All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "பகலவ நிலவே" கதை திரி 🌕🌝

Status
Not open for further replies.

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்ல குட்டிஸ்,

"பகலவ நிலவே" கதை இங்கு பதியப்படும். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்

நன்றி

அருணா
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 1:

சென்னை மாநகரம்....

தனது காலை நேர பரபரப்புடன் வேகமாக இயங்கிக்கொண்டிருந்த நகரத்தை போலையே, தன் வீட்டில் இருந்த ட்ரெட் மில்லில் வேகமாக ஓடிக்கொண்டிருந்தான் பகலவ வர்மன்..

உடல் முழுவதும் நீரில் மூழ்கி எழுந்தது போல் வியர்த்திருந்ததை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் தன் ஓட்டத்தை தொடர்ந்து கொண்டிருந்தவன் காதில், ஹெட் செட்டில் இளையராஜா பாடல் ஓடி கொண்டிருந்தது..

ஒலித்து கொண்டிருந்த மென்மையான பாடலுக்கும், ஓடி கொண்டிருந்த அவன் வேகத்திற்கும் கொஞ்சமும் சம்மந்தம் இருக்கவில்லை.

அவன் குணமும் அதே போல் புரியாத புதிர் தானோ..!

ஒருவித மோன நிலையில் இருந்தவன் தவத்தை கலைப்பது போல் பாடல் நின்று அவன் போன் ஒலிக்க, ஓடிக்கொண்டே அதை உயிர்பித்தான்..

"பகலவா அந்த பையனை தூக்கியாச்சு" என எதிர்புறம் இருந்தவன் கூற,

"ம்ம் குட் ண்ணா.. நான் ஒரு அரை மணி நேரத்தில் வரேன்.. அவனுக்கு டிபன் கொடுத்து உட்கார வைங்க.. நல்லா சாப்பிட சொல்லுங்க ண்ணா.. ஒரு குறையும் இருக்க கூடாது.."

சாதாரணமாக ஆரம்பித்தவன் ஒரு வித நக்கல் குரலில் முடிக்க, அங்கு கேட்டுக்கொண்டிருந்தவனுக்கும் அது புரிந்திருக்க வேண்டும்..

"கண்டிப்பா டா.. ஒரு குறையும் இல்லாமல் பார்த்துடுவோம்.. நீ வா.." என்றுவிட்டு அவனும் போனை வைத்துவிட்டான்.

ஒரு முறை நேரம் பார்த்துக்கொண்ட பகலவன், ட்ரெட் மில்லை நிறுத்திவிட்டு இறங்கி விட்டான்..

பக்கத்தில் இருந்த டவலை எடுத்து வியர்வையை துடைத்து கொண்டவன், அதற்கு மேல் வேகமாக கிளம்பிவிட்டான்.

குளித்து முடித்து வந்தவன், கருப்பு நிற சட்டையும் பேண்ட்டும் அணிந்து, கண்ணாடி முன் நின்று தலையை வாரிவிட்டு, கையில் கோட்டை எடுத்துக்கொண்டு தன் வேக நடையுடன் கீழே இறங்கி வந்தான்..

அவன் வருவதை பார்த்துவிட்டு வேகமாக அவனிடம் வந்தான் செழியன்..

"என்ன ண்ணா பையன் சாப்பிட்டானா?" என கேட்டுக்கொண்டே உணவு மேசை நோக்கி பகலவன் நடக்க,

"எங்கே பகலவா! திருதிருனு முழிக்கிறானே ஒழிய சாப்பாட்டில் கையை வைக்கவே காணும்.. இப்போது தான் பாசமா சாப்பிட சொல்லிக்கொண்டிருந்தேன்.."

பேசிக்கொண்டே இருவரும் உணவு மேசை அருகில் வந்திருந்தனர்..

அங்கே அமர்ந்திருந்த இளைஞனை தன் கூர் பார்வையால் அளந்து கொண்டே அவன் அருகில் வந்த பகலவன், "என்ன ஆகாஷ் சாப்பிடுவது தானே..!" என பலமாக அவன் தோளில் தட்ட, அதுவரை முகத்தில் கடினப்பட்டு தைரியத்தை பிடித்துவைத்து கொண்டு அமர்ந்திருந்த ஆகாஷிற்கோ அந்த நொடி தானாக உள்ளுக்குள் ஒரு வித உதறல் எடுக்க தான் செய்தது..

உதட்டில் புன்னகையும் கண்களில் கூர்மையுமாய், ஆறடிக்கும் மேலான உயரத்தில் அசால்டாக வந்து நின்ற பகலவனை பார்த்து உள்ளுக்குள் பெரிதாக நடுங்கியதை மறைக்க அவன் படாத பாடு பட்டு போனான்..

"எ.. என்னை எதுக்கு இப்படி காலங்காத்தால இழுத்துட்டு வந்திருக்கீங்க..? எங்க அப்பாக்கு தெரிந்தால் என்ன ஆகும் தெரியுமா? நான் போகணும்.."

குரல் நடுங்கினாலும் கெத்து போல் காண்பித்துக்கொள்ள அவன் முயற்சித்ததில் செழியன் சத்தமில்லாமல் சிரிக்க, பகலவனின் உதடுகளும் மிக மெலிதான நக்கலுடன் வளைந்தது..

"முதலில் சாப்பிடு ஆகாஷ்.. உன்னை ஏன் இழுத்து, இல்லை.. இல்லை.. அழைத்து வந்திருக்கிறோம் என்று சொல்லாமலா இருக்க போகிறேன்..! சாப்பிட்டுவிட்டு பேசிக்கொண்டே போவோம்.. எனக்கு டைம் இல்லை.." என்றவன் அவனுக்கு அருகிலேயே இருந்த சேரில் அமர்ந்துவிட, அடுத்த நொடி ஒரு வேலையாள் வந்து அவனுக்கான டிபனை எடுத்து வைத்தான்..

"ம்ம் நம்ம பார்த்தி அண்ணா கைப்பக்குவமே தனி தான்..! இத்தனை சுவையான சாம்பார் வைக்க நம் ஜில்லாவிலேயே ஆள் இல்லையாம் ண்ணா.." ரசித்து அவன் சாப்பிட,

"அட போங்க தம்பி.. நான் தோசை எடுத்துட்டு வரேன்.." என சிறு வெட்கத்துடன் கூறிவிட்டு பார்த்திபன் உள்ளே சென்றுவிட்டார்.

அவர் சென்ற பின்பு ஆகாஷ் புறம் திரும்பிய பகலவன், "நீ இன்னுமா வேடிக்கை பார்த்துட்டு இருக்க?" என கேட்க, அவனோ எதுவும் கூறாமல் பயத்துடன் அவனை பார்த்தான்..

அவன் பார்வையின் அர்த்தம் புரிந்து மெலிதாக சிரித்த பகலவன், "அசிங்கமா சாப்பாட்டில் எல்லாம் நான் விஷம் வைக்க மாட்டேன் ஆகாஷ்.. தைரியமா சாப்பிடு.. இந்த வீட்டில் இதுவரை ஒரு உயிர் கூட போனதில்லை.." பேசிக்கொண்டே ஆகாஷ் தட்டில் இருந்தும் ஒரு வாய் எடுத்து உண்டவன்,

"ம்ம் தைரியமா சாப்பிடு" என்றுவிட்டு தொடர்ந்து உணவை பார்க்க, வேறு வழி இல்லாமல் ஆகாஷும் சாப்பிட தொடங்கினான்..

என்ன தான் சாதாரணமாக பேசிக்கொண்டிருந்தாலும் பகலவன் குணம் ஊர் அறிந்த ஒன்றாயிற்றே..!

இரக்கம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் ரகம் அவன்..

ஒரே நேரத்தில் சிறந்த தொழிலதிபனாகவும் கைதேர்ந்த அரசியல்வாதியாகவும் இருப்பவன்..

ஆம் பகலவன் அந்த தொகுதியின் எம்.எல்.ஏ ..

அவன் தொகுதி மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அவன் பிரச்சனையை தீர்க்கும் வழி எத்தனை கொடுமையாக வேண்டுமானாலும் இருக்கும்..

அவன் ஆட்கள் நடுரோட்டில் சிலரை வெட்டிப்போட்ட கதை எல்லாம் உள்ளது..

அதே நேரம் அவன் ஒரு தேர்ந்த தொழிலதிபன்..

அவனுக்கென்று தனியாக மிக பெரிய ஐ.டி நிறுவனம் இருந்தது.. இந்தியா முழுவதும் பறந்து விரிந்து இருந்த நிறுவனங்கள் முழுவதும் அவன் உழைப்பாலும் மூளையாலும் மட்டுமே உருவானது..

வெறும் முப்பது வயதிற்குள் அவன் சாதித்திருந்த விஷயங்களை வார்த்தைகளால் கூறிவிட முடியுமா என்று கேட்டால் கொஞ்சம் கடினம் தான்..

'பகலவ வர்மன்' என்ற பெயரை கேட்டாலே அவனை தெரிந்த வட்டாரத்தில் ஒருவித பயமும் மரியாதையும் சேர்ந்தே எழும்..

அவனை பற்றி நன்கு தெரிந்தவர்களுக்கு மரியாதை என்றால், அவனிடம் தேவை இல்லாமல் மோதி வாங்கி கட்டிக்கொண்டவர்களுக்கு பயம்..

செழியன் ஐ. டி நிறுவனத்தை பொறுத்தவரை சம பங்குதாரர்.. முக்கால்வாசி நிறுவன வேலைகளை அவன் தான் பார்ப்பது. அரசியல் பொறுத்தவரை பகலவனின் பி. ஏ போல் இருந்து கொள்வான்.. பகலவன் மனதில் நினைப்பதை கூட செய்து முடித்துவிட கூடியவன்..

பகலவன் உணவை முடித்து எழுந்த போது அவனுடனே செழியனும் உணவை முடித்திருந்தான்..

இருவரையும் பார்த்து கொண்டே ஆகாஷும் எழுந்து நிற்க, அவன் தோளில் கைபோட்டு அவனை அணைத்தார் போல் பிடித்துக்கொண்ட பகலவன், "போயிட்டே பேசுவோம் ஆகாஷ்" என கூறிக்கொண்டே நடக்க, ஆகாஷும் நகர முடியாமல் அவனுடன் நடந்தான்..

"என்ன ப்ரோக்ராம் ண்ணா?" ஒரு பக்கம் ஆகாஷை இழுக்காத குறையாக அழைத்துவந்து கொண்டே பகலவன் கேட்க,

"ஆந்திரா போகணும் பகலவா.. இன்னிக்கு முக்கிய மீட்டிங் இருக்கு.. ஹெலிகாப்டர் வெயிட்டிங்.." என்றான் செழியன்.

"ஓ.. யா.. யா.. மறந்தே போய்ட்டேன்.. மேனேஜர் நேற்றே போயிட்டார் இல்லையா?"

"போயாச்சு பகலவா.. எல்லாம் பக்காவா இருக்கு.. விசாரிச்சுட்டேன்.. நீ நேரடியாக மீட்டிங் போனால் போதுமானது.."

இருவரும் பேசிக்கொண்டே கார் அருகில் வந்திருந்தனர்..

கார் கதவை திறந்த பகலவன், "ம்ம் ஏறு" என்று ஆகாஷை பார்த்து கூற,

"நா.. நான் எதுக்கு உங்களுடன் வரணும்? எதுவா இருந்தாலும் இங்கேயே சொல்லுங்க.. நான் வீட்டுக்கு போகணும்.." என்றான் ஆகாஷ் நா தந்தியடிக்க.

"உனக்காக என் நேரத்தை ஒதுக்கும் அளவு நீ வொர்த் இல்லை.. கெட் இன்.." என்ற பகலவன் அவன் அனுமதியை எதிர்பாராமல் ஒரே தள்ளாக அவனை காரினுள் தள்ள, அவனும் உள்ளே சென்று விழுந்தான்..

அவனை தொடர்ந்து பகலவன் ஏறி அமர, செழியன் முன்னாள் ஏறி கொண்டான்..

அதற்கு மேல் பயணம் முழுவதும் ஆகாஷ் என்ற ஒருத்தன் அந்த காரில் இருந்ததையே இருவரும் மதிக்கவில்லை..

தங்கள் கட்சி சம்மந்தப்பட்ட விஷயம், வேலை சம்மந்தப்பட்ட விஷயம் என ஏதேதோ பேசிக்கொண்டு வந்தனர்..

தன்னை வைத்துக்கொண்டே இத்தனையும் பேசுகின்றனரே என யோசனையாக இருந்தாலும், எதுவும் கேட்க தைரியமற்று அமைதியாக அமர்ந்திருந்தான் ஆகாஷ்..

ஹெலிபேட் அருகில் கார் நிற்க, அதில் இருந்து இறங்கிய பகலவன் கையோடு ஆகாஷையும் இழுத்துக்கொண்டு தான் இறங்கினான்..

முன்பு போலவே அவன் தோளில் கைபோட்டு அவனை தன்னுடன் இறுக்கிக்கொண்டு, கிளம்ப தயாராக நின்றிருந்த ஹெலிகாப்டர் நோக்கி பகலவன் நடக்க, இந்த முறை அமைதியாக செல்ல முடியாமல் ஆகாஷிற்கு பெரிதாக பயம் பிடித்துக்கொண்டது..

"சார் என்னை விடுங்க.. நான் போகணும்.." அவன் வெகுவாய் திமிர போராட, அவனை திரும்பி கூட பார்க்காமல் வேகமாக நடந்துகொண்டிருந்த பகலவன், இப்போது அவனை வெளிப்படையாகவே இழுத்து தான் சென்றான்..

காரில் தள்ளியது போலவே ஹெலிகாப்டரில் அவனை தள்ளி விட்டுவிட்டு பின்னாலேயே பகலவன் ஏற, செழியனும் ஏறியதும் மெதுவாக ஹெலிகாப்டரும் பெரும் சத்தத்துடன் மேலெழும்பியது..

"ஐயோ என்னை விடுங்க.. டேய் என்னை விடு டா.. நான் போகணும்.." என தொண்டை தண்ணீர் வற்ற ஆகாஷ் கத்தியதெல்லாம், ஹெலிகாப்ட்ர் கிளம்பிய பயங்கர சத்தத்தில் கரைந்து தான் போனது..

பகலவனோ நிதானமாக சீட் பெல்ட் போட்டு சாய்ந்து அமர்ந்து விட, ஆகாஷ் தான் கிடைத்த எல்லா இடத்திலும் பெரும் பயத்துடன் பிடித்துக்கொண்டு இருந்தான்..

ஹெலிகாப்டர் மேலே செல்ல செல்ல அதற்கு ஈடாக அவன் இதயத்துடிப்பும் அதிகரித்துக்கொண்டே போனது..

"ஐயோ சார், என்னை விட்டுருங்க சார்.. அந்த பையன் மேல் கார் இடிச்சது தப்பு தான்.. நான் வேண்டுமென்றே எதுவும் செய்யவில்லை சார்.. குடிபோதையில் தெரியாமல் இடிச்சுட்டேன்.. அவன் குடும்பத்துக்கு என்ன கேட்டாலும் நான் செய்து விடுகிறேன் சார்.. என்னை விட்டுருங்க ப்ளீஸ்.."

பெரும் பதட்டத்துடன் சீட்டை இறுக்கமாக பிடித்துக்கொண்டு கதறினான் ஆகாஷ்..

இப்போது பகலவன் முகத்தில் இருந்த இலகு தன்மையும் மறைந்து, அவன் முகம் விகாரமாக மாறி இருந்தது..

"இந்த அறிவு ஆக்சிடென்ட் செய்த போது எங்கே டா போனது? 'நான் தான் கொன்னேன்.. உங்களால் என்ன செய்துகொள்ள முடியுமோ பண்ணிக்கோங்க' என்று சொன்னாயாமே! என்ன முடியும் என்று பார்க்கிறாயா?"

நக்கலாக கேட்டவன் பேசிக்கொண்டே அவன் சட்டையை கொத்தாக பிடித்து ஹெலிகாப்டரில் இருந்து தள்ளி பிடிக்க, "ஐயோ... அம்மா..." என்ற அவன் அலறல் அவர்கள் காதில் மட்டும் பயங்கரமாக எதிரொலித்தது..

அடுத்த நொடி பகலவன் அவனை உள்ளே இழுத்துவிட்டான்.

"என்ன காத்து நல்லா அடித்ததா?" கண்ணடித்து அவன் கேட்க, ஆகஷோ அவன் காலிலேயே விழுந்து விட்டான்..

"சார் என்னை விட்டுருங்க சார்.. எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுத்து விடுகிறேன்.. நீங்க என்ன சொன்னாலும் செய்கிறேன்.. விட்டுருங்க சார் ப்ளீஸ்.." என அவன் கதற, அவன் கழுத்தை அழுத்தமாக பிடித்து தூக்கினான் பகலவன்..

"டேய் நான் சும்மாவே பாவம் பார்க்க மாட்டேன்.. அதுவும் என் மக்கள் மீது கை வைத்தால் இந்த பகலவன் அந்த எமனை விட மோசமானவன் டா.. எத்தனை தைரியம் இருந்தால் என் தொகுதி பையனை கொன்னுட்டு திமிரா வேறு தப்பித்திருப்பாய்.. நீ செய்தது விபத்து என்னும் பெயரில் கொலை.. நானும் அதையே தான் செய்ய போகிறேன்.. ப்ச் பாவம், இளைஞன் ஹெலிகாப்டரில் இருந்து தவறி விழுந்து மரணம்" போலியாக உச்சுக்கொட்டியவன் ஆகாஷ் கண்களில் இருந்த மரண பயத்தை திருப்தியுடன் பார்த்துக்கொண்டே அடுத்த நொடி யோசிக்காமல் அவனை தூக்கி வீசிவிட, பெரும் அலறலுடன் கீழே இருந்த கடலில் சென்று விழுந்தான் ஆகாஷ்..

அவன் விழுந்ததை லேசாக எட்டி பார்த்து உறுதி செய்து கொண்டவன், பின் சாவகாசமாக சீட்டில் சாய்ந்து அமர்ந்துவிட, செழியன் அவனை வேதனையுடன் பார்த்து கொண்டிருந்தான்..

"இத்தனை கொடூரம் தேவையா பகலவா?" மனம் கேட்காமல் அவன் கேட்டுவிட, அவனை அழுத்தமாக பார்த்தவன்,

"தண்டனைகள் கடுமையானால் தான் தவறுகள் குறையும் ண்ணா" என்றான் நிதானமாக.

"அதற்கு ஒரு வரைமுறை இல்லையா பகலவா? இருக்க இருக்க நீ ரொம்பவும் கொடூரமாக மாறிக்கொண்டே வருவது போல் இருக்கு டா.. நன்மை செய்ய வேண்டியது தான்.. அதற்காக இப்படி ஒரேடியாக இரக்கம் இல்லாமல் இருக்கணுமா?"

"அவனுக்கு வாழும் தகுதி இருக்குனு சொல்ல வர்றீங்களா?" செழியனை அழுத்தமாக பார்த்துக்கொண்டே பகலவன் கேட்க, அதற்கு எதிர்மறை பதில் சொல்ல முடியாமல் விழித்தான் செழியன்..

"இப்போது என்ன உங்களுக்கு? அவனை நம் ஆட்களை வைத்தோ இல்லை சுலபமா சுட்டோ கொன்றிருந்தால் ஓகே வா?"

இதற்கும் செழியனுக்கு பதில் தெரியவில்லை..

"பயம் இருக்கனும் ண்ணா.. அது தான் நாளைக்கு இன்னொரு தவறு நடக்காமல் காப்பாற்றும்.. இந்த பகலவன் மக்கள் மேல் கை வைக்க எவனுக்கும் தைரியம் வர கூடாது.." அழுத்தமாக கர்ஜித்தவனை பார்த்த செழியன் வாய் தானாக மூடி கொண்டது..

****************

மெரினா பீச் அருகில் ஒரு பக்கமாக நின்றிருந்தது பகலவனின் ஜாகுவார் கார்..

காரில் சாய்ந்து நின்றிருந்தவன் காதில் எப்போதும் போல் ஹெட் செட் இடம் பிடித்திருக்க, அவன் முகம் பாடலை கேட்டுக்கொண்டிருந்த ரசனையில் சற்றே இளகி இருந்தது..

சுற்றிலும் வீசிய கடற்கரை காற்றை ஆழ்ந்து சுவாசித்தவன், அந்த நொடியை மிகவும் ரசித்து அனுபவித்து கொண்டிருந்தான்..

"பகலவா" என்ற செழியனின் அழைப்பில் அவன் திரும்ப,

"அவன் தான்" என செழியன் காட்டிய திசையில் பகலவனின் பார்வை சென்றது..

இவர்கள் எதிர்பார்த்து வந்திருந்தவன் அவன் தான்..

இருபத்தியெட்டில் இருந்து முப்பது வயதிற்குள் இருக்கலாம்..

பார்க்க நன்றாக தான் இருந்தான்..

தன்னுடன் இணைந்து நடந்துகொண்டிருந்த பெண்ணின் கைகளை அவன் கைகள் அழுத்தமாக பற்றி இருந்தது..

இருவர் முகமும் புன்னகையுடன் தான் இருந்தது..

அதிலும் பால் நிலவு போல் ஜொலித்த பெண்ணவள் முகத்தில் சிறு வெட்க சிரிப்பு வேறு..

"அந்த பெண்" என பகலவன் நிறுத்த,

"அவன் கல்யாணம் செய்துகொள்ள போகும் பெண் போல் பகலவா" என்றான் செழியன்..

"பெயர்..?"

"வெண்ணிலா என்று நினைக்கிறேன்"

செழியன் கூற்றில் லேசாக புன்னகைத்தவன், "ம்ம் சரியா தான் வச்சிருக்காங்க" என மெதுவாக முணுமுணுத்து கொண்டான்.

"என் இனிய பொன் நிலாவே
பொன்நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம் த ர ர தா த தா
தொடருதே தினம் தினம் த ர ர தா த தா

என் இனிய பொன் நிலாவே
பொன்நிலவில் என் கனாவே"

அசந்தர்ப்பமாய் இளையராஜாவின் பாடல் வேறு அவன் காதில் ஒலிக்க, அதை பட்டென கழட்டி விட்டான்..

"அவன் டீடெயில்ஸ் முழுசா கலக்ட் பண்ணுங்க ண்ணா.. முதலில் உண்மையை பேசுகிறானா பொய் சொல்கிறானா பார்ப்போம்.." செழியனிடம் பேசிக்கொண்டிருந்தவன் கண்கள் அவனை அறியாமல் அந்த பெண்ணிடம் ஒரு முறை அழுத்தமாக படிந்தது.

அதே நேரம் அவர்கள் கவனித்து கொண்டிருந்த மனோகர் தன் பைக்கில் ஏற, அவனுக்கு பின்னால் வெண்ணிலாவும் ஒரு பக்கமாக ஏறி அமர்ந்து கொண்டாள்..

"இரண்டு பக்கம் கால் போட்டு உட்காரேன் நிலா" என மனோகர் சலிப்புடன் கூற,

அவளோ வழக்கம் போல், "இல்லை மனோ.. இது தான் வசதி.." என்று கூறி கம்பியை பிடித்துகொண்டாள்.

"ஆனாலும் நீ ரொம்பவும் அநியாயம் செய்கிறாய் நிலா.. ஊரில் அவனவன் எப்படி எல்லாமோ காதலிக்கிறான்.. எனக்கு மட்டும் தான் இப்படி.." மேலும் அவன் சலித்துக்கொள்ள,

"எல்லாரும் செய்வதை நானும் செய்ய முடியாது மனோ.. நான் இப்படி தான்.. உங்களுக்கு நல்லாவே தெரியும்.. பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடுங்கள்.." என அழுத்தமாகவே அவளிடம் இருந்து பதில் வந்தது.

"அட டா! உனக்கு உடனே கோபம் வந்துவிடுமே.. மலை இறங்கு மா தாயே.. நீ இன்னும் நாலு கிலோமீட்டர் தள்ளி வேண்டுமானாலும் உட்காரு.. ஆனால் விழுந்துவிடாதே.. போவோமா..?" சிரித்துக்கொண்டே மனோகர் கேட்டதில் அவளும் தன்னை அறியாமல் சிரித்துவிட்டாள்.

"போலாம் மனோ" என அவள் கூறியதும் அவனும் வண்டியை எடுத்துவிட்டான்.

இருவரும் கிளம்பியதும் பகலவனும் செழியனும் அங்கிருந்து கிளம்பி விட்டனர்..

வழக்கமாக அனைவரையும் பார்ப்பது போல் தான் பகலவன் மனோகரை பார்க்க வந்தது..

ஆனால் இந்த ஒற்றை நிகழ்வு அந்த பகலவனின் வெப்பத்தை தணிக்கும் மதியை அவன் வாழ்வில் அறிமுகப்டுத்தி சென்றதோ..!

குளிரும்....

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 2:

மனோகருடன் வெண்ணிலா தன் வீட்டுக்கு வந்து சேர்ந்த போது அவள் அன்னை சரியாக இருவருக்கும் காபி கலந்து வைத்திருந்தார்..

"வாங்க தம்பி.. உட்காருங்க.." என மனோகரை வரவேற்று அவர் காபி கொடுக்க, "தேங்க்ஸ் அத்தை" என்று கூறிக்கொண்டே அதை எடுத்துக்கொண்டான் மனோகர்..

"நான் ப்ரெஷ் ஆகிட்டு வரேன் மா" என்றுவிட்டு வெண்ணிலா உள்ளே சென்றுவிட, அப்போது தான் பள்ளி முடித்து வந்திருந்த வெண்ணிலாவின் தங்கை மனோகரை பார்த்ததும் சிறு புன்னகையுடன் நகர்ந்து விட்டாள்..

"ஸ்கூல் முடிஞ்சதா வர்ஷா?" என மனோகர் கேட்க,

"ம்ம் ஆமா" என சுருக்கமாகவே முடித்துக்கொண்டு அவள் சமையல் அறைக்குள் புகுந்து கொண்டாள்..

'பிள்ளைப்பூச்சி! எப்போதும் மதிப்பதே இல்லை..’ என மனோகர் தான் மனதிற்குள்ளேயே அவளை அர்ச்சித்து கொண்டான்.

ஏனோ வர்ஷாவிற்கு பெரிதாக மனோகரை பிடிப்பதில்லை..

காதல் என்று பெண் கேட்டபோதே, தன் அக்காவை தன்னை விட்டு பிரித்துப்போக போவதாக கூறிய அவனை முதல் பார்வையிலேயே அவளுக்கு பிடிக்காமல் போய்விட்டது..

