All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிலா ஶ்ரீதரின் "எங்கேயும் நீயடி.. போகுதே உயிரடி..!!!" - கதை திரி

Status
Not open for further replies.

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹலோ ப்ரண்ட்ஸ்,

இதோ அடுத்த கதையுடன் வந்துவிட்டேன்.

கதையின் பெயர் - எங்கேயும் நீயடி.. போகுதே உயிரடி..!!!

இது சிபி சக்கரவர்த்தி, அன்பரசியின் அழகிய காதல்...


முந்தைய கதைகளுக்கு கொடுத்த ஆதாரவை இக்கதைக்கும் தாருங்கள் ப்ரண்ட்ஸ்.


அன்புடன்,
நிலா ஶ்ரீதர்
 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 1

காக்கைச் சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரியநிறந் தோன்றுதையே நந்தலாலா
பார்க்கு மரங்கலெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சைநிறந் தோன்றுதையே நந்தலாலா
கேட்கும் மொழியிலெல்லாம் நந்தலாலா - நின்றன்
கீத மிசைக்குதடா நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னைத்

தீண்டுமின்பம்ந் தோன்றுதடா நந்தலாலா.

யாருமற்ற அந்த பெரிய கூடத்தில் கண்களில் நீர் வழிய வீணையை மீட்டுக் கொண்டே தன் தேன்மதுர குரலில் பாடி கொண்டிருந்தாள் அவனது ராசி.

வாழ்க்கையின் அர்த்தத்தை தொலைத்திருந்தவளுக்கு வாழ கற்று கொடுத்தவன் அவன் தானே. இன்று அவனை விட்டு வெகு தூரத்தில் வந்திருக்க வேண்டிய கட்டாயம்.

எத்தனை எத்தனை இன்பங்களை திகட்ட திகட்ட அவளுக்கு கொடுத்திருக்கிறான். இப்போதும் இந்த பாடலை பாடும் போது அவன் அவள் மடியில் கண்களை மூடி படுத்து அவள் பாடுவதை லயித்து கேட்பது நினைவில் ஆடியது. அது மட்டுமா அவள் அவன் தலையை கோதி கொடுக்க அவளது வயிற்று பகுதியை மறைத்திருக்கும் புடவையை விலக்கி வெற்று வயிற்றில் முகம் புதைத்து அவளுக்கு சிலிர்க்க செய்வான். அதில் சுருதியோடு சேர்ந்து அவளும் தப்பி போவாளே. இன்றும் தன் வயிற்றை வருடி கொடுத்துக் கொண்டாள்.

மனதில் அவன் நினைப்பும், உடலில் அவன் வாசமும் நிறைந்திருக்க, அவர்களது தூய அன்பை புரியாமல் பேசிய வார்த்தைகளுக்காக அவனை விட்டு விலகி வந்துவிட்டோமே என்று எண்ணும் போதே கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தது.

கண்ணீரை துடைத்தவள் நினைவுகளில் பின்னோக்கி சென்றாள்.

இரண்டு வருடங்களுக்கு முன்..

தான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் ஓட்டுநருக்கு பணத்தை செலுத்தி விட்டு கீழே இறங்கியவள் காவலாளியிடம் யாரை காணவேண்டும் என்ற விபரம் சொல்ல, அவரும் வீட்டினுள் இருப்பவருக்கு தகவல் சொல்லி அனுமதி பெற்று கொண்டே அவளை உள்ளே அனுப்பினார்.

இவள் உள்ளே வருவதற்கும் பொறுக்காத அவளது தோழி வாசலுக்கே வந்து “வா டி.. உன்னை நேர்ல பார்த்து எத்தனை வருஷமாச்சு” என்று ஆர்பரித்தவள் அவளை அணைத்து விடுத்து “சாப்பிடறியா இல்லையா, இப்படி இளைச்சி போயிருக்க” தோழியின் மெலிந்த தோற்றத்தை பார்த்து கவலையாக கேட்டாள்.

“அப்படியெல்லாம் இல்ல. எப்போவும் போல தான் இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க” அவளோ எதிரிலிருப்பவளை நலம் விசாரித்தாள்.

“எனக்கு என்ன. நல்லா இருக்கேன். மாசமானதுல இருந்து வீட்டுல இருக்க ஒவ்வொருத்தரும் கவனிக்கிற கவனிப்புல ரெண்டு மூணு சுத்து பெருத்துட்டேன்” தன்னை கண்களாலே காட்டி சொன்னவள் அவள் காதருகே குனிந்து “இப்போ எல்லாம் ஃபீலிங்கே வராத என் புருஷன் சிட்டி ரோபோ கூட தாங்கு தாங்குனு தாங்குறான்” என்று சிரித்து விட்டு

“நான் பாரு வாசலிலேயே நிக்க வச்சி பேசிட்டு இருக்கேன்.. உள்ளே வா அன்பு” என்று அவளை அழைத்து சென்ற அபர்னா சற்றே தெரிய தொடங்கிய தன் வயிற்றை பிடித்துக் கொண்டு உள்ளே செல்ல, அவளை தொடர்ந்து தனக்கே தெரியாமல் தன் வலது காலை எடுத்து வைத்து அந்த வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தாள் அன்பரசி.

அன்பரசியை சோபாவில் அமர்த்திவிட்டு அவள் வேண்டாம் என்று மறுத்தும் அவளுக்கு குடிக்க சூடாக ஏதாவது எடுத்து வருகிறேன் என்று அபர்னா சமையலறைக்கு சென்றாள்.

புது இடத்தில், அதுவும் அங்கு யாரும் இல்லாத போது நம் கண்கள் நம்மை மீறி அந்த வீட்டை சுற்றி பார்வையை சுழலவிடும். ஆனால் அன்புவோ தன் பார்வையை கொஞ்சமும் நகர்த்தாமல் நிலத்தை பார்த்து சோபாவில் அமர்ந்திருந்தாள்.

அந்நேரம் வெளியே வந்த அபர்ணா அன்பரசியின் அருகில் சென்றமர, அவளுடன் வந்த அவ்வீட்டில் பணிபுரியும் பார்வதி ஆவி பறக்க காப்பியும் இருவரும் சாப்பிட தின்பண்டமும் எடுத்து வந்து எதிரே இருக்கும் டீபாயில் வைத்தார்.

காப்பியை வாங்கி மீண்டும் டீபாயில் வைத்த அன்பு “செக்கப் போனீங்களா” என்று அபர்ணாவை விசாரிக்க

“போயிட்டு வந்தேன் அன்பு. பேபியோட க்ரோத் நல்லா இருக்குன்னு சொன்னாங்க. வீட்டுலயும் ஆள் மாத்தி ஆள் யாராவது கூடவே இருக்காங்க. சரி, வேலையெல்லாம் எப்படி போகுது. இங்க நான் ப்ரெக்னன்ட்னு தெரிஞ்சதும் ஜாப் போக வேண்டாம்னு சொல்லிட்டாங்க. அப்போ வேற எனக்கு தலைசுத்தல், வாந்தி எல்லாம் இருந்துச்சு. அதான் நானும் ஒன்னும் சொல்லல” என்றாள் அபர்ணா.

அன்பரசி அபர்ணாவை விட மூன்று வருடம் சிறியவள். இருவரும் ஒரே கம்பனியில் ஒரே ப்ரொஜெக்ட்டில் பணிபுரிந்திருந்தனர்.

அபர்ணா வசதியான வீட்டு பெண். அவளது தந்தைக்கு அம்பத்தூரில் சொந்தமாக மூன்று பேக்டரி இருக்கின்றது. அவள் அவளது வீட்டிற்கு ஒரே பெண்ணும். அவள் வேலைக்கு வருவதே பொழுதுபோக்கிற்கும் சம்பளத்தை வைத்து சுதந்திரமாக செலவு செய்து ஊர் சுற்றுவதற்கும் தான்.

எல்லாம் இருந்தும் ஜாதகத்தில் ஏதோ கோளாரென அபர்ணாவிற்கு இருபத்தியொன்பது வயதில் தான் திருமணமானது.

அதேநேரம் அன்பரசியோ குடும்ப தேவைக்காக வேலைக்கு செல்பவள். அவளது வீட்டில் அவளும் அண்ணனும் என இருவர். மகனுக்கு பிறகு பத்து வருடம் கழித்து அன்பு பிறந்ததால் வீட்டின் இளவரசியாகவே அவளை செல்லமாக வளர்த்திருந்தாலும், தந்தை பணி ஓய்வு பெற்றுவிட, அண்ணனும் தன் மனைவியோடு தனி குடித்தனம் சென்றுவிட்டிருக்க இப்போது இவள் வேலைக்கு செல்வது இன்றியமையாததாக ஆகிவிட்டது.

வேலையில் சேர்ந்து ஐந்து வருடங்கள் மட்டுமே ஆகியிருந்தாலும் அன்புவின் கடின உழைப்பால் ஒன்றரை வருடம் வெளிநாட்டில் வேலையில் இருந்துவிட்டு திரும்பியிருக்கிறாள். அவள் ஜெர்மனியில் இருந்த போது தான் அபர்ணாவிற்கு வரன் முடிவானதோடு திருமணமும் முடிந்து இப்போது அவள் ஐந்து மாதம் கருவுற்றிருக்கிறாள்.

பதினைந்து நாட்களுக்கு முன்னே ஜெர்மனியில் இருந்து வந்த அன்பு, இங்கே முடிக்க வேண்டிய வேலைகளை முடித்துக் கொண்டு இப்போது மாதமாக இருக்கும் தன் தோழியை காண வந்திருக்கிறாள்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் என்ன தான் காணொளி அழைப்பில் பேசி கொண்டாலும், இப்போதே ஒன்றரை வருட கதைகளை நேரில் பேசி கொள்ள சந்தர்ப்பம் கிடைக்க, இருவரும் அதில் ழூழ்கி போக அப்போதே கீழிறங்கி வந்தான் அந்த இளைஞன்.

ஆறடிக்கு மேல் உயரம், மாநிறத்திற்கும் சற்று மேலான நிறம், பரந்த மார்பு, நேர்கொண்ட பார்வை, கூர் நாசியோடு சரியாக கத்தரித்திருந்த மீசையென நேர்த்தியாக இருந்தான். உடலை பிடித்துக் கொண்டு இருந்த அவனது ட்-ஷர்ட்டில் அவனது கட்டுக்கோப்பான உடலும் புஜங்களும் தெரிந்தது.

தோழிகள் இருவரும் அபர்ணாவின் திருமண ஆல்பத்தை பார்த்திருக்க இவன் கீழே வந்ததை அவர்கள் கவனிக்கவில்லை. தனக்கு முதுகு காட்டி அமர்ந்து பேசியிருந்தவர்களை பார்த்து கொண்டே சமையலறைக்குள் சென்றவனோ அடுத்த பதினைந்து நிமிடங்களில் அவர்கள் முன் ஒரு டிரேவை நீட்டினான்.

இருவரும் அவனை நிமிர்ந்து பார்க்க, புன்னகை முகமாக நின்றிருந்தவனை பார்த்த அபர்ணா “அது எப்படி சிபி டைமுக்கு டைம் எல்லாம் செய்யறீங்க” என்று ஆச்சர்யப்பட..

“அசோக் இல்லாதப்போ நான் தானே அண்ணி உங்களை பத்திரமா பார்த்துக்கணும்” என்று புன்னகைத்தான் சிபி.. சிபி சக்கரவர்த்தி.

அவனது அண்ணன் அசோக் சக்கரவர்த்தியும் தந்தை பூபதி கேசவனும் அவர்களது கார்மெண்ட்ஸுக்கு தேவையான மெட்டீரியல்களை நல்ல தரத்தில் வாங்க வெளியூர் சென்றிருக்க, அவனது அன்னையோ வெளியில் சென்றிருக்கிறார்.

அதனால் இன்று அண்ணியை பார்த்து கொள்ளும் பொறுப்பு சிபியினுடையது. அவன் வேலைக்கு செல்லும் நேரம் சம்மந்தி அம்மா திரும்பி வரும் வரை அபர்ணாவின் அம்மா மகளுக்கு துணையாக வந்து இருப்பார்.

இரண்டு பெரிய கண்ணாடி குவளையில் இருந்த ஆப்பிள் பழச்சாறில் அபர்ணா ஒன்றை எடுத்துக் கொள்ள, இன்னொன்றை அன்பரசியின் முன் நீட்டி “எடுத்துக்கோங்க” என்றான் சிபி.

அதை கேட்ட அன்பு அவனை விழித்துப் பார்க்க, அப்போதே ஒருவரை ஒருவர் தெரியாதென்பதே அபர்ணாவின் புத்திக்கு எட்ட “நான் பாரு, சாரி சாரி.. சிபி, இது என் ப்ரண்ட் அன்பரசி.. ஒண்ணா தான் ஒர்க் பண்ணிட்டு இருந்தோம்” என்று சிபியிடம் சொன்னவள் “அன்பு, இது சிபி.. என் மச்சினர். ஜூஸ் எடுத்துக்கோ டி” என்று அன்பரசியிடமும் சொன்னாள்.

அப்போதும் அவள் தயங்க, அதை புரிந்தவனாக மேசை மீது வைத்துவிட்டு மீண்டும் சமையலறை சென்று தனக்கு ஒரு கண்ணாடி குவளையில் பழசாறை எடுத்துக் கொண்டு மாடியிலிருக்கும் தன்னறைக்கு சென்றுவிட்டான் சிபி.

இன்னும் ஒரு மணிநேரமாகியிருக்க, இப்போது நன்கு தயாராகி இருந்தவன் தன் வண்டி சாவியை விரலில் சுழற்றி கொண்டே கீழே வந்து, வாசலருகே இருந்த காலணி அடுக்கு தட்டில் இருந்து ஷுவை எடுத்து அதற்கு பாலிஷ் போட்டுக் கொண்டிருந்தான்.

அப்போது “ஜெர்மனி போன கொஞ்ச மாசத்துலயே வட்டிக்கு வாங்கியிருந்த பணத்தை அடைச்சிட்டேன். இப்போ பேங்க்ல இருந்த கடனையும் கட்டி முடிச்சிட்டேன். அடுத்து ஒரு நல்ல வீடா பார்த்து மாறி போய்டணும்னு பார்க்கறேன்” சிபியை கவனிக்காத அன்பரசி அபர்ணாவிடம் பேசிக் கொண்டிருக்க, அது அவனுக்கும் கேட்டிருக்க எத்தனை பொறுப்பான பெண்ணென்று எண்ணிக் கொண்டான்.

பேசி முடித்த அன்பு சில நிமிடம் மௌனமாக இருக்க “எல்லாம் சரி ஆகிடும் அன்பு“ என்று அபர்ணா தோழியின் கையை அழுத்திக் கொடுக்க அன்பரசியும் மெலிதாக இதழ் விரித்தாள்.

எதையோ விழுங்குவதாக அங்கிருந்த தண்ணீரை எடுத்து குடித்த அன்பு தன் கை கடிகாரத்தை உயர்த்தி பார்த்து “டைம் ஆகிடுச்சு அபர்ணா. நான் கிளம்பறேன். உடம்பை பார்த்துக்கோங்க” என்று சொல்லிக் கொண்டே தன் கைபேசியை எடுத்து வண்டிக்கு பதிய ஒரு வண்டியும் பதிவாகவில்லை.

தோழியின் முகம் வருத்தத்தை காட்டுவதை கண்ட அபர்ணா “என்னாச்சு அன்பு. கேப் புக் ஆகலையா” என்று விசாரிக்க

“தெரியலங்க அபர்ணா. எதுவும் புக் ஆக மாட்டேங்குது” என்று கவலை தோய்ந்த குரலில் சொன்னாள்.

அப்போதே மேலே தன்னறையில் பார்த்த செய்தி சிபிக்கு ஞாபகம் வர “அண்ணி, கேப் டிரைவர்ஸெல்லாம் ஸ்ரைக் பண்றாங்க” என்று சொல்ல அன்பரசியும் அபர்ணாவும் அதிர்ந்து போனார்கள். அவர்களின் முகத்தை வைத்தே அதை புரிந்தவன் “கவர்ன்மென்ட் எதோ நியூ ரூல்ஸ் கொண்டு வந்திருக்காங்களாம். அதுல அவங்களுக்கு உடன்பாடு இல்லாம இத்தனை நாள் பேச்சுவார்த்தை நடந்து தோல்வில முடிஞ்சு, இப்போ ஸ்ரைக்னால எந்த ஆப்லயும் கேப்போ ஆட்டோவோ புக் ஆகாது அண்ணி” என்று விளக்கமும் தந்தான்.

விசயத்தை கேட்ட அன்பரசிக்கு இப்போது எப்படி செல்வது என்ற கவலை இருந்தாலும், சட்டென யோசனை தோன்றியவளாக “நான் ஆட்டோ பிடிச்சு போயிடுறேன்ங்க அபர்ணா” என்று முகம் மலர சொல்ல..

“இல்ல அன்பு, இது கொஞ்சம் பாஷ்ஷான ஏரியா. உள்ள ஆட்டோவெல்லாம் வராது” அபர்ணா வருத்தமாக சொல்ல அன்பிற்கு இப்போது அழுகையே வரும் போல் இருந்தது.

“மாமாவும் அவரும் ஒரு கார்ல போயிருக்காங்க. அத்தை அவங்க கார்ல போயிருக்காங்க. வீட்டுல இருந்த காரையும் அம்மாவை கூப்பிட்டு வர அனுப்பி இருக்கேன்” இப்போது தோழியை எப்படி அனுப்புவது என்று தனக்கு தானே சொல்லியிருந்த அபர்ணா இவர்களையே பார்த்திருந்த சிபியை பார்த்து

“சிபி.. உங்களால அன்புவ ட்ராப் பண்ண முடியுமா” என்று கேட்டாள்.

அவன் பதில் சொல்வதற்குள் தோழி சொன்னதில் அதிர்ந்துப் போன அன்பு “இல்ல அபர்ணா, நான் பஸ்லயோ, டிரைன்லயோ போயிக்கிறேன்” என்று படபடத்தாள்.

“இங்க இருந்து பஸ் ஸ்டாப் இல்ல ரயில்வே ஸ்டேஷனுக்கு எப்படி போவ” என்று அபர்ணா கேள்வி எழுப்ப,

அவளோ ‘நடந்து போயிக்கிறேன்’ என்று சொல்ல வருவதற்குள், தன் கை கடிகாரத்தில் மணி பார்த்த சிபி “எனக்கு ப்ராப்ளம் இல்ல அண்ணி. இவங்கள ஸ்டேஷன்ல விட்டுடுறேன்” என்றுவிட்டு ஷுவை மாட்டி கொண்டு வெளியே செல்ல..

தயங்கி நின்ற அன்பரசிக்கு ஏதேதோ சமாதானம் சொல்லி சம்மதிக்க வைத்தாள் அபர்ணா.

அன்பு கைகளை பிசைந்துக் கொண்டு தலையை கூட நிமிர்த்தாமல் வண்டியில் அமர்ந்திருக்க, சிபி தான் “நாங்க கிளம்பறோம் அண்ணி. டோன்ட் ஒர்ரி, உங்க ப்ரண்டை பத்திரமா இறக்கிவிடுறேன். டிராபிக் போல, அத்தையை இன்னும் காணோம். வந்ததும் எனக்கு ஒரு மெசேஜ் பண்ணிடுங்க” என்றுவிட்டு காரை கிளப்ப, தயக்கத்துடனே அபர்ணாவிற்கு கையாட்டி விட்டு அவனுடன் கிளம்பினாள் அன்பரசி.

சிபி அன்பரசியை மத்திய புறநகர் ரயில் நிலையத்தில் இறக்கிவிடுவதாக சொல்லியே அழைத்து வந்திருக்க அவளும் வழியெங்கும் அவனை நிமிர்ந்தும் பாராமல் தலை குனிந்தது குனிந்ததாகவே அமர்ந்திருந்தாள்.

சிபி தான் அவளை அவ்வபோது பார்த்துக் கொண்டிருக்க அவனுக்கு வீட்டிலிருந்து கிளம்பும் போது நிகழ்ந்தது நினைவு வந்தது.

மகிழுந்தை காட்டிலும் தன் இருசக்கர வாகனத்தில் செல்வதையே அவன் அதிகம் விரும்புவான். இன்றும் தன் வண்டியில் ஏறி அமர்ந்து திரும்பி அவளை பார்க்க “பைக்கா.. இல்ல, நான் வரல” என்று மீண்டும் முரண்டு பிடித்தாள்.

அதை கண்டு சிபி கடுப்பாகி விட, அபர்ணா தான் “சிபி, அவ தயங்குறா. இன்னைக்கு ஒருநாள் கார்ல போறீங்களா” என்று கேட்க சரியென்று தலையாட்டிவிட்டு இருசக்கர வாகனத்தை மீண்டும் அதன் இடத்தில் விட்டு காரை எடுத்தான்.

கார், பைக் பூலிங் என யாரென்றே தெரியாத ஆடவனுடன் பயணிக்கும் காலத்தில் ஒரு அவசர தேவைக்கு கூட இன்னொருவனின் வண்டியில் ஏறமாட்டேன் என்று அடம்பிடிக்கும் பெண்ணை அதிசயமாக பார்த்துக் கொண்டே வண்டியை இயக்கி கொண்டிருந்தான் சிபி.

அப்போது தன் பொழுதுபோக்கிற்காக எஃப்.எமை உயிர்ப்பிக்க, அதில் ஸ்ரேயா கோஷலின் குரலில் இனிமையாக பாடல் ஒலித்தது.

‘நீதானே நீதானே
என் நெஞ்சை தட்டும் சத்தம்
அழகாய் உடைத்தேன்
நீயே அர்த்தம்

உன் மழை
வானம் மட்டும் இருள்
பூசிக்கொள்ளும் சத்தம்
இங்கு நீயும் நானும்
மட்டும் இது கவிதையோ’

சிபி பாட்டுக்கு ஏற்ப தன் விரல்களால் தாளம் போட்டு கொண்டே வண்டியை செலுத்த, அவள் இறுதியாக கேட்ட வரியில் சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தவள் கண்களில் கனல் கக்க “பாட்டை கொஞ்சம் நிறுத்தறீங்களா ப்ளீஸ்” என்று பற்களை கடித்தாள்.

அதில் உடனே அவள் சொன்னதை செய்தவன் “ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபீஸரா இருப்பாங்க போல” என்று தனக்குள்ளேயே முணுமுணுத்து கொண்டவன் அதற்கு மேல் அமைதியாகவே அவளை அழைத்து சென்றான்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வண்டியை நிறுத்தியவன் “நீங்க வெயிட் பண்ணுங்க, நான் காரை பார்க் பண்ணிட்டு வந்திடுறேன்” என்று இயல்பாக அவன் சொல்ல, அவளுக்கு தான் அதில் தூக்கி வாரி போட்டது.

“நீங்க ஏன்ங்க என் கூட வர்றீங்க. என்னை இவ்ளோ தூரம் ட்ராப் பண்ணதுக்கு ரொம்ப தேங்க்ஸ்” என்று அடித்து பிடித்து கீழே இறங்கினாள்.

அதில் அண்ணி சொன்னதை வைத்து அவள் பெயரை நினைவு வைத்திருந்தவன் “அன்பரசி” என்று இதழ்கடையோராம் புன்னகை வழிய அழைக்க, அந்த குரல் அவளையும் செல்லவிடாமல் தடுத்து நிறுத்த, திரும்பி அவனை குனிந்து பார்த்தாள்.

“நானும் உள்ள தான் வரணும். ஐ ஆம் எ எல்.பி. லோகோ பைலட்” என்று புன்னகைக்க, அப்போதே அவன் உடையை அவள் கவனிக்க, இளம்நீல நிறத்தில் சட்டையும் அடர் நிலத்தில் கால் சராயும் அணிந்திருந்தான்.

தன் அறியாமையை எண்ணி அவள் நொந்து கொள்ள “என் கூட பைக்ல வர்றதுக்கும் கார்ல வர்றதுக்கும் இவ்வளவு யோசிச்சீங்களே, யாருக்கு தெரியும் நீங்க போற டிரைனையே நான் தான் எடுக்கணுமோ என்னமோ” என்று அடக்கப்பட்ட புன்னகையுடன் அவன் சொல்ல, கண்கள் துடிக்க அவனையே பார்த்திருந்தாள் அன்பு.




உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்
 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 2

சென்னையின் மைய பகுதியில் அமைந்திருந்த அந்த நான்கு மாடி நகை கடையில் நகைகளை பார்த்திருந்தார் தெய்வநாயகி.

பெயருக்கு ஏற்றாற்போல் பட்டு புடவை உடுத்தி, தாலிக் கொடியோடு சேர்த்து கெஜலட்சுமி வைத்த இன்னொரு டாலர் சங்கிலியும் அணிந்திருக்க, இருக்கைகளில் நான்கு நான்கு வளையல்களும் இருந்தது. நெற்றியில் வட்ட பொட்டு, கருப்பு சாயம் பூசப்பட்ட தலையை சீராக பின்னி துளி பூவும் வைத்திருந்தார்.

அவருக்கு எதிரில் இருந்த அக்கடையில் வேலை செய்பவர் “இன்னைக்கு புது கலெக்ஷன்ஸ் வந்துச்சு மேடம். உடனே சார் உங்களுக்கு ஃபோன் பண்ணி சொல்ல சொல்லிட்டாரு. மேடமுக்கு தான் டிரையலுக்கு இன்னொருத்தர் போட்டு பார்த்த நகை கூட பிடிக்காதே. அதான் நீங்க எடுத்ததும் சேல்ஸுக்கு போட்டிடலாம்னு சொன்னார்” விட்டால் விழுந்தே விடுவார் என்னும் அளவிற்கு பணிவாக குனித்து இளித்து கொண்டே சொன்னார்.

