All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் 'கலாபம் கொ(ல்)ள்(லு)ளும் காதலா!!!' - மூன்றாம் பாகம்

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
அத்தியாயம் : 48

சகுந்தலா பிருந்தா வீட்டில் இருந்து கிளம்பி தனது வீட்டிற்கு வந்த போது மதியமாகி இருந்தது. அவள் வீட்டிற்குள் நுழைந்த போது சக்தீஸ்வரன் உணவு உண்டு கொண்டிருந்தான். அவளது வரவினை உணர்ந்து அவளை ஏறிட்டு பார்த்தவன், பின்பு அவளைச் சற்றும் கண்டு கொள்ளாது அவன் மீண்டும் உணவில் கவனம் செலுத்த தொடங்கி விட்டான். அவனது செய்கையைக் கண்டு அவளுக்குக் கோபம் வந்தது. அதேசமயம் முன்பு இதே சக்தீஸ்வரன் அவளுக்காகச் சமைத்து ஊட்டி விட்டது நினைவில் நின்று அவளை இம்சித்தது.

'ஒரு சம்பிரதாயத்துக்காகவாவது சாப்பிட கூப்பிடுறாங்களா? என்னமோ சாப்பாட்டைக் காணாத மாதிரி முழுங்குறத பாரு.' அவள் மனதிற்குள் கோபமாய் முணுமுணுத்துக் கொண்டே அங்கிருந்த சோபாவில் அவனைக் காணும்படி அமர்ந்தாள்.

சக்தீஸ்வரன் இலையில் இருந்த உணவு பதார்த்தங்களைப் பார்த்த சகுந்தலாவுக்கு வாயில் எச்சில் ஊறியது. கோழி, மீன், முட்டை என்று வகை வகையாய் உணவுகள் அவனது இலையில் பரிமாறப்பட்டு இருந்தது. அவன் ரசித்து, ருசித்து உண்ட அழகை கண்டு அவளுக்குப் பசி எடுத்தது. ஆனாலும் அவளால் அவனிடம் வாய்விட்டு கேட்க முடியவில்லை.

'இவங்க எப்போ இருந்து இப்படிக் கல் நெஞ்சக்காரங்களா மாறி போனாங்க?' அவளுக்கு முணுமுணுவென்று இருந்தது.

சக்தீஸ்வரன் திருப்தியாக உணவு உண்டு விட்டுக் கை கழுவ செல்ல... சகுந்தலாவின் விழிகள் கணவன் பின்னேயே சென்றது. சக்தீஸ்வரன் கரங்களைக் கழுவி விட்டுத் திரும்பிய போது... ஒரு பெண்ணின் கரம் அவன் முன்னே துண்டை எடுத்து நீட்டியது. அதைக் கண்ட சகுந்தலா 'எவ அவ?' என்பது போல் அந்தப் பெண் யாரென்று பார்க்க தனது விழிகளை உக்கிரத்துடன் திருப்பினாள். அங்கு நின்றிருந்த சாகித்யாவை கண்டு சகுந்தலா உயரழுத்த மின்சாரம் தாக்கியது போன்று அதிர்ந்து போனாள்.

'இவள் எப்படி இங்கே? இவ்வளவு நேரம் இவள் இங்கே தான் இருந்தாளா? நாம தான் கவனிக்காம விட்டுட்டோமோ?' சகுந்தலா டென்சனில் கையிலிருந்த நகத்தினைக் கடிக்க ஆரம்பித்தாள்.

"இந்த லிஸ்ட்ல உள்ள சாமான் எல்லாம் வேணும். அப்படியே காய்கறிக்கும் சொல்லிருங்க." சாகித்யா சொல்லவும்... அவள் கொடுத்த காகிதத்தை மடித்துச் சட்டை பையில் வைத்தபடி சக்தீஸ்வரன்,

"ம், சொல்லிர்றேன்." என்க...

‘நான் பேசினால் மட்டும் எதிர்த்து எதிர்த்துப் பேசுறது... இதே இது இவள் கிட்ட மட்டும் ஒரு வார்த்தை எதிர்த்து பேசாம, எல்லாத்துக்கும் சரி சரின்னு தலையை ஆட்டுறது. என்னைய பார்த்தா மட்டும் இவங்களுக்கு எப்படி இருக்கு?' சகுந்தலாவுக்குக் கோபம் அதிகரித்தது.

'உன்னைய பார்த்தா கோமாளி மாதிரி இருக்கோ என்னவோ?' அவளது மனசாட்சி நேரம் காலம் தெரியாது அவளைக் கேலி செய்தது.

'கொஞ்ச நேரம் பேசாம இரு. இல்லை உன் கழுத்தை நெரிச்சிருவேன்.' சகுந்தலா மனசாட்சியிடம் கோபம் கொண்டாள்.

'பட்டு திருந்து.' என்ற மனசாட்சி 'எனக்கு என்ன வந்தது?' என்பது போல் அமைதியாகி போனது.

"அப்புறம் மீன் எல்லாம் பிரஷா கிடைக்கும். தினமும் பிரெஷா கொண்டு வந்து கொடுக்கச் சொல்லுங்க. சிக்கன், மட்டனும் அதே மாதிரி." சாகித்யா சொல்லவும்... சக்தீஸ்வரன் சரியென்று தலையை மட்டும் ஆட்டினான்.

சாகித்யா சகுந்தலாவை கண்டாலும் ஒன்றும் பேசாது சமையலறைக்குள் சென்று மறைந்தாள். சக்தீஸ்வரன் வரவேற்பறைக்கு வந்தான். அதுவரை பொறுமையாக இருந்த சகுந்தலாவுக்கு அதற்கு மேல் பொறுமை காக்க முடியவில்லை.

"வீட்டுக்கு வந்த விருந்தாளியை சாப்பிட சொல்லணும்ன்னு தெரியாதா?" அவள் அவனிடம் சீற...

"விருந்தாளியா? எங்கே?" அவன் நாலாப்புறமும் தனது விழிகளைச் சுழற்றினான்.

"என்னைய பார்த்தால் எப்படித் தெரியுது?" சகுந்தலா மூச்சு வாங்கியபடி கத்த...

"ஓ, நீ தான் அந்த விருந்தாளியா?" என்று தாடையை வருடியபடி ஒரு மார்க்கமாய்க் கேட்டவன், "நீ என்னோட விருந்தாளி இல்லையே. அப்புறம் நான் எதுக்கு உனக்கு உபசாரம் பண்ணணும்?" என்று அலட்டி கொள்ளாது கூற...

கணவன் பட்டும் படாமல் பேசுவதைக் கண்டு சகுந்தலாவுக்குக் கண்கள் கரித்துக் கொண்டு வந்தது. ஆனாலும் அவள் தைரியத்தைக் கைவிடாதவளாய்,

"அப்போ எதுக்கு நீங்க இங்கே என்னைய தங்க வச்சீங்க?" என்று விடாப்பிடியாய் நிற்க...

"நீ அக்ரிமெண்ட் போட்ட கம்பெனி என் கிட்ட பேசி... உன்னைய இங்கே தங்க வைக்க மட்டும் தான் சொன்னாங்க. அப்போ நீ சாப்பாட்டுக்கு... அவங்க கிட்ட தான் கேட்கணும். என் கிட்ட கேட்டால் எப்படி?" அவன் அலட்சியமாகத் தோள்களைக் குலுக்க...

கல் நெஞ்சுக்காரனாக மாறிய கணவன் தலையில் கல்லை தூக்கி போட்டால் தான் என்ன? என்று சகுந்தலாவுக்கு ஆத்திரம் வந்தது. அவள் அதே ஆத்திரத்துடன் அந்த நிறுவனத்திற்கு அழைத்து விட்டாள். மறுமுனையில் எடுத்ததும் அவர்களைப் பேச விடாது அவளே,

"சார், ஷூட்டிங்க்கு வர சொன்னால் மட்டும் போதாது. சாப்பிடுறதுக்கு ஏதாவது அரேன்ஜ் பண்ணி கொடுக்கணும். நீங்க இங்கே ஒண்ணுமே ஏற்பாடு பண்ணலை. அப்போ நான் பட்டினி கிடந்து சாகவா?" என்று கோபமாய் வெடித்தாள். கடைசி வரியை சொல்லும் போது சக்தீஸ்வரன் மீது அவளது பார்வை அழுத்தமாய்ப் படிந்தது. அவனோ எதையும் கண்டு கொள்ளாது சோபாவில் அமர்ந்து அலைப்பேசியைப் பார்த்திருந்தான். அது வேறு அவளது கோபத்திற்கு மேலும் தூபம் போட்டது.

"சக்தீஸ்வரன் சார் கிட்ட கேளுங்க மேடம். அவர் ஏற்பாடு பண்ணி தருவார்." அவர்கள் சொன்னதும் அவள் சட்டென்று அழைப்பை துண்டித்து விட்டு கணவனைப் பார்த்தாள். அவனோ நிமிர்ந்து அவளைப் பாராது அலைப்பேசியில் மூழ்கியிருந்தான்.

"உங்க கிட்ட தான் கேட்க சொன்னாங்க." வேறுவழியில்லாது அவளே வலிய வந்து பேச...

"அப்படியா..." என்று அவன் நிமிர்ந்த போது அவனது அலைப்பேசி அழைத்தது.

சக்தீஸ்வரன் அழைப்பை எடுத்துக் காதில் வைத்தவன் 'ம்' என்று மட்டும் பதிலாகச் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்து இருந்தான். சகுந்தலா வெற்றி புன்னகையோடு அவனைப் பார்த்தாள். அதாவது அவன் தன்னை உணவு உண்ண அழைப்பான் என்று... அவனோ மீண்டும் அலைப்பேசியை நோண்ட ஆரம்பித்து விட்டான். சகுந்தலா கோபத்தோடு பேச நினைக்கும் முன் அவளது அலைப்பேசி அழைத்தது. அவள் எடுத்துக் காதில் வைத்தாள்.

"சார் சரின்னு சொல்லிட்டார். அவர் வீட்டிலேயே சாப்பிட்டுக்கோங்க." என்றுவிட்டு மறுபக்கம் அழைப்புத் துண்டிக்கப்பட்டது.

கணவன் அழைக்காது உண்ணவும் அவளுக்கு மனம் இல்லை. அவனையே பார்த்திருந்தவள் அவன் பேசும் வழி தெரியாததால் அவளே, "இங்கே சாப்பிட சொன்னாங்க." என்று மெல்லிய குரலில் சொன்னாள். அவனது உதாசீனம் அவளைக் கலங்க வைத்திருந்தது.

"சாப்பாடு டைனிங் டேபிளில் இருக்குது. எடுத்து போட்டு சாப்பிடு. இதை எதுக்கு என் கிட்ட சொல்லிக்கிட்டு இருக்க? ஒருவேளை ஊட்டி விட்டால் தான் சாப்பாடு இறங்குமோ?" அவன் ஒரு மாதிரி குரலில் கேட்க...

"ஏன் ஊட்டி விட்டது இல்லையா?" அவள் அவனை முறைத்துக் கொண்டு சொன்னவள் உணவு மேசை நோக்கி நடந்தாள்.

"சார், டைனிங் டேபிளை கிளீன் பண்ணவா?" சாகித்யா அங்கிருந்து குரல் கொடுக்க...

"ஏய், அங்கே என்ன கேள்வி? நான் ஒருத்தி இங்கே இருக்கிறது உன் கண்ணுக்கு தெரியலையா? நான் சாப்பிட்ட பிறகு கிளீன் பண்ணு." சகுந்தலா சாகித்யாவை முறைத்துக் கொண்டு சொல்ல... சாகித்யா ஒன்றும் சொல்லாது சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

"ரெண்டும் திமிர் பிடிச்சதுங்க." சகுந்தலா புலம்பி கொண்டே உணவை உண்டாள். அவளுக்கு நல்ல பசி. அவள் மளமளவென்று வேகமாக உணவு உண்ண ஆரம்பித்தாள்.

சக்தீஸ்வரன் தனக்கு எதிரே இருந்த கண்ணாடி அலமாரியில் தெரிந்த சகுந்தலாவின் பிம்பத்தை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்து இருந்தான்.

சகுந்தலா உண்டு முடித்து விட்டுப் பழக்கதோசத்தில் குளிர்சாதன பெட்டியை திறந்து பார்த்தாள். அங்கு ஐஸ்க்ரீம் பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டு இருப்பதைக் கண்டவள் ஆசையாக ஐஸ்க்ரீமை எடுத்துக் கொண்டு உண்ண அமர்ந்தாள்.

அதற்குள் சாகித்யா எல்லாவற்றையும் சுத்தப்படுத்தி விட்டு கிளம்ப ஆயத்தமானாள். அப்போது சக்தீஸ்வரன் அவளை இடைமறித்துத் தனது கையில் இருந்த கவரை அவளிடம் நீட்டினான். அதைக் கண்டு சகுந்தலாவின் விழிகள் கூர்மை அடைந்தது. அந்தக் கவரை பார்த்தாலே தெரிந்தது அதில் இருப்பது இனிப்பு என்று...

'இவளுக்கு இனிப்பு வேறு ஒரு கேடு.' சகுந்தலாவுக்கு மீண்டும் முணுமுணுவென்று வந்தது.

சாகித்யா சிரித்துக் கொண்டே இனிப்பை வாங்கியவள் விடைபெற்று சென்று விட்டாள்.

சகுந்தலாவுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வர... அவள் சக்தீஸ்வரன் முன்னே வந்து நின்றாள். அவனோ விழிகளைச் சுருக்கி கொண்டு அவளைக் கேள்வியாய் பார்த்தான்.

"அவள் கிட்ட என்ன கொடுத்தீங்க?" அவள் அதிகாரமாய்க் கேட்க...

"அது எதுக்கு உனக்கு?" அவன் அலட்சியமாய்ப் பதில் சொல்ல...

"நீங்க சொல்லலைன்னா எனக்குத் தெரியாதா? அதில் இருப்பது ஸ்வீட் தானே. நீங்க எதுக்கு அவளுக்கு ஸ்வீட் வாங்கிக் கொடுக்கிறீங்க?" அவள் என்ன உரிமையில் கேட்டாள் என்று அவளுக்கே தெரியாது.

"அதை ஏன் நீ கேட்கிற?" அவன் கூர்மையாக அவளைப் பார்த்தான்.

"அது... ஆங், அவள் கேரக்டர் சரியில்லை. அவளுக்கு எதுக்கு இனிப்பு எல்லாம் வாங்கிக் கொடுக்கிறீங்க? இது தப்பு இல்லையா? அதுக்குத் தான் கேட்டேன்." அவள் சமாளித்து மழுப்ப...

"எனக்குத் தப்பா தோணலை." என்றவன், "நீ கேட்டதுக்காகச் சொல்றேன். அதில் இருந்தது அல்வா. போதுமா?" என்று சொல்ல...

"அல்வாவா?" அவள் வாயை பிளந்தாள்.

"ஆமா, அதுக்கு என்ன?"

"அல்வா வாங்கிக் கொடுக்கிற அளவுக்குப் பழக்கமா?" அவள் தாங்க மாட்டாது ஆதங்கத்துடன் கேட்க...

"இப்போ உனக்கு என்ன பிரச்சினை? நான் யாருக்கு என்ன செய்தால் உனக்கு என்ன?" அவனுக்கும் கோபம் வந்ததுவோ!

"இன்னும் நான் உங்க மனைவி தான். நான் அப்படித்தான் கேள்வி கேட்க தான் செய்வேன். நீங்க அடுத்தவளுக்கு அல்வா வாங்கிக் கொடுத்ததுத் தப்பு தான்." அவள் கோபத்தில் படபடக்க...

"யாரோ தாஸை உயிருக்கு உயிரா காதலிக்கிறதா சொன்னாங்களே? அவங்களைப் பார்த்தியா?" அவன் நமட்டு சிரிப்புடன் கேட்க...

"ஆங்..." அவள் திருதிருவென முழித்தாள்.

"இன்னும் நீ என் மனைவி தானே." என்று சொல்லி கொண்டே அவன் அவள் அருகே நெருங்கினான்.

"ஆமா..." அவள் திணறலுடன் கூறியபடி பின்னால் நகர்ந்தாள்.

"அப்போ எனக்கு இன்னமும் உரிமை இருக்கு. அப்படித்தானே..." என்று அவன் கேட்ட போது... அவள் சுவற்றில் வந்து இடித்துக் கொண்டு நின்றாள். அதற்கு மேல் அவள் நகர்ந்து செல்ல வழியில்லை.

"அது வந்து..." அவளது வார்த்தைகள் சதிராடியது.

"என் உரிமையை நிலைநாட்டவா?" அவன் ஒரு மாதிரி குரலில் கேட்க...

"ஆ..." என்று அவள் வாயை பிளக்க...

ஆவென்று பிளந்திருந்த அவளது வாயை அவன் மூடினான், தனது உதடுகளால்... மீண்டும் அவன் நிமிர்ந்த போது அவள் உண்ட ஐஸ்க்ரீமின் மணத்தை அவன் தனது வாயில் உணர்ந்தான்.

