All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிலா ஶ்ரீதரின் "என் காதல் பொய்யும் இல்லை" - கதை திரி

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் - 8

சந்தியா இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. விக்ரம் அவளை பலமுறை அழைத்தான். அது அவளது செவிகளை எட்டவில்லை. கடைசியாக அவளை வேகமாக உலுக்கினான்.

“என்னடி ப்ரீஸ் ஆயிட்ட. அதுக்குள்ள எந்த உலகத்துக்கு போயிட்ட” அவன் நக்கலாக கேட்க, அவள் முகத்திலோ சிரிப்பை காண முடியவில்லை.

“எதுக்காக டிசிப்ளனரி ஆக்‌ஷன் எடுத்தாங்கனு உனக்கு தெரியுமா விக்ரம்”

“ஹ்ம்ம்.. தெரியும்” என்றதும் எதற்கு என்ற கேள்வியை கொண்டு அவனை பார்த்தாள்.

“லெவன் – ‘சி’ பையன் அரவிந்த். அவன் ஒரு பொண்ணு பின்னாடி சுத்திட்டு இருந்திருக்கான். அந்த பொண்ணும் இவனை பிடிச்சிருக்குங்கற மாதிரி தான் இருந்திருக்கா. இப்ப திடீர்னு கௌதமை தான் பிடிச்சிருக்குனு சொல்லிட்டாளாம். அதுக்கு கௌதி என்ன பண்ணுவான். கௌதிய ரிவென்ஜ் எடுக்கறதா நினைச்சி அவன் தான் அந்த டேரை தந்திருக்கான். சரியான லூசு பையன். இவனும் என்ன சொல்லப் போறான்னே தெரியாம என்ன சொன்னாலும் செய்வேன், இல்ல ஸ்கூலை விட்டு போய்டுறேன்னு சொல்லிருக்கான்”

“டேய் இதெல்லாம் எனக்கு தெரியும்டா. அதான், இவன் வின் பண்ணிட்டான்ல. அப்புறம் எதுக்கு போனான். இப்ப எதுக்கு ஆக்‌ஷன் எடுத்திருக்காங்க” அவன் சொல்வதை முழுவதாக கேட்கும் பொறுமை கூட அவளிடத்தில் அப்போதில்லை.

“ஒண்ணு இவன் டேர் பண்ணாம ஸ்கூலை விட்டு போயிடுவான். இல்ல எதாவது பொண்ணுகிட்ட ஐ லவ் யு சொல்லி அவ இவன் பேருல கம்ப்லைன் பண்ணி அதுக்கு ஸ்கூல் சைட்ல இருந்து டிசிப்ளனரி ஆக்‌ஷன் எடுத்து சஸ்பெண்ட் பண்ணனும்ங்கறது தான் அவன் பிளானே” விக்ரம் சொல்ல

“ஆனா நான் தான் கம்ப்லைன் பண்ணலையே விக்ரம்” அப்பாவி தனமாக கேட்டாள்.

“ஹேய் முதல்ல கேளுடி. கௌதமுக்கு வேற ஆளெல்லாம் சூனியம் வைக்க தேவையில்ல. அவனே வச்சிப்பான். அரவிந்த் பிளான் ஒண்ணும் சக்ஸஸ் ஆகல. நீயா போயிட்டனால பெருசுப்படுத்தாம விட்டுட்ட. இப்ப கௌதம் வின் பண்ணிட்டான், அதனால ஸ்கூலை விட்டும் போகமாட்டான்னு அடுத்த நாளே எங்கிட்ட வந்து போட்டு கொடுத்துட்டான்”

“என்னடா சொல்ற. அவனா உங்கிட்ட சொன்னான்” கண்களை விரித்து கேட்டாள்.

“ஆமா, கௌதம் ப்ரொபோஸ் பண்ணினான் சந்தியா சைலண்டா அழுதிட்டே போயிட்டானு அவன் தான் எங்கிட்ட சொன்னான். இத நான் கௌதம்கிட்ட சொன்னேன். சொன்னவுடனே அவனை அப்படியே விட்டுடுன்னும் சொன்னேன். கேட்கற ஆளா அவன். சாயந்திரமே கிரவுண்ட்ல வச்சி அவனை அடி அடின்னு அடிச்சிருக்கான். என்னமோ அவன் அடிக்கலனு அன்னைக்கு கவலைப்பட்டீயே. நாளைக்கு போய் அரவிந்த பாரு எப்படி அடிச்சிருக்கான்னு தெரியும். கண்ணுக்கு கீழ இன்னமும் வீக்கம் குறையல. அதப் பார்த்துட்டு ஸ்டாஃப், பிரின்சிபெல்கிட்ட கூட்டிட்டு போயிட்டாங்க. ப்ரின்ஸி உடனே ஒன் வீக் சஸ்பெண்ட் பண்ணி வீட்டுக்கு அனுப்பிட்டாங்க” விக்ரம் நடந்ததை சொல்ல சந்தியாவிற்கு அதிர்ச்சியில் கண்களே வெளியே வந்துவிட்டது.

“ஏன் விக்ரம் இப்படி பண்ணான். அவன் தான் பைத்தியம், ஒரு பொண்ணுக்காக இவ்ளோ கேவலமா நடந்துக்கிட்டான்னா. இவன் எதுக்கு அவனை அடிக்கணும்”

“என்னை கேட்டா”

“நீ பேசினியா”

“நான் அவன்கிட்ட பேசல. பிரச்சனை வேண்டாம்னு குழந்தைக்கு சொல்றமாதிரி சொன்னேன். எல்லாத்தையும் கேட்டுட்டு போய் அடிச்சி வச்சிருக்கான். பிரின்சிபெல் ரூம்ல இருக்குற நம்ப சுரேந்திரன் சார் சொல்றாரு, பிரின்சிபெல் ரெண்டுபேரயும் நிக்க வச்சி இப்படி அடிச்சிக்கிற அளவுக்கு என்ன பிரச்சனைனு கேட்டாங்களாம். அவன் கௌதிக்கு டேர் சொன்னேன்னு சொன்னா வீட்டுக்கு தெரிஞ்சி திட்டப் போறாங்கனு எதுவும் சொல்லலையாம். இவன்கிட்ட ஏன் அடிச்சனு கேட்டதுக்கு வாயயே திறக்கலயாம். அதான் ஒன் வீக் சஸ்பெண்ட் பண்ணிருக்காங்க” விக்ரமுக்கு கௌதம் மீது கோபம் அதனால் இவன் அவனுக்கு அழைக்கவே இல்லை. கௌதமும் ஒன்றிரண்டு முறை அழைத்துப் பார்த்துவிட்டு விட்டு விட்டான்.

“அவனை அசிஸ்டன்ட் ப்யூப்பெல் லீடர் போஸ்ட்க்கு எலேக்‌ஷன்ல நிக்க வைக்கலாம்னு பிளான் பண்ணி வச்சிருந்தோம். அவ்ளோ தான் எல்லாம் போச்சு. இந்த வருஷம் எதுவுமே பண்ணமுடியாது. பெரிய பிளாக் மார்க்” விக்ரம் ஆதங்கத்தில் புலம்ப

“இவன் ஏன் இப்படி பண்றான். அவனுக்கு கால் பண்ணு” சந்தியா வருத்தத்தில் சொன்னாள்.

அவள் சொன்னதை கேட்டு விக்ரமும் கௌதமுக்கு அழைத்து கைபேசியை ஸ்பீக்கரிலும் போட்டான்.

“சொல்லு விக்கி” குரலில் எந்த ஒரு வருத்தமுமின்றி சொன்னவன் மீது இருவருக்கும் கோபம் தான் வந்தது.

இருந்தும் அதை அடக்கிக்கொண்டு “எங்க இருக்க கௌதி” என்று விக்ரம் கேட்டான்.

“வீட்ல தான். இப்ப தான் எங்க அம்மாவ கொஞ்சி நைஸ் பிடிச்சி கேசரி செஞ்சித் தர சொன்னேன். அவங்க அத செஞ்சிக்கிட்டு இருக்காங்க நான் பக்கத்துமேடைல உட்கார்ந்து எப்போ கேசரி ரெடி ஆகும்னு பார்த்துட்டு இருக்கேன்” அவன் சொன்னதை கேட்டு விக்ரமுக்கு சிரிப்பு வந்தது. சத்தமாக சிரிக்கவும் செய்தான்.

சந்தியாவிற்கோ எரிச்சலாக இருந்தது ‘என்னமோ பெரிய சாதனை பண்ணி அவார்ட் வாங்கின மாதிரி எவ்ளோ சந்தோசமா கேசரி கேட்டிருக்கான். ஸ்கூல்ல சஸ்பெண்ட் பண்ணிருக்காங்கனு கொஞ்சமாவது கவலை இருக்கா’ மனதிற்குள் அவனுக்கு அர்ச்சனை செய்துக் கொண்டிருந்தாள்.

“என்னடா, விஷயம் வீட்டுல தெரியுமா” விக்ரம் கேட்க சமையலறையில் இருந்து மெல்ல நகர்ந்தவன்

“அத சொன்னா எங்க அம்மா கேசரி செஞ்சிட்டு இருப்பாங்களா. உடம்பு சரியில்லாம லீவ் போட்ட மாதிரி செட் பண்ணிருக்கேன்” சொல்லிவிட்டு சத்தமாக சிரித்தான். சந்தியாவிற்கு வெறுத்தேவிட்டது. நீ பேசுகிறாயா என்று விக்ரம் கண்ஜாடை காட்ட அவள் மாட்டேன் என்று தலையை ஆட்டினாள்.

“ஏன்” என்று சத்தம்வராமல் வாயசைத்து கேட்க

“நான் அவன்கிட்ட பேசமாட்டேன்” என்று அவள் கையசைவாலே பதிலளித்தாள்.

“டேய் லைன்ல இருக்கியா” அதற்குள் கௌதமின் குரல் ஒலிக்க “இருக்கேன்டா. ஏன்டா வீட்டுல இருந்து வர சொல்லிருப்பாங்களே. அப்புறம் எப்படி வீட்டுக்கு தெரியாம” புரியாமல் விக்ரம் கேட்க

“ஆமா சொன்னாங்க. அதுக்கு தான கார்த்தி அக்கா இருக்கா. கூட்டிக்கிட்டு வந்து நிறுத்தினேன்ல. அக்காவ தவிர வீட்டுல வேற யாருக்கும் தெரியாதுடா” என்ற கௌதமின் மீது சந்தியாவிற்கு கோபம் எல்லையை கடந்திருந்தது.

“அவனை இங்க வரச் சொல்லு” அவள் சத்தம் வராமல் வாயசைத்து சொன்னாள்.

“கௌதி. எங்க வீட்டுக்கு இப்ப வர்றீயா” இவர்களுக்கு நடுவில் நான் என்ன தூதா என்றெண்ணி கொண்டே சொன்னான்.

“டேய் அதெல்லாம் முடியாது. இந்த நேரத்துல அவ்ளோ தூரமெல்லாம் கஷ்டம்”

“ரொம்ப பண்றடா நீ. என்னமோ நைட்ல ஊரே சுத்தாத மாதிரி. உனக்கு போட்கிளப்ல இருந்து மயிலாப்பூர் வர கசக்குதா. ஒழுங்கு மரியாதையா கிளம்பி வா”

“அது இல்லடா எனக்காக கேசரி வேற ரெடியாகிட்டு இருக்கு” என்று குறும்பு சிரிப்பு சிரித்தவன் “சரி அவ இருக்காளா. அவ இருந்தா நான் வரல. தேவையில்லாம அவளை வேற பார்க்கறா மாதிரி இருக்கும்” அவன் சொல்ல இங்கே விக்ரமை முறைத்துக் கொண்டிருந்தவள் “நான் இங்க இல்லனு சொல்லு” என்று வாயசைத்தாள்.

“அவ இங்க இல்லடா” அவனும் அதையே சொன்னான்.

“அதெப்படி. பூஸ்ட்டும் ஈவ்னிங் ஸ்னாக்ஸும் வந்திருக்குமே” அவன் கேட்க, இங்கே எரிச்சலோடு சந்தியா விக்ரமை முறைக்க, அவன் தான் இருவருக்கும் இடையில் மாட்டிக் கொண்டு விழித்தான்.

“அதெல்லாம் கொடுத்துட்டு போயிட்டா. அவ வீட்ல இல்ல. வெளில போயிருக்கா”

“ஓ அப்போ சரி. நான் வரேன்” என்றவன் அழைப்பைக் கூட துண்டிக்காமல் “அம்மா கேசரி கேன்சல். நான் ப்ரண்ட் வீடு வரைக்கும் போயிட்டு வரேன்ம்மா” என்று சொன்னது இங்கே சந்தியாவிற்கும் விக்ரமிற்கும் கேட்க தவறவில்லை.

“அவனுக்கு திமிற பார்த்தியா விக்ரம். என்ன வேற பார்க்கறா மாதிரி இருக்குமாம். எப்படி விக்ரம் உனக்கு இப்படி ஒரு ப்ரண்ட். சஸ்பெண்ட் ஆன கவலை கொஞ்சமாச்சும் இருக்கா. கேசரி செய்ய சொன்னானாம்” அவனிடம் காட்ட வேண்டியதையும் சேர்த்து இவனை அர்ச்சனை செய்துக் கொண்டிருந்தவளை பார்த்த விக்ரம், தான் வாய் திறக்காமல் இருப்பதே சிறந்தது என்ற முடிவெடுத்தான்.

சந்தியாவிற்கு இப்படி சட்டென கோபம் வராது. அவளது கோபத்தை அவன் தூண்டிக் கொண்டு தான் இருந்தான். அது விக்ரமுக்கும் புரிந்து தான் இருந்தது. அதே கோபத்தோடு அங்கிருந்து கிளம்பினாள்.

அடுத்த அரைமணி நேரத்தில் கௌதம் விக்ரம் வீட்டிற்கு வந்து அழைப்பு மணியை அடிக்க, கதவை அவர்கள் வீட்டில் வேலைசெய்யும் மாரியப்பன் திறந்துவிட நேராக படியேறி விக்ரம் அறைக்கு சென்றான்.

வந்தவன் வாயை வைத்துக் கொண்டு அமைதியாக இல்லாமல் “மச்சான் ரொம்ப தேங்க்ஸ். நல்லவேளை, நிஜமாவே அவ இல்ல. சஸ்பெண்ட் வேற ஆயிட்டேனா, அவ முகத்துல முழிக்கவே ஒருமாதிரி இருக்கு. எங்கிட்ட பேசமாட்டா. ஒருவேளை அட்வைஸ் எதாவது பண்ணானா. நமக்கு இந்த அட்வைஸ்யெல்லாம் செட்டே ஆகாது” கௌதம் பேசிக் கொண்டிருக்க சந்தியா கதவிற்கு அருகில் தான் நின்றுக் கொண்டிருந்தாள். கௌதம் விக்ரமை நேர்கொண்டு அமர்ந்திருந்ததால் அவனுக்கு தெரியவில்லை. கீழே மாரியப்பனை கதவை திறக்கச் சொன்னதே அவள் தான். அதுமட்டுமா அவனுக்கு பின்னால் அவளும் படியேறி வந்தாள். அதையும் அவன் கவனிக்கவில்லை. இப்போதும் அவன் பின்னால் இருக்கிறாள் என்று விக்ரம் பலமுறை ஜாடை செய்தான். இவனோ கவனிக்காமல் பேசினான்.

பின் விக்ரமே “கௌதி கொஞ்சம் திரும்பி பாரேன்” என்று சொல்ல, திரும்பியவன் அதிர்ந்துப் போனான். சந்தியா அவனை கண்களாலே எரித்துவிடும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கையில் ஒரு தட்டில் மூன்று கிண்ணத்தில் கேசரி இருந்தது. அவன் வருகிறான் என்று தான் செய்து எடுத்து வந்திருக்கிறாள் என்று அவனுக்கு புரிந்தது.

எதுவும் பேசாமல் உள்ளே வந்தவள் “விக்ரம் எடுத்துக்கோ” என்றாள். விக்ரம் எடுத்ததும் “அவனையும் எடுத்துக்க சொல்லுடா” கௌதமிடம் தட்டை நீட்டி சொன்னாள்.

“எனக்கு வேண்டாம்டா” அவளை நிமிர்ந்தும் பார்க்காமல் சொன்னான்.

“எடுத்துக்கோ கௌதி. சாரிடா, நீ பேசிக்கிட்டு இருந்தப்போ அவளும் இங்க தான் இருந்தா. வீட்ல சாப்பிடாம வந்துட்டேனு உனக்காக தான் செஞ்சிருக்கா” தட்டை நீட்டியவள் இன்னும் அவனிடமிருந்து அதை நகர்த்தவில்லை.

“இவ யாரு எனக்கு கேசரி செஞ்சி தர. எங்க அம்மா இருக்காங்க எனக்கு செஞ்சிக் கொடுக்க” அன்று ஆட்டோவிற்கு கொடுத்த எண்பது ரூபாயை அவள் நீ யார் எனக்கு கொடுக்க என்று சொல்லித் தானே திருப்பித் தந்தாள் அதையே அவனும் இன்று சொன்னான்.

சந்தியாவிற்கு கோபம் பொத்துக் கொண்டு வர “விடு விக்ரம் எடுத்தா எடுக்கறான் இல்லாட்டி விடு நாம சாப்பிடலாம்” என்று தன் கிண்ணத்தை எடுத்துக் கொண்டு தட்டை அவன் அருகிலேயே வைத்துவிட்டாள். அவளுக்கு கௌதமை பற்றி இன்னும் சரியாக தெரியவில்லை. அவனுக்கு வேண்டாம் என்றால் வேண்டாம் தான். அவன் தான் பிடிவாதத்திற்கு மூத்த பிள்ளையாயிற்றே.

இருவரும் சாப்பிட கௌதம் அதை கண்டுக்கொள்ள கூட இல்லை. அறையே அமைதியாக இருந்தது. விக்ரம் தான் அந்த அமைதியை கலைக்கும் பொருட்டு பேச ஆரம்பித்தான்.

“ஏன்டா அதான் பிரின்ஸி எதுக்கு இப்படி பண்ணனு கேட்டாங்கல. அப்பவாவது சொல்லிருக்கலாம்ல அவன் செஞ்ச வேலைய. சஸ்பென்ஷன் அளவுக்கு போயிருக்காது ஜஸ்ட் ரெண்டுபேரையும் வார்ன் பண்ணி விட்டிருப்பாங்க”

“சொல்லிருக்கலாம். அவன் ஏற்கனவே அடிபட்டவன். நான் டேரை பத்தி சொல்ல அவன் கௌதம் டேரை பண்ணான் அதுவும் மேடமுக்கு தான் ப்ரொபோஸ் பண்ணான்னு சொல்லிட்டான்னா. தேவையில்லாம அவளை வேற இந்த பிரச்சனைல இழுத்துவிட்டா மாதிரி ஆகிடும். அதான் பர்சனல் ப்ராப்ளம்னு மட்டும் சொன்னேன். என்னனு சொல்லலைனா நீதான் அவனை அடிச்சிருக்க, உன்மேல தான் தப்புனு சஸ்பென்ட் பண்ணுவோம்னு சொன்னாங்க. சரி சஸ்பென்ட்டே பண்ணிகட்டும்னு விட்டுட்டேன்” சந்தியாவை பற்றி யோசித்து தான் அமைதியாக இருந்திருக்கிறான். அது அவளுக்கு அவன்மீது நல்ல அபிப்ராயத்தையே கொடுத்தது.

“அதுவும் கரெக்ட் தான். ஆனா எனக்கு இன்னும் கோவம் குறையல. நான் தான் பிரச்சனைய அத்தோட விடுன்னு சொன்னேன்ல அத அப்படியே விடாம அவனை அடிச்சி கேஸாகி சஸ்பெண்ட் ஆகியிருக்க. தேவையா இதெல்லாம்” விக்ரம் கேட்க, சந்தியாவின் கண்களும் அதையே தான் கேட்டுக் கொண்டிருந்தது. அதை கௌதம் தான் கவனிக்கவில்லை.

“அப்படி விட்டுட்டு போனா அவன் கௌதமே இல்லயே” என்றுவிட்டு சிரிக்க சந்தியாவிற்கு கோபத்தில் கிண்ணத்திலிருக்கும் கேசரியை அவன் தலையில் கொட்டலாம் என்றிருந்தது.

“பெரிய கௌதம்” என்று தனக்குள்ளேயே சொன்னாலும் அது அவனுக்கும் கேட்டது, விக்ரமும் கேட்டிருந்தான்.

“விக்ரம் எரிச்சலா இருக்கு” என்று எரிச்சலை காட்டியும் விட்டாள்.

“எரிச்சலா இருந்தா, தண்ணிக் குடிக்க சொல்லுடா. இவ செஞ்ச கேசரில காரம் அதிகமோ எரிச்சலெல்லாம் வருது” அவனை தான் சொல்கிறாள் என்பதை புரிந்து பதிலளித்தான் கௌதம்.

“கேசரி எங்கயாவது காரமா இருக்குமா விக்ரம்”

“கேசரி ஸ்வீட்டா தான் இருக்கும் விக்கி. சிலர் முகத்தை காரமா வச்சிக்கிட்டு சமைச்சா அவுட்கம் அப்படி தான் இருக்கும். நீ கூட இனிமே பூஸ்ட் குடிக்கறப்போ பார்த்து குடிடா” என்றான்.

அதற்குள் விக்ரம் இவர்கள் இருவருக்கும் இடையில் நேரடியான பேச்சுக்கள் இல்லை என்பதை உணர்ந்தான். அதற்கு அவர்கள் தனக்கு கொடுத்த வாக்குறுதி காரணமாக இருக்குமோ என்றெண்ணியவன், அதை உடனே சரி செய்ய முடிவெடுத்தான்.

“ஆமா நீங்க ரெண்டுபேரும் என்ன என்னை மத்தளமா யூஸ் பண்ணிக்கிட்டு இருக்கீங்க. எதுவா இருந்தாலும் நேருக்கு நேர் பேசுங்க” அவன் சொன்ன அடுத்த நொடி

“நான் அவகிட்ட பேசமாட்டேன்”

“நான் அவன்கிட்ட பேசமாட்டேன்” இருவரும் ஒரேநேரத்தில் ஒன்றாக சொன்னார்கள்.

“எதுக்காக” விக்ரம் புரிந்தும் புரியாதது போல் கேட்டான்.

“உனக்கு தெரியாதா விக்ரம்” அதைமட்டுமே சந்தியா சொன்னாள். அவளுக்கு தெரிந்ததெல்லாம் அவள் சொன்னதால் தான் கௌதம் அவளிடம் பேசாமல் இருக்கிறான் என்று. ஆனால், அவள் சொல்வதற்கு முன்பே கௌதம் விக்ரமிடம் பேசியது அவளுக்கு தெரியாது.

சந்தியா அவளைப் பற்றி மட்டும் கூறுகிறாள் என்பதை புரிந்த விக்ரம் “உனக்கு தெரியாதுல, நீ அன்னைக்கு ஈவ்னிங் இனி நான் கௌதம்கிட்ட பேசமாட்டேன்னு சொன்னியா. அடுத்தநாள் காலைல கௌதியும் உங்கிட்ட பேசமாட்டேன்னு சொல்லிட்டான்” என்று விளக்கினான். இது அவளுக்கு புதுத்தகவல். அந்த தகவல் அவளுக்கு வருத்தத்தை தந்தது. அவள் சொன்னபோது ஏற்படாத வலி அவனும் சொல்லியிருக்கிறான் என்பதை கேட்டபோது வந்தது. திரும்பி அவனை பார்த்தாள் அவன் இவளை பார்க்கவில்லை. வேறெங்கோ பார்த்திருந்தான்.

“ஏன் ரெண்டுபேரும் இப்படி பண்றீங்க. எனக்காக தான அப்படி ஒரு முடிவை எடுத்தீங்க. அதான் ப்ராப்ளம் இப்ப சால்வ் ஆகிடுச்சுல. ரெண்டுபேரும் கைகொடுத்து பேசிக்கறீங்க” என்றான் விக்ரம்.

“எனக்கு அவன்கிட்ட பேசறதுல எந்த ப்ராப்ளமும் இல்லடா” சந்தியா சொல்ல

“எனக்கு இருக்குடா. நான் அவகிட்ட பேசறதா இல்ல” கௌதம் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு சொல்ல அவளுக்கு முகமே வாடியது.

“டேய் ஏன்டா” விக்ரம் அதிர்ந்துக் கேட்க

“பிடிக்கல. நான் முடிவு பண்ணா பண்ணது தான். நான் இவகிட்ட எப்பவும் பேசப் போறதில்ல” இவ்வளவு தீர்க்கமாக சொல்லும் அளவிற்கு தான் என்ன செய்தோமென்று சந்தியாவே குழம்பிப் போனாள்.

“என்னடா எனக்கு தெரியாம எதாவது ஓடிக்கிட்டு இருக்கா. சண்டை எதாவது போட்டுக்கிட்டீங்களா” விக்ரம் புரியாமல் கேட்க

“நீ உடனே ஆரம்பிக்காத. ஓடுற அளவுக்கோ, சண்டைபோடுற அளவுக்கோ இங்க ஒண்ணுமில்ல” கௌதமின் பேச்சு சந்தியாவிற்கு கோபத்தைத் தூண்டியது. தான் பேச தயாராக இருக்கும்போது அவன் இப்படி சொல்வது அவளை அலைக்கழிப்பது போல் தோன்ற

“போதும் விக்ரம். யாரும் பேசணும்னு நான் காத்துக்கிட்டு இல்ல” சந்தியாவும் சொல்ல, விக்ரம் அவளை அடக்கப் பார்த்தான்.

அதற்குள் கௌதம் “கேட்டுக்கிட்டியா” என்றான்.

“பின்ன பேசமாட்டேன் பேசமாட்டேன்னு சீன் போடறவன்கிட்ட கெஞ்ச சொல்றியா விக்ரம்” அவளும் அமைதியாவதாக தெரியவில்லை.

கௌதமிற்கும் இப்போது கோபம் வர “நீயும் நானும் இதுவரைக்கும் பேசிக்கிட்டதே இல்ல. அப்படி இருக்கப்பவே உன்னால என் லைஃப்ல இவ்ளோ பிரச்சனை வந்திடுச்சு. இன்னும் நீயும் நானும் பேசிக்கிட்டோம்னா என்னென்ன நடக்கும்னு நினைச்சாலே பயமா இருக்குனு சொல்றவகிட்ட கெஞ்ச சொல்றியா விக்ரம்” அவனும் பதிலுக்கு சொல்ல, அப்போது தான் சந்தியாவிற்கு தான் செய்த தவறே புரிந்தது.

“என்னடா சொல்ற. சந்தியாவா அப்படி சொன்னா” விக்ரம் கேட்க கௌதம் அவளை பதிலாக பார்த்தான்.

“சொன்னியாடி” விக்ரம் இம்முறை நேரடியாக அவளிடமே கேட்க

“அது அன்னைக்கு இருந்த கோவத்துல சொல்லிட்டேன். அத இவன் பெரிய இஸ்யூ ஆக்குவானாம். இவன் ஒண்ணும் எங்கிட்ட பேச தேவையில்ல. யாரும் பேசணும்னு நான் ஒண்ணும் ஏங்கிட்டு இல்ல” அவள் மறுபடியும் வார்த்தையை விடுகிறாள் என்பதை உணராமலே சொன்னாள்.

“அவ்ளோ தான் மச்சான். மேட்டர் சால்வ்ட். ரெண்டுபேருமே பேசணும்னு ஏங்கல” கௌதம் திடமாக சொல்ல அவளுக்கு கோபம் தான் வந்ததே தவிர தான் மறுபடியும் தவறாகப் பேசினோம் என்பதே புரியவில்லை.

“போதும் ரெண்டுபேரும் நிறுத்துறீங்களா. நான் ஒருநாள் லூசுதனம் பண்ணா, நீங்க டெய்லி பண்றீங்க. பெரியவன் சொல்றத ரெண்டுபேரும் கேட்கற வழிய பாருங்க. ஒழுங்கா பேசிக்கோங்க” விக்ரம் இடைமறிக்க

“யாரு விக்கி பெரியவன்” கௌதம் சிரிப்பை அடக்கமுடியாமல் கேட்க

“நான் தான்டா. உன்னோட ஒரு மாசம் பெரியவன். இவளோட எட்டு மாசம் பெரியவன். அதனால நான் சொன்னா கரெக்டா தான் இருக்கும். ரெண்டுபேரும் பேசிக்கோங்க”

“போ மச்சான் சும்மா காமெடி பண்ணாத. பெரியவனாம் பெரியவன்” கௌதம் மறுபடியும் சிரிக்க இம்முறை எரிச்சலானது சந்தியாவே.

“நான் கிளம்பறேன் விக்ரம். அம்மா தேடுவாங்க” என்று எழுந்தவளை “இரு சந்து” என்று நிறுத்தினான் விக்ரம். முதல்முறையாக அவன் சந்தியாவை சந்துவென்று அழைப்பதை அப்போது தான் கவனித்தான் கௌதம். அவர்களுக்குள் அப்படி கூப்பிட்டு கொள்ளும் வழக்கம் இருக்கிறது போல் என்றெண்ணிக் கொண்டவன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

“நான் உங்க ரெண்டுபேரையும் கம்பெல் பண்ணல. ஆனா, சீக்கிரம் உங்க பிரச்சனைய சால்வ் பண்ணிக்கோங்க. கௌதி, அவ எதோ கோவத்துல வார்த்தைய விட்டுட்டா. யோசிச்சுப்பாரு நீ அவகிட்ட ஐ லவ் யு சொன்னதுக்கே அவ உன்னை ஒண்ணும் சொல்லல. அத பெருசும் பண்ணல. அவகிட்ட போய் இப்படி நடந்துக்கலாமா அண்ட் சந்தியா, நீ அவன்கிட்ட அன்னைக்கு பேசினது, இன்னைக்கு பேசினது எல்லாம் தப்பு. அதனால மேல மேல பேசி பெருசாக்காத” இருவருக்கும் சரியானதை சொல்ல அவர்களுக்கும் அது சரி என்றே பட்டது. இருந்தும் வாயைத் திறந்து பேசிக்கொள்ள தான் இல்லை.

இருவரும் பேசிக் கொள்வார்கள் என்று காத்திருந்து ஓய்ந்துப்போன விக்ரம், ஓர் ஆழ பெருமூச்சை வெளியே விட்டு “சரி பேசிக்க வேண்டாம். ஆனா, இனி நாம மூணு பேரும் ப்ரண்ட்ஸ். எங்க போனாலும் ஒண்ணா தான் போறோம் வரோம். வந்து பேசாம இருப்பீங்களோ இல்ல பேசி சண்டைப் போடுவீங்களோ அது உங்க பிரச்சனை. பட் டோன்’ட் ஃபர்கெட், மூணு பேரும் ஒண்ணாதான் இருக்கோம். காட் இட்” இருவருக்கும் பொதுவாக சொன்னவன் கௌதம் பக்கம் திரும்பி “கௌதி நாளைக்கு கடைல இருப்பீயா” என்றான். சந்தியாவிற்கு எந்தக் கடை எதை பற்றிப் பேசுகிறான் என்று புரியவில்லை.

“இல்லடா. நித்தி என்னை வெளில கூட்டிக்கிட்டு போக சொல்லிருக்கா. எதோ வாங்கனுமாம். கார்த்தி அக்கா தான் இருப்பா. தி.நகர்ல தான சொல்ற” என்றான் பதிலுக்கு. சந்தியாவிற்கு ஒன்றும் புரியாமல் ‘இவனுங்க ரெண்டுபேரும் எதப்பத்திடா பேசிக்கிறாங்க’ என்று இருவர் வாயையே பார்த்திருந்தாள். அத்தோடு யாரந்த நித்தி என்ற சந்தேகம் வேறு.

“ஆமா எதுக்கு கேட்கற. நீ வர போறியா” அடுத்த கேள்வியையும் கௌதம் கேட்க

“ஆமான்டா. அம்மாக்கு பர்த்டே வருது, சாரீ எடுக்கணும். நீ கூட இருந்தா நல்லா செலக்ட் பண்ணி தருவ. குட்டி பொண்ண தான வெளில கூட்டிட்டு போற பேசாம அவளையும் கூட கூட்டிட்டு வந்திடு. நாம பர்ச்சேஸ் பண்ண வேண்டியதை பண்ணிட்டு, அவ கேட்டத வாங்கிட்டு வீட்டுக்கு போய்டலாம். உனக்கு ஞாபகம் இருக்கா நம்ப ஹர்ஷினி பர்த்டேக்கு போனப்போ உன் தங்கச்சிய கூட்டிட்டு வந்தீயே. அவளோட செம்ம ஃபன். சரியான வாயாடி” விக்ரம் சொன்னத்தை கேட்ட பிறகே தங்கையா என்று நிம்மதியானாள்.

“அதுவும் சரிதான். அப்படியே பண்ணிடலாம். நீ சொல்ற டைம்ல நான் அங்க இருப்பேன்டா” விக்ரம் சொன்னதை கௌதமும் ஆமோதித்து சொன்னான்.

“சந்து, நீயும் வர தான” சந்தியாவையும் விக்ரம் சேர்த்துக் கொள்ள

“எங்க” என்றாள்.

“செல்வராணி சில்க்ஸ்” என்றவன் கௌதமை பார்த்து “சாயந்திரம் ஸ்கூல் விட்டதும் வீட்டுக்கு போய் டிரஸ் சேன்ஞ் பண்ணிட்டு ஒரு அஞ்சரை மணிக்கு அங்க வந்திடறோம்டா. உனக்கு ஓகேவா” என்று கேட்கவும்

“ஓ.. உங்களுக்கெல்லாம் ஸ்கூல் இருக்குல. எனக்கு எந்த ப்ராப்..” என்று நக்கலாக சிரித்துக் கொண்டே சொல்லவந்தவன் அவள் முறைப்பதை பார்த்ததும் சட்டென்று முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு “ப்ச் நீங்கயெல்லாம் ஸ்கூலுக்கு போறீங்க. நான் மட்டும் பாரு” என்றான் பரிதாபமாக.

‘அப்படியே வருத்தப்படற மாதிரி தான்’ சந்தியா முணுமுணுத்தாள்.

“நாம ஒரு அஞ்சு மணிக்கு கிளம்பிடலாம்டி. அப்போ தான் கௌதி அங்க இருப்பான். அப்புறம் கிளம்பிடுவான்” என்று சந்தியாவிடம் சொல்ல

“இவன் அந்த டைம்ல செல்வராணி சில்க்ஸ்ல என்ன பண்றான்” என்றவளை இதுவரை கோபத்தில் இருந்த கௌதம் இப்போது தன்னை மீறி ரசித்தான். என்னவொரு உரிமையான பேச்சு. அவளுக்கு அது அவர்களுடைய கடை என்று தெரியாது. விக்ரம் நாளை அவன் கடையில் இருப்பானா என்று விசாரித்தது. அதுவும் இவன் போகும் நேரம் அவன் இருக்க வேண்டும் என்று சொன்னது, இதையெல்லாம் வைத்து அரைகுறையாகவே புரிய அதை வைத்து அப்படி ஒரு அதிகார கேள்வியை கேட்டாள்.

“என்னடீ உனக்கு தெரியாதா. அவங்களுது தான் செல்வராணி சில்க்ஸ்” அவளை ஆச்சர்யமாக பார்த்து விக்ரம் சொல்ல சந்தியாவிற்கு ஐயோவென்று ஆனது. இது தெரியாமல் இவனுக்கு அங்கே என்ன வேலை என்று கேட்டுவிட்டோமே என்ற உணர்வில் கண்களை அழுந்த மூட அதில் அவள் முகத்தில் சுருக்கங்கள் ஏற்பட்டது. கையை வைத்து ஒருபக்க முகத்தையும் மறைத்துக் கொண்டாள். பின் அசட்டுசிரிப்பு சிரித்துக் கொண்டே கையை விலக்கி கண்களை திறந்தாள். அவளை பார்த்தவனுக்கு பிடித்திருந்தது. ரசித்தும் கொண்டிருந்தான்.

“சரி நாளைக்கு போகலாமா” விக்ரம் அவளிடம் மறுபடியும் உறுதிச் செய்ய கேட்க “ஹ்ம்ம்” என்றாள்.

“சரிடா நாளைக்கு பார்க்கலாம்” கௌதம் கிளம்பும் நேரத்தில் அவளுக்கு ஒன்று நினைவிற்கு வர

“ஒரு நிமிஷம்” என்று அவள் சொல்ல அந்த வார்த்தைகள் தனக்கானது, தன்னிடம் தான் பேசுகிறாள் என்ற ஆவலில் அவனும் திரும்ப அதற்குள் கிண்ணத்தில் ஆறிக் கிடந்த கேசரியை பார்த்தவளுக்கு மறுபடியும் கோபம் வந்து ஒட்டிக்கொள்ள “ஒரு நிமிஷம் நிக்க சொல்லு விக்ரம்” என்றாள்.

இவனும் பதிலுக்கு “ஹ்ம்ம். சொல்ல சொல்லுடா” என்றான். மறுபடியும் இரண்டு வேதாளமும் முருங்கை மரம் ஏறி இருந்தது.

‘இவங்க ரெண்டுபேருக்கும் இருக்க திமிறும் கொழுப்பும் இருக்கே’ மனதிற்குள் நினைத்து நொந்துக் கொண்டான் விக்ரம்.

“செல்வராணி சில்க்ஸ் இவங்க கடை தான” விக்ரமிடம் அவள் கேட்க

“ஆமா டி” என்றான் அவனும் பதிலுக்கு.

“டி.நகர்ல இருக்கே அதுவா” என்றாள். அதற்கும் ஆமாமென்று தலையை ஆட்டினான் விக்ரம். கௌதம் வேடிக்கை மட்டுமே பார்த்தான்.

“நான் இவங்க கடைக்கு போயிருக்கேன். சாரீ எடுக்க” என்றாள். அவ்வளவு தான் இப்போது கௌதமிற்கு கிலி பற்றிக் கொண்டது. கண்டுப்பிடித்து விட்டாளோ என்ற எண்ணத்தில் அவன் இதயத்தின் தாளங்கள் அவனுக்கே குத்துப்பாட்டாக கேட்டது. அத்தோடு அன்று ஆட்டோவிற்கு கொடுத்தப் பணத்தை திருப்பி தந்ததும் நினைவிற்கு வர வியர்க்கவே தொடங்கிற்று.

“சரி அதுக்கு என்ன” என்றான் இது எதுவும் அறியாத விக்ரம்.

அவள் “நான் அங்க ஒரு பையனை பார்த்தேன்” என்றது தான் மிச்சம் ‘செத்தான்டா சேகரு’ என்று ஓட்டம் பிடிக்கும் நோக்கத்தில் “நான் கிளம்பறேன்டா விக்கி. இவ சொல்ற கதையே கேட்க எனக்கு டைம் இல்ல” என்று ஓடப் பார்த்தான்.

“இப்ப அவன் நிப்பானா மாட்டானா விக்ரம்” ஓடுப்பவனை கையால் மட்டும் தானா பிடிக்கமுடியும். அவளது வார்த்தையாலே பிடித்து நிறுத்தினாள்.

“சரி சொல்ல வேண்டியதை சீக்கிரம் சொல்ல சொல்லுடா. வீட்ல அம்மா தேடுவாங்க” என்றான். அம்மா தேடுவதற்கெல்லாம் பயப்படுப்பவனா அவன். அவன் சொன்னதை பின் நினைத்து பார்த்தால் அவனுக்கே சிரிப்பு வரும்.

“சொல்லத்தான் போறாங்க. இவனை பிடிச்சி வச்சிக்கணும்னு எனக்கு என்ன ஆசையா” உரத்த குரலிலேயே சொன்னவள் “அன்னைக்கு நாங்க சாரீ எடுக்க போனப்போ அந்த பையன் தான் எனக்கும் அம்மாக்கும் சாரீ காட்டினான் விக்ரம். ரொம்ப வயசு இருக்காது. மேபி நம்ப வயசு தான் இருக்கும். ஆனா வேலை செய்யறான். இப்ப எனக்கு அவன் முகம் கூட ஞாபகமில்ல” இப்போது தான் கௌதமுக்கு போன உயிரே திரும்ப வந்தது.

நிம்மதி பெருமூச்சை விட்டவன் “சரி மேல சொல்ல சொல்லு விக்கி” அவன் சொல்ல, அவனை முறைத்துவிட்டு

“படிக்க வைக்க வீட்டுல வசதி இல்லாம தான வேலைக்கு வந்திருக்கான். அவனை இவங்களால படிக்க வைக்க முடியுமா” என்றாள். கௌதமுக்கு இப்போது புறக்கை ஏறியது. மாலை செல்வராணி ஊட்டிவிட்டு அனுப்பியதெல்லாம் தலைக்கு ஏறி கண்களில் தண்ணீர் நின்றது.

“டேய் என்னடா நீ. இந்தா தண்ணி குடி” தலையில் தட்டி தண்ணீர் பார்ட்டிலை விக்ரம் அவனிடம் நீட்டினான். அதை வாங்கிக் குடித்தவன் தன்னை ஆசுவாசப்படுத்தினான்.

“இவன் என்ன வேணும்னு பண்றானா” அதற்கும் அவள் அவனை விடவில்லை.

“எங்களுக்கு வசதி இல்ல. அப்பா உங்ககிட்ட டிரைவரா இருக்காரு. எனக்கும் சக்திக்கும் பீஸ் கட்டுற அளவுக்கு அப்பாகிட்ட காசு இல்ல. அப்ப நீ சொல்லி லாயர் அய்யாதான், நீ படிக்கற ஸ்கூல்லயே என்னையும் சேர்த்து படிக்க வச்சு பீஸூம் கட்டிக்கிட்டு இருக்காரு. சக்தி படிப்புக்கும் மெய்ன் டர்ம் பீஸ் அவர் தான் கட்டுறாரு. அதேமாதிரி பாவம் அந்த பையனுக்கு என்ன குடும்பக் கஷ்டமோ, இந்த வயசுல வேலைக்கு வந்துட்டான். அவனை இவங்க பேமிலி படிக்க வைக்கலாம்ல. இருக்குறவங்க தான எங்கள மாதிரி இல்லாதவங்களுக்கு உதவி பண்ணனும். படிப்பு கொடுக்கறது ரொம்ப பெரிய புண்ணியம் விக்ரம். முதல்ல இந்தமாதிரி சின்ன பசங்களுக்கு வேலை தரவேணாம்னு அவங்க அப்பாகிட்ட சொல்ல சொல்லு விக்ரம்” விக்ரமிடம் சொல்வதாக அனைத்தையும் அவனிடம் சொன்னாள்.

முதல்முறையாக சந்தியா தன் வீட்டை பற்றியும் தங்களது நிதி நிலையை பற்றியும் சொன்னாள். அத்தோடு யாரோ முன் பின் தெரியாத ஒருவன் தானே என்று நினைக்காமல் அவனுக்கு படிப்பு கொடுக்கக் கேட்பது அவளது உயர்ந்த உள்ளத்தை காட்டியது. அதையெப்படி அவனால் ரசிக்காமல் இருக்கமுடியும்.

‘இந்த வியாக்கானம் எல்லாம் நல்லா பேசுவா. அந்த பையனை படிக்க வைக்கணுமாம். இல்லாதவங்களுக்கு படிப்பு தர்றது பெரிய புண்ணியமாம். ஆனா அந்த பையன் முகத்தை மட்டும் மறந்திடுவா. இவ மறந்ததும் ஒரு விதத்துல நல்லது தான். இதுல சின்னப் பசங்கள வேலைக்கு வைக்ககூடாதுன்னு நான் அப்பாகிட்ட சொல்லணுமாம். எங்க கடைல வேலை பார்த்த ஒரே சின்னபையன் நான் தான். அதுவும் பதினாலு வயசுக்கு அப்புறம் தான். எது எப்படியோ யாரோ ஒருத்தனுக்காக இவ்ளோ அக்கறைப்படறாளே இதுதான் இவளை எனக்கு தனியா காட்டுது. ஐ லைக் ஹர்’ கடந்த சில நாட்களாக எல்லாவற்றையும் இழந்துவிட்டதாக எண்ணினான். இன்றோ அனைத்தும் திரும்ப பெற்றுவிட்டதாக தோன்ற, சந்தோசத்தில் சிரிக்க உதடுகள் பிரிய ‘ஐயோ வேண்டாம் கௌதம். இப்ப மட்டும் சிரிச்ச அந்த பையன் கஷ்டம் உனக்கு சந்தோசமா இருக்கானு கேட்பா. கன்ட்ரோல் யுவர்செல்ஃப்’ தனக்குள்ளேயே பேசிக் கொண்டிருந்தவனை பதிலுக்காக பார்த்திருந்தாள். அவன் தனக்குள் பேசிக் கொண்டிருந்ததால் அவளை கவனிக்கவில்லை.

“என்ன விக்ரம் நான் சொன்னதுக்கு பதிலை காணோம்” கிட்டத்தட்ட மிரட்டினாள்.

‘பதிலா.. நான் என்னனு சொல்லுவேன். என்னை நானே எப்படி படிக்க வச்சிக்க முடியும். இவளுக்கு இத நான் எப்படி புரிய வைப்பேன். சரி படிக்க வைக்கறேன்னு சொல்றது கூட பரவாயில்ல. அப்புறம் அவனை காட்டுன்னு சொன்னா’ என்று யோசிக்க ‘டேய் கௌதம் நீதான் அவகிட்ட பேசலயே. அப்படியே யெஸ் ஆகிடு. அதான் பெஸ்ட்’ திட்டத்தை உருவாக்கியவன்

“நான் கிளம்பறேன்டா விக்கி. வீட்டுல தேடுவாங்க. நாளைக்கு கிளம்பறப்போ மெசேஜ் பண்ணு. நான் அங்க இருப்பேன். கிளம்பறேன்னு சொல்லிடுடா” என்றுவிட்டு அவளை திரும்பிக் கூட பார்க்காமல் சென்றான். அவனுக்கு புரியவில்லை அவனது இச்செயல் அவளுக்கு கோபத்தை தான் தூண்டுமென்று.

“திமிருப்பிடிச்சவன். நான் என்ன எனக்காகவா கேட்டேன். அந்த தம்பிக்காக தான கேட்டேன்” வாய்க்குள்ளே முணுமுணுத்துக் கொண்டாள். நல்லவேளை ‘தம்பி’ என்ற சொல்லை கௌதமிடம் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் துடித்துப் போயிருப்பான்.

“நானும் கிளம்பறேன் விக்ரம்” என்றுவிட்டு அவளும் கிளம்பினாள்.


உண்மையாகும்..


உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..
 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் - 9

அடுத்தநாள் விக்ரமும் சந்தியாவும் டி.நகரில் இருக்கும் செல்வராணி சில்க்ஸை வந்தடைந்தனர். வந்ததும் கௌதமிற்கு அழைக்க அவன் புடவைகள் இருக்கும் தளத்திற்கு வந்துவிட சொன்னான். உள்ளே சென்றால் கார்த்தியாயினி பணம் செலுத்துமிடத்தில் அமர்ந்திருக்க உடன் குட்டிப்பெண் நித்திலா இருந்தாள். கௌதம் அங்கே பில் கௌன்டரின் மீது சாய்ந்து நின்று அவர்களிடத்தில் பேசிக் கொண்டிருந்தான்.

விக்ரமும் சந்தியாவும் வர “அக்கா. இது என் ப்ரண்ட் விக்ரம், ஞாபகம் இருக்கா. அவங்க அவன் ப்ரண்ட்” இருவரையும் கௌதம் கார்த்தியாயனிக்கு அறிமுகப்படுத்தினான். கார்த்தியாயினியும் இருவரையும் பார்த்து சிறுப் புன்னகையுடன் தலையசைக்க

“ஹலோ க்கா. ஹலோ குட்டி” கார்த்தியாயினி, நித்திலா இருவருக்கும் சேர்த்து விக்ரம் சொல்ல உடன் நின்றிருந்த சந்தியா தலையை மட்டும் மரியாதை நிமித்தமாக அசைத்தாள்.

“நான் இவங்க கூட போயிட்டு வரேன்க்கா” கௌதம் சொல்லிவிட்டு கிளம்ப “நானும் அண்ணன் கூட போறேன்க்கா” சொல்லிக் கொண்டே நித்திலா ஓடிவந்து கௌதம் கையை பிடித்துக் கொண்டாள்.

புடவைகளை பார்த்தனர். கௌதம் மிகவும் எச்சரிக்கையாக இருந்தான். உள்ளே சென்று ஒவ்வொரு புடவையையும் எடுத்துக்காட்ட ஆசை தான். அதை பார்ப்பவள் கண்டு பிடித்துவிட்டால்? அதனால் பணிபுரிபவரை எடுத்து பிரித்துக்காட்ட சொல்லிவிட்டு அவன் விக்ரம் அருகிலேயே நின்றான். கௌதம், இது இப்படியிருக்கும் அது அப்படியிருக்கும் என்று ஒவ்வொரு புடவையையும் காட்டி சொல்ல விக்ரமும் அவனுக்கு பிடித்ததை தேர்வு செய்தான். பின் பணம் செலுத்தும் இடத்திற்கு சென்று பணத்தை செலுத்திவிட்டு திரும்பிப் பார்த்தால் சந்தியாவை காணவில்லை.

“அந்த அக்கா இந்த சைடு போனாங்கண்ணா” நித்திலா சொல்ல கௌதமும் விக்ரமும் நித்திலாவை ஆளுக்கு ஒரு கையில் பிடித்துக் கொண்டு நித்தி சொன்ன பக்கம் போனார்கள். அவள் அந்த பகுதிக்கு பின்னால் இருந்த பட்டுப்புடவை பகுதியில் அன்றைக்கு புடவை பார்த்த இடத்தில் நின்றிருந்தாள். விக்ரமுக்கு புரியவில்லை, ஆனால் கௌதமுக்கு நன்றாக புரிந்தது.

வேகமாக அவளிடம் சென்றவன் “மேடம் எதுக்கு இங்க நிக்கறாங்க விக்கி” என்றான்.

“நான் சொன்னேன்ல விக்ரம். அந்த பையன் இங்க தான் இருந்தான். இன்னைக்கு காணோம்” வருத்தப்பட்டு சொன்னவள், அங்கே தள்ளி நின்றிருந்த பணியாளரை அழைக்க உடன் கௌதம் நின்றிருப்பதை பார்த்து அவரும் ஓடிவந்தார்.

