவிட்டு அறைக்குள் நுழையும் வரை தந்தையும் மகனும் போட்டி போட்டுக் கொண்டு உறங்கிக் கொண்டிருக்க... அதைக் கலைக்க மனம் வராமல் மீண்டும் தன் பணிகளைத் தொடர கீழிறங்கிச் சென்று விட்டாள்.


ஒரு அரைமணி நேரம் கழித்து மணி ஒன்பதை நெருங்குவதைக் கண்டு இரவு கூட மித்துச் சரியாகச் சாப்பிடாமல் உறங்கியதால் அவனை எழுப்பி ஏதாவது சாப்பிடக் கொடுக்க நினைத்து மீண்டும் அறைக்குள் நுழைந்தாள்.


மித்துவின் உறக்கத்தைக் கலைக்க நினைத்து அருகில் அமர்ந்தபடி அவனை எழுப்ப முயன்றவளுக்கு அப்போது தான் மித்துவின் உடல் கொதிப்பது தெரிந்தது.


உடனே உடல் முழுவதும் சோதித்துப் பார்த்தவள் மித்துவிற்குக் காய்ச்சல் அடிப்பது கண்டு, துரிதமாகச் செயல்பட்டு உடைகளைக் களைந்து ஈரத்துணி கொண்டு உடல் முழுதும் துடைத்து உடல் வெப்பத்தைத் தணிக்க முயன்றவள் தன்னிடம் இருந்த மருந்தை அவனுக்குக் கொடுக்க முயல...


மதுவின் இந்த முயற்சியினால் எழுந்த சலசலப்பிலும் அசைவிலும் உறக்கம் கலைந்து எழுந்த தேவ் அவளிடம் இருக்கும் பதட்டத்தையும் குழந்தையையும் ஒரு நொடி கண்டவன் “என்னாச்சு...?” என மித்துவை நெருங்க...


“காய்ச்சல் அடிக்குது...” என்றபடியே குழந்தைக்கு மருந்து கொடுக்க மது முயன்றுக் கொண்டிருந்தாள். “ஆனா... ஆனா...” என மித்து அடம் செய்யவும் அவனைத் தூக்கி சமாதானம் செய்ய முயன்ற தேவ்வுக்குக் குழந்தையின் உடல் கொதிப்பதை கண்டு பதட்டத்தோடு கூடிய கோபம் எழுந்தது.


“நைட் மருந்து கொடுத்தியா...” என அதே கோபத்தோடு மதுவின் மேல் பாய, “இல்லை...” என்றபடி மது அடுத்து ஏதோ சொல்ல வரவும், அதற்குள் அவள் உதிர்த்த இல்லை என்று சொல்லே ஏற்கனவே இருந்த கோபத்தை இன்னும் தேவ்விற்குக் கிளறிவிடப் போதுமானதாக இருந்தது.


“என்ன...? இல்லையா...? இதை எப்படி உன்னால் இவ்வளவு ஈசியா சொல்ல முடியுது...!! குழந்தையைக் கவனிப்பது தான் நீ இங்கே செய்யற ஒரே உருப்படியான வேலை அதுவும் கூட உன்னால சரியா செய்ய முடியாதா...?” என வார்த்தைகளைக் கொதி நீராக அவளை நோக்கி வீசியவன் உடனே குடும்ப மருத்துவருக்கு அழைத்தான்.


மருத்துவர் வந்து சோதிக்கும் வரை மித்துவை இறுக அணைத்துப் பிடித்துத் தூக்கியபடியே அறையில் குறுக்கும் நெடுக்குமாக ஆத்திரத்தோடு நடந்தபடி அழும் குழந்தையைச் சமாதானப்படுத்த முயன்று கொண்டிருந்தான்.


தொடர்ந்தும் மித்து அழுவதைப் பார்க்க முடியாது, அவனைத் தன்னிடம் தருமாறு கேட்க நினைத்து மது அவர்களை நெருங்க... தேவ் திரும்பிப் பார்த்த ஒரு பார்வையில் அப்படியே ஒடுங்கிப் போய் அங்குச் சோபாவின் ஓரத்தில் அமர்ந்து விட்டாள் மது.


மருத்துவர் வந்து மித்துவை சோதிப்பதற்குள் அழுதபடியே குழந்தை உறங்கியிருக்க... அவனைச் சோதித்தபடியே மருத்துவர் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் மதுவிடமிருந்து சட்சட்டென்று பதில் வந்துக் கொண்டே இருந்தது.


“ஏதாவது மருந்து கொடுத்தீங்களா...?”


