All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மகிழினி ராஜனின் ‘நீயாகி போகிறேன் நான்’ - கதைத் திரி

Status
Not open for further replies.

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீயாகி போகிறேன் நான்

நீயா நானா 1

அழகாக புலர்ந்தது அந்த நாள். அவன் மீது அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும் புது மலராய் அவள். உறங்கும் போது குழந்தையாய் தெரிந்தாள்.

நேற்று இரவு அந்த குழந்தை அவனது மார்பில் ஏற்படுத்திய சிறு ரணங்களை பார்த்து "ராட்சசி" என்று முணுமுணுத்தது அவனது இதழ்கள் ஆனால் அவனது மனம் அதையும் ரசிக்கத்தான் செய்தது.

ஆறு மாதங்களுக்கு முன் இப்படி நடக்கும் என்று யாராவது சொல்லியிருந்தால் அவர்களை பார்த்து கைகொட்டி சிரித்து இருப்பான். ஆனால் இன்று எல்லாம் தலைகீழாக மாறியது. ஒரு இரவில் அத்தனையும் மாற்றி விட்டாள் அவனது தேவதை.

இரவில் அவளின் வெட்கம் அவளின் கண்களில் தெரிந்த காதல் எப்படியாவது அவன் முகத்தில் புன்னகை வரவைக்க அவள் தன்னையே தந்தது, இரவு முழுவதும் அவனை சிறு நொடி நேரம் பிரியாமல் அவன் கை அணைவில் இருந்தது. இதில் காமம் மட்டுமில்லாமல் அதையும் தாண்டி அதீத காதல், நம்பிக்கை.

இந்த நாள் விடியாமல் நேற்று இரவு மட்டும் நீண்டு இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும், தனது சிறு பிள்ளை போன்ற எண்ணத்தை நினைத்து அவனுக்கு சிரிப்பு வந்தது. முகத்தில் புன்னகை வந்தமர்ந்தது.

“நமக்குள் இருக்கும் இந்த இணக்கம் நம் வாழ் நாள் முழுவதும் வேண்டுமடி. நீ இல்லாமல் நான் இல்லை என்று ஊரும் உலகமும் புரிந்துக் கொள்ள செய்கிறேன். உனக்காக மட்டுமே நம் வாழ்க்கை, அதை நாம் அனுபவித்து வாழ வேண்டும்” என்று அவள் காதில் ரகசியமாக கூறி நெற்றியில் முத்தம் வைத்து அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

ஆனால் நிதர்சனத்தை எதிர் கொள்ளத்தான் வேண்டும்.

“ராஜா!!! உன்னால முடிந்த முயற்சியை நீ செய்ய வேண்டும்... வெற்றி, தோல்வி பற்றி கவலை கொள்ள வேண்டாம்... வெற்றி என்றால் நீ சரியான பாதையில் பயணித்து இருக்கிறாய்!!! தோல்வி என்றால் உன் பாதையை மாற்றி அமை.
என்றுமே தோல்வி ஒரு முடிவல்ல அது அடுத்த நிலை, உனக்கு சரி என்று தோன்றினால் மட்டும் அதை செய் மற்றவர்களுக்காக உன் விருப்பத்தை மாற்ற கூடாது” அன்னையின் வார்த்தைகள் செவியில் கேட்டது.

அவரால் கூட இருக்க இயலாது என்றுதான் அனைத்தையும் சிறுவயதிலேயே கற்றுக் கொடுத்து விட்டு சென்று விட்டாரோ என்று நினைப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை...

இந்த நாளின் முடிவு ஏற்கனவே தெரிந்த ஒன்று. ஆயிரம் சொன்னாலும் மனதில் சிறிய வலி இருக்க தான் செய்கிறது. அமைதியாக எழுந்து குளித்து விட்டு கிளம்பினான்.

பின் உறங்கிக் கொண்டிருந்தவளை பார்த்து, 'இரவு ரொம்ப படுத்தினேன் போல' என்று எண்ணி அவள் முன் நெற்றியில் சிறு முத்தம் வைத்தவன், அவளுக்கு உடை அணிந்து அவளை கையில் ஏந்தி அவன் வண்டியில் ஏற்றி அவளின் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

விடியற்காலை என்பதால் ஊரில் யாரும் எழவில்லை. அவளும் தான் நீண்ட நாட்களுக்கு பின் உறங்கியவளை படுக்கையில் கிடத்தியவன், “கும்பகர்ணி எழும்பு டி” என்று காதில் ரகசியமாக கிசுகிசுக்க, ”இன்னும் 5 நிமிஷம் மூன்” என்று திரும்பி படுத்தாள்.

அவளது செய்கை அனைத்தும் அவளை அள்ளி அணைக்க ஆசை வந்தாலும் இந்த நாளின் முக்கியத்துவம் உணர்ந்து விலகிச் சென்றான்.
அவளுக்கு காலை உணவு செய்து வைத்து மறுபடியும் பள்ளி எழுச்சி பாடி அவளை எழுப்பி அவள் எழும்பவில்லை...

“ஹே குல்கந்து!! ஹாட் பேக்ல இட்லி வச்சிருக்கேன். காலையில கண்டிப்பா சாப்பிடு உனக்கு ரொம்ப பிடிச்ச மாதிரி கார சட்னி வைச்சுருக்கேன். ஒழுங்கா சாப்பிடு நைட் போன் பண்றேன். விடிஞ்சிருச்சு டி, ஊர்ல யாராவது பாத்தா தப்பா போய்டும்... நேரத்துக்கு கோர்ட்டுக்கு போகணும்“ என்று அவள் நெற்றி,கண், கன்னம் என்று முத்தம் வைத்தவனை பிடித்து வன்மையாக அவன் இதழ் சுவைத்தாள்.

“குல்கந்து நேரம் ஆச்சுடி, நேத்து ரொம்ப நேரம் உன்ன ஒரு நொடி கூட பிரியல... அதனால இன்னிக்கு ரெஸ்ட் எடு டி, நாளைக்கு முடிஞ்சா பார்க்கலாம் டி” என்று கிளம்பும் போது அவன் கையை இழுத்தவள், “இன்னைக்கு கோர்ட்டுக்கு அந்த திமிர் எடுத்தவ, அதான் உன் பொண்டாட்டி வருவா இல்ல” என்ற அவளது கேள்வியில் ஒரு நொடி நின்று அவளை பார்த்து "ஆம்" என்று தலை அசைத்தான்.

“அவள ரொம்ப சைட் அடிக்காம கோர்ட்டுக்குப் போன வேலையை முடிச்சுட்டு சீக்கிரம் வாங்க” என்று அவள் சொன்னவுடன், “என் பொண்டாட்டியை சைட் அடிக்கிற உரிமையும், தைரியமும் எனக்கு மட்டும்தான் டி இருக்கு, ஒரு உண்மை சொல்லட்டா அவளோடு திமிருதான் அவளுக்கு அழகு” என்று கூறி விறுவிறுவென்று சென்று விட்டான்.

காலை 10 மணி நீதிமன்ற வளாகம் மிகவும் பரபரப்புடன் காணப்பட்டது. இன்று முக்கியமான ஒரு வழக்கு. வெளியில் செய்தியாளர்கள் அந்த தீர்ப்பிற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு செய்தியை விட இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் பற்றி எழுத வேண்டும்.

ராஜ தோரணையுடன் வந்திறங்கினான் அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கியமான இளம் வயது அந்தத் தொகுதி மக்களவை உறுப்பினர் அவன், இக்கதையின் கதாநாயகன் ஆதிநிலவன்.

அவனின் ஒரே பரம்பரை சொத்தை அரசு கையகப்படுத்த வழக்கு. கிட்டத்தட்ட தீர்ப்பு முடிவாகியுள்ளது, கண்டிப்பாக அரசாங்கத்திற்கு சாதகமாகத்தான் இருக்கும். ஆனால் தீர்ப்பின் முழுவிவரம் மதியம் அறிவிக்கப்படும் என ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அமைதியாக அமர்ந்திருந்தான் அவன்... என்ன நினைக்கிறான் என்று யாராலும் கணிக்க இயலவில்லை. அவனை சுற்றியே அவனது அனைத்து உறவினர்களும் மக்களும் நெருங்கி நின்றுக் கொண்டிருந்தார்கள்.

அனைவரும் அவனுக்கு உயிருக்குயிரான சொந்தங்கள். அவனின் சின்ன தாயான ஈஸ்வரிக்கு மட்டும் கண்ணீர் நிற்கவே இல்லை மனசு ஆறவில்லை.

அந்த வழக்கின் எதிர்த்தரப்பு அரசாங்கத்தின் பிரதிநிதியாக நின்றுக் கொண்டிருந்த அவளை கண்டவர் விறுவிறு என்று அவள் அருகில் சென்று நின்றவர்

அவளை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்தவர், “இன்னும் என்னம்மா வேண்டும் உனக்கு?” என்று கோபமாக ஆரம்பித்தார் ஈஸ்வரி. “நல்லவன் என்ற ஒரே காரணத்திற்காக அவனை இன்னும் என்ன பண்ண போற?” என்றவர்க்கு கண்ணீர் மட்டுமே நிற்காமல் வந்துக் கொண்டிருந்தது.

“நீ இப்ப அவனிடம் இருந்து பறிக்க நினைக்கிறது அவனுடைய உயிர் மா, உன்னால் இன்னும் என்ன என்ன அவன் அனுபவிக்க போறான்னு தெரியலை” என்று கூறியவர், “கடவுள் கிட்ட தினமும் சண்டை போட்டுக்கிட்டு இருக்கிறேன்... உன்னை என் கண்ணு கவனிக்காமல் இருந்திருந்தால் இன்று எங்க ஆதி ஒரு நல்ல வாழ்க்கை வாழ்ந்திருப்பான்” என்று அழுகையுடன் கூறிய ஈஸ்வரியை வெற்றுப் பார்வை பார்த்த அவள் எதுவும் பேசாமல் சென்று அருகில் இருந்த ஒரு கல் மேடையில் அமர்ந்தாள்.

அவள் விட்டுச் சென்ற இடத்தில் நின்று அழுதுக் கொண்டிருந்த ஈஸ்வரியை ஓடி வந்து தாங்கிக் கொண்டான் தமிழ் நிலவன்.

"ஈஸு இப்ப எதுக்கு இப்படி அழுகுறீங்க?" என்ற ஆதியை பார்த்தவர், "ராஜா நான்..." அதற்கு மேல் வார்த்தை வராமல் அவன் மார்பில் சாய்ந்துக் கொண்டார்.

அவரை மெதுவாக பிரித்தெடுத்த ஆதி, "என்னோட வாழ்க்கை பற்றிய கவலையை விடுங்கள், எனக்கான வாழ்க்கையை நான் முடிவு பண்ணி வாழவும் ஆரம்பித்து விட்டேன்" என்று கூறினான்.

இவனது வார்த்தைகளை கேட்டு ஒரு நொடி இரு இதயங்கள் துடித்து நின்றது.

மிகுந்த உவகையோடு நிமிர்ந்த‌ பார்த்த ஈஸ்வரியை கண்களின் மூலம் ஆம் என்று இமைக்க அவனை இறுக கட்டிக் கொண்டார் ஈஸ்வரி. அவருக்கு ஒரு புறம் மகிழ்ச்சி என்றால் மறுபுறம் சிறிய வலி மனதில் வந்தது உண்மைதான்.

சிற புன்னகையுடன் அவனை அழைத்து நடந்தவர் அவளை கடக்கும் போது அவரை அறியாமல் 'உனக்கு அமைந்த நல்ல வாழ்க்கையை நீயே கெடுத்துக் கொண்டாய்.' என்று தன் உயிர் தோழியின் மகளுக்காக ஊமையாய் கண்ணீர் சிந்தினார் பரமேஸ்வரி.

ஏனோ ஈஸ்வரிக்கு அவரை அறியாமல் அவரது மனம் அவளை பார்த்த நாள் நினைவுக்கு வந்தது.

“பளார்” என்ற சப்தம் கேட்டு அனைவரும் திரும்பி பார்த்தார்கள். ஈஸ்வரியும் பார்த்த போது கம்பீரமான அழகுடன் ஒருவன் கையை முறுக்கிக் கொண்டு இருந்தாள் நம் கதையின் நாயகி “அமிழ்தினி

"எவ்வளவு தைரியம் இருந்தா என் தம்பியை பற்றி தப்பா பேசுவ?” என்று மறுபடியும் அவனை அறைந்திருந்தாள். அமிழ்தினியின் தம்பி அவளை தடுத்துக்கொன்டிருந்தான்.

அவர்களின் அன்னை மீனாட்சி சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் விதுரனை இழுத்துக் கொண்டே இருந்தார். அப்போது “மீனு” என்று கூவியபடி ஓடி வந்து மீனாட்சியை அணைத்துக் கொண்டார் ஈஸ்வரி.

சற்று சுதாரித்த மீனாட்சி, “அடியே பரமூ!” என்று கூவி அணைத்த மீனாட்சி அமிழ்தினிடம், “ஏய்! தினி அவய்ங்கள விடு, இவ தான் நான் அடிக்கடி சொல்வேன்ல என் மச்சி அதான் பரமேஸ்வரி.” என்று அறிமுகப்படுத்த
அவர்களை பார்த்ததுக்கு அடையாளமாக தலையசைத்தாள்
அமிழ்தினி, அப்போது அவரது காலை பணிந்தது ஒரு கரம். "நல்லா இரு தம்பி" என்று அவனை உச்சி முகர்ந்தார், அப்படியே தன் தோழியின் ஜாடையில் இருந்தவனை பார்த்து, "கண்ணா" என்று வாரி அணைத்துக் கொண்டார் ஈஸ்வரி.

இது எதையும் கருத்தில் கொள்ளாமல் தன் முன் நின்றவனை பார்த்து, “ஊனம் உடம்புல இருந்தா பரவால்ல, ஆனா மனசுல இருக்க கூடாது” என்றவள் மூச்சு விட்டு, “நீ கிண்டல் பண்ண என் தம்பி ஊனமாக இருக்கலாம், ஆனா அவன் சொந்தமா நிறுவனங்கள் வச்சு நிர்வகிக்கிறான், உன்னை மாதிரி வரதட்சணை கொண்டு வர வைத்து சாப்பிடலாம்னு நினைக்கல. ச்சீ தூ போ” என்று கண்டித்தவள் அன்னையிடம் திரும்பி, “எல்லாம் உன்னால தான், நான் வீட்டிற்கு போறேன்” என்று கிளம்பி விட்டாள்.

ஈஸ்வரி அப்படியே பிரமித்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தார். அன்று பிரமிப்பாக தோன்றிய பிம்பம் இன்று அந்த சந்திப்பு நிகழாமல் இருந்திருக்கலாம் என்று தோன்றியது.
அமிழ்தினி எதையும் முகத்தில் காட்டாமல் இருக்க மிகவும் முயன்றுக் கொண்டிருந்தாள். அப்போது ‘க்கும்’ என்று ஓசை திரும்பாமலே தெரிந்தது யார் என்று.

“அப்புறம் மேடம்” என்ற ஆதியின் குரலில் பெரிய நக்கல் நிறைந்து இருந்தது, ‌தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தாள். “தனியா இருக்க போல கவர்மெண்ட் குவாட்டர்ஸ் ல” என்று விரிந்த புன்னகை புரிந்தவன், அவள் நிமிர்ந்து அவனை பார்க்க, “இன்னிக்கு எந்த மக்களுக்காக நீ இவ்வளவு போராடுறியோ அந்த மக்கள் எப்பவும் என்னோட பக்கம் தான்” என்றவன், “நீ இந்த வழக்கில் ஜெயிக்கலாம் ஆனா எல்லாத்தையும் மொத்தமா தோத்துட்டீங்களே மேடம்” என்று கண்ணடித்தவன் அவளது நிமிர்ந்த பார்வையை பார்த்தவன், “இந்த கண்ணுல தெரியுற இந்த கர்வம் தான் டி உன் அடையாளம்,இதை உடைக்கணும்னு ஒரு வெறி வருது மேடம்” என்றவன் அடுத்து ஏதோ சொல்ல போக “ராஜா” என்ற குரல் கேட்டு அமைதியானான்.

“சுத்திலும் நியூஸ் ரிப்போர்ட்டர்ஸ் வச்சிட்டு நீங்க இப்படி பேசுறது தப்பு ராஜா“ என்று அவனைக் கண்டிக்கும் ஒரே குரலுக்கு, “இல்ல சித்தப்பா...” என்று பேச வர அவனை கை நீட்டி தடுத்தவர், “பொதுவெளியில நம்மளோட நடத்தை ரொம்ப கவனம் இருக்கணும், போங்க நான் வரேன்" என்றவர் திரும்பி அமிழ்தினியை பார்த்தவர், “மன்னிச்சிடுங்கம்மா” என்று திரும்பியவர், “ரொம்ப நல்லவன் மா இப்ப இவ்வளவு அடம் பிடிக்கிறவனா மாறி போயிட்டான், உண்மையாவே என் பொண்டாட்டி சொன்ன மாதிரி உங்கள நாங்க பார்க்காமல் இருந்து இருக்கலாம், அட்லீஸ்ட் எங்க ராஜா நல்லவராக இருந்திருப்பார்” என்றவர் விறு விறுவென்று நடந்துச் சென்றார்.

அந்த வீட்டில் இவன் குணம் தெரிந்த ஓரே நபரும் இப்படி பேசியதில் சிறிய வருத்தம் இருந்தாலும் அதை தனது நிமிர்வின் மூலம் ஓரம் தள்ளியவள், “நான் இந்த மக்களுக்கு சரியானதை செய்தே தீருவேன் எவ்வளவு தடை வந்தாலும். இது என் கடமை. உன்னால் ஆனதை நீ பார்த்துக்கொள்” என்னும் செய்தியுடன் அவளது வழக்கமான நிமிர்வுடன் ஆதியின் கண்களை நேராகப் பார்த்தாள்.

“என்ன கண்ணு டா சாமி, அப்படியே சுண்டி இழுக்குது” என்று அவனது மனைவி அமிழ்தினியை வஞ்சனை இல்லாமல் சைட் அடித்தான் குல்கந்தின் ஆதிநிலவன்.
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீயாகி போகிறேன் நான்
32731
நீயா நானா 2.


நிலத்தை மக்களுக்கு தர ஆதி சார்பாக சில கோரிக்கைகள் வைக்கப்பட்டது, அதனை அரசு பரிசீலித்தது இன்னும் இரண்டு வாரங்களில் பதில் அளிப்பதாக அமிழ்தினி கோரிக்கை வைக்க அதனை ஏற்ற நீதிமன்றம், "ஆதியின் கோரிக்கைகள் நிறைவேற்றும் போது நிலம் அரசு உடைமை ஆக்கப்படும் என்றும், இல்லை என்றால் ஆதிக்கு சாதகமாக தான் தீர்ப்பு வழங்கப்படும்” என்று கூறி இரண்டு வாரங்களுக்கு வழக்கை ஒத்தி வைத்தது.


வழக்கு விசாரணை முடிந்து அமிழ்தினி வெளியே வர அங்கே கூடியிருந்த மக்கள் அவளை வெறுப்புடன் பார்த்தார்கள், அவளுக்கு எதிராக கோஷங்கள் கூட எழுப்பினார்கள்.


இதையெல்லாம் மதிக்காமல் அவளது வாகனத்தை நோக்கி நகர செய்தியாளர்கள் அவளை படை எடுத்தார்கள். செய்தியாளர்கள் அனைவரையும் ஓரமாக நிக்க வைத்தவள் அவர்களது ஒவ்வொரு கேள்விகளுக்கும் நிதானமாக பதில் அளித்தாள்.


இந்த செய்தி ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது . கடைசியாக ஒரு நிருபர், “நீங்க உங்க கணவர் மேல இருக்குற வன்மத்தை தீர்க்க தான் இந்த வழக்குன்னு ஒரு பேச்சு இருக்கே அது உண்மையா ?” என்று கேட்க, அந்த செய்தியாளரை உற்று பார்த்தாள் இது யாருடைய ஏற்பாடு என்று நன்றாக தெரிந்தது.


அந்த நிருபரை பார்த்து மெலிதாக புன்னைத்தவள், “நான் இந்த தொகுதி மக்களுக்கு எது நல்லதோ அதை மட்டுமே நினைக்கிறேன் அதற்காக தான் போராடுகிறேன். அதை தவிர வேறு எந்த உள்நோக்கம் இல்ல“ என்று பொறுமையாக பதில் சொன்னாள்.


