All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிலா ஶ்ரீதரின் "எங்கேயும் நீயடி.. போகுதே உயிரடி..!!!" - கதை திரி

Status
Not open for further replies.

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 9

அன்பரசி தங்களறை கட்டிலில் அமர்ந்து துணிகளை மடித்துக் கொண்டிருந்தாள்.


அப்போது அவளிடம் வந்த அபிஷேக் “நீ எதிர்பார்த்த நாள், இல்லல்ல நான் எதிர்பார்த்த நாள் வந்திடுச்சு” என்று அவளிடம் ஒரு மரப்பெட்டியை நீட்டினான்.

அதை திறந்து பார்த்தால், அவன் புதிதாக தொடங்க போகும் தொழிலின் பெயர் கிரானைட் கல்லில் பதிக்கப்பட்டிருந்தது. பெயரை பார்த்த அன்புவின் கண்களில் நீர் சூழ, அவன் நிமிர்ந்து பார்த்தாள்.

“ஹேய்.. இதுக்கே இவ்ளோ ஷாக் ஆனா எப்படி. நான் ஒரு கதை சொல்லட்டுமா அரசி” அதுவரை அமுல் பேபி போல் குழைந்து பேசி கொண்டிருப்பவனின் முகத்தில் முதல் முறையாக வன்மத்தை கண்டாள்.

“எங்க அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட்.. பணம் இருக்குனு தான் பேர், ஆனா பையனுக்கு நல்லது செஞ்சி பார்க்கணும்ங்கிற எண்ணம் சுத்தமா கிடையாது. அவரோட தொல்லை தாங்க முடியாம தான் நான் யு.எஸ்க்கே படிக்க போனேன். உலகம் அது.. என் வாழ்க்கையை வாழ கிடைச்ச உலகம் தான் அது. அங்க நான் சந்திச்ச பொண்ணு தான் ரேச்சல்” முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு தந்தையை பற்றி சொல்லியிருந்தவன் சட்டென ரெமோவாக மாறி ரேச்சலை பற்றி சொல்ல ஆரம்பித்தான்.

“நானும் ரேச்சலும் ஒரு தனி உலகம். அன்புன்னா என்ன, காதல்னா என்ன, சந்தோஷம்னா என்னனு எனக்கு காட்டினவ அவ தான். படிப்பை முடிச்சதும் ஒரு கார்ப்பரேட் கம்பெனியில எங்க ரெண்டு பேருக்கும் வேலை கிடைச்சது. ரெண்டு பேரும் ஒண்ணா, சந்தோசமா காதலிச்சிட்டு இருந்தோம்” என்றவனின் முகம் மீண்டும் கோபத்தை தத்தெடுத்தது.

“ரேச்சல் எனக்கு லைஃப் லாங் வேணும்னு தோணுச்சு. அவ மேல இருந்த காதல் எங்க அப்பாவையும் பேஸ் பண்ற தைரியத்தை கொடுத்துச்சு. நானும் ரேச்சலும் சென்னை வந்தோம்” என்றவனின் தாடை இறுக, கண்கள் ஆக்ரோசத்தை பிரதிபலித்தது.

மகன் ஒரு அயல்நாட்டு பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்துபோது நமசிவாயம் கொதிநிலைக்கு சென்றார். அத்தோடு அவள் அவனுக்கு யாரென்று சொன்ன நொடி யாரும் தன்னை கட்டுப்படுத்தும் நிலையை கடந்திருந்தார்.

வீட்டிற்கு புதிதாக வந்திருப்பவள் முன், தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளையென்றும் பாராமல் நமசிவாயம் அபிஷேக்கை அறைந்திருந்தார்.

“அறிவிருக்காடா உனக்கு. படிக்க போன இடத்துல படிப்பை மட்டும் பார்க்காம இதை தான் பார்த்துட்டு இருந்தியாக்கும்” என்றுவிட்டு ரேச்சலை ஏற இறங்க எளாக்காரமாக பார்த்தவர் “எனக்கெல்லாம் காலையில எழுந்து குளிச்சதும் கோவிலுக்கு போயிட்டு வந்தா தான் மனசே நிறைவு பெரும். நீ என்னனா வேற கடவுளை கும்பிடுற பொண்ண கூட்டிட்டு வந்து நிக்கற. இந்த புள்ளையும் பெத்தவங்க கிட்ட சொல்லுச்சோ என்னவோ உன்னோட கிளம்பி வந்திருக்கு.. தூ.. இதெல்லாம் ஒரு பொண்ணா” என்று நிலத்தில் காரி துப்பினார்.

