All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கரை சேருமா இந்த ஓடம்..?

Status
Not open for further replies.

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
#10

சித்தார்த்தின் அலைபேசி அடிக்கொரு தரம் சிணுங்கிக் கொண்டே இருந்தது. அவன் இன்னமும் கண் விழிக்கவில்லை. மேகநாதன் அவனை எழுப்ப, அப்போது தான் தூக்கத்தில் இருந்து விழித்த சித்தார்த் மணியைப் பார்த்தான். மதிய நேரத்தை நெருங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்து எழுந்து அமர்ந்தவன் தலையைப் பிடித்துக் கொண்டான்.

“போய் குளிச்சுட்டு வாங்க.. சாப்ட போகலாம்” என்று மேகநாதன் சொல்ல, சித்தார்த் தலையாட்டினான்.

குளித்து முடித்து வெளியே வந்தவன் உணவையும் முடித்துவிட்டு மேகநாதனையும் அழைத்துக் கொண்டு நேற்று பார்க்கிங் செய்திருந்த காரை எடுக்கப் போனான்.

“நீங்க வாங்க ப்ரோ.. நாம போய் கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டு வந்துடுவோம்”

என்னவோ ஹோட்டலில் சாம்பார் வேண்டாம் சட்னி கொடு என்று சொல்வதைப் போல மிகவும் எளிதாக சித்தார்த் சொல்ல, மேகநாதனுக்கு சங்கடமாக இருந்தது.

“நான் எதுக்கு?” என்று அவன் சங்கடமாகக் கேட்க, சித்தார்த் வற்புறுத்தி அவனை அழைத்துச் சென்றான்.

சித்தார்த் தன் காரிலேயே அவனை வரச்சொல்ல, மேகநாதன் மறுத்துவிட்டு அவனது புல்லட்டில் பின்தொடர்வதாகச் சொன்னான். இருவரும் சிவநேசனின் வீட்டை அடுத்த அரைமணி நேரத்தில் அடைந்திருந்தனர். மேகநாதனுக்கு உள்ளே செல்வதற்கே மனமில்லை. நேற்றே அத்தனை அக்கப்போர் நடந்திருந்தது. அதை எண்ணி அவன் தயங்கினான்.

விதுர்ஷாவிற்கு இந்தத் திருமணம் நிற்பது ஒரு பிரச்சனை இல்லை என்பது அவனுக்குத் தெரியும். ஆனால், அங்கு அவன் இருப்பதை அவள் நிச்சயம் விரும்பமாட்டாள் அல்லவா?

பல யோசனையில் இருந்தவனை சித்தார்த் உள்ளே அழைத்துச் சென்றான். சிவநேசன் அப்போது வீட்டில் இல்லை. சித்தார்த்துடன் உள்ளே நுழைந்த மேகநாதனை வள்ளி வியப்புடன் பார்க்க, வள்ளி கட்டாயப்படுத்தியதால் உணவை விருப்பமே இல்லாமல் விழுங்கிக் கொண்டிருந்த விதுர்ஷா அதிர்ந்து எழுந்தாள்.

“வாங்க” என்று சம்பிரதாய புன்னகையுடன் சித்தார்த்தை அவள் வரவேற்க, அதற்கான எதிரொலி சித்தார்த்திடம் இல்லை.

விதுர்ஷாவின் மனம் நொடியில் நிலைமையைக் கணக்கிட்டது. அவள் வள்ளியைக் குறிப்பாகப் பார்க்க, குறிப்பை அறிந்து வந்தவர்களுக்கு பழச்சாறு தயாரிக்க உள்ளே சென்றார் அவர்.

“உங்க அப்பா எங்கே?”

சித்தார்த் நேராக விஷயத்திற்கு வர, “அப்பா வெளில போய்ருக்காங்க.. எதுனாலும் என்கிட்ட நீங்க சொல்லலாம்”

பேச்சு சித்தார்த்திடம் இருந்தாலும் பார்வை மேகநாதனைத் துளைத்தது.

‘இவ இதையும் என் கணக்கில் தானே எழுதுவா!’

பெருமூச்சுடன் அவளைப் பதிலுக்குப் பார்த்தான் அவன்.

“இல்ல இதை உன் அப்பா கிட்ட பேசுனா தான் சரிவரும்” என்று சித்தார்த் நிற்க, அவள் வேறு வழியின்றி தந்தையை அழைத்தாள்.

“சித்தார்த் வந்திருக்காருப்பா.. உங்கள பார்க்கணுமாம்” என்று மட்டும் சொல்ல,

“அரைமணி நேரத்துல வந்திருவேன்” என்றார் சிவநேசன்.

“வந்துட்டு இருக்காங்க..” என்று‌ மட்டும் சொன்னவள் அலைபேசியைப் பார்க்க ஆரம்பித்தாள்.

சித்தார்த் மேகநாதன் காதில், “எவ்ளோ திமிரு பார்த்தீங்களா? இப்படித்தான் யாரையும் ஒரு பொருட்டாவே மதிக்கவே மாட்டா.. இப்படி இருக்கும்போதே எவ்வளவு திமிரு” என்றான்.

சித்தார்த்தின் வார்த்தைகளில் மேகநாதன் சித்தார்த்தைப் பார்த்து முறைத்தான்.

