All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கரை சேருமா இந்த ஓடம்..?

Status
Not open for further replies.

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
#10

சித்தார்த்தின் அலைபேசி அடிக்கொரு தரம் சிணுங்கிக் கொண்டே இருந்தது. அவன் இன்னமும் கண் விழிக்கவில்லை. மேகநாதன் அவனை எழுப்ப, அப்போது தான் தூக்கத்தில் இருந்து விழித்த சித்தார்த் மணியைப் பார்த்தான். மதிய நேரத்தை நெருங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்து எழுந்து அமர்ந்தவன் தலையைப் பிடித்துக் கொண்டான்.

“போய் குளிச்சுட்டு வாங்க.. சாப்ட போகலாம்” என்று மேகநாதன் சொல்ல, சித்தார்த் தலையாட்டினான்.

குளித்து முடித்து வெளியே வந்தவன் உணவையும் முடித்துவிட்டு மேகநாதனையும் அழைத்துக் கொண்டு நேற்று பார்க்கிங் செய்திருந்த காரை எடுக்கப் போனான்.

“நீங்க வாங்க ப்ரோ.. நாம போய் கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டு வந்துடுவோம்”

என்னவோ ஹோட்டலில் சாம்பார் வேண்டாம் சட்னி கொடு என்று சொல்வதைப் போல மிகவும் எளிதாக சித்தார்த் சொல்ல, மேகநாதனுக்கு சங்கடமாக இருந்தது.

“நான் எதுக்கு?” என்று அவன் சங்கடமாகக் கேட்க, சித்தார்த் வற்புறுத்தி அவனை அழைத்துச் சென்றான்.

சித்தார்த் தன் காரிலேயே அவனை வரச்சொல்ல, மேகநாதன் மறுத்துவிட்டு அவனது புல்லட்டில் பின்தொடர்வதாகச் சொன்னான். இருவரும் சிவநேசனின் வீட்டை அடுத்த அரைமணி நேரத்தில் அடைந்திருந்தனர். மேகநாதனுக்கு உள்ளே செல்வதற்கே மனமில்லை. நேற்றே அத்தனை அக்கப்போர் நடந்திருந்தது. அதை எண்ணி அவன் தயங்கினான்.

விதுர்ஷாவிற்கு இந்தத் திருமணம் நிற்பது ஒரு பிரச்சனை இல்லை என்பது அவனுக்குத் தெரியும். ஆனால், அங்கு அவன் இருப்பதை அவள் நிச்சயம் விரும்பமாட்டாள் அல்லவா?

பல யோசனையில் இருந்தவனை சித்தார்த் உள்ளே அழைத்துச் சென்றான். சிவநேசன் அப்போது வீட்டில் இல்லை. சித்தார்த்துடன் உள்ளே நுழைந்த மேகநாதனை வள்ளி வியப்புடன் பார்க்க, வள்ளி கட்டாயப்படுத்தியதால் உணவை விருப்பமே இல்லாமல் விழுங்கிக் கொண்டிருந்த விதுர்ஷா அதிர்ந்து எழுந்தாள்.

“வாங்க” என்று சம்பிரதாய புன்னகையுடன் சித்தார்த்தை அவள் வரவேற்க, அதற்கான எதிரொலி சித்தார்த்திடம் இல்லை.

விதுர்ஷாவின் மனம் நொடியில் நிலைமையைக் கணக்கிட்டது. அவள் வள்ளியைக் குறிப்பாகப் பார்க்க, குறிப்பை அறிந்து வந்தவர்களுக்கு பழச்சாறு தயாரிக்க உள்ளே சென்றார் அவர்.

“உங்க அப்பா எங்கே?”

சித்தார்த் நேராக விஷயத்திற்கு வர, “அப்பா வெளில போய்ருக்காங்க.. எதுனாலும் என்கிட்ட நீங்க சொல்லலாம்”

பேச்சு சித்தார்த்திடம் இருந்தாலும் பார்வை மேகநாதனைத் துளைத்தது.

‘இவ இதையும் என் கணக்கில் தானே எழுதுவா!’

பெருமூச்சுடன் அவளைப் பதிலுக்குப் பார்த்தான் அவன்.

“இல்ல இதை உன் அப்பா கிட்ட பேசுனா தான் சரிவரும்” என்று சித்தார்த் நிற்க, அவள் வேறு வழியின்றி தந்தையை அழைத்தாள்.

“சித்தார்த் வந்திருக்காருப்பா.. உங்கள பார்க்கணுமாம்” என்று மட்டும் சொல்ல,

“அரைமணி நேரத்துல வந்திருவேன்” என்றார் சிவநேசன்.

“வந்துட்டு இருக்காங்க..” என்று‌ மட்டும் சொன்னவள் அலைபேசியைப் பார்க்க ஆரம்பித்தாள்.

சித்தார்த் மேகநாதன் காதில், “எவ்ளோ திமிரு பார்த்தீங்களா? இப்படித்தான் யாரையும் ஒரு பொருட்டாவே மதிக்கவே மாட்டா.. இப்படி இருக்கும்போதே எவ்வளவு திமிரு” என்றான்.

சித்தார்த்தின் வார்த்தைகளில் மேகநாதன் சித்தார்த்தைப் பார்த்து முறைத்தான்.

“எப்படி இருக்கும் போது?” என்று கேட்க வாய் வரை வந்தாலும் அவன் கேட்கவில்லை. மறைக்க வேண்டும் என்ற எண்ணமில்லை. தேவையில்லை என்று நினைத்தான்.

“எவ்வளவு நேரம் ஆகும்?” என்று சித்தார்த் சலிப்புடன் கேட்க,

“ஹாஃப் அன் அவர்” என்று பதிலளித்துவிட்டு மீண்டும் அவள் அலைபேசிக்குள் மூழ்க, வள்ளி இருவருக்கும் பழச்சாறு எடுத்து வந்து கொடுத்தார்.

சித்தார்த் வேண்டாம் என்று சொல்ல, மேகநாதன் எடுத்துக் கொண்டான்.

“ப்ரோ.. எதுக்கு ப்ரோ எடுத்தீங்க? வேணாம்னு சொல்லுங்க” என்று சித்தார்த் கடிந்து கொள்ள,

“தாகமா இருக்கு பாஸ்.. விடுங்க” என்றவன் வேகமாக அதைப் பருக ஆரம்பித்தான்.

விதுர்ஷா அவர்களின் பேச்சைக் கேட்டாலும் நிமிரவில்லை.

அரைமணி நேரம் என்றவர் இருபது நிமிடத்தில் வீட்டுக்கு வந்து நிற்க, அவரும் சித்தார்த்துடன் மேகநாதனை எதிர்பார்க்கவில்லை. எதுவோ நடக்கப் போவதாக அவரது உள்மனம் சொன்னது. சிவநேசன் நிதானித்தார்.

குரலில் அமைதியைக் கொண்டு வந்து, “வாங்க வாங்க.. அப்பா எதுவும் சொல்லிவிட்டாங்களா?” என்று அவர் பேச்சை ஆரம்பிக்க,

“இல்ல சார்.. இந்தக் கல்யாணத்துல எனக்கு விருப்பம் இல்ல.‌. அதை உங்க கிட்ட சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்.. இனிமேல் ஃபர்தரா எந்தக் கல்யாண வேலையும் பார்க்காதீங்க”

அலுங்காமல் சித்தார்த் சொல்ல, சிவநேசன் அதிர்வுடன் அவனைப் பார்த்தார். அதிர்வு மெல்ல கோபமாக மாற,

“ஏன் விருப்பமில்ல?”

கேள்வி சிவநேசனிடமிருந்து இல்லை. விதுர்ஷாவிடம் இருந்து.

விஷயம் வெளிவரும் வரை அவர்கள் பேசிக்கொள்ளட்டும் என்றிருந்தவள் அதற்கு மேல் பொறுமை காக்க விருப்பப்படவில்லை. மேகநாதன் வெறும் பார்வையாளராய் மாறியிருந்தான்.

“விருப்பமில்லை.. ‌அவ்ளோதான்”

“அப்படி எப்படிங்க சொல்ல முடியும்? உங்க வீட்ல தானே வந்து கல்யாணத்துக்குப் பேசுனாங்க? நீங்களும் கூட தானே இருந்தீங்க?”

“அப்போ எதுவும் தெர்லயே”

சித்தார்த் சொல்ல விதுர்ஷாவின் பார்வை கூர்மையானது.

“அப்படி என்ன தெரிஞ்சது இப்போ?”

“உனக்கு இது செகண்ட் மேரேஜ்னு நீயோ உன் அப்பாவோ ஏன் என்கிட்ட சொல்லல? நல்லவேளை கல்யாணத்துக்கு முன்னவே விஷயம் என் காதுக்கு வந்தது.. இல்லனா நான் ஏமாந்திருப்பேன்” என்று அவன் சொல்ல,

“யாரும் உங்கள ஏமாத்தல.. உங்க குடும்பம் தான் உங்கள ஏமாத்திருக்கு.. உங்க அப்பா கிட்டேயும் மாமா கிட்டேயும் எங்கப்பா எல்லாத்தையும் சொல்லிட்டாரே” என்றாள் அவளும் விடாமல்.

சித்தார்த் முகம் கறுக்க நின்றான். அவள் சொல்வது உண்மையல்லவா?

“கல்யாணம் பண்ணப் போறது நான்..‌‌ நீங்க என்கிட்ட சொல்லியிருக்கணும்”

மீண்டும் சித்தார்த் அவன் பிடியில் நிற்க, சிவநேசன் பேசினார்.

“எங்க கிட்ட யார் கல்யாணம் பேச வந்தாங்களோ அவங்க கிட்ட சொல்லியாச்சு.. உங்க கிட்ட சொல்லி உங்க சம்மதம் இருக்கதாகவும் உங்கப்பா என்கிட்ட சொன்னாரு”

“எனக்கு அதெல்லாம் எதுவும் தெரியாதுங்க.. நேத்து தான் எங்க அக்கா என்கிட்ட இந்த விஷயத்தைச் சொன்னாங்க.. இந்தக் கல்யாணம் வேணாம். நிறுத்திடுங்க”

மீண்டும் மீண்டும் அவன் அதையே பேச, விதுர்ஷாவின் பார்வை அவனை விட்டு மேகநாதனைப் பார்த்தது. அவன் முகம் நிர்மலமாக இருந்தது.

“என்னங்க திரும்பத் திரும்ப அதையே சொல்றீங்க? கல்யாணம்னா என்ன விளையாட்டுப் பேச்சா?” என்று சிவநேசன் கோபமாகக் கேட்க,

“ப்பா விடுங்க” என்று சிவநேசனிடம் கூறியவள்,

“சொல்லிட்டீங்கள்ல.. வெளில போங்க” என்று சித்தார்த்தை நோக்கிச் சொல்ல, சிவநேசன் தான் கலங்கிப் போனார்.

சித்தார்த் இப்படியொரு எதிர்வினையை நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. அவன் கற்பனை முற்றிலும் வேறாக இருந்தது.

‘இவ திமிர் தான் தெரிஞ்ச விஷயம் தானே’ என்று நினைத்துக் கொண்டவன்,

“வாங்க பாஸ் போகலாம்” என்றபடி வெளியேற மேகநாதன் தேங்கினான்.

“உங்களுக்கும் சேர்த்து தான் சொன்னேன்” என்று விதுர்ஷா அழுத்தமாகக் கூற,

“நான் யாருனு அவருக்குத் தெரியாது விது” என்றான் அவன் விளக்கம் கொடுக்கும் நோக்கத்தில். அவள் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை.

“நீங்க நினைச்ச மாதிரி கல்யாணம் நின்னுடுச்சுல? சந்தோஷமா?” என்றவளுக்கு கல்யாணம் நின்றதை விட, அவன் முன் தோற்றது தான் அத்தனை வருத்தம்.

“நான் மட்டுமில்ல நீயும் சந்தோஷமா தான் இருக்கணும் நியாயமா.. ஆனா, உன்னோட ஈகோ அதை ஒத்துக்க விடாது”

மேகநாதன் தன்மையாகவே சொன்னான்.

எங்கே பேசினால் தன்னை மீறி எதாவது பேசிவிடுவோம் என அவள் சிவநேசனைப் பார்க்க, அவர் தனக்குள்ளே மறுகிப்போய் அமர்ந்திருந்தார்.

அவர் அமர்ந்திருந்த தோற்றத்தில் எதுவோ சரியில்லை என்று உணர்ந்தவள் மேகநாதனை பயத்துடன் பார்க்க, அவனுக்கும் எதுவும் தெரியவில்லை.

“அப்பா” என்று அவள் சற்று அழுத்திக் கூப்பிடவும் தன் உணர்விலிருந்து மீண்டு மகளைப் பார்க்க, அவர் முகமெல்லாம் வியர்த்து பார்க்கவே ஒரு மாதிரி இருந்தார்.

“என்னப்பா செய்யுது?” என்று அவள் கவலையுடன் அருகில் போக,

“நானும் இப்படி உன்ன கஷ்டப்படுத்திட்டேனே பாப்பா.. நீ எவ்வளவோ சொன்ன இந்தக் கல்யாணம் வேணாம்னு.. நான் தான்” என்றவருக்கு வார்த்தைகள் அதற்கு மேல் வரவே இல்ல.

சித்தார்த் காரை ஸ்டார்ட் செய்து ஹார்ன் அடிக்கவும், மேகநாதன் வெளியே வந்தான்.

“இங்கே பக்கத்துல எனக்கு வேற ஒரு வேலை இருக்கு சித்தார்த்.. நீங்க போங்க.. நான்‌ அந்த வேலையை முடிச்சுட்டு வரேன்” என்றவன் புல்லட்டை ஸ்டார்ட் செய்யவும் சித்தார்த் அவனிடம் தலையாட்டிவிட்டுச் சென்றான். அவனுக்கு மிகப்பெரிய பிரச்சனை முடிந்த நிம்மதி.

சித்தார்த் கார் வெளியேறவும் மேகநாதன் மீண்டும் வீட்டிற்குள் நுழைந்தான். அங்கே சிவநேசன் ஓய்ந்து போய் அமர்ந்திருக்க, விதுர்ஷா தைரியம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

‘இப்போ அவன் வேணாம்னு சொன்னதால என்ன கெட்டுப் போச்சாம்?’

அவனுக்குக் கடுப்பாகத் தான் இருந்தது.

“தண்ணி குடு முதல்ல அவருக்கு”

மறைக்காத எரிச்சலுடன் மேகநாதன் சொல்லவும் சிவநேசன் அவனைப் பார்த்தார்.

மேகநாதன் குரலுக்கு வள்ளி தண்ணீர் எடுத்து வந்து தரவும் அதை வாங்கிப் பருகினார். அதன் பிறகு கொஞ்சம் அவரது முகம் தெளிவானது.

“பயமுறுத்திட்டீங்கப்பா?”

விதுர்ஷா சலுகையாய் குறைபட்டுக் கொண்டாள்.

“உனக்கு எதுவும் வருத்தம் இல்லையாமா?”

“ப்ச்.. என்னப்பா இது? இவனெல்லாம் என்னை வேணாம்னு சொல்லிட்டானு வருத்தப்படுவாங்களா? அவங்க குடும்பமே இவன் கிட்ட விஷயத்தை மறைச்சு செய்ய நினைச்சிருக்காங்க.. அங்க ஏதோ தப்பா இருக்குப்பா.. நல்லதுனு நினைச்சுக்கோங்க”

‘அட.. இப்ப தான் சரியா யோசிக்கிறா'

“திடீர்னு என்னப்பா ஆச்சு?”

“ரெண்டு நாளா பிரஷர் டேப்லெட் போடல.. வேற யோசனைல மறந்துட்டேன்.. அதான் போல”

“டேப்லெட் ஏன்ப்பா போடாம இருந்தீங்க..‌‌ டாக்டர் உங்கள டேப்லெட் ஸ்கிப் பண்ணக் கூடாதுனு சொல்லியிருக்காருல?”

விதுர்ஷா கடிந்து கொள்ள, மேகநாதன் யோசனையுடன் அவர்களைப் பார்த்தவாறு அமரப்போனான்.

அந்த அரவத்தில் திரும்பிப் பார்த்த விதுர்ஷா, “நீங்க இன்னும் கிளம்பலயா?” என்று கேட்டு வைக்க,

“நீ கிளம்பலயா?” என்றான் அவன்.

விதுர்ஷாவின் முகம் இறுகியது.

“எங்கே கிளம்பச் சொல்றீங்க?”

“நம்ம வீட்டுக்கு”

“நீங்க சொன்ன மாதிரி கல்யாணம் நின்னுடுச்சு தான். அதுக்காக உங்க கூட வருவேனு எப்படி எதிர்பார்க்குறீங்க?”

விதுர்ஷா கைகளைக் கட்டியவாறு நிதானமாகக் கேட்டாள். மேகநாதன் அடுத்த யுத்தத்திற்குத் தயாரானான்.

“நீங்க போ னு சொன்னா போறதுக்கும் வா னு சொன்னால் வர்றதுக்கும் நீங்க வளர்க்குற நாய்க்குட்டியா நான்?”

விதுர்ஷா கேட்க, அவன் முகம் இறுக அப்படியே நின்றிருந்தான்.

இதற்கு அவன் என்ன பதில் சொல்வது? அவன் தான் அவளைப் போகச் சொன்னான். அதற்கு எந்தவித சமாதானம் சொல்லவும் அவன் துணியவில்லை.

சிவநேசன் அவர்களின் பேச்சில் தலையிடாமல் பார்வையாளராக மாறியிருக்க, வள்ளி அங்கிருந்து சமையலறைக்குள் முடங்கிக் கொண்டார். அவரது வேண்டுதல் எல்லாம் விதுர்ஷா மீண்டும் மேகநாதனுடன் இணைய வேண்டும் என்பதாகவே இருந்தது.

“இப்போ என்னதான் முடிவா சொல்ற?”

“நான் எங்கேயும் வரப்போறது இல்ல”

“இது தான் உன் முடிவா?”

“ஆமா”

“சரி.. அப்போ நான் இங்கே தங்கிக்கிறேன்” என்றவன் அவளை சிறிதும் பொருட்படுத்தாமல் மேலே விதுர்ஷாவின் அறையை நோக்கிப் போனான்.

விதுர்ஷா ஒரு நிமிடம் அதிர்ந்து பார்த்தவள் வேகமாக செல்லும் அவனை வழிமறித்து நின்றாள்.

“எங்க போறீங்க? இதெல்லாம் என்ன ட்ராமா? ஒழுங்கா போய்டுங்க இல்ல கலாட்டா பண்றீங்கனு போலீஸைக் கூப்பிடுவேன்”

“கூப்பிட்டு என்னன்னு கம்ப்ளைண்ட் செய்வ? என் புருஷன் என் ரூம்ல தங்குறேனு சொல்றான்னா? தாராளமா கம்ப்ளைண்ட் பண்ணிக்க”

அலட்சியம் போலச் சொன்னவன் அவளை நகர்த்தி விட்டு மேலே சென்றான்.

விதுர்ஷா தடுக்க முடியாமல் கோபம் பாதி தவிப்பு பாதியென அவனைப் பார்த்திருக்க, சிவநேசன் மேகநாதனிடம் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

கருத்துகளைப் பகிர:

 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
#11

சோமசுந்தரம் கல்யாணியிடம் முகம் கொடுத்துப் பேசுவது இல்லை. அன்று ரதியின் வீட்டு விழாவைப் பற்றி பேசியபோது பேசியது. அதன் பின்னே இறுகிப்போய் தான் நடமாடிக் கொண்டிருந்தார். கல்யாணி சோர்ந்து போனார். ஒன்று போனால் ஒன்று என தொடர்ந்து பிரச்சனைகளாக வருவதைப் போலிருந்தது. மனதே விட்டுப் போயிருந்தது.

“உன் மக போயாச்சா ராசி?”

வழக்கம் போல அவர் ராசாத்தியுடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

“போய்ட்டா மா”

“ம்ம்..”

பேச்சை ஆரம்பித்து விட்டாலும் அவர் கேட்க நினைப்பதை எப்படிக் கேட்பது என்று புரியாமல் அவர் விழிக்க, ராசாத்தி அந்தக் கஷ்டத்தை எல்லாம் தன் முதலாளி அம்மாவுக்கு வைக்க எண்ணவில்லை போலும்.

“ம்மா நம்ம பாப்பாவோட மகன் காதுகுத்துக்கு உங்களுக்கு வந்து பத்திரிகை வைக்கிறதா பேசிட்டு இருக்காங்களாம்”

அவர் ஆரம்பித்து வைக்க, கல்யாணியின் முகம் சட்டென்று பரபரப்பைக் காட்டியது. பெருமளவு முயற்சி செய்து அதை மறைத்தவர் இயல்பாக இருப்பது போலக் காட்டிக் கொண்டார்.

“யார் சொன்னது?”

“எனக்கு யாருமா சொல்லுவா? நம்ம பேச்சி தான்”

“அவங்க எப்படிடி நம்மள கூப்டுவாங்க?”

கல்யாணி யோசிக்க,

“அதுக்குத்தான் அங்க அவங்க வீட்ல ஒரே வாக்குவாதமாம். நம்ம பாப்பாவோட வீட்டுக்காரரும் அவர் தம்பியும் இங்க வீட்ல கூப்பிடணும்னு அவங்கப்பா கிட்ட சொல்லிருப்பாங்க போல” என்றார் ராசாத்தி.

“ரதி மாமனார் அதுக்கு என்ன என்ன சொன்னாராம்?”

“அது தெரியலேங்க மா.. அவ இதை மட்டும் தான் சொன்னா”

கல்யாணிக்கு சப்பென்று ஆகிவிட்டது. ரத்தினவேல் இதற்கு சம்மதிப்பார் என்றெல்லாம் கல்யாணிக்குத் தோன்றவே இல்லை. சோமசுந்தரம் மாதிரி தானே அவரும்? ஏதாவது ஒரு மாயம் நிகழ்ந்து ரத்தினவேல் சம்மதித்தாலும் சோமசுந்தரம் இருக்கின்றாரே? அவர் இறங்கி வருவாரா?

கேள்விகள் வரிசையாய்த் தாக்க, சோர்ந்து போனார். ஒரு வருடமா இரண்டு வருடமா? கிட்டத்தட்ட இருபது வருடத்திற்கும் மேலான பகை.. நினைக்கும்போதே அவருக்கு மலைப்பாக இருந்தது.

ரதியைப் பற்றி யோசிக்கும்போதே மேகனின் நினைவும் வர, அவனைப் பற்றி யோசித்தபடி அமர்ந்துவிட்டார். எங்கே போகிறான்? என்ன செய்கிறான்? எதுவும் அவருக்குத் தெரிவது இல்லை. இப்போது கூட எங்கு சென்றிருக்கிறான் என்பது அவருக்குத் தெரியாது. இப்படியே அவனையும் விட்டுவிடக் கூடாது என்று நினைத்துக் கொண்டார்.


____________________


காலையில் நடந்த களேபரத்தில் இருந்து அறையின் பக்கமே ஒதுங்காமல் விதுர்ஷா இரவில் தூங்கவும் அவளது அறைக்குச் செல்லவில்லை. அவளுடைய வீட்டில் விருந்தினர் அறையே மூன்று இருந்தது. அதுபோக, சிவநேசனுக்கும் விதுர்ஷாவிற்குமான அறை. அதனால், விருந்தினர் அறையில் ஒன்றில் படுத்துக் கொண்டாள்.

மேகநாதனுடன் ஒரே அறையிலா? அவளது மனம், ‘போதும் அங்கே இருந்தவரை அனுபவித்தது’ என்று சொல்லிக்கொண்டது.

இரவிலும் அறைக்கு வராமல் அவள் கண்ணாமூச்சி காட்ட, அவனுக்குப் பொறுமையாய் இருப்பதை விட வேறு வழி தெரியவில்லை. மதியமே சென்று அவனுடைய அறையைக் காலி செய்துவிட்டு வந்திருந்தான். இதற்கு முன் இரண்டு மூன்று முறை இங்கு வந்திருக்கிறான். அவ்வளவே!

இன்னமும் அவன் இந்த வீட்டுடன் ஒட்டவில்லை. அதில் விதுர்ஷா வேறு முகம் தூக்கியிருப்பது ஒரு மாதிரி இருந்தாலும் பொறுத்துக் கொண்டான். ஆனால், அவனுக்கு எந்த சங்கடமும் இல்லாமல் வள்ளி பார்த்துக் கொண்டார். காபியோ, தண்ணீரோ, சாப்பாடோ எதையும் அவன் வாய் விட்டு கேட்கும் அவசியமே இல்லை. அவரது நடவடிக்கைகள் அவனுக்கு அன்பரசியை நினைவுபடுத்தின.

இன்னமும் வள்ளிக்கு எப்படி அவன் மேல் இந்த அளவிற்கு நம்பிக்கை வந்தது என்பது அவனுக்கே புரியாத புதிராகத் தான் இருந்தது. அவர் மட்டுமில்லை என்றால்? என நினைக்கவே பயமாக இருந்தது. விழிகளை மூடிக் கொண்டான். உறக்கம் வருவதாகக் காணோம்.

அந்த நேரத்தில் கதவு மெல்லியதாகத் தட்டப்பட, மேகநாதன் மணியைப் பார்த்துவிட்டு யோசனையுடன் கதவைத் திறந்தான். சிவநேசன் தான் தயக்கத்துடன் நின்றிருந்தார். அவருக்கு அவனிடம் பேச வேண்டியிருந்தது.

அவரைப் பார்த்ததும் மேதநாதனின் முகம் அனிச்சையாக சுருங்கியது. அவனால் இன்னுமே அவர் அவளுக்குத் திருமண ஏற்பாடு செய்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏதோ ஒரு கோபம் இருக்கத்தான் செய்தது. விதுர்ஷாவின் மீதும்! அதைக் காட்டிக்கொள்ள விரும்பவில்லை.

“சொல்லுங்க” என்று‌ மட்டும் சொன்னான்.

“நீங்க ஏன் திடீர்னு வந்திருக்கீங்க?”

சிவநேசன் இப்போது தெளிவாகி இருந்தார். அவரால் இயல்பாகப் பேச முடிந்தது.

“என் பொண்டாட்டியைக் கூப்பிட வந்திருக்கேன்”

அவன் அழுத்தமாகச் சொல்ல,

“ரெண்டு வருஷமா அது தெரியலயா?” என்றார் அவர் அவனை விட அழுத்தமாக.

“அதுனால தான் அவளுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கப் பார்த்தீங்களா? நீங்க உங்க பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கல.. என் மனைவிக்குக் கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சிருக்கீங்க.. பேசிட்டு இருக்காம லீகலா ஆக்ஷன் எடுத்திருக்கணும்”

அவனையும் மீறி வார்த்தை வெளிவந்திருந்தது.

அவன் சொல்வதும் உண்மை தான். இன்னும் அவர்களுக்கு சட்டப்படி விவாகரத்து ஆகவில்லை. டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பிய போதே அவனது வருகையை சிவநேசன் எதிர்பார்த்தார். ஆனால், அவனிடமிருந்து எந்த எதிரொலியும் இல்லை. அதனால் தான் அவன் வரமாட்டான் என்று முடிவு செய்து அவர் இந்த ஏற்பாடுகளைச் செய்தது. அப்படியே வந்தாலும் அதன்பிறகு சமாளித்துக் கொள்ளலாம் என நினைத்தார்.

“உங்களுக்கு ஒரு பொண்ணு பிறந்து நீங்க அப்பாவா நிற்பீங்கள்ல.. அப்போ இதெல்லாம் உங்களுக்குப் புரியும்.. இப்போ அதுக்கான எந்த விளக்கமும் நான் கொடுக்கப் போறது இல்ல”

இயல்பாகவே அவரும் சொன்னார். அவனிடம் மேலும் மேலும் வார்த்தையாடாமல் தகைந்து போக நினைத்தார் அவர். மேகநாதனின் மனம் அவரது சமாதானத்தை ஏற்கவில்லை.

“நீங்க இப்போ அவளைக் கூட்டிட்டுப் போறீங்கனா ஏன்? எதுக்கு இந்த திடீர் முடிவு? எனக்குப் புரியல. அதான் கேட்க வந்தேன்”

“அட இது என்னங்க? இந்த உலகத்துல சண்டை போட்டு பொண்டாட்டியை விட்டு எவனுமே பிரிஞ்சு இருந்தது இல்லையா? திரும்ப சேர்ந்தது இல்லையா?”

“எவனையும் பத்தி எனக்குத் தெரியாது. நான் இருந்தது இல்ல. என்னால என் அன்பரசியை விட்டு இருக்க முடிஞ்சது இல்ல”

அவரது பதிலில் திகைத்தான் மேகநாதன்.

“நீங்க சாதாரணமாக சண்டை போட்டு பிரியல. இங்க வந்த என் பொண்ணு நீங்க வேண்டவே வேணாம்னு சொன்னா.. உங்களுக்கும் அவளுக்கும் எதுவும் இல்லைனு சொன்னா.. அவளுக்குத் தெரியாம நான் உங்கள வந்து சந்திச்சப்போ நீங்களும் அதே தான் சொன்னீங்க.. இன்னும் உங்களுக்குள்ள என்ன பிரச்சனைனு கூட எனக்குத் தெரியாது. ஆனால், நீங்களும் உங்க குடும்பமும் அவளை நல்லா நடத்தல. அது மட்டும் உறுதியாகத் தெரியும்” என்று அவர் சொல்லவும், அவன் முகம் கறுத்தது.

“இப்போ என்ன பண்ணலாம்னு சொல்றீங்க?”

“எனக்கு ஒரு வாக்குறுதி வேணும். அதுக்கு நீங்க சரினு சொன்னா நான் விதுர்ஷா கிட்ட பேசுறேன்”

அவர் சொல்லவும் எதையாவது வில்லங்கமாகக் கேட்டு விடுவாரோ என்று அவன் பதற்றத்துடன் பார்க்க, அவர் கேட்ட விஷயம் அவனை ‘ஸ்சை’ என்று சொல்ல வைத்தது.

“நான் செத்தாலும் என் கூடவே கூட்டிட்டுப் போய்டுறேன் உங்க பொண்ணை.. போதுமா?”

அவன் ஆசுவாசமாகச் சொல்ல, அதற்கு சிவநேசன் தலையசைத்தது கண்டு உண்மையில் அவனுக்கு சிரிப்புத் தான் வந்தது.

மறுநாள் விடியலில் சிவநேசன் ஒரு முடிவுடன் எழுந்தார். விதுர்ஷாவிற்கு அவளது அறைக்குப் போக வேண்டிய கட்டாயம். வீட்டிலிருக்கப் பிடிக்காமல் கல்லூரிக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்திருந்தாள். அவளுடைய உடை எல்லாம் அவளது அறையில் இருந்தது. உடையை மட்டும் எடுத்துவிட்டு வெளியே வந்து விடலாம் என்ற எண்ணத்தில் அவள் அறைக்கதவைத் தட்ட, அது திறந்து இருந்தது.

மெல்ல உள்ளே தலையை நீட்டிப் பார்த்தவள் அவனுடைய அரவம் இல்லாமல் குழம்பும் போதே குளியலறையில் பைப் திறக்கும் சத்தம் கேட்டு அவளைத் தெளிவுபடுத்தியது.

தோள்களைக் குலுக்கியவள் உள்ளே வந்து அவளுக்கான உடையைத் தேர்வு செய்ய, குளித்து முடித்து வெளியே வந்தான் மேகநாதன்.

“ஒரு வழியே கண்ணாமூச்சிக்கு எண்ட்கார்டு குடுத்திட்டியா?”

குரல் வந்த திசையில் திரும்பியவள் அவனது தோற்றத்தில் அரண்டு போய் அவசரமாக அலமாரிக்குள் தலையை விட்டுக் கொண்டாள்.

இரண்டு வருடமாக அவனுடன் ஒரே அறையில் இருந்திருந்தாலும் அவனை மேல்சட்டை இல்லாமல் அவள் பார்த்தது இல்லை. இரவு நேரங்களில் கூட பனியனும் வேஷ்டியும் தான். இன்று வெறும் கைலியை மட்டும் கட்டிக் கொண்டு தலையைத் துவட்டிய துண்டை தோளில் போட்டபடி அவன் வந்து நின்ற தோற்றம் அவள்‌‌ அறியாதது.

அவனுக்கு அப்படியெல்லாம் தோன்றவில்லை போல! இயல்பாக இருந்தான்.

அவளிடமிருந்து பதில் வராமல் இருந்ததில், ‘திமிருக்கு ஒன்னும் குறைச்சலில்லை' என்று நினைத்தவனும் அடுத்துப் பேசவில்லை.