அவர் என்ன பேசினார் என்பது புரியாத போதிலும், அவரது உமிழ் நீர் ரேச்சலில் பாதத்திலும் பட, அவள் அருவருப்பாக இரண்டடி பின்னுக்கு சென்றாள்.

அதற்குள் அபிஷேக் “அம்மா, ப்ளீஸ் மா.. எனக்கு ரேச்சல்னா உயிர். அவளும் என்னை லவ் பண்றா. இத்தனை வருஷமா நீங்க சொன்ன ஸ்கூல், காலேஜ், கோர்ஸ்ன்னு எல்லாம் உங்க இஷ்டம் தானே. யு.எஸ்ல மேல படிக்கறது மட்டும் தான் நானா அடம்பிடிச்சி செஞ்சது. அப்படி செஞ்சதுனால தான் எனக்கு என் மேல உயிரையே வச்சிருக்கிற ரே கிடைச்சிருக்கா. ப்ளீஸ்ம்மா, அப்பாவ எங்க கல்யாணத்துக்கு ஒத்துக்க சொல்லுங்கம்மா” தந்தையை விட்டு தாய் பத்மாவிடம் அபிஷேக் கெஞ்ச, அவருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

“போதும் நிறுத்துடா. ஏன் இந்த ஊருல யாருமே அன்பு வைக்கறவங்க இல்லையா.. எல்லாம் கிடைக்கும்.. இத பாரு, நெத்தியில ஒரு பொட்டு இல்ல, என்னமோ உறிச்சி வச்ச கோழி மாதிரி இருக்கு. இந்த பொண்ண தல மூழ்கிட்டு வா. நான் உனக்கு மஹாலஷ்மி மாதிரி ஒரு பெண்ணை கட்டி வைக்கிறேன். அது தான் எனக்கும் கெளரவம்” என்றவர் அங்கு எதுவும் புரியாமல் விழித்துக் கொண்டு நின்றிருந்த ரேச்சலை தரதரவென இழுத்து வந்து வீட்டின் வெளியே தள்ளினார்.

சட்டென நிகழ்ந்துவிட்டதில் ரேச்சல் அதிர்ந்து தரையில் இருந்த படியே சுற்றும் முற்றும் பார்க்க, சாலையில் நடந்து போன ஒன்றிருவர் அவளை இழிவாக பார்த்துவிட்டு சென்றனர்.

தந்தையை தடுக்க முயற்சி செய்தும் முடியாமல் போன அபிஷேக், துடித்துப் போய் அவளை தூக்க போனான்.

“அபி, இதுக்கு மேல அந்த பொண்ணு தான் வேணும்னு போனா, என் சொத்துல ஒரு பைசா உனக்கு கிடையாது. அப்புறம் இந்த வெள்ளைக்காரி எப்படி உன் கூட சுத்துறானானு நானும் பார்க்கிறேன்” என்றவர் மகன் மறுக்க மறுக்க அவனை உள்ளே இழுத்து சென்றார்.

தான் கேட்ட விசயத்தில் அன்பரசி இமைக்க கூட மறந்து அபியை பார்த்து கொண்டிருக்க “எவ்வளவு அவமானம், எவ்வளவு வலி. காதலிக்கறது அவ்ளோ பெரிய தப்பா. அப்போ தான் முடிவு பண்ணேன், எங்க அப்பாவை அவர் வழியில போய் தான் சரி கட்டணும்னு. உடனே எல்லாம் எங்க அப்பா யு.எஸ் அனுப்பல. கொஞ்சநாள் இங்கயே இருந்தேன். அப்புறம் யு.எஸ் அனுப்பினப்பவும் அவர் சொத்து வேணும்னா, நான் அவர் சொல்ற பொண்ண தான் கல்யாணம் பண்ணனும்னும் சொன்னார்” என்று அடிப்பட்ட குரலில் சொன்னான்.

அன்பு எதுவும் பேசாமல் அவனையே பார்த்திருக்க “இதெல்லாம் என்ன இவரே கஷ்டப்பட்டு சம்பாதிச்ச சொத்தா. இவர் தொழில் பண்றேன்னு கேட்டதும் என் தாத்தா தன் சொத்தையெல்லாம் வித்து கொடுத்திருக்கார். அதை எனக்கு கொடுக்க இவர் ரூல்ஸ் பேசுவாரா. அதான் நாடகம் ஆட ஆரம்பிச்சேன்” என்று ஒரு வில்லனை போல் சிரித்தவன்..