“இல்ல இன்னும் கொடுக்கல...”


“எப்போ இருந்து காய்ச்சல்...”


“இப்போ ஒரு மணி நேரமா தான்...” என மது பதில் அளிக்கவும், அருகில் நின்றிருந்த தேவ் அவளைத் திரும்பிப் பார்க்க... அவளும் அதே நேரம் தேவ்வை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.


அவள் கண்களும் இதைத்தான் அப்போது நான் சொல்ல முயன்றேன் என்பதைச் சொல்லாமல் சொல்ல... தன் நைட் பேண்டின் பாக்கெட்டில் இரு கைகளையும் விட்டபடி பார்வையை எங்கோ பதித்தவாறே திரும்பி நின்று கொண்டான் தேவ்.


“சளி பிடிச்சு இருந்ததா...?” என மருத்துவரின் கேள்வியில் அவரின் பக்கம் திரும்பிய மது “இல்லை...” எனவும் ஒரு சிறு தலை அசைப்போடு “நைட் என்ன சாப்பிட்டான்...?” என்றார்.


இரவு பார்ட்டியில் சாப்பிட்டதைப் பற்றி மது விளக்கவும்... “சாப்பிட்டது ஏதோ ஒத்துக்காம இருந்திருக்கு...” என்றவர் “வாமிட் எதுவும் செஞ்சானா...?” எனத் தன் அடுத்தக் கேள்வியைக் கேட்க “இல்லை...” என்றாள் மது.


மித்துவிற்கு ஒரு ஊசியைப் போட்டு விட்டு “நல்லா தூங்கி எழட்டும்... பயப்படுவது போல எதுவுமில்லை... இன்னைக்கு வாமிட் பண்ணினாலும் பண்ணுவான்.. அதனால ஒன்னும் பிரச்சனை இல்ல, ரெண்டு நாள் தொடர்ந்து இந்த மருந்தைக் கொடுங்க... சீக்கிரம் சரியாகிடும்...” என்றபடியே விடை பெற்றுச் சென்றார்.


உறங்கும் மித்துவிற்குக் கழுத்து வரை போர்த்திவிட்டவள் அவனின் தலையைத் தடவியபடி சிறிது நேரம் அவன் முகத்தையே பார்த்தபடி அமர்ந்திருக்க... மருத்துவரை அனுப்பிவிட்டு அறைக்குள் நுழைந்த தேவ் இந்தக் காட்சியைக் கண்டு சில நொடிகள் தன் நடையை நிறுத்தியவன் அதன் பிறகு விறுவிறுவென்று குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.


அன்று காலை பதினொரு மணிக்கு மேல் தேவ்விற்கு முக்கியமான பிசினஸ் மீட்டிங் இருந்தது. அதற்காகவே தாமதமாக வீட்டில் இருந்து கிளம்ப எண்ணியிருந்தவன் மித்துவின் உடல்நிலை காரணமாகச் சற்று தயங்கினாலும் பிறகு இது தவிர்க்க முடியாத மீட்டிங் என்பதால் அரை மனதோடு கிளம்பியவன் குழந்தையின் அருகிலேயே சிலை போல் அமர்ந்திருந்தவளிடம் ஏதோ சொல்ல முயன்றவன் பின்பு அந்த முயற்சியைக் கைவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.


தொடர்ந்து ஒரு மணி நேரம் கூடத் தூங்காமல் சிணுங்கி சிணுங்கி அழுதபடியே எழுந்துக் கொண்ட மித்துவை சமாதானம் செய்து பால் கொடுத்து தூங்க வைக்க முயன்றுக் கொண்டு இருந்தாள் மது.


அவனோ சிணுங்கியபடியே மதுவின் தோள்வளையிலேயே முகம் புதைத்துக் கொண்டிருந்தான். அவளை அங்கும் இங்கும் நகரவிடாமல் சரியாக உறங்கவும் முடியாமல் அழுது கொண்டிருந்தான்.


அப்படியே குடித்த பால் அத்தனையையும் மதுவின் மேல் வாந்தியாக எடுத்து விட... மது அவனைக் குளியலறைக்குள் தூக்கிச் சென்று சுத்தம் செய்து தன்னையும் ஒரளவுக்கு அவசரமாகச் சுத்தப்படுத்திக் கொண்டு மித்துவை வேறு உடைக்கு மாற்றித் தூங்கச் செய்தாள்.


இருந்தும் அவன் ஆழ்ந்த உறக்கத்திற்குச் செல்லாமல் அரைத் தூக்கத்தில் இருப்பது போலவே புரண்டு புரண்டு படுத்தப்படி மதுவை எங்கும் செல்லாதவாறு அவளின் மடியிலேயே முகம் புதைத்துத் தூக்கத்தைத் தொடர்ந்தான்.