அவள் சேலையைத் தேர்வு செய்துவிட்டு அந்த அறையில் அவளுக்குத் தேவையான மற்ற பொருள்களையும் எடுத்துக்கொண்டு போகும் முன் அவளையும் அறியாமல் அவன் புறம் திரும்ப, அப்போது அவன் சட்டையும் வேஷ்டியும் அணிந்திருந்தான்.

'ஊஃப்' என்று சொல்லிக் கொண்டவாறே வெளியேறினாள் அவள்.

அவள் கீழே இறங்கிய சிறிது நேரத்திற்கெல்லாம் கீழே அப்பாவும் மகளும் வார்த்தையாடும் சப்தம் கேட்க, என்னவென்று எட்டிப் பார்த்தான் அவன்.

“என்னோட வாழ்க்கையை எனக்குப் பார்த்துக்க தெரியும். நீங்க இதுல தலையிடாதீங்கப்பா”

சுள்ளென்று சொல்லிவிட்டு விதுர்ஷா அறைக் கதவை அடைப்பது நன்றாகவே கேட்டது.

அடுத்த அரைமணி நேரத்தில் சிவநேசனின் முகத்தைக் கூடப் பார்க்காமல் கல்லூரிக்குக் கிளம்பிவிட்டாள் விதுர்ஷா. வீட்டில் சிவநேசனும் மேகநாதனும் மட்டுமே இருந்தனர்.

வள்ளி மேகநாதனை உணவுண்ண அழைக்க, அவனது காலை உணவு முடிந்தது. சிறிது நேரம் சுரேந்திரனுக்கு அழைத்து நேற்று நடந்தவை அனைத்தையும் கூற, அந்தப் பக்கம் சுரேந்திரனுக்கும் மகிழ்ச்சி.

“மச்சான் முருகன் உன்னைக் கரை சேர்க்க மனசு வச்சுட்டாரு போலடா”

அவனும் குதூகலிக்க,

“இன்னும் உன் தங்கச்சியை சமாளிக்கணுமே” என்றான் பெருமூச்சுடன்.

“அதான் உன் மாமனார் பார்த்துக்கிறேனு சொல்லியிருக்காரே”

“அவ இதுக்கெல்லாம் மசியுறவளா? காலைலயே அவங்கப்பா கூட சண்டை”

“இவ்ளோ நாள் இருந்துட்ட.. இன்னும் கொஞ்ச நாள் பொறுமையா இருந்து தங்கச்சியோட ஊருக்கு வா”

“அவ இல்லாம நான் மட்டும் வரவும் மாட்டேன். சரி என் தங்கச்சி என்ன பண்ணுது?”

“காலேஜ் போய்ட்டா டா”

“எதாவது பணம் தேவைனா எடுத்துக்க..‌ கணக்குல எழுதி வை. நான் இல்லைன்னா எதுவும் செய்ய மாட்ட”

“பணம்லா எதுவும் தேவைப்படல டா.. எங்களுக்கு என்ன செலவு”

சுரேந்திரன் சொல்ல, “தேவைப்பட்டா எடுத்துக்க” என்றவனோ அடுத்து தொழில்முறை பேச்சிற்குத் தாவினான்.

சுரேந்திரனிடம் பேசிவிட்டு வைத்தவன் அடுத்து நேரத்தை நெட்டித் தள்ளினான் என்று தான் சொல்ல வேண்டும். அலைபேசியை அழைப்பதற்கு மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்துவான். ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், த்ரட் என்று அனைத்து செயலிகளிலும் அவனுக்கு கணக்கு இருந்தாலும் அதிலெல்லாம் அரிதாகவே நேரத்தைச் செலவிடுவான்.

வேலை எதுவும் இல்லாததால் மதிய நேர உணவைப் பிறகு சாப்பிட்டுக் கொள்வதாகக் கூறியவன் நிறைய நாட்களுக்குப் பிறகு சமூக வலைதளத்தில் நேரத்தைச் செலவிட்டான்.

ஒரு கட்டத்தில் தூக்கம் வர, தூங்கலாமா என்ற யோசனையில் இருந்தவன் வெளியே கேட்ட கார் சத்தத்தில் எழுந்து வெளியே வந்தான்.

‘என்ன ரெண்டு மணி தான் ஆகுது.. இவ இவ்ளோ சீக்கிரமா வந்துட்டா’ என்றவாறே அவன் கீழிறங்கி வர, காரிலிருந்து இறங்கிய விதுர்ஷாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. உள்ளே வந்தவள் அவனைத் தீயாக முறைத்து விட்டு நேராக தந்தையின் அறையை நோக்கிச் செல்ல, அவன் குழப்பத்துடன் அவள் பின்னே சென்றான்.

“என்னப்பா ப்ளாக்மெய்ல் பண்றீங்களா?”

அவள் கைகளைக் கட்டிக்கொண்டு பொறுமை பறந்தோடிய குரலில் கேட்க, சிவநேசன் பேசவே இல்லை. மேகநாதனுக்கு ஒன்றும் புரியவில்லை.

“இப்போ சாப்பிட போறீங்களா இல்லையா? நீங்க டேப்லெட் ரெகுலரா போடணும்னு டாக்டர் சொல்லியிருக்காங்க தான?”

“என்னை எனக்குப் பார்த்துக்க தெரியும்.. யாரும் கரிசனம் பண்ண வேணாம்”

அவளது பதிலை அவளுக்கே அவர் திருப்பிப் படிக்க, மேகநாதனுக்கு விஷயம் புரிந்தது.

'ஓ உண்ணாவிரதப் போராட்டமா?’

முதல்நாள் இரவு பசி இல்லையென்று மறுத்தவர் காலையிலும் வேண்டாம் என்றிருந்தார். அறையில் வைத்துவிட்டுப் போன பால் கூட அப்படியே இருப்பதை மதிய உணவிற்கு அழைக்கப் போயிருந்த வள்ளி பார்த்துவிட்டு பயந்து போய் விதுர்ஷாவை அழைத்து விஷயத்தைக் கூறவும் தான் அவள் உடனே கிளம்பி வீட்டிற்கு வந்திருந்தாள்.

“ப்பா.. நீங்க ஏன்ப்பா இப்படி மாறிட்டீங்க? எனக்கு விருப்பமில்லைனு சொல்லியும் அவன் கூட போகச் சொல்றீங்க”

விதுர்ஷா சலிப்பாகக் கேட்க, மேகநாதன் அதிர்ந்தான்.

'என்னது டா வா?’

சிவநேசனும் விதுர்ஷாவும் அதை உணரவில்லை.

“நான் போக மாட்டேன் பா.. நீங்க என்ன சொன்னாலும்”

விதுர்ஷா அவளது பிடியில் நின்றாள்.

“அப்போ நான் வேற மாப்பிள்ளை பார்த்தா ஒத்துக்குவியா? லீகலா இந்த உறவிலிருந்து நீ வெளிய வந்த அப்றம் நான் வேற மாப்பிள்ளை பார்க்கட்டுமா?”

சிவநேசனின் கேள்வியில் மேகநாதன் வேகமாய் ஏதோ சொல்ல வர, கண்களாலேயே அவனை அமைதியாக இருக்கச் சொன்னார் அவர்.

“ப்பா எனக்கு கல்யாணம் வேணாம்னு நான் எத்தனை தடவை தான் சொல்றது?”

“அப்போ வேற வழியில்லை விது. நீ உன் குடும்பம் பிள்ளைங்கனு இருக்கதை நான் பார்க்கணும்”

அவள் அலுப்பாகத் தந்தையைப் பார்த்தாள்.

“சரி நான் யோசிக்கிறேன் பா.. நீங்க இப்போ சாப்டுங்க”

“நீ நல்லா யோசிச்சு முடிவை சொல்லு.. அப்புறம் எதுனாலும் பார்ப்போம்”

அவர் பிடிவாதமாக அமர்ந்திருக்க, விதுர்ஷா கோபத்துடன் அவளது அறைக்குச் சென்று கதவை அறைந்து சாத்தினாள். கதவின் சத்தமே அவளது கோபத்தைக் காட்டும் அளவுகோலாக இருந்தது.

கருத்துக்களைப் பகிர:

 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
#12

“தேவையில்லாம நீங்க உடம்ப கெடுத்துக்க வேணாம். இதை நான் பார்த்துக்கிறேன்”

மரியாதை நிமித்தமாக மேகநாதன் சொல்ல, “உங்களால அது முடியாது” என்றார் சிவநேசன்.

சிவநேசன் இயல்பாகத் தான் சொன்னார். ஆனால், அவனுக்கு அது சுருக்கென்று தைத்தது. அவர் சொன்னதை விட, அது உண்மை என்று அவனே ஒத்துக்கொள்ள வேண்டியிருந்ததைத் தான் அவனால் தாங்க முடியவில்லை. எதுவும் பேசாமல் வெளியேறிவிட்டான்.

விதுர்ஷா வெகுநேரம் ஆகியும் வெளியே வரவில்லை. தனக்குள்ளாக நிறைய யோசித்தவளுக்கு சிவநேசனிடம் பேசுவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. மீண்டும் ஒருமுறை அப்பாவிடம் மெதுவாகப் பேசிப் பார்க்கலாம் என்று தோன்ற அவரது அறைக்குச் சென்றாள் அவள்.

ஒருமணி நேரத்திற்கு முன் பார்த்த மாதிரி கூட சிவநேசன் அப்போது இல்லை. சோர்வு அவரது முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. அதையும் மீறிய பிடிவாதத்தில் அவர் நிற்க, விதுர்ஷாவிற்குப் பயமாகி விட்டது.

“எதாவது செய்யுதாப்பா?”

அவள் கவலையுடன் கேட்க, பதில் சொல்லக்கூட அவர் மிகவும் சிரமப்பட்டார்.

“பேச வேணாம் விடுங்க..‌‌. ப்பா நீங்க சொல்ற மாதிரியே கேட்குறேன்.. நான் போறேன். ‌நீங்க வாங்க.. சாப்பிட்டு டேப்லெட் போடுங்க ப்ளீஸ்”

சிவநேசன் மட்டும் தான் அவளுக்கு இருக்கும் ஒரே சொந்தம். அவரையும் இழந்து விடக்கூடாதே என்ற பதட்டத்தில் அவள் சம்மதித்திருக்க, சிவநேசன் அதன் பின்னர்தான் உணவுண்ண சம்மதித்தார்.

மேகநாதனுக்கு விஷயம் சொல்லப்பட, அவன் வெறுமனே சரி என்று மட்டும் சொன்னான். அவனுக்காகவா மனைவி இறங்கி வந்திருக்கிறாள்? அவளுடைய அப்பாவிற்காக.. அப்பாவின் உடல்நிலைக்காக இறங்கி வந்திருக்கிறாள். அவனது மனதில் சுணக்கம் வந்தது.

சிவநேசன் கொஞ்சம் தெளிவாகவுமே, “நாளைக்கு கிளம்புறீங்களா அப்போ?” என்று கேட்க,

“அவர் கிட்ட கேட்டுட்டு சொல்றேன் ப்பா” என முடித்துக் கொண்டாள் விதுர்ஷா. ஆனால், கேட்கவில்லை. சிவநேசன் மேகநாதனிடம் கேட்க, அவனும் மறுநாளே கிளம்புவதாகச் சொன்னான்.

விதுர்ஷாவின் மனம், ‘மீண்டும் அங்கே போக வேண்டுமா?’ என்பதிலே சோர்ந்து விட்டது. அவளது மனம் நிலையில்லாமல் தவிக்க, நேரம் யாருக்காகவும் நிற்கவில்லை. இரவு உணவை முடித்துவிட்டு தன்னுடைய உடைகளையும் பொருட்களையும் எடுத்து வைக்க ஆரம்பித்தாள் அவள்.

மேகநாதன் கட்டிலில் அமர்ந்து அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் உடலும் முகமும் இறுகிப் போயிருந்தது. அதற்கு நேர்மாறாக இந்த நிலையும் கண்டிப்பாக மாறும் என்பது மட்டும்தான் மேகநாதன் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. இருவரும் தத்தம் எண்ணங்களுடனே அன்றைய இரவைக் கழித்தனர்.

மறுநாள் காலை உணவை முடித்த கையுடன் அவர்கள் கிளம்புவதாய் இருக்க, பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவன் விதுர்ஷாவிற்கு அதைப் பற்றிய நினைவே இல்லை என்பது புரிந்து அவள் முன் போய் நின்றான்.

சிவநேசனிடம் பேசிக் கொண்டிருந்தவள் அவனைக் கேள்வியாகப் பார்க்க, அவளது கையைப் பிடித்து இரண்டு வருடங்களாக அவன் பொக்கிஷமாகப் பாதுகாத்த அவளுடைய மாங்கல்யத்தை அவளது உள்ளங்கையில் வைத்தான்.

விதுர்ஷா அதிர்வுடன் அவனைப் பார்க்க, மேகநாதனின் முகம் உணர்வுகளைத் தொலைத்திருந்தது.

உணர்ச்சி வேகத்தில் செய்த விஷயம் தான் அது. அதுவும் அவனோடு சேர்ந்து வாழப்போவது இல்லை என்ற முடிவெடுத்த பின் அவளது செயல் அவளுக்கு பெரிதாகத் தோன்றவில்லை. ஆனால், இப்போது?

பயத்துடன் மேகநாதனைப் பார்த்தாள். அவளது கரங்கள் தாமாக நடுங்க ஆரம்பித்திருந்தன.

அவளது முகம்..‌‌ அதில் தெரிந்த பயம்.. அவனுக்குக் காணச் சகிக்கவில்லை.

நொடியில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவனது வருத்தமெல்லாம் பின்னுக்குப் போயிருந்தது. எதுவும் பேசாமல் அவளை அழைத்துச் சென்றவன் அவர்கள் வீட்டு பூஜையறையில் போய் நின்றான்.

கண்மூடி என்ன வேண்டினானோ!? ஆனால், வழக்கத்திற்கு மாறாக கடவுளை வணங்க அதீத நேரம் எடுத்துக் கொண்டான். ஆனால், அவனது பிரார்த்தனைகள் அவளைச் சுற்றி மட்டுமே இருந்ததென்னவோ நிஜம்!

வெகுநேரம் கழித்தே கண் திறந்தவன், அவளது கழுத்தில் மீண்டும் அந்த மாங்கல்யத்தை அணிவித்து, நெற்றி வகிட்டில் குங்குமம் இட்டு விட, இப்போது விதுர்ஷாவின் உடல் இறுகியது. என்ன முயன்றும் கண்களில் தேங்கிய நீரை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை.

அவளது சுயமரியாதையைக் கொன்று அவனுடன் வாழ்ந்தாக வேண்டிய அவசியம் இல்லை என்று பேசியவள்.. மீண்டும் அதே சுழலில்!

—------------------

கார் சென்னையைக் கடந்து சென்று கொண்டிருந்தது. மேகநாதன் மறுக்க மறுக்க, விதுர்ஷா பயன்படுத்திய காரிலேயே அவர்களை ஊருக்கு அனுப்பி வைத்தார் சிவநேசன். மேகநாதனும் விதுர்ஷாவும் பின்னிருக்கையில் அமர, முத்து தான் காரை ஓட்டினார். விதுர்ஷா தனக்குள் மூழ்கியிருக்க, மேகநாதனும் அவளைத் தொல்லை செய்யவில்லை.

“பாதி தூரம் போகவும் என்கிட்ட கொடுங்கண்ணா.. நான் ஓட்டுறேன். ஒரே ஸ்ட்ரெச்ல அவ்ளோதூரம் ஓட்றது கஷ்டம்” என அவன் புரிந்துணர்வுடன் சொல்ல,

“அதெல்லாம் பரவாயில்லைங்க சார்.. முன்னாடி லாரி ஓட்டிட்டு இருந்தேன். தமிழ்நாடு டூ மஹாராஷ்டிரா.. தனியாவே ஓட்டியிருக்கேன். பழக்கம் தான்” என்றார் அவர்.

“அப்படியா? எங்க வேலை பார்த்தீங்க முன்னாடி?”

“ஒரு மில்லுல வேலைங்க சார்.. இங்க இருந்து பொருளை எடுத்துட்டு போய் அங்க இறக்கிட்டு, அங்க லோட் கிடைச்சா இருந்து ஏத்துட்டு வருவோம்”

“லாரின்னா வருமானம் நல்லாவே வருமே.. ஏன் அதை விட்டுட்டீங்க?”

“சமயத்துல ரெண்டு வாரத்துக்கும் மேலே ஆகும்.. பொண்டாட்டிக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லாம போய்டுச்சு.. பக்கத்துல இருந்து பார்த்துக்கணும். இதுனா கூப்ட்ட குரலுக்கு ஓடி போய்டலாம்”

“ஓ..”

“கல்யாணம் ஆகிட்டா அவங்கள சுத்தி தான நம்ம வாழ்க்கை.. இப்போவும் வருமானம் பிரச்சனை இல்லைங்க சார்.. புள்ளைங்க பீஸ் கட்டி ரசீது கொடுத்தா ஐயா பாதி காசு கொடுத்திருவாரு.. ரொம்ப நல்ல மனுசன்.. அதுனால தான் பொழப்பு எந்த சிக்கலும் இல்லாம ஓடுது”

“ம்ம்”

“படிப்புச் செலவுக்கும் மருந்துச் செலவுக்கும் ஐயா கணக்கே பார்க்க மாட்டாங்க”

டிரைவர்களின் மனநிலை நன்கு தெரியுமாதலால் அவன் பேச்சைத் துவக்கி வைக்க, முத்து அதை முடிவுறாமல் பார்த்துக் கொண்டார். பெட்ரோல் விலை, அரசியல், கல்விக் கட்டணம், சினிமா இப்படி பல விசயங்கள் அவர்களது பேச்சில் வந்து போனது. பேச்சினூடே அவர்கள் மங்கேளேஷபுரத்தை அடையும் போது மணி ஏழைத் தொட்டிருந்தது.

சோமசுந்தரமும் கல்யாணியும் கார் சத்தத்தில் வெளியே வந்து பார்க்க, அங்கே மேகநாதனும் விதுர்ஷாவும் காரிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தனர்.

“சார் சாவியை உங்க கிட்ட கொடுத்துட்டு ஐயா என்ன பஸ் புடிச்சு வந்துட சொன்னாங்க” என்று மேகநாதனிடம் சாவியை ஒப்படைத்தார் முத்து.

“கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்கண்ணா.. சாப்ட்டுட்டு கிளம்பிக்கலாம்”

மேகநாதன் சொல்லிக் கொண்டிருக்க, அதைக் கேட்டுக் கொண்டே இறங்கிய விதுர்ஷாவின் கண்களில் சோமசுந்தரமும் கல்யாணியும் பட்டனர்.

விதுர்ஷாவிற்கு இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது.

'ஏதாவது சொல்லிடுவாங்களோ?’

அவள் அனிச்சையாய் மேகநாதனின் முதுகுக்குப் பின்னால் நகர, அவளது பார்வையைக் கவனித்தவன் அவளை இழுத்துத் தன்பக்கத்தில் இருத்தி அவளது கைகளோடு தன் கைகளைக் கோர்த்துக் கொண்டான். அவர்களுக்குள் என்ன பிணக்கு இருந்தாலும் விதுர்ஷா ஆதரவு தேவைப்படும் சூழ்நிலைகளில் மேகநாதனின் தோள்சாய தயக்கம் காட்டியதே இல்லை. அதை அவனோ அவளோ உணர்ந்திருந்தனரா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

விதுர்ஷாவின் படபடப்பு மெல்ல குறைந்தது. அவளையும் அறியாமல் அவனது கரங்களை இறுகப் பற்றிக் கொண்டாள். நான்‌‌ யாருக்கும் எந்தப் பதிலும் சொல்லத் தேவையில்லை என்பது போல, அவன் விதுர்ஷாவைக் கூட்டிக்கொண்டு வீட்டிற்குள் நுழைய,

“நில்லுடா” என்றார் சோமசுந்தரம். நின்றான்.

“இதென்ன வீடா இல்ல சத்திரமா?”

சோமசுந்தரம் கோபக்குரலில் கேட்க, விதுர்ஷா இன்னும் அவனுடன் நெருங்கி நின்றாள்.

“இப்ப எதுக்கு கத்துறீங்க?”

“எங்க போயிருந்த?”

“பார்த்தா தெரியலயா? என் பொண்டாட்டிய கூப்பிட போயிருந்தேன்”

“உன் இஷ்டத்துக்கு முடிவெடுத்தா அப்புறம் நாங்க எதுக்குடா?”

“உங்க இஷ்டத்துக்கு முடிவெடுக்க விட்டா என் வாழ்க்கை என்ன ஆகும்னு அனுபவிச்சும் அந்த தப்பை மறுபடி செய்வேனா? இது என் வாழ்க்கை.. என் இஷ்டப்படி தான் முடிவெடுப்பேன்”

“உங்க இஷ்டத்துக்கு ஆட நீங்க ஒன்னும் தனியா இல்ல. என் வீட்ல இருக்கீங்க”

“உங்க வீடு இல்ல.. தாத்தாவோட வீடு”

திருத்தினான் அவன்.

அவனது வார்த்தையில் சோமசுந்தரம் அவனை உறுத்து விழிக்க, அவன் அவரைக் கொஞ்சமும் சட்டை செய்யாமல் விதுர்ஷாவை அவனது அறைக்கு அழைத்துச் சென்றுவிட்டான்.

கல்யாணிக்கு அவர்கள் இருவரது சண்டை பழகிப்போன ஒன்று தான் என்றாலும் விதுர்ஷாவின் முன்னிலையில் கணவரிடம் மகன் அப்படிப் பேசியது வருத்தம் தான்.

“எப்படி பேசுறான் பார்த்தியா உன் புள்ள” என்று அவர் ஆரம்பிக்க, கல்யாணி வழக்கம்போல கழண்டு கொண்டார்.

மேகநாதனைத் தொடர்ந்து அறைக்குள் நுழைந்த விதுர்ஷாவிற்கு கண்கள் கலங்கியது. அந்த அறை.. அது கொடுத்த நினைவுகள்.. அதன் தாக்கம் என இறந்தகாலம் அவளைப் போட்டு சுழற்றிக் கொண்டிருந்தது.

சுரேந்திரனிடம் ஊருக்கு வந்துவிட்டதாய் தகவல் தெரிவித்து விட்டுத் திரும்பியவன் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

“விது”

திரும்பிப் பார்த்தாள். மௌனம் மட்டுமே அவளது மொழியாகியிருந்தது.

“ரெஸ்ட் எடுக்கிறியா?”

அவன் இயல்பாக இருந்தான் என்பதை விட முயற்சி செய்தான். அவளால் அது முடியவில்லை. அவள் அமைதியாகச் சென்று படுத்துக் கொள்ள, இரவு விளக்கை மட்டும் போட்டுவிட்டு அவன் வெளியே வந்தான்.

முத்து ஊருக்குக் கிளம்ப அவசரம் காட்ட, சுரேந்திரனுக்கு அழைத்து விஷயத்தைச் சொன்னான் அவன்.

“திண்டுக்கல் வரைக்கும் நம்ம கார் ஒன்னு சவாரி போகுதுடா.. உன் வீட்டுக்கு வந்து அவரையும் ஏத்திக்க சொல்றேன்” என்றான் அவன்.

அதன்படியே முத்து ஊருக்குக் கிளம்ப, வெளியே அமர்ந்திருந்தவனுக்கு ஒரு மலையை இடம்பெயரச் செய்த அளவிற்கு சோர்வு. எப்படியோ விதுர்ஷாவை இங்கு வரவழைத்து விட்டான். இனி அவர்களது வாழ்க்கை? இந்த வினாவிற்கு அந்த நொடி வரை அவனிடம் பதிலில்லை. ஆனால் நிச்சயம் அதைச் சிறப்பாக அமைத்துக் கொள்வான். அந்த நம்பிக்கை மட்டும் இருந்தது.

வெளியே இருந்த திண்ணையில் சாய்வாக அமர்ந்தவனுக்கு விதுர்ஷாவை முதன்முதலில் பார்த்தது நினைவுக்கு வந்தது. உள்ளே அறையில் படுத்திருந்த விதுர்ஷாவும் கூட அதைத்தான் நினைத்துக் கொண்டிருந்தாள்.

அவர்கள் திருமணத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் அன்பரசி சிவநேசன் திருமணத்தைப் பற்றியும் சேர்த்து சொல்ல வேண்டும். அங்கே ஆரம்பித்த கதை இது!

அன்பரசியும் சிவநேசனும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். சிவநேசனின் தந்தைவழி குடும்பம் பூர்வீகமாகவே சென்னைவாசிகள். அவருடைய அம்மா வழி குடும்பத்தின் பூர்வீகம் மதுரையாக இருந்தாலும் அவர்களும் சென்னையில் தான் வாழ்ந்து வந்தனர்.

சிவநேசனின் அம்மாவிற்குப் பரம்பரைச் சொத்தாக வந்த நிலத்தைப் பார்த்துக் கொள்ள முடியாததால் அதை விற்பதற்காக வந்திருக்கும் போது தான் சிவநேசன் அன்பரசியைச் சந்தித்தது. பெரியவர்கள் வேலையில் கவனமாக இருக்க, வாலிபப் பருவத்திலிருந்த சிவநேசன் பொழுதைப் போக்க சினிமா தியேட்டருக்குச் சென்றிருந்தார்.

அன்பரசியும் வீட்டிற்குத் தெரியாமல் தங்கள் தோழியர் குழுமத்துடன் அங்கு வந்திருக்க, பார்த்த உடனே சிவநேசனுக்கு அன்பரசியை ரொம்பவே பிடித்துவிட்டது. பயமும் அந்தக் கொண்டாட்டத்தை ரசிக்கும் பாவமும் என இரண்டும் கலந்த அன்பரசியின் விழிகளைப் பார்த்தவர் படம் முடித்துவிட்டு வீட்டை நோக்கிச் செல்லாமல் அன்பரசியின் பின்னே அலைய ஆரம்பித்தார். அதுவே அவர்களது அன்பிற்கான அகர எழுத்தை எழுதி தொடக்கமாக அமைந்தது.

சிவநேசனின் தோற்றம், அவர் தன் பின்னால் அலைவது இதெல்லாம் அந்த வயதில் அன்பரசிக்குப் பட்டாம்பூச்சி உணர்வுகளைத் தர, அவர்களது பழக்கம் சிவநேசன் சென்னை வந்த பின்பும் கூட தொடர ஆரம்பித்தது. அவர்கள் காதலை திண்டுக்கல் பேருந்து நிலையத்தின் கடைக்கோடியில் இருக்கும் டெலிஃபோன் பூத் வளர்க்க, காதல் நாளும் கிழமையுமாக வளர்ந்து கொண்டிருந்தது.

எல்லாம் நன்றாகச் சென்று கொண்டிருந்த போது அன்பரசிக்கு அவரது வீட்டில் திடீரென கல்யாண ஏற்பாடு செய்தனர். அன்பரசி அப்போது கல்லூரியின் மூன்றாவது வருடத்தில் இருந்தார். பெரிதாகத் திருமணத்தைப் பற்றிய பயமின்றி படிப்பு முடிந்ததும் வீட்டில் காதலைப் பற்றிச் சொல்லிக் கொள்ளலாம் என்றிருந்தவர் அந்த திடீர் ஏற்பாட்டால் நிலைகுலைந்துதான் போனார்.

கண்மூடி கண் திறப்பதற்குள் திருமண வேலைகள் மளமளவென்று நடந்துவிட்டது. வீட்டில் அவரைப் பேசக்கூட விடவில்லை. படிப்பை முடிக்க வேண்டும் என்றதற்கே அவரது தாய் மீனாட்சி பார்த்த பார்வையில் காதலைச் சொல்வதற்கு அவரால் முடியவில்லை.

ரத்தினவேல்‌ தான் அன்பரசிக்கு நிச்சயித்திருந்த மாப்பிள்ளை. அன்பரசியின் பக்கத்து ஊர் தான் ரத்தினவேல். ஒருமுறையில் ரத்தினவேலிற்கு தூரத்து சொந்தமும் கூட. அன்பரசியின் விருப்பம் இல்லாமலே அவர்கள் இருவருக்கும் நிச்சயம் நடந்து முடிந்து விட்டிருந்தது.

திருமணத்திற்கு சில நாட்களே இருக்கும் நிலையில் அன்பரசிக்கு வீட்டை விட்டுச் சென்று சிவநேசனுடன் இணைவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை.

அவர்களது திட்டப்படியே சிவநேசன் திண்டுக்கல்லில் காத்திருக்க, வீட்டில் கல்லூரியில் கொடுத்த சான்றிதழ்களை மட்டும் வாங்கி வருவதாகக் கூறி சம்மதம் வாங்கியிருந்தார் அன்பரசி. இருந்தும் திருமணம் நிச்சயித்திருந்த பெண்ணைத் தனியாக அனுப்ப மீனாட்சிக்கு நெருடலாகவே இருந்தது. துணைக்கு அனுப்ப அவரது வீட்டில் ஆண்துணை இல்லாமல் போகவே வேறு வழியின்றி சம்மதித்திருந்தார்.

அதே ஊரில் மற்றொரு விசேசத்திற்காக வந்திருந்த சோமசுந்தரம் விசேசம் முடிந்து ஊருக்குத் திரும்பும் போது பேருந்து நிறுத்தத்தில் பதட்டமாக நேரத்தையும் ரோட்டையும் பார்த்தவாறு இருந்த அன்பரசி கண்ணில் படவும் என்ன ஏதென்று விசாரித்தார்.

ரத்தினவேலும் சோமசுந்தரமும் சமவயது. ஒன்றாகவே படித்தனர். ஆனால், சிறுவயது முதலே ஒருவருக்கு ஒருவர் ஆகாது. சோமசுந்தரத்திற்கு பணத்திமிர் அதிகம் என்பது ரத்தினவேலுவின் எண்ணமாகிப் போக, அவர் எட்ட நின்று கொள்வார். ரத்தினவேலுவின் பழகும் தன்மை சிறு வயது முதலே அவருக்கு நண்பர்களை அதிகம் தந்திருக்க, தன்னுடன் நட்பாக இல்லாமல் தன்னைத் தவிர்க்கும் ரத்தினவேலுவை சோமசுந்தரம், ‘நீ எனக்கு இணையா’ என்ற பாவத்தில் பார்க்க ஆரம்பித்துவிட்டார்.

இந்த சின்ன விஷயம் இருவருக்கும் இடையே பெரிய இடைவெளியைத் தந்திருந்தது. ரத்தினவேலு தன் திருமண நிச்சயத்திற்கு ஊர் தலைவர் என்ற முறையில் சோமசுந்தரத்தின் தந்தை ஞானப்பிரகாசத்தை அழைக்க வந்தவர், சோமசுந்தரத்தையும் பெயருக்கு அழைக்க, அவரும் கல்யாணியுடன் சென்று வந்தார். அன்பரசியை அவர் அன்று பார்த்தது தான்.

ரத்தினவேலுவிற்கு நிச்சயித்த பெண் இங்கே என்ன செய்கிறது என்று யோசித்து அன்பரசியின் அருகே சென்றவர் விசாரிக்க, அன்பரசிக்கும் அவரை அடையாளம் தெரிந்தது.

அன்பரசி பயந்த குரலில் கல்லூரிக்குச் செல்வதாகச் சொல்ல, “என்னம்மா.. கல்யாணத்தை வச்சுட்டு இப்படி வெளில துணையில்லாம போகலாமா?” என்றவர் அன்பரசி மறுத்தும் கேட்காமல் அவரே கல்லூரிக்கு அழைத்துச் சென்றார்.

“எனக்கும் இங்க ஒரு வேலை இருந்துச்சு.. அதான் உன்னைக் கூப்ட்டு வந்தேன். சான்றிதழ் எல்லாம் வாங்கிட்டன்னா அரைமணி நேரம் மட்டும் இரும்மா.. நான் வந்துடுவேன்.. நானே உன்னைக் கூப்பிட்டுப் போய் வீட்ல விட்டுடுறேன்” என்று அவர் சொல்ல,

“இல்ல நான் போய்டுவேன் அண்ணா.. நீங்க சிரமப்படாதீங்க” என்றார் அன்பரசி.

“தனியா போக வேணாம்மா.. நான் வரேன். வண்டி சும்மா தானே போகுது” என்று சோமசுந்தரம் விடைபெற, அன்பரசி ஆசுவாசமாக மூச்சு விட்டார்.

