All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வியனியின் "தந்தியில்லா வீணை"- கதை திரி

Status
Not open for further replies.

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தந்தியில்லா வீணை

வீணை-1

அரண்மனைகள், கோட்டைகள், கொத்தளங்கள், குகை ஓவியங்கள் மற்றும் பல வரலாற்று நினைவுச் சின்னங்கள் ஆகியவற்றால் நிறைந்தக் கலாச்சார பாரம்பரியத்தையும், பல பெருமைகளையும் தாங்கிச் சிறந்து விளங்கும் மாவட்டம் ‘புதுக்கோட்டை' மாவட்டம்.


ஆதி மனிதர்களின் வசிப்பிடமாகத் திகழ்ந்த இம்மாவட்டத்தில், பல பண்டைய கிராமங்கள் தமிழ் சங்க இலக்கியங்களில் அடிக்கடி குறிப்பிடபட்டுள்ளது. இப்பகுதியை ஆண்ட வேந்தர்களால் நிர்மாணிக்கப்பட்ட அரண்மனைகள், கோட்டைகள், கால்வாய்கள் மற்றும் குளங்கள் நிறைந்துக் காணப்படுகின்றன.


இங்கு உள்ள ஆவுடையார் கோயில், குடிமியான் மலை, பிரகதம்பாள் கோயில் ஆகியவை மிகவும் சிறப்பு வாய்ந்தவை. பழமை வாய்ந்த காட்டுபாவா பள்ளி வாசலும், ஆவூர் கிருஷ்துவ தேவாலயமும், சமணர்களின் சித்தன்ன வாசலும் மத நல்லினக்கதிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.


விராலிமலையில் உள்ள மயில்கள் சரணாலயமும், மலைகளில் உள்ள குகைகளில் வடிவமைக்கபட்ட கோயில்களும் பிரதானச் சுற்றுலா தலங்களாகும்.


இவ்வாறு பல சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ள மாவட்டத்திலிருந்து முப்பத்தியிரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது புதுவயல் கிராமம். விவசாயம் முக்கியத் தொழிலாக இருந்தாலும், பொய்த்துவிட்ட மழையாலும், கல்வி தரத்தாலும் இளைஞர்கள் விவசாயத்தை விட்டுவிட்டு வேறு தொழிலுக்குச் சென்றுவிடவே.. ரியல் எஸ்டேட் தொழிலுக்குப் பலியான பூமியைத் தவிர எஞ்சியிருக்கும் விவசாய நிலத்தில் தண்ணீருக்கு ஏற்றார் போல் பயிர் செய்துகொண்டு, தங்களின் சொற்ப காலத்தையும் உழவுக்கு அர்ப்பணித்து உழவுக்கு உயிர் ஊட்டி கொண்டிருக்கின்றனர் அக்கிராம மக்கள்.


அப்படி ஒரு விவசாயம் சார்ந்த குடும்பம் தான் சக்திவேல், வெற்றிவேல் சகோதரர்களின் குடும்பம். சக்திவேல் ராமன் என்றால் வெற்றிவேல் தமையன் பேச்சை கேட்டு அதன்படி நடந்து அவரை பூஜிக்கும் லக்ஷ்மணன். இந்தக் காலத்திலும் இப்படி ஒரு ஒற்றுமையா! என்று ஆச்சரியப்பட வைக்கும் அப்படி ஒற்றுமை உடன் பிறப்புகளுக்கிடையே..! அவர்களுடைய பத்தினிகள் பூங்கோதை, விசாலாட்சி இருவரும் தங்கள் கணவன் மார்களின் மனம் புரிந்து சண்டை சச்சரவுகள் இன்றி ஒற்றுமையாகக் குடும்பம் நடத்தும் மனையாட்டிகள்.


சக்திவேல், பூங்கோதை தம்பதிகளுக்கு மஹாலக்ஷ்மி, விஜயலக்ஷ்மி என்று இரு புதல்விகள். மஹாலக்ஷ்மியை தனது தம்பியின் மனைவி விசாலட்சியின் ஒன்றுவிட்ட அண்ணன் மகன் குமரனுக்கு மணமுடித்து, இரண்டு வயது ஆண் குழந்தையுடன் அதே ஊரில் வசிக்கின்றனர். அவரின் இளைய மகள் விஜயலக்ஷ்மிக்குத் திருமணம் முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.


இளையவரான வெற்றிவேலுக்கு.. வெற்றிவேந்தன் என்ற மகனும், நம் நாயகி வேதவள்ளி என்ற மகளும் உள்ளனர்.


வேந்தன் தனது படிப்பை முடித்துவிட்டு தனது அக்கா கணவர் குமரனுடன் இணைந்து பில்டிங் காண்ட்ராக்ட், எலக்ட்ரிக்கல் காண்ட்ராக்ட் எடுத்து இருவரும் செய்து வரவே.. வேதவள்ளி கடைசி வருடப் பொறியியல் படிப்பைப் படித்து கொண்டிருக்கிறாள்.

நான்கு அறைகள், ஒரு பெரிய ஹால், தானியங்களை அடுக்கி வைக்க ஒரு பெரிய அறை, பூஜை அறை. வீட்டின் பின்பக்கம் குளியலறை, கழிவறை, முன்பக்கம் உள்ள பகுதியில் பல வண்ண மலர் செடிகள், மரங்களால் தோட்டம் அமைக்கப்பட்டு.. அந்தக் காலத்தில் கட்டப்பட்ட வீட்டில் கூட்டு குடும்பமாக வசிக்கின்றனர் சக்திவேல், வெற்றிவேல் சகோதரர்கள்.

எப்போதுமே கலகலவென்று இருக்கும் வீட்டில்.. அன்று மதியம் பரபரப்போடு விஜயலட்சுமி தனதரையில் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தாள். அவளின் அறை வாசலில் ஐந்தே கால் அடி உயரத்தில், மாநிறத்தில் கலையான முகத்துடன், தனது பின்னலை முன்னால் கையில் பிடித்து ஆட்டிக் கொண்டு தனது அஞ்சனம் தீட்டிய மை விழியை சுருக்கி அவளையே பார்த்துக் கொண்டிருந்தவள்..

‘க்கும்’ என்று செருமி தனது இருப்பை விஜிக்கு உணர்த்தினாள் வேதா..!


தனது நடை பயிற்சியை நிறுத்துவிட்டு “ஏய்..! வந்துட்டியா..? போகலாமா..?”


“போகலாம். ஆனா, நீ ஏன் இவ்வளவு பதட்டமா அங்க இங்க நடந்துக்கிட்டு இருக்கே?” என்று வேதா கேட்க..


தனது பதட்டத்தை மறைத்துக் கொண்டு “அதெல்லாம் ஒண்ணுமில்ல டி.. கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு நாள் தானே இருக்கு அதான் கொஞ்சம் பயமாயிருக்கு..”

“பயமா..? எதுக்குப் பயம்..? உனக்கு மாதிரி மாப்பிள்ளை யாருக்குக் கிடைப்பா..? பெங்களூரில் சாப்ட்வேர் இன்ஞ்னீயர்.. கை நிறைய சம்பாதிக்கிறார், எவ்வளவு நாகரிகமா, அழகா ட்ரெஸ் பண்றார். நல்லா சிரிக்க.. சிரிக்கப் பேசி பழகுறார் அப்பறம் என்ன..? இப்பவே உன்கிட்ட சொல்லி வைக்கிறேன் எனக்கும் மாமா மாதிரியே நல்ல பையனா பார்த்து வை”

“அதெல்லாம் அப்பறம் பார்க்கலாம்.. இப்போ வா பியூட்டிபார்லர் போயிட்டு வந்துடலாம்” என்று இருவரும் வாசலுக்கு வந்தனர்.

“ஏய்.. எங்கடி தனியா போறீங்க..? வேந்தன் வந்ததும் துணைக்கு அழைச்சுட்டு போங்க, இப்போ வீட்டுக்குள்ள போங்க” என்று பூங்கோதை சொல்ல..


“என்ன மா..! நாங்க என்ன சின்ன பிள்ளையா..? தனியா இதுவரைக்கும் போகாத மாதிரி இப்போ துணைக்குக் கூட்டிட்டுப் போக சொல்றிங்க.. அண்ணன் கல்யாண வேலையா வெளில போயிருக்கான். அப்பாக்கள் ரெண்டு பேரும் தோட்டத்துக்குப் போயிருக்காங்க, அவன் எப்போ வரது..? நாங்க எப்போ போறது..? அதான் அக்கா கூட நான் போறேன்ல பார்த்துக்குறேன்” என்றாள் வேதா..

“அதுக்கில்ல டா வேதா.. கல்யாணப் பொண்ணு கருவைக் காடு வழியா போகணும் அதான் துணைக்கு யாரையாவது அழைச்சுட்டு போக சொல்றேன்”


“அதெல்லாம் வேண்டாம்மா.. இந்த வேதாவை கண்டாலே பேய் பிசாசு எல்லாம் பயந்துக்கிட்டு போய்டும்.. நான் இருக்கும்போது என்ன கவலை விடுங்க” என்றாள் கண் சிமிட்டி.

“அப்பாடி இன்னிக்காவது ஒத்துக்கிட்டியே டி, பேய் எல்லாம் உன்னைப் பார்த்துப் பயப்பிடும்னு, நான் பெத்த மகளே” என்றார் விசாலாட்சி.

அவரை பார்த்து முறைத்தவள்.. “தாயா நீ..! சரியான பேய், வந்து உன்னைக் கவனிச்சுக்கிறேன்” என்றவள் வண்டியை இயக்க.. விஜி பின்னால் அமர்ந்து கொண்டு பியூட்டி பார்லர் நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கையில்.. திடீரென ஒரு இருசக்கர வாகனம் அவர்கள் வண்டியை மறைத்து நிற்க, அதில் தடுமாறி வண்டியோடு இருவரும் “அம்மா..!” என்ற அலறலோடு கீழே சரிந்தனர்.

அந்த இரு சக்கர வாகனத்திற்குச் சொந்தக்காரன் விறுவிறுவென்று விஜியின் அருகில் வந்தவன்.. தனது முழு உயரத்திற்கு நிமிர்ந்து நின்று, குடித்திருந்ததால் கண்கள் இரண்டும் சிவந்து அவளை வெறித்துப் பார்த்தவன், அவள் கையைப் பிடித்துத் தூக்கி, விழுந்து கிடந்த வேதாவை கண்டுகொள்ளாமல் கருவை மரங்கள் அடர்ந்திருந்த மறைவான பக்கம் இழுத்துச் சென்றான்.



வேதாவோ மெதுவாக எழுந்து.. முழங்கையில் சிராய்ப்பு ஏற்பட்டதால் உண்டான எரிச்சலில் முனகியவள்.. ‘சரியான ரவுடி பய..! இப்படி தள்ளி விட்டுட்டு கண்டுக்காமல் அவளை இழுத்துகிட்டுப் போறான். இவன் ஏன் இங்க வந்தான் அதுவும் விஜியை இப்படி கை பிடிச்சு இழுத்துட்டுப் போறான். அதான் வீட்ல மாமா வந்து பொண்ணு கேட்டதும்.. ரவுடி மாதிரி சண்டை போட்டுக்கிட்டு திரியிறான்னு பெரியப்பாவும், அண்ணனும் கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்களே.. அப்பறம் ஏன் அக்காவை இப்படி இழுத்துட்டுப் போறான்..? அப்போ ரெண்டு பேருக்கிடையிலும் ஏதோ இருக்கு..’ என யூகித்தவள், அவர்கள் பின்னால் சென்றாள்.


“சொல்லு டி..! இப்போ பதில் சொல்ல போறியா இல்லையா..?” மிகுந்தச் சீற்றத்தோடுக் கேட்டுக்கொண்டிருந்தான் அவன்.


“என்ன அவளை மிரட்டிக்கிட்டு இருக்கீங்க..? கொஞ்சம் கூட உயிரை பத்தி கவலைப்படாமல் எங்களை சாகடிக்கப் பார்த்தீங்க.. நாளான்னைக்கு அவளுக்குக் கல்யாணம் ஆக போகுது, ஒழுங்கா அவளை விடுங்க நாங்க போகணும். இல்லை.. மாமாவுக்கும், அண்ணனுக்கும் போன் பண்ணி வர சொல்லுவேன்” ஒரு கையை இடுப்பில் வைத்து வேதா மிரட்டல் தொனியில் பேச..


அவளிடம் வந்த அவன் “என்ன டி..! உன் அக்கா ஏமாத்துகாரிக்கு சப்போர்ட்க்கு வந்துருக்கியா..? ஒழுங்கா நான் அவகிட்ட பேசி முடிக்கிறவரைக்கும் அங்க நில்லு” சிவந்தக் கண்களுடன் இரைந்தான்.


“நான் ஏன்டா அங்க நிற்கணும்..? அவளுக்கும், உனக்கும் பேச்சு என்ன வேண்டி கிடக்கு..” என்றவள்,

“வா விஜி போகலாம்” தன் தமக்கையின் கரத்தைப் பற்றச் சென்றாள்.


அதற்கு முன்னாள் வேதாவின் கையைப் பற்றியவன் “உனக்குச் சொன்னா புரியாதா டி..?” என இழுத்துச் சென்று தள்ளியவன்,

“நாங்க வர வரைக்கும் இங்கையே காவல் காத்துக்கிட்டு இரு” அவன் குரலை உயர்த்திச் சத்தம் போட, அவனது குரலில் தூக்கி வாரிப்போட.. பயந்துப் போனவள் சம்மதமாகத் தலை அசைத்தாள்.


“வீட்ல ஏற்கனவே தனியா போறோம்னு திட்டுனாங்க.. இப்போ நடந்தது தெரிஞ்சது அவ்வளவுதான்.. கட்ட பொம்மி கணக்கா வீர வசனம் பேசுன என்னைத் தான் திட்டுவாங்க.. உடனே அண்ணனையும், மாமாவையும் இங்க வர சொல்லுவோம்” என இருவருக்கும் அழைத்து நிலவரத்தை கூறி வர செய்தாள் வேதா..!

அடுத்த இருபதாவது நிமிடத்தில் அவர்கள் இருவரும் வந்து சேரவே.. கன்னம் இரண்டும் சிவந்து கண்ணீர் பெருக்கடுக்க முள்வேலி மறைவிலிருந்து விஜி வெளியே வந்தாள். அவள் கன்னம் இரண்டும் சிவந்திருப்பதைக் கண்டு அடித்திருக்கிறான் என்று உணர்ந்த வேந்தன்.. பற்களை நரநரவென்று கடித்தவன்..


“எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தா என் தங்கச்சி மேல கை வச்சுருப்பே..? உன்னை என்ன பண்றேன் பாரு டா” என்று அவன் மேல் பாய்ந்தான். இருவரும் அந்த முள்வேலிக்குள் கட்டி புரண்டு அடித்துக் கொண்டிருக்க.. குமரன் படாதபாடு பட்டு இருவரையும் பிரித்து விட்டான்.


“பார்த்தீங்களா மாமா! உங்க தம்பிய.. கல்யாணம் ஆக போற பொண்ணை வழி மறிச்சு அவளை அடிச்சுருக்கிறதே..” தங்கையை அடித்துவிட்ட கோபத்தில் வானத்திற்கும் பூமிக்கும் குதித்தான்.

“கொஞ்சம் பொறுமையா இரு வேந்தா அவன்கிட்ட நான் பேசுறேன்..” பொறுமைசலியான குமரன், அவனை அமைதிப்படுத்த முயற்சி செய்தான் .

“இதுக்கு மேல எப்படி மாமா பொறுமையா இருக்க சொல்றீங்க..! இவன் அவளை லவ் பண்ணா போதுமா..? அவ லவ் பண்ண வேண்டாமா..?”


அவளை உறுத்து விழித்த அவனோ.. அவள் அருகில் செல்ல எத்தனிக்க.. “அரசு” என்று கர்ஜித்தான் குமரன்.


“டேய்.. குமரா என்ன நடந்துச்சுன்னு உனக்குத் தெரியும் தானே, அப்பறம் ஏன்டா என்னை அடக்குறே..?” என்றான் இவ்வளவு களேபரத்துக்கும் காரணமான குமரனின் தமையன் இன்பரசு!


“எதுவும் பேசாதே.. இங்க பாரு உன்னை இத்தனை நாளா அவிழ்த்துவிட்ட காளை கணக்கா விட்டுட்டேன். இனிமேலும் அப்படி இருக்க முடியாது, என்ன நடந்துச்சுன்னு எனக்குத் தெரியும் உன் மேல் எனக்கு நம்பிக்கையும் இருக்கு, விஜிக்கு கல்யாணம் ஆகப்போகுது அவளை இனி தொந்தரவுப் பண்ணாதே. நம்ம வீட்லயும் ஒரு பொண்ணு இருக்கு அதை மனதில் வச்சுக்கிட்டு ஒழுக்கமா நடந்துக்க. அது மட்டும் இல்லை இது என் மானப் பிரச்சனை புரிந்துருக்கும்னு நினைக்கிறேன்” என்க..


கைகளப்பால் முகத்தில் அங்கங்கு கீறி வெளிவந்த குருதியையும், வியர்வையையும் தன் சட்டையால் துடைத்துக் கொண்டவன்.. வேந்தனை முறைத்துவிட்டு விஜியிடம் “நீ சொன்ன விஷயங்கள் எதையும் என் வாழ்க்கையில் நடக்க விடமாட்டேன்டி” என்றவன்,

“காவல் காக்க சொன்னா போட்டா கொடுக்கிற..? இருடி உன்னை கவனிச்சுக்கிறேன்” வேதாவிடம் காய்ந்தவன், தனது வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.


‘ஆளையும், சட்டையையும் பாரு.. பிச்சைகாரன் மாதிரி, என்ன ஒரு அடாவடி! விஜியையும், வேந்தனையும் அடிச்சுட்டானே.. நல்லவேளை என் அக்கா தப்பிச்சா.. எவ இவனை கட்டிக்கிட்டு படாதப்பாடு படப்போறாளோ.. பாவம்!' என்று நினைக்க, விதியோ அவளைப் பார்த்து நீதான் அந்த ஜீவன் என்று சிரித்தது.