செய்தியாளர்கள் அடுத்த கேள்வி கேட்கும் முன், “ராஜா ஐயா வாழ்க, ஆதி ஐயா வாழ்க” என்ற கோஷம் வரும் போது அவன் வருகிறான் என்று அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள்.


அமிழ்தினி நகர்ந்தவுடன் அந்த இடத்தில் நின்ற ஆதி, நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு சிரித்த முகத்துடன் பதில் சொன்னான். அமிழ்தினியிடம் கேட்ட அதே கேள்வி கேட்க ஒரு நொடி அவள் எங்கே என்று தேடி அவளை நக்கல் பார்வை பார்த்தவன், “உங்களுக்கே தெரியும் நீங்க சொல்றது உண்மையா பொய்யானு அப்பறம் இதை ஒரு கேள்வியா வேற கேட்கணுமா ?” என்று புன்னகை முகமாக பதில் சொன்னவன் அனைவரையும் பார்த்து வணங்கி பின் வண்டியில் ஏறிச் சென்றான்.


வண்டியில் அமர்ந்து அமிழ்தினியை கடக்கும் போது அவளை பார்த்து வெற்றி புன்னகை புரிந்தபடி கண்ணாடியை மூடினான். ஆதியை பார்த்து பெருமூச்சு விட்டபடி அமிழ்தினி அவளது அலுவலக வண்டியில் அலுவலகத்திற்குச் சென்றாள்.


இரண்டு வாரங்களில் எல்லாம் சரி செய்ய துரிதமாக செயல்பட்டாள். நாளை முதலமைச்சர் மற்றும் இந்த துறை சட்டமன்ற அமைச்சரை நேரில் பார்க்க அனுமதி வாங்கி விட்டாள், அவர்களுக்கு இவள் மேல் நல்ல மதிப்பு இருப்பதினால் கண்டிப்பாக அவர்களிடம் இதற்கான அனுமதி வாங்கி விடலாம் என்று மற்ற பணிகளை கவனிக்க ஆரம்பித்தாள்.
ஆதி அவனது அலுவலகத்தில் ஒரு அழைப்புக்காக காத்திருந்தான்.


'நம்ம கனடா சிங்கம் ஏன் இன்னும் போன் பண்ணல?' என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போது சரியாக அழைப்பு வந்தது கதிரவன்.... ஈஸ்வரி,வாசகம் அவர்களின் மகன்.


'அதானே நியூஸ் பார்த்த உடனே வரணுமே!' என்று சிரித்தபடி கால் அட்டென்ட் பண்ணி, “சொல்லு டா, மைனர்” என்று ஆதி பேச ஆரம்பிக்க, “ஆதி நீ இப்படி பண்றவன் இல்லனு எனக்கு நல்லா தெரியும், என்ன இப்படி பண்ணிருக்க! ரொம்ப ஓவரா போற டா நீ, உனக்கே தெரியும் இத நியூஸ்ல எப்படி போடுவாங்கனு... அப்பறம் ஏன் டா ?” என படபடவென ஆரம்பித்தான் கதிர்.


“ஏன் தெரியாம, நல்லா தெரியுமே அதுனால தான் இப்படி பேசுனேன். உனக்கு ஒண்ணு தெரியுமா! அந்த நிருபரே நம்ம ஆளு தான். இப்படி கேட்க சொன்னது நான் தான்” என்று பலமாக சிரித்தான் ஆதி.


“ஏன் டா ?”


“ஏன்னு உனக்கு தெரியாதா?”


“அவங்கள பத்தி உனக்கு நல்லா தெரியுமே டா, பின்ன ஏன் டா இப்படி?”


“அவங்களா? யாரு அவங்க?”


“அண்ணி “


“பாருப்பா தம்பிக்கு உறவு முறை எல்லாம் தெரியுது போலவே !”


“ஆதி“


“சொல்லு டா, என் சித்தி பெற்ற சிங்கமே, உன்ன தான் டா நான் தேடிட்டு இருக்கேன், எல்லா பிரச்சனைக்கும் நீ தான் டா காரணம் பக்கி பயலே” என்று சிறிது மூச்சு வாங்கியவன், “நல்லா வாங்கி கட்டிக்காத. சரி அத விடு, எப்ப இந்தியா வரீங்க?” என்று நிதானமாக கேட்டான் ஆதி.


அந்த பக்கம் அமைதி, “எருமை மாடே, எதையாவது பேசு டா குரங்கே, #### ####“ என்று கண்ணியமாக நாலு கெட்ட வார்த்தைகள் சேர்த்த பின் ஆதியின் கேள்விக்கு, “வரோம் டா எங்களுக்கு இரண்டு வருஷம் டைம் தா”


“அப்ப பிரசவம்“


“இங்கேயே தான்”


“உதவிக்கு யாரு டா இருக்கா?“


“மீனாட்சி மா வந்துட்டாங்க“


“ஒ! என் மாமியார் அங்கே வந்தாச்சா?”


“ம்ம்”


“அப்ப ஈஸு?”


“அதான் அவங்க பொண்ணு பாப்பா இருக்கா, அக்கா மகன் நீ இருக்க, தங்கமா தாங்குற புருஷன் இருக்காரு, வேண்டாம் னு நினைச்சு பெத்த பிள்ளை நான் எதுக்கு? அவங்க என்னை தேட மாட்டாங்க டா” என்று சொன்ன கதிரவன் குரல் கம்பீரமாக இருந்தாலும் கண்களில் கண்ணீர் மட்டும் நிற்கவே இல்லை.


“டேய், என்ன பேசுற நீ!”


“விட்றா, சரி நீ என்னோட விஷயத்தை விடு, எதுக்கு நியூஸ் சேனல் எல்லாம் இவ்வளவு இம்போர்ட்டன்ஸ் இந்த நியூஸ்க்கு தராங்க ? இதுவும் உன்னோட வேலை தானா?”


“ஆமா” குதுகலத்துடன் ஆதியின் குரல்...


“ஏன் டா?”


“டேய் என்னோட நிலம், அந்த நிலம் எவ்வளவு முக்கியம்னு உனக்கே தெரியும், இவங்க சட்டமா கேட்டா நான் தரணுமா? என் நிலம், என் உரிமை. எப்படியும் தர தான் வேண்டும் ஆனா சும்மா தந்தா என்ன கிக்கு, அதான் சும்மா ஒரு வழக்கு. அப்பறம் இத வச்சு ஆல் இந்தியா பப்ளிசிட்டி” என்று அப்பட்டமாக ஒரு சிரிப்பு ஆதியிடம்.


“அதுக்கு எதுக்கு டா விவாகரத்து?”


“அதை உன்னோட நொண்ணி கிட்ட கேளு”


“என்னமோ போ”


“என்னோட மீன்ஸ் எப்படி டா? ஆல் ஓகே?”


“ஆஸ்யூஸ்வல் சூப்பரா இருக்காங்க, அவங்க தான் 25 மணி நேரமும் பேசுவாங்களே, சுடர் இப்ப இன்னும் ரொம்ப ஒட்டிக்கிட்டா”


“ம்ம், என்னோட மாமியார் டா, ரொம்ப ஸ்பெஷல்”


“உண்மை தான் அவங்க ரொம்ப ஸ்பெஷல்”


“சரி டா, அப்பறம் பேசலாம்” என்று கூறிய ஆதி நொடி நேர மௌனத்திற்கு பிறகு, “கதிர், சும்மா சொல்லல இப்ப நீ என் கூட இருந்தா நல்லா இருக்கும்” என்று அழைப்பை துண்டித்தான்.


நகமும் சதையுமாக இருந்த சகோதரர்கள் இன்று இருவரும் அவ்விருவரின் அரவணைப்பிற்காக ஏங்கி நிற்கிறார்கள்


அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் மாற்றங்கள், இவை அனைத்திற்கும் பின்னால் ஒரு வஞ்சம் கொண்ட நெஞ்சத்தின் சூத்திரங்கள் இவர்கள் அனைவரும் அதில் ஆடும் பகடைகள்.


பகடைகள் சூழ்ச்சி சூத்திரங்களை முறியடிக்குமா?
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீயாகி போகிறேன் நான்

நீயா நானா 3

32768

அனைத்து ஊடகங்களிலும் அமிழ்தினியையே கெட்டவளாக சித்தரித்து பேசிக் கொண்டிருந்தார்கள். வழக்கின் சாராம்சத்தை விட்டு அவளது சொந்த குணநலங்களை விவரித்துக் கொண்டிருந்தார்கள். குறிப்பாக பெண்கள் என்ன செய்ய வேண்டும் இவள் ஒரு சிறந்த பெண் இல்லை, ஏன் பெண் தன்மையே இல்லாதவள் என்பது போல தான் அவர்களின் முக்கால்வாசி பேச்சு இருந்தது.

நிலவன் எதிர்பார்த்ததும் இதே தானே! அமைதியாக அதைப் பார்த்துக் கொண்டே சாக்லேட் சாப்பிட்டுக் கொண்டு இருந்தான். கனடாவிலும் இந்த செய்தி தான் கதிர் வீட்டிலும் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

அதை மாற்ற முயன்ற கதிரின் மனைவி சுடரின் கையை தடுத்த மீனாட்சி, “விடுமா என்ன தான் சொல்றாங்கன்னு பார்க்கணும் நல்ல காமெடியா இருக்குதுல. என் பொண்ணு பொண்ணே இல்லையாம், எப்படி எல்லாம் உருட்டுறாங்க பாரு. இன்னும் இவன்க 1960sல தான் இருக்கானுங்க போலயே. நல்ல சிரிப்பா வருது. எல்லாம் இந்த சீரியல் பாக்குறவைங்களா இருப்பாய்ங்க போல இருக்கு.”

அவரது பேச்சில் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்ட சுடர், “ஏன் ம்மா அப்படி சொல்றீங்க?”

“பின்ன என்ன மா? பொண்ணு இப்படி இருக்கணும் அப்படி இருக்கணும் இந்த சீரியல்ல எல்லாம் அப்படித்தானே காமிக்கிறாங்க, ஒரு பொண்ணு அவளுக்காக முடிவெடுத்தா அதை கொலை குத்தமாவும் அவள சுயநலமாவும் காமிக்கிறாங்க, அவளுக்கு அந்த குடும்பத்துல நான் முக்கியத்துவம் வேண்டும் என்று நினைத்தால் அவளை சிரிப்பா காமிக்கிறாங்க. காலைல எந்திரிக்கும் போதே ஏதோ வேலைக்கு நேர்ந்து விட்டது மாதிரி காமிக்கிறாங்க”

“அவளுக்குனு ஆசை இருந்தாலும் அதை கணவனுக்காகவும் வீட்டுக்காகவும் விட்டுக் கொடுத்தா தான் நல்ல பொண்ணாம்.கண்டிப்பா தியாகம் பண்ணியே ஆகணுமா? எப்படி தருதலையா இருந்தாலும் அவன திருத்தி மனுசனாக்கணுமா? அதுக்கு தான் பொண்ணு வளர்ந்து படிச்சு இருக்காம். இந்த மக்களும் அத பாத்துட்டு இன்னும் பின்னாடி தான் போயிட்டு இருக்குதுங்க. ஹ்ம்ம் எல்லா கால கொடுமை” என்று சொல்லிவிட்டு ,

“இன்னிக்கு கொஞ்சம் ஓவர் டோஸ் ஆயிடுச்சு, இதுக்கு மேல பேசினா பூமர் ஆன்ட்டி லிஸ்ட்ல சேர்த்துருவாங்க” என்று கையை வைத்து விசிறிக் கொண்டவர்,

“டேய் கிராண்ட் சன் நீயாவது பெரியவன் ஆகி நல்ல சீரியல் எடுடா, இந்த கிரானிய லீட் ரோல்ல போட்டு ஸ்வீட் கிரானினு ஒரு நல்ல கொரியன் சீரியல் எடுடா அதுக்கு தான் நம்ம ஊர்ல டிமாண்ட்” என்று இரண்டு மாதங்களில் பிறக்க போகும் குழந்தையிடம் பேசிக் கொண்டிருந்தார் மீனாட்சி.

“என்ன மீன்ஸ் எங்க பையன் சீரியல் டைரக்டரா வரணுமா?“ என்று கேட்டபடி அவர் மடியில் படுத்தான் கதிரவன்.

“ஏன்டா சீரியல் டைரக்டர்னா என்ன நெனச்ச? எனக்கு தெரிஞ்சு மூணு வருஷத்துக்கு கண்டிப்பா பணம் கிடைக்கும், அதுவும் டெய்லி சம்பளம். உன் பையன் கண்டெண்டுக்கு எல்லாம் வெளியில போகவே வேண்டாம், நம்ம வீட்டிலேயே நிறைய கன்டென்ட் கிடைக்கும் அதை வைத்து அவன் 7 வருஷம் கூட எபிசோட்ஸ் ஈஸியா கிரியேட் பண்ணிடலாம்.” என்று அவர் பேசிக் கொண்டிருந்தாலும் அவரது கைகள் கதிரவனின் தலையை கோதிக் கொண்டு தான் இருந்தது.

அப்போது அவரது தோளில் சாய்ந்த சுடர், “உங்களுக்கு கஷ்டமா இல்லையா அம்மா?” என்று கேட்க,

“எதுக்கு டா?”

“இல்ல இல்ல... அக்காவ பத்தி ஊரே தப்பா பேசுது, அது போக மாமாவும் அக்காவும் ஊர் பிரச்சனைக்காக முட்டிக்கிட்டு இருக்காங்க, எல்லாத்தையும் விட பெருசா அவங்க ரெண்டு பேரும் டைவர்ஸ் அப்ளை வேற பண்ணி வச்சிருக்காங்க. உங்களுக்கு அக்கா லைப் பற்றி கஷ்டமா இல்லையா அம்மா?” என்று தயக்கத்துடன் கேட்க,

“சே சே எனக்கென்னடா கஷ்டம், இந்த பப்பு வாய்ங்க பேசுறத பார்த்து நான் எதுக்கு கஷ்டப்படணும்? என் பொண்ணு சுதந்திரமா இருக்கா, அவ வேலைய அவ செய்றா, அவ வேலைக்கு குறுக்க கணவனே வந்தாலும் அதுக்காக எதிர்த்து நிற்கிறா இதைவிட என்ன பெருமை வேணும் எனக்கு!” என்று சொன்னவர் கண்ணில் பெருமிதம் தான் இருந்தது.

“இது என்ன என் பொண்ணு அவ சுயநலத்துக்கா கேஸ் போட்டு இருக்கா? அவகிட்ட இல்லாத சொத்தா? அவ இந்த மக்களுக்காக போராடுறா, மக்களா வாழ்க்கையானு வரும்போது அவ வாழ்க்கைய விட மக்கள் நலன் தான் முக்கியம்னு போராடிக்கிட்டு இருக்கா, ஆனால் அது இந்த மக்களுக்கே புரியல, ஒரு நாளைக்கு புரியும் புரியும் போது இப்ப பேசுற வாய் எல்லாம் அப்ப வேற மாதிரி பேசும்.”

“இன்னைக்கு அடங்காப்பிடாரி திமிரு புடிச்சவ அப்படின்னு பேசுற அதே வாய் நாளைக்கு தங்கத் தாரகை, சிங்கப்பெண் அப்படினு வாய் கூசாம பேசுவாங்க, இதுக்கெல்லாம் கவலைப்பட்டுக் கிட்டு இருக்க முடியுமா?”

“டைவர்ஸ்! இதுங்க ரெண்டுக்கும் ஆரம்பத்தில் இருந்து முட்டிக்கிச்சு, ரெண்டு பேருக்கும் தான் தான்ற எண்ணம் ரொம்ப ஜாஸ்தி, என்ன நீ ஒரு அடி அடிச்சிட்டியா இப்ப பாரு உன்னை நான் இரண்டு அடி அடிக்கிறேன் பாரு அப்படிங்கறது தான் இவங்க எண்ணம்”

“காதல் அப்படின்ற ஒன்று இருந்துச்சுன்னா இவங்க டைவர்ஸ் வாங்க மாட்டாங்க, இல்ல ‘நான்’ அப்படி என்ற எண்ணம் மட்டும் இருந்துச்சுன்னா சேர்ந்து வாழாமல் பிரிஞ்சு போறது நல்லது” என்று சொன்னவர்,

“ஏன்டா கதிர் நீ மாசமா இருக்கியா உன் பொண்டாட்டி மாசமா இருக்காளாடா? ஏதோ நீ மசக்க வந்தவன் மாதிரி வந்து படுத்துக்கிட்டு இருக்க எந்திரி டா முதல போயி நம்ம பேபிம்மாக்கும் எனக்கும் மாதுளை ஜூஸ் ரெண்டு எடுத்துட்டு வா போ, எனக்கு ஐஸ் போட்டு பேபிம்மாக்கு ஐஸ் போடாம” என்று அவனை மடியில் இருந்து தள்ளி விட்டார்.

“என்ன மீன்ஸ் எனக்கு வேலைய குறைப்பனு பார்த்தா எனக்கு ரெண்டு வேலை ஆக்குற? இதுக்கா நான் உன் ஊரில் இருந்து வர வச்சேன்?” என்று எழுந்தபடியே கதிரவன் புலம்ப.

“எதே! நீ வர வச்சியா? அடேய் என்னோட மாப்பி Mr.ஆதிநிலவன் சொன்னாருடா, என்ன தான் என்னோட பொண்ணு டைவர்ஸ் அப்ளை பண்ணாலும் இன்னும் அவர் தானே எனக்கு மாப்பி ‌, அவர் சொன்னா கேக்கணும் தானே, அதான் என் பொண்ணு வாழ்க்கைக்காக தியாகம் பண்ணிட்டு இங்க வந்து உட்கார்ந்து இருக்கேன்” என்று மீனாட்சி வராத கண்ணீரை துடைத்துக் கொண்டு சொல்ல,

'அட சண்டாள பாவி! ஒரு வார்த்தை சொன்னியா டா நான் பேசும் போது மூச்சு கூட விடல, நான் சொல்லும் போது ஏதோ புதுசா கேள்விப்பட்ட மாதிரி பில்டப் பண்ணிட்டானே பாவி பையன், பாவம்டா உன் பொண்டாட்டி. நானே ஒரு டக்கால்டி என்னையவே இந்த பாடு படுத்துற அந்த பிள்ளையை மட்டும் விட்டா வச்சிருப்ப' என்று மனதில் ஆதிக்கு ஒரு அர்ச்சனை போட்டுவிட்டு மீனாட்சி சொன்ன மாதுளை ஜூஸ் போட போய்விட்டான்.

இங்கே ஈஸ்வரி அவரது அக்காவின் படத்திற்கு முன்னே அமர்ந்து அழுதுக் கொண்டிருந்தாள். “ஏன் அக்கா என்ன விட்டு போனீங்க? நீங்க இருக்கிற வரைக்கும் எனக்கு ஒண்ணும் தெரியல நீங்க போன பிறகு ரொம்ப தனியா இருக்கேன்.” என்று கூற

“அப்ப நான் யாரு ஈஸ்வரி?” என்று அவரது கணவர் வாசகம் பின்னாடி வந்து கேட்க அவரைக் கட்டிக் கொண்டு கதறிவிட்டார் ஈஸ்வரி.

“என்னால முடியலங்க,என்னோட பிள்ளைகளே என் கூட இல்லை. நான் பெத்த பிள்ளையே என்ன வெறுக்குறான், எனக்கு யாருமே இல்லாத மாதிரி தோணுதுங்க, நான் என்னங்க பாவம் பண்ணேன் எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது? நான் ஏங்க அன்னைக்கு அப்படி நடந்துக்கிட்டேன்? ஏதோ உணர்ச்சிவசத்துல அப்படி நடந்துக்கிட்டேன் ஆனா அதையே சாக்கா வச்சு என்னை இப்படி ஒதுக்கிட்டானே அவன்” என்று கலங்க,

“நம்ம பிள்ளை நம்மள பிரிஞ்சு போறதுக்கு நீ விட்ட வார்த்தைகள் மட்டும் தான் காரணம் ஈஸ்வரி. இத நானும் மறுக்க மாட்டேன். இது எல்லாத்துக்கும் விடிவு வரும் அது வரைக்கும் பொறுமையா இரு” என்று தன் மனைவியை சமாதானப்படுத்தியவர் ஈஸ்வரியையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்து விட்டார்.