“யு நோ ஒன் திங் அரசி.. மைசெஃல்ப் அண்ட் ரேச்சல் ஆர் ஹஸ்பெண்ட் அண்ட் வைஃப். யெஸ், எங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சு” என்று அந்த அறை முழுதும் எதிரொலிக்க உரக்க சொன்னான்.

தான் வாழ்க்கை கை நழுவி கொண்டிருப்பதை உணர்ந்த அன்பு அதுவரை அவன் சொல்வதை சிலையாய் சமைந்து கேட்டிருக்க. இப்போது அவன் சொன்னதை கேட்டு கையிலிருந்த பெயர் பகலையை கை நழுவவிட்டு பொத்தென தரையில் விழுந்தாள். அதில் பெயர் பதிந்திருந்த அந்த கிரானைட் கல் இரண்டாக பிளந்தது. அவளது மனமும் தான்.

அதை கண்ட அபி “அறிவிருக்கா உனக்கு. இது என் பெயரும் ரே பேரும் சேர்ந்து, ரேஷக் சொலுஷன்ஸ்னு வைச்ச பேர். அதை போய் போட்டு உடைச்சிட்ட” என்று அவளை கடிய, அவளோ தலையை கூட நிமிர்த்தாமல் தரையை பார்த்து கண்ணீர் உகுத்திருந்தாள்.

“திடீர்னு ஒரு நாள் உன் போட்டோவை எனக்கு அனுப்பி, இது தான் எனக்கு பார்த்த பொண்ணுன்னு சொன்னார். நான் கூட ஒரு செகண்ட் சொத்தாவது மண்ணாவதுனு எங்களுக்கு கல்யாணம் ஆன விஷயத்தை சொல்லிடலாம்னு தான் பார்த்தேன். ஆனா ரே எப்படி விடுவா.. அவளை தான் உன் மாமனார் அவமானப்படுத்தி இருக்காரே. அன்னைக்கு அவளை ரோட்ல பிடிச்சி தள்ளினப்போ, எத்தனை பேர் பார்த்திருப்பாங்க. அதான்.. அதான் கேம் விளையாடி சொத்தையெல்லாம் பிடிங்கிக்கிட்டு அப்புறம் சொல்லிக்கலாம்னு முடிவு பண்ணோம்”

“சும்மா சொல்ல கூடாது, நீயும் நல்லாவே கோஆப்பரேட் பண்ண. வேஷம் கட்டியாச்சு, ஒழுங்கா நடிக்கணும்ல. அதனால பிடிக்காம உன்கூட ஒவ்வொரு நாளும் வாழ்ந்தேன். அப்ப தானே உன் சோ கால்ட் அப்பா நம்புவார். ரே கூட நீ என்ஜாய் பண்ணிக்கோ ஹனினு சொல்லிட்டா. ஆனா குழந்தை எதாவது உருவாகிட்டா. அதான், நீ டெய்லி கொண்டு வர பால்ல உனக்கே தெரியாம கர்ப்பத்தடை மாத்திரைய கலந்து உன்னை குடிக்க வச்சேன்” என்று சிரித்தவனை நிமிர்ந்து ஓர் அடிபட்ட பார்வை பார்த்தாள் அன்பு.

பேசிக் கொண்டே தன் துணிமணிகளை எடுத்து அடுக்கியவன் “அப்புறம் அரசி, நம்ப பிசினஸ் கூட இந்த நாடகத்துல ஒரு பங்கு தான். இல்லைனா உங்க அப்பாகிட்ட இருந்து சொத்தயெல்லாம் எப்படி வாங்க முடியும். நான் யு.எஸ்ல தான் சாப்ட்வேர் கம்பெனி தொடங்க போறேன்.. ரேஷக் சொலுஷன்ஸ். அப்புறம் எதுக்கு உங்கிட்ட பக்கம் பக்கமா சைன் வாங்கினேன்னு யோசிக்கிறியா” என்றவன் அவள் முன் வந்து நின்று,

“அது என்னன்னா.. ஊரறிய கல்யாணம் பண்ணிருக்கேன். நாளைக்கு நீ சேனல் சேனலா போய் என் பேர்ல புகார் வாசிச்சு மூக்கை சிந்தினேனா.. அதான், எனக்கு ஏற்கனவே கல்யாணமாகிடுச்சுனு தெரிஞ்சி தான் நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட.. உனக்கும் என்னை கல்யாணம் பண்ணிக்கிறதுல எந்த விருப்பமும் இல்ல. வசதியில்லாத நீ, என் வசதி, வாய்ப்புக்காக தான் என் ஆசை நாயகியா இருக்க ஒத்துக்கிட்டனு நீயே சைன் போட்டு கொடுத்திருக்க” என்ற நொடி அவள் கண்களில் விடாமல் வழிந்திருந்த கண்ணீரும் ஸ்தம்பித்து நின்றது.