ஓரளவு குழந்தை உறக்கத்தில் ஆழ்ந்து விட்டான் என்பதை உறுதி செய்துக் கொண்ட மது அவசர அவசரமாக மித்து வாந்தி செய்து இருந்த சேலையை மாற்றிக் குளித்துவிட்டு வேறு சேலை அணிய சென்றாள்.


அத்தனை அவசரமாக மது செல்ல காரணம் மீண்டும் மீண்டும் மித்து அவள் மேலேயே ஏறி படுக்க முயல்வதால் உடையில் உள்ள ஈரத்தினால் அவனுக்கு மீண்டும் காய்ச்சலை கொண்டு வந்து விடக் கூடாதே என்பதாலேயே...


அவசர அவசரமாக ஒரு சிறு குளியலை போட்டு விட்டு வந்தவள் உடை மாற்றும் அறையில் நுழைந்து அதன் கதவை திறந்து வைத்தபடி எங்கே குழந்தை மீண்டும் எழுந்து அழுவானோ...!? அவன் எழுவதற்குள் சேலையை உடுத்திக் கொண்டு மித்து அருகில் சென்று அமர்ந்து விட வேண்டும் என எண்ணியவள் படுக்கையில் உறங்கும் குழந்தையை எட்டி எட்டி பார்த்தபடியே புடவை கட்டிக் கொண்டிருக்க.... கொஞ்சமும் எதிர் பாராமல் அறையின் கதவை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்த தேவ்வை கண்டு மது அதிர்ந்தாள்.


மித்துவை பற்றி மட்டுமே மதுவின் எண்ணம் முழுவதும் இருக்கப் படுக்கை அறையின் கதவை தாழிட மறந்து இருந்தாள் மது. தேவ் எப்பொழுதும் மதிய வேளையில் வீட்டிற்கு வருவதில்லை காலையில் சென்றால் அதிகபட்சமாக இரவு மட்டுமே வீடு திரும்புவான்.


மாலையில் வருவதே அத்தி பூத்தாற்போன்று அரிதான ஒன்று இப்படி இருக்கையில் தேவ் திடீரென மதியவேளையில் அறைக்குள் நுழைந்ததைக் கண்டு அதிர்ந்து அப்படியே நின்றுவிட்டாள் மது.


தேவ்விற்கு இங்கிருந்து கிளம்பும் போதே குழந்தைக்கு உடல்நிலை இப்படி இருக்கையில் அவனை விட்டுச் செல்ல கொஞ்சமும் மனமில்லை... இருந்தும் வேறு வழி இல்லாத காரணத்தினால் கிளம்பி சென்றவன் சென்ற வேலை முடிந்த அடுத்த நொடி பிள்ளையைப் பார்க்க ஓடி வந்து விட்டான்.


எப்போதும் போல அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவன் நேர் எதிராக இருந்த உடை மாற்றும் அறை கதவு திறந்து இருந்ததையும் அங்கு மது பாதி உடுத்திய சேலையோடு நின்று இருந்ததையும் கொஞ்சமும் எதிர்பார்க்காததால் முதலில் திகைத்துப் பின் அவளை வேகமாக நெருங்கி இழுத்து அணைத்தவன் அதே வேகத்தில் அவள் இதழ்களைச் சிறை செய்திருந்தான்.


இதைச் சற்றும் எதிர்பார்க்காததால் முதலில் அதிர்ந்தவள், பின் விலக முயன்று முடியாமல் போக அவனிடமே சரணடைந்தாள். அது வரை அவளுள் மூழ்கியிருந்தவன் அவள் சரணடையவும் வேகமாக அவளை உதறி தள்ளினான்.


இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காததால் பின்னால் இருந்த சுவற்றில் மோதி மலங்க விழித்துக் கொண்டிருந்தவளை நோக்கி, "இதற்காகத் தானே இந்த ஆக்டிங்...." என அவள் பாதிப் புடவையுடன் நின்றிருந்த கோலத்தைச் சுட்டி காட்டி பேசியவன்,


"போதுமா..." என நக்கலாகக் கேட்டபடியே ஒரு அடி நகர்ந்தவன், மீண்டும் திரும்பி, "இல்லை இன்னும் வேணுமா.... ?" எனக் கண்களால் படுக்கையைப் பார்க்க...


