All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸகியின் சிறுகதைகள்

Jadejavid

Writer'ZAKI'
Hii friends..❤

இந்த திரியில் எனது சிறுகதைகள் பதிப்பிக்கப்படும். இதற்கும் உங்களது கருத்துக்களையும் ஆதரவையும் வழங்கி என்னை ஊக்குவிக்குமாறு கேட்டுக் கோள்ளும்,

உங்கள் வீட்டு பிள்ளை
❤ZAKI❤
 
  • Like
Reactions: Rif

Jadejavid

Writer'ZAKI'
shadow-hands-women-covering-face-wallpaper-preview.jpg

தூர எறிந்து விடு மனமே🔥

'இன்று மதியம் இளம்பெண் முகத்தில் ஆசிட் வீச்சு' என தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பாக, அந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவுக்கு முன்னால் வரிசையாக போடப்பட்டுள்ள கதிரையில் அமர்ந்து தன் மாமியாரின் தோளில் சாய்ந்து தன் மகளை நினைத்து கதறிக்கொண்டிருந்தாள் லலிதா ரம்யாவின் அம்மா.

ஆசிட் அமிலத்தின் தாக்கத்தால் தன் இடது பக்க கன்னத்திலிருந்து கழுத்து வரையான தோல் பொசுங்கி இருக்க மயக்க நிலையில் இருந்தாள் ரம்யா.. அவளை சுற்றி டாக்டர்களும் நர்ஸ்களும் அவளுக்கான சிகிச்சையை செய்துக்கொண்டிருந்தனர்.

சிகிச்சை முடிந்து வெளியே வந்த டாக்டர் கண் திறந்ததும் போய் பார்க்குமாறு கூறிவிட்டு செல்ல இரண்டு மணி நேரம் கழித்து தன் சிப்பி கண்களை மெதுவாக திறந்தாள் அந்த பத்தொண்பது வயது பேதை.அதை கவனித்த நர்ஸ் வெளியில் வந்து லலிதாவிடம் சொல்ல ஒரு வித பதட்டத்தில் உள்ளே நுழைந்தாள் லலிதா.

உள்ளே நுழைந்தவள் தன் மகளின் நிலைக்கண்டு உள்ளுக்குள் கதறினாலும் முகத்தை முடிந்தளவு சாதாரணமாக வைத்துக்கொள்ள முயன்றாள். சிறுவயதிலிருந்து பல கஷ்டங்களை தாங்கி கடந்து வந்தவள் இத்தகைய வேதனையையும் தன் உணர்வுகளையும் தன் மனத்திடத்தால் முகத்தில் காட்டாது மகளின் அருகில் சென்றாள்.ஆனால் பெற்ற பிள்ளைக்கு என்று வரும் போது தன் மனதைரியம் கூட காற்றில் பறந்து செல்கின்றது எனவோ உண்மை தான்..

மகளின் அருகில் சென்றவள் அவளின் தலையை மெதுவாக கோதி அப்பெயருக்கு வலித்து விடுமோ என்றளவுக்கு 'ரம்யா' என மெதுவாக அழைத்தாள். அம்மாவின் குரலில் கண்ணை திறந்தவள் லலிதாவை கண்ட மறுநொடி 'ரொம்ப எறியுதுமா தாங்க முடியல'என்று கதறி அழ ஆரம்பித்தாள். பிறகு ஏதோ தோன்றியவளாக 'அம்மா உங்க ஃபோன கொடுங்க' என ரம்யா கேட்க,

அவள் கேட்டதில் ஒருநிமிடம் பதட்டமடைந்த லலிதா பிறகு நிதானித்து என்ன நடந்தாலும் அவளுக்காக நான் இருக்கிறேன் என்று உணர்த்த முடியும் என்ற நம்பிக்கையில் தனது ஃபோனை அவளிடம் கொடுக்க, அதில் தனது முகத்தை பார்த்தவள்

கையிலிருந்ததை தூர எறிந்து தன் தாயினை கட்டி அணைத்து கதறி அழுதாள். ' அம்மா இது நா இல்ல மா என்னாலயே என் முகத்த பார்க்க முடியல இனி இந்த முகத்தோட உலகத்த எப்படிமா சந்திப்பேன்' என கதறி அழும் தன் மகளை தேற்ற வழியறியாது அவளை அணைத்துக்கொண்டு உள்ளுக்குள் கதறினாள் அந்த தாய்..

அடுத்த நாள் ரம்யா கண்விழித்த செய்தியில் அவளை விசாரிக்க காவல்துறையை சேர்ந்த இருவர் வர அவர்கள் எவ்வளவு கேட்டுப்பார்த்தும் மௌனத்தையே பதிலாக அளித்தாள் ரம்யா. அவர்களும் ஒரு கட்டத்தில் முடியாமல் லலிதாவை பார்க்க, தான் கேட்பதாக சைகையில் கூறியவள் தன் மகளின் அருகில் அமர்ந்து அவளின் தலையை வருடி விட்டவாறு கேட்க,

'நா சொன்னா மட்டும் நா அனுபவிச்ச அதே வலிய அவங்க அனுபவிச்சிருவாங்களாமா இல்லல்ல' என கூறிய மகளை பார்த்த லலிதா அவளுடைய கையை அழுத்தமாக பற்றி ' நீ சொல்லு மா அவங்களுக்கா தண்டன கிடைக்கும் உன் அம்மா கிடைக்க வைப்பேன்' என உறுதியாக கூற அதில் சற்று தெளிந்தவள் கண்களில் கோபத்துடன் நடந்ததை கூறத்தொடங்கினாள்.

'ரம்யா தற்போது தான் தன் உயர்தர பரீட்சை முடித்து தேர்வின் முடிவுகள் வெளியான நிலையில் அவளுடைய பரீட்சை பெறுபேறு பல்கலைக்கழக இலவச நுழைவுச்சீட்டை பெறும் வகையில் இருந்ததால் தனது ஆசிரியர் அறிவுரைக்கிணங்க தன் பள்ளிக்கூடத்திற்கு சென்று இணையத்தின் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விட்டு வீட்டுக்கு வந்துக்கொண்டிருக்கும் வழியில் அவளை வழிமறைத்தான் அவன்.

அவர்கள் வசிக்கும் ஊரிலியே பெரிய பணக்காரரின் மகன்.ரம்யா பள்ளிக்கூடம் செல்லும் காலத்திலிருந்தே அவளை பின்தொடர்வது தொல்லை செய்வதுமாக இருந்தவன் இன்று அதிகப்படியாக அவள் கையைப்பிடித்து தன் காதலை ஏற்றுக்கொள்ளுமாறு பிரச்சினை செய்ய ஒருகட்டத்தில் கோபத்தில் அவனை அறைந்தே விட்டாள் ரம்யா.

அவனை எச்சரிக்கை செய்துவிட்டு வீட்டுக்கு வந்தவள் மனம் சற்று படபடப்பாக இருந்தாலும் பின் இனி அவன் தொல்லை இல்லை என்ற நம்பிக்கையில் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள். ஆனால் அவனோ அவள் மேல் உள்ள கோபத்திலும், தான் என்ன செய்தாலும் தன் வீட்டினர் தன்னை மீட்டிடுவர் என்ற நம்பிக்கையிலும் ரம்யா தன் நண்பியை பார்த்து விட்டு தன் வீட்டுக்கு வரும் சமயம் தன் முகத்தை மூடியவாறு இருசக்கர வாகனத்தில் வந்தவன் அவளுடைய முகத்தில் ஆசிட்டை அடித்து விட்டு அவ்விடத்திலிருந்து பறந்து விட்டான்.'

என அச்சம்பவத்தை தன் மனக்கண்முன் கொண்டு வந்து கண்கள் கலங்க கூறியவளை பார்த்த லலிதாவிற்கு 'தன் மகள் தன்னிடம் அவளுடைய பிரச்சினையை சொல்லுமளவிற்கு தான் சுதந்திரம் கொடுக்கவில்லையா'என்ற குழப்பமும் வேதனையுமே இருந்தது. பின் வந்தவர்கள் சென்றுவிட தன் மகளை சமாதானம் செய்து உறங்க வைத்தாள் லலிதா.

இதோ ஒருமாதம் கடந்த நிலையில் வீட்டில் தன் முன் அழுததற்கு அடையாளமாக கண்ணீர் கோடுகள் தெரிய உறங்கிக் கொண்டிருக்கும் மகளை யோசனையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் லலிதா.

இந்த ஒரு மாதத்தில் அவள் தேறியிருந்ததால் ரம்யாவை வீட்டுக்கு அழைத்து வந்தவள் இந்நிலைக்கு காரணமானவர்கள் மேல் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் என்ன என்று விசாரித்ததில் 'அவர்கள் பெரிய இடம் அதனால் நடவடிக்கை மேற்கொள்வதில்
சிக்கல்' என சொல்லி விட்டனர். இதை எல்லாம் யோசித்தவள் பின் ஒரு முடிவு எடுத்தவளாக அறையை விட்டு செல்ல முற்பட்டவள் தன் மகளின் ' எங்க போறீங்க அம்மா ' என்ற குரலில் திரும்பி பார்த்தவள் ஏதோ ஒன்று மனதில் தோன்ற அவள் அருகில் அமர்ந்து அவள் கைகளை தன் கைகளுக்குள் பொத்திக்கொண்டு பேச ஆரம்பித்தாள் லலிதா.

'ரம்யாமா இன்னும் எவ்வளவு நாள் உன் நிலைமைய நினைச்சி ராத்திரி யாருக்கும் தெரியாம அழுவடா.. இன்னும் எவ்வளவு நாள் இந்த அறைக்குள்ளயே முடங்கி கிடக்க போற. இந்த உலகத்தில சாதிக்க தன்னம்பிக்கையும், மனதைரியமும் லட்சியத்த அடையுறதுக்கான திறமையும் இருந்தாலே போதும். இந்த முக அழகு தேவையே இல்ல. இந்த உலக மக்கள் உன்ன பார்க்குற பார்வைக்கு நீ பயப்படுறன்னா அதவிட முட்டாள்தனமான விஷயம் எதுவுமில்லை. நீ தப்பானவளா இருந்தா அவங்க பார்வைக்கு கூனிகுறுகி நிக்கலாம். ஆனால் நம்ம மேல தப்பில்லாத போது எவனோ ஒருத்தனோட செயலால நமக்கு கிடைக்கிற பார்வைய ஒரு சின்ன சிரிப்போட கடந்து போகனும்.

தப்பு செய்தவனே வெளில முகத்த தைரியமா காட்டும் போது நீ ஏன்மா உன்ன நீயே உனக்குள்ள மறச்சிக்குற. பார்க்குறவங்க பரிதாபமா பார்க்குறாங்களோ அருவருப்பா பார்க்குறாங்களோ அந்த பார்வைய உன் லட்சியத்திற்கு தடையா வச்சிராத. உன்னோட வாழ்கையில கடைசி வரை உனக்காக இருக்கப்போறது நீ மட்டும் தான். இந்த அம்மா கூட உயிர் இருக்கிற வரை உனக்காக இருப்பேன் அதுக்கப்றம் நீ தான் தனியா இந்த உலகத்த சந்திக்கனும்.