இருக்காதா பின்னே, தெய்வநாயகி தான் வாரத்தில் ஒருமுறையாவது ஏதேனும் நகை எடுத்துவிடுவாரே. அதனால் அவருக்கு அங்கு தனி மரியாதை. இன்னொருவர் போட்டு பார்த்த நகையை கூட அவர் அணியமாட்டார். பிறந்தவீட்டிலும் புகுந்தவீட்டிலும் அவர் அத்தனை செல்வாக்காகவே வாழ்கிறார்.

“தெய்வா.. தெய்வா” அருகில் இருந்த அவரது பெரியம்மா, அதாவது அம்மாவின் உடன் பிறந்த அக்கா பானுமதி அழைக்க

“ப்ச்ச்.. நகையை பார்க்க விடுங்க பெரியம்மா” என்று சிடுசிடுத்தார் தெய்வா.

“அது இல்ல தெய்வா” என்று மென்று விழுங்கியவர், தன் கழுத்தில் இருந்த சங்கிலியை காட்டி “பத்து வருஷமா போட்டுட்டு இருக்கேன் தெய்வா. அறுந்து எங்கயாவது விழுந்திடுச்சினா. அதான் இத மாத்தி தர்றியா தெய்வா” என்று அங்கிருந்து நகைகளை பார்த்து கண்கள் மின்ன கேட்க, அவரை ஏற இறங்க பார்த்த தெய்வநாயகி,

“நான் போடாத சங்கிலி நிறைய இருக்கு. அதுல ஒன்னு தரேன் போட்டுக்கோங்க. புதுசு வேணுமாம் புதுசு” என்று ஏளனமாக சொல்லிவிட்டு நகைகளை பார்க்கலானார்.

தெய்வநாயகி ஒவ்வொரு நகையையும் போட்டு பார்த்து அதில் தனக்கு மிகவும் பிடித்திருந்த சிவப்பு வைரங்கள் கொண்ட அட்டிகையை தேர்ந்தெடுத்தார்.

அதை தனியாக எடுத்துவைக்க சொன்னவர் “நான் கேட்ட சோக்கர் மாடல்ஸ் வந்திருக்கா” என்று விற்பனையாளரை கேட்டார்.

அதற்கு அவரும் “நீங்க கேட்டு இல்லாமயா மேடம். அதையும் யாரும் போடாம தான் சார் எடுத்து வைக்க சொன்னார்” என்று பல்லை காட்டினார்.

அதை கேட்டிருந்த அவரது பெரியம்மா “எச்ச பால் குடிச்சு வளர்ந்தவளுக்கு வந்த வாழ்வை பாரு” என்று வாய்க்குள்ளேயே முணுமுணுத்தார்.

அவர் எதோ பேசியது போல் இருக்க “எதாவது பேசினீங்களா பெரியம்மா” என்று தெய்வா கேள்வியாய் நிறுத்த,

“சேச்சே.. நான் என்ன பேசப் போறேன் தெய்வா.. இந்த அட்டிகை உனக்குன்னே செஞ்சது போல இருக்குன்னு நினைச்சேன்” என்று எதையோ சொல்லி சமாளித்தவர் “ஆமா தெய்வா, அந்த ஜோக்கரை நீயா போட போற” என்று வெள்ளந்தியாக கேட்டவும் செய்தார்.

அதில் தெய்வா அவரை முறைப்பதை கண்டு பயந்துப் போனவர் “இல்லடியம்மா, நீயும் அழகா தான் இருக்க. ரெண்டு பிள்ளைகளுக்கு அம்மானு சொன்னா யாரும் நம்பமாட்டாங்க. இருந்தும் அது வயசு பொண்ணுங்க போடறதாச்சே. அதுவுமில்லாம ரெண்டு நாள் முன்னாடி தான ரெட்டைவடம் சங்கிலி வாங்கின. இப்போ திரும்ப அட்டிகை, ஜோக்கர்னு வாங்கினா எங்க என் பொண்ணுக்கு கண்ணு பட்டுடுமோனு ஒரு பயம்” என்று நடித்து தள்ளினார்.

“ஐயோ அது ஜோக்கர் இல்ல பெரியம்மா, சோக்கர்” என்று எரிச்சல்பட்டவர் “அன்னைக்கு வாங்கினது என் வீட்டுக்காரர் பணத்துல. அட்டிகை எடுத்தது என் அண்ணன் பணத்துல. அண்ணன் எதோ பெரிய கேஸ் ஜெயிச்சிடுச்சாம். நீ நகை வாங்கிக்கோ பாப்பானு கொடுத்துச்சு. அப்புறம் சோக்கர் என் சின்ன மருமகளுக்கு” என்று சொல்லி கொண்டிருக்கும் போதே விற்பனையாளர் சோக்கர்கள் இருக்கும் பெட்டியை எடுத்து வந்து அவர் முன் கடை பரப்பினார்.

அங்கிருந்த சோக்கர்களை பார்த்து அவருக்கு மனதிற்கு மிகவும் திருப்தியாக இருந்ததை தேர்வு செய்து அதையும் பில் போட சொன்னார் தெய்வா.

இவர்களுக்கு இடையிடையே காபி, பாதாம் பால், ஜூஸ் என்று ஏதாவது ஒன்றை கொண்டு வந்து கொடுத்து கொண்டே இருக்க, தெய்வநாயகி அவற்றை வேண்டாம் என்று மறுத்துவிட, பானுமதி அம்மாவோ மகள் பங்கையும் சேர்த்து ஒன்றுக்கு இரண்டாய் எடுத்து வயிற்றை நிரப்பிக் கொண்டிருந்தார்.

இப்போது வந்த பாதாம் பாலையும் குடித்து முடித்து ஏப்பம் விட்டவர் “நானும் என் பெரிய பேரன் கல்யாணம் முடிய தான் காத்திருந்தேன் தெய்வா.. இப்ப மருமக மாசமாவும் இருக்கா. அடுத்து என் சின்ன பேரனுக்கு தானே. நம்ப ரதி கூட படிப்பை முடிச்சிட்டா. நீ சொன்னா உடனே உன் தம்பி பொண்ண கூட்டிட்டு வந்து உன் வீட்டு வாசல்ல நிப்பான். என் பேரனுக்கும் பேத்திக்கும் கல்யாணமாகிடுச்சினா நான் நிம்மதியா கண்ண மூடிடுவேன் தெய்வா” என்று தன் மகன் பெற்ற பேத்தியை இளைய பேரனுக்கு மணமுடிக்க பேசினார்.

பானுமதிக்கு ஒரு மகள், ஒரு மகன். மகளை காஞ்சிபுரத்தில் கட்டி கொடுத்திருக்கின்றார். மகனோ குடும்பதோடு விழுப்புரத்தில் இருக்கிறார். இருவருமே பெரிய செல்வச்செழிப்போடு வாழ்பவர்கள் எல்லாம் இல்லை. அவர்கள் வாழ்வில் பணம் என்பது வருவதும் போவதும் மட்டுமே. அதுவும் அவரது மகன் ஊரில் எந்த வேலைவெட்டிக்கும் செல்லாமல் மனைவி வேலைக்கு சென்று எடுத்து தரும் சொற்ப பணத்தை வைத்து குடும்பத்தை ஓட்டி கொண்டிருக்கிறார். அவருக்கும் ஒரு மகளும், மகனும்..

ஒருமுறை தெய்வநாயகிக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, அவரை பார்த்துக் கொள்ள ஊரிலிருந்து வந்த பானுமதி சொகுசு வாழ்க்கைக்கு பழகி இங்கேயே தங்கிவிட்டார். அதுவும் தெய்வாவிற்கு இரண்டு மகன்கள், அதில் ஒருவனுக்காவது பேத்தியை கட்டிவைத்து விடலாம் என்று திட்டத்தையும் அன்றே தீட்டிவிட்டார்.

பானுவதி பேசியதை கேட்ட தெய்வா “என்ன பெரியம்மா சொல்றீங்க, சிபிக்கு உங்க பேத்தியை கட்டணுமா. அசோக்குக்கு கேட்டப்பவே இது சரிப்பட்டு வராதுனு தானே சொன்னேன்” என்று எரிச்சல்பட்டார்.

“அது அப்போ அவ படிச்சி கூட முடிக்கல. அதான் நானும் அமைதியா இருந்துட்டேன். இப்போ தான் அவ கல்யாணத்துக்கு தயாரா நிக்கறாளே” பானுமதி விடாமல் முயற்சி செய்ய

“நான் உங்க பேத்தி கல்யாணத்துக்கு தயாரா நிக்கறாளா இல்லையாங்கிறதை பத்தி பேசல. எனக்கு என் பசங்களுக்கு எப்படிப்பட்ட வாழ்க்கையை அமைச்சி தரணும்னு எத்தனையோ ஆசைகள் இருக்கு. அந்த வட்டத்துக்குள்ள கூட உங்க பேத்தி வரமாட்டா” என்று அலட்சியமாக பதிலளித்தார் தெய்வா.

“அப்படியில்ல தெய்வா, அசோக் நம்ப மாப்பிள்ளை கூட தொழிலை பார்க்கறான். அவனுக்கு ஊர்ல எத்தனையோ பொண்ணு கிடைக்கும். அப்படி தான் அபர்ணா வீட்டுலயும் வந்தாங்க. சிபி அப்படியா.. நீ எவ்ளோ சொல்லியும் கேக்காம ரயில் வேலைக்கு போறான். நீ ஆயிரம் ஆசைப்படலாம். அதேமாதிரி பொண்ணு வீட்டுலயும் எதிர்பார்ப்பு இருக்கும்ல. நம்ப ரதி நீ சொல்றத கேட்டு நான் எப்படி உனக்கு இருக்கேனோ அதேமாதிரி அவளும் இருப்பா” தலை கீழ் நின்றாவது இந்த திருமணத்தை நடத்தி முடித்துவிட வேண்டும் என்று பேசினார்.

“சிபி லோகோ பைலட்டா இருக்குறதுல எனக்கும் விருப்பம் இல்ல தான். அதுக்காக அவன் ஒண்ணுமில்லாதவன் இல்ல. அவன் பேர்லயும் நிறைய கம்பெனிங்க இருக்க தான் செய்யுது. இது என் பையன் அவனுக்கு பிடிச்சிருக்குனு செய்றான். நானும் ஒரு பொழுதுபோக்குக்கு செஞ்சிட்டு போகட்டும்னு விட்டிருக்கேன்” என்ற தெய்வா “சிபி கல்யாணம் என் கனவு. அத கெடுக்கிற மாதிரி பேசுவீங்கன்னா இனி நீங்க இங்க இருக்க வேண்டாம், ஊருக்கு கிளம்பிடுங்க” என்று தடாலடியாக சொல்லிவிட்டார்.

மகள் பேசியதை கேட்டு அதிர்ந்து விட்டார் பானுமதி. இங்கே குளிரூட்டி இல்லாமல் இருக்கமாட்டார். அதுவும் தனக்கென்று தனி அறை, மூன்று வேளையும் சுட சுட சோறு, எப்போது கேட்டாலும் மருமகனோ, பேரப்பிள்ளைகளோ தனக்கு நொறுக்கு தீனியை வேறு வாங்கி கொடுத்துவிடுவார்கள். இதில் தெய்வநாயகியுடன் வெளியே வேறு செல்லலாம். அதுவும் காரிலே செல்லலாம். இந்த சொகுசெல்லாம் அங்கு கிடைக்காதே. அடுத்த நொடி அவரது வாய் பூட்டு போட்டுக் கொண்டது.

தெய்வநாயகியோ மகனுக்கு தான் அமைத்துக் கொடுக்க எண்ணியிருக்கும் வாழ்வை எண்ணி கர்வமாக புன்னைகைத்து கொண்டார்.

இது எதைப்பற்றியும் அறியாத சிபி சக்கரவர்த்தியோ தன் ரதத்தில் நகர்வலம் வந்து கொண்டிருந்தார்.

ஆம், அன்று அவனுக்கு விடுமுறை தினமாக இருக்க, தனக்கு மிகவும் பிடித்த சுமார் ஐம்பது லட்சம் மதிப்புடைய தன் பி.எம்.டபில்யூ பைக்கில் ஊர் சுற்றிக் கொண்டிருந்தான் சிபி.

நண்பர்களை பார்த்துவிட்டு இரவு பதினோறு மணியளவில் சிபி தன் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருக்க, அதேநேரம் அன்பரசி ஆள் அரவமற்ற அந்த சாலையில் தன் வண்டியை மீண்டும் மீண்டும் உதைத்து பார்த்தும் அது ஸ்டார்ட் ஆகாமல் போக, மனதை கிலி பற்றியிருந்தாலும் அதை முகத்தில் காட்டாது வண்டியை உருட்டிக் கொண்டிருந்தாள்.

வண்டியை எங்காவது விட்டுவிட்டு கேப் போட்டு கொள்ளலாம் என்றாலும் அவள் நேரமா என்ன என்று தெரியவில்லை ஒரு வண்டியும் பதிவாகவில்லை.

இவ்வாறு வண்டியை ஒருபக்கம் ஸ்டார்ட் செய்து பார்த்து கொண்டும், இன்னொரு புறம் கேப் ஏதாவது கிடைக்கிறதா என்று பார்த்து கொண்டும் இவள் வந்திருக்க, அங்கே சட்டென கேட்ட சத்தத்தில் ஒரு நிமிடம் மிரண்டு தான் நின்றுவிட்டாள். பயந்து கொண்டே திரும்பி பார்த்தால், சாலை ஓரத்தில் குடித்துவிட்டு விழுந்து கிடந்த குடிமகன் ஒருவரின் கையில் இருந்த பாட்டில் தான் உருண்டு வந்திருந்தது.

இது தானா என்று நெஞ்சை பிடித்து நிதானித்தவள் மீண்டும் பயந்தோடு நடக்க தொடங்கினாள்.

அடிப்படையிலேயே அன்பரசி சற்று தைரியமான பெண் தான். ஜெர்மனியில் இருந்த போது அலுவலகத்தில் இருந்து தான் தங்கியிருந்த இடத்திற்கு இது போன்ற ஆள் அரவமற்ற சாலையில் தனியாக தான் நடந்து செல்வாள். ஆனால் இன்று நாம் தினம் தினம் கேட்கும் செய்திகள் பெண்களின் பாதுகாப்பை கேள்விகுறியாக்கி இருக்கிறதே.

அலுவலகம் சென்றுவிட்டு வரும் பெண் வீடு திரும்புவதற்குள் வீட்டிலிருப்பவர்கள் வயிற்றில் நெருப்பை அல்லவா கட்டிக் கொண்டு இருக்க வேண்டியுள்ளது. அதுவும் இரவு நேரத்தில் சொல்லவே வேண்டாம். இன்றும் ஒரு பெண்ணால் இரவில் சுதந்திரமாக செல்லமுடியாத அவல நிலை தானே இருக்கிறது. அதுமட்டுமா இப்போதெல்லாம் பணிபுரியும் இடத்திலும் அவளது பாதுகாப்பிற்கு உத்திரவாதம் கிடையாதே.

மனதில் எண்ணற்ற எண்ணங்களோடும் வெளியில் காட்டிக் கொள்ளாத பயத்தோடும் அவள் வந்துக் கொண்டிருக்க, ஒரு வண்டி தன்னை கடந்து எதிர்புறத்தில் செல்ல இவள் தன் தலை தாழ்த்திக் கொண்டாள்.

கடந்து சென்றவனோ சிறிது தூரம் சென்றுவிட்டு அரைவட்டமிட்டு இவளிடம் வந்தான்.

வண்டி சத்தம் தன்னருகில் கேட்பதில் தன்னிச்சை செயலாக அவள் திரும்பி பார்க்க அவனோ இவளருகில் வண்டியை நிறுத்தினான். அதில் ஏற்பட்ட நடுக்கத்தில் குப்பென வியர்த்து விட, பெண்களுக்கே உரித்தான உணர்வில் தன் துப்பட்டாவை இழுந்து கழுத்தை முழுவதுமாக மறைத்தாள்.

அப்போதே அவன் தன் தலைக்கவசத்தை கழற்ற, அதுவரை விடலாமா வேண்டாமா என்று இழுத்து பிடித்து வைத்திருந்த மூச்சை சிபியை கண்டதும் வெளியே விட்டாள் அன்பரசி.

“அன்பரசி.. என்னாச்சுங்க. இந்த டைம்ல பைக்கை தள்ளிட்டு போயிட்டு இருக்கீங்க” என்று அவன் அக்கறையின் மிகுதியில் கேட்டான்.

“அது.. ஆபீஸ்ல கொஞ்சம் வேலை. முடிச்சிட்டு வந்தா வண்டி வழியிலேயே நின்னுடுச்சு” என்று அவன் முகத்தையும் பாராது வயிற்றை பார்த்து பதில் சொன்னாள்.

இந்த நேரத்தில் மேலே எதுவும் பேச தோன்றாதவனாய் “சரி, வண்டியில ஏறுங்க. நான் உங்களை ட்ராப் பண்ணிடுறேன்” என்று நல்லெண்ணத்துடன் சொன்னான் சிபி.

அவளோ “இல்ல வேண்டாம்” என்று சட்டென மறுத்துவிட, இப்படி முரண்டு பிடிப்பவளை எண்ணி அவனுக்கு ஆயாசமாக இருந்ததோடு அடக்க முடியாத கோபமும் வந்தது.

தன் வண்டியை விட்டு இறங்கியவன் அவளிடம் செல்ல, அதில் பயந்துவிட்டவள் வண்டியை கீழே போட்டுவிடாத குறையாக இரண்டடி பின்னுக்கு செல்ல, அவன் தான் அவள் வண்டி கீழே விழாமல் பிடித்து நிறுத்தினான்.

அவள் இன்னும் தன் இரண்டு குண்டு கண்கள் வெளிவர விழிக்க “ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ்.. உங்க வண்டியில என்ன ப்ராப்ளம்ன்னு தான் பார்க்கறேன்” என்று தானாகவே விளக்கம் கொடுத்தான்.

“இல்ல, நான் ஸ்டார்ட் பண்ணி பார்த்துட்டேன். ஆகல” என்று தயங்கி சொன்னாள்.

அதில் அவனுக்கு எரிச்சல் மேலோங்க “நான் ஒரு டைம் பார்த்தா உங்க பைக் ஒன்னும் கோச்சிக்காதே” என்று நக்கலாகவே கேட்டான்.

அது அவளுக்கு முதலில் புரியாவிட்டாலும் பின் புரிந்தவளாக “இல்ல, நீங்க லோகோ பைலட் தானே. வண்டியை பத்தி என்ன தெரியும். அதான்” என்று இழுக்க

“இப்போ தான் லோகோ பைலட்.. அதுக்கு முன்னாடி காலேஜையே ரெண்டாக்கின மெக்கானிக்கல் இன்ஜினியர். இப்ப உங்க பைக்கை நான் பார்க்கலாமா” என்று பற்களை கடிக்க, அவள் நகர்ந்து நின்று அவனுக்கு வழிவிட்டாள்.

சிறிது நேரத்தில் வண்டியை முழுதாக பரிசோதித்து பார்த்தவன் “பேட்டரி போயிருக்கு. வண்டி இப்போ ஸ்டார்ட் ஆகாது. வண்டியை இங்கேயே ஓரமா விட்டிடலாம். நாளைக்கு காலையில எனக்கு தெரிஞ்ச மெக்கானிக்கை வந்து சரி பண்ணி தர சொல்றேன். இப்போ என் கூட வாங்க, நான் உங்களை வீட்டுல விட்டுடுறேன்” என்று அவளுக்கு உதவும் எண்ணத்தில் சொன்னான்.

“இல்ல. பைக்ல நான்..” என்று இழுத்தவள் “உங்க ஃபோன்ல கேப் புக் பண்ண முடியுதான்னு பார்க்கறீங்களா ப்ளீஸ்” என்று அவன் பொறுமையை சோதித்தாள்.

வண்டியில் உடன் வர மறுத்தாளே ஒழிய அவனை அவள் போக சொல்லவில்லை. அவனின் இருப்பு அவளுக்கு தைரியத்தை கொடுத்தது. தனக்கு ஒரு வழி கிடைக்கும் வரை அவன் உடனிருக்கட்டும் என்றே எண்ணினாள். அவனோ அவள் கடுப்பேற்றியதில் அதை கவனிக்கவில்லை.

அவள் பேச்சில் அவனுடைய பொறுமையெல்லாம் காற்றில் பறந்திருக்க “இதை ஆபீஸ்ல இருந்து லேட்டா கிளம்பறப்போ யோசிச்சிருக்கனும். அப்பவே பைக்கை ஆபீஸ்ல விட்டுட்டு கேப்ல போயிருக்க வேண்டியது தானே” என்று சத்தமிட்டு விட, அவளோ அப்போதும் நான் வண்டியில் ஏறிவிடுவேனா என்று தலை குனிந்து நின்றிருந்தாள்.

இவளுக்கு எப்படி தான் புரிய வைப்பது என்று ஆயாசமாகி போக, கண்களை மூடி இதழ் குவித்து மூச்சை வெளிவிட்டவன் தன் கைபேசியை எடுத்து அவள் சிறிதும் எதிர்பார்க்காதவாறு இருவரையும் இணைத்து ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்டான்.

அதில் திகைத்து விட்ட அன்பரசி “மிஸ்டர். சிபி சக்கரவர்த்தி, என்ன பண்றீங்க. என் பெர்மிஷன் இல்லாம எப்படி போட்டோ எடுக்கலாம். டெலீட் பண்ணுங்க” என்று அந்த அர்த்தராத்திரி வேளையில் அவனிடம் வழக்காடி கொண்டிருந்தாள்.

அவனோ அவளை கிஞ்சித்தும் கண்டுகொள்ளாது அந்த புகைப்படத்தை தன் அண்ணிக்கு அனுப்பியிருந்தான். அதை புகைப்படத்தை அழிக்கிறானா என்று அவன் கைபேசி திரையை பார்த்திருந்தவள் கண்டு அதிர்ந்து விழி விரித்தாள்.

“என்ன பண்ணியிருக்கீங்க மிஸ்டர். சிபி சக்கரவர்த்தி. அபர்ணாவுக்கு எதுக்கு அனுப்பினீங்க. அவங்க பார்க்கறதுக்குள்ள அந்த மெசேஜை டெலீட் பண்ணுங்க. உங்க ஃபோன்ல இருக்குற நம்ப போட்டோவையும் டெலீட் பண்ணுங்க” என்று சத்தமிட, அதில் அங்கு போதையில் புரண்டிருத்தவனே மப்பு களைந்து எழுந்தமர்ந்து இவர்கள் சண்டையை வேடிக்கை பார்க்கலானான்.

சிபியோ தன் அண்ணி ஆன்லைன் வந்துவிட்டதை திருப்தியாக பார்த்துவிட்டு ஃபோனை லாக் செய்து கைப்பையில் போட்டுக் கொண்டு அவளையே கைகட்டி பார்த்திருக்க, அன்பரசி தான் “இப்ப டெலீட் பண்ண சொன்னேன் மிஸ்டர். சிபி சக்கரவர்த்தி” என்று கத்தினாள்.

“முதல்ல என் பேரை இப்படி நீட்டி முழங்கி ஏலம் விடுறத நிறுத்துங்க. கால் மீ சிபி..” என்று பதிலுக்கு கத்தியவன் “என்ன பண்றது, உங்களுக்கு தான் என் மேல நம்பிக்கை இல்லையே. என்னால உங்களை இப்படி தனியா விட்டுட்டு போகமுடியாது. அதான் அண்ணிக்கு அனுப்பினேன்” என்று பதிலுக்கு பேச இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்து நின்றிருந்தனர்.

இரவு அப்போதே அபர்ணாவும் அசோக்கும் வந்து படுத்திருக்க, தன் கைபேசி ஒலியெழுப்பியதும் எடுத்து பார்த்தவள் அதில் சிபியும் அன்பரசியும் இருக்கும் புகைப்படத்தை கண்டு அதிர்ந்து போனாள்.

அசோக் பார்ப்பதற்கு முன் கைபேசியை லாக் செய்தவள் அங்கிருந்து எழுந்து வெளியே செல்ல “படுக்காம எங்க போற அபர்” என்று கணீர்குரலில் அசோக் கேட்க, ஒரு நொடி நடுங்கி போனாள் அபர்ணா.

பின் சுதாரித்தவளாக “இல்ல அச்சு.. அது.. வயிறு வலிக்கிற மாதிரி இருக்கு. அதான் வெந்தயம் போட்டு தண்ணி குடிச்சிட்டு வரலாம்னு” என்று எதையோ சொல்லி சமாளிக்க

அவனோ அவளிடம் எழுந்து ஓடிவந்தவன் “வயிறு வலிக்குதா.. கை வைத்தியமெல்லாம் வேண்டாம். வா டாக்டரை பார்த்திடலாம்” என்று படபடத்தான்.

“எனக்கு ஒண்ணுமில்ல அச்சு.. ஐ ஆம் குட். நீங்க களைப்பா தெரியறீங்க” என்று அவன் கேசத்தை வருடிவிட்டவள் “சூட்டு வலியா கூட இருக்கலாம். உடனே டாக்டரை பார்க்காம கொஞ்சம் வெந்தயம் போட்டு தண்ணி குடிச்சு பாருனு அத்தை தான் சொன்னாங்க” என்று இதில் தெய்வநாயகியை உள்ளிழுக்க..

