All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அன்பரசி வீட்டிலிருந்தே வேலையும் பார்த்து கொண்டு மாமியாரையும் கவனித்து கொள்ள துவங்கினாள். காலை தனக்கும் சிபிக்கும் சமைத்து வைத்துவிட்டு கீழே வந்துவிட்டால் அதன்பிறகு தெய்வாவுடன் தான் நாள் முழுவதும் இருப்பாள்.
அபர்ணாவோ அவர்களுக்குள் பிணைப்பு ஏற்படட்டும் என்று பிள்ளையின் சாக்கு சொல்லி தானும் வரமாட்டாள், பானுமதி அம்மாவுக்கும் நேர நேரத்திற்கு எதையாவது அரைக்க கொடுத்து பிஸியாக வைத்திருந்தாள்.
சிபியும் அன்னையை பார்த்து கொள்ளும் மனைவியை தொந்தரவு செய்யாது அவன் வீட்டிலிருக்கும் நேரத்திலும் அவள் வரும் போது வரட்டும் என்று அமைதியாக அறையில் இருந்து கொள்வான். தினமும் ஒருமுறையாவது அன்னையை வந்து பார்த்து நலம் விசாரித்து சிறிது நேரம் அவருடன் இருந்துவிட்டு செல்வான்.
அசோக்கும் காலையும் மாலையும் அன்னையை வந்து பார்த்து, சிறிது நேரம் பேசிவிட்டு செல்வான். ஆண்பிள்ளைகளால் அவருக்கு வேறென்ன உதவி செய்துவிட முடியும்.
அன்பரசியே அவரது ஒரே உதவியாளராகி போனாள்.
அதேநேரம் அவள் அவரை குளிக்க அழைத்த போது மாட்டேன் என்று திடமாக மறுத்துவிட்டார் தெய்வா. பெண்ணாகவே இருந்தாலும் அவள் உதவி செய்து குளிப்பதை அவர் சங்கடமாக உணர்ந்தார்.
பெண்ணுக்கு கணவன் துணையை விட பெரிய துணை வேறென்ன. தினமும் காலையில் பூபதி கேசவன் தான் மனைவியின் கால் கட்டிலும், தையலிலும் தண்ணீர் படாதவாறு பக்குமாக அவருக்கு தண்ணீர் ஊற்றிவிடுவார். குளித்து முடித்ததும் மனைவிக்கு சேலை கட்டவும் உதவி செய்வார்.
ஆம், அந்த சூழலிலும் நைட்டி அணியமாட்டேன் என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார் தெய்வா.
அதனால் மனைவிக்கு குளிக்கவும், சேலை கட்டவும் உதவி அவரை மெத்தையில் சாய்வாக அமர வைத்துவிட்டால் போதும், அதன் பிறகு இரவு அவர் மீண்டும் வந்து தெய்வாவின் பொறுப்பை ஏற்கும் வரை அவருக்கு தலை வாரி விடுவது, ஒவ்வொரு வேளையும் தவறாமல் உணவு கொடுப்பது, இடையிடையே சத்தான திண்பண்டங்கள் தருவது, மருந்து, மாத்திரை கொடுப்பது, இயற்கை உபாதைகளின் போது உதவுவது என்று அனைத்தும் அன்பரசியின் வேலை தான்.
இயற்கை கடனிற்குமே பெட் பேன் பயன்படுத்துவது தெய்வாவிற்கு பிடிக்கவில்லை. அதனால் பால் மாறாமல் ஒவ்வொரு முறையும் ஓய்வறை சென்று வருவார். அதிலும் அன்பரசி தாங்கி பிடித்து சக்கர நாற்காலியில் அமர்த்தி ஓய்வறைக்குள் அழைத்து சென்று அங்கிருக்கும் டாய்லட் சீட்டில் அமர்த்தி விட்டு வெளியே வந்து காத்திருக்க வேண்டும். அனைத்தையும் முடித்த பின்பு குரல் கொடுத்தால் மீண்டும் இவள் அழைத்து வந்து மெத்தையில் படுக்க வைப்பாள்.
அதுவே எளிதான காரியமல்ல. தெய்வா தடிமனான உடல்வாகு கொண்டவரில்லை என்றாலும் அவரது ஐந்தே கால் அடி உயரத்திற்கு சற்று பூசலாகவே இருப்பதால், அன்பரசி தன் முழு பலத்தையும் பயன்படுத்தி தான் அவரை எழுப்பி நிறுத்துவாள்.
தெய்வநாயகியின் குரலுக்கு அவருக்கு உதவி செய்ய வசதியாக அங்கிருக்கும் சோபாவிலேயே அமர்ந்து அலுவலக பணிகளையும் பார்த்து கொள்வாள் அன்பு. அலுவலக அழைப்பின் போது மட்டும் வரவேற்பறையில் இருந்து அழைப்பை முடித்து கொண்டு மீண்டும் உள்ளே வந்துவிடுவாள். அப்பொழுதும் மாமியாருக்கு தேவையானவற்றை அவர் கைக்கு எட்டும் தூரத்தில் வைத்து விட்டே வெளியில் செல்வாள்.
சில மாதங்களாக அவள் இந்த வீட்டில் இருந்தாலும் இப்போதே அவளை கவனிக்க தொடங்கியிருந்தார் தெய்வா. அதுவும் அவள் அலுவல் பணிகளில் மூழ்கியிருக்கும் நேரத்தில் அவரின் பார்வை மருமகளின் மீதே இருக்கும்.
அப்படி ஒருநாள் அவள் நெற்றி பொட்டை கவனித்தவருக்கு தன்னை மீறிய மகிழ்ச்சி உண்டானது. என்ன தான் படித்து, பட்டம் பெற்றிருந்தாலும் கணவருக்கு மதிப்பு கொடுப்பதில் தெய்வா என்றுமே தவறியதில்லை. அதற்கு சாட்சியாக அவர் நெற்றியில் எப்போதும் மீனாட்சி குங்குமம் இருக்கும்.
அன்புவும் தன்னை போலவே நெற்றியில் குங்குமம் வைத்து மங்களகரமாக இருப்பதை பார்த்து வெளியில் சொல்லி கொள்ளவில்லை என்றாலும் உள்ளுக்குள் மெச்சி தான் போனார்.
அப்படிதான் ஒருநாள் பார்வதி அவருக்கு பழசாறு எடுத்து வந்து கொடுத்தார். தெய்வாவும் அதை குடித்து விட்டு குவளையை மீண்டும் பார்வதியிடம் கொடுக்க அதுவரை அமைதியாக இருந்த அன்பரசி, அவரை பின்தொடர்ந்து வெளியே சென்றவள்..
“அக்கா, அத்தைக்கு இப்படி ஒவ்வொரு வேளைக்கு நடுவுலயும் ஜூஸ் கொடுத்தா எப்படி. அவங்க ரெஸ்ட் ரூம் எழுந்து போக எவ்வளவு சிரமப்படறாங்க தெரியுமா” என்று கண்டிப்புடனே கேட்டாள்.
“அது இல்ல அன்புமா, அம்மா தான் எப்பவும் நிறைய ஜூஸ் கொடுக்க சொல்வாங்க” என்று தயங்கி சொன்னார் பார்வதி.
“அத்தையோட எலும்பின் திண்மம் குறைவா இருக்குனு சொல்றாங்க. அதான் கீழே விழுந்ததும் பிராக்ச்சர் ஆகியிருக்கு. அதனால இனி அவங்களுக்கு கால்சியம் அதிகமா இருக்குற முட்டைகோஸ், ப்ரோக்கோலி, பீன்ஸ் போன்ற காய்கறி அதிகம் சேர்ந்து சமைங்க. கேழ்வரகு, எள்ளுல செய்த உணவுகள், நட்ஸ், டைரி ப்ராடக்ட்ஸ் எல்லாம் அவங்க டயட் சார்ட்ல ஆட் பண்ணிருக்கேன். இனி அவங்களுக்கு சமைக்கறத எங்கிட்ட கேட்டுட்டே செய்ங்க” என்று சொல்லிக் கொண்டே போக, வெளியே பார்வதி அவளை மலைத்து பார்த்தார் என்றால், உள்ளே தெய்வநாயகியும் இவளுக்குள் இப்படியோர் ஆளுமையா என்று ஆச்சரியமாக தான் பார்த்திருந்தார்.
வேறொரு நாள் தன் அண்ணனிடம் பேசி கொண்டிருந்த தெய்வாவிடம் பேசுவதற்காக குட்டி போட்ட பூனையாய் அறைக்குள்ளேயே நடை பயின்று கொண்டிருந்தாள் அன்பரசி.
அதை கவனித்திருந்தவர் அழைப்பு அணைக்கப்பட்டதும் “இப்படி ரூமுக்குள்ளயே வாக்கிங் போய் உடம்பை குறைக்கிற அளவுக்கு நீ குண்டு இல்லயே” என்று நக்கலாக கேட்டு நிறுத்தினார்.
“அத்தை.. அது.. அது.. நான் இன்னைக்கு எங்க.. எங்க வீட்டுல புலாவ் செஞ்சிருக்கேன். எடுத்துட்டு வந்தா நீங்க சாப்பிடுவீங்களா அத்தை” என்று தைரியத்தை வரவழைத்து கேட்டுவிட்டாள்.
அதை கேட்ட தெய்வநாயகி அவளை முறைக்க “சாரி அத்தை.. நீங்க எங்க வீட்டுல சாப்பிட மாட்டீங்கனு புரியுது. சிபிக்கு மதியம் டூட்டி. அவருக்கு செஞ்சப்போ உங்களுக்கும் சேர்த்து ஒரு ஆசையில செஞ்சிட்டேன். அதான். சாரி அத்தை. நான் அட்வான்டேஜா எடுத்துட்டு எதுவும் செய்யல” என்று ஏமாற்றமாக பதிலளித்தாள் அன்பு.
“இங்க வா..” என்று தெய்வா அவளை அருகில் அழைக்க, பயந்து பயந்து அவரருகில் சென்று நடுங்கி நிற்க..
“ஆமா, எது உங்க வீடு. உன் புருஷன் அப்படி தான் சொல்ல சொல்லிருக்கானா. இது மொத்தமும் இந்த தெய்வாவோட வீடு. அதுல இருக்குற ஒரு ரூம்ல நீயும், உங்க வீட்டுக்காரரும் இருக்கீங்க” என்று தடாலடியாக பேச, அன்பரசிக்கு தன் முட்டை கண்ணை கொண்டு விழிப்பதை தவிர வேறெதுவும் தோன்றவில்லை.
“அப்புறம் எதுக்கு அன்னைக்கு உன் புருஷன் இந்த வீட்டுக்கு உரிமை போராட்டம் நடத்தினப்போ அமைதியா இருந்தேன்னு பார்க்கறியா. ஏதோ சின்ன பையன், செல்லமா வேற வளர்த்துட்டேன், அதான் பேசிட்டு போறான்னு விட்டுட்டேன்” என்றும் சொல்ல, அன்பரசி வாய் பிளக்காத குறையாக தான் அவர் சொல்வதை கேட்டிருந்தாள்.
“இப்படியே தான் நிக்க போறியா? போ, போய் என் வீட்டுல இருக்கிற உங்க ரூம்ல இருந்து புலாவ் கொண்டு வா” என்று அவளுக்கு மேலும் அதிர்ச்சி கொடுத்தார்.
அவளுக்கோ அது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. கண்களில் நீர் நிறைய உண்மையாகவா என்று கண்ணீர் மறைத்த கண்களாலே கேட்க “நீ தான சாப்பிடுறீங்களானு கேட்ட. போய் எடுத்திட்டு வா போ” என்று அவளை விரட்ட, அவளும் ஆனந்தமாய் அறைக்கு ஓடினாள்.
மூச்சிரைக்க மாடி படிகளின் ஏறிவந்த அன்பரசி அறை வாசலில் நின்று நெஞ்சில் கைவைத்து மூச்சு வாங்கி கொண்டே நிமிர்ந்து பார்க்க, அங்கே அவள் கண்ட காட்சியில் அதிர்ந்து போனாள்.
உள்ளே அபர்ணா தான் புலாவை தட்டில் வைத்து மகனுக்கும் ஊட்டி, தானும் உண்டு கொண்டிருந்தாள்.
எதேர்சையாக நிமிர்ந்த அபர்ணா அன்புவை பார்த்து அசடுவழிந்து கொண்டே “அது, வரு குட்டி உன் புலாவ் வாசத்துக்கு ஓடி வந்துட்டான். அதான் அவனுக்கும் ஊட்டி, அவன் மிச்சம் வச்சதை நானும் சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன்” என்று தான் உண்பதை மகன் உண்கிறான் என்று கதை அளந்தாள்.
“ஐயோ அபர்ணா.. உங்களுக்கும் என் செல்ல பையனுக்கும் இல்லாததா. தாராளமா சாப்பிடுங்க. புலாவ் இருக்கு தானே. கீழே அத்தைக்கு கொடுக்கறேன்னு சொல்லிருக்கேன்” பதற்றமாக கேட்டு கொண்டே குக்கரை எட்டி பார்த்தாள்.
“அதெல்லாம் இருக்கு. நீ என்னைக்கு உங்க ரெண்டு பேருக்கு மட்டும் சமைச்சிருக்க. நிறையவே இருக்கு. நிஜமாவே அத்தை சாப்பிடுறேன்னு சொன்னாங்களா? பை தி வே, இன்னைக்கு புயலடிக்கும்னு வெதர் மேன் ஏதாவது போஸ்ட் போட்டிருக்காரா, காத்து நம்ப பக்கம் அடிக்குது” என்று மாமியார் சாப்பிட சம்மதித்ததை கேலி கிண்டலோடு கேட்டாள் அபர்ணா.
அன்பரசியோ அதையெல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை. ஆமென்று வெட்கப்பட்டு கொண்டே தலையாட்ட, அவள் கன்னம் தாங்கியவள் “அடடா, மாமியாருக்கே மொத்த வெட்கத்தையும் பட்டுட்டாத. கொஞ்சம் என் மச்சினனுக்கும் வை” என்று சிரித்தாள்.
அன்பரசி கையால் சமைத்ததை முதல் முறையாக ருசித்த தெய்வநாயகி வாய் திறந்து அவளை பாராட்டவில்லை என்றாலும், மறுமுறை கேட்டு அவர் விரும்பி சாப்பிட்டதுலேயே அவரது மனம் அவளுக்கு புரிந்து போனது.
அன்றிரவு அறைக்கு வந்த சிபி தான் வந்ததை கூட அறியாமல் சிந்தனைகளின் பிடியில் இருந்தவள் முன்பு கையசைக்க அதுவெல்லாம் அவளுக்கு தெரிய கூட இல்லை. எழுந்து ஓய்வறைக்கு சென்றவன் தன்னை சுத்தப்படுத்தி கொண்டு, இரவு உடைக்கும் மாறி வெளியே வந்தான். அப்போதும் அவன் மனையாள் காற்றில் எண்ணம் வரைந்து, தனக்கு தானே சிரித்து கொண்டிருந்தாள்.
அவளை நெருங்கி அமர்ந்தவன் அவள் தோள்களை தொட்டசைக்க, கணவனை கண்டவள் அவன் இரவு உடையிலிருப்பதை பார்த்து “நீங்க எப்போ வந்தீங்க சிபி” என்றாள்.
“நானா.. நீ கனவு கண்டு சிரிச்சிட்டு இருந்தப்பவே வந்துட்டேன். என்ன என் பொண்டாட்டி ஒரே ஹாப்பி மூட்ல இருக்கா” என்றது தான், மகிழ்ச்சியில் வாகாக அவன் தோளில் முகம் புதைத்து கொண்டாள். அவனும் அவள் தலையை வருடி கொடுத்து கொண்டு கொண்டிருந்தான்.
“என்னடா ராசி விசயம்” என்று அவன் அவளை கேட்கவும் தான்..
“அதுவா..” என்றவள் மதியம் நடத்ததை சொல்ல ஆரம்பிக்க, அவன் மடியில் படுத்து அவள் சொல்வதை கேட்ட ஆரம்பித்தான்.
“அத்தை முன்னமாதிரி முகம் திருப்பாம இப்ப என்கிட்ட நல்லாவே பேசறாங்க சிபி. இன்னைக்கு நான் செஞ்ச புலாவை சாப்பிட்டாங்க. எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருந்துச்சு தெரியுமா” என்று பூரித்து சொன்னாள்.
அதை கேட்டிருந்தவனும் இதை தானே எதிர்பார்த்து நாட்களை நகர்த்துகிறான், “பார்ரா.. அப்போ அபர்ணா அண்ணி பிளான் சக்கஸ்ன்னு சொல்லு” என்று மகிழ்ந்து கூறியவன் “சரி.. ராசி மேடம் அவங்க மாமியார் கூட ராசி ஆனதுக்கு எனக்கு எப்போ ட்ரீட் வைக்க போறாங்க” என்றும் கேட்டான்.
“ட்ரீட் தானே. இந்த வீக் எண்ட் ரயில் கோச் ரெஸ்ட்டாரண்ட் போகலாம்” என்றாள்.
“அதெல்லாம் முடியாது.. எனக்கு இப்பவே வேணும். அதுவும் நான் சொல்றது தான் வேணும்” என்று அவன் அடம் பிடிக்க, இவன் எதை சொல்கிறான் என்று புரியாமல் அன்பரசி விழித்தாள்.
அவன் அவளது உதடுகளை விரல் கொண்டு வருட, இதுதானோ என்று அவளது கன்னங்கள் செம்மையுற முகத்தை வேறு பக்கம் திருப்பி கொண்டாள்.
அவனோ “எனக்கு உன் வாய்ஸ்ல பாடி கேட்கணும்னு ஆசை. இன்னைக்கு எனக்காக பாடறியா” என்றதும் தன் எண்ணங்கள் சென்ற திசையை எண்ணி தன் இவன் கெட்ட பெண்ணாக்கிவிட்டான் என்று மானசீகமாக குட்டு ஒன்று வைத்துக் கொண்டவள்..
தன்னவனது தலையை கோதி கொடுத்து கொண்டே தன் தேன்மதுர குரலில் அன்பரசி பாட, அவள் மடியில் படுத்து கண்மூடி கேட்டிருந்தவன் வயிற்று பகுதியில் இருக்கும் சேலையை ஏற்றி உள்ளே தலைவிட்டு வயிற்றில் முகம் புதைத்து கொண்டான்.
அவனது மீசை ரோமங்கள் அவளை தேகம் சிலிர்க்க செய்ய, சுருதியோடு சேர்ந்து தானும் தப்பி போக குனிந்து அவனை பார்த்தால் விஷம கண்ணனாய் உறங்கி கொண்டிருந்தான்.
திரும்ப கிடைக்காது என்று நினைத்த அனைத்து மகிழ்ச்சியும் மீட்டு கொடுத்த மாய கண்ணன் அவன் என்றே அவளுக்கு அப்போது தோன்றிற்று. புடவைக்கு மேலே அவன் நெற்றியில் முத்தமிட்டு எழ, உறக்கத்திலேயே அவளது ஸ்பரிசம் உணர்ந்தவன் புன்னகை புரிந்ததோடு அவளது இடையையும் அணைத்துக் கொண்டு உறக்கத்தை தொடர்ந்தான்.
அனைத்தும் ஒருநாள் மாற போகிறதென்றும், கொள்ளை அன்பு கொண்டவனை தானே மூர்கனாக்க போகிறோம் என்பதையும் அறியாத பேதையாய் இரவெல்லாம் கணவனது பால் முகத்தை ரசித்து கொண்டு இருந்தாள் அவள்.
அன்பரசியின் செயல்கள், பொறுப்புணர்ச்சி, ஒரு வேலையை செய்யும் விதம், ஆளுமை என ஒவ்வொன்றிலும் அவள் தெய்வநாயகியை கவர்ந்துவிட்டாள் என்று தான் சொல்லவேண்டும். தனக்கு பிறகு அவள் பார்த்து கொள்வாள் என்று அபர்ணா மீது இதுவரை வராத நம்பிக்கை அன்பரசியின் மீது இந்த ஒரே மாதத்தில் வந்திருந்தது.
இப்போது தெய்வா முழுவதாக குணமாகி விட்டிருக்க, பானுமதி அம்மாவும் பழைய படி மகளுடன் நேரத்தை செலவழிக்க துவங்கினார்.
அன்று தன்னறையில் தெய்வநாயகி ஒரு பெட்டியை திறந்து வைத்து ஆசை தீர பார்த்து புன்னகைத்து கொண்டிருக்க, அப்போது அங்கே வந்த பானுமதி “இது நம்ப சிபிக்கு வர பொண்ணுக்குனு நீ வாங்கி வச்ச ஜோக்கர் தானே தெய்வா. இனி இத பார்த்து என்ன பிரயோஜனம். சிபி தான் ஒண்ணுத்துக்கும் ஆகாதவள கட்டிக்கிட்டு வந்துட்டானே” என்று வன்மத்தை வருத்தம் போல் கூறினார்.
பெரியன்னையை முறைத்த தெய்வா “நான் இத அன்புவுக்கு கொடுக்க போறேன் பெரியம்மா” பெரிய கல்லாக தூக்கி அவர் தலையில் போடாத குறையாக சொல்ல, இது எப்படி சாத்தியமானது என்று குழம்பி போனார் பானுமதி.
அவர் மேலே எதுவும் பேசுவதற்குள் “என் பையனுக்கு பிடிச்சிருக்கு. எனக்கும் அன்பு கிட்ட எந்த குறையும் தெரியல. பேசாம, அவளையும், இந்த கல்யாணத்தையும் ஏத்துக்கிட்டா தான் என்னனு தோணுது பெரியம்மா” என்று மனதிலிருந்து சொன்னார்.
‘இவளுங்க எல்லாம் ஒன்னு சேர்ந்துட்டா, அப்புறம் நான் எப்படி சந்தோஷமா இருக்க முடியும். இன்னைக்கு கல்யாணத்தை ஏத்துக்கிறேன்னு சொல்லுவா. நாளைக்கு அவள் வயித்துல ஒரு குழந்தை வந்துட்டா அவ்ளோ தான், கொத்து சாவியை தூக்கி கொடுத்திடுவா போலயே’ மனதிற்குள் பொறுமி கொண்டிருந்தார் பானுமதி.
பெரியன்னையின் மௌனத்தை கண்டு கொள்ளாதவர், மேலறையிலிருக்கும் அன்பரசியிடம் சோக்கரை கொடுக்க மின்தூக்கி நோக்கி செல்ல, பானுமதிக்கு தான் இத்தனை நாட்கள் போட்ட திட்டமெல்லாம் நொடியில் குண்டு வைத்து தகர்த்தது போல் இருந்தது.
‘அன்னைக்கு அந்த ஆளுக்கு ரெண்டாவது கல்யாணம்னு தெரிஞ்சதும் நானே தான் அரளிவிதையை அரைச்சு குடிக்கிற மாதிரி என் தங்கச்சி வர நேரமா பார்த்து நாடகம் ஆடினேன். ஆனா அவன் மிராசா இருப்பான், அவளுக்கு இத்தனை பெரிய வாழ்க்கை அமையும்னு நான் என்ன கனவா கண்டேன். ஏற்கனவே நானும் என் பிள்ளைகளும் வாழ வேண்டிய வசதியான வாழ்க்கையை இவளும் இவ தரித்திரம் பிடிச்ச அம்மாவும் வாழ்ந்தாங்க. இப்ப இவ இன்னொரு ஒண்ணுமில்லாத பராரிக்கு ஜோக்கரை தூக்கி கொடுத்து மருமகளாக்கிப்பாளா. இத விட கூடாது பானுமதி’ என்ன செய்வது என்று யோசித்தவருக்கு அது நினைவு வர, தன் வயதையும் கருத்தில் கொள்ளாது தன்னறைக்கு ஓடி அதை எடுத்து வந்தார்.
அதற்குள் தெய்வநாயகி மின்தூக்கியில் ஏறி மேலே சென்றுவிட, இவர் படிக்கட்டுகளில் ஓடியே மேலே வந்தார். ஒரு குடும்பத்தை கெடுக்க எத்தனை உத்வேகம் பிறந்துவிடுகிறது..?
சரியாக தெய்வா அன்பரசியின் அறைக்குள் நுழையும் நேரத்தில் “தெய்வா” என்று குரல் கொடுத்து தடுத்து நிறுத்தினார் பானுமதி.
அவரும் என்னவென்று திரும்பி பார்க்க, அவரிடம் வந்து ஒரு பாட்டிலை காட்டி “இது என்னனு தெரியுதா. அன்னைக்கு நீ விழுந்த இடத்துக்கு பக்கத்துல இந்த பாட்டில் இருந்தது. இது, இதோ இந்த ஜோக்கரை கொடுக்க போறியே அவ பயன்படுத்துற எண்ணை. உன்ன அவ வலையில விழ வைக்க தான் எண்ணையை ஊத்தி கீழ விழ வச்சிருக்கா. நீ என்னனா அவ திட்டம் பலிச்சதுங்கற மாதிரி ஜோக்கரை தூக்கிட்டு போய் கொடுக்க போறீயே” என்று பற்றவைத்தார்.
தான் கேட்டதில் குழம்பி இருந்தாலும் முகத்தை இயல்பாக்கி கொண்டு “அப்படியெல்லாம் இருக்காது பெரியம்மா. நீங்க எதையும் உளறாதீங்க” என்றே கூறினார் தெய்வநாயகி.
“அப்போ நான் பொய் சொல்றேனாக்கும்” என்றவர் அந்த பாட்டிலை தெய்வநாயகியின் நாசிக்கு அருகே கொண்டு வந்து “முகர்ந்து பாரு. இது அவ உபயோகிக்கிற எண்ணெய் தானே. தன் சுயலாபத்துக்காக உன்னை கீழே தள்ள பார்த்திருக்காளே. ஏதாவது பாடாத இடத்துல பட்டு நீ பரலோகம் போயிருந்தா நான் என்ன பண்ணிருப்பேன் தெய்வா. உன் பின்னாடியே நானும் செத்திருப்பேன்” என்று அழுது, ஆர்ப்பாட்டம் செய்து பானுமதி ஒப்பாரி வைக்க..
வாசத்தை முகர்ந்த தெய்வாவின் சந்தேகமும் ஊர்ஜிதமானத்தில் அன்பரசியா இதை செய்திருக்கிறாள் என்று சிலநொடிகள் அதிர்ந்தவர், அடுத்த நொடி கோபத்தை தத்தெடுத்த கண்களோடு அழிக்கும் சக்தியாய் உருவெடுத்திருந்தார்.
பானுமதியின் ஒப்பாரி கேட்டு வெளியே வந்த அன்பரசியை பார்வையால் எரித்த தெய்வநாயகி அவள் என்னவென்று சுதாரிப்பதற்குள் அவள் கையை அழுத்தமாக பிடித்து கீழே அழைத்து வந்தார்.
தன் கால் இப்போதே சரியாகி இருக்கிறதென்றும் பார்க்கவில்லை, அது சரியாக உடனிருந்தவள் அவள் என்றும் பார்க்கவில்லை. தரதரவென இழுத்து வந்திருந்தார்.
தானும் சத்தம் கேட்டு வெளியே வந்த அபர்ணா மாமியார் அன்பரசியை இழுத்து செல்வதை பார்த்து பதறி அவர்களை பின் தொடர, அன்பரசியை இழுத்து வந்தவர் அவள் கையை வேகமாக விட, அதே வேகத்தில் நிலைதடுமாறி அவள் தரையில் போய் விழுந்தாள்.
அப்போது சரியாக உள்ளே நுழைந்த பூபதி கேசவனும் அஷோக்கும் என்ன நடக்கிறது என்று புரியாமல் அவர்களிடம் ஓடி வர, அதற்குள் அன்பரசியை தன் வலிய கரங்கள் கொண்டு எழுப்பி நிறுத்தியவர் “எவ்ளோ திமிர் இருந்தா என்னையே கொல்ல பார்ப்ப” என்று கையை ஓங்கி கொண்டு வந்தார்.
‘என்னை கொல்ல பார்க்கிறாயா’ என்று தெய்வா சொன்ன வார்த்தைகளில் பூபதியும் அசோக்கும் உறைந்து நின்றுவிட, அப்போதே பணியிலிருந்து வீடு வந்த சிபி தாய்க்கும் மனைவிக்கும் குறுக்கே வந்து நிற்கவும், தெய்வாவின் கரம் அவன் கன்னத்தில் இறங்கியது.
மாமியாரது கரம் தன்னை நோக்கி வருவதை கண்ட அன்பரசி முகத்தை ஒருபுறமாக திருப்பி கண்களை மூடி கொள்ள, இடையில் கணவன் வந்ததை அவள் அறியவில்லை. மாமியார் தன்னை அறையவில்லை என்றதும் கண்விழித்து பார்க்க, அவளுக்கு முன் பின் கழுத்து நரம்புகள் புடைக்க தோள்களும் உடலும் இறுக சிபி நின்றிருப்பதை பார்த்தாள்.
அவள் புறம் திரும்பாமலே மனைவியை தன்னருகில் இழுத்து தோளோடு அணைத்து கொண்டவன், தாயை கண்களில் சிகப்பு வரிகள் ஓட உக்கிரமாக முறைத்தான். மகனுக்கு குறையாத பார்வையோடு அவரும் அவன் அணைத்து நின்றிருந்த அன்பரசியை தன் கனல் பார்வையால் எரித்து விடாத குறையாக முறைத்திருந்தார்.