சோமசுந்தரம் வேலையை முடிக்க சிறிது நேரமாகிவிட, திரும்பி வரும் போது அங்கே அன்பரசி இல்லை. சிறிது நேரம் நின்றிருந்தவர் ஒருவேளை தனியாகச் சென்று விட்டாளோ என்றெண்ணி அவரும் ஊருக்குத் திரும்பி விட்டார்.

அந்தி சாயும் நேரமெல்லாம் அன்பரசி வீட்டை விட்டுச் சென்ற விஷயம் ஊருக்குள் பரவியிருந்தது. ரத்தினவேலுவிற்கு உறவுமுறையில் உள்ள ஒருவர் அன்பரசி சோமசுந்தரத்துடன் காரில் போவதைப் பார்த்ததாகக் கூற, அவர் நேரே சோமசுந்தரத்திடம் சண்டையிடக் கிளம்பிவிட்டார்.

சோமசுந்தரத்திற்கும் அது அதிர்ச்சி தான். காரில் ஏற்றிச் சென்றதை அவரே ஒத்துக்கொண்டிருந்ததால் விஷயம் இதுவென்று தெரியாது என்று அவர் கூறியதை ரத்தினவேலுவின் வகையறாக்கள் யாரும் நம்பத் தயாராக இல்லை. ரத்தினவேலுவும் கோபத்தில் வார்த்தைகளைச் சற்று அதிகப்படியாகவே விட்டுவிட, வார்த்தைகள் முற்றி இரு சாராருக்கும் கைகளப்பு ஆகிவிட்டது. அன்றோடு அவர்களது உறவும் முறிந்து போனது.

மீனாட்சி பெரிய பெண் செய்த தவறை சிறிய பெண்ணை வைத்து ஈடேற்றும் விதமாக, அன்பரசி யின் தங்கை ஈஸ்வரியை ரத்தினவேலுவிற்குத் திருமணம் செய்து வைத்துவிட்டார்.

நடந்த களேபரங்கள் எதுவும் அன்பரசிக்குத் தெரியாது. அவரது வாழ்க்கை அவர் எதிர்பார்த்தபடியே அழகாகச் சென்றது. வீட்டு நினைவு வரும். கூடவே பயமும்! அதனாலே அவரால் ஊர்ப்பக்கம் தைரியமாக வரமுடியவில்லை. அதற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க, அடுத்த இரண்டு வருடத்தில் அவரது அன்னை மீனாட்சி இறந்துவிட, தோழி ஒருத்தி சொன்ன தகவலில் அடித்துப் பிடித்துக்கொண்டு ஓடி வந்தவரை அதேவேகத்தில் திரும்பப் போக வைத்தார் ஈஸ்வரி. அவரால் அன்பரசியின் துரோகத்தை மன்னிக்க முடியவில்லை. அதிலும் மீனாட்சி இறக்கும் தருவாயில் கூட, அன்பரசிக்குத் தகவல் சொல்லக் கூடாது என்று சொல்லிவிட, அதன் பிறகு அங்கே அன்பரசி அனுமதிக்கப்படவில்லை.

வருடங்கள் சுழன்றது. சிவநேசன் அன்பரசியின் காதல் வாழ்வு எந்தக் குறையுமின்றி சென்றாலும் பிறந்தவீட்டு ஏக்கம் மட்டும் அவருக்கு விட்டபாடில்லை. இந்த நிலையில் தான் அந்த நாள் வந்தது.

அன்பரசி புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். ஒரேநாளில் சிவநேசனின் உலகத்திலிருந்த வண்ணங்கள் யாவும் மறைந்தன. விதுர்ஷா அவளது முதுகலைப் பட்டத்தை முடித்து வெளிவந்த சமயம் அது. பணம் நிறையவே இருந்தது. ஆனால், தைரியம் இல்லை. விதுர்ஷாவும் சிவநேசனும் அன்பரசியை விட்டு நிமிடம் கூட அகலாமல் அவரை அடைகாக்க, எப்போதும் பயந்த சுபாவம் கொண்ட அன்பரசி தான் இருவரையும் தேற்றும்படி ஆயிற்று.

சிவநேசன் இரண்டு நாட்களில் இருபது வயது கூடித் தெரிந்தார். விதுர்ஷாவின் முகத்தில் இருந்த இளமையின் துடிப்பு எங்கோ சென்று மறைந்திருந்தது. மீண்டும் அவர்களைத் தேற்ற வேண்டி அன்பரசி தைரியமாக இருப்பதாகக் காட்டிக் கொண்டாலும் அவருக்குள்ளும் பயம் இருக்கத்தான் செய்தது.

ஒரே மகள் விதுர்ஷா! அவளது திருமணம், பேரன்,பேத்தி என எத்தனையோ கனவுகள். அவையெல்லாம் கானல் நீரா? மகளைத் திருமணக் கோலத்தில் பார்க்கத் தான் இருக்க மாட்டோமா? என்றெல்லாம் எண்ணி மிகவும் பயந்து போனவர் சீக்கிரம் அவளுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். விதுர்ஷாவின் திருமணம் பற்றி யோசிக்கும்போதே பிறந்த ஊரின் நினைவும் வந்தது. பிறந்த வீட்டுடன் கடைசிவரை ஒன்ற முடியாமலே போய்விட்டதே என்ற எண்ணம் வேறு அவரை வாட்டி எடுத்தது.

மனைவியின் எண்ணத்தை அறிந்தோ அறியாமலோ திடீரென்று ஒருநாள், “நாம உன் தங்கச்சி வீட்டுக்குப் போய் பார்த்துட்டு வருவோமா அன்பு?” என்று கேட்டார் சிவநேசன்.

அன்பரசியின் கண்களில் வெகுநாளைக்குப் பிறகு அவர் இழந்த ஒளி தெரிய, அதற்கு மேல் சிவநேசன் தாமதிப்பாரா? மூவரும் கிளம்பிவிட்டனர்.

அவரவர் நியாயம் அவரவருக்கு! ரத்தினவேல் அவர்களை வீட்டிற்குள் கூட அனுமதிக்கவில்லை. கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்குப் பிறகு அன்பரசியைப் பார்க்கும் போது, அக்கா என்ற பாசம் ஈஸ்வரிக்கும் தலைதூக்கத் தான் செய்தது. ஆனால், ரத்தினவேலுவை மனதில் கொண்டு அவரும் முகத்தைத் திருப்ப, கோபத்தில் விதுர்ஷா அம்மாவையும் அப்பாவையும் அழைத்து வந்துவிட்டாள்.

அன்றைக்கு எதேச்சையாக சோமசுந்தரத்தையும் பார்த்துவிட, அவர் பார்த்ததும் அன்பரசியைக் கண்டுகொண்டார். இருந்தும் சந்தேகத்துடன் உறுதிப்படுத்திக்கொள்ள அவர் அன்பரசி தானா? என்று வினவ, அன்பரசி சங்கோஜத்துடன் தலையசைத்தார். எதிர்பாராதவிதமாக சோமசுந்தரம் நன்றாகவே பேசினார். வீட்டிற்கு அழைத்துப் பேசும் போது தான் ரத்தினவேலுவின் வீட்டில் நடந்ததை சிவநேசன் கூற, அன்பரசியின் சொந்தத்தைப் புதுப்பிக்கும் முயற்சி நன்கு அவருக்குப் புரிந்தது.

ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று கணக்குப் போட்டவரின் மனதில் புதிதாய் ஒரு எண்ணம் உருவானது.

“அண்ணன் தம்பினு இருந்தா முறை வரும்.. கட்டிக்குடுத்து சொந்தத்தை ஒட்ட வைக்கலாம். இதென்னமா உனக்குனு வந்த சிக்கல்” என்று அவர் சிரிக்க, உண்மையில் அவர்கள் மூவருக்கும் அந்த சிரிப்பு தொற்றவில்லை.

“இப்படியே போய்டுமானு பயமா இருக்குங்கணா” என அன்பரசி வருத்தப்பட,

“எப்படி விட்டுப் போகும்? நீ பேசாம உன் பொண்ணை என் வீட்டுக்கு மருமகளா அனுப்பு.. இப்போ பகை தான். ஆனால், அவன் எனக்கும் சொந்தம்ல.. நாளைக்கே நாங்க ஒன்னு சேரும் போது உன் பொண்ணையும் அவங்க ஏத்துக்கிட்டுத் தான ஆகணும்?” என்று கேட்டார் சோமசுந்தரம்.

இயல்பாக அவர் கேட்டதில் விதுர்ஷா அதிர்ந்து போய் தந்தையைப் பார்க்க, சிவநேசனுக்கும் அதே நிலை தான். ஆனால், அன்பரசியின் முகத்தில் ஆசை தெரிந்தது. உண்மையில் சோமசுந்தரத்திற்கு சிவநேசனின் வசதி வாய்ப்பெல்லாம் தெரியாது. இது பணத்தின் மீது போடப்பட்ட கணக்கு அல்ல. அவரது கணக்கு வேறு மாதிரி இருந்தது. அதனால் துணிந்து பெண் கேட்டுவிட்டார். கல்யாணியோ மகனை எண்ணி பயம் கொள்ள, சோமசுந்தரம் அதற்கெல்லாம் அஞ்சும் ரகம் அல்லவே! அன்பரசியும் சிவநேசனிடமும் விதுர்ஷாவிடமும் கேட்காமல் வாக்கு கொடுத்துவிட்டார்.

சிவநேசன் மனைவியின் ஆசையறிந்து அமைதியாக, விதுர்ஷாவும் அந்த நொடியே அந்தத் திருமணத்தை ஏற்றுக் கொள்ள மனதைத் தயார் செய்ய ஆரம்பித்திருந்தாள்.

அன்பரசியின் வாக்கிற்கு சிவநேசனும் விதுர்ஷாவும் கட்டுப்பட்டாலும், விஷயம் அறிந்து மேகநாதன் ஆடித் தீர்த்து விட்டான்.

“என்னை நினைச்சுட்டு இருக்கீங்க? யாரைக் கேட்டுக் கல்யாணம் பேசுனீங்க? உங்க இஷ்டத்துக்கு எல்லாம் என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது”

அவன் முடிவாக மறுத்தான்.

“அப்போ என்னாலயும் கையெழுத்துப் போட முடியாது”

சோமசுந்தரமும் முடிவாகச் சொல்லிவிட்டார்.

மேகநாதன் தொழில் ஆரம்பிக்க நினைத்திருந்த நேரம் அது. டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் தொடங்குவதற்காக வங்கிக் கடனுக்கு ஏற்பாடு செய்திருந்தான். சோமசுந்தரத்தின் கையெழுத்து அதற்குத் தேவைப்பட்டது. கிட்டத்தட்ட அனைத்து வேலைகளும் முடித்து வைத்திருந்தான். அலுவலகம் அமைக்க இடத்தை ஏற்பாடு செய்து, வண்டி பார்ப்பது இப்படி எல்லாமே முடிந்தது. வங்கிக் கடன் கிடைத்துவிட்டால் போதும் என்ற நிலையில் இருந்தது. சரியான நேரத்தில் சோமசுந்தரம் அவனை வைத்துக் காய் நகர்த்தியிருந்தார்.

அவனது கனவு! இரண்டாவது முறையாக மேகநாதனின் வாழ்க்கைக்கான முடிவைக் கையில் எடுத்திருந்தார் சோமசுந்தரம். மேகநாதனுக்காக கல்யாணியும் எவ்வளவோ பேசிப் பார்த்தார். அவரது பேச்சும் சோமசுந்தரத்திடம் எடுபடவில்லை.

கல்யாண வேலைகள் மளமளவென்று நடக்க, அவனுக்கு முள்ளின் மேல் நடப்பது போலிருந்தது. வீட்டினருடன் முழுவதுமாகப் பேச்சைக் குறைத்து விட்டான்.

கருத்துக்களைப் பகிர:

 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
#13


மேகநாதன் உச்சக்கட்ட கடுப்பில் இருந்தான். பிடித்தமில்லாத திருமணத்தை நிறுத்த முடியாமல் இதோ மணமேடை வரை வந்துவிட்ட தன்னை நினைத்து அவனுக்கு அத்துணை கேவலமாக இருந்தது.

ஒருசிலர் போல குடும்பத்தின் மீது அக்கறையையும் பாசத்தையும் பொழிபவன் அல்ல அவன். ஆனாலும் அவனது குடும்பம் தான் அவனுக்கு எல்லாமே என்று இருந்தது. ஆம்! இருந்தது தான். இனிமேல் அப்படி இருக்கப் போவதில்லை. தன்னை மோசமாகத் தோற்கச் செய்த, ஆண் என்று சொல்லிக்கொள்ள அருகதையற்றவனாக்கிய அந்தக் குடும்பம் அவனுக்குத் தேவையில்லை.

யார் வாழ்க்கையை யார் தீர்மானிப்பது? கிட்டத்தட்ட தன்னை மிரட்டிக் கல்யாணத்திற்கு ஒப்புக்கொள்ளச் செய்திருந்த தந்தையின் மேல் கொலைவெறி கிளம்பியது. தனக்கு அருகே மணப்பெண் கோலத்தில் அமர்ந்திருந்தவளை திரும்பிப் பார்த்தான். அவள் முகத்திலும் சந்தோஷத்தின் சாயலெல்லாம் இல்லை. தீவிரமான யோசனையில் இருப்பது போல் தெரிந்தது. அவளைப் பார்த்த அவனது முகத்தில் இன்னும் சற்று எரிச்சல் கூடிக்கொண்டது.

திருமணம் மதுரையில் மிகவும் கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது. சிவநேசன் மகளின் கல்யாணத்திற்காகப் பணத்தை வாரி இறைத்திருந்தார். அதில் சோமசுந்தரத்திற்குப் பரம திருப்தி. அன்பரசி மகளைத் திருமணக்கோலத்தில் ஆசையோடு பார்த்திருந்தார்.

மங்கல வாத்தியங்கள் முழங்க, பெரியவர்கள் அனைவரின் ஆசியுடன் மேகநாதன் விதுர்ஷாவின் கழுத்தில் விருப்பமே இல்லாமல் மங்கல நாணைப் பூட்டி தன் இல்லாளாக்கிக் கொண்டான். திருமணம் முடிந்து விதுர்ஷாவைப் புகுந்த வீட்டில் விட்ட அந்த நொடி அன்பரசி நிறைவாக உணர்ந்தார்.

திருமண வேலைகளால் அன்பரசி மிகவும் சோர்ந்து காணப்பட, சிவநேசனின் கவனம் எல்லாம் மனைவியின் மீது சென்றுவிட்டது. மேற்கொண்டு சிறிது நேரம் இருந்துவிட்டு அன்பரசி யின் உடல்நிலை கருதி அவர்கள் உடனே சென்னைக்கு கிளம்பி விட்டனர்.

திருமணத்திற்கு வந்திருந்த சோமசுந்தரத்தின் வகையறாக்கள் அந்த வீட்டை நிறைத்திருந்தனர். விதுர்ஷாவிற்கு அவர்களோடு ஒட்டவே முடியவில்லை. யாராவது ஆள் மாற்றி மாற்றி வந்து அவளிடம் பேச்சுக் கொடுத்தபடி இருந்தனர். அந்த சூழலே அவளுக்குப் புதியதாக இருக்க, அவளையும் அறியாமல் அவள் மனம் மேகநாதனைத் தேடியது. அவன் ஒருவனைத் தானே அவளுக்குத் தெரியும்? அவனும் வீட்டிற்கு வந்ததிலிருந்தே அவளது கண்ணில் படவில்லை.

முக்கியமான தொழில்முறை அழைப்பைத் தவிர்க்க இயலாமல், அந்தக் கூட்டத்தை மீறி தனியே வீட்டின் வெளியே வந்தவளின் செவிகளில் அட்சர சுத்தமாக,

“சரி‌ பண்றதா? அவ பேசுன பேச்சை நினைக்கவே உடம்பு கூசுதுடா.. எனக்காடா இப்படிப்பட்ட பொண்டாட்டி வரணும்.. அவ கூட வாழ்க்கையை நினைச்சாலே அருவெறுப்பா இருக்கு” என்று மேகநாதன் பேசியது விழுந்தது.

வீட்டிற்கு வெளியே மேகநாதனும் சுரேந்திரனும் நின்று பேசிக் கொண்டிருந்தனர். விதுர்ஷா அதிர்ந்து சுற்றும் முற்றும் பார்க்க, நல்லவேளையாக யாரும் அங்கே இல்லை. அவளுக்கு சுரேந்திரனையும் யாரென்று தெரியவில்லை. யாரோ ஒரு அந்நியனிடம் அவர்களது வாழ்க்கை பற்றி பேசுகிறான் என்ற ஆத்திரத்தில் விழிகள் சிவக்க அவனருகே சென்றாள் விது.

அவளைப் பார்த்துவிட்ட சுரேந்திரன், “டேய் சிஸ்டர் டா” என்று கூறிவிட்டு, “நீ பாரு மச்சான்.. நான் கிளம்புறேன்” என்க, அவனைக் கை பிடித்து நிறுத்தினான் மேகன்.

அந்த நேரத்தில் அவளது வருகையை விரும்பாத தொனியில், “என்ன?” என்று சுள்ளென்று கேட்டவனை முறைத்தவள்,
“நமக்குக் கல்யாணம் ஆகிடுச்சு ஞாபகம் இருக்கா?” என்று அழுத்தமாகக் கேட்டாள்.

“அதுக்கு இப்ப என்ன செய்யணும்? உன் கூட கட்டில்ல காதல் விளையாட்டு விளையாடணுமா?” என்று நக்கலாக அவன் கேட்க, விதுர்ஷாவின் கரங்கள் அடுத்த நொடி அவனை அறைந்திருந்தது.

அறைந்துவிட்ட போதிலும் அவளால் அதற்கு மேல் எதிர் வினையாற்ற முடியவில்லை. 'ச்சை' என்றிருந்தது. விதுர்ஷாவின் மனதில் மேகநாதன் ஒவ்வொரு படியாகக் கீழிறங்கிக் கொண்டிருந்தான். அதிலும் இந்த வார்த்தைகளில் அவளது அவன் பற்றிய மதிப்பீடு மிகவும் கீழிறங்கியது.

எப்படி பேசிவிட்டான்? என்னைப் பார்த்தால் இவனுக்கு எப்படித் தெரிகிறது?

விதுர்ஷாவை கோபம், ஆத்திரம், அழுகை என கலவையான உணர்வுகள் தாக்க, அவளையும் மீறி அவனை அடித்து விட்டாள்.

விதுர்ஷா தன்னை அடிக்கக்கூடும் என்ற எண்ணமே இல்லாதவன் ஒரு நொடி அதிர்ந்து பின் ஆக்ரோஷமாகக் கையை ஓங்க, அதிர்விலிருந்து மீண்ட சுரேந்திரன் நண்பனின் செய்கையை உணர்ந்து சட்டென்று ஊடே புக, விதுர்ஷாவின் மேல் விழ வேண்டிய அடி சுரேந்திரன் கன்னத்தில் இடியாய் இறங்கியது.

“நீ ஏன்டா இடைல வந்த?” என்று நண்பனை முறைத்தவனைக் கண்டு,

“மேகா.. நீ பேசுனது தப்பு.. இதுல அடிக்க வேற செய்வியா” என்று‌ சுரேந்திரன் கன்னத்தைப் பிடித்தவாறு எகிறினான்.

“என்னடா தப்பு? இந்த கருமத்தை தானே அவளும் அன்னைக்கு சொன்னா”

“என்ன சொன்னேன்?” என்று விதுர்ஷா பதிலுக்குப் பொறுமையிழந்து கேட்கவும்,

நிலைமை தீவிரமாவதை உணர்ந்து, “சிஸ்டர் நீங்க போங்க.. அவன் கொஞ்சம் கோபமா இருக்கான். அவன் கிட்ட‌ இப்போதைக்குப் பேசிப் புரிய வைக்க முடியாது” என்று சுரேந்திரன் விதுர்ஷாவை நோக்கிக் கூற, மேகநாதனை முறைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள் அவள்.

நேரம் அப்படியே கடந்தோட இரவும் வந்தது. முதலிரவுக்கென்று அலங்காரம் செய்யப்பட்ட அறை அவர்களைக் கேலி செய்வதைப் போலிருந்தது. கதைகளில் வருவது போல அவன் கட்டிலில் அவள் தரையில் என்றில்லாமல் இருந்தாலும் கட்டிலின் இரு ஓரங்களில் உடலும் மனமும் ஒட்டாமல் படுத்திருந்த இரண்டு ஜீவன்களுமே வாழ்க்கையின் அடுத்த கட்டம் என்ன என்று கலக்கத்தில் இருந்ததென்னவோ நிஜம்.

விதுர்ஷாவின் மனம் மேகநாதனை முதன் முதலில் சந்தித்த நினைவில் இருந்தது.

அன்பரசியின் ஆசைக்காக வேண்டி திருமணத்திற்கு சம்மதம் சொல்லியிருந்தாலும் அவளுள் அந்த திருமணம் சரிவருமா என்ற நெருடல் இருந்துகொண்டே இருந்தது. அதையெல்லாம் அன்பரசியின் மகிழ்ச்சியான முகம் சுக்கு நூறாக்கியிருக்க, தன் சந்தேகங்களை ஒதுக்கி வைத்துவிட்டு சந்தோஷமாகவே திருமண வேலைகளில் தன்னை நுழைத்துக் கொண்டாள் விது.

அதையும் மீறி மனம் சுணங்கும் நேரம், “சரி வரலனாலும் சரியாக்கிக்கலாம்” என உறுதியும் சொல்லிக் கொண்டாள்.

அன்றொரு நாள் திடீரென்று புதிய எண்ணிலிருந்து ஒரு செய்தி வந்திருந்தது. குழப்பத்துடன் அதைத் திறந்து பார்த்தவளுக்கு அந்த செய்தியைப் பார்த்ததும் ஏதோ ஒரு படபடப்பு ஒட்டிக் கொண்டது. மேகநாதன் தான் அவளிடம் பேசவேண்டும் என்று அழைத்திருந்தான்.

படபடப்பும் ஆர்வமுமாகக் கிளம்பிச் சென்றவளை, நிலைகுலைய வைத்தான் அவன்.

“எனக்கு உங்களை பிடிக்கலங்க.. அப்பா பேச்சை மீற முடியாத சூழ்நிலையில் மாட்டிக்கிட்டேன். எனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பமில்லைனு சொல்லியும் அதை மீறி இந்த ஏற்பாடெல்லாம் பண்றாங்க”

அவனது முதல் வாக்கியத்திலே அவளுக்குள் இருந்த உறுதி உடைந்துவிட, நல்லவேளையாக அவள் அணிந்திருந்த கண் கண்ணாடி அதை மறைக்க அவளுக்கு உதவி செய்தது.

“உங்களால இந்தக் கல்யாணத்தை நிறுத்த முடியும்னு தோனுது. உதவியா நினைச்சு இதை செய்யுங்க ப்ளீஸ்” என கையெடுத்துக் கும்பிட்டான் மேகநாதன்.

கையெடுத்துக் கும்பிட்டு அவன் அப்படிக் கேட்டது அவளுக்கே என்னவோ போல் இருந்தது. கிட்டத்தட்ட இறைஞ்சும் பாவனையில் அவள் முன் அவன் அமர்ந்திருந்தான். அவன் முகத்தில் தெரிந்த இயலாத்தன்மை மீதான சோர்வு அவளுக்கு நன்றாகவே புரிந்தது. அதனால் தன்மையாகவே பேச ஆரம்பித்தாள்.

“இதோ பாருங்க மிஸ்டர் மேகன்.. எனக்கும் இந்தக் கல்யாணத்தில் பெரிதான விருப்பமெல்லாம் இல்லை. மறுக்க முடியாத சூழ்நிலை தான் எனதும் கூட.. உங்களுக்கே அது தெரியும். என் வீடு இருக்கிற சூழ்நிலையில் இதை என்னால போய் சொல்ல முடியாது.. அண்ட் சாரி டூ சே திஸ். என்னைப் பொறுத்தவரை இந்தக் கல்யாணம் நடந்தே ஆகணும். அதுக்காக நான் எந்த எல்லைக்கும் போவேன். என்கூட வாழ்ந்து பாருங்க.. உங்களுக்கு என்னை அப்போவும் பிடிக்கலைனா இந்தக் கல்யாணத்துல இருந்து உங்களுக்கு விடுதலை தர வேண்டியது என் பொறுப்பு.. நீங்க என்னை நம்பலாம்”

அவள் மிகவும் ப்ராக்டிக்கலாக பேசுவதாக நினைத்துப் பேச, அவளது வார்த்தைகளைக் கேட்டவன் முகம் சட்டென்று தாங்க முடியாத அருவெறுப்பைக் காட்டியது. விதுர்ஷா குழப்பத்துடன் அவனைப் பார்க்க, அவளது குழப்பத்தைத் தீர்த்த அவனது அடுத்தடுத்த வார்த்தைகள், நஞ்சாய் அவளுக்குள் இறங்கியது.

“ச்சீ.. நீயெல்லாம் ஒரு பொண்ணு தானா? வாழ்ந்து பாருங்க பிடிக்கலைனா விடுதலைனு சொல்ற.. இதுக்கு எங்க ஊர் பக்கம் என்ன அர்த்தம் தெரியுமா? உன் அம்மா ஒழுங்கா கல்யாணம் பண்ணியிருந்தா தானே உனக்கு ஒழுக்கம் சொல்லிக் குடுத்து வளர்த்திருப்பாங்க..”

ஆத்திரத்தில் அவன் வார்த்தைகளை சரமாரியாக விட, அவள் அதிர்வுடன் அவனைப் பார்த்தாள். நினைவு தெரிந்த நாளில் இருந்து அவளைப் பார்த்து இப்படியெல்லாம் யாரும் பேசியது இல்லை. அவனது வார்த்தைகளின் அதிர்வில் இருந்தவளுக்கு பதில் சொல்ல சற்று நேரம் பிடிக்கத் தான் செய்தது. அதற்குள் அவள் சமநிலைக்கு வந்திருந்தாள்.

'என்ன தைரியம் இவனுக்கு? என் அம்மாவை எப்படி இவன் பேசலாம்' என்ற எண்ணம் எழும்போதே அவனது கோபத்திற்கான காரணம் புரிபட, அவளது உதடுகள் ஏளனமாக வளைந்தன.

‘வாழ்ந்து பார்னு சொன்னதுமே கட்டிலை யோசிக்கிறவன் எல்லாம் என் அம்மாவைப் பத்தி பேசுறான்’ என்ற எண்ணத்தில் கோபம் தலைக்கேற, அவனின் சட்டையைப் பிடித்து ஆத்திரம் தீரும் வரை பளார் பளாரென அறையத் தோன்றியது. அவளின் அம்மா இந்த திருமணத்தை முன்னிருத்தி பெரும் கோட்டையையே கட்டியிருக்கிறாரே! அதற்காக வேண்டி பொறுமை காத்தாள்.

“நான் சொன்னதுல என்ன இருக்கு மேகன்? வாழ்ந்து பார்த்தா தானே பிடிச்சிருக்கா இல்லையானு தெரியும்?” என புருவத்தை உயர்த்தினாள்‌ அவள். மீண்டும்‌ மீண்டும் அப்படி அவள்‌ பேசுவது ஏதோ சாக்கடையில் விழுந்த உணர்வு தான் அவனுக்கு!

“ஏய்…” என்று கர்ஜித்தவன், அப்போது தான் அவள் பெயர் சொல்லித் தன்னை அழைப்பதை உணர்ந்தான்.

“என் பேரை சொல்ற தகுதியெல்லாம் இது மாதிரியான பொம்பளைகளுக்கு நான் கொடுக்கிறதில்ல.. இன்னொரு முறை என் பெயர் உன் வாயிலிருந்து வந்துச்சு.. என்ன செய்வேனு எனக்கே தெரியாது”

விரல் நீட்டி எச்சரித்தவனைக் கண்டு பயந்தவளாய், “பெயர் சொல்லி கூப்பிடக் கூடாதுனா எப்படி கூப்பிட? மாமானு கூப்பிடவா?” என்க, மேகன் சட்டென்று எழுந்து விட்டான்.

“ச்சீ.. இனிமேலும் உன்கூட உட்கார்ந்தா அது எனக்குத்தான் அசிங்கம்” என்று கடித்த பற்களுக்கிடையே சொன்னவன், விருட்டென்று வெளியேற, தடையகன்ற நிம்மதியில் அவளது கண்கள் கண்ணீரைச் சொறிந்தன.

உண்மையில் அந்த வார்த்தைகளின் கணம் அவளை உருக்குலைத்தது நிஜம். அதையெல்லாம் மீறித்தான் அவள் அவனைத் திருமணம் செய்ய முடிவெடுத்தாள். அந்த நொடி அவள் அவளையே வெறுத்த தருணம். இதுமாதிரியான தருணங்களை அவன் தொடர்ந்து தரப் போவது தெரியாமல் மனதை மறைக்கும் கலையைக் கற்றுக் கொள்ளது துவங்கினாள் விதுர்ஷா.

இதோ திருமணம் முடிந்துவிட்டது. திருமணம் முடிந்த அன்றே இந்த உறவு கண்டிப்பாக நிலைக்க வேண்டுமா என்ற எண்ணத்துடன் அவனருகில் படுத்திருந்தவளுக்கு அழுகையை என்ன முயன்றும் அடக்க முடியவில்லை. சப்தம் எழுப்பாமல் எழ வேண்டுமென்ற நிபந்தனை ஏதுமில்லாமல் இயந்திரத்தனத்துடன் எழுந்து அந்த அறையின் குளியலறைக்குள் நுழைந்தவளை அவன் கண்கள் அளவெடுத்தன.

கதவை அடைத்ததும் அழுகை பீறிட்டெல்லாம் வரவில்லை. சப்தமே இல்லாமல் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. துடைக்கவும் தோன்றாமல் சுவரில் சாய்ந்து நின்றவளுக்கு மிக மோசமாக வாழ்க்கையில் தோற்றுவிட்ட உணர்வு.. அவள் மனதிற்குள்ளாகவே அரற்றினாள்.

'ம்மாஆ.. என்னால முடியல’

முகத்தை மூடிக்கொண்டு விசும்பல்கள் வெளிவராத படி அழுகையில் கரைந்தவளுக்கு அவன் அவனது நண்பனின் முன்னிலையில் உரைத்த விஷயம் செவிகளுக்குள் கேட்டுக் கொண்டே இருந்தது.

இந்த திருமணம் அவள் முழுமனதாக எடுத்த முடிவு. அவளது கனவு வாழ்க்கை இதில் கிடைக்காது என்று அறிந்து தானே அவள் சம்மதித்தது. அப்படி இருக்கையில் அழுவது என்பது எந்த வகையிலும் சரியல்ல என்று நினைத்தாள் அவள். ஆனால், இந்த வலி அவளது உயிரைப் பிடுங்கி எறிவது போல வலித்தது. கட்டுப்படுத்த முடியாமலோ பிடிக்காமலோ அழுது முடித்தவள் முகம் கழுவி விட்டு வந்து படுக்க, அழுத முகத்துடன் வெளிவந்தவளைப் பார்த்தபடி படுத்திருந்தவன் கண்களை மூடிக் கொண்டான். அவளது இந்தக் கண்ணீரெல்லாம் அவனைக் கிஞ்சித்தும் அசைத்துப் பார்க்கவில்லை.

கருத்துக்களைப் பகிர:


 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
#14

அன்பரசிக்கு உடல்நிலை தொடர்ந்து ஒருவாரம் சரியாக இருப்பது என்பது அபூர்வமாகிப் போனது. சொல்ல முடியாத சோர்வு அவரைப் படுத்தி எடுத்தது. சிவநேசன் முழுவதுமாக அன்பரசியின் உடனிருந்து பார்த்துக் கொண்டார். அன்பரசியின் சிகிச்சை அங்கே தொடங்கப்பட, இங்கே விதுர்ஷாவின் நிலை பரிதாபகரமாக இருந்தது.

விதுர்ஷா மேகநாதனின் வீட்டில் இருந்தாள் அவ்வளவே! அவளால் அங்கு ஒன்ற முடியவில்லை. சோமசுந்தரத்தைத் தவிர்த்து மற்ற யாரும் அவளுடன் பேசுவது கூட இல்லை. அவரும் மருமகள் என்ற எல்லையில் அளவாகத் தான் பேசுவார். மற்றவர்கள் அது கூட கிடையாது. பேச வேண்டாம். அவள் ஒருத்தி இருக்கிறாள் என்பது தெரிந்த மாதிரி கூட காட்டிக் கொள்ளவில்லை. ஓரிரு முறை கல்யாணியிடம் அவள் பேச முயற்சி எடுத்தாள் தான். ஆனால், அதனால் பெரிய பயன் இல்லை. மேகநாதனின் தங்கை ரதி அப்போது இரண்டாவது வருடத்தின் இறுதியில் இருந்தாள். அவளும் பெரும்பாலும் அறைக்குள்ளேயே முடங்கிக் கொள்வாள்.