“மாமா..! உங்க தம்பி மேலே நம்பிக்கை இருக்குன்னா.. அப்போ என் தங்கச்சிய தப்பா நினைக்கிறீங்களா..?” கோபமாக தன் மாமனிடம் கேட்டான் வேந்தன்.


‘இவனுங்க ரெண்டு பேருக்கிட்டையும் மாட்டிக்கிட்டு நான் படாதபாடு படறேன்’ என எண்ணியவன் “மாப்பிள்ளை அப்படி நான் சொல்ல வரல டா..”


“அப்படி இல்லைன்னா.. அப்பறம் எப்படி மாமா..? உங்க தம்பிக்காக என் தங்கச்சியை அவமானப்படுத்த பார்க்குறீங்க.. உங்க தம்பிதான் நாய் மாதிரி அவ பின்னால் சுத்திருப்பான், அப்படிப்பட்டவன் மேல் நம்பிக்கை இருக்குன்னு சொல்றிங்க.. இது கொஞ்சம் கூட சரி இல்லை. இதுவே நானும் உங்க தங்கச்சி பின்னாடி சுத்தி தொல்லை பண்ணிருந்தா.. இப்படிதான் பொறுமையா பேசிக்கலாம்னு சொல்லிருப்பிங்களா..?” என்றான்.

குமரன் விஜி இப்பவாவது ஏதவாது பேசுவாள் என்று அவள் முகத்தை பார்க்க அவளோ கீழே தலையை குனிந்து கொண்டாள்.


“வேந்தா..! அது வேற.. இது வேற.. நான் என்ன சொல்ல வரேன்னா..”


“நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம். என் அக்காவுக்காக பொறுமையா போறேன்.. இங்க நடந்த எதையும் நான் வீட்டில் சொல்லமாட்டேன். இதுக்கு மேல எனக்கும் உங்களுக்கும் ஒண்ணுமில்ல.. கல்யாணத்துக்கு வந்தோமா.. சப்பிட்டோமான்னு போய்கிட்டே இருங்க..” என்று தனது தங்கைகள் இருவரையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றான்.


அரசுடன் நடந்த பிரச்னையை வீட்டில் மறைத்தவர்கள், எப்போதும் போல் சாதாரணமாக இருக்க.. விஜியை அறைக்குள் அழைத்து வந்த வேதா.. “உண்மையை சொல்லு அவனும், நீயும் விரும்புனீங்க தானே?” என்று கேட்க..


“ஆமாம்” என்பது போல் தலை அசைத்தாள் விஜி.


“உனக்கெல்லாம் என்ன டேஸ்ட் விஜி! அவனை போய் லவ் பண்ணிருக்க? அவன் ட்ரெஸ்ஸும், பழக்க வழக்கமும்.. செஞ்ச வேலைய விட்டுட்டு ஆறு மாதமா இங்க சுத்திக்கிட்டு இருக்கான், அவனை போய்.. ச்சை..!” என்று முகம் சுளித்தாள்.


“நான் ஹாஸ்டலில் இருந்ததால் இதெல்லம் எனக்குத் தெரியாமல் போய்டுச்சு. லவ் பண்ணே சரி.. வீட்ல சொல்ல வேண்டியதுதானே..”

“என் மேல் வீட்ல நம்பிக்கை வச்சுருக்காங்கடி.. நான் லவ் பண்றேன்னு சொன்னா அவங்க நம்பிக்கையை உடைக்கிற மாதிரி ஆயிடாது? அதான் இதை அவங்களா ஏற்பாடு பண்ண கல்யாணம் மாதிரி இருக்கட்டும்னு, அவங்களைப் பொண்ணு கேட்டு வர சொன்னேன். ஆனா, வீட்ல ஜாதகம் பார்த்துட்டு அவருக்கு செவ்வாய் தோஷம் என்னைக் கல்யாணம் பண்ணா என் உயிருக்கு ஆபத்துன்னு சொன்னாங்க, அதோடு அவருக்கு வேலையும் இல்லை.. என்னால என்னடி பண்ண முடியும்? அதான் நமக்குள்ள ஒத்து வராதுன்னு சொல்லி பிரிஞ்சு ஆறு மாதம் ஆகுதுடி. ஆனா, இப்போ வந்து குடிச்சுட்டு பிரச்சனை பண்றான்டி, கல்யாணத்துல வந்து ஏதாவது கலாட்டா பண்ணிடுவானோன்னு பயமா இருக்கு”


“இதை முதலிலேயே யோசிச்சுருக்கணும், என்கிட்ட சொல்லிருந்தா ஜாதகத்தை மாத்தி எழுதி சம்மதிக்க வச்சுருப்பேன்டி”


“ஏண்டி.. மாத்தி எழுதி அவனை கட்டிக்கிட்டு என்னை சாகடிக்க பார்க்குறியா..?”


“அட போடி லூசு..! இந்தக் காலத்திலையும் இதெல்லாம் நம்பிக்கிட்டு, அவனும் கொஞ்சம் பாவம் தான்.. இருந்தாலும் அவனை என்னால் மாமாவாக ஏத்துக்க முடியாது. நீ எதுக்கும் பயப்பிடாதே குமரன் மாமா எல்லாத்தையும் பார்த்துக்குவாரு” என்றாள்.

குமரன் வீட்டில்.. “நீ ஆசைபட்டேன்னு நானும், மஹாவும் போய் பொண்ணு கேட்டோம்.. அவங்க செவ்வாய் தோஷம், வேலை இல்லைன்னு சொல்லித் தட்டிக் கழிச்சுட்டாங்க. நீயும் சரி விட்டுரலாம்னு சொன்னே.. அவங்களும் மாப்பிள்ளை பார்த்து நாளன்னைக்குக் கல்யாணம் வரைக்கும் வந்தாச்சு, இப்போ போய் அவகிட்ட பிரச்சனை பண்ணுனா என்ன அர்த்தம் சொல்லு..?”


“சாரி டா..! என்னால முடியல, அதான் கொஞ்சம் சரக்கு அடிச்சுட்டு அப்படி நடந்துக்கிட்டேன்.. வேண்டுமென்று பண்ணல..”


“நீ இன்னிக்குப் பண்ண காரியத்தால் எனக்கு ரொம்ப அவமானமா போய்டுச்சு டா.. இனிமேல் இது மாதிரி பண்ணி வீட்ல உள்ளவங்க நிம்மதியே கெடுக்காதே.. மஹா அவங்க வீட்டு பொண்ணு நம்மளால் அவர்களோடு உறவு அவளுக்கு விட்டு போகக் கூடாது. நம்ம வீட்ல கல்யாண வயசுல ஒரு பொண்ணு இருக்கா.. ஞாபகம் இருக்கட்டும்” என மிருதுளாவைப் பார்த்துக் கூறியவன், வெளியேறினான்.

அவன் சென்றதும்.. “என்னை மன்னிச்சுடுடா அரசு..! அவதான் உன் பின்னாடி சுத்தி, என்கிட்டே போன் நம்பர் வாங்கி பேசி உன் மனசைக் கெடுத்தான்னு எனக்குத் தெரியும். வீட்ல எதிர்த்து பேச தைரியம் இல்லாமல், இப்போ கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டா சுயநலவாதி” விஜியின் அக்காவும், அரசுவின் அண்ணியுமாகிய மஹா கூற..


“ஏய்..! மஹா! நீ ஏன் சாரி கேட்குற? அதெல்லாம் விடு. நான்தான் புத்தி கெட்டுப் போய் இப்படி நடந்துக்கிட்டேன். இனி குடிக்காமல் பிழைப்ப பார்க்குறேன் போ.. போய் நீயும் குட்டியும் தூங்குங்க, மித்துமா நீயும் போய் தூங்குடா.. அண்ணன் நல்லா இருக்கேன்” என்று அனுப்பி வைத்தவன் கண்களிலிருந்து ஒரு துளி கண்ணீர் வெளியேற..

“நான் சொன்ன மாதிரி செய்து காண்பிப்பேன்” என்று முணுமுணுத்தான்.


பிரச்சனைகள் அனைத்தும் ஓய்ந்து திருமணம் நல்லபடியாக முடிந்தது. அதன்பிறகு வேந்தன் அவர்களிடம் முகம் கொடுத்து பேசாததால்.. மஹா, குமரனின் வருகை குறைந்து விட, விடுமுறைக்கு வரும் வேதாவை அவர்கள் வீட்டிற்கு செல்லக்கூடாது என்று தடுத்திருந்தான் வேந்தன்.


தனது தொழிலை குமரனிடம் இருந்து பிரித்துக்கொண்டவன்.. தானாகவே பில்டிங், எலக்ட்ரிகல் ஒர்க்ஸ் காண்ட்ராக்ட் எடுத்து.. ஆட்களை வைத்து சம்பாத்தித்த மொத்த பணத்தையும் தொழிலில் போட்டு செய்துகொண்டிருந்தான்.


இவ்வாறு எட்டு மாதங்கள் கழிந்தது. தொழில் சம்மந்தமாக வேந்தன் வெளியூருக்குச் சென்றிருந்தான். அன்று இரவு திடீரென சக்திவேலுக்கு நெஞ்சு வலி வந்து துடிதுடிக்கவே.. வேந்தன் இல்லாத காரணத்தால் குமரனுக்கு அழைத்திருந்தார் விசாலாட்சி.


அவனும் மஹாவுடன் உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்றிருந்ததால்.. அவனோ அரசுக்குத் தகவலைச் சொல்லி அங்கு அனுப்பி வைத்தான்.


என்னதான் உறவினர்களாக இருந்தாலும், அவர்கள் வீட்டிற்கு குமரன் திருமணத்திற்குச் சென்றதோடு சரி, அதன்பிறகு செல்லாதவன் இன்று தான் அந்த வீட்டில் அடி எடுத்து வைத்தான்.


உடனே.. அவன் புதிதாக ஆரம்பித்த மெக்கானிக் செட்டில் பழுது பார்க்கப்பட்டு வாடிக்கையாளரிடம் ஒப்படைக்க நின்றிருந்தக் காருடன் வந்தவன், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தான்.

தொடரும்...
 

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே...

தந்தியில்லா வீணை முதல் அத்தியாயம் பதிவிட்டாச்சு, படிச்சுட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள், நன்றி🙏🏽

கருத்துத் திரி👇


அன்புடன்
வியனி❤
 

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வீணை-2


சக்திவேலை திருச்சியில் உள்ள பிரபல மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துவிட்டு, அனைவரும் மனதில் பரவிய பதைபதைப்புடனும், சோகம் ததும்பிய முகத்துடனும் காத்துக் கொண்டிருந்தனர்.



“கடவுளே..! அவுகளுக்கு ஒண்ணுமிருக்கக் கூடாது. அவுக குணமானதும் பழனிக்கு அலகு குத்தி, நடந்து வந்து என் முடியை காணிக்கையா கொடுக்கிறேன்டா.. பழனி மலை ஆண்டவா..!” அழுதுக்கொண்டே வேண்டுதலை வைத்தப் பூங்கோதையை விசாலாட்சி ஆறுதல் சொல்லித் தேற்றிக் கொண்டிருந்தார்.


பலமுறை வேந்தனுக்கு அழைத்த வெற்றிவேல், அவன் பேசி தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாகப் பதில் வரவே சோர்ந்துப்போய் அமர்ந்திருந்தார்.


அடுத்த இரண்டு மணி நேரத்தில் அனைத்து டெஸ்டுகளும் எடுக்கப்பட்டு.. அவர்களை அழைத்த மருத்துவர் இதயத்தில் இரண்டு இடத்தில் அடைப்பு(block) இருப்பதாகச் சொல்லி இரண்டு நாட்களில் பைபாஸ் செய்ய வேண்டும் என்று கூறிவிட்டுச் சென்றார்.


“அய்யோ..! ஆண்டவா..! இப்போ என்ன பண்ணுவேன்? டாக்டர் இப்படி சொல்றாகளே.. இப்போதானே கடனை உடனை வாங்கி வேந்தன் விஜி கல்யாணத்தை முடிச்சான். இப்போ என்ன பண்றதுன்னு தெரியலையே” என்று புலம்பிக் கொண்டிருக்க.. இது அனைத்தையும் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த அரசுவின் பேசி அலறியது..


பேசியை இயக்கி காதில் வைத்தவன் “சொல்லு குமரா..!” என்றான்.


“.............”


“அடைப்பு இருக்குதாம், ரெண்டு நாளுல ஆபரேசன் பண்ண சொல்லிருக்காங்க..”


“.............”

“ம்ம்.. செலவாகும்தான்.. உன் மச்சானை போன்ல பிடிக்க முடியுதான்னு பாரு, உன் சின்ன மாமனாரு அவனுக்குப் பண்ணி அலுத்துப் போய்ட்டாரு.”


“............”



“நான் இங்க பார்த்துக்கிறேன்.. நீ கிளம்பி வா. மஹாவுக்கு ஆறுதல் சொல்லு, குட்டிமாவுக்குத் துணையா பக்கத்து வீட்டு அக்காவை பார்த்துக்கச் சொல்லி விட்டுட்டு வந்துருக்கேன், வண்டில போயிருக்கே.. பதட்டபடாமல் வா.. ம்ம்” என்று பேசியை அணைத்தான்.


அடுத்த நாள் மெதுவாக விடிந்தது அனைவருக்கும். ஊரிலிருந்து வந்த குமரன், மஹா இருவரும் நேராக மருத்துவமனையை அடைந்தனர்.


மஹா, பூங்கோதையைக் கட்டிக்கொண்டு அழுது தீர்த்தாள்.


“என்ன மஹா சின்ன புள்ளை மாதிரி அழுதுகிட்டு இருக்கே..? எவ்வளவு செலவானாலும் பெரியவருக்கு ஆபரேஷன் பண்ணிடுவோம், நீ கவலைபடாமல் இருமா.. அப்போதான் அக்காவும் தைரியமா இருப்பாக எல்லாத்தையும் வேந்தன் பார்த்துக்குவான்” என்றார் விசாலாட்சி.


“சின்னமா.. விஜிக்கும், வேதாவுக்கும் சொல்லிட்டிகளா..?”


“சொல்லியாச்சுமா.. மாசமா இருக்கால்ல, அதான் உடம்பு ரொம்ப வீக்கா இருக்காம் இவ்வளவு தூரம் பயணம் பண்ணக் கூடாதுன்னு சொல்லிருக்காகலாம் மஹா.. இப்போதைக்கு வர முடியாதுன்னு சொல்லிருக்கா பணம் கூட கேட்டு பார்த்தோம், இப்போதான் காரு வாங்கிருக்காகலாம்.. அதுக்கே சேமிப்பு எல்லாம் போட்டாச்சு அப்டின்னா..” என பெருமூச்சு விட்டவர்,

“அவளும் என்ன பண்ணுவா..? வேதாவுக்கு பரீட்சை நடக்குதாம் மா.. நாளைக்குதான் கடைசி பரிட்சை, முடிஞ்சதும் கிளம்பி வரேன்னு சொன்னா” என்றார்.


“என்ன குமரா..! நீ போன இடத்துல பணம் கிடைச்சதா..?” பணத்திற்காக அலைந்தக் குமரனிடம் கேட்டான் அரசு.



“இல்லைடா.. நமக்கு வர வேண்டிய பணம் அது, அந்த ஆளு வெளியூர் போயிருக்காரம் வர ஒரு வாரம் ஆகும்னு சொல்லிட்டாங்க, இப்போ என்ன பண்றதுன்னு தெரியல..”


“உன் மச்சானுக்கு விவரத்தை சொல்லிட்டியா..?”


“சொல்லிட்டேன் டா.. வந்துக்கிட்டு இருக்கேன்னு சொன்னான். அவனும் என்னடா பண்ணுவான்..? இப்போதான் செலவு பண்ணி கல்யாணத்தை முடிச்சான், புதுசா தொழில் பண்றான். பாவம் என்ன பண்றதுன்னு தெரியல?”



“மச்சான்.. மேலே அவ்வளவு பாசம். சரி, இங்க அவங்களுக்கு சாப்பாடு வாங்கிக் கொடு, நான் இப்போ வந்துடுறேன்” என்று வெளியே சென்று விட்டான் அரசு.


நேரம் கடந்து மதிய வேளையை அடைந்தது. மருத்துவமனையை அடைந்த வேந்தன்.. திருமணம், தொழில் என அனைத்திலும் சேமித்த பணத்தையும், கடன் வாங்கியும் செய்ததால் யாரிடம் கேட்பது என்று தெரியாமல் உட்கார்ந்திருந்தான்.


அப்போது ரவுண்ட்ஸ் வந்த மருத்துவர்.. நாளை ஆபரேஷன் செய்வதற்கான நேரத்தை கூற..



பணம் கட்டாமல் எப்படி ஆபரேஷன் என்று முழித்துக் கொண்டிருந்தவர்கள், ரிசெப்சனில் விசாரிக்க.. அவர்களோ குமரனை கை காட்டினர்.



தனது மகனை வைத்துக்கொண்டு.. அரசுவிடம் பேசிக் கொண்டிருந்த குமரனிடம் விரைந்த வேந்தன்.. அவன் கையை பற்றி “ரொம்ப நன்றி மாமா..! மனசுல எதுவும் வச்சுக்காமே சரியான நேரத்தில் உதவிருக்கிங்க உங்க மனசு யாருக்கும் வராது, என்னை மன்னிச்சுடுங்க மாமா..!” என்றான்.


“டேய்.. மாப்பிள்ளை என்னடா இது? மன்னிப்பு எல்லாம் கேட்டுக்கிட்டு.. இந்தப் பணத்தை நான்..” என்று சொல்ல வந்தவனை, அரசு அவன் கையில் அழுத்தம் கொடுத்து ‘வேண்டாம்’ என்பது போல் தடுத்தான்.



“இல்லை மாமா.. கேட்ட இடத்தில் எல்லாம் பணம் கிடைக்கல.. நகை கூட கையில இல்லை. என்ன பண்றதுன்னு தெரியாமல் அல்லாடிக்கிட்டு இருந்தேன் மாமா..” கலங்கியக் குரலில் கூறினான்.


