All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "இளைப்பாற நிழல் தாராய்" கதை திரி 🌳🌳

Status
Not open for further replies.

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்ல குட்டிஸ்,

"இளைப்பாற நிழல் தாராய்" கதை இங்கு பதிவிடப்படும்.

நன்றி

அருணா
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இளைப்பாற நிழல் தாராய்:

அத்தியாயம் 1:

"காவியா... காவியா "என ராஜலட்சுமி குரல் கொடுக்க,

"பத்தே நிமிஷம் மா" என மேலிருந்து பதில் குரல் வந்தது.

'மூணு மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பனும்னு சொன்னா! இப்போவே மூணேகால் ஆச்சு..! இவ லேட் பண்ணிட்டு என்னை திட்டுவா..!' என புலம்பி கொண்டார் ராஜலக்ஷ்மி.

அதே நேரம் தன் அறையில் ஆள் உயர கண்ணாடி முன் நின்றிருந்தாள் காவியாஸ்ரீ.

தன்னை ஒரு முறை தலை முதல் கால் வரை பார்த்து கொண்டாள்.

உடலை பட்டும்படாமல் தழுவி இருந்த தங்க நிற டிசைனர் புடவை, ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் அணிந்திருந்தவள், தலையில் சின்ன கிளிப் மட்டும் குத்தி முடியை விரித்து விட்டிருந்தாள்.

முகத்தில் தேவையான அணைத்து மேக் அப்பும் ஒன்று விடாமல் செய்திருந்ததால், அவள் தேவதை போல் தான் ஜொலித்தாள்.

கடைசியாக கண்ணுக்கே தெரியாதது போல் ஒரு கல் பொட்டை மட்டும் வைத்து அவள் அலங்காரத்தை முடித்து கொண்டாள்.

தான் நின்றிருந்த ட்ரெஸிங் டேபிளை திறந்தவள், ஒரு நொடி எதையோ வெறித்து பார்த்தாள்.

அவள் முகம் மெதுவாக இறுக தொடங்கியது.

இறுக்கம் தளர்ந்து ஒரு கட்டத்தில் மனம் நெகிழ்ந்தாலும், 'யாரையும் சும்மா விட மாட்டேன்' என முணுமுணுத்துக்கொண்டவள் முகத்தில், அத்தனை ஆத்திரம் இருந்தது.

"காவியா" என மீண்டும் ஒலித்த அன்னையின் சத்தமான குரலில் நினைவிற்கு மீண்டவள், சட்டென அந்த கதவை மூடிவிட்டாள்.

கடைசியாக ஒரு முறை கண்ணாடி பார்த்து தன்னை சரி செய்து கொண்டவள், பக்கத்தில் இருந்த சிறிய ஹேண்ட் பேக் எடுத்துகொண்டு இறங்கி வந்து விட்டாள்.

மகளை பார்த்த ராஜலக்ஷ்மி எப்போதும் போல் அவளுக்கு திருஷ்டி கழிக்க தவறவில்லை.

"சாப்பிட்டுட்டு கிளம்பு காவியா மா" என அவர் கூற,

"சேலட் மட்டும் கொடுங்க" என்று கூறிக்கொண்டே உணவு மேசையில் அமர்ந்தாள் காவியா.

"எப்போ பாரு இந்த காய்கறி மட்டும் சாப்பிட்டா எப்படி டா..! கொஞ்சம் சாதம் சாப்பிடு.. அம்மா தரேன்." என அவர் அன்பாக கூற,

"நோ மா. உடம்பு கொஞ்சம் போட்டாலும் அவ்வளவு தான்! அப்புறம் அக்கா ரோல், அம்மா ரோல்னு கூப்பிட ஆரம்பிச்சுடுவாங்க. நான் இப்படி ஸீரோ சைசா இருக்கும் வரை தான் ஹீரோயின்னா நடிக்க முடியும்.." என்றாள் காவியாஸ்ரீ அழுத்தமாக.

"இன்னுமும் நீ ஓடணுமா காவியா..! அதான் சீக்கிரமே கல்யாணம் ஆக போகுதே..! பேசாமல் செட்டில் ஆக வேண்டியது தானே..!" அவர் கூற்றில் அவரை நிமிர்ந்து பார்த்து கசப்பாக புன்னகைத்தாள் காவியா.

"ராகவன் விரும்பறதே இந்த அழகை தான் மா. இதை கெடுத்துகிட்டா கல்யாணமே நடக்காது.." என்றாள் நிதானமாக.

அவள் கூற்றில் ஒரு நொடி ராஜலக்ஷ்மிக்கு ஒன்றும் புரியவில்லை.

"நீ ராகவனை விரும்பற தானே காவியா! அப்புறம் ஏன் இப்படி பேசுற..! என்ன ஆச்சு டா..?" சிறு பதட்டத்துடன் அவர் கேட்கவும் தான், அவள் சுயநினைவிற்கே வந்தாள்.

"ஒன்னும் இல்ல மா. சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். நான் கிளம்பறேன். நீங்க ரெஸ்ட் எடுங்க." என்றவள், எழுந்து விட்டாள்.

அவள் உண்டு முடித்திருந்த சேலட் பவுலை வேலைக்கார பெண்மணி வந்து உடனடியாக எடுத்து சென்று விட்டாள்.

வெளியில் நின்ற பென்ஸ் கார் ஒன்றுடன் டிரைவர் தயாராக நிற்க, "நைட் வந்துடுவேன் மா. எனக்காக வெயிட் பண்ணாமல் தூங்கிடு.." என்றுவிட்டு காவியாஸ்ரீ கிளம்பி விட்டாள்.

அவள் நேராக சென்றது ராகவன் வீட்டிற்கு தான்.

அவள் வீடே பங்களா என்றால், அவனுடையது மாளிகை தான்.

காவியா இன்று தான் கதாநாயகி. ராகவனோ, பரம்பரை பணக்காரன். அவன் தந்தையும் சினிமாவில் நாயகன், அவன் சித்தப்பா ப்ரொடியூசர், தம்பி டைரக்டர் என பெரிய பணக்கார குடும்பம் அவனுடையது.

அவள் காரையும் உடனடியாக உள்ளே விடவில்லை.

தன் சீட்டின் ஜன்னலை திறந்தவள், தன்னிடம் இருந்த இன்விட்டேஷனை காட்டிய பின் தான், செக்யூரிட்டி கதவை திறந்தான்.

ஒரு கிலோமீட்டர் பக்கம் பயணம் செய்து வீட்டின் வாசலில் கார் நிற்க, காவியா இறங்கி கொண்டாள்.

டிரைவர் காரை பார்க் பண்ண சென்று விட, அங்கு ஏற்கனவே குழுமி இருந்த மீடியா அவளை சூழ்ந்து கொண்டது.

சில நிமிடங்கள் நின்று அவர்கள் கேட்டது போல் எல்லாம் போட்டோவிற்கு போஸ் கொடுத்துவிட்டு தான், அவள் நகர்ந்தாள்.

அன்று ராகவன் தம்பியின் பிறந்தநாள்.

மிகவும் சிம்பிளாக செய்வதாக கூறி ராகவன் செய்ததே இத்தனை பிரமாண்டமாக தான் இருந்தது.

பார்ட்டியை ஆர்கனைஸ் பண்ணும் ஒரு ஆள் வந்து காவியாவை உள்ளே அழைத்து சென்றான்.

அங்கு ஏற்கனவே அவளது சக நடிகைகள் சிலர் இருந்தனர்.

அனைவரும் வந்து அவளுடன் பேச, அவள் கண்களோ தன் தோழி சுகந்தியை தான் தேடியது.

சுகந்தி ஏற்கனவே காவியாவை கவனித்திருந்தாள்.

ஆனாலும் பார்த்தது போல் காட்டிக்கொள்ளாமல் அவள் பாட்டிற்கு ஒரு பக்கம் அமர்ந்திருக்க, காவியாவே அவளை தேடி வந்தாள்.

"என்ன டி, என்கூட பேச மாட்டியா..?" என சுகந்தியை ஒட்டி அமர்ந்து காவியா கேட்க,

"ப்ச், நான் தான் உன்கூட பேச பிடிக்கலைனு நேரடியா சொல்லிட்டேனே காவியா..! அப்புறமும் ஏன் எப்போ பாரு என்னை படுத்தற. நான் இங்க வர மாட்டேன்னு எவ்வளவோ சொன்னேன். எல்லாம் இந்த அப்பா பண்ணும் வேலை." தன்னை வற்புறுத்தி அனுப்பிய தன் தந்தையை தான் சுகந்தி நொந்து கொண்டாள்.

"அப்படி என்ன கோபம் சுகி உனக்கு..? எனக்கு உன்னை விட்டா யாரு டி உண்மையான பிரெண்ட் இருக்கா..! நீயும் முகத்தை தூக்கினா நான் எங்க போக..!" கவலையுடன் காவியா கேட்க, அதற்கு மேல் சுகந்தியாலும் ஒரேடியாக முகத்தை திருப்ப முடியவில்லை.

அதே நேரம் தன் பேச்சை கேட்காத தோழி மீது அவளுக்கு மலை அளவு கோபமும் இருந்தது.

"உன்கிட்ட என்ன பேசுறது கவி..! நீ நான் சொல்லுறதை கேட்க போறியா..? திரும்ப திரும்ப நீ சொல்லுறதை தான் சொல்லுவ. உன்கிட்ட பேசி மேலும் மேலும் கோவம் தான் எனக்கு அதிகமாகும்." ஆற்றாமையுடன் சுகந்தி கூற,

"அதை விடு சுகந்தி.. நாம வேற பேசலாமே..!" என்றாள் காவியா கெஞ்சலாக.

அதே நேரம், "ஹேய் பேப். வந்துட்டயா..?" என்ற ராகவன் குரல் கேட்க, சுகந்தி சட்டென எழுந்து நகர்ந்து விட்டாள்.

காவியாவும் முகத்தை சிரித்தது போல் வைத்து கொண்டு எழுந்தாள்.

"ஹாய் ராகவ். இப்போ தான் வந்தேன். நல்லா இருக்கேனா..?" என மலர்ந்து புன்னகையுடன் அவள் கேட்க,

"நீ எப்போதுமே தேவதை தான் பேப். வா. அம்மா அப்பா எல்லாரும் உள்ள இருக்காங்க. அங்க போகலாம்." என்றவன், அவள் தோளில் கைபோட்டு அணைத்து அவளை அழைத்துச்செல்ல, அவளும் அவனுடன் நடந்தாள்.

இருவரையும் பார்த்த சுகந்திக்கு தான் அத்தனை காந்தியது.

ராகவன் தன் அன்னை தந்தை இருந்த இடத்திற்கு காவியாவை அழைத்து செல்ல, அவர்களும் அவளை இன்முகத்துடன் வரவேற்றனர்.

ராகவன் அன்னை சௌமியா, "வா காவியா மா" என சாதரணமாக வரவேற்க, அவன் தந்தை அருள்குமரனோ, "இன்னும் கொஞ்சம் காஸ்டிலியா டிரஸ் பண்ணி இருக்கலாம். அவளுக்கு சொல்லி புரிய வை ராகவ்." என மகன் காதில் ரகசியமாக கூறினார்.

"ம்ம். நானும் நினைச்சேன். சொல்லிடறேன் பா." என்ற ராகவன், மற்ற வேலைகளை பார்க்க சென்று விட்டான்.

சிறிது நேரத்தில் பர்த்டே பார்ட்டியும் ஆரம்பித்தது.

ராகவன் தம்பி விஷ்ணு கேக் வெட்ட, அங்கிருந்த பிரபலங்கள் அனைவரும் சத்தமாக வாழ்த்து கூறினர்.

ஒரு பக்கம் மதுபானங்கள் கொடுக்கப்பட, மற்றொரு பக்கம் டி.ஜே பாடல்களை அலற விட்டான்.

அனைவரும் கையில் ஒரு மதுக்கோப்பையுடன் நடனமோ, தள்ளாட்டமோ ஏதோ ஒன்றை ஆடி கொண்டிருந்தனர்.

காவியா சுகந்தியை தேடி போகலாம் என்று நினைக்க, அதற்குள் ராகவன் அவளை தேடி வந்துவிட்டான்.

"பேப், ஹாட் ட்ரை பண்ணுரையா..?" என அவன் கேட்க,

"நோ தேங்க்ஸ் ராகவ். ஜூஸ் போதும்.." என்றாள் காவியா.

"பழகிக்கோ பேப். எப்பயுமே இப்படி ஒதுங்க முடியாது.." அவளை ஒற்றை கையால் அணைத்துக்கொண்டே அவன் கூற,

"ம்ம். பழகிக்கறேன் ராகவ்.." என்றாள் அவளும் மென்புன்னகையுடன்.

"ஷால் வீ டேன்ஸ் பேப்" என்ற ராகவன், அவள் பதிலை எதிர்பார்க்காமல் ஆட ஆரம்பிக்க, அவளும் அவனுடன் இணைந்து நடனமாடினாள்.

ராகவ்வுடன் ஆடி கொண்டிருந்தாலும், அவள் கண்கள் சுகந்தியை தான் தேடியது.

சுகந்தி விஷ்ணுவுடன் பேசிக்கொண்டிருப்பது தெரிய, அதற்கு மேல் அங்கு பார்க்காமல் காவியா திரும்பி விட்டாள்.

பார்ட்டி முடிந்து இரவு உணவெல்லாம் முடித்துக்கொண்டு காவியா கிளம்பி வீடு வந்து சேர, நள்ளிரவு ஆகி விட்டது.

*********

கோவை அருகில் ஒரு மலை கிராமம்.

மக்கள் அனைவரும் இயற்கையுடன் ஒன்றி வாழும் இடம் அது.

அங்கு ஒரு சிறிய குடிசை வாசலில் நந்தினி நின்றிருந்தாள்.

அவள் கண்கள் யாரையோ தேடி கொண்டிருந்தது.

பொறுமை இல்லாமல் அவள் அங்கும் இங்கும் நடக்க, அவள் தேடியவன் ஒருவாறு அவள் கண்கள் முன் நடந்து வந்தான்.

அவனை பார்த்ததும் தான் அவளுக்கு நிம்மதியான மூச்சே வந்தது.

அவள் வேகமாக அவன் அருகில் ஓடி வர, "ஹேய் நந்தினி, ரிலாக்ஸ். ஏன் இப்படி ஓடி வர..?" என்றான் சிவதேவ்.

"நீங்க அப்பா கூட போகாதீங்கன்னு சொன்னா கேக்கறதே இல்ல. எனக்கு பயமா இருக்கு சிவா.." என்றாள் நந்தினி கவலையுடன்.

"ஏன் மா, நான் என்ன சின்ன குழந்தையா..! அதெல்லாம் பார்த்து பத்திரமா இருந்துப்பேன். நீ தேவை இல்லாமல் பயப்படாத.." என்றவன், கையில் இருந்த மூலிகைகளை அந்த குடிசைக்குள் வைத்தான்.

"நீங்களாவது அவரை விட்டுட்டு போக கூடாதா பா..?" என அவள் தந்தை புறம் திரும்ப,

"சிவாவிடம் பேசி நீ தான் ஜெயித்து காட்டேன்.." என்றார் வனராஜன்.

அவர் சொன்னதும் உண்மை தான். அவன் யார் பேச்சையும் கேட்க மாட்டானே..!

"அவரை பார்த்தால் இந்த வேலை எல்லாம் பழக்கம் இருப்பது போலவே தெரியலை பா.. ஏதாவது அடிபட்டால் கஷ்டம் தானே..!"

"அவன் தைரியமானவன் நந்தினி மா. அவன் தைரியம் தான் அவனை இவ்வளவு சீக்கிரம் எழுப்பி இருக்கு. நீ தேவை இல்லாமல் மனசை போட்டு அலட்டிக்காத. என் கூட தானே வரான். நான் பார்த்துக்கறேன்.."

"நந்தினி கொஞ்சம் மோர் கொடேன்" என கேட்டுக்கொண்டே சிவதேவ் வர,

"இதோ வரேன் சிவா" என்றவள், அடுத்த நொடி குடிசைக்குள் ஓடி விட்டாள்.

அவளை தாண்டி சிரித்துக்கொண்டே தான் சிவதேவ் வெளியில் வந்தான்.

அவனும் வனராஜனும் அங்கிருந்த ஒரு பெரிய பாறையில் அமர்ந்தனர்.

"அவ பயப்படறதும் சரி தானே சிவா..! இப்போ தான் உடம்பு கொஞ்சம் கொஞ்சமா சரியாகிட்டு வருது. அதுக்குள்ள ஏன் இப்படி அடம் பிடிச்சு உடம்பை வருத்திக்கற..?"

"இதில் என்ன சார் கஷ்டம் இருக்கு..! ஏதோ என்னால் முடிஞ்ச சின்ன உதவி செய்யுறேன். அவ்வளவு தான்.." என்றவன் நந்தினி கொண்டு வந்து கொடுத்த மோரை வாங்கி கொண்டான்.

வனராஜன் ஒரு பக்கம் மூலிகைகளை பரிக்க, சிவதேவும் அவருக்கு உதவினான்.

இரவு வரை எதுவும் யோசிக்காமல் சுற்றியவனுக்கு, இரவு தூங்கும் போது தான் பல இம்சைகள் ஏற்படும்.

அன்றும் அப்படி தான்.

கண் மூடி படுத்தவன் கண்முன் ஏதேதோ தெளிவில்லாத பிம்பங்கள் தோன்றியது.

கடைசியாக யாரோ பின்னந்தலையில் ஓங்கி அடித்தது தான் அவன் மனக்கண்முன் தோன்றி தோன்றி மறைந்தது.

யார் என்ற முகம் தான் புலப்படவில்லை.

அது தெரியும் நாளுக்காக தான் அவன் காத்திருந்தான்.

அவன் மனதில் ஏதோ ஒரு மிக பெரும் வெறி எழுந்துகொண்டே இருந்தது.

அதற்கு முழுதாக உருவம் கொடுக்க முடியாமல் தான் அவன் தவித்து கொண்டிருந்தான்.

நினைவுகளின் பிடியில் இருந்து வெளியே வந்தவன், சட்டென கண்களை திறந்தான்.

அது கன்றி சிவந்திருந்தது.

அவன் மனதின் வெறியை கண்கள் வெளிப்படுத்தியதோ..!

பக்கத்தில் இருந்த தண்ணீரை எடுத்து தொண்டையில் முழுதாக சரித்தவன், அதன் குளுமையில் மனதை குளிர்விக்க முயன்று, எப்படியோ மீண்டும் உறங்கி போனான்.

இளைப்பாறும்..

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 2:



காலை நேரம் சிவதேவ் சில கைவினை பொருட்கள் அமர்ந்து செய்து கொண்டிருந்தான்.



அவன் செய்யும் அழகான கைவினை பொருட்கள் நன்றாக வியாபாரம் ஆகும்.



அந்த கிராமத்தில் இருந்த ஒருவர் கீழே சென்று விற்று வருவார்.



செய்ததற்கான பணம் சிவதேவிற்கு, விற்ற லாபம் அவருக்கு என பிரித்து கொள்வார்கள்.



இப்போது கூட சிறிய மரத்துண்டு ஒன்றில் அழகான விநாயகர் தான் செய்து கொண்டிருந்தான்.



"சிவா எல்லாம் தயாரா பா..? இன்னிக்கு வியாபாரம் போகணும்.." சொக்கன் கேட்டு கொண்டே வந்தான்.



அவன் தான் இந்த பொருட்களை விற்பது.



"ஆச்சு சொக்கா. அந்த கூடை நிறைய இருக்கு பாருங்க. எடுத்துட்டு போங்க." என்றான் சிவதேவ்.



அவன் செய்து வைத்திருந்ததை பார்த்த சொக்கனின் கண்கள் வழக்கம் போல் ஆச்சர்யத்துடன் விரிந்தது.



வெறுமென அங்கு கிடைக்கும் பொருள்களையே வைத்து சிறு சிறு கடவுள் சிலைகள், அழகான காதல் சிலைகள், பெண் ஸ்டென்ட், சின்ன பொருட்கள் போடும் டப்பாக்கள், வீட்டு அலங்கார பொருட்கள் என பல வகைகள் செய்திருந்தான்.



"உன் திறமையே தனி சிவா" என சொக்கன் பாராட்ட,



"தேங்க்ஸ் சொக்கா" என்றான் சிவதேவ் சிறு புன்னகையுடன்.



சொக்கனுக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உண்டு.



அவனுக்கு தெரிந்ததெல்லாம் கிடைப்பதை விற்பது தான்.



இப்போது சிவதேவ் புண்ணியத்தில், அவன் வாழ்க்கை ஒரு சீராக ஓடிக்கொண்டிருந்தது.



சிவா செய்து வைத்திருந்த பொருட்களை எடுத்துக்கொண்டு அவன் கிளம்பி விட, சிறிது நேரத்திலேயே நந்தினி வந்து நின்றாள்.



"என்ன சிவா, இன்னிக்கு விநாயகரா..!" என கேட்டுக்கொண்டே அவள் அமர,



"ஆமா மா" என்றான் அவன்.



"நான் எப்படி இருக்கேன்?" என அவள் கேட்டு வைக்க, கை வேலையாக இருந்தவன், நிமிர்ந்து அவளை பார்த்தான்.



"நல்லா தான் இருக்க. என்ன திடீர்ன்னு..?" என்றவன் மீண்டும் வேலையை தொடர,



"புது சுடிதார் சிவா. என் பிரெண்ட் வாங்கி கொடுத்தா. நேத்து கூட வெளியில் போனேனே, அப்போ வாங்கினது.. கொஞ்சம் பார்த்து சொல்லுங்களேன்..!" என அவள் மீண்டும் கேட்க,



"நல்லா தான் இருக்கு நந்தினி மா" என்றான் அவன் நிமிராமலே.