“எப்படி இருக்கும் போது?” என்று கேட்க வாய் வரை வந்தாலும் அவன் கேட்கவில்லை. மறைக்க வேண்டும் என்ற எண்ணமில்லை. தேவையில்லை என்று நினைத்தான்.

“எவ்வளவு நேரம் ஆகும்?” என்று சித்தார்த் சலிப்புடன் கேட்க,

“ஹாஃப் அன் அவர்” என்று பதிலளித்துவிட்டு மீண்டும் அவள் அலைபேசிக்குள் மூழ்க, வள்ளி இருவருக்கும் பழச்சாறு எடுத்து வந்து கொடுத்தார்.

சித்தார்த் வேண்டாம் என்று சொல்ல, மேகநாதன் எடுத்துக் கொண்டான்.

“ப்ரோ.. எதுக்கு ப்ரோ எடுத்தீங்க? வேணாம்னு சொல்லுங்க” என்று சித்தார்த் கடிந்து கொள்ள,

“தாகமா இருக்கு பாஸ்.. விடுங்க” என்றவன் வேகமாக அதைப் பருக ஆரம்பித்தான்.

விதுர்ஷா அவர்களின் பேச்சைக் கேட்டாலும் நிமிரவில்லை.

அரைமணி நேரம் என்றவர் இருபது நிமிடத்தில் வீட்டுக்கு வந்து நிற்க, அவரும் சித்தார்த்துடன் மேகநாதனை எதிர்பார்க்கவில்லை. எதுவோ நடக்கப் போவதாக அவரது உள்மனம் சொன்னது. சிவநேசன் நிதானித்தார்.

குரலில் அமைதியைக் கொண்டு வந்து, “வாங்க வாங்க.. அப்பா எதுவும் சொல்லிவிட்டாங்களா?” என்று அவர் பேச்சை ஆரம்பிக்க,

“இல்ல சார்.. இந்தக் கல்யாணத்துல எனக்கு விருப்பம் இல்ல.‌. அதை உங்க கிட்ட சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்.. இனிமேல் ஃபர்தரா எந்தக் கல்யாண வேலையும் பார்க்காதீங்க”

அலுங்காமல் சித்தார்த் சொல்ல, சிவநேசன் அதிர்வுடன் அவனைப் பார்த்தார். அதிர்வு மெல்ல கோபமாக மாற,

“ஏன் விருப்பமில்ல?”

கேள்வி சிவநேசனிடமிருந்து இல்லை. விதுர்ஷாவிடம் இருந்து.

விஷயம் வெளிவரும் வரை அவர்கள் பேசிக்கொள்ளட்டும் என்றிருந்தவள் அதற்கு மேல் பொறுமை காக்க விருப்பப்படவில்லை. மேகநாதன் வெறும் பார்வையாளராய் மாறியிருந்தான்.

“விருப்பமில்லை.. ‌அவ்ளோதான்”

“அப்படி எப்படிங்க சொல்ல முடியும்? உங்க வீட்ல தானே வந்து கல்யாணத்துக்குப் பேசுனாங்க? நீங்களும் கூட தானே இருந்தீங்க?”

“அப்போ எதுவும் தெர்லயே”

சித்தார்த் சொல்ல விதுர்ஷாவின் பார்வை கூர்மையானது.

“அப்படி என்ன தெரிஞ்சது இப்போ?”

“உனக்கு இது செகண்ட் மேரேஜ்னு நீயோ உன் அப்பாவோ ஏன் என்கிட்ட சொல்லல? நல்லவேளை கல்யாணத்துக்கு முன்னவே விஷயம் என் காதுக்கு வந்தது.. இல்லனா நான் ஏமாந்திருப்பேன்” என்று அவன் சொல்ல,

“யாரும் உங்கள ஏமாத்தல.. உங்க குடும்பம் தான் உங்கள ஏமாத்திருக்கு.. உங்க அப்பா கிட்டேயும் மாமா கிட்டேயும் எங்கப்பா எல்லாத்தையும் சொல்லிட்டாரே” என்றாள் அவளும் விடாமல்.

சித்தார்த் முகம் கறுக்க நின்றான். அவள் சொல்வது உண்மையல்லவா?

“கல்யாணம் பண்ணப் போறது நான்..‌‌ நீங்க என்கிட்ட சொல்லியிருக்கணும்”

மீண்டும் சித்தார்த் அவன் பிடியில் நிற்க, சிவநேசன் பேசினார்.

“எங்க கிட்ட யார் கல்யாணம் பேச வந்தாங்களோ அவங்க கிட்ட சொல்லியாச்சு.. உங்க கிட்ட சொல்லி உங்க சம்மதம் இருக்கதாகவும் உங்கப்பா என்கிட்ட சொன்னாரு”

“எனக்கு அதெல்லாம் எதுவும் தெரியாதுங்க.. நேத்து தான் எங்க அக்கா என்கிட்ட இந்த விஷயத்தைச் சொன்னாங்க.. இந்தக் கல்யாணம் வேணாம். நிறுத்திடுங்க”

மீண்டும் மீண்டும் அவன் அதையே பேச, விதுர்ஷாவின் பார்வை அவனை விட்டு மேகநாதனைப் பார்த்தது. அவன் முகம் நிர்மலமாக இருந்தது.