“இங்க எங்க வயசுல எதாவது சின்ன பையன் வேலை செய்யறானா” அவரிடம் அவள் கேட்க

“சின்ன பையனா. அந்த மாதிரி யாரும் வேலை பார்க்கலைங்களே. இந்த கடைல ரொம்ப சின்னப்பசங்கள வேலைக்கு வைக்க எங்க அய்யா விரும்ப மாட்டாருங்க. படிப்பு தான் முக்கியம்னு சொல்லுவார். எங்க பசங்களயே அய்யா தான் படிக்க வைக்கறாரு” அவர் சொல்ல சந்தியா குழம்பிப் போய் அவரை பார்த்தாள்.

“இல்ல மூணு மாசம் முன்னாடி இங்க ஒரு தம்பிய நான் பார்த்தேன்”

‘தம்பியா’ கௌதம் அதிர்ந்துப் போனான். அது தான் தான் என்று முன்பே சொல்லியிருந்தால் அவள் இந்தளவிற்கு போயிருப்பாளா?

இம்முறை அந்த பணியாளர் “ம்மா, நீங்களே சின்னப்பொண்ணு மாதிரி தான் தெரியறீங்க. உங்க தம்பின்னா நம்ப சின்னம்மா வயசுல தான் இருப்பாங்க” நித்திலாவை காட்டி சொல்லியவர் “அந்த வயசுல இருக்கவங்கள ஏன் எங்க அய்யா வேலைக்கு வைக்கப் போறாரு” என்று சிரித்தார். கௌதமும் விக்ரமும் அடக்கமுடியாத சிரிப்பை அடக்கிக் கொண்டு நின்றிருந்தனர்.

“சந்து, என்னடி இங்க கலாட்டா பண்ணிக்கிட்டு இருக்க. அதான் யாருமில்லனு சொல்றாங்கல. அதோட நீ அந்த பையன் முகத்தை வேற மறந்துட்டேனு சொல்ற. அப்புறம் எதுக்குடி அவரை வேற படுத்தற” விக்ரம் பணியாளரை காட்டிச் சொல்ல

“இல்லடா நான் பார்த்தேன்” பாவமாக சொன்னவளை ரசிக்கும் எண்ணத்தில் இருந்தானே தவிர, தான் தான் அது என்று உண்மையை சொல்லும் எண்ணத்தில் இல்லை.

“கொஞ்சம் ஞாபகப்படுத்தி பாரு. அந்த பையன் எப்படி இருந்தான். என்னை மாதிரி, இல்ல நம்ம கௌதிய மாதிரி” விக்ரம் அவளுக்கு அவன் முகத்தை ஞாபகப்படுத்த முயற்சிச் செய்ய

‘அடப்பாவி டேய். நீ வேற ஏன்டா இப்படி பண்ற. அவ தான் மறந்துட்டால. அப்புறம் எதுக்கு உனக்கிந்த வேண்டாத வேலை’ தன் மனதிற்குள்ளேயே விக்ரமுக்கு பூஜை செய்தான்.

“ஐயோ நான் அன்னைக்கு அவன் முகத்தையே பார்க்கலைடா. அவன் பாட்டுக்கு புடவை காட்டினான் நான் வெறும் புடவைய தான் பார்த்தேன். அவன் அப்பியரன்ஸ் வச்சி அவனுக்கு நம்ம ஏஜ் தான் இருக்கும்னு சொல்றேன்”

‘அடிப்பாவி, அப்ப நீ என் முகத்தையே பார்க்கலையா. நான் இவ முகத்தை மட்டும் தான் பார்த்துக்கிட்டு இருந்தேன். இவன் என்னனா என் அப்பியரன்ஸ் பார்த்தாளாம். இதுல அவனை படிக்க வை கலெக்டராக்குனு டயலாக் பேசிக்கிட்டு இருக்கா’ இப்போது மனதிலேயே சந்தியாவிற்கும் சேர்த்து பூஜை செய்தான்.

“ஒழுங்கா கிளம்பு சந்தியா. டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்க. மீனாம்மாகிட்ட யார் திட்டு வாங்கறது. அடுத்து நித்தி பாப்பாவுக்கு வேற எதோ திங்ஸ் வாங்கணும்” விக்ரம் சந்தியாவை இழுத்துச் செல்ல

அந்நேரத்தில் அந்த பணியாளர் “அம்மா ஒருவேளை நீங்க எங்க சின்ன அய்யா..” என்று ஆரம்பித்தவரை ஒன்றை பார்வையிலேயே நிறுத்தினான் கௌதம்.

‘முதல்ல அவ, அப்புறம் விக்கி, இப்போ இவரா. டேய் கௌதம், என்னடா உன் பொழப்பு இப்படி ஓவர்டைமா போகுது’ மனதிற்குள்ளேயே நொந்துக் கொண்டான்.

நால்வரும் அங்கிருந்து கிளம்பினார்கள். நித்திலாவிற்கு வாங்க வேண்டியதை வாங்கிவிட்டு அவள் ஐஸ்கிரீம் கேட்டதால் நால்வரும் ஐஸ்கிரீம் பார்லருக்குள் நுழைந்தனர்.

“அக்கா உங்களுக்கு ஹேர் ரொம்ப லாங்கா இருக்கு. நானும் பெருசான இந்தமாதிரி லாங்கா வளர்த்துப்பேன்” ஐஸ்கிரீமை நக்கிக் கொண்டே நித்திலா சொல்ல அவளது கன்னத்தை செல்லமாக கிள்ளி முத்தமிட்டாள்.

நித்திலா கௌதமிடம் பன்மையில் பேசுவது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. சக்தி அவளை அக்காவென்று அழைத்தாலும் ஒருமையில் தான் பேசுவான். அதனாலேயே நித்திலாவை அவளுக்கு பார்த்தது முதலே பிடித்துப் போனது.

அந்நேரத்தில் கௌதமுக்கு அழைப்பு வர “டேய் அக்காடா. இப்ப வந்திடுறேன்” என்று எழுந்துப் போனான்.

அவன் தமையென்று சொன்னதை கேட்ட நித்திலா, கேட்காத தகவலாக “எங்க தமையா அக்கா. டாக்டர் படிக்கறாங்க” என்றுச் சொன்னாள்.

அவளது கன்னத்தைப் பிடித்து “அப்படியா, சோ க்யூட். உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, எங்க வீட்டுக்கு வந்துறியா” என்றாள்.

“ம்ஹூம்.. பெரியப்பா பெரியம்மா இல்லாம நான் வரமாட்டேன்” அவள் சொல்ல என்ன இவள் யாரை பெரியப்பா பெரியம்மா என்று சொல்கிறாள் என்ற குழப்பம் வந்தாலும் அதை அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

“செம வாயாடி. லாஸ்ட் டைம் இவளோட செம ஃபன். என்ன நித்திலா, என்னை மறந்துட்டியா” விக்ரம் கேட்க

“ஆமா நீங்க யாரு. எனக்கு ஞாபகம் இல்லயே” என்று சொன்னவள் “எனக்கு இந்த அக்காவ மட்டும் தான் தெரியுது. இவங்களுக்கு செம லாங் ஹேர். ஃபேரிடைல் பிரின்சஸ் ரபன்ஸல் மாதிரி” என்றாள் நித்திலா. அத்தோடு,

“ரபன்ஸல்! ரபன்ஸல்! லெட் டோவ்ன் யுவர் ஹேர், தட் ஐ மே கிளைம் யுவர் கோல்டன் ஸ்டேர்!”

அந்த கதையை படித்தவள் அதில் வரும் பாடலைப்பாடி “ஐ லைக் யு அக்கா” என்று சந்தியாவிற்கு ஐஸ்கிரீம் சாப்பிட்ட வாயாலேயே ஒரு முத்தமும் கொடுத்தாள்.

“ஐ லைக் யு டூ நித்தி” இவளும் பதிலுக்கு முத்தம் கொடுத்தவள் “டேய், சம்மந்தமே இல்லாம ஒரு அக்கா. சம்மந்தமே இல்லாம ரைம்ஸ் சொல்ற குட்டி தங்கச்சி, நடுவுல இவனா. இப்ப யாரோ ஃபோன் பண்ணாங்க. நான் கூட அக்காவ தான் தமைனு சொல்றான்னு நினைச்சேன். ஆனா இந்த குட்டிப் பொண்ணு ‘தமையா அக்கானு’ சொல்லுது. நேத்து கார்த்தி அக்கானு சொன்னமாதிரி ஒரு ஞாபகம். இவனை உனக்கு எத்தனை வருஷமா தெரியும். உண்மையிலேயே இவன் நல்லவன் தானா. ஒருவேளை எல்லாம் பொண்ணுங்களையும் அக்கானு சொல்லிட்டா இவனை நல்லவன்னு நம்பிடுவாங்கனு நினைக்கறானோ” விக்ரமிடம் மெல்லிய குரலில் சொன்னாள்.

“ஏன்டி எப்பவும் எங்க வந்தாலும் சைலண்ட்டா தான இருப்ப. இன்னைக்கு இந்த குட்டிப் பொண்ணு நித்தியோட மோசமா இருக்க” விக்ரமால் இன்று சந்தியாவை சமாளிக்க முடியவில்லை. அந்த ஆதங்கத்தில் சொன்னான்.

அந்நேரத்தில் கௌதம் அங்கு வந்தமர்ந்து “நித்தி, ஐஸ்கிரீம் போதுமா இன்னும் வேணுமா” என்றான்.

“சும்மா குழந்தைய கெடுக்க வேணாம் விக்ரம். அவ ஏற்கனவே நிறைய ஐஸ்கிரீம் சாப்பிட்டுட்டா” அதட்டல் குரலில் சொன்னவள் டிஸ்சு பேப்பரை எடுத்து நித்திலாவின் கை, வாயை துடைத்துவிட வழக்கம் போல் அதையும் அவன் ரசித்தான்.

“அண்ணா இந்த அக்காக்கு நீங்க நல்லவங்களானு டவுட் வந்துச்சாம்ண்ணா” என்று நித்தி போட்டு கொடுக்க, அவளெதிரில் பேசியது தவறென அப்போதே சந்தியாவிற்கு புரிந்தது.

அவளை தன் ஒரு புருவத்தை உயர்த்திப் கௌதம் முறைக்க, அவளுக்கோ என்ன சொல்லவென்றே புரியாமல் “இந்த குட்டி நான் முன்னாடி சொன்னத விட்டுடுச்சு” என்றவள் “இப்ப தான என்னை பார்த்து ஐ லைக் யு அக்கானு சொன்ன அதுக்குள்ள உன் அண்ணன பார்த்ததும் போட்டு தர” நித்திலாவிடம் குழந்தைப் போல் சண்டை பிடித்துக் கொண்டிருந்தாள்.

“ஓ.. முன்னாடி வேற சொன்னீயா” கௌதம் விடாமல் பேச்சிற்கு வந்தான்.

“நான் முன்னாடி என்ன சொன்னேன்னா. உனக்கு ஒரு பெரிய அக்கா அப்புறம் ஒரு ரொம்ப சின்ன தங்கச்சி. நடுவுல தமைனு யாரோ ஃபோன் பண்ணாங்க. நீ போனதும் அது உங்களோட தமையா அக்கானு நித்தி சொன்னா. அவங்க டாக்டர்க்கு வேற படிக்கறாங்கனு சொல்றா இந்த குட்டிப்பொண்ணு.. ஆனா உங்க அக்கா.. கடைல.. அவங்க கார்த்தி தான.. அதான் ஒரே குழப்பமா இருக்கு.. ஒருவேளை.. நீ நல்லவனானு.. டவுட்.. அதோட உங்க கடைல வேற எல்லாம் மர்மமா இருக்கு” மென்று முழுங்கிச் சொல்லி முடித்தாள்.

இப்போது அவன் இரு புருவத்தையும் உயர்த்தி முறைக்க “சும்மா சும்மா முறைக்காத. சஸ்பீசியஸா இருந்தா அப்படிதான் கேட்க தோணும்” என்றுவிட்டாள்.

“வாட்? சஸ்பீசியஸா தெரியறோமா” அவள் சொன்னதில் அவனுக்கு கோபம் தலைகேறியது. அதுவும் அவனது தாய், தந்தை, குடும்பம், அவர்களது கடையை பற்றி யாராவது ஏதாவது சொன்னால் முடிந்தது கதை. அவனை அடக்கவே முடியாது.

“ஆமா” என்றவள் மீது கோபம் எல்லையை கடந்திருந்தது. அருகில் நித்திலா இருப்பதை உணர்ந்தவன் கண்களை மூடி தன்னை ஆசுவாசப்படுத்தினான்.

“என்னை, எங்க கடைய சஸ்பெக்ட் பண்ற அளவுக்கு என் குடும்பத்தை பத்தி அப்படி என்ன குழப்பம் வந்துச்சு உனக்கு. எனக்கு மொத்தம் மூணு அக்கா, ரெண்டு தங்கச்சி. பெரிய அக்கா கார்த்தியாயினி தான் கடைல இருந்தாங்க. அடுத்த அக்கா அருந்ததி. லா படிக்கறாங்க. இன்னொரு அக்கா தமயந்தி. நான் தமைனு கூப்பிட்டது அவங்கள தான். டாக்டருக்கு படிக்கறாங்க. அருந்ததியும் தமயந்தியும் டிவின்ஸ். அப்புறம் நிரஞ்சனா நயன்த் படிக்கறா. குட்டி நித்தி..”

அவன் சொல்லவும் குட்டி நித்திலா “ஃபோர்த் படிக்கறா” என்று அவளே தன்னை பற்றி மழலை குரலில் சொன்னாள். “நிரஞ்சனாவும் நித்திலாவும் என் சித்தப்பா பொண்ணுங்க. எல்லாம் ஒண்ணா தான் இருக்கோம். இப்ப நான் நல்லவனா தெரிஞ்சிட்டேனா” என்றவன்

“அப்புறம் கடை மர்மமா இருக்கா. எங்க கடைய பத்தி இப்படி சொன்ன முதல் ஆள் நீதான். இப்ப என்ன, அந்த பையனை படிக்க வைக்கனும். சரி படிக்க வச்சு டாக்டரோ.. இல்ல இல்ல வேண்டாம். டாக்டர் வேண்டாம். இன்ஜினீயர் ஓகேவா. அவனை இன்ஜினீயர் ஆக்கிடுறேன். இல்ல வேற எதாவது ஆக்கணும்னாலும் சொல்லு, பண்ணிடலாம்” அவன் கோபமாக பேசுகிறான் என்று நித்திலாவிற்கு தெரியவில்லை ஆனால் விக்ரமிற்கும் சந்தியாவிற்கும் நன்கு புரிந்தது.

“உனக்கு தான் ஒரு தம்பி இருக்கான்ல அப்புறம் எதுக்கு ஊருல இருக்கிறவனெல்லாம் தம்பியா எடுத்துக்கற. பாவம் அவங்களை விட்ரு” அவன் பேசி முடிக்கவும் அவளுக்கே தான் அதிகபடியாக பேசி அவனை காயப்படுத்தி விட்டோமோ என்று தோன்றியது.

“சாரி கௌதம். அது.. சாரி” தயங்கி தயங்கி அவனிடம் மன்னிப்பும் கேட்டாள்.

“இத நீ வீட்டுக்கு வந்து கேட்டிருந்தா, நானே சொல்லிருப்பேன். ஏன்டி இப்படி மானத்தை வாங்கற. சாரி கௌதம்” விக்ரம் சொன்ன பிறகு தான் கவனித்தவன்

“ஆமா நீங்க ரெண்டுபேரும் பேசிக்கிட்டீங்க தான” விக்ரம் சொல்ல, அப்போது தான் இருவருக்குமே நடந்த வாக்குவாதத்தில் அவர்கள் பேசிக்கொண்டது புரிந்தது.. அதை நினைத்து இருவரும் சிரித்துக் கொண்டனர்.

அதை புரிந்து விக்ரமும் புரியாமல் நித்திலாவும் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்தார்கள். அந்த நால்வருக்கும் விதி என்னென்ன திட்டத்தைப் போட்டு வைத்துள்ளது என்பதை அறியாதவர்கள் சிரித்து மகிழ்ச்சியாக இருந்தனர். நித்திலாவும் விக்ரமும் இன்று போல் பின்வரும் காலத்திலும் சந்தியாவிற்கும் கௌதமிற்கும் தெரிந்தும் தெரியாமலும் நிறைய உதவிகளை செய்துக்கொண்டே தான் இருந்தனர். அவர்களே முடிவெடுக்க முடியாமல் திணறியபோதும் இவர்களின் முடிவு அவர்களுக்கு உதவியுள்ளது.

விக்ரம் தானே அவர்கள் பேசிக் கொள்ளவில்லை என்றாலும் மூவரும் ஒன்றாக தான் இருக்கவேண்டும் என்று சொன்னான். இங்கே குட்டி நித்தி அண்ணனிடம் சந்தியாவை மாட்டிவிட சொல்லி, அவர்களை பேச வைத்துவிட்டாள். நிகழ்காலத்திலும் நித்திலா தானே பெரிய அன்னையை அண்ணனிடம் அனுப்பியிருக்கிறாள்.

நித்தியும் அவளுடைய ரபன்ஸலை எப்படி மறந்தாள் என்று தான் தெரியவில்லை. ஞாபகம் இருந்திருந்தால் நிச்சயம் அண்ணன் காதலிக்கும் பெண் அவளென்று உறுதி செய்திருப்பாள். விக்ரமிடம் அவளை பற்றி கேட்டும் இருப்பாள்.

அதுமட்டுமா உண்மையில் சந்தியா சொன்ன வார்த்தைகள் நிஜம் தானோ? அவள் அவனிடம் பேசாமல் இருந்திருந்தால் அவள் வாழ்க்கை இல்லையில்லை அவர்கள் வாழ்க்கை சந்தோசமாக இருந்திருக்குமோ என்னவோ.


*****
அந்த ஐஸ்கிரீம் பார்லரில் கோபத்தில் தங்களை மறந்து இருவரும் பேசிக் கொண்டார்கள். இதுதான் சந்தியாவும் கௌதமும். பொறுமையாக இருக்கும் வரையே இருவரும் ‘பூ’. கோபம் வந்து இருவரும் பேச ஆரம்பித்தால் புயலாக மாறி தங்களையே மறந்து ‘உண்மையை பேசுபவன் தெய்வத்திற்கு சமம்’ என்று அனைத்தையும் கக்கி விடுவார்கள்.

முதலில் நம்பர் மாற்றி கொள்ளப்பட்டது. சந்தியா அப்போது விக்ரம் அவளுக்கு வாங்கிக் கொடுத்த கைபேசியை தான் வைத்திருந்தாள். பக்கத்துக்கு வீட்டில் தானே இருக்கிறேன், கூப்பிட்டால் வரப் போகிறேன். இதற்கு எதற்கு கைபேசி என்று தான் அவன் வாங்கிக் கொடுத்த போது சந்தியா சொன்னாள். அவன் கைபேசி வாங்கி தந்தது அவனுக்கு உதவியாக இருந்ததோ என்னவோ கௌதமுக்கு நன்கு உதவியது. சந்தியா கௌதமுடைய ‘குட் மார்னிங்’ குறுஞ்செய்தியை பார்த்தே எழுவாள். காலையில் நேரத்தில் எழுவது அவனது வழக்கம். எழுந்ததும் அவளுக்கு குட் மார்னிங் சொல்லிவிட்டு தான் அடுத்த வேலையே.

குட் மார்னிங்கில் ஆரம்பித்து வீட்டு பாடத்தை செய்தாயா, தேர்விற்கு படித்தாயா, அந்த மேத்ஸ் சம்மிற்கு என்ன விடை வந்தது போன்றதாகவே பேச்சுக்கள் இருக்கும். கௌதமுக்கும் அதற்குமேல் வேறு மாதிரியான பேச்சுக்களை வைத்துக் கொள்ள தோன்றவில்லை.

கௌதம் நிறைய பேசுவான். அவன் பேசும் போது அவ்வளவு அழகாக இருக்கும். கண்களிலும் வார்த்தைகளிலும் உயிர் இருக்கும். எதை சொன்னாலும் கோர்வையாக கதையாக சொல்லுவான். அவன் பேசுவதை கேட்கவே சந்தியாவிற்கு மிகவும் பிடிக்கும். அதற்காக அவள் பேசமாட்டாள் என்று நினைக்க வேண்டாம். அது என்னவோ மற்றவர்களிடம் அதிகம் பேசாதவள், விக்ரம் கௌதம் என்று வந்துவிட்டால் அதிகமும் பேசுவாள் அதிகாரமும் செய்வாள். அவர்கள் தவறு செய்தால் அதட்டவும் செய்வாள் கோபமும் படுவாள்.

ஆம், இப்போது விக்ரம், சந்தியா மட்டுமல்ல கௌதமோடு சேர்ந்து அவர்கள் மூவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகியிருந்தனர். விக்ரம் கௌதமை அழைப்பது போல் சந்தியாவும் ‘கௌதி’ என்றே அவனை அழைப்பாள்.

மூவரும் அரட்டை அடிப்பதும், விடுமுறை நாட்களில் வெளியே செல்வதும் என அந்த பள்ளியிருந்த மந்தவெளியிலும் அதை சுற்றியுள்ள பகுதியிலும் ஒரே கலாட்டா செய்து வந்தனர்.

சந்தியா வீட்டில் விக்ரம் உடன் இருப்பதால் அவனுடன் சென்று வருகிறாள் என்று எதுவும் சொல்ல மாட்டார்கள். விக்ரம் வீட்டில் சொல்ல ஆளே இருக்க மாட்டார்கள். கௌதம் வீட்டில் சொல்லவே மாட்டான். அவன் முதலிலிருந்தே வீட்டில் சொல்லிவிட்டு எதையும் செய்பவன் அல்லவே. நண்பர்களுடன் வெளியே செல்கிறேன் என்று தகவலாக மட்டுமே சொல்வான்.

கௌதம் டிரைவரை வைத்து கார் எடுத்து வந்தால் அட்டகாசம் இன்னும் பலமடங்கு அதிகமாகும். சந்தியா முதன்முதலில் இறக்குமதி செய்யப்பட்ட உயர்தர காரில் ஏறினாள் என்றால் அது அவனது காரே. சத்தமாக பாடலை ஒலிக்கவிட்டு ஜன்னலை திறந்துக் கொண்டு லாங் டிரைவ் போவது அவளுக்கு மிகவும் பிடிக்கும். சின்ன வயதில் இருந்தே முத்துகிருஷ்ணன் ஆட்டோவிலும் வாடகைக்காரிலும் அழைத்துச் சென்று அதை பிள்ளைகளுக்கு பழகியிருக்கிறார்.

“கௌதி நம்ப ப்ரண்ட்ஷிப் சாங் போடேன்” சந்தியா கேட்க காரில் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த கௌதமும் போட்டான்.

‘வார் ஷிப் என்றும் நீரில் ஓடும்
ஸ்பேஸ் ஷிப் என்றும் வானில் ஓடும்
ப்ரண்ஷிப் ஒன்றுதான் என்றும் நெஞ்சில் ஓடுமே
ஓஹோ ஹோ

ப்ரண்ட்ஷிப் என்றும் தெய்வம் என்று
ஒர்ஷிப் செய்வோம் ஒன்றாய் நின்று
ஒவ்வோர் உள்ளமும் இங்கு கோயில் ஆகுமே

நாட்டில் உள்ள கூட்டணிப் போல்
நாங்கள் மாற மாட்டோமே
நட்பு என்னும் சத்தியத்தை
நாங்கள் மீற மாட்டோமே

நண்பா வா ஹே ஹே ஹே ஹே
யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் என்று கண்டு யார் சொல்வாரோ

கடல் கொண்ட மழை நீரை
இதை காண முடியாது

கடல் கொண்ட நதி நீரை
அடையாளம் தெரியாது’

மூவரும் வானில் பறந்து சந்தோசமாக திரிந்தனர். ஒரு பெண்ணிற்கு தந்தை, சகோதரன், பின்னாளில் கணவன், மகன். இவர்கள் தான் அவள் வாழ்வின் பாதுகாவலர்கள் என்றிருந்த பழையகாலம் மாறி இப்போது ஒரு நல்ல ஆண் நண்பனும் அவளை பாதுகாப்பான் என்று உலகம் மாறித் தான் இருந்தது. அது சந்தியா விசயத்திலும் பொய்யில்லை. அதுவும் அவளுக்கு ஒன்றல்ல, அவளுக்காக எதையும் செய்யும் இரண்டு ஆண் நண்பர்களாக விக்ரமும் கௌதமும் இருந்தனர்.

அதற்காக பாதுகாப்பது மட்டும் அவர்களது பணி என்று இருந்துவிடவில்லை. அவளை படுத்துபவர்களும் அவர்கள் இருவரே. அவர்களை பொறுத்தவரை அவர்கள் கையில் கிடைத்த பொம்மை அவள். அவளை சீண்டி பார்ப்பதும், கிண்டல் செய்வதும், சமயத்தில் அவர்களது கேலியால் அவளை அழ வைப்பதும் அவர்களே. இதுவெல்லாம் அவர்கள் நட்பில் சகஜமே.

எங்கு வெளியே சென்றாலும் கேமராவை வைத்து விதவிதமாக புகைப்படம் எடுக்கவும் மூவரும் தவறியதில்லை. அன்றும் மூவரும் அவர்களது மற்ற நண்பர்கள் பீட்டர், தினேஷ், சரவணன், செல்வம் மற்றும் விக்னேஷுடன் வெளியே சென்றிருந்தனர்.

“ஹேய், சீக்கிரம் ஒழுங்கா போஸ் கொடுடி. எவ்ளோ நேரம் குனிய வைப்ப” பொறுமையை இழந்த கௌதம் சொன்னான். கௌதமும் விக்ரமும் தரையில் முட்டிப் போட்டிருக்க, கௌதம் மீது ஒரு காலையும் விக்ரம் மீது மற்றொரு காலையும் வைத்து அவர்கள் மீது ஏறி நின்றிருந்தாள்.

“நான் என்னடா பண்ணுவேன் காத்துல முடி பறக்குது. ரெண்டுபேரும் நல்ல கடோர்கஜன் மாதிரி தான இருக்கீங்க. கொஞ்சம் நேரம் வெய்ட் பண்ணமுடியாதா. இதோ சரி பண்ணிட்டேன். தினேஷ் அண்ணா இப்ப எடு” என்றாள்.

ஆம், இப்போது விக்ரம் கௌதமை தவிர அவர்களது மற்ற நண்பர்களை சந்தியா ‘அண்ணா’ என்றே அழைக்கிறாள். கௌதம் தான் அவள் யாரிடத்திலும் அதிகம் பேசுவதில்லை என்று அவர்களின் நண்பர்களிடத்தில் அறிமுகம் செய்து வைத்தான். அவளோ அவர்களை அண்ணாவென்று அழைக்க துவங்கிவிட்டாள்.

சந்தியா மிகவும் சந்தோஷமாக இருந்தாள். இந்த உலகத்திலேயே அவள் தான் மிகவும் கொடுத்து வைத்தவள் என்றெண்ண தொடங்கினாள். அப்படி தான் விக்ரமும் கௌதமும் அவளை தாங்கினார்கள். இந்த நிமிடம் இந்த நொடி அவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை பின்னாளில், ஒருவன் தனக்காக எதையும் இழக்கும் உயிர்தோழனாகவும், இன்னொருவன் தனக்காக உயிரையே கொடுக்கும் காதலனாகவும் மாறப் போகிறார்கள் என்று.

எது எப்படி நடந்தால் என்ன, இந்த நொடி அவர்கள் மூவரும் அடுத்த நாளை பற்றி யோசிக்காமல் இந்த நாளை மகிழ்ச்சியாக கழித்தார்கள். இதில் கௌதம், தான் எதற்கு இந்த பள்ளியில் சேர்ந்தோம் என்பதையே முற்றிலுமாக மறந்திருந்தான். அவனுக்கு வேண்டியதெல்லாம் அவன் தேவதை கடைசிவரை அவனுடன் இருக்கவேண்டும். இப்போது சந்தியா அப்படி தான் அவனுக்கு இருந்தாள். அவனை பொறுத்தவரை அந்த நட்பே போதுமென்று எண்ண ஆரம்பித்தான். ஆனால் ஒன்று மட்டும் உறுதி, அவள் தான் அவனது தேவதை. அதில் எந்த மாற்றமும் அந்நாளிலும் இந்நாளிலும் எந்நாளிலும் வந்ததில்லை, வரப் போவதுமில்லை.

அவள் அவனுடன் இருக்கிறாள். அதுபோதும் என்றெண்ணி திருப்தி அடைந்தவன் அதற்கே மோசம் வரும்போது என்ன முடிவெடுப்பான் என்பது அவனுக்கே தெரியாத ஒன்று.

இப்படியே பதினோறாம் வகுப்பு இறுதியை வந்தடைந்தனர். அப்போது தான் அந்த நிகழ்வு நடந்தேறியது.

விக்ரம், கௌதம், சந்தியா மூவரும் விக்ரமின் வீட்டில் கூடி ஒன்றாக படிப்பது, விளையாடுவது, அரட்டை அடிப்பது வழக்கமான ஒன்றே. அன்றும் அது தான் நடந்துக் கொண்டிருந்தது.

“ரெண்டுபேரும் ஆன்வல் எக்ஸாம்க்கு ப்ரிபேர் பண்ணப்போறேன்னு வந்ததுல இருந்து பிளே ஸ்டேஷன்ல கேம் தான் விளையாடிட்டு இருக்கீங்க” காலையிலிருந்து இருவரும் படிக்கிறோம் என்று சொல்லிவிட்டு விளையாடிக் கொண்டு தான் இருந்தார்கள். சந்தியாவும் அவள் வீட்டுற்கு சென்று அன்னைக்கு வீட்டு வேலையில் உதவி செய்துவிட்டு வந்துப் பார்த்தால் அப்போதும் விளையாடிக் கொண்டு தான் இருந்தனர்.

அவள் சொன்னதை காதில் வாங்கினார்களா இல்லையா என்று கூட தெரியவில்லை. கீழே சென்று இருவருக்கும் பூஸ்ட் மற்றும் மாலை சிற்றுண்டி செய்து எடுத்து வந்தாள்.

“விக்ரம் டைம் ஓவர் எழுந்து வா” அவள் வார்த்தைக்கு ஜாய் ஸ்டிக்கை அப்படியே போட்டுவிட்டு அவன் எழுந்து வந்தான். கௌதம் மட்டும் வரவில்லை. இன்னும் ஆர்வமாக விளையாடிக் கொண்டிருந்தான்.

“கௌதி, உனக்கு தனியா சொல்லணுமா. எழுந்து வா” அவ்வளவு தான். விக்ரமுக்கு நேற்று நடந்தது நினைவிற்கு வந்தது.

விக்ரமின் வகுப்புத் தோழன் சபரீஷ் செய்த வேலையே அது. ‘டேய் மச்சான். நீ கொஞ்சம் உஷாரா இருந்துக்கோ. எனக்கென்னமோ சந்தியாவும் கௌதமும் லவ் பண்றாங்கனு தோணுது. அது எப்படிடா, அவ அவனை மட்டும் கௌதினு கூப்பிடறா உன்னை விக்ரம்னு சொல்றா. என்னமோ தப்பா தெரியுதுடா பார்த்துக்கோனு’ சொல்லியிருந்தான். சபரீஷை கௌதமுக்கும் நன்கு தெரியும். அவனுக்கும் அவன் நண்பனே. இருந்தும் நாம் சிலர் மீது கூடுதல் அன்பும் அக்கறையும் காட்டுவோம். சபரீஷிக்கு விக்ரம் அப்படித்தான்.

அவன் பேசியது விக்ரமின் மனதில் நிறைந்திருக்க “நில்லு சந்து. அது என்ன நான் மட்டும் விக்ரம், அவன் கௌதியா” என்றான். அவன் என்ன சொல்கிறான் என்று புரியாமல் கௌதம் விளையாடுவதை நிறுத்திவிட்டு அவனை திரும்பிப் பார்த்தான்.

“இது என்னடா புதுசா. நான் உன்னை எப்பவுமே அப்படி தான கூப்பிடுவேன். ஆனா, அவன்கிட்ட பேச ஆரம்பிச்சப்பவே நீ கௌதினு கூப்பிடறத பார்த்து நானும் அவனை அப்படி கூப்பிட ஆரம்பிச்சிட்டேன்” சந்தியா அவனுக்கு பொறுமையாக விளக்கினாள்.

“அப்ப அவனும் தான் என்னை விக்கினு கூப்பிடறான். நீ அப்போ என்னை விக்கினு கூப்பிட வேண்டியது தான” விக்ரம் புரிந்துக் கொள்ளும் நிலையில் இல்லை.

“டேய், அப்ப நீ கூட தான் அவளை சந்துனு கூப்பிடற. நான் சந்தியான்னு தான கூப்பிடறேன். இதெல்லாமா பெருசு பண்ணுவாங்க” கௌதம் சந்தியாவிற்கு பரிந்துப் பேச அவள் அவனை குறுக்கே பேசாதே என்று கண் ஜாடை காட்ட, அதில் கோபம் வந்து வெடுக்கென்று எழுந்து

“நான் கிளம்பறேன்டா” விக்ரமிடம் மட்டும் சொல்லிவிட்டு சென்றுவிட்டான் கௌதம்.

அன்று முழுவதும் எந்த குறுஞ்செய்தியும் கௌதமிடம் இருந்து வரவில்லை. அடுத்தநாளும் மறுநாள் தேர்வு இருந்ததால் அதை படித்துவிட்டாயா இதை முடித்துவிட்டாயா என்பது போன்ற குறுஞ்செய்திகளே அவனிடமிருந்து வர இவளும் ஆம் இல்லை என்று அவன் பெயரை எங்கும் குறிப்பிடாமல் ஓரிரண்டு வார்த்தையிலேயே பதிலளித்தாள். அது அவனுக்கு புரிந்தும் இருந்தது. ஒரு தக்க சமயத்திற்காக காத்திருந்தான்.

காலையில் அவனுக்கும் அவளுக்கும் வேறு வேறு வகுப்பில் தேர்வு. தேர்வுக்கு செல்வதற்கு முன்பு பயாலஜி பரீட்சையை தவிர மற்ற பரீட்சைகளுக்கு மூவரும் ஒன்றாக அமர்ந்து ஒருமுறை படித்ததை நினைவுக் கூர்ந்துவிட்டு செல்வர். அன்று அவர்களுக்கு வேதியியல் பரீட்சை.

“இது இம்பார்ட்டண்ட் டாபிக்டா. வர வாய்ப்பிருக்குனு சொல்றாங்க. படிச்சிட்டியா” விக்ரமிடம் தான் முதலில் கேட்டான் கௌதம்.

“படிச்சிட்டேன் கௌதி. சந்து தான் நோட்ஸ் தந்தா” விக்ரம் சொல்ல

“ஐயோ.. நான் அந்த நோட்ஸை எப்படியோ மிஸ் பண்ணிட்டு இருக்கேன்டா. உன் நோட்ஸ் கொடு சந்தியா” என்றான்.

“இதோ ஒரு நிமிஷம். இந்தா கௌதம்” என்றாள். அந்த கௌதம் என்ற விளிப்பில் அவனுக்கு கண்கள் சிவந்து கோபம் தலைக்கு ஏறியது. நிமிர்ந்து அவளை அவன் பார்த்த பார்வையிலேயே அவன் அவள் மீது அளவில்லாத கோபத்தில் இருக்கிறான் என்பது அவளுக்கு புரிந்தது.

இது விக்ரமுக்கு புரியாமல் இல்லை. புரிந்துக் கொள்ள விருப்பமில்லாமல் இருந்தான். சொல்லப்போனால் அவனுக்கு அவளற்ற மகிழ்ச்சியே. அவள் தான் அவனை சரிசெய்ய அன்றே அவனிடம் சொல்லிவிட்டாளே, இனி தான் கௌதமை கௌதி என்று அழைக்கமாட்டேன் என்று. இப்போது அதை நடைமுறை மட்டுமே படுத்தியிருக்கிறாள்.

அதற்குமேல் அவளிடம் பேச தனக்கு ஒன்றுமில்லை என்று தோன்ற, அங்கிருந்து எழுந்த கௌதம் “இன்னும் டென் மினிட்ஸ் தான் இருக்கு. நான் கிளாஸுக்கு போறேன் விக்கி” என்று விக்ரமிடம் மட்டும் சொல்லிவிட்டு தன்னுடைய பையை மாட்டிக் கொண்டு விடுவிடுவென நடந்தான். சந்தியாவிற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. இந்த நண்பனுக்காக பரிந்து நடந்தால் அந்த நண்பன் கோபித்துக் கொள்கிறான். அந்த நண்பனுக்காக பரிந்து நடந்தால் இவன் கோபித்துக் கொள்கிறான். மீண்டும் அவளுக்கு இக்கட்டான நிலையாகி போனது.


உண்மையாகும்..


உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் - 10

விக்ரமின் தேர்வுக்கூடம் முதல் தளம். சந்தியாவிற்கும் கௌதமிற்கும் மூன்றாவது தளத்தில் தேர்வுக்கூடம்.

கௌதம் கோபமாக சென்றுவிட்டதை பார்த்து அதிர்ந்தவள் “வா விக்ரம், நாமளும் கிளம்பலாம்” என்று நண்பனையும் இழுத்து வந்து முதல் தளத்தில் அவனிடமிருந்து விடைபெற்று மூன்றாம் தளத்தை நோக்கி படிகளை ஏறவில்லை, படிகளில் ஓடினாள்.

கௌதம் உயரமானவன் என்பதால் இரண்டு படிக்கு ஒரு அடியென்று ஏறி இருந்தான். அதுவும் இப்போதிருந்த கோபத்தில் இன்னும் வேகமாக ஏறிச் சென்றிருந்தான். அவனது வேகத்திற்கு அவளால் ஈடுத்தர முடியவில்லை. ஏறி வந்தவள், கௌதம் அவனது தேர்வறை வாசலில் நிற்பதை பார்த்தாள். உடன் சரவணனும் நின்றிருந்தான். சரவணனும் சந்தியாவும் வரிசைப்படி அடுத்தடுத்த பெயர் என்பதால் இருவருக்கும் ஒரே தேர்வு வகுப்பு.

நேராக கௌதமிடம் வந்தவள் “கௌதம்” என்று மறுபடியும் அழைக்க, அவன் கோபம் குறையுமா என்ன, ஏறவே செய்தது. கைகளை அவள் முகத்திற்கு நேராக நீட்டியவனின் செயலில் பேசவேண்டாம் என்ற அர்த்தம் இருக்க அதை புரிந்து அவளும் கண்ணீரோடு அங்கிருந்து கிளம்ப முடிவு செய்தாள்.

“சரவணன் அண்ணா, நீயும் வர்றியா” என்றதும் அவனும் கௌதமிடம் விடைபெற்று சந்தியாவுடன் சென்றான். அவளால் அவனது கோபத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை. திரும்பி திரும்பி அவனை பார்த்தபடியே அவளது வகுப்பிற்குள் சென்றாள். ஆனால் கௌதம் அவளை திரும்பிக் கூட பார்க்கவில்லை.

எப்போது தேர்வு முடியும் என்று காத்திருந்தவள், தேர்வறையை விட்டு வெளியே வந்ததும் கௌதம் பின் ஓடினாள்.

“நில்லுடா. இப்படி வேக வேகமா நடந்தா உன் ஸ்பீட்க்கு நான் எப்படி மேச் பண்றது” அவள் சொல்ல அவன் பதிலேதும் பேசாமல் முன்னோக்கி நடந்தான்.

“நான் இன்னைக்கு உன் கூட தான் வரப் போறேன். விக்ரம்கிட்ட சொல்லிட்டேன். அவனும் கிளம்பி போயிட்டான்” இவர்கள் மூவரும் நண்பர்கள் ஆன நாளிலிருந்தே மூவரும் ஒன்றாக தான் வீட்டிற்கு செல்வார்கள். காலையில் எப்போதும் விக்ரம் தான் சந்தியாவை அழைத்து வருவான். மாலை வீட்டிற்கு திரும்பும்போது மூவரும் ஒன்றாக பள்ளியிலிருந்து கிளம்ப, சந்தியா ஒன்று விக்ரம் அல்லது கௌதமின் பைக்கில் ஏறிக் கொள்வாள். ஒன்றாக நண்பர்களின் வீடுவரை வரும் கௌதம், அவர்கள் அவரவர் வீட்டிற்கு சென்றதும் அங்கிருந்து அவன் வீட்டிற்குச் செல்வான். சந்தியா, ‘எனக்காக சுற்றிக் கொண்டு வராதே. நான் விக்ரமுடனே செல்கிறேன்’ என்று கௌதமிடம் பலமுறை சொல்லியும் அவன் கேட்பதாக இல்லை.

ஒன்று அவன் வண்டியில் ஏறவேண்டும் இல்லையென்றால் விக்ரம் வண்டியில். அதைவிட்டு நடந்து செல்வதோ இல்லை பஸ், ஆட்டோவில் செல்வதையோ வைத்துக்கொள்ள கூடாதென்று தெளிவாக சொல்லிவிட்டான்.

அத்தோடு ஆட்டோவில் செல்கிறோமோ இல்லையோ வீட்டை விட்டு வெளியில் வரும்போது கையில் பணம் இல்லாமல் வெளியே வரகூடாது. குறைந்தபட்சம் ஒரு இருநூறு ரூபாயாவது வைத்திருக்க வேண்டும் என்று கட்டளையும் இட்டான். இப்போது அவள் கையில் காசிருக்கும் என்று நன்கு தெரியும் அதற்காக அவளை விட்டு சென்று விடுவானா. அது அவளை மனதளவில் பாதிக்கும் என்று உணர்ந்தவன் பைக்கின் அருகில் நின்றவளை “ஏறு” என்றான்.

என்ன, வழியெங்கும் எதுவும் பேசத்தான் இல்லை. வீட்டுவாசலில் நிறுத்தும் நேரத்தில் “என்னடா பேசமாட்டீயா” என்றாள்.

அவன் அமைதியாகவே இருப்பதை பார்த்தவள் “ப்ளீஸ் கௌதம், பேசு” என்றும் சொன்னாள்.

“கௌதம்னு கூப்பிடாத. எனக்கு வெறி ஏறுது” கோபத்தில் அவன் கண்கள் சிவக்க, கை விரல்களை அழுந்த மடக்கிக் கொண்டான்.

“அதுதானடா உன் பேரு. அதுக்கு ஏன் வெறியாகுற. அவனுக்கு தான் புரியல. நீ மெச்சூர்ட்னு நினைச்சேன். நீயுமா”

“அதுக்காக அவன் சொன்னான்னு நீ என்னை கௌதினு கூப்பிடறத நிறுத்திடுவியா. சொல்ல வேண்டியது தான அப்படி தான் கூப்பிடுவேன்னு. அவன் உன்னை சந்து பொந்துனு கூப்பிடறானே நான் எதாவது குறுக்க வந்திருக்கேனா” கோபத்தில் வார்த்தைகளை கடித்துத் துப்பினான்.

“பேசி முடிச்சிட்டியா. அவன் சொன்னான்னு மட்டும் நான் உன்னை கௌதினு கூப்பிடறத நிறுத்தல. எனக்கும் உன்னை கௌதம்னு கூப்பிட தான் பிடிச்சிருக்கு” இவனை சமாதானம் செய்யும் பொருட்டுச் சொன்னாள்.

“பொய் சொல்லாத. அப்புறம் இத்தனை நாளா கூப்பிட வேண்டியது தான. இப்ப எதுக்கு திடீர்னு மாத்தணும்” அவன் கோபம் குறையவே இல்லை.

“அது பர்ஸ்ட்ல இருந்தே நான் உன்னை கௌதினு கூப்பிட்டுட்டேனா, அப்புறம் திடீர்னு மாத்தினா நீ கோவப்படுவியோனு தான் அப்படி கூப்பிடல. உண்மையிலேயே எனக்கு கௌதிய விட கௌதம் தான் பிடிச்சிருக்கு. அதனால தான் அவன் சொன்னதும் சட்டுனு மாத்திக்கிட்டேன். நீ என்னை அவனை மாதிரி சந்துனு கூப்பிடலனாலும் நான் உன் பெஸ்ட் ப்ரண்ட் தான. அப்படிதானடா நீயும் எனக்கு. கூப்பிடறதுல என்ன ஆகிடபோகுது” ஆம் அவனும் அவளை சந்தியாவென்று எல்லோரும் அழைப்பது போல் தானே அழைக்கிறான். அதில் என்ன மாறிவிட்டது. அவள் அவனது அருமைத்தோழி தானே.

இது தான் கௌதமின் குணம். அவனுக்கு வேண்டியதை பெற்றே தீருவேன் என்ற வைராக்கியம் கொண்டவன் தான். இருந்தும் ஒன்று சரியென்றுபட்டால் புரிந்து ஏற்றுக் கொள்வான். அதற்குமேல் வீம்பு பிடிக்கமாட்டான். ஐந்து சகோதரிகளுடன் ஒரேவீட்டில் இருப்பதால் இந்த பக்குவம் அவனுக்கு இயல்பிலேயே வந்துவிட்டது.

பின் நல்லபடியாக விடைபெற்று சென்றவனையே பார்த்திருந்தவள் “சாரி கௌதம். விக்ரமுக்காக தான் ஸ்டாப் பண்ணேன். என்னால உங்க ரெண்டுபேருக்கும் நடுவுல எந்த பிரச்சனையும் வந்துடக்கூடாது. அதேநேரத்துல நான் சொன்னதும் பொய் இல்ல. எனக்கு கௌதமும் பிடிச்சி இருந்துச்சு. அதான், அப்படி கூப்பிட ஆரம்பிச்சிட்டேன். இனி எப்பவும் அப்படி தான் கூப்பிடுவேன். நீயாவது என்னை புரிஞ்சிக்கோ” தன் மனதிலேயே எண்ணினாள்.

ஒரு நண்பனுக்காக இன்னொரு நண்பனுக்கு மிகப்பெரிய தவறு தான் செய்தாள். இருந்தும் அவளிடத்தில் வேறு வழி என்ன இருக்கக்கூடும். அன்றே விக்ரமிடம் இனி கௌதமை ‘கௌதி’ என்று அழைக்கமாட்டேன் என்று சொல்லித் தானே அந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்திருந்தாள். அது அவளுக்கும் விக்ரமுக்கும் இருக்கும் நட்பையும், விக்ரம் மற்றும் கௌதமின் நட்பையும் கருத்தில் கொண்டு எடுத்த முடிவு. அப்படியென்றால் அவளுக்கும் கௌதமுக்கும் இடையில் இருக்கும் நட்பை பற்றி அவள் யோசிக்கவே இல்லையா?

தேர்வுகள் அனைத்தும் முடிந்தது. முழு ஆண்டு விடுமுறையில் ஒருநாள் கௌதம் சந்தியாவை எங்கோ அழைத்து சென்றுக் கொண்டிருந்தான்.

“என்னை எங்க கூட்டிட்டு போற கௌதம்” வெகுநேரமாக கேட்டுக் கொண்டிருக்கிறாள். அவன் பதிலேதும் சொல்லாமல் பைக்கை இயக்கிக் கொண்டிருந்தான்.

“டேய், கேட்டுட்டு தான இருக்கேன். என்னை எங்கடா கூட்டிட்டு போற. வீட்ல அம்மாகிட்ட பொய் சொல்லிட்டு வந்திருக்கேன். நீ என்னனா வந்தா தான் ஆச்சுன்னு அடம்பிடிச்சி இழுத்துட்டு போயிட்டு இருக்க”

“உன்னை கடத்திட்டு போறேன். போதுமா” கௌதம் சொல்ல

“ஓ.. அப்படியா. என் தொல்லை தாங்காம நீயே திரும்ப கொண்டுப் போய் விட்டுடுவ” அவள் சொல்லிச் சிரித்தாள்.

“தெரிஞ்சா சரி” வாய்க்குள்ளேயே முணுமுணுத்து கொண்டவன் வண்டியின் வேகத்தை கூட்டினான்.

“இப்படி வேகமா போகாதனு எத்தனை தடவை சொல்றது கௌதம். நான் பின்னாடி இருக்கப்பவே இவ்ளோ வேகமா போறன்னா தனியா போறப்போ எவ்ளோ ஸ்பீட்ல போவ. இந்த ஏஜ்ல பைக் ஓட்டுறது தப்புனு உங்கிட்டயும் அவன்கிட்டயும் நிறைய டைம் சொல்லிட்டேன். அவனாவது பரவாயில்ல, பார்த்துப் போவான். நீ கண்ணுமண்ணு தெரியாம ஓட்டுற. முதல்ல உங்கிட்ட இருந்து பைக்கை பிடுங்கி வைக்கணும்” என்றவளை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு வண்டியை தொடர்ந்து இயக்கினான்.

வண்டியை நேராக கொண்டுப் போய் ஒரு பெரிய கட்டிடத்தின் முன் நிறுத்த காவலாளி அவனுக்கு சல்யூட் அடித்து கதவை திறந்தார். மேலே நிமிர்ந்து பார்த்தவளுக்கு அந்த பெயர்ப்பலகை தெரிந்தது. அதில் ‘செல்வராணி அறக்கட்டளை’ என்றிருந்தது.

உள்ளே சென்றதும் “இதுதான் எங்க டிரஸ்ட் ஆபீஸ். இதோட சேர்ந்து பசங்க படிக்கற ஸ்கூலும் இருக்கு. இங்க எதுக்கு உன்னை கூட்டிட்டு வந்திருக்கேன்னு யோசிக்கிறீயா” கௌதம் கேட்க

“இல்லயே.. எனக்கு தான் தெரியுமே” என்று சொன்னவளை ஆச்சர்யப்பட்டு திரும்பிப் பார்த்தான்.

“அந்த பையனை இங்க தான வச்சி படிக்க வைக்கறீங்க. அவனை எனக்கு காட்ட தான” என்று சொன்னவளை

‘அதானே. என்னடா ரொம்ப மாசமா அவனை பத்தி எதுவும் பேசலயேனு பார்த்தேன்’ தன் மனதிற்குள்ளேயே நொந்துக் கொண்டான். ஆம், அவனை படிக்க வைக்கிறேன் என்று சொல்லியும் பலமுறை கேட்டிருக்கிறாள் அவன் பள்ளிக்கு செல்கிறானா, நன்றாக படிக்கிறானா, மறுபடியும் வேலை செய்ய கடைக்கு சென்றுவிடவில்லையே என்று. சில மாதங்களாக தான் அவனைப் பற்றி கேட்பதை விட்டிருக்கிறாள். கௌதமை அவள் நம்ப ஆரம்பித்து விட்டாளோ?

