Mirshi
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் -09
“போகும்போதே எந்த கிருக்குதனமும் பண்ணிடாதனு எச்சரிச்சிட்டு தான போனேன்.. ஆனா இந்த ஆத்தா என் பேச்சையே கேட்க கூடாதுனு கங்கணம் கட்டிட்டு சுத்துது.. வயசானாலே புத்தி எல்லாம் மழுங்கிடும் போல..” நாலு எட்டு வைப்பதற்குள் எண்ண அலைகள் நாலாப் பக்கமும் சிதறி ஓடியது..
“அந்த புள்ளைக்கு என்ன தலையெழுத்தா? இப்படி ஒருத்தனை இரண்டாவதா கல்யாணம் கட்டிக்கிட்டு அனுபவிக்கனும்னு.. இந்த ஆத்தாளோட மூக்கருக்குற பேச்சால எப்படி எல்லாம் பயந்து போச்சோ.. பாவம் சின்ன பொண்ணு வேற..” என புலம்பிக்கொண்டு பின் பக்கத்தில் இருந்த அடுப்பங்கரையை நோக்கி தன் வேக எட்டுக்களை போட்டான்..
அவர்களுடையது மழை பெய்தால் உள்ளிருப்பவர்களுக்கு எந்த சேதாரமும் விளைவிக்காத சாதாரண ஓட்டு வீடு தான். உள்ளே இரண்டு அறையும் கூடவே ஒரு அடுப்பங்கரையும் மட்டுமே.
அதில் ஒன்றை சுந்தரம் – லட்சுமி மற்றும் குழந்தைகள் எடுத்துக்கொள்ள, அதை ஒட்டியுள்ள வரவேற்பு அறையில் வள்ளியம்மை உறங்குவார். அதுவும் சமீப காலமாக தான். வரவேற்பரையும் படுக்கையறையும் இருக்கும் அதே நீள வாக்கில், அதற்கு சமமாக வாசலுடன் ஒட்டிய ஒரு ஒடுங்கிய நீண்ட அறையுண்டு. அங்கு தான் உமையாள் இருந்தவரை வள்ளியம்மை உறங்கினார். அன்று மாட்டும் அங்கு சென்று இளைப்பாறாமல், முற்றத்திலேயே உட்கார்ந்து, உமையாளுடன் உரையாடியிருந்தால் அத்தகைய இழப்பு நேர்ந்திருக்காதோ என அவருக்குள்ளும் இருந்த ஈர மனம் எட்டி பார்த்ததில் இப்போது அந்த அறையை பயன்படுத்துவதை வெகுவாக குறைத்துக்கொண்டார்.
அந்த அறை தான் அடுப்பங்கரைக்கும் வீட்டிற்கும் உள்ள முக்கியமான பாலம்.
இன்னொரு வழி வெளி வாசலில் இருந்து சமயர்கட்டுக்கு செல்வது. ஆக மொத்தத்தில் அந்த வீட்டின் அடுப்பங்கரையால் தனித்து ஒரு அறை போல் தன்னிச்சையாக செயல்பட முடியும். பெரும்பாலும் இருட்டி விட்டால் சாப்பிட்டு முடித்த கையோடு அந்த கதவை உள்பக்கமாக அடைத்து விடுவார்கள்..
தாயிடம் சமரசம் பேசி உள்ளே அனுப்பி விட்டு, நேராக அவருடனேயே செல்லாமல் சிறிது நேர யோசனைக்கு பின் அடுப்பங்கரை வழியாக வீட்டிற்குள் செல்ல முயன்றான்.. ஆனால் வீட்டிற்குள் செல்லும் வழி உள்ளிருந்து பூட்டப் பட்டிருக்க, சமயலறையின் கதவு தாழ்ப்பாள் போடாமல் காற்றில் ஆடிக்கொண்டிருந்தது.. அதில் லட்சுமி அங்குதான் இருக்கிறாள் என யூகமாய் கதவில் கை வைக்க, தள்ள வேண்டிய அவசியமே இன்றி கதவு தானாக திறந்து கொண்டது.. வெளிச்சம் எதுவும் இல்லாமல் கும்மிருட்டாக காட்சியளிக்க அதை பழகிக்கொண்டு உருவம் தெரிந்த இடத்தில் பார்வையை செலுத்தினான் சுந்தரம்..
அதேநேரம் லட்சுமியும் வாசலை தான் பார்த்து நின்றிருந்தாள்.. இருட்டிலும் அது தெளிவாகவே அவன் கண்களுக்கு தெரிந்தது.
