All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
தன் தோழிக்கு அழைக்க முயற்சித்துக் கொண்டிருந்த அனுபல்லவி திடீரென ஏதோ சத்தம் கேட்கவும் பதறிச் சென்று பார்க்க, குளியல் அறை செல்லும் வழியில் பேச்சு மூச்சற்று விழுந்து கிடந்த பிரணவ்வைக் கண்டு அதிர்ந்தாள்.
மறு நொடியே தன்னிலை அடைந்து அவசரமாக பிரணவ்விடம் ஓடிய அனுபல்லவி அவன் தலையை தன் மடியில் ஏந்தி, "பி...பிரணவ்... பிரணவ்... என்னாச்சு உங்களுக்கு?" என அவனின் கன்னத்தைத் தட்டினாள் பதட்டமாக.
ஆனால் அவனிடம் இருந்து எந்த அசைவும் வராமல் போகவும் கண் கலங்கிய அனுபல்லவி, "பி...பிரணவ்... எனக்கு பயமா இருக்கு... கண்ணைத் திறந்து பாருங்க... ப்ளீஸ்..." எனக் கெஞ்சினாள்.
முகத்தில் தண்ணீர் தெளித்தும் பிரணவ் எழாமல் போகவும் பயந்தவள் உடனே ஆகாஷிற்கு அழைத்து தகவல் தெரிவித்தாள்.
பத்து நிமிடத்தில் அங்கு வந்த ஆகாஷ் அனுபல்லவியுடன் சேர்ந்து உடனே பிரணவ்வை அவன் விபத்துக்குள்ளான நேரம் சேர்த்த மருத்துவமனையில் சேர்த்தான்.
பிரணவ்விற்கு சிகிச்சை நடக்கும் அறைக்கு வெளியே அனுபல்லவி பதட்டமாக நின்றிருக்க, ஆகாஷும் அவளிடம் எந்தக் கேள்வியும் கேட்டு சங்கடப்படுத்தவில்லை.
சற்று நேரத்தில் அங்கு வந்த மருத்துவரிடம் ஓடிய அனுபல்லவி, "டாக்டர்... பிரணவ்வுக்கு என்னாச்சு? சொல்லுங்க டாக்டர்... அவர் நல்லா இருக்காரா?" எனப் பதட்டமாகக் கேட்கவும், "நீங்க யார் அவருக்கு?" எனக் கேட்டார் மருத்துவர்.
அனுபல்லவி, "நா...நான்..." என என்ன கூறுவது எனத் தெரியாமல் தடுமாற, "அவர் எங்க பாஸ் டாக்டர்... நல்லா தான் இருந்தார்... திடீர்னு மயக்கம் போட்டு விழுந்து இருக்கார்... அப்போ இவங்க தான் பாஸ் கூட இருந்தாங்க..." என்றான் ஆகாஷ்.
மருத்துவர், "யாரு சொன்னது அவர் நல்லா தான் இருந்தார்னு?" என மருத்துவர் கேட்கவும் இருவருமே அதிர்ந்தனர்.
"எ...என்ன சொல்றீங்க டாக்டர்? அவருக்கு என்னாச்சு?" எனக் கேட்டாள் அனுபல்லவி கண்ணீருடன்.
மருத்துவர், "அவருக்கு ஆக்சிடன்ட் ஆனப்போ நான் அவரை ஒரு வாரம் அப்சர்வேஷன்ல இருந்துட்டு டிஸ்சார்ஜ் ஆக சொன்னேன் இல்லையா? ஆனா அவர் தான் பிடிவாதம் பிடிச்சி அன்னைக்கே டிஸ்சார்ஜ் ஆகினார்... அந்த ஆக்சிடன்ட்ல அவரோட தலை பலமா அடிபட்டிருக்கு... ஆனா அன்னைக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்தப்போ அவரோட தலைல எந்த பிரச்சினையும் காட்டல... அதுக்கு அப்புறம் அவரோட மூளைல இரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கு... அதனால இப்போ அவரோட மூளைல ப்ளட் க்லாட் ஒன்னு இருக்கு... அது அவரோட உயிருக்கே ஆபத்தா முடியும்... அதுக்கான அறிகுறிகள் அவருக்கு வெளிப்பட்டு இருக்குமே... நீங்க எப்படி அதைக் கவனிக்காம விட்டீங்க?" என்றார்.
மருத்துவர் கூறிய செய்தியில் அனுபல்லவிக்கு உலகமே இருண்டு போய் தன் சுழற்சியை நிறுத்தியது போல் இருந்தது. அதிர்ச்சியில் பேச்சே எழவில்லை.
ஆகாஷுக்கும் இந்தத் தகவல் அதிர்ச்சியாக இருந்தது.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்டவன், "அவருக்கு அடிக்கடி தலைவலி வரும் டாக்டர்... அந்த நேரம் எல்லாம் வலில ரொம்ப துடிப்பார்... ஹாஸ்பிடல் கூப்பிட்டாலும் வர மாட்டார்... டேப்லெட் போட்டுட்டு அமைதியா இருப்பார்..." என்கவும் தான் அனுபல்லவிக்கும் அது பற்றிய நினைவு வந்தது.
தான் தன்னவனை சரியாகக் கவனிக்கவில்லையோ என மனம் வருந்தினாள் அனுபல்லவி.
மருத்துவர், "டேப்லெட் போட்டதனால தான் உங்க யாருக்குமே அதோட தீவிரம் புரியல... டேப்லெட் போட்டதும் வலி குறையும்... பட் மூளைல அந்த இரத்தக்கசிவு நிற்காது... அது தான் இப்போ அவர் இந்த நிலமைல இருக்க காரணம்..." என்கவும்,
"அ... அவரைக் குணப்படுத்தலாம் தானே டாக்டர்..." என அனுபல்லவி கண்ணீருடன் கேட்டாள்.
"உடனே அந்த ப்ளட் க்லாட்ட ஆப்பரேஷன் பண்ணி நீக்கணும்... அவர் இப்போ இருக்குறதே டேஞ்சர் ஸ்டேஜ் தான்... அந்த ப்ளட் க்லாட்ட ரிமூவ் பண்ணலன்னா அவரோட உயிருக்கு உத்தரவாதம் இல்ல..." என மருத்துவர் கூறவும்,
"அப்போ உடனே பிரணவ்வுக்கு ஆப்பரேஷன் பண்ணி அதை ரிமூவ் பண்ணுங்க டாக்டர்..." என்றாள் அனுபல்லவி அவசரமாக.
மருத்துவர், "அதுல தான் ஒரு ப்ராப்ளம் இருக்கு..." என்கவும் அனுபல்லவியும் ஆகாஷும் அவரைக் குழப்பமாக நோக்க,
"இந்த ஆப்பரேஷன் பண்ணா மேக்சிமம் அவர் அவரோட பழைய ஞாபகங்களை இழக்க வாய்ப்பு இருக்கு... டென் பர்சன்ட் தான் எதுவும் நடக்காம இருக்க சான்ஸ் இருக்கு..." என இடியை இறக்கினார் மருத்துவர்.
ஆகாஷும் அதிர்ந்து போய் நிற்க, "அதனால முதல்ல அவரோட ஃபேமிலிய வர சொல்லுங்க... அவங்க சம்மதம் இருந்தா தான் இந்த ஆப்பரேஷன் பண்ணலாம்... எதுவானாலும் சீக்கிரம் பண்ண பாருங்க... நாம லேட் பண்ற ஒவ்வொரு நிமிஷமும் அவரோட உயிருக்கு ஆபத்து..." என்று விட்டு சென்றார் மருத்துவர்.
அவர் சென்றதும் அனுபல்லவி அங்கிருந்து கதிரையில் இடிந்து போய் அமர, அவளைக் கலக்கமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு பிரணவ்வின் பெற்றோருக்கு தகவல் கூறச் சென்றான்.
'என் பிரணவ் என்னை மறந்துடுவானா?' என்ற எண்ணம் தோன்றவும் அனுபல்லவியின் இதயத்தை யாரோ கூரிய வாளால் அறுப்பது போல் வலித்தது.
அனுபல்லவி, "இல்ல... அவன் என் பிரணவ்... அவன் எப்படி என்னை மறப்பான்?" எனத் தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டவளுக்கு நேற்றைய இரவில் நடந்த கூடல் ஞாபகம் வேறு நெஞ்சைப் பிழிந்தது.
கண்ணீர் வேறு அவளின் அனுமதி இன்றி கன்னத்தைத் தாண்டி வடிய, திடீரென தன் தோளில் பதிந்த கரத்தில் திடுக்கிட்டு யார் என்று திரும்பிப் பார்த்தாள்.
சாருமதி தான் தன் தோழியை வருத்தமாகப் பார்த்தபடி நின்றிருந்தாள்.
அனுபல்லவி இருக்கும் மனநிலையைப் புரிந்து கொண்ட ஆகாஷ் தன்னவளுக்கு அழைத்து பிரணவ்வின் நிலையை மட்டும் கூறி அனுபல்லவியும் இங்கு தான் இருப்பதாக தெரிவித்தான்.
அனுபல்லவி எதற்காக மருத்துவமனையில் இருக்கிறாள் எனச் சாருமதி பதறவும் தானே அனைத்தையும் விளக்கமாகப் பிறகு கூறுவதாகக் கூறிய ஆகாஷ் அனுபல்லவியிடம் எந்தக் கேள்வியும் கேட்க வேண்டாம் எனக் கண்டிப்பாகக் கூறினான்.
சாருமதியும் நிலைமையை உணர்ந்து உடனே மருத்துவமனைக்கு கிளம்பி வந்தவள் உடைந்து போய் அமர்ந்திருந்த அனுபல்லவியைக் கண்டு அதிர்ந்தாள்.
காரணம் அறியாவிடிலும் தோழியின் மனவருத்தம் அவளையும் தொற்றிக் கொண்டது.
"சாரு..." என அனுபல்லவி தோழியை அணைத்துக்கொள்ள, "நைட் நீ வர லேட் ஆகும்னு சொன்னதும் நான் தூங்கிட்டேன்... காலைல எழுந்து பார்க்கும் போது கூட நீ வீட்டுக்கு வந்து இருக்கல... உனக்கு கால் பண்ணணும்னு நினைச்சப்போ தான் ஆகாஷ் கால் பண்ணி விஷயத்த சொன்னார்... கவலைப்படாதே... நம்ம சார்க்கு எதுவும் ஆகாது..." என்றாள் சாருமதி.
சற்று நேரத்திலேயே மூர்த்தியும் லக்ஷ்மியும் ஆகாஷுடன் மருத்துவமனைக்கு வந்தனர்.
"டாக்டர்... என் பையனுக்கு என்னாச்சு? இவங்க என்ன என்னவோ சொல்றாங்க... என் பையன் நல்லா இருக்கான்ல..." என லக்ஷ்மி பதட்டமாகக் கேட்க,
"அவரோட மூளைல இரத்தக்கசிவு ஏற்பட்டு ப்ளட் க்லாட் உருவாகி இருக்கு... அதை உடனே ஆப்பரேஷன் பண்ணி ரிமூவ் பண்ணலன்னா அவரோட உயிருக்கு ஆபத்தா முடியும்... பட் இந்த ஆப்பரேஷன் சக்சஸா முடிஞ்சாலும் அவருக்கு பழைய ஞாபகங்கள் இருக்குமான்னு சந்தேகம் தான்..." என மருத்துவர் கூறவும் தலையில் அடித்துக்கொண்டு கதறினார் லக்ஷ்மி.
மனைவியை சாமாதானப்படுத்துவதா இல்லை மகனின் நிலையை எண்ணி வருந்துவதா என மூர்த்தி ஒரு பக்கம் கலங்கினார்.
சாருமதியை அணைத்துக்கொண்டு அனுபல்லவியும் கண்ணீர் வடிக்க, "டாக்டர்... பழைய ஞாபகங்கள் இருக்காதுன்னா மொத்தமாவே எந்த ஞாபகங்களும் இருக்காதா? இல்ல குறிப்பிட்ட பீரியட்ல நடந்த சம்பவங்கள் ஞாபகத்துல இருக்காதா?" என மருத்துவரிடம் கேட்டான் ஆகாஷ்.
அனுபல்லவியும் மருத்துவரின் பதிலை எதிர்ப்பார்த்து அவரின் முகம் நோக்க, "அதை எங்களால எக்சேக்டா சொல்ல முடியாது... சில பேர் மொத்த ஞாபகத்தையும் இழந்துடுவாங்க... இன்னும் சில பேர் ரீசன்ட்டா ஆர் குறிப்பிட்ட பீரியடுக்குள்ள நடந்த சம்பவங்களை இழந்துடுவாங்க... சில சமயம் எல்லா விஷயமும் ஞாபகத்துல இருக்கவும் வாய்ப்பு இருக்கு... பட் அதுக்கு வாய்ப்பு கம்மி..." என்றார் மருத்துவர்.
அனுபல்லவி, 'என்னை மறந்துடுவீங்களா பிரணவ்?' என மனதில் தன்னவனிடம் கண்ணீருடன் கேட்டாள்.
சில நிமிட யோசனைக்குப் பின் மூர்த்தி, "ஆப்பரேஷனுக்கு ஏற்பாடு பண்ணுங்க டாக்டர்..." என்கவும் மருத்துவர் சரி எனத் தலையசைத்து விட்டு சென்றார்.
லக்ஷ்மி, "ஏங்க... ஆப்பரேஷனுக்கு அப்புறம் நம்ம பையன் நம்மள மறந்துடுவானாங்க?" என வருத்தமாகக் கேட்கவும் மனைவியை ஆறுதலாக அணைத்துக்கொண்ட மூர்த்தி, "பயப்படாதே லக்ஷ்மி... அவன் நம்ம பையன்... நம்மள எப்படி மறப்பான்? அப்படியே மறந்தாலும் நாம அவனுக்கு அம்மா அப்பா இல்லன்னு ஆகிடுவோமா?" எனக் கேட்டார்.
அடுத்த ஒரு மணி நேரத்திலேயே பிரணவ்விற்கு அறுவை சிகிச்சை ஆரம்பமானது.
சிகிச்சை ஆரம்பம் ஆனதிலிருந்து அனுபல்லவி கண்களை மூடி கடவுளிடம் தன்னவனுக்காக பிரார்த்திக்க ஆரம்பித்தாள்.
லக்ஷ்மியும் மூர்த்தியும் இருந்த மனநிலையில் தம் மகனுக்காக இங்கு ஒரு ஜீவன் வருந்திக் கொண்டிருப்பதைக் கவனிக்கவில்லை.
சாருமதிக்கு கூட அனுபல்லவி ஏன் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறாள் எனப் புரியவில்லை.
ஆகாஷ் அவளிடம் எதுவும் கேட்கக் கூடாது எனக் கூறி இருந்ததால் அமைதியாக இருந்தாள்.
பல மணி நேர போராட்டத்துக்குப் பின் அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவர் வெளியே வர, "டாக்டர்... என்னாச்சு? என் பையன் நல்லா இருக்கானா?" எனக் கேட்டார் லக்ஷ்மி பதட்டமாக.
அவரைப் பார்த்து புன்னகைத்த மருத்துவர், "ஆப்பரேஷன் சக்சஸ்... கவலைப்படாதீங்க..." என்க, "நாங்க போய் பிரணவ்வ பார்க்கலாமா?" எனக் கேட்டார் மூர்த்தி.
மருத்துவர், "தலைல சர்ஜரி பண்ணி இருக்குறதால இப்பவே போய் பார்க்க முடியாது... கொஞ்சம் நேரத்துக்கு அப்புறம் வார்டுக்கு மாத்துவோம்... அப்போ போய் பாருங்க... அவர் கண்ணு முழிக்க எப்படியும் இருபத்தி நான்கு மணி நேரம் எடுக்கும்... அதுக்கப்புறம் தான் எங்களால எதுவாக இருந்தாலும் சொல்ல முடியும்... கடவுள் கிட்ட வேண்டிக்கோங்க..." என்று விட்டு சென்றார்.
அனுபல்லவி அதன் பிறகு தான் நிம்மதியாக மூச்சு விட்டாள்.
இருந்தாலும் தன்னவனுக்கு தன்னை நினைவில் இருக்குமா என்று கவலையாக இருந்தது.
சில மணி நேரத்தில் பிரணவ்வை வார்டுக்கு மாற்றியதும் மூர்த்தியும் லக்ஷ்மியும் சென்று அவனைப் பார்த்து விட்டு வந்தனர்.
அனுபல்லவி இருந்த இடத்திலேயே அமர்ந்து இருந்தாள்.
ஆகாஷ், "சேர்... மேடம்... நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு போய் சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க... ரொம்ப நேரமா இங்கயே இருக்கீங்க... அதான் டாக்டர் சொன்னாரே பாஸ் கண்ணு முழிக்க எப்படியும் ஒரு நாள் ஆகும்னு... அதுவரை நீங்க இங்க இருந்து என்ன பண்ண போறீங்க? இங்க எல்லாம் நான் பார்த்துக்குறேன்..." என்றான்.
லக்ஷ்மி மறுக்க, "லக்ஷ்மி... அதான் ஆகாஷ் சொல்றான்ல... நீயே நோயாளி... டேப்லெட் வேற போடணும்... நாம கொஞ்சம் நேரம் கழிச்சி வரலாம்..." என மனைவியை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றார் மூர்த்தி.
அவர்கள் இருவரும் சென்றதும் அனுபல்லவி சாருமதியின் மடியில் தலை வைத்து படுத்திருக்க, அவர்களை நோக்கி சென்றான் ஆகாஷ்.
"மதி... அனு காலைல இருந்து எதுவுமே சாப்பிடல... நைட் ஆகிடுச்சு... நீ கேன்டீன் போய் அவங்களுக்கு சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வா... அப்படியே நீயும் சாப்பிடு... நீ முன்னாடி போ... சின்ன வேலை ஒன்னு இருக்கு... அதை முடிச்சிட்டு நானும் வரேன்..." என ஆகாஷ் கூறவும் எதுவும் கூறாது கேன்டீன் சென்றாள் சாருமதி.
கண்கள் வீங்கி அழுது சிவந்த முகத்துடன் அமர்ந்திருந்த அனுபல்லவியை வருத்தமாக நோக்கிய ஆகாஷ், "அனு... நீங்க உள்ள போய் பாஸைப் பாருங்க... மதி இப்பவே வர மாட்டா... நான் பார்த்துக்குறேன்... அதான் ஆப்பரேஷன் நல்லபடியா முடிஞ்சதே... வருத்தப்பட வேண்டாம்... பாஸ் நல்லா இருப்பார்..." என ஆறுதல் அளிக்கவும் அவனை நன்றியுடன் ஏறிட்டாள் அனுபல்லவி.
நிஜமாகவே அவளுக்காகத் தான் ஆகாஷ் அனைவரையுமே அங்கிருந்து அனுப்பி வைத்தான்.
எல்லாரும் இருந்தால் நிச்சயம் அனுபல்லவியால் பிரணவ்வைப் பார்க்க இயலாது என்பதை அறிவான் அவன்.
சுற்றியும் மருத்துவ உபகரணங்களுக்கு மத்தியில் பிரணவ் படுத்திருக்க, பிரணவ்வின் இதயத்துடிப்பு வீதத்தை அளக்கும் மானிட்டரில் இருந்து எழுந்த மெல்லிய ஓசை மட்டும் அவ் அறையில் எழுந்தது.
கதவைத் திறந்து கொண்டு அவ் அறையினுள் நுழைந்த அனுபல்லவி தன்னவன் இருந்த நிலையைக் கண்டு கண் கலங்கினாள்.
பிரணவ்வின் அருகில் அமர்ந்த அனுபல்லவி அவனின் கரத்தை எடுத்து தன் கரத்தினுள் வைத்துக்கொண்டு தன்னவனின் முகத்தை நோக்கியவாறு அவனின் நெஞ்சில் தலை சாய்த்தாள்.
அனுபல்லவி, "நான் உங்கள சரியா பார்த்துக்கல பிரணவ்... அதனால தான் நீங்க இந்த நிலமைல இருக்கீங்க..." என்றாள் கண்ணீருடன்.
"டாக்டர் சொன்னார் நீங்க கண்ணு முழிச்சா பழையது எல்லாம் மறந்துடுவீங்களாம்... அப்போ என்னைக் கூட மறந்துடுவீங்களா? உங்க பல்லவிய... இல்ல இல்ல... உங்க பவிய மறந்துடுவீங்களா?" எனக் கேட்டவளின் மனதில் எழுந்த வலியை அவளால் தாங்க முடியவில்லை.
அனுபல்லவி, "ஏன் பிரணவ் இப்படி பண்ணீங்க? உங்களுக்கு தலைவலி வரும் போதெல்லாம் நான் கேட்டேன் தானே என்னாச்சுன்னு? சொல்லி இருக்கலாம்ல... எதுக்கு உங்க வலிய உங்களுக்குள்ள மறைச்சீங்க? நீங்க என்னை மறந்துடுவீங்களா? நம்ம காதல மறந்துடுவீங்களா? வருஷக் கணக்கான ஞாபகங்களையே இழக்க வாய்ப்பு இருக்குறதா டாக்டர் சொல்றாங்க... நேத்து வந்தவ நான்... என்னை எப்படி?" என்றவளின் உதட்டில் விரக்திப் புன்னகை.
அனுபல்லவியின் கண்ணீர் பிரணவ் அணிந்திருந்த மருத்துவமனை ஆடையையே நனைத்து விட்டது.
"நைட்டு நடந்தது எல்லாம் கனவு போல இருக்குங்க... அந்த நினைவைக் கூட நம்மளால சுகமா அனுபவிக்க முடியல... அதுக்குள்ள நீங்க இப்படி..." என அழுதாள் அனுபல்லவி.
அனுபல்லவி, "உங்க கிட்ட நிறைய விஷயங்கள் சொல்ல இருக்கு பிரணவ்... என்னைப் பத்தி நீங்க தெரிஞ்சிக்க நிறைய விஷயங்கள் இருக்கு... அதெல்லாம் தெரிஞ்சா நீங்க என்னை ஏத்துப்பீங்களான்னு முன்னாடி பயமா இருந்தது... என் பிரணவ் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு... எங்க காதல் மேல நம்பிக்கை இருக்கு... ஆனா உங்களுக்கு என்னையே ஞாபகம் இல்லாம போனா என்ன பண்ணுவேன் பிரணவ்?" எனக் கேட்டாள்.
சில நிமிடங்கள் பிரணவ்வை அணைத்தவாறு கண்ணீர் வடித்த அனுபல்லவி தன் கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்தவள் தன்னவனின் காய்ந்து போய் மூடிக் கிடந்த இதழ்களில் அழுத்தமாக முத்தமிட்டாள்.
அவளின் கண்ணீர் பிரணவ்வின் கன்னத்தில் விழுந்து அவனின் செவி வழியே இறங்கியது.
தன் இதழ்களைத் தன்னவனிடமிருந்து பிரித்த அனுபல்லவி பிரணவ்வின் நெற்றியில் இதழ் பதித்து விட்டு மனமே இன்றி அவனின் கரத்தை விடுவித்து விட்டு அவ் அறையில் இருந்து அழுதுகொண்டே வெளியேறினாள்.
"ஆகாஷ்... இங்க என்ன தான் நடக்குது? அனு எப்படி பிரணவ் சார் கூட? நைட் அவ எங்க போனா? பிரணவ் சாருக்கு ஒன்னுன்னா இவ ஏன் இந்த அளவுக்கு துடிக்கிறா? தயவு செஞ்சி எதையும் மறைக்காம சொல்லுங்க... எனக்கு தலையே வெடிக்க போகுது..." எனத் தன் முன் அமர்ந்து காஃபியைக் குடித்துக் கொண்டிருந்த ஆகாஷிடம் கத்தினாள் சாருமதி.
சாருமதியின் கரத்தின் மீது தன் கரத்தைப் பதித்த ஆகாஷ், "மதி... எதுக்கு டென்ஷன் ஆகும்? கூல் குட்டச்சி பேபி..." என்றான் புன்னகையுடன்.
பல நாட்கள் கழித்து அவனின் அழைப்பு சாருமதியின் இதயத்தை மயிலிறகால் வருடினாலும் தன் தோழியைப் பற்றி அறிந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளுக்குள் எழுந்த சந்தோஷத்தை ஆகாஷிற்கு காட்டாது மறைத்தவள் அவனை அழுத்தமாக நோக்கினாள்.
பெருமூச்சு விட்ட ஆகாஷ், "அவங்களுக்குள்ள என்ன இருக்குன்னு அவங்களா சொன்னா மட்டும் தான் தெரியும் மதி... ஆனா ஒன்னு மட்டும் எனக்கு நல்லா தெரியும்... இவங்க ரெண்டு பேர்லயும் ஒருத்தரோட நிம்மதியும் சந்தோஷமும் மற்றவர் கிட்ட தான் இருக்கு..." என்றான் அமைதியாக.
அவனை அதிர்ச்சியாக பார்த்த சாருமதி, "ரெண்டு பேரும் லவ் பண்ணுறாங்களா?" எனக் கேட்டாள் அதிர்வாய்.
"தெரியல... அவங்க சொன்னா தான் உண்டு... நீ இப்போ அனு கிட்ட எதையும் கேட்காதே... ரொம்ப அப்சட்டா இருக்காங்க... நிச்சயம் உன் கிட்ட எதையும் மறைக்கமாட்டாங்க... சொல்லுவாங்க கண்டிப்பா... அவங்க மேல கோவப்படாதே..." என்றான் ஆகாஷ்.
பின் இருவரும் அனுபல்லவிக்கு உணவை வாங்கிக்கொண்டு கிளம்பினர்.
பிரணவ் இருந்த அறைக்கு வெளியே இருக்கையில் வாடிப் போய் அமர்ந்திருந்த அனுபல்லவி வேண்டாம் என்று மறுத்தும் அவளின் உடல் நிலையைக் கருதி வலுக்கட்டாயமாக ஒரு குவளை பாலை மட்டும் குடிக்க வைத்தாள் சாருமதி.
அன்று இரவும் ஆகாஷ் எவ்வளவு கூறியும் கேட்காது மருத்துவமனையிலேயே தங்கி விட்டாள் அனுபல்லவி.
வேறு வழியின்றி சாருமதியும் தன் தோழிக்கு துணையாக மருத்துவமனையில் தங்கினாள்.
அவர்கள் இருவருக்கும் துணையாக ஆகாஷ் இருந்தான்.
சரியாக மருத்துவர் கூறிய இருபத்தி நான்கு மணி நேரத்தில் மூடியிருந்த விழிகளைக் கஷ்டப்பட்டுப் பிரித்தான் பிரணவ்.
தலை 'விண்... விண்...' என்று வலிக்க, பார்வை கூட மங்கலாகத் தெரிந்தது.
அவன் கண் விழித்த செய்தியை அங்கு இருந்த நர்ஸ் மருத்துவரிடம் கூறவும் அவர் வந்து பிரணவ்வைப் பரிசோதித்து விட்டு அவன் அபாய கட்டத்தைத் தாண்டி விட்டான் என உறுதி அளித்தார்.
மூர்த்தி, லக்ஷ்மி, ஆகாஷ் மூவரும் பிரணவ்வின் அருகில் நின்றிருக்க, அவர்களை விட்டு சற்றுத் தள்ளி அனுபல்லவியும் சாருமதியும் நின்றிருந்தனர்.