“என்னங்க திரும்பத் திரும்ப அதையே சொல்றீங்க? கல்யாணம்னா என்ன விளையாட்டுப் பேச்சா?” என்று சிவநேசன் கோபமாகக் கேட்க,

“ப்பா விடுங்க” என்று சிவநேசனிடம் கூறியவள்,

“சொல்லிட்டீங்கள்ல.. வெளில போங்க” என்று சித்தார்த்தை நோக்கிச் சொல்ல, சிவநேசன் தான் கலங்கிப் போனார்.

சித்தார்த் இப்படியொரு எதிர்வினையை நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. அவன் கற்பனை முற்றிலும் வேறாக இருந்தது.

‘இவ திமிர் தான் தெரிஞ்ச விஷயம் தானே’ என்று நினைத்துக் கொண்டவன்,

“வாங்க பாஸ் போகலாம்” என்றபடி வெளியேற மேகநாதன் தேங்கினான்.

“உங்களுக்கும் சேர்த்து தான் சொன்னேன்” என்று விதுர்ஷா அழுத்தமாகக் கூற,

“நான் யாருனு அவருக்குத் தெரியாது விது” என்றான் அவன் விளக்கம் கொடுக்கும் நோக்கத்தில். அவள் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை.

“நீங்க நினைச்ச மாதிரி கல்யாணம் நின்னுடுச்சுல? சந்தோஷமா?” என்றவளுக்கு கல்யாணம் நின்றதை விட, அவன் முன் தோற்றது தான் அத்தனை வருத்தம்.

“நான் மட்டுமில்ல நீயும் சந்தோஷமா தான் இருக்கணும் நியாயமா.. ஆனா, உன்னோட ஈகோ அதை ஒத்துக்க விடாது”

மேகநாதன் தன்மையாகவே சொன்னான்.

எங்கே பேசினால் தன்னை மீறி எதாவது பேசிவிடுவோம் என அவள் சிவநேசனைப் பார்க்க, அவர் தனக்குள்ளே மறுகிப்போய் அமர்ந்திருந்தார்.

அவர் அமர்ந்திருந்த தோற்றத்தில் எதுவோ சரியில்லை என்று உணர்ந்தவள் மேகநாதனை பயத்துடன் பார்க்க, அவனுக்கும் எதுவும் தெரியவில்லை.

“அப்பா” என்று அவள் சற்று அழுத்திக் கூப்பிடவும் தன் உணர்விலிருந்து மீண்டு மகளைப் பார்க்க, அவர் முகமெல்லாம் வியர்த்து பார்க்கவே ஒரு மாதிரி இருந்தார்.

“என்னப்பா செய்யுது?” என்று அவள் கவலையுடன் அருகில் போக,

“நானும் இப்படி உன்ன கஷ்டப்படுத்திட்டேனே பாப்பா.. நீ எவ்வளவோ சொன்ன இந்தக் கல்யாணம் வேணாம்னு.. நான் தான்” என்றவருக்கு வார்த்தைகள் அதற்கு மேல் வரவே இல்ல.

சித்தார்த் காரை ஸ்டார்ட் செய்து ஹார்ன் அடிக்கவும், மேகநாதன் வெளியே வந்தான்.

“இங்கே பக்கத்துல எனக்கு வேற ஒரு வேலை இருக்கு சித்தார்த்.. நீங்க போங்க.. நான்‌ அந்த வேலையை முடிச்சுட்டு வரேன்” என்றவன் புல்லட்டை ஸ்டார்ட் செய்யவும் சித்தார்த் அவனிடம் தலையாட்டிவிட்டுச் சென்றான். அவனுக்கு மிகப்பெரிய பிரச்சனை முடிந்த நிம்மதி.

சித்தார்த் கார் வெளியேறவும் மேகநாதன் மீண்டும் வீட்டிற்குள் நுழைந்தான். அங்கே சிவநேசன் ஓய்ந்து போய் அமர்ந்திருக்க, விதுர்ஷா தைரியம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

‘இப்போ அவன் வேணாம்னு சொன்னதால என்ன கெட்டுப் போச்சாம்?’

அவனுக்குக் கடுப்பாகத் தான் இருந்தது.

“தண்ணி குடு முதல்ல அவருக்கு”

மறைக்காத எரிச்சலுடன் மேகநாதன் சொல்லவும் சிவநேசன் அவனைப் பார்த்தார்.

மேகநாதன் குரலுக்கு வள்ளி தண்ணீர் எடுத்து வந்து தரவும் அதை வாங்கிப் பருகினார். அதன் பிறகு கொஞ்சம் அவரது முகம் தெளிவானது.

“பயமுறுத்திட்டீங்கப்பா?”

விதுர்ஷா சலுகையாய் குறைபட்டுக் கொண்டாள்.

“உனக்கு எதுவும் வருத்தம் இல்லையாமா?”

“ப்ச்.. என்னப்பா இது? இவனெல்லாம் என்னை வேணாம்னு சொல்லிட்டானு வருத்தப்படுவாங்களா? அவங்க குடும்பமே இவன் கிட்ட விஷயத்தை மறைச்சு செய்ய நினைச்சிருக்காங்க.. அங்க ஏதோ தப்பா இருக்குப்பா.. நல்லதுனு நினைச்சுக்கோங்க”

‘அட.. இப்ப தான் சரியா யோசிக்கிறா'

“திடீர்னு என்னப்பா ஆச்சு?”

