All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ரொம்ப லாங் கேப் ஆகிடுச்சு.. ஆல்ரெடி ஆரம்பிச்ச ஜீவனின் ஜீவனவள் முடிக்க முடியல. ப்ளீஸ் எல்லோரும் மன்னிச்சு.. இந்தக் கதை நிச்சயமா பாதியில் நிற்காது. நம்பி பின்தொடரலாம். எப்பவும் போல வாசிச்சு ஊக்கப்படுத்தி என் தவறையும் சுட்டிக்காட்டுங்கள்.
“எனக்கு விருப்பமில்ல” என்று கத்தியவாறே எழுந்து அமர்ந்தவனுக்கு இதயம் தாறுமாறாக துடித்தது.
இரண்டு வருடங்களாக அனுதினமும் அவன் மனம் உருப்போடும் வார்த்தைகள்.
எழுந்து அமர்ந்தவன் நெஞ்சை நீவி விட்டுக் கொண்டான். கலங்க ஆரம்பித்த கண்களைக் கட்டுப்படுத்தியவன் தன்னை நினைத்து தானே வெட்கிப் போனான்.
அவனுக்குத் தெரிந்தது. இந்தக் கலக்கம் எதற்காக என்று! உண்மையில் இது இப்படி வலிக்கும் என்று அவனே எதிர்பார்த்திருக்கவில்லை. அந்த வலியே அவனுக்குத் தன் மனதை விளக்கிச் சொல்ல, அந்த உண்மையும் அவனுக்கு உவப்பானதாக இல்லை.
'வேணாம்டா மேகா..’
அவனது மனமே கண்டிக்க, தலையாட்டி ஒப்புக் கொண்டான்.
'அவ எனக்கு வேணாம் எப்பவும்’
இனி இப்படியொரு எண்ணம் தனக்கு வரக்கூடாது என்று அவனின் விருப்ப தெய்வமான முருகனை வேண்டினான்.
‘முருகா என்னை இதுல இருந்து வெளில கொண்டு வந்துடு.. எனக்கு அவ வேணாம்’
அன்றைய வேண்டுதல் எத்தனையாவது வேண்டுதல் என்பது அவனுக்கும் அந்த முருகனுக்குமே வெளிச்சம். வேண்டுதலை முழுதாக முடிக்க விடாமல் அவனது அலைபேசி அவனை அழைக்க, எடுத்துப் பேசியவனுக்கு அந்தப் பக்கம் சொன்ன செய்தி பயங்கர அதிர்ச்சி.
“என்ன??” என்று உச்சஸ்தானியில் அவன் கத்த, எதிர்பக்கம் பயத்துடன் மேற்கொண்டு என்ன சொல்வது எனத் தெரியாமல் அமைதியானது.
அவனது கோபத்தை அவர்களிடம் காட்ட முடியாதே!!
சுதாரித்தவனாய், “நீங்க வைங்க.. தகவல் சொன்னதுக்கு நன்றி. நான் பார்த்துக்கிறேன்” என்று கூறி அலைபேசியை அணைத்தவன் சற்று முன் வேண்டிய வேண்டுதலுக்கும் அவனுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாததைப் போலச் சென்னைக்குக் கிளம்பினான்.
'எவ்வளவு தைரியம் இவளுக்கு? என்னை என்னனு நினைச்சா இவ?’
அவனுக்கு அப்படியொரு கோபம் வந்தது. வீட்டினர் யாரிடமும் எதுவும் சொல்லாமல் தகவல் வந்த நிமிடத்தில் கிளம்பிவிட்டான்.
அவனை இப்படி ஆட்டி வைக்கும் விதுர்ஷா, அது பற்றிய எந்த எண்ணமும் இல்லாமல் அவளுக்குள் உழன்று கொண்டிருந்தாள். எந்த வேலையும் அவளுக்கு ஓடவில்லை. யோசித்து யோசித்து தலை விண்ணென்று வலிக்க, “ம்மாஆஆ” என்றவாறு விழிகளை மூடியவளின் விழிகள் கண்ணீரைக் கன்னத்திற்குத் தந்தன.
இந்த முடிவில் அவளுக்குத் துளியும் விருப்பமில்லை. எந்த நம்பிக்கையில் அப்பா இதையெல்லாம் செய்கிறார் என்பதும் அவளுக்கு விளங்கவில்லை. இப்போதும் கூட அவளால் இதை மறுக்க முடியும். செய் என்று சொல்லாமல் செய்வாயா என்றல்லவா இறைஞ்சுகிறார்!?
சித்தார்த்தன்! அழகனாய் இருந்தான். பெரியவர்களிடம் மரியாதையாகப் பேசினான்.
ஆனால்.. ஏனென்று தெரியாத நெருடல். சட்டென்று ஒரு ஒவ்வாமை ஒட்டிக்கொள்ள, இதிலிருந்து தப்பிக்கும் வழி தெரிந்தும் அதை செயல்படுத்த முடியாத நிலையை நொந்து கொண்டவள் விழிகளைத் திறந்தாள்.
அதேநேரம் அவளுக்கு வேறொருவன் நினைவும் வந்தது. அந்த நினைவு அவளுக்கு அவ்வளவு பிடித்தமான விஷயமல்ல. முயன்று அந்த நினைவையும் அவனையும் ஒதுக்கியவள் வீட்டிலிருந்தால் தேவையில்லாத நெருடல்கள் வரும் என்பதை உணர்ந்து அவர்களது கல்லூரிக்குச் செல்ல தீர்மானித்தாள். கட்டியிருந்த புடவை கசங்கியிருக்க, அதை மாற்றிவிட்டு முகத்திற்கு லேசாக ஒப்பனையிட்டுக் கொண்டாள்.
மனச்சோர்வை முகத்தில் காட்டாமல் இருக்க வேண்டி தன்னை அழகுபடுத்திக் கொள்வது அவளது வழக்கம். அவ்வளவு சீக்கிரத்தில் மனதினை மற்றவர்களுக்குக் காட்டிவிட மாட்டாள். அந்த விஷயத்தில் சற்று அழுத்தக்காரியும் கூட. ஒப்பனை முடிந்து தன்னை கண்ணாடியில் பார்த்துக் கொண்டவள் திருப்தியாய் அறையை விட்டு வெளியே வந்தாள்.
“முத்தண்ணா.. காரை எடுங்க” என்றவாறு அவள் படியிறங்க,
“இன்னைக்கு ஐயா உனக்கு ரெஸ்ட் குடுக்க சொல்லிருக்காங்க பாப்பா.. காலேஜ்க்கு நீ கிளம்புனா வேணாம்னு சொல்ல சொன்னாங்க.. ஐயா அங்க பார்த்துக்கிறாங்களாம்” என்றவாறு சமையலறையிலிருந்து வெளிப்பட்டார் வள்ளி. வள்ளி அந்த வீட்டில் நீண்ட காலமாக சமையல் வேலை செய்பவர்.
“ரெஸ்ட் எடுக்க வேண்டிய வயசு அவருக்கா இல்லை எனக்கா?” என்று விதுர்ஷா புன்னகைக்க,
“அய்யாவுக்கு தான் நீ ரெண்டு வருஷமா ரெஸ்ட் குடுத்திருக்கியே பாப்பா.. உனக்குத் தான் ரெஸ்ட் வேணும்” என்றார் வள்ளி.
“இத்தனை நாள் பம்பரம் மாதிரி சுத்திட்டு இப்போ வீட்ல மொட்டு மொட்டுனு உட்கார கடுப்பாகுது வள்ளிக்கா.. நான் அப்பாவ சமாளிச்சுக்கிறேன் நீங்க கவலைப்படாதீங்க” என்றவாறு அவள் தயாராக இருந்த காரில் ஏற, வள்ளியின் மனம் வழக்கம்போல தன் எஜமானி அம்மாவைத் துயரத்துடன் நினைத்துக் கொண்டது.
‘அம்மா மட்டும் இருந்திருந்தா..’
எண்ணமே மேலும் கவலையைக் கொடுக்க, அதை சிரமப்பட்டு ஒதுக்கி வைத்தவர் சமையலறைக்குள் புகுந்து கொண்டார்.
அடுத்த நாற்பது நிமிடத்தில் விதுர்ஷா கல்லூரியில் இருந்தாள். தனக்கும் தந்தைக்கும் பொதுவான அறையில் அவள் நுழைய, அவளை எதிர்பார்த்தவர் போல சிவநேசன் அமைதியாக இருந்தார்.
“என்னப்பா எதுவும் சொல்லாம இருக்கீங்க.. ஆச்சரியமா இருக்கு” என்று வலிய வரவழைத்த புன்னகையுடன் அவளே ஆரம்பிக்க,
“எனக்குத் தெரியும்மா உன்னால வீட்ல சும்மா இருக்க முடியாதுனு.. ரெண்டு வருஷத்து முன்ன உன்ன இந்த சீட்ல உட்கார வைச்சுட்டு வீட்ல இருந்தப்போ என்னாலயும் இருக்க முடியல” என்றவர் புரிதலோடு புன்னகைத்தார்.
“அதுக்கு முன்னாடியும் நீ காலேஜை அப்பப்போ பார்த்திருக்க தான். ஆனா அப்போ நான் அம்மா கூட இருந்ததால என்னால இதையெல்லாம் யோசிக்க முடில”
சிவநேசனின் குரல் கலங்கி ஒலித்தது. அவரது மனைவியின் இன்மையை இன்னும் எத்தனை காலம் கடந்து யோசித்தாலும் அவரது நிலை அதுதான். அவரது இந்த காதலுக்கு முற்றிலும் தகுதியானவர் தான் அன்பரசியும்!
அன்பரசி பெயரே வடிவானவர் என்று தான் சொல்ல வேண்டும். அவர்கள் இருவருடைய உலகமே அன்பரசி தான். அன்பரசி சொல்வது தான் இருவருக்கும் வேதவாக்கு. அன்பரசியின் முகம் சிறு சுணக்கத்தைக் காட்டினாலும் மற்ற இருவரும் அதைப் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். சிவநேசன் ஆரம்பித்து வைத்த பேச்சு விதுர்ஷாவிற்கு பழைய நினைவுகளைத் தட்டியெழுப்ப, முயன்று கட்டுக்குள் கொண்டு வந்தவள் தந்தையை சகஜமாக்கும் முயற்சியில் இறங்கினாள்.
“ப்பா.. அப்போ இது எவ்ளோ போர்னு தெரிஞ்சும் என்ன வீட்ல விட்டுட்டு வந்திருக்கீங்க.. உங்களுக்கு ரெஸ்ட் எடுக்குற வயசு வந்திருச்சுப்பா.. ஒழுங்கா வீட்ல இருங்க” என்று விதுர்ஷா முடிக்க,
“எனக்கு நீ குடுத்திருக்க சந்தோஷத்துக்கு என்னால இன்னும் பத்து வருஷம் ஓய்வே இல்லாம உழைக்க முடியும்மா.. எனக்கு ஒரு பேரனோ பேத்தியோ வரும்போது நானே வீ.ஆர்.எஸ் வாங்கிடுவேன் கவலைப்படாதே” என்று பெரிதாகப் புன்னகைத்தார்.
