All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘கண்ணில் கனவாக நீ!!!’ கதை திரி

Status
Not open for further replies.

Sasimukesh

Administrator
சர்வேஸ்வரன் எப்போதும் போல் அலுவலகத்திற்குக் கிளம்பி வரவேற்பறைக்கு வந்து நின்றான். அவன் வழக்கம் போல் தனது விழிகளைப் பூஜையறை பக்கம் செலுத்த... அங்கே உதயரேகாவையும் காணவில்லை. பூஜை நடந்ததற்கான அறிகுறியும் இல்லை. அவன் யோசனையுடன் ஒற்றைச் சோபாவில் அமர்ந்தான். அவனது விழிகள் அவனையும் அறியாது சமையலறை வாயிலில் படிந்தது. அவனது எண்ணத்தை அறிந்து கொண்டாளோ அவள்! அவன் எண்ணத்தின் நாயகியே கையில் காபி கோப்பையுடன் அவனை நோக்கி நடந்து வந்தாள். அவளது செயலிலேயே அவனுக்குத் தெரிந்து விட்டது. அவளுக்கு மாதாந்திர பிரச்சினை என்று... இத்தனை வருடங்களாய் அவன் அவளைப் பார்த்துக் கொண்டு தானே இருக்கின்றான். சில விசயங்களைப் பெண்ணவள் சொல்லாமலே அவன் உணர்ந்து கொள்வான்.



'ரெண்டு பேரோட புரிதலும் கண்டு புருசன், பொண்டாட்டி தோத்துருவாங்க.' இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த தாமோதரனுக்கு இப்படித்தான் எண்ணம் தோன்றியது. அதை வாய்விட்டு அவர் கூற முடியுமா? அவர் அருகில் இருந்த மனைவியைப் பார்த்தார். மந்தாகினி அலைப்பேசியைத் தன்னை மறந்து பார்த்திருந்தார். அதைக் கண்டு தாமோதரன் பல்லை கடித்தார்.



"குட்மார்னிங் பிரின்ஸ்." என்றவள் புன்னகையுடன் காபி கோப்பையை அவனிடம் நீட்டினாள்.



"குட்மார்னிங்..." அவனும் புன்னகையுடன் காபியை வாங்கிக் கொண்டான். உதயரேகா மீண்டும் சமையலறைக்குச் செல்ல போக...



"பப்ளிமாஸ்..." அவன் அவளைத் தடுத்து நிறுத்தினான். மேலே செல்லாது நின்றவள் என்னவென்று அவனைப் பார்த்திருந்தாள்.



"மாப்பிள்ளை பார்க்க சொன்னியே... என்ன மாதிரியான மாப்பிள்ளை பார்க்கட்டும்?" என்ற மகனை கண்டு தாமோதரனுக்குப் புரையேறியது. சர்வேஸ்வரன் தந்தையை ஒரு பார்வை பார்த்தான்.



"புரையேறுவதுக்கு எல்லாம் எதுக்குடா முறைக்கிற?" மந்தாகினி மகனை கண்டு முணுமுணுத்தார். அவன் ஒன்றும் பேசாது பார்வையைத் திருப்பி உதயரேகா மீது பதித்தான்.



"நீ சொல்லு?" அவன் அவளிடம் கேட்க...



"அது... அது... நீங்க வருத்தப்பட்ட மாதிரி இருந்துச்சு. அதான் சும்மா சொன்னேன். எனக்கு மாப்பிள்ளை எல்லாம் பார்க்க வேண்டாம்."



"ஏன்?" அவன் ஒற்றைப் புருவத்தைக் கேள்வியாய் உயர்த்த...



"எனக்குக் கல்யாணத்தில் விருப்பம் இல்லை. முதல்ல நீங்க கல்யாணம் பண்ணிக்கோங்க. குழந்தைகளைப் பெத்துக்கோங்க. உங்க குழந்தைகளை வளர்க்கிற பொறுப்பை நான் பார்த்துக்கிறேன்." உதயரேகா வெள்ளை மனதுடன் சொன்னவள் வெள்ளேந்தியாகச் சிரித்தாள்.



அவள் சொன்னது கேட்டு இப்போது மந்தாகினிக்கு புரையேறியது.



"உங்க ரெண்டு பேருக்கும் என்ன பிரச்சினை?" சர்வேஸ்வரன் நேரிடையாகப் பெற்றோரை கண்டு கேட்க... இருவரும் ஒன்று போல் 'ஒன்றுமில்லை' என்பதாய் தலையை ஆட்டினர்.



"நீ சொல்றதுக்காகவே நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்." என்றவன், "மத்த பொண்ணுங்க மாதிரி உனக்குப் புருசன், குழந்தை, குட்டின்னு வாழ ஆசையில்லையா?" இதைக் கேட்கும் போதே அவனது குரல் உடைந்து ஒலித்ததுவோ!



"ம்ஹூம், அப்படி எல்லாம் இல்லை." என்றவளின் முகத்தை அவன் உற்றுப் பார்த்தான். அந்த முகத்தில் பொய் தெரியவில்லை. மாறாக அறியாமையே நிறைந்திருந்தது.



உதயரேகா காலை முதல் இரவு வரை செக்குமாடாக உழைப்பவள். இரவு கிடைக்கும் சொற்ப நேரத்தில் ஓய்வுக்குக் கெஞ்சும் உடல், தூக்கத்தில் சொக்கும் விழிகள் இரண்டுமே அவளை எதைப் பற்றியும் சிந்திக்க விடாது. இப்படியிருக்கும் போது அவள் எங்கே தனிமையில் நிலவை கண்டு கனா காண்பது?



"சரி நீ போ." அவளை அனுப்பி வைத்து விட்டு அவன் விழிகளை மூடி கொண்டு அமர்ந்து விட்டான்.



மந்தாகினி கணவரை அழைத்துக் கொண்டு தங்களது அறைக்கு வந்தவர், "என்னங்க, இவன் தெரிஞ்சு பேசுறானா? இல்லை தெரியாம பேசுறானா?" என்று படபடவெனப் பொரிய...



"இப்போ இந்த ஆராய்ச்சி எதுக்கு? நீ சொல்ல வந்த விசயத்தைச் சொல்லு." தாமோதரன் எரிச்சலுடன் கேட்க...



"உதயாவுக்குப் புருசன் அவன் தான்னு சொன்னால்... சர்வாவுக்கு எப்படி இருக்கும்?" மந்தாகினி ஆர்வத்துடன் கணவரை பார்த்தார்.



'ம், சந்தோசமாக இருக்கும்.' மனதிற்குள் சொல்லி கொண்ட தாமோதரன் வெளியில், "எனக்குத் தெரியலை. நீயே சொல்லு." என்று விட்டேற்றியாகக் கூற...



"ஷாக் ஆகிருவான்." அவர் விழிகளை விரித்துக் கொண்டு பொங்கி வந்த சிரிப்பை அடக்கியபடி கூற...



"அப்படியே அவன் ஷாக் ஆகிட்டாலும்..." தாமோதரன் தலையில் அடித்துக் கொண்டு வெளியில் சென்றுவிட்டார்.



மகனின் எண்ணத்திற்குத் தாரிகா, மந்தாகினி இருவரும் வலு சேர்க்கின்றனர் என்று மட்டும் தாமோதரனுக்குப் புரிந்தது. மகன் புத்திசாலி... எதையும் யோசித்துத் தான் முடிவு எடுப்பான். நடப்பதை வேடிக்கை பார்ப்போம் என்ற மனநிலைக்கு அவர் சென்று விட்டார்.



மந்தாகினி தனது இரு மகள்களிடம் அலைப்பேசியில் இது பற்றி ஆலோசனை நடத்தினார். தாரிகா கன்னித்தன்மை பரிசோதனை செய்ததைக் கண்ட மந்தாகினி முற்றிலும் அவள் பக்கம் சாய்ந்து விட்டார். அவளுக்காக ஏதாவது செய்து வேண்டும் என்று அவர் விரும்பினார். அதனால் தான் தாரிகா சொன்ன திட்டத்திற்கு அவர் சம்மதித்தது. அதையே மகள்களிடமும் கூறிவிட்டார். இருவருக்குமே இதில் உடன்பாடு இல்லை. அதுவும் தாரிகா சொன்னதாய்ச் சொன்னதும் இருவருக்குமே இந்தத் திட்டம் பிடிக்கவில்லை.



"ம்மா, நீங்க எந்தக் காலத்தில் வாழ்ந்துட்டு இருக்கீங்க? ஜாதகம், சோசியம் எல்லாம் இல்லவே இல்லை. எனக்கு என்னவோ தாரிகா பண்றது சரியா தோணலை. அவள் வேண்டாம். பேசாம சர்வாவுக்கு நிலா இல்லை கவியைக் கல்யாணம் முடித்து விடலாம். என்னக்கா நான் சொல்றது? நிலாவை அவனுக்கு முடித்தால்... நான் கோபப்பட மாட்டேன். அதே மாதிரி தானே நீங்களும்?" அமலா அக்காவிடம் கேட்கவும்...



"ஆமாம் அமலா... எனக்குத் தாரிகாவையும் பிடிக்கலை. அவளது யோசனையும் பிடிக்கவில்லை. நீ சொல்றது தான் சரி." மஞ்சரி உடனே ஒத்து கொண்டாள்.



"சரி, நீங்க சொல்றபடி நான் கேட்கிறேன். ஆனால் உங்க நாத்தனார்களின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து என்றால் என் தலையைப் போட்டு உருட்டாதீங்க." என்று முடிவாய் மந்தாகினி முடித்துக் கொண்டார்.



"அதுக்குன்னு ரேகாவை போய்... எப்படிம்மா?" இருவருமே அதிருப்தியை காட்டினர்.



"ஊரு, உலகம் தெரிய நடக்கிற கல்யாணம் இது இல்லை. இது வெறும் கண்துடைப்புக் கல்யாணம் தான். ஜஸ்ட் தோச நிவர்த்திக்குப் பண்றது. வெளியில் யாருக்கும் தெரியாது."



"ம்மா, உங்களுக்குக் கொஞ்சமும் மூளை இருக்கிறதா? கல்யாணத்துக்குப் பிறகு உங்க மகன் கையை, காலை வைத்துக் கொண்டு சும்மா இருப்பானா? வேலைக்காரி வயிற்றில் நம்ம வீட்டு வாரிசு வந்துவிட்டால்..." மஞ்சரி கோபத்துடன் அன்னையைக் கண்டு கேட்டாள்.



"என்னடி இப்படிப் பொசுக்குன்னு கேட்டுட்ட?" மந்தாகினிக்கு வெட்கம் வந்து தொலைத்தது.



"ம்மா, அக்கா சொல்றது சரி தானே. அதுக்குப் பதில் சொல்லுங்க." அமலா அந்தப் பக்கம் இரைந்தாள்.



"ரேகா, நம்ம பேச்சு கேட்பாள். அவள் கிட்ட நேரம் சரியில்லை, அது இதுன்னு ஏதாவது சொல்லி ரெண்டு பேரையும் தள்ளி இருக்கச் சொல்லலாம். அவள் நம்ம அடிமை. நாம சொல்றதை கேட்பாள்." அன்னை கூறிய அடிமை என்கிற வார்த்தை அக்கா, தங்கை இருவரையும் யோசிக்க வைத்தது. அவர்கள் தங்களது சம்மதத்தை அன்னையிடம் கூறினர்.



அன்னையின் அழைப்பை துண்டித்து விட்டுச் சகோதரிகள் இருவரும் தனியே அலைப்பேசியில் பேசினர்.



"எனக்கு என்னவோ தாரிகா பேச்சு சரியில்லைன்னு தோணுது." மஞ்சரி ஆரம்பித்து வைத்தாள்.



"எனக்கும் அதே தான் தோணுது. ஆனாலும் தோசம்ன்னு வரப்போ கொஞ்சம் பயமா தான் இருக்கு. அதனால் தான் இந்தக் கல்யாணத்துக்கு நான் சரின்னு சொன்னது. அம்மா சொன்ன மாதிரி ரேகா தான் நமக்கு வாய்த்த சரியான அடிமை." அமலா தனது எண்ணத்தைச் சொன்னாள்.



"ஆமா அமலா... ரேகா நாம என்ன சொன்னாலும் கேட்பாள். தோசம் வேலை செய்யா விட்டால்... நாம ரேகா கிட்ட சொல்லி சர்வாவை விட்டு விலகி போகச் சொன்னால் கூட அவள் மறுபேச்சு பேசாது விலகி போய் விடுவாள். அவளை வச்சு நம்ம காரியத்தைச் சாதிப்பது சுலபம். இதே இது தாரிகான்னா கஷ்டம்."



"அதே தான் நானும் நினைச்சேன்க்கா. ரேகாவை விலக்கி வைத்து விட்டு நம்ம நாத்தானர்கள் இருவரில் ஒருவரை சர்வாவுக்குக் கல்யாணம் பண்ணி வச்சிருவோம். ஒரு கல்லில் ரெண்டு மாங்காய். தோசம் இருந்தால் அது நீங்கிய மாதிரியுமாச்சு. சர்வாவுக்கு நம்ம நாத்தானாருக்குக் கல்யாணம் பண்ணி வச்சி நம்ம பவரை நிலைநாட்டிய மாதிரியும் ஆச்சு." அமலாவுக்குச் சந்தோசமாக இருந்தது. அதை மஞ்சரியும் ஆமோதித்துச் சிரித்தாள்.



"அப்புறம் ஒரு முக்கியமான விசயம்... சர்வா கல்யாணம் பத்தி முக்கியமா நம்ம புகுந்த வீட்டுக்கு தெரியாம பார்த்துக்கணும்." இருவரும் ஒன்று போல் யோசித்து ஒருசேர கூறினர். தங்களது ஒத்த மனம் கண்டு சகோதரிகளுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. அதே மகிழ்ச்சியோடு இருவரும் அழைப்பை வைத்தனர்.



தாரிகா ஒரு புறம், மஞ்சரி அமலா மறுபுறம் என்று இருபக்கமும் சர்வேஸ்வரனுக்கு எதிராகச் சதி திட்டம் தீட்டப்பட்டது. இதில் பாதிக்கப்படப் போவது என்னமோ அப்பாவி உதயரேகா தான்.



********************************

 

Sasimukesh

Administrator
"அத்தை, இப்படியே உங்க பேரனை விட்டு விட்டால்... அவன் காலத்துக்கும் கல்யாணமே வேண்டாம்ன்னு இப்படியே இருந்து விடுவான். எப்படியாவது அவனைக் கல்யாணத்துக்குச் சம்மதிக்க வைக்கணும். அது உங்க கையில் தான் இருக்கு." மாமியாரை தேடி அவரது அறைக்கு வந்த மந்தாகினி சாமார்த்தியமாக அரிடம் பேச்சை ஆரம்பித்தார்.



"நான் என்ன செய்யணும்? எனக்கும் என் பேரன் கல்யாணத்தைப் பார்க்கும் ஆசை இருக்காதா?" என்றவரை கண்டு மந்தாகினி தனக்குள் சிரித்துக் கொண்டார்.



"நீங்க கை காட்டுற பெண்ணை அவன் கண்ணை மூடிட்டுக் கல்யாணம் பண்ணி கொள்வான்." என்று பீடிகை போட்ட மருமகளைக் கண்டு அவர் யோசனையாய் பார்த்தார்.



"நீ நினைக்கிறது தப்பு மந்தாகினி. அவன் என் அன்புக்கு கட்டுப்பட்டவன் தான். அதுக்காக அவன் என் பேச்சை எல்லாம் கேட்பான் என்று அர்த்தம் இல்லை."



"அப்படின்னா சர்வா கல்யாணம் பண்ணிக்காமலே இருக்கட்டும்." என்ற மந்தாகினி வராத கண்ணீரை துடைத்துக் கொண்டார்.



"அப்படிச் சொல்லாதே." மீனம்மாள் அவசரமாக மறுத்து சொல்ல...



"இங்கே பாருங்க அத்தை. உங்களுக்கு மரியாதை கொடுக்கும் பெண், உங்களை மதிக்கத் தெரிந்த பெண் தான் அவனோட மனைவி என்கிறான். அப்படிப்பட்ட பெண் கிடைக்கலைன்னா என் மகன் கடைசிவரை சந்நியாசியா தான் இருக்கணுமா?" மந்தாகினி மீண்டும் கண்ணைக் கசக்க... மூதாட்டிக்குத் தன்னால் தான் இந்தப் பிரச்சினை என்று வருத்தம் தோன்றியது.



"நான் என்ன பண்ணணும் மந்தாகினி?"



"நான் ஒரு யோசனை சொல்லவா?" என்ற மருமகளைப் புரியாது பார்த்தார் மீனம்மாள்.



"இப்போதைக்கு எனக்குத் தெரிந்து உங்களுக்கு மரியாதை, மதிப்புக் கொடுக்கக் கூடிய ஒரே பெண் ரேகா மட்டும் தான். அவளையே சர்வாவுக்குக் கல்யாணம் பண்ணி வச்சிரலாம் அத்தை."



"நீ அந்தஸ்து பேதம் பார்ப்பியே." மருமகள் சொன்னது கேட்டு மீனம்மாளுக்குச் சற்று அதிர்ச்சி தான். இருந்தாலும் சுதாரித்துக் கொண்டு மருமகளைக் கண்டு கேட்டார்.



"என் மகன் கல்யாணம் பண்ணாது, வாழ்க்கையை வாழாது இருக்கும் நிலைக்கு... இது எவ்வளவோ பரவாயில்லை. என் மகன் யாரை கல்யாணம் பண்ணினால் என்ன... அவன் வாழ்ந்தால் மட்டும் போதும்." மந்தாகினி சிறந்த தாயாக மாறி நடிக்க... மீனம்மாள் அதை அப்படியே நம்பி விட்டார்.



"நீ சொல்றதுக்காக நான் சர்வா கிட்ட பேசி பார்க்கிறேன். ஆனால் அவன் முடியாது என்று கூறிவிட்டால்... என்னால் ஒன்றும் செய்ய முடியாது." மீனம்மாள் தெளிவாகக் கூறிவிட்டார்.



மந்தாகினியும் சம்மதமாய்த் தலையை ஆட்டிவிட்டு வந்து விட்டார். பாட்டியின் வார்த்தைகளைப் பேரன் தட்ட மாட்டான் என்று அவருக்குத் தெரியாதா என்ன?



