All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கரை சேருமா இந்த ஓடம்..?

Status
Not open for further replies.

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
#19

“அப்போ தான் கார்த்திகா பண்ணதுல இருந்து வெளில வந்திருந்தேன். உடனே கல்யாணம்! திரும்பவும் என்னோட விருப்பு வெறுப்பு மதிக்கப்படாமப் போக உன்கிட்ட வந்தேன். முதல் சந்திப்பே நமக்குள்ள சரி வர்ல”

“என்ன சரி வர்ல? இல்ல என்ன சரி வர்ல? எல்லாரும் சொல்வாங்களே மஞ்சள் கயிறு மேஜிக் நடக்கும்னு.. அது மாதிரி நடந்து உங்களுக்கு என்னைப் பிடிச்சிரும்னு நினைச்சு தான் வாழ்ந்து பாருங்க பிடிக்கலனா டிவோர்ஸ்னு சொன்னேன்.. ஆனா, அதுக்கு நீங்க வேற மாதிரி அர்த்தம் பண்ணுவீங்கனோ அப்படிலாம் பேசுவீங்கனோ நான் எதிர்பார்க்கவே இல்லை.. அதுவும் என் அம்மாவைப் பத்தி.. ”

விதுர்ஷா முகத்தைச் சுளிக்க, “சாரி” என்றான் மேகநாதன் தன்மையாக.

அப்போதும் அவள் முகம் தெளியவில்லை. கசடுகளை ஒதுக்கத்தான் கற்றுக் கொண்டாள். மறக்க அல்ல இல்லையா? அவள் மனச் சுணக்கத்துடன் அவனைப் பார்த்தாள்.

“நான் இதைச் சொல்லியே ஆகணும் விது.. நீ தப்பா நினைச்சாலும் பரவாயில்ல. முதல்ல எனக்கு அத்தை மேலோ மாமா மேலோ நல்ல அபிப்பிராயம் கிடையாது. நான் காதலுக்கு எதிரி இல்லை. ஆனால், அத்தையோட அந்த முடிவு சுயநலமா தெரிஞ்சது”

மீண்டும் மீண்டும் அவன் அந்தப் புள்ளியில் நிற்பதில் அவள் அலுப்பாக அவனைப் பார்த்தாள்.

“அம்மா செஞ்சது தப்பு தான். ஆனால் அவங்க நிலை அந்த மாதிரி. சரி நீங்க சொல்லுங்க. அவங்க என்ன பண்ணிருக்கணும்னு நீங்க நினைக்கிறீங்க?”

விதுர்ஷாவின் கேள்விக்கு மேகநாதனிடம் பதிலில்லை.

அவனிடம் பதிலில்லை எனவும், “எதுவும் பண்ணிருக்க முடியாதுங்க.. சில விஷயங்கள் வாழ்க்கைல நம்ம கை மீறி நடக்கத்தான் செய்யும்” என்று கூற, மேகநாதனும் தலையசைத்தான்.

“சரி அதெல்லாம் விடுங்க.. கார்த்திகா கல்யாணம்னு தானே போனாங்க.. இப்போ ஏன் வந்திருக்காங்க? கழுத்துல தாலி இல்லையே?”

விதுர்ஷாவின் கேள்வியில் தயங்கியவன், “அந்தக் கல்யாணம் நின்னுடுச்சாம்.. இவங்கள விட பணக்கார சம்பந்தம் ஒன்னு கிடைக்கவும் பையனோட அப்பாவும் அம்மாவும் கல்யாணத்தை நிறுத்திட்டாங்க. முடிவான கல்யாணம் திடீர்னு நின்னு போகவும் ஊருக்குள்ள பல பேச்சு வந்து அடுத்து எந்த நல்ல சம்பந்தமும் வரலயாம். அப்படியே வந்தாலும் ஜாதகம் அப்படி இப்படினு வரிசையா தடங்கல் போல.. ஊர் மாறி வந்தது ராசி இல்லைனு திரும்ப அவங்கப்பா இங்க கூட்டிட்டு வந்திருக்காரு. இங்கே வந்து நம்ம கல்யாணம் பத்தியும் நீயும் நானும் சேர்ந்து இல்லைனும் யாரோ சொல்லியிருக்காங்க.. எனக்கு ஆக்ஸிடென்ட் ஆன அன்றைக்குத் தான் என்னை வந்து பார்த்தாள்.. நாம ஒன்னா இல்லைனு நினைச்சு..” என்று நிறுத்த,

விதுர்ஷா, “கல்யாணம் பண்ணிக்க கேட்டாங்களா?” என்றாள் அவளாகவே ஊகித்து.

மேகநாதன் முகம் இறுகி ஆமென்று தலையாட்ட, அதன் பின் அவனிடம் பேச எதுவும் இல்லை என்பது போல அவள் படுத்துக்கொள்ள, மேகநாதன் குழம்பிப் போனான்.

முன்னாள் காதல் பற்றிப் பேசியிருக்கிறான். அவள் திரும்ப வந்து கல்யாணம் செய்து கொள்ளக் கேட்டதாகக் கூறியிருக்கிறான். இப்படி அதைப் பற்றி எதுவும் பேசாமல், அவள் தூங்கப் போக, மேகநாதன் அவளை எழுப்பினான்.

எழுந்து அமர்ந்தவள், “என்னங்க?” என்று கேட்க,

“என்ன நீ பாட்டுக்குத் தூங்குற? உனக்கு வருத்தமில்லையா?” என்றான்.

“எதுக்கு வருத்தப்படணும்?”

விதுர்ஷா சாதாரணமாகக் கேட்கவும் அவனே குழம்பிவிட்டான்.

“அப்போ கோபமும் இல்லையா?”

“அட எதுக்கு? சரி எனக்கு ஒரு விஷயம் சொல்லுங்க.. அவங்கள கல்யாணம் பண்ணிக்கப் போறீங்களா?” என்று கேட்க, மேகநாதன் அவளை எரித்துவிடுவதைப் போல பார்த்தான்.

“கோபம் வேணாம். அது நடக்கப் போறதில்லை.. அப்படியிருக்க நான் ஏன் கோபமோ வருத்தமோ படணும்?”