அதன் பின் எதற்கும் அவள் கண்ணிலிருந்து கண்ணீர் வரவில்லை. தன் பெட்டிகளை அடுக்கி முடித்தவன் போகும் போது “உன் மாமனாரை பழிவாங்கறதுல நீ எனக்கு உதவியா இருந்திருக்க.. உனக்கு நான் எதாவது செய்யனும்னு ஆசைப்படறேன். இந்தா, இது எங்க நுங்கம்பாக்கம் ப்ரொபெர்ட்டி டாக்குமெண்ட்.. உன் பேர்ல மாத்தியிருக்கேன். ஹார்ட் ஆஃப் தி சிட்டில இருக்க ப்ரொபெர்ட்டி. இது நீ செஞ்ச எல்லாத்துக்கும். எல்லாத்துக்கும்” மீண்டும் ஒருமுறை அந்த வார்த்தையை அழுத்தி சொல்ல, அவன் எதை சொல்கிறான் என்பதை புரிந்தவளின் உடல் கூச, கண்களை மூடிக் கொண்டாள்.

கீழே வந்த அபிஷேக் தந்தையிடமும் அனைத்தையும் கூறினான். அவற்றை கேட்ட நமசிவாயம், மகனது சட்டையை பிடித்து “உனக்கு எவளோ திமிர் இருந்தா, இப்படி ஏமாத்தி இருப்ப. ராஸ்கல்” என்று மகனை அறைய போக, அவரது கரத்தை தடுத்து பிடித்தான் அபிஷேக்.

நமசிவாயம் மகனது கையிலிருந்து தன் கையை விடுவிக்க முயற்சித்து கொண்டே அவனை முறைக்க “பெத்தவங்க பிள்ளைங்க விருப்பு வெறுப்புக்கு மதிப்பு தரணும். என்னமோ நீங்க வளர்கிற ஐஞ்சு அறிவு பிராணி மாதிரி என்னை நடத்துறீங்க. இத்தனை வருஷமும் சொத்தை வச்சி தான மிரட்டுனீங்க. அதுவும் இப்போ முடியாது. இனிமேலாவது உங்க திமிரை மூட்ட கட்டிக்கிட்டு அடங்கி இருங்க” என்றுவிட்டு அவன் அங்கிருந்த நகர, தளர்ந்து போனார் நமசிவாயம்.

இப்போது அவர்கள் இருக்கும் வீடு, பேக்டரி மற்றும் சில நிலப்புலன்களை தவிர மற்றது அனைத்தையும் எழுதி வாங்கியிருந்தான் அபிஷேக். அத்தோடு ஒரு பெண்ணை திருமணம் செய்துவிட்டு வந்து, இங்கே தன் சுயலாபத்திற்காக அன்புவின் வாழ்க்கையையும் அழித்திருக்கிறான். இப்படியொரு மகனை பெற்றதை எண்ணி நமசிவாயமும், பத்மாவும் கூனி குறுகி தான் போயினர்.

நான்கு நாட்கள் கடந்திருந்தது. இழவு வீடு போல் தான் அன்பரசியின் வீடு காட்சியளித்து.

அபிஷேக் சென்றதும் அவரவர் இருந்த இடத்திலேயே தளர்ந்து அமர்ந்திருந்தவர்கள் அன்றைய நாளை அப்படியே தான் கழித்தனர். வேலையாட்களும் எதுவும் செய்யமுடியாமல் அமைதியாக இருந்துவிட்டு அவர்களது வேலை முடிந்ததும் கிளம்பி சென்றார்கள்.

அதில் ஒரு பெண்மணி அன்புவின் அம்மாவை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோவிலில் பார்ப்பார். அவ்வாறே அடுத்தநாள் கோவிலில் சந்தித்தவர், தன் காதுகளில் அரைகுறையாக விழுந்த விசயங்களை சரிதாவிடம் சொன்னார்.