ஆனாலும் வெண்ணிலாவும் அன்னையும் முழுமனதுடன் அவன் காதலை ஏற்றுக்கொண்ட பின், சிறு பெண் அவளால் என்ன செய்ய முடியும்..! அமைதியாகவே ஒதுங்கி கொண்டாள்..

வர்ஷா, வெண்ணிலாவின் தந்தை இறந்து நான்கு வருடம் ஆகிவிட்டது..

இப்போது வீட்டில் அவர்கள் அன்னை காமாட்சியுடன் சேர்த்து மூன்று பெண்கள் தான்..

வெண்ணிலா இப்போது தான் சட்டக்கல்லூரியில் இறுதியாண்டு முடித்திருந்தாள்..

ஒரு பிரபலமான வக்கீலிடம் ஜூனியராக சேர முயற்சித்து கொண்டிருந்தாள்..

மனோகர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவன்..

ஒரு வருடம் முன்பு தான் வெண்ணிலா வீட்டு அருகில் குடி வந்திருந்தான்..

அவனுக்கு தங்கை மட்டும் தான்.. அவளுக்கும் திருமணம் முடித்து அவன் தனியாக இருந்ததால், காமாட்சியிடம் சில உதவிகள் கேட்டு பழகியவன், கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப நண்பர் போல் ஆகிவிட்டான்..

ஒரு கட்டத்தில் அவன் காமாட்சியிடமே பெண் கேட்டுவிட, மறுக்க எதுவும் காரணம் இல்லாததால் அவரும் ஒத்துக்கொண்டார்..

திருமணம் முடிந்ததும் வெண்ணிலாவை அழைத்து கொண்டு மும்பையில் இருக்கும் அவர்கள் நிறுவன பிரேஞ்சிற்கு செல்ல வேண்டும் என்று அவன் கூறியது லேசாக உறுத்தியது தான்..

ஆனால் யாரோ முகம் தெரியாதவனுக்கு திருமணம் செய்துவைத்து, எங்கோ அனுப்பிவிட்டு பயப்படுவதை விட, நன்றாக தெரிந்த பையனுக்கு கொடுப்பதே மேல் என்று காமாட்சி சம்மதித்திருந்தார்..

பிரிய வேண்டுமே என தயங்கிய பெண்ணிடமும் அவர் இதே காரணத்தை கூறிய போது, அவளும் அதை ஏற்றுக்கொள்ள தான் வேண்டி இருந்தது..

அவளுக்கு மனோகரை மறுக்க எந்த காரணமும் தோன்றவில்லை.. காதல் என்றெல்லாம் அவள் யோசித்ததில்லை..

தெரிந்த பையன், எந்த கெட்டபழக்கமும் இல்லை, அவளை பிடித்து கேட்கிறான் என்னும் போது, மறுக்க ஒன்றுமில்லாமல் மட்டுமே சம்மதித்திருந்தாள்..

அவள் தந்தையின் பென்ஷன் பணமும், அவர் சேமிப்பாக சேர்த்து வைத்திருந்த பணத்தின் வட்டியும் வந்துகொண்டிருந்ததால் பெரிதாக பண பிரச்சனை அங்கு எப்போதும் எழுந்ததில்லை..

வீடும் சொந்த வீடு.. மகள்கள் படிப்பிற்கு என ஏற்கனவே சேர்த்துவைத்திருந்த பணம் என குடும்பத்தை அதிகம் கஷ்டம் இல்லாமலே அந்த மனிதர் விட்டு சென்றிருந்தார்..

சிறிது நேரத்தில் மனோகர் கிளம்பி சென்று விட, அன்னையுடன் அமர்ந்து அவருக்கு சப்பாத்தி போட உதவினாள் வெண்ணிலா..

"ஏதோ வக்கீல் பற்றி விசாரிக்கிறேன் என்று சொன்னாயே! என்ன ஆச்சு நிலா மா?"

ஒரு பக்கம் அமர்ந்து வெங்காயம் அறிந்து கொண்டே கேட்டார் காமாட்சி..

"இல்லை மா, ஒன்னும் செட் ஆகலை.." என வெண்ணிலா கவலையுடன் கூற,

"இப்போது கஷ்டப்பட்டு தேடி என்ன கா செய்ய போகிறாய்?எப்படியும் நாலு மாதத்தில் கல்யாணம் என்று பேசி வச்சிருக்கீங்க.. கல்யாணம் முடிந்ததும் அவர் கிளம்ப வேண்டும் என்று நிற்கிறார்.. நீ இங்கு அலைந்து என்ன ப்ரோயோஜனம்?" என்றாள் வர்ஷா சிறு கடுப்புடன்.

தங்கை தனக்காக தான் யோசிக்கிறாள் என்று புரிந்து வெண்ணிலா முகத்திலும் சிறு புன்னகை தோன்றியது..

"நான்கு முழு மாதம் இருக்கே வர்ஷா குட்டி.. அதற்குள் ஒரு நல்ல லாயரிடம் ஜூனியராக சேர்ந்தால் அனுபவம் தானே..! அவருக்கும் டிரான்ஸ்பர் எல்லாம் ஒழுங்கா கிடைத்து கிளம்பவேண்டும் இல்லையா! கிடைக்கும் நாட்கள் வரை லாபம் தானே.. இங்கே யாராவது நன்றாக தெரிந்துவிட்டால் அங்கு போய் ப்ராக்ட்டிஸ் தொடரவும் சுலபமா இருக்குமே..!"

வெண்ணிலா கூறியதும் சரியாகவே இருந்ததால் வர்ஷா அதற்கு மேல் எதுவும் கேட்டுக்கொள்ளாமல் தன் படிக்கும் வேலையை தொடர்ந்தாள்..

என்ன தான் வர்ஷா அமைதியாகவே இருந்தாலும், தன் பிரிவு தங்கையை பாதிக்கிறது என வெண்ணிலாவிற்கும் புரிந்து தான் இருந்தது..

அன்னைக்கு உதவி முடித்தவள் அடுத்து நேராக தங்கையிடம் தான் சென்றாள்..

படிப்பை முடித்துவிட்டு போனில் ஏதோ பார்த்து கொண்டு அமர்ந்திருந்த தங்கை அருகில் சென்று அமர்ந்த வெண்ணிலா, "என் மேல் கோபமா வர்ஷா?" என மெதுவாகா கேட்க,

"அச்சோ அதெல்லாம் இல்லை கா" என பதறிவிட்டாள் சிறியவள்..

அவளுக்கு இருந்தது வருத்தம் தானே.. தமக்கை மேல் அவளுக்கு எந்த கோபமும் இல்லையே..!

தங்கை மனம் உணர்ந்து நெகிழ்வுடன் அவள் தலை கோதி கொடுத்தவள், "எனக்கு உன் மனம் புரிகிறது வர்ஷா மா.. நானும் எல்லாம் யோசித்து தான் டா இந்த திருமணத்திற்கு சம்மதித்தேன்.. நமக்கு தெரிந்தவராக இருப்பது ஒருவகையில் நல்லது தானே டா.. அப்பாவும் இல்லை.. யாரோ முகம் தெரியாதவனிடம் என்னை கொடுத்துவிட்டு நீயும் அம்மாவும் பயந்துகொண்டே இருப்பதற்கு, இது மேல் இல்லையா? நல்லதே நடக்கும் வர்ஷா.. நீ டென்த் படிக்கிறாய்.. இதை எல்லாம் யோசிக்காமல் படிப்பில் கவனம் செலுத்து டா.. நம்மை அது தான் எப்போதும் காப்பாற்றும்.."

நிதானமாக ஒருமுறை வெண்ணிலா எடுத்து கூற, அதில் இருந்த நியாயம் புரிந்து வர்ஷாவும் சம்மதமாக தலையாட்டி கொண்டாள்..

"கண்டிப்பா கா" என அவள் முடித்துவிட, வெண்ணிலாவும் நிம்மதியுடன் எழுந்து சென்றாள்..

எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று தான் அனைவரும் நம்பினர்..

ஆனால் விதி அவள் வாழ்க்கையில் விளையாட ஒருவனை ஏற்கனவே தயார் செய்துவிட்டதை அவள் அறியவில்லை பாவம்..

**********************

கட்சி அலுவலகத்தில் தலைவர் எதிரில் அமர்ந்திருந்தான் பகலவன்..

"கொஞ்சம் அந்த ரோட் போடும் பிரச்சனையை என்னவென்று பாரேன் பகலவா.. உன் தொகுதியை மட்டும் தான் பார்க்க வேண்டுமா? மற்றவர்களுக்கும் கொஞ்சம் உதவ கூடாதா?"

ஆற்றாமையுடன் அவர் கேட்க, "கண்டிப்பா உதவறேன் அங்கிள்.. ஆனால் எனக்கு என் மக்கள் தான் முதல்.. அதற்கு பின் தான் மற்றதெல்லாம்.. நான் பார்த்துக்கொள்கிறேன்.. விடுங்க.." என்றான் அவன் தெளிவாக.

ஒருமுறை கூறிவிட்டால் அவன் செய்துவிடுவான் என்பதால் அதற்கு மேல் அவரும் எதுவும் கூறவில்லை..

"முக்கியமா பொறுமை பகலவா.. உன் முறையில் இல்லை.. கட்சி பெயர் கெட்டுவிட கூடாது.."

அவனை பற்றி நன்கு அறிந்தவராய் அவர் சேர்த்தே கூற, அதில் மெலிதாக புன்னகைத்தவன், "ஐ நோ அங்கிள்.. கவலைப்படாதீங்க.. உயிர் சேதாரம் இல்லாமல் முடித்துவிடுவோம்" என்றான் பகலவன் அசால்டாக.

"எப்படியோ பார்த்துக்கொள்" என்று அவரும் முடித்துவிட்டார்.

அவன் குணம் அவருக்கும் நன்றாக தெரியுமே..

அதனாலேயே முன்னெச்சரிக்கையாக எங்கு என்ன செய்ய வேண்டும் என்று சேர்த்தே கூறிவிடுவார்..

அவரும் சிறு வயதில் இருந்து அவனை பார்த்துக்கொண்டு தானே இருக்கிறார்.. இதே கட்சியின் முன்னால் தலைவரின் வளர்ப்பு பகலவன்..

ஒண்டிக்கட்டையான அவர், இறக்கும் முன் தன் சொத்து முழுவதும் பகலவன் பெயரில் எழுதி வைத்துவிட்டு போய் விடுவார் என்பது யாருமே எதிர்பார்க்காமல் நடந்தது..

அந்த பணத்தில் அவன் ஆரம்பித்த ஐ.டி நிறுவனம் தான் இன்று அவனை யார் கைகளுக்கும் எட்டாத உயரத்தில் நிறுத்து வைத்திருக்கிறது..

இளமையும் மூளையும் அவனை எங்கோ உயர்த்திவிட, அதற்கு ஈடு செய்வது போல் ராட்சசனாய் உயர்ந்து நின்றான் அவன்..

தலைவரான அவரே சற்று பயந்து அடக்கி வாசிப்பதென்றால் அவனிடம் மட்டும் தானே..!

அவரிடம் பேசிவிட்டு தன் இருக்கைக்கு வந்தவன், தன் முன் இருந்த மனுக்களை புரட்டி கொண்டிருந்தான்..

அதே நேரம் வெளி வேலையாக சென்றிருந்த செழியனும் வந்து சேர, ஒரு கோப்பை அவனிடம் கொடுத்தவன், "இந்த பாக்டரி பற்றிய எல்லா டீடெயில்ஸும் வேணும் ண்ணா.. நம்ம ஏரியா அருகில் இருக்கும் இடத்தில் பாக்டரி கட்டுவதற்காக அனுமதி கேட்டிருக்காங்க.. என்ன செய்யப்போறாங்க? அதன் கழிவுகள் என்ன? எல்லாமே வேண்டும்.." என பகலவன் கூற,

"ம்ம் பார்க்கிறேன் பகலவா" என்று கூறிக்கொண்டே அதை வாங்கி தானும் ஒருமுறை பார்த்தான் செழியன்.

"பெரிய இடம் போலையே!" என யோசனையுடன் செழியன் கூற,

"இருந்துட்டு போகட்டும்" என்றான் பகலவன் கடுப்பாக.

அவன் கோபம் புரிந்து மெலிதாக சிரித்துக்கொண்ட செழியன், "நான் விசாரிக்கறேன் டா.. நீ டென்ஷன் ஆகாதே.." என்று முடித்தான்.

மேலும் சிறிது நேரம் இருவரும் வேலையில் மூழ்கி விட்டனர்..

ஒருவாறு வேலை முடிய மாலையாகி விட, "ஆபிஸ் போகணுமா பகலவா?" என கேட்டுக்கொண்டே எழுந்தான் செழியன்.

"இன்று வெள்ளிக்கிழமை ண்ணா" என்று கூறிக்கொண்டே பகலவனும் எழுந்துகொள்ள, அவன் கூற்றில் ஒரு நொடி செழியனின் முகம் வேதனையும் மகிழ்ச்சியுமாய் ஒளிர்ந்தது..

இரண்டு உணர்வையும் ஒருசேர கட்டுப்படுத்தி கொண்டவன், "போகலாம் டா" என்றான் ஒரு பெருமூச்சுடன்.

அடுத்த அரை மணிநேரத்தில் இருவரும் இருந்தது ஒரு ஆதரவற்றோர் காப்பகம்..

இருவரும் நேராக அலுவலக அறை நோக்கி சென்றனர்..

பகலவன் நேராக உள்ளே சென்று விட, செழியன் கதவருகிலேயே நின்றுவிட்டான்..

அவன் கண்கள் மட்டும் அங்கு மேசைக்கு அந்த பக்கம் அமர்ந்திருந்தவள் மீது தான் படிந்திருந்தது..

சாதா காட்டன் புடவை, எந்த ஒப்பனையும் இல்லாத அழகு முகம், மாநிறத்தில் அமைதியன அழகுடனும், அமைதியான முகத்துடனும் அமர்ந்திருந்தவளை பார்க்க பார்க்க அவனுக்கு தெவிட்டவே இல்லை..

பகலவனை பார்த்ததுமே, "வா டா நல்லவனே, செய்யும் பாவத்தை எல்லாம் கழிச்சுட்டு போக வந்தியா?" என அவள் கிண்டலாக கேட்க,

"நான் ஒரு பாவமும் செய்வதில்லை போ டி" என்றான் அவனும் சிரித்துக்கொண்டே.

"கொஞ்சமாவது மரியாதை இருக்கா?" என அவள் நொடித்துக்கொள்ள,

"ஆமாம் இவள் பெரிய மதர் தெரசா! மரியாதை கொடுக்கறாங்க! என்னை விட ஒரு வயது சின்ன பெண் நீ.. சும்மா பார்க்க பெரிய பெண் போல் வேஷம் போட்டுகொண்டு, ஊரை வேண்டுமானால் ஏமாற்றலாம்.. எங்களை முடியாது.." பேசிக்கொண்டே அமர்ந்தவன் அப்போது தான் செழியன் உள்ளே வராததையே கவனித்தான்..

"அண்ணா இங்கே வந்து உட்கார்ந்து சைட் அடிங்க" என அவன் சத்தமாக கூறிவைக்க,

"பகலவா...!" என அதட்டினாள் மாதங்கி.

அவன் அவள் அதட்டலை எல்லாம் காதிலேயே வாங்கவில்லை..

அதே நேரம் அவன் குரலில் தன் மோன நிலை கலைந்து செழியனும் உள்ளே வந்தான்..

"எல்லாம் ஓகே தானே மது? ஏதாவது வேண்டுமா?" என கேட்டுக்கொண்டே செழியன் வர,

"ஒன்னும் வேண்டாம்" என்றாள் அவள் மெதுவாக.

"நான் ஒரு ரவுண்ட்ஸ் போய்ட்டு வரேன்" என்றுவிட்டு பகலவன் எழுந்து சென்றுவிட, அதுவரை அமைதியாக நின்றிருந்த செழியன் இப்போது மாதங்கி அருகில் வந்து அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தான்..

அவன் செயலில் அவள் பதறி எழ போக, அவளை அழுத்தமாக பிடித்து அமரவைத்தவன், "கொஞ்சம் உட்காரு.. இதிலாவது என் பேச்சிற்கு மரியாதை கொடு.." என இறுக்கமாக கூற, அவன் குரலை மீற முடியாமல் அமைதியாக அமர்ந்தாள் மாதங்கி.

சிறிது நேரம் எதுவும் பேசாமல் அவன் அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்க, தலை குனிந்து அமர்ந்திருந்த அவளால் தான் வெகு நேரம் அப்படியே அமர முடியாமல் போயிற்று..

"செழியா" என மெதுவாக மாதங்கி அழைக்க,

"ம்ம்" என்றான் அவன் பார்வையை மாற்றிக்கொள்ளாமல்.

"யாராவது வர போறாங்க!"

"வரட்டுமே.. நான் உன்னை ஒன்றுமே செய்யவில்லையே.."

அவளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தவன் பார்வை மட்டும் அவள் முகத்தை விட்டு அகலவே இல்லை..

"ப்ளீஸ் செழியா!" என அவள் தாங்க மாட்டாமல் முனக,

"பார்க்க கூட கூடாதா டி.. வாழ தான் முடியாது என்று படுத்துகிறாய்.. பார்க்கவும் தடை போட்டால் எப்படி? இந்த முகத்தை பார்த்துக்கொண்டே செத்துவிடலாமா என்று தோணுது மது.. இந்த மனவலியாவது குறையும்.."

அவள் முகத்தை மென்மையாக கைகளில் தாங்கி ஆழமான குரலில் செழியன் கூற, "அய்யோ! என்ன பேசறீங்க செழியா?" என வேகமாக அவன் வாயை மூடினாள் மாதங்கி.

அவள் செயலில் நிதானமாக அவள் கையை எடுத்துவிட்டு எழுந்தவன், "வேறு என்ன செய்ய மது? நீ எப்போது மனம் மாறி, நாம் எப்போது வாழ்வது? ஏற்கனவே முப்பத்தைந்து வயதாகிவிட்டது.. பாதி கிழவனாயாச்சு.. கடைசிவரை உன் முகத்தை மட்டும் பார்த்துக்கொண்டே கன்னிகழியாமலே சாக வேண்டும் என்று தான் என் தலையில் எழுதி இருக்கு போல்.."

பாதி விளையாட்டும் பாதி ஆற்றாமையுமாக புலம்பினான் செழியன்..

"உங்களுக்கு என்ன குறை செழியா? ஒரு நல்ல பெண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க.. நீங்க சந்தோசமா இருக்கனும்.." மென்மையாக கூறியவளை இந்த முறை செழியன் நன்றாகவே முறைத்தான்..

"செய்ய மாட்டேன் என்று தெரிந்தே பேசுகிறாய் பார்! உன்னை என்ன செய்ய?" என சலித்துக்கொண்டான் அவன்.

'இன்னும் எத்தனை நாட்களுக்கு செழியா? என்றவாது உங்கள் மனம் நிச்சியம் மாறும்'

அவன் கண்களை பார்த்து மனதிற்குள்ளேயே அவள் கூறிக்கொள்ள, 'வாய்ப்பே இல்லையடி பெண்ணே' என அவன் கண்களும் அவளுக்கு சலிக்காமல் பதில் கூறியது.

மாதங்கி மனம் மாறும் வரை இந்த பேச்சிற்கு முற்றுப்புள்ளியே இருக்கப்போவதில்லை என்பதை உணர்ந்து, ஒரு பெருமூச்சிற்குள் தன் உணர்வுகளை கட்டுப்படுத்தி கொண்ட செழியன், "வா நாமும் போவோம்.. ஏதாவது தேவை என்றால் பார்த்துக்கொள்கிறேன்" என கூறிக்கொண்டே நடக்க, அவளும் அவனை தொடர்ந்தாள்..

இருவரும் ஒவ்வொரு அறையாக பார்வையிட்டு கொண்டே பகலவன் இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர்..

ஒரு பக்கம் மரத்தில் சாய்ந்து நின்றிருந்தவன், எங்கோ முகம் சுருங்க பார்த்துக்கொண்டிருந்தான்..

"பகலவா" என்ற செழியனின் குரலில் அவன் புறம் திரும்பாமலே,

"அது யாரு மது?" என்றான் தன் எதிரில் இருந்த பெண்ணை காண்பித்து.

அவன் பார்வை சென்று திசையில் செழியனும் பார்க்க, "அந்த பொண்ணு வெண்ணிலா பகலவா.. போன வாரம் சில முதியவர்கள் கொண்டு வந்து விட்டாள்.. இந்த முறை சும்மா பார்த்துவிட்டு, அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்ய வந்தாள்.. சின்ன பெண் தான்.. ஆனால் நல்ல பெண்.." என்றாள் மாதங்கி.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே இவர்களை கவனித்துவிட்டு வெண்ணிலாவும் இவர்களை நோக்கி வந்தாள்..

"நான் கிளம்பறேன் அக்கா" என்றவள் பகலவனை ஒரு முறை பார்த்துவிட்டு மீண்டும் மாதங்கி புறம் திரும்ப,

"சரி மா.. பார்த்து போ.. இவன் தெரியுமா? பகலவ வர்மன் எம்.எல்.எ.. இந்த ஆசிரமத்தின் செலவு முழுவதும் இவன் செய்வது தான்.." என அறிமுகப்படுத்தினாள் மாதங்கி.

"ஓ.. ரொம்ப நல்ல விஷயம் சார்.." என வெண்ணிலாவும் சிறு புன்னகையுடன் கூற, ஏனோ அந்த புன்னகை அவன் முகத்தில் எதிரொலிக்கவில்லை..

அவன் எந்த பதிலும் கூறாமல் அமைதியாகவே நிற்க, அவளும் எதுவும் எதிர்பார்க்கவில்லை போல், மீண்டும் ஒரு முறை "வரேன்" என்றுவிட்டு கிளம்பிவிட்டாள்..

பகலவன் அவளையே பார்த்துக்கொண்டு நின்றிருக்க, அவன் பார்வையில் இருந்த வித்தியாசத்தை உணர்ந்து, "என்ன டா?" என அவள் தோளை தட்டினாள் மாதங்கி.

அவள் செயலில் தன் பார்வையை திருப்பி கொண்டவன், "நத்திங்.. போகலாம் வா.." என்றுவிட்டு அவர்களுடன் இணைந்துகொள்ள, அதற்கு மேல் எதுவும் பேசாமல் அவர்களும் அவனுடன் சேர்ந்து மற்ற வேலைகளை கவனிக்க சென்றனர்..

குளிரும்.

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 3:

"ஆண்ட்டி ப்ளீஸ்" என்ற பகலவனின் அழுத்தமான குரலில் அவன் முன் அமர்ந்து அழுதுகொண்டிருந்த பெண்மணி கடினப்பட்டு அழுகையை விழுங்கி கொண்டு நிமிர்ந்து அவனை பார்த்தார்..

"என்னை நம்பி சொல்லிவிட்டு இப்படி ரெண்டு பேரும் அழுதுவடிந்து கொண்டிருந்தாள் என்னை அசிங்கப்படுத்துவது போல் ஆகாதா? நீங்களாவது சொல்ல கூடாதா அங்கிள்?"

சிறு கோபமும் சலிப்புமாக பகலவன் கேட்க, "மன்னிச்சுரு பா" என உடனடியாக இறங்கிவிட்டார் சுந்தரம்.

"நானும் என்ன செய்யட்டும் தம்பி! சொலையா இருபது லட்சம்.. அந்த பையன் கொஞ்சம் கொஞ்சமா தந்துடுவேன் என்று சொன்னதை நம்பி தூக்கி கொடுத்துட்டேன்.. முதல் முறை வட்டி தொழில் என்று ஆரம்பித்ததில் ஒன்னும் சரியா பார்க்க தெரியலை பா.. அந்த பையனும் போன வருடம் வரை ஒழுங்கா வட்டி கொடுத்ததில் கண்டுக்காமல் விட்டுட்டேன்.. பாவி! எனக்கே தெரியாமல் என்னிடம் அடமானம் வச்ச இடத்தை வித்திருக்கான்.. அதுவும் என்னிடம் போலி பத்திரம் எல்லாம் கொடுத்திருக்கான்.. நானும் பைத்தியக்காரன் மாதிரி நம்பி இருக்கேன்.. இப்போ முழுசா ஏமாந்து நிக்கற மாதிரி ஆகிடுச்சே பா.."

மனம் கேட்காமல் அவர் புலம்ப, "அப்புறம் நான் எதுக்கு குத்துக்கல் மாதிரி உட்காந்திருக்கேன்" என்றான் பகலவன் எரிச்சலுடன்.

அவன் கோபத்தில் அவர் பயந்து விழிக்க, அவனும் முயன்று தன்னை கட்டுப்படித்தி கொண்டான்..

"கவனிங்க அங்கிள், நான் ஏற்கனவே அந்த மனோகரை பற்றி எல்லாம் விசாரிக்க சொல்லிட்டேன்.. உங்களுக்கு பணம் முக்கியம் இல்லையா? அவனை போட்டுத்தள்ள ரெண்டு நிமிஷம் ஆகாது.. ஆனால் பணம் வராது.. பணத்தை வாங்கும் வழியை தான் நாம் முதலில் பார்க்கணும்.. அதுக்கு அப்புறம் வேண்டுமானால் போட்டுரலாம்.."

"ஐய்யோ கொலை எல்லாம் வேண்டாம் பா" சுந்தரத்தின் மனைவி வேகமாக பதற,

"கூல்.. கூல் ஆண்ட்டி.." என்றான் பகலவன் சாதாரணமாக.

"இத்தனை இளகிய மனசுடன் நீங்க இந்த தொழிலே முயற்ச்சித்திருக்க கூடாது.." நிதானமாக பகலவன் கூற,

"உண்மை தான் தம்பி.. யாரோ சொன்னதை கேட்டு அவசரப்பட்டு விட்டேன்.." என ஒத்துக்கொண்டர் சுந்தரம்..

"பரவாயில்லை.. இனி கவனமாக இருங்க.. உங்கள் பணம் உங்கள் கைக்கு வரும்.. அதுக்கு நான் பொறுப்பு.. நிம்மதியா இருங்க.. பணம் வந்ததும் நானே கூப்பிடறேன்.. எதாவது அவசர தேவை இருக்கா?"

"அதெல்லாம் இல்லை பா.. இந்த பணம் கிடைத்தாலே போதும்.. நீ பாரு பா.. நான் காத்திருக்கேன்.. உன்னிடம் பொறுப்பை கொடுத்துட்டு மீண்டும் கேட்க வேண்டாம் என்று எவ்வளவோ சொன்னேன்.. இவள் தான் கேட்கவே இல்லை.." பேசிக்கொண்டே சுந்தரம் எழுந்துவிட, அவருடன் அவர் மனைவியும் எழுந்தார்.