கண்களில் கண்ணீர் வழிய கையெடுத்து கும்பிட்டவள், போதும் இதற்கு மேல் எதுவும் பேசிவிடாதே என்பது போல் தலையசைக்க, ஒரு கோணல் சிரிப்போடு அங்கிருந்து நகர்ந்தான்.



தொடரும்..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 
Last edited:

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை என்னோடு இங்கு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..

ANAN - 5 & 6


இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 
Last edited:

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதி – 7

தேவ் உச்சரித்த வார்த்தைகளின் தாக்கம் மதுவை உயிர்வரை வலிக்கச் செய்தது. எப்போதுமே அவன் முன்பு வார்த்தைகள் வராமல் தடுமாறுபவள் இப்பொழுது வார்த்தைகள் மட்டும் வராததோடு மனதை கசக்கி பிழியும் அளவிற்கு வலியும் சேர்ந்து வர... கையெடுத்து கும்பிட்டபடியே இதற்கு மேல் எதுவும் பேசி விடாதே அதைத் தாங்கிக் கொள்ள என் மனதில் தெம்பு இல்லை என்பது போல் கண்ணீரோடு தலையசைக்க... அவளை ஒரு வெற்றுப் பார்வை பார்த்தபடி வந்த வேகத்திலேயே அறையின் கதவை திறந்துக் கொண்டு வெளியேறி இருந்தான் தேவ்.


அவன் சென்ற நொடி கையில் இருந்த சேலையை அப்படியே மார்போடு இறுக்கிப் பிடித்தபடி மடங்கித் தரையில் அமர்ந்து அந்த வார்த்தைகள் கொடுத்த தாக்கம் தாங்க முடியாது கதறி தீர்த்து விட்டாள்.


‘தன்னைப் பற்றி இப்படிப் பேசும் அளவிற்கு எங்கே எப்போது அப்படி நடந்து கொண்டோம்...’ என்றும், ‘இல்லையில்லை... இப்படி உன்னைத் துச்சமாக நினைத்து பேசும் அளவிற்கு உன் மேல் அவர் மனதில் மலை அளவு வெறுப்பு மண்டிப்போய்க் கிடைக்கிறது...’ என்றும் தனக்குத் தானே எண்ணிக் கொண்டவள் குமுறி குமுறி அழ தொடங்கினாள்.


‘அவருக்கும் நேக்கும் ஏணி வச்சாலும் எட்டாது... அப்படி இருக்கச்சே இந்த வாழ்க்கைக்கு நான் கொஞ்சம் கூடத் தகுதியானவளே இல்ல... அந்தக் கோபம் அவருக்கு என் மேல் இருக்கத் தானே செய்யும்... அதுலயும் மனசுல யாரையோ சுமந்துண்டு இருந்தும் அவாளோட சேர முடியாம போன கோபமும் அதுக்குக் காரணமான என்னை பார்க்கறச்சே எல்லாம் வர தானே செய்யும்... தப்பெல்லாம் என் மேல வெச்சுண்டு அவர் பேசிய வார்த்தைகளை நினைச்சு அழறது கொஞ்சமும் நியாயமில்லை...’ எனத் தன்னைத் தேற்றிக் கொள்ள முயன்று கொண்டிருந்தவளுக்கு அது அத்தனை எளிதாக இருக்கவில்லை.


தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொள்ளத் தேவ்வுக்குத் தன் மேலான கோபத்தில் உள்ள நியாயத்தைத் தனக்குத்தானே நினைவுப்படுத்திக் கொண்டு அதிலிருந்து வெளிவர மது நினைக்க... ஆனால் அவள் மனமோ அதைக் கொஞ்சமும் ஏற்காமல் வலியை கொடுத்துக் கொண்டே இருந்தது. அதன் பிரதிபலனாகக் கண்கள் கண்ணீரை பொழிந்துக் கொண்டே இருந்தது.


‘இதெல்லாம் கொஞ்சம் கூட நியாயம் இல்லை மது... நீ என்ன அவர் வாழ்க்கையில நேர்வழிலேயா வந்தே... இல்லையில்ல அப்படி இருந்தும் இன்னும் அவர் உன்னை ஆத்த விட்டு துரத்தாம மத்தவா முன்னே ஆம்படையாளா நடத்தறார்... அதெல்லாம் விட்டுட்டு இப்படி அவர் பேசிய வார்த்தையைப் பிடிச்சிண்டு அழுது கரஞ்சிண்டு இருக்கிறது கொஞ்சமும் நல்லாயில்லை...’ என்று தன்னையே திட்டிக் கொண்டு மனதை சமாதானப் படுத்த முயன்று கொண்டிருந்தாள் மது.