மீனம்மாள் மிகுந்த தயக்கத்துடன் பேரனை காண சென்றார். அவன் அப்போது தான் அலுவலகம் முடிந்து வந்து அலுப்பு தீர குளித்து விட்டு வந்திருந்தான். பாட்டியை கண்டதும் புன்னகைத்தவன் அவரை அழைத்து வந்து கட்டிலில் அமர வைத்தான்.



"என்ன விசயம் மீனுக்குட்டி? விசயம் இல்லாம மீனுக்குட்டி இங்கே வர மாட்டீங்களே." அவன் அவரது கரங்களைத் தனது கரங்களுக்குள் பொத்தி வைத்துக் கொண்டான். மீனம்மாள் பேரனை பார்ப்பதும் தனக்குள் யோசிப்பதுமாக இருந்தார்.



"மீனுக்குட்டி, உங்க பேரன் கிட்ட பேச எதுக்கு இத்தனை தயக்கம்? எதுவாக இருந்தாலும் சொல்லுங்க."



"சர்வா, நீ கல்யாணம் பண்ணிக்கணும்." அவர் சொன்னதைக் கேட்டு வாய்விட்டு சிரித்தவன்,



"நிச்சயம் பண்ணிப்பேன். இதுக்கா இவ்வளவு தூரம் வந்தீங்க?" என்று கேட்க...



"நம்ம... நம்ம ரேகாவை கல்யாணம் பண்ணிக்கிறியா?" அவர் பட்டென்று சொன்னதும் அவன் அவரைக் கூர்ந்து பார்த்தான்.



"என்ன திடீர்ன்னு? இது உங்க யோசனை மாதிரி தெரியலையே." அவன் சரியாக ஊகித்துக் கேட்டான்.



"உன் அம்மா யோசனை தான்." அவர் தயக்கத்துடன் சொல்ல...



"அதானே பார்த்தேன்... மேலே சொல்லுங்க."



"உன் அம்மா உன்னை நினைத்து ரொம்பக் கவலைப்படுகிறாள்." என்றவரை கண்டு அவன்,



"ஓஹோ..." என்று மட்டும் சொன்னான்.



"இன்னைக்கோ, நாளைக்கோ போகப் போகிற எனக்காக நீ ஏன் உன் கல்யாணத்தை மறுக்கிற? எனக்கு மரியாதை கொடுக்கும் பெண் தான் வேண்டும்ன்னு ஏன் சொல்கிற? இதை எல்லாம் யோசித்துத் தான் உன் அம்மா இந்த முடிவு எடுத்தது." மீனம்மாள் சொல்லி முடிக்கவும் அவரைப் பார்த்தவன்,



"உங்க முடிவு என்ன?" என்று கேட்டான்.



"ரேகா என்றால் எனக்கு மிகவும் பிடித்தம் தான் சர்வா. அவள் எனக்கும் பேத்தி மாதிரி தான். நானே சில சமயம் இது போல் நினைத்து இருக்கிறேன்." மீனம்மாள் தனது ஆசையை அவனிடம் சொன்னார்.



"இதை ஏன் நீங்க முன்கூட்டியே என்னிடம் சொல்லவில்லை?" அவனது குரல் தேய்ந்து ஒலித்ததோ!



"நீ அந்தஸ்து பேதம் பார்ப்பியோன்னு..." மீனம்மாள் தயக்கத்துடன் நிறுத்தினார்.



"ஓ..." என்றவனது ஒற்றை வார்த்தையில் அத்தனை வருத்தம் இருந்ததுவோ!



"ரேகா மிகவும் நல்ல பெண். உன்னை அனுசரித்துப் போவாள்." மீனம்மாள் எடுத்து சொல்ல...



"இப்போது மட்டும் நான் அந்தஸ்து பார்க்க மாட்டேனா?" அவன் ஒருமாதிரி குரலில் கேட்க...



"நான் சொன்னால் நீ கேட்க மாட்டியா?" மீனம்மாள் பதிலுக்குக் கேட்டதும்... அவன் பக்கென்று சிரித்து விட்டான்.



"என்னை எப்படி லாக் பண்ணணும்ன்னு உங்களுக்குத் தான் தெரிந்திருக்கிறது மீனுக்குட்டி." அவன் செல்லமாய் அவரது கன்னத்தைப் பிடித்து ஆட்டியபடி சொல்ல...



"அப்படி என்றால் உனக்குச் சம்மதமா?" மீனம்மாள் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது.



"மீனுக்குட்டி ஒன்று கேட்டு அதைச் செய்யாது இருப்பேனா?" என்றவனது புன்னகையில் அவருக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.



"ரேகா வெகுளி பெண் சர்வா. எந்த நிலையிலும் நீ அவளைக் கண் கலங்க விடக் கூடாது." என்ற மீனம்மாளின் வலது கரத்தின் மீது தனது வலதுகரத்தினை அழுத்தமாய் வைத்து,



"நிச்சயமாய்ப் பப்ளிமாசை கலங்காது பார்த்து கொள்ளுவேன்." என்று அவன் சத்தியம் செய்யாத குறையாகச் சொல்ல... இதைவிட அவருக்கு என்ன வேண்டும்! அவருக்குப் பெருத்த நிம்மதியாக இருந்தது.



"எனக்கு உங்க மகன், மருமகளிடம் கொஞ்சம் பேச வேண்டியது இருக்கு. இப்போது அவங்களையும் வர சொல்கிறேன்."



"அது என்ன என் மகன், மருமகள். உன் அப்பா, அம்மா இல்லையா? படவா..." அவர் அவனது காதினை பிடித்து முறுக்க...



"ஐயோ, வலிக்குதே... அவங்க என்னோட அப்பா, அம்மா தான். ஒத்துக்கிறேன்..." அவன் போலியாக அலற... மீனம்மாள் சிரித்தபடி கையை எடுத்தார். அவனும் புன்னகை மாறாது தனது பெற்றோரை அறைக்கு அழைத்தான்.



தாமோதரன், மந்தாகினி இருவரும் பெருத்த யோசனையுடன் மகனது அறைக்கு வந்தனர். சர்வேஸ்வரன் அவர்களைக் கண்டு அங்கிருந்த சோபாவில் அமருமாறு விழிகளால் பணித்தான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்தனர்.



"மீனுக்குட்டி என்னென்னமோ சொல்றாங்க... உண்மையா?" அவன் நேரடியாக விசயத்திற்கு வந்தான்.



தாமோதரன் மகனது குணம் அறிந்து அமைதி காத்தார். ஒற்றை வார்த்தைக்காகப் பல கோடி ரூபாய் நஷ்டத்தை வரவழைத்துக் கொண்டது அவருக்குத் தானே தெரியும். அதனால் அவர் வாயை மூடி கொண்டார். மந்தாகினி கணவரது ஆதரவை எதிர்பார்த்து ஏமாந்தவர் பிறகு தானே மகனிடம் பேசலானார்.



"உண்மை தான் சர்வா."



"ஏனிந்த தீடீர் முடிவு? வேறு பெண் எதுவும் கிடைக்கலையா?" அவன் அவரை ஆழம் பார்த்தான்.



"நீ சொன்னது போல் இந்தக் காலத்தில் யார் அப்படி இருப்பார்கள்? இந்தக் காலத்தில் கட்டின புருசனையே மதிக்கிறது இல்லை. இதில் பாட்டியை மதிக்கணும், மரியாதை கொடுக்கணும்ன்னா யார் வருவாங்க. இதே இது ரேகான்னா உனக்கு நான் சொல்லவே தேவையில்லை. அவள் அத்தையை மரியாதையாகப் பார்த்து கொள்ளுவாள். எங்களுக்கும் இது மாதிரி உனக்குப் பார்க்கணும்ன்னு ஆசையா என்ன? நீ போடுற கன்டிசன் அப்படி... இதுக்கு ரேகா தான் ஒத்து வருவாள். எது எப்படியோ நீ கல்யாணம் பண்ணினால் அதுவே போதும் எங்களுக்கு..." மந்தாகினி நீளமாய்ப் பேசி முடித்தார்.



"சோ வேலைக்காரியை வீட்டுக்காரியாக்க முடிவு பண்ணிட்டீங்க. சூப்பர்." மகன் தன்னைக் கேலி செய்கின்றானோ என்று மந்தாகினி சந்தேகமாய் அவனை உற்று பார்த்தார். அவனோ சாதாரணமாகத் தான் இருந்தான்.



"சரி, நான் உங்க விருப்பப்படியே கல்யாணம் பண்ணிக்கிறேன் என்றே வையுங்கள். நீங்க உதியை மீண்டும் வேலைக்காரியா நடத்த மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்?" அவனது கேள்வி சுளீரென்று மந்தாகினியை தாக்கியது.



"சர்வா, என்னப்பா சொல்ற? ரேகா உன்னைக் கல்யாணம் பண்ணி கொண்டாலே அவள் இந்த வீட்டு பெண்ணாகி விடுவாள். அவளுக்கு உண்டான மரியாதை எப்போதும் கிடைக்கும். அவள் எப்போதுமே என்னுடைய பேத்தி தான்." மீனம்மாள் அவசரமாகப் பேரனுக்கு எடுத்து சொன்னார்.



"அதை உங்க மருமகள் சொல்ல மாட்டேங்கிறாங்களே..." அவன் தனது அன்னையைப் பார்த்தான்.



"அது..." மந்தாகினி திணறினார்.



தாமோதரன் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். மகனது பேச்சு போகும் திசையை அவர் அறிந்திருந்தாரோ!



"உங்க விருப்பத்திற்காக மட்டுமே இந்தத் திருமணம். அதுவும் நீங்கள் கை காட்டும் பெண்ணை... அப்படி என்றால் அந்தப் பெண்ணை நீங்க தான் நன்றாகப் பார்த்துக்கணும். எனக்கு என்னுடைய மனநிம்மதி முக்கியம். வெளியில் ஆயிரத்தெட்டு பிரச்சினைகளைத் தீர்த்துட்டு வர்றவனுக்கு வீட்டிலும் பிரச்சினை இருக்கக் கூடாது." என்ற மகனை மந்தாகினி கோபமாய்ப் பார்த்தவர்,



"அதுக்கு நாங்க என்ன செய்யணும்? ரேகாவை தொட்டிலில் போட்டு தாலாட்டணுமா?" அவர் சுள்ளென்று கேட்டார்.



"அது அநாவசியம்..." என்றவனைக் கண்டு, 'திமிரை பாரேன்' என்று மந்தாகினியால் முணுமுணுக்க மட்டுமே முடிந்தது.



"உதயரேகாவை நீங்க ஒரு சகமனுசியாய் மதித்து நடந்து கொண்டாலே போதுமானது. முன்பு மாதிரி அவளை வேலைக்காரியா நடத்த கூடாது. அவளை வார்த்தைகளால் அவமானப்படுத்தக் கூடாது. இந்த வீட்டு மருமகளாய் அவளுக்கு உண்டான மரியாதையை நீங்க கொடுத்து தான் ஆகவேண்டும். முக்கியமா மாமியார், மருமகள் சண்டை அறவே கூடாது."



"கல்யாணம் முடிக்கிறதுக்கு முன்னாடியே நீ பொண்டாட்டிதாசனா மாறிட்ட சர்வா." மந்தாகினிக்கு ஆற்றாமை தாங்க முடியவில்லை.



"இல்லவே இல்லை... நான் சொன்ன மாதிரி எனக்கு என் மனநிம்மதி முக்கியம். அதுக்குத் தான் இதெல்லாம். நான் நிம்மதியா இருக்கணும்ன்னா உதி நிம்மதியா இருக்கணும். அது உங்க கையில் தான் இருக்கு." என்றவன்,



"அப்புறம் ஒரு முக்கியமான விசயம்... உதி எக்காரணம் கொண்டும் கலங்க கூடாது, கண்ணீர் விடக் கூடாது. ஏன்னா எனக்கு என்னுடைய நிம்மதி முக்கியம்." என்று அவன் முடிக்க...



வேறுவழியின்றி மந்தாகினி கோபத்தை அடக்கி கொண்டு மகனது வார்த்தைகளுக்குச் சம்மதமாய்த் தலையை ஆட்டினார். அவருக்குத் தான் வேறு வழியில்லையே.



'பய பாயிண்ட்டை பிடிச்சிட்டான்.' தாமோதரன் மகனது எண்ணத்தை உணர்ந்தவராய் மனதிற்குள் சிலாகித்துக் கொண்டார். அவனது சாமர்த்தியம் சுட்டுப் போட்டாலும் அவருக்கு வராது.



பெற்றோரும், பாட்டியும் சென்றதும் சர்வேஸ்வரனுக்கு வாய்விட்டு சிரிக்க வேண்டும் போலிருந்தது. அடுத்த நொடி அவன் அரக்கத்தனமாய் அறை அதிர வாய்விட்டுச் சிரித்தான்.



"இஃப் யூ ஆர் பேட், ஐயம் யுவர் டாட்..." அவனுள் இருக்கும் அரக்கன் உற்சாகமாய் ஆர்ப்பரித்துச் சிரித்தான்.



அவர்கள் நடிகன் என்றால்... அவன் மகாநடிகனன்றோ!!!



தொடரும்...!!!
 

Sasimukesh

Administrator
அத்தியாயம் : 15



இரு விழிகளையும் மூடி, கரங்களைக் குவித்துத் தன் முன் நின்றிருந்த உதயரேகாவை சர்வேஸ்வரன் இமைக்காது பார்த்திருந்தான். அவளது இதழ்கள் எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தது. அதில் அவனது நலனும் அடங்கி இருப்பதை அவன் அறிந்தே இருந்தான். அவனது உதடுகளில் புன்னகை தோன்றியது. மீண்டும் அவனது பார்வை அவளைப் பார்த்தது. எப்போதும் உடுத்தும் சாதாரணப் புடவை, கழுத்தில், காதில், கரங்களில் செயற்கை அணிகலன்கள் அணிந்து அவள் மிகச் சாதாரணமாகத் தான் இருந்தாள். ஆனால் மஞ்சளில் குளித்த அவளது மஞ்சள் முகம், நீண்ட கூந்தல், இதழ்களில் வாடாத புன்னகை அனைத்தும் அவளை மற்ற பெண்களிடம் இருந்து தனித்து அசாதாரண அழகியாகக் காட்டியது.



அவனுடன் வந்த போதும் அவள் தனக்கான ஒப்பனையில் அக்கறை காட்டவில்லை, மெனக்கெடவில்லை. அது தான் அவனுக்குமே பிடித்திருந்தது. திருமண விசயம் பாட்டி அல்லது பெற்றோர் மூலமாக அவளுக்குத் தெரிவிக்க இருப்பதில் அவனுக்கு விருப்பம் இல்லை. அவனே அவளிடம் சொல்ல வேண்டும். அப்போது அவள் காட்டும் உணர்வுகளை அவன் சொட்டு சொட்டாய் தனக்குள் உள்வாங்க வேண்டும். அது அவனது பேராசை. அதனால் தான் பட்டம்மாள், உதயரேகாவிடம் தான் பேசுவதாகக் கூறிய மந்தாகினியிடம் வேண்டாம் என்று அவன் மறுத்து விட்டான். இன்று தான் அவன் அவளிடம் தங்களது திருமண விசயத்தைப் பற்றிப் பேச இருக்கின்றான். அதற்காகத் தான் அவன் அவளைக் கோவிலுக்கு அழைத்து வந்திருக்கின்றான்.



கடவுளை வேண்டி முடித்து விட்டு விழிகளைத் திறந்த உதயரேகாவை கண்ட சர்வேஸ்வரன் சட்டென்று தனது விழிகளை மூடி கொண்டான். அர்ச்சகர் பிரசாதம் கொண்டு வந்து கொடுக்கும் வரை அவன் விழிகளைத் திறக்கவில்லை. அர்ச்சகர் இருவருக்கும் பிரசாதத்தைக் கொடுத்துவிட்டு செல்ல... அவனோ திருநீறை பூசாது அவளைப் பார்த்தான். உதயரேகா தனது நெற்றியில் திருநீறை பூசியபடி நிமிர்ந்தவள் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த அவனைக் கண்டு என்னவென்று பார்த்தாள். அவன் தனது கரங்களில் இருந்த திருநீறை பார்த்தான்.



"கோவிலில் எப்படி?" அவள் தயக்கத்துடன் சுற்றுமுற்றும் பார்த்தபடி கேட்டாள். அவனோ அவளை அழுத்தமாய்ப் பார்த்தபடி நின்றிருந்தான்.



வேறுவழியின்றி அவள் அவன் அருகே வந்தாள். அவள் அருகில் வந்ததும் அவன் குனிந்து தனது நெற்றியை காட்ட... அவள் தனது கரத்தில் இருந்த திருநீறை எடுத்து அவனது நெற்றியில் வைத்து விட்டாள். அதன் பிறகே அவனது முகத்தில் மகிழ்ச்சி தோன்றியது.



"போகலாம்..." என்றவனைப் பின்தொடர்ந்து அவளும் சென்றாள்.



இருவரும் வீட்டை நோக்கி பயணித்தனர். எதற்காக அவன் கோவிலுக்கு அழைத்தான்? என்று அவளுக்குத் தெரியவில்லை. ஏதாவது முக்கியமான நாளா? அதுவும் அவளுக்குப் புரியவில்லை. வீடு வந்ததும் இருவரும் காரிலிருந்து இறங்கினர். வீட்டிற்குள் சென்ற போது மீனம்மாள் அங்கு இருந்தார்.



"பப்ளிமாஸ், ஜூஸ் எடுத்துக்கிட்டு ரூமுக்கு வா. அப்படியே உன்னிடம் இருக்கும் தாரிகாவின் ஃபோட்டோவும்..." அவன் அவளிடம் சொல்ல... அவள் சரியென்று விட்டு உள்ளே சென்று விட்டான்.



"மீனுக்குட்டி, பப்ளிமாஸ் கிட்ட கல்யாணம் பத்தி பேச போறேன். என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க." என்று அவன் அவரது பாதம் பணிந்தான்.



"ரேகா உன் மனசு குளிரும்படியான நல்ல பதிலை தருவாள். உங்க கல்யாணம் நல்லபடியா நடக்கும்." அவர் மகிழ்ச்சியுடன் பேரனை வாழ்த்தினார்.