"பட்டர் ஸ்காட்ச் ஃபிளேவர் ரொம்ப நல்லாயிருக்கு." அவன் நாக்கை சுழற்றியபடி ரசனையுடன் கூற...

சகுந்தலா முகம் சிவக்க கணவனைப் பார்க்க இயலாது தலை குனிந்து நின்றாள்.

"ஆனா எனக்குச் சாக்லேட் ஃபிளேவர் தான் பிடிக்கும்." அவன் திடுமெனச் சொன்னதும் அவள் புரியாது அவனைப் பார்க்க...

சக்தீஸ்வரன் விழிகள் அவளது மேனி முழுவதும் கண்டபடி மேய்ந்தது. அதைக் கண்டவளுக்கு உடம்பு எல்லாம் வெட்கத்தில் சிவப்பது போலிருந்தது. அவள் வெட்கப்பட்டுக் கொண்டே சுவற்று பக்கமாய் அவனுக்கு முதுகு காட்டி திரும்பி நின்றவள் தனது கைகள் கொண்டு முகத்தை மூடி கொண்டாள். சில நிமிடங்கள் அப்படியே நின்றிருந்தவள் சக்தீஸ்வரன் எதுவும் பேசாது இருப்பது கண்டு மெல்ல திரும்பி பார்க்க... அங்கே அவன் இல்லை.

அவள் தொய்ந்து போய் அப்படியே அமர்ந்து விட்டாள். ஒருநாள் கூட அவளால் அவனைத் தாக்கு பிடிக்க முடியவில்லை. இனிவரும் நாட்களில் என்னவாகுமோ? அவளுக்குத் தன்னை நினைத்தே பயமாக இருந்தது. ஆம், அவளுக்கு அவனை நினைத்து பயமில்லை. அவளுக்கு அவளை நினைத்து தான் பயம்.

விலக வேண்டும் என்று அவளது அறிவு அறிவுறுத்தியது. ஆனால் அவளது காதல் மனமோ விலகாதே என்று கெஞ்சி கதறியது. அவள் கண்ணீரோடு அப்படியே அமர்ந்து இருந்தாள்.


**************************
 

ஶ்ரீகலா

Administrator
மாலையில் வேலை முடிந்து வீட்டிற்குக் கிளம்பத் தயாரானாள் பத்மினி. தனது கைப்பையை எடுத்துக் கொண்டு அவள் வெளியில் வந்த போது... அங்கு மருத்துவமனை வராந்தாவில் போட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தபடி நாராயணன் அவளுக்காகக் காத்திருந்தான். எதிர்பாராது கணவனை அங்குக் கண்டதும் அவளது முகம் மலர்ந்து போனது. தன்னைக் கண்டதும் முகம் மலர்ந்த மனைவியின் மலர் முகத்தைக் கண்டு ரசித்தபடி நாராயணன் இருக்கையில் இருந்து எழுந்தான். தன்னைக் கண்டதும் அவளது கண்களில் தோன்றிய மின்னல் அவனுள் ஏதோ ஒரு உணர்வினை தோற்றுவித்தது. அவன் மனம் முழுவதும் பரவசமாக இருந்தது. தினமும் காணும் மனைவி தான். ஆனாலும் ஒவ்வொரு முறை தன்னைக் காணும் போதும் அவளுள் தோன்றும் உணர்வுகள் அவனைத் திக்குமுக்காட செய்தது.

"நானா, நீங்க எங்கே இங்கே?" அவள் பெரும் புன்னகையுடன் கேட்டபடி அவன் அருகே வந்தாள்.

"இன்னைக்கு வேலை முடிஞ்சு நேரமே வந்துட்டேன். அதான் உன்னைக் கூட்டிட்டு போகலாம்ன்னு வந்தேன்." என்றவன் அவளை நோக்கி கையை நீட்டினான்.

"என்ன?" அவள் புருவம் சுருக்கி பார்க்க...

"கார் கீ..." அவன் சொன்னதும் அவள் கார் சாவியை அவனது கரத்தில் வைத்தாள். இன்று அதிகாலை அவள் கிளம்பி வந்ததால் காரை எடுத்துக் கொண்டு வந்திருந்தாள்.

"நீங்க எப்படி வந்தீங்க?" அவள் கேட்டுக் கொண்டே அவனுடன் நடந்தாள்.

"பைக்கில் தான். அது இங்கே இருக்கட்டும். பிறகு எடுத்துக்கலாம்." என்று அவன் சொல்ல...

"பைக்கில் போகலாம் நானா." என்று சொல்லி கொண்டே பத்மினி அவனது கரத்தை பற்றிக் கொண்டு அவனது தோளில் சாய்ந்தாள்.

"சரி..." என்றவனின் உதடுகள் புன்னகையில் விரிந்தது, மனைவியின் செய்கையினால்...

நாராயணன் தனது இருச்சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு வந்து நிறுத்த... பத்மினி அதில் ஏறி கொண்டாள். மயக்கும் மாலை வேளையில் இதமான மஞ்சள் வெயிலில் தனிமையான பயணம். இருவருக்குமே அந்தப் பயணம் இனிமையாக இருந்தது. இருவரும் எதுவும் பேசி கொள்ளவில்லை. சில நேரங்களில் பேசாத மௌனம் கூடக் காதலை அதிகரிக்கச் செய்யும்.

"என்னாச்சு?" திடுமென வண்டி நின்றதும் பத்மினி கணவனிடம் கேட்க...

"லைட்டா சாப்பிட்டுட்டுப் போகலாம். வா..." அவன் சொன்னதும் தான் அவள் சுற்றுப்புறத்தை கவனித்தாள்.

இருவரும் இறங்கி கடைக்குள் நுழைந்தனர். நாராயணன் பத்மினிக்கு பிடித்த வடா பாவ், ரோஸ் மில்க்கை வாங்கிக் கொண்டு வந்தான். பத்மினிக்கு இருந்த பசியில் அவள் எடுத்ததுமே வேகமாக உண்ண ஆரம்பித்தாள். அவன் அவளைக் கனிவோடு பார்த்துக் கொண்டு இருந்தான். பாதி உண்டு முடித்ததும் தான் அவள் கணவனைக் கவனித்தாள்.

"உங்களுக்கு?" அவள் பாதியை அவனிடம் நீட்ட...

"வேறு வாங்கிட்டு வர்றேன்." என்றவன் எழுந்து சென்று அதே போன்று வேறு வாங்கிக் கொண்டு வந்தான்.

பத்மினி அவன் வரும் வரை உண்ணாது இருந்தாள். நாராயணன் அவள் உண்டதை தன் பக்கம் இழுத்து கொண்டவன்... வாங்கி வந்த புதியதை மனைவி பக்கம் வைத்தான். அவள் புரியாது அவனைப் பார்த்தாள்.

"அதை விட இது தான் டேஸ்ட் அதிகமா இருக்கும்." நாராயணன் கண்சிமிட்டியவாரே உண்ண... பத்மினி முகம் சிவக்க தலையைக் குனிந்து கொண்டாள்.

புதிதாய் வாங்கி வந்த வடா பாவில் பாதி உண்டு விட்டு மீதியை கணவன் பக்கம் நகர்த்திய பத்மினி, "இதையும் சாப்பிட்டால் தான் கணக்கு நேராகும்." என்று அவனைப் போன்றே கண்சிமிட்டி சொல்ல... நாராயணன் வாய்விட்டுச் சிரித்தான்.

கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஆண் ஒருவன் உடன் பணிபுரிந்து கொண்டிருந்த பெண்ணிடம், "சூப்பர் காதல் ஜோடி..." என்று இருவரையும் சுட்டிக்காட்டி கூற...

"அவங்க காதலர்கள் மாதிரி இல்லை. கணவன், மனைவின்னு நினைக்கிறேன்." அந்தப் பெண் பத்மினியின் நெற்றியில் இருந்த குங்குமத்தை பார்த்து விட்டு கூற...

"கணவன், மனைவியாக இருந்தால் என்ன? காதல் இருக்கக் கூடாதா?" என்று கூறி அவன் சிரிக்க... அந்தப் பெண்ணும் ஆமோதிப்பாய் சிரித்துக் கொண்டாள்.

அவர்கள் பேசியது அனைத்தும் நாராயணன், பத்மினி இருவரது காதுகளிலும் விழுந்தது. நாராயணன் புன்சிரிப்புடன் அமர்ந்து இருந்தான். ஆனால் பத்மினியின் முகம் ஒரு மாதிரியாய் மாறி விட்டது. வேண்டாத பழைய நினைவுகள் அவள் மனதில் படையெடுக்க... அவளது புன்னகை தொலைந்து போனது. அதை நாராயணனும் கண்டு கொண்டான்.

"மினி, என்னாச்சு?"

"போகலாம் நானா." பத்மினி எழுந்து கொண்டாள். உணவு உண்டு விட்டதால் நாராயணனும் எதுவும் பேசாது எழுந்து விட்டான்.

வீடு வரும் வரை இருவரும் எதுவும் பேசி கொள்ளவில்லை. அறைக்கு வந்ததும் பத்மினி குளிக்கச் சென்று விட்டாள். மருத்துவமனையில் இருந்து வந்தால் அவள் குளிப்பது வழக்கம். அதனால் நாராயணன் அமைதியாக மனைவியின் வரவிற்காகக் காத்திருந்தான். குளித்து முடித்து விட்டு வந்த பத்மினி கணவன் முகம் பார்க்காது,

"டயர்டா இருக்கு நானா. கொஞ்ச நேரம் தூங்குறேன்." என்றபடி கட்டிலின் மறுபக்கம் வந்து படுத்தாள்.

"ம் ம்..." என்று முணுமுணுத்த நாராயணன் இரவு விளக்கை போட்டான.

நாராயணன் அருகில் படுத்திருந்த மனைவியைப் பார்த்திருந்தான். பத்மினியின் புன்னகையற்ற முகம் அவனைப் பெரிதும் இம்சித்தது. அவளது புன்னகையைக் காணாது அவனால் நிம்மதியாய் இருக்க முடியாது. அவன் அவள் புறம் திரும்பி, "மினி..." என்றழைக்க...

அவளிடம் இருந்து பதில் எதுவும் வரவில்லை. அதற்குள்ளாகவா உறங்கி விட்டாள்? இருக்காதே... இப்போது தானே படுத்தாள். அவன் யோசனையுடன் அவளைப் பார்த்தான். பத்மினி அவனுக்கு முதுகு காட்டி படுத்து இருந்தாள்.

"மினி..." அவன் அவளது தோளை தொட்டு அவளைத் திருப்ப நினைக்க... அவளோ உறுதியாய் திரும்பாது இருந்தாள்.

அவளது உறுதியை கண்டவன் சட்டென்று அவள் புறம் நெருங்கினான். அப்போதும் அவள் திரும்பவில்லை. அவன் வலுக்கட்டாயமாக அவளைத் தன்புறம் திருப்பினான். அப்போது கண்ணீரில் மினுமினுத்த அவளது விழிகளைக் கண்டு கணவன் அவன் பதறி தான் போனான்.

"ஏன்டி அழுற?" அவன் பதற்றத்தோடு அவளது கண்ணீரை துடைத்தான்.

"ஏன் நானா, அப்படிப் பேசினீங்க?" அவள் அழுது கொண்டே கேட்க...

'எப்படி?' அவன் புரியாது விழித்தான்.

"உங்கம்மா கிட்ட நான் அப்படி நடந்து இருப்பேனா? அவங்க எனக்கும் அம்மா மாதிரி தானே." அவள் பேசவும் அவனுக்குப் புரிந்து போனது. அன்று அவன் கோபத்தில் பேசிய வார்த்தைகளைத் தான் மனைவி சொல்கின்றாள் என்று...

"அப்படி எல்லாம் இல்லை மினி. அது ஏதோ கோபத்தில்..." நாராயணன் அவளைச் சமாதானப்படுத்த வார்த்தைகளைத் தேடினான்.

"உங்களைக் கல்யாணம் பண்ணிக்க எனக்குத் தகுதி இல்லையா?" அன்றைய நாளின் அவனது பேச்சு அவளை மிகவும் பாதித்து இருக்கிறது என்பதை இப்போது தான் அவன் உணர்ந்தான்.

"உன்னைக் கல்யாணம் பண்ணிக்க எனக்குத் தான்டி தகுதி இல்லை." சொல்லும் போதே அவனது விழிகளும் கலங்கி விட்டது. பெண்ணவளின் இத்தகைய காதலை பெற அவனுக்குத் தான் அருகதை இல்லை.

"நீங்க பேசியது இங்கே வலிக்குது நானா." பத்மினி தனது இதயத்தைச் சுட்டிக்காட்டியவள், "உங்க இடத்தில் நான் இருந்து இருந்தால்... நான் உங்களைச் சந்தேகப்பட்டு இருக்க மாட்டேன். ஏன்னா எங்கம்மா மேல் நீங்க வைத்து இருக்கும் அன்பு, மரியாதை எல்லாம் எனக்குத் தெரியும். உங்களுக்கு அவங்க எவ்வளவு முக்கியம்ன்னு எனக்குப் புரியும். அப்படி இருந்தும் இது மாதிரி தவறு நடந்து இருந்தால்... நிச்சயம் அது நீங்க உணர்ந்து செஞ்ச தவறா இருக்காது. அதுக்குக் காரணம் நீங்க இல்லைன்னு எனக்கு நல்லா தெரியும். நிச்சயம் நான் உங்களைச் சந்தேகப்பட்டு இருக்க மாட்டேன். நான் உங்க சூழ்நிலையை நன்கு புரிஞ்சு இருந்திருப்பேன்." என்று கூற...

நாராயணனால் மனைவி முகத்தினைப் பார்க்க இயலவில்லை. அவள் கூறுவதும் சரி தானே. அவன் தலைகுனிந்து இருந்தான். அவனது தலையை நிமிர்த்தியவள் அவனது விழிகளைப் பார்த்தவாறு,

"இந்தப் புரிதல், நம்பிக்கை ஏன் உங்களுக்கு என் மேல் இல்லாம போச்சு நானா?" என்று கேட்கும் போதே அவளது விழிகளில் கண்ணீர் வழிந்தது.

"எனக்குக் காதலிக்கத் தான் தெரியலைன்னு நினைச்சேன். ஆனா ஒரு பெண்ணோட மனசை புரிஞ்சிக்கத் தெரியாத ஒரு தத்தியா தான் நான் இருக்கிறேன். இந்தப் புரிதல் இல்லாம தான் நான் அனுவை விட்டு விலகினேன்." அவன் அனுபமாவை பற்றிச் சொல்லவும்... அவளது முகம் வலியில் சுருங்கியது.

"உண்மை சில நேரம் கசக்கத்தான் செய்யும். கடந்து தான் வரணும்." என்றவன் அவளது நெற்றியில் மென்மையாய் முத்தமிட்டான். அவனது முத்தத்தில் அவளது வலி நீங்கியதோ! அவளது முகத்தில் நிம்மதி பரவியது. அதை உணர்ந்தவனாய் அவனும் நிம்மதி கொண்டான்.

"அவளைப் பிரிஞ்சப்போ கூட எனக்கு வலிக்கலை. ஆனா உன்னைப் பிரிஞ்சு இருந்தப்போ... அப்படி வலிச்சதடி." என்றவன் தனது நெஞ்சினை நீவி கொண்டான். அவள் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள். அவளுக்கு எதுவோ புரிவது போலிருந்தது.

"எனக்குக் காதலை பத்தி ஒண்ணுமே தெரியலைடி. எப்படிக் காதலிக்கணும்ன்னு எனக்குக் கத்து கொடுப்பியா மினி?" ஆணவன் பாவமாய்க் கேட்டான். அதைக் கேட்டு பெண்ணவள் பக்கென்று சிரித்து விட்டாள். இதுநாள் வரை மனதினை அழுத்தி கொண்டிருந்த பாரம் நீங்கி விட்டது போலிருந்தது அவளுக்கு...

"சொல்லி கொடுத்து வருவதில்லை காதல். காதல் தானா வரணும் மிஸ்டர் நாராயணன்." அவள் மிடுக்காகப் பதில் சொல்ல... அவன் பாவமாக முழித்தான்.

"எனக்குத் தூக்கம் வருது..." என்றவள் அவனை விட்டு விலகி படுக்க முயல...

"இப்படியே படு..." என்றவன் அவளை நெஞ்சில் சுமந்தபடி படுத்தான். பத்மினி அவனையே பார்த்துக் கொண்டிருக்க...

"தூங்கு மினி." என்றவன் அவளது தலையை மென்மையாய் வருடி கொடுக்க...

'இதுவும் காதல் தான் நானா.' என்று தனக்குள் சொல்லி கொண்டவள் புன்னகையுடன் கணவனது அரவணைப்பில் சுகமாய் உறங்கி போனாள்.


*******************************
 

ஶ்ரீகலா

Administrator
மாலை வேளையில் சகுந்தலா விக்ரமை காண பள்ளிக்கு சென்றாள். அவன் தன்னை மறந்து இருப்பானோ? என்று அவள் யோசனையுடனேயே தான் அவனைக் காண சென்றாள். ஆனால் அவனோ அவளைக் கண்டதும்,

"சக்குஊஊஊ அக்காஆஆஆ..." என்று கத்தி கொண்டே ஓடிவந்து அவளை அணைத்துக் கொண்டான். அவனது ஞாபகசக்தி கண்டு அவளுக்கு வியப்பாக இருந்தது.