“நீங்க என் அம்மாவா போய்ட்டிங்க அதான் அந்த அறையை நான் வாங்கிக்கிட்டேன். இதுவே இந்த இடத்துல வேற யாராவது இருந்திருந்தா, நடக்கறதே வேற. எந்த உரிமைல ம்மா நீங்க என் பொண்டாட்டி மேல கை வைக்க பார்த்தீங்க” என்று ஆவேசமாக கேட்டான்.
“எந்த உரிமையிலயா. என்ன கொலை பண்ண பார்த்த இவ மேல அட்டெம்ட் மர்டர்னு கம்ப்லைன்ட் கொடுத்தா நான் இல்ல, ஸ்டேஷன்ல இருந்து வர்றவங்களே இவளை லாடம் கட்டிடுவாங்க. செய்யவா” என்று தெய்வாவும் கோபமாக கத்தினார்.
“அன்பு உங்கள கொலை செய்ய பார்த்தாளா? பிடிக்கலைன்னா என்ன வேணா பழி போடுவீங்களா. உங்கள தன் அம்மா மாதிரி பார்த்துக்கிட்டாளே, அதுக்கு தான் இந்த பழியை அவ மேல சுமத்துறீங்களா”
“நான் ஒன்னும் காரணம் இல்லாம சொல்லல” என்று நடந்ததை சொன்னவர், திரும்பி பானுமதியின் கையிலிருந்த பாட்டிலை பிடுங்கி அதை அவனின் நாசிக்கு கொண்டு சென்றார்.
“ஒரு மாசம் இவ எனக்கு சேவகம் பண்ணதுலயே இது இவகிட்ட இருந்து மட்டும் வர எண்ணெய் வாசம்னு புரிஞ்சிது. நீ தான் ஏழு மாசமா குடும்பம் நடத்துறியா, உனக்கு தெரியாதா இது உன் பொண்டாட்டி யூஸ் பண்ற ஆயில் தான்னு”
“ஆமா, இது அன்பு யூஸ் பண்ற ஆயில் தான். ஆனா அவ இத பண்ணல. அன்பரசினு இல்ல, இந்த வீட்ல யாருமே நீங்க விழணும்னு நினைக்கமாட்டாங்க. அதுவும் அன்பு தான இந்த ஒரு மாசமும் உங்கள கூட இருந்து பார்த்துக்கிட்டா. கீழ விழ வச்சிவ தான் அப்படி பார்த்துப்பாளா” கோபம் இருந்த போதிலும் அன்னைக்கு புரியும் படியே எடுத்து சொன்னான்.
அவரும் சற்று அமைதியாக, எங்கே பிரச்சனை தீர்ந்துவிடமோ என்று அஞ்சிவிட்ட பானுமதி “என்ன சிபி பேசுற. இத இவ தான் பண்ணிருக்கா” என்றவர், பூபதியின் பக்கம் திரும்பி “பார்த்தீங்களா மாப்பிள்ளை. ஒண்ணுக்கு ரெண்டு புள்ளையை பெத்து கடைசியில என் மகளுக்கு இப்படி ஒரு நிலைமை வரணுமா. எண்ணையை ஊத்தி கொல்ல பார்த்திருக்கா உங்க சின்ன மருமக” அழுது கரைவது போல் தாரை தாரையாக கண்ணீர் வடித்து நடித்தார்.
“பாட்டி, திரும்ப திரும்ப என் பொண்டாட்டிய பத்தி தப்பா பேசாதீங்க. அவ இத பண்ணல. அம்மா தான் பழைய வென்ஜென்ஸ்ஸ வச்சி அவ மேல பழி போடுறாங்கன்னா, பெரியவங்களா எடுத்து சொல்லாம நீங்களும் அவங்களுக்கு தாளம் தட்டிட்டு இருக்கீங்க” என்று வார்த்தையை விட்டுவிட்டான்.
மகன் சொன்ன பகையுணர்ச்சி என்ற வார்த்தை தெய்வாவை கிளறிவிட “நான் வென்ஜென்ஸ்ல பண்றேனா. இதோ இருக்காளே நடிகை, நீலி கண்ணீர் விட்டு விட்டு என் பையனை பிரிச்சிட்டா, இப்போ என்னையும் ஒரேயடியா மேல அனுப்ப பார்த்திருக்கா, கொலைகாரி..” என்று பொரிந்தார்.
“ஏதேதோ பேசாத தெய்வா. அன்பரசி உன்னை அவ்ளோ அக்கறையோட பார்த்துக்கிட்டது நம்ம எல்லாருக்குமே தெரியும். கீழ கிடந்த பாட்டிலை வச்சிக்கிட்டு ஒரே குடும்பத்துல இருக்கிறவங்களை பேசறது சரி கிடையாது” என்ற பூபதி மனைவியின் கரம் பற்றி “தலையில அடிபட்டத்துல சிலருக்கு இப்படி தான் தவறான எண்ணங்கள் வருமாம். நீ வா, படுத்து ரெஸ்ட் எடு” என்று அவரை அவர்கள் அறைக்கு அழைத்து செல்ல பார்த்தார்.
“என்னை என்ன பைத்தியம்னு சொல்றீங்களா” என்ற தெய்வநாயகி கணவரின் கையை உதறிவிட்டார்.
இது தான் சாக்கென “அதானே.. என் பொண்ணு என்ன அவ்ளோ சாதாரணமா போய்ட்டாளா. ஒருத்தி எண்ணெயை ஊத்தி கொல்ல பார்க்கிறா, இன்னொருத்தி கீழே இருந்த தெய்வா கிட்ட குழந்தையை கொடுத்து மேலே போக வைக்க திட்டம் வகுக்குறா. ஐயோ, இப்படி ஒரு குடும்பத்துலயா என் பொண்ணை நான் கட்டி கொடுத்தேன். கடவுளே.. இப்படி பட்ட மருமகள்களா என் தெய்வாவுக்கு வாய்க்கணும். ரெண்டு பெரும் கொலைகார பாவிங்களா இருக்காளுங்களேன்” தலையில் அடித்துக் கொண்டு நீலி கண்ணீர் விட்டார் பானுமதி.
அதை கேட்ட அன்பரசிக்கும் அபர்ணாவிற்கும் தூக்கி வாரி போட்டது. ஏற்கனவே அன்பு தன் மேல் விழுந்த பழியில் அழுது கொண்டிருக்க, இப்போது அபர்ணாவும் இந்த வீட்டிற்கு வாழ வந்ததில் இருந்து கொலைப்பழி மட்டுமே விழவில்லை, அதையும் இப்போது சுமத்திவிட்டார்களே என்று குலுங்கி அழுதாள்.
இருவரையும் பார்த்த சிபி “பாட்டி” என்று பற்களை கடித்துக் கொண்டு அவர் முன் வர, அதற்குள் “தேவையில்லாம அபரை பத்தி பேசறதை நிறுத்துங்க பாட்டி. அன்னைக்கு எங்க குழந்தையும் தான் விழுந்தான். அவனுக்கு ஒண்ணுமில்லனு டாக்டர் சொல்றவரைக்கும் அவ அழுத அழுகையை பார்த்துட்டும் நாக்குல நரம்பில்லாம பேசறீங்களே. அபர் மட்டுமில்ல, அன்புவும் இந்த மாதிரி காரியத்தை செய்யற பொண்ணு இல்ல. கண்டதை உளறாதீங்க” என்று என்றும் வாய் திறவாத அசோக் இன்று மனைவிகாகவும், மைத்துனிக்காகவும் பேசிவிட்டான்.
அவன் பானுமதிக்கு சொன்னது தெய்வாவிற்கும் உரைத்து கொண்டது.
தன்னை கொல்ல பார்த்திருக்கிறார்கள். நியாயமாக பார்த்தால் கணவனும் மகன்களும் அதற்கு காரணமானவர்களை கேள்வி கேட்க வேண்டும். அதைவிட்டு தன்னை பேசுகிறார்களே என்று கோபம் கொள்ள, அன்பரசியை தன் பக்கம் திருப்பியவர் “நான் பெத்த பசங்க.. என் புருஷன்னு எல்லாரையும் அப்படி என்னத்தடி பண்ணி உன் கைக்குள்ள போட்டுக்கிட்ட” என்று நாராசமாய் கேட்டார்.
மாமியார் கேட்டதில் அன்பரசி வெடித்து அழ, “தெய்..வா, ஒழுங்கா பேசறதுனா இந்த வீட்டுல இரு. இல்ல உங்க அண்ணன் வீட்டுக்கு கிளம்பிட்டே இரு. வீட்டுக்கு வந்த மருமகள்கிட்ட மாமியாரா வேண்டாம், ஒரு பொண்ணா என்ன பேசணும்னு கூடவா தெரியாது” என்று முதல் முறையாக மனைவியை அதட்டி இருந்தார் பூபதி கேசவன். அதுவும் அனைவர் முன்பும். முக்கியமாக வீட்டை விட்டு வேறு போக சொல்லி இருக்கிறார்.
“என்ன சொன்னீங்க, இவ இங்க இருப்பா நான் இவகிட்ட சரியா பேசலனா வீட்டை விட்டு வெளிய போகணுமா..” என்று உடைபெடுக்க தயாராக இருந்த கண்ணீரை மூக்கை உறஞ்சி உள்ளிழுத்து கொண்டு “இனி நான் இந்த வீட்டுல இருக்கமாட்டேன். இந்த அபசகுனம் பிடிச்சவ வீட்டுக்கு வேணான்னு சொன்னேனே கேட்டீங்களா.. கடைசில ஒண்ட வந்த பிடாரி என்னையே விரட்டிட்டா. எப்போ கட்டின புருஷனும், என் பிள்ளைகளும் இவ பக்கம் சாஞ்சிட்டாங்களோ இனி நான் இங்க இருக்கமாட்டேன்” என்றவர் தன் கைப்பையை எடுத்து வர அறைக்குள் சென்றார்.
“ஐயோ.. பெத்த தாய் வீட்டை விட்டு போறேன்னு சொல்றா, ரெண்டு பேரும் கல்லு மாதிரி நிக்கறானுங்களே. ஏன் மாப்பிள்ளை, உங்க பசங்களுக்கு அவங்க பொண்டாட்டிங்க மேல இருக்குற பாசம் உங்களுக்கு உங்க பொண்டாட்டி மேல இல்லையா” என்று கடைசி நிமிடம் வரை தன் நடிப்பை விடாது தொடர்ந்தார் பானுமதி.
அதற்குள் வெளியே வந்த தெய்வா “பெரியம்மா, வாங்க போகலாம்” என்றுவிட்டு யாரை முகத்திலும் விழிக்க பிடிக்காது வாசலை நோக்கி நடந்தார்.
“என் பொண்ணை அனுப்பிட்டு நீங்க ரெண்டு பேரும் இந்த வீட்ல நல்லா இருங்கடி, நல்லா இருங்க” என்று தூற்றிவிட்டு பானுமதியும் கோபமாய் செல்லும் தெய்வநாயகியை பின்தொடர்ந்தார்.
உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..
சிபி தங்களறையில் இன்னும் குறையாத கோபத்தோடு தான் நடந்து கொண்டிருந்தான். அன்பரசிக்கு அவனை பார்க்கவே பயமாக இருந்தது.
வீட்டை விட்டு செல்லும் மாமியாரை எதுவும் செய்ய முடியாமல் பார்த்திருந்தவள் கணவனாவது அவரை தடுப்பான் என்று சிபியை பார்த்தாள். அவனோ அவளது கை பிடித்து மேலே அவர்களது அறைக்கு இழுத்து வந்தவன் அவளை கட்டிலில் அமர்த்திவிட்டு அரை மணி நேரமாகியும் எதுவும் பேசாது நடந்திருந்தான்.
இடையிடையே ஆத்திரத்தில் முகம் சுருக்குவதும் கண்களை மூடி பற்களை கடிப்பதுமாய் வேறு இருந்தான்.
அவனது இறுக்கம் குறையாத தேகத்தையும் சற்றும் தளராத முக பாவனைகளையும் பார்த்திருந்தவளுக்கு நடுக்கம் கொடுக்க “சிபி, சத்தியமா நான் இத பண்ணல” என்றவளது வார்த்தைக்கு அவன் திரும்ப..
“அது என் ஹேர் ஆயில் தான். ஆனா நான் பண்ணல சிபி.. அத்தையை என் அம்மா ஸ்தானத்துல தான் பார்க்கறேன். நான் அவங்க கீழே விழணும்னு நினைப்பேனா” ஒருவேளை இவனும் தன் மேல் சந்தேகப்பட்டு தான் கோபமாக நடந்திருக்கிறானோ என்று திணறி சொன்னாள்.
“ப்ச்.. இத நீ சொல்லணுமா” என்ற வார்த்தைகளில் நான் உன்னை நம்புகிறேன் என்று சொல்லாமல் சொன்னான் அவளவன்.
அவன் தன்னை நம்புகிறான் என்பதே அவளுக்கு போதுமானதாக இருக்க, அதுவரை எண்ணற்ற குழப்பங்களின் பிடியில் சிக்குண்டிருந்தவள் ஓடிவந்து அவனை அணைத்து கொண்டு கதறினாள். அவனும் அழும் அவளது முதுகை தடவி கொடுத்து கொண்டிருந்தான்.
“நான் ரொம்ப பயந்துட்டேன் சிபி. இங்க வந்ததுல இருந்து நீங்க எங்கிட்ட ஒரு வார்த்தை கூட பேசல. ஒருவேளை நீங்களும் நான் தான் அத்தை கீழ விழ காரணம்னு நினைச்சிட்டிங்களோனு என்னென்னவோ யோசிச்சிட்டேன்” என்றவளை தன்னிடமிருந்து விலக்கி நிறுத்தியவன் அவளை முறைத்தான்.
அவள் நடுங்கி அவனை பார்க்க, “என்னையே நான் சந்தேகப்படுவேனா டி” என்று ஆற்றாமையாக அவன் கேட்க, நீ தான் நான் என்று சொல்லாமல் சொன்னவனை எண்ணி உதடுகள் சிரிக்க, கண்களை மூடி ஆனந்தத்தில் கலங்கியவளை தன்னோடு அணைத்து கொண்டான் சிபி.
அவன் அணைப்பில் இருந்து கொண்டே “அத்தையும் பாவம் சிபி. நான் அந்த இடத்துல இருந்தாலும் அப்படி தானே யோசிப்பேன். அவங்க போறப்போ நீங்க தடுத்திருக்கணும்” என்று தெய்வநாயகிக்காக நியாயம் கேட்டாள்.
மனதிற்குள் தன்னவளை மெச்சி கொண்டாலும் “யாரும் அவங்கள வீட்டை விட்டு போக சொல்லல. அவங்களா போனா அதுக்கு யாரும் பொறுப்பாக முடியாது” அசராது பதிலளித்தான்.
“அப்படி இல்ல சிபி.. மாமா தானே அவங்கள போக சொன்னாரு. அதுவும் எல்லார் முன்னாடியும். அது அவங்களுக்கு எவ்ளோ அவமானமா இருந்திருக்கும்” என்று மாமியாருக்கு தொடர்ந்து வக்காலத்து வாங்குபவளை எண்ணி அவனுக்கு எரிச்சல் மேலேழுந்தது.
“அப்பா சரியா பேச முடியும்னா இருன்னு தான் சொன்னாரு. அவங்க தன்னை திருத்திக்க ஆரம்பிக்கனும்னு தான் அப்படி சொன்னது. அதை கூட புரிஞ்சிக்காம கோவிச்சிக்கிட்டு கிளம்பினா யார் என்ன பண்ண முடியும்” என்றவனுக்கு அன்னை அவளிடம் தாகாத வார்த்தைகளை உபயோகித்ததை எண்ணி தாடை இறுகியது.
“இங்க பாரு ராசி.. ஒரு விஷயத்தை ஆரம்பத்துல கண்டிக்கிறது தான் கரெக்ட். அப்புறம் நம்ப கை மீறி போனதுக்கு அப்புறம் வருத்தப்படறதுல எந்த அர்த்தமும் இல்ல. தான் பேசினது தவறுன்னு அவங்க உணரணும். அப்படி உணர்ந்துட்டாங்கனா அவங்களே இந்த வீட்டுக்கு திரும்ப வந்திடுவாங்க” இப்போதைக்கு அன்னையிடம் பேசி அவரை அழைத்து வரும் எண்ணம் அவனுக்கு இல்லை என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டான் சிபி.
தெய்வா சென்ற அடுத்த நொடியே சிபியும் அன்பரசியை அழைத்து கொண்டு மேலே சென்றுவிட்டான். அவனுக்கு பின்னே பூபதியும் போகும் மனைவியை தடுக்காது தன்னறைக்கு சென்றுவிட, அமைதியாக அனைத்தையும் பார்த்து நின்றிருந்த அசோக்கும் எதுவும் பேசாமல் அறைக்கு சென்றுவிட்டான்.
அபர்ணாவிற்கு தான் மேலே செல்வதா, வேண்டாமா என்று கிலி பற்றி கொள்ள, வெகு நேரம் கீழ் அறையிலேயே இருந்துவிட்டாள்.
பாட்டி முன் தன்னை விட்டு கொடுக்காமல் பேசிவிட்டு, தந்தையின் வார்த்தைகளுக்காக தாய் செல்வதையும் பற்களை கடித்து பொறுத்து கொண்டு இருந்துவிட்டு எங்கே இவள் மேலே சென்றதும் அனைத்திற்கும் நீ தான் காரணம் என்று வார்த்தைகளால் குதறிவிடுவானோ என்ற பயம் அவளுக்கு.
ஒருமணி நேரத்திற்கும் மேல் கீழே இருந்தவள் தூங்கி கொண்டிருந்த மகன் பசியில் ஏதும் அழுதிருப்பானோ என்று தயங்கி மாடி படி ஏறினாள்.
வரவழைக்கப்பட்ட தைரியத்துடன் அவள் அறைக்குள் காலை வைக்க அங்கே அசோக் மகனுக்கு வேறு உடையே மாற்றி கொண்டிருந்தான். மகனும் தந்தையிடம் மழலையில் ஏதோதோ பேசி கொண்டிருந்தான்.
மனைவியை பார்த்ததும் அசோக் மகனை அவனது தொட்டிலில் விட்டு அவன் விளையாட பொம்மைகளையும் கொடுத்து அவளின் புறம் திரும்ப நடுநடுங்கி போனாள் அபர்ணா.
அவன் மேலும் அவளை நெருங்க, “அச்சு.. சத்தியமா நான் இத பண்ணல. அத்தை செய்யற சிலது எனக்கு பிடிக்காது தான். அதுக்காக..” என்று அவள் பேசி கொண்டிருக்கும் போதே அவள் கன்னத்தில் கைவைத்து ஆராய்வதாக பார்த்தான்.
“வலிக்கிறதா” என்று வேறு கேட்டான்..
இது என்ன அடிக்க வேண்டிய கைகள் அரவணைத்து கொண்டிருக்கிறது என்று அபர்ணா கணவனை புரியாமல் பார்க்க “அம்மா அன்னைக்கு அடிச்சப்போ நான் சிபி மாதிரி தடுத்திருக்கணும்.. இல்ல ஏன் என் பொண்டாட்டிய அடிச்சீங்கனாவது கேட்டிருக்கணும்” வருத்தம் அப்பிய முகத்தோடு சொன்னான் அசோக்.
அப்போதே நிம்மதி வர பெற்றவளாக பெரிய மூச்சொன்றை இழுத்து விட்டு “ஏழு மாசம் முன்னாடி அடிச்சதுக்கு இப்போ வலிக்குதானு கேக்கறீங்களா. போங்க அச்சு” என்று சலித்து கொண்டாள்.
கணவனது கனிவான வார்த்தைகளில் அவள் கன்னமெல்லாம் பளபளத்து இப்போது உண்மையில் அடிவாங்கியது போல் சிவந்து தான் இருந்தது.
“சாரி டி. என் தம்பி தன் பொண்டாட்டிய எப்படி நடத்தணும்னு தெரிஞ்சி வச்சிருக்க அளவுக்கு கூட அவனுக்கு மூத்தவன் எனக்கு தெரியாம போய்டுச்சே. நிறைய இடத்துல பேசியிருக்கணும், உனக்காக நின்னிருக்கணும்.. எதுவும் செய்யல. ரொம்ப ரொம்ப சாரி அபர்..” அவளது கரங்களை சேர்த்து தன் புருவங்களுக்கு இடையே வைத்து கொண்டு மனைவியிடம் எந்தவொரு தயக்கமும் இன்றி மன்னிப்பு கேட்டான்.
இப்படி ஒரு நாள் தன் வாழ்வில் வராதா என்ற ஆசையோடு இல்வாழ்க்கையை தொடங்கி, பின் அதுவே ஏக்கமாக மாறி, இறுதியாக இதுவே தான் வாங்கி வந்த வரம் என்று வெறுத்து தானே அவனுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
இன்று தன்னை புரிந்து தன்னிடம் மன்னிப்பு கேட்டு குழந்தை போல் கலங்கி நிற்கும் கணவனை பார்த்து அவளுக்கும் நெகிழ்ச்சியில் கண்களெல்லாம் கலங்கி போனது.
மேலும் அவளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதாய் “லவ் யு அபர்.. இனி நீ விரும்பிய அச்சுவா நான் எப்பவும் இருப்பேன்” என்று காற்று கூட புகாத அளவிற்கு இறுக்கமாக அணைத்து கொண்டான் அசோக்.
இன்பத்தின் உச்சத்தில் வார்த்தைகளுக்கு இடமில்லாமல் போகிறது. தன் மகிழ்ச்சியின் அளவை கணவனின் கேசத்தை பிடித்திருந்ததிலும் அவளது இறுகிய அணைப்பிலும் வெளிப்படுத்தினாள் அபர்ணா.
சிறிது நேர வார்த்தைகளற்ற இனிமையான மௌனத்திற்கு பின் கணவனிடமிருந்து தன்னை பிரித்து கொண்ட அபர்ணா “அச்சு, அத்தை வீட்டை விட்டு போய்ட்டாங்க. மாமாவுக்காக நீங்க தடுக்கலனே வச்சிக்கலாம். ஆனா அவங்களுக்கு ஃபோன் பண்ணியாவது பேசினீங்களா” என்று கேட்க, அதற்கு அவன் இல்லையென்று உதட்டை பிதுக்கினான்.
“ஏன் அச்சு” கணவனது குணம் நன்கு அறிந்தவள் அவனது மாறுபட்ட செயலை கண்டு அதிர்ச்சியில் விழிகள் வெளியே வர கேட்டாள்.
“அம்மா செய்யறது சரி, தப்புனு கூட பார்க்காம சப்போர்ட் பண்ணுவான்னு அன்னைக்கு என்னை தானே சொன்ன. இத்தனை வருஷம் அந்த தப்ப நான் பண்ணினதால தான், தான் உண்டு தன் வேலை உண்டுனு யாருக்கும் எந்த தீங்கும் நினைக்காத ஒரு நல்ல பொண்ணு மேல பழி சுமத்தி கண்டதை பேசினாங்க. நல்ல மகனா இந்த முறையும் அவங்க திருந்தி வர வழிவிடாம அவங்கள கெடுக்க விரும்பல” என்றவன்..
“கொஞ்ச நாள் போகட்டும், அப்பவும் வரலனா போய் கூப்பிட்டு வரேன். அதுக்குள்ள அன்பரசி அவங்க மகனோட மனைவி, அவளும் அவங்கள போல பல கனவுகளோட தான் இந்த வீட்டுக்கு வந்திருக்கானு அவங்களுக்கு புரியணும்” என்று தெளிவாக சொன்னான்.
சிலருக்கு படிப்பினை ஏட்டில் கிடைக்காது, வாழ்க்கை போகின்ற போக்கில் கொடுத்து விட்டு செல்லும். அப்படி கற்று திருந்திய கணவனது மாற்றம் அபர்ணாவிற்கு திருப்திகரமாக இருக்க அவனது போக்கிலே விட்டுவிட்டாள்.
தெய்வநாயகி இந்த வீட்டை விட்டு சென்று இன்றோடு இரண்டு வாரங்கள் ஆகிறது.
அவர் இல்லாமல் வீடே களையிழந்து இருண்டு விட்டது. தெய்வா தான் அந்த வீட்டின் வெளிச்சம் என்பது அனைவரும் அறிந்ததே.
முதல் ஒரு வாரம் பூபதி உட்பட வீட்டிலிருக்கும் யாரும் அவரை சென்று பார்க்கவுமில்லை, அழைக்கவும் இல்லை. ஒரு வாரத்திற்கு மேல் யாராலும் முடியவில்லை. ஏன், அபர்ணா, அன்பரசிக்குமே அவர் இங்கு இருந்தால் நன்றாக இருக்குமே என்று தான் தோன்றியது.
முதலில் அசோக் தான் மாமா வீட்டிற்கு சென்று அன்னையை அழைத்தான். மகன் அன்று வாய் திறவாததில் அவருக்கு வருத்தம். வரமாட்டேன் என்று அடமாக சொல்லிவிட்டார்.
அடுத்து பூபதி கேசவன் மனைவி இல்லாத தனிமை உணர்ந்தார். இதுவரை மனைவி அவர்களது இருமகன்களை பிரசவித்த போது கூட அவரை அவரது தாய் வீட்டில் வெகுநாட்கள் இருக்க விட்டதில்லை. வேண்டுமென்றால் லோகநாதனின் குடும்பம் தான் இங்கு வந்து பார்த்துவிட்டு செல்வர்.
இன்றோ அவர் பேசிய வார்த்தைக்கு கண்டிக்க வீட்டை விட்டு செல் என்று வார்த்தையை விட, அவரும் அதை விடாமல் பிடித்து கொண்டு அண்ணன் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
பத்து நாட்கள் ஆகியும், மூத்த மகன் சென்று அழைத்தும் வராததால் தானே சென்றார் பூபதி.
ஏதேதோ சொல்லி சமாதானம் செய்தவர் “நான் போனு சொன்னது தப்பு தான், மன்னிச்சிடு.. ப்ளீஸ் வா தெய்வா” என்று கண்கள் கலங்க கேட்க, தெய்வநாயகிக்கும் அதற்கு மேல் வீம்பு பிடிக்க மனமில்லை.
அதோடு வாயை வைத்து கொண்டு அமைதியாக இருந்தாரா “அன்பரசி நீ நினைக்கிற மாதிரி இல்ல தெய்வா. நம்ப வீட்டுக்கு வாழ வந்த பொண்ணும் நம்ப பொண்ணு மாதிரி தான. நீ அன்பரசி பத்தின உன்னோட அபிப்ராயத்தை மாத்திக்க. அதான் நம்ப வீட்டுக்கு நல்லது” என்று அறிவுரை வேறு கூறினார்.
“ஓ.. அவ்ளோ அந்த மஹாராணி வீட்டுக்குள்ள இடத்தை பிடிச்சிட்டாளா. எது சொன்னாலும் அம்மா சொல்றது கரெக்ட்ன்னு இருக்க என் பெரிய பையன் இன்னைக்கு ஒரு வாரம் கழிச்சி என்னை கூப்பிட வரான். சின்னவன் அம்மா போனா போய் தொலையட்டும்னு இருந்துட்டான். நான் கட்டிக்கிட்டவர் என்னை கூப்பிட வந்திருக்கார்னு பார்த்தா மருமகளுக்கு வக்காலத்து வாங்க வந்திருக்கார்” என்று ஆவேசமாக கத்தியவர்..
“மாட்டேன்ங்க.. வரவே மாட்டேன். என்னைக்கு அவ அந்த வீடு விட்டு போறாளோ அன்னைக்கு தான் நான் அங்க வருவேன். இல்ல செத்தாலும் எனக்கு எங்க அண்ணன் வீடு இருக்கு. அங்கேயே என் வாழ்க்கை முடியட்டும்” என்றுவிட, பூபதிக்கும் அதற்கு மேல் அங்கு இருந்து காட்சி பொருள் ஆவதில் விருப்பமில்லை. அமைதியாக சென்றுவிட்டார்.
அன்று பணியிலிருந்து வந்த சிபி தன்னை சுத்தப்படுத்தி கொண்டு வந்து அயர்வாக கட்டிலில் அமர்ந்திருந்தான்.
அவனிடம் வந்த அன்பரசி அவன் தலை கோதி “எப்போ வந்தீங்க சிபி. பாப்பாவுக்கு வேக்ஸின் போட்டத்துல இருந்து சிடு சிடு அழுதுட்டே இருந்தான். அதான் அபர்ணாவுக்கு உதவி பண்ண அவங்க கூட இருந்தேன்” அவன் கேட்காமலே தான் இங்கு இல்லாத காரணத்தை சொன்னாள்.
அவன் அவள் சொல்வதை கேட்டானே தவிர எதுவும் பதில் சொல்லவில்லை. அவளே அவனது கன்னம் தாங்கி “சாப்பிடுறீங்களா” என்று கேட்டாள்.
“இல்லடா ராசி, நீ சாப்பிடு” என்று அவன் பதிலளிக்க அன்பரசிக்கு முகம் வாடி போனது.