மதுவின் வார்த்தைகளில் உள்ள நியாயம் அறிவுக்குப் புரிந்தாலும் மனம் அதை ஏற்றுச் சமாதானமடைய மறுத்தது. ‘அசடு மாதிரி அவர் பேசியதை நினைச்சு வருந்திண்டு... அவர் கோபத்துல ஏதோ பேசிட்டார்... அந்த வார்த்தை வலிக்கத்தான் செய்றது ஆனால் யோசித்துப் பார்... மத்தவாளுக்கு வேணா தெரியாம இருக்கலாம் ஆனா உன் கல்யாணம் எப்படி நடந்ததுனு உனக்குத்தான் தெரியும்... அவர் உனக்குச் செஞ்சதை நெனச்சு பாரு.... எனக்கு நல்லது செய்யப் போய் அவர் வாழ்க்கையை இழந்து நிற்கிறார்... அந்தக் கோபம் இருக்கத்தான் செய்யும்... அது அப்பப்போ வார்த்தைகளில் வெளியே வருது அவ்வளவு தானே... எத்தனையோ கஷ்டத்தைத் தாங்கின உன்னால இதைத் தாங்கிக் கொள் முடியாதா.. உனக்கு அவர் கொடுத்த வாழ்க்கையை நினைச்சுப் பாரு... அதைவிட உனக்கே உனக்கா கொடுத்த பொக்கிஷமான மித்துக் குட்டியை நினை... இதெல்லாம் பெரிய கஷ்டமாகவே தோணாது...’ என்று இந்த நிமிடம் தேவ்வால் அனுபவித்த துன்பத்தை விட இதற்கு முன்பு தான் அனுபவத்த துன்பமும் அதில் இருந்து தன்னை மீட்ட தேவ்வையும் நினைவில் கொண்டு வந்து ஒரு கோட்டிற்கு அருகில் பெரிய கோட்டை போட்டு முதலில் போட்ட கோட்டை சிறிதாக்குவது போலத் தன்னுடைய இப்போதைய துன்பத்திற்கும் பழைய துன்பத்திற்கும் ஒப்பீடு செய்து தன்னைத் திடப்படுத்திக் கொண்டு எழுந்து மித்துவை கவனிக்கத் தொடங்கினாள் மது.


அன்று தேவ் அதன் பிறகு வீட்டிற்கு வரவில்லை... இரவு மது உறங்கும் வரையிலும் கூட வராதவன் எப்போது வந்தான் என்று வழக்கம் போல மதுவிற்குத் தெரியவில்லை. காலை உறக்கம் கலைந்து எழும் போது தேவ் உறங்கியதற்கு அடையாளமாக அவன் பக்க படுக்கை கலைந்திருப்பதைக் கண்டவள் ‘உடற்பயிற்சிக்கு சென்றிருப்பார்’ என எண்ணிக் கொண்டு தன் பணிகளைத் தொடர்ந்தாள்.


அடுத்த நாள் மித்துவிற்கு உடல் நிலை சரியாகி விட, வழக்கமான தன் குறும்புத்தனத்தைத் தொடங்கி விட்டான் அவன். முதல் நாள் தேவ் பேசிய வார்த்தைகளால் எழுந்த வலியை மறக்க சிந்தித்தவள் ‘ஒருவேளை அடிக்கடி தான் அவர் முன் வருவது அவருக்குத் தன் இழப்பை அதிகப்படுத்திக் காட்டுகிறதோ...’ எனத் தோன்ற இனி அதைக் குறைத்துக் கொள்ள முடிவு செய்து தேவ் வீட்டில் இருக்கும் நேரங்களில் முடிந்த வரை அவன் முன் வராமல் பார்த்துக் கொண்டாள்.


இப்படியே இரண்டு நாட்கள் சென்றது. அன்று மித்துவிற்குப் பிறந்தநாள் பெரிய அளவில் தொழில்முறை நண்பர்களை எல்லாம் அழைத்துக் கொண்டாட விரும்பாதவன். தன் வீட்டுத் தோட்டத்திலேயே அலுவலக ஊழியர்களையும் வீட்டில் வேலை செய்பவர்களையும் மட்டுமே அழைத்துச் சிறிய பார்ட்டியாக ஏற்பாடு செய்திருந்ததை இப்போது தொடர வேண்டுமா...? எனக் குழந்தையின் உடல் நிலையை மனதில் வைத்து யோசிக்கத் தொடங்கினான்.