அன்னை பேச்சுக்கு மறுபேச்சு பேசாத அவரது மூத்த மகனும் “சரி, பார்த்து கவனமா போயிட்டு வா” என்றது தான், தன் கைபேசியை கையோடு எடுத்து கொண்டு கீழே வந்தாள் அபர்ணா.

முறைத்து நின்றிருந்த இருவரையும் அழைப்பொலி கலைக்க, பையிலிருந்த தன் கைபேசியை எடுத்து பார்த்த அன்பரசி “ஐயோ.. அபர்ணா கால் பண்றாங்க.. இப்போ என்னை தான் தப்பா நினைச்சிருப்பாங்க” என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

“எங்க அண்ணி தப்பா நினைச்சு பண்ணியிருக்க மாட்டாங்க.. உங்களுக்கு என்னனு தான் ஃபோன் பண்ணி இருப்பாங்க” என்று சரியாக சொன்னான்.

உண்மையில் வெளியே வந்து அபர்ணா அப்புகைப்படத்தை பெரிதாக்கி பார்க்க, அதில் அன்பரசி பதற்றமாக தெரிந்தாள். அதோடு அவர்கள் இருந்த இடமும் இருள் சூழ்ந்து ஆள் நடமாட்டம் இல்லாமல் இருக்க, அன்பரசியின் குணத்தை நன்கு அறிந்தவள் ஏதோ பிரச்சனை என்பதை புரிந்தே மைத்துனருக்கு அழைக்காமல் தோழிக்கு அழைத்திருந்தாள்.

அன்பரசி அழைப்பை ஏற்காமல் அதை விழித்து பார்த்திருக்க, எதற்கும் அஞ்சாத சிபி தான் அழைப்பு முடியும் நேரத்தில் அவள் கைபேசியை பிடுங்கி அழைப்பை ஏற்று “ஹலோ அண்ணி” என்றவன் நடந்த அனைத்தையும் சொல்லி முடித்திருந்தான்.

உடனே அன்புவிடம் கைபேசியை கொடுக்க சொன்னவள் அவளை சிபியுடன் போக சொல்லி சொல்ல “இல்ல அபர்ணா.. அவங்க பைக்ல வந்திருக்காங்க. எனக்கு கேப் புக் பண்ணி தர சொல்லுங்க, நான் போயிக்கிறேன்” என்று அபர்ணா, சிபி இருவரையும் கடுப்பேற்றி இருந்தாள்.

“புரிஞ்சிக்காம பேசாத அன்பு” என்று கடுப்பான அபர்ணா, இவளுக்கு வேறு வழியில் தான் புரியவைக்க வேண்டும் என்று முடிவு செய்து “சரி, நீ சிபி கூட போகவேண்டாம். இரு, நான் கிளம்பி வரேன். அதுவரை சிபி கூட இரு” என்று படாரென்று சொல்லிவிட, அதில் அதிர்ந்த அன்பரசி

“இல்ல, நீங்க கன்சீவா இருக்கீங்க” என்று அவளுக்காக அக்கறைப்பட்டாள்.

“தெரியுதுல நான் கன்சீவா இருக்கேன்னு.. அப்போ சிபி கூட போ. இல்லனா அசோக் இப்போ தான் டயர்ட்டா படுத்திருக்கார். அவரை எழுப்பி தான் நான் கூட்டிட்டு வரணும். என்னால நீ கேப்ல போயிப்பனுலாம் இங்க நிம்மதியா தூங்க முடியாது” என்றவள் அவள் மறுப்பு சொல்லாமல் அமைதியாக இருப்பதை தனக்கு சாதகமாக்கி,

“சிபி கூட போ அன்பு. என் மச்சினர்னு சொல்லல, சிபி இஸ் ஜெம் ஆஃப் பர்சன். இல்ல, உனக்காக யோசிச்சு இவ்ளோ காத்திருப்பாரா. நீ அவர் கூட சேஃப்பா வீட்டுக்கு போ அன்பு” என்றுவிட்டே அபர்ணா அழைப்பை துண்டிக்க, அவர்கள் பேசியதை கேட்டிருக்காத போதிலும் அன்புவின் முகத்தை வைத்தே விசயத்தை யூகித்திருந்தவன் அடக்கப்பட்ட சிரிப்போடு தன் இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்தான்.

அன்புவும் ஒன்றும் சொல்லாது தன் வண்டியை அங்கேயே விட்டு அவன் வண்டியில் ஏற போக, அங்கே பிடிப்பிற்கு ஒன்றுமே இல்லை. பின் எப்படியோ வடிவேலு சொல்வது போல் ‘படாது படாது’ என்று அவனை தொடாமல் ஏறி அமர, அவனும் “படாது படாது” என்று அவளுக்கு கேட்கும் படியே சொல்லி சிரித்தான்.

அவனுக்கு பின்னால் வேதாளம் போல் அமர்ந்திருந்தாலும் வழியெங்கும் தப்பி தவறி கூட அவனை உரசியும் விடாமல், பிடிப்பிற்கு அவன் தோளை பிடித்தும் விடாமல் வர, அவள் குணத்தை புரிந்துக் கொள்ள முடித்தவனால் தனக்குள் சிரித்துக் கொள்ள மட்டுமே முடிந்தது.

அன்பரசி தன் கைபேசியில் போட்டு கொடுத்த லொகேஷனை வைத்து அவள் வீட்டு வாசலில் சிபி வண்டியை நிறுத்த, இறங்கியவள் அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு நகர “லேட் நைட் வொர்க் தப்பில்ல. ஆனா இந்தமாதிரி நேரத்துல சேஃப்பா எப்படி திரும்ப போறதுன்னு தான் யோசிக்கணும். இப்படி வழியில மாட்டிக்கிட்டு ரிஸ்க் எடுக்க கூடாது. டேக் கேர்” என்று சொல்ல, அவனுக்கு ஒரு தலையசைப்பை மட்டும் கொடுத்துவிட்டு வீட்டினுள்ளே செல்ல, அவள் செல்வதையே ஒருவித யோசனையாக பார்த்திருந்தான் சிபி.



உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்.
 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 3

தன் இருசக்கர வாகனத்தை சர்வீஸுற்கு விட்டிருந்ததால் அன்று அலுவலகத்திற்கு இரயிலில் வந்திருந்தாள் அன்பரசி.

மத்திய புறநகர் இரயில் நிலையத்தில் இறங்கியவள் வெளியே செல்ல நடைமேடையில் நடந்து வந்துக் கொண்டிருக்க, அப்போது என்ஜீனை கடந்து சென்ற போது அவளுக்கு தானாக ‘யாருக்கு தெரியும் நீங்க போற டிரைனையே நான் தான் எடுக்கணுமோ என்னமோ’ என்று அன்று அவன் சொன்னது நினைவு வந்தது.

அதில் தன்னையும் மீறி நான்கைந்தடி பின்னுக்கு வந்தவள் ஒரு வேளை அவன் தான் அங்கு இருக்கிறானா என்று விழிகளை உருட்டி பார்க்க “என்ன தான தேடுறீங்க” என்று அவளுக்கு பின்னால் இருந்து வந்த குரலில் ஒரு நொடி விதிவிதிர்த்து திரும்பியவள் சிரித்து கொண்டு நின்றிருக்கும் சிபியை கண்டததும் கண்கள் குறுகுறுக்க தலை குனிந்தாள்.

“சொல்லுங்க, என்ன தான தேடிட்டு இருந்தீங்க” என்று அவன் அடக்கப்பட்ட சிரிப்புடன் மீண்டும் கேட்க

“இல்லையே.. இல்லயே.. நான் ஏன் உங்கள தேட போறேன்” என்று திக்கி திணறியவள் முன்னே நடக்க, அவளுக்கு முன்னால் வந்து அவள் வழியை மறித்து கைகட்டி நின்றவன்

“பொய் சொன்னா கன்னம் சிவக்கும்னு சொல்லுவாங்க, கரெக்ட்டா தான் இருக்கு” என்று அவளை பார்க்க, சட்டென தன் கன்னத்தில் கைவைத்து பார்த்தவள் “அப்படியெல்லாம் இல்ல” என்று அவனை முறைத்தாள்.

“ஹா ஹா.. சும்மா பொய் சொன்னதும் எதுக்கு உங்க கன்னத்தை தொட்டு பார்த்தீங்க, அப்போ என்ன தான தேடியிருக்கீங்க” என்று புன்னகை மாறாது கேட்டான்.

அதில் அவளுக்கு கோபம் கொப்பளிக்க “நான் வந்த டிரைனை நீங்க எடுத்திருக்க கூடாதுனு தான் பார்த்தேன் போதுமா” என்று முறுக்கிக் கொண்டு சொன்னாள்.

அதை கேட்டவன் அங்கு கடந்து செல்பவர்கள் ஒரு நொடி நின்று பார்த்துவிட்டு செல்லும் அளவிற்கு சத்தமாக சிரித்தவன் “நீங்க சேஃப்பா பயணம் செய்ய நாங்க டே அண்ட் நைட் உழைக்கிறோம். அதுலயும் நான் வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன். நீங்க என் கூட பயந்து வர வேண்டிய அவசியமே இல்ல. சதர்ன் ரயில்வே’ஸ் ஆப்கா ஸ்வாகத் ஹை” என்று புன்னைகைக்க, அன்பரசிக்கு மொக்கை வாங்கியதாக இருந்தது.

அதற்குமேல் அங்கு நின்று வளவளக்க விரும்பாமல் அவள் அவனை விட்டு நகர்ந்து நடக்க ஆரம்பிக்க, அவனுக்கும் தன் பணி முடிந்திருக்க அவளுடனே நடந்தான்.

தன்னுடன் ஒருவன் நடந்து வருகிறான் என்பதை சிறிதும் கண்டு கொள்ளாமல் அவள் தானுண்டு தன் வேலையுண்டு என்று மணி பார்த்துக் கொண்டே நடக்க “அன்பரசி” என்றழைத்தான் சிபி.

அதில் நடையை நிறுத்தாது அவள் அவன் புறம் திரும்பி பார்க்க “ப்ரண்ட்ஸ்” என்று தன் கையை நீட்டினான்.

அதில் ஒரு நிமிடம் அவள் உடல் அதிர்வில் குலுங்கினாலும் “நான் ஏன் உங்க கூட ப்ரண்ட் ஆகணும்” என்று கேட்டுக் கொண்டே தோளிலிருந்த தன் பையை சரி செய்துக் கொண்டு முன் நடந்தாள்.

தன் தொண்டையை செருமி சரி செய்தவன் “நான் பொண்ணுங்க கூட பழகாத பையன்னு எல்லாம் பொய் சொல்லமாட்டேன். நிறைய பெண் தோழிகள் இருக்காங்க. ஹேய் சிபி, போற வழியில என்ன ட்ராப் பண்ணிடறியான்னு என் பைக்ல உரிமையா ஏறி உட்கார்ந்துகிற பொண்ணுகளுக்கு மத்தியில் என் பைக்ல ஏறமாட்டேன், கார்ல ஏறமாட்டேன், ஏன் நான் ஓட்டுற டிரைன்ல கூட போக கூடாதுனு நினைக்கிற உங்களோட..” சொல்லிக் கொண்டே வந்தவன் இறுதியாக அவளை கேலி செய்யும் படி சொல்லி நிறுத்த, அதை புரிந்தவள் அவனை முறைத்தாள்.

“ஜோக்ஸ் அபார்ட். நிஜமாவே இப்படி ஒரு பொண்ணு கூட ப்ரண்ட்ஷிப் வச்சிக்கணும்னு ஆசைப்படுறேன் அன்பு. ப்ரண்ட்ஸ்” என்று மீண்டும் நட்பு கரம் நீட்டினான்.

உடனே அவள் ஆற்றாமையாக மிச்சு கொட்டி கொண்டாள்.

“அப்பாடா.. இல்ல, மாட்டேன்னு மறுத்து பேசலையே. அப்போ என் நட்பு கரத்த ஏத்துக்கிறீங்க” என்று புன்னகைக்க, அவள் எதிர்வினையாற்றாமல் தலை குனிந்திருந்தாள்.

“சரி ப்ரண்ட்ஸ் ஆகியாச்சு. ஒரு காஃபி சாப்பிடலாமா. காலையிலேயே டியூட்டிக்கு வந்துட்டேன்” என்று கேட்க, சிரிப்பையும் தாண்டிய அவனது சோர்ந்த முகத்தை கண்டவளுக்கு ஏனோ மறுக்க மனம் வரவில்லை.

இரயில் நிலையத்தில் இருந்த ஒரு கடையிலேயே சிபி இருவருக்கும் காப்பி வாங்கி வர, அதை வாங்கியவள் ஓவ்வொரு மிடறாக யோசித்து யோசித்து பருகி கொண்டிருந்தாள்.

காப்பியை பருகுவதிலும் தயக்கமா என்று அவளை வியந்து பார்த்துக் கொண்டே தன் காப்பியை குடித்திருந்தவனின் பார்வை ஒவ்வொரு மிடறிற்கும் அந்த காகித கோப்பையை தீண்டி செல்லும் அவளது இதழில் நிலைகுத்தி நின்றது.

பன்னீர் புஷ்பம் நிறத்தில் இருக்கும் அவளது அதரத்தை விழியகற்றாது பார்த்திருந்தவனுக்கு நட்பு கரம் நீட்டிவிட்டு இப்போது அவளை இப்படி பார்ப்பது தவறென தன் புத்தி இடித்துரைக்க, மனதிற்குள்ளேயே அவளிடம் மன்னிப்பு கேட்டான். வெளிப்படையாக கேட்டால் அதன்பின் நட்பு தான் இருக்குமா என்று பயம் அவனுக்கு.

தான் குடித்து முடித்த பேப்பர் கோப்பையை குப்பைத் தொட்டியில் எறிந்துவிட்டு அவள் பக்கம் திரும்பியவன் “சரி ப்ரண்ட்ஸ் ஆகியாச்சு. உங்க நம்பர் கொடுக்கலாமே” என்று அடுத்த கோரிக்கையை வைத்தான்.

அதுவரை தன் பார்வையை கொஞ்சமும் மேலேற்றாது நிலத்தை பார்த்தப்படி காப்பியை பருகி கொண்டிருந்தவள் அவனை நிமிர்ந்து முறைக்க “சரி கொடுக்க வேண்டாம்” என்று அலட்டாமல் சொல்லிவிட்டு “நான் அண்ணிகிட்ட வாங்கிக்கிறேன். என் நம்பர்ல இருந்து உங்களுக்கு ஹாய்னு ஒரு மெசேஜ் அனுப்புவேன். சேவ் பண்ணுக்கோங்க. வழக்கம் போல சிபி சக்கரவர்த்தின்னு நீட்டி முழக்கி சேவ் பண்ணாதீங்க. சேவ் மை நேம் ஆஸ் சிபி” என்று தோளை குலுக்கினான்.

அனைத்திற்கும் அவன் இயல்பாக பேசிக் கொண்டிருக்க, அன்பரசி தான் அவனது வேகத்திற்கு ஈடுத்தர முடியாமல் திக்குமுக்காடி போனாள். ஒருகாலத்தில் அவளும் இவன் போல் இருந்தவள் தான். ஏனோ இன்று அதையெல்லாம் தொலைத்து வாழ்கிறாள்.

இருவரும் ஒன்றாக இரயில் நிலையத்திற்கு வெளியே நடக்க, நிச்சயம் அவள் தன் வண்டியில் ஏறமாட்டாள் என்பதை நன்கறிந்தவனும் பேருந்து நிலையம் வரை பேச்சு கொடுத்தவாறு உடன் நடந்தான்.

“நாளைக்கு வர்றீங்க தானே அன்பு” என்று சிபி அடுத்து கேட்க, எங்கே வரவேண்டும் என்பதாய் அவள் அவனை திகைத்து பார்த்தாள்.

“அண்ணியோட வளைகாப்பிற்கு” என்றதும் தான் அன்பரசிக்கு அது நினைவே வந்தது.

அபர்ணாவிற்கு இப்போது ஏழாம் மாதம் நடந்துக் கொண்டிருக்கிறது. அவள் அன்புவின் வீட்டிற்கே சென்று வளைகாப்பிற்கு முறையாக அழைத்திருந்தாள். வேலைக்கு ஓடி கொண்டிருக்கும் அயர்ச்சியிலும் மன சோர்விலும் அது அவளுக்கு சட்டென நினைவுக்கு வராமல் போனது.

அதற்குள் சிபி “பேண்ட் இருக்கு தானே” என்று அடுத்த கேள்வியை கேட்டான்.

“ஹான்.. அபர்ணா கொடுத்தாங்க” என்றாள் அன்பு.

அவர்கள் வீட்டில் நடக்கவிருக்கும் வளைகாப்பு விழாவிற்கு தெரியாதவர்கள் யாரும் அனுமதியின்றி உள்ளே வந்து பிரச்சனையாகிவிட கூடாதென அழைப்பு விடுத்த அனைவருக்கும் ஒரு கைப்பட்டியை கொடுத்திருக்கிறார்கள். அதை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே உள்ளே அனுமதி.

பேருந்து நிறுத்தமும் வந்துவிட “ஒகே அன்பு, நாளைக்கு பார்க்கலாம், பை” என்றுவிட்டு தன் வண்டியை எடுக்க மீண்டும் இரயில் நிலையத்திற்குள் நுழைந்தான் சிபி.

அடுத்தநாள் காலை அழகாக புலர்ந்திருந்தது. அன்புவும் அபர்ணாவின் வளைகாப்பிற்கு அவளது வீட்டிற்கு வந்திருந்தாள்.

வீட்டினுள்ளே நுழைந்ததுமே அவளை பார்த்துவிட்ட சிபி ஒருநொடி அவளது தோற்றத்தில் தேகம் சிலிர்க்க உறைந்து நின்றுவிட்டான். அத்தனை பொருத்தமாக தயாராகி வந்திருந்தாள் அன்பு.

விலையுயர்ந்த பட்டு புடவையோ, தகதகக்கும் தங்க நகைகளோ அணியவில்லை அவள். மாறாக பாக்கு நிறத்தில் இலை பச்சை கரை கொண்ட மங்களகிரி கைத்தறி சேலை அணிந்திருந்தாள். அதற்கு பொருத்தமாக கழுத்தில் மாங்காய் நெக்லஸும், காதில் சின்ன ஜிமிக்கியும் அணிந்திருந்தாள். கைகளில் கண்ணாடி வளையல்கள் மட்டுமே.

அன்பரசி எலுமிச்சை நிறம். வட்டமாகவும் இல்லாமல் நீளமாகவும் இல்லாத சதுர முகம். அதில் எதுவும் செய்யாமல் இயற்கையிலே வரைந்து விட்டது போல் இருக்கும் அவளது புருவம். அதற்கு கீழ் குண்டு கண்கள் இரண்டு. அந்த முகத்திற்கும் கண்களுக்கும் பொருத்தமான அளவில் நாசி. கண்களை எங்கே சுழலவிட்டாலும் இறுதியில் தன்னிடம் நிலைகுத்தி நிற்க வைக்கும் அவளது ரோஜா இதழ்கள்.

இப்படி கண் கொட்டாமல் அவளை பார்த்திருந்தவனுக்கு ஏதோ ஒன்று குறைவது போல் மனம் சொல்லியது.

அது என்னவென்று புரியாமல் பார்வையை அவளிடம் ஓடவிட்டு கொண்டிருக்க “சிபி, பக்கத்து கோவில்ல அம்மா எதோ அபிஷேகத்துக்கு தந்திருக்காங்கலாம். ஐயர் எதோ அபிஷேக பாலும் வளையலும் தருவாராம். போய் அதை வாங்கிட்டு வந்திடுறீயா. அம்மா அந்த வளையலை தான் அபருக்கு முதல்ல பூட்டனும்னு சொல்றாங்க” என்று நந்தி போல் குறுக்கே வந்தான் அசோக்.

அதை கேட்டவன் அதிருப்தியாய் அண்ணனை முறைக்க, அவன் “எப்போ வேணும்னாலும் ஃபன்ஷன் ஸ்டார்ட் ஆகிடும்டா. இப்போ நான் எப்படி போக முடியும்” என்று விளக்கமும் கொடுத்தான்.

சரியென்று தலையாட்டி விட்டு சிபி வாசல் வரை சென்றவன், அன்புவை அங்கேயே நிறுத்திவிட்டு செல்வது நினைவு வந்தவனாய் மீண்டும் அண்ணனிடம் வந்து “அசோக், இவங்க அன்பரசி. அண்ணியோட ப்ரண்ட். இவர்கள அண்ணி ரூமுக்கு கூட்டிட்டு போ” என்று சொல்ல, அவளை ஒரு தலையசைப்போடு வரவேற்ற அசோக் பார்வதி அம்மாவை அழைத்து அவளை அவர்கள் அறைக்கு அழைத்து செல்ல சொன்னான்.

மாடியிலிருந்த அபர்ணா அவர்கள் அறையில் தயாராகி அமர்ந்திருந்தாள்.

அப்போது உள்ளே வந்த அன்பரசியை பார்த்தவள் “ஹே அன்பு.. வா வா” என்றுவிட்டு வாசலை பார்த்தாள். அங்கே யாரும் இல்லாததை கண்டு “அம்மாவை கூட்டிட்டு வர சொன்னேனே, கீழே இருக்காங்களா” என்றும் வினவினாள்.

“இல்ல அபர்ணா. நான் மட்டும் தான் வந்திருக்கேன்” என்று அவள் பதிலளிக்க, அபர்ணா அவளை கோபமாக முறைத்தாள்.

அதை புரிந்தவளாக “நானும் உங்களுக்காக தான் வந்திருக்கேன்” என்று உள்ளே சென்ற குரலில் சொல்ல, அவளால் தோழியின் நிலையை புரிந்து கொள்ள முடிந்தது.

அபர்ணா அன்புவை ஆறுதலாக அணைத்துக் கொள்ள, அவளுக்கு இப்போது அது தேவைப்படவில்லையா இல்லை தேவைப்படாத அளவிற்கு மனம் மரத்துவிட்டதா என்று தெரியவில்லை, தோழியின் அணைப்பில் அவள் தோளில் அமைதியாக சாய்ந்திருந்தாள்.

என்ன தான் தோழி என்று சொன்னாலும், அபர்ணா அன்புவை தன் உடன்பிறவாத தங்கையாக தான் பார்க்கிறாள். சிலை போல் இறுகி இருப்பவளை பார்க்க அவளுக்கு வேதனையாக இருந்தது.

எதுவும் செய்யமுடியாத கையறு நிலையில் இருந்த அபர்ணா, அன்பு அழாத போதிலும் அவள் மனம் வெம்பும் என்பதை சரியாக புரிந்து அவள் முதுகை வருடி கொடுத்திருந்தாள்.

அதுவரை அமைதியாக அணைப்பில் இருந்த அன்பு, அபர்ணாவின் இந்த செயலில் தன்னை கண்டுகொண்டாள் என்பதை புரிந்து அவளிடமிருந்து விலகி அவளை மேலிருந்து கீழ் பார்த்தாள்.

தன் முகூர்த்த பட்டுடுத்தி அழகாக தயாராகி இருந்தாள் அபர்ணா. அவள் கன்னம் வழித்து எடுத்தவள் “என் கண்ணே பட்டிடும் போல அபர்ணா. அவ்ளோ அழகா இருக்கீங்க” என்று முகத்தை இயல்பாக்கி கொண்டு, சிரமப்பட்டு வரவழைக்கப்பட்ட புன்னகையோடு சொன்னாள்.

அபர்ணாவும் அன்பரசியை பார்த்தவள் “நானும் உன்னை சரியா பார்க்கல பாரு. நீயும் அழகா தயாராகி இருக்க அன்பு. நில்லு வயித்துக்குள்ள இருக்க குட்டி வெளியே வரட்டும். உனக்கு நல்ல மாப்பிள்ளையா பார்த்து கட்டி வைக்கறேன்” என்று சொல்ல, அதில் அன்பரசிக்கு பிடித்தம் இல்லை போல், அவளது முகம் சுருங்கி விட்டது.

அப்போதே அவளை உற்று நோக்கிய அபர்ணாவிற்கு அது தென்பட “அழகா இருந்தாலும் ஏதோ ஒண்ணு மிஸ்சிங்ன்னு யோசிச்சிக்கிட்டே இருந்தேன். இப்ப தான் கண்டுப்பிடிச்சேன்” என்று புன்னக்கவும்,

“அண்ணி, மே ஐ கம் இன்” என்று திறந்திருந்த கதவை தட்டினான்.

அதில் தோழிகள் இருவரும் அவனை திரும்பி பார்க்க, உள்ளே வந்தவனோ “அத்தை இந்த ஜூஸை குடிக்க சொன்னாங்க. அப்புறம் ஃபன்ஷனை ஆரம்பிச்சிட்டாங்கனா முடியுற வரைக்கும் எதுவும் சாப்பிட முடியாதாம்” என்று சொல்லி அபர்ணாவிடம் பழச்சாறை கொடுக்க, அதை வாங்கியவள் சுற்றும் முற்றும் கண்களை சுழலவிட்டாள்.

அதை பார்த்த சிபி “ஏதாவது வேணுமா அண்ணி” என்று கேட்க, ஆமென்று தலையாட்டியவள் “சிபி, தலைக்கு வைக்க பூ கொண்டு வர்றீங்களா” என்று கேட்டாள்.