கேட்டவர் தலையில் இடியே இறங்கி இருக்க, ஆட்டோ பிடிக்கவேண்டும் என்பதையும் மறந்து, பித்து பிடித்தவர் போல் எதையெதையோ பேசிக் கொண்டும் அழுதுக் கொண்டும் வீட்டிற்கு வந்தவர், வீட்டிலிருந்த அனைவரிடமும் விசயத்தை சொன்னார். அனைத்தையும் கேட்ட விநாயகம் ஒருபுறம் தளர்ந்து விட, கலைக்கு அவனை தேடி கொன்றுவிடும் ஆவேசம் வந்தது. இருந்தும் இது தங்கள் வருத்தத்தையும் கோபத்தையும் காட்டும் நேரமல்ல என்பதை உணர்ந்து, அன்புவை காண நமசிவாயத்தின் வீட்டிற்கு சென்றனர்.

அதுவரை அபிஷேக் பேசி சென்ற இடத்திலேயே கிடந்த அன்பு, தாய், தந்தை, அண்ணனை பார்த்தும் கூட துளி கண்ணீர் விடவில்லை. அவளிருந்த நிலையை கண்டு அவர்களுக்கு பயம் தொற்றி கொண்டது.

அவளை அணைத்தாற்போல் பிடித்து கீழிறக்கி வந்தவர்கள், நமசிவாயம், பத்மா முன் வந்து நிற்க, இருவரும் அவமானத்தில் தலை கவிழ்ந்து கொண்டனர்.

மகளை பிடித்திருந்த சரிதா, வாய் பொத்தி அழுது கொண்டிருக்க, விநாயகமும் கலையும் தான் நமசிவாயத்திடம் கேட்காத கேள்வியெல்லாம் கேட்டு சண்டையிட்டு விட்டு, இனி தங்களுக்கும் அவர்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும் சொல்லிவிட்டு அன்புவை அங்கிருந்து அழைத்து கொண்டு கிளம்பினர்.

நான்கு நாட்களும் அந்த வீடு களை இழந்து, இருள் சூழ்ந்து தான் இருந்தது. பித்து பிடித்தவள் போல் இருந்தாள் அன்பு. சாப்பிடுகிறாளா, தூங்குகிறாளா எதுவும் அவளது கருத்தில் பதியவில்லை.

சரிதா தான் ஒவ்வொரு நிமிடமும் மகளுடன் இருந்து அவளை பார்த்துக் கொண்டார். விநாயகமும் கலையும் அவளது நிலையை கண்டு உள்ளுக்குள் மருகிக் கொண்டிருந்தனர். அவ்வீட்டில் நந்தனா மட்டுமே தனக்கென்னவென்று இருந்த ஒரே ஆள். அவளை பொறுத்தவரை அன்புவின் இந்நிலை அவளுக்கு வருத்தத்தை கொடுக்கவில்லை. மாறாக சந்தோஷப்பட்டாளா என்றும் தெரியவில்லை. ஆனால் அவளுக்கு கிடைத்த வசதியாக வாழ்க்கை பறிபோனதில் ஓர்வித நிம்மதி. அதே நேரம் ஏதோ ஓர் வருத்தமும்.

மகளது நிலையை எண்ணி விட்டத்தை வெறித்திருந்த விநாயகத்தை அலைபேசி அழைப்பு கலைக்கவும், அதையெடுத்து பேசியவர் அனைவரையும் அழைத்துக் கொண்டு நமசிவாயத்தின் வீட்டிற்கு சென்றார்.

அவர்கள் அந்த வீட்டு வாசலில் இறங்கும் போதே வாசலில் கேட்டு கொண்டிருந்த சங்கு சத்தமும், தப்பு சத்தமும் ஏதோ அசம்பாவிதம் நிகழ்விட்டிருப்பதை சொல்ல, ஒவ்வொரு அடியையும் நடுக்கத்துடன் எடுத்து வைத்தாள் அன்பு.

ஒருகட்டத்தில் உடல் நடுங்க அவள் அங்கேயே தேங்கி நிற்க, அவளை அவ்வீட்டிலிருந்து வெளியே அழைத்து வந்த விநாயகமும் கலையும் தான் மீண்டும் உள்ளே அழைத்து சென்றனர்.

