All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பார்கவியின் "நீயாக நான், நானாக நீ" கதை திரி

Status
Not open for further replies.

Valli18

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 ஹாப்பி சண்டே...😊😊😊 ஏற்கனவே ஒரு கதை பாதியோட நிக்குது... அதுக்குள்ள என்ன புது கதையான்னு உங்க மைண்ட் வாய்ஸ் எனக்கும் கேக்குது... ஆனா, இந்த கதை ஏற்கனவே முடிச்ச கதை தான்... சோ ரெகுலர் அப்டேட்ஸ் உண்டு...😁😁😁 வாங்க கதைக்குள்ள போவோம்...😊😊😊

கதை பெயர் : நீயாக நான், நானாக நீ
ஹீரோ : ஆகாஷ்
ஹீரோயின் : பூமிகா

24952

இது ஒரு டாம் அண்ட் ஜெர்ரி ஹீரோ ஹீரோயின் கதை தான்... ஆகாஷ் - பூமிகா, அத்தை பையன் - மாமா பொண்ணு... சின்ன வயசுலயிருந்து சண்டை போட்டுட்டு இருக்க இவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க இவங்க வீட்டுல இருக்குறவங்க பிளான் பண்றாங்க... அந்த கடுப்புல ரெண்டு பேரும் சுத்த, விதியும் இவங்க கூட விளையாடி பார்க்க நினைக்க, அதுக்கப்பறம் இவங்க வாழ்க்கைல நடக்குற விஷயம் தான் கதை... ஒரு light hearted storyஆ இது இருக்கும்...😊😊😊

குட்டி கதை தான்... நாளைக்கு முதல் எபி போடுறேன்... திங்கள், புதன், வெள்ளி - வாரத்துல இந்த மூணு நாட்கள் எபி வரும்...😁😁😁


இண்ட்ரோ பத்தின உங்க கருத்துக்களை கருத்து திரில சொல்லுங்க பிரெண்ட்ஸ்...😍😍😍

 

Valli18

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 சொன்ன மாதிரியே வந்துட்டேன்...😁😁😁 இதுக்கு முன்னாடி நான் எழுதுன கதைகளுக்கு நீங்க கொடுத்த ஆதரவை இந்த கதைக்கும் கொடுப்பீங்கங்கிற நம்பிக்கையோட இதோ முதல் எபி போட்டுட்டேன்...😁😁😁 வாங்க ஆகாஷ் அண்ட் பூமியோட கூட நாமும் பயணிப்போம்...😊😊😊

24976

அத்தியாயம் 1

அந்த அதிகாலை வேளையில், சூரியன் தன் கிரணங்களைக் கொண்டு பூமியைத் தழுவ சோம்பியவாறு, கருநிற மேகங்களுக்குள் தன்னை மறைத்துக் கொண்டிருக்க, அவள் தன் அலைபேசியில் வைத்த அலாரமோ தன் வேலையை செவ்வனே செய்யத் துவங்கியது.

காதருகே ஒலித்த அலாரத்தின் சத்தத்தில், லேசாக அசைந்தவள், ஒற்றைக் கண்ணை சோம்பலுடன் திறந்து அலைபேசியில் மணியைப் பார்த்தாள். அது 5.55 எனக் காட்டியது.

‘ஹ்ம்ம் இன்னும் 5 நிமிஷம் இருக்கு… அதுவரைக்கும் சுகமா தூங்கலாம்…’ என்று படுத்தவளை அலறியடித்து எழச் செய்தது அந்த பாட்டு சத்தம்.


டண்டனக்கா நக்கா நக்கா நக்கா

டண்டனக்கா நக்கா

எங்க தல எங்க தல டீ ஆரு
செண்டி மெண்டுல தாறு மாறு

மைதிலி காதிலி இன்னாரு
அவர் உண்மையா லவ் பண்ண சொன்னாரு

மச்சான் அங்க தாண்டா
தல நின்னாரு

டண்டனக்கா நக்கா நக்கா நக்கா

டண்டனக்கா நக்கா

“ஐயோ கடவுளே… காலங்கார்த்தாலேயே ஆரம்பிச்சுட்டானா…” வாய்விட்டு புலம்பியபடி தன் அறையிலிருந்து வெளியே வந்தாள்.

நடு கூடத்தில் இசைப்பான் அதிர்ந்து கொண்டிருக்க, அவள் தேடி வந்தவனோ சமையலறையில் பாடிக் கொண்டும் ஆடிக்கொண்டும் காய்களை வெட்டிக் கொண்டிருந்தான். அதுவும் மேற்சட்டை இல்லாமல் வெறும் ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு, டி.ஆர் போல தலையை சிலுப்பி ஆடிக் கொண்டிருந்தவனை பார்த்தபோது அவளிற்கு இருந்த தூக்கம் மறைந்து கோபம் அதனிடத்தை பிடித்தது. வேகமாக சென்று இசைப்பானை அணைத்தாள்.

“எவ அவ…” என்று நாக்கை மடித்துக் கொண்டு தர லோக்கல் ஸ்லாங்கில் கேட்டபடி திரும்பிவன் அங்கு நின்றவளைக் கண்டதும், “ஆ…அம்மா… பத்ரகாளி…” என்று கத்தினான்.

தூங்கி எழுந்து… இல்லை இல்லை… எழுப்பப்பட்ட கோபத்தில் அப்படியே வந்ததால், தலைமுடி கலைந்து, கண்ணிலிட்ட மை இழுகி ஒரு மாதிரியாகத் தான் இருந்தாள்!!!

அவன் அப்படி கத்தியதும் அவளின் கோபம் மேலும் பெருக, “டேய் எரும… எதுக்கு காலைலேயே கழுத மாதிரி கத்திட்டு இருக்க… அதுவும் இப்படி ‘ப்ரீ ஷோ’ காட்டிட்டு இருக்க… எத்தன தடவ சொல்லிருக்கேன், பொண்ணு இருக்க வீட்டுல இப்படி சட்டை இல்லாம இருக்காதன்னு…” என்று கத்தினாள்.

அவள் அப்படி கூறியதும், அவளை சுற்றி வந்து தேடுவது போல பாவனை செய்தவன், “பொண்ணா… இங்க யாரும் இல்லையே…” என்றான் அவளை சீண்டும் பொருட்டு.

அவன் கூறியதில் பல்லைக் கடித்தவள், “ஏன் என்ன பார்த்தா பொண்ணா தெரியலையா…” என்றாள்.

மெல்ல அருகில் வந்தவன், அவளை மேலும் கீழும் ஒரு அளவிடும் பார்வை பார்த்தவன், “உன்ன பார்த்தா பொண்ணு மாதிரி இல்ல… பஜாரி மாதிரி தான் இருக்கு…” என்று கூறியவன் சட்டென்று தன்னறைக்குச் சென்று மறைந்தான். பின்னே அங்கிருந்தால் மீண்டும் அவளிடம் திட்டு வாங்க வேண்டுமல்லவா…

‘அடேய் கருவாயா… எங்கிட்ட மாட்டமையா போயிடுவ… அப்போ இருக்கு உனக்கு…’ என்று கருவியவள் பணிக்கு செல்ல ஆயத்தமானாள்.

அவள் பூமிகா மணிவண்ணன். மணிவண்ணன் – விசாலாட்சி தம்பதியரின் ஒரே புதல்வி. அவளது குடும்பம், மதுரையை ஒட்டிய கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டது. பள்ளிப் படிப்பையும், கல்லூரி படிப்பையும் மதுரையிலேயே முடித்தவள், தன் வேலைக்காக சிங்காரச் சென்னையில் காலடி எடுத்து வைத்தாள். ஆனால் இங்கு வந்த நாள் முதல், ஏன் தான் இங்கு வந்தோம் என்று அவளிற்கு தோன்ற வைத்த பெருமை அவனையே சாரும்.

அவன் ஆகாஷ். ஆகாஷின் அன்னை மீனாட்சி, மணிவண்ணனின் தங்கை. தேடித் தேடி தன் தங்கைக்கு சிவகுருவை மணமுடித்து வைத்தார் மணிவண்ணன். ஆனால் அவர்கள் சேர்ந்து வாழ்ந்த காலமோ ஐந்தாண்டுகள் மட்டுமே. பணிக்காக வெளியூர் சென்றவர் விபத்தில் சிக்கி, தன் ஆசை மனைவியையும் மகனையும் இவ்வுலகில் தனியே விட்டுச் சென்று விட்டார்.

பூவும் பொட்டுமாக மகிழ்ச்சியுடன் புகுந்த வீட்டிற்கு சென்ற தங்கை, அவை அனைத்தையும் இழந்து மீண்டும் பிறந்தகம் நாடி வந்தது அந்த பாசமிகு அண்ணனிற்கு வேதனை அளித்தது. ஆனால் அன்றிலிருந்து இன்று வரை தங்கையையும் தங்கை மகனையும் கையில் வைத்து தான் தாங்குகிறார்.

மருமகன் என்று வந்து விட்டால், மகள் கூட இரண்டாம் பட்சம் தான் அந்த மனிதருக்கு…

இதுவே சிறு வயதிலிருந்தே பூமிகாவிற்கு ஆகாஷை பிடிக்காமல் போகக் காரணமாகியது. ஆம் பூமிகாவின் அத்தை மகன் அத்தான் தான் ஆகாஷ்.

ஆகாஷ் ஊரில் இருந்தவரை இருக்குமிடம் தெரியாமல் இருப்பவன் என்று பெயர்பெற்றவன். அவன் இவ்வளவு வாய் பேசுவான் என்று கற்பூரம் கொளுத்தி சத்தியம் செய்தால் கூட யாரும் நம்ப மாட்டார்கள்.

அவன் ஊரில் இருந்த நாட்களும் குறைவே. எட்டாம் வகுப்பிலிருந்தே விடுதியில் தங்கி படிக்க ஆரம்பித்தவன், வேலையும் சென்னையில் தேடிக் கொள்ள, பூமிகா அவனைப் பார்க்கும் நாட்கள் பெரும்பாலும் விடுமுறை தினங்களாகவே இருக்கும்.

அப்போதும் சும்மா இருக்காமல், சிறுவயதில் நடந்த சண்டைகளுக்கு பழிவாங்க மீண்டும் ஒரு சண்டையை அவனிடம் ஆரம்பிக்க, அவன் பதிலுக்கு இவளை வம்பிழுக்க என்றே அந்த நாட்களையும் கழித்ததால், இருவருக்கும் இடையே சுமூகமான சூழ்நிலை இன்று வரை ஏற்படவே இல்லை.

ஆகாஷ், கணினி பொறியியலில் பட்டம் பெற்று மென்பொருள் பொறியியலாளராக வேலை செய்து கொண்டிருக்கிறான். இருவருக்கும் எதில் ஒற்றுமையோ, படிப்பில் ஒரே மாதிரியே யோசித்தனர். பூமிகாவும் அதே துறையைத் தான் தேர்ந்தெடுத்தாள்.

பூமிகா கல்லூரி படிப்பை தேர்ந்தெடுத்த சமயம்… “கண்ணு… நம்ம ஆகாஷு கூட அந்த படிப்பு தான் படிக்கிறானாம்… உனக்கு படிப்புல எதனாச்சும் சந்தேகம்னா அவனே சொல்லித் தருவான்…” என்று பூமிகாவின் அன்னை விசாலாட்சி கூறியபோது, “யாரு அந்த கருவாயனா… நா கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிக்கணும்னு சொன்னதே அவனுக்கு போட்டியா இருக்கணும்னு தான்… பெரிய இவன்… உன் புருஷன் அவன தலையில தூக்கி வச்சு கொண்டாடுறாரு…” என்று எண்ணெயில் இட்ட அப்பளமாக பொறிந்தாள்.

“பூமி எத்தன முறை சொல்றது… உன்ன விட மூணு வயசு பெரியவன்… மாமன் முறை வேணும்… மாமான்னு கூப்பிடாட்டியும் மரியாதையா பேசிப் பழகு…” என்று விசாலாட்சி கூறிக் கொண்டிருக்கையிலேயே, அங்கு வந்தார் மீனாட்சி.

மீனாட்சியைப் பார்த்த பூமிகா, வேண்டுமென்றே கண்ணைக் கசக்கியவாறு, “பாருங்க அத்த… உங்க அண்ணி என்ன திட்டிட்டே இருக்காங்க…” என்று அவரிடம் செல்லம் கொஞ்சினாள்.

“அண்ணி இப்போ எதுக்கு பாப்பாவ திட்டுறீங்க… சின்ன பிள்ளைங்க… இப்போ அப்படி தான் அடிச்சுக்குங்க… விடுங்க அண்ணி…” என்று தன் அண்ணியிடம் கூறியவர், “இந்தா கண்ணு உனக்கு பிடிக்கும்னு அத்த சீடை செஞ்சு வச்சுருக்கேன். .” என்று ஆசையுடன் தன் மருமகளுக்கு எடுத்து ஊட்டினார்.

இதிலிருந்தே தெரிந்திருக்கும், யாருக்கு யார் செல்லம் என்று.

பூமிகா படிப்பை முடிக்கவும், விதி பூமி மற்றும் ஆகாஷின் வாழ்வில் விளையாடிப் பார்க்க எண்ணியதோ… அவளின் வேலை ரூபத்தில் அதற்கு பிள்ளையார் சுழியிட்டது.

பூமிகா அவளிற்கு சென்னையில் வேலை கிடைத்திருப்பதை மகிழ்ச்சியுடன் வீட்டில் பகிர்ந்து கொள்ள, அவர்கள் கூறியதைக் கேட்டு பூமிக்கு தான் மனம் முழுக்க இருந்த மகிழ்ச்சி இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனது.

“சென்னையிலேயே வேலை கிடைச்சுருச்சா… ரொம்ப நல்லது… அப்போ ஆகாஷுக்கும் பூமிக்கும் கல்யாணத்த முடிச்சு ஜோடியா சென்னைக்கு அனுப்பிடலாம்…” என்று கூறி சிரித்தார் மணிவண்ணன்.

விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்த ஆகாஷிற்கும் இது அதிர்ச்சியே…

பெரியவர்கள் மனதிலிருந்த ஆசை இருவருக்குமே அரசல் புரசலாக தெரிந்திருந்தாலும், இப்படி பொதுவில் அதுவும் இவ்வளவு விரைவாக இந்த பேச்சுவார்த்தை நடக்கும் என்று இருவரும் எதிர்பார்த்திருக்க வில்லை.

அவர்களின் நிலையைக் கண்ட மணிவண்ணன், “என்ன ரெண்டு பேரும் இப்படி நிக்குறீங்க… சரி நான் நேரடியாவே கேக்குறேன்… ஆகாஷு, என் மகள கட்டிக்க உனக்கு சம்மதமா..?” என்று கேட்டார்.

அவர் வார்த்தைகளில் கேள்வி தொக்கியிருந்தாலும், கண்களிலோ ‘தான் வளர்த்த பையன் தன் வார்த்தைக்கு மறுப்பு தெரிவிப்பானா…’ என்ற அபரிமிதமான நம்பிக்கை தான் தெரிந்தது. அந்த நம்பிக்கையை உடைக்க விரும்பாதவன், ‘சரி’ என்று தலையசைத்து தன் சம்மதத்தை தெரிவித்தான்.

ஆகாஷ் எப்படியும் சம்மதிக்க மாட்டான் என்ற நம்பிக்கையில் இருந்தவளின் நம்பிக்கையை உடைத்தது அவனின் ‘சம்மதம்’…

‘அடப்பாவி… உன்ன நல்லவனா காட்டிக்க என்ன மாட்டிவிட்டுட்டியே… ஐயோ இவரு வேற என் பக்கம் திரும்புறாரே… என்ன ஆனாலும் சரி, இதுக்கு ஒத்துக்கவே கூடாது….’ என்று முடிவெடுத்தவள், மணிவண்ணன் பேசும் முன்பே, “எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல…” என்று கூறினாள்.

“உங்கிட்ட யாரும் கேக்கல…” என்று பட்டென்று மணிவண்ணன் கூறியதும், அதுவரை இறுக்கமாக இருந்த ஆகாஷின் முகத்தில் புன்னகை அரும்ப, சூழ்நிலை கருதி அதை மறைத்தான். ஆனால் அவன் மறைக்கும் முன் அதைக் கண்டுவிட்ட பூமி, ‘இரு டா இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு உனக்கு இருக்கு…’ என்று மனதில் கூறிக் கொண்டாள்.

அப்போது தோளைத் தொட்ட அத்தையைக் கண்டவள், அவரின் கண்களில் இருந்த கலக்கத்தையும் கண்டு கொண்டாள்.

“ஏன் கண்ணு… உனக்கு ஆகாஷ பிடிக்கலையா… எதுவா இருந்தாலும் சொல்லு கண்ணு… அண்ணன் கிட்ட நான் பேசுறேன்…” என்றார்.

ஆனால் பூமியோ அவரின் முகத்திலிருந்த கலக்கத்தை போக்க வேண்டும் என்று சிந்தித்ததில் அவளின் தலை தானாக ‘சம்மதம்’ என்று அசைந்தது.

அடுத்தகட்ட வேலைகளைப் பற்றி மூவரும் விவாதித்துக் கொண்டிருக்க, “மாமா…” தயங்கி ஒலித்தது அவனின் குரல்…

“சொல்லு ஆகாஷு…” என்று மணிவண்ணன் சொல்ல, அவரை இடித்த அவரின் மனையாள், “இன்னும் என்ன ஆகாஷு… மாப்பிள்ளன்னு சொல்லுங்க…” என்றார்.

“ஹாஹா… அதுவும் சரி தான்… சொல்லுங்க மாப்பிள்ள…”

‘கல்யாணமே வேணாம்னு சொல்லலாம்னு இருந்தா, இவங்க இப்போ மாப்பிள்ளன்னு கூப்பிட்டு வெறுப்பேத்திட்டு இருக்காங்க…’ என்று மனதில் நினைத்தவன், அதை மறைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தான்.

“அது… அது வந்து மாமா… இப்போ வேலை அதிகமா இருக்கு மாமா… அதோட இன்னும் வேலைல நான் பெருசா எதுவும் சாதிக்கல மாமா… அதுக்குள்ள எப்படி கல்யாணம்….” என்று இழுத்தான்.

‘நான் இன்னும் சாதிக்கல… உங்க பொண்ணு என்ன பாதிக்கலன்னு சீன போட்டுட்டு இருக்கான்… இந்த அப்பாவும் அவன என்னமோ சுந்தர் பிச்சை ரேஞ்சுக்கு லுக் விடுறாரு… கடவுளே இன்னும் என்னென்ன பாக்க வேண்டியத்திருக்குமோ…’ பூமியின் மைண்ட் வாய்ஸ் தான் இது…

“நீ சொல்றதும் சரி தான் ஆகாஷு…” என்று சிறிது யோசித்தவர், “சரி அப்போ நிச்சயத்த முடிச்சுட்டு ரெண்டு பேரையும் அனுப்பலாம்…” என்றார்.

அதன்பின் நடந்த வேலைகள் அனைத்தும் மின்னல் வேகம் தான். இரண்டே நாட்களில் சொந்தங்கள் அனைவருக்கும் சொல்லி, வீட்டிலேயே நிச்சயத்தை முடித்தனர். அங்கு அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க, சம்பந்தப்பட்டவர்கள் இருவரும் குழப்பத்துடனே இருந்தனர்.

அடுத்த வாரத்தில் இருவருக்கும் பல அறிவுரைகள் கூறி சென்னை அனுப்பி வைத்தனர். அவனுடன் தங்க மாட்டேன் என்று அடம்பிடித்தவளை, “அப்போ நீ வேலைக்கே போக வேண்டாம்…” என்ற ஒற்றை வாக்கியத்தில் அடக்கியிருந்தார் மணிவண்ணன்.

ஆகாஷ் தங்கியிருந்தது இரு படுக்கை அறையுடன் கூடிய அடுக்குமாடி வீடு என்பதாலும், அங்கு தங்கியிருந்த அவனின் நண்பன் சமீபத்தில் பெங்களூருவிற்கு மாற்றலாகி சென்று விட்டதாலும் அவள் அங்கு தங்குவதற்கு பிரச்சனை இல்லாமல் போயிற்று.

ஆனால் இங்கு வந்த முதல் நாள் அவன் வாழ்க்கை முறையைக் கண்டவள் சற்று அதிர்ந்து தான் போயிருந்தாள். ஊரில் எப்போதும் ‘டிப்-டாப்’பாக ஆடை அணிந்து மரியாதையுடன் வலம் வருபவன், இங்கு அழுக்கு லுங்கியோ, இல்லை ஷார்ட்ஷோ அணிந்து தான் காட்சி தருகிறான்.

அவனிற்கு குடிப்பழக்கம் இருப்பதே அவளுக்கு அதிர்ச்சி தான், இதில் அவன் நடு வீட்டில் வைத்து குடிப்பதை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை. அதை அவனிடம் கேட்க, “இது என் வீடு… நான் இங்க இப்படி தான் இருப்பேன்… உன்னால பார்க்க முடியலைனா கண்ண மூடிட்டு போடி…” என்றுவிட்டு மீண்டும் குடியில் ஐக்கியமாகி விட்டான்.

இதையெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தவள், ‘கருவாயா… ஒரு நாள் இதையெல்லாம் எங்க அப்பாக்கு ‘ப்ரூஃவ்’வோட காட்டி அவரு வாயாலேயே உன்ன திட்ட வைக்கிறேன்…’ என்று மனதில் நினைத்து அதற்கான சரியான சந்தற்பத்திற்காக காத்திருந்தாள்.

வெளியே கமகமக்கும் மணத்தை முகர்ந்தவள், ‘இதுக்காக தான் டா உன்கூட இருக்கேன்… இப்படி வேளாவேளைக்கு மூக்கு பிடிக்கிற மாதிரி ருசியான சாப்பாடு யாரு செஞ்சுத்தருவா… அதுக்காக மட்டும் தான் உன் தொல்லையெல்லாம் தாங்கிட்டு இருக்கேன்… இல்லைனா அப்போவே உன்ன தூக்கிப் போட்டு மிதிச்சுட்டு போயிருப்பேன்…’ என்று மனதினுள் கூறிக்கொண்டு வெளியே விறைப்பாக காட்டிக் கொண்டு தன்னறைக்கு வெளியே வந்தாள்.

“ப்ச் லேட்டாச்சு… இன்னுமா மதியத்திற்கு எடுத்து வைக்கல…”

“ஹ்ம்ம் இவ பெரிய மகாராணி… சமைச்சத டப்பால எடுத்து வைக்க கூட மாட்டாளாம்… இந்நேரம் எனக்கு வேற பொண்ணு கூட கல்யாணமாகிருந்தா, அவ எனக்கும் என் பிள்ளைக்கும் சமைச்சு எடுத்துவச்சு எங்கள சிரிச்சுகிட்டே வழியனுப்பிருப்பா… ஹ்ம்ம் என் வாழ்நாள்ல அதெல்லாம் கனவாவே போயிடும் போல… என் விதி என்ன இவ கூட கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்குது…” என்று மெல்லிய குரலில் புலம்பிக் கொண்டிருந்தான்.

அதைக் கேட்டவள், ‘ஓ சாருக்கு எல்லாம் எடுத்துவச்சு சிரிச்சுட்டே டாட்டா காட்டுற பொண்டாட்டி வேணுமா…’ என்று நினைத்தவள், அவனின் கண்படும் இடத்தில் நின்று, அலைபேசியில், “ஹலோ அத்த… உங்க பையனுக்கு…” என்று ஆரம்பித்தவளை இடைமறித்து அவளின் அலைபேசியை பறித்தவன், “ஹலோ அம்மா…” என்று மூச்சிரைக்க பேசியிருந்தான்.

அதற்குப்பின் அவனிடமிருந்து வந்தது எல்லாம், ‘ம்ம்ம்’ மட்டுமே…

ஆகாஷ், அன்னை வார்த்தைக்கு மறுபேச்சு பேசாமல் அவர் கூறுவதை செய்பவன். அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வாள் பூமிகா.

அங்கு அவனின் தாய் ஏதோ கூற, “இல்லம்மா அவ வேலையா இருக்கா… அப்பறம் பேசுங்க…” என்றுவிட்டு அலைபேசியை அணைத்து அவளின் கையில் திணித்திருந்தான்.

அவனைப் பார்த்து உதடு வளைத்து சிரித்தவள், “கருவாயா இனிமே டெய்லி நீதான் எனக்கு சாப்பாடு கட்டி கைல குடுத்து சிரிச்சுட்டே வழியனுப்பணும்… எங்க இப்போ ஒரு ட்ரையல் பார்க்கலாம்…” என்றாள்.

அவனோ முறைத்துக் கொண்டே அந்த டப்பாவை அவள் கையில் கொடுக்க, “ச்சு… என்ன இது உனக்கு சிரிக்கக் கூட தெரியாதா… இரு அத்த கிட்ட…” என்று அவள் சொல்லும்போதே, தன் முப்பத்திரண்டு பற்களையும் காட்டி, கையைக் கூப்பி, “எம்மா தாயே… கிளம்பு முதல…” என்றான்.

அவள் கிளம்பியதும், “ச்சே… இவள எப்படி தான் இத்தன நாளா அத்தையும் மாமாவும் பார்த்துக்கிட்டாங்களோ…” என்று கூறியதும், அவனின் மனச்சாட்சி, ‘அவங்களுக்காக ரொம்ப ஃபீல் பண்ணாத… இவள உன் தலைல கட்டிட்டு அவங்க இப்போ ஜாலியா தான் இருக்காங்க… உன் நிலைமை தான் இனி ரொம்ப மோசம்…’ என்று உண்மையை (!!!) எடுத்துரைத்தது.