பிரணவ் கண் விழித்த பின்னர் தான் அனுபல்லவிக்கு இவ்வளவு நேரமும் சென்றிருந்த உயிர் திரும்ப வந்தது.
மருத்துவர், "நீங்க யாருன்னு ஞாபகம் இருக்கா?" என சுற்றும் முற்றும் கேள்வியாகப் பார்த்த பிரணவ்விடம் கேட்கவும், "பி...பிரணவ்... பிரணவ் ராஜ்..." என்றான் மெல்லிய குரலில்.
பின் மூர்த்தியையும் லக்ஷ்மியையும் காட்டி, "இவங்க யாருன்னு தெரியுதா?" என மருத்துவர் கேட்கவும் தன் வலப் பக்கம் வருத்தம் தோய்ந்த முகத்துடன் காணப்பட்ட தன் பெற்றோரைப் பார்த்து, "எ...ன்னோட அ...அப்பா... அம்...அம்மா..." என்றான் பிரணவ்.
மறு நொடியே, "பிரணவ்... ஏங்க... என் பையனுக்கு நம்மள ஞாபகம் இருக்குங்க... அவன் அம்மாவ அவனுக்கு ஞாபகம் இருக்கு..." என மூர்த்தியின் தோளில் சாய்ந்து ஆனந்தக் கண்ணீர் வடித்தார் லக்ஷ்மி.
மூர்த்தியும் புன்னகைத்தவாறு கண்ணீருடன் ஆம் எனத் தலையசைத்தார்.
அவர்களுக்கு அருகில் நின்ற ஆகாஷின் மீது பார்வையைப் பதித்த பிரணவ், "எ...எனக்கு... என்...னாச்சு ஆ...காஷ்?" எனக் கேட்டான் மெல்லிய குரலில்.
தன்னை அவனுக்கு ஞாபகம் இருப்பதில் மகிழ்ந்த ஆகாஷ், "பாஸ்... பாஸ் நிஜமாவே உங்களுக்கு என்னை ஞாபகம் இருக்கா?" எனக் கண்ணீருடன் கேட்கவும் கஷ்டப்பட்டு ஆம் எனத் தலை அசைத்தான் பிரணவ்.
பிரணவ்வின் பார்வை மெதுவாக ஆகாஷைத் தாண்டி சற்றுத் தள்ளி நின்றிருந்த தோழிகள் மீது பதியவும் அனுபல்லவியின் இதயம் இரு மடங்கு வேகத்தில் துடித்தது.
ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்த கரத்தை மெதுவாகத் தூக்கி அனுபல்லவியின் பக்கம் பிரணவ் காட்டவும் அவர்களைத் திரும்பிப் பார்த்த மருத்துவர், "அவங்க யாருன்னு தெரியுமா மிஸ்டர் பிரணவ்?" எனக் கேட்கவும் அனுபல்லவி பிரணவ்வின் முகத்தை ஆவலுடன் நோக்க, "யா...யாரு?" என்ற பிரணவ்வின் கேள்வியில் மொத்தமாக உடைந்து விட்டாள் அனுபல்லவி.
தன் வலியை மறைக்க சாருமதியின் கரத்தை அழுத்த, அதிலேயே தோழியின் வலியை உணர்ந்தாள் சாருமதி.
ஆகாஷ் ஏதோ கூற வர, அதற்குள், "உன் கம்பனி ஸ்டாஃப்ஸ் பா..." என்றார் மூர்த்தி.
திடீரென பிரணவ் முகத்தை சுருக்கவும், "தலை இன்னும் ரொம்ப வலிக்கிதா பிரணவ்?" என மருத்துவர் கேட்கவும், "லை...ட்டா..." என்றான்.
மருத்துவர், "ஆப்பரேஷன் பண்ணதனால அப்படி இருக்கலாம்... கொஞ்சம் நாள்ல சரி ஆகிடும்... நவ் யூ ஆர் பர்ஃபக்ட்லி ஆல் ரைட் பிரணவ்... பேஷன்ட்டை டிஸ்டர்ப் பண்ணாதீங்க... கொஞ்சம் நேரம் இருந்துட்டு எல்லாரும் வெளியே போங்க... மிஸ்டர் மூர்த்தி... நீங்க கொஞ்சம் என் கூட வாங்க... பேசணும்..." என்று விட்டு வெளியேற, அவரைத் தொடர்ந்து மூர்த்தியும் லக்ஷ்மியும் வெளியேறினர்.
அனுபல்லவி சாருமதியுடன் சேர்ந்து அங்கேயே ஒரு ஓரமாக நிற்க, சில நொடி அமைதிக்குப் பின் ஆகாஷைப் பார்த்து, "தா...தாரா எ...எங்க? அ...வளு...க்கு ஆர்...யான் கூட என்...கேஜ்மென்ட்னு அ...அபி சொன்...னானே..." என்கவும் சிதாராவைப் பற்றித் தெரிந்த ஆகாஷும் அனுபல்லவியும் ஏகத்துக்கும் அதிர்ந்தனர்.
சிதாராவுக்கு நிச்சயம் என்று கேள்விப்பட்டது வரை தான் பிரணவ்விற்கு ஞாபகம் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட அனுபல்லவிக்கு இவ்வளவு நேரமும் வெளி வரத் துடித்த கண்ணீர் அவளையும் மீறி வெளிப்பட்டு விட்டது.
தன்னவனுக்கு தன்னை சுத்தமாக நினைவில் இல்லை என்பதைத் தாங்க முடியாத அனுபல்லவி அவ் அறையில் இருந்து வெளியே ஓட, "உங்க பையனுக்கு ரீச்ன்ட்டா நடந்த சம்பவங்கள் தான் மறந்து போய் இருக்கு... கொஞ்சம் கொஞ்சமா அந்த நினைவுகள் திரும்ப வரலாம்... ஏன் வராமலும் கூட போகலாம்... எதையும் உறுதியாக சொல்ல முடியாது... பட் நீங்களா அவருக்கு எதையும் ஞாபகப்படுத்த போக வேணாம்... அவர் ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணி பழைய ஞாபகத்த மீட்க நினைச்சா அவரோட உயிருக்கு ஆபத்தாகலாம்..." என மருத்துவர் கூறியது அனுபல்லவியின் செவியில் விழவும் மேலும் அதிர்ந்தாள்.
அனுபல்லவியைத் தொடர்ந்து வெளியே வந்த சாருமதியும் மருத்துவர் கூறியதைக் கேட்டு அதிர்ந்தாள்.
பிரணவ்வின் கேள்வியில் ஆகாஷ் அதிர்ச்சியாக அவனைப் பார்க்க, "சொ...ல்லுங்க ஆ...ஆகாஷ்..." எனப் பிரணவ் மீண்டும் கேட்கவும், "அ..அது பாஸ்... சி...சிதாரா மேடமுக்கு ஆர்யான் சார் கூட மேரேஜ் முடிஞ்சு சிக்ஸ் மந்த் ஆகுது..." எனத் தயக்கமாகக் கூறினான் ஆகாஷ்.
அதனைக் கேட்டு பிரணவ் எந்த அதிர்வையும் காட்டாது, "ஓஹ்... சரி..." என்று மட்டும் கூறி விட்டு அமைதி ஆகினான்.
"நீங்க ரெஸ்ட் எடுங்க பாஸ்... நான் அப்புறம் வரேன்..." என்று கூறி விட்டு வெளியேறிய ஆகாஷிற்கும் மருத்துவர் கூறியது காதில் விழுந்தது.
மருத்துவர் கூறிய செய்தியில் மனமுடைந்த அனுபல்லவி, "சாரு... நான் ரெஸ்ட் ரூம் போய்ட்டு வரேன்..." என்று விட்டு ரெஸ்ட் ரூம் வந்தவள் கதறி அழுதாள்.
"என்னை உங்களுக்கு தெரியலயா பிரணவ்? உங்க பவிய மறந்துட்டீங்களா?" எனக் கண்ணீர் வடித்தவளின் கைப்பேசி வெகுநேரமாக அலற, திரையில் காட்டிய பெயரைக் குழப்பமாகப் பார்த்துக்கொண்டு அழைப்பை ஏற்ற அனுபல்லவி மறு முனையில் கூறிய செய்தியில் அதிர்ந்து, "நா... நான் உடேன வரேன்..." என்று அழைப்பைத் துண்டித்து விட்டு சாருமதியிடம் கூட கூறாது உடனே மருத்துவமனையில் இருந்து கிளம்பினாள்.
"அன்னைக்கு தான் அனுவ கடைசியா பார்த்தது... அப்புறம் பார்க்கவே இல்ல... அவ எங்க போனா? என்ன ஆனா? எப்படி இருக்கா? ஏன்? உயிரோட இருக்காளான்னு கூட தெரியல..." என சாருமதி தன் கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டு மாலதியிடம் கூற,
மாலதி, "என்ன சாரு சொல்ற? நான் சடன்னா மேரேஜ் ஆகி ஜாப்ப ரிசைன் பண்ணிட்டு வெளியூர் போனதால எனக்கு எதுவும் தெரியல... உங்க ரெண்டு பேரையும் மீட் பண்ணலாம்னு வந்தா இப்போ நீ சொல்ற நியூஸ் எல்லாம் அதிர்ச்சியா இருக்கு... அதுக்கு அப்புறம் அனுவ எங்கயும் தேடலயா டி?" எனக் கேட்டாள் வருத்தமாக.
கசந்த புன்னகை ஒன்றை உதிர்த்த சாருமதி, "அது எப்படி மாலு தேடாம இருப்போம்? ஆகாஷ் அவருக்கு தெரிஞ்ச வழியில எல்லாம் தேடினார்... நானும் தேடினேன்... கடைசியில போலீஸ் கம்ப்ளைன் கொடுப்போம்னு நினைக்கும் போது எனக்கு அனு கால் பண்ணா... நான் நல்லா இருக்கேன்... எந்தப் பிரச்சினையும் இல்ல... என்னைத் தேட வேணாம்னு சொல்லிட்டு உடனே கட் பண்ணிட்டா..." என்றாள்.
அவர்கள் இருவரும் கம்பனி கஃபடேரியாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, பிரணவ்வுடன் ஏதோ பேசிவாறு அங்கு வந்தாள் அர்ச்சனா.
அர்ச்சனா சாருமதியைக் கண்டதும் வேண்டுமென்றே பிரணவ்வை நன்றாக உரசிக்கொண்டு பேச, அதனைக் கண்டு பல்லைக் கடித்தபடி வேறு பக்கம் திரும்பினாள் சாருமதி.
அர்ச்சனா பேசப் பேச அவளுக்கு ஒரு வார்த்தையில் பதில் சொல்லிக் கொண்டிருந்த பிரணவ் அவள் தன்னை நெருங்கவும் அவசரமாகத் தள்ளி நின்று அவளை ஒரு பார்வை பார்த்தான் அழுத்தமாக.
அதில் அர்ச்சனாவிற்கு உள்ளுக்குள் திக் என்றிருந்தாலும் அதனைக் காட்டிக் கொள்ளாது, "என்ன பிரணவ் நீங்க? உங்கள கட்டிக்க போற பொண்ணு நான்... இப்படி தள்ளி தள்ளி போறீங்க..." எனப் பொய்யாகச் சிணுங்க,
"கட்டிக்க போற பொண்ணுன்னு இல்ல... யாரா இருந்தாலும் என் அனுமதி இல்லாம என் ப்ரைவசிக்குள்ள என்ட்ரி ஆக முடியாது... மைன்ட் இட்... எனக்கு இம்பார்ட்டன்ட் மீட்டிங் ஒன்னு அட்டன்ட் பண்ண இருக்கு... நான் கிளம்புறேன்..." என எச்சரிக்கை குரலில் கூறி விட்டு அங்கிருந்து சென்றான் பிரணவ்.
பிரணவ் அவ்வாறு கூறவும் ஆத்திரத்தில் பல்லைக் கடித்த அர்ச்சனா சாருமதியையும் மாலதியையும் முறைத்து விட்டு அங்கிருந்து சென்றாள்.
மாலதி, "இந்த லூசு எப்படி டி சார் கூட?" எனக் குழப்பமாகக் கேட்கவும் பெருமூச்சு விட்ட சாருமதி, "எல்லாம் சாரோட மறதிய யூஸ் பண்ணி பிரயோஜனம் எடுத்துக்கிட்டா... பிரணவ் சார் வீட்டுல என்ன நாடகம் ஆடினான்னே தெரியல... மூர்த்தி சார் ஒரு நாள் வந்து பிரணவ் சாரை கட்டிக்க போற பொண்ணுன்னு இவளை இன்ட்ரூ பண்ணிட்டு போனார்..." என்றாள்.
"எனக்கு என்னவோ இதுல பிரணவ் சாருக்கு உடன்பாடு இல்லன்னு நினைக்கிறேன் சாரு... அவரோட முகத்த பார்த்தாலே தெரியுது..." என மாலதி கூறவும், "எப்படி இருந்தா என்ன? அவர் அர்ச்சனாவ தான் கல்யாணம் பண்ணிக்க போறார்... என் அனுவே இல்ல இப்போ... இவங்க எப்படி போனா எனக்கென்ன?" என்றாள் சாருமதி சலிப்பாக.
மாலதி, "ம்ம்ம் ஓக்கே டி... நீ எதையும் மைன்ட்ல போட்டு குழப்பிக்காதே... எவ்ரித்திங் வில் பீ ஓக்கே... ரொம்ப லேட் ஆகிடுச்சு... அவர் வேற கால் பண்றார்... இன்னொரு நாளைக்கு மீட் பண்ணலாம்... கண்டிப்பா வீட்டுக்கு வா... நான் கிளம்புறேன்..." என விடை பெற்றுச் செல்லவும் தோழியின் நினைவில் தலையைப் பிடித்தபடி அமர்ந்தாள் சாருமதி.
திடீரென தன் அருகில் ஏதோ சத்தம் கேட்கவும் சாருமதி தலையை உயர்த்திப் பார்க்க, கன்னத்தில் கை வைத்து அவளையே கண் எடுக்காது பார்த்துக் கொண்டிருந்தான் ஆகாஷ்.
சாருமதி புருவம் உயர்த்தி என்ன எனக் கேட்க, அவளின் கரத்தை எடுத்து தன் கரத்துக்குள் வைத்துக் கொண்ட ஆகாஷ், "அனு பத்தி திங்க் பண்ணுறியா?" என வருத்தமாகக் கேட்க, அவன் தோளில் தலை சாய்த்த சாருமதி, "ஃபைவ் இயர்ஸ் ஆகிடுச்சு அனு போய்... ஜாப் ஜாய்ன் பண்ண நாள்ல இருந்து ஒன்னாவே இருந்தோம்... அவ இல்லாம ரொம்ப லோன்லியா ஃபீல் பண்றேன் ஆகாஷ்..." எனக் கண்ணீர் வடித்தாள்.
ஆகாஷ், "மதி... அழாதே டா... அனு எங்க இருந்தாலும் நல்லா இருப்பா... கூடிய சீக்கிரம் அவளே நம்மள தேடி வருவா..." என சமாதானப்படுத்தியவன், "அப்புறம் மதி... அம்மா கால் பண்ணி இருந்தாங்க... எப்போ அவங்க மருமகள காட்டுவேன்? எப்போ கல்யாணம் பண்ணிக்க போறேன்னு கேட்டாங்க..." என்றான் புன்னகையுடன்.
அவனின் தோளில் சாய்ந்து கொண்டே தலையை உயர்த்திப் பார்த்த சாருமதி, "நீங்க என்ன சொன்னீங்க?" என்க,
"நீங்களே நல்ல பொண்ணா பாருங்கம்மா... பொண்ணு பாருங்க... சில பேரைப் போல ரௌடிய பார்க்க வேணாம்னு சொன்னேன்..." என்றான் ஆகாஷ் புன்னகையுடன்.
உடனே அவனை விட்டு விலகிய சாருமதி, "நான் உனக்கு ரௌடியா பனை மரம்? ரௌடி என்ன செய்யும் தெரியுமா?" எனக் கேட்டு விட்டு ஆகாஷின் கரத்தைக் கடிக்க, "ஆஹ்... விடு டி... விடு டி குட்டச்சி... வலிக்கிது... பேபி விடு... நான் சும்மா பொய் சொன்னேன்..." எனக் கத்தினான்.
சாருமதி, "அந்தப் பயம் இருக்கணும்..." எனக் கேலியாகக் கூறவும் ஆகாஷ் அவளைப் பொய்யாக முறைக்க, சாருமதி புன்னகைக்கவும் பதிலுக்கு புன்னகைத்த ஆகாஷ், "ஒரு வார்த்தை சொல்லிடக் கூடாதே... ரௌடி... இவ்வளவு அழகான எனக்கே எனக்கான குட்டச்சி பேபி இருக்கும் போது நான் எப்படி வேற பொண்ணைப் பார்ப்பேன்? லூசு... சீக்கிரமா அவங்க மருமகளை கூட்டிட்டு வரேன்னு சொன்னேன்... அனு வந்ததுக்கு அப்புறம் தான் நமக்கு கல்யாணம் மதி..." என்றான் தன்னவளை அணைத்து காதலுடன்.
சாருமதி, "உங்கள ரொம்ப வெய்ட் பண்ண வைக்கிறேனா ஆகாஷ்?" என வருத்தமாகக் கேட்க, "இதுல என்ன மதி இருக்கு? உன் லைஃப்ல அனு எவ்வளவு முக்கியம்னு எனக்கு தெரியாதா? உனக்கு முக்கியமானவங்க எனக்கும் முக்கியமானவங்க தானே... அதுவும் இல்லாம அனு எனக்கு தங்கச்சி மாதிரி... அவ இல்லாம நம்ம கல்யாணம் எப்படி நடக்கும்? நீ வேணா பாரு குட்டச்சி... நம்ம அனு தான் உனக்கு நாத்தனார் முடிச்சு போட்டு நம்ம கல்யாணத்த நடத்தி வைப்பா... அது வரைக்கும் நாம ஜாலியா லவ் பண்ணலாம்..." என்றான் ஆகாஷ் புன்னகையுடன்.
"ஐ லவ் யூ ஆகாஷ்... ஐம் சோ லக்கி டு ஹேவ் யூ இன் மை லைஃப்..." எனத் தன்னவனைக் காதலுடன் அணைத்துக் கொண்டாள் சாருமதி.
மனம் வேறு அமைதியின்றி தவித்தது. கூடவே அனைவரும் இருந்தும் யாரையோ காண பிரணவ்வின் மனம் ஏங்கித் தவித்தது.
இது இன்று நேற்று தோன்றும் உணர்வல்ல. கடந்த ஐந்து வருடங்களாவே அவனின் மனம் எதையோ எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறது.
அது என்னவென்று தெரிந்தால் கூட எங்கிருந்தாலும் தேடிக் கண்டு பிடித்து விடலாம். ஆனால் இங்கோ தான் எதை எதிர்ப்பார்க்கிறோம் என்றே தெரியாத நிலை.
அன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்ததில் இருந்து அவனின் பெற்றோர் பிரணவ்வின் மீது பாசத்தை அள்ளித் தெளித்தனர்.
அதிலும் லக்ஷ்மி பிஸ்னஸை ஒதுக்கி வைத்து விட்டு மகனின் நலனில் மட்டுமே கண்ணாக இருக்கிறார்.
திடீரென இவர்களுக்கு என்னவாயிற்று எனப் பிரணவ்வும் யோசிக்காத நாள் இல்லை.
ஆனால் அன்புக்காக ஏங்கிக் கொண்டிருந்தவனுக்கு தனக்கு வேண்டிய அன்பைத் தன் பெற்றோர் வழங்கும் போது எதற்கு அதனைப் பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று அத்தோடு விட்டு விட்டான்.
இருந்தும் மனதில் எழும் அந்த ஏக்கம் மட்டும் இன்று வரை தீரவே இல்லை.
பிரணவ்வின் மனம் ஒரு வித வெறுமையைத் தத்தெடுத்து இருந்தது.
அப்படி தோன்றும் நேரம் எல்லாம் நேரத்தைக் கூடப் பார்க்காது உடனே தன் பீச் ஹவுஸிற்கு கிளம்பிச் சென்று விடுவான்.
இன்றும் யாரிடமும் கூறாது உடனே பீச் ஹவுஸ் கிளம்பிச் சென்றவன் நிலவை வெறித்தபடி இந்த ஐந்து வருடங்களில் நடந்தவற்றைப் பற்றி எண்ணிப் பார்த்தான்.
பலவித எண்ணங்களில் சிக்கித் தவித்தவனின் கண்கள் தூக்கத்தில் சொக்க, பால்கனியிலேயே படுத்து விட்டான்.
மறுநாள் விடிந்ததுமே கண் விழித்த பிரணவ் தன்னைக் காணாது தாய் வருந்துவார் என உடனே வீட்டுக்கு கிளம்பிச் சென்றான்.
ஹாலில் அமர்ந்து பத்திரிகை படித்துக் கொண்டிருந்த மூர்த்தி, "எங்கப்பா போய்ட்ட காலைலயே?" எனக் கேட்கவும், "எங்கேயும் இல்லப்பா... சும்மா தான்..." என்றவாறு அவருக்கு அருகில் அமர்ந்தான்.
கணவனுக்கும் மகனுக்கும் காஃபி கலந்து எடுத்து வந்த லக்ஷ்மி இருவருக்கும் கொடுத்து விட்டு தானும் ஒன்றை எடுத்துக்கொண்டு அமர்ந்தார்.
அர்ச்சனாவின் பெயரைக் கேட்டதும் முகம் சுருக்கிய பிரணவ்வின் மனம் வேறு எதையோ எதிர்ப்பார்க்க, தாயின் கேள்விக்கு பதிலளிக்கவில்லை.
மூர்த்தி, "பிரணவ்... அம்மா உன் கிட்ட தான் கேட்குறாங்க..." என்கவும் தன்னிலை அடைந்த பிரணவ், "ஆஹ்... கொஞ்சம் நாள் போகட்டும் மா... இப்பவே என்ன அவசரம்?" எனக் கேட்டான்
லக்ஷ்மி, "அஞ்சி வருஷமா இதையே தான் பா நீ சொல்லிட்டு இருக்க... நாங்களும் உனக்கு ஒரு கல்யாணத்த பண்ணி வெச்சி பேத்தி பேரனுங்கள பார்க்க வேணாமா?" என வருத்தமாகக் கேட்கவும் பிரணவ் பதில் கூறாது அமைதியாக இருந்தான்.
"என்னங்க நீங்க பேசிட்டு இருக்கீங்க? நம்ம பையனும் அர்ச்சனா பொண்ணும் ரொம்ப நாளா காதலிக்கிறதா சொன்னாங்களே... இப்போ போய் இப்படி கேட்குறீங்க..." என லக்ஷ்மி கணவனைக் கடிந்து கொள்ள, தன்னையும் அர்ச்சனாவையும் சேர்த்து வைத்து தாய் பேசியதை ஏனோ பிரணவ்வின் மனம் விரும்பவில்லை.
ஆனால் தான் ஏதாவது கூறி தாயின் மனம் வருத்தப்படும் என்பதற்காக அமைதியாக இருந்தான்.
மூர்த்தி, "சரி அதை விடு லக்ஷ்மி... இன்னும் கொஞ்சம் நாள் டைம் கொடு பிரணவ்வுக்கு... அர்ச்சனா தான் நம்ம வீட்டுக்கு மருமகள்னு முடிவெடுத்துட்டோம்... கொஞ்சம் நாள் பொறுக்குறதுல எதுவும் ஆகப் போறதில்ல..." என மனைவியிடம் கூறியவர் பிரணவ்விடம் திரும்பி,
"அப்புறம் பிரணவ்... பல்லவன் இன்டஸ்ட்ரீஸ் பத்தி தெரியும்ல... இந்தியா மட்டும் இல்லாம வேர்ல்ட்லயே நம்பர் வன் இடத்துல இருக்குற கம்பனி... அவங்க புதுசா ப்ராஜெக்ட் ஒன்னு ரெடி பண்ணி இருக்காங்க... அவங்க ஃபேக்டரில வர்க் பண்ற வசதி வாய்ப்பு குறைந்த ஐநூறு பேருக்கு அவங்க செலவுல வீடு கட்டி கொடுக்க நினைக்கிறாங்க... இந்த ப்ராஜெக்ட் மட்டும் நம்ம கம்பனிக்கு கிடைச்சா நம்ம கம்பனி பெயர் இந்தியா மட்டும் இல்லாம வேர்ல்ட் லெவல்ல ஃபேமஸ் ஆகும்..." என்றார்.
பிரணவ், "ஓக்கே பா... நான் என்ன பண்ணணும்?" எனத் தந்தையிடம் கேட்க, "டூ டேய்ஸ்ல பல்லவன் இன்டஸ்ட்ரீஸ் எம்.டி இந்தியா வராங்க... அவங்கள மீட் பண்ண அப்பாய்ன்மென்ட் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்... சோ நீ நாளைக்கே கிளம்பி ஹைதரபாத் போகணும்... அங்க தான் பல்லவன் இன்டஸ்ட்ரீஸ் மெய்ன் ப்ராஞ்ச் இருக்கு... எப்படியாவது எத்தனை நாள் போனாலும் அவங்கள மீட் பண்ணி இந்த ப்ராஜெக்ட்ட நம்ம கம்பனிக்கு வாங்கி எடுக்குறது உன்னோட பொறுப்பு பிரணவ்..." என்றார் மூர்த்தி.
பிரணவ் சரி எனத் தலையசைக்க, "எதுக்குங்க அவ்வளவு தூரம் பிரணவ்வ தனியா அனுப்புறீங்க? ஆப்பரேஷன் எல்லாம் முடிஞ்சி இப்போ தான் கொஞ்சம் நல்லா இருக்கான்... அதுக்குள்ள நீங்க..." என லக்ஷ்மி குறைப்பட்டார்.
"மா... எதுக்கு ஃபீல் பண்ணுறீங்க? அதான் இப்போ நான் நல்லா இருக்கேனே... அதுவும் இல்லாம ஆகாஷும் என் கூட வரப் போறான்... எனக்கு ஒன்னும் இல்லம்மா..." என்றான் பிரணவ் லக்ஷ்மியை அணைத்துக்கொண்டு புன்னகையுடன்.
மூர்த்தி ஹைதரபாத் போகக் கூறியதில் இருந்து பிரணவ்வின் மனம் காரணமே இன்றி மகிழ்ச்சி அடைந்தது.
அவனின் இதயம் வேறு வேகமாகத் துடிக்கத் தொடங்கியது.
லக்ஷ்மி, "அப்போ ஒரு கன்டிஷன்... அதுக்கு சம்மதிச்சா தான் நான் பிரணவ்வ ஹைதரபாத் போக அலோ பண்ணுவேன்..." எனப் புதிர் போடவும் தந்தையும் மகனும் அவரைக் கேள்வியாக நோக்கினர்.
"என் மருமகளையும் பிரணவ் கூட கூட்டிட்டுப் போகணும்..." என லக்ஷ்மி கூறவும், "அவ எதுக்கு மா அங்க? நான் என்ன ஊரை சுத்திப் பார்க்கவா போறேன்? கம்பனி விஷயமா போறேன்..." என்றான் பிரணவ் சலிப்பாக.
மூர்த்தி எதுவும் கூறாது அமைதியாக இருக்க, "எனக்கு அதெல்லாம் தெரியாது... அர்ச்சனாவையும் உன் கூட ஹைதரபாத் கூட்டிட்டுப் போகணும்... இல்லன்னா நீயும் போக வேணாம்..." என்றார் லக்ஷ்மி முடிவாக.