“ஏய் லட்சுமி.. என்ன இது விளக்கு போடாம இருட்டுல நின்னுக்கிட்டு இருக்க?” என்றவர் சுவரில் தேடிப்பிடித்து ஸ்விட்ச் போட,
அங்கு தலையில் இருந்து கால் வரை நனைந்து போய், உடல் வெடவெடக்க கைகள் இரண்டையும் பின்னிருந்த திண்டை பற்றிக்கொண்டு சிவப்பேரிய கண்களுடன் நின்றிருந்தாள் லட்சுமி.
“என்ன இவ.. இப்போ போய் குளிச்சிட்டு வந்திருக்கா” என மனதில் எண்ணம் ஓட, அவளை நோக்கி முன்னேறி வந்தவனுக்கு அப்போதுதான் மண்ணெண்ணெய் வாசம் நாசியை நிரப்ப, அவளை இன்னும் கூர்ந்து கவனித்தவன் கண்களில் ஒற்றைக் கைக்குள் மடக்கி வைத்திருந்த தீப்பெட்டி தென்பட அது உணர்த்திய செய்தியில் மொத்தமாக அதிர்ந்து நின்றுவிட்டார்.
வெளியே சென்று வீடு திரும்பும் ஆணிடம் வீட்டு பெண்களே இத்தகைய நாடகத்தை அரங்கேற்றினால் பாவம் அவர்களும் தான் என்ன செய்வார்கள்..!!
அவள் தற்கொலை செய்ய முடிவெடுத்து விட்டாளா? நம்ப முடியாமல் திகைப்பில் இருந்தது இரண்டு நொடிகள் தான்..
“ஏய்… ஏய்… லட்சுமி! என்ன மா இது.. ஏன் இப்படி இருக்க? மண்ணெண்ணெய உடம்பு முழுசுக்கும் ஊத்திக்கிட்டு இது என்ன விளையாட்டு?” என சற்றே குரலை உயர்த்தி அதட்டலுடன் அவளை நெருங்கி வர முயல,
“அங்கேயே நில்லுங்க! பக்கத்துல ஒரு அடி எடுத்து வச்சாலும் என்னை நானே பொசுக்கிடுவேன்” என்றாள் குரல் உடைந்து போய்..
முதல் வாக்கியத்திலேயே அவனுக்கு வலிக்க செய்த பெண்ணை அதிர்ச்சியாக பார்த்தான் சுந்தரம்.
“என்ன லட்சுமி? என்ன வார்த்தை இது? உன் கோவம் எனக்கு புரியுது.. ஆத்தா உன் மனசு நோகும் படி எதையோ சொல்லியிருக்கு.. வயசானலே பெரியவங்களுக்கு புத்தி மழுங்கிடும்னு உனக்கு தெரியாதா? என்மேல இருக்குற அக்கறையில எதையாவது உளறியிருக்கும்.. ஆனாலும் அது என்ன சொல்லியிருந்தாலும் நா உன் காலுல விழுந்து மன்னிப்பு கேட்கிறேன்.. எதையும் மனசுல வச்சிக்காத மா..” என்றார் அவளை சமாதானப்படுத்தும் முனைப்போடு..
தாயின் வார்த்தைகள் அவளை தாக்கியிருக்கும் என்பதை அறிவார்.. ஆனால் தற்கொலை செய்யும் அளவுக்கு தூண்டியிருக்கிறது என்றால் அவர் என்ன பேசியிருப்பாரோ என இப்போது பயம் அப்பிக்கொண்டது..
“எதுவா இருந்தாலும் என்கூட வா.. அவங்கள கூப்பிட்டு வச்சு பேசி நான் தீர்த்து வைக்கிறேன்.. எதுக்குமே தற்கொலை ஒரு தீர்வே கிடையாது லட்சுமி.. புரிஞ்சிக்கோ.. கையில இருக்கிறத தூர போடு மா.. நீ தான் வாழ்க்கையில எனக்கும் பிள்ளைங்களுக்கும் இப்போ இருக்க ஒரே பிடிப்பு..” மறைமுகமாக தன் விருப்பத்தை சொல்லி அவளிடம் கெஞ்சியவரை கண்டும் அவள் உள்ளம் அடங்க மறுத்ததோ?