"எனக்கு புரியுது அங்கிள்.. போங்க.. நான் பார்த்துக்கறேன்.." என அவர்களை அனுப்பி வைத்தான் பகலவன்.

காலையில் அலுவலகம் கிளம்பிக்கொண்டிருந்தவனிடம் வந்து தான் சுந்தரமும் அவன் மனைவியும் பேசிவிட்டு சென்றனர்..

அவர்கள் கிளம்பியதும் சில நொடிகள் முகம் சுருங்க ஏதோ யோசித்தவன், ஒரு தலைசிலுப்பலுடன் கிளம்பிவிட்டான்..

பகலவன் தனது நிறுவனத்திற்கு வந்து சேர்ந்த போது அங்கு சீராக வேலை நடந்துகொண்டிருந்தது..

பொதுவாக அவன் எப்போது எந்த பிராஞ்சிற்கு வருவான் என யாராலும் கணிக்க முடியாது என்பதால், எப்போதும் அங்கு வேலை ஒழுங்காகவே நடக்கும்..

ஏதாவது அஜாக்கிரதையாகவோ, அசட்டையாகவோ கோட்டைவிட்டால் யோசிக்காமல் வேலையை விட்டு தூக்கி விடுவானே..!

அன்று பெருங்குடியில் இருந்த பிராஞ்சில் முக்கிய ப்ராஜெக்ட் வேலை போய் கொண்டிருந்ததால் செழியன் அங்கு தான் இருந்தான்..

பகலவனும் அங்கு தான் வந்திருந்தான்..

அவன் வந்த போது செழியன் மீட்டிங்கில் இருந்ததால், அவனை தொந்தரவு செய்யாமல் தன் அறைக்கு சென்று அமர்ந்துவிட்டான்..

சிறிது நேரத்தில் மீட்டிங் முடிந்து செழியனும் பகலவன் அறைக்கு வந்து சேர்ந்தான்..

"என்ன பகலவா கட்சி வேலை இருக்கு என்று சொல்லி இருந்தாயே! பார்க்கவில்லையா?" என்று கேட்டுக்கொண்டே அவன் அமர,

"போகணும் ண்ணா.. அதுக்கு முன் மனோகர் விஷயம் என்ன ஆச்சு?" என்றவன் காலையில் சுந்தரம் வந்ததையும் சேர்த்தே கூறினான்..

"முக்கால்வாசி விசாரிச்சாச்சு பகலவா.. சில பேங்க் டீடெயில்ஸ் மட்டும் கேட்டிருந்தேன்.. கால் பண்ணுறேன் என்று சொல்லி இருந்தாங்க.. அது மட்டும் தெரிந்தால் முழுதா முடிந்துவிடும்.."

"கால் பண்ணி கேளுங்க ண்ணா" என்றுவிட்டு அவன் லாப்டாப்பிற்கு திரும்பி விட, செழியனும் போனுடன் நகர்ந்தான்..

அவன் மீண்டும் வர அரை மணி நேரம் ஆனது..

"மெயில் பார்த்தாயா பகலவா?" என கோபத்துடன் கேட்டுகொண்டே செழியன் வர, சரியாக பகலவனும் அதே நேரம் மெயிலை தான் பார்த்துக்கொண்டிருந்தான்..

அவன் முகமும் பெரும் கோபத்துடன் சுருங்கி தான் இருந்தது..

"ஹவ் டேர்" என எரிச்சலுடன் பகலவன் முணுமுணுக்க,

"இப்படிபட்ட பிறவிகளும் உலகில் வாழ தான் டா செய்யறாங்க" என்றான் செழியனும் கடுப்புடன்.

"அடித்து மிரட்டி பணத்தை வாங்க முயற்சிக்கலாம் தான்.. ஆனால் இவனை பற்றி நான் கேள்விப்பட்டது கொஞ்சம் உதைக்குது பகலவா.." என செழியன் நிறுத்த,

"அடி உதைக்கு பயந்து பணம் தராத ரகம்.. ரைட்.." என முடித்து வைத்தான் பகலவன்.

"ம்ம் அதே தான் டா.. அவன் இயல்பிலேயே சரியான பணத்தாசை பிடித்தவன் போல்.. கொன்றுவிடுவோம் என்று மிரட்டினால் கூட பணத்தை கொடுத்துட்டு வாழ்வதற்கு சாவே மேல் என்று நின்றுவிடுவானே ஒழிய, பணம் வாங்குவது கஷ்டம் தான்.. பாறையில் தண்ணி வர வைப்பது போல் போராடனும்.."

நெற்றியை நீவி கொண்டே செழியன் யோசிக்க, பகலவன் முகமும் ஏதோ யோசனையுடன் சுருங்கியது..

"இவனுக்கு சொந்தம்..?" என பகலவன் கேள்வியுடன் நிறுத்த,

"தங்கை குடும்பம் தான் டா.. அவங்களுக்கெல்லாம் பாவம் பார்ப்பான் என்று தோன்றவில்லை.." என்றான் செழியன்.

"வாட் எபவுட் வெண்ணிலா?" அழுத்தமாக பகலவன் கேட்டதில் முதலில் செழியனுக்கு சரியாக புரியவில்லை.

அவன் முகத்தில் இருந்த அழுத்தம் ஏதோ உணர்த்த, சட்டென பிடிபட்டதில் அதிர்ச்சியுடன் அவனை பார்த்தான் செழியன்..

"சின்ன பெண் பகலவா.. அவளை பற்றி போய் யோசிக்கிறாயே! வேறு ஏதாவது சொல்.. இது வேண்டாம்.." இந்த எண்ணத்தை முளையிலேயே கிள்ளிவிட வேண்டும் என வேகமாக மறுத்தான் செழியன்.

அவன் நினைத்து என்ன செய்வது! பகலவன் முடிவுகளை மாற்ற யாராலும் முடியாதே..!

"ம்ஹ்ம்.. அவள் தான் சரியான சாய்ஸ்.. எனக்கு இன்னும் இரண்டு நாட்களுக்குள் அவளை பற்றிய முழு விவரமும் வேண்டும்" தெளிவாக பகலவன் கூற, அவன் எண்ணம் ஓரளவு செழியனுக்கு புரிந்தது

"பாவம் டா பகலவா.. சொன்னால் கேளு.. இதுவரை நாம் எந்த பெண்ணையும் இது போல் பயன்படுத்தியதில்லையே! நீ இப்படி யோசிக்கவே மாட்டாயே டா! வேறு வழி யோசிப்போம் பகலவா.. வழிகளா இல்லை?"

இவன் மனதை மாற்ற முடியாதே என்ற தவிப்புடன் செழியன் கேட்க, அவன் நினைவை பகலவன் உறுதிபடுத்தினான்..

"இது வரை தேவை ஏற்படவில்லை ண்ணா.. இப்போது தேவைப்படுகிறது.. அவ்வளவு தான்.. காதலை விட பெரிய செண்டிமெண்ட் என்ன இருந்துவிட போகிறது.. சுலபமா முடிப்போம்.." அவன் தோளை குலுக்கிய விதத்திலேயே அவன் தெளிவாக முடிவெடுத்துவிட்டான் என செழியனுக்கு புரிந்து போனது..

"அந்த பெண்ணிடம் தவறா எதுவும்..." என செழியன் தயக்கத்துடன் நிறுத்த, அவனை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தான் செழியன்..

"எல்லாருக்கும் பாவம் பார்த்துக்கொண்டிருந்தாள் நம் வேலை ஆக வேண்டாமா? அதே நேரம் நான் உங்களுக்கு தம்பியும் தான்.." நிதானமாக அவன் கூறியது செழியனுக்கு அரைகுறையாக தான் புரிந்தது.

"பகலவன் என்னும் அரசியல்வாதியையும் தொழிலதிபனையும் பார்த்து பார்த்து, பகலவன் என்னும் தனி மனிதன் இருக்கிறான் என்றே நீங்க மறந்துட்டிங்க ண்ணா.."

எதுவும் வரையறுக்க முடியாத ஒரு மாதிரி குரலில் பகலவன் கூற, அவன் குரலில் எங்கோ ஒளிந்திருந்த ஏக்கம் செழியனுக்கு ஏதோ செய்தது..

"என் தம்பி மிச்சம் இருந்தால் சந்தோசம் தான் டா" நெகிழ்வுடன் செழியன் கூற, அவனை பார்த்து லேசாக புன்னகைத்தவன்,

"ஊருடன் ஒட்டி வாழ்ந்து தான் ஆக வேண்டும் ண்ணா.. நான் கேட்ட டீடெயில்ஸ் ப்ளீஸ்.." என கண்ணடித்து மேலும் அவனை குழப்பிவிட்டு தன் வேலையை தொடர்ந்தான்.

"அட போ டா குழப்பதுக்கு பிறந்தவனே!" என சலித்துக்கொண்டே எழுந்து சென்ற செழியனின் மனம் நிச்சியம் கொஞ்சம் சமன் பட்டு தான் இருந்தது..

பகலவன் கேட்டது போலவே அடுத்த இரண்டாம் நாள் வெண்ணிலாவை பற்றிய அணைத்து தகவலும் அவனிடம் ஒப்படைத்தான் செழியன்.

செழியன் பகலவனை தேடி வந்த போது இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆகி இருந்தது..

பகலவன் அவர்கள் வீட்டு தோட்டத்தில் இருந்த பெஞ்சில் அமைதியாக கண்மூடி சாய்ந்து அமர்ந்திருந்தான்..

அவன் காதில் எப்போதும் போல் இளையராஜாவின் பாடல் ஒலித்துக்கொண்டிருக்க, பகலில் அவன் முகத்தில் முற்றிலும் காண முடியாத மெல்லிய புன்னகை அவன் உதட்டில் தவழ்ந்து கொண்டிருந்தது..

"இசையில்
தொடங்குதம்மா விரஹ
நாடகமே வசந்தம் கண்டதம்மா
வாடும் வாலிபமே

வசந்த கோலங்களை
வானின் தேவதைகள்
கண்டு ரசிக்க
வந்து கூடிவிட்டார்
இங்கு நமக்கு ஹோ
ஹோ ஓ
.................

தேய்ந்து வளரும்
தேன் நிலாவே மண்ணில்
வா தேய்ந்திடாத தீ குழம்பாக
ஒளிர வா

வானத்தில்
வானத்தில் மின்னிடும்
வைரத்தின் தாரகை
தோரணங்கள் பூமிக்கு
கொண்டு வா

ஆ ஆஆ ஆஆ ஆ

இசையில்
தொடங்குதம்மா விரஹ
நாடகமே வசந்தம்
கண்டதம்மா ஆஹா
வாடும் வாலிபமே"

பாடலில் லயித்திருந்தவன் செழியன் தன் அருகில் அமரும் அரவம் உணர்ந்து கண்விழித்தான்..

"சொல்லுங்க ண்ணா" என கேட்டுக்கொண்டே பகலவன் ஹெட் செட்டை கழட்ட, அவனிடம் வெண்ணிலா பற்றிய முழு விவரமும் கூறி முடித்தான் செழியன்.

அவன் கூறி முடித்ததும் சில நிமிடங்கள் யோசித்தவன் ஒரு முடிவுடன் அடுத்து செய்ய வேண்டியதை கூற, "இது தேவைதானா என்று நன்றாக யோசித்துக்கொள் பகலவா" என்றான் செழியன் மீண்டும்.

"தேவை தான் ண்ணா.. நான் சொன்னதை செய்யுங்க.. அந்த மனோகர் காதலுக்காவது நேர்மையா இருக்கிறானா பார்த்துவிடுவோம்" என்ற பகலவன் குரலில் என்ன உணர்வு இருந்தது..

செழியனுக்கு சரியாக புரியவில்லை..

அவன் சொன்னதை தட்ட முடியாது என்பதால் அமைதியாக எழுந்து சென்றுவிட்டான்..

***************************

மாலை வீட்டிற்குள் நுழைந்த வெண்ணிலா முகத்தில் அத்தனை மகிழ்ச்சி..

அவள் சுத்தமாக எதிர்ப்பார்க்காத வாய்ப்பல்லவா கிடைத்திருந்தது..

முதல் வேலையாக அவள் அன்னையிடம் தான் விஷயத்தை கூறினாள்..

"அம்மா மிகவும் பிரபலமான ஒரு வக்கீலிடம் ஜுனியரா சேர வாய்ப்பு கிடைத்திருக்கிறது மா.. நான் சுத்தமா எதிர்பார்க்கவே இல்லை.. சும்மா மெயில் பண்ணி வச்சிருந்தேன்.. அவர் கிளம்பி வர சொல்லிட்டாரு மா.."

ஆர்ப்பாட்டத்துடன் வெண்ணிலா கூற, மகள் குதூகலத்தில் தானும் மெலிதாக சிரித்துக்கொண்டவர், "உனக்கு சந்தோசம் என்றால் எனக்கும் மகிழ்ச்சி தான் டா.. ஆனால் இப்படி அரைகுறையாக சொல்லாமல் முழுதாக சொன்னால் எனக்கும் புரியும்.." என்றார் மென்மையாக.

"மும்பையில் பெரிய வக்கீல் மா.. அவரிடம் ஜுனியரா சேருவது அத்தனை சுலபம் இல்லை.. ரொம்பவும் செலெக்ட்டிவ்வா தான் தேர்ந்தெடுப்பார்.. அதான் நான் பெரிதா அதை கவனிக்கவில்லை.. மெயில் அனுப்பியதோடு மறந்தே போய்ட்டேன்.. இன்று அவரிடம் இருந்து மெயில் வந்திருக்கு மா.. வந்து சேர்ந்துகொள்ள சொல்லி இருக்கார்.."

"அப்போ மும்பை போகணுமா டா?" குழப்பத்துடன் காமாட்சி கேட்க,

"ஆமா மா" என்றாள் வெண்ணிலா.

"எப்படியும் கல்யாணத்துக்கு அப்புறம் அங்கே போகணும் என்று தானே மனோ தம்பியும் சொல்லிச்சு.. கல்யாணம் முடிந்ததும் சேர்ந்தே போய் கொள்கிறாயா?"

"இல்லை மா.. அவர் உடனே வர சொல்லி இருக்கார்.. அவர் கூப்பிடும் போதே போய் விட வேண்டும் மா.. கல்யாணம் செய்துகொண்ட பின்பும் நிச்சயம் இது ரொம்ப உதவியா இருக்கும்.. நான் இப்போதே போய் ப்ராக்ட்டிஸ் ஸ்டார்ட் பண்ணுறேன் மா.. இடையில் கேப் எடுத்துக்கொண்டு கல்யாணத்தை பார்த்துக்கலாம்.."

தன் முடிவை தெளிவாக வெண்ணிலா கூற, "ம்ம் அதுவும் சரி தான் நிலா.. ஆனால் தனியாக போகணுமா டா? மனோவிடம் சொல்லிவிட்டாயா?" அடுத்தகட்ட கவலையுடன் கேட்டவரை வாஞ்சையுடன் பார்த்தவள்,

"இதில் என்ன இருக்கு மா! என் பிரெண்ட் அங்கே இருக்கிறாள்.. அவள் உதவியுடன் ஒரு ஹாஸ்டல் பார்த்துக்கறேன்.. மனோவிடம் இனி தான் சொல்லணும்.. அவர் மறுக்க ஒன்றும் காரணம் இல்லையே..!" என தன் மகிழ்ச்சி நீங்காமல் கூறி முடித்தாள் வெண்ணிலா.

அவள் நினைத்தது சரியே என்பது போல் அவள் விஷயத்தை கூறிய போது மனோகர் பெரிதாக எதுவும் மறுக்கவில்லை..

மாறாக அதன் லாப நஷ்டங்களை தான் கணக்கிட்டான்..

"அவரிடம் ப்ராக்டிஸ் போனால் நல்ல எதிர்காலம் இருக்கும் இல்லையா?" என மனோகரன் ஏதோ யோசனையுடன் கேட்க,

"கண்டிப்பா நல்ல எதிர்காலம் இருக்கும்.. நிறைய கத்துக்கலாம்.." என்றாள் வெண்ணிலா.

அவள் அறிவை கணக்கிட்டு பேச, அவனோ பணத்தை தான் மனதில் கணக்கிட்டு கொண்டிருந்தான்..

"பார்த்து பத்திரமா இருந்துகொள்வாய் தானே நிலா? இப்போது என்னாலும் உடன் வர முடியாது.. தனியாக சமாளித்துவிடுவாயா?"

அவனுக்குள்ளும் எங்கோ அக்கறை இருந்தது போல்.. என்ன இருந்தாலும் அவன் கைப்பிடிக்க போகும் பெண் ஆயிற்றே..!

"அதெல்லாம் பத்திரமா இருந்துகொள்வேன் மனோ" என சிறு புன்னகையுடன் கூறினாள் வெண்ணிலா.

"சரி தான்.. கிட்டத்தட்ட நாலு மாதம் பிரிந்திருக்கனுமே.. அதுவரை தாங்குவது போல் ஏதாவது தர கூடாதா?" பேசிக்கொண்டே மனோகர் அவளை நெருங்க, அவன் வீட்டு வரவேற்பரை சோபாவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவள் சட்டென எழுந்துவிட்டாள்..

"இதெல்லாம் அநியாயம் நிலா மா" என அவன் பாவமாக முகத்தை வைத்துக்கொள்ள, அதில் மேலும் சிரித்தவள்,

"கல்யாணம் வரை அடக்கமா தான் இருந்தாகணும்" என புன்னகை மாறாமல் கூறிவிட்டு கிளம்பிவிட்டாள்..

அடுத்த நான்கு நாட்களில் வெண்ணிலா மும்பைக்கு கிளம்பி விட்டாள்..

அவளை அழைத்திருந்த வக்கீலின் ஜூனியர் ஒருவர் நம்பர் தான் அவளுக்கு கொடுக்கப்பட்டிருந்தது..

அதற்கு ஒரு முறை அழைத்து தனது வரவை அவரிடம் உறுதி செய்து கொண்டவள், ஒரு ட்ரைனில் டிக்கெட் புக் செய்து கொண்டு கிளம்பினாள்..

அனைவரும் அவளுடன் ரயில் நிலையம் வரை வருவதாக தான் இருந்தது..

கடைசி நேரத்தில் மனோகருக்கு நகர முடியாமல் வேலை வந்து விட, இரவு நேரத்தில் வர்ஷாவுடன் அலைய வேண்டாம் என அவள் காமாட்சி வர்ஷாவையும் உடன் வர வேண்டாம் என்று கூறிவிட்டாள்..

ஒரு கேப் புக் செய்து விட்டு அவள் காத்திருந்த போது மனோகர் அவளுக்கு அழைத்தான்.

"பார்த்து பத்திரமா போ நிலா.. போனதும் போன் பண்ணு.. ரொம்ப ரொம்ப சாரி மா.. கடைசி நேரத்தில் இப்படி ஆகும் என்று நான் நினைக்கவே இல்லை.." என அந்த நாளில் மட்டுமே பத்தாவது முறையாக மன்னிப்பு கேட்டவனை பார்த்து அவளுக்கு இப்போது சிரிப்பு தான் வந்தது..

"எத்தனை முறை சாரி சொல்லுவீங்க மனோ? நான் என்ன குழந்தையா! பார்த்து போய்க்கொள்வேன்.. நீங்க வேலையை பாருங்க.." என்று அவளே அவனை சமாதானம் செய்துவிட்டு வைத்தாள்.

அவன் போனை வைக்கவும் கேப் வரவும் சரியாக இருக்க, "பார்த்து இருங்க மா.. ஏதாவது வேண்டுமென்றால் மனோவிடம் சொல்லுங்க.." என ஆயிரம் அறிவுரை கூறி, தானும் ஆயிரம் அறிவுரை பெற்றுக்கொண்டே கேபில் ஏறினாள்..

அவள் ஏறி அமர்ந்ததும் கார் நகர ஆரம்பிக்க, புறவழி சாலை வந்ததும் கார் வேகமெடுத்தது..

"ஜன்னலை சாத்துங்க மேடம்.. ஏ. சி போடணும்.." என திடீரென டிரைவர் கூற, அது வரை லேசாக ஜன்னலை திறந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தவள், ஜன்னலை மூடினாள்..

போனில் ஏதோ பார்த்து கொண்டிருந்தவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தலை வலிப்பது போல் இருக்க, ஒரு கட்டத்தில் தலை சுற்ற வேறு தொடங்கியது..

நாசியில் ஏறும் ஏதோ நெடி தனக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்று புரிய, "ஏ.சியை ஆப் பண்ணுங்க டிரைவர்.. எனக்கு தலை வலிக்குது" என்று கூறிக்கொண்டே ஜன்னலை திறந்தாள் வெண்ணிலா.

"இனி அனைத்து பிரோயோஜனம் இல்லை மா.. நீ இன்னும் சில நொடிகளில் மயங்கிவிடுவாய்" சாதாரணமாக வந்து விழுந்த டிரைவரின் வார்த்தைகள் அவள் மூளைக்குள் செல்லவே சில வினாடிகள் பிடித்தது.

ஒருவாறு தலை சுற்றலும் அதிகரித்து அவன் கூரியது உண்மை என்று உணர்த்த, "ஹேய் யாரு நீ? என்ன பேசற?" என பெரும் பயத்துடன் அவன் சட்டையை பிடித்தாள் வெண்ணிலா.

அவனும் அதை எதிர்பார்த்தே இருந்தான் போல்.. அவள் கையில் சிக்காமல் வாகாக நகர்ந்து கொண்டவன், வண்டியையும் ஓரம் கட்டி பொறுமையாக நிறுத்தினான்..

'இறங்கி ஓடிவிடு' என மூளை கொடுத்த அபாய மணிக்கு வெண்ணிலாவின் உடல் கொஞ்சமும் ஒத்துழைக்கவில்லை..

அது தெரிந்து தான் அவன் தைரியமாக வண்டியை நிறுத்தினான் போல்..!

"ஏய்..! யா.. யாரு நீ? கா.. காப்பாத்துங்க..." அதிகம் கத்தகூட முடியாமல் மயக்கத்துடன் போராடி தோற்றுகொண்டே முன்னாள் இருந்தவனை பார்க்க முயன்றாள் வெண்ணிலா.

அது வரை முகத்தில் ஒரு மாஸ்க் அணிந்திருந்தவன், அதை கழட்டிவிட்டு அவள் புறம் திரும்பினான்..

மங்கலாக தெரிந்த அவன் முகத்தை தலையை சிலுப்பி கொண்டு அவள் பார்க்க முயல, நொடி பொழுதில் தெளிவாக தெரிந்த அவன் முகத்தை இனம் கண்டுகொண்டவளுக்கு பெரும் அதிர்ச்சி..

"ப.. பகலவன் சார்.." என மெதுவாக அவள் முணுமுணுக்க,

"நாட் பேட்" என பகலவன் லேசாக சிரித்துக்கொள்ளும் போதே அவள் மயங்கி சரிந்துவிட்டாள்..

முன்பக்கம் சரிந்து விழுந்தவளை பிடித்து பின்சீட்டில் படுக்க வைத்தவன் கண்கள், இப்போது அவள் முகத்தில் கூர்மையுடன் படிந்தது..

"நீ பாம்பா? பழுதா? மை டியர் மூன்.. கண்டுபிடிப்போம்.." என ஆழமான குரலில் கூறிக்கொண்டவன், அவளையே சில நொடிகள் பார்த்துக்கொண்டிருந்தான்..

பின் ஒருபெருமூச்சுடன் கிளம்பியவன் கார் அவன் வீட்டை நோக்கி சீறி கொண்டிருந்தது..

குளிரும்..

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 4:

மெதுவாக கண்விழித்த வெண்ணிலாவிற்கு தலை எல்லாம் பாரமாக கனத்தது..

நல்ல பஞ்சு மெத்தையில் படுத்திருந்தவள் உடல் 'அப்படியே தூங்கிவிடேன்' என்று கெஞ்ச, மீண்டும் கண்ணை மூட போனவளுக்கு மெதுவாக தான் நடந்தது நினைவு வந்தது..

கண்முன் தோன்றிய காட்சியில் மனம் வெகுவாய் பதறிட, கண்களை அழுத்தமாக மூடி வேகமாக திறக்க முயன்றாள்..

ஒருவாறு மூன்றாம் முறை உடல் ஒத்துழைத்துவிட, வேகமாக எழுந்து அமர்ந்தாள் வெண்ணிலா..

கண்களை நன்றாக கசக்கி கொண்டு சுற்றி பார்த்தவளுக்கு ஒன்றும் புரியவில்லை..

ஏதோ ஒரு பெரிய படுக்கை அறை போல் இருந்தது..

திடீரென மனதில் இனம் புரியாத பயம் தோன்ற, வேகமாக தன்னை குனிந்து ஒரு முறை ஆராய்ந்தாள்..

நல்ல வேலையாக அவள் உடைகள் எதுவும் கலைந்திடாமல் நன்றாக தான் இருந்தாள்..

அதில் மனதில் எழுந்த நிம்மதியுடன் மெதுவாக கட்டிலில் இருந்து இறங்கியவளுக்கு, அப்போது தான் பகலவனின் நினைவே வந்தது..

அவனை காப்பகத்தில் பார்த்தது அவளுக்கு நன்றாகவே நினைவிருந்தது..

ஒரு எம்.எல். ஏ.. அவன் ஏன் அவளை கடத்த வேண்டும்? அவளுக்கு ஒன்றும் புரியவில்லை..

மெதுவாக அறையை சுற்றி பார்த்தவளுக்கு ஒன்றும் புரியவில்லை..

சாதாரண படுக்கை அறை போல் காட்சி அளித்த அந்த அறையில், அவளை தவிர யாருமே இல்லையே..!

சுற்றி சுற்றி பார்த்தவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தான் பயம் வர ஆரம்பித்தது.

'கடவுளே யார் அவன்? எதற்கு சம்மந்தமே இல்லாமல் அவளை கடத்தி வந்தான்?'

சில பல செய்திகள் எல்லாம் அவள் கண்முன் வந்து அவளை பலமாக மிரட்ட, அதற்கு மேல் அமைதியாக நிற்க முடியாமல் வேகமாக அந்த அறை கதவை நோக்கி நடந்தாள் வெண்ணிலா..

அவள் பயந்தது போலவே கதவு பூட்டி தான் இருந்தது..

அழுத்தமாக இரண்டு முறை இழுத்து பார்த்தவளுக்கு அதை திறக்க முடியாது என்று புரிந்த போனது..

முதலில் கத்தி பார்ப்போமா என தோன்ற, நொடியில் அந்த எண்ணத்தை கைவிட்டவள், தப்புவதற்கு ஏதாவது வழி இருக்கிறதா என்று தேடினாள்..

அறையில் ஜன்னல் எதுவும் இல்லாமல் போக, மற்றைய பக்கம் ஒரு கதவு தெரிந்தது..