பிரணவ், "மா... என்னம்மா?" என ஏதோ கூற வர, "பிரணவ்... அதான் அம்மா சொல்றாங்களே... அர்ச்சனாவும் உன் கூட வரட்டும்... அதுவும் இல்லாம அர்ச்சனா உன் ஆஃபீஸ்ல தானே வர்க் பண்றா... அவ வந்தா உனக்கும் ஹெல்ப்பா இருக்கும்... ஆகாஷும் உன் கூட இருப்பான்ல... சோ எந்தப் பிரச்சினையும் இல்ல... முக்கியமா உனக்கு அர்ச்சனாவைக் காதலிச்ச எந்த ஞாபகமும் இல்லன்னு சொல்ற... ஒருவேளை இந்தப் பயணத்தால அந்த ஞாபகங்கள் கூட திரும்ப வர வாய்ப்பு இருக்குல்ல... அதனால போய்ட்டு வாங்க..." என மூர்த்தி கூறவும் மனமே இன்றி சம்மதித்தான் பிரணவ்.
பிரணவ் கூறி விட்டதால் ஆகாஷ் வேறு வழியின்றி அவன் கூறியபடியே இரண்டு அறைகளை புக் செய்து சாவிகளை வாங்கி வந்தான்.
அதனைப் பிரணவ்விடம் நீட்டவும் வாங்கிக்கொண்ட பிரணவ் ஒன்றை அர்ச்சனாவிடம் கொடுத்தவன் ஆகாஷிடம் திரும்பி, "நீங்க என் கூட ஸ்டே பண்ணுங்க ஆகாஷ்... ப்ராஜெக்ட் விஷயமா கொஞ்சம் டிஸ்கஸ் பண்ண வேண்டி இருக்கு..." என்கவும் அர்ச்சனாவிற்கு புஸ் என்றானது.
ஆகாஷ், 'ப்ராஜெக்ட் பத்தி பேச ஒரே ரூம்ல தங்கணுமா என்ன?' என யோசித்தவன் அர்ச்சனாவின் முகம் போன போக்கைப் பார்த்து வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு, "ஓக்கே பாஸ்..." என்றான் புன்னகையுடன்.
அர்ச்சனா கோபத்தில் அங்கிருந்து விருட்டென சென்று விட, பிரணவ்வும் ஆகாஷும் தமக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றனர்.
ஆகாஷ், "பாஸ்... ப்ரேக் ஃபாஸ்ட் ரூமுக்கே ஆர்டர் பண்ணவா? ஆர் போய் சாப்பிடலாமா?" என்க, "இங்கயே கொண்டு வர சொல்லுங்க ஆகாஷ்..." எனப் பிரணவ் கூறவும் அதன் படி செய்தான் ஆகாஷ்.
பிரணவ், "பல்லவன் இன்டஸ்ட்ரீஸ் எம்.டி நாளைக்கு எத்தனை மணிக்கு இந்தியா வராங்க?" எனக் கேட்கவும், "நாளைக்கு மார்னிங் எய்ட் போல வந்துடுவாங்க பாஸ்... த்ரூவா அவங்க கம்பனிக்கு தான் வராங்க... அப்பாய்ன்மென்ட் கேட்டு இருக்கேன்... இன்னைக்கு பதில் சொல்லுவாங்க..." என்றான் ஆகாஷ்.
இருவரும் வேலை விஷயமாக பேசிக் கொண்டிருக்கும் போதே அவர்கள் ஆர்டர் செய்த உணவு வந்து விட, இருவரும் அமைதியாக சாப்பிட்டனர்.
சாப்பிட்டு முடித்து தண்ணீர் குடித்த பிரணவ், "நான் மறந்து போன பீரியட்ல என் லைஃப்ல ஏதாவது முக்கியமான விஷயம் நடந்ததா ஆகாஷ்? நீங்க ஏதாவது சொல்லாம விட்டுட்டீங்களா?" எனத் திடீரென கேட்கவும் ஆகாஷிற்கு அதிர்ச்சியில் புறை ஏறியது.
"மெதுவா மெதுவா ஆகாஷ்... ஏன் ஷாக் ஆகுறீங்க? இந்தாங்க இந்தத் தண்ணீரை குடிங்க..." என பிரணவ் நீர்க் குவளையை நீட்டவும் அதனை அவசரமாக வாங்கிய ஆகாஷ் ஒரே மூச்சில் குடித்து முடித்தான்.
அனுபல்லவி சம்பந்தமான விடயங்களையும் பிரணவ்வின் பெற்றோர் பற்றிய விடயத்தையும் தவிர்த்து மற்ற அனைத்து விபரங்களையும் பிரணவ்விற்கு கூறி இருந்தனர்.
பிரணவ்வின் உடல்நிலையைக் கருத்திற்கொண்டு அனுபல்லவி பற்றிய எந்த விடயங்களையும் ஆகாஷ் அவனுக்கு நினைவுபடுத்த முயலவில்லை.
இப்போது பிரணவ்வே கேட்டதால் பேசாமல் அனுபல்லவியைப் பற்றிக் கூறி விடலாம் என நினைத்து ஆகாஷ் வாய் திறக்க, பிரணவ் மாத்திரை போடுவதைக் கண்டு, 'இல்ல... நான் ஏதாவது சொல்லி பாஸ் அதைப் பத்தி தெரிஞ்சிக்க ஸ்ட்ரெய்ன் பண்ணா அவரோட உயிருக்கு ஆபத்தாகும்னு டாக்டர் சொல்லி இருக்காங்க... அவரா தெரிஞ்சிக்கும் போது எல்லாம் தெரிய வரட்டும்...' என முடிவெடுத்தான்.
பிரணவ், "என்ன ஆகாஷ் அமைதியா இருக்கீங்க? ஏதாவது சொல்ல இருக்கா?" எனக் கேட்கவும், "இ...இல்ல பாஸ்... எதுவும் முக்கியமான விஷயம் நடக்கல... எல்லாமே சொல்லிட்டேன்..." என்றான் ஆகாஷ் அவசரமாக.
"ம்ம்ம்..." என முகம் வாடிய பிரணவ் அத்துடன் அமைதியாகி விட, அவர்களின் அறைக் கதவு தட்டப்பட்டது.
ஆகாஷ் சென்று கதவைத் திறக்க, வாசலில் அர்ச்சனா நின்றிருந்தாள்.
ஆகாஷைத் தள்ளிக்கொண்டு அறைக்குள் நுழைந்த அர்ச்சனா, "பிரணவ்... நாளைக்கு தானே பல்லவன் இன்டஸ்ட்ரீஸ் எம்.டிய மீட் பண்ணணும்... சோ நாம ரெண்டு பேரும் இன்னைக்கு கொஞ்சம் ஊர சுத்தி பார்க்கலாமா? நாம ரெண்டு பேரும் தனியா வெளிய போய் ரொம்ப நாளாச்சு..." என முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு கூறவும் ஆகாஷ் அதனைக் கேட்டு ஆத்திரத்தில் பல்லைக் கடித்தான்.
பிரணவ் நிச்சயம் மறுத்து விடுவான் என ஆகாஷ் எதிர்ப்பார்க்க, அவனோ எதுவும் கூறாமல் சம்மதிக்கவும் ஆகாஷ் அதிர, அர்ச்சனாவோ வாயெல்லாம் பல்லாகக் காணப்பட்டாள்.
அர்ச்சனா தம்மைப் பற்றி கூறிய எதுவும் பிரணவ்விற்கு நினைவு இல்லாததால் ஏதாவது பழைய விடயங்கள் நினைவு வருமா என்று பார்க்கத் தான் அவளுடன் செல்ல பிரணவ் சம்மதித்தான்.
அவனின் பெற்றோர் கூட அதற்காகத் தானே அர்ச்சனாவை அவனுடன் அனுப்பி வைத்தனர்.
இருவரும் ஹோட்டலில் இருந்து வெளியேறியதும் அர்ச்சனா பிரணவ்வின் கரத்துடன் தன் கரத்தைக் கோர்த்துக் கொள்ள, பிரணவ்விற்கோ தீச்சுட்டார் போல் இருந்தது.
இருந்தும் தன் கரத்தை விலக்காமல் பல்லைக் கடித்துக்கொண்டு அமைதியாக இருந்தான்.
ஆனால் அவனின் மனமோ, 'காதலித்த பெண் தொட்டும் ஏன் தனக்கு அருவருப்பாக இருக்கிறது?' எனக் கேள்வி கேட்டது.
அர்ச்சனாவிற்கு அதுவே சாதகம் ஆகிப் போக, அவனை இன்னும் நெருங்கிக் கொண்டு சுற்றினாள்.
அர்ச்சனா அழைத்துச் செல்லும் இடம் எல்லாம் வேறு வழியின்றி சென்ற பிரணவ் ஓய்வில்லாமல் ஏதேதோ பேசிக்கொண்டிருந்த அர்ச்சனாவிற்கு வெறும் ம்ம்ம் கொட்டினான் பதிலாக.
அவை ஒன்றையும் அர்ச்சனா பெரிதாக எடுத்துக்கொள்ளவே இல்லை.
பிரணவ் அமைதியாக இருப்பதால் அவன் தன் பக்கம் சரிய ஆரம்பித்து விட்டான் என நினைத்து ஏதோ பெரிதாக சாதித்து விட்டது போல் மகிழ்ச்சியாக இருந்தாள்.
இருவரும் ஊர் சுற்றி முடிந்து மாலையில் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு மீண்டும் சென்றனர்.
மறுநாள் காலையிலேயே பல்லவன் இன்டஸ்ட்ரீஸ் எம்.டி. ஐ சந்திக்கச் செல்லத் தயார் ஆகினான் பிரணவ்.
ஏதோ ஒரு பாடலை ஹம்மிங் செய்தபடி மிகவும் உற்சாகமாகத் தயாராகிக் கொண்டிருந்தவனை விசித்திரமாகப் பார்த்த ஆகாஷ், "பாஸ்... ஆர் யூ ஓக்கே?" எனக் கேட்டான் புரியாமல்.
"எ...எனக்கு என்ன? ஐம் ஓக்கே ஆகாஷ்... ஏன்? என்னாச்சு?" எனப் பிரணவ் தடுமாறவும், "இல்ல பாஸ்... காலைல இருந்து ரொம்ப குஷியா இருக்கீங்க போல... பாட்டு விசில்னு ஹோப்பியா இருக்கீங்க... ரொம்ப வருஷம் கழிச்சு நீங்க இவ்வளவு ஹேப்பியா மனசு விட்டு சிரிச்சு பார்க்குறேன்..." என்றான் ஆகாஷ் புன்னகையுடன்.
ஆகாஷ், "ஒருவேளை இந்த ப்ராஜெக்ட் நம்ம கம்பனிக்கு தான் கிடைக்க போகுதோ... அதனால இப்படி ஃபீல் ஆகுதா இருக்குமோ?" எனக் கேட்கவும் தோளைக் குலுக்கிய பிரணவ், "தெரியல... சான்ஸ் இருக்கு... பாசிடிவ்வா திங்க் பண்ணலாம்..." என்றான் புன்னகையுடன்.
அவனின் சந்தோஷ மனநிலையைக் கெடுப்பது போலவே அனுமதி கூட வாங்காது உரிமையாய் அவ் அறைக்குள் நுழைந்தாள் அர்ச்சனா.
அவளைக் கண்டு கடுப்பான பிரணவ், "டோன்ட் யூ ஹேவ் எனி மெனர்ஸ் அர்ச்சனா? இப்படி தான் பர்மிஷன் கூட கேட்காம ஒருத்தரோட ரூமுக்குள்ள என்ட்ரி ஆகுவியா?" எனக் கேட்டான் கோபமாக.
அர்ச்சனா, "நான் உங்க ஃபியூச்சர் வைஃப் பிரணவ்... உங்க ரூமுக்கு வர நான் யாரோட பர்மிஷன் கேட்கணும்?" எனக் கேட்டாள் புரியாமல்.
"என் கிட்ட கேட்கணும்... இன்னும் நமக்கு கல்யாணம் ஆகலயே... அதனால தயவு செஞ்சி டிஸ்டான்ஸ் மெய்ன்டெய்ன் பண்ணு... மோர் ஓவர் இது என் ரூம் மட்டும் இல்ல... ஆகாஷும் என் கூட தான் ஸ்டே பண்ணி இருக்கார்... ரெண்டு பசங்க இருக்குற இடத்துல எப்படி நடந்துக்கணும்னு ஃபர்ஸ்ட் கத்துக்கோ... நவ் கெட் அவுட் ஃப்ரம் ஹியர் என்ட் வெய்ட் ஃபார் அஸ் இன் அவுட் சைட்..." எனப் பிரணவ் வார்த்தைகளைக் கடித்துத் துப்ப, கோபமாக அங்கிருந்து வெளியேறினாள் அர்ச்சனா.
நேற்று பிரணவ் அவளை எதுவும் கூறாது அமைதியாக இருந்ததால் அவன் தன் பக்கம் விழுந்து விட்டதாக எண்ணி இன்னும் அவனை தன் வசப்படுத்தவே அனுமதி கூட வாங்காது உரிமையாய் வந்தாள் அர்ச்சனா.
ஆனால் பிரணவ்வோ அவளை மூக்குடைத்து அனுப்பி விட்டான்.
அதனைக் கண்டு ஆகாஷ் உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டான்.
பிரணவ், "ஷிட்... மூடயே ஸ்பாய்ல் பண்ணிட்டா... இரிட்டேட்டிங் இடியட்... இவளை எல்லாம் எப்படி தான் நான் லவ் பண்ணேனோ?" எனக் கடுகடுக்க, "பாஸ்... பல்லவன் இன்டஸ்ட்ரீஸ் எம்.டி இந்தியா ரீச் ஆகிட்டாங்க..." என அவனைத் திசை திருப்பினான் ஆகாஷ்.
************************************
பல அடுக்கு மாடிகளைக் கொண்ட வெளிநாட்டு கம்பனிகளைப் போன்று கண்ணைக் கவரும் விதத்தில் இருந்த பல்லவன் இன்டஸ்ட்ரீஸ் கம்பனி பரபரப்பாகக் காணப்பட்டது.
ஒரு சிறிய குறை இருந்தால் கூட தம் எம்டியிடம் இருந்து ஏகத்துக்கும் திட்டு விழும் என்பதை அனைத்து ஊழியர்களும் புரிந்து வைத்திருந்தனர்.
கம்பனியில் அவர் கால் எடுத்து வைத்ததில் இருந்தே தன் பீ.ஏவிடம் சின்னச் சின்ன குறைகளை எல்லாம் சுட்டிக்காட்டி திட்டிக் கொண்டிருந்தார்.
பிரணவ் ஆகாஷ் மற்றும் அர்ச்சனாவுடன் எம்.டி. ஐ சந்திக்க பல மணி நேரமாகக் காத்திருந்தான்.
அர்ச்சனா, "இன்னும் எவ்வளவு நேரம் தான் வெய்ட் பண்ணுறது? நாங்க இங்க வந்து ஆல்மோஸ்ட் த்ரீ ஹவர்ஸ் ஆகிடுச்சு..." என்றாள் கடுப்பாக.
ஆகாஷ், "அவங்கள சந்திக்க நமக்கு நேத்து அப்பாய்ன்மென்ட் கிடைக்கல... பட் மூர்த்தி சார் எப்படியாவது அவங்கள மீட் பண்ணி இந்த ப்ராஜெக்ட்ட நம்ம கம்பனிக்கு வாங்கிட்டு வர சொன்னாங்க..." என்றான் விளக்கமாக.
"அதுக்காக இவ்வளவு இறங்கி போகணுமா நாம? அதான் மீட் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாங்களே... இன்னும் எதுக்காக நாம இங்க வெய்ட் பண்ணணும்?" என அர்ச்சனா கோபமாகக் கேட்க, ஆகாஷ் எதுவும் கூறாது அமைதியாக இருந்தான்.
ஒரு வழியாக ஐந்து மணி நேர காத்திருக்குப் பின் எம்.டியின் பீ.ஏ வந்து மூவரையும் உள்ளே அழைத்துச் சென்றார்.
பிரணவ் முதல் ஆளாக உள் நுழைந்தவன் எம்.டியின் இருக்கையில் யாரையும் காணாது முகம் வாட, அவனைத் தொடர்ந்து வந்த ஆகாஷும் அர்ச்சனாவும் அந்தக் கேபினைப் பார்வையால் அலசினர்.
"மேடம் இப்போ வந்துடுவாங்க... நீங்க கொஞ்சம் நேரம் வெய்ட் பண்ணுங்க சார்..." என்று விட்டு அந்த பீ.ஏ சென்று விட, 'மேடமா?' என ஆகாஷும், 'இவ்வளவு நேரமா வெய்ட் பண்ணது பத்தலயா? இன்னும் வெய்ட் பண்ணணுமா?' என அர்ச்சனாவும் ஒரே சமயம் எண்ணினர்.
அங்கிருந்த இருக்கையில் அமர்ந்த பிரணவ்வின் இதயம் ஏனோ வழமையை விட பல மடங்கு வேகமாகத் துடித்தது.
பெருமூச்சு விட்டபடி தன் நெஞ்சை நீவி விட்டவனைக் கலக்கமாகப் பார்த்த ஆகாஷ், "பாஸ் என்னாச்சு?" எனக் கேட்டான் பதட்டமாக.
"நத்திங் ஆகாஷ்... ஜஸ்ட்..." என்ற பிரணவ் ஏதோ சத்தம கேட்டுத் திரும்பிப் பார்க்க, அவனைத் தொடர்ந்து சத்தம் வந்த திசையைத் திரும்பிப் பார்த்த ஆகாஷ் மற்றும் அர்ச்சனா அதிர்ச்சியில் எழுந்து நின்று விட்டனர்.
அந்த அறையின் ஒரு பக்கம் இருந்த கதவு ஒன்றைத் திறந்து கொண்டு ஐந்து வருடங்களுக்கு முன் பார்த்தவளா இவள் என யோசிக்கும் வண்ணம் நடை, உடை, பாவனை அனைத்திலும் தனக்கே உரிய கம்பீரத்துடன் சாதாரண ஒப்பனையில் அதிக வேலைப்பாடற்ற சில்க் சேலை ஒன்றை அணிந்து கழுத்தில் பொன் தாலி மின்ன, முகத்தில் மருந்துக்கும் புன்னகை இன்றி அவர்களை நோக்கி நடந்து வந்தாள் அனுபல்லவி.
அனுபல்லவியை அங்கு எதிர்ப்பார்க்காது ஆகாஷும் அர்ச்சனாவும் அதிர்ந்து நின்றிருக்க, பிரணவ்வோ காரணமே இன்றி அவளின் கழுத்தில் தொங்கிய தாலியையே வெறித்தான்.
"ஏன் நின்னுட்டு இருக்கீங்க? ப்ளீஸ் சிட் டவுன்..." என அனுபல்லவி முன் பின் அறிமுகம் இல்லாதவர்களுடன் பேசுவது போல் அந்நிய குரலில் கூறி இருக்கையைக் காட்டவும் அவளின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு மூவரும் அமர்ந்தனர்.
அர்ச்சனா, 'சனியன் தொலஞ்சிட்டான்னு கொஞ்சம் காலம் நிம்மதியா இருந்தா திரும்ப வந்துட்டா... ச்சே...' என மனதில் கோபமாக எண்ணியவள் பிரணவ்வைத் திரும்பிப் பார்க்க, ஆகாஷும் பிரணவ்விடம் ஏதாவது மாற்றம் இருக்கிறதா எனத் திரும்பிப் பார்த்தான்.
பிரணவ்வின் பார்வை சென்ற திக்கை இருவரும் குழப்பமாகப் பார்க்க, அப்போது தான் அனுபல்லவியின் கழுத்தில் தொங்கிய பொன் தாலி அவர்களின் பார்வையில் பட்டது.
"அனு உனக்கு..." என ஆகாஷ் அதிர்ச்சியுடன் ஏதோ கூற வர, அவன் முன் கை நீட்டித் தடுத்த அனுபல்லவி, "ஆஃபீஸ் டைம்ல பர்சனல் மேட்டர் பேசுறது எனக்கு பிடிக்காது..." என்றாள் இறுகிய குரலில்.
சில நொடி அமைதிக்குப் பின் தொண்டையைச் செறுமிய அனுபல்லவி பேச்சைத் தொடங்கினாள்.
அதில் தன்னிலை அடைந்த பிரணவ் அவளின் முகம் நோக்க, அவனின் மனமோ, 'யார் இவங்க? ஏன் இவங்கள பார்த்தா எனக்குள்ள ஏதோ பண்ணுது... பட் அது என்னன்னு தான் புரியல...' எனக் கேள்வி எழுப்பியது.
வேறு சிந்தனையில் மூழ்கி இருந்த பிரணவ் ஆகாஷ் அனுபல்லவியை உரிமையாக அழைத்ததைக் கவனிக்கவில்லை.
அன்று ஆப்பரேஷனின் பின் சில நொடிகள் தூரத்தில் அனுபல்லவியைக் கண்டதால் பிரணவ்விற்கு அவளை நினைவில் இல்லை.
காலையில் இருந்த உற்சாகம் வடிந்து போய் அதன் காரணம் கூட புரியாது அமர்ந்து இருந்தான் பிரணவ்.
"சொல்லுங்க... என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்து இருக்கீங்க?" என அழுத்தமான குரலில் கேட்டாள் அனுபல்லவி.
அதில் தன்னிலை அடைந்த பிரணவ் ஆகாஷிற்கு கண் ஜாடை காட்ட, அதனைப் புரிந்து கொண்ட ஆகாஷ், "உங்க கம்பனி புதுசா ஒரு ப்ராஜெக்ட் பண்ண போறதா கேள்விப்பட்டோம்... எங்க எம்.எல். கான்ஸ்ட்ரக்ஷன்ஸ் கூட இந்தியால ஃபேமஸ் என்ட் டாப் ஃபைவ்ல இருக்கு... உங்களுக்கே தெரியும்னு நினைக்கிறேன்... இது எங்க எம்.டி பிரணவ் ராஜ்... இந்த ப்ராஜெக்ட் எங்க கம்பனிக்கு கிடைச்சா அதை பெஸ்ட்டா பண்ணி கொடுக்க முடியும்னு நினைக்கிறோம்... இந்தப் பாட்னர்ஷிப்னால எங்க கம்பனியும் அடுத்த கட்டத்துக்கு போக முடியும்..." என விளக்கினான்.
ஆகாஷ் பேசிக் கொண்டிருக்க, பிரணவ்வின் பார்வையோ அனுபல்லவியின் முகத்திலேயே நிலைத்து இருந்தது.
ஆனால் அனுபல்லவியோ அது தன்னைக் கொஞ்சம் கூட பாதிக்கவில்லை என்பது போல் அழுத்தமாக அமர்ந்திருந்தாள்.
ஆகாஷ் விளக்கியதும் தன் இருக்கையில் கை கட்டி சாய்ந்து அமர்ந்து கொண்ட அனுபல்லவி, "ஹ்ம்ம்... பட் இந்த ப்ராஜெக்ட்டை யாருக்கு கொடுக்குறோமுங்குறதை வழமையை போலவே மீட்டிங் வெச்சி தானே முடிவு பண்ணுவோம்... அது கூட உங்களுக்கு தெரிஞ்சிருக்குமே... நெக்ஸ்ட் வீக் தானே அந்த மீட்டிங் இருக்கு... அப்படி இருக்கும் போது நீங்க இன்னைக்கே வந்து என்னை மீட் பண்ணி இந்த ப்ராஜெக்ட்ட உங்க கம்பனிக்கு கொடுக்க சொன்னா அது எந்த விதத்துல நியாயம்? நான் இதுக்கு சம்மதிப்பேன்னு நீங்க எப்படி எதிர்ப்பார்க்கலாம்?" என மிடுக்காகக் கேட்டாள்.
அனுபல்லவியின் குரலில் இருந்த அழுத்தமும் அவள் தனக்கே உரிய கம்பீரத்தில் பேசுவதும் ஆகாஷையே அடுத்த வார்த்தை பேசத் தயங்கச் செய்தது.
அர்ச்சனாவோ அனுபல்லவியின் கழுத்தில் இருந்த தாலியைக் கண்டு விட்டு இனிமேல் அவளால் தனக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது என உற்சாகமாக காணப்பட்டாள்.
பிரணவ், "அது தானே சிறந்த பிஸ்னஸ் மேனுக்கு அழகு..." என இவ்வளவு நேரமும் இருந்த அமைதியைக் கலைத்து அதே மிடுக்குடன் கூற, ஒற்றைப் புருவம் உயர்த்தி அவனைக் கேள்வியாய் நோக்கினாள் அனுபல்லவி.
இப்போது அனுபல்லவியைப் போலவே மார்பின் குறுக்கே கைகளைக் கட்டி சாய்ந்து அமர்ந்துகொண்ட பிரணவ், "நல்ல பிஸ்னஸ் மேனா இருக்க வெறும் அறிவு மட்டும் போதாதுன்னு நினைக்குறேன் மிஸ் பல்லவி... சாமர்த்தியமும் அவசியம்..." என்றான் இள நகையுடன்.
இருவரின் விழிகளுமே ஒரு நொடி நேருக்கு நேராய் சந்தித்தன.
அனுபல்லவியோ கண்களில் வெறுமையுடன் பிரணவ்வை நோக்க, பிரணவ்வோ அனுபல்லவியின் விழிகளில் எதையோ தேடி அது கிடைக்காது ஏமாந்து போனான்.
திடீரென கதவு திறக்கும் சத்தத்தில் இருவரும் தன்னிலை அடைந்து பார்வையை விலக்கினர்.
"அனு இன்னும் கிளம்பாம என்ன பண்ணிட்டு இருக்க? அங்க..." என ஏதோ கூறிக் கொண்டு வந்த பிரதாப் அங்கு நின்ற மூவரையும் கண்டு அதிர்ச்சி அடைந்தான்.
பிரணவ் அனுபல்லவியை இவ்வளவு உரிமையாக அழைக்கும் அந்த ஆடவனை யார் எனும் விதமாக நோக்க, ஆகாஷும் அர்ச்சனாவும் பிரதாப்பை அங்கு கண்டு அதிர்ந்தனர்.
அர்ச்சனா, 'அப்போ இவன் தான் அனு புருஷனா? அதான் இவனோட கான்டாக்டே கிடைக்கல போல...' என எண்ணினாள்.
ஆகாஷ் பிரதாப்பைக் கண்டு ஆத்திரத்தில் நின்றிருந்தான்.
பிரணவ் மூலம் பிரதாப் செய்த அனைத்து காரியங்களும் ஆகாஷும் அறிந்ததே.
பிரணவ், ஆகாஷ், அர்ச்சனா என மூவரும் வெவ்வேறு சிந்தனையில் பிரதாப்பின் மீது பார்வையைப் பதித்திருக்க, பிரதாப்போ அனுபல்லவியைக் கேள்வியாக நோக்கினான்.
தொண்டையைக் கனைத்து அவர்களின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பிய அனுபல்லவி, "நீங்க சொன்ன விஷயத்தைப் பத்தி நான் கொஞ்சம் யோசிக்கணும்... இந்த ப்ராஜெக்ட் யாருக்கு கொடுக்கணும்ங்குறத டிசைட் பண்ணிட்டு எதுவா இருந்தாலும் உங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணுறோம்... இப்போ நீங்க கிளம்பலாம்..." என்றவள் அத்துடன் பேச்சு முடிந்ததாக அவ்விடம் விட்டுக் கிளம்பினாள்.