வெளியே சொல்லி கொள்ளவில்லை என்றாலும் மிகவும் சோர்வாக தெரிந்தான் சிபி. அபர்ணாவிடம் பேசியபோது அசோக்கும் அப்படி தான் இருக்கிறான் என்று அவளும் சொல்லி வருத்தப்பட்டாள்.
கணவனை இப்படி பார்ப்பதற்கு அன்பரசிக்கு மனவேதனையாக இருந்தது. வீட்டிலிருக்கும் மற்றவர்களை காட்டிலும், ஏன் அன்னை செய்யும் எதற்கும் துணை போகும் அசோக்கை காட்டிலும் சிபி தான் அவன் அன்னையை அதிகம் தேடுவான். தெய்வநாயகிக்கும் தன் சிறிய மகன் மீது தனி பாசம் உண்டு.
அவர் சென்றதில் இருந்து அவனுடைய புன்னகை முகமும், குறும்புத்தனமும் அடியோடு தொலைந்துவிட்டதை எண்ணி வருந்தினாள் அன்பரசி. அதுவும் ஒரு குடும்பம் உடைய தான் காரணமாகி விட்டோமே என்ற குற்றவுணர்வும் அவளை உருக்கியது. இதில் ஒருவாரமாக தன் உடலில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள், அது எதனால் என்றும் அவளால் புரிந்த கொள்ள முடிந்தது.
தெய்வநாயகியை கவனித்து கொள்வதிலேயே நாள் தள்ளி போனதை கவனிக்காமல் விட்டிருந்தவள் இப்போது வாந்தியும் மயக்கமும் அடிக்கடி வரவுமே கர்ப்பத்தை உறுதி செய்யும் கருவி வாங்கி சோதித்து பார்த்தாள்.
இரயில் தண்டவாளத்தை போன்று இரு சிவப்பு கோடுகள் அவர்களது இணைந்த உயிரை உறுதி செய்ய அன்பரசியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
விசயத்தை அறிந்த நாளில் இருந்து அவளும் கணவனுக்கு அதை இயம்பிவிட எண்ணி முடியாமல் போக தனக்குள்ளேயே தவித்து கொண்டிருந்தாள். இன்று எப்படியேனும் சொல்லிவிட வேண்டுமென்று அவனுக்கு பிடித்த இனிப்பை தன் கையாலே செய்து வைத்து விட்டே சாப்பிட அழைத்தாள்.
அவனோ உணவு வேண்டாம் என்று மறுத்துவிட இருவர் மட்டும் அமர்ந்து உணவருந்தும் அந்த உணவு மேசையில் இருந்த உணவு பாத்திரங்களை எடுத்து குளிர்சாதன பெட்டிக்குள் திணித்தவள், விளக்கை அணைத்து வந்து அமைதியாக பால்கனி ஊஞ்சலில் அமர்ந்து கொண்டாள். அவளது கண்களிலிருந்து கண்ணீர் தானாக வழிந்து கொண்டிருந்தது.
விளக்கு அணைக்க பட்டத்தை கூட அறியாத சிபி எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தான் என்று தெரியவில்லை. திடீரென நினைவு வந்து சுற்றி பார்க்க அத்துவான காட்டில் விட்டது போல் சுற்றிலும் இருள் சூழ்ந்திருந்தது.
தன் பக்க விடிவிளக்கை உயிர்ப்பித்து மனைவி எங்கே என்று பார்க்க, அவள் அருகில் படுத்திருக்கவில்லை. அப்போதே எங்கோ வெறித்திருந்த போது அவளும் உண்ணாமல் அனைத்தையும் ஏறக்கட்டிய காட்சி மனக்கண்ணில் வந்து போனது.
மனைவியை தேட எழ, காற்றில் ஆடும் திரைசீலைக்கு பின் குத்துக்காலிட்டு அமர்ந்து இலக்கில்லாமல் வெறித்திருந்தவளின் பால் முகம் தெரிந்தது.
வேகமாக எழுந்து மனைவியின் அருகில் சென்றவன் அவளை தன் வயிற்றோடு அணைத்து “சாரிடா ராசி.. நான் சாப்பிடலனா என்ன. நீயும் எல்லாத்தையும் எடுத்து வச்சிட்ட” என்றவன் “சரி வா சாப்பிடலாம்.. எனக்கு ரொம்ப பசிக்குது” என்று அவள் கையை பிடித்து கொண்டே முன்னே அடியெடுத்து வைக்க, கணவனது கை பிடித்து தடுத்தாள் அன்பரசி.
அவன் என்ன என்பதாய் அவளை திரும்பி பார்க்க “நான் வேணும்னா அத்தை கிட்ட போய் பேசி பார்க்கட்டுமா சிபி. அவங்க பையனை நான் இப்படி பார்த்தத்தில்லனு சொல்றேன். எனக்கு என் பழைய சிபி வேணும், அதுக்காக அவங்க காலுல விழணும்னாலும்..” என்றவளின் வாயை கை கொண்டு மூடியவன் தலையை இடமும் வலமும் அசைத்து வேண்டாம் என்றான்.
அவள் கண்கள் துடிக்க அவனையே பார்த்திருக்க “உன்னோட மரியாதை எனக்கு முக்கியம் ராசி. உனக்கு மதிப்பு கொடுக்கிற நிலையில என் அம்மா இப்ப இல்ல. மதிச்சிருந்தா இந்நேரம் கிளம்பி வந்திருப்பாங்க” என்று அவளுக்கு எடுத்து கூறினான்.
அவள் அப்போதும் அமைதியாக இருக்க “சாரி, நானும் முன்ன மாதிரி உன்கிட்ட பேசறதில்ல. எனக்கு கொஞ்சம் டைம் கொடு, எல்லாத்தையும் சரி பண்றேன். முடிஞ்சா நானே அம்மாகிட்ட போய் பேசி பார்க்கறேன். உனக்கு தெரியாது ராசி, எல்லாரையும் விட அம்மாவுக்கு என்னை தான் ரொம்ப பிடிக்கும். நான் கேட்டு அம்மா எதுவுமே மாட்டேன்னு சொன்னதில்ல” மீண்டும் அன்னையின் பேச்சுக்கு சென்றவன் அவள் முகம் வேதனையில் சுருங்குவதை உணர்ந்து தன்னையறியாமல் அவளை நோகடித்து விடுகிறோம் என்று புரிந்து சாப்பிட அழைத்து வந்தான்.
இப்போது கணவனிடம் தான் கருவுற்றிருப்பதை சொல்வது சரியாக இருக்காதென்று முடிவு செய்தவள் இனிப்பை தவிர்த்து மற்றதை எடுத்து சூடு செய்து இருவருக்கும் பரிமாறினாள். சாப்பிட்டு கொண்டிருக்கும் போது தான் மனைவியை கவனித்தான் சிபி.
இந்த இரண்டு வாரத்திலேயே மிகவும் மெலிந்திருந்தாள் அன்பரசி. மற்றவர்களுக்கு தெய்வா சென்ற வேதனை தான் இருக்கிறது. ஆனால் அவளுக்கோ தன்னால் தான் சென்றார்கள் என்று குற்றஉணர்ச்சியும் சேர்ந்து அமிழ்த்துக்கிறது என்பதை புரிந்தான்.
“நீ வேணா கொஞ்ச நாள் உங்க அம்மா வீட்டுல இருந்துட்டு வாயேன் ராசி” அவளிடம் கனிவாக சொன்னான். அவளுக்கும் அது சரியென்றே பட்டது. இன்னும் குழந்தை விசயத்தை சொல்லாத போது அவளுள் ஏற்படும் உடல் மாற்றத்தை அவனிடமிருந்து மறைப்பது பெரும் பாடாக இருக்கிறது. நேற்று கூட அவள் இரவில் வாந்தி எடுத்த போது என்ன, ஏதென்று கேட்டு பயந்துவிட்டான் சிபி. அதனால் அவளும் சரியென்று தலையாட்டி விட்டாள்.
அன்பரசி அன்னை வீட்டிற்கு சென்று மூன்று நாட்கள் ஆகிறது. இந்த ஏழரை மாதத்தில் அவளுக்கு அவன் அதிகம் பழகியிருந்தாலும் மனைவியின் மன அமைதிக்காக அவளை அங்கே இருக்க விட்டான்.
அன்று விடியற்காலையிலேயே பணிக்கு சென்ற சிபி மாலை வீட்டிற்கு வரும் வழியில் ‘நந்தனா ஸ்வீட்ஸ்’ என்று பெயர்பலகை கொண்ட அந்த கடையின் முன் வண்டியை நிறுத்தினான்.
நந்தனா இனிப்பு மற்றும் காரவகைகள் கடை, நான்கு வருடங்களுக்கு முன்பு சென்னையில் சிறிய கடையாக தொடங்கி இப்போது அவர்களது சுவை மற்றும் தரத்தின் வாயிலாக நகரின் முக்கிய இடத்தில் மூன்று பெரிய கிளைகளாக மாறியுள்ளது.
உள்ளே சென்றவன் “நான் உங்க ஓனர் மிஸ்டர்.கலைவாணனை ஒரு ஆர்டர் விஷயமா பார்க்கணும்” என்று கல்லாவில் அமர்ந்திருந்தவரிடம் சொன்னான். அவர், அதாவது கலைவாணனின் மாமனார், நந்தனாவின் அப்பா சிபியை ஏற இறங்க பார்த்துவிட்டு உள்ளே சென்று தன் மருமகனை அழைத்து வந்தார்.
அன்பரசி ஒரு நாள் தன் அண்ணனுக்கும் தனக்கும் இடையில் இருக்கும் அழகிய பந்தத்தை பற்றி கூறி, அவனை அதிகம் மிஸ் செய்வதாக அவனிடம் வருத்தப்பட்டிருந்தாள்.
சிறந்த கணவனாக அவள் இப்போது இருக்கும் மனநிலையில் அவள் அண்ணனை அவளிடம் பேசவைத்தால் மகிழ்ச்சியாக உணருவாள் என்றே சிபி கலையை சந்திக்க வந்தான்.
வந்த கலைவாணனிடம் “ஹலோ ஐ ஆம் சிபி சக்கரவர்த்தி” என்று கை நீட்டவும், எங்கோ கேட்ட பெயராக இருக்கிறதே என்று அவன் யோசிக்கும் போதே “உங்க சிஸ்டர் அன்பரசியோட ஹஸ்பெண்ட்” என்று அறிமுகத்தை விரிவும் படுத்தினான்.
கையை உயர்த்திய கலை மீண்டும் கீழே இறக்கி “நீங்க எதுக்கு இங்க வந்தீங்க” என்று கோபமாக சிபியிடம் கேட்டான்.
அதற்குள் தந்தையின் மூலம் விசயமறிந்த நந்தனாவும் அங்கு வந்துவிட, சிபியோ “ப்ளீஸ் இங்க சத்தம் போட வேண்டாம். தனியா பேசலாமா” அவன் கடை நலனிற்கு இவன் பேசினான்.
அதற்குள் நந்தனா “அவ சகவாசமே வேண்டாம்னு தானே இருக்கோம். அப்புறம் எதுக்கு அவ சொந்தம்னு வந்திருக்கீங்க” என்று ஆவேசமாக கேட்டாள்.
மனைவியை தன் பார்வையால் எரித்த கலை “என் தங்கச்சி மேல மனஸ்தாபம் இருந்தாலும், அவர் எங்க வீட்டு மாப்பிள்ளை. நான் போயிட்டு வந்திடுறேன்” என்றான். அதில் சிபிக்கு தான் வந்த வேலை எளிதென்றே தோன்றியது.
முதலாளி அறைக்கு அழைத்து சென்ற கலை, அவனுக்கு காப்பி சொல்லி சிபியும் அதை வாங்கி குடித்த படியே பேச ஆரம்பிப்பதற்கு முன் “என் அன்பு மேல நான் உயிரையே வச்சிருந்தது உண்மை தான். ஆனா எப்போ அவ கல்யாணத்துக்காக வாங்கின பணத்தை திருப்பி கொடுத்தாளோ அப்பவே எனக்கு மனசு விட்டு போச்சு. அவர் மாமனார் வச்சி தரேன்னு சொன்ன பிசினஸையும் இவ வேண்டாம்னு தடுத்ததுல நந்தனா கொஞ்சம் அதிகபடியா தான் பேசினா. அதுக்காக எதுவும் வேண்டாம்ங்கிற மாதிரி பணத்தை திருப்பி தந்து அசிங்கப்படுத்துவாளா. அவளுக்கு என் மேல பாசமே இல்ல. நான் மட்டும் பாசத்தை வச்சிக்கிட்டு என்ன பண்ண” இத்தனை வருடங்களாக தன் மனதில் தேக்கி வைத்திருந்ததை எல்லாம் வெளியில் சொன்னான்.
அதையும் அமைதியாக கேட்ட சிபி “ராசி” என்றதும் கலை புரியாமல் புருவம் சுருக்க..
“உங்க அன்பு எனக்கு எப்பவுமே ராசி தான். அவ என்கிட்ட எல்லாம் சொல்லிட்டா. உங்க தரப்பு நியாயம் எனக்கு புரியுது. இப்போ நீங்க சொல்லுங்க.. நீ எனக்கு இத்தனை நாள் ஆசைநாயகியா இருந்ததுக்கு இந்த சொத்தை தரேன்னு ஒருத்தன் சொல்றப்போ அவன் மூலமா வர சொத்தை ராசி எப்படி ஏத்துக்குவா. அதன் மூலம் வர பிசினஸை அவ அண்ணனான நீங்களும் தான் ஏத்துப்பீங்களா? கண்டிப்பா மாட்டீங்க. இதை தானே ராசியும் பண்ணா அப்புறம் நீங்க அவகிட்ட பேசாம இருக்குறது எந்த விதத்துல நியாயம்” என்று கேட்டான்.
கணவனே ஆனாலும் அண்ணன் தனக்கு இரண்டாம் தாரமாக ஒரு வரன் பார்த்ததை சிபியிடம் மறைந்திருந்தாள் அன்பு.
சிபி பேசியதை கேட்ட கலைக்கு முகமெல்லாம் கருத்து விட்டது. அதோடு இதுவரை அபிஷேக் தங்கையை அப்படி ஓர் வார்த்தை சொன்னதை அறியாதவன் இன்றே முதல் முறையாக கேட்டு உடல் இறுகியது.
இறந்தவனை என்ன செய்வது என்று சற்று நிதானித்தவன் “சாரி மாப்பிள்ளை. என்னைவிட அன்பு பத்து வயசு சின்னவ. ஆனா அண்ணன்ங்கிறது பேருக்கு தான். ஒரு ப்ரண்டடா தான் அவகிட்ட பழகியிருக்கேன். பெரிய தப்பு பண்ணிட்டேன். நான் அன்புக்கிட்ட பேசிருக்கணும். ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன்” என்று கண்களில் கண்ணீரோடு புலம்ப அவன் கைபிடித்து ஆறுதல் படுத்திய சிபி..
“ப்ளீஸ், அவகிட்ட பேசுங்க. ரொம்ப சந்தோஷப்படுவா” என்றவன் “இப்போ உங்க வீட்டுல தான் இருக்கா. இது உங்க புது வீட்டு அட்ரஸ். முடிஞ்சா இன்னைக்கே போய் உங்க தங்கச்சிக்கு சர்ப்ரைஸ் கொடுங்க” என்றுவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.
மனைவியின் வீட்டிற்கு மைத்துனனை இன்ப அதிர்ச்சி கொடுக்க அனுப்பிய சிபிக்கு அங்கே தனக்கோர் அதிர்ச்சி காத்திருப்பதை அறியாது போனது தான் பரிதாபம்.
உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் பர்ண்ட்ஸ்..
“வக்ரதுண்ட மஹாகாய
சூர்யகோடி சமப்ரபா
நிர்விக்னம் குருமே தேவ
சர்வ கார்யேஷு சர்வதா”
சுற்றிலும் பசுமையாக, மரங்களாலும், இயற்கை வளங்களாலும் சூழ்ந்து, சொறு ஓடுகளால் கேரளா பாணியில் கட்டப்பட்டிருந்த கலாலயாவில் அமர்ந்து எதிரில் இருக்கும் மாணவர்களுக்கு விநாயகர் பாட்டு சொல்லி தர ஆரம்பிப்பதற்கு முன் விநாயகர் துதி சொல்லி கொடுத்து கொண்டிருந்தாள் அன்பரசி.
மாணவர்களும் அவள் சொல்வதை கேட்டு மீண்டும் சொல்ல, எளிமையான விநாயகர் பாடல் ஒன்றையும் அவர்களுக்கு பாட கற்று கொடுத்தாள்.
அன்பரசி இப்போது மங்களூருக்கு சற்று தள்ளி இருக்கும் இடத்தில் வாய் பாட்டு ஆசிரியையாக இருக்கிறாள்.
வகுப்பு முடிந்து அனைவரும் வணக்கம் சொல்லிவிட்டு கிளம்ப, “பை மிஸ்.. சி யு டூமாரோ” என்று அயல்நாட்டு ஆங்கில உச்சரிப்பில் சொல்லிவிட்டு கிளம்பினாள் அந்த சிறுமியும்.
அவள் செல்வதையே பார்த்திருந்தவள் தன் வயிற்றில் ஆசையாக கை வைத்து வருடினாள். இது போன்று ஒரு பெண்பிள்ளையை தானே அவனும் கேட்டான்.
தாய் தந்தையை பற்றி நினைவு கொள்கையில் தானும் உற்சாகமாக ஆடி, அசைந்து தன் இருப்பை சொல்லியது வயிற்றில் இருக்கும் மகவு.
“பாப்பா.. நீ என்னை மாதிரி இருக்க கூடாது. உங்க அப்பாவை மாதிரி தைரியமா, நினைச்சதை சாதிக்கிறவளா இருக்கணும்” என்று சொன்னவள் ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டு “நமக்கு தான் அவர் கூட இருக்கிற பாக்கியம் கிடைக்கலனாலும், அவராவது வைஃப், குழந்தைங்கன்னு சந்தோஷமா இருக்கணும்” என்று பேசி கொண்டிருக்கையில் அங்கே அவளது நினைவுகளுக்கான நாயகன் பணிக்கு தயாராகி கொண்டிருந்தான்.
ஓரிரு மாதமாக அவனது உணவு மேசையில் தவறாது இருக்கும் உணவை எப்போதும் போல் அன்றும் தொட்டு தீண்டாமல் அவன் கடந்து செல்ல, அதை மறைந்திருந்து பார்த்திருந்த இரு கண்கள் கலங்கியது.
வண்டியை எடுத்து கொண்டு கிளம்பிய சிபி நேரத்திற்கு முன்னே ரயில் நிலையத்தை வந்தடைந்து விட அமைதியாக அமர்ந்து அங்கு நடப்பவைகளை பார்த்திருந்தான். அப்போது அன்பரசியை போல் ஓர் பெண் தோள் பையை மாட்டி கொண்டு அவனை கடந்து செல்ல அவனது சிந்தனைகள் நான்கு மாதங்களுக்கு முன் கலையை அன்பரசியின் வீட்டிற்கு அனுப்பிய நாளுக்கு பயணித்தது.
கலையிடம் பேசிவிட்டு வீட்டிற்கு வந்த சிபி உடைமாற்றி தயாராகி அண்ணன் மகனுடன் விளையாடி கொண்டிருந்தான். குழந்தையை மேல்நோக்கி தூக்கி போட்டு பிடிக்க, அதை மிகவும் விரும்பிய குழந்தையும் சத்தமாக சிரித்து கொண்டிருந்தான்.
அப்போது அவனுக்கு அன்பரசியின் தந்தை விநாயகத்திடமிருந்து அழைப்பு வந்தது.
அழைப்பை ஏற்று எடுத்து காதில் வைத்தவன் “சொல்லுங்க மாமா, எப்படி இருக்கீங்க. அத்தை எப்படி இருக்காங்க. மேடமுக்கு இன்னும் அம்மா வீடு சலிக்கலயா” என்று அவன் பாட்டிற்கு பேசி கொண்டிருக்க இடைமறித்த விநாயகம்..
“மாப்பிள்ளை கலை வீட்டுக்கு வந்திருக்கான். நீங்க தான் அனுப்பி வச்சிருந்தீங்கலாமே” என்றதும் தான் சொன்னதை மதித்து அங்கு சென்றிருக்கும் மைத்துனனை முழுதாக மெச்சியும் முடிக்கவில்லை, அவர் அடுத்து சொன்னதை கேட்டு அதிர்ந்து போனான் சிபி.
மருமகன் ஒன்றும் பேசாமல் இருக்க “லைன்ல இருக்கீங்களா மாப்பிள்ளை. அன்பு இங்க இல்லையே. கலை என்னவோ, அன்பு இங்க வந்திருக்கானு நீங்க தான் சொல்லி அனுப்பினதா சொல்றான். அவன் ஏதாவது தப்பா கேட்டுட்டானா மாப்பிள்ளை” குரலில் பயம் தெரிந்தாலும், மகளின் மீதும் மருமகனின் மீதும் இருக்கும் நம்பிக்கையில் கேட்டார்.
அதை கேட்டு திடுக்கிட்ட சிபி “மாமா.. ராசி.. ராசி அங்க இல்ல” வாய் திறவேனா என்று வித்தை காட்ட சிரமப்பட்டு வினவினான்.
“அங்க இல்லனா..? அப்போ அங்கயும் இல்லையா. ஐயயோ.. என்னாச்சு மாப்பிள்ளை என் பொண்ணுக்கு” என்றவரது குரல் நடுங்கி ஒலித்ததில், சற்று தள்ளி அமர்ந்திருந்த கலையும் சரிதாவும் ஓடிவந்து விட்டனர்.
“என்னப்பா.. என்னாச்சு..” கலை பதறி கேட்க..
“அன்பு அங்கயும் இல்லையாம் கலை.. என் பொண்ணுக்கு என்னாச்சுன்னு தெரியலையே..” அவர் உடைந்து அழுவது இந்த பக்கமிருந்த சிபிக்கு கேட்டிருந்த நொடி, சரியாக தந்தையின் கைபேசியை வாங்கி கலை ஸ்பீக்கரில் போட, அவனது பைக் சீறி கிளம்பியது அங்கிருந்தவர்களுக்கும் கேட்டது.
அடுத்த இருபதாம் நிமிடம் மாமியார் வீட்டில் இருந்தான் சிபி. இத்தனைக்கும் இரு வீட்டிற்கும் இடையே இருப்பது கிலோமீட்டர் தூரமிருக்கும்.
வீட்டிற்குள் நுழைந்தவனை வாசலுக்கே ஓடிவந்து அவனது கைகளை விநாயகமும் சரிதாவும் பிடித்து கொண்டு மகளுக்கு என்னவாயிற்றோ என்று கதறினர். கலையும் சிபியும் தான் தங்கள் நடுக்கத்தை மறைத்து அவர்களை ஆறுதலாய் தோள் பிடித்து உள்ளே அழைத்து வந்தனர்.
அடுத்து, நொடியும் தாமதிக்காது “ராசி இங்க வர்றதா தான மூணு நாளுக்கு முன்னாடி கிளம்பினா. இங்க வரலையா அத்தை” என்று மாமியாரிடம் கேட்டான்.
“இல்லயே மாப்பிள்ளை. நாலு நாளா எனக்கு அவ ஃபோன் கூட பண்ணலையே. வேலையா இருக்கானு விட்டு தப்பு பண்ணிட்டேனோ.. என் பொண்ண ஒரேடியா விட்டுட்டேனோ.. ஐயோ.. கடவுளே..” என்று அவர் தலையில் அடித்து கொண்டு கதற..
“எதுவும் நெகடிவ்வா யோசிக்காதீங்க ம்மா” அன்னைக்கு சொன்ன கலை.. “உங்ககிட்ட கூட பேசலையா மாப்பிள்ளை” என்றவனுக்கு வார்த்தைகள் வர மறுக்க இல்லையென்று தலையாட்டினான் சிபி.
“அம்மா வீட்டுக்கு போன பொண்டாட்டிக்கு நீங்களும் மூணு நாளா ஒரு ஃபோன் கூட பண்ணலையா” இப்போது சற்று காட்டமாகவே கேட்டான் கலை.
தன் மடத்தனத்தை எண்ணி நொந்து கொண்டவன் இல்லையென்று தலையாட்டி “அது, அம்மா எங்க வீட்டுல இல்ல. அதுல கொஞ்சம் அப்செட்டா இருந்தா. அதான் நானா ஃபோன் பண்ணி அவளுக்கு அத ஞாபகப்படுத்த வேணாம்னு தான் கால் பண்ணல. அவளும் பண்ணாத போது அம்மா வீட்டுல நிம்மதியா இருக்கட்டும் நினைச்சேன்” என்னும் போதே கண்ணின் ஓரம் கண்ணீர் நின்று அவனுக்கு தொண்டை குழி அடைத்தது.
விநாயகமும் சரிதாவும் வாய் பொத்தி அழ, கலை தான் தைரியத்தை வரவழைத்து கொண்டு “ஊர்ல நடக்கறதெல்லாம் பார்த்தா பயமா இருக்கு. போலீஸ்ல சொல்றது தான் மாப்பிள்ளை சரி.. என் அன்புக்கு..” என்றவனுக்கும் மேல பேசமுடியாமல் தொண்டை அடைத்தது.
சிபியும் கலையும் சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்து விட்டு வந்தனர். அவர்கள் என்னென்னவோ கேள்விகளை கேட்டு சிபியை துளைத்தார்கள். ஏதேனும் குடும்ப பிரச்சனையா, வரதட்சணை கொடுமையா, மாமியார் கொடுமையா, அன்பரசி அவனோடு மனம் ஒத்து தான் வாழ்ந்தாளா, ஏன் அவளுக்கு யாரோடும் தொடர்புள்ளதா என்று பல்வேறு கோணத்தில் விசாரித்தனர்.
இறுதியாக புகார் பதிவு செய்து, அவளது புகைப்படம் ஒன்றையும் வாங்கி கொண்டு தகவல் கிடைத்தால் சொல்லி அனுப்புவதாக சொல்லி அனுப்பிவைத்தனர்.
தகவல் அறிந்த அசோக், அபர்ணா, பூபதி கேசவன் மூவரும் மகனின் வருகையை எதிர்நோக்கி பதட்டத்துடன் வாசலிலேயே காத்திருந்தனர்.
சில மணிநேரத்திற்கே முழுவதுமாய் உருக்குலைந்து, நடக்கவும் திராணியற்று வந்த சிபியை நோக்கி மூவரும் ஓட, நேரே வந்து தந்தையை அணைத்து கொண்டவன் “எங்கப்பா போயிருப்பா. நான் கவனிக்காம விட்டுட்டேனா. எப்பவும் அம்மாவை பத்தி பேசி எப்ப போய் பேசறீங்கன்னு கேட்பா. இல்ல, நானே போறேன்னு சொல்லுவா. அதான் ஃபோன் பண்ணாம இருந்தேன். பெரிய தப்பு பண்ணிட்டேனோ.. என் ராசியை நான் இப்போ எங்கன்னு போய் தேடுவேன்” அவர் கழுத்தின் பின்னே முகம் புதைத்து புலம்பியிருந்த மகனது முதுகை நீவி கொடுத்திருந்தார் பூபதி.
“சிபி, கவலை படாத. எப்படியாவது தேடி கண்டுபிடிப்போம்” அவ்வளவு எளிதல்ல என்று தெரிந்தும் மகனை ஆறுதல்படுத்த சொன்னார்.
அவர்களுக்கும் பேச வார்த்தைகள் இல்லை. இருந்தும் தங்களது வேதனைகளை மறைத்து “எங்கயும் போயிருக்க மாட்டா” என்று தம்பியின் தோளில் அழுத்தி கொடுத்தான் அசோக்.
அபர்ணாவால் இன்னனுமே பேசமுடியாமல் அவள் ஒருபக்கம் ஓயாமல் அழுது கொண்டிருந்தாள். அவளையும் அசோக் தான் தேற்றினான்.
அன்பரசி காணாமல் போய் ஒரு வாரம் ஆகி போனது. போலீசார் ஒரு பக்கம் தேடி கொண்டிருக்க சிபியோ காணும் இடமெல்லாம் அவளாய் தெரிய, வேலைக்கும் போகாமல் வீட்டிலே முடங்கி போனான்.
அவளை காணவில்லை என்று தெரிந்த அடுத்தநாளே அபர்ணாவின் உதவியோடு அவளது அலுவலகத்திற்கு சென்று விசாரித்த போது அங்கு கிடைத்த தகவல் அவனை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஒரு வாரத்திற்கு முன்னே தன் வேலையை ராஜினாமா செய்துவிட்ட அன்பு, அவள் தன் தாய் வீட்டிற்கு சென்றிருப்பதாக நினைத்த மறுநாள் தன் வேலையிருந்து நிறைவு பெற்றிருக்கிறாள்.
கேட்டதற்கு உடல்நலனை காரணமாக சொல்லியிருக்கிறாள். அன்றையோடு அவளது கைபேசியும் அணைக்கப்பட்டிருந்தது. கேட்கும் தகவல்கள் ஒவ்வொன்றும் அவனை ஒரு அனுமானத்திற்கு கொண்டு செல்லும் நேரத்தில் தான் மீண்டும் வீட்டிற்கு வந்தார் தெய்வா.
அன்னையை பார்த்ததும் துக்கம் பொங்கி எழ, அவரை தன் வலிய கரங்களால் அணைத்து கொண்டான் சிபி.