“சரி விடு வேந்தா.. அதான் கட்டியாச்சுல.. எல்லாம் சரியாயிடும்.. எல்லாம் ஒரே சமயத்தில் வந்தா நீயும் என்ன பண்ணுவே..? இன்னும் ஆறு மாதம் போனா எல்லாத்தையும் சரி பண்ணிட போறே.. இதுக்குப் போய் கலங்கிக்கிட்டு? இப்போ போய் மாமாவைப் பாரு, ஒரு சின்ன வேலை அதை முடிச்சுட்டு வரேன்” என்று அனுப்பி வைத்தவன்.


“ஏன்டா.. நீதான் பணம் கட்டுனேன்னு சொல்ல விடமால் தடுத்தே..? எப்படி பணம் புரட்டுனே..? நான் மஹா நகையை அடகு வச்சு பணம் புரட்டலாம்னு இருந்தேன்..” குமரன் சொல்ல,




“மஹா அவன் பேச மாட்டேங்குறான்னு எவ்வளவு அழுதா.. அவனே இப்போதான் உன் மேல் உள்ள கோபம் குறைந்துப் பேசுறான். இப்போ போய் நான் கட்டுனேன்னு சொல்றதுதான் முக்கியமா..? அது மட்டுமில்லாமல் நாளைக்கு விசேஷம் எல்லாம் வரும், அப்போ மஹா நகை இல்லாமல் சொந்தபந்தம் முன்னாடி எதுவுமில்லாமல் நிற்கணுமா..? அதான் நானே பணத்தை ஏற்பாடு பண்ணிட்டேன், என்னால் உங்களுக்குள் இருந்த மனத்தாங்கலை நானே சரி பண்ணிட்டேன்” என்க.


அவன் தலையை ஆதுரமாகத் தடவிக் கொடுத்த குமரன்.. “உன்னை நினைச்சு கவலைப்பட்டுக்கிட்டு இருந்தேன், எவ்வளவு பொறுப்புள்ளவனா மாறிட்டேடா.. சந்தோசமா இருக்குடா..”

“போடா டேய்.. போய் உன் மாமனார பாரு.. செண்டிமெண்ட் சீன் ஒட்ட வந்துட்டான். குட்டிமா தனியா இருப்பா அவளைப் பார்த்துட்டு செட்டுக்குப் போறேன் நிறைய வேலை இருக்கு” என்று சொல்லிவிட்டு வெளியேறியவனை, சிறு புன்னகையுடன் தன் தம்பி செல்வதைப் பார்த்துவிட்டு சக்திவேலை பார்க்கச் சென்றான் குமரன்.



அடுத்த நாள் வெற்றிகரமாக ஆபரேஷன் முடிந்தது. வேதாவும் தனது கடைசி பருவத் தேர்வை முடித்துவிட்டு மருத்துவமனைக்கு வந்துவிட்டாள்.


இரண்டு நாள் கழித்து, மிருதுளாவுடன்.. சக்திவேலை பார்க்க வந்த அரசு.. பிறக்கும் போதே இடது காலை விட.. வலது கால் சிறியதாக இருந்ததால் நடக்கச் சிரமப்பட்ட தன் தங்கையை மெதுவாக அழைத்து வந்தான்.


அவனை கண்ட வேதா “ரவுடி பய..! இன்னும் அப்படியே தான் இருக்கான்” என்று முணுமுணுத்தவள்.. மிருதுளாவைப் பார்த்து மெல்லிதாகப் புன்னகைத்தாள். அங்கு வேதா என்ற ஒருத்தி இல்லாததைப் போல் கண்டுகொள்ளாமல் தனியாக நின்றான் அரசு.

பதிலுக்கு மிருதுவும் வேதாவைப் பார்த்துப் புன்னகைத்தவள், அரசுவிடம் சொல்லிவிட்டு அவளிடம் பேச சென்று விட்டாள். அவன் அருகில் வந்த பூங்கோதை “ரொம்ப நன்றி பா..! நீங்க மட்டுமில்லன்னா.. என்ன பண்ணிருப்போம்னு தெரியல. உனக்குக் கடவுள் நீண்ட ஆயுசையும், சந்தோஷத்தையும் கொடுக்கணும்” என்றவரின் வாழ்த்தை சிறு தலை அசைப்புடன் ஏற்றுக்கொண்டவன், தன் அண்ணன் மகனுடன் ஐக்கியமாகிவிட்டான்.


“என்னடி மிருது.. உன் அண்ணன் இன்னும் குடிச்சுட்டு வெட்டியா தான் சுத்துறானா..?”



“ஒரு ஆறு மாதம் வேலைய விட்டு வந்ததுக்காக, என் அண்ணன வெட்டி ஆஃபீஸ்ர்னே முடிவு பண்ணிட்டியா..? இப்போ என் அண்ணன் அரசு ஆட்டோமொபைல் செட்டோட ஓனர் தெரியுமா..?” கெத்தாகக் கூறினாள் மிருதுளா.


“என்ன மெக்கானிக் செட்டா..?”என்று முகம் சுளித்தாள் வேதா!


“ரொம்ப சுளிக்காதே ஒரு பக்கம் அப்படியே இழுத்துக்கப் போகுது” அவள் முகம் போன போக்கைப் பார்த்து கடுப்பகா சொன்னாள்.



“எனக்கு அந்த ஆயில், கிரீஸ் வாடையே பிடிக்காதுடி.. ஒமட்டிக்கிட்டு வரும்.”


“வரும்டி.. வரும்.. என்னமோ உன் அண்ணன் பெரிய சாப்ட்வேர் கம்பனிக்கு ஓனர் மாதிரி பேசுறே.. அங்கையும் ஜல்லி, சிமெண்டு எல்லாம் கலக்கும்போது ட்ரெஸ் அழுக்காகி வாடை எல்லாம் வரத்தானே செய்யும்? இல்லை அங்க மட்டும் சந்தன வாடை வருமா..?” தன் தமையனைப் பற்றி கூறியது பொறுக்காது, வேந்தனையும் உள்ளே இழுத்து விட்டாள்.


“என் அண்ணன் காண்ட்ராக்டர்டி.. மேற்பார்வை மட்டும் தான் பார்ப்பான்”


“அங்க போய் பார்த்தா தான் தெரியும்.. உன் நொண்ணன் என்ன பண்றாருன்னு, கண்டிப்பா பாரு உனக்கு மெக்கானிக் மாப்பிள்ளை தான் புருஷனா வருவான். அதுவும் அவன் குளிக்காமல் உன்னைக் கட்டிப் பிடிக்கணும், அதில் உங்களுக்குள் சம்பவம் நடக்காமலே நீ தினமும் வாந்தி எடுக்கணும் இது என் சாபம்” என்று கூற..

“அடிபாவி! இருடி, உன்னை என்ன பண்றேன் பாரு?” என்று அடிக்க வர.. அதில் எழுந்து ஓட ஆரம்பித்தவள், ஓட முடியாமல் விழ போக.. ஒரு வலிய கரம் அவளைத் தாங்கிப் பிடிக்க.. இறுக தன் கண்களை மூடி கொண்டாள். அவள் முகத்தை ஒரு நிமிடம் ஆழ்ந்து பார்த்த வேந்தன்..


“அறிவு இருக்காடி உனக்கு..? இந்த கால வச்சுக்கிட்டு பி.டி உஷான்னு நினைப்பா..? இந்த ஓட்டம் ஓடி வர்றே.. அப்படியே அண்ணன் மாதிரியே அடங்காதது..” அவளை விலக்காது வசைமாரி பொழிந்தான்.

அவனை விட்டு விலகியவள்.. “இங்க பாருங்க நாங்க அடங்காமல் திரிஞ்சதே நீங்க பார்த்திங்களா..? வார்த்தையை விடாதீங்க.. அல்ல முடியாது” என்றாள்.


“ஊமை கொட்டான் மாதிரி இருந்தவளுக்கு இப்போ பேச்சைப் பார்த்தியா..? அப்படித் தாண்டி சொல்லுவேன் அடங்காபிடாரி” என்றான் வேந்தன்.


மஹா வருவதைக் கவனித்தவள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.. “நீ தாண்டா அடங்காதவன்.. உன் தங்கச்சி அடங்காதவள்.. போடா தடி மாடு, அலக்கு மரம் மாதிரி வளர்ந்து கெட்ட உனக்கு அறிவே கிடையாது” என்று சொல்லி விட்டு அப்போது வந்த மஹாவிடம் போய் நின்றுக் கொண்டாள்.


“இருடி.. தனியா என்னைக்காவது மாட்டுவேல அப்போ கவனிச்சுகிறேன்” என்று முணுமுணுத்தான்.

பத்து நாட்கள் மருத்துவமனையில் கழிய.. வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார் சக்திவேல்.


படிப்பு முடிந்து வந்திருந்த வேதா.. “வேந்தா எனக்கு பெங்களூர்ல வேலை கிடைச்சிருக்குடா.. இந்த மாதம் கடைசில கிளம்பனும்” என்றாள்.


“மேல படிக்கணும்னு சொன்னே.. இப்போ என்ன வேலைக்குப் போறேங்கிற..?”



“தனியாளா நீ எல்லாத்தையும் எப்படிடா சமாளிப்பே? அதான் இப்போதைக்கு வேலைக்குப் போய்ட்டு, ரெண்டு வருசம் கழிச்சு படிக்கலாம்னு இருக்கேன்.”


“மகாராணி நான் கஷ்டப்படறேன்னு வருத்தபப்டாதீங்க.. எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன், ஒருவருடம் பொறுத்துக்கோ எல்லாத்தையும் சரி பண்ணிடுறேன். அது வரைக்கும் நான் கட்டுற வீடு, வேற ஏதாவது கட்டிடம் இதுக்கு பிளான் போட உதவி பண்ணுங்க சிவில் இன்ஜ்னீயர் மேடம்” என்க..

“போடா..! எனக்கு வீட்டில் இருந்தா போர் அடிக்கும், வெளில போய் வேலை பார்க்கணும்” என்றாள் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு.


“நானும் ஒரு ஆபீஸ் போடணும்னு யோசிச்சுக்கிட்டு இருந்தேன், ஆனா இப்போ அது முடியாது. சரி, என் ஃபிரண்ட் ஒருத்தன் நகை அடகு கடை வச்சிருக்கான் அதுக்கு வேலைக்கு ஆளு கேட்டான் போறியா..?”



“ஏன்டா.. அதுக்கு நான் பெங்களூர் போய் வேலை பார்ப்பேன்ல.. ப்ளீஸ்டா..!” என கெஞ்சினாள்.


“நீ அங்க போய் வேலை பார்க்கிறது பிரச்சனை இல்ல. நானும் வெளில அடிக்கடி போயிடுறேன்.. சக்தி அப்பாவுக்கு நெஞ்சு வலி வந்ததும் என்னை காண்டாக்ட் பண்ணவே முடியல. அப்பாவுக்கும் வயசாகுது அம்மாக்கள் ரெண்டு பேருக்கும் வெளி உலகம் அவ்வளவா தெரியாது. வீட்ல படிச்சவங்க, விவரம் தெரிஞ்சவங்க யாராவது இருந்தா இப்படி ஒரு சூழ்நிலைய சமாளிக்க ஆளு இருக்குன்னு நானும் நிம்மதியா வேலை பார்ப்பேன், அதுக்குத்தான் சொன்னேன். இந்த ஒரு வருஷம் மட்டும் பொறுத்துக்கோ அப்பறம் நிலைமை சரியாயிடும்.. நீயும் உன் படிப்பைத் தொடரலாம்”


“சரிடா, வருங்கால கன்ஸ்டரக்ஷன் கம்பனி ஓனர நகை அடகுக் கடைக்கு வேலைக்குப் போக சொல்ற.. எல்லாம் என் நேரம்” என பொய்யாக அலுத்துக் கொண்டவளை,


“ரொம்ப பண்ணாதடி.. உனக்கு போர் அடிக்குதுன்னு சொன்னதால தான் அங்க போக சொல்றேன், மித்த நேரம் எனக்கு நீ உதவி பண்ணனும்” என்று தலையில் செல்லமாகத் தட்டினான்.
*****************
அரசு வீட்டில்.. மஹா, குமரனிடம் கண் ஜாடை காட்ட.. ‘நான் பார்த்துக்கிறேன்’ என்பது போல் கண் மூடி திறந்தான் குமரன்.


“அரசு..!”


“என்னடா..? சொல்லு..”


“ஒரு வரன் வந்துருக்கு, பொண்ணு படிச்சு முடிச்சுட்டு வீட்ல இருக்கா.. அவளுக்கும் செவ்வாய் தோஷம் ஜாதகம் எல்லாம் ஒத்துப் போகுது. ஒரு அண்ணன், நம்மளை மாதிரி குடும்பம் தான்.. பொண்ணுக்கு உன்னை ரொம்பப் பிடிச்சுருக்கு, அதானால் இதை முடிச்சிடலாம்னு பார்க்குறேன் நீ என்ன சொல்ற..?”



“பல இடத்தில் தேடி கடைசில செவ்வாய் தோஷம் உள்ள பொண்ணை பிடிச்சுட்டிங்களா..? பரவாயில்ல.. இங்க பாரு குமரா! நான் தான் அன்னிக்கே சொன்னேனே, நீ எந்த பொண்ணை கை காட்டுறியோ அவளையே கட்டிக்கிறேன்னு. உனக்கு, மஹா, குட்டிமாவுக்கு பிடிச்சிருந்தா போதும்.. மத்த வேலைய பாரு” என்றான்.


மஹா மகிழ்வுடன் “உன் நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதா தாண்டா அமையும்.. அடுத்த வாரத்தில் நாள் நல்லா இருக்கு அன்னிக்கே பொண்ணைப் போய் பார்த்துட்டு வந்துடுவோம்” என்றாள்.



“என் அண்ணனுக்கு கல்யாணம் , வீடே கலை கட்ட போகுது.. ஜாலி என்னடா குட்டி பையா!” என்று அண்ணன் மகனை கட்டிக்கொண்டு ஆர்பரித்தாள் மிருதுளா.


“அவனுக்கு முடிச்சதும் உனக்குத்தான்” என்று சிரித்துக் கொண்டே மஹா கூறினாள்.


“இங்க பாரு அத்தாச்சி.. நான் என்னோட பி.ஹச்டி படிப்பு முடிஞ்சு வெளிநாட்டில் கொஞ்ச நாள் மாலிகுலர் ஆங்காலஜி(molecular oncology) பிரிவில் வேலை பார்த்துட்டு இங்க வந்து யுனிவர்சிட்டில ப்ரஃபசரா ஒர்க் பண்ணி, பல பேருக்கு ஆராய்ச்சி துறையில் வழி காட்டணும்னு ஆசை.. அதை எல்லாம் முடிச்ச பிறகு, நீங்க யாரை கை காட்டுறிங்களோ அவனுக்கு கண்ண மூடிக்கிட்டு கழுத்தை நீட்டுறேன் சரியா.. அது வரைக்கும் என் கல்யாண பேச்சுக்குத் தடா போடுங்க..” உறுதியாக அவள் சொல்ல,


“ஏய்.. நீ இதெல்லாம் பண்றதுக்குள்ள வயசு போய்டும்..”


“மஹா..! விடு, குட்டிமா என்ன பண்ணனும்னு நினைக்கிறாளோ அதெல்லாம் செய்யட்டும். அவ எப்ப விருப்பபடறாளோ அப்போ கல்யாணம் பண்ணிக்கட்டும். இப்போ போய் நீ தூங்கு டா..” என்று தங்கையை அனுப்பி வைத்தான்.

“என்னடா.. நீயும் அவளுக்கு செல்லம் கொடுக்கிற..”


“மஹா.. உனக்குத் தெரியாதது இல்ல. அவ நடக்க சின்ன வயசில் எவ்வளவு சிரமப்பட்டா..? அம்மா அவளை நடக்க வைக்க எல்லா வைத்தியமும் பண்ணாங்க, அதன் பிறகு தான் நடக்க ஆரம்பிச்சா.. சின்ன வயசில நான் மட்டும் ஏன் இப்படி இருக்கேன்னு எத்தனை தடவை எங்கக்கிட்ட சொல்லி அழுவா.. அப்போ எல்லாம் அம்மா உடம்பில் இருக்கிற ஊனம் பெருசு இல்லை, மனசில் தான் ஊனம் இருக்கக்கூடாதுன்னு அவ்வளவு தன்னம்பிக்கை ஊட்டுவாங்க” என்று தாயின் நினைவில் முகம் வாடியவன்.



அவங்க இறந்த பிறகு, அவளே சுயநம்பிக்கையை வளர்த்துக்கிட்டா.. அவள் கவனம் முழுதும் படிப்பில் இறங்குனதுக்கு காரணம் அவள் குறையைப் பத்தி யாரும் பேசாமல் அவளோட சாதனையை பேசணுங்கிறதுக்காகத் தான், அதை தான் அம்மாவும் விரும்புவாங்கன்னு அவளும் உணர்ந்திருக்கிறா. அதை அவ வாயால் சொல்லாட்டியும் எனக்கும் குமரனுக்கும் அவள் மனதில் இருக்கிறது தெரியும். அதனால் அவளுக்கு என்னனென்ன செய்யணும்னு தோணுதோ அதை செய்யட்டும் சாதிக்கட்டும், அவளோட சந்தோசம் தான் எனக்கும், குமரனுக்கும் முக்கியம்”என்றான்.


“உங்களை நினைச்சா எனக்கு பெருமையை இருக்குடா..” என்றவள் உள்ளே சென்றுவிட்டாள்.


இரண்டு நாள் கழித்து.. வேந்தனை பார்க்க ஒருவன் வந்திருந்தான் “அடேடே..! வாடா..! கார்த்தி எப்படி இருக்கே..?” என்று நலம் விசாரித்தான்.

“நல்லா இருக்கேன்டா.. நீ எப்படி இருக்கே..? அப்பாவுக்கு உடம்பு சரி இல்லைன்னு கேள்விப்பட்டேன், இப்போ எப்படி இருக்காங்க..?”