அவள் கேள்வியாகவே பதிலைச் சொல்லிவிட்டு மீண்டும் படுத்து விட்டாள்.

“இதுக்காடா இவ்வளவு நாள் தள்ளிப்போட்ட நீ?” என்று அவனது மனசாட்சி கிண்டலாக வினவ,

“இவ இப்படி ரியாக்ட் பண்ணுவானு எனக்கு மட்டும் தெரியுமா என்ன?” என்று பதில் கொடுத்தவனும் தோள்களைக் குலுக்கிவிட்டுப் பக்கத்தில் படுத்துக் கொண்டான்.

மறுநாள் எப்போதும் போல் விடிய, காலை உணவு மேசையில் அவனுக்குப் பரிமாறிக் கொண்டிருந்தாள் விதுர்ஷா.

“நகைக் கடைக்குப் போகணும்னு சொன்னீங்களே.. எப்போ ரெடியாகட்டும்?”

அவள் கேட்கும்போது தான் கல்யாணி சமையலறையிலிருந்து வெளியே வந்தார்.

“நான் ரெண்டு மணிக்கு வந்து உன்னைக் கூப்பிட்டுக்கிறேன்”

இட்லியை பிய்த்தபடி அவன் பதில் கூற, “மாமா அத்தை கிட்ட சொல்லிட்டீங்களா?” என்று கேட்டாள் விதுர்ஷா.

“அவங்க கிட்ட சொல்றதுக்கு என்ன இருக்கு?” என்று அவன் கேட்க, பதில் பேசாமல் அவனைப் பார்த்தாள் அவள்.

அந்தப் பார்வையில், “அம்மா கிட்ட வேணும்னா சொல்றேன்” என்றவன் கல்யாணியை அழைத்து விஷயத்தைக் கூறி வேறு எதுவும் வாங்க வேண்டுமா என்பது போல் கேட்க,

“துணியும் எடுத்துட்டு வந்துடுங்க வேலையோட வேலையா.. மத்தபடி தட்டு சாமானெல்லாம் ரெண்டு நாள் முன்னாடி வாங்கிக்கலாம்” என்றார் அவர்.

அவர்கள் மூவரும் பேசிக் கொண்டிருக்கும்போதே, சோமசுந்தரம் உணவருந்த வந்தார்.

விதுர்ஷா மீண்டும் கணவனைக் கணவனைப் பார்க்க, அவனோ உன் பார்வையைச் சந்தித்தால் தானே என்றபடி கீழே குனிந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவளும் பரிமாறும் சாக்கில் எப்படி எப்படியோ அவனது பார்வையைச் சந்திக்க முயல, அதற்கு அவன் இடம் கொடுக்கவே இல்லை.

சட்டென்று கோபம் தலைதூக்கவும் அவள் பரிமாறுவதை விடுத்து அறைக்குச் செல்ல, கல்யாணியும் சோமசுந்தரமும் வித்தியாசமாக அவர்களைப் பார்த்தனர்.

“என்ன மேகா? உன் பொண்டாட்டி கோபமா போகிற மாதிரி தெரியுதே.. என்னாச்சு?” என்று கல்யாணி விசாரித்துக் கொண்டே சோமசுந்தரத்திற்குப் பரிமாற,

அவனுக்கு அதற்கு மேல் உணவு இறங்கவில்லை. அலுப்பாக அவனும் அறைக்குள் சென்றான்.

“என்னடி?” என்று கேட்டவனின் குரலில் சலிப்பு மட்டும்தான் இருந்தது.

“மாமா கிட்ட இப்போ ஏன் பேச மாட்டேங்குறீங்க? அப்போ கார்த்திகா இன்னும் உங்கள பாதிக்குறாங்களா?”

விதுர்ஷாவின் குரலில் கணக்கிட முடியாத அளவிற்கு கோபம் இருந்தது. அவன் தன் முதல் காதலைப் பற்றிச் சொல்லும் போது அதிர்ந்தாலும் அவள் நிகழ்காலத்தை எண்ணி மனதைச் சமன்செய்து கொண்டாள். ஆனால், தற்போதைய மேகநாதனின் நடவடிக்கை அவளுக்குள் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.

“ப்ச் எதுக்கும் எதுக்கும் முடிச்சு போடுற?”

அவன் அதட்ட, விதுர்ஷா அவனைத் தீயாக முறைத்தாள்.

அவளது முறைப்பில் உடனே இறங்கி வந்தவன் அவளை அருகில் இருத்தி, “அவர் என் வாழ்க்கையை கையிலெடுத்தது தான் எனக்குப் பிடிக்கல விது.. இப்போ எல்லாம் சரியாகிடுச்சு.. நீ கொஞ்சம் யோசி.. நமக்குள்ள எதுவுமே சரியாகலனா அது நம்ம ரெண்டு பேரோட வாழ்க்கையை எப்படி பாதிச்சிருக்கும்?” என்று சொல்ல,

“எனக்கு உங்க காரணம்லா வேணாம்ங்க.. நீங்க மாமா கூட பேசணும் அவ்ளோதான்” என்றபடி நின்றாள் அவள்.

இப்போது அவன் கோபமாகப் பார்க்க, அவள் கொஞ்சம் இறங்கி வந்தாள்.

“எனக்காகப் பேசுங்க” என்று அவள் சலுகைக் குரலில் கேட்க,

“படுத்துற விது” என்று அலுத்துக் கொண்டாலும் அவனுக்கு மறுக்கத் தோன்றவில்லை.

அதன் படியே மேகநாதன் ரதியின் விசேஷத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்று சோமசுந்தரத்திடம் கலந்து பேசினான். கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கும் மேலான இடைவெளியில் இனி இப்படித்தான் என்று அவரும் பழகியிருந்தார். ஆனால் அதற்கு நேர்மாறாக தற்போது அவன் வந்து அவருடன் கலந்து பேசியதில் மகிழ்ந்துதான் போனார்.

___________________

ரதியின் குழந்தைக்கு அம்மன் கோவிலில் இருக்கும் மண்டபத்தில் வைத்து காது குத்தும் வைபவம் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது.