அவனுக்கு அப்போதைக்கு விநாயகர் தும்பிக்கை தான் முக்கியம்.



"ப்ச். பாக்கவே இல்ல..!" என நந்தினி புலம்பி கொண்டது அவன் காதில் விழுந்தது போலவே தெரியவில்லை.



அவன் நிமிராவிட்டால் என்ன..! அதுவும் அவளுக்கு வசதி தான். அவள் பாட்டிற்கு அவனை ரசிக்க தொடங்கி விட்டாள்.



ஒரு வெள்ளை உள்பனியனும், லுங்கியையும் தான் அணிந்திருந்தான்.



சிலையை உற்று பார்த்து அவன் செதுக்கி கொண்டிருக்க, அவன் புஜங்கள் இறுகிய அழகை அவள் ஆச்சர்யமாக பார்த்தாள்.



"எப்படி உனக்கு கை இவ்ளோ பெருசா இருக்கு சிவா..?" என்றவள் உடற்பயிற்சியால் இறுகி இருந்த அவன் தோள்பட்டையை தொட்டு பார்க்க, அவன் சட்டென்று விலகி விட்டான்.



"நிறைய எக்சர்ஸைஸ் செய்வேன்னு நினைக்கறேன்"



"ஓ! இப்போ பண்ணுறதில்லையா..?"



"இங்கே என்ன முடியுமோ அது மட்டும் பண்ணுறேன்.."



"நான் பார்த்தே இல்லையே..!"



"நீ எழுந்துக்கறது பாதி மதியம். அந்த நேரத்தில் உடற்பயிற்சி எல்லாம் பண்ண முடியாது.."



"ஒன்பது மணி உங்களுக்கு மதியமா..?"



"கிட்டத்தட்ட..!"



"அப்போ நானும் நாளையில் இருந்து அஞ்சு மணிக்கே எழுந்துக்கறேன்.." என அவள் வீராப்பாக கூற, அவளை நிமிர்ந்து பார்த்து சிரித்தவன், "பார்ப்போம்" என்றான் கிண்டலாக.



"சிரிக்கறீங்களா..! நான் எழுந்து காட்டுவேன்..!"



"அதையும் பார்ப்போமே" என்றவன் தான் செய்து முடித்திருந்த சிலையை ஒரு பக்கம் வைத்துவிட்டு எழுந்தான்.



நந்தினி பள்ளி படிப்பை முடித்துவிட்டு இப்போது கல்லூரி படித்துகொண்டிருந்தாள். அவளுக்கு பத்து மணிக்கு தான் கல்லூரி தொடங்கும் என்பதால், தாமதமாக தான் எழுந்துகொள்வது.



தினமும் வனராஜன் கத்தி எழுப்புவது பக்கத்து குடிலிலேயே இருக்கும் அவன் காதில் கேட்காமலா போகும்..!



"இது கொடுக்க தான் வந்தேன்" என அவள் ஒரு தட்டை நீட்ட, அதில் வேக வைத்த கிழங்கு வைகைகள் இருந்தது.



"தேங்க்ஸ்" என அதை வாங்கி கொண்டவன், அங்கேயே சாப்பிட்டும் முடித்துவிட்டான்.



அதற்கு மேல் அவன் வனராஜனுக்கு உதவ சென்று விட, நந்தினி மதிய சமையல் வேலையை பார்த்தாள்.



விடுமுறை நாட்களில் அவள் செய்வதை, அவளுக்கு கல்லூரி இருக்கும் நாட்களில் ஆண்களே செய்து விடுவார்கள்.



*******



காவியா ஒரு வீட்டின் முன் நின்றிருந்தாள்.



கதவை தட்டிவிட்டு காத்திருந்தவள், அங்கிருந்த சிறிய தோட்டத்தில் இருந்த காய்ந்த ரோஜா செடியை தான் பார்த்து கொண்டிருந்தாள்.



என்றோ ஒரு நாள் அதில் பூத்து குலுங்கிக்கொண்டிருந்த ரோஜாக்கள், அவள் கண் முன் நிழலாடியது.



அந்த செடி மட்டுமா கருகி போனது..!



"வா காவியா மா" என்ற குரல் அவள் நினைவுகளை கலைக்க, அவளும் திரும்பினாள்.



பர்வதம் கதவை திறந்திருக்க, "எப்படி இருக்கீங்க ஆண்ட்டி..?" என கேட்டுக்கொண்டே காவியா உள்ளே நுழைந்தாள்.



"இருக்கோம் மா. காஃபி போடறேன். உட்காரு.." என்றவர், சமையல் அறை நோக்கி நடக்க,



"நானும் வரேன் ஆண்ட்டி" என்றவள் அவருடன் இணைந்து கொண்டாள்.



சமையலறை மேடையில் சாய்ந்து நின்று கொண்டவள், "அங்கிள் எங்க ஆண்ட்டி..?" என கேட்க,



"சும்மா ப்ரெண்ட்ஸ் பாக்க போய் இருக்காரு மா. நான் தான் அனுப்பி வச்சேன். வீட்டில் இருந்தா ஏதாவது யோசிச்சு உடம்பை கெடுத்துக்கறாரு. ஏதோ கொஞ்ச நேரமாவது எல்லாம் மறந்து இருக்கட்டும்.." என்றவர், காஃபியை கலந்து அவளிடமும் கொடுத்துவிட்டு, தானும் எடுத்துக்கொண்டார்.



"உனக்கு படம் எல்லாம் எப்படி போகுது காவியா மா..?"



"எல்லாம் ஓகே தான் ஆண்ட்டி."



"சாப்பிடறயா காவியா மா..?"



"ம்ம். சாப்பிடறேன் ஆண்ட்டி. என்ன சமையல்..?"



"இனி தான் ஏதாவது பண்ணனும் டா. எனக்கும் அவருக்கும்னா வெறும் தயிர் சாதம் போதும்னு நினைச்சிருந்தேன். வேற ஏதாவது பண்ணுறேன் டா."



"ஏன் ஆண்ட்டி, நான் சாப்பிட்டால் தான் பண்ணுவீங்களா..! நீங்களும் அங்கிளும் சத்தான உணவா சாப்பிட வேண்டாமா..?" ஆற்றாமையுடன் காவிய கேட்க, அவளை வெறுமையாக பார்த்தார் பர்வதம்.



"நாங்க நல்லா இருந்து என்ன பண்ண போறோம் காவியா மா..! எவ்வளவு சீக்கிரம் போறோமோ, அவ்வளவு நிம்மதி.." என்றவர் பேசிக்கொண்டே காய்கறியை எடுக்க,



"இப்படி பேசாதீங்கன்னு சொல்லி இருக்கேன் தானே ஆண்ட்டி. நான் உங்களையும் அங்கிளையும் என் அம்மா அப்பா மாதிரி தான் பாக்கறேன். ஆனா நீங்க என்னை மதிக்கறதே இல்லை." கோபம் போல் கூறிவிட்டு அவள் ஹாலுக்கு சென்று அமர்ந்து விட்டாள்.



அவள் கண்கள் தானாக அங்கு மாட்டி இருந்த ஒருவன் படத்தை தான் பார்த்தது.



அதை பார்த்ததுமே, எப்போதும் போல் அவள் கண்கள் கலங்கியும் விட்டது.



'உன்கிட்ட கொடுத்த வாக்கை காப்பாற்றமுடியாமல் போய்டுமோனு பயமா இருக்கே டா!' மனதிற்குள் அவள் புலம்பி கொண்டிருந்த போதே, பர்வதம் அவள் அருகில் வந்து அமர்ந்தார்.



"நீயும் கோவப்பட்டால் எங்களுக்கு வேற யாரு இருக்கா காவியா மா..!" வெங்காயத்தை நறுக்கி கொண்டே அவர் பேச,



"அப்புறம் நீங்க மட்டும் இப்படி பேசலாமா ஆண்ட்டி...?" என்றாள் அவளும் வேதனையுடன்.



"சரி மா. பேசலை விடு. சாம்பாரும் உருளைக்கிழங்கும் பண்ணுறேன். உனக்கு ஓகே தானே..!" என அவர் கேட்க,



"டபிள் ஓகே ஆண்ட்டி.." என்ற காவியா, தானும் காய்கறியை நறுக்கினாள்.



சிறிது நேரத்தில் பர்வதம் கணவர் ரங்கநாதனும் வந்துவிட்டார்.



"அட டா, காவியா எப்போ வந்த மா..?" என கேட்டுக்கொண்டே அவர் வர,



"கொஞ்ச நேரம் ஆச்சு அங்கிள். உங்க ப்ரெண்ட்ஸ் எல்லாரும் என்ன சொல்லுறாங்க..?" என்றாள் அவள்.



"என்ன மா பெருசா பேசிட போறோம்! எல்லாம் உலக நிலவரம் தான். நீங்க வேலையை பாருங்க. நான் குளிச்சுட்டு வரேன்.." என்றவர், உள்ளே சென்றுவிட்டார்.



பர்வதம் அளவு உணர்வுகளை வெளிக்காட்டா விட்டாலும், அவரும் உள்ளுக்குள் ஓய்ந்து தான் போய் இருந்தார்.



மதிய உணவும் முடிந்து, சிறிது நேரம் கழித்து தான் காவியா கிளம்பினாள்.



கிளம்பும் முன் பர்வதத்திடம் வந்தவள், தன் ஹேண்ட் பேக்கில் இருந்து ஒரு ஐநூறு ரூபாய் கட்டை எடுத்து அவரிடம் கொடுத்தாள்.



"பணம் எல்லாம் வேண்டாம் காவியா மா. அங்கிள் பென்சன் பணமே எங்களுக்கு போதுமானதா இருக்கு. உனக்கு எத்தனை முறை நான் சொல்லிட்டேன் மா..!"



"நானும் இதுக்கு பல முறை பதில் சொல்லிட்டேன் ஆண்ட்டி. இது என் கடமை. பணத்தை நீங்க வச்சுக்கிட்டாலும் சரி, கோவில் உண்டியலில் போட்டாலும் சரி. என் கையை மட்டும் கட்டாதீங்க. உங்களுக்கும் அங்கிளுக்கும் அடுத்த மாசம் ஹாஸ்பிடல் போகணும். நான் வருவேன். ரெண்டு பேரும் என்கூட வரீங்க. இப்போவே சொல்லிட்டேன். எதுவும் அடம் எல்லாம் பிடிக்கும் ஐடியா வச்சுக்காதீங்க.."



"காவியா...."



"பர்வதா விடு. அவ கிட்ட பேசி ஜெயிக்க முடியாது.." பர்வதம் மறுக்க வாய் திறந்த போதே ரங்கநாதன் கூறிவிட, அவரும் வாயை மூடி கொண்டார்.



"கிளம்பறேன் ஆண்ட்டி. எதுனாலும் என்னை கூப்பிடுங்க ப்ளீஸ்.." என்றுவிட்டு தான் காவியா கிளம்பினாள்.



வாசல் வரை வந்து இருவரும் அவளை வழி அனுப்பினர்.



"இந்த பொண்ணு சொன்னால் கேட்கவே மாட்டேங்கறாங்க..! நம்ம பையனே போய்ட்டான். எனக்கு வாழும் ஆசையே விட்டுப்போச்சுங்க. ஆனால் இந்த பொண்ணு நம்மை பாசத்தால் ஒரேடியா கட்டிபோடறா.." மனம் கேட்காமல் பர்வதம் புலம்ப,



"விடு பர்வதா. அவளுக்குனு ஒரு வாழ்க்கை அமையும் வரை தான் எல்லாமே. சீக்கிரம் சரியாகிடுவா. அதுவரை அவ மனசு அமைதிக்கு என்ன தோணுதோ செய்யட்டும். அவளும் நமக்கு பொண்ணு மாதிரி தான்.." என மனைவியை சமாதானம் செய்து உள்ளே அழைத்து சென்றார் ரங்கநாதன்.



********



காவியாஸ்ரீ வீட்டிற்குள் நுழைந்ததுமே, ராஜலக்ஷ்மி அவளிடம் வந்து விட்டார்.



"ராகவன் தம்பி வந்திருந்தார் காவியா. உன்னை தேடி தான் வந்தாரு. நீ எங்க போய் இருக்கேனு கேட்டாரு. நான் தெரியாதுன்னு சொன்னதில் கொஞ்சம் கோவமா கிளம்பின மாதிரி இருந்தது டா." கவலையும் பதட்டமுமாக அவர் கூற,



"விடு மா. இதுக்கு ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகற..! நான் பேசிக்கறேன்." என்றவள், நிதானமாக தன் போனை எடுத்தாள்.



அதில் ராகவனிடம் இருந்து ஐந்து மிஸ்ஸெட் கால் வந்திருந்தது.



அவள் சைலென்டில் வைத்திருந்ததால் ஒன்றும் தெரியவில்லை.



மீண்டும் அவனுக்கு அழைத்தவள், அப்படியே தன் அறைக்குள் நுழைந்தாள்.



அவனோ போன் எடுத்ததுமே, "எங்க போன பேப்? ஏன் போன் கூட எடுக்கலை..?" என கோபத்துடன் கேட்க,



"சாரி ராகவ். ஒரு கதை கேட்க போய் இருந்தேன். அம்மா கிட்ட வெளியில் போறேன்னு மட்டும் தான் சொல்லிட்டு போனேன். அதான் அம்மாக்கு தெரியல. கதை கேட்கும் போது எப்பவுமே போன் சைலன்ட்டில் வைப்பது தானே..! சாரி. நீங்க பிசியா இருப்பீங்கனு தான் உங்களுக்கு கூப்பிடலை." தன்மையாக அவள் கூறியதில், அவன் கோபம் குறைந்தது.



"ஓகே. விடு பேப். கதை ஓகேவா..? கமிட் ஆகிட்டயா..? எந்த ப்ரொடக்ஷன்..?"



"இல்ல ராகவ். மொக்க கதை. புது டைரக்டர். ப்ரொடக்ஷனும் சின்னது தான். வேண்டாம்னு சொல்லிட்டு வந்துட்டேன்."



"குட்.. குட்.. சின்ன கதை எல்லாம் பண்ணாத. அண்ட் கொஞ்ச நாளைக்கு புது கதை எதுவும் கமிட் ஆகாத பேப்.. எதுனாலும் என்கிட்ட சொல்லு.."



"சொல்லுறேன் ராகவ். ஏன் அப்படி சொல்லுறீங்க..?"



"நம்ம கல்யாண விஷயம் பேசிடலாம்னு இருக்கேன் பேப். வீட்டிலும் கல்யாண பேச்சு எடுக்கறாங்க. சோ சொல்லிடலாம்னு பாக்கறேன்.." அவன் அந்த பக்கம் பேச பேச, இந்த பக்கம் காவியாவின் கண்கள் ஒளிர்ந்தது.



அதை அவன் பார்க்காமல் போனது தான் அவன் துரதிஷ்டம்.



"நாம கொஞ்சம் நேரில் பேசலாமா பேப்..?" என ராகவன் கேட்க,



"கண்டிப்பா ராகவ்" என்றாள் காவியா.



அவள் குரலில் அத்தனை ஆர்வம் இருந்தது.



"நாளைக்கு மார்னிங் உன்னை பிக் அப் பண்ணிக்கறேன் பேப். ரெடியா இரு. ஷூட் இருக்கா..?"



"இருக்கு ராகவ். நான் தள்ளி வைக்க சொல்லிக்கறேன்.." என்றுவிட்டாள் காவியா.



அவள் குரலில் இருந்த அதீத ஆர்வத்தை கவனிக்காத ராகவானோ, அப்பாவியாய் போனை வைத்தான்.

இளைப்பாறும்..

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 3:



ராகவனும் காவியாவும் ஒரு ஐந்து நட்சத்திர உணவகத்தில் அமர்ந்திருந்தனர்.



"அப்பா கிட்ட பேசிட்டேன் பேப்" என்ற ராகவன் ஒரு நொடி நிறுத்த,



"முழுசா சொல்லுங்க ராகவ்" என்றாள் காவியாஸ்ரீ.



"அம்மாக்கு சம்மதம் தான் பேப். சொல்லப்போனால் உன்னை அவங்களுக்கு பிடிச்சு போச்சு. அப்பா தான் கொஞ்சம் யோசிக்கறாரு..."



"சோ.." என காவியா அவனை ஆழமாக பார்க்க,



"ஹேய், நீ என்ன என்னை சந்தேகமா பாக்குற..! அவரை சம்மதிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு.." என்றான் ராகவன் வேகமாக.



"அப்புறம் என்ன தயக்கம் ராகவ்?"



"கொஞ்சம் போராடனும் பேப். அவர் ஸ்டேட்டஸ் ரொம்ப பாக்கறாரு. என்ன தான் இப்போ நீயும் பெரிய ஹீரோயின் என்றாலும், பேமிலி பேக்ரவுண்ட் இல்லைனு ஆர்க்யூ பண்ணுறாரு. அவருக்கு புரிய வைக்கணும்..." தயக்கத்துடன் தலை கோதி கொண்டே அவன் கூற, காவியா அவனை அமைதியாக பார்த்து கொண்டிருந்தாள்.



"நீங்க தான் எனக்கு ப்ரொபோஸ் பண்ணினீங்க ராகவ். இப்ப நானும் உங்களை விரும்பறேன். நீங்க தான் வாழ்க்கைனு நினைச்சு வாழ்ந்துட்டு இருக்கும் என்னை ஏமாத்த போறீங்களா..?" வெறுமையான குரலில் அவள் கேட்கவும், அவனுக்கு தாங்கவில்லை.



"ஏய், என்ன பேப் ஏமாற்று அது இதுனு ஏன் பேசற..? அப்பாவை சம்மதிக்க வைக்கணும்னு சொல்ல வந்தேன். அவ்வளவு தான். ஐ லவ் யு பேப். அண்ட் ஐ மீன் இட்." அழுத்தமாக கூறியவன் எழுந்து அவள் அருகில் வந்தான்.



சேரை இழுத்து அவள் அருகில் போட்டுகொண்டு அமர்ந்தவன், "எனக்கு உன்னை தான் கல்யாணம் பண்ணிக்கணும் பேப். உன்னை விட அழகான சிறந்த பெண் என்னை பொறுத்தவரை இந்த உலகத்திலேயே இல்ல. நீ கவலைப்படாத. நான் அப்பா சம்மதம் வாங்கிட்டு சீக்கிரமே வரேன்." என்றவன் அவளை அணைத்துக்கொள்ள, அவளும் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.



"நம்ம கல்யாணம் நடக்கணும் ராகவ்" நிமிராமல் அழுத்தமாக காவியா கூற,



"கண்டிப்பா நடக்கும் பேப்" என்றான் அவனும் உறுதியாக.



குடித்த ஜுஸுக்கு பில் கட்டிவிட்டு இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.



ஹோட்டலை விட்டு இருவரும் வெளியே வர, திடீரென எங்கிருந்தோ வந்த நாலு மீடியா ஆட்கள் அவர்களை சூழ்ந்து கொண்டனர்.



"ஹாய் சார், எப்படி இருக்கீங்க..? நீங்க ரெண்டு பேர் மட்டும் தனியா வந்தீங்களா..? ஏதாவது குட் நியூஸா..?" என ஆளாளுக்கு கேட்க, அவர்களை சுத்தமாக எதிர்பார்க்காத ராகவன் மொத்தமாக திணறி தான் போனான்.



அவன் சுதாரிக்கும் முன், அவனும் காவியாவும் கை கோர்த்திருப்பது போல் பல புகைப்படங்களும் வீடியோக்களும் எடுத்து விட்டனர்.



"ப்ளீஸ், ப்ளீஸ், இது பிரைவேட் மீட். மீடியாவில் எல்லாம் பரப்பாதீங்க." என ராகவன் வேகமாக கூற,



"அப்படி என்ன பிரைவசி..!" என்றான் ஒருவன் நக்கலாக..



அவன் கேள்வியில் சுள்ளென கோபம் வந்தாலும், ராகவன் கட்டுப்படுத்தி கொண்டான்.



"ஜஸ்ட் மூவி டிஷ்கஷன் கைஸ். வேற ஒன்னும் இல்ல. ப்ளீஸ் மூவ்.." என்ற ராகவன், காவியா கையை அழுத்தமாக பிடித்து அவளையும் அழைத்துக்கொண்டு வந்து காரில் ஏறிவிட்டான்.



காரை எடுத்துவிட்டவனுக்கு பரபரப்பு மட்டும் குறையவே இல்லை.



இவங்களுக்கு எப்படி நாம இங்க இருக்கறது தெரியும் என அவன் புலம்ப, "மீடியாக்கு நாலு பக்கமும் கண்ணு ராகவ். யாராவது பார்த்து சொல்லி இருப்பாங்க." என்றாள் காவியா.



அவள் சொல்வதை என்னவோ அவன் ஒத்துக்கொள்ள தான் வேண்டி இருந்தது.



"ப்ச், ஒரு பத்து நிமிஷம் நிம்மதியா வெளில வர முடியலை. என்னவோ போ."



"என்ன பண்ணுறது ராகவ்..! ஸ்டார்னு பேர் எடுக்க போராடறோம். அப்போ இதையும் பேஸ் பண்ணி தானே ஆகணும்.."



"ம்ம். அதுவும் உண்மை தான் பேப்.." என ஒத்துக்கொண்டவன், முதலில் அவளை இறக்கி விட்டுவிட்டு தான் சென்றான்.



**********



அதே நாள் மாலை அருள்குமரன் எதிரில் ராகவன் தலைகுனிந்து நின்றிருந்தான்.