“ரெண்டு நாளா பிரஷர் டேப்லெட் போடல.. வேற யோசனைல மறந்துட்டேன்.. அதான் போல”

“டேப்லெட் ஏன்ப்பா போடாம இருந்தீங்க..‌‌ டாக்டர் உங்கள டேப்லெட் ஸ்கிப் பண்ணக் கூடாதுனு சொல்லியிருக்காருல?”

விதுர்ஷா கடிந்து கொள்ள, மேகநாதன் யோசனையுடன் அவர்களைப் பார்த்தவாறு அமரப்போனான்.

அந்த அரவத்தில் திரும்பிப் பார்த்த விதுர்ஷா, “நீங்க இன்னும் கிளம்பலயா?” என்று கேட்டு வைக்க,

“நீ கிளம்பலயா?” என்றான் அவன்.

விதுர்ஷாவின் முகம் இறுகியது.

“எங்கே கிளம்பச் சொல்றீங்க?”

“நம்ம வீட்டுக்கு”

“நீங்க சொன்ன மாதிரி கல்யாணம் நின்னுடுச்சு தான். அதுக்காக உங்க கூட வருவேனு எப்படி எதிர்பார்க்குறீங்க?”

விதுர்ஷா கைகளைக் கட்டியவாறு நிதானமாகக் கேட்டாள். மேகநாதன் அடுத்த யுத்தத்திற்குத் தயாரானான்.

“நீங்க போ னு சொன்னா போறதுக்கும் வா னு சொன்னால் வர்றதுக்கும் நீங்க வளர்க்குற நாய்க்குட்டியா நான்?”

விதுர்ஷா கேட்க, அவன் முகம் இறுக அப்படியே நின்றிருந்தான்.

இதற்கு அவன் என்ன பதில் சொல்வது? அவன் தான் அவளைப் போகச் சொன்னான். அதற்கு எந்தவித சமாதானம் சொல்லவும் அவன் துணியவில்லை.

சிவநேசன் அவர்களின் பேச்சில் தலையிடாமல் பார்வையாளராக மாறியிருக்க, வள்ளி அங்கிருந்து சமையலறைக்குள் முடங்கிக் கொண்டார். அவரது வேண்டுதல் எல்லாம் விதுர்ஷா மீண்டும் மேகநாதனுடன் இணைய வேண்டும் என்பதாகவே இருந்தது.

“இப்போ என்னதான் முடிவா சொல்ற?”

“நான் எங்கேயும் வரப்போறது இல்ல”

“இது தான் உன் முடிவா?”

“ஆமா”

“சரி.. அப்போ நான் இங்கே தங்கிக்கிறேன்” என்றவன் அவளை சிறிதும் பொருட்படுத்தாமல் மேலே விதுர்ஷாவின் அறையை நோக்கிப் போனான்.

விதுர்ஷா ஒரு நிமிடம் அதிர்ந்து பார்த்தவள் வேகமாக செல்லும் அவனை வழிமறித்து நின்றாள்.

“எங்க போறீங்க? இதெல்லாம் என்ன ட்ராமா? ஒழுங்கா போய்டுங்க இல்ல கலாட்டா பண்றீங்கனு போலீஸைக் கூப்பிடுவேன்”

“கூப்பிட்டு என்னன்னு கம்ப்ளைண்ட் செய்வ? என் புருஷன் என் ரூம்ல தங்குறேனு சொல்றான்னா? தாராளமா கம்ப்ளைண்ட் பண்ணிக்க”

அலட்சியம் போலச் சொன்னவன் அவளை நகர்த்தி விட்டு மேலே சென்றான்.

விதுர்ஷா தடுக்க முடியாமல் கோபம் பாதி தவிப்பு பாதியென அவனைப் பார்த்திருக்க, சிவநேசன் மேகநாதனிடம் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

கருத்துகளைப் பகிர:

 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
#11

சோமசுந்தரம் கல்யாணியிடம் முகம் கொடுத்துப் பேசுவது இல்லை. அன்று ரதியின் வீட்டு விழாவைப் பற்றி பேசியபோது பேசியது. அதன் பின்னே இறுகிப்போய் தான் நடமாடிக் கொண்டிருந்தார். கல்யாணி சோர்ந்து போனார். ஒன்று போனால் ஒன்று என தொடர்ந்து பிரச்சனைகளாக வருவதைப் போலிருந்தது. மனதே விட்டுப் போயிருந்தது.

“உன் மக போயாச்சா ராசி?”

வழக்கம் போல அவர் ராசாத்தியுடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

“போய்ட்டா மா”

“ம்ம்..”

பேச்சை ஆரம்பித்து விட்டாலும் அவர் கேட்க நினைப்பதை எப்படிக் கேட்பது என்று புரியாமல் அவர் விழிக்க, ராசாத்தி அந்தக் கஷ்டத்தை எல்லாம் தன் முதலாளி அம்மாவுக்கு வைக்க எண்ணவில்லை போலும்.