அவரின் புன்னகையில் விதுர்ஷாவின் முகம் அனிச்சையாய் ஒரு புன்னகையை ஒட்டவைத்துக் கொள்ள, மகளின் முகத்தை ஆராய்ந்தவருக்கு அவளது மலர்ச்சி மகிழ்ச்சியைத் தந்தது.
“ப்பா நீங்க வீட்டுக்குப் போங்க.. நான் இங்கே பார்த்துக்கிறேன்”
விதுர்ஷா சொல்லவும் சிவநேசனும் மனநிறைவுடன் தலையசைத்துவிட்டுக் கிளம்பினார். சிவநேசன் கிளம்பவும் அவளை வேலைகள் பிடித்துக் கொண்டது. வேலைகள் முடியும் வரை அவளுக்கு அவளுடைய மனப் போராட்டத்திலிருந்து தற்காலிக நிம்மதி என்றுதான் சொல்ல வேண்டும்.
சரியாக கல்லூரி முடியும் நேரத்தில் சித்தார்த்தன் அவளுக்கு அழைத்தான். அலைபேசி திரையைப் பார்த்ததும் தலையைப் பிடித்தவள் மனதிற்குள் மிகப்பெரிய பட்டிமன்றத்தை நடத்தி முடிப்பதற்குள் அந்த அழைப்பு தானாகவே நிறுத்தப்பட்டது.
'ஊஃப்'
பெருமூச்சு விடப் போனவள் மீண்டும் அவனிடமிருந்து அழைப்பு வரவும் தவிர்க்க முடியாமல் அழைப்பை உயிர்ப்பித்து அலைபேசியைக் காதுக்குக் கொடுத்தாள்.
“ஹல்லோ விது.. எங்க இருக்க?”
அவனது உற்சாகம் ஏனோ அவளைத் தொற்றிக் கொள்ளவில்லை.
“காலேஜ்ல தான் சித்தார்த். சொல்லுங்க என்ன விஷயம்?”
நேரடியாக விஷயத்துக்கு வா என்ற தொனியில் அவள் சொல்ல, அதை உணர்ந்தவன் முகம் சுருங்கியது.
“என்னாச்சு ஏன் ஒரு மாதிரி பேசுற? எதுவும் பிரச்சனையா? உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இருக்குதான?”
அவன் வாய் வார்த்தையாகக் கூட விருப்பம் இல்லையா என்று கேட்கவில்லை. அவளுக்கு எப்படியோ அவனுக்கு இந்தத் திருமணம் மிகவும் முக்கியம் ஆயிற்றே!
அவனை அதிகம் சோதிக்காமல், “விருப்பம் இல்லாமல் சம்மதம் சொல்வேனா சித்தார்த்? அடிக்கடி இது மாதிரி கேட்காதீங்க” என்று சொல்ல, அந்தப் பக்கம் ஆசுவாசமாக மூச்சு விட்டான் சித்தார்த்.
“ஷ்யர். உனக்குப் பிடிக்கலனா நான் செய்ய மாட்டேன். நீ சம்மதம் சொன்னதை செலிபிரேட் பண்ணணும். இப்போ நீ ஃப்ரீயா இருந்தா பீச் போகலாமா?” என்று ஆர்வமாகக் கேட்க,
விதுர்ஷாவின் மனம், ‘இதுவேறா’ என்றது.
“நோ சித்தார்த். இன்னைக்கு ரொம்ப வொர்க். அட்மிஷன்ஸ் இன்னும் க்ளோஸ் பண்ணல.. ரொம்ப டயர்ட். இன்னொரு நாள் போகலாம்” என்று நாசுக்காக மறுக்க, அந்தப் பக்கமிருந்த சித்தார்த் வேறு வழியில்லாமல் தலையாட்டும்படி ஆனது.
சித்தார்த் அவளது தந்தை அவளுக்காகத் தேர்ந்தெடுத்திருக்கும் மாப்பிள்ளை. தெரிந்தவருக்குத் தெரிந்தவர் என்று தூரத்து சொந்தம் மாதிரி தூரத்து தெரிந்தவர் மூலம் அமைந்த வரன். முதலில் பேசிப் பார்க்கலாம் என்று சிவநேசன் அவர்களை வரச் சொல்லியிருக்க, அவர்களோ பேசி முடித்து நாள் குறிக்கும் நோக்கத்தில் வந்திருந்தனர்.
விதுர்ஷாவிற்கு விஷயம் பத்து நிமிடத்திற்கு முன் தான் தெரிவிக்கப்பட்டது. விதுர்ஷா அதிர்வுடன் சிவநேசனைப் பார்க்க, அவரோ கெஞ்சலான பார்வையோடு நின்றார்.
“ஜஸ்ட் பேசத்தான் வராங்க.. உன் முடிவு தான்” என்றும் அவர் கூற, தந்தையை சபையில் விட்டுக்கொடுக்க வேண்டாம் என்று அவளும் சம்மதித்திருந்தாள்.
கடைசியில் சித்தார்த்தின் அக்கா கணவர் நாள் குறிக்கும் அளவிற்குப் பேச, அதற்கு மேல் விதுர்ஷாவால் பொறுமையாக இருக்க முடியவில்லை. அவள் தந்தையைத் துளைக்கும் பார்வை பார்க்க,
“இவ்வளவு அவசரம் வேண்டாமே.. விதுக்கு இப்போ தான் நான் விஷயத்தையே சொன்னேன். அவளுக்கு முடிவெடுக்க கொஞ்சம் டைம் வேணும்” என்று அவரே சொல்லிவிட, விதுர்ஷா பெரிய சுமை குறைந்ததாய் உணர்ந்தாள்.
பின்னே அவளால் அவளது அப்பாவையும் விட்டுக்கொடுக்க முடியாது.. இவர்களுடைய விருப்பத்துக்கும் சரி சொல்ல முடியாதே!
சித்தார்த்தின் அக்கா கணவரான சுரேஷ் விதுர்ஷாவை அளவெடுக்கும் பார்வை பார்த்தான். சித்தார்த்தின் அக்கா ஷர்மிளா ஒரு அதிருப்தியான பார்வையை விதுர்ஷாவின் மீது செலுத்தியவள் கணவனையும் தந்தையையும் பார்க்க, சுரேஷ் தான் நிலைமையை சுலபத்தில் மாற்றினான்.
“நீங்க சொல்றதும் சரி தான். முதல்ல ரெண்டு பேரும் பேசிப் பார்க்கட்டும். அப்புறம் முடிவு சொல்லட்டும்”
இதை சொல்லிவிட்டாலும் சுரேஷிற்கு ஒரு புறம் பயம் தான். பயத்தைப் புறம் தள்ளிவிட்டு அவரே சித்தார்த்தின் அலைபேசி எண்ணை அவளுக்குச் சொல்ல, மறுக்க முடியாமல் அலைபேசியில் பதிவு செய்து கொண்டாள். விதுர்ஷாவின் அலைபேசி எண்ணும் பரிமாறப்பட்டது.
சித்தார்த் வாரத்திற்கு இருமுறை என்றவாறு அழைத்துப் பேசுவான். அவள் கொஞ்சம் முகம் கொடுத்திருந்தால் கூட தினமும் அழைத்திருப்பான். ஆனால் அதற்கான அவசியமே இல்லாதவாறு விதுர்ஷா தேவைக்கு அதிகமாகப் பேசவே மாட்டாள்.
இதெல்லாம் நடந்து ஒரு மாதம் இருக்கும். இந்த ஒரு மாதமும் அதையும் இதையும் பேசியும் இறைஞ்சியும் நேற்று தான் விதுர்ஷாவின் சம்மதத்தை சிவநேசன் வாங்கியிருந்தார்.
சித்தார்த்திடம் பேசி முடித்தவளுக்கு, அவனது நினைவும் வர சட்டென்று கண்ணீர் முட்டியது.
'நோ'
தன் மனதுக்கு அழுத்தமாகச் சொல்லிக் கொண்டாள்.
காதல் இல்லை. அது அவளுக்கு நிச்சயம். ஆனால் இந்த வலி.. அதைக் கடந்து அவளால் வரமுடியவில்லை.
அழ வேண்டும் போல் இருந்தது. ஆனால் அவளை அவள் அதற்கு அனுமதிக்கவில்லை. மடமடவென்று இடத்தைக் காலி செய்தவள், “முத்தண்ணா” என்று குரல் கொடுக்க, அவர் அவளை அடுத்த சொல் சொல்ல விடாமல் காரை எடுத்தார்.
______________________
மேகநாதன் சென்னையில் இறங்கும்போது இரவாகியிருந்தது.
அடுத்தது என்ன? என்ன நினைத்து இங்கு அவன் வந்திருக்கிறான்? அவனுக்கே அது புரியவில்லை. எங்கு செல்வது? அதுவும் தெரியவில்லை.
சென்னை வரை வந்துவிட்டான்தான். ஆனால் சென்னை வந்து இறங்கும் வரை அடுத்த கட்டம் என்ன என்பது பற்றி அவன் யோசிக்கவே இல்லை என்பது தான் உண்மை. அவள் மீதான கோபத்தில் மட்டுமே வந்தவன் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி சிறிதும் சிந்தித்தானில்லை. விதுர்ஷா திருமணத்திற்கு சம்மதித்திருக்கிறாள் என்ற உண்மையை இன்னமும் அவனால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் தொலைத்த இடத்தில் தேடுவது என்று முடிவு செய்து விட்டான். கிடைக்குமா என்றெல்லாம் யோசிக்கவில்லை. தனக்கு இன்னொரு வாய்ப்பு இருக்கிறதா என்றும் தெரியவில்லை. ஆனால், தான் இப்போது செய்து கொண்டிருப்பது வடிகட்டிய சுயநலத்தனம். அது மட்டும் அவனுக்குப் புரிந்தது.
இருந்துவிட்டுப் போகட்டுமே! அவள் செய்யவில்லையா? சுயநலமாக அவள் முடிவெடுக்கவில்லையா?
அவளுக்கு என்ன காரணங்கள் இருந்த போதும் அது சுயநலம் தானே? அதுபோல நானும் இருந்துவிட்டுப் போகிறேன்.
சுய அலசலில் ஈடுபட இது நேரமில்லை என்று உணர்ந்து ஒரு ஆட்டோவைப் பிடித்தவன் ஒரு ஹோட்டல் பெயரைச் சொல்லி ஏறி அமர்ந்தான். அங்கே தங்குவதற்கு ஓர் அறையை புக் செய்தவன் மணியைப் பார்த்தான். 9.30 என்று காட்டியது. அங்கேயே உணவை உண்டுவிட்டு அவனுக்குத் தந்திருந்த அறைக்குச் சென்று படுத்தவனுக்கு உறக்கம் வந்தபாடில்லை. மனம் எதை எதையோ நினைவுபடுத்தியது.