மடியில் குழந்தையை வைத்தபடி அமர்ந்திருந்தான் மேகநாதன். தாய்மாமன் மடியில் வைத்து காது குத்த வேண்டும் என்ற ரதியின் எண்ணம் வெகுசிறப்பாக ஐந்து நிமிடங்களுக்கு முன்னர் தான் நடந்து முடிந்திருக்க, அவன் அழும் குழந்தையைச் சமாதானம் செய்து கொண்டிருந்தான்.

சிவநேசனையும் ரதி அழைத்திருந்ததில் விதுர்ஷா மனம் மகிழ்ந்து போனாள். அதிலும் ரத்தினவேலு சிவநேசனிடம் புன்னகை முகமாகப் பேச, அங்கே மூவர் கூட்டணி உருவானதை நிறைவான புன்னகையுடன் பார்த்திருந்தாள் அவள். சிவநேசனும் ரத்தினவேலுவிடம் தன் பங்கிற்கு மன்னிப்புக் கேட்க, ரத்தினவேலு அதை தலையசைத்து ஏற்றுக் கொண்டார். சோமசுந்தரத்திடம் ரத்தினவேலு அழைப்பு விடுக்கும் போதே மன்னிப்புக் கேட்டிருக்க, அங்கே பகை விலகி நட்பு அரும்பு விடத் தொடங்கியிருந்தது.



ஈஸ்வரி மட்டுமே விதுர்ஷாவிடம் தள்ளியிருந்தார். ரத்தினவேலுவே இறங்கி வந்துவிட்டதால் அவருக்கு ஒன்றுமில்லை தான். ஆனாலும் இத்தனை வருட இடைவெளி சட்டென்று விதுர்ஷாவுடன் பேச இசைவு தரவில்லை. அன்பரசியின் இறப்பிற்குக் கூடப் போகவில்லை என்பது பெரும் குற்றவுணர்வாய் அவரைக் குடைந்து கொண்டிருந்தது.

‘அவங்க பேசலைனா என்ன நாம பேசலாம்’ என்ற எண்ணத்தில் அவரை நோக்கிப் போனாள் விதுர்ஷா.

“சித்தி எதாவது வேலை இருக்கா?” என்று அவள் இயல்பாகக் கேட்கவும்,

“இல்லம்மா எல்லாம் முடிஞ்சது.. அப்பா எங்கே? அவர் சாப்பிட்டாரா?” என்று ஈஸ்வரி திருப்பிக் கேட்க, விதுர்ஷாவிற்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை.

‘ஈஸ்வரி சித்தி தன் அப்பாவைப் பற்றி விசாரிக்கிறாரா?’

“சித்தப்பா,மாமா கூட இருக்காங்க சித்தி”

குதூகலமாகப் பதில் சொன்னாள் அவள். கொஞ்சம் சிரமப்பட்டால் போதும் என்று தான் நினைத்திருந்தாள். ஆனால், அதற்கு அவசியமே இல்லாததைப் போன்று அவர் மிக இயல்பாகப் பதிலளித்ததும் அவளுடைய தந்தையைப் பற்றி விசாரித்ததும் அவளை ஆச்சரியப்படுத்தியது. ஈஸ்வரியும் அப்போது தயக்கங்களை ஒதுக்கி வைத்துவிட்டு விதுர்ஷாவுடன் பேச வேண்டும் என்று அல்லவா நினைத்துக் கொண்டிருந்தார்? அதனால் வந்த வாய்ப்பை விடாமல் பற்றிக்கொண்டார்.

“உனக்கு என்மேல எந்தக் கோபமும் இல்லையாமா?”

ஈஸ்வரி சங்கடமாகக் கேட்க, விதுர்ஷா புரியாமல் பார்த்தாள்.

“நீங்க என்ன பண்ணீங்க சித்தி? நான் ஏன் கோபப்பட போறேன்?”

“அக்கா மேலே கோபமா இருந்த வரை எனக்கு ஒன்னும் தெரியல.. அக்கா செத்ததுக்கு கூட நான் வரலயே” என்ற ஈஸ்வரியின் கண்களில் மெலிதான நீர்ப்படலம்.

“நிஜம்மாவே எங்களுக்கு விஷயம் மறுநாள் தான்மா தெரியும்.. ஆனால் அதுக்குள்ள என்னென்னவோ நடந்து முடிஞ்சிருச்சு” என்று அவர் வருத்தமாகப் பேச, அவரது கைகளை ஆதரவாய்ப் பிடித்துக் கொண்டாள் விதுர்ஷா.

அவர்கள் இருவரும் பேசுவதை அதிசயமாகப் பார்த்துக் கொண்டே அருகில் வந்தான் ஜெகதீஸ்வரன்.

“என்ன இங்க புதுக் கூட்டணி உருவாகுது போல?” என்று அவன் கிண்டலாய்க் கேட்க,

அவசரமாக முகத்தை சீராக்கி, “டேய் வாலு.. இங்கே என்ன உனக்கு வேலை? உன்னைப் பரிமாறுற இடத்துல தானே அப்பா இருக்கச் சொன்னாரு?” என்றார் ஈஸ்வரி மிரட்டலாக.

“அங்கே தான் இருந்தேன்.. அப்பா உங்களைக் கூப்பிட்டாரும்மா.. அதான் சொல்ல வந்தேன்” எனக் கூறிவிட்டு அவன் இடத்தை விட்டு அகல, ஈஸ்வரியும் விதுர்ஷாவிடம் சொல்லிவிட்டு அவன் பின்னே சென்றார்.