விதுர்ஷாவிற்கு ஒன்று மட்டும் நிச்சயமானது. அது அங்கே யாரும் அவளது இருப்பை விரும்பவில்லை. கட்டிக் கொண்டவனுக்குத் தான் பிடிக்கவில்லை என்றால் குடும்பமே எதிராக இருப்பதை எண்ணி அவள் சோர்ந்து போனாள்.

மேகநாதன் அப்போது தான் புதிதாகத் தொழில் தொடங்கியதால் அவன் அதிக நேரம் வீடு தங்குவதில்லை. ஒருவகையில் அது அவனுக்கு சற்று நிம்மதியைத் தந்தது. தொடர்ந்து வந்த அலைப்புறுதல்களில் இது சற்றே ஆசுவாசம் தரவும் அவன் விரும்பியே தன்னை தொழிலுக்குள் புகுத்திக் கொண்டான்.

ஆனால், அவனது இந்த நடவடிக்கை வேறு விதத்தில் விதுர்ஷாவைப் பாதிக்கும் என்று அவனுக்கும் தெரிந்திருக்கவில்லை. அவன் தன் போக்கில் எழுந்து செல்வதும் வீடடைவதுமாக இருக்க, மகன் இப்படி வீடு தங்காமல் இருப்பதற்கு காரணம் இந்தக் கல்யாணம் தான் என்ற எண்ணம்தான் கல்யாணிக்கு.. அவரது கோபம் முழுவதும் விதுர்ஷாவின் மீது திரும்பியது.

அந்த நேரத்தில் தான் ராசாத்தி தன் மகள் கல்யாணத்திற்கு ஒரு மாதம் விடுப்பு கேட்க, எப்படி என்று உணரும் முன்பாகவே அந்த வீட்டில் ராசாத்தி செய்த அனைத்து வேலைகளும் விதுர்ஷாவின் கரங்களுக்கு வந்து சேர்ந்தன. இதன் பின் இருக்கும் அரசியலைப் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு விதுர்ஷா முட்டாள் இல்லையே!! மூன்று மாதங்கள் எந்த வேலையும் இல்லாமல் யாரும் பேசுவதற்கு இல்லாமல் கிட்டத்தட்ட பைத்தியம் பிடிக்கும் நிலையில் இருந்தாள் அவள்.

பேசிக் கொல்வது ஒரு வகை என்றால் இது மற்றொரு வகை போல என்று எண்ணம் கொள்ளும் வகையில் அவளுக்கு அது சித்திரவதையாக இருந்தது. எத்தனை நேரம் சிவநேசனிடமும் அன்பரசியிடமும் மட்டுமே பேசுவாள்? இப்போதெல்லாம் எங்கே அவர்களிடம் பேசினால் கட்டுப்பாட்டை மீறி அழுதுவிடுவோமோ என்ற எண்ணம் தோன்ற, அவர்களிடமும் அளவாகப் பேச ஆரம்பித்திருந்தாள். தனக்குப் பேச்சே மறந்து விடுமோ என்ற எண்ணத்தில் இருந்தவளை வீட்டு வேலைகள் கொஞ்சம் மாற்றியது என்றே சொல்லலாம்.

வீட்டுவேலை செய்து பழக்கம் இல்லாத உடல்! சாதாரணமாக பத்து நிமிடம் பிடிக்கும் வேலை இவளுக்கு இருபது நிமிடம் எடுக்கும். அதனால் எப்போதும் சமையலறையிலேயே இருப்பது மாதிரி இருந்தது. மேகநாதன் இரவில் தாமதமாகத் தான் வருவான். அவன் வரும்வரை முழித்து இருந்தாலும் அவளைப் பரிமாறச் சொல்ல மாட்டான். அங்கு அவள் நிற்பதையே கண்டுகொள்ள மாட்டான். அவனது ஒவ்வொரு உதாசீனத்திலும் அவளது தன்மானம் அடிவாங்கிக் கொண்டே இருந்தது.

அந்த வீட்டில் அவள் யார்? அவளது இடம் என்ன? அவற்றையெல்லாம் குத்திப் பேசும் வார்த்தைகள் இன்றி செயல்களால் தெளிவாகப் புரிய வைத்திருந்தனர். சுயமரியாதையை இழந்து ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது அவளுக்கே புரிந்தது. புரிந்தும் அதைத்தான் தொடரவும் வேண்டியிருந்தது. அதைத்தான் அவளால் சகிக்க முடியவில்லை.

காலம் இப்படியே போக, சிவநேசன் விதுர்ஷாவைப் பார்க்க வந்திருந்தார். அன்பரசி தான் வற்புறுத்தி அனுப்பி வைத்திருந்தார். மனமில்லாமல் தான் அவரும் கிளம்பி வந்திருந்தார்.

சோபாவில் அமர்ந்தபடியே மகளைக் கவனித்துக் கொண்டிருந்தவரின் எண்ணத்தில் அப்போது அன்பரசி இல்லை. மகள் மட்டுமே இருந்தாள். வேலை செய்தபடியே அப்பாவிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தாள் விது.

“ரிலாக்ஸ் டா.. ஏன் இவ்ளோ அவசரம்?”

தந்தையாய் அவர் அவளைக் கடிந்துகொள்ள, “அவர் எப்போ கிளம்புவாருனு சொல்ல முடியாதுப்பா.. வெளில போனவர் வந்ததும் கிளம்பிட்டாருனா சாப்பிட எடுத்து வைக்கணும்” என பொறுப்பான இல்லத்தரசியாகப் பதிலளித்தாள் அவள்.

விந்து இயல்பாகச் சொன்னாலும் அவருக்குத் தான் மகளது பதிலில் மனம் சஞ்சலப்பட்டுப் போனது. அடுத்த அரைமணி நேரமும் அவர் ஏதும் பேசாமல் அமைதியாக, அதை உணரக்கூட இல்லாமல் வேலை செய்து கொண்டிருந்தாள் அவள்.

வெளியில் சென்று வந்த மேகநாதன் வாசலில் நின்றிருந்த காரைப் பார்த்ததுமே மாமனாரின் வருகையை உணர்ந்துவிட்டான். உள்ளே செல்லலாமா வேண்டாமா என்று குழப்பத்தில் இருந்தவன் இனி கண்ணாமூச்சி விளையாடி பயன் ஒன்றுமில்லை என்று உணர்ந்தவனாய் உள்ளே சென்றான். சிந்தனைகளின் ஊடே இருந்த சிவநேசனும் மேகநாதனின் வருகையை சற்றும் கவனிக்கவில்லை. அவரின் கவனம் இங்கில்லை என்பதை உணர்ந்து அவன் லேசாகத் தொண்டையைச் செறும, அந்த சத்தத்தில் சிந்தனை அறுபட அவனைப் பார்த்தார் சிவநேசன்.

மேகநாதன், “வாங்க.. எப்போ வந்தீங்க?” என்று கேட்க,

“இப்போதான் மாப்பிள்ளை.. ஒருமணி நேரம் ஆகுது” என்றார் அவர் புன்னகைத்தவாறே.

“டீ காபி எதுவும் சாப்ட்டீங்களா?” என் சம்பியதாயமாக அவன் கேட்க, உள்ளே காய்கறி வெட்டிக் கொண்டிருந்த விதுர்ஷினியின் புருவங்கள் உயர்ந்தன.

“சாப்ட்டாச்சு மாப்பிள்ளை”

“நீங்க வர்றது தெரியாது எனக்கு.. சொல்லியிருந்தா வீட்ல இருந்திருப்பேன்”

இதுவும் சம்பிரதாயமான வார்த்தைகள் தான். ஆனால், விதுர்ஷாவின் மனம் இதிலேயே நிறைந்துவிட்டது. குறைந்தபட்சம் தன் அப்பா அம்மாவிடம் மரியாதையாக நடந்து கொள்கிறானே என்ற மட்டும் சந்தோஷப்பட்டுக் கொண்டாள்.

“நான் சர்ப்ரைஸா இருக்கட்டும்னு விது கிட்ட கூட சொல்லல மாப்பிள்ளை.. சொல்லிட்டு வந்திருக்கணும். அப்பா அம்மா கூட ஊர்ல இல்லைனு விது சொன்னாள்” என்றார் சிவநேசன்.

“ம்ம் ஆமா.. அத்தைக்கு உடம்பு இப்ப பரவாயில்லைங்களா?”

மெதுவான குரலில் அவன் கேட்க, “ட்ரீட்மென்ட் போய்ட்டு இருக்கு. உங்க ரெண்டு பேரையும் தான் வீட்டுக்குக் கூப்டணும்னு சொல்லிட்டே இருப்பா..” என்றார் சிவநேசன்.

திருமணம் முடிந்ததுமே மறுவீட்டிற்கு சென்று வந்தனர். வேஷம் கட்டியாகிவிட்டது அதற்கேற்ப நடிக்க வேண்டும் என மேகநாதனும் மறுப்பு சொல்லாமல் சென்று வந்தான். ஆனால், அன்பரசி மீதோ சிவநேசன் மீதோ அவனுக்கு நல்ல விதமான எண்ணம் இல்லாததால் அவர்களுடன் பழக முயற்சிக்கவே இல்லை. ஆனால், அவனே அறியாமல் வள்ளியுடன் அவன் மிகவும் எதார்த்தமாகப் பழகினான். வள்ளியின் திறமை அது. சட்டென்று ஒட்டிக் கொண்டார். அதற்குப் பிறகான இந்த நான்கு மாதத்தில் விதுர்ஷா அங்கு செல்லவில்லை.

இப்போது என்ன சொல்வான் என விது கூர்மையாகக் கவனிக்க, “சீக்கிரமே வர பார்க்கிறேன்” என்றான் சங்கடமாக.

அதிர்ச்சிக்கும் மேலே அதிர்ச்சி கொடுத்துக் கொண்டிருந்தான் மேகநாதன். இவன் இப்படியும் பேசுவானா? என்ற எண்ணம் மட்டுமே அவளுடைய மனதை நிறைத்திருந்தது.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, அதைக் காதில் கேட்டவாறு வேலையை மொத்தமாக முடித்து வைத்து விட்டு வெளியே வந்த விதுர்ஷா, தந்தையின் அருகே ஆசுவாசமாய் அமர்ந்தாள்.

சிவநேசன் மகளை ஆதூரமாகப் பார்க்க, மேகநாதனும் மனைவியைத் தான் ஆராய்ச்சிப் பார்த்துக் கொண்டிருந்தான்.

வந்ததிற்கு இளைத்திருக்கிறாளோ? நிறம் கூட குறைந்து விட்டதோ? உண்மையில் சொல்லப்போனால் அவனுக்கு விடை தெரியவில்லை. அவள் அந்த அளவிற்கு அவன் மனதில் பதியவில்லை எனும் போது எப்படி ஒப்பிடுவான். கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக உடனிருக்கும் ஒருத்தியை இன்று தான் நிதானமாக அளவிடுகிறான். சோகம் அப்பிய முகமில்லை என்றாலும் கூட அவளது முகத்தில் சந்தோஷத்திற்கான எந்த சாயலும் தெரியவில்லை. ஒரு மாதிரி இயந்திரத்தன்மை மட்டுமே தெரிந்தது.

முன்னெப்போதும் அவளை அறிந்திராத அவனுக்கே அவளது நிலை தெளிவாகத் தெரியும் போது, அவளது தந்தைக்குத் தெரியாதா? சட்டென்று குற்றவுணர்வு வந்து நெஞ்செல்லாம் அழுத்த, அதற்கு மேல் அவனால் அங்கிருக்க முடியவில்லை.

“நீங்க பேசிட்டு இருங்க.. நான் இதோ வந்திடுறேன்” என்றவன் அவனது அறைக்குச் சென்றுவிட்டான்.

அறைக்குச் சென்றவனின் மனம் ஒரு நிலையில்லாமல் தவித்தது. மனம் எதை எதையோ யோசித்தது.

“ச்சை.. இதுக்குத் தானே நான் சொன்னேன்? இந்தக் கல்யாணம் வேணாம்னு.. எல்லாத்தையும் இவ பண்ணிட்டு இப்போ நான் தப்பு செஞ்ச மாதிரி என்னையே நினைக்க வைக்கிறா”

மிகச் சரியாகத் தவறாக நினைத்தான்.

'யார் மேல இருக்க கோபத்தை யார்கிட்ட காட்டிட்டு இருக்க? இப்போ இவளைக் கல்யாணம் பண்ணி என்ன இங்க கெட்டுடுச்சு? எதுவும் இல்லைனும் போது நீ ஏன் இந்தக் கல்யாணத்தை சரி பண்ணிக்க கூடாது?’

அவனது மனசாட்சி நியாயமாகக் கேள்வி கேட்டாலும் அவனால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

குழம்பிய நிலையிலேயே குளித்து முடித்து இனியும் காலம் தாழ்த்த முடியாது என்று எண்ணிக் கீழே சென்றான். அவனைப் பார்த்ததும் எழுந்தவள் எதுவும் பேசாமல் அவனுக்கு உணவு எடுத்து வைக்கச் செல்ல, “சாப்டலாம் வாங்க” என்று சிவநேசனையும் அழைத்தான் அவன்.

சிவநேசனுனை மகளின் கைப்பக்குவம் அசத்தியது என்றுதான் சொல்ல வேண்டும்.

“பாப்பா நீ எப்போ இவ்ளோ நல்லா சமைக்க கத்துக்கிட்ட?” என்று அவர் ஆச்சரியம் போல் வினவ, மேகநாதன் அப்பா மகள் பேசுவதை கவனித்தான்.

“கல்யாணம்னு முடிவானதும் வள்ளிக்கா கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன் பா.. சில விஷயங்கள் இன்னமும் கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால் மேனேஜ் பண்ணுற மாதிரி பார்த்துப்பேன்”

இவளுக்கு சமைக்கத் தெரியாது என்பதே மேகநாதனுக்குப் புதிய செய்தி ஆயிற்றே.. அவனுக்கு உணவு அதற்குமேல் இறங்காமல் சண்டித்தனம் செய்தது.

“வள்ளின்னு சொன்னதும் ஞாபகம் வருது. உன்னை வள்ளி ரொம்பவும் கேட்டதா சொல்ல சொன்னாங்க பாப்பா. உன்னைப் பார்க்காம எங்கள விட அவங்க தான் ரொம்ப கஷ்டப்படுறாங்க.. நான் வேணும்னா உனக்கு ஹெல்ப்க்கு அவங்கள இங்க கொண்டு வந்து விடவா? உனக்கும் கொஞ்சம் ரெஸ்ட் கிடைக்கும்”

சிவநேசன் மனதில் பட்டதை அப்படியே சொல்ல, மேகநாதனுக்கு முகம் இன்னும் சிறுத்துப் போனது.

விதுர்ஷா சங்கடமாக மேகநாதனைப் பார்த்தாள். அவள் பார்வையை உணர்ந்து,

“மாப்பிள்ளை உங்களுக்கு எதுவும் ஆட்சேபனை இல்லையே?” என்று வேறு அவர் கேட்க, அவனுக்குத் தான் பதில் சொல்ல முடியவில்லை.

“அப்பா அதெல்லாம் தேவையில்லை.. என்னால இதையெல்லாம் மேனேஜ் பண்ண முடியாதா என்ன? அம்மாவைப் பார்த்துக்க வள்ளிக்கா அங்க வேணும்”

விது தான் அந்தப் பேச்சை முடித்து வைத்தாள்.

மீண்டும் ஏதோ சொல்ல வந்த சிவநேசனை, “அப்பா.. சாப்டுங்க” என்று மட்டும் சொல்ல, மகளின் மறைமுக கருத்தை உள்வாங்கி அவரும் அதன் பின் எதுவும் பேசவில்லை.

சிவநேசன் கிளம்பும் வரை மேகனும் வீட்டிலேயே இருந்தான்.

கிளம்பும் முன், “நல்லா பார்த்துக்கோங்க மாப்பிள்ளை” என்று மட்டும் சொல்லி விடைபெற அவர் மனம் மேகநாதனுக்கு நன்றாகவே புரிந்தது.

திருமணம் செய்து கொடுக்கும் போது கூட இந்த வார்த்தை அவரிடமிருந்து வரவில்லை. இப்போது சொல்கிறார் என்றால் அவரது மகள் நன்றாக இல்லை என்று உணர்ந்து அல்லவா சொல்கிறார்!

அவனது சிறு தலையசைப்பைப் பெற்றுக்கொண்டு காரில் ஏறியவரின் மனதில் சந்தோஷம் என்பது துளியுமில்லை. மனைவியைப் பார்த்து மகளை விட்டுவிட்டோமோ என்ற குற்றவுணர்வு மோலோங்க அவர் சென்னை பயணித்தார்.

கல்யாணியிடம் மேகநாதன் என்ன சொன்னானோ, அடுத்த இரண்டு நாட்களில் ராசாத்தி வேலைக்கு வந்துவிட்டார். அடுத்து எப்போதும் போல, விதுர்ஷா நான்கு சுவருக்குள் முடங்கி விட்டாள்.

எத்தனை நேரம் தான் சுவற்றையே வெறித்துப் பார்த்தபடி அமர்வது? இது சிலருக்கு சாதாரணமான விஷயமாகத் தோன்றலாம். ஆனால், அந்த நிலையில் இருப்பது என்பது முற்றிலும் வேறு. மெல்ல மெல்ல அது அவளை மன அழுத்தத்தில் ஆழ்த்த, அது அவளுக்கும் புரிந்தாலும் எதுவும் செய்ய இயலாத நிலையில் இருந்தாள் அவள்.

—--------------

தன் அறையில் அமர்ந்திருந்த விதுர்ஷா தீவிர யோசனையில் இருந்தாள். வழக்கத்திற்கு மாறாக இருந்த ரதியின் நடவடிக்கைகள் அவளைக் குழப்பின. அலைபாய்ந்த கண்களோடு, எப்போதும் எதையோ யோசித்தவாறு வளைய வந்த ரதி விதுர்ஷாவின் கண்களுக்குப் புதிதாகத் தெரிந்தாள். தயக்கத்தை விட்டுவிட்டு அவளே நேரடியாக ரதியிடம் போய்க் கேட்டாலும் அவளது பதில் நீ யார் என்பதைப் போல இருக்க, அதற்கு மேல் உரிமையாகக் கேட்க முடியாமல் அவளும் விட்டுவிட்டாள்.

உள்ளுணர்வு ஏதேதோ சொல்ல, அன்று இரவு தயக்கத்துடன் மேகநாதனிடம் இதைப்பற்றி சொன்னாள் விதுர்ஷா.

அவனோ, “ஓ.. இது ஒரு வழியா” என்றான் நக்கலாக.

அவனது நக்கலான குரலில் ஏதோ ஏடாகூடமாகத் தான் சொல்லப் போகிறான் என்று அவளது மனம் சொல்லவும் என்ன வழி என்று கேட்காமல் விதுர்ஷா அவனைக் கேள்வியாகப் பார்க்க,

“என் தங்கச்சி மேல அக்கறை இருக்க மாதிரி காட்டி என்னை நெருங்கப் பார்க்கிறியா?” என்றான் சூடாக.

இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். இல்லையென்றால் ஒவ்வொரு பேச்சிற்கும் இதை இழுப்பான் என்ற முடிவுடன் விதுர்ஷா அவனை அழுத்தமாகப் பார்த்தாள்.

“நீங்க என்ன அவ்வளவு பெரிய அழகனா? உங்களைக் கல்யாணம் பண்ணிக்கவும் உங்க கூட நெருங்கிப் பழகவும் நான் ஆசைப்படுறதுக்கு?”

அவளது இடக்கான கேள்வியில், ‘நீ எல்லாம் எனக்கு ஒரு ஆளா?’ என்ற அர்த்தம் பொதிந்திருக்க,

“பின்ன எதுக்குடி நான் வேணாம்னு சொல்லியும் என்னைக் கல்யாணம் பண்ணுன?” என்றான் கோபமாக அவனும்.

அவள் சலிப்பாக அவனைப் பார்க்க, “நீ தான் சொன்னியே.. வாழ்ந்து பார்த்து அப்படியும் பிடிக்கலனா விலகிடுறேனு.. இன்னுமா எனக்கு உன்னைப் பிடிக்கலனு உனக்குப் புரியல? இன்னும் இங்க இருந்து ஏன் என் உயிரை எடுக்குற? ஒருவேளை இன்னும் வாழ ஆரம்பிக்காததால அதுக்காக இருக்கியோ?” என்று அவன் கட்டிலைக் காட்ட, விதுர்ஷா அதிர்ந்து நின்றாள்.

“இருந்தாலும் உன்மேல உனக்கு இவ்வளவு அதீத நம்பிக்கை இருக்கக்கூடாது” என்று நக்கலாகச் சொல்ல, அவன் சொல்ல வரும் அர்த்தம் புரிந்ததில் உடலெல்லாம் அவளுக்குக் காந்தியது.

விதுர்ஷா அடிபட்ட பார்வை பார்த்தாள். எப்படிப்பட்ட வார்த்தைகள்? கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் மனைவியைப் பார்த்து இவனால் சொல்ல முடிகிறதென்றால் இவன் எப்படிப்பட்டவனாக இருப்பான்?

“இவ பெரிய ஒழுக்கம் மாதிரி என் தங்கச்சியைக் குறை சொல்ல வந்துட்டா.. உன் அம்மாவை மாதிரியோ உன்னை மாதிரியோ இல்ல அவ.. அப்படியே அவளுக்கு யாரையாவது பிடிச்சிருந்தா என்கிட்ட வந்து நிற்பாளே தவிர, குடும்பத்தை அவமானப்படுத்திட்டு ஓடுற பழக்கத்தை நாங்க அவளுக்குக் கத்துக்குடுக்கல”

அவனது குடும்பத்திற்காகப் பேசப் போய், கடைசியில் அவளுக்குக் கிடைத்த பெயர் என்ன? தன் அம்மாவின் நிம்மதிக்காக தன் உணர்வுகளையும் ஆசைகளையும் கொன்று ஜடத்தைப் போல இந்த வீட்டில் இருப்பவளைப் பார்த்துக் கட்டிலைக் காட்டி இதற்காகவா என்று கேட்டுவிட்டானே..

அங்கிருந்து அப்போதே வெளியேற வேண்டும் என்ற எண்ணம் உடலெல்லாம் எழ, அன்பரசியின் நினைவு அவளைத் தடுத்து நிறுத்தியது. அத்தனை பேச்சையும் பேசிவிட்டு மேகநாதன் நிம்மதியாக உறங்கச் சென்றுவிட, அவனருகில் படுக்கவே அவளுக்கு அத்தனை அருவெறுப்பாக இருந்தது.

அவள் தலையணையை எடுத்துக் கீழே போட்டுப் படுத்துக் கொண்டாள். உறக்கம் வந்தபாடில்லை. மேகநாதனின் வார்த்தைகளே மனமெங்கும்! அவன் ஒருமுறை சொன்ன வார்த்தைகளை அவள் ஓராயிரம் முறை நினைத்துப் பார்த்து தன் ரணத்தைத் தானே கீறிவிட்டுக் கொண்டாள். உறக்கம் என்பது மருந்துக்கும் இல்லை.

அவன் பேசிய பேச்சிற்கெல்லாம் இறைவன் மறுநாளே அவனுக்குக் கூலி தரப் போகிறான் என்று‌ முன்பே தெரிந்திருந்தால் உறங்கியிருப்பாளோ என்னவோ?

ஆம்! மறுநாள் கல்லூரிக்குச் சென்ற ரதி திரும்ப வந்த போது பிரபாகரனின் மனைவியாகி வந்திருந்தாள்.

இரண்டு குடும்பத்திற்கும் பகை என்பது ஊரறிந்த விசயம் ஆதலால் அந்தத் திருமணம் ஊரின் நடுவே பயங்கர விவாதமாக இருந்தது. ரத்தினவேலுவிற்குமே இது பயங்கர அதிர்ச்சி. ஆனால், மீண்டும் சரித்திரம் திரும்பியது. அன்று சோமசுந்தரத்தின் மீது தவறே இல்லாத போதும் பழிசுமத்தப்பட்டது போல, இன்று ரத்தினவேலுவின்‌ மீது சுமத்தப்பட்டது. அவருடைய ஆதரவின் பேரில் தான் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக வதந்தி பரவ, அதற்கேற்றாற்போல் அவரும் மகனையும் மருமகளையும் ஏற்றுக்கொண்டது அதை ஊர்ஜிதப்படுத்தியது.

சோமசுந்தரமும் மேகநாதனும் பஞ்சாயத்தில் தலைகவிழ்ந்து நின்றிருக்க, கல்யாணி அருகில் கண்ணீரைத் தாரைதாரையாக வடித்தபடி நின்றிருந்தார். அப்பா மற்றும் அண்ணனின் முகத்தைப் பார்ப்பதற்கே ரதிக்கு அத்தனை பயமாக இருந்தது. கல்யாணியின் கண்களில் வழிந்த கண்ணீரைக் கண்ட ரதிக்கும் கண்கள் கலங்கியது. ஆனால், என்ன செய்வது? காதலித்துவிட்டாளே!

அறியாத வயதில் பகை என்றெல்லாம் புரியாத வயதிலிருந்தே பிரபாகரன் என்றால் அவளுக்கு இஷ்டம். அந்த இஷ்டம் பருவ வயதில் அவளே அறியாமல் காதலாக மாறிய போது அவளால் தடுக்க முடியவில்லை. அது எந்த மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும் என்று புரிந்த போது அவர்கள் ஒருவருக்கொருவர் காதலை வெளிப்படுத்தியிருந்தனர். அவளால் பிரபாகரனை விட்டுக்கொடுக்க இயலவில்லை. அவளது வீட்டில் காதலைச் சொல்வதற்கு கூட அவள் பயப்பட, பிரபாகரனுக்கும் அதே நிலை தான். விஷயத்தைச் சொல்லி ரத்தினவேல் மறுத்துவிட்டால் அதை மீற அவனுக்குத் தைரியம் இருக்காது. ஆகையால் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு தான் இந்தப் பதிவுத் திருமணம். முடிவெடுக்கும் போது சுலபமாக இருந்தது. ஆனால், இப்படி பலர் முன் அப்பாவும் அண்ணனும் தலைகுனிந்து நின்றிருப்பதைப் பார்க்கும் போது அதை அவளால் தாங்க முடியவில்லை. ஏன் இந்தக் காதல் தனக்கு வந்தது? என்ற எண்ணத்தில் அவள் அழுது கரைய, பிரபாகரன் தான் மனைவியின் கரத்தைத் தன் கரத்தோடு பிணைத்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான்.

அவள் உள்ளுக்குள் மறுகி நின்றிருக்கும் போதே சோமசுந்தரம் அவளைத் தன் மகளே இல்லை என்று பேசிவிட்டுச் செல்ல, மேகநாதனும் பஞ்சாயத்தில் வைத்து எதுவும் பேசமுடியாமல் கல்யாணியை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டான். யாரும் யாருடனும் பேசவில்லை. உணவுண்ணவும் இல்லை. ஒவ்வொருவர் நினைவும் ஒவ்வொரு விதமாக இருந்தது. கல்யாணி கண்ணீரிலே கரைந்தார் என்றால் சோமசுந்தரம் கண்ணீர் கூட விடமுடியாமல் தனக்குள் மறுகிக் கொண்டிருந்தார்.

மேகநாதன் விதுர்ஷா நேற்று சொல்லியபோதே கொஞ்சம் கவனமெடுத்து கேட்டிருக்க வேண்டிமோ? ரதியிடம் பேசியிருக்கலாமோ? தான் பேசியிருந்தால் இது நடந்திருக்காதோ? என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தான். அதே யோசனையுடன் எதிரே இருந்த விதுர்ஷாவை அவன் பார்க்க, அவளது விழிகள் அவனைக் கண்டு ஏளனமாகச் சிரித்தன. அந்தச் சிரிப்பிற்கான விளக்கம் அவர்களின் தனியறையில் அவனுக்குப் போதுமட்டும் கிடைத்தது என்று தான் சொல்ல வேண்டும்.

விதுர்ஷா மற்றவர்கள் துன்பத்தில் இன்பம் காணும் ரகம் கிடையாது என்றாலும் அதற்கு நேர்மாறாக அவள்‌ அன்று நடந்து கொண்டாள்.

“வார்த்தைக்கு வார்த்தை என் அம்மாவை சுயநலம்னு சொல்லுவீங்களே.. எங்க போய் வச்சுப்பீங்க உங்க முகத்தை இப்போ?”

விதுர்ஷா கைகளைக் கட்டிக்கொண்டு கேள்வி கேட்க, மேகநாதனால் பதில் சொல்ல முடியவில்லை.

“காதலிச்சா சரி.. ஆனால், எனக்குத் தெரிஞ்சு உங்க வீட்ல கல்யாணம் கூட பேசல ரதிக்கு.. அப்படியிருக்கும் போது எதுக்காக இவ்வளவு சீக்கிரமா இந்த முடிவு?” என்று அவள் யோசிப்பதைப் போல பாவனை காட்டியவள், “ஒருவேளை இதுக்காகவோ?” என்று கட்டிலைச் சுட்டிக்காட்ட, மேகநாதன் கண்களை மூடித்திறந்தான்.

அவனது முகத்தில் அப்படியொரு வலி! வேறு யாராவது இப்படிப் பேசியிருந்தால் கொன்று போட்டிருப்பான். ஆனால், பேசுவது அவனது மனைவி என்பதை விட, பேசத் தூண்டியது அவனல்லவா? அவனுக்கு அவனது தவறு நன்கு புரிந்தது. மன்னிப்புக் கேட்கக்கூட வார்த்தை வரவில்லை.

பேசும்போது புரியாத வார்த்தைகளின் கனம் கேட்கும்போது நன்றாகவே புரிந்தது.

“வலிக்குதா? இதை விட நூறு மடங்கு அதிகமா எனக்கு வலிக்குது. என்னைப் பார்த்து நீங்க என்னலாம் பேசிட்டீங்க?” என்றவள் கண்ணில் நிற்காமல் நீர் வழிந்து கொண்டே இருந்தது.

“நான் ஏன் இன்னும் உங்க வாழ்க்கைல இருக்கேனு தானே உங்களுடைய கேள்வி.. எனக்குக் கொஞ்சம் டைம் கொடுங்க.. இதுக்கும் சீக்கிரமே பதில் சொல்றேன்” என்றவள் அவன் முகத்தையும் பார்க்கப் பிடிக்காதவளாக அறையை விட்டு வெளியேறிவிட்டாள்.

அன்று வரை மேகநாதன் தான் அவளிடம் ஒதுக்கம் காட்டுவான். அன்றிலிருந்து எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. அவள் ஒதுக்க ஆரம்பித்தாள்.

அன்பரசியின் உடல்நிலை சமநிலைக்கு வந்தபிறகு அவளது திருமணத்தைக் குறித்தும் அவள் எடுத்திருக்கும் முடிவு குறித்தும் பொறுமையாக அன்பரசிக்குப் புரிய வைக்க வேண்டும் என்று நினைத்திருந்தாள். அந்த நிலையில் தான் பேரிடியாய் அந்த செய்தி வந்தது.

திடீரென்று ஓர் மதிய நேரத்தில் வந்து, “கிளம்பு சென்னை போகலாம்” என்று மேகநாதன் சொல்ல, அவனது மொழி புரியாதவளைப் போல அவனைப் பார்த்தாள் விதுர்ஷா.

'என்ன சொன்னான்? சென்னைக்குப் போகணுமா?’’

“எ..எது..எதுக்கு?”

விதுர்ஷா தவிப்புடன் கேட்க,

“உங்க அம்மாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை போல.. ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்காங்க” என்றான் அவன்.

அவள் வேகமாக சிவநேசனுக்கு அழைக்க, அது எடுக்கப்படவில்லை. விதுர்ஷாவின் நெஞ்சம் எதை எதையோ நினைக்க, நிற்க முடியாமல் தள்ளாடியவள் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு வேகவேகமாக உடைகளை எடுத்து வைத்துக் கிளம்பினாள் அவள்.

கல்யாணியும் சோமசுந்தரமும் மறுநாள் வந்து பார்ப்பதாகக் கூற, சரியென்றவள் மேகநாதனைப் பார்க்க,

அவளது பார்வை புரிந்து, “கார் வெளில இருக்கு.. போய் ஏறு” என்றான் அவன்.