அடுத்த அம்பில் தனக்கு வேண்டியது கிடைக்க, தேர்ந்தெடுத்த சொற்களை சரியாக தடவி அவன் மார்பில் குறிப்பார்த்து எய்தினால்..
“இல்ல.. அத்த சொன்ன மாதிரி நா எதுக்குமே உதவாதவ.. வெறும் அன்றாடங்காய்ச்சி.. உங்க முத பொண்டாட்டி மாதிரி நா கைநிறைய சொத்தும் கொண்டு வரல.. சொல்லிக்குற அளவுக்கு பணக்கார சொந்தங்களும் எனக்கில்ல.. என்னால உங்களுக்கு எப்போதுமே அவமானம் மட்டும் தான்.. இந்த அவமானம் உங்களுக்கு வேண்டாம்” என அப்படியே உட்கார்ந்து கதறி அழ, சுந்தரம் முகம் சிவக்க கைமுஷ்டி இறுக அவளை நெருங்காமல் நின்று விட்டார்..
“புகுந்த வீட்டிற்க்கு வாழ வந்த பெண்ணை அன்றாடன்காய்ச்சி என்பதா..! அது அவளுக்கு எத்தகைய இழுக்கு.. அதை கூட உணர முடியாத பெண் உண்டா..? பெண்ணுக்கு பெண்ணே எதிரிங்குறது உண்மைதானோ? கை நிறைய பணமோ நகையோ கொண்டு வந்தா தான் வீட்டுக்கு உதவுறவளா..! மகராசியா..! அப்போ ஒன்னத்தையும் கொண்டு வரலனா உதவாதவளா..! அன்றாடங்காய்ச்சியா! இதுல அந்த பொண்ணோட மனசையோ ஒழுக்கத்தையோ பார்க்கவே மாட்டாங்களா? ச்சீ.. என் ஆத்தா இவ்ளோ கீழ்தரமா பேசுமா.. அப்போ கேவலம் இந்த சொத்துக்காகவா உமையாள் மேல பாசமா இருந்துச்சு..?” என ஆயிரம் எண்ணங்கள் ஓட அதை கலைத்தது அடுத்து அவள் சொன்ன வார்த்தைகள்..
“இதுல என் அக்காங்க கூடயெல்லாம் உங்கள சேர்த்து வச்சு வாய் கூசாம பேசிட்டாங்களே அத்த.. நா தான் அடுத்த வீட்டு பிள்ள.. என்ன பிடிக்கல.. இருந்துட்டு போட்டும்.. ஆனா உங்கள சொல்ல எப்படி அவங்களுக்கு மனசு வந்தது.. அதையெல்லாம் இந்த காதால கேட்குற அளவுக்கு துர்பாக்கியவதியா ஆகி போனேனேங்க.. உங்க நல்ல மனச புரிஞ்சிக்காம இவங்களே இப்படி பேசினா ஊர் வாய் என்னவெல்லாம் சொல்லுயிருக்குமோ.. உங்களுக்கு இந்த அவமானம் எல்லாம் என்னால தானே..?” என தலையில் அடித்துக்கொண்டு கதறி அவன் நெஞ்சில் மெது மெதுவாக ஈட்டியை பாய்த்துக் கொண்டிருந்தாள்..
அவருக்கு தாயின் இந்த தகாத பேச்சுக்கள் முற்றிலும் புதிது.. அதற்கு ஒரே காரணம் உமையாளின் பொறுத்து போன குணம்… மாமியாரை பற்றி புகார் சொல்ல தெரியாத அந்த அப்பாவி பெண்ணினால் இதுவரை தப்பித்து வந்த வள்ளியம்மை இன்று சொல்லாத வார்த்தைகளுக்காக மாட்டிக்கொள்ள.. இதுதான் செய்த கர்மத்தின் பலனோ..!
அவளை அவமானப்படுத்தி குற்றுயிரும் குலையுயிருமாய் ஆக்கிய வேளையிலும் தனக்காக வருந்துகிறாளா என மலைப்பாக இருந்தது..
பற்கள் நறநறக்க, “ஏன் ஆத்தா இப்படி செஞ்ச.. என் வாழ்க்கையில இருந்து எல்லாரையும் துரத்தி விடுறியே.. உன்ன நம்பி ஒருத்தங்களையும் விட்டுட்டு போக முடியலயே..” என மனதிற்குள் குமுறியவன் முதன் முறையாக தாயின் மீது உட்ச பட்ச வெறுப்பில் உழன்றான்..