விதுர்ஷா இப்போது தனியாக நிற்க, வழக்கம் போல கண்கள் கணவனைத் தேடியது. அவன் அப்போது தான் கல்யாணியிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

விதுர்ஷாவிற்கு மனம் அப்படியொரு நிறைவாக இருந்தது. அவளது வாழ்க்கைக்கு இப்படி ஒரு இரண்டாம் பாகம் இருக்குமென அவள் கனவிலும் நினைத்ததில்லை. மேகநாதனின் இப்போதைய நடவடிக்கைகளை எல்லாம் பார்த்தால் இவனா நம்மிடம் அப்படியெல்லாம் நடந்து கொண்டான் என்று தான் இருந்தது. அவளது வாழ்வின் தாரக மந்திரமே, “மாற்ற முடியாத விஷயங்களை அப்படியே விட்டுவிட வேண்டும்” என்பது தான். அவர்களது திருமணமும் சரி, மீண்டும் இருவரும் இணைந்ததும் சரி.. இரண்டையும் அவள் அதன்படியே ஏற்றுக் கொண்டாள். கஷ்டங்களை நினைத்துக் கொண்டே காலமெல்லாம் இருப்பதில் அவளுக்கு உடன்பாடு இல்லை. மன்னிப்பு கேட்டுவிட்டான். மன்னித்தாளா என்றால் இல்லை.. மறக்க முயற்சி செய்கிறாள். இன்றுவரை!

அவன் மன்னிப்புக் கேட்ட விதம் வேறு அவளது நினைவுக்கு வர, இதழ்கள் சிறியதாய் விரிந்து கொண்டன.

அவளருகில் வந்தவன், “என்ன இப்படி வச்ச கண் வாங்காம பார்க்கிற? அவ்ளோ அழகா இருக்கேனா என்ன?” என்று புருவம் உயர்த்த,

“நீங்க கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்டீங்களே.. அதை நினைச்சுட்டு இருந்தேன். சிரிப்பு வந்துடுச்சு” என்றாள் அவள்.

“அதுல சிரிக்க என்ன இருக்கு?”

“அதெப்படிங்க யோசிக்காமல் கால்ல சடார்னு விழுந்தீங்க?”

புன்னகை முகமாகக் கேட்க,

“என் பொண்டாட்டி கால்ல விழுறதுக்கு நான் ஏன் யோசிக்கணும்?” என்றான் தோள்களைக் குலுக்கியவாறு.

அவள் அதற்கும் சிரிக்க, “வீட்டுக்குப் போய் நீ பாட்டுக்கு என்னைப் பார்த்து சிரிச்சுட்டு இரு. இப்போ வா.. சாமி கும்பிட்டுட்டு வந்துடலாம்” என்று அவளை அழைத்துக்கொண்டு மண்டபத்திற்கு வெளியே வந்தான் மேகநாதன்.

அவள் கைகளை அவனது கைகளோடு கோர்த்துக் கொள்ள, அவன் சன்னிதானத்தை நோக்கி நடந்தான். அவர்கள் உள்ளே போவதற்கும் கார்த்திகா வெளியே வருவதற்கும் சரியாக இருந்தது.

கார்த்திகாவைப் பார்த்தாலும் அவளை வெகு இயல்பாகத் தாண்டி அவன் கோவிலுக்குள் நுழைய, கார்த்திகாவின் விழிகள் ஒரு நொடி அவர்களது பிணைந்திருந்த கைகள் மீது படிந்து மீண்டது. அவள் மனம் ‘ஹோ’வென்று அரற்றியது.

மேகநாதனைப் போல் இயல்பாக விதுர்ஷாவால் இருக்க முடியவில்லை. அவள் பிடித்திருந்த அவனது கைகளை விட, திரும்பி மேகநாதன் பார்த்த அழுத்தமான பார்வையில்,

“நீங்க சாமி கும்பிடுங்க.. இதோ வந்துடுறேன்” என்று அவள் நழுவினாள்.

சன்னிதானத்தைச் சுற்றி வந்த கார்த்திகாவைப் பின்தொடர்ந்தவள், “கார்த்திகா” என்று சத்தமாக அழைக்க, அவள் திரும்பிப் பார்த்தாள். அங்கே விதுர்ஷா நின்றிருக்க, அவளது முகம் கசங்கியது.

“சொல்லுங்க” என்று அவள் சொல்ல,

“உங்க கிட்ட கொஞ்சம் பேசலாமா?” என்றாள் விது.

“அவ கிட்ட உனக்கு என்ன பேச்சு?” என்ற குரலில் விதுர்ஷா திரும்ப, அங்கே மேகநாதன் நின்றிருந்தான்.

“ப்ச்.. நீங்க சாமிக் கும்பிட போங்கனு சொன்னேன்” என்று அவள் அலுக்க,

“எதுவா இருந்தாலும் என் முன்னாடி பேசு” என்றான் அவனும்.

கார்த்திகா அங்கே நிற்பதா இல்லை போவதா என்று குழம்ப, விதுர்ஷா அவனைப் பேசி சரிகட்டி அனுப்பிவிட்டு கார்த்திகாவின் பக்கம் திரும்பினாள்.

“கஷ்டமா இருக்கா?”

விதுர்ஷா மொட்டையாகக் கேட்க, அதன் அர்த்தம் புரிந்தவளுக்கோ அவமானமாக இருந்தது.

அவளது முகத்தை சரியாகப் படித்த விதுர்ஷா, “நான் தப்பான அர்த்தத்தில் கேட்கலங்க.. கைநழுவிப் போன பிறகு தான் நமக்கு சில விஷயங்களோட மதிப்பு புரியும். நாம செஞ்ச முட்டாள்தனம் ரொம்ப பெரியதா தெரியும். மனுசங்க இயல்பு இதுதானே? நீங்களோ நானோ விலக்கு இல்லை” என்றாள் ஆதூரமாக.

“நீங்க அவரை சந்திச்சதை சொன்னார்”

மெதுவாக விதுர்ஷா சொல்ல, கார்த்திகாவிற்கு செத்துவிடலாம் போல இருந்தது.

“நீங்க சேர்ந்துட்டீங்கனு எனக்குத் தெரியாது. அதனால் தான்” என்றவளுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.

“நாங்க சேராம இருந்தால்கூட அவர் உங்களை ஏத்துக்க மாட்டார் கார்த்திகா. அந்த எண்ணத்தை அழிச்சுடுங்க.. முக்கியமா என்னையும் அவரையும் பொதுவெளியில் பார்க்கிறப்போ கொஞ்சம் கவனமா இருங்க. இது கிராமம்.. நீங்களும் கல்யாணம் ஆகாத பொண்ணு. விஷயம் வேறு விதமா திரிஞ்சா அது நல்லா இருக்காது”

அவள் சூசகமாகச் சொல்ல வருவது புரிந்து கார்த்திகாவின் விழிகள் கலங்கிப் போனது.