உள்ளே நடுக்கூடத்தில் அபிஷேக் சடலமாக கிடந்தான். அவனுக்கு அருகில் பத்மா அழுது அழுது ஓய்ந்திருப்பார் போல், தலையில் கைவைத்து கொண்டு மகனையே வெறித்து பார்த்து அமர்ந்திருந்தார். அதை பார்த்தவளது உடல் இறுகி போனது. அவளது மனமும் தான்.

தந்தை செய்த தவறிற்கு தன்னிடம் ஆவேசமாக பேசிவிட்டு சென்றவன் இன்று அவள் முன் சடலமாக கிடக்கிறான். இது எப்படி நிகழ்ந்தது என்று எதுவும் புரியாமல் அவள் நமசிவாயத்தை பார்த்தாள்.

அவரும் அவளது பார்வையை புரிந்தவராக “பாவி.. கொஞ்சமா பாவம் பண்ணான். உனக்கு பண்ண பாவம் தான்மா இன்னைக்கு இப்படி கிடக்குறான். போனவன் எங்க கண்ணுல படாம போய் தொலைஞ்சிருக்க வேண்டியது தானே. இப்படி பிணமாவா திரும்பி வரணும். தொழில் தொடங்க இடத்தை விக்க போறேன்னு, பைபாஸ்ல மேஜர் ஆக்சிடென்ட், ஸ்பாட் அவுட்னு ஃபோன் பண்ணாங்க. இதுக்கா உன்னை தேடி கல்யாணம் பண்ணி வைச்சேன். காதலிச்சவன் எல்லாம் கல்யாணம் பண்ணிக்கிறானா. உன்னை கட்டி வைச்சா நிச்சயம் உன் நற்பண்புகள் இவனையும் உன் பக்கம் திருப்பிடும்னு தானே நினைச்சேன். இப்போ போய்ட்டானே மா” என்று மருமகளின் கைகளில் முகத்தை புதைத்துக் கொண்டு கதறினார்.

அவர் பேசும் வரை எதுவும் பேசாமல், அசையாமல் நின்றிருந்தவள் அதன் பிறகு அபிஷேக் அருகில் வந்து அவனது முகத்தை பார்த்தாள். ஆயிரம் இருந்தாலும் அவனோடு வாழ்ந்திருக்கிறாளே. மனது துடித்தது.

அதேநேரம், நான்கு நாட்களுக்கு முன் எத்தனை ஆங்காரமாக வார்த்தைகளை உதிர்த்தான். நிலையில்லாத இவ்வாழ்க்கைக்காக, அதை மகிழ்வாக கழிக்க தேவைப்படும் சொத்துக்காக, உரிமையில்லாத தன் வாழ்க்கையை பகடை ஆக்கினான். இன்றோ உயிரில்லாத வெறும் உடல் ஆனான்.

மனித வாழ்க்கை இவ்வளவு தான் என்பதை அறியாமல் எத்தனை வேஷங்கள், பொய், பித்தலாட்டங்கள். யோசித்தவாறே அவனது தலைமாட்டில் அமர்ந்துவிட்டாள்.

அரைமணி நேரத்திற்கும் மேல் அன்பு அப்படியே அமர்ந்துவிட, அப்போதே அதிர்ச்சியில் இருந்து மீண்ட சரிதா விறுவிறுவென மகளின் அருகில் வந்து அவளது கையை பிடித்து இழுக்க, என்ன என்பதாய் தாயை நிமிர்ந்து பார்த்தாள் அன்பு.

“கிளம்பு அன்பு போகலாம்” என்று சரிதா அவளை எழுப்ப, அவள் எங்கே என்பதாய் தாயை பார்த்தாள்.

அதற்குள் விநாயகமும், கலையுமே அவர் அருகில் வர, விநாயகம் தான் “என்ன சரிதா பண்ற” என்று கேட்டார்.

சரிதா பதில் சொல்வதற்குள், மகனது சடலத்திற்கு அருகில் அமர்ந்திருந்த பத்மா “எங்க கூட்டிட்டு போறீங்க. அவ என் பையனுக்கு மனைவி. அவன் செத்து பிணமா கிடக்குறான். நீங்க கூட்டிட்டு போனா எப்படி” என்று குரலை சற்று உயர்த்தியே சொன்னார்.