சர்வேஸ்வரன் விசிலடித்தபடி தனது அறையை நோக்கி சென்றான். அவன் அறைக்கு வந்த சில நிமிடங்களில் உதயரேகா பழச்சாறை எடுத்துக் கொண்டு அவனது அறைக்கு வந்தாள். அவள் அனுமதி கேட்டு அறையின் உள்ளே வந்தாள். அவன் பால்கனியில் அமர்ந்து இருந்தான். அவள் அங்கே சென்று அவனிடம் பழச்சாறை நீட்டினாள். அதோடு தாரிகாவின் புகைப்படத்தையும்... இரண்டையும் வாங்கி மேசை மீது வைத்தவன் அவளிடம்,



"அங்கே பிரிஜ் மேலே ஒரு கிளாஸ் இருக்கும் எடுத்துட்டு வா..." என்று கூற... அவள் மறுபேச்சு பேசாது அவன் சொன்னதைச் செய்தாள்.



சர்வேஸ்வரன் பழச்சாறை இரண்டு கோப்பைகளிலும் சரிபாதியாய் ஊற்றியவன் ஒரு கோப்பையை எடுத்து அவளிடம் நீட்டினான்.



"எனக்கு வேண்டாம்." அவள் மெல்லிய குரலில் மறுத்தாள்.



"நீ குடித்தால் தான் இங்கே இருந்து போக முடியும்." என்றவனைக் கண்டு அவள் ஒன்றும் பேசாது பழச்சாறை குடித்து விட்டு அவனைப் பார்த்தாள்.



"உட்கார்..." அவன் நிதானமாகப் பழச்சாறை பருகியபடி அவளிடம் சொன்னான்.



"இல்லை வேண்டாம். நான் நிற்கிறேன்." அவள் சொன்னதும்...



"அப்போ சரி... நானும் நிற்கிறேன்." என்றபடி அவனும் எழுந்து நின்று கொண்டான். அவனது செயல்கள் அனைத்தும் புதிதாக இருப்பதைக் கண்டு அவள் மிரட்சியுடன் அவனைப் பார்த்தாள்.



"நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் பேசறது உனக்குத் தெரியுமா?" அவன் எந்தவித மேல்பூச்சும் இல்லாது நேரடியாக விசயத்திற்கு வந்தான்.



சர்வேஸ்வரன் சொன்னது கேட்டு உதயரேகாவுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இருந்தும் தன்னைச் சமாளித்துக் கொண்டவள்,



"பொய் தானே... சும்மா விளையாடுறீங்க தானே." என்று பயத்தில் திக்கி திணறி பேச...



"உன் கிட்ட நான் பொய் சொல்லுவேனா.." அவன் அவளைக் கண்டு ஆதூரமாய்ப் புன்னகைத்தான்.



அவன் சொன்னதைக் கேட்டு அவளுக்குத் தான் உள்ளம் அதிர்ந்தது. அவளது தளிர்மேனி நடுங்கியது. அவள் பிடிமானத்திற்காக நடுங்கும் தனது கரங்களைக் கொண்டு பால்கனி கம்பியை இறுக பற்றிக் கொண்டாள். அவன் மலை, அவள் மடு... அவன் கோபுரம், அவள் குப்பைமேடு... எப்படி இது சாத்தியம்? நடைமுறைக்கு ஒவ்வாத விசயமல்லவா இது! அவளுக்குத் திகைப்பாக இருந்தது.



"எங்க வீட்டு பெரியவங்க அதாவது அம்மா, பாட்டி ரெண்டு பேரும் தான் இந்தக் கல்யாண பேச்சை எடுத்தது." அவன் அவளது திகைப்பினை ரசித்தபடி கூறினான். இதற்காகத் தானே அவனே விசயத்தை அவளிடம் பேசுவதாகச் சொன்னது.



"நான் அவங்க கிட்ட பேசுறேன்." அவள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சொன்னாள்.



"என்னன்னு?" அவன் கூர்மையாய் அவளைப் பார்த்தான்.



"வேண்டாம்ன்னு..."



"நான் வேண்டாம்ன்னா..." அவனது வார்த்தைகளில் திடுக்கிட்டவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவனது முகத்தில் இருந்து அவளால் எதையும் யூகிக்க முடியவில்லை.



"இல்லை இல்லை... உங்களை வேண்டாம்ன்னு யாராவது சொல்வாங்களா? நான் உங்களுக்குப் பொருத்தம் இல்லை. அதனால் நான் உங்களுக்கு வேண்டாம்ன்னு சொல்ல போறேன்." என்றவளை கண்டு அவன் மெச்சுதலாகப் பார்த்தான். இந்த நிலையிலும் அவள் அவனை வேண்டாமென்று சொல்லவில்லை.



"இந்தத் திருமணமே மீனுக்குட்டிக்காகத் தான்." என்றவனைக் கண்டு அவளது திகைப்பு இன்னமும் அதிகரித்தது.



"பெரியம்மாவுக்காகவா?" அவள் திகைப்பாய் கேட்க...



"ஆமா, மீனுக்குட்டியை உன்னால் மட்டும் தான் நல்லா பார்த்துக்க முடியும்." அவன் சொன்னது கேட்டு அவளது முகத்தில் நிம்மதியின் சாயல் தோன்றியது. அந்தக் கணம் நகைக்கடையில் நடந்த சம்பவம் அவளுக்கு நினைவுக்கு வந்தது. அவளது மனம் அமைதியானது. அவளது இதழ்களில் புன்னகை தோன்றியது. அவளது முகமாற்றத்தை அவன் யோசனையுடன் அவதானித்துக் கொண்டிருந்தான்.



"பெரியம்மா பத்தி நீங்க கவலைப்பட வேண்டாம். அவங்க கடைசிக் காலம் வரை நான் அவங்களைப் பத்திரமா பார்த்துப்பேன். அதுக்கும், கல்யாணத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அதுக்காக எல்லாம் நீங்க இந்த முடிவுக்கு வர வேண்டாம்." அவள் புன்னகையுடன் கூற... அவனது புன்னகை மறைந்து போனது. அவள் சொன்னால் அவன் கேட்டுவிடுவானா என்ன!



"சம்பந்தம் இருக்கிறதே... எனக்கு வர போகிறவ மீனுக்குட்டி கிட்ட மரியாதையோடு நடந்துக்கணும். அப்படி நடந்துக்கலைன்னா அடுத்த நொடி டிவோர்ஸ் தான்." என்று அலட்சியமாகச் சொன்னவனைக் கண்டு அவள் அதிர்ச்சியாகப் பார்த்தாள். அவளது அதிர்ச்சி கண்டு அவனுக்குக் குதூகலமாக இருந்தது.



"நான் கோர்ட், கேஸ்ன்னு அலையணும்ன்னு நினைத்தால்... நீ உன் விருப்பம் போல் இரு. இல்லைன்னா நம்ம கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லு."



"இருந்தாலும்..." இப்போதும் அவளுக்கு ஒட்டாத நிலை தான். எப்படிப் பொருந்தும்? அதுவே அவளது மனநிலை...



"சே எஸ் ஆர் நோ... ஒண்ணு ஆமாம்ன்னு சொல்லு. இல்லை இல்லைன்னு சொல்லு." அவன் கண்டிப்பான குரலில் கூற...



"வேறுவழியே இல்லையா?" அவள் அவனைப் பாவம் போல் பார்த்தாள். தனக்காகப் பாவம் பார்க்கும் அவளைக் கண்டு அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அதேசமயம் அவளது பாவனை அவனுக்குச் சிரிப்பை வரவழைத்தது.



"வேறுவழியே இல்லை." அவனும் அவளைப் போன்றே பாவனையுடன் சொல்ல... அவள் தனக்குள் யோசித்தபடி அமைதியாக இருந்தாள்.



"உன்னோட தயக்கம் எனக்குப் புரிகிறது. பெரியவர்கள் விருப்பத்தினால் நடக்கும் கல்யாணம் தான். ஆனாலும் இது உண்மை கல்யாணம். சாஸ்திர, சம்பிரதாயப்படி அக்னி சாட்சியா உன் கழுத்தில் கட்டும் தாலிக்கு... வாழும் காலம் முழுமைக்கும் நான் உண்மையா இருப்பேன். நீ ஒருத்தி தான் என் ஒரே மனைவி. இந்த ஒரு உத்திரவாதத்தை மட்டும் நான் உனக்குக் கொடுக்கிறேன்." என்றவனைக் கண்டு அவள் பதறி தான் போனாள்.



"ஐயோ பிரின்ஸ்... நான் உங்களை நம்பாமல் இல்லை." அவள் பதற்றத்தோடு அவனைப் பார்த்தாள்.



"அப்போ சம்மதம் சொல்லு." என்றவனை நிமிர்ந்து பார்த்தவள்,



"எனக்குப் பயமா இருக்கு." என்று உண்மையான பயத்துடன் சொல்ல...



அவளது விழிகளில் தெரிந்த பயத்தைக் கண்டவன், "என் கண்களைப் பார்." என்று அவன் சொல்ல... அவளும் அவன் சொல் கேட்டு அவனது விழிகளை உற்று நோக்கினாள். "நான் எப்பவும் உன் கூட இருப்பேன். என்னை நம்பு." என்றவனின் பார்வையில், வார்த்தையில் அவளது மனம் சற்று அமைதி அடைந்தது. அவள் மௌனமாகத் தலையை ஆட்டினாள்.



"எனக்கு வாய்மொழியாகப் பதில் வேண்டும்." அவன் விடாக்கண்டனாய் நிற்க...



"சம்மதம்..." வேறுவழியின்றி அவள் தனது திருவாய் மலர்ந்தாள்.



"அப்புறம் ஒரு விசயம்... எந்தக் காரணத்திற்காகவும் நம் திருமணம் தோற்க கூடாது. நீ திருமண வாழ்க்கையை இயல்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும். நான் என்ன சொல்ல வருகிறேன் என்று உனக்குப் புரிகிறதா?"



அவன் சொன்னதன் அர்த்தம் அவளுக்குப் புரிந்ததோ இல்லையோ! அவன் கூற்றை மறுக்கக் கூடாது என்பது மட்டும் அவளுக்குப் புரிந்தது. அவள் சரியென்று தலையாட்டினாள்.



"இனி இதற்கு வேலை இல்லை." அவன் மேசை மீதிருந்த தாரிகாவின் புகைப்படத்தைக் கிழித்துக் குப்பை தொட்டியில் போட்டான்.



அதைக் கண்டு அவளது மனம் கனத்தது. இருவருக்குமான ஜோடி பொருத்தம் எத்தனை அழகாக இருந்தது. தாரிகா சரியில்லை என்றால் வேறு அழகான பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டியது தானே? தன்னை எதற்காக? அவளுக்கு இதயத்தில் நெருஞ்சி முள் குத்தியது போன்று ஒரு நெருடல்... தொண்டையில் முள் சிக்கியது போன்று ஒரு அவஸ்தை. இதை அவனிடம் எப்படிச் சொல்வது?



உதயரேகாவின் எண்ணம் போகும் திசையைச் சர்வேஸ்வரன் அறிந்து கொண்டானோ!



"உள்ளே வா..." அவன் அவளை அறைக்குள் அழைத்தான். அவளும் அவன் சொன்னது கேட்டு அவனின் பின்னேயே சென்றாள்.



"இங்கே நில்லு..." அவன் அவளை ஆளுயர கண்ணாடி முன்னே நிற்க வைத்தான். பின்பு தானும் அவளின் பின்னே நெருங்கி நின்றான். ஆனால் அவளைத் தொடவில்லை.



"பொருத்தம் எப்படியிருக்கிறது?" அவன் அவளிடம் கேட்டான்.



அவள் தயக்கத்துடன் இருவரையும் பார்த்தாள். எந்த விதத்திலும் அவள் அவனுக்குப் பொருத்தம் இல்லை. படிப்பு, பணம், அந்தஸ்து இதெல்லாம் இல்லை என்றாலும் கூடப் பரவாயில்லை. ஆனால் பார்த்ததும் பாராட்டும் தோற்ற பொருத்தம் கூட இருவருக்கும் இடையில் இல்லவே இல்லை. ஆணழகனாய் அவன், அவலட்சணமாய் அவள்... அவன் உடற்பயிற்சி செய்து கட்டுடலுடன் கம்பீரமாக இருந்தான். அவளோ உடல் பெருத்து அவனுக்கு அக்கா போன்ற தோற்றத்தில் இருந்தாள். சரி, நிறமாவது இருக்கிறதா? சிவந்த நிறத்துடன் இருக்கும் அவன் அருகில் அவளது மாநிறம் கூட மங்கி போய்க் கருப்பாகத் தெரிந்தது. மொத்ததில் இருவருக்கும் பொருந்தவில்லை என்பதே உண்மை. அந்த நொடி அவளது மனக்கண்ணில் தாரிகாவின் பிம்பம் தோன்றியது.



அவளுள் ஓடும் உணர்வுகளை அவன் படித்தானோ என்னவோ! அவன் கண்ணாடியை பார்த்துக் கொண்டே அவள் காதருகில் குனிந்து, "இது தான் நிரந்தரம். இது தான் சூப்பர் ஜோடி பொருத்தம்" என்று மென்மையாய் மயக்கும் குரலில் கூற... அவனது குரல் அவளை ஸ்தம்பிக்கச் செய்தது. அவளது காது மடலில் உரசிய அவனது மூச்சுக்காற்றின் ஸ்பரிசத்தில் அவளுக்குப் பயத்தில் மூச்சடைத்தது.



"நான் சொல்றது உனக்குப் புரியுதா பப்ளிமாஸ்?" இன்னும் அவன் நிமிராது அவளிடம் ரகசியம் பேசினான்.



அவள் தான் அவன் என்ன சொன்னாலும் தலையை ஆட்டுவாளே! அதே போன்று இப்போதும் அவள் தலையை ஆட்டி வைத்தாள். ஆனாலும் இருவரது பொருந்தா பொருத்தத்தைக் கண்டு அவளுள் கலக்கம் இருந்து கொண்டே இருந்தது.



"கொஞ்சம் இரு." என்றவன் பால்கனிக்கு சென்றுவிட்டு ஒரு நொடியில் மீண்டும் திரும்பி வந்தான். அவனது கரத்தில் சிவப்பு ரோஜா வீற்றிருந்தது.



"அன்று உரிமை இல்லாது கொடுத்தேன். இன்று உரிமையோடு கொடுக்கிறேன்." அவன் பூவை அவளிடம் நீட்ட... அவளோ பெரும் தயக்கத்துடன் வாங்கிக் கொண்டாள். அன்று மன சஞ்சலம் இல்லாது வாங்கியது போன்று இன்று வாங்க முடியவில்லை.



உதயரேகா பூவை பார்த்தபடி தலைகுனிந்து நிற்க... அவளைக் கண்டு அவனுக்குச் சிரிப்பு வந்தது.



"சரி நீ போ..." அவன் சொன்னதும் அவள் வேகமாகக் கதவினை நோக்கி நடந்தாள்.



"இந்தச் சர்வேஸ்வரனின் மனைவி உதயரேகா தான் என்பதை அழுத்தமாய் மனதில் பதிய வைத்து கொள்." என்று அவன் கத்தி அழுத்தி சொல்ல... அவள் திரும்பி பார்க்காது அங்கிருந்து ஓடி விட்டாள்.



சர்வேஸ்வரன் கண்ணாடியில் தன்னைப் பார்த்து தலையைக் கோதியபடி தனக்குள் சிரித்துக் கொண்டான். அவள் சம்மதம் கூறிய காட்சியே அவனது மனக்கண்ணில் மீண்டும் மீண்டும் தோன்றியது. அவனது மனம் மகிழ்ச்சியில் துள்ளியது.



"ஒத்த சொல்லால என் உசிர எடுத்து வச்சிக்கிட்டா

ரெட்ட கண்ணால என்ன தின்னாடா

பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்திவச்சி

நித்தம் குடிச்சு என்னைக் கொன்னாடா"


*************************

 

Sasimukesh

Administrator
மீனம்மாள் தானே நேரில் சென்று பட்டம்மாளிடம் சர்வேஸ்வரன், உதயரேகா திருமணத்தைப் பற்றிப் பேசினார். பட்டம்மாள் சந்தோசத்தில் திக்குமுக்காடி போனார். பேத்திக்கு இப்படி ஒரு வாழ்வு அமையத்தான் எல்லா வரன்களும் தட்டி போனதோ! அவருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த நொடி அவரது உயிர் போனால் கூட அவருக்குக் கவலையில்லை. உதயரேகா தான் திக்திக் மனதுடன் இருந்தாள். இந்தத் திருமணம் பொருந்தா திருமணம் என்கிற எண்ணம் அவனது மனதில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. அதேசமயம் சர்வேஸ்வரனின் வார்த்தைகளை மீறும் துணிவும் அவளுக்கு இல்லை.



சர்வேஸ்வரன், உதயரேகா திருமணம் விசயம் மந்தாகினி மூலம் தாரிகாவுக்கும் எட்டியது. அவள் தனக்குச் சாதகமான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தாள்.



மூத்த மருமகள் வித்யா இந்தச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தாள். ஏன், எதற்கு? என்று அவள் கணவன் ஆகாஷை கேள்விகளால் துளைத்து எடுக்க... அவனோ 'இது சர்வேஸ்வரன் திருமணம், அவனுக்கு விருப்பம் இருக்கிறது... இடையில் பேச நீயும், நானும் யார்?' என்று முடித்துக் கொண்டான். வித்யா தனது வீட்டினரிடம் சர்வேஸ்வரன் குழந்தை உதயரேகாவின் வயிற்றில் வளருகிறது. அதனால் தான் இந்தத் திருமணம் என்று ஒரு புதுப் புரளியை கிளப்பித் தனது மனதின் பொறாமையை ஆற்றி கொண்டாள். பின்னே வேலைக்காரிக்கு வந்த வாழ்வு அப்படிப்பட்டது அல்லவா! சர்வேஸ்வரன் என்றால் சும்மாவா!



அன்று சர்வேஸ்வரன் தனது அன்னையிடம் பேசுவதற்காக அவரைத் தேடி வந்தான். மந்தாகினியும் மகனை புன்னகையோடு தான் வரவேற்றார். ஆனால் அவன் சொன்ன விசயத்தைக் கேட்டு அவரது புன்னகை மறைந்து போனது.



"உனக்குக் கொஞ்சமாவது அறிவு இருக்கா சர்வா? ரேகாவை போய் என் வருங்கால மருமகள்ன்னு நான் எப்படிச் சம்பந்தி வீட்டுக்காரங்க கிட்ட சொல்லுவேன்?" மந்தாகினி பதட்டத்தில் படபடத்தார்.