செல்லும் வழியில் குழப்பத்தில் நின்றிருந்த பிரதாப்பிடம், "நான் கார்ல வெய்ட் பண்ணுறேன்... சீக்கிரம் வந்து சேருங்க மாமா..." என்று விட்டு அனுபல்லவி வெளியேறி விட, அவள் பிரதாப்பை மாமா என் அழைத்தது காரணமே இல்லாமல் பிரணவ்வின் உள்ளத்தை வதைத்தது.
பிரணவ்வின் முன் பிரதாப்பை எதுவும் செய்ய முடியாத கோபத்தில் ஆகாஷ் பல்லைக் கடித்துக்கொண்டு நின்றிருக்க, அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல், "வாங்க ஆகாஷ் கிளம்பலாம்..." என்று ஆகாஷுடன் அங்கிருந்து வெளியேறினான் பிரணவ்.
அனைவரும் சென்றதும் தனியே நின்ற பிரதாப்பை நெருங்கிய அர்ச்சனா, "நீ தான் அனுவ கல்யாணம் பண்ணிக்கிட்டியா?" என உற்சாகமாக் கேட்க, பிரதாப் ஆம் எனத் தலையசைக்கவும், "அன்னைக்கு அனுவ என் வழியில இருந்து தூக்குறேன்னு சொல்லிட்டு வெச்சிட்ட... அப்புறம் கொஞ்சம் நாள்ல அனுவயும் காணோம்... உன்னயும் காணோம்... பார்த்தா நீயே அனுவ கல்யாணம் பண்ணிக்கிட்ட போல... எப்படியோ எனக்கு இருந்த பெரிய தலைவலி ஒழிஞ்சது... இனிமே பிரணவ்வ யாராலயும் என் கிட்ட இருந்து பிரிக்க முடியாது..." என்றாள் அர்ச்சனா கண்கள் மின்ன.
பிரதாப், "இன்னும் நீ அப்போ பிரணவ்வ கல்யாணம் பண்ணிக்கலயா?" எனக் குழப்பமாகக் கேட்டான்.
"அந்தக் கொடுமைய ஏன் கேட்குற? அனுவும் போய்ட்டா... பிரணவ்வுக்கும் பழசு எல்லாம் மறந்திடுச்சு... சரின்னு ஒரு நாடகத்த போட்டு அவன் அப்பா அம்மாவ கரெக்ட் பண்ணேன்... சீக்கிரமா அவன கல்யாணம் பண்ணி மொத்த சொத்தையும் அனுபவிக்கலாம்னு பார்த்தா இந்தப் பிரணவ் இழுத்துட்டே இருக்கான்... இந்தத் தடவ ஊருக்குப் போனதும் முதல் வேலையா கல்யாணத்த நடத்தணும்... ஆமா... இந்த அனு எப்படி இவ்வளவு பெரிய கம்பனிக்கு எம்.டி ஆனா?" எனக் கேட்டாள் அர்ச்சனா.
பிரதாப் ஏதோ கூற வர, அதற்குள் அனுபல்லவி அவனுக்கு அழைத்திருந்தான்.
அதனை எடுத்துப் பார்த்தவன், "நான் உன் கிட்ட அப்புறம் பேசுறேன் அர்ச்சனா... இப்போ நான் அவசரமா போய் ஆகணும்..." என்ற பிரதாப் அர்ச்சனாவின் பதிலைக் கூட எதிர்ப்பாராது அங்கிருந்து சென்று விட்டான்.
பிரதாப் சென்றதும் தோளைக் குலுக்கிய அர்ச்சனா, "எப்படியோ இந்த அனு சேப்டர் க்ளோஸ்ட்... இந்த ப்ராஜெக்ட் எப்படியாவது பிரணவ்வுக்கு கிடைக்க விடாம பண்ணணும்... இல்லன்னா திரும்ப அந்த அனு எங்க லைஃப்ல இடைஞ்சலா வர சான்ஸ் இருக்கு... அதுக்கு பிரதாப் கிட்ட சொல்லி ஏதாவது பண்ணணும்..." எனத் தனக்கே கூறிக் கொண்டாள்.
கார் பின் இருக்கையில் சாய்ந்து கண்களை மூடி அமர்ந்திருந்த அனுபல்லவி கார்க் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்கவும் மெதுவாக விழி திறந்தாள்.
ட்ரைவர் சீட்டில் ஏறி அமர்ந்த பிரதாப் அனுபல்லவியின் பக்கம் புன்னகையுடன் திரும்பி, "அனு நீ என்னை..." என ஏதோ கூற வர, அனுபல்லவி அவனை விழிகளாலேயே எரித்தாள்.
அதில் பிரதாப்பின் வாய் தன்னால் மூடிக்கொள்ள, எதுவும் பேசாது காரை இயக்கினான்.
பல வருடங்களாக தனக்குள் அடக்கி வைத்திருந்த மொத்த வலியும் பிரணவ்வை மீண்டும் கண்டதும் வெளியில் வரத் துடித்தன.
இங்கு அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்த மூவரும் தம் அறையில் தஞ்சம் அடைந்தனர்.
பிரணவ் வந்ததுமே குளிக்கச் செல்வதாகக் கூறி குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.
ஷவரைத் திறந்து விட்டு அதன் கீழ் நின்றிருந்த பிரணவ்விற்கு ஏன் என்றே தெரியாமல் மனம் வாடியது.
பிரணவ், 'யார் அவ? இதுக்கு முன்னாடி நான் அவள பார்த்ததா கூட நினைவு இல்லயே... ஆனா ஏன் அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு தெரிஞ்சதும் எனக்கு வலிக்கிறது?' என மனதில் தன்னையே கேட்டுக் கொண்டான்.
எவ்வளவு யோசித்தும் அனுபல்லவியைப் பற்றிய எந்த நினைவுமே அவனுக்கு எழவில்லை.
மாறாக தலைவலி வந்தது தான் மிச்சம்.
'ப்ச்... நான் தான் சும்மா கண்டதையும் யோசிக்கிறேன் போல... அவளுக்கும் எனக்கும் தான் எந்த சம்பந்தமும் இல்லயே... எனக்கு அவள முன்னாடியே தெரிஞ்சிருந்தா ஆகாஷ் கண்டிப்பா சொல்லி இருப்பான்... ஷ்ஷ்... இனிமே எதைப் பத்தியும் யோசிக்கக் கூடாது... வந்த வேலைய முடிச்சிட்டு சீக்கிரம் கிளம்புற வழிய பார்க்கணும்...' எனத் தன்னையே கடிந்து கொண்டான் பிரணவ்.
ஆகாஷோ பால்கனியில் நின்று சாருமதியுடன் பேசிக் கொண்டிருந்தான்.
"நிஜமா தான் மதி... அவ நம்ம அனுவே தான்... ஆனா மொத்தமா மாறிட்டா... என்னால நம்பவே முடியல... அவ கூட சரியா பேச கூட முடியல... முன்ன பின்ன தெரியாதவங்க போல எங்க கிட்ட நடந்துக்கிட்டா..." என ஆகாஷ் கூறவும் மறுபக்கம் அழைப்பில் இருந்த சாருமதி,
"ஏன் ஆகாஷ் அவ கூட பேசல? அவளுக்கு என்ன ஆச்சுன்னு கேட்க வேண்டியது தானே..." எனத் திட்டினாள்.
ஆகாஷ், "ப்ச் மதி... நான் என்ன வேணும்னா பேசல? அவ தான் என்னைப் பேசவே விடல... முன்னாடி இருந்த இனசன்ட் அனுபல்லவி இல்ல அவ... ஒரு மாதிரி... எனக்கு சொல்லத் தெரியல மதி... நீயே அவள பார்த்தா ஷாக் ஆகுவ... அதுவும் இல்லாம அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சு... கழுத்துல தாலியோட இருந்தா..." என்கவும் ஏகத்துக்கும் அதிர்ந்தாள் சாருமதி.
"ஆமா மதி... அனுவுக்கு கல்யாணம் ஆகிடுச்சு... பாஸுக்கு தான் அனுவ சுத்தமா ஞாபகம் இல்லயே... இன்னைக்கு அனுவ பார்த்ததுக்கு அப்புறம் கூட அவர் கிட்ட எந்த ஒரு மாற்றமும் இருக்கல... அதான் அனுவுக்கு கல்யாணம் ஆகிடுச்சே... இனிமே பாஸுக்கு அனு பத்தி நினைவு வந்தா என்ன? வரலன்னா என்ன?" என்றான் ஆகாஷ் கசந்த புன்னகையுடன்.
சில நொடிகள் மௌனமாக இருந்த சாருமதி, "அனு யாரைக் கல்யாணம் பண்ணி இருக்கான்னு தெரிஞ்சிதா?" எனக் கேள்வியாய் நிறுத்த, "தெரியல... ஆனா அந்தப் பிரதாப் அவ கூட தான் இருந்தான்... அவனைத் தான் கல்யாணம் பண்ணி இருக்கான்னு நினைக்கிறேன்..." என்றான் கோபமாக ஆகாஷ்.
சாருமதி, "அந்தக் கேடு கெட்டவனையா அனு கல்யாணம் பண்ணி இருக்கா? அவளுக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருச்சா? நான் உடனே கிளம்பி ஹைதரபாத் வரேன்... அவள நேரா பார்த்து நல்லா நாலு கேட்கணும்... என்ன தைரியம் இருந்தா அவ பெஸ்ட் ஃப்ரெண்ட் என் கிட்ட கூட சொல்லாம இவ்வளவு பெரிய முடிவு எடுத்திருப்பா..." என ஆத்திரப்பட்டாள்.
ஆகாஷ், "வேணாம் மதி... அவ எங்க யாரு கூடவும் பேச விரும்பல... முதல்ல நான் எப்படியாவது அவ கூட பேசி எல்லாம் தெரிஞ்சிக்க பார்க்குறேன்... அப்புறம் நீ வா..." என்றவன் பிரணவ் வரும் அரவம் கேட்டு, "சரி மதி... பாஸ் வந்துட்டார்... நான் உன் கூட அப்புறம் பேசுறேன்... பாய்... லவ் யூ..." என்று விட்டு அழைப்பைத் துண்டித்தான்.
பால்கனியில் இருந்து அறைக்குள் நுழைந்தவனைத் தலையைத் துவட்டியபடி பிரணவ் கேள்வியாக நோக்க, "மதி கூட பேசிட்டு இருந்தேன் சார்..." எனப் பதிலளித்தான் ஆகாஷ்.
"ம்ம்ம்..." என்று விட்டு பிரணவ் தலையைத் துவட்ட, "பாஸ்... லஞ்ச் ஆர்டர் பண்ணட்டுமா?" எனக் கேட்டான் ஆகாஷ்.
மறுப்பாகத் தலையசைத்த பிரணவ், "வேணாம் ஆகாஷ்... நீங்க கீழ போய் சாப்பிட்டுட்டு வாங்க... எனக்கு எதுவும் வேணாம்... ஒரு டூ ஹவர்ஸ் என்னை யாரும் டிஸ்டர்ப் பண்ண வேணாம்... முக்கியமா யாரை சொல்றேன்னு புரிஞ்சிருக்கும்..." என்கவும் புரிந்ததாகத் தலையசைத்து விட்டு வெளியேறினான் ஆகாஷ்.
ஆகாஷ் சென்றதும் கட்டிலில் விழுந்த பிரணவ்விற்கு மீண்டும் அனுபல்லவியின் நினைவே எழ, தூக்க மாத்திரை ஒன்றைக் குடித்து விட்டு உறங்கினான்.
மறுநாள் விடிந்ததுமே பிரணவ் மற்றும் ஆகாஷ் தங்கியிருந்த அறைக் கதவைத் தட்டினாள் அர்ச்சனா.
ஆகாஷ் சலிப்புடன் சென்று கதவைத் திறக்கவும் அவனைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்த அர்ச்சனா அப்போது தான் குளித்து உடை மாற்றி விட்டு வந்த பிரணவ்விடம், "அதான் அந்தப் ப்ராஜெக்ட் யாருக்கு கொடுக்குறாங்கன்னு மீட்டிங் வெச்சி டிசைட் பண்ணுறதா சொல்லிட்டாங்களே... இன்னும் ஏன் நாம இங்கயே இருக்கோம்? கிளம்பலாம் தானே..." என்றாள்.
எங்கு இங்கு இருந்தால் மீண்டும் பிரணவ் அனுபல்லவியை சந்திக்க நேரிட்டு அதனால் பிரணவ்வின் பழைய நினைவுகள் வந்து விடுமோ என்ற பயம் அவளுக்கு.
"யாரும் உன்ன எங்க கூட வான்னு கட்டாயப்படுத்தல... நீயா தான் வந்த... போறதுன்னாலும் தாராளமா போ... ஐ டோன்ட் கேர்..." என்றான் பிரணவ் அழுத்தமாக.
ஆகாஷின் முன் பிரணவ் தன்னை அவமானப்படுத்தியதில் முகம் சிறுத்த அர்ச்சனா அதனை வெளிக்காட்டாது மறைத்தாள்.
பின் போலிப் புன்னகையை முகத்தில் ஏந்தி, "அ...அது இல்ல பிரணவ்... அவங்க எப்படி பேசினாங்கன்னு பார்த்தேல்ல... பல்லவன் இன்டஸ்ட்ரீஸ் அளவுக்கு இல்லன்னாலும் நம்ம கம்பனியும் டாப் ஃபைவ்ல தான் இருக்கு... ஆனா அவங்க நம்மள மதிக்காம எப்படி திமிரா பேசினாங்க? நாம எதுக்கு அவங்க கிட்ட அடி பணிஞ்சி போகணும்?" எனக் கேட்டாள் அர்ச்சனா.
"அவ அவனுக்கு அவனவன் கவலை..." என நக்கலாக முணுமுணுத்தான் ஆகாஷ்.
ஆகாஷைத் திரும்பி அர்ச்சனா முறைத்து வைக்க, "இங்க யாரும் திமிரா நடந்துக்கவும் இல்ல... அடி பணிஞ்சி போகவும் இல்ல... இதுக்கு தான் பிஸ்னஸ் மைன்ட் வேணும்ங்குறது... உன்ன எல்லாம் எப்படி தான் வேலைக்கு சேர்த்தேனோ? இதுல காதல் வேறயாம்..." என்றான் பிரணவ் கடுப்பாக.
அர்ச்சனா இடைமறித்து ஏதோ கூற வர, "இங்க பாரு அர்ச்சனா... இந்த ப்ராஜெக்ட் எங்க கம்பனிக்கு ரொம்ப முக்கியமானது... அதுக்காக நான் எந்த எல்லைக்கும் இறங்கி போவேன்... உனக்கு இங்க இருக்க பிடிக்கலனா தயவு செஞ்சி போயிடு... நான் நிம்மதியா இருப்பேன்... ஆகாஷ்... உடனே இவளுக்கு பெங்களூர் கிளம்ப டிக்கெட் புக் பண்ணு..." என உத்தரவிட்டான் பிரணவ்.
ஆகாஷ் கைப்பேசியை எடுக்கவும், "இ...இல்ல இல்ல... நான் போகல... இங்கயே இருக்கேன்... நம்ம கம்பனிக்காக தானே... கொ.. கொஞ்சம் இறங்கி போறதுல தப்பில்ல..." என்றாள் அர்ச்சனா சமாளிப்பாக.
அர்ச்சனா அங்கிருந்து சென்று விடவும் ஆகாஷிடம் திரும்பிய பிரணவ், "நான் கொஞ்சம் வெளியே போய்ட்டு வரேன்... ஏதாவது அர்ஜென்ட்டா இருந்தா மட்டும் கால் பண்ணுங்க..." என்கவும், "நானும் கூட வரட்டா பாஸ்?" எனக் கேட்டான் ஆகாஷ்.
பிரணவ் பார்த்த பார்வையில் கப்சிப் என வாயை மூடிக்கொண்ட ஆகாஷ், "நீங்க போய்ட்டு வாங்க பாஸ்... இங்க நான் சமாளிக்கிறேன்..." என்றான் அவசரமாக.
பிரணவ் அங்கிருந்து கிளம்பியதும் ஆகாஷ் அனுபல்லவியின் அலுவலகத்திற்கு அழைத்து ஏதோ விசாரித்தான்.
அவனுக்கு தேவையான பதில் கிடைத்ததும் ஆகாஷின் முகத்தில் புன்னகை குடி கொண்டது.
உடனே தன்னவளுக்கு அழைத்து ஏதோ கூறினான்.
இங்கு பிரணவ்வோ ஹைதரபாத்தில் இருந்த புகழ் பெற்ற பார்க் ஒன்றிற்கு வந்திருந்தான்.
ஒரு ஓரமாக இருந்த கல் பெஞ்ச் ஒன்றில் கண்களை மூடி அமர்ந்த பிரணவ் முதன் முறை அக் காரியத்தை செய்தான்.
தாயின் கட்டளையின் பெயரில் தான் மறந்த நினைவுகளை மீட்க இந்த ஐந்து வருடங்களும் முயலாதவன் ஏதோ ஒன்றை எதிர்ப்பார்த்து தன் நினைவடுக்குகளைத் துலாவினான்.
முன்பெல்லாம் போல் அல்லாது அனுபல்லவியைப் பார்த்ததில் இருந்து அவனின் மனம் அவனிடம் ஏதோ கூற முயலுவதாக உணர்ந்தான்.
ஆனால் அது என்னவென்று தான் அவனுக்குப் புரியவில்லை.
தான் இழந்த ஏதோ ஒன்று இங்கு இருப்பதாக உணர்ந்தான் பிரணவ்.
தான் காதலித்ததாகக் கூறப்படும் அர்ச்சனாவைக் காணும் போது வராத உணர்வு அனுபல்லவியைக் காணும் போது அவனுள் எழுந்தது.
ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணைப் பற்றி தான் இவ்வாறு உணர்வது சரியா தவறா என்று எல்லாம் அவனுக்குத் தெரியவில்லை.
ஆனால் தான் தொலைத்த ஏதோ ஒன்று நிச்சயமாக இங்கிருப்பதாக நம்பினான்.
எவ்வளவு தான் யோசித்தும் அவனின் நினைவடுக்குகளில் சேமிக்கப்பட்டிருந்த எதுவும் அவன் நினைவில் வரவில்லை.
மாறாக தலைவலி வந்தது தான் மிச்சம்.
இதற்கு மேல் முயற்சித்தால் அன்னை பயப்படுவது போல் ஏதாவது நடந்து விடும் எனப் புரிந்துகொண்ட பிரணவ் மெதுவாக விழிகளைத் திறந்து பார்த்தான்.
அதேநேரம் அவனுக்கு முன்னே சில அடிகள் தூரத்தில் ஒரு ஆண் குழந்தை பிரணவ் இருந்த திசையைப் பார்த்து, "அப்பா..." என தன் மழலைக் குரலில் மகிழ்ச்சியாக அழைத்தவாறு அவனை நோக்கி ஓடி வந்தது.
ஒரு நொடி பிரணவ்வின் உடல் முழுவதும் சிலிர்த்து அடங்கியது.
மயிர்க்கால்கள் எல்லாம் பரவசத்தில் எழுந்து நின்றன.
பிரணவ்விற்குள் சொல்ல முடியாத ஒரு உணர்வு.
ஆனால் அதே நேரம் பிரணவ்வின் பின்னால் இருந்து அந்தக் குழந்தையை நோக்கி நடந்த ஒரு ஆடவன், "எங்க பாப்பா போன அதுக்குள்ள?" என்றவாறு அக் குழந்தையைத் தூக்கிக் கொண்டான்.
ஏதோ ஒரு ஏமாற்றம் பிரணவ்வின் நெஞ்சில் எழுந்து அவனை வதைத்தது.
தனக்குள் ஏன் இந்த மாற்றம் என்றே அவனுக்குப் புரியவில்லை.
அதைப் பற்றி யோசிக்கும் முன்னே, "பிரணவ்... இங்க தான் இருக்கீங்களா?" என்றபடி அவன் முன் வந்து நின்றாள் அர்ச்சனா.
அர்ச்சனாவைக் கண்டதும் எழுந்த ஆத்திரத்தை அடக்க தன் முடியை அழுத்திக் கோதிய பிரணவ், "நீ இங்க என்ன பண்ணுற?" என்றான் எரிச்சலாக.
அவள் உரிமையாகப் பேசும் ஒவ்வொரு முறையும் கன்னத்தில் 'பளார்' என அறையத் துடிக்கும் தன் கரத்தை இறுக்கி மூடிக் கொண்ட பிரணவ், "கொஞ்சம் நேரம் கூட என்னை நிம்மதியா இருக்க விட மாட்டியா? ச்சே..." எனக் கடிந்து கொண்டு விட்டு அங்கிருந்து வேகமாகக் கிளம்பினான்.
அர்ச்சனாவும் அவனைப் பின் தொடர்ந்து அவசரமாக ஓடினாள்.
************************************
வாடிய கொடியாய் கட்டிலில் மருத்துவ உபகரணங்களுக்கு நடுவே படுத்துக் கிடந்தவரின் தலையைக் கோதி விட்டு அவருக்கு மெதுவாக கூழைப் பருக்கினாள் அனுபல்லவி.
அவரின் விழிகள் அனுபல்லவியின் முகத்தைப் பார்த்து கண்ணீர் சிந்த, உதடுகளோ ஏதோ கூற முயன்று அசைந்தன.
அவரின் விழி நீரைத் துடைத்து விட்ட அனுபல்லவி, "அதான் நான் உங்க கூட இருக்கேன்லப்பா... எதை நினைச்சும் கவலைப்படாதீங்க..." என்றாள் வரவழைத்த புன்னகையுடன்.
மறுப்பாகத் தலையசைத்தவரோ, "நீ...நீ... என்...என்...னால..." என ஏதோ கூற முயன்றார்.
அனுபல்லவி, "ஷ்ஷ்ஷ்... அதான் சொன்னேனே... எதுவும் பேசாதீங்க... எல்லாம் மறந்துடுங்க... எனக்குன்னு நீங்க இருக்கீங்களே... அது போதும்... நான் சந்தோஷமா தான் இருக்கேன்..." என்கவும், "அ...அம்மா... அம்மா..." என அவர் கண்ணீர் வடிக்கவும் தன்னையும் மீறி கண்ணீர் வடித்தாள் அனுபல்லவி.
"அவங்க வாழ்க்கை அவ்வளவு தான் பா... பிறந்ததிலிருந்து எந்த சந்தோஷமும் அனுபவிக்காமலே போய் சேரணும்னு அவங்க விதி போல... நீங்க காரணம் இல்லப்பா..." என்றாள் அனுபல்லவி சமாதானமாக.
அப்போது சரியாக பிரதாப் அவ் அறைக்குள் தயக்கமாக நுழையவும், "இ...இவன்... இவன்..." என ஆவேசமாக எழ முயன்றவரை, "அப்பா... அமைதியா இருங்க தயவு செஞ்சி..." என லேசாக அனுபல்லவி அதட்டவும் அவர் முகம் வாடினார்.
பெருமூச்சு விட்ட அனுபல்லவி தந்தையின் கரத்தைப் பற்றி, "அப்பா... அதான் தப்பு பண்ணவங்க தண்டனை அனுபவிக்கிறாங்களே... அதுக்காக மாமா பண்ணது சரின்னு சொல்லல... அவருக்கு நான் கொடுத்து இருக்குற தண்டனையே போதும்... நீங்க எதையும் நினைச்சி வருத்தப்படாதீங்க... உங்கள இந்த நிலமைக்கு கொண்டு வந்தவங்கள நிச்சயம் நான் சும்மா விட மாட்டேன்..." என்றாள் உறுதியாய்.
அத்துடன் அமைதியானவருக்கு தேவையான மருந்தைக் கொடுக்கவும் அவர் உறங்கி விட, அறை வாயிலில் தயக்கமாக நின்றிருந்த பிரதாப்பை முறைத்து விட்டு அங்கிருந்து சென்றாள் அனுபல்லவி.
************************************
அனுபல்லவி தன் அலுவலக அறையில் அமர்ந்து ஏதோ கோப்புகளை புரட்டிக் கொண்டிருக்க, புயல் வேகத்தில் அங்கு நுழைந்தான் பிரணவ்.
கோபமாக தன் இருக்கையை விட்டு எழுந்த அனுபல்லவி, "மிஸ்டர் பிரணவ்... கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லயா? இப்படி தான் பர்மிஷன் வாங்காம ஒருத்தரோட கேபின் உள்ள நுழைவீங்களா?" எனக் கேட்டாள் பல்லைக் கடித்துக்கொண்டு.
இதழில் கேலி நகையோட அனுபல்லவியின் முன் இருந்த இருக்கையில் அமர்ந்த பிரணவ், "எனக்கு மேனர்ஸ் இல்லன்னே வெச்சிக்கலாம்... ஆனா பல்லவி மேடமுக்கு நேர்மைன்னா என்னன்னு தெரியுமா? இல்ல நேர்மைக்கு எத்தனை எழுத்துன்னு கூட தெரியாததனால தான் ஜஸ்ட் ப்ராஜெக்ட் லீடரா இருந்தவங்க அஞ்சி வருஷத்துக்குள்ள ஒரு கம்பனிக்கே எம்.டி ஆகி இருக்கீங்களா?" எனக் கேட்டான் திமிருடன்.
ஒரு நொடி பிரணவ்விற்கு அனைத்து உண்மைகளும் தெரிந்து விட்டதோ என அனுபல்லவியின் முகம் மாற, மறு நொடியே அதனைப் பிரணவ்விற்கு காட்டாது மறைத்தவள் அதே திமிருடன், "ஓஹ்... உங்க கம்பனில வர்க் பண்ணி உங்க கிட்ட கை ஏந்தி சம்பளம் வாங்கிட்டு இருந்தவ இப்போ உங்கள விட உயர்ந்த இடத்துல இருக்குறதனால பிரணவ் சாருக்கு பொறாமையா இருக்கு போல..." என்றாள் எள்ளலுடன்.
நொடி நேரம் என்றாலும் அனுபல்லவியின் முகத்தில் வந்து சென்ற மாற்றத்தை அவதானித்து விட்டான் பிரணவ்.
அவளின் திமிர் கலந்த பேச்சை வெகுவாக ரசித்த பிரணவ் அனுபல்லவியின் முகத்தை ரசனையுடன் நோக்கினான்.
பிரணவ்வின் பார்வையில் தடுமாறிய அனுபல்லவி அவசரமாக தண்ணீரைக் குடித்து தன்னை சமன்படுத்திக்கொள்ள, பிரணவ்வின் பார்வை மெதுவாக அவளின் முகத்தை விட்டு கீழிறங்கி அவளின் கழுத்தில் தொங்கிய பொன் தாலியில் நிலைத்து நின்றது.
மறு நொடியே பிரணவ்வின் தாடை இறுக, அனுபல்லவியை ஆத்திரத்துடன் நோக்கியவன், "என்ன தைரியம் இருந்தா எங்க கிட்ட ப்ராஜெக்ட்டை யாருக்கு தரணும்னு யோசிச்சு சொல்றேன்னு சொல்லிட்டு எங்க கம்பனிக்கு எதிரா வேலை பார்க்குற கம்பனிக்கு கொடுக்க ரகசியமா டீல் பேசி இருப்ப?" எனக் கேட்டான் பல்லைக் கடித்துக்கொண்டு.