அப்போதே எதுவோ குறைகிறது என்று அன்புவை ஆராய்ந்திருந்தவனுக்கு பல்பு எரிந்தது. அவளிடம் பூ தான் குறைந்தது.

தன் பளபளக்கும் பட்டு கூந்தலை பிரெஞ்சு பின்னல் போட்டு தோளில் தவழும் படி முன்னே எடுத்து போட்டிருந்தவள் தலையில் பூ மட்டும் வைக்கவில்லை. இப்போது முழுதாக தயாராகி இருந்த அபர்ணாவும் பூ கொண்டுவர சொல்ல, அவனுக்கு எதுவோ புரிவது போல் இருந்தது.

கீழே சென்றவன் தனக்கு பிடித்த ஜாதிமல்லியில் ஒரு சரமும், குண்டு மல்லியில் ஒரு சரமுமென இரண்டு பூச்சரத்தை எடுத்து கொண்டு மேலே ஓடிவந்தான்.

அதை கையில் வாங்கிய அபர்ணாவும் அவன் யூகத்தை பொய்யாக்காது பூச்சரங்களை அன்பரசியின் தலையில் சூட்ட போனாள்.

அதை கண்ட அன்பரசி “எதுக்கு அபர்ணா. வேண்டாம்” என்று மறுத்தாள்.

“ப்ச்.. திரும்பு” என்று அவளை திருப்பியவள் அதை தோழிக்கு சூட்டி அவளை நிறைவாக அழகு பார்த்தாள்.

அவளை பூவுடன் பார்த்த சிபிக்கும் அவளை பார்த்த நாளிலிருந்து தன்னை மீறி பிரவாகித்து கொண்டிருந்த அவளின் மீதான உணர்வுகளுக்கு இன்று பெயர் கிடைத்தது.

ஆம், அவளை அவன் அவர்கள் வீட்டில் வைத்து முதலில் பார்க்கவில்லை. அதற்கு மிக மிக முன்னரே பார்த்திருக்கின்றான். யாரென்று தெரியாத ஒரு பெண்ணை தேடி மீண்டும் மீண்டும் அவளை சந்தித்த இடத்திற்கு சென்றிருக்கின்றான்.

அப்போதெல்லாம் அவன் கண்களில் படாமல் கண்ணாமுச்சி ஆட்டம் ஆடியவள் ஒரு நாள் தன் அண்ணியின் தோழியாக அவனுக்கு அறிமுகமானாள். ஆனால் அவன் பார்த்த பெண் துறு துறுவென்று இருப்பவள். தன்னை காக்க முன் பின் தெரியாத ஆண் என்றும் பாராமல் தன் கரத்தை பிடித்தவள்.

இன்றிருக்கும் அன்பரசியோ முற்றும் மாறுபட்டவள். தன்னுடைய தேவைக்கு கூட இன்னொரு ஆணின் வண்டியில் ஏற மறுப்பவள்.

இத்தனை முரண்பாடு இவளுள் எப்படி வந்தது, இல்லை தன் கணிப்பு தான் தவறா என்று அவளை தன் வீட்டில் பார்த்ததிலிருந்து எத்தனையோ முறை யோசித்துவிட்டான். விடை தான் கிடைத்தாற்பாடில்லை.

எது எப்படியோ, சிபி சக்கரவர்த்தியின் மனதை ஆட்சி செய்ய தொடங்கினாள் நம் அன்பிற்கரசி.


உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..

 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 4

மெக்கானிக்கல் பிரிவில் தன் இளங்கலை பொறியியல் படிப்பை முடித்துவிட்ட சிபி, ரயில்வே தேர்விற்கு தன்னை தயார் படுத்திக் கொண்டிருந்தான்.

நான்கு மாதங்களாக முழுதாக தயாராகியிருந்தவனுக்கு அன்று ஆர்ஆர்பி தேர்வு. அதுவும் அவனுக்கு சற்று தூரத்தில் தேர்விடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

தேர்வு கூடத்திற்கு தன் வண்டியில் சென்றிருந்தவனுக்கு இடையூறு தருவதாக அவனது வண்டி வழியிலேயே நின்றிவிட்டது.

தனக்கு தெரிந்தவரை வண்டியை எவ்வளவோ சரி செய்ய முயன்றான் சிபி. அன்று அவனுக்கு இருந்த பதற்றத்தில் இதுவும் சேர்ந்து கொள்ள, அவனது அனைத்து முயற்சிகளும் வீணாய் போனது. வண்டியை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு என்ன செய்தவென்று நேரத்தை பார்த்தான்.

இன்னும் ஒரு மணி நேரத்தில் அவன் தேர்வுகூடத்தில் இருக்க வேண்டும். வேறு வழியில்லாமல் அருகிலிருந்த பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக வந்து நின்று கொண்டான்.

அடுத்த மூன்று நிமிடத்தில் ஒரு பேருந்தும் வந்தது. ஆனால் அதில் கூட்டமாக இருந்தது. ஞாயிற்றுகிழமை ஆயினும் வெகுநேரமாய் இடையில் எந்த பேருந்தும் வராததால் இப்பேருந்து நிரம்பி வழிந்ததோடு படிக்கட்டில் பல ஆடவர்கள் தொங்கிக் கொண்டிருந்தனர்.

அதில் ஏறலாமா வேண்டாமா என்று அவன் யோசித்ததெல்லாம் ஒரு நொடியே. அடுத்த நொடி அவனும் அந்த வவ்வால் கூட்டத்தோடு சேர்ந்து படிக்கட்டில் பயணம் செய்ய தொடங்கினான்.

[படியில் நின்று பயணம் செய்வது உயிருக்கு கேடு. கரணம் தப்பினால் மரணம். படியில் பயணம் செய்வதை தவிர்ப்பீர்களாக.]

இதில் கோப்பு வேறு ஒரு கையில் இருக்க, அவனுக்கு சரியான பிடிமானம் இல்லாமல் போனது. எப்படியோ அடுத்த நிறுத்தம் வரை தாக்கு பிடித்தவன், அந்த நிறுத்தத்தில் மற்றவர்கள் இறங்கி ஏற கீழிறங்கி மேலேறிய போது தன் கோப்பை அவளிடம் கொடுத்து வைத்து கொள்ளுமாறு சைகை செய்தான்.

ஒருபக்கமாக சாய்ந்துக் கொண்டு சென்றிருந்த பேருந்தில் தனக்கு இடம் கிடைத்துவிட்டதில் எதை பற்றியும் கவலை கொள்ளாது கைபேசியில் யாரிடமோ வளவளத்து கொண்டிருந்தாள் அவள். அவள் ‘டி’ போட்டு பேசி கொண்டிருந்ததில் தோழியுடன் பேசுகிறாள் என்று நினைத்துக் கொண்டான்.

உண்மையில் அவளை பற்றிய ஆராய்ச்சியில் இறங்க அவனுக்கு நேரமும் இல்லை, விருப்பமும் இல்லை.

அவன் கோப்பை அவள் கையில் திணித்து வைத்து கொள்ள சொன்னதும், தன் குண்டு கண்களை உருட்டி பார்த்தவள் பின்பு சரி என்பதாய் மீண்டும் பேச்சை தொடரலாளாள்.

அவனுடன் தொங்கி கொண்டிருந்தவர்கள் பெரும்பாலும் இப்படி தான் பயணம் செய்வார்கள் போல். பழம் தின்று கொட்டை போட்டவர்கள் போல் அலட்சியமாக பிடித்து கொண்டிருந்தனர். ஆனால் சிறுவயதில் இருந்தே காரிலேயே சென்று வந்திருந்த நம் சிபிக்கு அது கொஞ்சம் சிரமமாகவே இருந்தது.

முதலில் கோப்பினால் தான் சரியாக பிடிக்க முடியவில்லை என்று நினைத்திருந்தவன் பின் தனக்கு இதில் பழக்கமில்லை என்பதை புரிந்து கொண்டான். பேருந்தோ நிறுத்தங்கள் கூட கூட நிறைமாத கர்ப்பிணியாகவே மாறி போனது.

படிக்கட்டின் விளிம்பில் நின்றிருந்தவனுக்கு அங்கிருந்த ஜன்னல் கம்பியை பிடித்திருந்தது தான் ஒரே பிடிமானமாக இருந்தது. அழுத்தி பிடித்திருந்ததில் அவனது கைகள் சிவந்து, மரத்து போயிருக்க, ஒரு நொடி தன்னையும் மீறி அவன் கை நழுவிவிட்டது. அவனதை சுதாரித்து பிடிப்பதற்குள், கைபேசியில் பேசியிருந்தவள் சட்டென அதை மடியில் போட்டுவிட்டு இரு கைகளாலும் தன் முழுபலம் கொண்டு அவன் கை பற்றி கீழே விழாமல் அவனை காத்தாள்.

அதில் அவன் முயன்று அவள் முகம் பார்க்க, அவளும் தன் குண்டு விழிகள் படபடக்க அவனை பார்த்தாள். அந்நொடி இருவரது பார்வையும் ஒன்றோடு ஒன்று கலந்திருந்தது. இருவரும் மற்றவரின் பார்வையை தாங்கிக் கொண்டே இமைக்கவும் மறந்து பயணம் செய்ய, அப்போது பேருந்து நிறுத்தம் வந்தது.

உள்ளிருந்து இறங்குபவர்கள் வெளியே வர அவளது கைகளில் இருந்து தன் கையை பிரித்துக் கொண்டு சிபி கீழே இறங்க, அவளும் தன் பார்வையை நேராக்கி கொண்டு முன்னே பார்த்து அமர்ந்தாள்.

பின் அவன் மீண்டும் ஏறி ஜன்னல் கம்பியை பிடிக்க, இம்முறை அவள் தானே அவனது கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.

அவன் இறங்கும் இடம் வரையும் இருவரின் கரமும் ஒன்றோடு ஒன்று பிணைந்து தான் இருந்தது. இவ்வாறே அவர்களது முதல் பயணம் அழகாக அமைந்திருந்தது.

அந்த நாளை நினைத்த பார்த்த சிபியின் கண்களில் மின்னல். கைபேசியில் தோழியிடம் பேசிக் கொண்டிருக்கும் விளையாட்டு பெண்ணாக தான் அவன் அன்று அன்புவை நினைத்தான். இல்லை இல்லை அன்பு என்று தெரியாத அவளை எண்ணினான். ஆனால் நொடிபொழுதில் தன் கை நழுவிய போது அதை சரியாக கவனித்து அவனை இறுக பற்றி அவனுயிர் காத்தாள்.

அதை இப்போது எண்ணும் போதும் அவன் உடல் சிலிர்த்து தேகம் மிளிர்ந்தது. அன்றோ நேரத்தில் தேர்வறைக்கு செல்வதே அவனது ஒரே எண்ணமாக இருந்தது.

தெய்வநாயகிக்கோ, அஷோக்குக்கோ அவன் இந்த தேர்வு எழுதுவதில் சுத்தமாக விருப்பமில்லை. பூபதி கேசவன் தான் மகனின் விருப்பத்திற்காக இதற்கு சம்மதித்தார். தன்னை நிரூபிக்க வேண்டிய இக்கட்டான நிலையில் இருந்தவனுக்கு பேருந்தை விட்டு இறங்கி தேர்வறைக்கு சென்றதும் அவளது நினைவு அறவே இல்லாமல் போனது.

தேர்வு, அதன்பின் முடிவுகள் பற்றிய கவலை என்று அதை சுற்றியே அவன் மனம் உழன்றிருக்க அவளது எண்ணம் அவன் மனதில் எங்கோ அடி ஆழத்தில் சென்று புதைந்து போனது.

சரியாக இரண்டு மாதம் கழித்து தேர்வு முடிவுகள் வெளிவந்தன. சிபி நன்மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தான். ரயில்வே
யில் வேலை உறுதி என்று முடிவானதும் தனக்கு இந்த வெற்றியை பெற்று கொடுத்த தெய்வத்திற்கு நன்றி சொல்ல கோவில் சென்றான்.

சாமி கும்பிட்டு முடித்து ஒரு தூணருகே கண்மூடி அமர்ந்திருந்தவனுக்கு தன் உயிர் காத்தவளின் முகம் மின்னலாய் வந்து போனது. அப்போதே அவன் அன்பரசியை தேட தொடங்கினான்.

அப்போதும் காதல் என்ற எண்ணத்தில் எல்லாம் இல்லை. தன்னுயிர் காத்தவள் என்ற நன்றி உணர்ச்சி மட்டுமே. அதோடு அவள் தன் கை பிடித்து தனக்கு மானசீகமாக வாழ்த்து சொல்லி அனுப்பியதால் தான், தான் தேர்ச்சி பெற்றோம் என்ற எண்ணம் வேறு.

அதுமட்டுமா, வீட்டில் தெய்வநாயகிடம் ஹால் டிக்கெட்டை கொடுத்து சாமியறையில் வைத்து பூஜை செய்து தர சொன்னான். அவரோ தனக்கு பிடிக்காத ஒன்றை மகன் செய்வதால் அதை தொட்டும் தீண்டாமல் சென்றுவிட்டார். அதன் பிறகு பேருந்தில் அன்பரசியிடம் தான் அதை கொடுத்தான்.

அவனை பொறுத்தவரை அவள் அவனுக்கு ராசியானவள். ஆம், அவனது ராசி அவள். தனக்கு அசிஸ்டெஸ்ட் லோகோ பைலட்டாக போஸ்டிங் கிடைக்கும் வரை ராசியை தேடி பலமுறை அதே பேருந்தில் பயணத்திருக்கிறான். அவளோ அவன் கண்களில் ஒருநாளும் படவில்லை.

எட்டு வருடங்களுக்கு பின் அவன் அவளை அபர்ணாவை காண வீட்டிற்கு வந்த போது தான் பார்த்தான்.

இத்தனை வருடமும் அவளை எங்காவது பார்த்து விடமாட்டோமா என்று தேடி கொண்டே தான் இருந்தான் சிபி. அதற்கு பெயர் காதலா, இல்லை வேறு ஏதாவதா என்று கேட்டால் அவனுக்கு பதில் தெரியாமல் தான் இருந்தது.

தன் மனம் காண துடித்திருந்தவளை அன்று நேரில் கண்ட நொடி அவனுள் மின்னல் வெட்டியது. அதுவும் அபர்ணாவும் இன்னொரு பெண்ணும் பேசி கொண்டிருக்கிறார்கள் என்றே அவர்களை கடந்து அவன் சமையலறைக்குள் சென்றான். அவனுக்கு அன்புவின் குரல் நன்கு பரிச்சயம். அவள் தான் தோழியிடம் அத்தனை உரக்க பேசியிருந்தாளே. அவள் குரல் அவனுள் ஆழமாய் பதிந்து தான் இருந்தது. அன்றோ அபர்ணா பேசி அவள் கேட்டு கொண்டு மட்டும் இருந்ததால் அவனால் இனம் காண முடியவில்லை.

பழச்சாறுடன் வந்தவன் அபர்ணாவிற்கு கொடுத்துவிட்டு, தலைகுனிந்து அமர்ந்திருந்தவளிடம் அதை எடுத்துக் கொள்ள சொல்ல, அப்போதே அவள் அவனுக்கு நிமிர்ந்து காட்சி தந்தாள். அந்த நொடி சிபி சிறகில்லாமல் பறந்தான் என்று தான் சொல்ல வேண்டும். அதற்குமேல் அங்கு நின்றால் எங்கே தன் கால்கள் தரையில் நிற்க மறுத்து, குதூகலித்து தன்னை காட்டி கொடுத்துவிடுமோ என்று தான் பழச்சாறு கொண்ட ட்ரேவை டீபாயின் மீது வைத்துவிட்டு அவன் மேலே சென்றது.

மேலே சந்தோசமாக ஒரு குத்தாட்டம் போட்டுவிட்டு தானே அலுவலகத்திற்கு தயாராகி கீழிறங்கி வந்தான். அவளை காணும் போதெல்லாம் சந்தோசம் கொள்கிறான். இருந்தும் அது என்ன உணர்வு என்று தன்னை சுய அலசல் செய்யாமல் தான் இருந்தான்.

அதற்கு காரணம் அவள். அவளிடம் அவன் கண்ட மாற்றம் அவனை பெரிதும் சிந்தனைக்குள்ளாக்கியது. அதேபோல் இதுநாள் வரை அவனை தெரிந்தது போல் அவள் காட்டிக் கொள்ளவில்லையே. அப்படியென்றால் அவளுக்கு தன்னை நினைவில்லை தானே அர்த்தம் என்று வேறு குழம்பியிருந்தான்.

ஒரே ஒரு முறை பார்த்து அவளது குணத்தை கணித்துவிட்டவனுக்கு இப்போது அது தவறோ என்று தான் இருந்தது. இருந்தும் அவளருகில் மட்டும் தன் கட்டுப்பாட்டை இழந்து தறிக்கெட்டு ஓடும் அவனது உணர்வுகள் அவன் மனதை அவனுக்கு அழகாய் புரிய வைத்தது. அதில் அவன் மனம் இறகாய் லேசானது.

அனைத்தையும் யோசித்து பார்த்த சிபிக்கு தான் அவளை விரும்புகிறோம் என்பது புரிந்தாலும் உடனே அவளிடம் தன் மனதை திறப்பதில் உடன்பாடில்லை. இன்னும் சிறிது காலம் அவளுடன் பேசி பழகி நெருக்கமான பிறகு சொல்லி கொள்ளலாம் என்று எண்ணினான். அது என்றும் நடக்காத ஒன்று என்பதை அறியாது அவன் தப்பு கணக்கு போட்டான்.

நான்கு மாதங்கள் ஓடிவிட்டது. சிபியும் தன் காதலை மறைத்துக் கொண்டு அவளிடம் ஒரு நண்பனாகவே பேசிக் கொண்டிருந்தான்.

தினமும் ‘குட் மார்னிங்’, ‘குட் ஈவ்னிங்’, ‘குட் நைட்’ என்று மூன்று குறுஞ்செய்தி அனுப்புவான். அதற்கு எப்போதாவது அவளிடமிருந்து பதில் வரும். அதை வைத்து பேச்சு கொடுத்து வளவளப்பான்.

இருவருக்கும் புத்தகம் படிப்பதில் ஆர்வம் இருந்தது. அதனால் தான் படித்ததில் பிடித்த புத்தகங்களை அவளுக்கும் பரிந்துரை செய்வான். அவளும் அதுபோல் அவனுக்கு பரிந்துரைப்பாள்.

அது போல் எப்போதாவது அவளை வெளியில் காண நேர்ந்தால் காப்பி குடிக்க அழைப்பான். சிலநேரம் முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு ‘சாப்பிடவில்லை, ஏதாவது சாப்பிட செல்வோமா’ என்று அவளது பலவீனத்தை சரியாய் பயன்படுத்த, அது வேலையும் செய்து இருவரும் வெளியில் சென்று சாப்பிடுவர். அதிலும் இரயில் பெட்டி போல் வடிவமைக்கப்பட்டிருக்கும் உணவு விடுதியே அவர்களது அபிமான உணவு விடுதி.

இப்போது அன்பரசிக்கு சிபி நல்ல தோழனாகி இருந்தான். அதை தாண்டி வேறெதுவும் அவள் மனதில் வந்தது போலும் தெரியவில்லை.

இதற்கிடையில் அஷோக்கிற்கும் அபர்ணாவிற்கும் ஆண் குழந்தை பிறந்தது. தன் வீட்டின் அடுத்த தலைமுறை வாரிசை பொக்கிஷமாகவே கருதினார் தெய்வநாயகி. சிபிக்கும் தனக்கு பிறகு முப்பது வருடம் கழித்து பிறந்த அந்த குட்டி கண்ணன் மீது கொள்ளை பிரியம்.

அசோக் மற்றும் அபர்ணாவின் குழந்தையை தொட்டிலில் போட்டு வருண் சக்கரவர்த்தி என்று அபர்ணாவின் வீட்டில் வைத்து பெயர் சூட்டினர். அவ்விழாவிற்கு தோழியின் வற்புறுத்தலால் அன்பரசியும் வந்திருந்தாள்.

வீடே விழா கோலம் பூண்டு விருந்தினரால் நிரம்பி வழிய, தெய்வநாயகி தன் கணவரோடு நடுநாயகமாக பேரனை மடியில் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார். அவருக்கு அருகில் போட்டிருந்த நாற்காலியில் என்ன வம்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து கொண்டு பானுமதியும் அமர்ந்திருந்தார்.

தன் வீட்டில் வளைகாப்பு வைபவம் நடந்தபோது, வீடும் விசாலம், வந்திருந்த விருந்தினர்களும் ஏராளம். அதில் யாரென்று தெரியாத ஒரு சாதாரண பெண்ணை கவனிக்க தெய்வாவிற்கு நேரம் இருக்கவில்லை.

இன்றோ அபர்ணாவின் வீட்டை தன் வீடு போல் எண்ணி அங்கும் இங்கும் நடந்து வந்தவர்களுக்கு குடிக்கவும் சாப்பிடவும் கொடுத்து அன்பு உபசரித்து கொண்டிருக்க, தன் சிறிய மகனின் பார்வை அவள் மீது ரசனையாய் படுவதையும், இருவரும் கடந்து செல்லும் போது சிறு புன்னகையை கொடுத்துவிட்டு செல்வதையும் பேரனை கொஞ்சி கொண்டிருந்தவர் தவறாமல் பார்த்துவிட்டார்.

அதன்பின் அன்பு மீது ஒரு கண்ணை வைக்க, அவளோ ஏதும் அறியாமல் தன் வேலையை செய்திருந்தாள். அவரது மகன் தான் அவளை வண்டு போல் மொய்த்து கொண்டிருந்தான். அதை பார்த்த தெய்வநாயகிக்கு தன் உலகமே நின்று சுழன்றது.

மகனை பற்றி எத்தனை எத்தனை கனவுகள் வைத்திருக்கின்றார். இவன் என்னவென்றால் யாரோ ஒரு பெண்ணை வைத்த கண் வாங்காமல் பார்த்திருக்கிறானே. அதுவும் அவர் அன்பரசியை உற்று பார்க்க, நல்ல விலையிலேயே அழகான வேலைப்பாடுகள் கொண்ட சுடிதார் அணிந்திருந்தாள். ஆனால், அவரை பொறுத்தவரை அது சாதாரணமே.

அதோடு அவள் கழுத்தில் மெல்லிய சங்கிலியும் காதுகளில் சிறு தோடும் அணிந்திருந்தாள். அது அவருக்கு தங்கத்திற்கு வழியில்லாதவர்கள் அணிவது. இப்படி அன்பரசியை பற்றிய முதல் அபிப்ராயமே முகம் சுளிப்பதாய் தான் அவருக்கு இருந்தது.

தன் மூத்த மகனை அழைத்தவர் அவள் யாரென்று விசாரிக்க, அவன் “அவங்க அபர் ப்ரண்ட் ம்மா” என்றது தான், பேரனை தொட்டிலில் போட்டுவிட்டு அங்கு உறவினரிடம் பேசிக் கொண்டிருந்த அபர்ணாவை கையோடு அவளது அறைக்கு இழுத்துச் சென்றார்.

“யாரது.. நம்ம குடும்பத்துக்கு சம்மந்தமே இல்லாம ஒரு டிரஸை போட்டுக்கிட்டு இங்கேயும் அங்கேயும் நடந்துக்கிட்டு இருக்கா” என்று எடுத்த எடுப்பிலேயே தெய்வா அன்புவை பற்றி அபர்ணாவிடம் கேட்க, அவளுக்கு முதலில் அவர் யாரை பற்றி சொல்கிறார் என்றே புரியவில்லை.

பின் புரிந்தவளாக “அது அன்பு அத்தை. என் ப்ரண்ட் தான்” என்றாள்.

அதை கேட்டவர் “நம்ப தராதரத்துக்கு ஏத்த நட்பு வச்சிக்கணும்னு கூடவா உனக்கு தெரியாது. நீ கட்டியிருக்க புடவையோட விலை என்னனு தெரியுமா” என்று அவளது நிச்சய புடவையை காட்டி கேட்டவர் “மூணு லட்சம். அந்த பொண்ணு போட்டிருக்கிற டிரஸ் ஒரு முன்னூறு ரூபா இருக்குமா. கழுத்துலயும் காதுலையும் கவரிங்கை மாட்டிக்கிட்டு வந்துட்டா போலயே” என்று பேசிக் கொண்டே போனார்.

அதில் அபர்ணாவிற்கு கோபம் மூள “அத்தை.. ப்ளீஸ் அவளை அப்படி பேசாதீங்க. அவ இங்க வரலன்னு தான் சொன்னா. நான் தான் வற்புறுத்தி கூப்பிட்டேன்” என்று சற்று கடுமையாகவே மாமியாருக்கு பதில் கொடுத்தாள்.

“என்ன வாய் கூடி போச்சா. குழந்தையை சுமந்திட்டு இருந்தியேனு தான் அசோக் உங்கிட்ட கரிசனமா நடந்துக்கிட்டான். இப்படி என்னை என் புள்ள முன்னாடி பேசிடாத, அப்புறம் பல்லு போன கிழவி மாதிரி எல்லாத்தையும் இடிச்சி தான் சாப்பிடணும்” என்று அவர் எகத்தாளமாக சொல்ல, அன்னையின் விசயத்தில் தன் கணவரின் குணத்தை நன்கறிந்த அபர்ணாவிற்கு கண்களில் நீர் நிறைந்துவிட்டது.