எதையும் தனியா சந்திக்க பழகு. இதே ஆசிட் வீச்ச வாங்கின Lakshi agarwal mam இப்போ ஊக்கமூட்டும் பேச்சாளராக பெண்களுக்கு ஓர் உதாரணமா இருக்காங்க. காலம் யாருக்காகவும் நிக்காது. இதை கடந்து வா. உன் லட்சியத்திற்காக போராடு. உனக்குள்ள இருக்குற மனதைரியத்த வெளில கொண்டு வா. உனக்காக எப்போவும் உன் அம்மா இருப்பேன்.'

என கூறியவள் ரம்யாவின் பதிலை கூட எதிர்பாராது அவளை தன் மாமியாரின் பொறுப்பில் விட்டு விட்டு வெளியேற போகும் தன் அம்மாவையே கண் இமையாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் ரம்யா.

ரம்யாவின் நிலைக்கு காரணமானவனோ தன் நண்பர்ளுடன் சந்தோஷமாக படம்,பார் என சுற்றிவிட்டு தனியாக காரில் வரும்வழியில் தன் முகத்தை மூடியவாறு ஒரு பெண் எதிரில் நிற்க காரை நிறுத்தியவன் கார் கண்ணாடியை இறக்கிவிட்டு வெளியே எட்டி பார்த்து நகர சொல்ல அவள் நகராமல் அவனையே அழுத்தமாக பார்த்த வண்ணம் நின்றிருந்தாள்.

கோபம் கொண்ட அவன் காரிலிருந்து இறங்கி அவளை திட்டிக்கொண்டே வர தன் கையில் வைத்திருந்த ஆசிட்டை அவன் எதிர்பாராத சமயம் அவன் முகத்தில் வீசினாள்.அவன் வலி தாங்காது கதறிக்கொண்டு கீழே விழுந்து துடிப்பதை பார்த்தவள் அவன் முகம் முழுவதும் பொசுங்கிக்கொண்டே செல்வதையும், அவன் துடிப்பதையும் பார்த்தவாறு தனது முகத்தை மூடியிருந்த துணியை எடுத்தாள் லலிதா.

சுற்றி இருந்தவர்கள் அங்கு கூடி காவல்துறையினருக்கு செய்தி சொல்லியும் லலிதா அவ்விடத்திலிருந்து நகரவில்லை. 'என் மகளும் இப்படி தானே துடித்திருப்பாள் அனுபவி' என்ற ரீதியில் அவனையே பார்த்தவாறு நின்றுக்கொண்டிருந்தாள். ஆம்ப்யூலன்ஸ் வந்து அவனை ஸ்ட்ரெச்சரில் ஏத்திக்கொண்டு செல்ல பொலிஸால் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டாள் லலிதா.ஆனால் அவள் முகத்தில் பயமோ பதட்டமோ தெரியவில்லை தன்மகளுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றி விட்டேன் என்ற மனநிறைவே இருந்தது.

இச்செய்தி லலிதாவின் குடும்பத்தினருக்கும் கேள்விபட 'தன்னால் தான் தன் அம்மாவுக்கு இந்த நிலைமை' என ரம்யா துடித்தே விட்டாள்.பொலிஸ் விசாரனையில் லலிதா இருந்தமையினால் லலிதாவின் குடும்பத்தினருக்கு அவளை பார்க்கவும் முடியவில்லை.

அன்று நீதிமன்றத்தில் லலிதாவின் குற்றம் தொடர்பாக அவள் கூண்டில் ஏற்றப்பட நீதிபதி கேட்கும் எல்லா கேள்விளுக்கும் 'ஆம் நான் தான் செய்தேன்' என முகத்தில் எந்தவித சலனமுமின்றி பயமுமின்றி அழுத்தமாகவே பதிலுரைத்தாள் லலிதா. எதற்கு என்ற கேள்விக்கு 'தன் மகளுக்காக தன் மகளுக்கு கொடுத்த வாக்கிற்காக' என நெஞ்சை நிமிர்த்தி பதில் சொன்னவளை அங்கிருப்பவர்களும் ஆச்சரியமாகதான் பார்த்தார்கள்.

பின் கொடுத்த தண்டனையையும் முழு மனதோடு ஏற்றவள் நிமிர்ந்து தன் முகத்தை மறைத்த வண்ணம் கண்கள் கலங்க தன்னை பார்த்துக்கொண்டிருக்கும் மகளை ஏறிட்டாள். இரண்டு காவல்துறையினரோடு செல்ல எத்தனித்தவள் தன் மகளிடம் பேச அனுமதி கேட்க அவர்களும் சம்மதித்தனர். தன் மகள் அருகில் வர அவள் தலையை வாஞ்சையோடு கோதிவிட்டவள் நெற்றியில் முத்தமிட்டு,
'உனக்கு நா கொடுத்த வாக்க நிறைவேத்திட்டேன் மா. நீ அனுபவிச்ச அதே வலிய அவனையும் அனுபவிக்க வச்சிட்டேன். இப்போ நா உன்கிட்ட கேட்டத செய்யனும். உன் முகத்த மறைச்சிருக்க இந்த துணி இனி தெவையில்லை.இதுவும் கடந்து போகும்னு இத கடந்து வா. அடுத்தவங்க பார்வைக்காக உன்ன நீ இழந்துடாத. இனி இதான் உன் அடையாளம்னா இத ஏத்துக்க பழகு. இனி இந்த அம்மா துணையில்லாம நீதான் இந்த உலகத்த சந்திக்கனும்.உன் முகத்துல மூடியிருக்குற துணிய மட்டுமில்ல உன் மனசுக்கு போட்டிருக்கிற பயம் என்ற முகமூடியையும் தூக்கி போட்டுறு. எப்போவும் உனக்காக இந்த அம்மா இருப்பேன் கண்மனி' என கூறியவள் தன் மகளின் நெற்றியில் மீண்டும் ஒரு முத்தம் வைத்து சென்றாள்.

செல்லும் தன் அம்மாவை பார்த்தவள் அவர் கூறிய வார்த்தைகளை மனதில் ஏற்றிக்கொண்டு தன் கண்களிலிருந்து கன்னத்தினூடே வழிந்த கண்ணீரை துடைத்தெறிந்து விட்டு அவரை நோக்கியவாறு தன் முகத்தை மூடியிருந்த துணியை கழற்றி தூர எறிந்தவள் இந்த உலகத்தையும் அதன் பலவித பார்வைகளையும் நேருக்குநேர் சந்திக்க தயாரானாள்.

இந்த உலகத்தை சந்திக்கவும் சமாளிக்கவும் மனதைரியமும் தன்னம்பிக்கையுமே போதுமே தவிர முக அழகு என்றும் தேவையில்லை. தமக்கு இப்படி ஒரு அநியாயத்தை செய்பவர்கள் எதிர்பார்ப்பதே தாம் தன்னையே வெறுத்து முடங்கி விட வேண்டும் என்பதே. அவர்களை தவறையும் செய்யவிட்டு அவர்கள் ஆசையையும் நிறைவேற்றி வைப்பதா? அவர்களுக்கான தண்டனையை இந்த உலகத்திலே கொடுப்பதோடு இதுவும் கடந்து போகும் என பிறர் பார்வைகளையும் சிறு இதழ் சிரிப்போடு கடந்து செல்வோம்.

நன்றி..

❤ZAKI❤

Friends idhu ennoda 1st short story.. story epidinnu marakama unga comments a solluga ❤❤
 
Last edited:

Jadejavid

Writer'ZAKI'
men-imitate-women-instagram-bros-being-basic-10__605.jpg

உணர்ந்து கொள் நட்பே💪

'சஞ்சய் வெட்ஸ் ஹரினி'என்ற அந்த பெயர்பலகை பூக்களாலும் மின்விளக்குகளாலும் மின்ன அதை கண்கலங்க பார்த்துக்கொண்டிருந்தான் ரகு ஹரினியின் அண்ணன்.. திடீரென தன் தோளில் தொடுகையை உணர்ந்த ரகு திரும்பி பார்க்க எதிரில் தன் நண்பர்கள் சரண், மனோ இருவரையும் கண்டவன் தாவி அணைத்து
"ரொம்ப தேங்க்ஸ் மச்சான். என் தங்கச்சி கல்யாணத்த எப்பிடி நடத்த போறேன்னு ரொம்ப குழப்பத்துல இருந்தேன்டா. இவ்வளவு பெரிய உதவி பன்னிருக்கீங்க மறக்கவே மாட்டேன் டா" என கண்ணிலிருந்து கன்னத்தினூடாக கண்ணீர் வழிய ரகு கூற,

"நீ ஒரு கஷ்டத்துல இருக்கப்ப நாங்க பார்த்துட்டு இருப்போம்னு நீ எப்பிடி நினைக்கலாம். நீ எங்ககிட்ட சொல்லாம இருந்தா எங்களுக்கு தெரியாதுன்னு நினைச்சியா.. நீ எங்க ஃப்ரென்டுடா ரகு" என்ற சரணும் அவனை ஆதரவாக அணைக்க,

"டேய் போதும்டா... உங்க கண்ணீருல மண்டபமே மூழ்கிடும் போல. நல்ல நேரம் நெருங்கிருச்சி தாலி கட்ட போறாங்க சீக்கிரம் வாங்கடா" என்ற மனோ சரணையும் ரகுவையும் இழுத்துச் சென்றான்

'கெட்டி மேளம் கெட்டி மேளம்' என ஐயர் சொல்ல, மங்கல வாத்தியங்கள் முழங்க, கல்யாண மாப்பிள்ளை மணப்பெண்ணின் கழுத்தில் மங்கல நாணைப்பூட்டி தன்னவளாக்கிக்கொண்டான்.. இதை ரகுவும் அவன் அம்மாவும் கண்கலங்க அட்சதை தூவி வாழ்த்த அவன் நண்பர்கள் அவனை ஆதரவாக தோளோடு அணைத்திருந்தனர்.

ரகு,சரண்,மனோ மூவரும் நெருங்கிய நண்பர்கள்.சிறுவயதிலிருந்து ஒன்றாகவே பள்ளிப்படிப்பையும், கல்லூரிப்படிப்பையும் முடித்தனர். தற்போது சரண் புதிதாக ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பனி ஆரம்பித்து அதை திறம்பட நடத்திக் கொண்டு வர ரகுவும் மனோவும் அவனுக்கு உதவியாக அவன் கம்பனிலேயே வேலை செய்கின்றனர்..

ஆனால் விதியோ அவர்களின் வாழ்க்கையிலும் ஒரு ஆட்டத்தை ஆரம்பித்தது. எவனை தங்களுக்கு நண்பனாக கருதி அவனுக்கு உதவி செய்தார்களோ அவனே பின்னாளில் அவர்கள் முதுகில் குத்திச்செல்வான் என்பதையும், செய்த உதவியை மறக்க மாட்டேன் என்று கூறியவனே அவர்கள் தன் நண்பர்கள் என்பதையும் மறந்து நடந்து கொள்ளப்போகிறான் என்பதையும் அப்போது அம்மூவரும் அறியவில்லை..
விதி வலியது..