அவரோ மகனை ஏகத்திற்கும் முறைத்து வைத்தார்.



"என்ன டா, நான் சம்மதிக்க மாட்டேன்னு சொன்னதும் வேணும்னே இப்படி ஒரு சீன் கிரியேட் பண்ணிட்டயா..? மொத்த மீடியாவும் இப்போ உன்னையும் காவியாவையும் பத்தி தான் பேசுது. இந்த பேச்சை இப்படியே விட்டால், உன் நேம் ஸ்பாயில் ஆகிடும். நம்ம குடும்பத்துக்குனு ஒரு இமேஜ் இருக்கு. அது கெடவே கூடாதுனு உனக்கு படிச்சு படிச்சு சொல்லி இருக்கேன் ராகவ். இருந்தும் இப்படி பண்ணி இருக்கனா, அப்படி என்ன டா மோகம்..!"



“அப்பா ப்ளீஸ்.."அருள்குமரன் கத்திக்கொண்டிருக்கும் போதே, ராகவன் இடை புகுந்தான்.



"நான் வேணும்னு பண்ணலை பா. உங்களுக்கு குடும்ப கௌரவம் எவ்ளோ முக்கியமோ, அதே அளவு எனக்கும் முக்கியம். இது தெரியாமல் நடந்த நிகழ்வு தான். எவனோ பார்த்து தொலைச்சுட்டான்.." என்றான் ராகவனும் சலிப்புடன்.



மகன் பதிலில் அருள்குமரனும் சற்றே நிதானித்தார்.



"அப்போ நீ வேணும்னு பண்ணல..?"



"இல்ல பா"



"ம்ம், சரி. அப்போ அந்த பொண்ணு வேண்டாம் தானே..? நான் சொல்லும் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கற தானே..?"



"நோ பா. மீடியாக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை.பட் காவியா எனக்கு வேணும். ஐ நீட் ஹெர் அட் எனி காஸ்ட்."



"அப்படி அவ கிட்ட என்ன டா இருக்கு..? உருப்படியான ஒரு பேக்ரவுண்ட் கூட இல்ல..! ஏன் டா இப்படி உயிரை வாங்குற..!"



"அப்பா ஐ லவ் ஹர். எத்தனையோ பேர் காவியா பின்னாடி சுத்தினாங்க. எனக்கே தெரியும். பட் அவ என் லவ்வை தான் அக்செப்ட் பண்ணினா. மே பீ பேமிலி பேக்ரவுண்ட் இல்ல. பட் அவ அளவு ஒரு ஹேப்பனிங் ஹீரோயினும் உங்களால் தேட முடியாது. பேமிலி மட்டும் பாக்காதீங்க பா. அவ பென்டேஸ்ட்டிக் ஆக்டர். நானும் அவளும் வாழ்ந்து எங்களுக்குனு ஒரு குழந்தை வந்ததும், நம்ம பேமிலி தரம் உயர தான் செய்யுமே ஒழிய, கட்டாயம் குறையாது.." என்றான் ராகவன் அழுத்தமாக.



அத்தனை நேரம் அழுத்தமாக மறுத்துக்கொண்டிருந்த அருள்குமரனும், இப்போது சற்றே அமைதியானார்.



மகனும் எதுவும் யோசிக்காமல் வரட்டு பிடிவாதம் பிடிக்கவில்லையோ என அவருக்கும் தோன்ற தொடங்கியது.



"இது சரிவரும்னு தோணுதா ராகவ்..?" இன்னுமும் குழப்பத்துடன் அவர் கேட்க,



"கண்டிப்பா சரி வரும் பா. காவியாக்கு இருக்கும் மார்க்கெட் பத்தி நான் சொல்ல தேவையில்லை. உங்களுக்கே தெரியும். யோசிங்க பா. ப்ளீஸ்.." கெஞ்சலாக அவன் கேட்க,



"ம்ம்.." என்றவர் சிறிது நேரம் அமைதியாக அங்கும் இங்கும் நடந்தார்.



இப்போதைக்கு மறுத்தால் நிலை இன்னுமும் மோசம் தான் ஆகும் என அவருக்கு ஒருவாறு புரிந்தது.



"சரி ராகவ். காவியாவையும் அவ அம்மாவையும் நம்ம வீட்டுக்கு வர சொல்லு. பேசி முடிக்கலாம்.." என அவர் கூற,



"நாம தானே பா போகணும்..!" என்றான் ராகவன் தயக்கத்துடன்.



"காவியா தான் பெண் என்னும் போது, அந்த பார்மாலிட்டி எல்லாம் தேவையில்ல ராகவ். எல்லாமே நாம தான் எப்படியும் பண்ண போறோம். அவங்களையே வர சொல்லு. நான் நல்ல நாள் மட்டும் பார்த்துட்டு சொல்லுறேன்.." என அவர் முடித்துவிட்டார்.



இந்த விஷயத்தை காவியாவிடம் கூறினால் எப்படி எடுத்துக்கொள்வாளோ என ராகவனுக்கு சிறு பயம் வந்தது தான்.



ஆனால் இதற்கு மேல் தந்தையை எதிர்க்கும் தைரியம் அவனுக்கு இருக்கவில்லை.



காவியாவிடமே பேசிக்கொள்வோம் என முடிவு செய்து விட்டான்.



*************



சிவதேவ் வேலை முடித்து தன் குடில் விட்டு சற்றே தள்ளி இருந்த பாறையில் வந்து அமர்ந்திருந்தான்.



எதிரில் தெரிந்த முடிவில்லா மலையை வெறித்துக்கொண்டிருந்தவன் மனநிலையும், அதே போல் ஒரு முடிவில்லாமல் தான் இருந்தது.



அந்த மலையின் எல்லையை கூட தொட்டுவிடலாம். அவன் மனம் தான் சரியான பாதை எதுவும் காட்டாமல் அவனை படுத்தி கொண்டிருந்தது.



அப்போது தான் கல்லூரி முடிந்து வந்திருந்த நந்தினி, வந்ததும் முகம் அலம்பி உடை மாற்றிக்கொண்டு அவனை தேடி தான் வந்தாள்.



'சி....' என அவள் வாய் திற்கும் போதே, அவள் போன் அடித்தது.



அந்த மலை கிராமத்தில் மொத்தமே சிலரிடம் தான் போன் உண்டு.



அதில் நந்தினியும் ஒருத்தி.



ஒரு சில இடங்களில் மட்டுமே டவரும் கிடைக்கும்.



போனில் வந்த எண்ணை பார்த்தவள், சிவாவை ஒரு முறை பார்த்துவிட்டு, அவன் தன்னை கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்துகொண்டு நகர்ந்தாள்.



சிறிது தூரம் வந்ததும் போனை ஆன் செய்து அவள் காதில் வைக்க, அந்த பக்கம் இருந்து முதல் கேள்வியே, "சிவா எப்படி இருக்கான்..?" என்று தான் வந்தது.



"ரொம்ப நல்லா இருக்கார்.."



"மாத்திரை மருந்து எல்லாம் மறக்காமல் சாப்பிடறானா..?"



"நான் எல்லாம் சரியா பார்த்துப்பேன்.." அழுத்தமாக நந்தினி பதில் கொடுத்தாள்.



"நாளைக்கு டாக்டர் கூட்டிட்டு வரேன்.."



"நீங்க வர வேண்டாம். டாக்டர் மட்டும் அனுப்புங்க. போதும்.."



"என்னை தடுக்கும் உரிமை உனக்கு மட்டும் இல்லை. யாருக்குமே கிடையாது. நாளைக்கு வரோம். அவ்வளவு தான்." என்றதுடன் பட்டென போன் வைக்கப்பட்டது.



இங்கு நந்தினிக்கு தான் அத்தனை கோபம் வந்தது.



அவளுக்கா உரிமை இல்லை..!



'உரிமையை பெற்று காட்டுறேன் பார்' என சூளுரைத்துக்கொண்டாள் அவள்.



"நந்தினி எப்போ வந்த..?" என்ற வனராஜன் குரலில் அவள் வேகமாக முகத்தை சரிசெய்து கொண்டு திரும்பினாள்.



"இப்போ தான் பா" என கூறிக்கொண்டே அவள் தந்தையை நோக்கி நடக்க, அவர் தான் வாங்கி வந்திருந்த சோளகதிரை அவளிடம் கொடுத்தார்.



"சிவாவுக்கும் சுட்டு கொடு" என அவர் கூற,



"இதோ பா" என்றவள் துள்ளி கொண்டே வீட்டிற்குள் சென்று விட்டாள்.



விறகில் அதை சுட்டு எடுத்தவள், சிவதேவை தேடி வர, அவன் இன்னுமும் அங்கேயே தான் அமர்ந்திருந்தான்.



"சிவா..." என்ற அவள் குரலில் தான் அவன் அத்தனை நேர மோன நிலை கலைந்தது.



"அப்பா வாங்கிட்டு வந்தாங்க" என அவள் சோளகதிரை நீட்ட, அதை வாங்கி கொண்டவன், "உட்காரு.." என்றுவிட்டு சற்றே நகர்ந்து அமர்ந்தான்.



நந்தினியும் அவன் அருகில் அமர்ந்து கொண்டாள்.



"உனக்கு எக்ஸாம் ஆரம்பிக்குது இல்லையா நந்தினி..! படிச்சுட்டாயா..?"



"ம்ம் அதெல்லாம் எப்பவோ பிடிச்சாச்சு.." என அவள் வேகமாக கூறியதில், அவன் மெலிதாக சிரித்து கொண்டான்.



"என் ப்ரெண்டுக்கு பர்த்டே வருது சிவா. எல்லாரும் கிப்ட் வாங்கணும்னு சொல்லுறாங்க. நம்மகிட்ட பெருசா காசில்லை. நீங்க ஏதாவது செஞ்சு தர்றீங்களா."



"ம்ம், செஞ்சுட்டா போச்சு. என்ன வேணும் உனக்கு..?"



"உங்க இஷ்டம் சிவா.."



"இல்ல மா. நீ சொல்லு. ஏதாவது ஐடியா வச்சிருப்பயே..!" அவளை பற்றி தெரிந்தவனாக அவன் கேட்க,



"ஒரு கீ செயின் மாதிரி பண்ணி தரீங்களா..! அவ பெயர் போட்டு.." என யோசனையுடன் நந்தினி கூற,



"பண்ணிடலாம் மா" என்றான் அவன்.



"வா. இப்பவே பண்ணி தரேன்.." என அவன் எழுந்து விட, தான் கேட்டதுமே அவன் செய்வதாக சொன்னதில் பெரிதாக பூரித்து போனவள், 'என்ன இருந்தாலும் என் சிவா!' என மனதிற்குள் அவனை பாராட்டி கொண்டே அவனை தொடர்ந்தாள்..

இளைப்பாறும்..

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்


அத்தியாயம் 4:



காவியாவும் ராஜலக்ஷ்மியும் ராகவன் வீட்டில் அமர்ந்திருந்தனர்.



முதலில் ராகவன் விஷயத்தை கூறிய போது, "இது முறை இல்லையே!" என ராஜலக்ஷ்மி தயங்க தான் செய்தார்.



காவியா தான் அவரை சமாதானப்படுத்தினாள்.



"விடுங்க மா. ராகவ் இவ்வளவு தூரம் பேசி சம்மதம் வாங்கி இருக்காரு. நாம இது கூட செய்யலைன்னா எப்படி..! தேவை இல்லாமல் ஈகோ பார்க்க வேண்டாம். நாமே போகலாம் மா." என்று முடித்துவிட்டாள்.



அதில் ராகவனுக்கு பெரும் திருப்தி.



தனியாக காவியாவிடம் ஆயிரம் நன்றி சொல்லிவிட்டான்.



இப்போதுமே அருள்குமரன் முகம் சுருங்க தான் அவர்களை பார்த்து கொண்டிருந்தார்.



சௌமியா தான் அவர்களுக்கு ஜூஸ் எடுத்து வந்து கொடுத்து உபசரித்தார்.



அருள்குமரனே பேசட்டும் என ராஜலக்ஷ்மி அமைதியாக தான் இருந்தார்.



என்ன இருந்தாலும் தங்களை மதித்து அவர் வரவில்லையே என்ற ஆதங்கம் ராஜலக்ஷ்மிக்கு இருக்க தான் செய்தது.



"ஹம். ராகவன் சொன்னான். எனக்கு சில நிபந்தனைகள் இருக்கு.." என அருள்குமரன் குரலை செருமிக்கொண்டு தொடங்க,



"சொல்லுங்க" என்றாள் காவியாஸ்ரீ.



"இங்க பாரு மா, நீ பெரிய ஹீரோயினா இருக்கலாம்! ஆனால் நீ எங்களை போல் பணக்கார பரம்பரையில் இருந்து வரலை. என் பையனுக்காக தான் இந்த கல்யாணத்துக்கு நான் சம்மதிச்சேன். இங்கே வந்துட்டா, நம்ம குடும்பத்துக்குனு சில கட்டுப்பாடு இருக்கு. அதை மதிச்சு நடந்துக்கணும். முக்கியமா உன் இஷ்டத்துக்கு எல்லாம் இனி படம் நடிக்க கூடாது. எதுவா இருந்தாலும் எங்ககிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கனும். எங்க சம்மதம் இல்லாமல் எதுவும் செய்ய கூடாது. ஒரு இம்மி அளவு கூட எங்க பெயர் கெடுவது போல் நடந்துக்க கூடாது. புரியுதா..?" நிதானமாக அவர் கூற, காவியா அவரை பார்த்து மெலிதாக புன்னகைத்தாள்.



"எங்ககிட்ட பரம்பரை பணம் இல்லாமல் இருக்கலாம் அங்கிள். ஆனால் குணம் நல்லாவே இருக்கு. உங்கள் பேருக்கு ஒரு பங்கமும் வராமல் நான் பாத்துக்கறேன் அங்கிள்." கடைசி வரியில் அவள் கொடுத்த அழுத்தத்தின் அர்த்தம், அவருக்கு அப்போது புரியவில்லை.



"நல்லது. கல்யாண ஏற்பாடெல்லாம் நான் பார்த்துக்கறேன். உங்க பக்கத்தில் ஏதாவது பார்மாலிட்டி இருக்கா..?"



"கல்யாணம் முடிஞ்சதும் எங்க குலதெய்வ கோவிலுக்கு ஒரு முறை போகணும்.." என ராஜலக்ஷ்மி கூற,



"அது எங்க இருக்கு..?" என்றார் அருள்குமரன்.



அவர் மதுரை அருகில் ஒரு கிராமத்தை கூறிவைக்க, "அங்க எப்படி இவங்களை கூட்டிட்டு போவீங்க..?" என்றார் அவர் மறுப்பாக.



அடுத்து அவர் என்ன பேசுவார் என புரிந்தவனாக ராகவன் அவர் அருகில் வந்தான்.



"அப்பா ப்ளீஸ், இது ஒன்னு தானே சொல்லுறாங்க. நாங்க நைட் போயிட்டு, ஏர்லி மார்னிங் சாமி கும்பிட்டுட்டு, யார் கண்ணிலும் படாமல் வந்துரோம். ஒன்னும் சொல்லாதீங்க.." கெஞ்சலாக அவன் கேட்க,



"என்னவோ பண்ணி தொலை" என்றுவிட்டு அவர் எழுந்து விட்டார்.



"உங்களுக்கு எல்லா செய்தியும் வரும். நான் கிளம்பறேன்.." என்றுவிட்டு அவர் சென்றுவிட, ராகவனே அப்போது தான் நிம்மதியாக அமர்ந்தான்.



"சாரி ஆண்ட்டி. சாரி பேப். அப்பா கொஞ்சம் அப்படி தான். நீங்க ப்ரீயா விடுங்க. நான் பார்த்துக்கறேன்." என அவன் கூறிவிட,



"பார்த்துக்கோங்க தம்பி. உங்களை நம்பி தான் நான் சம்மதிச்சிருக்கேன்." என்றார் ராஜலக்ஷ்மி கவலையுடன்.



அவருக்கு என்னவோ இத்தனை ஆடம்பரம் மனதிற்கு ஒப்பவே இல்லை.



அவர் வேறு ஒரு கனவில் இருந்தார்.



எல்லாம் ஒரு கட்டத்தில் சிதைந்து போனது.



இப்போதோ மகள் ஆசை பட்டுவிட்டதால் தான், அவர் அமைதியாக அனைத்திற்கும் சம்மதித்து கொண்டு அமர்ந்திருந்தார்.



அருள்குமரன் கிளம்பி சென்றதும், சௌமியா அவர்களிடம் சாதாரணமாக தான் பேசி கொண்டிருந்தார்.



"காவியா வந்ததும் தான் ராகவன் கொஞ்சம் மாறி இருக்கான். முன்னாடி எல்லாம் அவங்க அப்பா கூடவே தான் சுத்துவான். இப்போ தான் அவனை வீட்டிலேயே பாக்கறேன். அப்படியே கொஞ்சம் கொஞ்சமா அவனை மாத்திடு மா." என சௌமியா கூற,



"மொத்தமா மாத்திருவோம்" என்றாள் காவியா புன்னகையுடன்.



"ஹேய் பேப், கொஞ்சம் என்கூட வா.." என ராகவன் காவியா கையை பிடித்து தூக்க, பெரியவர்களிடம் ஒரு தலையசைப்புடன் அவள் அவனுடன் நடந்தாள்.



அவளை அழைத்து கொண்டு முதல் தளத்திற்கு வந்தவன், பால்கனியில் வந்து நின்றான்.



"சந்தோசமா இருக்கையா பேப்..?" என அவன் கேட்க,



"ம்ம். ரொம்ப சந்தோசம் ராகவ்.." என்றவள் முகம் உண்மையாகவே மகிழ்ச்சியில் மலர்ந்து தான் இருந்தது.



அதை ஆசையுடன் பார்த்தவன், அவள் இடையை சுற்றிவளைத்து அவளை தன்னை நோக்கி இழுத்தான்.



"அதான் கல்யாணம் முடிவாகிருச்சே பேப்..! இனியாவது எனக்கு கருணை காட்ட கூடாதா..!" என்றவன் ஒற்றை விரலால் அவள் முகத்தில் கோலமிட, அவளோ அவன் பார்வையை தவிர்த்து வேறு எங்கோ பார்த்தாள்.



கண்ணை அழுத்தமாக அவள் மூடி கொண்டதை அவன் வெட்கம் என்று தான் நினைத்தான்.



"மென்மையான பூ கூட உனக்கு முன்னாடி தோத்து போய்டும் பேப்.." தன் மூச்சுக்காற்று அவள் மேல் மோத பேசியவன், அவள் இதழ் தீண்ட நெருங்க, நூல் அளவு இடைவெளி இருந்த போது, "ராகவா.." என்ற சௌமியா குரல் அவனை கலைத்தது.



அதில் அவன் பதறி விலகி விட, அடுத்த நொடி காவியா அங்கிருந்த கம்பியை அழுத்தமாக பிடித்துகொண்டாள்.



அவள் உணர்வுகளை ராகவன் கவனிக்கவில்லை.



மீண்டும் ஒரு முறை சௌமியா அழைத்துவிட, "வா பேப்" என்றுவிட்டு அவன் சென்றுவிட்டான்.



காவியாவோ பல ஆழ்ந்த மூச்சுகள் எடுத்துக்கொண்டாள்.



அவள் இதயத்துடிப்பின் ஓசை அவளுக்கே கேட்பது போல் இருந்தது.



அத்தனை நேரம் அவள் பல்லை கடித்து கட்டுப்படுத்தி வைத்திருந்த கண்ணீர், இப்போது அவள் கண்ணில் இருந்து விடுதலை பெற்று அவள் கன்னங்களை நனைத்தது.



"கடவுளே! எனக்கு நீ தான் தைரியத்தை கொடுக்கணும்..!" என மனதார வேண்டிக்கொண்டவள், மேலும் சில மூச்சுகள் எடுத்து தன்னை சமன் செய்து கொண்டாள்.



நெஞ்சை அழுத்தமாக நீவி கொண்டவள், 'நோ.. நான் வீக் ஆக கூடாது..' என தனக்கு தானே அழுத்தமாக கூறிக்கொண்டாள்.



மனம் ஒருவாறு தெளிவடைந்து விட, அதற்கு மேல் தான் அவள் கீழே இறங்கி சென்றாள்.



************



நந்தினி வீட்டை விட்டு தள்ளி வந்து அந்த கிராமத்திற்குள் நுழையும் இடத்தில் நின்றிருந்தாள்.



பரபரப்புடன் அவள் கண்கள் ரோட்டை ஆராய்ந்து கொண்டிருந்தது.



கையில் ஒரு நகம் மிச்சம் இல்லாமல் கடித்து துப்பி வைத்திருந்தாள்.



அவள் எதிர்பார்த்த ஆட்கள் வந்தே விட, இத்தனை நேரம் அவர்கள் வரவே கூடாது என்ற அவள் பிரார்த்தனை முழுதாக வீணாகி போய் இருந்தது.



"என்ன மா நந்தினி, இங்கேயே எங்களுக்காக வெயிட் பண்ணுரையா..?" என டாக்டர் தங்கராஜ் கேட்க,



"சும்மா தான் சார். வாங்க.." என்றவள், அவருடன் வந்த காவியாஸ்ரீயை முறைக்க தவறவில்லை.



காவியாவும் அவளை தான் பார்த்தாள்.



ஆனால் அவள் முகத்தில் இருந்த உணர்வை நந்தினியால் சுத்தமாக படிக்க முடியவில்லை.