அதே சமயம் மீனாட்சி மடியில் படுத்திருந்த சுடரோ, ”ஏன் ம்மா அன்னைக்கு மட்டும் அப்படி நடக்காம இருந்திருந்தா இன்னைக்கு எல்லாரும் சந்தோஷமா இருந்திருப்பாங்க இல்ல, இந்த எல்லா பிரச்சனைக்கும் நான் தானே காரணம்?” என்று வருந்த,

“ஏன் அதை பற்றி இன்னும் ஒரு பத்து வருஷம் கழிச்சு பேசேன்“ அவள் தலையில் செல்லமாக கொட்டிய மீனாட்சி, ”அப்படியெல்லாம் இல்லடா இதுதான் நடக்க வேண்டும் என்று இருந்தால் அதுதான் நடக்கும் நடந்து முடிஞ்சது பத்தி வருத்தப்படக்கூடாது இனி நடக்க போறது எப்படி சரியா நடக்க வைக்கணும் அது மட்டும் தான் யோசிக்கணும்” என்று கூறிய மீனாட்சி,

“இப்ப நீ யோசிக்க வேண்டியது இந்தப் பிள்ளையை நல்லபடியா பெற்று அவன நல்ல பிள்ளையா வளர்க்கணும், மத்ததை போட்டு குழப்பிக்காம இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சு என்ன ஜூஸ் குடிக்கலாம் என்று யோசி, நடக்கிறது நல்லபடியா நடந்தே தீரும்” என்று பேசி சுடரை திசை திருப்ப பார்த்தாலும் சுடரின் முகத்தில் இன்னும் குழப்பம் இருக்கத்தான் செய்தது.

சுடர்,ஈஸ்வரி என இருவரும் இப்போது நடக்கும் செயலுக்கு தாங்கள் தான் காரணம் என்று நம்பி மனதில் போட்டு வருந்திக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களுக்கு யார் சொல்வது? விதியின் கோரப் பிடியில் சிக்கி தவித்த பூ மகள்கள் இவர்கள். நடக்கும் நிகழ்வுகளுக்குப் பின் இருக்கும் சூத்திரதாரியின் முக்கிய பகடைகள் இவர்கள்தான். இவர்களை வைத்துதான் இந்த விளையாட்டு போய்க் கொண்டிருக்கிறது.
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீயாகி போகிறேன் நான்

32959

நீயா நானா 4


அடுத்த நாள் காலையில் தலை நகரம் நோக்கி புறப்பட்ட அமிழ்தினி அன்று மாநில முதல் அமைச்சர் மற்றும் அவள் பணி புரியும் துறை அமைச்சரிடம் பேசினாள்.


நீதிமன்றம் குறிப்பையும் மக்களின் எதிர்ப்பையும் அவர்களிடம் பதிவு செய்தாள். இந்த வழக்கின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்த பின், “ இனி நீங்க தான் முடிவு செய்ய வேண்டும் நமக்கு இரண்டு வாரம் டைம் இருக்கு.” என்று பொறுப்பினை அவர்கள் பக்கம் திருப்பி விட்டாள்‌ அமிழ்தினி.


இதில் மத்திய அரசு ஒப்புதல் வேண்டி இருப்பதை அறிந்து அந்த துறை அமைச்சர் மத்திய அமைச்சரிடம் பேசுவதாக முடிவு செய்யப் பட்டது.


எல்லாம் முடித்துவிட்டு கிளம்பும் போது, “நீங்க இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்து செய்றீங்க. கொஞ்சம் மக்களுக்கு பேசி புரிய வச்சுருக்கலாம் மா” என்று முதல் அமைச்சர் சொல்ல, “என்னோட சூழ்நிலை அப்படி சார். இதுல நோட் பண்ணிங்கனா மக்கள் அமைதிக்கு எதிராக இருக்கிறார்கள் அரசுக்கு எதிராக இல்லை, பரவாயில்ல மக்கள் பிற்காலத்தில புரிஞ்சிப்பாங்க” என்று புன்னகையுடன் வணங்கி விடை பெற்றாள்.


அமிழ்தினிக்கு பெரிய பாரம் குறைந்த உணர்வு. எல்லா வேலையும் முடித்த அமிழின் உடம்பு அவளிடம் சிறிது ஓய்வு கேட்க ஐந்து நாட்களுக்கு பிறகு ஒய்வு எடுக்க சற்று கண் மூடினாள்.


நாளைய தினம் அவர்களது திருமண நாள் உதடு ஓரத்தில் ஒரு கசிந்த புன்முறுவல் நல்ல வேளை ஊரில் இல்லை. அவனை பார்க்கும் தர்ம சங்கடம் இருக்காது. அடுத்த அடுத்த பணிகளை எவ்வாறு முடிக்க வேண்டும் என்று எண்ணியபடி உறங்க கண் அயர்ந்த நேரம் இவளுக்கு செல் போன் அழைப்பு வந்தது.


நாளை நாட்டின் தலை நகரத்துக்கு வர வேண்டும் என்று உத்தரவு வந்தது. ' *இது கண்டிப்பா* அவன் வேலையா தான் இருக்கும், பாவி ஒரு நாள் நிம்மதியா இருக்க விடமாட்டான்' என்று கருவியவள் மத்திய மாநில தொகுதி அமைச்சர்கள் எல்லாம் வருவதாகவும் உடனே கிளம்பி வர சொல்லி உத்தரவு, இதன் முக்கியத்துவம் உணர்ந்தவள் சொந்த விருப்பு வெறுப்புகளை தள்ளி வைத்து உடம்பில் இருந்த சோம்பலுடன் கிளம்பி விட்டாள்.


பிளைட் ஏறும் முன் தனது அம்மாவை அழைத்தவள் தனது பயணம் பற்றி கூற,


“ஹனி, நாளைக்கு என்ன நாள் ஞாபகம் இருக்கா?” என்று மீன்ஸ் கேட்க,


"ஹ்ம் ஏன் இல்லாம, நான் புதைக்குழிக்குள் விழுந்த நாள் தானே?“ என்று பதில் சொன்னாள்.


“ச்சீ போடி, அது என்னோட மாப்பிக்கு வேண்டுமானால் சரியா இருக்கும்.” என்று சிரித்தவர், “பாரு என்னோட மாப்பி எனக்கு டிரஸ் வாங்கி அனுப்பிருக்காரு டி, நீயும் இருக்கியே"


“ஹ்ம் குட்டி ஆடு பகையாம், தாய் ஆடு உறவாம், ம்மா நான் நாளைக்கு பேச முடியாது அதான் இன்னைக்கி பேசுனேன். சரி வைக்கவா ?”


“ஏன் டா இந்த மீன்ஸ் மேல கோபமா ?”


“தனியா விட்டுட்டு அங்க உக்காந்து ஜாலி பண்ணிக்கிட்டு இருக்க, அப்புறம் உன்ன கொஞ்சுவாங்களா ?”


“மீன்ஸ் அண்டர் மிஷன் டி”


“என்ன மிஷன்?”


“மிஷன் கதிரவன்“


“ஓ! ஊரான் பிள்ளை பழ மொழி“


"இல்ல டி சுடர் ரொம்ப பாவம் டி, அவளுக்கு வேற யாரு இருக்கா ?”


“சரி சரி, எனக்கு எல்லாம் தெரியும்”


“என்ன தெரியும்“


“உன் மாப்பி உன்ன பார்த்தது, உனக்கு விசா இங்கே ரெடி பண்ணி ஊருக்கு அனுப்புனதுனு எல்லாம்“


“நீ ஸ்ட்ரோங் கேர்ள் டி! உன்னால முடியும்”


“ம்மா“


“கொஞ்சம் ஓவர் ஆயிடுச்சு, சாரி டி”


“உடம்ப பார்த்துக்க ம்மா“


“எனக்கு என்ன குறைச்சல்?“


“நான் கதிர் உடம்ப சொன்னேன், சுடர் தான் புள்ளைத்தாச்சி, அவளை வேலை வாங்கு, கதிரை இல்ல“


“என்ன கதிர் கிட்ட பேசுனியா?”


“இல்ல ம்மா உன்ன தெரியாதா?“


“என் ராஜாத்தி டி நீ“


“சரி ம்மா நாளைக்கு பேசுறேன்“


என்று அழைப்பை அணைத்து வைத்தாள்.


கதிர் இவர்கள் மூவருக்கும் சமைக்க சுடரை அழைத்துக் கொண்டு ஷாப்பிங் சென்றார் மீன்ஸ் .


வீட்டில் அனைத்து வேலைகளும் முடித்த கதிர் சற்று கண் அயர்ந்து தூங்கினான். மெதுவாக அவனை எழுப்பியது சுடரின் மென்மையான கைகள். அவன் எழுந்த உடன் பார்த்தது கண்களில் அவனுக்காக காதலுடன் நின்ற மனைவியை தான்...


“ஹாப்பி பர்த்டே அண்ட் ஹாப்பி ஆனிவர்சரிங்க“ என்று சொல்ல இதை சற்றும் எதிர்பாராதவன் தனது மனைவியை அணைத்து நெற்றில் முத்தம் வைத்து பின் உதட்டில் முத்தம் வைக்கும் முன் “ஹே” என்று அங்கே சுவரில் ப்ரொஜெக்ட்டர் மூலம் இணைந்து இருந்த மற்ற குடும்ப உறுப்பினர்கள் கத்தினார்கள்.


மெதுவாக சுடரை அவனது கை அணைப்பில் வைத்தவன், எல்லாரையும் பார்த்து கை அசைக்க அவன் அருகில் அமர்ந்த மீன்ஸ் அவனை பார்த்து, “ஹாப்பி பர்த்டே டா கண்ணா“ என்று வாழ்த்த


"தேங்க்யூ மீன்ஸ்"


“ஹாப்பி பர்த்டே மை சாம்ப்” என்று வாசகம் வாழ்த்த


“தேங்க்ஸ்“ என்று மட்டும் கூறியவன் அழைப்பில் வேறு முகம் தேட அவன் தேடும் முகம் மட்டும் இல்லை.


கதிரவன் எதுவும் சொல்லாமல் வெறும் தேங்க்ஸ் என்று மட்டும் சொல்ல வாசகம் முகம் வாடியது. இதனை மீன்ஸ் குறித்துக் கொண்டார்.


'இன்னைக்கு வேண்டாம் நாளைக்கு இவனுக்கு வேப்பிலை அடிச்சுக்கலாம்' என்று புன்னைகை முகமாக இருந்தாலும் நாளைக்கு கதிரவனுக்கான தண்டனையை இன்றே முடிவு செய்துவிட்டார் மீன்ஸ்.


பின் “ஹாப்பி பர்த்டே கதிர்” “ஹாப்பி பர்த்டே டா“ என்று ஒரே நேரத்தில் ஆதியும் அமிழும் சொல்ல அனைவர் முகத்திலும் சிறு புன்னகை.


“தேங்க்ஸ் டா“


“தேங்க்ஸ் அண்ணி” என்று அழுத்தி சொன்னவன், “ஹாப்பி அனிவர்சரி“ என்று மறுபடியும் அவர்கள் இருவரும் சேர்ந்து சொல்ல கதிரின் புன்னகை விரிந்து, “தேங்க்ஸ் யு" என்று சொன்னான்.


“உங்களுக்கும் ஹாப்பி அனிவர்சரி அக்கா மாமா“ என்று சுடர் சொல்ல சின்ன தயக்கத்திற்கு பிறகு “தேங்க்ஸ்“ என்று சொன்னார்கள்.


மீன்ஸ் கேக் எடுத்து வந்து வெட்ட சொல்ல எல்லாரும் பிறந்தநாள் பாட்டு பாடினார்கள். கதிர் செவிகளுக்கு மட்டும் ஈனஸ்ரத்தில் ஒரு நலிந்த குரல் பாடியது நன்றாக கேட்டது.


அப்போது தான் கதிரவன் கவனித்தான் வாசகம் பின் புறத்தில் சிறிதாக தெரிந்த சேலை. அவன் மனதில் ஒரு இதம் பரவியது. அவன் தேடியது இதுதானே.


மூன்று வருடங்களுக்கு பிறகு முதன் முதலாக கதிரின் இதயம் அவனிடம்,

'ஒரு வேளை நீ தான் இவ்வளவு வருசமா கவனிக்கல போல?' என்று சரியாக கேட்டது.


என்ன காரணம் கூட கேட்க தோணல! முழுசா என்ன ஆச்சுனு கூட தெரியல! ஆனாலும் கோபம் மட்டும் உனக்கு முக்கியமா இருந்துருச்சுல! ' என்று கதிரவனின் மனசாட்சி அவனை காரி துப்பியது


'நான் ஏதாவது தப்பு பண்ணிட்டேனா ? இதை இன்னும் கொஞ்சம் நிதானமா ஹேண்டில் பண்ணி இருக்கலாமோ' என

ஆதி, அமிழ் மனதிலும் அதே எண்ணம் தான்.


மூன்று வருடங்களுக்கு முன் என்ன நடந்தது ?
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

நீயாகி போகிறேன் நான்

33198
நீயா நானா 5

ஈஸ்வரியின் அக்கா மகன் தான் ஆதி நிலவன். ஈஸ்வரி வாசகம் தம்பதியினருக்கு கதிரவன் மற்றும் அவினி குழந்தைகள்.

ஈஸ்வரியின் கணவர் வாசகம் தான் தற்போது ஆதியின் சொத்துகளையும் பராமரித்துக் கொண்டிருக்கிறார். ஊரில் பெரிய குடும்பம் ஆதி நிலவனின் குடும்பம். அவனது தாய் தந்தையர் இறந்தபின் ஈஸ்வரி வாசகம் தம்பதியினர் ஆதியை வளர்க்கிறார்கள்.

ஈஸ்வரி யாரிடமும் அதிகம் பேச மாட்டார் அவருக்கு நெருக்கமானவர்களிடமிருந்து மட்டுமே அவரது வழக்கமான பேச்சு வெளிப்படும் மற்றவர்களிடத்தில் பெரும்பாலும் தலையசைப்பு, கண்ணசைவில் தான் இருக்கும். வீட்டில் ஈஸ்வரியின் குரல் கேட்பதே அரிதிலும் அரிது.

கதிரவன் ஆதிக்கும் இரண்டு வயதை வித்தியாசம்.அவினி இளையவள். சிறுவயதில் இருந்தே இவர்கள் அனைவரும் வெளிநாட்டில் வளர்ந்தவர்கள்.மூவரும் இணைந்து வெளிநாட்டில் கல்வி கற்றவர்கள். வாசகம் கனடா நாட்டின் பிரஜை.

கதிரவன் கம்ப்யூட்டர் துறையில் மாஸ்டர்ஸ் முடித்தவன். ஆதி நிலவன் மற்றும் அவினி பிசினஸ் மேனேஜ்மென்டில் மாஸ்டர்ஸ் முடித்தவர்கள்.

நிலவன் மூன்று வருடங்களுக்கு முன்னே இங்கே வாசகம் ஈஸ்வரியுடன் வந்து விட்டான். நிலவனின் அப்பா ஊர் தலைவராக இருந்து சுயேச்சை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.

நிலவனின் அப்பா இறந்த பின் வாசகம் அரசியலில் ஆர்வம் காட்டவில்லை என்றாலும் மக்களின் நலனில் அக்கறை காட்டினார். நிலவனை எப்படியாவது அரசியலில் கொண்டு வந்து விட வேண்டும் என்பது மணிவாசகத்தின் விருப்பம் ஆனால் நிலவன் சிறுவயதில் இருந்தே இந்த அரசியலில் ஆர்வம் இல்லாமல் இருந்தான். இங்கு வந்த பிறகு ஒரு நாள் “சித்தப்பா நானும் இந்த அரசியலை செய்யலாம்னு இருக்கேன் நம் மக்களுக்கு ஏதாவது செய்யலாம் அப்பாவோட பேர்ல” என்று கூறியவுடன் வாசகத்திற்கு மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

நிலவனும் மக்கள் பணியில் ஈடுபட்டவன் தற்போது அரசியலில் ஆர்வம் எடுத்து இப்போது முழுநேர அரசியல்வாதியாக மாறிக் கொண்டிருக்கிறான்.
கதிரவன், அவினி தற்போது படிப்பு முடிந்தவுடன் நாடு திரும்பி இருக்கிறார்கள்.
சிறுவயதில் இருந்தே ஈஸ்வரி பிள்ளைகளிடம் இருந்தும் சற்று விலகி தான் இருப்பார்.

இன்னும் 5 மாதங்களில் தேர்தல், ஆதி அதற்கான பணிகளில் இருந்தான். இன்று கதிரவனும் அவினியும் ஊருக்கு வரும் நாள்.

காலையில் இருந்து வீட்டை பம்பரமாக சுற்றி வந்துக் கொண்டிருந்தாள் சுடர்விழி.
வாசகத்தின் நெருங்கிய நண்பர் மாணிக்கத்தின் மகள். பள்ளி படிப்பை முடித்து விட்டு ஃபேஷன் டெக்னாலஜி சேர்ந்தவள் தந்தையின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு படிப்பை நிறுத்தி தற்போது தந்தையை கவனித்துக் கொள்ளும் பெண்.

அடுத்த கல்வி ஆண்டில் ஆதி அவளை ஃபேஷன் டிசைனிங் படிப்பதற்கு சேர தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்து விட்டான்.

வீட்டினுள் மலர் அலங்காரம் வாசலில் பூ கோலம், என அனைத்தும் பார்த்து பார்த்து செய்திருந்தாள் சுடர்.

கையில் ஆரத்தி தட்டுடன் வேகமாக ஓடி வந்து ஆதியின் மேல் மோத போனவள் சுதாரித்து நின்றுக் கொண்டாள்.

ஆதி அவளை பார்த்தவன், “என்ன உன் மாமன் வரான் ஓரே ஆர்வம் போல.”

“ஷ் அத்தான் நீங்க வேற! நான் அவரை மாமானு கூப்பிடறது யாருக்கும் தெரியாது“

“ஓ, ஈஸ்வரிக்கிட்ட உன்னை பற்றி சொல்லி கல்யாணத்திற்கு ஏற்பாடு பண்ணட்டுமா?“

“அய்யோ அப்படி எதுவும் பண்ணிடாதீங்க அத்தான்“

“இல்ல இல்ல இன்னிக்கு கண்டிப்பா சொல்லுறேன்”
என்று சொன்னவனை இடுப்பில் கை வைத்து அவனை முறைத்தவள், “சொல்லுங்க நானும் உங்க குல்கந்து மேட்டரை அத்தை கிட்ட சொல்றேன்”

“ஹே! அது உனக்கு எப்படி தெரியும்?”

“அத்தான் எனக்கு எல்லாம் தெரியும்“

“அடேய் !!! என்ன அந்த நல்லவன் உளறிட்டானா?”

“ஹம்” என்று சுடர் கண் அடிக்க,

“சண்டை உன்கூட பேச மாட்டேன்னு சொன்னான்”

“அந்த சண்டையை நான் வேற பக்கம் டைவர்ட் பண்ணிட்டேன்“

“எப்படி?”

“பொஸஸிவ்”

“அடிப்பாவி! அவனை நல்லா புரிஞ்சு வைச்சுருக்க... பையன் கொஞ்சம் பொஸஸிவ் தான்... ஆமா யாரு அந்த பலி ஆடு?”

நிலவனை திருப்பி பக்கத்தில் இருந்த கண்ணாடியை காட்ட, “ஓ!!! அதான் பையன் என்னை போட்டு தந்துட்டானோ?”

“ஹம்” என்று கலகலவென சிரித்தாள்.

அவள் சிரிப்பை ரசித்த நிலவன் அவளை ஒரு சகோதர பாசத்துடன் நோக்கி சுடர் தலையில் கை வைத்து, “நல்லா இருங்க டா! அவனுக்கு கொஞ்சம் அன்பு காட்டினால் போதும் உனக்காக எதுவும் செய்வான்டா!” என்று வாழ்த்தினான்.

இவர்கள் மனதில் கள்ளமில்லாமல் இயல்பாக பேசிக் கொண்டிருந்தாலும் தூரத்தில் இருந்து பார்த்த ஈஸ்வரியின் கண்களுக்கு அது காதலாக தோன்றியது.
சுடரை ஈஸ்வரிக்கு மிகவும் பிடிக்கும். தன் கணவரின் தோழரின் மகள். அவளது தந்தையின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவளது கனவை உறங்க வைத்து தன் தந்தையை கவனித்துக் கொள்பவள்.

சுடர் கண்களில் தெரிந்த காதல் தன் மகன் கதிரவன்கானது என்று தெரியாமல் போனது தான் விதியின் சதி போல.