லட்சுமியின் கண்ணீருக்கு தான் எத்தனை மதிப்பு..! அவளின் ஒற்றை கதறலுக்காக இத்தனை வருடங்களில் தன்னை ஈன்றவள் தனக்காக செய்த அனைத்து நல்ல காரியங்களும் கூட கருத்தை விட்டு அகன்று விட, பூத கண்ணாடிக் கொண்டு ஆராய்ந்ததில் அவன் தாயே இப்போது தவறாக பட்டார்.
அதீத அன்பும் அதீத வெறுப்பும் உருவாக ஒரு செயல் ஒரு நொடி போதுமே..!
ஆனால் இப்போது அவருக்கு அதுவல்ல முக்கியம்… கண் முன் கதறுபவளின் கண்ணீரை எப்படியாவது களைத்தெரிய வேண்டும்..
“அப்படி எதுவும் இல்ல லட்சுமி.. நீ வாழ வந்தது என்கூட.. என் அம்மாக்கூட இல்ல.. நா உன்னை அந்த மாதிரி எல்லாம் நினைக்கவே இல்ல.. நினைக்கவும் மாட்டேன்.. உன்ன கல்யாணம் செஞ்சு நாள்ல இருந்து ஊருல எல்லாரும் என்ன பேசிக்குறாங்க தெரியுமா? சுந்தரம் ரொம்ப குடுத்துவச்சவனு சொல்றாங்க.. அதுல எனக்கு எவ்ளோ பெருமைனு உனக்கு நா எப்படி புரியவைப்பேன்..” என சொல்ல தெரியாமல் தவித்தவர், “உண்மைய சொல்லனும்னா உனக்கு நா தான் எந்த விதத்துலயும் பொருத்தமே இல்ல..” குரல் உடைய அவளருகில் அமர்ந்து இயலாமையில் விம்மினார்..
அதுவரை கதறியவள் அழுகையை நிறுத்தி அவரை நிமிர்ந்து பார்த்தாள்..
“இப்போவாவது உனக்கு புரிஞ்சிதே..” அருவருப்பில் முகம் சுருங்கியது.. ஆனால் சடுதியில் மாற்றிக் கொண்டு அவரை நெருங்கியவள் கன்னம் தொட்டு தன்னை பார்க்க வைத்தாள்.
“அய்யோ என்னங்க இப்படி சொல்லிட்டீங்க? உங்க மனசுல இப்படி ஒரு தாழ்வு மனப்பான்மை வரலாமா! அதுவும் என்னால? நீங்க என்னோட தெய்வங்க.. அழகான ரெண்டு தேவதைகளுக்கு அம்மாவா உங்களுக்கு மனைவியா அமைஞ்சது எல்லாமே என்னோட பாக்கியம்..” அலைபாய்ந்த அவன் கண்களுக்குள் பார்த்து சொன்னவள்,
“நா ஒன்னு சொல்றேன்னு கோவப்படாதீங்க.. இந்த எண்ணமே தப்பு தான்.. இருந்தாலும் சொல்றேன்..” என்று ஆரம்பித்து
“அக்கா எனக்காகவே உங்களை விட்டுட்டு போயிருக்காங்கனு எத்தனையோ முறை அந்த புண்ணியவதிக்கு மனசார நன்றி சொல்லிருக்கேன் தெரியுமா.. எனக்கு உங்கள அவ்ளோ புடிக்கும்…” என்றாள் வியப்புடன் தன்னை நோக்கியவனிடம்..
“உங்களுக்கு என்ன புடிக்குமாங்க..?” பொட்டில் அடித்தாற்போல் அவன் பார்வையே பதில் கூறுகிறது.. இருந்தும் கொக்கி போட்டாள்.
இதை சொல்ல தானே தனக்கு தகுதி இல்லை என இத்தனை நாட்களாக மனதிற்குள் புளுங்கிக் கொண்டிருந்தான்..
மனைவியே மனம் திறந்து கேட்கையில் அவனுக்கு என்ன தடை? மனதில் இருந்த பாரம் முழுதாக விலகி ஓடிய உணர்வு.. அதற்கு மேலும் கட்டுபடுத்தமுடியாமல் அவளை வேகமாக இழுத்து அணைத்தவனை 'ஆடே வந்து சிக்கிடுச்சு…இனி பொலி போட்டுட வேண்டியதுதான்' என்னும் ரீதியில் அணைத்தவள்,
“பதில் சொல்லுங்க…” என சிணுங்கினாள்..