மகனது தோற்றத்தை கண்டு கலங்கியவரும் அவனது தலையை வருடி கொடுத்து “ஒண்ணுமில்ல.. சரியாகிடும்” என்று ஆறுதல் சொல்ல, அப்போதைக்கு அவனுக்கு அது தேவையானதாக இருந்தது.
வெகுநேரத்திற்கு பிறகே அன்னையிடமிருந்து அவன் விலகி நிற்க, தானும் கண்ணீரை துடைத்தவர் “இதுக்கு தான் அன்னைக்கே சொன்னேன். அவ நம்ப குடும்பத்துக்கு வேணான்னு. கேட்டியா. இப்படி ஓடி போய் குடும்ப மானத்தையே வாங்கிட்டாளே பாவி” என்று நாக்கில் நரம்பில்லாமல் பேசினார்.
“அம்மா.. ராசியை பத்தி தப்பா பேசாதீங்க” கண்டிக்கும் தொனியில் குரலை உயர்த்தியவன் “அவ இந்த வீட்ட விட்டு போறதுக்கு காரணமே நீங்களும், நானும் தான். அவளுக்கு நான் சந்தோசமா இருக்கணும். அது நீங்க இங்க இருந்தா தான் நடக்கும்னு முட்டாள்தனமா யோசிச்சி என்னை விட்டு போயிருக்கா” என்று கோபமாக பொரிந்தவன் சற்று நிதானித்து..
“இவ்ளோ பேசறீங்களே.. அவ மட்டும் இல்லனா என்னைக்கோ உங்க பையன் செத்து சாம்பலாகிருப்பான். அவளை நான் பார்த்த நாளுல இருந்து என் நல்லத்துக்கு மட்டும் தான் என் ராசி யோசிச்சிருக்கா. அவளுடைய செயல்களும் அப்படி தான் இருக்கும். யார் என் ராசியை புரிஞ்சிக்கலனாலும் எனக்கு அவளை புரியும்” என்றுவிட, தெய்வநாயகியின் முகம் கருத்து போனதே ஒழிய இப்போதும் அவளின் மீதான அவரது காழ்ப்புணர்ச்சி குறைந்தது போல் தெரியவில்லை.
என்ன, தொடர்ந்து அங்கேயே இருந்துவிட்ட தெய்வா அவளை பற்றி அவதூறு பேசுவதை நிறுத்தினார்.
அன்னையின் வாயை அடைத்து விடலாம். ஊராரின் வாயை எதை கொண்டு அடைக்க முடியும். ஒருநாள் விட்டு ஒருநாளைக்காவது காவல் நிலையத்திற்கு சென்று மனைவியை பற்றி ஏதேனும் தகவல் கிடைத்ததா என்று விசாரித்து விட்டு வருவான்.
அவர்களும் என்ன செய்வார்கள். அன்பரசியோ மங்களூர் நகரை விட்டு புறப்பகுதியில் இருக்கும் கலாலயாவை விட்டு வெளியே வருவதே இல்லை. மாதத்தில் ஒருநாள் மட்டும் வெளியே வந்து தன் மகப்பேறு மருத்துவ சோதனைகளை முடித்து கொண்டு மீண்டும் கலாலயாவிற்கு சென்றுவிடுவாள்.
இதில் சிபி வேறு விடாமல் வந்து தகவல் கேட்டுவிட்டு செல்கிறான். அதுவும் கிடைத்த தகவலை வைத்து பார்த்தால் அன்பரசியே தான் கிளம்பி சென்றிருக்கிறாள் என்பதும் தெளிவாக புரிகிறது.
அன்று சற்று கடுமையாகவே சிபியும் கேட்டுவிட, பொறுமை இழந்த துணை ஆய்வாளர் “யோவ்.. சும்மா எங்களை கேள்வி கேட்டுட்டு இருக்க. பொண்டாட்டியை வச்சி வாழ துப்பில்லாம விட்டுட்டு எங்ககிட்ட அதிகாரம் பண்ணுவியா. அவ யார் கூட ஓடி போனாளோ” என்று கேட்டுவிட, அதிகாரி என்றும் பாராமல் அவர் சட்டையை பிடித்து விட்டான்.
அதற்கும் அவர் “ஆமா, அவளுக்கு யார் கூட தொடர்பிருந்துச்சோ” என்று தன் சட்டையிலிருந்த அவன் கைகளை அவர் ஆங்காரமாய் உதறிவிட,
நல்லவேளை அடிக்க சென்றுவிட்டவனை அங்கிருந்த கண்ணியமான தலைமை காவலாளி தான் மக்களுக்கு சேவை புரியும் பணியில் இருக்கும் இருவர் இப்படி நடந்து கொள்ளலாமா என்று அறிவுறுத்தி இருவரையும் தடுத்து நிறுத்தினார்.
அதன் பின்னே இயல்பிலேயே நற்பண்புகள் கொண்ட அந்த துணை ஆய்வாளரும் சிபியின் நிலை புரிந்து பெரிது படுத்தாமல் விட்டார்.
அதிலிருந்து காவல் நிலையம் சென்று அன்புவை பற்றி விசாரிப்பதை அறவே நிறுத்திவிட்ட சிபி, நம்பகமாக இடங்களில் மட்டும் அவளை பற்றிய தகவல்களை சொல்லி ஏதேனும் தெரிந்தால் தனக்கு சொல்ல சொல்லியிருந்தான்.
இப்படியே அன்பரசி வீட்டை விட்டு சென்று இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. இதுவரை அவளை பற்றி ஒரு தகவலும் கிடைக்காமல் இருக்க, நாளுக்கு நாள் உடல் மெலிந்து, வெட்டப்படாத கேசம், புதர் போல் வளர்ந்துவிட்ட தாடி என உயிர் உடலை விட்டு பிரியவில்லை அதனால் இருக்கிறேன் என்ற நிலையில் தான் வாழ்ந்திருந்தான் சிபி.
அவன் நேசிக்கும் பணிக்கும் செல்லவில்லை. அறையே கதியென்று இருந்தான்.
இதில் இத்தனை நாட்களாக தனக்கு துணையாக இருந்த அன்புவின் வீட்டிலும் இப்போது மாற்று கருத்துகள் எழ தொடங்கியிருந்தது. விநாயகத்துடன் வீட்டிற்கு வந்த கலையை அபர்ணா தான் உபசரித்து அவர்களுக்கு குடிக்க கொடுத்தாள். அதை தொடாத இருவரும் சிபிக்காக காத்திருந்தனர். சிபியும் அபர்ணா அழைத்து சொன்னதை வைத்து மேலிருந்து கீழிறங்கி வந்தான்.
அது ஒரு பின் மாலை நேரம். தெய்வநாயகியும் பானுமதியும் அறையை விட்டு வெளியே வராமல் இருக்க, மற்றவர்கள் அனைவரும் கூடத்தில் தான் குழுமியிருந்தனர்.
சிபி கலைக்கு எதிர் இருக்கையில் வந்தமர்ந்து தரையை வெறித்து கொண்டிருந்தான்.
அப்போது “மாப்பிள்ளை சொல்றேனேனு தப்பா எடுத்துக்காதீங்க. எனக்கு என்னமோ உங்க அம்மா மேல தான் சந்தேகமா இருக்கு. எங்க அப்பா இப்ப தான் சொன்னார். கல்யாணத்துக்கு முன்னாடியே உங்க அம்மா எங்க அப்பாவை கூப்பிட்டு மிரட்டினாங்களாமே. கல்யாணத்துக்கு கூட உங்க அம்மாவும், அண்ணனும் வரல தானே. உங்க அம்மா தான் என் தங்கச்சியை ஏதோ பண்ணிருக்காங்க” கலை தெய்வநாயகியை குற்றம் சட்ட, அவரது அறை கதவு மூடியிருந்ததால் அவருக்கு அது தெரியவில்லை.
கலை பேசியதை கேட்டு முதலில் அசோக் தான் சீறி கொண்டு வந்தான். “எங்க வீட்டுக்கு வந்துட்டு எங்க அம்மாவையே தப்பா பேசுவீங்களா” என்று அவன் எகிற..
அண்ணனை அடக்கிய சிபி மைத்துனனை பார்த்து “நீங்க கூட தான் எங்க கல்யாணத்துக்கு வரல, அதனால நான் உங்க மேல சந்தேகப்படட்டுமா” நிறுத்தி நிதானமாக கேட்டான். அதில் கலையின் முகம் வெளிறி தலை தானாக கவிழ்ந்தது.
“சாரி, உங்கள ஹர்ட் பண்ணனும்னு சொல்லல. அம்மாவுக்கு ராசியை பிடிக்கல தான். இப்பவும் அவமேல பிடித்தமில்லாம தான் இருக்காங்க. அதுக்காக கீழ்த்தரமா நடத்துக்கிற அளவுக்கு எங்க அம்மா கேவலமானவங்க இல்ல. அவங்களுக்கு எதையும் நேரா பேசி தான் பழக்கமே தவிர யாரையும் மறைஞ்சிருந்து அடிக்க மாட்டாங்க” என்றவன்..
“அம்மாவை பத்தி எவ்ளோ தெரியுமோ அதே அளவு ராசியை பத்தியும் தெரியும். அவ எனக்காக தான் எதுக்கு பிரச்சனைனு போயிருப்பா.. என் சந்தோஷத்துக்காக தான் பண்ணிருப்பா. ஆனா, என் சந்தோசமே அவதான்னு ஏன் அவளுக்கு புரியல” என்றுவிட்டு விறுவிறுவென தன்னறைக்கு சென்றவனுக்கு அவளில்லாத துயரம் நாளுக்கு நாள் அவனது வாழ்வை நரகமாக்கி கொண்டிருந்தது.
இதில் நண்பன் ஒருவன் அவனை சந்திக்க வேண்டுமென இரயில் நிலையத்திற்கு வரச்சொல்லி அழைத்திருந்தான். இவனும் முதலில் வரமாட்டேன் என்று மறுத்துவன் நண்பனின் தொடர் வற்புறுத்தலால் வேறு வழியில்லாமல் சென்றான்.
இருவரது பொது நண்பன் இரயில்வே காவலராக இருக்கிறான். அவனது எல்லைக்கு உட்பட்ட இரயில் தண்டவாளத்தில் அன்பரசி வயதையொத்த பெண்ணின் சடலம் ஒன்று இருப்பதாக அவனுக்கு தகவல் வந்துள்ளது.
சிபி அன்பரசியை காணாமல் தேடி கொண்டிருப்பதை அறிந்த இருவரும் சடலத்தை அடையாளம் காணவே அவனை இங்கு வரச் சொல்லியிருந்தனர். அதுவும் அப்பெண்ணின் கையிலிருந்த கைபேசியின் ஐஎம்இஐ எண் அன்பரசியின் கைபேசி எண்ணுடன் முக்கால் பாகத்திற்கு பொருந்தி இருந்தது. என்ன, பாதிக்கும் மேல் சிதைந்து விட்ட கைபேசியில் உறுதியாக எதையும் சொல்ல முடியவில்லை.
வலியோடு தான் சிபியிடம் விசயத்தை சொன்ன அவன் நண்பன் “மச்சான் ஜி.எச் எடுத்துட்டு போறாங்களாம். அதுக்கு முன்னாடி நீ வந்து பாடியை ஐடென்டிஃபை பண்ணிட்டேனா... ஐஎம்இஐ நம்பர் 70% மேட்ச் ஆகறதால தான்டா. ஹயிட், ஸ்கின் டோன், ஏஜும் சரியா இருக்கு.. ஐ ஆம் சாரிடா.. வேற வழியில்ல..” என்று தயங்கி சொன்னான்.
“இல்லடா.. இது அவளா இருக்காது. அவ என்னை லவ் பண்றாடா.. எனக்கு இந்த இடம் எவ்வளவு பிடிக்கும்னு தெரியும். என் ராசி என்னை காயப்படுத்த மாட்டா. ப்ளீஸ், நான் போறேன்” ஓடாத குறையாக அங்கிருந்து நகர முயன்றவனை தடுத்து பிடித்த அவன் நண்பன்..
“ப்ளீஸ் டா.. எங்களுக்கும் கஷ்டமா தான் இருக்கு. ஆக்சிடென்ட்டா கூட இருக்கலாம்.. ப்ளீஸ் வா” கிட்டத்தட்ட வரமாட்டேன் என்று அடம் பிடிக்கும் சிறுபிள்ளையை கைபிடித்து இழுத்து செல்வது போல் தான் சிபியை இழுத்து சென்றான் அவன் நண்பன்.
இப்படியொரு தோற்றத்தில் அவன் இரயில் நிலையத்திற்குள் நுழைந்ததும் இல்லை, கால்கள் நடுங்க தண்டவாளத்தில் இறங்கியதுமில்லை. ஒவ்வொறு அடியையும் மரணவலியுடன் எடுத்து வைத்தான் சிபி.
அங்கே முகம் மூடப்பட்டிருந்த பெண்ணை திறந்து கூட பார்க்கவில்லை, அவளது முழங்கையிலிருந்த டாட்டூவை வைத்தே அது தன்னவள் இல்லை என்று அறிந்தவனுக்கு அப்போதே உயிர் மீண்டும் வர, அதை அவர்களிடம் உறுதியும் செய்தான்.
அதற்கு மேல் அங்கிருக்க முடியாதவனாய் சற்று நகர்ந்து வந்துவிட்டான். ஆனால் அவனது நடுக்கம், சிறிது நேரத்திற்கு முன் அவனிருந்த சூழ்நிலை அவனது மனதில் ஏற்படுத்திய அச்சம் அவனை விட்டு அகலவில்லை.
அது அவள் இல்லை என்று நிம்மதி கொள்வதா, இல்லை அவள் எங்கே என்று வேதனை கொள்வதா?
தண்டவாளத்திற்கு அருகிலே மடிந்தமர்ந்தவன் சுற்றி யார் இருக்கிறார்கள் என்றும் பாராமல் “ராசி.. எங்கடி இருக்க?” என்று ஆற்றாமையாக வானத்தை பார்த்து கத்தினான்.
ஹலோ ப்ரண்ட்ஸ், சிபி பேன்ஸ் எல்லாம் திட்டுறது சத்தமா கேக்குது. வேற வழியில்ல.. தொடர்ந்து கதையை படியுங்கள், அனைத்திற்கும் விடை கிடைக்கும்.. உங்கள் கருத்துக்களை மறக்காம கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
நாளுக்கு நாள் சிபியின் நெஞ்சில் பாரம் கூடிக் கொண்டே போனது. சிலநேரங்களில் படுத்தால் எழுவேனா என்றெல்லாம் தோன்ற தொடங்கியது. இருந்தும் அவனது ராசி எங்கோ இருக்கின்றாள் என்று மனது அடித்து சொன்னது.
அவள் என்றேனும் ஒரு நாள் திரும்பி வரும் வேளையில் இவன் இருக்கவேண்டுமே. அதற்கேனும் அவளை தேடும் பணியை துரிதப்படுத்த எண்ணினான். ஒரு துப்பறிவாளரை ஏற்பாடு செய்தான். அவரிடம் அன்பரசியின் தகவல்களை கொடுத்து விரைவாக தேடித்தர சொன்னான்.
இவன் ஒரு முடிவெத்தால், இவனது அன்னையும் ஒரு முடிவு எடுப்பாரே. அதுபோல் தெய்வநாயகியும் ஓர் முடிவோடு இருந்தார்.
சென்ற முறை போல் அல்லாது இம்முறை மகனது வாழ்வின் கட்டுப்பாட்டை மொத்தமாக தன் கையில் எடுத்தார் தெய்வா. அதற்கு முதலில் அவளை சந்திக்கும் எண்ணத்தோடு அவளுக்கு அழைத்து ஓர் தனியார் விடுதிக்கு வரச் சொன்னார்.
சிறிது நேரம் கழித்து இரண்டு காபி கொண்டுவர சொல்லி வெயிட்டரிடம் சொல்லிவிட்டு அவளுக்காக அவர் சொன்ன விடுதியில் காத்திருந்தார் தெய்வநாயகி.
அப்போது அங்கே வந்தவள் “ஹலோ ஆன்ட்டி, எப்படி இருக்கீங்க” என்று நலன் விசாரித்து கொண்டு அவர் எதிரில் அமர்ந்தாள்.
“வா வெண்பா.. நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க” என்று பதிலுக்கு அவர் கேட்கவும் இருவர் முன்னும் இரு கோப்பையை எடுத்து வந்து வைத்தான் வெயிட்டர்.
வெண்பா காப்பியை எடுத்து பருக, தன் காப்பியை கையில் வைத்து கொண்டே “அப்புறம் வெண்பா, உன்னை தான் மருமகளா கொண்டு வரணும்னு ஆசைப்பட்டேன். அதுக்குள்ள சிபி என்னென்னமோ பண்ணிட்டான்” என்று பழையதை எண்ணி முகம் சுருங்கியவர்.. “பரவாயில்ல.. இப்போ தான் அவ ஓடிட்டாளே” என்றும் கூறினார்.
அதை கேட்ட வெண்பாவின் பார்வையில் இருந்தது அதிர்ச்சியா, ஆச்சர்யமா, ஆனந்தமா என்று பிரித்து பார்க்க முடியவில்லை. தெய்வநாயகியையே பார்த்திருந்தாள்.
“எனக்கு நம்பிக்கையா தெரியும் அவ திரும்ப வரமாட்டா. அதுக்காக என் மகனை தனியா விட்டுட கூடாது வெண்பா. சிபிக்கு கல்யாணம் பண்ணனும்னு முடிவு பண்ணதும் எனக்கு நீ தான் நினைவுக்கு வந்த. கொஞ்ச நாள் அந்த விளங்காதவள நினைச்சி அழுது தீர்த்திடட்டும். அப்புறம், அவனுக்கும் உனக்கும் கல்யாணம் பண்ணி வச்சிடறேன்” என்றவரை கண்டு சத்தமாக சிரித்தாள் வெண்பா.
அவள் சிரிப்பதில் தெய்வநாயகிக்கு ஒரு மாதிரி ஆகிவிட சுற்றி அமர்ந்திருப்பவர்களை சங்கடமாக பார்த்தார்.
“அன்னைக்கு சிபி என்னை அவ்வளவு அசிங்கப்படுத்தினதை பார்த்ததுக்கு அப்புறமும் இப்படி ஒரு விஷயம் பேச உங்களுக்கு தைரியம் தான் ஆன்ட்டி” என்றவளது பேச்சின் வித்தியாசத்தில் தெய்வநாயகி அவளை கூர்ந்து பார்க்க..
“நீங்க ஏன் ஆன்ட்டி அன்புவை ஏத்துக்கல. அவளுக்கு சிபி மூலமா கிடைக்கற லைஃப் செகண்ட் லைஃப்ங்கறதால தான. இப்ப உங்க பையனுக்கும் ஏற்கனவே மேரேஜ் ஆகிடுச்சே..” என்று ஏளனமாக புன்னகைத்தவள்.. “அன்னைக்கு உங்க பையன் என்ன சொன்னார். அதை நான் ஏன் யோசிக்கணும், அவரை கல்யாணம் பண்ணிக்கிற அன்பு தான் யோசிக்கணுமா. இப்போ நான் கேக்கறேன் என்னை கல்யாணம் பண்ணிக்க உங்க பையனுக்கு என்ன தகுதி இருக்கு” அவரை அழுத்தமாக பார்த்து கேட்டாள்.
“வெண்பா..” இருக்கையிலிருந்து எழுந்து அவள் முன் தன் ஆள் காட்டி விரலை நீட்டி நின்றார் தெய்வா.
“டோன்ட் ரைஸ் யுவர் வாய்ஸ் இன் ஃப்ரண்ட் ஆஃப் மீ. ஏதோ பழகின பழக்கத்துக்கு கூப்பிட்டீங்களேன்னு வந்தா உங்க பையனுக்கு செகண்ட் வைஃப்பா என்னை ஆக்க பார்ப்பீங்களா. அண்ட் இ ஆம் டேம் ஸ்யூர், இப்பவும் உங்க பையனுக்கு திமிரும் குறைஞ்சிருக்காது, அவள் மேல இருக்கிற பைத்தியமும் போயிருக்காது. என்கிட்ட வந்து பேசறதை விட்டுட்டு, போய் உங்க பையனோட வைஃப்ப கண்டுபிடிக்கிற வழிய பாருங்க” என்றுவிட்டு அங்கிருந்து வேகமாக கிளம்பி சென்றாள் வெண்பா.
வாழ்வில் முதல் முறை தோற்றதாக உணர்ந்தார் தெய்வா. அவள் செல்வதை பார்த்திருந்தவரின் கண்களில் தானாக கண்ணீர் தேங்கியது. அதை துடைத்துக் கொண்டு தலை நிமிரவும் பிடிக்காது அங்கிருந்து நகர்ந்தார்.
வெண்பாவின் பேச்சு தெய்வநாயகியை உணர செய்திருக்குமா?
ஒரு மாலையில் சிபியை சந்தித்த டிடெக்ட்டிவ் அவனிடம் சில தகவல்களை சொன்னார். அதை கேட்டவனின் முகம் அதிர்வை காட்டியது. அதே அதிர்ச்சியோடு வீட்டிற்கு வந்தான் அவன்.
அவன் வீட்டிற்குள் நுழையும் போது அவனுக்கு முன்னே அவனது தந்தையும், அண்ணனும் வீட்டிலிருந்தனர். அவள் சென்றதிலிருந்து யாரிடமும் ஒன்றும் பேசாது அமைதியாக மாடிப்படி ஏறி அறைக்கு சென்றுவிடுபவன் இன்று தந்தையிடம் வந்தான்.
“அப்பா, உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்” என்று அவன் சொல்ல, அவரும் மகனுக்கு சொல்ல ஓர் செய்தியை வைத்து கொண்டு தான் காத்திருந்தார்.
இருந்தும் மகனுக்கு முதலுரிமை கொடுத்து அமைதியாக இருந்தார். இரண்டாவது காரணம் அவர் எதிர்பார்த்திருந்த ஆள் இன்னும் வரவில்லை.
மகன் என்ன சொல்ல போகிறான் என்று பூபதி அவன் முகத்தையே பார்த்திருக்க, அவனோ “அம்மா..” என்று அறைக்குள் இருந்த தெய்வநாயகியை அழைத்தான்.
தெய்வநாயகியும் வெளியே வர, அவரது அறையில் அமர்ந்து கதை பேசியிருந்த பானுமதியும் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பது போல் உடன் வெளியே வந்தார்.
வெளியே வந்த அன்னையின் கரங்களை பிடித்து கொண்டவன் “இன்னைக்கு டிடெக்ட்டிவ்வ பார்க்க போயிருந்தேன். அவர் ராசி மொபைல் லாஸ்ட்டா சுவிட் ஆஃப் ஆகிறதுக்கு முன்னாடி ஒரு இடத்தை காட்டுதுனு சொன்னார். அது எந்த இடம் தெரியுமாம்மா? நம்ம மாமா வீடு” என்றவன்.. “அன்னைக்கு ராசி உங்கள பார்க்க வந்தாளா ம்மா. இத ஏன் நீங்க இவ்வளவு நாளா என்கிட்ட சொல்லல” என்று தாயிடம் முறையிட்டு கொண்டிருந்தான்.
“என்ன சொல்ற சிபி. அந்த பொண்ணு அண்ணன் வீட்டுக்கு வந்திருந்தாளா. இது எனக்கு தெரியாதே. ஒருவேளை எங்கிட்ட பேசி வீட்டுக்கு வாங்கனு கூப்பிட வந்திருப்பா. அப்புறம் அவ செஞ்ச தப்புக்கு நான் நிச்சயம் மன்னிக்கமாட்டேன்னு புரிஞ்சி வாசலோட திரும்ப போயிருப்பா” என்று அலட்சியமாக பதலளித்தார் தெய்வநாயகி.
“அம்மா…” அன்னையின் பதிலில் கடுப்பான சிபி முயன்று வரவழைக்கப்பட்ட நிதானத்துடன் “ராசியோட மொபைல் அதே நாள்ல ரெண்டு தடவை மாமா வீட்டு லொகேஷன்ல காட்டுது. ரெண்டாவது முறையும் உங்கள பார்க்காம திரும்ப போய்ட்டாளா” கடித்த பற்களுக்கிடையே வார்த்தைகளை வெளியிட்டான்.
“பெத்த புள்ளையே நம்பாம கேள்வி கேக்கற அளவுக்கு பண்ணிட்டால அந்த ஊமை குசும்பி. அது தான அவ ப்ளானும்.. அவ எவ்ளோ கேடியா இருந்தா உனக்கு சந்தேகம் வரணும்னே அண்ணன் வீடு வரைக்கும் வந்து ஃபோனை அணைச்சிருப்பா” என்று மெச்சுவது போல் கை தட்டியவர் எகத்தளமாக சிரித்தவாறு “வெல் ப்ளான்ட்.. ஓட போறதுக்கு முன்னாடி கூட என்னென்ன வேலை பார்த்திருக்கா பார்த்தியா” அன்பரசியின் மீது குற்றங்களை அடுக்கி கொண்டு போனார் தெய்வா.
அதில் பொறுமையிழந்த சிபி “அம்மா..” என்று உரக்க அழைத்தான்.
அப்போது “அத ஏன் சிபி அத்தையை கேக்கற.. ஏன் அத்தை மட்டும் தான் அந்த வீட்டுல இருந்தாங்களா?” என்று கேட்டு கொண்டே உள்ளே நுழைந்தான் சஞ்சீவ், தெய்வநாயகியின் அண்ணன் லோகநாதனின் மகன்.
வீட்டிலிருந்த அனைவரும் அவனது குரலுக்கு திரும்பி பார்க்க, நிமிர்வாக உள்ளே நடந்து வந்தவன் “எங்க அத்தையை பார்த்தா ஒரு அப்பாவி பொண்ணோட வாழ்க்கையை கெடுக்கறவங்க மாதிரியா இருக்கு. அவங்களுக்கு என்ன மோட்டோ இருக்கு உன் வைஃப்ப அப்படி பண்ண..” என்றவனை பற்களை கடித்து கொண்டு முறைத்தான் சிபி.
அவன் மட்டும் என்ன அன்னையின் மீது பழியா சுமத்தினான். ஒருவேளை அவரை அழைக்க மாமா வீட்டிற்கு சென்ற மனைவி, அன்னை மறுத்ததால் எதற்கு பிரச்சனை என்று இப்படியொரு முடிவை எடுத்துவிட்டாளோ என்று குழப்பத்தில் தானே கேட்டான்.
ஏற்கனவே தனித்து வாதாடும் திறன் கொண்டவருக்கு இப்போது வழக்கறிஞரான அண்ணன் மகனும் அவர் பக்கம் நிற்க, நிமிர்வாக நின்று அங்கிருப்பவர்களை சந்தித்தார் தெய்வா.
நேராக சென்று சிபியின் தோளில் கைபோட்ட சஞ்சீவ் “போலீஸூக்கு ஒரு இன்ஸ்டிங்க்ட் இருக்கிற மாதிரி அட்வகேட்டுக்கும் இவன் க்ரைம் பண்ணிருப்பானா மாட்டானானு ஒரு இன்ஸ்டிங்க்ட் சொல்லும். எனக்கென்னவோ அத்தை இத பண்ணல. அத்தைக்காக அவங்க பாசமான பெரியம்மா தான் பண்ணிருக்காங்கனு தோணுது” என்றவன் பானுமதியின் முன்பு சென்று நிற்க, அவருக்கு கால்களெல்லாம் கிடுகிடுவென்று நடுங்க தொடங்கியது.
“அன்னைக்கு அன்பரசி வந்தது உண்மை. அத்தை சொன்னது போல வாசலோட எல்லாம் திரும்பி போகல. உள்ளே வந்திருக்காங்க. அத்தைய கேட்டிருக்காங்க. ஆனா அத்தை மேல இருக்கிற பாசத்துலயும், அன்பரசி மேல இருக்கிற கோவத்துலயும் அவங்கள அத்தையை பார்க்கவிடாம திட்டி அனுப்பிருக்காங்க இந்த பாசக்கார பானு பாட்டி..” என்று வாஞ்சையாக பார்ப்பது போல் பானுமதியை பார்த்தான்.
அவருக்கோ பேஸ்மென்ட் வீக்காக ஆடி கொண்டிருந்தது.. ‘கட்டையில போறவன். எதிர்தரப்பு வக்கீல் மாதிரி எல்லா பழியையும் தூக்கி என்மேல போடுறானே’ என்று சஞ்சீவ்வை கெட்ட வார்த்தையெல்லாம் சொல்லி மனதிற்குள் திட்டி கொண்டிருந்தார்.
அவரது முழு உடலையும் ஆடவைக்கும் படி அடுத்ததை கூறினான் சஞ்சீவ்.
“ஐபிசி 498A.. ஒரு பெண்ணை அவளுடைய கணவன் அல்லது கணவரோட உறவினர்கள் கொடுமைப்படுத்தினாலோ இல்லை பொறுக்கமுடியாத சங்கடத்தை உண்டு பண்ணாலோ, அவங்களுக்கு மூணு வருஷம் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கலாம்..” என்றதும் பானுமதிக்கு முகமெல்லாம் வியர்த்து கொட்டியது..