வெளியில் வண்டி சத்தம் கேட்டவுடன் தனது ஆர்வத்தை வெளிக்காட்டாமல் அமைதியாக வந்தாள் சுடர். ஈஸ்வரி முன் நிற்க, ஆதியும் வாசகமும் சிரித்தபடி வந்தார்கள்.

ஈஸ்வரி சுடரிடம், “சுடர் ஆரத்தி எடு மா” என்று ஈஸ்வரி சொல்லி ஒதுங்கி நின்றுவிட்டார். வாசகம் ஈஸ்வரியை முறைத்தவர், வந்த குழந்தைகளை சிரித்த முகமாக கட்டி அணைத்தார்.
நிலவன் வந்த உடன் மூவரும் இறுக்கமாக அணைத்துக்கொண்டு சத்தமாக, “இப்ப நாம எப்படி இருக்கோம் ? சந்தோசமா இருக்கோம்“ என்று வானம் நோக்கி கத்தினார்கள்.

கதிர் அவன் தந்தையின் காலை வணங்கி விட்டு தாயின் காலை வணங்க ஈஸ்வரி சட்டென விலக, அந்த விலகலை உணர்ந்தவன் அருகில் நின்று இருந்த அங்கே வேலை செய்யும் செல்வியை வணங்கினான்.

வீட்டிற்கு வந்தவுடன் உடனே கிளம்பி வந்த கதிர் சாப்பிட அமர்ந்துவிட்டான். சமைத்து வைத்த அனைத்தும் கதிரின் விருப்பமான உணவுகள்.

விவரம் தெரிந்ததில் இருந்து வளர்ந்தது முழுவதும் ஹாஸ்டல் தான். விடுப்புக்கு வீட்டிற்கு வந்தாலும் பெரும்பாலும் உணவுக்கு வெளியே தான்.

ஏனோ முதல் முறை உணவு சாப்பிடுவது போல் உணர்வு. சட்டென்று கண்கள் கலங்கி விட்டது. “யார் சமையல்?” என்று ஆர்வமாக கதிர் கேட்க , “நான் தான்” என்று சுடர் சொன்னதும் சப்பென ஆகிவிட்டது.

“ரொம்ப அருமையா இருக்கு” என்று சொல்லி எழும்பியவன் நிலவனை பார்த்து, “வா டா” என்று அழைத்துச் சென்று விட்டான். அவன் செல்லவும் உடன் நடந்து வந்த சுடரை அவன் திரும்பி பார்க்க அவள் அவனை வெறுப்பேத்த “அத்தான்“ என்று நிலவனுடன் பேச ஆரம்பித்தாள்.

சுடர் வேண்டும் என்று வெறுப்பேத்த கதிர் அவர்களை பார்த்துக் கொண்டு பைக்கை உறும விட்டுக் கொண்டிருந்தான். நிலவன் சுடரை காதலர்கள் என்ற கண்ணோட்டத்தில் பார்த்த ஈஸ்வரிக்கு கதிரின் செய்கை பொறாமையின் வெளிப்பாடாக தெரிந்தது.

ஈஸ்வரிக்கு திக்கென இருந்தது. அதுவும் கதிரின் கண்களில் அவர் பார்த்த அந்த வெறி ஏனோ இதனை சாதாரணமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

உடனே நிலவன் சுடர் மற்றும் கதிர் அமிழ்தினி கல்யாணத்தை முடிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டார். கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பது மெய் என்று உணராமல் போய் விட்டார்.
மறுநாள் காலை விடிந்ததும் முதலில் ஈஸ்வரி சென்றது நேராக தனது தோழி மீனாட்சி வீட்டிற்கு தான். மீனாட்சியிடம் நேராக விசயத்திற்கு வந்தவள், “அமிழ்தினியே என் வீட்டிற்கு மருமகளாக வர வேண்டும், ப்ளீஸ் டி எனக்காக உன் மகளை எங்களுக்கு மருமகளாக தா டி“ என்ன உருகி வேண்ட, மீனாட்சி எதுவும் சொல்ல முடியாமல் மகளை பார்க்க அமிழ்தினி கண்களை மூடி சம்மதம் கூறினாள்.

மீனாட்சியால் கூட நம்ப முடியவில்லை. ஈஸ்வரியும் தான் நினைத்தது இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்று நினைக்கவில்லை . மிகவும் சந்தோஷமாகி சுடர் தான் இன்னொரு மருமகள் என்றும் சுடர் அப்பாவின் உடல்நிலையை எடுத்து கூறியவர் அடுத்த வாரம் நிச்சயம் என்றும் நிச்சயம் முடிந்து இரண்டு மாதங்களில் திருமணம் என்று முடிவு சொல்லியவர் அமிழ்தினி தலையில் பூ வைத்து நிச்சயம் உறுதி பண்ணி கிளம்பினார்.

ஈஸ்வரி திரும்பும் போது வாசகத்திற்கு அழைத்து, “ஏங்க நம்ம மீனாட்சி பொண்ணு அமிழ்தினி நம்ம வீட்டிற்கு மருமகளாக பேசியிருக்கேன்” என்று கூறியவர், “வாங்க நம்ம சுடரின் அப்பாவை பார்த்து விட்டு வரலாம், அப்படியே இரண்டு பசங்களுக்கும் சேர்த்து பண்ணிடலாம்னு நினைக்கிறேன்” என்று கூறினார்.

வாசகத்திற்கு மனதில் சுருக்கு என்று ஒரு வலி வந்தது. “எல்லாத்தையும் நீ பண்ணிரு மா! நான் எதற்கு ?” என்று தோன்றிய வலியே உடனே கேட்டுவித்தார்.

ஈஸ்வரி எதுவும் பேசவில்லை. “நீங்க காலைல பிரச்சாரம் போறீங்கனு தெரியும் சரி நேர்ல சொல்லிக்கலாம்னு நினைச்சேன்” என்றார் மெதுவாக.

“நீ சொல்றது பொய்யினு உனக்கே தெரியும்” என்ற வாசகம், “அட்லீஸ்ட் பிள்ளைகளிடம் ஒரு வார்த்தை கேட்டியா??” என்று கேட்க ஏனோ ஈஸ்வரிக்கு பயம்... வந்த அன்று கதிரின் பார்வை சுடரை சுற்றி வருவதை ஈஸ்வரி கண்டுக் கொண்டார்.

அவரின் பார்வையில் சுடர், நிலவன் காதலர்களாக தெரிய, எங்கே கேட்டால் கதிரின் விருப்பம் வெளிப்பட்டு நிலவன், சுடர் காதல் நிறைவேறாமல் போய்விடுமோ என்று பயம் கொண்டார்.

சிறுவயதிலிருந்து நிலவன், கதிர் எதை கேட்டாலும் தந்து விடுவான். ஈஸ்வரி அவர்களை வளர்க்கவில்லை என்றாலும் அவர்களின் குணாதிசயங்களை அறிந்து வைத்திருந்தார்.

சிறுவயதில் மிகவும் முரட்டுக் குழந்தையாக இருந்த கதிர் இன்னும் அந்த முரட்டுத்தனத்தை கொண்டிருப்பான் என்பது ஈஸ்வரியின் திண்ணமான எண்ணம்.

குழந்தைகள் வளர வளர அவர்களது குணாதிசயங்கள் முற்றிலுமாக மாறிவிட்டது என்பதை உணர தவறிவிட்டார்.

இதோ இன்று ஈஸ்வரியுமே ஒரு முடிவு செய்து வாழப்போகும் அவர்களிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமல் அவர்களின் வாழ்க்கையை தீர்மானித்து விட்டார்.
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீயாகி போகிறேன் நான்

33261

நீயா நானா 6

ஆதி தேர்தல் பணியில் மிகவும் மும்முரமாக இருந்தான். இன்னும் ஐந்து மாதங்கள் இருக்கின்றன இருப்பினும் அவன் மக்களை ஓரளவுக்கு தன் பக்கம் ஈர்த்து விட்டான். அதில் அவனுடைய தாய் தந்தை செய்த நற்பலன்களும் நிறைய அடங்கியிருந்தது என்று சொன்னால் மிகையாகாது.

ஆதி, கதிரவன் முதலில் முடிவு செய்தது போல் அந்த ஊரில் ஒரு ஐடி கம்பெனி தொடங்க வழி பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஓரளவுக்கு இடம் அந்த ஊரில் இருக்கும் படித்த நபர்களை வேலையாட்கள் ஆக நியமித்து கிட்டத்தட்ட அனைத்தும் ஏற்பாடு செய்து விட்டார்கள்.

கதிரவன் அதில் சற்று கவனம் செலுத்திக் கொண்டிருந்தான் இருந்தாலும் அவன் எப்பொழுதும் சுடரை அவன் கண் பார்வையில் வைத்துக் கொண்டான்.

ஒரு மாலை பொழுது அவர்களது கம்பெனி வளாகத்துக்கு அருகில் சுடர் கதிரவனை தனிமையில் சந்தித்தாள். “மாமா” அழைப்பில் கூட இத்தனை காதல் இருக்குமா? என்று கதிர் எண்ணிக்கொண்டு அவளை கண்ணோடு கண் கலந்தான்.

“சொல்லுடி, என் சுடர் மணி” என்று கதிர் அவளை கிண்டல் செய்ய, “ச்சு போங்க” என்று திரும்பி நிற்க போனவளை கையில் இழுத்து அவனின் கண் பார்க்க செய்தான்.

“சுடர்மணி சொல்லாதீங்க ரொம்ப ஒரு மாதிரி இருக்கு” என்று சுடர் சிணுங்க,
“ஏய், நீ இப்படி சிணுங்குறத பாக்குறதுக்கே சொல்லணும் போல இருக்குடி” என்று அவள் தலை கோதினான்.

“ரொம்ப ரொமான்டிக்கா இருக்கு போல!!! இன்னும் ஒரு மாசத்துல நிச்சயதார்த்தம்”

“ம்ம்”

“என்னை உங்களுக்கு உண்மையிலேயே புடிச்சிருக்கா மாமா?” என்று ஏக்கம் கலந்த குரலில் சுடர் கேட்க,

“அறிவில்லையா டி உனக்கு எத்தனை தடவை சொல்றது! நீ இப்படி கேட்கும் போது எனக்கு ரொம்ப கோவம் வருது சுடர்“ என்று உரிமை கோபம் கொண்டான் பொல்லாத கோபக்காரன்.

“இல்ல”

“என்ன இல்ல... நான் உன்ன ரொம்ப நேசிக்கிறேன்... உன் கூட தான் வாழணும்னு நினைக்கிறேன்... நீ என்னை புரிஞ்சிக்கிட்டேன்னு நம்பி என் வாழ்க்கையை உன் கிட்ட ஒப்படைக்கலாம் நினைச்சா, நீ இன்னும் என்ன புடிச்சிருக்கா ? வச்சிருக்கா? டேஷ் இருக்கா னு பேசிக்கிட்டு இருக்க” என்று சுடரின் தோள்பட்டையை பிடித்து உலுக்கிக் கொண்டிருந்தான்.

“என்ன பொறுத்த வரைக்கும் எனக்கு நீதான்னு வாழ்க்கையில நான் முடிவு பண்ணிட்டேன். உனக்கு ஒரு வேளை என்ன புடிக்கலைனா சொல்லிரு... யாருக்கும் என்ன பிடிக்கல உனக்கும் பிடிக்கலைனு நினைச்சு நான் கனடாவிற்கு போயி” என்று அவன் பேசும் முன்,

“இல்ல மாமா, நீங்க இப்ப என்ன நேர்ல பாக்குறீங்க... இவ்வளவு நாள் நம் காதல் போன்ல தான் இருந்துச்சு... ஒரு வேளை நேரில் என்னை எதுவும் புடிக்கலையோனு... நாங்க ரொம்ப வசதி இல்லாதவங்க, சொத்து பத்தும் எதுவும் இல்ல, அப்பா மட்டும் தான் அவரும் எப்ப போகலாம்னு ரெடியா இருக்காரு... எனக்கு வேற யாருமே இல்ல... இப்பயும் என்ன கல்யாணம் பண்ணிக்கணும் நீங்க நினைக்கிறீங்களா? நாளைக்கு சபையில் எனக்காக நிக்க கூட யாரும் இல்லை, இப்ப சொல்லுங்க மாமா... கண்டிப்பா நான் தான் வேணுமா உங்களுக்கு? ஒரு சின்ன வருத்தம் ‌இருந்தா கூட சொல்லிருங்க மாமா நான் விலகி போயிடுறேன்” என்று மறுபடியும் சுடர் பல்லவி படிக்க
“விழி” என்று அறைய கையை ஓங்கி விட்டான் கதிர்.

பின்னர் சற்றென்று அவளை கையைப் பிடித்து இழுத்து அருகில் நிற்க வைத்து, “உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் டி, ரொம்ப ரொம்ப, உனக்கும் இது நல்லா தெரியும் என்ன பேச வைக்காத, என்னோட கோபத்தோட அளவு உனக்கு நல்லா தெரியும். வீணா ஏதாவது பேசி உடம்ப புண்ணாக்கிடாத... இந்தக் கதிர் இந்த விழிக்கு மட்டுமே சொந்தம்” என்று இன்னும் பக்கத்தில் இழுத்தவன் அவளது தாடையை இறுக்கி பிடித்து, “இந்த உலகத்தில அம்மா பாசத்தை நான் உணர்ந்தது உன் கிட்ட மட்டும் தான்... அதை இழக்க நான் ஒன்னும் முட்டாள் இல்ல... நீ என்னை விட்டு போகலாம் ஆனால் நான் உன்னை விடமாட்டேன் உன்ன அடைய எந்த எல்லைக்கும் போவேன்” என்று காதலை கூட கோபமாக காண்பித்தான்.
அவனின் வலியை உணர்ந்து சுடர் அதற்கு மேல் அவனிடம் நின்று பேச தைரியம் இல்லாமல் ஓட, “நல்லா ஞாபகத்துல வச்சுக்கடி, இந்த உலகத்தில் நீ எந்த மூலைக்கு போனாலும் உன்னை விடமாட்டேன். உன்ன அடைய எந்த எல்லைக்கு நான் போவேன்” என்று சத்தமாக கத்தினான்.
சுடரின் கண்களில் கண்ணீர் அது தன்னவனின் அன்னை பாசத்திற்கு ஏங்கும் மனதிற்காகவும், அவன் கொண்டிருக்கும் காதலுக்காகவும்...
இந்த காட்சி அனைத்தும் மாலை கோயிலுக்கு சென்றுக் கொண்டிருந்த ஈஸ்வரியின் கண்ணில் தான் விழுந்து தொலைக்க வேண்டுமா?

அவரின் கோணத்தில் இருந்து பார்க்கும் போது அனைத்தும் தவறாகவே பட்டது. அவர் பார்த்த காட்சி கதிர் வன்மையாக சுடரை பிடித்திருந்தது, அவள் தாடையை இறுக்கி அவளிடம் அத்துமீறி நடப்பது போன்ற காட்சியாகவே விழுந்தது.

அதுவும் கடைசியில் கதிரின் சத்தமான வார்த்தைகள் அவருக்கு மிகுந்த பயத்தை உண்டாக்கியது. இன்று இரவே இதை குடும்பத்தில் பேசி தெரியப்படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். ஆனால் பாவம் விதியின் சதி இன்னும் இடியாப்ப சிக்கலில் தான் சிக்கிக் கொள்ளப் போகிறார் என்று அவர் அறியவில்லை.

முதலில் சுடரின் தந்தையிடம் பேசி விடலாம் அப்படியே சுடரையும் பார்த்துவிட்டு வரலாம் என்று இரவு சுடரின் வீட்டிற்குச் சென்றார் ஈஸ்வரி.

அங்கு வீடு அலங்கோலமாக இருப்பதை கண்டு‌ பதறிப்போய் உள்ளேச் செல்ல தந்தையின் கால் மாட்டில் அமர்ந்து அழுதுக் கொண்டிருந்தாள் சுடர்.

சுடரின் தந்தையின் கண்களிலும் தண்ணீர் வழிந்துக் கொண்டு தான் இருந்தது. சுடரின் தந்தை அவரது மகளிடம், “ம்மா பொண்ணு குட்டி! பயப்படாத மா! மாப்பிள்ளையை எப்பவும் நம்பு தாயி! தாயன்பிலாத பிள்ளை உன்ன தான் தாயாக நினைக்கிறான்! இந்த உலகத்தில இப்ப எனக்கு உயிர் போனாலும் கவலை இல்லம்மா உன்ன ஒரு நல்ல மாப்பிள்ளைக்கு நல்ல குடும்பத்தில் சேர்த்துட்டு தான் போறேன்! எதுக்கும் பயப்படாதே மாப்பிள்ளை பார்த்துக்குவார் எல்லாத்தையும்” என்று கதிரை நினைத்து பேசியவர் பார்வையில் ஈஸ்வரி பட,

“சுடர்மா உன் மாமியார் வந்து இருக்காங்க பாரு” என்று சொன்னார். ஈஸ்வரி சுடரின் அப்பாவின் அருகில் வந்து உட்கார்ந்து, “என்ன அண்ணா இது எல்லாம் எப்படி ஆச்சு இப்படி?” என்று கேட்க

ஒரு பெருமூச்சு இழுத்து விட்டவர், “ஒன்னும் இல்லம்மா சுடருக்கு கல்யாணம் நிச்சயம் ஆனது தெரிந்து ஒரு கேனப்பையன் அவனுக்கு கட்டி கொடுக்கணும்னு ரொம்ப ரவுடித்தனம் பன்றான். நான் முடியாது அப்படினு சொன்னேன். வீட்டை இப்படி பண்ணிட்டு போயிட்டான்” என்று தன் தங்கையின் மகனை பற்றி சுடரின் அப்பா சொல்ல ஈஸ்வரிக்கு அது அவரின் மகன் கதிராக தான் தோன்றியது.

“வாசகம் வரலையா தங்கச்சி?” என்று கேட்க,

“அவரு ஆதியோடு கட்சி அலுவலகத்துக்கு போயிருக்காரு நைட்டு வீட்டுக்கு வரும்போது உங்கள பாத்துட்டு வரேன்னு சொன்னாரு. அப்படியே ஆதியும் உங்களை பார்க்க வரேன்னு சொன்னான்" என்று கூறியவர், "நான் அவர் கிட்ட சொல்லி உங்களுக்கு காவலுக்கு ஆள் போடுறேன் அண்ணா" என்று ஈஸ்வரி சொல்ல

“சரிமா” என்று சம்மதமாக தலையசைத்தார் சுடரின் அப்பா. “வீட்டையும் சுத்தம் செய்ய ஆள் அனுப்பி விடுறேன்” என்று கூறியவர் பேச வந்த விஷயத்தை மறந்து விட்டு, “முதலில் உங்களைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று சென்று விட்டார் ஈஸ்வரி.
ஈஸ்வரி இது எல்லாம் செய்தது கதிர் என்று நினைத்து சுடரின் அப்பாவின் முன் நிற்க வலுவில்லாமல் ஒருவேளை, 'என்ன பையன் உன் பையன்! இப்படி ஒரு பொண்ணுக்காக பண்றான்' என்று கேட்டு விடுவார்களோ என்று பயந்து ஓடி வந்து விட்டார்.

இரவில் சுடரின் வீட்டிற்கு வாசகம், ஆதி மற்றும் கதிர் வந்தார்கள். சுடரின் அப்பா கதிரை அருகில் அழைத்து அமர செய்தவர் சுடரையும் கண்ணால் வரும்படி அழைத்தார்.

இருவர் கையையும் பிடித்துக் கொண்டவர், “என் பொண்ணு உங்கள நல்லா பார்த்துக்கும் தம்பி. அவள உங்க கூடவே வச்சுக்கங்க வயசு பொண்ணு அனுபவிக்க வேண்டிய எந்த சந்தோஷத்தையும் இவ அனுபவிக்கல... இந்த இத்துப்போன நோய் புடிச்ச அப்பனை பாத்துக்குறக்காக அவ படிப்பை விட்டு எனக்காக என் கூடவே இருக்கா, இனிமேலாவது அவளுக்கான வாழ்க்கையை அவ வாழணும் தம்பி.”

“இவ்வளவு நாளு இருக்கேனா செத்தேனா னு கூட பாக்காத சொந்தம் இப்ப உங்க கல்யாணம்னு தெரிஞ்ச பிறகு என்கிட்ட இருக்கிற வீட்டுக்காகவும் அந்த நிலத்துக்காக சண்டை போட்டுக்கிட்டு என் தங்கச்சி மகன் இதெல்லாம் பண்ணிட்டான்.”