“இனி நம்ம வீட்டுல நடக்கிற எந்த விசேஷத்துலையும் நான் அவளை பார்க்க கூடாது” என்று மருமகளை மேலும் கீழும் பார்த்து விட்டு அங்கிருந்து நகர்ந்தவர்,

‘இதை இப்படியே விடக்கூடாது. சீக்கிரம் சிபிக்கு நான் நினைச்ச மாதிரி ஒரு பொண்ண பார்த்து கட்டி வச்சிடனும்’ என்று எண்ணிக் கொண்டே வெளியில் சென்றார்.

அன்னை ஒரு திட்டம் போட, நான்கு மாதங்களாக அவளது மனமறிய காத்திருந்த தனயனும் ஒரு முடிவிற்கு வந்திருந்தான்.

அன்றொரு நாள் காலையிலிருந்தே அன்பரசிக்கு எதுவோ தவறாக நடக்க போவதாகவே மனது படபடக்க மன சாந்தி பெற கோவிலுக்கு சென்றாள்.

அங்கே சாமி சன்னிதானத்தில் நின்று கருவறையில் வீற்றிருந்த தெய்வத்தையே இமைக்காது பார்த்திருந்தவள் ஐயர் தீபாராதனை காட்டி எடுத்து வந்ததும், அதை தொட்டு கண்ணில் ஒற்றி கொண்டாள். பின் அவர் விபூதியும் குங்குமமும் கொடுக்க, அதை வாங்கியவள் சாஸ்திரத்திற்கு விபூதியை மட்டும் எடுத்து கழுத்தில் தடவி கொண்டு இரண்டையும் அங்கிருந்த கிண்ணத்தில் கொட்டிவிட்டு பிரகாரத்தை சுற்றிவர சென்றாள்.


இவளது செயலை பார்த்திருந்த அந்த நபர் மனது வலிக்க அவள் பெயர் சொல்லி அழைக்க, அவரை திரும்பி பார்த்தவள் ஓர் நொடி திகைத்து பின் புன்னகைத்தாள்.


உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்.
 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 5

அன்று காலை எழுந்ததிலிருந்தே அன்புவிற்கு எதுவோ தன்னை சோதிக்க காத்திருப்பதாகவே உணர்ந்தாள். சோதனைகள் அவளுக்கு ஒன்றும் புதிதல்ல. வாழ்க்கை கையை விரித்து அவளை நிர்கதியில் நிறுத்திய போதும், தனக்கு நெருங்கியவர்கள் தன்னை விட்டு விலகி சென்ற போதும் அரும்பாடுபட்டு தான் மீட்டெழுந்தாள்.

நிம்மதியை தேடி கோவிலுக்கு வந்தவளுக்கு அங்கே தன் நிம்மதியை குலைக்க காத்திருந்தார் அவர். அவரை பார்த்ததும் முதலில் திகைத்தாள். பின் அவர் மீது இருக்கும் கோபம் எட்டி பார்க்க தயாராக இருந்தது. அனைத்தையும் அவர் வயதின் காரணம் கொண்டு அடக்கியவள் உதடு விரியாமல் புன்னகைத்துவிட்டு அங்கிருந்து நகர பார்த்தாள்.

அவரோ விடாமல் அவள் பின்னால் வந்து “அரசி, எப்படிமா இருக்க” என்று பரிவாக கேட்டார்.

“ஹ்ம்ம்” என்றாள் அவரிடம் வாய் திறக்க விரும்பாதவளாய்.

அது அவருக்கு புரிந்தாலும் “அம்மா கூட வரலையா, தனியா வந்திருக்கீயே” என்று கேட்டதற்கு இல்லையென்று தலையாட்டினாள்.

அவளது ஓவ்வொரு பேச்சிலும் தன்னிடம் உரிமையை நிலைநாட்டுபவள், இன்று வாய் திறக்கவும் மறுக்கிறாள் என்ற வேதனை அவரை வாள் கொண்டு அறுக்க, தொண்டையை அடைக்கும் துக்கத்தை விழுங்கி “இன்னைக்கு ஆபீஸ் லீவ்வா மா” என்று அடுத்த கேள்வியை கேட்டார்.

அவர் அவளிடம் வலிய பேச்சு கொடுத்தும், அவள் ஒன்றும் பேசாமல் இல்லையென்று தலையை மட்டும் ஆட்டினாள்.

தன் மனக்கிலேசத்தை தாங்கி கொண்டு “அம்மா சொன்னாங்க நீ ஜெர்மனில இருந்து வந்துட்டேனு.. எனக்கும் உன்னை வந்து பார்க்கணும்னு ஆசை தான். நீ தான் என்னை வெறுத்துட்டியே மா. இனி எப்பவும் உன்னை பார்க்க வரக்கூடாதுன்னு சொல்லிட்டியே. அதான் நான் வரல” என்றதற்கும் அவள் அமைதியாகவே நிற்க,

“எனக்கு ஒண்ணு தான் மா வேணும். உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சிட்டா, அதை கண் குளிர பார்த்துட்டு நான் கண்ணை மூடிடுவேன். அதுக்காக தான்ம்மா இந்த உயிரை இன்னும் கையில பிடிச்சிக்கிட்டு இருக்கேன்” என்று கண்கலங்கி விட்டார்.

அவர் கண்களில் கண்ணீரை பார்த்தவளுக்கும் மனம் பதற தான் செய்தது. இருந்தும் ஒரு வார்த்தையும் பேசவில்லை.

இதுபோல் எப்போதாவது எதேர்ச்சையாக சந்தித்தால், அவளிடம் அவர் வந்து பேசுவார் தான். அப்போதெல்லாம் துளியும் கரையாத தன் மனது, இன்று அவரது கண்ணீரில் கரைந்துவிடுமோ என்று தான் இருந்தது. இருந்தும் மனதை கல்லாக்கி கொண்டு நின்றிருந்தாள். அவரால் தன் வாழ்வில் ஏற்பட்ட கலங்கம் அவளை அவரிடம் பேச விடவில்லை.

பேசி பார்த்து ஓய்ந்தவர் அவள் தலையில் ஆசீர்வதிப்பது போல் கைவைத்து “நல்லா இருப்ப மா” என்றவர், கருவறையில் வீற்றிருக்கும் அம்மாள் சன்னதி இருக்கும் திசை பார்த்து “அது தான் மா என் ஒரே பிரார்த்தனை” என்றுவிட்டு தலையை தொங்கப்போட்டு கொண்டு அங்கிருந்து சென்றார்.

அதை பார்த்திருந்த அன்புவிற்கு அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் கண்ணிலிருந்து வழிய, என்ன தான் அவர் செய்தது தவறென்றாலும், அவர் அவள் மீது வைத்திருக்கும் பாசமும் பொய்யில்லை என்பதை நன்கு அறிந்தவளின் உதடுகள் “அப்பா” என்று தானாகவே முணுமுணுத்தது.

மாலை, அந்த புகழ்பெற்ற கர்நாடக இசை பாடகி ‘காக்கை சிறகினிலே நந்தலாலா.. நின்றன் கரியநிறந் தோன்றுதையே நந்தலாலா’ சுருதியோடு தாளம் தட்டி உருகி பாடிக் கொண்டிருந்தார்.

ஏற்கனவே மன அயர்வு, இதில் காலையில் அவரை வேறு சந்தித்ததில் வேறு கூடிப் போன மன பாரம் என அனைத்து வகையிலும் வேதனையில் தவித்திருந்த அன்பு, கண்களை மூடி பாடலை லயித்து கேட்டிருந்தாள்.

அப்போது அவளுக்கு மிக அருகில் பரிச்சயமான குரல், வார்த்தைகளில் புத்துணர்வுடன் ஒலிப்பதை கேட்டு கண்களை திறந்தவள் சிபி அவளுக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்திருப்பதை கண்டு திகைத்து கண்களை விரித்தாள்.

“எவ்ளோ பெரிய முட்டை கண்ணு.. பார்த்து வெளிய விழுந்திட போகுது” என்று சிரிக்க, அன்பு அவனையே பார்த்திருந்தாள்.

“நீங்கயெல்லாம் இந்த ஜெனரேஷன்ல பிறக்க வேண்டிய ஆளே இல்ல தெரியுமா” என்று சற்று சத்தமாகவே சொல்லிவிட, அவனுக்கு அருகில் அமர்ந்து தாளம் போட்டு கொண்டே பாட்டை ரசித்திருந்த முதியவர் அவனை திரும்பி முறைத்தார்.

உடனே அவரிடம் “சாரி.. சாரி” என்று மன்னிப்பு கேட்டவன் “நீங்கயெல்லாம் இந்த ஜெனரேஷன்ல பிறக்க வேண்டிய ஆளே இல்ல தெரியுமா. எல்லாரும் மியுசிக் டைரக்டர்ஸ் கான்செர்ட்ஸ், ப்லே பேக் சிங்கர்ஸ் கான்செர்ட்ஸ், ஸ்டாண்டப் காமெடி, பப், பார்ட்டினு சுத்திட்டு இருக்க இந்த காலத்துல நீங்க மட்டும் ஆ..ஆ, ஊ..ஊ, ன்ஞானு சங்கீத சாகரத்துல நீந்திட்டு இருக்கீங்க” என்றுவிட்டு எப்போதும் போல் புன்னகைக்க, நீங்கள் மட்டும் என்ன என்பதாய் அவள் அவனை பார்த்தாள்.

அதை புரிந்தவனாக “அப்புறம் எதுக்குடா நீ இங்க வந்து உட்கார்ந்துட்டு இருக்கனு கேக்கறீங்களா. இப்போ பாடிட்டு இருக்காங்களே கலைமாமணி. ஶ்ரீமதி. சௌந்தர்யலஷ்மி அம்மாள், அவங்களோட ஸ்டூடென்ட் என் ப்ரண்ட். அவளும் ஒரு பாட்டு பாடுறா. அதான் கூட்டம் சேர்க்க எனக்கு கை காசை போட்டு டிக்கெட் எடுத்து கூட்டிட்டு வந்து உட்கார வச்சிருக்கா. சரி நானும் கொஞ்சம் நேரம் தூங்கிட்டு போலாமேன்னு வந்தேன்” அவன் பாட்டிற்கு அவளுக்கு மட்டும் கேட்கும் படி அவள் காதருகே கிசுகிசுத்துக் கொண்டிருந்தான்.

அதில் அவனது மூச்சு காற்று அவளது காதுமடலை வருட, தேகம் சிலிர்த்து போனாள் அன்பு. இதில் அவளை இன்னும் இம்சிப்பதாய் இருந்தது அவனது நெருக்கம். அவனது உதட்டிற்கும் அவளது கன்னத்திற்கும் இடையே ஒரு அங்குல தூரம் தான் இருக்கும். அதோடு அவனது மீசை ரோமங்கள் அவளை தீண்டாமலே தீண்டுவது போல் ஓர் குறுகுறுப்பை உண்டு செய்தது.

அதில் அன்பு ஒரு சிலநிமிடங்கள் தடுமாறினாலும் பின் தன்னை சுதாரித்துக் கொண்டு தன் காதருகே பேசி கொண்டிருந்தவனின் தாடை பற்றி அவனது முகத்தை மேடையை நோக்கி திருப்பினாள்.

அவன் திகைத்து அவள் புறம் திரும்பி பார்க்க, அவளோ அவனை திரும்பி பார்க்காமலே தன் ஒற்றை கரத்தால் அவன் கன்னத்தில் கைவைத்து முகத்தை மீண்டும் திருப்பினாள்.

இதுவரை அவனை அவள் தொட்டதே இல்லை. அன்றொரு நாள் இரவு அவள் தனியாக நின்றிருந்த போதும், அவனது இருசக்கர வாகனத்தில் ஏறினாளே தவிர அவள் விரல் கூட அவன் மீது படவில்லை. அதன் பின் நண்பர்களான பிறகும் ஒரு நாளும் அவள் அவனுடன் வண்டியில் வந்ததில்லை.

அவள், அவளது வண்டியில் வருவாள். அவன், அவனது வாகனத்தில். அப்படியில்லாமல் காரில் செல்வதானாலும் சரி, இல்லை ஆட்டோவில் செல்வதானாலும் அவன் விரல் நுனியும் படாத அளவிற்கு இருக்கையின் விளிம்பிலேயே அமர்வாள்.

இன்றோ அவளே அவனது தாடையை பிடித்து அவன் முகத்தை திரும்பியது அவன் மனதிற்குள்ளும் ஏதேதோ உணர்வுகளை பெருக்கெடுக்க செய்ய, கண்களை மூடி கொண்டான் சிபி. இப்போது அவனை பார்த்த அன்பு, அவன் பாடலை மெய்மறந்து கேட்டு கொண்டிருக்கிறான் என்றெண்ணி கொண்டாள். அவனோ அவளது முதல் ஸ்பரிசத்தை அனுபவித்து கொண்டிருந்தான்.

முதல் முறை தான் அவன் தேர்விற்கு செல்லும் அவசரத்தில் அதை அனுபவிக்க தவறிவிட்டானே. அதனால் இப்போதே முதல் முறை போல் திகட்ட திகட்ட அனுபவித்திருந்தான். அதுவும் தான் உயிருக்கு உயிராய் நேசிக்கும் தன் காதலியின் ஸ்பரிசத்தை.

கச்சேரி முழுவதும் அன்பு பாடல்களை ரசித்திருக்க, அவன் அன்புவை மனதிற்குள்ளேயே ரசித்திருந்தான்.

கச்சேரி முடிந்து இருவரும் வெளியே வர, நேரமாகி விட்டதே, இப்போது எப்படி செல்ல போகிறாள் என்பதாய் சிபி தேங்கி நிற்க, அதை புரிந்தவள் போல் “ஸ்கூட்டி எடுத்துட்டு வரல. கவலைபடாதீங்க, நான் இங்கயே இருந்து கேப் புக் பண்ணி போயிடுவேன். நீங்க கிளம்புங்க” என்றாள்.

“அது எப்படி உங்கள விட்டுட்டு போக முடியும். நீங்க என் அண்ணிக்கு ப்ரண்ட்டா இருக்கப்பவே உங்கள தனியா விட்டுட்டு போனதில்ல. இப்ப எனக்கும் ப்ரண்ட். போயிடுவேனா என்ன” என்று புன்னகைக்க, அவனிடம் திகைத்து விழிப்பதே அவளது வாடிக்கையாகி போனது.

பின் அவனே “வாங்க வாங்க.. கார் பார்கிங்ல இருக்கு. எனக்கு பசிக்குது பா. வழியில சாப்பிட்டு உங்கள வீட்டுல விட்டுடுறேன்” என்றான்.

அவன் சாப்பிடவில்லை என்று சொன்னால், துடிக்கும் தன் மனதையும், அதை அனுகூலமாக பயன்படுத்தி கொள்ளும் அவனது சாமர்த்தியத்தின் மீதும் அவளுக்கு கோபம் கோபமாக வர, பல்லை கடித்து கொண்டு அவனோடு நடந்தாள்.

இருவரும் வண்டியில் சென்றுக் கொண்டிருக்க, அவனுக்கு மிகவும் பிடித்த தள்ளு வண்டி கடையில் நிறுத்தி இருவருக்கும் இரு ப்ளேட் பரோட்டா சால்னாவும், கலக்கியும் ஆர்டர் செய்தான். அதை ரசித்து, ருசித்து அவன் சாப்பிட, வழக்கம் போல் தயக்கத்தோடே சாப்பிட்டு முடித்தாள் அன்பு.

சாப்பிட்டதற்கு பணத்தை கொடுத்துவிட்டு அவளை அழைத்து வந்தவன் வழியில் அந்த பகுதியிலேயே மிகவும் பிரசித்தமான தள்ளு வண்டி பனிகூழ் கடையின் எதிரே வண்டியை நிறுத்தினான்.

இப்போது என்ன என்பதாய் அன்பு அவனை பார்க்க “க்ளைமட் சூப்பரா இருக்கு. இந்த டைம்ல ஒரு ஐஸ்கிரீம் சாப்பிடலாமா” என்று கேட்டான்.

அதில் கடுப்பான அன்பு அவனை முறைக்க “அது இல்ல, சாப்பிட்டது பத்தல. ஒரு ஐஸ்கிரீம் சாப்பிட்டா பசி அடங்குமேனு பார்த்தேன்” என்று சிறுபிள்ளை போல் தலை குனிந்து சொன்னவன் “ப்ச்ச்.. வேண்டாம் விடுங்க” என்று காரின் ஹேண்ட் பிரேக்கை ரிலீஸ் செய்து வண்டியை உயிர்ப்பிக்க போக

“இல்ல.. போகலாம் வாங்க” என்றாள் மெல்லிய குரலில்.

உடனே முகம் மலர்ந்தவனாக மீண்டும் ஹேண்ட் பிரேக்கை லாக் செய்துவிட்டு உற்சாகமாக கீழிறங்க, அன்புவும் தன் பக்க கதவை திறந்துக் கொண்டு கீழறங்கினாள்.

நேரம் அப்போது இரவு பதினொன்று இருக்கும். அவளது அன்னை அழைத்து கேட்டதற்கு, தான் தன் நண்பருடன் பத்திரமாக வீட்டிற்கு வந்துவிடுவேன் என்று சொல்லியிருக்க, அவரும் மகளுக்கு மீண்டும் மீண்டும் அழைத்து தொந்தரவு செய்யாமல் அவளுக்காக பொறுமையாக காத்திருந்தார்.

இங்கே சிபி, தனக்கும் அவளுக்கும் தத்தம் விருப்பத்திற்கேற்ற ஃப்ளேவரில் மூன்று கார்னெட்டோ ஐஸ்கிரீமை வாங்கி கொண்டு வர, சற்று தள்ளி நின்றிருந்த அன்பு நிலத்தை பார்த்து நின்றிருந்தாள்.

இரவு நேரமானாலும் அப்பகுதியில் சற்று பிரசித்தமான கடை என்பதால் கூட்டம் வெகுவாகவே இருந்தது.

மூன்று கார்னெட்டோவையும் வாங்கி கொண்டு வந்தவன், அதை ஒன்றாக சேர்த்து பிடித்து ஒரு பூங்கொத்தை போல் ஏந்தி, அது சாலையென்றும் பாராமல் ஒற்றை காலில் அவள் முன்பு மண்டியிட, அன்பு அதிர்ந்து இரண்டடி பின்னுக்கு சென்றாள்.

அவனோ தன் கையிலிருந்த ஐஸ்கிரீம்களை நீட்டி “எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு அன்பு. நாம கல்யாணம் பண்ணிக்கலாமா” என்று மனதின் ஆசையை அவளிடம் கேட்டான்.

ஏற்கனவே திகைத்து நின்றிருந்தவளுக்கு இப்போது அவனது வார்த்தைகளை கேட்டு கண்களில் களுக்கென்று கண்ணீர் நின்றுவிட்டது.

அங்கு நண்பர்களோடும், தங்கள் காதலர், காதலியோடும், தத்தம் துணைகளோடும் ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் அவனது இச்செயலுக்கு கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நல்லவேளை அங்கு சிறுவர்கள் யாருமில்லை. அதை உறுதி செய்த பின்னே சிபி இம்முடிவிற்கு வந்திருந்தான்.

அவளது மனது புரியும் வரை ஒரு நண்பனாக மட்டுமே இருக்கவேண்டும் என்ற தீர்மானத்துடன் தான் தன் காதலை ஆறு மாதங்களாக மறைத்து வைத்திருந்தான். இன்றோ அவள் அவனது தாடையை பிடித்தும், கன்னம் தொட்டும் முகத்தை திருப்பிய பின் அவனுடைய கட்டுப்பாடெல்லாம் காற்றில் ஏற்றிய சூடமாய் கரைந்து தான் போனது.

அவளது ஸ்பரிசம் காலத்திற்கும் வேண்டுமென்று மனம் முரண்டு பிடிக்க, காதலை சொல்ல தன்னை தயார்படுத்தி கொள்ளவே அவளை உணவகத்திற்கு அழைத்து சென்றான். கச்சேரி நிகழ்ந்த சபாவிலிருந்து உணவகத்திற்கு வந்த போதும் சரி, அங்கிருந்து பனிகூழ் கடைக்கு வந்த போதும் அவன் அமைதியற்ற ஓர் நிலையில் தான் தவித்திருந்தான்.

ஒவ்வொரு வினாடியையும் அவன் சிரமப்பட்டு கடத்த, அவனால் சொல்லவும் முடியவில்லை, சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை. அவனுக்கு அவளது அருகாமை வாழ்வு முழுவதும் வேண்டும், அவளது ஸ்பரிசம் தன்னுயிர் உள்ள வரை வேண்டும் என்று தோன்றி கொண்டே இருக்கவே அவளிடம் சொல்லியும் விட்டான்.

அங்கிருந்தவர்களும் அவர்களுக்கு வாழ்த்து சொல்லும் விதமாக உற்சாகமாக கைதட்ட, சிபி செய்த காரியத்தில் உறைந்திருந்த அன்பு விறுவிறுவென தன் கைப்பையை எடுக்க அவனது காரை நோக்கி சென்றாள்.

அவனும் நிலைமையை புரிந்து ப்ளூடூத்தின் மூலம் வண்டியை ஆன் செய்ய, கதவை திறந்துக் கொண்டு உள்ளே குனிந்தவள் டேஷ் போர்டின் மீதிருந்த தன் கைப்பையை எடுத்து கொள்ள, அவளுக்கு பின்னால் வந்தவன் அவளது அனுமதியும் கேளாது அவள் தோள் தொட்டு அவளை வலிய உள்ளே அமர்த்திவிட்டு கதவை சாற்றியிருந்தான்.

அவனது தொடுகையில் அருவருத்தவளுக்கு அவனை அறைந்துவிடும் கோபம் வந்தது. அந்நிலையிலும் அது பொது இடம் என்பதை உணர்ந்து கண்மூடி கோபத்தை கட்டுப்படுத்தி கொண்டு அவள் கதவை திறந்து கீழிறங்குவதற்குள், தன் பக்க இருக்கையில் வந்து அமர்ந்தவன் அவளையும் இறங்கவிடாமல் கைபிடித்து இழுத்து வலுகட்டாயமாக அமர்த்தி கதவையும் லாக் செய்திருந்தான்.

அதில் அவள் திரும்பி அவனை முறைக்க “உங்க முடிவு என்னவா வேணும்னாலும் இருக்கட்டும். ஆனா நான் தான் உங்கள வீட்டுல ட்ராப் பண்ணுவேன். எனக்கு உங்க சேஃப்ட்டி முக்கியம்” என்று கடுமையான குரலில் சொன்னான்.

இதுவரை இதுபோன்ற குரலில் அவன் பேசியதே இல்லை. அதில் அவள் திகைத்து அவனை முறைக்க “ப்ளீஸ் அன்பு. இத நான் ரொம்ப நாளா மனசுக்குள்ளேயே பூட்டி தான் வச்சிருந்தேன். உங்க மனசை புரிஞ்சிக்கிட்டு தான் சொல்லணும்னு கூட நினைச்சிருந்தேன். ஆனா, இன்னைக்கு என்னால முடியல. அதான் என்னைக்கு இருந்தாலும் தெரிஞ்சி தானே ஆகணும்னு இன்னைக்கே சொல்லிட்டேன்” என்று தன் தரப்பை அவன் சொல்ல, அவள் அவனை இன்னமும் முறைத்து கொண்டு தான் இருந்தாள்.

தன்னை எப்படியாவது அவளுக்கு புரியவைத்து, தன் காதலை நிறைவேற்றி கொள்ளவேண்டும் என்று அவன் மேலும் பேச வாயெடுக்க “போதும் சிபி. எனக்கு காதல்னாலே பிடிக்காது. கல்யாணம்ங்கிற வார்த்தையை நான் வெறுக்கிறேன். இதுக்காக தான் நான் எந்த ஆண்கிட்டயும் பேச தயங்குறது. தன்னுடைய சுயநலத்துக்காக ஒரு பெண்ணை பகடையா ஆக்குறது ஆண்களுடைய இயல்பு. நீங்க ப்ரண்ட்ஷிப்ன்னு சொன்னப்போ, உங்கள நான் நம்பினேன். ஆனா, நீங்களும் எல்லாரையும் மாதிரி தான்னு ப்ரூவ் பண்ணிட்டீங்க. அதுவும் இத்தனை பேர் முன்னாடி என்னை நீங்க அசிங்கப்படுத்திட்டீங்க” அதுவரை கோபமாக சொல்லியிருந்தவள், இறுதி வார்த்தைகளை சொன்னபோது குரல் கமறி கண்ணிலிருந்து நீர் வழிந்தது.

அவன் மீண்டும் எதையோ சொல்ல முயற்சி செய்ய, அவனை கை நீட்டி தடுத்தவள் “நீங்க என் பாதுகாப்ப பத்தி கவலைப்பட வேண்டாம்” என்று தன் கைபேசியில் வண்டிக்கு பதிந்தவள் அது வரும் வரை கண்களை மூடி அமைதியாக அமர்ந்திருந்தாள்.

சிபியோ என்ன செய்வதென்று தெரியாமல் அவளையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான். அவனுக்கு புரிந்ததெல்லாம், அவள் இப்போது இருக்கும் மனநிலையில் நிச்சயம் தன்னோடு வர விரும்பமாட்டாள் என்றே. அவன் நினைத்தால் முன்பு போல் அதட்டியோ.. ஏன், கண்களை மூடிக் கொண்டு தானே இருக்கிறாள், கதவை திறக்காமல் வலுக்கட்டாயமாக அவளை அழைத்து செல்லவும் முடியும். ஆனால் அப்படி அவளை அழைத்து செல்வதில் அவனுக்கு விருப்பமில்லை.