“இன்னும் மிஸஸ். அன்பரசி என்ன ஆனாங்கனு யாருக்கும் தெரியாது. ஒருவேளை பாட்டி பேசினதுல.. சாரி டு சே திஸ், அவங்க ஏதாவது தவறான முடிவுக்கு தள்ளப்பட்டிருந்தா.. ஐபிசி 304லின் படி பத்து வருஷ சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.. அண்ட் இது ரெண்டும் நான்-பெயிலபல் பாட்டி” என்று வேறு உற்சாமாக அவன் சொல்ல..
“அச்சச்சோ தெய்வா, என்னமா இது.. பத்து வருஷம், மூணு வருஷம்னு உன் மருமகன் சொல்லிட்டு இருக்கான். நீயும் வாய் மூடிட்டு இருக்க. இதெல்லாம் நீ தானே பண்ண.. அன்னைக்கு வீட்டுக்கு வந்த அன்பரசியை வாயும் வயிருமா இருக்கானு கூட பார்க்காம நீ தானே ஊரே விட்டே துரத்தி விட்ட.. ஒருவேளை நீ பேசினதுல அவ ஒரேடியா போயிட்டிருந்தா நாம ஜெயிலுக்கு போகணுமா” என்று படபடத்தார்.
அதைக்கேட்ட அடுத்த நொடி வீட்டினர் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர்.
அவள் கருவுற்றிருக்கிறாள் என்று தெரிந்து மகிழ்ச்சி கொள்வதா, இல்லை அதை தெரிந்து கொள்ள கூட தகுதியில்லாதவன் என்று சொல்லாமலே விட்டு விலகி சென்றுவிட்டதை எண்ணி வருத்தம் கொள்வதா என்று புரியாத ஓர் இறுகிய மனநிலையில் நின்றிருந்தான் சிபி.
அவனுக்கே அவனது உணர்வுகளெல்லாம் வடிந்துக் கொண்டு வருகிறதோ என்ற ஐயம் எழுந்தது.
சிபியின் அருகில் வந்த சஞ்சீவ் “சாரி சிபி. நீ என்ன கேட்டாலும் அத்தை வாயில இருந்து ஒரு வார்த்தையும் வராது. அம்மாவும், என் வைஃப்பும் பையன் ஸ்கூல்ல ஆன்வல் டேனு போய்ட்டாங்க. அதான் பாட்டி மூலமா வெளியே கொண்டு வர இப்படி ஒரு ஆக்யூமெண்ட் நடத்தினேன்” என்று அவன் தோளில் தட்டி கொடுத்தவன்..
“யு ஹேவ் காட் எ லாட் டு சி மேன்” என்று தன் கோட்டின் உட்புறமிருந்து ஒரு பத்திரத்தை எடுத்து நீட்டி “இது அன்பரசிகிட்ட அத்தை வாங்கின சைன்.. இதுக்கு எங்க அப்பாவும் உடந்தை. இன்னைக்கு அவருடைய லாக்கர்ல இந்த டாக்குமெண்டை பார்த்துட்டு தான் மாமா கிட்ட பேசினேன்..” என்று அவன் கையில் கொடுத்தான்.
கைகள் நடுங்க அதை வாங்கிய சிபி, பத்திரத்தில் இருந்ததை படிக்கலானான்..
தான் சிபியை விட்டு விரும்பியே பிரிந்து செல்வதாகவும், இனி தானோ, தன்னுடைய பிள்ளையோ எக்காரணத்தை கொண்டும் சிபியின் வாழ்வில் இடையூறாக வரமாட்டோம் என்றும், இதை விடுதலை பத்திரமாகவும் பயன்படுத்தி சிபி வேறொரு வாழ்க்கை அமைத்து கொள்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் அச்சடிக்கப்பட்டிருந்தது. இறுதியாக அன்பரசியும் அதில் கையொப்பம் இட்டிருந்தாள்.
அதை படித்தவனின் கண்கள் கலங்கி சொட்டு சொட்டாக அவனது விழிநீர் அவளது கையொப்பத்தின் மீது விழுந்தது. தலை நிமிரவும் பிடிக்காது பத்திரத்தையே வெறித்திருந்தான் சிபி.
வீட்டிலிருந்த மற்றவர்களும் உறைந்த கதியில் ஸ்தம்பித்து நிற்க, மீண்டும் சஞ்ஜீவே “ஆல்ரைட்.. என்ன பாட்டி இப்பவாவது அன்னைக்கு என்ன நடந்துச்சுனு சொல்றீங்களா..” என்று புருவம் உயர்த்தி கேட்க தெய்வநாயகியை திரும்பி பார்த்தவர், அன்று நிகழ்ந்தவைகளை சொல்ல ஆரம்பித்தார்.
முந்தைய நாள் இரவு ‘இதை என்னிடம் விட்டுவிடு’ என்று கணவன் சொன்னதையும் கேட்காது மாமியாரை பார்க்க அவரது அண்ணன் வீட்டிற்கு சென்றிருந்தாள் அன்பரசி.
வாசலில் நின்ற காவலாளியிடம் அவரின் மருமகள் என்று சொல்லவும் அவரும் மரியாதையுடன் வீட்டிற்குள் விட்டார்.
வீட்டில் தெய்வநாயகி, பானுமதியை தவிர வேறு யாருமில்லை. லோகநாதனும் அவரது மகனும் நீதிமன்றத்திற்கு சென்றிருக்க, இருவரது மனைவிமார்களுமே சஞ்சீவின் பிள்ளையின் ஆண்டு விழாவிற்கு பள்ளிக்கு சென்றிருந்தனர்.
அன்பரசியை அங்கே பார்த்த தெய்வா “ஏய்.. உன்னை யார் வீட்டுக்குள்ள விட்டா” என்று ஆங்காரமாய் கேட்டவர் “செக்யூரிட்டி.. செக்யூரிட்டி..” வாசல் வரை சென்று கத்த, அவரும் பதறியடித்து ஓடி வந்தார்.
“யாரை கேட்டு இவளை உள்ள விட்ட” அவன் கன்னத்தில் அறைந்த பின்னே கேட்டார்.
அவரும் கன்னத்தை தாங்கி பிடித்துக் கொண்டே “இல்லம்மா உங்க மருமகனு சொன்னாங்க.” என்று தயங்கி சொன்னார்.
“மருமகளா..?” என்று அன்பரசியை இகழ்வாக பார்த்தவர் “ரோட்டுல போற பிச்சைக்காரி வந்து என் மருமகனு சொன்னா உள்ள விட்டிடுவியா” அகம்பாவம் என்னும் பேய் பிடித்து ஆடியவராய் ஆணவத்தில் கேட்டார்.
காவலாளி பயந்து நடுங்கி நிற்க, அன்பரசிக்கோ ‘உனக்கு அங்கே மரியாதை கிடைக்காது’ என்று கணவன் கூறியது நினைவு வந்து முகம் கருத்தது.
இருந்தும் காரியம் பெரியதாயிற்றே. மானத்தை பார்த்தால் அவனது அன்னையை வீட்டிற்கு திரும்ப கொண்டு வந்து கணவனுக்கு நிம்மதியை தர முடியாதே.
அவர் முன் மண்டியிட்டு கைகூப்பி அமர்ந்தவள் “ப்ளீஸ் அத்தை, நான் போயிடுறேன். அதுக்கு முன்னாடி நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க ப்ளீஸ்” என்று மன்றாடினாள்.
அதை பானுமதி திருப்தியாக பார்த்திருக்க, அவளது செயலில் எரிச்சலுற்ற தெய்வநாயகி கண்களாலே காவலாளியை அனுப்பிவிட்டு சொல் என்று அன்பரசியையும் பார்த்தார்.
“நீங்க வீட்டுக்கு வந்திடுங்க அத்தை. உங்க மகனை நான் அப்படி பார்த்ததே இல்ல. ரொம்ப டவுன் ஆகிட்டாரு” அன்பரசி கணவனது நிலையை வேதனையோடு எடுத்து சொன்னாள்.
“என் மகனா..? அதான் அவனை மொத்தமா உன் பக்கம் திருப்பிட்டீயே. இப்போ எதுக்கு என் மகன்னு நடிக்கிற. என் மகனா இருந்திருந்தா என்னை எதிர்த்து உன்னை கல்யாணம் பண்ணிருக்க மாட்டான். நீ தான் முக்கியம்னு ஒவ்வொரு முறையும் எங்கிட்ட சண்டை போட்டிருக்க மாட்டான். குடும்பத்தை பிரிச்சி அவனை தனியா கூட்டிட்டு போனவ தானடி நீ. இப்ப வந்து ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி பேசற” உடல் முழுவதும் ஓடுகின்ற இரத்தம் கொதிக்க வன்மத்தை கக்கினார் தெய்வா.
“ப்ளீஸ் அத்தை, அப்படி சொல்லாதீங்க. என்னை விட உங்கமேல தான் சிபிக்கு பாசம் அதிகம். எப்பவும் துறுதுறுணு சிரிச்சிட்டு எல்லார்கிட்டயும் அன்பா பழகுற சிபி இப்போ இல்ல. எப்பவும் எதையோ வெறிச்சி பார்த்துட்டு இருக்காங்க. நீங்க வீட்டுக்கு வாங்க அத்தை. வேணும்னா நான் ரூமை விட்டு நீங்க இருக்கற பக்கம் கூட வரமா இருந்துக்கிறேன். உங்களுக்கு எந்த விதத்துலயும் தொந்தரவா இருக்கமாட்டேன்” என்று கலங்கி நின்றவளை பார்த்து ஆங்காரமாய் சிரித்தார் தெய்வநாயகி.
அன்பரசி புரியாமல் மாமியாரை பார்க்க “என்னடி நினைச்சிட்டு இருக்க. நீ பிச்சை போட்டு நான் அந்த வீட்டுக்குள்ள வரணுமா. அது தெய்வா வீடு. அந்த வீட்டோட சிறு அசைவும் இந்த தெய்வவோட கண்ணசைவுல தான் நடக்கும். இப்போ என் வீட்டுக்காரர் என்னை வீட்டை விட்டு போக சொல்றார். என் பெரிய பையன் போற அம்மாவை தடுக்கல. விட்டது தொல்லைனு விட்டுட்டு ஒருவாரம், பத்து நாள் கழிச்சி வந்து கூப்பிடுறாங்க. நீ அவனா இல்லனு சொன்ன என் சின்ன பையன் இதுவரைக்கும் என்னை வந்து பார்க்கல. வீட்டுக்கு வாங்கம்மானும் கூப்பிடல. நீ சின்னவளாகிட்டா, அந்த மஹாராணி பெரியவளாகிடுவோம்னு அவளும் கண்டுக்காம இருந்துட்டா. இதுல நீ வந்து வானு கூப்பிட்டா நான் வந்திடணுமா. முடியாது.. நீ என்னைக்கு அந்த வீட்டை விட்டு போறியோ, அன்னைக்கு தான் இந்த தெய்வா அந்த வீட்டுக்குள்ள காலெடுத்து வைப்பா” மனதில் தேக்கி வைத்திருந்த கசடுகளை தீ கங்குகளாய் அள்ளி கொட்டினார்.
இதற்கு மேல் என்ன சொல்லி இவரை வீட்டிற்கு அழைப்பது என்று புரியாத அன்பு அவர் கால்களை பற்றி “ப்ளீஸ் அத்தை.. எங்களுக்காக வேண்டாம். உங்க பேர குழந்தைக்காக வாங்க. வரு குட்டி உங்களை தேடறான். உங்களை தேட இன்னொரு உயிரும் உருவாகிட்டு இருக்கு” என்றவள் எழுந்து தன் மணிவயிற்றை பற்றி..
“சிபியோட குழந்தை.. இந்த குழந்தைக்காக வாங்க அத்தை, ப்ளீஸ். இதோட முழு சந்தோஷத்தை கூட அவங்க அப்பா நீங்க பக்கத்துல இருந்தா தான் உணருவாங்க” என்று வயிற்றின் பிடியை அழுத்தி கண்ணீர் விட்டாள்.
குடும்பம் தழைத்திருப்பதை எண்ணி மகிழ வேண்டியவரோ “ச்சிச்சீ.. சிபி குழந்தையா? என் பையனோட உயிர் உன் வயித்துல வளர்றதை நினைச்சா எனக்கு அருவருப்பா இருக்கு” என்று முகம் சுளித்தார்.
அன்பரசி அதிர்ச்சியாக அவரை பார்க்க “உன்னை மட்டுமில்ல, உன் வயித்துல வளருற குழந்தையையும் என்னால எங்களுதா ஏத்துக்க முடியாது. ஒண்ணே ஒண்ணு சொல்லு. முதல் புருஷன் கூட எந்த ஒரு விருப்பமும் இல்லாம தான் வாழ்ந்தேன்னு உன் வயித்துல வளர்ற குழந்தை மேல சத்தியம் பண்ணு. நீ என் மகனுக்கு மட்டும் தான் உண்மையா இருக்கேனு நம்பி இதோ இப்பவே உன் கூட கிளம்பி வந்திடுறேன்” ஓர் பெண்ணாக இருந்து கொண்டு இன்னொரு பெண்ணை வார்த்தைகளால் கலங்கப்படுத்தி சேற்றை வாரி இரைத்தார்.
அவரின் வார்த்தைகளில் அன்பரசிக்கு உடலெல்லாம் கூசியது. முதல் வாழ்க்கையில் கணவனென்று நம்பி கொடுத்த பெண்மையை கலங்க பொருளாக்கி ஆசைநாயகி என்ற பட்டம் கொடுத்தான். இனி இது தான் நிரந்திரம் என்று சிபியுடன் வாழ ஆரம்பித்த காதல் வாழ்க்கையில் ‘நீ என் மகனுக்கு உண்மையாக தான் இருந்தாயா?’ என்று அக்னி பிரவேசம் செய்ய சொல்கிறார்கள்.
அதுவும் தீயில் இறங்க சொல்லி இருந்தாலும் இறங்கி தன் பெண்மையை நிரூபித்திருப்பாள். கேட்பது என்னவோ முகம் காணாத பிள்ளையின் மீது சத்தியம் அல்லவா. பூமி இரண்டாக பிளந்து இப்போதே தன்னை உள்ளிழுத்து கொள்ள கூடாதா என்று துடித்தாள்.
தன் கண்ணீரை இருகைகளாலும் துடைத்தவள் “போயிடுறேன் அத்தை. சிபியை விட்டு போயிடுறேன். இனி அவர் வாழ்க்கையில நான் என்னைக்குமே தொந்தரவா இருக்கமாட்டேன்” உணர்வுகள் வடிந்த குரலில் சொன்னாள்.
தான் வென்றுவிட்டதில் ஆனந்த களிப்போடு “ஹ்ம்ம். இனி நீ என் பையன் கண்ணுல கூட படக்கூடாது. எங்கயாவது கண்காணாத இடத்துக்கு உன் குடும்பத்தை கூட்டிட்டு போயிடு. சாயந்திரம் போல வா. ‘என் மகனுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. அவன் வேற கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் உனக்கு எந்த ஆட்சேபமும் இல்லைனு’ பத்திரத்தைல சைன் போட்டு கொடுத்திட்டு எங்க யார் கண்ணுலயும் படாத இடத்துக்கு போய்டணும்..” என்றார்.
அனைத்திற்கும் சரியென்று தலையாட்டியவள் அங்கிருந்து குனிந்த தலையாகவே நகர “ஹேய் இரு.. வயித்துல இருக்கறத பெத்து தொலைச்சு என் பையனுக்கு இடைஞ்சல் கொடுக்கலாம்னு நினைக்காத. அத கலைச்சிட்டு நீ போற இடத்துல வேற ஆளை பார்த்துக்கிட்டாலும் சரி..” என்றவரின் கூற்றில் அவளது உடலும் மனமும் கூசி போனது.
தெய்வநாயகி சொன்னது போல் வீட்டிற்கு சென்ற அன்பரசி அன்னை வீட்டிற்கு செல்வதாக அனைவரிடமும் சொன்னாள். சிபிக்கும் அழைத்து சொன்னாள். கொஞ்சம் துணிமணிகளை மட்டும் எடுத்து கொண்டவள் நிழற்படத்திலிருந்த சிபிக்கு அன்பு முத்தம் கொடுத்துவிட்டு அவ்வீட்டை விட்டு கிளம்பினாள்.
அதற்குள் நீதிமன்றத்தில் இருந்த தன் அண்ணனுக்கு அழைத்து பத்திரம் ஒன்றை தயார் செய்ய சொன்னார் தெய்வா. அவர் அப்போது ஓர் வழக்கு விசாரணையில் இருந்த போதும் தன் ஜூனியரை வைத்து இரகசியமாக பத்திரம் ஏற்பாடு செய்து, அதை அவன் மூலமே தெய்வாவிடமும் கொடுக்க செய்தார்.
என்ன தான் குழந்தையை கலைத்துவிடு என்று சொல்லி இருந்தாலும், அதையும் பத்திரத்தில் இணைக்க சொல்லியிருந்தார். தன் பிள்ளை வாழ்க்கைக்கு அவன் பிள்ளையாலும் இடைஞ்சல் வரக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார்.
மீண்டும் தெய்வா இருக்குமிடம் சென்றவள் அவர் காட்டிய இடத்தில் கையொப்பமிட்டு, அந்த வீட்டு வாசலிலேயே தன் கைப்பேசியையும் அணைத்துவிட்டு, எங்கு செல்கிறோம் என்றும் தெரியாது அனைத்தையும் இழந்தவளாய் அங்கிருந்து புறப்பட்டாள் அவனின் ராசி.
இருந்தும் மனம் வரவில்லை. அலுவலகம் சென்று விடுப்பு சம்பிரதாயங்களை முடித்தவள், எப்படி இருந்தாலும் இரயில் நிலையத்திற்கு தானே வருவான் என்று அங்கு சென்று கணவனை ஆசை தீர மனதில் நிரப்பிக் கொண்டு கிடைத்த இரயிலுக்கு பயணசீட்டு வாங்கி அதில் ஏறினாள்.
அன்பரசியும் அன்றைய நினைவுகளில் தான் இருந்தாளோ, கண்ணீரை துடைத்து கொண்டு அடுத்த வகுப்புக்கான மாணவர்களுக்கு வாய்பாட்டு சொல்லித்தர ஆரம்பித்தாள்.
இங்கே பானுமதி சொல்லிய அனைத்தையும் கேட்ட ஒவ்வொருவரின் மனதிலும் கோபத்தீ கனன்றது.
முதலில் பூபதி தான் மனைவிக்கு முன்னே வந்தவர் அவர் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
இதை சற்றும் எதிர்பாராத தெய்வா திகைத்து கணவனை ஏறிட “இந்த வீட்டை நம்பி வாழ வந்த பொண்ணுக்கு நீ இதை தான் செய்வியா தெய்வா?” அவரை அனலாக முறைத்தவர் “உன்னை நினைச்சா அசிங்கமா இருக்கு. இதுவரைக்கும் பசங்களுக்கு கூட நம்மளுது காதல் திருமணம்னு தெரியாது. ஒண்ணா படிச்ச எனக்கு உன்னோட ஒவ்வொரு வலியும் தெரியும் அதான் நீ செய்யற ஒவ்வொன்னுக்கும் அமைதியா உன் பின்னாடி நின்னேன். ஆனா, ஒருநாளும் என் தெய்வா தப்பா எதுவும் செய்யமாட்டாங்கிற நம்பிக்கை இருந்தது. இப்ப எல்லாத்தையும் உடைச்சிட்ட. மொத்தமா உடைச்சிட்ட.. ச்சீ.. உன் முகத்தை பார்க்கவே பிடிக்கல..” என்று முகம் சுளித்தவர் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார்.
அடுத்து அன்னை முன்பு வந்த அசோக் “ஏன் இப்படி பண்ணீங்க. அன்புவுடைய அண்ணன் அன்னைக்கே சொன்னார் நீங்க தான் இதுக்கு காரணமா இருப்பீங்கனு. பொண்டாட்டியை தொலைச்சிட்டு நின்னப்போ கூட என் தம்பி உங்கள நம்பினான். அவனுக்கு நீங்க என்ன பண்ணி இருக்கீங்க.. உங்கள அம்மானு சொல்லவே அசிங்கமா இருக்கு” என்று இகழ்வாக அன்னையை பார்த்தான்.
கணவனது அடியை விட மகனது பார்வை அவருக்கு மரண வலியை கொடுக்க, தானென்ற அகந்தை கரைந்து கண்ணீராய் நிற்காமல் வழிந்தது.
“நீங்க அந்த பொண்ண பக்கத்துல வச்சி பார்த்தா தானே அவளோட நல்ல குணம் புரியும். ரெண்டுபேரும் அவ்ளோ அந்நியோன்யமா, ஆதர்ஷ தம்பதிகளா வாழ்ந்தாங்க. ஒரு சண்டை இருந்ததில்ல, சச்சரவு இருந்ததில்ல. என் கண்ணு தான் பட்டுடுச்சு போல” வேதனையாக சொன்னவன்..
“இல்ல, தெரியாம தான் கேக்கறேன்.. ஒரு பொண்ணு ரெண்டாவது வாழ்க்கை அமைச்சிக்கிட்டா தான் என்ன. அது அவ்ளோ பெரிய குத்தமா. அதுவும் நம்ப வீட்டு குழந்தையை பழிச்சிருக்கீங்க. அந்த குழந்தை என்ன பண்ணுச்சு. என் தம்பியை அவன் குழந்தையை பார்க்க விடாம பண்ணிட்டீங்கல, இனி நீங்க செத்தா கூட நான் உங்களுக்கு கொல்லி போடமாட்டேன்” என்று ஆவேசமாக சொல்லிவிட்டு அங்கு நாதியற்று நின்றிருந்த தம்பியை அணைத்து கொண்டான்.
சஞ்சீவும் சிபியின் தோளில் ஆறுதலாக கை வைத்தான். தன் தந்தையும் இதில் கூட்டு என்பதில் அவனுக்கு அவமானமாக இருந்தது. ஒரு பெண்ணை பெற்றவரால் எப்படி இந்தளவிற்கு செய்ய முடிந்தது என்று கண்கள் கலங்கி விட அதை யாருக்கும் தெரியாமல் துடைத்தான்.
அபர்ணாவும் மாமியாரின் மீது வெறுப்பாக தான் நின்றிருந்தாள். அவரை பார்க்கவே பிடிக்காமல் தலையை தழைத்துக் கொண்டாள்.
பேச வேண்டியவனோ எதுவும் பேசாது அண்ணனிடமிருந்து விலகியவன் அமைதியாக மாடிபடி ஏறி தன்னறைக்கு சென்று கதவடைத்துக் கொண்டான்.
உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்
அத்தியாயம் - 23
காதல் கணவரது அறை தெய்வநாயகியை விழிக்க வைத்திருந்தது. வாய் திறவாத மூத்த மகனது வார்த்தைகள் அவரை அசைத்திருந்தது. வார்த்தைக்கு வார்த்தை பேசும் இளையவனின் மௌனம் அவரை முழுவதுமாக மாற்றியிருந்தது.
அதற்கு வலு கூட்டுவதாக அறைக்கு வந்த பூபதி அழுதுக் கொண்டிருந்த மனைவியை பொருட்படுத்தாது “நியாயமா நீ செஞ்ச தப்புக்கு உன்னை வீட்டை விட்டு தான் அனுப்பிருக்கணும். ஆனா செய்யமாட்டேன். அன்னைக்கும் சரியா நடக்க முடியலன்னா தான் போக சொன்னேன். அது உன்னை இவ்வளவு மிருகமாக்கும்னு தெரியாம போச்சு. சாரி தெய்வா, இனியும் உன்னோட ஒரே ரூம்ல இருக்க முடியாது. நான் பக்கத்து ரூம்ல தங்கிக்கிறேன்” என்றுவிட்டு தன் உடமைகளை எடுத்து கொண்டு பக்கத்துக்கு அறைக்கு சென்றுவிட்டார்.
தெய்வநாயகிக்கு தன் தவறுகள் புரிய தொடங்கியது. சிறுவயதில் பாட்டி விதைத்த நஞ்சு விதை இன்று அடி ஆழத்திற்கு வேரூன்றிய விஷ விருக்ஷமாக வளர்ந்திருப்பதை உணர்ந்தார். அது மகனது வாழ்வை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டதை எண்ணி கலங்கினார்.
அனைத்தும் கண் கெட்ட பின்னான சூரிய நமஸ்காரம் ஆகி போனது. என்ன செய்து அன்பரசிக்கும் அவள் வயிற்றில் வளரும் பிள்ளைக்கும் செய்த பாவத்தை கழிப்பார். இப்போது அவர்களை எங்கனம் தேடி கண்டுபிடிப்பார். இரவெல்லாம் கண்ணீரில் கரைந்தார் தெய்வா.
அடுத்தநாள் காலை வற்புறுத்தி தம்பியின் அறைக்கு உணவோடு வந்தான் அசோக். சிபியின் சிவந்த கண்களே இரவெல்லாம் உறங்காமல் விழித்திருக்கிறான் என்பதை உணர்த்தியது.
புன்னகை முகமாக தம்பியின் தலையை கோதி விட்டவன் “போய் ப்ரஷ் பண்ணிட்டு வா சாப்பிடலாம்” என்றான்.
சிபி வேண்டாம் என்பதாய் தலையசைத்தவன் “வயித்துல குழந்தையை வச்சிக்கிட்டு எங்கடா போயிருப்பா. இந்த மாதிரி நேரத்துல ஒரு துணை கண்டிப்பா தேவை தான. என்ன கஷ்டப்படறாளோ தெரியலயே” மனைவி, மகவை எண்ணி பரிதவித்தான்.
அவனுக்கு ஓர் நம்பிக்கை, குழந்தையோடு இருப்பவள் அதை கலைத்திருக்கவும் மாட்டாள், தன் உயிரையும் மாய்த்திருக்க மாட்டாள் என்று. அதே நம்பிக்கை தான் இரவெல்லாம் தூங்கவிடாமல் தன்னவர்களை எண்ணி துடிக்க செய்தது.
கலங்கி தவித்தவனின் கண்ணீரை துடைத்த அசோக் “அன்பரசி திரும்ப வரப்போ எழுந்து நின்னு அவளை வரவேற்க உடம்புல தெம்பிருக்கணும்ல. அன்பு மட்டுமா, ஒரு குட்டியும் இந்த வீட்டுக்கு வர போகுது. பொண்டாட்டி, பிள்ளைக்காகவாவது சாப்பிடுடா” என்று அவன் வாயருகே இட்லியை கொண்டு போக, அண்ணனை அணைத்து கொண்டவன்..
“ஏன்டா இப்படி பண்ணா. நான் வேண்டாம்னு எப்படிடா சைன் போட்டு கொடுப்பா. கன்சீவா இருக்கறத கூட சொல்லல அவ” என்று வேதனையில் கலங்கினான்.
தம்பிக்கு தெரியாமல் தானும் கண்ணீரை துடைத்தவன், ஆறுதலாக அவன் முதுகை தடவி கொடுத்து “எல்லாம் சரியாகிடும். சாப்பிட்டிட்டு போய் டிடெக்ட்டிவை பார்த்து பேசிட்டு வரலாம்” என்று சமாதானம் கூறி சாப்பிடவும் வைத்தான்.
நேற்றிரவில் இருந்து சாப்பிடாதது பானுமதிக்கு பசி வயிற்றை கிள்ளியது. இதற்கு மேலும் தாங்காது என்று வெளியே வந்தவர் அங்கே கூடத்தில் அமர்ந்திருந்த பூபதியை கண்டு செல்வதா, வேண்டாமா என்று தயங்கி மீண்டும் அறைக்குள் செல்ல போனார்.
அப்போது “நில்லுங்க அத்தை. போய் சாப்பிடுங்க” என்று அவரது மனமறிந்து சொன்னார் பூபதி.
அவரும் மகிழ்ச்சியாக மருமகனை கடந்து செல்ல, “சாப்பிட்டதும் டிரைவருக்கு சொல்றேன். நீங்க ஊருக்கு கிளம்பிடுங்க அத்தை” என்று பானுமதியின் சொகுசு வாழ்விற்கு நிறைவு விழா நடத்த முடிவு செய்தார்.
பானுமதியோ அதிர்ந்து மருமகனையே பார்த்திருந்தார். தெய்வநாயகி கூட திருந்திவிட்டார். ஆனால் இவருக்கு திருந்தும் எண்ணமில்லை. அதேநேரம் இந்த வீட்டையும், இங்கு கிடைக்கும் ராஜ போக வாழ்வையும் இழக்க மனமில்லாமல் கலங்கி நின்றிருந்தார்.
“பாட்டிய ஏன்ப்பா போக சொல்றீங்க” என்ற குரல் வந்த திசை நோக்கி இருவரும் திரும்ப, சிபியும் அசோக்கும் நின்றிருந்தனர்.
பூபதி மகனை ஆரத்தழுவி அவனது நலனை விசாரித்தார். அவனும் தந்தைக்கு தலையசைப்பை கொடுத்தவன் “பாட்டிய ஏன்ப்பா போக சொல்றீங்க. அவங்க செஞ்ச தப்புக்கு பாட்டி என்ன பண்ணுவாங்க. எங்களுக்கு ரெண்டு பக்க பாட்டியும் இல்ல. அப்ப தான் அவங்கள பார்த்துக்க பாட்டி இங்க வந்தாங்க. அன்னையில இருந்து நான் அவங்கள நம்ப சொந்த பாட்டியா தான் பார்க்கிறேன். பாட்டி இங்கயே இருக்கட்டுமே ப்பா” என்றான்.