"அப்போ நீங்க இன்னும் உதியை வேலைக்காரியா தான் பார்க்கிறீங்களா?" அவன் நிதானமாக அவரைக் கண்டு கேட்க...



"அப்படியில்லைடா." அவர் மென்று முழுங்கினார். ஆமென்று அவர் எப்படிச் சொல்லுவார்?



"அப்போ ஏன் அக்காங்க வீட்டுக்குப் போய்ப் பேச வர மாட்டேங்கிறீங்க?"



"எதுக்கு இத்தனை ஆர்ப்பாட்டம்? உறுதி பண்றதுக்கு எதுக்கு அவங்க எல்லாம்? நேரே கல்யாணத்தைக் கோவிலில் வைத்து சிம்பிளா முடிச்சுக்கலாமே?" மந்தாகினி மெல்ல தனது எண்ணத்தைச் சொல்ல...



"நான் உங்க மகன் தானே?" அவனது கேள்வியில் அவர் விக்கித்துப் போனார்.



"என்னடா சர்வா, இப்படிக் கேட்கிற?" அவருக்கு ஆற்றாமையாக இருந்தது. அவன் அவர் பெற்ற மகன் இல்லையா?



"ஆகாஷ் கல்யாணத்தை நீங்க எப்படி நடத்தினீங்கன்னு கொஞ்சம் நினைச்சு பாருங்க. ஊரை கூட்டி, பெரிய மண்டபம் எடுத்து ரொம்பப் பெருசா அவனுக்குக் கல்யாணம் பண்ணியதா எனக்கு ஞாபகம். அதே மாதிரி எனக்குப் பண்ணும் எண்ணம் உங்களுக்கு இல்லையா?" அவன் கேட்டதற்கு அவரால் பதில் கூற முடியவில்லை. கடப்பாரையை விழுங்கியது போல் அவர் நின்றிருந்தார்.



"உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா... நீங்க ஒதுங்கிக்கோங்க. என் கல்யாணத்தை நான் ஜாம்ஜாம்ன்னு இந்த ஊரே அதிரும்படி பெருசா பண்ணிக்கிறேன். அப்படிப் பண்றதுக்கான பணமும், வலிமையும் எனக்கு இருக்கு." தான் யாரையும் நம்பி இல்லை என்பதை அவன் அழகாகச் சொல்ல...



"சர்வா, என்ன இப்படிச் சொல்லுற? அப்பான்னு நான் எதுக்கு இருக்கேன்? உன் கல்யாணம் என் பொறுப்பு." அப்போது தான் அங்கு வந்த தாமோதரன் மகனது பேச்சை கேட்டு மனம் வருந்தி... அவனது மனம் குளிரும்படி பதிலை சொன்னார். அதேசமயம் அவர் மனைவியை முறைக்கவும் தவறவில்லை.



"தேங்க்ஸ்ப்பா..." என்று அங்கிருந்து செல்ல முயன்றவன் பின்பு என்ன நினைத்தானோ! நின்று தனது தந்தையை அணைத்து விடுவித்து விட்டு விறுவிறுவெனச் சென்று விட்டான்.



"உங்களுக்கு என்ன பைத்தியமா? தாரிகா என்ன சொல்லி இருக்கிறாள்?" மந்தாகினி கணவனிடம் கோபம் கொள்ள...



"உனக்குத் தான் பைத்தியம் பிடித்திருக்கிறது. தாரிகா பைத்தியம். எவளோ சொன்னதைக் கேட்டு ஆடாதே. சர்வா நம்ம மகன். அவன் கல்யாணத்தைச் சந்தோசமா நடத்தி கொடுக்க வேண்டியது நம்ம கடமை." தாமோதரன் மனைவியைக் கண்டு கடிய...



"அப்போ தாரிகா?"



"இங்கே பார் மந்தாகினி, அந்தப் பெண் மீது பரிதாபம் இருக்கிறது தான். அதுக்காக நம்ம மகனை ஒதுக்க முடியாது. அப்படி ஒதுக்கினால் அதனோட விளைவுகள் வேறு மாதிரி இருக்கும். சர்வாவை பத்தி உனக்குத் தெரியலை. புத்திசாலியா பிழைச்சுக்கோ."



தாமோதரன் அவ்வளவு சொல்லியும் மந்தாகினி மனதில் தாரிகாவின் மீதிருந்த பரிதாபம் அப்படியே இருந்தது.



அன்றிரவு ஆகாஷ் வரவேற்பறையில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தான். அறைக்குள் சென்றால் மனைவி என்னும் தொல்லை காத்திருக்குமே. அதற்குப் பயந்தே அவன் அறைக்குச் செல்லாது இருந்தான். தொலைக்காட்சியைப் பார்த்து கொண்டிருந்தவன் திடுமென,



"எல்லோரும் ஓடி வாங்க... சீக்கிரம்..." என்று கத்தி குரல் கொடுக்க...



எல்லோரும் என்னவோ ஏதோவென்று ஓடி வந்தனர். சமையலறையில் இருந்து உதயரேகா கூட வெளியில் வந்து எட்டிப்பார்த்தாள். தோட்டத்தில் அமர்ந்திருந்த மீனம்மாளும் என்னமோ ஏதோ என்று பதறி வீட்டை நோக்கி நடக்க...



"மெல்ல போகலாம் மீனுக்குட்டி... அவனுக்கு வேற வேலையில்லை. சும்மா எதையாவது பார்த்துட்டு கத்திக்கிட்டு இருப்பான்." சர்வேஸ்வரன் அவரது கரத்தினைப் பற்றி மெல்ல நடத்தி சென்றான்.



சர்வேஸ்வரன் மீனம்மாள் இருவரும் வீட்டினுள் வரும் போது எல்லோரின் பார்வையும் தொலைக்காட்சியை ஆவெனப் பார்த்துக் கொண்டிருந்தது. உதயரேகா கூட ஆவெனப் பார்த்திருந்தாள். அங்கே தொலைக்காட்சி திரையில் தெரிந்தது சாட்சாத் நம் உதயரேகாவே தான். உதயரேகா தெருநாய்களுக்கு உணவு அளிப்பது போல், நாய்களைக் குளிப்பாட்டுவது போல், கல்லால் அடிப்பவர்களிடம் இருந்து நாயை காப்பாற்றுவது போல், விபத்தில் உடல் முழுவதும் அடிப்பட்டுக் காயங்களில் சீழ் பிடித்து இருக்கும் நாய் ஒன்றுக்கு அவள் மருந்திடுவது போல்... இப்படி உதயரேகாவுக்கும், ஐந்தறிவு ஜீவன்களுக்கும் இடையேயான அழகான பந்தத்தைப் பறைச்சாற்றும் விதமாகப் பல காணொளிகள் விதம் விதமாய்த் தொலைக்காட்சியில் தோன்றியது.



எல்லோரும் வியப்பாய் தொலைக்காட்சி திரையையும், அவளையும் மாறி மாறி பார்த்திருந்தனர். அவளது இன்னொரு பக்கம் கண்டு வீட்டினருக்கு ஆச்சிரியமாக இருந்தது. ஆனாலும் வித்யா அவளை அலட்சியமாகத் தான் பார்த்தாள்.



அந்தக் காணொளியோடு உதயரேகாவுக்குச் சென்னை ப்ளூ க்ராஸ் அமைப்பின் செயலாளராகப் பதவி கிடைத்து இருப்பதையும், அவளது தொண்டினை பாராட்டி தனியார் நிறுவனம் ஒன்று விருது கொடுக்கப் போவதையும் தொலைக்காட்சியில் கூறினர்,



"ஹேய் ரேகா, செம செம... வாழ்த்துகள் மா..." முதலில் ஆகாஷ் தான் அவளுக்கு வாழ்த்துச் சொன்னது.



அடுத்து தாமோதரன் வாழ்த்து சொல்ல... வேறுவழியின்றி மந்தாகினி வேண்டாவெறுப்பாய் வாழ்த்து சொல்ல... மீனம்மாள் சந்தோசத்துடன் அவளிடம் சென்றவர், "ஐந்தறிவு ஜீவன்கள் மீது நீ வைத்திருக்கும் பாசம் ரொம்பவே பெருசு. வாழ்த்துகள் ரேகா." என்று அவளை அன்போடு அணைத்துக் கொண்டார். பிறகு அவளை விடுவித்தவர், "முதலில் இந்த விசயத்தைப் பட்டுவிடம் போய்ச் சொல்லு. சந்தோசப்படுவாள்." என்று சொன்னார். அவள் சரியென்பது போல் தலையாட்டினாள்.



உதயரேகாவின் விழிகள் அடுத்துச் சர்வேஸ்வரனை நிமிர்ந்து பார்த்தது. அவனும் புன்னகையுடன் அவளைத் தான் பார்த்திருந்தான்.



"என்ன மேடம், பெரியாளாகிட்டீங்க போல? என்னை எல்லாம் ஞாபகம் இருக்குமா?" என்று அவன் அவளிடம் வம்பு வளர்த்தான்.



"அச்சோ பிரின்ஸ்... நான் எப்பவும் உங்க பப்ளிமாஸ் தான்." அவள் வெகுளியாய் அறியாமையுடன் சொன்னாள்.



தொலைக்காட்சியில் வந்த காணொளி பற்றிப் பெருமை கிடையாது. கிடைத்திருக்கும் பதவி பற்றிக் கர்வம் கிடையாது. அவளுக்குத் தெரிந்தது எல்லாம் அன்பு மட்டுமே! அதை அவனும் அறிந்து இருந்தானோ! அவனது உதடுகள் புன்னகையில் விரிந்தது.



"வாழ்த்துகள்..." என்றவனை அவள் லஜ்ஜையுடன் பார்த்தாள்.



"குட் நைட்..." அவன் சொன்னதும்... அவள் அங்கிருந்து ஓடி விட்டாள்.



சர்வேஸ்வரன் இப்போது அன்னை புறம் திரும்பி, "நாளைக்கு நாம அக்காங்க வீட்டுக்குப் போகிறோம். இனி மறுக்க எந்தக் காரணமும் இல்லையே?" என்று ஒருவித அழுத்தத்துடன் கேட்க...



மந்தாகினி திகைத்து போய் மகனை பார்த்தார்.



"உங்க சம்பந்தக்காரங்க வீட்டில் பெண் யார் என்று கேட்டால்... அவள் ப்ளூ கிராசில் செக்ரட்டரியாக இருக்கிறாள். அன்புக்காக, மனிதாபிமானத்திற்காக அவள் விருது வாங்க இருப்பதையும் சேர்த்து சொல்லுங்க." என்றவன் பாட்டியை அழைத்துக் கொண்டு சென்று விட்டான்.



மந்தாகினிக்கு ஏதோ புரிந்தது போலவும் இருந்தது. புரியாதது போலவும் இருந்தது.



"அவன் சொல்லுகிறபடி நடந்தால் உனக்கு நல்லது மந்தாகினி." தாமோதரன் சொல்லிவிட்டு சென்று விட்டார். மந்தாகினி திகைப்பு மாறாது நின்றிருந்தார்.



தனது அறை பால்கனியில் வந்து நின்ற சர்வேஸ்வரன் சற்றுத் தள்ளியிருந்த உதயரேகாவின் வீட்டினை பார்த்தான். அவளது அறை இருண்டு போயிருந்தது. தூங்கி விட்டாள் போலும் என்று நினைத்தவனின் உதடுகளில் புன்னகை தவழ்ந்தது. அவனது எண்ணம் சற்று முன் தொலைக்காட்சியில் வந்த காணொளியை பற்றிச் சிந்தித்தது.



அதை அவன் தான் எல்லாத் தொலைக்காட்சிகளுக்கும் அனுப்பி வைத்திருந்தான். இதற்காக அவன் பெரும் பணத்தைச் செலவழித்து இருந்தான். அவளுக்காக எதையும் செய்ய நினைப்புவனுக்கு இது ஒன்றும் பெரிய விசயம் இல்லையே! தனது சரிபாதியை தனக்குச் சரிக்குச் சமமாக உயர்த்துவது தானே இணையின் அழகு. அதை இங்கு அவன் அழகாகச் செய்திருந்தான். அவளுக்காக மட்டுமே செய்திருந்தான்.



இனி யாரும் அவனது உதயரேகாவை கை நீட்டி ஒரு சொல் சொல்லிவிட முடியுமோ! அவள் அவனது பப்ளிமாஸ் மட்டுமல்ல... அவனது திருமதியும் கூட...



மறுநாள் காலையில் சர்வேஸ்வரன் எழும் போது அவனது வீட்டின் வெளியே பெரும் கூச்சல் கேட்டது. அவன் பால்கனி வழியே கீழே எட்டிப்பார்த்தான். வீட்டின் வாசலின் முன்னே கூடியிருந்த ஊடகங்களைக் கண்டு அவனுக்கே சற்று ஆச்சிரியமாக இருந்தது. அவன் காவலாளிக்கு அழைத்துக் கேட்க... எல்லோரும் உதயரேகாவை காண வந்திருப்பதாய் சொல்ல... அவர்களைக் காத்திருக்கச் சொன்னவன் வேகமாகக் குளித்து முடித்து உடை மாற்றிக் கொண்டு கீழே சென்றான்.



அங்கே உதயரேகா எதையும் அறியாது பூஜையறையில் கடவுளை வேண்டியபடி நின்றிருக்க... இன்று அவன் உரிமையுடன் பூஜையறை வாயிலில் போய் நின்றான். அவள் வழக்கம் போல் தீபாராதனை தட்டை ஏந்தியபடி திரும்ப... அங்கே இனிய அதிர்ச்சியாகச் சர்வேஸ்வரன் நின்றிருப்பதைக் கண்டவள் புன்னகையுடன் தீபாராதனையை அவனிடம் காட்டினாள். அவன் தீபாராதனையைக் கண்களில் ஒற்றிக் கொண்டதும்... அவள் திருநீறை எடுத்து அவனது நெற்றியில் வைத்து விட்டாள்.



உதயரேகா தீபாராதனை தட்டை வைத்து விட்டு வெளியில் வரும் வரை பொறுமையாக இருந்தவன் பின்பு அவளிடம் வாசலில் ஊடகங்கள் காத்திருப்பதைச் சொன்னான். அவள் மிரட்சியுடன் அவனைப் பார்த்தாள்.



"நானிருக்கேன்ல வா..." அவன் அவளை அழைத்துச் சொன்றான்.



வீட்டின் வாயிலில் குழுமியிருந்த ஊடகங்களைக் கண்டு உதயரேகாவுக்குள் பதற்றம் தொற்றிக் கொண்டது. அவள் தன்னையும் அறியாது அவனது கரத்தினை இறுக பற்றிக் கொண்டாள். சர்வேஸ்வரன் திரும்பி அவளைப் பார்த்தான். அவளது ஸ்பரிசத்தில் அவனது மனதில் ஆழி பேரலை போன்று உணர்வுகள் ஆர்ப்பரித்தது. அவன் தனது உணர்வுகளை அடக்கியபடி நிமிர்ந்தவன் அங்கிருந்த ஊடகங்களைக் கண்டு கர்வமாய்ச் சொன்னான்.



"இப்போது இவங்க மிஸ் உதயரேகா. வருங்காலத்தில் இவங்க மிஸஸ் உதயரேகா சர்வேஸ்வரன்."



சர்வம் துணை இருக்கும் போது... உதயத்தினைத் தடுக்க யாரால் இயலும்!



தொடரும்...!!!
 

Sasimukesh

Administrator
அத்தியாயம் : 16



சர்வேஸ்வரன் தனது அறையில் கிளம்பி கொண்டிருந்தான். இளம் நீல நிற முழுக்கை சட்டை, அடர் நீல நிற நீள கால்சராய் அணிந்து அழகாகக் கிளம்பி கொண்டிருந்தான். இன்று அவனுக்கும், உதயரேகாவுக்கும் திருமண உறுதி விழா நடக்கவிருக்கிறது. அதாவது பெண் பார்த்து பூ வைப்பது... அதற்காகத் தான் அவன் தயாராகிக் கொண்டிருந்தான். இந்த விழாவிற்கு அவனது அண்ணன், அக்காள்கள் இருவரின் புகுந்த வீட்டினர் வரவிருக்கின்றனர். எல்லோரையும் அழைத்தே அவன் இந்த விழாவை நடத்த இருக்கின்றான்.



மஞ்சரி மாமனார், மாமியாருடன் கூட்டுக் குடும்பத்தில் தான் இருக்கின்றாள். அதனால் சர்வேஸ்வரன் பெற்றோருடன் பெங்களூர் சென்று அவர்களை அழைத்திருந்தான். அவன் அங்கே செல்லும் முன் உதயரேகா பற்றிய விபரங்கள் அனைத்தும் அவர்களுக்குத் தெரியுமாறு பார்த்துக் கொண்டான். மஞ்சரியின் மாமனார், மாமியார் தங்களது மகளை அவனுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று எல்லாம் நினைக்கவில்லை. அது மஞ்சரியின் பேராசை. அதனால் அவர்கள் இயல்பாக அவனை வரவேற்றனர். அவர்கள் அவனிடம் அதிகம் கேள்விகள் கேட்கவில்லை.



"எல்லாம் இருந்தும் குணம் இல்லைன்னா குப்பையில... அதை உணர்ந்து நீ பெண் பார்த்து இருக்கிற. உன்னையும், வீட்டையும் அனுசரித்துப் போகும் பெண்ணைக் கல்யாணம் முடிக்க நினைக்கிற பார். அங்கே நிற்கிற நீ... தொழிலில் மட்டுமில்லை வாழ்க்கையிலும் நீ புத்திசாலி தான்." மஞ்சரியின் மாமியார் அவனைப் புகழ்ந்தார். அதேசமயம் அவரது பார்வை மஞ்சரியை கோபத்தோடு பார்த்தது.



பணம், அந்தஸ்து என்று மஞ்சரியை மகனுக்குக் கட்டி வைத்து விட்டு அவர் படும் பாடு அவருக்குத் தானே தெரியும். தனிக்குடித்தனம் போக வேண்டும் என்று மருமகள் மகனுக்குத் தூபம் போடுவது அவருக்குத் தெரியாதா என்ன?



