“இங்க பாருடா கடைசியா சொல்றேன், இந்த பொண்ணு உனக்கு வேண்டாம், அப்படி என்னடா வெறும் அழக பார்த்து மட்டும் கல்யாணம் பண்ணுறதுக்கு சம்மதிப்ப” என்று மணமேடையில் அமர்ந்திருக்கும் மாப்பிள்ளையின் தாய் ஏகத்துக்கும் கத்தினார்.
“இந்த பொண்ண தான் நீ கல்யாணம் பண்ணனும்னு நினைச்சா எங்கள எல்லாம் மறந்துடு, எங்களுக்கு ஒரே ஒரு பொண்ணு மட்டும் தானு உன்னைய நாங்க இங்கயே தலை மூழ்கிடுறோம், ஒன்னும் இல்லாதவள கல்யாணம் பண்ணி எங்க வீட்டுக்கு மருமகளாக்க நாங்க ஒன்னும் கேனை இல்ல, உன்னால எங்க கௌரவம் தான் போக போகுது” என்று அவனின் தந்தையும் திட்டி தீர்த்தார்.
“இங்க பாருங்க எனக்கு யாரை கல்யாணம் பண்ணனும்னு எனக்கு தோணுதோ அவள தான் நான் கல்யாணம் பண்ணுவேன், அதுக்காக இவள உங்களுக்கு பிடிக்கலை, கௌரவம், அது இதுனு சொன்னா உடனே நான் இந்த கல்யாணத்தை நிறுத்திடுவேனோ இல்லை உங்க சொத்துல பங்கு கேட்க மாட்டேனோ,வீட்டுக்கோ வரமாட்டேனு மட்டும் தப்பு கணக்கு போட்டா ஐ ஆம் வெரி ஸாரி” என்று கூலாக தன் பெற்றோரை பார்த்து பதில் பேசியவன் மிரண்டு விழிக்கும் ஐயரை தன் முன் எரியும் ஹோமகுண்டகத்திற்கு இணையாக கண்கள் சிவக்க அக்னிக்கு ஒத்த தன் பார்வையால் பார்த்தான். அவனின் பார்வையில் கைகளும் மந்திரம் சொல்ல முயற்சி செய்யும் வாயும் நடுங்கினாலும் அவனின் தீப் பார்வையில் தானாக “கெட்டிமேளம் கெட்டிமேளம்”என்றார்.
ஐயரின் குரலிற்கு இணங்க தன் கையில் உள்ள தாலியை ஒரு முறை பார்த்து தயங்கியவன் மறுநிமிடம் தன் முக மாறுதல்களை மாற்றிக் கொண்டு தன் அருகில் அமர்ந்து தன்னை அன்னியப் பார்வையோடு பார்க்கும் அந்த மணபெண்ணின் கழுத்தில் கலக்கத்துடனும் இறுக்கத்துடனும் தாலியை இரண்டு முடிச்சினை போட்டவன் தன் பின் பெற்றோருக்கு பயந்து நிற்கும் தன் தங்கையை ஆழ்ந்து பார்த்தான். தன் உடன்பிறந்தவனின் பார்வையில் மருட்சியுடன் ஒரு முறை பெற்றோரை பார்த்தவள் குனிந்து மூன்றாவது முடிச்சிட்டாள் தன் உயிரான அண்ணனின் மனைவிற்கு. அதில் ஒரு நிமிடம் அவனின் மனது அமைதி அடைந்தது.
அந்த மிக பெரிய திருமணம் மண்டபம் முழுவதும் அமர்ந்திருந்தவர்கள் ஆனாலும் இவனுக்கு இவ்வளவு ஆகாது அழுத்தக்காரன், கல்நெஞ்சுக்காரன், பணம் இருக்குன்னு அவ்ளோ திமிரு அதான் அவன் நினைச்சதை சாதிச்சுட்டானே, இந்த பிள்ளை எந்த ஜென்மத்துல பண்ணுன பாவமோ இவன கல்யாணம் பண்ற நிலைமை வந்துருச்சே, இந்த பிள்ளைக்கு இவன பத்தி தெரிஞ்சா கல்யாணம் பண்ணிருக்காதோ என்னவோ” என்று ஏகத்துக்கும் மணமேடையில் மணக்கோலத்தில் அமர்ந்திருக்கும் மாப்பிள்ளையை ஆளாளுக்கு வசை பாடிக்கொண்டிருந்தனர்.
ஆனால் அவனின் முக பாவனை திமிரினாலோ பணசெருகினாலோ கர்வதாலோ வந்தது இல்லை வெளியில் முக இறுக்கத்துடன் அமர்ந்திருந்தவன் உள்ளுக்குள் எவ்வளவு வேதனையை வலியை தாங்கி கொண்டு அமர்ந்திருக்கிறான் என்பதை அறிந்தவர்கள் மூன்று பேர் மட்டுமே ஒன்று தாலி கட்டிய, மாப்பிள்ளை,இரண்டாவது மாப்பிள்ளையின் தங்கை, இன்னொரு நபர் மாப்பிள்ளையின் உயிர் நண்பனும் மாமன் மகனுமாகிய மற்றொருவன்.