"நீ கொடுத்த... சுவீட்டு நல்லா இருந்துச்சுஊஊஊ." அவன் திக்கி திணறி சொல்ல...

"நானா? ஸ்வீட்டா?" அவள் புரியாது விழித்தாள்.

"ஆமாங்க மேடம்... இப்போ தான் சாகித்யா வந்து நீங்க கொடுத்ததா சொல்லி ஸ்வீட் பாக்ஸ் கொடுத்துட்டு போனாங்க. எல்லாமே விக்கிக்கு பிடிச்ச ஸ்வீட்ஸ்." அங்கிருந்த ஆசிரியர் கூறவும்... அவளுக்குப் புரிந்து போனது. சக்தீஸ்வரன் கொடுத்த இனிப்பு பெட்டி விக்ரமுக்காகத் தானா? அவளையும் அறியாது அவளது மனதில் நிம்மதி தோன்றியது.

"பாப்பாஆஆஆ எங்கேஏ?" விக்ரம் கேட்கவும்...

"கடவுள் கிட்ட போயிருச்சு." சகுந்தலா புன்னகையுடன் பதில் சொன்னாள். இப்போது எல்லாம் அவள் துக்கத்தைக் கடக்கவும் பழகி இருந்தாள்.

"கடவுள் திரும்பக் கொடுப்பாருஊஊஊ." விக்ரம் அவளது வயிற்றில் கை வைத்து கூற...

கடவுளே வாக்குக் கொடுத்தது போன்று இருந்தது அவளுக்கு... அவள் மகிழ்வோடு அவனை அணைத்து கொண்டாள்.

சகுந்தலா சிறிது நேரம் விக்ரமுடன் விளையாடி விட்டு வீட்டிற்குக் கிளம்பினாள். வீட்டிற்கு அவள் சென்ற போது அங்கு ஆதித்யா, ஆதிரை இருவரும் வந்திருந்தனர். அவர்களைக் கண்டதும் அவளது விழிகள் வியப்பில் விரிந்தது.

"ஆதி, ஆரி எப்போ வந்தீங்க?" சகுந்தலா ஆர்ப்பாட்டத்துடன் அவர்களை வரவேற்றாள். அவர்களைக் கண்டதும் இனிப்பு பெட்டியை பற்றிச் சக்தீஸ்வரனிடம் கேட்க வந்தவள் அதை மறந்து தான் போனாள்.

"இனி நாங்க இங்கே தான் இருப்போம்." இருவரும் கூறியபடி அவளை அணைத்து கொண்டனர்.

"ம்க்கும்..." சக்தீஸ்வரன் தொண்டையைச் செருமி கொண்டு அங்கு வந்தான்.

அண்ணனை கண்டதும் ஆதித்யா சட்டென்று சகுந்தலாவிடம் இருந்து விலகி கொண்டான். அதைக் கண்டு சக்தீஸ்வரன் விழிகளில் திருப்தி வந்தது.

"அப்போ மும்பை போகலையா?" சகுந்தலா கணவனைக் கண்டு கொள்ளாது கேள்வி கேட்க...

"இல்லை... விளம்பர ஷூட்டிங் முடியும் வரை நாங்க இங்கே தான்." என்றவர்களைக் கண்டு அவளது விழிகள் இடுங்கியது.

"இந்த விளம்பரத்துக்கு டிரெஸ் டிசைனிங் நாங்க தான்." என்று இருவரும் கோரசாகச் சொல்ல... சகுந்தலா முகத்தில் யோசனை வந்தது.

"நீ தான் எங்க கிட்ட சொல்லாம வந்துட்ட. நாம எல்லோரும் ஒண்ணா வரலாம்ன்னு இருந்தோம்." ஆதிரை தான் குறைப்பட்டுக் கொண்டாள்.

"பேசினது போதும்... சாப்பிட வாங்க." சக்தீஸ்வரன் எல்லோரையும் இரவு உணவு உண்ண அழைத்தான்.

ஆதித்யா, ஆதிரை இருவரும் அரட்டை அடித்துக் கொண்டே உண்ண... சகுந்தலா யோசனையுடன் உணவினை உண்டாள். அதைச் சக்தீஸ்வரன் கண்டு கொண்டாலும் பெரிதாக அலட்டி கொள்ளவில்லை. பூவையவளின் புயல் தாக்குதலுக்கு அவன் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டான்.

ஆதித்யா, ஆதிரை இருவரும் உறங்க சென்றவுடன்... சகுந்தலா சக்தீஸ்வரனை தேடி வந்தாள். அப்போது அவன் அலுவலக அறையில் இருந்தான். அவள் கோபத்தோடு அறை கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல...

"ரொம்ப லேட்டா வந்திருக்க... சீக்கிரமே வருவன்னு எதிர்பார்த்து இருந்தேன்." அவன் கேலியாய் அவளை வரவேற்றான்.

"இது எல்லாம் உங்க பிளானா?" அவள் குரல் நடுங்க கேட்டாள்.

"ஆம்..." என்றான் அவன் அசராது...

"ஏன்?" அவளுக்குக் கண்கள் கரித்துக் கொண்டு வந்தது.

"சந்தோசமா இருந்தியா?" அவன் சம்பந்தம் இல்லாது கேள்வி கேட்க...

"என்னது?" அவள் புரியாது அவனைப் பார்த்தாள்.

"என்னைப் பிரிந்து சென்றால்... சந்தோசமா இருப்பேன்னு நீ சொன்னியே. அதான் கேட்டேன்." என்று கேட்டவனை அவள் உணர்வில்லாது பார்த்தாள். அவனைப் பிரிந்து அவள் எங்கே மகிழ்ச்சியாக இருந்தாள்?

"இந்த ஆறு மாச கால டைம் எதுக்குன்னு தெரியுமா?" அவன் கேட்டதுக்கு... அவள் அமைதியாக அவனைப் பார்த்து இருந்தாள்.

"உன் மனசும், உடம்பும் தேறுவதற்குத் தான். உன்னை அடுத்தவனுக்குத் தாரைவார்த்து கொடுக்க இல்லை." அவனது வார்த்தைகள் அத்தனை கடினத்துடன் வந்தது. அதைக் கேட்டு அவளது உடல் பயத்தில் சில்லிட்டது.

"நீ அக்ரிமெண்ட் போட்ட கம்பெனிக்கு நாங்க தான் ஒவ்வொரு வருசமும் அட் ஷூட் பண்ணி தருவோம்." அவன் சொன்னது கேட்டு அவளுக்கு எதுவோ புரிந்தது.

"மாடலிங் துறைக்குப் புதுசான உனக்கு இந்த ஆஃபர் கிடைக்கக் காரணம், சாட்சாத் நானே." அவன் தன்னைச் சுட்டிக்காட்டி கூற...

சகுந்தலாவுக்கு இப்போது எல்லாம் புரிந்துவிட்டது. வலை விரித்துக் காத்திருந்தவனின் வலைக்குள் அவள் தானாக வந்து மாட்டி கொண்டாள் என்று...

"எல்லாம் திட்டம் போட்டு செஞ்சிட்டு... என் கண்ணுல வலிய வந்து சிக்கிட்டன்னு டயலாக் வேற." அவள் கோபமாய்ச் சீற...

"எப்படியும் உன்னை வரவழைக்க நான் திட்டம் போட்டேன் தான். ஆனா இடையில் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம போனதால்... நீயே என்னைத் தேடி வந்துட்ட. வந்தது மட்டும் இல்லாது நீ வலிய என்னைத் தேடி வந்து பேசியது உன் தப்பு. வலிய வந்த உன்னை விட்டுவிட நான் என்ன பைத்தியக்காரனா?" அவன் ஒற்றைப் புருவத்தை உயர்த்தியபடி எகத்தாளத்துடன் கேட்டான்.

"எதுக்கு இதெல்லாம் பண்றீங்க?" அவள் கோபத்தோடு சீற...

"என்னோட அவமானத்தைத் துடைக்க..." அவன் அசால்ட்டாய் பதில் கொடுக்க...

"என்னால் முடியாது." அவள் திடமாய் நிற்க...

"என் பழியைப் போக்காம நீ இங்கே இருந்து போக முடியாது." அவன் உறுதியாய் கூற...

"அதையும் பார்க்கலாம்..." அவள் சவடாலாகக் கூற...

"பார்க்க தானே போற." அவனது உதடுகள் கேலியாய் வளைந்தது.

"உங்க கிட்ட மனுசன் பேசுவானா? ச்சீ..." என்றவள் அங்கிருந்து செல்ல முனைய...

சக்தீஸ்வரன் தனது கரம் கொண்டு வேகமாய் அவளது கையைப் பிடித்திழுத்து அங்கிருந்த சுவற்றில் அவளைச் சாற்றினான். அவள் பயத்துடன் அவனைப் பார்த்தாள். அவனோ அவளைப் பார்த்தபடி நிற்க...

"இதெல்லாம் சரியில்லை." அவள் திணறலுடன் கூற...

"எனக்கு இது தான்டி சரி. என்னை ச்சீன்னா சொல்ற? உன்னை..." என்றவன் அவளை நோக்கி குனிந்தான்.

இந்த முறை சக்தீஸ்வரனின் உதடுகள் அவளது இதழ்களைத் தீண்டவில்லை. ஆனால் அவனது உதடுகள் அவளது மேனியை தீண்டியது. அதுவும் வேகமாக, அழுத்தமாக அவளைத் தீண்டி சென்றது. அவனது உதடுகள் தீண்டிய இடங்களை எல்லாம் அவனது கரங்களும் தீண்டி உதட்டின் செயலை சரிபார்த்துக் கொண்டது.

மன்னவன் கரங்களில் மங்கையவள் தன்னை ஒப்பு கொடுத்தவளாய் விழிகளை மூடி நின்றிருந்தாள். அவளது பைத்தியக்கார காதல் மனம் வெட்கமே இல்லாது அவனது தொடுகையில் உருகி கரைந்தது.

"சீக்கிரமே என்னோட வேலை முடிஞ்சிரும் போலிருக்கே." அவனது கர்வ குரலில் அவள் மெல்ல விழிகளைத் திறந்தாள்.

சக்தீஸ்வரன் ஒற்றைப் புருவத்தை உயர்த்தியபடி அவளைக் கேலியாய் பார்த்தான். அப்போது தான் சகுந்தலா தனது உடையைக் கவனித்தாள். சக்தீஸ்வரனின் கைங்கரியத்தில் அவளது உடை தாறுமாறாக விலகி இருந்தது. அவள் திகைத்து போனவளாய் வேகமாய்த் தனது உடையைச் சரி செய்து கொண்டாள்.

"ஹா ஹா..." அவளது செயலை கண்டு அவன் வாய்விட்டுச் சிரித்தான்.

"பொறுக்கி பொறுக்கி..." அவள் அவனைத் திட்ட...

"பொறுக்கி மாதிரி நடக்கவா?" என்று கூறியபடி அவன் அவளது முகம் நோக்கி குனிந்தான். சகுந்தலா அச்சத்தை விழிகளில் தேக்கி அவனைப் பார்த்தாள்.

மனைவியின் அச்சத்தில் சக்தீஸ்வரன் உதடுகளில் புன்னகை அரும்பியது. அவளது விழிகள் பயத்தில் அங்குமிங்கும் நர்த்தனமாடியதை கண்டு... அவனது உதடுகள் உல்லாசமாய் விசிலடித்தபடி அவளைக் கண்டு சரசமாய்ப் பாடியது. கணவனது இந்த முகம் அவள் காணாத ஒன்று. அவள் பேவென அவனையே பார்த்திருந்தாள்.

"உன் கண்களோ திக்கி திக்கி பேசுதடி
என் நெஞ்சிலே தக்கத்திமி தாளமடி
வனிதாமணி வனமோகினி வந்தாடு
கனியோ கனி உன் ருசியோ தனிக் கொண்டாடு"


தொடரும்...!!!
 

ஶ்ரீகலா

Administrator
அத்தியாயம் : 49

இன்று தான் தாஸ் வருவதாக இருந்தது. சகுந்தலா ஆதித்யா, ஆதிரையுடன் தாஸை வரவேற்க முதல் ஆளாய் வந்து நின்று விட்டாள். கப்பல் அங்கு வந்து நின்று ஆட்கள் இறங்கும் போது மிகச் சரியாகச் சக்தீஸ்வரன் அங்கு வந்து சேர்ந்தான். அவனைக் கண்டதும் சகுந்தலா ஆதித்யா, ஆதிரையின் பின்னே சென்று மறைந்து நின்று கொண்டாள். அவனைக் கண்டாலே பாழாய் போன அவளது உள்ளமும், உடலும் அவனது அருகாமைக்காக ஏங்கி தவிக்கின்றதே. அதைத் தவிர்க்க எண்ணி தான் இந்த இரண்டு நாட்களாக அவள் அவனிடம் தனியாக மாட்டி கொள்ளாது ஆதித்யா, ஆதிரையுடன் சுற்றிக் கொண்டு இருந்தாள். இப்போது அவனைக் கண்டதும் அவளது உடலும், உள்ளமும் குறுகுறுத்தது. அதை மறைக்கவே அவள் மறைவாக நின்று கொண்டாள்.

தன்னிடம் கண்ணாமூச்சி ஆட்டம் விளையாடும் மனைவியவளை சக்தீஸ்வரன் புரிந்து கொள்ளாது இருப்பானா? அவள் வேண்டுமென்றே தன்னைத் தவிர்ப்பது அவனுக்கு நன்கு புரிந்தது. இருந்தாலும் அவன் அவளைக் கண்டும் காணாதது போல் இருந்தான். இதோ இப்போதும் தன்னைக் கண்டதும் ஓடி ஒளியும் அவளை அவன் சிறிதும் கண்டு கொள்ளவில்லை. அவன் தனது விழிகளில் குளிர்கண்ணாடியை அணிந்து கொண்டு அங்கு வந்து நின்ற கப்பலை பார்த்தான்.

தாஸ் தான் முதலில் வந்தது. அவனைக் கண்டதும் சகுந்தலா, "தாஸ்..." என்று ஆர்ப்பாட்டத்துடன் ஓடிவந்து அவனை அணைத்துக் கொள்ள...

"டாலு..." தாஸ் திகைப்பாய் அவளைப் பார்த்தவன் பதிலுக்கு அவளை அணைக்கவில்லை.

"என்னாச்சு தாஸ்?" சகுந்தலா அவனிடம் இருந்து விலகியபடி கேட்க...

"அதை நான் தான் உன் கிட்ட கேட்கணும்? உனக்கு என்னாச்சு?" தாஸ் அவளைப் புதிராகப் பார்த்தான்.

"ஏன் இப்படிக் கேட்கிற?" சகுந்தலா புரியாது விழிகளைச் சுருக்கினாள்.

"ஏதேச்சையா தொட்டாலே உனக்கு அப்படி ஒரு கோபம் வரும். அப்படிப்பட்ட நீ கட்டிப்படிச்சு வரவேற்கிறதை பார்த்தால்... இது சகுந்தலா தானான்னு எனக்குச் சந்தேகமா இருக்கு?" அவன் வியக்க...

'இவன் ஒருத்தன் நேரங்காலம் தெரியாம பேசிக்கிட்டு...' சகுந்தலா தனக்குள் முணுமுணுத்துக் கொண்டே சக்தீஸ்வரனை திரும்பி பார்த்தாள். அவனை வெறுப்பேற்ற தானே அவள் தாஸை அணைத்தது.

சகுந்தலா செயலில் சக்தீஸ்வரன் முதலில் திகைத்தான் தான். பின்னர்த் தாஸ் சொன்னதைக் கேட்டு அவனுக்குச் சிரிப்பு வந்து விட்டது. அவன் தனது சிரிப்பினை அடக்கி கொண்டு நின்றிருந்தான். சகுந்தலா பார்க்கும் போது அவனது முகம் உணர்வுகளைத் துடைத்து வெறுமையுடன் காட்சி அளித்தது. அதைக் கண்டு அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது. அவன் குளிர்கண்ணாடி அணிந்து இருந்ததால்... அவனது விழிகளில் வழிந்த சிரிப்பினை காண அவளுக்குக் கொடுத்து வைக்கவில்லை.

"ம், அதே சகுந்தலா தான். சும்மா சும்மா கேள்வி கேட்டு எரிச்சல் படுத்தாதே தாஸ்." அவள் சிடுசிடுக்க...

"ஓகே ரிலாக்ஸ் டாலு." தாஸ் அவளை அமைதிப்படுத்தினான்.

ஆதித்யா, ஆதிரை இருவரும் தாஸை வரவேற்றவர்கள்... பிறகு சக்தீஸ்வரனை தாஸிடம் அறிமுகப்படுத்தினர்.

"ஹலோ..." தாஸ் கையை நீட்ட...

"ஹாய்..." என்றபடி சக்தீஸ்வரன் அவனது கையைப் பிடித்துக் குலுக்கினான்.