அதேபோன்று தான் அமலாவின் புகுந்த வீட்டினரையும் சர்வேஸ்வரன் பெற்றோருடன் சென்று முறைப்படி அழைத்திருந்தான். அவர்கள் மதுரையில் இருந்தனர். அவர்கள் சற்றுக் கட்டுப்பட்டியான குடும்பம்... அதனால் தான் கவிதா அங்கிருந்து சென்னைக்கு அண்ணன் வீட்டுக்கு ஓடி வந்துவிட்டாள். அமலா அவளுக்கான சுதந்திரத்தை கொடுத்திருப்பதால் அவளுக்கு அண்ணன் வீடு தான் மிகவும் பிடிக்கும். இது எதுவும் சந்துருவின் பெற்றோருக்குத் தெரியாது. அவர்களுக்கும் தங்களது மகளைச் சர்வேஸ்வரனுக்குப் பேசும் எண்ணம் எல்லாம் இல்லை. ஏற்கெனவே பெண் எடுத்துப் படும் பாடு அவர்களுக்குத் தானே தெரியும். அமலாவின் அலட்டல் போக்கு அவர்களது குடும்பத்திற்கு ஒத்து வரவில்லை. அதனால் தான் சென்னையில் தொழிலை ஏற்படுத்திக் கொடுத்து மகனை தனியே வைத்து விட்டனர்.



சர்வேஸ்வரன் விசயம் கேள்விப்பட்டதும் அவர்களும் பெரிதாக அலட்டி கொள்ளவில்லை. எல்லோரின் மனதினையும் உதயரேகாவின் அன்பு வென்று இருந்தது.



"பொண்ணு பணிவா, கைக்கு அடக்கமா இருந்தால் போதும். இந்தக் காலத்தில் இப்படிப்பட்ட பெண் கிடைப்பது இல்லை. உனக்குக் கிடைத்து இருக்கு. பொக்கிசமா பார்த்துக்கப்பு." அமலாவின் மாமனார் அவனிடம் பாராட்டி பேச... மாமியாரும் அதை ஆமோதித்தார்.



அக்காள்களின் புகுந்த வீட்டினர் எளிதாகச் சம்மதித்தது சர்வேஸ்வரனுக்குமே ஆச்சிரியமாக இருந்தது. அவனுக்கு இருந்த மிகப் பெரிய பிரச்சினை தீர்ந்தது.



அதை எல்லாம் நினைத்தபடி சர்வேஸ்வரன் தன்னைக் கண்ணாடியில் ஒரு முறை எல்லாம் சரியாக இருக்கின்றதா என்று பார்த்துக் கொண்டான். அவன் வாசனை திரவியத்தைச் சட்டை மீது அடிக்கும் போது அறை கதவு தட்டப்பட்டது.



"எஸ், கம்மின்..." கதவு நோக்கி திரும்பியவன் குரல் கொடுத்தான்.



ஆகாஷ் தம்பியின் அறைக்குள் நுழைந்தான். அண்ணனை பார்த்ததும் தம்பிக்கு மிகுந்த ஆச்சிரியம்.



"என்னண்ணா, இந்த நேரத்தில் இங்கே வந்திருக்கீங்க?" சர்வேஸ்வரன் கேட்டு முடிக்கும் முன் ஆகாஷ் விரைந்து வந்து அவனை அணைத்துக் கொண்டான்.



"ஹேய், விடுங்க என்னை... சட்டை கசங்க போகுது." சர்வேஸ்வரன் சிரித்தபடி அப்படிச் சொன்னாலும் பதிலுக்குத் தானும் சகோதரனை அணைத்துக் கொண்டான்.



ஆகாஷ் தனது அணைப்பினை தளர்த்திவிட்டு தம்பியை பார்த்தவன், "என்னோட மாமியார், மாமனார் பேசியதை தப்பா எடுத்துக்காதே சர்வா. அதுக்காக நான் உன் கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்." என்று மனம் வருந்தி கூற...



சர்வேஸ்வரனுக்கு ஆகாஷின் மாமனார், மாமியார் சொன்னதை நினைத்து இப்போதும் முகம் இறுகியது. அவர்கள் தான் வித்யா சொன்னதை வேத வாக்காக எடுத்து கொண்டனரே. அதனால் அவர்களது பேச்சு அதனை ஒட்டியே இருந்தது.



"ஆனாலும் சின்ன மாப்பிள்ளை நீங்க இப்படி அவசரப்பட்டு இருக்க வேண்டாம். இப்போ பாருங்க, உங்களுக்குச் சமம் இல்லாத பொண்ணு மனைவியா வர போகுது. இதெல்லாம் தேவையா? அப்படியே தப்பு பண்ணினாலும் காதும், காதும் வைத்த மாதிரி பேசி முடிச்சிரணும்." என்று வித்யாவின் அப்பா கொஞ்சமும் விவஸ்தை இல்லாது பேச...



"அப்படின்னு யார் சொன்னது?" சர்வேஸ்வரன் முகம் இறுக கேட்டான்.



"என் மகனை பார்த்து இப்படிச் சொல்ல உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்?" தாமோதரனும் தனது குரலை உயர்த்தினார்.



அதைக் கேட்டு ஆகாஷின் புகுந்த வீட்டினர் பயந்து தான் போயினர். ஆகாஷ் இருந்திருந்தால் இன்னும் நிலைமை மோசமாகி போயிருக்கும். அவன் வேலையாக வெளியில் சென்றிருந்தான். வித்யாவின் பெற்றோருக்கு மகளைக் காட்டி கொடுக்க முடியாத நிலை. அதனால் எதையோ சமாளித்துப் பேசினர். அப்படியிருந்தும் சர்வேஸ்வரன் அவர்களை விழாவிற்கு அழைத்து விட்டே வந்தான். தாமோதரனுக்குக் கூட அவனது செய்கை பிடிக்கவில்லை.



"ஆகாஷுக்காக நாம பார்க்கணும்ப்பா. உதி நம்ம வீட்டில் சந்தோசமா வாழணும். அதுக்காக..." என்ற சின்ன மகனை அவர் பெருமை பொங்க பார்த்தார். அவர் காலம் தாழ்ந்து சில விசயங்களை உணர்ந்து கொண்டார்.



"இது எல்லாம் நான் செய்ய வேண்டியது." என்றவர் மகனது கரத்தினைப் பிடித்துக் கொண்டார். இனி சின்ன மகன் குடும்பத்தைப் பார்த்து கொள்வான் என்று அவருக்கு நிம்மதியாக இருந்தது. மந்தாகினி ஒன்றும் புரியாது பார்த்துக் கொண்டிருந்தார். வாழ்க்கையின் படிப்பினை, குடும்பத்தின் தாத்பரியத்தை இனி தான் அவர் கற்றுக் கொள்ளப் போகிறார்.



"சர்வா..." ஆகாஷ் அவனை உலுக்கியதும் சர்வேஸ்வரன் சுயவுணர்வு பெற்று அவனைக் கண்டு புன்னகைத்தான்.



"வாழ்க்கைக்கு என்ன தேவை என்பதை என்னை விடச் சின்னவனான உனக்குப் புரிந்து இருக்கிறது. ஆனா இது எல்லாம் எனக்குப் புரியாது போனது பாரேன்." ஆகாஷ் வருத்தத்துடன் சொன்னான். சர்வேஸ்வரன் ஒன்றும் பேசாது அண்ணனை பார்த்தான்.



"அழகு, பணம், படிப்பு, அந்தஸ்து இதெல்லாம் மனைவியாக வர போகிறவளுக்கு இருக்கணும்ன்னு நான் நினைச்சேன். அதனால் தான் காலேஜில் அப்படி எல்லாவற்றிலும் ஒத்து போன வித்யாவை காதலிச்சேன்." என்ற அண்ணனை அவன் கூர்மையாய் பார்த்தான்.



"என்னடா காதலிச்சேன்னு சொல்றேன்னு பார்க்கிறியா? என் நிலைமை அப்படித்தான் இருக்கு. இப்போ எங்களுக்கு இடையில் காதல் இருக்கான்னு தெரியலை." என்று பெருமூச்சுடன் சொன்னவன் மேலே பேசலானான்.



"கல்யாணத்துக்கு அப்புறம் தான் தெரியுது. அழகு, படிப்பு, அந்தஸ்து எல்லாமே வாழ்க்கைக்குத் தேவையில்லாத கானல்நீர்ன்னு... அன்பான, அனுசரணையான, பண்பான பெண் தான் வாழ்க்கைக்குத் தேவைன்னு இப்போ தான் புரியுது. வித்யா கிட்ட எல்லாம் இருக்கு. ஆனால் புரிதல்...?" என்றவன் காற்றில் 'ஸீரோ' என்பது போல் வரைந்து காட்டினான். சர்வேஸ்வரன் இதற்கு என்ன பதில் சொல்ல? அவன் அமைதியாக இருந்தான்.



"இப்போ எல்லாம் அலட்டல், ஆடம்பரம் இல்லாத அன்பான, அமைதியான வாழ்க்கைக்கு மனம் ஏங்குது." என்று ஏக்கத்துடன் சொன்ன ஆகாஷ், "ஆனா நீ புத்திசாலி சர்வா. சரியான சமயத்தில் சரியான முடிவு எடுத்திருக்க. ரேகா உனக்கு அன்பான, அனுசரணையான மனைவியா இருப்பாள். உன் வாழ்க்கை சிறப்பா இருக்கும்." என்று சொல்ல...



"நிச்சயமாய்..." சர்வேஸ்வரனின் முகம் புன்னகையில் மலர்ந்து இருந்தது.



"உனக்குக் கொஞ்சம் கர்வம் அதிகம் சர்வா. அது ரேகாவை பாதிக்காம பார்த்துக்கோ." ஆகாஷ் மூத்தவனாய் அறிவுரை கூற...



"அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்." அவன் புன்னகையுடன் கூறினான்.



இருவரும் இணைந்து வரவேற்பறைக்கு வந்த போது அனைவரும் வந்திருந்தனர். சர்வேஸ்வரன் வீட்டினனாய் எல்லோரையும் இன்முகமாய் வரவேற்றான். அவன் வித்யாவின் பெற்றோரையும் வரவேற்க தவறவில்லை.



"எனக்குத் தான் தலையெழுத்து... நீ எதுக்கு இவங்களை வரவேற்கணும்?" ஆகாஷ் கோபத்தில் பல்லை கடித்தான்.



"எல்லாம் உங்களுக்காகத் தான்... இது இன்றோடு முடியும் பந்தம் இல்லை." என்ற தம்பியை கண்டு ஆகாஷிற்கு வியப்பாக இருந்தது. தம்பியிடம் இருந்து அவன் கற்றுக் கொள்ள வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது போலும்.



வீட்டினர் மட்டுமே என்பதால் வீட்டிலேயே விழா நடத்தப்பட்டது. ஆனால் அலங்காரம் எல்லாம் மிகவும் ஆடம்பரமாகச் செய்யப்பட்டு இருந்தது. சமையலுக்குத் தேர்ந்த நிபுணரை அழைத்து இருந்தனர். எல்லாமே சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சர்வேஸ்வரன் பாட்டியிடம் ஒவ்வொன்றையும் ஆலோசனை கேட்டு அதன்படி செய்திருந்தான். அதனால் எல்லாமே நன்றாக வந்திருந்தது.



"ம்மா, நான் உங்க மேல கோபமா இருக்கேன்." மஞ்சரி அன்னையைக் கண்டு முறைத்தாள்.



"நானும் தான்." அமலா தன் பங்கிற்குச் சொல்ல...



"நான் என்னடி பண்ணினேன்?" மந்தாகினி புரியாது விழித்தார்.



"எங்க வீட்டுக்கு வர்றதா இருந்தால்... எங்க கிட்ட முதலிலேயே ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்ல. முதல் நாள் நைட் ஃபோன் பண்ணி சொல்லுறீங்க?" இருவரும் அன்னையிடம் காய்ந்தனர்.



"எனக்கே கிளம்புறதுக்கு முதல் நாள் நைட் தான் தெரியும்." மந்தாகினி பரிதாபமாக மகள்களைப் பார்த்தார்.



"முதலிலேயே சொல்லியிருந்தால் வராம தடுத்து இருப்போம். இப்போ எல்லோருக்கும் சொல்லி, ஊரு முழுக்கத் தம்பட்டம் அடித்து... இந்தக் கூத்தை பார்த்துக் கோபம் கோபமா வருது." இருவரும் புசுபுசுவென மூச்சு விட்டபடி கோபமாய்க் கத்தினர்.



"சர்வா உங்க ரெண்டு பேரோட மாமனார் கிட்டேயும் அப்பாயிண்ட்மென்ட் வாங்கிட்டு வந்து தான் என் கிட்டேயே சொன்னான். அதுக்குப் பிறகு நான் என்ன சொல்ல? அப்படியே நான் உங்க கிட்ட சொன்னாலும்... நீங்க என்ன பண்ணியிருக்க முடியும்?" மந்தாகினி இருவரையும் கண்டு கேட்க... இருவரும் இயலாமையில் கோபத்துடன் அமர்ந்து இருந்தனர்.




"என்ன பண்ணன்னு எனக்கே தெரியாம இருக்கேன்? இப்போதைக்குப் பேசாம இருங்க. பிறகு பார்த்துக்கலாம்." மந்தாகினி மகள்களைச் சமாதானப்படுத்தினார். அதற்குள் அனைவரையும் அழைக்கவும்... வேறுவழியின்றி மூவரும் சென்றனர்.
 

Sasimukesh

Administrator
உதயரேகா தனது பாட்டி பட்டம்மாளுடன் அங்கு வந்து சேர்ந்தாள். இந்த ஒரு மாத காலமாக அவளுக்கு வேலைகளில் இருந்து ஓய்வு கொடுக்கப்பட்டது. அதற்கும் மந்தாகினி முறுக்கி கொண்டு சண்டைக்கு வந்தார். ஆனால் ஒன்றுக்கு இரண்டு வேலையாட்களைச் சர்வேஸ்வரன் நியமித்ததும் அவர் வாயை மூடி கொண்டார். இந்த ஒரு மாத காலத்தில் உதயரேகாவின் அழகில் பெரிய மாற்றம் வந்திருந்தது. வேலைகள் எதுவும் செய்யாது தணலில் இல்லாது நிழலில் இருந்ததால் அவளது சருமம் நன்கு மெருகேறி இருந்தது. அதிக வேலைப்பளு காரணத்தால் அதிகம் உண்டவள்... இப்போது வேலை அதிகம் இல்லாததால் உணவினை குறைத்து இருந்தாள். அது அவளது தேகத்தில் நல்ல மாற்றத்தை விளைவித்து இருந்தது. 'ஸீரோ சைஸ்' அளவிற்கு இல்லை என்றாலும் சிறிது இடை சிறுத்து காணப்பட்டாள்.



இப்போது அழகு நிலைய பெண்களின் உபயத்தில் உதயரேகா பேரழகியாகக் காட்சி அளித்தாள். அடர் நீல நிற புடவையில், அதற்கு ஏற்றார் போன்று நகைகள் அணிந்து, நீண்ட கூந்தலை பின்னி பூச்சூடி அவள் அழகுற நின்றிருந்தாள். புடவை, நகைகள் அனைத்தும் சர்வேஸ்வரன் தான் வாங்கிக் கொடுத்திருந்தான். பணம் கொடுக்க நினைத்த பாட்டியிடமும் அவன் உறுதியாய் மறுத்து விட்டான். இப்போது தன் முன் நின்றிருந்த தன்னவளை கண்டு அவன் இமைக்க மறந்து பார்த்திருந்தான். இதுநாள் வரை அவன் பார்த்திருந்த அவனது 'பப்ளிமாஸ்'ஆ இது என்று அவனுக்கே ஆச்சிரியமாக இருந்தது.



உதயரேகா பக்கம் பட்டம்மாள் மட்டுமே நின்றிருந்தார். அதனால் மீனம்மாள் பேரனிடம் அனுமதி கேட்டு அவள் பக்கம் செல்ல நினைத்தார். அதற்குள் மஞ்சரி, அமலா இருவரின் புகுந்த வீட்டினர்,



"ரேகா முறைக்கு எங்களுக்கு மகள் போல... அதனால் நாங்க அவள் பக்கம் நிற்கிறோம்." என்று கூறியவர்கள் அவள் பக்கம் வந்து நின்றனர்.



"எங்க அம்மா, அப்பாவே அங்கே நிற்கும் போது நாங்களும் அங்கேயே செல்கிறோம்." செல்வம், சந்துரு இருவரும் பெற்றோர் பக்கம் சென்று விட்டனர். மனைவியர் முறைத்ததை இருவரும் கண்டு கொள்ளவே இல்லை.



"நான் மட்டும் தனியா நிற்கணுமா?" என்று கேட்ட ஆகாஷ் உதயரேகா பக்கம் வந்து நின்றவன், "என்ன எல்லோரும் திகைச்சுப் போய்ப் பார்க்கிறீங்க? நான் ரேகாவுக்கு அக்கா கணவனா இங்கே நிற்கிறேன்." என்று சொல்ல...



"நான் அக்காவா? அதுவும் இவளுக்கு? இவள் தான் பார்க்கிறதுக்கு எனக்கு அக்கா மாதிரி இருக்கிறாள்." வித்யா கோபத்தோடு கணவனிடம் எகிறினாள்.



"கல்யாணமானாலே பெண்கள் ஆன்ட்டி தான். அப்படிப் பார்த்தால் இப்போது நீ ஆன்ட்டி." ஆகாஷ் வேண்டுமென்றே தனது மனைவியைக் கலாய்த்தான். அதைக் கேட்டு எல்லோரும் சிரித்தனர். வித்யா கணவனை முறைத்தபடி முகத்தைத் தூக்கி வைத்து கொண்டாள்.



பேத்திக்காக இத்தனை பேர் இருப்பது கண்டு பட்டம்மாளுக்கு ஆனந்த கண்ணீரே வந்துவிட்டது. அவருக்கு மிகவும் சந்தோசமாக, நிம்மதியாக இருந்தது. மீனம்மாளுக்கும் மிகவும் சந்தோசமாக இருந்தது. சொந்த பந்தங்கள் கூடியிருப்பதே தனி மகிழ்ச்சி அல்லவா!



திருமண உறுதி பத்திரத்தை பெரியவரான மஞ்சரியின் மாமனார் வாசித்தார். பிறகு மணமக்கள் கரங்களில் புது உடை அடங்கிய தம்பாள தட்டுக் கொடுக்கப்பட்டது. இருவரும் சபையினரை வணங்கி தட்டினை வாங்கிக் கொண்டனர்.