லலிதாவுக்குமே இதே எண்ணம்தான். ‘இப்போது தான் உடல் நிலை சரியாகி இருக்க, இது தேவையா...?!’ என அவரும் சிந்திக்கத் தொடங்கவும்... “நிச்சயம் வெச்சே ஆகணும் மாமி...” என அவரிடம் அழுத்தம் திருத்தமாகக் கூறினாள் மது.


எப்போதுமே குழந்தை விஷயத்தில் மட்டும் எதையுமே விட்டு கொடுக்காத மதுவின் குணத்தை அறிந்த லலிதாவும் இந்தச் செய்தியை தேவ்வின் காதிற்குக் கொண்டு செல்ல, பார்ட்டி சிம்பிளாகவும் இனிமையாகவும் நடத்தப்பட்டது.


அனைத்தும் முடிந்து அனைவரும் சென்ற பிறகு இரவு லலிதா எதிர்பார்த்தது போலவே அவரைத் தேடி வந்த தேவ் “மா... நான் கெஸ்ட் ஹவுஸ் போறேன் த்ரி போர் டேஸ்ல வந்துடுவேன்...” என இறுக்கமான குரலில் கூறவும், அவனின் மன நிலையை அறிந்திருந்தவர் “உனக்கும் ஓய்வு தேவை தான்... உன் மனைவியையும், மகனையும் கூட்டிட்டுப் போ...” என வெகுவாக முயன்று வரவழைத்த சாதாரணக் குரலில் சொல்ல, ஒரு நொடி தயங்கியவன் பிறகு சம்மதித்து அவர்களையும் அழைத்துக் கொண்டு கிளம்பினான்.


அவர்கள் கிளம்பிச் செல்லும் வரை வெகுவாக முயற்சி செய்து கண்ணீரை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தவர் பிறகு தாங்க முடியாத மனவலியோடு அழுது தீர்த்து விட்டார்.


சென்னை நீலாங்கரை...


மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் மட்டுமே வசிக்கக்கூடிய பகுதிகளில் ஒன்றான கடற்கரையோர வீடுகளைக் கொண்ட பகுதி. அதில் ஒரே வரிசையில் ஐந்து வீடுகளை இல்லையில்லை மிகப் பெரிய பங்களாக்களைக் கொண்ட சந்தில் கடைசிப் பங்களாவிற்குள் நுழைந்தது தேவ்வின் கார்.


பங்களாவை நெருங்கும் போதே தன்னிடமுள்ள ரிமோட்டின் மூலம் காம்பவுண்ட் கேட்டை திறந்தபடி உள்ளே நுழைந்தவன் மீண்டும் அதை ரிமோட்டின் மூலமே பூட்டிவிட்டு மதுவின் கைகளில் உறங்கிக் கொண்டிருந்த மித்துவை தூக்கித் தோளில் போட்டபடி ரிமோட் மூலமே வீட்டின் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்.


வழக்கம் போலவே கீ கொடுத்த பொம்மை போல் அவன் பின்னாலேயே சென்று கொண்டிருந்தாள் மது. முதல் தளத்தில் இருந்த ஒரு மிகப்பெரிய மாஸ்டர் பெட்ரூமிற்குள் நுழைந்து மித்துவை படுக்கையில் கிடத்திவிட்டு தன் பின்னால் வந்து கொண்டிருந்தவளை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காமல் விறுவிறுவென்று இறங்கிச் சென்று அவர்கள் கொண்டு வந்திருந்த பொருட்களைக் கொண்டு வந்து அறையில் வைத்துவிட்டு சென்று விட்டான்.


மித்துவும் உறங்கிக் கொண்டிருக்க... என்ன செய்வது என்று தெரியாமல் சில நொடிகள் விழித்துக் கொண்டிருந்தவள் இத்தனை அழகாக நளினமாக வடிவமைக்கப் பட்டிருந்த அந்தப் அறையைக் கண்கள் விரிய ஒரு குழந்தையின் ஆர்வத்தோடு அந்தப் பதினோரு மணி இரவில் மெல்ல சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.


மதுவிற்கு அனைத்துமே புதுமையாக இருந்தது. இந்த வீடு மொத்தமும் ரிமோட்டால் வடிவமைக்கப்பட்டிருந்தது. இப்படி ஒன்றை மது காண்பது இதுவே முதல் முறை.


இப்போது அவர்கள் இருக்கும் வீடும் மிகப் பெரியது தான் என்றாலும் அது இத்தனை அழகோடும் நளினத்தோடும் வடிவமைக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் இங்கு அனைத்திலுமே ஒரு ரசனையும், அழகும் மிளிரந்து கொண்டிருந்தது.