விதுர்ஷா நினைவுக்கு வந்தாள். அவளுடனான அவனின் பொழுதுகள் அசைபோட்டு மகிழும் அளவிற்கானது இல்லையே.. அவனது முகம் சுருங்கிவிட்டது.
'ச்ச' என்று சொல்லிக் கொண்டவன் தன் மீது கோபமாக இருந்தானா இல்லை விதுர்ஷாவின் மீதா என்பதை அவனே உணரக்கூடிய நிலையில் இல்லை என்பது தான் உண்மை.
#2
விதுர்ஷாவின் கார் இந்தப் பாதையில் தான் வருமென்று அறிந்தவனாய் அவளுக்காகக் காத்திருந்தான் மேகநாதன். அது பெரிதாக ஜனத்திரள் இல்லாத ஒரு குறுகிய சாலை. அதைக் கடந்தால் மெயின் ரோட். இவனால் உரிமையாக வீட்டிற்குச் சென்று பேச முடியாதே.. அதனால் அந்த இடத்தைத் தேர்வு செய்திருந்தான்.
அவன் கை நீட்டி மறைத்ததை யாரோ லிஃப்ட் வேண்டி நிற்பதாக எண்ணிய டிரைவர் முத்து அவனைக் கடந்து செல்ல, விதுர்ஷா இந்த இரண்டு நாட்களாகவே சுற்றுப்புறத்தைக் கவனிக்கும் நிலையில் இல்லை. அவள் தனக்குள் எதையோ யோசித்தபடி வர, அவளும் அவனைக் கவனிக்கவில்லை.
கார் தன்னைக் கடந்து செல்லவும் திகைத்து நின்றவன் காரின் பின்னோடு ஓடி வர, கண்ணாடியில் அவனைப் பார்த்துவிட்டு,
'இதென்ன லிஃப்ட் கேட்க இப்படி பின்னாடியே ஓடிக்கூட வருவாங்களா' என்று எண்ணியபடி காரின் வேகத்தைத் தன்னையறியாமல் மட்டுப் படுத்தினார் முத்து. கிடைத்த வாய்ப்பில் வேகமாக காரின் முன் வந்து நின்றவன்,
“நிறுத்த சொல்றேன்.. பார்த்தும் ஏன் நிறுத்தாம போனீங்க?” என்றான் கடுமையாக.
“நான் ஏன்யா நிறுத்தணும்?” என்று முத்துவும்
பேச, அப்போது தான் கார் நின்றிருப்பதையும்
முத்து ஏதோ வாக்குவாதத்தில் ஈடுபடுவதையும் உணர்ந்தவள் எதிரே இருப்பவனைக் கண்டு ஏகத்துக்கும் அதிர்ந்தாள்.
'இவனா? இவன் எதுக்கு வந்திருக்கான்?’
மேகநாதனிடம் முத்து வாக்குவாதத்தில் ஈடுபட, அவசரமாக இறங்கினாள் அவள்.
“முத்தண்ணா” என்று அவளிட்ட அதட்டலில், இருவரும் ஒருசேர அமைதி ஆனார்கள். முதலாளி இறங்கி நின்றிருக்க தான் மட்டும் காருக்குள் அமர்ந்திருப்பதா என்று முத்துவும் காரிலிருந்து அவசரமாக இறங்கினார்.
மேகநாதன் இரண்டு வருடங்களுக்குப் பிறகு அவளைப் பார்க்கிறான். அவளுக்கு எப்படியோ அவனுக்கு மிக நீண்ட இரண்டு வருடங்கள்..! அவளிடம் எந்த மாற்றமும் இல்லை. அவள் அப்படியே இருந்தாள். அதே பொலிவு.. அதே கம்பீரம்!
அவனது கைகள் தானாக கன்னத்தைத் தடவிக் கொண்டன. சவரம் கூட செய்யாத தன் மடத்தனத்தை எண்ணி நொந்து கொண்டான். அதிலெல்லாம் கவனம் வைக்கும் நிலையில் அவன் இல்லையே! அவள் முன் அப்படி நிற்பது வேறு அவனுக்குப் பெரிய தலையிறக்கமாக இருந்தது.
“நீங்க ஏன்மா இறங்குனீங்க.. நான் பார்த்துக்கிறேன்” என்று முத்து பணிந்து சொல்ல,
விதுர்ஷாவின் நினைவெல்லாம் எதிரே இருந்தவன் மீது தான் இருந்தது. அவனைப் போல் தான் அவளும் யோசித்துக் கொண்டிருந்தாள்.
‘என்ன இவன்.. ஷேவ் கூட பண்ணாம இப்படி இருக்கான்.. இத்தனை நாளா வீட்ல இருந்தானா இல்ல காட்ல இருந்தானா? இப்ப எதுக்கு வந்திருக்கான்?’
அவள் இப்படியாக யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவளது மனம் சித்தார்த்தை நினைவில் கொண்டு வந்து நிறுத்த, அவளுக்கு நெஞ்சம் படபடவென்று அடித்துக் கொண்டது.
'தெரிஞ்சு தான் வந்திருக்கானா? ஆனா எப்படி?’
அவள் குழம்பினாள். எல்லாம் ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரம் தான்.
'இவன் என்ன கேட்பது?’ என்ற எண்ணம் எழும்போதே அவளது இதழ்கள் விரக்தியாகப் புன்னகைத்தன.
'இவன் கேட்கவும் மாட்டான்'
மேகநாதன் அவளைத் தான் படித்துக் கொணடிருந்தான். முதலில் ஆராய்ச்சிப் பார்வை.. பின் குழப்பமான பார்வை. அடுத்ததாக அலட்சியப் பார்வை. அவள் மனதில் என்ன நினைக்கிறாள் என்பது அவனுக்கு நிச்சயம்.
'ரெண்டு வருஷம் கழிச்சு பார்க்கிறா.. ஒரு சின்ன நலம் விசாரிப்பு கூட இல்ல'
அவனது மனம் அவளது மனதில் அவன் எங்கே என்பதைத் தெளிவாகக் காட்டியது. நிதர்சனம் முகத்தில் அறைய பெருமூச்சு ஒன்று அவனிடமிருந்து வந்தது.
“எப்படி இருக்க?”
அவன் பேசும் வரை அவளும் பேசமாட்டாள் என்பதால் அவனே ஆரம்பித்தான்.
“நீங்க எங்க இங்க?”
அவனது கேள்விக்கு பதில் சொல்லாமல் அவள் வேறு கேள்வி கேட்க,
“உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான் அவன். அவள் எதுவும் பேசாமல் காரின் முன்பக்கக் கதவைத் திறந்து விட்டாள்.
விதுர்ஷாவின் செய்கையில் முத்து, “ம்மா நமக்கு தெரிஞ்சவங்களா.. மன்னிச்சுக்கங்க மா... தெரியாது இல்லனா கை காட்டுனப்ப நிறுத்தியிருப்பேன்” என்று சொல்ல, அவள் தலையசைத்தாள்.
முத்து காரை ஸ்டார்ட் செய்யவும் பிரபலமான ரெஸ்டாரன்ட் பெயரைச் சொல்லி அங்கே போகச் சொல்ல, ட்ராஃபிக் எல்லாம் தாண்டி அங்கே செல்ல நாற்பது நிமிடங்களுக்கும் மேல் ஆனது.
என்ன பேசப் போகிறான் என்று அவளும், எப்படி ஆரம்பிப்பது என்று அவனும் யோசனையில் வர, முத்துவின் மனதில் மேகநாதனைப் பற்றிய கேள்வி வண்டாகக் குடைந்தது.
அவரவர் யோசனையில் இருக்கும்போதே அவள் சொன்ன ரெஸ்டாரன்ட் வர, முத்து அவர்களை இறக்கி விட்டு பார்க்கிங் ஏரியாவிற்குள் காரைச் செலுத்தினான். உள்ளே நுழைந்தவர்கள் இடது பக்கவாட்டில் இருந்த தனிமேசையில் அமர்ந்தனர். இருவருக்கும் பழச்சாறு மட்டும் ஆர்டர் செய்தவள் மேகநாதனின் முகம் பார்த்தாள்.
“சொல்லுங்க”
அவள் அப்படிக் கேட்டதும் அவளை நேர்கொண்டு பார்த்தவன், “இப்போ நான் எதுக்கு வந்திருக்கேனு உனக்கு நிஜமா தெரியலனு சொல்றியா?” என்று அடக்கப்பட்ட கோபத்தில் கேட்க,
“எப்படி எனக்குத் தெரியும்னு நினைக்குறீங்க?” என்று பதில் கேள்வி கேட்டாள்.
கோபப்பட வேண்டாம் என்று சிரமப்பட்டு அதை அடக்கிக் கொண்டிருந்தவன் மனதில் மேலும் மேலும் தீயைப் பற்ற வைத்துக் கொண்டிருந்தாள் விதுர்ஷா.
“ஏதேதோ காதுக்கு வருது.. அதெல்லாம் உண்மையா?”
“எதைப் பத்தி கேட்குறீங்க?”
அவன் நேரடியாகக் கேட்கட்டும். நாமாக எதையும் பேசிவிட வேண்டாம் என்று நினைத்தாள் விதுர்ஷா.
“கல்யாணம் பண்ணிக்கப் போறியாமே?”
அவனும் நேரடியாகவே கேட்டுவிட, அவள் தலையசைத்தாள்.
“ஆமா.. ஆனால், இதைக் கேட்கவா வந்தீங்க?” என்று கேட்டு வைக்க, அவன் முகம் செந்தணலாய்ச் சிவந்து போனது.
“என்னைக் கோபப்படுத்திப் பார்க்க நினைக்காதே விது.. இந்தக் கல்யாணம் நடக்காது. உனக்குக் கண்டிப்பா கல்யாணம் பண்ணணும்னா என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ”
அவன் கோபத்தோடு ஆரம்பித்து அலட்சியமாகச் சொல்லி முடிக்க,
விதுர்ஷா கோபப்படவில்லை. நிதானமாக அவனை எதிர்கொண்டாள்.
“எதுக்கு கூச்சப்படணும். நான் உன்னை விரும்புறேன்”
அவளது நிதானம் அவனை சரியாகக் குறிபார்த்து அடித்தது. இருந்தும் பின்வாங்காமல் அவன் தன் நிலையில் நின்றான்.
“போதும் இந்த உளறலை நிப்பாட்டுங்க.. நம்பிக்கையா நீங்க இங்க கிளம்பி வந்திருக்கீங்களே அதை நினைச்சா தான் எனக்கு ஆச்சரியமா இருக்கு.. ஒழுங்கா ஊர் போய் சேருங்க”
“ஏன் நடக்காது?”
“உங்க விருப்பத்துக்குத் தகுந்த மாதிரியெல்லாம் என்னால வளைய முடியாது.. என்னை என்னன்னு நினைச்சீங்க?”