“சாரி.. இனிமேல் இதுமாதிரி நடக்காம நான் பார்த்துக்கிறேன்”

அவளது மறுமொழியில் விதுர்ஷா அவளைப் பார்த்து புன்னகைத்தாள்.

‘சீக்கிரம் இவங்களுக்குத் திருமண யோகம் கூடி வரணும் கடவுளே’ என்று அவளுக்காக ஒரு வேண்டுதலை அங்கேயே வைத்தவள் அவளிடம் தலையசைத்துவிட்டு மேகநாதனிடம் சென்றாள்.

அவன் சாமி கும்பிடாமல் அவளுக்காகக் காத்திருந்தான்.

“என்ன பேசுன?” என்று அவன் கேட்க,

“அடடே.. உங்க முன்னாள் காதலியை நான் ஒன்னும் கடிச்சு வைச்சுடல” என்று அவனைப் பார்த்துப் பழிப்புக் காட்டினாள் அவள்.

அவன், “நீ கடிச்சு வைச்சா ஒன்னுமில்ல” என்று தோள்களைக் குலுக்க,

“ஒரேயடியாக அவளுக்கு வில்லி சாயம் பூசாதீங்க. பாவமா இருக்கு அந்தப் பெண்ணைப் பார்த்தால்” என்றாள் விது.

அவளைக் கூர்ந்து பார்த்தவன், “அப்போ அவ சொன்ன டீல்க்கு ஓகே சொல்லிடலாமா?” என்று கேட்கவும்,

“என்னது?” என்று இடுப்பில் கைவைத்து அவள் முறைத்துப் பார்க்க, பயந்தவனாய் தோப்புக்கரணம் போட்டான் மேகநாதன்.

யாரும் பார்த்துவிடப் போகிறார்கள் என்று அவள் அவசரமாக சுற்றும் முற்றும் பார்க்க, அங்கே யாருமில்லை.

தலையில் அடித்துக்கொண்டு அவனை அவள் உள்ளே அழைத்துப் போக, அவர்களுக்கு இடப்பக்கமாக இருந்த தூண் மறைவிலிருந்து பார்த்த கார்த்திகாவிற்கு ஒன்று மட்டும் புரிந்தது.

அது மேகநாதனின் காதல்!

தம்பதியராய் இருவரும் காளியம்மன் சன்னதியில் நின்றிருந்தார்கள்.

மேகநாதன் அதிகம் இறைநம்பிக்கை உடையவன். அவன் வெகுநேரம் கண் மூடியபடி வேண்டிக்கொண்டிருந்தான்.

விதுர்ஷா சாமி கும்பிட்டுவிட்டு விழிகளைத் திறந்தாள். அர்ச்சகர் எதிரில் விபூதி தட்டுடன் நின்றிருந்தார். அவள் புன்னகையுடன் பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டாள்.

சிறு கீற்றாய் நெற்றியில் இட்டுக் கொண்டவள், கணவனுக்கும் திருநீற்றைப் பூசிவிட்டாள். மனைவியின் ஸ்பரிசத்தில் கண் திறந்தவன் அவளைப் பார்த்து புன்னகைத்தான். அவனது மனமும் வெகுநாளைக்குப் பிறகு நிறைவாக இருந்தது.

விழா நிறைவாக முடிவுற, சிவநேசன் அவசர வேலையென்று உடனே கிளம்பிவிட்டார்.

இரவு மங்கிய நிலவொளியில் அவர்களது வீட்டு மொட்டைமாடியில் விதுர்ஷாவின் மடியில் மேகநாதன் படுத்திருந்தான்.

“விது”

“ம்ம்”

“தேங்க்ஸ்”

அவள் எதற்கு என்று கேட்கவில்லை. அமைதியாக இருந்தாள்.

“எதுக்குனு கேட்க மாட்டீயா?”

அவள் புன்னகையோடு அவனைப் பார்த்தாள்.

“எல்லாத்துக்கும்”

“எல்லாத்துக்கும்னா?”

“எல்லாத்துக்குமே.. நான் சந்தோஷமா இருக்கேன் உன்கூட.‌. நீ சந்தோஷமா இருக்கியா விது?”

அவன் ஆவலாகக் கேட்டான்.

“ரொம்ப..”

“நிஜம்மா?”

“ம்ம்”

அவன் மனம் நிறைந்து போனது. இது போதுமே என்றிருந்தது.

“நான் ஒன்னு கேட்கவா?”

அவள் தனது வெகுநாளைய சந்தேகத்தைக் கேட்டாள்.

“உங்களுக்கு நான் சித்தார்த்தைக் கல்யாணம் செய்ய சம்மதிச்சது கோவமில்லையா?”

அவளது கரங்கள் அவனது சிகையைக் கோதுவதை நிறுத்தி அவனது பதிலுக்காகக் காத்திருந்தது.

“கோபம் வராம என்ன? உன்னைக் கொல்லும் அளவுக்கு ஆத்திரம் வந்துச்சு தான்.. அதை விடு.. அதைப் பத்தி பேசாதே”

அவன் அதற்கு முற்றுப்புள்ளியிட, விதுர்ஷாவும் தலையாட்டினாள். சில விஷயங்கள் பேசப்படாமல் இருப்பதே நன்மை அல்லவா? வீணான மனக்கசப்பு எதற்கு என்று அவள் எண்ணினாலும் சித்தார்த்துடன் மேகநாதன் எவ்வாறு பழகினான் என்பது அவளுக்குள் கேள்வியாகவே இருந்தது.

“அந்த சித்தார்த் கூட உங்களுக்கு எப்படிப் பழக்கம்?”

“உனக்காகப் பழகிக்கிட்டேன்” என்றவன் சுருக்கமாக விஷயத்தைக் கூறினான்.