“ம்மா நம்ம பாப்பாவோட மகன் காதுகுத்துக்கு உங்களுக்கு வந்து பத்திரிகை வைக்கிறதா பேசிட்டு இருக்காங்களாம்”

அவர் ஆரம்பித்து வைக்க, கல்யாணியின் முகம் சட்டென்று பரபரப்பைக் காட்டியது. பெருமளவு முயற்சி செய்து அதை மறைத்தவர் இயல்பாக இருப்பது போலக் காட்டிக் கொண்டார்.

“யார் சொன்னது?”

“எனக்கு யாருமா சொல்லுவா? நம்ம பேச்சி தான்”

“அவங்க எப்படிடி நம்மள கூப்டுவாங்க?”

கல்யாணி யோசிக்க,

“அதுக்குத்தான் அங்க அவங்க வீட்ல ஒரே வாக்குவாதமாம். நம்ம பாப்பாவோட வீட்டுக்காரரும் அவர் தம்பியும் இங்க வீட்ல கூப்பிடணும்னு அவங்கப்பா கிட்ட சொல்லிருப்பாங்க போல” என்றார் ராசாத்தி.

“ரதி மாமனார் அதுக்கு என்ன என்ன சொன்னாராம்?”

“அது தெரியலேங்க மா.. அவ இதை மட்டும் தான் சொன்னா”

கல்யாணிக்கு சப்பென்று ஆகிவிட்டது. ரத்தினவேல் இதற்கு சம்மதிப்பார் என்றெல்லாம் கல்யாணிக்குத் தோன்றவே இல்லை. சோமசுந்தரம் மாதிரி தானே அவரும்? ஏதாவது ஒரு மாயம் நிகழ்ந்து ரத்தினவேல் சம்மதித்தாலும் சோமசுந்தரம் இருக்கின்றாரே? அவர் இறங்கி வருவாரா?

கேள்விகள் வரிசையாய்த் தாக்க, சோர்ந்து போனார். ஒரு வருடமா இரண்டு வருடமா? கிட்டத்தட்ட இருபது வருடத்திற்கும் மேலான பகை.. நினைக்கும்போதே அவருக்கு மலைப்பாக இருந்தது.

ரதியைப் பற்றி யோசிக்கும்போதே மேகனின் நினைவும் வர, அவனைப் பற்றி யோசித்தபடி அமர்ந்துவிட்டார். எங்கே போகிறான்? என்ன செய்கிறான்? எதுவும் அவருக்குத் தெரிவது இல்லை. இப்போது கூட எங்கு சென்றிருக்கிறான் என்பது அவருக்குத் தெரியாது. இப்படியே அவனையும் விட்டுவிடக் கூடாது என்று நினைத்துக் கொண்டார்.


____________________


காலையில் நடந்த களேபரத்தில் இருந்து அறையின் பக்கமே ஒதுங்காமல் விதுர்ஷா இரவில் தூங்கவும் அவளது அறைக்குச் செல்லவில்லை. அவளுடைய வீட்டில் விருந்தினர் அறையே மூன்று இருந்தது. அதுபோக, சிவநேசனுக்கும் விதுர்ஷாவிற்குமான அறை. அதனால், விருந்தினர் அறையில் ஒன்றில் படுத்துக் கொண்டாள்.

மேகநாதனுடன் ஒரே அறையிலா? அவளது மனம், ‘போதும் இரண்டு வருடங்களாக அனுபவித்தது’ என்று சொல்லிக்கொண்டது.

இரவிலும் அறைக்கு வராமல் அவள் கண்ணாமூச்சி காட்ட, அவனுக்குப் பொறுமையாய் இருப்பதை விட வேறு வழி தெரியவில்லை. மதியமே சென்று அவனுடைய அறையைக் காலி செய்துவிட்டு வந்திருந்தான். இதற்கு முன் இரண்டு மூன்று முறை இங்கு வந்திருக்கிறான். அவ்வளவே!

இன்னமும் அவன் இந்த வீட்டுடன் ஒட்டவில்லை. அதில் விதுர்ஷா வேறு முகம் தூக்கியிருப்பது ஒரு மாதிரி இருந்தாலும் பொறுத்துக் கொண்டான். ஆனால், அவனுக்கு எந்த சங்கடமும் இல்லாமல் வள்ளி பார்த்துக் கொண்டார். காபியோ, தண்ணீரோ, சாப்பாடோ எதையும் அவன் வாய் விட்டு கேட்கும் அவசியமே இல்லை. அவரது நடவடிக்கைகள் அவனுக்கு அன்பரசியை நினைவுபடுத்தின.

இன்னமும் வள்ளிக்கு எப்படி அவன் மேல் இந்த அளவிற்கு நம்பிக்கை வந்தது என்பது அவனுக்கே புரியாத புதிராகத் தான் இருந்தது. அவர் மட்டுமில்லை என்றால்? என நினைக்கவே பயமாக இருந்தது. விழிகளை மூடிக் கொண்டான். உறக்கம் வருவதாகக் காணோம்.

அந்த நேரத்தில் கதவு மெல்லியதாகத் தட்டப்பட, மேகநாதன் மணியைப் பார்த்துவிட்டு யோசனையுடன் கதவைத் திறந்தான். சிவநேசன் தான் தயக்கத்துடன் நின்றிருந்தார். அவருக்கு அவனிடம் பேச வேண்டியிருந்தது.