'பெரிய நடிகைன்னா சும்மாவா! மூஞ்சியை எப்படி வச்சிருக்கா பாரு!' என உள்ளுக்குள் நொடித்துக்கொண்டாள் நந்தினி.



சிவதேவ்வும் இவர்கள் வருவதை பார்த்துவிட்டு குடிலை விட்டு வெளியே வந்தான்.



"வாங்க டாக்டர்" என்றவன், "வாங்க காவியா" என அவளையும் அழைக்க, அவளும் கண்களை எட்டாத ஒரு சிரிப்பை உதிர்த்து வைத்தாள்.



"ரெகுலர் செக் அப் தான் சிவா. உள்ளே வாங்க." என்ற தங்கராஜ் குடிலுக்குள் சென்றுவிட, அவனும் அவரை தொடர்ந்து சென்றான்.



பெண்கள் இருவரும் வெளியிலேயே நின்று விட்டனர்.



வனராஜன் உடன் இருந்ததால், இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.



நந்தினி காவியாவை முறைத்துகொண்டே நிற்க, ஒரு கட்டத்திற்கு மேல் அவள் பார்வை காவியாவிற்கு சலிப்பாக இருந்தது.



ஒரு பெருமூச்சுடன் சற்றே தள்ளி சென்று அங்கிருந்த பாறையில் காவியா அமர்ந்து விட்டாள்.



சில நொடிகள் தான் சென்றிருக்கும்.



"ஹலோ, இங்க உட்கார கூடாது. எந்திரிங்க.." என்ற நந்தினி குரல், அவளை கலைத்தது.



அவள் குரலில் நிதானமாக நிமிர்ந்தவள், "ஏன்..?" என்று மட்டும் கேட்க,



"இது எங்க சிவா எப்போதும் உட்காரும் பாறை. அவருடையது. எனக்கும் அவருக்கும் மட்டுமே சொந்தமானது. நீங்க உட்காரு கூடாது.." என்றாள் நந்தினி வீராப்பாக.



அவள் கூற்றில் உடனடியாக எழுந்துகொள்ளாமல், காவியா பாறையை சுற்றி ஏதோ தேட, "என்ன பாக்கறீங்க..?" என்றாள் நந்தினி.



"உன் சிவா பேரு எங்கன்னு பாக்கறேன்"



"இதோ இருக்கு" என அதற்கும் நந்தினி ஒரு இடத்தை காட்ட, அவளை அதிர்ந்து பார்த்த காவியா, அவள் காண்பித்த இடத்தையும் பார்த்தாள்.



பாறையின் கீழ் சுலபமாக கண்ணுக்கு எட்டாத இடத்தில், 'சிவா.. நந்தினி..' என தெளிவாக எழுதி இருந்தது.



அதை பார்த்ததும் காவியா சட்டென எழுந்து விட்டாள்.



"நீ எழுதினயா..?"



"நானும் என் சிவாவும் எழுதினது.. இது எங்க இடம். தள்ளி போங்க." அழுத்தமாக நந்தினி கூறியதில், இந்த முறை காவியா வாதாடவில்லை.



அமைதியாக நகர்ந்து நின்று விட்டாள்.



அவள் செயலை பார்த்து நந்தினிக்கு ஏதோ பெரிதாக சாதித்து விட்டது போல் அத்தனை மகிழ்ச்சி.



அதே நேரம், "ஹேய் பார்த்து..!" என சிவா வேகமாக நந்தினியை தாண்டி ஓட, அவளும் ஒன்றும் புரியாமல் அவனை பார்த்தாள்.



அவனோ நேராக காவியாவிடம் தான் சென்றான்.



அவளை அவன் வேகமாக பிடித்து பின்னால் இழுப்பதற்கும், அவள் கால் அருகில் ஒரு பெரிய பாம்பு ஊர்ந்து போகவும் சரியாக இருந்தது.



"கீழ பார்த்து நிற்க மாட்டீங்களா..! இது சிட்டி இல்லை. ஒரு நிமிஷத்தில் உயிர் போய் இருக்கும்.." என சிவதேவ் கோபத்துடன் கத்த, அத்தனை பதட்டத்திற்கு அவள் ஒரு உணர்வும் இல்லாமல் தான் அவனை பார்த்தாள்.



"அந்த கொடுப்பனை கூட எனக்கு இல்லை போல்..!" என மென்குரலில் அவள் கூற, அவனோ அவளை புரியாமல் பார்த்தான்.



"சிவா, என்ன ஆச்சு...?" என்ற நந்தினி குரலில் தான் இருவரும் சுயநினைவிற்கே மீண்டனர்.



அப்போது தான் தன் கைகளுக்குள் காவியா இருப்பதை உணர்ந்த சிவா, அவளை மெதுவாக தன்னைவிட்டு விலக்க, அவளும் எந்த அவசரமும் இல்லாமல் நிதானமாக நகர்ந்து நின்றாள்.



அங்கு பதறியது என்னவோ நந்தினி தான்.



"ஒன்னும் இல்லை நந்தினி மா. பாம்பு. நீ வா.." பார்வையை காவியாவிடம் இருந்து விலக்காமலே பேசிக்கொண்டு சிவா நடக்க, அவளும் அமைதியாக அவனை தொடர்ந்தாள்.



"கொடுத்த மாத்திரை எல்லாம் மறக்காமல் எடுத்துக்கோங்க சிவா. நான் கிளம்பறேன்.." என தங்கராஜ் கைநீட்ட,



சிவாவும், "கண்டிப்பா டாக்டர்" என்று கை கொடுத்தான்.



காவியாவும் ஒரு தலையசைப்புடன் அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.



அவள் சென்றதும் தான் நந்தினிக்கு நிம்மதியாகவே இருந்தது.



சிறிது தூரம் தள்ளி வந்ததும் காவியா தங்கராஜிடம் பேசினாள்.



"சிவாவிற்கு சரியாகுமா டாக்டர்..?"



"எதுவும் உறுதியா சொல்ல முடியாது மா. அவர் நிலையை பார்த்தால், சரியாவது கஷ்டம்னு தான் தோணுது.." என்றார் அவர் மெதுவாக.



கடைசி நப்பாசையாக தான் அவள் கேட்டது.



அந்த நம்பிக்கையும் வீணாக போனதை ஏற்றுக்கொள்ள அவளுக்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டது.



என்னவோ நெஞ்செல்லாம் அடைத்து கொண்டு கதறல் வரும் போல் இருக்க, மிகவும் முயன்று அதை கட்டுப்படுத்திக்கொண்டாள் காவியாஸ்ரீ.



உதட்டத்தை அழுந்த கடித்து கதறி விடாமல் தடுத்தவள், தன்னை மீறிய கலங்கிய கண்களை துடைத்துக்கொண்டே அந்த மலை கிராமத்தை விட்டு கிளம்பினாள்.



மனித திட்டமும் தெய்வ திட்டமும் மாறுபாட்டிற்கே உரித்தானது என அவளுக்கு தெரியவில்லை பாவம்...!

இளைப்பாறும்..

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 5:



காவியா அமைதியாக அமர்ந்திருக்க, அவள் முன் சுகந்தி விஷ்ணு இருவரும் அமர்ந்திருந்தனர்.



"ஏதாவது வாயை திறந்து பேசி தொலை டி. என்ன தான் முடிவில் இருக்க..! நான் சொல்லும் எதையும் கேட்க கூடாதுன்னே வச்சிருக்கயா..?" சுகந்தி கோபம் கொஞ்சமும் குறையாமல் கேட்க, அதே நேரம் ராஜலக்ஷ்மி அவர்களுக்கு ஜூஸ் எடுத்துக்கொண்டு வந்தார்.



அவரை பார்த்ததும் சுகந்தி பட்டென வாயை மூடி கொண்டாள்.



"ஜூஸ் எடுத்துக்கோ சுகந்தி. நீங்களும் எடுத்துக்கோங்க பா." என இருவருக்கும் அவர் நீட்ட, இருவரும் அமைதியாக எடுத்து கொண்டனர்.



"நீங்க பேசிட்டு இருங்க. லன்ச் ரெடி ஆகுது. சாப்பிட்டுட்டு தான் போகணும்.." என ராஜலக்ஷ்மி கூற,



"எது செஞ்சாலும் கொஞ்சம் பூண்டு ரசம் வைக்க சொல்லு மா. சுகந்திக்கு ரொம்ப பிடிக்கும்." என்றாள் காவியா.



"கண்டிப்பா டா.." என்றுவிட்டு அவர் சென்று விட்டார்.



"இது விளையாட்டில்லை காவியா. ராகவன் என் அண்ணன் தான். இருந்தாலும் நானே சொல்லுறேன், இந்த கல்யாணம் வேண்டாம் மா.." என்றான் விஷ்ணு.



அவனை அமைதியாக பார்த்தவள், "உங்க மேல் எனக்கு நிறைய மரியாதை இருக்கு விஷ்ணு. நீங்க என் சுகந்தியை கல்யாணம் பண்ணிக்க போறவர். நல்ல இயக்குனர். அந்த மரியாதை எப்பவுமே இருக்கும். ஆனால் என் வாழ்க்கையில் தலையிடாதீங்க. ப்ளீஸ்.." கெஞ்சலாக தான் காவியா கூறினாள்.



"உன் நல்லதுக்கு தானே டி இத்தனை சொல்லுறோம்..!" சுகந்தி சலிப்புடன் கேட்க,



"அதை நான் பாத்துக்கறேன், விட்டுருன்னு தான் சுகி சொல்லுறேன்.." என்றாள் காவியா வெறுமையாக.



"எப்படி டி விட முடியும்..! எப்படியோ போன்னு விட நீ ஒன்னும் மூணாவது மனுஷி இல்ல. என் பிரெண்ட். அப்படி எல்லாம் விட முடியாது.." தோழி அன்பில் காவியா மனம் நெகிழ்ந்து தான் போனது.



"நீ எனக்கு உண்மையாவே நல்லது பண்ணனும்னு நினைச்சனா, நான் கேட்கும் ஒரு உதவியை செய். அது போதும். முக்கியமா விஷ்ணு தான் இதுக்கு ஒத்துக்கணும்.." அவள் விஷ்ணுவை பார்க்க,



"என்ன பண்ணனும் மா..?" என்றான் அவன்.



"சொல்லுறேன் விஷ்ணு. நேரம் வரும் போது சொல்லுறேன். அப்போ நீங்க என் பக்கம் நின்னால் போதும். அது தான் பெரிய உதவி.."



"நான் எதுனாலும் பண்ணுறேன் மா. பட் இந்த கல்யாணம்..." என அவன் இழுக்க,



"அதை யாராலும் தடுக்க முடியாது விஷ்ணு. அந்த பேச்சை விட்டுருங்க." என்றாள் காவியா.



இதற்கு மேல் அவளிடம் என்ன பேசுவதென்று இருவருக்குமே தெரியவில்லை.



"சரி கவி. உன் இஷ்டத்துக்கு விடறேன். ஆனால் உனக்கு என்னிக்குமே நான் ஒருத்தி இருக்கேன். அதை மறக்கவே கூடாது.." காவியா கையை அழுத்தமாக பிடித்து சுகந்தி கூற,



"உன்கிட்ட தான் டி வந்து நிற்பேன். எனக்கும் வேற யாரு இருக்கா..!" என்றாள் காவியும் மென்மையாக.



ராஜலக்ஷ்மி வந்து உண்ண அழைக்க, அவர்களும் சாப்பிட்டுவிட்டு கிளம்பினர்.



**********



சிவதேவ் மலை உச்சியில் நின்றிருந்தான்.



இயற்கையை ரசித்து கொண்டிருந்தவனை பின்புறம் இருந்து, இரு கைகள் அழுத்தமாக அணைத்தது.



கைகளுக்கு சொந்தக்காரியை அவனுக்கு தெரியாதா என்ன..!



உதட்டில் உறைந்துவிட்ட புன்னகையுடன் அவன் அவளை பிடித்து முன்னாள் இழுத்தான்.



அவளோ அவன் முகம் பார்க்காமல், அவன் நெஞ்சில் வாகாக பொருந்தி கொண்டாள்.



அவன் அணைப்பும் மேலும் இறுகியது.



"என்ன டி..?" அவள் காதோரம் அவன் கேட்க,



"ஐ லவ் யு" என்றாள் பெண்ணவள் மென்மையாக.



"என்ன புதுசா..?"



"காதலில் என்ன புதுசு..! நான் சொல்லிட்டே இருப்பேன். எப்போதெல்லாம் தோணுதோ, அப்போதெல்லாம் சொல்லுவேன். உனக்கு கசக்குதா..?" கோபத்துடன் அவள் விலக போக, அவளை கொஞ்சமும் அசைய விடாமல் அழுத்தமாக பிடித்தான் சிவதேவ்.



"காதல் கசக்குமா டி..! அதுவும் நம் காதல் கசக்குமா..! இப்படி எல்லாம் பேசும் வாயை சும்மா விடலாமா..?"



"என்ன பண்ணுவயாம்..?" வீரமாக அவள் கேட்க, அடுத்த நொடி அவள் இதழ்கள் சிறைப்பட்டு போனது.



நல்ல ஆழமான இதழ் தீண்டல் அது.



உன் உயிர் எனக்கானது என அவன் புரிய வைக்க முயன்றானோ! அவளை மொத்தமாக கரைத்திட முயன்றானோ!



கரைந்து தான் போனாளோ பெண்ணவள்..!



உயிர் வரை தீண்டிய உணர்வில் முழுதாக லயிக்கும் முன், சிவதேவ் திடுக்கிட்டு எழுந்தான்.



ஒரு நொடி அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.



சுற்றிலும் வெறும் இருட்டு.



மெதுவாக சுயநினைவிற்கு வந்தவன், பக்கத்தில் இருந்த தண்ணியை எடுத்து குடித்தான்.



அவன் குடிலில் தான் அமர்ந்திருந்தான்.



என்ன கனவிது..! இன்னுமும் அவனுக்குள் ஏதோ செய்தது.



மனம் முழுவதும் பாரமாக அழுத்த, அங்கிருந்து எழுந்து வெளியே வந்து விட்டான்.



முகத்தில் சில்லென மோதிய காற்று அவனை கொஞ்சம் சமாதானம் செய்தது.



சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்தவன் மனம், அந்த கனவை தான் சுற்றி சுற்றி வந்தது.



விடை மட்டும் தெரியாமலே போக, ஒரு கட்டத்தில் மனதை தானே சமன் செய்து கொண்டு வந்து படுத்துவிட்டான் சிவதேவ்.



***********



அன்று கைவினை பொருட்கள் எடுத்துப்போக வந்த சொக்கனுடன், சிவதேவும் வருவதாக கூறினான்.



"என்ன சிவா திடீர்னு..! கொஞ்ச நாளைக்கு உன்னை வெளியில் வர வேண்டாம்னு அந்த டவுனு பாப்பா சொல்லிச்சே..!" என சொக்கன் தயங்க,



"ஏன் அப்படி சொன்னாங்கனு தெரியல சொக்கா..! ஆனால் வெளிய வரணும் போல் இருக்கு. நான் முகத்தை மூடிட்டு வரேன்.." என்றான் சிவதேவ் அடமாக.



வனராஜனிடம் கூறிய போது அவரும் அவனை தடுக்க தான் செய்தார்.



"உனக்கு ஏதோ ஆபத்து இருக்குனு அந்த பொண்ணு சொல்லி இருக்கு பா. அது சொல்லும் வரை இங்கேயே இரேன்.." என அவரும் கூற,



"ப்ளீஸ் சார். எனக்கு போகணும்னு தோணுது.. முகம் தெரிந்தால் தானே பிரெச்சனை. முகத்தை மறைச்சுக்கறேன்.." என்றவன், தன் துண்டை எடுத்து கண்களை மட்டும் விட்டுவிட்டு முகத்தை சுற்றி கட்டிக்கொண்டான்.



சுத்தமாக அடையாளம் தெரியவில்லை தான்.



மேலும் அவன் சொன்னாலும் கேட்கும் ரகம் இல்லை என இத்தனை நாளில் வனராஜனுக்கும் தெரிந்திருந்தது.



"சரி சிவா. ஆனால் பத்திரம். சீக்கிரம் வந்துடு." என்று கூறி தான் அவர் அனுப்பி வைத்தார்.



சிவாவும் சொக்கனுடன் கிளம்பி வியாபாரம் செய்யும் இடத்திற்கு வந்தான்.



ஒரு இடத்தில் சாக்கு விரித்து அதில் சொக்கன் பொருட்களை அடுக்க, சிவதேவ் அவனுக்கு உதவினான்.



அவன் கண்கள் இலக்கில்லாமல் சுற்றிலும் எதையோ தேடி கொண்டிருந்தது.



அனைத்தும் அடுக்கி முடித்த போது, அவன் கண்ணில் ஒரு டீ கடை பட, "வியாபாரத்தை பாருங்க சொக்கா. நாம் பேப்பர் வாங்கிட்டு வரேன்." என்றவன், அவன் பதிலை எதிர்பார்க்காமல் ரோட் கிராஸ் செய்து சென்று விட்டான்.



அங்கிருந்த கடையில் பேப்பர் வாங்கியவன், அதை அங்கேயே நின்று புரட்டினான்.



தற்போதைய செய்திகள் நிறைய இருந்தது.



என்ன தேடினான் என அவனுக்கே தெரியவில்லை..!



சாதாரணமாக பேப்பரை புரட்டி கொண்டிருந்தவன் கண்கள், ஒரு செய்தியில் மட்டும் நிதானித்தது.



'பிரபல நடிகை கவியாஸ்ரீ அவர்களுக்கும், ஸ்டார் நடிகர் ராகவனுக்கும் இன்னும் இரண்டு நாளில் ப்ரமாண்டமாக திருமணம் நடைபெற இருக்கிறது' என்பது தான் அந்த செய்தி.



ஒரு பேப்பரின் பாதி பக்கத்தை அந்த செய்தி அடைத்து கொண்டிருந்தது.



காவியாஸ்ரீயும் ராகவனும் அணைத்து கொண்டு நிற்பது போல் ஒரு படமும் போட பட்டிருந்தது.



அதை பார்த்து கொண்டிருந்தவன் கண்கள் ஏனோ அந்த செய்தியை விட்டு அகலவே இல்லை.



அடுத்து என்னவென்று எதுவும் யோசிக்காமல், அவன் மீண்டும் மீண்டும் அந்த செய்தியையே வாசித்து கொண்டிருந்தான்.



அதே நேரம் அந்த இடத்தை தாண்டி ராகவன் கார் சென்றது.



உள்ளுக்குள் ராகவனும், காவியாஸ்ரீயும் தான் இருந்தனர்.



ராகவன் நெருங்கிய நண்பனுக்கு பத்திரிகை வைக்க தான் கோவை வந்திருந்தனர்.



ஒற்றை கையால் அசால்டாக கார் ஓட்டி கொண்டிருந்த ராகவன், தற்செயலாக அந்த டீ கடையை பார்த்தான்.



அவன் பார்வை சென்ற திசையை நொடியில் காவியாஸ்ரீயும் கவனித்து விட்டாள்.



"ராகவ் இங்க ஒரு மால் இருக்கு. அங்கே போங்களேன். ஒரு கடை பார்த்தேன். லெஹெங்கா கலெக்ஷன் ரொம்ப அழகா இருந்தது." என காவியா கூற, அவன் கவனமும் அவள் புறம் திரும்பி விட்டது.



"ஸ்யூர் பேப்" என்றவன், நல்லவேளையாக அதற்கு மேல் அந்த கடை பக்கம் திரும்பவில்லை.



காவியாவிற்கு தான் ஒரு நொடி உயிரே நின்றுவிட்டது போல் இருந்தது.



ராகவனிடம் ஏதோ பேசி கொண்டே இருந்தாலும், அவள் மனதில் அத்தனை கோபம்.



தான் சொல்லும் வரை வெளியே வர கூடாது என எத்தனை முறை கூறி இருப்பாள்..!



எதற்கு வந்து தொல்லைத்தான்! என அவள் மனம் சிவதேவை தான் ஏகத்திற்கும் திட்டி கொண்டிருந்தது.



அவன் என்ன முகமூடி போட்டிருந்தால் என்ன, அவள் நொடியில் கண்டுகொண்டாள்.



ஒருவேளை ராகவன் கூட கண்டுபிடித்திருப்பானோ! என்னவோ!



இன்னும் கொஞ்சம் கவனித்திருந்தால், நிச்சயம் சந்தேகம் வந்திருக்கும்.



ராகவன் கண்டிபிடித்திருந்தால், அதன் பின் விளைவு..! அதை நினைத்தாலே அவளுக்கு அடிவயிற்றில் புளியை கரைத்தது.



மிகவும் சிரமப்பட்டு தான் ராகவனிடம் எதுவும் காண்பித்துக்கொள்ளாமல் அவள் அந்த நாளை கடத்தினாள்.



இரவு அவர்கள் தங்கி இருந்த ஹோட்டல் அறைக்கு வந்ததும் தான், அவளுக்கு தனிமையே கிடைத்தது.



ராகவன் அவளை இறக்கிவிட்டுவிட்டு வேறு வேலையாக வெளியே சென்று விட, அவள் தன் அறைக்குள் நுழைந்ததுமே, நந்தினிக்கு அழைத்து விட்டாள்.



நந்தினி போனை எடுத்ததுமே, "போனை சிவா கிட்ட கொடு நந்தினி.." என அவள் கூற,



"அவர் கிட்ட உங்களுக்கு என்ன பேச்சு..? கொடுக்க முடியாது.." என அவள் வேறு காவியா கோபத்தை அதிகரித்தாள்.