"உங்க கம்பெனி விளம்பரங்கள் எல்லாம் நான் பார்த்து இருக்கிறேன். ரொம்ப அற்புதமா இருக்கும். உங்களைச் சந்திச்சதில் எனக்கு ரொம்பச் சந்தோசம்." தாஸ் சக்தீஸ்வரனை புகழ்ந்து பேச...

சக்தீஸ்வரன் தனது கண்ணாடியை கழற்றி விட்டு 'எப்படி?' என்பது போல் ஒற்றைப் புருவத்தை ஏற்றியபடி சகுந்தலாவை பார்த்தான்.

"ப்ச், இப்போ இது ரொம்பத் தேவை. நீ வா தாஸ்." சகுந்தலா உதட்டை சுழித்துக் கொண்டு தாஸை அழைக்க...

சக்தீஸ்வரனின் பார்வை அவளது உதட்டுச் சுழிப்பின் மீது நிலைத்து நிற்க... 'ஆத்தாடி, இது அதுல்ல...' என்று பயத்துடன் நினைத்தவள் வேகமாகத் தனது முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அதைக் கண்டு சக்தீஸ்வரனின் உதடுகள் கேலியாய் வளைந்தது.

அடுத்துச் சாய்ராம் தனது குழுவினருடன் வந்தான். விளம்பர படப்பிடிப்பு என்றாலும்... அதற்கும் நிறையத் தொழில்நுட்ப கலைஞர்கள் தேவை. அவர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு அவன் வந்திருந்தான். சக்தீஸ்வரன் தனது நண்பனையும், தங்களது குழுவினரையும் வரவேற்றான். பிறகு அவன் பணிபுரிபவர்களைத் தனியே வண்டியில் ஏற்றி அனுப்பி வைத்துவிட்டு, சாய்ராமை மட்டும் தன்னுடன் அழைத்துக் கொண்டான். சாய்ராம், தாஸ் இருவரும் அவர்களுடன் தங்குவதாக ஏற்பாடு.

சகுந்தலா, தாஸ், ஆதிரை, ஆதித்யா நால்வரும் ஒரு காரில் சென்றுவிட... சாய்ராம் சக்தீஸ்வரனுடன் தனியே காரில் வந்தான்.

"சிஸ்டர் இப்போ ஓகேவா சக்தி?" சாய்ராம் கேட்க...

"ப்ச், இல்லை..." என்றவன் சாலையில் கவனமானான்.

"என்னடா சொல்ற? நாம அவ்வளவு பிளான் போட்டது எல்லாம் வேஸ்ட்டா?"

"அப்படின்னு சொல்ல முடியாது. அதைச் சொல்லி தான் அவளைப் பிளாக்மெயில் பண்ணிக்கிட்டு இருக்கேன்." என்று சொன்ன சக்தீஸ்வரனின் முகம் இறுகி போயிருந்தது. இந்தளவிற்குக் கீழே இறங்க வேண்டுமோ என்று அவனுக்குத் தோன்றியது போலும். ஆனாலும் அவளை விட்டு விட அவனுக்கு மனமில்லை.

"அம்மாவுக்கு ராதா மேல் கோபம் ஒண்ணும் இல்லையே." சாய்ராம் தயக்கத்துடன் கேட்டான்.

"ச்சேச்சே, அப்படி எல்லாம் இல்லைடா. என்னோட கணிப்பு சரின்னா... அவங்களுக்கு உடம்பு சரியில்லாம போனது கூட டிராமான்னு தான் நினைக்கிறேன்." என்றவனைச் சாய்ராம் திகைப்புடன் பார்த்தான்.

"என்னடா சொல்ற?"

"எஸ், என்னையும், சகியையும் சேர்த்து வைக்க அவங்க போட்ட டிராமாவா இருக்கலாம். ஆனா அதுக்கு முன்னாடியே நான் அவளைக் கட்டம் கட்டி தூக்க பிளான் பண்ணியது அவங்களுக்குத் தெரியாதில்ல." என்று சிரித்தவனைக் கண்டு சாய்ராம் பிரமிப்பாய் பார்த்தான்.

"சகியை வெறுப்பேற்ற எனக்குப் பொண்ணு பார்த்தாங்க. அதான் நான் நம்ம ராதாவை ஏற்பாடு பண்ணி விட்டேன். நம்ம திட்டத்துக்கு ராதா தான் செட்டாகுவாள் என்று..." சக்தீஸ்வரன் சிரித்தபடி கண்ணைச் சிமிட்டி கொண்டு கூற... அதைக் கேட்டு சாய்ராம்க்கும் சிரிப்பு வந்தது.

"ஆனா ஒண்ணு சொல்லணும். ராதா நாம நினைச்சதை விட ரொம்ப நல்லா நடித்தாள்." அவன் ராதாவை பாராட்ட...

"இருந்தாலும் ராதா பேசியது கேட்டு எனக்கே ஒரு மாதிரியாகி போச்சு." சாய்ராம் வருத்தம் கொள்ள...

"அது நான் சொல்லி கொடுத்தது தானேடா. ராதா உனக்குத் தங்கச்சின்னா... எனக்கும் அவள் தங்கச்சி தான்." சக்தீஸ்வரன் நண்பனை சமாதானம் செய்தான்.

"ஒண்ணு சொல்லியே ஆகணும்டா. நீ இதைச் சாக்கா வச்சு சிஸ்டரை கிஸ் அடிச்ச பார். சும்மா சொல்ல கூடாது. ம் ம் ம்..." என்று சாய்ராம் ராகம் போட்டு சொல்ல... அதைக் கேட்டு சக்தீஸ்வரனின் முகம் வெட்கத்தில் சிவந்து போனது.

"சக்தி, ஒண்ணு கேட்டா தப்பா நினைச்சிக்க மாட்டியே." சாய்ராம் பீடிகை போட...

"கேளுடா..." சக்தீஸ்வரன் புன்னகையுடன் சொல்ல...

"உண்மையில் எல்லோரும் உன்னை அப்படித்தான் பேசுறாங்களா? உனக்குக் கஷ்டமா இல்லையா?" சாய்ராம் தயங்கி தயங்கி கேட்க...

"பேசுறாங்க தான். இல்லைன்னு சொல்ல முடியாது. ஆனா அதுக்கு எல்லாம் கவலைப்பட்டு மூலையில் முடங்கிக் கிடக்கும் ஆள் நான் கிடையாது. நான் எப்படி, என்னன்னு எனக்கு மட்டும் தெரிஞ்சா போதும். யாருக்கும் நான் என்னை நிரூபிக்கணும்ன்னு அவசியம் இல்லை." சக்தீஸ்வரனின் தெளிவான பதிலை கேட்டு சாய்ராம்க்கு நிம்மதியாக இருந்தது.

"இந்த உலகம் ஆணான என்னையே இப்படிப் பேசுதுன்னா... பெண்ணான சகியை சும்மா விட்டிருக்கும்ன்னு நீ நினைக்கிறியா?" சக்தீஸ்வரன் சாய்ராமை பார்த்து கேட்டான். அவன் இல்லையென்று தலையசைத்தான்.

"அவள் வேலியில்லாத பயிர்ன்னு நினைச்சு நிறையப் பேர் அவளை அப்ரோச் பண்ணியிருக்காங்க. ஆனா சகி தைரியமானவள். எல்லாத்தையும் ரொம்பத் தைரியமா தனியா சமாளிச்சிட்டாள். அதுக்கு ஒரு சாம்பிள் சொல்றேன் கேளு... சந்தர்ன்னு ஒருத்தன், டையமண்ட் பிசினஸ் பண்றான். அவன் அவள் கிட்ட இப்படிக் கேட்டதுக்கு அவள் சொன்ன பதில் என்ன தெரியுமா? அவனோ பொண்டாட்டி கிட்ட ரெக்கமெண்ட்டேசன் லெட்டர் வாங்கிட்டு வர சொல்லி... அவனை ஓட ஓட விரட்டி இருக்கிறாள்." என்ற சக்தீஸ்வரனுக்குச் சந்தரின் அன்றைய நிலையைக் கண்டு இப்போதும் சிரிப்பு வந்தது.

"சிஸ்டரை பத்தி எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்க." சாய்ராம் அவனைக் கண்டு கேட்க... சக்தீஸ்வரன் பதில் சொல்லாது காரை ஓட்டினான்.

"ஒருவேளை சிஸ்டரால் இப்படித் தைரியமா சமாளிக்க முடியாம போயிருந்தால்... நீ என்னடா பண்ணியிருப்ப?"

"ம், அந்தச் சந்தரை உரு தெரியாமல் அழிச்சிருப்பேன். அவளை மாதிரி இளகின மனசு எல்லாம் எனக்கு இல்லை." சக்தீஸ்வரன் ஆத்திரத்துடன் கூறினான்.

"அப்போ சந்தர்?" சாய்ராம் சந்தேகத்துடன் நண்பனை பார்த்தான்.

"ஒண்ணுத்துக்கும் உதவாம வீட்டில் படுத்த படுக்கையாய் கிடக்கிறான்." சக்தீஸ்வரன் கண்சிமிட்டி சிரித்தான்.

"இவ்வளவு காதலை வச்சிக்கிட்டு எதுக்குடா பிரிஞ்சு இருக்க? என்ன இருந்தாலும் நீ சிஸ்டரை தனியே போக விட்டிருக்கக் கூடாது." சாய்ராம் வருத்தம் கொண்டான்.

"என்னைப் பிரிந்தால் தான் சந்தோசமா இருப்பேன்னு சொல்றவளை என்ன செய்யச் சொல்லுற? போன்னு தான் அனுப்பி வைக்க முடியும்." சக்தீஸ்வரனுக்குக் கோபம் வந்தது.

"சக்தி..." சாய்ராம் அவனது கோபம் கண்டு விழிக்க...

"புரிஞ்சிக்காம பிரிஞ்சு போயிட்டாளேன்னு கோபம் இருக்கு தான். ஆனா அதைவிட அவள் மீது அதிகக் காதல் இருக்கு." என்றவன் மனைவியை நினைத்து பெருமூச்சு விட்டான்.

"சிஸ்டர் சீக்கிரமே புரிஞ்சுக்குவாங்க சக்தி." சாய்ராம் ஆதரவாக நண்பனின் தோளில் தட்டினான்.


"எங்கே?" சகுந்தலா தாஸுடன் ஒட்டி உறவாடுவதைக் கண்டு சக்தீஸ்வரனுக்கு ஆற்றாமையாக இருந்தது.
 

ஶ்ரீகலா

Administrator
அதற்குள் வீடு வந்து விட்டது. இருவரும் இறங்கி வீட்டினுள் செல்ல... சகுந்தலா தாஸுடன் கலகலவெனச் சிரித்துப் பேசி கொண்டிருந்தாள். அதைக் கண்டு சக்தீவரனுக்கு உள்ளுக்குள் பற்றிக் கொண்டு வந்தாலும்... வெளியில் கூலாக இருந்தான். அவன் கொஞ்சம் கூடக் கோபம் கொள்ளாதது கண்டு சகுந்தலாவுக்கு முகம் சுருங்கி போனது. அவனைத் தன்னை வெறுக்க வைக்க வேண்டும் என்று அவள் போட்ட திட்டம் எல்லாம் பாழாய் போயிற்றே. இன்னும் நாள் இருக்கிறதே... பார்த்துக் கொள்ளலாம் என்றெண்ணி அவள் நிம்மதி கொண்டாள்.

அன்றைய நாள் பகல் முழுவதும் ஒழுங்காய்ப் போனது. இரவு நேரத்தில் சகுந்தலா சக்தீஸ்வரனிடம் தனியே மாட்டி கொண்டாள். தாஸ் கேட்டான் என்று வெந்நீர் போட சமையலறைக்குள் வந்தவளை சக்தீஸ்வரன் அங்கே வைத்து லாக் செய்து விட்டான். வெகு அருகாமையில் வந்து நின்ற கணவனைக் கண்டு அவளுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்த போதும்... வெளியில் எதையும் காட்டி கொள்ளாது அமைதியாக நின்றாள்.

"என்னடி அவன் கூடச் சேர்ந்துக்கிட்டு என்னைய வம்புக்கு இழுக்கிறியா?" சக்தீஸ்வரன் அடிக்குரலில் கோபத்தோடு உரும...

"அப்படி எல்லாம் இல்லையே." அவள் திணறியபடி அவனைப் பார்த்தாள். அவன் தன்னைக் கண்டு கொண்டானே என்று அவளுக்குப் பயம்.

"அவன் கூட இப்படித் தொட்ட, இங்கே உரசின..." என்று சக்தீஸ்வரன் செய்கையில் செய்து காட்ட... அவனது தொடுகை அவளுக்கு அனலாய் சுட்ட போதும்... உள்ளுக்குள் பனிச்சாரலாய் குளுமையாக இருந்தது என்னவோ உண்மை.

"இங்கே பாருங்க, இது எல்லாம் தப்பு. தாஸ் பார்த்தால் என்ன நினைப்பான்?"

"அவன் நினைக்க என்ன இருக்கு? நான் உன் புருசன்னு சொல்லு..."

"அது தாஸுக்கு தெரியாது."

"அப்போ உனக்குக் கல்யாணமாகலைன்னு நீ அவன் கிட்ட பொய் சொல்லியிருக்க...?"

"நான் ஒண்ணும் பொய் சொல்லலை."

"நீ உண்மையையும் சொல்லலையே."

"டாலு..." தாஸ் அழைக்கும் குரல் தொலைவில் கேட்டது.

"தாஸ் கூப்பிட மாதிரி இருக்கு. நீங்க தள்ளி போங்க." அவள் அவனது நெஞ்சில் கை வைத்து தள்ள... அவளது தொடுகையில் ஆணவன் இரும்பு உடல் சற்று இளகத்தான் செய்தது.

"சரி, நான் போறேன். ஆனா நீ எனக்கு ஒரு முத்தம் கொடுக்கணும்." அவன் டீல் பேச...

"என்ன விளையாடுறீங்களா?" என்றவளது சத்தம் அப்படியே அடங்கிப் போனது. அவன் தனது இருகரங்களையும் அவளது இடையில் வைத்து அழுத்தி இருந்தான்.

"விளையாட ஆசை தான். நீ ரெடியா?" அவன் தாபத்துடன் அவளைப் பார்க்க...

"என்ன பேசுறீங்க?" அவள் படபடக்க...

"ஒரு முத்தம்... அவ்வளவு தான். அடுத்தச் செகண்ட் நான் போயிக்கிட்டே இருப்பேன்." என்று பிடிவாதம் பிடித்தவனை இயலாமையுடன் அவள் பார்த்தாள். அவன் அசராது அவளது பார்வையைத் தாங்கி நின்றான்.

சகுந்தலா கணவனது உயரத்திற்கு எம்பியவள் அவனது கன்னத்தில் தனது உதட்டினை லேசாக ஒற்றி எடுத்தாள். அதற்கே அவளுக்குப் படபடவென்று வந்தது.

"நான் கேட்டது உதட்டில். இங்கே இல்லை. போனா போகுது இதைப் போனசா நான் எடுத்துக்கிறேன்." அவன் தனது உதட்டினை பிதுக்கி காட்ட...

"டாலு..." தாஸ் குரல் அருகில் கேட்டது.

சகுந்தலா பயத்தில் சக்தீஸ்வரன் முகத்தைப் பற்றி அவனது உதட்டில் தனது உதட்டினை பதிக்க... அடுத்த நொடி அவன் அவளது செயலை தனதாக்கி கொண்டான். சில நொடிகள் மட்டுமே நீண்ட முத்தம் தாஸ் வருகையால் முற்றுப் பெற்றது. சகுந்தலா முகம் சிவக்க நின்றிருக்க... சக்தீஸ்வரன் அவளது முகத்தை ரசனையுடன் பார்த்தபடி வெளியில் வந்தான்.

"நீங்க எங்கே இங்கே?" சக்தீஸ்வரனை கண்டு தாஸ் கேட்க...

"நல்ல ஆள் கிட்ட வெந்நீர் கேட்டீங்க போங்க. அவளுக்கு அடுப்பை பத்த வைக்கக் கூடத் தெரியாது." சக்தீஸ்வரன் போகிற போக்கில் தாஸிடம் சகுந்தலாவை பற்றிக் கொளுத்தி போட்டு விட்டுப் போனான்.

அதைக் கேட்ட சகுந்தலா கோபத்தோடு, "நான் சமைச்சு நீங்க சாப்பிட்டதே இல்லையா?" என்று கத்த...

"சாருக்கு நீ எப்போ சமைச்சு கொடுத்த டாலு?" தாஸ் கேட்க... சகுந்தலா திருதிருவென விழிக்க...

"சார் கேட்கிறார்ல்ல... பதில் சொல்லு." என்ற சக்தீஸ்வரன் உல்லாசமாக விசிலடித்தபடி சென்று விட்டான்.

"அது... ஆங், எங்க ரெண்டு குடும்பங்களைப் பத்தி தான் உனக்குத் தெரியுமே. அங்கே வீட்டில் இருக்கும் போது சமைச்சது." சகுந்தலா சமாளித்தாள். தாஸ் அதையும் நம்பி விட்டான்.