“இல்ல. எங்க மேல நம்பிக்கை இல்லாம தான அந்த பையனைப் பத்தி அடிக்கடி கேட்டுக்கிட்டு இருக்க. அதான் அதுக்கு ஒரு எண்ட்கார்ட் போடலாம்னு. சரி வா உள்ள போகலாம்”

“ஒரு நிமிஷம் கௌதம். அந்த பையன் முன்னாடி கொண்டுப் போய் நிறுத்தி நான் தான் அவனை படிக்க வைக்க சொன்னேனுனெல்லாம் சொல்லிடாத. இந்த வயசுல யாரும் வேலை செய்யக் கூடாது, அவன் படிக்கணும் அவ்ளோ தான் எனக்கு வேணும். மத்தபடி அவனை நேர்ல பார்க்கணும்னுலாம் ஒண்ணுமில்ல. சரி, என்னை வேற கூட்டிட்டு வந்துட்ட. அதனால நான் கிட்ட வரல தூரத்துல இருந்தே அவனை பார்த்துக்கறேன். நான் வேற கடைல அன்னைக்கு பார்க்காம விட்டுட்டேன்” அவள் பேச பேச அவளையே அசந்து பார்த்திருந்தான்.

‘ரொம்ப தான் தன்னடக்கம். ஆமா, யார் இவளுக்கு பேச தெரியாதுனு சொன்னது. எவ்ளோ பேசறா பாரு. இதுல அந்த பையனை தூரத்துல இருந்து பார்க்கணுமாம். என்னால முடியல’ மனதில் நினைத்துக் கொண்டிருந்தவனை ‘கௌதம்’ என்று உலுக்கியவள்

“போகலாமா” என்றாள்.

“போலாம். அதுக்கு முன்னாடி நான் சொல்றத முதல்ல கேளு. அந்த பையனை நீ இப்ப பார்க்கப் போறதில்ல. அவன் டுவெல்த்ல நல்ல மார்க் எடுத்து, மெரிட்ல நல்ல காலேஜ்ல சேர்ந்து, இன்ஜினீயர் ஆகி, நல்ல வேலைக்கு போய் அவன் லைஃப்ல ஒரு நல்ல நிலைமைக்கு வரப்போ தான் உன் முன்னாடி வருவானாம். அதுவரைக்கும் உன்னை பார்க்கமாட்டானாம்” என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட

“அவனே சொன்னானா. நீ என்னைப் பத்தி அவன்கிட்ட சொன்னியா” அவள் உடனே கேட்க, அவன் ஆமென்று தலையாட்ட “ஏன்டா. இதுக்கு தான் தெரியவேண்டாம்னு சொன்னேன். இப்ப பாரு, நீ சொன்னதுனால அவன் இப்படி சொல்லிருக்கான்” என்றவளுக்கு முகமே வாடிப்போனது.

“சரி வா, நாம மத்த பசங்கள பார்க்கலாமா” அவளை உள்ளே அழைத்துச் சென்றான்.

“நானே கேட்கணும்னு நினைச்சேன். செல்வராணி யாரு கௌதம். அவங்க நேம்ல எல்லாம் இருக்கு”

“இதுவே உனக்கு தெரியாதா. செல்வராணி என் ஸ்வீட் அம்மா” என்றான் ஆச்சர்யத்தோடு.

“ஓ, உன் அம்மா பேரா. அப்போ வேணி பொன்மாளிகை. உன் சிஸ்டர்ஸ் நேம் கூட வேணினு இல்லயே”

“அது எங்க அத்தை, அம்சவேணி. அத்தைய அப்பா தான் வளர்த்தாரு. அவருக்கு அத்தைனா உயிர்” என்றவுடன்

“சே.. நான் உன்னைப் பத்தி எதுவுமே தெரிஞ்சிக்காம இருந்திருக்கேனே” வருத்தப்பட்டு சொன்னாள்.

“தெரிஞ்சிக்கிற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லன்னு நினைச்சிருப்ப” என்றதும் அவள் அவனை முறைக்க “சரி அட்லீஸ்ட் எங்க அப்பா நேம் தெரியுமா” என்று அவளிடம் விளையாட

“தெரியும் கௌதம் செல்வராஜ்” என்றாள் மிடுக்காக.

“பரவாயில்லடி. உனக்கும் அப்பப்போ கிட்னி ஒர்க் பண்ணுது” அவன் அவளை கேலி செய்ய ‘டேய்ய்ய் உன்னை’ என்ற முறைப்போடு அவனைப் பார்த்தாள். இருவரும் மற்ற பிள்ளைகளை பார்த்து அவர்களோடு மகிழ்ச்சியாக நேரத்தையும் செலவழித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினர்.

அது தான் தான் என்று சொல்லவிடாமல் அவனை எது தடுத்தது. புடவை விசயத்தை பற்றி பயப்படுகிறான் என்றால் அதை தவிர்த்து மற்றதை சொல்லியிருக்கலாமே. எதற்கு இந்த பிடிவாதம். எதற்காக ஒரு சின்ன விசயத்தை மறைக்க இத்தனை பொய்கள். அது அவன் மட்டுமே அறிந்தது. எது எப்படியோ இன்னும் பல வருடங்களுக்கு கடையில் வேலை செய்த அவனை அவளிடம் காட்டுவதிலிருந்து தள்ளிப் போட்டான். உண்மை ஒருநாள் சந்தியாவிற்கு தெரிய வரும்போது அவளதை எப்படி எடுத்துக் கொள்வாள் என்பது யாரும் அறியாத ஒன்று.

நாட்கள் செல்ல செல்ல மூவரது பிணைப்பும் வலுவாகி கொண்டே போனது. மூவரும் பன்னிரெண்டாம் வகுப்பில் அடியெடுத்து வைத்தார்கள். இம்முறை பள்ளி விளையாட்டு தலைவனாக கௌதம் தேர்ந்தெடுக்க பட்டிருந்தான். விக்ரம் அவனது ஸஃபயர் (நீளம்) அணியின் விளையாட்டு தலைவன். போட்டிகளும் நடந்து இருவரும் பரிசுகளை வாங்கி குவித்துக் கொண்டிருந்தனர். பள்ளி கால்பந்து அணியிலும் கௌதம் தலைவனாகவும் விக்ரம் துணைத் தலைவனாகவும் இருந்தார்கள். விளையாட்டிலும் கௌதம் தாக்குதல் முறையிலே ஃபார்வார்ட் விளையாடுவான். விக்ரம் அதற்கு நேர்மாறு. அவன் டிஃபென்ட்(Defend) செய்து விளையாடுவான். இப்படி விளையாட்டு, படிப்பு என அனைத்திலும் இரண்டு நண்பர்களும் சிறந்து விளங்க சந்தியாவிடம் படிப்பை தவிர வேறேதிலும் பங்களிப்பு இருக்காது. அது அவளுக்கு விளையாட தெரியாது என்றில்லை. அவளுடைய தயக்கமே அவளை எதிலும் பங்குபெற விடாது.

இத்தனைக்கும் பாட்டு கற்றிருக்கிறாள். இரண்டு வருடம் நாட்டியமும் கற்றிருந்தாள். ஆனால் இதுவரை மேடை ஏறியதுமில்லை எந்த போட்டியிலும் கலந்துக் கொண்டதுமில்லை. இம்முறை கௌதம் அவளை எதிலாவது ஈடுப்படுத்தியே ஆகவேண்டும் என்ற முடிவோடு ஸ்போர்ட்ஸ் கேப்டன் என்ற பொறுப்பிலிருந்து அனைவரும் ஏதாவது ஒரு விளையாட்டு போட்டியில் நிச்சயம் பங்குபெற வேண்டும் என்று திட்டவட்டமாக சொல்லியிருந்தான்.

அதுமட்டுமில்லாமல் அவள் நன்றாக கோ-கோ விளையாடுவாள். மூன்று வருடத்திற்கு முன் யாரோ இரண்டு மாணவர்கள் கேலி செய்ததால் இப்போது அணியில் இல்லை. அவளை மறுபடியும் கோ-கோ அணியில் சேர ஊக்குவித்தான். பரிசு கிடைப்பது இரண்டாம் பட்சம் ஆனால் பங்குபெறுவது முக்கியம், அதனால் நூறு மீட்டர், இருநூறு மீட்டர் ஒட்டப் பந்தயத்திலும் பங்குபெற சொன்னான். அவளது கோ-கோ அணி வெற்றியும் பெற்றது. இதுதான் சந்தியா அவள் வாழ்வில் வாங்கும் விளையாட்டு சம்மந்தமான முதல் பரிசு.

கௌதமும் வெறும் பள்ளியின் ஸ்போர்ட்ஸ் கேப்டனாக மட்டும் இல்லாமல் அவனது ரூபி (சிவப்பு) அணிக்காகவும் விளையாடினான். எப்போதும் விதி விக்ரமை விலக்கி சந்தியாவையும் கௌதமையும் இணைக்கும். இம்முறையும் அதுவே நடந்தது. இருவரும் ரூபி அணியில் இருந்தனர். விக்ரம் மட்டும் ஸஃபயர் அணியில்.

ஆன்வல் ஸ்போர்ட்ஸ் மீட்டில் நிறைய பரிசுகளை ரூபி அணி குவித்து ஓவரால் சாம்பியன் பட்டம் வாங்கியது. சிறந்த மார்ச்ஃபாஸ்ட்டக்கான பரிசை விக்ரம் ஸஃபயர் அணி சார்பாக வாங்கினான். ரூபி அணிக்கு அடுத்து ஸஃபயர் அணியே புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்தது. கௌதமும் விக்ரமும் நிறைய பரிசுகளை வாங்கி குவித்திருந்தனர்.

“அத்லெடிக்ஸ் இண்டிவியூஜுவள் சாம்பியன்ஷிப் – பாய்ஸ் - கௌதம் செல்வராஜ்” கௌதம் அந்த பரிசை வாங்க ஓட சந்தியாவிற்கும் விக்ரமிற்கும் அளவு கடந்த மகிழ்ச்சி.

கௌதமுக்கோ அவன் வாங்கிய சாம்பியன்ஷிப்பை விட அதிக நிறைவை கொடுத்தது அன்றைக்கு சந்தியா தன் கோ-கோ அணியோடு மேடையேறி பரிசு வாங்கியது. அவள் தன்னை வெளியே காட்டிக் கொள்பவள் அல்ல. அவளை வெளிக்காட்டவே அவன் விரும்பினான். அதுமட்டுமா வாழ்வில் அவள் சென்ற ஒவ்வொரு இடமும் அங்கே அவள் பெற்ற பேரும் புகழும் அவன் கொடுத்த தைரியதால் வந்ததே. அதை அவளாலும் மறுக்கமுடியாது.

எல்லாம் முடிந்து காலாண்டு தேர்வும் வந்தது. மூவரும் படிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினர். அதற்கு நடுவில் ஒரு ஞாயிற்றுக்கிழமை ஓணம் பண்டிகை வந்தது.

ஆம், சந்தியாலஷ்மி கேரளத்தை சேர்ந்தவள். அவளது தாத்தா அதாவது முத்துகிருஷ்ணனின் தந்தை கேரளாவில் தன் வீட்டுப் பக்கத்தில் இருந்த தமிழ் பெண்ணை விரும்பி அவரை காதல் திருமணமும் செய்து தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்துவிட்டார். அதன்பின் முத்துகிருஷ்ணனுக்கு தமிழ்மரபு சொல்லித்தந்தே தாயும் தந்தையும் வளர்த்தனர். ஆனால், விதி விடுமா. நிறைய வருடங்களுக்கு பிறகு தன் பத்தொன்பது வயதில் ஒரு திருமணத்திற்கு சொந்தமண்ணுக்கு தாய் தந்தையுடன் சென்ற முத்துகிருஷ்ணனனை பார்த்ததும் பிடித்துவிட்டது அவரது தூரத்து சொந்தக்கார பெண் மீனாட்சிக்கு. அப்போதே மீனாட்சி பன்னிரெண்டாம் வகுப்பை முடித்து கல்லூரியில் சேர்ந்திருந்தார். முத்துகிருஷ்ணனோ படிப்பேறாமல் பத்தாவதோடு படிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு முதலில் ஒரு மெக்கானிக் ஷெட்டில் வேலை செய்தார். பின் வாடகை ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்தார். மீனாட்சி குடும்பமோ நல்ல வசதி. இரண்டு மூன்று தலைமுறைக்கு சொத்து இருந்தது. என்ன இருந்து என்ன, அவருக்கு பிடித்தது முத்துகிருஷ்ணனையே. கல்லூரி படிப்பை முடித்த கையோடு கேரளாவில் இருந்து இரயிலேறி சென்னை வந்துவிட்டார். திருமணமும் ஆனது. ஆனால் மீனாட்சியின் வீட்டில் தான் அவரை தலை முழுகிவிட்டனர். மீனாட்சி வந்த பிறகே அந்த வீட்டில் விஷு, திருவோணம் எல்லாம் அனுசரிக்கப்பட்டது.

முத்துகிருஷ்ணனின் தாயும் மருமகளாவது கணவர் வீட்டுமுறைகளை இந்த வீட்டிற்கு கொண்டுவரட்டும் என்று விட்டுவிட்டார். அதிலிருந்து அந்தவீட்டில் தமிழ் பண்டிகைகளும் அனுசரிக்கப்படும் கேரளத்து பண்டிகைகளும் அனுசரிக்கப்படும். முத்துகிருஷ்ணனுக்கு மலையாளம் தெரியாது. அதனால் வீட்டில் தமிழிலேயே பேசிக் கொண்டாலும் சக்திக்கும் சந்தியாவிற்கும் மலையாளம் நன்கு தெரியும். அவ்வப்போது தாயிடம் பேசிக்கொள்வதும் உண்டு.

அன்றைய பரீட்சையை முடித்துவிட்டு மூவரும் வண்டி நிறுத்துமிடத்திற்கு நடந்து வந்துக் கொண்டிருக்க, சந்தியா “குரூப் ஸ்டெடிஸ்க்கு ப்ரண்ட் வீட்டுக்கு போற. நாளைக்கு என்னனு ஞாபகம் இருக்குல. மறக்காம வந்திடுடா. அப்புறம் உன் மீனுக்குட்டி மனசு உடைஞ்சிடும்” விக்ரமிடம் சொன்னாள்.

“அது எப்படி நான் வராம ஓணம் ஃபங்ஷன் நடக்கும்” விக்ரமும் சொல்ல

“என்னதுடா ஓணம் ஃபங்ஷன்” என்றான் புரியாமல் கௌதம்.

“ஓ உனக்கு தெரியாதா. நம்ப கேரள நாட்டு கிளி சந்தியாலஷ்மி வீட்டுல நாளைக்கு திருவோணம் ஃபங்ஷன். நான் போனாதான் ஓணம் சத்யா நடக்குமாம்”

‘என்ன இவ மலையாளியா’ என்பது தான் கௌதமின் பார்வையாக இருந்தது. இதுவரை அவனுக்கு அது தெரியாது. தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பமும் ஏற்படவில்லை. கடையில் ஓணப் புடவைகள் விற்பதை பார்த்து ஓணம் வரப் போகிறது என்று தெரியும். ஆனால் அதை இவள் அனுசரிப்பவள் என்று அவனுக்கு தெரியாது.

“அது என்னடா ஓணம் சத்யா. ஆமா மீனுக்குட்டி யாரு” என்றான் விக்ரமிடம்.

“அடப்பாவி ஓணம் சத்யா தெரியாதா. இட்ஸ் ஓணம் பீஸ்ட்(feast). வாழையிலைல நிறைய வகை கேரளா டிஷ்ஷ சமைச்சி வச்சி சாப்பாடு போடுவாங்கடா. செமையா இருக்கும். அதுவும் என் மீனுக்குட்டி கையால. சொல்லல பாரு, மீனுக்குட்டி என் டார்லிங். இவளோட அம்மா. எனக்கும் அம்மா தான். அவங்கள செல்லமா அப்படி தான் கூப்பிடுவேன்” விக்ரம் சொல்லும்போதே அவனுக்கும் அவள் வீட்டிற்கும் இருக்கும் பந்தம் அழகாக தெரிந்தது.

“சரி, இவ என்ன உன்னை மட்டும் கூப்பிடறா. நானெல்லாம் இவளுக்கு ஆளா தெரியலையா” இதையும் அவளிடம் கேட்காமல் விக்ரமிடமே கேட்டான்.

“விளையாடாத கௌதம். அவனை எங்க வீட்டுல எல்லாருக்கும் தெரியும். அவன் எங்க வீட்டுல ஒருத்தன் மாதிரி. அவன் மேல எங்க அம்மாவுக்கு தனி பாசம். அவனுக்கு பிடிக்கும்னு ஓணத்துக்கு சம்மந்தமே இல்லாம பொங்கல் செய்வாங்க. எனக்கும் சக்திக்கும் கூட அப்படி பண்ணமாட்டாங்க. நான் உன்னை என்னனு கூட்டிட்டு போறது” அவள் நேராக அவனிடமே கேட்டுவிட்டாள்.

“நான் உனக்கு என்ன. ப்ரண்ட் தான. அதையே சொல்லு”

“அதெல்லாம் முடியாது. தேவையில்லாத பிரச்சனை வரும்”

“என் கூட பைக்ல வாசல்ல போய் இறங்கறப்போ இல்லாத பயம் இப்ப மட்டும் வருதோ. இத்தனை நாள் வாசல்ல இறக்கிவிட்டவன் இன்னைக்கு வீட்டுக்கு வந்துட்டான்னு சொல்லு” கடுமையான குரலில் சொல்ல அவன் பேசியது அவளுக்கு கோபத்தை கிளறியது

“என்ன கௌதம் சொல்லிக்காட்டறீயா. நான் வரமாட்டேன்னு சொன்னப்போ நீ தான் வம்புப் பண்ணி கூட்டிட்டு வந்த. இனி, உன் பைக்ல ஏறினா என்னனு கேளு”

“என்ன சொன்ன அவனை மட்டும் கூப்பிடறேனா. அவன் வீட்டுக்கு நான் உரிமையா போவேன். என்னை லாயர் அய்யா, அம்மா எதுவும் சொன்னதில்ல. கிளம்பு என்னை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய் நான் உனக்கு ஆளா தெரியறேனா இல்லயானு காட்டு. அப்புறம் நான் கூட்டிட்டு போறேன்” அவளும் பதிலுக்கு வார்த்தைகளை விட்டாள்

“என்னடீ இப்ப நீ சொல்லிக்காட்டறீயா. உங்க வீடு வேற எங்க வீடு வேற. உனக்கும் அவனுக்கும் இருக்குற பிரண்ட்ஷிப்பை உங்க ரெண்டு வீட்டுலயும் மதிக்கறாங்க. எங்க வீடு அப்படியில்ல. எங்க வீட்டுக்கு நான் உன்னை இல்ல, எந்த பொண்ணையும் கூட்டிட்டு போனதில்லனு உனக்கும் தெரியும் தான” என்று சீறினான்.

செல்வராஜிற்கு வீட்டிற்கு நண்பர்களை அழைத்து வருவது பிடிக்காத ஒன்று. பெண் தோழிகள் என்றில்லை ஆண் நண்பர்களையும் சேர்த்துதான். ஐந்து பெண்கள் இருக்கும் வீடு அதனால் ஆண் நண்பர்களையும் பெண் தோழிகளையும் வீட்டிற்கு அழைத்து வந்து அதனால் குடும்பமானம் கெட்டுவிடக் கூடாதென்பது அவருடைய கருத்து. அதில் மகனும் பெண்பிள்ளைகளுடன் கூட்டு வைத்து அதனால் அவனுக்கு எவ்வித பிரச்சனையும் வந்துவிடக் கூடாதென்ற அக்கறையும் இருந்தது. இந்த கட்டுப்பாடு கௌதமுக்கு மட்டுமல்ல. வீட்டிலிருக்கும் மகள்களுக்கும் சேர்த்து தான்.

கௌதம் தந்தைக்கு பிடிக்காத எதையும் செய்யமாட்டான். இந்த விசயத்திலும் அப்படி தான். அவன் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வருவது மட்டுமல்ல இவனும் யார் வீட்டிற்கும் செல்லமாட்டான். சந்தியாவை பார்க்கும் முன் விக்ரம் வீடு எங்கிருக்கிறது என்று தெரிந்திருந்தாலும் ஓரிரண்டு முறை விக்ரமின் வற்புறுத்தலினால் சென்றிருக்கிறான். அதுவும் விக்ரம் வீட்டில் பெண்பிள்ளை இல்லையென்பதை கருத்தில் கொண்டே சென்றிருக்கிறான். பீட்டர், தினேஷ், விக்னேஷ் மற்றும் சரவணன் வீட்டில் சகோதரிகள் இருப்பதால் அதுவும் செய்யமாட்டான்.

சந்தியாவை பார்த்ததிலிருந்து அவனது கொள்கையில் சிறு மாற்றம் ஏற்பட்டு இப்போது விக்ரம் வீட்டிற்கு அவனையும் அவளையும் பார்க்கச் செல்கிறான்.

கௌதம் சந்தியா இருவரும் மாறி மாறி பேச சண்டை வெடித்திருந்தது.

விக்ரமிற்கு தெரியும் இவர்கள் இருவருக்கும் கோபம் வந்தால் அனைத்தையும் பேசி பிரச்சனையில் தான் கொண்டுப் போய் முடிப்பார்கள் என்று. அதனால் அதை நிறுத்தும் பொருட்டு

“அடச்சே. ரெண்டுபேரும் நிறுத்துங்க” இருவரும் வாயை அடைத்துக் கொண்டனர்.

“இப்ப என்ன அவ வீட்டு ஓணத்துக்கு நீ வரணும் அவ்ளோ தான. நாளைக்கு என் வீட்டுக்கு வாடா” கௌதமை பார்த்து சொல்லிவிட்டு “சந்து, நீ என்ன பண்றன்னா சத்யவை தூக்கி ஒரு கேரியர்ல கட்டிட்டு வந்திடு. மீனாம்மா கேட்டா, விக்ரமுக்கு வர முடியலை அதான் எடுத்துக்கிட்டு போறேன்னு சொல்லிடு. இப்ப முறையா அவனை கூப்பிடு பார்ப்போம்” விக்ரம் சொல்லியும் அவள் வாய் திறக்காமல் அமைதியாக இருக்க “கூப்பிடு சந்து” என்றான் அதட்டல் குரலில் விக்ரம்.

“அதெல்லாம் வேண்டாம்டா. நான் தான் எதோ ப்ரண்ட்னு நினைச்சி கேட்டுடேன். நான் வர..” வரமாட்டேன் என்று சொல்ல வந்த கௌதமை தடுத்து சந்தியாவை காட்டினான் விக்ரம். அவள் கண்களில் கண்ணீரோடு தரையை பார்த்து நின்றிருந்தாள். அவளது கண்ணீரை பார்த்தவனுக்கு இதற்கும் மேல் இதை பெரிதுப்படுத்த மனமில்லை.

“சாரி, எனக்கு ஒண்ணும் உன்னை கூப்பிடக் கூடாதெல்லாம் இல்ல. விக்ரம் வீட்டுக்கு வந்திடு. ப்ளீஸ்ஸ்” என்றாள் அவளும் கௌதமிடத்தில்.

“அப்ப வந்து பைக்ல ஏறு” என்றான் சமாதானமாய் அவனும். அவனுக்கும் அவள் சூழ்நிலை புரிந்து தான் இருந்தது. என்ன செய்வது அவள் விக்ரமை மட்டும் அழைத்ததை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அடுத்தநாள் கௌதம் விக்ரம் வீட்டிற்கு வர, இருவரும் அவன் வீட்டு உணவுமேசையில் காத்திருந்தனர். அந்நேரத்தில் சந்தியா தூக்கமுடியாத கேரியரோடு வந்தாள். உடன் அவளது தம்பி சக்தியும் மூன்று டிபன் பாக்ஸையும் வாழையிலையையும் கையில் தூக்கிவந்தான்.

“வாம்மா. எவ்ளோ நேரம் சாப்பிடாம வெயிட் பண்றது” விக்ரம் சொல்ல, கௌதம் அவளையே பார்த்திருந்தான். உடன் அவளது தம்பி சக்தி நின்றிருந்தான்.

“இது என் தம்பி சக்தி. சிக்ஸ்த் படிக்கறான்” கௌதமிடம் தான் சொன்னாள், ஆனால் நேரடியாக சொல்லாமல் பொதுவாக சொன்னாள். தம்பியை அதிகநேரம் வைத்திருக்காமல் “நீ போயிக்கோ சக்தி. அம்மா வழக்கு பரையும்” சந்தியா தம்பியிடம் சொல்ல கௌதம் அவளை புரியாமல் பார்த்திருந்தான்.

“ஒண்ணுமில்லடா அம்மா திட்டுவாங்கனு சொல்லி அவனை கிளப்பிவிடறா” விக்ரம் கௌதமுக்கு மட்டும் கேட்க விளக்கி சொல்ல ‘ஓ இவனுக்கும் புரியும் போல’ என்று அவனும் எண்ணிக் கொண்டான்.

சக்தி செல்வதற்கு காத்திருந்த கௌதம் சத்தமாகச் சிரித்து “என்னடி டிரஸ் இது, பாவாடை சட்டை. ஏற்கனவே நீ குட்டி. இதுல இத வேற போட்டுக்கிட்டு ‘பாப்பா பாடும் பாட்டு கேட்டு தலைய ஆட்டு’” என்று கேலிச் செய்தான்.

“இதுக்கு தான் விக்ரம் இவன் வேண்டாம்னு சொன்னேன். நீ தான் கேட்கல” கோபத்தில் அவள் முகமே சிவப்பானது.

“சும்மா இரேன் டா. அது அவளோட ஓணம் டிரஸ். அதை பார்த்து சிரிக்கற. சத்யவை திரும்ப எடுத்துட்டு போய்ட போறா” விக்ரம் பதறிப்போய் சொன்னான்.

“இவனுக்கு எப்பவும் என் ஹயிட்டை வச்சி கிண்டல் செய்யறதே வேலையா போச்சு விக்ரம்” சந்தியா முறைத்துக் கொண்டே சொன்னாள்.

“சரி, நான் சொல்லலை. நீ சொல்லு விக்கி. இவளை பார்த்தா எப்படி தெரியுது” என்று அவனை பார்த்து கண்ணடிக்க விக்ரமுக்கு இப்போது என்ன செய்யவேண்டும் என்று புரிந்துப் போனது.

“அவ ஹயிட்க்கு நேரா பார்த்தாயெல்லாம் தெரியமாட்டாடா. குனிஞ்சி தான் பார்க்கணும். லிமிடெட் எடிஷன் டா” விக்ரமும் சேர்ந்து கிண்டல் செய்ததும் அங்கிருந்து கிளம்பவே முடிவுச் செய்துவிட்டாள்.

“நான் போறேன் விக்ரம். நீங்களே எடுத்து வச்சு சாப்பிட்டுக்கோங்க” என்று அங்கிருந்து சென்றவளை கௌதம் கைப்பிடித்து நிறுத்தினான்.

“சும்மா உன் கூட விளையாடலாம்னு பார்த்தா நீ என்னனா கோவப்பட்டு போற. நல்லா தான் இருக்க. ஆனா பாவாடை தாவணி போட்டிருந்தா இன்னும் அழகா இருந்திருப்ப” கௌதமுக்கு அவளை அப்படி பார்க்கத்தான் பிடித்து இருந்தது. உண்மையில் அவளிடம் விளையாடும் பொருட்டே அவளை கேலிச் செய்தான். ஆனால் அவள் பாவாடை தாவணியில் இருந்திருந்தால் அவனது தேவதையை கண்ட திருப்தி கிடைத்திருக்கும் என்றெண்ணினான்.

“அதெல்லாம் தீபாவளிக்கு போடுவேன் வேணும்னா வந்து பார்த்துக்கோ” முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு சொன்னாள் “இவனோட நீயும் சேர்ந்துக்கிட்டல விக்ரம்” என்றவள் விட்டால் அழுதிருப்பாள்.

“சும்மாடி. அவன் கண்ணடிச்சனால நானும் அப்படி சொன்னேன். இல்லனா உன்னை போய் நாங்க அப்படி சொல்லுவோமா” பாவமாக முகத்தை வைத்து சொல்லிவிட்டு மறுபடியும் இருவரும் ஹை-ஃபை கொடுத்துக் கொண்டு சத்தமாக சிரித்தார்கள். அவர்களுக்கு முழுநேர வேலையே அவளை கேலிச் செய்து விளையாடுவது தானே. அது அவளுக்கும் தெரியாதா என்ன.
 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காலாண்டு பரிட்சையும் முடிந்து விடுமுறையில் இருந்தனர். அன்று சந்தியாவும் விக்ரமும் பைக்கில் சென்றுக் கொண்டிருந்தனர்.

“இப்ப நாம ரெண்டுபேரும் எங்க போறோம் விக்ரம்” சந்தியா புரியாமல் கேட்க

“கௌதி தான் கூட்டிட்டு வரச் சொன்னான். நம்ப ரெண்டுபேருக்கும் எதோ சர்ப்ரைஸ்ஸாம்” என்று விக்ரம் சொல்ல சந்தியாவிற்கு எதற்கு கூப்பிட்டான், என்னவாக இருக்கும் என்ற எண்ணமே வழியெங்கும். அந்த இடத்தை அடைந்ததும் கௌதம் தன் பைக்கில் சாய்ந்து நின்றிருப்பதை இருவரும் பார்த்தனர்.

“வா விக்கி. வா சந்தியா. நான் ஒண்ணு புதுசா கத்துக்கிட்டேன். அத உங்ககிட்ட காட்டணும் தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்” அவளுக்கு பிடிக்கும் என்று நினைத்தான். ஒருமுறை மூவரும் படத்திற்கு சென்றபோது அவள் அந்த காட்சியை ரசித்தது உண்மைதான். அதற்காக அவளுக்கு அது பிடிக்கும் என்று நினைத்தது எவ்வளவு பெரிய முட்டாள் தனம். அன்று ஏதோ பார்த்தும் மலைத்துச் சொல்லிவிட்டாள். அவள் இதையெல்லாம் விரும்புபவள் அல்ல என்பது அவனுக்கு அவள் முதல்நாள் அறிவுரை கூறிய போதே புரிந்திருக்க வேண்டாமா. அவன் செய்யப்போவது இருவருக்கும் இடையில் பெரிய பிளவை ஏற்படுத்தக் கூடும் என்பது எப்படி அவனுக்கு தோன்றாமல் போனது.

அவனுடைய டுகாட்டியை விட்டு வேறொரு பைக்கின் அருகில் அவன் நின்றிருந்த போதே அவள் மனதிற்கு ஏதோ சரியாக படவில்லை. தலைக்கவசத்தை மாட்டியவன் சிறிது தூரம் சென்றான். சந்தியாவிற்கு எதற்கு அழைத்துவிட்டு இவன் எங்கோ செல்கிறான் என்ற எண்ணம் தோன்ற அவள் பார்த்துக் கொண்டிருந்த நொடிபொழுதில் வண்டியை அரைவட்டமிட்டு திரும்பியவன் அவளை நோக்கி வேகமாக வந்தான். ஒரு நூறு மீட்டரை கடந்தவன் வண்டியின் முன் சக்கரத்தை தூக்கியப்படி வீலி செய்தான். பின் முன் சக்கரத்தை இறக்கி பின் சக்கரத்தை தூக்கி வண்டியை இயக்கி கொண்டே அவளிடம் வந்தான். ஆம் அந்த காட்சியை தான் சந்தியா அன்றைக்கு ரசித்தாள். அது அவளுக்கு மிகவும் பிடித்த நடிகர். அவர் அதை செய்யும் போது தன்னை மறந்து ரசித்தாள் தான். ஆனால் அதையே நேரில் யாராவது செய்திருந்தால் பயத்தில் கண்களை மூடி இருப்பாள்.

சந்தியாவிற்கு குலை நடுங்கிவிட்டது. அதேநேரத்தில் அவள் கத்தவில்லை. எங்கே அவள் கத்தி அவன் நிலை தடுமாறிவிட்டால் உயிருக்கு ஆபத்து வரவும் வாய்ப்புண்டு. அதனால் அமைதியாக இருந்தாள். அவனோ வீலி செய்தப்படியே அவளை கடந்துச் சென்று திரும்பி சரியாக வண்டியை ஓட்டிக் கொண்டு வந்து அவள் முன் நிறுத்தினான். அவள் தன்னை புகழ்வாள் என்று வேறு எண்ணினான்.

“வேற லெவல் மச்சான். எப்படா கத்துக்கிட்ட. மாஸ் காட்டிட்ட போ. செமடா செம” விக்ரமுக்கு பிடித்திருந்தது. அது அவன் முகத்திலும் தெரிந்தது. அவன் கௌதமை வார்த்தைகள் தேடி தேடி பாராட்டிக் கொண்டிருக்க சந்தியா அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமல் நின்றிருந்தாள்.

“இவ என்னடா எதுவும் சொல்லாம இருக்கா. ஒரு ரௌண்ட்டோட நிறுத்திட்டேன்னு கோவமாடி. பர்ஸ்ட் டைம்ங்கறதால இந்த பைக். அடுத்த முறை என் டுகாட்டியிலேயே பண்றேன்” அவன் சொன்னது தான் தாமதம்.

“கொஞ்சமாவது அறிவு இருக்காடா. அது இருந்தா நீ ஏன் இதெல்லாம் பண்ணப் போற” சந்தியா கேட்டதில் கௌதம், விக்ரம் இருவரும் அதிர்ந்துப் போயினர்.

“நீ தான சந்து அன்னைக்கு அந்த சீன்னை அப்படி இப்படினு படத்தை விட்டு வந்துல இருந்து பேசிக்கிட்டே இருந்த” விக்ரமும் அவளுக்கு அந்தக்காட்சி தந்த பிரமிப்பை பார்த்து தான் இருந்தான்.

“இருக்கட்டும் அது சினிமா. அவங்களுக்கு பதிலா வேற ஒருத்தர் பண்ணுவாங்க. இல்ல அவங்களே பண்ணாக் கூட ஆயிரத்தெட்டு சேஃப்டி மெஷர்ஸ் எடுத்திருப்பாங்க. இதெல்லாம் நாம செய்யணும்னு என்ன அவசியம் இருக்கு. அந்த படத்துல பிப்டீன்த் ஃபோர்ல இருந்து கயிறை கட்டிட்டு ஹீரோ கீழ குதிக்கறா மாதிரிக் கூட சீன் இருந்துச்சு. அதுக்காக கயிற கட்டிக்கிட்டு கீழ குதிச்சிடுவானா இவன்” அவள் கேட்ட கேள்விக்கு இருவரிடமும் பதில் இல்லை.

“எனக்கு இவன் வீலி பண்ணத பார்த்தப்போ எவ்ளோ பயமா இருந்துச்சு தெரியுமா. எங்க மிஸ் ஆகிடுமோ கீழ விழுந்திடுவானோனு.. எனக்கு.. என்னால..” அவள் பயந்து தான் இருந்தாள். இன்னும் கூட அவளுக்கு பதற்றம் குறையவில்லை. அது அவள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.

அதை கவனித்த கௌதம் “ஹேய் சந்தியா. ரிலாக்ஸ். ரிலாக்ஸ்.. ஓகே.. டென்ஷன் ஆகாத. ப்ளீஸ் காம் டவுன். இங்க பாரு நான் நல்லா தான இருக்கேன். ஏன்டி இந்த சின்ன விஷயத்துக்கு போய் இப்படி பயப்படற” அவ்வளவு தான் அவளுக்கு சுருக்கென்று கோபம் வந்தது.

“எதுடா சின்ன விஷயம். இப்படி பண்றது எவ்ளோ பெரிய ரிஸ்க். எதாவது ஆகியிருந்தா என்ன பண்ணிருப்ப. உயிரே கூட போயிருக்கலாம். ஏன்டா உனக்கு எதுக்குமே பயம் இல்லயா. யாருக்கும் பயப்படமாட்ற. டேர் கேம் விளையாடறேனு சஸ்பெண்ட் ஆகற. அன்னைக்கு அப்படி தான் ஸ்கேட்டிங் பண்ற. கேட்டா சின்னவயசுல இருந்தே பிடிக்கும் கத்துக்கிட்டேன்னு சொல்ற. நீ சக்கரத்தை கட்டிட்டு போனப்போ நான் தான் அவ்ளோ பயந்தேன். ஒருநாள் ஸ்கேட்டிங்ற, இன்னொரு நாள் பாக்ஸ்ஸிங் போயிருந்தேன்ங்கற. இதோ இப்ப இந்த வீலி. ஒரு நிமிஷம் எனக்கு இதயமே நின்னு துடிச்சா மாதிரி இருந்துச்சு” அவளுக்கு மனது ஆறவில்லை. கோபம் ஆத்திரம் அனைத்தும் இருந்தது. ஆனால், எல்லாவற்றையும் தாண்டி அவள் பயந்திருந்தாள். அவன் கூற்று ஒன்றும் ஆகவில்லையே என்பது. அவள் கூற்று ஏதாவது ஆகியிருந்தால் என்பது. அதே பயத்தில் தான் அவனிடம் பேசினாள் இல்லையில்லை அவனை சத்தமிட்டுக் கொண்டிருந்தாள்.

“உனக்கு என்ன வயசு ஆகுது. வெறும் பதினேழு. இந்த வயசுல இதெல்லாம் தேவை தானா கௌதம்”

“நீ ஏன் இவ்ளோ ஓவர் ரியாக்ட் பண்றனு எனக்கு புரியல சந்தியா” அவனுடைய சர்வ சாதாரணமான பதில் அவளுக்கு மேலும் ஆத்திரத்தை தூண்டியது.

அதில் “நான் ஓவர் ரியாக்ட் பண்றேனா. ஏன்டா, எப்பவும் உனக்கு உயிரோட விளையாட தான் பிடிக்குமா” அவள் அவனிடம் கோபமாக கத்தினாள்.

“இப்ப எதுக்கு நீ ஒண்ணுமில்லாத விஷயத்தை பெருசாக்கற. அதான் ஒண்ணும் நடக்கலையே” அவன் ஒன்றும் நடக்காததை சொல்ல

“நடந்து இருந்தா” கோபத்தில் பல்லை கடித்துக் கொண்டு கேட்டாள்.

“அப்படி பார்த்தா லைஃப்ல ஒண்ணுமே பண்ணமுடியாது சந்தியா” அவனது அலட்சிய பேச்சு அவளது கோபத்தை அடுத்தடுத்த கட்டத்துக்கு கூட்டிச் சென்றது.

இருவரும் பேசிக் கொள்ள விக்ரம் பார்வையாளர் ஆகிப் போனான். அவனுக்கும் அது தவறாக தெரியவில்லை என்பது தான் உண்மை. இந்த வயதில் ஆண்பிள்ளைகள் இதையெல்லாம் வயதுகோளாறில் செய்வது தானே. ஏன் அவனும் கௌதம் அளவிற்கு இல்லையென்றாலும் சின்ன சின்ன வீர விளையாட்டை நிகழ்த்தி தானே இருக்கிறான். அதேநேரத்தில் சந்தியா கூறுவதிலும் தவறில்லை என்றுணர்ந்தான். அவள் சொல்வது போல் ஏதாவது ஆகியிருந்தால் என்ன செய்வது என்றும் யோசித்தான். கௌதமை பொறுத்தவரை அவன் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. அவனுக்கு பிடித்திருந்தது அதைவிட முக்கியமாக அவளுக்கு பிடிக்கும் என்று நினைத்தான் செய்தான். அவ்வளவே. அதை புரியாமல் பேசுபவள் மீது அவனுக்கு இப்போது கோபமும் வந்தது.

“அதானே. உனக்கு எல்லாமே ஈசி தான கௌதம். இங்க என் இடத்துல இருந்து பாரு. இப்ப கூட எனக்கு பதற்றம் குறையல. உனக்கு என்ன சொல்லி என்ன புரிய போகுது. உங்கிட்ட பேசறதே வேஸ்ட். வா விக்ரம் கிளம்பலாம்”

“இங்க பாரு சந்தியா. என்னால நீ சொல்றமாதிரி இது நடந்திடும் அது நடந்திடும்னு எதுவும் செய்யாமயெல்லாம் இருக்கமுடியாது. எனக்கு பிடிச்சத நான் செஞ்சிகிட்டே தான் இருப்பேன். லைஃப்ல கோழையா நூறு வருஷம் வாழறதைவிட நமக்கு பிடிச்சதுல ரிஸ்க் இருந்தாலும் சந்தோஷமா செஞ்சிட்டு செத்து போகலாம்” என்றான். இந்த முட்டாள் தனமான விளையாட்டு இவனுக்கு உயிரைவிட பெரியதாகி விட்டதா என்று தோன்ற இப்போது யாருமே அடக்கமுடியாத நிலைக்கு அவளுக்கு கோபம் சென்றிருந்தது.

“நான் இவ்ளோ சொல்றேன், உனக்கு நீ பண்ண தப்பு புரியலைல”

“நான் தப்பு பண்ணா தான புரியறதுக்கு” இருவரும் கண்களில் தீ பறக்க வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் முற்ற இதற்குமேலும் அமைதியாக இருந்தால் சரியாக இருக்காது என்று “விடுடி எதோ உனக்கு பிடிக்குமேனு பண்ணிட்டான். அதுக்கு போய் அவனை இந்த வாங்கு வாங்கற” நண்பனுக்கு பரிந்து பேசுவதாக எண்ணி தோழியின் கோபத்தை அவனுக்கே தெரியாமல் பலமடங்கு ஏற்றிவிட்டு விட்டிருந்தான் விக்ரம். ஏற்கனவே அடக்கமுடியாத கோபம் இருந்தவள் இனிமேல் சொல்லவா வேண்டும்.

“நீ பர்ஸ்ட் டைம் இவனை பத்தி சொன்னது ரொம்ப கரெக்ட் விக்ரம். இவனுக்கு எல்லாரும் இவனை ஹீரோனு சொல்லணும். அதுக்காக யாருக்கு வேணா ப்ரொபோஸ் பண்ணுவான். யாரை வேணும்னா போட்டு அடிப்பான். சில சமயத்துல அடியும் வாங்குவான். அப்புறம் இந்த ஸ்கேட்டிங், பாக்ஸ்ஸிங், வீலினு எல்லாமே பண்ணுவான். நான் தான் தப்பு பண்ணிட்டேன். இவன் கூட பேசாம இருக்கணும்னு சரியா தான் முடிவு எடுத்திருந்தேன். அப்புறம் என் புத்தி எப்படி கெட்டுப் போச்சின்னே தெரியல. இவனை ப்ரண்ட்னு நினைச்சிட்டேன். அதான் இன்னைக்கு எனக்கு பதறுது” வழக்கம் போல் அவள் பேச பேச அவனுக்கும் அளவுக்கடந்த கோபம் வந்திருந்தது. அவள் அவனுக்காக பேசியதில் தவறில்லை. அதை அவன் கேட்டும் இருப்பான். ஆனால் பழையதை எடுத்து பேசிவிட்டாள்.

அவனுக்கும் இப்போது கோபம் தலைக்கு ஏற “நானும் தப்பு தான் பண்ணிட்டேன். உங்கூட பேசக்கூடாதுனு அன்னைக்கே நானும் சரியான முடிவை தான் எடுத்திருந்தேன். அத மாத்திருக்கக் கூடாது. அதனால தான் இப்ப நீ எனக்கு அட்வைஸ் பண்ணிட்டு இருக்க. எனக்கு என் விஷயத்துல யார் தலையிட்டாலும் பிடிக்காது. எனக்கு எப்படி பிடிக்குதோ அப்படிதான் நான் வாழ்வேன்” கடுப்பில் பல்லை கடித்துக் கொண்டு சொன்னவன்

“அதான் நான் தப்புனு தெரியுதுல. அப்புறம் ஏன் இங்கயே நின்னு என்னை கடுப்பேத்திக்கிட்டு இருக்க. டேய் கூட்டிட்டு போடா இவளை” சொன்னவனின் முகத்தில் அலட்சியமும் எரிச்சலும் தெரிந்தது.

“போகத்தான் போறேன். இங்கயே நிக்க நமக்குள்ள என்ன இருக்கு. ஆனா போறதுக்கு முன்னாடி ஒண்ணே ஒண்ணு சொல்றேன். இனி எப்பவும் எங்கிட்ட பேச முயற்சிப் பண்ணாத. நமக்கு இன்னும் ஆறுமாசம் ஸ்கூல் இருக்கு. அதுக்கப்புறம் உன் முகத்தைக் கூட பார்க்க விரும்பல கௌதம். வா விக்ரம் போலாம்” சந்தியா சொல்லிவிட்டு கிளம்ப விக்ரமுக்கு என்ன செய்வதென்றெ புரியாமல் கௌதமை பார்த்துக் கொண்டே வண்டியை எடுத்து அவளை அழைத்து சென்றான்.


உண்மையாகும்..


உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் - 11

அந்த சண்டைக்குப் பிறகு அவனிடமிருந்து குறுஞ்செய்திகள் வருவது நின்றுவிட்டது. இவளும் அவனது எண்ணை அழித்திருந்தாள். விக்ரமும் இருவருக்கும் இடையில் இருக்கும் பிரச்சனையை சரிசெய்ய வீட்டிற்கு அழைத்தான். இருவருமே வர தயாராகயில்லை. இவர்களை எப்படி தான் சரி செய்வது என்று அவனுக்கும் புரியவில்லை.

ஒரு வாரத்திற்கு பிறகு பள்ளி திறந்தது. ஆரம்பத்தில் ஒருவர் முகத்தை கூட இன்னொருவர் பார்த்து கொள்ளவில்லை. போக போக வீட்டில் இருந்தபோது காட்டப்பட்ட வீம்பை இப்போது இருவராலும் காட்ட முடியவில்லை. அவர்களது நட்பும், அதன் நினைவுகளும் அதற்கு இடமும் கொடுக்கவில்லை.

கடந்த சில மாதங்களாக விக்ரமை காட்டிலும் ஓரே வகுப்பில் இருப்பதால் கௌதமிடம் சந்தியா அதிக நெருக்கமாகி இருந்தாள். கௌதமிற்கும் அப்படியே. இருவருக்கும் பேசாமல் இருப்பது ஏதோ போன்று இருந்தது. இருந்தும் பேசாமல் இருந்தனர்.

விக்ரமும் “இதெல்லாம் இந்த வயசுல சகஜம்டி. எனக்கே அவன் வீலி பண்ணது தப்பா தெரியல, கெத்தா தான் இருந்துச்சு. அதேமாதிரி தான் அவனும் நினைச்சிருப்பான். அதுவும் உனக்கு பிடிக்கும் தான செஞ்சான். பொண்ணுங்க ஒரு விஷயத்தை பார்க்கற மாதிரி பசங்க நாங்க சீரியஸா பார்க்கமாட்டோம்டி. அப்படியே அவன் பண்ணது தப்பா இருந்தாலும் அத அவன்கிட்ட பொறுமையா சொல்லிருக்கலாம். அதவிட்டுட்டு அந்த கத்து கத்தினா அவனும் டென்ஷன் ஆகமட்டானா. நீ அவனை ரொம்ப ஓவரா பேசிட்டடி” என சந்தியாவிற்கு எவ்வளவோ புரிய வைக்கப் பார்த்தான்.

“என்னடா அவன் இதெல்லாம் சொல்லி அனுப்பினானா” கோபம் அவளுக்கு கண்ணை மறைத்தது.

“அவன் சொல்லி அனுப்புறவன் இல்லனு உனக்கும் தெரியும்” என்று அவளை முறைத்தான். சந்தியா எதையும் புரிந்துக் கொள்ள தயாராக இல்லை. அவனிடம் பேசவும் தயாராக இல்லை.

சந்தியாவே இப்படியென்றால் கௌதம் ஏற்கனவே தன்மீது தவறில்லை என்றால் இறங்கிப் போகமாட்டான் இதில் இவர்களுக்குள் இருக்கும் பிரச்சனையை எப்படி சரிசெய்வது என்று விக்ரம் திணறிப் போனான்.

கௌதமோ அதற்கு வேலையே வைக்கவில்லை. முதல் இரண்டு நாள் அவனுக்கு கோபம் இருந்தது என்னவோ உண்மை தான். அவளுக்காக தானே ஆசையாக செய்தோம். அதை பாராட்டவில்லை என்றாலும் திட்டாமலாவது இருந்திருக்கலாம் என்றெண்ணினான். அவ்வெண்ணம் அவனுக்கு கோபத்தை குறைய விடவில்லை. அதை வெறியாகவும் மாற்றியிருந்தது. அவள் சொன்னால் தான் செய்யாமல் இருக்கவேண்டுமா. அதற்காகவே மறுபடியும் மறுபடியும் அவனது டுகாட்டியிலேயே வீலி செய்தான். அதுமட்டுமா காலில் ஸ்கேட்டிங் ஷூவை கட்டிக் கொண்டு நீண்ட பயணமே மேற்கொண்டான். குத்து பையை குத்தி தீர்த்தான். எதுவும் அவனை அமைதிப் படுத்தவில்லை.

மற்றவர்களை போல் போனால் போகட்டும் என்று தொலைத்துவிடும் உறவல்ல அவள். இன்றும் அவள் அவனது தேவதையே. அவள் அவனோடு எப்போதும் இருப்பாள் என்ற எண்ணம் தான் அவனை நிம்மதியாக வாழச் செய்தது. இன்று அந்த நம்பிக்கை பொய்யாகி போனது.

தனக்கு தான் ஆறுமாதம் கெடு வைத்திருக்கிறாளே. அதற்கு பின் தன் முகத்தை காணக் கூட அவள் விரும்பவில்லையே என்ற கசப்பான உண்மை அவனை ஏதேதோ செய்தது. அது வெறியை வேதனையை கூட்டியது. இதை இப்படியே விடக்கூடாது என்று முடிவெடுத்தான். அவளிடம் பேசவேண்டும் என்ற முடிவையும் எடுத்தான். முடிவெடுத்து விட்டான், ஆனால் எதையும் நினைத்த மாத்திரத்தில் செய்து முடிப்பவன் இம்முறை தயங்கினான். அடிபணிவதும் இறங்கிபோவதும் அவன் அகராதியிலேயே இல்லை. கடந்தமுறை இருவருமே ஒன்றாக இறங்கி வந்து தங்களை மறந்து பேசிக் கொண்டனர். இப்போது அப்படியில்லை. அவள் இறங்கி வருவதாக தெரியவில்லை. இவனுக்கும் நாம் இறங்கிப் போவதா என்ற எண்ணம் இருந்தாலும் அவளை விடவும் முடியவில்லை.

மனதை ஒருநிலைப் படுத்தி தான் அவளிடம் இறங்கிப் போக முடிவெடுத்தான். ‘நீயா இறங்கி போக போகிறாய் கௌதம்’ என்று மனது கேட்ட கேள்விக்கு ‘நான் அவளிடம் தானே இறங்கிப் போகிறேன். எனக்கு அவளிடத்தில் இறங்கிப் போவதில் எந்த கௌரவ குறைச்சாலும் இல்லை’ என்று பதிலளித்து அதை அடக்கினான்.