"உனக்கு உன் சிவா உயிருடன் வேணும்னா போனை கொடு டி" பொறுமை இல்லாமல் காவியா கத்திவிட, அந்த பக்கம் நந்தினி கொஞ்சம் பயந்து தான் விட்டாள்.



"எ... என்ன சொல்லுறீங்க..?" என அவள் தடுமாற,



"போனை கொடு நந்தினி. இன்னிக்கு அவர் கீழே சிட்டிக்கு வந்திருக்கார். அது பெரிய ஆபத்து. திரும்ப அந்த தப்பை அவர் பண்ணவே கூடாது. கொடு ப்ளீஸ்.." காவியா இழுத்து பிடித்து வைத்திருந்த பொறுமையுடன் தான் கூறினாள்.



"ஒரு நிமிஷம். தரேன்.." என்ற நந்தினி, அதற்கு மேல் தாமதிக்காமல் சிவதேவை தேடி சென்று போனை கொடுத்தாள்.



"காவியஸ்ரீ" என்று கூறி அவள் போனை கொடுக்க, புருவங்கள் நெரிய போனை வாங்கியவன், "சொல்லுங்க" என்றான்.



"உன்னை வெளியே வர கூடாதுனு சொல்லி இருக்கேன் தானே..! எதுக்கு என் பேச்சை மீறி வந்த..?"

எடுத்ததுமே காவியா கத்த,



"எக்ஸ்கியூஸ் மீ" என்றான் சிவதேவ் ஒன்றும் புரியாமல்.



அவன் குரலில் தான் அவள் தன் தவறையே உணர்ந்தாள்..!



சில ஆழ்ந்த மூச்சுகள் எடுத்துக்கொண்டவள், சற்றே நிதானித்து, இப்போது பேசினாள்.



"இங்க பாருங்க சிவதேவ், தயவு செஞ்சு கொஞ்ச நாளைக்கு வெளியே வராதீங்க. அந்த மலை கிராமத்திலேயே இருங்க. உங்க நல்லதுக்கு தான் சொல்லுறேன்."



"ஏன்...?" ஒற்றை வார்த்தையில் அவன் நிறுத்த,



"உ.. உங்க நல்லதுக்கு தான்.." என்றாள் அவள் திணறலாக.



"அதான் ஏன்..?" அவனிடம் இருந்து மேலும் அழுத்தமாக கேள்வி வந்தது.



இப்போது காவியா தான் பதில் சொல்ல முடியாமல் விழித்தாள்.



"பதில் சொல்லுங்க காவியா. எதுவுமே சொல்லாமல் இன்னும் எத்தனை நாள் இப்படி என்னை வச்சு கண்ணாமூச்சி ஆடுவீங்க..? ஏதாவது சொல்லுங்க. என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு. ஒன்னு நீங்க சொல்லுங்க. இல்ல நானே தெரிஞ்சுப்பேன்.." அவன் குரலும் அதில் இருந்த அழுத்தமும் அவளுக்கு பெரும் பயத்தை விதைத்தது.



பழைய சிவதேவ் குணம் திரும்புகிறதா..!



ம்ஹ்ம். இதை விட கூடாது..!



"சிவதேவ், உங்களை கெஞ்சி கேட்கறேன். காரணம் எதுவும் கேட்காதீங்க. குறைந்தது ஒரு ஆறு மாசம். அதுக்கு அப்புறம் உங்களுக்கு எல்லாமே தெரியப்படுத்தறேன். அதுவரை கொஞ்சம் அமைதியா அங்கேயே இருங்க. உங்க உயிரை காப்பாத்தி இருக்கேன். அதுக்கு நன்றிக்கடன் செலுத்தறதா நினைச்சுக்கோங்களேன்.. இது ஒன்னை மட்டும் கேளுங்க ப்ளீஸ்.." அவள் கெஞ்சலாக கேட்டதில், அவன் உடனடியாக எதுவும் பேசவில்லை.



"இப்படி சிறை வைக்க, நீங்க என்னை சாகவே விட்டிருக்கலாம் காவியா.." மென்குரலில் அவன் கூற, அவன் வார்த்தைகள் அவளுக்குள் சுருக்கென தைத்தது.



"சாரி" என்று மட்டுமே அவளால் கூற முடிந்தது.



"வாழ்த்துக்கள்" என சிவதேவ் கடைசியாக கூற,



"எதுக்கு..?" என்றாள் அவள் புரியாமல்.



"உங்க கல்யாணத்துக்கு. ஹாப்பி மேரீட் லைப்.."



அவன் வாழ்த்திற்கான அவள் எதிர்வினையை அவனால் பார்க்க முடியாமல் போய் விட்டது.



அவள் எந்த பதிலும் சொல்லாமலே போனை வைத்துவிட, அவனும் காதில் இருந்து போனை எடுத்து பார்த்துவிட்டு நந்தினியிடம் கொடுத்து விட்டான்.



"தயவு செஞ்சு கீழ போகாதீங்க சிவா" என நந்தினியும் தன் பங்குக்கு கூற,



"சரி டா. போகலை.." என அவன் உடனடியாக தலையாட்டி விட்டான்.



அவன் மனதில் இப்போது வேறு குழப்பம் அமர்ந்து விட்டது.



காவியா சொன்ன விஷயங்களை எல்லாம் தாண்டி, போனை எடுத்ததுமே அவள் உரிமையுடன் ஒருமையில் பேசியது அவனை மேலும் குழப்பி இருந்தது.



என்ன வகையான உரிமை அது..! அவனுக்கு சரியாக பிடிபடவில்லை.



அவன் மேல் அவளுக்கு அக்கறை இருக்கிறது என்று மட்டும் தான் அவனுக்கு இப்போதைக்கு புரிந்தது..

இளைப்பாறும்..

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 6:



பர்வதம் ரங்கநாதன் இருவரையும் அழைத்து கொண்டு காவியா மருத்துவமனைக்கு வந்திருந்தாள்.



இன்று அவர்களுக்கு ஜெனெரல் செக் அப் செய்ய வேண்டிய நாள்.



டாக்டருக்காக அவர்கள் காத்திருக்க, பர்வதம் தான் மனம் கேட்காமல் புலம்பி கொண்டிருந்தார்.



"உனக்கு நாளைக்கு கல்யாணம் காவியா. இன்னிக்கு இப்படி எங்க கூட சுத்தணுமா..! நாங்க பார்த்துக்க மாட்டோமா..!"



"மாட்டிங்க ஆண்ட்டி.." அழுத்தமாக காவியா கூறியதில், பர்வதம் முகம் சிறுத்து விட்டது.



"நீங்களும் அங்கிளும் கண்டிப்பா பார்த்துக்க மாட்டிங்க. பேசாமல் இருங்க.." உரிமையுடன் அவள் கூற,



"உனக்கு ஈவினிங் பங்க்ஷன் இருக்கு மா.." என்றார் ரங்கநாதன்.



"நான் பார்த்துக்கறேன் அங்கிள். அதுக்குள்ள போய்டலாம். முதலில் ஹெல்த் தான் முக்கியம். பேசாம இருங்க." என்றுவிட்டாள் காவியாஸ்ரீ.



மாஸ்க் போட்டது மட்டுமில்லாமல், யார் கண்ணிலும் படாதவாறு சற்றே ஒதுங்கி குனிந்து தான் அவள் அமர்ந்திருந்தாள்.



அவள் போன் அடிக்க, அழைப்பது ராகவன் என்றதும் போனை எடுத்து கொண்டு தள்ளி வந்து விட்டாள்.



"பேப் பிளவுஸ் வந்துடுச்சா..? எப்போ கிளம்ப போற..?" என போன் எடுத்ததுமே அவன் கேட்க,



"அதை வாங்க தான் வந்திருக்கேன் ராகவ். ஒரு டூ ஹவர்ஸ்ல. ரெடி ஆகிடும். அதை வாங்கினதும் வீட்டுக்கு போய் ரெடி ஆகி வந்துர்றேன்.." என்றாள் காவியா.



"டூ ஹவர்ஸா..! லாஸ்ட் மினிட் வரை ஏன் வச்சுக்கற பேப்..? இப்போவே கெஸ்ட் எல்லாம் உன்னை கேக்கறாங்க.."



"சாரி.. சாரி ராகவ்.. இந்த பிளவுஸ் டிசைன் லாஸ்ட் மினிட்ல தான் கன்பார்ம் ஆச்சு. உங்களுக்கு தெரியுமே! முன்னாடி இருந்தது சிம்பிளா இருந்துச்சு. அது போட்டால் ஸ்டேட்டஸ் கம்மியா தெரியும். இது ஹெவி வொர்க். இது கூட இல்லைனா நல்லா இருக்காது ராகவ்.."



என்ன சொன்னால் அவன் வாயை மூட முடியும் என்று தெரிந்து தான் அவள் பேசினாள்.



அது சரியாக வேலையும் செய்தது.



"ஓகே பேப். சீக்கிரம் வா.." என அவன் முடித்துவிட்டான்.



அவன் ஸ்டேட்டஸிற்கு எந்த பங்கமும் வந்துவிட கூடாதல்லவா..!



அதில் எல்லாம் அவன் தெளிவாக தான் இருந்தான்.



போனை வைத்துவிட்டு வந்தவள், அடுத்த சில மணி நேரத்தை பெரியவர்களுடன் தான் செலவிட்டாள்.



அவர்களை பத்திரமாக வீட்டில் விட்டுவிட்டு தான் அவள் கிளம்பினாள்.



தன் வீட்டிற்கு அவள் சென்ற போது, அவளுக்காக ஏற்கனவே மேக் அப் ஆர்ட்டிஸ்ட் காத்திருந்தார்.



அவருடன் சேர்ந்து சிரத்தையாக தன்னை அலங்காரம் செய்து கொண்டாள் காவியா.



அனைத்தும் முடிந்ததும், தன்னை கண்ணாடியில் பார்த்து கொண்டவளுக்கு, திருப்தியாக இருந்தது.



மேக் அப் செய்தவர்கள் கிளம்பிவிட, இப்போது காவியா மட்டுமே தனியாக அந்த அறையில் இருந்தாள்.



அங்கிருந்து கிளம்பும் முன் கடைசியாக ஒரு முறை ட்ரெஸ்ஸிங் டேபிளை திறந்தாள்.



சிறிது நேரம் அந்த கப்போர்டை வெறித்து பார்த்தவள், பின் ஒரு பெருமூச்சுடன் அதை மூடிவிட்டு கிளம்பி விட்டாள்.



அவளும் ராஜலக்ஷ்மியும் ஒரு காரில் ஏறிக்கொள்ள, அவள் பக்க சொந்தங்களில் நெருங்கிய சொந்தங்களாக வந்திருந்த சிலர், வேறு காரில் ஏறி கொண்டனர்.



அனைவரும் நேராக மண்டபத்திற்கு தான் சென்றனர்..



பரஸ்பரம் அனைவரும் பேசிகொள்ள, காவியாவை ராகவன் தனியாக அழைத்து வந்து விட்டான்.



"ரொம்ப அழகா இருக்க பேப். எல்லார் கண்ணும் உன் மேல் தான்.." அவள் இடையில் கைபோட்டு அவளை அணைத்துக்கொண்டே அவன் பேச, அவளும் வெட்கத்துடன் சிரித்து கொண்டாள்.



"நான் எப்படி இருக்கேன்..?" என அவன் கேட்க, அப்போது தான் காவியா அவனை கவனித்தாள்.



உயர் ரக குர்தா அணிந்திருந்தவன், பணக்காரத்தனத்தின் மொத்த அடையாளமாக அம்சமாக தான் இருந்தான்.



"சூப்பரா இருக்கீங்க ராகவ்" என அவள் கூற, அவனும் தலை கோதி சிரித்து கொண்டான்.



அதே நேரம் அவன் நண்பன் ஒருவன் வந்து விட, "ஒரு நிமிஷம் பேப்" என்றுவிட்டு அவன் நகர்ந்து விட்டான்.



அவன் நகர்ந்ததும் காவியா சுகந்தியை தேடி தான் சென்றாள்.



சில நிமிடங்கள் முன்பு வந்திருந்த சுகந்தி, அங்கு தான் ஒரு பக்கம் அமர்ந்திருந்தாள்.



காவியாவும் அவள் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள்.



"நல்லவேளை, வர மாட்டியோன்னு பயந்துட்டே இருந்தேன்..!" என காவியா சிரித்துக்கொண்டே கூற,



"உண்மையை சொல்லனும்னா வர பிடிக்கலை தான் கவி. அதுக்காக உன்னை விட்டுக்கொடுக்க முடியாது. அதான் வந்தேன். நீ உண்மையாவே சந்தோசமா தான் இருக்கையா..?" தோழி கையை பிடித்துக்கொண்டு கவலையுடன் கேட்டாள் சுகந்தி.



"என்னை பார்த்தால் உனக்கு எப்படி தெரியுது..?" மலர்ந்த புன்னகையுடன் கேட்டவளை பார்த்தும், ஏனோ சுகந்திக்கு மனம் ஆறவில்லை.



"நல்லா நடிக்கரையோன்னு தான் தோணுது.." மனதில் இருந்ததை மறைக்காமல் சுகந்தி கூறி விட்டாள்.



"ப்ச், விடு சுகி. விஷ்ணு எங்க..? நீ இங்கே இருந்தால், அவரும் இங்க தானே இருக்கணும்..!" என கேட்டுக்கொண்டே காவியா சுற்றி தேட,



"ஒரு போன் வந்ததுனு போனாரு கவி. புது பட டிஸ்கஷன் போயிட்டு இருக்கு.. சோ அவர் கொஞ்சம் பிசி.." என்றாள் சுகந்தி.



"நீ தான் பண்ணுறையா..?"



"ம்ஹ்ம். உன்னை மனசில் வச்சு தான் ஹீரோயின் கேரக்ட்டர் எழுதினாறாம். இப்போ கல்யாணம் இருப்பதால், அருள்குமரன் சார் உன்னை கேட்க வேண்டாம்னு சொல்லிட்டாராம். அதான் வேற ஹீரோயின் தேடிட்டு இருக்காங்க.."



"ஓ! நல்ல வாய்ப்பு ஒன்னு போச்சு..." என புலம்பி கொண்டாள் காவியா.



விஷ்ணு சிறந்த இயக்குனர்.



கதாநாயகிகளுக்கு சமமான பங்கு கொடுத்து படம் எடுக்கும் சில இயக்குனர்களில் ஒருவன் அவன்.



படம் மிஸ் ஆனது அவளுக்கு சற்றே வருத்தமாக தான் இருந்தது.



சிறிது நேரத்தில் பங்க்ஷன் தொடங்கி விட, அதற்கு மேல் நேரம் ரெக்கை கட்டிக்கொண்டு பறந்தது.



பாதி திரை உலகமே வந்து குமிந்ததில், யாருக்கும் நிற்க கூட நேரம் இல்லாமல் போனது.



ராகவன் காவியாஸ்ரீ ஜோடி பொருத்தத்தை வந்த அனைவரும் பாராட்ட தவறவில்லை.



பங்க்ஷன் முழுவதும் மலர்ந்த புன்னகையுடனே இருந்த காவியாஸ்ரீயை பார்த்து, ஒரு பக்கம் ராஜலக்ஷ்மி நிம்மதியடைந்தார் என்றால், மற்றொரு பக்கம் சுகந்தி குழப்பத்துடனே தான் இருந்தாள்.



அவள் எதிலுமே கலந்து கொள்ளாமல் இருப்பதை கவனித்த விஷ்ணு, அவளை தனியாக அழைத்து வந்தான்.



"என்ன சுகா! இப்படியே இருந்தால் எப்படி..! காவியா உன்னையே தான் பார்த்துட்டு இருக்கா. அவ கூட இருக்க கூடாதா டா..?" மென்மையாக அவன் கேட்க, அவனை நிமிர்ந்து பார்த்தாள் சுகந்தி.



"எனக்கு மனசே ஆறலை விஷு. உண்மையை சொல்லனும்னா நீங்க சீக்கிரம் இந்த வீட்டை விட்டு வந்துடுவேன்னு சொன்னதுனால தான் உங்க காதலையே நான் ஏத்துக்கிட்டேன். உங்க பேமிலி பத்தி நான் சொல்லி நீங்க தெரிஞ்சுக்க ஒண்ணுமே இல்ல. இந்த கவி எப்படி உங்க அண்ணாவை போய் காதலிச்சா..! எனக்கு இன்னுமும் புரியல விஷு.." கவலையுடன் அவள் கூற, அவனும் அவளை மென்மையாக அணைத்து கொண்டான்.



"காவியா சின்ன பொண்ணு இல்லை சுகா. அவள் வாழ்க்கையை சரியா அமைச்சுக்க அவளுக்கு தெரியும். நீ பயப்படற மாதிரி ஏதாவது ஆனாலும், அவளுக்கு எப்போதும் நாம இருப்போம். அதெல்லாம் எதிர்காலம். இப்போ அவளுக்கு ஒரு நல்ல உறுதுணை வேணும். நீ போ. அவ கூடவே இரு. இனி யோசிச்சு பிரோயோஜனம் இல்லை மா. எல்லாம் கை மீறி போய்டுச்சு.." விஷ்ணு நிதானமாக எடுத்து கூற, சுகந்திக்கும் அது புரிந்தது.



"ம்ம். போறேன் விஷு.." என்றவள் மறுக்காமல் தோழியிடம் சென்று விட்டாள்.



சுகந்தி வந்ததும் காவியா அவளை தன்னுடனே இருக்கும் படி கெஞ்சி கேட்க, அவளும் மறுக்காமல் இருந்து கொண்டாள்.



அந்த நாள் இரவு பறந்து போக, மறுநாள் திருமண தினமும் விடிந்தது.



திருமணத்தன்று இன்னும் நான்கு மடங்கு கூட்டம்.



அனைவரையும் உபசரிக்க அருள்குமரன் தனியாக ஒரு குழுவே அமைத்திருந்தார்.



ஒரு பக்கம் நூறு ஐட்டங்களுடன் விருந்து என அந்த இடமே அமர்களப்பட்டது.



முகூர்த்த நேரத்திற்கு பொண்ணு மாப்பிள்ளையை மேடைக்கு அழைத்து வந்தனர்.



தங்க நிற பட்டுப்புடவையில், காவியா உண்மையாகவே தேவதை போல் ஜொலித்தாள்.



அவளை வெளிப்படையாகவே ராகவன் சைட் அடித்தான்.



மொத்த திரை உலகமும் அவர்களை பொறாமையுடன் பார்ப்பது போல் தான் அவனுக்கு தோன்றியது.



இருவரும் அமர்ந்ததும் மந்திரம் எல்லாம் முடிந்து ஐயர் கையில் தாலியை எடுக்க, அதை பார்த்து காவியா உடல் ஒரு நொடி இறுகி போயிற்று.



இப்போது கூட ஒன்றும் கெட்டுவிடவில்லை. பேசாமல் அப்படியே எழுந்து ஓடி விடலாமா என்று கூட தோன்றியது.



எல்லாம் ஒரு நொடி தான்.



"பேப்" என்ற ராகவனின் அழைப்பில், அவள் சட்டென்று சுதாரித்து விட்டாள்.



அவளும் அவனை திரும்பி பார்த்து புன்னகைக்க, அவன் மகிழ்ச்சியுடன் அவள் கழுத்தில் தாலியை கட்டினான்.



அந்த நொடி காவியாவின் இதயம் வேலை செய்யாமல் அடம் பிடித்ததை உணர, அங்கு யாருமே இல்லாமல் போய் விட்டனர்.



திருமணம் முடிந்த கையோடு மற்ற சடங்குகளும் முடித்தனர்.



மாலையே வரவேற்பும் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பிரமாண்டமாக நடந்தது.



இரவு ராகவன் வீட்டிலேயே முதலிரவிற்கும் ஏற்பாடு செய்திருந்தனர்.



வரவேற்பெல்லாம் முடிந்து கிளம்பும் முன், சுகந்தி காவியாவிடம் வந்தாள்.



"எல்லாம் நல்லதே நடக்கும் கவி. நல்லபடியா வாழ்க்கையை தொடங்கு.." என அவள் மென்குரலில் கூற,



"என்ன டி நேத்து வரைக்கும் கோபமா இருந்த. திடீர்னு இந்த குடும்பம் உன் கண்ணுக்கு நல்லவங்களா தெரியராங்களா..? எப்படி சுகி..?" ஆச்சர்யமாக கேட்ட காவியாவை ஒன்றும் புரியாமல் அதிர்ந்து பார்த்தாள் சுகந்தி.



திருமணம் முடிந்த கையோடு அவள் இப்படி ஒரு கேள்வி கேட்டால், என்ன தான் செய்வது..!



"கவி..." என சுகந்தி திணற, அதில் சட்டென சிரித்துவிட்ட காவியா, "விடு டி. நான் பாத்துக்கறேன். நீ கிளம்பு.." என்று விட்டாள்.



சுகந்தியும் கலங்கிய மனதுடன் தான் அங்கிருந்து கிளம்பி சென்றாள்.



இரவு ராஜலக்ஷ்மிக்கு ராகவன் வீட்டிலேயே ஒரு அறை கொடுத்து விட்டனர்.



முதல் இரவு அறைக்கு போகும் முன் ராஜலக்ஷ்மி காவியாவை பார்க்க வர, அவளும் அலங்காரம் முடிந்து அப்போது தான் எழுந்தாள்.



உடன் இருந்த பெண்கள் காவியா பார்வையில் ஒதுங்கிக்கொள்ள, அவள் அன்னையை அழுத்தமாக அணைத்துக்கொண்டாள்.



"சந்தோசமா இருக்கணும் காவியா மா.." என அவர் வாழ்த்த, அவளோ எந்த பதிலும் கூறாமல் அன்னை அணைப்பில் சிறிது நேரம் அமைதியாக இருந்தாள்.