தனது அறைக்குள் நுழைந்த சகுந்தலாவிற்கு இன்னமும் படபடப்பு நீங்கவில்லை. அதேநேரம் சக்தீஸ்வரன் கொடுத்த முத்தம் மீண்டும் மீண்டும் அவளது நினைவில் நின்று அவளது உள்ளத்தையும், உடலையும் சிலிர்க்க செய்தது. அவள் கரங்களைக் கொண்டு முகத்தை மூடியபடி படுக்கையில் விழுந்தாள். அவள் மனமெங்கும் மன்னவனின் வாசமே நிறைந்திருந்தது.

வானில் பவனி வந்த வெண்ணிலவை பார்த்திருந்த சக்தீஸ்வரன் உதடுகளில் வெற்றி புன்னகை உறைந்திருந்தது. சீக்கிரமே சகுந்தலா அவனது கை வந்து சேர்ந்து விடுவாள் என்கிற நம்பிக்கை அவனுள் எழுந்தது.

போரில் இரத்தம் கொண்டு வெற்றி பெறலாம் தான். ஆனால் காதல் போரில் ரத்தம் கொண்டு வெற்றி பெற்றால்... வலியும், வேதனையும் தான் மிஞ்சும். காதல் மனைவிக்கு வலியை கொடுக்கக் கூட அந்தக் காதல் கணவனுக்கு விருப்பம் இல்லை. காதல் போரில் காதலை கொண்டு கூட வீழ்த்த முடியும். அதனால் அவன் காதல் போரில் தீவிரவாதியாகச் செயல்படாது மிதவாதியாகச் செயல்பட்டான். அந்தக் காதலையே ஆயுதமாக்கி அவன் போர் புரிய ஆயத்தமாகி விட்டான்.

சகுந்தலா ஆழ்மனதில் புதையுண்டு இருக்கும் காதல் வெளியில் வர வேண்டும். அப்போது தான் அவனது காதல் கை கூடும். அவர்களது காதல் வாழ்க்கை சிறக்கும். அவன் நினைத்தைவிடச் சகுந்தலா முதல் பந்திலேயே விக்கெட் இழந்து விட்டாள். சாகித்யா உணவு கொண்டு வந்ததற்கே சகுந்தலாவுக்குள் இருந்த உரிமை உணர்வு வெளிவந்து விட்டது.

"நீ என் கோபத்தைத் தூண்டி விட்டு என்னை விலகி போக வைக்கிறாயா? ஹா ஹா... அது என் கிட்ட நடக்காது. நான் உன் பொறாமையைத் தூண்டி உன் உரிமை உணர்வை வெளியில் கொண்டு வந்து உன்னை அடைவேன்." அவன் மனதிற்குள் சபதம் எடுத்துக் கொண்டான்.

*****************************

படப்பிடிப்பு எப்படி, எந்த மாதிரி நடைபெறும் என்று எல்லோருக்கும் ஒரு குறிப்புக் கொடுக்கப்பட்டது. நாட்காட்டி விளம்பரம் என்பதால்... பனிரெண்டு மாதங்கள், பனிரெண்டு காலச் சூழலில் படம் பிடிப்பதாக இருந்தது. இருவர் சந்தித்து, காதலை பகிர்ந்து, திருமணம் செய்வது முதல் குழந்தை பிறந்து அழகான குடும்பமாய் இருப்பது வரை ஒரு அழகிய கவிதை போன்று இருந்தது அவர்கள் கொடுத்த தீம். சகுந்தலாவுக்குமே இது ரொம்பப் பிடித்திருந்தது. எல்லாம் சரியாகத் தான் இருந்தது, படப்பிடிப்புக்குச் செல்லும் வரை... அங்குச் சென்றதும் தான் சகுந்தலாவுக்குப் படப்பிடிப்பு நடக்கும் இடம் பற்றித் தெரிய வந்தது.

பிரம்மாண்டமான நட்சத்திர விடுதியில் வந்து இறங்கிய சகுந்தலா அதன் பிரம்மாண்டம் கண்டு பிரமித்து நின்றாள். அவள் அருகில் நின்ற ஆதிரையிடம்,

"இது யாரோட ஹோட்டல் ஆரி? ரொம்ப அழகா இருக்கு." என்று ஆர்வத்தோடு கேட்டாள்.

"நம்மளோடது..." ஆதிரை சாதாரணமாகச் சொல்ல...

"நம்மளோடதா?" சகுந்தலா கேள்வியாய் அவளைப் பார்க்க...

"என்னோடது..." என்றபடி சக்தீஸ்வரன் சகுந்தலாவை கடந்து சென்றான்.

"நான் ஒண்ணும் என்னோடதுன்னு சொல்லலையே." அவளும் அவன் காதுபடச் சொல்ல...

"சொல்லிட்டாலும்..." அவன் உதட்டை சுழித்துக் கொண்டு சொல்ல... அவன் எதைப் பற்றிப் பேசுகின்றான் என்று அவளுக்குத் தெரியாதா என்ன!

"உன் அண்ணன் ரொம்பத்தான் என்னை இரிடேட் பண்ணிக்கிட்டே இருக்கார். இது நல்லதுக்கு இல்லை சொல்லி வை ஆரி." சகுந்தலா ஆதிரையிடம் காய்ந்தாள்.

"அண்ணா..." ஆதிரை சக்தீஸ்வரனை அழைக்க...

"இப்போ எதுக்கு அவரைக் கூப்பிடுற? பேசாம இரு." சகுந்தலா அவசரமாக அவளை அடக்கினாள். சக்தீஸ்வரன் செய்யும் அட்டகாசம் அவளுக்குத் தெரியும் அல்லவா!

சக்தீஸ்வரன் அடக்கப்பட்ட சிரிப்புடன் மனைவியைப் பார்த்திருந்தான்.

எல்லோரும் மின்தூக்கி மூலம் மேல் தளத்திற்குச் சென்றனர். ஜனவரி மாதத்திற்கான படப்பிடிப்பு என்பதால்... அங்கிருந்த நீச்சல் குளத்தைச் சுற்றி அதிகாலை நேரம் பனி சூழ்ந்திருப்பது போன்று அழகாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. அவள் அதன் அழகை வியந்து பார்த்தபடி நடந்து வந்தாள். அப்போது ஆதிரை அவளிடம் வந்து அவள் போடுவதற்காக ஒரு உடையைக் கொடுத்தாள். அதுவோ நீச்சல் உடை. அதை வாங்கிப் பார்த்த சகுந்தலா,

"இதை எல்லாம் நான் போட மாட்டேன்னு உனக்குத் தெரியாதா?" என்று கேட்க... என்ன பதில் சொல்வது? என்று தெரியாது அவள் விழித்தாள்.

"எனக்கு எதுவும் தெரியாது சக்கு. அவங்க டிசைன் பண்ண சொன்னாங்க. நான் பண்ணினேன். இதில் நான் வெறும் டிரெஸ் டிசைனர் மட்டும் தான். டிசைடிங் அத்தாரிட்டி கிடையாது." ஆதிரை அவளது பங்களிப்பை எடுத்துரைக்க...


"எல்லாம் உன் அண்ணன் வேலை தான்." சகுந்தலா கோபமாய் முணுமுணுத்தபடி சக்தீஸ்வரனை தேடி சென்றாள்.
 

ஶ்ரீகலா

Administrator
நல்லவேளையாகச் சக்தீஸ்வரனும் அங்கு வந்திருந்தான். 'என்னை வம்பிழுத்து வேடிக்கை பார்க்கணும்ன்னே வந்திருக்காங்க.' அவனைக் கண்டவள் கோபமாய் முணுமுணுத்துக் கொண்டே அவனை நோக்கி வந்தாள்.

"என்ன இது?" சகுந்தலா அவன் முன்னே உடையைக் காட்டி கேட்க...

"இது என்னன்னு உனக்குத் தெரியாதா?" அவன் பதிலுக்குக் கேள்வி கேட்க...

"இப்படி ஒரு டிரெசை டிசைன் பண்ணியது நீங்க தானே." அவள் கோபத்தில் கத்த... அவன் வலக்கை சுண்டுவிரல் கொண்டு காதை குடைந்தவன்,

"எதுக்கு இப்போ கத்துற? டிரெஸ் நாங்க டிசைன் பண்ணியதா இருந்தாலும்... இந்த விளம்பரம் கொடுத்தது வேற கம்பெனி. அவங்க காலேண்டரில் கவர்ச்சிக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பாங்க. அதைத் தான் நாங்க செய்தது." அவன் அலட்டி கொள்ளாது சொல்ல...

"முன்பு எப்படியோ எனக்குத் தெரியாது. ஆனா நான் இது மாதிரி எல்லாம் போட மாட்டேன்." அவள் அடம்பிடிக்க...

"நீ அவங்களுக்கு ஃபோன் பண்ணி பேசு. என் கிட்ட குதிக்காதே." என்றவன் அங்கிருந்து விலகி செல்ல...

சகுந்தலா அந்த நிறுவனத்திற்கு அழைத்துப் பேசினாள்.

"நான் இது மாதிரி கவர்ச்சியா போஸ் கொடுக்க மாட்டேன்னு ஏற்கெனவே சொல்லி இருந்தேனே." அவள் சற்று கோபத்துடன் கேட்க...

"மேடம், அதுக்காக ஸ்விம்மிங் சூட்டில் போஸ் கொடுக்க மாட்டேன்னு நீங்க சொல்லலையே." என்று அவர்கள் மடக்க...

"அதையும் சேர்த்து தான். என்னால் இப்படிக் கவர்ச்சியா போஸ் கொடுக்க முடியாது." அவள் சட்டம் பேச...

"நீங்க எங்க கூட அக்ரிமெண்ட் போட்டு இருக்கீங்க. அதை மறந்துராதீங்க. இந்த விளம்பரத்தை நீங்க தான் நடிச்சு கொடுக்கணும்." அவளது பதிலை எதிர்பாராது மறுபக்கம் அழைப்புத் துண்டிக்கப்பட்டது.

கடந்த ஆறு மாதமாக இல்லாத பிரச்சினை இப்போது எப்படி? அவள் கோபத்தோடு யோசித்துக் கொண்டிருந்தாள். அதே கோபத்தோடு சக்தீஸ்வரனிடம் வந்தவள்,

"இதை எல்லாம் என்னால் போட முடியாது." என்று தீர்மானமாய்ச் சொல்ல...

"ஹலோ, என்ன விளையாடுறியா? இதுக்காக எவ்வளவு செலவழிச்சு இருக்கேன் தெரியுமா? இதுக்கான நஷ்ட ஈடை நீ தான் கொடுக்கணும்." அவனும் பதிலுக்குக் கோபமாய்ச் சொல்ல...

"நஷ்ட ஈடு எவ்வளவுன்னு சொல்லுங்க... நான் கொடுத்துர்றேன்." அவள் அலட்சியமாக அங்கிருந்த செட்டிங்கை பார்த்தபடி சொல்ல...

"ஐம்பது கோடி மேடம்." அவன் நக்கலாய் பதில் சொல்ல...

"என்னது... இத்துப்போன இந்தச் செட்டிங்குக்கு ஐம்பது கோடியா?" அவள் வாயை பிளந்தாள்.

"இதுக்கு ஆயிரக்கணக்கில் தான் ஆச்சு. ஆனா என்னோட நேரத்தை வீணடிச்சதுக்குத் தான் இந்தப் பணம்." என்றவனை வெட்டவா? குத்தவா? என்பது போல் அவள் பார்த்தாள்.

"என்னோட ஒவ்வொரு நொடி மதிப்பு உனக்குத் தெரியுமா?" அவன் எகத்தாளமாகக் கேட்க...

"என்ன பழிவாங்குறீங்களா?" அவளுக்கு இயலாமையில் கண்ணீர் வந்தது.

"உன் வேலையைப் பார்க்க சொன்னதுக்குப் பெயர்... பழிவாங்கலா? இது என்னடா வம்பா போச்சு?" அவன் போலி வியப்புடன் வாயில் கை வைத்தான்.

"என்னால் இதைச் செய்ய முடியாது." அவள் திடமாய் மறுத்தாள்.

"அப்போ நான் சொன்ன பணத்தை எடுத்து வச்சிட்டு நீ போ. நீ இல்லைன்னா ஆயிரம் பேர் இருக்காங்க." அவன் இரு கரங்களையும் பேண்ட் பையில் விட்டபடி நிமிர்ந்து நின்று அலட்சியமாகச் சொன்னான்.

"என்னோட நிலைமையை உங்களுக்குச் சாதகமாக்கிக்கிறீங்க. இதுக்கு எல்லாம் அனுபவிப்பீங்க." என்றவளது விழிகளில் இருந்து கரகரவெனக் கண்ணீர் வழிந்தது. அதைக் கண்டும் அவன் அசராது நின்றான்.

சகுந்தலா அழுதபடி அங்கிருந்து செல்ல முயல... சக்தீஸ்வரன் சொடக்கிட்டு அவளை அழைத்தான். அவள் நின்றாள், ஆனால் அவனைத் திரும்பி பார்க்கவில்லை. அவன் தான் அவள் முன்னே வந்து நின்றான்.

"எனக்குப் பிடிக்காதுன்னு தெரிஞ்சும், நீ மாடலிங்குக்கு வந்தது உன் தப்பு." என்றவனைக் கண்டு அவள் திகைப்புடன் விழிகளை உயர்த்திப் பார்த்தாள். அவனுக்கு எப்படி இந்த இரகசியம் தெரியும் என்று...

"எனக்கு எல்லாம் தெரியும்டி. உன் கண்ணிமை அசைஞ்சால் கூட அதுக்கு அர்த்தம் என்னன்னு எனக்குத் தெரியும். அப்படிப்பட்டவனுக்கு உன்னோட தில்லாலங்கடி வேலை மட்டும் தெரியாம போயிருமா என்ன? என்னை வெறுப்பேத்த தானே நீ மாடலிங்கை தேர்ந்தெடுத்த. அந்த மாடலிங்கை ஏன்டா தேர்ந்தெடுத்தோம்ன்னு நான் உன்னைய கதறவிடுறேன்டி." அவன் அடக்கப்பட்ட கோபத்தில் பல்லை கடித்தான்.

இனி கணவன் மனமிரங்க மாட்டான் என்பதை அறிந்து சகுந்தலா பதில் பேசாது உடை மாற்ற சென்றாள். அவளது விழிகளில் இருந்து தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. எல்லோரும் அவளையே பார்ப்பது போன்று அவளுக்குக் கூச்சமாக இருந்தது. அவள் தலையைக் குனிந்து கொண்டே வேகமாய் நடந்து தனக்கு என்று ஒதுக்கப்பட்டு இருந்த அறைக்குள் நுழைந்து கதவை தாழிட்டாள்.

சகுந்தலாவுக்குத் தனது கையிலிருந்த நீச்சல் உடையைக் காண காண அழுகை பொங்கி கொண்டு வந்தது. அவள் மாடலிங் துறையில் இருந்தாலும்... இதுநாள் வரை அவள் அதில் கண்ணியம் காத்து வந்தாள். இன்று அந்தக் கண்ணியம் காற்றோடு கரைந்து போகப் போவதை நினைத்து அவளுக்குத் துக்கம் தாங்கவில்லை. நாய் வேடம் போட்டால் குரைத்து தானாக வேண்டும் என்று மனதினை தேற்ற கூட அவளால் முடியவில்லை.

இறுதியில் சகுந்தலா மனதினை கொன்று, உணர்வுகளைக் கொன்று அந்த நீச்சல் உடையை அணிந்தாள். உடையை அணிந்துவிட்டுத் தன்னைக் கண்ணாடியில் பார்த்தவளுக்கு மீண்டும் கண்ணீர் பொங்கி கொண்டு வந்தது. அதுவே நீச்சல் உடை... இந்த லட்சணத்தில் இடையின் இரு பக்கமும் ஓவல் வடிவத்தில் வெட்டப்பட்டு அவளது சிற்றிடை அழகாக அதில் தெரிந்தது. அந்த உடை கூட அவளுக்கு அத்தனை அழகாக, பாந்தமாகப் பொருந்தி இருந்தது. ஆனால் அதை ஏற்க தான் அவளுக்கு மனமில்லை.

ஒருவழியாகச் சகுந்தலா மனதினை ஒருநிலைப்படுத்திக் கொண்டு அறையை விட்டு வெளியில் வந்தாள். அவள் நீச்சல் குளம் அருகே வரும் வரை அவள் யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை. யாரையும் நிமிர்ந்தும் பார்க்கும் தைரியமும் அவளுக்கு இல்லை. அவளது தைரியத்தைத் தான் சக்தீஸ்வரன் காவு வாங்கி விட்டானே. அவளது மனம் அழுகையோடு அவனைத் திட்டி தீர்த்தது. அப்போது தான் சகுந்தலா சுற்றுப்புறத்தை கூர்ந்து கவனித்தாள். அங்கே எந்தவித சத்தமும் இல்லாது அந்த இடமே அமைதியாக இருந்தது. அவள் யோசனையுடன் நிமிர்ந்து பார்த்தாள்.