அவன் அமைதியாக அவளையே பார்த்திருக்க, அவ்விடத்திற்கு சரியாக வந்துவிட்ட கேப் ஓட்டுனர் அவளுக்கு அழைத்தார். செல்பேசி ஒலியில் கண்களை திறந்தவள் அதை எடுத்து பேசிவிட்டு அவனை பார்க்க, அவனும் புரிந்தவனாக கதவின் லாக்கை ரிலீஸ் செய்தான்.

அவள் காரிலிருந்து இறங்கும் நேரத்தில் “இதுவே நான் உங்கள பார்க்கறது கடைசி மிஸ்டர். சிபி சக்கரவர்த்தி” என்றுவிட்டு இறங்கி, அவனது வண்டிக்கு சற்று முன் நின்றிருந்த வண்டியில் ஏறி சென்றுவிட்டாள். சிபி தான் அவளது செயலில் திகைத்து அவள் செல்வதையே பார்த்திருந்தான்.


உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்

 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 6

ஒன்றரை மாதங்களுக்கும் மேலாகி இருந்தது. தன் காதலை சொன்ன அந்த வாரத்திலேயே சிபியும் அன்புவை சந்திக்க பலமுறை முயற்சி செய்திருக்கிறான். அவள் அலுவலகத்திற்கு செல்லும் வழியிலும் அவளிடம் பேச மணிக் கணக்கில் காத்திருந்திருக்கிறான்.

அவளோ அவனது எண்ணை பிளாக் செய்ததோடு, அவனுக்கு கண்ணா மூச்சி ஆட்டம் காட்டுவது போல் இருசக்கர வாகனத்தையோ, பொது போக்குவரத்தையோ உபயோகிக்காமல் அலுவலக பேருந்தில் செல்ல தொடங்கினாள்.

பொறுத்து பொறுத்து பார்த்தவன் அவளது அலுவலகத்திற்கே சென்றுவிட்டான். எப்பாடுபட்டாவது அவளை சந்தித்ததோடு, தன் காதலையும் அவளுக்கு புரியவைக்கும் படி பேசினான்.

“உங்களுக்கு சொன்னா புரியுதா. எனக்கு காதலே பிடிக்காது. கல்யாணம்ங்கிற வார்த்தையையே நான் வெறுக்கிறேன்” என்று கடுமை காட்டியவள், எல்லோரும் தன்னை பார்ப்பதை உணர்ந்து “ப்ளீஸ் மிஸ்டர்.சிபி சக்கரவர்த்தி, இப்படி ஆபீஸுக்கு வராதீங்க” என்று கைகூப்பி சொன்னாள்.

அதற்கு மேல் அவனால் அவளை தொந்தரவு செய்யமுடியவில்லை. அமைதியாக காத்திருக்க தொடங்கினான்.

என்ன தான் அவளை அவன் முன்பே பார்த்திருந்தாலும், மற்றவர்களை பொறுத்தவரை அவள் அவனது அண்ணியின் மூலமாக அறிமுகமானவள் தானே. அப்படியிருக்கும் பொழுது அன்பு இதுவரை இதை பற்றி அபர்ணாவிடம் சொன்னது போல் இல்லை என்றாலும் அதற்காக இதை அப்படியே அண்ணியிடமிருந்து மறைப்பது அவனுக்கு உசிதமாக படவில்லை.

அன்பு சொல்லிவிடுவாள் என்பதற்தாக இல்லை. தனக்கே அண்ணியிடம் சொல்வதே சரியென்று தோன்ற, அபர்ணாவிடம் சொல்லும் முடிவுடன் வீட்டில் யாருமில்லாத நேரமாக பார்த்து அண்ணனின் அறை கதவை தட்டினான்.

ஆம், குழந்தைக்கு ஐந்தாம் மாதம் முடியும் நேரத்தில் அபர்ணாவையும் பேரனையும் வீட்டிற்கு அழைத்துக் கொண்டார் தெய்வநாயகி.

கணவரும் மாமனாரும் அலுவலகத்தில் இருக்க, மாமியாரும் அவரது பெரியன்னையுடன் வெளியே சென்றிருக்க, இரவெல்லாம் தூங்காமல் தங்களது தூக்கத்தையும் களவாடிவிட்ட மகன் இப்போதே தூங்கியிருக்க, அவனை அணைத்துக் கொண்டு படுத்திருந்தவளும் உறங்கிவிட்டிருந்தாள்.

அபர்ணா வந்து கதவை திறக்காததால், சிபி இரண்டாவது முறையும் “அண்ணி” என்று குரல் கொடுத்து கதவை தட்டிய போது தான் விழிப்பு தட்டி அபர்ணா அசந்து எழுந்தாள்.

உடனே பட்டென மகனை திரும்பி பார்க்க, அவன் தான் அவனது சித்தப்பா செல்லமாயிற்றே. ஊசி விழும் சத்ததிற்கும் எழுந்துவிட்டால், கொட்ட கொட்ட விழித்திருந்து தாய், தந்தை இருவரையும் வாழ்க்கையை வெறுக்க வைத்த பின்னே மீண்டும் உறங்குபவன் இன்று சித்தப்பாவிற்கு துணை நின்று உதட்டை பிதுக்கிக் கொண்டு அமைதியாக உறங்கியிருந்தான்.

அப்போதே நிம்மதியடைந்த அபர்ணா, சத்தம் செய்யாமல் எழுந்து வந்து கதவை திறக்க, அவள் முகத்தை வைத்தே தூக்கத்தில் தொந்தரவு செய்துவிட்டோம் என்பதை புரிந்த சிபி “சாரி அண்ணி. நான் அப்புறம் வரேன்” என்று அங்கிருந்து நகர

“இருங்க சிபி. உங்க பையனை தூங்க வைச்சா, அவன் எங்க தூங்கறான். நாங்க தான் தூங்கறதா இருக்கு” என்று புன்னகைத்தவள் “எதாவது முக்கியமா பேசணுமா” மைத்துனனின் முகத்தை வைத்தே அவன் அகத்தை படித்தவள் போல் கேட்டாள்.

சிபி ஆமாம் என்பதாக தலையாட்ட “வாங்க” என்று அவள் உள்ளே நடக்க, சிபியும் அவளுக்கு பின்னால் சென்றான். மகன் தூங்கி கொண்டிருப்பதால் இருவரும் பால்கனியில் நின்று பேச முடிவெடுத்தனர்.

பேசவேண்டும் என்று வந்துவிட்டு வெகுநேரமாக சிபி அந்தி வானத்தையே வெறித்திருக்க “யாரு சிபி அந்த பொண்ணு” என்று சரியாக கேட்டாள் அபர்ணா.

அதில் சட்டென அவளை திரும்பி பார்த்தவன் “அண்ணி, உங்களுக்கு முன்னாடியே தெரியுமா” என்று புருவம் சுருக்க..

“யாருனு தெரியல. ஆனா, லவ் பண்றீங்கன்னு மட்டும் நல்லா புரியுது. தன் பேச்சுல எப்பவும் ஒரு தெளிவிருக்க சிபியே தயங்குறார்னா அப்போ அது லவ் விஷயமா தானே இருக்கணும்” என்ற பின்னே பிடித்து வைத்திருந்த மூச்சை வெளியிட்டவன்

“அது அண்ணி. அது நான்.. நான் அன்புவை லவ் பண்றேன் அண்ணி” என்று போட்டுடைக்க, அதுவரை யாரை சொல்லப் போகிறான் என்று காதுகளை தீட்டி ஆர்வமாக கேட்டிருந்த அபர்ணாவிற்கு இப்போது மயக்கமே வரும் போல் இருந்தது.

குலை நடுங்கி, கண்கள் இருண்டு, தடுமாறி கீழே விழ போனவளை விழாமல் பிடித்தவன் “அண்ணி, என்னாச்சு” என்று படபடக்க

“என்ன சிபி சொல்றீங்க.. அன்புவை நீங்க லவ் பண்றீங்களா” என்று அதிர்ச்சியில் சத்தமாகவே கத்தியிருந்தாள்.

அதில் அறையில் உறங்கி கொண்டிருந்த மகன் எழுந்ததும் இல்லாமல் வீரென்று அழ ஆரம்பிக்க, மகனை தூக்க போனவளை தடுத்து அங்கிருந்த ஊஞ்சலில் அமர்த்திவிட்டு, தானே வந்து குழந்தையை தூக்கிய சிபி அவனை தோளில் போட்டு தட்டி கொடுக்க, சித்தப்பா தனக்கு சீக்கிரம் சித்தியை கொண்டு வரட்டும் என்று அவனும் அமைதியாக தூங்கி போனான்.

சிபி மகனை தோளில் போட்டு கொண்டு அறையிலேயே இங்கும் அங்கும் உலாத்தி கொண்டிருக்க, அப்போது அறைக்குள் வந்த அபர்ணா “என்ன சிபி சொல்றீங்க.. அன்புவை எப்படி லவ் பண்றீங்க. இதுக்கு அன்பு நிச்சயம் சம்மதிச்சிருக்க மாட்டா” என்று சற்று குரல் உயர்த்தியே கேட்டாள்.

அவனோ மகனை காட்டி அமைதியாக பேச சொல்ல, தான் கேட்டதற்கு பதில் வேண்டும் என்பதாய் அவள் அவன் முன் கைகட்டி நின்றாள்.

பின் சிபியே “நீங்க சொன்னது கரெக்ட் தான். உங்க ப்ரண்ட்க்கு காதல்னாலே பிடிக்காதாம். கல்யாணம்ங்கிற வார்த்தையையே வெறுக்கறாங்கலாம்” என்று நடந்த அனைத்தும் சொல்லி முடித்தான் சிபி.

அதை கேட்ட அபர்ணா “அன்பு சொன்னது சரினு சொல்லல. ஒரு ப்ரண்ட்டா அவ மேரேஜ் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்கணும்னு தான் ஆசைப்படுறேன். இப்போ விஷயம் அதில்ல. அத்தையை பத்தி உங்களுக்கு நல்லாவே தெரியும். அவங்களுடைய குணம், பிடிவாதம், அவங்க யாரை ஏத்துப்பாங்கனு தெரிஞ்சுமா இப்படி காதல்னு சொல்லிட்டு வந்து நிக்கறீங்க” என்று மச்சினரை கூர்மையாக பார்த்து கேட்டான்.

“காதலுக்கு முன்னாடி அதெல்லாம் தெரியாது அண்ணி” ஒற்றை வரியானாலும் ஆணித்தரமாக சொன்னான்.

“இல்ல சிபி, இது சரிவராது. இது மட்டும் அத்தைக்கு தெரிஞ்சது, இந்த வீட்டுல ஒரு பிரளயமே வெடிக்கும். நீங்க என்ன சொன்னாலும் நான் உங்களுக்கு இதுல சப்போர்ட் பண்ணமாட்டேன், சாரி” அபர்ணாவும் தன் முடிவை தீர்மானமாக சொல்லிவிட்டாள்.

அண்ணியின் பேச்சில் அதிருப்தியாக தலையாட்டியவன், தோளில் தூங்கியிருந்த பிள்ளையை கொண்டு போய் கட்டிலில் படுக்கவைத்து, அவன் நெற்றியில் முத்தம் பதித்து “உனக்கு சித்தினா அது அன்பரசி மட்டும் தான் கண்ணா” என்று புன்னகைத்து கொண்டே குழந்தை வருண் சக்கரவர்த்தியிடம் சொன்னவன்

“யாரு சம்மதிச்சாலும் இல்லனாலும், அவ தான் என் வைஃப். நான் அவளுக்காக எந்த தடையை தாண்டவும் தயாரா இருக்கேன். எத்தனை வருஷமானாலும் காத்திருப்பேன்” என்று அபர்ணாவை பார்த்து உறுதியாக சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

மகன் தன்னவளுக்காக காத்திருப்பதாக சொல்லிவிட்டான். அவனது அன்னை அதற்கு பொறுக்க வேண்டுமே. சிபியின் பார்வை அன்பரசியின் மீது ரசனையாக படிந்த அன்றே மகனுக்கு பெண் பார்க்க தொடங்கிவிட்டார் தெய்வா.

தெய்வாவும் அவரது பெரியாம்மாவும் அந்த நட்சத்திர உணவகத்தில் அமர்ந்திருக்க, அவர்களுக்கு எதிரே அமர்ந்திருந்தாள் வெண்பா.

அவள் தான் தெய்வா தன் சிறிய மகனுக்காக சல்லடை வைத்து சல்லித்து தேர்ந்தெடுத்த பெண். வெண்பா நன்கு படித்தவள். ஸ்டான்ஃபோர்ட் கிராஜுவேட் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் வணிகம் படித்திருக்கிறாள். இப்போது அப்பாவின் தொழிலையும் தன் அக்காவோடு சேர்ந்து பார்த்து கொள்கிறாள். அதுவுமில்லாமல் கராத்தே, நடனமும் கற்றிருக்கிறாள். அவளுக்கு எட்டு மொழிகள் சரளம். சர்வ லக்ஷ்ணமும் நிறைந்த பெண்ணையே மூன்றரை மாதமாக தேடி மகனுக்கு தேர்ந்தெடுத்திருக்கிறார் தெய்வா.

இது அவர்களுக்குள் முதல் சந்திப்பல்ல. மூவரும் இப்படி வெளியே சந்தித்து கொள்வது இந்த ஒரு மாதமாக அவர்களுக்கு ஓர் வாடிக்கையாகவே போனது.

“என்ன ஆண்ட்டி இப்படி நாமளே மீட் பண்ணிட்டு இருந்தா எப்படி, எப்போ தான் என்னை சிபியை மீட் பண்ண வைப்பீங்க” தன் மொஜிடோவில் இருக்கும் ஸ்ட்ராவால் அதை கலக்கிக் கொண்டே கேட்டாள் வெண்பா.

“அதுக்கு முன்ன நீ என் குடும்பத்துக்கும், என் மகனுக்கும் ஏத்தவளானு நான் தெரிஞ்சிக்க வேண்டாமா. என் மகனுக்கு நீ சரியா இருப்பனு நம்பிக்கை வந்திடுச்சு. எனக்கும் உன்னை பிடிச்சிடுச்சி. சிபியை கூடிய சீக்கிரத்துல உனக்கு இன்ட்ரோடியூஸ் பண்ணி வைக்கிறேன்” மிடுக்காக தெய்வா சொன்னதும் வெண்பாவிற்கு இப்போதே சிபியை வென்றுவிட்ட களிப்பு.

மூவரும் சிறிது நேரம் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்ப, தெய்வாவை அணைத்து விடுத்து விடைபெற்றாள் வெண்பா.

அவள் செல்லும் வரை மனதிற்குள்ளேயே கறுவி கொண்டிருந்த பானுமதி “ஏன் தெய்வா, இது நம்ம குடும்பத்துக்கு பொருந்தும்னு நினைக்கிற. சொல்றேனேனு தப்பா எடுக்காத, நீ தான் என்னைக்குமே அந்த வீட்டுக்கு ராணியா இருக்கணும். நம்மள விட புத்திசாலியை வீட்டுக்கு கொண்டுவர கூடாது” என்று மகளை ஏற்றிவிட பார்த்தார்.

தெய்வாவும் அதற்கேற்றாற்போல் அமைதியாக இருக்க “இப்பவும் ஒண்ணும் கேட்டு போயிடல, என் பேத்தி அழகுரதிக்கும் உன் தம்பி மாப்ள பார்த்துட்டு தான் இருக்கான். பேருக்கு ஏத்த மாதிரி ஆளும் ரதி தான். இந்த வெண்பாவை வேண்டாம்னு தூக்கி போட்டுட்டு அழகுரதியை நம்ப சிபிக்கு முடிச்சிடலாம்” என்று சிலாகித்து சொன்னார்.

அனைத்தையும் பொறுமையாக கேட்டவர் “வெண்பா படிப்பென்ன, அவ குடும்பம் என்ன, அவ உயரம் என்னனு தெரியுமா உங்களுக்கு. அவ கூட உங்க பேத்தியை கம்பேர் பண்ணதே தப்பு. இதுல அதுனு சொன்னதும் இல்லாம, அவளை தூக்கி போட்டுட்டு ஒண்ணுத்துக்கும் ஆகாத அந்த அழகில்லாத ரதிய கட்டுனுமா” என்று புருவம் உயர்த்த, பானுமதி நடுங்கி தான் போனார்.

“இதை திரும்ப திரும்ப என்னால சொல்ல முடியாது பெரியம்மா. கடைசியா ஒருமுறை சொல்றேன் கேட்டுக்கோங்க. அசோக் அவங்க அப்பா கூட சேர்ந்து பிசினஸ் பார்க்கிறான். சிபி அப்படியில்ல. நாளைக்கு அவனோட தொழிலை யார் பார்ப்பா. அதுக்கு எல்லாத்துலையும் பெஸ்ட்டா ஒரு பொண்ணை பார்த்திருக்கேன். வெண்பா அழகு, அறிவு, திறமைனு எல்லாம் ஒருசேர கொண்ட பெண். அதுமட்டுமில்ல, சிபியுடையது இராஜ யோகம் பொருந்திய ஜாதகம். வெண்பா ஜாதகமும் அப்படி தான் அமைஞ்சிருக்கு. கல்யாணத்துக்கு பிறகு வெண்பா அவன் பிசினஸை பார்த்துப்பா, சிபியும் பொழுதுபோக்குக்கு அவனுக்கு பிடிச்ச இரயில் வேலைக்கு போயிக்கட்டும்” என்று தன் மனக்கணக்கு அனைத்தையும் சொன்னவர்

“ஏற்கனவே மூத்த மருமகனு ஒரு தண்டத்தை கூட்டிட்டு வந்துட்டேன். அவளுக்கு சொத்து பத்து இருக்குற அளவுக்கு அறிவும் இல்ல, தராதரம் பார்த்து பழகவும் தெரியல. ஒண்ணுமில்லாதவள வீட்டுக்கு கூட்டிட்டு வந்து என் பையன் மனசை கலைக்க பார்க்கறா. இதுல நீங்க வேற புரியாம பேசிட்டு. இல்லல்ல இது சரிப்பட்டு வராது” என்று அதிருப்தியாக தலையாட்டியதோடு..

“நீங்க பஸ்ல வாங்க. அப்ப தான் உங்களுக்கு நீங்களும் நானும் ஒண்ணுங்கிற எண்ணமெல்லாம் போய் உங்க பேத்தியை பத்தி இனி பேசமாட்டீங்க” என்றுவிட்டு தன் பர்சில் இருந்து ஓர் பத்து ரூபாய் தாளை எடுத்து அவரிடம் கொடுத்தார்.

பானுமதி திகைத்து மகளை பார்க்க “இந்த டீலக்ஸ், எக்ஸ்பிரஸ்ல எல்லாம் வந்துட்டா, அப்புறம் உங்க கொழுப்பு குறையாது. கூட்டத்துல முட்டி, மோதி நின்னுட்டு வந்தா தான் திருந்துவீங்க. சாதாரண பஸ்லயே வாங்க. அதுக்கு தான் வெறும் பத்து ரூபாய் மட்டும் கொடுத்தேன்” என்றுவிட்டு தன் வயதையும் மீறி அவரின் பின்னால் ஓடிவந்து கெஞ்சும் பானுமதியை சிறிதும் பொருட்படுத்தாது தன் காரில் ஏறி சென்றார் தெய்வா.

இத்தனை ஆருடம் பார்த்து பெண்ணை தேர்ந்தெடுத்த தெய்வாவிற்கு தன் சிறிய மகனுக்கு தவறே செய்யாமல் களங்கப்பட்ட பெண் தான் மனைவியாக போகிறாள் என்பது தெரியாமல் போனது தான் பரிதாபம்.

அன்றிரவே வெண்பாவின் நிழல்படத்தை காட்டி சிபியிடம் அவளை பற்றி தெய்வா சொல்ல, அவனுக்கு முகம் கருத்து போக, அபர்ணாவிற்கோ புறக்கை ஏறியது.

“ஒரு நல்ல விஷயம் சொல்றப்போ தான் உனக்கு புறக்கை ஏறும், தும்மல் வரும், எல்லாம் வரும்” என்று அதற்கும் பெரிய மருமகளை தெய்வா வறுத்தெடுக்க, அவள் இங்கிருந்து மாட்டிக் கொண்டு விழிப்பதற்கு பதிலாக அமைதியாக மேலேறி சென்றுவிட்டாள்.

சிபியோ அன்புவின் சம்மதம் இல்லாமல் தன் காதலை வீட்டில் சொல்ல தயக்கம் கொண்டவனாக வெண்பாவிற்கு சரியென்றும் சொல்லாமல், இல்லையென்றும் மறுக்காமல், யோசித்து தன் முடிவை சொல்கிறேன் என்று அப்போதைக்கு நழுவி கொண்டான்.

இரவெல்லாம் யோசித்த சிபி, தன் காதலை அம்மாவிடம் சொல்லாமல் இத்திருமணத்தில் இருந்து தப்பிக்க முடியாது என்பதை புரிந்து அடுத்தநாளே அன்புவை சந்திக்க முடிவு செய்தான்.

அதன்படி அடுத்த நாள் காலை சிபியும் அபர்ணாவும் அன்பின் வீட்டில் இருந்தனர்.

கணவரும் மாமனாரும் அலுவலகத்திற்கு செல்லும் வரை போர்வையை போர்த்தி கொண்டு உடம்பு முடியாதவள் போல் படுத்திருந்தவள், மாமியாரும் அவரது பெரியம்மாவும் அப்படி வெளியே சென்றதும் மகனோடு மைத்துனனின் காதலுக்காக தோழியை பெண் கேட்க இப்படி கிளம்பிவிட்டாள் அபர்ணா.

தன் இன்னொரு மகளாகவே என்னும் அபர்ணா காலையிலேயே வீட்டிற்கு வந்திருப்பதை கண்டு குழம்பி போனாலும் அவளுக்கும் சிபிக்கும் காப்பி கலந்து எடுத்து வந்தார் அன்புவின் அன்னை சரிதா.

பாவம் நடக்க போவதை அறியாமல் அன்னைக்கு சமையலில் உதவி செய்துவிட்டு அலுவலகம் கிளம்ப அப்போதே குளிக்க சென்றிருந்தாள் அன்பு.

அவள் வருவதற்குள் சரிதாவிடம் பேசிவிடும் எண்ணத்தில் “அம்மா, இவர் சிபி. என் மச்சினர். எதுக்கு இவரை கூட்டிட்டு வந்திருக்கேன்னு நீங்க யோசிக்கலாம். சிபி நம்ப அன்புவை மனசார விரும்புறார். என் மச்சினருக்கு நம்ப அன்புவை தர்றீங்களா மா. இவர் ரொம்ப நல்லவர். அன்புவை ரொம்ப நல்லா பார்த்துப்பார். பாருங்க எங்க வீட்டு பெரிய மனுஷன் அவர் சித்தப்பாவுக்காக பொண்ணு கேட்டு வந்திருக்கார்” என்று அபர்ணா அனைத்தும் சொல்ல, சரிதாவிற்கு இதை கேட்டு சந்தோசப்படுவதா, இல்லை மகளின் குணம் நன்கு அறிந்தவராக துக்கப்படுவதா என்று தெரியவில்லை.

அந்நேரம் குளித்து முடித்து வெளியே வந்த அன்பு “என்ன பேசிட்டு இருக்கீங்க அபர்ணா. அவங்க தான் புரிஞ்சிக்காம பேசறாங்கனா, நீங்களும் அவங்களுக்கு சப்போர்ட் பண்ணிக்கிட்டு வந்திருக்கீங்க. இத பேசிக்கிட்டு தயவு செஞ்சு இனி இங்க வராதீங்க” என்று அபர்ணாவை சத்தமிட, சிபி கூர்மையாக அவளையே பார்த்திருந்தான்.

“அன்புமா, அவசரப்படாதடா. வலிய வந்த வரனை வேண்டாம்னு சொல்ல கூடாது. எங்களுக்கும் உன் கல்யாணத்தை பார்க்கணும்னு ஆசை இருக்காதா” சரிதா மகளுக்கு புரியவைக்க பார்த்தார்.

“நீங்க இதுக்கு சப்போர்ட் பண்ணாதீங்கமா” என்று தாயிடம் கத்தியவள் “உங்கள ஹார்ஷா பேசியிருந்தா சாரி அபர்ணா” என்று தோழியிடமும் வருந்திவிட்டு சிபியை ஏறெடுத்தும் பார்க்காமல் தன்னறைக்குள் சென்றுவிட்டாள்.

சரிதா என்ன செய்வதென்று புரியாமல் கலங்கி நிற்க, மகனை அவரிடம் கொடுத்துவிட்டு அபர்ணாவும் தோழியின் அறைக்கு சென்றாள்.

அங்கே மெத்தையில் விழுந்து அழுதிருந்த அன்புவின் தலையை வருடி “அன்பு..” என்று தான் அவள் பெயரை உச்சரித்தாள். வேறெதுவும் அபர்ணா பேசவில்லை. தோழியின் நிலையை அறியாதவளா அவள். அதேநேரம் அவளின் வாழ்க்கையும் அபர்ணாவிற்கு முக்கியம். சிபி போல் ஒருவனை தன் தோழி இழந்துவிட கூடாதென்று எண்ணினாள். அவள் வாழ்வில் பட்ட கஷ்டங்கள் அனைத்திற்கும் கிடைத்த பலன் தான் சிபி என்று உறுதியாக நம்பினாள்.