“என்னோட கைக்குள்ள சிறைப்பட்டு போய் இருக்க… இதுலயே உனக்கு புரியவேண்டாமா லட்சுமி..” என்றான் குரல் கரகரக்க..
“அப்போ உங்களுக்கு என்ன பிடிக்கும் தானே..! எவ்ளோ பிடிக்கும்னு சொல்றீங்களா..?” அவன் தோளில் வாகாக சாய்ந்துகொண்டு உணர்ச்சிகளை தூண்டும் விதமாக நெஞ்சில் கோலமிட்டவளை பார்த்து கிறங்கியவன்,
“சொல்றது என்ன சொல்றது… என்னோட செயல்ல நீயே தெரிஞ்சுக்கோ..!” என்று தன் செயல்களால் லட்சுமியை வேறு உலகத்திற்கு கடத்தி செல்ல, அங்கே சுந்தரத்தின் அறீவீனத்தாலும் லட்சுமியின் சாதூறியத்தாலும் இயல்பாக, இயற்கையாக நடக்க வேண்டிய தாம்பத்தியம் தனி ஒருத்தியின் சூழ்ச்சியால் சத்தமில்லாமல் ஈடேரியது..
---------------------
அடுத்து வந்த நாட்களில் தன் சொல் எடுபடாமல் போனதில், லட்சுமியை விரட்டாமல் அவளுடன் அன்னியோன்யமாக இருந்ததில் வள்ளியம்மைக்கு நன்றாகவே புரிந்தது இது வந்தவளின் கைங்கர்யம் என்று..
அதிலும் மகன் தன்னிடம் நேராக வந்து “எங்களை விட்டு ஒதுங்கியே இரு” என்று எச்சரித்துவிட்டு சென்றது நெருஞ்சி முள்ளாய் பெற்றவளை குத்தியது..
மகனை தன்னிடம் இருந்து பிரித்துவிட்டாள் என சதா உர்ரென எதையாவது வாய்க்குள்ளாகவே முணுமுணுத்து கொண்டு வீட்டை சுற்றி வசைபாடினார்.. அவரால் அதை மட்டுமே செய்ய முடிந்தது..
இதை பார்த்த லட்சுமிக்கு சொல்லவும் வேண்டுமா? அவள் காட்டில் அடைமழை வெளுத்து வாங்கியது.. தன் திட்டம் ஒவ்வொன்றாக ஈடேறும் மகிழ்ச்சி முகத்தில் அப்பட்டமாக தெரிய வீட்டில் வளைய வந்தாள்..
இப்போதெல்லாம் கணவன் இவளிடம் காசை கொடுத்து செல்கிறான்.. தேவைக்கும் அதிகமாகவே கையில் பணபுழக்கம் இருந்தது.. விளைவு, வேண்டிய நேரங்களில் கணவனுக்கு தெரிந்தும் தெரியாமலும் சகோதரிகளுக்கு உதவி தன் செல்வ நிலையை பெருமையுடன் பறைசாற்றினாள்..
'அம்மா அம்மா' என கால்லை சுற்றும் குழந்தைகள் ஒரு பக்கம்.. முந்தானையை பிடித்துக் கொண்டு பூனைக்குட்டி போல் பின்னாடியே ஓடிவரும் கணவன் மறுபக்கம் என இருந்தவள் கிடைக்கும் நேரங்களில் மாமியாரை வார்த்தைகளால் பொசுக்கவும் தவறவில்லை.. மொத்தத்தில் ஒரே ராத்திரியில் அந்த வீட்டின் மகராணியாகி போனாள் லட்சுமி..
இப்படியே மாதங்கள் உருண்டோட, உமையாளின் முதல் வருட நினைவு நாளன்று லட்சுமி கருவுற்ற செய்தி எல்லோர் காதிற்கும் வந்து சேர்ந்தது..
பதினைந்து வருடங்களுக்கு பிறகு……
அன்புடன்,
மிர்ஷி
கருத்துக்கள் இங்கே,
மிர்ஷியின் 'நிலாபெண் ஈன்ற நிலவொளியே!' - கருத்து திரி
வள்ளியம்மை உமையாளுக்கு செய்த கொடுமைகளை இந்த புது மருமகளிடம் திரும்ப பெருவார் என்று தெரிகிறது சகோ 😊😊😊😊😊😊😊 சரியா சொன்னீங்க sis 😍
www.srikalatamilnovel.com