அசோக்கும் “சிபி சொல்றது கரெக்ட் தான்ப்பா. பாட்டி பாவம், இந்த வயசான காலத்துல ஒரு மருத்துவ உதவி தேவைப்பட்டாலும் அலையவா முடியும். இங்கயே இருக்கட்டுமே” என்று தம்பியின் கூற்றை ஆமோதிப்பதாய் சொன்னான்.
அவர்களது உரிமை உணர்வு பானுமதியின் கண்களில் கண்ணீரை நிறைத்துவிட்டது. இதுவரை அவர் அவர்களை தங்க முட்டையிடும் வாத்தாக தான் பார்த்திருக்கின்றார். அதனாலே, தன் பேத்திக்கு ஒருவரையேனும் மனம் முடிக்க எண்ணினார்.
ஊரிலிருக்கும் அவரது மகன் வயிற்று பேரன் கூட ‘ஹேய் கிழவி’ என்று தான் இவரை அழைப்பான். இவர்கள் இருவரோ தன்னுடைய பாட்டியாகவே பார்த்ததில் மனம் நெகிழ்ந்து போனார். துன்பம் வரும் போது தான் உறவினர்களில் அருமை புரிகிறது.
சிபியை அசோக் கவனித்துக் கொள்ள, தெய்வநாயகியை சிரமப்பட்டு சாப்பிட வைத்தாள் அபர்ணா. அவளுக்கும் அவர் மீது கோபமிருந்தாலும் வீட்டிலிருக்கும் ஒருவரும் அவருடன் பேசாத போது மிகவும் ஒடுங்கி காணப்பட்ட மாமியாரை பார்க்கவே வேதனையாக இருந்தது.
அபர்ணாவிற்கு கம்பீரமாக பார்த்து பழக்கப்பட்ட அவளது மாமியாரை இப்படி பார்க்க முடியவில்லை. அதுவும் அசோக் போன்ற ஒரு மகன் அன்னையை எதிர்த்துப் பேசுவதே பெரிது. இதில் அவரை அடியோடு தலைமூழ்கிவிட்டது போல் அல்லவா பேசிவிட்டான். அதோடு கணவன் சொன்ன இறுதி வார்த்தைகள் அவரை எந்தளவிற்கு பாதித்திருக்கும் என்பதை ஒரு தாயாய் அவளால் புரிந்த கொள்ள முடிந்தது.
அவளாவது மாமியாருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று எண்ணினாள்.
மாலை போல் மாடி படியேறி சிறிய மகனது அறைக்கு தயங்கி சென்றார் தெய்வநாயகி. அப்போதே அசோக்கும் சிபியும் துப்பறிவாளரிடம் பேசிவிட்டு வீடு திரும்பி இருந்தனர். தந்தையிடம் அவர்கள் அது பற்றிய தகவல்களை சொல்லியிருந்ததை அறையிலிருந்து கேட்டார் தெய்வா. அதிலும் பெரிய மகனின் குரலே அதிகம் ஒலித்தது.
எப்படியாவது மகனிடம் பேசி, தான் செய்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற முடிவோடு அறை வாசல் வரை வந்துவிட்டவருக்கு உள்ளே செல்ல தயக்கம். மனதில் தைரியத்தை வரவழைத்து கொண்டு அறைக்குள் சென்றார்.
அங்கே சிபி, மெத்தையில் கால் இருக்க வேண்டிய இடத்தில் தலையும், தலை இருக்க வேண்டிய இடத்தில் காலும் வைத்து படுத்து, சிரத்தை கட்டிலுக்கு வெளியே நீட்டி கண்மூடியிருந்தான்.
மகன் அருகில் சென்றவர் அவனது கேசத்தை வருடி கொடுத்து “சிபி..” என்று மகனது பெயரை தயங்கி உச்சரித்தார்.
சட்டென கண்களை திறந்தவன் அன்னையின் முகம் பார்த்ததும் வெடுக்கென்று எழுந்து அவருக்கு முதுகு காட்டி திரும்பி நின்றுக் கொண்டான்.
“மன்னிச்சிடு சிபி. அம்மா உனக்கு நல்ல வாழ்க்கை அமையணும்னு தான் எல்லாம் செஞ்சேன். அது உன்னை இவ்ளோ கஷ்டப்படுத்தும்னு நினைக்கல. இப்போ தான் எல்லாம் புரியுது. அதுக்கு நான் இவ்ளோ பெரிய விலை கொடுப்பேன்னு எதிர்பார்க்கல. உங்க அப்பா என்னை வெறுத்திட்டார். உன் அண்ணன் அம்மானே சொல்லமாட்டேன்னு தலை மூழ்கிட்டான். பேசாத அசோக் பேசினப்போ எவ்வளவு வலியை உணர்ந்தேனோ, அதே வலியை நீ பேசாதப்பவும் உணர்ந்தேன்” என்று பேசிக் கொண்டே போனவர்..
“என்னை உன் வலி தீர திட்டிடு சிபி. அப்பவாவது உன் மனசுல இருக்கிற பாரம் குறைச்சா போதும்” என்று மகனது தோளில் கை வைக்க, அவன் விருட்டென திரும்பி தன் தோளிலிருந்த அன்னையின் கையை உதறிவிட்டான்.
“நான் யார் உங்கள திட்ட. உங்களையும் அவளையும் பொறுத்தவரைக்கும் நான் ஒரு உயிருள்ள பொருள். அதான் உங்களுக்குள்ளயே பேசி என்னை யாருக்கு சொந்தம்னு முடிவு பண்ணிக்கிட்டீங்க. பொருளுக்கு பேசற உரிமை எல்லாம் இல்ல” என்று விட்டேற்றியாக பதில் கொடுத்தான்.
மகனது வார்த்தைகள் தெய்வாவின் நெஞ்சில் நெருஞ்சி முள்ளாய் குத்த, கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. அவரால் எங்கிருந்தாலும் அன்பரசியும் குழந்தையும் திரும்பி வந்துவிட வேண்டும் என்று இறைவனிடத்தில் வேண்டுதலை வைப்பதை தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை. அழுகையை வாய் பொத்தி அடக்கி அங்கிருந்து நகர்ந்தார்.
அன்றிலிருந்து அறையை விட்டும் வெளியே வராது அறைக்குள்ளே அடைந்து இருப்பவர் மகன் தன்னிடம் பேசவில்லை என்றாலும், அன்பரசி மீண்டும் வந்து அவளிடம் மகனது பொறுப்பை ஒப்படைக்கும் வரை மூன்று வேளையும் அவனுக்கு தன் கையாலே சமைத்து எடுத்து கொண்டு போய் அவனறை உணவு மேசையில் வைப்பார்.
இதுவரையும் சிபி அதை தொட்டதில்லை. இன்றும் அப்படி தான் பணிக்கு கிளம்பி வந்திருந்தான்.
வீட்டிலேயே இருந்த சிபியிடம் அசோக் தான் “நீ டூட்டிக்கு போய் ரெண்டரை மாசம் ஆச்சு. இப்படியே இருந்தா எப்படி. டூட்டிக்கு போ, ப்ரண்ட்ஸ்ஸ பாரு.. அப்போ தான் மனசு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும்” என்று அறிவுறுத்தினான்.
சிபிக்கும் அது சரியாக பட, ஒரு மாதத்திற்கு முன் மீண்டும் பணியில் சேர்ந்தான். இருந்தும் அவள் நினைவுகள் அவனை இம்சிப்பதை நிறுத்தவில்லை.
சாலைகளில் அவளை போன்ற பெண்களை பார்க்கும் போதும், இரயில் நிலையத்திலும், இடையிடையே நிறுத்தும் நடைமேடையிலும் கண்கள் அவளை தேடி அலையும் போதும், இரயிலில் இருந்து இறங்கி செல்லும் பெண்களில் அவளும் இருந்துவிட மாட்டாளா என்று துடிக்கும் போதும், அது அவள் இல்லை என்று புத்தி எடுத்து சொன்னாலும் கேட்காது முரண்டு பிடிக்கும் மனதோடு தினம் தினம் போராடினான்.
தன் ராசி இல்லாத கொடிய நான்கு மாதங்களை நினைவு கூர்ந்த சிபி நிகழ் காலத்திற்கு வந்தான். பணிக்கு நேரமாவதை உணர்ந்து தனக்கு ஒதுக்கப்பட்ட இரயிலை நோக்கி சென்றான்.
அன்று அயல்நாட்டில் இருக்கும் நண்பன் ஒருவன் தன் மனைவி, மகளோடு சிபியை காண அவனது வீட்டிற்கு வந்திருந்தான்.
அவர்களை “வா பிரசாந்த்.. வாங்க மா” என்று ஒட்ட வைத்த புன்னகையோடு வரவேற்றான் சிபி.
சிபியை பார்த்த பிரசாந்திற்கு அதிர்ச்சியாக இருந்தது. பல மாதங்களாக மழிக்க படாத தாடியோடும், கழுத்து வரை வளர்ந்திருந்த கேசத்தோடும் இருந்தான். விடுபட்ட முகத்திலேயே நிரந்திரமாக குடியமர்ந்திருந்த இறுக்கம் அப்பட்டமாக தெரிந்தது. கட்டுக்கோப்பான தேக கட்டுகளும் தளர்ந்து இளைத்து தெரிந்தான்.
சிபியை அணைத்துக் கொண்ட பிரசாந்த் “சாரிடா. விசா ரினிவலுக்காக சென்னை வந்தோம். அப்படியே உன்னை பார்த்துட்டு போகலாம்னு கிளம்பிட்டோம். அப்போ தான் கிரண் உன்னோட கரண்ட் சிச்சுவேஷனை சொன்னான். வந்தது வந்துட்டோம், உன்னை நேர்ல பார்த்து பேசிட்டு போகலாம்னு தான் நினைச்சேன். ஆனா சத்தியமா, இப்படி பார்ப்பேன்னு எதிர்பார்க்கலடா” என்று வேதனையாக சொன்னான்.
நண்பனது தோளில் தட்டி செயற்கையாக புன்னகைத்தவன் வீட்டில் நடக்கும் பிரச்சனைகளை வெளியே காட்டாது மூவருக்கும் குடிக்க கொண்டு வரும்படி பார்வதியிடம் சொல்லிவிட்டு அவர்களை மேலே அழைத்து சென்றான்.
சிபியும் அவன் நண்பனும் மேலிருந்த வரவேற்பறையில் இருந்த சோபாவில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அதில் பெரும்பாலும் பிரசாந்த் நண்பனுக்கு அவனது மனைவி கிடைத்துவிடுவார், கவலை கொள்ளாதே என்று சொன்ன ஆறுதல்களே.
தம்பி எதையும் யோசிக்காமல் இருக்க மகனை அவனறையில் அதிகம் விடுவான் அசோக். இன்றும் தன் சிறிய தகப்பனை தேடி வந்த குழந்தை, அங்கே பிரசாந்தின் மகள் லயா இருப்பதை கண்டு உற்சாகமானான். லயாவும் வீட்டிற்கு ஒரே குழந்தை என்பதால் இங்கு வருணுடன் ஒன்றிவிட, இருவரும் சிபியின் அறை வாசலில் அமர்ந்து விளையாடி கொண்டிருந்தனர்.
பிரசாந்தின் மனைவி ஸ்வப்னா அபர்ணாவுடன் அவளது அறையில் அமர்ந்து தன் பிள்ளைப்பேறில் தொடங்கி அங்கே மகளை எப்படி தனியாக பார்த்து கொள்கிறாள், மகள் செய்யும் சுட்டி தனம், எந்தெந்த வயதில் என்னென்ன உணவு கொடுத்தாள் என அனைத்தையும் பேசி கொண்டிருந்தாள். அபர்ணாவும் தன் பங்கிற்கு வருண் செய்யும் சேட்டைகளை பகிர்ந்திருந்தாள்.
சற்று நேரம் லயாவுடன் விளையாடியிருந்த வருண், சலித்துவிட்டவனாய் அங்கிருந்து எழுந்து தன் சித்தப்பாவிடம் ஓட, அவனை பிடித்து வைப்பதற்காக அன்னையின் கைபேசியை வாங்கி வந்து காணொளி ஒன்றை ஒளிரவிட்டு அதை அவனுக்கு காட்டினாள்.
அதில் லயாவிற்கு கண்ணன் வேஷமிட்டிருக்க, அவள் புல்லாங்குழல் ஊதுவது போல் பாவனை செய்திருந்தாள். அவளது பெரியப்பாவின் மகள் ராதையாகி கோலாட்ட கட்டைகளை வைத்து நடனம் ஆடி கொண்டிருந்தாள். பின்னணியில் ‘என்ன தவம் செய்தனை யசோதா’ என்ற பாடல் இணைக்க பட்டிருந்தது.
“என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பர பிரம்மம் அம்மா என்றைழைக்க
என்ன தவம் செய்தனை யசோதா…”
அதை கேட்ட சிபி ஆனந்தமாய் அதிர்ந்து நண்பனின் மகளிடம் எழுந்து வர, அதற்குள் “த்தி.. த்தி” என்று கைதட்டி ஆர்பரித்தான் குழந்தை வருண். அன்பரசி தான் இப்பாடலை தன் இனிய குரலில் பாடி அவனை எப்போதும் தாலாட்டுவாளே. அதில் தன் சித்தியின் குரலை சரியாக கண்டறிந்து கொண்டான்.
“த்தி.. பா.. ஆ..ஆ..” சித்தி பாட்டென்று சொல்லி வருண் தானும் பாடலோடு சேர்ந்து ராகமிழுத்து கொண்டிருக்க.. அவனிடமிருந்து கைபேசியை வாங்கிய சிபி “என் ராசி வாய்ஸ்” என்றான் கண்ணீர் மல்க..
பேசியிருந்தவன் திடீரென்று எழுந்து செல்லவும், தானும் பின்னே எழுந்து வந்த பிரசாந்த் “என்ன சிபி சொல்ற.. கன்ஃபார்ம்மா இது உன் வைஃப் வாய்ஸ் தானா” என்றதற்கு கண்களை மூடி ஆமென்று தலையாட்ட, தன்னால் நண்பனுக்கு ஏதேனும் உதவ முடியுமா என்று யோசித்தவன்..
“பாப்பா.. அம்மா பக்கத்து ரூம்ல ஆண்ட்டிகிட்ட பேசிட்டு இருக்கா.. போய் கூட்டிட்டு வா” என்று அவசரப்படுத்த, மகளும் அவளது அம்மாவை கையோடு அழைத்து வந்தாள். உடன் அபர்ணாவும் அவளோடு வந்தாள்.
“ஸ்வப்னா.. இந்த வாய்ஸ் யாருது. உனக்கு தெரிஞ்சவங்களா..” பிரசாந்த் மனைவியிடம் வினவ..
“ஏன் உங்க பொண்ணு சொல்லலயா. இது அவங்க பாட்டு மிஸ் வாய்ஸ். இவளும் உங்க அண்ணன் பொண்ணும் தான் ரெகார்ட் பண்ணி எடுத்துட்டு வந்தாங்க”
“அந்த மிஸ்ஸை நீ பார்த்திருக்கியா” ஆர்வமாக கேட்டான் பிரசாந்த்.
“இல்லயே..” என்று உதட்டை பிதுக்கியவள் “உங்க அண்ணி தான் கூட்டிட்டு போய் கூட்டிட்டு வருவாங்க. அவங்க நேம் கூட தெரியாது” என்றாள்.
“லயா.. இது உங்க மிஸ் வாய்ஸ் தான” உறுதிப்படுத்தி கொள்ள பிரசாந்த் மகளை கேட்க, குழந்தையும் ஆமென்று தலையாட்டியது.
“உங்க மிஸ் நேம் என்னடா செல்லம்” இப்போது சிபி குழந்தையை கேட்க..
“ஹ்ம்ம் ம்ம்ஹ்ஹ்.. தெய்ல.. அவங்க எங்க மிஸ், அவ்ளோ தான் தெய்யும்” மழலை குரலில் சொன்னாள். ஐந்து வயது குழந்தைக்கு அவ்வளவு தானே தெரியும்.
“உங்க மிஸ் எப்படிடாமா இருப்பாங்க” என்றவன் யோசனை தோன்றியவனாக அறையில் இருக்கும் புகைப்படத்தை எடுக்க உள்ளே செல்ல, “அழ்ழகா.. இருப்பாங்க” என்று அவள் பதில் சொல்வது அவனுக்கு கேட்டது.
சிபி புகைப்படத்தை லயாவிடம் காட்ட, “ஐய்.. மிஸ்..” என்று குதூகலித்தவள்.. “சேம் ஐஸ், சேம் நோஸ் அண்ட் லிப்ஸ்.. இதான் மிஸ்.. ஆனா.. ஆனா வயித்து மட்டும் இப்டி.. இப்டி இர்க்கும்” இருகரங்களை முன்னே வளைத்து காண்பித்தாள்.
சிபிக்கு கண்களெல்லாம் கலங்கி விட்டது. மனைவியின் அழகு கோலத்தை இப்படி தான் தெரிந்து கொள்ள வேண்டுமா? தன் விதியை பழித்தான் அவன்.
பிரசாந்தின் மூலம் அன்பரசி இருக்கும் இடத்தை அறிந்து கொண்டவன் க்ஷணமும் தாமதிக்காது கிளம்ப, அபர்ணா தானும் உடன் வருவதாக கூறினாள். பிரஷாந்த் அவனும் உடன் வந்து வழி காண்பிப்பதாக சொன்னான்.
கணவனின் கூற்றில் அவனது மனைவியின் முகம் குழப்பத்தை காட்ட “இந்த டைம்ல நான் இவன் கூட இல்லனா அப்புறம் என்ன ப்ரண்ட்ஷிப்” என்றவன்..
“நாம நைட் கோயம்பத்தூர்ல இருக்குற உன் அத்தை வீட்டுக்கு போறதா தான இருந்தோம். நீ ரூமை செக்கவுட் பண்ணிட்டு பாப்பாவை கூப்பிட்டு நேரா அங்க வந்திடு. நானும் மங்களூர்ல இருந்து அங்க வந்திடுறேன்” என்று அவளது குழப்பத்திற்கு விடை கொடுத்தான்.
வீட்டிலிருப்பவர்களிடம் சொல்லிவிட்டு உடனடியாக மங்களூருக்கு விமானத்தில் பயணித்தவர்கள், அங்கிருந்து கார் பிடித்து அவனின் அண்ணன் வீட்டிற்கும் சென்றனர். ஏற்கனவே தயாராக இருக்க சொல்லியிருந்த அவனது அண்ணியும் காரில் ஏறிக்கொள்ள அவர் சொன்ன வழியை வைத்து கலாலயாவை அடைந்தனர்.
அப்போதே மாணவர்களுக்கு பாட்டு சொல்லி முடித்து விட்டு சற்று ஓய்வாக அமர்ந்திருந்தாள் அன்பரசி. பிரசாந்தும் அவனது அண்ணியும் வெளியே நின்றுவிட, சிபியும் அபர்ணாவும் தான் அவள் இருக்கும் கூடத்திற்கு சென்றனர்.
எதேர்ச்சையாக நெற்றியில் விழுந்த முடியை ஏற்றி விட்டுக் கொண்டே அன்பரசி நிமிர, அங்கே சிபியும் அபர்ணாவும் அவளை தான் கலங்கியபடி பார்த்து நின்றிருந்தனர்.
இனி ஒருமுறையாவது பார்ப்பேனா என்று ஏங்கிய கணவனது முகத்தை பார்த்ததும் வாய் பொத்தி கதறி அழுதாள் அவள். அபர்ணா அவளை நெருங்கி அணைத்து ஆசுவாசப்படுத்த, சிபி சிலைபோல் நின்ற இடத்திலே தான் நின்றிருந்தான்.
அன்பரசியின் அழுகை சற்று ஓய பாறையாய் இறுகி காத்திருந்தவன் “அண்ணி, அவ நம்ம கூட கிளம்பி வரணும். இல்லனு ஏதாவது சொன்னா, தண்டவாளத்தில் ரயில்வே ஊழியர் உடல் மீட்புன்னு நாளைக்கு நியூஸ் வரும்” என்றான்.
அவள் “சிபி..” என்று அலறியதையும் கேட்க அவனில்லாமல் அங்கிருந்து கிளம்பி சென்றிருந்தான்.
அபர்ணா தான் “ஏன் அன்பு இப்படி பண்ண? எங்கிட்டயாவது சொல்லிருக்கலாம்ல” தன் அழுகையை, வேதனையை, கோபத்தை, ஆத்திரத்தை அவளிடம் காட்டி கொண்டிருந்தாள். சிபிக்கு அடுத்து அன்புவின் பிரிவை அதிகம் உணர்ந்தது அவள் தானே.
அனைத்தும் முடிந்து விடுப்பு சம்பிரதாயங்களை முடித்து கொண்டு மங்களூரில் இருந்து கிளம்பினார்கள். பிரசாந்த் அன்று தன் அண்ணன் வீட்டிலே தங்கி கொள்வதாக நின்று விட, சிபி, அன்பு மற்றும் அபர்ணா மட்டும் ஊர் திரும்பினர்.
அன்பரசிக்காக வீட்டிலிருந்த ஒவ்வொருவரும் வழி மீது விழி வைத்து காத்திருந்தனர். தெய்வநாயகியும் அறை வாசலில் நின்றாவது அவளை பார்த்துவிடும் எண்ணதோடு இருந்தார்.
வீட்டிற்கு வந்தவளை அபர்ணாவும், பார்வதி அம்மாவும் சேர்ந்து ஆரத்தி எடுத்து உள்ளே அழைக்க, பானுமதி பாட்டி சிபியையும் உடன் நிற்க சொன்னார். அனைத்தையும் ஆதரவற்ற நிலையில் ஏக்கமாக பார்த்திருந்தார் தெய்வா.
பூபதியும் அசோக்கும் அவளது நலம் விசாரித்தோடு, இனி இந்த வீட்டில் எந்த பிரச்சனை வந்தாலும் தங்களிடம் எந்தவொரு தயக்கமும் இன்றி சொல்லும் படி அறிவுறுத்திவிட்டு அவளை ஓய்வெடுக்க சொல்லி மேலே அனுப்பினர்.
கலாலயாவில் மனைவியை பார்த்ததிலிருந்து இதுவரை அவளை முழுதாக பார்க்கவும் இல்லை, ஒரு வார்த்தையும் பேசவில்லை. விமானத்திலும் அருகில் உட்கார்ந்திருந்தவளை கண்களாலும் தீண்டவில்லை.
அன்பரசியும் வரும் வழியெல்லாம் கணவனிடம் பேச முயற்சி செய்து தோல்வியே கண்டாள். இவள் அவனை விட்டு சென்றதை எல்லாம் வசதியாக மறந்துவிட்டவள் கணவனது சில மணிநேர ஒதுக்கத்திற்கே அவதிக்குள்ளானாள். இதில் அவனது தற்போதைய தோற்றம் வேறு அவளை வேதனைப்படுத்தியது.
குளித்து முடித்து வெளியே வந்த சிபி அங்கு தன் முழு வயிறும் தெரிய, கர்ப்ப காலத்தால் கால்களை கொஞ்சம் அகற்றி அறைக்குள் நடந்திருந்த மனைவியை கண்டான். அவளது மேடிட்ட வயிற்றை பார்க்க பார்க்க அவனுக்கு ஆசை கூடியது.
மனைவியின் அருகில் வந்தவன் அவள் முன் மண்டியிட்டு அவள் வயிற்றை பொக்கிஷத்தை ஏந்துவது போல இருகைகளாலும் பிடித்துக் கொண்டான். கணவனது திடீர் செயலில் அன்பரசிக்கு கூச்சமாக இருந்தது. இருந்தும் இது போல் ஒரு நாள் தன் வாழ்வில் வராதா என்று ஏக்கம் கொண்டிருந்தவள் அதை அமைதியாக அனுபவித்திருந்தாள்.
அப்போது அவளது வயிற்றில் முத்தம் பதித்தவன் “சாரிடா பாப்பா. அப்பாவுக்கு நீ இருக்குறது ரொம்ப லேட்டா தான் தெரியும். அப்பவும் உன்னை உடனே வந்து பார்க்க நீ எங்க இருக்கனு தெரியாது. ரொம்ப கொடுமையான நாட்கள் டா அது. இந்த உலகத்துலேயே நான் அதிகம் நேசிச்சது என் அம்மாவையும் உன் அம்மாவையும் தான். ரெண்டும் பேரும் ஏமாத்திட்டாங்க. இனி எனக்குன்னு இருக்கறது நீ மட்டும் தான். நீ போதும்டா பாப்பா எனக்கு” கண்களில் இருந்து வழிந்து வந்த கண்ணீரை துடைத்தவன் அங்கிருந்து எழுந்து செல்ல, கணவனது வார்த்தைகள் மனதின் அடி ஆழம் வரை வலியை உண்டு பண்ணியது.
“நான் வேண்டாமா சிபி” செல்லும் கணவனை இயலாமையாக அவள் கேட்க..
“நான் வேண்டாம்ங்கிற முடிவை நீ தான் முதல்ல எடுத்த” என்றவனின் பதிலில் அவளுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை.
இருந்தும் தயாராக இருக்கும் அழுகையை அடக்கிக் கொண்டு “நான் வேணும்னு செய்யல. உங்களுக்காக தான். உங்க சந்தோஷத்துக்காக..” தழுதழுத்த குரலில் சொன்னாள்.
“என் சந்தோஷத்துக்கு செஞ்சியா. நான் இருந்த சந்தோஷத்தை சொல்றேன் கேட்டுக்கோ. அம்மா வீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு யாருக்கும் சொல்லாம எங்கயோ போய்ட்ட. உனக்கு என்னாச்சோ, ஏதாச்சோ துடிச்ச துடிப்பு கொஞ்ச நஞ்சம் இல்ல. உங்க அண்ணன் கேக்கறார், அம்மா வீட்டுக்கு போன பொண்டாட்டிக்கு ஒரு ஃபோன் கூட பண்ணலயானு. எத்தனை அவமானமா இருந்துச்சு தெரியுமா. உன்னை நாயா பேயா தேடினேன். தினமும் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் என் பொண்டாட்டிய பத்தி ஏதாவது தகவல் கிடைச்சிருக்கானு கேப்பேன். அந்த போலீஸ்காரன் சொல்றான், எனக்கு என் பொண்டாட்டிய வச்சி வாழ துப்பில்லயாம். அதான் நீ போய்ட்டியாம்” என்று பற்களை கடித்தான்.. அண்ணன் எப்போது கணவனை சந்திந்தான் என்பதை கூட யோசிக்க தோன்றாது கணவனது வார்த்தைகளை கண்களின் கண்ணீரோடு கேட்டிருந்தாள்.
“நான் தெய்வமா மதிச்ச என் வேலை. இந்த பத்து வருஷத்துல எத்தனையோ சூசைட்ஸ், ஆக்சிடென்ட்ஸ் பார்த்திருக்கேன். ஒருநாளும் ஸ்டேஷனுக்குள்ள போக பயந்ததில்ல. தண்டவாளத்துல இறங்கவும் நடுங்கினதில்ல. ஆனா, உன்னை மாதிரி ஒரு பொண்ணோட பாடி கிடைச்சிருக்குனு வந்து ஐடென்டிஃபை பண்ண சொன்னப்போ உடம்புல இருந்த மொத்த தெம்பும் போய்டுச்சு..” அவளது வலி நிறைந்த கண்களும், கண்ணீரும் அவனை பாதித்தபோதும் வெளியே காட்டாது மறைத்து சத்தமிட்டிருந்த வேளையில், கலங்கி நிற்கும் அன்பரசிக்கு துணையாக அவனது கைபேசி சிணுங்கியது.
எடுத்து பேசியவன் கைபேசியை அணைத்து “என் கூட வா” என்றுவிட்டு வெளியே சென்றவன் “நீ ஸ்டெப்ஸ் இறங்க வேண்டாம். லிஃப்ட்ல வா..” என்றவன் வேகநடை இட்டு படிக்கட்டுகளில் இறங்கினான்.
அன்பரசி மின்தூக்கியில் இறங்கி வெளியே வந்த நேரம் அனைவரையும் கூட்டியிருந்தான் சிபி.
இவள் என்னவென்று புரியாமல் திகைத்து நிற்க, தந்தையின் கைகளை பிடித்தவன் “சாரிப்பா.. நானும் அன்பரசியும் தனியா போறோம். என் ப்ரண்டோட ப்ளாட் அவைலபிலா இருக்குனு இப்ப தான் சொன்னான். நாங்க அங்க போயிடுறோம்” என்றவனின் கூற்றை மறுக்க முடியாத வேதனையில் மகனை பார்த்திருந்தார் பூபதி. தெய்வநாயகியும் தன் தவறால் எதுவும் பேசமுடியாது கலங்கி நின்றிருந்தார்.
அசோக் தான் “டேய் என்னடா முட்டாள் தனம் பண்ற. இனி அன்புவை யாரும் ஒண்ணும் சொல்ல முடியாது” என்று அன்னையின் மீது பார்வை செலுத்தியவன் “நீங்க இங்க தான் இருக்கணும்” என்று திட்டவட்டமாக சொன்னான்.