வேகமாக அதை நோக்கி சென்றவள், அதை திறந்து பார்க்க, அதிசயமாக அது திறந்து கொண்டது..

கதவு திறந்ததும் தான் அது அந்த அறை பால்கனி என்றே அவளுக்கு தெரிந்தது..

சத்தமில்லாமல் மெதுவாக நடந்தவள் அங்கிருந்து எட்டி பார்த்தாள்..

கீழே தெரிந்த உயரத்தை பார்த்தால் அவள் இருந்தது குறைந்தது இரண்டாவது தளமாகவாது இருக்கும்..

'இங்கிருந்து குதிக்க கூட முடியாது போலையே!' என நினைத்துக்கொண்டவளுக்கு, அதனால் தான் அந்த கதவை தைரியமா மூடாமல் விட்டிருக்கின்றனர் என்றும் புரிந்தது..

இங்கிருந்து தப்பிக்க முயன்றால் எலும்பு உடைவது தான் மிச்சமாக இருக்கும் என அவள் நினைத்துக்கொண்டிருக்கும் போதே, "ஐயோ..." என்ற பயங்கரமான அலறலில் திடுக்கிட்டு குரல் வந்த திசை நோக்கி பார்த்தாள் வெண்ணிலா.

அங்கிருந்து கீழே தெரிந்த மிக பெரிய தோட்டத்தில் ஒருவன் எங்கிருந்தோ சுருண்டு வந்து விழுந்தான்..

அதை பார்த்ததும் பெரும் பயத்துடன் அவள் உறைந்து நின்றுவிட, அடுத்து நடந்தது அவளை மேலும் உலுக்கி விட்டது..

கீழே விழுந்தவனை தொடர்ந்து மூன்று பேர் நடந்து வந்தனர்..

அதில் முன்னால் வந்தது பகலவன் தான்..

அங்கிருந்து பார்த்தபோதே அவளுக்கு நன்றாக தெரிந்தது..

கையில் துப்பாக்கியுடன் வந்தவன் கீழே விழுந்து கிடந்தவனிடம் குனிந்து ஏதோ பேசினான்..

அவளுக்கு அவன் குரல் சுத்தமாக கேட்கவில்லை.

மாறாக, "ஐயோ விட்டுருங்க சார்" என்ற மற்றவனின் அலறல் தான் அவள் காதில் விழுந்தது.

அவன் விடுவதற்கு தயாராக இல்லை போல்..!

நிதானமாக எழுந்தவன் கொஞ்சமும் யோசிக்காமல் விழுந்துகிடந்தவனை சுட்டு விட, "அம்மா..." என்ற அவன் மரண அலறலுடன்,

"ஐயோ" என்ற வெண்ணிலாவின் அலறலும் சேர்ந்து ஒலித்தது..

அவள் குரலில் பட்டென நிமிர்ந்து அவளை பார்த்தான் பகலவன்..

அசால்ட்டாக ஒருவனை சுட்டு விட்டு அவன் நிமிர்ந்து தன்னை வேறு பார்க்கவும், அவளுக்கு மீண்டும் பயத்தில் மயக்கமே வந்துவிட்டது..

அவள் அங்கேயே மயங்கி சரிந்துவிட, "ஏய்..." என கீழிருந்து பகலவன் கத்திய குரல் தான் அவள் காதில் கடைசியாக ஒலித்தது.

கீழே இருந்து அவளை பார்த்த பகலவனுக்கு நொடியில் அவள் நிலை புரிந்து போனது..

அதில் ஒரு பெருமூச்சுடன் தன் கையில் இருந்த துப்பாக்கியை செழியன் கையில் கொடுத்தவன், "இவனை மிரட்டி ஹாஸ்பிடலில் சேர்த்துருங்க ண்ணா.. பயந்து மயங்கிவிட்டால் போல்.. நான் போய் பார்க்கிறேன்.." என்று கூறிக்கொண்டே திரும்ப,

"பாவம் டா.. நீ கொலை செய்துவிட்டாய் என்று நினைத்திருப்பாள்.." என்றான் செழியன்.

"ம்ம் அவள் பார்வைக்கு அப்படி தான் தெரிந்திருக்கும்.. சோ வாட்.. வீடு என்பதால் கையோடு தப்பித்தான்.. இல்லை என்றால் கஷ்டம் தான்.. பார்த்துக்கோங்க.." என்றுவிட்டு நகர்ந்துவிட்டான் பகலவன்.

முகத்தில் வேகமாக தெளிக்கப்பட்ட தண்ணீரில் மீண்டும் கண்களை கசக்கி கொண்டு விழித்தாள் வெண்ணிலா..

நன்றாக விழித்தவள் கண்களில், எதிரில் நின்றிருந்த பகலவன் விழ, அவனை பார்த்ததுமே சில நிமிடங்கள் முன்பு அவன் சுட்டது தான் அவள் கண்முன் வந்தது..

அதில் பயந்து வேகமாக எழுந்து அவள் கட்டிலுடன் ஒன்றி அமர, அவளை வெறுமையாக பார்த்துக்கொண்டே தன் கையில் இருந்த ஜக்கை மேசை மீது வைத்தான் பகலவன்..

அவள் கண்களில் பயம் கூடிக்கொண்டே போவதை கவனித்தவன், "ஹேய் மீண்டும் மயங்கி விடாதே..! உன்னை எழுப்புவதே எனக்கு வேலையாகிடும் போல்.. நான் ஒன்றும் நல்லவன் இல்லை.. நீ பயப்படுவது போல் மோசமானவன் தான்.. காட் இட்.. அதை நினைவு வைத்துக்கொள்.. நல்லது தான்.. இப்போது பேசுவோமா..?" பேசிக்கொண்டே கட்டிலின் ஒரு பக்கம் அவன் கால் மேல் கால் போட்டு பின் பக்கம் சாய்ந்து அமர, அவளோ மேலும் பயந்து கட்டிலின் அந்த பக்கம் இருந்து வேகமாக இறங்கினாள்..

"எங்கும் ஓட முடியாது மூன்.. என்னை மீறி இங்கு ஒரு அணுவும் அசையாது.. அமைதியாக அமர்ந்தால், எதுக்கு நீ இங்கு இருக்கிறாய் என்று தெரிந்துகொள்ளலாம்.. இல்லை என்றால் மயங்கி மயங்கி விளையாட வேண்டியது தான்.. எனக்கு விளையாண்டு கொண்டிருக்க நேரமில்லை.. சோ ப்ளீஸ்.." என அவன் நிறுத்த, அவளோ அவன் ஏதோ வேற்று மொழி பேசுவது போல் திருதிருவென விழித்தாள்.

அவள் மனம் முழுவதும் பறந்து விரிந்திருந்த பயத்தில் அவன் பேசியதெல்லாம் அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை..

'ஐயோ! இவன் ஒரு கொலைகாரன்.. இவனிடம் போய் மாட்டி இருக்கிறோம்..' என்று பயந்து பயந்து கதறி அவள் மனம் தவித்துக்கொண்டே போனது தான் மிச்சமாக இருந்தது..

அவள் கண்களின் மொழி அவனுக்கு புரிந்ததோ என்னவோ, அவனும் இப்போது எழுந்து அவளை நோக்கி வந்தான்..

அவன் தன்னிடம் வருவதை பார்த்ததும் அவள் வேகமாக பின்னால் நகர, அவளை ஒற்றை கையால் அழுத்தமாக பிடித்தான் பகலவன்..

அவன் பிடித்ததும் அவள் மேலும் பயத்துடன் கையை உறுவிக்கொள்ள போராட, "ஸ்டாப் இட் மூன்.. இதுவரை உன்னை ரேப் பண்ணும் எண்ணம் எல்லாம் எனக்கில்லை.. கொஞ்சம் அமைதியாக என்னை பேசவிட்டால் நீயும் கிளம்பலாம்.. இங்கே கவனி.." அவன் குரலிலும் கைகளிலும் ஒரே நேரத்தில் கூடிய அழுத்தம் ஒருவாறு அவளை சுயநினைவுக்கு மீட்டு வந்தது..

மெதுவாக தான் அவன் ஏதோ சொல்ல தான் வருகிறான் என்றே அவளுக்கு புரிந்தது..

ஆம் கடத்தி வந்திருக்கிறான் என்றால் ஏதேனும் காரணம் இருக்கணுமே..!

'தன்னிடம் போய் என்ன இருக்கிறது?' என மனம் கேள்வி எழுப்பினாலும், விடை எதிரில் இருந்தவன் தான் சொல்ல வேண்டும் என்பதால் கொஞ்சம் மனதை தேற்றிக்கொண்டு இப்போது அவனை பார்த்தாள் வெண்ணிலா..

"சொ.. சொல்லுங்க.." என ஒருவாறு மெதுவாக கூறியவள் அடுத்து தன் கைகளில் அழுத்தமாக படிந்திருந்த அவன் கைகளை பார்க்க, அவள் பார்வை உணர்ந்து அவன் கண்களும் அவள் கைகளில் படிந்தது..

ஒரு நொடிக்கும் மேலாக இருவரின் கைகளையும் பார்த்தவன், பின் கையை எடுத்துவிட்டான்..

"இப்படி வந்து உட்காரு.. நீ தெம்பில்லாமல் மீண்டும் மயங்கி வைத்தால் வம்பு.." என அவன் சோபாவை காட்ட, கவனமாக தனியாக இருந்த சோபாவில் அமைதியாக அமர்ந்துகொண்டாள் வெண்ணிலா..

அவன் கொடுத்த தண்ணீர் டம்ளரையும் வாங்கி மறுக்காமல் குடித்துவிட்டாள்..

அவளுக்கும் கொஞ்சம் தெம்பு வேண்டி இருந்தது..!

சற்றே தெளிவாக அவள் நிமிரவும், பகலவனும் அவளுக்கு பக்கத்தில் இருந்த சோபாவில் அமர்ந்தான்..

"லுக் வெண்ணிலா, உன் காதலன் மனோகர் எனக்கு தெரிந்தவரிடம் இருந்து இருபது லட்சம் வாங்கிவிட்டு ஏமாற்றிவிட்டான்.. எனக்கு அந்த பணம் வேண்டும்.. அது வந்தால் தான் நீ உருப்படியாக வீடு திரும்ப முடியும்.. சோ கால் பண்ணி கொண்டு வர சொல்லு.."

எந்த மேல்பூச்சும் இல்லாமல் நேரடியாக பகலவன் கூற, எந்த உணர்வுமற்ற அவன் முகத்தில் இருந்தும், குரலில் இருந்தும் அவளால் ஒன்றும் கணிக்க முடியவில்லை..

அவள் எதற்கும் முயற்சிக்கவுமில்லை..

"அவர் ஒன்னும் ஏமாற்றவில்லை.. அவரிடம் இப்போது பணம் இல்லை என்று தான் டைம் கேட்டார்.. வந்ததும் கொடுத்துவிடுவார்.." என்றாள் வெண்ணிலா வேகமாக.

மனோகர் அவன் தங்கைக்கு பெரிய இடத்தில் திருமணம் செய்துவைக்க கடன் வாங்கியது அவளுக்கு தெரியும்..

'இப்போது வீடெல்லாம் மாற்றியதில் வட்டி கட்ட முடியவில்லை.. சீக்கிரம் தந்துவிடுகிறேன்..' என அவன் ஒருமுறை போனில் யாரிடமோ கூறிக்கொண்டிருந்ததை அவள் கேட்டுவிட்டாள்.

அவள் விளக்கம் கேட்டபோது தான் மனோகர் அவளிடம் இப்படி கூறி வைத்திருந்தான்..

அவளது பதிலில் பகலவனின் முகம் லேசாக சுருங்கியது..

"அவனுக்கு கொடுக்கும் ஐடியா இல்லை.."

"அதெல்லாம் ஒன்னும் இல்லை" வேகமாக அவள் மறுக்க, அவன் முகத்தின் கடினம் கூடியதோ என்று வெண்ணிலாவிற்கு தோன்றியது..

"கவனி, உன் காதலன் பணத்தை கொடுக்காமல் ஊரை விட்டு ஓட பார்க்கிறான்.. விட்டுவிடும் அளவு இங்கு யாரும் முட்டாள் இல்லை.. நாளைக்குள் அவன் பணத்துடன் இங்கே இருக்க வேண்டும்.." அழுத்தம் திருத்தமாக அவன் கூறியதில், அவள் பொறுமையும் கரைந்து போனது.

"என்ன சும்மா மிரட்டுறீங்க? அவர் இத்தனை வருடம் வட்டி கட்டவில்லையா? அதுவே அசலுக்கு மேல் போய் இருக்கும்.. அநியாய வட்டி வாங்குவதும் தவறு தான்.. அதற்கு மேல் கழுத்தை பிடித்தால் எப்படி? இருந்தால் கொடுக்க மாட்டார்களா? சரியான பணபிடுங்கிகள்.."

"ஷட் அப் இடியட்" திடீரென பயங்கரமாக ஒலித்த அவன் குரலில் திடுக்கிட்டு பேசுவதை நிறுத்தினாள் வெண்ணிலா..

தன் முன் கண்கள் சிவக்க ரவுத்திரமாய் நின்றுகொண்டிருந்தவனை பார்த்து அவள் உடல் தானாக நடுங்க தொடங்க, பயந்து போய் அதே சோபாவுடன் அவள் உடல் தானாக ஒன்றியது..

ஒரு ஆழ்ந்த மூச்செடுத்து கொண்ட பகலவன், இப்போது நிதானமாக அவள் அருகில் வந்தான்..

சோபாவில் ஒன்றிக்கொண்டிருந்தவள் அருகில் லேசாக குனிந்து சோபாவின் இருபக்கமும் கை ஊன்றியவன் கண்கள், பெரும் கூர்மையுடன் அவள் முகத்தில் படிந்தது.

"நீ அவனை போல் இருந்துவிட கூடாது என்று நினைத்தேன்.. பட்..." ஏதோ நினைவில் ஒரு நொடி நிறுத்தி கண்களை மூடி திறந்தவன் தொடர்ந்து பேசினான்.

"யாரு பணம் பிடுங்கிகள்? நாங்களா? கடனை வாங்கிவிட்டு திருப்பி கொடுக்காமல் ஊரை விட்டு ஓட நினைக்கும் நீங்கள் இருவரும் ரொம்பவும் ஒழுக்கம்.. நாங்க கெட்டவர்களா? குட் ஜோக்.. உங்கள் திட்டமெல்லாம் இந்த பகலவனிடம் பலிக்காது பெண்ணே.. கவனமா கேட்டுக்கோ, அந்த மனோகருக்கு போன் செய்து இங்கே நீ மாட்டி இருப்பதை சொல்லி நீயே அவனை இங்கு வர சொல்கிறாய்.. அவன் வந்தால் மட்டும் தான் உனக்கு விடுதலை.."

ஒவ்வொரு வார்த்தையும் அவளுக்கு புரியவேண்டும் என்றோ என்னவோ, அத்தனை அழுத்தத்துடன் கூறிவிட்டு நிமிர்ந்தான் பகலவன்..

அவளுக்கோ தனக்கு வெகு அருகில் ராட்சசன் போல் வந்து பேசிக்கொண்டிருந்தவன் விலகினால் போதும் என்ற நிலை தான் அப்போதைக்கு இருந்தது..

அவன் நகர்ந்த அடுத்த நொடி தான் பெரும் நிம்மதியுடன் அத்தனை நேரம் வேலை நிறுத்தம் செய்திருந்த அவள் இதயம் துடிக்கவே தொடங்கியது..

அவள் ஆசுவாசப்படுத்தி கொள்வதற்கு முன்பே அவள் போனை எடுத்து அவள் மடியில் வீசியவன், "ம்ம் கூப்பிடு" என்று கூற, வெண்ணிலா அதை எடுக்க கூட தோன்றாமல் அவனை வெறித்தாள்..

அவள் மனம் சிறிது நேரம் முன்பு அவன் செய்த கொலையில் தான் சென்று நின்றது..

அவள் பாட்டிற்கு மனோகருக்கு அழைத்து, அவளுக்காக அவன் இங்கு வந்து இந்த கொலைகாரன் அவனை கொன்றுவிட்டால்..!

இவன் செய்ய கூடியவன் தானே..! எத்தனை சுலபமாக ஒருவனை சுட்டு தள்ளினான்..!

பணம் இல்லை என்று சொன்னால் கொன்று விடுவானோ என்ற பயத்திலேயே அவளுக்கு நடுங்கி விட்டது..

கொலைசெய்ய நினைப்பவன் அவளை கடத்தி மிரட்ட வேண்டிய அவசியம் இல்லையே என்று யோசிக்கும் அளவு அவளுக்கு அப்போது மூளை வேலை செய்யவில்லை..

"நா.. நான் கூப்பிட மாட்டேன்.. பணம் வந்ததும் அவர் கொடுத்துடுவார்.. என்னை விட்டுரு.." சிறு நடுக்கத்துடன் அவள் கூற, அவள் பதிலில் அவன் முகம் மேலும் இறுகி போயிற்று..

"உனக்காக, உன்னால் தான் அவன் இங்கு வர வேண்டும் வெண்ணிலா.. அப்போது மட்டும் தான் பணம் வரும்.. நீயாக பேசி வரச்சொல்லி விட்டால் நல்லது.. நானாக ஏதாவது செய்தால் உனக்கு தான் கஷ்டம்.."

என்ன செய்துவிடுவான்? அடிப்பானா..? சினிமாக்களில் வருவது போல் கைகளை கட்டி அடித்து, இல்லை வேறு ஏதேனும்? ஏதேதோ கற்பனையில் அவளுக்கு வியர்த்து வடிந்தது..

பயத்தில் வெளிப்படையாக நடுங்கிய அவள் உடலை எந்த உணர்வுமற்று பார்த்தவன், அவள் பயத்தை போக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை..

"இன்று ஒரு நாள் உனக்கு டைம்.. என்ன வேண்டுமானாலும் யோசித்துக்கொள்.. நாளை காலை நான் வரும் போது உன் காதலனுக்கு அழைக்க தயாரா இரு.. அதுவரை இந்த ரூமில் தான் நீ இருக்கனும்.." பேசிக்கொண்டே அவளிடம் இருந்த போனையும் பிடுங்கிவிட்டான் பகலவன்.

"உன் காதலன் நேர்மையானவன் இல்லை வெண்ணிலா.. நீயாவது கொஞ்சம் நல்லவளாக இருக்க முயற்சி செய்.. பணம் மட்டும் வாழ்க்கை இல்லை.."

இந்த முறை அவன் குரலில் நிச்சியம் ஏதோ வேறுபாடு இருந்தது..

முன்பிருந்த அழுத்தமோ கோபமோ இல்லாத வேறு ஏதோ உணர்வு.. அவளுக்கு தான் சரியாக புரியவில்லை..

அதற்கு மேல் பகலவன் அங்கு நிற்கவில்லை..

"உன் பை அங்கே இருக்கு" என ரூமின் ஒரு மூலையை காட்டியவன், அவள் போனுடன் வேகமாக வெளியேறி விட்டான்..

குளிரும்..

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அத்தியாயம் 5:

பகலவன் சென்ற நொடி ஏதோ பெரும் புயல் அடித்து ஓய்ந்தது போல் இருந்தது வெண்ணிலாவிற்கு.

'ஹப்பா சில நிமிடங்கள் தானே கடந்திருக்கும்! அதற்குள் எத்தனை பாடு!'

ஒரே இரவில் மொத்தமாக வாழ்க்கையே திசை மாறி போனதை ஏற்றுக்கொள்வது அவளுக்கு பெரும் பாடாக இருந்தது..

ஆயாசமாக சோபாவில் சாய்ந்து தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டவளுக்கு மூளை வேலை செய்யவே சில நிமிடங்கள் பிடித்தது..

நேரம் காலை பத்து மணிபோல் இருக்கும்.

முந்தைய நாள் காரில் மயங்கியவள் இப்போது தான் கண்விழித்திருக்கிறாள்..

கண்விழித்த நிமிடமே சுதாரிக்க கூட முடியாமல் பல குழப்பங்கள்..

பகலவன் கூறியதில் இருந்து அவளுக்கு சில விஷயங்கள் தெளிவாக புரிந்தது.

ஒன்று மனோகர் கடன் வாங்கிய நபர் பகலவனுக்கு மிகவும் வேண்டப்பட்டவர்.. இத்தனை நாள் அமைதியாக இருந்தவர் மனோகர் வட்டி கொடுக்காததால் பகலவனிடம் சொல்ல போய், அவன் மனோகரை மிரட்ட இவளை கடத்திவிட்டான்.

இவளை பணயமாக வைத்து பணம் கேட்டால் மட்டும் மனோகர் உடனடியாக பணத்திற்கு எங்கே போவான்..!

பல லட்சங்கள் ஆயிற்றே..

பகலவனை பார்த்தால் கொஞ்சமும் யோசிப்பவனாக தெரியவில்லை..

கொக்கிற்கு ஒன்றே மதி என்பது போல் தன் தேவையில் மட்டுமே நிற்கிறான்..

அடுத்தவர் நிலை பற்றி யோசிக்கவே மாட்டான் போல்..!

ஏனோ அவனை பற்றி நல்லதாக அவளுக்கு ஒன்றும் நினைக்க தோன்றவில்லை..

கடத்திவந்தவனை பற்றி நல்லதாக என்ன தோன்றிவிடும்..!

இப்போது அவளுக்கு மனோகர் உயிரை பணயம் வைக்கவும் மனம் வரவில்லை.. அதே நேரம் தன் உயிரையும் மானத்தையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.. அதற்கான வழியும் சரியாக புரியவில்லை..

ஒரு நாள் டைம் கொடுத்துவிட்டு சென்றவன், அந்த நேரம் முடிந்ததும் என்ன செய்வானோ..!

'கடவுளே ஒண்ணுமே புரியலையே!' என வாய்விட்டே புலம்பிக்கொண்டவள், யோசித்துக்கொண்டே எத்தனை மணிநேரம் அமர்ந்திருந்தாளோ, ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்..

ஒருகட்டத்தில் கண்கள் சொருகி மூளை வேலை நிறுத்தம் செய்ய, வேகமாக எழுந்து அமர்ந்துவிட்டாள்..

சோம்பலுடன் அமரும் நேரம் இல்லையே..! நிறைய யோசிக்க வேண்டும்..

அதற்கு முதலில் முகத்தையாவது அலம்ப வேண்டும் என்று உரைக்க, தன் உடைகள், பேஸ்ட், ப்ரஷ் எல்லாம் எடுத்துக்கொண்டு குளியல் அறைக்குள் சென்றவள், குளித்துவிட்டே வெளியே வந்தாள்..

கொஞ்சம் தெம்பு வந்தது போல் இருக்க, வயிறு வேறு வேலையை காட்டியது..

இருந்தும் மனதில் இருந்த பயத்தில் பசியை யோசிக்க முடியாமல் போக, அதை ஓரம் கட்டிவிட்டு அந்த அறையை நோட்டம் விட்டாள்..

இப்போதும் பால்கனி கதவு என்னவோ திறந்து தான் இருந்தது..

இந்த முறை அவள் கீழே பார்த்த போது அங்கு இரண்டு பெரிய நாய்கள் சுற்றி கொண்டிருந்தது..

அவள் உயிரை பணயம் வைத்து குதித்தாள் கூட தப்ப முடியாது..

மற்றபடி அந்த அறையில் இருந்து தப்பிக்க எந்த மார்க்கமும் இருப்பதாக அவளுக்கு தெரியவில்லை..

மனம் முழுவதும் ஒரே கேள்வி தான்..

மனோகரிடம் பேசி அவனை பலிகொடுக்க வேண்டுமா? இல்லை அவளை பலிகொடுத்துக்கொள்ள வேண்டுமா?

இந்த கேள்விக்கு விடை தெரியாமல் ஒவ்வொரு நொடியையும் நெட்டி தள்ளியவள், பேசாமல் பகலவனிடமே கொஞ்சம் சமாதானமாக பேசி பார்க்கலாமா என்று தான் கடைசியாக நினைத்தாள்..

அவள் அவனை முதல் முறை பார்த்தது ஒரு காப்பகத்தில் தானே.. கொஞ்சமேனும் ஈரம் ஓடிக்கொண்டிருக்குமோ என்ற நப்பாசை அவளுக்கு இருந்தது..

வெண்ணிலா குழப்பமும் பயமுமாய் நேரத்தை கடத்த, அலுவலகத்தில் அமர்ந்திருந்த பகலவனும் அவளை பற்றி தான் செழியனிடம் பேசிக்கொண்டிருந்தான்..

"அந்த பெண்ணை பார்த்தால் பணத்திற்கு ஆசைப்படுவது போல் தெரியலையே பகலவா!"

முகம் சுருங்க செழியன் கேட்க, "ப்ச் முகத்தில் எழுதி ஒட்டி இருக்குமா ண்ணா? அவள் பேசும் லட்சணத்தை வைத்து தானே கண்டுபிடிக்க முடியும்.." எரிச்சலுடன் பதில் கூறிய பகலவனை வித்தியாசமாக பார்த்தான் செழியன்..

எதற்காகவும் பகலவன் தன்னிலை இழந்து அவன் பார்த்ததே இல்லையே..!

எத்தனை பெரிய பிரச்சனை என்றாலும் ஒற்றை பார்வையில் சமாளிக்க கூடியவன்.. இன்று திணறுவது அவனுக்கு பெரும் வியப்பாக தான் இருந்தது..

"எதற்கு இத்தனை கோபம் பகலவா? அந்த பெண்ணை கடத்திவிட்டோம் என்று நாமே மனோகரை மிரட்டலாமே.. அவள் எதற்கு பேச வேண்டும்?" குழப்பத்துடன் கேட்ட செழியனை அழுத்தமாக பார்த்த பகலவன்,

"நோ ண்ணா" என்றான் பட்டென.

"அவள் என்ன தான் செய்கிறாள் பார்ப்போம்.. பார்க்கணும்.." தெளிவாக பகலவன் கூறியதில், செழியன் குழப்பம் அதிகமானது தான் மிச்சமாக இருந்தது.

"எனக்கு புரியலை பகலவா.."

"அவளுக்கு பணத்தாசை இருந்தால் அதுவும் அழியனும் ண்ணா.. சுலபமா நாமே முடித்துவிடலாம் தான்.. ஆனால் நாளை இருவரும் சேர்ந்து இதே போல் வேறு யாரையாவது ஏமாற்றமாட்டார்கள் என்று என்ன நிச்சியம்! தப்பு பண்ண கூடாது என்ற பயம் வர வேண்டாமா?"

பகலவன் சொல்வது நியாயம் தான் என்றாலும், இது தேவை தானா என்று தான் செழியனுக்கு தோன்றியது..