அவள் சென்றதும் அன்பரசியின் நிலை பற்றி சுருக்கமாகக் கல்யாணியிடம் கூறியவன், “வர மாதிரி இருந்தாலும் இருக்கும்” என்று கூறிவிட்டே சென்றிருந்தான்.

ஏழுமணி நேரப் பயணம்! மேகநாதன் காரை ஓட்ட அந்த ஏழு மணி நேரத்தைக் கடத்துவதற்குள் விதுர்ஷா படாதபாடு பட்டுவிட்டாள். சிவநேசன் அவளது அழைப்பை ஏற்கவே இல்லை. அதுவேறு அவளைப் பயம் கொள்ளச் செய்ய, அவள் மேகநாதனைப் பார்க்க, அவள் புறம் திரும்பி, ‘’என்ன?” என்றான்.

“அப்பா.. என்ன சொன்னாங்க? உடம்பு முடியலனா என்னாச்சு? ஏன் என்னோட ஃபோனை எடுக்க மாட்டேங்குறாங்க? சீரியஸா எதுவும் இல்லைல?”

கருமணிகள் ஓரிடத்தில் நிலைகொள்ளாமல் அங்குமிங்கும் அசைய, கண்களில் தவிப்புடன் அவள் கேட்க, மேகநாதனுக்கு அவளை எண்ணிப் பாவமாக இருந்தது. அவனுக்குத் தெரிந்த செய்தியைச் சொன்னால் அவள் தாங்குவாளா? அவன் தலையை இடவலமாக அசைத்துவிட்டு மீண்டும் பாதையில் கவனமாக, விதுர்ஷா வெகுவாகத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு வந்தாள்.

அவர்கள் நேராக மருத்துவமனைக்கே செல்ல, அங்கே சிவநேசனைப் பார்த்தவுடனே விதுர்ஷாவிற்கு நிலைமை புரிந்து போனது. தலை கலைந்து உடை கசங்கி அழுத முகத்துடன் ஓய்ந்து போய் அமர்ந்திருந்தார்.

“அப்பாஆஆஆ”

ஓடிச்சென்று அவரை அவள் அணைத்துக் கொள்ள, சிவநேசனின் கண்ணீர் நிற்காமல் பெருகியது.

“என்னப்பா ஆச்சு?”

“கீமோ செஞ்சும் ஸ்ப்ரட் ஆகிடுச்சு மா.. டாக்டர் ரிஸ்க்னு சொல்றாரு.. எப்போ வேணும்னாலும் எதுனாலும் ஆகலாம்னு…”

அவரால் தன் வார்த்தைகளை முடிக்க முடியவில்லை. சிறு குழந்தையாய் அவர் முகத்தை மூடிக்கொண்டு அழ, அவரைப் பார்த்து விதுர்ஷாவும் அழ ஆரம்பித்தாள்.

“ப்பா அம்மாக்கு ஒன்னும் ஆகாது அழாதீங்க” என்று சிவநேசனைத் தேற்றியவாறே அவளும் அழுது கொண்டிருந்தாள்.

“அவங்களுக்கு மறுபடியும் கான்சியஸ் வந்திருச்சு சார்.. பார்க்கணும்னா போய்ப் பார்த்துட்டு வாங்க” என்று நர்ஸ் குரல் கொடுக்க,

“நீ போய் பாரும்மா..‌‌. மாப்பிள்ளை நீங்களும் போங்க” என்றார் சிவநேசன் கண்ணைத் துடைத்துக் கொண்டு.

விதுர்ஷா மேகநாதன் நீட்டிய கரங்களை நாசுக்காக மறுத்துவிட்டு உள்ளே சென்றாள். அந்த ஐசியு அறையைப் பார்க்கும் போதே வயிற்றில் என்னவோ செய்தது. அன்பரசியின் கோலத்தைப் பார்த்துவிட்டு அவளது கால்கள் அதற்குமேல் நகர மாட்டேன் என பிடிவாதம் பிடிக்க, மேகநாதன் அவளது அனுமதியின்றி அவனது கரங்களை அவளது கரங்களோடு கோர்த்துக் கொண்டான்.
 
  • Like
Reactions: Ums

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அதே நிலையில் அவர்கள் இருவரும் அன்பரசியின் அருகில் போக, சிரமப்பட்டு விழிகளைத் திறந்தவர் இணைந்திருந்த கரங்களைப் பார்த்ததும் நிறைவாகப் புன்னகைத்தார்.

விதுர்ஷாவை அருகில் வருமாறு அழைத்தவர், “அப்பாவ…. பார்த்துக்கோ.. பாப்பா” என்று சிரமத்துடன் கூற,

“ம்மா.. நீங்க இப்படிலாம் பேசாதீங்க.. எனக்கு பயமாயிருக்கு.. நீங்க குணமாகி வந்துடுவீங்க.. உங்களுக்கு எதுவும் ஆகாது” என்றாள் விது அழுகைக் குரலில்.

தன் வலியை மறைத்துப் புன்னகைத்த அன்பரசி, “அப்பாவை வரச் சொல்லு” என்றார். விதுர்ஷா சிவநேசனை அழைக்க வேகமாக வெளியேற, அன்பரசி மேகநாதனைப் பார்த்தார்.

“வி..து…”

அவரால் அதற்கு மேல் பேச முடியவில்லை.

அவனையும் மீறி, “நான் பத்திரமா பார்த்துப்பேன். நீங்க கவலைப்படாதீங்க” என்றிருந்தான் மேகநாதன்.

வரமாட்டேன் என்றவரைப் பிடிவாதமாக உள்ளே அழைத்து வந்தாள் விதுர்ஷா.

“அன்பு..” என்றவாறே அவர் அங்கேயே நிற்க, தலையசைத்து அவரை அன்பரசி அருகில் அழைக்க, சிவநேசன் அருகில் சென்றார். சிவநேசனைப் பார்த்ததும் அவரையும் மீறி கண்ணீர் கன்னங்களில் வழிந்தது.

“என்ன செய்யுது அன்பு? ஏன் ஏன்‌ அழற” என்று சிவநேசன் பதட்டத்துடன் கேட்க, அன்பரசியின் கரங்கள் நீண்டு சிவநேசனின் கண்ணீரைத் துடைத்தது.

பார்த்துக் கொண்டிருந்த மேகநாதனுக்கு உடல் சிலிர்க்க, அவனால் அங்கு நிற்க முடியவில்லை. மூச்சுவிட சிரமமாக இருப்பது போல் தோன்றியது.

“தைரியமா இருக்கணும்.. உங்க கூடத் தான் இருப்பேன் நான் எப்போவும்”

அன்பரசி சொல்ல, சிவநேசன் உடைந்து அழ ஆரம்பித்தார். தன்னையறியாமல் மேகநாதனின் கண்களும் கலங்க ஆரம்பிக்க, அவர்களின் கவனத்தைக் கவராமல் வெளியே வந்துவிட்டான்.

இரண்டு நிமிடத்தில் அவர்கள் மீதான இத்தனை நாள் பிம்பம் அப்படியே தலைகீழாக ‌மாறியிருந்தது. மனம் தானாக அவனுக்கும் விதுர்ஷாவிற்குமான வாழ்க்கை இப்படியொரு காதலைத் தருமா என்ற வினாவை எழுப்ப, தன் மனம் போன போக்கில் குழம்பினான் அவன்.

அவன் குழப்பத்தை நீண்ட நேரம் நீடிக்க விடாமல் சிறிது நேரத்தில் எல்லாம், “ம்மாஆஆஆ” என்ற விதுர்ஷாவின் கதறல் செவிகளில் மோத, மேகநாதன் வேகமாக உள்ளே ஓடினான்.

அவன் உள்ளே சென்ற போது அன்பரசியின் உடலில் உயிர் பிரிந்திருந்தது. சிவநேசனும் விதுர்ஷாவும் பித்துப் பிடித்த நிலையிலிருக்க, மேகநாதன் தன் சிந்தனையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு அடுத்து நடக்க வேண்டிய அனைத்தையும் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டான்.

வள்ளியும் மேகநாதனும் சேர்ந்து தான் அனைத்தையும் பார்த்துக் கொண்டனர். சோமசுந்தரம் கல்யாணியுடன் உடனே கிளம்பி வந்துவிட்டார். சோமசுந்தரத்தின் சம்பந்தி என்று சோமசுந்தரத்தின் வகையறாக்களும் சிலர் வந்திருந்தனர். யாரும் ஒரு சொல் சொல்ல முடியாதபடி அனைவரையும் சிவநேசனின் இடத்திலிருந்து மேகநாதன் கவனித்துக் கொண்டான். அவ்வப்போது கண்கள் விதுர்ஷாவை அளவெடுக்கவும் மறக்கவில்லை.

எல்லாம் நல்லபடியாகச் சென்றது. அன்பரசியின் உடலை அடக்கம் செய்துவிட்டு வரும் வரை விதுர்ஷா எதுவும் பேசவில்லை.

“மேகன் இருப்பான் மா.. நாங்க காரியத்துக்கு வரோம்”

சோமசுந்தரம் கிளம்புகிறேன் என்று சொல்லாமல் சொல்ல, “உங்க பையனையும் அழைச்சுட்டுப் போங்க” என்றாள் விது.

மேகநாதனும் அங்கு தான் இருந்தான். அவளது வார்த்தையில் அவன் யோசனையுடன் அவளைப் பார்க்க,

“இல்லம்மா.. இங்கே வேலை இருக்கும்ல. அவன் உதவி தேவைப்படும்” என்று மறுத்தார் சோமசுந்தரம்.

“இல்ல.. இங்க அவரோட உதவி இதுக்கு மேல தேவைப்படாது. இதுவரை செய்த உதவிக்கு ரொம்ப நன்றி” என்று விதுர்ஷா சொல்ல, மகளின் குரலில் தெரிந்த பேதத்தில் சிவநேசன் வேகமாக அருகில் வந்தார்.

“என்ன விது பேசுற? மாப்பிள்ளை இருக்கட்டும்னு சம்பந்தியே சொல்றாருல” என்று அவர் கடிந்து கொள்ள,

“இனிமேல் இந்தக் குடும்பத்துக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் வேணாம் பா. அவரை அவரோட குடும்பத்தோட வெளியே போகச் சொல்லுங்க”

சிவநேசன் மனைவியை இழந்து முழுதாக ஒரு நாளே ஆகியிருந்தது. அந்த அதிர்ச்சியையே அவரால் தாங்க முடியவில்லை. இதில் மகள் வேறு இப்படியொரு முடிவைச் சொல்ல, அவர் பயந்து போனார்.

பெரியவர்கள் அனைவரும் அதிர்வுடன் நின்றிருக்க, மேகநாதன் முன்னால் வந்தான்.

அவன் ஒரு வார்த்தை பேசும் முன்னே தன் கழுத்திலிருந்த தாலியைக் கழட்டி அவனது கையைப் பிடித்து அதில் வைக்க, யாருமே அவளது அந்த செயலை எதிர்பார்க்கவில்லை. மேகநாதன் அதிர்வுடன் அவளைப் பார்த்தான்.

“என்னம்மா பொண்ணு நீ.. இப்படியா செய்வ” என்று மேகநாதனின் சித்தப்பா முறையிலிருந்த ஒருவர் தான் சுதாரித்துக் கொண்டு கேட்க, அவமானமாக உணர்ந்தான் மேகநாதன்.

அவர் ஆரம்பிக்கவும் உறவினர் ஆளாளுக்குப் பேச வர, கல்யாணி, “ச்சீ.. புருஷன் உயிரோட இருக்கும் போதே இப்படி பண்ண உனக்கு எப்படி மனசு வந்துச்சு? இதான் உங்கம்மா உனக்கு சொல்லி வளர்த்த லட்சணமா?” என்று பேச ஆரம்பிக்க,

“எங்கம்மாவைப் பத்தி யாரும் பேச வேணாம்.. மீறிப் பேசுனா நான் மனுஷியா இருக்க மாட்டேன்”

அதிர்ச்சியில் இருந்தவன் விதுர்ஷா குரலில் தன்னிலைக்கு வந்தான்.

“ஷ்ஷ்.. யாரும் எதுவும் பேச வேணாம். ம்மா..‌உன் புருஷனைக் கூப்ட்டு கிளம்பு.. சித்தப்பா, மாமா, அண்ணே.. எல்லாரும் கிளம்புங்க..”

தாடை இறுக, அவன் அனைவரையும் வெளியேறச் சொல்ல, சிவநேசனுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. சோமசுந்தரத்திடம் வந்தவர், “சம்பந்தி..‌‌. நான் பேசுறேன் விது கிட்ட.. கொஞ்சம் பொறுமையா மட்டும் இருங்க” என்று கெஞ்ச, மேகநாதன், “ம்மா உன் புருஷன் வரப்போறாரா இல்லையா?” என்று கத்திக்கொண்டே அவரைப் பார்த்த பார்வையில் சோமசுந்தரம் சிவநேசனுக்குப் பதில் சொல்லாமல் வெளியேறினார்.

ஐந்தே நிமிடத்தில் அந்த இடம் வெறிச்சோடி இருந்தது.

“என்ன விது இப்படி பண்ணிட்ட.. தப்புமா ரொம்ப தப்பு”

சிவநேசன் கோபமாகச் சொல்ல, விதுர்ஷா அவரை அமைதியாகப் பார்த்தாள்.

“ப்பா.. நான் எதையும் சொல்ல விரும்பல ஆனா எனக்கு அவர் வேணாம் பா”

கலங்கிய குரலில் அவள் சொல்ல, “விது.. உன் வாழ்க்கை இது” என்று கண் கலங்கினார் சிவநேசன்.

“எனக்குப் புரியுது பா.. இவ்வளவு பெரிய விஷயத்தை நான் இந்த நேரத்தில் முடிவு பண்ணிருக்கேன்னா என் பக்கமிருந்து கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க பா”

விதுர்ஷா அப்படிச் சொல்ல, சிவநேசனால் அதற்கு மேல் பேச முடியவில்லை. வள்ளி அப்போது வீட்டில் இல்லை. அவர் வந்ததும் அவருக்கு விஷயம் தெரிவிக்கப்பட, வள்ளியும் விதுர்ஷாவின் முடிவில் வருத்தப்பட்டார்.

ஆனால், யாரையும் இந்த விஷயத்தில் விதுர்ஷா முடிவெடுக்க அனுமதிக்கவில்லை. மனமாற்றத்திற்காக கல்லூரிக்கு அவ்வப்போது வந்தவள் பின்பு பொறுப்பு நிர்வாகியாக, அவள் வாழ்க்கை அவளது திட்டப்படி நன்றாகவே சென்று கொண்டிருந்தது. எல்லாம் சிவநேசன் சித்தார்த்தை திருமணம் செய்து
கொள்ளச் சொல்லிக் கேட்கும் வரையில்!!


கருத்துகளைப் பகிர:

 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
#15

பழைய நினைவுகளின் தாக்கத்திலிருந்து வெளியே வந்தவளுக்கு அந்த அறையில் இருப்பதே அத்தனை அசௌகரியமாக இருந்தது. அப்பாவிற்காக என்று முடிவெடுத்து வந்துவிட்டாள் தான்.. ஆனாலும் மனம் ஒருநிலையில் இல்லாமல் தவித்தது.

திடீர் திருமணம் என்றபோது வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்துத்தான் திருமணத்திற்கு சரியென்றாள். மேகநாதன் தனக்கு விருப்பமில்லை என்றபோதும் கூட காலவோட்டத்தில் அவன் மனம் மாறுமென்று நம்பியே வாழ்ந்து பார் என்று நம்பிக்கையாகச் சொன்னாள். ஆனால், அவனோ அதை தப்பர்த்தம் செய்து கொண்டு அவளை அவமானப்படுத்தினான். அவளை ஒரு பொருட்டாக அந்த வீட்டினர் நடத்தாத போது உள்ளுக்குள் உடைந்தாலும் அதையும் ஏற்றுக் கொண்டாள். எல்லாம் அவளது அம்மாவிற்காக! ஆனால், அதையும் வேறு மாதிரியாக அவன் கொச்சைப்படுத்த, அது கொடுத்த வலி என்பதை விட, மேகநாதன் மீதும் அந்த பந்தத்தின் மீதுமிருந்த ஏதோ ஒரு பிடிப்பு சுக்குநூறாகியது. அதற்கு மேல் அம்மாவிற்காக என்று பார்த்தால் அவளுக்கு அவளே நியாயம் செய்யாததைப் போலாகும் என்றெண்ணியே அவள் அவனிடம் அவகாசம் கேட்டாள். அன்பரசியின் உடல் கொஞ்சம் முன்னேற்றம் கண்டுவிட்டால் போதும்.. அவருக்குப் புரியும்படி எடுத்துச் சொல்லி இந்த பந்தத்திலிருந்து அவனையும் தன்னையும் ஒருசேர விடுவித்துக் கொள்ளலாம் என்று அவள் நினைத்திருக்க, அன்பரசியின் திடீர் மரணம் அவளை வேறு மாதிரி முடிவெடுக்க வைத்துவிட்டது.

மேகநாதன் வெகுநேரம் திண்ணையில் அமர்ந்திருப்பது புரிந்து வீட்டினுள்ளே சென்றான். கல்யாணி மேசையில் இரவுக்கான உணவுப் பதார்த்தங்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்தவாறே அறைக்குள் சென்றவனுக்கு விதுர்ஷாவின் முகமே அவள் அழுதிருந்ததைப் படம் பிடித்துக் காட்டப் பெருமூச்சுடன் அவளருகில் அமர்ந்தான் அவன்.

அவள் உடனே எழுந்து கொள்ளப் போக அவளைத் தடுத்தவன், “நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் விது” என்றான் ஸ்திரமாய்.

அவனது அந்தக் குரலை மீற முடியும் என்று அவளுக்குத் தோன்றவில்லை. தன் இயலாத்தன்மை மீது எரிச்சல் வர, அதை அவனுக்குக் காட்டாமல் அவனைப் பார்த்தாள் அவள்.

“என்னை மன்னிச்சுடு”

எந்தவித மேல்பூச்சு வார்த்தைகளும் இன்றி நேரடியாக அவன் மன்னிப்புக் கேட்க, அதைக் கேட்டதும் விதுர்ஷாவின் உடல் இறுகியதை அருகில் இருப்பவனால் நன்றாகவே உணர முடிந்தது.

“பேசு விது. இது தான் இனி நம்ம வாழ்க்கை. இதுவரைக்கும் சரியாக இல்லை. இனியாவது சரி படுத்திக்கணும்னு நான் நினைக்கிறேன். நீ பேசாம பழசையே நினைச்சுட்டு இருந்தா இது சரியே ஆகாது”

அவன் அவர்களது உறவை சரிப்படுத்த முயற்சி எடுப்பது புரிந்தது.

'இவன் சரிப்படுத்த நினைச்சா அது சரியாகிடுமா?’

விதுர்ஷா மனதுக்குள் கேட்டுக் கொண்டாள்.

“சரியாகும்.. சரியாகணும்.. நான் என்ன செஞ்சா சரியாகும்னு நீ சொல்லு.‌‌. நான் அதை செய்றேன். கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்கவா?” என்று கேட்டவன் நொடியும் தாமதியாது அவளது கால்களில் சாஷ்டாங்கமாக விழ,

“என்ன பண்றிங்க?” என்றபடி வேகமாகக் கால்களை உள்ளிழுத்துக் கொண்டாள் விதுர்ஷா.

“இப்படிலாம் பண்ணுனா நீங்க செஞ்சதெல்லாம் இல்லைனு ஆகிடுமா?”

அவள் கோபத்துடன் கேட்க, அவன்‌ எழுந்து நின்றான்.

“நான் தப்பு பண்ணலனு சொல்லல.. என் பேச்சை நியாயப்படுத்தவும் போறதும் இல்ல.. ஆனால், அதையே நினைச்சு இனி இருக்க வாழ்க்கையை வேஸ்ட் பண்ண வேணாம்னு சொல்றேன்” என்றவன்,

“நீ தாலியைக் கழட்டி என்கிட்ட கொடுத்ததைக் கூட என்னால இன்னும் மன்னிக்க முடியல தான். ஆனால், மறக்க முயற்சி பண்றேன். இந்த ஊருக்கே அந்த விஷயம் தெரியும். ஒருத்தர் மாதிரி இன்னொருத்தர் இருக்க மாட்டாங்க.. எட்டு மாசத்துல நீ இந்த முடிவு எடுக்குறனா அவங்க நினைப்பு எதிலெல்லாம் போகும்?” என்றான்.

அவன் முகம் இறுகி இதைச் சொன்னபோது, அவன் கடந்து வந்த சில பேச்சுக்கள் அவனது நினைவிற்கு வர, அவனது தாடை நரம்புகள் வெளியே தெரிந்தன.

விதுர்ஷா அவனைப் பயந்து போய் பார்த்தாள். அவளுக்கு அவனுடன் வாழப் பிடிக்கவில்லை தான். அதேசமயம் அவளுடைய அந்த செயலை அவனாலும் மன்னிக்க முடியாது என்பது அவளுக்கு நன்கு புரிந்தது. அதையே தான் அவனும் சொன்னான்.

“இப்போ வரை வருத்தம் தான் அது. உன்கிட்ட இருந்து நான் அதை எதிர்பார்க்கல. எனக்கு உன் பக்கம் நியாயம் நல்லாவே புரியுது. அதான், அதையெல்லாம் நான் கெட்ட கனவா நினைச்சு மறக்கப் பார்க்கிறேன். நீயும் மறந்துட்டு வாழப் பாரு.. அதுதான் நமக்கு நல்லது”

பெருமூச்சுடன் அவன் எடுத்துச்சொல்ல, அவளது மனம் அவனை ஏற்றுக்கொள்ள முடியாமல் முரண்டு பிடித்தது.

“டைம் எடுத்துக்கோ.. உனக்கு எப்போ என்னை ஏத்துக்கத் தோனுதோ அப்போ சொல்லு.. அதுவரைக்கும் நான் காத்திருப்பேன்”

அவனே அவளுக்கு எடுத்துக் கொடுக்க, “ஒருவேளை ஏத்துக்கவே முடியலனா?” என்றாள் குரலில் எதையும் காட்டிக் கொள்ளாமல்.

“ஏத்துக்குவனு நான் நம்புறேன். அப்படி உன்னால என்னை மன்னிக்கவே முடியலனா அப்போ அதைப்பத்தி பேசுவோம்”

அவளுக்குத் தலையாட்டுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது.

“சரி வா.. சாப்பிடலாம்”

அவன் அழைக்க, அவள் கலக்கத்துடன் அவனைப் பார்த்தாள். முன்பு சோமசுந்தரமாவது அவளை முழுமனதுடன் மருமகளாக ஏற்றிருந்தார். ஆனால், இன்று அவரும் அல்லவா கோபத்தில் இருக்கிறார்?

“இல்ல பசிக்கல”

அவள் அவசரமாகச் சொல்ல, “என்னை மீறி இங்க யாரும் உன்னை ஒரு வார்த்தை சொல்ல முடியாது. முதல்ல இந்த மாதிரி அவங்கள பார்த்து பயப்படக் கூடாது. எனக்கு அது பிடிக்கல. புரிஞ்சதா?” என்றான் அவன்.

'இவனுக்கு எப்படி நாம நினைக்கிறதெல்லாம் தெரியுது?’ என்று அவள் ஆச்சரியப்பட்டாலும் அவன் சொல்வதற்கு தலையாட்டினாள் அவள்.

அவளை அழைத்துக்கொண்டு வெளியே வரும்போது சோமசுந்தரத்திற்கு கல்யாணி பரிமாறிக் கொண்டிருந்தார். மேகநாதனும் விதுர்ஷாவும் அமர, கல்யாணி வேண்டாவெறுப்பாக அவளுக்கும் பரிமாறினார். அவரது முகமே அவருடைய பிடித்தமின்மையைச் சொல்ல, விதுர்ஷாவிற்கு உணவுத் தொண்டைக்குழியை விட்டு இறங்க மறுத்தது.

அவள் உணவில் கவனில்லாமல் இருப்பதைக் கண்டு, “சும்மா கண்டதையும் யோசிக்காம சாப்பிடு” என்று மேகநாதன் அதட்டல் போட, அவளால் முடியவில்லை. அவள் அப்படியே அமர்ந்திருந்தாள். அவளுக்கு நிஜமாகவே பசி போயிருந்தது.

அவளை ஓர் விழிகளால் அளவெடுத்துக் கொண்டே இருந்தவன் என்ன நினைத்தானோ அவளிடமிருந்து சாப்பாடு தட்டை நகர்த்தி, “ரூம்க்கு போ” என்று சொல்ல, தப்பித்தோம் பிழைத்தோம் என்று அங்கிருந்து ஓடினாள் விதுர்ஷா.

அவள் மீதம் வைத்திருந்த உணவையும் மேகநாதனே உண்ண,

கல்யாணி, “எச்சி சாப்பாடெல்லாம் நீ சாப்பிட வேணாம்.. இரு சூடா வைக்கிறேன்” என்றார் மகனிடம்.

“என் பொண்டாட்டியோட எச்சிலை சாப்டுறதுல எனக்கு ஒன்னுமில்ல”

அவன் பதிலில் கல்யாணி, “ஊர்ல இல்லாத பொண்டாட்டியைக் கட்டிக்கிட்ட மாதிரி பேசுற.. அவ செஞ்சது, இந்த ஊர் பேசுனது எல்லாம் மறந்து போச்சா?” என்றார் கோபமாக.

அதையும் மீறிய கோபத்துடன் தாயைப் பார்த்தான் மேகநாதன்.

“ம்மா.. அவளுக்கும் எனக்குமான பிரச்சினை அவளுக்கும் எனக்குமானதா மட்டும்தான் இருக்கணும். அதில் நீங்களோ உங்க புருஷனோ தலையிடுறதை நான் விரும்பல. அவ கிட்ட யாராவது பழைய விஷயங்களைப் பேசி அவளைக் கஷ்டப்படுத்த நினைச்சா நான் சும்மா இருக்க மாட்டேன்”

நேரடியாகவே தலையிடாதே என்று சொல்லிவிடுவான் என்று நினைத்திராத கல்யாணி, மகன் பேச்சில் அதிர்வுடன் அவனைப் பார்த்தார். அவனோ அவரது அதிர்வைக் கண்டும் எதுவும் பேசாமல் உண்ண ஆரம்பித்தான்.

கல்யாணி ஆதங்கத்துடன், “என்னை விட உன் பொண்டாட்டி தான் உனக்கு முக்கியமா போய்ட்டாளா?” என்று கேட்க, அவன் அலுப்பாக அவரைப் பார்த்தான்.

“நான் உங்களை முக்கியமில்லனு சொல்லல. சொல்ற மாதிரி பண்ணிடாதீங்கனு சொல்றேன்”

அவன் சாப்பிட்டு முடித்துவிட்டு எழுந்து கொள்ள, அடுத்துப் பேசப் போன கல்யாணியை சோமசுந்தரத்தின் பார்வை தடுத்துது.

அவர்கள் இருவரது பார்வை பரிமாற்றத்தைக் கவனித்த மேகநாதன் தோள்களைக் குலுக்கிக் கொண்டு அவனுடைய அறைக்குச் சென்றுவிட்டான்.

__________________

தன் அருகில் சீரான மூச்சுடன் உறங்கும் மேகநாதனைத் தான் அவள் பார்த்துக் கொண்டிருந்தாள்.

முதல் நாள் இரவு கட்டிலில் அவனருகே படுத்து உறங்குவதற்கு அவள் பிடிவாதமாக மறுக்க, அவன் அவளை வற்புறுத்தவில்லை. ஆனால், அவளருகே தரையில் படுத்துக் கொண்டான்.

“என்ன இது?” என்று அவள் முறைக்க,

“உனக்கு கட்டிலைப் பார்த்தால் கண்டதும் ஞாபகம் வருதுன்ற.. அதான்” என்றான் அவன்.

“எனக்கு கட்டிலா பிரச்சனை?” என்ற விதுர்ஷா மீண்டும் அவனை முறைக்க,

“என் வார்த்தை தான் பிரச்சனை. புரியுது. அதுக்கு மன்னிப்பும் நான் கேட்டுட்டேன். இதுக்கு மேல என்னை என்ன செய்யச் சொல்ற? எனக்கு மட்டும் சக்தி இருந்தா உன் நினைவுல இருந்து அந்த எட்டு மாச நினைவுகளை அழிச்சுடுவேன். ஆனால், நான் சாதாரண மனுஷன். என்னால பண்ண முடியாதே” என்றான் அவன்.

“மேல கட்டில்ல படுங்க” என்று அவள் முணுமுணுக்க, “நீ?” என்றான் அப்போதும் அவன் விடாப்பிடியாக.

விதுர்ஷா மேகநாதனை ஒரு பார்வை பார்த்துவிட்டு மேலே ஏறிப்படுத்துக் கொண்டாள்.

இப்படி அவள் விலகும் போதெல்லாம் அவன் அவளை இழுத்துப் பிடிக்க, அவளும் பழைய கசடுகளைத் தூக்கிப் பிடிக்க நினைக்கவில்லை. அவன் சொன்னது போல மறக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள்.

மீண்டும் அவளது வழக்கமான அந்த முடிவினை எடுத்திருந்தாள் விதுர்ஷா. வாழ்க்கையை அதன் போக்கில் எடுத்துக் கொள்ளலாம் என!

விதுர்ஷா இங்கே வந்து அதோ இதோ என்று மூன்று மாதம் ஆகிவிட்டது. கல்யாணியும் சோமசுந்தரமும் முதலில் விலகி விலகிப் போனாலும் ஒரு கட்டத்தில் தேவைக்குப் பேச ஆரம்பித்திருந்தனர். ரதியும் இல்லாமல் போனதால் கல்யாணியின் தனிமை அதிக நாட்களுக்கு விதுர்ஷாவிடம் முகத்தைத் தூக்க விடவில்லை. மேகநாதனும் அதிக நேரம் அவளைத் தனித்து இருக்க விடாமல் பார்த்துக் கொண்டான்.

இடையில் சுரேந்திரன் வீட்டுக்கு ஒருமுறை இருவரும் சென்று வந்ததிலிருந்து மீனாவுடன் அவளுக்கு நல்ல நட்பு உருவாகியிருக்க, அவ்வப்போது அங்கே அழைத்துச் செல்வதை வழக்கமாக்கியிருந்தான் மேகநாதன். அப்படித்தான் அன்றும் போயிருந்தனர். ஆனால், வழக்கத்துக்கு மாறாக இருவரது முகமும் ஒளியை இழந்திருக்க, விதுர்ஷா மேகநாதனின் முகத்தைக் கேள்வியாகப் பார்த்தாள். அவனோ தெரியாது என்று தோள்களைக் குலுக்கினான்.

“என்னாச்சு மீனா?” என்று விதுர்ஷா அவளிடமே கேட்க, மீனா சுரேந்திரனை முறைத்துப் பார்த்தாள்.

அதைப் பார்த்து, “என்னம்மா என்ன செஞ்சான்? உன்னை எதுவும் திட்டிட்டானா?” என்று மேகநாதன் கேட்க,

“அதெல்லாம் இல்லண்ணா.. இருங்க டீ வைச்சு கொண்டு வரேன்” என்றாள் மீனா. அப்போதும் சுரேந்திரனை முறைத்தவாறே பதில் சொல்லிவிட்டு அவள் அடுக்களைக்குச் செல்ல, விதுர்ஷா அவளைப் பின்தொடர்ந்து சென்று விஷயத்தை ஒருவாறு வாங்கியிருந்தாள்.

மீனாவிற்கு நாள் தள்ளிப் போயிருந்தது. சுரேந்திரன் குழந்தை இப்போதைக்கு வேண்டாம் என்று சொல்ல, அதுதான் மீனாவிற்கும் சுரேந்திரனுக்கும் வாக்குவாதம்.

சுரேந்திரன் எதற்காகச் சொல்கிறான் என்பது விதுர்ஷாவிற்குப் புரியவே,

“படிப்பு முடிக்கட்டும்னு நினைச்சிருப்பாங்க மீனா” என்றாள் விது.

“எனக்குத் தெரியாம என்ன அண்ணி? நல்லா தெரியுது. ஆனா, எப்படி இவர் கலைச்சுடலாம்னு சொல்லலாம்?”

விதுர்ஷாவிற்கு ஒரு பெண்ணாய் மீனாவின் எண்ணமும் நன்கு புரிந்தது.