“சாரிடா அசோக்.. முதல் நாளே நான் இந்த வீட்டை விட்டு போயிருக்கணும். இல்ல, இவங்க என் பொண்டாட்டி உள்ள வந்துட்டானு கல்லை பேத்து எடுக்க சொன்னாங்களே அப்பவாவது போயிருக்கணும். உங்களை எல்லாம் பிரிய மனசில்லாம இங்கயே இருந்ததால தான வீண் பழி சுமத்தி அவளை வீட்டை விட்டு துரத்தினாங்க. நான் போக தான் செய்யணும் டா” என்று தன் முடிவில் உறுதியாக இருந்தான்.
அதுவரை கணவன் சொன்னதை கேட்ட அதிர்ச்சியில் இருந்த அன்பு “என்ன சிபி சொல்றீங்க. நான் தானே தப்பு பண்ணேன். அதுக்கு எதுக்கு உங்களுக்கு தண்டனை கொடுத்துக்கறீங்க” என்று பதறினாள்.
மனைவியின் புறம் திரும்பி “உன்னை நான் தனி குடித்தனம் போலாமான்னு அனுமதி கேக்கலடி. என் கூட வந்து தான் ஆகணும்னு சொல்றேன்” என்று ஆவேசமாக கத்தினான்.
இதுவரை சிபி அன்புவை இப்படி நடத்தியதே இல்லை. அதுவும் அனைவர் முன்பும்..
அன்பரசி கண்களில் நீர் சூழ, நடுங்கி கணவனை பார்க்க “இல்ல, திரும்ப வேற ஊருக்கு போற பிளான் ஏதாவது வச்சிருக்கியா. நீயும், உன் மாமியாரும் தான் நல்லா பிளான் போடுவீங்களே. பேசாம ஒரு பிளானை போட்டு என்னை தூக்கிடுங்க. அப்புறம் உன் மாமியார் உன்னை எங்க வேணா துரத்தட்டும்.. நீயும் எங்க வேணா போய்க்கோ.. ஆனா நான் உயிரோட இருக்குற வரைக்கும் அது நடக்காது. இதான் பைனல்.. நாளைக்கு நாம இந்த வீட்டை விட்டு போறோம்” என்றுவிட்டு வேக எட்டுகள் வைத்து மாடிப்படி ஏறிய கணவனது புது பரிமாணத்தில் திகைத்து, செல்லும் அவனையே கண்ணீரோடு பார்த்திருந்தாள் அன்பு.
உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..
அடுத்த நாள் காலையில் மனைவியை அழைத்துக் கொண்டு கீழே வந்தான் சிபி. ஏற்கனவே இருவரது துணிமணிகள் மற்றும் உடமைகள் அடங்கிய பெட்டிகளை இரண்டிரண்டாக எடுத்து வந்து கார் டிக்கியிலும் பின் இருக்கைகளிலும் வைத்து விட்டான்.
இறுதியாக அவர்களும் கிளம்ப தயாராகி வர, பூபதிக்கு மகன் செல்வது பிடிக்கவில்லை என்றாலும் ஒன்றும் செய்யமுடியாத கையறு நிலையில் அனைத்தையும் பார்த்திருந்தார். அசோக்கும் தம்பி செல்லும் வருத்தத்தில் நின்றிருந்தான்.
உடன் அபர்ணாவும் மகனை இடுப்பில் வைத்து கொண்டு கலங்கி நிற்க, பானுமதி பாட்டி தான் சிபியிடம் ஒரு பெட்டியை நீட்டி “இதுல ஜோக்கரு இருக்கு சிபி. ‘என் பையனுக்கு அன்புவை பிடிச்சிருக்கு. எனக்கும் அவகிட்ட எந்த குறையும் தெரியல. என் மகனுக்காக நான் அவளை ஏத்துக்கபோறேன்னு’ சொல்லிட்டு ஜோக்கரை கொடுக்க தான் தெய்வா மாடிக்கு வந்தா. அப்போ நான் தான் அன்னைக்கு அவ விழுந்த இடத்துக்கு ரொம்பவே தள்ளியிருந்த எண்ணை டப்பாவை காட்டி அவ மனசை கலைச்சிட்டேன். அதுல இருந்து தான் எல்லாமே ஆரம்பமாச்சு. எல்லாத்துக்கும் காரணம் நான் தான். பாட்டிய மன்னிச்சிடுப்பா. தயவுசெஞ்சு வீட்ட விட்டு போயிடாத கண்ணா” வாஞ்சையாக பேரன் கன்னம் தாங்கி அழுகையில் கரைந்து சொன்னார்.
அவருக்கு மறுப்பாக தலையசைத்தவன் பாட்டி கையை பரிவாக பிடித்து “உங்களுக்கு என்ன வேணும்னாலும் என் நம்பர் இருக்குல்ல, கால் பண்ணுங்க. ப்ளீஸ் எங்கள தடுக்காதீங்க பாட்டி” என்று அவரிடமிருந்து விடைபெற்றான்.
பிறகு தந்தையையும் அண்ணனையும் அணைத்து விடுத்து, அண்ணனது மகனை தூக்கி கொஞ்சி, அண்ணியிடமும் தலையசைத்து விடைபெற்றவன் அன்புவின் மருந்துகள் மற்றும் மருத்துவ கோப்புக்களை கொண்ட பையை ஒரு கையிலும் மறுகையால் மனைவியின் கரம் பிடித்து அங்கிருந்து நகர, விழிகளில் நீரோடு அனைவரையும் ஏக்கமாக பார்த்தபடி மனமே இல்லாமல் மெல்ல அடியெடுத்து வைத்து நடந்தாள்.
அப்போது “இவளை எங்கயும் அனுப்ப முடியாது..” என்ற குரலுக்கு சிபி திரும்ப, அதுவரை அங்கு நடப்பதற்கும் தனக்கும் சம்மந்தமில்லாதது போல் கால் மீது கால் போட்டு நாளிதழ் படித்து கொண்டிருந்த தெய்வநாயகி அன்பரசியின் கரம் பிடித்து தடுத்திருந்தார்.
மாமியாரது ஆதரவில் புத்துணர்வு பெற்றவள் கணவனது பிடியிலிருந்து தன்னை பிரித்து கொண்டு தெய்வாவை அணைத்து “தேங்க்ஸ் அத்தை. நேத்து நைட் நான் பேசினப்போ கூட நீங்க ஒரு வார்த்தையும் பேசாம நின்னீங்க. எங்க, நீங்களும் எங்களை தடுக்காம இருந்திடுவீங்களோனு நான் ரொம்ப பயந்துட்டேன்” அவர் அணைப்பில் இருந்துக் கொண்டே சொல்லியிருந்தாள்.
அதை கேட்ட சிபியின் பார்வையில் கோப கனல்.. ‘மாமியார் கூட சேர்ந்துக்கிட்டு ரொம்ப தான் ஆடுறா’ என்று பற்களை கடித்திருந்தான். மற்றவர்கள் இவர்களுக்கு இடையே நிகழ்வதை புரியாமல் பார்த்திருக்க, அவர்களின் குழப்பங்களை தீர்க்க நினைத்தார் தெய்வா.
நேற்று கணவன் பின்னால் மேலே வந்த அன்பரசி அவனிடம் எவ்வளவு கெஞ்சியும் ‘நாளை நாம் தனியே செல்வது உறுதி’ என்றதோடு இருவருக்கும் அறையிலே சமைத்து தானும் உண்டு, மனைவியையும் உண்ண செய்து சோர்வாக கட்டிலில் சென்று சரிந்தான்.
அவள் அருகில் வந்துவிட்டதில் வெகு நாட்களுக்கு பிறகான நிம்மதியான உறக்கம் அவனுக்கு. ஆனால் அன்பரசியால் உறங்க முடியவில்லை. வெகுநேரம் விழித்திருந்து கணவனது முகத்தையே பார்த்திருந்தவள் ஒரு முடிவு எடுத்தவளாக கீழிறங்கி மாமியாரின் அறை கதவை தட்டினாள்.
பூபதி தான் தனி அறையில் இருக்கிறாரே. அங்கே தெய்வநாயகியும் மகனது முடிவில் உறக்கம் கொள்ளாமல் விழித்திருந்தார். கதவை தட்டும் ஓசை கேட்டு வந்து திறந்தவர் வாசலில் அன்பரசி நிற்பதை கண்டு புரியாமல் அவளை பார்த்தார்.
“மாமா தூங்கறாங்களா அத்தை. நான் உங்ககிட்ட தான் பேசணும்னு வந்திருக்கேன். வெளிய பேசலாமா” அன்பு தயங்கி கேட்க..
“உங்க மாமா என்னை ஒதுக்கி வச்சிட்டார்” என்று விரக்தியாக புன்னகைத்தவர் அவளை உள்ளே அழைத்து சென்று கதவடைத்தார்.
மூச்சு வாங்க இறங்கி வந்திருப்பவளுக்கு அங்கிருந்த தண்ணீரை எடுத்து கொடுத்தவர், குடித்து முடித்ததும் என்ன என்பதாய் அவளை பார்க்க, “சிபி கோவத்துல பேசறார். அதே சமயம் நீங்க இல்லாத இடத்துல அவர் நிம்மதியா இருக்கமாட்டார் அத்தை. ப்ளீஸ் அத்தை, எங்களை போகவிடாதீங்க. உங்களால மட்டும் தான் அவரை தடுக்க முடியும். ப்ளீஸ், உங்க மகன் சந்தோஷத்துக்காக அவரை போக விடாதீங்க அத்தை” மகனது மகிழ்ச்சியை முன்னிறுத்தி பேசுபவளை வியப்பாக பார்த்தார் தெய்வநாயகி.
அன்றும் அவனுக்காக தான் அவரிடம் பேச வந்தாள். இவர் தான் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லாமல் என்னென்னமோ செய்துவிட்டார். இன்றோ மருமகளது தூய மனதை, கணவன் மீது அவளுக்கிருக்கும் அபரிமிதமான நேசமும் அவருக்கு நன்றாக புரிந்தது.
இருந்தும் ‘நான் இருக்கிறேன். நீ தைரியமாக செல்’ என்று ஒரு வார்த்தை சொல்லவில்லை. ஏனோ பழைய கம்பீரமான தெய்வநாயகியை மீட்டெடுக்க அவருக்கும் சிறிது நேரம் தேவைப்பட்டது. மாமியாரிடம் பேசி பார்த்து தோற்றவள் அமைதியாக வந்து அறையில் படுத்து கொண்டு தவித்தாள்.
அனைத்தையும் சொன்ன தெய்வா கணவரிடம் வந்து “மகள் இல்லாத நமக்கு மருமகள்கள் தான் மகள்கள்னு ரொம்ப லேட்டா தாங்க புரிஞ்சது. போதும்ங்க நீங்க எனக்கு கொடுத்த தண்டனை. உங்க பிரிவை இனியும் என்னால தாங்க முடியாது” என்று கலங்கினார்.
மனைவியின் மாற்றத்தில் நெகிழ்ந்துவிட்ட பூபதி அவரது கண்ணீரை துடைத்து விட, மேலும் மேலும் ஆனந்த கண்ணீர் உதிர்த்தார் தெய்வா.
பின் இரு மருமகளது தலையை இருகைகளால் வருடி கொடுத்தவர் “அத்தை உங்களுக்கு செஞ்ச தப்பை எல்லாம் மன்னிச்சிடுங்கம்மா. இனி உங்களுக்கு அத்தையா இல்ல அம்மாவா இருப்பேன்” என்றவர் அவர்களது தோள்களை வளைத்து அணைத்து பிடித்துக் கொண்டே மகன்களது பக்கம் திரும்பினார்.
அன்னையை சந்திக்க முடியாது அசோக் கண்கள் கலங்கி தலை குனிந்து கொள்ள, சிபி மட்டும் மனமிறங்காமல் அவரை முறைத்து கொண்டிருந்தான்.
மகனை அசராது பார்த்தவர் “மாமியாரும் மருமகளும் பிளான் போடுவோம்னு தானே சொன்ன. ஆமா, இந்த முறையும் போட்டுட்டோம். இவ இந்த தெய்வாவுடைய மருமக. அவ வயித்துல வளர்றது இந்த வீட்டோட வாரிசு. அது யார் வீட்லயோ இருந்து பிறக்க நான் ஒருக்காலும் அனுமதிக்க மாட்டேன். உனக்கு வேணும்னா நீ தாராளமா போகலாம்” திமிர், தெனாவட்டு, அகந்தை என எதற்கும் பஞ்சமில்லாது சொன்னார்.
சிபி அன்னையை முறைத்து நிற்க, “மணி” என்று வேலையாளை அழைத்த தெய்வா “சார் வீட்டை விட்டு போறாராம். நீ கூட இருந்து அவருக்கு பொருள் அடுக்க உதவி பண்ணிட்டு வா” அவருக்கு வேலை பணித்ததோடு, பானுமதியிடமிருந்த சோக்கரை வாங்கி சிறிய மருமகளுக்கு போட்டுவிட்டு ஆசை தீர ரசிக்கவும் செய்தார்.
பின் கண்களை துடைத்து கொண்டு மகனது கையிலிருந்த அன்பரசியின் பையை வாங்கி அபர்ணாவிடம் கொடுத்து “அபர், அன்புவை மேல கூட்டிட்டு போம்மா” என்றவர், மூத்தவள் இளையவளை அழைத்துக் கொண்டு மின்தூக்கியில் ஏறியதும் ‘நீ இன்னும் கிளம்பவில்லையா’ என்று சிறிய மகனை ஏற்றமாக பார்த்துவிட்டு தானும் அறைக்குள் சென்றுவிட்டார் தெய்வா.
அங்கே நின்றிருந்த சிபிக்கு கோபம் ஒரு புறம் இருந்தாலும் மனம் நிறைந்து விட்டது என்பது தான் உண்மை. திருமணத்தன்று ‘இருவருக்கும் உன்னை பிடிக்கலாம். ஆனால், இருவரையும் பிடிக்க வைப்பது உன் கையில் தான் இருக்கிறது’ என்று தந்தை சொல்லிவிட்டு சென்றது இன்று நிஜமானதை உணர்ந்து உள்ளம் குளிர்ந்தான்.
அவனும் அந்த வீட்டிலேயே தன் வசிப்பை தொடர்ந்தான். இருந்தும் மனைவியிடம் பாராமுகம் காட்டியிருந்தான். அது அன்பரசியை மிகவும் சோர்வாக்கியது. என்ன தான் மாமியார், ஓரகத்தி, பானு பாட்டி என்று ஒவ்வொருவரும் அவளை பார்த்து பார்த்து கவனித்து கொண்டாலும் கணவனது அன்பிற்காக ஏங்கினாள் சிபியின் அன்பரசி. அவனுக்கோ இந்த அன்பை வேண்டாமென்று விட்டு சென்றவள் தானே என்ற கோபம்.
அன்பரசியை வீட்டிற்கு அழைத்து வந்த இரண்டாம் நாளே சிபியை தனியாக அழைத்து பேசினாள் அபர்ணா.
“ஆண்களுக்களான இலக்கணமா நான் உங்கள தான் பார்க்கறேன். நீங்க போய் எல்லார் முன்னாடியும் அன்புக்கிட்ட கோபப்படறதும், அவகிட்ட பேசமா இருக்குறதும் சரியா” தன் மனதில் இருந்த கேள்விகளை மைத்துனனிடம் நேரடியாகவே கேட்டாள்.
“எனக்கு மட்டும் அவ மேல கோபப்படணும்னு ஆசையா அண்ணி. இந்த மாதிரி கல்யாணத்துல இதுமாதிரி பிரச்சனைகள் வர தான் செய்யும். அதுக்காக என்னை விட்டு கொடுத்திடுவாளா. எங்க காதலை காப்பாத்துற பொறுப்பு எனக்கு மட்டும் தானா. அவளுக்கு இல்லையா? அத அவ உணரணும். அதுக்கு தான் பேசாம இருக்கேன். அப்போ தான் என்ன பிரச்சனை வந்தாலும் வீட்டை விட்டு வெளியே போகணும்ங்கிற எண்ணம் வராது” என்றவனின் கூற்றும் சரியாகவே இருக்க, மேலே எதுவும் பேசமுடியாமல் அமைதியாக சென்றுவிட்டாள் அபர்.
இப்படியே ஒன்றரை மாதங்களுக்கு மேலாகி விட, அன்பரசி இப்போது மகப்பேறின் எட்டாம் மாதத்தின் முடிவில் இருந்தாள். இதுவரையும் சிபி அவளிடம் பேசவில்லை. மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்வான். சில நேரங்களில் மகவிடம் பேச அவளை நெருங்குவான். அவ்வளவே..
அன்றொரு நாள் பணி முடிந்து வீட்டிற்கு வந்த சிபி மாடிபடி ஏற, பழரச குவளையோடு கீழிறங்கி வந்தாள் அபர்ணா.
“ஜூஸை குடிக்காம எதுக்கு கீழ எடுத்துட்டு போறீங்க அண்ணி.. பிடிக்கலையா” என்று அவன் கேள்வியாய் நிறுத்த..
“உங்க பொண்டாட்டிய என்னால சமாளிக்க முடியல சிபி. சாப்பிட வைக்கறதுல இருந்து ஜூஸ் குடிக்க வைக்கிற வரை போதும் போதும்னு ஆகிடுது. அவளுக்கு மனசு இருந்தா சாப்பிடுவா, இல்ல வேண்டாம்னு சொல்லிடுவா. அட்லீஸ்ட் அத்தைக்கு பயந்து சாப்பிடுவா. என்னையெல்லாம் நல்லா ஏமாத்துறா” சலிப்பு போல் சொன்னவள்..
“ஏன் சிபி நீங்களும் கஷ்டப்பட்டு அவளையும் கஷ்டப்படுத்தணும். அவளுக்கு உங்க அன்கன்டிஷனல் அன்பை கோவமா எல்லாம் காட்டினா புரியாது. பேசி புரிய வைங்க. சீமந்தம் முடிஞ்சி அம்மா வீட்டுக்கு போய்ட்டான்னா அவளை மிஸ் பண்ணிட்டு உட்கார்ந்துட்டு இருப்பீங்களா. போய் பேசுங்க சிபி” தன்னால் இயன்ற அறிவுரைகளை கூறினாள்.
அண்ணியிடம் இருந்து பழச்சாறை பெற்று கொண்டு அறைக்கு வந்தவன் கட்டிலின் மேசையில் வைத்துவிட்டு குளியறைக்கு சென்றான்.
தன்னை சுத்தப்படுத்தி கொண்டு வெளியே வந்தவன் பழச்சாறு தீண்டப்படாமல் இருப்பதை கண்டு பற்களை கடித்தவன், அதை எடுத்து கொண்டு வந்து அவள் முன் நின்று “இந்தா.. இத குடி” என்றான்.
கலங்கிய கண்களோடு அவனை பார்த்தவள் வேண்டாமென்பதாய் தலையாட்ட, “ராசி, ஏன்டி படுத்துற.. குடி..” அவனுக்கும் கோபம் எட்டி பார்த்தது.
“இப்போ தான் நான் ராசின்னு தெரியுதா சிபி. எத்தனை மாசம் ஆச்சு நீங்க எங்கிட்ட பேசி, ராசின்னு கூப்பிட்டு..” கண்ணீர் மல்க அவள் கேட்க
“அதுக்கு முன்னாடி எத்தனை மாசம் நீ என்னை விட்டுட்டு போனனு உனக்கு ஞாபகம் இருக்கா..” என்று குரல் ஓங்கியவன் தன்னை நிதானிப்பதற்குள் அவன் மார்பில் முகம் புதைத்து கதறிவிட்டாள் அன்பு.
“நான் என்ன பண்ணுவேன் சிபி. என்னால என்ன பண்ணமுடியும்.. என் முதல் வாழ்க்கை தான் எல்லாரும் விமர்சிக்கும் படி ஆகிடுச்சே.. எத்தனை வருஷம் ஆனாலும் அந்த கறை என்னை விட்டு போகாதப்போ நான் என்ன பண்ணுவேன். முதல் புருஷன் கூட எந்த விருப்பமும் இல்லாம தான் வாழ்ந்தேனு வயித்துல இருக்குற குழந்தை மேல சத்தியம் பண்ணனுமாம். அப்போ தான் உங்களுக்கு நான் உண்மையா இருக்கேனு நம்புவேன்னு சொல்றப்போ நான் என்ன பண்ணுவேன் சிபி..” என்றவளது முதுகை அவன் வருடி கொடுத்து கொண்டிருக்க, அவனை விட்டு விலகியவள்..
“நான் என்னனு சத்தியம் பண்ணுவேன். அபிஷேக் கூட சந்தோஷமா வாழலைன்னா. என்னை பொறுத்தவரைக்கும் அது தான் என் வாழ்க்கைனு நினைச்சி பல கனவுகளோட தானே வாழ்ந்தேன். அந்த பாவி தான ஏமாத்தி என் வாழ்க்கைல விளையாடினான். அப்புறம் எப்படி நான் சத்தியம் பண்ணுவேன். அதான் போய்ட்டேன்” என்று துடித்து அழுபவளை கண்டு பதறிவிட்டான் சிபி.
“போதும்டா ராசி.. வயித்துல பாப்பா இருக்குடி. இப்படி அழுதா உடம்பு என்ன ஆகும். அதுக்கு தான் பேசாம இருந்தேன். நீ அதுக்கும் உன்னை வாட்டிக்கிட்டா எப்படி..” தவித்து அவளிடம் அவன் கெஞ்சி கொண்டிருக்க, அழுகையை அவள் முயன்று நிறுத்திய போதும் அடிவயிற்றிலிருந்து பெரிய பெரிய கேவல்கள் வந்து கொண்டிருந்தது.
அவள் அணைத்த வேகத்திலே கொஞ்சம் பழச்சாறு கீழே கொட்டியிருக்க, அருகிலிருந்த மேசையில் இருந்த தண்ணீரை எட்டி எடுத்தவன் அவளை கட்டிலில் அமர்த்தி,
“முதல்ல தண்ணி குடி. அப்புறம் மிச்சம் வைக்காம இந்த ஜூஸையும் குடிக்கிற. நான் பேசலனு தானே குறைப்பட்ட. இப்போ நிறைய பேசணும். அப்போ நான் பேசறதை கேக்க தெம்பு வேணும்ல. குடி” ஆணை போல் சொன்னவன், இந்நேரம் கால் வழுக்கி கீழே விழுந்தால் பேராபத்து என்று மாப் கொண்டு வந்து கீழே சிந்திய பழச்சாறை சுத்தம் செய்தான்.
அன்பரசி கணவன் செய்வதை பெருமையாக பார்த்துக் கொண்டே பழச்சாறை பருகி முடித்தாள். அவனையும் சேர்த்து தான்.
அவள் குடித்து முடிக்கவும் ஒன்றிற்கு இரண்டு முறை தண்ணீர் வைத்து சுத்தம் செய்து முடித்திருந்தவனும் அவள் அருகில் வந்தமர்ந்தான்.
“இது புதுமை பெண் எப்படி இருக்கணும்ங்கிற மகாகவியோட எதிர்பார்ப்பு, ஏக்கம், ஆசை, கனவு. ‘மாதராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும்னு’ சொன்னார். அப்படிப்பட்ட உன்னதனமான பிறப்பான, ஒரு உயிரையே ஈன்றெடுக்கிற தாய்மை என்ற மகத்துவத்தை பெற்ற பெண்கள் இந்த உலகத்துல தன்னுடைய எண்ணமும், செயலும், மனமும் சரியா இருக்கும் போது எதைப்பத்தியும் கவலைப்படாது, யாரை பார்த்தும் அஞ்சாத நிமிர்ந்த நன்னடையோடு, சற்றும் பயமறியாத நேர்கொண்ட பார்வையும் கொண்டு திமிர்ந்த ஞான செருக்கோடு இருக்கணும்ங்கிறார் பாரதி. அப்படிப்பட்ட பெண்கள் தன் வழியில தடைகளே இருந்தாலும் வழி மாறாம தன் வெற்றி இலக்கை அடைவாங்கணும் சொல்றார். பெண்கள் எப்பவும் அறியாமைங்கற பேரிருளோட அவலப்பட்டு வாழாம அதை விட்டொழிந்து புதுமை பெண்ணாய் வாழ்றது தான் பெண்ணறம்னு சொல்றார் நம்ப முண்டாசு கவிஞன்” பார்வையில் திண்மையும், உதட்டில் பெருமிதமும், மனதில் திடமும் கொண்டு சொன்னான்.
அன்பரசி கணவனையே விழியகற்றாது பார்த்திருக்க, “யாருக்கும் உன்னை நிரூபிக்க வேண்டிய அவசியமில்ல. என் வருத்தமெல்லாம் ஒண்ணு தான். அன்னைக்கு அம்மா என் பையனுக்கு நீ உண்மையா இருக்கியான்னு கேட்டப்போ, உங்க பையனுக்கு தெரியும் அவர் மேல எனக்கிருக்க காதல் உண்மையானு. அதை உங்களுக்கு உணர்த்த தேவையில்லனு சொல்லிட்டு வரவேண்டியது தானடி. ஏன் நீ சொல்லல..” என்று ஆற்றாமையாய் கேட்டான்.
அவளால் பதில் சொல்ல முடியாமல் தன் குண்டு விழிகள் திணற அமைதியாக இருக்க, “நீ உன்னை மட்டுமா அசிங்கப்படுத்திக்கிட்ட, உன் வயித்துல இருக்குற நம்ப குழந்தையையும் தான். அவ பொண்ணா இருந்தா ஒரு அம்மாவா நீ அவளுக்கு என்ன எக்சாம்பல் செட் பண்ற. யார் என்ன பேசினாலும் நம்ப பக்கம் தவறே இல்லைனாலும் பொறுத்து வாழணும்ங்கிறதையா?” என்றவன் அவளது மனதின் எண்ணம் புரிந்தவனாய்..
“சரி நீ நினைக்கிற மாதிரி பையனாகவே இருக்கட்டும். அவனுக்கு பெத்தவங்களா நற்பண்புகளை காட்ட வேண்டாமா? இப்போ இருக்குற காலத்துல பொண்ணுகளை பெத்த அப்பா அம்மாவை விட ஒரு பையனை பெத்த அப்பா அம்மாவுக்கு தான் பொறுப்பு அதிகம். தன் மகன் பெண்களை மதிச்சு அவளுக்கு பாதுகாவலனா தான் இருக்கணுமே தவிர, அவளை கலங்கப்படுத்துறவனாவோ, அவ கற்பை சூறையாடுறவனாவோ, அவளை அடிமையா நடத்துறவனாவோ இருக்க கூடாது. ஒரு ஆண்பிள்ளைங்கிறது இந்த உலகத்துல நாம விதைகிற விதை. அது விருக்ஷமா வளர்ந்து நன்மை தரணுமே தவிர கள்ளி செடியா மாறி விஷத்தை கக்க கூடாது”
“இனிமேலும் உன்னை ஒரு விக்டிமா பார்க்கறதை நிறுத்து. ஒரு நாய் நம்பள கடிச்சு குதறப்போ அதற்கான மருத்துவ உதவிகளை மேற்கொண்டு எப்படி அதிலிருந்து விடுபடுறோமோ, அதேமாதிரி தான் நம்ப கிட்ட அத்து மீறுற மனித மிருகத்துடைய செய்கைக்கும் செய்யணும். அந்த மிருகம் கணவனாகவே இருந்தாலும் மனைவியோட விருப்பமில்லாம அவளை நெருங்கி இருந்தாலோ, இல்ல அவனுடைய மாய வலையில விழ வச்சு அவளை தொலைக்க வச்சிருந்தாலோ அங்கே தப்பு அந்த பெண் மேல எங்கடி வந்துச்சு. இந்த இடத்துல அவளுடைய மன குன்றலுக்கு மருந்து கொடுத்து கடந்துவர சொல்றது தான் அந்த மிருகங்களுக்கு நாம கொடுக்கிற தண்டனை..” என்று தீர்க்கமாக கூறினான்.
அதுவரை கேவலும் கண்ணீருமாய் அவன் சொல்லவதை கேட்டிருந்தவள் அவனது இறுதி வார்த்தைகளில் மெய் சிலிர்த்து போனவளாய் தன் கண்ணீரை துடைத்து கொண்டு..
“சாரி சிபி.. ரொம்ப சாரி.. நான் யோசிக்காம செஞ்சுட்டேன். இனி என்னையோ, நம்மளோட வாழ்க்கையையோ என்னைக்குமே, யாரிடத்திலும் கேவலப்பட விடமாட்டேன். நம்ப பாப்பாவுக்கு ஒரு எக்சாம்பலா தான் இருப்பேன்” என்று கணவனது மார்பில் சாய, சிபியும் அவளை தன்னுள் இறுக்கி உச்சந்தலையில் முத்தமிட்டு அவளை எண்ணி பெருமிதமாய் புன்னகைத்து கொண்டான்.
உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்
அன்று அன்பரசிக்கு வளைகாப்பு. ஏழாம் மாதமே அவள் வீட்டிற்கு திரும்பி வந்திருந்ததால், அதுவும் அப்போதிருந்த வீட்டு சூழலும் சரியில்லாததால் ஒன்பதாம் மாதத்திலே வளைகாப்புக்கான நாள் குறித்தனர்.