சில நொடிகளில் தானே சுதாரித்து கொண்டு விலகியவள், "அம்மா எந்த சூழ்நிலையிலும் நீ என்னை வெறுத்துட மாட்டா தானே..?" என கேட்க,



"இது என்ன டி கேள்வி..?" என்றார் அவர் புரியாமல்.



"பதில் சொல்லேன் மா.."



மகள் குரலில் என்ன புரிந்ததோ, "நீ என் பொண்ணு டி. நீ கொலையே செய்தாலும் அதில் நியாயம் இருக்கும்னு நான் நம்புவேன்.. உன்னை என்னால் எப்பவுமே வெறுக்க முடியாது டா.." என்றார் அவர் அழுத்தமாக.



அவர் பதிலில் மனம் நிறைந்து விட, "தேங்க்ஸ் மா" என்றவள் மீண்டும் ஒருமுறை அன்னையை அணைத்து விடுவித்தாள்.



"நீ போய் தூங்கு மா" என அவள் கூறிவிட, "சரி டா" என்றவர், மகள் தலையில் கை வைத்து ஆசிர்வதித்து விட்டு சென்று விட்டார்.



காவியாவும் தன்னை கடைசியாக ஒரு முறை கண்ணாடியில் பார்த்து கொண்டாள்.



சிறந்த ஒப்பனை கலைஞர் கைவண்ணத்தில் அவள் அழகில் மேலும் ஜொலித்தாலும், அவள் கண்கள் மட்டும் சிவந்து இருந்தது.



கோபமா! அழுகையா! வெறியா! என்னவென்று அவளுக்கு மட்டுமே வெளிச்சம்..!



சௌமியா வந்து விட, காவியா வேகமாக முகத்தி மாற்றி கொண்டாள்.



ராகவன் அறையை அவளுக்கு காண்பித்து விட்டு, அனைவரும் சென்று விட்டனர்.



மெதுவாக அவள் அறைக்குள் நுழைய, அடுத்த நொடி கதவை ராகவன் தாள் போட்டு விட்டான்.



என்னவென்று அவள் யோசிக்கும் முன்பே, அவள் அவன் கைகளுக்குள் சிறை பட்டிருந்தாள்.



அவள் தலையில் இருந்த மல்லிகையை வாசம் பிடித்தவன், "என்னால் இன்னுமும் நம்பவே முடியல பேப். இண்டஸ்ட்ரியில் டாப் ஹீரோயின். ஊருக்கே கனவு கன்னி. இப்போ முழுசா என் கையில். ஐ எம் சோ ஹாப்பி, யு நோ..!" அவள் காதருகில் அவன் கிசுகிசுப்பாக கூற, அவளோ எந்த பதிலும் கூறவில்லை.



அவள் பதிலை எல்லாம் அவன் எதிர்பார்க்கவுமில்லை.



அவன் கைகள் அத்துமீற தொடங்க, "லைட் ஆப் பண்ணிடுங்க ராகவ்" என்றாள் காவியா.



"இருக்கட்டுமே பேப்" என்றவன் காரியத்தில் கண்ணாக இருக்க, "ப்ளீஸ் ராகவ்" என்றாள் அவள் கெஞ்சலாக.



அதற்கு மேல் மறுக்காமல் நல்லவேளையாக அவன் லைட்டை அனைத்து விட்டான்.



அவன் முகத்தை நிச்சயம் அவளால் பார்க்க முடியாது.



அதே நேரம் அவள் முகத்தை அவன் தெளிவாக பார்ப்பதையும் அவள் விரும்பவில்லை..



அவன் கவனம் முழுவதும் அவளை ஆட்கொள்வதில் மட்டும் தான் இருந்தது.



அவளோ எந்த உணர்வும் இல்லாமல் தான் இருந்தாள்.



அவனுக்கு வாழ்வில் தொடக்கமோ என்னவோ..! அவளை பொறுத்தவரை இது திருமண வாழ்வின் முடிவு.



அவ்வளவு தான்.



அவள் வாழ்வின் திருமணம், தாம்பத்தியம் என்னும் அத்தியாயம் எந்த உணர்வும் இல்லாமலே முடிந்து போனது.



அவள் உணர்வற்ற நிலையோ, நடுக்கமோ, மனப்போராட்டமோ எதுவும் கவனிக்கும் நிலையில் ராகவன் இருக்கவில்லை...



அதே நேரம் தன் குடிலில் நன்றாக உறங்கி கொண்டிருந்த சிவதேவ், திடுக்கிட்டு விழித்தான்.



அவன் உடல் முழுவதும் வியர்த்து விட்டிருந்தது.



அவன் இதயம் வேகமாக துடித்தது.



ஏதோ ஒரு வித நடுக்கம் ஏற்பட, அவன் வாய் தானாக, 'ஸ்ரீ..' என முணுமுணுத்தது.



'ஸ்ரீ... ஸ்ரீ...' என புலம்பியவனுக்கு, ஏன் புலம்புகிறோம் என்று மட்டும் புரியவே இல்லை.



ஒரு கட்டத்தில் அலைப்புறுதலும், நடுக்கமும் தாங்க முடியாமல், "ஐயோ..." என அவன் சத்தமாக கத்திவிட்டான்..

இளைப்பாறும்..

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Int 7:

காவியாவிற்கு அந்த வீட்டில் பொருந்துவதற்குள் போதும் போதும் என்று தான் ஆகி விட்டது.

சௌமியா மட்டுமே அவளுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தார்.

மற்ற அனைத்து சொந்தங்களும் பகட்டு தான்.

விஷ்ணுவோ ஷூட் இருக்கிறது என்று வீட்டு பக்கமே அதிகம் வர மாட்டான்.

ஒருவாறு சொந்தங்கள் எல்லாம் கிளம்பி சென்றதும் தான், காவியாவாள் நிம்மதியாக மூச்சே விட முடிந்தது.

இனி கொஞ்சமேனும் நிம்மதியாக இருக்கலாம் என அவள் நினைத்த போது, ராகவன் அடுத்த பிரச்சனையை தொடங்கினான்.

"ஹனிமூன் எங்க போலாம் பேப்..? லண்டன் ஓகே வா..?" என அவன் ஒரு நாள் இரவு கேட்க, அவளுக்கோ திக்கென்றிருந்தது.

இங்கு வைத்து அவனை சமாளிப்பதே அவளுக்கு பெரும் பாடு. இதில் வெளியூர் வேறா..!

"ஒரு மூவி டப்பிங் இருக்கு ராகவ். அது முடிக்கணும். அப்புறம் ஏற்கனவே பாதி நடிச்ச ஒரு வெப் சீரிஸ் மிச்சம் இருக்கு. அதுவும் முடிக்கணும். எல்லாம் முடிச்சுட்டு ப்ரீயா போகலாமே..!" என்றாள் அவள்.

"இதெல்லாம் நீ சொல்லவே இல்லையே பேப்..!"

"சின்ன சின்ன கமிட்மென்ட் தானே ராகவ். பார்த்துக்கலாம்னு தான் விட்டுட்டேன். சீக்கிரம் முடிஞ்சுடும். முடிஞ்சதும் பிளான் பண்ணிக்கலாமே..!" கெஞ்சலாக அவள் கேட்கவும், அவனும் அப்போதைக்கு விட்டுவிட்டான்.

"கொஞ்ச நாளில் நானும் பிசி ஆகிடுவேன். ஓகே. பார்த்துப்போம் விடு பட் புதுசா எதுவும் என்னை கேட்காமல் கமிட் ஆகாதே.." என்று மட்டும் கூறி வைத்தான்..

அவளும் அப்போதைக்கு தலையாட்டி கொண்டாள்.

அருள்குமரன் தான் அடிக்கடி ஏதோ ஒரு குறை கூறிக்கொண்டே இருந்தார்.

அவரை காவியா பெரிதாக கண்டுகொள்ளாமல் இருந்து பழகி கொண்டாள்.

வெளிப்படையாக அவர் காவியாவை அசிங்கப்படுத்திய சம்பவமும் நடந்தது.

திருமணம் முடிந்து ஒரு வாரம் தான் இருக்கும்.

காலை நேரத்தில் ஒரு பெரிய பிஸ்னஸ் மேன் அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தார்..

அப்போது தான் காவியா எழுந்து தன் அறையில் இருந்து கீழே வந்தாள்.

அவளை பார்த்த அருள்குமரன், "காவியா ரெண்டு காஃபி சொல்லு" என கூற,

"ஓகே அங்கிள்" என்றுவிட்டு உள்ளே வந்தவள், வேலையாளிடம் இரண்டு காஃபி கூறினாள்.

அதை ஒரு பக்கம் போட்டவர், மற்றொரு பக்கம் டிபன் வேலையை பார்த்து கொண்டிருந்தார்.

அவருடன் வேலைபார்க்கும் அவர் மனைவி அன்று உடல்நிலை சரி இல்லாமல் வராததால், அவருக்கு வேலை அதிகமாக தான் இருந்தது.

இரண்டு கை பத்தாமல் வேலை செய்து கொண்டிருந்தவரை கவனித்தவள், "நான் கொடுத்துக்கறேன் ண்ணா" என காஃபி வைத்திருந்த ட்ரேயை எடுத்தாள்.

"இல்ல மா, கொடுங்க. நானே கொடுத்துக்கறேன். இல்லைனா திட்டுவாங்க.." என தோசையை திருப்பி கொண்டே அவர் கூற,

"இதில் என்ன ண்ணா இருக்கு..! நீங்க வேலையை பாருங்க." என்றவள், நகர்ந்து விட்டாள்.

அவர் முகத்தில் இருந்த தவிப்பை அவள் கவனிக்கவில்லை.

ஹாலில் வந்து இருவருக்கும் அவர் காஃபியை கொடுக்க, புதிதாக வந்திருந்தவர் அவளை ஒரு மாதிரி பார்த்துக்கொண்டே காஃபியை எடுத்து கொண்டார்.

"என்ன குமரா, இந்த பொண்ணு உன் மருமகளா? இல்லை வேலைக்காரா பெண்ணா?" என அவர் கேட்டு வைக்க, அருள்குமரனும் ஒரு பக்கம் தன்னை முறைப்பதை காவியா அப்போது தான் கவனித்தாள்.

"என்னத்த சொல்ல சங்கரா..! இந்த ராகவன் தான் சொல்ல சொல்ல கேட்காமல் இவள் தான் வேணும்னு அடம் பிடித்தான். பெரிய ஹீரோயின்னு பேரு தான். கொஞ்சமும் ஹைடெக்கா இருக்க தெரியலை. என்ன குடும்பமோ போ..!" என அவர் சத்தமாகவே பதில் கூற, காவியா முகம் இறுகி போயிற்று.

அவள் சட்டென அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.

இன்னும் ஒரு நிமிடம் நின்றிருந்தாலும், அவள் வாயில் இருந்து சூடாக பதில் வந்திருக்கும்.

அதே நேரம் வந்திருந்த ராகவனும், அங்கு நடந்ததை கவனித்தான்.

மனைவி சமையலறைக்குள் செல்வதை பார்த்தவன், அவளை தொடர்ந்து உள்ளே வந்தான்.

"இந்த வேலை நீ செய்ய கூடாது பேப். பாக்கறவங்க அசிங்கமா தான் நினைப்பாங்க. இனி பண்ணாத.." என அவனும் கூறிவைக்க, அவள் அவனுக்கும் எந்த பதிலும் கூறவில்லை.

"ஒரு காஃபி கொடுத்தது தப்பா டா..! அதுக்கு அப்பாவும் பிள்ளையும் இந்த பேச்சு பேசறீங்க..!" என மகனை கடித்துக்கொண்டே சௌமியா வர,

"அவளாவது இப்போதே எல்லாம் கத்துக்கட்டும். உங்களை மாதிரி ஆக்கி வைக்காதீங்க.." என அன்னையையும் திட்டிட்டே அவன் சென்றான்.

காவியா எந்த பதிலும் கூறாமல் அமைதியாகவே நிற்க, சௌமியா அவள் அருகில் வந்து அவள் கையை ஆறுதலாக பிடித்து கொண்டார்.

"இவனும் இவன் அப்பாவும் இப்படி தான் மா ஸ்டேட்டஸ் ஸ்டேடஸ்ன்னு உயிரை வாங்குவாங்க. நீ ஒன்னும் கவலைப்படாத டா.." என அவர் மென்மையாக கூற,

"உங்க பிள்ளைக்காவது நீங்க ஏதாவது சொல்லி தந்திருக்க கூடாதா..? இது ஒரு சாதாரண விஷயம். இதுக்கு இத்தனை வார்த்தையை கொட்டணுமா..?" என்றாள் அவள் வெறுமையாக.

"தப்பு தான் காவியா மா. ஆனால் ராகவன் என்னிடம் வளரவே இல்ல டா. எல்லாம் அவர் வளர்ப்பு. அவரை மாதிரியே வளர்த்துட்டார். மாறிடுவானு நினைச்சேன். நீ தான் மாத்த முயற்சி பண்ணனும் காவியா.."

'இவனை எல்லாம் யாராலும் திருத்த முடியாது!' என மனதில் நினைத்துக்கொண்டவள், வெளியில் எதுவும் சொல்லவில்லை.

ஆனால் அவள் முகம் என்ன உணர்த்தியதோ, "என்ன நினைக்கற காவியா..?" என அவர் கேட்டே விட்டார்.

அவர் கேள்வியில் சுதாரித்தவள், "ஒன்னும் இல்லை ஆண்ட்டி. நாம காஃபி குடிப்போம்.." என்று திரும்பி விட்டாள்.

அப்படியே அவள் வேறு கதைகள் பேச, அவரும் மனம் மாறி அதில் லயித்து விட்டார்.

**********

நாட்கள் அதன் போக்கில் வேகமாக சென்று கொண்டிருந்தது.

ஒரு நாள் இரவு உணவு முடிந்து சிவதேவ் தனியாக அமர்ந்திருந்த போது, நந்தினி அவனை தேடி வந்தாள்.

"சிவா உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்" என அவள் தொடங்க, "சொல்லு" என்றான் சிவதேவ் அவள் பக்கம் திரும்பாமலே..

அவன் கவனம் வேறு எங்கோ இருந்தது.

சில நாட்களாக அவன் சரியாக பேசுவதில்லையோ என்று கூட நந்தினிக்கு தோன்றியது.

இருந்தும் இப்போது அவள் சொல்ல வந்த விஷயத்தை தள்ளி போட முடியாதே..! அதனால் தொடர்ந்து பேசினாள்.

"இன்னிக்கு நான் காலேஜில் இருந்து வரும் போது, அப்பாவும் வேலையை முடிச்சுட்டு என் கூட தான் வந்தாரு. அப்போ அப்பாக்கு தெரிஞ்சவர் ஒருத்தர், என்னை அவர் பையனுக்கு பொண்ணு கேட்டாரு..." என அவள் நிறுத்த, அவனிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

"சிவா கவனிச்சீங்களா..?" சந்தேகத்துடன் அவள் நிறுத்த,

"ம்ம் கேக்கறேன். சொல்லு.." என்றான் அவன்.

"என்னை பொண்ணு கேக்கறாங்க சிவா.."

"ம்ம். அதுக்கு என்ன..?" சாதாரணமாக அவன் கேட்க,

"எனக்கு அவனை கல்யாணம் பண்ணிக்கறதில் இஷ்டம் இல்லை சிவா.." என்றாள் அவள் தவிப்புடன்.

"சரி. உன் அப்பாகிட்ட சொல்லு.."

"நீங்க வந்து பேசுங்களேன்.."

"ப்ச். நீயே பேசு. சார் கேப்பாரு.."

"சிவா ப்ளீஸ்.. எனக்காக.. நான் உங்களை...."

"நந்தினி ப்ளீஸ் ஸ்டாப்.."

அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே சிவதேவ் கத்திவிட்டான்.

இப்போது அவளை திரும்பி நேராக பார்த்தவன், "தயவுசெஞ்சு போ நந்தினி. எதுவும் பேசும் நிலைமையில் நான் இல்லை. போய்ட்டு ப்ளீஸ்.." அவன் என்னவோ தன்மையாக தான் கூறினான்.

அவன் நிலை புரியாமல் அவள் மீண்டும், "இல்ல சிவா. நான் சொல்லுறதை கேளுங்களேன்.." என தொடங்க, இந்த முறை அவன் பொறுமை கரைந்து விட்டது.

அவள் கையை அழுத்தமாக பிடித்தவன், "உன்னை போக சொன்னேன் நந்தினி" என அவள் கண்ணை பார்த்து அழுத்தமாக கூற, அவன் கண்களில் ஏறி இருந்த செம்மை நிறம் அவளை பயமுறுத்தியது.

"போ" என அவன் அவள் கையை விட்டுவிட, அவளும் அப்போதைக்கு அமைதியாக நகர்ந்தாள்.

அவனை திரும்பி திரும்பி பார்த்து கொண்டே தான் நந்தினி சென்றாள் மீண்டும் இருளை வெறிக்க ஆரம்பித்தவன் மனதின் போராட்டத்தை சிறு பெண் அவள் உணர வாய்ப்பில்லை.

**********

நந்தினி சிவாவை பற்றியே யோசித்து கொண்டிருக்க, அவனோ அடுத்த இரண்டு நாளில் டாக்டரை பார்க்க வேண்டும் என திடீரென்று கூறினான்.

அப்போது அவனுடன் நந்தினியும் வனராஜனும் மட்டும் தான் இருந்தனர்.

"ஏன் சிவா, என்ன பண்ணுது..?" என நந்தினி பதட்டத்துடன் கேட்க,

"என்ன சிவா..?" என்றார் வனராஜனும் சற்றே பதறியவராக.

"தலை வலிக்குது சார். நம்ம மூலிகை மருந்து எடுத்து பார்த்துட்டேன். ஒன்னும் கேட்கலை. அதான் டாக்டரை பார்த்து கேட்கலாம்னு பார்த்தேன். கூப்பிட முடியுமா..?" என்றான் அவன்.

"நான் காவியா கிட்ட சொல்லுறேன் சிவா. அவங்க கூட்டிட்டு வருவாங்க.." என நந்தினி கூற,

"ஏன், டாக்டர் நம்பர் இல்லையா..?" என்றான் அவன்.

"இல்ல. அவர் ரொம்ப பிஸியான டாக்டர். அப்பாயின்மென்ட் இல்லாமல் பார்க்க முடியாது. காவியா தான் எப்பவும் கூட்டிட்டு வருவாங்க. அவங்க நம்பர் தான் இருக்கு.." என்றாள் நந்தினி.

"ம்ம். அப்போ சொல்லு.." என்றுவிட்டு சிவதேவ் நகர்ந்து விட்டான்.

நந்தினி காவியாவிடம் போன் செய்து விஷயத்தை கூறினாள்.

அவனுக்கு முடியவில்லை என்றதும் காவியாவிற்கு பதறி தான் விட்டது.

"நான் ஒரு ரெண்டு நாளைக்குள் எப்படியாவது வந்துர்றேன் நந்தினி. இப்போதைக்கு டாக்டர் கிட்ட கேட்டு டேப்லெட் அனுப்பறேன். அதை வாங்கி கொடு.." என்றாள் காவியா.

நந்தினி போனை வைத்த உடனேயே, மருத்துவருக்கு அழைத்து பேசியவள், விஷயத்தை கூறினாள்.

அவரும், "வரும் சண்டே போகலாம் காவியா. அதுவரை நான் அனுப்பும் டேப்ளெட்ஸ் போட சொல்லு.." என்று கூற,

"இன்னும் நாலு நாள் இருக்கே சார்..! அவனுக்கு வலி அதிகமாகிடாதே..!" என்றாள் அவள் கவலையுடன்.

"அதெல்லாம் ஆகாது மா" என அவளை சமாதானம் செய்து தான் அவர் போனை வைத்தார்.

அவர் கூறிய மாத்திரைகளை உடனடியாக நந்தினிக்கு அனுப்பி வைத்தவள், மீண்டும் தானே அவளுக்கு அழைத்தாள்.

"மாத்திரை அனுப்பி இருக்கேன் நந்தினி. பாத்தியா..? உடனே வாங்கிடு.."

"ம்ம் வந்துடுச்சு. நான் வாங்கிடறேன்.."

"சரி. சிவா கிட்ட போன் கொடு.."

"எதுக்கு..?" எச்சரிக்கையாக நந்தினி கேட்க,

"உடம்பு எப்படி இருக்குனு கேட்க தான்.. ரொம்ப பண்ணாமல், கொடு.." எரிச்சலுடன் காவியா கூற, நந்தினி நொடித்துக்கொண்டாலும், போனை கொடுக்க தவறவில்லை.

சிவாவும் நந்தினி கொடுத்த போனை வாங்கி அமைதியாக காதில் வைத்தான்.

"உடம்பு எப்படி இருக்கு தேவ்..? ரொம்ப வலி இருக்கா..? ரொம்ப முடியலைன்னா சொல்லுங்க.. வேற ஏதாவது உடனே ஏற்பாடு பண்ணுறேன்.." படபடப்புடன் அவள் கூற,

"பெருசா ஒன்னும் இல்ல. சின்ன பெயின் தான். இந்த நிமிஷம் வரை உயிரோட தான் இருக்கேன்." என்றான் அவன் நிதானமாக.

"எ.. என்ன..?" அவன் குரலில் தெரிந்த சிறு வித்தியாசத்தில் அவள் திணறி தான் போனாள்.