“ஏன்னு தெரியல தம்பி அந்த நிலம் வேணும்னு ரொம்ப பிடிவாதமா சண்டை போடறாங்க. அது என் பிள்ளைக்கு நான் செய்யும் சீர்... என் பிள்ளையை நல்லா பாத்துக்கோங்க தம்பி என்ன விட்டா அவளுக்கு வேற யாரும் இல்ல” என்று கஷ்டப்பட்டு பேசியவர் அவர் கழுத்தில் இருந்த செயினை கழட்டி கதிரின் கழுத்தில் அணிவித்தார்.

உடனே கதிர் என்ன நினைத்தான் என்று தெரியவில்லை அவன் கழுத்தில் இருந்த அவனது செயினை கழட்டி சுடரின் கழுத்தில் அணிவித்தான்.

இப்போது சுடரின் அப்பாவின் செயின் கதிரின் கழுத்திலும் கதிரின் செயின் சுடரின் கழுத்திலும் இருக்க, இது பார்ப்பதற்கு மாலை மாற்றியது போல் தோன்றியது சுடரின் அப்பாவிற்கு.

பிறகு மெல்ல திரும்பி வாசகத்தை பார்த்தவர், “மணி ரெண்டு பிள்ளைங்களையும் பாத்துக்கடா” என்று தன் கடமை முடிந்தது என்று இந்த உலகத்தை விட்டுச் சென்று விட்டார்.

“அப்பா” என்று சுடர் கதற அவளை இறுக அணைத்துக் கொண்டான் கதிர். ஆதிக்கும் சற்று மனம் கலங்க அதனை புறம் தள்ளியவன் மற்றவர்களுக்கு செய்தியை கூறினான்‌.

மீனாட்சி அவர்களுடைய மகனுடன் வந்து பார்த்து விட்டுச் சென்றார். ரொம்ப நாள் நோய் வாய்ப்பட்டிருந்ததால் அன்றைய தினமே சுடரின் அப்பாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

கதிர் தான் சுடரின் அப்பாவிற்கு மருமகன் என்ற முறையில் அனைத்தும் செய்தான். ஆனால் பாவம் ஈஸ்வரிக்கு இது எதுவும் தெரியவில்லை.

இப்போது இந்த தந்தை இல்லாத பிள்ளையை எப்படி தன் பிள்ளையிடம் இருந்து காப்பது என்று மட்டும் தான் ஈஸ்வரியின் தலையில் ஓடிக் கொண்டிருந்தது.

கதிர் சுடரின் வீட்டிற்கு இன்னும் காவலை அதிகப்படுத்தினான். பதினாறாம் நாள் காரியம் முடிந்தவுடன் சீக்கிரம் நிச்சயம் மட்டும் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

ஒரு பக்கம் நிச்சயதார்த்த வேலைகள் நடந்துக் கொண்டிருந்தது மறுபக்கம் ஆதியின் தேர்தலுக்கான பணிகளும் செவ்வனே நடந்துக் கொண்டிருந்தது. இந்த முறை கண்டிப்பாக தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று ஆதி மிகவும் பரபரப்புடன் செயல்பட்டுக் கொண்டிருந்தான். ஆதிக்கு சாதகமாக வாசகமும் முழு நேரமும் அரசியல்வாதி போல ஆதியுடனே இருந்தார்.

ஆதியின் செயல்களை முழுவதுமாக கவனிப்பது வாசகத்தின் வேலை அவன் இந்த வீட்டிலும் மக்களின் முன் எதுவும் சிறு பிழை செய்யாமல் பார்த்துக் கொண்டார்.

இந்த பக்கம் கதிரின் காதல் இன்னும் ஆழமாக வேரூன்றி வளர ஆரம்பித்திருந்தது. கதிரை பொருத்தவரை அன்று நடந்தது அவர்கள் திருமணமாகவே எடுத்துக் கொண்டான்.

பல சந்தர்ப்பங்களில் தனிமைகள் கிடைத்தாலும் இருவருமே கண்ணியத்துடன் தங்கள் காதலை மட்டும் வளர்த்தார்கள்.

இன்னும் இரண்டு நாளில் நிச்சயதார்த்தம் அப்பொழுது தான் அந்த சம்பவம் அவர்கள் வாழ்க்கையில் நடந்தேறியது. அந்த சம்பவத்தினால் இவர்களின் அழகான காதல் முடிவுக்கு வர போகும் நிலையில் நின்றது.

சுடரின் வீட்டின் அருகில் ஒரு சிறிய அழகான குளம் உள்ளது. அங்கே மழைக்காலத்தில் நீர் சேமிக்கப்பட்டு அந்த நீராடு வெயில் காலத்தில் பாசனத்திற்கு உதவும்.
அந்தக் குளத்தின் அருகில் இருந்த மரங்களும் செடிகளும் நறுமலர்களும் வாசம் பரப்ப அந்த சூழலில் ஒரு ஏகாந்தமான இனிமையான சூழ்நிலையாக இருந்தது.

“இன்னும் ரெண்டு நாள்ல நிச்சயதார்த்தம் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு மாமா,சீக்கிரம் கல்யாணம் பண்ணி உங்க கூடவே வந்துரணும் போல இருக்கு மாமா”

“அப்பதானே சீக்கிரம் அப்பாவை கொண்டு வர முடியும்! தனியா இருக்கேன் எனக்கு ஒரு மாதிரி இருக்கு மாமா” என்று சொல்ல அவள் தலையை செல்லமாக முட்டினான் கதிர்.

“கண்டிப்பா டி நிச்சயம் முடிஞ்ச உடனே உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு போக எல்லா ஏற்பாடு நான் பண்ணிட்டேன் டி, ஒரு ரெண்டு நாள் மட்டும் பொறுத்துக்கடி தங்கம்மா” ஏன்று கதிர் அவளை செல்லம் கொஞ்ச,

“கல்யாணம் முடிஞ்ச பிறகு தான் வீட்டுக்கு கூட்டிட்டு போகணும். நீங்க இப்ப நிச்சயம் முடிந்து கூட்டிட்டு போறீங்களா ஐ ஜாலி!” என்று பெண் புறா இன்னும் சிணுங்கியது.

“உனக்கு ரொம்ப தான் டி ஆசை, கல்யாணம் முடிஞ்ச பிறகு தான் என் வீட்டுக்கு வர முடியும் இப்ப மீனாட்சி அம்மா வீட்டில் தங்க எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன். நிச்சயம் முடிஞ்ச உடனே உன்னையும் அவங்க சேர்த்து கூட்டிட்டு போய்டுவாங்க.” என்று அழகாக புன்னகைத்தான் கதிர்.

“கல்யாணம் முடிஞ்ச உடனே உன்னை நான் சேர்த்துக் கொள்வேன். அதுவரைக்கும் ஒன்லி பேச்சு நோ ஆக்சன்” என்று அவளைப் பார்த்து கண் சிமிட்டி அழகாக சிரித்தான்.

“ஏன் மாமா நிச்சயம் முடிஞ்ச பின்ன நான் நம்ம வீட்டுக்கு வரலையா?” என்று பாவம் போல சுடர் கேட்க,

“வேணாம்டி, எந்த ஒரு சூழ்நிலையிலும் நம்ம பெத்தவங்களுக்கு தலைகுனிவ ஏற்படுத்தக் கூடாதுனு நினைக்கிறேன் டி. உன்னை கூடவே வச்சுக்கிட்டா கண்டிப்பா என்னால கண்ட்ரோலா இருக்க முடியாது. அதனால தான் சொல்றேன் நீ மீனாட்சி அம்மா வீட்டில் இரு கல்யாணம் முடிஞ்ச உடனே நம்ம வீட்டுக்கு வரலாம் ஓகேவா?”

“இப்பவே உன்ன பார்த்துட்டு என்னால சும்மா இருக்க முடியல... நைட் எல்லாம் உன் நினைப்பு தான் என்ன பண்றதுனு தெரியாம முழிச்சுக்கிட்டு இருக்கேன் நானு”

“என்ன பண்ணனும் மாமா?“

“எல்லாம் தான் பண்ணனும்”

“உனக்கு இல்லாததா டா மாமா, எடுத்துக்க மாமா, நான் உனக்கு தான் சொந்தம். நானே உன்னை விட்டாலும் நீ என்னை விட மாட்டேன்னு எனக்கு நல்லா தெரியும் எடுத்துக்க மாமா” என்று சொல்ல

அவளது நம்பிக்கையில் இவன் உள்ளம் உருகிப் போய் விட்டது. "இந்த நம்பிக்கையை நான் காப்பாற்ற வேண்டும் டி கல்யாணம் முடிஞ்ச உடனே தான் எல்லாம், இப்ப இது மட்டும் தான்” என்று அவளது நெற்றியில் முத்தம் வைத்து அவளை அனுப்பி வைத்தான்.

இவர்கள் பேசும் அனைத்தையும் மரத்திற்கு பின்னால் நின்று கேட்டுக் கொண்டிருந்த சுடரின் அத்தை மகன், கதிரவன் அவனிற்கு ஒரு முக்கிய அழைப்பு வர அதனுடன் பேசிக் கொண்டிருந்தான்.

அவன் பேசிக் கொண்டிருந்தாலும் ஒரு பார்வை சுடரின் மேல் இருக்க தான் செய்தது.

அப்போது அங்கு ஒரு வண்டி கிராஸ் செய்ய அந்த நொடியில் சுடரின் அத்தை மகன் சுடரை வாயைப் பொத்தி பக்கத்தில் இருந்த இடத்திற்கு இழுத்துச் சென்றான்.

வண்டி போனவுடன் சுடர் அங்கு இல்லாததால் கதிர் சுடர் வீட்டுக்குச் சென்று விட்டாள் என்று நினைத்துக் கொண்டான்.

அதே சமயம் காவலாளிகளும் இன்னும் சுடர் வீட்டுக்கு வரவில்லை என்று நினைத்துக் கொண்டார்கள்.

ஆனால் சுடரோ அவளது மானத்தை காப்பாற்ற தலை தெறிக்க ஓடிக் கொண்டிருந்தாள். எல்லோரும் இது போன்ற சமயத்தில் கடவுளைத் துணைக்கு அழைப்பார்கள். சுடர் மனதில், 'மாமா எப்படியாவது வந்து என்ன காப்பாத்திரு மாமா' என்று கதிரிடம் மானசீகமாக வேண்டிக்கொண்டு ஓடிக் கொண்டிருந்தாள். சுடரின் வேண்டுதல் நிறைவேறுமா?
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீயாகி போகிறேன் நான்
33356
நீயா நானா 7

“ப்ளீஸ் உனக்கு என்ன வேணும்? எது வேண்டுமானாலும் நான் தரேன் அந்த நிலம் தானே நான் கையெழுத்து போட்டு தரேன், என்னை விட்ரு” என்று சுடர் கெஞ்ச, “அது எல்லாம் வேண்டாம் சுடரு! இந்த தாலி மட்டும் கட்டி விடுறேன். அதுக்கப்புறம் நீ எனக்கு தான் சொந்தம், இது எல்லாம் அந்த நிலத்திற்கு தான்” என்று அவன் சொல்லி சுடர் கழுத்தில் தாலி கட்ட வர அவனை தள்ளி விட்டு ஓடினாள்.

ஓடும் போது கால் இடறி கீழே விழுந்ததில் சுடர் கையில் இருந்த வளையல்கள் அனைத்தும் நொறுங்கி சுடரின் கையையும் கிழித்து விட்டது.

செருப்புகள் ஒரு பக்கம் பறக்க எக்காரணம் கொண்டும் அவளது அத்தை மகன் கையால் தாலி வாங்கி விடக்கூடாது என்பதில் முனைப்பாக ஓட ஆரம்பித்தாள் சுடர்.

பின்னாடி அவன் வருகிறானா என்று திரும்பி பார்த்தே ஓடியதில் எதிரில் இருந்த மரத்தில் ‘டம்’ என்று மோதி கீழே விழுந்தாள் சுடர். அவளை எப்படியும் பிடித்து விட வேண்டும் என்ற வெறியுடன் ஓடி வந்தவன் கையில் மறுபடியும் சிக்கினாள்.
மறுபடியும் அவன் முகத்தை பார்த்து, “ப்ளீஸ்! நான் உன்னை அப்படி நினைக்கவே இல்ல, எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல என்னை எதுவும் பண்ணிராத ப்ளீஸ்” என்று கெஞ்ச,

“சீ சீ... நான் உன்னை தொட மாட்டேன். எனக்கு உன்னை பெருசா ஒன்னும் புடிக்கல. ஆனா அந்த நிலம் எனக்கு வேணும். இதை கல்யாணம் பண்ணி தான் வாங்கணும் அப்பதான் என்கிட்ட இருந்து கோடிக்கணக்குல இந்த நிலத்தை வாங்குவாங்க. உன்னை மிரட்டி வாங்குவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. ஆனால் அதை செய்யக்கூடாதுனு தெளிவா சொல்லி இருக்காங்க, ஒரு வேளை நீ இறந்தால் கூட நிலம் எனக்கு மட்டும் சொந்தம் சொல்ற மாதிரி இருக்கணும்னு சொல்லி இருக்காங்க அதுக்கு மட்டும் தான் இந்த தாலி.” என்றவன்,

“நீ ரொம்ப பேசாம தாலியை வாங்கிக்க. இந்த நிலத்தை நான் வித்த உடனே உன்னை வந்து அத்து விட்டுருவேன். நீ அப்புறம் எப்படி போனாலும் எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை எனக்கு வேண்டியது அந்த நிலம் மட்டும் தான்” என்று சொன்னவன் மறுபடியும் தாலி கட்ட வர, அவன் உயிர் நாடியில் ஓங்கி எத்தினாள் சுடர்.

அவன் வலி தாங்காமல் நிலை தடுமாற அந்த சந்தர்ப்பத்தில் அவனை தள்ளிவிட்டு திரும்பி ஓடும் போது அவளது சுடிதார் கை அங்கிருந்த ஏதோ ஒரு கிளையில் மாட்டியது அதை பிரித்து எடுத்துக் கொண்டு ஓடினாள்.

இவை அனைத்தும் ஒரு புறம் நடந்துக் கொண்டு இருக்க, கதிர் அவனோட ஜிபிஎஸ் இன் மூலம் சுடர் இன்னும் வீட்டிற்கு போகவில்லை என்று உணர்ந்து அவளது ஜிபிஎஸ் லொகேஷன் காட்டும் இடத்திற்கு விரைந்துக் கொண்டு இருந்தான்.
ஒரு கட்டத்திற்கு மேல் அந்த காட்டுப்பகுதிக்குள் வண்டி செல்ல முடியாது என்று உணர்ந்து வண்டியை வெளியில் நிறுத்தி விட்டு உள்ளே ஓடினான்.

இன்னும் ஒரு வாரத்தில் நிச்சயம் நடக்க இருப்பதால் ஈஸ்வரியும் வாசகமும் நிச்சயத்திற்கான ஏற்பாடுகளை செய்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
சுடர் ஒரு புறம் அவளது அத்தை மகனிடம் இருந்து தாலி வாங்காமல் தப்பித்து ஓடிக் கொண்டிருந்தாள். கதிரவன் ஒரு புறம் சுடரை தேடி ஓடிக்கொண்டிருந்தான். எதுவும் தெரியாத ஈஸ்வரியும் வாசகமும் கதிர் வண்டி ஏன் இந்த பகுதியில் நின்றுக் கொண்டிருக்கிறது, உள்ளே அவன் என்ன செய்துக் கொண்டிருக்கிறான் என்று அவர்களும் உள்ளே நுழைந்தார்கள்.

ஈஸ்வரிக்கு உடைந்த கண்ணாடி வளையல் துகள்கள் கண்டவுடன் அவருடைய இதயம் படபடவென்று வந்தது.
சற்று தூரம் தள்ளி வரவும் சுடரின் செப்பல்கள் இருந்ததைக் கண்டு வாசகத்திடம், “இது சுடர் செப்பல் போல இருக்கிறதுங்க” என்று கூறியவர் வாசகத்தின் கையை இறுக பற்றிக் கொண்டார்.

வாசகத்திற்கு ஈஸ்வரியின் மனநிலை நன்றாக புரிந்தது. அவர் என்ன யோசிக்கிறார் என்பதை புரிந்துக் கொண்டார். ஆனால் உண்மை ஏது என்று தெரியாமல் எந்த முடிவுக்கும் வரக்கூடாது என்று திண்ணமாக இருந்தார்.

சிறிது தூரத்தில் சுடரின் கிழிந்த உடையை பார்த்தவுடன் ஈஸ்வரி ஏங்கி ஏங்கி அழுக ஆரம்பித்து விட்டார்.

வாசகமும் பிரச்சனையின் வீரியத்தை உணர்ந்தவர் உடனே ஆதிக்கு போன் செய்து, “ஆதி, சீக்கிரம் நான் சொல்ற இடத்துக்கு வா, வரும்போது ஆம்புலன்ஸ் அழைச்சிட்டு வா” என்று சொல்லி போனை அணைத்து விட்டு மறுபடியும் சுடரை தேட ஆரம்பித்தார்கள்.

ஈஸ்வரி ஒரு புறம், “சுடர்... சுடர்” என்று கத்தினார்.

கதிர் ஒரு புறம், 'விழி உனக்கு ஒன்னும் ஆகியிருக்காது. விழி, தயவு செய்து என்கிட்ட வந்து விடுடி நீ இல்லனா எனக்கு யாருமே இல்லடி' என்று மனதில் புலம்பிய படியே அவளை தேடி எல்லா பக்கமும் ஓடினான்.

இவர்கள் தேடும் சுடர்விழி எக்காரணம் கொண்டும் அவளது அத்தை மகன் கையால் தாலி வாங்கி விடக்கூடாது என்று ஒடியவள் மறுபடியும் அந்த அரக்கனின் கையில் மாட்டினாள்.

சுடர் அவன் கையில் சிக்கியவுடன் அவளது கன்னத்தில் ஓங்கி அறைய உதடு கிழிந்து ரத்தம் கசிய கீழே விழுந்தாள்.

இனி ஓடி பிரயோஜனம் இல்லை என்று நினைத்தவள் அங்கே அருகே இருந்த ஒரு குழியில் முட்கள் நிறைந்து இருந்தது. அந்த அத்தை மகனிடம் இருந்து தப்பிக்க வேறு வழி இல்லாமல் “மாமா” என்று கத்திக் கொண்டே அந்த முள் பள்ளத்தில் விழுந்தாள்.

சரியாக அவள் விழபோகும் நேரம் அங்கு வந்த கதிர், “விழி” என்று அழைத்துக் கொண்டு வர அதற்கு முன் அவனை பார்த்துக் கொண்டே பள்ளத்தில் விழுந்தாள்.

விழியின் இந்த செயலைப் பார்த்து அந்த அத்தை மகன் பயந்து ஓடிவிட்டான். அவன் தப்பித்து வெளியே வர அங்கு சரியாக ஆம்புலன்ஸை அழைத்துக் கொண்டு ஆதியும் வர, 'ஏன் யாரோ ஒருவன் இப்படி ஓடுகின்றான்?' என்று நினைத்த ஆதி, “நீங்க ப்ளீஸ் உள்ளே போங்க” என்று ஆம்புலன்ஸில் இருந்தவர்களிடம் உள்ளேச் செல்லும் வழி சொல்லி விட்டு ஒடியவனை துரத்த ஆரம்பித்தான் ஆதி.

இங்கு சுடர் குழியில் விழும் போது அவளது முகத்தை மூடிக்கொண்டு விழ அந்த முட்கள் அவள் கை மற்றும் உடம்பை கிழித்தது.

கதிரவன் உடனே வேகமாக அனைத்து முட்களையும் அப்புறப்படுத்தி விட்டு சுடரை இழுத்துத் தன்னோடு கட்டிக் கொண்டான்.

விழி கண் திறந்து கதிரவனை பார்த்து, “நீ வருவனு எனக்கு தெரியும் மாமா ஐ லவ் யூ” என்று சொல்லியபடி மயங்கி விழுந்தாள்.