“அதுவும் சரிதான்…” என்று தன் வருங்காலத்தை நினைத்து நீண்ட பெருமூச்சு விட்டவன் தன் பணிக்குச் செல்ல ஆயத்தமானான்.

ஒருவருக்கொருவர் பிடிக்காமல் இருக்கும் இவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்… அவர்களோடு நாமும் பயணிப்போம்…


தொடரும்...

உங்க கருத்துக்களை இங்க பகிர்ந்துக்கோங்க பிரெண்ட்ஸ்...👇👇👇
 

Valli18

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 போன எபிக்கு நீங்க கொடுத்த ஆதரவுக்கு நன்றி...🙏🙏🙏 வாசகர் விருப்பம்... திங்கள் முதல் சனி வரை டெய்லி எபி உண்டு...😁😁😁 (மை மைண்ட்வாய்ஸ்... கதைய முடிச்சுட்டங்கிறதால தான டெய்லி எபி போடுற...😂🤣😂) தொடர்ந்து உங்க ஆதரவை கொடுங்க பிரெண்ட்ஸ்...😍😍😍

24988

அத்தியாயம் 2

பூமிகாவிற்கு அன்றைய நாள் சற்று மோசமாகத் தான் சென்றது. ஆகாஷை வம்பிழுத்துவிட்டு சென்றதால் அலுவலகத்திற்கு தாமதமாகவே சென்றாள். என்றும் அதை பெரிதாக கண்டுகொள்ளாத மேலாளர் அன்று என்ன கடுப்பில் இருந்தாரோ, அறிவுரை என்ற பெயரில் காய்ச்சி எடுத்து விட்டார் அவளை.

அவர் திட்டியதில் கடுப்புடன் இருந்த பூமி, பயிற்சி வகுப்பில் கவனமில்லாமல் சொதப்பி பயிற்சியாளரிடமும் திட்டு வாங்கினாள்.

அந்த மொத்த கோபமும் ஆகாஷின் மேல் திரும்பியது. ‘அடேய் கருவாயா… உன்னால இங்க எல்லாருக்கிட்டேயும் நான் திட்டு வாங்கிட்டு இருக்கேன்…’ என்று மனதினுள் புலம்ப, அவளின் நியாயமான மனச்சாட்சியோ, ‘நீ அவன வம்பிழுத்து லேட்டாக்குனதுக்கு அவன் என்ன பண்ணுவான்…’ என்று அவளின் தவறை சுட்டிக் காட்டியது.

அவளின் நிலை உணர்ந்த அவளின் தோழி ரூபா, அவளை கேன்டீனிற்கு அழைத்துச் சென்றாள். அங்கு இவர்களின் மற்ற தோழமைகள் அமர்ந்திருக்க, அவர்களுடன் சென்று அமர்ந்து கொண்டனர். பேச்சு அவர்களின் திருமணத்தில் வந்து நின்றது.

அவர்களுள் திருமணம் நிச்சயமானவர்கள் இருவர் – பூமிகாவும் சினேகாவும். சினேகா, கோவையை சேர்ந்த ஒரு முக்கிய புள்ளியின் ஒரே மகள். தன் வியாபார லாபத்திற்கான வாய்ப்பாகவே மகளின் திருமணத்தை நிச்சயத்திருந்தார் அந்த முக்கிய புள்ளி. மகளின் மனமோ அவளின் சம்மதமோ அவருக்கு தேவையேயில்லை.

சினேகா அவளின் நிலையை எண்ணி புலம்பிக் கொண்டிருக்க, மற்றவர்களும் அதை ஆமோதிப்பது போல பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிரில் அமர்ந்திருந்த ஆண்களின் குழுவைப் பார்த்த பூமி, “ஹ்ம்ம் பொறந்தா ஆம்பளையா பொறக்கணும்… அவங்கள பாரு எவ்ளோ ஜாலியா இருக்காங்க… கல்யாணத்துக்கு கூட அவங்க சம்மதம் கேப்பாங்க… நம்மள ஒரு பொருட்டா கூட மதிக்க மாட்டாங்க…” என்றாள் சோர்வாக. தன் தந்தை தன்னிடம் சம்மதம் கேட்காமல், ஆகாஷிடம் மட்டும் சம்மதம் கேட்ட கடுப்பு இன்னும் அவளுள் உறுத்திக் கொண்டே இருந்தது.

*****

இங்கு ஆகாஷின் நிலையோ இதைக் காட்டிலும் கொடுமையாக இருந்தது. மேலாளரின் அறையிலிருந்து தொங்கிப் போன முகத்துடன் வந்து கொண்டிருந்தான்.

அவனைப் பார்த்த அவனின் நண்பன் அசோக், “என்ன மச்சான் இன்னிக்கு நீ மாட்டிகிட்டியா அந்த குடுமி மண்டையன் கிட்ட… என்னவாம் அவனுக்கு…” என்றான்.

“காலைலேயே வந்து உசுர வாங்குறான் டா… எப்பயாச்சும் ஆஃபிஸ் பக்கம் எட்டிப்பார்க்க வேண்டியது… அன்னைக்கு மாட்டுறவங்கள எல்லாம் வச்சு செய்ய வேண்டியது…”

“நீ எதுக்கு டா வான்டட்டா போய் அவன்கிட்ட சிக்குற…”

“ஒரு டவுட் இருந்துச்சுன்னு கேக்க போனேன் டா… அந்த ஆளு என்ன நிலைமைல இருக்கான்னு தெரியாம போனது என் தப்பு தான் டா… இந்நேரம் என் இடத்துல ஒரு பொண்ணு இருந்துருந்தா வழிஞ்சுட்டு வந்து ஹெல்ப் பண்ணிருப்பான்…” என்று கூறியவன், சில கேட்க முடியாத கெட்ட வார்த்தைகளால் அந்த குடுமி மண்டையனை (அந்த மேலாளர், ஃபேஷன் என்ற பெயரில் நீளமாக முடி வளர்த்து குடுமி போட்டிருப்பார்…) அர்ச்சித்த பின்பே ஓய்ந்தான்.

“உன் பிரச்சனைக்கு ஒரே தீர்வு தான் டா… உடனே மும்பைக்கு போய் ஒரு ஆப்பரேஷன் பண்ணிக்கோ…” என்றான் கண்ணடித்து.

“அடிங்…” என்று ஓடிய நண்பனை அடிக்க துரத்தினான் கதிர்.

*****

பயிற்சியில் கவனமின்மை காரணமாக, எப்போதும் செய்வதைக் காட்டிலும் அதிக பணியை பயிற்சியாளர் பூமிக்கு கொடுத்திருந்தார். அதை முடித்து கிளம்பவே 8 மணி ஆனது. மேலும் அவளின் பொறுமையை சோதிக்கவென அவர்களின் வண்டி போக்குவரத்து நெரிசலில் ஊர்ந்து கொண்டிருந்தது.

அந்த எரிச்சலில் வீட்டிற்கு வந்தவள், அங்கு கண்டது நடு வீட்டில், தன் சோமபானத்தையும் அதற்கு தோதான சிற்றுண்டியையும் கடைபரப்பி வைத்திருந்த ஆகாஷைத் தான்.

மேலாளர், பயிற்சியாளர், வண்டி ஓட்டுனர் ஆகியோரிடம் காட்ட முடியாது தேக்கி வைத்த கோபத்தையெல்லாம் ஆகாஷிடம் காட்டினாள்.

அவள் திட்டிக் கொண்டிருக்க, ஆகாஷோ அதையெல்லாம் உணரும் நிலையிலேயே இல்லை. அவன் அவனின் பிரத்யேக உலகத்திற்குள் சென்று விட்டான்.

சற்று நேரம் திட்டியவள், அவன் அவளை மனிதியாக (!!!) கூட மதிக்காமல் இருப்பதைக் கண்டு, தரையில் காலை உதைத்தவள் தன்னறைக்கு சென்று விட்டாள்.

அவள் சென்றதை அறிந்தவன், “ஷப்பா என்னமா நடிக்க வேண்டியதா இருக்கு… நல்ல வேள அந்த வெள்ளெலி இதோட நிறுத்துனா… நான் குடிக்காம இருக்கேன்னு தெரிஞ்சுது இன்னும் பேசி என் காத டேமேஜ் பண்ணியிருப்பா… ச்சே அவளால வாய்க்குள்ள ஊத்த வேண்டியத வெளிய தெளிச்சு, குடிகாரன் எஃபெக்ட் கொண்டுவரதுக்குள்ள...” என்று வாய்விட்டு புலம்பிக் கொண்டிருந்தவனின் எதிரில் நிழலாட திரும்பிப் பார்த்தவன் அதிர்ந்தான்.

அங்கு தன் முட்டைகண்ணை இன்னும் முட்டையாக விரித்தபடி அவனை முறைத்துக் கொண்டிருந்தாள் அவனின் முறைப்பெண்.

“இப்போ தெளிவா தான இருக்க…” என்று பல்லைக் கடித்தாள் பூமி.

ஆகாஷ் தான் எந்த பக்கம் தலையாட்டுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தான்.

“எத்தன தடவ சொல்லிருக்கேன், இப்படி நட்டநடு வீட்டுல பப்பரப்பான்னு சரக்கடிக்காதன்னு… அப்படி என்ன பெரிய கவலை உனக்கு… இப்படி சரக்கடிச்சு சீரழியுற அளவுக்கு...? நாங்களும் தான் வேலைக்கு போறோம், எங்களுக்கும் தான் டென்ஷன்… நாங்க என்ன உன்ன மாதிரி குடிச்சுட்டு கவுந்து கிடக்குறோமா…” என்று ஏதோ மேடைப்பேச்சு போல பேசிக் கொண்டிருந்தாள்.

விரக்தியாக சிரித்தவன், “ஹ்ம்ம் நீ பேசுறது எல்லாம் கரெக்ட் தான்… வேலைப்பளுங்கிறது இப்போ எல்லாருக்கும் இருக்குறது தான்… வேலைல மேலிடத்து மேல கோபம் வந்தாலும் காட்ட முடியாது… வருஷா வருஷம் ஹைக் போடுவானான்னு தெரியாது... பெர்ஃபார்மன்ஸ் காரணம் காட்டி சம்பளத்த குறைச்சாலும் ஒண்ணும் கேக்க முடியாது… இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கவலை…”

“ஆனா உங்களுக்கு அந்த எமோஷன்ஸ்ஸ கொட்ட அழுகைன்னு ஒரு உணர்ச்சி இருக்கு… நாங்க அப்படி ஈஸியா அழுக முடியுமா… இல்ல இந்த சமூகம் தான் எங்கள அழ விட்டுடுமா… ‘ஆம்பள கண்ணுல தண்ணி வரலாமா…’ன்னு சொல்லி சொல்லியே தான இந்த சமூகம் எங்கள வளர்த்து விட்டுருக்கு… ஏன் ஒரு ஆண் அழுதா என்ன… அழுகைங்கிறது ஒரு உணர்ச்சி தான, எல்லாருக்கும் அது பொதுவானது தான… ஹ்ம்ம் இதுக்கு தான் பொண்ணாவே பொறந்துருக்கலாம்…” என்று பேசிக் கொண்டே சென்றவன், “ப்ச் அத சொன்னா உனக்கு புரியாது விடு… இது ஆண்களோட ஃபீலிங்ஸ்… என்ன கேட்ட டென்ஷன் குறைக்க குடிக்குறோம்ன்னா… ஆமா அப்படியே விட்டா பைத்தியம் ஆகிடுவோம்… எங்களுக்கு ஈகோ ஜாஸ்தி தான்… சாதாரணமா உள்ளயிருக்க ரணமெல்லாம் வெளிய சொல்லிக்க மாட்டோம்… அதான் இத குடிச்சாவது அது வெளிய வரட்டும்னு குடிக்குறோம்…” என்று மிக நீளமாக பேசினான்.

ஆகாஷ் இவ்வளவு பெரிதாக பேசி அவள் பார்த்ததேயில்லை. அதனால் ஒரு நொடி பிரமித்து அவனைப் பார்த்தவள், அவன் சொல்லியது மூளைக்கு சென்றடையவும், ‘அடப்பாவி… என்னமோ ஆல்கஹாலுக்கு அம்பாசிடர் மாதிரி பேசிட்டு இருக்கான்…’ என்று மானசீகமாக தலையிலடித்துக் கொண்டாள்.

“குடிச்சு உன் உயிர அழிச்சுக்குறதுக்கு இப்படி ஒரு பில்ட்-அப்பா… அழுது தான் ஸ்ட்ரெஸ்ஸ குறைக்கணும்னு இல்ல… நம்மளோட நலம் விரும்பிங்க, நம்ம சொல்றத காது குடுத்து கேட்டு நமக்கு சரியான வழிய காட்டுறவங்க கிட்ட நம்ம கவலைகள சொல்லியும் குறைக்கலாம்… உனக்கு குடிக்க ஒரு சாக்கு வேணும்… இவ்ளோ சொல்ற எந்த டாக்டராவது குடிச்சா ஸ்ட்ரெஸ் குறையும் அட்வைஸ் பண்றங்களா… ஒழுங்கா யாருக்கிட்டயாவது ஷேர் பண்ணு… அத விட்டுட்டு குடிக்க கிளாஸ் எடுக்காத…”

அப்போதும் விரக்தியாக சிரித்தவன், “என்னோட கவலைய ஷேர் பண்ணிக்க யாரு இருக்கா…” என்று ஏதோ கூற வந்தவன், பின் சுதாரித்தவனாக, “ப்ச் இதப் பத்தி இப்போ எதுக்கு பேசிட்டு இருக்க… வந்ததும் உன் ரூமுக்குள்ள போய் அடஞ்சுக்குவ தான… இப்போ மட்டும் என்ன அக்கறை…” என்று கூறி அவளை முறைத்தான்.

“உன் மேல ஒன்னும் அக்கறை இல்ல… உன்ன நல்லவன் வல்லவன் நாலும் தெரிஞ்சவன்னு அவரு பொண்ண கல்யாணம் பண்ணி குடுக்க சம்மதிச்சுருக்காரே அவருக்காகவும், தன்னோட வாழ்க்கைத் துணை விட்டுட்டு போயிருந்தாலும் தன்னோட பையன் தான் இனிமே வாழ்க்கைன்னும் துணைன்னும் நெனச்சு வாழ்ந்துட்டு இருக்காங்களே அவங்களுக்காகவும் தான் இப்போ பேசிட்டு இருக்கேன்…”

“அப்பறம் சார் என்ன சொன்னீங்க… உங்களுக்கு உங்க கவலைய ஷேர் பண்ண ஆளே இல்லயா… அதான் ஒரு மனுஷர் இருக்காரே… அவரு பொண்ணுகிட்ட கூட சம்மதம் கேக்காம உங்கிட்ட கேட்டாரே… அந்த நல்ல மனுஷன்கிட்ட சொல்ல வேண்டியது தான…” என்று கூறியவள், அதுவரை இருந்த மனநிலை மாறியவளாக, அவன் கையிலிருந்த கிளாஸை பிடுங்கி வாயில் சரித்துக் கொள்ள முயன்றாள்.

அவளின் செய்கையில் ஒரு நொடி பதறியவன், வேகமாக அவளிடமிருந்து கிளாஸை பிடுங்கினான்.

“ஹே என்ன டி பண்ற… லூசா நீ..?”

“ஏன் உங்களுக்கு மட்டும் தான் ஸ்ட்ரெஸ்னா தண்ணியடிக்க தோணுமா..?”

“லூசுன்னு சரியா ஃப்ரூவ் பண்ற… இப்போ தான மத்தவங்க கிட்ட ஷேர் பண்ணுன்னு எனக்கு அட்வைஸ் பண்ண… அறிவுரைலாம் மத்தவங்களுக்கு தானா…” என்றான் கிண்டலாக.

அதில் உதட்டை சுழித்தவள், “நீ சொன்ன மாதிரி தான் எனக்கு ஷேர் பண்ண யாருமில்ல… எங்க அப்பா உன்கிட்ட பேசுற அளவுக்கு கூட எங்கிட்ட பேச மாட்டாரு…” என்றாள் சோகமாக.

அவளின் மனநிலை ஆகாஷிற்கும் புரிந்தது. அவன் அமைதியாகவே இருந்தான்.

“ச்சு… பையனாவே பொறந்திருக்கலாம்…” என்று கூறியவள், “நீ சொன்னா அப்பா கேப்பாருல… எனக்கு இப்போ கல்யாணம் வேணாம்… ப்ளீஸ் அப்பா கிட்ட சொல்லி இந்த கல்யாணத்த நிறுத்திடுறியா..?” என்றாள் கெஞ்சல் குரலில்.

‘ஹ்ம்ம் அது முடியாம தான நானே அமைதியா இருக்கேன்…’ என்று அவனால் உள்ளுக்குள் மட்டுமே நினைக்க முடிந்தது.

“ப்ச்… என்னால கல்யாணத்த நிறுத்த முடியாது… உனக்கு வேணும்னா நீயே நிறுத்திக்கோ…” என்றான்.

“ச்சே… உங்கிட்ட போய் சொன்னேன் பாரு…” என்று அவனை இன்னும் திட்டிவிட்டு தன்னறைக்கு சென்று விட்டாள்.

ஆகாஷிற்கு அவளின் வார்த்தைகளே மனதில் ஓடிக் கொண்டிருந்தன. அவள் கூறிய ‘கல்யாணம் வேணாம்’ என்றதை நினைத்து வருந்தியவன், ‘இப்போ’ என்ற வார்த்தையை கவனிக்காமல் விட்டததை நினைத்து பிற்காலத்தில் வருந்துவானோ…

அன்றைய இரவு இருவரும் தாமதமாக உறங்க, அடுத்த நாள் காலையிலும் தாமதமாகவே விழித்தனர். ஆனால் அவர்கள் விழித்த நொடி, அவர்களின் கூச்சலில் அந்த குடியிருப்பே அதிர்ந்து தான் போனது.


தொடரும்...

உங்க கருத்துக்களை இங்க பகிர்ந்துக்கோங்க பிரெண்ட்ஸ்...👇👇👇
 

Valli18

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 போன எபிக்கு நீங்க கொடுத்த ஆதரவுக்கு நன்றி...🙏🙏🙏 இதோ கதையோட முக்கிய இடத்துக்கு வந்தாச்சு... இங்க இருந்து தான் கதை ஸ்டார்ட் ஆகுதுன்னும் சொல்லலாம்...😁😁😁 படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க பிரெண்ட்ஸ்...😍😍😍

25010

அத்தியாயம் 3

அதிகாலை வேளை கனவில் மூழ்கியிருந்தவளின் இதழ்கள் கனவின் இனிமையை பறைசாற்றுமாறு விரிந்திருக்க, அதன் இனிமையைக் குழைக்கவென கர்ணக்கொடூரமாகக் கேட்டது அந்த சத்தம்.

“ஹு லெட்ஸ் தி டாக்ஸ் அவுட்” என்ற பாடல் அவளின் காதருகே கேட்க, அடித்து பிடித்து எழுந்தாள் பூமி.

“ச்சே அலாரமா… யாரது பாட்ட மாத்துனது… அந்த கருவாயன் மாத்திருப்பானோ…” என்று வாய்விட்டு புலம்பியவள், ஒற்றைக் கண்ணை மட்டும் திறந்து, மணி பார்க்க அலைபேசியை எடுத்தாள்.

‘இது அவனோட மொபைல் மாதிரி இருக்கு…’ என்று யோசித்தவள், அப்போது தான் அவளிருக்கும் அறையைக் கண்டாள்.

அதிர்ச்சியில் தூக்கத்திற்கு முழுதாக (!!!) விடைகொடுத்தவள், மீண்டும் தன் கண்களை தேய்த்துவிட்டு நன்றாக பார்த்தாள்.

“நான் எப்படி இவன் ரூமுக்கு வந்தேன்… நேத்து என்ன நடந்துச்சு… ஃபர்ஸ்ட் அவன் குடிச்சான்… நான் அவனுக்கு அட்வைஸ் பண்ணேன்… அப்பறம் நான் குடிக்கப் போனேன், அவன் எனக்கு திருப்பி அட்வைஸ் பண்ணான்… அவன் கல்யாணத்த நிறுத்த மாட்டேன்னு சொன்னதும் கோபத்துல என் ரூமுக்கு போயிட்டேன்… இது தான நடந்துச்சு… இதுல நான் எப்போ இவன் ரூமுக்கு… ஒரு வேள அப்படி இருக்குமோ… நைட் அந்த கருவாயன் என்ன…. சேச்சே அவன் அதுக்கு சரிபட்டு வரமாட்டான்...” என்று புலம்பியவாறே அறையில் நடந்து கொண்டிருந்தாள்.

அப்போது எதேச்சியாக அங்கிருந்த நிலைக்கண்ணாடியைக் கண்டவள், அதில் தெரிந்த அவளின் பிம்பத்தை அதிர்ச்சியுடன் பார்த்து கத்த ஆரம்பித்தாள். அதே நேரம் பக்கத்து அறையிலிருந்தவனும் கத்திக் கொண்டு தான் இருந்தான்.

ஐந்து நிமிடங்களுக்கு முன்பு…

கால்களை விரித்து சுகமாக படுத்து தூங்கிக் கொண்டிருந்தவனின் நித்திரையை, அலைபேசியின் அதிர்வொலி (வைப்ரேஷன் சவுண்ட்) கலைக்க, தூக்கம் பறிபோன கடுப்பில், எழுந்து கொள்ளாமல், அரைக்கண்ணில் வந்த புலன செய்தியை படித்தான்.

ஹாய் க்யூட்டி… திஸ் இஸ் ஸ்வீட்டி… அண்ட் திஸ் இஸ் மை நியூ நம்பர்… - என்ற செய்தியை படித்தவன், “யாரது ஸ்வீட்டி… அதுவும் என்ன க்யூட்டின்னு கூப்பிடுற ஸ்வீட்டி… ஹ்ம்ம் நம்ம பசங்க தான் விளையாடுறாங்க போல…” என்றவன் கண்களை மூட, மீண்டும் அதே ஒலி கேட்டது. மீண்டும் அதே ஸ்வீட்டியிடமிருந்து செய்தி…

“கொய்யால… எவன்டா அது காலங்கார்த்தால தூக்கத்த டிஸ்டர்ப் பண்ணுறது…” என்று கோபத்தில் கத்தியவாறே எழுந்தவன், கையிலிருந்த அலைபேசியை பார்த்து, “இது அந்த வெள்ளெலியோட மொபைலாச்சே… நேத்து நைட் தூக்கத்துல எதுவும் மாத்தி எடுத்துட்டு வந்துட்டோமோ… ஐயையோ இது என்ன அந்த ரவுடி ரூம்ல படுத்துருக்கேன்… போச்சு நேத்து சரகடிச்சுட்டு என்ன மறந்து அவ ரூமுக்கு வந்துட்டேன் போலயே… சும்மாவே ஜிங்கு ஜிங்குன்னு குதிப்பா, இப்போ அவள வேற சமாளிக்கணும்…” என்றவாறே நெட்டி முறித்தான்.

“மணி என்ன… ரொம்ப லேட்டாகிருச்சோ…” என்று அலைபேசியை எடுத்தவன், அதன் கருப்பு திரையில் தெரிந்த அவளின் உருவத்தைக் கண்டு பதறி, அதை கீழே போட்டு விட்டான்.

“ச்சே எங்க பார்த்தாலும் அந்த உலக உருண்ட மூஞ்சி தான் தெரியுது.” என்றவன், எதிரிலிருந்த கண்ணாடியில் அவன் உருவத்தை பார்க்க, அதிர்ச்சியில் அந்த நொடி அவனின் மூளை செயலிழந்து போனது. ஆனால் மறுநொடியே சுயத்திற்கு வந்தவன் அலறினான்.

அடுத்த இரண்டு நிமிடங்களுக்கு அந்த அடுக்குமாடி குடியிருப்பே இவர்களின் கூச்சலில் அல்லோலப் பட்டது.

தொடர்ந்து இரு நிமிடங்கள் கத்தியதால், சோர்ந்தவர்கள் அவர்களின் குரலுக்கு தற்காலிக ஓய்வளிக்க, அப்போது தான் இருவருக்கும் மற்றவர்களின் நினைவு வந்தது. இருவரும் ஒரே நேரத்தில் மற்றவர்களின் (!!!) கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தனர்.

நேருக்கு நேர் நின்ற இருவரும் ஒருவரையொருவர் பார்த்து மீண்டும் கத்த, இம்முறை அவர்களின் கூச்சலை அடக்கியது, வாசலில் இடைவிடாது ஒலித்த அழைப்பு மணி.

இருவரும் மற்றவரை முறைத்துக் கொண்டே வாசல் வரை சென்றனர். ஆகாஷ் கதவைத் திறக்க, அங்கு அவர்களின் அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள முக்கால்வாசி நபர்கள் அவர்களை முறைத்துக் கொண்டு நின்றிருந்தனர்.

அதில் ஒருவர், “என்னப்பா ஆகாஷ் காலங்கார்த்தால இப்படி எல்லாரோட தூக்கத்தையும் கெடுத்துட்டு இருக்கீங்க…” என்று அவனைப் பார்த்து கேட்க, அவனருகிலிருந்தவள் (!!!), “சாரி விஷ்ணு அங்கிள்… எல்லாத்துக்கும் ‘இவ’ தான் காரணம்…” என்று அவனை (!!!) முறைத்தாள்.