அதன் பின் என்ன பள்ளி வளாகத்தில் சென்றுக் கொண்டிருந்தவளை வழி மறித்தான்.

“என்னடி கண்டுக்காம போற” அவனது பேச்சு விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற பாணியிலேயே இருந்தது. இவ்வளவு சண்டை நடந்திருக்கிறது எப்படி வெட்கமே இல்லாமல் ஒன்றும் நடக்காதது போல் பேசுகிறான் என்ற உணர்வே சந்தியா முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. விக்ரமுடன் வீட்டிற்கு செல்ல அவன் பைக் நிறுத்தும் இடத்தை நோக்கி நடந்தாள்.

“சரி வீட்டுக்கு தான போற. பைக்ல ஏறு ஒண்ணா போகலாம்” அவன் சொல்ல

“யார் நீ” என்பது அவளது பார்வையாக இருந்தது.

“என்ன தெரியலையா. நான் தான் கௌதம்” விளையாட்டாக சொன்னான் அவளது பார்வையை புரிந்தவனாக.

“அன்னைக்கு நான் சொன்னது மறந்துப்போச்சு போல. எங்கிட்ட பேச முயற்சி பண்ண வேண்டாம்னு சொன்னேன் தான. அது என்னனு தெரியல எனக்கு பிடிக்கலனு சொன்னாலும் சிலர் வெட்கமே இல்லாம வந்து பேச்சு தர்றாங்க” நேரடியாக அவனிடம் பேசாமல் யாருக்கோ சொல்வது போல் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டு சொன்னாள்.

“உன் ப்ரண்ட்டா அப்பாயிண்மெண்ட் வாங்கின அப்பவே அதையெல்லாம் தூக்கிப் போட்டுடேன்” அவன் சொல்ல அவள் கண்களில் கோபத்தோடு முறைத்தாள்.

“சரி சாரி. நான் அன்னைக்கு அப்படி பண்ணிருக்கக் கூடாது. தப்பு தான் மன்னிச்சிடு. இனி வீலி பண்ணமாட்டேன். ப்ராப்ளம் சால்வ்ட்டா. இப்ப ஏறு” என்றான். அவன் அடம் ஊருக்கே. அவளது அடம் அவன் ஒருவனுக்கே. ஏறாமல் நின்றாள்.

“விக்கி கிளம்பிட்டான் தெரியுமா. பை தி வே எனக்காக தான் கிளம்பினான். ரெண்டு ப்ரண்ட்ஸும் திரும்ப பேசிக்கணும்னு அவனுக்கு அப்படி ஒரு அக்கறை. உன்னை மாதிரி இல்ல. வந்து ஏறு”

“விக்ரம் இல்லனா என்ன. ஆட்டோல போவேன்” என்பது போல் எதுவும் பேசாமல் ஸ்கர்ட் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்துக் காட்டினாள்.

“ஓ.. நான் கைல காசு வச்சிக்க சொன்னத எனக்கே திருப்பிக்காட்டறியா. ஆட்டோல போவாளாமே. நீ எப்படி ஆட்டோல ஏறரேனு நானும் பார்க்கறேன்டி” தன் பைக்கில் சாய்ந்து கைக்கட்டி நின்றான். அவனது பேச்சு அவளுக்கு கோபத்தை தூண்டிவிட்டது.

“ஆட்டோ இல்லனா என்ன. பஸ்ல போவேன். இல்லனா என் ரெண்டு கால் நல்லா தான இருக்கு. ரெண்டு கிலோமீட்டர் தான, நடந்து போவேன் சார். அப்ப கூட உங்க பைக்ல ஏறமாட்டேன்” இதுவரை நேரடியாக பேசாதவள் இப்போது பேசினாள். இதுவே முதல் வெற்றி தானே, பிறகென்ன எப்படியோ பேசி சரி செய்துவிடலாம் என்ற நம்பிக்கை கௌதமுக்கு வந்தது.

“அதான் ரெண்டு கிலோமீட்டர் இருக்குல. ஒண்ணு பண்றேன். அப்படியே மந்தவெளிய சுத்தி காமிச்சிட்டு உங்க வீட்டுல விடறேன். நிறைய டைம் இருக்கும். சண்டை சமாதானம் எல்லாத்தையும் வழியிலேயே முடிச்சிடலாம். ஆனா அத்தோட முடிச்சிக்கணும். அப்புறம் பேசமாட்டேன் முகத்தை பார்க்கமாட்டேன்னு எதாவது சொன்ன கௌதம் யார்னு பார்ப்ப” சமாதானத்தை கூட இவ்வளவு கறாராக பேச அவனால் மட்டுமே முடியும்.

“ஏற மாட்டேன்டா” அவளும் அவனுக்கு சளைத்தவள் இல்லை.

“அப்ப வா ரெண்டு கிலோமீட்டர் தான. நடந்தே போவோம். இன்னும் நிறைய டைம் இருக்கும். சண்டை சமாதானம் எல்லாத்தையும் முடிச்சிடலாம்” அவள் நடக்க அவனும் அவன் வண்டியை உருட்டிக்கொண்டு உடன் நடந்தான்.

அவன் வண்டியை உருட்டிக்கொண்டு வருவது அவளுக்கு கஷ்டமாக இருந்தது. வியர்வை துளிகள் அவன் முகத்தில் இருந்து வழிந்து இறங்கியது. அதை பார்த்தவளுக்கு இன்னும் கஷ்டமாக இருந்தது. அவன் வசதிப் பெற்றவன். இப்படி நடந்து வியர்க்கவேண்டும் என்ற அவசியமே அவனுக்கு இல்லை. பின் ஏன் இவனிதை செய்கிறான் என்று தோன்ற அதை அவனிடம் கேட்டும் விட்டாள்.

“இப்ப ஏன் உன்னை நீ இப்படி கஷ்டப்படுத்திக்கற” அவள் கேட்க, அவன் என்ன என்பது போல் புருவத்தை உயர்த்தி கண்ணால் கேட்க அவனது வியர்வையை காட்டினாள்.

“யூஷ்வலா எனக்கு இப்படி வேர்க்காது. என்னமோ தெரியல இன்னைக்கு அதிகமா வேர்க்குது. ஒருவேளை என் பக்கத்துல இருக்கவங்க சூடா இருக்கனால வேர்க்குதோ” விளையாட்டாக சொல்ல அவளது சுட்டெரிக்கும் பார்வை அவனை சுட “சென்னையில வெயில் அதிகமாயிடுச்சு” சாதாரணமாக பேச்சை மாற்றி சொன்னான்.

“வண்டிய எடுத்துக்கிட்டு நீ கிளம்பு” அப்போதும் வா செல்லலாம் என்று சொல்லாததால் அவனுக்கு கோபம் வந்தது. அதேநேரம் அவளை இன்று சமாதானம் செய்தே தீரவேண்டுமென்று பிரயத்தனம் செய்து கோபத்தை அடக்கியவன்

“இதுவும் பாடிக்கு எக்ஸர்சைஸ் தான். ஒரு அத்லெட் வாழ்க்கைல இதெல்லாம் சகஜம்” என்று அவள் வேதனையை போக்கும்படி விளையாட்டாக சொன்னான்.

அவளோ “எது வீலி பண்றது கூடவா” என்று பேச்சிற்கு வந்தாள். அவனுக்கோ அப்பாடா பேச்சிற்கு வந்தாள் என்ற சந்தோசம் ஒருபுறமிருக்க ஐய்யோ அடுத்து திட்டுவாளே, அறிவுரை கூறுவாளே என்ற பதற்றம் இன்னொரு புறம் இருந்தது. இரண்டையும் முகத்தில் காட்டாமல் சரணாகதி ஆவதே சிறந்தது என முடிவெடுத்தான்.

“அது நான் உனக்கு பிடிக்கும்னு பண்ணிட்டேன். ஐ ஆம் சாரி.. சாரி.. சாரி.. போதுமா. ப்ளீஸ் ஃபர்கீவ் மீ” என்றான்.

“எனக்காக பண்ணீயா. நான் அத விருப்பப்படலயே. இதெல்லாம் வீரம் கிடையாதுனு உனக்கு எத்தனை முறை சொல்றது கௌதம். எது வீரம் எது உயிருக்கும் மானத்துக்கும் குறி வைக்கும்னு முதல்ல வித்தியாசம் தெரிஞ்சிக்கோ. நீ வீட்டுக்கு ஒரே பையன். உங்க வீட்டுல இருக்கவங்க உன் மேல உயிரையே வச்சிருப்பாங்க. இனி எத பண்றதா இருந்தாலும் அப்பா அம்மாவ மனசுல வச்சிக்கிட்டு செய். வண்டிய எடு” என்று பைக்கில் ஏறினாள். அவ்வளவு தான் இனி வழியெங்கும் திட்டுவாளோ அடிப்பாளோ எது எப்படியோ இருவரும் பழையபடி சேர்ந்துவிட்டனர்.

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டதில் விக்ரமுக்கு பெரும் மகிழ்ச்சி. கடந்த சில மாதங்களாக அவன் என்ன தான் வெளிப் பார்வைக்கு சிரித்து மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிந்தாலும் அவனுடைய வாழ்வில் தாங்கமுடியாத வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறான். அதை அவன் மறப்பதே சந்தியா கௌதமுடன் இருக்கும் பொழுது தான். இப்போது அவர்களும் யாரோ போல் இருந்து வந்ததால் மனமுடைந்துப் போனான்.

சொல்லி புரிய வைத்துவிடலாம் என்று நினைத்த சந்தியாவே மூர்க்கம் பிடித்துக் கொண்டிருந்ததும் இது முடிந்துவிட்டதா என்று கௌதம் எந்தளவிற்கு பயந்தானோ அதே அளவிற்கு விக்ரமும் பயந்தான். அதற்காக சந்தியா கவலைப்படவில்லை என்று அர்த்தமில்லை. அவளென்ன தனக்காகவா அவனிடம் சண்டையிட்டாள். அவனுக்காக அவனுடைய நலனுக்காக தானே சண்டையிட்டாள். அப்படியிருப்பளுக்கு வலி வேதனை இருக்காதா என்ன. நிச்சயம் இருந்தது. கௌதமுடன் பேசிய பின் தான் அவளும் இழந்த சந்தோசத்தை திரும்பப் பெற்றாள். அதுபோல் இருவரும் பேசிக்கொண்டது விக்ரமுக்கும் நிம்மதியை கொடுத்தது.

“அப்பாடா, எப்படியோ ரெண்டுபேரும் பேசிக்கிட்டீங்களே. என்ன கோபம் வருதுடி உனக்கு. நாளைக்கு எங்கிட்ட சண்டைப் போட்டாலும் இப்படிதான் பேச முயற்சி பண்ணாத உன் முகத்தை கூட பார்க்க விரும்பலைனு சொல்லுவியா” உடன் கௌதம் இருக்க விக்ரம் சந்தியாவிடம் கேட்டான்.

“அதெல்லாம் கௌதம்ங்கற இளிச்சவாயன்கிட்ட மட்டும் தான் சொல்லுவா” வாயை வைத்துக் கொண்டு அமைதியாக இல்லாமல் கௌதம் சொல்ல

“அவன் உன்னை மாதிரி எதுவும் செய்யமாட்டான். நீதான் ஊர்ல இருக்குற எல்லா தேவையில்லாத வேலையும் செய்வ” சந்தியா அவனிடம் சீறிக்கொண்டு போனாள்.

“ஆமான்டி அவன் குழந்தை. வாயில விரலை வச்சா கூட கடிக்கமாட்டான்” இருவரையும் இப்படி பார்த்த விக்ரம் சிரித்துக் கொண்டிருந்தான். பின் இருவரும் மாற்றி மாற்றி பேச ஆரம்பிக்க அதில் அதிர்ந்து போனவன்

“ஹேய் போதும் போதும். இந்த மன்த் கோட்டா ஓவர். மத்ததை நெக்ஸ்ட் மன்த் வச்சிப்போமா. இதோ பாருங்க அக்டோபர் வந்திடுச்சு. இன்னும் முழுசா ஆறுமாசம் கூட இல்ல. மார்ச்ல போர்ட் எக்ஸாம். இனி சண்டையெல்லாம் போடாம மூணு பேரும் ஒழுங்கா படிக்கற வேலைய பார்ப்போமா” என்றான்.

“டன் டா” “டன் மச்சான்” கௌதமும் சந்தியாவும் ஒன்று சேர்ந்து சொல்ல

“படிச்சி நீ பெரிய டாக்டர் ஆகற. நாங்க ரெண்டுபேரும் இன்ஜினீயர் ஆக போறோம்” உற்சாகமாக கௌதம் சொல்ல

“இல்லடா ரெண்டுபேரு இல்ல மூணு பேரு. நானும் இன்ஜினியரிங் தான் எடுக்கப் போறேன்” திடமாக சொன்னான் விக்ரம்.

“டேய் லாயர் அய்யா ஒத்துக்குவாரா” சந்தியா சொல்ல, நண்பனின் மனதைப் புரிந்த கௌதம் அவளை தடுத்து “நீ படி விக்கி” என்றான்.

விக்ரமும் தந்தையின் பேச்சை மீறுபவனில்லை. தந்தைக்கு பிடிக்குமென்று தனக்கு பொறியியல் படிப்பில் சேர ஆசையிருந்தும் அதைப் பொருட்படுத்தாமல் தந்தை சொன்ன மருத்துவ படிப்பை எடுக்கவிருந்தான். இப்போதோ தந்தையையே பிடிக்காமல் போன பிறகு தந்தைக்கு பிடித்ததை எதற்கு படிக்கவேண்டும் என்ற எண்ணம் கொடுத்த தெளிவில் வந்தது இன்றைய வார்த்தைகள்.

அவன் வாழ்வில் சிலமாதங்களாய் புயலே அடித்துக் கொண்டிருக்கிறது. எந்த மகனும் பார்க்கக் கூடாத ஒன்றை தான் அவன் அன்று பார்த்தான். ரவிப்பிரகாஷை வேறு ஒரு பெண்ணுடன் பார்த்தான். அதுவும் சாதாரணமாக இல்லை. அவரது தோள்மீது கைபோட்டு தந்தை அப்பெண்ணை அழைத்து சென்றுக் கொண்டிருந்தார். பார்த்தவனுக்கு இரத்தம் கொதித்தது. அதே கொதிப்போடு தந்தை முன் சென்று நின்றான். அவரிடம் தாயிற்காக சண்டையிட்டான். அவரோ ‘இதெல்லாம் உனக்கு புரியாது நீ வீட்டிற்கு செல் நான் வீட்டில் வந்து பேசுகிறேன்’ என்று சென்றுவிட்டார்.

வீட்டிற்கு அதே சினத்தோடு வந்தவன் எவ்வளவு நேரம் ஆனாலும் காத்திருந்து இன்றைக்கு தந்தையிடம் பேசியே ஆகவேண்டும் என்றிருந்தான். சந்தியாவும் பூஸ்ட் மற்றும் மாலை சிற்றூண்டி செய்துக் கொடுக்க அவன் அதை சாப்பிடவில்லை. பயந்துப் போய் கௌதமிற்கு அழைத்து வரசொன்னாள். அவனும் வந்து எதற்காக இப்படி இருக்கிறான் என்று பேசிப் பார்த்தான். பலனில்லை. வாயே திறக்காமல் அப்படியே அமர்ந்திருந்தான். பின் அவர்கள் பதறியிருப்பதை பார்த்து தனக்கு ஒன்றுமில்லை சிறிதுநேரம் தான் தனியாக இருக்க விரும்புவதாக சொல்லி அவர்களை அங்கிருந்து கிளப்பினான். இரவாகியும் வீட்டுக் கூடத்திலேயே அமர்ந்திருந்தான். தாயும் வந்தார் இவன் சாப்பிட்டானா என்பது போன்ற நான்கைந்து வார்த்தைகளை பேசிவிட்டு களைப்பாக அவரது அறைக்குள் சென்று கதவடைத்தார். மணி விடியற்காலை நான்கானது. அப்போது தான் இனியும் தந்தை வீட்டிற்கு வரப் போவதில்லை என்பதே அவன் புத்திக்கு எட்டியது.

இருந்தும் அப்படியே அமர்ந்திருந்தான். காலை ஆறு மணிக்கு வரலட்சுமி எழுந்து குளித்து முடித்து வெளியே வந்து பார்த்தால் மகன் நேற்று அமர்ந்திருந்த அதே இடத்திலேயே அமர்ந்திருந்தான். அவனது சிவந்த கண்கள் இரவு முழுவதும் உறங்கவில்லை என்பதை சொல்லியது.

“விக்கி. நுவ்வு நிதரபோலேதா (நீ தூங்கலையா)” மகனது முன்நெற்றி முடியை ஒதுக்கிவிட்டு அவன் நெற்றியை தொட்டு உடம்பேதும் சரியில்லையா என்று பார்த்தார்.

“லேதும்மா. நாக்கு நிதர ராலேது(இல்லம்மா. எனக்கு தூக்கம் வரல)” என்றான். வெகுநேரம் என்னவென்று புரியாமல் மகனையே பார்த்திருந்தவரை பார்த்து “நேனு சுசேனம்மா(நான் பார்த்தேன்ம்மா)” என்றான். அவன் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே இல்லை.

“எவர சுசினாவு விக்கி (யாரை பார்த்த விக்கி)” என்றார் அவர்.

“நானா(அப்பா). நானாவ இன்னொருத்தங்க கூட” முழுதாக சொல்லக்கூட முடியவில்லை. அன்னையின் வயிற்றை இறுக கட்டிக் கொண்டான்.

“எனக்கு இதெல்லாம் பழகிடுச்சு விக்கி” சொன்னவரை நிமிர்ந்துப் பார்த்தான். தாய்க்கு இது தெரிந்தால் எப்படி எடுத்துக் கொள்வார் என்று பயந்திருந்தவன் இப்போது அன்னைக்கு தெரிந்தா இதுவெல்லாம் நடக்கிறது என்றெண்ணி துடித்துப் போனான்.

“ஏன் ம்மா” என்றான் ஆதங்கத்தில். அவன் அருகில் வந்தமர்ந்து மகனை மடியில் படுக்க வைத்தவர் அவன் தலையை வருடி கொடுத்து கொண்டே “பேர் பொருத்தம் இருக்கா, ஜாதக பொருத்தம் இருக்கா, ஏன் படிப்புல கூட பொருத்தம் இருக்கானு பார்த்து கட்டி வச்சாங்க. ஆனா மனப்பொருத்தம் இருக்கானு யாருமே பார்க்கலை” என்றவரை எழுந்து பார்த்தான்.

“முதல்ல இருந்தே ஒருத்தர் மேல இன்னொருத்தருக்கு பெரிய எண்ணமெல்லாம் இல்ல. கல்யாணம் ஆகிடுச்சு இனி இது தான் வாழ்க்கை வாழ முயற்சி பண்ணலாம்னு பார்த்தோம். நீ பிறந்த, அப்புறம் விஷாந்தும் பிறந்தான். ஆனா எதுவுமே எங்கள இணைக்கல. எதோ ஒரு வெற்றிடம் இருக்க தான் செஞ்சிச்சு. ஒரே வீட்டுலயே தனி தனியா இருக்க ஆரம்பிச்சோம். நீயும் விஷாந்தும் நாங்க ஏன் தனி தனி ரூம்ல இருக்கோம்னு கேக்கற கேள்விக்கு கேஸ் விஷயமா நிறைய வேலை இருக்கும், அதான் நானா அம்மாக்கோ அம்மா நானாக்கோ டிஸ்டபென்ஸ்ஸா இருக்கக்கூடாதுனு தனி தனி ரூம்ல இருக்கோம்னு பொய் சொன்னோம். நீங்களும் நம்ப ஆரம்பிச்சிங்க. அதுல நாங்க ஜெய்ச்சிட்டதா நினைக்கல. எங்க பசங்ககிட்ட தோத்ததா தான் நினைச்சோம். அப்படியே வருஷங்களும் ஓடிடுச்சு” ரவிப்பிரகாஷ் வீட்டில் கிடைக்காததை வெளியில் தேடத் தொடங்கினார். வரலஷ்மி தன் வேலையில் தேடத் தொடங்கினர். அப்போது பிள்ளைகள் என்ன ஆவார்கள் என்று இருவரும் யோசிக்கவில்லையா. மேலே பேச வந்த விக்ரமை தடுத்த வரலஷ்மி

“ப்ளீஸ் விக்கி. எதுவும் சொல்லிடாத. எத்தனையோ பேருக்காக கோர்ட் படிய ஏறின எங்களுக்கு, எங்க கேஸ்காக கோர்ட் படி ஏறுறதல விரும்பமில்ல. அதுக்காகவும் உங்களுக்காகவும் தான் ஒரே வீட்ல இருக்கோம். மத்தபடி அவர் எப்படி வாழனும்னு நினைக்கறாரோ அப்படியே வாழட்டும். அதுல நான் தலையிடமாட்டேன். ஒண்ணு மட்டும் உண்மை. எனக்கும் அவருக்கும் உன் மேலயும் விஷான் மேலயும் இருக்க அன்பு பொய்யில்ல. ஐ ஆம் ப்ரிட்டி மச் சோர் அபௌட் இட். நீ எங்களோட இந்த டெஸிஷன்ல எங்க கூட இருப்ப தான” அவர் வயதிற்கு பேசிவிட்டார். விக்ரம் என்ன சொல்வான். அவன் இன்னும் பள்ளிப் படிப்பை கூட முடிக்காத பதின்வயதை சேர்ந்தவன் தானே. அவனால் இதை எளிதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மனதிலேயே போட்டு குமைந்தான்.

இதை சந்தியா கௌதம் இருவருக்கும் கூட சொல்லவில்லை. அவன் போக்கில் மாற்றத்தை இருவரும் கண்டு பலமுறை விசாரித்து பார்த்தும் விக்ரமிடமிருந்து பதிலேதும் வரவில்லை. தந்தையையும் நேராக பார்ப்பதில்லை பேசுவதில்லை என்றிருந்தான். மனதில் அடக்கி அடக்கி மனமே வெடித்துவிடுமோ என்றிருந்தது அவனுக்கு. இவையனைத்தும் பன்னிரெண்டாம் வகுப்பில் சேர்ந்த புதிதில் நிகழ்ந்தது. கௌதம் தான் அவன் மனதை அரித்து கொண்டிருந்ததிலிருந்து அவனுக்கு விடிவு தந்தான்.

பள்ளிகளுக்கு இடையே நடந்த கால்பந்து போட்டியில் விக்ரமின் கவனமின்மையால் தோற்கும் நிலைக்கு போன போது முதலில் கடிந்தான். பின் நண்பன் எதையோ மனதில் போட்டு வதைவதால் தான் இவ்வாறு இருக்கிறான். அவனை அதிலிருந்து வெளியே கொண்டு வந்தே தீரவேண்டும் என்ற முடிவெடுத்து, ஒருநாள் வம்புச் செய்து வெளியே அழைத்து சென்றான். நண்பனிடம் எப்படியோ லாவகமாக பேசி அனைத்தையும் தெரிந்தும் கொண்டான். உடன் சந்தியாவும் இருந்தாள். தன் பெற்றோரின் கதையை சொல்லி கண்ணீர் விட்டு அழுத அந்த பதின்வயது குழந்தையை இருவரும் தேற்ற அரும்பாடுபட்டனர்.

அதிலிருந்து பெரும்பாலும் வீட்டிலும் சரி பள்ளியிலும் சரி கௌதம் சந்தியாவை விக்ரமுடன் அதிகம் இருக்கச் சொல்லி கேட்டுக் கொண்டான். பள்ளியிலிருந்து வீட்டிற்கு செல்லும் போதும் அவள் விக்ரமுடன் தான் பைக்கில் செல்வாள். கௌதம் வீடு வரை உடன் வருவான். கௌதமிடம் முதலில் இருந்தே ஒரு விதமான பக்குவம் இருந்தது. விக்ரமுக்கு வேறு விதமான பக்குவம் வந்தது. தன்னை அதிகம் படிப்பு மற்றும் விளையாட்டில் ஈடுபடுத்திக் கொள்ள ஆரம்பித்தான். கௌதம் மற்றும் சந்தியாவுடன் இருப்பதை சந்தோசமாகவும் உணர்ந்தான். அந்நேரத்தில் தான் கௌதமின் செயலில் சந்தியா கோபமடைந்து அவளது பேச்சால் அவன் கோபத்தையும் தூண்டி இருவருக்குமிடையில் இந்த பிளவு ஏற்பட்டது. நண்பர்கள் இருவரும் இப்படி முறுக்கிக் கொண்டு சுற்றுவது அவனுக்கு கஷ்டமாக இருந்தது. இருவரிடமும் பேசிப் பார்த்து தோற்றவனுக்கு இப்போதே நிம்மதியானது.

அனைத்தும் சரியாகியிருக்க இப்போது விக்ரமும் மனதளவில் ஓரளவிற்கு சரியாகி ஒரு முடிவிற்கு வந்தான். தன் படிப்பு விசயத்தில் தந்தை சொல்வதை கேட்காமல் தனக்கு பிடித்த இன்ஜினியரிங் படிப்பையே தேர்ந்தெடுப்பது என்று. சொல்லபோனால் மூவரும் ஒரே கல்லூரியில் சேரவேண்டும் என்றெல்லாம் யோசிக்க தொடங்கினர். விக்ரமின் இந்த தெளிவும் மாற்றமும் சந்தியா கௌதம் இருவருக்கும் பிடித்திருந்தது. இந்த மகிழ்ச்சி எல்லாம் வெறும் மூன்று நாட்கள் தான் நிலைத்தது. சந்தியாவும் கௌதமும் பேசி மூன்று நாட்கள் கூட ஆகவில்லை கௌதம் எதையோ மனதில் போட்டு குழப்பி உம்மென்று சுற்றுவதை சந்தியா கவனித்தாள்.

அதை சரி செய்தாக வேண்டும் என்று எண்ணியும் இருந்தாள். அதற்கு ஏற்றாற்போல் விக்ரமுக்கு அன்று சிறப்பு வகுப்பு இருந்ததால் கௌதமுடன் வீட்டிற்கு செல்ல சொல்லிவிட்டான். வழியெங்கும் அமைதியாக வண்டியை இயக்கிக் கொண்டிருந்தான் கௌதம். அது அவனில்லை. எதையாவது சிரித்து பேசி கொண்டு வருவதே அவனது குணம்.

“டேய் டுகாட்டி, என்ன இன்னைக்கு உன் பாஸ் உம்முனு வரான். கண்ணாடில அவனுக்கு முகத்தை காட்டறீயா இல்லயா. பார்க்க சகிக்கலை” வண்டியிடம் கேட்பது போல் அவனிடம் கேட்டாள்.

“அதுக்கு காரணமே அவ தான்னு சொல்லு டுகாட்டி” அவனும் வண்டியிடம் சொல்வது போல் அவளிடம் சொன்னான்.

“நானா. நான் என்னடா பண்ணேன்” என்று யோசித்தவள், கை விரல்களை விட்டு எண்ணி “மூணு நாளா சண்டை கூட போடலையே” என சொல்ல, அதற்கும் அவன் அமைதியாக இருக்க “இப்ப சொல்லபோறீயா இல்லயா” அதட்டிக் கேட்டாள்.

“எனக்கு இப்போலாம் விக்கி உன்னை சந்துனு கூப்பிட்டா கடுப்பாகுதுடி” என்றான். ஆம், ‘நீ கௌதம் கூட போ சந்துனு’ விக்ரம் சொல்லி அனுப்பியதில் இருந்து தான் அவன் முகம் மாறி இப்படி இருக்கிறான். அது தவிர வேறு சில சொல்ல முடியாத உணர்வுகளும் அவனை ஆட்கொண்டிருந்தது.

“என்ன ஆரம்பிச்சிட்டியா. எதுக்கு சின்ன விஷயத்தை பெருசாக்கறேனு எனக்கு புரியலை கௌதம். முதல்ல அவன். இப்ப நீயா. உங்க ரெண்டுபேருக்கும் என்னை பார்த்தா நீங்க விளையாடுற புட்பால் மாதிரி தெரியுதா. நீ ஒரு உதை அவன் ஒரு உதைனு உதைச்சிக்கிட்டு இருக்கீங்க” சந்தியா கடகடவென பேசியதில் கௌதமுக்கு கோபம் வர தன் பைக்கை ஒரு ஓரமாக நிறுத்தினான். அவன் கண் பார்வையில் அவள் கீழே இறங்க அவனும் இறங்கினான்.

“என்ன பேசுற நீ. நானும் அவனும் உன்னை புட்பால் மாதிரி உதைக்கறோமா. நான் என்ன சொல்லவரேன்னு கூட உனக்கு புரியலையா. எது, சின்ன விஷயத்தை நான் பெருசாக்கறேனா. கௌதி எப்படி கௌதமா மாறினான்னு உனக்கு ஞாபகம் இருக்கா. நீ என்னை கூப்பிடறதையே மாத்திக்கிட்ட. நான் சைலண்ட்டா தான போயிட்டேன். நான் என்னமோ பிரச்சனை பண்ற மாதிரி ஆரம்பிச்சிட்டியாங்கற. அவன் உன்னை அப்படி கூப்பிடக் கூடாதுனு சொன்னேனா. எனக்கு கடுப்பாகுதுனு தான சொன்னேன். எனக்கு ஏன் அப்படி தோணுதுனு யோசிச்சியா” கௌதமும் அதற்கு எதிர்வாதம் புரிய வழக்கம் போல் இருவருக்குள்ளும் சண்டை வெடித்தது.

“இதுல யோசிக்க என்ன இருக்கு. உனக்கு தான் டைம்பாஸ் ஆகலனா எங்கிட்ட பிரச்சனை பண்றதயே வேலையா வச்சிருக்கியே. நீ விக்ரமுக்காக அவ்ளோ கேரிங்கா எப்பவும் அவன் கூட இரு, அவன் பைக்ல போ, அவனை பார்த்துக்கோனு சொன்னப்போ உன்னை எனக்கு எவ்ளோ பிடிச்சிருந்துச்சு தெரியுமா. ஆனா பழைய குருடி கதவை திறடி. இல்ல” வழக்கம் போல் பேசியே கோபத்தை வரவழைத்து விட்டாள்.

“என்னடி நீ ரொம்ப ஓவரா பேசிட்டே போற. என்னைக்குடி நான் தேவையில்லாம சண்டை போட்டிருக்கேன்”

“இப்போ என்னை வீட்டுல கொண்டுப் போய் விடறீயா இல்ல நானே நடந்து போயிக்கவா” என்றாள். அதற்கு மேல் அவளிடம் பேசி ஒன்றும் ஆக போவதில்லை என்று வண்டியை கிளப்பினான்.

சிறிது தூரம் வந்ததும் மறுபடியும் அவன் வண்டியை ஓரம் நிறுத்த “ஏன்டா இது என்ன பைக்கா இல்ல பஸ்ஸா. அங்கங்க நிறுத்திக்கிட்டு இருக்க” எரிச்சல்பட்டு சொன்னாள்.

“நில்லுடி எனக்கு பேசணும்” கோபமாக கத்தினான். அதற்குமேல் அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இறங்கினாள்.

“நான் ஏன் விக்கி உன்னை சந்துனு கூப்பிட்டா கடுப்பாகறேன்னு உனக்கு புரியலையா சந்தியா”

“அதான் சொன்னேனே உனக்கு எங்கிட்ட எதாவது பிரச்சனை பண்ணிக்கிட்டே இருக்கணும்”

எவ்வளவு திமிர் இவளுக்கு என்று தோன்ற “வேண்டாம் சந்தியா. என்னை டென்ஷன் பண்ணாத. நான் இன்னைக்கு பேசியே ஆகணும். திரும்ப இந்த மாதிரி சந்தர்ப்பம் எனக்கு கிடைக்குமானு தெரியலை. ப்ளீஸ் புரிஞ்சிக்கோ” அவன் பேச்சில் அவள் அமைதியானாள்.

“அவன் உன்னை அப்படி கூப்பிடக் கூடாதுனு நான் சொல்லலைடி. அப்படி கூப்பிடறப்போ எனக்கு பொறாமையா இருக்குனு தான் சொல்றேன். ஏன்னா நீ எனக்கு மட்டும் தான் சொந்தம்னு தோணுது. அவனுக்கு வேணா நீ சந்து, தெரு எதுவா வேணா இருக்கலாம். ஆனா என்னோட உலகமே நீதான் சந்தியா. உனக்கு புரியுதா இல்லையா” அவளை பார்த்து அவளது கண்களை இமைக்காமல் பார்த்து சொல்லிக் கொண்டிருந்தான். அவள் முகமே அவள் இதை எதிர்பார்க்கவில்லை என்பதை பிரதிபலித்தது. இம்முறையும் அவள் கண்களில் கண்ணீர் நின்றது. அன்றவன் பார்த்த அதே கண்ணீர். மறுபடியும் உடைந்துப் போனான். அதற்கு மேல் பேசத் தோன்றாமல் “சரி கிளம்பு உன்னை வீட்டுல விட்டுறேன்” என்றான்.

வழியெங்கும் அமைதி. அவனது வண்டி கண்ணாடி வழியாக அவளை பார்த்தப்போது வெகுநேரமாக கண்ணில் நின்றிருந்த கண்ணீர் கீழே இறங்கி வந்தது. அதையவள் துடைக்கவும் தோன்றாமல் அமர்ந்திருந்தாள். அவள் வீட்டு வாசலில் வண்டியை கொண்டு வந்து நிறுத்தினான்.

அவளும் அவனிடமிருந்து விடைபெறாமல் அமைதியாக இறங்கி நடந்தாள்.

“நில்லு சந்தியா. விளையாட்டுக்கு சொன்னாலும் அழற. நிஜமா சொன்னாலும் அழற. இப்படி உன் கண்ணுல தண்ணிய பார்த்தா எனக்கு எப்படி மேல பேச தோணும். ஐய்யோ, இவளை நம்ப செயலால காயப்படுத்திட்டோமோனு தோணுது. எனக்கு உன்னை பிடிச்சிருக்குங்கற விஷயம் உனக்கு கண்ணீரை தர்றத பார்த்தா மனசே விட்டு போயிடுதுடி. ஆனாலும் அதான் உண்மை. எனக்கு உன்னை பிடிச்சிருக்கு சந்தியா. இத நீ உங்கிட்ட பேச முயற்சி பண்ணாத, ஆறுமாசத்துக்கு அப்புறம் என் முகத்தை கூட காட்டாதனு சொன்னியே அப்ப தான்டி நானே உணர்ந்தேன். அண்ட் தட் ஒன் வீக், இட் வாஸ் எ ஹெல் டு மீ. அப்ப தான் புரிஞ்சிது ஐ ஆம் இன் லவ் வித்..” அவன் முழுதாக சொல்வதற்குள் வீட்டினுள்ளே ஓடிவிட்டாள்.


உண்மையாகும்..


உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..
 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் - 12

அடுத்தநாள் அவளிடம் பேசிப் பார்க்க முயற்சிச் செய்தான் கௌதம். அவளோ அவனிடமிருந்து ஓடுவதையே வேலையாக வைத்திருந்தாள். மாலை வீட்டிற்கு செல்லும் மணி அடித்ததும் வேகமாக வகுப்பை விட்டு கிளம்பினாள். கௌதமும் அவளை பின் தொடர, வழியில் ஒரு நண்பன் அவனிடம் ஒரு முக்கியமான விசயம் பேசவேண்டுமென்று அவனை பிடித்து வைத்துக் கொண்டான்.

“விக்ரம் கிளம்பலாம் வா” என்றாள் அவர்களுக்காக காத்திருந்த விக்ரமிடம். அதற்கு “கௌதி எங்கடி. அவனும் வரட்டும்” என்றான் இவர்களுக்கிடையே என்ன நடக்கிறது என்பதை அறியாத விக்ரம்.

“அதெல்லாம் அவன் வந்துப்பான். ப்ளீஸ் விக்ரம் நீ வண்டிய எடு. எனக்கு அர்ஜெண்ட்டா வீட்டுக்கு போகணும்” அவன் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருப்பதை பார்த்தவள் “இப்ப நீ எடுக்கறீயா இல்ல நான் நடந்து போகவா” திடமாக கேட்டாள்.

“ஹேய் என்னடி நீ. வர வர அவன்கிட்ட சண்டை போட்டு போட்டு சண்டகோழியா மாறிட்டு வர சந்து. சரி ஏறு. நான் அவன்கிட்ட வீட்டுக்குப் போய் பேசிக்கறேன்” விக்ரம் சந்தியாவை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

கௌதம், நண்பனிடம் பேசிவிட்டு வந்து வண்டி நிறுத்துமிடத்தில் பார்த்தால் இருவரையும் காணவில்லை. கோபம் தலைக்கேற வண்டியை எடுத்தான். வண்டியின் வேகத்தைக் கூட்டியவன் அவர்கள் செல்லும் வழியெங்கும் தேடிக் கொண்டே சென்று இருவரும் முன்னே செல்வதை கண்டு வண்டியை வேகமாக கொண்டுப் போய் விக்ரமின் வண்டிக்கு குறுக்கே நிறுத்தினான். அதில் இருவரும் நிலைதடுமாறி போனார்கள். இருந்தும் விக்ரம் சுதாரிக்க, சந்தியா அவனை கெட்டியாக பிடித்துக் கொண்டாள். அவள் அவனை பிடித்திருந்தை பார்த்தவனுக்கு கோபம் இன்னும் எகிறியது.

பைக்கை அப்படியே நிறுத்திவிட்டு இறங்கி வந்தவன் “இறங்குடி கீழ. இப்ப எதுக்குடி என்னை விட்டுட்டு வந்த” அவனது கேள்விகள் சந்தியாவிடமே இருந்தது.

“கௌதி, அவ மேல எந்த தப்பும் இல்ல. நான் தான் வீட்டுக்கு சீக்கிரம் போகணும்னு அவளை கூப்பிட்டுக்கிட்டேன். அவ உனக்காக தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தா” சந்தியாவை காப்பாற்ற விக்ரம் அவளுக்கு பரிந்துப் பேசினான்.

“யாரு இவ. இவ எங்கிட்ட பேசறதில்ல விக்கி. திமிறு காட்டிக்கிட்டு சுத்திட்டு இருக்கா. எனக்கு ஒண்ணுதான் புரியல. ஊருக்கே உமைக்கோட்டான். எனக்குனு வந்தா மட்டும் எங்க இருந்து தான் இப்படி ஆகிடுவானே தெரியாதுடா. மொத்த திமிரையும் எங்கிட்ட காட்டி சாவடிப்பா” அவன் கண்ணில் அனல் பறந்தது. அவளோ சட்டை செய்யாமல் நின்றிருந்தாள்.

“டேய் என்னடா சொல்ற மறுபடியும் சண்டையா. இது எப்போதிலிருந்து. அன்னைக்கே இந்த மாசத்துக்கு போதும்ங்கற அளவுக்கு சண்டை போட்டுட்டீங்கனு சொன்னேனா இல்லயா” விக்ரமிடம் சந்தியா எதுவும் சொல்லவில்லை. அதனால் அவனுக்கு கௌதம் செய்த செயல் தெரியாமல் வழக்கம் போல் சின்னப் பிரச்சனையென்று பேசிக் கொண்டிருந்தான்.

விக்ரம் கேட்டுக் கொண்டிருந்த போது சந்தியாவிடம் திரும்பிய கௌதம் “ஏன்டி அப்படி நான் உனக்கு என்ன பண்ணிட்டேன்னு இப்படி அவாய்ட் பண்ற. தப்பா கூட இருக்கட்டும் அத வாயத்திறந்து சொல்லலாம்ல. அதவிட்டுட்டு யாரோ மாதிரி வர போற. ரொம்ப கஷ்டப்படுத்துற சந்தியா” என்ன பிரச்சனை என்று வெளிகாட்டாமல் அவளிடம் பேசினான்.

“விக்ரம் எனக்கு பேச ஒண்ணுமில்ல. வண்டிய எடு கிளம்பலாம்” சந்தியாவும் என்னவென்று காட்டிக் கொள்ளவில்லை.

“இல்ல எனக்கு ஒரு பதில் சொல்லிட்டு போ சந்தியா. அப்புறம் நீ பார்க்காத ஒரு கௌதமை பார்ப்ப” கௌதமின் வார்த்தையில் விக்ரமுக்கு விசயம் ஏதோ பெரியது என்று புரிந்தது. அதை உடனே சரி செய்யவில்லை என்றால் இருவருக்கும் இடையே சரிசெய்ய முடியாத பிளவு ஏற்பட்டுவிடும் என்றும் உணர்ந்தவன்

“வில் யூ போத் ஸ்டாப் இட்? சந்தியா இறங்கு. நீ அவன்கூட வா. ரெண்டுபேருக்கும் வீட்டுக்கு வர வரைக்கும் டைம் தரேன். நான் எங்க வீட்டு பால்கனில இருந்து பார்த்துக்கிட்டு இருப்பேன். உங்க இஷ்யூவ சால்வ் பண்ணிக்கிட்டு அவளை வீட்டுல கொண்டு வந்து விடுறது உன் பொறுப்பு கௌதி” எப்பேற்பட்ட நண்பன் அவன். அவர்களுக்குள் என்ன பிரச்சனை என்று கூட கேட்கவில்லை. அதேநேரத்தில் அதை இப்போதே பேசி சரி செய்யவில்லை என்றால் எல்லாம் முடித்துவிடும் என்பதை அறிந்தவன் அவர்களுக்கு நேரம் கொடுத்து ஒதுங்கிப் போனான். இவன் மட்டும் இல்லையென்றால் இவர்கள் இருவருக்கும் இருக்கும் கோபத்திற்கும் ஆத்திரத்திற்கும் இருவரும் ஒன்று சேர்ந்து இருப்பார்களா என்ன?

சந்தியா இறங்கியதும் கௌதம் நிச்சயம் அவளை நடுத்தெருவில் விட்டு செல்லமாட்டான் என்ற நம்பிக்கையோடு விக்ரம் அங்கிருந்து கிளம்பினான். வழக்கம் போல் முதலில் வீம்பு பிடித்தாள். பின் வண்டியில் ஏறவும் செய்தாள். சந்தியாவும் அவனை இழக்க விரும்பவில்லை என்பது தான் உண்மை. அதனால் அவனோடு சென்றாள். இருவரும் கடற்கரைக்கு வந்தனர்.

அவனை பேசவிடாமல் அவளே ஆரம்பித்தாள் “நான் சொல்றத பொறுமையா கேட்பியா கௌதம். எனக்கு கௌதமை பிடிக்கும். பட் ஒரு ப்ரண்ட்டா தான். நீ என் ப்ரண்ட் டா. எனக்கு நீ, விக்ரம் ரெண்டுபேரும் ஒண்ணு தான். என்னோட பெஸ்ட் ப்ரண்ட்ஸ். எல்லாருக்கும் ஒரு சிறந்த ஆண்தோழன் கிடைக்கறதே அபூர்வம். எனக்கு நீங்க ரெண்டுபேரு கிடைச்சிருக்கீங்க டா. இதுக்கு நடுவுல இந்த லவ்வெல்லாம் எதுக்கு கௌதம். வேண்டாமே ப்ளீஸ்” அவள் பேச பேச அவன் முகம் வாடியது.

“இது என்னடா முகத்தை இப்படி தூக்கி வச்சிருக்க. இப்படி இருந்தா பொண்ணுங்க லவ் பண்ண மாட்டாங்க. என் ப்ரண்ட் இருக்குற பெர்சனாலிட்டிக்கு சார்மிங்க்கு பொண்ணுங்க லைன் கட்டி நிப்பாங்க. நீ காலேஜ் சேரு, காலேஜ்ஜோட ஹார்ட் த்ராப்பே நீதான்டா. அப்ப போயும் போயும் சந்தியாகிட்டவா ப்ரொபோஸ் பண்ணோம்னு உனக்கே தோணும்” அவன் என்னவோ குழந்தை போலும், அவன் வாழ்வில் வேறு பெண்ணையே பார்க்காதது போலும் அவனுக்கு அறிவுரை கூறிக் கொண்டிருந்தாள். அந்த கடற்கரை காற்றில் அவளது அருகாமையும் கனிவான வார்த்தைகளும் அவனுக்கு இதமாய் இருந்தது அதனால் அமைதியாக கேட்டிருந்தான்.

இருந்தும் அவன் ஒன்றும் எதுவும் தெரியாமல் காதல் செய்யவில்லையே. ஒரு வருடத்திற்கும் மேல் அவள் நட்பே போதுமென்று இருந்தவன் இப்போது அவள் வேண்டும் என்பதால் தான் காதலை சொல்லியிருக்கிறான். அவனது தரப்பை சொல்ல வாயெடுத்தான். அவள் சொல்ல விடவில்லை.

“வேண்டாம் கௌதம். எதுவும் பேசாத. எனக்கு நீ எப்பவும் ப்ரண்ட்டா இருப்பியா” என்று சொல்லி அவனுடைய பதிலுக்காக காத்திருந்தாள். அவனும் இமையை மூடி திறந்து சரி என்றான். பின் இருவரும் ஒன்றாக வருவதை பால்கனியிலிருந்து பார்த்த விக்ரமுக்கும் மகிழ்ச்சி தொற்றிக் கொண்டது.

இரண்டு மாதங்கள் வேகமாக ஓடின. அரையாண்டு பரிட்சையும் முடிந்து விடுமுறையில் இருந்தனர். விக்ரமும் தந்தையால் ஏற்பட்ட வலியிலிருந்து சரியாகியிருந்தான். சந்தியாவும் கௌதமும் ஒன்றாகவே இருந்தனர்.

அன்று சந்தியாவிற்கு பிறந்தநாள். இரவு பன்னிரண்டு மணிக்கே கேக்குடன் அவள் வீட்டிற்கு வந்தான் விக்ரம். அதையவள் விக்ரம் மற்றும் அவள் குடும்பத்தினர் முன்பு வெட்டி பிறந்தநாளை கொண்டாடினாள். பின் மதியம் மீனா கையால் நன்கு சாப்பிட்ட பிறகு அவளது வீட்டில் சொல்லி அனுமதிப் பெற்று அவளை தன் காரில் எங்கோ அழைத்துச் சென்றான் விக்ரம்.

“எங்கடா கூட்டிட்டு போற” வழியெங்கும் அவள் கேட்க

“அது சர்ப்ரைஸ்” என்றான். அவர்கள் சென்றுக் கொண்டிருக்க வழியில் ஓட்டுநரை காரை ஒரு ஓரமாக நிறுத்தச் சொன்னான். தூரத்தில் பார்த்தால், கௌதம் அவன் காரிலிருந்து இறங்கி இதில் ஏறிக் கொண்டான். விக்ரமும் சந்தியாவும் பின் இருக்கையில் அமர்ந்திருக்க இவன் ஓட்டுநருக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்தான்.

“ஹாய் டா” பின்னே பார்த்து விக்ரமுக்கு மட்டும் சொல்லிவிட்டு திரும்பினான்.

“இவன் எதுக்கு வந்திருக்கான்” கௌதமை பார்த்ததும் சந்தியா மனதில் ஏற்பட்ட கேள்வியை கேட்டும் விட்டாள்.

“ஹேய் சந்து. என்னடீ அவன் மேல எதாவது கோவமா” அவளிடம் கேட்டுவிட்டு “என்னடா பர்த்டேக்கு விஷ் பண்ண மறந்துட்டீயா. அதுக்கு தான் கோவமா இருக்காளா” கௌதமிடமும் கேட்டான்.

அதற்கு அவன் சிரிப்பையே பதிலாக தர “அப்போ மறந்து தான் போயிட்டியா. சந்து நீ அவன் மேல கோவமா இருக்கறதுல தப்பே இல்ல” என்று தோழிக்கு பரிந்துச் சொன்னான். கௌதம் அவளை திரும்பிக் கூட பார்க்காமல் நேராக பார்த்திருந்தான். அவளோ அவனை நிமிர்ந்துக் கூட பார்க்காமல் கீழே பார்த்திருந்தாள். வண்டி வேகமாக அந்த கிழக்கு கடற்கரை சாலையில் பறந்தது. மூவரும் மகாபலிபுரம் வந்தடைந்தனர்.

“எதுக்குடா மகாபலிபுரம் கூட்டிட்டு வந்திருக்கீங்க” சந்தியா கேட்டது தான் தாமதம் “ஹான். யாருக்கோ கடல்னா பயமாமே. கடல்ல காலே வைக்க மாட்டாங்களாமே. அதான் குளிப்பாட்டி விடலாம்னு கூட்டிட்டு வரச் சொன்னேன்” கௌதம் சொல்ல, திரும்பி அவனை ஒரு அர்த்தமான பார்வை பார்த்து முறைத்தாள்.

“விக்ரம் எனக்கு தான் சுனாமிக்கு அப்புறம் தண்ணில நிக்க பயம்னு தெரியும்ல. அப்புறம் ஏன்டா இவன் பேச்ச கேட்டு இங்க கூட்டிட்டு வந்த. இனி நீ எங்க கூப்பிட்டாலும் நான் வரவே போறதில்ல பாரு” பாவமாக சொன்னாள்.

“அவளுக்கு எதுக்கு தான் பயமில்ல. சுனாமி போய் நாலு வருஷமாச்சு இன்னுமா பயப்படுவாங்க. அப்படி பார்த்தா பதினேழு வருஷத்துக்கு முன்னாடி அதேநாள் தான் ஒரு சுனாமி பொறந்திருக்கு. கௌதமை மட்டும் வெளுத்து வாங்கற சுனாமி. இவளாம் இந்த சுனாமிக்கு போய் பயப்படலாமா” கௌதம் முகத்தில் எந்த ஒரு உணர்வையும் காட்டாமல் பேச்சிலே அனைத்து நக்கலையும் வைத்துச் சொன்னான். அவன் சுனாமி என்று சொன்னது சந்தியாவை தான். ஆம் அவள் டிசம்பர் இருபத்தியாறு தான் பிறந்திருந்தாள். அதை தான் அவன் அவ்வாறு குறிப்பிடுகிறான்.

“நான் அப்படி உன்னை என்ன பண்ணிட்டேன். எப்ப பார்த்தாலும் நீ பாவம்னும் நான் உன்னை கஷ்டப்படுத்தறேன்னும் சொல்லிட்டு திரியற” அவள் பதில் வாதம் செய்ய “நான் ஏன் பாவம்னு உனக்கு தெரியாதா” பட்டும்படாமல் அவன் சொன்னாலும் அதில் அர்த்தம் இருந்தது. அது அவளுக்கும் புரிந்தது.