“நல்லா இருக்காங்கடா.. நீ வேலை இல்லாமல் இந்த பக்கம் வரமாட்டியே.. என்ன விஷயம்..?” வேந்தன் சந்தேகமாக கேட்டான்.


“அது ஒண்ணுமில்ல, சும்மா தாண்டா வந்தேன்” சிரித்துக் கொண்டே சொன்னான்.

அவன் சிரிப்பிலையே ஏதோ வேலையாகத்தான் வந்திருக்கிறான் என்பதை புரிந்து கொண்டவன் “ஏய்.. வந்த விஷயத்தைச் சொல்லு..” என்றான்.


“தங்கச்சிக்கு மாப்பிள்ளை பார்த்துருக்கோம், மாப்பிள்ளை வேற யாருமில்ல.. உன் மாமா குமரனோட தம்பி இன்பரசு தான். அதான் பையன் எப்படின்னு விசாரிச்சுட்டு போகலாம்னு வந்தேன். அதோடு அவன் தங்கச்சிய பார்த்துருக்கேன் ரொம்ப நல்ல பொண்ணு.. ஸ்கூல் படிக்கும்போது சைட் எல்லாம் அடிச்சுருக்கேன்” என்று கூறும் போதே அவன் முகத்தில் ஒளி வட்டம் தெரிய.. அவனை முறைத்த வேந்தன்,


“நீ இப்போ உன் தங்கச்சிக்கு மாப்பிள்ளை பார்க்க வந்தியா..? இல்லை உனக்குப் பொண்ணு பார்க்க வந்தியா..?” முகத்தில் அடித்தார் போல் கேட்டு வைத்தான்.


“ரெண்டுக்கும் தாண்டா.. முதலில் தங்கச்சிக்கு கல்யாணம் முடியட்டும். அப்பறம் மிருதுவ பொண்ணுக் கேட்டா கண்டிப்பா கொடுத்துடுவாங்க.. அவளுக்கு கொஞ்சம் கால் ஊனமா இருக்குல்ல அதனால் கேட்டா உடனே கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க. நான் பி.இ, அவள் டாக்டர் பட்டம் வாங்க போறா.. ரெண்டு பேரும் வெளிநாட்டில் செட்டில் ஆகிடலாம்” என்று கூற..


அவனை உறுத்து விழித்த வேந்தன்.. “அரசு ஒரு குடிகாரன், இப்போ மெக்கானிக் செட்டு வச்சிருந்தாலும் தினமும் குடிப்பான். சரியான ஊதாரி இதுக்கு மேலே அவனுக்கு உன் தங்கச்சிய கொடுக்கணுமா வேண்டாமானு முடிவு பண்ணிக்க..” மிருதுளாவைப் பற்றி பேசியதும் இந்த சம்மந்தத்தைத் தடுக்க நினைத்து வாய்க்கு வந்ததை கூறினான்.


“என்னடா.. சொல்ற..? நீ சொல்றது எல்லாம் உண்மைதானா..?”


“நம்பலைன்னா இந்த இடத்தை விட்டு கிளம்புடா..” என்று கடுப்படித்தான்.


“இல்லைடா.. நீ சொன்னா சரியா தான் இருக்கும். இந்த சம்மந்தம் முடிஞ்சதுனா மிருதுளாவை ஈஸியா பிராக்கெட் பண்ணலாம்னு நினைச்சேன். சரி அவளை நான் பார்த்துகிறேன்.. வீட்டில் இந்த சம்மந்தம் வேண்டாம்னு சொல்லிடுறேன் வரேன்டா..” என்று சொல்லிச் சென்றான்.



“இவனுக்கு மிருதுளா அவ்வளவு ஈஸியா போய்ட்டாளா..? அவகிட்ட இவனை பத்தி சொல்லி வைக்கணும். ச்சை.. மூடையே கெடுத்துட்டான் பொறம்போக்கு” என்று திட்டியவன் அன்று முழுதும் அவனே அறியாமல் மிருதுளா நினைவாகவே சுற்றிக் கொண்டிருந்தான் வெற்றிவேந்தன்.


தொடரும்...
 

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே..

தந்தியில்லா வீணை-2 போட்டாச்சு படிச்சுட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்.

கருத்துத் திரி👇


அன்புடன்
வியனி❤
 

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வீணை-3



இரண்டு நாட்கள் கழித்து, அன்று இரவு உறங்காமல் யோசனையோடு அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான் குமரன்.


“மாமா என்னாச்சு..? ஏன் இப்படி நடந்துக்கிட்டு இருக்கீக? தூக்கம் வரலையா..?” என்றாள் மஹா.


“அது ஒண்ணுமில்ல டி.. எப்போ பொண்ணு பார்க்க வரிங்கன்னு அடிக்கடி போன் பண்ணி கேட்டுகிட்டு இருந்த பொண்ணு வீட்டுக்காரங்க, இன்னிக்கு நானே போன் பண்ணி வெள்ளிக்கிழமை வரோம்னு சொல்றேன், இப்போ வேண்டாம் ஒரு ஆறு மாதம் போகட்டும்னு மழுப்பலா பதில் சொல்றாக, அதான் என்னன்னு யோசிச்சுகிட்டு இருக்கேன்டி” என்றான்



“என்ன மாமா சொல்றீக..? நான் இந்த சம்மந்தம் முடிஞ்சுடும்னு நினைச்சுக்கிட்டு இருக்கும்போது.. நீங்க இப்படி சொல்றீக? எதுக்கும் நாளைக்கு ஒரு எட்டு போய்.. என்னனு விசாரிச்சுட்டு வந்துடுங்க”



“அதை தான் நானும் நினைச்சேன், நீ சொல்லிட்டே.. ஆறு மாதமா அலைஞ்சுத் திரிஞ்சு இப்போதான் கூடி வந்துச்சு. அதுக்குள்ள ஒரு குழப்பம்.. சரி போய் தூங்கு நாளைக்கு போய்ட்டு வந்து என்ன பண்றதுன்னு முடிவு பண்ணிக்குவோம்” என்றான்.



அடுத்த நாள், பொண்ணு வீட்டிற்குச் சென்று விட்டு வந்த குமரனின் முகத்தில் கோபத்தின் சாயம் பூசியிருந்தது.. “என்ன மாமா என்ன சொன்னாங்க..?” ஆர்வமாகக் கேட்டாள் மஹா.




“யாரோ நம்ம அரச பத்தி குடிச்சுட்டு ஊதாரியா சுத்துறன்னு ஒன்னுக்கு ரெண்டா பொய் சொல்லிருக்காங்க”


“யாரு மாமா அப்படி சொன்னது..? ஏன் இப்படி எல்லாம் பொய் சொல்றாங்க, அப்படி என்ன அவன் மேல் அவ்வளவு வன்மம்?”



“கேட்டதுக்கு உங்களுக்கு வேண்டியவங்கதான் சொன்னாங்கன்னு சொல்றாகா. ஆனா, ஆள் யாருன்னு சொல்லமாட்றாக, எனக்கும் தெரியல அவன் மேல் அப்படி என்ன கோபம்னு.. அவன் உண்டு அவன் வேலை உண்டுன்னு இப்ப எல்லாம் இருக்கான். நானும் அப்படி எல்லாம் இல்லை, உங்கக்கிட்ட தப்பா சொல்லிருக்காங்கன்னு எவ்வளோ எடுத்துச் சொன்னேன், அதெல்லாம் காது கொடுத்துக் கேட்கலே, நானும் இதுக்கு மேல பேசி பிரோயோஜனம் இல்லைன்னு வந்துட்டேன்.”



“வயசு போய்க்கிட்டே இருக்கு செவ்வாய் தோசம் வேற.. இவனுக்கு ஒரு நல்ல காரியம் நடக்க மாட்டேங்குது, என்ன பண்றதுன்னு புரியல..?” என சோர்ந்து போய் அமர்ந்தான்.



“என்ன மாமா நீங்க.. இப்படி சோர்ந்து போலாமா..? அவனுக்குத் தாமதமா அமைஞ்சாலும், நல்ல ராணி மாதிரி பொண்ணு வர போறா பாருங்க” உள்ளுக்குள் மருகினாலும் வெளியில் ஆறுதலகாகக் கூறினாள்.



“வேற ஏதாவது காரணம் சொல்லி இந்த சம்மந்தம் தட்டிகிட்டு போய்டுச்சுன்னு அவன்கிட்ட சொல்லு மஹா, இல்லைனா சொன்னவன் யாருன்னு கண்டுபிடிச்சு சண்டைக்கு கிளம்பிடுவான், அவன்கிட்ட இதை பத்தி பேச எனக்கு கஷ்டமா இருக்கு”



“அந்த கவலையவிடுங்க.. எப்படி நாசுக்கா சொல்லணுமோ அப்படி நான் சொல்றேன், நீங்க வருத்தபடாம கை, கால் கழுவிட்டு சாப்பிட வாங்க” என்றாள்.



குமரன் சொன்னது போல் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி சமாளித்திருந்தாள் மஹா, அரசுவும் அதை பத்தி எல்லாம் பெரிதாக எண்ணாமல் தன் வேலையைப் பார்க்கச் சென்று விட்டான்.



இப்படியே ஒருமாதம் கடந்தது, அன்று மாலை வேலைக்குச் சென்று விட்டு திரும்பிய வேதாவின் வண்டி கருவை காட்டிற்கு இடையே நின்றுவிட்டது. சாயங்காலம் ஆறு மணிக்கு மேல் அந்தப் பாதையில் ஆள் நடமாட்டம் குறைந்து, நன்றாக இருட்டிப் போய் இருந்தது.



“அய்யோ..! என்னாச்சு இப்படி திடீர்னு வண்டி மக்கர் பண்ணுது?” என்று முணுமுணுத்தவள், வேந்தனை அழைக்க பேசியை எடுத்துப்பார்த்தால்.. அது சார்ஜ் இல்லாமல் இறந்து போயிருந்தது.



“ச்சை.. இப்படி வந்து மாட்டிக்கிட்டேனே! இப்போ வண்டிய உருட்டிக்கிட்டு தான் போகணும் போல.. நல்லா இருட்டி போய்டுச்சு வேற.. அன்னிக்கு பெரியம்மாகிட்ட வீராதி வீரி.. சூராதி சூரி மாதிரி.. பிசாசே என்னை கண்டா பயந்து ஓடிடும்னு சவுடாலா பேசிட்டு வந்தேன். இன்னிக்கு சந்திரமுகில வர தலைவர் மாதிரி பேய் இருக்கா இல்லையான்னு ஆராய்ச்சி பண்ண வச்சுடுச்சே இந்த வண்டி..! ஏதோ ஊளை வேற விடுது, அய்யயோ தூரத்தில் என்னமோ வெள்ளையா தெரியுதே” என பயத்தை போக்குவதற்காகச் சத்தம் போட்டு பேசிக்கொண்டே வண்டியை உருட்டினாள்.


காற்றின் வேகத்தில் அந்த வெள்ளை உருவம் இன்னும் ஆடியது. அதில் பயந்து போனவள்.. இஷ்ட தெய்வத்தை வேண்டிக் கொண்டு வேகமாக அந்த இடத்தை கடந்துச் செல்ல எத்தனிக்க, எதுவோ வந்து முகத்தில் வேகமாய் மோதி மறைத்தது. அதில் அச்சம் கொண்டு “ஆஆ..” என அலறியவள்.. பிறகு தான் உணர்ந்தாள் அது ஒரு வெள்ளைத் துணி என்பதை,





“ச்சை ஏதோ வெள்ளைத் துணி. இதுவா இவ்வளவு நேரம் நம்மளை பயமுறுத்துச்சு, அதான் அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்னு சும்மாவா சொல்லி வச்சாங்க பெரியவங்க. நல்லவேளை.. நான் பயந்ததை யாரும் பார்கல.. கொஞ்ச நேரத்தில இந்த வேதாவையே பயமுறுத்திருச்சு இந்தத் துணி. வேஷ்டியா இவ்வளவு சின்னதா இருக்கு?” என்று அதன் நீள அகலத்தை கணக்கிட்டவள்..

“ச்சீ.. கோவணம்” என்று தூர எறிந்தாள். “என்னடி வேதா ஆப்ட்ரால் ஒரு கோவணம் உன்னை பயமுறுத்திருக்கு, கோவணத்தைப் பார்த்து பயந்தாள் வேதான்னு தெரிஞ்சா.. வருங்கால சந்ததி எல்லாம் உன்னைப் பத்தி என்ன பேசும்?” பேசிக்கொண்டே.. மெதுவாக வண்டியை நகர்த்தினாள்.



வேலையை முடித்துவிட்டு தனது வண்டியில் வந்துக் கொண்டிருந்த அரசு தூரத்திலையே வேதாவை கண்டு கொண்டான். ஒரே இடத்தில் அவள் நிற்பதைக் கண்டு.. வண்டியில் ஏதோ பிரச்சனை என்பதை உணர்ந்து கொண்டவன், என்னதான் செய்கிறாள் என்று பார்க்க வேண்டும் என்பதற்காக.. வண்டியை அணைத்து விட்டு அவள் பின்னாலையே வண்டியை சத்தம் போடாமல் நகர்த்திக்கொண்டு வந்தவன்.. அவள் பயந்தது, பேசியது அனைத்தையும் பார்த்து மெல்லிதாக புன்னகைத்து ‘அக்கா,தங்கச்சி எல்லாம் சரியனா கேடிங்க..’ என நினைத்து வண்டியை இயக்கி அவளைத் தாண்டி செல்ல போகும் சமயத்தில்.. யாரோ வருகிறார்கள் எண்றெண்ணி உதவி கேட்பதற்காகக் கை நீட்டி மறித்தாள்.


அவனும் வண்டியை நிறுத்திவிட்டு என்ன என்பது போல் பார்க்க.. ‘வேதா உனக்கு அறிவே இல்லடி, இவனை போய் கைநீட்டி தடுத்திருக்க லூசு' என்று திட்டிக்கொண்டாள்.



“எதுக்கு என்னை கை நீட்டி நிறுத்துன?” என்று அரசு கேட்டான்.



‘உன் வண்டின்னு தெரியாமல் நிறுத்துன கைய வீட்டுக்கு போனதும் வெட்டி போடணும்’ தனக்குள்ளே பேசிக்கொண்டவள்..



“வேற யாரோன்னு நிறுத்திட்டேன், நீங்க போங்க..” என்று கூறிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.



‘சரியான திமிர் பிடிச்சவ..! என்கிட்டே உதவி கேட்டா அப்படியே தலையில் இருக்கிற கிரிடம் இறங்கிடும், சரிதான் போடி!' என்று அர்ச்சித்தவன் வண்டியை கிளப்பிச் சென்றான்.



“கடவுளே..! இவன் வராமல் வேற யாரவது வந்திருக்க கூடாதா..” என மெதுவாக வண்டியை நகர்த்திக் கொண்டு கொஞ்சத் தூரம் சென்றிருப்பாள், வீட்டிற்குச் சென்ற அரசு வண்டியைத் திருப்பிக் கொண்டு வந்து அவள் அருகில் நிறுத்தினான்.




“போனவன் எதுக்கு யூ டர்ன் போட்டு திரும்ப வந்தான்..” என்று யோசித்துக் கொண்டிருக்கையில்,

வண்டியை விட்டு இறங்கியவன், அவள் வண்டியை பிடிக்கும் சமயம் அவன் கை அவள் கை மேல் உரசியதும் வெடுக்கென்று எடுத்துக்கொண்டாள்.



க்ரீஸ், டீசல் படிந்த சட்டையோடு வந்திருந்தான் அரசு. அந்த வாடை பிடிக்காமல் முகம் சுளித்து.. மூச்சை அடக்கிக்கொண்டு தள்ளி நின்றவளைப் பார்த்து முறைத்தான்.


“எதுக்கு இப்போ என் வண்டிய, என் அனுமதி இல்லாமல் பிடுங்குனீங்க..?” வெடுவெடுவென்று முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள்.



அவன் பதில் எதுவும் சொல்லாமல் வண்டியில் என்ன பிரச்சனை என ஆராய்ந்து கொண்டிருந்தான்.



“நான் கேட்டுக்கிட்டே இருக்கேன்.. நீங்க பாட்டுக்கு பதில் சொல்லாமல் என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க..?”



“பேரிச்சம் பழம் வாங்க ஏதாவது இரும்பு தேறுமான்னு பார்த்துக்கிட்டு இருக்கேன்..” அவன் பதில் கொடுக்க,


“சரியான திமிர் பிடிச்சவன்!” என்று சத்தம் வராமல் வாய் அசைத்தவள், “ஒழுங்கா என் வண்டியை விட்டு தள்ளி நின்னுங்க.. உங்க கைல உள்ள களும்பெல்லாம் பட்டு வண்டி அழுக்காகிடப் போகுது, புது வண்டி.. வாங்கி ரெண்டு வருஷம் தான் ஆகுது” என்றாள்.



அவள் பேச்சை எல்லாம் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தான் அரசு..!



“நான் சொல்லிக்கிட்டே இருக்கேன்.. வண்டிக்கு ஓனர் என்னை கேட்காமல் என்னென்னமோ பண்றிங்க..” என்று தொணதொணத்தாள்.


தனது பொறுமையை கை விட்டவனாக.. “ஏய்..! இப்போ வாயை மூடுறியா.. இல்லையாடி. பாத்திரக் கடைக்குள்ள புகுந்த யானை கணக்கா நல்லா வாயலையே உருட்டிக்கிட்டு இருக்கே, இனி ஒரு வார்த்தை பேசுனே.. பொம்பளை பிள்ளைன்னு பார்க்கமாட்டேன் அப்படியே நாளு அப்பு அப்பிடுவேன் பார்த்துக்கோ..”