“இங்க எங்க பண்ணுவாங்கனு தெரிஞ்சி தான் கூட்டிட்டு போறேன். என் பொண்ணு மட்டும் உங்க பையனுக்கு பொண்டாட்டி இல்ல. சொல்லப்போனா உங்க பையனோட சுயநலத்துக்கு என் பொண்ணு வாழ்க்கை போனது வரை போதும். அவளுக்கு என்னென்னமோ பண்ணி அத எங்களை பார்க்க வைக்கலாம்னு மட்டும் நினைக்காதீங்க” என்று சத்தம் போட்டார்.

பதிலுக்கு பத்மாவும் பேச வாய் திறக்க “வேண்டாம் பத்மா..” என்று தடுத்தார் நமசிவாயம்.

கணவர் சொன்னதை கேட்டவருக்கு அழுகை விம்மி கொண்டு வர “ஒத்த புள்ளையை பெத்தேன். அவனோட விருப்பத்துக்கே நீங்க விட்டிருந்தா, இன்னைக்கு என் பையன் எனக்கு இருந்திருப்பானே. இப்போ என் புள்ள..” என்று கணவரது தோளில் முகம் புதைத்து கதறினார்.

மனைவியை ஒரு கையால் தேற்றி கொண்டே, மறுகையால் அன்புவின் தலையை ஆசீர்வதிப்பது போல் வருடிவிட்டு “போ மா, போற வழியில உன் கழுத்தை பாம்பா சுத்திக்கிட்டு இருக்க இந்த தாலியை ஏதாவது கோவில்ல போட்டுடு” என்றார் நமசிவாயம்.

மூன்று மாதங்களுக்கு வீட்டிலேயே முடங்கி கிடந்த அன்பு, பின்பு மீண்டும் வேலைக்கு போக தொடங்கினாள். ஆனால், எப்போதும் வளவளவென்று எதையாவது பேசி கொண்டிருக்கும் பெண் இப்போது பேசா மடந்தையாகி போனாள்.

இடையில் ஒரு முறை நமசிவாயம் வந்து அவளை பார்த்தார். தன் சொத்துகளை இரண்டு பங்குகளாக பிரித்து, ஒன்றை ரேச்சல் பெயரிலும், மற்றொன்றை அன்பு பெயரிலும் எழுதி வைத்திருந்தார். அன்று அன்பு அங்கிருந்து கிளம்பவும் ரேச்சல் அங்கு வந்திருந்தாள்.

முன்னரே அபிஷேக் அவளை இந்தியா வர சொல்லியிருக்க, அவனிடம் பேசிவிட்டு தான் அவள் விமானம் ஏறி இருந்தாள்.

விமானம் தரையிறங்குவதற்குள் அவள் தலையில் இடி இறங்கியிருந்தது. விமான நிலையத்திற்கு அபி வராததால், விலாசத்தை வைத்து அவளே அவன் தங்கியிருந்த வீட்டிற்கு வந்துவிட்டாள். அதுவும் நமசிவாயத்திடமிருந்து அபிஷேக் எழுதி வாங்கிய வீடு தான் என்பதால், அங்கிருந்த வேலையாள் மூலம் விசயம் அறிந்து இங்கு வந்தாள்.

மகன் இருந்தபோது அவளிடம் காட்டிய கோபத்தை, அவன் போன பின் காட்ட முடியவில்லை. ரேச்சலை ஏற்றுக்கொண்டதோடு, அவள் பெயரில் சொத்துக்களும் எழுதி வைத்து, அவளுக்கு பிடித்த வாழ்க்கையை அமைத்து கொள்ளவும் சொன்னார்.

அன்புவிடம் அதையே சொல்லி பத்திரங்களை அவள் கையில் கொடுக்க “வேண்டாம் சார். இந்த சொத்துனால நான் இழந்தது ஏராளம்” என்று மறுத்து விட்டாள்.

நமசிவாயத்தின் மூலம் எப்படியாவது ஒரு தொழில் தொடங்கி விடலாம் என்றிருந்த நந்தனாவிற்கு அபிஷேக் இறந்ததுமே இனி என்ன செய்வது என்ற குழப்பம் வந்திருக்க, இப்போது வலிய வந்த லஷ்மியை வேண்டாமென்று அன்பு மறுத்ததில் அவளுக்கு கோபம் வந்தது.

ஏற்கனவே தன் தோழிகள் அனைவருக்கும் திருமணம் நடந்த பின்னும், அன்புவால் தான் தன் திருமணம் தள்ளிப் போய் கொண்டிக்கிறது என்று முன்பிலிருந்தே அன்புவின் மீது நந்தனாவிற்கு ஒரு வெறுப்புணர்ச்சி இருக்க தான் செய்தது.