ஒவ்வொரு சிறிய சிறிய விஷயத்திற்கும் கூட அதிகக் கவனம் எடுத்துக் கொண்டிருப்பது போலத் தோன்றியது ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு பொருளையும் பார்க்கும் போது.


அப்படியே இவற்றையெல்லாம் ரசித்துக் கொண்டு அமர்ந்து விட்டவளுக்கு ஒரு மணி நேரம் சென்ற பிறகும் தேவ் திரும்பி வராதது அப்போதே உரைக்க... மெல்ல தாங்கள் இருந்த அறை கதவை திறந்து எட்டிப் பார்த்தவளுக்குத் திக்கென்று இருந்தது.


அவளிருந்த முதல் தளம் முழுவதும் இருளில் மூழ்கி இருக்க... படி ஏறும் இடத்தில் மட்டும் ஒரு அழகிய கலை நயத்தோடு கூடிய இரவு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. மெல்ல மனதில் எழுந்த ஒரு படபடப்போடு முதல் தளத்தில் இருந்து கீழே பார்த்தவள் அங்கும் இதே போல ஒரு இரவு விளக்கின் ஒளி மட்டுமே எரிந்து கொண்டிருப்பதைக் கண்டு பயத்தில் உறைந்து நின்றாள்.


தன்னை இங்கே தனியாக விட்டுவிட்டு சென்றுவிட்டாரோ என்று தோன்ற, அந்த நடுநிசியில் பழக்கமில்லாத அத்தனை பெரிய வீட்டில் இருப்பது மதுவுக்குப் பயத்தைக் கொடுக்க... கதவு வரை சென்று திறந்து பார்க்கலாம் என்றால் இதை அனைத்தையும் ரிமோட் மூலம் தேவ் இயக்கியது நினைவில் வந்தது.


‘ரிமோட்டால் கதவை பூட்டி சென்றிருப்பானோ...?!’ என்ற சந்தேகம் எழுந்தது. என்ன செய்வது எனத் தெரியாமல் ஸ்தம்பித்து நின்றவளுக்குத் தான் இருந்த அறையில் பார்த்த பால்கனியும் அங்கிருந்து பார்த்தால் தெரிந்த போர்டிகோவும் நினைவு வர வேகமாக அங்குச் சென்று எட்டிப் பார்த்தவளுக்குத் தாங்கள் வந்த கார் நிற்பது கண்ணில் படவும் தான் போன உயிர் திரும்பி வந்தது போல இருந்தது.


ஒரு ஆசுவாச பெரு மூச்சோடு பால்கனியை பற்றிக் கொண்டு சில நொடிகள் நின்றவள் பிறகு மீண்டும் அறையில் இருந்து வெளியில் வந்து மெல்ல நடக்கத் தொடங்கினாள்.


பழக்கப்படாத இடம் என்பதோடு இருள் சூழ்ந்து வேறு இருக்க எங்குச் சென்று தேடுவது...? என மதுவிற்குச் சுத்தமாகத் தெரியவில்லை. எத்தனை தளங்கள் எத்தனை அறைகள் இருக்கிறது என்று கூடத் தெரியாமல் எந்தப் பக்கமாகச் செல்வது எனத் திருதிருவென விழித்தபடி மேலும் கீழும் பார்வையைச் சுழற்றியவாறே நடந்து கொண்டிருந்தவளுக்கு மது இருந்த அறைக்குப் பக்கத்து அறையில் மெல்லிய விளக்கொளி கதவின் வழியே கசிந்து கொண்டிருப்பது தெரிய... அறையை நெருங்கி கதவில் கைவைத்தவள், அதை தானாக திறந்து கொண்டு உள்ளே செல்ல ஏதோ ஒன்று தடுக்க அப்படியே நிற்கவும் “மதுஊஊஊ...”என அழுத்தமான குரல் அவள் செவியைத் தீண்டியது.


அந்தக் குரலும் அதிலிருந்த அழுத்தமும் உடலை உதறலெடுக்கச் செய்ய... இல்லாத தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மெல்ல கதவை திறந்து கொண்டு சென்றவள், நடுநாயகமாகப் போடப்பட்டிருந்த அழகிய கை வண்ணத்தோடு கூடிய பெரிய இருக்கையில் தேவ் அமர்ந்திருப்பதையும் அவன் எதிரில் மதுவகைகள் கடை பரப்பப்பட்டு இருப்பதைக் கண்டாள்.