அவள் தயக்கத்துடன் மீனாவிடம், “சேஃப்டியா இருந்திருக்கலாம்ல..” என்று கேட்கவும்,

“நாங்களே எதிர்பாரக்கல கா.. இவ்வளவு நாள் ரொம்ப ஜாக்கிரதையா தான் இருந்தோம்” என்றவள்,

“நடந்திருச்சு.. அதுக்காக கலைச்சிடுனு சொன்னா எப்படிக்கா? எனக்கு இன்னும் ஏழு மாசம் தான் படிப்பு இருக்கு. நான் அட்ஜஸ்ட் பண்ணி போய்ட்டு வரேன்னு சொல்றேன். இவருக்கென்ன அதுல பிரச்சனைனு தெரில. வேண்டாம்னு நிக்கிறாரு” என்றாள்.

“அது அவ்வளவு ஈஸி இல்ல மீனா”

“கலைக்கிறதை விட கஷ்டமா எனக்குத் தோனலக்கா”

மீனா பட்டென்று சொல்ல, விதுர்ஷா புன்னகைத்தாள்.

அங்கே சுரேந்திரனும் மேகநாதனிடம் விஷயத்தைச் சொல்ல, மேகநாதன் நண்பனைத் திட்டித் தீர்த்து விட்டான்.

“அறிவிருக்காடா.. படிப்பை முடிக்கிற வரை ஜாக்கிரதையா இருந்திருக்க வேண்டியது உன் பொறுப்பு. அதை பண்ணாம இப்போ வந்து வியாக்கியானம் பேசிட்டுத் திரியிறியா படிப்பு கெட்டுடும்னு” என்று அவன் திட்ட, சுரேந்திரன் அமைதியாக வாங்கிக் கொண்டான்.

“ஒன்னு தெரிஞ்சுக்க மச்சான்.. வலியும் வேதனையும் அனுபவிக்கிறது பொண்ணுங்க.. குழந்தை பெத்துக்கிறதா இருந்தாலும் சரி, வேணாம்னு முடிவெடுக்கிறதா இருந்தாலும் சரி.. அதைப் அவங்க தான் முடிவு பண்ணணும். மீனா என்ன சொல்லுதோ அதைச் செய்”

மீனாவிடம் பேசிவிட்டு வந்த விதுர்ஷாவின் செவியில் மேகநாதனின் வார்த்தைகள் விழுந்தது. இது மாதிரியான சிறுசிறு புரிதல்களைத் தானே அவனிடம் அவள் முன்பு எதிர்பார்த்தாள்? அவள் மனம் ஏனென்றே தெரியாமல் அவனது வார்த்தைகளில் நிறைவாக உணர, விதுர்ஷா புது சொந்தத்துடன் மேகநாதனைப் பார்த்தாள்.

அவள் மேகநாதனை மன்னித்து விட்டாளா என்று அவளுக்கே தெரியவில்லை. இந்த ஒரு மாதமும் அவனது சிந்தனை எல்லாம் அவளைச் சுற்றியே என்பதை ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு விதத்தில் உணர்த்திக் கொண்டே இருந்தான். நாட்கள் மீண்டும் நல்லபடியாகவே நகர்ந்து கொண்டிருக்க, அவர்கள் ஊரில் உள்ள அம்மன் கோவிலுக்குக் கும்பாபிஷேகம் நடைபெற ஏற்பாடாகிக் கொண்டிருந்தது.

ஊர்த் தலைவர் என்பதால் சோமசுந்தரத்தைக் காண அடிக்கடி ஆள் வருவதும் கும்பாபிஷேகம் பற்றிப் பேசுவதுமாக இருந்தனர். கும்பாபிஷேக வேலைகள், அது முடிந்து காலை அன்னதானம் என்று அனைத்திற்கும் எவ்வளவு ஆகும் என்று கணக்கிட்டுத் தோராயமாக ஒரு தொகையை வந்தவர்கள் கூற, வீட்டுக்கு இவ்வளவு என வரி வசூலிக்கலாம் என்று சோமசுந்தரம் பேசிக் கொண்டிருந்தார். மேகநாதனும் மரியாதை நிமித்தமாக அங்கு அமர்ந்திருந்தான்.

“மூனு நேரமும் அன்னதானத்துக்குப் பேசிடுங்க பெரியப்பா.. அதுதான் சரி வரும்” என்று மேகநாதன் கூறவும்,

“அதெல்லாம் சரிப்பட்டு வராது.. வரிக்காசு சாஸ்தியா கேட்டா சடைப்பானுங்க.. ஒரு நேரச் சாப்பாடு போதும்” என்று சோமசுந்தரம் சட்டென்று சொல்ல, அப்பாவிற்கும் மகனுக்கும் இடையே அந்தப் பெரியவர் சங்கடமாக விழித்தார்.

“அண்ணே.. வரிக்காசு ஆயிரம் தான் வாங்கறோம். கும்பாபிஷேகம் ஆறுல இருந்து ஏழரைக்குள்ள முடிச்சுட்டு அப்படியே காலைச் சாப்பாடு. அவ்வளவு தான். முதல் நாளு ரேடியோ செட்டுக்கு சொல்லிடலாம். எல்லா தெருவுலயும் சீரியல் செட் அலங்காரமும் ரெண்டு நாளுக்கு முன்னாடி பண்ணிடலாம். காப்புக்கட்டு தொடங்கி யாரும் வெளியூர் போய் தங்கக்கூடாதுனு அறிவிப்போட நோட்டிஸ் அடிச்சுடணும்.. நோட்டீஸ் அடிக்குற வேலையைப்‌ பாருங்க.. சாட்டுறவன் கிட்ட சொல்லி சாட்டி விட்டுறச் சொல்லுங்க” என்று சோமசுந்தரம் அந்தப் பேச்சை முடித்து வைத்தார்.

மேகநாதனும் எதிர்த்துப் பேசாமல் அப்போதைக்கு விட்டுவிட்டான். ஆனால், நோட்டீஸ் அடிக்கும் பொறுப்பை அவன் எடுத்துக்கொண்டு, அதில் வேலையைக் காட்டியிருந்தான். அதில் தெளிவாக மூன்று நேரமும் அன்னதானம் என்று போடப்பட்டிருந்தது.

கையில் நோட்டீஸை வைத்துக்கொண்டு கத்திக் கொண்டிருந்தார் சோமசுந்தரம். மேகநாதன் அன்று இரவு சோமசுந்தரம் இதைப்பற்றி பேசுவார் என்று கணக்கிட்டு வழக்கத்தை விட தாமதமாகத் தான் வீட்டிற்கு வந்தான். அவனது யுக்தியைக் கணித்து சோமசுந்தரமும் உறங்காமல் அவனுக்காகக் காத்திருந்தார். அவன் வருவதற்கு முன்பே கல்யாணியிடம் விஷயத்தைச் சொல்லி அவர் திட்டிக் கொண்டிருந்ததால் விதுர்ஷாவும் அறைக்குச் செல்லாமல் முன்கட்டில் அமர்ந்திருந்தாள்.

அவன் வந்தவுடன் அவர் எப்படி அவன் தன்னைக் கேட்காமல் இப்படிச் செய்யலாம் என்று கோபத்தில் கத்த,

“இப்போ என்ன? உங்களுக்கு வரிப்பணம் எக்ஸ்ட்ரா வாங்கக்கூடாது அவ்வளவுதான? செலவை நான் பார்த்துக்கிறேன்.. சரிதானா?” என்று சாதாரணமாக அந்தப் பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தான் மேகநாதன்.

“எப்படிடா பார்ப்ப? உன்ட்ட என்ன இருக்கு? இப்போ செய்யுற தொழிலே முழுசும் கடன்.. என்ன இருக்கு உன்கிட்ட சொந்தமா? வெறும்பயலா இருக்கும்போதே இவ்வளவு திமிரா?”

சோமசுந்தரம் கண்டபடி பேச, மேகநாதனுக்கு சுள்ளென்று இருந்தது. விதுர்ஷாவிற்கும் மாமனார் பேச்சு சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவள் கல்யாணியைப் பார்த்தாள். கல்யாணி கைகளைப் பிசைந்து கொண்டிருந்தாரே தவிர வாய் திறந்து எதையும் பேசுவதாக இல்லை என்பது புரிந்து அவளும் அமைதியாகிவிட்டாள்.

“என் பேர் சொல்ல தொழில் இருக்கும்போது வெறும்பயலா எப்படி ஆவேன்?”

மேகநாதன் முறைப்புடன் சொல்ல, அது சோமசுந்தரத்தை இன்னும் தூண்டிவிட,

“என்ன பெரிய தொழில்? அதுவே என்னால வந்தது தான்” என்றார் அவரும் விடாமல்.

“அதெப்படி சூரிட்டி கையெழுத்து போட்டது தான் நீங்க.. வட்டி கட்டுறது நான்.. பத்துப் பைசா உங்கட்ட இருந்து வாங்கல”

மேகநாதன் சுள்ளென்று சொல்லிவிட்டு அறைக்குள் சென்றுவிட, அவன் போவதையே யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்த விதுர்ஷா சோமசுந்தரத்திடம் திரும்பினாள்.

“நான் உங்களை எதிர்த்துப் பேசணும்னு சொல்லல மாமா.. உங்களுக்கு ஞாபகப்படுத்துறேன். எனக்குனு இருக்க எல்லாமே அவருக்குத் தான். சின்ன விஷயம்.. இதுக்கு நீங்க இவ்வளவு வார்த்தையாடணுமா?” என்று கேட்டவள் அவரது பதிலை எதிர்பார்க்காமல் அறைக்குள் அடைந்து கொண்டாள்.

“முன்னாடி மாதிரி இல்லங்க.. அவனுக்குனு பொண்டாட்டி இருக்கா.. வார்த்தையைப் பார்த்து விடுங்க”

கல்யாணியும் சூசகமாகச் சொல்ல, சோமசுந்தரம் எதுவும் பேசாமல் அவரும் அவருடைய அறைக்குள் அடைந்து கொண்டார்.

கோவில் வேலைகள் விமர்சையாக நடந்து கொண்டிருந்தன. மேகநாதன் தொழிலையும் கவனித்துவிட்டு சில கோவில் வேலைகளையும் பார்த்ததால் அவனுக்கு முன்பு மாதிரி நேரம் இருக்கவில்லை. விதுர்ஷா மீண்டும் தனியாளாகிப் போனாள். முன்பே பழக்கப்பட்டது தான் என்றிருந்தாலும் இங்கு வந்ததிலிருந்து மேகநாதன் அவளையே அடைகாத்துக் கொண்டிருந்ததால் அவனது இந்த மாற்றம் அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது.

அன்று எப்போதும் போல் ஓய்வாக அறைக்குள் இருந்தவளை அவசரமாக ராசாத்தி அழைக்க, அவள் வெளியே வந்தாள்.

“என்னக்கா?”

“என்னன்னு தெரியலமா.. அம்மா அழுதுட்டே அவங்க ரூம்குள்ள போறாங்க”

“அத்தையா? கோவிலுக்குப் போனாங்களே.. வந்துட்டாங்களா?”

“கோவிலுக்குப் போனவங்க தான்மா.. வரும்போதே அழுதுட்டே வந்தாங்க”

ராசாத்தி சொல்லவும், “சரி நீங்க வேலையைக் கவனிங்க.. நான் பார்த்துக்கிறேன்” என்று அவரை அனுப்பி வைத்தவள் நேராக கல்யாணியின் அறைக்குச் சென்றாள்.

கல்யாணி விதுர்ஷாவைப் பார்த்ததும் கண்ணீரைத் துடைத்துவிட்டு, “என்ன?” என்று கேட்க,

அவரருகில் அமர்ந்தவள், “எதுக்காக அழுறீங்க?” என்று கேட்டாள்.

கல்யாணிக்கு சொல்லி அழக்கூட யாருமில்லாத நிலையில் விதுர்ஷா கேட்கவும் பழைய கசப்பை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு அவரும் சொன்னார்.

“ரதியைக் கோவில்ல பார்த்தேன்”

அவர் சொல்லவும் அவரது கண்ணீருக்கான காரணம் அவளுக்கு நன்கு புரிந்தது.

“குழந்தை பிறந்தாவாச்சும் இவர் கொஞ்சம் மனசு மாறுவாருனு நினைச்சேன்.. ஆனா, இன்னும் பிடிவாதமா இருக்காரு.. எனக்கும் அவ அப்படி செஞ்சது கோபம் தான்.. இருந்தாலும் பெத்த மனசு கேட்க மாட்டேங்குது”

கல்யாணி அழுகையினூடே சொல்ல, “விடுங்க அத்தை.. எல்லாம் சரியாகிடும்” என்றாள் விதுர்ஷா தன்மையாக.

“எப்படி சரியாகும்? குழந்தை பிறந்தும் போய்ப் பார்க்க முடியல.. இப்போ அவனுக்கு காதுகுத்து வைக்கப் போறதா பேசிட்டு இருக்காங்களாம்” என்றவர் ராசாத்தி சொல்லியதையும் சோமசுந்தரம் அதற்கு என்ன சொன்னார் என்பதையும் சேர்த்தே சொன்னார்.

“மேகனுக்கும் இதெல்லாம் பிடிக்காது”

அவர் ஓய்ந்து போய் சொல்லவும், “உங்க பையன்கிட்ட நான் பேசிப் பார்க்கிறேன்.. கவலைப்படாதீங்க” என்றாள் விதுர்ஷா.

அவளது வார்த்தையில் கல்யாணியின் முகத்தில் சிறிய நம்பிக்கை வெளிச்சம் வந்தது.


கருத்துக்களைப் பகிர:

 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
#16


குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு தீவிர யோசனையில் அமர்ந்திருந்தாள் ரதி. அவளது செவிகளில் பிரபாகரன் சொன்ன வார்த்தைகள் தான் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தன.

மூன்று மாதங்களாக காதுகுத்துக்கு அழைப்பது பற்றிய பேச்சு அப்படியே கிணற்றில் போட்ட கல்லாக இருந்தது. காதுகுத்த தேதி முடிவு செய்து பத்திரிகை கூட வந்துவிட்ட நிலையில் ரதி மீண்டும் அந்தப் பேச்செடுக்கும் போது, பிரபாகரன்,

“போதாதகுறைக்கு உன் அண்ணியை வேற உங்க அண்ணா கூட்டிட்டு வந்துட்டாரு.. அவங்க இங்க இருக்கும்போது அப்பா எப்படி ஒத்துக்குவாரு.. எல்லாம் நம்ம நேரம்” என்று சொல்லியிருந்தான்.

கணவன் கருத்தில் அவளுக்கு உடன்பாடு இல்லை. அவள் ஈஸ்வரியுடன் இதைப்பற்றி பேச வேண்டும் என்று நினைத்து அவரிடம் பேசினாள். அவரும் பிரபாகரனைப் போலவே பேச, ரதிக்குத் தலை வெடித்துவிடும் போலிருந்தது.

“என்னத்தை சொல்றீங்க? அப்போ காலம் முழுக்க எங்கண்ணன் தனியாவா இருக்க முடியும்?” என்று பட்டென்று ரதி கேட்க, ஈஸ்வரி திகைத்தார்.

“அய்யோ அப்படிச் சொல்லலமா.. இந்த நேரத்தில் இது நடந்திருக்க வேணாம்னு நினைச்சு தான் சொன்னேன்”

ஈஸ்வரி பதட்டத்துடன் சொல்ல, அதன் பிறகு ரதி எதுவும் அவரிடம் பேசவில்லை.

ஜெகதீஸ்வரன் குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு எங்கோ வெறித்துக் கொண்டிருந்த அண்ணியைப் பார்த்து‌ யோசனையுடன் ரதிக்கு எதிரே அமர்ந்தான். அதில் கூட அவளது சிந்தனை அனுப்பவில்லை.

“அண்ணி” என்று அவன் சத்தமாக அழைக்கவும் அதில் கவனம் வரப் பெற்றவளாய் ஜெகதீஸ்வரனைப் பார்த்தவள்,

“எப்போ வந்தீங்க? காபி எதுவும் வைக்கணுமா?” என்று கேட்டபடி எழப் போனாள்.

“அதெல்லாம் வேணாம் அண்ணி.. என்ன தீவிரமான யோசனை?”

“இல்ல.. பத்திரிகை கூட வந்திருச்சு. மாமா எந்த முடிவும் சொல்லாம இருக்காரு.. இன்னும் எவ்வளவு நாள் தான் இந்தப் பிரச்சினை முடிவுக்கு வராம சுத்தும்னு தெரியல.. அதை நினைச்சாலே வேற எதையும் நினைக்க முடியாத மாதிரி அது மட்டுமே மண்டைக்குள்ள ஓடுது”

வெறுமையாகச் சொன்ன ரதியைப் பார்த்தால் அவனுக்கும் பாவமாக இருந்தது.

“கவலைப்படாதீங்க அண்ணி.. எல்லாம் சரியாகிடும்”

ஜெகதீஸ்வரன் ஆறுதலாகச் சொன்ன நேரம், அங்கே ரத்தினவேலுவின் முன்னால் விதுர்ஷா நின்றிருந்தாள். இருவரும் ரத்தினவேலுவின் வயலில் இருந்த மோட்டார் ரூம் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

“இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்தப் பகை சித்தப்பா?” என்றவள்,

“யாரு யாருக்கு சித்தப்பா? உங்க உறவையெல்லாம் எந்தக் காலத்துலயும் நான் ஏத்துக்கப் போறது இல்ல.. இந்த உறவுமுறை எங்களுக்கு வேணாம்” என்று ரத்தினவேல் சொல்லவும்,

“நீங்க ஏத்துக்கிட்டாலும் இல்லைனாலும் இந்த ஊரைப் பொறுத்தவரைக்கும் நீங்க எனக்குச் சித்தப்பா தானே? அதை நீங்களோ நானோ மாத்த முடியாது இல்லையா?” என்றாள்.

இரத்தினவேல் அவளது பேச்சிலிருந்த உண்மையில் அமைதியாக,

“மாத்த முடியாததை விட்டுடலாமே சித்தப்பா.. உங்களுக்கு அம்மா மேல தான கோபம்? அவங்க இப்போ இந்த உலகத்துலயே இல்ல.. இப்போ கூட உங்களால அவங்களை மன்னிக்க முடியலயா?” என்று கேட்டவளுக்கு அன்பரசியின் நினைவில் குரல் கம்மி அழுகை வரும் போல இருந்தது.

“அம்மா உங்க கிட்ட எப்பவும் மன்னிப்புக் கேட்கணும்னு சொல்லிட்டே இருப்பாங்க.. அந்த மன்னிப்புக்காக தான் ரொம்ப வருஷம் அப்புறம் கூட நாங்க இந்த ஊருக்கு உங்களைப் பார்க்க வந்தோம்.. ஆனால் கடைசி காலத்துல கூட நீங்க அதை அவங்களுக்குத் தரல.. எனக்காவது தரக்கூடாதா?”

கண்ணீர்க் குரலில் அவள் இறைஞ்சிக் கேட்டது ரத்தினவேலுவை இளகச் செய்தாலும், அவரது இத்தனை ஆண்டு பிடிவாதம் அதை ஒத்துக்கொள்ளத் தயாராக இல்லை.

விதுர்ஷா வேறு எதைப் பற்றியும் பேசவில்லை. அவளது அம்மாவிற்கான மன்னிப்பை மட்டுமே கேட்டாள்.

“கண்ணைத் துடைமா மொதல்ல” என்று ரத்தினவேல் சொல்ல,

“நீங்க என் அம்மாவை மன்னிச்சுட்டீங்களா?” என்றாள் அவள். அதில் ரத்தினவேல் உன் பெருமூச்சுடன் அவளைப் பார்த்தார்.

“நீங்க இந்தக் காலத்துப் பிள்ளைங்க.. இப்போ எல்லா விஷயமும் ரொம்ப லேசா போய்டுச்சு.. ஆனா எங்க காலம் அப்படி இல்ல.. கல்யாணத்துக்கு முன்னாடி பொண்ணு ஓடிப் போறதுலாம் ரெண்டு குடும்பத்துக்கும் எம்புட்டு அசிங்கம் தெரியுமா?” என்றவர்,

“உன் அம்மா அவங்க காதலை என்கிட்ட சொல்லியிருந்தா நானே அந்தக் கல்யாணத்தை நிறுத்தியிருப்பேன். நானே நிறுத்தியிருந்தால் எனக்கும் அது பெரிய அவமானமாக இருந்திருக்காது. ஆனால், உன் மாமனார் கிட்ட சொல்லி அவன் உங்க அம்மாவுக்கு உதவுறேனு போய்.. அது பங்காளிச் சண்டையாகி.. எத்தனை பிரச்சனை” என்றார்.

ரத்தினவேலுவின் குரலில் கோபம் போய் அங்கு வருத்தம் வந்திருந்தது.

“தப்பா புரிஞ்சிருக்கீங்க சித்தப்பா.. அம்மா மாமா கிட்ட எதுவும் சொல்லல” என்று விதுர்ஷா அன்பரசியின் வாயிலாக தெரிந்த உண்மைகளை மறைக்காமல் சொல்ல, ரத்தினவேல் அதிர்வுடன் பார்த்தார்.

“நீ சொல்றதெல்லாம்?”

தவிப்புடன் ரத்தினவேல் கேட்டதில், “கடவுள் சத்தியம் சித்தப்பா.. மாமா உங்களுக்கு நிச்சயம் பண்ண பொண்ணு தனியா போக வேணாம்னு நினைச்சு தான் உதவி செஞ்சிருக்காரு” என்றாள் விதுர்ஷா.

விதுர்ஷா சொல்லவும் அங்கிருந்த கல்லில் அப்படியே அமர்ந்துவிட்டார் ரத்தினவேல்.

தன் அவசரபுத்தியால் எவ்வளவு பெரிய தவறு நடந்திருக்கிறது? கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக இரண்டு குடும்பத்திற்கும் இடையே உள்ள உறவு அவரது தவறால் முறிந்ததா?

“தப்பு பண்ணிட்டேன்மா.. சுத்தி உள்ள பயலுக சொன்னதை நம்பி நானும் சோமுவைக் கண்டபடி பேசிட்டேன். அவன் அவ்வளவு சொல்லியும் நான் நம்பலயே” என்று அவர் பெரிதாக வருத்தப்பட,

“முன்னாடி சொன்னதை தான் சித்தப்பா நான் இப்பவும் சொல்றேன். மாத்த முடியாததை விட்டுடலாமே.. நாம மனுஷங்க. தப்பே செய்யாம யாராலும் இருக்க முடியாது. அந்த சூழ்நிலை மாமாவைக் குற்றவாளியாக உங்களுக்கு காட்டிருச்சு.. நீங்க இவ்வளவு வருத்தப்பட வேணாம். இனிமேல் நடக்கப் போறதைப் பார்ப்போமே” என்றாள் தன்மையாக அவள்.

அவர் கலங்கிய கண்களுடன் விதுர்ஷாவைப் பார்த்தார். என்ன ஒரு இருபத்தைந்து வயது இருக்குமா? எவ்வளவு பக்குவம்? அவரால் வியக்காமல் இருக்க முடியவில்லை. அவளைப் பற்றி அவர் கேள்விப்பட்டதற்கும் நிஜத்திற்கும் சற்றும் பொருந்தவில்லை.

அதை அப்படியே அவர் சொல்ல, விதுர்ஷாவின் முகம் கன்றிவிட்டது. என்ன கேள்வி பட்டிருப்பார் என்பது தெரியுமே!

“வருத்தப்படாதமா.. நம்மை மீறி சில விஷயங்கள் நடக்குறது சகஜம் தான். ஆனால், எந்தக் கோபத்தையும் உன் வாழ்க்கையை அழிக்க விட்டுடாம பார்த்துக்கணும்” என்று ரத்தினவேல் பெரியவராய் அறிவுரை சொல்ல, விதுர்ஷா தலையாட்டினாள்.

ரத்தினவேலுவுடன் பேசிவிட்டு வீட்டிற்குச் சென்றவளுக்கு அப்படியொரு நிறைவாக இருந்தது. அவர் மன்னித்ததை விட, இறுதியாய் அங்கிருந்து கிளம்பும் போது,

“வீட்டுக்கு வந்துட்டுப் போ மா” என்று அழைத்தது அப்படியொரு மகிழ்ச்சியைத் தந்தது. அன்பரசி மட்டும் இருந்திருந்தால் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்? என எண்ணிப் பார்த்தவள் அதே சந்தோஷத்துடன் சிவநேசனுக்கு அழைத்து விஷயத்தைக் கூறினாள்.

சிவநேசனுக்கும் மன நிறைவாக இருந்தது. அன்பரசி அடிக்கடி சொல்லாவிடினும் அவரது ஆழ்மனதில் இந்த குற்றவுணர்வு இருந்து கொண்டே இருந்ததை சிவநேசன் அறிவார். மனைவியின் ஆன்மா நிச்சயம் இந்தச் செய்தியில் அமைதியடையும் என்று உணர்ந்தவர் விதுர்ஷாவிடமும் அதையே கூற, அவள் புன்னகையுடன் ஆம் என்றாள்.

சிறிது நேரம் மகளுடன் பேசியவர் வள்ளியிடம் அலைப்பேசியைத் தர, அவரும் சிறிது நேரம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.

சிவநேசனிடம் பேசிவிட்டு வைத்தவள் அடுத்து சோமசுந்தரத்திடம் பேச வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள். அவள் நினைத்த நேரமே வெளியே போயிருந்த சோமசுந்தரத்தின் குரல் வீட்டிற்குள் கேட்க, விதுர்ஷா முடிவுடன் எழுந்தாள்.

அவர் அவருக்கான அறையில் நுழைய, கல்யாணியும் பின்னோடு நுழைந்ததைப் பார்த்தவள் அவளும் அங்கே சென்றாள்.

திடீரென்று தங்கள் அறைக்கு வந்திருப்பவளை சோமசுந்தரம் கேள்வியாகப் பார்க்க,

“உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் மாமா” என்றாள் விதுர்ஷா.

கல்யாணி புரியாமல் விதுர்ஷாவைப் பார்த்தார்.

“என்ன பேசணும்?”

“ஈஸ்வரி சித்தி வீட்டுக் கூட பேச்சுவார்த்தை இருக்கணும்.. உறவு விட்டுப் போகக் கூடாதுனு தான் அம்மா இந்தக் கல்யாணப் பேச்சுக்கு சம்மதிச்சாங்க.. நீங்களே அம்மாவுக்கு வாக்கு கொடுத்திருக்கீங்க”

விதுர்ஷா ஆரம்பிக்க, சோமசுந்தரம் அமைதியானார்.

“அதுக்கான முயற்சி நீங்க எடுக்கிற மாதிரி தெரியலயே மாமா. ரதி விஷயத்தை வைச்சு திரும்பவும் இந்தப் பகை இன்னும் நீடிக்கிற மாதிரி ஆகிடுச்சு”

“.............”

“என் அம்மா கல்யாணம் செஞ்சப்போ இருந்த நிலைமை இல்ல மாமா இப்போ.. ரதி விஷயத்துலயும் நீங்க கொஞ்சம் இறங்கி வரலாம்”

விதுர்ஷா சொல்லவும் உடல் இறுகிப் போனார் சோமசுந்தரம். கல்யாணி ஏதாவது அதிசயம் நடந்து தன் கணவர் மனம் மாறிவிட மாட்டாரா என்று பார்த்துக் கொண்டிருந்தார். அது சோமசுந்தரத்திற்கும் புரிந்தது.

“உங்க ஒருத்தரோட கோபம் எல்லாரையும் பாதிக்குது மாமா”

அவள் குறிப்பாகக் கல்யாணியையும் இணைத்துச் சொன்னாள்.

“இதைத் தான் சொல்லணும்னு வந்தேன். சொல்லிட்டேன். எதாவது தப்பா சொல்லியிருந்தா மன்னிச்சுக்கோங்க” என்றபடி வெளியேறப் போனவள் மீண்டும் அவரருகே வந்தாள்.

“நான் அம்மா இறந்த வீட்ல நடந்துக்கிட்டது ரொம்பவே அதிகப்படினு உங்களுக்கும் அத்தைக்கும் தோனலாம். என்மேல கோபம் இருக்கலாம். ரெண்டு பேரும் மன்னிச்சிருங்க” என்று பொதுவாக மன்னிப்புக் கேட்டவள் மனதிலிருந்த பாரம் அகன்ற நிம்மதியுடன் அறையை விட்டு வெளியேறினாள்.

மேகநாதன் வந்ததும் அவனிடம் ரத்தினவேலுவைச் சென்று சந்தித்ததைச் சொல்ல நினைத்தவளுக்கு எட்டு மணியைத் தாண்டி சுரேந்திரனின் எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.

“சொல்லுங்கண்ணா” என்று அவள் உற்சாகக் குரலில் ஆரம்பிக்க, சுரேந்திரன் பேரிடியை அவள் தலையில் இறக்கினான்.

“என்..ன என்ன சொல்றீங்க?”

“ஆமாம்மா.. நம்ம விலக்கு பக்கத்துல ஆக்ஸிடென்ட்.. நான் அங்க தான் போய்ட்டு இருக்கேன்.. லிங்கம்மாள் ஹாஸ்பிடலுக்குத் தான் கொண்டு போறாங்க”

சொல்லும்போதே சுரேந்திரன் குரலிலும் கண்ணீர்.

விதுர்ஷாவின் உடலோ வெளிப்படையாகவே நடுங்க ஆரம்பித்தது. கண்ணீர் கண்ணை விட்டு இறங்கவில்லை.

வேகமாக வெளியே வந்தவள் சோமசுந்தரத்திடமும் கல்யாணியிடமும் விஷயத்தைக் கூற, மூவரும் வேகமாக மருத்துவமனைக்கு விரைந்தனர். சுரேந்திரன் அங்கு அவர்களுக்கும் முன்பே வந்திருந்தான்.

“என்ன சொல்றாங்க டாக்டர்?” என்று சோமசுந்தரம் சுரேந்திரனிடம் பதட்டமானக் குரலில் கேட்க,

“தலைல அடிபட்டிருக்கு‌ மாமா.. பார்த்துட்டு தான் சொல்லணும்னு சொல்றாங்க” என்ற சுரேந்திரனின் குரல் நைந்து ஒலித்தது.

“அய்யோ.. என் குடும்பத்துக்கு மட்டும் வரிசையா சோதனையா கொடுக்குதே இந்த காளியம்மா.. என் புள்ளையை இப்படிப் பார்க்குறதுக்கா நான் வெள்ளியானா உன்னைக் கும்பிட வரேன்” என்று பெருங்குரல் எடுத்துக் கல்யாணி கத்த, விதுர்ஷா நிற்க முடியாமல் தள்ளாடினாள்.

சுரேந்திரன் வேகமாக அவளைப் பிடித்துக்கொள்ள, “நான் அவரைப் பார்க்கணும் அண்ணா.. முடியுமா?” என்றாள் அவள் கண்ணீரை அடக்கிக் கொண்டு.

ஐசியுவின் வெளியே நின்றபடி தான் பார்க்க முடிந்தது. கண்ணாடிக் கதவின் வழி மேகநாதனைப் பார்த்தவளுக்கு அதுவரை அடக்கியிருந்த அழுகைப் பீறிட்டு வந்தது. வாயைப் பொத்தி சப்தம் எழுப்பாமல் அழுதவளுக்கு அவன் அரை உயிராய் உள்ளே படுத்திருந்த தோற்றமே உயிரைப் பிசைந்தது.

“இங்கே எல்லா வசதியும் இருக்குமா? வேற எதாவது பெரிய ஹாஸ்பிடல் எங்கேயாவது கூட்டிட்டுப் போயிடலாமா அண்ணா? எனக்குப் பயமா இருக்கு”

விதுர்ஷா பயத்துடன் கேட்கவும், “இப்போதைக்கு ஹாஸ்பிடல் மாத்துறது ரிஸ்க்னு சொல்றாங்கமா” என்று சுரேந்திரன் மெல்லிய குரலில் சொல்ல, விதுர்ஷா மொத்தமாக உடைந்துவிட்டாள்.

“அழாதம்மா.. அதெல்லாம் ஒன்னும் ஆகாது.. சீக்கிரமே கண் முழிச்சுடுவான் பாரு” என்று சுரேந்திரன் அவளைத் தேற்ற, கல்யாணி கூட தான் அழுவதை நிறுத்திவிட்டு விதுர்ஷாவைத் தேற்றினார். யார் சொன்னாலும் அவள் மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது.

சோமசுந்தரம் கலங்கிப் போய் அமர்ந்திருந்தார். அவருக்கே ஆறுதல் சொல்ல ஒருவர் தேவைப்படும்போது அவர் விதுர்ஷாவிற்கு என்ன ஆறுதல் சொல்ல முடியும்?