அதோடு தங்கையின் மீது உயிரையே வைத்திருக்கும் கணவன், அவள் முன் நெருக்கத்தை தவிர்ப்பது, தங்கள் எதிர்காலத்தை பற்றி யோசிக்காமல் அவளது திருமணத்திற்கு லோன் பெற்றிருப்பது என்று விதவிதமாக பொருமி கொண்டிருந்தவளுக்கு இப்போது தனக்காக கடன் வாங்கி தினமும் சிரமப்படும் அண்ணனுக்கு ஒரு நல்லது செய்யக்கூட தோன்றவில்லையே என்று பெருங்கோபம் மூண்டது.

அதை கலையிடமும் கொண்டு போனாள்.

“உங்க தங்கச்சிக்கு அந்த சொத்து வேண்டாம்ன்னா போகட்டும். நீங்க அவ கல்யாணத்துக்காக கடனை வாங்கிட்டு டெய்லியும் வேலையில இருந்து எவ்ளோ லேட்டா வர்றீங்க. அட்லீஸ்ட் உங்களுக்கு கொடுத்திருக்கலாம்ல. உங்க தங்கச்சி சரியான சுயநலக்காரி. உங்க மேல அவளுக்கு அன்பே இல்ல” என்று கோபமாக வெடித்தாள்.

அப்போதைக்கு “அதெல்லாம் என் தங்கச்சிக்கு என் மேல பாசம் இருக்க தான் செய்யுது. நீ தேவையில்லாம பேசாத” என்று மனைவியிடம் மறுத்தாலும், நமசிவாயத்தின் மூலம் தனக்கு கிடைக்க போகும் பணத்தால் அரும்பியிருந்த கலையின் தொழில் கனவு இப்போது கனவாகவே போய்விட, முதல் முறையாக அவன் மனதிலும் ஓர் நெருடல் உருவானது.

அதற்கு வலுவூட்டம் படியாக, தன் நண்பன் ஒருவன் அவன் மனைவியை இழந்து கை குழந்தையுடன் தனியாக சிரமப்படுவதை பற்றி நந்தனாவிடம் சொல்லி வருத்த பட, அதை தனக்கு சாதகமாக்கி கொண்டு “பேசாம அவருக்கு நம்ப அன்புவை கட்டி வைச்சா என்ன” என்று கேட்க, நண்பனின் குணங்களை நன்கு அறிந்தவனும் அன்புவிடம் பேசினான்.

அபிஷேக்கை விட்டு வந்து இன்னும் ஒரு வருடம் கூட ஆகாத நிலையில், அவளால் எப்படி இன்னொரு திருமணத்தை பற்றி யோசிக்க முடியும். சொல்லப்போனால், இனி வாழ்க்கைக்கும் திருமணம் வேண்டாமென்றே அவளுக்கு தோன்றியது.

அதையே அண்ணனிடம் சொல்ல, அதில் கோபம் வந்த கலை அவளது திருமணத்திற்காக கடன் வாங்கி தான் கஷ்டப்படுவதை பற்றி பேசிவிட்டான்.

அண்ணனுக்கு சிரமம் வேண்டாமென்று அன்பு நல்ல மனதோடே தன்னிடமிருந்த நகைகளை விற்றும், பர்சனல் லோன் போட்டும் அண்ணனின் கடனை திருப்பி கொடுக்க, கணவனை உதாசினப்படுத்தியது போல் திரித்துவிட்ட நந்தனா, அவனை ஓரேயடியாக தன் பிறந்தவீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டாள்.

வெகு வருடங்களுக்கு பிறகு நந்தனா கர்ப்பமாகியிருக்க, இதில் தான் சொன்ன மாப்பிள்ளையை திருமணம் செய்ய மறுத்ததோடு, அவள் நன்றாக வாழவேண்டும் என்பதற்காக தான் வாங்கிய கடனையும் அலட்சியமாக திருப்பி கொடுத்த தங்கையின் மீதிருந்த கோபத்தில் கலை அத்தோடு அவளுடன் அனைத்து தொடர்பையும் துண்டித்துவிட்டான். அவளுக்கு துணையாக நின்ற தாய், தந்தையுடனுமே..


சோகமா முடிச்சிட்டேனேனு என்னை திட்டாதீங்க. அடுத்த எபில இருந்து நீங்க எதிர்பார்க்கற மாதிரி இருக்கும். மறக்காமல் உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..

 
Status
Not open for further replies.
Top