அங்கே குழுமியிருந்த படக்குழுவினர் யாரையும் அங்கே காணவில்லை. சக்தீஸ்வரன் மட்டும் கையில் புகைப்படக் கருவியோடு நின்றிருந்தான். யாருமில்லை என்று நிம்மதி கொள்வதா? இல்லை கணவனாக இருந்தாலும் சக்தீஸ்வரன் அவளுக்கு அந்நியனே. அவனின் முன் இப்படி உடலை காட்டி கொண்டு நிற்பதா? என்று அவள் இருயோசனையோடு நின்றிருந்தாள்.

சக்தீஸ்வரன் புகைப்படக் கருவி மூலம் தனது மனைவியைப் பார்த்தவன்... அவளது அழகில் அசந்து போய்க் கண்ணிமைக்க மறந்தான். அவன் தன்னையும் அறியாது புகைப்படக் கருவியைக் கீழே இறக்கினான். சிக்கென்று தெரிந்த அவளது இடையைக் கண்டு மூச்சடைத்தவன் மெல்ல தனது பார்வையை உயர்த்தினான். அங்கே பெண்ணவளின் அழகினை கண்டு அவன் பிரமித்துத் தான் போனான். மனைவி அழகி தான், அது அவனுக்குமே தெரியும். ஆனால் அவள் இத்தனை அழகு என்று இன்று தானே அவன் அறிந்து இருக்கின்றான். காதல் பித்துக் கொண்டவன் இப்போது மோக பித்துப் பிடித்துப் போய்த் தலைச்சுற்றிப் போனான்.

“பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன்
ஆஹா அவனே வள்ளலடி”

கணவனது பார்வையில் தெரிந்த மாற்றத்தை கண்ட சகுந்தலா... அவனது பார்வையில் இருந்து தனது உடலை மறைக்க எண்ணி... அங்கிருந்த நீச்சல் குளத்தில் குதித்து விட்டாள். மார்பளவு நீரில் நின்றபடி அவள் தனது முகத்தில் இருந்த நீரை வழித்து எடுத்தாள். அவளது செயலை கண்டு அவன் வாய்விட்டுச் சிரித்தான்.

"என் நிலைமை உங்களுக்குச் சிரிப்பா இருக்கா?" அவள் அழுகை மறைந்து கோபத்துடன் கேட்டாள். யாருமில்லாத சூழல் அவளது இயல்பு குணத்தைத் திருப்பி இருந்தது.

"இல்லையா பின்னே?" அவன் அவளைக் கேலி செய்ய... அதற்கும் அவள் அவனை முறைத்தாள்.

"எவ்வளவு நேரம் இப்படியே தண்ணிக்குள்ள இருக்கப் போற? வெளியில் வா..." அவன் தனது கரத்தினை அவளை நோக்கி நீட்டினான்.

சகுந்தலா அவனது கரத்தினைப் பிடிக்காது வெளியேறி செல்ல வேண்டி படிக்கட்டினை தேடினாள். படிக்கட்டு சற்று தள்ளி இருந்தது. அவள் அதை நோக்கி போக எத்தனித்த போது... சக்தீஸ்வரன் குனிந்து அவளைத் தூக்கி கொண்டான்.

"விடுங்க..." என்று துள்ளியவளை அவன் கரையில் நிறுத்த...

அவனது கரங்களில் துள்ளி கொண்டிருந்தவள் பிடிமானம் இல்லாது தடுமாறி கீழே விழுந்து விடுவோமோ என்று பயந்து அவனது தோள்களை இறுக பற்றிக் கொண்டாள். நீரில் மூழ்கி எழுந்த தாமரை பூ போன்று அழகுற இருந்தவளை கண்டு அவன் கண்ணிமைக்க மறந்து நின்றிருந்தான். கணவனது பார்வையில் தன்னையும் அறியாது மயக்கம் கொண்ட பாவையவள் நாணம் கொண்டு முகம் சிவக்க... அவனும் மோகத்தில் தன்னை மறந்து அவளது முகம் நோக்கி குனிந்தான். அவளும் தன்வசம் இழந்து மெல்ல விழிகளை மூடி கொண்டாள்.

சக்தீஸ்வரனிடம் இருந்து சத்தம் இல்லாது போகவும்... சகுந்தலா மெல்ல விழிகளைத் திறந்தாள். அவனோ நமட்டு சிரிப்புடன் அவளையே பார்த்திருந்தவன் அருகிலிருந்த தரையை அவளிடம் சுட்டிக்காட்டினான். அவள் புரியாது தரையைப் பார்த்தாள். அங்கே இருவரது நிழல்களும் ஒன்றை ஒன்று அணைத்து முத்தமிட்டுக் கொண்டிருந்தது. அதைக் கண்டு அவள் செந்தாமரையாய் முகம் விகசிக்க நின்றாள். அவனோ அவளை ரசனையுடன் பார்த்திருந்தான்.

“சங்கத்தில் பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது
சந்தத்தில் மாறாத நடையோடு என்
முன்னே யார் வந்தது”

தொடரும்...!!!
 

ஶ்ரீகலா

Administrator
அத்தியாயம் : 50

காலையில் கண்விழித்த பத்மினி எழுந்து மணியைப் பார்க்க... அவள் வழக்கமாய் எழும் நேரத்தை விட இன்று தாமதமாகி இருந்தது. நேற்று இரவு உணவு முடித்துவிட்டு அப்படியே கண்ணயர்ந்தது மட்டுமே அவளுக்கு ஞாபகத்தில் இருந்தது. மன்னவனின் அருகாமையோ, அவனது அணைப்போ, எதோ ஒன்று... வெகுநாட்களுக்குப் பிறகு அவள் நிம்மதியாக உறங்கி இருந்தாள். அதன் விளைவு தான் இந்தத் தாமதப் பள்ளியெழுச்சி. 'அச்சோ, நேரமாகி விட்டதே' என்று தலையில் கை வைத்தவள் வேகமாகக் குளியலறைக்குள் நுழைந்தாள். அவள் குளித்து முடித்துக் கீழிறங்கி வந்தவள் நேரே சமையலறையை நோக்கி சென்றாள்.

அங்கு நாராயணன் சமையல் செய்து கொண்டிருந்தான். அவளது வரவினை உணர்ந்து திரும்பி பார்த்தவன், "குட்மார்னிங் மினி..." என்க...

"குட்மார்னிங் நானா. என்னை எழுப்பி விட்டிருக்கலாமே?" என்றபடி அவள் அடுப்புப் பக்கம் வர...

"எல்லாம் முடிஞ்சது. நீ ஒண்ணும் செய்ய வேண்டாம். முதல்ல இந்தக் காபியை குடி." அவளைத் தடுத்தவன்... அவளது கரத்தில் காபி கோப்பையை வைத்தான்.

பத்மினி காபியை பருகியபடி தன்னவனை விழிகளால் பருகினாள். சாதாரண டீ சர்ட், அரைக்கால் டவுசரை அணிந்து கொண்டு கணவன் நின்றிருந்த போதும்... அவனது அழகும், கம்பீரமும் சிறிதும் குறையவில்லை. அவனோ குக்கரில் பருப்பு, காய்கறிகளைப் போட்டு அடுப்பில் வைத்துக் கொண்டு இருந்தான். நெற்றியில் வியர்வை பூக்கள் பூக்க நின்றிருந்த நாராயணனை கண்டு ஏனோ அவளுக்கு முத்தமிட தோன்றியது. ஆனாலும் சிறு தயக்கம் இருந்தது. அவள் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

"லன்ச் எல்லாம் நான் பேக் பண்ணிடறேன். நீ ஹாஸ்பிட்டலுக்குக் கிளம்பு." என்றவன் வாஷிங்மெசினில் இருந்து துவைத்த துணிகளை எடுத்தான்.

"நான் துணிகளைக் காயப் போடறேனே." அவள் சொல்ல...

"வேண்டாம், நான் பார்த்துக்கிறேன்." என்றவன் பின்னால் சென்று கொடியில் துணிகளைக் காயப் போட சென்றான்.

சீரோ சதவீத ஈகோ கொண்ட ஆண்மகனை கண்டு பத்மினி உள்ளம் பூரிக்க நின்றாள். இத்தகைய குணங்களால் தானே கணவன் அவள் மனதினை கவர்ந்தது. அவளைக் கவர வேண்டுமென்று அவன் என்றுமே இது போன்று செய்தது கிடையாது. சிறுவயதில் இருந்து நாராயணன் இப்படித்தான், பொறுப்பானவன் தான். இந்தப் பொறுப்பு, பக்குவம் எல்லாம் கண்டு தானே அவள் அவனைக் காதலித்தது. இப்போதும் அவளது காதல் அதிகரித்ததே ஒழிய, குறையவில்லை. அதுவும் நேற்றைய பேச்சு வார்த்தைக்குப் பிறகு அவளது மனதில் எந்தச் சலனமும் இல்லை.

காபி குடித்த கோப்பையைக் கழுவி வைத்து விட்டு பத்மினி விஜயாவை காண சென்றாள். அவரது உடல்நிலையைப் பரிசோதித்து விட்டு அவள் கிளம்பு போது...

"என் மேல் கோபமா மினி?" என்று விஜயா கேட்க...

"எதுக்கு அத்தை?" அவள் புரியாது கேட்டாள்.

"அன்னைக்கு நான் அப்படிப் பேசியதுக்கு..." விஜயா தயக்கத்துடன் மருமகளைப் பார்த்தார்.

பத்மினி மருமகள் என்பதை விட... அவர்களது தெய்வத்தின் மகள். அது தான் அவர் முதலில் நினைப்பது. அப்படிப்பட்டவளை அன்று அவர் உதாசீனப்படுத்திப் பேசியது நடிப்பாக இருந்தாலும்... அவரது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

"உண்மையைத் தானே சொன்னீங்க அத்தை. எனக்குக் கோபம் எல்லாம் இல்லை.” அவள் புன்னகையுடன் கூறவும் தான்... விஜயா நிம்மதி கொண்டார்.

பத்மினி வேறு உடையை மாற்றி விட்டு தலைவாரி கொண்டிருக்கும் போது தான் நாராயணன் அறைக்குள் நுழைந்தான்.

"கிளம்பிட்டியா? சாப்பாடு எல்லாம் ரெடி. நீ சாப்பிட்டுட்டு இரு. நான் வந்திர்றேன்." என்றவன் அலமாரியை திறந்து தனது உடையை எடுத்துக் கொண்டு இருந்தான்.

கண்ணாடி வழியே கணவனைப் பார்த்திருந்த பத்மினிக்கு அவனை முத்தமிடும் தாபம் அதிகரித்தது. அடுத்த நொடி அவள் அவன் அருகே செல்ல... நாராயணன் அவளது வரவினை உணர்ந்து திரும்பியவன் அவளைக் கேள்வியாய் பார்த்தான். அவள் சட்டென்று எம்பி அவனது நெற்றியில் தனது இதழை ஒற்றினாள். நாராயணன் மனைவியின் செயலை எதிர்பார்க்கவில்லை போலும். அவன் விழிகளை விரித்தபடி இனிய அதிர்ச்சியில் உறைந்திருக்க... அவளது இதழ்கள் முத்தம் மட்டுமா கொடுத்தது... அவனது நெற்றியில் பூத்திருந்த வியர்வை பூக்களைத் தனது இதழ்களுக்குள் உறிஞ்சி கொண்டது.

பத்மினி கணவனை விட்டு விலகியவள், "ஈகோ இல்லாத என்னவனுக்காக... எனக்காக எல்லாம் செய்யும் என் அன்பனுக்காக..." என்று கண்சிமிட்டி சொன்னவள் அங்கிருந்து ஓடி விட்டாள்.

மனைவியின் செயலை நினைத்து தனக்குள் புன்னகைத்துக் கொண்ட நாராயணன்... அதே கிறக்க நிலையில் குளிக்கச் சென்றான்.

மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் இருவரும் ஒருவித மயக்க நிலையில் தான் இருந்தனர். மருத்துவமனை வந்ததும் பத்மினி கீழே இறங்கியவள் தனது கையிலிருந்த வெள்ளை கோட்டை வேகமாகப் போட்டு விட்டு தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு கிளம்ப...

"மினி, ஒன் மினிட்..." என்று அவளைத் தடுத்து நிறுத்திய நாராயணன்... அவளது கோட்டின் காலரை சரிசெய்து விட்டு பின்பு அவளது நெற்றியில் தனது இதழ்களை அழுத்தமாய்ப் பதித்து விட்டு, "பை மினி..." என்றுவிட்டு கிளம்பி சென்றான்.

கணவனது செயலில் பத்மினி தனக்குள் புன்னகைத்தபடி மருத்துவமனைக்குள் நுழைந்தாள். அதே புன்னகை நாராயணனின் உதடுகளிலும் உறைந்து இருந்தது.

நாராயணன் இன்று முக்கியமான வாடிக்கையாளரை சந்திக்க வந்திருந்தான். அவர் சென்னையில் மிகப் பெரிய தொழிலதிபர். நாராயணனின் நேர்மையைக் கேள்விப்பட்டு அவனிடம் தனது நிறுவனங்களின் தணிக்கை பொறுப்பை ஒப்படைக்க எண்ணி அவனை அழைத்திருந்தார். அவரைக் காண்பதற்காக அவன் காத்திருந்த போது பத்மினி அவனை அழைத்து இருந்தாள்.

"என்னாச்சு மினி?" அவனுள் சிறு பதற்றம் வந்து ஒட்டி கொண்டது. ஏனெனில் அவன் அவளை மருத்துவமனையில் விட்டு விட்டு வந்து ஒரு மணி நேரம் தான் ஆகியிருக்கும்.

"நானா..." என்று அழுது கொண்டே அவனது பெயரை சொன்னவளாய் மேலே பேச முடியவில்லை. அடுத்து அவள் அழைப்பை துண்டித்து இருந்தாள்.

அடுத்த அரை மணி நேரத்தில் நாராயணன் மருத்துவமனையில் இருந்தான். அவன் தொழிலதிபரின் சந்திப்பை தவிர்த்து விட்டு தான் இங்கு வந்தது. இதனால் அவன் ஒரு நல்ல வாடிக்கையாளரை இழந்து விட்டான் தான். ஆனால் காதல் மனைவியின் கண்ணீரின் முன்னே அவனுக்கு வேறு எதுவுமே பெரிதாகத் தெரியவில்லை. பத்மினி எங்கே இருக்கிறாள்? என்று விசாரித்து அவன் வந்த போது... அவள் ஓய்வறையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள்.

"என்னாச்சு மினி?" நாராயணன் பதறியபடி அவள் அருகே சென்று அவளது தோள் மீது ஆதரவாகக் கை வைத்தான்.

"நானா?" என்றபடி அவள் அவனை இடுப்போடு அணைத்துக் கொண்டு அவனது வயிற்றில் முகம் புதைத்து அழலானாள்.

என்ன விசயம் என்று அவனுக்குத் தெரியவில்லை. ஆனாலும் அவளுக்கு ஆறுதல் சொல்ல வேண்டி அவன் அமைதியாக அவளது தலையை வருடி கொடுத்தபடி நின்றிருந்தான். சில நிமிடங்களில் அவளே சுதாரித்துக் கொண்டு நிமிர்ந்து இருந்தாள்.

"என்னாச்சு மினி?" அவன் கவலையுடன் கேட்க...

"தனு... ஆறு மாச குழந்தை. சாதாரணக் காய்ச்சல்ன்னு தான் இங்கே வந்தான். டெஸ்ட் பண்ணி பார்த்தால்... டெங்கு காய்ச்சல்ன்னு தெரிய வந்தது. நல்லா தான் ட்ரீட்மெண்ட் பண்ணினோம். ஆனா அவனைக் காப்பாத்த முடியலை. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி..." என்றவளுக்கு மேலே எதுவும் பேச முடியவில்லை. அவளுக்கு அழுகையாக வந்தது.

மரணம் என்றாலே வருந்தக்கூடிய ஒன்று தான். அதிலும் மழலையின் மரணம் என்பது ஆறாத ரணம் தான். நாராயணன் ஆறுதலாக மனைவியை அணைத்துக் கொண்டான்.

"காய்ச்சல் இருந்த போதும் எப்பவும் சிரிச்ச முகத்தோட இருப்பான். ட்ரீட்மெண்ட்க்கு நல்ல ஒத்துழைப்பு கொடுப்பான். அதிலும் அவன் என் கூட அப்படி ஒட்டிக்கிட்டான் தெரியுமா. இப்போ அவன் இல்லாததை நினைத்தால் கஷ்டமா இருக்கு." என்றவளின் தலையை வருடி கொடுத்தான்.

"லீவு எடுக்கலாம் தானே மினி?"

"ம்..." என்றவளை கண்டு,

"அப்போ வீட்டுக்கு போகலாம்." என்றவன் அவளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து விட்டான்.

விஜயா என்னவென்று விசாரித்த போது... பத்மினிக்கு உடம்பு சரியில்லை என்று நாராயணன் சமாளித்து விட்டான். அறைக்கு வந்த பிறகும் நாராயணன் அவளை விட்டு விலகாது அவளை அணைத்தபடி இருந்தான்.