"உலகில் உள்ள அனைவரையும் நாம் திருத்த முடியுமா பகலவா? நம் நேரத்தை எதுக்கு வீணடித்துக்கொண்டு? அதுவும் பெண் வேறு.. தேவை இல்லாத வேலை டா.."

விடாமல் செழியன் பேச, "பெண் என்றால் தப்புக்கு துணை போகலாமா?" என்ற பகலவனின் கேள்விக்கு அவனால் பதில் சொல்ல முடியவில்லை..

"எத்தனை நாள் அதற்காக அவளை வைத்திருக்க முடியும்.. கை நீட்டி விடாதே பகலவா.. அடி உதை எல்லாம் கூடாது.."

இப்போதெல்லாம் அதிகப்படியாகவே கோபப்படும் பகலவன் மீது இருந்த பயத்தில் தான் செழியன் அவசரமாக எச்சரித்தான்..

"எந்த அளவில் பாவம் பார்க்க வேண்டும் என்று நான் பார்த்துக்கொள்கிறேன் ண்ணா.. விடுங்க.." என பகலவன் முடித்துவிட, அதற்கு மேல் பேசாவிட்டாலும் செழியனுக்கு சற்றே படபடப்பாக தான் இருந்தது..

இரவு நேரம் வரை எதுவும் ஓடாமல் தான் வெண்ணிலா அமர்ந்திருந்தாள்..

காலையில் பகலவன் விட்டுவிட்டு போனது தான்.. அதற்கு மேல் அந்த அறை பக்கம் யாரும் வரவேயில்லை..

பின் பக்கம் தோட்டத்தில் சிலர் நடமாடினர் தான்.. ஆனால் யாரும் அவளை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை..

முக்கியமாக பெண்கள் யாரும் அவள் கண்ணில் படவே இல்லை..

'வேலைக்கு கூட இங்கு பெண்கள் இல்லையோ!' என யோசித்தவளுக்கு அது வேறு தனியாக பயமாக இருந்தது..

ஏதேதோ பயத்தில் அவள் அறையை அளந்துகொண்டிருந்த போது, அவள் அறை கதவு பட்டென திறக்கப்பட, ஒரு நொடி அவளுக்கு தூக்கி வாரி போட்டுவிட்டது..

பெரும் பயத்துடன் அவள் திரும்ப, அவளை பார்த்துக்கொண்டே உள்ளே வந்த பகலவன், "மயங்கி விடாதே தாயே" என நக்கலடித்துக்கொண்டே கதவை பூட்டினான்.

அவன் குரலில் ஒருவாறு பதட்டம் குறைந்து அவனை முறைத்தாள் வெண்ணிலா..

அவள் அருகில் வந்ததும் அவளிடம் போனை நீட்டியவன், "உன் வீட்டிற்கு அழைத்து மும்பை போய் சேர்ந்துவிட்டதாக சொல்" என்று கூற, அவளுக்கு அப்போது தான் வீட்டின் நினைவே வந்தது..

அவளே மறந்திருந்த போது இவன் எப்படி இத்தனை தெளிவாக நினைவு வைத்திருக்கிறான் என்று அவளுக்கு ஆச்சர்யமாக தான் இருந்தது..

அதே நேரம் அவள் மும்பை செல்வது எல்லாம் தெரிந்தே தான் திட்டமிட்டு கடத்தி இருக்கிறான் என்றும் புரிந்தது..

ரொம்ப நாளாக தன்னை தொடர்ந்திருப்பான் போல் என தெளிவாகவே கணித்தாள் வெண்ணிலா..

"காதலன் முன் குடும்பம் உனக்கு பெரிதாக தெரியவில்லை போல்.. ஆனால் நான் அப்படியே விட முடியாது.. அவர்கள் உன்னை தேடி பயந்து கொண்டு சுற்ற வேண்டுமா? ம்ம் பேசு.." என அவன் போனை அவள் கையில் திணிக்க, அதை அனிச்சை செயலாக வாங்கிகொண்டவள்,

"ரொம்ப நல்லவன் போல் பேச வேண்டாம்.. அவங்க தேடி ஏதாவது கம்பளைண்ட் கொடுத்தால் நீ மாட்டிக்கொள்வாய் என்று தானே இந்த கரிசனம்?" என்றாள் கடுப்புடன்.

அவள் கூற்றில் ஏதோ பெரிய நகைச்சுவை கேட்டது போல் சிரித்துவைத்தவன், "உனக்கு அறிவு என்பதே கிடையாதா?" என சிரிப்பினூடே கேட்க, அவளால் மேலும் முறைக்க மட்டும் தான் முடிந்தது.

"அப்படியே கம்பளைண்ட் கொடுத்தாலும் என்னை தேடி வந்து எப்படி பிடிப்பார்களாம்? அப்படியே பிடித்தாலும் உன்னை கொன்று உருத்தெரியாமல் என்னால் அழித்துவிட முடியும் தெரியுமா!" ஒற்றை புருவம் உயர்த்தி நக்கலாக சிரித்துக்கொண்டே அவன் கேட்ட தினுசில், அவளுக்கு தான் பயத்தில் முதுகு தண்டு சில்லிட்டு போனது.

உண்மை தானே! அவன் இருக்கும் உயரத்திற்கு என்ன வேண்டுமானாலும் செய்துவிடுவான் தான்.. கொன்றே விடுவானோ?

உயிர் பயத்தை கண்களில் தேக்கி அவள் அவனை பார்த்ததில், அவன் புன்னகையும் மறைந்தது..

"இப்போது பேசுகிறாயா? வேண்டாமா?" என அவன் வெறுமையாகவே கேட்க,

"இ.. இல்லை பேசறேன்.." என்றாள் அவள் வேகமாக.

"ம்ம்" என்றுவிட்டு அவன் அமர்ந்துவிட, அவளும் வேகமாக தன் வீட்டிற்கு அழைத்தாள்.

அவன் மனம் மாறிவிட கூடாதே..!

அந்த பக்கம் போனை எடுத்த காமாட்சி சற்று படபடப்புடன் தான் பேசினார்..

"பத்திரமா போய்விட்டாயா நிலா மா.. உன் போன் கிடைக்கவே இல்லையே.. நான் ரொம்பவும் பயந்துட்டேன் டா.."

அன்னை குரலில் இருந்த பயத்தில் அவளுக்கும் கண்களை கரித்துக்கொண்டு வந்தது..

பத்திரமா இரு என அத்தனை முறை கூறினார்.. வேண்டாம் என்று தடுத்த அன்னையை மீறி வந்ததன் பயன் தான், இன்று ஒரு ராட்சசனிடம் மாட்டிக்கொண்டோம் போல் என அவள் மனம் கதற, "நிலா.. நிலா.." என்ற அன்னையின் பதட்டமான அழைப்பில் வேகமாக கண்ணீரை துடைத்து கொண்டாள் வெண்ணிலா..

"நான் பத்திரமா வந்துட்டேன் மா.. டவர் இல்லை.. அதான் கால் பண்ண முடியவில்லை.. என் பிரெண்ட் வீட்டுக்கு தான் மா போறேன்.. இங்கே கொஞ்சம் செட்டில் ஆனதும் கூப்பிடறேன் மா.. ஒன்றும் பயமில்லை.. டவர் தான் கிடைக்க மாட்டேன் என்கிறது.. நான் கூப்பிடாவிட்டால் பயந்துடாதீங்க.." மென்மையாக அவள் கூறியதை அப்படியே நம்பினார் காமாட்சி.

"சரி மா.. உன்னால் முடிந்தபோதெல்லாம் ஒரு வார்த்தை பேசிவிடு.. பார்த்து போ மா"

"நீங்களும் வர்ஷாவும் பத்திரமா இருங்க மா" பகலவனை பார்த்து கொண்டே வெண்ணிலா கூற, அவனோ முகத்தில் எந்த உணர்வும் பிரதிபலிக்காது அவளை பார்த்துக்கொண்டிருந்தான்.

அவள் போனை வைத்த அடுத்த நொடி மீண்டும் அவள் போன் அலற, அதை அவள் பார்க்கும் போதே அவளிடம் இருந்து போன் பிடுங்கப்பட்டது...

பகலவன் தான் பிடுங்கி இருந்தான்..

அழைப்பது மனோகர் என்றதும் அவளை நிமிர்ந்து பார்த்தவன், "பேசுகிறாயா?" என்று கேட்க அழுத்தமாக மறுப்பாக தலையசைத்தாள் வெண்ணிலா.

அதில் ஒரு தோள் குழுக்களுடன் அவள் போனை பாக்கெட்டில் போட்டுக்கொண்டு, "இந்த ஒரு இரவு தான் உனக்கான டைம்.. நாளை காலை நீ பேசித்தான் ஆக வேண்டும்.." என்றுவிட்டு அவன் பாட்டிற்கு நகர,

"ஒரு நிமிஷம்" என்றாள் அவள் அவசரமாக.

அவள் குரலில் அவன் நின்று திரும்பி பார்க்க, "இது ரொம்ப தப்பு சார்.. என்னை கடத்தி வந்து மிரட்டுவதெல்லாம் சட்டப்படி குற்றம்.. என்னை விட்டுருங்க.." பயத்தை மறைத்துக்கொண்டு பேச தான் அவள் முயன்றாள்.

அவனோ அப்போதும் ஒரு நக்கல் சிரிப்புடன் தான் அவளை பார்த்தான்..

"வக்கீல் அம்மா இல்லையா! அதான் சட்டம் பேசறீங்க.. உங்க சட்டத்தில் வாங்கிய கடனை திருப்பி அடைக்க வேண்டுமென்றெல்லாம் ஒன்றும் சொல்லித்தரவில்லையா?"

"அதான் தந்துவிடுவார் என்று சொல்கிறேனே!" சலிப்புடன் அவள் கூற,

"நானும் தர தானே சொல்கிறேன்.. கொண்டு வர சொல்.." என்றான் அவனும் விடாக்கொண்டனாக.

"ஐயோ! இருந்தால் தர மாட்டாரா? எப்படியும் புரட்டி விடுவார்.. கொஞ்சம் டைம் கொடுங்களேன்.." கெஞ்சலும் கடுப்புமாக அவள் கேட்க, இந்த முறை அவளை நெருங்கி வந்தான் பகலவன்..

"எதுவரை டைம் வேண்டும்? நீயும் அவனும் திருமணம் செய்துகொண்டு ஊரை விட்டு ஓடும் வரை கொடுத்தால் போதுமா?"

அவளுக்கு அருகில் வந்து அவன் கேட்ட விதத்தில், அவளுக்கு வார்த்தைகள் தொண்டைக்குள்ளேயே சிக்கி கொண்டது.

அவன் விரல் நுனி கூட அவளை தீண்டவில்லை தான்.. ஆனால் ஏனோ அவன் பலமாக அடித்து பேசுவது போல் ஒரு மிரட்சியை அவன் குரலே ஏற்படுத்தியது..

அவள் எந்த பதிலும் கூறாமல் மிரட்சியுடன் நின்றுவிட, "காலையில் வருவேன்.. பீ ரெடி.." என்றுவிட்டு அவனும் வெளியேறிவிட்டான்.

பகலவன் வெளியே சென்றதும் தான் அவளால் நிம்மதியாக சுவாசிக்கவே முடிந்தது..

அதே நேரம் தான் பேச வேண்டும் என்று நினைத்த ஒன்றுமே பேசமுடியவில்லை என்றும் புரிந்து விட, தலையில் கைவைத்து அமர்ந்து விட்டாள் வெண்ணிலா..

அவன் அருகில் வந்தாலே உதறி தொலையும் போது, எங்கிருந்து பேச..! அதே நேரம் அமைதியும் வேலைக்காகாது..

நேரம் செல்ல செல்ல அடுத்து என்ன செய்வானோ என்ற பயம் வேறு அதிகரித்து கொண்டே போனது..

'எப்படியும் காலையில் வருவான்.. பேசிவிட வேண்டும்' என்று நினைத்துக்கொண்டவள், அவனிடம் என்ன பேச வேண்டும் என்று யோசித்துக்கொண்டே எப்படியோ அந்த சோபாவிலேயே கண் அயர்ந்துவிட்டாள்..

எப்போது தூங்கினாளோ! மறுமுறை அவள் கண்விழித்த போது நன்றாக விடிந்திருந்தது..

ஒருபெருமூச்சுடன் எழுந்து சென்று ப்ரெஷ் ஆகி வந்தவள், என்ன செய்வதென்று புரியாமல் பால்கனிக்கு தான் வந்து நின்றாள்..

நன்றாக விடிந்திருந்த அழகான காலை வேளை..

கண்ணுக்கு நேர் மிதமான சூரியன் வெளிச்சம் அவளுக்குள் தனி புத்துணர்வை கொடுக்க தான் செய்தது..

காலை நேர காற்றை ஆழ்ந்து சுவாசித்து ஒருமுறை கண்மூடி திறந்தவள், கீழிருந்து வந்த சத்தத்தில் குனிந்து பார்த்தாள்..

பகலவன் தான் தோட்டத்தை சுற்றி ஜாகிங் ஓடி கொண்டிருந்தான்..

சாதா டீ ஷர்ட் ஷார்ட்ஸ்ஸில் இருந்தவன், மிதமான வேகத்தில் காதில் ஹெட் செட்டுடன் ஓடிக்கொண்டிருக்க, அவனுடனே அங்கிருந்த இரண்டு நாய்களும் சுற்றிக்கொண்டிருந்தது..

'இவனிடம் இருந்து எப்படி தப்ப போகிறோம்!' என்ற யோசனையுடன் அவனை பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு, அப்போது தான் அந்த வித்தியாசம் உரைத்தது..

அவன் முகத்தில் இருந்த மென்மையும் ரசிப்பு தன்மையும்..

ஆம், அவளிடம் தீயாக காயும் முகமில்லை இது..

ஏதோ கலா ரசிகன் போல், காலை வேலை இதத்தை அனுபவிக்கும் கவிஞன் போல் அவன் முகத்தில் அத்தனை ரசனை..

எப்படி என்ற குழப்பம் தான் அவளுக்கு மிஞ்சியது..

ஒரு கொலைகாரனால் பூக்களின் அழகை ரசிக்க முடியுமா என்ன? அவள் பார்த்தவரை இவன் எப்போதும் கொலை அடிதடி என்று தான் சுற்றுவான் என்று தான் அவள் கற்பனை செய்திருந்தாள்..

அப்படிப்பட்டவன் முகத்தில் இது போன்ற உணர்ச்சிகளை கண்டால் அவளால் குழம்பாமல் என்ன செய்ய முடியும்..

அவள் அவனை பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தது அவனுக்கும் தெரிந்ததோ என்னவோ! சட்டென அவன் நிமிர்ந்து பார்க்க, அதுவரை அவனையே பார்த்துக்கொண்டிருந்தவள் வேகமாக பின்னால் நகர்ந்து விட்டாள்..

ஒரு நொடி முகம் சுருங்க மேலே பார்த்த பகலவனும், ஒரு தோள் குழுக்களுடன் தன் ஓட்டத்தை தொடர்ந்தான்..

மேலும் இரண்டு மணி நேரம் சென்றிருக்கும்..

வெண்ணிலா எதிர்பார்த்தது போலவே பகலவன் வந்து சேர்ந்தான்..

எப்போதும் போல் கதவை அடைத்துவிட்டு வந்து அமர்ந்தவன், எதுவும் பேசாமல் அவளிடம் போனை நீட்ட, அவளோ அதை வாங்காமல் அமைதியாக மற்றொறு சோபாவில் அமர்ந்தாள்..

"வீட்டுக்கு போகும் ஆசை இல்லையா?" நிதானமாக பகலவன் கேட்க,

"என் சுயநலத்திற்காக ஒருவர் உயிரை பலி கொடுக்க முடியாது" என்றாள் வெண்ணிலா.

"உயிர் எனக்கு தேவைப்பட்டிருந்தால், என்னிடம் இத்தனை பொறுமை இருந்திருக்காது.. எனக்கு தேவைப்படுவது பணம் தான்.."

"இல்லாத பணத்தை கொண்டுவா என்றால் எங்கே போவது பகலவன்"

தாங்கமாட்டாமல் அவள் கத்திவிட, அவன் முகம் ஒரு நொடி ஏதோ யோசனையில் சுருங்கியது..

"பணத்தை எப்படி வாங்குவது என்று எனக்கு தெரியும்.. நீ என்னிடம் சிக்கி இருப்பதை அவனிடம் தெரியப்படுத்துவது மட்டும் தான் உன் வேலை.."

"அவர் உயிருக்கு தெரிந்தே ஆபத்தை தேடி தர என்னால் முடியாது"

"ப்ச்.. ரொம்ப தான் தெய்வீக காதலோ!"

போலியாக உச்சுக்கொட்டி நக்கலாக கேட்டவன் குரலில், மருந்துக்கும் கருணை இருக்கவில்லை..

"மனிதாபிமானம் என்று ஒன்று இருக்கு தெரியுமா பகலவன்? உங்களை போன்ற கொலைகாரர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்.." அவளிடமும் கொஞ்சமும் நக்கல் குறையாமல் தான் பதில் வந்தது..

"யாருக்கு மனிதாபிமானம் பார்க்க வேண்டும், யாருக்கு பார்க்க கூடாது என்று எனக்கு தெரியும் வெண்ணிலா.. நீ பாடம் எடுக்க வேண்டாம்.."

பட்டுதெறித்தார் போல் அவனிடம் இருந்து பதில் வந்ததில், அவளுக்கு அதற்கு மேல் என்ன சொல்வதென்று தெரியவில்லை..

"உன் காதலன் செய்வது தவறென்று உனக்கு கொஞ்சமும் உறுத்தவில்லையா?"

ஒருமாதிரி வரையறுக்க முடியாத குரலில் பகலவன் கேட்க, "நீங்க ரொம்ப நியாயஸ்தன் போல் பேசாதீங்க.. அவர் ஒன்றும் வேண்டுமென்றே செய்யவில்லை.." என்றாள் வெண்ணிலா வீம்பாக.

அவனுக்கு கோபம் வந்ததோ என்னவோ, ஒரு முறை அழுத்தமாக கண்மூடி திறந்து தன்னை கட்டுப்படுத்தி கொண்டான்..

"பணம் வராமல் நீ இங்கிருந்து செல்ல முடியாது வெண்ணிலா.. இனி உன் அறை கதவு திறந்தே தான் இருக்கும்.. வெளியில் காவலுக்கு ஆள் இருப்பாங்க.. தப்பிக்கவெல்லாம் முட்டாள் தனமாக முயற்சிக்காதே.. மனம் மாறும் போது வெளியில் இருப்பவனிடம் சொல்.. என்னிடம் கூட்டி வருவான்.." பேசிக்கொண்டே அவன் எழுந்துவிட,

'இது என்ன மாதிரி செயல்! என்ன தான் சொல்ல வருகிறான்?' என்று புரியமால் விழித்தாள் அவள்.

அவள் முகம் அவள் மனதை அப்படியே காட்டிக்கொடுக்க, அவன் உதடுகள் கேலியாக வளைந்தது..

"கடைசியாக எப்போது சாப்பிட்டாய் வெண்ணிலா?"

அவன் கேள்வியில் தான் அவளுக்கு உணவின் நினைவே வந்தது..

ஆம்.. கடைசியாக ஒரு நாள் முன்பு இரவு சாப்பிட்டது.. அதற்கு மேல் தன்னிடம் இருக்கும் தண்ணீரை குடித்து தானே ஓட்டி கொண்டிருக்கிறாள்..

அவள் பார்வை தானாக மேசை மேல் இருந்த தண்ணீர் பாட்டில் மேல் படிய, பகலவனும் அதை தான் பார்த்துக்கொண்டிருந்தான்..

"ப்ச் பாவம்.. தண்ணீர் கூட காலியாக போகிறது போலையே..! எத்தனை மணி நேரம் பசி தாங்குவாய்? உன் வைராக்கியத்தின் அளவை பார்த்துவிடுவோம்.."

கிண்டலாக கண்ணடித்து கூறிவிட்டு அவன் சென்று விட, அவன் சொல்ல வந்ததில் இருந்த உண்மை புரிந்து திகைத்து விழித்தாள் வெண்ணிலா..

குளிரும்..

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 6:

பகலவன் கூறிவிட்டு சென்றதன் வீரியம் கொஞ்சம் கொஞ்சமாக தான் வெண்ணிலாவிற்கு புரிய தொடங்கியது..

சில நிமிடங்கள் முன்பு வரை தெரியாமல் இருந்த பசி இப்போது அவன் நினைவுபடுத்திவிட்டதாலோ என்னவோ, பூதாகரமாக தெரிந்தது..

இத்தனை நேரம் மரத்து போய் இருந்த பசி உணர்வுகள் யாவும் ஒரே நேரத்தில் விழித்து ஆட்டம் போடுவது போல் தெரிய, அவள் பெரிதாக தவித்து போனாள்..

இருந்த தண்ணீரை கொஞ்சமாக குடித்து பசியை போக்க அவள் எடுத்த முயற்சி எல்லாம் பயனற்றதாக தான் போனது..

நேரம் ஆக ஆக பகலவன் கூறியது போல் பசி ஏறிக்கொண்டே தான் போனது.

'தாங்கவே முடியாது போலவே!' என பெரிதாக பயப்பட தொடங்கிவிட்டாள் வெண்ணிலா..

'அடிப்பான், ஏதாவது தவறாக செய்துவிடுவான் என்றெல்லாம் பயந்தால், எத்தனை சுலபமாக அடிக்கிறான்!' என அந்த நிலையிலும் அவள் மனம் வியக்க தான் செய்தது..

பசி எத்தனை கொடுமையான உயிர்கொல்லி நோய் என நொடிக்கு நொடி உணர்ந்தாள் வெண்ணிலா..

அடிவயிற்றை அழுத்தமாக இழுத்து பிடிப்பது போல் அப்படி ஒரு வலி..

கிட்டதட்ட இரண்டு முழு நாட்கள் சாப்பிடவில்லை.. உடம்பு எப்படி தாங்கும்..!

இரவு நெருங்க நெருங்க அவளால் வலியை தாங்க முடியாமல் தான் போனது..

வயிற்றை அழுந்த பற்றி கொண்டு சோபாவில் சுருண்டு படுத்திருந்தவள், அப்படியே தூங்கியும் போனாள்..

ஆனால் வயிற்றின் பசி முழுதாக தூங்க விடாமல் சதி செய்ய, நள்ளிரவில் அவளுக்கு விழிப்பு வந்துவிட்டது..

அப்போது தண்ணீர் கூட மிச்சம் இருக்கவில்லை.

டேப்பிள் வரும் தண்ணீர் பிடித்து குடித்தாலும், ரொம்ப நேரம் தாக்குப்பிடிக்க முடியாது என்று அவளுக்கு புரிந்தது..

ஒரேடியாக பசி வயிற்றை கிள்ள, காலை வரை இருந்த தைரியம் எல்லாம் அவளுக்கு போன இடம் தெரியவில்லை..

பயத்தில் கூட அழாமல் அவள் கட்டுப்படுத்தி வைத்திருந்த அத்தனை அழுகையும் அவள் அனுமதி பெறாமலே வெடித்து சிதறிக்கொண்டு வர, பல்லை கடித்து அழுகையை கட்டுப்படுத்த முயன்று தோற்று போனாள் வெண்ணிலா..

அதற்கு மேல் சுத்தமாக முடியாமல் போக, மெதுவாக எழுந்து வந்து அறை கதவை திறந்து பார்த்தாள்..

அவன் சொன்னது போலவே கதவென்னவோ திறந்து தான் இருந்தது..

யார் நிற்க போகிறார்களோ என்ற பயத்துடனே அவள் கதவை திறக்க, கண்களுக்கு முன் இருந்த பெரிய வரவேற்பறையில் அவளுக்கு உடனடியாக யாரும் தட்டுப்படவில்லை.

மெதுவாக அவள் பார்வையை சுழற்ற, ஒரு பக்கம் இருந்த சோபாவில் கண்களை மூடி காலை எதிரில் இருந்த டீப்பாயில் நீட்டி சாய்ந்து அமர்ந்திருந்த பகலவனை பார்த்ததும், ஒரு நொடி உறைந்து நின்றுவிட்டாள்..

அவளால் அடுத்து என்னவென்று உடனடியாக யோசிக்க கூட முடியவில்லை..

அவனை அந்த நேரத்தில் அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லையே..!

யார் இருந்து இருந்தாலுமே அவளுக்கு என்ன பேசுவது என்று தெரிந்திருக்காது தான்..

ஆனால் பகலவனை பார்த்த போது மேலும் அவள் மனம் ஒடுங்க தான் செய்தது..

கடினப்பட்டு கட்டுப்படுத்திய அழுகை கூட தன்னை மீறி வெளிவந்து அவளை மேலும் மேலும் பலவீனமாக்கியது..

ஒருவித தவிப்புடன் வேறுவழி இல்லாமல் அவனை நோக்கி அவள் வர, அவள் இரண்டடி எடுத்துவைத்திருந்த போதே திடீரென பகலவன் கண்களை திறந்தான்..

முகம் சுருங்க ஏதோ யோசனையுடன் கண் விழித்தவன், அவளை பார்த்ததும் தன் ஹெட் செட்டை கழட்டி விட்டு எழுந்தான்..

அத்தனை நேரம் அவன் முகத்தில் இருந்த மென்மை துணி கொண்டு துடைத்தார் போல் மறைந்துவிட்டிருந்தது.

நிதானமாக எழுந்து அவள் அருகில் வந்தவன், "என்ன..?" என்று கேட்க, அவனை நிமிர்ந்து கூட பார்க்க முடியாமல் திணறிபோனவள், "பசிக்குது" என்றாள் உள்ளே சென்றுவிட்ட குரலில்.

அவளுக்கு எந்த பதிலும் கூறாமல் அவன் அவள் போனை எடுத்து நீட்ட, அவன் சொல்ல வருவது அவளுக்கு புரிந்தது..

அதே நேரம் தன் பசிக்காக அவன் சொன்னதை செய்யவும் மனம் வராமல் போக, அவனை நிமிர்ந்து ஒரு கையாலாகா பார்வை பார்த்தாள் வெண்ணிலா..

கண்களில் முட்டிக்கொண்டு நின்ற கண்ணீர் கீழே விழுந்துவிடாமல் இருக்க அழுத்தமாக உதட்டை கடித்துக்கொண்டே மறுப்பாக அவள் தலையசைக்க, "இன்னும் எத்தனை நாள் பட்டினி கிடப்பாய்?" என்றான் அவன் போனை தன் பாக்கெட்டில் போட்டுக்கொண்டே.