பல்லைக் கடித்துக் கொண்டு அவள் வார்த்தைகளைக் கடித்துத் துப்ப,
“உன் விருப்பத்துக்கு என்னை வளைச்சியே.. அது சரினு நீ நினைச்சா இதுவும் சரிதான்” என்றான் அவனும் கோபமாக.
அவள் நிதானத்தையும் அவன் அலட்சியத்தையும் கைவிட்டுவிட்டு கோபத்துடன் ஒருவரையொருவர் காயப்படுத்திக்கொள்ள ஆயத்தமாக, மேகநாதன் தான் முதலில் தன்னிலைக்கு வந்தான்.
“அதுவும் இதுவும் ஒன்னில்ல” என்று அவளுக்குக் கத்த வேண்டும் போல் இருந்தது. ஆனால், பொது இடம் என்பதால் அவள் அமைதியாக, அவளைக் காயப்படுத்தி விட்டோமோ என்றெண்ணி விளக்கம் தர ஆரம்பித்தான் அவன்.
“நான் வேணும்னே அப்படி சொல்லல.. எனக்குப் புரியுது ரெண்டும் ஒன்னில்ல” என்று அவன் ஆரம்பிக்கும்போதே கைநீட்டி அவனைத் தடுத்தவள்,
“உங்களுடைய இந்த எண்ணம் எப்பவும் நடக்காது. இது தான் என்னோட முடிவு. இதுக்குமேல உங்க கூட பேசுறதுக்கு எனக்கு இஷ்டமில்லை” என்று சொல்லிவிட்டு மடமடவென்று வெளியேறினாள் விதுர்ஷா.
மேகநாதன் அப்படியே அமர்ந்திருந்தான். எதிர்பார்த்தது தான் என்று மனதை சமாதானம் செய்ய முடியவில்லை. அவள் மீது இன்னும் அவனுக்குக் கோபம் இருக்கிறது தான். அதையும் மீறிய காதல், எப்படி வந்ததென தெரியாமல் அவன் நெஞ்சத்தில் ஒட்டிக்கொண்டு அவனைக் கூறுபோட்டுக் கொண்டிருந்தது.
அரும்பிய கணமே கருகிவிட்ட நேசம் அவனுடையது! அப்படித்தான் நினைத்தான். ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக மலர்ந்து மணம் பரப்பிக் கொண்டிருந்தது அவனது நேசம்.
அவளது செயலை அவன் இன்று வரை மன்னிக்கவில்லை. இன்றுவரை அவனுக்கு அது வலி தான். ஆனால், அதற்காக அவளை வேறொருவனுக்குத் தந்துவிடுவானா?
எல்லாவற்றிற்கும் மேலாக இன்றைய நிலை வேறு நினைவில் வந்து அவனை வதைத்தது.
‘என்ன நினைத்து அவள் சம்மதம் சொன்னாள்?’
நினைக்க நினைக்க ஆத்திரம் அடங்கவில்லை. அதை மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பது வீணென்று அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தபடி முகத்தை இரு கைகளாலும் அழுந்தத் தேய்த்தவன், முதலில் ஒரு சலூனுக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
அதன்படியே சலூனிற்குச் சென்றவன் முடியைத் திருத்தி, சவரம் செய்து முகத்தைப் பார்த்தான். அவனது தற்போதைய தோற்றம் அவனுக்குத் திருப்தியாக இருக்க, அங்கிருந்து அருகில் ஒரு உணவு விடுதியில் மதிய உணவையும் முடித்தவன் அவன் எடுத்திருந்த அறைக்குச் சென்றான்.
காலை அவனைப் பார்த்ததிலிருந்தே விதுர்ஷாவிற்கு வேலை ஓடவில்லை. இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் என்று நாள் குறித்திருக்க, இப்போதுதானா இவன் வந்து நிற்க வேண்டும்? என்று அவள் சோர்வாக நினைக்கும் போதே, ‘அப்போ நாள் குறிக்கிறதுக்கு முன்னாடி வந்திருந்தா உனக்கு ஓகேவா?’ என்று அவளது மனம் கேள்வி கேட்டது.
'இல்ல அவன் எப்பவுமே எனக்கு ஓகே இல்ல'
இன்று வீராப்பாக அவள் முறுக்கிக் கொண்டாலும் எல்லாம் சரியாக நடந்திருக்கலாம் என்று அவள் அவ்வப்போது எண்ணுவதுண்டு. பின் வருந்துவதும் உண்டு. அதைவிட அவளது அந்த வருத்தத்தை மறைக்க அவள் பட்ட சிரமங்கள் ஏராளம் என்றே சொல்ல வேண்டும்.
முழுதாக எல்லாவற்றிற்கும் அவன் தான் காரணம் என்று சொல்ல முடியாது. அவளது தவறும் சரிபாதி உண்டு தானே! யோசிக்க யோசிக்க பழைய நினைவுகள் மேலோங்க, ‘இது என்னை விடவே விடாதா' என்றவாறே கண்களை மூடிக் கொண்டாள் அவள்.
அலைபேசி அவளை அழைத்தது. எடுத்துப் பார்த்தாள். சித்தார்த்!
அவனிடம் பேசும் நிலையில் அவள் இல்லை. இருந்தாலும் மீண்டும் மீண்டும் முயற்சி செய்வான் என்பதை அறிந்து அவள் அழைப்பை ஏற்க,
“ஹாய் விது..” என்று எப்போதும் போல் உற்சாகமாய் ஆரம்பித்தான் அவன்.
“இஸ் எனிதிங் இம்ப்பார்ட்டென்ட் சித்தார்த்?”
“நோ.. காலேஜ்ல இருக்கியா?”
“ஸ்டாப் ஆக்டிங் ஸ்டுப்பிட் சித்தார்த். இந்த டைம்க்கு காலேஜ்ல இல்லாம எங்க இருப்பேன்? அடிக்கடி போன் பண்ணி தொல்லை பண்ணாதீங்க.. என்ன பண்ற? சாப்டாச்சா? இப்டிலாம் கேட்டு இரிட்டேட் பண்ணாதீங்க.. நாம என்ன டீனேஜ் காதலர்களா?”
அவளது கொதிப்பில், “ஓகே ஓகே.. நீ ஸ்ட்ரெஸ்டா இருக்க போல.. யூ கேரி ஆன்” என்று அழைப்பைத் துண்டித்த சித்தார்த் மிகப்பெரிய தலையிறக்கமாக உணர்ந்தான்.
அந்தக் கோபத்தில் அவன் அலைபேசியைத் தூர வீச, அதை லாவகமாக கேட்ச் பிடித்தான் சுரேஷ்.
“மாப்பிள்ளை இந்த ஃபோன் விலை என்ன தெரியுமா? நாம இப்போ இருக்க நிலைமைக்கு இதெல்லாம் திரும்ப வாங்க முடியாதுடா”
சுரேஷ் அவர்களின் நிலையை நினைவுபடுத்த, சித்தார்த் அவனை முறைத்தான்.
“அந்த நிலைமை யாரால? அதையும் சொல்லிடுங்க”
அவன் கிண்டலாக வினவ, “உங்க அப்பா செஞ்சதுக்கு நான் எப்படி பொறுப்பாவேன் சித்?” என்றான் சுரேஷ்.
“நீங்க கூட தானே மாமா இருந்தீங்க.. இவ்வளவு தூரம் போறதுக்கு முன்னாடி தடுத்திருக்க வேணாமா?”
“ஏன் அதை நீ கூட இருந்து செஞ்சிருக்க வேண்டியது தான? உனக்கு குடும்ப பொறுப்புகள் வேணாம்.. ஊர் ஊரா போய் சுத்தணும்.. பார்ட்டி பண்ணணும். இதுல மட்டுமே குறியா இருந்து இப்போ இந்த நிலைமைக்கு ஆளாக்குனது நீ.. என்னால ஓரளவு தான் பார்க்க முடியும்.. இதெல்லாம் என்னை மீறி நடந்த விஷயம்”
சுரேஷின் பேச்சில் இருந்த உண்மையில் சித்தார்த் அமைதியானான். அவன் தந்தை இப்படி ஆன்லைன் சூதாட்டத்தில் அத்தனை கோடியை இழப்பார் என்றும் அதனால் குடும்பத் தொழிலையே அவர்கள் இழக்க வேண்டி வரும் என்றும் முன்னமே சுரேஷுக்குத் தெரியுமா என்ன? தெரிந்திருந்தால் நிச்சயம் தடுத்திருப்பான் தான்.
சுரேஷின் மனைவி அதாவது சித்தார்த்தின் அக்கா ஷர்மிளா கர்ப்பமாக இருந்தாள். எட்டு வருடங்கள் கழித்து அவள் குழந்தை உண்டாகி இருந்ததால் சுரேஷ் முன்பு மாதிரி தொழிலைக் கவனத்தில் கொள்ளவில்லை. அவன் ஷர்மியின் முழுநேர நர்ஸ் ஆகிப் போனான்.
அந்த நேரத்தில் தான் ஆன்லைன் சூதாட்டத்தில் மகேஷ்வரன் அனைத்தையும் இழந்திருந்தார். முதலில் லாபத்திலிருந்து கொஞ்சம் என்று தான் ஆரம்பித்தார். நாளாக ஆக அதன் மோகம் அதீதமாக, தன்னிடம் இருப்பது போதாமல் கடன் வாங்க ஆரம்பித்தார்.
கடன் கொடுத்தவர்கள் கேட்க ஆரம்பிக்கும் போது தான் அவருக்கே தன் நிலைமை புரிய ஆரம்பித்தது. கடன் கொடுத்தவர்கள் கொடுத்த கெடுபிடியால் வேறு வழியில்லாமல் சுரேஷிடம் அனைத்தையும் கூற, அப்போது தான் வீட்டிலிருக்கும் மற்றவர்களுக்கும் விஷயம் தெரிந்தது. அவர்களுடைய சொத்துக்கள் கடனுக்கு ஈடாகப் பறிபோக, அவர்களது குடும்பத் தொழிலான எம்.எம் கார்மென்ட்ஸ் மட்டும் மிஞ்சியது. அங்கும் புது சரக்கு வாங்குவதற்குக் கூட கையில் பணமில்லாத நிலையில் வியாபாரம் டல்லடிக்க ஆரம்பித்தது. ஊழியர்களுக்கான சம்பளமே கடந்த மாதம் வீட்டுப் பெண்களின் நகையை அடமானம் வைத்துக் கொடுக்கும் நிலை!
அந்த நிலையில் வந்தது தான் விதுர்ஷா வீட்டினரின் சம்பந்தம். தெரிந்தவர் ஒருவர் மூலமாக விதுர்ஷா பற்றி கேள்விப்பட, சுரேஷ் தான் இந்தத் திருமணப் பேச்சைத் துவக்கி வைத்தான். சிவநேசன் குடும்பத்தைப் பற்றி சொல்லவும் மகேஷ்வரன் எப்படியோ அவரது பிரச்சனை சரியானால் போதும் என்று நினைக்க, சித்தார்த் முடியாது என்றான்.