“பணத்துக்காக தான் அவங்க வீட்டிலும் கூட இந்தக் கல்யாணத்தை ஏற்பாடு பண்ணியிருக்காங்க.. இப்போ வேற ஏதோ ஒரு பணக்காரப் பொண்ணு கூட கல்யாணம் ஆகிடுச்சு போல”

“உங்களுக்கு எப்படித் தெரியும்? இன்னுமா டச்ல இருக்கீங்க?” என்று அவள் முறைக்க,

“நான் செய்ய வேண்டியதெல்லாம் நீ செய்” என்று பதிலுக்கு முறைத்தவன்,

“ஃபேஸ்புக்ல பார்த்தேன்டி.. அப்போவே அவனை லிஸ்ட்ல இருந்தும் எடுத்துட்டேன்..” என்றான் அவன்.

அவள் கரங்கள் நிறுத்தியிருந்த வேலையைத் திரும்பச் செய்ய ஆரம்பித்திருந்தது. அந்த வேளையில் தான் மேகநாதன் அதைக் கேட்டான்.

 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
#20

“நாம குழந்தை பெத்துக்கலாமா விது?”

அவன் கேட்டதும் எந்தவித மறுப்புமின்றி புன்னகையோடு தலையாட்டினாள் விதுர்ஷா.

“ஆண் குழந்தை வேணுமா? பெண் குழந்தை வேணுமா?” அவள் விளையாட்டுப் போலக் கேட்க,

“ரெண்டுமே” என்றான் மேகநாதன் கண்களில் கனவோடு.

“இப்படி மடில படுத்து கனவு கண்டுட்டு இருந்தால் கடைசி வரை கனவு மட்டும் தான் காண முடியும் சார்”

அவள் கிண்டலடிக்க, படாரென்று எழுந்தவன் அடுத்த நொடி அவளைக் கைகளில் ஏந்தியிருந்தான். அவனது அதிரடியில்,

“ஏங்க என்ன பண்றீங்க?” என்று கேட்டவள் வார்த்தைகள் வெளிவருவதற்கே சிரமப்பட்டுப் போனாள். இடையில் அவன் விரல்கள் கொடுத்த அழுத்தம் வேறு அவளை கூச்சத்தில் நெளிய வைத்தது.

“பச்சை லைட் எரியுறதுக்காக எவ்வளவு நாள் தான் காத்திருக்கது? இப்போ பொண்டாட்டியே சிக்னல் குடுத்தும் எதுவும் பண்ணாம இருந்தா வரலாறு தப்பா பேசும்மா”

அவளுக்கு பதிலளித்தவாறே கைகளில் அவளை ஏந்தியவாறு கீழே வந்தவன் அவர்களுடைய அறைக்குள் சென்று அவளைக் கட்டிலில் கிடத்தி அவளருகில் விழுந்தான்.

சம்மதம் சொல்லிவிட்டவளுக்கு கட்டிலில் அவன் கிடத்திய நொடியில் சம்மதமே இல்லாமல் அவனது வார்த்தைகள் திடீரென்று நினைவுக்கு வர, ஒரு நொடியாயினும் அவளது உடல் விரைத்துப் போய் மீண்டது.

மேகநாதனின் கரங்கள் அவளது உடலின் இறுக்கத்தை நொடியில் அவனுக்கு விளக்கிச் சொல்ல, சட்டென்று உணர்வுகள் எல்லாம் வடிந்தவனாய் அவன் அவளை விட்டு விலகினான்.

“என்னாச்சு?”

தெரிந்து கொண்டே தான் கேட்டாள். அவன் பதில் பேசவில்லை.

“ப்ச்.. சில விஷயங்களைப் பிடிச்சுத் தொங்கிட்டே இருக்கக் கூடாதுங்க.. அது நமக்கும் நமக்கான வாழ்க்கைக்கும் நல்லது கிடையாது.. அப்படி பார்த்தால் நானும் தான் தப்பு செஞ்சுருக்கேன்”

அவள் அவனை சமாதானம் செய்ய, அவன் முகம் தெளியவே இல்லை. ஒரு நொடியாயினும் அவளது உடலில் வந்த இறுக்கம் அவனைக் கூறு போட்டது.

“இன்னொரு நாள் வச்சுக்கலாம் விது.. படுத்துத் தூங்கு”

அவளது சமாதனங்களைக் கிடப்பில் போட்டுவிட்டு அவன் எழுந்து அமர்ந்தான்.

“அதெல்லாம் முடியாது. இன்னைக்கு வேணும்”

அவள் அடம்பிடிக்க, அவன் அவளைப் பார்த்து புன்னகைத்தான்.

“மேடம்.. நான் ஓகேதான். நீங்க ரொம்ப கவலைப்பட்டு தியாகமெல்லாம் பண்ண வேணாம்”

“தியாகமா?”

அவள் முகத்தைச் சுளிக்க,

“யோவ் புருஷா.. நிஜம்மா ஆசைனு சொல்றேன்.. நீ என்ன உளறிட்டு இருக்க” என்று முறைத்தவள் இது சரிப்பட்டு வராது என்றெண்ணி தானாக வேலையில் இறங்க, மேகநாதன் அவளது அதிரடியில் ஆடித்தான் போனான்.

விதுர்ஷாவின் இதழ் முத்தம் கண்டபடி அவனது எண்ணத்தைக் கெடுக்க, சிறிது சிறிதாக அந்த முத்தம் மேகநாதனின் கட்டுப்பாட்டில் வந்தது . அதன் பின்னே அவனது செயலெல்லாம் வன்மையாகிப் போக, அவளது உடல் அவனது ஒவ்வொரு செய்கைக்கும் சிலிர்த்து அடங்கியது. கணவனின் வன்மையில் முதலில் திணறியவள் அடுத்து கிறங்க ஆரம்பித்தாள். அவளது கிறக்கத்தில் அவனும் கிறங்கினான்.

மனைவியிடம் தன் ஆசைகளை எல்லாம் நிவர்த்தி செய்து கொண்டவன் விலகிப் படுத்த போது அவளது நெற்றியில் மென்மையாக முத்தமிட, களைப்பாக அருகில் படுத்திருந்தவளின் இதழ்கள் விரிந்தன.