அவரைப் பார்த்ததும் மேதநாதனின் முகம் அனிச்சையாக சுருங்கியது. அவனால் இன்னுமே அவர் அவளுக்குத் திருமண ஏற்பாடு செய்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏதோ ஒரு கோபம் இருக்கத்தான் செய்தது. விதுர்ஷாவின் மீதும்! அதைக் காட்டிக்கொள்ள விரும்பவில்லை.

“சொல்லுங்க” என்று‌ மட்டும் சொன்னான்.

“நீங்க ஏன் திடீர்னு வந்திருக்கீங்க?”

சிவநேசன் இப்போது தெளிவாகி இருந்தார். அவரால் இயல்பாகப் பேச முடிந்தது.

“என் பொண்டாட்டியைக் கூப்பிட வந்திருக்கேன்”

அவன் அழுத்தமாகச் சொல்ல,

“ரெண்டு வருஷமா அது தெரியலயா?” என்றார் அவர் அவனை விட அழுத்தமாக.

“அதுனால தான் அவளுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கப் பார்த்தீங்களா? நீங்க உங்க பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கல.. என் மனைவிக்குக் கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சிருக்கீங்க.. பேசிட்டு இருக்காம லீகலா ஆக்ஷன் எடுத்திருக்கணும்”

அவனையும் மீறி வார்த்தை வெளிவந்திருந்தது.

அவன் சொல்வதும் உண்மை தான். இன்னும் அவர்களுக்கு சட்டப்படி விவாகரத்து ஆகவில்லை. டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பிய போதே அவனது வருகையை சிவநேசன் எதிர்பார்த்தார். ஆனால், அவனிடமிருந்து எந்த எதிரொலியும் இல்லை. அதனால் தான் அவன் வரமாட்டான் என்று முடிவு செய்து அவர் இந்த ஏற்பாடுகளைச் செய்தது. அப்படியே வந்தாலும் அதன்பிறகு சமாளித்துக் கொள்ளலாம் என நினைத்தார்.

“உங்களுக்கு ஒரு பொண்ணு பிறந்து நீங்க அப்பாவா நிற்பீங்கள்ல.. அப்போ இதெல்லாம் உங்களுக்குப் புரியும்.. இப்போ அதுக்கான எந்த விளக்கமும் நான் கொடுக்கப் போறது இல்ல”

இயல்பாகவே அவரும் சொன்னார். அவனிடம் மேலும் மேலும் வார்த்தையாடாமல் தகைந்து போக நினைத்தார் அவர். மேகநாதனின் மனம் அவரது சமாதானத்தை ஏற்கவில்லை.

“நீங்க இப்போ அவளைக் கூட்டிட்டுப் போறீங்கனா ஏன்? எதுக்கு இந்த திடீர் முடிவு? எனக்குப் புரியல. அதான் கேட்க வந்தேன்”

“அட இது என்னங்க? இந்த உலகத்துல சண்டை போட்டு பொண்டாட்டியை விட்டு எவனுமே பிரிஞ்சு இருந்தது இல்லையா? திரும்ப சேர்ந்தது இல்லையா?”

“எவனையும் பத்தி எனக்குத் தெரியாது. நான் இருந்தது இல்ல. என்னால என் அன்பரசியை விட்டு இருக்க முடிஞ்சது இல்ல”

அவரது பதிலில் திகைத்தான் மேகநாதன்.

“நீங்க சாதாரணமாக சண்டை போட்டு பிரியல. இங்க வந்த என் பொண்ணு நீங்க வேண்டவே வேணாம்னு சொன்னா.. உங்களுக்கும் அவளுக்கும் எதுவும் இல்லைனு சொன்னா.. அவளுக்குத் தெரியாம நான் உங்கள வந்து சந்திச்சப்போ நீங்களும் அதே தான் சொன்னீங்க.. இன்னும் உங்களுக்குள்ள என்ன பிரச்சனைனு கூட எனக்குத் தெரியாது. ஆனால், நீங்களும் உங்க குடும்பமும் அவளை நல்லா நடத்தல. அது மட்டும் உறுதியாகத் தெரியும்” என்று அவர் சொல்லவும், அவன் முகம் கறுத்தது.

“இப்போ என்ன பண்ணலாம்னு சொல்றீங்க?”

“எனக்கு ஒரு வாக்குறுதி வேணும். அதுக்கு நீங்க சரினு சொன்னா நான் விதுர்ஷா கிட்ட பேசுறேன்”

அவர் சொல்லவும் எதையாவது வில்லங்கமாகக் கேட்டு விடுவாரோ என்று அவன் பதற்றத்துடன் பார்க்க, அவர் கேட்ட விஷயம் அவனை ‘ஸ்சை’ என்று சொல்ல வைத்தது.

“நான் செத்தாலும் என் கூடவே கூட்டிட்டுப் போய்டுறேன் உங்க பொண்ணை.. போதுமா?”

அவன் ஆசுவாசமாகச் சொல்ல, அதற்கு சிவநேசன் தலையசைத்தது கண்டு உண்மையில் அவனுக்கு சிரிப்புத் தான் வந்தது.