“இன்னும் ரெண்டு வருஷமாவது ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு அப்றம் தான் மாமா மேரேஜ்” என்று சித்தார்த் முடிக்க,
“முதல்ல நாம என்ன நிலைமையில் இருக்கோம்னு தெரியுமா சித்?” என்றான் சுரேஷ்.
“பிஸினெஸ்ல கொஞ்சம் லாஸ் ஆகிட்டதா அப்பா சொன்னாரு.. கமான் மாமா பிஸினெஸ்னா இதெல்லாம் இருக்கத் தான் செய்யும்.. அதுக்காக கல்யாணமா?”
“நீ நினைக்கிற மாதிரி சின்ன லாஸ் இல்ல சித் இது” என்றவன் விவரமாகச் சொல்ல, சித்தார்த்தின் முகம் அப்பட்டமான பயத்தைக் காட்டியது.
“என்ன மாமா சொல்றீங்க?”
“ஆமா சித்.. புடிச்சா கல்யாணம் பண்ணி சேர்ந்து வாழு.. இல்லனா நீ எப்பவும் போல டூர் ட்ரிப்னு என்ஜாய் பண்ணு. கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் உன்னை யாரு கேட்கப் போறா? நமக்கு நம்ம பிரச்சனையும் முடிஞ்சது.. உனக்கும் உன் என்ஜாய்மென்ட்ஸ் கிடைக்கும்”
சுரேஷ் சொன்னதில் யோசித்த சித்தார்த் சரியென்று சொல்ல, பெண் பார்க்கும் படலம் முதலில் குழப்பத்தில் தான் முடிந்தது. பின் ஒருவழியாக அங்கிருந்து பச்சைக்கொடி காட்ட, ஒரு மாத இடைவெளி விட்டு திருமணத் தேதி குறித்தனர்.
இதற்கிடையில் சுரேஷ் தான் நாள்களை பதட்டத்துடன் கழித்தான்.
'எங்கே விதுர்ஷா ஏதேனும் சொல்லிவிடுவாளோ?’ என்ற பயமும் பதட்டமும் அவனுக்கு இருக்க, ஷர்மிளாவோ அதற்கு மேல் பிரச்சனை செய்து கொண்டிருந்தாள். ஒவ்வொரு நாளும் அவளுடன் போராடிக் கொண்டிருந்தவன் அவளையும் கண்காணிக்கும் வேலைக்கு ஆளானான். மகேஷ்வரனோ எல்லாவற்றையும் தன் மாப்பிள்ளை பார்த்துக் கொள்வாரென நிம்மதியாக இருந்தார்.
மகேஸ்வரனின் சொந்த அக்காவின் மகன் தான் சுரேஷ். சிறுவயதில் ஒரு விபத்தில் பெற்றவர்களைப் பறிகொடுத்திருந்தவனை அடைக்கலம் கொடுத்துப் பார்த்துக் கெண்டவர் ஒரு கட்டத்தில் ஷர்மிளாவைத் திருமணம் செய்து வைத்து தன்னுடனே வைத்து கொண்டார்.
பிள்ளைகள் மூவரில் ஷர்மிளா பெண்ணாகிப் போக, இரு ஆண்களில் சித்தார்த் சிறியவன் என்று எல்லாவற்றிற்கும் சுரேஷை மகேஷ்வரன் இழுக்க, இயல்பாக அவன் மீது குடும்பப் பொறுப்பு வந்துவிட்டது. அவனும் தட்டிக் கழிக்கவெல்லாம் நினைக்கவில்லை. அவனுமே முழுமனதுடன் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டான்.
மகேஷ்வரன் இந்தப் பிரச்சனையில் மாட்டிக்கொள்ளும் வரைக்குமே அவனது வழி நேர்வழியாகத் தான் இருந்தது. அவர்கள் குடும்பத்திற்கு ஒரு பிரச்சனை என்று வந்த பின்பு அவனுக்கு நியாய தர்மமாக யோசிக்கத் தோன்றவில்லை. அவனுக்கு அவன் குடும்பம் தான் முதலில்!
விதுர்ஷாவிற்கு இந்தத் திருமணம் அத்தனை விருப்பமில்லை என்பது போலத் தான் தெரிந்தது. சித்தார்த் மனதிலும் பெரிதாக விதுர்ஷாவின் மீது எண்ணம் இல்லை. இது இரண்டும் தெரிந்தாலும் அவனால் பின்வாங்க முடியவில்லை. ஷர்மிளாவை என்ன என்னவோ பேசி அமைதியாக இருக்க வைத்தான்.
சித்தார்த்திடம் கல்யாணம் முடியும் வரையாவது விதுர்ஷாவிடம் நல்லபடியாக நடந்து கொள் என்று அறிவுரை கூறி வைத்திருந்தான். அதனால்தான் என்றில்லாமல் அவனுமே இந்தத் திருமணம் நடக்க வேண்டும் என்று நினைத்தான். அவனுடைய கணக்குகள் வேறு மாதிரி இருந்தன.
ஆனால் விதுர்ஷா இப்படி பிடி கொடுக்காமல் பேசுவது சித்தார்த்திற்கு என்னவோ அவன் வழிவது போன்ற பிம்பத்தைத் தந்தது.
'கல்யாணம் முடியட்டும்டி.. அப்போ நான் யாருனு காட்றேன்' என்று சித்தார்த் முணுமுணுக்க,
அதே நகரின் இன்னொரு பகுதியில் இருந்த மேகநாதன், ‘இந்தக் கல்யாணம் எப்படி நடக்
குதுனு நானும் பார்க்குறேன்டி’ என்றவாறே தன் மீசையை முறுக்கி விட்டுக் கொண்டான்.
“உன் புல்லட்டை எடுத்தாச்சாடா? எதுவும் டேமேஜ் ஆகாம வந்திருச்சு தான?” என்ற சுரேந்திரனிடம்,
“ம்ம்.. வந்திருச்சு டா” என்றான் மேகநாதன்.
சென்னைக்குள் ஆட்டோவில் அலைய அவனுக்கு அவ்வளவு வசதியாக இல்லை. அதனால் தன்னுடைய புல்லட்டை பார்சல் சர்வீஸில் போட்டுவிட சொல்லியிருந்தான். அதைத் தான் கேட்டுக் கொண்டிருந்தான் சுரேந்திரன்.
சுரேந்திரன் மேகநாதனின் பள்ளித்தோழன். அது மட்டுமல்ல மேகநாதனின் “முருகன் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ்”-யை அவனுடன் சேர்த்துப் பார்த்துக் கொள்கிறான். சம்பளம் மாதிரி தனியாக அதற்குப் பெற்றுக் கொள்வான். அவர்களுக்குள் பதினெட்டு வருட பழக்கம். அவனின் வாழ்க்கையில் நடந்த நடக்கிற அனைத்து விஷயங்களும் அறிந்தவன் அவன் ஒருவனே..!
“பேசுனேன்டா.. அவர் ஒரு நாள் முழுக்க கேட்குறாரு.. நமக்கு நாலு ட்ரிப் கேன்சல் ஆகுது”
“என்கிட்ட காலைல மட்டும் தான்டா சொன்னாரு..”
“உன்கிட்ட காலைல மட்டும் தான் சொன்னதாகத் தான் என்கிட்டேயும் சொன்னாரு.. இப்போ ப்ளான் மாறிடுச்சு போல. அதுக்கும் சேர்த்து வாடகை போட்டு சொல்லிருக்கேன். சரினு சொன்னா தான்டா மேற்கொண்டு பேசணும்”
“சரி சரி பாரு.. ஒரு பத்து நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோடா” என்று மேகநாதன் சங்கடமாக சொல்லவும்,
“இதெல்லாம் நீ சொல்லணுமா?” என்று கடிந்து கொண்டவன் “எதுவும் முன்னேற்றம் இருக்கா மாப்ள?” என்று இழுக்க,
சுரேந்திரன் இடக்காகக் கேட்பது புரிந்து, “என்னை வேற என்னடா பண்ண சொல்ற? நான் செஞ்சது தப்புனு அழுதுட்டே உட்காரவா? ஏன் அவ எதுவும் செய்யலயா?”
மேகநாதனும் சுள்ளென்று விழ, சுரேந்திரன் அமைதியானான். விதுர்ஷாவின் செயல் மேகநாதனை எந்த அளவுக்குப் பாதித்தது என்பதை அவன் அறிவானே!!
“அங்கே அப்பா அம்மா எதுவும் கேட்டாங்களா?” என்று மேகன் பேச்சை மாற்ற,
“ம்ம் உங்கப்பாவை காலைல வயல்ல பார்த்தேன்.. கேட்டாரு.. எனக்கு எதுவும் சொல்லல வெளியூர் போறேனு மட்டும் சொன்னதா சொல்லியிருக்கேன்” என்றான் சுரேன்.
“என் தங்கச்சி என்ன பண்ணுது?”
சுரேனின் மனைவி பற்றி அவன் கேட்க, அதற்கு பதிலளித்தவன் மேற்கொண்டு ஊரில் நடந்தவற்றைப் பேச கேட்டுக்கொண்ட மேகன், அவனிடம் பேசி முடித்த பின்பு அடுத்து செய்ய வேண்டியதைப் பற்றி யோசித்தான். சிவநேசனின் நினைவு வந்தது.
'அந்தாளுக்கு என்ன ஒரு அதுப்பு இருந்திருந்தா இந்தக் கல்யாணத்தைப் பேசியிருப்பாரு'
இந்த எண்ணம் தோன்றும் போதே அவன் முகத்தசைகள் இறுக, சிவநேசனை நேரில் சந்தித்து இது பற்றி பேசலாமா என்று யோசித்தான். எண்ணத்தின் இடையே விதுர்ஷாவின் உருவம் காளி அவதாரத்தில் வந்து நிற்க, அவன் இதழின் கடையோரம் சிறு சிரிப்பொன்று வந்து போனது.
அவளிடமிருந்து தூரத்தில் நிற்க நிற்க, இடைவெளி இன்னும் அதிகமாகத்தான் ஆகும் என்பது போல யோசித்தவன் அவளது அருகிலேயே இருக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான்.
முதலில் அவளது வீட்டில் தங்குவதற்கு ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா? என்பது போல யோசித்தான்.
'முட்டாள் தான்டா நீ'
அவனுக்கு அவனே சான்றிதழ் கொடுத்துக் கொண்டான்.
‘யோசி மேகா..’
யோசித்தவனுக்கு விதுர்ஷாவின் அருகில் இருக்க முடியவில்லை என்றால் என்ன? அவளுக்கு நிச்சயம் செய்தவனைப் பிடிப்போம் என்று தான் தோன்றியது.