“டேய் சும்மா பேசிக்கிட்டு இருப்பா. தூக்குடா அவளை” கௌதம் விக்ரமிடம் சொன்ன அடுத்த நொடி சந்தியா பயத்தில் ஓட ஆரம்பித்தாள். இருவரும் அவளை பிடிக்க அவள் பின்னால் ஓடி, பிடித்தும் விட்டனர். கடற்கரை மணல் திட்டை வந்தடைந்ததும் அவளது தோளை கௌதமும் கால்கள் இரண்டையும் விக்ரமும் பிடித்துக் கொண்டு அவளை தூக்க அலறினாள்.

“டேய் விட்டிருங்கடா. ப்ளீஸ் கௌதம். ப்ளீஸ் விக்ரம். எனக்கு தண்ணினா பயம். ப்ளீஸ் வேண்டாம். நீங்க என்ன சொன்னாலும் செய்யறேன்” சந்தியா அலறியதை பார்த்து விக்ரம் கால்களை விட

“டேய், நீ என்னடா அவ பேச்ச கேட்கற. தூக்குடா அவளை” கௌதம் அவனையும் அதட்டினான்.

“கௌதம் இப்படி பண்ணாத ப்ளீஸ். எனக்கு பயம் கௌதம்” மறுபடியும் கதறியவள் இம்முறை ஒருபடி மேல் சென்று “ஐயோ யாராவது என்னை காப்பாத்துங்களேன். இவனுங்க ரெண்டுபேரும் என்னை தூக்கிட்டு போறாங்களே” என்று கத்தினாள்.

“அடியேய். வாய மூடுடி. இப்படி கத்தினேனு வச்சிக்கோ எங்க ரெண்டுபேரையும் தூக்கி உள்ள போட்டிடுவாங்க” கௌதம் அதட்டினான்.

“அப்ப கீழ இறக்கிவிடுங்கடா பன்னிங்களா” அவளும் விடாமல் கெஞ்சினாள். அந்த கெஞ்சலில் அவர்களை வசையும் பாடினாள்.

“கௌதி அவ வாய மூடுடா இல்லாட்டி ஜெயில் தான்” விக்ரமுக்கு ஒருபுறம் இந்த விளையாட்டு பிடித்திருந்தாலும் இன்னொருபக்கம் கிலி பற்றியிருந்தது. வழக்கம் போல் எதற்கும் அஞ்சாதவன் “ஒழுங்கா வாய மூடிட்டு வர்றியா இல்லயா. சைலண்ட்டா எங்களுக்கு கோ-ஆப்ரேட் பண்ணா கடல்ல போட்டு ரெண்டு புரட்டு புரட்டிட்டு தூக்கிட்டு வந்திடுவேன். இல்ல போட் வச்சி நடுகடலுக்கு கூட்டிட்டு போய் தண்ணில தூக்கி போட்டுருவேன். எது ஓகேனு நீயே முடிவு பண்ணிக்கோ” இவன் எதற்கும் அடங்கமாட்டானா என்று தோன்ற அவனுக்கு பயந்து அவளும் சத்தம் போடாமல் அமைதியானாள்.

கடல் அருகே கொண்டுப் போன நொடிபொழுதில் அவளை இருவரும் தொப்பென்று தண்ணீரில் போட்டனர். அவள் திணறி எழ முயற்சிக்க அவள் கைப்பிடித்து நான் இருக்கிறேன் என்று தைரியம் தந்து எழுப்பினான் கௌதம். அவள் எழுந்து நின்ற கணம் மறுபடியும் அவளை கேலி செய்துச் சிரித்தான். இதில் விக்ரமும் கூட்டு சேர்ந்தான். சந்தியா அவர்கள் மீது கொலைவெறியில் இருந்தாள் முக்கியமாக கௌதம் மீது.

உண்மையில் கௌதம் அதை விளையாட்டிற்கு செய்யவில்லை. சந்தியாவிற்கு எதற்கெடுத்தாலும் பயம். சிறுவயதிலிருந்தே அவளுக்கு அலையில் நிற்க பயம். அதுவும் அந்த பிறந்தநாளன்று குடும்பத்துடன் காலையில் வெளியே செல்ல கிளம்பியவர்கள் சுனாமி வந்து கடல்நீர் உள்வாங்குவதை தூரத்திலிருந்து பார்த்தனர். அதிலிருந்து பயம் அதிகமாக தொற்றிக் கொண்டது. எப்போது கடற்கரை வந்தாலும் சேவை சாலையிலே நின்றுவிடுவாள். அதற்குமேல் மணல் திட்டில் கூட அடியெடுத்து வைக்கமாட்டாள். இதை போக்கவே அவளை தூக்கி அலையில் போட்டான் கௌதம்.

அவளை செதுக்கியவன் அவனே. அவளது ஓவ்வொரு பயத்தையும் போக்க செய்தான். அவளது ஒவ்வொரு திறனையும் வளர்க்க எண்ணினான். இன்று பெரிய மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்யும் தன்னம்பிக்கையும் இரவு எத்தனை மணி ஆனாலும் தனியாக கார் எடுத்து வரும் தைரியமும் அவளுக்கு அவன் கொடுத்தது.

பன்னிரெண்டாம் வகுப்பு முடிந்த கையோடு வண்டியை எடுத்துக்கொண்டு மூவரும் அதிகமாக ஊர் சுற்றினார்கள். அந்தி மாலை நேரங்களில் மேற்கூரையை திறந்து மூவரும் விட்டத்தை ரசித்து வலம் வருவார்கள்.

எப்போது பதினெட்டு வயது பூர்த்தியாகும் என்று காத்திருந்து ஓட்டுநர் உரிமம் வாங்கியவர்களை கையிலேயே பிடிக்க முடியாமல் போனது. அதன் பின் வந்த நாட்களில் கௌதமும் விக்ரமும் மாற்றி மாற்றி காரை ஓட்ட பின் இருக்கையில் சந்தியா அமர்ந்து வருவதே வழக்கமான ஒன்றாயிற்று.

அப்படி ஒருநாள் கௌதம் காரை இயக்க விக்ரம் அவனருகில் அமர்ந்திருந்தான்.

“டேய் எப்படா எனக்கு கார் ஓட்ட சொல்லி தரப் போறீங்க” சந்தியா பின் இருக்கையில் இருந்து இருவரையும் கேட்க

“ஏம்மா பாப்பா உனக்கெல்லாமா லைசென்ஸ் தராங்க. நீ இன்னும் வளரணும்” என்றான் விக்ரம்.

“இவ வளர்ந்து தான் லைசென்ஸ் எடுக்கணும்னா அதெல்லாம் நடக்கற கதையா என்ன” கௌதமும் உடன்சேர இருவரும் ஹை-பை போட்டுக் கொண்டனர்.

“எனக்கும் எய்டீன் ஆகும். நானும் மேஜர் ஆவேன். அப்புறம் லைசென்ஸ் எடுப்பேன். வோட் போடுவேன். அப்புறம் அப்புறம்” சந்தியா விரல் விட்டு எண்ணி ஒன்வொன்றாக அடுக்கிக் கொண்டே போக

“அடல்ட் படம் பார்ப்பேன்” வண்டியை இயங்கிக் கொண்டே கௌதம் சொல்ல “ச்ச்சீ கௌதம். ரொம்ப மோசம் நீ” என்றாள்.

உண்மையில் பின்னாளில் கௌதம் தான் அவளுக்கு கார் ஓட்டவும் கற்றுத் தந்தான். கற்று தரும் போதே “பெரிய டிரைவர் பொண்ணு நீ. உங்க அப்பா உனக்கு கார் ஓட்ட சொல்லித் தரலையா. சரி விடு நானே சொல்லி தரேன்” என்று சொல்லியே கற்றுத் தந்தான். கற்றுத் தந்தது மட்டும் தான் அவன். அவள் அட்டகாசமாக ஓட்டும் போது அவன் உடனில்லை. எங்கோ எதற்கோ அவளை விட்டு சென்றுவிட்டான்.

அன்றொரு நாள் சந்தியா அவள் வீட்டில் இருந்தாள். விக்ரம் பரபரப்பாக வந்து அழைப்பு மணியை அடித்தான்.

சக்தி தான் ஓடிப் போய் கதவைத் திறந்தவன் “சந்தியாக்கா. விக்ரம் அண்ணா வந்திருக்காரு” என்றான் வாசலில் நின்றப்படியே அறையிலிருந்த சந்தியாவுக்கு.

அவளும் “உள்ள வா விக்ரம்” என்றாள் துணிமடித்து கொண்டே

உள்ளே வந்தவன் “கௌதிக்கு எதோ அடிப் பட்டிடுச்சாம் சந்து. ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிருக்காங்களாம்” விக்ரம் சொன்னதும் மடித்துக் கொண்டிருந்த துணியை கீழே போட்டுவிட்டாள்.

“என்னடா சொல்ற. எ.. எப்படி பட்டுச்சு. இப்போ எப்படி இருக்கான். இது உனக்கு எப்படி தெரியும்” அவள் கண்களிலும் வார்த்தையிலும் பதற்றம் தெரிந்தது.

“எதோ வேற ஸ்கூல் பசங்க கூட சண்டையாம். எங்க கிளாஸ் சபரீஷ் இருக்கான்ல அவன் தான் சொன்னான். அவனுக்கு உங்க கிளாஸ் திவாகர் தான் சொன்னானாம். ‘நான் அவனை போய் பார்க்கலாம்னு இருக்கேன் அதான் உங்கிட்ட எந்த ரூம் நம்பர்னு கேட்கலாம்னு ஃபோன் பண்ணேன்னு’ சொல்றான்டி சபரீஷ்” கேட்ட சந்தியாவிற்கு பெருங்கோபம் ஒருபுறம் இருந்தாலும் எப்படியிருக்கிறான் என்ற பயம் தான் பெரிதாக இருந்தது. அவனுடைய நண்பனை பற்றி இன்னொரு நண்பனின் மூலம் தெரிந்துக் கொண்டதில் விக்ரமுக்கும் கோபம் தான். அத்தோடு கௌதம் இதை ஏன் தன்னிடமிருந்து மறைத்தான் என்ற வருத்தமும். இருந்தும் மனது கேட்கவில்லை “மூணு நாளா ஹாஸ்பிட்டல்ல இருக்கானாம்டி. கைல ஸ்க்ரூஸ் போட்டு சர்ஜரி பண்ணிருக்கங்களாம். கால்லயும் நல்ல அடியாம்” விக்ரம் சொல்ல சொல்ல சந்தியாவுக்கு மனம் பதைத்தது.

“நாம அவனை போய் பார்க்கலாமா விக்ரம். எனக்கு அவனை பார்க்கணும் போல இருக்கு” அவனுக்காக அவள் கண்களில் தவிப்பு தெரிந்தது. அத்தோடு கண்ணீரையும் பிரயத்தனப்பட்டு அடக்கினாள்.

“மீனாம்மா கிட்ட என்ன சொல்றது”

“என்னை அவன் பைக்ல கொண்டு வந்து விடறத அம்மா பார்த்திருக்காங்க. நம்ப ப்ரண்ட்னு தெரியும். ஆனாலும் அடிப்பட்டு ஹாஸ்பிட்டல்ல இருக்கான்னு சொல்லவேண்டாம். என்ன ஏதுன்னு கேட்பாங்க பதில் சொல்லமுடியாது. காலேஜ் அட்மிஷன் விஷயமா விசாரிக்க போறோம்னு சொல்லிடு விக்ரம். ப்ளீஸ், எனக்கு அவனை இப்பவே பார்க்கணும்”

“நம்ம வீட்ல ஓகே சந்து. அவங்க வீட்ல என்ன சொல்றது. கண்டிப்பா அவங்க வீட்ல யாராச்சும் கூட இருப்பாங்கடி”

“அதெல்லாம் எனக்கு தெரியாது. எனக்கு அவனை பார்க்கணும் அவ்ளோ தான். நீ என்னை கூட்டிட்டு போறீயா இல்ல நானே போயிக்கவா” சொல்லும்போதே அவள் கண்களில் இப்போது கண்ணீர் நின்றது. விக்ரமுக்கு என்ன இவள் இப்படி அடம் பிடிக்கிறாள் என்று எதுவும் புரியாமல் போனது.

புரியாமலேயே அழைத்தும் சென்றான். சென்னையிலிருக்கும் மிகப் பெரிய மருத்துவமனை அது. கௌதம் உள்ளே வலது கையில் அறுவை சிகிச்சை முடிந்த கட்டும் இடது காலில் அடிபட்ட கட்டோடும் படுத்திருந்தான். உடன் அவனை பார்க்க வந்த பீட்டர், சரவணன், விக்னேஷ் மற்றும் சபரீஷ் என அனைவரும் இருந்தனர். சபரீஷை தவிர மற்ற மூவரும் தினமும் ஒருமுறையாவது இவனை வந்து பார்த்துவிட்டு தான் செல்வர். கௌதம் கேட்டுக் கொண்டதால் யாரும் இதை விக்ரமிடம் சொல்லவில்லை. அவனிடம் சொன்னால் அது சந்தியாவிற்கு தெரிய வந்து அவள் கோபப்படுவாள் என்பதால் அவனிடம் சொல்லவேண்டாம் என்று கேட்டுக் கொண்டான் கௌதம்.

செல்வராணி பழத்தை உரித்துக் கொடுக்க நண்பர்களிடம் பேசிக் கொண்டே கௌதம் சாப்பிட்டிருந்தான். உடனிருந்த நண்பர்களும் செல்வராணி தந்த பழத்தை சாப்பிட்டு இருந்தனர். அதுமட்டுமா தினமும் இரவு செல்வராணி கையால் சாப்பிட்டு விட்டு தான் கிளம்புவர்.

“தம்பி இந்த ஜூஸ்ஸ குடிச்சிடுப்பா” ஆரஞ்சு பழச்சாறை பிழிந்து அவனுக்கு குவளையில் தந்தார். அந்த பழச்சாறை வாங்கி குடித்துக் கொண்டே நிமிர்ந்தவனுக்கு அதிர்ச்சி. எதிரில் விக்ரம் நின்றிருந்தான்.

‘டேய் இவனுக்கு யார்டா சொன்னது. இவனுக்கு தெரிஞ்சா அவளுக்கு தெரிஞ்சிடுமே. தனியா தான் வந்திருக்கான். அப்ப இன்னும் அவகிட்ட சொல்லலை. என்ன தான் இருந்தாலும் ப்ரண்ட்டாச்சே. அவனுக்கும் தான் அவளை பத்தி தெரியாதா என்ன. எதுக்கும் அவகிட்ட சொல்லக் கூடாதுனு சொல்லி வைக்கணும்’ மனதிற்குள் நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு கேட்காத தகவலாக

“நான் தான்டா விக்கிக்கு சொன்னேன்” என்றான் சபரீஷ்.

‘நீ தான் அந்த நல்ல காரியத்தை செஞ்சவனாடா’ கௌதம் மனதிற்குள் புலம்பிக் கொண்டிருந்த வேளையில்

“என்னடா தனியா வந்திருக்க. சந்தியாவும் கூட வரான்னு தான சொன்ன” சபரீஷ் சொல்ல, வாசலை பார்த்தவனுக்கு குடித்த ஜூஸ் புரை ஏறியது. ஏனென்றால் இப்போது அவன் பார்த்தது அவனது தேவதையை. ஏனோ இன்று அவனுக்கு அவள் ராட்சசியாக தெரிந்தாள். அப்படிதான் அவனை சினத்தில் கண்கள் சிவக்க முறைத்துக் கொண்டிருந்தாள்.

‘அடப்பாவிங்களா இவளுக்கு யார்டா சொன்னது’ என்று நினைக்கும் போதே உள்ளே வந்தாள்.

செல்வராணி சந்தியாவை யாரென்பது போல் பார்க்க, இப்போது என்ன சொல்வதென்று தெரியாமல் அவள் திணறிப் போனாள். விக்ரம் தான் அவளை காப்பாற்றும் வகையாக

“என் ப்ரண்ட் தான்ம்மா. நானும் இவளும் வெளில வந்திருந்தோம். கௌதிக்கு இப்படி ஆகிடுச்சுனு தெரிஞ்சதும் அப்படியே இவளையும் கூட கூட்டிட்டு வந்துட்டேன்” என்று சமாளித்தான்.

“அப்படியா சரிப்பா” என்றவர் “தம்பி நீங்க எல்லாரும் நைட் வரை இருப்பீங்க தான. கௌதம் ஜூஸ் குடிச்சிட்டு இருக்கட்டும். நான் வீட்டுக்கு போயிட்டு நைட்க்கு வந்திடுறேன். எல்லாரும் சாப்பிட்டு தான் போகணும்” அவனது நண்பர்களை பார்த்துச் சொல்ல

“ஐயோ அம்மா. நீங்க எங்கம்மா போறீங்க. இங்கயே இருங்கம்மா ப்ளீஸ்ம்மா ப்ளீஸ்” அன்னையின் கையை இறுக்கமாக பற்றி கௌதம் சொல்ல, மகனா கெஞ்சுவது என்று ஆச்சர்யமாக பார்த்தார்.

“இல்ல தம்பி. லேட்டாகிடுச்சு. தமையா வரேன்னு சொன்னா இன்னும் வரல. நான் நைட்க்கு சமைக்கணும். எப்படியும் அவ வந்துக்கிட்டே இருப்பா. இல்லனாலும் நான் வீட்டுக்கு போயிட்டு அவளை அனுப்பி வைக்கறேன்”

“இல்லம்மா. ப்ளீஸ் இங்கயே இருங்கம்மா. தமை வந்திடட்டும் அப்புறம் நீங்க போங்க. நான்.. நான் தனியா இருக்கமாட்டேன்” பயத்தில் உளறினான்.

“என்ன கௌதம் பேசற. இத்தனை பயலுங்க இருக்காங்க. அப்பா வந்திடுவார் தம்பி. சோலி இருக்கு. நான் போய் சமைச்சு வச்சிட்டு உங்களுக்கும் சாப்பாடு கொண்டு வந்திடுறேன்”

“இன்னைக்கு ஒருநாள் அரு, இல்ல தமைய செய்ய சொல்லுங்கம்மா. இல்ல ஃபோன குடுங்க நான் கார்த்தி அக்காவை போய் செய்ய சொல்றேன். ஆனா நீங்க இங்க தான் இருக்கணும்” செல்வராணிக்கு எதற்கு திடீரென்று இப்படி பேசுகிறான் என்று புரியவில்லை. நேற்று இத்தனைக்கும் கார்த்தியாயினி வர சற்று தாமதமான போது ‘அதான் நர்ஸ் இருக்காங்கல. அப்புறம் இவனுங்களும் நைட் தான் போவாங்க. நான் பார்த்துக்கறேன்ம்மா நீங்க கிளம்புங்க’ என்று அனுப்பி வைத்தவன் இன்று ஏன் இப்படி நடந்துக் கொள்கிறான் என்று புரியாமல் குழம்பினார்.

பர்ஸில் இருந்த விபூதியை எடுத்து நெற்றியில் வைத்து “பயந்து எதாவது போயிட்டியா தம்பி” என்றார். அவரது தவிப்பை பார்த்தவனுக்கு “ஐயோ அதெல்லாம் இல்லம்மா. நீங்க கூட இருக்கணும் தான் சொன்னேன். வேற ஒண்ணுமில்ல” என்றான். அவன் கஷ்டம் யாருக்கு புரியும்.

“அவ்ளோ தான. நீ இந்த ஜூஸை குடிச்சிட்டு, பழத்தை சாப்பிட்டுட்டு, ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருப்பியாம். அம்மா சட்டுனு போயிட்டு சமைச்சி வச்சிட்டு வந்திடுவேனாம்” குழந்தைக்கு சொல்வதுப் போல் சொல்லிவிட்டு பார்த்துக் கொள்ளுங்கள் என்ற கனிவானப் பார்வையை அவனது நண்பர்களை நோக்கிப் பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

‘ஐயோ அம்மா என்னை இந்த ராட்சசிகிட்ட விட்டுட்டு போறீங்களே’ என்று மனதிற்குள்ளேயே நொந்துக் கொண்டான்.

செல்வராணி அவளை கடந்த போது “பொம்பள புள்ள.. நேரமாகுது சீக்கிரம் வீட்டுக்கு கூட்டிட்டு போப்பா” என்று சொல்லிவிட்டு சென்றார்.

அவர் அறையை விட்டு வெளியே சென்றதும் கௌதமை நின்ற இடத்தில் இருந்தே ஒரு அனல் பார்வை பார்த்தாள். பின் திரும்பாமல் ஒவ்வொரு அடியாக பின்னெடுத்து வைத்து கதவருக்கே சென்று பின்வாட்டமே சாய்ந்து எட்டிப் பார்த்தாள். அவள் பின்னே செல்ல செல்ல கௌதமின் இதயம் வேகமாக துடிக்கத் தொடங்கியது. வெளியே எட்டி பார்த்தவளுக்கு அவன் அன்னை வெளியே நடந்துச் சென்று திரும்பியது தெரிந்தது. அவ்வளவு தான் வேகமாக உள்ளே வந்தாள். அவள் அவன் அருகில் வர வர என்ன செய்யப் போகிறாள் என்று விழித்துப் பார்த்ததில் அவனுக்கு கண்களே வெளியே வந்துவிட்டது. என்ன நடக்கப் போகிறது என்று தெரியவில்லை ஆனால் நிச்சயம், ஏதோ நடக்கப் போகிறது என்பதை உணர்ந்தான்.

வேகமாக அவனருகே வந்தவள் அடிபட்ட வலக்கையை விட்டு இடக்கையை எடுத்து ஒரு மடக்கு மடக்கினாள்.

“ஆ..ஆஆ. அம்மா. வலிக்குதுடி விட்டுருடி” வலியில் அலறினான் கௌதம். இன்னொரு கையில் கட்டிருந்ததால் அவனால் அவளை தடுக்க முடியவில்லை. விக்ரமுக்கோ ஒன்றும் புரியவில்லை. இவள் என்ன இப்படி செய்கிறாள் என்று பதறியடித்துக் கொண்டு அவளை தடுக்க அவளருகில் ஓடி வந்தான்.

“ஒரு கைய எவன்கிட்டயோ போய் உடைச்சிக்கிட்டு வந்தல. நீதான் என் உயிர், உலகம்னு இருக்கேன்ல. கொடுடா இன்னொரு கைய நான் உடைக்கறேன்” என்று வேகமாக கையை மறுபடியும் திருப்பினாள்.

ஆம், இருவரும் காதலிக்க தொடங்கி மாதங்கள் ஆகியிருந்தது. கௌதம் அவள் செய்கையால் வலியில் துடித்தான். விக்ரமும் அவள் செய்கையால் வலியில் துடித்தான். அவனும் தானே அவளை நேசித்தான். அதை அவளால் உணர முடியவில்லையா இல்லை உணர தவறிவிட்டாளா?

விதி இவர்கள் மூவரிடத்தில் பல விளையாட்டை விளையாட ஆரம்பித்தது. அதில் இவர்கள் பெற போவதும் இழக்க போவதும் எத்தனையோ. காலத்தின் கைதிகளாக மாட்டிக்கொண்டு தவிக்கப் போகின்றவர்களுக்கு வருங்காலம் என்று ஒன்று இருக்கிறதா என்ன. இருந்திருந்தால் நிகழ்காலத்தில் ஏன் மூவரும் தனிமரமாக வாழ்கின்றனர். அனைத்திற்கும் காலமே பதில்.


உண்மையாகும்..


உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..
 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் - 13

சந்தியாவும் கௌதமும் பலமாதங்களாக காதலித்து வருகின்றனர். பாவம் இது விக்ரமுக்கு தான் தெரியவில்லை. சந்தியா கௌதமிடம் வேகமாக சென்று அவன் கையை மடக்கும் போது கூட விக்ரம் நினைக்கவில்லை இவர்களுக்குள் இப்படி ஒன்று இருக்குமென்று. அவன் நேசித்தவள் அவனுடைய நண்பனை பார்த்து நீ தான் என் உயிர், உலகமென்று இருக்கிறேன் என்று சொன்னபோது அதிர்ச்சியில் உறைந்துப் போனான். சந்தியா அவனுக்கு எவ்வளவு முக்கியமானவள். அவளை அவன் இதுவரை தனியாக பிரித்துப் பார்த்ததே இல்லை. கௌதம் வருவதற்கு முன் அவள் விக்ரமுடன் சேர்ந்து ஒன்றாக பள்ளியை வலம் வந்தபோது எத்தனை பேர் அவர்கள் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள் என்றெண்ணி இருக்கிறார்கள். ஊருக்கே தெரிந்திருந்த அவனுடைய காதல் அவளுக்கு மட்டும் தெரியவில்லையா. அவன் நேசித்தவளுக்கு தன் நண்பனே ஆயினும் காதலை சொன்னான் என்பதால் தானே விக்ரம் கௌதமை அடித்தான். அதுக் கூடவா அந்த பேதை பெண்ணிற்கு தெரியவில்லை.

நொறுங்கிப் போனான் விக்ரம். வாழ்வில் பல அடிகளை வாங்கிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தான். இன்றோ அடித்தளமே ஆட்டம் கண்டுவிட தரைமட்டமானான். இடிந்து அப்படியே அவளருகிலேயே கல் போல் சமைந்துப் போனான்.

“ஆ...ஆஆ.. சனு விட்டுடுடி வலிக்குது. என்னால முடியல” கௌதம் கத்த

‘சனுவா’ இவனுக்கு தன்னுடைய சந்து எப்போது சனுவாக மாறினாள். தனக்காக அவனை இன்றும் கௌதமென்று அழைப்பவள் இதை எவ்வாறு அனுமதித்தாள் என்று விக்ரம் அதிர்ச்சியடைந்தான்.

இன்னொரு பக்கம், கௌதம் நினைத்திருந்தால் தன் கையை அவள் கையிலிருந்து நொடிப்பொழுதில் விடுவித்திருக்கலாம். ஏனோ அவனுக்கு அப்போது அது தோன்றவில்லை. அவளை பார்த்த அதிர்ச்சி, அத்தோடு அவள் என்ன செய்ய போகிறாளென்று புரியாமல் இருந்தவன் சட்டென்று அவள் கையை திரும்பியதும் வலியில் துடித்தானே தவிர அவனுக்கு கையை விடுவித்து கொள்ளவேண்டும் என்று தோன்றாமல் போனது.

விக்ரம் முழுவதுமாக உடைந்திருந்தான். சபரீஷ் அவனும் ஆடி போயிருந்தான். மற்றவர்களை பார்த்தால் இது அவர்களுக்கு புதிய விடயம் போல் தெரியவில்லை. சந்தியாவின் செயலை தடுக்க பீட்டரே முன் வந்தான்.

“சந்தியா என்னமா பண்ற. பாவம் அவனே அடிபட்டிருக்கான்” பீட்டர் சொல்ல திரும்பி அவனை முறைத்தவள்

“உங்களையெல்லாம் என் அண்ணன்ங்களா தான நினைச்சேன். உங்க எல்லாரையும் நம்பித் தான இவனை உங்க கூட அனுப்பறேன். நீங்க என்னனா சண்டை போடுற அளவுக்கு விட்டிருக்கீங்க. அது மட்டுமா இப்படி அடிபட்டிருக்கான். அத எங்கிட்ட இருந்து மறைச்சும் இருக்கீங்க” நண்பர்கள் மூவரையும் பார்த்துக் கேட்க அவர்கள் பதில் சொல்லமுடியாமல் தலைக்குனிந்தனர்.

அப்படியென்றால் தன்னை தவிர மற்றவர்களுக்கு இவர்கள் காதல் விவகாரம் தெரியுமா என்பதே விக்ரமின் பார்வையாக இருந்தது.

கௌதம் பக்கம் திரும்பியவள் “நீ அடிச்சதே தப்பு. இப்படி அடி பட்டும் இருக்க. இதுல பொய் வேற சொல்ற. என்ன சொன்ன, ஊருக்கு ஒரு கல்யாணத்துக்கு போறேன் அங்க என்னால சரியா ஃபோன் மெசேஜ் பண்ணமுடியாதுனு சொன்னல. உனக்கு எதாவதுனா என்னால தாங்கமுடியாதுனு தெரியும் தான கௌதம். அப்புறம் ஏன் இப்படி பண்ற. நீ ஹாஸ்ப்பிடல்ல இருக்க, சர்ஜரி பண்ணிருக்காங்கனு விக்ரம் சொன்னதும் உயிரே போயிடுச்சு. உன்னை பார்க்கணும்னு அவன்கிட்ட அடம்பிடிச்சு கூட்டிட்டு வந்திருக்கேன். வழியெல்லாம் நீ எப்படி இருக்க, அடியேதும் பெருசா இருக்ககூடாதுனு தான் மனசுல ஓடிக்கிட்டே இருந்துச்சு. நான் அவ்ளோ செத்து பொழைச்சு வரேன்..” அவன் மீதுள்ள அன்பை கண்களில் சினத்தோடு அவனிடம் கொட்டிக் கொண்டிருந்தாள்.

“உனக்கு அதப்பத்தி எதாவது கவலை இருக்கா. ஹாய்யா ஜூஸ் குடிச்சிட்டு இருக்க. நான் அம்மாகிட்ட பொய் சொல்லிட்டு வந்திருக்கேன். எங்க அப்பா யார் வம்புக்கும் போகமாட்டாரு. உனக்கு அடிபட்டுச்சினு உண்மைய சொன்னா என்ன ஏதுன்னு கேப்பாங்க. எல்லாத்தையும் சொன்னா நாளைக்கு நம்ப லவ் விஷயத்தை வீட்டுல சொல்றப்போ பையன் இப்படி அடிதடி சண்டைனு இருக்கானேனு எங்க வீட்ல அக்ஸ்செப்ட் பண்ணலைனா நான் என்னடா பண்ணுவேன். நீ இல்லாம என்னால இருக்க முடியாது கௌதம். உனக்கு இதெல்லாம் புரியுதா இல்லையா” அவள் சொன்ன ‘நம்ப லவ்’ என்ற வார்த்தை விக்ரம் காதைவிட்டு அகலவே இல்லை. அப்படியென்றால் அவனை பார்க்க துடித்ததும் இதற்கு தானா. அவனை பார்க்க செல்கிறோம் என்று மீனாட்சியிடம் சொல்லவேண்டாம் என்று சொன்னதும் இதற்காக தானா. இந்த நிமிடம் விக்ரமிற்கு வாழவே பிடிக்கவில்லை.

“பாரு கைல கால்ல எவ்ளோ பெரிய கட்டு போட்ருக்காங்க. இப்ப தான் ஸ்கூல் பர்ஸ்ட் வந்திருக்கனு ஸ்கூலே உன்னை தூக்கி வச்சி பேசிட்டு இருக்கு. இந்த டைம்ல இப்படி அடிபட்டு வந்திருக்க. என்னால உன்னை இப்படி பார்க்கவே முடியல. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு கௌதம்” அவள் கண்களில் கண்ணீர் தேங்கி நின்றது.

அவள் அவனை அவ்வளவு நேசிக்க தொடங்கியிருந்தாள். அந்த அன்பு தான் அவனது கையை முறுக்கச் செய்தது. அந்த அன்பு தான் அவனிடம் சத்தமிட செய்தது. இப்போது அதே அன்பு அவனை கட்டோடு பார்க்க பார்க்க அழ வைக்கவும் செய்தது. அடக்கமுடியாமல் முகத்தை கையால் மூடிக்கொண்டு குலுங்கி அழுதாள்.

“சனு சாரிடி. ப்ளீஸ் அழாத” கௌதம் அவளை சமாதானம் செய்ய எண்ணி நண்பர்களை சிறிதுநேரம் வெளியே இருக்கும்படி கண்ஜாடை காட்டினான். அவர்களும் அதை புரிந்து அங்கிருந்து நகர விக்ரம் மட்டும் அப்படியே நின்றிருந்தான்.

“விக்கி வாடா, வெளில வெயிட் பண்ணலாம். அவன் சந்தியாவை சமாதானம் பண்ணட்டும்” பீட்டர் சொல்லி விக்ரமை கையோடு இழுத்துக் கொண்டு போனான்.
அந்த கதவடைக்கப்பட்ட அறைக்குள் கௌதம் சந்தியா மட்டும் இருந்தனர். விக்ரம், சபரீஷ் ஒருபுறம் நின்றிருக்க பீட்டர், சரவணன், விக்னேஷ் மூவரும் மறுபுறம் நின்று அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.

“இருந்தாலும் நம்ம பையன் பாவம்டா மச்சான். உள்ள அடி எதாவது வாங்குவானா” சரவணன் கேட்க

“டேய்.. என்னடா கையை போட்டு அந்த திருப்பு திருப்புறா. கிளாஸ்ல யார்கிட்டயும் பேசாம இருக்க சந்தியாவா கௌதம்கிட்ட இப்படி நடத்துக்கிறா. என்னால நம்பவே முடியலடா” கௌதமின் நண்பனும் இருவரது வகுப்பு தோழனுமான விக்னேஷ் உடன் சேர

“அதே தான்டா. இவன் அம்மாவ இங்கயே இருங்கமானு கதறினப்பவே தெரியும்டா, சந்தியா கொலைவெறில எதாவது பண்ணுவானு. அதுவும் அம்மா என்னமோ பையனுக்கு பேயறைஞ்ச மாதிரி விபூதிலாம் வச்சாங்க. என்னால சிரிப்பை அடக்கவே முடியல. அவங்களுக்கு தெரியாம போச்சு கொஞ்ச நேரத்துல சந்தியா தான் அறைய போறானு. பையன் அவகிட்ட வசமா சிக்கிட்டான்டா” சரவணன் சொல்லி சிரிக்க

“அதெல்லாம் இவன் இப்படி சண்டைப் போட்டு அடிபட்டிருக்கானே, அதையும் மறைச்சிட்டானேங்கற கோவம் தான்டா. சந்தியா ரொம்ப நல்ல பொண்ணு. பார்த்தீங்களா கொஞ்ச நேரத்துல அழ ஆரம்பிச்சிட்டா. அவளும் ரொம்ப பயந்திட்டிருக்காடா” பீட்டர் சந்தியாவுக்கு ஆதரவாக பேசினான்.

இவர்கள் மூவரது பேச்சை கேட்ட விக்ரமுக்கு கண்ணில் கண்ணீர் தயாராக இருந்தது. இதற்கு மேல் அவன் அங்கே இருந்தால் நிச்சயம் அழுதுவிடுவான். அவனை கவனித்த சபரீஷ் இதோ வருகிறோம் என்று சொல்லிவிட்டு அவனை தூர அழைத்துச் சென்றான்.

மருத்துவமனைக்கு பின்புறமிருந்த காலி இடத்திற்கு சபரீஷ் விக்ரமை அழைத்துச் செல்ல, அங்கே தரையில் முட்டியில் அமர்ந்தவன் கைகளை மடக்கி தரையில் குத்து குத்தென்று குத்தி தேக்கி வைத்த மழைநீரை மேகக் கூட்டங்கள் திறந்துவிட்டது போல் கதறி அழுதான். ஆண்பிள்ளை அழக்கூடாது என்பதெல்லாம் வெறும் பேச்சு. அவர்களுக்கு மனமில்லையா இல்லை அதற்கு வலிக்க தான் செய்யாதா. விக்ரம் துடி துடித்தழுதான்.

“அப்பவே சொன்னேனேடா. அவங்க ரெண்டுபேருக்குள்ள எதுவும் சாதாரணமா இல்லனு. கேட்டியாடா. பைத்தியக்காரன் மாதிரி எல்லாத்தையும் நம்பனியே. இப்ப என்னடா பண்ணப் போற. ஒருநாளா ரெண்டுநாளா. சந்தியாவுக்கு கௌதமை என்ன ரெண்டுவருஷமா தெரியுமா. நீ அவளை மூணு வருஷமா லவ் பண்றியேடா. அவகிட்ட சொல்லுடானு எத்தனை முறை சொல்லிருப்பேன். இப்ப சொல்றேன் அப்ப சொல்றேன்னு இப்படி எல்லாத்தையும் கோட்டை விட்டுட்டு நிக்கறீயே” சபரீஷிற்கு மனதாறவில்லை. விக்ரமின் நோட்டில் சந்தியாவை பற்றிய அவனது முதல் கவிதையை பார்த்துத் தான் முதன்முதலில் சபரீஷிற்கு இது தெரிய வந்தது. எட்டாவதிலிருந்தே இருவரும் ஒரே வகுப்பில் படிப்பதாலும், சபரீஷிக்கு அவன் காதல் விவகாரம் தெரிந்ததாலும் விக்ரம் தன் காதலை பற்றியும் சந்தியா மீது அவனுக்கு இருக்கும் எண்ணத்தை பற்றியும் அவனிடம் பலமுறை சொல்லியிருக்கிறான். இதை ஒருமுறை சந்தியாவிடமோ இல்லை கௌதமிடமோ சொல்லியிருந்தால் இன்றைக்கு அவன் இந்த நிலைமையில் இருந்திருக்க மாட்டானோ என்னவோ.

கதறி அழுதவனை தேற்றிய சபரீஷ், அருகிலிருந்த கடையிலிருந்து தண்ணீர் பாட்டிலை வாங்கி வந்து அவனை முகம் கழுவ வைத்தான். பின் சிறிது தண்ணீரை பருகவும் வைத்து உள்ளே அழைத்துச் சென்றான்.

அப்போதும் அந்த அறை சாற்றப் பட்டிருந்தது. வெளியே நின்றிருந்த நண்பர்கள் மூவரும் இன்னும் அரட்டையை முடிக்கவில்லை.

விக்ரமும் சபரீஷும் வருவதை பார்த்ததும் “இன்னும் முடிக்கலடா விக்கி. அப்படி என்ன தான் சமாதானம் பண்றான்னு தெரியல” சரவணன் கௌதமை நக்கலடித்து சிரித்தான்.

அந்நேரத்தில் கௌதமின் அக்கா தமயந்தி தூரத்தில் நடந்து வருவதை பார்த்தனர். இதை உள்ளே இருப்பவர்களுக்கு தெரிவித்து உஷார் படுத்த பீட்டர் கதவை தட்டிவிட்டு திறந்தான். கதவு திறந்ததும் அனிச்சையாக உள்ளே பார்த்த விக்ரமுக்கு அவன் பார்த்த காட்சி கண்களை கண்ணீரால் நிரப்பியது.

கௌதம் கட்டிலில் படுத்திருக்க சந்தியா அதே கட்டிலில் குத்துக்காலிட்டு அவனருகே இடுக்கி அமர்ந்திருக்க அவன் அவள் திருப்பிய அதே கையால் அவளது இடையை வளைத்து பிடித்திருந்தான். இருவரும் சிரித்து வேறு பேசிக் கொண்டு இருந்தாற்போல் தெரிந்தது.

“கௌதி உங்க அக்காடா. சந்தியா டக்குனு கீழ இறங்கு” என்றான் பீட்டர். விக்ரம் அவன் கண்களை மறைந்திருந்த கண்ணீரை யாரும் பார்ப்பதற்கு முன் துடைத்துவிட்டு உள்ளே வந்தவன் கதவருகேயே நின்றுவிட்டான்.

“ஏன்டா அங்கயே நிக்கற. உள்ள வா விக்கி” அவனை கவனித்த கௌதம் சொல்ல, விக்ரமின் முகத்தை நிமிர்ந்து பார்த்த சந்தியா “சாரிடா.. உங்கிட்ட இருந்து மறைக்கற மாதிரி ஆகிடுச்சு. ஆமா ஏன் உன் முகம் வாட்டமா இருக்கு. கண்ணெல்லாம் சிவந்திருக்கு. கண்ணுல எதாவது விழுந்திடுச்சா” என்றாள்.

அந்த கண்களில் இருந்த காதலையே பார்க்காதவள் சிவந்திருப்பதை பார்த்துவிட்டாளா என்றெண்ணியவன் சிரிப்பையே பதிலாக தரவும் தமயந்தி உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

“இப்ப எப்படியிருக்க கௌதம்” கேட்டுக்கொண்டே உள்ளே வந்தாள்.

“நல்லாருக்கேன் தமை. என்ன வர்றப்பவே புக்கோட வர. படிக்கறேன்னு சீன் போட போறீயா. அதெல்லாம் நாட் அலௌட். எனக்கு போர் அடிக்கும்” தமயந்தியிடம் வம்பிழுப்பது தான் கௌதமுக்கு பிடித்த ஒன்றாயிற்றே “விக்ரம் உனக்கு என் அக்காவ தெரியுதா. இதான் தமை. என் அக்கா. நிறைய சொல்லிருப்பேன் ஆனா நேர்ல பார்த்திருக்க மாட்ட” நண்பனுக்கு சொல்வது போல் சந்தியாவிற்கு சொல்ல அவளும் அதை புரிந்து மெல்ல தலையசைத்தாள்.

தமயந்தியோ ஓரமாக நின்றிருந்த சந்தியாவை உற்று நோக்க, அவள் படபடத்து போனாள். அத்தோடு கௌதமை பார்த்து “இவங்களும் உன் ப்ரண்ட்டா கௌதம்” என்றாள்.

“யெஸ் என் ப்ரண்ட் தான்” என்று சொன்னவன் மனதிற்குள்ளேயே ‘என் கேர்ள் ப்ரண்ட்’ என்று சொல்லிக் கொண்டான். அவளை பார்த்து இயல்பாகவே புன்னகைத்தாள் தமயந்தி. சந்தியா தான் தமயந்தியை பார்த்து நடுங்கிப் போனாள்.

“அப்புறம் பீட்டர் உண்மையிலேயே பைக்ல இருந்து தான் விழுந்தானா” அந்த வீட்டில் கௌதமை சரியாக கண்டறிபவள் தமயந்தியே. இன்றும் அதையே செய்யத் தொடங்கினாள்.

“அ..அது வந்து க்கா.. க்கா.. பொய். அதுவும் பொய் இல்லக்கா” திக்கி திணறி பீட்டர் சொல்ல “பொய் இல்லனா. அப்போ, வேற உண்மையும் இருக்கு அப்படி தான” தமயந்தி சரியாக கண்டுப் பிடித்திருந்தாள்.

‘இவ வேற சும்மா இருக்க மாட்டாளே. நானே என் சண்டகோழிய இப்ப தான் கஷ்டப்பட்டு ஆஃப் பண்ணிருக்கேன்’ தன் நிலையை எண்ணி மனதிற்குள்ளேயே நொந்துக் கொண்டவன் “இப்ப இந்த சி.பி.சி.ஐ.டி வேலை தேவை தானா தமை. புக்கை எடுத்துட்டு வந்தல, போய் ஒரு ஓரம் உட்கார்ந்துட்டு படி. நமக்கு படிப்புத்தான் முக்கியம்” சந்தியா முகம் மாறுவதை கண்டுச் சொன்னான்.

இருவருக்குமே இது தான் வேலை. கௌதம் ஏதாவது செய்து மாட்டுவானா என்று தமயந்தியும் அவள் ஏதாவது செய்து மாட்டுக்கிறாளா என்று கௌதமும் கண்ணில் விளக்கெண்ணை விட்டு கண்காணிப்பர். அதனாலேயே இருவரும் ஒருவர் மற்றொருவரிடம் சற்று கவனமாகவே இருப்பர்.

நேரமானதும் கௌதமை விட்டுப் பிரிய சந்தியாவிற்கு மனமேயில்லை. இருந்தும் வீட்டிற்கு சென்று தானே ஆகவேண்டும். அங்கிருந்து சந்தியாவும் கௌதமிடம் கண்களாலேயே விடைப்பெற்று விக்ரமுடன் கிளம்பினாள். வழியெங்கும் விக்ரம் அமைதியாக வண்டியை இயக்க சந்தியா அவர்களது காதலைப் பற்றி அவனிடம் சொல்லாததால் கோபமாக இருக்கிறான் என்றெண்ணி பயந்திருந்தாள். இவ்வாறே இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்.

சந்தியா அவள் வீட்டிற்குள் செல்லும் முன் “ப்ளீஸ் விக்ரம். எங்க வீட்டுல எதுவும் சொல்லிடாத ப்ளீஸ். அவங்க இதை எப்படி எடுத்துப்பாங்கனே தெரியாது. உன்னை கெஞ்சி கேட்கறேன். ப்ளீஸ் விக்ரம் சொல்லிடாத” கையை மட்டும் தான் கூப்பவில்லை. அவள் கண்களில் அத்தனை பயமும் கெஞ்சுதலும் தெரிந்தது.

அதன் பிறகு சந்தியாவிற்கு விக்ரமை பார்க்கவே தயக்கமாக இருந்தது. கௌதமும் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியிருந்தான். ஆனால் வீட்டில் ஒருவர் அல்லது மற்றொருவர் அவனருகில் இருந்துக் கொண்டே இருக்க, அவனிடமும் அவளால் மனம் விட்டு பேச முடியவில்லை. இரண்டு வாரம் கழித்து கௌதமே சந்தியாவிற்கு அழைத்திருந்தான். அந்த அழைப்பை பார்த்ததும் அவள் கண்களில் கண்ணீர் தானாக நின்றது.

“கௌதம்ம்ம்” அந்த குரலில் இருந்த நடுக்கத்திலேயே அவளுக்கு ஏதோ பிரச்சனை என்றுணர்ந்தான்.

“என்னாச்சு சனு. உன் குரலே சரியில்ல” அவன் கேட்டதும்

‘ஐயோ அவனே கைல கால்ல அடிபட்டு கட்டோட இருக்கான். நான் இப்போ இப்படி பேசினா இந்த டைம்ல என்னோட இருக்க முடியலயேனு ரொம்ப கஷ்டப்படுவான்’ தாமதமாகவே அவளது புத்திக்கு அது எட்டியது.

“விக்கி பக்கத்துல இருக்கானா. இருந்தா அவன்கிட்ட ஃபோனை கொடு” என்றான்.

சந்தியா, கௌதம் மற்றும் விக்ரமிடம் கோபப்படுவாள், அதட்டுவாள், மிரட்டுவாள் தான். அதிலும் அது கௌதமிடம் சற்று அதிகமாகவே இருப்பதும் உண்மை தான். அதேநேரத்தில் அவள் எதையும் தனித்து முடிவெடுப்பவளல்ல. அவர்கள் இருவர் தான் அவளுடைய பக்கபலம். ஒருவன் கையுடைந்து வீட்டிலேயே இருக்கிறான். மற்றொருவனை அவளால் எதிர்கொள்ள முடியவில்லை. நண்பனிடம் உண்மையை மறைத்துவிட்டோமே என்ற குற்றவுணர்வு அவளை அவனிடம் முகத்தை காட்டவிடாமல் செய்தது.

“நான் அவனை போய் பார்க்கவே இல்ல கௌதம். அன்னைக்கு ஹாஸ்ப்பிடல்ல இருந்து பைக்ல கொண்டுவந்து விட்டது தான். அதுக்கு அப்புறம் அவனும் இங்க வரல நானும் அவங்க வீட்டுக்கு போகல” என்றவளின் கூற்றில் எதையோ உணர்ந்தவன் “சரி நான் கிளம்பி வரேன். அவனை போய் பார்க்கலாம்” என்றான்.

“இல்லல்ல. உனக்கு உடம்பு சரியில்ல. நீ ரெஸ்ட் எடு” அடுத்த கணமே படபடத்து சொன்னாள்.

“அதெல்லாம் ஒண்ணுமில்ல. காலு இப்ப பரவாயில்ல. கட்டெல்லாம் பிரிச்சிட்டாங்க. கை தான, பார்த்துக்கலாம். நான் கிளம்பி வரேன்” அவளால் அவனை வராதே என்று சொல்ல முடியவில்லை ஏனென்றால் அவளுக்கு இப்போது அவன் தேவைப்பட்டான் “பார்த்து வா கௌதம்” என்றாள்.

சந்தியா விக்ரமின் வீட்டுவாசலில் காத்திருக்க கௌதமின் கார் கேட்டை தாண்டி உள்ளே நுழைந்தது. கீழே இறங்கியவன் “எப்படியிருக்க சனு” என்றான் கையில் கட்டும் அது அசையாமலிருக்க கழுத்தை சுற்றி ஆர்ம் ஸ்லிங் பௌச் அணிந்திருந்தவனாய்.

“நீ எப்படியிருக்க கௌதம். இதெல்லாம் தேவை தானா” அவனை அவ்வாறு பார்த்ததும் அவளுக்கு வலிக்கவும் செய்தது கோபமும் வந்தது.

“மறுபடியும் ஆரம்பிக்காதடி. சரி விக்கியோட சண்டையா என்ன. எனக்கு ரெண்டுநாள் முன்னாடி கூட எப்படி இருக்கனு கேட்டு மெசேஜ் பண்ணானே” கௌதம் சொல்ல, சந்தியா அழத் தொடங்கிவிட்டாள்.

“இப்படி அழாதடி. என்னாச்சுனு முதல்ல சொல்லு” அவள் கண்ணீரை பார்த்ததும் அவனுக்கு வருத்தமாக இருந்தது. அதுவே அவனுக்கு எரிச்சலையும் தந்தது.

“விக்ரம் எங்கிட்ட பேசவே இல்ல” விசும்பிக் கொண்டே சொன்னாள்.

“பேசலையா. நீ என்ன பண்ண” என்னு கேட்டான் கௌதம். நண்பனிடம் காதலை மறைத்ததற்கு குறுஞ்செய்தி வாயிலாக மன்னிப்பு கேட்டுவிட்டதாலும் விக்ரமும் தொடர்ந்து அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி அவனிடம் பேசிக் கொண்டு இருப்பதாலும் வேறேதோ பிரச்சனை என்றெண்ணினான்.

“என்ன கௌதம் விளையாடுறீயா. நான் என்னமோ சண்டைப்போட்ட மாதிரி பேசற. நம்ப லவ் பத்தி தெரிஞ்சதுக்கு அப்புறம் தான் அவன் பேசல”

“கண்டிப்பா நம்ப லவ் பத்தி தெரிஞ்சதுனால இருக்காது. அவனுக்கு வேற எதாவது இஷ்யூ இருக்கணும். இல்ல, நம்ப லவ் பண்றோம்னு அவன்கிட்ட மறைச்சிட்டோம்ங்கற வருத்தமா இருக்கலாம். இன்ஃபேக்ட், நான் நம்ப ரெண்டுபேரு சார்பாகவும் அவன்கிட்ட மெசேஜ்ல சாரி கூட கேட்டேன். அப்படி இருந்தும் கோவமா இருக்கானோ. எது எப்படியோ நீ சால்வ் பண்றத விட்டுட்டு எதுக்கு வளர்த்துக்கிட்டு இருக்க. அவன் பேசலனா நீயா போய் பேசவேண்டியது தான” இது தான் கௌதம் தன் தவறென்று வந்துவிட்டால் இறங்கி மன்னிப்பு கேட்க ஒரு கணமும் யோசிக்கமாட்டான். தன் பக்கம் தவறில்லை என்றால் அவ்வளவே திரும்பிக் கூட பார்க்கமாட்டான்.