மறுநாள் விடியலில் சிவநேசன் ஒரு முடிவுடன் எழுந்தார். விதுர்ஷாவிற்கு அவளது அறைக்குப் போக வேண்டிய கட்டாயம். வீட்டிலிருக்கப் பிடிக்காமல் கல்லூரிக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்திருந்தாள். அவளுடைய உடை எல்லாம் அவளது அறையில் இருந்தது. உடையை மட்டும் எடுத்துவிட்டு வெளியே வந்து விடலாம் என்ற எண்ணத்தில் அவள் அறைக்கதவைத் தட்ட, அது திறந்து இருந்தது.

மெல்ல உள்ளே தலையை நீட்டிப் பார்த்தவள் அவனுடைய அரவம் இல்லாமல் குழம்பும் போதே குளியலறையில் பைப் திறக்கும் சத்தம் கேட்டு அவளைத் தெளிவுபடுத்தியது.

தோள்களைக் குலுக்கியவள் உள்ளே வந்து அவளுக்கான உடையைத் தேர்வு செய்ய, குளித்து முடித்து வெளியே வந்தான் மேகநாதன்.

“ஒரு வழியே கண்ணாமூச்சிக்கு எண்ட்கார்டு குடுத்திட்டியா?”

குரல் வந்த திசையில் திரும்பியவள் அவனது தோற்றத்தில் அரண்டு போய் அவசரமாக அலமாரிக்குள் தலையை விட்டுக் கொண்டாள்.

இரண்டு வருடமாக அவனுடன் ஒரே அறையில் இருந்திருந்தாலும் அவனை மேல்சட்டை இல்லாமல் அவள் பார்த்தது இல்லை. இரவு நேரங்களில் கூட பனியனும் வேஷ்டியும் தான். இன்று வெறும் கைலியை மட்டும் கட்டிக் கொண்டு தலையைத் துவட்டிய துண்டை தோளில் போட்டபடி அவன் வந்து நின்ற தோற்றம் அவள்‌‌ அறியாதது.

அவனுக்கு அப்படியெல்லாம் தோன்றவில்லை போல! இயல்பாக இருந்தான்.

அவளிடமிருந்து பதில் வராமல் இருந்ததில், ‘திமிருக்கு ஒன்னும் குறைச்சலில்லை' என்று நினைத்தவனும் அடுத்துப் பேசவில்லை.

அவள் சேலையைத் தேர்வு செய்துவிட்டு அந்த அறையில் அவளுக்குத் தேவையான மற்ற பொருள்களையும் எடுத்துக்கொண்டு போகும் முன் அவளையும் அறியாமல் அவன் புறம் திரும்ப, அப்போது அவன் சட்டையும் வேஷ்டியும் அணிந்திருந்தான்.

'ஊஃப்' என்று சொல்லிக் கொண்டவாறே வெளியேறினாள் அவள்.

அவள் கீழே இறங்கிய சிறிது நேரத்திற்கெல்லாம் கீழே அப்பாவும் மகளும் வார்த்தையாடும் சப்தம் கேட்க, என்னவென்று எட்டிப் பார்த்தான் அவன்.

“என்னோட வாழ்க்கையை எனக்குப் பார்த்துக்க தெரியும். நீங்க இதுல தலையிடாதீங்கப்பா”

சுள்ளென்று சொல்லிவிட்டு விதுர்ஷா அறைக் கதவை அடைப்பது நன்றாகவே கேட்டது.

அடுத்த அரைமணி நேரத்தில் சிவநேசனின் முகத்தைக் கூடப் பார்க்காமல் கல்லூரிக்குக் கிளம்பிவிட்டாள் விதுர்ஷா. வீட்டில் சிவநேசனும் மேகநாதனும் மட்டுமே இருந்தனர்.

வள்ளி மேகநாதனை உணவுண்ண அழைக்க, அவனது காலை உணவு முடிந்தது. சிறிது நேரம் சுரேந்திரனுக்கு அழைத்து நேற்று நடந்தவை அனைத்தையும் கூற, அந்தப் பக்கம் சுரேந்திரனுக்கும் மகிழ்ச்சி.

“மச்சான் முருகன் உன்னைக் கரை சேர்க்க மனசு வச்சுட்டாரு போலடா”

அவனும் குதூகலிக்க,

“இன்னும் உன் தங்கச்சியை சமாளிக்கணுமே” என்றான் பெருமூச்சுடன்.

“அதான் உன் மாமனார் பார்த்துக்கிறேனு சொல்லியிருக்காரே”

“அவ இதுக்கெல்லாம் மசியுறவளா? காலைலயே அவங்கப்பா கூட சண்டை”

“இவ்ளோ நாள் இருந்துட்ட.. இன்னும் கொஞ்ச நாள் பொறுமையா இருந்து தங்கச்சியோட ஊருக்கு வா”

“அவ இல்லாம நான் மட்டும் வரவும் மாட்டேன். சரி என் தங்கச்சி என்ன பண்ணுது?”

“காலேஜ் போய்ட்டா டா”

“எதாவது பணம் தேவைனா எடுத்துக்க..‌ கணக்குல எழுதி வை. நான் இல்லைன்னா எதுவும் செய்ய மாட்ட”

“பணம்லா எதுவும் தேவைப்படல டா.. எங்களுக்கு என்ன செலவு”

சுரேந்திரன் சொல்ல, “தேவைப்பட்டா எடுத்துக்க” என்றவனோ அடுத்து தொழில்முறை பேச்சிற்குத் தாவினான்.