“உன் அண்ணன் இன்னும் வரலையாம், அதான் உன்னை காணோம்னு வீட்ல மஹாக்கிட்ட சொல்லிருக்காங்க.. அவதான் என்கிட்ட நீ எங்கே இருக்கேன்னு பார்க்க சொன்னா, போன் வேற ரீச் ஆகலையாம். அவ சொன்னதால் உனக்கு ஹெல்ப் பண்றேன்.. இல்லை நீ பேசுன பேச்சுக்கு எக்கேடோ கெட்டு போன்னு விட்டுட்டு போயிருப்பேன். இவ்வளவு பேச்சு பேசுறியே.. வண்டில பெட்ரோல் இருக்கா.. இல்லையான்னு பார்க்கிறது இல்லை. வந்துட்டா பெரிய கிழவன் பொண்டாட்டி மாதிரி வக்கணையாப் பேச..” அவள் எதிர்த்துப் பேச முடியாத அளவிற்குக் கொடுத்துக் கட்டினான்.



“வண்டில பெட்ரோல் இல்லை. வண்டி இங்கையே இருக்கட்டும் என்கூட வா.. வீட்ல விட்டுறேன்” என்று சொல்ல..



அவன் திட்டியும் வாயை அடக்காதவள்.. “உங்க வண்டிலையா..? அதெல்லாம் வர முடியாது. பேசாமல் குமரன் மாமாவை வண்டிய எடுத்துட்டு வர சொல்லுங்க அவர் கூட வரேன்.”




அவளை ஒரு மார்க்கமாக பார்த்து வைத்தவன்..” இந்த பேச்சுக்கெல்லாம் என்னிக்காவது என்கிட்டே வசமா மாட்டுவே அன்னிக்கு இருக்கு உனக்கு..” என்றவன்,

“தண்ணீ பாட்டில் வச்சுருக்கியா..?” என்று கேட்டான்.



“அது எதுக்கு..?”



“சரக்கு வாங்கிட்டு வந்துருக்கேன் மிக்ஸிங்குக்கு தண்ணி இல்லை அதுக்குத்தான், அப்படியே ஊறுகாய் இருந்தாலும் கொடு, இங்கையே ஆளுக்கு ரெண்டு பெக்கு போடுவோம்” நக்கலாக மொழிந்தான்.



“எரிச்சலை கிளப்பாமல்.. இப்போ எதுக்குன்னு சொல்லுங்க..?”



“என்கிட்ட இல்லாத பொறுமையை இழுத்துப் பிடிச்சு வச்சுக்கிட்டு பேசிக்கிட்டு இருக்கேன்.உனக்கு வீட்டுக்குப் போகணும்னா கொடு, இல்லைனா நான் இடத்தை காலி பண்றேன்” என்றான்.


“சரியான இம்சை பிடிச்சவன்..” திட்டிக் கொண்டே பாட்டிலை எடுத்துக் கொடுத்தாள்.



அதை வாங்கி தனது வண்டியில்.. பெட்ரோல் போகும் டியூபை பிடிங்கி பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி, அவள் வண்டியில் ஊற்றி ஸ்டார்ட் செய்ய.. வண்டி இயங்க ஆரம்பித்தது.



அவன் உதவி செய்ததற்கு ஒரு நன்றி கூட நவிலாமல், வண்டியில் ஒய்யாரமாக அமர்ந்து கிளப்பிக் கொண்டு சென்றவளை வெறித்துப் பார்த்தான். அவள் வீடு சென்று சேரும் வரையிலும், அவள் பின்னால் பாதுகாப்புக்காக வந்தவன்.. வீட்டை அடைந்ததும் வண்டியை புயல் வேகத்தில் கிளப்பிக் கொண்டு தன் வீட்டை அடைந்தான்.



வீட்டிற்கு வந்து குளித்துவிட்டு அனைவருடனும் சாப்பிட அமர்ந்தவன்.. “எப்படி மஹா உன் தங்கச்சி, தம்பி எல்லாரும் ஒரே மாதிரி இருக்கும்போது, நீ மட்டும் வேற மாதிரி இருக்கே..? ஹாஸ்பிடல்ல இருந்து உன்னை மாத்தி எடுத்துட்டு வந்துட்டாங்களோ..?”


அவன் பேச்சில் சிரித்த மிருதுளா .. “ஆமா அண்ணா எனக்கும் இந்த சந்தேகம் ரொம்ப நாளா இருக்கு” என்றாள்.



“ஏய்..! அண்ணனும், தங்கச்சியும் என் தம்பி, தங்கச்சிங்கள கிண்டல் பண்றிங்களா..? என்றாள் மஹா.



“கிண்டல் இல்லை மஹா.. உண்மையா தான் கேட்குறேன்.” என்றவன் வேதா அவனிடம் நடந்து கொண்ட விதத்தையும் கூறினான்.



“இப்படியா உன்கிட்ட பேசுச்சு அந்தக் கழுதை.. இருக்கட்டும் நாளைக்கு சின்னம்மாக்கிட்ட சொல்லி கண்டிச்சு வைக்க சொல்றேன்” என்று சொல்ல..



“ஏய்.. மஹா! நீ வேற.. அவ தான் கிறுக்குத் தனமா பண்றானா அதை போய் அங்க சொல்லி பிரச்னைய இழுத்து விடாதே.. அப்படியே ஃப்ரியா விடு..” என்றான்.



“நீ மறைமுகமா உதவி பண்ணிருக்கே.. அந்த கிறுக்குங்களுக்கு அது புரிய மாட்டேங்குது என்ன பிள்ளைங்களோ போ!” என்று அலுத்துக் கொண்டாள்.



“அத்தாச்சி..! இன்னிக்கு தான் ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமா சொல்லிருக்கீங்க” மிருது சொல்ல..



“அப்படி என்ன நல்ல வார்த்தையா சொல்லிப்புட்டேன்..?”


“உங்க தம்பி, தங்கச்சிய கிறுக்குங்கன்னு சொன்னிங்களே அதை சொன்னேன்” நமட்டுச் சிரிப்புடன் சொன்னாள்.


இப்போது குமரனும் உடன் சேர்ந்து கொண்டு சிரிக்க.. நிமிர்ந்து நின்று இடுப்பில் கையை வைத்து அவனை முறைத்து வைத்தாள் மஹா..!


****************************************


இரண்டு மாதங்கள் அரசுவிற்கு பெண் தேடி அலைந்த குமரன், சோர்ந்து போயிருந்தான். அதுவும் இன்னும் மூன்று மாதத்திற்குள் திருமணம் செய்ய வேண்டும் என்று ஜோசியர் சொல்லியிருந்ததால்.. செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணை எங்கு தேடுவது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றான்.



அன்று ஆழ்ந்த யோசனையில் இருந்த குமரனிடம் இந்த விஷயத்தை எப்படி சொல்லுவது என்று தெரியாமல் தடுமாறிய மஹா.. ஒரு வழியாக சொல்லி விட வேண்டும் என்று முடிவெடுத்தவள்.


“மாமா..!”

“என்ன மஹா..?”

“நான் உங்கக்கிட்ட ஒன்னு சொல்லுவேன் கேட்பிங்களா..?” தயங்கியவாறு கேட்டாள்.



“என்ன விஷயம்..? சொல்லு” என்று நிமிர்ந்து அமர்ந்தான்.



“அது வந்து..” என்று இழுத்தவள்.. “நம்ம வேதாவுக்கும் செவ்வாய் தோஷம் தானாம், நேத்துதான் சின்னமா பேச்சு வாக்கில் சொல்லிக்கிட்டு இருந்தாங்க, பேசாமல் வேதாவை நம்ம அரசுக்கு கேட்டு பார்ப்போமா..?” தயங்கிக் கொண்டே சொல்ல..



“என்ன விளையாடுறியா..? ஏற்கனவே ஒரு தடவை கேட்டு அவமானப்பட்டு நின்னது பத்தாதா..? திரும்பவும் இன்னொரு தடவை படணும்னு நினைக்கிறியா..?” என்று கூச்சல் போட்டான்.


“ஏங்க நீங்க அப்படி நினைக்கிறீக.. அப்போ அவனை நிராகரிச்சதுக்கு வேலை இல்லை, செவ்வாய் தோஷம் இதெல்லாம் காரணமா இருந்தது. ஆனா, இப்போ அது எதையுமே அவங்க சொல்ல முடியாது.”



“இல்லை மஹா.. இது எனக்கு சரியா வரும்னு தோணல.. வேண்டாம் விட்டுரு, இதுக்கு மேலே இந்த பேச்சை பேச வேண்டாம்” என்று கூறிக்கொண்டிருக்கும்போது..


“அண்ணா..! ஏன் வேண்டாம்னு சொல்லுறீங்க? வேதாதான் எனக்கு அண்ணியா வரணும்” வீட்டின் உள்ளே நுழைந்து கொண்டே ஒரு வித தீவிரத்தோடு கூறினாள் மிருதுளா.



“மிருது என்ன பேசுறே நீ..?“


“எல்லாம் தெரிஞ்சுதான் பேசுறேன். வேதாதான் எனக்கு அண்ணியா வரணும்..” என கண் கலங்கியவளை பதறிப் போய் அணைத்துக் கொண்ட குமரன்,


“குட்டிமா.. என்னடா.. என்னாச்சு..?” என்று விசாரிக்க ஆரம்பித்தான்.



அன்று மாலை பல்கலைகழகப் பேருந்து நிறுத்தத்தில், பேருந்திற்காக காத்துக்கொண்டிருந்த மிருதுளாவிடம் வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான் கார்த்தி.


அவள் அவன் யாரு என்று விசாரிக்க.. அரசுவிற்கு தனது தங்கையை பெண் பார்த்தது, வேந்தனிடம் விசாரித்த போது அவனைப் பற்றி கூறியது என அனைத்தையும் அவளிடம் பேசும் குஷியில் விளைவுகளை பற்றி யோசிக்காமல் மடை திறந்த வெள்ளமாக அனைத்தையும் கூற.. மிருதுளாவிற்கு வேந்தனை நினைத்து ஆத்திரமாக வந்தது.



முதலில் இதை அரசுவிடம் சொல்லலாம் என நினைத்தவள்.. அவன் கோபத்தின் அளவை அறிந்து இந்த விசயத்தை குமரனிடம் சொல்வதுதான் உசிதமானது என எண்ணி.. அதன் பிறகு கார்த்தி பேசியது எதையும் காதில் வாங்காது, கிடைத்த பேருந்தில் ஏறி வீட்டை அடைந்தாள்.


அவள் வீட்டிற்குள் நுழையும் சமயம்.. மஹா வேதாவை பெண் கேட்பது பற்றி பேச.. அதற்கு குமரன் மறுத்துப் பேசுவது என விவாதங்கள் நடந்து கொண்டிருந்தது.


வேந்தனால் தடைபட்ட தன் அண்ணன் திருமணம் அவன் வீட்டு பெண்ணை கொடுத்துதான், அவன் செய்தத் தப்பை சரி செய்ய வேண்டும் என நினைத்து, குமரனிடம் வேதா தான் தனக்கு அண்ணியாக வர வேண்டும் என்று கூறினாள்.



தன் தம்பி அரசுவிற்கு இணையாக நினைத்த வேந்தனா..! இப்படி ஒரு காரியத்தை செய்தது என நம்ப முடியாத குமரனுக்கு அவன் மேல் வெறுப்பாக இருந்தது.



“மாமா..! உடனே கிளம்புங்க அவன் ஏன் இப்படி ஒரு காரியத்தை பண்ணுனான்னு கேட்போம்” என்று மஹா சொல்ல..



“கண்டிப்பா கேட்போம். அவனை இல்லை.. வேதாவை நம்ம அரசுக்கு கட்டித் தர சொல்லி கேட்போம், உன் தம்பி என் தம்பி கல்யாணத்தை கெடுத்துக்கு உன் தங்கச்சிய கொடுத்துதான் அவன் சரி பண்ணனும். அப்படி அவன் சம்மத்திக்கலை.. நீ நிரந்தரமா உங்க அம்மா வீட்டில் தான் இருக்கணும்” கோப மிகுதியில் கூறியவனை அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தாள் மஹாலட்சுமி..!!

தொடரும்...
 

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே...

தந்தியில்லா வீணை-3 பதிவிட்டாச்சு படிச்சுட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்.

கருத்துத் திரி👇


அன்புடன்
வியனி❤
 

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வீணை-4


“அண்ணா..! அவங்க தம்பி பண்ணதுக்கு அத்தாச்சிகிட்ட நீங்க இப்படி பேசுறது சரி இல்லைண்ணா..” கலங்கிய குரலில் கூறினாள் மிருதுளா.




“மிருது நீ சின்ன பொண்ணு உனக்கு எதுவும் தெரியாது” சற்றே காரம் மிகுந்து அதட்டியவன்..

“அரசுக்கு வேதாவை கல்யாணம் பண்ணி வைக்கணும், இது நடந்தாதான் இவ இந்த வீட்டில இருக்க முடியும் இதான் என் முடிவு..” என்றவன்,

“இங்க நடந்த எதுவும் அரசு காதுக்கு போகாமல் பார்த்துக்கோங்க” கடுமையாக எச்சரித்துவிட்டே வெளியேறினான்.



இதுநாள் வரைக்கும் யார் சண்டை போட்டாலும் பொறுமையாக கையாளும் தன் கணவன்.. இன்று தன்னை வீட்டில் இருக்க முடியாது என சொல்லும் அளவிற்கு அவன் நடந்து கொள்கிறான் என்றால் அவன் மனம் எவ்வளவு காயப்பட்டிருக்கும் என்று அப்போதும் தன் கணவன் மீது கோபப்படாமல் அவனுக்காக வருந்தியவள்..


அவன் மன வருத்தத்தைப் போக்குவதற்காகவும், தன் தந்தை ஆபத்திலிருந்த போது விஜி அரசுக்கு இளைத்த அநீதியை மனதில் வைத்து கொள்ளாமல்.. அறுவை சிகிச்சைக்கு பணம் உதவி செய்து, இந்தக் காலத்தில் ஒரு டியுப் லைட்டை கோவிலுக்கு வாங்கி மாட்டினால் கூட.. அந்த லைட் வெளிச்சமே மறைக்கும் அளவிற்கு பெரிய அளவில் பெயரை எழுதி உபயம் என்று போட்டுக் கொண்டு விளம்பரம் தேடும் மனிதர்கள் மத்தியில்.. ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பெரிய தொகையை கொடுத்து உதவி செய்துவிட்டு சொல்ல வேண்டாம் என்று தடுத்து எட்டி நின்றவன், வேந்தனிற்கு பிறகு தன் தம்பி ஸ்தானத்தில் இருக்கும் அரசுவிற்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என முடிவு எடுத்துக்கொண்டாள்.



“அத்தாச்சி..! அண்ணே இப்படி உன் மனசு கஷ்டப்படற மாதிரி பேசுவாருன்னு தெரிஞ்சிருந்தா.. இந்த விஷயத்தை அண்ணன்கிட்ட சொல்லிருக்க மாட்டேன், என்னை மன்னிச்சுடு அத்தாச்சி” மிருது வருத்தத்துடன் மொழிந்தாள்.


“இங்க பாரு மிருது, அமைதியான உங்க அண்ணனே இதைக் கேட்டு கோபப்படும் போது, முனுக்குன்னு நுனி மூக்கில வரும் கோபத்தை தற்காலிகமா மறைச்சு வச்சுருக்க உன் சின்ன அண்ணன்கிட்ட சொல்லிருந்தேன்னு வை.. வெட்டு குத்து நடந்துருக்கும் நம்ம ரெண்டு குடும்பத்துக்கிடையில. நீ இப்போ எங்கக்கிட்ட சொன்னது நல்லதுதான், எது நடந்தாலும் வீட்ல சொல்லணும் மிருது. உங்க அண்ணன் ஏதோ கோபத்தில் பேசுறாக எல்லாம் சரியாயிடும்.. நீ எதை நினைச்சும் கவலைப்படாமல் உன் வேலைய பாரு. இந்த பிரச்சனை எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்” என்று தலையை வருடி கொடுக்க.. மஹாவை அணைத்துக் கொண்டாள் மிருதுளா.



அடுத்த நாள் காலை, பகலவன் அன்றைய சூடான நிகழ்வுகளுக்கு ஆரூடம் சொல்லுவது போல்.. தனது வெப்பக் கதிர்களால் பூமா தேவியை குளிப்பாட்டி கொண்டிருந்தான். அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு, தானும் தயாராகித் தனது இரண்டு வயது மகன்.. ஆதவனையும் தயார் செய்து குமரனுக்காக காத்துக் கொண்டிருந்தாள் மஹா..


“என்ன மஹா.. காலையிலையே நீயும், குட்டியும் ரெடியாயிருக்கீங்க.. எங்க கிளம்பிட்டிங்க?” தனது சட்டையின் ஸ்லீவை மடித்துவிட்டபடி கேட்டான் அரசு.



“சும்மாதாண்டா.. ஒரு விசேஷசத்துக்கு போறோம்” என்று குமரன் பதில் கூறினான்.


“விசேஷமா..? ஆனா ரெண்டு பேரு முகத்துலையும் ஏதோ மிஸ் ஆகுதே..” என சந்தேகத்துடன் வினவினான்.



“ஏன்டா.. எப்போ பார்த்தாலும் லூசு கணக்கா சிரிச்சுக்கிட்டா இருக்க முடியும்? இன்னிக்கு நிறைய வேலை இருக்குன்னு சொன்னியே சீக்கிரம் கிளம்பு” சூடாகக் கூறி துரத்திவிட்டான்.



“ஏதோ மறைக்கிற.. தெரியாமலா போகப் போகுது” முணுமுணுத்துக் கொண்டே வெளியேறினான்.



மிருது கிளம்பியதும்.. இருவரும் கிளம்பி வேந்தன் வீட்டை அடைந்தனர். அவர்களை வரவேற்று குட்டி பையனை தூக்கி கொஞ்சிக் கொண்டிருந்தனர் அனைவரும்.


எப்போதும் மாப்பிள்ளை என உரிமையாக கை போட்டு பேசும் தன் மாமன், இன்று கிஞ்சித்தும் தன்னை பார்க்காமல் இறுகி போய் அமர்ந்திருப்பதை யோசனையோடு பார்த்துக் கொண்டிருந்தான் வேந்தன்.



“என்ன மாப்பிள்ளை காலையிலையே ரெண்டு பேரும் கிளம்பி வந்துருக்கீக..? ஏதவாது செய்தியோடு வந்துருக்கீக போல.. முகம் வேற வாட்டமா இருக்கு” என்றார் சக்திவேல்.