சிறிது நேரத்தில் இருவரும் உடை மாற்றிக் கொண்டு வந்தனர். சர்வேஸ்வரன் இளஞ்சிவப்பு பருத்தியாலான சட்டையும், மணல் வண்ண நீள கால்சராயும் அணிந்திருந்தான். அதே இளஞ்சிவப்பு நிறத்தில் உதயரேகா பட்டுடுத்தி நின்றிருந்தாள். இருவரையும் அருகருகே நிற்க வைத்தனர். உதயரேகா உள்ளத்தில் நடுக்கத்துடன் சர்வேஸ்வரன் அருகில் வந்து நின்றாள். இன்னமும் அவளால் இதை எல்லாம் ஜீரணிக்க முடியவில்லை, நம்ப முடியவில்லை. இன்னமும் அவளுள் பெரும் தயக்கம் இருந்து கொண்டே இருந்தது.



"மதினி, நீங்க போய்ப் பொண்ணுக்கு பூ வச்சு விடுங்க." அமலாவின் மாமியார் மந்தாகினியிடம் சொன்னார். மந்தாகினி மனதில் வெறுப்பு இருந்தாலும் வெளியில் சிரித்தபடி எழுந்தார்.



"என்னோட வருங்காலப் பொண்டாட்டிக்கு நான் தான் பூ வைப்பேன்." என்ற சர்வேஸ்வரன் பூவை எடுத்து உதயரேகாவின் தலையில் அழகாய் சூடி விட்டான். அவனது அருகாமையில் அவளுக்குப் பயத்தில் வியர்க்க ஆரம்பித்தது.



சர்வேஸ்வரன் அவளைத் தன்புறமாய்த் திருப்பித் தன்னிடம் இருந்த வைர மாலையைக் கையில் எடுத்தான். அன்று அவன் நகைக்கடையில் ஒவ்வொன்றாகக் கையில் எடுத்து பார்த்து அதில் ஒன்றை தேர்ந்தெடுத்தானே அந்த மாலை தான் இது. அவன் ஒவ்வொரு வைர மாலையும் அங்கிருந்த கண்ணாடி வழியே தெரிந்த உதயரேகாவின் பிம்பத்தின் கழுத்தில் வைத்து அழகு பார்த்து... அதில் சிறந்த ஒன்றை தான் அவன் தேர்ந்து எடுத்திருந்தான். அதைக் கண்டு மந்தாகினி திகைத்துப் போனார். தாமோதரனுக்கு நகையை அடையாளம் தெரியவில்லை.



"இந்த நகை அன்னைக்குத் தாரிகா கூடப் போன போது வாங்கியது." மந்தாகினி மகள்களிடம் திகைப்புடன் கூறினார். ஏனெனில் அந்த நகையைக் கடையில் இருந்து வாங்கிக் கொண்டு வந்ததில் இருந்து அது மகனிடம் தான் இருக்கிறது. தாரிகா சம்பந்தம் முறிந்து போனதால் மகன் நகையைக் கடையில் திருப்பிக் கொடுத்திருப்பான் என்று அவராக நினைத்துக் கொண்டார். ஆனால் அப்படியில்லை என்று இன்று தானே தெரிகிறது.



"அப்போ எல்லாம் சர்வா பிளானா?" மஞ்சரி, அமலா இருவரும் திகைப்பில் வாயை பிளந்தனர்.



"ஒண்ணும் புரியலை." மந்தாகினி புலம்பினார். மூவருக்கும் நடப்பதை வேடிக்கை பார்ப்பதை தவிர வேறுவழி இருக்கவில்லை.



சர்வேஸ்வரன் யாரையும் கண்டு கொள்ளாது வைர மாலையை உதயரேகாவின் கழுத்தில் அணிவித்தான். அவனது கரங்கள் இரண்டும் அவளது தோள்பட்டையில் அழுத்தமாய்ப் பதிந்திருந்தது. அணிகலனை மாட்டும் போது அவனது கைவிரல்கள் அவளது பின்னங்கழுத்தில் மென்மையாய் அங்குமிங்கும் சதிராடியது. அவனது கைவிரல்களின் மெல்லிய ஸ்பரிசத்தில் அவளது பூவுடல் மெல்ல நடுங்கியது. அவளது மனதில் இருந்தது எல்லாம் அச்சம் மட்டுமே.



"பையன் வைர மாலை போட்டு இருக்கான். பொண்ணு வீட்டில் என்ன போட போறாங்க?" வித்யாவின் அன்னை கேலியாய் கேட்க...



பட்டம்மாள் தன்னிடம் இருந்த மோதிர பெட்டியை பேத்தியிடம் நீட்டினார். இதையும் அவன் தான் வாங்கித் தந்திருந்தான். அதாவது அன்று நகைக்கடையில் வாங்கிய வைர மோதிரம் தான் இது. தாரிகா தேர்வு செய்ததை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு அவன் தனக்குப் பிடித்ததைத் தனியே வாங்கி வைத்துக் கொண்டான்.



உதயரேகா நடுங்கும் கைவிரல்கள் கொண்டு சர்வேஸ்வரனின் வலக்கரத்தினைப் பற்றினாள். அவளது நடுக்கத்தை உணர்ந்தவனாய் அவன்,



"ரிலாக்ஸ் பேபி." என்று மென்மையான குரலில் அவளைத் தேற்ற...



அவள் அவனைக் கண்டு சிரிக்க முயன்று தோற்று பயத்துடன் தான் பார்த்தாள். அவன் விழிகளை மூடி அவளை ஆறுதல்படுத்தினான். அடுத்த நொடி அவள் மோதிரத்தை அவனது விரலில் போட்டுவிட்டு சட்டென்று தனது கரத்தினை விலக்கி கொண்டாள். அதைக் கண்டு அவன் தனக்குள் சிரித்துக் கொண்டான். பின்னர் இருவரும் பெரியவர்களின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர்.



திருமண உறுதி நல்லபடியாக முடிந்தது. எல்லோரும் சந்தோசமாக அமர்ந்து இருந்தனர். செல்வம், சந்துரு இருவரும் தனியே வந்து சர்வேஸ்வரனை வாழ்த்தினர்.



"எங்க தங்கைகளை நீ கல்யாணம் பண்ணிக்கலைன்னு எங்களுக்குக் கோபம் இருந்தது. ஆனா எங்க அப்பா, அம்மா ரேகாவை ஏத்துக்கிட்டது பார்த்து... நாங்களும் மனசு மாறி விட்டோம். உண்மையில் நீ வாழ்க்கையைத் துணையைச் சரியாகத் தேர்ந்தெடுத்து இருக்க." என்று மகிழ்வோடு கூறினர்.



விழாவிற்கு வந்தவர்கள் எல்லோரும் விடைபெற்று சென்றனர். இப்போது வீட்டினர் மட்டுமே எஞ்சி இருந்தனர். உதயரேகா பாட்டியை அழைத்துக் கொண்டு தனது வீட்டிற்குச் சென்று விட்டாள். தாமோதரன் வெளியே சென்றிருந்தார். மந்தாகினி மனது சரியில்லாது அறைக்குச் சென்று விட்டார். மீனம்மாள் ஓய்வு எடுக்கத் தனது அறைக்குச் சென்று விட்டார். இது தான் சந்தர்ப்பம் என்றெண்ணி சர்வேஸ்வரன் நேரே உதயரேகாவை காண அவளது வீட்டிற்குச் சென்றான். பட்டம்மாள் ஓய்வெடுக்கச் சென்றிருக்க... உதயரேகா தனது அலங்காரத்தைக் கலைத்து விட்டுச் சாதாரணப் புடவை அணிந்து வீட்டை ஒழுங்குப்படுத்திக் கொண்டிருந்தாள்.



"பேபி..." சர்வேஸ்வரனின் குரலில் அவள் திடுக்கிட்டு திரும்பி பார்த்தாள். 'பப்ளிமாஸ்' அழைப்பு இப்போது 'பேபி'ஆக மாறி போனதோ! அவளுக்குப் பக்கென்று இருந்தது.



"உள்ளே வரலாமா?" அவன் கேட்டதும் தான் அவளுக்குச் சுயவுணர்வு வந்தது.



"வாங்க, வாங்க... எதுக்கு அனுமதி எல்லாம் கேட்டுக்கிட்டு..." அவள் சொல்லவும் அவன் விரிந்த புன்னகையுடன் வீட்டினுள் நுழைந்தான்.



"அதுக்குள்ள எல்லாத்தையும் கழட்டி வச்சிட்டியா?" அவனது குரல் ஏக்கத்துடன் ஒலித்தது. அவனது விழிகள் ஏமாற்றத்துடன் அவளைப் பார்த்தது.



"வேலை செய்யும் போது கசகசன்னு இருக்கும்ன்னு..." அவள் தயங்கி தயங்கி பேச...



"அதுவும் சரி தான்." என்றவன் அவளை ஆழ்ந்து பார்த்து, "நான் உன் கிட்ட அனுமதி கேட்க தேவையில்லை தானே?" என்று கேட்க... அவள் ஆமென்பது போல் தலையாட்ட...



சர்வேஸ்வரன் அவள் அருகே வந்து அவளது நெற்றியில் தனது உதட்டினை அழுத்தமாய் வைத்து தனது முதல் அச்சாரத்தைப் பதித்து இருந்தான். அவன் தனது இருகரம் கொண்டு அவளை அள்ளி எடுக்கவில்லை. அவனது கரங்கள் அவளை ஆரத்தழுவி இருக்கவில்லை. அவனது உதடுகளும், அவனது மூச்சுக்காற்றும் மட்டுமே அவளை ஸ்பரிசித்து இருந்தது. அதற்கே அவள் பயத்தில் வெலவெலத்து போனாள். அவளுக்கு மயக்கம் வரும் போலிருந்தது. எங்கே கீழே விழுந்து விடுவோமோ என்று அவள் பயத்தில் தன்னையும் அறியாது அவனது சட்டைக்காலரை இறுக பிடித்துக் கொண்டாள். அவளது செயலில் அவன் அவளை இமைக்காது பார்த்திருக்க... அவளோ அச்சத்தில் உறைந்திருந்தாள். எவ்வளவு நேரம் அப்படியே இருந்தார்களோ!



"ரேகா..." பட்டம்மாளின் குரலில் இருவரும் மீண்டனர். அவள் தனது செயலில் முதலில் திகைத்து பின்பு அவசரமாகத் தனது கரங்களை விலக்கி கொண்டாள்.



சர்வேஸ்வரன் கசங்கி இருந்த தனது சட்டைக்காலரை நீவி விட்டவன், "நான் உன் புடவை கசக்காது முத்தம் கொடுத்தேன். ஆனால் நீ என் சர்ட் கசங்க..." என்று மேலே சொல்லாது கண்ணடித்துக் குறும்பாய் சிரிக்க... அவளோ பேவென நின்றாள்.



"நான் அப்படிச் சொல்ல மாட்டேன். ஆனா பார்க்கிறவங்க அப்படி நினைப்பாங்க." என்று கூறி மேலும் அவளைத் திகைக்க வைத்தவன், "பை பேபி..." அவளது கன்னத்தில் மெல்ல தட்டியபடி விடைபெற்றுச் சென்றான்.



நியாயத்திற்கு உதயரேகாவிற்கு அவனது தொடுகையில் மெய்சிலிர்த்திருக்க வேண்டும். ஆனால் அவளது மெய்யோ அச்சத்தில் நடுங்கி கொண்டிருந்தது.



*************************************



"கட்டாயம் கல்யாணத்துக்கு வந்திருங்க." சர்வேஸ்வரன் தனது திருமண அழைப்பிதழை நடேசனிடம் நீட்டினான்.



"கட்டாயம் வருவோம்." தந்தையை முந்தி கொண்டு கூறிய தாரிகா அதைத் தனது கரங்களில் வாங்கிக் கொண்டாள்.



"வரணும்ன்னு தானே பத்திரிக்கை வைக்கிறது." அவன் புன்னகையுடன் சொல்ல... அதைக் கண்டு அவளுக்கு உள்ளுக்குள் பற்றிக் கொண்டு வந்தது. ஆனால் அவள் அதை வெளியில் காட்டி கொள்ளவில்லை.



நடேசன் கோபமாய் ஏதோ சொல்ல வருவதைக் கண்டு தாரிகா தலையை மறுப்பாய் அசைத்தாள். அதைக் கண்டு நடேசன் அமைதியானார்.



"வாழ்த்துகள் சர்வா." தாரிகா தனது கரத்தினை அவன் முன் நீட்டினாள்.



"உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி." அவன் கை கொடுக்காது இருகரங்களையும் குவித்து நன்றி சொன்னவன் விடைபெற்று சென்று விட்டான்.



அவன் சென்றதும் நடேசன் மகளிடம் கோபத்தில் குதித்தார். அவரது மனைவியும் அதே கோபத்துடன் மகளைக் கடிந்தார்.



"எனக்கு மட்டும் என்ன குளுகுளுன்னா இருக்கு? உடம்பு எல்லாம் பத்திக்கிட்டு எரியுது." தாரிகா ஆத்திரத்தில் பல்லை கடித்தாள்.



"நீ என்னமோ அவனோட அம்மா கிட்ட அப்படிச் சொன்ன... ஆனா நடப்பது?" நடேசனுக்கு ஆற்றாமையாக இருந்தது.



"இதுவும் ஒருவிதத்தில் நல்லது தான்." என்றவளின் இதழ்கள் வில்லத்தனத்தோடு வளைந்தது.



காரை ஓட்டி கொண்டிருந்த சர்வேஸ்வரன் சகலத்தையும் அறிந்த சர்வேஸ்வரனாக வாய்விட்டு நகைத்தான்.




தொடரும்...!!!
 

ஶ்ரீகலா

Administrator
ஒரு வாரமாகிருச்சு… பரிசு பெற்றவங்களை அறிவிச்சிரலாமா???

சிறந்த விமர்சனம் மட்டுமல்ல… எந்தக் கதை அப்டேட் போட்டாலும் உடனே சுடச்சுட விமர்சனம், அதுவும் பெருசா போடுவாங்க இவங்க ரெண்டு பேரும்… இவங்களுக்கு மிக்க நன்றி மா 😍😘
1) Aruna Venu
2) @Rio

எப்போதுமே என்னைப் பின்தொடர்ந்து வர்றாங்க இவங்க எல்லாம்… நான் ஆறு மாசம், ஒரு வருசம் கழிச்சு வந்தாலும் அதே அன்போடு கமெண்ட்டோடு ஓடி வந்திருவாங்க. இவங்களுக்கு மிக்க நன்றி மா 😍😘

பேஸ்புக் :
1) Priya Saravanan
2) Srinivasan Krishnan
3) Ruba Jayaseelan
4) Amsaveni Rajasekharan

தளம் :
1) Saru S
2) Sarala K

ஒரு சிலர் நம்மையே பின்தொடர்வாங்க. ஏன் எதுக்குன்னு தெரியாம அன்பை பொழிவாங்க. அப்படிப்பட்டவங்க இவங்க. மிக்க நன்றி மா😍😘
Sudhakar

சிறந்த மீம் விமர்சனம்… ஆல்வேஸ் இவங்க தான். மிக்க நன்றி மா 😍😘
வனிதா கண்ணன்

இந்தக் கதைக்குப் புதிதாய் விமர்சனம் கொடுத்தாலும் மனதை கவர்ந்தவங்க இவங்க இரண்டு பேர்… மிக்க நன்றி மா 😍😘
1) Hameed Ahsan
2) Sadam Nasreen

இன்னும் நிறையப் பேர் இருக்கீங்க. அவங்களை எல்லாம் அடுத்த வாரம் பார்ப்போம். அதேபோல் லிஸ்ட்டில் வரலைன்னாலும் சிலரோட கருத்துகள் மனதை கவர்ந்து இருக்கிறது, ஒரு வார்த்தை என்றாலும் உடனே வந்து சொல்ற சிலரது அன்பும் மனதை கவர்ந்து இருக்கிறது. அப்படிப்பட்ட சிலர் சிறந்த தேர்வாகக் கதை முடிவில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். உங்களது தொடர் அன்பிற்கு நன்றி நன்றி நன்றி 😍❤️😘🙏
 

Attachments

  • IMG_0003.jpeg
    IMG_0003.jpeg
    44.3 KB · Views: 5

Sasimukesh

Administrator
அத்தியாயம் : 17



அந்தப் பெரிய திருமண மண்டபத்தின் ஒவ்வொரு மூலையிலும் ஆடம்பரம் மிளிர்ந்தது. தொழிலில் முடிசூடா மன்னனான சர்வேஸ்வரனின் திருமணம் என்றால் சும்மாவா! எல்லோரும் திரும்பி பார்க்கும் வகையில் மிகவும் பிரம்மாண்டமாய்த் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. நகரத்தில் உள்ள அத்தனை பெரிய மனிதர்களும் இன்று இங்கே தான் குழுமி இருந்தனர்.



விருந்தினர்களை வரவேற்க என்று தனியே பெண்கள் பதினோரு பேர் ஒன்று போல் புடவை உடுத்தி நிற்க வைக்கப்பட்டு இருந்தனர். விருந்தினர்களை அவர்களின் இடத்திற்குச் சென்று அமர வைக்க வேண்டி, அதாவது அவர்களை வழிநடத்துவதற்காக இளைஞர்கள் பலர் ஆங்காங்கே நின்றிருந்தனர். அவர்களது அனைவரின் கைகளிலும் வாக்கிடாக்கி இருந்தது. அதன் மூலம் ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டு விழாவை சிறப்பாக நடத்தி கொண்டிருந்தனர். நாற்காலியில் அமர்ந்த விருந்தினர்களுக்குக் குளிர்பானங்களைக் கொடுப்பதற்காகத் தனியே தனிக்குழு ஒன்று சுறுசுறுப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அனைத்தும் எண்ணெய் பூசப்பட்ட இயந்திரம் போன்று தங்கு தடையின்றித் திட்டமிட்டபடி கச்சிதமாக நடந்து கொண்டிருந்தது.