நாட்கள் நகர மூன்று வருடங்ளிலேயே சரணுடைய உழைப்பாலும், சாமர்த்தியத்தினாலும், நட்பு பலத்தினாலும் அவனுடைய கம்பனி வளர்ச்சியடைந்து வெற்றியை கண்டது. அதே சமயம் விதி அவர்களின் நட்பை சோதிக்கவென ஒரு விளையாட்டையும் துவங்கியது.

தன்னுடைய அறையில் மும்முரமாக வேலை செய்துக் கொண்டிருந்த ரகுவின் கவனத்தை அவனுக்கு வந்த தொலைப்பேசி அழைப்பு கலைக்க, அழைப்பு ஏற்று காதில் வைத்தான் ரகு. மறுமுனையில் என்ன சொல்லப்பட்டதோ முகம் கறுக்க,
"டேய் யாருகிட்ட என்ன வேல பார்க்க சொல்ற.. அவன் என் நண்பன்டா" என கோபத்தில் எகிறியவனை குறுக்கிட்ட அந்த நபர் தான் சொன்ன வேலையை செய்தால் அவன் எதிர்ப்பார்ப்பதை விட அதிக பணம் தருவதாக டீலிங் பேச,

அவர் பணம் என்றவுடன் ரகுவினுள் ஒழிந்திருந்த பணப்பிசாசு வெளியில் எட்டிப்பார்க்க அடம்பிடிக்க, யோசனையின் ஆழ்ந்திருந்த ரகுவின் அமைதியை தனக்கு சாதகமாக்கிய அந்த நபர் அவன் மனதிலுள்ள பணமிருகத்தை வெளியில் கொண்டுவரும் முயற்சியில் இறங்கினார்.அதில் வெற்றியும் கண்டார்.

'இத செய்தாலும் எப்பிடியும் வெளில தெரிய போறது இல்ல. பணமும் கிடைச்ச மாதிரி ஆச்சு.. எவ்வளவு நாள்தான் நாமளும் இப்பிடி இருக்கிறது' என மனதில் நினைத்து ஒரு முடிவை எடுத்த ரகு இது தன் நண்பனுக்கு செய்யும் துரோகம் என்பதை இலகுவாக மறந்து போனவனாக அதற்கு சம்மதித்தான்.

அவர் கேட்டது போன்று தற்போது எல்லா கம்பனிகளும் ஆர்வமாக எதிர்பார்த்திருக்கும் அரசாங்க டெண்டருக்காக சரணுடைய கம்பனி எவ்வளவு தொகையை நிர்ணயித்துள்ளது என்பதை சரணுடைய மடிக்கணினியில் அது தொடர்பாக விபரங்கள் இருக்க அதை பார்த்தவன் அப்பிடியே அவனுக்கு அதாவது சரணுடைய எதிர் கம்பனிக்கு அனுப்பி வைத்தான்.

தன்னுடைய மடிக்கணினி திறக்கப்பட்டதற்கான குறுந்தகவல் சரணுடைய தொலைப்பேசிக்கு வந்தும் தன் நண்பர்கள் தான் என்பதை அறிந்து அவன் அதை பெரிதுபடுத்தவில்லை. சொல்லப் போனால் அவனுடைய நண்பர்கள் மீது அவன் வைத்திருக்கும் நம்பிக்கை அப்படி..

ஒரு வாரம் கழித்து நடந்த அந்த அரசாங்க டென்டர் தொடர்பான கூட்டத்தில் சரணுடைய எதிர் கம்பனி ஒரு ரூபாய் வித்தியாசத்தில் அதை கைப்பற்ற சரணும் வியாபாரத்தில் வெற்றி தோல்வி சகஜம் என சாதாரணமாக எடுத்துக்கொண்டான்.

ஆனால், ரகுவின் செயற்பாடுகளோ அதோடு நிற்கவில்லை. அதன்பிறகும் வந்த சில ப்ரோஜெக்டுகள் தொடர்பான விடயங்கள் கம்பனி ரகசியங்கள் என வெளியில் விற்று பணம் சம்பாதிக்க ஒரு கட்டத்தில் வெளிநாட்டு ப்ரோஜெக்ட் ஒன்றுக்காக சரணுடைய கம்பனிக்கு முற்பணமாக கிடைத்த ஐம்பது கோடியையும் திருடி வெளியூரிற்கே ஓடிவிட்டான்.

கொஞ்ச நாட்களாக ரகுவின் நடவடிக்கையில் மாற்றங்கள் தெரிந்தாலும் அவன் மேல் உள்ள நம்பிக்கையில் சரணும் மனோவும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், இன்றோ இவன் இப்படி ஒரு காரியத்தை செய்திருக்கிறான் என அறிந்து மொத்தமாக உடைந்து போனர் அவ்விரு நண்பர்களும்.

"ச்சீ.. என்ன மனுஷன்டா அவன்.. அவன் எல்லா ஒரு நண்பனா.." என மனோ ஆத்திரத்தில் கொதித்தெழ,

"விடு மனோ.. இப்போ இத பெரிசு படுத்த வேணாம். அடுத்து ஆகப்போறத பார்ப்போம். இதுல அவன் மேல மட்டும் தப்பில்ல. நம்ம மேலயும் தப்பு இருக்கு. அவனுக்கு என்ன தேவைன்னு நாம முன்னாடியே யோசிச்சு பன்னிருக்கனும்" என தலையை கவிழ்த்தியவாறு சரண் கூற,

"ஏன்டா இப்பிடி பைத்தியம் மாதிரி பேசுற.அவன் நம்மல நல்லா ஏமாத்திட்டான். இப்பவும் அவன விட்டுடலாம்னு சொல்ற" என மனோ கூற,

"அவன் நம்ம ஃப்ரெண்டுடா.. அவனே திரும்ப நம்மகிட்ட வருவான். அப்ப பார்த்துக்கலாம் விடு.." என சரண் அவனை சமாதானப்படுத்த தன் நண்பன் தனக்கு துரோகம் செய்தும் அவன் மேல் கோபப்படாது அவன் என் நண்பன் என தெளிவாக எந்தவித சலனமுமின்றி சொல்லும் சரணின் நட்பை பார்த்து அவ்விதியே பெருமைப்பட்டது.

இவ்வாறு ஆறுமாதம் கடக்க இவ் ஆறு மாதத்தில் ரகுவோ வெளியூரில் உல்லாசமாக அங்கு தனக்கு கிடைத்த நண்பர்களுடன் மது,சூது என கேளிக்கைகளில் பணத்தை வாரி இறைத்து சந்தோஷமாக இருந்தான். ஆனால், எல்லாருக்கும் தன் தவறை உணரும் நாள் என்று ஒன்று வரும் அல்லவா.. அது அவனுடைய வாழ்வில் ஆறு மாதம் கழித்து அன்று வந்தது.

நண்பர்களுடன் குடித்துவிட்டு கூத்தடித்து போதையில் ரகு சரிய, இது தான் தக்க சமயம் என்று அவனுடைய போலி நண்பர்கள் மொத்த பணத்தையும் சுருட்டிக் கொண்டு அவ்விடத்தை விட்டு ஓடியே விட்டனர்.

காலையில் விழித்தவன் கண்ணை சுருக்கிக்கொண்டு எழ, இரவு குடித்ததால் தலைவலி வேறு எடுக்க தலையை பிடித்துக் கொண்டு கண்ணை திறந்து சுற்றி முற்றி பார்த்தான் ரகு. எழுந்தவன் குளியலறையில் புகுந்து தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு வந்து ஆடையை எடுக்க அலுமாரியை திறக்க அங்கு வைத்திருந்த தன் பணப்பையை காணாது அதிர்ச்சியில் உறைந்தே விட்டான்..

என்ன நடந்திருக்கும் என்பது புரிய தலையில் கை வைத்து 'கடவுளே' என வாய்விட்டு புலம்பியவாறு கட்டிலில் இதயம் படபடக்க பொத்தென்று விழுந்தவன் அப்போது உணர்ந்தான்..
'Karma is boomerang'
அவன் உணர்ந்து சிலை போல் இருந்தது ஒருசில நிமிடங்கள் தான்.. தனக்கு வந்த தொலைபேசி அழைப்பில் சுய உணர்வு பெற்றவனுக்கு இதோ அடுத்த அடி..

மறுமுனையில் சொல்லப்பட்ட செய்தியில் பதட்டமாக அங்கிருந்து தன் ஊருக்கு கிளம்பியவன் அவர்கள் சொன்ன வைத்தியசாலையை அடைந்தான். அங்கு அவன் அம்மாவுக்கு இரண்டு கிட்னிகளும் செயலிழக்க உடனடியாக சிகிச்சை செய்தாக வேண்டும் என டாக்டர் கூற, தனக்கு தெரிந்த எல்லாருக்கும் செய்தி அனுப்பி உதவி வேண்டினான் ரகு.

அங்கும் இங்கும் அலைந்தவன் சரணையும் மனோவையும் நினைக்காமல் இல்லை. 'எங்கு தான் உதவி என்று கேட்க போய் அவர்கள் தன்னை நோக்கி ஒரு அருவருப்பான பார்வையை வீசினால்.. இப்பிடி ஒரு துரோகத்தை செய்து எப்பிடி அவர்கள் முன் உதவி என்று போய் நிற்பது'
என யோசனையில் ஆழ்ந்தவன் ஒரு கட்டத்தில் முடியாமல் இருக்கையில் தலையில் கைவைத்து கண்கள் கலங்க அமர்ந்தான்.

திடீரென 'அண்ணா' என்ற குரலில் நிமிர்ந்து பார்த்தவன் தன் தங்கை தனக்கருகில் அமர்ந்திருப்பதை கண்டு கண்கலங்க தலை குனிந்துக் கொண்டான். 'தன் தங்கை வாழ்கை சிறப்பாக அமைவதற்கும் தன் நண்பன் தானே காரணம்' என்ற குற்றவுணர்வோடு..