அந்த விஷ்ணு அங்கிள் எனப்பட்டவரோ, ‘என்னது இது இந்த பையன கேள்வி கேட்டா, அந்த பொண்ணு பதில் சொல்லுது…’ என்று குழம்பினார்.

மற்றவர்களும் அவர்களை ஒரு மாதிரி பார்க்க, ‘அவன்’ ‘அவளின்’ கைகளைப் பிடித்து, “சாரி அங்கிள்…” என்று கூறியவாறே உள்ளே சென்று கதவை அடைத்தான்.

இதைக் கண்டவர்களுக்கு, புரளி பேச விஷயம் கிடைத்த திருப்தியில் ஆளாளுக்கு ஒன்றை கூறியபடி கலைந்தனர்.

“ஹே எதுக்கு டி இப்போ என்ன இழுத்துட்டு வந்த… அவங்க என்ன நெனைப்பாங்க…” என்றான் ‘அவன்’, பெண்குரலில்…

“அவங்க வேற மாதிரி நெனச்சுடக் கூடாதுன்னு தான் இழுத்துட்டு வந்தேன்…” என்றாள் ‘அவள்’, ஆண்குரலில்…


அவளாக அவனும், அவனாக அவளும்..

உடலிருக்க, உயிர் மட்டும் இடமாறியதோ…
போகனின் சித்துவிளையாட்டுக்களுள் ஒன்றை
விதி இவர்களுக்கு வரமாக தந்திருக்க…

அதை வரமாக்கிக் கொள்வதும் சாபமாக்கிக் கொள்வதும் அவர்களின் கைகளில்…

அரைமணி நேரம் கடந்திருந்தது. இருவரும் எதிரெதிரே அமர்ந்து, தரையையும் உத்தரத்தையும் மாறி மாறி வெறித்திருந்தனர்.

அந்த அமைதியை பொறுக்காத பூமி, “எப்படி டா இப்படி…” என்று அவர்கள் இருவரையும் சுட்டிக் காட்ட, அதை யோசித்து யோசித்து மண்டை குழம்பியிருநத ஆகாஷோ, “ஹ்ம்ம்… நீதான் டி மந்திரவாதி, ஏதாவது மந்திரம் போட்டிருப்ப…” என்றான்.

அதில் வெகுண்டெழுந்தவள், “என்னையா மந்திரவாதின்னு சொன்ன… நீதான் டா பில்லி சூனியம் வைக்குற மாதிரி இருக்க…” என்றாள்.

பின் வாய்ச்சண்டை, கைச்சண்டையாக மாற, சோஃபாவின் தலையணைகளிலுள்ள பஞ்சு வெளிவரும் வரை அவர்களின் சண்டை நீடித்தது.

சிறிது நேரத்தில் சோர்ந்த இருவரும், “நீதான் டி(டா) ஆணா(பொண்ணா) மாறனும்னு ஆசைப்பட்ட…” என்று ஒரே நேரத்தில் கூறினர்.

ஒருவர் கூறியதை மற்றவர் கேட்டதும், அதிர்ச்சியடைந்தனர். இவர்களின் விருப்பத்திற்கு ‘ததாஸ்து’ கூறிய கடவுளோ, இவர்களின் சண்டையை பூஜையறையிலிருந்த போட்டோவிலிருந்து சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

*********

இருவரும் சற்று பயத்துடன் காணப்பட்டனர். ஆம் பயமே… இவ்வளவு நேரமிருந்த விளையாட்டுத்தனம் மறைந்து தீவிரமாக சிந்தித்தனர். இவர்களின் மாற்றத்திற்கான காரணம் விதியென்றால், அதை வெல்வதற்கான வழியையும் அறிய வேண்டுமல்லவா…

“டேய் அஷு… இப்போ என்னடா பண்றது…” நலிந்த குரலில் அவள் வினவினாள், பூமி.

“அதான் எனக்கும் தெரியல டி க்ளோபு…” – என்றான் ஆகாஷ், அவளின் ‘அஷு’வை கவனிக்காமல்…

சற்று நேரம் யோசித்தவன், “எனக்கு தெரிஞ்ச சாமியார் இருக்காரு. அவருக்கிட்ட கிட்ட போய் நாம திரும்ப நம்மளோட உடம்புக்குள்ள வரதுக்கான வழிய கேக்கலாமா…” என்றான்.

“சாமியாரா…” என்று முகத்தை சுழித்தவளை கடுப்புடன் பார்த்தவன், “ஏன் உன்கிட்ட வேற ஏதாவது நல்ல ஐடியா இருக்கா…” என்றான்.

“சரி சரி சாமியார் கிட்டயே போலாம்…” என்றாள்.

“ம்ம்ம் சரி நீ போய் உன் ரூம்ல குளி… நான் என் ரூம்ல குளிக்கிறேன்… சீக்கிரம் போனா தான் கூட்டமில்லாம இருக்கும்… அப்பறம் இன்னிக்கு உனக்கு லீவ் சொல்லிடு…” என்று ஆகாஷ் அடுத்தடுத்து திட்டங்களை தீட்ட, பூமியோ ‘குளி’ என்றதிலேயே ஸ்தம்பித்து போய் அமர்ந்திருந்தாள்.

அவளின் அதிர்ச்சியைக் கண்டவன், ‘இப்போ எதுக்கு இவ இப்படி ஷாக்காகுறா… இவளால தான மத்தவங்க தான இப்படி பேயறஞ்ச மாதிரி இருப்பாங்க…’ என்று யோசித்தவன், அவளை உலுக்கி நிகழ்விற்கு அழைத்து வந்து என்னவென்று வினவினான்.

“டேய் கருவாயா… நீ குளிக்க கூடாது…” என்றாள்.

‘என்னாச்சு இந்த க்ளோபுக்கு… எப்பவும் சுத்தம் சுகாதாரம்னு அரை பக்கத்துக்கு டையலாக் பேசுவா…’ என்று யோசித்தவனிற்கு அவள் அவ்வாறு கூறியதற்கான காரணம் புரிபட, ‘அடி வாடி என் மாமா பொண்ணு உலக உருண்ட… இன்னிக்கு இத வச்சே உன்ன கதற விடுறேன்…’ என்று மனதிற்குள் கூறியவன், “ச்சே குளிக்காம இருக்கணுமா… உன்ன மாதிரி நான் கெடையாது மா… தினமும் குளிச்சுடுவேன்…” என்று வெறுப்பேற்றினான்.

“ச்சோ… இப்போ நீ… நீ இல்ல… நான்…”

“இப்போ எதுக்கு நீ நான்னு உளறிட்டு இருக்க…”

“அடேய் கருவாயா… நீ இப்போ இருக்குறது என் உடம்புக்குள்ள… நீ எப்படி குளிப்ப… அது…” என்று கூறும்போதே அவளின் கண்கள் கலங்கிவிட்டது.

சிறுவயதிலிருந்தே, அவளின் சேட்டைக்கு எல்லாம் எதிர்வினை புரிபவன், அவளின் கண்ணீருக்கு அடங்கி விடுவான். இப்போதும் அப்படியே… அவளின் கண்ணீரைக் கண்டதும், தன் குறும்பை கைவிட்டவன், “ஹே லூசு இதுக்கெதுக்கு அழுதுட்டு இருக்க… அப்படி பார்த்தா, நீயும் தான் என் உடம்புக்குள்ள இருக்க… இங்க பாரு…” என்று கூறி அவளின் முகத்தை நிமிர்த்தி, கண்களில் வழியும் கண்ணீரைத் துடைத்தவன், “இப்படியே எவ்வளவு நாள் இருப்போம்னு தெரியாது… அதுவரைக்கும் குளிக்காம இருப்பியா…” என்று கேட்டான்.

அவள் இன்னும் தெளியாததைக் கண்டு, “சரி உனக்கு ப்ரோமிஸ் பண்றேன்… நான் கண்ண மூடிட்டு தான் குளிப்பேன் போதுமா…” என்றான்.

அதற்கு தலையாட்டியவள், “ஆமா நீ எப்படி கண்ண மூடிட்டே குளிப்ப…” என்றாள்.

“ம்ம்ம் ஆமால அப்போ கண்ண தொறந்தே குளிக்குறேன்…” என்றான் நக்கலாக.

“ஓய் கண்ண தொறந்தன்னு தெரிஞ்சுது, கண்ண நோண்டிடுவேன்…” என்று மிரட்டினாள்.

அவள் பேசியதிலிருந்து அவள் தெளிந்து விட்டாள் என்று புரிந்து கொண்டவன், “நீயும் தான் கண்ண மூடிட்டு குளிக்கணும்…” என்றான்.

அவளோ அவனை நக்கலாக பார்த்தபடி, “எனக்கு கண்ண மூடிட்டு குளிக்குற வித்தையெல்லாம் தெரியாது…” என்றாள்.

அவளின் கூற்றில் புருவம் உயர்த்தியவன், “அப்போ சரி கண்ண தொறந்தே குளி…” என்றான் விஷமமாக.

அதில் அதிர்ந்தவள், “உவக்… சீ…” என்று கூறி அறைக்குள் செல்ல முற்பட்டாள்.

அவளைத் தடுத்தவன், “ஓய்… இப்போ ப்ரோமிஸ் பண்ணது உனக்காக இல்ல… ‘நான்’ அழுகுறத என்னால பார்க்க முடியாம தான்…” என்றான்.

பூமியோ உதட்டை சுழித்துவிட்டு சென்று விட்டாள். ஆகாஷ் அவளின் செய்கைகளை எண்ணி சிரித்தவன், தலையை இடவலமாக ஆட்டிவிட்டு அறைக்குள் நுழைந்து கொண்டான்.


தொடரும்...

போறதுக்கு முன்னாடி ரெண்டு ஜாலி கேள்விகள் பிரெண்ட்ஸ்...

1. நீங்க தூங்கி எழுந்ததும், இப்படி நீங்களும் மாறியிருந்தீங்கன்னா, எப்படி ரியாக்ட் பண்ணுவீங்க...😉😉😉

2. உங்களுக்கும் இது மாதிரி கூடு விட்டு கூடு பாயுற சக்தி கிடைச்சா, யாரு உடம்புக்குள்ள போவீங்க...😜😜😜

விருப்பம் இருக்குறவங்க பதிலை கமெண்ட்ல சொல்லுங்க...😁😁😁

உங்க கருத்துக்களை இங்க பகிர்ந்துக்கோங்க...👇👇👇
 
Last edited:

Valli18

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 போன எபிக்கு நீங்க கொடுத்த ஆதரவுக்கு நன்றி...🙏🙏🙏 இதோ அடுத்த எபி போட்டாச்சு... படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க...😁😁😁

உள்ள போறதுக்கு முன்னாடி ஒரு டிஸ்கி... இந்த பதிவு யாரையும் குறிப்பிட்டு எழுதப்பட்டது அல்ல... இதில் வரும் பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே...😁😁😁

25028

அத்தியாயம் 4

(இனி ஆகாஷ், பூமி என்ற பெயர்கள் அவர்களின் ஆத்மாக்களை குறிக்கும்… உடல்களை அல்ல…)

ஆகாஷ் கொடுத்த ஆடையை அணிந்து அறையை விட்டு வெளியே வந்த பூமி, நடுகூடத்தில் அமர்ந்து, ஆகாஷின் அறையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ப்ச் இன்னும் என்ன பண்ணிட்டு இருக்கான்… எவ்ளோ நேரம்… ஒரு வேள ப்ரோமிஸ்ஸ மறந்து பார்த்திருப்பானோ… ச்சே அவ்ளோ மோசம் கிடையாது அந்த கருவாயன்…” என்று வாய்விட்டு புலம்பிக் கொண்டிருந்தாள்.

அவளை மேலும் சில நேரம் காத்திருக்க வைத்தே கதவைத் திறந்தான் ஆகாஷ். அவனைக் கண்டு தலையிலடித்துக் கொண்டாள் பூமி. ஏனெனில் அவன் இருந்த கோலம் அப்படி..

தலைமுடி கலைந்து முகத்தை மறைத்திருக்க, துப்பட்டாவோ ஒரு பக்கம் சரிந்து தொங்கிக் கொண்திருந்தது. அவனோ பின்னால் இருக்கும் கயிறைக் கட்ட படாத பாடு பட்டுக் கொண்டிருந்தான்.

“அடேய் என்ன டா இது…” என்று பூமி கோபமாக கேட்க, “அதே தான் டி நானும் கேக்குறேன்… என்னது இது… முடியா இது… அங்கங்க கொதறி வச்சுருக்க… இத சீவுறதுக்கு தான் இவ்ளோ லேட்டாச்சு… என் பொறுமைய இழுத்து பிடிச்சு சீவுனா, இங்க பாரு இப்போவே முகத்த மறைச்சுக்கிட்டு இருக்கு…” என்று ஆகாஷ் குற்றப்பத்திரிக்கை வாசிக்க, அவனை அனல் தெறிக்க பார்த்துக் கொண்டிருந்தாள் பூமி.

அதைப் பார்த்ததும் சற்று அடங்கிய ஆகாஷ், “சரி சரி வா கிளம்பலாம்…” என்றான்.

“என்னது கிளம்புறதா… இப்படியே வெளிய போகப் போறீயா… உனக்கு கொஞ்சமாச்சும் ட்ரெஸ்ஸிங் சென்ஸ் இருக்கா…” என்று கத்தத்துவங்க, ஆகாஷோ பாவமாக, ‘நான் இப்போ என்ன தப்பா சொல்லிட்டேன்னு இவ இந்த குதி குதிக்கிறா…’ என்று மனதிற்குள் பேசினான்.

திட்டுவதை எல்லாம் முடித்த பின்னர் அவனை இழுத்துச் சென்று அவளின் அலங்கார கண்ணாடி மேசையில் அமர வைத்தவள், “இங்க பாரு… இது தான் லாஸ்ட் டைம்… எப்படி இப்போ மேக்-அப் போடுறேனோ அப்படியே தான் ஒவ்வொரு தடவ வெளிய போகும் போதும் போடணும்… இதுல ஏதாவது ஒன்னு கொறஞ்சுச்சு, அப்பறம் நீ வெளிய போறதையே மறந்துடு…” என்று எச்சரித்துக் கொண்டிருக்க, ‘அடி க்ளோப்பே… இது தான் எனக்கும் மேக்-அப் போடுறது ஃபர்ஸ்ட் டைம் டி… சை ஒரு பொண்ணா இருக்குறது எவ்ளோ கஷ்டமா இருக்கு…’ என்று சலித்துக் கொண்டான்.

அடுத்த அரை மணிநேரம், எதை எதற்கு பயன்படுத்த வேண்டும் என்று கூறியவள், அவனை தயார் படுத்தினாள்.

“இப்போ போலாம்…” என்று அவள் அறையை விட்டு செல்ல முயற்சிக்க, அவளின் கையைப் பிடித்து தடுத்தவன், “எங்க போற… நீங்க மட்டும் தான் மேக்-அப் பண்ணுவீங்களா… நாங்களும் பண்ணுவோம்…” என்றவன் அவளை அந்த நாற்காலியில் அமர வைத்தான்.

“நான் இப்போ எப்படி ஸ்டைலா முடிய கோதி விடுறேனோ, அப்படி தான் வெளிய போகும் போதேல்லாம் பண்ணனும்… அப்பறம் என்னது இது டக்-இன் பண்ணிட்டு… இதெல்லாம் வேலைக்கு போகும்போது மட்டும் தான்…” என்றவன் டக்-இன் செய்த ஷர்ட்டை வெளியே எடுத்து விட, பூமிக்கு தான் அவனின் நெருக்கம், உள்ளுக்குள் சொல்லத் தெரியாத பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுவரை தொட்டு பேசாதவர்கள் அல்ல… ஆனாலும் இன்றைய நெருக்கம், அவளின் மனதை ஏதோ ஒரு விதத்தில் பாதித்தது. அவளிருப்பது அவனின் உடலில் தான் என்றாலும் உணர்வுகள் அவளது தானே…

ஆகாஷோ இதை எதுவும் அறியாமல், அவனின் வேலையில் கண்ணாக இருந்தான்.

“ஏண்டி நெளிஞ்சுகிட்டே இருக்க… நீ எனக்கு மேக்-அப் பண்ணி விடும்போது இப்படி தான் நெளிஞ்சுட்டு இருந்தேனா…”

‘ஐயோ படுத்துறானே இவன்…’ என்று மனதிற்குள் புலம்பியவள், அவனை தள்ளி நிற்க வைத்து, “போதும் டா… லேட்டாச்சு…” என்று ஏதேதோ கூறி சமாளித்துவிட்டு அறைக்கு வெளியே சென்று விட்டாள்.

ஆகாஷோ ‘இனி மேக்-அப் பண்றேன்னு என் பக்கத்துல வருவ நீ…’ என்று மனதிற்குள் நினைத்து சிரித்து விட்டு அவனும் வெளியே வந்தான்.

********

‘ஸ்ரீ கஷ்டானந்தா சுவாமிகளின் அன்பாலயம்’ என்ற பலகையைக் கண்டவள், “கஷ்டானந்தா சுவாமிகளா… என்ன பேரு டா இது…” என்று அவள் முகத்தை சுழிக்க, “நம்ம கஷ்டங்களை எல்லாம் அவருக்கிட்ட கொட்டி வழி கேக்குறோம்ல அதான் கஷ்டானந்தா சுவாமிகள்…” என்று விளக்கினான் ஆகாஷ்.

“க்கும் கஷ்டத்தை மட்டுமா கொட்டுறோம்… காசையும் சேர்த்து தான கொட்டுறோம்… ஆமா இவர எப்படி உனக்கு தெரியும்…” என்று வினவினாள் பூமி.

“என் பிரெண்டு பல குடும்ப பிரச்சனைகளால தவிச்சுட்டு இருந்தப்போ, இவருக்கிட்ட வந்தானாம்… இவருக்கிட்ட கஷ்டங்கள கொட்டிட்டு போன ஒரே வாரத்துல அவன் குடும்ப பிரச்சனை எல்லாம் தீர்ந்துடுச்சாம்…”

“இதெல்லாம் நீ நம்புறியா…”

“ப்ச் பூமி நமக்கு இப்போ வேற வழியில்ல… இது ஜஸ்ட் அ ட்ரை… பண்ணித்தான் பார்ப்போமே…”

அவன் கூறுவதை போல், முயற்சி செய்து பார்ப்பதில் தவறில்லை என்பதால், அமைதியாக அந்த வரிசையில் அவனுடன் நின்றாள்.

நேரம் கூட கூட வரிசை நீண்டு கொண்டே செல்ல, அவர்களை உள்ளே அழைத்த பாடில்லை. அப்படியே ஒருவர் உள்ளே சென்று விட்டு வெளியே வந்தாலும், அடுத்த நபரை உள்ளே அழைப்பதற்கு மேலும் ஐந்து நிமிடங்கள் ஆனது.

காத்திருந்து காத்திருந்து கடுப்பாகிப் போன பூமி, அருகில் வந்த அவரின் சீடன் ஒருவனை அழைத்து, “ஒருத்தர் போயிட்டு வந்ததுக்கப்பறம் அடுத்தவர உள்ள அனுப்ப ஏன் இவ்ளோ நேரம்..?” என்று வினவினாள்.

“ஒருத்தருக்கிட்ட இருந்து அவங்க கஷ்டங்கள வாங்கினதும், சுவாமிகள் ஆழ்நிலை தியானத்துக்கு போய் அவங்க கஷ்டங்களை கரைப்பாரு… அதுக்கு தான் அந்த ஐந்து நிமிடங்கள் தேவைப்படுது…” என்று விளக்கிவிட்டு சென்றார்.

ஆகாஷை ஒரு பார்வை பார்த்தவள், தலையை இடவலமாக ஆட்டிவிட்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

அடுத்த அரைமணி நேரத்தில் இவர்களை உள்ளே அழைத்தனர்.

பத்தி மற்றும் சாம்பிராணியின் புகையினால், சற்றே மங்கலாக காட்சியளித்தது அந்த இடம். அதீத சந்தன வாசனையும் பூக்களின் நறுமணமும் நாசியைத் தீண்டி அவர்களை ஒருவித மயக்க நிலைக்குத் தள்ளியது. அதிலிருந்து சமாளித்து இருவரும் உள்ளே சென்றனர்.

அங்கு ‘கஷ்டானந்தா சுவாமிகள்’ எனப்பட்டவரோ, இரு சிஷ்யர்கள் அருகில் நிற்க, சுற்றி பூ, பழங்கள் ஆகியவை வைக்கப் பட்டிருக்க, நடுவில் அமர்ந்திருந்தார். புன்னகையுடன் இவர்களை நோக்கியவர், அமருமாறு சைகை செய்தார்.

அவர்கள் அமர்ந்ததும், “வாருங்கள் குழந்தைகளே… உங்கள் கஷ்டங்களை இந்த கஷ்டானந்தாவிடம் கொட்டுங்கள்… உங்களின் கஷ்டங்கள் அதோடு மறைந்துவிடும்…” என்று அவர் கூற, அவரின் தொனியில் அடக்க முடியாமல் சிரித்து விட்டாள் பூமி.

ஆகாஷ் அவளைக் கண்டு முறைக்க, சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.

பின், “சுவாமி எனக்கு ஒரு சந்தேகம்…” என்று அவளே ஆரம்பித்தாள். ஏதோ வில்லங்கமாக கேட்க போகிறாள் என்பதை உணர்ந்த ஆகாஷ் அவளை அடக்க முயல, அவனின் முயற்சியைத் தடுத்த சுவாமி, “கேள் குழந்தாய்…” என்று கூறினார்.

‘இவர டேமேஜ் பண்றதுக்கு இவரே வாலண்டியரா என்ட்ரி குடுக்குறாரு… என்ன ஆகப் போகுதோ…’ என்று சிந்தித்தவன், அருகே இருந்த சீடர்களைக் கண்டு, ‘இவனுங்க வேற பல்க்கா இருக்கானுங்க… இன்னிக்கு உசுரோட வீடு போய் சேருவோமா…’ என்று புலம்பினான்.

இதைப் பற்றி கவலைப்படாத பூமியோ, “சுவாமி, உங்களிடம் கஷ்டங்களை மட்டும் கொட்டினால் போதுமா… வேறு எதையும் கொட்ட வேண்டாமா…” என்று விஷமமாகக் கேட்டாள்.

அதில் குழம்பிய சுவாமியோ, “என்ன கேட்க வருகிறாய் குழந்தாய்… புரியும்படி கேள்…” என்றார்.

“இதுவே புரியலைனா எங்க கஷ்டங்களை எப்படி புரிஞ்சு தீர்த்து வைப்பீங்க சுவாமி…” என்று சலித்த குரலில் கூறி அவருக்கு ஒரு குட்டு வைத்தவள், “கஷ்டங்களை மட்டும் கொட்டினால் போதுமா… காசு பணம் எதுவும் கொட்ட வேண்டாமா என்று கேட்டேன் சுவாமி…” என்றாள்.

அப்போது ஒரு சீடன் சுவாமியின் காதில், “அடேய் சாமி இதுங்க ரெண்டும் விவரமா இருக்குதுங்க… ஒழுங்கா பேசி சமாளி…” என்று முணுமுணுத்தான்.

“அப்படியே ஆகட்டும் சிஷ்யா…” என்று கூறினார் சுவாமிகள்.

பின் பூமியைக் கண்டு பெரிதாக சிரித்தவர், “குழந்தாய், முற்றும் துறந்தவனிற்கு செல்வம் ஒரு கேடா… நீங்களும் அளிக்கும் நன்கொடைகள் இறைவன் பெயரால், உதவி தேவைப்படுபவர்களுக்கு தானமாக வழங்கப் படுகிறது…” என்றார்.

அவர் பாதை அமைத்துக் கொடுக்க, அதையே பின்பற்றினர் சீடர்களும். “சுவாமி சொல்றது சரி தான்… நீங்க கொடுக்குற பணம், பசியால் வாடுற பலரோட பசிய போக்குறதுக்காக செலவிடப் படுது..” என்றான் ஒருவன்.

மற்றொருவனோ, “பல அனாதை ஆசிரமங்களுக்கும், முதியோர் இல்லங்களுக்கும் இதிலிருந்து ஒரு பங்கு தொகை தானமாக வழங்குகிறோம்…” என்று கூறி சுவாமியை பார்த்தான்.

சுவாமியோ, ‘அடேய் நீயா எதுக்கு டா கோர்த்து விடுற…’ என்று மனதிற்குள் திட்டிக்கொண்டே அவனை பார்த்து சிரித்து வைத்தார்.

“ஓ… ஆமா முற்றும் துறந்தவருக்கு எதுக்கு ஏசி ரூமு... சரி சரி அத விடுவோம்… நீங்க எந்தந்த அனாதை ஆஸ்ரமங்களுக்கு உதவி செய்யுறீங்கன்னு சொன்னா, நானும் அவங்களுக்கு உதவலாம்னு இருக்கேன்… நீங்க அட்ரஸ் தாங்க, நாங்க அவங்களுக்கு என்ன மாதிரி உதவி தேவைப்படுதுன்னு கேட்டுக்குறோம்…” என்று கூற, சுவாமி மற்றும் அவரின் இரு சீடர்களும் மாட்டிக்கொண்ட உணர்வில் என்ன சொல்வதென்று தெரியாமல் திணறினர்.

அவர்களை காப்பவனாக, “ஷ் பூமி… கொஞ்ச நேரம் அமைதியா இரு…” என்று அடக்கியவன், தங்களின் பிரச்சனையை சுவாமியிடம் கூறினான்.