அவனைப் பற்றி விவரம் தெரிகிறதா என்று அவனுக்குத் திருமணம் பற்றி தகவல் சொன்ன நபரிடம் கேட்டுப் பார்க்க, அவனுக்குப் போதிய தகவல்கள் கிடைத்தன. அவனை எப்படி அணுகுவது என்று திட்டம் தீட்டிக் கொண்டிருக்கும் போதே, கடவுள் தந்த வாய்ப்பாக அவனைச் சந்தித்தான் மேகன்.
அன்று ஏனோ விதுர்ஷாவைப் பார்க்க வேண்டுமென தோன்றவும் கல்லூரிக்கே சென்றவன் உள்ளே செல்லாமல் தன் புல்லட்டை வெளியிலேயே நிறுத்தி அதன் மீது சாய்ந்தவாறு நின்றுகொண்டான்.
விதுர்ஷாவின் கார் கல்லூரி வாசலை நெருங்க, இந்த முறை அவன் கையசைக்காமலே முத்துவிற்கு அவனை அடையாளம் தெரிந்தது. உள்ளே இருந்த விதுர்ஷாவும் அவனைப் பார்த்துவிட்டாள்.
“அந்த ஐயா நிக்கிறாருமா.. இப்படி ஓரமா நிப்பாட்டட்டுங்களாமா?” என்று முத்து பவ்யமாக வினவ,
“வேணாம்.. வண்டியை உள்ளே விடுங்க” என்றவளின் முகம் அதுவரை இருந்த இளக்கத்தை மறந்து சட்டென்று கடுமையைப் பூசிக் கொண்டது.
காரை விட்டு இறங்கியவளோ அவனை சற்றும் கண்டுகொள்ளாமல் அவளது அறையை நோக்கிச் செல்ல, அவன் அதைப்பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அங்கேயே நின்றான்.
அவனை அலட்சியப்படுத்திவிட்டு உள்ளே சென்றவளுக்கு கண்மண் தெரியாத கோபம் வந்தது. அவளுடைய கோபத்திற்கு மேசையின் மீதிருந்த பேப்பர் வெய்ட் பலியாக, அதனடியில் இருந்த தாள்கள் அங்குமிங்குமென சிதறின. அப்படியும் அவளுடைய கோபம் குறைந்தபாடில்லை.
கோபம் குறையாமல் மேசையின் மீது ஓங்கி குத்தியதில் கை வலிக்க ஆரம்பிக்க, “ஷ்ஷ்” என்றபடி ஒரு கையால் மற்றொரு கையைப் பிடித்துக் கொண்டாள். எப்போதும் அவளிடமிருக்கும் நிதானத்தை அவள் இழந்து கொண்டிருப்பதை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
‘இவனை எப்படி விலக்கி நிறுத்த?’
வெளியே அவனை நிறுத்தி வைத்திருப்பது சரியான முடிவாக இருக்காது. எந்த நேரமும் அவளுடைய தந்தை வரலாம். செக்யூரிட்டியை அழைத்து அவனை வெளியே அனுப்பச் சொல்லலாம். ஆனால், அதை அவள் செய்ய மாட்டாள்.
வேறு வழியில்லாமல் செக்யூரிட்டியின் லேண்ட் லைனிற்கு அழைத்த விதுர்ஷா, சிரமப்பட்டுக் குரலில் எதையும் காட்டாமல், “வெளியே ஒருத்தர் நிக்கிராருல.. அவரை என் ரூம்க்கு அனுப்புங்க” என்று சொல்ல, மேகநாதனுக்கு அதுவரை இருந்த மனநிலை கொஞ்சம் சமன்பட்டது.
அவனை ஒரு ஆள் என்றே மதிக்காமல் அவள் சென்றதில் அவனது தன்மானம் அடிவாங்கியது. ஆனால் வெளியே காட்டிக் கொள்ளாமல் அலட்சியமாக நின்றிருந்தான். இன்னும் சிறிது நேரம் அழைக்காமல் இருந்திருந்தால் அவனே உள்ளே சென்றிருப்பான். தேவையில்லாத சங்கடங்கள் நிகழ்ந்திருக்கும். அதனை அவள் தவிர்த்துவிட்டாள். அவனது மனதில் சிறியதாய் ஓர் இளக்கம் வந்தது.
'மேகா.. இன்னும் உனக்கு சான்ஸ் இருக்குடா' மனம் குதூகலமாக, அதே மனநிலையில் உள்ளே சென்றவனை, அறையின் நிலை சட்டென்று மாற்றியது. ஒரு புறம் தாள்கள் இறைந்து கிடந்தன. கண்ணாடியால் ஆன பேப்பர் வெயிட் சிதறி கண்ணாடிச் சிதறல்கள் ஒரு புறம் கிடந்தன. என்ன நடந்திருக்கும் என்பதை அனுமானிக்க முடிந்தது.
ஏனோ அவளது கோபத்தை சமாதானம் செய்ய வேண்டும் என்று தோன்றவில்லை. அவனுக்கும் கோபம் வந்தது.
“இப்போ எதுக்கு இதையெல்லாம் போட்டு உடைச்சு வச்சிருக்க?”
அவன் குரலுயர்த்த, “எதுக்கு நீங்க இப்போ வந்திருக்கீங்க? என்னை நிம்மதியா விடவே கூடாதுனு சபதம் எதுவும் போட்ருக்கீங்களா?” என்று அவளும் குரலை உயர்த்தினாள்.
“ஓ.. நான் வந்ததுல நிம்மதி போய்டுச்சா? அப்போ கல்யாணம் உன் அப்பா முடிவு இல்ல” என்றவன், “அப்படி என்னடி அவசரம்?” என்றான் சீறலாக. வார்த்தைகள் வந்து விழுந்த பின் தான் அவனே அதன் அர்த்தத்தை உணர்ந்தான்.
கோபம் வந்தால் இந்த மாதிரி என்ற வரையறை இல்லாமல் சற்று அதிகமாகவே பேசிவிடுவான். சில நேரங்களில் உணர்ந்தும் சில நேரங்களில் உணராமலும் அவன் பேசும் வார்த்தைகள் தான் அவனை இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.
ஏற்கனவே கல்யாணப் பேச்சு வந்ததில் இருந்து தனக்குள்ளாகவே மறுகிப் போயிருந்தவள் அவனது கேள்வியில் இன்னும் உச்சநிலைக்குச் சென்றாள்.
அவன் மன்னிப்புக் கேட்க வருவதற்குள்ளாக, “ஆமா அவசரம் தான்.. உனக்கு என்ன பிரச்சனை அதுல?” என்று உச்சகட்ட கோபத்தில் கத்தியவள், அடுத்து சொன்ன வார்த்தையில் மேகநாதன் அதிர்ந்தான்.
“ச்ச.. லூசாடி நீ.. நான் ஏதோ கோபத்தில்..” என்று அவன் ஆரம்பிக்கும் போதே அவளது கண்கள் தாரை தாரையாய் கண்ணீரைச் சிந்த ஆரம்பித்தது.
அவன் பேசிய வார்த்தைகள் தான். அவள் திரும்ப சொல்லும் போது அவனுக்கே அவ்வளவு வலித்தது.
“வேணாம்.. போயிடு.. நீ என் வாழ்க்கைல இருந்ததையே மறக்கணும்னு நினைக்கிறேன்.. வலிக்குது ரொம்ப.. என்னை விட்டுப் போயிடு ப்ளீஸ்..”
அவள் கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டாள். அவனிடம் கெஞ்சுவதைத் தவிர அவளுக்கு வேறு வழியிருக்கவில்லை.
அவனும் இப்படி ஒருமுறை அவளிடம் கையெடுத்துக் கும்பிட்டிருக்கிறான். அன்று ஆரம்பித்த பிரச்சனைகள் அவர்கள் வாழ்வில் தொடர்கதையாய் இன்னும் தொடர்கிறது.
“நான் இப்போ போய்ட்டா உனக்கு இன்னும் வலிக்கும் விது”
அவன் குரல் கரகரத்துச் சொன்னான். ஏன் அவனுக்கு அப்படி தோன்றியது என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால், இத்தனை ஆன பின்பும் விதுர்ஷாவின் மனதில் அவனுக்கான இடம் இருப்பதாகவே அவனுக்குத் தோன்றியது.
“நான் சொன்னேனா? நீ இதெல்லாம் ஏன் பண்றனு கூட எனக்குத் தெரில.. புதுசா வந்து காதல்னு சொல்ற.. இத்தனை நாள் எங்க போச்சு இதெல்லாம்?”
கண்களில் ஜீவனே இல்லாமல் கேட்டவளின் அருகே வந்தவன் அவளது கைகளைப் பற்றி,
“மன்னிச்சுடுனு சொல்ல மாட்டேன். முடிஞ்சா மறக்க ட்ரை பண்ணு” என்று சொல்ல, அவள் இணைந்திருந்த கைகளைப் பார்த்தாள். அதைப் பார்க்கப் பார்க்க அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
கைகளை மெல்ல உருவிக் கொண்டவள் மீண்டும், “போய்டுங்க ப்ளீஸ்.. என் உணர்வுகளோட விளையாடாதீங்க” என்று உணர்வுகள் மரத்துப்போன குரலில் சொல்ல,
“இந்த இடத்தை விட்டுப் போறேன். சென்னையை விட்டு நீ இல்லாம நான் போறதா இல்ல” என்று மட்டும் சொல்லிவிட்டு வெளியேறினான் மேகநாதன்.
பெரிய புயலொன்று அடித்து அமைதியானதைப் போல இருந்தது அந்த இடம். அவன் சென்ற பிறகு அங்கு நடந்ததை மீண்டும் மனதிற்குள் ஓட்டிப் பார்த்தவளுக்கு ஒன்று மட்டும் புரிந்தது. அவன் அவளைக் காதலிக்கிறான். அவன் தொடுகையில் அவன் பார்வையில் என்று அவனது ஒவ்வொரு அசைவும் அதை அவளுக்குப் படம் போட்டுக் காட்டின. ஆனால், எப்போதிருந்து? என்பதை விட எப்படி என்பது தான் அவளுக்கு கேள்வியாக இருந்தது. அவன் முன்னிலையில் அழுதது வேறு அவளுக்குத் தலையிறக்கமாக இருந்தது.
'ம்மாஆ இதென்னமா புது சோதனை.. நீ தான் இதுக்கு காரணமா'
அவள் மனம் சிறுபிள்ளையாய் அன்பரசியைத் தேடியது.
எவ்வளவு நேரம் அப்படியே உட்கார முடியும்? கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னைத் தேற்றிக் கொண்டு வேலைகளில் கவனத்தை வைக்க ஆரம்பித்தாள் அவள்.
வெளியே வந்த மேகநாதனுக்கு உடனே செல்வதற்கு ஏனோ மனமில்லை. அருகே இருந்த டீ கடையில் டீ சொல்லிவிட்டு அமர்ந்தவன் தன்னைத் தானே திட்டிக் கொண்டான்.
‘கோபம்னு வந்துட்டா என்ன பேசுறோம் ஏன் பேசுறோம்னு தெரியாம கண்டதை பேசித் தொலைச்சிடுறேன்.. ச்ச..’