“என்னால அவனை ஃபேஸ் பண்ண முடியல கௌதம்” என்றாள். அவள் முகத்தை பார்த்தாலும் அவனுக்கு பாவமாக தான் இருந்தது. அனைத்தையும் சரி செய்யும் பொறுப்பை தன் கையிலெடுத்தான் கௌதம்.

இருவரும் வீட்டிற்குள் செல்ல அழைப்புமணி பொத்தானை அழுத்த, மாரியப்பன் அண்ணன் வந்து கதவை திறந்தவர் “வாம்மா.. என்ன இத்தனை நாளா ஆளையே காணோம். முத்துகிட்ட கூட கேட்டேன். அப்படியெல்லாம் இருக்காது, ஒருவேளை பொண்ணு வரப்போ நீங்க இல்லயோனு சொன்னான். வாங்க தம்பி என்ன உங்களையும் கொஞ்ச நாளா ஆளை காணோம்” என்று இருவரையும் கேட்க அவர்கள் சிரித்து மழுப்பினர். அத்தோடு அவன் கை கட்டு பற்றியும் விசாரிக்க பதில் சொல்லியிருந்தான்.

“அண்ணா விக்ரம் மேல இருக்கானா” பின் சந்தியா கேட்க

“தம்பிக்கு மூணு நாளா உடம்பு சரியில்லம்மா. நேத்தெல்லாம் உடம்பு நெருப்பா கொதிச்சுது. இப்ப கூட ரூம்ல படுத்துக்கிட்டு தான் இருக்கு” மாரியப்பன் அண்ணன் சொல்ல

“என்னது உடம்பு சரியில்லையா” கௌதம், சந்தியா இருவரும் ஒரே நேரத்தில் அதிர்ந்துக் கேட்டார்கள்.

“சக்தி கூட ஒண்ணும் சொல்லலையே” என்றாள். இத்தனை நாட்களாக பூஸ்ட் மற்றும் மாலை சிற்றுண்டியை செய்து சக்தியிடமே கொடுத்து அனுப்பியிருந்தாள் சந்தியா.

“நேத்து சக்தி தம்பி வந்தப்போ விக்ரம் தம்பி நல்லா தூங்கிட்டு இருந்துச்சு. நான் தான் வாங்கிட்டு அனுப்பினேன்” மாரியப்பன் அண்ணன் சொல்ல, கௌதம் அவளை திரும்பி முறைத்தான்.

“சரிங்கண்ணா உங்க வேலையெல்லாம் முடிஞ்சிடுச்சுன்னா நீங்க வீட்டுக்கு கிளம்புங்க. நான் அவனை பார்த்துக்கறேன்” சந்தியா சொல்ல அவரும் கிளம்பினார். அவளுக்கு நன்றாக தெரியும் அடுத்து கௌதம் அவளை வசைப்பாட போகிறானென்று. அதனால் அமைதியாக படியேற தொடங்கினாள்.

“நில்லு சந்தியா” சனு சந்தியாவான போதே புரிந்தது அவன் கோபமாய் இருக்கிறானென்று.

அவர்கள் காதலிக்க ஆரம்பித்து ஆறுமாததிற்கும் மேல் ஆகிறது. அவளும் தான் அவனை பார்க்கிறாளே. கௌதம் எளிதில் கோபப்படுபவனல்ல. சந்தியா அப்படியில்லை. அவன் ஏதாவது வேண்டாத காரியத்தை செய்தால் கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று உணராமல் பேசுவாள். அத்தோடு அவனுடைய கோபத்தையும் தூண்டி கடைசியாக பிரச்சனையில் கொண்டுப் போய் முடிப்பாள். பின் கௌதமே இறங்கி வந்து அவளை சமாதானம் செய்வான். ஆனால், கௌதமின் கோபமே வேறு. அவனுக்கு எளிதில் கோபம் வராது. அப்படி வந்தால் அவனை அவ்வளவு எளிதில் இறக்கிவிட முடியாது. அவனது கோபம் புலி வாலை பிடித்த கதை தான்.

அதுவும் விக்ரம் அவனுக்கு முக்கியமானவன். விக்ரம் அவன் வீட்டு விசயம் சொல்லி அழுததிலிருந்து அவனை கௌதம் இன்னும் அதிக அக்கறையோடு பார்த்துக் கொண்டான். சந்தியா விசயத்திலேயே பலமுறை நண்பனின் கண்களில் ஏதோ வித்தியாசத்தை கண்டு விசாரித்தும் இருக்கிறான். விக்ரம் அப்போது சொன்னதெல்லாம், அவள் அவனுக்கு நல்லதோழி. அதை தாண்டி தனக்கு தேவையானதை தினமும் பார்த்து பார்த்து செய்யும் இன்னொரு அன்னை அவள் என்பது தான். கௌதமும் அதில் தான் கோட்டை விட்டான். இவனுக்கு சந்தியாவை ஏன் முதன்முதலில் பிடித்து அவன் தேவதையானாள். அன்னை வயதில் அன்னையை பார்த்தது போல் இருக்கிறாள் என்பதால் தானே. அப்படியிருக்க இவனுக்கு அவள் மீது காதல் வரும்போது, அவனுக்கு ஏன் வரக்கூடாது. அதை கௌதம் யோசித்திருந்தால் நண்பனிடம் கேட்டிருப்பான். ஒருவேளை அப்போது விக்ரம் அவனுக்கு அவளை பிடித்திருக்கிறது என்று சொல்லியிருந்தால், கௌதம் தன் காதலை சொல்லாமல் கூட போயிருக்கலாம். இல்லை, அவளை காதல் செய்யும் எண்ணம் கொள்ளாமலே தன் மனதிற்கு கட்டுப்பாடும் இட்டிருக்கலாம். எல்லாம் வீணாகி போனது. ஏதேதோ நடந்தும் விட்டது.

இப்போது விக்ரமை பார்த்துக் கொள்ளாத சந்தியாவின் மீது அவனுக்கு கோபம் வர “இங்க உடம்பு முடியாம இருக்கான். வீட்டுல யாரும் இல்ல. அட்லீஸ்ட் உடம்பு சரியில்லனுனாவது வீட்ல இருக்கவங்களுக்கு தெரியுமா. அதுவும் நமக்கு தெரியல. சரி அவங்க தான் அப்படின்னா, நீயாவது அவனை கவனிச்சிட்டு இருக்கணும்ல. நான் உன்னை பார்த்துக்கோனு தான சொன்னேன்” சொன்னவன் கண்களில் கோபத்தீ பறக்க அவள் பயந்திருந்தாள். அவளால் எப்போதும் அவனது கோபத்தை தாங்கிக் கொள்ள முடியாது. இன்றும் அப்படி தான்.

“இல்ல கௌதம்.. நான் அவன்கிட்ட உண்மைய மறைச்சதில்ல, அதான் ஒருமாதிரி ஆகிடுச்சு. அதான்.. நான்” தட்டு தடுமாறி சொல்லிக் கொண்டிருந்தவளை கை நீட்டி நிறுத்தியவன் வேகமாக படியேறினான். அவன் பின்னாலே இவளும் அவன் வேகத்திற்கு ஈடுக் கொடுத்து ஓடினாள்.

விக்ரம் தன் அறையில் போர்வை போர்த்தி அமைதியாக படுத்திருக்க, இவர்கள் உள்ளே வருவதை பார்த்ததும் எழுந்தமர்ந்தான்.

“ஏன்டா உடம்பு சரியில்லனா சொல்லமாட்டியா. அவ்ளோ பெரிய ஆள் ஆகிட்டியா” கௌதமின் அர்ச்சனை அடுத்து விக்ரமுக்கு நடந்தது.

விக்ரம் கௌதமை விட ஒரு மாததிற்கும் மேல் பெரியவன். ஆனால் அவனுக்கு இருக்கும் ஆளுமை, அதிகாரம், பக்குவம் எப்போதும் விக்ரமுக்கு கிடையாது. சந்தியா, கௌதம், விக்ரம் மூவரில் கௌதம் தான் மற்ற இருவருக்கும் ஊன்றுகோல். அவன் இல்லையென்றால் இவர்கள் இருவரும் என்ன செய்வதென்று புரியாமல் போய்விடுவர். விக்ரம் கொஞ்சம் பரவாயில்லை தன் வாழ்வை முடக்கிப் போடும் பிரச்சனைகள் வரும்போது தான் செய்வதறியாது ஒடுங்கிவிடுவான். சந்தியாவோ முழுவதுமாக முடங்கிவிடுவாள். அவளுக்கு அன்றாடம் என்ன செய்யவேண்டும் என்றுக் கூட தெரியாது. இருவரில் யாரேனும் ஒருவர் அவளுக்கு நிச்சயம் தேவை. இம்முறை விக்ரம், கௌதம் இருவரும் அவளருகில் இல்லாததால் எதையும் யோசிக்க முடியாமல் விக்ரமை கூட வந்து பார்க்காமல் வீட்டிலேயே இருந்துவிட்டாள்.

இது கௌதமுக்கும் நன்கு தெரியும். அவனும் வரவில்லை தானும் போகவில்லை என்று சந்தியா சொன்னதுமே ஏதோ தவறாகப்பட வீட்டில் வேண்டாமென்று அவ்வளவு சொல்லியும் கிளம்பி வந்துவிட்டான்.

“ஏன்டா இப்படி பண்ண. பீவர் வந்தா சொல்லமாட்டீயா” சந்தியாவும் அவனது நெற்றி கழுத்தை தொட்டுப் பார்த்தாள். தெர்மாமீட்டரை அவன் வாயில் வைத்து “ஒரு குரல் குடுத்திருந்தா ஓடி வந்திருப்பேன்ல. இல்லனா மாரியப்பன் அண்ணன் இல்ல சக்திகிட்ட சொல்லி விட்டிருக்கலாம்ல” சந்தியாவிற்கு விக்ரமை பார்ப்பதில் தயக்கம் இருந்தது உண்மை தான். அதெல்லாம் இப்போது நண்பனின் மீதுள்ள அக்கறையில் மறந்துப் போனது. அவன் உடல்நிலை சரியில்லாமல் படுத்திருந்ததை பார்த்ததும் இருவரும் துடித்துப் போனார்கள்.

விக்ரம் உடல்சோர்வுற்று மிகவும் மெலிந்து பல நாட்களாக சவரஞ்செய்யாத தாடியுடன் காணப்பட்டான். இருவரும் அவனை பார்த்ததுமே பதறிப்போயினர். ஆயினும் காய்ச்சலால் அப்படியிருக்கிறான் என்று நினைத்துக் கொண்டனர். அவனுடைய மனசோர்வே உடலையும் பாதித்திருந்தது. அது அவனது முதல் காதலை இழந்ததால் வந்த சோர்வென இருவருக்கும் புரியவில்லை.

“என்ன நீ பார்த்துட்டு இருக்க. போய் அவனுக்கு சாப்பிட எதாவது செஞ்சி கொண்டு வா. என் கை நல்லாயிருந்தா நானே செஞ்சிருப்பேன்” கௌதமுடைய அதட்டலுக்கு கீழே கஞ்சி செய்யப் போனாள் சந்தியா.

“உன் கை எப்படிடா இருக்கு” அந்த நிலையிலும் நலம் விசாரித்தான் விக்ரம். நன்றாக இருக்கிறேன் என்று தலைசாய்த்து கண்களை மூடி திறந்து பதிலளித்தான் அவனது நண்பன்.

சிறிதுநேரத்தில் கஞ்சியை எடுத்து வந்தவள் நேராக விக்ரமிடம் கொண்டுப் போய் கொடுக்க “என்ன சந்தியா நீ. அவன் எப்படி சாப்பிடுவான். ஊட்டிவிடு. நான் வேணா ஊட்டிவிடட்டுமாடா” கௌதம் மறுபடியும் அதட்ட, சந்தியா அரண்டுப்போனாள். அவளுக்கு தெரியும் இது தொடக்கமே, இன்னும் அவன் பேசி அவள் கேட்க நிறைய இருக்கிறது என்று. அவள் கணிப்பு தப்பாது அவனும் ஆரம்பித்தான்.

“ஏன்டா உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா. வீட்ல யாருமில்லனா அட்லீஸ்ட் எங்கள கூப்பிட்டு இருக்கலாம்ல. அண்ட் சந்தியா, நீ அவன் கூட எப்பவும் இருக்கணும்னு சொல்லிருக்கேன் தான. ரெண்டு வாரம் ஆச்சுல நீ இங்க வந்து. இவனை பார்த்துக்க கூட உன்னால முடியலைல. நாம லவ்வ மறைச்சிருக்கோம். அவன் கோபப்பட்டான்னா வாங்கிக்கோ. அதவிட்டுட்டு அவனை வந்து பார்க்காமலே விட்டிடுவியா. லவ் எல்லாம் புதுசா வந்தது. ஆனா நம்ப மூணு பேரோட பாண்டிங் முதல்ல இருந்தே இருக்கு. அதெல்லாம் உனக்கு மறந்திடுச்சா. லவ் பண்ண ஆரம்பிச்சதும் அவனை பார்த்துக்கணும்னு கூட தோணாம போயிடுச்சி. அப்படி தான. அவனை கவனிச்சிக்கனும்ங்கறது மறக்கற அளவுக்கு அவ்ளோ செல்பிஷ் ஆகிட்டியா சந்தியா” கௌதம் பேச பேச அவள் கண்களில் கண்ணீர் தேங்கி நின்றாலும் அவள் கை விக்ரமுக்கு ஊட்டிவிட்டு கொண்டிருந்தது.

விக்ரமுக்கு தான் என்ன செய்வதென்று தெரியவில்லை. முன்னே மூவரும் நண்பர்கள், குறுக்கே போகலாம். இப்போது அவளது காதலன் அவளிடத்தில் கேட்டுக் கொண்டிருப்பதில் தான் எவ்வாறு தலையிட முடியும். வேறு வழியில்லாமல் அமைதியாக இருந்தான். அப்போது அவள் கண்ணில் இருந்து வழிந்து வந்த கண்ணீர் விக்ரம் கைமேல் விழ அவனால் அதை தாங்க கொள்ள முடியவில்லை.

பொறுமை இழந்தவன் “போதும் கௌதி. பாவம் அவ. அழறாடா” கௌதமை பார்த்து சொல்லிவிட்டு “ப்ளீஸ் அழாத சந்.. சந்தியா” சந்து என்று சொல்ல வந்தவன் இனி நமக்கு அந்த உரிமை இருக்கிறதா என்றெண்ணி சந்தியா என்றான். அவனுக்கு தெரியாது அவளை சந்து என்று அழைக்கும் உரிமை அவனுக்கு மட்டுமே, அதை எப்போதும் கௌதம் அவனிடமிருந்து பறிக்கப் போவதில்லை என்று. அவர்கள் காதலை பற்றி தெரிந்த நாளிலிருந்து இதுதான் முதல்முறை விக்ரம் இருவரிடமும் நேரடியாக பேசியது.

“தப்பு செஞ்சா திட்டத்தான்டா செய்வாங்க. அதுக்கெல்லாம் அழுதா ஒண்ணும் செய்யமுடியாது” கௌதம் சொன்னதும் விக்ரம் அசந்துப் போனான். இதுவரை அவன் அவளுக்கு பிடிக்காத எதையாவது செய்வான். அவள் கோபத்தில் கத்துவாள். வார்த்தைகளால் இவனது கோபத்தை தூண்டுவாள். பின் இருவருக்கும் இடையே பிரச்சனை வெடிக்கும். பேசாமல் இருப்பார்கள். அதன் பிறகு கௌதமே முன் வந்து சமாதானம் செய்து அவளுடன் சரியாவான். இதுவே விக்ரமுக்கு தெரிந்த சந்தியாவும் கௌதமும்.

இன்றோ வித்தியாசம். கௌதம் அவளிடம் கோபப்பட்டுத் திட்டிக் கொண்டிருக்கான். அவள் அனைத்தையும் கேட்டு மறுத்துப் பேசாமல் அமைதியாக இருக்கிறாள். அதுமட்டுமா அவனது கோபத்தை தாங்க முடியாமல் கண்ணீரும் விட்டுக் கொண்டிருக்கிறாள். அன்று சந்தியா உரிமையாக அவன் கையை முறுக்கினாள். பின் அவனை திட்டவும் செய்தாள், அழவும் செய்தாள். இவனும் அவள் திட்டுவதை அமைதியாக வாங்கிக் கொண்டு அழுத அவளை சமாதானமும் செய்தான். இன்று இவன் அவளை சத்தமிடுகிறான். இவளும் அமைதியாக கேட்கிறாள். இந்த உரிமை ஒருவர் மீது இன்னொருவருக்கு எப்போது வந்தது.

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான காதல் வெறும் காதல் உணர்வு மட்டுமல்ல. ஒருவர் பேச்சுக்கு மற்றொருவர் தரும் மரியாதை.. அவர்களிடத்தில் எடுத்து கொள்ளும் உரிமை.. ஒருவர் கடிந்து பேசும் போது இன்னொருவர் காக்கும் பொறுமை.. அவர்களுக்கு கோபம் வந்தால் என்னவாகிவிட போகிறது என்றில்லாமல் அவர்களது சிறு முகமாற்றத்திற்கும் கோபத்திற்கும் கொள்ளும் பயம்.. இந்த அனைத்தையும் கொடுக்க துவங்கும் உண்மை அன்பு என அனைத்தையும் உள்ளடக்கியது. இவையனைத்தும் இவர்கள் இருவருக்குள்ளும் வந்திருப்பதை உணர்ந்த விக்ரம் அந்த கேள்வியை கேட்டான்.


உண்மையாகும்..


உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் - 14

“எப்படா ரெண்டுபேரும் லவ் பண்ண ஆரம்பிச்சிங்க” என்று இருவரையும் பார்த்து விக்ரம் கேட்க

“இவ பிறந்தநாளுக்கு ரெண்டுநாள் முன்னாடி” என்றான் கௌதம்.

“பர்த்டே அப்ப நாம மூணு பேரும் ஒண்ணா தானடா மகாபலிபுரம் போயிருந்தோம். இவக் கூட நீ விஷ் பண்ணலனு கோவமா இருந்தாளே” விக்ரம் குழப்பத்தில் கேட்க

“நீ தப்பா புரிஞ்சிக்கிட்ட விக்கி. அன்னைக்கு காலையிலேயே வழக்கமா அவங்க அம்மா கூட அவ போற கோயிலுக்கு போய் விஷ் பண்ணி குங்குமம் வச்சி விட்டுட்டு தான் வந்தேன். அதுக்கு அப்புறம் லவ் பண்ண ஆரம்பிச்சதும் வர பர்ஸ்ட் பர்த்டே மகாபலிபுரம் போலாமானு கூப்பிட்டா வரலனிட்டா. கேட்டா தண்ணில நிக்க பயம்ங்கறா. அதான் உன்னை வச்சி பிளான் பண்ணி கொண்டுப் போய் கடல்ல தள்ளியாச்சு. உண்மையா இவ என் மேல கோவமா இல்ல. மகாபலிபுரம் வரலன்னதும் நான் தான் இவ மேல கோவமா இருந்தேன். இவ கோவமா இருந்தா அவ்ளோ அமைதியா இருந்திருப்பாளா என்ன” என்றான்.

விக்ரமுக்கோ ‘ஓ நான் தான் முட்டாள் மாதிரி தப்பா புரிஞ்சிக்கிட்டேனா. மாதிரி என்ன, முட்டாளே தான். வேர்ல்ட்’ஸ் மோஸ்ட் ஸ்டுபிட் அவார்ட் கோஸ் டு மீ’ என்று உரக்க கத்தவேண்டும் போல் இருந்தது.

அது கோபமாகவும் மாற “அப்ப நீ லெவன்த்ல அவகிட்ட ப்ரொபோஸ் பண்ணது உண்மை. இவளும் அத அக்ஸ்செப்ட் பண்ணிட்டு இருந்திருக்கா. என்ன சமாதானம் பண்ணத் தான் ரெண்டுபேரும் பேசிக்கமாட்டேன்னு சொல்லிருக்கீங்க” அவன் கோபத்தில் சீறினான்.

நண்பன் தவறாக நினைத்துவிட்டானே என்று படபடத்து “இல்லல்ல விக்ரம். டுவெல்த்ல தான் நடந்துச்சு. அன்னைக்கு ஒருநாள் நாம பைக்ல போயிட்டிருந்தப்போ இவன் வண்டிய குறுக்க கொண்டு வந்து நிறுத்தி எங்கிட்ட சண்டை போட்டானே. நீ கூட ரெண்டுபேரும் பேசி பிரச்சனைய முடிச்சிக்கோங்கனு சொன்னியே. அதுக்கு முந்தன நாள் தான் ப்ரொபோஸ் பண்ணான். லெவன்த்ல நடந்தது உண்மையாவே டேர் கேம் தான்டா” என்றாள் சந்தியா. அதுவரை அவளால் அவனிடம் பேசமுடியாமல் இருந்தது உண்மை தான். இப்போது பேசாவிட்டால் நண்பனை இழந்துவிடுவோம் என்ற பயம் அவளை பேச வைத்தது.

“இப்படி பிட்டு பிட்டா சொன்னா அவனுக்கு எப்படி புரியும்” என்று ஆரம்பித்த கௌதம் வீலி செய்து வந்த சண்டைக்கு பின் அவன் அவளை நேசிக்க தொடங்கியதையும் அதை அவளிடம் சொல்லிய போது அவளதை ஏற்காமல் அவனை நண்பனாக தான் பார்க்கிறேன் என்று மறுத்ததென அனைத்தையும் சொல்லி முடித்தான்.

“அதோட இவன் சும்மா இல்ல விக்ரம். நான் அன்னைக்கு பீச்ல சொன்னதுக்கு சரின்னு சொல்லிட்டு அப்புறம் வேலைய காட்ட ஆரம்பிச்சுட்டான்” சந்தியா அவனை காதலிக்க தொடங்கிய கதைக்கு பின்னோக்கி சென்றாள்.

இருவரும் கடற்கரையில் பேசிவிட்டு வந்ததும் சந்தியாவின் மனதில் ஒருவிதமான அமைதி நிலவியது. நண்பனின் நட்பையும் இழக்காமல் அவன் மனதையும் நோகடிக்காமல் இந்த பிரச்சனையை சுமூகமாக முடித்துவிட்டோம் என்றெண்ணி நிம்மதி கொண்டாள். அவள் எண்ணியது தவறென்று கௌதம் சில நாட்களிலே உணர்த்த ஆரம்பித்தான்.

முதலில் அவள் அவனிடம் நட்பாக தான் பேசி பழகி வந்தாள். அவனும் அப்படி தான் இருந்தது போல் தெரிந்தது. ஆனால் கௌதமோ விக்ரமுக்கு சிறப்பு வகுப்பு வரும் நாளுக்காக காத்திருந்தான். அந்த நாளும் வந்தது. பள்ளியிலிருந்து வீட்டிற்கு வரும் வழியில் வண்டியை நிறுத்தி அவளிடம் பேச ஆரம்பித்தான்.

“எதுக்கு இப்ப இங்க வண்டிய நிறுத்திருக்க கௌதம்” சந்தியா புரியாமல் கேட்க

“நீ அன்னைக்கு பீச்ல சொன்னத நான் நல்லா யோசிச்சு பார்த்துட்டேன் சந்தியா. எனக்கு இன்னும் உன்னை பிடிச்சி தான் இருக்கு. என்னால மாத்திக்க முடியாது. நீ ஏன் என்னை வெறும் ப்ரண்ட்டா மட்டும் பார்க்கணும்னு நினைக்கற. ஏன் ப்ரண்ட்ஸ் லவ் பண்ணக்கூடாதுனு ரூல்ஸ் எதாவது இருக்கா என்ன” அவன் பேசியதில் சந்தியாவிற்கு கோபமும் எரிச்சலும் ஒன்றுசேர வந்தது.

“ச்ச்சீ. நீயெல்லாம் திருந்தவேமாட்டல கௌதம். நான் போறேன்” அங்கிருந்து நகர போனவளை கைப் பிடித்து நிறுத்தினான். அவள் அவன் பிடித்திருந்த கையை பார்த்து முறைக்க அதை புரிந்தவனும் கையை விட அங்கிருந்து விடுவிடுவென நடக்கத் தொடங்கினாள்.

“நில்லு சனு” கௌதம் சந்தியாவை நிறுத்த அழைத்தான். அவளை பிடிக்க ஆரம்பித்த நாளிலிருந்து மனதில் பலமுறை சொல்லியிருக்கிறான். இது தான் முதல்முறை அவன் அவளை நேரில் சனுவென்று அழைப்பது. அவனால் அவளை ஒரு தோழியாக மட்டும் பார்க்க முடியவில்லை. அவனுடைய சனுவாக மாறியிருந்தாள் அவள். அவளுக்கோ விக்ரமை போல் ஒரு தோழனாக அவன் அவளை சனுவென்று அழைத்திருந்தால் ஏற்றிருப்பாளோ என்னவோ. தன்னை பிடிக்கும் என்று சொன்ன கௌதமின் வாயால் அதை கேட்க அவள் விரும்பவில்லை.

அவன் சொன்ன அடுத்த நொடி அவன் பக்கம் திரும்பி “சந்தியா” என்றாள் தன் ஆள்காட்டி விரலை அவன் முன் உயர்த்தி காட்டி. அவளது செயலில் உடைந்துப் போனான். இருந்தும் இப்போது தன்னை அவளுக்கு புரியவைப்பதன் அவசியத்தை உணர்ந்தவன்

“நான் சொல்றத முதல்ல கேளு. நீ ஏன் என்னை லவ் பண்ணக்கூடாதுனு தான் கேக்கறேன். அதுக்காக லவ் பண்ணுனு சொல்லலை. என்னால ஒரு ப்ரண்ட்டா மட்டும் இருக்கமுடியாது தான் சொல்றேன். பிகாஸ் எனக்கு உன்னை பிடிச்சிருக்கு. இத கண்டிப்பா என்னால மாத்திக்க முடியாது” ஆணித்தரமாக சொன்னவனை சில வினாடிகள் உற்று நோக்கியவள் அடுத்த நொடி

“அப்ப இனி நாம பேசிக்க வேண்டாம் கௌதம்” அதே உறுதியுடன் அவளும் சொன்னாள்.

“அதே தான் சந்தியா நானும் சொல்றேன். மனசுக்குள்ள லவ்வ வச்சிக்கிட்டு ப்ரண்ட்டா மட்டும் பழகற மாதிரி நடிச்சி உன்னை ஏமாத்த முடியாது. அட் த சேம்டைம் எனக்கு உன்மேல லவ் இல்லனு சொல்லி என்னையும் ஏமாத்திக்க முடியாது. பேசாமலே இருப்போம். உங்கிட்ட சொல்ல வர்றதெல்லாம் ஒண்ணே ஒண்ணு தான். எனக்கு உன்னை பிடிச்சிருக்கு அதுல எந்த மாற்றமும் வராது. என்னைக்காவது உனக்கும் என்னை பிடிக்கும்னு வெயிட் பண்றேன். வரலனாலும் பரவாயில்ல. ஆனா எனக்காக முயற்சி மட்டும் பண்ணி பார்க்கறீயா” இவ்வளவு தெளிவாக தன் காதலை சொல்பவனை யாருக்கு தான் பிடிக்காது. ஆனால் சந்தியாவுக்கு பிடிக்கவில்லை. முயற்சி செய்ய இதில் என்ன இருக்கிறது என்றெண்ணினாள்.

அவளது மௌனத்தில் அது வெளிப்படையாக தெரிய “சரி கிளம்பு. உன்னை வீட்ல விட்டுறேன்” என்றான்.

“வேண்டாம் கௌதம். எப்போ உனக்கும் எனக்கும் கருத்து வித்தியாசம் வந்துச்சோ இனி உன் கூட பேசாம இருக்கறது மட்டுமில்ல உன் கூட வெளில வர்றது, உன் பைக்ல ஏறுறதுனு எதுவும் வேண்டாம்” தீர்க்கமாக பேசுபவளை என்ன சொல்லமுடியும் “ஆட்டோ கூப்பிடறேன் இரு” என்றான்.

“வேண்டாம். ஆட்டோ வேண்டாம்” எப்போது போலும் அவள் அடத்தை அவனிடம் காட்டிக் கொண்டிருந்தாள்.

“அப்ப நடந்து போகப் போறீயா” அழுத்தமான குரலிலேயே கேட்டான். இவள் ஏன் இப்படி செய்கிறாள் என்ற கோபம் அவனுக்கு.

“அத நான் பார்த்துக்கறேன் நீ கிளம்பு. அப்புறம் இது விக்ரமுக்கு தெரியக்கூடாது. அவன் முன்னாடி மட்டும் நீயும் நானும் நார்மலா இருக்குற மாதிரி இருக்கட்டும். போன வருஷம் இதேமாதிரி ஒரு சிச்சுவேஷன்ல அவன் உன்னை அடிச்சி, அத சுத்தி நடந்த பிரச்சனைய எல்லாம் இப்ப நினைச்சா கூட பயமா இருக்கு. திரும்ப அப்படி ஒரு பிரச்சனை வேண்டாம். நான் என்ன சொல்ல வரேன்னு” அவள் முடிப்பதற்குள்

“புரியுது” என்றவன் இதற்குமேல் அங்கே நின்றாலும் பயனில்லை என்று பைக்கை கிளப்ப “பார்த்து ஓட்டு கௌதம்” என்று சந்தியா சொல்ல, அவளுக்கு ஓர் மெல்லிய புன்னகையே பதிலாக தந்துவிட்டு கிளம்பினான். ஆம் கிளம்பியது போல் அவளுக்கு தெரிந்தது. உண்மையில் அவளை தனியாக விட்டு அவன் எப்படி செல்வான். தெருமுனையில் அவளுக்கே தெரியாமல் காத்திருந்தவன் வழியெங்கும் நடந்து செல்பவளை பின் தொடர்ந்தான். அவளும் லேசுப்பட்டவள் அல்ல அவன் எங்காவது காத்திருக்கிறானா என்று சுற்றி முற்றி கவனித்துக் கொண்டே தான் சென்றாள்.

அதன் பின் சந்தியாவும் அவனிடம் பேசவில்லை கௌதமும் பேச முயற்சி செய்யவில்லை. அதே நேரத்தில் தன் தேவதையை பழையப்படி அமைதியாக பார்த்திருந்தான். அதுவும் அவள் இப்போது அவன் காதல் செய்யும் தேவதையாயிற்றே. பின் இருக்கையில் அமர்ந்து அவளை பார்த்துக் கொண்டும், ரசித்துக் கொண்டும் இருந்தான். இதை சந்தியாவும் கவனித்திருக்க அது அவளுக்கு எரிச்சலை தான் தந்தது.

இருவருக்கும் இருவேறு கருத்துக்கள். கௌதமுக்கோ எனக்கு அவளை பிடித்திருக்கிறது அதை நான் அவளிடம் சொல்லியும் விட்டேன். இனி முடிவு அவளிடத்தில். அதே நேரத்தில் தன் மனதை மாற்றிக் கொள்ள முடியாதென்பது. சந்தியாவிற்கோ அவன் அவளது நண்பன். இந்த காதல் போன்ற தேவையில்லாத நினைப்பையெல்லாம் விடுத்து அவளுடைய நண்பனாகவே அவன் அவளுக்கு வேண்டுமென்பது.

நான் இதுதான், அவளை தொந்தரவு செய்யமாட்டேன். அதேநேரம் என்னை மாற்றிக் கொள்ளவும் மாட்டேன் என்று அவனும், நான் இதுதான் எனக்கு இது வேண்டாம் அதேபோல் அவனும் இதை வேண்டாமென்ற முடிவை தான் எடுத்தாக வேண்டுமென்று அவளும் முரண்டு பிடித்துக் கொண்டிருந்தனர்.

அது வசதியான வீட்டு பிள்ளைகள் படிக்கும் பள்ளியென்பதால் நிறைய மாணவர்களிடம் கைபேசி இருந்தது. கௌதமிடமும் இருந்தது. வகுப்பு நேரத்தில் சைலண்ட்டில் வைத்திருப்பான். மதிய வேளையில் மணி ஒலிக்கும் படி வைத்திருப்பான். சமயத்தில் செல்வராணி இல்லை கார்த்தி அவன் சாப்பிட்டானா என்று தெரிந்துக் கொள்ள அழைக்கவும் செய்வர். அன்றொரு நாள் பள்ளியின் மதிய உணவு நேரத்தில் கௌதமும் சரவணனும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவனது கைபேசியில் பாடல் ஒலித்தது.

‘லஜ்ஜாவதியே என்ன அசத்துற ரதியே
லஜ்ஜாவதியே என்ன அசத்துற ரதியே
ராட்சசியோ தேவதையோ
ரெண்டும் சேர்ந்த பெண்ணோ
அடை மழையோ அனல் வெயிலோ
ரெண்டும் சேர்ந்த கண்ணோ
தொட்டவுடன் ஓடுறீயே
ஹே தொட்டாச்சிணுங்கி பெண்தானோ
அழகினாலே அடிமையாக்கும்
ராஜ ராஜ ராணி’

“என்னடா பாட்டெல்லாம் புதுசா இருக்கு. என்ன, எதாவது கேரளா பொண்ணா” ஒரு விதமாக சிரித்துக் கொண்டே பீடிகை வைத்து சரவணன் கேட்க, கௌதமிற்கு வெட்கம் தொற்றிக் கொண்டது.

“அது என்னமோ தெரியல. இப்ப இந்த சாங்க அதிகமா பிடிக்குது” மனதில் இருந்ததை அப்படியே சொன்னான்.

உண்மையில் அந்த பாடல் அவனுக்கு பிடித்திருந்தது. அதை அவன் சந்தியா நினைவில் தான் வைத்திருக்கிறான். ஆனால் அவள் கேட்க வேண்டுமென்றோ அவளை தொந்தரவு செய்ய வேண்டுமென்றோ நினைத்து வைக்கவில்லை. அவன் எதேர்ச்சையாக சரவணனிடம் சொல்ல அது சந்தியாவிற்கு எரிச்சலை தான் தந்தது

சட்டென்று எழுந்தவள் “உங்கிட்ட கொஞ்சம் பேசணும் கௌதம்” என்றாள்.

வெகுநாட்களுக்கு பிறகு அவள் அவனிடம் பேசுகிறாள். இருந்தும் பிடிக் கொடுக்காமல் “பேசு” என்றான்.

“ம்ச்ச். தனியா பேசணும்” என்று சொல்லிவிட்டு எழுந்து வெளியே செல்ல, இவனும் அவள் பின்னே சென்றான். இதை பார்த்த சரவணனுக்கு எதுவோ புரிந்தும் புரியாதது போல் இருந்தது.

வெளியே வந்ததும் “ஏன்டா இப்படி பண்ற. உனக்கு எவ்ளோ சொன்னாலும் புரியாதா. இதெல்லாம் வேண்டாம் கௌதம்” என்றாள்

“இப்ப எதுக்கு இவ்ளோ ஓவர் ரியாக்ட் பண்ற. அப்படி நான் என்ன செஞ்சிட்டேன்” புருவத்தை உயர்த்தி கேட்டவன் “நான் பாட்டுக்கு சரவணன்கிட்ட பேசிட்டு இருந்தேன்” சாதாரணமாக சொன்னான்.

“பேசிக்கிட்டு மட்டும் தான் இருந்தியாடா. நீ என்னென்ன செய்யறேனு எனக்கு தெரியாதுனு நினைக்கிறீயா. எப்ப பார்த்தாலும் என்னையே பார்த்துக்கிட்டே இருக்கறது. அது எனக்கு எவ்ளோ கடுப்பை தருதுனு தெரியுமா. அப்படியே கோவமா வருது. என்னடா ரிங்க்டோன் அது. எனக்கு எரிச்சலா இருக்கு கௌதம். முதல்ல அத மாத்து” சந்தியா சொன்னதும் கௌதம் சத்தமாக சிரித்தான்.

“என்னடா நான் பேசறது உனக்கு சிரிப்பா இருக்கா” கோபத்தில் அவள் முகம் சிவக்க, அப்போதும் அவள் அழகாக தான் இருந்தாள். அதை அவன் ரசித்தும் இருந்தான்.

“நீ சொல்றது சிரிப்பு வராம. என்னை வேண்டாம்னு சொல்லிட்ட. என் கூட பேசறத நிறுத்திட்ட. ஹவ் டெஸ் திஸ் ரிங்க்டோன் ஈவன் பாதர் யு. ஊர்ல இந்த பாட்டை ரிங்க்டோனா வச்சிருக்க எல்லார்கிட்டயும் போய் சொல்லுவியா” பேச்சில் நக்கலை தோய்த்து சொன்னான்.

“ஊர்ல இருக்குற எவனும் எனக்காக வைக்கல கௌதம். நீதான் வச்சிருக்க” அவள் கோபத்தில் சொன்னாலும் அவளது வார்த்தைகள் அவனுக்கு மகிழ்ச்சியையே தந்தது.

“அப்போ நான் உனக்காக தான் செய்யறேன்னு உனக்கு புரியுதுல. புரிஞ்சும் ஏன் இப்படி நடந்துக்கற. சொல்லு. உனக்கும் என்னை பிடிச்சிருக்கு தான” கண்ணில் காதலோடு கேட்டான்.

“ச்சே.. உங்கிட்ட பேசறதே வேஸ்ட்” கோபமாக அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.

இப்படியே நாட்கள் சென்றது. அந்த மாதத்தின் மிட்-டர்ம் தேர்வும் வந்தது. இத்தனை பிரச்சனையிலும் கௌதம் அனைத்து பாடங்களிலும் நன்மதிப்பெண்களே பெற்றிருந்தான். அவனை பொறுத்தவரை அவன் ஒரு தெளிவான முடிவை எடுத்துவிட்டான். அதில் அவனுக்கு எந்த ஒரு குழப்பமும் இன்றி நின்றும் விட்டான். இங்கே பிரச்சனை சந்தியாவிடம் தான். அவனிடம் அவள் காட்டும் அடத்தில் தான். அவன் வேண்டும், ஆனால் நண்பனாக மட்டும் வேண்டும். அந்த அடம் அவளை பெரிதாக பாதித்திருந்தது. அது அவளது படிப்பிலும் வெளிப்படையாக தெரிந்தது.

இரண்டு மூன்று பாடத்தில் வெறும் தேர்ச்சி பெறும் மதிப்பெண்ணே பெற்றிருந்தாள். மற்றதிலும் அதிக மதிப்பெண்கள் இல்லை. இதில் அதிர்ச்சியடைந்த வகுப்பு ஆசிரியை வகுப்பின் கடைசி பத்து நிமிடத்தில் அவளை அழைத்துப் பேசினார். இருவரும் வெளியே பேசிக் கொண்டிருக்க உள்ளிருந்து பார்த்த கௌதமிற்கு தெரிந்ததெல்லாம் அவளுடைய கண்ணீரே. அது அவனை துடிக்க செய்தது. இப்போதெல்லாம் விக்ரமுக்கு சிறப்பு வகுப்பு வரும் நேரத்திலெல்லாம் சந்தியா நடந்தோ இல்லை பேருந்திலோ தான் வீட்டிற்கு செல்கிறாள். விக்ரம் நினைத்திருப்பது அவள் கௌதமுடன் செல்கிறாள் என்று. சந்தியா நினைத்திருப்பது தன்னை கௌதம் பின் தொடர்வதில்லை என்று. இரண்டும் உண்மையில்லை. இன்றும் அவள் பத்திரமாக வீட்டிற்கு செல்கிறாளா என்பதை உறுதிச் செய்ய அவன் அவளுக்கே தெரியாமல் அவளை பின் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறான்.

அன்று ஏனோ சந்தியாவின் கண்ணீர் அவன் மனதை பிசைய, வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தவளின் முன் பைக்கை கொண்டுப் போய் நிறுத்தி இறங்கியவன்

“ஏன் என்னாச்சு. எதனால மார்க் குறைஞ்சிச்சு” என்றான். அவன் கேட்டது தான் தாமதம்.

“பொறுக்கியாடா நீ. எத்தனை தடவை சொல்லிருக்கேன். இதெல்லாம் எனக்கு பிடிக்கல, வேண்டாம்னு. ஒரு தடவை கேட்டியாடா. நீ எனக்கு பிடிச்சிருக்குனு சொல்லி சொல்லி அதை நான் மனசுல போட்டு குழப்பி இன்னைக்கு என் படிப்பே போய்டுச்சு. நான் என்ன உன்னை மாதிரி வசதியான வீட்டு பொண்ணா. எங்க அப்பா டிரைவர். வண்டி ஓட்டினா தான் வருமானமே. என் படிப்பையும் சக்தி படிப்புல ஒரு பங்கையும் லாயர் அய்யா தான் பார்த்துக்கிறாரு. நான் ஸ்கூலுக்கு வர்றது படிக்கறதுக்கு, லவ் பண்றதுக்கில்ல. உன்னை மாதிரி பணக்கார வீட்டு பசங்களுக்கு இது விளையாட்டா இருக்கலாம். யார் உணர்ச்சில வேணும்னா நீங்க விளையாட தயாரா இருக்கலாம். அதுக்கு எங்கள மாதிரி காசு பணம் இல்லாதவங்க வாழ்க்கைல ஏன் விளையாடறீங்க. உனக்கு ஊர்ல வேற எவளுமே கிடைக்கலையா. எதுக்குடா என் பின்னாடி வந்து இப்படி என் உயிரை எடுக்கற. அன்னைக்கு அந்த டேர் கேம்ல நான் கம்ப்லைன்ட் பண்ணாம உன்னை காப்பாத்தினேனே, அதனால இவ எதுக்கும் தயாராவனு நினைச்சிட்டியா. என்னால உன் ப்ரண்ட்ஷிப்பையும் விட முடியாம, உன்னை லவ் பண்ணியும் தொலைக்க முடியாம, உன்னை விட்டு ஒதுங்கி இருக்கவும் முடியாம, கூட இருக்கவும் முடியாம குழம்பி குழம்பி இதோ இன்னைக்கு என் படிப்பே போச்சு” கண்ணில் வழிந்து வந்த கண்ணீரை துடைத்தவள்

“இனி நான் என்ன பண்ணப்போறேனே எனக்கு தெரியல கௌதம். இப்ப உனக்கு சந்தோஷமா. நிம்மதியா போயிட்டு வேற பொண்ணை பாரு. உன்னை கையெடுத்து கும்பிடறேன் என்னை விட்டிடு” கடகடவென்று மனதில் இருந்த அனைத்தையும் கொட்டித் தீர்த்தாள். அது அவனை காயப்படுத்துமா என்றெல்லாம் அவள் யோசிக்கவில்லை. பேசி முடித்தவள் வேகமாக நடக்க இதை சற்றும் எதிர்பார்த்திராத கெளதம் அவள் முன் சென்று அவளை மறித்து நின்றான்.

அவள் பேசியதில் முழுவதுமாக உடைந்துப் போயிருந்தவன் “என்ன சொன்ன. உனக்கு என்மேல இவ்ளோ தப்பான தாட்ஸ்ஸா. நான் என்ன ஊர்ல வேற பொண்ணு கிடைக்காம உன் பின்னாடி சுத்துறேன்னு நினைக்கிறீயா. எனக்கு உன்னை மட்டும் தான் பிடிச்சி இருந்துச்சு. அத மறைச்சி ஏமாத்த விரும்பல. அதான் சொன்னேன். அத நீ திருப்பித் தரணும்னு கூட நான் கேக்கலயே. நான் உண்டு என் வேலை உண்டுனு தான இருந்தேன். ஆமா உன்னை பார்க்கறேன் தான், இல்லனு சொல்லலை. அத தவிர நீ பேசாதேனு சொன்னதுக்கு அப்புறம் என்னைக்காவது நானா வந்து பேசிருக்கேனா. இல்லயே. ஏன்னா நான் உன்னை, உன் உணர்வை மதிக்கறேன். ஆனா நீ. சே” என்றான். அவனுக்கு அவள் பேசியது மனதாரவில்லை.

“நீ என்னை அட்லீஸ்ட் ஒரு ப்ரண்ட்டா புரிஞ்சிட்டு இருக்கேனு நினைச்சேன். இன்னைக்கு அதுவும் பொய்யாகிடுச்சு. என்னமோ ப்ரண்ட்டா இரு இருனு சொல்றீயே இத்தனை நாள் ப்ரண்ட்டா இருந்ததுல உனக்கு என்னை என்ன புரிஞ்சிச்சு. வெறும் தப்பான எண்ணம் தான இருக்கு. ஒருநாள் உன்னை தப்பான எண்ணத்துல பார்த்திருப்பேனா இல்ல பேசிருப்பேனா. என் ப்ரண்ட்ஷிப்க்கு நான் உண்மையா தான் இருந்தேன். எப்ப அது லவ்வா மாறுச்சோ அப்பவும் உண்மையா தான் இருந்தேன். இப்ப வரைக்கும் அப்படி தான் இருக்கேன். அது தான் நான் செஞ்ச தப்பாடி. என்னமோ பிளான் பண்ணி உன் படிப்பை கெடுத்த மாதிரி நிம்மதியா போய் வேற பொண்ணை பாருங்கற. டூ யு திங்க் ஐ ஆம் எ வுமனைஸர்?” காலை தரையில் உதைத்தவன்

“அஞ்சு அக்கா, தங்கச்சிங்க கூட இருக்கவன்டி நான். எந்த பொண்ணுக்கிட்டயும் தப்பா நடந்துக்கிட்டதில்ல. எங்க அம்மா அப்பாவும் என்னை அப்படி வளர்க்கல. எங்க வீட்டு பொண்ண மாதிரி தான் மத்த வீட்டு பொண்ணுங்களையும் பார்க்கச் சொல்லி வளர்த்திருக்காங்க. என்னை நீ இவ்ளோ மோசமா நினைச்சி வச்சிருப்பனு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. அவ்ளோ மோசமாவா நான் உனக்கு தெரிஞ்சிருக்கேன்ல. ச்சே.. எனக்கே இப்ப என்னை நினைச்சா அசிங்கமா இருக்கு. முடிச்சிக்கலாம். எல்லாத்தையும் முடிச்சிக்கலாம். இதுக்கு மேலயும் உங்கிட்ட நான் எதையாவது எதிர்பார்த்தா அத விட பெரிய தப்பை நான் செய்ய முடியாது. இனி உன்னை ஏறெடுத்து கூட பார்க்க மாட்டேன். நீ இருக்க திசைல நான் இல்ல என் நிழல் கூட படாது. கௌதம் லைஃப்ல சந்தியா சாப்டர் ஓவர். போர்டு எக்ஸாமுக்கு முழுசா நாலு மாசம் கூட இல்ல. அதுக்கு அப்புறம் என் பேரை கூட கேக்கற சந்தர்ப்பம் உனக்கு வராது. அதுக்கு நான் கேரண்ட்டீ. ஒழுங்கா படி” கௌதம் பேச பேச அவனையே இமைக்காது பார்த்திருந்த சந்தியா அவனுடைய முடிவில் மனதுடைந்தாள். அவள் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் இறங்கியது. அவன் முகத்திலோ அவள் பேசியதில் உணர்வுகள் அனைத்தையும் தொலைத்து வெறுமையே காணப்பட்டது.

“ஆட்டோ” அந்த வழியே சென்ற ஆட்டோவை நிறுத்தியவன் ஓட்டுனரிடம் அவள் இறங்கும் இடத்தை சொல்லி பணத்தைக் கொடுத்தான்.

“ஒரு ஆட்டோல ஆரம்பிச்சது இன்னொரு ஆட்டோல முடியட்டும்” என்றவன் ஏறு என்பதை போல் கையை ஆட்டோவை நோக்கி காட்ட அவளும் இன்று வீம்பு பிடிக்காமல் ஆட்டோவில் ஏறினாள். ஆட்டோவிலிருந்து திரும்பி அவனை பார்த்தாள். வழக்கமாக பின் தொடர்பவன் தன் வண்டியை எடுத்து அரைவட்டமிட்டு திரும்பி எதிர் திசையில் சென்றான். இவளோ கண்ணீருடன் வீடு சென்றாள்.

கௌதம் சொன்னால் சொன்னது தான். அது சந்தியாவிற்கும் அவனுடன் பழகிய இந்த ஒன்றரை வருடத்தில் புரிந்திருந்தது. அவளுக்கு தெரியும் அவன் முடித்துக் கொள்ளலாம் என்று சொன்னது போல் அவளிடம் எக்காலத்திலும் திரும்பி வரமாட்டான். அந்த உண்மை அவளை அசைத்திருந்தது. இருந்தும் அவனுடன் சரியாக அவள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

வகுப்பில் யாரோ போல் இருக்க தொடங்கினான் கௌதம். மாலை வீட்டிற்கு செல்லும் போதும் விக்ரம், சந்தியாவுடன் ஒன்றாக செல்வதை தவிர்த்தான். கேட்டதற்கு தினமும் ஒரு மணி நேரமாவது கடைக்கு வந்து போகும் படி தந்தை சொன்னதாகவும் இவர்களோடு வந்தால் தாமதமாகிவிடும் என்றும் சொல்லி விட்டான். அத்தோடு விட்டானா, அரையாண்டு தேர்விற்கு ஒன்றாக படிக்க விக்ரம் அவன் வீட்டிற்கு அழைத்தபோதும் வரமாட்டேன் என்று மறுத்துவிட்டான்.

இந்த பதினைந்து நாட்களில் சந்தியாவை அவன் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவள் பேசியது தவறென்று அவன் திருப்பி பேசிய கணமே அவளுக்கு புரிந்துவிட்டது. அன்றிருந்த சூழ்நிலையில் ஒரு ஆத்திரத்தில், ஆதங்கத்தில் அவனை காயப்படுத்தி விட்டாள். அது தவறென்று புரிந்தவளுக்கு அவனை பார்க்கவே சங்கடமாக இருந்தது.

ஒருநாள் சந்தியா அன்னையோடு எங்கோ சென்றுவிட்டு வர, எதிரில் கௌதம் தன் அக்கா மகன் இனியனை பைக்கில் அழைத்து சென்றுக் கொண்டிருந்தான். இவள் அவனை பார்த்தாள். அவனோ பார்த்தும் பார்க்காதது போல் கடந்துச் சென்றது அவளை காயப்படுத்தியது. அவளுக்கென்ன தெரியும் அவள் அவனுக்கு தந்த வலியை விட இதுவொன்றும் பெரிதல்ல என்று.

கௌதமின் இந்த திடீர் மாற்றத்தை கவனித்த விக்ரம் “கௌதி நில்லு. உனக்கு என்னாச்சுடா. எங்கள அவாய்ட் பண்றீயா” அவனை வழியில் நிறுத்திக் கேட்டான். சந்தியாவும் அருகில் தான் இருந்தாள். கௌதம் அவளை திரும்பியும் பார்க்கவில்லை.