இதுவே இவ்வளவு ஆடம்பரம் என்றால் மணமக்கள் அமரும் மணமேடையின் ஆடம்பரத்தை கேட்கவும் வேண்டுமோ! மேடையின் பிண்ணனி அனைத்தும் பல்வேறு வண்ணம் கொண்ட ரோஜாப்பூக்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மணமக்கள் அமரும் மணவறை தேவலோகத்தின் அரசவை போன்று அத்தனை அழகாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. மணவறையின் மூன்று பக்கங்களிலும் சுற்றி மலர் மாலை திரை போன்று தொங்க விடப்பட்டு இருந்தது. மணமக்கள் அமருவதற்கான மணப்பலகை வெள்ளியில் அமைக்கப்பட்டு அதில் அத்தனை நுணுக்கமான வேலைப்பாடுகள் காணப்பட்டது. அதன் மீது சிவப்பு நிற பட்டுத்துணி போர்த்தப்பட்டு இருந்தது. அதன் இருபுறமும் இரு பெரிய வெள்ளி குத்துவிளக்குகள் முத்து போன்று சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்தது. மணப்பலகை முன்னால் ஹோமம் வளர்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அய்யர் அதன் அருகே அமர்ந்து மந்திரங்களை உச்சரித்தபடி ஹோமம் வளர்க்க தயாராகிக் கொண்டிருந்ததார்.



மணமேடை அருகில் இரு நாற்காலிகள் போடப்பட்டு அதில் மூதாட்டிகள் மீனம்மாள், பட்டம்மாள் இருவரும் அமர வைக்கப்பட்டு இருந்தனர். பேரன், பேத்தியின் திருமணத்தை அவர்கள் இருவரும் அருகில் இருந்து பார்ப்பதற்கு வசதியாக இந்த ஏற்பாடு. அவர்களைக் கவனிக்க என்று தனியே ஒரு ஆள் அருகிலேயே இருந்தார். பெரியவர்கள் இருவரின் முகத்திலும் பெருமிதம் கலந்த சந்தோசம் நிறைந்திருந்தது.



மணமேடைக்கு முன்னால் விஐபிக்களுக்கு என்று போடப்பட்டிருந்த சோபாவில் மந்தாகினி, மஞ்சரி, அமலா மூவரும் இறுக்கமான முகத்துடன் அமர்ந்து இருந்தனர். மூவருமே திருமண ஏற்பாட்டைத் தான் வைத்த கண் வாங்காது பார்த்து கொண்டிருந்தனர்.



"எங்க மூணு பேர் கல்யாணத்தைக் கூட நீங்க இத்தனை ஆடம்பரமா நடத்தியது இல்லை." அமலா பெருமூச்சுடன் சுற்றிலும் பார்வையை ஓட்டினாள்.



"நீ இதைப் பார்த்து பெருமூச்சு விடுற. ஆனா நான் வேலைக்காரிக்கு வந்த வாழ்வை நினைச்சு பெருமூச்சு விடுறேன். சர்வா அவளுக்கு வாங்கிக் கொடுத்திருக்கும் நகைகள், புடவைகள் எல்லாம் இந்தச் செலவை விடப் பல மடங்கு அதிகம். எனக்கும், உனக்கும் அதில் ஒரு பங்கு கூடச் செய்யலை." மஞ்சரி பொறாமையில் பொங்கினாள்.



"நானே என்ன நடக்குமோன்னு டென்சனில் இருக்கேன். நீங்க வேற..." மந்தாகினி திருமண மண்டபத்தின் வாயிலை அடிக்கடி திரும்பி பார்த்துக் கொண்டிருந்தார். தாரிகா எந்நேரமும் இங்கு வர கூடும் என்பது அவரது அனுமானம்.



"ஆனாலும் உங்களுக்கு இத்தனை ஓரவஞ்சனை ஆகாதும்மா. அவனுக்கு மட்டும் பணத்தைத் தண்ணியா வாரியிறைச்சு இருக்கீங்க." மகள்கள் இருவரும் அன்னையைக் குற்றம் சாட்ட...



"இது எல்லாம் சர்வா சம்பாதித்த பணம். அப்படிச் செலவு சைய்யணும்ன்னா நீங்களே சம்பாதிச்சுச் செலவு செய்ங்க. எங்களால் இவ்வளவு தான் செய்ய முடியும்." மந்தாகினி கடுப்புடன் பதில் கூறினார். அவரே எரிச்சலில் இருக்கும் போது மகள்கள் வேறு புலம்பினால் கோபம் வராதா!



"சரி சரி... கோபப்படாதீங்க. நீங்க ரேகாவை பார்த்தீங்களா? உறுதி பண்ணினப்போ பார்த்தது. அதுக்குப் பிறகு நான் பார்க்கவே இல்லை." மஞ்சரி அன்னையிடம் விசாரிக்க...



"நானும் தான் அவளைப் பார்க்கலை. அப்படி என்ன அவள் பெரிய இவளா? பூட்டி பூட்டி பாதுகாத்து வைக்கிறான். அவளே ஒரு அசிங்கம். அசிங்கத்தை எதுக்குப் பொக்கிசம் மாதிரி பாதுகாத்து வைச்சிருக்கான்?" அமலாவுக்கும் ஒன்றும் புரியவில்லை.



அவர்கள் கூறுவது போல் உறுதி பண்ணிய பிறகு உதயரேகா, பட்டம்மாள் இருவரையும் சர்வேஸ்வரன் தனியே தங்க வைத்து விட்டான். வீட்டில் இருந்து யாரையும் அவர்களைப் பார்க்க அனுமதிக்கவில்லை. மீனம்மாளுக்கு அவர்கள் இருவரும் இல்லாது போரடித்து விட... அவரை மட்டும் அழைத்துச் சென்று அவர்களிடம் விட்டு விட்டு வந்துவிட்டான். இப்போது தான் மீனம்மாளையும் அவர்கள் கண்ணில் காண்கின்றனர்.



"அப்படி என்ன சிதம்பர ரகசியம் இருக்கப் போகிறது? ரேகா வந்தால் தெரிந்துவிடப் போகிறது." மந்தாகினி அலட்சியமாகக் கூறினார். இன்னமும் உதயரேகா வேலைக்காரி தானே என்கிற உதாசீன மனப்பான்மை அவரிடத்தில் இருந்தது.



"இத்தனை விஐபிகள் மத்தியில் நிச்சயம் சர்வா நம்ம மானத்தை வாங்க போகிறான்." மஞ்சரி கோபத்தில் பல்லை கடித்தாள். மந்தாகினி, அமலா இருவருக்கும் அதே நினைவு தான்.



புற அழகை ஆராதித்தவர்கள் அக அழகை காண தவறி விட்டனர்!!



வித்யா ஒரு பக்கம் தனது பெற்றோருடன் அமர்ந்து மனதில் மூண்ட எரிச்சலோடு திருமண நிகழ்வை பார்த்திருந்தாள். அவளது திருமணத்தை விட மிகவும் ஆடம்பரமாக நடைபெறும் இந்தத் திருமணம் அவளுக்குப் பிடிக்கவே இல்லை. தன்னனை விட வேலைக்காரி எந்த விதத்தில் உயர்ந்து போனாள்? என்று அவளது உள்ளம் குமைந்தது.



இந்த வன்மம் எல்லாம் ஆண்களுக்கும், குழந்தைகளுக்கும் இல்லை போலும். தாமோதரன், ஆகாஷ் இருவரும் ஆளுக்கு ஒரு வேலையை இழுத்து போட்டுக் கொண்டு செய்து கொண்டிருந்தனர். செல்வம், சந்துரு இருவரும் மாப்பிள்ளை தோழனாகச் சர்வேஸ்வரன் அருகில் இருந்தனர். வீட்டு மாப்பிள்ளைகள் இருவரின் குடும்பத்தாரும் திருமணத்திற்கு வந்து முதல் வரிசையில் அமர்ந்து இருந்தனர். கரண் மற்றும் ரக்சி இருவரும் பட்டாடை அணிந்து கொண்டு பட்டாம்பூச்சி போன்று அங்குமிங்கும் பறந்து திரிந்து கொண்டிருந்தனர்.



முதலில் மண்டபத்திற்கு வந்த சர்வேஸ்வரன் மணமேடை ஏறாது தன்னவளுக்காகக் காத்திருக்கலானான். அவன் தான் தனது தேவதையை அழைத்துச் செல்ல வேண்டும் என்பதில் அவன் உறுதியாக இருந்தான். அவனது விழிகள் நொடி நேரம் கூட வாயிலை விட்டு அகலாது அங்கேயே பார்த்திருந்தது. அவனை அதிக நேரம் காக்க வைக்காது உதயரேகா அங்கு வந்து சேர்ந்தாள். அவளைக் கண்டதும் அவன் இமைக்க மறந்தான், தன்னை மறந்தான். இனிய அதிர்ச்சியில் அவன் சிலையாய் சமைந்து போனான். அவனுமே திருமணப் பரபரப்பில் இருந்ததால் அவளை வெகுநாட்கள் கழித்து இன்று தான் நேரில் பார்க்கின்றான்.



'பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ' என்ற பாடல் தான் சர்வேஸ்வரன் நினைவில் எழுந்தது. அடர் அரக்கு நிற பட்டில், உடல் முழுவதும் கொடி போன்று தங்க சரிகை இழையோட, புடவையின் ஒரு கரையோரம் மட்டும் அடர் பச்சை நிறம் கொண்டு பல லட்சங்களை விழுங்கிய பட்டுப்புடவை உதயரேகா தளிர்மேனியை தழுவியிருந்தது. திருமண வைபவத்திற்கு என்று வாங்கியிருந்த 'டெம்பிள் ஜூவல்லரி' நகைகள் அவளது உடலில் பாந்தமாய்ப் பொருந்தி இருந்தது.



'சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ' என்பதற்கேற்ப அவளது கன்னங்கள் இரண்டும் செயற்கையாய் இல்லாது இயற்கையாய்ச் சிவந்திருந்தது. அதைக் கண்டு மன்னவன் மனதில் மயக்கம் தோன்றியது.



'கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ' பாடல் வரியை ஒத்து அவளது அஞ்சனம் தீட்டிய இரு விழிகள் அரசனவனைக் கொல்லாது கொன்றது. 'சிரிப்பு மல்லிகை பூ' பூவை போன்ற பெண்ணவளின் புன்னகையும் பூவை விட மென்மையாக இருந்தது.



"சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யா பூ

அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர் பூ

மை விழி ஜாடைகள் முல்லை பூ

மணக்கும் சந்தன பூ

சித்திர மேனி தாழம் பூ

சேலை அணியும் ஜாதி பூ

சிற்றிடை மீது வாழை பூ

ஜொலிக்கும் செண்பக பூ"



பாடல் வரிகளுக்கு ஏற்ப மொத்ததில் தனது அழகால் மென்மையான பெண்ணவள் முரட்டு காளையவனை அசரடித்துக் கொண்டிருந்தாள். அவன் மீளவே இயலாத சுழலுக்குள் விரும்பியே புதைந்து போனான்.



மூன்று மாதங்கள்... நெடிய மூன்று மாதங்கள் சர்வேஸ்வரன் உதயரேகாவை யார் கண்ணிலும் படாது தனித்து வைத்திருந்தான். அவளுக்கு என்று டயட்டீசியன், ஜிம் டிரையினர், ப்யூட்டிசன் என்று எல்லாவற்றிற்கும் தனித்தனியே ஆள் நியமித்து இருந்தான். இந்த மூன்று மாத காலமும் அவள் அவர்கள் சொன்னப்படி தான் கேட்டு நடந்து கொண்டாள். அவளுக்கு இது பிடித்தம், இல்லை என்பது எல்லாம் கிடையாது. அவளது 'பிரின்ஸ்' எதைச் செய்தாலும் அதில் ஒரு நியாயம், காரணம் இருக்கும் என்று அவள் முழுமையாக நம்பினாள். அதனால் அவள் எதையுமே மறுக்கவில்லை. அதன் விளைவு மூன்று மாதங்கள் கழித்து அவள் தன்னைக் கண்ணாடியில் பார்த்த போது அவளாலேயே நம்ப முடியவில்லை.



இதோ மணப்பெண் அலங்காரத்தில் உதயரேகா மாசுமருவற்ற பூரண நிலவாக அவனின் முன்னே காட்சியளித்தாள். அவளது மாநிறம் நன்கு மெருகேறி, உடலில் அநாவசிய சதைகள் இல்லாது, சிக்கென்ற சிறுத்த இடையுடன் மாடல் அழகிகளே தோற்று போகும் அளவிற்கு அவள் அத்தனை அழகாக இருந்தாள். அவளை அவன் ரசித்துப் பார்த்திருந்தான் என்பதை விடப் பெருமையோடு பார்த்திருந்தான் என்பது சாலப்பொருந்தும். தனது குழந்தையை அலங்காரம் செய்து அதன் அழகினை ரசித்துப் பெருமையுடன் பார்க்கும் தாயின் உள்ளத்தை ஒத்திருந்தது அவனது உள்ளம்!



அவன் அவளது புற அழகை மட்டுமே மாற்றி இருந்தான். எந்தக் காரணம் கொண்டும் அவளது அக அழகை அவன் மாற்றியமைக்க முற்படவில்லை. அவளது வெகுளியான மன அழகு தானே அவனுக்குப் பிடித்தமானது. அவளது வெள்ளேந்தியான குணம் தானே அவனைக் கட்டி போட்டது. அவளது அன்பு தானே அவனை ஈர்த்தது. அதை மாற்றும் எண்ணம் அவனுக்கு என்றுமே இல்லை.



சர்வேஸ்வரன் விரிந்த புன்னகையுடன் சற்று கர்வத்தோடு அவளின் முன்னே சென்று நின்றான். உதயரேகா இமைகள் படபடக்க அவனைப் பயத்தில் பார்த்தாள். சுற்றுப்புறத்தை கண்டு அவளுள் தன்னையும் அறியாது பயம் எழுந்தது. சாதாரணப் பெண்ணை மகாராணியாக்கி அழகு பார்க்கின்றான் அவளது பிரின்ஸ். தான் அதற்குப் பொருத்தமானவளா என்பதே அவளது பயத்திற்கான காரணம். அவனது புன்னகை முகம், அணுசரணை எதுவுமே அவளது பயத்தைப் போக்கவில்லை.



"வா..." சர்வேஸ்வரன் புன்னகையுடன் தனது வலது கரத்தினை அவள் முன்னே நீட்டினான். அவள் தயக்கத்துடன் அவனைப் பார்த்தாள்.



"இதற்கே இப்படி என்றால்... காலம் முழுவதும் என்ன செய்வாய்?" அவன் புன்னகை மாறாது அவளது கரத்தினைத் தனது கரத்தோடு கோர்த்துக் கொண்டான்.



"விட்டு விடுவாயா?" அவன் அவளது காதருகில் குனிந்து ரகசியம் பேச... அவனது வார்த்தைகளில் திடுக்கிட்டு அவனை ஏறிட்டு பார்த்தவள் இல்லையெனத் தலையசத்தாள்.



"அப்போ வா..." என்றவன் நடக்க ஆரம்பிக்க... அவள் அவனுடன் இணைந்து நடந்தாள்.



அவன் முன்னே நடக்கவில்லை. அவளோடு இணைந்து நடந்தான். இனிமேலும் அனைத்திலும் அவனுக்கு இணையாக அவளை நடத்துவான். சில சமயங்களில் அவள் முன்னே செல்ல வேண்டிய சூழ்நிலை வந்தால்... அவளின் பின்னே அவன் செல்லவும் தயங்க மாட்டான். அனைவரையும் ஆட்டி படைக்கும் சர்வேஸ்வரனை ஆட்டி படைக்கும் சக்தி அவள் ஒருத்தியே!



"ரொம்ப அழகாயிருக்கப் பேபி." அவன் உண்மையாய் உணர்ந்து அவளது காதில் கிசுகிசுத்தான். அவள் நம்பாது அவனை ஏறிட்டாள்.



"நம்பலையா? என் கண்ணைப் பார் புரியும்." என்றவனின் விழிகளுக்குள் அவள் உற்று நோக்கினாள்.



அவனது கருவிழிகளில் அவளது அழகிய வதனம் தெரிந்தது. அதைத் தான் அவன் கேட்கின்றான் என்று எண்ணியவளாய் அவள், "ஆமா..." என்று கூறி புன்னகைத்தாள்.



அவனை விட அவள் அப்படி ஒன்றும் அழகியில்லை. ஆனால் அவனை ஏமாற்ற மனம் இல்லாது அவள் அப்படிக் கூறினாள். ஆனால் அவன் சொன்னதோ வேறு அர்த்தத்தில்... அவனது விழிகளில் வழிந்த மையலை, மயக்கத்தை அவள் உணரவே இல்லை. அவனோ அவளது வார்த்தைகளில் மகிழ்ந்தவன் அவளது கரத்தினை இறுக பற்றிக் கொண்டான்.
 

Sasimukesh

Administrator
"பார்த்தியா... வேலைக்காரிக்கு வந்த வாழ்வை. இதுக்குத் தான் அவளை நம்ம கிட்ட காட்டாம வச்சிருந்தான் போலிருக்கு." மஞ்சரி நொடித்துக் கொண்டாள். அமலா பொங்கும் கோபத்தை அடக்கி கொண்டு இருந்தாள். வேலைக்காரி தங்களுக்கு இணையாக இருப்பதா என்று...



மந்தாகினி ஒன்றும் பேசாது வியந்து போய் உதயரேகாவை பார்த்திருந்தார். மகன் அருகில் அவனுக்குப் பொருத்தமாய் நின்றிருந்த அவளைக் கண்டு அவருக்கு வித்தியாசமாய் எதுவும் தோன்றவில்லை. அடடே, பொருத்தம் நன்றாக இருக்கின்றது! என்றே அவருக்குத் தோன்றியது.



தன்னை விட அழகாய் ஜொலித்த உதயரேகாவை கண்டு வித்யாவிற்குப் பொறாமையாக இருந்தது.



இருவரும் மணவறையில் அமர்ந்து மந்திரங்களை உச்சரிக்க ஆரம்பித்தனர். மீனம்மாள், பட்டம்மாள் இருவரையும் மகிழ்ச்சியோடு பார்த்திருந்தனர். திருமண நிகழ்வில் வழக்கமான சடங்குகள் முடிந்து மாங்கல்யம் மணமகனின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டது. சர்வேஸ்வரன் தனது கரங்களில் மங்கள நாணை பிடித்தபடி அவளைப் பார்த்தான். உதயரேகா நிமிர்ந்தும் அவனைப் பார்க்கவில்லை. அச்சம் கலந்த இனம் புரியாத உணர்வோடு அவள் தலைகுனிந்து அமர்ந்து இருந்தாள்.



"பப்ளி பேபி, என்னை நிமிர்ந்து பார்." அவன் அவளைக் கண்டு கிசுகிசு குரலில் சொல்ல... அவனது வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு அவள் மெல்ல இமைகளை மலர்த்தி அவனைப் பார்த்தாள்.