"இவ்வளவு நாள் ஏன் அண்ணா எங்ககிட்ட பேசல.. நிறைய தடவ உங்க நம்பருக்கு ட்ரை பன்னேன்.. ஏதோ வேல விஷயமா வெளியூருக்கு போயிருக்கீங்கன்னு அண்ணனுங்க தான் சொன்னாங்க. அதுக்காக பேசாமயா இருப்பீங்க.. அம்மா எவ்வளவு வருத்தப்பட்டாங்க தெரியுமா" என ஹரினி வருத்தமாக சொல்ல,

அவன் குழப்பமாக பார்த்து " என்ன.. சரணும் மனோவுமா சொன்னாங்க' ரகு கேட்க,

" ஆமாண்ணா.. அதுமட்டுமில்ல நீங்க இல்லாத குறைய அண்ணனுங்களே தீர்த்துட்டாங்க.. டெய்லி அம்மாவ பார்க்க வருவாங்க உங்க சம்பளத்த கூட அம்மா கைலயே கொடுத்துட்டு போவாங்க.. அவசரமா ஏதாவது தேவவைன்னா கூட அவங்களே பார்த்துப்பாங்க.. என் புருஷன் அவசரமா வாங்கின கடனுக்கு கூட அவங்களே பொறுப்பு ஏத்துகிட்டாங்க"

என அவள் அடுக்கிகிட்டே போக இவனுக்கோ பேச்சே வரவில்லை. 'தான் எத்தகைய அசிங்கத்தை அவர்களுக்கு செய்தோம் ஆனால் அவர்களோ..' கண்களில் கண்ணீராக ஓட யோசித்துக் கொண்டிருந்த ரகுவின் அருகில் வந்த நர்ஸ்
" உங்க அம்மாவுக்கு கிட்னி கிடைச்சாச்சு.. ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சிட்டாங்க" என சொல்லிவிட்டு சென்றார்..

'யாரு கிட்னி குடுத்தது.. அதுவும் பணம் கட்டாம ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சிட்டாங்களா' என அவன் குழம்பி போய் நிற்க, ஹரினியிடம் கேட்டதில் அவளும் 'இல்லை' என சொல்லிவிட. அவன் சந்தேகத்தை தீர்க்க தான் அங்கு யாரும் இல்லை.

சிகிச்சை முடிய நர்ஸிடம் ரகு விசாரிக்க " அது எங்க ஹொஸ்பிடல் ரூல்ஸ் வெளில சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டாங்க சொரி சார்" என நர்ஸ் கூறிவிட்டு செல்ல,

சிகிச்சை மேற்கொண்ட டாக்டரிடம் சென்றவன் அவனின் மூன்று மணிநேர கெஞ்சலில் ஒருவழியாக அந்த டாக்டரும் சம்மதிக்க, ரகுவை அழைத்துக்கொண்டு ஒரு அறைக்கு சென்று
" நீங்க எதிர்பார்க்குறவரு இங்க தான் இருக்காரு.. இன்னும் கொஞ்ச நேரத்துல கண் முழிச்சிருவாரு சீக்கிரம் பார்த்துட்டு கிழம்பிருங்க" என சொல்லிவிட்டு செல்ல,

கண்கள் மின்ன ஆர்வத்தில் கதவை திறந்து உள்ளே சென்றவன் அவ்வறையில் வைத்தியசாலை கட்டிலில் வயிற்றுப்பகுதியை சுற்றி கட்டோடு படுத்திருந்த சரணை கண்டு ஆடிப்போய் விட்டான்.அந்த இடத்திலே முட்டி போட்டு அமர்ந்தவன் கதறி அழுக தன் தோளில் தொடுகையை உணர்ந்து திரும்பி பார்க்க தன் அருகில் மனோ நிற்பதை பார்த்து அவமானத்தில் கூனிகுறுகி தலை கவிழ்ந்தான்.

அதே சமயம் மெதுவாக மயக்கத்திலிருந்து கண்விழித்த சரண் ரகுவை கண்டு புன்னகைக்க, 'தான் இவர்களுக்கு செய்த தூரோகத்துக்கு தன்னை திட்டுவார்கள், தண்டிப்பார்கள், அருவருப்பாக ஒரு பார்வையாவது தன்மீது விட்டெறிவார்கள்' என ரகு எதிர்ப்பார்த்திருக்க, சரணின் புன்னகையும் மனோவின் அமைதியும் அவனை உயிரோடே கொன்று விட்டது.

அவனை தோளோடு அணைத்தவாறு எழுப்பிய மனோ ரகுவை சரணின் அருகில் கூட்டிச்செல்ல கட்டிலில் படுத்திருந்தவனின் காலில் விழுந்து கதற ஆரம்பித்தான் ரகு.
" எனக்கு மன்னிப்பு கேட்க கூட தகுதி இல்லடா.. உங்களுக்கு இப்படி ஒரு துரோகத்த பன்னிட்டேன்.. என்ன நீங்களே கொன்னுறுங்கடா.. தயவு செஞ்சி அமைதியா மட்டும் இருக்காதிங்கடா.." என அவன் கதற,

"என்ன நடந்தாலும் நீ எங்க ஃப்ரென்டுடா.. உன்ன தண்டிக்க எங்களுக்கு மனசு வரல.. இப்போ நீ பன்ன தப்ப உணர்ந்ததே எங்களுக்கு போதும்.." என சரண் அந்த வலியிலும் முயற்சித்து பேச,

"எப்பிடி டா உங்களால மட்டும் இப்பிடி இருக்க முடியுது.. உங்க நம்பிக்கையையே நா உடைச்சிட்டேன்.. ஆனா நா போனதுக்கப்றமும் என்னோட இடத்துல நீங்க ஒரு மகனா இருந்து என் குடும்பத்த பார்த்திருக்கீங்க.. இப்போ.." என பேச முடியாது அவன் நிறுத்தி அழுக,

அவனை அணைத்தவாறு மனோ " உன் குடும்பம் எங்களுக்கும் குடும்பம் தான்டா.. நீ வேணா நாங்க வேணாம்னு பணம் பின்னாடி போயிருக்கலாம். ஆனா எங்களுக்கு நீ பன்ன காரியத்துக்காக உன் குடும்பத்த ஒதுக்கி வைக்கவோ அவங்க கஷடப்படும் போது பார்த்துட்டு இருக்கவும் முடியல" என கூற,

"முடிஞ்சது முடிஞ்சு போனதாகவே இருக்கட்டும்.. பொண்ணுங்கள விட ஆனா ஊனா நீ தான்டா டெப்ப ஓபன் பன்ற" என சரண் அந்த நிலைமையிலும் ரகுவை கேலி செய்ய,

" உங்களுக்கு என் மேல கோபமே இல்லையாடா. நா உங்களுக்கு துரோகம் பன்னிட்டேன்.. உங்க நட்பையே கொன்னுட்டேன்.. அப்பவும் எப்பிடிடா உங்களால இப்பிடி சாதாரணமா பேச முடியுது.. எதிரிய கூட மன்னிக்கலாம் ஆனா துரோகிய மன்னிக்கவே கூடாதுன்னு சொல்வாங்க... ஆனா என் குடும்பத்துக்கிட்ட கூட என்ன தப்பானவனா காட்டாம என்ன தண்டிக்க கூட மனசு வருதில்லன்னு சொல்ற அளவுக்கு நா அப்பிடி என்னதான்டா பன்னிட்டேன்." கண்களில் கண்ணீரோடே ரகு கேட்க,

ஒரு புன்சிரிப்பை உதிர்த்த சரண் "நீ எங்க நண்பன்டா. நீ தப்பு பன்ன அதுக்கான தண்டனையையும் அனுபவிச்சிட்ட.. இப்போ இப்பிடி கூனிகுறுகி தண்டன கொடுன்னு எங்க முன்னாடி நிக்கிற பாத்தியா அதுலயே உன் தப்ப நீ உணர்ந்துட்ட.. முன்ன இருந்த நம்பிக்கையில இப்போ கொஞ்சம் கலக்கம் வந்திருக்கலாம்.. ஆனா நம்ம நட்பு அது எப்போவும் எங்க மனசுல மாறல.. அதனால தான் நீ பன்னதையும் மறந்தோம். மன்னிச்சிட்டோம்.. நடந்தது கனவாகவே போகட்டும்." என கூற,

"சரி அழுகுறத நிறுத்திட்டு நா கேக்குறதுக்கு மட்டும் பதில் சொல்லு.. நம்ம நட்ப புதுப்பிக்க ஒரு வாய்ப்பு நாங்க உனக்கு தந்தா அத பயன்படுத்த மாட்டியா என்ன.."
என புருவத்தை உயர்த்தி மனோ கேட்க,

"கண்டிப்பா டா.. என்னோட நட்புல நா பன்ன கலங்கத்த நானே துடைச்செறிவேண்டா.. என்ன மன்னிச்சிருங்கடா.. நண்பன் துரோகம் செய்தும் அவன எதிரியா கூட பார்க்காம அவன மன்னிச்சி அதுக்கப்றமும் அவன் குடும்பத்துக்கு அவன் இல்லாத குறைய தீர்த்து பரிகாரமே செய்ய முடியாத அளவுக்கு பெரிய உதவியையும் செய்து இப்போ கூட நா பன்ன தப்ப நினைச்சி அழுறப்ப அழாதன்னு ஒரு வார்த்தை சொல்றிங்களேடா.. என்ன மாதிரியான நட்பு டா.." என ரகு தலைகுனிந்தவாறே கையெடுத்து கூம்பிட,

மனோ அவன் கைகளை கீழ் இறக்கி தலையை நிமிர்த்தி விட சரண் இதழில் உறைந்த புன்னகையுடன் பார்த்திருந்தான். தான் செய்த துரோகத்துக்கு பரிகாரமாக அவர்கள் போதும் போதும் என்றளவுக்கு தன் நட்பால் அவர்களை நனைய வைப்பது மட்டுமன்றி தன்மீது வைத்து சிதைந்து போன நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுக்க முடிவெடுத்தான் ரகு.. விதியே தான் ஆரம்பித்த விளையாட்டின் முடிவில் சரணினதும் மனோவினதும் நட்பை பார்த்து கையெடுத்து கும்பிட்டது..

நட்பு ஒரு புனிதமான ஒன்று. எல்லா உறவுகளையும் விட நம்பிக்கை என்ற ஒன்று நட்பில் அதிகமே.. தன் நண்பன் செய்த தவறை சுட்டிக்காட்ட வேண்டும். மன்னிக்க வேண்டும். ஏற்றுக் கொள்ள வேண்டும். .அதைவிட நட்புக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்.

'Karma' தான் செய்யும் சில தவறுக்கான தண்டனையை அவ்வுலக வாழ்க்கையிலேயே தாம் அனுபவிக்க நேரிடும்.ரகு அவர்களுக்கு எத்தகைய துரோகத்தை செய்தானோ அதே துரோகம் தனக்கு நேர்ந்ததும் தன் தப்பை தன் செயலை உணர்ந்தான்.அவன் மன்னிப்பு வேண்ட நட்புக்கு முக்கியத்துவம் அளித்து அவனுடைய துரோகத்தை மறந்து மீண்டும் அவனை ஏற்றுக்கொண்ட சரண் மனோவினது நட்பு எத்தகையது...

ஒருவருக்கு எந்தளவு நம்பிக்கைத்தன்மையாக இருக்க வேண்டுமோ அதே அளவு ஒருவர் உண்மையாக தப்பை உணர்ந்து திரும்பி வரும் போது மன்னிப்பையும் வழங்க வேண்டும்.இதில் எதுவும் குறைந்து விடப்போவதில்லை உறவே பலப்படும்💪...