கதிரவன் சுடரின் மேல் இருந்த இன்னும் சில முட்களை எடுத்து விட்டு கையில் ஏந்திக் கொண்டு வெளி பக்கமாக ஓட ஆரம்பிக்க சரியாக ஈஸ்வரியும் வாசகமும் அங்கே வந்தார்கள்.
அவர்கள் கண்டது கதிரவன் சுடரை கையில் ஏந்திக் கொண்டு ஓடுவதை. நல்லவேளையாக கதிர் ஓட எதிரே ஆம்புலன்ஸ் ஆட்கள் வர விரைவாக சுடர் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு உடனே முதல் உதவி அளித்து ஹாஸ்பிடலுக்கு விரைவாக ஆம்புலன்ஸ் கிளம்பியது.

கதிரின் பின்னால் ஓடி வந்த ஈஸ்வரியும் வாசகமும் ஆம்புலன்சில் ஏறுவதைக் கண்ட பின் அவர்கள் வண்டியே எடுத்துக்கொண்டு அந்த ஹாஸ்பிடலுக்கு விரைந்தனர்.

இங்கே சுடரின் அத்தை மகனை விரட்டிக் கொண்டு ஓடிய ஆதி அவனை பிடித்து நன்றாக அடித்து விட்டு போலீஸில் தகவல் சொல்லி போலீஸிடம் அவனை ஒப்படைத்து விட்டு ஹாஸ்பிடல் பற்றிய தகவலும் அளித்து ஹாஸ்பிடலுக்கு விரைந்தான்.

“சுடருக்கு வெறும் வெளிக்காயங்கள் மட்டுமே, அவங்க பயத்தில் மயங்கி விழுந்திருக்காங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல மயக்கம் தெளிஞ்சுருவாங்க.” என்று மருத்துவர் கதிரிடம் தகவல் சொன்னவர், “அவங்க எழுந்தவுடன் சொல்லுங்கள்” என்று வெளியேச் சென்று விட்டார்.

கதிரின் சட்டை முழுவதும் சுடரின் ரத்தக்கறைகள். கதிரின் கண்களில் கண்ணீர் மட்டும் வந்து கொண்டே இருந்தது. அவனால் எதையும் யோசிக்க முடியவில்லை. “நீ வந்துருவனு எனக்கு தெரியும் மாமா” இந்த வார்த்தைகள் மட்டுமே அவன் காதில் ஒலித்துக் கொண்டு இருந்தது.

'என் மேல உனக்கு இப்படி ஒரு நம்பிக்கையா? உன் நம்பிக்கையை நான் காப்பாற்றணும் கடவுளே!' என்று கடவுளை வேண்டிக் கொண்டிருந்த சமயம் ஆவேசமாக உள்ளே வந்த ஈஸ்வரி கதிரின் சட்டையை பிடித்து எழுப்பி அவனை கன்னம் கன்னமாக அறைந்து விட்டார்.

எதற்கு அடிக்கிறார் என்று தெரியாமல் அமைதியாக நின்றிருந்தான் கதிர். பின்னே வந்த வாசகமும் ஆதியும் வந்து ஈஸ்வரியை தடுப்பதற்குள் அவனை மொத்தமாக அடித்து துவைத்து இருந்தார் ஈஸ்வரி. கண்ணு மண்ணு தெரியாமல் அடித்த ஈஸ்வரி அவனின் உடலளவில் காயப்படுத்தியது பத்தாது என்று, “நான் எதுக்கு இவ்வளவு வருஷம் பயந்தேனோ அதே மாதிரி வந்து பொறந்திருக்கியேடா, ஒரு பொண்ண அவளோட விருப்பம் இல்லாம உன் இச்சைக்கு பலி கொடுத்துட்டியா டா, சுடர் உன் அண்ணன் விரும்பற பொண்ணு னு தெரிஞ்சும் உன் அண்ணனுக்காக பேசி வச்சிருக்கிற பொண்ணு னு தெரிஞ்சும் எப்படி உன்னால இப்படி பண்ண முடிஞ்சது?” என்று ஈஸ்வரி ஆவேசமாக கத்த அங்கிருந்த அனைவருக்கும் சுத்தமாக எதுவும் புரியாத நிலை.

ஈஸ்வரி தவறாக புரிந்து இருக்கிறார் என்று நினைத்த கதிரவன் அவருக்கு விளக்கம் கொடுக்க, “அம்மா” என்று அழைக்க, “என்ன அப்படி கூப்பிடாத” என்று காதை பொத்திக் கொண்டார் ஈஸ்வரி.

“உன்ன சொல்லி தப்பில்லை என்ன தான் குப்பைய கோபுரத்தில் வந்து உட்கார வைச்சு இருந்தாலும் குப்பை... குப்பை தான்னு நிரூபிச்சிட்ட... நீயும் உன் முகம் தெரியாத அப்பன் மாதிரி தான் நிரூபிச்சிட்டியேடா” என்று ஈஸ்வரி கத்தி முட்டி போட்டு தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பிக்க, “ஈஸ்வரி,சித்தி” என்ற குரல்கள் அந்த அறையை நிறைத்தது.

கதிரின் மூளை இந்த செய்தியை உள்வாங்க வேலை நிறுத்தம் செய்தது. கதிர் மூளை அந்த செய்தியை கிரகிக்க இப்போது மூச்சுக்காக தவிக்க ஆரம்பித்தான்.
ஒரு நிமிடம் அவன் இதயமே நின்றது போல் ஒரு உணர்வு, சுற்றிலும் இருளடைந்தது போல் இருந்தது. எதுவும் தெரியவில்லை அப்படியே கண்ணை மூடிக்கொண்டு நின்றான்.

அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு சின்ன ஒலி காற்று “மாமா” என்று கதிரை திரும்ப இந்த உலகத்திற்கு இழுத்து வந்தது.

மறுபடியும் மிக சிறு குரலில் கதிரை நோக்கி கையை நீட்டி, “மாமா” என்று அழைக்க இரும்பை இழுக்கும் காந்தம் போல சுடரை நோக்கி விரைந்தவன்,
சுடர் எழுந்து நிற்க முடியாமல் கதிரை நோக்கி எழுந்து அடி எடுத்து வைக்க அவளை நோக்கி ஓடி வந்த கதிர் அவளை இறுகப் பற்றிக் கொண்டான்.

சுடர் “மாமா” என்றழைத்து அவனை கட்டிக்கொண்டு மறுபடியும் மயங்கி விட்டாள். அவளை இறுக பற்றிக் கொண்ட கதிர், “என்ன விட்டு போயிடாத விழி, எனக்கு யாரும் இல்லை நீ இன்னும் ஒரு நொடி கழிச்சு எழுந்திருந்தா கூட நான் உயிரோடு இருந்திருப்பேனா என்று தெரியவில்லை. என்ன பெத்தவளே என்னை நம்பல ஆனா நீ என்னை இவ்வளவு நம்புற இப்பவும் என்னைய தான் கூப்பிடுற ப்ளீஸ் விழி என்னை விட்டு போயிறாத என் கூடவே எனக்கு மூச்சு கொடு டி“ என்று கதற ஆரம்பித்து விட்டான்.

அங்கிருக்கும் யாருக்கும் என்ன செய்வது என்று கூட தெரியவில்லை. ஈஸ்வரிக்கோ உச்சகட்ட அதிர்ச்சி. சுடர் கதிரை மாமா என்று அழைப்பதும் கதிர் அவளை “விழி” என்று கட்டிக் கொண்டு கதறுவதையும் பார்க்க, 'அய்யோ நீ தப்பு பண்ணிட்ட?' என்று அவரது நெஞ்சம் எடுத்துரைத்தது.

அதிர்ச்சியில் அவர் ஆதியை பார்க்க அவன் இயல்பாக எடுத்துக் கொண்டது போல் தான் இருந்தது. பின் குற்ற உணர்ச்சியுடன் வாசகத்தை பார்க்க அவர் ஈஸ்வரியை பார்த்த பார்வையில் அவரது கோபத்தின் வீரியம் புரிந்தது. வாசகம் எதுவும் பேசாமல் வெளியில் சென்று அமர்ந்து விட்டார்.

சுடர்விழியை கவனிக்க மருத்துவர்கள் ஓடி வந்து அவளுக்கு மருத்துவம் செய்த மருத்துவர், ‌“கொஞ்சம் ஸ்ட்ரஸ் அதனால மயக்கம் தான் இன்னும் சிறிது நேரத்தில் கண் விழிச்சுருவாங்க மூன்று நாட்கள் மட்டும் ஹாஸ்பிடல்ல இருக்கணும். அப்புறம் வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம்” என்று கூறியவர், “சின்ன ட்ரோமா (மன அதிர்ச்சி) தான்! வெளியே வர கொஞ்சம் நேரம் ஆகும், பார்த்துக்கோங்க. தேவைப்பட்டால் சைக்கியாட்ரிஸ்ட் கிட்ட கன்சல்டிங் தரலாம்”

இதற்கு இடையே போலீஸ் வந்தனர். சுடரின் அத்தை மகன் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும் அவன் மீது வழக்கு பதிய சுடரின் வாக்குமூலத்தை வாங்க வந்தார்கள்.

போலீஸ் சொல்லி தான் அங்கே என்ன நடந்தது என்பது ஈஸ்வரிக்கு தெரிந்தது. அவர் மிகுந்த குற்ற உணர்ச்சியுடன் தன் மகனை பார்க்க அவனோ சுடர் அருகே அவளது கைகளை பற்றிக் கொண்டு இருந்தான்.

சுடர் மெல்ல கண் விழிக்க அவளது வாய் மறுபடியும் முதலில் “மாமா” என்று தான் முணுமுணுத்தது. உடனே அவளிடம் சென்று அவளின் காயங்கள் தாக்காதவாறு மெல்லமாக கட்டிக் கொண்டான்.
சுடர் கண்ணீருடன் கதிரவனை பார்த்து, “மாமா எனக்கு ஒன்னும் ஆகல மாமா, அவன் என்னை எதுவும் பண்ணல மாமா, நான் நல்லா தான் இருக்கேன் மாமா, எனக்கு ஒன்னும் ஆகல என்னை அவன் எதுவுமே பண்ணல மாமா, தாலி மட்டும் தான் கட்ட வந்தான் மாமா, வேற எதுவும் பண்ணல மாமா நான் வந்து... நான் தூய்மையா தான் மாமா இருக்கேன்" என்று அவள் சொல்ல சொல்ல அங்கிருந்த அனைவருக்கும் நெஞ்சில் சிறு பாரம் ஏறி போனது.
வாசகத்திற்கு ஈஸ்வரியின் குரல், “மாமா என்னால முடியல மாமா கூட்டிட்டு போய்ருங்க மாமா, எனக்கு பயமா இருக்கு மாமா, எனக்கு ரொம்ப வலிக்குது எனக்கு எரியுது மாமா” என்று அழுதது தான் காதில் விழுந்தது.

இப்போது ஈஸ்வரியின் நிலையை புரிந்துக் கொண்ட வாசகம் அவருக்கு துணையாக அவரது பக்கத்தில் போய் நின்று அவரது தோளை பற்ற மௌனமாய் அவரை கட்டிக் கொண்டு கண்ணீர் வடித்தார்.

வாசகம் எதுவும் பேசவில்லை. ஆனால் என்றும் உனக்கு துணையாக நான் இருப்பேன் என்ற உறுதியை இப்போதும் ஈஸ்வரிக்கு அவர் தந்துக் கொண்டிருந்தார்.

அங்கே சுடர் தன்னை நிரூபிக்க, “மாமா நீங்க வேணும்னா டாக்டர் கிட்ட கேளுங்க மாமா எனக்கு ஒன்னும் ஆகல மாமா” என்று சொல்ல அதுவரை அவளை சமாதானப்படுத்தும் நோக்கத்தில் முதுகை தடவிக் கொண்டிருந்தவன் அவளது ஒவ்வொரு வார்த்தையிலும் கதிரின் உடலும் மனமும் இறுகத் தொடங்கியது.

ஒரு கட்டத்திற்கு மேல் கதிரால் இதை தாங்க முடியாமல் அருகில் இருந்த அவனோட ஃபோனை தரையில் எறிய சுக்கு நூறாக உடைந்தது.

“ஏன் டி உனக்கும் என்ன பார்த்தா உடம்பு இச்சைக்கு அலையுறவன் போல தெரியுதா?” என்று கதிர் கேட்க அந்த வார்த்தைகள் முதலில் ஈஸ்வரியை தான் தாக்கியது.

“உனக்கு ஒன்னும் ஆகல, எதுவும் ஆகியிருந்தாலும் அதை பத்தி எனக்கு கவலை இல்லை. ஏன்னா நான் இதை நேசித்தவன்” என்று அவனது நெஞ்சில் கைவைத்து சொன்னவன்,
“உன்னோட விர்ஜினிட்டி (கன்னித்தன்மை) ப்ரூஃப் பண்ணி தான் என் கூட வாழ ஆரம்பிக்கணும்னு நினைச்சா சாரி அப்படிப்பட்ட ஒரு கல்யாணமே எனக்கு வேண்டாம்.” என்றவன் அவளது மருண்ட விழிகளை பார்த்து தன்னை கடிந்துக் கொண்டவன், “சாரி டி, இந்த ஜென்மம் என் வாழ்க்கை உன் கூட மட்டும் தான் டி, நான் வாசகத்தோட மகனா இல்லாம இருக்கலாம்! ஆனா வாசகத்தோட வளர்ப்பு டி நான்” என்று சொன்னவன் கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்துக் கொண்டிருந்தது.
சுடர் சற்று அமைதி ஆனவுடன் அங்கிருந்து கிளம்பிய கதிரவனை பார்த்து, “எங்க டா போற?" என்று ஆதி கேட்க, “கம்பெனிக்கு தான்” என்று சொன்னவன் மெதுவாக ஆதியை பார்த்தவன், “ஏதோ மிஸ் அண்டர் ஸ்டாண்டிங் போல இருக்கு ஆதி, எதுக்கும் அமிழ்தினி வீட்டில ஒரு தடவை பேசிக்க, நீதான் மாப்பிள்ளைனு தெளிவா பேசிக்க” என்றவன், “நான் நிச்சயதார்த்தத்துக்கு நேரா வந்துருவேன், நிச்சயம் முடிந்து கனடா போறேன், அப்புறம் கல்யாணத்துக்கு சரியா வந்துருவேன்” என்று ஆதியின் கண்களை பார்க்காமல் பேசியவன், “நாங்க கனடா போயிடுறோம் ஆதி” என்று சொல்லி வெளியே போகப் போனான்.

“கதிரா” என்று வாசகம் அழைக்க, “உங்களை அப்பா னு கூப்பிடலாம் தானே?” என்று கேட்க உள்ளுக்குள் நொறுங்கி விட்டார் வாசகம்.
“யாரு என்ன சொன்னா என்ன டா ! நீ என்னோட மகன் டா! அவ உன்னை பத்து மாசம் சுமந்திருக்கலாம் ஆனா கருவா உருவானதுல இருந்து இந்த நிமிஷம் வரைக்கும் உன்னை என் நெஞ்சில் சுமந்துக்கிட்டு இருக்கேன் டா, இதுக்கு மேல என்ன சொல்ல எனக்கு தெரியல” என்றவர் சற்று தடுமாற ஓடி வந்து, “அப்பா” என்று கட்டிக்கொண்டான் கதிர்.
இவர்களின் பிணைப்பை பார்க்கும் போது ஆதியின் மனதிலும் அவனோட தந்தையை பற்றி சின்ன ஏக்கம் வந்தது உண்மை தான்.

அப்படியே வெளியே வந்தவன் அமிழ்தினிக்கு முதல் முறையாக அவனுடைய செல்பேசியில் இருந்து அழைப்பு விடுத்தான்.
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீயாகி போகிறேன் நான்

33456

நீயா நானா 8

கல்யாணம் பேசியதற்கு அப்புறம் இன்று தான் முதன்முதலாக அமிழ்தினி போனுக்கு அழைத்தான். இரண்டு நொடிகளில் போன் இணைக்கப்பட, “சொல்லுங்க மருமகனே“ என்று உற்சாகமாக கேட்டது மீனாட்சியின் குரல்.

“நான் ஆதிநிலவன்”

“தெரியும் மருமகனே உங்க நம்பர் எனக்கு மனப்பாடமா தெரியுமே” என்று மீனாட்சி சொல்ல,

“நான் அமிழ்தினி கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றவன் மீனாட்சியை என்ன முறை சொல்லி அழைக்க என்று ஆதி திணற,

“அத்தைம்மா இல்லைனா மீன்ஸ் கூட சொல்லலாம்” என்று மீனாட்சி சொல்ல அவனை மீறி ஒரு புன்னகை வந்தது உண்மை.

“உங்க பொண்ண பார்க்கணும், அப்பாயிண்ட்மெண்ட் எதுவும் வாங்கணுமா?” என்று ஆதி கேட்க,

“தினிக்கு நான் இன்பார்ம் பண்ணிடுவேன். நீங்க அப்படியே நேரா அவ கிட்ட பேசலாம் மருமகனே” என்று சொல்ல,

“சரி அப்புறம் இங்க ஒரு சின்ன குழப்பம்" என்று நடந்த அனைத்தையும் கூறியவன், "அதான் நிச்சயதார்த்தத்துக்கு முன்னாடி ஒரு தடவை உங்க பொண்ணு கிட்டயே நேர பேசிடலாம்னு”

“ஆஹா இதுல இப்படி ஒரு குழப்பம் இருக்கா இது தெரியலையே மருமகனே! உங்க சித்திகாரி இருக்கா பாருங்க... ஆல்வேஸ் குழப்பத்திலேயே சுத்துவா, சரி நான் போய் முதல்ல சுடரையும் கதிரையும் பார்க்கிறேன்.”

“சரிங்க அவங்க கிட்ட போய் பாக்குறேன். நீங்க அவங்களுக்கு சொல்லிருங்க... வேற எதுவும் சொல்ல வேணாம் நான் வந்து பார்க்கிறேன் மட்டும் சொல்லுங்க நான் அவங்க கிட்ட நேரா பேசிக்கிறேன்” என்று போனை வைத்துவிட்டு நேரே அவள் அலுவலகத்திற்கு வண்டியை விட்டான்.

ஆதி, அமிழ்தினியை பார்க்க செல்லும் போது வாசகம் அவனுக்கு அழைத்தார்.

“ராஜா”

“சொல்லுங்க சித்தப்பா”

“ராஜா, நீ எதுவும் தப்பா எடுத்துக்காத. இப்படி ஒரு குழப்பம் வரும்னு யாருமே நினைக்கல”

“விடுங்க சித்தப்பா இப்ப என்ன சுடர் நல்லா இருக்கா, கதிர் தானே புரிஞ்சுப்பான் சித்தப்பா”

“இல்ல ராஜா, அவனை தடுக்க வேண்டாம் ராஜா, என்ன சொன்னாலும் ஈஸ்வரி பேசியதை நியாயப்படுத்த முடியாது. கதிருக்கு கொஞ்சம் டைம் தரலாம் அவன் உணர்ந்து வரட்டும். அதுக்கு எத்தனை வருஷம் ஆனாலும் நான் காத்துக்கிட்டு இருப்பேன்”

'இப்படியும் ஒரு மனிதரா!' என்று ஆதியால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

“ராஜா உனக்கு போன் பண்ணது வேற விஷயமா பேச”

“சொல்லுங்க சித்தப்பா”

“ராஜா உங்க சித்திக்கு இருந்த குழப்பம் இந்த சூழ்நிலை... எனக்கு நல்லா தெரியும் மீனாட்சி உன்ன தான் மருமகனா நினைத்திருப்பாங்க, இருந்தாலும் அந்த பொண்ணு கிட்ட நீ நேரில் பேசு... ஒருவேளை அந்த பொண்ணு கதிர நெனச்சு தான் சம்மதம் சொல்லி இருந்தா இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம் ராஜா” என்றவர் சற்று தயக்கமாக,
“ராஜா தேர்தல் வருது இந்த சமயத்துல கல்யாணம் நிக்கறது சரி இல்ல, இது எப்படினாலும் உன்னோட அரசியல் வாழ்க்கையில ஒரு பாதிப்பு உண்டாகும், அது எனக்கு நல்லா புரியுது, கல்யாணம் ஆனா எல்லாம் சரியாயிடும் அப்படினு நினைத்து கல்யாணம் பண்ண வேண்டாம், தெளிவா பேசிக்கோங்க”

“புரியுது சித்தப்பா, நான் அவங்க கிட்ட பேசிட்டு சொல்றேன்”

“இத நம்ம முன்னாடியே பண்ணியிருக்கணும், பரவாயில்ல தாலி கட்டுற அந்த நொடி வரைக்கும் நமக்கு டைம் இருக்கு”

“நான் பேசிட்டு வரேன் சித்தப்பா, நீங்க கொஞ்சம் ஈஸ பாத்துக்கோங்க”

“ஹ்ம்”

ஏனோ ஆதிக்கு முதலில் பேசி பார்க்கலாம் என்று தோன்றியது.