"இப்போ நான் ஓகே தான் நானா. நீங்க போங்க. எனக்காக உங்க வேலை கெட வேண்டாம்."

"காலையில் ஒரு பிசினஸ்மேனை சந்திக்க இருந்தது. இப்போ அது தான் கேன்சலாகிருச்சே. இனி பெருசா வேலை ஒண்ணும் இல்லை. என்னோட அசிஸ்டென்ட்ஸ் பார்த்துக்குவாங்க."

"அந்தப் பிசினஸ்மேன் கிட்ட திரும்ப அப்பாயிண்ட்மென்ட் கிடைக்காதா?" அவள் கவலையுடன் கேட்க...

"தெரியலை... கேட்டு பார்ப்போம்." என்றவன், "நீ எதுக்கு இதை எல்லாம் யோசிக்கிற? இந்தக் கிளையண்ட் இல்லைன்னா... வேறு ஒருத்தர்." என்று மனைவியைச் சமாதானப்படுத்தினான் அவன்...

தனக்காக அனைத்தையும் துறக்கும் கணவனைக் கண்டு அவளது காதல் இன்னமும் அதிகரித்தது. அவள் அவனோடு ஒன்றி கொண்டாள்.


***********************
 

ஶ்ரீகலா

Administrator
அடுத்து படப்பிடிப்புக்கான வேலை ஆரம்பமானது. தான் நீச்சல் உடையை அணிந்தது போன்று புகைப்படம் எடுக்கப்பட்டதா? இல்லையா? என்று சகுந்தலாவுக்கு இன்னமும் தெரியாது. ஆனால் அதற்குப் பதிலாக வேறு ஒரு இடத்தில் செட்டிங் போட்டுப் புகைப்படம் எடுத்தாயிற்று. நீச்சல் உடை புகைப்படங்களைப் பற்றித் திரும்பக் கணவனிடம் பேச அவளுக்குப் பயம். அவனது பேச்சும் பார்வையும் ஒரு மார்க்கமாக இருக்க... சகுந்தலா அவனிடம் தனியே செல்வதைத் தவிர்த்து வந்தாள். அவனும் தானாக அவளிடம் வலிய வந்து பேசாது அமைதியாக இருந்தான்.

இதோ அடுத்தப் படப்பிடிப்பில் தான் இருவரும் பார்த்து கொண்டனர். காதல் மாதமான பிப்ரவரியில் காதலர்கள் இருவரும் காதலை சொல்லுவது போன்று புகைப்படம் பிடிக்க வேண்டும். தாஸ் சிவப்பு ரோஜாவை கையில் பிடித்தபடி அவளிடம் கொடுப்பது போல் நிற்க... சகுந்தலா விழிகளில் காதல் வழிய, முகத்தில் நாணம் பொங்க அதை வாங்குவது போல் நிற்க வேண்டும்.

'நான் அட் ஷூட்டிங் வந்தேனா? இல்லை சினிமா ஷூட்டிங் வந்தேனா? இது என்ன கொடுமையா இருக்கு?' சகுந்தலா புலம்பி கொண்டே கஷ்டப்பட்டு முகத்தில் நாணத்தையும், விழிகளில் காதலையும் கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு அது எங்கே வந்தது? அவளையும் அறியாது அவளது விழிகள் சக்தீஸ்வரனை காண... அவனோ இரு கரங்களையும் கட்டி கொண்டு இவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தான். சகுந்தலா அவனைப் பார்க்க... அவனோ 'இங்கே என்ன பார்வை? அங்கே பார்' என்பது போல் வலக்கை இருவிரல்களைக் கொண்டு சைகை காட்டினான். அதைக் கண்டு விதிர்த்து போனவளாய் அவள் திரும்பி கொண்டாள்.

தாஸும் சாய்ராம் சொன்னது போல் நின்றான். அவனது விழிகளிலும் காதல் மிஸ்ஸிங்.

"தாஸ், சிஸ்டர் இப்படி இல்லை... இப்படி." சாய்ராம் நடித்துக் காட்ட... இருவரும் தலையை ஆட்டினர்.

அப்போது அங்கு எல்லோருக்கும் தேநீர் வழங்கி கொண்டிருந்த சாகித்யாவை கண்ட தாஸின் விழிகள் பளபளத்தது. தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்கும் அவள் அவனுக்கு வித்தியாசமான பெண்ணாகத் தெரிந்தாள். அவனும் அவளிடம் வலிய சென்று பேசத்தான் செய்தான். கேட்ட கேள்விக்குப் பதில் என்று சாகித்யா அமைதியாகிவிட... அவளது ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதி அவனைக் காந்தம் போல் கவர்ந்தது. சகுந்தலா அவனைச் சத்தம் போட்டதில் இருந்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவன் முடிவு எடுத்திருந்தான். அந்தப் பெண் ஏன் சாகித்யாவாக இருக்கக் கூடாது என்று அவன் நினைத்தான். சாகித்யாவை கண்டதும் தாஸின் கண்களில் அவனையும் அறியாது காதல் வழிந்தோடியது.

"பெர்பெக்ட் தாஸ்." சாய்ராம் அவனைப் பாராட்டினான்.

ஆனால் சகுந்தலா தான் இல்லாத காதலை எப்படி வரவழைப்பது? என்று தெரியாது முழித்துக் கொண்டிருந்தாள்.

"சிஸ்டர், நீங்க கொஞ்சம் ஒத்துழைங்க." சாய்ராம் சகுந்தலாவிடம் மென்மையாய்ச் சொன்னான். சகுந்தலா இடத்தில் வேறு ஒரு பெண் இருந்திருந்தால் சாய்ராம் கண்டபடி திட்டி தீர்த்து இருப்பான். நண்பனின் மனைவியைத் திட்டினால் நண்பன் சண்டைக்கு வருவானே. அதனால் சாய்ராம் சற்று அடக்கி வாசித்தான்.

சகுந்தலா தவிப்புடன் நிமிர்ந்த போது... அவளுக்கு நேரெதிரே சக்தீஸ்வரன் நின்றிருந்தான். விழிகளில் குளிர்கண்ணாடி அணிந்தபடி அவன் சூரியனை அண்ணாந்து பார்த்தபடி நின்றிருந்த கம்பீரமான தோற்றம் சகுந்தலாவினுள் சொட்டு சொட்டாக இறங்கியது. அவன் அவளைப் பார்க்காததால் அவள் விழிகளில் வழிந்த காதலோடு தனது கணவனைப் பார்த்திருக்க... சாய்ராம் எதிர்பார்த்தது போன்று அந்தக் காட்சி அழகாக வந்திருந்தது.

"வெல்டன் தாஸ் அன்ட் சிஸ்டர்." சாய்ராம் இருவரையும் பாராட்டினான்.

சகுந்தலா கணவனையே பார்த்திருக்க... சக்தீஸ்வரனோ அவளைக் கண்டு கொள்ளாது அங்கிருந்து நகர்ந்தான். ஆனால் அவள் கள்வனது நடவடிக்கையைக் கண்டு கொண்டாள். அவளது இதழ்களில் அவளையும் அறியாது புன்னகை தோன்றியது.

அதன் பிறகு படக்குழுவினருக்கு உணவு பரிமாறப்பட்டது. மொத்தம் பதினைந்து பேர் இருப்பர். அனைவருக்கும் சாகித்யா தான் பரிமாறினாள். அதுவும் பொறுமையாக... தாஸின் விழிகள் அவளையே சுற்றிக் கொண்டு வந்தது. எல்லோரும் உணவு வாங்கிக் கொண்டு சென்ற பிறகும் கூடச் சாகித்யா உணவின் அருகிலேயே நின்றிருந்தாள். யாரேனும் மீண்டும் வந்தால் பரிமாற வேண்டுமே என்று...

சாகித்யா இன்னமும் உண்ணவில்லை என்பதை அறிந்து கொண்ட தாஸ் வேகமாக உண்டு விட்டு அவளை நோக்கி சென்றான்.

"ஹலோ..." நேர்பார்வையோடு நின்றிருந்தவளின் அருகே சென்று தாஸ் அழைக்க...

"என்ன வேணும் சார்? காபி ஆர் டீ?" என்று அவள் கேட்க...

"ஒண்ணும் வேண்டாம். நீ சாப்பிட்டியா?" தாஸ் அக்கறையோடு கேட்டான்.

"இன்னும் இல்லை."

"நீ போய்ச் சாப்பிடு. இங்கே நான் பார்த்துக்கிறேன்." என்று தாஸ் சொல்ல...

"இல்லை, வேண்டாம் சார். இது என்னோட வேலை. நானே பார்த்துக்கிறேன்." அவள் மறுத்தாள்.

"சக்தி சார் எதுவும் சொல்லுவார்ன்னு பயப்படுறியா? நான் வேணா அவர் கிட்ட சொல்லுறேன்." தாஸ் கூற...

"ஐயோ, இல்லை வேண்டாம்." அவள் பதறி போய் மறுத்தாள்.

"சக்தி சார்." தாஸ் சக்தீஸ்வரனை அழைத்தே விட்டான்.

"என்ன?" அவன் அங்கிருந்து வினவினான்.

"இவங்களைச் சாப்பிட சொல்லுங்க." தாஸ் சொன்னதும்... சக்தீஸ்வரன் எழுந்து அங்கே வந்தான்.

"என்ன தாஸ்?" சக்தீஸ்வரன் கேள்வி தாஸிடம் கேட்டாலும் அவனது விழிகள் சாகித்யா மீதே பதிந்து இருந்தது.

சக்தீஸ்வரன் இங்கு வரும் போதே சகுந்தலாவும் அவனைப் பின்பற்றி இங்கே வந்துவிட்டாள். கணவன் சாகித்யாவை காண்பது கண்டு அவளுக்கு பற்றிக் கொண்டு வந்தது.

'தாஸ் கேள்வி கேட்டால்... அவனைப் பார்த்துப் பதில் சொல்லணும். அது என்ன அவளைப் பார்த்துக்கிட்டு நிற்கிறது?' அவள் கோபமாக வந்தது.

"இவங்களைச் சாப்பிட சொல்லுங்க. நான் சொன்னா கேட்க மாட்டேங்கிறாங்க." தாஸ் சொன்னதும் சக்தீஸ்வரன் சாகித்யாவை கேள்வியாய் பார்த்தான்.

"வேலை முடிஞ்சதும் சாப்பிட்டுக்கிறேன் சார்." அவள் பதில் சொல்ல...

"அதான் சாரே சொல்லுறாரே. நீ போய்ச் சாப்பிடு." சக்தீஸ்வரன் சொல்லவும்... சாகித்யா மறுபேச்சு பேசாது தனக்கான உணவினை தட்டில் எடுத்துக் கொண்டு அங்கிருந்து அகன்றாள்.

சாகித்யா பற்றிக் கணவனிடம் கூறி கடிய முடியாத எரிச்சலில் இருந்த சகுந்தலா நண்பன் புறம் திரும்பி, "தாஸ், இவள் கூட உனக்கு என்ன பேச்சு?" என்று கோபம் கொள்ள... சக்தீஸ்வரன் சகுந்தலா பேச்சில் கோபமாய்ப் பல்லை கடித்தான்.

"ஏன்? என்னாச்சு?" தாஸ் புரியாது கேட்டான்.

"இவள் மோசமான பெண். ஒரு ஆம்பளையை விடுறது கிடையாது. எல்லா ஆம்பளைங்க கிட்டேயும் வழிஞ்சி, வழிஞ்சி பேசுவாள். இதில் கல்யாணமானவங்க, கல்யாணமாகாதவங்க என்கிற பிரிவினை எல்லாம் கிடையாது. அவளுக்கு வேண்டியது ஒரு ஆண்." சகுந்தலா மிகவும் கேவலமாகச் சாகித்யாவை பற்றிப் பேசினாள். கணவன் சாகித்யாவிடம் கூடுதல் கவனத்தைச் செலுத்துவது அவளுக்குக் கோபத்தை வரவழைத்து இருந்தது. கோபம் என்று சொல்லுவதை விடப் பொறாமை என்று கூடச் சொல்லலாம்.

"டாலு, உனக்கு என்னாச்சு? யாரையும் இப்படிக் கேவலமா பேச மாட்டியே. இங்கே வந்ததில் இருந்து நீ சரியில்லை." தாஸ் தோழியைக் கடிய முடியாது அமைதியாகக் கேட்டான்.

"அது வந்து தாஸ்..." சாகித்யா பற்றித் தான் பேசியது சற்று அதிகப்படி தான் என்று சகுந்தலாவுக்குப் புரிந்தது. அவள் தவிப்புடன் கைகளைப் பிசைந்தாள்.

"நான் பார்த்தவரையில் அந்தப் பெண் மீது எந்தத் தவறும் இருப்பது போல் தெரியவில்லை. அப்படியே அவள் இருந்தாலும்... அது அவளோட பெர்சனல். அதைப் பற்றி நாம பேச கூடாது." தாஸ் எடுத்து சொல்லவும்.. சகுந்தலா சரியென்று தலையாட்டியவள்,

"சாரி தாஸ். ஏதோ ஒரு மூட்ல..." என்று வருந்தி மன்னிப்பு கேட்டாள்.

"உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா டாலு? ரிலாக்ஸ்டா." தாஸ் அதை எளிதாக எடுத்துக் கொண்டான்.

சகுந்தலா அங்கிருந்து விலகி சென்று தனிமையில் நின்றிருந்தாள். சக்தீஸ்வரன் அவளின் பின்னேயே வந்து அவளின் அருகே வந்து நின்றான்.

'இவங்க என்ன சொல்ல போறாங்களோ?' அவள் உள்ளுக்குள் சலிப்பாக எண்ணி கொண்டாள்.

"சகுந்தலா..." சக்தீஸ்வரன் தன்னை முழுப்பெயர் சொல்லி அழைத்தது கண்டு அவளுக்கு எரிச்சல் வந்தது.

"என்ன?" அவள் எரிச்சலுடன் கணவனிடம் கேட்டாள்.

"என்னடி வாய் ரொம்ப நீளுது?" அவன் கோபமாய்க் கேட்க...

"வாய் நீளுதா?" என்றவள் தனது வாயை தொட்டு பார்த்தபடி, "எத்தனை முழத்துக்கு நீளுது?" என்று நக்கலாகக் கேட்க...

"என்ன கிண்டலா?" அவன் கோபமாய்ச் சீற...

"அப்படித்தான் வச்சுக்கோங்களேன்." அவள் அலட்சியமாகச் சொன்னாள்.

"தேவை இல்லாம அடுத்தப் பெண்ணைப் பத்தி அசிங்கமா பேசாதே." அவன் எச்சரிக்கும் குரலில் கூற...

"அவள் அப்படிப்பட்ட பெண் தானே." அவள் கோபமாய்ப் பதிலடி கொடுத்தபடி அவனை உறுத்து விழித்தாள்.

"இப்போ அவள் அப்படி இல்லை." அவன் அமைதியான குரலில் எடுத்து சொல்ல...

"அவளைப் பத்தி நீங்க எனக்குச் சொல்ல தேவை இல்லை. எனக்கே அவளைப் பத்தி தெரியும்." சகுந்தலாவுக்குக் கணவன் மீது கோபம், அவன் சாகித்யாவை தாங்கி பேசி, தன்னைத் திட்டுவது கண்டு அவளுக்கு வருத்தமாக இருந்தது.

"நீ மனுசியே இல்லை. உன்னுடன் பேசுவது வீண்." அவன் திரும்பி போக எத்தனிக்க...

"அப்போ தானே உங்களுக்கு வசதியா இருக்கும்." என்றவளை அவன் திரும்பி கூர்மையாகப் பார்த்தான்.

"நான் ராட்சசி. அவள் தேவதை. போங்க, தேவதை பெண்ணிடம் போங்க." என்று அவள் முகத்தைத் திருப்பிக் கொள்ள...

இதுவரை கோபமாய் இருந்த சக்தீஸ்வரனின் கோபம் இந்த நொடி காணாது போனது. மனைவியின் கோபம் கூடத் தனக்கானது, தன்னை வேறு பெண்ணிடம் விட்டு கொடுக்க முடியாததால் வருவது என்பதை அறிந்த அவனுக்கு இன்னமும் அவள் மீது கோபம் இருக்கக் கூடுமோ!

"இந்த ராட்சசனுக்கு ஏத்த ராட்சசி." என்று அவன் முணுமுணுக்க...

"என்னது?" ஏதோ யோசனையில் இருந்தவள் அவனைக் கண்டு கோபமாய்க் கேட்க...

"நான் அவள் கிட்ட போகக் கூடாது. அவ்வளவு தானே." சக்தீஸ்வரன் கேட்டது கண்டு அவள் யோசனையாய் பார்த்தாள். இப்படி எல்லாம் சட்டென்று அடங்கி விடும் ரகம் இவன் இல்லையே என்று...

"ராட்சசி நீ கூட எனக்கு ஓகே தான். வர்றியா?" என்று அவன் குறும்பு குரலில் கேட்க...

"எதுக்கு?" அவன் கூற வருவது அந்த மக்குவுக்கு இன்னமும் புரியவில்லை போலும்.