❤ZAKI❤
 
Last edited:

Jadejavid

Writer'ZAKI'
aca8b43533cfb6b136de0b7721930ebc.jpg

ஒரு மங்கையின் கனவு🔥

கதிரவன் தன் செங்கதிர்கள் கொண்டு பூமியை தட்டி எழுப்பி அரவணைக்க தன் தாயின் தட்டலில் சிணுங்கலுடன் எழுந்தது பூமி மட்டுமல்ல அவளுள் இருக்கும் ஒவ்வொரு அனுக்களும் அதாவது மனிதர்கள்..



அக் காலை வேளையில் வேலைக்கு செல்வதெற்கென இளைஞர்களும் பெரியவர்களும் பம்பரம் போல் சுழன்று தம் காலை கடன்களை முடித்து இன்றாவது பஸ்ஸை நேரத்திற்கு பிடித்து முன் சீட்டில் அமர்ந்து விட வேண்டும் என்று விறுவிறுவென பஸ் தரிப்பிடத்திற்கு ஓட சொந்த வண்டி உள்ளவர்களோ 'இன்னைக்கு பெற்றோல் முடிஞ்சிராம இருக்கனும் ஆண்டவா..' என மனதில் புலம்பியவாறு தத்தமது வண்டிகளில் செல்ல, அம்மாவின் கை வண்ணத்தில் முதுகில் இரண்டு அடிகளை வாங்கி அழுது கொண்டே பாடசாலை சென்றனர் சின்னஞ்சிறு பூக்கள்.



இவ்வாறு அந்நாள் காலை அமைய, சூர்யனே எழுவதற்கு முன் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து இறைவனை வணங்கி விட்டு தன்னுடைய புத்தகத்தில் ஆர்வமாக எழுதிக் கொண்டிருந்தவள் சட்டென நிமிர்ந்து எதிரே சுற்றில் இருந்த மணியை பார்க்க அது எட்டு என காட்டியது.



"அச்சோ இவ்வளவு நேரமாவா எழுதிக்கிட்டு இருந்தோம்.. எழுத ஆரம்பிச்சா நேரம் போறதே தெரியுறது இல்லை.." என மானசீகமாக தலையிலடித்துக் கொண்டவள் தன் பேனாவை புத்தகத்தில் வைத்து மூடவும் அவள் அம்மா "மீரா.." என கத்தவும் சரியாக இருந்தது.



"இதோ வரேன் மா.." என கத்தியவள் மனதிலே 'இன்னைக்காவது அம்மாகிட்ட என் இலட்சியத்தை பத்தி சொல்லியாகனும்..' என நினைத்தவாறு விறுவிறுவென குளியலறைக்குள் புகுந்து குளித்து உடை மாற்றி வந்தாள் மீரா.தனக்கான அடையாளத்துக்காக போராடும் மங்கை.



ஹோலிற்கு வந்தவளை கண்ட அவள் பாட்டி முகத்தை சுழித்தவாறு,
"க்கும்.. எப்பவும் போல கொட்டிக்க வந்துட்டா.. பொம்பள பிள்ளையா வீட்டு வேலைய பன்னனும் அந்த எண்ணம் எல்லாம் இல்லை.. தண்டச்சோறாட்டாம் இருக்கா.. " என முணுமுணுக்க,



இதைக்கேட்டவளோ " இரண்டாயிரத்து இருநூற்றி இருபத்திரெண்டு" என அவர் இதை சொல்லும் தடவையை சொல்லி விட்டு செல்ல அவருக்கோ கோபம் ஏகத்துக்கும் எகிறியது.



கிட்ச்சனுக்கு சென்றவள் தன் அம்மா இருப்பதை பார்த்து "அம்மா.." என தயங்கியவாறு நிற்க, அவள் குரலில் திரும்பி பார்த்தவர்,
"மீரா உன்கிட்ட ஒன்னு சொல்லனும்.." என்று சொல்ல, இவளோ தான் சொல்ல வந்ததை விட்டுவிட்டு அவரையே கேள்வியாக பார்த்தாள்.



"என்னோட கபோர்ட்ல சாரி எடுத்து வச்சிருக்கேன்.. இன்னைக்கு உன்ன பொண்ணு பார்க்க வராங்க.. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரதுக்குள்ள சீக்கிரம் ரெடி ஆகிறு.." என்று விட்டு அவள் அம்மா வேலையில் கவனமாக இதைக்கேட்டவளுக்கு தான் தலையில் இடி இறங்கியது போன்று இருந்தது.



தயங்கியவாறு, "அம்மா இப்போவே கல்யாணம் பன்னனுமா.. இன்னும் இரண்டு வருஷம்.." என மீரா இழுக்க,



அவளை முறைத்தவர்,
"நீ பன்னி தான் ஆகனும்.. நீ அந்த பேனாவும் பேப்பருமா அலைறது என்னால பார்த்துகிட்டு இருக்க முடியாது.. அப்பா இல்லாத பொண்ணுன்னு நானும் விட்டா உனக்குன்னு ஒரு தங்கச்சி இருக்கா அவளையும் கட்டிக் கொடுக்கனும்னு ஒரு நினைப்பு இல்லாம அவ்வளவு பெரிய படிப்பு படிக்க யுனிவர்ஸ்ஸிடில வாய்ப்பு கிடைச்சும் முட்டாள்தனமா விட்டுட்டு எப்போ எழுத ஆரம்பிச்சியோ இதையே கட்டிக்கிட்டு அழுகுற.. அப்பிடி வெட்டியா அந்த பேப்பர்ல கிறுக்குறதுல உனக்கு என்ன தான் கிடைக்க போகுது.." என்று அவர் திட்ட,



"அம்மா புரிஞ்சிக்கோங்க மா.. எனக்கு அது படிக்க இன்ட்ரெஸ்ட் இல்லை.. பெரிய ரைட்டர் ஆகனும்னு தான் கனவு இருக்கு.. இப்போ நா சின்ன சின்ன கதையா தான் எழுதிக்கிட்டு இருக்கேன்.. இதை வாசிச்சு கொஞ்ச பேர் சொல்ற விமர்சனமே மனசுக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு மா.. நிறைய பேருக்கு என்னோட வார்த்தை புடிச்சிருக்கு மா.. இன்னும் ஒரு வருஷம் அதுக்குள்ள இந்த ஃபீல்ட்ல எனக்குன்னு ஒரு அடையாளத்தை உருவாக்கிகிறேன் மா.. கல்யாணம் ஆனா என்ன நடக்கும்னு சொல்ல முடியாது.. அவங்க இதை எக்ஸெப்ட் பன்னிக்காம இருக்க கூட வாய்ப்பிருக்கு.." என மீரா இதை புரிய வைக்க முயல,



"அவங்க ஏத்துக்கலன்னா விட்டுறு.. மாப்பிள்ளை என்ன சொல்றாரோ அது படி நடந்துக்கோ அது போதும்.. பெருசா அடையாளத்துக்காக போராட போறேன் கனவுக்காக போராட போறேன்னு சொல்லி புகுந்த வீட்ல எங்க மானத்தை வாங்கிராத.. இதுல நீ சாதிச்சு எங்கள பெருமைப்படுத்துற விட உன் புகுந்த வீட்ல நல்ல பேர் வாங்கி பொறந்த வீட்டு பெருமையை காப்பாத்து அது போதும்.. இனிமேலும் வெட்டியா பேப்பர் பேனான்னு சுத்திகிட்டு இருக்காதா.. அவ்வளவு தான் சொல்லிட்டேன்.. பொண்ணுங்கன்னா வீட்டு வேலைய பாத்துகிட்டு மாப்பிள்ளைக்கு சேவை செய்றது அவ்வளவு தான் கனவு காணுரதோட நிறுத்திக்கனும்.. அதை நிறைவேத்துறேன்னு பைத்தியக்காரத்தனமா நடந்துக்க கூடாது.. முதல்ல பொண்ணா புகுந்த வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி வீட்டு வேலை எல்லா கத்துக்கோ புரியுதா.. போ போய் வீட்ட கூட்டி பெருக்கு.." என அவர் நகர்ந்து செல்ல,



தரையையே வெறித்தவாறு கண்கலங்கி நின்றவள், 'அப்போ நம்மளால கனவு மட்டுமா காண முடியும்.. எனக்குன்னு ஒரு அடையாளத்தை உருவாக்க முடியாதா.." என மனதில் நினைத்தவாறு தன் கனவு கோட்டையில் விழுந்த முதல் அடியில் மொத்தமாக சிதைந்து போய் நின்றுக் கொண்டிருந்தாள் அந்த மங்கை. அறைக்கு வந்தவள் வெடித்து தொலைபேசியில் தன் நண்பியிடம் சொல்லி அழ அவளுக்கு என்றும் ஆறுதலாக இருக்கும் அவள் நண்பியால் கூட அன்று அவளை சமாதானம் செய்ய போதும் போதும் என்று ஆகிவிட்டது.



மாலை மாப்பிள்ளை வீட்டினர் வந்திருக்க மீராவை பார்த்த கதிருக்கு மிகவும் பிடித்து விட மாப்பிள்ளை வீட்டினர் தங்களது சம்மதத்தை தெரிவித்தனர். இங்கு மீரா தான் எதிலுமே ஈடுபாடு இல்லாமல் தன் தாயின் சந்தோஷத்திற்காக வரவழைக்கப்பட்ட கட்டாய புன்னகையுடன் பொம்மை போல் அமர்ந்திருந்தாள்.



கதிர் மீராவின் முகத்தில் உள்ள கலக்கத்தை புரிந்து கொண்டவன் போல் அவளிடம் தனியாக பேச ஆசைப்படுவதாக கூற மீராவின் தாயும் "போமா அதான் மாப்பிள்ளை பேசனும்னு கூப்பிடுறாருல.." என அனுப்பி வைக்க அவளும் அவன் பின்னாடி தயக்கமாகவே சென்றாள்.



வீட்டின் முன் புறத்திலுள்ள தோட்டத்தில் இருவரும் நின்றிருக்க கதிர் பேச கூப்பிட்டாலும் முதலில் பேச்சை ஆரம்பித்தது எனவோ மீரா தான்..



"நா உங்ககிட்ட ஒன்னு கேக்கனும்.." என மீரா ஆரம்பிக்க கதிரோ அமைதியாக அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.



"எனக்கு வாழ்க்கைல எதாவது சாதிக்கனும்னு ரொம்ப ஆசை.. எனக்குன்னு ஒரு அடையாளத்தை உருவாக்கனும்..எழுதுறது எனக்கு ரொம்பவே புடிக்கும்.. பெரிய ரைட்டர் ஆகனும்னு ஒரு கனவு இருக்கு.. ஆனா உங்க வீட்ல அதை.." என்று அவள் சற்று தயங்கி நிறுத்த,



அவனோ சிரிப்புடன், "ஒத்துக்க மாட்டாங்கன்னு பயப்படுற.. அதனால கல்யாண வேணாம்னு முடிவு பன்னிருக்க.. சரிதானே.." என கதிர் கேட்க அவளும் தயக்கத்துடன் ஆம் என தலையாட்டினாள்.