"இன்னைக்கு என்ன நாள்ன்னு தெரியுமா?" அவன் கேட்டதும் அவள் யோசித்துப் பார்த்தாள். இன்று அவனது பிறந்தநாள் கூட இல்லை. அவளதும் இல்லை. பின்னே என்னவாக இருக்கக் கூடும்? அவள் விழிகளில் வினாவை தாங்கி அவனைப் பார்த்தாள். அவளது பார்வையில் அவன் முற்றிலும் நிலைகுலைந்து தான் போனான். 'இப்படிப் பார்க்காதேடி' அவன் மனதோடு புலம்பினான்.



"தெரியலை." அவள் அப்பாவியாக உதட்டினை பிதுக்க...



"இன்று தான் நாம் முதன் முதலாய் சந்தித்தோம்." அவன் சொன்னதும் அவளுக்கு அந்த நாள் ஞாபகம் வந்தது. அந்த நாளை அவளால் மறக்க முடியுமா! அவளது இதழ்களில் அவளையும் அறியாது புன்னகை தோன்றியது. அவளது முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது.



உதயரேகாவின் புன்னகை முகம் அவனுக்கு நிறைவை கொடுக்க அவன் தனது கரத்தில் இருந்த மங்கள நாணை அவளது கழுத்தில் அணிவித்து மூன்று முடிச்சிட்டான். சம்பிரதாயத்திற்கு வந்து நின்ற மஞ்சரி, அமலா இருவரையும் மூன்றாவது முடிச்சு போட கூட அவன் அனுமதிக்கவில்லை. அவளுக்குச் சகலமும் தான் மட்டுமே இருக்க வேண்டும் என்று அவன் எண்ணினான்.



உதயரேகாவின் மகிழ்ச்சியைப் பார்த்தபடி சர்வேஸ்வரன் அவளது நெற்றியில், மாங்கல்யத்தில் குங்குமம் வைத்தான். அவளையும் அறியாது அவள் தனது அச்சத்தைக் கைவிட்டு இருந்தாள். அவன் விடுவிக்கச் செய்திருந்தான். அவள் இயல்பான மனநிலையில் முகம் மலர அமர்ந்திருக்க... அவன் சந்தோசமான மனநிலையில் இருக்க... இருவரது மகிழ்ச்சியான தருணத்தைப் புகைப்படக் கருவி தன்னுள் அழகாக உள்வாங்கிக் கொண்டது.



"வாழ்த்துகள் பொண்டாட்டி..." அவன் அவளைத் தோளோடு அணைத்தபடி வாழ்த்து சொல்ல...



அன்றைய நாள் நினைவில் அவள் குறும்பாக அவனைப் பார்த்தவள், "வாழ்த்துகள் சர்வா." என்று சொல்லி விட்டு நாக்கை கடிக்க...



அவளது இயல்பில் அவன் விரும்பியே தன்னைத் தொலைத்தவன் அவளது நெற்றியில் அழுத்தமாய்த் தனது இதழை பதித்தான். அவன் மனமெங்கும் மகிழ்ச்சி மட்டுமே. அவனது செயலில் தான் அவள் தன்னுணர்வு பெற்று சுற்றும் முற்றம் பார்த்தாள். அந்த நொடி அவளுக்குத் தன்னிலை உறைக்க... அவளது புன்னகை தொலைந்து போனது. அவளது முக மாற்றத்தை உணர்ந்தவனாய் அவன் அவளைத் தன்னோடு மேலும் இறுக்கி அணைத்துக் கொண்டான். அவனது செயலில் அவள் இன்னமும் பயத்தில் தனக்குள் ஒடுங்கி போனாள்.



அதற்கு மேல் உதயரேகா சிந்திக்க முடியாதபடி அடுத்தடுத்து திருமண நிகழ்வுகள் நடைபெற்றது. முதலில் பெரியவர்கள் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர். மீனம்மாள், பட்டம்மாள் இருவரும் மனதார சின்னவர்களை வாழ்த்தி நெற்றியில் குங்குமம் வைத்து விட்டனர். தாமோதரன், மந்தாகினி கால்களில் இருவரும் விழ... மந்தாகினி முகத்தைத் திருப்ப இயலாது கணவரோடு சேர்ந்து சின்ன மகன், அவனது மனைவியை ஆசிர்வதித்தார்.



செல்வம், சந்துரு இருவரின் பெற்றோரோடு வித்யாவின் பெற்றோரையும் நிற்க வைத்து அவர்களின் பாதங்களிலும் மணமக்கள் பணிந்து எழுந்தனர். இதை வித்யாவின் பெற்றோர் எதிர்பார்க்கவே இல்லை. சர்வேஸ்வரன் உயரம் என்னவென்று அவர்களுக்குத் தெரியும். அமைச்சர்கள், தொழிலதிபர்கள் என்று பலர் வந்திருக்க... அவன் தங்களது கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியது அவர்களுக்குப் பெருமையாக இருந்தது. அவர்கள் மனதார மணமக்களை வாழ்த்தினர். இதை எல்லாம் கண்ட வித்யாவிற்குக் கோபம் வந்தது. அவள் அதை அப்படியே தனது பெற்றோரிடம் காட்டினாள்.



"இங்கே பார்... நீ சொன்னதை வச்சு சர்வாவை நாங்க தப்பா நினைச்சோம் தான். ஆனா சர்வாவை பார்த்தால் அப்படித் தெரியலை. அதை விட அப்பாவின் தொழில் உன் புகுந்த வீட்டாரை நம்பி உள்ளது. வீண் பகை வேண்டாம் வித்தி. அவங்க உன்னை மதிக்கலைன்னா கூட நீ சொல்றதை நம்பலாம். ஆனா அவங்க உன்னையும் மதிக்கிறாங்க, எங்களையும் மதிக்கிறாங்க." அவளது அன்னை அவளை அடக்க...



"ஆகாஷ் தானே உங்க கூடப் பிசினஸ் டீல் பண்ணுறது. சர்வா இதில் எங்கே இருந்து வந்தான்?" வித்யா அலட்சியமாகக் கேட்க...



"ஆகாஷே சர்வாவை நம்பி தான் இருக்கின்றான். மறந்து விடாதே. கொஞ்சம் அடக்கி வாசி." அவளது பெற்றோர் அவளை எச்சரித்து விட்டு அகன்று விட்டனர். அவ்வளவு சீக்கிரத்தில் வித்யா அடங்கி விடுவாளா என்ன!



அதன் பிறகு திருமண விளையாட்டுகள் நடைபெற்றது. மணமக்களைப் பானைக்குள் கரங்களை விட்டு மோதிரம் எடுக்கச் சொன்னர். மோதிரத்தை முதலில் எடுத்த சர்வேஸ்வரன் அதைத் தனது மனைவியின் உள்ளங்கையில் பொதிந்து வைத்து அவளை அர்த்தமுள்ள பார்வை பார்த்தான். அவளோ புரியாது அவனைப் பார்த்தாலும் மோதிரத்தை வெளியில் எடுத்து காட்ட தவறவில்லை.



"இப்பவே மாப்பிள்ளை தோற்க ஆரம்பிச்சிட்டான். இனி வாழ்க்கை முழுவதும் தோற்க வேண்டியது தான்." ஆகாஷ், செல்வம், சந்துரு மூவரும் அவனைக் கேலி செய்தனர். சர்வேஸ்வரன் புன்னகையுடன் அவர்களைப் பார்த்திருந்தான். உதயரேகா தலையைக் குனிந்து கொண்டாள்.



அடுத்துத் தலையில் அப்பளம் உடைப்பது, தேங்காய் உருட்டுவது என்று அனைத்தும் அழகாய் நடந்து முடிந்தது. எல்லா விளையாட்டிலும் சர்வேஸ்வரன் உதயரேகாவுக்கு விட்டு கொடுத்து, அவள் மனம் அறிந்து விளையாடினான். அப்படியாவது அவள் தனது கூட்டில் இருந்து வெளியில் வருகிறாளா? என்று எண்ணி... அவளோ அவர்களுக்கு இடையில் இருக்கும் ஏற்றத்தாழ்வு கண்டு அமைதியாக இருந்தாள். அதனால் விளையாட்டில் அவள் வெற்றி பெற்ற போதும் சிறு புன்னகையுடன் அவள் அதைக் கடந்தாள். அவளது அலட்டி கொள்ளாத தன்மை அவனை மேலும் மேலும் அவள் பால் ஈர்த்தது.



வீட்டினர் மற்றும் விருந்தினருடன் புகைப்படங்கள் எடுத்து முடித்ததும் மணமக்களைத் தனியே புகைப்படம் எடுக்க எண்ணி புகைப்படக்காரர் இருவரையும் அழைத்தார். இயற்கை எழில் கொஞ்சும் தோட்டத்தில் இருவரையும் நிற்க வைத்து அவர் புகைப்படம் எடுத்தார். சாதாரணமாக நிற்பதற்குச் சிரமமாக இல்லை. இருவரும் அவர் சொன்னதைக் செய்தனர்.



"மேடம், சார் கன்னத்தோடு கன்னம் வைத்து சேர்ந்து நின்னு போஸ் கொடுங்க." புகைப்படக்காரர் சொன்னதைக் கேட்டு உதயரேகா திருதிருவென விழித்தாள். சர்வேஸ்வரன் அருகே நிற்பதற்கே அவளுக்கு உடல் நடுங்குகிறது. இதில் கன்னத்தோடு கன்னம் வைத்தா? அவளுக்கு மூச்சடைத்தது.



"அப்படியே அவரது மாலையைப் பிடிச்சிழுத்து, ஒரு காலை தூக்கியபடி லேசா அவர் பக்கம் சாய்ந்து நில்லுங்க. அப்புறம் அவரோட காதை பிடிச்சு திருகிற மாதிரி ஒரு ஃபோட்டோ..." அவர் சொல்லி கொண்டே போக... அவள் திகைத்து நிற்க...



"நீங்க சொல்றதை எல்லாம் நான் செய்கிறேன்." என்ற சர்வேஸ்வரன் அவர் சொன்னதை அப்படியே செய்ய... அவனது செயலில் அவள் தான் சங்கடத்துடன் அவன் அருகில் நின்றிருந்தாள்.



புகைப்படங்கள் அனைத்தும் நன்றாக வந்திருக்கவும் தான் புகைப்படக்காரர் இருவரையும் விட்டார். அதன் பிறகே உதயரேகாவுக்கு மூச்சு சீரானது.



எல்லோரும் வீட்டிற்குக் கிளம்ப ஆயத்தமானர். மந்தாகினி இன்னமும் வாயிலை பார்த்துக் கொண்டே இருந்தார். அன்னையின் எண்ணத்தைச் சர்வேஸ்வரன் அறிந்திருந்தானோ! அவன் நமட்டு சிரிப்புடன் அவர் அருகே சென்றவன்,



"கல்யாணமே முடிஞ்சு போச்சு. இன்னும் தாரிகா வருவாள்ன்னு எதிர்பார்த்துட்டு இருக்கீங்களே. உங்களைப் பார்த்தால் பாவமா இருக்கு." சர்வேஸ்வரன் அன்னையைக் கண்டு போலியாகப் பாவப்பட்டான். மந்தாகினி மகனது வார்த்தைகளில் மாட்டி கொண்ட தினுசில் திருதிருவென விழித்தார்.



"தாரிகா வர மாட்டாள். அவங்க கம்பெனிக்கு ஐடி ரெய்டு வந்திருக்கு." என்று சாதாரணமாகச் சொன்னவன் தனது மனையாளை தேடி சென்று விட்டான்.



"நீயும் பார்த்து இருந்துக்கோ. சர்வா உனக்கும் பெரிய ரெய்டு விடப் போறான்." அருகில் இருந்த தாமோதரன் மனைவியைக் கண்டு கடிந்து விட்டு சென்றார். மந்தாகினி மந்திரித்து விட்டது போல் நின்றிருந்தார்.



மணமக்களை வீட்டிற்கு அழைத்து வந்தனர். இருவருக்கும் ஆரத்தி கரைத்து உள்ளே அழைத்தனர். செல்வம், சந்துருவின் பெற்றோர் இருந்ததால் திருமணச் சடங்குகள் எல்லாம் முறைப்படி ஒழுங்காக நடந்தது. உதயரேகா வலதுகாலை எடுத்து வைத்து வீட்டினுள் நுழைந்தாள். இத்தனை நாளாய் புழங்கிய வீடு தான். இன்று ஏனோ அந்த வீடு அவளுக்கு மிரட்சியைக் கொடுத்தது. உதயரேகா விளக்கேற்றி விட்டு வரவும்... இருவருக்கும் பாலும் பழமும் கொடுத்தனர். சர்வேஸ்வரன் முதலில் பால், பழம் உண்டுவிட்டு உதயரேகாவிடம் கொடுத்தான். அவளோ பதட்டத்தில் வாய் நிறையப் பால், பழத்தை வைத்துக் கொண்டு முழித்தாள்.



"ரிலாக்ஸ், மெதுவா சாப்பிடு." அவன் மெல்லிய குரலில் அவளை ஆறுதல் படுத்தினான். அதில் அவள் சற்று ஆசுவாசம் அடைந்தாள்.



சர்வேஸ்வரன் உதயரேகா நெற்றியில் அதிகப்படியாய் அப்பியிருந்த குங்குமத்தை தனது கைக்குட்டை கொண்டு மென்மையாய் துடைத்து விட்டான். சுற்றியிருந்த யாரையும் அவன் பொருட்படுத்தவில்லை, கண்டு கொள்ளவில்லை.அவனது இயல்பான செய்கையைக் கண்டு வித்யாவின் பொறாமை குணம் மீண்டும் தலைத்தூக்கியது.



"என்ன சர்வா, இதில் எல்லாம் முன் அனுபவம் இருக்கும் போலிருக்கு." என்று அவள் அடங்காது அவனைக் கிண்டலடித்தாள்.



ஆகாஷ் கோபத்தோடு மனைவியை ஏதோ பேச வந்தான். அண்ணனை விழிகளால் அடக்கிய சர்வேஸ்வரன் அண்ணியிடம் தனது பதிலை கூறும் முன் உதயரேகா அவனை முந்தி இருந்தாள்.



"மேடம், பிரின்ஸ் அப்படிப்பட்டவர் இல்லை. எனக்கு அவர் மேல் நம்பிக்கை இருக்கு." சொல்லும் போதே அவளது கரம் அவளையும் அறியாது அவனது கரத்தினைப் பற்றிக் கொண்டது.



மனைவியின் நம்பிக்கையில் சர்வேஸ்வரன் உள்ளம் குளிர்ந்து போனான். இதைத் தானே அவன் தனது இணையிடம் எதிர்பார்த்தது.



"உங்களோட எண்ணம் எல்லாம் என் பொண்டாட்டி கிட்ட எடுபடாது." அவன் கர்வமாய் அண்ணியைப் பார்த்தான். வித்யா நன்றாக மூக்குடைப்பட்டாள். அதைக் கண்டு அவனது சகோதரிகள் இருவரும் வாயை இறுக முடி கொண்டனர்.



இருவரும் வந்தவர்களை மதிய உணவு உண்டும்படி உபசரித்து விட்டு வெளியில் கிளம்பி சென்றனர். அவளுக்கு எங்கே செல்கிறோம் என்று தெரியவில்லை. ஆனாலும் அழைத்துச் செல்வது அவளது பிரின்ஸ் அல்லவா! அதனால் அவள் அமைதியாக வந்தாள். முதலில் ஆதரவற்றோர் இல்லத்திற்குச் சென்று மதிய உணவை பரிமாறியவர்கள்... அவர்களுடனே மதிய உணவினை உண்டனர். அவனது செய்கையில் அவள் அகமகிழ்ந்து போனாள்.



பிறகு அவன் அவளை அழைத்துச் சென்றது, ஐந்தறிவு அன்பு ஜீவன்களிடம்... வீரா, ஜூலி என்று அனைத்து ஜீவன்களும் அவளைத் தேடி அன்போடு ஓடி வர... அவள் பாசத்துடன் அவர்களை அரவணைத்து கொண்டாள். அந்த அன்பு ஜீவன்களுக்கும் திருமண விருந்து பரிமாறப்பட்டது. இருவரும் சேர்ந்தே பரிமாறினர். அவைகள் பசியாற... உதயரேகா நெகிழ்ச்சியுடன் கணவனைப் பார்த்தாள்.



"தேங்க்ஸ் பிரின்ஸ்..." அவள் புன்னகையோடு மனதார நன்றி கூற... அவளது புன்னகையைக் கண்டு அவன் உள்ளம் மகிழ்ந்தான். அவள் இயல்புக்கு திரும்பியதை கண்டு அவனுக்குச் சந்தோசமாக இருந்தது.



*******************************



சர்வேஸ்வரனின் அறை மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இன்றைய நாளின் மகத்துவத்தை அறியாதவன் அவன் இல்லையே! இந்த விசயத்தில் அவனும் பல கனவுகளோடு காத்திருக்கும் சாதாரண இளைஞன் தான். அவன் மனைவியின் வரவினை எதிர்பார்த்து மகிழ்ச்சியோடு காத்திருந்தான். அப்போது அவனது அலைப்பேசி அதிர்ந்தது. எடுத்து பார்த்தவன் அதில் ஒளிர்ந்த தாரிகாவின் எண்ணை கண்டு அவனது உதடுகள் வன்மமாய் வளைந்தது.



"இந்த நாள் எனக்கும், எனது பேபிக்குமான முக்கியமான நாள். இந்த நாளின் சந்தோசத்தைக் கெடுக்க நீ நினைத்தால் நான் சும்மா விட்டு விடுவேனா? அதனால் தான் நான் உனக்குச் செக் வைத்தேன். நீ நினைக்கும் முன் நான் அதைச் செயலாற்றி விடுவேன். என்னை அதிர வைக்க நீ நினைத்தாய்... நான் உன்னையே அதிர வைத்து விட்டேன். சர்வேஸ்வரனிடம் சிக்கினால் சின்னாபின்னமாகுவது உறுதி." சர்வேஸ்வரன் ஆத்திரம் பொங்க தனக்குள் சொல்லி கொண்டான்.



அவன் அவனவளுக்கு மட்டுமே நாயகன்! மற்றவர்களுக்கு அவன் என்றுமே வில்லன் தான்!!



தொடரும்...!!!

 
Status
Not open for further replies.
Top