“மாமா..! நான் சுத்தி வளைச்சு பேசாமல் நேரா விசயத்துக்கு வரேன், என் தம்பி அரசுக்கு வேதாவை பொண்ணு கேட்டு வந்துருக்கோம்..” சொல்ல வந்த விஷயத்தை போட்டுடைத்தான்.



அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டவர்கள், சில நிமிட அமைதிக்குப் பிறகு.. “மாப்பிள்ளை வேதா மேல படிச்ச பிறகு தான் கல்யாணம் பண்ணனும்னு சொல்லுது..” சற்று தயக்கத்துடன் பதில் வந்தது வெற்றிவேலிடமிருந்து.



“அவ என்ன படிக்கணும்னு நினைக்கிறாளோ அதை நாங்க கல்யாணத்துக்குப் பிறகு படிக்க வச்சிக்கிறோம் மாமா. வேதாவுக்கும் செவ்வாய் தோஷம்னு கேள்விப்பட்டேன்.. அவ பிறந்ததேதி எல்லாத்தையும் வச்சு நாங்களே நெட்ல ஜாதகம் பார்த்துட்டோம் எல்லா பொருத்தமும் சரியா இருக்கு. அரசுவும் இப்போ அவன் உண்டு அவன் வேலை உண்டுன்னு இருக்கான் இதுக்கு மேல உங்களுக்கு என்ன வேணும்..? அவளை நல்லா பார்த்துக்குவான் எப்போ கல்யாணத்தை வச்சுக்குவோம்னு சொல்லுங்க…? நாளை குறிச்சுருவோம்” திருமணம் நடைப்பெற்றே தீர வேண்டும் என்று உறுதியாகப் பேசிக் கொண்டிருந்தான்.



பொறுமையிழந்த வேந்தன் “என்ன மாமா நினைச்சுக்கிட்டு இருக்கிய..? உங்க இஷ்டத்துக்கு பேசிக்கிட்டு போறிய.. வேதாவுக்கு இப்போ கல்யாணம் பண்ற எண்ணத்தில் இல்ல. அதுவும் உங்க தம்பிக்கு கொடுக்கிறதுல எனக்கு விருப்பமில்ல” என தனது விருப்பமின்மையை காட்டமாகவே வெளிப்படுத்தினான்.



நிதானமாக எழுந்த குமரன்.. “என் தம்பிக்கு பார்த்த பொண்ணோட அண்ணன்கிட்ட அவனைப் பத்தி தப்பா சொல்லி, அந்தச் சம்மந்தத்தை கெடுக்காமல் இருந்திருந்தால்.. உன் தங்கச்சிய கேட்டு வந்துருக்க மாட்டோம் வேந்தா” என்றான் அவன் கண்களை கூர்ந்து நோக்கி..



“மாமா.. அது எதுக்கு சொன்னேனா..” வேந்தன் விளக்கம் கொடுக்க முன் வர..



“இனிமேல் என்னை அப்படி கூப்பிடாதே வேந்தா..! உன்னை மச்சானா பார்க்காமல், அரசுக்கு இணையா உன்னை பார்த்தேன். ஆனா, என் மேல் கொஞ்சம் கூட மரியாதை இல்லாம, அவனுக்காக நான் பார்த்த சம்மந்தத்தையே கெடுத்துட்டே, அப்பவே உன் மேல் எனக்கு உள்ள பிரியம் போய்டுச்சு. உங்கக்கூட உங்க வீட்டு மருமகனா பழகாமல் வீட்ல ஒருத்தனா சகஜமா பழகினேன். நீ என்னை மதிக்காமல் நடந்துகிட்ட போது கூட தணிஞ்சு போனேனே.. நம்ம குடும்பம்னு நினைச்சு. அதை எல்லாம் வச்சு நாம எது செஞ்சாலும் இவன் பொறுமையா போவான்னு இப்படி ஒரு காரியத்தைப் பண்ணிருக்கே..” என்றவன்..



“எதுக்கு வெட்டியா பேசிக்கிட்டு இப்போ நான் இங்க வந்தது ஒன்னு வேதாவை என் தம்பிக்கு கட்டிக்கொடு, இல்லை உன் அக்காவை இங்கையே உன் வீட்லையே வச்சுக்கோன்னு சொல்லதான்” அலுங்காமல் குலுங்காமல் குண்டைத் தூக்கிப் போட்டன்.



அவன் மஹாவை வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள் என்றதும் அனைவர் முகமும் அதிர்ச்சியைத் தத்தெடுத்துக் கொண்டது.



“மாப்பிள்ளை என்ன இப்படி பேசுறீங்க” என மொத்த குடும்பமும் பதற.. வெற்றிவேல் தன் மகனால் இப்படி ஒரு பிரச்னை உருவானதை தாங்காமல் அவன் கன்னத்தில் அறைந்து விட்டார்.




“வெற்றி..! என்ன இது தோளுக்கு மேல் வளர்ந்த ஆம்பள புள்ளைய கை நீட்டுற பழக்கம்” என கடிந்து கொண்டார் சக்திவேல்.



“அண்ணே..! இவன் என்ன காரியம் பண்ணிருக்கான் பார்த்தீகளா..? நமக்கு ஒரு குடும்பத்தை வாழ வச்சுதான் பழக்கம் கெடுத்து பழக்கம் இல்லை. இவனுக்கு மட்டும் எப்படி கெடுக்கிற புத்தி வந்துச்சு..?” என நொந்து கொண்டவர் மகனை பார்க்கப் பிடிக்காது திரும்பி நின்றுக் கொண்டார்.



ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் யோசிக்காமல் அவன் விட்ட வார்த்தைகள் இன்று விஸ்வரூபம் எடுத்து தன் குடும்பமே தனக்கெதிறாகத் திரும்ப வைத்தது மட்டுமல்லாமல்.. தன் அக்கா, தங்கை வாழ்க்கைக்கு அது வினையாக முடியும் என்று அறியாதவன்,அனைவரின் முன்பும் வாய் திறக்க முடியாமல் அமைதியாக நின்றான்.




“இன்னொரு விஷயம் சொல்றேன் உங்க எல்லாருக்கும் கேட்டுகோங்க, உங்க ஆபரேஷனுக்கு நான் தான் பணம் கொடுத்தேன்னு நினைச்சுக்கிட்டு இருக்கீங்க.. ஆனா, அதில் ஒரு ரூபாய் கூட என் பணம் கிடையாது. எல்லாம் அரசோட பணம், அதைக்கூட அவன்தான் கொடுத்தான்னு சொல்ல வந்தப்ப தடுத்துட்டான். இதான் அவன் குணம்..! ஆனா, நீ அவன் மேல் உள்ள பழி வெறில அவன் வாழ்க்கையை கெடுக்கப் பார்க்குற.. அப்படி கெடுக்கப் பார்த்த உனக்கு அதை சரி செய்றதுக்கான பொறுப்பும் இருக்கு.”



இதற்கப்புறம்.. என்னால் ஒரு பொண்ண பார்த்துக் கல்யாணம் பண்ணி வைக்க ஒரு வருஷம் ஆயிடும். ஆனா, அவனுக்கு மூணு மாசத்துக்குள்ள கல்யாணம் நடக்கணும்னு சொல்லிருக்காங்க. இப்ப இருக்கிற ஒரே வழி வேதாதான்..! இப்போ என் தம்பி மட்டும் தான் எனக்கு முக்கியம் அவன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு நினைக்கிறதுல நான் சுயநலவாதிதான்.. இதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை” திட்டவட்டமாகத் தனது எண்ணத்தை ஆணி அடித்தார் போல் அனைவர் மனதிலும் பதிய வைத்தான்.



அனைவரும் என்ன சொல்வதென்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டிருக்க.. வேந்தனோ ‘காச கொடுத்து நல்ல பேரு வாங்கிக்கிட்டு.. என் தங்கச்சிய இதை வச்சு மடக்கப் பார்குறானே அந்த ஊதாரிப் பய' என சில பல கெட்ட வார்த்தைகளை கொண்டு அர்ச்சித்தான்.



“இதைச் சொல்ல தான் நாங்க வந்தோம். ஒரு வாரம் அவகாசம் எடுத்துக்கிட்டு நல்ல யோசிச்சு ஒரு முடிவை சொல்லுங்க” என்றவன் நடக்க ஆரம்பித்தான். வந்ததிலிருந்து பேசாத மஹா.. “என் வாழ்க்கை உங்க முடிவில் தான் இருக்கு” என்று விழி நீர் கசிய கூறி விட்டு தன் மகனைத் தூக்கிக் கொண்டு குமரன் பின்னால் சென்றாள்.



அவர்கள் சென்ற பிறகு, மயான அமைதி நிலவ.. விசாலாட்சி தான் தன் பேச்சை ஆரம்பித்தார்.



“பெரிய மாமா..! அரச பத்தி நீங்க என்ன நினைக்கிறீக?” என்று கேட்டார்.



ஒரு நொடி விசாலாட்சியை ஆழ்ந்து பார்த்தவர்.. “எனக்கும் ஆரம்பத்தில் அந்த பையன பத்தி பெரிய அபிப்ராயம் இல்ல. ஆனா, இப்போ கொஞ்ச நாளா பொறுப்பாதான் நடந்துக்கிறான்னு கேள்விப்பட்டேன்” என தன் அபிப்ராயத்தை சொன்னார்



“இப்போ எதுக்கும்மா, நீ அபிப்ராயம் கேட்குறே..? வேதாவே அவனுக்கு கட்டி வைக்க முடிவு பண்ணிருக்கியா..?” சுள்ளென்று கேட்டான் வேந்தன்.



அவனை முறைத்த விசாலாட்சி “ஆமா டா.. இப்போ அந்த பையனுக்கு கட்டிக் கொடுத்தா என்ன தப்பு..? ஒரு காலத்தில் எல்லா பிள்ளைகளும் சுத்திதான் திரிஞ்சுருக்கும், அததுக்கு வயசு வந்ததும் பொறுப்பா குடும்பத்தை கவனிச்சுக்கும். அதே மாதிரி தான் அந்த புள்ளையும் இப்போ பொறுப்பா இருக்கு. அன்னிக்கு பெரியவருக்கு முடியாத சமயத்தில் அந்த புள்ளை இல்லைன்னா எதையுமே சமாளிச்சுருக்க முடியாது அதை தெரிஞ்சுக்க” என்க.



“ஓ..! ரூட்டு அப்படி போகுதோ..! உன் அண்ணன் மகனுக்கு பரிஞ்சு பேசுறளவுக்கு அன்னிக்கு ஒரு நாளுல உன்னை மாத்தி வச்சிருக்கான்” என்றான் வேந்தன் பல்லைக் கடித்துக்கொண்டு.



“மாத்தலடா அவன் எப்படின்னு அவனுக்கே தெரியாமல் எங்களுக்கு புரிய வச்சிருக்கான். பல வருஷம் ஒரு மனுசனை அடுத்தவங்க சொன்னாங்கன்னு தப்பாவே புரிஞ்சுக்கிட்டு இருந்துருப்போம்.. ஒருநாள் ஏதோ அவனோட ஒரு செயல் நம்ம எண்ணத்தை எல்லாம் தூள் தூளாக்கி நமக்கு அவனோட நல்ல குணத்தை பொட்டுல அடிச்ச மாதிரி, அவன் எப்பேர்பட்ட மனுஷன்னு நமக்கு உணர்த்திருக்கும், அதே மாதிரி தான் அந்த புள்ளை எங்களுக்கு உணர்த்திருக்கு. நீ தான் அந்த புள்ளையத் திட்டிக்கிட்டு இருந்தியே தவிர, இதுவரைக்கும் நாங்க திட்டுனதைப் பார்த்துருக்கியா?” என்றார் அவனைப் பார்த்துக் கொண்டே..



அப்போதுதான் உணர்ந்தான் தானும், வேதாவைத் தவிர மற்றவர்கள் யாரும் அவனைப் பத்தி ஒரு வார்த்தைக் கூட தப்பாகப் பேசியதில்லை என்று.



“ஏன்னா, என் அண்ணன் புள்ளைடா அவன். என்னைக்கும் வழி மாறி போகமாட்டான். அது இந்த வீட்ல உள்ள எல்லாருக்கும் தெரியும். இந்த குடும்பம் கஷ்டப்பட்டப்ப.. எல்லா விதமான உதவிகளையும் செஞ்சு குடும்பத்தை உயர்த்த உதவுனவர்டா அந்த மனுஷன்.”


“நாம விவசாயம் பண்ற ரெண்டு ஏக்கர் நிலம் அவர் நல்லா இருந்த காலத்துல தங்கச்சி கஷ்டப்படக் கூடாதுன்னு இந்த குடும்பத்துக்காக கொடுத்தது. இத்தனைக்கும் அவர் எனக்கு பெரியப்பா மவன் தான், அப்படி ஒரு பாசக்காரு, உன் பெரியப்பாவுக்கு நெருங்கியத் தோழன்.”



“இன்னிக்கு அவங்கக்கிட்ட நிலம் இல்லாமல் இருந்தாலும், என் அண்ணன் ரத்தம் எதுவும் இல்லாட்டியும் உதவுறதுல வள்ளலுங்றத நிரூபிச்சுருக்குடா.. அதனால் தான் மஹாவை எத்தனையோ வசதியான குடும்பத்தில் கேட்டும், உறவை வலுபடுத்த நாங்களா குமரனுக்கு கட்டி வச்சோம். விஜியை அவங்க கேட்டும் கட்டி வைக்க முடியல, இப்போ என் மருமவன் திரும்ப வந்து கேட்குது. நான் மஹாவ பெத்துக்கலைன்னாலும் உங்க ரெண்டு பேரை விடவும் அவ தான் எனக்கு முதல் புள்ளை. அவ மனசு என்னிக்கும் கஷ்டப்படக் கூடாது. அதனால வேதாவை அந்த புள்ளைக்கு கட்டி வைக்கிறதுல எனக்கு முழு சம்மதம், உங்களுக்கெல்லாம் எப்படி..?” என்று சுற்றி தன் பார்வையை சுழல விட்டபடி கேட்க..



அனைவரும் விசாலாட்சி சொல்வது சரி என்று பட்டதும் சம்மதமாக தலை அசைத்தனர்.


வேந்தனோ.. என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றான்.



****************************************


அன்று இரவு, வீட்டிற்கு வந்த அரசு.. குமரன், மஹா முன்பு கோபமாக வந்து நின்றான்.



“யாரை கேட்டு அவளை பொண்ணு கேட்டு போனீங்க?” என்றான் முகத்தில் கடுமையைத் தேக்கி..


“என் தம்பிக்கு பொண்ணுப் பார்க்க யாரை கேட்கணும்?” நக்கலாக பதில் வந்தது குமரனிடமிருந்து..



“உன் தம்பிக்கு பொண்ணு பார்க்க நீ யாரையும் கேட்க வேண்டாம். வேதாவை ஏன் கேட்டு போனீங்கன்னு தான் கேட்குறேன்”



“இங்க பாருடா.. என்கிட்டே நான் எந்த பொண்ண பார்த்தாலும் அவளைக் கட்டிக்கிறேன்னு சொல்லிருக்கே.. இப்போ உனக்கு வேதாவை பார்த்தா நல்லதுன்னு தோணுச்சு அதான் பேசிட்டு வந்தோம்.”



“இங்க பாரு குமரா..! அவளுக்கும் எனக்கும் ஒத்துப் போகாது, வேற பொண்ண பாரு. அதோடையும் நானும் விஜியும் விரும்புன விஷயம் அவளுக்குத் தெரியும், திரும்ப அந்த வீட்லையே பொண்ணு எடுத்தா சங்கட்டமா இருக்கும்டா..”



“கல்யாணதுக்கு முன்னாடி கீறியும், பாம்பா இருந்தவங்க எவ்வளவோ பேரு கல்யாணத்துக்கு பிறகு ஆதர்ச தம்பதிகளா ஒற்றுமையா வாழுறாங்க, அதேமாதிரி உங்களுக்குள்ள எல்லாம் சரியா போய்டும். விஜி விஷயம் பழைய கதை அதை எல்லாம் நினைச்சுக்கிட்டு இருந்தா குடும்பம் நடத்த முடியாது. உன் கல்யாணம் என் பொறுப்பு வேதாதான் இந்த வீட்டு மருமகள்! இதுக்கு மேல் எதுவும் பேசாதே.. கல்யாணத்துக்கு தயாராகுறே, அவள் கழுத்துல தாலிய கட்டுற” என்றவன்,


“சரி, உனக்கு எப்படி நாங்க அங்க போனது தெரியும்?” என்று கேட்க..



“அது எப்படியோ தெரியும். டேய் இப்பவும் சொல்றேன் அவ வேண்டாம்டா.. நம்ம வீட்டுக்கு.”



அவனை முறைத்த குமரன்.. “இது வரைக்கும் நான் உன்னை உன் இஷ்டப்படி தான் விட்டுருக்கேன், இந்த ஒரு விஷயத்தில் நான் சொல்றதைக் கேட்டு என் தம்பிதான்னு நிரூபி” என சரேலென்று எழுந்துச் சென்று விட்டான்.



மஹா தனக்கு உதவிக்கு வருவாள் என்று பார்க்க.. அவளோ அவன் பார்ப்பதை அறியாதது போல் தன் மகனுக்கு உணவூட்டிக் கொண்டிருந்தாள்.


‘சுத்தம்’ என நினைத்தவன் தனத்தறைக்குச் சென்று சட்டையை கழட்டியவன் எண்ணம்.. ஒரு மணி நேரத்திற்கு முன்பு வேந்தன் அவனுக்கு அழைத்து ‘பணத்தைக் கொடுத்து என் தங்கச்சிய உனக்கு கட்டி வைக்க சொல்லி அக்காவையும், மாமாவையும் அனுப்பி வச்சியா?' என சொன்னது காதில் எதிரொலித்துக் கொண்டு இருந்தது.



‘இவன் என்ன உளறுறான்’ என நினைத்தவன், பதில் எதுவும் சொல்லாமல் பேசியை அணைத்து விட்டு, வேந்தன் சொல்வது போல் ஏதாவது நடந்திருந்தால் இதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் வீட்டிற்கு விரைந்தான்.