“இல்லயேடா. ஏன் என்னாச்சு” என்றான்.

“அப்புறம் ஏன் இப்பலாம் எங்க கூட வர்றதில்லை. படிக்கலாம்னு வீட்டுக்கு கூப்பிட்டாலும் வரமாட்டற”

“அதான் அப்பா கடைக்கு கூப்பிட்டாருனு சொன்னேனே. அதுல டைம் இருக்கமாட்டேங்கிது”

“பொய் சொல்றீயாடா. உனக்கு இன்ஜினியரிங் சேரணும்னு எவ்ளோ பேஷன்னு(Passion) எங்களுக்கும் தெரியும். கண்டிப்பா இந்த டைம்ல அப்பா கூப்பிட்டிருக்க மாட்டாரு. அப்படியே கூப்பிட்டிருந்தா, நீ சொல்ல வேண்டியது தான. வீட்ல வேற எதாவது ப்ராப்ளமா. எதுவா இருந்தாலும் எங்கிட்டயும் சந்துகிட்டயும் ஷேர் பண்ணிக்கலாமே. அத விட்டுட்டு எதுக்கு இப்படி எங்கள அவாய்ட் பண்ற” விக்ரம் நண்பனின் கவலையில் பதறிப்போய் பேசிக் கொண்டிருந்தான். சந்தியாவும் கௌதமின் இந்த மாற்றத்தில் தவித்துத் தான் போயிருந்தாள். ஆம், அவளுக்கு அவனது புறகணிப்பு தவிப்பைத் தர தொடங்கியிருந்தது.

“என்னாச்சுடா. லவ் எதாவது பண்றீயா” விக்ரம் கிட்டத்தட்ட விசயத்திற்கு வந்தான். ஆனால் கௌதமின் செயல் சந்தியாவின் தவிப்பிற்கு எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் இருந்தது.

“ஹா ஹா” என்று சத்தமாக சிரித்தவன் “லவ்வா.. அதெல்லாம் பொய்டா. இதுல அத வேற நான் பண்றேனா” சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.

கௌதமின் இச்செயல் சந்தியாவை உயிரின் ஆழம் வரை சென்று பதம் பார்த்தது. அத்துடன் அவள் கண்களில் கண்ணீரை வர செய்தது. அன்று தன்னை நேசிப்பதாக சொன்னான். இன்று அத்தனையும் பொய் என்று பேசுகிறான். இவன் தன்னை வெறுத்துவிட்டானா என்ற உணர்வு அவளுக்கு முதலில் வலியை தந்தாலும் பின் கோபத்தையே தந்தது

“இவனே வருவானாம். கடைசில பெரிய இவனாட்டம் பேசுவானாம். எனக்கென்ன வந்தது. போனா போறான். எனக்கு விக்ரம் இருக்கான். அவன் ப்ரண்ட்ஷிப் போதும்” வீராவேசமாக மனதிற்குள்ளேயே சொல்லிக் கொண்டாள்.

அவள் முதலில் கேட்டுக் கொண்டது போல் அவனும் காதல் வேண்டாமென்ற முடிவிற்கு வந்துவிட்டானா? இல்லை அவன் ஆசைப்பட்டது போல் அவளுக்கு அவனை பிடிக்க ஆரம்பித்துவிட்டதா?? இல்லை இருவருக்கும் மறுபடியும் கருத்து மாற்றம் ஏற்பட்டுவிட்டதா???


உண்மையாகும்..


உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..
 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் - 15

கௌதம் தெளிவாக ஒதுங்கியிருக்க சந்தியா குழப்பத்திலேயே சுற்றினாள். அவன் மனதிலிருந்து காதல் எண்ணத்தை அகற்றிவிட்டால் அனைத்தும் சரியாகிவிடும் என்றெண்ணி இருந்தவளுக்கு காதலெல்லாம் பொய் என்று அவன் சொல்லி சிரித்தது ஏதேதோ செய்யத் தொடங்கியது.

அதை இன்னும் அதிகப்படுத்தியது அந்த அரையாண்டு பரீட்சை. எப்போது போலும் இருவருக்கும் வேறு வேறு தேர்வறை. இம்முறை தேர்வுக்கு முன் மூவரும் ஒன்றாக அமர்ந்து படிக்கும் இடத்திற்கும் கௌதம் வரவில்லை. தேர்வு முடிந்ததும் கிளம்பியும் விடுவான். சந்தியா கௌதமை பார்த்தே இரண்டு வாரங்கள் ஆகியிருந்தது.

அவர்கள் விசயத்தில் அது கோபமாக சண்டையிட்டாலும் சரி சமாதானமாக இறங்கி போனாலும் சரி ஓவ்வொரு முறையும் கௌதமே வெல்வான். அதற்கு காரணம் அவன் வென்றே பழக்கப்பட்டவன் என்றோ அதற்காக எதையும் செய்வான் என்றோ இல்லை. உண்மையான அன்பை கொண்டு உண்மையாக முயற்சி செய்வான். சமயத்தில் போராடவும் செய்வான். இறுதியில் வெற்றியும் காண்பான். இம்முறையும் அதுவே நடந்தது. கௌதமே வென்றான். இனிவரும் காலங்களிலும் அது அப்படிதான் நிகழப்போகிறது. அதிலும் மாற்றமில்லை.

கடைசி பரீட்சைக்கு காத்திருந்தவள் அது முடிந்ததும் விக்ரம் மூலமாக அவன் எங்கே இருக்கிறான் என்பதை தெரிந்துக் கொண்டு அவனது கடைக்கு தனியாக சென்றாள். இதுவே முதல் முறை அவள் யார் துணையும் இன்றி ஓர் இடத்துக்கு செல்வது. கௌதமும் அவளை பார்த்ததும் ஆடிப் போனான். அவள் வந்திருக்கிறாள் என்பதால் அல்ல, தனியாக வந்திருக்கிறாள் என்பதால். அது அவளது குணமல்ல என்பதை நன்கறிந்தவன், அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வெளியே வரச் சொன்னான். அவன் சொன்ன இடத்தில் அவள் காத்திருக்க, யாரும் பார்க்காததை உறுதிச் செய்துக்கொண்டு அவளை தன் வண்டியில் ஏற்றிக் கொண்டான். வழியெங்கும் அமைதியே. நீ ஏன் இங்கு வந்தாய் என்று அவனும் கேட்கவில்லை நான் எதற்கு வந்தேன் என்று அவளும் சொல்லவில்லை.

அந்த அமைதியை முதலில் அவளே கலைத்து “என்னை எங்கயாவது கூட்டிட்டு போ கௌதம். நான் உங்கிட்ட பேசணும்” என்றாள்.

“எதுக்கு இவ்ளோ தூரம் தனியா வந்த. வீட்டுலயும் விக்கி கிட்டயும் என்ன சொல்லிட்டு வந்த” ஒன்றரை மாததிற்கும் மேலாகி இருந்தது அவன் அவளிடம் பேசி.

“வீட்ல சொல்லலை. விக்ரமுக்கும் தெரியாது. நான் விக்ரம் கூட இருக்கறதா அவங்க நினைச்சிட்டு இருக்கலாம்” அவள் சொல்ல, சட்டென்று திரும்பிப் பார்த்தவன் வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தினான்.

“அறிவிருக்கா உனக்கு. வீட்ல சொல்லாம வந்திருக்க. அவங்க தேடமாட்டாங்க. எல்லாம் யோசிச்சு தான் செய்யறீயா”

“நீ ஏன் எங்கிட்ட பேசமாட்டேங்கிற. முதல்ல அதுக்கு பதில் சொல்லு”

“இப்ப நான் யார்கிட்ட பேசிக்கிட்டு இருக்கேன்”

“இல்ல. இது இல்ல. நான் உனக்கு வேண்டாம்னே முடிவு பண்ணிட்டல. என் முகத்தை கூட பார்க்க உனக்கு பிடிக்கல இல்ல. நீ என்னை சுத்தமா ஒதுக்கிட்ட தான” பேசிக் கொண்டிருக்கும் போதே அழ தொடங்கிவிட்டாள்.

“இப்ப எதுக்குடி அழற” அவளது கண்ணீரை பார்த்த எரிச்சல் அவனுக்கு. அவள் எதற்கும் அழுவதை நிறுத்துவதாக இல்லை “சந்தியா இப்ப அழறத நிறுத்துறீயா இல்லயா” கண்டிப்போடு சொல்ல

கண்ணீரை துடைத்துக்கொண்டு “சனு” என்றாள். அந்த ஒற்றை வார்த்தையில் அவனுக்கு எல்லாம் புரிந்தது. ஏனோ இம்முறை அதை ஏற்க அவனது மனம் இடம் கொடுக்கவில்லை. இவளுக்கு புரியவைக்க இது இடமில்லை. அவர்கள் கடையிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தான் தள்ளி வந்திருப்பார்கள். யாராவது பார்த்து தந்தையிடம் சொல்லிவிட்டால். அவனை மாட்டிவிட அவனது டுகாட்டி ஒன்றே போதுமே. அதனால் வேகமாக வண்டியை கிளப்பினான்.

நேராக கடற்கரைக்கு அழைத்து வந்தான். டிசம்பர் மாதம் விடுமுறை நேரம் என்பதால் மணல் தெரியாத அளவிற்கு அந்த கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

“என்ன சந்தியா பேசற” அவன் கேட்க, மறுபடியும் “சனு” என்றாள்.

“ஸ்டாப் இட் சந்தியா. இதெல்லாம் வேண்டாம். படிக்கிற வழிய பாரு. போர்ட் எக்ஸாம்ஸ்க்கு ரெண்டு மாசம் தான் இருக்கு. எக்ஸாம்ஸ்லாம் எப்படி எழுதி இருக்க”

“நமக்குள்ள பேச வேற எதுவுமே இல்லயா கௌதம்”

“நீ கிளம்பு, வீட்ல விட்டுறேன்” அன்று அவள் பேசியதில் ஏற்பட்ட கோபமா இல்லை அவள் படிப்பை பற்றி பேசியதிலிருந்த நியாயத்தில் ஏற்பட்ட பக்குவமா அவன் அவளது உணர்வுகளை நிராகரித்தான்.

“இல்ல வரமாட்டேன். சொல்லு. என் முகத்தை கூட பார்க்க உனக்கு பிடிக்காம போயிடுச்சுல” என்றாள் மறுபடியும்.

“அத தான நாம டிசைட் பண்ணோம்” என்றான் அவனும்.

“எது டிசைட் பண்ணோம். தப்பு தான் நான் அன்னைக்கு அப்படி பேசினது. அதுக்காக நீ என்னை வெறுத்திடுவியா” மறுபடியும் கண்களில் கண்ணீர் சூழ தன்னுடைய இரண்டு ஆள்காட்டி விரலையும் இரண்டு கண்களுக்கு கொண்டுப்போய் அதை துடைத்தவள் “அதுவும் நல்லது தான். இல்லனா எனக்கு உன்னை பிடிக்கும்னு தெரியாம போயிருக்கும்” என்றாள்.

“உன்னை நான் கிளம்புன்னு சொன்னேன். வீட்டுலயோ விக்கிக்கோ நீ வீட்ல இல்லனு தெரிஞ்சா பயப்படுவாங்கடி. உனக்கு புரியுதா இல்லையா” அவனிடம் இருந்த பதற்றம் அவளிடம் இல்லை என்பதை கவனித்தவன் அதிர்ந்துப் போனான்.

“நல்லா புரியுது. நீதான் எனக்கு வேணும்னு” இந்த சந்தியா அவனுக்கே புதியவள். அவனிடம் அடம்பிடிப்பாள் என்று தெரியும் ஆனால் இவ்வளவு அடமா என்றெண்ணினான். புரிந்து கொள்ளும் நிலையில் அவள் இல்லை என்றுணர்ந்தவன் “ப்ச் நீ வா” இழுத்துப்போக அவள் கையை பற்றினான்.

அவளோ அவன் சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவன் நெஞ்சில் சாய்ந்தாள். அத்தோடு “ஐ ஆம் சாரி கௌதம். ப்ளீஸ் கௌதம் என்னை விட்டு போயிடாத. நீ இல்லாத ஒரு லைஃப் எவ்ளோ நரகமா இருக்கும்னு நான் பார்த்துட்டேன். இதுக்கு மேல என்னால அப்படி ஒரு லைஃப்ப வாழவே முடியாது” அவன் நெஞ்சில் முகம் புதைத்துச் சொன்னாள்.

கௌதம் தான் அது பொதுயிடம் என்பதை உணர்ந்து அவளை விலக்கிவிட்டவன் “இப்ப என் பேச்ச கேப்பியா மாட்டியா. கிளம்புன்னு சொன்னேன்” அவளுக்கு புரியவைக்க முடியாதென்று அவளை அங்கிருந்து கிளப்ப பார்த்தான்.

“நான் உன் சனு தான கௌதம். அதுக்கு முதல்ல பதில் சொல்லு” அது தான் சந்தியா. அவனிடம் காட்டும் அவளது பிடிவாதத்திற்கு முன் யாரும் நிற்க முடியாது. அது கௌதமாயினும் சரி. இப்போது இவளிடம் காதல் ஆசையை வளர்த்து தவறு செய்துவிட்டோமோ என்று கௌதமுக்கு தோன்ற

“லவ் கேட்டெல்லாம் வரக்கூடாது சந்தியா. இப்போ நான் பேசலைனு உனக்கு தோணுறது பேரு லவ்வே இல்ல” தன்மீது ஏற்பட்ட குற்றயுணர்ச்சியே அவனுக்கு கோபமாக மாறி அவ்வாறு பேசவைக்க

“சனு” என்றாள். அவன் வாயிலிருந்து வரும் வரை லட்சம் முறை என்றாலும் சொல்லியிருப்பாள்.

“இப்ப யாரு, நீ பேசலைனு உன்னை பிடிச்சதுன்னு சொன்னா. நீ உணர்ந்ததை நான் கொஞ்சம் லேட்டா ஃபீல் பண்ணிட்டேன். அதுக்குள்ள உன்னை நிறைய ஹர்ட்டும் பண்ணிட்டேன். நான் உங்கிட்ட சண்டை போட்டு பேசாம இருந்தப்போ எப்படி உனக்கு என்னை பிடிச்சதோ அதேமாதிரி நீ என்னை விட்டு தள்ளி போனப்போ தான் நீ எனக்கு எவ்ளோ முக்கியம், நீ இல்லாம நான் இல்லனு எனக்கு புரிஞ்சது. நீ அன்னைக்கு முயற்சி பண்ணி பார்க்க சொன்னல. இன்னைக்கு முயற்சியே இல்லாம உன்னை எனக்கு பிடிச்சி இருக்குடா. இது தெரியாம நான் உன்னை நிறைய ஹர்ட் பண்ணிட்டேன். உன் சனுவ நீ மன்னிப்பியா கௌதம்” அது தான் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கிய நொடி. கௌதம் சொன்னது போல் சந்தியாவின் பிறந்தநாளுக்கு சரியாக இரண்டு நாட்களுக்கு முன்.

இதை கேட்ட விக்ரமுக்கு மனதினுள் ஆயிரம் வலிகள். இவர்கள் இருவரும் காதலித்தார்கள் சரி. ஆனால், தன்னிடம் சொல்லக்கூட தான் தகுதியில்லாதவன் என்று நினைத்துவிட்டார்களா. அதனால் தான் தன்னிடமிருந்து மறைத்தார்களா என்று தோன்ற அந்த ஆதங்கம் கோபமாக மாறியது. இப்போது அவனுக்கு தெரிய வேண்டியதெல்லாம் ஒன்று தான். அதை வாய் திறந்தும் கேட்டான்.

“இவ்ளோ நடந்திருக்கு. நான் தான் பைத்தியக்காரன் மாதிரி நடுவுல இருந்திருக்கேன்ல. நீங்க ரெண்டுபேரும் லவ் பண்றீங்கனு எங்கிட்ட சொல்லக் கூட முடியாத அளவுக்கு நான் அவ்ளோ முக்கியமில்லாதவன் ஆகிட்டேன்ல” விக்ரம் கேட்ட கேள்வியில் சந்தியாவிற்கு கண்ணில் நீர் நின்றது. கௌதமுக்கு சுள்ளென்று உறைத்தது.

தவறு செய்துவிட்டோம், நண்பனின் கேள்விகளுக்கு பதில் சொல்லித்தான் ஆகவேண்டும் என்றெண்ணியவன் “அதுக்கு உன் சந்து தான் காரணம்” என்றான். ஒரே வார்த்தையில் அவனுக்கே தெரியாமல் கௌதம், சந்தியா விக்ரமின் நட்பை மரித்து போகாமல் வாழ வைத்துவிட்டான்.

தொடர்ந்து கௌதமே பேசி இருக்கலாம். ஆனால், அவன் பேசாமல் சந்தியாவும் விக்ரமும் சரியாக வேண்டுமென்று அவளை பார்த்து பேசு என்று கண்களை காட்டினான். அவளும் அதை புரிந்து “சாரிடா. நான் தான் உங்கிட்ட சொல்லவிடாம பண்ணிட்டேன். பர்ஸ்ட் அவன் ப்ரொபோஸ் பண்ணப்போ, உங்கிட்ட சொல்ல பயமா இருந்துச்சு. எங்க நான் சொல்லி நீ அவனை திரும்ப அடிச்சி, உங்களுக்குள்ள பிரச்சனை வந்துடுச்சின்னா. அதான் சொல்லலை. லவ் பண்ண ஆரம்பிச்சதும் உங்கிட்ட தான் முதல்ல சொல்லணும்னு கௌதம் சொன்னான். நான் தான், நீ எங்க வீட்டுக்கு ரொம்ப க்ளோஸ். ஒருவேளை உனக்கு இது பிடிக்காம வீட்டுல சொல்லிட்டா என்ன பண்றதுன்னு பயந்துட்டேன். ஹாஸ்பிட்டல்ல உனக்கு இது தெரிஞ்சப்போ தான் எவ்ளோ பெரிய முட்டாள்தனம் பண்ணிருக்கேன்னு எனக்கே புரிஞ்சிது. ஐ ஆம் சாரிடா” அவன் முன் குழந்தை போல் விசும்பிக் கொண்டு மன்னிப்பு கேட்டாள்.

“என் மேலயும் தப்பு இருக்கு விக்கி. அவ சொன்னானு நானும் சொல்லாம இருந்திருக்க கூடாது. நீ எங்க ப்ரண்ட். நிச்சயமா எங்க லவ்வுக்கு சப்போர்ட்டா தான் இருப்பேனு அவளுக்கு புரிய வச்சிருக்கனும். ஐ ஆம் சாரிடா” மறுபடியும் மறுபடியும் கௌதம் விக்ரமை விட்டுத்தராமல் பேச, அவனுக்கு அதில் ஒரு மாதிரி ஆனது. தொடர்ந்து பேசிய கௌதம் “என்னடா பண்றது லவ் பண்ண ஆரம்பிச்சதும் மைன்ட் ஒர்க் பண்றத நிறுத்திடுச்சு. லவ் பண்ணாலே இதான் பிரச்சனை போல” சலித்துக்கொண்டு சொல்வது போல் தன்னவளை கேலி செய்ய அவளும் சீறிக்கொண்டு

“எது நான் உன் மைன்ட்டை ஒர்க் பண்ணவிடாம பண்ணிட்டேனா. இவன் என்னை என்னலாம் பண்ணான் தெரியுமா விக்ரம். என்னால தான் உன் படிப்பு கெட்டு போச்சுனு ரெண்டு மாசம் படிக்க வச்சு பரேட் எடுத்துட்டான். அப்போ நான் உன்னை எவ்ளோ மிஸ் பண்ணேன் தெரியுமா. உனக்கு வேற எங்க விஷயத்தை சொல்லலையா, சப்போர்ட்டுக்கும் கூப்பிட முடியல. படி படினு ரொம்ப டார்சர் பண்ணிட்டான்டா. இங்க பாரு கௌதம், இப்ப என் ப்ரண்ட் இருக்கான். இனி நீ என்னை எதுக்குமே டார்சர் பண்ணமுடியாது” அவன் கையின் இடையே அவள் கையைவிட்டு அவன் கையை இறுக்க பற்றி கண்ணில் பெருமிதத்துடன் சொன்னவளை விக்ரம் கண் கொட்டாது பார்த்தான்.

“அவன் எனக்கும் தான் ப்ரண்ட். இவ மட்டும் என்னவாம். நீ இல்லனு என்னைப் பார்த்து பொறுக்கியாடா நீனு கேட்டா டா” இருவரும் அவன் நட்பை உயர்த்தி பேசி விக்ரமின் தலையில் பொறுப்பின் மேல் பொறுப்பை ஏற்றிவைத்தனர். அது அவனுக்கு பாரமாக இருந்தபோதிலும் சுமக்கும் முடிவெடுத்தான்.

“சரி நான் கிளம்பறேன்டா. வீட்டுல இருந்து போன் வந்துக்கிட்டே இருக்கு. உடம்பை பார்த்துக்கோடா” விக்ரமிடம் சொல்லிவிட்டு சந்தியாவை பார்த்து “நீயும் அவனை ஒழுங்கா பார்த்துக்கோ. அவனுக்கு பீவர் எப்படி இருக்குனு அப்பப்போ மெசேஜ் பண்ணு” கௌதம் சொல்லிவிட்டு கிளம்ப அவனை வழியனுப்பி விட்டு வர சந்தியாவும் உடன் சென்றாள்.

இருவரும் செல்வதையே பார்த்திருந்தான் விக்ரம். அவனுக்கு கௌதமை ஐந்தாம் வகுப்பிலிருந்து தெரியும். சந்தியாவை எட்டு வயதிலிருந்தே தெரியும். அப்போது தான் முத்துகிருஷ்ணன் அவர்கள் வீட்டில் ஓட்டுநராக வந்து வேலையில் சேர்ந்தார். ஏனோ தெரியவில்லை, ரவிப்பிரகாஷ் அவர்களை அவரது கெஸ்ட் ஹவுஸிலேயே தங்கிக் கொள்ள சொன்னார். அப்படி தான் அவன் சந்தியாவை முதன்முதலில் பார்த்தான். அவள் அப்போது வேறு பள்ளியில் படித்திருந்தாள். தினமும் அன்னையோடு பள்ளிக்கு நடந்து செல்பவளை பார்த்து அவள் பள்ளி தன் பள்ளிக்கு செல்லும் வழியில் தானே இருக்கிறதென்று முத்துகிருஷ்ணனிடம் சொல்லி காரில் ஏற்றிக்கொண்டவன் அன்றிலிருந்து அவள் பன்னிரெண்டாம் வகுப்பை முடிக்கும் வரை அவன் தான் அவளை தினமும் பள்ளிக்கு அழைத்து சென்றான். சந்தியாவும் அவன் வீட்டில் யாருமில்லை என்பதை புரிந்து அவனுக்கு தேவையானதை செய்துத் தர தொடங்கினாள்.

சிறுவயதில் உடன் விளையாடும் தோழியாக தெரிந்தவள் பருவவயதில் வித்தியாசமாக தெரிய தொடங்கினாள். கடந்து வந்த நண்பர்களும், பார்த்த படங்களும் அதற்கு பெயர் காதல் என்று சொல்லிக் கொடுக்க அவன் அவளை காதல் செய்தான். மூன்று வருடமாக காதல் கொண்டிருந்தாலும் அதை யாரிடமும் சொல்லவில்லை. விக்ரம் நன்றாக கவிதை எழுதுவான். இல்லையில்லை சந்தியாவிற்காக முதல் கவிதையை எழுதியவன் இன்று அவளுக்காக ஒரு சிறந்த கவிஞனாகவே மாறியிருந்தான். சபரீஷ் ஒருநாள் அவனது புத்தகத்தில் இருந்த சந்தியாவை பற்றிய கவிதையை படித்துவிட்டு விக்ரம் அவளை நேசிக்கிறான் என்பதை அறிந்தான். அதிலிருந்து விக்ரம் தன் காதலை பற்றி ஒருவரிடம் பகிருவான் என்றால் அது சபரீஷே. சந்தியாவிடம் காதலை சொல்ல சொல்லி சபரீஷ் விக்ரமை பலமுறை வற்புறுத்தி இருக்கிறான். ஏனோ சந்தர்ப்பம் அமையவில்லையா இல்லை இவன் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளவில்லையா என்று தெரியவில்லை. அனைத்தையும் தாண்டி ஒருநாள் அவன் காதலை சொல்ல முடிவெடுத்தான். பன்னிரெண்டாம் வகுப்பில் வந்த காதலர் தினம் அது. சரியாக அவர்கள் பொது தேர்வுக்கு பதினைந்து நாட்களுக்கு முன்.

தைரியத்தை வரவழைத்து கொண்டு வீட்டிற்கு செல்லும் வழியில் சொல்ல பரிசெல்லாம் வாங்கி வைத்திருந்தான். அவனுக்கு தெரியாத ஒன்று அந்நேரமே கௌதமும் சந்தியாவும் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கி இருந்தனர் என்று. விக்ரம் காத்திருக்க, சந்தியாவும் கௌதமும் அவனிடம் வந்து கணினி ஆசிரியை பரீட்சையில் வருவதற்கு வாய்ப்புள்ள முக்கியமான கேள்விகளை தருவதற்கு தங்கள் இருவரையும் காத்திருக்க சொன்னார்கள் என்று சொல்ல, இவனும் வீட்டிற்கு சென்று காத்திருந்தான். அன்று சந்தியா பூஸ்ட் மற்றும் மாலை சிற்றுண்டி தரவும் வரவில்லை. அவளை ஏழு மணியளவில் கௌதம் பைக்கில் கொண்டு வந்துவிட்டதை விக்ரம் அவன் வீட்டு பால்கனியில் இருந்து பார்த்தான். இதற்கு மேல் எங்கே சொல்வது என்று விட்டுவிட்டான். அத்தோடு பொதுதேர்விற்கு முன் சொல்ல நினைத்த தன் முட்டாள் தனத்தை எண்ணி நொந்துக் கொண்டு, தான் சொல்லாததை எண்ணி நிம்மதியும் பட்டுக்கொண்டான். இன்றும் அன்று அவன் சொல்லாததை எண்ணி நிம்மதி தான் அடைந்தான். சொல்லியிருந்தால் நண்பனின் காதலியிடம் காதலை சொன்ன பழி அவனுக்கு வந்திருக்குமே.

அன்று பால்கனியில் இருந்து பார்த்தவனுக்கு ஒன்று தான் தோன்றியது. ஏன் இவ்வளவு நேரம் கணினி ஆசிரியை இவர்களை பிடித்து வைத்திருந்தார்கள் என்றெண்ணி இருந்தான். அதற்கும் விடை இப்போது கிடைத்தது. அவர்கள் இருவரும் அவர்களது முதல் காதலர் தினத்தை கொண்டாட தான் இவனிடம் பொய்யுரைத்து வெளியே சென்றிருக்கிறார்கள் என்று.

கடவுள் தருவதை மனிதன் நிராகரிக்க வேண்டாம் என்று சொல்வார்கள். விக்ரம் விஷயத்திலோ கடவுளே நிராகரித்ததை அவனால் எப்படி பெறமுடியும். ஏனோ இன்று கடவுளை பழிக்கக் கூட அவன் விரும்பவில்லை. கடவுளையே பழிக்காத போது, கௌதம் சந்தியாவையா பழிக்கப் போகிறான். அதுவும் அவன்மீது அதீத நம்பிக்கை வைத்திருக்கும் நண்பர்கள் இருவரும். அழுத பிள்ளைக்கு பால் கிடைக்கும் என்பார்கள். கௌதம் எவ்வளவு நாள் அவளை காதல் செய்தான் என்பது முக்கியமல்ல. அவன் அவளிடம் தன் காதலை சொன்னான் அவளும் அவன் காதலை ஏற்றுக்கொண்டாள். இவன் சொல்லாதது இவன் தவறு என்றே தோன்றியது. அதன்பின் அவன் யார்மேலும் கோபப்பட தயாராக இல்லை.

அத்தோடு அவன் அவர்கள் பேசியதையும் கவனித்தான். அவனுக்கு சந்தியா மீதான அன்பு பெரியது தான். அதில் எந்த ஐயமும் இல்லை. அதே சமயத்தில் அவனுக்கு அவர்கள் இருவரின் அன்பும் புரிந்திருந்தது. அது கௌதம் விளையாட்டாக சொல்லி சந்தியா சரியென்று ஏற்றுக் கொண்டதில்லை என்பதை புரிந்துக் கொண்டான். இதில் இவனுடைய ஒருதலை காதலை பற்றி சொல்லி தெளிவாக சென்றுக் கொண்டிருக்கும் அவர்களது வாழ்க்கை நீரோடையில் கல் எறிய அவன் விரும்பவில்லை. அதுவும் அவள் இப்போது அவனது தோழி என்பதை தாண்டி அவனது நண்பனின் காதலி. அவனுக்கு தெரியாது என்றாலும் இத்தனை நாள் அவளிடம் அப்படியொரு எண்ணத்தோடு பழகியதே தவறு. இதற்குமேலும் செய்தால் அதைவிட பெரிய பாவம் என்னவிருக்கும் என்றெண்ணினான். தன் காதலை வலிக்க வலிக்க துடிக்க துடிக்க கருணைக்கொலை செய்ய முடிவெடுத்தான் விக்ரம்.

‘நதியும் நானும்
நாட்களைப் பற்றிய கவலை இல்லை
நடந்ததைப் பற்றிய நினைப்பு இல்லை
நதி வழி ஓடுகின்ற நீராகவே
என் பயணம் இருந்தது.
கரடு முரடானதும் கடுமையானதும்
ஆனாலும் கண்டுகொள்ளாத மனது
எதையோ நோக்கி ஓடிக் கொண்டிருந்தது...

இலையாய் இடையிலே விழுந்த உன்னை
மலரால் மடியிலே ஏந்தி நான் செல்ல
சல சலப்புகள் இருந்தாலும்
சங்கீதமாய் அவைகளை மாற்றி
அலை பாய்ந்து ஓடிக் கொண்டிருந்தேன்
எத்தனை ஆனந்தம் எத்தனை எதிர்ப்பார்ப்புகள்
எத்தனை நினைவுகள் எத்தனை வலிகள்
இப்படி அத்தனையுமாய் உன்னுடன் கடக்க
இடையூறுகள் பல எனை மோதினாலும்
உனை ஏதும் தீண்டாமல் நீ மிதந்தோடி பறக்க
ஒரு நாளும் வந்ததடி நீ எனை நீங்கி மறக்க
வழி மறந்து போன நானோ
எனை மறந்து கிடக்க
உனை ஏந்தி வந்த நாட்கள்
என்னோடு மிதக்க
உணர்வின்றி போன நீயோ எனை
கனவென்று மறக்க
மெய்யறிந்து விழித்த நானோ
எனை மாற்றியமைக்க
வழிக்கரையல்ல என் வாழ்வு
என்றே நான் உணர்ந்து
என்றாவது கலப்பேனடி
எனக்கான சமூத்திரத்தில்’ – விக்ரம்

அந்நேரம் கௌதமை வழியனுப்பி விட்டு வந்த சந்தியா தெர்மாமீட்டரை வைத்து அவனுக்கு காய்ச்சல் இருக்கிறதா என்று பார்த்து “இப்ப பீவர் இல்ல. ஏன்டா சொல்லமாட்டியா. இப்ப உனக்கு உன் சந்து தேவையில்லாதவளா போயிட்டால” என்று முறைத்தவள் “உன் முகத்தை பார்த்தியா எப்படி இருக்குனு. இந்த ஷேவ் பண்ற பழக்கத்தை எல்லாம் விட்டுட்டியா. ஒரு நாய்குட்டி மட்டும் பக்கத்துல இருந்தா தேவதாஸ் மாதிரியே இருப்படா” சொல்லிவிட்டு அவள் சிரிக்க அவனும் தன்னையெண்ணி சிரித்து கொண்டான்.

“ஐ ஆம் சாரி விக்ரம். கௌதம் சொல்ற மாதிரி நான் செல்பிஷ் இல்லடா. அச்சாக்கும் அம்மாக்கும் நீ கிளோஸ்ஸா, அதான் கொஞ்சம் பயந்துட்டேன். அதுக்காக நீ எனக்கு இம்பார்ட்டண்ட் இல்லனு அர்த்தமில்ல. கௌதமுக்கு கூட தெரியும் உன்னை எனக்கு எவ்ளோ பிடிக்கும்னு. என்னோட பெஸ்ட் ப்ரண்ட் நீ. எனக்கு நீயும், உன் ப்ரண்ட்ஷிப்பும் ரொம்ப முக்கியம்டா. நான் பெரிய தப்பு பண்ணிட்டேன். சாரிடா. இனி இப்படி இங்க வராம, உன்னை பார்க்காம இருக்கமாட்டேன்” அவள் சொன்னதை கேட்டவனுக்கு அவள் மேலிருந்த மிச்சம் மீதி கோபமும் மறைந்திருந்தது. ஏனோ அவளுக்கு பதில் சொல்ல தான் தோன்றவில்லை. அமைதியாகவே இருந்தான். இன்று முழுவதும் அவன் கேட்டதெல்லாம் ஒரு சில கேள்விகளே. அதற்கான பதில் அவனை யாரும் ஏமாற்றவில்லை, தன் முட்டாள் தனத்தால் அவனே தான் ஏமாந்திருக்கிறான் என்பதை புரியவைக்க அவன் பேச விரும்பவில்லை அமைதியையே தேர்ந்தெடுத்தான்.

அவனுக்கு இப்போது புரியாதது ஒன்று தான். அது, ஒருவேளை கௌதமுக்கு முன் அவன் அவளிடம் காதலை சொல்லியிருந்தால் அதையவள் ஏற்றிருப்பாளோ என்பது தான்.

“விக்ரம்ம்ம்” ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி இருந்தவனை அவள் அழைக்க என்னவென்று அவன் அவளை பார்க்க “அச்சா எப்பவும் சொல்லுவார், எனக்கு கல்யாணம் பண்ணா விக்ரம் தம்பிய மாதிரி ஒரு தங்கமான பையனை தான் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு. கௌதம் உன் அளவுக்கு நல்லவனெல்லாம் இல்ல. அவன் எவ்ளோ சொன்னாலும் அடங்கமாட்டான். சண்டை, அடிதடி எல்லாத்துக்கும் போவான். அத்தோட தேவையில்லாத ரிஸ்க்கெல்லாம் எடுப்பான். அதுமட்டுமா அவனுக்கு ஜெய்க்கணும். அதுக்காக உயிரை பணயம் வைக்கவும் தயங்கமாட்டான். இதெல்லாம் அச்சாக்கு பிடிக்காதுன்னு உனக்கு தெரியும்ல. அதோட அவன் அவ்ளோ பெரிய வீட்டு பையன். அச்சாவும் அம்மாவும் எங்க லவ்வ அக்ஸ்செப்ட் பண்ணிப்பாங்களா விக்ரம். எனக்கு இதையெல்லாம் நினைச்சாலே பயமா இருக்கு. ஒரு மாதிரி அழுகையா வருது” அவள் முகத்தில் நாளை என்ன நடக்குமோ என்ற பயம் அப்பட்டமாக தெரியவும்

அதுவரை பேசாதிருந்தவன் “நான் எதுக்கு இருக்கேன். உங்க லவ்வுக்கு என்னோட ஃபுல் சப்போர்ட் எப்பவும் இருக்கும். முத்து அண்ணனை பத்தி கவலைப்படாத. முத்தண்ணா மீனாம்மா ரெண்டுபேரையும் சம்மதிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு. சின்ன பொண்ணு மாதிரி எல்லாத்துக்கும் அழுதுகிட்டு” அவள் கண்ணீரை துடைத்தவன் “பயப்படாம இரு. நான் இருக்கேன்” விக்ரம் சொல்ல அவள் மகிழ்ச்சியில் தரையில் இறங்கி குதித்தவள்

“தேங்க் யு விக்ரம். நீ தான்டா என்னோட பெஸ்ட் பெஸ்ட் பெஸ்ஸ்ட் ப்ரண்ட். சரி நீ ரெஸ்ட் எடு. நான் கீழே இருக்கேன். எதாவதுனா கூப்பிடு. நைட்டுக்கும் சக்தியை உன் கூட படுத்துக்க சொல்றேன். நாளைக்கு முதல்ல உனக்கு ஷேவ் பண்ணனும். அப்புறம் பீவர் இப்படியே இருந்துச்சினா டாக்டர்கிட்ட போயிடலாம்” அடுக்கி கொண்டே அங்கிருந்து சென்ற அவனது தோழியை பார்த்து சிரித்துக் கொண்டான்.

மூவரும் கலந்தாய்வுக்கு காத்திருந்தனர். கௌதமுக்கு தான் முதலில் கலந்தாய்வுக்கு தேதி வந்தது. விக்ரமும் சந்தியாவும் விக்ரம் வீட்டில் காத்திருந்தனர்.

“என்னடா அண்ணா யூனிவர்சிட்டியா” சந்தியா ஆவலாக கேட்க ஆம் என்று தலையை ஆட்டினான். “சூப்பர்டா. நான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன்” சந்தோசமாக அவனுக்கு இனிப்பு ஊட்ட போன நேரத்தில் “கோயம்பத்தூர். அண்ணா யூனிவர்சிட்டி கோயம்பத்தூர் தான் கிடைச்சுது” என்றான். கௌதமுக்கு முந்தைய நாளே தெரியும் அண்ணா யூனிவர்சிட்டி சென்னை கிடைக்காதென்று. ஒன்றரை கட்ஆப் மதிப்பெண்ணில் சென்னை கிடைக்காமல் போனது. அதை அவளிடம் சொன்னால் வருத்தப்படுவாள் என்று சொல்லவில்லை.

“உனக்கு நான் அவ்ளோ சீக்கிரம் கசந்துட்டேனா கௌதம்” வார்த்தையால் காயப்படுத்த தொடங்கினாள்.

அவனோ ஒரே வார்த்தையில் “ஆமாம்” என்றான். அது அவள் புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆதங்கத்தில் வந்த வார்த்தையாக இருந்தாலும் அவளை பொறுத்தவரை அவளது கேள்விக்கான பதிலாக பார்த்தவளுக்கு கோபம் தான் வந்தது.

“உனக்கு நான் அவ்ளோ கசந்துட்டேன்ல. அப்போ போ கௌதம். எனக்கும் நீ வேண்டாம். போய் சந்தோசமா உன் வாழ்கைய பாரு”

“திரும்ப திரும்ப அந்த வார்த்தையை சொல்லாதடி. எனக்கு கடுப்பாகுது. அப்புறம் நான் எதாவது வார்த்தைய விட்டுருவேன்” கோபத்தில் கத்தியவன் அடுத்த சில நொடிகள் தன்னை ஆசுவாசப்படுத்தி “சனு ப்ளீஸ் புரிஞ்சிக்கோ. எனக்கு வேற வழி இல்ல. ஒன்றரை மார்க்ல போயிடுச்சு. வீட்ல அப்படி வேற ஊர்ல தான் படிக்கப்போறனா திருநெல்வேலில எடுத்துக்கோ, நம்ம வீட்ல இருந்து போகலாம்னு சொன்னாங்க. நான் தான் கோயம்பத்தூர் எடுத்திருக்கேன். அட்லீஸ்ட் நாம பேசிக்க கொள்ள பிரைவசி இருக்குமேன்னு”

“ஓ இதுல எனக்காக பண்ணேன்னு வேற சொல்றியா. இங்க வேற காலேஜே இல்லயா. கோயம்பத்தூர்ல படிச்சா தான் ஆச்சா. உனக்கு தெரியும் தான என்னால நீ இல்லாம இருக்கமுடியாதுனு”

“நான் என்னடி வேணும்னா பண்ணேன். நேத்து வரைக்கும் சென்னைல எப்படியாவது கிடைச்சுடும் தான் பார்த்தேன். கிடைக்கல. எனக்கு புரியுது இது உனக்கு கஷ்டமா தான் இருக்கும்னு. எனக்கு மட்டும் கஷ்டம் இல்லயா. அதுக்காக கிடைக்கற நல்ல காலேஜை விட்டுட்டு வேற எடுப்பாங்களா. மெரீட்ல இன்ஜினியரிங் படிக்க தான் நான் ஆசைப்பட்டேன்னு உனக்கே தெரியும். என் பேருக்கு பின்னாடி வர பி.இ என்னோட கனவுனு உனக்கு தெரியும் தான” அவன் மனதை கோபமாக கொட்டினான்.

“எங்களுக்கு வசதி இருக்கலாம் ஆனா எங்க அப்பா அம்மா ரெண்டுபேரும் படிக்காதவங்க. அப்பாவுக்கு ரெண்டாவதுக்கு மேல படிப்பு ஏறல. அம்மா அவர் படிக்கலனு நாலாவதோட நின்னுட்டாங்க. ஆனா, அவங்க பசங்க நாங்க எல்லாரும் படிப்ப உயிரா நினைச்சி படிச்சோம். ஏன் தெரியுமா, எங்க அப்பா அப்படித் தான் சொல்லி வளர்த்தாரு. இப்ப இருக்குற சொத்து வசதியெல்லாம் இன்னைக்கு இருக்கலாம் நாளைக்கு இல்லாமக்கூட போகலாம். ஆனா உங்க படிப்பு தான் எப்பவும் உங்க கூட இருக்கும். அதான் உங்க வாழ்க்கையோட அழியா செல்வம்னு சொல்லுவாரு. நான் அவருக்கு பெருமை தேடித் தர முடியும்னா அது என் பேருக்கு பின்னாடி இருக்குற அவர் பேருக்கு பின்னாடி பி.இனு போடுறத தான் நினைக்கறேன். அதுவும் நான் ஆசைப்பட்ட காலேஜ்ல சேரணும் நினைச்சேன். அதேமாதிரி சென்னைல கிடைக்கலனாலும் கோயம்பத்தூர்ல கிடைச்சிச்சு எடுத்துட்டேன்” யதார்த்தமாக பேசினான். அவனது யதார்த்தம் அவளுக்கு கோபத்தை வரச் செய்தது.

“ஓ.. அப்போ நீ, உன் கனவு, உன் அப்பாவோட ஆசை, உன் குடும்பம் இதுமட்டும் தான் இல்ல. இதுல நான் எங்க இருக்கேன் கௌதம்” அவனை கூர்மையாக பார்த்துக் கேட்டாள்.

‘உனக்காக தான்டி எல்லாமே பண்றேன்’ மனதிற்குள் நினைத்தவன், அதை அவளிடம் சொல்லாமல் “சில விஷயத்தை ப்ராக்டிக்கலா பார்க்கணும். ப்ளீஸ் டோன்'ட் கனெக்ட் எவெரிதிங் எமோஷனலி” என்றான்.

“வெல் செட் கௌதம். ரொம்ப தேங்க்ஸ். வாய திற” இனிப்பை அவனுக்கு ஊட்டியவள் “இப்பவும் உனக்காக நான் சந்தோசம் தான் படறேன். பிகாஸ் ஐ லவ் யு கௌதம். நீ சந்தோஷமா கோயம்பத்தூர் போகலாம்” என்றுவிட்டு அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டாள்.

இது தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் வித்தியாசம். ஒரு ஆண் அந்த பெண் காதலை ஏற்கும் வரை அவன் பின்னால் அலைவான். அவள் காதலை ஏற்ற கணம் அவளுக்காக அலைய தொடங்கிவிடுவான். அவளை நன்றாக பார்த்துக் கொள்ளவேண்டும் அதற்கு நல்ல கல்லூரியில் படிப்பு, நல்ல உத்யோகம், நல்ல சம்பாத்தியம் என்று அவளுக்கு சிறந்ததை தர எண்ணியே ஓடுவான். ஆனால் பெண்ணோ காதலிக்கும் வரை வீடு, பெற்றவர்கள் என்றெல்லாம் இருப்பாள். காதலிக்க தொடங்கிவிட்டாள், அவளுடைய உலகம் மிகவும் சுருங்கி தன்னவன் மட்டுமே என்றாகிவிடும். அவளுடைய நினைப்பெல்லாம் அவனை சுற்றியே இருக்கும்.

கௌதமும் சந்தியாவும் அப்படி ஒரு நிலையில் தான் இருந்தனர். அவன் அவளிடம் சொன்ன அனைத்தும் உண்மை. அப்பா சொன்னது போல் படிப்பிற்கு தந்த முக்கியத்துவம், அப்பாவை பெருமைப்படுத்த நினைத்தது, அவன் கனவை எட்டிப்பிடிக்க எண்ணியது என்று அத்தனையும் உண்மை. அதைவிட அவன் கோயம்பத்தூர் செல்ல மிக முக்கிய காரணம் ஒன்று இருந்தது. அது அவள் தான். அவளை காதலிக்க தொடங்கிய நாளில் இருந்தே வீட்டில் ஏற்றுக் கொண்டால் சரி இல்லையென்றால் அவளை நன்கு பார்த்துக் கொள்ள தனக்கு படிப்பும் உத்யோகமும் வேண்டும் என்றெண்ணினான். அதுதான் அவனை பள்ளியிலேயே முதல் மாணவனாக வரச் செய்தது. ஏனோ அந்த முதன்மையான காரணத்தை விடுத்து மற்றதை சொல்லி அவள் கோபத்திற்கு ஆளானான்.

இம்முறை இருவரும் சண்டையிட்டு கொள்ளவில்லை பேசாமலும் இருக்கவில்லை. ஆனால் இருவருக்குமிடையே ஒரு சலசலப்பு இருக்க தான் செய்தது. கௌதம் இப்படியென்றால் விக்ரம் அதற்கும் மேல் என்று தோன்றும் படி ஒரு முடிவை எடுத்தான். சந்தியாவிற்கு தன் நண்பர்களை நன்கு புரிந்து வைத்துள்ளேன் என்ற நம்பிக்கை தவறா என்றானது. ஆம், கௌதமையும் சேர்த்து தான் எண்ணினாள். காதலனாக கௌதமை புரிந்துக் கொள்ள அவளுக்கு இன்னும் நிறைய காலம் தேவை என்று தெரியும், ஆனால் நண்பனாக அவனை நன்கு புரிந்துள்ளேன் என்று இறுமாப்புடன் இருந்தாள். அதுவும் பொய்யாகி போக இப்போது விக்ரமின் முடிவு ஒரு வெறுமையை அவளுக்குள் உண்டு செய்தது.

விக்ரமின் கலந்தாய்விற்கு உடன் சென்று அவனோடு அவன் வீட்டிற்கு வந்த கௌதம் அந்த பிரச்சனைக்கு பிறகு இன்று தான் சந்தியாவை பார்க்கிறான். இருவரும் தினமும் அலைபேசியில் பேசிக் கொண்டாலும் இப்போது கௌதமுக்கு கைக் கட்டு பிரித்து அவன் பிசியோதெரபி சென்று வருவதால் பேச்சுக்கள் அதன் தொடர்பாகவே இருக்கும். இருவருக்குள்ளும் பெரிதான பேச்சுக்களோ அல்லது அன்பு பரிமாற்றங்களோ இல்லாததை விக்ரமும் கவனித்திருந்தான். இருந்தும் ஒரு நல்ல சந்தர்ப்பம் பார்த்து பேசிக் கொள்ளலாம் என்று அதை அப்போதைக்கு ஆறப்போட்டான். கௌதம் அமைதியாக வந்து சோபாவில் அமர இப்போது சந்தியாவின் ஆர்வமெல்லாம் விக்ரம் என்ன கல்லூரி தேர்ந்தெடுத்துள்ளான் என்பதின் மேல் தான் இருந்தது.

“எந்த காலேஜ்டா. நீயாவது சென்னைல காலேஜ் எடுத்தியா இல்ல உனக்கும் என்னை பிடிக்காம எங்கயாவது தூரமா போக போறியா” இம்முறை விக்ரமுக்கு பிடித்த ட்ரை ஜாமுனை செய்து கையில் வைத்திருந்தவள் கௌதமையும் சேர்த்து இடித்து பேசினாள்.

“நம்ப பிரச்சனைய பேசவேண்டாம் சனு” கௌதம் இடைபுகுந்து சொன்னான்.

“பேச ஒண்ணுமில்லாத விஷயத்தை நான் ஏன் கௌதம் பேசப் போறேன். நீ கோயம்பத்தூர் போக உனக்கு நான் தடை போடலையே. ஓ.. சாரி, நீ என்ன நான் சொல்றதையா செய்யப்போற. உன் விருப்பம் தான” அவளும் எதிர்வாதம் செய்ய

“போதும் சந்தியா. முதல்ல அவனை கேளு” பொதுவாக அவன் முகத்தை வைத்தே கண்டுபிடிக்க கூடியவள் தான், இன்று கோபத்தில் கவனிக்கவில்லை.

“ஏன் அவன் என்ன பண்ணான் இப்போ. நீ ஏன்டா வாய மூடிட்டு இருக்க. என்ன பண்ணனு சொல்லி தொலையேன்” அது கௌதம் மேலிருந்த கோபம், விக்ரம் மீது காட்டிக் கொண்டிருந்தாள்.

“நான் கௌன்சிலிங் போகல சந்து. நான் வீட்ல இருக்கறத பார்த்துட்டு கௌதி என்ன வம்பு பண்ணி கூட்டிட்டுப் போனான், நான் தான் வேணாம்னு பாதி வழியிலேயே திரும்ப சொல்லிட்டேன்” உடனே அவள் கௌதமை திரும்பிப் பார்க்க விக்ரமை கௌன்சிலிங் கூட்டி செல்லலாம் என்று வந்தவன் அவன் வீட்டில் இருப்பதை பார்த்து அழைத்து சென்றும் பயனில்லாமல் போன அதிருப்தியில் அமர்ந்திருந்தான்.

“நான் இன்ஜினியரிங் எடுக்க போறதில்ல சந்து. லா எடுக்கலாம்னு இருக்கேன்” விக்ரம் தந்த அதிர்ச்சியில் அவள் உறைந்துப் போனாள்.

ஆனால் அதெல்லாம் சில வினாடிகளே. பின் சுதாரித்தவள் “ரொம்ப சந்தோசம். நான் கிளம்பறேன். என் பேச்சுக்கு இங்க என்ன மரியாதை இருக்கப்போகுது. எல்லாம் அவங்கவங்க இஷ்டம் தான. ரெண்டு பேரும் ரொம்ப வளர்ந்துட்டானுங்க. நான் தான் அப்படியே இருக்கேன் போல” அவள் பாட்டிற்கு பேசிவிட்டு கிளம்பபோனவளை கைப் பிடித்து நிறுத்தினான் கௌதம்.