அதற்கான விடை அவளுக்கும் தெரியவில்லை.. ஆனால் அதே நேரம் அவன் மேல் இருந்த பயம் மனோகரை அழைக்க விடாமலும் தடுத்தாதே..!

'பட்டினி போட்டே கொன்று விடுவான் போலையே!' என அவள் மனசாட்சி நேரம் காலம் தெரியாமல் கேட்டுவைக்க, அவளுக்கு மேலும் அழுகைவரும் போல் இருந்தது..

அங்கே நின்று அழுது ஒரு பிரோயோஜனமும் இல்லை என்று மூளைக்கு உரைக்க, மெதுவாக அறை நோக்கி திரும்பினாள் வெண்ணிலா..

"இரு" என திடீரென ஒலித்த பகலவன் குரலில் அவள் நின்று திரும்ப, "என்னுடன் வா" என்றுவிட்டு முன்னால் நடந்தான் பகலவன்.

திடீரென்று எங்கு கூப்பிடுகிறான்? ஏதாவது செய்துவிடுவானோ? என்ற பயத்தில் அவள் ஆணிஅடுத்தார் போல் அங்கேயே நிற்க, படியின் முனை வரை சென்றிருந்தவன் திரும்பி அவளை பார்த்தான்.

"உன்னை ஏதாவது செய்ய நினைத்திருந்தால் இத்தனை நேரம் விட்டுவைத்திருக்க மாட்டேன்.. இல்லாத மூளைக்கு வேலை கொடுக்காமல் வருகிறாயா?"

எப்போதும் போல் நக்கலாக அவன் கேட்டதில், அத்தனை நேரம் இருந்த அழுகை அலைப்புறுதால் எல்லாம் குறைந்து அவனை முறைத்தவள், அவன் சொன்னதில் இருந்த நியாயம் புரிந்து அவனை தொடரவும் தவறவில்லை.

அவன் படி இறங்க இறங்க அவனை தொடர்ந்து கொண்டே வந்தவளுக்கு, தான் நினைத்தது போலவே இரண்டாம் தளத்தில் தான் இருந்திருக்கிறோம் என்று புரிந்தது.

இரண்டு தளங்கள் இறங்குவதற்குள்ளேயே அவளுக்கு போதும் போதும் என்று ஆகிவிட்டது.

சாப்பிடாததன் விளைவு.. அவளுக்கு கால் ஒத்துழைக்காமல் படுத்தி எடுத்தது..

எப்படியோ கீழ் தளம் வரை அவன் பின்னாலேயே வந்தவள், அவன் சமையல் அறைக்குள் நுழையவும் முகத்தில் பெரும் ஆச்சர்யத்துடன் அவனை தொடர்ந்தாள்.

சமையல் அறை உள்ளேயே இருந்த சிறு உணவு மேசையை காண்பித்தவன், "இப்படி உட்காரு" என அவள் முகத்தை பார்க்காமலே கூறிவிட்டு ப்ரிட்ஜ் அருகில் சென்றுவிட, அவளோ இன்னுமும் அதிர்ச்சி நீங்காமல் இருந்ததில் எதுவும் கேட்காமல் அமைதியாக அமர்ந்துவிட்டாள்..

எதுவும் பேச தோன்றாவிட்டாலும் அவள் கண்கள் அவனையே தான் தொடர்ந்து கொண்டிருந்தது..

ப்ரிட்ஜில் இருந்து தோசை மாவை எடுத்தவன், அடுப்பை ஆன் செய்து வார்க்க தொடங்கி விட, அவள் தான் ஏதோ உலகின் எட்டாம் அதிசயத்தை பார்ப்பது போல் வாயை பிளந்து கொண்டு அவனை பார்த்து கொண்டிருந்தாள்..

ஒரு பெண்ணை கடத்துவது, கொலை செய்வதெல்லாம் இவன் தான் என்றால் யாராலும் நம்ப கூட முடியாது..

அத்தனை பாந்தமாய் வேலை செய்துகொண்டிருந்தான்.

சாதா டீஷர்ட்டும், நைட் பேண்ட்டும் அணிந்திருந்தவன், லேசாக கலைந்திருந்த தலை, கழுத்தை சுற்றி இன்னும் இருந்த ஹெட் செட் என அத்தனை பெரிய சமையல் அறையை தன் உயரத்தால் சிறிதாக்கி கொண்டு நின்றிருந்தான்..

அவள் அவனையே எத்தனை நேரம் பார்த்துக்கொண்டிருந்தாளோ, திடீரென அவன் தன்னை நோக்கி வரவும் அவள் கண்கள் மேலும் விரிந்துகொண்டது..

அவள் முன் ஒரு தட்டை வைத்தவன், "ம்ம்.. என்னை ஆராய்ந்தது போதும்.. நான் மனம் மாறும் முன் சாப்பிடு.." என்றுவிட்டு அவளுக்கு பக்கவாட்டில் இருந்த மற்றொரு சேரில் அமர்ந்துவிட, அவன் தொடர் செயல்களிலும் குரலிலும் தான் அவள் ஒருவாறு சுயநினைவிற்கே மீண்டாள்..

தன் முன் இருந்த தட்டை பார்த்தவளுக்கு, அதில் நாலு தோசையும், தொட்டுக்கொள்ள மிளகாய் பொடியும் இருப்பது தெரிய, அதற்கு மேல் வேறு எதுவும் யோசிக்க தோன்றாமல் அவசரமாக தோசையை விழுங்கினாள்.

ஒரு தோசை முடிப்பதற்குள்ளேயே சாப்பிட்ட வேகத்தில் புரை வேறு ஏறிக்கொள்ள, அவள் வேகமாக தண்ணீரை தேடும் போதே அவள் முன் ஒரு டம்ப்ளரை நீட்டினான் பகலவன்..

அதை வாங்கி யோசிக்காமல் குடித்தவளுக்கு, மெதுவாக தான் நடந்துகொண்டிருப்பதே உரைத்தது..

அப்போது தான் பக்கத்தில் ஒருவன் இருப்பதே நினைவு வர, காலி டம்ப்ளரை மேசையில் வைத்துக்குக்கொண்டே ஓரக்கண்ணால் அவனை பார்த்தாள்..

அப்போது தான் அவனும் சாப்பிட்டு கொண்டிருந்ததையே கவனித்தாள்..

அவளுக்கு வார்க்கும் போதே தனக்கும் சேர்த்து வார்த்திருப்பான் போல், அவனும் அமைதியாக உண்டு கொண்டிருந்தான்..

அதற்கு மேல் அவசர படாமல் மெதுவாக சாப்பிட்டவள், "தேங்க்ஸ்" என மெதுவாக கூற, அவளை நிமிர்ந்து பார்த்தவன்,

"அவசரப்படாதே.. நீ நினைக்கும் அளவு நான் நல்லவனில்லை.." என்றான் அழுத்தமாக.

'அது தான் தெரியுமே!' என உடனடியாக நினைத்துக்கொண்டாலும், இந்த நொடி தன் பசி தீர்த்த நன்றி அவளுக்கு அவன் மேல் வர தான் செய்தது..

ஒருபக்கம் கடத்தல் கொலை என்று செய்கிறான்.. மற்றொரு பக்கம் காலை வேளையை ரசிக்கிறான்.. ஏதோ பாடல் கேட்டு ரசிக்கிறான்.. அவளை பணிய வைக்க பட்டினி போட்டுவிட்டு, அவனே அவள் பசியையும் போக்குகிறான்.. ஒருவன் இத்தனை முரண்பாடாக இருக்க முடியுமா என்ன? அவனை பற்றி ஒன்றுமே கணிக்க முடியாத குழப்பமே அவளிடம் எஞ்சி இருந்தது..

"ஆராய்ச்சி முடிந்ததென்றால் தோசையை முடிக்கிறாயா? உன்னுடனே உட்கார்ந்திருந்தாள் நான் காலையில் எழுந்துகொள்ள வேண்டாமா?" பேசிக்கொண்டே அவன் எழுந்ததில் பல்லை கடித்து தன் கற்பனையை ஓரம் கட்டியவள், ஒழுங்காக தானும் உணவை முடித்துக்கொண்டு எழுந்தாள்..

அவளும் தட்டை அலம்பிவிட்டு வர, உணவு மேசையில் சாய்ந்து கைககளை கட்டிக்கொண்டு நின்றிருந்தான் பகலவன்..

"ஒருவேளை சாப்பிட விட்டுவிட்டேன் என்பதற்காக எதுவும் கற்பனை செய்துகொள்ளாதே.. நான் சொன்னதை நீ செய்யாத வரை இன்னும் என்ன வேண்டுமானாலும் நீ சந்திக்க நேரலாம்.."

எப்போதும் போல் அவள் வயிற்றில் புளியை கரைப்பது போல் அவன் பேசிவைக்க, அவன் எதிர்பார்த்த பயம் தவராமல் அவள் கண்களில் பிரதிபலித்தது..

மீண்டும் 'என்ன செய்வானோ?' என்ற அதே கேள்வி.

அதற்கு விடை சொல்லிவிட்டால் அவன் பகலவன் இல்லையே..!

அவன் அமைதியாகவே முன்னால் நடக்க, அவளும் ஒரு பெருமூச்சுடன் அவனை தொடர்ந்தாள்.

அவன் பின்னால் சற்று இடைவெளி விட்டு வந்துகொண்டிருந்தவள் கண்கள் அவன் ஹெட் செட்டில் பதிய, ரொம்ப நேரமாக மனதில் உறுத்திகொண்டிருந்ததை வாய்விட்டே கேட்டுவிட்டாள்.

"அப்படி என்ன தான் கேட்பீங்க? ஹெட் செட் போட்டிருக்கும் போது மட்டும் உங்க முகம் வேறு மாதிரி மாறி விடுகிறதே!"

ஒருவித ஆர்வத்துடன் கேட்டவளை திரும்பி ஒரு முறை பார்த்துக்கொண்டவன், "இளையராஜா சாங்ஸ்" என்றான் ஒற்றை சொல்லாக.

"ஓ.." என கேட்டுக்கொண்டவளுக்கு அவன் ரசனை லேசாக புரிவது போல் இருந்தது..

அதற்குள் அவள் அறை வரை இருவரும் வந்திருந்தனர்.

"தப்ப முயற்சித்து நாய்க்கடி வாங்கிவிடாதே" என்றுவிட்டு அவன் நகர்ந்து சென்றுவிட, ஒரு நொடி திகைத்து விழித்தவளுக்கு மெதுவாக தான் அவன் கூறிவிட்டு சென்றது புரிந்தது..

யாரும் இல்லை என்று நினைத்து தப்பிக்க முயற்சிக்க கூடாதாம்..

நாய் இல்லாவிட்டாலும் இத்தனை பெரிய வீட்டின் கதவை அவள் கண்டுபிடிப்பதற்குள்ளேயே, அவளை பிடித்து தூக்கி விடுவார்கள் என்று தான் அவளுக்கு தோன்றியது..

அதிகம் யோசிக்க முடியாமல் தூக்கம் வேறு கண்களை சுழற்ற, அமைதியாக சென்று படுத்துவிட்டாள்..

மறுநாள் காலை சரியான நேரத்தில் தன் அறைக்கு டிபன் வந்து சேர்ந்த போது வெண்ணிலா பெரிதாக குழம்பி தான் போனாள்..

காலை எழுந்து குளித்துவிட்டு வந்து அவள் அமர்ந்த சில நொடிகளிலேயே அவள் அறை கதவு தட்டப்பட்டது..

எதற்கும் இருக்கட்டும் என்று அவள் தான் பூட்டி வைத்திருந்தாள்.

கதவு சற்றே மென்மையாக தட்டுப்பட, 'இது பகலவன் போல் தெரியவில்லையே!' என்று நினைத்துக்கொண்டே மெதுவாக கதவை திறந்தாள் வெண்ணிலா.

கையில் தட்டுடன் மத்திய வயதை ஒத்த ஒருவர் நின்றிருப்பதை அவள் குழப்பத்துடன் பார்க்க, "கொஞ்சம் நகர்ந்துக்கோங்க மா" என்றார் அவர்.

அவர் குரலில் அவள் ஒருவாறு சுதாரித்து நகர, உள்ளே வந்து அங்கிருந்த மேசைமீது உணவு தட்டை வைத்தவர், "மிச்சம் வைக்காமல் சாப்பிட்டுரு மா" என சாதாரணமாக கூற,

"பகலவன் கொடுக்க சொன்னாரா?" என்றாள் அவள்.

"ஆமாம் மா.. தம்பி தான் கொடுக்க சொல்லிச்சு.." பேசிக்கொண்டே அவர் வாசல் நோக்கி நகர்ந்துவிட,

"நீங்க... நீங்க இங்கே வேலை செய்யறீங்களா? இல்லை அவருக்கு சொந்தமா?" என வேகமாக கேட்டாள் வெண்ணிலா.

தப்புவதற்க்கு ஏதாவது வழி இருக்கிறதா என்ற ஆர்வத்தில் தான் அவள் கேட்டது.

"நான் இங்கே தான் பல வருடமா சமைக்கிறேன் மா" மென்மையாகவே பதில் கூறினாலும், தேவையில்லாமல் ஒரு வார்த்தை கூட அவர் பேசவில்லை.

"பார்த்தி அண்ணா" என திடீரென எங்கிருந்தோ பகலவன் குரல் வேறு ஒளிக்க, அவளுக்கு பயம் பிடித்துக்கொண்டது..

பொறுமையாக கேட்டுக்கொள்வோம் என்று நினைத்து அவள் வாயை மூடிக்கொள்ளும் போதே, அவரும் ஒரு தலையசைப்புடன் நகர்ந்துவிட்டார்.

அவர் சென்றதும் அவள் மெதுவாக வெளியில் எட்டி பார்க்க, அவர் பக்கத்து அறைக்குள் செல்வது தெரிந்தது.

'அந்த வில்லன் ரூமும் இங்கே தான் இருக்கா!' என நினைத்துக்கொண்டவள், மேலும் சுற்றி பார்க்க, யாரோ ஒருவர் படிகளில் ஏறிவரும் அரவம் கேட்டது..

சத்தம் வந்த திசையில் பார்த்தவளுக்கு, அங்கு வந்தவனை எங்கோ பார்த்தது போல் இருந்தது..

வேகமாக மூளையை கசக்கி யோசித்தவளுக்கு, அன்று காப்பகத்தில் பகலவனுடன் இருந்தவன் என்று நினைவு வந்துவிட்டது.

அதே நேரம் அவனும் வெண்ணிலாவை பார்த்துவிட்டான்.

அவன் பார்வை ஒரு நொடி அவள் மீது அழுத்தத்துடன் படிந்தது.

என்ன பகலவன் போல் வில்லன் பார்வையாக இல்லாமல், அவன் கண்களில் சற்றே அமைதி இருந்தது.

அவளை தலை முதல் கால் வரை ஒருமுறை பார்த்துக்கொண்டவன், அதிகம் நிற்காமல் அவளை கடந்து சென்றுவிட்டான்..

மொத்தத்தில் இந்த வீட்டில் பகலவன் அனுமதி இல்லாமல் ஒரு அணு கூட அசையாது என்பது உண்மை தான் என அந்த நொடி அனுபவபூர்வமாக உணர்ந்தாள் வெண்ணிலா.

செழியன் பகலவன் அறைக்குள் வந்த போது, பார்த்தி கீழே சென்றுவிட்டார்.

"அந்த பெண் என்ன சொல்கிறாள் பகலவா?" என்று கேட்டுக்கொண்டே செழியன் வர,

"ம்ம்.. ரொம்பவும் பசிக்குதாம்.." என்றான் அவன் நக்கலாக.

"டேய் சாப்பிட ஏதாவது கொடுத்தாயா இல்லையா?"

சில நொடிகள் முன்பு அவள் முகத்தில் இருந்த தெளிவை பார்த்திருந்தாலும், ஏனோ சிறு பயத்துடனே செழியன் கேட்டான்.

"ரொம்ப பதற வேண்டாம்.. கொடுத்தாச்சு.. சாப்பிட்டாலாவது மூளை வேலை செய்கிறதா பார்ப்போம்.." என்றான் அவன் கிண்டலாக.

"என்ன தான் டா உனக்கு பிரச்சனை?" என செழியன் தொடங்க,

"எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை ண்ணா.. மதுக்கு தான் ஏதோ பிரச்சனையாம்" என பகலவன் உதடு துடிக்க கூற,

"மதுக்கு என்ன டா? என்ன ஆச்சு?" என அடுத்த நொடி பதறிவிட்டான் செழியன்.

அவன் பதட்டத்தை பார்த்து அவன் தோளில் கைபோட்டு சத்தமாக சிரித்த பகலவன், "அட டா! என்ன ஒரு பாசம்.. விட்டால் பறந்து போயிடுவீங்க போலையே!" என கிண்டலடிக்க, அதில் பெரிதாக ஒன்றும் இல்லை என செழியன் மனம் சமாதானமடைந்தது.

"என்ன டா?"

இன்னுமும் முழுதாக படபடப்பு குறையாமல் செழியன் கேட்க, "கடந்த ஒரு மாதமாக அனாதை குழந்தைகள் வரவு கொஞ்சம் அதிகமாகி இருக்காம் ண்ணா. சில பொருட்கள் வாங்க வேண்டுமாம். யாராவது ஆட்கள் உதவிக்கு அனுப்ப முடியுமா என்று கேட்டாள். என் அண்ணனை தவிர யாரென்றாலும் ஓகே தானாம். என்ன செய்யலாம்?"

தீவிரமாக அவன் யோசிக்க, "திமிர் பிடித்தவள்" என்று முணுமுணுத்தான் செழியன்.

அவன் கோபம் பகலவனுக்கும் புரிந்தது.

"விடு ண்ணா.. நம்ம மது தானே.. நீங்க போங்க.. அவள் மனமும் மாறும்.. எப்படியும் நீங்க தான் வருவீங்க என்று அவளுக்கு தெரியாதா என்ன! சும்மா வேண்டுமென்றே சொல்கிறாள்" என சமாதானமாக பேசினான் பகலவன்.

"அதெல்லாம் நான் தான் வருவேன் என்று நல்லா தெரியும் டா.. என்னை எதிர்பார்த்து தான் காத்திருப்பாள்.. இந்த வறட்டு பிடிவாதத்தை விட்டு தொலைத்தால் தான் என்ன? மனிதனை படுத்த வேண்டியது.."

இன்னும் கோபம் குறையாமல் செழியன் புலம்ப, "புரிந்துகொள்வாள் ண்ணா.. எங்கே போய்விட போகிறாள்.. பார்த்துக்கலாம்..." என்றான் பகலவன் மென்மையாக..

குளிரும்..

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 7:

காப்பகத்திற்கு வந்த செழியன் நேராக மாதங்கி வீட்டுக்கு தான் சென்றான்..

அந்த காப்பகத்திற்குள்ளேயே ஒரு சிறிய வீட்டில் தான் அவள் இருந்தது..

தங்களுடன் வர சொல்லி பகலவனும் செழியனும் எத்தனையோ வற்புறுத்தி தோற்று போய், அவளுக்கு அங்கேயே வீடு கட்டி கொடுத்திருந்தனர்..

வாசல் கதவு திறந்தே இருக்க, அதை ஒரு முறை தட்டி விட்டு பதிலை எதிர்பாராமல் உள்ளே வந்தான் செழியன்.

ஹாலில் ஒரு சேரில் அமர்ந்து மதிய உணவை உண்டுகொண்டிருந்த மாதங்கி சரியாக எழ போக, "நான் தான் மது.. சாப்பிடு.." என்றான் செழியன்.

அவனை பார்த்ததும் தானும் அமர்ந்துவிட்டவள், "சொல்லுங்க செழியன்" என்று கேட்டுக்கொண்டே சாப்பிட,

"ஏதோ வாங்க வேண்டும் என்றாயாமே.. சாப்பிட்டுட்டு வா.. போவோம்.." என்றவன் அவளிடம் பேசிக்கொண்டே அங்கிருந்த சிறிய மேசையில் இருந்த பாத்திரங்களை ஆராய்ந்தான்.

"நான் வேறு யாரையாவது தானே..." என அவள் தயக்கத்துடன் இழுக்க,

"ஆமா.. ஆமா.. நீ வேறு யாரையோ தான் கூப்பிட்டாய்.. இதோ இப்போது கூட நான் வருவேன் என்று எதிர்பார்த்து நீ அதிகம் சமைக்கவே இல்லை.. நானாக பிடுங்கி சாப்பிட போகிறேன்.. எல்லாம் சரி தானே.."

அவளை பார்க்காமலே கூறிவிட்டு ஒரு தட்டில் சாப்பாட்டை போட்டுக்கொண்டவன், அவள் அருகிலேயே வந்து அமர்ந்தான்..

"நான் நைட்டுக்கு சேர்த்து சமைத்தேன்" வீம்புடன் கூறியவளை நிமிர்ந்து கண்களில் சிரிப்புடன் பார்த்தவன்,

"நான் தான் நம்பிவிட்டேனே" என்று கூறி கண்ணடிக்க, அவள் தான் அவன் முகத்தை நேராக பார்க்க முடியாமல் தலை குனிந்து கொண்டாள்..

இருவரும் சாப்பிட்டு முடித்ததும் காப்பகத்தில் இருப்பவர்களிடம் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு கிளம்பினர்..

எப்போதும் வருவது போல் ஒரு ஹோல் சேல் கடைக்கு தான் செழியன் மாதங்கியை அழைத்து வந்தான்..

அது அவர்கள் வழக்கமாக வரும் கடை தான்..

தேவைப்படும் அனைத்தும் மொத்தமாக வாங்கி வந்துவிடுவார்கள்..

இப்போதும் குழந்தைகளுக்கு தேவையான சிறிய சிறிய உடைகள், பால் டப்பா, சின்ன சின்ன விளையாட்டு பொருட்கள், கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கு நர்சரி புத்தகங்கள் என யோசித்து யோசித்து இருவரும் சேர்ந்தே வாங்கினர்..

மாதங்கி ஒரு பக்கம் வாங்குவதில் மூழ்கிவிட, செழியனோ அவள் கவனத்தை கவராதவாறு பக்கத்தில் இருந்த மற்றொரு கடைக்கு சென்றுவிட்டு வந்தான்..

அனைத்தும் வாங்கி முடிக்க மாலைக்கு மேல் ஆகிவிட்டது..

காரில் ஏறியதும், "சாப்பிட்டுட்டே போய் விடுவோமா மது?" என செழியன் கேட்க,

"ம்ம் ஓகே செழியா" என்றாள் மாதங்கி.

பக்கத்தில் இருந்த உணவகத்திற்க்கு அவளை அழைத்து சென்றவன், அவளிடம் கேட்காமலே அவளுக்கு பிடித்த உணவுகளை ஆர்டர் செய்ய, அவனை வாஞ்சையுடன் பார்த்து கொண்டிருந்தாள் மாதங்கி..

'இவனது காதலுக்கு தன்னால் எந்த நியாயமும் செய்ய முடியவில்லையே!' என்ற வேதனை தான் அவளை உள்ளிருந்து கொன்று கொண்டிருந்தது..

அவள் மனதை அவனால் உணர முடியாதா என்ன..!

"போதும் போதும் மது.. கண்ணாலேயே விழுங்கி விடாதே.. நீ சம்மதித்தாள் உன்னிடம் தொபுக்கடீர் என்று நானே விழுந்துவிட தயார் தான்" என அவன் வம்பிழுக்க, அவளோ முகத்தில் தோன்றிய செம்மையை மறைக்க பெரிதாக திண்டாடி போனாள்.

உணவு வந்ததும் வேண்டுமென்றே அவள் தட்டில் இருந்து எடுத்து எடுத்து சாப்பிட்டு அவளை வம்பிழுத்து கொண்டிருந்தான் செழியன்.

"இளவயது பசங்க கூட இத்தனை லொள்ளு பண்ணமாட்டாங்க" என மது கடுப்புடன் ஒரு கட்டத்தில் கூற,

"ஏன்? எனக்கு என்ன மா குறை? நீ வாழ்க்கை கொடுக்கும் வரை நான் எலிஜிபிள் பேச்சிலர் தான்.. உன்னிடம் மட்டுமில்லை, யாரிடம் வேண்டுமானாலும் வம்பு பண்ணலாம்.." சிரிக்காமல் அவன் கூறியதில்,

"போய் பண்ணி தான் பாருங்களேன், செருப்பால் நாலு கொடுப்பாங்க.." என்றாள் அவள் எரிச்சலுடன்.

அவள் கோபத்தை பார்த்து தலையாட்டி சிரித்துக்கொண்டவன், "என் தேவதை இங்கே இருக்கும் போது நான் ஏன் டி யாரையோ பார்த்து போக போகிறேன்?" சீரியஸாக செழியன் கேட்க, அவளுக்கு தான் அவன் கூற்றை ரசிக்க முடியவில்லை.

வேறு யாருடனும் அவனை இணைத்து பேசினால் கோபம் வருகிறது தான்.. ஆனால் அதற்காக அவன் அப்படியே தனியாக நிற்கட்டும் என்று விட முடியுமா?

அவனுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்று தானே அவள் நினைக்க வேண்டும்..

மனதின் குழப்பம் அவள் முகத்தில் அப்பட்டமாக தெரிய, அவள் கைகளை மென்மையாக பிடித்துக்கொண்டவன், "ரொம்ப யோசிக்காதே மது மா.. எனக்கு நேரடி அறுபதாம் கல்யாணம் என்றாலும் அது உன்னுடன் தான் நடக்கும்.." என்றான் மென்மையாக.

அவள் முகமோ மேலும் வலியுடன் சுருங்கி தான் போயிற்று..

"அதற்காக அத்தனை வருடம் கையை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்ப்பேன் என்று தப்பு கணக்கு போட கூடாது.. ஏதோ போனால் போகிறதே என்று பார்க்கிறேன்.. ரொம்பவும் சுத்தவிட்டால் கட்டாய கல்யாணம் செய்யவும் தயங்க மாட்டேன்.."

அவள் மனதை மாற்றவே அவன் முயற்சிக்க, அது தெளிவாக வேலை செய்து அவள் மீண்டும் அவனை முறைத்தாள்..

அதில் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டவன், மேலும் ஏதேதோ பேசிக்கொண்டே தானும் உண்டு, அவளையும் ஒழுங்காக சாப்பிட வைத்தான்.

இருவரும் கிளம்பி காப்பகம் வந்து சேர, பைகள் அனைத்தையும் கொண்டு வந்து அவள் வீட்டினுள் வைத்த செழியன், அதிலிருந்து ஒரு கவர் மட்டும் எடுத்து மாதங்கியிடம் நீட்டினான்..

"இது உனக்காக நான் வாங்கியது மது.. போட்டு காட்டுகிறாயா?" என செழியன் கேட்க, அவனை முகம் சுருங்க பார்த்து கொண்டே அதை வாங்கினாள் மாதங்கி..