சுரேந்திரன் மீனாவிற்கு அழைத்து விஷயத்தைக் கூற, அவளும் உடனே வருவதாய் சொன்னாள். அவளது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு வேண்டாம் என்றவன் பகல் நேரத்தில் நாளை வந்து பார்த்துக்கொள் என்று கூறிவிட்டான்.

மேகநாதனுக்கு தொடர்ந்து சிகிச்சைகள் தரப்பட்டுக் கொண்டிருந்தன. அங்கும் இங்கும் அவசரகதியில் சுழன்று கொண்டிருந்த செவிலிப் பெண்ணிடம் அவ்வப்போது சுரேந்திரன் விசாரித்தவாறு இருந்தான். அந்தப் பெண்ணும் அதே பதிலை சளைக்காமல் ஒவ்வொரு முறையும் சொன்னாள்.

நிமிடங்கள் காற்றின் வேகத்தில் கரைய,

“ஆப்ரேஷன் முடிஞ்சது. இதுக்கு மேல பயமில்லை.. பத்து நாள் மட்டும் அப்சர்வேஷன்ல இருந்தா போதும்” என்று டாக்டர் சொல்லும் வரை அங்கு யாருக்கும் நிம்மதியில்லை.

“நாங்க இப்போ பார்க்கலாமா?”

சுரேந்திரன் கேட்க, “இன்னும் மயக்கம் தெளியல சாய்.. மயக்கம் தெளியவும் சொல்வாங்க. ஒவ்வொருத்தரா போய்ப் பாருங்க” என்றார் அவர்.

சுரேந்திரன் கல்யாணியையும் சோமசுந்தரத்தையும் அழைத்துப் போய் டீ வாங்கித் தந்தான். விதுர்ஷா வேண்டாம் என்று விட்டாள்.

மணி பத்தை நெருங்க, இரவு நேரம் யாராவது இருவர் மட்டுமே இருக்க வேண்டும் என்று சொல்லப்பட, சோமசுந்தரமும் கல்யாணியும் வீட்டிற்குச் செல்வதாய் இருந்தது.

“அண்ணா.. நீங்க போய் அவங்கள விட்டுட்டு வாங்க.. மாமா ரொம்ப பதட்டப்படுறாரு.. இப்போ வண்டி ஓட்றது நல்லதில்ல” என்று சுரேந்திரனிடம் விதுர்ஷா சொல்ல, சுரேந்திரன் விதுர்ஷாவை எண்ணித் தயங்கினான்.

“நான் தனியா இருந்துப்பேன் அண்ணா. நீங்க வீட்டுக்கு போய்ட்டு மீனாவுக்குத் துணையா இருங்க.. காலைல வாங்க”

இயல்பில் அவள் தைரியமானவள் என்றாலும் அன்றைக்கு தைரியம் என்றால் என்ன என்று கேட்கும் நிலையில் தான் இருந்தாள் விதுர்ஷா. ஆனால், வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அதை சுரேந்திரனும் உணர்ந்தே இருந்தான்.

“நான் அத்தை மாமாவை வீட்ல விட்டுட்டு வந்துடுறேன். மீனா பக்கத்து வீட்டுப் பொண்ணைத் துணைக்கு அழைச்சிக்கிறேனு சொல்லியிருக்கா.. நான் வந்துடுவேன் கவலைப்படாத” என்று சொல்லிவிட்டே சுரேந்திரன் சென்றான்.

பெரியவர்களை வீட்டில் விட்டவன் சொன்ன மாதிரியே மீண்டும் மருத்துவமனைக்கு விரைந்தான். இருவருக்குமே பொட்டுத் தூக்கமில்லை.

சுரேந்திரனுக்கு மனமெங்கும், ‘அவனைத் தனியா விட்ருக்கக் கூடாது’ என்ற எண்ணமே வியாபித்திருக்க, விதுர்ஷாவின் மனமெங்கும் மேகநாதன் தான்.

இருவரையும் கேட்காமல் மறுநாளுக்கான பொழுதும் புலர்ந்தது. விடிந்ததுமே கல்யாணியும் சோமசுந்தரமும் வந்துவிட்டனர். அவர்கள் வந்த சிறிது நேரத்திற்கெல்லாம் ரதி பிரபாகரனுடன் அவர்களது குடும்பமே மருத்துவமனைக்கு வந்துவிட்டனர்.

அந்த சூழ்நிலையின் கனம் யாரையும் பழைய பகையைப் பேசச் செய்யவில்லை.

“ம்மாஆஆ” என்றவாறு ஓடிவந்த ரதியை விலக்காமல் கல்யாணியும் அணைத்துக் கொண்டார்.

“அண்ணா எப்படிமா இருக்காங்க” என்று கல்யாணியிடம் ரதி அழுதுகொண்டே கேட்க, அவர் அதற்கு மேல் அழ, ஈஸ்வரி தான் இருவரையும் ஒருசேர சமாதானப்படுத்தினார்.

“டாக்டர் என்ன‌ சொன்னாங்க மதினி?” என்று ஈஸ்வரி கேட்க,

“மயக்கம் தெளிஞ்சதும் திரும்ப எல்லா டெஸ்ட்டும் எடுத்துப் பார்க்கணும்னு சொல்லியிருக்காங்க” என்றார் கல்யாணி கண்ணைத் துடைத்துக் கொண்டு.

ரத்தினவேலு எதுவும் பேசாமல் சோமசுந்தரத்தின் கைகளைப் பற்றிக் கொள்ள, அவரது கண்களும் கலங்க ஆரம்பித்தது.

“சீக்கிரமே கண் முழிச்சிருவாரு மாப்ள.. நீ எதுவும் கவலைப்படாத சோமு” என்று ரத்தினவேல் சொல்ல, சோமசுந்தரம் தலையசைத்தார்.

அங்கே வெகுநாளைக்குப் பிறகான குடும்ப சங்கமம் நிகழ்ந்தது. என்ன‌ ஒன்று அதை அனுபவிக்கும் மனநிலையில் தான் அங்கே யாருமில்லை!

—-------------

மேகநாதனுக்கு நினைவு திரும்பும் வரை அனைவரும் அங்கேயே இருந்தனர். மதிய நேரத்தை நெருங்கும் வேளையில் அவனுக்கு நினைவு திரும்ப, விதுர்ஷா தான் முதல் ஆளாய் உள்ளே சென்றாள்.

அவன் அவளைப் பார்த்து புன்னகைக்க முயன்றான். அவ்வளவு தான்! அவள் கண்கள் தாரை தாரையாகக் கண்ணீரைக் கொட்டியது.

ஆக்ஸிஜன் மாஸ்க்கும் இன்னும் பல உபகரணங்களின் உதவியோடு மேகநாதன் படுத்திருக்க, அவனால் பேச முடியவில்லை. கிட்டத்தட்ட சாவின் விளிம்பிற்குச் சென்று வந்தும் கூட அவனது உதடுகள் புன்னகைத்துக் கொண்டிருந்தன. அதை அவளால் பார்க்க முடியவில்லை.

அருகில் வந்து அவனது கரங்களைப் பிடித்துக் கொண்டாள். அவன் எதுவும் கேட்கவில்லை. அவளாகச் சொன்னாள்.

“பயந்துட்டேன்”

ஒற்றைச் சொல்லில் அவளது தவிப்பையெல்லாம் அவனுக்குக் கடத்திட முயன்றாள். அவளது அந்த ஒற்றைச் சொல் அவனுக்கு மட்டுமல்ல அவளுக்கும் சேர்த்தே சில விஷயங்களைத் தெளிவு படுத்தியிருந்தது. ஆக்ஸிஜன் மாஸ்க்கினுள் இருந்த மேகநாதனின் இதழ்கள் நிறைவாகப் புன்னகைத்தன.

அடுத்த சிறிது நேரத்தில் குடும்பத்தினர் அனைவரும் உள்ளே வரவும் தான்‌ அவளது அழுகை நின்றது. ரத்தனவேலு உட்பட ரதியின் புகுந்த வீட்டில் அனைவருமே வந்திருக்க, அவர்களை வியப்பாகப் பார்த்தவன் விஷயம் புரிந்ததும் நிறைவாக உணர்ந்தான்.


__________________


கார்த்திகா பதட்டத்துடன் மருத்துவமனைக்குள் நுழைந்தாள். அவளுக்கு மேகநாதனுக்கு விபத்து ஏற்பட்ட விஷயமே நேற்று இரவு தான் தெரியும். விஷயம் கேள்விப்பட்டதிலிருந்தே அவளது மனம் ஒருநிலையில் இல்லை. விடிந்ததுமே கிளம்பி வந்துவிட்டாள்.

அறை எண் கேட்டு அங்கு சென்றவளுக்கு அறைக்குள் செல்லும் நொடியில் தயக்கம் வந்து ஒட்டிக்கொண்டது. பெருமுயற்சி செய்து அதை விரட்டிவிட்டுக் கதவை நாசுக்காக அவள் தட்ட, சில நொடிகளில் கதவு திறந்தது.

கதவைத் திறந்த விதுர்ஷா கேள்வியாய்ப் புதியவளின் முகம் பார்க்க, கார்த்திகாவும் இதுவரை விதுர்ஷாவைப் பார்த்தது இல்லை.

“யார் வேணும்?” என்ற விதுர்ஷா பதில் வேண்டி அவள் முகம் பார்க்க,

குழப்பத்துடன் அவளைப் பார்த்தவள், “மேகநாதன்னு… இந்த ரூம் நம்பர் தான் சொன்னாங்க” என்றாள் கார்த்திகா தயக்கத்துடன்.

“உள்ளே தான் இருக்காரு.. வாங்க” என்றவள் முன்னே நடக்க,

விதுர்ஷாவுடன் கார்த்திகாவும் இணைந்து வருவதைக் கண்ட மேகநாதன்‌ அதிர்ந்து போய் அவர்களைப் பார்த்தான்.

கணவனின் அதிர்வைக் கண்டவள் யோசனையாய் கார்த்திகாவைப் பார்க்க, அவளோ மேகநாதனைப் பார்த்ததும் விதுர்ஷாவை முந்திக் கொண்டு அவனின் அருகே சென்றாள்.

“அய்யோ.. இதென்ன இவ்வளவு பெரிய கட்டு? எனக்கு நேத்து நைட் தான் விஷயமே தெரியும்.. பார்த்து வந்திருக்கக் கூடாதாங்க?” என்று கவலையான குரலில் கேட்க,

‘இதென்ன பக்கத்துலயே போய் உட்கார்ந்துக்குவா போலயே’ என்று நினைத்த விதுர்ஷா, “முதல்ல உட்காருங்க” என்று தூரமாக இருந்த நாற்காலியைக் காட்டி சொல்ல, கார்த்திகா விதுர்ஷாவைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தாள்.

அது விதுர்ஷாவை, ‘நீ இடையில் பேசாதே’ என்று சொல்வது போலிருக்க, சட்டென்று கோபம் தலைக்கேற அவள் இருவருக்கும் இடையில் போய் நின்று கொண்டாள்.

விதுர்ஷாவின் செயலில் அவ்வளவு நேரம் முகத்தில் கடுமையைப் பூசியிருந்த மேகநாதன் புன்னகைத்தான்.

இடையில் வந்து‌‌ நின்று கொண்டதால், “நீங்க கொஞ்சம் வெளியே நிக்குறீங்களா?” என்று கார்த்திகா கடுப்புடன் கேட்க,

“என்னது நான் வெளியே போகணுமா?” என்று பார்வையிலேயே கார்த்திகாவிடம் கேட்டவள் அதே பார்வையை மேகநாதனை நோக்கி வீச,

“நான் சொன்னேனா அப்படி?” என்று பதில் பார்வை வீசினான் மேகநாதன்.

அவனை முறைத்தவள் அவனை விடுத்து,

“யார் நீங்க?” என்று கார்த்திகாவை அதட்ட,

“என்ன அதட்டுறீங்க? நீங்க யாரு முதல்ல?” என்றாள் கார்த்திகா அதட்டலாக.

கார்த்திகா அதட்டியதில் விதுர்ஷா திகைத்து விழிக்க, மேகநாதன் வாய் சிரித்தான்.

அதற்கும் சேர்த்து அவனை முறைத்தாள், கார்த்திகாவை நேர் பார்வையால் பார்த்தாள்.

“நான் இவரோட பொண்டாட்டி.. இப்போ சொல்றீங்களா நீங்க யாருன்னு?” என்று கேட்க,

அந்தப் பதிலில் அதிர்ந்த கார்த்திகா தானாக இரண்டடி பின் நகர்ந்தாள். அவள் இதை எதிர்பார்த்திருக்கவில்லையே!

நம்ப இயலாமல் மேகநாதனைப் பார்த்தாள் அவள். அவனோ புன்சிரிப்புடன் விதுர்ஷாவைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் விழிகளில் வழிந்த ரசனையைக் கண்டவளுக்கு அது உண்மை தான் என விளங்கியது.

‘கடவுளே இது தெரியாம அவர்ட்ட போய் என்னென்ன நான் பேசி வச்சிருக்கேன்’

“நீங்க யாருனு சொல்றது அவ்வளவு கஷ்டமான கேள்வியா?”

விதுர்ஷாவின் குரலில் தன்னை மீட்டுக் கொண்டு அவளைப் பார்த்தவள் தன்னை யாரென்று சொல்லுவாள்? அவள் மேகநாதனை உதவிக்கு வரச் சொல்லிப் பார்த்தாள்.

“அங்கே என்ன பார்வை?”

இப்போது விதுர்ஷாவின் குரலில் கடுமையும் சேர, மேகநாதன் சுதாரித்தான்.

“விது அவங்களை போக விடு. நீங்க கிளம்புங்க” என்றான் அவன்.

மனமெங்கும் அவள் யாரென்ற கேள்வி இருந்தாலும் ஏனோ மேகநாதனைத் தவறாக நினைக்கத் தோன்றவில்லை. அதனால் விதுர்ஷா அமைதியாக, கார்த்திகா தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெளியே ஓடினாள்.

கார்த்திகா சென்றதும் அவனைப் பார்த்தபடியே விதுர்ஷா நிற்க, அவன் தனது கையை நீட்டினான். யோசிக்காமல் அவள் தன் கையைக் கொடுக்கவும் அதைப் பற்றி அவளை இன்னும் அருகே இழுக்க, அவன் மேலே விழப் போனவள் நொடிக்குள் சுதாரித்து அவன் மேல் விழாமல் சமாளித்தாள். விழுந்து விடாமல் தான் அவளால் தடுக்க முடிந்தது. நெருக்கத்தை அல்ல!

இந்த ஒருவார மருத்தவமனைவாசம் ஏதோவொரு வகையில் அவனது நம்பிக்கைக்கு வலு சேர்த்திருந்தது. அவன் அடுத்த கட்டத்திற்கு அவர்களது வாழ்வை எடுத்துச் செல்ல முடிவெடுத்திருந்தான்.

இருவரது முகமும் அத்தனை நெருக்கத்திலிருக்க, மேகநாதன் அவளைப் பருகிக் கொண்டிருந்தான். அவனுக்குள் மோகம் கிளர்ந்து எழுந்து மிகப்பெரும் போரை நடத்திக் கொண்டிருந்தது.

“யார் அவங்க?”

விதுர்ஷா அந்த மாதிரி எந்த உணர்வும் இல்லாமல் முறைப்பாகக் கேட்க,

“ஏன்டி.. ஒன்னை வச்சே சமாளிக்க முடியல.. இதுல இன்னொன்னு சைட்ல நான் ஓட்டுவேனா?” என்றான் அவன் அப்பாவியாக.

அவனது பேச்சில் அவனது வாயில் சட்டென்று அவள் ஒரு அடி போட, அவளது கரத்தைப் பிடித்தவன் இன்னும் அவளை அருகில் இழுக்க, அவனது எண்ணம் புரிந்தவளுக்கோ கண்கள் சாசர் போல விரிந்து கொண்டது.

அதுவரை அந்த நெருக்கம் அவளுக்கு எதையும் கடத்தவில்லை. அவனது உணர்வுகள் புரிய ஆரம்பித்த நொடியில் எப்படி எதிர்வினையாற்றுவது என்று கூட தெரியாமல் அவள் படபடக்கும் இதயத்துடன் அவனையே பார்த்தபடி இருந்தாள்.

மீண்டும் கதவு தட்டும் ஒலி. விதுர்ஷா பதறி விலக, கார்த்திகா சங்கடமாக அறை வாசலில் நின்றிருந்தாள். கதவு திறந்தே இருந்தது.

அவசரத்தில் பர்ஸை விட்டுவிட்டுச் சென்றிருந்தாள்.‌‌. அதை எடுக்கத் திரும்ப வந்த போது, அவர்களது நெருக்கத்தைக் கண்டவள் பதறி வேகமாகத் திறந்திருந்த கதவை வேண்டுமென்றே தட்டினாள். அவள் வந்ததை அறிவிக்கும் வகையில்!

மேகநாதன் ‘வடை போச்சே’ என்ற எரிச்சலுடன் அவளைப் பார்க்க, “பர்ஸ்” என்றவள், அவர்களை நிமிர்ந்தும் பார்க்காமல் உள்ளே வந்து பர்ஸை
எடுத்துக் கொண்டு வேகமாக வெளியேறி விட்டாள்.

விதுர்ஷா தற்காலிகமாக ஆசுவாசமடைந்தாலும், அடுத்து அவளால் அவன் முகத்தை ஏறிட்டுப் பார்க்க முடியவில்லை.


கருத்துகளைப் பகிர:

 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
#17

கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்கும் மேல் ஆகியிருந்தது. அன்று தான் மேகநாதன் டிஸ்சார்ஜ் செய்து அழைத்து வந்தனர்.

காயமெல்லாம் ஆறியிருந்தது. அடுத்த வாரம் கும்பாபிஷேகம் என்றிருக்க, இன்னுமே அவன் நடப்பதற்கு சற்று சிரமப்பட்டான். அதற்கு மட்டும் வாக்கிங் ஸ்டிக் பயன்படுத்துக் கொண்டிருந்தான்.

சோமசுந்தரமும் எப்போதும் போலக் கோவில் வேலைகளில் பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்தார். மகன் சொன்னது போல மூன்று வேளைக்கும் அன்னதானம்‌ ஏற்பாடு செய்தார்.

அதை அறிந்து புருவம் தூக்கியவன், “சுரேந்தர் கிட்ட சொல்லி அதுக்கு பணம் கொடுக்க சொல்லணும்.. எனக்கு ஞாபகப்படுத்து” என்று விதுர்ஷாவிடம் சொல்ல,

“ம்ம்” என்றவள், “நான் ஒன்னு சொல்லட்டுமா?” என்க,

“ஓராயிரம் கூட சொல்லு.. கேட்க கசக்குமா என்ன? என்றவன் புன்னகைத்தான்.

இப்போதெல்லாம் விதுர்ஷாவிடம் நிறைய மாற்றங்கள்.. அனைத்தும் நல்ல விதமாக! அவனுக்கு அப்படியொரு நிறைவாக இருந்தது.

“நீங்க நினைக்கிற மாதிரி இல்லங்க மாமா.. பேசுறப்போ வார்த்தைகள் கொஞ்சம் தடிச்சிருது.. மத்தபடி உங்க மேல அவர் ரொம்ப பாசம் வச்சிருக்காரு”

“நீ சொன்னா ஒத்துக்க வேண்டியது தான்”

அவளிடம் வாக்குவாதம் செய்ய அவனுக்கு விருப்பமில்லை. அதனால், அவன் குரலில் எதையும் காட்டவில்லை. அவன் நம்ப மறுக்கிறான் என்றெண்ணி,

“உண்மை தாங்க.. உங்களுக்கு ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சுனு செய்தி கேட்டு எவ்வளவு துடிச்சுப் போய்ட்டாரு தெரியுமா? கார் கூட ஓட்ட முடியல அவரால.. கையெல்லாம் அவ்வளவு நடுக்கம்.. பாசமில்லாம இதெல்லாம் எப்படி சாத்தியம்?” என்று அவள் சொல்ல,

“அவருக்கு என்மேல பாசம் இல்லைனு யார் சொன்னது?” என்று தோள் குலுக்கினான் அவன்.

“அப்புறம் ஏன் அவர்கிட்ட பேச மாட்டீங்குறீங்க?”

அவளது கேள்வியில் அசுவாரசியமாக அவளைப் பார்த்தவன்,

“பசிக்குது விது.. எதாவது வைச்சு கொண்டு வா” என்று சொல்ல, அவள் உடனடியாக சமயலறை நோக்கி விரைந்தாள். பேசிக்கொண்டிருந்த பேச்சை விட அவனது பசியே முதன்மையாகத் தெரிய, அதன் பின் அந்தப் பேச்சை மறந்தும் போனாள் அவள்.

கார்த்திகாவையும் இப்படித்தான் மறந்தாள் என்று நினைத்துக் கொண்டவனுக்கு இதழ்கள் விரிந்தன.

கார்த்திகாவின் நினைவு வருமே, ‘சீக்கிரம் சொல்லணும்’ என்று நினைத்துக் கொண்டான்.

மறைக்க வேண்டும் என்ற எண்ணமில்லை. அன்று மருத்துவமனையிலேயே சொல்ல வேண்டும் என்று நினைத்தான் தான். ஆனால், அதற்கான சூழல் அது இல்லை. சரியான சூழலில் சொல்ல வேண்டும் என நினைத்துத் தான் தள்ளிப் போட்டான்.

—----------------------------


அன்று ரத்தினவேலு தன் குடும்பத்துடன் சோமசுந்தரத்தின் வீட்டிற்குப் பேரனின் காதுகுத்திற்குப் பத்திரிகை வைக்க வந்திருந்தார். சோமசுந்தரம் உட்பட, அங்கிருந்த அனைவருக்குமே இது எப்படி சாத்தியமானது என்பது புரியவில்லை. எந்தவித திட்டமிடலும் சமரசமும் எதுவுமில்லாமல் இயல்பாக அந்தக் குடும்பம் ஒன்றிணைந்திருந்தது.

சோமசுந்தரம் ரதியைத் தவிர்த்து மற்ற அனைவரிடமும் புன்னகை முகமாகவே பேசினார். மேகநாதன் என்றுமே காதலுக்கு எதிரி இல்லையே! அவன் ரதியிடம் எப்போதும் போல பேசினான். கல்யாணிக்கு மனது நிறைவாக இருந்தது. விதுர்ஷாவின் இதழ்களில் நிரந்தரமாக ஒரு புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது.

குடும்பமாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போதே, பிரபாகரன் கையிலிருந்த இளமாறன் அழ ஆரம்பிக்க, ரதி குழந்தையை வாங்கிக் கொண்டு அருகிலிருந்த அறைக்குள் நுழைந்தாள். அது மேகநாதன்-விதுர்ஷாவின் அறை.

அனைவருக்கும் ராசாத்தி வந்து பழச்சாறு கொடுக்க, ரதி உள்ளே இருந்ததால் விதுர்ஷா அவளுக்கு வாங்கிக் கொண்டு போனாள்.

குழந்தை பால் குடிக்கும் போதே தூங்கிய இருக்க,

“சாரி எதாவது எடுத்துத் தரட்டுமா ரதி.. தொட்டில் கட்டி தம்பியைப் போடுறியா?” என்றாள் விதுர்ஷா.

“இருக்கட்டும்.. பெட்ல தூங்கிப்பான் அதெல்லாம்” என்று பதில் சொன்ன ரதிக்கு இன்னும் சரளமாக அண்ணி என்ற வார்த்தை வரவில்லை. அதை விதுர்ஷா உணர்ந்தாலும் எதையும் காட்டிக் கொள்ளவில்லை.

அவளிடம் பழச்சாறை நீட்டியவள், “அங்கே எல்லாரும் எப்படி? உன்னை நல்லா பார்த்துக்கிறாங்களா?” என்றாள் புன்னகையோடு.

ரதியுடன் உறவை வளரக்க விரும்பி, விதுர்ஷாவே பேச்சைத் தொடர்ந்தாள்.

“ம்ம்.. நல்லா பார்த்துக்கிறாங்க”

கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொன்னாலும் அவள் மனதிற்குள்ளாக விதுர்ஷாவிடம் எப்படி அதை சொல்வது என்று ஒத்திகை பார்த்தபடி இருந்தாள்.

அவளுக்காக இவ்வளவு தூரம் அவளது புகுந்த வீட்டில் இறங்கி வந்திருக்கின்றனர். அந்த நன்றியில் அவளாக ஒரு விஷயத்தை முடிவெடுத்திருந்தாள். அதை எப்படி விதுர்ஷாவின் மனம் வருந்தாமல் சொல்வது என்று தான் இந்த ஒத்திகை.

அவளுக்கு விதுர்ஷாவும் முக்கியம் தான். ஆனால், அதற்கான நேரம் இது இல்லை என்று நினைத்தாள் ரதி.

மேகநாதனுக்கு விபத்து என்றவுடனே பிரபாகரனிடம் அவள் மருத்துவமனைக்கு அழைத்துப் போகச் சொல்லி சண்டையிட, அந்த நிலையில் அவனாலும் பகை என்றெல்லாம் யோசிக்க முடியவில்லை. ரதியை அழைத்துக்கொண்டு அவன் தந்தையிடம் விவரம் சொல்லிவிட்டுக் கிளம்ப எண்ண, யாருமே எதிர்பார்க்காதபடி ரத்தினவேலுவும் சேர்ந்தே கிளம்பினார். இதுதான் வாய்ப்பு என்றெண்ணி ஜெகதீஸ்வரன் ஈஸ்வரிக்கு கண் காட்ட, அவரும் ஜெகதீஸ்வரனும் கூட அவர்களுடன் இணைந்து கொண்டனர்.

ஈஸ்வரியிடம் விதுர்ஷா தன்னை வந்து சந்தித்ததைச் சொல்ல வேண்டும் என்று எண்ணியிருந்த ரத்தினவேலுவிற்கு அதற்கான சரியான நேரம் கிடைக்கும் முன்னே இப்படி நடந்திருக்க, அவரால் சொல்ல முடியவில்லை.

என்னதான் அன்று மருத்துவமனையில் வைத்து இரு குடும்பமும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டாலும் அடுத்து பேரனின் காதுகுத்து விழாவில் அவர்களை முறைப்படி அழைப்பது பற்றி பேச்சு வீட்டில் எழும்போது அனைவரும் பயத்துடன் ரத்தினவேலுவின் பதிலை எதிர்பார்த்தபடி இருந்தனர். அவர்களது கணிப்பிற்கு நேர்மாறாக அவர் சம்மதித்ததில் ரதிக்கு தலைகால் புரியாத நிலை தான். ஈஸ்வரிக்குமே கணவனது மனமாற்றம் ஆச்சரியமாக இருக்க, அன்றிரவே அதற்கான விடையாக விதுர்ஷா தன்னை சந்தித்ததை மனைவியிடம் கூறினார் அவர்.

இதெல்லாம் ரதிக்குத் தெரியாது. அதனால் அவள் வேறுமாதிரி முடிவெடுத்து வைத்திருந்தாள்.

“நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க” என்ற பீடிகையுடன் ரதி தொடங்க,

“தப்பா நினைக்கிற அளவுக்கு என்ன சொல்லப் போற?” என்று புன்னகைத்தாள் விதுர்ஷா.

“அது வந்து.. உங்களைப் பார்த்தா மாமாவுக்குத் தேவையில்லாத நினைவு வரும்னு வீட்ல எல்லாரும் சங்கடப்படுறாங்க”

ரதி தயங்கி நிறுத்த, மனிதர்களைத் தெரியாதவளா விதுர்ஷா? அவள் விஷயத்தை யூகித்து விட்டாலும் அமைதியாக ரதியே சொல்லட்டும் என்றிருந்தாள்.

“ஃபங்க்ஷன் நல்லபடியா நடக்கணும். யாருக்கும் எந்த மனவருத்தமும் இருக்கக்கூடாதுனு நினைக்கிறேன்.. நீங்க வந்தால் தேவையில்லாத சங்கடம் வரும்”

பெரும் தயக்கத்தோடு தான் அவளும் சொன்னாள். விதுர்ஷா எந்தவித சுணக்கமும் இல்லாமல் தலையசைத்தாள்.

“இது இங்க வீட்ல..”

அவள் ஆரம்பிக்கும் போதே, “கோவில்ல தானே வைக்கிறீங்க.. பீரியட்ஸ்னு சொல்லி வீட்ல இருக்கேன். உங்க அண்ணன் மட்டும் வருவாரு சரிதானா?” என்று விதுர்ஷா சொல்ல,

“என்கிட்ட கேட்காம வாக்கு கொடுக்கிறது இதுவே கடைசியா இருக்கட்டும் விது” என்றபடியே உள்ளே வந்தான் மேகநாதன்.

அண்ணனைப் பார்த்ததும் ரதி அவன் கேட்டுவிட்டானோ என்ற பயத்துடன் எழுந்து நிற்க, மேகநாதன் விதுர்ஷாவை முறைத்துப் பார்த்தான். அவன் முகத்திலிருந்த கொடுமையில் ரதி துணுக்குற்றாள்.

“அவ அப்படிப் பேசிட்டு இருக்கா.. நீ என்னடானா சரி‌ சரினு தலையாட்டிட்டு இருக்க” என்று மனைவியை முறைத்தவன்,

“உனக்கு என் பொண்டாட்டி வேணாம். ஆனால் நான் வேணுமா? அதெப்படி என் பொண்டாட்டி வராத இடத்துக்கு நான் வருவேனு எதிர்பார்க்கிற?” என்று தங்கையைக் கேட்டான்.

“இல்லண்ணா.. அது வந்து”

“அம்மாவும் அப்பாவும் வருவாங்க. நாங்க வர்ல.. நீ எந்த பிரச்சனையும் இல்லாம நல்லபடியா உன் வீட்டு விசேஷத்தை நடத்து”

மேகநாதன் கோபத்துடன் சொல்லிவிட்டு, “வெளியே கூப்பிடுறாங்க வா” என்றபடி வெளியே போனான்.

விதுர்ஷா சங்கடத்துடன் ரதியைப் பார்த்தாள்.

“உன் அண்ணனை நான் பார்த்துக்கிறேன்.. நீ கவலைப்படாத” என்று விதுர்ஷா சொல்ல, ரதியின் முகம் தெளிவில்லாமல் இருந்தது. அவளது கண்கள் எந்த நொடியிலும் கண்ணீரைச் சிந்தத் தயாராக இருந்தன.

ரதியின் கைகளை எடுத்து தனக்குள் வைத்துக் கொண்டவள், “அய்யோ இதுக்குப் போய் இவ்வளவு வருத்தமா? சின்ன விஷயம் இது. நான் பார்த்துக்கிறேன்..” என்று தைரியம் கூறினாள்.

“அண்ணே இவ்வளவு கோவமா பேசிட்டுப் போறாங்க” என்றவள் கலக்கத்துடன் விதுர்ஷாவைப் பார்க்க, அவளுக்குச் சிரிப்பு தான் வந்தது.

“நான் தான் சொல்றேன்ல ரதி.. எந்தப் பிரச்சனையும் வராது.. வா வெளியே போகலாம்”

விதுர்ஷா குழந்தையைத் தூக்கிக் கொண்டு ரதியுடன் வெளிவர, அங்கே ரதியின் குடும்பம் முழுவதும் சங்கமித்திருந்தது. மேகநாதன் முகம் மட்டும் சரியில்லாமல் இருந்தது. அவன் கோபத்தை அடக்கிக் கொண்டிருந்தான்.

ரதியும் வந்ததும் அவர்கள் முறையாகப் பத்திரிகை வைத்து விழாவிற்கு அழைக்க, சோமசுந்தரமும் கல்யாணியும் மேகநாதனைப் பார்க்க, அவன் அவர்களை வாங்குமாறு சொன்னான்.

அவ்வளவு தான்! ரதி கலங்கிப் போனாள்.

“அண்ணா.. நான் தெரியாம சொல்லிட்டேன். மன்னிச்சிடுங்க.. பத்திரிகையை வாங்கிக்கோங்கண்ணா” என்று ரதி கெஞ்ச, அங்கிருந்த யாருக்கும் அவள் பேசுவது புரியவில்லை.

“என்ன ரதி?” என்று பிரபாகரன் கேட்க, கல்யாணியும் புரியாமல் மகளைப் பார்த்தார்.

“அது.. மாமா சங்கடப்படுவாங்கனு அண்ணியை வர வேணாம்னு சொன்னேன்.. அண்ணா கோவிச்சுக்கிட்டாங்க” என்று அவள் சொல்ல, ரத்தினவேல் உட்பட அதை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.