சுரேந்திரனிடம் பேசிவிட்டு வைத்தவன் அடுத்து நேரத்தை நெட்டித் தள்ளினான் என்று தான் சொல்ல வேண்டும். அலைபேசியை அழைப்பதற்கு மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்துவான். ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், த்ரட் என்று அனைத்து செயலிகளிலும் அவனுக்கு கணக்கு இருந்தாலும் அதிலெல்லாம் அரிதாகவே நேரத்தைச் செலவிடுவான்.

வேலை எதுவும் இல்லாததால் மதிய நேர உணவைப் பிறகு சாப்பிட்டுக் கொள்வதாகக் கூறியவன் நிறைய நாட்களுக்குப் பிறகு சமூக வலைதளத்தில் நேரத்தைச் செலவிட்டான்.

ஒரு கட்டத்தில் தூக்கம் வர, தூங்கலாமா என்ற யோசனையில் இருந்தவன் வெளியே கேட்ட கார் சத்தத்தில் எழுந்து வெளியே வந்தான்.

‘என்ன ரெண்டு மணி தான் ஆகுது.. இவ இவ்ளோ சீக்கிரமா வந்துட்டா’ என்றவாறே அவன் கீழிறங்கி வர, காரிலிருந்து இறங்கிய விதுர்ஷாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. உள்ளே வந்தவள் அவனைத் தீயாக முறைத்து விட்டு நேராக தந்தையின் அறையை நோக்கிச் செல்ல, அவன் குழப்பத்துடன் அவள் பின்னே சென்றான்.

“என்னப்பா ப்ளாக்மெய்ல் பண்றீங்களா?”

அவள் கைகளைக் கட்டிக்கொண்டு பொறுமை பறந்தோடிய குரலில் கேட்க, சிவநேசன் பேசவே இல்லை. மேகநாதனுக்கு ஒன்றும் புரியவில்லை.

“இப்போ சாப்பிட போறீங்களா இல்லையா? நீங்க டேப்லெட் ரெகுலரா போடணும்னு டாக்டர் சொல்லியிருக்காங்க தான?”

“என்னை எனக்குப் பார்த்துக்க தெரியும்.. யாரும் கரிசனம் பண்ண வேணாம்”

அவளது பதிலை அவளுக்கே அவர் திருப்பிப் படிக்க, மேகநாதனுக்கு விஷயம் புரிந்தது.

'ஓ உண்ணாவிரதப் போராட்டமா?’

முதல்நாள் இரவு பசி இல்லையென்று மறுத்தவர் காலையிலும் வேண்டாம் என்றிருந்தார். அறையில் வைத்துவிட்டுப் போன பால் கூட அப்படியே இருப்பதை மதிய உணவிற்கு அழைக்கப் போயிருந்த வள்ளி பார்த்துவிட்டு பயந்து போய் விதுர்ஷாவை அழைத்து விஷயத்தைக் கூறவும் தான் அவள் உடனே கிளம்பி வீட்டிற்கு வந்திருந்தாள்.

“ப்பா.. நீங்க ஏன்ப்பா இப்படி மாறிட்டீங்க? எனக்கு விருப்பமில்லைனு சொல்லியும் அவன் கூட போகச் சொல்றீங்க”

விதுர்ஷா சலிப்பாகக் கேட்க, மேகநாதன் அதிர்ந்தான்.

'என்னது டா வா?’

சிவநேசனும் விதுர்ஷாவும் அதை உணரவில்லை.

“நான் போக மாட்டேன் பா.. நீங்க என்ன சொன்னாலும்”

விதுர்ஷா அவளது பிடியில் நின்றாள்.

“அப்போ நான் வேற மாப்பிள்ளை பார்த்தா ஒத்துக்குவியா? லீகலா இந்த உறவிலிருந்து நீ வெளிய வந்த அப்றம் நான் வேற மாப்பிள்ளை பார்க்கட்டுமா?”

சிவநேசனின் கேள்வியில் மேகநாதன் வேகமாய் ஏதோ சொல்ல வர, கண்களாலேயே அவனை அமைதியாக இருக்கச் சொன்னார் அவர்.

“ப்பா எனக்கு கல்யாணம் வேணாம்னு நான் எத்தனை தடவை தான் சொல்றது?”

“அப்போ வேற வழியில்லை விது. நீ உன் குடும்பம் பிள்ளைங்கனு இருக்கதை நான் பார்க்கணும்”

அவள் அலுப்பாகத் தந்தையைப் பார்த்தாள்.

“சரி நான் யோசிக்கிறேன் பா.. நீங்க இப்போ சாப்டுங்க”

“நீ நல்லா யோசிச்சு முடிவை சொல்லு.. அப்புறம் எதுனாலும் பார்ப்போம்”

அவர் பிடிவாதமாக அமர்ந்திருக்க, விதுர்ஷா கோபத்துடன் அவளது அறைக்குச் சென்று கதவை அறைந்து சாத்தினாள். கதவின் சத்தமே அவளது கோபத்தைக் காட்டும் அளவுகோலாக இருந்தது.

கருத்துக்களைப் பகிர:

 
Status
Not open for further replies.
Top