அவன் கொடுத்த கவருக்குள் ஒரு அழகிய சுடிதார் இருந்தது..

அதிலும் அவளுக்கு மிகவும் பிடித்த கருநீல வண்ணத்தில், வெள்ளை பூக்கள் பதித்து அத்தனை அழகாக இருந்தது..

சில வருடங்கள் முன்பு வரை அவள் விரும்பி அணிவதென்றால் அது சுடிதார் வகைகள் தான்..

வகைவகையாக வைத்திருப்பாள்..

"உன் ரூமில் கால் வைக்கவாது இடம் விட்டுவை டி" என செழியனும் பகலவனும் அவளை கிண்டல் கூட செய்திருக்கின்றனர்.

ஆனால் இப்போதெல்லாம் போட்டிருக்கும் வேடத்திற்கு ஏற்றார் போல் காட்டன் புடவைகள் தான் அவள் உடுத்துவது.

அந்த சுடிதார் எல்லாம் அனாதை ஆசிரமத்தில் கொடுத்துவிட்டாள்..

எதுவுமே அவளுக்கு இப்போது பிடிக்காமல் போய் இருந்தது..

கையில் இருந்த சுடிதாரை வெறித்து பார்த்தவள், "இதெல்லாம் வேண்டாம் செழியா" என்று மீண்டும் அவனிடமே கவரை நீட்ட, அவனோ அதை வாங்காமல் கைகளை கட்டிக்கொண்டு அவளை பார்த்தான்.

"எனக்காக கூட போட்டுக்காட்ட மாட்டாயா மது மா..?" ஏக்கத்துடன் கேட்டவனை வெறுமையாக பார்த்தவள்,

"எனக்கு பிடிக்கவில்லையே செழியா" என்றாள் பாவமாக.

அதற்கு மேல் அவளை வற்புறுத்த அவனுக்கு மனம் வரவில்லை..

"வைத்துக்கொள் மது.. என்று என்னை ஏற்றுக்கொள்கிறாயோ அன்று போட்டுக்கொள்.. குட் நைட்.." என்றவன் அவளிடம் அனுமதி பெறாமலே அவள் நெற்றியில் மென்மையாக இதழ் பதித்துவிட்டு சென்றுவிட்டான்..

அவன் முத்தத்தில் காதலோ காமமோ இருக்கவில்லை..

வெறும் தாயன்பு தான்..

அதை மனதார உணர்ந்தவளும் இளகிவிட்ட மனதுடன் படுத்து உறங்கி போனாள்.

********************

வெண்ணிலா அந்த வீட்டிற்கு வந்து மேலும் இரண்டு நாட்கள் ஓடி விட்டது..

இதற்கிடையில் பெரிதாக எந்த மாற்றமும் இருக்கவில்லை..

அவள் அந்த அறையிலேயே தான் இருந்தாள்..

மூன்று வேலையும் உணவு வந்து விடும்..

பார்த்தி தான் எப்போதும் எடுத்து வருவார்..

அவரிடம் வெண்ணிலா நன்றாகவே பேச தொடங்கி இருந்தாள்..

பகலவன் பற்றியோ, அவள் பிரச்சனை பற்றியோ ஒன்றும் பேசாவிட்டால், அவரும் நன்றாகவே பேசுவார்.

இடையில் ஒரு முறை பகலவன் அவளை அவள் வீட்டுடன் பேச வைத்தான்..

வாய்க்கு வந்த பொய்யை எல்லாம் கூறி அவளும் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தாள்..

மனோகரிடம் ஏன் பேசவில்லை என அன்னை கேட்டபோது, 'அவர் போனுக்கு லைன் கிடைக்கவில்லை. நீங்களே சொல்லிடுங்க..' என்று சமாளித்துவிட்டாள்.

எப்படியும் மனோகர் அவளுடன் பேச நினைப்பான் என்று அவளுக்கு தெரியும்..

அன்னை கூறுவதை அப்படியே நம்புவானா? என்ற கேள்வியும் அவளுக்குள் எழ தான் செய்தது.

அதை சொன்னால், 'சரி தான்.. நீயே பேசேன்' என்று பகலவன் நக்கலடிப்பான் என்று தோன்றியதால், அந்த கேள்வியை அவள் தனக்குள்ளேயே புதைத்து கொண்டாள்.

அன்றும் மதிய உணவு எடுத்துக்கொண்டு வந்த பார்த்தி அவளுக்கு கொடுக்க, "தேங்க்ஸ் ண்ணா" என அதை வாங்கிகொண்டவள், சாப்பிட்டு கொண்டே அவருடன் பேச்சுக்கொடுத்தாள்.

"உங்கள் பையன் என்ன டிபார்ட்மெண்ட் ண்ணா?"

தன் மகன் கல்லூரி செல்கிறான் என அவர் சொல்லி இருந்ததை நினைவு வைத்து கேட்டாள் வெண்ணிலா.

"ஏதோ சொல்லுவானே மா!" என லேசாக யோசித்தவர்

"ஈயோ! கொசுவோ! என்னவோ சொல்லுவான்.." என்று சத்தமாகவவே யோசிக்க, அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டவள்,

"ஈ. சீ. ஈ யா ண்ணா?" என்றாள் தானே யூகித்து.

"ஆ.. அது தான் மா.. ரெண்டாம் வருஷம் படிக்கிறான்.. நல்லா படிப்பான் மா.. அவன் டீச்சர் ஒரு முறை என்னை நேரில் பார்த்து பாராட்டினாங்க.." என்றவர் குரலில் அத்தனை பெருமை.

பார்த்தி உலகமே அவர் மகன் தான் என்று அவர் பேசுவதில் இருந்தே புரியும்..

மனைவியை இழந்துவிட்டவருக்கு, மகன் தான் அனைத்துமே..

அவனை பற்றி பெருமைப்பட்டு கொள்வதில் மனிதருக்கு சலிக்கவே சலிக்காது என்று நினைத்துக்கொண்டாள் வெண்ணிலா..

"உங்கள் சாம்பார் ருசியே தனி தான் ண்ணா" என சாப்பிட்டு கொண்டே அவள் பாராட்ட, அவளை ஒரு மாதிரி ஆச்சர்யமாக பார்த்தார் பார்த்தி..

அவர் பார்வையில், "என்ன ண்ணா?" என அவள் புரியாமல் கேட்க,

"தம்பி மாதிரியே பேசுகிறாய்" என்றார் அவர் மெதுவாக.

"தம்பி என்றால் உங்கள் மகனா?" சாப்பிட்டு கொண்டே அவள் கேட்க,

"இல்லை மா.. பகலவன் தம்பி.. தம்பிக்கும் என் சாம்பார் என்றால் ரொம்பவும் பிடிக்கும்.."

அவர் பாட்டிற்கு வெகுளியாக கூற, அவன் பெயரை கேட்டதும் அவளுக்கு தான் புரையேறி விட்டது..

அவள் திணறியதும், "பார்த்து மா" என அவரே தண்ணீர் எடுத்து கொடுக்க, அதை வாங்கி குடித்து மனதை சமன் செய்து கொண்டாள் வெண்ணிலா..

"பார்த்து சாப்பிடு மா.. இதுக்கு தான் சாப்பிடும் போது பேச கூடாதுனு சொல்லுவாங்க.. நீ சாப்பிட்டு முடி.. நான் கொஞ்ச நேரத்தில் தட்டு எடுத்துட்டு போக வரும் போது பேசிக்கலாம்.." என்றுவிட்டு அவர் சென்றுவிட, அவளும் அமைதியாக உணவை முடித்தாள்.

இந்த இரண்டு நாளாக போன் கொடுக்க வந்தது தவிர அவளை பார்க்க பகலவன் வரவே இல்லை..

என்ன நினைத்துக்கொண்டிருக்கிறானோ! என அவளுக்கும் பயமாக தான் இருந்தது..

ஒவ்வொரு நொடியையும் பயத்துடனே கடத்திக்கொண்டிருந்தவளுக்கு இருந்த ஒரே ஆறுதல், அவ்வப்போது பார்த்தியுடன் பேசிக்கொண்டிருப்பது தான்..

ஏதோ அந்த கொஞ்ச நேரம் தான் இருக்கும் நிலை மறந்து மனதை மாற்றி கொள்வாள்.

அவள் பயந்து கொண்டே இருந்தது போல் அன்று இரவு பகலவன் அவளை பார்க்க வந்தான்.

கதவை தட்டிய அழுத்தத்திலேயே அவனை கண்டுகொண்டவள், படபடப்புடன் தான் கதவையே திறந்தாள்..

அவள் திறந்ததும் உள்ளே வந்தவன், நேராக பால்கனிக்கு சென்று அவளை திரும்பி பார்க்க, அவளும் அவன் அருகில் சென்று நின்றாள்..

"கொஞ்சமாவது மனம் மாறியதா?" அவள் முகத்தையே பார்க்காமல் பகலவன் கேட்க,

"நீங்கள் மாறினால் தான் உண்டு" என்றாள் அவள் மெதுவாக.

அவள் பதிலில் அவளை திரும்பி பார்த்தவன், இப்போது கைகளை கட்டிக்கொண்டு பால்கனி கம்பியில் சாய்ந்து நின்றுகொண்டான்.

"பணம் அத்தனை முக்கியமா வெண்ணிலா?" ஒரு மாதிரி உணர்வுகள் காட்டாத குரலில் அவன் கேட்க,

"உயிர் முக்கியம் இல்லையா?" என்றாள் அவள் சம்மந்தமே இல்லாமல்.

அவள் பதிலில் அவன் முகம் மேலும் சுருங்கி தான் போயிற்று..

ஏதோ யோசிக்கிறான் என்று அவளுக்கு புரிந்தது..

அவன் முகம் இறுகிக்கொண்டே போனதில் நிச்சியம் அவன் சிந்தனை தனக்கு சாதகமாக இல்லை என்றும் அவள் மனம் இடித்துரைத்தது..

"நல்ல மண்வாசனை இல்லையா?" திடீரென பகலவன் கேட்க, அவள் தான் அவன் ஏதோ வேற்று மொழி பேசுவது போல் விழித்தாள்.

"மழை, இடி, மின்னல் எல்லாம் பிடிக்குமா வெண்ணிலா?" தொடர்ந்து அவன் பாட்டிற்க்கு கேட்டுக்கொண்டே போக, அவளோ பதில் பேச தெரியாமல் அவனையே வெறித்துக்கொண்டிருந்தாள்..

"இருட்டென்றால் பயப்படுவாயா?" அவன் அடுத்த கேள்வியில் அவளுக்குள் ஏதோ ஆபாய மணி ஒலித்தது..

இந்த குரல்.. இது அவன் ஏதாவது செய்யும் முன் வரும் நக்கல் குரல்..

அதாவது அவளுக்கு உணவு கொடுக்காமல் இருக்கும் போது, அவனிடம் இருந்து வந்த குரல்..

அவள் சிறு பயத்துடன் அவனை பார்க்க, "இன்று உன் தைரியத்திற்கான சோதனை" என எப்போதும் போல் சிரித்துக்கொண்டே கூறியவன், அவளை ஒருமுறை அழுத்தமாக பார்த்துவிட்டு நகர்ந்தான்..

தெளிவாக போகும் போது அவள் அறை கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு போய் விட்டான்..

குளிரும்..

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 8:

பகலவன் சென்ற சில நிமிடங்களிலேயே மழை வேகமாக பொழிய தொடங்கியது..

பால்கனியில் நிற்க முடியாமல் காற்றில் மழைத்துளிகள் பெண்ணவளை நனைக்க தொடங்க, பால்கனி கதவை வேகமாக பூட்டி விட்டு அறைக்குள் வந்தாள் வெண்ணிலா.

'என்ன என்னவோ சொல்லிவிட்டு போனானே!' என யோசித்துக்கொண்டே அவள் அமர்ந்திருந்த போது, பட்டென கரெண்ட் கட் ஆகிவிட, ஒரு நொடி உள்ளுக்குள் தூக்கிவாரி போட நிமிர்ந்தவளுக்கு மெதுவாக தான் பகலவன் சொல்லிவிட்டு சென்றதே உரைத்தது..

'கடவுளே! கரெண்ட் தானாக போனதா? இல்லை அவன் வேண்டுமென்றே செய்தானா? வேண்டுமென்றே தான் செய்திருப்பான்..' என உடனடியாக அவளுக்கு புரிந்து போனது.

பின்னே இத்தனை பெரிய வீட்டில் இன்வெர்ட்டர் இல்லாமலா இருக்கும்..?

பக்கத்தில் என்ன இருக்கிறது என்று கூட பார்க்க முடியாத இருட்டு சற்றே பயமுறுத்தியது தான்..

ஆனாலும் பெரிதாக அவள் ஒன்றும் பயந்துவிடவில்லை..

இயல்பிலேயே கொஞ்சம் தைரியமான பெண் என்பதால் தானே இத்தனை நாள் அவளால் தாக்கு பிடிக்க முடிகிறது..

வேறொரு பெண்ணாக இருந்திருந்தால் இந்த நேரம் பயந்தே ஒரு வழி ஆகி இருப்பாள்..

அவளே அறியாமல் பகலவன் மீது எங்கோ தோன்றி இருந்த நம்பிக்கையும் ஒரு காரணமாக இருக்கலாம்..

என்ன நம்பிக்கை என்று கேட்டால், அவளுக்கு நிச்சயமாக விடை தெரியவில்லை..

இங்கு வந்த நாளில் இருந்து அவன் அவளை மிரட்டி கொண்டு தான் இருக்கிறான்..

ஆனாலும் என்ன தைரியம்? அவளுக்கே தன் மனம் சரியாக புரியாத நிலை தான்..

நேரம் ஆக ஆக மழை அதிகரித்துக்கொண்டே தான் போனது..

சுற்றிலும் இருளும், மின்னலும், இடியுமாய் கொஞ்சம் கொஞ்சமாக தான் அந்த சூழல் அவளுக்கு பயத்தை தோற்றுவிக்க தொடங்கியது..

மிகவும் கடினப்பட்டு அவள் இழுத்துப்பிடித்து வைத்திருந்த தைரியத்தை அறையின் வெளியில் திடீரென கேட்க தொடங்கிய நடை சத்தம் முற்றிலுமாய் குலைத்தது..

'ஐயோ, யார் அவள் அறை வாசலில் நடப்பது? உள்ளே வந்துவிடுவார்களா? இந்த இருளில் அவளால் தப்பிக்க முடியுமா?'

சில நொடிகள் முன்பு தான் பகலவன் மேல் நம்பிக்கை என தோன்றிய எண்ணமெல்லாம் போன இடம் தெரியவில்லை..

யாரும் உள்ளே வந்துவிட கூடாதே என நொடிக்கு நொடி பயம் அதிகரித்து கொண்டே போக, தான் அமர்ந்திருந்த சோபாவிலேயே நன்றாக ஒட்டி காலை இறுக்கமாக கட்டிக்கொண்டு அமர்ந்துகொண்டாள் வெண்ணிலா..

வெளியில் கேட்க தொடங்கிய நடை சத்தம் தொடர்ந்து கதவருகில் கேட்டுக்கொண்டே இருந்ததில் அவள் நடுக்கமும் அதிகரித்து கொண்டே சென்றது..

தாங்கமாட்டாமல் கண்கள் வேறு கலங்கிவிட, 'ஒன்றும் தவறாக நடந்துவிட கூடாது கடவுளே' என மனதில் உருபோட்டுக்கொண்டே இருளில் அமர்ந்திருந்தாள் வெண்ணிலா.

எத்தனை மணி நேரம் அமர்ந்திருந்தாளோ! அவளுக்கு ஒன்றும் தெரியாது..

திடீரென எங்கிருந்தோ டொம்மென கேட்ட பலமான சத்தத்தில் அவள் தைரியம் எல்லாம் வடிந்து போக, "அம்மா" என்ற அலறலுடன் பயத்தின் உச்சத்தில் மயங்கி சரிந்துவிட்டாள்..

அவள் குரல் வெளியில் இருந்த பகலவன் காதிலும் விழுந்தது..

அவள் பயப்பட வேண்டுமென, வேண்டுமென்றே தான் எல்லாம் செய்தான்..

ஆனாலும் அவள் பயம் அவனையே ஒரு நிமிடம் உலுக்கி விட, அதற்கு மேல் நிற்காமல் வேகமாக கதவை திறந்து கொண்டு உள்ளே வந்துவிட்டான்.

அவன் கதவை திறந்ததும் வெளியில் இருந்த வெளிச்சமும் உள்ளே பரவ, சோபாவில் மயங்கி விழுந்திருந்தவளை கண்டுகொள்வது ஒன்றும் அவனுக்கு அத்தனை கஷ்டமாக இருக்கவில்லை..

வேகமாக அவள் அருகில் வந்தவன், "ஹேய் வெண்ணிலா இங்கே பார்.. ஒன்னும் இல்லை.." என சத்தமாக கூறி கொண்டே அவள் கன்னம் தட்ட, அவளிடமோ எந்த சலனமும் இல்லை..

அதில் ஒரு நொடி வெகுவாய் பதறிவிட்டவன், முதலில் அவளை ஒழுங்காக தூக்கி சென்று கட்டிலில் படுக்க வைத்தான்.

அடுத்த நொடி அவன் யாருக்கோ அழைத்து பேச, அந்த அறையில் கரெண்ட் வந்தது..

வெளிச்சம் வந்ததும் தண்ணீர் எடுத்து அவள் முகத்தில் வேகமாக தெளித்தவன் முகம், அவன் வாழ்நாளிலேயே கண்டிராத அளவு பதட்டத்துடன் இருந்தது..

"ஏய் மூன் கண்ணை திற.. உனக்கு ஒன்றும் இல்லை.." என கூறிக்கொண்டே அவன் மீண்டும் அவள் கன்னத்தை பலமாக தட்ட, அப்போதும் அசைவில்லாமல் அவள் படுத்திருப்பதை பார்த்து அவன் தான் இப்போது பயந்து போனான்..

விடியற் காலை மூன்று மணி என்று கூட பார்க்காமல் டாக்டருக்கு அழைத்து அவன் வர சொல்ல, அவன் பதவிக்கு இருந்த மரியாதையில் எல்லாம் ஒழுங்காக நடந்தது..

சிறிது நேரத்தில் அவன் அழைத்த மருத்துவரும் வந்து சேர்ந்தார்..

அவருக்கு பகலவனை நன்றாகவே தெரியும்..

"என்ன ஆச்சு பகலவன்?" என்று கேட்டுக்கொண்டே அவர் வெண்ணிலாவை சோதிக்க, ஒரு நொடி என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்தான் அவன்..

நொடியில் சுதாரித்துக்கொண்டவன், "கொஞ்சம் பயந்துட்டா டாக்டர்" என்று மட்டும் கூற, அதற்குள் அவளை சோதித்துவிட்டு நிமிர்ந்தவர்,

"ம்ம் பயப்பட ஒன்னும் இல்லை.. ரொம்ப பயந்துட்டாங்க போல்.. இன்ஜெக்ஷன் போட்டிருக்கேன்.. ஒரு ஒன் ஆர் டூ ஹவர்ஸ்ல கண் விழிச்சுடுவாங்க.. தெரிந்த பெண்ணா? எங்களுக்கெல்லாம் சொல்லாமல் கல்யாணம் எதவாது பண்ணிடீங்களா என்ன?" பல வருடமாக அவனை தெரியும் என்ற உரிமையில் அவர் கேட்க,

"தெரிந்த பெண் தான் மேடம்" என்று மட்டும் கூறினான் பகலவன்.

அவரும் அதற்கு மேல் அவனிடம் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை..

அந்த அளவு தைரியம் தான் யாருக்கும் கிடையாதே.

அவர் இத்தனை தூரம் பேசியதே தனக்கு அவன் மீது நல்ல மரியாதை இருக்கிறது என்னும் தைரியத்தில் தான்..

மருத்துவர் கிளம்பி சென்றதும், அவள் அருகிலேயே ஒரு சேர் போட்டு அமர்ந்துகொண்டவன், அவளையே தான் பார்த்து கொண்டிருந்தான்..

அவளை பார்க்க பார்க்க அவன் முகம் யோசனையும் வேதனையுமாய் சுருங்கியே தான் இருந்தது..

"ஐ எம் சாரி மூன்" என மெதுவாக முணுமுணுத்துக்கொண்டவன், அவள் முகத்தில் லேசாக அங்கங்கே இருந்த வியர்வை துளிகளை தன் கர்சீப் வைத்து மெதுவாக ஒற்றி விட்டான்..

டாக்டர் சொல்லிவிட்டு சென்றது போலவே ஒரு மணி நேரத்தில் மெதுவாக விழித்தாள் வெண்ணிலா..

கண்களை கடினப்பட்டு திறந்தவள், முதல் விஷயமாக பகலவனை பார்க்க, மயங்குவதற்கு முன் வந்த அதே பயம் மீண்டும் அவள் மனதில் எழுந்தது..

அதில் வேகமாக எழுந்து அவள் இறங்க முயற்சிக்க, "ஷ்ஷ்.. பேசாமல் படு மூன்.." என அவளை அழுத்தமாக பிடித்து படுக்க வைக்க முயன்றான் பகலவன்.

அவளோ அவன் தொட்டதில் மேலும் பதறி, "என்னை ஒன்னும் பண்ணிடாதீங்க" என திணறலாக கூறி வைக்க, அப்போது தான் அவள் பயமே அவனுக்கு முழுதாக உரைத்தது..

அதில் சட்டென தன் கையை விலக்கி கொண்டவன், "ஒன்றும் செய்ய மாட்டேன் வெண்ணிலா.. முதலில் கொஞ்சம் அமைதியா உட்காரு.." என்றான் அழுத்தமாக.

அவன் மென்மைக்கு கிடைக்காத மரியாதை, அவன் அழுத்தத்திற்கு தான் கிடைத்தது..

அவள் அப்போதும் கட்டிலில் ஒட்டிக்கொண்டே அமர, "நான் வரும் வரை அமைதியா உட்காந்திருக்கணும்" என குரலோ முகமோ மாறாமல் கூறிவிட்டு அவன் எழுந்து சென்று விட, அவளும் எதுவும் தோன்றாமல் பேசாமல் அமர்ந்திருந்தாள்.

சில நிமிடங்களில் மீண்டும் வந்தவன் கையில், சூடான இரண்டு காபி இருந்தது..

ஒன்றை அவளிடம் கொடுத்தவன், "குடி.. தெம்பா இருக்கும்" என்றுவிட்டு தானும் அமர்ந்து குடித்தான்.

கொஞ்சம் சூடான பானம் உள்ளே இறங்கியதும், அவள் முகமும் லேசாக தெளிந்தது..

அதை பார்த்துக்கொண்டே தன் காபியை குடித்தவன், "நீ இத்தனை பயந்தாங்கூளியா?" என கேட்டுவைக்க, இந்த முறை அவனை முறைத்தாள் வெண்ணிலா..

"என் நிலையில் யார் இருந்தாலும் பயந்து தான் இருப்பாங்க.. முழுவதும் இருட்டு, வெளியில் வேறு தொடர்ந்து ஆள் நடமாட்டம், திடீரென்று பயங்கர சத்தம் வந்தால் பயம் வராமல் என்ன செய்யுமாம்?"

"மழை என்றால் இடி சத்தம் கேட்காதா?"

அவள் கூறிய மற்ற அனைத்தையும் விட்டுவிட்டு கடைசி வரிக்கு மட்டும் தான் அவன் பதில் கேள்வியே கேட்டான்..

"அது இடி சத்தம் மாதிரியா இருந்தது! ரொம்ப பயங்கரமா இருந்தது.." கையில் இருந்த காபியை ஒரு மிடறு விழுங்கி கொண்டே கூறியவள் கண்களில் இன்னுமும் பயம் தெளிந்தபாடில்லை..

"சாரி" என பகலவன் திடீரென கூற, அவனை புரியாது பார்த்தாள் வெண்ணிலா.

"நிஜமாவே சாரி"

அவள் பார்வை உணர்ந்த்து மீண்டும் அவன் கூற, "வேண்டுமென்றே தானே செய்தீங்க.. அப்புறம் எதுக்கு சாரி?" என்றாள் அவள் பட்டென.

அதில் ஒரு பெருமூச்சுடன் அவளை பார்த்தவன், "மயக்கம் அளவு போகும் என்று நினைக்கவில்லை.. ப்ச்.. அப்படியேனும் அந்த பணத்தை கட்டி காப்பாற்றி ரெண்டு பேரும் என்ன பண்ண போறீங்க? அதை கொடுத்து தொலைத்தால் தான் என்ன?" சாதாரணமாக ஆரம்பித்தவன் கோபத்துடன் தான் முடித்தான்.

"நீங்களும் தான் கொஞ்சம் புரிந்து கொள்ளலாமே பகலவன் சார்.. இல்லாத பணத்தை எங்கிருந்து கொண்டு வருவது?" அவள் அழுத்தமான பதிலில் முதல் முறை பகலவன் லேசாக குழம்பி போனான்.

"அவனை கூப்பிட்டு விட்டு நீ கிளம்பேன்.. இத்தனை கஷ்டம் பணத்துக்காக இல்லாமல் எதுக்காக படுகிறாய்?"

"அவர் உயிருக்காக தான்.. பணம் இல்லை என்று நீங்கள் அவரை சுட்டுவிட்டால்! ஒரு உயிர் பகலவன்.. உங்களுக்கு சுலபமா இருக்கலாம்.. என்னால் அப்படி எல்லாம் பார்க்க முடியாது.."

"அவனை நான் ஏன் கொல்ல போறேன் வெண்ணிலா? ஏற்கனவே சொன்னேனே, அவன் உயிர் எனக்கு வேண்டாமென்று.."

"உங்களை எப்படி நம்புவது? அன்று என் கண் முன்பே...."

பேசிக்கொண்டே வந்தவள் கண்களில் அன்றைய நிகழ்வின் வினையாய் அப்பட்டமாக பயம் தெரிந்தது..

அதை தெளிவாக கண்டுகொண்ட பகலவன், மேலும் மேலும் குழம்பி போனான்..

"நான் கொலை செய்துவிடுவேன் என்ற பயத்தில் மட்டும் தான் அழைக்காமல் இருக்கிறாயா?"

மீண்டும் ஒரு முறை அவன் அழுத்தமாக கேட்க, "ம்ம்.. ம்ம்.." என முனகி வைத்தாள் வெண்ணிலா.

"நான் கொல்ல மாட்டேன் என்று வாக்கு கொடுத்தால் கூப்பிடுவாயா?"

அவளை ஆழம் பார்த்து கொண்டே அவன் கேட்டதெல்லாம் அவளுக்கு உரைக்கவில்லை..