அவ்வளவு நேரம் பூமியை சமாளிக்கவே படாத பாடு பட்டதால், அவளருகில் இருக்கும் பெண்ணை (!!!) சுவாமி கவனிக்க வில்லை. இப்போதோ அந்த பெண்ணையே (!!!) வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். ஆகாஷ் அவரின் பார்வையை கவனிக்காமல், அவர்களின் பிரச்சனையை கூறி முடித்திருந்தான்.

ஆகாஷ் கூறி முடித்தும் அவரிடமிருந்து பதிலில்லாமல் போனதால், பூமி சுவாமியை பார்க்க, அவரோ ஆகாஷின் அழகை (!!!) ரசித்துக் கொண்டிருந்தார்.

அதில் கோவம் கொண்ட பூமி, “யோவ்…” என்று கத்தியிருந்தாள்.

அவளின் கத்தலில் மற்ற நால்வரும் அதிர்ந்து அவளை பார்த்தனர். சுவாமியோ ஒரு படி மேலே சென்று, “குழந்தாய், இப்போது என்னை மரியாதை இல்லாமல் விளித்தாயா…” என்று சற்று கோபத்துடன் கேட்டார்.

பூமி ஏதோ கூறப் போக, ஆகாஷ் அவளின் கைகளை அழுத்தி, கண்களாலேயே வேண்டாம் என்று ஜாடை காட்டினான்.

அதில் தன் கோபத்தை குறைத்தவள், “என்னது நான் உங்களை மரியாதை இல்லாமல் அழைத்தேனா…” என்று பாவமாக கேட்டாள்.

“ஆம்… இப்போது தானே ‘யோவ்’ என்று கூறினாய்…”

“அது அப்படியில்லை சுவாமி. இவன் நடந்ததைக் கூறிய பின்னரும் தாங்கள் யோசனையில் இருந்தீர்களா… அது தான் என்ன யோசனை என்று தெரிவதற்காக ‘யோ…’ என்று ஆரம்பித்தேன். பின்னர் தான் உங்களைப் போன்ற மகான்கள் உலக நன்மைக்காக அடிக்கடி யோசனையில் மூழ்குவீர்கள்… உங்கள் சிந்தனையை எதற்கு தொல்லை செய்ய வேண்டும் என்று நினைத்து, கேட்க வந்ததை வாய்க்குள்ளேயே முழுங்கிவிட்டேன்… அதனால் தான் ‘யோ..வ்’ என்று தங்களுக்கு கேட்டது…” விளக்கினாள்.

“நீ கூறிய ‘யோவ்’விற்கு இதுவா அர்த்தம்…” என்று சுவாமி கேட்க, “ஆமாம் சுவாமி…” என்றாள். ஆகாஷிற்கு பூமி கூறியதைக் கேட்டு சிரிப்பு வந்தாலும், அதை அடக்கிக் கொண்டான்.

“ம்ம்ம் நல்லது… இப்போது உங்கள் பிரச்சனைக்கு வருவோம்…” என்று அவர் ஏதோ சொல்லப் போக, இப்போதும் அவரின் சீடன் அவரின் காதருகே குனிந்து, “யோவ்…” என்று முணுமுணுத்தான்.

அதில் அவர் அவனை முறைக்க, “ரொம்ப முக்கியம்… இத கவனி… இது கொஞ்சம் சிக்கலான பிரச்சனை போல… ஏதாவது எடக்குமடக்கா பேசி, நீ போலி சாமியார்னு தெரிய வந்தது, ஒரு நாடு இல்ல ஒரு வீடு கூட வாங்க முடியாது… ஏற்கனவே இந்த இடத்தோட ஓனர், ரெண்டு மாசம் வாடகைய வாங்க வந்துருக்கான்… அவன பின் பக்கம் மடக்கி வச்சிருக்கோம்… இவங்க கிட்டேயிருந்து கரக்குற பணத்த வச்சு தான் அவனுக்கு செட்டில் பண்ணனும்… அத மனசுல வச்சுக்கிட்டு ஜொள்ளு விடாம, ஏதாவது சொல்லி சமாளி…” என்றான்.

“இப்போ பாரு எப்படி சமாளிக்குறேன்னு…” என்று சீடனிடம் முணுமுணுத்தவர், ஆகாஷ் மற்றும் பூமியைப் பார்த்து, “உங்கள் பிரச்சனையைத் தீர்க்க சில நாட்கள் ஆகலாம்… உங்களுக்காக கடும் தவம் புரிய போகிறேன்… அதன்மூலம் உங்களின் ஆத்மாக்களை என்னுள் கொண்டு வந்து மறுபடியும் அவரவர்களின் உடலில் செலுத்த போகிறேன்… அதுவரையிலும் நீங்கள் இங்கே தங்கியிருந்து எனக்கு சேவை செய்ய வேண்டும்…” என்று ஆகாஷை ஒரு மாதிரி பார்த்துக் கொண்டே கூற, ஆகாஷிற்கும் கோபம் வந்தது.

பூமியோ வெகுண்டெழுந்து, “யோவ்…” கத்தினாள்.

“குழந்தாய், நான் தான் இப்போது எதையும் யோசிக்க வில்லையே…”

“மண்ணாங்கட்டி… நீ யோசிக்குறதெல்லாம் என்னன்னு எனக்கு தெரியும்… பேர பாரு கஷ்டானந்தாவாம்… கஷ்டத்த கொட்டனுமாம்… நாலு விட்டேன் உன் கஷ்டத்த சொல்ல ஆளே இல்லாம போயிடுவ… இவரு மூஞ்சிக்கு சேவை பண்ணனுமாம்ல…” என்று அவள் கோபத்தில் அங்கிருந்த பூஜை தட்டு, பழத்தட்டு ஆகியவற்றை அவர்களின் மீது வீசினாள்.

இன்னும் சிறிது நேரம் அங்கிருந்தால், அவர்களின் உயிருக்கு பாதிப்பு வந்துவிடுமோ என்று எண்ணிய ஆகாஷ், பூமியை இழுத்துக் கொண்டு வெளியே சென்றான்.

இங்கு சுவாமியின் நிலை தான் பரிதாபமாக இருந்தது. மஞ்சள், குங்குமம் எல்லாம் சேர்ந்து ஒரு கலவையாகி அவரின் உடலில் புது வண்ணம் பூசியிருக்க, அதில் அவர் வாங்கிய பல ஊமைக் காயங்கள், வெளியில் தெரியாமல் மறைந்து போனதோ…

“சிஷ்யா, இப்போ இங்க என்ன நடந்துச்சு…?” – தட்டுத்தடுமாறி எழுந்தவர் பாவமாக கேட்டார்.

“ஹ்ம்ம் உனக்கு சேவை செஞ்சுட்டு போனாங்க… ஆளப் பாரு… நான் தான் சொன்னேன்ல பார்த்து பேசுன்னு…”

“க்கும்… பார்த்து பேசுனதுனால தான் இந்த நெலமைல இருக்கேன்… அடேய் சிஷ்யா என்ன அப்படியே கைத்தாங்கலா ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போங்க டா… வெளிய இருக்க அந்த ஓனர் பயலுக்கிட்டயிருந்து வேற தப்பிக்கணுமே… ஆஆ… டேய் அங்க தொடாதடா… ஐயோ அம்மா வலிக்குதே…”

“யோவ் என்னயா சமஞ்ச புள்ள மாதிரி நெளிஞ்சுட்டே இருக்க… ஒழுங்கா நடந்து வா யா…”

*****

ஆகாஷ், சிறிது தூரம் சென்றவன், ஆளில்லாத இடத்தில் நின்றான். அவ்வளவு நேரமும் திட்டிக்கொண்டே வந்தவள், அவன் நின்றதும், “ஏன்டா இப்போ என்ன கூட்டிட்டு வந்த… அந்த போலி சாமியார இன்னும் நல்லா திட்டிருப்பேன்…” என்று சூடான குரலில் கூறினாள்

ஆகாஷோ கையைக் கட்டிக்கொண்டு, “இங்க நம்ம பிரச்சனையே எப்படி தீர்க்க போறோம்னு தெரியாம முழிச்சுட்டு இருக்கோம்… இதுல ஊருல இருக்க பிரச்சனையெல்லாம் உன் தலைல போட்டுக்க போறீயா…” என்றான்.

“அதுக்காக அப்படியே விட சொல்றீயா… என்ன என்ன உன்ன மாதிரி சமூக பொறுப்பில்லாதவன்னு நெனைச்சீயா…”

“எனக்கும் சமூக பொறுப்பு இருக்கு… அதுக்குன்னு உன்ன மாதிரி லூசுத்தனமா யோசிக்காம முடிவெடுக்க மாட்டேன்…”என்று கூறியவன், யாருக்கோ அலைபேசியில் அழைப்பு விடுத்தான்.

அவன் பேசியதை வைத்தே, இந்த போலி சாமியாரைப் பற்றி யாருக்கோ கூறுகிறான் என்பதை உணர்ந்து கொண்டாள்.

அலைபேசியில் பேசி முடித்ததும், “இப்போ என் பிரெண்டுக்கு தான் கால் பண்ணேன்… அவன் பிரெஸ்ல வேலை பாக்குறான்… இனி இந்த பிரச்சனைய எப்படி வெளிய கொண்டு வரணும்னு அவன் பார்த்துப்பான்… எந்தவொரு விஷயத்துலயும் ஆழம் தெரியாம கால விடக் கூடாது…” என்று கூறி அவளின் துடுக்குதனத்திற்கு ஒரு கொட்டும் வைத்தான்.

ஆனால் அதை ஒத்துக்கொள்ள முடியாத பூமி, ‘இவன ஏதாவது சொல்லணுமே...’ என்று யோசித்தவள், ‘ஹான் கெடைச்சுருச்சு…’ என்று சந்தோஷித்தாள்.

“டேய் கருவாயா… அதெல்லாம் சரி… அவன் உன்ன தப்பா பாக்குறான்னு கூட தெரியாதா உனக்கு…” என்று அடுத்த பிரச்சனையை கையில் எடுத்தாள்.

“எனக்கு இந்த மாதிரி எக்ஸ்பீரியன்ஸ் இல்லல… அதான் அத உணர முடியல…” என்றான் மெல்லிய குரலில்.

இவள் அதற்கு ஏதோ திட்ட, அந்த பக்கம் வந்த ஒரு மாமி, “நடுரோட்டுல இப்படி ஒரு பொண்ண திட்டுறானே… ஏண்டா அம்பி உங்க பிரச்சனைய ஆத்துல போய் வச்சுக்கப்படாதோ... அந்த பொண்ணு மனசு என்ன பாடுபடும்…” என்று தேவையில்லாமல் ஆஜரானார்.

“அது பொண்ணுன்னு உங்களுக்கு தெரியுமா…” என்று எரிச்சலில் பூமி கேட்டாள்.

“இதுல என்னடா அம்பி நோக்கு சந்தேகம்… நன்னா அழகா லக்ஷணமா இருக்காளே… என்ன அவள கம்பேர் பண்றச்சே நீ கொஞ்சம் கம்மி தான்…” என்க, அவளின் அழகைப் பாராட்டுவதைக் கூட அனுபவிக்க முடியாத எரிச்சலில், “ஏதாவது சொல்லிட போறேன் மாமி… உங்க வேலைய பார்த்துட்டு போங்க…” என்றாள்.

அவளின் கோபத்தில் சற்று பயந்த அந்த மாமி, “நன்னா மூக்குக்கு மேல கோபம் வர்ரது… ஏம்மா உன் ஆத்துக்காரரை பார்த்து அழைச்சுண்டு போ…” என்று கூறி அங்கிருந்து நழுவினார்.

ஆகாஷோ நடப்பவைகளைக் கண்டு தலையில் கைவைத்து விட்டான்.

அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், இருவரும் அருகிலிருந்த கோவிலில் சென்று அமர்ந்து விட்டனர்.

“இப்போ என்ன டா பண்றது… நம்மளால திரும்ப பழைய மாதிரி மாற முடியாதா…” என்று பூமி சோகமாக கேட்டாள்.

அப்போது அவர்களின் அருகில் சத்தம் கேட்டது. இருவரும் அங்கு பார்க்க, சற்று வயதான தோற்றத்தில், ஜடாமுடியுடனும், அழுக்கு உடையுடனும் ஒருவர் தூணில் சாய்ந்து இவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்.

“அவன் உங்களுக்கு வைக்கும் பரிட்சை இது…
அதற்கான பதிலை பிறரிடம் எதிர்பார்க்காமல், உங்களுக்குள்ளே தேடுங்கள்…
நீங்கள் எப்படி இருக்க ஆசைப்பட்டீர்களோ, அப்படியே மாறியிருக்கிறீர்கள்..
யாருக்கும் தராதை உங்களுக்கு தந்திருக்கிறான் அவன்…
எனில், அதை வரமாக மாற்றுவது உங்கள் கைகளில் தான் இருக்கிறது…”

அவர் இவ்வாறு கூற, இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.


தொடரும்...

உங்க கருத்துக்களை இங்க பகிர்ந்துக்கோங்க பிரெண்ட்ஸ்...👇👇👇
 

Valli18

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 போன எபிக்கு நீங்க கொடுத்த ஆதரவுக்கு நன்றி...🙏🙏🙏 இதோ அடுத்த எபி போட்டாச்சு...😁😁😁 முதல் தடவை சமைக்குறவங்களுக்கு ஏத்த டிஷ் ஒன்னு இந்த எபில இருக்கு...😉😉😉 படிச்சுட்டு மறக்காம அதையும் ட்ரை பண்ணி பாருங்க...😜😜😜

25053

அத்தியாயம் 5

வீட்டிற்கு திரும்பிய பின்னரும் ஆகாஷும் பூமியும் யோசனையிலேயே இருந்தனர். காலையிலிருந்து எதுவும் சாப்பிடாததால், பூமிக்கு பசியெடுக்க, “டேய் கருவாயா இன்னைக்கு காலைல என்ன சமைச்ச…” என்று ஆகாஷிடம் கேட்டாள்.

‘அடிப்பாவி க்ளோபு… இன்னைக்கு காலைலயிருந்து உங்கூட தான் சுத்திட்டு இருக்கேன்… எவ்ளோ கொழுப்பிருந்தா என்ன சமைச்சுருக்கன்னு கேப்ப… இருடி என் அத்தை பெத்த உருண்ட…’ என்று மனதிற்குள் அவளைத் திட்டியவன், “மேடம், இன்னிக்கு மார்னிங்லயிருந்து நான் உங்க கூட தான் சுத்துறேன்… அது நியாபகம் இருக்கா…” என்றான்.

“ஓ ஆமால… சரி சரி… இப்போ போய் சீக்கிரம் சமைச்சு எடுத்துட்டு வா… எனக்கு பசிக்குது…”

“ஓய் என்னால சமைக்க முடியாது… இந்த லாக்டவுன் பீரியட்ல நீ.. அதாவது நானா இருக்க நீ தான் சமைக்கணும்…”

“என்னாது லாக்டவுனா…”

“ஆமா… நீ என் உடம்புக்குள்ள லாக்டவுன், நான் உன் உடம்புக்குள்ள லாக்டவுன்… ப்ச் இப்போ அதுக்கெல்லாம் நேரமில்ல… நீ சொன்ன மாதிரி எனக்கும் பசிக்குது… சோ சீக்கிரம் போய் சமைச்சு வை…”

“டேய் ஸ்கை ஹை என்ன கிண்டலா… என்னால சமைக்க முடியாது…”

“சரி உன்ன பாத்தாலும் பாவமா இருக்கு… உனக்கு ரெண்டு ஆப்ஷன் தரேன்… ஒன்னு என் உடம்புல இருக்குற வரைக்கும் மட்டும் சமைக்கணும்… இல்லனா எப்போ நீயா மாறுறியோ, அப்போல இருந்து நீ தான் சமைக்கணும்… சாய்ஸ் இஸ் யுவர்ஸ் க்ளோபு…”

‘பெரிய உங்கள் சாய்ஸ்… வந்துட்டான்… இவன் சொல்ற மாதிரி சமைக்க விட்டுடுவானோ… ஹ்ம்ம் வாய்ப்பிருக்கு… இவன் அப்பாகிட்ட சொன்னா, சமைக்க கூட மாட்டியான்னு திட்டி சமைக்க வச்சுடுவாரு… இதுக்கு இவன் சொன்ன ஃபர்ஸ்ட் ஆப்ஷனே பெட்டர்…’ என்று யோசித்தவள் , “சரி சரி நானே சமைக்குறேன்… ஆனா நீ வாக்கு மாற மாட்டேல… நாம திரும்ப மாறுனதுக்கு அப்பறம் நீ தான் சமைக்கணும்…” என்றாள்.

“ம்ம்ம் அதெல்லாம் அப்பறம் பார்த்துக்கலாம்… இப்போ போய் மாமாக்கு சூடா சமைச்சு வை க்ளோபு…” என்றான்.

‘மாமாவாம் மாமா… இரு டா உன்ன கோமாக்கு அனுப்புற மாதிரி சமைக்குறேன்…’ என்று மனதிற்குள் அவனை திட்டிவிட்டு சமையலறைக்குள் புகுந்தாள்.

ஆகாஷோ, கைகளைத் தலைக்குப் பின்னே கட்டியவாறு சோஃபாவில் சாய்ந்தமர்ந்து, ‘இந்த உருண்ட நமக்கு பயந்துட்டாளோ… இருக்கும் இருக்கும்… இது கூட நல்லா ஜாலியா தான இருக்கு… இப்படியே இருந்துட்டா என்ன…’ என்று யோசித்தவனிற்கு, சற்று முன் மேக்-அப் செய்தது நினைவிற்கு வர, தலையை உலுக்கிக் கொண்டு, “ஃபர்ஸ்ட் நம்ம உடம்புக்கு மாறிடனும்…” என்று வாய் விட்டு கூறிக் கொண்டான்.

மேலும் கால் மணி நேரம் கடக்க, ‘இந்த வெள்ளெலி கிச்சன்ல என்ன உருட்டிட்டு இருக்கான்னு தெரியலயே…எதுக்கும் உள்ள போய் பாப்போம்…’ என்று சமையலறைக்குள் எட்டிப் பார்த்தான்.

“ஹே க்ளோப், மே இ கம் இன்..” என்றாவரே உள்ளே செல்ல, “ப்ச்… இப்போ எதுக்கு உள்ள வர… நான் சமைக்கும்போது யாரு டிஸ்டர்ப் பண்ணாலும் எனக்கு பிடிக்காது…” என்று பூமி கூறி, அவள் சமையலறை மேடையில் எடுத்து வைத்திருப்பதை மறைத்தவாறு நின்று கொண்டாள் .

“அப்படி என்னத்த சமைக்குற வெள்ளெலி…” என்று அவள் பின்னே பார்க்க முயல, “ஹே இப்போ எதுக்கு எட்டி எட்டி பார்க்குற… இன்னைக்கு நான் சைனீஸ் டிஷ் பண்றேன்…” என்றாள்.

‘சைனீஸ்ஸா!!! ஒரு வேள வௌவ்வால குடுத்து சாப்பிட சொல்லிருவாளோ…’ என்று சற்று பீதியுடனே, “அப்படி என்ன டிஷ் பண்றீங்க மேடம்…” என்று பூமியிடம் வினவினான்.

“ம்ம்ம் நூடுல்ஸ்…”

அப்போது அவளின் பின்னிருந்த பிரிக்கப்பட்ட நூடுல்ஸ் பாக்கெட் தெரிய, ‘ச்சே வௌவ்வால், பாம்புன்னு என்னமோ நெனச்சேன்… கடைசில நூடுல்ஸுக்கு தான் இவ்ளோ ‘பில்ட்-அப்’பா… ஆமா இவ வந்து ரொம்ப நேரமாச்சே… இன்னுமா நூடுல்ஸ் பண்ணிட்டு இருக்கா…’ என்று யோசித்தவன், “நூடுல்ஸ் ரெடியாகிடுச்சுன்னா எடுத்துட்டு வர வேண்டியது தான…” என்றான்.

“ஓய் என்ன கிண்டலா… இன்னும் வேகப் போடவே இல்ல…”

“அப்போ இவ்ளோ நேரம் என்ன பண்ண…?”

“ஹான் ஊற வச்சேன்…”

‘என்னாது ஊற வச்சாளா!!!’

“ஆனா இப்போ எனக்கு ஒரு டவுட் வந்துடுச்சு… ரைஸுக்கு மூணு விசில்னு அம்மா சொல்லிருக்காங்க… அப்போ நூடுல்ஸுக்கு எத்தன விசில் வைக்கணும்…”

‘டூ மினிட்ஸ் நூடுல்ஸுக்கு விசிலா!!!’ என்று தலையில் கை வைத்துக் கொண்டான் ஆகாஷ்.

“அப்போதான் நானா ஒன்னு கண்டுபிடிச்சேன்…” என்று அவள் கூறவும், ‘போச்சு இன்னும் என்ன பண்ணி வச்சுருக்கான்னு தெரியலையே…’ என்று பயந்து கொண்டே, “என்ன கண்டுபிடிச்ச?” என்று கேட்டான்.

“சின்னதா இருக்க அரிசிக்கே மூணு விசில்னா, இது நீளமா வேற இருக்கா, அதான் ஒரு பத்து விசில் வைக்கலாம்னு நெனச்சேன்…”

‘அடியேய் அத்த பெத்த அனகொன்டாவே… இத்தன நாள் கிட்சன் பக்கம் எட்டி கூட பார்த்தது இல்லயா டி நீ… இதுக்கு தான் உன்ன என் தலையில கட்ட பிளான் பண்ணியிருப்பாங்களோ…’ என்று மனதிற்குள் நினைத்தவன், “ஏன் க்ளோபு அந்த நூடுல்ஸ் பாக்கெட் பின்னாடியே செய்முறை விளக்கம் இருக்குமே, அதெல்லாம் படிக்கலையா…” என்றான்.

“ஓய் என்ன என்ன நூடுல்ஸ் கூட சமைக்க தெரியாதவன்னு நெனச்சீயா… ஊருல வந்து கேட்டுப் பாரு, என் சமையல் திறமைய பத்தி…” என்று பூமி பெருமை பேசினாள்.

‘இனி இவள இங்க விட்டு வச்சா, நூடுல்ஸ் வச்சு குழம்பு வச்சாலும் வைப்பா… எப்படியாவது பேக் பண்ணி வெளிய அனுப்பணும்…’ என்று நினைத்தவன், “சரி சரி நீ இவ்ளோ பண்ணதே போதும்… வெளிய போ…” என்றான்.

“ஹே இன்னும் வேக வைக்கவே இல்ல… என் சமையல் திறமைய பார்த்து உனக்கு பொறாமை… இதுக்கே இப்படினா, நாளைக்கு ஒரு கொரியன் டிஷ் பண்ண போறேன்…” என்று கூறினாள்.

‘இவ என்ன சாகடிக்காம விட மாட்டா போல..’ என்று பயந்தவன், “நீ ஆணியே பிடுங்க வேணாம்… வெளிய போடி…” என்று கத்தினான்.

“டேய் கருவாயா என்ன மிரட்டுற… அப்போ என்னன்னா நீ தான் சமைக்கணும்னு சொன்ன, இப்போ கிச்சன விட்டு வெளிய போன்னு சொல்ற… “ என்று அவள் எகிறவும், “அப்படி இல்ல டா பூமி, ஏற்கனவே ஊற வச்சு நீ டையர்டாகிருப்ப, அதான் நீ போய் ரெஸ்ட் எடு, மிச்சத்த நான் பார்த்துக்குறேன்…” என்று கெஞ்சி, கொஞ்சி அவளை அங்கிருந்து அப்புறப்படுத்தினான்.

“இவள சமைக்க சொன்னது எனக்கு நானே வச்சுக்கிட்ட ஆப்பு…” என்று வாய் விட்டு புலம்பியவன், அவள் ‘சமைத்ததை’ ஓரமாக வைத்துவிட்டு புதிதாக சமைக்க ஆரம்பித்தான்.

அவனின் செயல்களை ஒளிந்து நின்று பார்த்த பூமி, ‘பூமியா கொக்கா… இனி என்ன சமைக்க சொல்லுவ…’ என்று நினைத்து அவளுக்கு அவளே ஹை-ஃபை கொடுத்துக் கொண்டாள்.

ஒரு வழியாக அவர்கள் சாப்பிட்டு முடித்ததும், பூமிக்கு அவளின் அன்னை விசாலாட்சியிடமிருந்து அழைப்பு வந்தது.

அவளோ தன்னிலை மறந்து அழைப்பை ஏற்று விட்டாள். “ஹலோ…” என்று அவள் பேச, அவளிடமிருந்து வந்ததோ ஆகாஷின் குரல்.

“ஹலோ… யாரு ஆகாஷா…” என்று அன்னையின் வார்த்தைகளிலேயே உண்மை புரிந்து ஆகாஷை பார்த்து முழித்தாள்.

முதற்கட்ட அதிர்ச்சியிலிருந்து வெளிவந்த ஆகாஷ், அழைப்பை ஸ்பீக்கரில் போட சொன்னான்.

அதற்குள் பூமியின் அன்னை, “ஆகாஷு லைன்ல இருக்கியா…” என்று இரண்டு முறை கேட்டுவிட்டார்.

ஆகாஷ் பூமியிடம் பேசுமாறு சைகை காட்ட, அவளோ தயக்கத்துடன், “ஹலோ…” என்றாள்.

“லைன் கட்டாகிடுச்சோன்னு நெனச்சேன்… ஆமா நா பூமி நம்பருக்கு தான போட்டேன்… அவ என்ன பண்றா…”

“அது… அது ம்மா…” என்று பூமி திக்க, “ஆகாஷு நல்லா தான இருக்க… நா அத்த பேசுறேன் பா…” என்று விசாலாட்சி கூறினார்.