“இங்க நம்ப பிரச்சனைய நான் பேச வரல. அவன் ஏன் அப்படி பண்ணான்னு கேளு” பார்வையில் அனல் தெறிக்க அவள் கண்களை பார்த்துச் சொன்னான்.

“நீ கேட்டியா நான் சொன்னத. அவனை கேட்க சொல்ற” அதே அனல் அவள் பார்வையிலும் இருந்தது “சொல்லேன்டா. ஏன் இப்படி பண்ண” இன்னும் அவள் கை அவன் பிடியில், முகத்தை மட்டும் விக்ரம் பக்கம் திருப்பிக் கேட்டாள்

“எனக்கு இப்போ இன்ஜினியரிங் வேணாம்னு தோணுச்சு. நான் லா படிக்கறேன் சந்து. அம்மா மாதிரி பெரிய லாயர் ஆகணும்னு நினைக்கறேன்” விக்ரம் சொன்னதும் சந்தியா கையை விடுத்த கௌதம் புருவத்தை சுருக்கி நண்பனை பார்க்க

சந்தியாவோ “குட் டா. நீ படி. ஐ ஆம் ஹாப்பி ஃபார் யு. வாய திற” செய்து வைத்த இனிப்பை விக்ரமுக்கு ஊட்டியவள் “நீயும் வாய திற, நம்ப ப்ரண்ட் லாயர் ஆகப்போறான்ல” கௌதமுக்கும் கொடுத்தாள். அவன் அதை உண்ணும் நிலையில் இல்லை. கையில் வாங்கிக் கொண்டவன் அவளையே பார்த்திருந்தான்.

“அப்படி பார்க்க வேண்டாம் கௌதம். உன் பார்வை எனக்கு புரியுது. அவனுக்கு என்ன பிடிக்கிதோ அதை அவன் படிக்கட்டும். அவன் இன்ஜினியரிங் எடுக்கப்போறேன்னு சொன்னப்போ நீ தான சப்போர்ட் பண்ண. இப்பவும் பண்ணு” அவள் விக்ரம் பக்கமாய் பார்த்திருந்தாலும் கெளதம் தன்னை தான் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்தவள் சொன்னாள்.

சந்தியா அவன் விசயத்தில் புரிந்துக்கொள்ள மறுத்து கோபமாக இருக்கிறாள் என்ற வருத்தம் கௌதமுக்கு இருந்தாலும் விக்ரமின் விசயத்தில் அவளின் பதில் அவனுக்கும் ஒரு தெளிவை தந்தது. அவள் சொல்வது சரி என்று உணர்ந்தான். பின் மூவரும் விக்ரமின் அந்த முடிவை சந்தோசமாக கொண்டாடத் தொடங்கினர்.

விக்ரமுக்கு மட்டுமே தெரியும் அவன் ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தான் என்று. அவன் இன்ஜினியரிங் படிப்பை எடுக்க ஆசைப்பட்டது அவனுக்காக இல்லை சந்தியாவுடன் இருக்கலாமென்று. இன்று அனைத்தும் மாறிப்போனது. சந்தியாவே அவனுக்கு இல்லை என்றானது, இதில் இந்த இன்ஜினியரிங் படிப்பை எடுத்து என்ன செய்யப்போகிறோம் என்ற எண்ணம் அவனை வழக்கறிஞர் படிப்பை எடுக்க சொல்லியது. இதை அவன் இன்று முடிவு செய்யவில்லை. வெகுநாட்களுக்கு முன்பே முடிவு செய்துவிட்டான். அந்த முடிவு இன்று சந்தியாவுக்கும் கௌதமுக்கும் தெரிந்தது. அவ்வளவே.

இதுவரை ஒன்றாக இருந்த இவர்களது வாழ்வு வெவ்வேறு திசையில் பயணப் பட தொடங்கியது. கௌதம் ஒருபக்கம், சந்தியா மறுபக்கம், விக்ரம் வேறொரு படிப்பென முற்றிலும் மாறுபட்ட பக்கம். தந்தை மீது வெறுப்பு வந்தபோது மருத்துவ படிப்பை தூக்கியெறிந்தான். சந்தியா கௌதம் காதல் தெரிந்தபோது பொறியியல் படிப்பை வேண்டாமென எண்ணினான். அவன் எடுத்த வழக்கறிஞர் படிப்பிலாவது நிம்மதி கிடைத்துவிடும் என்று எண்ணினானோ என்னவோ. இன்று அந்த படிப்பை தேர்வுச் செய்த விக்ரமுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, ஒருநாள் அவனது தோழி அவனது நண்பனிடம் இருந்து விவாகரத்து வாங்கி தரும்படி அவனிடம் வந்து நிற்பாள் என்றும் அதற்கு அவனது நண்பனும் பரஸ்பரமாக விவாகரத்து பெறவே கையெழுத்திட்டு தருகிறேன் என்று சொல்லுவான் என்றும்.

விதி வலியது, அது இவர்கள் மூவரின் வாழ்வில் இன்னும் வலிமைக் கொண்டே விளையாடியது.


உண்மையாகும்..


இந்த இடத்தில் விக்ரம் கதாபாத்திரத்திற்காக கவிதை எழுதி கொடுத்த என் நண்பன் விக்ரமுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.

உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..
 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் - 16

“நில்லு சந்து” தன் வீட்டிற்கு கிளம்ப இருந்த சந்தியாவை நிறுத்தினான் விக்ரம். கௌதம் ஏற்கனவே கிளம்பியிருந்தான்.

“ஏன் ரெண்டுபேரும் இப்படி இருக்கீங்க. இன்னும் முழுசா லவ் பண்ண ஆரம்பிச்சீங்களா, ஒருத்தரயொருத்தர் புரிஞ்சிக்க ஆரம்பிச்சிங்களானே தெரியல. அதுக்குள்ள இந்த சண்டை தேவை தானா. இப்ப என்ன அவன் கோயம்பத்தூர் போகணுமா, போய் படிக்கட்டுமேடி. அதுக்கு நீ ஏன் தடைப்போடற. கௌதம் எங்க இருந்தாலும் அவன் உன்னை தான் லவ் பண்றான். நீ முதல் நாள் பார்த்த கௌதமுக்கும் இன்னைக்கு இருக்குற அவனுக்கும் எவ்ளோ வித்தியாசம். உனக்காக அவனை எவ்வளவோ மாத்திக்கிட்டான். அதுவும் உன்னோட வார்த்தைக்கு அவனுக்கு மதிப்பும் இருக்கு பயமும் இருக்கு. அது அவன் உன்மேல வச்சிருக்க அன்போட வெளிப்பாடு தான்னு உனக்கு புரியலையா. இதெல்லாம் கௌதமுக்கு மட்டுமில்ல அவனை பார்க்கற எங்களுக்கே புதுசு. அவனை எனக்கு ஃபிப்த்ல இருந்தே தெரியும். இப்படியெல்லாம் அவன் யாருக்கும் அடங்கிப் போனதில்ல. உனக்கு அடங்கிப் போறான். உன் அன்புக்கு கட்டுப்படறான். அந்த நல்ல விஷயத்தை தக்க வச்சிக்கோ. அதை விட்டுட்டு ஏன் எல்லா விஷயத்துலையும் அவனை பிடிச்சி வைக்க பார்க்கற. அது அவனை பிரஷர் பண்ணும் அப்புறம் எல்லாம் தப்பா முடிஞ்சிடும்” கிளிப்பிள்ளைக்கு சொல்வதுப் போல் பொறுமையாக யதார்த்தத்தைச் சொன்னான்.

“இதெல்லாம் நீ அவனுக்கு சொல்லலாம்ல. கட்டுப்படறானாம். கிழிக்கறான்” எரிச்சல் பட்டு சொன்னாள்.

“குழந்தை மாதிரி பேசாத சந்து. அவன்கிட்டயும் பேசுவேன். ஆனா, இந்த விஷயத்துல நீ தான் அவனை பிரஷர் பண்ற. அந்த பழக்கத்தை விடு. அவனுக்கு நீ அன்கண்டிஷனல் லவ்வ கொடுத்துக்கிட்டே இரு. அவன் எங்க இருந்தாலும் உன்னையே தான் நினைச்சிட்டு இருப்பான். எவ்ளோ சீக்கிரம் முடியுதோ அவ்ளோ சீக்கிரம் உன் பக்கத்துலையே வர்றதுக்கு முயற்சியும் பண்ணுவான்”

“அதானே. நீ அவனுக்கு தான சப்போர்ட் பண்ணுவ” அவளுக்கு கோபம் தான் வந்தது.

“இல்ல நான் ஒண்ணும் அவனுக்காக சொல்லலை. ரெண்டுபேருக்காகவும் தான் சொல்றேன். இவ்ளோ சொல்றீயே. அவனுக்கு ஐஐடில கிடைச்சுது தெரியுமா. என்ன பண்றது அங்கயும் அவன் நேரம் ஐஐடி மெட்ராஸ் கிடைக்கலை. மத்த ஐஐடில கிடைச்சும் உனக்காக தான் வேண்டாம்னு சொல்லிட்டான். அவ்ளோ தொலைவு போயிட்டா அவ ரொம்ப துடிச்சுப் போயிடுவானு சொன்னான்” கேட்டவளுக்கு பெரும் அதிர்ச்சி.

“என்ன சொல்ற விக்ரம் எனக்காகவா வேண்டாம்னு சொன்னான். நான் தான் அவனை தப்பா புரிஞ்சிக்கிட்டேனா” தனக்காக செய்தான் என்ற பெருமிதத்தில் கண்களில் கண்ணீர் நின்றது.

“இப்ப புரியுதா தப்பு யார்மேலனு. யு போத் ஆர் கோயின் டு ஷேர் எ லைப் டுகெதர். சோ ப்ளீஸ் பீ மெச்சூர்ட். நீ பிடிச்சி வைக்கனும் நினைக்கற ஸ்கூல் பையன் இல்ல அவன். ஒழுங்கா அவன்கிட்ட நல்லபடியா பேசி ஊருக்கு அனுப்பி வை” அவன் சொன்னதை கேட்டு பூம்பூம் மாட்டை போல் சரி என்று தலையை ஆட்டியவள்

“ஏன் விக்ரம் நீ சட்டுனு மாத்திக்கிட்ட. இன்ஜினியரிங் தான எடுக்கறேன்னு சொன்ன. கௌதம் இதனாலயும் செம்ம டென்ஷன் ஆகிட்டான்” விக்ரம் விருப்பப்படியே விடு என்று கௌதமிடம் சொல்லிவிட்டாள். இருந்தும் விக்ரமுக்கு அதில் உண்மையிலேயே விருப்பமா என்று உறுதி செய்யக் கேட்டாள்.

“எப்பவும் ஒண்ணயே பிடிக்கணும்னு இல்ல. முன்னாடி பிடிச்சது. இப்ப எதுக்கு பிடிக்கணும் வேண்டாம் விட்டிடுவோம்னு தோணினதும் விடறது தான சரி” அவளுக்கு புரிந்தது போலும் இருந்தது புரியாதது போலும் இருந்தது. அவன் தொடர்ந்து பேசினான் “அதான் லா எடுத்தேன். இதான் என் ட்ராக். ஐ ஆம் ப்ரிட்டி மச் ஷோர் அபௌட் இட். யு டோன்’ட் ஒர்ரி அபௌட் மீ. கௌதமுக்கும் உனக்கும் நடுவுல இருக்கறத சரி பண்ணு. எப்பவும் சண்டைய ப்ரோலாங் பண்ணாதீங்க” சிறந்த நண்பன் அவன் அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனையை ஊதி பெரிதாக்கி அதில் குளிர் காயாமல் புகைந்து கொண்டிருந்ததை அணைக்க வழிச் சொன்னான்.

இதுவரை இருவரும் சண்டையிட்டு பேசாமல் கூட இருந்திருக்கிறார்கள். ஆனால் ஒன்றாய் இருந்தும் பட்டும்படாமல் இருந்தது இதுவே முதல்முறை. விக்ரம் கௌதமிடமும் பேசினான். இருவருக்கும் அவன் சொல்வதில் இருக்கும் நியாயம் புரிய தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாட்டை கலைந்து சரியாகினர். அவர்களின் காதலில் அன்பு, பாசம், நேசம், மரியாதை, பயம், உரிமை என அனைத்தும் இருந்தது. அதைவிட முக்கியமான இரண்டை இப்போது சேர்த்திருந்தனர். அது தான் புரிதலும் விட்டுக் கொடுத்தலும்.

தொலைதூர உறவு அவ்வளவு எளிதல்ல. அதை சரியாக கையாளும் திறனை காலம் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்கு தந்துக் கொண்டிருந்தது. அதற்காக சண்டையிடாமல் இல்லை. அடித்து கொள்ளவில்லை என்றால் அவர்கள் சந்தியாவும் கௌதமும் அல்லவே. சின்ன சின்ன ஊடல்களும் இருக்கத் தான் செய்தது. ஒருபுறம் சந்தியாவின் திறனை வளர்ப்பதிலும் அவளின் பயத்தை போக்குவதிலும் தன்னவளை சுற்றியே அவன் கவனம் இருந்தாலும் கௌதமிடமும் சிறு வித்தியாசம் தெரிந்தது. முன்பெல்லாம் அவன் செய்வது தவறென்று தெரியாமல் அவள் கோபத்திற்கு ஆளாவான். அவளிடம் மறைத்து உதையும் வாங்குவான். இப்போது ஆண்மகனுக்கு தேவையான மிக முக்கியமான பக்குவம் அவனுக்கு வந்திருந்தது. அதற்காக அவளுக்கு பிடிக்காததை செய்யாமல் இருக்கிறான் என்று நினைத்து விட கூடாது. அவன் தான் கௌதமாயிற்றே, அவன் செய்யும் வேலையே செய்துக்கொண்டு தான் இருந்தான். என்ன, எதைச் செய்தாலும் அவளிடம் கேட்டுத் தான் செய்வதுப் போல் ஒரு அப்பாவி முகத்தை தயார் செய்துக்கொண்டு வந்து அவளிடம் அனுமதிக் கேட்பான். சொல்லும் போதே ஆபத்தில்லாமல் செய்கிறேன் என்று பாவமாக கேட்பவனுக்கு இல்லையென்று சொல்ல சந்தியாவிற்கும் மனம் வராது.

குத்து சண்டை போட்டிக்கு போக, நண்பர்களுடன் இரவு வெளியே செல்ல, அவர்களோடு சேர்ந்து மதுவருந்த என அனைத்திற்கும் காதலியின் மனநிலையை புரிந்து அவளிடம் அனுமதி பெற்றே செய்துக் கொண்டிருந்த பக்குவமான காதலன் ஆனான். சந்தியாவிற்கு இதுவெல்லாம் புரியாமல் இல்லை. அவளுக்கும் காதலிக்கான பக்குவம் வந்து தான் இருந்தது. விட்டுக் கொடுக்கவில்லை விட்டுப் பிடிக்க தொடங்கினாள்.

‘ஒரு வெட்கம் வருதே வருதே
சிறு அச்சம் தருதே தருதே
மனம் இன்று அலை பாயுதே
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே

போக சொல்லி கால்கள் தள்ளும்
நிற்க சொல்லி நெஞ்சம் கிள்ளும்
இது முதல் அனுபவமே
இனி இது தொடர்ந்திடுமே
இது தரும் தடுமாற்றம் சுகம்

மழை இன்று வருமா வருமா
குளிர் கொஞ்சம் தருமா தருமா
கனவென்னை களவாடுதே

இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே

கேட்டு வாங்கி கொள்ளும் துன்பம்
கூறு போட்டு கொல்லும் இன்பம்
பற பற பறவெனவே
துடி துடித்திடும் மனமே
வர வர வர கரை தாண்டிடுமே’

மகிழ்ச்சியாக ஒரு வருடம் ஓடியது. கௌதம் அன்று சந்தியாவை காண விக்ரம் வீட்டிற்கு வந்திருந்தான்.

“வா கௌதி. எப்படி இருக்க” விக்ரம் அவனை வரவேற்க “ஆல் குட் டா. நீ எப்படி இருக்க. எங்க என்னோட மேடமை காணோம்” என்று கௌதம் கேட்க

“அவ காலைல தான் கேரளால இருந்து வந்தா. டயர்ட்ல(tired) தூங்கிட்டு இருப்பா. வந்திடுவா” என்றான் விக்ரம்.

இருவரும் பேசி அரட்டை அடித்துக் கொண்டிருந்த வேலையில் சந்தியா அங்கு வந்தாள்.

“எப்படா வந்த” கௌதமை விசாரித்துக் கொண்டே உள்ளே நுழைந்தாள்.

“இப்ப தான். என்னடீ எல்லாம் நல்லபடியா முடிஞ்சிதா” என்று கௌதம் கேட்டான். மீனாட்சி அவர்களின் பாட்டி இறந்துவிட்டார். குடும்பமே கேரளா சென்று இன்று தான் வீடு திரும்பினர்.

“எங்க இருந்து. செம சண்டை. என் அம்மச்சன் அப்பாவை அடிச்சிட்டார். அப்புறம் சண்டை போட்டுட்டு நாங்க கோவமா கிளம்பி வந்துட்டோம்” இப்போது சொல்லும் போதும் தந்தையை அடித்துவிட்டார்களே என்ற கோபமும் ஆத்திரமும் சந்தியா முகத்தில் தெரிந்தது. கண்களில் நீர் சூழ்ந்தது.

“சனு. சனு..” அவளை அணைத்தாற்போல் பிடித்து தன் மார்பில் சாய்த்தவன் “அழக்கூடாது. நீ என்னை கூப்பிட்டிருக்கணும். இன்னைக்கு காலைல தான் கோயம்பத்தூர்ல இருந்து வந்தேன். கோயம்பத்தூர்ல இருந்து கேரளா பக்கம் தான. நீ ஒரு குரல் கொடுத்திருந்தா நான் அங்க வந்து யார் அவரு.. ஹான் உன் அச்சன் அவரை வெளு வெளுனு வெளுத்திருப்பேன்” கௌதம் சொன்னது தான் தாமதம், விக்ரம் விழுந்து விழுந்து சிரித்தான். சந்தியாவும் ஒரு நிமிடம் அவனை நிமிர்ந்துப் பார்த்தவள் சிரிக்க தொடங்கிவிட்டாள். சந்தியா தன்னை மறந்து சிரிப்பதை பார்த்து அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் தான் அப்படி என்ன சொல்லிவிட்டோம் எதற்கு இவர்கள் இப்படி சிரிக்கிறார்கள் என்று குழப்பமாகவும் இருந்தது.

“உனக்கு அவ்ளோ தைரியம் வந்துச்சா. எங்க முத்து அண்ணனயே வெளு வெளுனு வெளுக்கிறங்கற” விக்ரம் சொல்ல இவன் என்ன தன்னை தேவையில்லாமல் அவளிடம் மாட்டிவிட்டுக் கொண்டிருக்கிறான் என்று எண்ணியவன்

“டேய் ஏன்டா ஏன்.. நல்லா போயிட்டு இருக்குற குடும்பத்துல குட்டைய குழப்பற” பதறிப்போய் கௌதம் கேட்க

“பின்ன நீ என் அப்பாவ தான அடிக்கறனு சொன்ன. என் அச்சனா என் அப்பா தான” என்றாள் சந்தியாவும்

“நீ தானடி அச்சன் அப்பாவ அடிச்சிட்டாருனு சொன்ன. யாரோ அச்சன் தான உன் அப்பாவ அடிச்சாரு” அவளின் கோபத்தில் இருந்து தப்பிக்க தெளிவுப்படுத்தும் நோக்கத்தில் சொன்னான்.

“அப்பா, அச்சன் ரெண்டும் ஒண்ணு தானடா. அவ சொன்னது அவளுடைய அம்மச்சன். அதாவது மீனா அம்மாவோட அப்பா” விக்ரம் கௌதமுக்கு புரியவைக்க

“என் அப்பாவ அடிக்கிற ப்ளானை எத்தனை நாளா வச்சிருந்த” சந்தியா இப்போது பொய் கோபத்தோடு கேட்க பயந்துப் போனவன்

‘உனக்கு டைமே சரியில்ல கௌதம். அவ தான் சண்டைக்கு போகாதனு எத்தனை தடவை சொல்லிருக்கா. இதுல அவ அச்சனை வெளு வெளுன்னு வெளுக்கறேன்னு இந்த வீரவசனம் தேவையா. பத்தாக்குறைக்கு லாங்வேஜ் ப்ராப்ளம் வேற. கேரளா பொண்ண லவ் பண்ணா போதாது. முழுசா மலையாளம் தெரியலனாலும் முக்கியமான வார்த்தைகளயாவது தெரிஞ்சிருக்க வேண்டாமா. அதுவும் அச்சானா அப்பானு கூட தெரியாம இருக்கியேடா. சொதப்பிட்டியேடா’ மனதிற்குள்ளே தன்னை தானே நொந்துக் கொண்டிருக்க

“டேய் மைன்ட்வாய்ஸ் ரொம்ப லென்த்தா போகுது” விக்ரம் அவன் காதைக் கடிக்க தெரிந்துவிட்டதா என்று அசடுவழிந்தான்.

சந்தியாவோ இன்னும் முறைத்து கொண்டு தான் இருக்க ‘ஐயோ இவ வேற முறைக்கறாளே. பேச்ச மாத்தி விடுடா கௌதம்’ என்றெண்ணியவன்

“இப்ப அதுவா முக்கியம். உங்க அப்பாவ ஏன் உங்க தாத்தா அடிச்சாரு. முதல்ல எனக்கு அதுக்கு பதில் தெரிஞ்சாகணும். இங்க பாரு என் கண்ணெல்லாம் எப்படி கோவத்துல துடிக்கிதுனு” வெளியே சொன்னாலும் உள்ளுக்குள் ‘டேய் ஓவராக்ட்டிங் பண்ணாதடா கண்டுபிடிச்சிடுவா’ என்ற பயமும் இருந்தது.

“டேய் நீ என்னடா எதுவும் தெரியாத மாதிரி பேசுற. மீனாம்மா மேல அவங்க அப்பா ஏன் கோவமா இருக்காருனு உனக்கு தெரியாதா” விக்ரம் இடைப்புக

“அவனுக்கு எப்படி தெரியும். எங்க அம்மா அப்பா லவ் ஸ்டோரிய சொன்னப்போ இந்தியா வர்சஸ் ஆஸ்திரேலியா கிரிக்கெட் மேச்ச இன்டரெஸ்ட்டிங்கா பார்த்துட்டு நான் சொன்னத இந்த காதுல வாங்கி உள்ள கூட கொண்டுப் போகாம அப்படியே விட்டுட்டானே” மறுபடியும் அவள் அவனை முறைக்க

‘மறுபடியும் முதல்ல இருந்தா. முடியல’ மனதிற்குள் தன்னை தானே பாவம் என்று எண்ணிக் கொண்டவன் “இன்னொரு தடவை சொல்லேன். கண்டிப்பா இந்த தடவை மிஸ் பண்ணாம கவனமா கேட்பேன். ப்ளீஸ். அது அன்னைக்கு நைல் பைட்டிங் மேட்ச்” அசடு வழிய கேட்டவனுக்கு சந்தியாவும் தன் தாய் தந்தையின் காதல் திருமணம் அதற்கு முன் நடந்த அவளது பாட்டி தாத்தாவின் காதல் திருமணம் என அனைத்தையும் சொன்னாள்.

அவள் சொல்ல சொல்ல மெச்சிக் கொண்ட கௌதம் “உன் பேமிலில இருக்கவங்களாம் பெரிய ஆளுங்க தான். தாத்தா, பாட்டியை கல்யாணம் பண்ணி வேற ஊருக்கு கூட்டிட்டு வந்திருக்காரு. அம்மா, அப்பாக்காக ட்ரைன் ஏறி கிளம்பி வந்துட்டாங்க. அப்பவே புரட்சியெல்லாம் பண்ணிருக்காங்க” என்று சொல்ல

“ஆமான்டா. மீனாம்மா வேற லெவல். குடும்பத்தை, அவ்ளோ வசதியான வாழ்க்கைய விட்டுட்டு முத்தண்ணனுக்காக வந்திருக்காங்க. செம தைரியம் வேணும்”

“அதே தைரியம் பொண்ணுக்கிட்டயும் இருக்கு. அன்னைக்கு அவளும் என்னை லவ் பண்றானு சொல்றதுக்கு எங்க கடைக்கு வந்துட்டு ப்ளோர் ப்ளோரா என்னை தேடியிருக்கா. இவ ஒவ்வொரு ப்ளோரா சுத்தி வர்றத கேமராவுல பார்த்துட்டு செக்யூரிட்டி மேனேஜர்கிட்ட சொல்றாரு யாரோ சின்னப் பொண்ணு எல்லாம் ப்ளோர்லயும் சும்மா நடந்துட்டு இருக்கு. எதுவும் எடுத்த மாதிரி தெரில துணியையும் பார்த்த மாதிரி இல்லனு. அதோட அப்படியே பக்கத்துல இருக்க பொன்மாளிகைக்கும் போயிட்டிருக்கா. இவளை கூப்பிட்டு விசாரிக்கிற நிலைமைக்கு போயிட்டாங்க. நல்லவேளை செக்யூரிட்டி மேனேஜர்கிட்ட சொல்லிட்டு இருந்தப்போ நான் பக்கத்துல தான் இருந்தேன். எதையோ சொல்லி அவங்கள ஆஃப் பண்ணிட்டு இவளை வெளில கூப்பிட்டுட்டு வந்துட்டேன்” கௌதம் தன்னவளை எண்ணி பெருமைப்பட்டு அவளை பார்க்க, அவன் பார்வையை தாளாது அவள் வெட்கத்தில் தலைகுனிந்தாள். அவன் அவளது கைப்பிடித்துக் குனிந்திருந்தவளின் முகத்தை குனிந்து பார்க்க அவளும் அவனை பார்த்தாள். இருவரும் ஒருவரின் பார்வையில் ஒருவர் கலந்து அப்படியே நின்றிருக்க விக்ரமின் கனைப்பு இருவரையும் நிஜத்திற்கு கொண்டு வந்தது.

“என்ன ஒரே லவ்ஸ்ஸா” விக்ரம் கிண்டல் செய்ய சந்தியா வெட்கத்தில் வேறு பக்கம் திரும்பி தலைகுனிந்தாள். கௌதமும் நாணத்தில் வலக்கை விரலால் நெற்றியை தேய்த்தபடி தரையை பார்த்து சிரிக்க அந்த வரவேற்புகூடம் முழுவதும் காதலால் நிரம்பி வழிந்தது.

விக்ரம் இருவரையும் மாற்றி மாற்றி பார்ப்பதை உணர்ந்த கௌதம் ‘இப்ப பேச்சை மாத்தல இவன் ஓட்டியே வச்சி செஞ்சிடுவான்’ மனதில் நினைத்தவன் அந்த வார்த்தைகளை சொன்னான் “அப்போ நானே விட்டுட்டு போனா கூட இவளும் இவ அம்மா மாதிரி ட்ரைன் பிடிச்சி வந்திடுவாளா” அவளை குறும்பு பார்வை பார்த்துக் கேட்டான்.

“கண்டிப்பா வருவேன்” அவன் சொன்னதில் விசும்பும் நிலைக்கு சென்றாலும் திடமாக சொன்னாள்.

“அப்ப நான் நீ ட்ரைன்ல வர முடியாத தூரம் போயிட்டேனா” விதி அவன் வாயில் அந்த வார்த்தைகளை வரச் செய்தது. விளையாட்டாக சொல்லும் வார்த்தைகள் நிஜமாக போவதை உணராமல் சொன்னான்.

“அப்பவும் வருவேன். விக்ரமை கூட்டிட்டு வருவேன்” இம்முறை அவன் கண்களை பார்த்து இன்னும் தீர்க்கமாக சொன்னாள்.

“ஆமா நான் எதுக்கு இருக்கேன். நீ எங்க போனாலும் சந்துவை உன் முன்னாடி கூட்டிட்டு வந்து நிறுத்துவேன்” விக்ரமும் உறுதியாகவே சொன்னான்.

மூவரும் ஒன்றாக அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். அப்போது “சரி டைமாச்சு, கிளம்பு கௌதம்” சந்தியா கௌதமிடம் சொல்ல

“அவன் எங்க போகப் போறான். இன்னைக்கு மேட்ச் இருக்கு ரெண்டுபேரும் சேர்ந்து பார்க்கலாம்னு நான் தான் கூப்பிட்டேன்” கௌதம் பதிலளிக்கும் முன் விக்ரம் சொல்ல “அப்ப என்னை பார்க்க வரேன்னு சொன்னது பொய். இன்னைக்கும் மேட்ச் தான் முக்கியம்” சந்தியா கௌதமை முறைக்க

“ஏன்டா மாட்டிவிடறதையே வேலையா பார்ப்பியா” விக்ரமை பார்த்து சொன்ன கௌதம் “அது இல்ல சனு பேபி, நீ தான் முக்கியம். அதுக்காக மேட்ச் பார்க்கறத விட்டுட முடியுமா. நீ லைஃப் லாங் முக்கியம். மேட்ச் டேஸ்ல மட்டும் மேட்ச் முக்கியம்” என்று சந்தியாவிடம் சொல்லிவிட்டு ஓட

“டேய் நில்லுடா” சந்தியா அவன் பின்னால் ஓடினாள். இருவரும் ஓடி விளையாடுவதை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான் விக்ரம். ஓடிக் கொண்டே அங்கிருந்த பூஞ்ஜாடியை கையில் எடுத்தவள் கௌதமை துரத்தினாள். அவனும் சோபாவை சுற்றி சுற்றி ஓடி, சிரித்துக் கொண்டிருந்த விக்ரமின் பின்னால் தஞ்சமடைந்து “டேய் கூப்பிட்டு என்னடா வேடிக்கை பார்க்கற. காப்பாத்து டா” என்றான்.

“விடுடி அவனை. அவன் இன்னைக்கு இங்க தான் இருக்கப் போறான். மேலே எதுவும் சொல்லாத. இன்னைக்கு எவ்ளோ முக்கியமான மேட்ச். ஜெர்மனி வர்சஸ் அர்ஜென்டினா, புட்பால் வேர்ல்டு கப் குவாட்டர் பைனல்ஸ்” கௌதமுக்கு பரிந்து விக்ரம் சந்தியாவிடம் திட்டவட்டமாக சொன்னான்.

“ஆமான்டா. அர்ஜென்டினா டா”

“ஜெர்மனி டா” நண்பர்கள் இருவரும் அவர்கள் பின்பற்றும் அணிகளின் பெயர்களை விறைப்பாக மார் தூக்கி சொல்லிக் கொண்டனர்.

“என்ன கௌதம் விளையாடுறீயா. போன மாசம் இப்படி தான் ப்ரண்ட் வீட்டுக்கு சரக்கு அடிக்க போறேன்னு பெர்மிஷன் கேட்ட. அப்பவே இதெல்லாம் லாஸ்ட்டா வச்சிக்கோனு சொன்னேன் தான” கண்டிப்போடு கேட்டாள்.

“அது போன மாசம் நான் கேக்கறது இந்த மாசம்” வடிவேலு பாணியில் சொல்லிவிட்டு “இங்க என்ன சரக்கா அடிக்கப் போறோம். மேட்ச் பார்க்கப் போறோம். ப்ளீஸ்டி. ப்ளீஸ் ப்ளீஸ். தயவுசெஞ்சு என்னை போக சொல்லாத. என் சனு பேபி தான. என் செல்லக்குட்டி தான. ப்ளீஸ்ஸ்” பாவமாக அவளிடம் கெஞ்சினான்.

“என்ன இவன் இப்படி இறங்கி பிச்சை எடுத்துக்கிட்டு இருக்கான்” விக்ரம் முணுமுணுக்க அதை கேட்டுவிட்ட கௌதம்

“சார் நீங்க மைன்ட்வாய்ஸ்னு நினைச்சி சத்தமா சொல்லிட்டிங்க. ‘அவ உன் மேல இருக்குற அன்புல தான் சொல்றா அட்ஜஸ்ட் பண்ணிக்கோனு’ சொன்னல. அதான் அட்ஜஸ்ட் பண்ணிக்க ஆரம்பிச்சிட்டேன்” அவனுக்கு மட்டும் கேட்கும் படிச் சொன்னான்.

“என்ன அங்க ரெண்டுபேருக்கு நடுவுல. அதெல்லாம் வேண்டாம் நீ கிளம்பு. ஒருத்தங்க வீட்டுல வந்து இப்படி அட்டகாசம் பண்ணி மேட்ச் பார்க்கணும்னு என்ன இருக்கு கௌதம். வீட்ல போய் பாரு. எதுவா இருந்தாலும் ஃபோன்ல பேசி அடிச்சிக்கோங்க” சந்தியாவும் விடுவதாக இல்லை.

“என்ன சொன்ன, ஒருத்தங்க வீடா. நான் அவ்ளோ யாரோ ஆகிட்டேன்ல” விக்ரம் அவள் சொன்ன வார்த்தையை பிடித்துக் கொண்டான்.

“அப்படி மீன் பண்ணலைடா. நீங்க மேட்ச் பார்த்து சத்தம் போட்டா, லாயர் அய்யா அம்மாலாம் எப்படி தூங்குவாங்க. இவன் இவனோட வீட்டுல போய் பார்த்தா என்னவாம்” கௌதமை முறைத்துக் கொண்டு சொன்னாள்.

“இவன் என்னைக்காவது எங்க வீட்ல இப்படி தங்கறேன்னு வந்து நீ பார்த்திருக்கியா. வரவே மாட்டான். நானே கெஞ்சி கூப்பிட்டுட்டு வந்திருக்கேன். இப்ப வீட்டுல இருக்கவங்களுக்கு டிஸ்டபென்ஸ், அதானே உன் பிரச்சனை. உங்க லாயர் அய்யாவும் அம்மாவும் இங்க இல்ல. அதிசயமா ரெண்டுபேரும் சேர்ந்து எதோ கல்யாணத்துக்கு இவ்ளோ நாளா பெத்த பசங்கள ஏமாத்தினது போதாதுனு ஊரை ஏமாத்த போயிருக்காங்க” தாய் தந்தை மீதுள்ள அதிருப்தி விக்ரமின் முகத்தில் வெளிப்பட்டது.

அதை கவனித்த கௌதம் “இப்ப என்ன. நான் இங்க இருந்து மேட்ச் பார்க்கக்கூடாது, அதானே. நான் கிளம்பறேன் விக்கி. நான் இங்க தங்கறது என் ஆளுக்கு பிடிக்கல. அவளுக்கு பிடிக்காததை நான் செய்யமாட்டேன்” என்றான்.

சந்தியாவிற்கும் அவள் எதேர்ச்சையாக பேசி விக்ரமை வேதனைப் படுத்திவிட்டோமே என்று தோன்ற “இரு கௌதம். ஆனா, இன்னைக்கு ஒருநாள் தான்” அவள் சொன்ன அடுத்த நொடி நண்பர்கள் இருவரும் சந்தோசத்தில் ஆர்ப்பரித்தனர்.

சிறிதுநேரம் உடனிருந்து அவர்களுக்கு தேவையானதை செய்து தந்துவிட்டு சந்தியா அவளது வீட்டிற்கு சென்றுவிட்டாள். பின் நண்பர்கள் இருவரும் கால்பந்தாட்டத்தை ரசித்து பார்த்து கொண்டிருந்தனர்.

“ச்சே.. எனக்கு மனசு ஆறல. மனசு ஆறலையே” அவன் ஆதரித்த அணி தோற்றுவிட்ட ஆதங்கத்தில் புலம்பிக் கொண்டிருந்தான் கௌதம். விக்ரமோ இன்னொரு புறம் மகிழ்ச்சியில் திளைத்து வானத்திற்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டிருந்தான்.

“என் மனசு ஆறவே மாட்டேங்கிதே. சரக்கு அடிச்சா தான் சரியாகும் போலயே” கௌதம் நாக்கில் சனிப்பகவான் வந்தமர்ந்து அவனை அப்படி சொல்ல வைத்தார்.

“குடிக்கிறியா” இன்னமும் தன் அணி வென்ற மகிழ்ச்சியில் வாயெல்லாம் பல்லாக கேட்டான் விக்ரம்.

“ஐய்யோ. சும்மா சொன்னேன்டா. சனுக்கு தெரிஞ்சா கொன்னுடுவா” சந்தியா மீதுள்ள பயத்தில் சொன்னான்.

“அவளுக்கு என்ன தெரியவா போகுது. இந்த நைட்ல அவ எங்கிருந்து வர போறா. இந்நேரம் கவுந்தடிச்சு தூங்கிருப்பா. வேணும்னா அவளுக்கு ஃபோன் பண்ணி கேட்கவா”

“ஃபோன் பண்றீயா வேற வினையே வேணாம். அவ அப்பவே குட்நைட் சொல்லிட்டு தூங்கிட்டா தான், இருந்தாலும் வேண்டாம். அவளை ஏமாத்தற மாதிரி இருக்கும்” கௌதம் அவள் மீதிருந்த காதலில் சொன்னான்.

“எனக்கு குடிக்கனும் போல இருக்கு. உனக்கு வேணும்னா குடி இல்லனா சாப்ட் ட்ரிங்க்ஸ் குடிச்சி கம்பெனி கொடு” தெளிவாக விக்ரம் சொல்ல “உன் டீம் வேற வின் பண்ணிட்டாங்க. சந்தோசமா இருக்க. நீ என்ஜாய் பண்ணு” என்றான் கௌதமும்

தந்தை அறையிலிருந்த மதுவை எடுத்து வந்து விக்ரம் அருந்த, கௌதம் குளிர்பானம் குடித்துக் கொண்டிருந்தான். அந்நேரம் வீட்டு அழைப்புமணி அலறியது.

“யார்ரா இந்த நேரத்துல. ஒருவேளை அம்மா அப்பாவா” கௌதம் பதற்றத்தில் கேள்வி எழுப்பினான்.

“ம்ச்ச் அவங்க வரமாட்டாங்கடா. சரி, நீ போய் யார்னு பாரு. நான் பாட்டிலை மறைச்சி வைக்கறேன்” விக்ரம் கௌதமிடம் சொல்ல அவன் கதவை நோக்கி ஓடினான். விக்ரம், வாடை தெரியாமலிருக்க சுவீங்கம்மை போட்டுக் கொண்டு மது பாட்டிலை எடுத்து ஓரமாக மறைத்து வைத்தான்.

கதவை திறந்தவன் எதிரே ஒரு சின்ன பையன் நின்றிருப்பதை பார்த்து “டேய் யாரோ ஒரு பையன் வந்திருக்கான்டா” விக்ரம் பக்கம் திரும்பி சொன்னான். அவன் அனைத்தையும் சரியாக அப்புறப் படுத்திவிட்டோமா என்று பார்த்துக் கொண்டே

“என் தம்பியா” என்று கேட்க, அதற்கு கௌதம் “டேய் எனக்கு விஷாந்த்தை தெரியாதா. இவன் வேறடா” என்றான்.

“அப்ப பேய் எதாவது பார்த்தியா” விளையாட்டாக சொல்லிவிட்டு சிரித்த விக்ரம் “இந்த டைம்ல வேற யாருடா வர போறாங்க. காலிங்பெல் அடிச்ச மாதிரி நமக்கு மனப்பிராந்தி. வா உள்ள” என்றவனிடம்

“டேய் உனக்கு வந்தா சரி, சும்மாயிருந்த எனக்கு ஏன்டா கேட்குது. அதுவும் என் கண் முன்னாடி ஆள் நிக்கறாங்கடா” கௌதம் சொல்ல வெளியே வந்து பார்த்தவன் அதிர்ந்துப் போனான்.

“டேய் இவனை யாருனு தெரியல. சந்தியா தம்பிடா” விக்ரம் சொல்ல அதிர்ந்துப் போன கௌதம் “அப்போ பேய் இல்லடா பேயோட தம்பி. ரெண்டுவருஷம் முன்னாடி, ஓணம் அப்போ பார்த்தப்போ கொழுக் மொழுக்கினு சார்ட்டா க்யூட்டா அவன் அக்கா மாதிரியே இருந்தானே. இப்ப என்ன அடையாளம் தெரியாம இருக்கான்” விக்ரமுக்கு மட்டும் கேட்கும்படி கௌதம் சொல்ல “டேய் இதை அவன் அக்காகிட்ட சொல்லிடாத. இவன் என்னமோ ஐ.ஏ.எஸ் படிக்கிற மாதிரி, என் தம்பி படிச்சு படிச்சு துரும்பா இளைச்சிட்டான்னு சொல்லிட்டு திரியறா” விக்ரமும் அவனுக்கு மட்டும் கேட்கும்படி சொன்னான்.

இருவரையும் ஏற இறங்க பார்த்த சக்தி “அக்கா.. நீ சொன்ன மாதிரி விக்ரம் அண்ணா கூட இன்னொரு அண்ணாவும் இருக்காங்க. ரெண்டுபேரும் இன்னும் தூங்கல” நின்ற இடத்திலிருந்தே கேட் அருகே நின்றிருந்த சந்தியாவிற்கு சொன்னான்.

“போச்சுடா. காலி. அவனோட ஸ்பெஷாலிட்டியே இதான். நின்ன இடத்துல இருந்தே அவனோட சிக்னேசர் வாய்ஸ்ஸ வச்சி சொல்லிடுவான்” விக்ரம் கௌதம் காதைக் கடிக்க இருவரும் சக்தியின் குரல் சென்ற திசையை உற்று பார்க்க சந்தியா நடந்து வந்துக் கொண்டிருந்தாள். சக்தியும் அவளை நோக்கி ஓடினான்.

அவளின் மீதிருந்து பார்வையை அகற்றாத கௌதம் “டேய் பாட்டிலை கரெக்ட்டா க்ளியர் பண்ணியா. ஐயோ அவ வராடா. உள்ள ஸ்மெல் எதாவது வரப்போகுது. இப்ப என்னடா பண்றது” என்றான்.

“பயப்படுறா மாதிரி நடிடா” விக்ரம் யோசனைத் தர அவனோ “எனக்கு இப்ப நேச்சுரலாவே வருதுடா” என படபடத்தான். கௌதமுக்கு அவளை பார்த்ததில் கிலி பற்றியிருந்தது.

சக்தியிடம் காவலாளியுடன் இருக்க சொல்லிவிட்டு நேராக வந்த சந்தியா இருவரையும் நகற்றி வீட்டின் உள்ளே நுழைத்தாள். அவள் பின்னே வந்த நண்பர்கள் இருவரும் தவறு செய்துவிட்டு தாய் முன் நிற்கும் குழந்தை போல் நின்றனர். சோபாவின் மேல் அவள் செய்து தந்துவிட்டு சென்ற பாப்கார்ன் இருந்தது. கௌதம் அவளை பார்த்து ‘பார் வேறேதுவும் இல்லை’ என்ற பார்வை பார்த்தான். அதை நம்பாமல் அனைத்து இடங்களையும் சோதனை செய்தவள் கண்ணில் அந்த மதுப்பாட்டில் பட்டது. அது தானா என்பதை உறுதிப்படுத்தியவள் இருவர் பக்கமும் திரும்பி சுட்டெரிக்கும் பார்வை பார்த்தாள். நண்பர்கள் இருவரும் பேச வார்த்தை கிடைக்காமல் திருதிருவென்று விழித்தனர்.

“நீ குடிச்சி கெட்டு போ. ஏன் அவனையும் கெடுக்கற. அவனுக்கு இதெல்லாம் என்னனு கூட தெரியாது. உன்னால தான் கெட்டுப் போறான் கௌதம்” விக்ரமை விட்டு கௌதமை கடிந்தாள். விக்ரமோ ‘இல்லடி நான் தான் குடிச்சேன். அவன் குடிக்கலை’ என்று சொல்ல வாய் திறக்க அவனையும் அவள் தடுத்துவிட்டாள்.

‘அடப்பாவி இவன் நல்லவனா. கரெக்ட்டா மிக்ஸ் பண்ணி குடிச்சிட்டு இருந்தான்’ மனதில் நினைத்துக் கொண்டே “நான் குடிக்கலைடி” என்று கௌதம் சொல்ல இவளோ “நீ குடிக்கலைனா வேற யாருக்காக இந்த பாட்டில் இருக்கு” என்றாள்.

வழக்கம் போல் சந்தியா கௌதமை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள். ஏனோ அவன் பொறுமையாக தான் கேட்டுக் கொண்டிருந்தான். இவள் பேசி பேசி அவன் கோபத்தை தூண்டப் பார்த்தாள். அவனோ பக்குவப்பட்டவன் போல் அமைதியாகவே நின்றிருந்தான்.

பொறுத்து பொறுத்து பார்த்து பொறுமை இழந்த விக்ரமோ இடைபுகுந்து “நீ ரொம்ப பேசுற சந்து. அவன் குடிக்கல. உங்கிட்ட சொல்லாம குடிக்கமாட்டேன்னு சொன்னான். நான் தான் குடிச்சேன்” விக்ரம் சொன்னதும் சந்தியா அதிர்ந்தாள்.

விக்ரம் மது அருந்துகிறான் என்று கௌதமுக்கு தெரியும் சந்தியாவிற்கு தெரியாது. அதிர்ச்சியில் அவனை நீயா என்று பார்க்க “ஆமா டுவெல்த் லீவ்ல பழகிட்டேன். இப்பவும் எப்பவாவது ட்ரின்க் பண்றேன்” தன் குடிப்பழக்கத்தை ஒத்துக் கொண்டான்.

“பார்த்தியா கௌதம். உன் பழக்கம் அவனுக்கும் வந்திடுச்சி. இப்ப உனக்கு சந்தோஷமா” நண்பன் மது அருந்துகிறானா என்ற ஆதங்கத்தில் அதற்கும் கௌதமையே குற்றம் சாட்டினாள்.

அதுவரை அமைதியாக இருந்த கௌதம் “ஆமா உனக்கு எல்லாத்துக்கும் நான் தான காரணம். ச்சே.. வர வர லவ் பண்றேனா இல்ல போர்டிங் ஸ்கூல்ல சேர்ந்திருக்கறேனானே தெரியல” அதையும் அவன் கோபத்தில் சொல்லவில்லை, ஆதங்கத்தில் சொன்னான். அவன் பேசியதை கேட்டு விக்ரமுக்கு சந்தியா மீது கோபம் வந்தது. இவள் இப்படி இவனை பிடித்து பிடித்து வைத்து ஒருநாள் ஒரேயடியாக இவனை இழந்துவிடுவாளோ என்ற பயம். தோழியின் வாழ்க்கையே குறித்த அக்கறை. இவையனைத்தும் அவளின் மீது கோபமாக மாறியிருந்தது.

“நீ என்ன எல்லாத்துக்கும் அவனை போட்டு அந்த வாட்டு வாட்டி வதைக்கிற. எத்தனை தடவை நான் உனக்கு மெச்சூர்ட்டா நடந்துக்க சொல்றது. எப்பவும் இப்படியே அவனை போட்டு திட்டிக்கிட்டே இருக்க. ரொம்ப பேசற சந்து நீ. இப்ப அவன் குடிச்சா என்னவாம். ஒவ்வொரு டைமும் உங்கிட்ட கேட்டுட்டு தான் செய்யணுமா” விக்ரமை பொறுத்தவரை கௌதம் இந்தளவிற்கு அவளது வார்த்தைகளை கேட்பதே பெரிது. அதிகம் அவனை கட்டுப்படுத்துவதால் அவர்களுக்குள் பிரச்சனை வந்து விடக்கூடாது என்பதற்காக தான் அவளை சத்தமிட்டான்.

“ஓ. அப்ப நீ குடிச்சாலும் தப்பில்ல. அவன் குடிச்சாலும் தப்பில்ல. உனக்கு இந்த மாதிரி பேச தெரியாதே விக்ரம். இவன் கற்று தந்தானா. குடிக்கவே கற்று தந்திருக்கான். இதை சொல்லி தந்திருக்க மாட்டானா” புரியாமல் அனைத்திற்கும் கௌதமையே மையமாக வைத்து பேசினாள்.

அதற்கு ஒரே காரணம், அவளுக்கு மதுவருந்தினால் பிடிக்காது. இருந்தும் கௌதம் கேட்ட போதெல்லாம் அனுமதித்து இருக்கிறாள். கௌதமின் பழக்கத்தை நிறுத்த முடியவில்லை என்ற ஆதங்கம் ஒருபுறமிருக்க இப்போது நண்பனும் குடிக்கிறான் என்ற ஆற்றாமையும் உடன் சேர்ந்துக் கொண்டது. இவையனைத்தும் அவளை சத்தம் போட வைத்தது. அதுவும் தவறு செய்தவனை விட்டு விட்டு செய்யாதவனை கடிந்து கொண்டிருந்தாள்.

“ஸ்டாப் இட் சந்தியா. நீ ரொம்ப பேசிக்கிட்டே போற. அவன் உனக்கு பாய் ப்ரண்ட் மட்டுமில்ல. என் ப்ரண்ட்டும் கூட. சும்மா இப்படி பேசறதை நான் கேட்டுக்கிட்டு இருக்கமாட்டேன்” உச்சக்கட்ட கோபத்தில் சீறினான் விக்ரம்.

“எப்பவும் அவனுக்கு தான் சப்போர்ட் பண்ணுவல விக்ரம். நான் உனக்கு முக்கியம் இல்லயா. எனக்கு இப்போ தனியா ஆகிட்ட மாதிரி இருக்கு” விக்ரம் அவளை இதற்கு முன்பு திட்டியதே இல்லை. இப்போது திட்டுக்கிறான், அதுவும் கௌதமுக்கு துணை நின்று பேசுவது அவளுக்கு வலியை கொடுத்தது.

“இப்படியே இவனுக்கு சப்போர்ட் பண்ணிக்கிட்டே இரு விக்ரம். இவன் சொன்ன மாதிரி நான் ட்ரைன் ஏறி போகமுடியாத தூரம் ஒருநாள் போவான். அப்ப தான் நீ பண்ற தப்பு உனக்கு புரியும்” சொல்லிவிட்டு அழுதுக்கொண்டே அங்கிருந்து ஓடியவளை இருவரும் செய்வதறியாது பார்த்திருந்தனர்.

நிகழ்காலத்தில் கௌதம் சொன்னது நிகழ்ந்துவிட்டது. சந்தியாவும் விக்ரமும் அவர்கள் வாக்கை காப்பாற்றினார்களா? கடல் கடந்து சென்ற கௌதமை தேடி சந்தியா சென்றாளா? விக்ரம் அவளை அழைத்து சென்றானா? அப்படி சென்றிருந்தால் கௌதமின் முடிவு தான் என்ன? ஒருவேளை செல்லவில்லை என்றால் எதற்காக செல்லவில்லை. அவர்கள் வாழ்வில் இனிவரும் பக்கங்களே பதில்.


உண்மையாகும்..


உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..
 
Top