"உயிரோட தான் இருக்கேன் காவியாஸ்ரீ. நீங்க வரும் நாலு நாளில் செத்துட மாட்டேன்னு நம்புறேன். வந்துருவீங்க தானே..?" அழுத்தமாக ஒலித்த அவன் குரல் அவளுக்கு என்னவோ போல் இருந்தது.

"கண்டிப்பா வந்துருவோம்" என அவள் கூற,

"ம்ம் வெயிட் பண்ணுறேன்" என்றுவிட்டு அவன் போனை வைத்து விட்டான்.

காவியா போலவே நந்தினியும் அவனை வித்தியாசமாக தான் பார்த்தாள்.

"ஏன் என்னவோ மாதிரி பேசறீங்க சிவா..?" என அவளும் கேட்க,

"ஒன்னும் இல்ல மா. கொஞ்சம் முடியல. அவ்வளவு தான்.." என மெலிதாக சிரித்தான் சிவதேவ்.

அவளுக்கு அந்த புன்னகை போதுமானதாக இருந்தது.

"ரெஸ்ட் எடுங்க சிவா. நான் வேணா சூடா சுக்கு காஃபி போடவா..?" என நந்தினி கேட்க,

"போடேன்" என்றுவிட்டான் சிவதேவ்.

அவள் நகர்ந்ததும் அவன் முகம் மீண்டும் இறுகி விட்டது..

இளைப்பாறும்..

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 8:

ராகவனிடம் தோழி நிச்சயத்திற்கு போவதாக கூறிவிட்டு தான், காவியாஸ்ரீ கிளம்பினாள்.

நேரடியாக கோவை வந்தவள், ஹாஸ்பிடல் சென்று தங்கராஜை அழைத்து கொண்டு, சிவத்தேவை பார்க்க தான் வந்தாள்.

அவள் வருவதாக கூறி இருந்ததால், சிவதேவ் அவளுக்காக வாசலிலேயே காத்திருந்தான்.

அவனை பார்த்ததும் காவியா மெலிதாக புன்னகைக்க, அவன் முகம் அந்த புன்னகையை பிரதிபலிக்கவில்லை.

மாறாக அவன் கண்கள் அவளை தான் ஆராய்ந்தது.

நெற்றி வகிட்டில் குங்குமம், கழுத்தில் மினுமினுக்கும் புது தாலி என பார்ப்பதற்கு மேலும் அழகு கூடியது போல் தான் இருந்தாள்.

வழக்கமாக அணியும் ஜீன்ஸ் குர்தா தான் அணிந்திருந்தாள்.

"உடம்பு எப்படி இருக்கு..?" என்ற காவியா குரலில் நினைவிற்கு வந்தவன்,

"பரவாயில்லை" என்றுவிட்டு டாக்டர் பக்கம் திரும்பினான் .

"வாங்க டாக்டர்" என்றுவிட்டு அவன் குடிலுக்குள் செல்ல, அவரும் அவனை தொடர்ந்து சென்றார்.

வழக்கம் போல் மற்றவர்கள் வெளியில் தான் நின்றிருந்தனர்.

"வாழ்த்துக்கள்" என நந்தினி கை கொடுக்க, காவியா அவளை முகம் சுருங்க பார்த்தாள்.

"கல்யாணத்துக்கு வாழ்த்துக்கள்" சிறு புன்னகையுடன் நந்தினி கூற, காவியா எந்த பதிலும் கூறாமல் திரும்பி விட்டாள்.

நந்தினி என்னவோ சாதாரணமாக தான் கூறினாள்.

சொல்லப்போனால், தன் பாதை சரியாகிவிட்ட நிம்மதி அவளுக்கு.

காவியா நிலை தான் மோசமாக இருந்தது. அது நந்தினிக்கு புரிய வாய்ப்பில்லை தான்.

காவியா சற்றே நகர்ந்து வந்து நின்று விட்டாள்.

சிறிது நேரத்தில் தங்கராஜ் வெளியே வந்தார்.

அவரை தொடர்ந்து சிவதேவ்வும் வந்தான்.

"ஒன்னும் இல்லை. சாதா வலி தான்.." என தன்னை பார்த்தவர்களிடம் தங்கராஜ் கூறினார்.

"ஹாப்பி மேரீட் லைப் காவியாஸ்ரீ.." என சிவதேவ்வும் கூற, அவனிடம் அமைதியாக இருக்க முடியாமல், "தேங்க்ஸ்" என்று கூறி வைத்தாள் காவியா.

"எப்படி போகுது மேரேஜ் லைப்..? லவ் மேரேஜா..?" சிவதேவ் சகஜமாக கேட்க, காவியா தான் பதில் சொல்லும் முன் திணறி போனாள்.

"ஆ.. ஆமா..."

"உங்க ஹஸ்பண்டும் ஆக்டரா..?"

"ம்ம்"

"ரொம்ப டீப் லவ்வோ..!"

அவன் கேள்வியில் அவள் குழப்பத்துடன் அவனை பார்க்க, "ஜஸ்ட் சும்மா தான் கேட்டேன்" என்ற சிவதேவ், தொடர்ந்து கேள்வி கேட்டான்.

"சந்தோசமா இருக்கீங்களா..? உங்க குட் டைமில் தொந்தரவு பண்ணிட்டேனா..?"

"அதெல்லாம் இல்ல" என வேகமாக அவன் கடைசி கேள்விக்கு மட்டும் பதில் கூறினாள் காவியாஸ்ரீ.

"நான் எப்போ வெளியே வரலாம்?" இந்த கேள்வியில் காவியா கவனம் இப்போது முழுதாக அவன் மேல் திரும்பியது.

"ஏற்கனவே சொன்னேனே! சில மாதங்கள் மட்டும் பொருங்க.. ப்ளீஸ்.."

"அதற்குள் என்ன மாற்றம் நடக்கும்..?" தொடர்ந்து அவன் கேட்டதில், மீண்டும் அவள் விழிக்க வேண்டியதாயிற்று.

திடீரென அவன் இத்தனை பேசுவான் என்றே எதிர்பார்க்காதவள், திணறி தான் போனாள்.

அவள் டாக்டரை பார்க்க, "சிவதேவ் வெளிய வரணும்னு நினைக்கறாரு காவியா" என்றார் அவர்.

இப்போது அவள் சிவதேவை பார்க்க, அவனும் அவளை தான் அழுத்தமாக பார்த்து கொண்டிருந்தான்.

அவன் பார்வை அவளுக்குள் ஏதோ செய்தது.

அந்த பார்வையில் இருந்த அழுத்தம் அவளுக்குள் ஒரு வித அவஸ்தை ஏற்படுத்துவதை அவளால் தடுக்க முடியவில்லை.

"நீங்க சொல்லுங்க காவியா. நான் வெயிட் பண்ணுறேன்.." என திடீரென அவனே கூற, அவளுக்கு ஏற்பட்ட நிம்மதியை வார்த்தைகளால் கூறி விட முடியாது..

"தேங்க்ஸ் தேவ்" என அவள் தன்னை அறியாமல் கூறிவிட, அவன் கண்கள் ஒரு முறை இடுங்கி தெளிவானது.

"சரி கிளம்பறோம்" என்றுவிட்டு தங்கராஜ் நடக்க தொடங்க, காவியாவும் மெதுவாக நகர்ந்தாள்.

அவள் கண்கள் என்னவோ சிவதேவ் மீதே தான் இருந்தது.

அவள் திரும்பி திரும்பி பார்த்து கொண்டே சென்று விட்டாள்.

இவர்கள் செயல்களை பார்த்து கொண்டிருந்த நந்தினிக்கு தான், ஒன்றும் சரியாக படவில்லை.

சிவதேவ் கேள்விகள், காவியா பதில்கள் என எதுவுமே அவளுக்கு சரியாக படவில்லை.

திடீரென சிவதேவ் குரலில் வந்திருந்த அதீத அழுத்தம் வேறு அவளை பயமுறுத்தியது.

அன்று முழுவதும் அதையே யோசித்து கொண்டிருந்தவள், இதற்க்கு மேல் தாமதிக்க கூடாது என்ற முடிவுடன் இரவு தந்தையிடம் பேசினாள்.

"அப்பா எனக்கு உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்" என அவள் கூற, அப்போது தான் வேலை முடித்து ஓய்வாக அமர்ந்திருந்தவர், "சொல்லு மா" என்றார்.

"அப்பா நான் நம்ம சிவாவை விரும்பறேன்.. எனக்கும் அவருக்கும் கல்யாணம் பண்ணி வைங்க பா.." என அவள் பட்டென போட்டு உடைத்து விட, வனராஜன் தான் ஒரு நொடி அதிர்ந்து போனார்.

"என்ன பேசற நந்தினி நீ..!" என அவர் அதிர்ச்சியுடனே கேட்க, அவளோ, சற்று நகர்ந்து தந்தை அருகில் வந்து அமர்ந்து கொண்டாள்.

"அப்பா ப்ளீஸ் கோவப்படாதீங்க. எனக்கு சிவாவை ரொம்ப பிடிச்சிருக்கு. அவரை பற்றி உங்களுக்கு நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவருக்கு ஏதோ ஆபத்து இருக்குனு வேற அந்த காவியா அடிக்கடி சொல்லுறாங்க. அவர் நம்ம கூடவே இருக்கட்டும் பா. ஏதோ சின்னதா தொழில் பண்ணிட்டு நல்லபடியா இருக்கட்டுமே..! யாரோ தெரியாத பையனை பார்க்க, சிவா எவ்வளவோ பரவாயில்லை தானே பா..!" நிதானமாக நந்தினி எடுத்து கூறினாலும், வனராஜன் முகம் தெளியவில்லை.

"இல்ல நந்தினி. நீ ஒரு பக்கம் மட்டுமே பாக்குற. சிவாக்கு நமக்கு தெரியாத இன்னொரு பக்கம் கண்டிப்பா இருக்கு. கொஞ்ச நாளில் அவன் போய்டுவானு தோணுது டா. ஆழம் தெரியாமல் காலை விட கூடாது மா.."

"சிவாக்கு எதுவும் தப்பான பக்கம் இருக்கும்னு நினைக்கிறீங்களா பா..?"

"ச்ச.. ச்ச.. இல்ல டா.."

"அப்புறம் என்ன பா..! எப்படினாலும் அவர் நல்லவர் தான். ப்ளீஸ் பா, எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைங்க. நீங்க சொன்னால் அவர் கேட்பாரு. ப்ளீஸ் பா.." கிட்டத்தட்ட அழுதுவிட்ட மகளை பார்த்து, அவருக்கு பாவமாக தான் இருந்தது.

சிவா சம்மதித்தால் அவருக்கு மறுப்பு இல்லை தான். சிவா நல்லவன் என்பதில் அவருக்கு மாற்றுகருத்தில்லை.

ஆனால் அவன் சம்மதிக்க வேண்டுமே. அவர் மகளை விரும்ப வேண்டுமே. அன்பவம் வாய்ந்த அவர் கண்களுக்கு சிவா முகத்தில் காதல் என்றுமே தெரிந்ததில்லை.

ஒரேடியாக இதை எல்லாம் கூறி நந்தினியை உடனடியாக கஷ்டப்படுத்த அவர் விரும்பவில்லை.

"சிவா கிட்ட பேசி பார்ப்போம் நந்தினி. முடிவு அவன் தான் சொல்லணும்.." என்று மட்டும் அவர் கூற,

"அப்போ இப்போவே பேசலாம் பா" என்றாள் அவள் அவசரமாக.

"இது அவசரப்படும் விஷயம் இல்ல நந்தினி. நான் நேரம் பார்த்து பேசறேன். ஆனால் கண்டிப்பா பேசறேன். கவலைப்படாதே..!" என அவர் கூறிவிட, தந்தை சொன்னால் செய்வார் என்பதால் அவளும் அமைதியாகி விட்டாள்.

**********

ஷூட்டிங்கில் இருந்த ராகவன் போன் அடிக்க, அதை எடுத்துக்கொண்டு தனியாக வந்து அவன் பேசினான்.

அந்த பக்கம் சொன்ன செய்தியை கேட்டு அவன் முகம் கோபத்துடன் இறுகி போனது.

"நான் பார்த்துக்கறேன். தேங்க்ஸ்.." என்றுவிட்டு போனை வைத்தவன், அடுத்த நொடி மனைவிக்கு தான் அழைத்தான்.

"எங்க இருக்க பேப்..?" என அவள் எடுத்ததுமே அவன் கேட்க,

"ஷூட்டிங் தான் ராகவ்" என்றாள் அவள்.

"எந்த ஷூட்டிங்..?"

"ஒரு புது வெப் சீரிஸ்.."

"என்னவா நடிக்கற..?"

இந்த கேள்விக்கு அவள் பதில் கூறவில்லை.

"கூப்படறாங்க ராகவ்" என்றவள், போனை கட் செய்து விட்டு சென்றுவிட்டாள்.

மீண்டும் அவன் அழைத்த போதும், அவள் எடுக்கவில்லை.

அதற்கு மேல் பொறுமை இல்லாமல் ராகவன் கிளம்பி விட்டான்.

"ஷூட்டிங் இருக்கு சார்" என டைரக்டர் தடுக்க முயற்சித்த போதும்,

"நாளைக்கு வரேன். இன்னிக்கு முடியாது.." என்றுவிட்டு அவன் வேகமாக சென்று விட்டான்.

"இவனை போல் நடிகர்களை நடிக்க போட்டால், இது தான் கதி. என்ன பண்ணி தொலைய..!" என டைரக்டர் புலம்ப,

"ப்ரொடியூசர் முழுசா இவங்க கையில் தான் சார். வேற வழியே இல்லையே..!" என துணை இயக்குனரும் புலம்பி கொண்டார்.

படத்தின் தயாரிப்பாளார் அருள்குமரன் சொந்தமாக இருக்கும் போது, அவரால் என்ன செய்துவிட முடியும்..!

ராகவன் நேராக காவியா ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த இடத்துக்கு தான் வந்தான்.

அப்போது ஒரு சீன் எடுத்து கொண்டிருந்தனர்.

அவள் இருந்த கெட்டப்பை பார்த்து, அவனுக்கு அத்தனை ஆத்திரம் வந்தது.

பிச்சைக்காரி வேடம் அல்லவா போட்டிருந்தாள்..!

அவன் நண்பன் போனில் சொன்ன போது கூட அவன் முழுதாக நம்பவில்லை. இப்போது நேரில் பார்த்தாப்போது அத்தனை ஆத்திரம் வந்தது அவனுக்கு.

ஒரு குடிசையில் கிழிந்த புடவையுடன் காவியா அமர்ந்து சமைப்பது போல் காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருந்தது..

"ஸ்டாப் இட்" என ராகவன் சத்தமாக கத்த, மிகுந்த சிரத்தையுடன் வேலை பார்த்து கொண்டிருந்த அனைவருமே, அதிர்ந்து திரும்பினர்.

ராகவனோ யாரையும் கண்டுகொள்ளவில்லை.

வேகமாக நடந்தவன், நேராக சென்று மனைவி கையை பிடித்து தூக்கினான்.

"என்ன பண்ணிட்டு இருக்க காவியா நீ..! இந்த மாதிரி லோ களாஸ் கேரக்டர் எல்லாம் நடிக்க கூடாதுனு சொல்லி இருக்கேனா இல்லையா..!" உச்ச ஸ்தாதியில் அவன் கத்த,

"நல்ல ஸ்கோப் இருக்கும் கேரக்டர் ராகவ்.." என்றாள் அவள் மெதுவாக.

"எப்படி பட்ட ஸ்கோப் வேணும்னாலும் இருந்துட்டு போகட்டும். அதுக்காக பிச்சைக்காரியா நடிப்பையா..! இடியட்..." மேலும் அவன் கத்த,

"இந்த ஒரு ரோல் மட்டும் ராகவ். ப்ளீஸ்.." என்றாள் அவள் கெஞ்சலாக.

தான் இத்தனை சொல்லியும், அவள் மீண்டும் நடிப்பதாக கூறவும், அவனுக்கு கட்டுகடங்காத ஆத்திரம் வந்து விட்டது.

"ஹவ் டேர் யு..!" என கத்தியவன் அடிக்க கை ஓங்கி விட்டான்.

"சார் வேணாம்" என்று யூனிட்டில் இருந்து யாரோ கத்தியதில் தான், அவனுக்கு இருக்கும் இடமே உரைத்தது.

ஓங்கிய கையை இறக்கியவன், காவியா கையை அழுத்தமாக பிடித்தான்.

"வா என்கூட" என்றவன், "இந்த சீரிஸ் காவியா பண்ணமாட்டாங்க" என பொதுவாக கூறிவிட்டு நடந்தான்.

அதற்குள் அந்த சீரிஸ் எடுக்கும் தயாரிப்பாளர் குறுக்கே வந்தார்.

"சார் நல்லா வரும் சார். அந்த டைரெக்டர் பையன் நல்லா எடுக்கறான். செலவு பண்ணி செட் எல்லாம் போட்டாச்சு. மேடம்க்கும் சம்பளம் கொடுத்துட்டேன். புரிஞ்சுக்கோங்க சார்..!" என்றார் கெஞ்சலாக.

"எவ்ளோ செலவாச்சு..?" என்று மட்டும் ராகவன் கேட்க, அவர் ஒரு தொகையை கூறினார்.

"இருங்க வரேன்" என்றவன், நேராக காருக்கு சென்று அதில் மனைவியை தள்ளிவிட்டான்.

காரில் இருந்து செக் எடுத்தவன், அவர் கூறிய தொகையை எழுதி சைன் போட்டு அவர் கையில் திணித்துவிட்டு வந்து, காரை எடுத்துவிட்டான்.

அந்த கார் அவன் வீடு நோக்கி கிட்டத்தட்ட பறந்தது.

ஏற்கனவே இருக்கும் பிரெச்சனையை மேலும் பெரிதாக்குவது போல் போகும் வழியிலேயே அருள்குமரன் ராகவனுக்கு அழைத்து விட்டார்.

போனை ஆன் செய்தவன், காரில் இருந்த ப்ளூடூத் ஸ்பீக்கரில் தான் பேசினான்.

"என்ன டா, உன் பொண்டாட்டி ஏதோ பிச்சைக்காரியா நடிக்கறாளாமே..! எனக்கு போன் வந்தது.. என்ன தான் டா பண்ணிட்டு சுத்தறீங்க..?" எடுத்ததும் அவர் கத்த, இங்கு ராகவன் காவியாவை முறைத்தான்.

"வீட்டுக்கு தான் வந்துட்டு இருக்கோம் பா. அந்த சீரிஸ் நடிக்க மாட்டான்னு சொல்லிட்டேன்.." என்றான் அவன்.

"என்னத்த சொன்னியோ..! சொல்ல சொல்ல கேட்காமல் கல்யாணம் பண்ணிட்டு, என் உயிரை வாங்குற..! வந்து சேறு.." என்றுவிட்டு தான் அவர் போனை வைத்தார்.

ராகவன் மேலும் மனைவியை முறைத்தானே ஒழிய, அவன் அப்போதைக்கு வேறு எதுவும் பேசவில்லை.

அவன் உச்சகட்ட கோபத்தில் இருக்கிறான் என காவியாவிற்கு புரியாமல் இல்லை.

இப்போது அவன் கோபத்தை குறைக்க வேண்டுமே என அவள் மனம் யோசிக்க தொடங்கியது..

இளைப்பாறும்..


 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 9:

காவியாவும் ராகவனும் வீட்டிற்கு சென்ற போது அங்கு அருள்குமரன் அவர்களுக்காக காத்திருந்தார்.

இருவரும் உள்ளே நுழைந்ததுமே அவர் கத்த ஆரம்பித்து விட்டார்.

"ஒரு முறை சொன்னால் உன் மனைவிக்கு புரியாதா டா..? இப்படி தான் பண்ணுவாளா..?" என அவர் கத்த, ராகவனும் அவருக்கு பதில் கூறாமல் காவியா பக்கம் தான் திரும்பினான்.

"கேள்வி உனக்கு தான் காவியா" என அவன் அழுத்தமாக கூற,

"சாரி ராகவ். கேரக்டெர் ரொம்ப நல்லா இருந்தது. ஒரு மாதம் பக்கம் தான் மொத்த ஷூட் டைம் சொன்னாங்க. அதான் ஒத்துகிட்டேன். நல்ல பேர் தான் கிடைக்கும்னு தான் சம்மதிச்சேன்.."

"என்கிட்ட கேட்காமல் எதுவும் கமிட் ஆக கூடாதுனு சொல்லி இருந்தேன் தானே..!"

"ம்ம்.."

"அப்புறம்..?" என ராகவ் நிறுத்த, காவியாவும் பதில் சொல்லாமல் கையை பிசைந்து கொண்டு நின்று விட்டாள்.

"இது உனக்கு கடைசி வார்னிங் காவியா. அடுத்த முறை இந்த தப்பை பண்ணினால், நீ இங்கே இருக்க முடியாது. இதையும் சும்மா விட முடியாது. இதுக்கு தண்டனை உண்டு.." என அருள்குமரன் நிறுத்த,

"அங்கிள் சாரி. இனி இப்படி பண்ண மாட்டேன்.." என்றாள் காவியா மெதுவாக.

"இந்த வார்த்தை ஞாபகம் இருக்க தான் தண்டனை. இன்னிக்கு முழுக்க நீ சாப்பிட கூடாது. மீறி சாப்பிட்டேன்னு தெரிஞ்சா, கிளம்ப வேண்டியது தான். போ.." என அவர் கூறிவிட, அவள் காதல் கணவனும் ஒன்றும் மறுப்பு கூறவில்லை.

ஷூட்டிங் என காலை உணவை தவிர்த்திருந்தவளுக்கு, இப்போதே பசிப்பது போல் இருந்தது.