அதைக் கேட்டதும் ஆகாஷ் தலையிலடித்துக் கொண்டான். ‘ஒழுங்கா பேசு டி…’ என்று பூமியை நோக்கி வாயசைத்தான்.

பூமி ஆகாஷை நோக்கி தம்ப்ஸ்-அப் காட்டிவிட்டு, “சாரி அத்த, ஒரு வேலைல பிஸியா இருந்தேன்…” என்று ஆகாஷ் மாதிரியே பேசினாள் பூமி.

“அச்சோ உன் வேலைய கெடுத்துட்டேனா… ஆமா அந்த கழுத என்ன பண்றா…”

அதைக் கேட்டு ஆகாஷ் சத்தமில்லாமல் சிரிக்க, பூமியோ கோபத்தில் பற்களை நரநரவென கடித்தவள், “அத்த அவள ஏன் கழுதன்னு சொல்றீங்க… அவளே பாவம் இவ்ளோ நேரம் வேலை செஞ்சு, இப்போ தான் ரெஸ்ட் எடுக்குறா…” என்றாள் பூமி. ‘அடிப்பாவி’ என்று வாய்மேல் கை வைத்து அவளைப் பார்த்தான் ஆகாஷ்.

“சரி சரி உன் வருங்கால பொண்டாட்டிய நான் ஒன்னும் சொல்லல… அவ இருந்தா போன்ன அவகிட்ட குடு…” என்றார் அவர்.

அதில் இருவரும் ஒருவரையொருவர் பார்த்து முழித்தனர். அதற்குள் அவர், “ஹலோ” என்று கூற, பூமி ஆகாஷை இடித்து பேசுமாறு கூறினாள்.

“ஹலோ.. க்கும்.. ம்மா…” என்று திக்கியவாறே பேசினான் ஆகாஷ்.

“என்ன டி… ஏதோ வேலையெல்லாம் பார்த்தீயாம்… அப்படி என்ன வேலை பார்த்த…”

என்ன சொல்வதென்று தெரியாமல், “ஹான்... அது… சமைச்சேன்…” என்று கூறினான்.

“எது சமைச்சீயா… இங்க கிச்சன் பக்கமே போக மாட்ட… நீ சமைச்சீயா…”

அப்போது, “என் சமையல் திறமைய ஊருல வந்து கேட்டுப் பாரு…” என்று பூமி கூறியது நினைவிற்கு வர அவளை நோக்கினான். அவளோ அவனை பார்க்காமல் வேறு புறம் திரும்பிக் கொண்டாள்.

தன் பதிலுக்காக அவனின் அத்தை காத்துக்கொண்டிருப்பதை உணர்ந்தவன், “அது மாமா சொல்லிக் குடுத்து… சமைச்சேன்…” என்று உளறினான்.

“என்னாது மாமாவா… என் பொண்ணு தான் பேசுறதா..” என்று அதிர்ச்சியுடன் அவர் கேட்க, இம்முறை தலையிலடித்தது பூமி.

“ம்மா எனக்கு வேலைக்கு நேரமாகுது…” என்று ஆகாஷ் கூற, “ஆமா இன்னும் ஏன் வேலைக்கு போகாம இருக்க…” என்று அடுத்த கேள்வியை கேட்டார்.

‘ஐயோ விட மாட்டிங்குறாங்களே…’ என்று ஆகாஷ் மனதிற்குள் புலம்ப, ‘சிக்கிட்டான் கருவாயன்…’ என்று குதூகலத்துடன் அவர்களின் உரையாடலை கேட்கத் தயாரானாள் பூமி.

“அது வந்து… மா… அந்த கருவாயனுக்கு காய்ச்சல்… அதான் கொஞ்சம் லேட்டா போறேன்…” என்றான்.

அவன் ‘கருவாயன்’ என்று கூறியதைக் கேட்ட பூமியோ, சத்தம் வராமல் சிரித்துக் கொண்டிருந்தாள்.

“ஹே என்ன டி அவனுக்கு காய்ச்சல்னு சொல்லிட்டு வேலைக்கு கிளம்புறேன்னு சொல்ற… ஒழுங்கா லீவு போட்டு அவன பாத்துக்கோ… புள்ள இதுனால தான் ஏதோ மாதிரி பேசிருக்கான்… மதியத்துக்கு கஞ்சி வச்சு குடு…” என்று ஆரம்பித்தவர், அதன் செய்முறையைக் கூறினார்.

மேலும், “ஹே அவன ஒழுங்கா பாத்துக்கோ டி… ரொம்ப காய்ச்சல்னா ஹாஸ்பிடல் கூட்டிட்டு போ…” என்று பத்து நிமிடம் பேசிவிட்டே வைத்தார்.

இங்கு பூமி இன்னும் சிரித்துக் கொண்டிருக்க, அவளின் தலையில் நங்கென்று கொட்டினான் ஆகாஷ்.

அடுத்த ஐந்தாவது நிமிடம், ஆகாஷின் அன்னை மீனாட்சி அழைப்பு விடுக்க, அவரிடமும் இதே காரணத்தை சொல்லி சமாளித்து விட்டனர்.

“ஹே ஸ்கை ஹை இவங்கள சமாளிக்குறதே, இவ்ளோ கஷ்டமா இருக்கே… ஆஃபிஸ்ல எப்படி சமாளிக்க போறோம்…” என்று பூமி வினவியதும் தான் ஆகாஷிற்கு அலுவலகத்தின் நினைவே வந்தது. அதனுடன் அந்த வாரயிறுதியில் திட்ட விளக்கக்காட்சி (ப்ராஜெக்ட் ப்ரெசன்டேஷன்) இருப்பதும் நினைவிற்கு வந்தது.

ஆகாஷ் தலையில் கை வைத்து அமர்ந்ததைக் கண்டவள், “ஹே என்னாச்சு…” என்று கேட்டாள்.

அவளிடம் விஷயத்தை கூறியவன், “இந்த ப்ரெசன்டேஷன் ஒழுங்கா பண்ணா தான் ஹைக்குன்னு அந்த குடுமி மண்டையன் வேற உசுர வாங்குறான்… இப்போ இந்த சிஷுவேஷன்ல எப்படி அத பண்றது…” என்று சிறிது கவலையாக கூறினான்.

அவனை எப்போதும் வம்பிழுத்து சுற்றிக் கொண்டிருக்கும் பூமிக்கு, அவன் கவலையாக அமர்ந்திருப்பது ஏதோ போலிருந்தது. அவனருகே அமர்ந்து, தோளில் கை வைத்து, “டேய் இதுக்கு போய் ஏன் ஃபீல் பண்ற...? அதான் நான் இருக்கேன்ல…” என்று ஆறுதல் கூறினாள்.

ஆகாஷும் சற்று தெளிந்தவள், அவளை வம்பிழுக்கும் பொருட்டு, “நீ இருக்குறது தான் கவலையே…” என்றான்.

பூமி, இடுப்பில் கை வைத்து முறைத்தவள், “உனக்கு போய் ஆறுதல் சொன்னேன் பாரு…” என்று உதட்டை சுழித்தாள்.

“அது இல்லடி… என்ன தான் நீ என் டிப்பார்ட்மெண்ட்னாலும், நீ இன்னும் ட்ரெயினிங்கே முடிக்கல… நீ எப்படி இவ்ளோ பெரிய ப்ராஜெக்ட்ட சமாளிப்ப…” என்றான்.

“எப்படி பண்ணனும்னு நீ சொல்லிக்குடு… இப்போ அது பிரச்சனை இல்ல… உன் ஆஃபிஸ்ல எனக்கு யாரையும் தெரியாதே… அத எப்படி சமாளிக்குறது…”

ஆகாஷும் யோசித்தவன், “அசோக் கிட்ட எல்லாத்தையும் சொல்லிடலாம்… உன்ன பாத்துக்க சொல்லி அவன்கிட்ட சொல்லிடுறேன்…” என்று கூறினான்.

“யாரு… எப்போ பாத்தாலும் உங்கூட சுத்திட்டு இருப்பானே அவனா…” என்று பூமி வினவியதும், “யாருக்கும் மரியாதையே குடுக்க மாட்டீயா டி…” என்று ஆகாஷ் அவளைத் திட்ட என்று மீண்டும் அங்கு ஒரு சண்டை உருவானது.


தொடரும்...

உங்க கருத்துக்களை இங்க பகிர்ந்துக்கோங்க பிரெண்ட்ஸ்...👇👇👇
 

Valli18

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 கொஞ்சமே கொஞ்சம் லேட்டானாலும் எப்படியோ எபியோட வந்துட்டேன்...😁😁😁 இதோ அடுத்த எபி... படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க...😊😍😊

25080
அத்தியாயம் 6

அவர்களின் சண்டை ஓய்ந்ததும், முதல் வேலையாக அசோக்கிற்கு வீட்டிற்கு வருமாறு தகவல் அனுப்பினான், ஆகாஷ்.

“ஹே ஸ்கை ஹை, பசிக்குது ஏதாவது செஞ்சு தாயேன்…” என்று பாவமாக கேட்டாள் பூமி.

“அடிப்பாவி, அரை மணி நேரத்துக்கு முன்னாடி தான என் பங்குலயும் கொஞ்சம் பிடுங்கி தின்ன… அதுக்குள்ள பசிக்க, அது என்ன வயிறா வேற எதுவுமா…”

“டேய் கருவாயா… ஓவரா பேசாத… அப்படி பார்த்தா இது உன் வயிறு தான்… நீ தான் தின்னு தின்னு பெருத்து இப்படி வச்சுருக்க…” என்று உதட்டை சுழித்துவிட்டு, குளிர்சாதன பெட்டிக்குள் தலையை விட்டு சாப்பிட ஏதாவது கிடைக்குமா என்று தேடினாள்.

ஆகாஷோ இவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு அறைக்குள் சென்று விட்டான்.

“ச்சே என்ன ஆப்பிள் மட்டும் தான் இருக்கு… சரி பசி ருசி அறியாது… அப்படின்னு நெனச்சுட்டே இந்த ஆப்பிளை சாப்பிட வேண்டியது தான்…” என்று அவளாக பேசியபடி கூடத்திற்கு வர, அங்கு ஆகாஷ் இல்லாமல் தேடியவள், “இவன் ஏன் எப்ப பார்த்தாலும் ரூமுக்குள்ள போயிடுறான்… சரி நமக்கு சோறு தான் முக்கியம்… அவன் எப்படி போனா என்ன..” என்று கூறியவாறு ஆப்பிளை வெட்ட முற்படும்போது, அழைப்பு மணி அடிக்க, “எவன் அவன்… நான் சாப்பிடும்போது தான் வருவீங்களா டா…” என்று எரிச்சலில் கத்தியுடனே சென்று கதவைத் திறந்தாள்.

அவள் கதவைத் திறந்ததும், “டேய் மச்…சா…ன்ன்..” என்று அலறியவாறே அவளை அணைக்க வந்த அசோக்கை, “பக்கத்துல வந்த சொருகிடுவேன்…” என்று கத்தியைக் காட்டி மிரட்டினாள், பூமி.

“டேய்… என்ன டா மச்சான்… வீட்டுக்கு கூப்பிட்டு அசிங்க படுத்துறியா… டேய் மச்சான் அசோக்கு டா… உன் தேவா டா… நீ கூட அடிக்கடி சொல்லுவியே, நான் தோனினா நீ ரெய்னானு… நான் ‘அ’ன்னா, நீ ‘ஆ’ டா…” என்று அசோக் புலம்ப, “ஹே போதும் நிறுத்துறியா… கேக்க முடியல…” என்று காதை குடைந்தாள்.

அவளின் செய்கையைக் கண்டவன், “நட்புன்னா என்ன தெரியுமா…” என்று ஆரம்பிக்க, “இப்போ வாய மூடல, வாயில இன்டு மார்க் போட்டு விட்டுருவேன் பாத்துக்கோ…” என்று அவள் மிரட்டவும் தான் அமைதியானான்.

அப்போது வெளியில் கேட்ட பேச்சு சத்தத்தில், யாரென்று எட்டிப் பார்த்த ஆகாஷ், அசோக்கை கண்டதும், “டேய் மச்சான்... என்ன டா அங்கேயே நின்னுட்டு இருக்க…” என்று அசோக்கை அணைக்க செல்ல, அதில் மற்ற இருவருமே பதறினர்.

சற்று சுதாரித்த பூமி, கடைசி நிமிடத்தில் இருவருக்கும் இடையே சென்று, “ஹே என்ன பண்ற… ஒழுங்கா ரெண்டு ஸ்டெப் பேக் எடுத்து வை… பாசம் ஓவரா தான் பொங்குது…” என்று காட்டமாக பேச, (பாவம் அவளிற்கு ஆப்பிள் சாப்பிட விடாத கடுப்பு!!!) அப்போது தான் நிலையை உணர்ந்தவன், தலையைக் கோதி சமாளித்தான். அதற்கும் அவளிடமிருந்து முறைப்பைப் பெற்றான். (பின்னே அரை மணி நேரம் செலவழித்து செய்த ‘ஹேர் ஸ்டைல்’ ஆயிற்றே…)

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க, அதை ‘சப்-டைட்டில்’ இல்லாத வேற்று மொழி படத்தை பார்ப்பது போல், இருவரின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தான்.

‘டேய் என்னங்கடா நடக்குது இங்க… கூப்பிட்டு வச்சு கலாய்க்குறாங்களோ…’ என்று மனதிற்குள் புலம்பினான் அந்த அப்பாவி ஜீவன்.

அதற்குள் ஆகாஷை உள்ளே அனுப்பிய பூமி, அசோக்கை பார்த்து, “ஹலோ, உனக்கு தனியா சொல்லணுமா… உள்ள வா…” என்று மிரட்டிவிட்டு சென்றாள்.

‘ஆரம்பமே இப்படி இருக்கே… உள்ள போனா இன்னும் என்னன்ன நடக்குமோ… இப்படியே எஸ்ஸாகிடலாமா…’என்று அவன் யோசிக்கவும், “இன்னும் உள்ள வரலியா நீ…” என்ற சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது.

“யார் யாரோ நண்பன் என்று…
ஏமாந்த நெஞ்சம் உண்டு…”
என்ற பாடலை மீண்டும் முணுமுணுத்துக் கொண்டே உள்ளே சென்றான்.

அங்கு நின்றிருந்த பூமியைக் கண்டவன், “நீ நல்லா தான இருக்க மச்…” என்று ஆரம்பித்தவன் பூமியின் முறைப்பைக் கண்டு, “க்கும்… எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு டா… உன்மேல யாரோ செம கோபத்துல இருக்காங்கன்னு நெனைக்குறேன்… அதான் குட்டிச்சாத்தான ஏவி விட்டுருக்காங்க…” என்று அசோக் கூறியதைக் கேட்டதும் ஆகாஷ் பக்கென்று சிரித்தது மட்டுமின்றி, “ஆமா ஆமா குட்டிச்சாத்தான் தான் அந்த உடம்புக்குள்ள இருக்கு…” என்று கூறியதும் அந்த ‘குட்டிச்சாத்தான்’ இரத்தக்காட்டேரியாக மாறி, அசோக்கின் இரத்தத்தை உறிஞ்ச பாய முற்படும் போது, அவளைத் தடுத்து நண்பனை காப்பாற்றினான் ஆகாஷ்.

“யார பார்த்து டா குட்டிச்சாத்தான்னு சொன்ன பூன மூஞ்சி… உன்ன…” என்று ஆகாஷின் கைகளிலிருந்து திமிற, அவளை அடக்க வழியைத் தேடிய ஆகாஷ், பக்கத்திலிருந்த முழு ஆப்பிளை அவளின் வாயில் அடைத்து, “ம்ம்ம் சாப்பிடு… பசி வந்துச்சுன்னா நீ நீயா இருக்க மாட்ட…” என்று விளம்பர பாணியில் கூறினான்.

பூமியோ சண்டையா சாப்பாடா என்று ஒரு நொடி சிந்தித்தவள், ‘நமக்கு சோறு தான் முக்கியம்…’ என்று ஆப்பிளுடன் ஐக்கியம் ஆனாள்.

அவள் சாப்பிடுவதற்குள், நடந்தவைகளை சுருக்கமாக அசோக்கிற்கு கூறினான் ஆகாஷ்.

அதைக் கேட்ட அசோக், பூமியாக நின்றிருந்த ஆகாஷை நோக்கி, “நான் சரக்கடிச்சு புலம்புற ஆளு… என்ன இப்படி சரக்கடிக்காமயே குழம்ப விட்டுட்டீயே மா…” என்று பாவமாக கூறினான்.

“டேய் நான் தான் ஆகாஷ் டா…”

“அட போடா…” என்று சோஃபாவில் சோர்வாக அமர்ந்தான் அசோக். அதே சோஃபாவில் சற்று தள்ளி அமர்ந்திருந்த பூமி அவனைப் பார்க்க, பதறி எழுந்தான்.

“அது வந்து மச்… ஆகா… மா…” என்று குழப்பியடிக்க, அவனைக் கண்ட மற்ற இருவரும் சிரித்து விட்டனர்.

“என்ன ரெண்டு பேரும் என்ன கூப்பிட்டு வச்சு கலாய்க்குறீங்களா… நீ சொன்னதெல்லாம் பொய் தான…” என்று அழும் குரலில் வினவினான் அசோக்.

“இல்ல அசோக்… நான் சொன்னதெல்லாம் உண்மை தான்… நான் தான் ஆகாஷ்… இவ பூமி…” என்று மீண்டுமொரு முறை விளங்கினான்.

இம்முறை, ஆகாஷ் கூறியதை நம்பிய அசோக், “ஹே அப்போ நீங்க மாறுறதுக்கு ஏதாவது வழி யோசிக்க வேண்டியது தான… நம்ம கஷ்டானந்தா சாமிய பாக்கலாம்…” என்ற அசோக் மீண்டும் ஒரு முறை பூமியின் முறைப்பிற்கு ஆளானான்.

“டேய் ஆகாஷ், நியாயமா பாத்தா உன் முறைபொண்ணு உன்ன தான டா முறைக்கணும்… என்ன எதுக்கு முறைச்சுட்டு இருக்கா…” என்று அருகே நின்ற ஆகாஷிடம் முணுமுணுத்தான்.

பின், ஆகாஷ் அசோக்கிடம் காலையில் நடந்ததைக் கூறி, அந்த இரண்டாவது சாமியார் கூறியதையும் சொன்னான்.

“இப்போ என்ன டா பண்ண போற…” என்று அசோக் கேட்க, “அது தான் ஒன்னும் புரியல டா… வர்ற ஃப்ரைடே வேற ப்ரொஜெக்ட் ப்ரெசென்டேஷன் இருக்கு…” என்றான் ஆகாஷ்.

“மச்சான் நாம வேணா அந்த குடுமி மண்டையன் கிட்ட ப்ரெசென்டேஷன அடுத்த வாரம் போஸ்ட்போன் பண்ண சொல்லலாம் டா…” என்றான் அசோக்.

“அடுத்த வாரம் மட்டும் நான் பழைய மாதிரி மாறிடுவேனா என்ன…” என்று சலிப்புடன் கூறினான் ஆகாஷ்.

“அப்பறம் எப்படி டா ப்ரெசென்ட் பண்ணுவ… உன் இத்தன நாள் உழைப்பு டா…” என்று அசோக் கூற, “ஏன் என்ன பாத்தா ப்ரொஜெக்ட் ப்ரெசென்ட் பண்ற மாதிரி தெரியலையா…” என்று பூமி கேட்டாள். இவ்வளவு நேரம் தன் வேலையில் (சாப்பிடும் வேலை!!!) குறியாக இருந்தவள், வேலை முடிந்ததும் (ஆப்பிள் தீர்ந்ததும்…) அவளும் அவர்களின் உரையாடலில் பங்கு கொண்டாள்.

பூமியின் கூற்றைக் கேட்ட அசோக் ஆகாஷை பார்க்க, “ஆமா டா… எனக்கு பதிலா பூமி தான் ப்ரெசென்ட் பண்ண போறா…” என்றான் ஆகாஷ்.

“இது எவ்ளோ தூரம் சரி வரும்னு எனக்கு தெரியல மச்சான்… என்ன தான் உன் ப்ரொஜெக்ட்ட பத்தி நீ முன்னாடியே அவளுக்கு சொல்லிக் குடுத்தாலும், அங்க ஆன்-ஸ்பாட்ல அவங்க கேக்குற கேள்விக்கு பதில் தெரியலைனா அதுவே ஒரு பிளாக் மார்க் ஆகிடும்ல…” என்றான் அசோக்.

“ஆனா இப்போ நமக்கு வேற வழி இல்ல மச்சான்… ப்ரொஜெக்ட் விஷயத்த நான் பாத்துக்குறேன்… அவளுக்கு நம்ம ஆஃபிஸ் புதுசு டா… சோ நீ தான் அவள அங்க பாத்துக்கணும்…”

‘என்னாது நான் பாத்துக்கணுமா…’ என்று யோசித்தவன் எச்சிலை விழுங்கியவாறு அவளிருக்கும் திசை நோக்கித் திரும்ப, அங்கு பூமியோ இவனை பாவமாக பார்த்து வைத்தாள்.

‘இப்போ சாதுவா இருக்கா… நம்மள திட்டுறப்போ மட்டும் சொர்ணாக்காவா மாறிடுறாளே… அது எப்படி…’ என்று மனதிற்குள் புலம்பினான்.

“டேய் அசோக்… எந்த உலகத்துல டா இருக்க… நான் சொன்னது காதுல விழுந்துச்சா… நீ தான் அவள ஆஃபிஸ்ல பாத்துக்கணும்… என்ன ஓகேவா...” என்று மீண்டும் அழுத்திக் கூறினான்.

“இப்போ நான் இல்லன்னு சொன்னா மட்டும் விட்டுடவா போறீங்க…” என்று பெருமூச்சு விட, “ நீ தான் தைரியமான ஆளாச்சே… சொல்லித்தான் பாரு…” என்று பூமி கவுண்டர் கொடுக்க, அடுத்த கால் மணி நேரம் கலகலப்பாகவே சென்றது.

“ஆமா அப்போவே கேக்கணும்னு நெனச்சேன்… மெசேஜ் பண்ணி பத்து நிமிஷம் தான் ஆச்சு… அதுக்குள்ள எப்படி டா வந்த…” என்று ஆகாஷ் கேட்க, அதற்கு கேவலமான சிரிப்பொன்றை சிறிது விட்டு, “அது மச்சான்… இன்னைக்கு அந்த குடுமி மண்டை வரல… நீயும் லீவா… அதான் போர் அடிச்சது… சரி வெளிய போலாம்னு கிளம்புன நேரம் , நீ மெசேஜ் பண்ணியா, உடனே நண்பன் தான் முக்கியம்னு உன்ன பாக்க வந்துட்டேன்…” என்றான் அசோக்.

“இதுக்கு வெட்டியா இருந்தேன்னு ஒரே வரில முடிச்சுருக்கலாம்…” என்று தலையிலடித்துக் கொண்டாள் பூமி.

“மச்சான்… பூமி நம்ம ஆஃபிஸ் வந்துட்டா, நீ என்ன பண்ணுவ…” என்று அசோக் கேட்க, “அவளோட ஆஃபிஸுக்கு அவளுக்கு பதிலா போகணும்…” என்று யோசனையுடன் கூறிக் கொண்டே பூமியைக் கண்டான்.

“ஹ்ம்ம் அப்போ உனக்கும் இவன மாதிரி ஒரு ஆளு வேணும்ல… என் பிரெண்ட கூப்பிடுறேன்… அவ உனக்கு ஹெல்ப் பண்ணுவா…” என்றாள் பூமி.

பூமி, ‘பிரென்ட்’ என்றதும் கண்கள் ஒளிர அமர்ந்திருந்த அசோக்கை கண்ட பூமி, “ஆமா உன் பிரென்ட் வந்த வேலை தான் முடிஞ்சுருச்சே கிளம்ப வேண்டியது தான….” என்று ஆகாஷிடம் கூறுவது போல் சத்தமாகக் கூறினாள்.

ஆகாஷும் அசோக்கை பார்க்க, ‘அச்சச்சோ நம்மள பேக்-அப் பண்ணிடுவாங்களோ… ‘ என்று மனதிற்குள் பயந்த அசோக், “அது… வந்து… ஹான்… என் மச்சான் எப்படி தனியா ஹாண்டில் பண்ணுவான்… உங்க பிரெண்டு வந்ததுக்கு அப்பறம், என் மச்சான பத்திரமா பாத்துக்க சொல்லிட்டு நான் கிளம்புறேன்…” என்று ஏதோ கூறி (உளறி) சமாளித்தான்.

“அதெல்லாம் நாங்க பாத்துக்குறோம்… இவரு மச்சான் குட்டி பாப்பா… எப்படி ஹாண்டில் பண்றதுன்னு தெரியாதாம்…” என்று வாய் விட்டே கூறினாள் பூமி.

“இல்ல அது…” என்று அவன் மீண்டும் இழுக்க, “கத்திக்கு மறுபடியும் வேலை வங்துடும் போலயே…” என்று பூமி கூறவும், “நான் கிளம்பிட்டேன் மச்சான்…” என்று அசோக் அவசர அவசரமாக கிளம்பினான்.

அதை சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தவர்கள், அவன் கிளம்பியதும், பூமியின் தோழி ரூபாவிற்கு அழைத்து அவர்களின் நிலை பற்றி விளக்கினர்.