ஆனால், குமரன் வேதாவை கட்ட வேண்டும் என்று பிடிவாதமாக இருப்பதை பார்த்து அவனால் எதுவும் செய்ய முடியாமல் போனது. ” அடிதடி பண்றவனை கூட.. நாலு சாத்து சாத்தி சமாளிச்சுடுவேன். இந்த உலக வாயாடி வேதாவை எப்படி நான் சமாளிக்கிறது?” அவனே அறியாமல் அவளை மனைவியாக்கிக் கொள்ள சம்மதித்தான்.



***************************************


இங்கு வேதா விஷயத்தை கேள்விப்பட்டதும்.. கையில் வேப்பிலையும், திரி சூலமும் இல்லாத குறையாக வானத்திற்கும், பூமிக்கும் சாமி ஆடி கொண்டிருந்தாள்.


“என்ன..! உன் நன்றி கடனைத் தீர்க்க, உன் அண்ணன் மகனுக்கு என்னை நேந்து விட பார்க்குறியா..? எனக்கு வர போறவன் எப்படி இருக்கணும்னு கனவு எல்லாம் இருக்கு. அதுல ஒண்ணுல கூட பாஸாகாதவனை எனக்கு கட்டி வைக்க பார்க்குற..”



நான் விஜிக்கு அவனை பேசும்போதே அதை என்னால ஏத்துக்க முடியல, இதுல எனக்கே அவன புருஷனாக்க பார்க்குறே, கொஞ்சமாவது என் விருப்பத்தை நினைச்சு பார்த்தியா..? அவங்க ரெண்டு ஏக்கர் கொடுத்தாங்கன்னா, அதை திருப்பி அவங்க பேருலையே எழுதி வை. அதை விட்டுட்டு என்னைக் கேட்காமல் நீங்களா அவனுக்கு என்னைக் கட்டி வைக்க முடிவு பண்ணிருக்கீங்க, அவனுக்கு மட்டும் என்னைக் கட்டி வைங்க எங்கையாவது நான் ஓடி போயிடுறேன்” என்று எண்ணையில் போட்ட கடுகாகப் பொரிந்து தள்ளினாள்.



ஆடி முடித்து அடங்கியதும் பேசி கொள்ளலாம் என்றிருந்த விசாலாட்சி.. பெரியவர்கள் முன்பு வாயை அடக்காமல் ஓடி போய்டுவேன் என்று பேசியதும் அதற்கு மேல் பொறுமை காக்க முடியாமல் கன்னத்தில் ‘பளார்’ என அறைந்து சாமியை மலை இறக்கினார்.


அவளை அடித்தும் “விசாலம்..!” என பதறிக் கொண்டு வந்தவர்களை.. கை நீட்டி தடுத்தார்.



வயல் காட்டில் வேலை செய்து காய்ச்சி போயிருந்த கையால் அடித்ததால்.. கை தடம் பதிந்த கன்னத்தை கையால் பற்றிக்கொண்டு, மிகுந்த உக்கிரத்தோடு தன் முன் நின்றிருந்த தாயை ‘பே’ என பார்த்துக் கொண்டிருந்தாள் வேதவள்ளி!!



தொடரும்...
 

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ்...


தந்தியில்லா வீணை-4 பதிவிட்டாச்சு படிச்சுட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்.சென்ற பதிவிற்கு லைக், கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றி.
கருத்துத் திரி👇


அன்புடன்
வியனி❤
 

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வீணை-5



விசாலாட்சி அடித்த அடியில் கையை கன்னத்தில் அழுத்திப் பிடித்துக் கொண்டு தன் தாயை ‘பே’ என பார்த்துக் கொண்டிருந்தாள் வேதவள்ளி.


“விசாலம்..!” என பதறிக்கொண்டு வந்தவர்களையும் தடுத்து நிறுத்தியவர்..



நானும் கோபத்துல பேசுற, பேசி முடிச்சதும் அமைதியாடுவேன்னு பார்த்தா..? வாய் என்ன பத்து ஊருக்கு நீளுது. எப்படி வாயடிச்சாலும் கடை குட்டி, சின்ன பிள்ளைன்னு சொல்லிச் சொல்லியே.. உனக்கு செல்லம் கொடுத்ததாலதானே வீட்டு பெரியவுக முன்னாடியே, ஓடி போய்டுவேன்னு மனசுல கொஞ்சம் கூட அச்சம் இல்லாமல் பேசுறே. நாங்க எல்லாம் எங்க மாமனார் இருக்கும் போது அவுக சாப்பிட்டு முடிச்சு எழுந்து போற வரைக்கும் நின்னுக்கிட்டே தாண்டி இருப்போம், அப்படி ஒரு மரியாதை மனசுல இருந்துச்சு, இப்போ உள்ள புள்ளைகள் எல்லாம் எதிர்த்துப் பேசுது” என்று பேசிக்கொண்டிருக்க..



“சும்மா சொல்லாத.. உன்னால் உட்கார்ந்தா கொலுக்கு மொழுக்குன்னு இருக்கிற இந்த உடம்ப வச்சுக்கிட்டு எழுந்திருக்க முடியாது. அதுக்குள்ள தாத்தா சாப்பிட்டு கை கழுவிட்டு போய்டுவாரு.. அதான், நின்னுக்கிட்டு இருந்திருப்ப” என்றாள் அந்த ரணகளத்திலும்..



அவள் பேச்சில் வந்தச் சிரிப்பை அடக்கிக் கொண்டு மற்றவர்கள் நிற்க.. “இருடி உன்ன..” என்று அவளை அடிப்பதற்கு ஏதாவது கிடைக்குமா என்று தேடவே.. வேதா பூங்கோதைப் பின்னால் சென்று ஒளிந்து கொண்டாள்.


“வேதா என்ன இது..? அம்மாக்கிட்ட இப்படி எல்லாம் பேசக்கூடாது” என்று அதட்டினார் பூங்கோதை.


“கற்காலத்துல நடந்த அவங்க கதை எல்லாம் சொன்னா.. இப்படி பேசாமல் எப்படி பேசுறதாம். அவங்க காலம் வேற, எங்க காலம் வேறன்னு சொல்லுங்க பெரியம்மா..” தன்னை முறைத்துக் கொண்டிருந்த தாயைப் பார்த்துக் கொண்டு கூறினாள்.




“பார்த்தீகளா..! நாளைக்கு புருஷன் வீட்டுக்கு போய் இப்படியே தான் ராங்கியா பேசுவா, அவன் ரெண்டு போட்டு விரட்ட போறான். நம்ம வீட்ல இவளுக்கு மூத்தவளுங்க ரெண்டு பேரு இருந்தாளுங்க, அவளுங்க ரெண்டு பேரும் பத்தரை மாத்த தங்கம்.. எதிர்த்துப் பேச மாட்டாளுங்க. இது எல்லார் முன்னாடியும் ஓடி போய்டுவேன்னு சொல்லுது” என்றார் ஆற்றாமையுடன்.



“இங்க பாருமா..! அவனுக்கு நீ என்னை கட்டி வச்சேன்னா முகூர்த்தம் அன்னிக்கு காலையில ஓடி போய்ட்டு, பொழுது போனதும் சாயங்காலம் வீட்டுக்கு வந்துடுவேன்னு, அந்த ஓடி போறதே சொல்ல வந்தேன். நீ பாட்டுக்கு தப்பா புரிஞ்சுக்கிட்டு, அடிச்சது மட்டுமில்லாமல் ரெண்டு மணி நேரமா ஆத்தோ ஆத்துன்னு சொற்பொழிவு ஆத்திக்கிட்டு இருக்கே.. நமக்கு இந்த லவ் பண்ணி ஓடி போய் கல்யாணம் பண்ணிக்கிறது எல்லாம் செட் ஆகாது. எனக்கு நீங்கதான் நல்ல படிச்ச, நல்ல ஜாப்ல இருக்கிற மாப்பிள்ளையா பார்த்து கட்டி வைக்கணும், அதை விட்டுட்டு உன் அண்ணன் மகன கட்டிக்கச் சொன்னே.. அவ்வளவுதான் விசாலாட்சி” என்று மிரட்டினாள்.



“அடிச்சும் உன் வாய் அடங்குதா பார்த்தியா..? உன் கை, கால கட்டி வச்சாவாது என் மருமவனுக்கு கட்டி வைப்பேன்டி. இந்தக் கல்யாணம் நடந்தாதான், உங்க அக்காவும் அங்க இருக்க முடியும்.. இல்லை கண்ணீரும், கம்பலையுமா வாழா வெட்டியா நம்ம வீட்ல இருக்கணும். புரிஞ்சு நடந்துக்க அவ்வளவுதான் சொல்லிப்புட்டேன்” என்றுவிட்டு சென்றார்.



விசாலாட்சி பேச்சிற்கு மற்ற அனைவரும் மறுப்புத் தெரிவிக்காமல் கலைந்து சென்றது ஏமாற்றமாக இருந்தது வேதாவிற்கு..



“வேந்தா, ஏன்டா இப்படி ஒரு காரியத்தைப் பண்ணே..? அம்மா இவ்வளவு உறுதியாயிருக்கு, எனக்கு பயமா இருக்கு! குமரன் மாமா அப்படி எல்லாம் அக்காவை வீட்டை விட்டு துரத்த மாட்டாரு, நம்ம வீட்ல உள்ளவங்களை சம்மதிக்க வைக்க இப்படி மிரட்டுறாருன்னு நினைக்கிறேன். சாட்சிக்காரன் காலுல விழறதை விட, சண்டைக்காரன் காலுல விழுந்தாலும் காரியம் ஆகும்னு சொல்லுவாங்க. இவங்கக்கிட்ட தொண்டை தண்ணி வத்த கத்தறதுக்கு, நானே அவன்கிட்ட பேசி பார்க்கலாம்னு தோணுது.”



“அவன்கிட்ட நான் போன் பண்ணி விவரத்தை சொன்னேன். ஆனா, அவன் பதில் சொல்லாம கட் பண்ணிட்டான். இதிலிருந்து என்ன தெரியுது அவன் தான் அவசரதுக்கு காச கொடுக்கிற மாதிரி கொடுத்து, இதை வச்சு பொண்ணுக் கேட்க சொல்லிருக்கான்” என்றவன் வகையாக மறந்து போனான் அவனுக்கு பார்த்த சம்பந்தத்தை தடுத்து நிறுத்தியது தான்தான் என்பதை.



அவனுக்கு யாரு பொண்ணுக் கொடுப்பா..? அவன் முகத்தைக்கூட பார்க்கப் பிடிக்காத என்னைய போய் அம்மா கோர்த்து விடுது, என்னால் அவன ஏத்துக்க முடியாது வேந்தா.. எதுக்கும் ஒரு தடவை அவன்கிட்ட பேசி பார்க்குறேன், அப்பறம் என்ன முடிவு பண்ணலாம்னு யோசிக்கலாம்” என்றாள் வேதா.



“சரி பேசி பாரு..? ஒத்து வந்தா பார்க்கலாம், இல்ல தாலி கட்டணும்னு நினைக்கிற அந்த கையை இல்லாமல் பண்ணிடுறேன்” தீவிரத்தோடு கூறினான்.



அன்று இரவு முழுவதும் தூங்காமல் புரண்டு புரண்டு படுத்தவள்.. திடீரென எழுந்து அமர்ந்தாள்.. ‘என் அக்காவை விரும்புனவன், என்னை தள்ளிவிட்டு என் கண் முன்னாடியே அவ கூட பேச என்னை காவல் இருக்க சொல்லி அவ கை பிடிச்சு இழுத்துக்கிட்டு போனவனோடு.. நான் எப்படிக் குடும்பம் நடத்தி குழந்தை பெத்து, இணக்கமா வாழ முடியும்?”



“எல்லாம் பொண்ணுங்களுக்கும் தனக்கு வர போறவனைப் பத்தி எதிர்பார்ப்பு இருக்கும், எனக்கும் அதே மாதிரி எதிர்பார்ப்பு இருக்கிறது தப்பா..? என்னை கல்யாணம் பண்ணிக்கிறவனுக்கு நான் தான் முதல் காதலா இருக்கணும்னு நினைக்கல, இந்த காலத்தில் அதை எதிர்பார்க்கவும் கூடாது. உயிருக்கு உயிரா விரும்பினவங்க கூட அவரவர் சூழ்நிலை காரணமா பிரிஞ்சு போயிருப்பாங்கா, அவங்களை குத்தம் சொல்ல முடியாது.”

“அப்படி அவன் காதலில் தோற்றுப் போயிருந்தால் கூட நான் கல்யாணம் பண்ணிப்பேன், அவங்க காதல் லீலை என் கண் முன்னாடி நடக்கலைன்னு திருப்தியில். ஆனா, இவன் அவளை கைபிடிச்சு இழுத்துட்டுப் போய் பேசுனது எல்லாத்தையும் பார்த்துட்டு இப்போ எப்படி அவனை நான் ஏத்துக்க முடியும்..? அதை நினைக்கும்போது என் உடம்பு கூசுது, அப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் என் வாயும் சும்மா இருக்காது ஏதாவது ஏடா கூடமா சொல்லிச் சண்டையை இழுத்து விட்ருவேன், அது ரெண்டு பேருக்குமே நிம்மதியை கொடுக்காது. நாளைக்கு எப்படியாவது பேசி இந்தக் கல்யாண பேச்சையே நிறுத்த சொல்லணும்' என்று முடிவு எடுத்த பின்புதான் நித்திரா தேவி அவள் கண்ணைத் தழுவினாள்.



மறுநாள் அவனிடம் இன்றைக்கு பேச வேண்டும் என்பதற்காக கிளம்பி வெளியே வந்தவள் கண்ணில் அகப்பட்டது விசாலட்சி வேதாவின் தோழி சங்கரியுடன் பேசிக்கொண்டு தன் முந்தானையால் கண்ணைத் துடைக்க.. அவளோ அவர் கையை பிடித்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள்.



‘ஒஹோ..! அவகிட்ட பேசி என்னை பிரைன் வாஷ் பண்ண சொல்றியே விசாலாட்சி! நானே பல பேரே பிரைன் வாஷ் பண்றவ.. உன் மகளை பத்தி தெரியாமல் எனக்கே விபூதி அடிக்க பார்க்குற..? இதுக்கு இன்னைக்கு ஒரு முடிவு கட்டுறேன்’ என்று நினைத்துக் கொண்டாள்.



அவள் அருகில் வந்ததும் இருவரும் பேச்சை நிறுத்திக் கொண்டனர். தன் தாயிடம் பேசாமல் “என்னடி உங்க பேச்சு வார்த்தை முடிஞ்சதுன்னா நாம கிளம்பலாமா..?” விசாலாட்சியை ஒர பார்வைப் பார்த்துக் கொண்டே கேட்டாள் வேதா.



“கிளம்பலாம்டி” என்ற சங்கரி, கண்களால் விசாலாட்சிக்கு ஆறுதல் சொல்லிவிட்டு அங்கிருந்து நடக்க ஆரம்பித்தாள்.



‘பெரிய காஷ்மீர் பிரச்னை.. இவ பெரிய பாகிஸ்தான் தூதரு கண்ணாலையே எல்லாத்தையும் முடிச்சுடுறேன்னு ஆறுதல் வேற.. முடியல’ என எண்ணிக் கொண்டவள் அவளுடன் சென்றாள்.


“ஏண்டி வேதா.. அம்மா நல்லதுக்கு தானே உனக்கு சொல்றாங்க, பேசாமல் கல்யாணத்துக்கு ஒத்துக்கடி. இந்த ஊருளையே அம்மா, அப்பா பக்கத்துலையே இருக்கலாம்ல” என்றாள் சங்கரி.


அவளை முறைத்த வேதா “உனக்கே நல்லா தெரியும் என்னோட எதிர்பார்ப்பை பத்தி.. மேல படிச்சு நல்ல வேலைக்கு போய் கை நிறைய சம்பாதிச்சு, என் தகுதிக்கு ஏத்த மாதிரி டிப் டாப்பா ட்ரெஸ் பண்ணிக்கிட்டு மாத சம்பளம் வாங்குற வைட் காலர் ஜாப்பில் இருக்கிறவனை தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு ஏற்கனவே சொல்லிருக்கேன், இப்போ என் அம்மா அழுது புலம்புதுனெல்லாம் என் மாமா மகனை கட்டிக்க முடியாது.”


“இன்ஜினியரிங் படிச்ச நான் எங்க..? டிப்ளோமோ படிச்சுட்டு மெக்கானிக் செட் வச்சுருக்க அவன் எங்க..? என் அம்மா சொன்னுச்சுன்னு நீ அவனை கட்டிக்க சொல்லி தூது வந்துருக்கே பிச்சுபுடுவேன் பிச்சு” என்றாள்.


“என்னடி இப்படி பேசுறே..? ஊரெல்லாம் பொண்ணு தேடி அவருக்கு எதுவுமே செட் ஆகல, உனக்கும் செவ்வாய் தோஷம், அவருக்கும் செவ்வாய் தோஷம் உங்க ரெண்டு பேருக்கும் தான் செட் ஆகுமாம், அவருக்கு அப்பா, அம்மாவும் இல்லை அதான் அவரோட அண்ணனும் உன் அக்காவும் உன்னைக் கட்டி தர சொல்லி கேட்டுருக்காங்க.. நீயே அவரை வேண்டம்னு சொன்னா அவரு பாவம் இல்லை.” அவளின் மனதை மாற்ற முயற்சி செய்தாள் சங்கரி.


“இது என்ன கத்திரிக்கா வியபாரமா..? கல்யாணம்டி! பிடிச்சாத்தான் கட்டிக்க முடியும், கட்டாயத்தின் பேரில் எல்லாம் பண்ண முடியாது. எனக்கு அவனைப் பிடிக்கலை அழுக்கு ட்ரெஸ், உடம்பெல்லாம் ஒரே கருப்பு கலரில் களிம்பு, கிரீஸ், ஆயில் வாடை ஒமட்டிக்கிட்டு வரும்..” என் அக்காவை விரும்பியவன் என்பதை மட்டும் மனதில் சொல்லிக் கொண்டாள்.


