அதை நெருங்க நெருங்க அவர்களின் இதயத்துடிப்பு அதிகமாகியது. அதிலும் யாரோ சிலர் ஒருவரை அடிப்பதைப் போன்ற சப்தம் கேட்கவும் சொல்லவே வேண்டாம் மதிக்கு கண்கள் கலங்கியது.
"டேய் இனிமேல் இப்படி பண்ண. அடிக்க மாட்டேன். ஏண்டா நாம உயிரோட இருக்கோம்னு நீ நினைக்கிற அளவுக்கு பண்ணிடுவேன்" சொல்லிக் கொண்டே கீழே கிடந்தவனை மிதித்தான் ஆதி. அதில் கீழே கிடந்தவனின் வாயிலிருந்து இரத்தம் வெளியேறியது.
இதைப் பார்த்து அரண்டு போன நிவியும், மதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நிற்க, அடித்தவனோ தன் கரங்களில் படிந்திருந்த இரத்தக் கரையை சுத்தம் செய்ய வேண்டி தண்ணீர் இருந்த இடம் நோக்கிச் சென்றான்.
ஆதி எனும் ஆதித்யா அந்த பிரபல கல்லூரியின் முக்கியமான மாணவன். வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன். முரட்டு தனம் நிறைந்தவன். கோபக்காரன். அவனைக் கண்டால் மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் மிரளுவார்கள். நல்ல நிறமும், பார்ப்பவர்கள் எதிர்த்து பேச முடியாதளவுக்கு கம்பீரமான உடலமைப்புக் கொண்டவன்.
தனக்கு சரியென்று தோன்றுவதை யார் தடுத்தாலும் செய்பவன். யாருக்கும் கட்டுப் படாதவன். அடுத்த ஆண்டு கோல்டு மெடல் வாங்குவான் என பலரது நம்பிக்கையை பெற்றவன். மொத்தத்தில் அவனை எதிர்க்க கல்லூரியில் யாரும் இல்லை.
இதற்கு மேல் நிற்க கூடாதென்று மதியின் மூளை வலியுறுத்த
"நிவி வா போய்டலாம்" என்று கூறியவள் பதட்டத்தில் கரங்களை கழுவிவிட்டு வந்த ஆதியை பார்க்காமல் அவன் மீது மோதிவிட, சுவற்றில் முட்டியது போல் வலித்தது மதிக்கு.
கைகளில் தண்ணீர் பாட்டிலை ஏந்திக் கொண்டு நண்பர்களின் புறம் பார்வையை பதிந்திருந்த ஆதியும் மதியை கவனிக்காததால் தான் நடந்தது இந்த மோதல்.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்ததில் மதி பயந்துவிட, ஆதி கோபமாக அவளைப் பார்த்து உறுமினான்.
"ஏய்...... அறிவில்ல பாத்து வரமாட்ட"
அவனுடைய அதட்டலில் உடலெல்லாம் நடுங்கியது மதிக்கு. கண்ணீர் காட்டாற்று வெள்ளம் போல் கன்னங்களில் வழிய பதட்டத்துடன் நிமிர்த்தவள், தன் முன்னே கோபமான முகத்தை கண்டு மீண்டும் நடுங்கினாள்.
"தெ.. தெரியாம மோ...திட்டேடன்.... சாரி.. சாரி.... என்னய அடிச்சுடாதீங்க. உண்மையிலேயே நான் தெரியாம தான் மோதினேன்"
திணறிக் கொண்டே சொல்லி முடித்தவள் அங்கிருந்து ஓட முயற்சிக்க அவளுடைய வலக்கரத்தினை பிடித்து தடுத்தான் ஆதி.
அவனது கரத்தின் அழுத்தம் தந்த வலியால் மதியின் கண்களில் கண்ணீர் இன்னும் அதிகமாய் பெருக்கெடுத்தது.
"ஏய்.. என்ன என்னனு நினச்ச. எனக்கு பொண்ணுங்ககிட்ட கை நீட்ற பழக்கம் இல்ல" கோபமாக கத்தியவன் அவள் கண்ணீரைக் கண்டு " அதான் அடிக்கவேயில்லைல அப்றம் ஏன் அழுது தொலைக்கிற" என மீண்டும் உறுமினான்.
மதியோ அவனது முகத்தினைப் பார்க்காமல் அவனது கரத்தினுள் சிறைப்பட்ட தனது கரத்தினைப் பார்த்தவாறு " கை வலிக்குது" என்றாள்.
முதலில் புரியாமல் விழித்தவன் , அவள் கரங்களை விடுவித்து விட்டு " புடிக்க தான செஞ்ஞேன் அது எப்படி வலிக்கும்" என்றான்.
அவளோ அவனுக்கு பதில் கூறாமல் தன் கையை தடவிக் கொண்டிருந்தாள். அவளுடைய கரத்தினில் ஆதியினுடைய விரல் தடம் பதிந்து இரத்தம் கட்டியிருந்தது.
ஒரு நிமிடம் அவளுடைய கரங்களை பார்த்தவன் வியப்பில் புருவத்தை உயர்த்தினான். பின்னர் முகம் மாறியவன்
" உங்களுக்கு வேற வேலயே இல்லயா. அதான் காலேஜ்ல அவ்ளோ இடம் இருக்குல, அப்புறம் ஏன் இங்க வரீங்க. அவ்ளோ தனியா பேசனுமோ உங்க லவ்வர் கூட. ச்சை இதுங்க டார்ச்சர் தாங்க முடியல" என்று கத்தினான்.
அவனுடைய வார்த்தைகளை கேட்ட மதிக்கு கோபம் வந்தது என்றுமில்லாத திருநாளாய். ஏனெனில் அவளுடைய தன்மானம் அல்லவா சீண்டப்பட்டுள்ளது. கோபத்தில் மூக்கு விடைக்க நிமிர்ந்தவள்.
"ச்சீ... உங்களப் பத்தி தெரிஞ்சிருந்தும் உங்ககிட்ட ஹெல்ப் கேக்க வந்தேன் பாரு, எனக்கு இது தேவதான்" என்றபடி போக முயற்சித்தாள். அவளுடைய வார்த்தைகள் ஆதிக்கு கோபத்தைத் தூண்டியது.
கோபத்தில் அவளது கரத்தினை மீண்டும் பிடித்தவன் " என்னடி தெரியும் என்னப் பத்தி.... சொல்லுடி என்னப் பத்தி என்ன தெரியும்" என்று கத்தினான்.
மதியோ வலியில் கண்களை மூடினாள். அவளுடைய உடலில் நடுக்கம் ஏற்பட்டது. அதை அவளது கரத்தினைப் பற்றிய ஆதியும் உணர, அவளது கரத்தினை விடுவித்தான்.
இதுவரை உறைந்திருந்த நிவி, மதியை அழைத்து செல்ல நினைத்து அவளை நெருங்க நினைக்கயில் ஆதியின் நண்பர்கள் அவளைத் தடுத்தனர்.
அதுவரை கோபமாயிருந்த ஆதி அப்போது தான் மதியின் முகத்தை கூர்ந்து கவனித்தான். மதிக்கு இயற்கையிலேயே மீன்களைப் போன்ற கண்கள். அதில் சற்று நீளமான இமை முடிகள்.
அவளின் மூடிய இமை முடியின் நுனியில் ஒரு சொட்டுக் கண்ணீர் வழியாமல் நிற்க, காலை வேளையில் புற்களின் நுனியில் இருக்கும் பனித்துளியின் நினைவு வந்தது ஆதிக்கு.