பிரணவ்வின் பேச்சில் குழம்பிய அனுபல்லவி ஏதோ நினைவுக்கு வந்தவளாக அவனைத் திமிருடன் நோக்கி விட்டு, "உன் கம்பனிக்கு இந்த ப்ராஜெக்ட்டை கொடுக்க விரும்பலன்னு அர்த்தம்..." என்றவள், "என் இடத்துக்கே வந்து என்னையே மரியாதை இல்லாம பேசுறீங்க... மரியாதை கொடுத்தா மட்டும் தான் மரியாதை திரும்ப கிடைக்கும்..." என்றாள் அழுத்தமாக.
அவளை ரசனையாக நோக்கிய பிரணவ் தன் இருக்கையை விட்டு எழுந்து அனுபல்லவியை நோக்கிக் குனிந்தான்.
அதில் தடுமாறி அனுபல்லவி இருக்கையின் பின்னே சாய, "உரிமை உள்ள இடத்துல மரியாதை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லன்னு நினைக்கிறேன் மிஸ் ப....ல்லவி..." என இழுத்துக் கூறியவன் மேலும் குனியவும் அனுபல்லவியின் விழிகள் தன்னால் மூடிக் கொண்டன.
வெகுநேரம் கழித்தும் எதுவும் நடக்காததால் அனுபல்லவி மெதுவாக இமைகளைத் திறக்க, அவளையே குறும்புப் புன்னகையுடன் மார்பின் குறுக்கே கை கட்டி பார்த்துக் கொண்டிருந்தான் பிரணவ்.
இவ்வளவு நடந்தும் பிரணவ்வின் அருகாமையில் தடுமாறும் தன் மனதை வறுத்தெடுத்த அனுபல்லவி பிரணவ்வை ஏகத்துக்கும் முறைத்தாள்.
பிரணவ், "எனக்கு சொந்தமான பொருளை என் கிட்டயே எப்படி வர வைக்கணும்னு எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும்... அதுக்காக எந்த எல்லைக்கும் போவேன்..." என்றவனை அனுபல்லவி பயத்துடன் ஏறிட, "ப்ராஜெக்ட் பத்தி சொன்னேன் மிஸ் பல்லவி..." எனக் குறு நகையுடன் கூறிய பிரணவ் வந்த வேகத்திலேயே அங்கிருந்து கிளம்பினான்.
அவன் சென்று வெகுநேரம் கழிந்தும் திடீரென பிரணவ் ஏன் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறான் என்ற பயத்தில் இதயம் பல மடங்கு வேகமாகத் துடிக்க அமர்ந்திருந்தாள் அனுபல்லவி.
அப்போது தான் பிரணவ் கூறிய விடயம் நினைவு வந்து ஆத்திரத்தில் பல்லைக் கடித்தவள் உடனே பிரதாப்பிற்கு அழைத்து தன்னை சந்திக்கக் கூறினாள்.
பிரதாப் அங்கு வரவும், "யார் கிட்ட கேட்டு எனக்கு தெரியாம மிஸ்டர் தர்மராஜோட கம்பனி கூட டீல் பேசினீங்க?" எனக் கேட்டாள் அனுபல்லவி கோபமாக.
"அனு அது..." என ஏதோ கூற வந்த பிரதாப்பின் முன் கை நீட்டி தடுத்தவள், "இது என் கம்பனி... உங்க லிமிட்டோட இருந்துக்கோங்க... அதை விட்டு இப்படி ஏதாவது பண்ண நினைச்சீங்கன்னா தண்டனை கடுமையா இருக்கும்..." என எச்சரித்த அனுபல்லவி, "என்ன? திரும்ப நான் பிரணவ்வை பார்த்ததும் மனசு மாறிடுவேனோன்னு பயந்து இப்படி பண்ணுறீங்களா?" எனக் கேட்டாள் நக்கலாக.
பிரதாப்பின் தலை ஆம் என மேலும் கீழும் ஆட, அவனை நோக்கி கசந்த புன்னகை ஒன்றை உதிர்த்த அனுபல்லவி, "அதுக்கு தான் வழியே இல்லாம பண்ணிட்டீங்களே..." என்றவள் தன் கழுத்தில் தொங்கிய தாலியைக் குனிந்து நோக்கினாள்.
பிரதாப்பின் முகம் குற்ற உணர்வில் வாட, வெறுமையுடன் அவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்த அனுபல்லவி, "உங்க கிட்ட கெஞ்சி கேட்குறேன் மாமா... தயவு செஞ்சி இதுக்கு மேலயும் என்னை உயிரோட வதைக்காதீங்க..." என்றாள் கண்ணீருடன்.
அடுத்து வந்த நான்கு நாட்களும் பிரணவ் ஆகாஷை விட்டு விட்டு தனியாக பல முறை எங்கோ கிளம்பிச் சென்றான்.
இயன்றளவு அர்ச்சனா எதையும் அறியாமல் பார்த்துக் கொண்டான்.
இடையில் ஒரு நாள் பல்லவன் இன்டஸ்ட்ரீஸ் கம்பனியில் ப்ராஜெக்ட்டை யாருக்கு வழங்குவது பற்றிய மீட்டிங்கும் நடந்தது.
ஒரு பார்ட்டி போல் வைத்து அனைத்து சக நிறுவனங்களையும் அழைத்து ப்ராஜெக்ட் பற்றி கூற முடிவெடுத்தாள் அனுபல்லவி.
அதன்படி மறுநாள் அந்தப் பார்ட்டி நடக்க இருந்தது.
பிரணவ் இரவு குளியலறையில் குளித்துக் கொண்டிருக்க, அவர்கள் தங்கியிருந்த அறைக் கதவு வேகமாகத் தட்டப்பட்டது.
அர்ச்சனாவாகத் தான் இருக்கும் என்று சலிப்புடன் சென்று கதவைத் திறந்த ஆகாஷ் அங்கு சாருமதியை நிச்சயம் எதிர்ப்பார்க்கவில்லை.
"மதி... நீ இங்க என்ன பண்ணுற?" என அதிர்ச்சியுடன் கேட்டான் ஆகாஷ்.
"அனு இங்க தான் இருக்கான்னு நீ சொல்லிட்ட... என்னால அவள பார்க்காம அங்க நிம்மதியாவே இருக்க முடியல..." என்றாள் சாருமதி வருத்தமாக.
ஆகாஷ், "நான் தான் உன்ன நான் சொல்லும் வரை வர வேணாம்னு சொன்னேன்ல..." எனக் கோபமாகக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, "யாரு ஆகாஷ்?" எனக் கேட்டவாறு தலையைத் துவட்டியபடி வந்தான் பிரணவ்.
"பாஸ் அது..." என ஆகாஷ் தயங்கும் போதே சாருமதியைக் கண்டு கொண்ட பிரணவ், "நீங்க எப்போ வந்தீங்க சாருமதி?" எனக் கேட்டான்.
ஆகாஷ் வாய் திறக்க முன் தானே முந்திக்கொண்ட சாருமதி, "என் ஃப்ரெண்ட் ஒருத்திய மீட் பண்ண வந்தேன் சார்... பார்த்து ரொம்ப வருஷமாச்சு... அப்படியே ஆகாஷையும் பார்த்துட்டு போலாம்னு தான் இங்க வந்தேன்..." எனப் பதிலளித்தாள்.
ஆகாஷ் அவளை ஏகத்துக்கும் முறைக்க, "ஓஹ்..." என்று மட்டும் கூறினான் பிரணவ்.
சாருமதி, "சார்... இஃப் யூ டோன்ட் மைன்ட் ஆகாஷை கொஞ்சம் நேரத்துக்கு என் கூட கூட்டிட்டு போகட்டுமா?" என அனுமதி கேட்கவும், "என் கிட்ட எதுக்கு பர்மிஷன் கேட்குறீங்க சாருமதி? உங்க பாய் ஃப்ரெண்ட்... நீங்க எங்க வேணாலும் கூட்டிட்டு போகலாம்..." என்றான் பிரணவ்.
உடனே, "தேங்க்ஸ் சார்..." என்று விட்டு ஆகாஷை அங்கிருந்து இழுத்துக்கொண்டு வெளியே நடந்தாள் சாருமதி.
ஹோட்டலை விட்டு வெளியே வந்ததும் சாருமதியின் கரத்தை உதறிய ஆகாஷ், "என்ன பண்ண போற மதி நீ? அதுவும் இந்த ராத்திரில? எங்க போறோம் நாம?" எனக் கேட்டான் கோபமாக.
"ஆஹ்... உன்ன ரேப் பண்ண போறேன்..." என்ற சாருமதியின் பதிலில் ஆகாஷின் கண்கள் அதிர்ச்சியில் விரிய, "த்தூ... மூஞ்ச பாரு... கேட்குறான் பாரு கேள்வி... வேற எங்க? அனுவ பார்க்க தான் போறோம்..." என்றாள் சாருமதி.
ஆகாஷ், "உன் கிட்ட அனு வீட்டு அட்ரஸ் கிடைச்சிடுச்சுன்னு சொன்னது தப்பா போச்சு..." எனத் தலையில் அடித்துக்கொண்டான்.
அவனை முறைத்த சாருமதி ஆகாஷை விட்டு தனியே சென்று ஆட்டோ பிடித்தாள்.
"ஹேய் இரு டி நானும் வரேன்..." எனக் கத்திய ஆகாஷ் அவசரமாகச் சென்று சாருமதியைத் தொடர்ந்து ஆட்டோவில் ஏறினான்.
ஆகாஷும் சாருமதியும் அனுபல்லவியின் வீட்டை அடையவும் வீட்டின் பிரம்மாண்டத்தை கண்டு வாயை பிளந்தாள் சாருமதி.
"ஆகாஷ்... நீங்க சொன்னப்போ கூட நான் நம்பல... ஆனா இவ்வளவு பெரிய வீட்டுல நம்ம அனுவா?" என சாருமதி ஆச்சர்யப்பட்டாள்.
"அவ்வளவு பெரிய கம்பனிக்கு எம்.டியா இருக்கா... இந்த வீடெல்லாம் எம் மாத்திரம்?" என்றான் ஆகாஷ் நக்கலாக.
இவர்கள் இங்கு வெளியே நின்று பேசிக் கொண்டிருக்கும் போதே உள்ளே இருந்த செக்கியூரிட்டி டிவைஸில் இவர்கள் வந்ததைப் பார்த்து விட்ட அனுபல்லவி அதிர்ச்சியில் உறைந்து விட்டாள்.
அதுவும் பல வருடங்கள் கழித்து தன் உயிர்த் தோழியைப் பார்த்ததும் ஓடிச் சென்று அவளை அணைத்துக்கொள்ளக் கட்டளை இட்டது மனம்.
இருந்தும் அவளால் அதனை செய்ய இயலவில்லை.
"நான் அவங்கள உள்ள வர சொல்லிட்டு வரேன்..." என பிரதாப் செல்லப் பார்க்கவும், "வேணாம் இருங்க மாமா..." என அவனைத் தடுத்த அனுபல்லவி வாட்ச்மேனிற்கு அழைத்து அவர்களை உள்ளே விட வேண்டாம் என்றும் ஏதாவது கூறி உடனே அவர்களை அங்கிருந்து அனுப்பி வைக்கவும் எனவும் கட்டளை இட்டாள்.
ஆகாஷ் வாட்ச்மேனிடம் சென்று அனுபல்லவியைக் காண வேண்டும் என்று கூற, "மேடம் வீட்டுல இல்ல... அவங்க ஹஸ்பன்ட் கூட வெளிய போய் இருக்காங்க..." என மறுத்தார் வாட்ச்மேன்.
அனுபல்லவி வீட்டில் இல்லை. அதுவும் கணவனுடன் வெளியே சென்றிருக்கிறாள் என்று கூறவும் முகம் வாடிய சாருமதி, "அண்ணா... அது... அனு ஹஸ்பன்ட்னு சொன்னீங்களே... அது... பிரதாப்பா அவர் பெயர்?" என வாட்ச்மேனிடம் கேட்டாள் அவர் இல்லை என்று கூற வேண்டும் என எதிர்ப்பார்த்தபடி.
ஆகாஷும் அதே கேள்வியுடன் வாட்ச்மேனின் முகம் நோக்க, "ஆமாங்கம்மா... சார் பெயர் பிரதாப் தான்..." என வாட்ச்மேன் கூறவும் வேறு எதுவும் கூறாது இருவருமே அங்கிருந்து கிளம்பினர்.
வெளியே நடப்பதை ஒன்று விடாமல் செக்கியூரிட்டி டிவைஸ் மூலம் பார்த்துக் கொண்டிருந்த அனுபல்லவியின் விழிகளோ கண்ணீரை சிந்தின.
"அவங்க போனதுக்கு அப்புறம் இப்படி அழுறதுக்கு பேசாம அவங்க கூட போய் பேசி இருக்கலாம்ல..." என பிரதாப் முணுமுணுக்க, அது அனுபல்லவியின் காதில் தெளிவாகவே விழுந்தது.
சட்டெனத் திரும்பி பிரதாப்பை முறைத்தவள், "எந்த மூஞ்சோட போய் அவங்க முன்னாடி நிற்க சொல்றீங்க?" என ஆத்திரத்துடன் கேட்டு விட்டு விருட்டென அங்கிருந்து சென்று விட்டாள்.
************************************
மறுநாள் மாலை பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, பிரணவ் மிகவும் உற்சாகமாக அதற்குத் தயாராகிக் கொண்டிருந்தான்.
"பாஸ்... ரொம்ப ஜாலியா இருக்கீங்க போல... ப்ராஜெக்ட் நம்ம கம்பனிக்கு கிடைக்கணும்னு ஏதாவது தகிடுதனம் பண்ணிட்டீங்களா என்ன?" எனக் கேட்டான் ஆகாஷ் சந்தேகமாக.
அவனைப் பார்த்து புன்னகைத்த பிரணவ், "என்ன ஆகாஷ் இப்படி கேட்டுட்டீங்க? என்னைப் பார்த்தா அப்படியா தெரியுது?" எனக் கேட்கவும், "பார்த்தா அப்படி தெரியல... ஆனா பண்ணுற காரியம் எல்லாம் அப்படி தானே இருக்கு... எந்த நேரத்துல என்ன பண்ணுவீங்கன்னு கெஸ் பண்ணவே முடியாது..." என முணுமுணுத்தான் ஆகாஷ்.
பிரணவ், "ஏதாவது சொன்னீங்களா ஆகாஷ்?" எனக் கேட்கவும், "இ...இல்ல பாஸ்... ஒன்னுமில்ல... நான் சும்மா தனியா உளறுறேன்..." என்றான் ஆகாஷ் அவசரமாக.
"அது சரி... ஆமா சாருமதி ஊருக்கு கிளம்பிட்டாங்களா? அவ ஃப்ரெண்ட பார்த்தீங்களா?" எனக் கேட்டான் பிரணவ் தன் கோர்ட்டை அணிந்தபடி.
ஆகாஷ், "இல்ல பாஸ்... அவ ஃப்ரெண்ட் நாங்க போகும் போது அவங்க ஹஸ்பன்ட் கூட வெளியே போய் இருந்தாங்க... அதான் மீட் பண்ண கிடைக்கல... மதியும் இதே ஹோட்டல்ல தான் தங்கி இருக்கா... எப்படியும் பார்ட்டி முடிஞ்சி கிளம்பிடுவோம் தானே... அதான் எங்க கூடவே போக இருக்க சொன்னேன்..." என்றான்.
"ஓஹ்... பார்ட்டி முடிஞ்சதும் நீங்க கிளம்பிடுவீங்களா? ஹ்ம்ம்... அதுவும் நல்லதுக்கு தான்..." என்ற பிரணவ்வின் கூற்றில் குழம்பிய ஆகாஷ், "அப்போ நீங்க வரலயா பாஸ் எங்க கூட?" எனக் கேட்டான் புரியாமல்.
பதிலுக்கு மந்தகாசப் புன்னகை ஒன்றை சிந்திய பிரணவ் அறைக் கதவு தட்டப்படவும் அவனே சென்று கதவைத் திறந்தான்.
அர்ச்சனா முழங்கால் வரை மட்டுமே இருந்த பளிச்சென மின்னும் மார்டன் ட்ரெஸ் அணிந்து பார்ட்டிக்கு செல்லத் தயாராகி நின்றிருந்தாள்.
அவளின் உடையைக் கண்டு ஆகாஷ் முகம் சுழிக்க, பிரணவ்வோ அர்ச்சனாவின் தோளில் கை போட்டு, "போலாமா?" எனக் கேட்டான் புன்னகையுடன்.
ஆகாஷ் அதிர்ச்சியில் கண்களை அகல விரிக்க, அர்ச்சனாவோ வாயெல்லாம் பல்லாக பிரணவ்வை மேலும் நெருங்கி நின்று, "போலாம் பேபி..." என்றாள் கண்கள் மின்ன.
ஆகாஷுடன் ஏதோ பேச வந்த சாருமதி பிரணவ் அர்ச்சனாவின் தோளில் கரம் போட்டு செல்வதைக் கண்டு ஆகாஷைப் போலவே அதிர்ச்சி அடைந்தாள்.
சாருமதியின் குரலில் தன்னிலை அடைந்த ஆகாஷ், "ஹ்ம்ம்... என்ன பண்ணுறது? அனுவே வேற கல்யாணம் பண்ணிட்டா... இவருக்கு அர்ச்சனா தான்னு இருந்திருக்கு போல... அதை விடு மதி... சீக்கிரம் நீயும் பார்ட்டிக்கு கிளம்பு... அங்க போனா உனக்கு அனுவ மீட் பண்ண முடியும்... இன்னைக்கு விட்டா திரும்ப அவள பார்க்க முடியாம போயிடும்..." என்றான்.
அவனைப் புரியாமல் பார்த்த சாருமதி, "ஏன் இன்னைக்கு விட்டா பார்க்க முடியாது?" எனக் கேட்டாள்.
ஆகாஷ், "அவ அஞ்சி வருஷம் கழிச்சி இந்தியா வந்து இருக்குறதே இந்தியால இருக்குற பிஸ்னஸை இங்க யாருக்கோ ஹேன்ட் ஓவர் பண்ணிட்டு ஃபாரின்ல பிஸ்னஸை கவனிக்கிற ஐடியால தான்... இன்னைக்கு பார்ட்டி அதைப் பத்தி இன்ஃபார்ம் பண்ணவும் சேர்த்து தான்... பாஸ் கிட்ட இன்னும் இதைப் பத்தி சொல்லல..." என்றான்.
************************************
ஆடல், பாடல், கொண்டாட்டம் என பல்லவன் இன்டஸ்ட்ரீஸ் தலைமை அலுவலகத்தின் பார்ட்டி பிரம்மாண்டமாக நடை பெற்றுக் கொண்டிருந்தது.
அனுபல்லவியின் பார்வை மட்டும் கண்களில் கோபம் மின்ன ஒரு இடத்தை வெறித்திருந்தது.
அங்கு ஒரு கையில் மதுக் குவளையுடன் மறு கையால் அர்ச்சனாவை வளைத்தபடி ஆடிக் கொண்டிருந்தான் பிரணவ்.
அதனைக் காணக் காண அனுபல்லவியின் முகம் கோபத்தில் சிவக்க, கண்களோ கலங்கின.
சில வருடங்களுக்கு முன் இதே போல் ஒரு பார்ட்டியில் தானும் அவனும் ஒன்றாகக் கலந்து கொண்டதும் அன்று தன் காதலை அவனிடம் பகிர்ந்து கொண்டதும் நினைவுக்கு வந்து அனுபல்லவியை வாட்டியது.
ஓரக் கண்ணால் அனுபல்லவியைப் பார்த்த பிரணவ் அவளின் பார்வை தம் மீது இருப்பதைக் கண்டதும் அர்ச்சனாவை மேலும் நெருங்கி நின்று கொண்டான்.
திடீரென முகத்தில் புன்னகையை வரவழைத்துக்கொண்டு கையில் ஒரு குளிர்பானக் குவளையை எடுத்த அனுபல்லவி நேராக பிரணவ்வை நோக்கி வரவும் பிரணவ்வின் விழிகள் குழப்பத்தைத் தத்தெடுத்தன.
அர்ச்சனாவோ பிரணவ்வின் நெருக்கம் தந்த மயக்கமும் லேசாக ஏறியிருந்த போதையும் சேர்ந்து பாட்டுக்கு ஏற்றவாறு ஆடிக் கொண்டிருந்தாள்.
அனுபல்லவி அவர்களை நோக்கி நடந்தவள் அவர்களைத் தாண்டி திரும்புவது போல் திரும்பி கால் தடுக்கி விழப் போவது போல் அர்ச்சனாவின் உடையில் தன் கையில் இருந்த குளிர்பானத்தைக் கொட்டி விட்டாள்.
பிரணவ் உதடு மடித்து சிரிக்க, "அச்சோ... சாரி சாரிங்க... தெரியாம கால் தடுக்கிடுச்சி..." என்றாள் அனுபல்லவி மன்னிப்பு வேண்டும் குரலில்.
"இடியட்... கண்ணு தெரியலயா? என் ட்ரெஸ்ஸ இப்படி ஸ்பாய்ல் பண்ணிட்டியே... ச்சே... அறிவிருக்கா?" என அர்ச்சனா திட்ட, "அர்ச்சனா..." என்ற பிரணவ்வின் கடுமையான குரலில், "பாருங்க பிரணவ்... வேணும்னே ஜூஸை என் மேல கொட்டிட்டா..." எனக் குற்றப் பத்திரிகை வாசித்தாள் அர்ச்சனா.
"அதான் அவங்க தெரியாம பண்ணிட்டாங்கன்னு சொல்றாங்களே... நீ பண்ண மாட்டியா? போ... போய் அதை வாஷ் பண்ணிட்டு வா..." என பிரணவ் கடுமையாகக் கூறவும் அனுபல்லவியை முறைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தாள் அர்ச்சனா.
அர்ச்சனா செல்லவும் அனுபல்லவியும் அங்கிருந்து நகரப் பார்க்க, அவளின் கையைப் பிடித்து தன்னை நோக்கி இழுத்தான் பிரணவ்.
அதனை எதிர்ப்பார்க்காத அனுபல்லவி பிரணவ்வின் மீது வந்து மோத, "என்ன பல்லவி மேடம்? எதுக்காக இப்படி பண்ணீங்க?" எனக் கேட்டான் பிரணவ் புன்னகையுடன்.
"அ...அது... அதான் சென்னேனே தெரியாம கொட்டிடுச்சுன்னு..." என அனுபல்லவி எங்கோ பார்த்தபடி கூறினாள்.
"ஓஹ்....." என இழுத்த பிரணவ்வின் பார்வை அனுபல்லவியின் முகத்தை ரசனையுடன் நோக்க, அப்போது தான் அவனின் பிடியில் தான் இருப்பதைப் புரிந்து கொண்ட அனுபல்லவி பிரணவ்வை விட்டு வேகமாக விலகினாள்.
பிரணவ் இன்னுமே தன் பார்வையை மாற்றாமல் இருக்க, "என் அனுமதி இல்லாம என்னைத் தொடாதீங்க மிஸ்டர் பிரணவ்..." என விரல் நீட்டி எச்சரித்த அனுபல்லவி அங்கிருந்து வேகமாகக் கிளம்பினாள்.
பிரணவ்விடமிருந்து விலகி வேகமாக வந்த அனுபல்லவி திடீரென யார் மீதோ மோதவும், "சாரி சாரி..." என மன்னிப்பு வேண்டியபடி தலையை உயர்த்த, அவளைத் தீயாக முறைத்தபடி நின்றிருந்தாள் சாருமதி.
"சாரு..." என்ற அனுபல்லவியின் வாயில் இருந்து காற்று தான் வெளி வந்தது.
அனுபல்லவியின் கையைப் பிடித்து அவளை அங்கிருந்து சற்று தள்ளி இழுத்துச் சென்ற சாருமதி அனுபல்லவியின் கரத்தை விடுவிக்கவும் "சாரு..." என அனுபல்லவி மகிழ்ச்சியாக அழைக்க, மறு நொடியே அவளின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் சாருமதி.
கன்னத்தில் கை வைத்து கண்ணீருடன் தன்னைப் பார்த்து புன்னகைத்த அனுபல்லவியை பாய்ந்து அணைத்துக் கொண்டாள் சாருமதி.
"சாரி சாரு..." என அனுபல்லவி கண்ணீர் வடிக்க, அவளை விட்டு விலகியவள், "பெஸ்ட்டி... பெஸ்ட்டின்னு என்னைப் பெயருக்கு தான் சொன்னேல்ல நீ..." எனக் கேட்டாள் சாருமதி பதிலுக்கு கண்ணீருடன்.
அனுபல்லவி மறுப்பாகத் தலையசைக்க, "அப்போ ஏன் என் கிட்ட கூட சொல்லாம வந்துட்ட? இதெல்லாம் எப்படி? யார் அனு நீ? இது தான் நீயா? இது நீன்னா எங்க கூட இருந்த அனு யாரு?" எனக் கேட்டாள் சாருமதி புரியாமல்.
"உன் கிட்ட வேணும்னு மறைக்கல டி... என் சூழ்நிலை அப்படி... ஏதேதோ ஆகிடுச்சு... நான் உன் கிட்ட எல்லாமே தெளிவா சொல்றேன்..." என்றாள் அனுபல்லவி.
சாருமதி, "இனியும் உன்ன விட முடியாது... ஆகாஷ் சொன்னான் நீ அவங்க கூட பேச கூட விருப்பப்படலன்னு... எங்க என்னைப் பார்த்தாலும் அதையே தான் நீ சொல்லுவன்னு நினைச்சேன்..." என்க,
"அவங்களும் நீயும் ஒன்னா?" எனக் கேட்டாள் அனுபல்லவி வருத்தமாக.
"அவங்களும் நானும் ஒன்னில்ல சரி... அப்போ பிரணவ் சாரும் அந்த அவங்களுக்குள்ள தான் வராரா?" எனக் கேட்டாள் சாருமதி புருவம் சுருக்கி.
பெருமூச்சு விட்ட அனுபல்லவி, "அதான் எல்லாம் முடிஞ்சிடுச்சே... அதுவும் இல்லாம அவருக்கு தான் என்னை சுத்தமா ஞாபகம் இல்லயே... என்னைப் பத்தி தெரிஞ்சி இனிமே அவர் என்ன பண்ண போறார்? அர்ச்சனா கூட அவர் சந்தோஷமா இருக்கட்டும்..." என்றாள் கசந்த புன்னகையுடன்.
சாருமதி, "நிஜமாவே உனக்கு கொஞ்சம் கூட வருத்தமா இல்லையா அனு?" எனக் கேட்டாள் கவலையாக.
அனுபல்லவி, "நான் வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம் சாரு? எல்லாமே என் கை மீறி போயிடுச்சு... இது தான் இனிமே என் லைஃப்னு நான் ஏத்துக்கிட்டு ரொம்ப நாளாச்சு..." என்றவளின் கண்கள் கண்ணீரை உகுத்தன.
சாருமதி, "சரி அதை விடு... நான் நிஜமாவே உனக்கு ஃப்ரெண்ட்னா தயவு செஞ்சி இப்பவே நடந்த எல்லாத்தையும் சொல்லு..." என்றாள் உறுதியாக.
அனுபல்லவி மேலோட்டமாக தன்னைப் பற்றிக் கூறவும் அதிர்ச்சி அடைந்தாள் சாருமதி.