"நீ ஏன் உன் கனவ விட்டுக் கொடுக்கனும்.. கல்யாணத்துக்கப்றம் நீ தொடர்ந்து எழுது.. நா வீட்ல சொல்லிக்கிறேன்.. பொண்ணுங்க வாழ்க்கைலை சாதிச்சது இல்லையா அதுக்கு அவங்க கூட இருக்கிறவங்க அவங்களுக்கு துணையா தான் இருந்தது இல்லையா.. நீ கல்யாணத்துக்கு அப்றமும் உன் கனவ நிறைவேத்த போராடு.. நா கண்டிப்பா உனக்கு துணையா இருப்பேன்.. " என கதிர் சொல்ல தற்போது மீரா இருந்த மனநிலை சற்று விலகி மனதில் ஒரு இதம் பரவ மெல்லிய புன்னகையை சிந்தினாள்.



"சரி" என கதிரிடம் தலையாட்டியவள் கல்யாணத்துக்கும் "சம்மதம்" என தலையாட்டினாள்.



அடுத்த ஒரு மாதத்தில் கோவிலில் வைத்து மீராவின் கழுத்தில் மங்கள நாணை பூட்டி கதிர் அவளை தன்னவளாக்கிக் கொண்டான். நாட்களும் அழகாக நகர கணவனின் காதலில் திக்கு முக்காடி போனவள் மாமியார் வீட்டினருடன் நன்றாகவே ஒன்றிப் போனாள். மாமியாருடன் சேர்ந்து வேலை செய்வது, நாத்தனாருடனும் கதிரின் அண்ணண் மனைவி லேகாவுடனும் சேர்ந்து சிரித்து சிரித்து பேசுவதுமாக இருந்தவள் அடுத்த இரு மாதத்தில் கருவுற்றிருக்க கதிருக்கோ சந்தோஷம் தாளவில்லை.. தன் மனைவியை தூக்கி தட்ட மாலை சுற்றி விட்டான்.



மீராவை பார்க்க தன் சம்மந்தி வீட்டிற்கு வந்திருந்த மீராவின் தாய்,
"பாரு நா அப்பவே சொன்னேன்ல.. இது தான் பொண்ணுங்களுக்கான வாழ்க்கை.. கனவு கனவுன்னு கல்யாணத்துக்கு முன்னாடி சுத்திக்கிட்டு இருந்த..இப்போ பார்த்தியா நீ பெரிய ரைட்டர் ஆகியிருந்தா கூட இப்பிடி வாழ்ந்திருக்க மாட்ட.. மாப்பிள்ளை உன்னை ராணி மாதிரி பார்த்துக்குறாரு.." என்று தான் சொன்னது தான் சரி என்பது போல் மீராவின் தாய் பேச,



அவரை பார்த்து புன்னகையை சிந்தியவள்,
"என் புருஷன் என்னை ராணி மாதிரி பார்த்துக்குறாரு தான் மா.. அதுக்காக என் கனவ நா விட்டுட்டேன்னு நா சொல்லவே இல்லையே.. கொஞ்ச நாள் என் புருஷனுக்காகவும் என் மாமியார் குடும்பத்துக்காகவும் என் கனவ தள்ளி வச்சிருக்கேன் அவ்வளவு தான்.. அதுக்காக இது மட்டும் தான் பொண்ணுங்களுக்கான வாழ்க்கைன்னு என்னால ஏத்துக்க முடியாது மா.." என சொல்ல,



அவரோ, "க்கும்.. நீ திருந்த போறதில்லை.. எங்க மானத்தை வாங்கு அப்றம் இருக்கு உனக்கு.." என நொடிந்துக் கொண்டார் மீராவின் தாய்.



நாட்கள் நகர,



மீண்டும் தன் கனவை அடைய அடி எடுத்து வைத்தாள் மீரா.. இதுவரை சின்ன சின்ன கதைகளாக எழுதியவள் அன்று தன் முதல் நாவலை எழுத எண்ணி முதலிரவன்று தனக்காக கதிர் வாங்கி தந்த புத்தகத்தை எடுத்தவள் இதழில் உறைந்த புன்னகையுடன் மேசையில் புத்தகத்தை வைத்து எழுத ஆரம்பிக்க,



சரியாக அந்நேரம் அவள் அத்தை,
"மீரா சமையலுக்காக காய்கறி வச்சிருக்கேன்.. அதை கொஞ்சம் வெட்டி வச்சிரு மா.." என குரல் கொடுக்க புத்தகத்தை மூடி வைத்தவள் அவர் சொல்லி சென்ற வேலையை செய்து முடித்து வர,



லேகாவோ,
"மீரா எனக்கு கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு.. கோவிச்சிக்காம குழந்தைக்கு பாடம் சொல்லி கொடுக்குறியா மா.." என சொல்ல மறுப்பு கூறாமல் புன்னகை மாறா முகத்துடன் இரண்டு மணி நேமாக பாடம் சொல்லி கொடுக்க மதியம் இரண்டை தாண்டி விட்டது.



மதிய சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு எழுத ஆரம்பிக்கலாமென சாப்பிட்டு எழுத வந்தவளை எழுத விடாது பக்கத்திலிருந்து பேசி பேசி அவள் மாமியாரும் நாத்தனாரும் இருக்க மீராவால் ஒன்றும் சொல்ல முடியாத நிலை.



சரி இரவு எழுதலாம் என்று இருந்தவளுக்கு இரவு கணவன் வந்தவுடன் அவனுக்கான வேலைகளை செய்வதிலே நேரம் சரியாக இருந்தது. பதினொரு மணிக்கு மேல் எழுத போன மீராவை,
"மீரா இப்போ எழுத வேணாம்.. காலைல எழுது.. நைட் முழிச்சிருந்து எழுதனும்னு ஒன்னும் அவசியமில்லை.." என கதிர் சொல்ல ஒன்றும் பேசாமல் வந்து படுத்துக் கொண்டாள்.



சரி அம்மா வீட்டில் இருக்கும் போது அதிகாலை நான்கு மணிக்கு எழுதுவது போல் எழுதலாம் என நினைத்து எழுந்தவள் வெளிச்சம் வந்தால் கதிரின் தூக்கம் கெட்டுவிடும் என்று ஹோலிற்கு வந்தாள்.



அங்கோ கதிரின் பாட்டி,
"ஏம்மா இந்த நேரம் இங்க லைட்ட போட்டுகிட்டு என்ன பன்ற மா.. புள்ளதாச்சி பொண்ணு அங்க இங்க அலையாம லைட்ட அணைச்சிட்டு போய் தூங்கு மா.." என சொல்லி விட்டு செல்ல, மீராவுக்கு தான் 'என் கனவு அவ்வளவு தானா..' என நினைத்து கண்கள் கலங்கி விட்டது.



இறைவன் மேல் பாரத்தை போட்டு விட்டு ஒரு முடிவுடன் அறையில் அந்த சிறு வெளிச்த்தில் உட்கார்ந்திருந்தவள் காலையில் தன் மாமியாருடன் தனியாக பேசும் சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தாள்.



தன் அத்தையுடன் சமையல் செய்துக் கொண்டிருந்தவள்,
"அத்தை நா உங்க கிட்ட ஒன்னு சொல்லனும்.." என்று மெதுவாக பேச்சை ஆரம்பித்தவள்,



"எனக்கு நாவல் எழுதனும்னு ரொம்ப நாள் ஆசை.. என்னோட கனவும் அதான்.. நா வீட்டு வேலையும் பார்ப்பேன்.. அதே சமயம் நா எழுதுறதுக்கும் கொஞ்சம் டைம் வேணும் அத்தை.. அதான்.. இதுல உங்களுக்கு சம்மந்தமா.." என கேட்க,



அவரும் சமையலை கவனித்தவாறே,
"எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை மா.. நீ உனக்கு எப்போ தோணுதோ அப்போ எழுது.." என சாதாரணமாக கூறிவிட்டு வேலையை கவனிக்க மீராவுக்கோ உச்சகட்ட சந்தோஷம்.



"ரொம்ப நன்றி அத்தை.." என்று சொன்னவள் மதிய சாப்பாட்டிற்கு பிறகு எழுத ஆரம்பிக்க லேகாவிடம் அவள் அத்தை சொல்லியிருந்ததால் அவளும் மீராவிடம் எதுவும் கேட்காமல் இருக்க அன்று தான் தன் நாவலின் முதல் அத்தியாயத்தை எழுதி முடித்தாள் மீரா.



வீட்டு வேலையையும் பங்கு போட்டு செய்து அப்பப்போ கொஞ்சம் கொஞ்சமாக எழுதவும் செய்தவள் நாட்கள் சந்தோஷமாக நகர போக போக அவள் அத்தையிலிருந்து கதிரின் பாட்டி வரைக்கும் இவள் எழுதும் போது ஏதேதோ முணுமுணுத்தவாறு இருக்க முதலில் ஒரு மாதிரி சங்கடமாக உணர்ந்தவள் பிறகு தன் கனவை விட்டுக் கொடுக்க மனமில்லாது அவர்கள் முணங்கலை கண்டுக்காது கடந்து சென்றாள்.



மீரா அவள் அத்தை சொன்ன வேலையை முடித்து விட்டு எழுத உட்கார்ந்தால் கதிரின் பாட்டியோ,
"ஏம்மா அங்க அவ்வளவுமே போட்டது போட்ட படி கிடக்குது..நீ இங்க உட்கார்ந்து இதோடையே மல்லுகட்டிகிட்டு இருக்க.." என சொல்லி விட்டு செல்வார். அவளும் சரி என செய்து விட்டு வந்து மீண்டும் எழுத ஆரம்பித்தால் லேகா அவள் அறையில் அவள் குழந்தைகளை வைத்து விட்டு அவள் வேலையை பார்க்க சென்று விடுவாள்.



முதலில் எல்லாத்தையும் பொறுத்துக் கொண்டவள் பின் ஒரு கட்டத்திற்கு மேல்,
"எழுதி முடிச்சிட்டு வரேன்.." என்று சொல்லும் அளவிற்கு சென்று விட்டாள். அவளும் மனுஷி தானே.. அவளுக்கும் பொறுமை ஒரு அளவு தான்.. பொறுத்து பொறுத்து பார்த்தவள் இப்பிடி சொல்லி விட அதையும் குற்றமாக்கி அவர்களின் முணங்கல்கள் இன்னும் அதிகரித்ததே தவிர அவளுடைய இலட்சியத்திற்கு தாங்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர்கள் யோசிக்கவில்லை..