அவள் அமைதியாக தங்கள் அறைக்கு சென்றுவிட, ராகவனும் அவளை தொடர்ந்து வந்தான்.

"சாரி ராகவ்" என அவன் உள்ளே நுழைந்ததுமே அவள் கூற,

"நான்சென்ஸ். இனி தப்பு பண்ணாதே. அப்பா சொன்ன மாதிரி ஒழுங்கா தண்டனை அக்செப்ட் பண்ணிக்கோ. அப்போ தான் அடுத்த முறை ஞாபகம் இருக்கும். நான் இப்போ கிளம்பறேன்.." அவள் முகத்தை கூட பார்க்காமல் கூறிவிட்டு அவன் சென்று விட்டான்.

அவன் போனதும் ஒரு பெருமூச்சுடன் காவியா அமைதியாக அமர்ந்து விட்டாள்.

ஒரு மணி நேரம் சென்றிருக்கும்.

சௌமியா அவளை தேடி மெதுவாக அவள் அறைக்கு வந்தார்.

கதவை தட்டி விட்டு அவர் உள்ளே வர, அவரை பார்த்தவள், "உட்காருங்க ஆண்ட்டி" என்றாள்.

"இவங்க சொல்லுறதை மீறி எதுவும் பண்ணாத மா. சரியான அகம்பாவம் பிடிச்சவங்க. கவனமா இரு மா." மென்மையாக அவர் கூற,

"ஹ்ம்.. தெரியும் ஆண்ட்டி.. நான் பாத்துக்கறேன்.." என்றாள் காவியா சிறு புன்னகையுடன்.

"இந்தா. இதை சாப்பிடு.." தன் புடவையில் மறைத்து எடுத்து வந்திருந்த வாழைப்பழத்தை அவர் நீட்ட,

"மாட்டிகிட்டா இன்னும் நாலு நாள் சேர்த்து பட்டினி போட்டுற போறாங்க ஆண்ட்டி..!" என்றாள் காவியா விளையாட்டு போல்.

"வீட்டில் யாரும் இல்லை காவியா மா. பார்த்துட்டு தான் வரேன். வெளிய போய்ட்டா அவங்க வர லேட் ஆகும். நீ சாப்பிடு. பழ கணக்கெல்லாம் அவங்களுக்கு தெரியாது. வேலைக்காரங்களுக்கு கூட தெரியாமல் தான் எடுத்துட்டு வந்தேன்." ரகசியமாக அவர் கூறியதில் மேலும் சிரித்து கொண்டவள், மறுக்காமல் வாங்கி உண்டாள்.

அவள் சாப்பிட்டு முடித்ததும் பழத்தின் தோளை கவனமாக எடுத்துக்கொண்ட சௌமியா, "நீ ரெஸ்ட் எடு மா. நான் கொஞ்ச நேரம் கழிச்சு வேற பழம் எடுத்துட்டு வரேன்.." என்றுவிட்டு சென்று விட்டார்.

அவர் சென்ற சில நிமிடங்களில் சுகந்தியிடம் இருந்து காவியாவிற்கு ஒரு மெசேஜ் வந்தது.

ஒரு வீடியோ லிங்க் அனுப்பி இருந்தாள்.

அதை ஓபன் செய்து பார்த்த காவியா முகத்தில் ஒரு நிம்மதியான புன்னகை தோன்றியது.

அவள் திட்டம் சரியாக நடந்திருந்ததே..!

ஆம் காலையில் அவள் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து ராகவன் கலாட்டா செய்தது தான், தெளிவான வீடியோவாக வெளியாகி இருந்தது.

ராகவனை திட்டியும், அவளுக்கு அனுதாப்பட்டும் நிறைய பேசி இருந்தனர்.

அவள் திட்டபடியே எல்லாம் நடந்ததில், அவள் மனம் பழிவெறியுடன் மகிழ்ந்தது.

தொடர்ந்து போன் செய்து சுகந்தி விசாரிக்க, அப்போதைக்கு தனக்கு எதுவும் பிரெச்சனை இல்லை என்று கூறி வைத்தாள் காவியா.

அதே நேரம் அருள்குமரன் ராகவன் கண்களிலும் அந்த வீடியோ பட்டது.

அதை பார்த்த அருள்குமரன், "இனி எவ்வளவு கோவம் என்றாலும் பப்லிக் ப்ளேஸில் காட்டாதே ராகவ்.. வீட்டுக்குள் வச்சு பேசிக்கலாம்.." என அழுத்தமாக கூற,

அவனும், "சரி பா" என்று கூறி வைத்தான்.

************

சிவதேவ் முன்பு போல் இல்லையோ என வனராஜனுக்குமே இப்போது தோன்ற தொடங்கி இருந்தது.

சாதாரணமாக அவருடன் பேசி சுற்றி கொண்டிருந்தவன், இப்போதெல்லாம் கேள்வி கேட்டால் ஒழிய பேசுவதே இல்லை.

அவன் முகத்தில் இருந்த இளகு தன்மை எல்லாம் போன இடம் தெரியவில்லை.

எப்போதும் ஒரு வித இறுக்கத்துடனே இருந்தான்..

அவருடன் வழக்கம் போல் உதவிகள் செய்தாலும், பேச்சு என்பது முற்றிலுமாக குறைந்து போய் இருந்தது.

பேசாமல் நந்தினி கூறியது போல் பேசி பார்த்து விடுவோம் என அவருக்கே தோன்றி விட, ஒரு நாள் மாலை அவனுடன் பேச முடிவு செய்தார் வனராஜன்.

அப்போது தான் இருவரும் சென்று கொஞ்சம் மூலிகைகள் எடுத்து வந்திருந்தனர்.

"இதை அரைக்கவா..?" என கேட்டுக்கொண்டே ஒரு கட்டு மூலிகையை சிவதேவ் எடுக்க,

"பண்ணிக்கலாம் சிவா. இப்போ உன்கூட பேசணும். உட்காரு.." என்றார் வனராஜன்.

அவனும் அமைதியாக அங்கிருந்த நாற்காலியில் அமர, அவரும் அவனுக்கு எதிரில் அமர்ந்தார்.

"உனக்கு என்ன ஆச்சு சிவா..? நீ சாதாரணமா இல்லையே..! நிறைய மாறிட்ட மாதிரி இருக்கு.. என்னனு என்கிட்டே சொல்ல கூடாதா..!"

"நிறைய விஷயங்கள் தோணுது சார். கொஞ்சம் கொஞ்சமா நிறைய நினைவுகள் எல்லாம் சேர்ந்து மண்டைக்குள் ஓடிட்டே இருக்கு. வேற ஒன்னும் இல்லை.."

பாதி உண்மையும் பாதி பொய்யுமாக கூறி வைத்தான் சிவதேவ்.

"எல்லாம் தானா சரியாகும் சிவா. அதுக்காக இப்படி இருக்காதே..!" ஆறுதலாக அவர் கூற,

"ம்ம். சரி சார்.." என்று மட்டுமே அவன் கூறினான்.

"நான் கேட்கறேன்னு தப்பா எடுத்துக்காதே சிவா! நீ நந்தினியை கல்யாணம் பண்ணிக்கரையா..? அவ உன்னை விரும்பறா.." நேரடியாக அவர் கேட்டுவிட, அதுவரை சாதாரணமாக பேசி கொண்டிருந்தவன், அதிர்ந்து தான் போனான்.

"சார் என்ன நீங்க..! கல்யாணம் அது இதுனு பேசிட்டு..! நான் என்னிக்குமே நந்தினியை அப்படி பார்த்ததில்லை சார்.." என சிவதேவ் வேகமாக கூற,

"உன்னை பத்தி எனக்கு தெரியும் சிவா. நீ நந்தினியை தப்பா ஒரு பார்வை கூட பார்த்ததில்லை தான். ஆனால் அவ உன்னை விரும்பறா. என்கிட்ட சொன்னா. நீ என்றால் என்னிடம் எதிர்ப்பில்லை. முடிவு நீ தான் சொல்லணும் சிவா.." தெளிவாக அவர் கூறினாலும்,

"இல்ல சார்.. சாரி.." என நொடியும் யோசிக்காமல் சிவதேவ் மறுத்துவிட்டான்.

"ஏன் பா..? மலைவாசி பொண்ணு உன் தகுதிக்கு சரிவராதுனு நினைக்கிறாயா..?" வெறுமையாக அவர் கேட்க,

"ஐயோ! சத்தியமா இல்லை சார்.." என்றான் அவன் பதட்டத்துடன்.

"நந்தினிக்கு ஒரு குறையும் இல்லை சார். என்னால் அவளை மட்டும் இல்ல, யாரையுமே கல்யாணம் பண்ணிக்க முடியாது.." என்றவன், எழுந்து அவர் அருகில் வந்தான்.

அவன் வந்ததும் அவரும் எழுந்து விட்டார்.

"நீங்க எனக்கு செஞ்சது பெரிய உதவி சார். உங்க இடத்தில் யார் இருந்து இருந்தாலும், இன்னிக்கு நான் இப்படி முழுசா நின்னிருக்க மாட்டேன். நந்தினியும் அதே மாதிரி தான். நீங்க ரெண்டு பேரும் என்ன கேட்டாலும் நான் செய்ய கடமை பட்டிருக்கேன். என் உயிரை கேட்டால் கூட, யோசிக்காமல் கொடுத்துடுவேன். கல்யாணம் மட்டும் வேண்டாம் சார். அதை மட்டும் வற்புறுத்தி, என்னை மறுக்க வைக்காதீங்க. நந்தினி வாழ்க்கைக்காகவும் சேர்த்து சொல்லுறேன். புரிஞ்சுக்கோங்க சார். இன்னிக்கு அவள் பிடிவாததுக்கு சம்மதிச்சாலும், என்னால் அவளுடன் வாழ முடியாது. அவள் வாழ்க்கை தான் மொத்தமா வீணா போய்டும்.." நீளமாக அவன் பேசி முடித்ததில், அவருக்கு குழப்பம் தான் மிஞ்சியது.

"என்ன பேசற சிவா நீ..! அப்போ வாழ்க்கை முழுக்க கல்யாணமே பண்ணிக்க போறதில்லைனு சொல்லுரையா..?"

"ஆமா சார்.."

"ஏன்னு நான் தெரிஞ்சுக்கலாமா..?" அவர் கேள்வியில் சில நொடிகள் அமைதியாக இருந்தவன், பின் ஒரு பெருமூச்சுடன் அனைத்தும் கூறினான்.

"புரிஞ்சுக்கோங்க சார். நந்தினி வாழ்க்கை தான் வீணாகும். அவளுக்கும் சொல்லி புரிய வைங்க. இதை தவிர வேற என்ன வேணும்னாலும் சொல்லுங்க. நான் செய்யறேன்.." என்றவன் தான் கூறியதை கிரஹித்துக்கொள்ள அவருக்கு அவகாசம் விட்டு அமைதியாகி விட்டான்.

வனராஜனுக்கும் மெதுவாக அவன் மனநிலை புரிந்தது.

"கொஞ்ச நாளில் மனம் ஆறும் சிவா.." மென்மையாக அவர் கூற,

"இந்த பிறவியில் ஆறாது சார்.." என்றான் அவன் அழுத்தமாக.

அவன் குரலிலும் முகத்திலும் இருந்த அழுத்தம் அவன் மனதை அப்பட்டமாக எடுத்து காட்டியது.

"என்ன தான் பண்ணலாம்னு இருக்க சிவா..?"

"தெரியல சார். இப்போதைக்கு தெரியல.. முதலில் நான் இங்கிருந்து வெளியே போகும் நாள் வரட்டும். அப்புறம் தான் என்ன பண்ணுறதுனு பார்க்கணும்.. உங்களுக்கு என் மேல் கோவம் இல்லையே..!" கவலையுடன் அவன் கேட்க,

"அதெல்லாம் இல்லை பா. உன் நிலை புரியுது. என்றாவது உன் மனம் மாறணும்னு நான் வேண்டிக்கறேன்.." என்றார் வனராஜன்.

அதற்கு எந்த பதிலும் கூறாமல் அவன் கசப்பாக புன்னகைத்து கொண்டான்.

அவர் இந்த அளவு புரிந்துகொண்டதே பெரிது. இதற்கு மேல் எதுவும் பேச அவனும் தயாராக இல்லை.

இப்போது நந்தினியை எப்படி சரி பண்ணுவது என்று தான் இருவருக்குமே குழப்பமாக இருந்தது.

அவர்கள் எதிர்பார்த்தது போலவே இரவு நந்தினி வந்ததும், பெரிய கலாட்டா தான் செய்தாள்.

வனராஜன் அவளிடம் பொறுமையாக சிவதேவ் கூறியதை எடுத்து கூறினார்.

அவள் தான் புரிந்துகொள்ளும் வழியை காணவில்லை.

"அவர் தான் லூசு மாதிரி பேசறார்னா, நீங்களும் சப்போர்ட் பண்ணுறீங்களே பா..! அவர் தேவதாஸ் ஆகி என்ன சாதிக்க போறாரு. நான் பேசறேன் இருங்க.." என்றவள், வனராஜன் நிற்க சொன்னதை மதிக்காமல் சிவதேவை தேடி வந்து விட்டாள்.

அவனும் அவள் வரவை எதிர்பார்த்தே இருந்தான்.

"உட்காரு நந்தினி" என அவன் பொறுமையாக கூற,

"நான் ஒன்னும் உட்கார வரலை சிவா.. ஏன் என்னை கல்யாணம் பண்ணிக்க மறுக்கறீங்க..? அப்படி என்ன பிடிவாதம் சிவா உங்களுக்கு..?"

"பிடிவாதம் தான் நந்தினி. இந்த ஒரு விஷயத்தில் என்னை யாராலும் மாற்ற முடியாது. நீ தான் புரிஞ்சுக்கணும்.."

"என்ன புரிஞ்சுக்கறது..! ஏதாவது நியாமான காரணம் இருந்தால் பரவாயில்லை. முடிஞ்சு போன காரணத்தை போய் சொல்லுறீங்க. நான் உங்களை ரொம்ப நேசிக்கிறேன் சிவா. நீங்க என்னை புரிஞ்சு ஏத்துக்க கூடாதா..?" நந்தினி அவனை நெருங்க முயற்சிக்க, அவன் சட்டென பின்னால் நகர்ந்தான்.

"முதலில் இப்படி உட்காரு நந்தினி. நான் சொல்லுறதை பொறுமையா கேளு. அப்புறம் பேசு.." நிதானமாக அவன் கூற, அவளும் வேறு வழி இல்லாமல் அமர்ந்தாள்.

அவளுக்கு புரிய வைக்க வேண்டும் என்பதால், அவன் தெளிவாகவே தன் நிலையை எடுத்து கூறினான்.

"வனராஜன் சார் கிட்ட நான் எல்லாமே சொல்லலை நந்தினி. அவர் எப்படி எடுத்துபாருனு தெரியலை. உனக்கு புரியும்னு நினைக்கறேன். ஒரு மஞ்சள் கயிறால் எல்லாம் முடிஞ்சுறாது நந்தினி. மனசுன்னு ஒன்னு இருக்கு. இன்னுமும் என்ன நடக்கும்னு எனக்கு சரியா புரியலை. ஆனால் எதுனாலும் நான் இருக்கனும். எல்லாமே நல்ல படியா நடந்தாலும், என் வாழ்க்கையில் வேற பொண்ணுக்கு இடம் கிடையாது நந்தினி. எப்பவுமே கிடையாது. உயிர் போகும் நிலை வந்தால் கூட, வேற பொண்ணுக்கு நான் தாலி கட்ட மாட்டேன். நீ என்றில்லை, யாரா இருந்தாலும் சரி. இது தான் என் பதில். அடம் பிடிக்காமல் என்னை புரிஞ்சுக்க முயற்சி பண்ணு மா.. ஏற்கனவே நான் வேதனையில் தான் இருக்கேன். மேலும் மேலும் குத்தாதீங்க. வலிக்குது.."

அவன் குரல் கடைசியாக கரகரத்து போய் தான் ஒலித்தது.

அவன் வேதனையை அவளுக்குள்ளும் அவனால் கடத்த முடிந்ததோ என்னவோ..! நந்தினியும் சில நிமிடங்கள் எதுவும் பேசவில்லை.

"எப்போவுமே உங்க மனசு மாறாதா சிவா..?"

"ம்ஹ்ம்.."

"மாறினால் என் ஞாபகம் வருமா..?"

"ம்ஹ்ம்.." அதுக்கும் அவன் மறுப்பாக தலையசைக்க, அவள் கவலையுடன் அவனை பார்த்தாள்.

"என்னை விட்டுரு நந்தினி. என் வாழ்க்கை இது இல்லை. உனக்கு நல்ல லைப் அமையும். உன்னை உயிருக்கு உயிரா நேசிக்கும் ஒருத்தன் வருவான். உன் கல்யாணத்துக்கு நான் கண்டிப்பா வருவேன். காதல்ங்கற உணர்வு வேற மா. உனக்கு உண்மையான காதல் வரும் போது அது புரியும்.." மெதுவாக அவன் எடுத்து கூற, நந்தினிக்கு ஒருவாறு புரிய தொடங்கியது.

அவன் சொன்னதை வைத்து பார்க்கும் போது, அவளுக்கு வேறு ஒரு சந்தேகமும் வந்தது.

'தப்பு பண்ணி விட்டோமோ!' என குற்றஉணர்வாக போய்விட, "சிவா.." என மெதுவாக அழைத்தாள் நந்தினி.

அவள் அழைப்பில் அவன் அவளை பார்க்க, "நான் ஒன்னு சொல்லணும். முதலில் சாரி.." என அவள் மென்று விழுங்க, அவளை புரியாமல் பார்த்தான் சிவதேவ்.

அவளுக்கு பயமாக இருந்தது தான்.

ஆனால் இனியும் மறைக்க தோன்றவில்லை.

ஒரு முறை ஆழ்ந்த மூச்செடுத்து கொண்டவள், தான் சொல்ல வேண்டியதை வேகமாக கூறி விட்டாள்.

அவள் கூறியதை கேட்ட சிவதேவிற்கு பல கேள்விகளுக்கு பதில் தெரிவது போல் இருந்தது.

"இவ்வளவு மோசமானவளா நந்தினி நீ..?" முகம் சுருங்க அவன் கேட்டதில், அவளுக்கு கண்கள் கலங்கி விட்டது.

"இத்தனை விஷயம் இருக்குனு எனக்கு தெரியாது சிவா. ஏதோ நீங்க எனக்கு தான் வேணும்னு நினைச்சு பண்ணிட்டேன்.." மெதுவாக அவள் கூற,

"உன்னால் எவ்வளவு பெரிய பிரெச்சனை நடந்திருக்கு தெரியுமா...? இடியட்.." என கத்தியவனுக்கு, மனதை சமன் படுத்துவது பெரும் பாடாக இருந்தது.

"போ நந்தினி.." அடக்கப்பட்ட கோபத்துடன் அவன் கூற,

"சிவா ப்ளீஸ்.. சாரி.." என்றாள் அவள் மெதுவாக.

"சாரி..! அந்த ஒரு வார்த்தையில் எல்லாம் சரி ஆகிடுமா..? நானும் உன்னை கொலை பண்ணிட்டு சாரி சொல்லவா..?" கண்கள் எல்லாம் சிவந்திருக்க ரௌத்திரமாக பேசியவனை பார்த்து நந்தினிக்கு நடுங்வே தொடங்கி விட்டது.

"சிவா நான் ஏதோ தெரியாமல்..!" என அவள் இழுக்க, சிவதேவ் மிகவும் முயன்று தன்னை கட்டுப்படுத்தி கொண்டான்.

"இங்கே நின்னாள் நான் அடிக்க கூட தயங்க மாட்டேன் நந்தினி. ஏதோ நன்றிக்கடனால் பேசாமல் இருக்கேன். இப்படி ஒரு காரியத்தை நீ பண்ணுறதுக்கு, என்னை கொன்னே போட்டிருக்கலாம்..! போ. தயவு செஞ்சு போய்ட்டு.." கையை அழுத்தமாக மூடிக்கொண்டு அவன் கர்ஜிதித்ததில், அதற்கு மேல் அங்கு நிற்க தைரியம் இல்லாமல் நந்தினி மெதுவாக விலகி நடந்தாள்.

இதுவரை நந்தினி சிவதேவை இப்படி பார்த்ததே இல்லை.

அவள் பார்த்த மென்மையே உருவான சிவாவா இவன்..! நிச்சயம் இல்லை.

ஒரு நொடியில் அவன் கண்களில் ஏறிய செம்மை நிறம், அவள் வாழ்க்கை மொத்தத்துக்கும் அவனை பார்த்து பயப்பட போதுமானதாக இருந்தது.

அவள் பிதற்றிய காதல் கீதல் எல்லாம் போன இடம் தெரியவில்லை.

அவன் சொன்ன வார்த்தைகளில் இருந்த உண்மையை வெகு தாமதமாக உணர்ந்தாள் நந்தினி.

பெரிய பாவம் செய்துவிட்டோம் என்று புரிந்தது தான்.

சரி பண்ண தான் என்ன செய்ய வேண்டும் என்று அவளுக்கு தெரியவில்லை.

மீள முடியாத தவறை அல்லவா செய்து விட்டாள்.

வீட்டிற்கு வந்தவளை வனராஜன் விசாரிக்க, "ஒன்னும் இல்லை பா. சிவா சொன்னது தான் சரி.." என திக்கித்திணறி கூறிவிட்டு, நகர்ந்து விட்டாள் நந்தினி..

இளைப்பாறும்..

 
Status
Not open for further replies.
Top