"என்ன டி சொல்ற? என்னால நம்பவே முடியல... இப்படி எல்லாமா மனுஷனுங்க இருப்பாங்க?" எனக் கேட்டாள் சாருமதி கோபமாக.
அனுபல்லவி, "இருக்காங்களே... அதனால தானே நான் இன்னைக்கு எனக்கு பிடிச்ச எல்லாரையும் விட்டு விலகி இந்த நிலமைல இருக்கேன்..." எனக் கண் கலங்கினாள்.
"ஆனா நீ என் கிட்ட கூட சொல்லாம கல்யாணம் பண்ணது தான் எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு அனு..." எனச் சாருமதி கூறவும் தலை குனிந்தாள் அனுபல்லவி.
அப்போது சரியாக, "மேம்... அனவுன்ஸ்மன்ட் பண்ணுற டைம் சரி..." என அனுபல்லவியின் பீ.ஏ வந்து கூறவும் தன் கண்களைத் துடைத்துக்கொண்ட அனுபல்லவி, "சாரு... ப்ளீஸ் உன் கிட்ட கெஞ்சி கேட்குறேன்... நான் சொன்ன எதையும் யார் கிட்டயும் சொல்லாதே... எனக்காக இதை மட்டும் பண்ணு..." என்று விட்டு சென்றாள்.
"குட் ஈவ்னிங் எவ்ரிவன்... நைஸ் டு மீட் யூ ஆல் ஹியர்..." என அனுபல்லவி மைக்கில் பேச ஆரம்பிக்கும் போதே அவ் அரங்கம் முழுவதும் கரகோஷங்களால் நிரம்பி வழிந்தன.
சாருமதிக்கு தன் தோழியை எண்ணி பெருமையாக இருந்தது.
பிரணவ்வும் அனுபல்லவியை மெச்சுதலாகப் பார்க்க, அர்ச்சனாவிற்கோ பொறாமைத் தீ கொழுந்து விட்டெரிந்தது.
"ஓக்கே காய்ஸ்... ரொம்ப இழுக்காம நேரா விஷயத்துக்கு வரேன்... எதுக்காக இந்த பார்ட்டி அரேன்ஜ் பண்ணி இருக்கேன்னு உங்க எல்லாருக்கும் நல்லா தெரியும்... பல்லவன் இன்டஸ்ட்ரீஸ் ஃபேக்டரில வர்க் பண்ணுற வசதி குறைந்த நூறு பேரோட குடும்பத்துக்கு வீடு கட்டி கொடுத்து அவங்களுக்கு தேவையான அடிப்படை வசதி எல்லாம் பண்ணி கொடுக்கலாம்னு திட்டம் இட்டிருக்கோம்... முன்னாடியே ஒவ்வொரு வருஷமும் நம்ம கம்பனி சார்பா வசதி இல்லாதவங்களுக்கு இதெல்லாம் பண்ணி கொடுத்துட்டு தான் இருந்தோம்... பட் லாஸ்ட் ஃபைவ் இயர்ஸா சில பிரச்சினைகளால அதைப் பண்ண முடியல..." என அனுபல்லவி கூறும் போதே குழப்பத்தில் பிரணவ்வின் புருவங்கள் முடிச்சிட்டன.
மேலும் தொடர்ந்த அனுபல்லவி, "பட் இனியும் தாமதிக்காம இந்த ப்ராஜெக்டை திரும்ப ஆரம்பிக்கலாம்னு இருக்கோம்... ஏதோ வீடு கட்டி கொடுக்குறோம்னு இல்லாம எல்லாமே தரம் வாய்ந்ததா இருக்கணும்னு விரும்புறேன்... அன்னைக்கே மீட்டிங் வெச்சி எல்லார் கூடவும் பேசிட்டேன்... என்ட் தனிப்பட்ட விதத்துலயும் வெளிய விசாரிச்சு தான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன்... இந்த வருஷத்துக்கான ப்ராஜெக்டை எம்.எல்.க்ரூப்ஸ் ஆஃப் கம்பனீஸுக்கு கொடுக்கலாம்னு இருக்கோம்..." என்கவும் பிரணவ்வின் இதழ்கள் விரிய, அனைவரும் அவனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
பிரணவ் மேடைக்குச் செல்லவும், "கங்கிரேட்ஸ் மிஸ்டர் பிரணவ்..." எனத் தன் கரத்தை அவன் முன் நீட்டினாள் அனுபல்லவி.
மென் முறுவலுடன் அவளின் கரத்தைப் பற்றிய பிரணவ், "தேங்க் யூ மிஸ் பல்லவி..." என்றவன் அனுபல்லவியின் கரத்தை விடாது அவளின் விழிகளையே ஆழ நோக்கினான்.
அவனின் பார்வையோ, 'இனிமே நாம ரெண்டு பேரும் ஒன்னா தான் வர்க் பண்ணணும்...' எனும் விதமாக இருந்தது.
அனுபல்லவிக்கு தான் அனைவரும் பார்க்கிறார்கள் என சங்கடமாக இருக்க, ஒரு புன்னகையுடனே தன் கரத்தை இழுத்துக்கொண்டாள்.
ப்ராஜெக்ட் பற்றி மேலும் சில நிமிடங்கள் பேசிய அனுபல்லவி, "அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லணும்..." என்கவும் அனைவரும் அவளின் முகம் நோக்கினர்.
சிலர் ஏற்கனவே அவள் என்ன கூறப் போகிறாள் என அறிந்திருந்தனர்.
அனுபல்லவி, "இந்த பார்ட்டிய அரேன்ஜ் பண்ணினதுக்கு இன்னொரு முக்கியமான ரீசன் இருக்கு..." என்றவள் சில நொடி அமைதிக்குப் பின், "உங்க எல்லாருக்கும் தெரியும் லாஸ்ட் ஃபைவ் இயர்ஸா நான் ஃபாரின்ல இருந்து தான் கம்பனிய மேனேஜ் பண்ணிட்டு இருந்தேன்... அங்க இருக்குற நம்ம கம்பனி கூட என் பொறுப்புல தான் இருக்கு... சோ இந்தியால இருக்குற நம்ம கம்பனிய இனிமே இவர் தான் மேனேஜ் பண்ண போறார்... அதுக்காக மொத்தமா இங்க கம்பனீஸ நான் பார்த்துக்க மாட்டேன்னு இல்ல... பட் மெய்னா இவர் தான் இனி பார்க்க போறார்..." என பிரதாப்பைக் காட்டினாள்.
பிரணவ் அதிர்ச்சியாக அனுபல்லவியை நோக்க, 'திரும்ப உன்ன சந்திக்குற எந்த சூழ்நிலைக்கும் நான் இடம் தர மாட்டேன் பிரணவ்...' என மனதினுள் நினைத்துக் கொண்டாள் அனுபல்லவி.
'அடடா... அர்ச்சனா... உன் காட்டுல மழை தான்... எனக்கு இருந்த ஒரே தொல்லையும் ஒழிஞ்சது... இனிமே பிரணவ் எனக்கு மட்டும் தான் சொந்தம்... பிரணவ்வோட மொத்த சொத்தையும் அனுபவிக்க போறது இந்த அர்ச்சனா தான்...' என விஷமமாக நினைத்துக் கொண்டாள் அர்ச்சனா.
பின் சில பிஸ்னஸ் பேச்சுகளுடன் பார்ட்டி முடிவடைந்தது.
அனுபல்லவி தன் அலுவலக அறையில் இருந்த ஜன்னல் வழியாக மண்ணை முத்தமிடும் மழைத் துளிகளை ரசித்துக் கொண்டிருந்தாள்.
திடீரென அவளின் முதுகில் பட்ட நன்றாக பழக்கப்பட்ட சூடான மூச்சுக் காற்றில் வேகமாகத் திரும்பிய அனுபல்லவி கால் தடுக்கி கீழே விழப் போக, அவள் விழாமல் தாங்கிய பிரணவ்வின் கரம் அனுபல்லவி அணிந்திருந்த சேலையைத் தாண்டி அவள் வயிற்றில் அழுத்தமாக பதிந்தது.
அனுபல்லவியின் கண்கள் அதிர்ச்சியில் விரிய, பிரணவ்வின் முகமோ பல வித உணர்ச்சிகளைக் காட்டியது.
பிரதாப் ஏதோ கூற வாய் திறக்க, "ஆகாஷ்... வாங்க கிளம்பலாம்... இனிமே நமக்கு இங்க வேலை இல்ல... பெங்களூர் போக டிக்கெட் புக் பண்ணுங்க..." என அழுத்தமாகக் கூறி விட்டு அங்கிருந்து வெளியேறினான்.
ஆகாஷும் பிரணவ்வைத் தொடர்ந்து வெளியேறி விட, தலையைப் பற்றிக் கொண்டு தன் இருக்கையில் அமர்ந்தாள் அனுபல்லவி.
"அனு..." என்ற பிரதாப்பின் குரலில், "இதுக்கு மேல என்னால இங்க இருக்க முடியல மாமா... ரொம்ப கஷ்டமா இருக்கு... நாளைக்கே நான் கிளம்ப ஏற்பாடு பண்ணுங்க..." என்றாள் உடைந்த குரலில்.
"நாளைக்கே நீ கிளம்ப முடியாது அனு... ஆகாஷ் இப்போ தான் பேசினார்... கம்பனி ஃபார்மாலட்டீஸ் படி அவங்க கம்பனி சார்பாவும் ப்ராஜெக்ட் சைன் பண்ண நாம பெங்களூர் போகணும்..." என்றான் பிரதாப்.
"நீங்க போக வேண்டியது தானே... நான் எதுக்கு?" எனக் கேட்டாள் அனுபல்லவி புரியாமல்.
பிரதாப், "எனக்கும் நீ அங்க போறது பிடிக்கல தான்... ஆனா என்ன பண்றது? கம்பனிய நான் பொறுப்பேற்றாலும் நீ தான் பல்லவன் இன்டஸ்ட்ரீஸ் எம்.டி... சோ நீ தான் போய் எல்லாம் பார்த்து சைன் பண்ணணும்..." என்றான் எங்கோ பார்த்தபடி.
எதுவும் கூறாது பெருமூச்சு விட்டாள் அனுபல்லவி.
தாம் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு வந்ததில் இருந்து பிரணவ் சிடு சிடு என்றே இருந்தான்.
ஆகாஷிற்கு அவனிடம் பேசவே பயமாக இருந்தது.
ஒரு பக்கம் என்ன நடந்தது என்ற கேள்வி அவனின் மண்டையைக் குடைந்தது.
"பாஸ்..." என்ற ஆகாஷின் குரலில் ஏதோ சிந்தனையில் மூழ்கிக் கிடந்த பிரணவ் தன்னிலை அடைந்து ஆகாஷைக் கேள்வியாக நோக்கினான்.
ஆகாஷ், "பெங்களூருக்கு உடனே எந்த ஃப்ளைட்டும் இல்ல... நாளைக்கு நைட் தான் டிக்கெட் கிடைச்சிருக்கு..." என்றான் தயக்கமாக.
பிரணவ்வோ அவனுக்கு பதிலளிக்காது கட்டிலில் படுத்தவன் கண்களை மூடி உறங்க ஆரம்பித்தான்.
ஆனால் அவன் மனதிலோ ஏதேதோ குழப்பங்கள்.
************************************
மறுநாள் காலை ஆகாஷிடம் கூட கூறாது அனுபல்லவியை சந்திக்க வந்திருந்தாள் சாருமதி.
"சாரு... வா வா... வந்து உட்கார்..." என அனுபல்லவி புன்னகையுடன் அவளை வரவேற்க, "நான் உட்காருறது இருக்கட்டும்... நீ ஏன் சடன்னா இப்படி ஒரு முடிவெடுத்த? ஆல்ரெடி ஃபைவ் இயர்ஸ் நீ எங்க இருக்க? என்ன பண்ணுற? எதுவுமே தெரியாம இருந்துட்டோம்... இப்போ திரும்ப ஃபாரின் போறேன்னு சொல்ற... அதுவும் அங்க செட்டல் ஆகுறேன்னு வேற சொல்ற... நீ ஏன் பிரச்சினைய பார்த்து பயந்து ஓட நினைக்கிற? அதான் எல்லாம் சோல்வ் ஆகிடுச்சுல்ல... இன்னும் ஏன் நீ எங்கள விட்டு போகணும்னு நினைக்கிற?" எனக் கேட்டாள் சாருமதி ஆற்றாமையில்.
"நான் எங்க போனாலும் இனிமே உன் கூட கான்டாக்ட்ல தான் இருப்பேன் சாரு..." என்றாள் அனுபல்லவி தயக்கமாக.
சாருமதி, "நீ என் கிட்ட சொன்ன விஷயம் தவிர வேற ஏதாவது என் கிட்ட மறைக்கிறியா அனு?" எனக் கேட்டாள் அழுத்தமாக.
ஒரு நொடி அவளை அதிர்வுடன் ஏறிட்ட அனுபல்லவி மறு நொடியே அதனை மறைத்து புன்னகையுடன், "இ...இல்ல சாரு... என்னோட பாஸ்ட் எல்லாம் சொல்லிட்டேன்... இ..இதுக்கு மேல உன் கிட்ட மறைக்க என்ன இருக்கு?" என்றாள் சமாளிப்பாக.
"அப்போ இங்கயே இருக்க வேண்டியது தானே... எதுக்காக எல்லாத்தையும் விட்டு போகணும்னு நினைக்கிற?" என்ற சாருமதியின் கேள்விக்கு பெருமூச்சு விட்ட அனுபல்லவி, "ரொம்ப கஷ்டப்பட்டு இந்த வாழ்க்கைய நான் ஏத்துக்கிட்டு இருக்கேன்... திரும்ப திரும்ப பிரணவ்வ பார்க்கும் போது நான் பழையபடி உடைஞ்சி போயிடுறேன்..." என்றாள் கண்ணீருடன்.
அவளின் கரத்தை ஆதரவாகப் பிடித்த சாருமதி, "அனு... பிரணவ் சார் உன் லைஃப்ல முடிஞ்சி போன சேப்டர்... அவருக்கு உன்ன சுத்தமா ஞாபகம் இல்ல... உனக்கும் வேற ஒருத்தர் கூட கல்யாணம் ஆகிடுச்சு... எப்பவோ நடந்த விஷயத்துக்காக நீ ஏன் இன்னும் ஃபீல் பண்ணுற? அவருக்கும் அர்ச்சனாவுக்கும் கூடிய சீக்கிரம் கல்யாணம் நடக்க போகுது... உங்க ரெண்டு பேரோட பாதையும் ஃபைவ் இயர்ஸ் முன்னாடியே வேற வேறயா பிரிஞ்சிடுச்சு... அப்படியே அவருக்கு உன் ஞாபகம் வந்தாலும் எந்த யூஸும் இல்ல... நீங்க ரெண்டு பேரும் இனிமே சேர முடியாது... அப்படி இருக்குறப்போ எதுக்காக வீணா பயந்து எங்கள விட்டு தள்ளி போக பாக்குற?" எனக் கேட்டாள்.
'யார் என்ன சொன்னாலும் பிரணவ்வோட நினைவுகள் என்னைக்கும் என்னை விட்டு போகாது... அது சுகமான நரக வேதனை... பிரணவ்வுக்கு நான் பொருத்தமானவ இல்ல... அதனால தான் அந்தக் கடவுளே எங்கள பிரிச்சிட்டார் போல...' என வருத்தமாக எண்ணிக் கொண்டாள் அனுபல்லவி.
அனுபல்லவி, "நான் எங்க எப்படி இருந்தாலும் நீ என் பெஸ்ட் ஃப்ரெண்ட் தான்... உனக்கு ஒன்னுன்னா முதல் ஆளா நான் ஓடி வருவேன்... பட் என்னால இங்க இருக்க முடியாது சாரு... பிரணவ் லைஃப்ல என்னால எந்த பிரச்சினையும் வரத நான் விரும்பல... ட்ரை டு அன்டர்ஸ்டேன்ட் மீ..." என்றாள் கெஞ்சலாக.
************************************
"என்னடா நான் பெத்த மகனே... இன்னைக்கு தான் உனக்கு இந்த அப்பனையும் ஆத்தாளையும் பார்க்க வழி தெரிஞ்சதா?" எனக் கேட்டார் பிரதாப்பின் தந்தை சுந்தர்.
"அவனுக்கு எங்கங்க நம்ம ஞாபகம் இருக்க போகுது? அதான் ஒத்த ஆளா மொத்த சொத்தையும் அனுபவிக்கிறான்ல..." என்றார் பிரதாப்பின் தாய் ஜெயந்தி நக்கலாக.
கோபத்தில் பல்லைக் கடித்துக்கொண்டு அவர்கள் இருவரும் இருந்த சிறையைப் பார்த்தவன், "ஜெயிலுக்கு வந்தும் நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் கூட திருந்தவே இல்லல்ல... ச்சே..." என்றான் பிரதாப் ஆத்திரத்துடன்.
"சும்மா நல்லவன் போல பேசாதே டா... நீயும் தானே நாங்க பண்ண எல்லாத்துக்கும் ஒத்து ஊதின..." எனக் கேட்டார் சுந்தர் பதிலுக்கு.
பிரதாப், "ஆமா... அது சின்ன வயசுல இருந்தே நீங்க சொன்னத எல்லாம் உண்மைனு நம்பினேன்... ஆனா என்னோட அம்மா அப்பா மாமாவுக்கு இவ்வளவு பெரிய அநியாயத்தை செஞ்சி இருப்பாங்கன்னு நினைக்கல... உங்களால இன்னைக்கு மாமா முன்னாடியும் அனு முன்னாடியும் நானும் குற்றவாளியா நிற்கிறேன்..." என்றான் வருத்தமாக.
அவனின் பெற்றோரோ பிரதாப்பின் பேச்சில் உதட்டை சுழிக்க, அதனைக் கண்டு கொள்ளாதவன், "இது தான் நான் உங்கள பார்க்க வர கடைசி தடவ... சும்மா சும்மா ஜெயிலர் கிட்ட என் பையனை பார்க்கணும் பையனை பார்க்கணும்னு சண்டை போடாதீங்க... இனிமே எனக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல... இனியாவது திருந்துற வழியா பாருங்க... ஒருவேளை அனு உங்கள மன்னிச்சா அதுக்கப்புறம் நான் யோசிக்கிறேன் உங்கள மன்னிக்கலாமா வேணாமான்னு... இப்போ நான் தனி ஆள் இல்ல... என்னை நம்பி அனு இருக்கா... எனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு... வீணா என்னை சீண்டிப் பார்க்க நினைக்காதீங்க..." என்ற பிரதாப் அவர்களைத் திரும்பியும் பார்க்காமல் அங்கிருந்து சென்றான்.
************************************
ஹோட்டல் அறையில் அடைந்து கிடக்க மனமின்றி இன்றும் அதே பார்க்கில் வந்து கல் பெஞ்ச்சில் படுத்து தீவிர சிந்தனையில் இருந்தான் பிரணவ்.
அன்று போலவே இன்றும் "அப்பா..." என ஒரு குழந்தையின் உற்சாகமான குரல் கேட்கவும் மெல்ல கண் விழித்துப் பார்த்தவன் அன்று இருந்த அதே குழந்தை பிரணவ்வைப் பார்த்து புன்னகைத்தபடி நின்றது.
அதன் குரலில் மெய் சிலிர்த்தவன் அக் குழந்தையை நோக்கி புன்னகையுடன் அடி எடுத்து வைக்க, பிரணவ்விற்கு முன்னே அவனைத் தாண்டி நடந்த ஒரு ஆடவன் அக் குழந்தையைத் தூக்கினான்.
"அப்பா வரும் வரைக்கும் கொஞ்சம் வெய்ட் பண்ண முடியாதா? அப்படி என்ன அவசரம்?" என அவ் ஆடவன் அக் குழந்தையிடம் கேட்கவும் அக் குழந்தையோ அவனுக்கு பதிலளிக்காது இடுப்பில் கையூன்றி அவனை முறைத்தது.
ஏதோ பழக்கப்பட்ட குரலில் பிரணவ் புருவம் உயர்த்தி அவ் ஆடவன் திரும்பும் வரை காத்திருக்க, குழந்தையைத் தூக்கிக்கொண்டு திரும்பிய பிரதாப்பைக் கண்டு ஏகத்துக்கும் அதிர்ந்தான் பிரணவ்.
பிரணவ்வை அங்கே எதிர்ப்பார்க்காத பிரதாப்பும் ஒரு நொடி அதிர்ந்தவன், "நீங்க..." என ஏதோ கூற வர, "இது உங்க குழந்தையா?" எனக் கேட்டான் பிரணவ் அக் குழந்தையின் மீது பார்வையைப் பதித்தபடி.
"ஆமா... என் குழந்தை தான்..." என பிரதாப் பதிலளிக்கவும், "அ...அம்மா?" எனக் கேட்டான் பிரணவ் தயக்கமாக.
பிரதாப் பதிலளிக்க எடுத்த இடைவெளியில் பிரணவ்வின் மனம் காரணமே இன்றி இரு மடங்கு வேகத்தில் துடித்தது.
"அனு தான்... என்னோடதும் அனுவோடதும் குழந்தை... பெயர் பிரஜன்..." எனப் பிரதாப் கண்கள் மின்ன புன்னகையுடன் கூறவும் பிரணவ்வின் மனம் சுக்குநூறாக உடைந்தது.
அதன் காரணம் எதுவும் அவன் அறியவில்லை.
"சரி அப்போ நாங்க கிளம்புறோம்... அனு எங்களுக்காக வெய்ட் பண்ணிட்டு இருப்பா..." எனப் பிரதாப் கூறவும் அவனின் கரத்தில் இருந்த குழந்தை பிரதாப்பை முறைத்து விட்டு பிரணவ்வைப் பார்த்து புன்னகைத்தது.
அப் பார்வை பிரணவ்வை ஏதோ செய்ய, குழந்தையின் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான்.
பின் பிரதாப் தன் குழந்தையை அழைத்துக்கொண்டு அங்கிருந்து செல்லவும் பிரணவ் தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்தான்.
"அம்மா..." எனக் கூச்சலிட்டுக் கொண்டு வந்த மகனைத் தூக்கி ஆரத் தழுவி முத்தமிட்டாள் அனுபல்லவி.
அனுபல்லவி, "பிரஜு கண்ணா வந்துட்டீங்களா?" எனக் கேட்டாள் பாசமாக.
அவள் கழுத்தில் மாலையாக கரங்களைக் கோர்த்த பிரஜன், "ஆமா அம்மா... பிரஜுக்கு இங்க பிடிக்கவே இல்ல... நம்ம வீட்டுல இருக்கும் போது நீங்க பிரஜு கூடவே இருப்பீங்க... ஆனா இங்க வந்ததுல இருந்து என்னை கேர் டேக்கர் கிட்ட விடுறீங்க... ஐ மிஸ் யூ மா..." என்றான் மழலைக் குரலில் தேம்பியபடி.
பிரஜன் அவ்வாறு கூறவும் பிரணவ் தன் கடந்த காலம் பற்றி தன்னிடம் கூறியது தான் அவளுக்கு நினைவு வந்து கண்கள் கலங்கின.
"இனிமே அம்மா உன்ன கேர் டேக்கர் கிட்ட விட மாட்டேன்... ஓக்கேயா? நாம இப்போ பெங்களூர் போய்ட்டு அங்க இருந்து சிங்கப்பூர் போயிடுவோம்... திரும்ப இங்க வர மாட்டோம்..." என்றாள் அனுபல்லவி புன்னகையுடன்.
"ஹை... ஜாலி ஜாலி... வீட்டுக்கு போக போறோம்... ஆனா..." என அனுபல்லவியிடம் இருந்து இறங்கி துள்ளிக் குதித்த பிரஜனின் முகம் மறு நொடியே வாடி ஏதோ கூற வர, அதற்குள் பிரதாப் அங்கே வரவும் அவனைக் கண்டு கோபத்தில் முகத்தைத் திருப்பினான் பிரஜன்.
அவனின் கோபத்தைக் கண்டு பிரதாப்பிற்கு தாங்க மாட்டாமல் சிரிப்பு வந்தது.
எங்கு சிரித்தால் தன் செல்லக் குழந்தையின் கோபம் அதிகரித்து விடுமோ என்று சோகமாக இருப்பது போல் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டான் பிரதாப்.
அதனைக் கண்டு உதட்டைச் சுழித்த பிரஜன், "அம்மா... நாம மட்டும் தனியா சிங்கப்பூர் போலாம்... வேற யார் கூடவும் நான் பேச மாட்டேன்..." என மழலை மொழியில் தன் கோபத்தை வெளிப்படுத்திய பிரஜன் பிரதாப்பை முறைத்துக் கொண்டே அங்கிருந்து ஓடி விட்டான்.
இருவரையும் புரியாமல் நோக்கிய அனுபல்லவி, "என்னாச்சு? எதுக்கு பிரஜன் உங்க கூட கோவமா இருக்கான்?" எனக் கேட்டாள்.
"அ..அது... ஒன்னும் இல்ல அனு... சும்மா தான்... அவன் கேட்ட டாய் ஒன்ன வாங்கி கொடுக்கல... அதான் கோவமா இருக்கான்... நான் அவன சமாதானப்படுத்துறேன்..." என்றான் பிரதாப் சமாளிப்பாக.
"ம்ம்ம்..." என்று மட்டும் கூறிய அனுபல்லவி சிங்கப்பூர் செல்ல தன் உடமைகளை அடுக்கி வைக்க, "கண்டிப்பா அங்க போயே ஆகணுமா அனு?" எனத் தயக்கமாகக் கேட்டான் பிரதாப்.
அவனைப் பாராமலே, "என் முடிவுல எந்த மாற்றமும் இல்ல..." என்றாள் அனுபல்லவி.
பிரதாப், "ஈவ்னிங் ஃப்ளைட்ல பெங்களூர் கிளம்பலாம்... சிங்கப்பூர் போக இன்னைக்கு நைட் ஃப்ளைட் புக் பண்ணி இருக்கேன்..." என்றவன் அங்கிருந்து செல்லவும் தந்தையின் அறைக்குள் நுழைந்தாள் அனுபல்லவி.
"அப்பா..." என உறங்கிக் கொண்டிருந்தவரின் தலையை வருடவும் அவர் கண் விழிக்க, "நாளைக்கே சிங்கப்பூர் கிளம்புறோம் பா... திரும்ப இங்க வரதா ஐடியா இல்ல... அங்க உங்களுக்கு ட்ரீட்மெண்ட்டுக்கு ஏற்பாடு பண்ணி இருக்கேன்... உங்கள இந்த நிலைமைக்கு கொண்டு வந்தவங்கள வெளியவே வர முடியாதபடி பண்ணிட்டேன்... இப்போ உங்களுக்கு சந்தோஷமா ப்பா?" எனக் கேட்டாள் அனுபல்லவி புன்னகையுடன்.
"ஆ... ஆனா... நீ... நீ..." என ஏதோ கூற முயன்றவரின் கண்கள் கலங்கின.
கசந்த புன்னகையுடன் அதனைத் துடைத்து விட்ட அனுபல்லவி, "எனக்குன்னு இனிமே ஒன்னும் இல்லப்பா... இனிமே வாழ போற வாழ்க்கை என் பிரஜனுக்காக மட்டும் தான்..." என்றாள் எங்கோ வெறித்தபடி.