முதலில் அதை நம்ப மறுத்த ரூபாவை சரிகட்டினர் இருவரும். பின் அவளும் உதவுவதாகக் கூற, அன்றைய நாளின் பெரும் பணியை முடித்த அலுப்பில் இருந்தனர் இருவரும்.

முன்னிரவில் பூமியை அழைத்த ஆகாஷ், அவனின் ப்ரொஜெக்ட் பற்றி விளக்குவதாகக் கூற, “ஹே ஸ்கை ஹை என்ன இன்னிக்கேவா… நாளைக்கு பாக்கலாம்…” என்று சோம்பலாகக் கூறினாள் பூமி.

“என்னாது நாளைக்கு பாக்கலாமா… நானே இன்னும் ரெண்டு நாள் தான் இருக்குன்னு டென்ஷன்ல இருக்கேன்… க்ளோபு இந்த ப்ரொஜெக்ட்ல தான் என் கரியரே இருக்கு…” என்று ஆகாஷ் புலம்ப ஆரம்பிக்க, “ஸ்ஸ்ஸ் போதும் போதும் இதுக்கு உன் ப்ரொஜெக்ட்டையே கேக்கலாம்…” என்று சலித்துக் கொண்டாள் பூமி.

அதன் பின் அவர்களின் நேரம், கலந்துரையாடலிலேயே சென்றது. பூமிக்கு அனைத்தும் புதிதாக இருந்தாலும், இத்துறை மீது அவளுக்கிருந்த பற்றினால், அவளும் ஆர்வமாகவே ஆகாஷ் கூறுவதை கவனித்தாள். இடையிடையே அவளுக்கிருந்த சந்தேகங்களையும் கேட்டாள். இவ்வாறு அவர்களின் இரவு கழிய, அவர்களுக்கிருந்த களைப்பினால், அந்த சோஃபாவிலேயே ஆளுக்கொரு புறம் படுத்து விட்டனர்.


தொடரும்...

கமெண்ட்ஸ் அவ்ளோவா வர மாட்டிங்குதே...🤔🤔🤔 கதை உங்களுக்கு பிடிக்கலையா..🙄🤔🙄 எதுவா இருந்தாலும் ரெண்டு வார்த்தை சொல்லிட்டு போங்க பிரெண்ட்ஸ்...😁😁😁 உங்க கருத்துக்களை இங்க பகிர்ந்துக்கோங்க...👇👇👇
 

Valli18

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 ஒரு நாள் லீவுக்கு அப்பறம் இதோ அடுத்த எபியோட வந்துட்டேன்...😁😁😁 படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க...😍😍😍

25117

அத்தியாயம் 7

தூக்கத்தில் எசகுப்பிசகாக படுத்திருந்த இருவரும், அலாரத்தின் ஒலியில் கண்விழிக்க, மற்றவரின் நிலை கண்டு அடித்து பிடித்து எழுந்தமர்ந்தனர்.

“ஹே ஸ்கை ஹை… ஒழுங்கா படுக்க மாட்டீயா… இப்படி தான் பப்பரப்பான்னு படுப்பீயா… இன்னொரு தடவ இப்படி படுத்த அவ்ளோ தான்…” என்று பூமி ‘அவளின்’ மானம் காக்க ஆகாஷிடம் கோபப்பட்டாள்.

“ஓய்… நீயும் அப்படி தான் படுத்துருந்த… என்ன மட்டும் சொல்லாத…” என்று கூறிக்கொண்டே எழுந்தவன் அவனின் அறைக்குச் செல்ல முற்பட, “ஹே நில்லு நில்லு… நேத்து சொன்னது தான் இன்னைக்கும்… ஒழுங்கா கண்ண மூடிட்டு குளிக்கணும்…” என்று பூமி கூறினாள்.

“அதெல்லாம் தெரியும் போடி…” என்று அவளை அவளின் அறைக்குள் தள்ளினான்.

இருவரும் குளித்து வர, முதல் நாள் போலவே அவனை தயாராக சொல்ல, அவனோ முகத்தை அவளிடம் தந்துவிட்டு அமர்ந்து விட்டான்.

பூமி காரியமே கண்ணாக மேக்-அப் செய்து கொண்டிருக்க, ஆகாஷிற்கு தான் அவளின் அருகாமை ஏதோ செய்தது. முதல் நாள் இருந்த பரபரப்பில் இதை சரியாக (!!!) கவனிக்கவில்லை. இன்றோ அவளின் நெருக்கத்தில், அவனிற்கு தான் வியர்த்தது.

“ஹே ஸ்கை ஹை உனக்கு ஏன் இப்படி வேர்க்குது… ஃபேன் ஃபுல்லா தான இருக்கு..” என்று கூறியவாறு துண்டை கொண்டு துடைக்கச் செல்ல, வேகமாக அதை அவளிடமிருந்து பறித்தவன், அவனே துடைத்துக் கொண்டான்.

ஒருவழியாக அவனின் மேக்-அப் முடிய ‘ஒரு நாளுக்கே இப்படியா… இனி தினமும் இத எப்படி சமாளிக்கப் போறேன்னு தெரியலையே…’ என்று பெருமூச்சு விட்டுக் கொண்டான் ஆகாஷ்.

அதன்பின் நேரம் ரெக்கை கட்டிக்கொண்டு பறக்க, அசோக் பூமியை அழைத்துச் செல்ல வந்தான். ஆயிரமாவது முறையாக அவள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கூறினான் ஆகாஷ்.

“ஹே கருவாயா… நிறுத்து நிறுத்து… என்னமோ இப்போ தான் ஃபர்ஸ்ட் டைம் ஆஃபிஸ் போற மாதிரி இவ்ளோ அட்வைஸ் பண்ற… எனக்கு ஏற்கனவே ரெண்டு மாசம் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு…” என்றாள்.

பின், அசோக்கிடமும் அவளை பார்த்துக் கொள்ள கூறிவிட்டு, அவர்களை வழியனுப்பினான்.

பூமி செல்லும்முன், “என்ன மட்டும் சொன்ன… நீயும் ஒழுங்கா உன் ரோல்ல ப்ளே பண்ணு… நல்லா நியாபாகம் வச்சுக்கோ உனக்கு ரெண்டு மாச அனுபவம் தான்… அங்க போய் எக்ஸ்ட்ராடினரியா வேலை செய்யுறேன்னு மாட்டிக்காத…” என்று அவள் பங்கிற்கு அறிவுரை கூறிவிட்டே கிளம்பினாள்.

அசோக் வண்டியை பார்க் செய்துவிட்டு வருவதாகக் கூறிவிட்டு செல்ல, பூமி ஆகாஷின் அலுவலகத்திற்குள் நுழைந்தாள். அவள் நுழையும் போதே ஆகாஷின் மற்ற நண்பர்கள், அவளை சூழ்ந்து கொண்டனர்.

“ஹே ஆகாஷ்… என்ன மேன் நேத்து லீவ் போட்டுட்ட…”

“அதான எப்பவும் தேவையில்லாம லீவ் எடுக்காதவன், நேத்து சொல்லாம லீவ் எடுத்துட்ட…”

“ஆர் யூ ஓகே…?” என்று ஆளாளுக்கு இடைவிடாமல் பேச, பூமிக்கு அவர்களை சமாளிப்பது சற்று சிரமமாக தான் இருந்தது.

அதில் ஒருவன், அவனை அணைப்பது போல் வர, பூமி பயந்து போய் இரு அடிகள் பின்னால் நகர, மற்றவர்கள் அவளை வித்தியாசமாக பார்த்தனர்.

‘அச்சோ இவனுங்க வேற ஒரு மாதிரி பாக்குறாங்களே… இப்போ என்ன சொல்லி சமாளிக்குறதுன்னு தெரிலயே…’ என்று பூமி யோசிக்கும் வேளையில், அவளின் உதவிக்கென அங்கு வந்தான் அசோக்.

“ஹே அவன விடுங்க டா… அவனே உடம்பு முடியாம இருக்கான்…” என்று கூறி ஒருவாறு சமாளித்தான்.

மற்றவர்கள் உள்ளே செல்ல, பூமியை அணைக்க வந்தவன் மட்டும் அவளை குறுகுறுவென பார்த்துவிட்டு உள்ளே சென்றான்.

‘இப்போ எதுக்கு அந்த பாடி பில்டர் ஒரு மாதிரி லுக் விட்டுட்டு போறான்…’ என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, “அதுக்குள்ள உன்ன யாரு உள்ள வர சொன்னா…” என்று அசோக் அவளின் காதருகே முணுமுணுத்தான்.

“நீ வர வரைக்கும் அங்கயே நிக்க சொல்றீயா… அந்த செக்யூரிட்டி வேற ஒரு மாதிரி பாத்தான்… அதான் உள்ள வந்தேன்.. இப்படி மொத்தமா வந்து அட்டாக் பண்ணுவாங்கன்னு கனவா கண்டேன்…” என்று பூமி புலம்பினாள்.

“அவங்க எல்லாரும் எங்க பிரெண்ட்ஸ்…” என்று கூறி அவர்களைப் பற்றிய சிறிய அறிமுகத்தையும் கூறினான்.

“அந்த பாடி பில்டர் பேரு என்ன…” என்று பூமி கேட்கவும், அவள் யாரை கூறுகிறாள் என்று பார்த்தவன் அங்கு நின்று கொண்டிருந்தவனைக் கண்டு, “ஓ அவனா… அவன் பேரு சோனு… ஊரு மும்பை… இப்போ கொஞ்ச நாள் முன்னாடி தான் இங்க ஜாயின் பண்ணான். அவ்ளோவா யாருக்கிட்டயும் பேசாம தனியா இருந்தான்… ஆகாஷ் தான் அவனோட ஃபர்ஸ்ட் பேசினான்… அப்பறம் நாங்களும் பேச, அவனும் இப்போ எங்க கேங்ல ஒருத்தனாகிட்டான்.” என்று கூறினான்.

“ரொம்ப பெருமையான வரலாறு…” என்று உதட்டை சுழித்தாள் பூமி.

அடுத்த சில நிமிடங்களில், அந்த இடமே பரபரப்பாக, பூமி அசோக்கை பார்க்க, அவனும் புரியாமல், அங்கு பதட்டமாக வந்து கொண்டிருந்தவனை நிறுத்தி விசாரித்தான்.

“ஆபத்து இன்னைக்கு ஆஃபிஸ் வந்துருக்கு டா…” என்றான் அவன்.

உடனே அசோக்கும் வேகவேகமாக அவனிடத்தில் அமர்ந்து கணினியை உயிர்பித்தான். பூமியோ எதுவும் புரியாமல் நின்று கொண்டிருக்க, அவளைக் கண்ட அசோக், அவளை அழைத்து, “சீக்கிரம் வந்து சிஸ்டம் ஆன் பண்ணு… அந்த குடுமி மண்டையன் வந்தா, இன்னும் சிஸ்டம் கூட ஆன் பண்ணலையான்னு அரை மணி நேரம் பக்கம் பக்கமா பேசி உசுர வாங்குவான்…” என்றான்.

பூமியும் கணினியை உயிர்பித்தவாறே, “யாரு அது ‘குடுமி மண்டையன்’..?” என்று வினவினாள்.

அசோக், “அது… எங்க மேனேஜர் தான்…” என்று அவரைப் பற்றி கூறி முடிக்கவும், அவனால் ‘குடுமி மண்டையன்’ என்று அழைக்கப் பட்டவர், உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

அவர் வந்ததும் அந்த இடமே அமைதியாக இருக்க, அந்த அமைதியை கிழித்துக் கொண்டு வந்தது அந்த சத்தம்.

“மாதத்தில் ஒரு முறை தலையைக் காட்ட வேண்டியது…
கண்ணில் படுபவர்களை எல்லாம் கேள்வி கேட்டு படுத்த வேண்டியது…
இந்த லட்சணத்தில் மாதம் பிறந்தால் லட்சத்தில் சம்பளம் வேறு…
கேட்டால் மேனேஜர் என்று பீற்றிக் கொள்வது…”
என்ற சத்தம் வர அனைவரும் சுற்றிலும் பார்த்தனர்.

அசோக்கும் அவர்களை போலவே பார்த்துக் கொண்டிருக்க, அவனின் தோளைத் தட்டிய பூமி, அவனின் அலைபேசியைக் காட்டினாள்.

“ஐயையோ… இதுலயிருந்து தான் சத்தம் வருதா… எவன் பார்த்த வேலைன்னு தெரியலையே…” என்று அருகிலிருக்கும் நண்பர்களை பார்க்க, அனைவரும் அவனை பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தனர்.

“அட பரதேசிங்களா…” என்று திட்டிக்கொண்டே திரும்பியவன், எதிரில் நின்றிருந்த குடுமி மண்டையனை கண்டு முழித்தான்.

“வாட் தி ஹெல் இஸ் திஸ், அசோக்..?” என்று அந்த ‘குடுமி மண்டையன்’ கோபமாக கத்த, பூமியோ அதுவரை அடக்கி வைத்திருந்த சிரிப்பை, அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியாமல் சிரித்து விட்டாள்.

அவளையும் முறைத்தவர், “அசோக் அண்ட் ஆகாஷ் கம் டூ மை கேபின் இம்மிடியட்லி…” என்று கூறிவிட்டு சென்றார்.

அவர் அங்கிருந்து சென்றதும், அனைவரும் அசோக் அருகே வந்து, “தேங்க்ஸ் டா அசோக்… இன்னைக்கு நீ தான் எங்கள அந்த ஆளுக்கிட்டயிருந்து காப்பாத்த போற… உன் தியாக மனப்பான்மை யாருக்கும் வராது டா மச்சான்…” என்று ஒவ்வொருத்தரும் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியது போல பேச, “தியாகமெல்லாம் நானா பண்ணனும் டா… என்ன தள்ளிவிட்டிட்டு, அதுக்கு பேரு தியாகமாம்ல… போங்க போங்க எல்லாரும் அவங்கவங்க வேலைய பாருங்க… இன்னைக்கு அந்த குடுமி மண்டையனுகிட்ட மாட்டிட்டு எந்த நிலமைல வெளிய வரப்போறேனோ…” என்று புலம்பியபடி அவரின் அறைக்குச் செல்ல, அவனைத் தொடர்ந்து பூமியும் சென்றாள்.

*****

பூமி எப்போதும் செல்லும் அலுவலக பேருந்திற்காக, அதன் நிறுத்துமிடத்தில் ஆகாஷ் காத்துக் கொண்டிருக்க, அவனை யாரோ உற்றுப் பார்ப்பது போல தோன்றியது. சுற்றிலும் பார்க்க, அங்கு சற்று தொலைவிலிருந்து ஒருவன் அவனையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

அப்போது பூமி கூறிய எச்சரிக்கைகள் நினைவிற்கு வர, குனிந்து ஆடை எங்கும் விலகியிருக்கிறதா என்று பார்த்து சரி செய்தான். இப்போதும் அந்த பொறுக்கியின் பார்வையில் மாற்றமில்லாததால், அவனை முறைத்து விட்டு, சற்று தள்ளி அவனின் கண்களுக்கு தென்படாதவாறு நின்று கொண்டான்.

‘ச்சே நிம்மதியா நிக்க விடுறானுங்களா… பொறுக்கிங்க…’ என்று மனதிற்குள் திட்டியவன், ‘ஒரு நாளைக்கே இப்படி இருக்கே, இந்த பொண்ணுங்க எப்படி தான் இப்படி மறைஞ்சு மறைஞ்சு வேலைக்கு போயிட்டு வராங்களோ…’ என்று சிந்திக்கும் போதே அவனின் பேருந்து வந்தது.

முதல் நாளே ரூபாவிடம் அவனும் அதே பேருந்தில் வருவதாகக் தகவல் தெரிவித்ததால், அவன் பேருந்தில் ஏறியதும், ரூபா கையசைக்க, அவனும் அவளின் அருகில் அமர்ந்து கொண்டான்.

இன்னமும் பூமி கூறியதை நம்பாத ரூபா, “உண்மையிலேயே நீங்க பூமி இல்லயா…” என்று அவனிற்கு மட்டும் கேட்குமாறு முணுமுணுக்க, லேசாக சிரித்தவன், “நீ வேணா செக் பண்ணி பாரு… உங்க ரெண்டு பேருக்கு மட்டும் தெரிஞ்சத எங்கிட்ட கேளு… அதுக்கு கரெக்ட்டா பதில் சொல்லிட்டேனா நான் தான் பூமி… இல்லனா நான் பூமி இல்ல… என்ன ஓகேவா…” என்றான்.

“நீங்க வேணும்னே தப்பா பதில் சொன்னா…” என்று ரூபா கேட்க, “இதுக்கு மேல என்னால யோசிச்சு ஐடியா சொல்ல முடியாது மா… என்ன விட்டுடு…”என்று ஆகாஷ் கெஞ்ச, “சரி போனா போகுது ரொம்ப கெஞ்சுறதால விடுறேன் அண்ணா” என்று ரூபாவும் விட்டு விட்டாள்.

ரூபாவின் ‘அண்ணா’ என்ற விளிப்பில் ஆகாஷும் சகஜமாக, இருவரும் அந்த பேருந்து பயணம் முழுவதும் பேசிக் கொண்டே இருந்தனர். ரூபா, அவர்களின் அலுவலகத்தை பற்றியும் கூறினாள். பூமியின் மற்ற தோழிகளின் பெயர்களை கூறியவள், அவர்களை நேரில் அறிமுகப் படுத்துவதாகக் கூறினாள்.

இப்படியே பேசியபடியே அந்த அரை மணி நேரத்தை கடத்தியிருக்க, அவர்களின் அலுவலகமும் வந்தது. இருவரும் இறங்கியதும் அவர்களை சுற்றி வளைத்தனர் அந்த மூவர் கூட்டணி. அவர்கள் யாரென்று தெரியாமல் ஆகாஷ் முழிக்க, ஏதோ சொல்ல வந்த ரூபாவை பேசக் கூட விடாமல், “ஹலோ மேடம், எங்களயெல்லாம் நியாபகம் இருக்கா… இல்ல ஒரே நாள்ல எங்கள மறந்துட்டியா…” என்றாள் ஒருத்தி.

“அது எப்படி நியாபகம் இருக்கும்… அவ லீவு போட்டதே அவ ஆளு கூட டைம் ஸ்பெண்ட் பண்ண தான…” என்றாள் மற்றொருத்தி.

‘ஆளா…’ என்று ஆகாஷ் குழப்பமாக ரூபாவை பார்க்க, அவளோ அவர்களை தடுக்கும் நோக்கத்தோடு ஏதோ சொல்ல வர, அவர்களா அவளிற்கு செவி சாய்ப்பார்கள்…

“ஹே என்ன டி இந்த முழி முழிக்குற… ஒரு வேள உன் மாம்ஸ் ஏதாவது ரொமான்டிக்கா பண்ண விஷயத்த எங்ககிட்ட இருந்து மறைக்குறீயா…” என்று முதலாமாவள் கேட்க, ‘மாம்ஸா… அப்போ இதுங்க என்ன பத்தி தான் பேசுதுங்களா…’ என்று அதிர்ந்து போய் ரூபாவை பார்க்க, அவளோ மனதிற்குள், ‘ஐயோ… அவர அவருக்கிட்டயே கலாய்க்குதுங்களே… இது எங்க போய் முடியப்போகுதோ…’ என்று புலம்பிக் கொண்டிருந்தாள்.

“ஓய் அங்க என்ன பார்வை… ஒழுங்கா நீயா எங்ககிட்ட சொல்றீயா… இல்ல உன் மாம்ஸ் கிட்ட நாங்களே கேட்டுகவா…” என்று மிரட்டினர்.

என்ன சொல்வதென்று தெரியாமல் திணறிய ஆகாஷ், தங்கள் பெற்றோரிடம் கூறிய அதே காரணத்தை இவர்களிடமும் கூறினான். “அது… ஆகாஷுக்கு ஃபீவர்…” என்று அவன் முடிக்கும் முன்னே, “பாருங்க டி… இத்தன நாள் கருவாயனா இருந்தவரு, இன்னைக்கு ஆகாஷாம்ல…” என்று கிண்டலடித்தனர்.

‘அடிப்பாவி உருண்ட… இவங்ககிட்ட கூடவா கருவாயன்னு சொல்லிருக்க… இருடி உனக்கு இருக்கு’ என்று மனதிற்குள் பூமியை அர்ச்சித்துக் கொண்டிருந்தான்.

அவர்கள் மேலும் ஏதோ கேட்க வருகையில், அவர்களை அடக்கிய ரூபா, “ப்ச் எதுக்கு இப்போ வாசல்ல வச்சே இன்வெஸ்டிகேட் பண்ணிட்டு இருக்கீங்க… அதான் அவ காரணத்த சொல்லிட்டால… நேரமாச்சு… மத்தத உள்ள போய் பேசிக்கலாம்…” என்று அவர்களை உள்ளே விரட்டினாள். அவர்களும் முணுமுணுத்தவாறே உள்ளே சென்றனர்.

“அண்ணா நீங்க தப்பா எடுத்துக்காதீங்க… அவங்க எப்பவும் பூமிய இப்படி தான் ஓட்டுவாங்க… அதான் இன்னைக்கும்…” என்று ரூபா இழுக்க, அதையெல்லாம் கண்டுகொள்ளாதவன், “பூமி ஒன்னும் சொல்ல மாட்டாளா…” என்று வினவினான் ஆச்சரியமாக…

“இந்த மாதிரி கிண்டலுக்கெல்லாம் ஏதாவது பதில் சொன்னா தான் இன்னும் ஓட்டுவாங்கன்னு எதுவும் சொல்ல மாட்டா…” என்றாள் ரூபா.

ஆகாஷிற்கோ, அவர்கள் இருவரையும் சேர்த்து வைத்து ஓட்டியது, அவன் மனதை குறுகுறுக்க செய்ய, அதற்கான காரணத்தை அவன் அறிய முற்படவில்லை. ஒரு வேளை சற்று சிந்தித்திருந்தால்… இவர்களின் பின்னே சுற்றித் திரியும் க்யூபிட் வேறொரு ஜோடியின் மேல் அம்பெய்ய சென்றிருக்கும்… அதன் விதி இவர்களின் பின் லோலோவென அலைய வேண்டும் என்றிருந்தால் அதை யாரால் மாற்ற முடியும்!!!

*****

மேனேஜரின் அறைக்குள்ளே சென்ற அசோக்கும் பூமியும், ஒருவரையொருவர் ‘நீ சொல்லு’ என்று கண்களால் ஜாடை காட்டிக் கொண்டிருக்க, “ரெண்டு பேரும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க… அசோக் இப்படி தான் ஒரு ப்ரொஃபெஃஷனல் நடந்துப்பாங்களா” என்று கோபமாக வினவினார் ‘குடுமி மண்டையன்’.

“சாரி சார்… அது… யாரோ ஒருத்தன் யாரோ ஒரு மேனேஜர திட்டுன ஆடியோ… என் பிரெண்டு கேட்டான்னு அவனுக்கு ஃ பார்வேர்டு பண்றதுக்கு பதிலா ரிங்-டோன்னா செட் ஆகிடுச்சு சார்… பிலீஸ் டோன்ட் மிஸ்டேக் மீ… நா அப்போ கூட அவன்கிட்ட சொன்னேன்… எல்லா மேனேஜரும் இந்த மாதிரி இல்ல… என் மேனேஜர் ஒரு ப்ரைனி… இப்படி இப்படிங்கறதுகுள்ள (கைகளை சொடுக்கியவாறு) வேலைய முடிச்சுடுவாருன்னு சொன்னேன்…” என்று அசோக் ஐஸ் கட்டியை அவர் மேல் வைக்க, அதுவும் உருகி அதன் வேலையை சரியாக செய்ததோ…

அசோக் வைத்த ஐஸில் மனம் குளிர்ந்தவர், “டோன்ட் ரீபீட் திஸ் அகேய்ன் அசோக்..” என்று எச்சரித்து (!!) ஆகாஷிடம் திரும்பினார்.

“அண்ட் யூ ஆகாஷ்… இந்த வாரம் முக்கியமான ப்ரெசென்டேஷன் இருக்குன்னு தெரிஞ்சும் நேத்து லீவ் போட்டுருக்கீங்க… ஹவ் இர்ரெஸ்பான்சிபில்…” என்று திட்டினார்.

‘ஹ்ம்ம் ஒரு நாள் ஆஃபிஸ் வந்துட்டு ரெஸ்பான்சிபிலிட்டிய பத்தி நீ பேசுறியா…’ என்று மனதிற்குள் புகைந்தாள், பூமி.

பூமி என்ன கூறுவது என்று தெரியாமல் திணற, அவளின் உதவிக்கென வந்தான் அசோக். “சார்… அவன் ப்ரொஜெக்ட்ட பெர்ஃபெக்டா முடிச்சுடுவான்… இன்ஃ பேக்ட் ப்ரெசென்டேஷனுக்கு ஒரு நாள் முன்னாடியே எல்லாம் பக்காவா இருக்கும்…” என்று நண்பனின் மேலிருந்த நம்பிக்கையில் கூறினான்.

“ஓ… ஐ சீ… நாளான்னைக்கு தான ப்ரெசென்டேஷன்… அப்போ நாளைக்கே ரெடியா இருக்கும்ல…” என்று நக்கலாக கூறியவர், அவர்களுக்கு பேசவே அவகாசம் கொடுக்காமல், “அப்போ நாளைக்கு எனக்கொரு டெமோ காட்டிருங்க… நவ் யூ போத் மே கோ…” என்று கூறினார்.