கதிரிடமும் இவள் அத்தை இவள் எழுதுவது பற்றி இல்லாதது பொல்லாதது சொல்லி பற்றி வைக்க அவனும் வேலை விட்டு வரும் டென்ஷனில் அம்மாவும் இப்பிடி பேச மீராவிடம்,
"எழுதுறது சரி மீரா.. ஆனா வீட்டு வேலையையும் பாரு.. வீட்டு வேலை பார்க்காம அப்படியே இருந்துகிட்டு எழுதிக்கிட்டு தான் இருப்பேன்னா இது எதுவும் தேவையில்லை.. இதோட நிறுத்திரு.." என கண்டிப்பாக சொல்ல,



"என்னங்க நா வீட்டு வேலையையும் பார்க்க தான் செய்றேன்.. செய்தாலும் செய்யல்லைன்னு சொல்றாங்க.. ப்ளீஸ் என்னையும் கொஞ்சம் புரிஞ்சிக்கோங்க.. இதை தான் நா கல்யாணத்துக்கு முன்னாடி சொன்னேன்.. அப்போ நா வீட்ல சொல்லிக்கிறேன்னு சொன்னிங்க இப்போ என்கிட்ட விட்டுடுன்னு சொல்லிகிட்டு இருக்கிங்க.." என மீராவும் பதிலுக்கு கேட்க,



"வீட்டு வேலையையும் பார்த்துகிட்டு அம்மாவுக்கு உதவியா இருந்து உன் சொந்த வேலையையும் பார்த்தா யாருக்கு என்ன பிரச்சினை வரப்போகுது.. பழைய புராணத்தை பாடாம சொன்னதை செய் மீரா.." என காட்டமாக சொன்னவன் தான் அவளுக்கு கொடுத்த வாக்கை இலகுவாக மறந்து போனான்.மீராவும் அதன் பிறகு எதுவும் பேசவில்லை பேசவும் அவளுக்கு தோன்றவில்லை..



இப்போது மீராவுக்கு நான்கு மாதம் ஆகியிருக்க அன்று இரவு,



அத்தையுடன் சேர்ந்து இரவு சமையலை முடித்து விட்டு பாத்திரங்களை விலக்கி வைத்தவள் அப்போது தான் அறைக்கு வந்து தன் நாவலின் இறுதி அத்தியாயத்தை எழுதி முடித்து நிமிர திடீரென லேகா அவள் ஒரு வயது குழந்தையை கொண்டு வந்து கட்டிலில் வைத்து,
"மீரா கொஞ்சம் குழந்தையை பார்த்துக்கோ.. ஒரு முக்கியமான கோல் பேசிட்டு வந்துடுறேன்.." என சொல்லியவள்
அவள் பதிலை கூட எதிர்ப்பார்க்காது போக
மீராவோ எழுதி முடித்து புத்தகத்தை மூடி குழந்தை அருகில் வந்து படுத்துக் கொண்டு குழந்தையை ரசித்துக் கொண்டிருந்தாள்.



அப்போது சரியாக வந்த கதிரின் பாட்டி,
"மீரா வெளில துணி இருக்கு எடுக்க மறந்துட்டேன்.. கொஞ்சம் எடுத்துட்டு வா மா.. உன் அத்தை வெளில போயிருக்கா இந்நேரம் பார்த்து மழை வேற வர்ற மாதிரி இருக்கு.." என்று சொல்ல,



அவளோ, " பாட்டி குழந்தை.." என தயங்க,



"நா பாத்துக்குறேன் மா.. " என்று சொன்ன பாட்டியை நம்பி குழந்தையை வைத்து விட்டு அவள் துணி எடுக்க செல்ல,



பாட்டியோ அறையை சுற்றி பார்த்து, "இந்த பொண்ணு அந்த பேப்பர் கையுமா இருக்கு.. அறையை சுத்தம் பன்னுவோம் அதெல்லாம் இல்லை.." என முணங்கிக் கொண்டிருந்தவருக்கு அப்போது தான் ஏதோ நினைவு வந்தவராக,
"ஆண்டவா.. துணிய ஊற போட்டிருந்தேன்.. அதையும் மறந்தே போயிட்டேன்.. இப்போ எல்லா நமக்கு மறதி ஜாஸ்தியாகிட்டு.." என வாய்விட்டே புலம்பியவாறு அவர் பாட்டிற்கு குழந்தையை மறந்து குளியலறை நோக்கி சென்று விட்டார்.



இங்கு குழந்தையோ உருண்டு வந்து கட்டிலிலிருந்து விழுந்து அழுது கொண்டிருந்தது. அந்த அறையிலிருந்து ஃபோன் பேசிக் கொண்டிருந்த லேகாவுக்கு குழந்தையின் அலறல் கேட்க, பதறி அடித்து ஓடி வந்தவள் குழந்தை விழுந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சியாகி உடனே குழந்தையை தூக்கியவள் குழந்தையின் தலையை தடவி ஆறுதல்படுத்த,



அப்போது தான் குழந்தையின் சத்தத்தில் மீராவும், கதிரின் பாட்டியும் கூட ஓடி வர சரியாக மீராவின் அத்தையும் வந்திருந்தார்.



வந்தவர்கள் பதறி குழந்தையின் அருகே வர குழந்தையை தொட வந்த மீராவை பார்த்து,
"தள்ளி போ.." என கத்தி விட்டாள் லேகா.



அவள் அத்தையோ, "லேகா ஏன் இப்பிடி அவளுக்கு கத்துற.. முதல்ல குழந்தையை பாரு.." என்று சொல்ல,



"இவளால தான் அத்தை என் குழந்தை விழுந்திருக்கா.. இவக்கிட்ட தான் பார்த்துக்க சொல்லிட்டு போனேன்.. ஆனால், இவ குழந்தையை மறந்துட்டு அவ வேலைல தான் அவ இருந்துருக்கா.." என லேகா கத்த,



"என்ன தான் மா உனக்கு கிடைக்குது அதுல.. ஒரு மருமகளா பொறுப்பா இருக்குறத விட்டுட்டு எப்ப பாரு எழுதிகிட்டு.. ச்சே, பாரு இப்போ உன்னால தான் குழந்தைக்கும் அடிபட்டிருச்சி.." என அவர் மீரா சொல்ல வருவதை கேட்காது புலம்ப, கதிரின் பாட்டிற்கும் அப்போது குழந்தையின் அழுகையே பெரிதாக தோன்ற அவர் குழந்தைக்கும் சமாளிப்பதாலே இருந்ததாலும் அவர் மீராவின் நிலையை அறியாது இருந்தார்.



ஓஃபீஸில் எதோ பிரச்சினையாகி உச்ச கட்ட கோபத்தில் வந்திருந்த கதிருக்கும் இது அனைத்தும் கேட்டதில் மீரா தன்னிடம் பேச வந்ததை கூட காது கொடுத்து கேட்காது தன் மொத்த பலத்தையும் சேர்த்து அவள் தன் குழந்தையை வயிற்றில் சுமக்கிறாள் என்பதை கூட மறந்து மீராவை ஓங்கி அறைந்திருந்தான் கதிர்.



ஏற்கனவே லேகாவும் அவள் அத்தையும் பேசியதில் மனதளவில் சோர்விளந்து இருந்தவள் அவன் அறைந்த அறை தாங்காது அங்கிருந்த மேசையின் மேல் விழ அவள் விழுந்த வேகத்தில் அதன் நுனி பக்கத்தில் அவள் வயிறு நன்றாக அடிபட்டதில் 'ஆஆ..' என கத்தியவள் அறைந்த அறையில் அதிர்ச்சியிலே மயங்கி விட்டாள்.



"மீரா.." என பதறி அடித்துக் கொண்டு அவள் அத்தை அவள் அருகில் ஓட கதிரோ அப்போது தான் செய்த காரியத்தின் வீரியம் புரிந்து அதிர்ச்சியில் அடுத்து என்ன செய்வதென தெரியாமல் கண்கள்கலங்க கீழே விழுந்த மீராவையே பார்த்தவாறு நின்றுக் கொண்டிருந்தான்.



விழுந்து கிடந்த மீராவை அவள் அத்தை தூக்க அவள் அணிந்திருந்த சேலையின் பின் சொட்டு சொட்டாக இரத்தம் படிவதை கண்டவர் "கதிர்.." என அலறி விட்டார்.



அவர் கத்தலில் சுயவுணர்வு பெற்றவன் ஓடிச் சென்று தன் மனைவியை கைகளில் ஏந்திக் கொண்டு மருத்துவமனைக்கு தூக்கி சென்றவன் கன்னங்கள் போகும் வழியெங்கும் அவன் கண்களிலிருந்து வழிந்த கண்ணீராலே நனைத்திருந்தது.



மருத்துவமனையில் அவளை அனுமதித்து வெளியில் இவர்கள் காத்திருக்க வழியும் கண்ணீரை கூட துடைக்க மனமின்றி "மீரா..மீரா.." என புலம்பியவாறு இருந்த மகனை கண்ட அவன் அன்னைக்கு உலகமே இருண்டது போன்று ஆகி விட்டது.



அடுத்த பத்து நிமிடத்தில் அவளை பரிசோதித்து விட்டு வந்த டாக்டெர் கதிரிடம்,
"ஐ அம் சோரி மிஸ்டர் கதிர். வயித்துல அடி பலமா விழுந்ததால குழந்தை அபோர்ட் ஆகிறுச்சி.. அவங்க அதிர்ச்சியில தான் மயங்கி விழுந்திருக்காங்க..மயக்கம் தெளிஞ்சதுக்கு அப்றம் போய் பாருங்க..." என கதிரின் தலையில் ஒரு இடியை இறக்கி விட்டு நகர மொத்தமாக நொறுங்கி போய் இருந்தவன் நிற்க திராணியின்றி அந்த இடத்திலே முட்டி போட்டு அமர்ந்து விட்டான்.



அவள் கருவுற்ற சமயம் தன் உயிர் நீரில் உருவான குழந்தையை எதிர்ப்பார்த்து அவன் ஒவ்வொரு நிமிமிடமும் காத்திருக்க தன்னாலயே தன் குழந்தை இல்லாமல் போனதில் ஆண்மகன் அவன் இடம் பொருள் பார்க்காது,
"நானே என் குழந்தையை கொன்னுட்டேன்.." என கத்தியவாறு கதறி அழ ஆரம்பித்து விட்டான் கதிர்.



ஓடி வந்து அவனை அணைத்த அவன் தாய்,
"இல்ல பா.. இப்பிடி எல்லாம் நடக்கும்னு உனக்கு தெரியாதுல்ல கண்ணா.. நீயே அழுதா எப்படி பா.. மீராவுக்கு நீ தானே ஆறுதலா இருக்கனும்.." என அவர் சமாதானப்படுத்த முயல,



மீராவின் பெயரை கேட்டதும்,
"அய்யோ.. என்னால முடியாது மா.. அவ முகத்தை இனி எப்படி மா பார்ப்பேன்.. அவ குழந்தை மேல உயிரையே வச்சிருந்தா மா.. இப்போ இல்லைன்னு தெரிஞ்சா துடிச்சிறுவா மா.. என்னால முடியல மா.." என்று கதறியவனுக்கு தானே தெரியும் தன் மனைவி குழந்தையின் மேல் உயிரையே வைத்திருந்ததும் தன் மனைவி தினமும் இரவு அவள் வயிற்றை வருடியவாறு தன் குழந்தையுடன் பேசிவிட்டு உறங்குவதும்.