“ஹேய்.. இதெல்லாம் ஓவர் டி. அவருக்கு என்னடி குறைச்சல் ஆளு ஹீரோ கணக்காத்தானே இருக்காரு, தொழில் பார்க்கிற இடத்தில் அப்படித்தானே இருக்க முடியும்.. மத்த நேரத்தில் எல்லாம் நம்மளை மாதிரி தானே ட்ரெஸ் பண்றாரு” அவனுக்கு ஆதரவாக பேசினாள் சங்கரி.


“ஹீரோ கணக்கா இருந்தா அப்போ நீயே கட்டிக்க வேண்டியதுதானே.. அப்பறம் எதுக்கு என்கிட்ட தூது வந்துருக்கே..?”புருவத்தை ஏற்றி பரிகாசம் வழிய கேட்டாள் வேதா.


“என்னைக் கட்டிக்கச் சொல்லி கேட்டிருந்தா இந்நேரம் கல்யாணம் பண்ணி ஃபர்ஸ்ட் நைட் கொண்டாடிருக்க மாட்டேன்.. அதுக்குத்தான் கொடுத்து வைக்கலையே” என்று வருத்தபட்டவளை ஏற இறக்கப் பார்த்து வைத்தாள் வேதவள்ளி.



“உனக்கெல்லாம் என் இடத்திலிருந்து யோசிச்சாதான்டி.. என் நிலைமை புரியும், விதியேன்னு என்னால அவனை கட்டிக்க முடியாது புரிஞ்சதா..?” மூக்கு சிவக்க மொழிந்தாள்



“மஹாக்கா வாழ்க்கையை யோசிச்சு பார்த்தியா..? உன் அண்ணனால தான் அவங்களை வீட்டை விட்டு அனுப்புறேன்னு சொல்லிருக்காங்க இதை நினைச்சு அவங்க அம்மா அப்பா வருத்தபடமாட்டாங்க..? என்னதான் நீங்க கூட்டுக் குடும்பமாக இருந்தாலும்.. வாயும், வயிறும் வேற தாண்டி..” சங்கரி வீட்டு அரசியலை எடுத்துச் சொல்ல முயன்றாள்.



“அப்படி எல்லாம் அவங்க நினைக்கமாட்டங்க.. நீயா எதையாவது கற்பனை பண்ணிக்கிட்டு உளறாதே..? எரிச்சல் மிகுந்த குரலில் சொன்னாள் வேதா..



“யாரு.. நான் உளருறேன்? இப்போ அம்மா எதுக்கு அழுதாங்க தெரியுமா..?” பீடிகையுடன் கேள்வி எழுப்பினாள் சங்கரி.



“எதுக்கு..?”


“நேத்து நைட்டு உங்க பெரியம்மா பெரியப்பாக்கிட்ட வேந்தன் மட்டும் இப்படி பண்ணாமல் இருந்திருந்தால் மஹாவுக்கு இப்படி ஒரு பிரச்சனை வந்துருக்காது. இவன் பண்ண தப்பால என் பொண்ணுக் கஷ்டப்படறான்னு பேசிக்கிட்டு இருந்தாங்களாம், அதைத்தான் என்கிட்ட சொல்லி கண் கலங்குனாங்க..”



“என்னதான் நீங்க கூட பிறந்தவங்க மாதிரி இருந்தாலும், தன் பிள்ளைன்னு வரும்போது நீங்க எல்லாம் அவங்களுக்குப் பிறகுதான், இப்போ அம்மா வருத்தப்பட காரணம் உன் அண்ணனால் மஹா அக்காவுக்கு ஒரு பிரச்சனை வந்துடுச்சுங்கிற குற்ற உணர்ச்சிதான், அது மட்டுமில்லாமல் அரசு மாமாவுக்கு உன்னைக் கட்டி வைக்க அவங்க ரொம்ப விருப்பப்படறாங்கடி. இது நடக்கலைன்னா பிரச்னை பெருசாகி உங்க குடும்பமே உடைய வாய்பிருக்கு.. யோசிச்சு நல்ல முடிவெடு.”

“எல்லாருக்கும் விரும்புற வாழ்க்கை அமையறது இல்லை, அப்படி அமைந்த வாழ்க்கையை நல்லப்படியா வாழனும் அதான் புத்திசாலித்தனம். இனி, உன் கையில் தான் உங்க குடும்பத்தோட ஒற்றுமை இருக்கு” சொல்ல வந்த விஷயத்தை அவள் மண்டைக்கு உறைப்பது போல் சொல்லி முடித்தாள்.



அவள் பேச்சை காதில் வாங்காதது போல் எங்கையோ வெறித்துக் கொண்டு வந்தாள் வேதா.



“சரிடி வேதா, நைட் போன் பண்ணி ஒரு இடத்துக்கு போகணும்னு சொன்னியே.. எங்க போகணும்?



“ம்ம்.. அரச பார்க்க அவன் செட்டுக்கு போறோம்..” என்றாள்.



“அடி ஆத்தி..! எதுக்குடி அங்க..?”


“உனக்கு சம்மந்தம் பேச.. ஒழுங்கா வாயை மூடிக்கிட்டு வண்டில ஏறுடி” என்று அதட்டி அமர வைத்தவள் வண்டியை கிளப்பினாள் அரசுவைப் பார்க்க அவன் செட் வைத்திருக்கும் கீரனுரிற்கு!




புதுவயல் கிராமத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கீரனூர் பேரூராட்சி, இங்கு உத்தம நாதர் உடனுறை பிரகதம்பாள் அருள்பாலிக்கும் சிவன் கோயில் பதினொன்றாம் நூற்றாண்டு இறுதியில் புதுக்கோட்டையை ஆண்ட உத்தமதாணி முத்தரைய மன்னரால் கட்டப்பட்டு, ரகுநாத ராய தொண்டைமான் மன்னர் காலத்தில் புணரமைக்கபட்டதாகக் கூறப்படுகிறது.



ஒரு காலத்தில் புதுக்கோட்டையிலையே பெரிய தேரோடும் வீதியைக் கொண்டது எனும் சொல்லும்போது, அந்த அளவிற்கு பெரிய தேரைக் கொண்டிருந்தது என்பதை நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது. இன்று அம்மிகப் பெரியத் தேர் கால ஓட்டத்தில் அழிந்து, ரத வீதி என்ற பெயர் மட்டுமே தேர் ஓடியதற்கானச் சான்றை இங்குள்ள இளைய தலைமுறைக்கு விளக்குகிறது, இன்று அந்த ரத வீதி முழுவதும் அடுக்கு மாடி வீடுகளும், கடைகளும் ஆக்கிரமித்து.. கோவில் இடங்கள் பராமரிப்பற்றுக் கிடக்கின்றது.



இங்குள்ள கல்வெட்டுகளில் ‘உத்தமநாத புரம்’ என்று உத்தமநாத சுவாமி பெயரால் இந்த ஊர் வழங்கி வந்ததாக கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிவபெருமானை எதிர்த்துச் சொற்போர் புரிந்த புலவர் நக்கீரன் இங்கு தவமிருந்ததால் இந்த ஊர் 'கீரனூர்' என்று வழங்கபட்டு வருகிறதாகவும் மற்றொரு கருத்து உண்டு..


அப்படி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கோயில் உள்ள ஊரில் தனது ‘அரசு ஆட்டோமொபைல்ஸ்’ என்ற கார் மெக்கானிக் செட்டை ஏழு மாதங்களாக நல்ல முறையில் நடத்தி வருகிறான் அரசு.



“என்ன தம்பி கருப்பு புகை வருதுன்னு கொண்டு வந்தா.. நாப்பதாயிரம் செலவாகும்னு சொல்றிங்க” ஒரு வாடிக்கையாளர் கேட்டுக்கொண்டிருந்தார்.


“செகண்ட்ஸ்ல எடுத்த வண்டிதானே..? நீங்க வண்டி எடுத்து எத்தனை வருஷம் ஆகுது” என்றான் அரசு.



“என்ன ஒரு ரெண்டு வருஷம் இருக்கும் தம்பி ” யோசனையோடு சொன்னார் அவர்.


“ஆயில் எப்போ மாத்துனீங்க..?”



“என்ன தம்பி பத்தாயிரம் கிலோமீட்டர் ஓடுனாதானே ஆயில் மாத்தணும், இந்த வண்டி இன்னும் ஆறாயிரம் கிலோமீட்டர் கூட ஓடல அதான் மாத்தல தம்பி..”



“என்னண்ணே நீங்க..! ஆயில் ஆறு மாதத்துக்குள்ள அதோட பிசுபிசுப்பு(viscosity) தன்மையை இழந்து கெட்டு போய்டும், பத்தாயிரம் கிலோமீட்டர் ஓடுதோ இல்லையா? ஆறு மாதத்துக்கு ஒருக்க ஆயில் மாத்தணும் இல்ல வருசத்துக்கு ரெண்டு சர்விஸ பண்ணிவிட்டா இந்த மாதிரி பிரச்னை எல்லாம் வராமல் வண்டி நல்லா ஓடும். இப்போ பாருங்க டர்போ(turbo)போய்டுச்சு, இதை மாத்தணும்னா நாற்பதாயிரம் செலவாகும்.. என்ன பண்ணலாம்?” என்க.




“மதுரை வரைக்கும் போகணும், வண்டி அவசியம் தேவை. இப்போ இந்தப் பணத்தை வச்சு பாருங்க மீதியை வேலை முடிஞ்சு வண்டி எடுக்கும்போது கொடுக்குறேன்” என்றவர் அவன் கையில் பணத்தைக் கொடுத்தார்.



“நல்ல வண்டி எது வந்தாலும் சொல்லுங்க தம்பி.. இதை தள்ளி விட்டுட்டு அதை முடிச்சிடலாம்” என்றார் அந்தக் கஸ்டமர்.



“ம்ம்.. சரிண்ணே அப்படி வந்துச்சுன்னா உங்களுக்குச் சொல்றேன்” என்றவன் தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.



அந்தச் சமயத்தில்.. தனது தோழி சங்கரியுடன் வந்து இறங்கினாள் வேத வள்ளி.



‘அரசு ஆட்டோமொபைல்ஸ்’ என்ற பெயர் பலகையை நிமிர்ந்து பார்த்தவள், ‘நாட்டுக்கே பெரிய அரசன், பேர பாரு அரசு என்னைக் கொஞ்சம் உரசுன்னு’ என்று மனதிற்குள் அவன் பெயரை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள்.



“பரவாயில்லடி உன் வீட்டுக்காரர் பெரிய மெக்கானிக் செட்டாதான் வச்சிருக்காரு” சங்கரி அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்துக் கொண்டே சொல்ல..



அவள் விலாவில் தன் கை கொண்டு இடித்தவள்.. “இனி ஒரு தடவை வீட்டுக்காரன் அப்படி இப்படின்னு ஏதாவது உளறுனே வாயை தச்சு விட்ருவேன் பார்த்துக்கோ” அவளுக்கு மட்டுமே கேட்கும் குரலில் அழுத்தமாகக் கூறினாள்.


“ஆமா, உண்மையை சொன்னா அப்படியே வரிஞ்சு கட்டிக்கிட்டு வந்துடுவா” என்று முமுணுத்தவள் அவள் பின்னால் செல்ல முயல..



“ஏய்..! நீ இங்கையே இரு, நான் பேசிட்டு வரேன்” சங்கரியை அங்கையே நிற்க வைத்து விட்டுச் சென்றாள்.



அந்தச் சமயத்தில் வியர்த்து விறுவிறுக்க ஒரு இன்ஜின் வேலையை முடித்துவிட்டு தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தவன், வேதாவைக் கண்டதும்.. ‘இவ எதுக்கு இங்க வரா..?’ யோசனையோடு பார்த்துக் கொண்டிருந்தான்.



அவன் அருகில் சென்றதும்.. “உங்கக்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றவள், அவன் உடல் முழுதும் கருப்பு மை படிந்து, ஆயில் வாடை வீசவே.. அது அவளுக்கு ஒத்துக் கொள்ளாமல் ஒரு மாதிரியாக இருக்க கொஞ்சம் தள்ளி நின்றுக் கொண்டாள்.



அவள் செய்கைகள் அனைத்தையும் அவதானித்தவன் “ம்ம்.. பேசு.. பேசறதுக்கு உனக்கு சொல்லியா கொடுக்கணும் அதற்காகவே படைக்கபட்டவளாச்சே, என்ன விஷயம் சொல்லு..?”


“இந்தக் கிண்டல் எல்லாம் என்கிட்ட வேண்டாம். குமரன் மாமாகிட்ட சொல்லி இந்தக் கல்யாணப் பேச்சை நிறுத்த சொல்லுங்க” என்றாள் அவன் கண்ணோடு கண் பார்த்து.




“நான் எல்லாம் சொல்லி பார்த்தாச்சு அவன் கேட்குற மாதிரி தெரியல.. என்னால எதுவும் பண்ண முடியாது, நீ உங்க வீட்ல சொல்லி இதை தடுக்கப்பாரு” என்றான்.



“நானும் சொல்லிப் பார்த்துட்டேன் எதுவும் வேலைக்கு ஆகல, நீங்க பிடிவாதமா குமரன் மாமாகிட்ட சொன்னா கண்டிப்பா அவர் நிறுத்திடுவாரு”



“என் கல்யாணத்தில் என் அண்ணன் எடுக்கிற முடிவுதான் எல்லாமே.. என்கிட்ட பேசி ஒரு பிரயோஜனமும் இல்லை. எது பேசுறதா இருந்தாலும் அவன்கிட்ட பேசிக்கோ” என்று கூற..




“கல்யாணம் பேசிருக்கறது உனக்கும், எனக்கும் அவர்கிட்ட பேச வேண்டிய அவசியம் எனக்கில்லை. சத்தியமா உன்னை எனக்குப் பிடிக்கல, உன் வேலை பிடிக்கல, உன்னைப் பார்த்தா எரிச்சலாதான் வருது. நாம கல்யாணம் பண்ணிக்கிட்டா கூட எந்த ஃபீலிங்கும் உன் மேல் எனக்கு வராது” என்றாள் உணர்ச்சியற்றக் குரலில்.



அவள் பேச்சைக் கேட்டு வெறித்துப் பார்த்தவன், “உன்னைக் கட்டிக்கணும்னு நான் ஒன்னும் அலையல. இப்பவும் சொல்றேன் என் அண்ணன் எடுக்கிற முடிவு தான், என்னால் எதுவும் செய்ய முடியாது. உன்னால் முடிஞ்சா இந்தக் கல்யாணத்தை நிறுத்து நான் தப்பிப்பேன். அப்படி முடியாமல் கல்யாணம் நடந்தால் இப்போ பேசுனியே பேச்சு அதுக்கெல்லாம் சேர்த்து அனுபவிப்பே” என்றான் கடுமையான முகத்தோடு.



“மஹா அக்கா..” என்று ஆரம்பிக்க..



“வேதா..!” என்று அழுத்தமானக் குரலில் அவள் பின்னாலிருந்து அழைத்தான் குமரன்.



குமரன் குரல் கேட்டதும் அவனைத் திரும்பிப் பார்க்க.. அவளை அர்த்தம் பொதிந்தப் பார்வையுடன் முறைத்துக் கொண்டிருந்தான்.



‘மாமா ஏன் மஹாக்கா பேச்சை ஆரம்பிச்சதும் இப்படி கத்துறாரு, அப்போ இவர் மஹாக்காவை வச்சு வீட்டில் உள்ளவர்களை மிரட்டுனது இவனுக்குத் தெரியாதோ..? ச்சே கொஞ்சம் லேட்டா இவர் வந்திருந்தா அந்த விஷயத்தைச் சொல்லிருப்பேன். இவனும் குமரன் மாமாகிட்ட மஹாக்காவுக்காகச் சண்டைப் போட்டு கல்யாணத்தை நிறுத்திருப்பான்' என்று எண்ணிக் கொண்டிருந்தாள்



“வாடா குமரா..! வந்த வேலை முடிஞ்சதா..?”


“எல்லாம் முடிஞ்சது ஒரு வேலை பாக்கி இருக்கு” வேதாவைப் பார்த்துக் கொண்டே சொன்னான் குமரன்.


“என்ன வேதா.. இந்தப் பக்கம் வந்துருக்கே..?”



“ஒண்ணுமில்ல மாமா சும்மா தான் வந்தேன்” என்றாள் தயக்கத்துடன்.



“ம்ம்.. உனக்கு யாரை பார்க்கணும்னாலும் வீட்ல வந்து பார்க்க வேண்டியதுதானே.. இங்க எல்லாம் எதுக்கு வர..? கல்யாணப் பொண்ணு இப்படி அலையாமே வீட்ல இரு” என்றவன் பேச்சில் அவன் நினைத்ததைச் செய்து முடிப்பான் என்று உறுதித் தன்மை புரியவே..

“சரி மாமா” என்று சொல்லிவிட்டு சங்கரியை அழைத்துக்கொண்டு வெளியேறினாள்.



“டேய் குமரா..! இந்தக் கல்யாணத்துல நீ ஏன் இவ்வளவு பிடிவாதமா இருக்கேன்னு எனக்குத் தெரியல. கடைசியா சொல்றேன் அவ எனக்கு வேண்டாம்டா.. வேற பொண்ணைப் பாரு” என்றான் அரசு.



“நான் சொன்னது சொன்னதுதான்.. எதைப் பத்தியும் யோசிக்காமல் கல்யாண மாப்பிள்ளையா லட்சணமா இரு” என்று சொல்லிவிட்டு அவனும் சென்றுவிட்டான்.



“டேய் அரசு பழைய மாதிரி இருந்திருக்குக்கலாம் டா.. வாழ்க்கை ரொம்ப சந்தோசமா போச்சு, எப்போ பொறுப்பா இருக்க ஆரம்பிச்சேனோ அப்போதிலிருந்தே நிம்மதி, சந்தோசம் எல்லாம் போய்டுச்சு” என்று சொல்லிக் கொண்டவன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.
 
Status
Not open for further replies.
Top