“என்னது?” என்று அதிர்ந்த கல்யாணி,

“லூசாடி நீ? இந்த வீட்ல நீ இப்போ இருக்கதுக்கு காரணமே உன் அண்ணி தான். அவளைப் போய் வரவேணாம்னு சொல்லியிருக்க” என்றார் கோபமாக.

“அவ தெரியாம சொல்லிட்டா.. அவளை மன்னிச்சுடுங்க மச்சான்” என்று பிரபாகரனும் மேகநாதனிடம் மன்னிப்புக் கோர, அவன் இறங்கி வருவது மாதிரி தெரியவில்லை.

ரத்தினவேல், “நீங்களா முடிவெடுத்துக்கிட்டா அப்போ பெரியவங்கனு நாங்க எதுக்கு இருக்கோம்? விதுர்ஷா வர்றதுனால நான் ஏன் சங்கடப்பட போறேன்?” என்று சொல்ல,

விது, “அய்யோ இதைப் பெரிசு பண்ண வேணாமே சித்தப்பா.. ரதி ஏதோ நல்லபடியா எல்லாம் நடக்கணும்னு சொல்லிட்டா” என்று கூற, உண்மையில் ஈஸ்வரியைத் தவிர்த்து அங்கிருந்த மற்றவர்களுக்கு அவர்களின் பிணைப்பு புதிதாகத் தான் தோன்றியது.

அனைவரும் ஆச்சரியமாகப் பார்க்க, ரத்தினவேல் விதுர்ஷா அவரை வந்து சந்தித்ததைச் சொல்ல, சோமுவும் விதுர்ஷா தன்னிடம் பேசியதைச் சொல்ல, மேகநாதனுக்கு இரண்டுமே புதிய செய்தி.

அவன் மனைவியை இதெல்லாம் தன்னிடம் சொல்லவில்லையே என்று பார்க்க, அவள் சொல்லும் நிலைமையா இருந்தது? என்று விழிகளாலேயே பதில் கேள்வி கேட்டாள் அவள்.

ரதி விதுர்ஷாவிடம் வந்து, “மன்னிச்சுக்கோங்க அண்ணி” என்று மன்னிப்புக் கேட்க,

“மன்னிப்பெல்லாம் எதுக்கு ரதி? உன்னை என்னால புரிஞ்சுக்க முடிஞ்சது” என்று அணைத்துக் கொண்டாள் அவள்.

ஈஸ்வரி மட்டும் தான் இன்னும் விதுர்ஷாவுடன் பேசாமல் இருந்தார். அவரையும் காலம் மாற்றும் என்ற நம்பிக்கை விதுர்ஷாவிற்கு இருந்தது.

“மாப்பிள்ளையை பத்திரிகையை வாங்கிக்க சொல்லுமா” என்று ரத்தினவேல் சொல்ல, விதுர்ஷா மேகநாதனைப் பார்த்தாள்.

அவளது பார்வையின் பொருள் அவன் அறியாததா?

அவன் உடனே முன்வந்து நின்று அழைப்பிதழைப் பெற்றுக்கொள்ள, அங்கே மீண்டும் சுமூகமான சூழ்நிலை நிலவியது.

அவர்கள் விடைபெற்றுச் சென்றவுடன், மனைவியிடம் வந்தவன் அவளிடம் தனியாக தங்கையின் பேச்சிற்காக மன்னிப்புக் கேட்டான்.

“நான் உன்னை ஆரம்பத்துல தள்ளி வச்சிருக்கக் கூடாதுடி.. எல்லாம் என்னால தான். எப்படி அவ நீ இல்லாம நான் மட்டும் வருவேன்னு நினைக்கலாம்?” என்று கேட்க, விதுர்ஷா அவன் கரங்களோடு தன் கரங்களைக் கோர்த்துக் கொண்டாள்.

“நீ வருத்தப்படுறியா விது?” என்று அவன் கேட்க, அவள் இடவலமாகத் தலையசைத்தாள்.

அவள் வாய் திறந்து பதில் சொல்லாததால் அவளது முகத்தைத் தன் பக்கம் திருப்பியவன் அவளது கண்களுக்குள் பார்க்க, அதில் வருத்தமேதுமில்லை.

அவன் நிறைவாகப் புன்னகைக்க, விதுர்ஷா அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். அவளது மனமறிந்து அவனும் அவளை அணைத்துக் கொண்டான்.

என் மனைவி தேவைப்படாத இடத்திற்கு நான் வருவேன் என்று நீ எப்படி நினைத்தாய் என்று ரதியிடம் அவன் கேட்ட ஒற்றைக் கேள்வியே அவளுக்குள் ரீங்காரமாகக் கேட்டுக் கொண்டே இருந்தது. இதைத்தானே அவள் தனது திருமண வாழ்க்கையில் எதிர்பார்த்தாள்? இன்னும் அவனது பழைய செயல்களுக்கான கசடுகள் அவள் மனதிலிருந்தாலும் அதை ஒதுக்கக் கற்றுக் கொண்டாள் அவள்.
அன்றிரவு உறங்கும் போது கூட அதிசயமாக அவனை ஒட்டிக்கொண்டு அவள் படுக்க, மேகநாதன் நெளிய ஆரம்பித்தான்.

“என்ன விது ஓவரா ஒட்டுற இன்னைக்கு?”

அவனது உணர்வுகள் கணவனாக விழித்துக் கொண்டன.

“ஒன்னுமில்ல” என்றவள் வாகாக அவனை இன்னும் நெருங்க, அவஸ்தையாக இருந்தாலும் அது அவனுக்கும் பிடித்து இருந்தது.

‘எல்லாம் சீக்கிரம் சரியாகிடும்’ மனதுக்குள் நினைத்துக் கொண்டவன் அவனது விருப்ப தெய்வமான முருகனுக்கு மனமார நன்றி சொல்லிக் கொண்டான்.



கருத்துக்களைப் பகிர:

 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
#18

கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. சோமசுந்தரத்தின் அருகில் நிற்க வேண்டும் என்பதற்காக மேகநாதன் அவரது அருகில் நின்றிருந்தான். ஆனால், அவனே எதிர்பாராமல் சோமசுந்தரம் மேகநாதனுக்கு இம்முறை பட்டம் கட்டச் சொல்ல, திகைப்பாக இருந்தாலும் ஊர் முன் மறுக்க முடியாமல் அதை ஏற்றுக் கொண்டான் அவன்.

அதில் மட்டுமில்லாமல் எல்லா சடங்குகளிலும் சோமசுந்தரம் அவனை முன்னிருத்த, அதையெல்லாம் கூட்டத்தில் நின்றவாறு ரசித்துக் கொண்டிருந்தாள் விதுர்ஷா.

பட்டு வேஷ்டி சட்டையில் காற்றுக்கு கலைந்த முடியைச் சரிசெய்தவாறே திரும்பியவனின் கண்கள் மனைவியின் ரசிப்பை உள்வாங்க, அவன் புருவத்தை மேலே உயர்த்தி என்ன என்றான். விதுர்ஷா இடவலமாகத் தலையசைக்க, நம்பாத பார்வையொன்றை அவள் புறம் வீசியவன் புன்சிரிப்புடன் வேலைகளுக்குள் புகுந்து கொண்டான்.

ரத்தினவேலுவின் வீட்டினர் அனைவரும் வர, விதுர்ஷாவும் கல்யாணியும் அவர்களுடன் ஐக்கியமாகி விட்டனர். சுரேந்திரன் தாமதமாகவே கோவிலுக்கு வந்தான். வந்ததும் விதுர்ஷாவிடம் மீனாவைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு அவனும் மேகநாதனுடன் சென்றுவிட்டான்.

கருடன் வானில் வட்டமிடவும் கும்பத்தை அகழிகையின் விமானத்தின் மீது வைத்தப் பின் அனைவரின் மீதும் தீர்த்தம் தெளிக்கப்பட்டது. அடுத்து நேரமாகவே அன்னதானம் ஆரம்பமாக, கூட்டம் தள்ளிச் சாய்ந்தது.

அதனால் இவர்கள் குடும்பமாய் அங்கிருந்த மண்டபத்தில் ஓரமாக ஒதுங்கி அமர்ந்தனர். ஆண்கள் அனைவரும் கோவில் வேலைகளில் இருந்ததால் பெண்கள் நால்வர் மட்டுமே அமர்ந்திருந்தனர். கல்யாணியும் ஈஸ்வரியும் ஊர் விஷயங்களைப் பேசிக் கொண்டிருக்க, அவர்கள் இருவரும் இணைந்து பேசிக் கொண்டிருந்தது ஊரிலுள்ள விஷயம் தெரியாத மற்றவர்களுக்குப் பேசு பொருளாகிப் போனது.

மற்றவர்களின் குறுகுறுப்பைக் கண்டுகொள்ளாமல் அவர்கள் பேசிக் கொண்டிருக்க, ரதியும் அவர்களுடன் இணைந்து கொண்டாள். விதுர்ஷா மீனாவுடன் பேசிக் கொண்டிருந்தாள். என்னதான் மீனாவின் பேச்சை செவிக்குக் கொடுத்தாலும் கண்கள் மேகநாதனை அவ்வப்போது கவனித்துக் கொண்டிருந்தன.

அதைக் கவனித்து, “ம்ம்க்க்கும்” என்று மீனா குறும்பாகத் தொண்டையைச் செறும, அவளிடம் கவனத்தைத் திருப்பிய விதுர்ஷா அவளது புன்னகையில் தானும் சிரித்தாள்.

சிரித்துக் கொண்டே மேகநாதனைப் பார்த்தவள் கண்களில் அவனைத் தயக்கத்துடன் பார்த்துக்கொண்டு நிற்கும் கார்த்திகா பட்டாள்.

‘இவங்க அன்னைக்கு ஹாஸ்பிடல் வந்தவங்களாச்சே’ என்ற எண்ணம் எழ, மேகநாதனிடம் இன்று பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள் அவள்.

கூட்டம் குறைவாக இருக்கும்போது மேகநாதன் விதுர்ஷாவைப் பார்த்துக் கண்ணசைக்க, அவள் அனைவரையும் அழைத்துக்கொண்டு அவனருகே வந்தாள்.

“கூட்டம் கம்மியா இருக்கு.. போய் சாப்டுங்க எல்லாரும் இப்பவே” என்று அவன் கூற, ரதியிடமிருந்து குழந்தையை வாங்கிக் கொண்டு மற்றவர்களை விதுர்ஷா அனுப்பி வைத்தாள்.

“என்கிட்ட குடுத்துட்டு நீயும் போ.. அவங்க கூடவே சாப்பிடு” என மேகநாதன் குழந்தைக்காகக் கைநீட்ட,

“வேணாம்.. நான் அவங்க வந்ததும் போய்க்கிறேன்” என்று விதுர்ஷா மறுத்துவிட்டாள்.

வேலை எல்லாம் முடிந்திருந்ததால் அவனும் மனைவியின் அருகிலேயே நின்று கொண்டான்.

விதுர்ஷா குழந்தையிடம் குழந்தை மொழியிலேயே பேச, என்ன புரிந்ததோ!? இல்லை புரியாமலோ கைகால்களை எல்லாம் உதைத்துக் கொண்டு அவளிடம் பேசிக் கொண்டிருந்ததான் இளமாறன்.

தலையை அங்குமிங்கும் ஆட்டிப் பேசும்போது இயல்பாக அவளது முகத்தின் முன் முடிக்கற்றை வந்து விழ, அவளது பேச்சினை ரசித்தவாறே அதைக் காதோரம் ஒதுக்கி விட்டான் மேகநாதன்.

விதுர்ஷா அதையெல்லாம் கவனிக்காமல் தன் வேலையைத் தொடர்ந்தாலும் தூரத்திலிருந்த கார்த்திகா அதை நன்கு கவனித்தாள். அதற்கு மேல் அவளால் அங்கு இருக்க முடியவில்லை. மனதில் சட்டென்று வெறுமை படர, உடனே வீட்டிற்குக் கிளம்பிவிட்டாள்.

கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்து முடிந்திருந்தது. இரவு எல்லாவற்றிற்கும் மீதப்பணம் கொடுக்க வேண்டி சோமசுந்தரம் அங்கேயே இருந்தார். மேகநாதனும் கடைசி பந்தி முடியும் வரை அங்கே இருந்து மேற்பார்வை பார்த்துவிட்டு வீட்டிற்குத் திரும்பினான்.

காலையிலிருந்து அங்குமிங்கும் அலைந்தது, நின்று கொண்டே இருந்தது என எல்லாம் சேர்த்து கால் வலி எடுக்க, அவன் காலை நீட்டி அமர்ந்து கொண்டான்.

விதுர்ஷாவும் கதவை அடைத்துவிட்டு அவனருகில் வந்து அமர்ந்து கொண்டாள்.

“கோவில்ல எல்லா வேலையும் முடிஞ்சதாங்க?” என்று அவள் கேட்க,

“ம்ம்.. முடிஞ்சது” என்றான் மேகநாதன்.

“நாளைக்கு நகைக் கடைக்குப் போய்ட்டு வந்துடலாமா? ரதி விஷேசமும் கிட்ட வந்திருச்சு.. குழந்தைக்கு தோடு, செய்ன் எல்லாம் வாங்கணும்” என்று அவன் கேட்க,

“ம்ம் போகலாம்ங்க” என்றாள் அவளும்.

“சரி அப்போ தூங்கு.. எனக்கும் டயர்டா இருக்கு.. லைட்டை ஆஃப் பண்ணிட்டு வா” என்றவாறு அவன் தூங்கப் போக, விதுர்ஷாவிற்கு சப்பென்று ஆகிப் போனது. அவள் மனமே இல்லாமல் விளக்கை அணைக்கப் போக,

“என்ன யோசிக்கிற? கேட்டுடு” என்றான் மேகநாதன் அவளைப் பார்த்துக்கொண்டே.

“இல்லை நாளைக்குப் பேசிக்கலாம்.. நீங்க டயர்டா இருக்கீங்க. தூங்குங்க” என்று விதுர்ஷா மனமே இல்லாமல் மறுக்க, மேகநாதனுக்கு சுத்தமாக தூக்கம் பறந்தோடி விட்டது.

“இந்த சஸ்பென்ஸோட என்னால தூங்க முடியாது. பரவாயில்ல சொல்லு” என்றவாறு எழுந்து அமர்ந்தான் அவன்.

விதுர்ஷா தயக்கத்துடன் அவனைப் பார்த்து, “அன்னைக்கு ஹாஸ்பிடல் வந்தாங்களே.. அவங்க யாருங்க?” என்று கேட்க, மேகநாதன் முகம் யோசனையாய் மாறியது.

“ஏன் இப்போ திடீர்னு கேட்குற”

“கோவில்ல அவங்கள பார்த்தேன். அதான்”

“ஓ”

“யாருங்க அவங்க?”

மேகநாதனுக்கும் இன்றே இதை முடித்துவிடலாம் என்ற எண்ணம் தான். ஆனால், எப்படி இவளிடம் சொல்வது என்று தான் தெரியவில்லை.

பெரும் தயக்கத்துடன், “அந்தப் பொண்ணை ஒரு காலத்துல நான் காதலிச்சேன்” என்று அவன் சொல்ல, விதுர்ஷா அதிர்வுடன் அவனைப் பார்த்தாள்.

“நி.. நிஜமாவா?”

நம்ப முடியாமல் அவள் உறுதிப்படுத்திக் கொள்ளக் கேட்க,

“ம்ம்” என்றவன் எல்லாவற்றையும் சொல்ல ஆரம்பித்தான்.

மேகநாதனுக்கு அவனது ஊரில் முறைப் பெண்கள் யாருமில்லை. அவனது வயதிலோ அல்லது அவனை விட ஒன்றிரண்டு வயது குறைந்தோ இருந்த மற்ற பெண்களும் கூட அவனது குடும்பப் பின்னனியால் விலகி தான் போவார்கள். இதற்கு நேர்மாறாக இருந்தாள் கார்த்திகா.

மேகநாதனை அவளுக்கு முன்பே தெரியும் தான். அவளது இளம் பருவத்தில் அவளையும் அறியாமல் நுழைந்தவன் அவன். முதலில் மறைந்தும் யாரும் அறியாமலும் ஏன் அவனே அறியாமலும் தான் அவனை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தாள்.

எல்லாம் அவள் கல்லூரிக்குச் சென்றதும் தலைகீழாகிப் போனது. புதிதாய் ஓர் நம்பிக்கை பிறக்க, மேகநாதன் பார்க்கவே அவனைப் பார்க்க ஆரம்பித்தாள். அவளது ஆசைப் பார்வைகள் மேகநாதனுக்கும் பிடித்திருந்தது தான் நிஜம். அவளது ஆளை விழுங்கும் பார்வைகள் அவனது மனதிற்குள்ளும் பெரிய சலனத்தை உண்டு பண்ணியிருந்தது. விடலைப் பருவத்தில் கூட அவன் இது மாதிரியான உணர்வுகளுக்கு ஆளானதில்லை. கார்த்திகா வெறும் பார்வைகளாலேயே அவனை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் சென்றாள்.

அவனது பார்வைகளும் மெல்ல உரிமைப் பார்வைகளாக மாற ஆரம்பிக்க, மேகநாதனிடம் துணிந்து காதலை சொல்லிவிட்டாள் கார்த்திகா.

“ஏய்.. என்ன வயசு உனக்கு? படிக்கப் போகாம காதல் கேட்குதா?” என்று அவன் அதட்டலிட,

கார்த்திகா குழம்பிப் போனாள். அவனது பார்வைகளில் பிடித்தத்தைக் காணவும் தான் அவள் துணிந்து காதல் சொல்லியது! ஆனால் இப்படி அவன் அதட்டவும், அவளுக்குக் கண்கள் கலங்கி விட்டது.

அவ்வளவு தான்! அவளது கலக்கத்தைப் பார்க்கவும் மேகநாதன் சிரித்துவிட்டான்.

“ஏய்.. சும்மா விளையாட்டுக்கு அதட்டுனேன். இதுக்குப் போய் அழுவியா” என்று அவன் புன்னகையுடன் கேட்க, அப்போதுதான் அவளால் சீராக மூச்சு விட முடிந்தது.

“அப்போ உங்களுக்கும் என்னைப் பிடிச்சிருக்கா?”

கார்த்திகா ஆவலாகக் கேட்க, மேகநாதன் ஆமென்று தலையாட்டினான். முழுதாக இரண்டு வருடம் எந்தவித தடையும் இல்லாமல் அவர்கள் திகட்டத் திகட்டக் காதலித்தனர். அடிக்கடி சந்தித்துப் பேச முடியாது என்பதால் அவர்களது காதலை அலைபேசி உரமிட்டு வளர்த்துக் கொண்டிருந்தது. எப்போதும் அலைபேசியுடன் திரியும் நண்பனைக் கண்டு சுரேந்திரன் கூட அலுத்துக் கொள்வான்.

எல்லாம் கார்த்திகாவிற்கு மாப்பிள்ளை பார்க்கும் வரையில்!

படிப்பை முடித்ததும் திருமணம் என்ற பேச்சை கார்த்திகாவின் தந்தை சுதர்சனம் எடுக்க, கார்த்திகா விஷயத்தை மேகநாதனின் காதுகளுக்குக் கொண்டு சென்றாள். அவனும் யோசிக்காமல் சுதர்சனத்திடம் பேச நேரில் சென்று விட்டான்.

“நீங்க வேற இனம். நாங்க வேற இனம். இதெல்லாம் சரிப்பட்டு வராதுங்க”

அவர் நேரடியாகவே எந்தப் பூச்சுமின்றி சொல்ல,

“கல்யாணத்துக்கும் எங்களோட அடுத்தகட்ட வாழ்க்கைக்கும் எது தேவையோ அது எங்க ரெண்டு பேர் கிட்டேயும் இருக்கு. நீங்க சொல்றதெல்லாம் கல்யாணத்துக்கு அவசியம் இல்லைனு நினைக்கிறேன்” என்றான் அவன் எளிதாக.

ஆனால், சுதர்சனத்தால் அப்படி எடுத்துக் கொள்ள முடியவில்லை. கார்த்திகா சமையலறையிலிருந்து அவர்கள் பேசுவதைப் கேட்பது புரிந்து தன் கோபத்தை மட்டுப்படுத்தியவர் எந்தவித சலனமுமில்லாமல் மேகநாதனைப் பார்த்தார்.

“சரி தம்பி.. உங்கப்பா அம்மாவோட வந்து பொண்ணு கேளுங்க. நான் கண்டிப்பா கட்டி வைக்கிறேன்”

சுதர்சனம் மேகநாதனுக்கு வாக்கு தந்தார். அவருக்குத் தான் சோமசுந்தரம் பற்றித் தெரியுமே! அவர் என்ன நினைத்து அப்படிச் சொன்னாரோ அது அப்படியே நிறைவேறியது.

சுவற்றில் அடித்த பந்தாய் மேகநாதன் திரும்பி சுதர்சனத்திடமே வந்தான். அவனது காதலுக்கு சோமசுந்தரம் அப்படியொரு எதிர்ப்பைக் காட்டியிருந்தார். கல்யாணியாலும் எதுவும் செய்ய முடியவில்லை.

“இப்போ எங்க வீட்ல ஒத்துக்கலைனா என்ன? அவங்களை மீறி உங்க பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்க நான் தயாரா இருக்கேன்”

அவன் தன் காதலில் உறுதியாக இருந்தான்.

“ஆனால், நான் தயாராக இல்ல. உங்களுக்கு குடும்ப அமைப்போட அருமை இன்னும் புரியல. குடும்பம் இல்லாம தனிமரமா நிற்கிற ஒருத்தருக்கு என்னால என் பொண்ணைக் கொடுக்க முடியாதுங்க” என்ற சுதர்சனம்,

“எங்க குடும்பத்தில சொத்து பிரிக்கிறதுல நடந்த சண்டையால தான் நானும் கார்த்திகாவோட அம்மாவும் தனியா வந்து வாழ்ந்தோம். எவ்வளவு கஷ்டப்பட்டோம்னு எங்களுக்கு மட்டும்தான் தெரியும். அந்த நிலைமை என் பொண்ணுக்கு வர வேணாம். அவ குடும்பமா வாழணும்னு ஆசைப்படுறேன்” என்று முடித்துக் கொண்டார்.

சுதர்சனம் ஆணி அடித்ததைப் போல கூற, அடுத்தடுத்து நடந்த மறுப்புகள் மேகநாதனை ஆத்திரம் கொள்ளச் செய்தன.

“கார்த்தி..” என்று அவன் ஆக்ரோஷமாகக் கத்த, உள் அறையில் இருந்தவள் வேகமாக வெளியே வந்தாள்.

அவளது கண்ணீரே அனைத்தையும் அவளும் கேட்டிருப்பாள் என்று பறைசாற்றியது. அவளது கண்ணீரில் அவளுக்கும் இது கஷ்டம் தானே என்று எண்ணியவன் வலிந்து தன் கோபத்தைக் கட்டுப்படுத்தினான்.

“நீ என்கூட வரியா? நாம கல்யாணம் பண்ணிக்கலாம்”

அவன் கைநீட்டி அழைக்க, கார்த்திகா அதிர்ந்து போய் தந்தையைப் பார்த்தாள். அவர் எதுவும் பேசவில்லை. அமைதியாக நடப்பதை வேடிக்கை பார்த்தார்.

அம்மா இல்லாத குறையே இல்லாமல் தந்தையும் தாயுமாக இருந்தவரை விட்டுவிட்டு வரச் சொல்கிறானா?

அவள் ஓரடி பின்னே நகர்ந்தாள். மேகநாதனின் கரங்கள் தானாக கீழிறங்கின.

“இதான் உன் முடிவா?”

அவன் கேட்ட த்வனியில் உடலுக்குள் நடுக்கம் பரவினாலும் அவளால் தந்தையை விட்டுவிட முடியாதே!

அவளால் அதற்கு பதில் பேச முடியவில்லை.

“ப்பா..” என்று அவள் அழுகையுடன் அழைக்க,

“நீ உள்ளே போ கார்த்திகா.. நான் பேசிக்கிறேன்” என்றார் சுதர்சனம்.

அவள் மேகநாதனைத் திரும்பிப் பார்த்தவாறே உள்ளே செல்ல, “நீங்க நினைக்கிறது என்னைக்கும் நடக்காது தம்பி. இதெல்லாம் வயசுக் கோளாறுல எல்லாரும் பண்றது தான். மறந்துட்டு உங்க வாழ்க்கையைப் பாருங்க” என்று நாசுக்காக அவனைக் கிளம்பச் சொன்னார் அவர்.

மேகநாதனுக்காகக் காத்திருந்த சுரேந்திரனுக்கு அவனது முகமே வேண்டிய தகவல்களைத் தந்தது. மேகநாதன் ஒரு வார்த்தை பேசவில்லை. அன்று மட்டுமல்ல. அடுத்து வந்த நாட்களிலும் கூட அவன் அப்படியே இருக்க, சுரேந்திரனுக்கு கார்த்திகாவை எண்ணி எரிச்சல் வந்தது.

‘என்ன பொண்ணு இவ.. ‌சும்மா இருந்தவனைக் காதல்னு சொல்லி உசுப்பேத்தி விட்டுட்டு இப்போ அப்பா ஆட்டுக்குட்டினு கதை சொல்லிட்டு இருக்கு’

அவன் மனதில் என்னதான் எரிச்சல் இருந்தாலும் நண்பனிடம் மூச்சுக் கூட விடவில்லை. தன்னால் என்ன செய்ய முடியும் என்று யோசித்துக் கொண்டிருந்தான். உண்மையில் அவனால் எதுவும் செய்ய முடியும் என்று தோன்றவில்லை. மிஞ்சிப் போனால் கார்த்திகாவிடம் பேசிப் பார்க்கலாம் என்று தோன்ற அதற்கான சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தான் அவன். ஆனால், அதற்குள்ளாக அவன் கேள்விபட்ட செய்தி அவனையே அதீத அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தது.

“அவ அப்பனைக் கேட்டுட்டா என்னைக் காதலிச்சா? என்கூட மணிக்கணக்கா போன்ல கொஞ்சுறப்போ தெரியலயா அவ அப்பனை?”

மேகநாதன் ஆத்திரத்திற்கு அவனைச் சுற்றிச் சிதறிக் கிடந்த பொருட்களே சான்று! அவனது அறையையே அலங்கோலமாக ஆக்கி வைத்திருந்தான்.

அவனது ஒவ்வொரு கேள்விக்கும், “விட்றா மச்சான் பார்த்துக்கலாம்.. விட்றா” என்ற ஒரே வாக்கியத்தைத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான் சுரேந்திரன்.

“ச்சே.. நான் என்னலாம் கனவு கண்டேன் மச்சான்.. அவளுக்கும் எனக்குமான வாழ்க்கையை அப்படி உருவாக்கி வச்சிருந்தேன். இவ என்னடானா கொஞ்சம் கூட குற்றவுணர்வே இல்லாம எண்ணி இருபது நாள்ல இன்னொருத்தனைக் கல்யாணம் பண்ணிக்க சரினு சொல்லியிருக்கா”

அவனுக்கு கோபம் போய் ஆற்றாமையாக இருந்தது. வாழ்க்கையில் மிக மோசமாகத் தோற்றுப் போய் விட்டதாக.. ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தான்.

“அவ மூஞ்சிலயே இனி முழிக்க கூடாது” என்றும்,

“மச்சான்.. இல்லடா எனக்கு மனசே கேட்கல.. அவளைப் பார்த்து நாக்கைப் பிடுங்கிட்டு சாகுற மாதிரி கேட்கணும்டா” என்றும் மாறி மாறி பேசிக் கொண்டிருந்தவனை சமாளித்துத் தேற்றுவதற்குள் சுரேந்திரனுக்குப் போதும் போதுமென்று ஆகிவிட்டது.

சிறிது நாட்களில் சுதர்சனமும் ஊரைக் காலி செய்துவிட்டுச் சென்றுவிட்டார். அவரது பூர்வீக ஊருக்குச் செல்வதாக விஷயம் காதிற்கு வந்தது. அதுவரை அவர்கள் இருந்த வீடு கார்த்திகாவின் தாய் வீட்டு வழி வந்த வீடு. சுதர்சனம் பாக்யா இருவரது திருமணம் முடிந்த கையோடு பாக்யாவின் பெற்றோர் ஒருவர் பின் ஒருவர் மறைந்திருக்க, சொந்த பந்தங்களால் சொத்துத் தகறாரில் மனக்கசப்பு ஏற்பட்டு சுதர்சனம் அவர்களை விட்டு விலகியிருந்தார். இப்போது பெண்ணுக்குத் திருமணம் கைகூட, அவரது சொந்த ஊரில் நடப்பது தான் சரியாக இருக்கும் என்றெண்ணி அங்கேயே சென்றுவிட்டார் அவர்.

ஊரைவிட்டுப் போகும் போதும் கார்த்திகா மேகநாதனைப் பார்த்தாளில்லை. அவளது திடீர் மனமாற்றம் கூட அவனுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. காதலிக்கும் போது அத்தனை முறை சுற்றிச் சுற்றி வந்தவள் காதல் வேண்டாம் என்பதையும் நாகரிகமாகச் சொல்லியிருக்க வேண்டாமா? அவள் செய்தது அவனுக்குப் பச்சோந்தித்தனமாகப்பட்டது.

‘ச்சீ இவ்வளவு தானா இவள்’ என்ற எண்ணம் வேறூன்ற, அவளது சுயநலத்தை நினைக்கும் போதெல்லாம் கோபத்தைக் கட்டுப்படுத்த அவன் வெகுவாக சிரமப்பட்டான் என்று தான் சொல்ல வேண்டும்.

முதல் காதல்! வலி அதிகமாக இருந்தது. மறக்க முயற்சி செய்தான். ஓரளவு அதில் வெற்றி பெற்றாலும் அந்த நிகழ்வில் இருந்தே மேகநாதன் மொத்தமாக சோமசுந்தரத்துடன் பேசுவதில்லை. அவரால் தான் காதல் கைகூடவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், அவரும் சற்று அதிகமாகவே வார்த்தைகளை விட்டுவிட்டார்.

அத்தனை நாளும் வயலும் தோப்புமென அலைந்து கொண்டிருந்தவன் சுரேந்திரனுடன் மட்டுமே சுற்றிக் கொண்டிருந்தான். நண்பனின் மனம் புரிந்தாலும்,

“கோபத்துல எதாவது சொல்றது தான்டா.. அதுக்காக வயசானவரை தோப்பு வயல்னு அலைய வச்சுட்டு நீ இப்படி சுத்திட்டு இருக்க” என்று அவன் நண்பனை அதட்ட,

“இல்லடா.. எனக்கு அவர் கூட சரி வராது. வேற எதாவது தொழில் தொடங்கலாம்னு இருக்கேன்” என்றான் மேகநாதன் ஸ்திரமாக.

‘இதெல்லாம் நடக்கிற காரியமா?’ என்பது போல சுரேந்திரன் அலுத்துக் கொள்ள, மேகநாதன் அதற்கான வேலைகளில் இறங்கினான். அப்படி ஆரம்பமானதே முருகன் டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ்.

தொழில் ஆரம்பிக்கும் போது முதலீட்டிற்காக அவன் ஏறாத வங்கிப் படிகள் இல்லை எனலாம். தொகை பெரியதாக இருக்கவே சூரிட்டி தேவைப்பட, வேறு வழியில்லாமல் சோமசுந்தரத்தின் முன் நின்றான்.

அவனது அந்த நிலையைப் பயன்படுத்தி சோமசுந்தரம் அவனது திருமணத்தைக் கையில் எடுத்துக் கொண்டார். அவரும் பார்க்கிறார் தானே.. காதல் என்று வந்ததில் இருந்து மேகநாதன் வீட்டில் யாருடனும் பேசுவதில்லை. கல்யாணி ரதியுடன் கூட பேசுவதைக் குறைத்திருந்தான். எங்கே மகன் திருமணமே வேண்டாம் என்று இருந்து விடுவானோ என்ற பயத்தில் இருந்தவர் அன்பரசியைப் பார்க்கவும் அவரது சூழ்நிலையையும் பயன்படுத்தி எல்லாவற்றையும் நடத்தி முடித்திருந்தார்.

மேகநாதன் கல்யாணத்தை நிறுத்த எடுத்த முயற்சிகளும் அதன்பின் நடந்ததும் விதுர்ஷா அறிவாளே என அவன் மனைவியைத் திரும்பிப் பார்த்தான்.


கருத்துக்களைப் பகிர:

 
Status
Not open for further replies.
Top