அப்போது மீராவின் அன்னையும் வந்திருக்க அவரோ விஷயத்தை கேட்டு மொத்தமாக உடைந்து போய் விட்டார். தன் மகனையும் தன் மருமகனையும் சமாதானம் செய்ய முடியாது இரு தாயுள்ளங்களும் கண்கலங்கி நின்றிருக்க சிறிது நேரம் வந்த நர்ஸ் மீரா கண்விழித்ததாகவும் போய் பார்க்குமாறும் சொல்லி விட்டு செல்ல கதிருக்கோ குற்றவுணர்ச்சியில் சாவு வந்து விடாதா என்றிருந்தது.



இருந்தும் தன் மனைவியின் காலில் விழுந்தாவது மன்னிப்பை யாசிக்க எண்ணி உள்ளே செல்ல எதோ ஒரு இடத்தையே வெறித்தவாறு உணர்ச்சிகள் துடைக்கப்பட்டு இருந்த அவள் வதனத்தில் எதையுமே கண்டுபிடிக்க முடியவில்லை கதிரால்.



"மீ.. மீரா.. என்னை மன்னிச்சிறு மா.. ஏதோ கோபத்துல.." என கதிர் திக்கித்திணறி குரல் தழுதழுக்க தலை குனிந்தவாறு சொல்ல,



மீராவோ அவன்புறம் சற்றும் பார்வையை திருப்பாது அங்கு கலங்கிய கண்களோடு நின்றுக் கொண்டிருந்த தன் தாயிடம்,
"அம்மா நம்ம வீட்டுக்கு போகலாம் மா.." என சொன்னாள்.



இதைக் கேட்ட கதிர் அதிர்ச்சியில் அவளை பார்க்க மீராவின் அத்தையோ,
"அம்மா மீரா.. கதிர் ஏதோ கோபத்துல அப்பிடி பன்னிட்டான் மா.. தயவு செஞ்சு என் மகனை மன்னிச்சிறு மா.. வீட்டுக்கு வா மா.. இனி நாங்க எதுவுமே சொல்ல மாட்டோம் நீ ஆசைப்பட்டத பன்னு டா.." என்று அவர் அவளை சமாதானப்படுத்த முயல, அவர் அறியவில்லை இழந்த பிறகு பேசி பிரயோஜனம் இல்லை என்று..



"அம்மா நீ என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போறியா.. இல்ல.. என் குழந்தை போன இடத்துகே நானும் போகவா.." என மீரா கேட்டதில் பதறி விட்டார் அவள் தாய்.



"ப்ளீஸ் மீரா என்னை விட்டு போயிராத டி.. சத்தியமா இப்படி நடக்கும்னு நா எதிர்ப்பார்க்கல.. ஏதோ ஒரு கோபத்துல புத்தி மழுங்கி அப்பிடி நடந்துக்கிட்டேன்.. என் குழந்தை இல்லாம போக நானே காரணமாகிட்டேன்னு ரொம்ப குற்றவுணர்ச்சியா இருக்கு டி.. உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்க கூட தகுதி இல்ல நா பன்னது பாவம்.. ஆனா ப்ளீஸ் டி நீ இல்லாம என்னால இருக்க முடியாது மீரா.." என கதறியவனது வார்த்தைகள் அவளிடத்தில் காற்றில் கரைந்த கற்பூரமாக தான் போனது.



அடுத்த நாள் டிஸ்ச்சார்ஜ் செய்யப்பட்ட மீரா தன் அம்மாவுடன் தன் பிறந்த வீட்டிற்கே சென்றிருக்க அவளின் உடல்நிலை மனநிலை கருதி இப்போது கதிர் அவள் முன் இருந்தால் அவள் மேலும் உணர்ச்சிவப்படக் கூடும் என மீராவின் அத்தை கதிரை வீட்டிற்கு அழைத்து சென்று விட்டார்.



வீட்டிற்கு வந்தவன் எதுவும் செய்ய தோணாது இடிந்து போய் அமர்ந்திருக்க அவன் அருகில் அமர்ந்த அவன் பாட்டி அவன் தலையை வருடிய மறுநொடி வீட்டிற்கு வரும் வரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் உடைப்பெடுத்து வெளிவர பாட்டியின் மடியிலே படுத்து கதறி விட்டான் கதிர். அவன் தலையை வருடியவாறு அவனுக்கு ஆறுதல் கூறியவர் தன் மேல் தான் தவறு என்பதையும் நடந்ததையும் கூற அவனுக்கு மேலும் மேலும் குற்றவுணர்ச்சி தான் அதிகரித்தது.



மீராவின் வீட்டிலும் அவள் தாய் அன்று நடந்ததை பற்றி எதுவும் பேசாது அவள் தன் வயிற்றை வருடி அழும் போது அவளை ஆறுதல்படுத்தி சமாதானப்படுத்துவதிலே இருக்க இங்கு கதிரோ குழந்தையை இழந்த துயரத்திலும் மனைவி விட்டுச் சென்றதிலும் ஒரு வேலையும் செய்யாது கலையிழந்த முகமாக அலைந்து கொண்டிருந்தான்.



அன்று,



தன் அறையில் இருந்தவனுக்கு மேசை மீதிருந்த புத்தகம் தென்பட அதை எடுத்தவன் அதில் இருந்ததை வாசிக்க தொடங்க தன் மனைவி எழுதிய வார்த்தைகளை வாசிக்க வாசிக்க அவனுக்கோ அவள் கனவுக்கு தான் துணை நிற்பதாக கூறி அதை தானே தவற விட்டதில் தன்னை நினைத்தே மேலும் மேலும் வெறுப்பு அதிகரித்தது.



ஒரு பெண்ணிற்கும் கனவு, ஆசை, தனக்கான அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்ற வெறி அவள் ஆழ்மனதில் எப்போதும் இருக்கும். சிலர் குடும்ப கஷ்டங்களிலாலும், சமூக கட்டுப்பாடுகளினாலும் அடைய முடியாது தங்களுக்குள்ளே கனவாக புதைத்து விடுகின்றனர். சில பேரே மொத்த கட்டுப்பாடுகளையும் தகர்த்தெறிந்து தங்கள் கனவுகளுக்காக போராடுகின்றனர்ர. அதற்கு அவர்களை சுற்றி இருப்பவர்களின் ஒத்துழைப்பும் ஒரு காரணம்..



தன் மனைவியின் இலட்சியத்தின் ஆழத்தை அன்று உணர்ந்தவன் ஒரு முடிவு எடுத்தவனாக எழுந்து அடுத்து தான் செய்ய வேண்டிய காரியத்தை நிறைவேற்ற அப்புத்தகத்துடன் வெளியே புறப்பட்டான்.



இரண்டு மாதங்கள் கழித்து,



இரண்டு மாதங்களாக தன் மனைவியை சென்று அவனும் பார்க்கவில்லை. மீராவும் நடந்ததிலிருந்து மீண்டு வந்திருக்க பழைய சிரிப்பு உதட்டில் இல்லாவிடினும் சாதாரணமாக வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டு இருந்தாள்.



வீட்டின் கோலிங் பெல் சத்தத்தில் கதவை திறந்த மீராவின் அன்னை தன் எதிரே நிற்பவனை பார்த்து "வாங்க மாப்பிள்ளை.." என்று கூறிவிட்டு உள்ளே செல்ல,



உள்ளே வந்த கதிர் கண்களை அங்கும் இங்கும் சுழலவிட்டவாறு இருந்தான். அவரோ அவன் தேடலை புரிந்து கொண்டவர் போல்,
"மீரா ரூம்ல இருக்கா மாப்பிள்ளை.." என்று கூறியவர் அப்போது தான் அவனை கவனித்தார்.



முகம் கலையிழந்து இரண்டு மாதங்களாக சிரைக்காத தாடி மீசை அடர்ந்து வளர்ந்து இருக்க மெலிந்து கண்களில் கருவளையம் என பொழிவிழந்து இருந்தான். இழப்பு மீராவுக்கு மட்டுமில்லையே அவனுக்கும் தானே..



அறையை தட்டி விட்டு உள்ளே வந்தவனை பார்த்த மீராவுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் நீண்ட நாட்கள் கழித்து தன் கணவனை பார்த்ததில் சந்தோஷம் ஒருபுறம் நான் என் குழந்தையை இழக்க இவன் தானே காரணம் என்ற கோபம் மறுபுறம் இருக்க முகத்தை திருப்பிக் கொண்டு கட்டிலில் தரையை வெறித்தவாறு அமர்ந்துக் கொண்டிருந்தாள்.



அவளருகில் வந்தவன் தரையில் முட்டிபோட்டு அமர்ந்து கட்டிலில் அமர்ந்திருந்த அவள் மடியில் தன் தலையை வைத்து படுத்து கண்கள் கலங்க,
"உன்கிட்ட நா மன்னிப்பு கேக்க கூட தகுதி இல்லை டி.. உனக்கு துணையா இருப்பேன்னு வாக்கு கொடுத்து உன் கனவ என் கனவா நினைக்காம விட்டு தப்பு பன்னிட்டேன்.. உன் மனச புரிஞ்சிக்காம உன் இலட்சியத்தை விட்டுறுன்னு சொல்லி உன்ன நோகடிச்சிட்டேன்.. அப்போ நீ சொல்ல வந்ததை கூட கேக்காம உன் வயித்துல நம்ம குழந்தை இருக்குறதையும் மறந்து உன்னை அடிச்சிட்டேன்.. என் கோபத்தால என் குழந்தைய நானே இழந்துட்டேன்.. என்னால தாங்க முடியல மீரா.." என கதறி அழுதவனை பார்த்தவளுக்கு அவன் அழுகை அவன் மேல் இருந்த கோபத்தை சற்று மட்டுப்படுத்த எதுவும் வாய் வார்த்தையாக ஆறுதல் சொல்லவில்லை என்றாலும் கண்களில் கண்ணீர் ஓட அவன் தலையை ஆறுதலாக வருடி விட்டாள் மீரா.



சற்று நேரத்தில் அவள் வருடலில் அழுகை மட்டுப்பட நிமிர்ந்து பார்த்தவன் தன் கையிலிருந்த ஒரு கவரை எடுத்து அவளிடம் நீட்டி,
"வாழ்க்கைல என்னால ஒன்ன இழந்துட்ட.. இழந்தத என்னால திருப்பி கொடுக்க முடியாது ஆனா நீ ஆசைப்பட்டதை அடைய உனக்கு துணையா இருக்க முடியும் மா.. " என கதிர் கூறி அவள் பக்கத்தில் அமர்ந்து கொள்ள,



புரியாமல் அந்த கவரை பிரித்து பார்த்தவள் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது. அவள் கையிலிருந்த புத்தகத்தின் அட்டையில் "ஒரு மங்கையின் கனவு" என எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்க அதன் கீழ் எழுத்தாளர் மீரா கதிர் என்ற பெயரை பார்த்தவள் விழிகளிலிருந்து இருசொட்டு கண்ணீர் அந்த அட்டையில் விழ அவள் இதழ்களோ நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தோஷத்தில் விரிந்து கொண்டதை கண்டதும் அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டான் கனவு கண்ட மங்கையின் மணாளன்..❤❤



❤ZAKI❤

மறக்காமல் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் நண்பர்களே👇

 
Top