அவனுக்கு அவனை நினைத்தே கோபமாக வந்தது. டீ குடித்துவிட்டும் கூட அங்கேயே தான் உட்கார்ந்திருந்தான். மதிய நேரம் தாண்டியும் கூட அவன் அங்கேயே தான் இருந்தான். எத்தனை டீ உள்ளே போனது என்ற எண்ணிக்கை இல்லாமல் டீயை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தான்.
நேரம் மெதுவாக நகர, மாலை கல்லூரி முடியும் நேரம் ******* கார் அந்த காம்பவுண்டுக்குள் நுழைந்தது. நுழையும் முன் செக்யூரிட்டியிடம் எதையோ விசாரிப்பதும் தெரிந்தது.
புருவ முடிச்சுடன் அதைக் கவனித்தவனுக்கு மனதுக்குள் சித்தார்த் என்றவனின் நினைவு வர, அதே சிந்தனையுடன் ரோட்டைக் கடந்து செக்யூரிட்டியிடம் விசாரித்தான்.
அவன் எண்ணியது சரியே! உள்ளே சென்றவன் சித்தார்த் தான். அவனுக்குக் கோபமும் பொறாமையும் வருவதற்கு பதிலாக கவலை வந்து தொலைத்தது.
'அட நம்ம வந்து டென்ஷன் பண்ணுன நாள்ல தான் இவனும் வரணுமா? ஆல்ரெடி என்மேல கொலை காண்டுல இருப்பா.. இதுல இவன் வேறயா’ என்று தான் தோன்றியது.
என்ன நடக்கப் போகிறதோ என்று எண்ணியபடி அவன் செக்யூரிட்டியிடம் பேச்சுக் கொடுத்தான். ஒவ்வொரு நொடியும் திக் திக் என கழிய, உள்ளே ஒரு கண்ணை வைத்தபடி செக்யூரிட்டியிடம் பேச்சை வளர்த்துக் கொண்டிருந்தான் மேகநாதன்.
அங்கே விதுர்ஷா அந்தக் கல்லூரியின் கேன்டீன் உரிமையாளரிடம் பேசிக் கொண்டிருந்தாள்.
“என்ன கவிதாக்கா..இப்போ வந்து இப்படி சொல்றீங்க?”
அவள் கவலையாய்க் கேட்க,
“கொஞ்சம் குடும்ப சூழ்நிலைங்க மேடம்.. சொந்த ஊருக்கே போகப் போறோம்” என்று கவிதாவும் தர்மசங்கடமாக பதில் சொன்னார்.
அந்தக் கல்லூரியில் பத்து வருடங்களுக்கு மேலாக கேன்டீன் பொறுப்பை எடுத்து நடத்திக் கொண்டிருப்பவர் கவிதா. விலையும் அதற்கேற்ற தரமுமாக நியாயமாக இருக்கும். சுவையும் குறை சொல்ல முடியாதபடி இருக்கும்.
குடும்ப சூழ்நிலை என்று சொன்ன பிறகு அவளும் வேறு என்ன சொல்வாள்?
“அடுத்த ஆள் போடும் வரை இருக்க முடியுமா?” என்று அவள் கேட்க,
“அதெல்லாம் பிரச்சனை இல்லைங்க மேடம்.. புது ஆள் வந்த பிறகே போறேன்” என்றார் கவிதாவும்.
அந்த நேரத்தில் தான் பியூன் மாணிக்கம் உள்ளே வந்து, “மேடம் உங்களைப் பார்க்க ஒரு சார் வந்திருக்காரு” என்றார்.
சட்டென்று மேகநாதனின் எண்ணம் வர, ‘திரும்பவும் வந்திருக்கானா?’ என்று எண்ணியவள், மனம் சோர்ந்தாள்.
“காலைல வந்த சாரா?”
“இல்ல மேடம்”
'ஒருவேளை சித்தார்த்தா?’
அவள் இருந்த நிலையில் அன்றே சித்தார்த்தையும் நிச்சயம் எதிர்கொள்ள முடியாது என்றுணர்ந்து, “நான் பிஸியா இருக்கதா போய் சொல்லுங்க.. நான் ஃபோன்ல பேசுறதா சொல்லுங்க” என்று சொல்ல, தனக்குச் சொல்லப்பட்ட செய்தியில் சித்தார்த் கடுப்பானான்.
அவன் மாணிக்கத்தின் பேச்சை சட்டை செய்யாமல் விதுர்ஷாவின் அறைக்குள் நுழையப்போக, அவன் வேகமாக வந்து தடுத்தார்.
“சார் எங்கே போறீங்க?” என்று அவர் தடுத்தது வேறு அவனுக்கு அவமானமாக, எதுவும் பேசாமல் அவரைத் தள்ளிவிட்டு கதவைத் திறந்து உள்ளே போனான் அவன். மாணிக்கமும் வேகமாக அவனும் பின்னோடு சென்றார்.
“சொல்லச் சொல்ல கேட்காம என்னைத் தள்ளிவிட்டு உள்ளே வந்துட்டாருங்க மேடம்” என்று மாணிக்கம் அவசரமாகச் சொல்ல, விதுர்ஷா முகச்சுளிப்புடன் சித்தார்த்தைப் பார்த்தாள்.
“படிச்சிருக்கீங்க தான? இப்படித்தான் மேனர்ஸ் இல்லாம நடந்துப்பீங்களா? பிஸியா இருக்கேனு சொன்னா புரியாதா? அவரைத் தள்ளிவிட்டு உள்ளே வந்திருக்கீங்க வேற.. சாரி கேளுங்க” என்று அதட்ட, சித்தார்த்துக்கு அது பிடிக்கவில்லை.
“நான் உன்னைப் பார்க்க வரக்கூடாதா?” என்று அவன் ஆதங்கமாகக் கேட்க,
“வந்தால் இப்படி பிஹேவ் பண்ணக்கூடாது” என்றாள் சுள்ளென்று.
“அவர் கிட்ட சாரி கேளுங்க” என்று வேறு அவனை வற்புறுத்த, சித்தார்த் அப்படியே நின்றான்.
அவர்களது சம்பாஷணை சித்தார்த் விதுர்ஷாவிற்கு நன்கு தெரிந்தவன் என்பதைக் காட்ட, மாணிக்கம் தான் கடைசியில் இறங்கி வந்தார்.
“இருக்கட்டும் மேடம்.. மன்னிப்பெல்லாம் எதுக்கு?” என்று கேட்டு அவர் நகர்ந்து விட,
அவனது நினைப்பெல்லாம், “கட்டிக்கப் போறவன் வந்திருக்கேன்.. அப்படியென்ன வேலை முக்கியம் இவளுக்கு..” என்பதாகவே இருந்தது. அதே கோபத்தோடு வெளியே வந்து காரை எடுத்தவன் அந்தக் கோபத்தை வேகத்தில் காட்டினான்.
அவனைத் தூரமாக நின்றுகொண்டு கவனித்துக் கொண்டிருந்த மேகநாதன் அவசரமாகத் தன்னுடைய புல்லட்டில் அவனைப் பின்தொடர்ந்தான்.
#4
சித்தார்த்தன் அசுரவேகத்தில் போய்க் கொண்டிருந்தான். அவனைப் பின்தொடர்ந்த மேகநாதனுக்கு அவன் எங்கேயும் விழுந்து வாரி வைத்து விடுவானோ என்ற எண்ணம் தான். ஆனால், கடவுள் கிருபையால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
சித்தார்த்தின் கார் அந்த சென்னை நகரத்தில் பெயர் சொல்லும் பார் முன்னிலையில் நின்றது.
'குடிப்பானா?’
மேகநாதன் முகம் யோசனையாய் சுருங்கியது. அவனுக்கு எந்தவித கெட்ட பழக்கமும் இதுவரை இல்லை. வாழ்க்கை எத்தனையோ எதிர்பாராத விஷயங்களைத் தந்தபோதும் அது எவ்வளவோ மனக்கஷ்டத்தைத் தந்தபோதும் அவன் போதை வஸ்துக்களின் பின்னால் சென்றதில்லை.
எப்போதுமில்லாத வழக்கமாகப் பாரின் உள் செல்லவே ஒரு மாதிரி இருக்க, அவன் வெளியில் நின்று கொண்டான். ஒன்று, இரண்டு, மூன்று என மணிநேரங்கள் கடந்த போதிலும் சித்தார்த் வெளிவரவில்லை.
மணி ஏழை நெருங்கிக் கொண்டிருந்தது. வேறுவழியின்றி உள்ளே சென்று பார்ப்போமா என்று எண்ணிக் கொண்டிருந்த போதுதான் தள்ளாடியபடி வெளியே வந்தான் சித்தார்த்.
கழுத்து வரை குடித்திருப்பவன் போல தலையெல்லாம் கலைந்து கண்கள் சிவக்க அலங்கோலமாக வந்தவன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து கார் சாவியை எடுப்பதற்கு ஐந்து நிமிடத்திற்கும் மேலானது.
'இதுல எப்படி அவன் வண்டியை ஓட்டுவான்?’ என்று பயந்து போனான் அவன். ஆனாலும் எப்படி அருகில் செல்வது என்ற யோசனையில் தள்ளியே நின்றான். ஒருவாறு தட்டுத்தடுமாறி அவன் காரிலேறி அமர்ந்து காரைச் செலுத்த, அவனைப் பின்தொடர்ந்தான் மேகநாதன்.
சித்தார்த்தின் கைகளில் காரின் கட்டுப்பாடு இல்லை. ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு வண்டியின் மேல் மோதப் போய் கடைசி நிமிடத்தில் சுதாரித்து விலகினான். சித்தார்த் எப்படி உணர்ந்தானோ அவனைப் பின்தொடர்ந்து வந்த மேகநாதனுக்கு ஒவ்வொரு முறையும் உயிர் போய் உயிர் வந்தது.
அப்படியொரு முறை ஒரு ட்ரக் எதிரே வந்து கொண்டிருக்க, கடைசி நிமிடத்தில் ஒடித்துத் திருப்புகிறேன் என்ற பேர்வழியில் சித்தார்த் செய்த செயல்களால் கார் முற்றிலும் கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது மோதியது.
சித்தார்த்திற்கு தலையிலும் கையிலும் அடி! திடீரென்று நிகழ்ந்த நிகழ்வில் அவன் அரை மயக்க நிலைக்குச் செல்ல, மேகநாதன் துரிதமாகச் செயல்பட்டான். நூற்றி எட்டிற்கு அழைத்து அவர்கள் உதவியுடன் சித்தார்த்தை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தான்.
விபத்து என்றவுடன் மருத்துவமனையிலிருந்தே காவல் துறையினருக்குத் தகவல் சொல்ல, அவர்கள் வந்து மேகநாதனை விசாரித்தனர்.