************************************
"பிரணவ் கண்ணா... வந்துட்டியாப்பா? ட்ராவல் எல்லாம் எப்படி இருந்தது?" எனக் கேட்டார் லக்ஷ்மி புன்னகையுடன்.
"ஃபைன் மா..." என்ற பிரணவ்வின் முகத்தில் மருந்துக்கும் புன்னகை இல்லை.
"கங்கிரேட்ஸ் மை சன்... எனக்கு தெரியும் நீ கண்டிப்பா இந்த ப்ராஜெக்ட்ட நம்ம கம்பனிக்கு வாங்கிடுவேன்னு..." என்றார் மூர்த்தி பிரணவ்வை அணைத்து.
"ஆமா... என் மருமகள் எங்க? நேரா நம்ம வீட்டுக்கே கூட்டிட்டு வந்து இருக்கலாம்ல..." என லக்ஷ்மி கேட்கவும், "ப்ச்... அவ வீட்டுக்கு போய்ட்டா... எப்படியும் கொஞ்ச நேரத்துல இங்க தானே வரப் போறா..." எனச் சலிப்பாகக் கூறிய பிரணவ்,
பிரணவ், "இதுக்கு முன்னாடி அம்மாவும் நீங்களும் தானே பிஸ்னஸை கவனிச்சீங்க... அதுவும் இல்லாம அம்மாவுக்கு பிஸ்னஸ்னா ரொம்ப பிடிக்கும்னு எனக்கு தெரியும்... இனிமே அவங்களும் பழையபடி பிஸ்னஸை பார்த்துக்கட்டும்... ரொம்ப பெரிய கான்ட்ராக் சைன் பண்ண போறோம்... இந்த ப்ராஜெக்ட் சக்சஸ்ஃபுல்லா முடிஞ்சா நம்ம கம்பனி பெயர் உலகம் ஃபுல்லா ஃபேமஸ் ஆகும்... சோ இந்த நல்ல காரியம் உங்க ரெண்டு பேர் ஆசிர்வாதத்தோட ஆரம்பிக்க விரும்புறேன்..." என்கவும் அவர்களால் மறுக்க இயலவில்லை.
மாலை மூர்த்தி, லக்ஷ்மி, பிரணவ் மூவரும் தம் அலுவலகத்தில் அனுபல்லவி வரும் வரை காத்திருந்தனர்.
அதே நேரம் அர்ச்சனா அங்கு வர, "நீ எதுக்கு இங்க வந்த? இம்பார்ட்டன்ட் மீட்டிங் நடக்க போறது தெரியும்ல..." எனக் கேட்டான் பிரணவ் கடுமையாக.
"அவள ஏன் பா திட்டுற? என் மருமகளுக்கு இல்லாத உரிமையா? அவ தானே இனிமே உன் கூட சேர்ந்து நம்ம பிஸ்னஸ் எல்லாம் கவனிச்சிக்க போறா..." என லக்ஷ்மி கூறவும் அர்ச்சனாவிற்கு குளு குளு என்றிருந்தது.
பிரணவ்வோ எதுவும் கூற முடியாமல் ஆத்திரத்தில் பல்லைக் கடித்தான்.
சரியாக ஆகாஷ் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வர, அவனைத் தொடர்ந்து தனக்கே உரிய கம்பீரத்துடன் மிடுக்காக நடந்து வந்தாள் அனுபல்லவி.
பிரதாப்பும் அனுபல்லவியுடன் ஜோடியாக வந்திருப்பதைக் கண்டு பிரணவ்வின் கண்கள் சிவந்தன.
அனுபல்லவியை இதற்கு முன்னர் தம் கம்பனியில் கண்டுள்ளதால் மூர்த்தியும் லக்ஷ்மியும் அதிர்ந்து, "இது..." என ஏதோ கூற வர, "இவ தான் பல்லவன் இன்டஸ்ட்ரீஸ் எம்.டி அத்தை... அப்புறம் இது அவ புருஷன் பிரதாப்..." என்றாள் அர்ச்சனா முந்திக்கொண்டு.
அவளுக்கு அனுபல்லவியின் முன் பிரணவ் மீது தனக்கு இருந்த உரிமையைக் காட்ட வேண்டிய தேவை இருந்தது.
அதனால் தான் அனைவரையும் முந்திக்கொண்டு பதிலளித்தாள்.
அனுபல்லவி அவளை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை.
பிரணவ், "அவங்க ஒரு பெரிய கம்பனியோட எம்.டி... முதல்ல அடுத்தவங்களுக்கு எப்படி மரியாதை தரணும்னு கத்துக்கோ..." என்றான் அர்ச்சனாவிடம் கடுமையாக.
அனுபல்லவியின் இதழ்கள் இப்போது ஏளனமாக வளைந்தன.
தன்னை அனுபல்லவியின் முன் பிரணவ் அவமானப்படுத்திய கோபத்தில் அனுபல்லவியை முறைத்தாள் அர்ச்சனா.
"உட்காருங்க ரெண்டு பேரும்... பட் மிஸ்டர் பல்லவன் தானே அந்த கம்பனி எம்.டி..." எனக் கேட்டார் மூர்த்தி புரியாமல்.
"பல்லவனோட ஒரே பொண்ணு தான் நான்... அனுபல்லவி..." என்றாள் இருக்கையில் வாகாக அமர்ந்தபடி.
லக்ஷ்மியோ அனுபல்லவி வந்ததில் இருந்து அவளையே பார்வையால் அளந்து கொண்டிருந்தார்.
பல்லைக் கடித்த பிரணவ் அனுபல்லவியின் முன் ஒரு கோப்பைத் தூக்கிப் போட்டான்.
அனுபல்லவி எதுவும் கூறாமல் அக் கோப்பைப் படித்து விட்டு கையொப்பமிட முனைய, "அம்மா..." எனக் கத்திக்கொண்டு அவ் அறைக்குள் நுழைந்தான் பிரஜன்.
அவனைத் தொடர்ந்து ஓடி வந்த நடுத்தர வயது ஒருவர், "சாரி சார்... சாரி மேடம்... தம்பி எவ்வளவு சொல்லியும் கேட்காம திடீர்னு கார்ல இருந்து இறங்கி ஓடி வந்துட்டார்..." என்றார் தயக்கமாக.
பிரஜனை அங்கு கண்டதும் அனுபல்லவியின் உடல் நடுங்க, இதயம் இரு மடங்கு வேகத்தில் துடித்தது.
அதே சமயம், "என்னங்க... இந்தப் பையன் நம்ம பிரணவ் சின்ன வயசுல இருந்தது போலவே இருக்கான்ல..." என்றார் லக்ஷ்மி தன்னை மறந்து.
பயத்தில் எச்சில் விழுங்கிய அனுபல்லவி அவசரமாக பிரஜனை நெருங்கி, "பிரஜு... அம்மா உன்ன கார்ல தானே வெய்ட் பண்ண சொன்னேன்... நீ எதுக்கு இங்க வந்த? போ... ட்ரைவர் அங்கிள் கூட போய் கார்ல வெய்ட் பண்ணு..." என்றாள் கடுமையாக.
அன்னையின் கோபத்தில் முகம் வாடிய பாலகன் அனுபல்லவியிடம் இருந்து விலகி ஓடிச் சென்று பிரணவ்வின் கால்களைக் கட்டிக் கொண்டது.
அனைவரும் குழந்தையைப் புரியாமல் நோக்க, "ஏன் பா நீங்க பிரஜுவ பார்க்க வரல? பிரஜுவ பார்க்ல பார்த்தும் ஏன் பேசல? பிரஜுக்கு ரொம்ப சேட் ஆகிடுச்சு... ஏன் நீங்க பிரஜுவ தூக்கல?" என வருத்தமாகக் கேட்ட பிரஜன் தன் தாயைப் பார்த்து, "பிரஜு குட் பாயா கார்ல தான் வெய்ட் பண்ணேன் மா... அப்போ தான் இந்த பிள்டிங்குக்கு வெளிய அப்பாவோட ஃபோட்டோ பெரிசா மாட்டி இருக்குறதைப் பார்த்ததும் ஓடி வந்தேன்..." என்றான் கண்கள் பளிச்சிட.
பிரஜன் முன்னரே பிரணவ்வை சந்தித்ததாகக் கூறவும் பிரதாப்பைக் குற்றம் சாட்டும் பார்வை பார்த்தாள் அனுபல்லவி.
பிரணவ் குழந்தைக்கு பதிலளிக்காது அமைதியாக இருக்க, "ஹேய்... யாரைப் பார்த்து நீ அப்பான்னு சொல்ற? அதோ நிக்கிறான் உன் அப்பா..." என பிரதாப்பைக் கை காட்டி அர்ச்சனா கடுமையாகக் கூறவும் குழந்தை பயந்து பிரணவ்வின் பின்னால் ஒளிந்து கொண்டது.
அர்ச்சனா குழந்தையைக் கடிந்து கொள்ளவும் பிரணவ் அவளை விழிகளாலேயே சுட்டெரிக்க, கப்சிப் என வாயை மூடிக் கொண்டாள் அர்ச்சனா.
இவ்வளவு நேரமும் உடல் நடுங்க நின்று கொண்டிருந்த அனுபல்லவி தன் முன்னே தன் மகனை அர்ச்சனா திட்டவும் ஆவேசமானவள் அர்ச்சனாவை முறைத்து விட்டு பிரஜனை தன்னை நோக்கி இழுத்தாள் கோபமாக.
பிரஜனோ பிரணவ்வை இறுக்கிக் கட்டிக்கொள்ள, "பிரஜு... இப்போ அம்மா கிட்ட வரப் போறியா இல்லையா?" எனக் கோபமாகக் கேட்டபடி பிரஜனை மீண்டும் இழுத்தாள் அனுபல்லவி.
அனுபல்லவியின் கரத்தை பற்றிய பிரணவ் அவளை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்து விட்டு, "அப்பா உங்க அம்மா கூட கொஞ்சம் பேச வேண்டி இருக்கு... அது வரைக்கும் அங்கிள் கூட போய் வெளிய விளையாடுறியா?" எனப் பிரஜனிடம் குனிந்து புன்னகையுடன் கேட்கவும், "ஓக்கே ப்பா..." என்றான் பிரஜன் புன்னகையுடன்.
பிரணவ் அனுபல்லவியின் கார் ட்ரைவரைத் திரும்பிப் பார்க்கவும் அவர் பிரஜனை அழைத்துக்கொண்டு வெளியேறினார்.
அனுபல்லவி பிரணவ் பிடித்திருந்த தன் கரத்தையே வெறித்துக் கொண்டிருந்தாள்.
அவளின் கரத்தை விட்ட பிரணவ், "இப்போ சொல்லு... ஏன் இப்படி எல்லாம் பண்ணுற?" எனக் கேட்டான் அழுத்தமாக.
அனுபல்லவியோ எதுவும் கூறாது தலை குனிந்து நின்றிருக்க, "உன்ன தான் கேட்குறேன்... வாயைத் திறந்து பதில் சொல்லு பல்லவி..." என அவளின் தோளைப் பற்றி உலுக்கி ஆவேசமாகக் கேட்டான் பிரணவ்.
அப்போதும் அனுபல்லவி அமைதியாக இருக்க, "பிரணவ்... என்ன பண்ணிட்டு இருக்க நீ? அவ புருஷன் முன்னாடியே இப்படி நடந்துக்குற..." எனக் கடிந்து கொண்டார் மூர்த்தி.
"யாருக்கு யாரு புருஷன்? இதோ இவரா?" எனப் பிரதாப்பைக் காட்டிக் கேட்ட பிரணவ், "நீ தான் இவ புருஷனா? சொல்லு? நீ தான் பிரஜனோட அப்பாவா?" எனக் கேட்டான் பிரதாப்பிடம் கடுமையாக.
பிரதாப் அமைதியாக இருக்க, "பிரணவ்... ஏன் இப்படி எல்லாம் நடந்துக்குற? அதுவும் அர்ச்சனா முன்னாடியே... அவ மனசு எவ்வளவு கஷ்டப்படும்? அடுத்தவன் பொண்டாட்டி கிட்ட அவன் முன்னாடியே இப்படி நடந்துக்கலாமா?" எனக் கேட்டார் லக்ஷ்மியும் கோபமாக.
அனுபல்லவியின் அருகில் சென்ற பிரணவ், "யாரு அடுத்தவன் பொண்டாட்டி? நான் என் பொண்டாட்டி கிட்ட கேள்வி கேட்டுட்டு இருக்கேன்... நான் தொட்டு தாலி கட்டின பொண்டாட்டி கிட்ட..." என ஆவேசமாகக் கூறியவன் அனுபல்லவியின் கழுத்தில் தொங்கிய தாலியைத் தூக்கிக் காட்டவும் அனுபல்லவி, பிரதாப் தவிர அனைவருமே அதிர்ந்தனர்.
அர்ச்சனா, "பி... பிரணவ்... பொய் சொல்லாதீங்க... நானும் நீங்களும் தான் காதலிச்சோம்... நமக்கு இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம் நடக்க போகுது... பிரதாப் தான் அனு புருஷன்..." என்கவும், "ஏய்..." எனக் கத்தி விரல் நீட்டி எச்சரித்த பிரணவ், "எனக்கு பழசு மறந்ததைப் பயன்படுத்தி நீ இதுவரை போட்ட நாடகம் எல்லாம் போதும்... உன்ன நான் அப்புறம் கவனிச்சுக்குறேன்... இப்போ நான் என் பொண்டாட்டி கிட்ட கேட்க வேண்டிய கேள்வி நிறைய இருக்கு..." என்றான் அழுத்தமாக.
பிரணவ் கூறிய செய்தியில் லக்ஷ்மியும் மூர்த்தியும் அதிர்ந்து அர்ச்சனாவை நோக்கினர்.
'இவனுக்கு எப்போ பழசு ஞாபகம் வந்தது?' என அர்ச்சனா யோசித்துக் கொண்டிருக்க, "பாஸ்... உங்களுக்கும் அனுவுக்கும் எப்போ கல்யாணம் ஆச்சு?" எனக் கேட்டான் இவ்வளவு நேரமும் அதிர்ச்சியில் நின்றிருந்த ஆகாஷ்.
மென் பஞ்சு மெத்தையில் தன்னவளை மெதுவாக கிடத்திய பிரணவ் அவள் மேல் படர்ந்து கழுத்தில் முகத்தைப் புதைத்தான்.
அனுபல்லவி, "பி...பிரணவ்..." எனத் தயக்கமாக அழைக்கவும், "பவி... நி...நிஜமாவே உனக்கு சம்மதமா?" என அவளின் கண்களைப் பார்த்து கேட்ட பிரணவ்வின் கண்களில் தெரிந்த ஏக்கம் அனுபல்லவியின் கன்னத்தை வெட்கத்தில் சிவக்கச் செய்து முகத்தில் மென் முறுவல் தோன்றச் செய்தது.
சில நிமிடங்களில் திடீரென அனுபல்லவியை விட்டு விலகிய பிரணவ்வைப் புரியாமல் பார்த்த அனுபல்லவி, "எ... என்னாச்சு?" எனக் கேட்டாள் தயக்கமாக.
அவளின் கேள்விக்கு பதிலளிக்காது எழுந்து கொண்ட பிரணவ் அவ் அறையில் இருந்த கப்போர்டைத் திறந்து எதையோ எடுத்து வந்தான்.
அனுபல்லவியின் அருகே வந்தவன் அவளை கைப் பிடித்து எழுப்பி அவ் வீட்டில் இருந்த ஒரு பூஜை அறைக்கு அழைத்துச் சென்றான்.
அனுபல்லவி அவனின் செயல்களை புரியாமல் நோக்க, பிரணவ் தன் இடக் கரத்தால் அவளின் கரத்தைப் பற்றியவன் தன் வலக் கரத்தை விரித்தான்.
அவனின் உள்ளங்கையில் மின்னிய பொன் தாலியை அதிர்ச்சியுடன் பார்த்தாள் அனுபல்லவி.
"உன் கிட்ட ப்ரபோஸ் பண்ணும் போது இதைக் கொடுத்து தான் பண்ணணும்னு ஆசை ஆசையா ரெடி பண்ணேன் பவி... ஆனா அன்னைக்கு பார்ட்டில நடந்த பிரச்சினையால அதுக்கு வாய்ப்பு இல்லாம போயிடுச்சு... இப்போ தான் அதுக்கு சந்தர்ப்பம் அமைஞ்சிருக்கு..." என பிரணவ் கூறவும் அனுபல்லவி அவனைக் கலங்கிய கண்களுடன் நோக்கினாள்.
பிரணவ், "மனசு ரொம்ப அடிச்சிக்கிது பவி... ஏதோ தப்பா நடக்க போறது போல..." என வருத்தமாகக் கூறவும் அவனின் கரத்தை அழுத்திய அனுபல்லவி, "எதுவும் நடக்காது பிரணவ்... என்ன நடந்தாலும் உங்களுக்காக நான் இருப்பேன்..." என்றாள் ஆறுதலாய்.
"பவி... ஐ நீட் யூ பேட்லி..." எனப் பிரணவ் கூறவும் அனுபல்லவியின் காது மடல் சிவக்க, "பட் என்னால உன்ன யாரும் தப்பா பேசிட கூடாது..." எனப் பிரணவ் கூறவும் அவனைப் புரியாமல் நோக்கினாள் அனுபல்லவி.
"எனக்குன்னு யாரும் இல்லயே... என் மேல யாருக்கும் நிஜமான அக்கறை இல்லயே... காதலிக்க நான் தகுதியானவன் தானா? இப்படி பல எண்ணங்களோட நான் இருக்கும் போது தான் நீ என் வாழ்க்கைல வந்த... உனக்காக நான் இருப்பேன்னு நம்பிக்கை தந்த... அதே போல இருக்க... நீ என் லைஃப்ல கிடைச்ச மிகப் பெரிய வரம்... என்னோட தேவதை... இந்த தேவதை எனக்கே எனக்கா என் கடைசி மூச்சு வரை இருக்கணும்னு விரும்புறேன்..." என்ற பிரணவ் தன் கரத்தில் இருந்த தாலியை அனுபல்லவியின் கழுத்தின் அருகே கொண்டு செல்ல, அனுபல்லவியோ தன்னவனையே அதிர்ச்சியுடன் நோக்கினாள்.
"சபை கூட்டி, மந்திரம் சொல்லி, எல்லாரோட ஆசிர்வாதத்தோடும் உன் கழுத்துல மூணு முடிச்சிட்டு ஊரறிய உன்ன என் மனைவியா ஏத்துக்கணும்னு தான் எனக்கும் ஆசை... ஆனா இப்போ இந்த தாலியைக் கட்ட சொல்லி தான் என் மனசு சொல்லுது... உன் விஷயத்துல இது வரைக்கும் நான் என் மனசு சொல்றத மட்டும் தான் கேட்டு இருக்கேன்... இப்பவும் அதையே செய்ய விரும்புறேன்..." என்ற பிரணவ் அனுபல்லவியின் முகத்தை சம்மதத்தை எதிர்ப்பார்த்து நோக்க, இதழ்கள் புன்முறுவல் பூக்க கண்களை மூடி சம்மதமாக தலை குனிந்து நின்றாள் அனுபல்லவி.
மறு நொடியே புன்னகையுடன் தன்னவளின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளை தன் சரி பாதி ஆக்கிக் கொண்டான் பிரணவ்.
கண்கள் மகிழ்ச்சியில் கண்ணீரை சிந்த, கண்களில் காதலும் மகிழ்ச்சியும் போட்டி போட, இருவரின் விழிகளும் தம் இணைகளுடன் சங்கமித்தன.
பிரணவ் தன்னவளின் முகத்தை ஏந்தி அவளின் நுதலில் தன் காதல் சின்னத்தைப் பதிக்க, "லவ் யூ பிரணவ்..." என அவனை அணைத்துக் கொண்டாள் அனுபல்லவி.
பதிலுக்கு தன்னவளை இறுக்கி அணைத்த பிரணவ், "ஐ லவ் யூ பவி..." என முதல் முறை வார்த்தையாலும் தன் காதலை வெளிப்படுத்தினான்.
"ரொம்ப சீக்கிரமா சொல்லிட்டீங்க..." என அனுபல்லவி அவனின் அணைப்பில் இருந்து விடுபடாமலே குறைபட, "வெறும் வார்த்தையால சொல்லுறத விட என் காதலை ஒவ்வொரு பார்வையிலும் செயலிலும் உன்ன உணர வைக்க நினைச்சேன்... ஆனா என் பொண்டாட்டியோட மனசுல இருக்குற குறை எனக்கு தெரியாதா? எத்தனை தடவ நான் லவ் யூ சொல்லலன்னு ஃபீல் பண்ணி இருப்ப..." என்றான் பிரணவ் தன்னவளை சரியாகக் கணித்து.
அவனின் நெஞ்சில் முகம் புதைத்த அனுபல்லவி, "நீங்க பொண்டாட்டின்னு சொல்றது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குங்க... இனிமே நான் பெருமையா சொல்லிக்கலாம் நான் தான் பிரணவ் ராஜோட வைஃப்னு..." என்றாள் கண்கள் மின்ன.
"ம்ஹ்ம்..." என அனுபல்லவியைத் தன்னிடம் இருந்து விலக்கிய பிரணவ், "எனக்கு தான் பவியோட புருஷன்னு சொல்லிக்க பெருமையா இருக்கு..." என்றான் காதலுடன்.
அனுபல்லவியின் இதழ்கள் விரிய, அதனை ஆசை தீர ரசித்தவன் அனுபல்லவியின் இடையைப் பிடித்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு, "பொண்டாட்டின்னு சொன்னா பிடிச்சிருக்குன்னு சொல்ற... பொண்டாட்டியோட கடமைய செய்ய மாட்டியா அப்போ?" எனக் கேட்டான் பிரணவ் குறும்பாக.
பிரணவ்வின் கண்களில் இருந்த குறும்பை அ
கவதானிக்காத அனுபல்லவி, "என்ன கடமை? டெய்லி உங்களுக்கு சமைச்சு போடணுமா?" எனக் கேட்டாள் புரியாமல்.
அவளின் நெற்றியோடு நெற்றி முட்டிய பிரணவ், "அட மக்குப் பொண்டாட்டி... புருஷனுக்கு சமைச்சு கொடுக்குறது தான் பொண்டாட்டியோட கடமையா? அதுக்கு எதுக்கு பொண்டாட்டி? நான் பேசாம வேலைக்காரியே வெச்சிருப்பேனே... இது வேற டிப்பார்ட்மென்ட்..." என்றவன் அனுபல்லவியின் காதில், "இன்னைக்கு தான் நமக்கு கல்யாணம் ஆச்சு... அதனால இன்னைக்கு நமக்கு ஃபர்ஸ்ட் நைட்..." எனக் கிசுகிசுக்கவும் அனுபல்லவியின் முகம் செவ்வானமாய் சிவந்தது.
"என்ன பதிலையே காணோம்?" என தன் மீசையால் அனுபல்லவியின் கழுத்து வளைவில் குறுகுறுப்பு ஊட்டியபடி பிரணவ் கேட்கவும் கூச்சத்தில் நெளிந்த அனுபல்லவி, "போங்க பிரணவ்..." என்று விட்டு அதற்கு எதிராய் அவனின் நெஞ்சில் முகம் புதைத்தாள்.
அதனை சம்மதமாக ஏற்ற பிரணவ் அனுபல்லவியைப் பூக்குவியலைப் போல் தன் கரத்தில் ஏந்திச் சென்று மஞ்சத்தில் கிடத்தினான்.
அனுபல்லவி விழிகளைத் திறவாமல் இருக்க, "பவி... ஓப்பன் யுவர் ஐஸ்..." எனப் பிரணவ் கட்டளையிட, அவளோ மறுப்பாகத் தலையசைத்தாள்.
"சரி அப்போ நான் கிளம்புறேன்... உனக்கு இஷ்டம் இல்லை போல..." எனப் பொய்யாகக் கூறவும் சட்டென விழிகளைத் திறந்த அனுபல்லவி, "எனக்கு ஓக்கே பிரணவ்..." என்றாள் பதட்டமாக.
மென் புன்னகை பூத்த பிரணவ் பதட்டத்தைத் தத்தெடுத்து இருந்த அனுபல்லவியின் விழிகளில் மெதுவாக இதழ் பதிக்கவும் அனுபல்லவியின் விழிகள் மீண்டும் நாணத்தில் மூடிக்கொள்ள, தன்னவளின் இதழ்த் தேன் பருகி இல்லறத்தை நல்லறமாகத் துவங்கி வைத்தான் பிரணவ்.
************************************
ஊசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவுக்கு பிரணவ்வின் அலுவலக அறை அமைதியாக இருந்தது.
அனுபல்லவி மற்றும் பிரணவ்வின் திருமணச் செய்தி அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தது.
வெகுநேரம் தலை குனிந்து நின்றிருந்த அனுபல்லவி, "மாமா... நாம கிளம்பலாம்... ஃப்ளைட்டுக்கு டைம் ஆச்சு..." எனக் கதவை நோக்கி நடக்க, "நான் இன்னும் பேசி முடிக்கல..." என்றான் பிரணவ் அழுத்தமாக.
ஒரு நொடி அவனின் குரலில் நின்ற அனுபல்லவி மீண்டும் கதவை நோக்கி நடக்க, "இன்னும் ஒரு அடி எடுத்து வெச்சாலும் அதுக்கு அப்புறம் நடக்குறதே வேற..." என்றான் பிரணவ் பல்லைக் கடித்துக்கொண்டு.
அனுபல்லவியோ அவனின் வார்த்தைகளைப் பொருட்படுத்தாது மேலும் முன்னேறவும் இரண்டே எட்டில் அவளை நெருங்கி, "சொல்லிட்டே இருக்கேன்... கொஞ்சம் கூட கண்டுக்காம போற..." என்று விட்டு அனுபல்லவியின் கரத்தைப் பிடித்து இழுத்து அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் பிரணவ்.
பிரணவ்வின் அடியில் அனுபல்லவி தள்ளிச் சென்று விழுக, உதட்டோரம் கிழிந்து இரத்தம் வடிந்தது.
"டேய்..." "பிரணவ்" "பாஸ்" என்ற அதிர்ச்சியான குரல்கள் ஒரே நேரத்தில் அறையில் ஒலித்தன.
கீழே விழுந்து கிடந்த மனைவியின் கரத்தை அழுத்தப் பற்றித் தூக்கிய பிரணவ், "எனக்கு தானே பழசு மறந்து போச்சு... உனக்கு என்ன டி வந்தது? சொல்லு... உனக்கு என் கிட்ட சொல்லி இருக்க முடியும்ல... என்ன தைரியத்துல நீ என் பையனையும் என் கிட்ட இருந்து பிரிச்சு அவன அப்பா பாசத்துக்காக ஏங்க விட்டிருப்ப?" எனக் கேட்டான் ஆவேசமாய்.
"பிரணவ்... அனு மேல எந்தத் தப்பும் இல்ல... என்ன நடந்ததுன்னு நான் சொல்றேன்..." எனப் பிரதாப் குறுக்கிட, அவனைத் திரும்பி எரிப்பது போல் பார்த்த பிரணவ், "நான் என் பொண்டாட்டி கிட்ட பேசிட்டு இருக்கேன்..." என்றான் அழுத்தமாய்.