"வேற எதுக்கு? பாப்பா பெத்துக்கிறதுக்குத் தான்." என்றவன் தனது இரு கரங்களையும் தொட்டில் ஆட்டுவது போன்று சைகை காட்ட...

"யூ யூ யூ..." என்றவளின் முகம் கொஞ்சம் கோபத்திலும், மீதி நாணத்திலும் சிவந்து போனது.

"இட்ஸ் ஓகே. உனக்கு வர விருப்பம் இல்லைன்னா பரவாயில்லை. நான் வேற பார்த்துக்கிறேன்." என்று சொன்னவன் நமட்டு சிரிப்புடன் அங்கிருந்து செல்ல...

சகுந்தலா இயலாமையுடன் புசுபுசுவென்று மூச்சு விட்டபடி கோபத்துடன் நின்றிருந்தாள். அவளது நிலையை மனக்கண்ணில் கண்டவனது புன்னகை இன்னமும் அதிகரித்தது.

********************************
 

ஶ்ரீகலா

Administrator
அன்றைய படப்பிடிப்பு முடிந்ததும் எல்லோரும் தீவை சுற்றி பார்க்க சென்றனர். சகுந்தலா சக்தீஸ்வரனை முறைத்துக் கொண்டு வந்தாள். அவனோ அவளைக் கண்டு கொள்ளாது தாஸ், சாய்ராமுடன் பேசி கொண்டு வந்தான். ஆதித்யா, ஆதிரை இருவரும் அவர்களுக்குள் பேசி கொண்டு நடந்தனர். இரட்டையர்கள் என்பதால் அவர்களது ரசனை எல்லாம் ஒன்றாக இருக்கும். அதனால் அவர்கள் இருவரும் சுவாரசியமாகப் பேசி கொண்டிருந்தனர். சகுந்தலா யாருடனும் பேசாது தனியாக வந்து கொண்டிருந்தாள். இயற்கை எழில் கொஞ்சும் தீவு அவளது மனதினை சற்று அமைதிப்படுத்தியது. அவள் அமைதியாக நடந்து வந்தாள்.

அப்போது அங்கு ஒரு தொங்கு பாலம் வந்தது. அதைக் கடந்தால் மறுபுறம் இருக்கும் காட்டிற்குள் செல்லலாம். ஆதித்யா, ஆதிரை பேசியபடி அந்தப் பாலத்தில் நடந்து சென்றனர். இருவரும் ஒருவரது கரத்தினை ஒருவர் பிடித்தபடி சென்றதால் பிடிமானம் இல்லாது தள்ளாடவில்லை. அதே போன்றே மற்றவர்களும் செல்ல... தாஸ் சாய்ராமுடன் அந்தப் பாலத்தில் நடந்தான். மீதம் இருந்தது சகுந்தலா மற்றும் சக்தீஸ்வரன். சக்தீஸ்வரன் அவளை அழைக்காது அவன் தனியே பாலத்தில் நடக்க ஆரம்பித்தான். அவன் இங்கு வந்து பழக்கம் போலும்.

சகுந்தலா தான் பாலத்தின் மீது செல்ல பயந்து கொண்டு அப்படியே நின்றாள். பிறகு துணிச்சல் வந்தவளாகப் பாலத்தின் நுனியில் நின்று கொண்டு பாலத்தின் கட்டை மீது ஒற்றைக் காலை வைத்தாள். அதற்கே பாலம் கிடுகிடுவென ஆடியது. அவள் பயந்து போய்த் தனது காலை எடுத்து விட்டாள். இப்படியே அவள் காலை வைப்பதும், எடுப்பதுமாக இருக்க... தூரத்தில் இருந்து இதைக் கண்ட ஆதித்யா, தாஸ் இருவரும் அவளை நோக்கி வந்தனர். சக்தீஸ்வரன் மறுபக்கம் சென்றவன் அமைதியாக நடப்பதை வேடிக்கை பார்த்தான்.

"சக்கு என் கையைப் பிடிச்சுக்கோ. நான் கூட்டிட்டு போறேன்." ஆதித்யா தனது கரத்தினைச் சகுந்தலாவிடம் நீட்டினான்.

சகுந்தலா அவனது கரத்தினைப் பற்றியபடி தைரியமாகப் பாலத்தின் மீது ஒரு காலை வைத்தவள்... அடுத்தக் காலை வைக்கும் போது பாலம் பலமாக ஆடியதில் பயந்து போய்ப் பின்னுக்குச் சென்று விட்டாள்.

"டாலு, என் கையைப் பிடிச்சிட்டு வா." தாஸ் சொல்லவும்... அவளும் அவனது கையைப் பிடித்துக் கொண்டு செல்ல முயல... அந்தோ பரிதாபம்! அந்த முயற்சியும் தோற்றுப் போனது.

அதைக் கண்ட சக்தீஸ்வரன் விறுவிறுவென அவர்களை நோக்கி வந்தவன்... இருவரையும் கண்டு, "நீங்க போங்க. நான் பார்த்துக்கிறேன்." என்க...

"நீங்க எப்படி?" தாஸ் யோசனையுடன் கேட்க...

"தாஸ் வா..." அண்ணனை பற்றித் தெரிந்த ஆதித்யா தாஸை இழுத்துக் கொண்டு சென்று விட்டான்.

அவர்கள் இருவரும் மறுபக்கம் சென்றுவிட்டதை உறுதி செய்து கொண்ட சக்தீஸ்வரன் சட்டென்று குனிந்து சகுந்தலாவை தனது கரங்களில் தூக்கி கொண்டான்.

"என்ன பண்றீங்க?" அவள் அவனது பிடியில் இருந்து திமிற...

அவனோ பதில் கூறாது பாலத்தின் மீது நடக்க ஆரம்பித்தான். அவ்வளவு தான் பாலம் ஆடியதில் சகுந்தலா பயந்து போய் விழிகளை இறுக மூடி கொண்டாள். அவளது கரங்களோ கணவனின் கழுத்தை சுற்றி இறுக பற்றிக் கொண்டது. மனைவியின் செயலில் சக்தீஸ்வரன் மூச்சடைத்துப் போனான். அவனது முகம் அவளது நெஞ்சுக்குழியில் அழுத்தமாய்ப் பதிந்தது. பயத்தில் இருந்த சகுந்தலா முதலில் அவனது ஸ்பரிசத்தை அறியவில்லை. மேலும் மேலும் அவனது முகத்தின் அழுத்தம் அதிகரித்த போது தான். அவள் தாங்கள் இருக்கும் நிலையை உணர்ந்தாள்.

சகுந்தலாவுக்குமே கணவனது செயல் கிறக்கத்தைக் கொடுத்தது. அவளும் கழுத்தை இறுக பற்றிக் கொண்டு அவனது உச்சந்தலையில் முகம் பதித்துக் கொண்டாள். சாய்ராம், ஆதித்யா, ஆதிரை மூவரும் இவர்களைத் தவறாக நினைக்கவில்லை. இவர்களது உறவு அவர்களுக்குத் தெரியும் அல்லவா! தாஸ்க்கு தான் இது வித்தியாசமாகத் தெரிந்தது. ஆனாலும் சகுந்தலா மிகவும் பயந்து போயிருக்கிறாள் என்று அவன் நினைத்துக் கொண்டான்.

மறுபக்கம் வந்ததும் சக்தீஸ்வரன் மனமே இல்லாது சகுந்தலாவை கீழே இறக்கி விட்டான். அவளால் அவனது முகத்தைக் காண முடியவில்லை. அவள் வேறு எங்கோ பார்த்தபடி நின்றிருந்தாள்.

"எல்லோரும் என்ன பார்த்துக்கிட்டு இருக்கீங்க? போகலாம்." சக்தீஸ்வரன் சொன்னதும் எல்லோரும் நடக்கத் தொடங்க...

சக்தீஸ்வரன் சகுந்தலாவுடன் இணைந்து நடந்தான். நடக்கும் போது இருவரது தோள்களும் உரசி கொண்டது. இருவரது கரங்களும் தொடாமல் தொட்டுக் கொண்டது. அது இருவருக்குள்ளும் தீயை பற்ற வைத்தது. இருவருமே அமைதியாக வந்தனர். இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுபுற அழகோடு அவர்களது மோன நிலையும் சேர்ந்து அந்தத் தருணத்தை அழகாக்கியது.

எல்லோரும் முன்னே செல்ல... இருவரும் பின்னே மெல்ல நடந்தனர்.

"இன்னும் ஒரு வாரத்தில் தீவு திறப்பு விழா இருக்கு." அவன் செய்தி போன்று சொன்னான்.

"வேலைகள் எல்லாம் முடிஞ்சதா?" அவளும் சாதாரணமாகப் பேசினாள்.

"ம், கொஞ்சம் இருக்கு. முடிச்சிரலாம்." என்றவனைக் கண்டு அவள் அமைதியாகக் கேட்டு கொண்டாள்.

"விழாவுக்குச் சென்ட்ரல் மினிஸ்டர், ஸ்டேட் சீஃப் மினிஸ்ட்ர் எல்லோரும் வருவாங்க." என்றவனை அவள் புரியாது ஏறிட்டு பார்த்தாள்.

"இதை எல்லாம் எதுக்கு உன் கிட்ட சொல்றேன்னு பார்க்கிறியா?"

சகுந்தலாஆமென்பது போல் தலையாட்டினாள்.

"அவங்க முன்னாடி நீ என்னோட பொண்டாட்டியா வந்து என் கூட நிற்கணும். அதுக்குத் தான் சொல்றேன்."

"நானா?" அவள் தயங்க...

"அப்போ சாகியை நடிக்கச் சொல்லவா?" அவன் கேலியாய் கேட்டான்.

"ஓ... சாகித்யா சாகியாகி போனாளா?" சகுந்தலா வரிந்து கட்டி கொண்டு சண்டைக்கு நின்றாள்.

அவளது உரிமை குணம் கூட அவனைக் காதலாய் சுகமாய்த் தாலாட்டியது. அது அவனுக்கு நிரம்பப் பிடித்திருந்தது.

"வேறென்ன செய்யச் சொல்ற?" அவன் புரியாதது போன்று கண்களை இடுங்கினான்.

"வேற ஏதாவது பண்ணுங்க?" அவனிடம் எகிறியவள், "பொண்டாட்டி நான் இருக்கும் போது அவளைப் பொண்டாட்டின்னு சொல்லுவாங்களாம். எனக்கு வர்ற கோபத்துக்கு?" என்று அவள் தனக்குள் முணுமுணுக்க... அவள் சொன்னது கேட்டு அவனது உதடுகள் புன்னகையில் விரிந்தது.

"அப்போ நீ தான் வந்து நிற்கணும். இல்லை இல்லை பொண்டாட்டியா வந்து நடிக்கணும்." என்று அவன் தனது சிரிப்பினை அடக்கி கொண்டு சொல்ல...

"நான் எதுக்கு நடிக்கணும்? நான் தானே உங்க உண்மையான மனைவி." அதற்கும் அவள் எகிற...

"முன்னே போனால் கடிக்கிற. பின்னே போனால் உதைக்கிற." என்று அவன் நக்கல் தொனியில் பேச...

"அப்போ நீங்க என்னைய கழுதைன்னு சொல்றீங்களா?" அவள் கோபத்தில் மூச்சுவாங்க அவனைக் கண்டு முறைத்து பார்த்தாள்.

"எஸ், அப்கோர்ஸ்..." என்று தோள்களைக் குலுக்கியவனைக் கண்டு அவள் எரித்துவிடுவது போல் பார்க்க...

"இங்கே பார், ரெண்டே ஆப்சன் தான். ஒண்ணு என் மனைவியா வா. இல்லைன்னா விலகி போயிரு. நான் பார்த்துக்கிறேன்." அவன் திட்டவட்டமாய் அழுத்தி சொல்லிவிட்டுச் சென்றான்.

அந்த வார்த்தைகள் வாழ்க்கை முழுவதற்கும் என்றே சகுந்தலாவுக்குத் தோன்றியது. ஆனாலும் அவளால் தான் போட்டு வைத்த கோட்டை தாண்டி அவனிடம் செல்ல பயமாக இருந்தது. அவனுக்குத் தான் வேண்டாம் என்பதில் அவள் உறுதியாக இருந்தாள். அதேசமயம் அவனது செயலில் அவளது காதல் கொண்ட நெஞ்சம் அவன் வேண்டும் என்று தவிக்கத்தான் செய்தது.

சகுந்தலா அமைதியாக வந்தாள். சிறிது தூரம் சென்ற சக்தீஸ்வரன் திரும்பி வந்தான். அவள் அருகே வந்தவன் அவளது காதருகே குனிந்து,

"கழுதை என்றால் அழகான இளம்பெண் என்றும் அர்த்தம் இருக்கு." என்று சொல்ல... அவள் முகம் மலர அவனை ஏறிட்டு பார்த்தாள். சற்று முன்னர் அவன் கூறிய வார்த்தைகள் கூடப் பின்னுக்குப் போய்விட்டது.

"அப்பப்பா இந்தப் பெண்களுக்கு அழகா இருக்கேன்னு சொன்னால் அப்படி ஒரு சந்தோசம். நீயும் அதற்கு விதிவிலக்கு இல்லை." அவன் கேலியாய் கூறி கண்ணடிக்க...

சகுந்தலா அவனை முறைத்தாள்.

"முறைக்காதே. நீ கொஞ்சம் அழகு தான். ஒத்துக்கிறேன்." என்றவனைக் கண்டு அவளது கன்னங்களில் சிவப்பு ரோஜாக்கள் பூத்தது. அதை ரசனையுடன் பார்த்தவன்,

"ஆதி, ஆரி அங்கே இருக்காங்க. போ..." என்று அவளை அனுப்பியவன் தாஸ், சாய்ராமுடன் இணைந்து கொண்டான்.

சிறிது நேரம் கழித்து அங்கே ஓடி கொண்டிருந்த ஓடை அருகே சென்று எல்லோரும் ஓய்வெடுக்க... சக்தீஸ்வரன் ஓடைக்குள் இருந்த கல் மீது ஏறி நின்று கொண்டு இயற்கை அழகை தனது அலைப்பேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தான். அவன் தனியே இருப்பதைக் கண்ட சகுந்தலா அவனை நோக்கி வந்தாள். அவள் ஓடைக்குள் செல்லாமல் கரையில் நின்றாள்.

சக்தீஸ்வரனின் பிம்பம் ஓடையின் தெளிந்த நீரில் அழகாகத் தெரிந்தது. நீரில் தெரிந்த கணவனது அழகினை அவள் ரசித்துப் பார்த்து கொண்டிருந்தாள். காதல் கொண்ட நெஞ்சம் கணவனது அழகினை அள்ளி பருக நினைத்தது. விழிகளுக்கு மட்டும் தான் அந்த உரிமை இருக்கிறதா என்ன? அவள் குனிந்து கணவனது பிம்பம் தெரிந்த நீரை அள்ளி பருகினாள். ஒரு முறை பருகினால் தாகம் தீர்ந்து விடுமா? அவள் மீண்டும் மீண்டும் அந்த நீரை அள்ளி பருகினாள். காதல் கணவனைத் தனக்குள் அடக்கி கொண்டது போன்று அவளது முகத்தில் பரவசம், மனதில் காதல் பிரவாகம்.

இறுதியாகச் சகுந்தலா அந்த நீரை அள்ளி எடுத்து தனது முகத்தின் மீது ஊற்றி கொண்டாள். மன்னவனின் முகத்தோடு முகம் பதித்த உணர்வு அவளுள் நீரை போன்றே ஜில்லென்று இறங்கியது. அவள் விழிகளை மூடி காதலில் கட்டுண்டு உருகி அப்படியே மெய்மறந்து இருந்தாள்.

மனைவியின் ஒவ்வொரு செய்கையையும் சக்தீஸ்வரன் தனது அலைப்பேசியில் இருந்த 'ஃபிராண்ட் கேமிரா' மூலம் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். அவளது செயலில் தெரிந்த காதலை அவன் தனக்குள் உள்வாங்கிச் சொட்டு சொட்டாய் அனுபவித்தான். அந்த நீராகத் தான் இல்லையே என்று ஆணவன் ஏக்கம் கொண்டான். அவனது ஏக்க பெருமூச்சில் அந்தக் காடு வெந்து தணியாது போனது ஆச்சிரியமே!

இருவருக்கும் நினைவே சுகமாய்! கற்பனையே காதலாய்!

“நீராக நான் இருந்தால்
உன் நெத்தியில நான் இறங்கி
கூரான உன் நெஞ்சில்
குதிச்சி அங்க குடியிருப்பேன்
ஆணா வீணா போனேன்”


தொடரும்...!!!
 

ஶ்ரீகலா

Administrator
அடுத்த எபி புதனன்று… இந்த வாரமும் அடுத்த வாரமும் வாரத்திற்கு மூன்று அத்தியாயங்கள் வரும். நவம்பர் 24க்கு பிறகு எப்போதும் போல் வரும். திங்கள், புதன், வெள்ளி மூன்று நாட்கள் அத்தியாயம் வரும்.
 
Status
Not open for further replies.
Top