"பணமும் இல்லை, கொல்லவும் மாட்டேன் என்றால், ஏன் கூப்பிடனும்?" என்றால் அவள் முன்னெச்சரிக்கை போல்.

அவள் பேசிய லட்சணத்தில் அவனுக்கு லேசாக சிரிப்பு கூட வரும் போல் இருந்தது..

"கேள்வி கேட்டால் பதில் சொல்லணும்.. பதில் கேள்வி கேட்க கூடாது?" சற்றே மென்மையாக பேசியவனை ஆச்சர்யமாக பார்த்துக்கொண்டவளுக்கு, என்ன பதில் சொல்வதென்று தான் தெரியவில்லை..

ஏனோ தன் விஷயத்தில் அவளுக்கு அவன் மேல் இருந்த நம்பிக்கை கூட, மனோகர் விஷயத்தில் வர மறுத்தது..

இந்த முறை அவள் மனதை பகலவன் தெளிவாகவே படித்துவிட்டான்..

"ரைட்.. உடனடியாக ரொம்பவும் குழப்பிக்க வேண்டாம்.. இப்போ நீ ரெஸ்ட் எடு.. அப்புறம் பேசிக்கலாம்.. நிம்மதியா தூங்கு.. உனக்கு இங்கே ஒரு ஆபத்தும் வராது.. செய்ய கூடிய ஒரே ஆளான நானும் கட்டாயம் ஒன்றும் செய்ய மாட்டேன்.. நீ என்னை நம்பலாம்.. குட் நைட் மூன்.." என்றுவிட்டு அவள் காபி கோப்பையும் எடுத்துக்கொண்டு அவன் நகர்ந்துவிட, அவன் பேசிய அனைத்தையும் தாண்டி அவனது இறுதி அழைப்பு தான் அவளை திகைக்க வைத்தது..

இப்போது தான் அவள் அதை ஒழுங்காக கவனிக்கவும் செய்தாள்..

பல சமயங்களில் "வெண்ணிலா" என்றே அழைப்பவன் சில சமயங்களில் மட்டும் "மூன்" என்று கூப்பிட்டு வைக்கிறான்..

அதற்கு ஒழுங்காக நிலா என்றே கூப்பிடலாமே! இதில் கூட வம்பு தான் போல்..!

ஏதேதோ நினைவில் இருந்தவளுக்கு அப்படியே கண்கள் சொருகி விட, அதிகம் யோசிக்க முடியாமல் அமைதியாக படுத்து உறங்கிவிட்டாள்..

சிறிது நேரத்தில் அவள் அறையை பார்க்க வந்த பகலவனும் அவள் நன்றாக உறங்குவதை பார்த்ததும் நிலை கதவிலேயே சாய்ந்து சில நிமிடங்கள் அவளையே பார்த்து கொண்டு நின்றிருந்தான்..

பின் உதட்டில் அழகாய் தோன்றி மறைந்த ஒரு புன்னகையுடன் தன் அறைக்கு வந்தவன், தானும் நிம்மதியாக தூங்கி போனான்..

குளிரும்.

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 9:

அடுத்து வந்த இரண்டு நாட்களும் பகலவன் வெண்ணிலாவை எந்த தொந்தரவும் செய்யவில்லை..

தொடர் மன உளைச்சல் காரணமாகவோ என்னவோ வெண்ணிலாவும் மாத்திரை போட்டு கொண்டு அதிகம் தூங்கி கொண்டு தான் இருந்தாள்..

இதற்கிடையில் செழியனிடம் சொல்லி சில விஷயங்களுக்கான ஆதாரத்தை சேகரித்திருந்தான் பகலவன்..

"இதெல்லாம் எதுக்கு பகலவா சேர்த்து கொண்டிருக்கிறாய்? அவனுக்கெல்லாம் இத்தனை மரியாதை தேவை இல்லை.." என எரிச்சலுடன் செழியன் கூறிய போது,

"இது அவனுக்காக இல்லை ண்ணா" என்றான் பகலவன்.

"பின்னே..?" என செழியன் புரியாமல் கேட்க,

"அவனை நம்பிக்கொண்டு ஒருத்தி உட்கார்ந்திருக்கிறாளே! அவளுக்காக தான்.." என்றான் அவன்.

அவன் பதிலில் செழியன் குழப்பம் அதிகமானது தான் மிச்சமாக இருந்தது..

"எதற்காக தேவை இல்லாமல் இத்தனை மெனக்கெட்டு கொண்டிருக்கிறாய் என்று எனக்கு நிஜமாவே புரியலை பகலவா"

தன் குழப்பத்தை மறைக்காமல் செழியன் கூறிவிட, அதில் மெலிதாக சிரித்துக்கொண்ட பகலவன், "கொஞ்சம் டைம் கொடுங்க ண்ணா.. கண்டிப்பா சொல்லுறேன்.." என்று முடித்துவிட, அவனை வற்புறுத்த விரும்பாமல் செழியனும் விட்டுவிட்டான்..

பகலவன் எது செய்தாலும் சரியாக தான் இருக்கும் என அவனுக்கு பெரும் நம்பிக்கை இருந்தது..

அன்று இரவு தான் கொஞ்சம் தூக்கம் எல்லாம் கலைந்து வெண்ணிலா தெளிவாக இருந்தாள்..

உணவை எடுத்துக்கொண்டு வந்த பார்த்தியும் அவள் தெளிவாக அமர்ந்திருப்பதை பார்த்து புன்னகையுடன் அவளிடம் வந்தார்..

"உடம்பு பரவாயில்லையா மா? ரெண்டு நாளா நான் வந்த போதெல்லாம் நன்றாக தூங்கி கொண்டிருந்தாயே.. தம்பி தான் உன்னை எழுப்ப கூட வேண்டாம்னு சொல்லிடுச்சு.."

"ரொம்ப தூங்கி வழிஞ்சுட்டேனா ண்ணா?" சிறு வெட்கத்துடன் கேட்டவளை வாஞ்சையுடன் பார்த்தவர்,

"அதெல்லாம் ஒன்னும் இல்லை மா.. உடம்பு முடியலைன்னா என்ன பண்ண முடியும்.. இப்போ ஒன்னும் இல்லையே?" என அக்கறையுடன் கேட்க,

"இல்லை ண்ணா.. இப்போ ஓகே.. நீங்க சாப்பிடீங்களா?" என்று கேட்டுக்கொண்டே அவளும் உண்ண தொடங்கினாள்.

"இல்லை மா.. வீட்டுக்கு போய் தான் சாப்பிடணும்.. இந்த பையன் வேற வந்துட்டானா தெரியலை.. போய் பார்க்கணும்.."

சாதாரணமாக இல்லாமல் குரலில் ஏதோ வேதனையுடன் அவர் பேசியது வெண்ணிலாவிற்கு புரிந்தது..

"எதாவது பிரச்சனையா ண்ணா? படிக்கும் பையன் தானே.. இத்தனை நேரம் வெளியில் என்ன பண்ண போகிறான்?"

அவர் மகனிடம் தான் எதாவது பிரச்சனை இருக்க வேண்டும் என்று யூகித்தே அவள் கேட்டாள்..

"வேலைக்கு போறான் மா" என அவர் கூறியதில் புரியாமல் அவரை பார்த்தாள் வெண்ணிலா.

"பகுதி நேர வேலைக்கு போறான் மா.. போன மாசம் முழுசா எக்ஸாம் இருக்குனு போக முடியலை.. இப்போ பீஸ் கட்டணுமாம்.. பணம் அதிகம் கையில் இல்லை.. அதான் அதிக நேரம் வேலைக்கு போறான்.. வேண்டாம்னு சொன்னால் கேட்கவே மாட்டேங்கறான் மா.." மனம் கேட்காமல் அவர் புலம்ப, அவளுக்கும் கஷ்டமாக தான் இருந்தது..

"ஏன் இதற்கெல்லாம் உங்க செல்ல தம்பி உதவ மாட்டாரா? சம்பளம் தவிர ஒன்றும் உதவ மாட்டாரோ! சரியான கஞ்சம் போல்.."

ஏதோ கடுப்புடன் அவள் பேச, "அச்சோ அப்படி எல்லாம் சொல்லாதே மா" என பெரிதாக பதறிவிட்டார் பார்த்தி..

அவர் அதீத பதட்டத்தில் அவள் வாய் தானாக மூடி கொண்டது..

"தம்பி தான் மா என் பிள்ளையை படிக்க வச்சது.. பையன் தான் காலேஜ் பீஸ் நானே கட்டிக்கறேன் என்று சொல்லிட்டான்.. அவன் ஒரேடியா பிடிவாதம் பிடிக்கவும் தான் தம்பி விட்டுச்சு.. அப்பவும் எதுவும் கஷ்டப்பட கூடாதுனு தம்பி சொல்லிச்சு.. இவன் தான் கேட்க மாட்டேன் என்கிறான்.. தம்பியை எப்போ பாரு படுத்த சங்கடமா இருக்காம்.. அவன் சொல்றதும் சரி தானே மா.. தம்பிகிட்ட சொன்னால் எல்லாம் தம்பியே பார்த்துக்கும்.. பாவம் எத்தனை தான் தம்பிகிட்டயே கேட்பது!"

"ரொம்ப தான் பாராட்டு பத்திரம் வாசிக்கறீங்க ண்ணா" வெண்ணிலா கிண்டலாக கூறிக்கொண்டாலும், அவர் பேசியதில் இருந்தே பகலவன் மீது அவருக்கு இருந்த அன்பும் மரியாதையும் நன்றாகவே அவளுக்கு தெரிந்தது..

'இவன் நல்லவனா? கெட்டவனா? என்றே புரிய மாட்டேங்குதே!' என மனதிற்குள்ளேயே புலம்பிக்கொண்டே எழுந்தவள், தட்டை அலம்பிவிட்டு,

"கொஞ்சம் இருங்க ண்ணா" என்றுவிட்டு எங்கோ சென்றாள்.

தன் பையில் இருந்து பணம் எடுத்து வந்தவள், "இதை வச்சுக்கோங்க ண்ணா.. என்னிடம் மூவாயிரம் தான் இருக்கு.. ஏதோ கொஞ்சமாவது உதவும் இல்லையா?" என்று கூறிக்கொண்டே கொடுக்க,

"ஐயோ இதெல்லாம் வேண்டாம் மா" என்றார் அவர் வேகமாக.

"ஏன் ண்ணா நான் கொடுக்க கூடாதா? இப்போதைக்கு இந்த பணம் எனக்கு எதுக்கும் தேவைப்படாது.. உங்களுக்காவது பிரோயோஜனமா இருக்கட்டுமே.. என் மேல் உண்மையாவே அன்பிருந்தா வாங்கிக்கோங்க.." அழுத்தமாக கூறியவளிடம் மறுக்கவும் தோன்றாமல் அவளை சங்கடமாக பார்த்தார் பார்த்தி..

"ம்ம் வாங்கிக்கோங்களேன்.. இவளை விட உங்களுக்கு நான் அந்நியமா போய்விட்டேன் இல்லையா?" திடீரென ஒலித்த பகலவன் குரலில் இருவருமே திடுக்கிட்டு திரும்பினர்.

"தம்பி மன்னிச்சுரு பா.. நான் எதுவும் கேட்கலை பா.." பகலவனை பார்த்ததுமே அவன் ஏதாவது தவறாக எடுத்துகொள்வானோ என பார்த்தி பெரிதாக பதறி கூற,

"தெரியும் ண்ணா.. டென்ஷன் ஆகாதீங்க.." என்றான் பகலவன் லேசாக புன்னகைத்து.

"ஒழுங்கா தேவைப்படும் பணத்தை செழியன் அண்ணா கிட்ட சொல்லி வாங்கிக்கோங்க.. அவன் சொந்த காலில் நிற்க ஆசைப்பட்டதை தடுக்க வேண்டாம் என்று தான் நான் பேசாமல் இருந்தேன்.. அதுக்காக படிக்காமல் வேலை செய்வதா? அவன் ஏதாவது சொன்னால் என்னிடம் கூட்டிட்டு வாங்க.. நான் பேசிக்கறேன்.." என பகலவன் முடித்துவிட,

அதற்கு மேல் எதுவும் பேசாமல், "சரி தம்பி" என்றுவிட்டு அவர் சென்றுவிட்டார்.

பகலவன் பேசியதில் இருந்தே அவன் முன்பே வந்துவிட்டான் என்று தெரிந்தது..

"ஒட்டு கேட்டீங்களா?" என வெண்ணிலா கேட்க,

"நீங்க ரகசியம் பேசினீர்களா என்ன?" என்றான் அவன் புன்னகை மாறாமல்..

வழக்கமாக முகத்தில் இருக்கும் கடுப்பு, வெறுமை எதுவுமே இல்லாமல் அழகாய் உதட்டில் உறைந்திருந்த சிறு புன்னகையுடன் நின்றிருந்தவனை பார்த்தவளுக்கு என்னவோ செய்தது..

பேச்சே வராமல் அவள் அமைதியாக நின்றுவிட, "ஒரு வழியாக இரண்டு நாளாக நடத்திக்கொண்டிருந்த தூங்கும் விரதம் போராட்டத்தை முடித்துவிட்டாயா?" என கேட்டுக்கொண்டே அமர்ந்தான் பகலவன்..

"மாத்திரைக்கு தானாக தூக்கம் வந்துவிட்டது.. நான் என்ன செய்ய?" அவன் கிண்டல் செய்ததில் அவளிடமும் கோபமாக தான் பதில் வந்தது..

அவனோ அதற்கும் சிரித்து கொண்டான்..

"இப்போ ஹெல்த் ஓகே வா? ஒன்றும் பிரச்சனை இல்லையே!" இந்த முறை சீரியஸாக அவன் கேட்க,

அவளும், "ம்ம் ஓகே" என்றாள் மெதுவாக.

"அப்புறம் எத்தனை மணி நேரம் நின்றுகொண்டே இருக்க போகிறாய்? மரியாதை மனதில் இருந்தால் போதும் மா.." நக்கலாக அவன் கூறியதில் வேகமாக சோபாவில் அமர்ந்தாள் வெண்ணிலா.

"மரியாதை இல்லை என்று நிரூபிக்கிறாயா?" தொடர்ந்து அவன் வம்பிழுத்ததில் அவளால் தான் பதில் சொல்ல முடியாமல் போனது.

'இன்று இவனுக்கு என்ன ஆனது? என்னவோ போல் பேசுகிறானே!' என யோசித்துக்கொண்டே அவள் அவனை பார்க்க, அவனோ அப்போதும் மாயக்கண்ணனாய் சிரித்து அவளை ஒரு வழி செய்தான்..

"ஒரு சின்ன வாக் போவோம்.. வருகிறாயா மூன் பேபி?" என கேட்டுக்கொண்டே அவள் எழுந்துகொள்ள,

"என் பெயர் வெண்ணிலா" என்றாள் அவள் இருந்த இடத்தில் இருந்து நகராமல்.

"நானும் அதை தானே கூப்பிட்டேன் மூன்" என்றவன் முகத்தில் அப்பட்டமாக குறும்பு தெரிந்தது.

'போச்சு! இவனுக்கு என்னவோ ஆகி போச்சு!' என வேகமாக அவள் மனம் கத்த,

"வா.. நடந்துகொண்டே யோசிப்பாயாம்.." என அவள் நினைவை இடைமறித்தான் பகலவன்.

ஒருவாறு அவன் அழைப்பதே அப்போது தான் அவளுக்கு புரிந்தது..

உடனடியாக அவனுடன் போக தோன்றாமல், அடுத்து ஏதேனும் செய்து விடுவானோ என்ற பயம் தான் அவளுக்கு முதலில் தோன்றியது..

"இ.. இ.. இல்லை.. நான் வரலை.." மெதுவாக அவள் கூற, ஒரு நொடி அழுத்தமாக அவளை பார்த்தவனுக்கு அவள் பயம் புரிந்துவிட்டது..

"வரமாட்டேன் என்று சொன்னால் எப்படி மா? என் நாய்களை வைத்து உன்னை துரத்த விடலாம் என்ற என் திட்டம் என்ன ஆவது!"

குரலில் எதுவும் காண்பித்துக்கொள்ளாமல் அவன் பேசியதில், உண்மையான பயத்துடன் அவனை பார்த்தாள் வெண்ணிலா..

'கடவுளே நிஜமாகவே செய்து விடுவானோ!' என்ற பயத்துடன் அவள் அவனை பார்க்க, அதற்கு மேல் அவளை படுத்த விரும்பாதவன், "அநியாயத்திற்கு யோசிக்க கூடாது மூன் பேபி.. உனக்கு இனி நான் வில்லன் இல்லை.. பயப்படாமல் வா.. சும்மா கொஞ்சம் நடந்துவிட்டு வருவோம்.. உனக்கும் ப்ரெஷ்ஷா இருக்கும்.." என மென்மையாக கூறியதில், அந்த குரல் அவளுக்குள் ஒருவித நம்பிக்கையை ஏற்படுத்த, அமைதியாக எழுந்தாள் வெண்ணிலா..

அவளை பின்பக்கம் தனியாக இருந்த படிவழியாக கீழே தோட்டத்திற்கு அழைத்து வந்தான் பகலவன்..

நாய்கள் இருக்குமோ என்ற சிறு பயத்துடனே வந்தவள், கடைசி படியில் நின்று அந்த தோட்டம் முழுவதும் ஒரு முறை ஆராய்ந்தாள்..

அவன் பார்ப்பதை கவனித்த பகலவன், "எதுவும் இல்லை பேபி.. பயப்படாமல் வா.. ரெண்டு பேரும் முன்னால் இருக்காங்க.." என்றான்.

அவளும் அதற்குள் நன்றாக ஆராய்ந்துவிட்டதால், தைரியமாக நடந்தாள்..

"இதை போட்டுக்கோ.. பாட்டு கேட்பாய் இல்லையா..?" என்று கேட்டுக்கொண்டே அவன் ஹெட் செட்டை நீட்ட, அவளோ அதை வாங்காமல், "வேண்டாம் நீங்க மட்டும் கேளுங்க" என்றாள்.

'இதற்கு ஏன் இவளுக்கு இத்தனை சங்கடம்!' என முதலில் குழம்பிபோனவனுக்கு, மெதுவாக தான் அவர்கள் இருவருக்கும் இடையில் அவள் விட்டிருந்த இடைவெளி உரைத்தது..

ஹெட் செட் போட்டுகொண்டாள் அவனை நெருங்கி நடக்க வேண்டுமே..! அதற்காக தான் மறுக்கிறாள் என்று புரிந்துவிட, அவனும் அவளை வற்புறுத்தவில்லை..

தானும் அப்போதைக்கு காதில் இருந்து ஹெட் செட்டை எடுத்துவிட்டவன், அவள் நடைக்கு ஈடு கொடுத்து மெதுவாகவே நடந்தான்..

"நான் ஒன்று கேட்டால் உண்மையை சொல்வாயா மூன் பேபி?"

அவன் கேள்வியில் அவனை திரும்பி பார்த்தவள், "இன்று உங்களுக்கு என்ன ஆச்சு? ஏன் என்னவோ போல் பேசறீங்க? பேபி என்றெல்லாம்.. எனக்கு ஒரு மாதிரி இருக்கு..."

அவனுக்கு பதில் கூறாமல் அவள் தன் சங்கடத்தை தான் முதல் கூறினாள்..

"இப்போது தான் தெளிவானேன் என்று வைத்துக்கொள்ளேன்.. இனி உனக்கு நான் நல்லவன் தான்.. இப்போதைக்கு அது மட்டும் போதும்.. இப்போ நான் கேட்கலாமா?"

அவன் கூறியதில் அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை தான்.. ஆனால் எதுவும் மறுக்கவும் தோன்றவில்லை..

"ம்ம்" என்று மட்டும் அவள் முனக, அவனுக்கும் அதுவே போதுமானதாக இருந்தது..

"நீ அந்த மனோகரை மனதார விரும்புகிறாயா பேபி? ஐ மீன் ரொம்ப லவ் பண்ணுறயா? அவன் இல்லை என்றால் வாழவே முடியாது, அந்த அளவு..?"

'இப்போது எதற்கு இதெல்லாம் கேட்கிறான்?' என சிறு பயத்துடன் அவனை பார்த்தாள் வெண்ணிலா..

"ப்ளீஸ் பதில் மட்டும் சொல்லேன்.. உண்மை மட்டும்.. அவனை ஏதாவது செய்து விடுவேனோ என்று பயந்து எந்த பொய்யும் சொல்லாதே.. அவனை எப்போதில் இருந்து விரும்புகிறாய்? எத்தனை தூரம் விரும்புகிறாய்?"

மீண்டும் அதே கேள்வியுடன் தான் அவன் நிறுத்தினான்..

அவளுக்கு ஏனோ மனோகரை விரும்புகிறேன் என்று சொல்லவே வாய் வரவில்லை..

உண்மையான நேசம் இல்லாமல் அதை காதல் என்று சொல்ல முடியவில்லை போல்..

அவன் பெண் கேட்டது, மறுக்க காரணம் இல்லாமல் அவள் ஒத்துக்கொண்டது என நடந்ததை அப்படியே கூறிவிட்டாள் வெண்ணிலா..

அவள் சொல்ல சொல்ல ஏதோ இனிமையான பாடல் கேட்டது போல் அவன் முகம் அத்தனை இளகி போயிற்று..

"தேங்க் காட்" என அவன் முணுமுணுக்க, அது சரியாக காதில் விழாமல், "என்ன..?" என்றாள் வெண்ணிலா.

அவள் கேட்டதில் ஒரு ஆழ்ந்த மூச்செடுத்துக்கொண்டவன், "ஒன்னும் இல்லை.. உட்காரலாம் வா.." என்று கூறிக்கொண்டே அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தான்..

அவளும் அவனுக்கு சற்று இடைவெளி விட்டு அமர்ந்துகொள்ள, தன் போனில் சத்தமாகவே பாட்டை போட்டுவிட்டான் பகலவன்..

"நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை
நிலவு தூங்கும் நேரம்...
நான்கு கண்ணில் இன்று ஒரு காட்சியானதே
வானம் காற்று பூமி இவை சாட்சியானதே
நானுனைப் பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்
நீண்ட நாள் நினைவிலே வாழுமிந்த சொந்தம்
நான் இனி நீ... நீ இனி நான்
வாழ்வோம் வா கண்ணே....."
சுற்றி ஆளரவமற்ற தனிமை, இனிமையாக வீசி கொண்டிருந்த தென்றல் காற்று, இளையராஜா பாடல், இதை விட அழகான சூழல் அமையுமா...!

கண்களை மூடி எப்போதும் போல் அந்த சூழலை ரசித்து கொண்டே பகலவன் அமர்ந்துவிட, வெண்ணிலாவும் மனம் முழுவதும் அந்த நொடி லேசானது போல் தான் உணர்ந்தாள்..

பாடலில் லயித்திருந்தவள் தற்செயலாக பகலவனை திரும்பி பார்க்க, அவன் முகத்தை பார்த்தவளால் அதில் இருந்து கண்களையே அகற்ற முடியாமல் போய்விட்டது..

இனம் புரியாத ஏதோ உணர்வு அவனை பார்க்க பார்க்க தனக்குள் எழுவதை அவளால் கட்டுப்படுத்தவே முடியவில்லை..

திருமணம் என்று பேசி வைத்திருந்த மனோகரை கூட அவள் ரசித்து பார்த்ததில்லையே!

இந்த வில்லனிடம் அப்படி என்ன இருக்கிறது..?

மாறுபாட்டின் மொத்த உருவமாக அவன் இருந்ததே அவளை ஈர்த்ததா? இல்லை மாறுபாடுகள் இணையும் கோட்டை கண்டுபிடிக்கும் ஆர்வம் அவளை ஈர்க்கிறதா?

ஏதோ ஒன்று அவளை கட்டிபோடுவது என்னவோ உண்மை தான்..

பாடல் முடிந்ததும் பகலவன் கண்களை திறக்க, வேகமாக தன் முகத்தை திருப்பி கொண்டாள் வெண்ணிலா..

ஆனால் கடைசி நொடியில் அவன் அவளை கவனித்து விட்டான்..

"எதாவது கேட்பதானால் கேட்டுவிடு பேபி" என அவன் மென்மையாக கூற, அவளால் கேட்காமல் இருக்க முடியவில்லை.

"உங்களை எந்த வகையில் சேர்ப்பது என்றே புரியவில்லை பகலவன்.. ஒரு பக்கம் கொலை பண்ணுறீங்க.. பணம் திருப்பி வாங்க என்னை படுத்தறீங்க.. இன்னொரு பக்கம் அத்தனை ரசனை.. அத்தனை மென்மை.. இதில் எது நீங்க..?"

மனதில் இருந்ததை அவள் மறைக்காமல் கேட்டுவிட, மெலிதாக சிரித்துக்கொண்டவன், "இரண்டுமே நான் தான் பேபி.. கெட்டவர்களுக்கு பகலவன்.. நல்லவர்களுக்கு வர்மன்.. அவ்வளவு தான்.. உனக்கு இனி கட்டாயம் பகலவன் இல்லை.. வர்மன் மட்டும் தான்.." என்றான் அழுத்தமாக

"கெட்டவர்களை தண்டிக்க தான் சட்டம் இருக்கு பகலவன்.. நீங்களே கையில் எடுத்துக்கொண்டால் எப்படி?" சிறு கோபத்துடன் அவள் கேட்க,

"வக்கீல் அம்மா நீங்க வாதாடி சரியான தண்டனை வாங்கி கொடுத்துவிட்டால், நான் ஏன் சட்டத்தை கையில் எடுக்க போறேன்?" என்றான் அவன் புன்னகை மாறாமல்.

"கண்டிப்பா வாங்கி கொடுப்போம்.." உறுதியாக அவள் கூற,

"ஆமா, கிழிச்சசீங்க...!" என்றான் அவன் ஒருவித கடுப்புடன்.

அவன் பதிலில் தேவை இல்லாமல் அவனை கோபப்படுத்தி விட்டோமோ என்ற பயத்துடன் அவள் அவனை பார்க்க, அவனோ நொடியில் தன்னை கட்டுப்படுத்தி கொண்டான்..

"சில விஷயங்களுக்கு என் பாணி தான் சரி பட்டு வரும் பேபி.. விடு.. இப்போது இருக்கும் நல்ல மனநிலையை கெடுத்துக்க வேண்டாம்.. போகலாம் வா.." பேசிக்கொண்டே அவன் எழுந்துவிட, அவன் கூற்றில் உடன்பாடு இல்லாவிட்டாலும் அவனிடம் வாக்குவாதம் செய்ய விரும்பாமல் அவளும் எழுந்துவிட்டாள்..

குளிரும்..

 
Status
Not open for further replies.
Top