பின் மீண்டும் அனுபல்லவியிடம் திரும்பி, "சொல்லு டி... ஏன் இன்னும் அமைதியா இருக்க? என்ன மனசுல வெச்சிட்டு இதெல்லாம் பண்ண? உன் முழு சம்மதத்தோட தானே உன் கழுத்துல இந்தத் தாலிய கட்டினேன்..." என அவளைப் போட்டு உலுக்கினான்.
அனைவரும் பார்வையாளர்களாக வாய் மூடி அமைதியாக இருக்க, அனுபல்லவி குனிந்த தலை நிமிரவே இல்லை.
ஆனால் கண்ணீர் மட்டும் அவளின் அனுமதியே இன்றி வழிந்தது.
"ஓக்கே... நீ பதில் சொல்ல மாட்டேல்ல... நானே உனக்கு முக்கியம் இல்லாதப்போ நான் கட்டின தாலி மட்டும் எதுக்கு டி?" எனக் கோபமாக கேட்ட பிரணவ் அனுபல்லவியின் கழுத்தின் தொங்கிய தாலியில் கை வைத்து இழுக்க முயல, சட்டென பிரணவ்வின் கரத்தைப் பற்றித் தடுத்த அனுபல்லவி மறுப்பாகத் தலையசைத்து அவனைக் கெஞ்சலாகப் பார்த்தாள் கண்ணீருடன்.
தன்னவளின் கண்களில் இருந்த வலி பிரணவ்வை ஏதோ செய்ய, மறு நொடியே அனுபல்லவியை விட்டு விலகியவன் தலையை அழுத்தக் கோதி தன்னை சமன் செய்ய முயன்றான்.
பின் பெருமூச்சு விட்டவன் ஆகாஷிடம் திரும்பி, "ஆகாஷ்... நான் என் பையன கூட்டிட்டு என் வீட்டுக்கு கிளம்புறேன்... அவளுக்கு என் மேல தான் காதல் இல்ல... அட்லீஸ்ட் பையன் மேலயாச்சும் கொஞ்சமாவது பாசம் இருந்தா அங்க வர சொல்லு... ஆனா என் பையன இனி ஒரு நிமிஷம் கூட என் கிட்ட இருந்து பிரிக்க முடியாது..." என அழுத்தமாகக் கூறிய பிரணவ் அங்கிருந்து சென்று விட, அதிர்ச்சிக்கு மேல் ஏற்பட்ட அதிர்ச்சியில் அனுபல்லவியை ஒரு பார்வை பார்த்து விட்டு பிரணவ்வைப் பின் தொடர்ந்தனர் மூர்த்தி மற்றும் லக்ஷ்மி.
பிரணவ்விற்கு பழைய நினைவுகள் மீண்டதில் அவர்கள் இருவரின் மனதிலும் வேறு ஒரு பயம் எழுந்திருந்தது.
பிரணவ் நினைவுகளை இழக்கும் முன் தாம் அவனைப் பெற்றவர்கள் இல்லை என்ற உண்மை தெரிந்து அவன் கோபப்பட்டு அங்கிருந்து சென்று தான் அனைத்தும் நடந்திருந்தது.
இப்போது மீண்டும் பழைய நினைவுகள் திரும்பியதில் எங்கு தம்மை வெறுத்து விடுவானோ எனப் பயந்தனர் இருவரும்.
அவர்கள் சென்றதும் அனுபல்லவியை முறைத்த அர்ச்சனா, "அத்த... மாமா..." எனக் கத்திக்கொண்டு அவர்களைத் தொடர்ந்து ஓடினாள்.
அனைவரும் சென்ற பின்னும் அனுபல்லவி குனிந்த தலை நிமிராமல் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்க, "இதை எனக்கு சொல்ல உரிமை இருக்கா இல்லையான்னு தெரியல... நீங்க என்னை எப்படி பார்த்தீங்களோ எனக்கு தெரியாது... மதிக்கு நீங்க ஃப்ரெண்ட் அப்படிங்கிறத தாண்டி நான் உங்கள என் கூடப் பிறக்காத தங்கச்சியா தான் பார்த்தேன்... உங்க அளவுக்கு எனக்கு என் பாஸும் முக்கியம்... நீங்க ஒருவேளை இங்கயே இருந்திருந்தா நானே பாஸ் கிட்ட எல்லா உண்மையையும் சொல்லி இருப்பேன்... ஆனா நீங்க சொல்லாம கொள்ளாம போனதுக்கு அப்புறம் அவருக்கு பழைய ஞாபகங்கள் வந்து என் பல்லவி எங்கன்னு கேட்டா நான் என்ன சொல்லுவேன்... அதனால தான் எதையும் சொல்லல...
அவருக்கு உங்க நினைவுகள் வேணா மறந்து இருக்கலாம்... ஆனா இந்த அஞ்சி வருஷமா எதைத் தேடுறேன்னே தெரியாம தான் தொலைச்ச எதையோ ஒன்ன தேடி எங்க எங்கயோ அலைஞ்சிட்டு தான் இருந்தார்... வெளிய சொல்லவும் முடியாம யார் கிட்ட கேட்குறதுன்னும் தெரியாம என்னன்னே தெரியாம ரொம்ப கஷ்டப்பட்டார்... ஹைதரபாத்துக்கு போறோம்னு சொன்னதும் தான் நான் அவர் முகத்துல அந்த பழைய சிரிப்ப பார்த்தேன்... அது எதனாலன்னு எல்லாம் எனக்கு தெரியல... அவரோட மூளை தான் உங்கள பத்தின நினைவுகள மறந்ததே தவிர அவர் மனசுல எப்பவும் நீங்க மட்டும் தான் இருந்தீங்க...
அர்ச்சனா அவங்க ரெண்டு பேரும் தான் காதலிக்கிறதா சாரையும் மேடமையும் நம்ப வெச்சி பாஸ் கிட்ட சொன்னப்போ கூட காதலின்னு சொல்லப்பட்டவள கூட அவர் தன்னை நெருங்க விடல... வெளிய சொல்லலன்னாலும் நீங்க ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் எவ்வளவு அன்பா இருந்தீங்கன்னு நானே பல தடவ உணர்ந்து இருக்கேன்... உங்களோட இந்த அமைதிக்கு பின்னால நிச்சயம் ஒரு காரணம் இருக்கும்னு எனக்கு தெரியும்... பட் அதைத் தெரிஞ்சிக்குற உரிமை பாஸுக்கு இருக்கு...
நான் சொல்ல எதுவும் இல்ல... யோசிச்சு நடந்துக்கோங்க... இனியாவது பாஸை கஷ்டப்படுத்தாதீங்க... மனசுளவுல அவர் ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கார்... அதனால தான் இவ்வளவு ஆத்திரம்... ஆனா ஒரு அண்ணனா என் தங்கச்சி வாழ்க்கை நல்லா அமையணும்னு ஆசைப்பட்டு கேட்குறேன்... எதுவா இருந்தாலும் பாஸ் கூட பேசி தீர்த்துக்கோங்க... ரெண்டு பேரும் இனிமேலாவது ஒன்னா சந்தோஷமா வாழுங்க..." என்று விட்டு அங்கிருந்து சென்றான் ஆகாஷ்.
ஆகாஷ் சென்றதும் அனுபல்லவி தலையில் அடித்துக்கொண்டு கதற, "அனு... ப்ளீஸ்... அழாதே... வா நாம பிரணவ் வீட்டுக்கு போகலாம்... நீ இந்த நிலமைல இருக்க நானும் ஒரு விதத்துல காரணம்... நானே பிரணவ் கிட்ட எல்லா உண்மையையும் சொல்றேன்... நான் பண்ண தப்புக்கு பிராயச்சித்தம் தேட ஒரு வழி கிடைச்சிருக்கு... தயவு செஞ்சி எனக்கு ஒரு வாய்ப்பு கொடு..." எனக் கேட்டான் பிரதாப்.
சில நிமிடங்கள் கண்ணீர் விட்ட அனுபல்லவி ஏதோ ஒரு முடிவுடன் நிமிர்ந்து தன் கண்களை அழுத்தத் துடைத்துக்கொண்டு, "வாங்க மாமா கிளம்பலாம்..." என வெளியேறினாள்.
அனுபல்லவி எங்கு செல்லப் போகிறாள் எனப் புரியாமலே அவளைப் பின் தொடர்ந்தான் பிரதாப்.
தந்தையின் கட்டளைக்கு இணங்க பார்க்கில் ட்ரைவருடன் விளையாடிக்கொண்டிருந்த பிரஜன் அங்கு பிரணவ் வருவதைக் கண்டதும், "அப்பா..." எனத் துள்ளிக் குதித்தபடி ஓடிச் சென்று பிரணவ்வை அணைத்துக் கொண்டான்.
தன்னை வந்து கட்டிக் கொண்ட மகனை புன்னகையுடன் தூக்கிக் கொண்ட பிரணவ் பிரஜனின் முகம் முழுவதும் முத்த மழை பொழிந்தான்.
பிரணவ்வின் கண்கள் ஆனந்தத்தில் லேசாகக் கலங்க, தன் குட்டிக் கரங்களால் அதனைத் துடைத்து விட்ட பிரஜன், "என்னாச்சு அப்பா? ஏன் அழுறீங்க? பிரஜு ஏதாவது தப்பு பண்ணிட்டேனா?" எனக் கேட்டான் வருத்தமாக.
உடனே மறுப்பாகத் தலையசைத்த பிரணவ் குழந்தையை அணைத்துக்கொண்டு, "இது ஹேப்பி டியர்ஸ் கண்ணா... அப்பா பிரஜுவ பார்த்ததால வந்தது..." என்றவன் மீண்டும் தன் உயிரணுவில் ஜனித்த மகனை ஆசை தீர முத்தமிட்டான்.
"பிரஜு அப்பா கூட நம்ம வீட்டுக்கு போலாமா?" எனக் கேட்டான் பிரணவ்.
உடனே தன் வெண் பற்கள் தெரியச் சிரித்த பிரஜன் சம்மதமாய்த் தலையசைத்து விட்டு, "பட் அம்மா பிரஜுவ காணோம்னு தேடுவாங்களே... அப்புறம் அம்மா அழுவாங்க..." என்றான் உடனே வருத்தமாக.
"உங்க அம்மா தேட மாட்டாங்க கண்ணா... பிரஜுவும் அப்பாவும் முன்னாடி போலாம்... அம்மா பின்னாடியே வருவாங்க... ஓக்கேயா?" எனப் பிரணவ் கேட்கவும் பிரஜன் சரி எனத் தலையசைக்கவும் அவனை அழைத்துக்கொண்டு தன் வீட்டுக்கு கிளம்பினான்.
வீடு செல்லும் வழி எங்கிலும் ஏதேதோ பேசிக்கொண்டு வந்தான் பிரஜன்.
தன் குறும்புத்தனங்கள், தாயுடன் கழித்த நிமிடங்கள் என தனக்கு நினைவு தெரிந்த நாட்களில் இருந்து நடந்த அனைத்தையும் தந்தையிடம் சந்தோஷமாக பகிர்ந்து கொண்டான் பிரஜன்.
பிரஜன் பேசுபவற்றை ஆசை பொங்க பார்த்த பிரணவ்வின் மனமோ மிகுந்த வேதனை அடைந்தது.
'எத்தனை சந்தோஷங்களைத் தான் இழந்திருக்கிறேன்? தன் மகனின் குட்டிக் குட்டிக் குறும்புகளை எல்லாம் பார்க்காமல் அவனின் கூடவே இருந்து வளர்க்க முடியாமல் போன துரதிஷ்டசாலி ஆகி விட்டேனே...' எனப் பிரணவ்வின் மனம் கதறியது.
பிரஜனின் பேச்சிலே தந்தைப் பாசத்துக்கு அவன் எவ்வளவு ஏங்கி இருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்ட பிரணவ்விற்கு மொத்த கோபமும் அனுபல்லவியின் பக்கம் திரும்பியது.
'தனக்கும் தன் மகனுக்கும் எவ்வளவு பெரிய அநீதியை இழைத்து விட்டாள்' எனப் பிரணவ்வின் உள்ளம் கொதித்தது.
மனம் ஒரு பக்கம் தன்னவள் காரணம் இன்றி இப்படி நடந்து கொண்டிருக்க மாட்டாள் என அடித்துக் கூறினாலும் மூளை அதை ஏற்க மறுத்தது.
எத்தனை காரணங்கள் கூறினாலும் தான் இழந்தது இழந்தது தானே. அதை மீண்டும் மீட்க முடியுமா என்ன?
சில நிமிடங்களில் வீட்டை அடைந்ததும் பிரணவ் தன் புதல்வனைத் தூக்கிக் கொண்டு இறங்கி வீட்டை நோக்கி நடந்தான்.
"வாவ்... இனிமே நாம இந்த வீட்டுல தான் இருக்க போறோமா ப்பா?" எனக் கேட்டான் பிரஜன் ஆவலாக.
"ஆமாடா... என் பிரஜு இனிமே அப்பா கூட இந்த வீட்டுல தான் இருக்க போறான்... இங்க பிரஜுவுக்கு தாத்தா பாட்டி எல்லாம் இருக்காங்க..." எனப் பிரணவ் கூறவும், "ஹை.. ஜாலி... ஜாலி..." எனக் கை தட்டிச் சிரித்தான் பிரஜன்.
பின் திடீரென ஏதோ நினைவு வந்தவனாக, "அப்போ அம்மா?" எனப் பிரஜன் யோசனையாக கேட்கவும், "அம்மாவும் தான்... அப்பா... அம்மா... பிரஜு... எல்லாரும் ஒன்னா இருக்க போறோம்..." எனப் பிரணவ் பதிலளிக்கவும், "தேங்க்ஸ் பா..." என்று பிரஜன் பிரணவ்வின் கன்னத்தில் முத்தமிட்டான்.
பிரணவ் வீட்டை அடைந்து சில நிமிடங்களிலேயே மூர்த்தியும் லக்ஷ்மியும் வீட்டுக்கு வந்து விட, அவர்களைத் தொடர்ந்து அர்ச்சனாவும் அங்கு வந்திருந்தாள்.
அவர்களைப் பிரஜன் வாசலில் பார்த்ததும் பிரணவ்வின் காலின் பின்னே ஒளிந்து கொண்டான்.
பிரஜனைத் தூக்கிக் கொண்டு மகன் நினைவு தெரிந்ததால் மீண்டும் என்ன கூறுவானோ எனப் பயத்துடன் நின்று கொண்டிருந்த லக்ஷ்மி மற்றும் மூர்த்தியை நோக்கிச் சென்ற பிரணவ், "பிரஜு... இவங்க தான் உன்னோட தாத்தா பாட்டி... என்னோட அப்பா அம்மா... அவங்க கிட்ட போய் பேசு..." என மகனிடம் கூறுவது போல் தன் பெற்றோரின் மனதில் இருந்த பயத்தை நீக்கவும் இருவருமே மகிழ்ந்தனர்.
பிரணவ் கூறவும் அவனிடம் இருந்து இறங்கி லக்ஷ்மியை நோக்கி நடந்த பிரஜன், "பா...பாட்டி..." எனத் தயக்கமாக அழைக்கவும் அவனை வாரி அணைத்து முத்தமிட்ட லக்ஷ்மி, "என் செல்லம்... அப்படியே என் பிரணவ் போலவே இருக்கப்பா... என்னங்க... நம்ம பேரன பாருங்க..." என உணர்ச்சி வசப்பட்டார்.
மூர்த்தியும் புன்னகையுடன் தன் பேரனை அணைத்து முத்தமிட, "பிரஜுவயும் பிரஜு அம்மாவையும் இங்க அப்பா கூடவே இருக்க பர்மிஷன் தருவீங்களா?" எனக் கேட்டான் பிரஜன் தயக்கமாக.
"எதுக்கு கண்ணா அனுமதி எல்லாம் கேட்டுக்கிட்டு? உனக்கு இல்லாத உரிமையா? இது உன் அப்பா வீடு... நீ தான் இந்த வீட்டோட வாரிசு... நீயும் உங்க அம்மாவும் தாராளமா இங்க தங்கலாம்... பாட்டி என் குட்டிக் கண்ணனுக்கு பிடிச்சதை எல்லாம் சமைச்சு தரேன்... நைட் தூங்கும் போது கதை சொல்றேன்..." என்றார் லக்ஷ்மி புன்னகையுடன்.
அதனைக் கேட்டு புன்னகைத்த பிரஜன் அவர்களுடன் நன்றாகவே ஒட்டிக் கொண்டான்.
அதே நேரம், "பிரணவ்..." என அழைத்தபடி வந்த அர்ச்சனாவை அனைவரும் துச்சமாக நோக்க, "ஆகாஷ்... பிரஜுவ கூட்டிட்டு உள்ள போங்க..." என அப்போது தான் அங்கு வந்த ஆகாஷிடம் பிரணவ் கூறவும் ஆகாஷ் பிரஜனை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான்.
அவர்கள் சென்றதும், "கழுத்த பிடிச்சு வெளிய துரத்த உன்ன தொடுறதை கூட விரும்பல நான்... நீயாவே போயிடு இங்க இருந்து... இல்ல அசிங்கப்படுவ..." என எச்சரித்தான் பிரணவ்.
அர்ச்சனா, "இல்ல பிரணவ் நான் நிஜமாவே உங்கள..." என ஏதோ கூற வரவும் ஆத்திரத்தில் பல்லைக் கடித்த பிரணவ் அர்ச்சனாவின் கழுத்தைப் பற்றி வெளியே தள்ள, அந் நேரம் பிரதாப்புடன் அங்கு வந்த அனுபல்லவியின் காலடியில் சரியாக சென்று விழுந்தாள் அர்ச்சனா.
அனுபல்லவி அதிர்ச்சியுடன் அர்ச்சனாவின் கையைப் பிடித்து எழுப்ப முயல, அவளோ அனுபல்லவியின் கரத்தைத் தட்டி விட்டு தானாகவே எழுந்து நின்று அனுபல்லவியை முறைத்தாள்.
"எல்லாம் உன்னால தான்... நீ எதுக்கு டி திரும்ப வந்த? இந்த அஞ்சி வருஷமும் நான் எவ்வளவு நிம்மதியாவும் சந்தோஷமாவும் இருந்தேன் தெரியுமா? நீ வந்ததும் எல்லாம் நாசமா போச்சு... போனவ அப்படியே தொலைஞ்சி போயிருக்க வேண்டியது தானே... நான் பிரணவ்வ எவ்வளவு காதலிக்கிறேன்னு தெரியுமா? உன்னால தான் அவர் இப்போ என்னை வீட்ட விட்டே துரத்துறார்... உன்ன நான் சும்மா விட மாட்டேன் டி..." என ஆவேசமாகக் கூறிய அர்ச்சனா அனுபல்லவியை அடிக்கக் கை ஓங்க, அவளின் கரத்தை அழுத்தப் பற்றி தடுத்தது ஒரு கரம்.
தன்னைத் தடுத்தது யார் எனத் திரும்பிப் பார்த்த அர்ச்சனா அங்கு கார்த்திக்கை சத்தியமாக எதிர்ப்பார்க்கவில்லை.
ஐந்து வருடங்களில் ஆளே மாறிப் போய் இருந்தான்.
அடர்ந்த தாடி முகத்தின் பாதியை மறைந்திருக்க, ஒழுங்காக கத்தரிக்கப்படாத முடியும் சிவந்திருந்த கண்களும் என வித்தியாசமான தோற்றத்தில் இருந்தான் கார்த்திக்.
"கா... கார்த்திக்..." என அர்ச்சனா அதிர்ச்சியுடன் அழைக்க, "இது உனக்கான இடம் இல்ல அர்ச்சு..." என்றான் கார்த்திக் எப்போதும் போல் கனிவான குரலில்.
ஆனால் அதனைக் கேட்கும் மனநிலையில் தான் அர்ச்சனா இருக்கவில்லை.
கார்த்திக்கின் பிடியில் இருந்து தன் கரத்தை உருவிய அர்ச்சனா அதே கோபத்துடன், "அதை நீ எப்படி சொல்லலாம்? நான் தான் இந்த வீட்டோட மருமக..." என்கவும் கண்களை மூடித் திறந்து தன்னை சமன்படுத்திக்கொண்ட கார்த்திக், "இன்னொருத்தியோட புருஷனுக்கு ஆசைப்படுறத விட கேவலமான ஒன்னு இந்த உலகத்துலயே இல்ல... அதுவும் அவங்களுக்கு குழந்தை வேற இருக்கு..." என்றான் அமைதியாக.
"இவ எங்கயோ கண்டவன் கூட ஊரு மேஞ்சி புள்ளய பெத்துக்கிட்டு வந்து இப்போ சொத்துக்காக அதைப் பிரணவ்வோட புள்ளன்னு சொன்னா நாங்க நம்பணுமா? இப்படி ஒரு பொழப்புக்கு இவ பிச்சை எடுக்கலாம்..." என அர்ச்சனா நாக்கில் நரம்பில்லாமல் பேசிய அடுத்த நொடியே அவளின் கன்னங்கள் தீயாய் எரிந்தன.
தன்னவளைப் பற்றித் தவறாகப் பேசவும் பிரணவ் அர்ச்சனாவை நோக்கி ஆத்திரமாக அடி எடுத்து வைக்க, அதற்குள் கார்த்திக்கே அவளை அறைந்திருந்தான்.
அர்ச்சனா கார்த்திக்கை அதிர்ச்சியாக நோக்க, அவள் மறுக்க மறுக்க அவளின் கைப் பற்றி அங்கிருந்து இழுத்துச் சென்றான் கார்த்திக்.
அவர்கள் சென்றதும் பிரணவ்வும் வீட்டிற்குள் செல்ல அடி எடுத்து வைக்க, "என் பையன அனுப்பி வைங்க..." என்றாள் அனுபல்லவி அழுத்தமாக.
ஏளனச் சிரிப்புடன் அவளை நோக்கித் திரும்பிய பிரணவ், "அவன் என் பையன்... என் பையன் என் கூட தான் இருப்பான்... எங்கேயும் போக மாட்டான்... உனக்கு உன் பையன் வேணும்னா நீயும் இந்த வீட்டுல தான் இருந்தாகணும்..." என்றான்.
அனுபல்லவி, "அவன பத்து மாசம் சுமந்து பெத்தவ நான்... அவன் பிறந்ததுல இருந்தே நான் அவன தனியா தான் வளர்க்குறேன்... இனியும் என்னால என் பையன வளர்க்க முடியும்... எனக்கு தான் அவன் மேல எல்லா உரிமையும் இருக்கு..." என்றாள் முயன்று வரவழைத்த குரலில்.
"யாரு உனக்கு என் பையன தனியா வளர்க்க சொன்னாங்க? அப்பா நான் உயிரோட இருக்கும் போது என் பையன என் கண்ணுலயே காட்டாம எடுத்துட்டு போய் வளர்த்துட்டு இப்போ வந்து உரிமைய பத்தி பேசுறியா?" எனக் கேட்டான் பிரணவ் எள்ளலாக.
"ப்ளீஸ் பிரஜுவ என் கூட அனுப்புங்க... என்னால அவன் இல்லாம இருக்க முடியாது... நாங்க ரெண்டு பேரும் எங்கயாவது கண் காணாத இடத்துக்கு போயிடுறோம்... இனிமே உங்க லைஃப்ல குறுக்கிட மாட்டோம் நாங்க..." எனக் கேட்டாள் அனுபல்லவி இம்முறை கெஞ்சலாக.
கசந்த புன்னகை ஒன்றை உதிர்த்த பிரணவ், "இப்போ கூட உனக்கு நான் வேணாம்ல... உன் பையன் மட்டும் தான் வேணும்... காதல் அது இதுன்னு சொன்னது எல்லாமே பொய்... அப்படி தானே... கடைசியில எல்லாரைப் போலவும் நான் அன்புக்காக ஏங்கினதை நீயும் உன் சுயநலத்துக்காக பயன்படுத்திக்கிட்டேல்ல..." எனக் கேட்டான் வருத்தம் தோய்ந்த குரலில்.
பிரணவ்வின் வார்த்தைகளில் அனுபல்லவியின் கண்கள் கலங்க, எதுவுமே கூறாது அமைதியாக இருந்தாள்.
பெருமூச்சு விட்ட பிரணவ், "சரி... உனக்கு நான் தான் வேணாம்ல... நான் உன் கழுத்துல கட்டின தாலிய இந்த நிமிஷமே கழட்டி கொடுத்துட்டு இங்க இருந்து போயிடு... ஆனா ஒன்ன மட்டும் நல்லா ஞாபகம் வெச்சிக்கோ... என் பையன என்னை விட்டு நான் எங்கேயும் அனுப்ப மாட்டேன்... இதுக்கு அப்புறம் உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல... என் பையனுக்கு நீ தான் அம்மாங்குறதையும் இதோட மறந்துட வேண்டியது தான்... தாலிய கழட்டி கொடு..." என அழுத்தமாகக் கூறியவன் அனுபல்லவியிடம் தாலியை வாங்க கரத்தை நீட்டினான்.
கலங்கிய கண்களுடன் மறுப்பாகத் தலையசைத்த அனுபல்லவி தன் தாலியை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு, "ப்ளீஸ் பிரணவ்... என்னைப் புரிஞ்சிக்கோங்க... என்னால நீங்க சொல்ற எதையும் பண்ண முடியாது..." எனக் கெஞ்சினாள்.
"நான் ஏன் டி உன்ன புரிஞ்சிக்கணும்? நீ என்னைப் புரிஞ்சிக்கிட்டியா? என் காதல புரிஞ்சிக்கிட்டியா? ஒவ்வொரு நிமிஷமும் நான் எவ்வளவு வேதனைய அனுபவிக்கிறேன்னு புரியுதா உனக்கு?" என ஆவேசமாகக் கேட்ட பிரணவ் எவ்வளவு அடக்கியும் அவனையும் மீறி கண்ணீர் வெளிப்பட்டு விட்டது.
"உங்களுக்காக நான் இருக்கேன்... உங்களுக்காக நான் இருப்பேன்னு வார்த்தைக்கு வார்த்தை சொல்லிட்டு இப்போ என்னை உயிரோட கொன்னுட்டு போக போறேல்ல பவி..." என உடைந்து அழுதான் பிரணவ்.
பிரணவ் மனம் உடைந்து அழவும் அவனுடன் சேர்ந்து கண்ணீர் விட்டாள் அனுபல்லவி.
தன்னவனைத் தெரிந்தே நோகடிக்கிறோம் என அவளின் மனம் தவியாய்த் தவித்தது.
கணவன் மனைவி இருவருக்கும் இடையில் நடக்கும் பிரச்சினையில் தாம் தலையிட விரும்பாமல் ஒதுங்கி நின்ற மூர்த்திக்கும் லக்ஷ்மிக்கும் கூட தம் மகன் இப்படி உடைந்து போய் அழுவதைப் பார்த்து மனம் வேதனை அடைந்தது.
சில நிமிடங்கள் அழுகையில் கரைந்த அனுபல்லவி தன் கண்களைத் துடைத்துக்கொண்டு நேராக லக்ஷ்மியிடம் சென்றவள், "ஒரு தாசியோட பொண்ணு உங்க மருமகளா இருக்குறது உங்களுக்கு சந்தோஷமா இருக்கா?" எனக் கேட்டாள் அழுத்தமாக.
அவளின் கேள்வியில் பிரணவ் உட்பட அனைவருமே அதிர, லக்ஷ்மியின் முகம் மாறியதைக் கண்டு அனுபல்லவியின் முகத்தில் வேதனையின் சாயலுடன் கூடிய கசந்த புன்னகை ஒன்று உதித்தது.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.