மதுவின் கால்கள் அதற்கு மேல் ஒரு அடி கூட எடுத்து வைக்காமல் தயங்க... அவளை ஆழ்ந்த பார்வை பார்த்தவன் “குழந்தையைப் பார்த்துக்கோ... எப்படியும் நைட் எழுந்திருக்க மாட்டான், அப்படியே எழுந்து என்னைக் கேட்டாலும் ஏதாவது சொல்லி சமாளி, இங்கே கூட்டிட்டு வராதே... நாளைக்கு ஃபுல்லா என்னை டிஸ்டர்ப் பண்ணாத...” என ஒரு மாதிரியான குரலில் தான் சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லி முடித்தவன் இரு விரல்களை அசைத்து ‘நீ போகலாம்...’ என்பது போல் சைகை செய்தான்.


எப்போதுமே தேவ்விடமிருந்து இது போலச் செய்கை எப்போது வரும் அங்கிருந்து ஓடலாம் எனக் காத்திருப்பவளுக்கு இன்று ஏதோ ஒரு வித்தியாசம் அவனிடமும் அவன் பேச்சிலும் தெரிய... சில நொடிகள் தயங்கி தேவ் முகத்தை ஆராய்ச்சியாகப் பார்த்தவள் பார்த்தபடி நின்று கொண்டிருக்க... அவளை என்ன என்பது போலத் தேவ் நிமிர்ந்து பார்க்கவும், நொடியும் தாமதிக்காமல் கதவை திறந்துக் கொண்டு அவசரமாக வெளியேறிவிட்டாள் மது.


மித்து உறங்கிக் கொண்டிருக்கும் அறைக்கு வந்து படுக்கையில் சாய்ந்து அமர்ந்தவளின் மனம் முழுவதும் சற்று முன் பார்த்த தேவ்வையே சுற்றி வந்தது.


அந்தக் கண்களிலும் குரலிலும் இதுவரை கோபம் ஆத்திரம் அதிகாரம் அகங்காரம் சீண்டல்கள் எனப் பல வகை உணர்வுகளைப் பார்த்து இருந்தவளுக்கு இன்று அதில் வேறு ஏதோ ஒரு பாவம் தெரிவது போல இருந்தது.


அவை வெளிப்படுத்திய உணர்வு மதுவின் மனதை ஏனோ பிசைந்தது. அப்படி அதிலே இருந்தது என்ன...!? என வெகு நேரம் யோசித்துக் கொண்டே அமர்ந்திருந்தவள் அப்படியே உறங்கி விட்டாள்.


அடிக்கடி இங்கு வருவது தேவ்வின் வழக்கம், தனக்குத் தனிமை வேண்டும் எனத் தோன்றும் போதெல்லாம் இங்கு வந்து இரண்டு நாட்கள் தங்கி செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.


இதுவரை அவனைத் தவிர இந்த வீட்டிற்கு வேறு யாரும் வந்ததில்லை. யாரையும் வர தேவ் அனுமதித்ததுமில்லை. யாரும் என்றால் யாரையுமே...! இன்று தான் முதன் முதலாக அவனைத் தவிர இன்னும் இரண்டு ஜீவன்கள் இந்த வீட்டிற்குள் நுழைந்து இருக்கின்றன.


இன்றைய தினத்தைக் கடக்க அவனுக்குத் தனிமை தேவைப்படவே இங்குச் செல்ல தீர்மானித்தான். ஆனால் இவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு செல்ல லலிதா சொல்லவும் முதலில் மறுக்க நினைத்தவன் அதன் பிறகு சில காரணங்களால் அதற்குச் சம்மதம் தெரிவித்து அழைத்தும் வந்திருந்தான்.


மதுவை கோப்பையில் சரித்து வாயருகில் கொண்டு சென்றவனின் மனமோ அலைகடலென ஆர்ப்பரிக்க... அதில் மேலெழுந்து வரும் சில நினைவுகளின் தாக்கத்தைத் தாங்க முடியாது கையிலிருந்த கோப்பையை எதிரில் இருந்த டீப்பாயின் மேல் வைத்து இருக்கையில் சரிந்தவன் தலையைப் பின்னுக்குச் சாய்த்துக் கண்களை மூடினான்.


அவன் உதடுகள் “மஞ்சு ஷாலினி...” என அழுத்தி உச்சரித்தால் அந்தப் பெயருக்குக் கூட வலிக்குமோ என்பது போல் மயிலிறகால் வருடுவது போன்று மெல்ல உச்சரிக்க... அந்த அரக்கனாகவும் இரும்பு மனிதனாகவும் மட்டுமே மற்றவர்களால் அறியப்பட்டவனின் மூடிய கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.


தொடரும்..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 
Last edited:
Status
Not open for further replies.
Top