அவன் அவளது இதழ்களைப் பிடித்தவாறே, “என்னடி சிரிப்பு?” என்று கேட்க, அவனது கையை எடுத்துவிட்டவாறே,

“சாஃப்ட் கிஸ் கூட உங்களுக்குக் கொடுக்கத் தெரியுமா?” என்றாள் புன்னகைத்தபடியே.

சற்று முன் நடந்த கூடலில் அவனது வன்மை காரணமாக அவள் கேட்க, அவளது கேள்வியில் கவலையாக, “ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனா?” என்றான் அவன்.

அவனது கேள்வி அவனுக்கே அபத்தமாகத் தெரிந்தது. அவளது உடல்மொழி சொன்ன செய்தி அப்படி இல்லையே!

விதுர்ஷாவும் அதையே நினைத்தாளோ என்னவோ.. இருவரும் ஒரே நேரத்தில் புன்னகைக்க, அவனது புன்னகையில் கைகளால் முகத்தை மூடிக் கொண்டவளுக்கு வெட்கம் வந்து தொலைத்தது.

அவளது வெட்கம் அவனுக்குள் அடங்கியிருந்த உணர்வுகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்க, அவர்கள் மீண்டும் பள்ளியறைப் பாடத்தைப் படிக்கத் தயாரானார்கள்.

_____________________


திருமணக்கோலத்தில் மேகநாதனும் விதுர்ஷாவும் கடவுளின் சந்நிதியில் மனமார பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். பூசாரிகள் ஒருவொருக்கொருவர் அவர்களுக்குள் பேசிக்கொள்வதும் தம்பதியரை வித்தியாசமாகப் பார்ப்பதுமாக இருந்தனர்.

ஏழுமாத கர்ப்பிணிப் பெண்ணாக விதுர்ஷா நின்றிருக்க, அவர்களைச் சுற்றி சோமசுந்தரம், கல்யாணி, ரத்தினவேல், ஈஸ்வரி, ரதி, பிரபாகரன், ஜெகதீஸ்வரன், சுரேந்திரன், மீனா, சிவநேசன், வள்ளி என அனைவரும் நின்றிருந்தனர். அனைவரின் ஆசிர்வாதத்துடன் கடவுள் சன்னிதியில் மேகநாதன் விதுர்ஷாவின் கழுத்தில் தாலி அணிவிக்கப் போக,

பிரபாகரன், “மச்சான்.. பொண்ணு பிடிச்சு தானே கல்யாணம் பண்றீங்க? அக்கா உங்களுக்கும் மச்சான் ஓகே தானே?” என்று சந்தேகமாகக் கேட்க,

சுற்றி இருந்தவர்கள் அனைவரும் தங்களது சிரிப்பை தத்தம் உதடுகளுக்குள் மறைத்துக் கொண்டு தம்பதியரைப் பார்த்தனர்.

மேகநாதன் மனைவிக்கு வளைகாப்பு நடத்தத் திட்டமிட, அவனது மனைவியோ திருமணத்திற்குத் திட்டமிடச் சொன்னாள்.

“என்ன விது சொல்ற?” என்று மேகநாதன் குழப்பமாகக் கேட்க,

“நீங்க தானே என்ன ஆசைனாலும் சொல்லு.. நிறைவேத்துறேனு பில்டப் கொடுத்தீங்க?” என்றாள் அவனது மனைவி.

“ஏன்டி எல்லாரும் மாங்காய் சாப்டணும் சாம்பல் சாப்டணும்னு ஆசைப்படுவாங்கனு தான் கேள்வி பட்டிருக்கேன். இதென்ன நீ வித்தியாசமா ஆசைப்படுற?”

புன்னகையுடன் அவன் கேட்க, “என் கழுத்துல இருக்கது நீங்க ரெண்டாவது தடவையா போட்டுவிட்ட தாலி.. ரெண்டு தடவையும் நிலைமை சுமூகமா இல்ல. யாரோ ஒருத்தர் மனக்குறையோட தான் இருந்தோம். அதுனால தான் சொல்றேன். இப்போ நிறைவா கல்யாணம் செஞ்சுக்கலாம் ப்ளீஸ்” என்றாள் விதுர்ஷா.

அவளது ‘ப்ளீஸ்’க்குப் பிறகு அவனிடம் அப்பீல் ஏது? மேகநாதன் அவளது ஆசையில் புன்னகையுடன் தலையாட்டினான். முதலில் வளைகாப்பிற்கு நாள் குறிக்க, அதற்கு முன்தினம் திருமண ஏற்பாட்டை மேகநாதன் தனியாளாகச் செய்து விட்டான்.

எல்லோரையும் வேண்டுதல் என்று சொல்லி அவர்களது குலதெய்வம் கோவில் வரை அழைத்து வந்தவன் அங்கு வந்த பிறகே விஷயத்தைக் கூற,‌ பிரபாகரனும் ஜெகதீஸ்வரனும் அவனை உண்டு இல்லையென்று பண்ணிக் கொண்டிருந்தனர்.

மேகநாதன் பிரபாகரனை முறைக்க, “இல்ல மச்சான்.. அப்புறம் நாங்க அன்னைக்கு நல்ல மனநிலைல இல்ல.. இன்னொரு தடவைக் கல்யாணம் பண்ணணும்னு சொல்லிட்டீங்கனா? இப்போ சரி.. பாப்பா இன்னும் வரல.. ஆனால் யோசிங்க.. உங்க குழந்தையோட கல்யாணம் பண்ணா நல்லாவா இருக்கும்?” என்று கேட்க, ஜெகதீஸ்வரன் அண்ணனுக்கு ஹைபை கொடுத்துக் கொண்டான்.

“மச்சான்.. நீ செஞ்சாலும் செய்வடா.. இதான் உனக்கு லாஸ்ட் கல்யாணம். புரிஞ்சதா?” என்று கைக்குழந்தையைக் கையில் வைத்தபடி நின்றிருந்த சுரேந்திரனும் சொல்ல, அங்கே சிரிப்பலை பரவியது.

இளையவர்களின் கலகலப்பு பெரியவர்களின் முகத்தில் ஒருசேர புன்னகையையும் நிம்மதியையும் தந்தது.