அபர்ணாவின் குரலிற்கு சட்டென எழுந்த அன்பு அவளை அணைத்துக் கொண்டு கதறி அழுதாள். அவள் அடிவயிற்றிலிருந்து கேவி கேவி அழ, அவளது முதுகை தேய்த்து கொடுப்பதை தவிர அபர்ணாவால் வேறெதுவும் செய்ய முடியவில்லை.

அன்புவின் அழுகை சத்தத்தை கேட்ட சரிதாவின் பெற்ற வயிறோ பதற செய்தது. குழந்தையை தோளில் போட்டு ஒரு கையால் பிடித்திருக்க, மறுகையால் முந்தானையால் வாய் பொத்தி அவரும் அழுதார்.

அவளை வயிற்றில் சுமந்தவருக்கு மட்டுமா வலியும் வேதனையும், மனதில் சுமந்திருப்பவனுக்கும் அவளது ஓல குரல் உயிரின் ஆழம் வரை சென்று மரண வலியை கொடுத்தது.

வேகமாக அறைக்குள் வந்தவன் அபர்ணாவிடமிருந்து தன்னவளை விலக்கி தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டவன், அவள் முதுகை வருடி கொடுத்தான்.

அவளும் அவன் தோளில் வாகாக முகம் புதைத்து கதறி அழ, அவன் சட்டை நனைத்த அவளது கண்ணீரில் துடிதுடித்து போனவன் “இப்போ எதுக்கு ராசி இந்த அழுகை. எனக்கு உன்னை பத்தி எல்லாம் தெரியும்” என்று சொல்ல, அதை கேட்டு பட்டென்று நிமிர்ந்தவள் உண்மையா என்பதாய் அவனை பார்த்தாள்.

அவனும் ஆம் என்று தலையாட்டியவன் “அண்ணி எல்லாம் சொன்னாங்க. அதனால என் காதல் ஒரு துளி கூட குறையல. சொல்லப்போனா கடலளவு பெருகியிருக்கு” என்றவன் “ஐ லவ் யூ ராசி. ஐ லவ் யூ டூ தி மூன் அண்ட் பேக்” என்று தன் அணைப்பை இன்னும் இறுக்க..

அப்போதே அவன் அணைப்பில் இருப்பதை உணர்ந்தவள் மின்சாரம் தாக்குண்டவள் போல் தெறித்து அவனிடமிருந்து விலகி, அந்த அறையின் மூலையில் சென்று மடிந்தமர்ந்து கதறியதோடு தன்னை உயிரோடு இறக்க செய்த தன் இறந்தகாலத்தை வலியோடு நினைவு கூற தொடங்கினாள்.


உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்.

 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 7

மூலையில் மடிந்தமர்ந்து கதறி கொண்டிருந்த அன்புவை பார்க்க பார்க்க சிபியின் மனம் பதறியது. அவளை தாங்கி பிடிக்க அவன் முன்னே செல்ல, அபர்ணா தான் மைத்துனனை போகவிடாமல் தடுத்தாள்.

தன்னை கைபிடித்து நிறுத்திய அண்ணியை ஏன் என்பதாய் சிபி வேதனை வழிய பார்க்க “அவ அழட்டும். அப்போ தான் மனசுல இருக்க கஷ்டமெல்லாம் போகும்” என்று விளக்கம் தந்தாள்.

ஏனோ சிபியால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவன் மறுத்து பேச வாய் திறக்க, “அவ தைரியமான பொண்ணு சிபி. தப்பா எதுவும் செய்யமாட்டா. நீங்க வெளியில இருங்க. நான் அவளை சமாதானம் செய்துட்டு வந்ததும் நாம கிளம்பலாம்" என்றிருந்தாள் அபர்ணா.

அவனுக்கு அனைத்தையும் இன்றே பேசிவிடும் உத்வேகம் இருந்தாலும் அவளது காயம் பெரிது. அதை ஒரே நாளில் அகற்ற நினைப்பது வேரோடு மரத்தை பிய்த்தெறிவது போல், மீண்டும் ரணம் மட்டுமே மிஞ்சும் என்பதை புரிந்து ஒரு நொடி கண்களை மூடி தன்னை சமன்படுத்த அவனது விழிகளில் இருந்து தாமாக விழிநீர் இறங்கியது.

அதை துடைத்தவன் அவளை ஒருமுறை பார்வையால் வருடிவிட்டு வெளியே வந்து அமர்ந்துக் கொள்ள, சரிதாவும் குழந்தையை தூக்கி கொண்டு வெளியே வந்துவிட்டார்.

அந்நேரம் கைகளில் இரண்டு பெரிய பயண பைகளோடு உள்ளே நுழைந்தார் அன்புவின் தந்தை விநாயகம்.

வீட்டு கூடத்தில் யாரென்று தெரியாத ஒரு இளைஞன் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருப்பதும், அவனுக்கு சற்று தள்ளி வருத்தமும் பதற்றமுமாய் கை குழந்தை ஒன்றை தோளில் போட்டு கொண்டு தன் மனைவி அழுதிருப்பதையும் கண்டார்.

தான் பார்த்த காட்சியில் குழம்பிவிட்ட விநாகயம் “யார் சரிதா இந்த தம்பி” என்று புரியாத பார்வையோடு கேட்க, அப்போதே அவரை இருவரும் நிமிர்ந்து பார்த்தனர்.

“இவர் சிபிங்க. அன்பு ப்ரண்ட் அபர்ணாவுடைய மச்சினர்" என்று சிபியை கணவருக்கு அறிமுகம் செய்து வைத்த சரிதா, உடன் “இவர் நம்ப அன்புவை விரும்புறாராம். கல்யாணம் பண்ணிக்க கேட்கறார்” என்றும் தயங்கி சொன்னார்.

அதை கேட்ட விநாயகத்திற்கு ஒரு நொடி உடல் அதிர்ந்து அடங்கியது. அதற்குள் சிபி அவரெதிரே வந்து நின்று “வணக்கம் சார், நீங்க கவலையே படவேண்டாம். நான் அன்புவை நல்லா பார்த்துக்குவேன்” என்று மகளை பெற்ற தந்தைக்கு அவன் உத்திரவாதம் கொடுக்க..

அவரோ “தம்பி, சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. இது சரிப்பட்டு வராது. இனி இந்த பேச்சை கொண்டு வந்து தொந்தரவு செய்யாதீங்க” என்று முளையிலேயே அப்பேச்சை கிள்ளி எறிந்தார்.

அதை கேட்டு அதிர்ந்த சிபி பேசுவதற்குள் “என்னங்க, என்ன பேசறீங்க. நம்ம பொண்ணு வாழ்க்கைங்க. இந்த தம்பி நெஞ்சுல பாலை வார்த்தா மாதிரி சொல்லியிருக்கார். நம்ப அன்புவுக்கு ஒரு வாழ்க்கையை அமைச்சு பார்க்கறது தானே நம்ப ஒரே ஆசை” தாயாய் மகளின் வாழ்க்கைக்காக பரிதவித்து கூறினார் சரிதா.

“அமைதியா இரு சரிதா. பட்டதெல்லாம் போதும். அன்பு வாழ்க்கை முக்கியம் தான். அதுக்காக நம்ம தகுதிக்கு மீறிய சம்மந்தம் ஆகாது” என்று விநாயகம் ஸ்திரமாக சொல்ல,

“சார், காதலுக்கு நீங்க சொல்ற எதுவும் தேவையில்லை” என்றான் சிபி அழுத்தமாக.

“யார் தம்பி அப்படி சொன்னது. காதலும் கல்யாணமும் அந்தஸ்தும் கவுரவமும் பார்த்து தான் வரும். அப்படி வந்தா தான் அந்த வாழ்க்கையும் நிலைக்கும். இந்த உலகத்துல நட்பு மட்டும் தான் எதுவும் பார்க்காம, யார் எப்படியோ அவங்களை அப்படியே ஏத்துக்கிட்டு வருவது. அதனால தான் அன்பு அபர்ணா பாப்பாவோட பழகினப்போ அதுக்கு நாங்க தடை சொல்லல. அது மூலமா இப்படி ஒரு பிரச்சனை வரும்ன்னா நிச்சயம் அபர்ணா பாப்பா கூடவே என் அன்பு பேசாம இருக்குறது தான் நல்லது” என்று அவர் திட்டவட்டமாகவே சொல்லிவிட்டார்.

அவரது பேச்சில் சிபிக்கு கோபம் கொந்தளிக்க, அவன் பேசுவதற்குள் “அப்பா, நீங்க எல்லாரையும் மாதிரி சிபியை பேசறீங்க. இவர் அப்படி இல்ல. அன்புவை எங்க சிபிக்கு கொடுங்கப்பா, அவர் ரொம்ப நல்லா பார்த்துப்பார்” அன்புவை சமாதானப்படுத்திவிட்டு வெளியே வந்த அபர்ணா இடைபுகுந்தாள்.

“போதும் மா அபர்ணா, தகுதியை மீறின நட்பால் எங்க குடும்பம் பட்ட கஷ்டமெல்லாம்” என்றவர் வீட்டிற்கு முதன்முறையாக வந்திருக்கும் குழந்தையின் கையில் ஐநூறு ரூபாய் தாளை கொடுத்துவிட்டு, மகளை காண உள்ளே செல்ல போனார்.

அவரை தடுக்கும் படியாய் “அப்பா” என்று அபர்ணா மீண்டும் பேச அழைக்க

“வேண்டாம் அண்ணி, விட்ருங்க. எனக்கு உள்ள இருக்குறவ சரி ஆகணும். மத்தபடி இவரெல்லாம் தானா சம்மதிப்பார். என்னைக்கு இருந்தாலும் நான் தான் இந்த வீட்டு மாப்பிள்ளை. இவருடைய மருமகனும்” என்று மலர்ந்த முகமாக அதே நேரத்தில் உறுதியாக விநாயாகத்திடம் சொல்லிவிட்டு தன் கண் கண்ணாடியை மாட்டிக்கொண்டு சிபி வெளியே செல்ல, குழந்தையை வாங்கிக் கொண்டு அபர்ணாவும் அவனை பின் தொடர்ந்தாள்.

விநாயகம் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்தார். பணியில் இருந்தபோது, அடிக்கடி இது போன்று வேலை விசயமாக வெளியூருக்கு சென்று வருவது உண்டு. இப்போது பணி ஓய்வு பெற்றிருந்த போதிலும், மகனும் தங்களை விட்டு சென்றுவிட்டிருக்க, மகளுக்கு பாரமாக இருப்பதாக எண்ணி வருந்தி கொண்டிருந்த நேரத்தில், அவர் வேலை செய்த அலுவலகத்தில் புதிதாக ஐதராபாத்தில் திறந்த கிளையில் இருப்பவர்களுக்கு வேலை சொல்லித்தர சொல்லி இவரிடம் கேட்க, விநாயகமும் மூன்று மாதங்கள் அங்கிருந்து விட்டு இப்போது தான் வந்திருக்கிறார்.

சிபியை அனுப்பிவிட்டு உள்ளே மகளிடம் வந்தவர் அவளிடம் எவ்வளவோ பேசி பார்த்தும் மௌனமே அவளிடமிருந்து பதிலாக வர, அவளை சிறிது நேரம் தனியாக இருக்க விட்டு கணவனும் மனைவியும் மிகுந்த மனபாரத்துடன் வெளியே வந்து அமர்ந்தனர்.

எத்தனை துள்ளலோடு, உற்சாகமாக சுற்றி திரிந்த பெண். இன்று அனைத்தையும் துறந்து முற்றிலுமாக முடங்கி விட்டாளே என்றெண்ணி அவர்கள் மனம் வெம்ப, அன்புவும் தன்னை முடக்கி போட்ட நாட்களை தான் நினைவு கூர்ந்தாள்.

அப்போது அன்பு தன் இளங்கலை படிப்பை முடித்த கையோடு கல்லூரி மூலமாக ஒரு மென்பொருள் கம்பெனியில் கிடைத்த வேலையில் இருந்தாள்.

அப்போது வீடு விட்டால் வேலை, வேலையை விட்டால் நண்பர்களோடு ஊர் சுற்றுவது, அரட்டை அடிப்பது, சந்தோசமாக நாட்களை கழிப்பது என்று வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து வாழ்ந்திருந்தாள் அன்பு.

அதுபோல் அலுவலகத்திற்கு சென்று வருவதை தவிர வீட்டில் ஒரு வேலையும் செய்யமாட்டாள். செய்யமாட்டாள் என்பதை விட செய்ய இருக்காது என்பதே சரியாக இருக்கும். அப்படிதான் சரிதாவும், விநாயகமும் மகளை தாங்கு தாங்கென்று தாங்குவார்கள்.

அவர்களுக்கு கொஞ்சமும் குறையாத அன்புடன் தான் அவளை கலைவாணனும் பார்த்து கொண்டான். கலைவாணன் அவளது அண்ணன். அவனுக்கு அடுத்து பத்து வருடங்களுக்கு பிறகு பிறந்தவள் தான் அன்பரசி. அதனால் தங்கையின் மீது உயிரையே வைத்திருந்தான்.

அவனுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகளாகிறது. தங்கைக்கு திருமணமாகாமல் தனக்கு வேண்டாம் என்று விடாபிடியாக தான் இருந்தான். அவனது நீண்டநாள் காதலியான நந்தனாவின் வீட்டில் திருமணத்திற்கு வற்புறுத்தவே, ஒரு நாள் இவர்கள் வீட்டிற்கே அவள் கிளம்பி வந்துவிட்டாள்.

இதற்குமேலும் தாமதிக்க கூடாதென்று விநாயகமும், சரிதாவும் பெண் வீட்டில் பேசி அவர்களுக்கு திருமணம் முடித்து வைத்தனர். அப்போதும் அரைமனதாக தான் கலை இத்திருமணத்திற்கு சம்மதித்தான். அதுபோல் வீட்டில் வயது வந்த பெண் இருந்ததால் தங்கை முன் மனைவியிடம் பார்த்தே நடந்து கொள்வான். கலை தங்கை மீது அத்தனை பாசம் கொண்டவன்.

இப்படியே அன்பு வேலைக்கு சென்று ஆறு மாதங்கள் ஆகியிருக்க, ஒருநாள் விநாயகம் மகளை அருகிலுள்ள கோவிலுக்கு அழைத்து சென்றார்.

சாமி கும்பிட்டு முடித்த அன்பு குளத்தின் படியில் அமர்ந்து குளத்திலுள்ள மீன்களுக்கு இரையிட்டு கொண்டிருக்க, மகளருகில் வந்தமர்ந்த விநாயகம் தன் சட்டை பையில் இருந்து ஒரு புகைப்படத்தை எடுத்து அவளிடம் நீட்டி “அன்புமா, இந்த போட்டோவை கொஞ்சம் பாரேன். இது என் ப்ரண்ட் நமசிவாயதோட பையன். அவருக்கு உன்னை பொண்ணு கேட்ருக்கான் மா” என்று தன் நண்பனின் மகனான அபிஷேக்கின் புகைப்படத்தை காட்டினார்.

அபிஷேக் பார்க்க நன்றாக இருந்தான். அவள் வயதிற்கும், அவளுக்கிருக்கும் குறும்பு தனத்திற்கும் நாள் முழுவதும் அவனை ஆர்வமாக பார்த்து ரசிக்க சொன்னால் செய்யலாம். ஆனால் திருமணம் எல்லாம் ஒத்துவராத ஒன்று என்றே அன்புவிற்கு தோன்றியது. அதை தந்தையிடமும் சொன்னாள்.

“அப்பா, நான் இப்போ தான் வேலைக்கு போக ஆரம்பிச்சிருக்கேன். உடனே கல்யாணம் எல்லாம் வேண்டாம் ப்பா” என்று சிணுங்கிய மகளின் தலையை வருடி கொடுத்தவர்

“அப்பாவுக்கும் அம்மாவுக்கும் வயசாகுது டா. நீ எங்களுக்கு சின்ன வயசுல பிறக்கல. என்னுடைய முப்பத்தி ஆறாவது வயசுல தான் நீ பிறந்த. அடுத்த மாசத்தோட என் சர்வீஸ் முடியுது. வர செட்டில்மென்ட் பணத்துல உன் கல்யாணத்தை பண்ணிட்டோம்னா, அப்புறம் எங்களுக்கு என்ன, உன் குழந்தையையும் உங்க அண்ணன் குழந்தையையும் கொஞ்சிக்கிட்டு காலத்தை ஒட்டிட வேண்டியது தான்” என்று மகளுக்கு நீளமாக எடுத்து சொன்னார்.

அப்போதும் அவள் அமைதியாக இருக்க “இங்க பாரு அன்பு, உனக்கு இந்த மாப்பிள்ளைய பிடிக்காம வேண்டாம்னு சொன்னா நானும் ஒத்துக்குவேன். ஆனா இப்போ கல்யாணம் வேண்டாம்ங்கிறதுக்காக எல்லாம் வலிய வர நல்ல வரனை வேண்டாம்னு சொல்ல கூடாது” என்று பேசி பேசியே மகளது மனதை கரைக்க, அன்புவும் திருமணத்திற்கு சரியென்று சொல்லிவிட்டாள்.

அதன் பின் திருமண வேலைகள் எல்லாம் முழுவீச்சில் ஆரம்பித்தது. முதலில் நமசிவாயமும், அவரது மனைவி பத்மாவும் அன்புவை பெண் பார்த்து, பூ வைக்க வந்தனர். மாப்பிள்ளை அபிஷேக் அமெரிக்காவில் பணிபுரிவதால், அவனால் உடனே வரமுடியாது என்று கூறிவிடவே, இருவரும் காணொலி அழைப்பில் தான் பேசி தங்கள் பிடித்தத்தை வெளிப்படுத்தினர்.

பூ வைத்த அடுத்த வாரத்திலேயே ஒரு மண்டபத்தில் வைத்து இருவருக்கும் அபிஷேக் இல்லாமலே திருமண நிச்சயம் நிகழ்ந்தது. அதிலிருந்து மூன்று மாதத்தில் திருமண தேதியும் குறித்தனர்.

அந்த மூன்று மாதமும் அன்புவும் அபிஷேக்கும் அலைபேசியில் தான் பேசி பழகி வந்தனர். இப்போது இந்த திருமணம் எதற்கு என்ற அன்புவின் மனநிலை எல்லாம் மாறி அவளுக்கு அபிஷேக்கை பிடிக்க தொடங்கியது. அவளும் அந்த வயது பெண்களை போல் திருமண நாளை ஆவலாக எதிர்நோக்கி காத்திருக்க ஆரம்பித்தாள்.

நமசிவாயத்தின் குடும்பம் இவர்களை விட நல்ல வசதி. அவர்களுக்கு அபிஷேக் ஒரே மகன். மேலே படிக்க செல்வதாக சொல்லி வெளிநாட்டிற்கு சென்றவன், படிப்பை முடித்ததும் ஒரு வேலையை தேடி கொண்டு அங்கேயே இருந்துவிட்டான்.

நமசிவாயமும், பத்மாவும் எத்தனையோ முறை மகனை இங்கேயே வந்துவிடும் படி சொல்லியிருக்கின்றனர். ஆனால் அவனுக்கு அந்த ஊர் மிகவும் பிடித்துவிட அவன் இங்கு திரும்பி வருவதாக இல்லை.

திருமணம் மட்டுமே மகனை இங்கு இருக்க வைக்கும் என்று யோசித்தவர்கள் வசதியை பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் குடும்பம் நல்லதாக இருந்து, பெண் தங்கமாக இருந்தால் மட்டுமே போதும் என்றே அன்புவை தேர்ந்தெடுத்தனர்.

இதில் மகனும் அவளுடன் பேசி பார்த்ததில் பெண்ணை பிடித்திருக்கிறது என்று சொல்லிவிட, அவர்களது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

என்ன தான் நமசிவாயம் திருமணத்தை தங்கள் செலவிலேயே செய்து கொள்வதாக சொல்லியிருந்தாலும், அதை விநாயகமும், சரிதாவும் ஏற்றுக் கொள்வதாக இல்லை. அவர்கள் வீட்டு வழக்கப்படி திருமணம் பெண் வீட்டில் செய்வது, அதோடு மகள் பெரிய வீட்டில் திருமணமாகி செல்லும் போது அவளுக்கு செய்ய வேண்டியதை நிறைவாக செய்து அனுப்பினால் தானே அவளுக்கு புகுந்த வீட்டில் மரியாதை இருக்கும் என்றும் எண்ணினார்கள்.

குளிரூட்ட பட்ட பெரிய மண்டபத்தில் திருமணம், பெயர் போன கேட்ரர்ஸ், பிரபலமான இசை கலைஞரின் இன்னிசை நிகழ்ச்சி என்று தடல்புடலாக திருமணத்தை ஏற்பாடு செய்திருந்தனர். அது மட்டுமா மகளுக்கு கொடுக்கும் வீட்டு உபயோக பொருட்களும், நகை, நட்டு, சீர், சனத்தியுமே பார்த்து பார்த்து சிறப்பாக தான் வாங்கியிருந்தனர்.

ஏற்கனவே மகனின் திருமணத்திற்கே நந்தனா வீட்டை விட்டு வந்துவிட்டதால், அவளது பெற்றோர் மகளுக்கென்று எதுவும் செய்யமாட்டேன்று இது தான் சாக்கென்று நழுவி கொள்ள, விநாயகம் தான் திருமண செலவை ஏற்றிருந்தார். இப்போது என்ன தான் செட்டில்மென்ட் பணம் வந்தாலும், அது திருமண செலவில் மூன்றில் ஒரு பங்கிற்கு கூட வரவில்லை. மகனின் பெயரில் லோன் போட்டும், வெளியே வட்டிக்கு பணம் வாங்கியும் அனைத்து ஏற்பாட்டையும் செய்தனர்.

இதில் கலைக்கும் எந்த மாற்று கருத்தும் இல்லை. தங்கைக்கு அனைத்தும் சிறப்பாக செய்வதே அவனது விருப்பமாகவும் இருக்க, நிறைந்த மனதோடே திருமண வேலையே பார்க்கலானான்.

அந்த வீட்டில் புகைந்து கொண்டிருந்தது நந்தனா மட்டுமே. அவளால் அன்பரசிக்கு இத்தனை பெரிய இடத்தில் சம்மந்தம் அமைந்ததை ஏற்றக்கொள்ள முடியவில்லை. இருந்தும் வெளியில் காட்டிக் கொள்ளாது திருமண வேலைகளில் ஈடுபட்டாள்.

இவ்வாறே அன்பரசியின் திருமண நாளும் வந்தது. திருமணத்திற்கு நான்கு நாட்களுக்கு முன் தான் அபிஷேக் இந்தியா வந்திருந்தான். அவன் வந்த அடுத்த நாளே இருவீட்டிலும் பந்தக்கால் நட்டுவிட, அன்புவை வெளியே சந்திக்க அவன் அழைத்தும், வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்லகூடாதென்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார் சரிதா.

அதனால் அன்பு அவனை நேரில் கண்டதே இருவரும் வரவேற்பிற்காக ஒன்றாக மேடையில் நின்ற போது தான். இருப்பினும் தன்னவன் என்ற உணர்வும், அலைபேசியில் பேசி கொண்ட தருணங்களும் அவளை அவனிடம் சகஜமாக இருக்க வைத்தது.

அபிஷேக்கிற்கும் அப்படி தான். இயல்பாக தன் சொந்தங்களை அவளிடம் அறிமுகப்படுத்துவதும், அவ்வப்போது அவள் காதில் கிசுகிசுத்து அவளை சிவக்க வைப்பதுமாய் இருந்தான்.

இவர்களின் சம்பாஷணைகளை பார்த்திருந்த அந்த நான்கு ஜோடி கண்களுக்கும் உள்ளம் குளிர்ந்து போனது.

ஆம், மகன் இந்த பெண்ணோடு ஒத்து வாழ்வானா என்று நமசிவாயமும் பத்மாவும் ஒருபுறமும், வெளிநாட்டு மாப்பிள்ளை என்று நேரில் பார்க்கமாலே முடிவு செய்கின்றோமே, அது மகளுக்கு சரியாக இருக்குமா என்று விநாயகமும் சரிதாவும் மறுபுறம் குழம்பி தவித்ததெல்லாம் இப்போது பனி போல் விலகியிருக்க, நால்வரும் முழுமையான மனநிறைவை பெற்றனர்.

அவர்களின் எண்ணத்தை பொய்யாக்க போகும் விதியும் மண்டபத்தின் ஒரு ஓரம் நின்று சிரித்து கொண்டு தான் இருந்தது.


உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்
 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 8

தங்கள் வீட்டிற்கு வந்திருக்கும் அண்ணனை முக மலர்ச்சியோடு உபசரித்து கொண்டிருந்தாள் அன்பரசி.

ஆம், அன்புவிற்கும் அபிஷேக்கிற்கும் திருமணமாகி நான்கு மாதங்களாகின்றது. மணமான ஒருவாரம் மட்டுமே அபிஷேக் இங்கு இருந்தான். அதன்பின் வேலையில் தான் இருக்கவேண்டிய கட்டாயத்தை மனைவிக்கு உணர்த்திவிட்டு அமெரிக்கா சென்றுவிட்டான்.

அன்றிலிருந்து அந்த ஒரு வார காலத்தில், அவளுக்கு அவன் காட்டிய புது உலகத்தையும், அவனது கரத்தில் அவள் பாகாய் உருகி கரைந்து கூடி களைத்த க்ஷணங்களையும் நினைத்து கொண்டே நான்கு மாதங்களை நானூறு ஆண்டுகளாய் பிரிவு துயரோடு கடத்தியிருந்தாள் அன்பு.