அமிழ்தினியை பார்க்க ஆர்வமாக நின்றுக் கொண்டிருந்தான்.
அப்போது அவன் கண்டது தூரத்தில் மஞ்சள் நிற பூக்களுக்கு நடுவில் நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையுமாக 80 கிலோவில் அழகான தேர் நகர்ந்து வருவது போல் முகத்தில் சிறு புன்னகை கண்ணில் ஒரு தீவிரமும் கொண்டவள் அவன் அருகில் வந்து நின்றாள்.
அவளது இந்த நிமிர்வு எப்போதும் போல இவனை வீழ்த்தியது.

’யப்பா என்ன கண் டா!' என்று அவளை ரசிக்க ஆரம்பித்து விட்டான்.

“ம்மி... சொன்னாங்க, நீங்க வரீங்கனு. என்னாச்சு கதிருக்கு... அவர் எதுவும் சொல்லலையே?” என்று இயல்பாக அமிழ் ஆதியின் மனதில் பாறாங்கல்லை இறக்கினாள்.

'ஓ! அப்ப இவங்களும் கதிர் தான் மாப்பிள்ளைனு நினைச்சிட்டாங்க போல' என்று நினைத்தவனுக்கு அந்த நினைப்பே வேப்பங் காயாய் கசந்தது.

“ஹாய், ஆதிநிலவன்” என்று கையை நீட்டினான் ஆதி.

“ஹலோ” என்று அவன் கரம் பற்றி குலுக்கினாள் அமிழ்தினி.

மறுபடியும் அவன் கண்களை நேராக பார்த்து ‘என்ன’ என்பது போல் புருவத்தை அமிழ்தினி உயர்த்த, வழக்கம் போல் அந்த கண்களில் சிக்கிக் கொண்டான் ஆதி.

'கண்ட்ரோல் ஆதி மானத்தை வாங்காத டா' என்று மனசாட்சி எடுத்துரைக்க ஒரு அளவுக்கு கவனத்தை திசை திருப்பி பேச்சை ஆரம்பித்தான்.

“அது கதிருக்கு ஒரு எமர்ஜென்சி அதான் உங்ககிட்ட எதுவும் அப்டேட் பண்ணி இருக்க மாட்டான். இப்ப நான் நேர்ல உங்களை பார்க்க வந்தது ம்ம்ம்....” ஒரு சின்ன தயக்கத்திற்கு பின், “இப்ப முடிவு செய்து இருக்கிற இந்த நிச்சயம் நடக்காது” என்று அவள் கண்களை நேராகப் பார்த்து சொன்னான்.

“ஏன்” வார்த்தையை விட பார்வை ஆதியை வெட்டுவது போல் இருந்தது.

“இல்ல ஒரு சின்ன குழப்பமாயிடுச்சு, இது யாரும் எதிர்பார்க்கல, சந்தர்ப்பமும் சூழ்நிலையுமே இதுக்கு காரணம். ஆனா பேசி வச்சபடி கல்யாணம் பண்ண முடியாது, எல்லா பிரச்சனைக்கும் ஒரு ஆல்டர்நேடிவ் கண்டிப்பா இருக்கும். இந்த குழப்பத்திற்கும் இருக்கு. ஆனா அதுக்கு முதல்ல தெளிவா பேசிக்கணும்” என்று தலையை சுற்றி மூக்கை தொட முயற்சி செய்துக் கொண்டிருந்தான்.

“இப்ப முடிவா என்ன சொல்ல வரீங்க நிலவன்” என்று முடிவாகக் கேட்டாள் அமிழ்தினி.

“நிலவன்” இந்த வார்த்தைக்குள் சிக்கிக் கொண்டது ஆதியின் மனம்.

அவன் முன்னால் சொடக்கிட்டவள், “இது நடக்காது என்று நல்லா தெரியும், எனக்கு இது பழகிப்போச்சு, உருவ கேலி, திமிர் புடிச்சவ, கல்யாணத்துக்கு பிறகு வீட்டுக்கு சப்போர்ட் பண்ணனும் இப்படி ஏதாவது ஒன்று என்னை ரிஜெக்ட் பண்றதுக்கு, இப்ப நீங்க ஏதோ புதுசா ஒரு காரணம் சொல்ல ட்ரை பண்றீங்க” என்று நிமிர்ந்து நின்றவள் அவன் கண்களைப் பார்த்து, “நீங்க எந்த காரணமும் சொல்ல தேவை இல்லை. நீங்கள் போகலாம்” என்று வேறு புறம் திரும்பி நின்றாள்.

இதற்கு முன்னால் அவளுக்கு கிடைத்த சில கசப்பான அனுபவங்கள் அவளை இவ்வாறு பேச செய்தது.

“நீங்க ரொம்ப துணிச்சலா பேசுறீங்க, உங்க பதவிக்கு இது தான் அழகு. ஆனால் எதிர்க்க இருக்கிறவனுக்கு ஒரு நியாயம் இருக்கும். அது என்ன என்று தெரிஞ்சுக்க முயற்சி பண்ணா இன்னும் நல்லா இருக்கும்” என்று கூறிய ஆதி, “நான் பேசுறத கேக்குறதுக்கு உங்களுக்குப் பொறுமை இருந்தால் நில்லுங்கள் இல்ல...” என்று ஆதி முடிக்கும் முன், “சரி சொல்லுங்க... எதுக்கு இந்த கல்யாணம் வேண்டாம்?” என்று அவன் கண்களைப் பார்த்துக் கேட்டாள் அமிழ்தினி.

“அது ஈசு... தெரியாம உங்களுக்கும் கதிருக்கும் நிச்சயம் பண்ண பேசிட்டாங்க”

“வாட்!”

“அதான் கதிருக்கும் உங்களுக்கும் தானே நிச்சயம்?” என்றும் மறுபடி அவன் திணற,

“வெயிட் வெயிட், உங்க போன் குடுங்க... எங்க அம்மாக்கு கால் பண்ணுங்க” என்று கேட்க
ஆதியின் கை ஆட்டோமேட்டிக்காக அவள் சொன்னதை செய்தது.

“காலிங் மாமியார்” என்று ரிங் போனது. அந்த மாமியாரை பார்த்து உடனே அமிழ்தினி ஆதியை நிமிர்ந்து பார்க்க அவன் வேறு பக்கமாக திரும்பிக் கொண்டான்.

இங்கே சுடரை பார்க்க வந்த மீனாட்சியை பார்த்தவுடன் கதிர் ஓடிச் சென்று மீன்ஸ் என்று அவரை கட்டிக் கொண்டான்.

அவன் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. மீனாட்சியை பார்த்தவன், "உங்களுக்கு இது முன்னாடியே தெரியுமா?" என்று மட்டும் தான் கேட்டான் மீனாட்சி பெரிதாக அழுத்திக் கொள்ளவில்லை. அவன் எதை கேட்கிறான் என்று புரிந்து விட்டதால் ஆம் என்று கண்களை மட்டும் மூடி செய்கை செய்தார்.

மீனாட்சி அப்போதுதான் சுடர் அருகே அமர்ந்து கதிரிடமும் சுடரிடமும் பேசிக்கொண்டிருந்தார். அந்த அறையில் இவர்களுடன் வாசகம் மட்டும் இருந்தார். ஈஸ்வரி வெளியே தனியாக அமர்ந்திருந்தார்.

அப்போது சரியாக ஆதியின் நம்பரில் இருந்து கால் வந்தது.

“சொல்லுங்க மருமகனே” என்று மீனாட்சி ஆரம்பிக்க,
“ம்மி, அமிழ்தினி பேசுறேன்”

“சொல்லு தினி”

“என்ன நடக்குது இங்க? யாருக்கும் யாருக்கும் நீங்க நிச்சயம் பண்ணீங்க?”

“ஏன் தினி உனக்கு தெரியாதா?”

“ம்மி, ப்ளீஸ் கொஞ்சம் தெளிவா பேசுங்க, நிலவன் ஏதோ சொல்றாரு. கதிர் கூட எப்படி மா? ஃபர்ஸ்ட் அவர் சுடர லவ் பண்றாரு. நெக்ஸ்ட் கதிர் எனக்கு சகோதரர் மாதிரி நீங்க தான் சொன்னீங்க... இப்ப இவ்ளோ குழப்பம்?” என்று படபடவென பொறிய
இங்கே ஆதி மனதில் 'அப்பாடா!' என்ற உணர்வு...

“அமிழ்தினி கதிர் ஹியர்”

“யா கதிர் வாட்ஸ் ஹாப்பனிங்?”

“ஒரு சின்ன கன்ஃபியூஷன்! எல்லாரும் நிச்சயம் பேசினது உனக்கும் எனக்கும் நினைச்சுட்டாங்க”

“ஓ மை காட்!”

“அமிழ்தினி ரிலாக்ஸ்”

“ஏன் இப்படி ஒரு கன்ஃபியூஷன்?”

“சாரி ஒரு மிஸ் அண்டர் ஸ்டாண்டிங் ஆயிடுச்சு, ப்ளீஸ் போன் ஸ்பீக்கரில் போடு”

"ம்ம்..." என்றவள் போன் ஸ்பீக்கரில் போட்டாள்.
கதிர் வாசகத்தை கண்களால் அழைக்க, அவர் நெருங்கி வந்தவுடன் அவர் கையில் போனை தந்தான்.

“மா! வாசகம் பேசுறேன் மா!”

“என்ன மாமா"

"சொல்லுங்க சித்தப்பா”

"இப்ப எல்லாரும் இங்க இருக்கோம். நீயும் ஆதியும் அங்க இருக்கீங்க குழப்பம் இல்லாம இருக்கறதுக்காக திரும்ப கேட்கிறேன். அம்மா, உனக்கு எங்க பையன் ஆதி நிலவனை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா?”

“நீ தாம்மா முடிவு சொல்லணும், நீ யாருக்காகவும் யோசிக்க வேண்டாம், உன்னோட முடிவு மட்டும் சொல்லு. நீ யாருக்காகவும் பயப்பட வேண்டாம்” என்று வாசகம் அமிழ்தினியின் சம்மதம் கேட்க,

“க்கும்! அவ பயந்துட்டாலும்” என்றும் மீனாட்சி முணுமுணுத்தார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த கதிருக்கு சிரிப்பை கட்டுப்படுத்துவது பெரும் பாடாக போய் விட்டது.

அமிழ்தினி நேராக ஆதியின் கண்களை பார்த்தாள். பின் ஸ்பீக்கர் கிட்ட வந்து, “எனக்கு முழு சம்மதம் மாமா” என்று கூறினாள். ஏதோ ஒரு சிறிய நிம்மதி ஆதியின் முகத்தில் பரவுவதை அவளால் கணிக்க முடிந்தது.

“சரிமா அடுத்த வாரம் பூ வச்சுக்கலாம்” என்று போனை கட் செய்துவிட்டார் வாசகம்.

மீனாட்சி... சுடரிடம், "நிச்சயம் முடிந்தவுடன் என் வீட்டிற்கு வர வேண்டும்” என்று சொல்லி விட்டு கிளம்பி வெளியே வந்தவர் அங்கே ஈஸ்வரியை பார்த்தவுடன் மிக வேகமாக ஈஸ்வரியை நோக்கி வந்தார். அவர் வேகத்தில் ஒரு பெண் புலியை போல் தெரிந்தது. ஏதோ பேச வாய் எடுக்க சட்டென்று வாசகம் ஈஸ்வரிக்கு முன்னால் வந்து நின்றார். வாசகத்தை பார்த்தவுடன் மீனாட்சி வேகம் கட்டுப்பட்டது.

“இப்ப சந்தோஷமா?” என்று மீனாட்சி ஈஸ்வரியை பார்த்து கேட்டார் .

“என்ன மறந்துட்டியா? எனக்கும் கதிருக்கும் இருக்கும் உறவு என்னனு... நீ மறந்துட்ட அதனால தான் இப்படி குழப்பி வைச்சுருக்க.”

“கதிர பெற்றது வேணா நீயா இருக்கலாம். அவனுக்கு ரெண்டு வயசு வரைக்கும் தாய் பால் கொடுத்தவ நான்.”

“கதிரவனையும், என்னோட மகள் அமிழ்தினியும் இரட்டை பிள்ளைகளாக நினைச்சதனால தான் இரண்டு பிள்ளைகளுக்கும் என்னால தாய்ப்பால் கொடுக்க முடிந்தது.”

“இப்பவும் சொல்றேன் நல்லா கேளு... உன்னை விட எங்களுக்கு தான் கதிரவன் மேல உரிமை ஜாஸ்தி”

“மீனா, நான் வந்து...“ என்று ஈஸ்வரி திணற,

“எப்பவுமே சிரிப்பு மட்டும் தான் அந்த புள்ள முகத்தில் நான் பார்த்து இருக்கேன். இன்னிக்கு முதல் தடவை கண்ணு கலங்கி பார்க்கிறேன்.”

"நீ எந்த அர்த்தத்தில் பேசுனனு தெரியல... ஆனா என் பிள்ளை கொஞ்ச நாளைக்கு விலகி போறேன்னு சொல்றான்.
காலம் எல்லாத்தையும் மாத்தும்... இதுவும் மாறும் என்று நான் நம்புறேன்" என்று விறு விறுவென வெளியேச் சென்று விட்டார்.

தன் மனதில் இருந்த பயத்தில் தான் ஈஸ்வரி அப்படி பேசியது. கோபத்தில் பேசி விட்டேன் என்று கூறினாலும் அவர் சொன்ன வார்த்தைகளின் தாக்கம் இவர்களின் உறவு முறையில் இன்னும் இடைவெளி விழுந்து விட்டது.

அங்கே ஆதி அமிழ்தினியை பார்த்து சிறு புன்னகையுடன், “அப்ப நான் கிளம்புறேன்“ என்று சொல்ல,

“ஒரு நிமிசம்”

“சொல்லுங்க”

“மக்களுக்கு ஒரு சிறு துரும்பு தூக்கி போட்டாலும் மலையவே பொளந்த மாதிரி சீன் போடுற அரசியல்வாதி ஆதி நிலவன் இந்த ஒரு சாதாரண குடும்பத்தில பெண் எடுக்கறதுக்கு பின்னாடி ஏதாவது ஸ்ட்ராங்கான ரீசன் இருக்கா?”

அவளை ஒருமுறை ஆர்வத்துடன் பார்த்தவன் அழகாக சிரித்துக் கொண்டே அவனது ஜீப்பின் முன்பக்கம் ஏறி உட்கார்ந்தான்.

“பியூட்டி வித் பிரைன்” என்று ரசித்து சிரித்தவன்‌, “நாட் பேட்... என்ன பத்தி கொஞ்சம் நிறையவே தெரிஞ்சி வச்சிருக்கீங்க போல”

“ஹ்ம், லைட்டா” என்று கைகளை கட்டிக்கொண்டு அவன் கண்களை பார்த்தாள்.

“உண்மைய சொல்லணும்னா உன்ன ரிஜெக்ட் பண்றதுக்கு எனக்கு ரீசன் கிடைக்கல, ஆனா உன்ன கன்சிடர் பண்ண மெயின் ரீசன் நீதான்... உனக்கு மக்கள் மத்தியில நல்ல பெயர், கண்டிப்பா உன்னை கல்யாணம் பண்ணா உன்னோட நேம் கிரெடிட் எனக்கு வாக்குகளா மாற சான்ஸ் அதிகம்” என்று அவள் கண்களை பார்த்து சொன்னான்.

“ஐ லைக் யுவர் கட்ஸ்! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இந்த கல்யாணத்தில் இருக்கிற குழப்பத்தை தீர்க்கணும் அந்த டென்ஷன் உங்க ஃபேஸ்ல இருந்தது. ஒன்ஸ் உங்கள கல்யாணம் பண்ணிக்கிறேன் சொன்னவுடனே உங்க முகத்தில வர்ற சேஞ்சஸ் என்னால நோட் பண்ண முடியுது”

இதைக் கேட்டவுடன் ஆதியின் புன்னகை விரிந்தது.

“எனக்கும் உங்கள ரிஜெக்ட் பண்ண எந்த ரீசனும் இல்ல. இதுவரைக்கும் மக்களுக்கு கெடுதல் பண்ணல,பண்ற நல்லத கொஞ்சம் மார்க்கெட்டிங் பண்றீங்க, அரசியல்ல மார்க்கெட்டிங் ரொம்ப முக்கியம்... ஓகே எனக்கு தெரியும் நீங்க பிஸினு, அதனால நான் உங்களை எதிர்பார்க்க மாட்டேன். ஆல் தி பெஸ்ட் ஃபார் யுவர் எலக்சன்” என்று சொன்ன படியே அவள் அலுவலகத்திற்கு சென்று விட்டாள்.

“பாய்” என்று அமிழ்தினிக்கு கேட்க உரக்க கத்தினான். அவன் செய்கை அவனுக்கே சிரிப்பு வர புன்னகைத்தபடியே வண்டியை எடுத்தான்.

தேர்தலில் வெற்றி பெறவே இந்த கல்யாணம் என்பதில் மிகவும் தெளிவாக இருந்தான் ஆதி.
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீயா நானா 9

நைட்டு சுடருடன் மீனாட்சி மற்றும் ஈஸ்வரி தங்கிக் கொள்ள அமைதியாக அவனது புதிய அலுவலகத்திற்குச் சென்றான் கதிரவன்.

அலுவலகத்திற்கு பக்கத்தில் ஒரு வீடு எடுத்திருந்தான், இன்று அவன் வீட்டிற்குச் செல்ல விருப்பம் இல்லாமல் அந்த வீட்டிற்கு வந்து அமைதியாக வெளியில் இருந்த திண்ணையில் உட்கார்ந்தான்.

அதுவரை சுடருக்காக தனது உணர்வுகளை வெளிக்காட்டாமல் இருந்த கதிரவன் இப்போது யாரும் இல்லா தனிமையில் ஈஸ்வரியின் வார்த்தைகளை மறுபடியும் மனம் அசை போட்டது.

"எது நடக்கக்கூடாதுனு நான் பயந்தேனோ" இந்த வார்த்தை கதிரவனுள் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியது.

நன்கு யோசித்துப் பார்த்தால் கதிரவன் எப்போது எல்லாம் ஒரு பெண்ணிடம் பேசுகிறானோ அப்போதெல்லாம் ஈஸ்வரியின் முகம் ஒரு கலவரத்தை தத்தெடுத்துக் கொள்ளும்.

இதுவரை கதிரவன் நினைத்தது 'ஒருவேளை லவ் பண்ணி விடுவேன் பயம் போல' என்று தான்... ஆனால் இன்று ஈஸ்வரி உதிர்த்த வார்த்தையின் அர்த்தமோ, 'நான் அந்த பொண்ணுங்கள மிஸ் யூஸ் பண்ணிடுவேன்னு பயந்து இருக்காங்க' என்று நினைத்த நொடி கண்களில் இருந்து அவன் அனுமதி இல்லாமல் கண்ணீர் வழிந்தது.

'என்னால பொண்ணுங்களுக்கு ஆபத்து வரும்னு என்னோட அம்மாவே நினைக்கிறாங்க' என்று நினைக்க நினைக்க கதிரவனால் இதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

ஊருக்கு கிளம்பும் முன் அவனிடம் ஈஸ்வரி, "பாத்துக்க ஜாக்கிரதை" என்ற ஈஸ்வரியின் வார்த்தைகள் "ஒருவேளை அவினியும் நான் விட்டு வைக்க மாட்டேன்னு நினைச்சுட்டாங்க போல" என்று தோன்றிய நொடி கதிரவன் ஓங்கி சுவற்றில் குத்த போகும் போது ஒரு கை அவனை தடுத்தது.

"ஆதி"

"என்ன பண்ண போனீங்க சார்?"

"இல்ல"

"இல்ல சும்மா சொல்லு"

"----" ஒரு அமைதி கதிரவனிடம்.

"கைய இடிச்சு என்ன பிரயோஜனம்? தலைய போய் முட்டிக்க அப்ப தான் ஒரேடியா போய் சேர முடியும்" என்று சொல்ல,

"டேய்"

"இல்ல இல்ல அப்பதான் சுடர்விழிய நடு காட்டில் அனாதையா விட்டுட்டு போக வசதியா இருக்கும்"

"டேய்"

"என்னடா டேய்? இல்லை என்னனு கேட்கிறேன்? மூடிட்டு உள்ள வந்து படுடா இன்னும் ஒரு வாரத்தில் நிச்சயம் இருக்கு" என்று கதிரவனை இழுத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றான் ஆதி.