அத்தனை கலகலப்பிற்கும் கலாட்டாவிற்கும் மத்தியில் மேகநாதன் மீண்டும் விதுர்ஷாவின் கழுத்தில் மங்கல நாணை அணிவிக்க, விதுர்ஷா நிறைவுடன் கணவனைப் பார்த்தாள்.

திருமணம் சிறப்பாக நடந்து முடிந்திருந்தது. மதுரையில் காலை உணவை முடித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பலாம் என்று நல்ல உணவகத்தை நோக்கி மேகநாதன் வண்டியை செலுத்தினான். அதன்படியே எல்லோரும் காலை உணவை முடித்துவிட்டு ஊர் திரும்பும் நேரம், ஏதோ தோன்ற நின்று ஊன்றி கவனித்தாள் விதுர்ஷா.

அது கார்த்திகா! அருகிலிருந்த ஆண் ஏதோ சொல்ல, அவள் சிரித்துக் கொண்டிருந்தாள். நெற்றி வகிட்டிலிருந்த குங்குமம் விதுர்ஷாவிற்கு விஷயத்தை விளக்க, அவளது புன்னகை இன்னும் பெரிதானது. மேகநாதனுக்கு எப்படியோ! அவளைப் பொறுத்தவரை கார்த்திகாவின் மீது எந்தக் கோபமும் எந்த நாளும் அவளுக்கு இருந்ததில்லை. விதூர்ஷா புன்னகையுடன் காரில் ஏறிக் கொண்டாள்.

ஏழு வருடங்கள் கழித்து..

“மாறா.. பாப்பா பத்திரம்” என்று சொன்னவாறே ரதி தன் மகன் இளமாறனின் மடியில் அப்போதுதான் பிறந்திருந்த குழந்தையை வைத்தாள். எட்டு வயது இளமாறன் தன் மாமன் மகளை மடியில் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தான்.

அவனருகே ஆறு வயது சக்தி தருண் தன் தங்கையைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

“இப்படித்தான் நானும் இருந்தேனா அம்மா?” என்று அவன் ஆசையாகக் கேட்க, விதுர்ஷா புன்னகையுடன் தலையாட்டினாள்.

மீனாவின் கைப்பிடித்துக் கொண்டு உள்ளே வந்த ஏழு வயது கிரிதரன் ஆவலாகக் குட்டிப் பாப்பாவைப் பார்க்க, அவளது இடுப்பில் இரண்டு வயதான தமிழ்செல்வன் விதுர்ஷாவைப் பார்த்ததும் அவளிடம் தாவி வந்தான்.

“தமிழ்.. அத்தைக்கு உடம்பு முடியல.. அவங்கள கஷ்டப்படுத்தக் கூடாது.. வா அண்ணா தூக்குறேன்” என்று கிரி தம்பியை வாங்கிக்கொள்ள,

“டேய் பெரிய மனுஷா.. ஸ்கூல் கட் அடிச்சுட்டியா? அதிசயமா இருக்கே” என்று சிரித்தாள் விதுர்ஷா.

“பாப்பா தான் அத்தை ஃபர்ஸ்ட்.. ஸ்கூல் செகண்ட்” என்று சிரித்தபடி அவன் இளமாறனை நோக்கிப் போக, அவனது பெரிய மனித தோரணையை அங்கிருந்த மூவரும் ரசித்துச் சிரித்தனர்.

மேகநாதன், பிரபாகரன், சுரேந்திரன் மூவரும் ஒருசேர உள்ளே வர, ஜெகதீஸ்வரன் காணொளி அழைப்பில் வந்தான். அவன் படித்து முடித்துவிட்டு பெங்களூரில் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலையில் இருக்கிறான்.

பிரபாகரன் தம்பியிடம் பேசிவிட்டு மேகநாதனிடம் கொடுக்க,

“வாழ்த்துகள் மாமா.. உங்க ஆசைப்படியே பொண்ணு பொறந்திடுச்சு” என்று ஜெகதீஸ்வரன் வாழ்த்து சொல்ல, மேகநாதன் புன்னகையோடு அதை ஏற்றுக் கொண்டான்.

“அக்கா எப்படி இருக்காங்க?”

“நல்லா இருக்கா..” என்று சொன்னபடி அவன் மனைவியின் அருகில் சென்று அவளையும் சேர்த்துக் காட்ட, அவளுக்கும் சேர்த்து வாழ்த்து சொன்னான்.

“எப்படி இன்னும் ஒன்னு மிச்சம் இருக்கே.. அதை எப்போ பெத்துக்கப் போறீங்க?” என்று அவன் கேட்க, பிரபாகரன் வாய் மூடி சிரித்தான். சுரேந்திரன் வாய்விட்டே சிரிக்க, ரதியும் மீனாவும் கூட சிரித்துவிட்டனர்.

“டேய்.. உன் வாய் இருக்கே” என்று மேகநாதனும் கூட சிரிக்க,

“மூனு கல்யாணம் பண்ணியிருக்கீங்க.. ஒரு கல்யாணத்துக்கு ஒரு குழந்தைனு வைச்சா கூட மூனு குழந்தை வேணும்ல” என்றான் ஜெகதீஸ்வரன் சிரிக்காமல்.

“முதல்ல உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்கணும்.. அப்போ தான் உன் வாய் அடங்கும்” என்று விதுர்ஷா சொல்லவும்,

“சொல்லத் தான் செய்றீங்க.. ப்ராஸஸ் நடக்க மாட்டேங்குதே” என்று பாவமாய் பதில் சொன்னவனைப் பார்த்து அங்கிருந்த அனைவரும் சிரிக்க, பின் அந்த இடமே களைகட்டியது.

உள்ளே கேட்ட சிரிப்பு சத்தத்தில் சோமசுந்தரம், சிவநேசன், ரத்தினவேல் மூவரும் ஒருவரையொருவர் நிறைவாகப் பார்த்துக் கொள்ள, ஈஸ்வரியும் கல்யாணியும் கூட உள்ளே சென்று அந்த கலகலப்பில் இணைந்து கொண்டனர்.



+----முற்றும்----+



கருத்துகளைப் பகிர:



 
Status
Not open for further replies.
Top