மருமகன் ஊருக்கு சென்றதும், அவரில்லாமல் மகளுக்கு புது இடத்தில் ஒன்ற சிரமமாக இருக்கப்போகிறதென்று தங்கள் வீட்டில் வந்து இருக்கும்படி விநாயகமும் சரிதாவும் அழைத்தனர். ஆனால் அன்பு வர மறுத்துவிட்டாள்.

அது அவளது கணவனது வேண்டுகோளாக இருக்கும் போது, அவளால் எங்கனம் மறுக்க முடியும். அபிஷேக் தான் அவன் மீண்டும் வந்து அவளையும் உடன் அழைத்து செல்லும் வரை தன் தாய், தந்தையுடன் இருக்க சொல்லி கேட்டுக் கொண்டான். அதன்படி அவளும் புகுந்த வீட்டிலேயே இருந்துக் கொண்டாள்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் விநாயகமும், சரிதாவும் மகளை வந்து பார்த்து விட்டு செல்வர். கலைக்கும் வர ஆசை தான். நந்தனாவும் வரமாட்டாள். ஏதாவது சாக்கு சொல்லி கணவனையும் வரவிடாமல் செய்துவிடுவாள்.

திருமணத்தின் போது தானும் மனைவியும் சேர்ந்து வந்து தங்கையை அவளது புகுந்த வீட்டில் விட்டு சென்ற போது தான் அவன் இங்கு வந்தான். அதன்பிறகு இப்போதே கலை தங்கை வீட்டிற்கு வந்திருக்க, பத்மா ஒரு விஷேசத்திற்கும், நமசிவாயம் தங்களுடைய பேக்டரிக்கும் சென்றிருக்க, அவனை இந்த வீட்டின் மருமகளாக உபசரித்து கொண்டிருந்தாள் அன்பு.

“சாப்பிடுண்ணா. இன்னும் கொஞ்சம் பொரியல் வைக்கவா” கலை திணற திணற, அவனது தட்டில் சாதத்தை வைத்து சாம்பார் ஊற்றி கொண்டிருந்தாள்.

“அன்பு, போதும். இதுக்கு மேல முடியாது” என்று சட்டையின் மேல் பொத்தான்களை கழற்றிவிட்ட கலை, வெகுநாட்களுக்கு பிறகான தங்கையின் பாச மழையில் விருப்பப்பட்டே நனைந்து கொண்டிருந்தான்.

ஒருவழியாக சாப்பிட்டு முடித்து வந்து அவன் வரவேற்பறை சோபாவில் அமர, இரு கண்ணாடி பௌலில் ஐஸ்கிரீமை கொண்டு வந்து, ஒன்றை அண்ணனிடம் கொடுத்தவள், இன்னொன்றுடன் அவனருகில் அமர்ந்து அதை ருசிக்க தொடங்கினாள்.

சாப்பிடுவதற்கு இடையே “எனக்கு ஐஸ்கிரீம் பிடிக்கும்னு வீட்டுல எப்பவும் மாமா வாங்கி வச்சிடுவார் ண்ணா” என்று சொல்லிக் கொண்டே சாப்பிடும் தங்கையின் அழகை கண்டு, அவளுக்காக அலுவலகத்தில் வாங்கிய கடன், அதனால் அங்கே அதிக பணிச்சுமையை தலையில் ஏற்றும் போதும் எதுவும் சொல்லமுடியாத தன் கையறு நிலையென அனைத்தையும் மறந்து தங்கையை நினைத்து சந்தோசப்பட்டு கொண்டான் கலை.

“மாப்பிள்ளை அடிக்கடி ஃபோன் பண்றாரா அன்பு” என்று தங்கையிடம் கலை விசாரிக்க

“உங்க மாப்பிள்ளை தானே, எங்களுக்காக உழைக்கிறாராம். வேலைனு சொல்லிட்டு ஒண்ணு ஃபோனே பண்ணமாட்டார். அப்படி, நானா பண்ணா வைக்கமாட்டார். உன்னோட பேச ஆரம்பிச்சிட்டா, உலகமே மறந்திடுதுன்னு சொல்லுவார். என்னை ரொம்ப மிஸ் பண்றார் ண்ணா” என்ற தங்கையின் குரலில், கணவனுக்காக அவளுக்கு இருக்கும் காதல், ஏக்கம், அவனில்லாத தவிப்பு, வருத்தம் என அனைத்தும் கலைக்கு புரிந்தது.

தன் ஐஸ்க்ரீமை விரைவாக சாப்பிட்டு முடித்தவள் அண்ணனிடமிருந்தும் எடுத்து உண்ண, அவனே அதை பாசமாக தங்கைக்கு ஊட்டிவிட்டான்.

இவ்வாறு இருவரும் தங்களுக்கான நேரத்தை சந்தோசமாக கழித்திருக்க, தன் கையிலிருந்த பிரேஸ்லெட்டை கழற்றி அண்ணனிடம் கொடுத்த அன்பு “வர புதன்கிழமை அண்ணிக்கு பர்த்டே. நீ எதுவும் வாங்கிட்டு போகலனா, அவங்க சண்டை போடுவாங்க. இந்த பிரேஸ்லெட்டை வித்து அண்ணிக்கு எதாவது வாங்கி கொடுண்ணா” என்றாள்.

அதை கேட்ட கலையின் முகத்தில் அப்படியொரு ஆச்சர்யம். தானாக தங்கையிடம் எதுவும் சொல்லாமல் அவளாக எப்படி புரிந்துக் கொண்டாள் என்று அவளை எண்ணி வியந்தான்.

உண்மையில் அவன் அன்புவிடம் பணமோ, பொருளோ வாங்க வரவில்லை. காலையில் கிளம்பும் போதே, ஒரு தோடின் கேட்லாக்கை காண்பித்த நந்தனா, தன் பிறந்தநாளுக்கு அது வேண்டுமென்று சொல்லியிருந்தாள்.

இதில் அலுவலகத்திற்கு சென்றால், அங்கே தேவையில்லாத வேலை பளுவை எல்லாம் தூக்கி இவன் தலையில் கட்டியிருந்தார்கள். இதையெல்லாம் எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் விழி பிதுங்கியவன், அவர்கள் கொடுத்த வேலையை முடிந்த அளவிற்கு முடித்துவிட்டு, மீதியை வீட்டில் முடித்து எடுத்து வருவதாக சொல்லி வீட்டிற்கு செல்லாமல், தங்கையை கண்டால் மனம் சிறிது ஆசுவாசப்படும் என்று அவள் வீட்டிற்கு வந்திருக்கிறான்.

அதற்கு அவனது மனைவி விட்டுவிடுவாளா. நந்தனா விடாமல் அழைக்க, அலைபேசியை அணைத்தே வைத்துவிட்டான் கலை.

“என்னால தான் உனக்கு இவ்ளோ கஷ்டம்ல” அண்ணனின் மனதை படித்தவளாய் கண்களில் நீர் சூழ அன்பரசி சொல்ல, தங்கையை பார்த்துவிட்டு மட்டும் சென்றுவிட வேண்டும் என்று எண்ணியிருந்ததெல்லாம் இப்போது வேலைக்கு ஆகாமல் போனது.

“கஷ்டமா இல்லைனு சொல்லமாட்டேன். உண்மையிலேயே முடியல. லோன் வாங்கியிருக்கேன், எப்படியும் இங்க தானே இருக்கணும்னு ரொம்ப வேலை தர்றாங்க” அதுவரை தங்கைக்காக அணிந்திருந்த சந்தோச முகமூடி எல்லாம் கிழிந்து போக, இப்போது சோர்ந்த முகத்துடன் சொன்னான் கலை.

அதை பார்த்த அன்பரசிக்கு கண்களில் குளம் கட்டி நின்றிருந்த கண்ணீர், நீர் மணிகளாய் கன்னம் பட்டு உருண்டன.

தங்கையை அழ வைத்துவிட்டதில் கலைக்கும் வருத்தமாகி போய்விட “ஒண்ணுமில்ல அன்பு. கொஞ்சம் வருஷம் தான். பணத்தை செட்டில் பண்ணிட்டு பிசினஸ் பண்ணலாம்னு இருக்கேன். ஒருத்தனுக்கு கீழே வேலை பார்த்தா, என்னமோ இவனுங்க அடிமைங்க மாதிரி ரொம்ப குனிய சொல்றாங்கனுங்க” என்று பற்களை நறநறத்தான்.

இவர்களது சம்பாஷனைகளை வீட்டிற்கு வந்த நமசிவாயம், வெளியே நின்று கேட்டுவிட்டிருக்க, அதை காண்பிக்காது “என்ன மாப்பிள்ளை, எப்போ வந்தீங்க” என்று விசாரித்துக் கொண்டே உள்ளே நுழைய, அவரை திரும்பி பார்த்த கலையும் பதிலுக்கு நலம் விசாரித்தான்.

பின் சிறிது நேரம் அவரிடம் பேசி இருந்துவிட்டு கலை அங்கிருந்து கிளம்ப தயாராக, நமசிவாயமே “என்ன மாப்பிள்ளை, உங்க தங்கச்சிகிட்ட மட்டும் தான் சொல்லுவீங்களா. பிசினஸ் பண்ண எதுக்கு கடன் அடையுற வரைக்கும் காத்திருக்கணும். நான் பணம் தரேன், உடனே அடைச்சிடுங்க” என்றார்.

அதை கேட்ட கலை வேண்டாம் என்பதாக நெளிய “அட, நானும் கடனா தான் தரேன்னு சொல்றேன். உங்க குடும்பம் தான் ரொம்ப கவுரவம் பார்க்குமே” என்று சிரிக்க, கலைக்கு தன் பிரச்சனை தீர்ந்த திருப்தி, அன்பரசிக்கு தன்னால் ஏற்பட்ட கஷ்டத்திலிருந்து தன் அண்ணன் விடுபட்ட மகிழ்ச்சி.

“சரிங்க மாமா, வாங்கிக்கிறேன்.. ஆனா உடனே செட்டில் பண்ண ஒத்துக்கமாட்டாங்க.. இன்னும் ஒரு ஆறு இல்ல ஒரு வருஷம் போகட்டும், அப்போ தாங்க” என்றான் கலை.

“அந்த வேலைய விட்டதும் புதுசா பிசினஸ் தொடங்குறதுக்கு, நம்ப கம்பெனி, பேக்டரி எல்லாம் நான் தனி ஆளா தான பார்த்துக்கிறேன். உன் மாப்பிள்ளையும் அங்கேயே செட்டில் ஆகிடுவான். எல்லாம் நம்ப கம்பெனி தான. பேசாம நீ பார்த்துக்கோ மாப்பிள்ளை” என்று நமசிவயாம் அறிவுறுத்த, அதில் கலைக்கு விருப்பம் இல்லை. ஏன் அன்பரசிக்குமே.

இதற்கு எப்படி மறுப்பு சொல்வதென்று அவன் சங்கடப்பட “புரியுது மாப்பிள்ளை. அப்படியே உங்க அப்பனை போலயே இருக்க. உனக்கு வேணும்ங்கிறப்போ கேளு, பணம் தரேன்.. நீ தொடங்க போற பிசினஸுக்கும் சேர்த்து தான், நீ பிசினஸை அமோகமா தொடங்கிக்கோ மாப்பிள்ளை” என்று மீசையை முறுக்கிவிட்டு தன் பிரத்யேகமான சிரிப்பை சிரித்தார்.

தன் கஷ்டமெல்லாம் இன்னும் சிலமாதங்களே என்ற நினைப்போடு கலையும் நிம்மதியாக இருவரிடமிருந்தும் விடைபெற்று கிளம்பினான்.

அன்று, அன்பரசி தங்கள் அறையில் இருக்க, கீழிருந்து ஒரே சத்தம். என்னவென்று பார்க்க கீழிறங்கி வந்தால், நமசிவாயமும் பத்மாவும் தான் சண்டையிட்டு கொண்டிருந்தனர்.

அதை பார்த்தவள் தலையில் கைவைத்து கொண்டு அங்கிருந்த சோபாவில் வந்து அமைதியாக அமர்ந்து கொண்டாள்.

நமசிவாயமும் பத்மாவும் ஆதர்ஷ தம்பதிகள் தான். ஆனால் தினமும் ஒரு முறையாவது சண்டையிட்டு கொள்ளாமல் இருக்கமாட்டார்கள். இந்த நான்கு மாதங்களில் அன்பரசிக்கும் இது பழகி போன ஒன்றானது.

அதுமட்டுமில்லை, அவர்களது சண்டைக்கு சில நேரம் அவள் ரெஃப்ரீ, சில நேரம் நாட்டாமை, பல நேரங்களில் நீங்களும் சரி, அவர்களும் சரி என்று டபுள் சைடு கோல் அடிப்பாள். அபிஷேக் இல்லாத குறையை அவளது மாமியாரும், மாமனாரும் தான் தீர்த்து வைக்க, அவளுக்கு அவர்களது சண்டை, அன்யோன்யம் இரண்டுமே பிடிக்கும்.

கன்னத்தில் கைவைத்து கொண்டு “சண்டைனு தெரியுது. எதுக்குன்னு சொன்னீங்கன்னா, நானும் இன்ட்ரஸ்ட்டா வேடிக்கை பார்ப்பேன்ல” என்று சோகமாக முகத்தை வைத்து கொண்டு அன்பு சொல்ல,

“அடி கழுதை” என்று அவளது தோளில் ஒரு செல்ல அடி போட்ட பத்மா “சண்டையே உன்னால தான். உன் அப்பா என்னை திட்டுறாரு” என்று குறைப்பட்டார்.

அன்பரசி தன் மாமனார், மாமியாரை அப்பா, அம்மா என்று தான் அழைப்பாள். அந்தளவிற்கு அவர்களும் அவளை தன் மகளென தான் பார்த்துக் கொள்கின்றனர்.

“அப்பா உங்களை திட்டுனாரா..” என்று நெற்றிப்பொட்டில் கைவைத்து யோசிப்பவள் போல் பாவனை செய்தவள் “வாய்ப்பில்லையே.. நீங்க அப்பாவ திட்டுனீங்கன்னு சொன்னாலும் நம்பலாம்.. ஆனா” என்று அவள் இழுக்க,

அவளது காதை திருகிய பத்மா “கொழுப்பு தானே உனக்கு. நீ இறங்கி வருவனு நானும் சாப்பிடாம காத்துகிட்டு இருந்தேன். அதுல பிரஷர் மாத்திரை போடல. அதுக்கு தான் சத்தம் போட்டுக்கிட்டு இருக்கார்” என்று விளக்கம் கொடுத்தார்.

“அச்சோ சாரி அம்மா. அபி பேசிட்டு இருந்தாங்க.. அதுல சாப்பிடலைனு..” என்று அவள் நிறுத்த

“புருஷன் கிட்ட பேசினா சுற்றமே தெரியாதே” என்று பத்மா சொன்னதும், அன்பரசி முகம் சிவக்க, தலை குனிந்துக் கொண்டாள்.

மகனும், மருமகளும் இத்தனை இணக்கமாக இருப்பதை காணும் நமசிவாயத்திற்கும், மனதிலிருந்த பாரமெல்லாம் விலகி உள்ளம் குளிர்ந்து தான் போனது.

“புருஷன் கூட ஃபோன்ல பேசினா மட்டும் போதாது. நீ தான் அவன் மனசுல இருக்குற வெளிநாட்டு மோகத்தை ஒரேடியா அழிச்சி, இங்க வரவைக்கணும். இல்ல, நீயாவது வராத கண்ணீரை விட்டாவது அவன்கிட்ட போய்டணும். அதவிட்டுட்டு, இப்படியே இருந்தா எப்படி. எங்களுக்கும் பேரப்பிள்ளையை பார்க்கணும்னு ஆசை இருக்கும்ல” மருமகளுக்கு பத்மா அறிவுறுத்த, குழந்தையை பற்றி பேசியதில் அன்புவின் முகம் ரோஜா பூவாய் சிவக்க, தலை குனிந்தே சரியென்று தலையாட்டினாள்.

அபிஷேக், பார்க்க அமுல் பேபி போல் இருந்தாலும், படுக்கையில் அவளை கையாள்வதில் அத்தனை முரட்டு தனம் காட்டுவான்.

‘முரடன் அவன். இவனா தான் சொல்வதை கேட்பான்’ என்று புன்னகைத்து கொண்டாள் அன்பு.

அதேநேரம் அந்த ஒரு வாரமும் அவளுக்கு ஒரு புது உலகையும், உணர்வுகளையும் காண்பித்து, அவன் மீது பித்து பிடிக்க வைத்திருக்கிறான். முரட்டு தனமாக தன்னை களவாடிவிட்டு, அமைதியாக விலகி படுத்து உறங்கிவிடுவான். அவள் தான் குழந்தை போல் உறங்கும் அவனது அழகு முகத்தை இரவெல்லாம் ரசித்தவாறே விழித்திருப்பாள்.

அன்பிற்கும் அவனில்லாமல் இருப்பது சிரமமாக தான் இருந்தது. அதனால் அத்தை சொன்னதை மனதில் வைத்து கணவனிடம் பேசி பார்க்க, அபிஷேக் மனதிலும் அவளை பிரிந்து வாடும் துயர் இருந்ததுவோ என்னவோ, உடனே இந்தியா கிளம்பி வந்துவிட்டான்.

வந்தவன் முதல் மூன்று நாட்கள், ஜெட் லாக் என்று சொல்லி தூங்கிக் கொண்டே இருந்தான். நான்காம் நாள் காலை குளித்து முடித்து தயாரானவன், அன்புவை விட்டு நொடியும் அகலவில்லை. அவள் கீழே வந்தபோதும் மனைவியின் தோளில் கைப்போட்டு அவனும் அவளோடு சேர்ந்து நடந்தான்.

கீழே உணவு மேசையில் நமசிவாயம் சாப்பிட்டு கொண்டிருக்க, அவருக்கு பத்மா பரிமாறி கொண்டிருந்தார்.

அவர்கள் முன் இப்படி வருவதை எண்ணி அன்பு நெளிந்தாள். அவனிடமிருந்து விலகவும் முயற்சி செய்தாள். அபிஷேக்கோ, நான் கண்டுகொள்வேனா என்பதாகவே அவளை அழைத்து வந்தான்.

மகனும் மருமகளும் இப்படி அன்னோன்யமாக இருப்பதில் உண்மையில் அவர்களுக்கும் மகிழ்ச்சியே.

தந்தைக்கு நேரெதிர் இருக்கையில் வந்தமர்ந்த அபிஷேக், அன்னை தனக்கு பரிமாற்ற வருவதை பார்த்து, மனைவியிடம் பரிமாற சொல்வதாக அவளது பஞ்சு போன்ற கரங்களை அழுத்தி கொடுத்தான்.

அவளும் அதை புரிந்தவளாக “நீங்க உட்காருங்க ம்மா. நான் பரிமாறுறேன்” என்று பத்மாவையும் வற்புறுத்தி அமர்த்தி, மூவருக்கும் என்னென்ன வேண்டும் என்று கேட்டு பரிமாறி கொண்டிருந்தாள்.

“நான் திரும்ப யூ.எஸ் போகல ப்பா” என்று சாப்பிட்டு கொண்டே அபி சொல்ல, நமசிவாயத்திற்கும், பத்மாவிற்கும் மனது நிறைந்து போனது. இத்தனை ஆண்டுகளாக அவர்கள் கேட்க துடித்த வார்த்தைகளாயிற்றே அவை.

மூன்றே வருடம் என்று சொல்லி படிக்கச் சென்ற மகன், தனக்கு அங்கேயே ஓர் நல்ல வேலை கிடைத்து விட்டதாக சொன்ன போது முதல் முறையாக சறுக்கியவர்கள், அவன் அந்த ஊரை பிடித்துவிட்டதாக சொல்லி அங்கேயே குடியுரிமை வாங்க போவதாக சொன்ன நொடி, ஒரே பிள்ளையை பெற்ற இருவரது மனமும் கண்ணாடியாய் உடைந்து நொறுங்கி போனது.

வீட்டிற்கு மகாலஷ்மியே மருமகளாக வந்தால், அனைத்தும் மாறும் என்ற நமசிவாயத்தின் நம்பிக்கை இன்று உண்மையாகி போக, இப்போது மகனின் வார்த்தைகள் நீங்காத ரீங்காரமாய் அவரது செவிகளில் ஒலித்து கொண்டே இருந்தது.

தந்தை உணர்ச்சிகளில் மிகுதியில் இருக்கிறார் என்பதை உணர்ந்து சிறு இடைவேளை விட்ட அபி “இங்கேயே ஒரு ஸ்டார்ட்டப் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன் ப்பா” என்று அடுத்த இனிய செய்தியையும் சொன்னான்.

“பண்ணு பா. இது எல்லாம் உனக்கு தான். நீ என்ன ஆசைப்படுறியோ அதையே செய்” என்று மனதார தன் சம்மதத்தை கொடுத்தார் நமசிவாயம்.

“தேங்க்ஸ் ப்பா” என்று முகம் கொள்ளா புன்னகையுடன் தந்தையின் கையை அழுத்தி கொடுத்தவன் “முதல்லயே பிக்கப் ஆகாது ப்பா. கிளையண்ட்க்கு நம்ப வேலை மேல நம்பிக்கை வர்றதுக்கு, முதல்ல நம்ப பணத்தை வச்சி தான் ஆட்களை சேர்க்கறது, அவங்களை டிரைன் பண்றது எல்லாம் பண்ணனும். அவங்களுக்கு திருப்தியா ப்ராஜெக்ட் பண்ணி கொடுத்த அப்புறம் தான் கிளையண்ட் கிட்ட இருந்து வாங்கணும். என்னால அன்புவை பிரிஞ்சி இனியும் அங்க இருக்கமுடியும்னு தோணல. நீங்க தான் பணத்துக்கு ஹெல்ப் பண்ணனும் ப்பா” என்று தன் தொழில் திட்டங்கள் அனைத்தும் சொல்லி, தன் பெயரில் சொத்துகள் இருந்தால் தான், அதை காட்டி பணம் பெற முடியும் என்றும் சொன்னான்.

நமசிவாயம் யோசித்தவர் “நான் சூரிட்டி போட்டு தந்தா நடக்காதா ப்பா” என்று கேள்வியாக நிறுத்த

“நான் சூரிட்டிய வைச்சு பேங்க்ல லோன் வாங்க போறது இல்லப்பா. என்னோடது மில்லியன் டாலர்ஸ் பிசினஸ் ப்ரோபோசல். என் பேர்ல பிராப்பர்ட்டிஸ் இருந்தா தான், அத பிலெட்ஜ் பண்ணி பிசினஸ் தொடங்க முடியும். அன்னைக்கு தாத்தா உங்க மேல நம்பிக்கை வச்சதுனால தான், உங்களால இவ்ளோ பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்க முடிஞ்சது. எனக்கும் அப்படியொரு வாய்ப்பை நீங்க ஏற்படுத்தி கொடுங்க.. இதை தனியா என் பேர்ல மட்டும் தொடங்க விரும்பல” என்றவன், அன்புவை சுட்டி காட்டி,

“எங்க ரெண்டு பேரோட பேர்ல தான் இந்த பிசினஸ் இருக்க போகுது. யெஸ், அரசியும் இதுல ஈக்குவல் பார்ட்னர்” என்ற புன்னகைத்த மகனை பார்க்க பார்க்க நமசிவாயத்திற்கு பெருமையாக இருந்தது.

இருப்பது ஒரு மகன், அவனுக்கு இல்லாமல் வேறு யாருக்கு. மகன் சொன்ன அனைத்தையும் அந்த மாதத்திலேயே செய்து முடித்தார் நமசிவாயம்.

அபிஷேக்கும் அமெரிக்காவில் இருக்கும் போதே, புது தொழிலுக்கான ஏற்பாட்டை ஓரளவிற்கு செய்துவிட்டிருக்க, இன்னும் ஒரு மாதத்தில் அவர்களது புது தொழிலின் திறப்பு விழா.

நமசிவாயம், பத்மா, அபிஷேக், அன்பரசி என்று குடும்பமாகவே வந்து அன்பரசியின் பிறந்த வீட்டை முறையாக விழாவிற்கு அழைத்தனர். அதுவும் மகளது பெயரில் தொழில் என்று எண்ணும் போதே விநாயகத்திற்கும் சரிதாவிற்கும் அவர்களது சந்தோசத்திற்கு அளவே இல்லை.

இதில் கலைக்கும் மனம் நிறைந்த மகிழ்ச்சி தான். அன்பிற்கு நடக்கும் ஒவ்வொன்றையும் பார்த்து நந்தனா மட்டுமே புசு புசுவென்று பொறாமையில் பெருமூச்சை விட்டு கொண்டிருந்தாள்.

அனைத்தும் சிறப்பாக நடந்துக் கொண்டிருக்க, அன்புவும் வானமே தன வசமென சந்தோச வானில் சிறகடித்து பறந்துக் கொண்டிருந்தாள்.

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் அது வாழ்க்கை இல்லையே.. அவளை அதல பாதாளத்திற்கு தள்ள போகும் நாளும் அவளின் வாழ்வில் வந்தது.


உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..
 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள் ப்ரண்ட்ஸ் :D அடுத்த எபிசோட் இப்போ போட்டுடுவேன். அதோட சஷ்டியெல்லாம் முடிந்து தான் அதற்கடுத்த எபி.
 
Status
Not open for further replies.
Top