‘அச்சச்சோ.. அவசரப்பட்டு வாய விட்டுட்டோமோ…’ என்று சற்று தாமதமாக உணர்ந்தான் அசோக்.

பூமியோ அவனை பார்வையாலேயே எரித்துக் கொண்டிருந்தாள். ‘அவரே ரெண்டு திட்டு எக்ஸ்ட்ரா திட்டிட்டு விட்டிருப்பாரு… இவன் நடுல ஒரு பிட்ட போட்டு அது எனக்கு ஆப்பா திரும்பிருச்சு…’ என்று மானசீகமாக தலையிலடித்துக் கொண்டாள்.

அவர்கள் வெளியில் வந்ததும், அசோக்கை திட்டுவதற்குள், “ஹிஹி… பூமி, நான் உனக்கு ஹெல்ப் பண்ண தான் நெனச்சேன்… ஆனா அது வேற மாதிரி ஆகிடுச்சு… நீ ஒன்னும் கவலப்படாத, ஆகாஷ் எல்லாமே பக்காவா முடிச்சுடுவான்…” என்று கூற, பூமியோ அவனை முறைத்துக் கொண்டே கைபேசியில் யாருக்கோ அழைத்தாள்.

*****

ரூபா, “அண்ணா… வாங்க உள்ள போவோம்… அப்பறம் அந்த பச்ச கலர் சுடி ரிஷா, எல்லோ சுடி சினேகா, அந்த பாப் கட் பேரு ஸ்வேதா… ரிஷாவ ரிஷு, சினேகாவ ஸ்னேக், ஸ்வேதாவ ஸ்வே – இப்படி தான் கூப்பிடுவோம்… இத கரெக்டா நியாபகம் வச்சுக்கோங்க… மத்தது நான் சமாளிச்சுக்குறேன்…” என்று கூறியவாறு ஆகாஷை உள்ளே அழைத்துச் சென்றாள்.

அதன்பின் பயிற்சி வகுப்பில் நேரம் செல்ல, மூன்று வருட அனுபவம் உள்ளவனிற்கு அவையெல்லாம் எளிதாகவே இருந்தன. அவனின் ஒரு மனமோ, ப்ரெசென்டேஷன் பற்றியும், பூமி அங்கு எவ்வாறு சமாளிக்கிறாள் என்பதை பற்றியும் யோசித்துக் கொண்டே இருந்தது.

அவளி(னி)ன் கவனம் அங்கில்லை என்பதை உணர்ந்த பயிற்சியாளர், “மிஸ். பூமிகா” என்று அழைத்தார். அப்போதும் சிந்தையிலிருந்து கலையாமல் இருந்தவனை, ரூபா தான் கையில் இடித்து நிகழ்விற்கு கொண்டு வந்தாள்.

அந்த பயிற்சியாளரோ, அவனிடம் கேள்வியைக் கேட்க, ஆகாஷும் அதற்கான சரியான விடையைக் கூறினான். அந்த பயிற்சியாளருக்கு ஆச்சரியமே. அவள்(ன்) வகுப்பை கவனிக்க வில்லை என்பது அவருக்கு நன்றாக தெரிந்தது. இருப்பினும் எவ்வாறு விடை கூறினாள்(ன்) என்பதை யோசித்தார் அவர்.

கால் மணி நேர இடைவேளைக்காக கேண்டீன் சென்றனர் தோழிகள் ஐவரும்.

அப்போது ரிஷா, “ஹே பூமி… எப்படி டி இன்னைக்கு அந்த சிடுமூஞ்சி கேட்ட கேள்விக்கு பதில் சொன்ன… ஒரு வேள மாம்ஸ் ட்ரைனிங்கோ…” என்று கூறி கண்ணடித்தாள்.

அவள் மேலும் பேசாமல் இருக்க, “ரிஷு, எனக்கு பசிக்குது… என்கூட வா சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரலாம்…” என்று அவளை பேச விடாமல் இழுத்துச் சென்றாள் ரூபா.

மற்ற இருவரும் ஆகாஷையே குறுகுறுவென பார்க்க, அவனை அவர்களிடமிருந்து காக்க அவனின் அலைபேசி ஒலித்தது. அழைத்தது பூமி என்றதும், அவர்களிடமிருந்து சற்று விலகி நின்று அழைப்பை ஏற்றான்.

“உன் பிரெண்ட போட்டுத் தள்ளுன்னா உனக்கு ஒன்னும் பிரெச்சனை இல்லல…” – ஆகாஷ் அழைப்பை ஏற்றவுடன் இதைத் தான் கூறியிருந்தாள் பூமி.

ஆகாஷோ ஒன்றும் புரியாமல் என்னவென்று கேட்க, நடந்ததைக் கூறினாள் பூமி.

அதன்பின் தன் பங்கிற்கு ஆகாஷும் அசோக்கை திட்ட, “என்ன டா இது ஒரு பச்சமண்ண ரெண்டு பேரும் இப்படி திட்டுறீங்க… உதவி பண்ணது தப்பா… இதுல கொலை பண்ண வேற பிளான் பண்றீங்க…” என்று அசோக் தனியாக புலம்ப, அவனின் புலம்பலை காதில் வாங்காமல் மற்ற இருவரும் அடுத்து என்ன செய்வது என்பதைப் பற்றி ஆலோசித்தனர்.

தொடரும்...


உங்க கருத்துக்களை இங்க பகிர்ந்துக்கோங்க பிரெண்ட்ஸ்...👇👇👇
 

Valli18

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 போன எபிக்கு நீங்க கொடுத்த ஆதரவுக்கு நன்றி...🙏🙏🙏 இதோ அடுத்த அத்தியாயம்... படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க...😁😁😁

25137

அத்தியாயம் 8

அன்றைய இரவு ஆகாஷ் தீவிரமாக திட்ட விளக்கக்காட்சிக்காக உழைத்துக் கொண்டிருந்தான். சூழ்நிலையின் தீவிரத்தை புரிந்த பூமி கூட ஆகாஷிற்கு அவளால் முடிந்த உதவியை செய்து கொண்டிருந்தாள். நடு ஜாமத்தில் பூமிக்கு தூக்கத்தில் கண்கள் சொருக, தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

அவளைக் கவனித்த ஆகாஷ், “ஹே க்ளோபு உள்ள போய் தூங்கு டி…” என்றான்.

“ஆவ்… இல்ல இல்ல நான் தூங்கல… உனக்கு ஏதாவது ஹெல்ப் வேணும்னா கேளு…” என்றாள்.

ஆனால் அடுத்த ஐந்து நிமிடங்களில், அமர்ந்தபடியே உறங்கியிருந்தாள். அவளைக் கண்டு சிரித்தவன், அவளை வசதியாக படுக்க வைத்து, தன் வேலையைத் தொடர்ந்தான்.வேலை முடிந்ததும், அப்படியே கண்ணயர்ந்து விட்டான். அவர்கள் சோஃபாவில் உறங்கும் இரண்டாவது இரவானது அது…

மறுநாள் காலை இருவரும் படப்படப்புடனே இருந்தனர். கிளம்பும்முன் அவளிற்கு ஒருமுறை அனைத்தையும் கூறியவன், ஒரு ‘ஆல் தி பெஸ்ட்’டுடன் வழியனுப்பி வைத்தான்.

பூமி அலுவலகம் செல்லும் வழியெல்லாம் பதட்டமாகவே காணப்பட்டாள். அசோக் கூட, ‘நல்ல வேள ப்ரெசென்டேஷன் பண்ணப் போற டென்ஷன்ல நம்மள மறந்துட்டா…’ என்று மகிழ்ந்து கொண்டே வண்டி ஓட்டினான்.

முதல் நாள் கூறியது போல், அந்த குடுமி மண்டையன் வந்தவுடன் பூமியை அழைத்தார். பூமியும் சற்று பயத்துடனே செல்ல, அவளின் முன் வந்த அசோக் தன் முப்பத்திரண்டு பற்களையும் காட்டியபடி, “ஆல் தி பெஸ்ட், பூமி” என்றான்.

அதுவரை பதட்டத்தில் இருந்த பூமி, அசோக்கை முறைத்துவிட்டு அறைக்குள் சென்றாள்.

என்ன தான் ஆகாஷ் பூமிக்கு சொல்லி அனுப்பியிருந்தாலும், முதல் முறை என்பதால் சற்று சொதப்பினாள்.

“இது தான் நீங்க பக்காவா ரெடி பண்ண லட்சணமா, ஆகாஷ். இதே மாதிரி நாளைக்கும் சொதப்புனீங்கனா, க்ளைன்ட் முன்னாடி எவ்ளோ அசிங்கமா இருக்கும்… இதே மாதிரி உங்க பெர்ஃபார்மன்ஸ் இருந்துச்சுன்னா உங்க ப்ரோமோஷன்ல தான் கைவைக்க வேண்டியது வரும்” என்று அந்த குடுமி திட்டும்போதே யாரோ அறைக்கதவை தட்ட, அவர்களுக்கு அனுமதி அளித்தார் மிஸ்டர். குடுமி.

அங்கு ஒரு பெண் அழுது கொண்டே உள்ளே வர, அதுவரை ‘இஞ்சி தின்ற குரங்கு’ போல் முகத்தை வைத்திருந்தவர், அப்பெண் நுழைந்ததும் நொடியில் முகத்தை சீர்படுத்திக் கொண்டார்.

“ஹே சாரா, வாட்ஸ் தி ப்ராப்ளம்… எதுக்கு அழுகுற...”

“சாரி சார்… க்ளைன்டுக்கு அனுப்புன மெயில்ல ஒரு தப்பு நடந்துடுச்சு…” என்று அந்த தவறை விளக்க, அதைக் கேட்டுக் கொண்டிருந்த பூமியோ, ‘அச்சோ இவ்ளோ பெரிய மிஸ்டேக்… இங்க சொதப்புனதுக்கே இந்த காண்டாமிருகம் இவ்ளோ திட்டுச்சு… இந்த பொண்ணு என்ன ஆகப் போகுதோ…’ என்று வருந்த, அதற்கு நேர்மாறாக, “சாரா இது சின்ன மிஸ்டேக் தான் மா… ஐ வில் டேக் கேர்… நீ எதுக்கும் பயப்படாத…”என்று அப்பெண்ணிற்கு ஆறுதல் அளித்துக் கொண்டிருந்தார் குடுமி.

அதை கண்கள் தெறித்து விடுமளவிற்கு பார்த்த பூமி, “அட பக்கி… இப்படி வழியுறான்…’ என்று இன்னும் பல கெட்ட வார்த்தைகளால் குடுமியை காய்ச்சிக் கொண்டிருந்தாள் பூமி. இதற்கு முன் இப்படியான நிகழ்வுகளை அவள் செவிவழியாக கேட்டிருக்கிறாள். ஆனால் இப்போது தான் சொந்த அனுபவத்தில் (!!!) தெரிந்து கொள்கிறாள்.

அப்பெண்ணை அங்கிருந்து அனுப்பி வைத்தவர், மீண்டும் கடூப்ஸ் ரோலுக்கு திரும்பி, “இன்னும் என்ன இங்கேயே நின்னுட்டு இருக்கீங்க… நாளைக்காவது நல்லபடியா ப்ரெசென்ட் பண்ணுங்க…” என்றார்.

அவரை முறைத்துக் கொண்டு வெளியே வந்தாள் பூமி. முதலில் அவர் திட்டியபோது தன்மேல் குற்றம் இருப்பதால், தன்னைத் தானே தேற்றிக் கொண்டாள். ஆனால் இறுதியாக நடந்த செயலை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

அதே எரிச்சலில் வந்தவள் சற்று தள்ளி நடந்த சம்பாஷனையில் தேங்கினாள்.

“எப்படி டி இவ்ளோ சீக்கிரமா வெளிய வந்த… அந்த ஜொள்ஸ் அதுக்குள்ளயும் சமாதானம் ஆகிட்டானா…”

“என் பெர்ஃபார்மன்ஸ் அப்படி ரெண்டு சொட்டு கண்ணீர் தான்… அந்த ஆளு ஃபிளாட்…” என்று கூறி சத்தமாக சிரித்தாள் அவள், சற்றுமுன் குடுமியிடம் கண்ணீர் நாடகத்தை நடத்தியவள்.

“ஆனா இந்த ஆகாஷ் தான் பாவம்… நான் போனப்போ அந்த ஆளு அவன திட்டிட்டு இருந்தாரு… ப்ரொமோஷன்ல கை வைப்பேன்னு பேசிட்டு இருந்தாரு…” என்று அப்பெண் கூற, மற்றொருத்தி, “இந்த ஆஃபிஸ்லயே அவன் தான் ரொம்ப சின்சியர்… நியாயமா பார்த்தா, அவனுக்கு தான் ப்ரொமோஷன் தேடி வரணும்… ஆனா நமக்கு வருது…” என்று சிரித்தாள்.

“அது தான் நம்ம பொண்ணா இருக்குறதுக்கான அட்வான்டேஜ் டி…”

பூமிக்கு தான் இந்த பேச்சுக்கள் அருவருப்பாக இருந்தன. ‘சீ… பொண்ணா இதுங்க…’ என்று அங்கிருந்து நகர்ந்தாள்.

அதற்குள் ஆகாஷின் விஷயம் ஆஃபிஸிற்குள் பரவியிருக்க, பூமி சென்றதும் ஆளாளுக்கு வந்து, “விடு மச்சான் அந்த ஆள பத்தி தெரியும்ல…” என்று ஆறுதல் சொல்கிறேன் என்று மேலும் ரணத்தைக் கீறினர்.

அசோக் தான், “எல்லாரும் போய் அவங்கவங்க வேலைய பாருங்க…” என்று அவர்களை அனுப்பி வைத்தான்.

“ஃபர்ஸ்ட் ரிலாக்ஸ் பண்ணு பூமி…” என்று தண்ணீரை அவளிடம் தந்தான். பின் பூமியே உள்ளே நடந்ததை அவனிடம் கூறினாள்.

“இப்படி ஒரு மேனேஜர்… அப்பறம் அந்த பொண்ணுங்க… ச்சே டிஸ்கஸ்டிங்… நான் பண்ணது தப்பு தான் இல்லன்னு சொல்லல… ஆனா என்ன ட்ரீட் பண்ணதுக்கும் அந்த பொண்ண ட்ரீட் பண்ணதுக்கும் எவ்ளோ வித்தியாசம்…” என்று அவளின் மனக்குமுறலைக் கூறினாள்.

“இது எல்லா இடத்துலயும் நடக்குறது தான், பூமி. சில பொண்ணுங்க வேற வழியில்லாம இந்த மாதிரி தொந்தரவுக்கு ஆளாகுறாங்க… சிலர் குறுக்கு வழில சம்பாதிக்கணும்னு இப்படி பண்றாங்க… ப்ச் விடு.. நீ அத பத்தி யோசிக்காம ரிலாக்ஸா இரு…” என்றான் அசோக்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே மிஸ்டர். குடுமி வெளியே செல்ல, “வந்த வேலை முடிஞ்சுதுன்னு கிளம்பிட்டான் பாரு… ஒரு நாள் என் கைல சிக்கட்டும் அன்னைக்கு அந்த குடுமிய வெட்டிடுறேன்…” என்று அசோக் கூற, பூமிக்கும் லேசாக சிரிப்பு வந்தது.

ஆனால் சற்று நேரத்தில், எல்லாரும் அவளைப் பார்த்து பரிதாபப்படுவது போல் தோன்ற, அசோக்கிடம் வீட்டிற்கு செல்வதாகக் கூறினாள்.

அவளின் நிலையை புரிந்து கொண்டவன், “நான் ட்ராப் பண்ணவா…” என்று கேட்டான்.

“இல்ல நான் கேப் புக் பண்ணி போயிடுறேன்…” என்று கூறி அங்கிருந்து வெளியே வந்தாள்.

*****

ஆகாஷின் அன்றைய நாள், வழக்கம் போல் கேலி கிண்டலுடன் ஆரம்பித்தது. ஆனால் அவனின் மனம் தான் அதில் ஒன்ற முடியாமல், பூமியையும் ப்ரெசென்டேஷனையும் சுற்றிக் கொண்டிருந்தது.

அப்போது அசோக் அவனிற்கு அழைத்து அங்கு நடந்ததைக் கூறினான். பூமி வீட்டிற்கு சென்று விட்டாள் என்பதை அறிந்தவன், அவனும் வீட்டிற்கு கிளம்ப ஆயத்தமானான்.

ஏனெனில், அவனிற்கு நன்கு தெரியும், வீட்டிற்குள்ளேயே செல்லமாக வளர்க்கப்பட்ட அவள் இப்படிப்பட்ட சூழ்நிலையை இதுவரை எதிர்கொண்டிருக்க வாய்ப்பில்லை. அதிலிருந்து வெளிவர அவளிற்கு ஆறுதலாக யாராவது அருகே இருக்க வேண்டும் என்பதையும் அவன் அறிவான். அதனாலேயே அவன் சீக்கிரமாக கிளம்பினான்.

பயிற்சியாளரிடம் அவனிற்கு உடம்பு சரியில்லை என்று கூறியவன் அரை நாள் விடுப்பு கோரினான். அவரோ, அன்றைய நாள் பயிற்சியை முடித்துவிட்டு தான் செல்ல வேண்டுமென்று கூற, ஆகாஷ் அனைத்தையும் முடித்து விட்டதாகக் கூறி அதன் முடிவுகளையும் அவரிடம் காட்டிவிட்டு வெளியே வந்தான். அந்த பயிற்சியாளரோ எப்படி அவள்(ன்) முடித்திருப்பான் என்று ஆச்சரியமாகப் பார்த்தார்.

அவர் மட்டுமல்ல அவளி(னி)ன் தோழிகளும் கூட. செல்லும்முன் ரூபாவிடம் ஏதோ சைகை செய்துவிட்டு சென்றதைக் கண்டவர்கள், “என்ன அவ உங்கிட்ட மட்டும் ஏதோ சொல்லிட்டு போறா…” என்று அவளிடம் நச்சரிக்க, “ஆகாஷ் அண்ணாவுக்கு உடம்பு முடியலன்னு போறா…” என்று கூறி சமாளித்தாள் ரூபா.

*****

வீடு வந்து சேர்ந்த பூமிக்கு தலை வலிக்க, அப்படியே சோஃபாவில் சாய்ந்து விட்டாள். ஆகாஷ் அவனிடமிருந்த சாவியைக் கொண்டு கதவைத் திறக்கும் சத்தத்தில் ஒற்றைக் கண்ணைத் திறந்து பார்த்தவளிற்கு, அவனின் வரவு சற்று ஆறுதலாகவே இருந்தது.

ஆகாஷும் நடந்ததைப் பற்றி வினவாமல், “சாப்பிட்டியா…” என்றான். பூமி சோர்வாக இல்லை என தலையசைத்தாள்.

“சரி வா சாப்பிடலாம்…” என்று ஆகாஷ் கூற, பூமியோ உதட்டைப் பிதுக்கி, வேண்டாம் என்று தலையசைத்தாள். ஆகாஷிற்கு சிறு வயதில், தப்பு செய்துவிட்டு உதட்டைப் பிதுக்கும் பூமி போலவே காட்சியளித்தாள்.

உதட்டோரம் மெல்லிய புன்னகை பூக்க, அதை அவளிற்கு தெரியாமல் மறைத்தவன், அவளருகே அமர்ந்து, “உனக்கு இப்போ என்ன பிரச்சனை…” என்று கேட்கவும், அவ்வளவு நேரம் மனதில் வைத்து அழுத்தியதெல்லாம் அருவி போல் கொட்டினாள்.

ஆகாஷும் அமைதியாக அவள் கூறுவதைக் கேட்டான். அவள் அனைத்தையும் கூறி முடித்ததும், “இப்போ ஒரு டீப் பிரெத் எடு…” என்றான், ஆகாஷ்.

‘இவன் என்ன லூசா… எவ்ளோ எமோஷனலா சொல்லிருக்கேன்… இப்போ வந்து மூச்சு பயிற்சிக்கு இன்ஸ்ட்ரக்ஷன் குடுத்துட்டு இருக்கான்…’ என்று மனதிற்குள் திட்டியவள், அவனை முறைக்க, “ட்ரஸ்ட் மீ பூமி… கண்ண மூடிட்டு மூச்ச இழுத்து விடு…” என்றான்.

பூமியும் கண்களை மூடிக்கொள்ள, “இப்போ மூச்ச விடுறப்போ, உன் மனசுல இருக்க எரிச்சலும் அதோட வெளிய போற மாதிரி ஃபீல் பண்ணு…” என்றான். அவளும் அவ்வாறே செய்ய, “இப்போ கண்ண திற… ஹவ் டூ யூ ஃபீல் நவ்..?” என்றான்.

“ம்ம்ம் குட்… முன்னாடி இருந்த டென்ஷன் இல்ல… இப்போ மனசு கொஞ்சம் அமைதியா இருக்கு…”

“குட்… இப்போ நீ சொன்ன விஷயத்துக்கு வருவோம்… நீ வேலைக்கு வந்து ரெண்டு மாசம் தான் ஆகுது… அதுவும் ட்ரைனிங் பீரியட்ல தான் இருக்க… அதான் இந்த மாதிரி விஷயத்துக்கு டென்ஷன் ஆகுற… இது மாதிரி சிஷுவேஷன் நாளைக்கு உனக்கே ஏற்படலாம்… அப்போ எப்படி ரியாக்ட் பண்ணுவங்கிறதுக்கான அனுபவமா இத எடுத்துக்கோ…” என்று பேசி பேசியே அவளை இயல்பாக்கினான்.

“என்ன இப்போ ஓகேவா…” என்று ஆகாஷ் கேட்டதும், “ம்ம்ம் ஓகே… ரொம்ப ஓவரா ரியாக்ட் பண்ணிடேனோ…” என்றாள் பூமி.

“கொஞ்சம்… நான் கூட இந்நேரம் அந்த குடுமிய தலைகீழா தொங்க விட்டுருப்பன்னு நெனச்சேன்… ஆனா மேடம் வீட்டுல தான் புலி, வெளிய எலி தான் நிரூபிச்சுட்டீங்க…” என்று கிண்டல் செய்ய, அவனைத் துரத்திக் கொண்டு ஓடினாள்.

ஒருவழியாக அவர்களின் அடிதடி சண்டையெல்லாம் முடிந்த பின்னர், “உனக்கு கிளாஸ் எடுத்தே என் எனர்ஜி காலியாகிருச்சு… நான் போய் ஏதாவது சமைக்குறேன்…” என்றான்.

“ஹே இரு நானும் வரேன்…” என்று பூமி கூற, “எம்மா தாயே… பத்து விசில் நூடுல்ஸ்லா என்னால சாப்பிட முடியாது…” என்று கூறி மீண்டும் சண்டையை ஆரம்பித்து வைத்தான். அதன்பின் சண்டை கொஞ்சம், சமாதானம் கொஞ்சம், சமையல் கொஞ்சம் என்று அவர்களின் நேரம் சென்றது.

இரவில் மீண்டும் பதட்டமாக காணப்பட்டவளைக் கண்ட ஆகாஷ், “எதுக்கு இப்போ மறுபடியும் டென்ஷன்…” என்றான்.

“தெரியல… நாளைக்கு திரும்ப சொதப்பிட்டா, உன் ப்ரோமோஷன்…” என்று பூமி இழுக்க, “இதான் உன் டென்ஷனுக்கான காரணம்… அதப்பத்தி எதுவும் யோசிக்காம நீ ப்ரெசென்ட் பண்ணாலே சொதப்பாம பண்ணுவ… தேவையில்லாம நீ தான் டென்ஷன உன் தலையில ஏத்திக்குற…” என்று கூறி அவளை தெளிவு படுத்தினான்.

“ம்ம்ம் சரி தான்… தேங்க்ஸ்…” என்று ஆகாஷிடம் பூமி கூற, “அட க்ளோபு தேங்க்ஸ்லா சொல்ற… நீ உண்மையிலேயே என் க்ளோபு தான…” என்று வம்பிழுத்து சண்டை போட்ட பின்பே அவளை உறங்க அனுமதித்தான். அவர்களின் சண்டையில் அவன் கூறிய ‘என் க்ளோபு’ என்பதை இருவருமே கவனிக்கவில்லை.

இருவருமே கட்டிலில் படுத்து அன்றைய நிகழ்வுகளை நினைத்துப் பார்த்தனர். ‘கருவாயன் அவ்ளோ மோசம் இல்ல… கொஞ்சமே கொஞ்சம் குட் பாய் தான் போல…’ என்று நினைத்த பூமி, சிரித்துக் கொண்டே உறங்கிப் போனாள்.

‘இன்னிக்கு குட்டி பூமிய மறுபடியும் பார்த்த மாதிரி இருந்துச்சு… ஹாஹா அதே அழுமூஞ்சி டி நீ…’ என்று நினைத்தவனும் உறங்க ஆரம்பித்தான்.

இருவரும் அவர்களை அறியாமலேயே மற்றவர்களை நெருங்கியிருந்தனர்... இது உடல் மாற்றத்தால் உண்டான நெருக்கமா… இல்லை உள்ளப் பரிமாற்றத்தால் உண்டான நெருக்கமா… அவர்களுக்கே வெளிச்சம்…

*****

காலையில் அதே மலர்ச்சியுடன் எழுந்தவர்கள், அவரவர்களின் பணியிடம் நோக்கிக் கிளம்பினர். செல்லுமுன் பூமி, “உன் ப்ரோமோஷனோட வரேன்…” என்று கூற, ஆகாஷும் அவளை வாழ்த்தி அனுப்பினான்.