அதற்கு பதினைந்து நாட்களுக்கு முன், மருமகள்கள் இருவரையும் அழைத்து கொண்டு நகைக்கடைக்கு சென்றிருந்தார் தெய்வா. பானுமதியை உடன் அழைத்ததற்கு அவர் வீட்டில் இருந்து வருண் குட்டியை பார்த்துக் கொள்வதாக சொல்லிவிட்டார்.
மூவரும் நகைக்கடைக்குள் நுழைய, வாசலுக்கே வந்து வரவேற்ற கடையின் உரிமையாளரின் மகன் “என்ன மேடம், கடை பக்கம் வந்து ரொம்ப நாள் ஆச்சு. இப்ப தான் ஃபோன் பண்ணதா அப்பா சொன்னார். முன்னாடியே சொல்லிருந்தா யாரும் டிரையல் பார்க்காம எடுத்து வைக்க சொல்லிருப்பேன். இன்னைக்கு பிரெஷ் கலெக்ஷன்ஸ் கம்மி தான் மேடம்” என்று வருத்தம் போல் கூறினார்.
அதை கேட்ட தெய்வா “அட, இதுல என்ன இருக்கு. ஒருத்தர் போட்டு பார்த்த நகையை நாம போட்டு பார்த்து தேர்ந்தெடுக்க கூடாதா.. எல்லாம் மனுஷங்க தானே. எனக்கு மட்டும் என்ன கொம்பா முளைச்சிருக்கு” என்றாரே பார்க்கலாம்..
உடன் நின்றிருந்த பணியாளரால் திகைப்பை வெளியே காட்டமுடியாது இருக்க, மாமியார் சொன்னதை கேட்ட அபர்ணாவிற்கு புறக்கையே ஏறியது.
இது எதையும் கண்டுகொள்ளாது நின்றிருந்த அன்புவின் பக்கம் திரும்பிய தெய்வா “உனக்கு பிடிச்ச நகைகளை சீமந்ததுக்கு வாங்கிக்கோ அன்பு” பாசம் வழிய சொன்னார்.
“எதுக்கு அத்தை? நான் நிறைய நகை போடமாட்டேன்” அவள் தயங்கி சொல்ல..
“ப்ச்.. நீ இந்த தெய்வாவோட மருமக. அதுவும், இது தான் உங்களுக்கு ஊரை கூட்டி செய்ய போகிற முதல் ஃபங்ஷன். அத நான் கிராண்டா பண்ணனும்னு நினைக்கிறேன்” என்றார்.
அதேநேரம் மாதம் ஏறிய நேரத்தில் நலங்கிற்கென்று அதிக நேரம் அவளை உட்கார வைக்காத படி அளவாகவே விருந்தினர்களை அழைத்திருந்தனர்.
அபர்ணா தான் அன்பரசிக்கு ஒவ்வொரு நகையாக போட்டு பார்த்து தேர்வு செய்தாள். ஒற்றுமையாக இருக்கும் மருமகள்களை கண்கொட்டாது பெருமிதமாக பார்த்திருந்தார் தெய்வநாயகி.
கழுத்திற்கு லட்சுமி பதித்த பெரிய வைர ஆரம். அதற்கு இடையே இன்னொரு ஆரம். வைர நெக்லஸ், வைர தோடு ஜிமிக்கி, நான்கு ஜோடி வளையல்கள் என அனைத்தும் தேர்ந்தெடுத்தார்கள். தெய்வநாயகியும் தேர்ந்தெடுத்த நகைகளுக்கு பொருத்தமாக வைர ஒட்டியாணம் ஒன்றை அவளுக்கு எடுத்தார்.
அபர்ணாவையும் தனக்கு தேவையான நகைகளை எடுத்து கொள்ள சொன்னார். அவளும் வளைகாப்பில் போட்டு கொள்ள மரகத கற்கள் பதித்த நெக்லஸ், தோடு, வளையல்களை எடுத்தாள்.
அனைத்தையும் பணம் கட்ட அனுப்பிவிட்டு “நான் கேட்டது இருக்கா..? பார்க்கலாமா?” என்று தெய்வநாயகி விற்பனையாளரிடம் கேட்க..
“இருக்கு மேடம். நீங்க பாருங்க. பிடிக்கலன்னா, நீங்க எப்படி கேக்கறீங்களா அப்படியே ஆர்டர் செஞ்சி கொடுத்திடலாம். வாங்க மேம்..” என்றான் பணிவாக.
அவன் முன்னே செல்ல, அவனை பின் தொடர்ந்து மூவரும் செல்ல.. அங்கே, வெள்ளி தொட்டில்கள் இருந்தது.
“இப்போதைக்கு ரெண்டு பீஸ் தான் மேடம் இருக்கு. உங்களுக்கு பிடிக்குதானு பாருங்க” என்றுவிட்டு அவன் ஒதுங்கி நின்றிவிட, இரு தொட்டிலையும் பார்வையிட்ட தெய்வநாயகி அதன் ஊட்டத்தையும், அதிலிருக்கும் வேலைப்பாடுகளையும் ஆராய்ந்தார்.
அபர்ணாவும் மாமியாருடன் சேர்ந்து தொட்டிலை பார்த்து கருத்து பகிர்ந்து கொண்டிருக்க, இருவருக்கும் அருகில் நின்றிருந்த அன்பு “அத்தை.. இப்ப எதுக்கு தொட்டில். அதான் வரு குட்டி தொட்டில் இருக்கே. அது போதாதா?” வருணை தொட்டில் போட்ட நேரம் அது தெய்வநாயகி வாங்கியது என்று அபர் சொல்லி கேட்டதை வைத்து மாமியாரிடம் மென்குரலில் சொன்னாள்.
“ப்ச்.. அது நம்ம வீட்டோட மூத்த வாரிசுக்கு வாங்கினது. இது இளைய வாரிசுக்கு வாங்குறது” என்று புன்னகைத்தார்.
“என்ன அத்தை, சின்ன பேரனுக்கும் தொட்டிலா..? பேத்தியா இருந்தாலும் வெள்ளி தொட்டில்ல போடுவீங்க தான அத்தை..” அபர்ணா தன் குழப்பத்தை சந்தேகமாய் கேட்க..
“ஏன் பேத்தியா இருந்தா என்ன. அதுவும் நம்ம வீட்டு வாரிசு தானே” என்றவரை வியப்பாக அபர்ணாவும், அன்பரசியும் பார்த்தனர்.
இதே முன்பிருந்த தெய்வநாயகியாக இருந்திருந்தால் எனக்கு அடுத்ததும் பேரன் தான் பிறப்பான் என்று கர்வமாக உரைத்திருப்பார். அவரிடம் ஏற்பட்டிருந்த மாற்றம் இருவருக்கும் மகிழ்ச்சியை கொடுத்தது.
ஆர்வமில்லாதிருந்த அன்பரசியை அதட்டி தொட்டில் தேர்வு செய்ய சொன்னார் தெய்வநாயகி. இது பிடிக்கவில்லை என்றால் வேறு பார்த்து கொள்ளலாம் என்றும் கூறினார்.
இரண்டு தொட்டிலையும் தொட்டு, தடவிய அன்பு, அதில் ஒன்றை தேர்வு செய்தாள். தன் பிள்ளைக்கு தேர்வு செய்ததில் அவளுக்கும் மனம் நிறைந்திருந்தது. வயிற்றில் கை வைத்து பூரித்துக் கொள்ள அவர்களது மகவும் அசைவு கொடுத்து பிடித்திருக்கிறது என்றது.
“அன்பு, உங்க வீட்டுல தான குழந்தைக்கு தொட்டில் போடுவோம். வீட்டு அட்ரஸ் கொடுத்திடு. குழந்தை பிறந்ததும் தொட்டிலை அந்த அட்ரஸ்ல இறக்கிடுவாங்க” மருமகளிடம் சொன்னவர், விற்பனையாளர் பக்கம் திரும்பி “இதையும் பில் பண்ணி, நாங்க சொல்றப்போ அனுப்பிடுங்க” என்றார்.
சீமந்தப் புடவை வாங்குவதற்கு முன் கட்ட மருமகளுக்கு விலையுயர்ந்த பட்டுப்புடவை, அபர்ணாவிற்கும், தனக்கும் புடவைகள், அதுபோல் பானுமதிக்கு இரட்டை வட சங்கிலியும், பட்டுபுடவையும் என அனைத்தும் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினர்.
வளைகாப்பிற்கு வீடே விழா கோலம் பூண்டிருந்தது. மாமியார் வாங்கி தந்த அணிகலன்கள் அணிந்து, உடலெங்கும் தங்க இழையால் நெய்யப் பட்டிருந்த பட்டுப்புடவை உடுத்தி, பெண்மை நிறைவு பெரும் பெரும்பேரான தாய்மை தந்த செருக்கோடு வரவேற்பறையின் நடுவில் போட்டிருந்த ராஜ நாற்காலியில் அனைவருக்கும் வணக்கம் சொல்லி அமர்ந்த போது, ஓர் அரசியாகவே தோற்றமளித்தாள் அன்பரசி.
கலையும் தாய்வீட்டு சீரில் ஒரு குறையும் வைக்காது அனைத்தும் செய்து சபையை நிறைத்திருந்தான். அவன் தங்கைக்கு எடுத்திருந்த பச்சை நிற பட்டுப்புடவை, தெய்வநாயகி எடுத்ததற்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல் இருந்தது. அதில் விநாயகம், சரிதாவிற்கு அப்படியோர் பெருமை.
நந்தனா தான் “இவளுக்கு மட்டும் எத்தனை வாழ்க்கை அமைஞ்சாலும் எப்படி தான் வசதியான வீடாவே அமையுதோ..” அந்த வீட்டையும், அதன் வேலைப்பாடுகளையும் பார்த்த நொடியில் இருந்து கறுவி கொண்டிருந்தாள். சிலரை திருத்த முடியாது, பொருட்படுத்தாமல் விடுவது நல்லது.
சிறிய மருமகளின் பெயரில் தெய்வநாயகி அபிஷேகத்திற்கு சொல்லியிருக்க, அபிஷேக பாலும், அம்மன் அருளாசியோடு கிடைத்த வளையலும் பூட்டி வளைகாப்பை தொடங்கினர். அவரை தொடர்ந்து வந்தவர்களும் அன்பரசிக்கு வளை பூட்டி தாயையும் சேயையும் வாழ்த்திவிட்டு செல்ல, அனைத்தையும் நிறைவாக பார்த்திருந்தான் சிபி.
வளைகாப்பு முடிந்து அன்பரசி தன் தாய் வீட்டில் இருந்தாள். அவளது பேறு காலத்தை அன்னையுடன், பிறந்த வீட்டில் கழிக்கட்டும் என்று விரும்பியே தான் அனுப்பி வைத்தான் சிபி. நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனைவியை சென்று பார்த்துவிட்டும் வந்திருந்தான்.
அன்றொரு நாள் பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் முன் மனைவியை பார்த்துவிட்டு செல்லலாம் என்று சிபி மாமியார் வீட்டிற்கு சென்ற நேரம் அன்பரசிக்கு வலியெடுக்க தொடங்கிவிட்டது. காரில் அனைவரும் மருத்துவமனைக்கு விரைய, அதற்குள் தெய்வநாயகிக்கும் தகவல் சொல்லிவிட அவர்களது மொத்த குடும்பமும் அங்கிருந்தது.
சிபியும் மனைவியின் கைகளை பிடித்துக் கொண்டு பிரசவ அறையில் அவளுடனிருக்க, அன்னைக்கு அதிக நேரம் சிரமம் கொடுக்காது பூவுலகில் ஜனித்தாள் அவர்களது புதல்வி.
மகளை முதல் முறையாக கைகளில் வாங்கியவனின் கண்கள் கண்ணீரில் நிறைந்து விட்டது. மகளது பட்டு கன்னத்தில் அழுந்தாது மென்முத்தம் பதித்தவன் தந்தையின் ஸ்பரிசத்தில் அழகாய் கன்னம் சுருக்கி கண்சிமிட்டிய பூஞ்செண்டை மீண்டும் மருத்துவரிடம் கொடுத்தான்.
பெண் பிறந்திருக்கிறாள் என்ற தகவல் வெளியே இருப்பவர்களுக்கு பகிரப்பட்டாலும், எதிர்ப்பு சக்திக்காக சிறிது நேரம் தந்தையின் வெற்று மார்பில் குழந்தையை கிடத்தி வைத்திருந்தவர்கள், பின் குளிக்கவும் வைத்தே குழந்தையை சிபியிடம் கொடுத்தனர்.
அவனும் அந்த வீட்டு மகாலஷ்மியின் வரவை எதிர்நோக்கி ஆசையாக காத்திருந்தவர்களிடம் வந்தவன், குழந்தையை உயர்த்தி காண்பித்தான்.
ஒவ்வொருவருக்கும் குழந்தையை தூக்கி, கொஞ்சும் ஆவல் இருந்தாலும் முதலில் யார் வாங்குவது என்று ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்திருக்க, “உங்க வீட்டு குழந்தையை நீங்களே வாங்குங்க மா” என்று சரிதா சொல்லவும், கண்கள் கலங்க பேத்தியை கையில் வாங்கினார் தெய்வநாயகி..
ஏழு ஆண்டுகளுக்கு பிறகு..
அந்த வீடெங்கும் நவீனாவின் கொலுசொலியே சங்கீதமாய் ஒலித்துக் கொண்டிருந்தது. அது நவராத்திரி நேரம். அன்பரசியும் மகளுக்கு தினம் ஒரு புது பட்டுப்பாவாடை அணிவித்து, அதற்கேற்றாற் போல் ஆபரணங்களும் போட்டு விட்டு, மகளுடைய இடைவரை நீண்டிருந்த அடர்ந்த கூத்தலில் சவுரி வைத்து மேலும் நீட்டமாக பின்னி முனையில் குஞ்சலம் வைத்து, பூச்சூடி தயார் செய்துவிடுவாள். இருந்தும் குழந்தையின் சருமம் என்பதால் கண்ணுக்கு வீட்டிலே தயாரித்த மை தவிர வேறெந்த ஒப்பனையும் இருக்காது.
தன்னை ஆளுயர கண்ணாடி முன் நின்று பார்த்த நவீனாவிற்கு எதுவோ குறைவாக தோன்ற “பெரியம்மா..” என்று அபர்ணாவின் அறைக்கு ஓடினாள்.
தங்கையின் குரல் கேட்டு “அம்மா, மேக்கப் பிசாசு வந்திடுச்சு” என்று தாயிடம் சொன்ன வருண், அதற்கு தாய், தந்தையிடம் முறைப்பை பெற்று கொண்டு, அடுத்து என்னென்ன அலப்பறைகள் நிகழும் என்பதை அறிந்தவனாய் “நான் எங்க சித்தி ரூம் போறேன்” என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
“பெரியம்மா, அம்மா பேஸுக்கு ஒண்ணுமே போட மாட்றாங்க. எனக்கு லிப்ஸ்டிக், பிலஷ்(Blush) எல்லாம் வேணும்..” என்று உரிமையாக நவீனா தன் பெரியம்மாவிடம் கேட்க, அவளும் மகளை அமர்த்தி முக அலங்காரம் செய்ய தொடங்கினாள்.
அபர்ணா மகளுக்காக பீட்ரூட்டை கொண்டு வீட்டிலே தயாரித்த உதட்டுச்சாயம், தக்காளி மற்றும் பீட்ரூட் கொண்டு செய்த முகப்பூசும் போட்டுவிட, பெரியம்மாவிற்கு பொறுமையாக கன்னம் உயர்த்தியும், உதடுகளை முன்னே பிதுக்கியும் காண்பித்திருந்தாள் அவளது குட்டிம்மா.
மகளது அலங்காரத்தை கண்களில் புன்னகையோடு பார்த்து ரசித்திருந்தான் அசோக்..
சிபியின் தந்தை பூபதி கேசவனுக்கு எட்டு வயது இருக்கும் போது ஒரு தங்கை பிறந்து, பிறந்த பதினைந்து நாட்களிலேயே கடவுளுக்கு அக்குழந்தையை மிகவும் பிடித்துவிட உடனே திருப்பி அழைத்தும் கொண்டார். அதில் அவர் ஒரே மகனாக நின்றுவிட்டார். அவருக்கு பிறந்த அசோக்கும், சிபியும் ஆண்பிள்ளைகளாக இருந்துவிட, அடுத்து அசோக்கிற்கும் வருண் ஆண்பிள்ளையாக பிறந்தான்.
தலைமுறை தலைமுறையான பூபதியின் பெண்பிள்ளை ஆசையை நவீனா பிறந்து தான் தீர்த்து வைத்தாள்.
இதில் அசோக், அபர்ணா தம்பதிக்கும், சிபி, அன்பரசிக்கும் இரண்டாவது குழந்தை ஆண் குழந்தைகளாகி விட, நவீனா சக்கரவர்த்தினி அந்த வீட்டின் ஒரே பெண் தேவதை ஆனாள். அதுவும் அறுபது ஆண்டுகளுக்கு பிறகு அந்த வீட்டிற்கு கிடைத்த லஷ்மியின் அனுக்கிரஹம். அதுவும் பாட்டி தெய்வநாயகியை உருவத்திலும், செயலிலும், பேச்சிலும் எண்ணத்திலும் கொண்டு பிறந்திருப்பதால் அசோக் மகளிடம் மரியாதை பன்மையுடன் தான் உரையாடுவான்.
முதலில் ஆண் குழந்தை தான் பிறக்க வேண்டும் என்ற மாற்று கருத்து தெய்வாவிற்கும், அசோக்கிற்கும் இருந்தது என்னவோ உண்மை தான். இப்போது நவீனாவின் வரவிற்கு பிறகு அவளது அன்பில் அதிகம் மயங்கி இருப்பவர்களும் அவர்கள் இருவரே..
அதிலும் தம்பி செய்யும் ஒவ்வொன்றையும் பெருமையாய் பார்க்கும் அசோக், தன்னை போல் அல்லாது பெண்பிள்ளை தான் வீட்டின் ஒளி என்பதை சரியாக புரிந்திருக்கும் தம்பியின் அறிவை மெச்சாத நாளில்லை.
வருணுக்கு ஒன்பது வயதாக, நவீனாவிற்கு ஏழு முடிய, அசோக், அபர்ணாவின் இரண்டாம் மகன் கவின் சக்கரவர்த்திக்கு ஆறு நடக்க, சிபி, அன்பரசியின் இரண்டாம் மகன் ஆதித்ய சக்கரவர்த்தி தான் வீட்டிற்கு இளையவன். அவனுக்கு இரண்டரை வயதாகிறது.
சிபி இப்போது சதாப்தி, ராஜ்தானி போன்ற மணிக்கு 120தில் இருந்து 150 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் அதிவேக இரயில்களை இயக்கி கொண்டிருக்கிறான். அபர்ணா பிள்ளைகள் நால்வரின் பொறுப்பை தான் ஏற்றுக்கொள்ள, அசோக்கோடு சேர்ந்து அன்பரசியும் அவர்களது நிறுவனங்களை கவனித்து கொள்கிறாள்.
மாலை முழுவதும் கொலு, பூஜை, பாட்டு கச்சேரி, வீட்டிற்கு வந்தவர்களை உபசரித்து தாம்பூலம் தருவதென நேரம் கழிந்துவிட, அன்பரசி தான் வீட்டிலிருக்கும் வளர்ந்த பிள்ளைகள் மூவருக்கும் உணவு ஊட்டினாள். ஆதித்யாவிற்கு இன்னும் தாய் பாலை முழுதாக நிறுத்தாததால், இரவில் உறங்க போவதற்கு முன் மட்டும் பால் கொடுக்கிறாள் அன்பு.
நேரமாவதை உணர்ந்து பிள்ளைகளை படுக்க சொல்ல, தன் தினப்படி கதையை ஆரம்பித்தாள் நவீனா..
“பெரியப்பா, நான் அப்பா, அம்மா ரூம் போக மாட்டேன். நான் உங்க கூட தான் தூங்குவேன்..” மின்தூக்கியில் ஏறாமல் தந்தையிடம் அலுவலக வேலைகளை ஆலோசித்திருந்த அசோக்கின் காலை பிடித்துக் கொண்டு அழுது, ஆர்ப்பாட்டம் செய்தாள்.
மகளது கண்ணீரில் துடித்த அசோக் “அன்பு, எங்க இளைய ராணியை அழ வைக்காதமா. அப்புறம் அவங்க அழுதது தான் என் நெஞ்சுல பாரமா இருக்கும். இன்னைக்கு எங்க கூடவே தூங்கட்டுமே..” என்று தங்களுடனே நிறுத்திக் கொண்டான்.
நேரம் இரவு மூன்றை நெருங்கி கொண்டிருக்க, அப்போதே பணி முடிந்து வீட்டிற்கு திரும்பினான் சிபி. சத்தம் எழுப்பாமல் அறை கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல, அங்கே அன்பரசி கால்களை குறுக்கிக் கொண்டு உறங்கி கொண்டிருப்பதை கண்டான். முன்பெல்லாம் அவன் வரும் வரை உறங்காமல் விழித்திருப்பாள்.
இப்போது அவனது சொல்லுக்கு கட்டுப்பட்டு விழித்திருக்காது உறங்கிவிட்டிருந்தாலும், கணவன் நல்ல படியாக திரும்பி வரவேண்டும் என்ற பயம் இப்போதும் அவளுக்கிருக்க, அது அவளது புருவ முடிச்சுகளில் நன்றாக தெரிந்தது.
தன்னை சுத்தப்படுத்தி கொண்டு வந்தவன், மனைவியின் கன்னத்தோடு கன்னம் வைத்து இழைய, புருவ முடிச்சி அறுபட்டதோடு இதழில் சிரிப்பு வந்தமர்ந்தது.
“லவ் யு டி ராசி..” காதலாய் அவள் நெற்றி முட்டி முத்தம் வைக்க..
“லவ் யு டூ சிபி. பத்திரமா வந்துட்டீங்களா..?” என்றாள் முணுமுணுப்பாய்..
மனைவியின் பதிலில் விழித்திருக்கிறாளோ என்று அவளை உற்று நோக்க, அவளது சீரான சுவாசம் உறக்கத்தில் தான் இருக்கிறாள் என்பதை உணர்த்த, தன்னவளின் தூய அன்பில் உடம்பில் புது இரத்தம் பாய, காற்று கூட புகாத அளவிற்கு அவளை இழுத்தணைத்தான் சிபி.
அதில் பட்டென கண்களை திறந்த அன்பரசி எதிரில் கணவன் இருப்பதை கண்டு “எப்போ வந்தீங்க சிபி..?” என்று தன் குண்டு கண்களை விரித்தாள்.
“அப்ப்பா.. விட்டா ஐஸ் வெளில வந்திடும்” என்று கேலி செய்தவன், விழிகளில் முத்தமிட்டு “நீ மட்டும் தனியா தூங்கற. எங்க நம்ம மழலைகள் பட்டாளம்?” என்றான்.
“வரு குட்டி பானு பாட்டி கதை சொல்லுவாங்கனு அவங்க ரூம்ல தூங்கறான். கவின் குட்டியும், ஆதி குட்டியும் அத்தை, மாமா கூட தூங்கறாங்க.. உங்க பொண்ணு இருக்காளே.. வழக்கம் போல அழுது, ஆர்ப்பாட்டம் பண்ணி அவ பெரியப்பா ரூம்ல படுத்துக்கிட்டா.”
சிபி இல்லாத நாட்களில் ஆண்பிள்ளைகள் மூவரும் அவளுடன் தான் உறங்குவர். சிலநேரங்களில் நவீனாவும் உடன் உறங்குவாள். அதுவே, அவன் வரும் நாளன்று இதே கதை தான். அவர்களுக்கு தனிமை கொடுக்க பெரியவர்கள் செய்யும் வேலை இது. சித்தியை தனியாக உறங்கவிடாத வருணையும் கதையின் ஆசை காட்டி தன்னுடன் படுக்க வைத்து கொள்வார் பானு பாட்டி.
“என் பொண்ண உனக்கு குறை சொல்லணுமே.. பல்லாயிரம் அடிகளுக்கு மேல மலைகள்ல உருவான மலைகளின் ராணிடி என் சக்கரவர்த்தினி..” மகளை பற்றி உயர்வாக சொல்லி அவன் பெருமிதம் கொள்ள..
அவளுக்கு மட்டும் அது இல்லாமலா இருக்கும்? அதுவும் மகள் மாமியாரின் பிரதி பிம்பம் ஆயிற்றே.. இச்சிறுவயதிலேயே அவளுக்கிருக்கும் புத்தி கூர்மையிலும், அறிவிலும் அன்புவிற்கும் பெருமை தாங்காது.
அப்போது “அப்போ யாருமில்ல..?” கைகளை பின்னுக்கு கொண்டு போய் சோம்பல் முறித்த சிபி, “எனக்கு செமையா பசிக்குது டி..” என்றான் குறும்பு இழையோடும் குரலில்.
அவளோ புரியாதவளாக “இப்போ செஞ்சிடுறேன்..” என்று அங்கிருந்து எழ..
“அடியேய், அதெல்லாம் நான் ஜோலார்பேட்டை ஜங்ஷன்லயே சாம்பார் வடை வாங்கி சாப்பிட்டுட்டேன். பசங்க வேற இல்லை. இது காதல் பசி..” என்று கிறங்கி சொல்ல, கணவனுக்கு இல்லாதது அவளது வாழ்வில் என்ன இருக்கின்றது.
தன் வாழ்வின் அர்த்தமானவனுக்கு விரும்பியே தன்னை அவனிடம் ஒப்படைத்தாள் சிபி சக்கரவர்த்தியின் மனதின் அரசி, அன்பரசி..
விதியால் பழிக்கப்படும் ஒவ்வொரு பெண்ணிற்கும் சிபி போல் ஓர் தன்னலமற்ற துணை கிடைக்க வேண்டும். கடவுளே கைப்பெண்ணிற்கும், வாழ்வில் தோல்வியுற்றவர்களுக்கும் இரண்டாம் வாய்ப்பை தர தயாராக இருக்கும் போது, மனிதர்கள் யார் அவர்களது வாழ்வை விமர்சிக்க..? விடையறியா அவளது வாழ்க்கையை மீண்டும் கேள்விக்குறி ஆக்காமல் இருப்போம்.. பெண்ணறம் காப்போம்..
மனிதி தலை நிமிர்ந்து வெளியே வரட்டும்.. உலகை வெல்லட்டும்.. வாழ்வாங்கு வாழட்டும்..
இதில், தெய்வா வழுக்கி விழுந்தபோது எண்ணெயை யார் தான் ஊற்றியதென்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். உண்மையில், அதை ஊற்றியது குழந்தை வருண் தான். பிரவசத்திற்கு பின் முடி அதிகமாக கொட்டுகிறது என்று அபர்ணா தான் அன்பரசியிடமிருந்து அவள் பயன்படுத்தும் எண்ணெயை வாங்கினாள். அதை அவள் கவனக்குறைவாக வைத்துவிட, மகனும் விளையாட்டில் எடுத்து கீழே கொட்டிவிட்டான். இது பற்றி இப்போது வருணிடம் கேட்டாலும், பாவம் அவனுக்கு அது தெரியாது. எது எப்படியோ அந்த சம்பவம் தானே கலகமும் பிறந்து, நன்மையிலும் முடிய காரணம்..
வாழ்க்கையின் ஏற்ற, தாழ்வுகளை தலைக்கும் ஏற்றாது, மனதையும் வருத்தி கொள்ளாது இன்முகத்துடன் கடந்துவிட்டால் போதும், நமக்கு உண்டான பலன் ஒரு நாள் நிச்சயம் கிடைக்கும்..
ஹலோ ப்ரண்ட்ஸ், கதையை முடித்துவிட்டேன். இது தான் நான் எழுதிக் கொண்டே இங்கேயும் பதிந்த முதல் கதை. ஆரம்பிக்கும் போது கதை எப்படி வரும், உங்களுக்கெல்லாம் பிடிக்குமா என்று ஏகப்பட்ட சிந்தனை. பட், முந்தைய கதைகளை விட இதற்கு கிடந்த ரெஸ்பான்ஸ் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
எனக்கும் ஒரு நல்ல கருத்தை பதிந்திருக்கிறேன் என்று மனதிற்கு மிகவும் நிறைவாக இருந்தது. அதனால் தான் சுபம் போட்டு முடித்திருக்கிறேன்.
எப்போதும் போல் இது உங்களுக்கானது அம்மா. அண்ட் திஸ் ஸ்டோரி இஸ் ஸ்பெஷலி டெடிகேடட் டூ யூ அப்பா
வாய்ப்பு கொடுத்த ஶ்ரீ மேமுக்கு நன்றி. இந்த கதையையும் தொடர்ந்து படித்து ஆதரவளித்த அனைத்து ப்ரண்ட்ஸூக்கும் நன்றிகள் பல
குறிப்பாக ஒவ்வொரு எபிக்கும் கமென்ட் செய்த @Joe Deepan க்கு தேங்க்ஸ் மச்சி
கதை வரும் ஞாயிற்றுகிழமை(22.12.2024) வரை நம் சைட்டில் இருக்கும்.. படித்து பார்த்துவிட்டு மறக்காமல் உங்கள் ருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து விடுங்கள் நண்பர்களே..
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.