வீட்டிற்குள் நுழைந்த உடன் அங்கு இருந்த பீன் பேக்ல கதிரவனை தள்ளி விட்டவன், அவன் அருகில் சென்று இவனும் அமர்ந்துக் கொண்டான்‌.

"உன்னை யார் இப்ப இங்க வர சொன்னது?" என கதிரவன் பொறிய,

"ஹலோ மிஸ்டர் மைனர், இந்த வீடு நம்ம ரெண்டு பேருக்கும் தான் சொந்தம் தெரியும்ல?"

"ச்சு"

"என்னடா ரொம்ப சலிச்சிக்கிற? ஓ... ஐயா தனிமையில் இனிமை காண நினைத்தீர்களோ?"

"ஆதி"

"ரைட் விடு... சாப்பிட்டியா டா எருமை?"

"ஹ்ம்ம்"

"உன் மொகரக்கட்டையை பார்த்தாலே தெரியுது நீ தின்ன லட்சணம்" என்ற ஆதி உள்ளேச் சென்று அவர்களுக்காக வாங்கி வைத்திருந்த இரவு உணவை எடுத்து வந்தான்.

"வாடா வந்து தின்னு தொலை... எனக்கு தனியா சாப்பிட்டா வயிறு வலிக்கும்" என்று மிரட்டி உருட்டி கதிரவனை சாப்பிட வைத்தான் ஆதி.

இரவு உணவை முடித்தவர்கள் அமைதியாக உட்கார்ந்து இருந்தார்கள்.

ஆதி மிகவும் தெளிவாக எக்காரணம் கொண்டும் ஈஸ்வரியை பற்றி கதிரிடம் பேசக்கூடாது என்று நினைத்தான்.

அதேபோல் கதிரும் அந்த நிகழ்வு பற்றி விவாதிக்க விரும்பவில்லை. எப்போதும் பேச ஆயிரம் விஷயங்கள் இருக்கும் இருவருக்கும்... ஆனால் இன்றைய நாளின் தாக்கம் இருவரையும் அமைதியாக அமர வைத்திருந்தது.

இந்த அமைதியை உடைக்கும் பொருட்டு ஆதி தான் ஆரம்பித்தான். "டேய், உனக்கு எப்படி டா அமிழ்தினியை தெரியும்?" கதிருடன் பேச ஒரு சாக்கு கிடைத்துவிட்டது.

"டேய், ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் அவங்க வீட்டுக்கு போய் மீனாட்சி அம்மாவை பார்த்தேன். நிச்சயதார்த்தத்துக்கு அப்புறம் சுடரு அங்க தான் தங்க பேசி இருந்தோம்ல... அதான் அவங்க கிட்ட நான் நேரடியா ஒரு தடவ பேசிட்டு வந்தேன். ஏன் டா?" என்று கதிரவன் கேள்வி எழுப்ப,

"சும்மா தான்டா கேட்டேன்" என்ற ஆதி, 'ஓ! அதுதான் கதிரவன் எதுவும் சொல்லல னு சொல்லி இருக்கா போல' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

"என்னடா நேர்ல போய் அவங்க கிட்டயே பேசிட்ட போல?"

"ஹ்ம்ம்"

"எல்லாமே சொல்லிட்டியா டா?"

"என்ன சொல்லணும்?"

"நேத்து வேக வச்ச சுரைக்காய்ல உப்பே போடலைனு"

"டேய், எதுக்கு எனக்கு கல்யாணம் பண்ணிக்கிறீங்கனு கேட்டா, நான் உடனே உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டா எனக்கு நிறைய ஓட்டு கிடைக்கும் அதனால தான் சொன்னேன்" என்று ஆதி சொல்ல,

"அட பாவி டேய்! என்னடா, இப்படி பேசிட்டு வந்திருக்க?"

"ஏன் வேற எப்படி பேசணுமாம்?"

"நீ நடத்து ராஜா, சரி அதுக்கு அவங்க என்ன சொன்னாங்க?"

"என்ன ரிஜெக்ட் பண்ண பெருசா எந்த காரணமும் இல்லையாம்... அது போக மக்களுக்கு இதுவரைக்கும் என்னால எந்த கஷ்டமும் இல்லையாம். அதனால என்ன ஓகே பண்ணி இருக்காங்க"

"அடப்பாவிகளா! டேய் ஏன்டா, கல்யாணம் பண்ணிக்க போறீங்க... இப்படியாடா பேசுவீங்க?"

"டேய், உனக்கு தான் மேடத்தோட உள்குத்து புரியல... உன்னால மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை அப்படினு மேடம் ஓகே சொல்லி இருக்காங்க, இதுக்கு இன்னொரு அர்த்தம் என்ன தெரியுமா? என்னால மக்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்துச்சுனா கல்யாணம் ஆனா கூட மேடம் என்ன விட்டுட்டு போக கூட தயங்க மாட்டாங்க. இதுதான் அவங்க சொன்ன இலை மறை காய் மறை விஷயம்" என்று ஆதி சொல்ல

"விளங்கும் டா" என்றான் கதிரவன்.

"ஈஈஈஈ"

"டேய், அவங்களோட வொர்க் ஹிஸ்ட்ரி எடுத்து பார்த்தேன் டா, ரொம்ப சூப்பர் டா"

"என்னவாம் மேடம், என்ன பண்ணி இருக்காங்களாம்?"

"டேய் நம்ம பக்கத்துல ரெண்டு ஊருக்கு பிரச்சனை இருந்துச்சு இல்ல அதை மேடம் தான் சால்வ் பண்ணி இருக்காங்க. இன்னும் மூணு வருஷம் ப்ராஜெக்ட், அது முடியும் போது உன்னோட ஆளு வேற லெவல்"

"ஓ! நல்லா தெரியும்டா, இவங்கள வச்சு தான் நான் அந்த இரண்டு ஊர் மக்களிடம் ஓட்டு வாங்க போறேன்"

"அடப்பாவி"

"என் பொண்டாட்டி செஞ்ச புண்ணியத்துல எனக்கு கொஞ்சம் லாபம் அவ்வளவு தான் டா"

"உன்னை" இருவரும் கட்டி உருண்டு சண்டை போட்டார்கள்.

"வேய்டிஸ் டா" என்ற ஆதி, "டேய் என்னடா உண்மையா அடிக்கிற வலிக்குதுடா"

"சரி உன்னை பற்றி உன் குல்கந்து பற்றி ஏதாவது சொன்னியா?" என்று கதிர் கேட்க

"ச்சு! மெதுவா சொல்லிக்கலாம் டா" என்ற ஆதியை பார்க்க மட்டும் தான் முடிந்தது.

"ஆதி"

"என்ன?"

"ஆதி"

"ஏன்டா ஏலம் விடுற, சொல்லும் சொல்லி தொலையும்"

"நிச்சயம் முடிஞ்ச உடனே நான் கனடா போயிட்டு கல்யாணத்துக்கு வரேன்"

"இதுதான் ஹாஸ்பிடல்ல சொல்லிட்டியே அப்புறம் என்ன?"

"ஆதி"

"என்ன டா?"

"ஆஃப்டர் மேரேஜ் கனடா போயிடுறோம்"

"ஓஓஓ..!"

"டேய்"

"என்ன அதான் முடிவு எடுத்துட்டல்ல அப்புறம் என்ன போய் தொல"

"ஆதி"

"இந்த பேச்சை விடுடா, உன்னோட முடிவுக்கு குறுக்க நிக்கக்கூடாதுனு சித்தப்பா சொல்லிட்டாரு, என் பக்கம் உன்னோட முடிவுக்கு ஆதரவும் இல்லை அதே சமயத்தில் எதிர்ப்பும் இல்லை, அவ்வளவுதானா இப்ப தூங்கலாம் நாளைக்கு எனக்கு ஒரு வேலை இருக்கு" என்று ஆதி தூங்க ஆரம்பித்து விட்டான்.

கதிரவனால் தான் சில வார்த்தைகளில் இருந்து வெளியே வர முடியவில்லை... ஒரு சின்ன இடைவெளி கண்டிப்பாக வேண்டும் என்று நினைத்து விட்டான்.

இந்தா அந்தா என்று நிச்சயம் நாளும் வந்துவிட்டது. மிக எளிமையாக நிச்சயத்திற்கு மீனாட்சியின் வீட்டில் தான் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

சுடர் அவளின் காயங்களை மறைக்கும் பொருட்டு காலர் மற்றும் ஃபுல் ஹேண்ட் டைப் சட்டை போட்டு மிக நேர்த்தியாக புடவை அணிந்து இருந்தாள், மிதமான ஒப்பனையில் மிக நேர்த்தியாகவும் அழகாகவும் அமர்ந்திருந்தாள்.

அனைவரின் முகத்திலும் சிறு புன்னகை இருந்தது. ஈஸ்வரி மட்டும் அடிக்கடி கதிரவனை பார்த்துக் கொண்டே இருந்தார். கதிரவனுக்கு அவர் பார்வை தெரிந்தாலும் அவர் புறம் திரும்புவதை தவிர்த்து விட்டான்.

நிச்சயம் முடிந்து திருமண நாளும் நிச்சயிக்கப்பட்டது. ஆதியின் பரிந்துரையின் பெயரில் கதிரவனின் பிறந்த நாள் இந்த முறை நல்ல நாளில் வருவதினால் அவர்களின் திருமணமும் அதே நாளில் முடிவு செய்யப்பட்டது.

தேதி அறிவிக்கப்பட்டவுடன் கதிர் அதிர்ச்சியாக ஆதியை பார்க்க ஆதியோ, "உன்னை எனக்கு தெரியும்டா, இனிமேல் நீ என்ன ஆனாலும் உன் பிறந்தநாள் கொண்டாட மாட்டனு, அதுக்காக உன்னை அப்படியே விட முடியுமா? இப்ப பாரு குடும்பமே உன் பிறந்தநாளை கொண்டாடும்" என்று கதிருக்கு மட்டும் கேட்குமாறு சொல்லி கண்ணடித்தான்.

நல்லபடியாக நிச்சயம் முடிந்தவுடன் அங்கிருந்த ஊர் மக்களுடன் பேசிக்கொண்டு இருந்தான் ஆதி. இன்று ஆதியிடம் ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி தனியாக பேச வேண்டும் என்று நினைத்த அமிழ்தினி ஆதியை தேடி அவன் இருக்கும் இடத்திற்கு வந்தாள்.

அப்போது சரியாக ஓரு பாட்டி ஆதியிடம், "ஏய்யா ராசா நீ இந்த ஜில்லாவிற்கே ராஜா, நீ ஊ...ன்னு சொன்னா உனக்கு பொண்ணு கொடுக்க நான் நீனு போட்டி போட்டு பொண்ணு தருவாங்க, ஏன் அப்பு இந்தப் பிள்ளையை கல்யாணம் கட்ட போற?"

"ஏன் என் பொண்டாட்டிக்கு என்ன குறைச்சல்?" என்று ஆதி அந்த கிழவியிடம் வம்பு வளர்க்க.

தள்ளி நின்று கேட்டுக் கொண்டிருந்த அமிழ்தினியின் மனதில் "என் பொண்டாட்டி" என்ற ஆதியின் இந்த வார்த்தை தென்றல் காற்று போல வருடியது.

அந்த கிழவியும் சும்மா இல்லாமல், "என்ன குறைச்சல் எதுவும் குறைச்சல் இல்ல எல்லாம் நிறைய தான் இருக்கு... ஆனா ஒன்னு ராஜா உங்களுக்கு மெத்தையே தேவையில்லை உங்க பொண்டாட்டியே போதும்" என்று ஏதோ பெரிய உலகமகா காமெடி செய்தது போல் கெக்க பிக்க என்று சிரிக்க ஆரம்பித்து விட்டார்.

கிழவியின் இந்த வார்த்தைக்கு ஆதி எதுவும் பதில் கூறாமல் அமைதியாக சிரித்துக் கொண்டு இருந்தான்.

ஆதி மறுபடியும் அவளுக்கு சப்போர்ட் செய்வான் என்று நினைத்த அமிழ்தினிக்கு ஆதியின் இந்த புன்னகை ஏமாற்றத்தை அளித்தது. அவள் பேச வந்த அந்த முக்கியமான விஷயத்தை விட்டு விட்டு அந்த இடத்தில் இருந்து நகர்ந்துச் சென்றாள் அமிழ்தினி.

சுடரை மீனாட்சியின் வீட்டில் விட்டு விட்டு கிளம்ப முடிவு செய்யப்பட்டது. அப்போது சரியாக அங்கு வந்த கதிரவன், "நானும் கிளம்புறேன்" என்று கூற ஈஸ்வரியை தவிர அனைவருக்கும் இது தெரியும் என்பதால் அவர்கள் அனைவரும் அதை அமைதியாக ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் ஈஸ்வரிக்கு இப்பொழுது தான் தெரியும் அதனால் சற்றென்று அவர் கண்கள் கலங்கிவிட்டது. தனது கண்ணீரை யாருக்கும் காட்ட விரும்பாமல் அமைதியாக தலைக் குனிந்துக் கொண்டு நின்று விட்டார்.

நாட்கள் மெதுவாக நகர கதிரவன் சுடர்க்காக கனடாவில் மிகப்பெரிய ஃபேஷன் டெக்னாலஜி காலேஜில் அடுத்த கல்வியாண்டில் சேர அனுமதி வாங்கி விட்டான். சுடர்க்கான விசாவும் ரெடியாகி விட்டது.

அதே சமயத்தில் இந்த பக்கம் ஆதி அவனது தேர்தல் பணியில் மிகவும் மும்முரமாக இறங்கி விட்டான். இந்த முறை எந்த வழியிலாவது வெற்றியை அடைந்து தீர வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தான்.

ஈஸ்வரி அடிக்கடி சுடரையும் மீனாட்சியும் வீட்டில் வந்து பார்த்து விட்டுச் செல்வார். சுடருக்கும் இப்போது அமிழ்தினியுடன் ஒரு நல்ல நட்புறவு மேம்பட்டியிருந்தது.

என்ன ஆனாலும் சரி இரவு சுடரிடம் பேசாமல் ஒருநாளும் கதிரவன் உறங்கியதில்லை தினமும் சுடரிடம் பேசி விடுவான்.

ஆனால் இந்த பக்கம் ஒரு நாள் கூட ஆதி அமிழ்தினியிடம் பேசியது இல்லை நிச்சயத்திற்கு பிறகு நேரில் பார்த்ததும் இல்லை.

அமிழ்தினிக்கு இது சிறிய உறுத்தலாக தோன்றியது உண்மைதான். எதையும் இயல்பாக கடந்துச் செல்லும் அமிழ்தினிக்கு ஏனோ தேர்தலுக்காக தான் உன்னை கல்யாணம் செய்கிறேன் என்ற வார்த்தை அவ்வளவு உவப்பாக இல்லை.

'சரி கல்யாணமானால் சரியாயிடும்' என்று நினைத்து விட்டாள். அவளுக்கும் சில அலுவலகப் பணிகள் இருந்ததால் அதில் அவளது முழு கவனத்தை செலுத்திக் கொண்டாள்.

இன்னும் மூன்று வாரங்களில் திருமணம். ஏற்கனவே வாசகத்திடம் அமிழ்தினி திருமணம் எளிய முறையில் நடக்கட்டும் ரிசப்ஷன் மட்டும் கொஞ்சம் கிராண்டா வச்சுக்கலாம் என்று கேட்டிருந்தாள்.

அவளின் யோசனை கதிருக்கும் சரியாகவே பட்டது, அதனால் அனைவரும் அந்த யோசனையை ஏற்றுக் கொண்டார்கள்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு அமிழ்தினியை பார்க்கிறான் ஆதி. அவளைப் பார்த்தவுடன் இவனது முகம் கோபத்தை தத்தெடுத்துக் கொண்டது. அவனது முகமாற்றத்தை கண்டு அவளுக்கு சிறிது ஏமாற்றமாக இருந்தது. இருந்தாலும் அதை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் அவன் அருகில் வந்து நின்றாள்.

அவளது கையில் அவர்களது திருமண வரவேற்பு அழைப்பிதழை தந்தவன், “நீ சொன்ன மாதிரி ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டு, சிம்பிளா ஒரு ரிசப்ஷன் மட்டும் வச்சுக்கலாம். ரிஜிஸ்டர் ஆஃபீஸ் ப்ராசஸ் எல்லாம் பண்ணிட்டேன். இது ரிசப்ஷனுக்கு கொஞ்சம் கார்ட்ஸ் உன்னோட ஃபேமிலி அண்ட் பிரண்ட்ஸ் காக” என்றவன் கண்கள் அவளை எப்போதும் போல் ரசனையுடன் அளவிட்டது.

“ஹ்ம்ம்” என்று அழைப்பிதழைப் பார்த்தவளுக்கு அது மிகவும் பிடித்திருந்தது, “உங்களுக்கு பயங்கர ரசனை தான்” என்றவாறு அவன் கண்களை பார்த்தவள் அதில் அவனது பார்வை அவளை ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தது.

“தெரியும்” என்றவன், “என்ன வேலை அதிகமா? ரொம்ப மெலிஞ்சு போயிட்ட” என்று ஆதி கேட்டவுடன்,

“ஏதேய்!! கஷ்டப்பட்டு ரெண்டு மாசமா ஹெவி டயட் இருந்து வெயிட் லாஸ் பண்ணி இருக்கேன்” என்று ரோஷமாக வந்தது அமிழ்தினி வார்த்தைகள்.

“எதுக்காக?”

“கல்யாணத்துக்காக தான்”

“ஏன் கல்யாணம்னா கண்டிப்பா உடம்பை குறைக்கணுமா என்ன?”

“நம்ம நிச்சயத்தின் போது ஒரு கிழவி உங்க கிட்ட உனக்கு வரப்போற பொண்டாட்டி நல்லா பஞ்சு அடைச்ச மெத்தை மாதிரி இருக்கானு சொன்னதுக்கு நீங்க சிரிச்சீங்க தானே!!” என்று கோபமாக பேசுகிறேன் என்று தன்னை அறியாமல் அவனை நெருங்கி நின்றாள் அமிழ்தினி.

“ஓ அதுவா?” என்று ஆதி இன்னும் அவளை நெருங்க,

“அதே தான், சிரிச்சா என்னோட வெயிட் உங்க கண்ணை உறுத்தி இருக்குனு தானே அர்த்தம்?” என்று அவளும் அவனை நூல் அளவு இடைவெளி இருக்கும் அளவுக்கு நெருங்கினாள். கோபத்தில் அவர்களுக்கு இடையே இருந்த இடைவெளி குறைந்தது அவள் கணக்கில் கொள்ளவில்லை.

அவனும் அவளது கோபத்தை ரசித்தவன், “அந்த பாட்டி என்ன அர்த்தத்துல சொன்னாங்கனு தெரியாது. ஆனா எனக்கு ------- “ அவளது காதில் ரகசியமாக அவன் சிரித்தற்கான காரணத்தை சொன்னான் ஆதி.

அவன் சொல்வதைக் கேட்க கேட்க வெட்கத்தில் அமிழ்தினியின் முகம் கருஞ்சிவப்பாக மாறியது. ரத்த ஓட்டம் அனைத்தும் அவளது முகத்திற்கு வந்தது போல் ஒரு உணர்வு!! இந்த உணர்வு அவளுக்கு புதிது!! அவனை கண் கொண்டு பார்க்க முடியவில்லை. அவனிடம் அவளது வெட்கத்தை காட்டவும் முடியவில்லை... உடனே அவனை தள்ளிவிட்டு அங்கிருந்து ஓடி விட்டாள்.

அலுவலகத்தில் அவளது இருக்கையில் அமர்ந்த பின்னும், அவளால் அவனது வார்த்தையில் இருந்து வெளியே வர இயலவில்லை. அப்போது அவளது மொபைலில், “நீ எப்படி இருக்கியோ அப்படியே எனக்கு வேணும்... எனக்காக இனிமேல் உன்னை மாத்திக்க வேண்டாம்.“ என்ற ஆதியின் மெசேஜ் பார்த்தவுடன் முகத்தில் புன்னகை.

'பையன் ரொம்ப மோசம் இல்லை,ஆனா லைட்டா மோசம் தான்' என்று நினைத்துக் கொண்டாள் அமிழ்தினி.
 
Status
Not open for further replies.
Top