என்ன தான் நம்பிக்கையுடன் கிளம்பி வந்தாலும், அலுவலகத்திற்கு வந்த பின் சற்று படப்படத்தாள், பூமி. ஆகாஷிற்கு அழைக்கலாமா வேண்டாமா என்று குழம்பிக் கொண்டிருந்தவளின் கவனத்தை அவளின் அலைபேசி ஒலி ஈர்க்க, அதில் தெரிந்த ஆகாஷின் பெயரை பார்த்து, அவளின் இதழ்கள் தானாக விரிந்தன.

அழைப்பை ஏற்றவள், வேண்டுமென்றே வேலை இருப்பது போல் காட்டிக்கொள்ள, அவனும் சாதரணாமாக பேசிவிட்டு வைத்து விட்டான். ஆனால் அவனிடம் பேசிய பின்னரே சற்று இயல்பாக இருந்தாள் பூமி.

அதே உற்சாகத்தோடு விளக்கப்படக் காட்சியை முடித்தாள். வாடிக்கையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு கூட சரியாக பதிலளித்தவளை ஆச்சரியமாக நோக்கினார் மிஸ்டர். குடுமி. அவர்கள் பூமியை பாராட்ட, மிஸ்டர். குடுமி தான் அனலில் சிக்கிய அண்டங்காக்கா போல் முகம் கறுத்துப் போனார்.

“வீ ஆர் ஹாப்பி வித் யுவர் ப்ரெசென்டேஷன் மிஸ்டர். ஆகாஷ். கிளாட் டு டூ திஸ் ப்ரொஜெக்ட் வித் யூ…” என்று அவர்கள் பாராட்ட, மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தாள் பூமி. அவர்களின் பாராட்டிலேயே ஆகாஷின் பதவி உயர்வு உறுதியானது.

அவள் வெளியே வந்ததும், அனைவரும் அவளை வாழ்த்த, சிறு சிரிப்புடன் அதை ஏற்றாள்.

“பூமி கங்கிராட்ஸ்… அந்த குடுமி மண்டையன் மூஞ்சிய பார்க்கணும்… கடுகடுன்னு இருக்கான்…” என்று பூமியின் காதருகே கூறினான் அசோக். அதில் அவளும் சிரிக்க, இருவரும் ஹை-ஃபை அடித்துக் கொண்டனர்.

இதை ஆகாஷிற்கு தெரிவிக்கலாம் என்று அழைத்தால், அவன் எடுக்க வில்லை. வீட்டிற்கு வந்தும் அழைத்து விட்டாள். அப்போதும் அவன் எடுக்க வில்லை.

‘ஏன் இன்னிக்கு இவ்ளோ லேட்டாகுது…’ என்று அவள் யோசிக்கும்போதே, கதவு திறக்கும் சத்தம் கேட்க, உற்சாக மிகுதியில், ஓடிச் சென்று அவனை அணைத்து, “ஹே அஷு… உனக்கு ப்ரோமோஷன் ஓகே ஆகிடுச்சு…” என்றாள்.

நொடி நேரத்திற்கு பின்பே, அவளிருக்கும் நிலை உணர்ந்தவள், அதிர்ச்சி பாதி வெட்கம் மீதியென கலவையான உணர்வுகளில் சிக்கித் தவித்து, அவனை விட்டு விலகினாள்.

ஆனால் ஆகாஷோ அதையெல்லாம் உணராமல், வேறேதோ யோசனையில் முகம் சிவக்க நின்றிருந்தான்…. அது கோபத்திலா… இல்லை வெட்கத்திலா…


தொடரும்...

உங்க கருத்துக்களை இங்க பகிர்ந்துக்கோங்க பிரெண்ட்ஸ்...👇👇👇
 

Valli18

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 போன எபிக்கு கொடுத்த ஆதரவுக்கு நன்றி...🙏🙏🙏 இதோ அடுத்த அத்தியாயம்... படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க...😍😍😍

25151

அத்தியாயம் 9

பூமி தன் வெட்கத்திலிருந்து வெளிவந்து, தயங்கியபடி ஆகாஷைப் பார்க்க, அவனின் சிவந்த முகத்தைக் கண்டவள், ‘நியாயமா பார்த்தா, நான் தான வெட்கப்படனும்… இவன் ஏன் வெட்கப்பட்டுட்டு இருக்கான்… ஒரு வேள உடம்பு மாறுன மாதிரி உணர்வும் மாறிடுச்சோ…’ என்று அவளின் சிந்தனை தாறுமாறாக செல்ல, அதை அடக்கியவள் அவனை அழைத்தாள்.

“ஹே ஸ்கை ஹை என்ன யோசிச்சுட்டு இருக்க…” என்று பூமி கேட்க, அப்போது தான் யோசனையிலிருந்து வெளிவந்தவன், “ஒன்னுமில்ல…” என்றான்.

என்ன தான் அவன் ஒன்றுமில்லை என்று கூறினாலும், அவனின் முகஇறுக்கம் ஏதோ பிரச்சனை என்று காட்டிக் கொடுத்தது.

“ஆஃபிஸ்ல ஏதாவது பிரச்சனையா… யாருக்கிட்டாயாவது சண்டை போட்டியா… இல்ல யாராவது உன்ன திட்டுனாங்களா…” என்று வரிசையாக கேட்டுக் கொண்டிருந்தவளை முறைத்தவன், “நான் என்ன உன்ன மாதிரியா… திட்டுன்னா அழுறதுக்கு…” என்றான் காட்டமாக.

“ப்ச் அப்போ எதுக்கு இப்படி காண்டா இருக்க காண்டாமிருகம் மாதிரி இருக்கன்னு சொல்லித்தொல…”

“அது… நீன்னு நெனச்சு…”

“நெனச்…சு….”

“உன் ட்ரைனர்…”

“ட்ரைனர்ர்ர்ர்…”

“அவன்… என்ன ப்ரொபோஸ் பண்ணிட்டான்…”

அதைக் கேட்டதும் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தாள் பூமி. ஆகாஷ் அவளை முறைத்ததும், கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கியவள், “வெறும் ப்ரொபோசல் தானா…” என்று பூமி இழுக்க, ஆகாஷின் முறைப்பைக் கண்டு, “இல்ல… படத்துல முட்டிக்கால் போட்டு ப்ரொபோஸ் பண்ணுவாங்களே அது மாதிரி ஏதாவது சம்பவம் நடந்துச்சான்னு கேக்க வந்தேன்…” என்று கூறி சமாளித்தாள்.

அவன் கோபமாக எழுந்து செல்ல, பூமி அவனின் கைகளைப் பற்றி அமர வைத்து, “சரி சரி நான் இனிமே பேசல… நீ சொல்லு என்ன நடந்துச்சுன்னு…” என்று கூறினாள். அவனும் ஒரு பெருமூச்சுடன் கூறத் துவங்கினான்.

ஒரு மணி நேரத்திற்கு முன்பு…

வேலை நேரம் முடிய, அனைவரும் கிளம்பிக் கொண்டிருக்க, ஆகாஷோ மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தான். தோழிகள் அழைக்க, அவர்களை கேன்டீனில் காத்திருக்குமாறு கூறி மீண்டும் வேலையில் மூழ்கினான்.

“வரவர ஓவரா தான் வேலை பாக்குறா…” என்று சலித்துக் கொண்டே கிளம்பினர் தோழிகள். அடுத்த பத்து நிமிடங்களில், வேலையை முடித்தவன், அப்போது தான், அங்கு அவனைத் தவிர யாருமில்லை என்று உணர்ந்து, வேகவேகமாக கிளம்பினான்.

“மிஸ். பூமிகா..”

முதலில் அதை கவனிக்காமல் நடந்து கொண்டிருந்த ஆகாஷ், இரண்டாவது முறையும் அதே பெயர் காதில் விழுகவும், ‘ச்சே நம்மள தான் யாரோ கூப்பிடுறாங்க…’ என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவன், திரும்பிப் பார்த்தான்.

அங்கு அந்த ‘சிடுமூஞ்சி’ பயிற்சியாளர், எப்போதும் இல்லாத வகையில் மில்லிமீட்டர் அளவிற்கு, இதழ்களை விரித்தும் விரிக்காமலும் ஒரு சிரிப்பை சிந்தியபடி நின்றிருந்தார்.

புருவம் சுருக்கி யோசித்த ஆகாஷ், அவரை நோக்கி நடந்தான்.

“ஏன் தனியா போறீங்க…?” என்று அவர் ஏதேதோ கேள்விகள் கேட்க, இவனும் ஒன்றும் புரியாமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.

‘இந்த ஆள் எதுக்கு நம்மகிட்ட கடலை போட்டுட்டு இருக்கான்..’

அவரோ தன் கையிலிருந்த கடிகாரத்தையும் வாயிலையும் அடிக்கடி பார்க்க, வேறு யாருக்கோ காத்திருக்கிறார் என்று நினைத்தான் ஆகாஷ்.

ஆனால் அடுத்த ஐந்தாவது நிமிடம் அவர் செய்த வேலையில், அதிர்ந்து தான் போனான் பாவையவன்(!!!)

சரியாக ஆறு மணிக்கு, அங்கிருந்த அனைத்து விளக்குகளும் அணைந்து, இவர்கள் நிற்கும் பகுதி மட்டும் வெளிச்சத்தால் நிரம்பியது. ஆகாஷ் என்னவென்று யோசிக்கும் முன்பே, ஒற்றைக்காலில் அமர்ந்த அந்த பயிற்சியாளர், “பூமிகா, வில் யூ மேரி மீ…” என்றார்.

ஆகாஷின் நிலை தான் மிகவும் மோசமாக இருந்தது. அவன் நிச்சயம் இதை எதிர்பார்த்திருக்க வில்லை. அந்த அதிர்ச்சியில் அவன் சிலையாக நின்றிருக்க, எதிரில் நின்றவரோ பேச்சை தொடர்ந்தார்.

“இது உனக்கு ஆச்சரியமா தான் இருக்கும்னு எனக்கு தெரியும் பூமி. இன்ஃபேக்ட் நாம சரியா கூட பேசிகிட்டது இல்ல… உண்மைய சொல்லணும்னா ஃபர்ஸ்ட் உன்ன பார்த்தப்போ, ரொம்ப திமிருன்னு கூட நெனச்சுருக்கேன்… ஆனா அன்னைக்கு நான் திட்டுனத்துக்கு அப்பறம் உன் பிஹெவியர்ல தெரிஞ்ச மாற்றம் தான் என்ன உன்ன நோக்கி ஈர்த்துச்சு… நான் சொன்னதுக்காக நீ மாறுனேனா, உனக்கும் என்ன பிடிச்சுருக்குன்னு தான அர்த்தம்…”

‘என்னாது இவனுக்காக மாறுனேனா… லூசாடா நீ… லாஜிக்கே இல்லாம பேசுற… சரியான மாங்கா மடையன் டா நீ…’

“உன்ன மாதிரி பொண்ண நான் பார்த்ததே இல்ல… நீ பொண்ணே இல்ல… தேவதை…” என்று காதல் போதையில் அவர் பிதற்றிக் கொண்டிருந்தார்.

‘அடேய் அத தான் டா நானும் சொல்றேன்… நான் பொண்ணே இல்ல… என்ன விட்டுடு டா…’ என்று மைண்ட் வாய்சிலேயே அவனைத் திட்டிக் கொண்டிருந்தான் ஆகாஷ்.

அடுத்து அவன் பேச ஆரம்பிக்கும் முன், “ஹோல்ட் ஆன்… எனக்கு ஏற்கனவே கல்யாணம் நிச்சயமாகிடுச்சு…” என்று கூறி அவரை ‘ஆஃப்’ செய்தான் ஆகாஷ்.

இவ்வளவு நேரம் ஆகாஷ் கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்த பூமியோ மீண்டும் சிரித்தாள். “பரவாலையே ரெண்டே நாள்ல அவன கரெக்ட் பண்ணிட்ட… ஹாஹா…” என்று சிரிக்க, அவளின் தலையில் கொட்டினான் ஆகாஷ்.

“ஸ்…ஆஆ.. எருமை…. சரி சொல்லு அப்பறம் என்னாச்சு…”

“ஃபர்ஸ்ட் அவன் நம்பல… அப்பறம் எப்படியோ அவன நம்ப வைக்குறதுக்குள்ள எனக்கு தான் தலையே சுத்திடுச்சு… அப்பறம் என்ன சாரி கேட்டுட்டு சோகமா லுக் விட்டுட்டு போயிட்டான்…”

“ஹாஹா… அப்போ இன்னும் ஒரு வாரம், சார் தேவதாஸ் லுக்கு விட்டுட்டு இருப்பாரு… ஆமா அதான் அவன சமாளிச்சுட்டேல, அப்பறம் ஏன் மூஞ்சிய தூக்கி வச்சுருந்த…” என்று கூறிவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் சென்று விட்டாள் பூமி.

ஆனால் ஆகாஷின் மனமோ, ‘ஆமா நான் ஏன் இவ்ளோ கோபப்பட்டேன்…’ என்று சிந்தித்துக் கொண்டிருக்க, அந்த ‘உருப்படியான’ காரியத்தை செய்ய விடாமல், அவனை அழைத்தாள் பூமி.

“ஹே ஸ்கை ஹை, நாளைக்கு ஈவ்னிங் ட்ரீட்… நான்… இல்லல்ல நீ… ப்ச் நான் தான்… ப்ரோமோஷன் வாங்குனதுக்கு ட்ரீட் தரேன்னு சொல்லிருக்கேன் உன் பிரெண்ட்ஸுக்கு… சோ என்ன ட்ரெஸ் போடுறதுன்னு ஹெல்ப் பண்ணு…” என்று பூமி கூறவும், அது என்ன மாதிரி ‘ட்ரீட்’ என்று தெரிந்ததால் ஆகாஷ், “அதுக்கெல்லாம் நீ போக வேணாம்…” என்று கூறினான்.

உடனே ‘சந்திரமுகி’யாக மாறிய பூமி, “ஏன் ஏன் ஏன்… நான் ஏன் போகக் கூடாது…” என்று அடம்பிடிக்க, ‘எத்தன ஏன் போடுறா பாரு… அவசரக்குடுக்க… நான் இங்க ட்ரிங்க் பண்றதுக்கே அந்த குதி குதிப்பா, அங்க போய் நீ என்ன பண்றன்னு பாக்குறேன் டி…’ என்று மனதில் எண்ணியவன், “சரி போயிட்டு வா…” என்று சலித்துக் கொண்டே கூறினான்.

மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியவள் (!!!), “என்ன ட்ரெஸ்ஸிங் சென்ஸ் டா உன்னோடது… கப்போர்ட் ஃபுல்லா பிளாக் ஷிர்ட் தான் வச்சுருக்க… பிங்க், எல்லோ, கோல்டன் இப்படி ஏதாவது கலர் வச்சுருக்கியா…” என்று பேசிக்கொண்டே வந்தவள், அவனின் முறைப்பைக் கண்டு, “ஸ்ஸ்ஸ் அது கேர்ள்ஸ் கலர்ல… ஹிஹி… கொஞ்சம் எக்ஸ்சைட் ஆகிட்டேன்…” என்று சமாளித்தாள்.

ஒருவழியாக உடையை தேர்வு செய்து முடித்ததும், பேசிக் கொண்டே இரவு உணவை சமைத்தனர் (சமைத்தான்!!!)

படுக்கச் செல்லும்முன், “ஹே ஸ்கை ஹை… உனக்கு ப்ரோமோஷன்லா வாங்கி குடுத்துருக்கேன்… எனக்கு ட்ரீட் எதுவும் இல்லையா…” என்று உதட்டைப் பிதுக்கி கேட்க, அவளின் பாவனையில் சிரித்தவன், “சரி தரேன்… என்ன வேணும்…” என்று கேட்டான்.

“ஹே உண்மையா தான சொல்ற…” என்று உறுதிபடுத்திக் கொண்டவள், வரிசையாக அவளின் தேவைகளை சொல்ல, மீண்டும் அவளிடம் சிறு வயது பூமியைக் கண்டவன், அவளை சிரிப்புடன் ரசித்துக் கொண்டிருந்தான். இத்தனைக்கும், அவளிருப்பது அவனின் உடலில். ஆனாலும் அவளின் பிரத்யேக பாவனைகளில் மயங்கித் தான் போனான்.

அவனின் சிந்தனை எங்கோ சுற்றிக் கொண்டிருக்க, தான் சொல்வதை கவனிக்காதவனை உலுக்கினாள் பூமி. சட்டென்று அவனின் நினைவுகள் அறுந்து விழ, நிகழ்விற்கு வந்தவன், ‘என்ன பண்ணிட்டு இருக்கேன் நான்… நான் எப்படி…’ என்று குழம்பினான்.

“டேய் கருவாயா… நான் சொன்னது கேட்டுச்சா…” என்று அவனின் காதருகே வந்து கத்தியவளைப் பார்த்து, லேசாக தலையசைத்தான்.

அவனின் தலையசைப்பில் சந்தோஷம் பொங்க, “குட்… இந்த சன்டே ஷாப்பிங் போறோம்… நான் சொன்ன எல்லாத்தையும் வாங்குறோம்…” என்று கூவியபடி அறைக்குள் சென்றாள் பூமி.

‘ஐயோ… என்ன சொன்னான்னு தெரிலயே… மண்டைய வேற ஆட்டி வச்சுருக்கேன்… இந்த டைம் என் பேலன்ஸுக்கு வேட்டு வைக்காம விட மாட்டா போலயே…’ என்று அவன் மனதினுள் புலம்ப, புதிதாக தோன்றிய உணர்வு மனதின் அடியாழத்திற்கு சென்றதோ…

*****

அடுத்த நாள் வேலைக்குச் சொல்லும்போதே உற்சாகத்துடன் கிளம்பினாள் பூமி. அவளின் சந்தோஷத்தைக் கண்டவன், ‘திரும்ப வரும்போது இப்படியே இருந்தா சரி தான்…’ என்று நினைத்துக் கொண்டான்.

பூமியை அழைத்துச் செல்ல அசோக் வந்துவிட, பூமி கிளம்பிக் கொண்டிருந்தாள். ஆகாஷ் அசோக்கிடம், அவன் காதிலிருந்து ரத்தம் வருமளவிற்கு பூமியை பார்த்துக் கொள்ளுமாறு கூறியிருந்தான்.

“எப்பா சாமி… போதும் டா… இதுக்கு பேசாம நீயும் எங்க கூட வந்துடு… அதான் மத்தவங்க யாரும் பூமிய இதுக்கு முன்னாடி பார்த்தது இல்லல… உன்ன என் கேர்ள்-பிரெண்டுன்னு சொல்லிக்கிறேன்…” என்று கண்ணடித்துக் கூறினான் அசோக் .

“உன்னயெல்லாம் திருத்தவே முடியாது டா… அவளுக்கு மட்டும் இது தெரிஞ்சுது, மவனே நீ காலி…” என்று ஆகாஷ் மிரட்ட, “டேய் மச்சான், உன் கைய காலா நெனச்சு கேக்குறேன், அவகிட்ட மட்டும் சொல்லிடாத டா…” என்று கெஞ்சிய அசோக், திடீரென்று சிரிக்க, “எதுக்கு டா இப்போ லூசு மாதிரி சிரிச்சுட்டு இருக்க…” என்று ஆகாஷ் வினவினான்.

“உனக்கு நியாபகம் இருக்கா மச்சான்… ஒரு தடவ அந்த குடுமி மண்டையன் கிட்ட திட்டு வாங்குனேன்னு நீ ஃபீல் பண்ணப்போ, நான் கூட ஒரு சொல்யூஷன் குடுத்தேன்ல… மும்பை போய் ஆப்பரேஷன் பண்ணுன்னு… ஆனா அப்படி எதுவும் பண்ணாமயே நீ மாறிருக்க… ஹாஹா…” என்று அசோக் சிரிக்கும்போதே பூமி கிளம்பி வந்துவிட, அந்த பேச்சு அத்துடன் நின்றது.

பூமியை வழியனுப்பும்போதும் ஆயிரம் பத்திரம் சொல்லியே அனுப்பி வைத்தான்.

*****

மாலை ஆறரை மணிக்கே அந்த உயர்ரக பப், வண்ண விளக்குகளால் ஒளிர்ந்து கொண்டிருந்தது. பூமி அதைக் கண்டதும், ட்ரீட்டிற்கான இடத்தைப் பற்றி விசாரிக்காத தன் மடத்தனத்தை நொந்து கொண்டாள்.

அடுத்து அவளின் கோபம் அசோக்கை நோக்கித் திரும்ப, அவனோ அங்கு வரும் பெண்களை சைட்டடித்து கொண்டிருந்தான்.

அவனருகே சென்று, “டேய் பூனமூஞ்சி…” என்று அடிக்குரலில் கூப்பிட, “யாரு நம்மள இவ்ளோ மரியாதையா கூப்பிடுறது…” என்று அவனும் திரும்பிப் பார்த்தான்.

அங்கு கோபமாக இருக்கும் பூமியைக் கண்டவன், ‘போச்சு எனக்கு ஏழரை ஸ்டார்ட் ஆகிடுச்சு…’ என்று உள்ளுக்குள் பயந்தாலும், வெளியே காட்டிக்கொள்ளாமல், “ஹிஹி பூமி எதுக்கு கூப்பிட்ட…” என்று இளித்தான்.

“என்ன இது… ட்ரீட்ன்னா ஹோட்டலுக்கு போக மாட்டீங்களா… பப்புக்கு கூட்டிட்டு வந்துருக்கீங்க…”

“ஹோட்டலுக்கா… நாங்க எப்பவும் ட்ரீட்னாலே பப்புக்கு தான் வருவோம்… ஆகாஷ் உன்கிட்ட சொல்லையா…”

‘அச்சோ… அதுக்கு தான் போக வேணாம்னு சொல்லிருப்பானோ…’ என்று பூமி யோசிக்கையிலேயே மற்றவர்கள் அவளை உள்ளே அழைத்துச் சென்றனர்.

பூமியால் அங்கு சுத்தமாக ஒட்டவே முடியவில்லை. ஏனோ அங்கு தான் மட்டும் தனித்திருப்பது போல தோன்றியது. அவளின் சங்கடமான முகத்தைக் கண்ட அசோக், “பூமி வா நான் வேணா உன்ன ட்ராப் பண்றேன்…” என்றான்.

ஆனால் பூமியோ, அவனின் மகிழ்ச்சியை ஏன் கெடுக்க வேண்டும் என்றெண்ணியவளாக மறுத்து விட்டாள்.

அவளின் கையில் மாம்பழ சாறைக் கொடுத்தவன், “இந்தா இத குடி… எப்பவும் ஆகாஷ் இங்க வந்தா ஜூஸ் தான் குடிப்பான்… அதனால யாருக்கும் சந்தேகம் வராது…” என்றான்.

“ஏன் அவன் குடிக்க மாட்டான்…” என்று பூமி வினவ, “அது அவனோட ப்ரின்சிபலாம்… வெளியிடத்துல குடிக்க மாட்டானாம்… ஆனா அதுலயும் ஒரு நல்லது மாதிரி, நாங்க குடிச்சுட்டு மட்டையாகிட்டா அவன் தான் எங்கள பத்திரமா கூட்டிட்டு போவான்…” என்று விளக்கினான் அசோக்.

“அப்போ இன்னிக்கும் குடிச்சுட்டு மட்டையாகப் போற…” என்று ஒரு மாதிரி குரலில் பூமி கேட்கவும், “ச்சே ச்சே… அப்படி மட்டும் பண்ணா, ஆகாஷ் என்ன அடிச்சு தொவைச்சுடுவான்… கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரமா கிளாஸ் எடுத்துருக்கான்… உன்ன பத்திரமா பாத்துக்கணும்னு…” என்று அசோக் கூறியதும், பூமியின் மனதில் ஆகாஷ் மேலும் உயர்ந்தான்.

சற்று நேரத்தில் அங்கு ஆட்டம் களைகட்ட, அசோக்கும் நடுவில் சென்று பாடலுக்கு ஏற்றவாறு ஆடிக் கொண்டிருந்தான்.

அப்போது பூமியின் அருகே வந்த சோனு, “ஹே ஆகாஷ், டோன்ட் யூ ட்ரிங்க்…” என்று மது கோப்பையை நீட்டினான்.

பூமியோ அவள் கையில் இருக்கும் மாம்பழ சாறைக் காட்டி, “ஐ’ம் ஒகே வித் இட்…” என்றாள்.

மற்ற நண்பர்களையும் அவர்களின் ஆட்டத்தையும் பூமி பார்த்துக் கொண்டிருந்தாள், தன்னை ஒருவன் ரசிப்பதைக் கவனிக்காதவளாக…

சிறிது நேரத்திற்கு பின்பே யாரோ அவளை உற்று நோக்குவது போலிருக்க, திரும்பிப் பார்த்தவள், சோனுவின் பார்வையைக் கண்டு திடுக்கிட்டாள்.

சோனுவோ, பூமி அவனைப் பார்த்ததும் மெல்ல அவளின் அருகே அமர்ந்தவன், “ஷால் வீ டேட்…” என்று கூற, பூமிக்கு குடித்துக் கொண்டிருந்த பானம் புரையேறியது.

“வாட்…” என்று அந்த இடமே அதிரும் வண்ணம் கத்தியிருந்தாள் காளையவள்!!!

தொடரும்...

உங்க கருத்துக்களை இங்க பகிர்ந்துக்கோங்க பிரெண்ட்ஸ்...👇👇👇
 
Status
Not open for further replies.
Top