யாரென்று தெரியாது என்றும் மனிதாபிமான அடிப்படையில் மருத்துவமனையில் சேர்த்ததாகவும் அவன் சொல்ல, அவனைப் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொண்டு, அங்கிருந்த செவிலியரிடம் சித்தார்த்திற்கு நினைவு திரும்பியதும் அழைக்கச் சொல்லி சொல்லிவிட்டு அவர்கள் சென்று விட்டனர்.
தலையில் அடி என்பதால் எம்.ஆர்.ஐ எடுத்துப் பார்க்க, பிரச்சனை என்று எதுவும் இல்லை. மயக்கம் கூட அதிர்ச்சியால் தான் இருக்கும் என்பது மருத்துவர் கணிப்பு.
எல்லாம் சரியாகவும் தான் அவனுடைய வீட்டிற்குச் சொல்ல வேண்டும் என்றே அவனுக்குத் தோன்றியது. அவனுக்கு யாரைத் தெரியும் விதுர்ஷாவைத் தவிர?
விதுர்ஷாவிற்கு அழைத்தான். அவனது அழைப்பு எடுக்கப்படவில்லை. இரண்டாவது முறையும் எடுக்கப்படாமலே போக, அவனும் அழைப்பதை நிறுத்திவிட்டான்.
அதற்குள்ளாக சித்தார்த்திற்கு விழிப்பு வர, மேகநாதனிடம் செவிலிப்பெண் வந்து விஷயத்தைச் சொன்னாள்.
தயக்கத்துடன் உள்ளே சென்ற மேகநாதன் ஐ சித்தார்த் அறிமுகமற்ற பார்வை பார்த்தான்.
“நான்.. என் பெயர் மேகநாதன்.. நான் தான் உங்களைக் கொண்டு வந்து ஹாஸ்பிடலில் சேர்த்தேன்” என்று அவன் தன்னை அறிமுகம் செய்துகொள்ள,
“தேங்க்ஸ்” என்றவன் மீண்டும் விழிகளை மூடிக்கொண்டான்.
“ஹலோ.. என்னங்க செய்து? மயக்கம் எதுவும் வருதா?” என்று மேகநாதன் அவசரமாக அருகில் செல்ல, “இல்ல” என்று சொல்லிக்கொண்டே மயக்கத்திற்குச் சென்றான் சித்தார்த்.
மேகநாதனுக்குப் பயம் பிடித்துக் கொண்டது. அவனது நிலை பற்றி உறுதியாக எதுவும் தெரியவில்லை என்றாலும் அவனது வீட்டிற்குத் தெரிவிப்பது தான் முறை என்று எண்ணியவன் சித்தார்த்தின் அலைபேசியை ஆராய்ந்தான். அது உயிரை விட்டிருந்தது. பர்ஸில் கொஞ்சம் பணம் மட்டும் இருந்தது.
மேகநாதன் மீண்டும் விதுர்ஷாவிற்கு அழைக்க, இந்த முறை நேரம் சென்றானாலும் எடுக்கப்பட்டது.
“என்ன தான் வேணும் உங்களுக்கு?” என்று அவள் கோபமாக ஆரம்பிக்கும் போதே,
அவளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட நேரமில்லாமல், “லிங்கம்மாள் ஹாஸ்பிடல்ல இருக்கேன். உடனே கிளம்பி வா” என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டான்.
மருத்துவமனைக்கு வரச் சொல்லவும் அவளுக்கு எதுவும் புரியவில்லை.
'அவனுக்கு எதுவுமா? இல்ல இல்ல.. அவன் தான் பேசுறான்.. அப்போ அவனுக்கு ஒன்னுமில்ல.. வேற யாருக்கு? என்னை எதுக்கு வரச் சொல்றான்?’
இப்படி கேள்விகள் தொடர்ந்து மனதில் எழுந்தாலும் அடுத்த ஒருமணி நேரத்தில் அவள் அங்கே சென்றிருந்தாள். தொன்னூறு சதவீதம் அவனுக்கு எதுவும் இல்லை என்று தெரிந்தாலும் அவனைப் பார்த்த பின்பு தான் அவள் மனதில் ஏற்பட்ட சிறு சலனம் அகன்றது.
“யாருக்கு என்ன? எதுக்கு வரச் சொன்னீங்க?” என்று அவனருகில் வந்தவள் கேட்க,
“சித்தார்த்” என்றான் அவன்.
“என்ன?” என்று அதிர்ந்தவளுக்கு சித்தார்த்துக்கும் மேகநாதனுக்கும் எப்படி பழக்கம் என்று குழப்பமாக இருந்தது.
“உங்களுக்கு எப்படி அவரைத் தெரியும்? அவருக்கு என்னாச்சு?” என்றாள் குழப்பமாக.
“ஆக்ஸிடென்ட்.. பெருசா அடி ஒன்னும் இல்ல.. பட், மயக்கத்துல இருக்கான்.. வீட்டாள்களுக்குத் தகவல் சொல்லணும்னா எனக்கு யாரையும் தெரியாது.. அதான் உனக்குக் கூப்பிட்டுச் சொன்னேன்”
“ஈவ்னிங் தானே என்னைப் பார்க்க வந்தாரு!?”
அவளுக்கு அவளே பேசிக்கொள்ள,
“வந்தவன் கிட்ட நீ முதல்ல நல்லா பேசுனியா? அதுல வெக்ஸ் ஆகி ஃபுல் குடி.. குடிச்சுட்டு வண்டி ஓட்டுனதுல தான் ஆக்ஸிடென்ட்” என்றான் அவன்.
மேகநாதன் குரலில் என்ன இருந்தது? விதுர்ஷாவால் அதை இனம் காண முடியவில்லை. வார்த்தைக்கு வார்த்தை என்னோடு வந்துவிடு என்று கூறுபவனா சித்தார்த்திடம் நீ நன்றாகப் பேசியிருக்க வேண்டும் என்று கூறுகிறான்? அவள் புரியாமல் அவனைப் பார்த்தாள்.
“உன்னால இந்தக் கல்யாணத்தை ஏத்துக்க முடியாதுனு உனக்கு நல்லாத் தெரிஞ்சும் இப்படி இன்னொரு மனுஷன் உணர்வுல விளையாடுறது தப்பு விது”
அவன் கண்டிப்புடன் விதுர்ஷாவை நோக்கிச் சொல்ல, அவளுக்கு அவன் கூற வருவது புரிந்தது. விதுர்ஷா குற்றவுணர்வுடன் தலைகுனிந்து நின்றாள்.
“இது சின்ன அடி.. சரியா போச்சு. இதுவே உயிருக்கு எதாவதுனா யோசி.. அந்தப் பாவம் நமக்கு வேணாம்” என்று சொல்ல அதிர்ந்து பார்த்தவளுக்கு அந்த நினைவே ஏதேதோ பயத்தைக் கொடுக்க, நிற்க முடியாமல் அங்கிருந்த நாற்காலியில் தொய்வாக அமர்ந்தாள். மேகநாதனின் அப்பட்டமான குற்றச்சாட்டில் விதுர்ஷா கலங்கிவிட்டாள்.
“அவங்க வீட்டுக்குத் தகவல் சொல்லு”
அவன் நினைவுப்படுத்தவும் அவள் சிவநேசனுக்கு அழைத்து விஷயத்தைச் சொன்னாள். சிவநேசன் மூலமாக விஷயம் மகேஷ்வரனுக்குச் சொல்லப்பட, அவர்களும் உடனே கிளம்பி வருவதாகச் சொன்னார்கள்.
விதுர்ஷாவைத் தனியாக விட்டுப் போக மனமில்லாமல் மேகநாதனும் அவள் அருகில் அமர,
அவள் சொல்ல வருவது புரிந்து, “நீ தனியா இருந்துப்பியா?” என்று கேட்க, அவள் விழித்தாள்.
ஒரு கல்லூரியே அவளின் பொறுப்பில் இருக்கிறது தான். ஆனால், அந்த சூழ்நிலை, அதிலும் தன்னால் தானே என்ற எண்ணம் இதெல்லாம் அவளை பலவீனமாக்கியிருந்தது. மேகநாதனின் துணை தேவைப்பட்டது. அதைச் சொல்வதும் அப்படியொரு கஷ்டமாகத்தான் அவளுக்கு இருந்தது. அவளது நிலை அவனுக்கு நன்றாகவே புரிந்தது.
“வாயைத் திறந்து கூட இருடானு சொல்றதுக்கு என்ன” என்று நினைத்துக் கொண்டவன் அவளிடம் வார்த்தையாடவில்லை. ஆனால், முகம் மட்டும் கடினமாக இருந்தது. எதுவும் பேசாமல் அவளருகில் அமர்ந்து கொண்டான். அதுவே அவளுக்குப் போதுமானதாக இருந்தது.
சிறிது நேரத்திலேயே சிவநேசன் அவளுக்கு அழைத்து எந்த தளம் என்று விசாரிக்க, அவர்கள் வந்துவிட்டதை உணர்ந்து மேகநாதன் அவளிடம் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டான்.
சிவநேசன் வந்ததுமே சித்தார்த்தின் நிலை பற்றி விசாரிக்க, அவளுக்கு மேகநாதன் சொன்னதை வைத்து அப்படியே ஒப்புவித்தாள்.
“உனக்கு யாருமா தகவல் சொன்னது?” என்று சிவநேசன் கேட்க, அந்தக் கேள்வியில் திகைத்து சட்டென்று,
“ஃப்ரெண்ட் ஒருத்தி இங்க அட்மிட் ஆகியிருந்தா.. அவளைப் பார்க்க வந்தேன். நேத்தே டிஸ்சார்ஜ் ஆகிப் போய்ட்டாள் போல” என்று சமாளித்தாள்.
“டிஸ்சார்ஜ் எப்போனு உன் ஃப்ரெண்ட் கிட்ட கேட்கலயா நீ?”
“கேட்டேன் பா.. கம்மிங் செவன்த் அப்படினு சொல்லியிருந்தா.. நான் இன்னைக்கு எட்டாம் தேதி ஆகிட்டதை மறந்துட்டேன்.. இங்கே வந்து ரிசப்ஷனில் விசாரிக்கும் போது தான் சித்தார்த்தைக் கூட்டிட்டு வந்தாங்க.. பேர் மட்டும் சொல்லிட்டு மயங்கிட்டாரு போல.. ரிசப்ஷன்ல இவரை அட்மிட் செஞ்சவங்க பேசிட்டு இருக்கவும் சந்தேகத்துல வந்து பார்த்தேன்”
கோர்வையாகப் பொய் சொல்லி சமாளிப்பதற்குள் அவளுக்குப் போதும் போதுமென்று ஆகிவிட்டது. விதுர்ஷா களைப்பாக வேறு தெரிய, அதற்கு மேல் அவரும் எதுவும் கேட்கவில்லை.
சிறிது நேரத்தில் மகேஷ்வரனும் சுரேஷும் கூட வந்துவிட்டனர். அவர்களும் பார்த்துவிட்டு பெரிதான அடியில்லை என்றதும் விதுர்ஷாவை வீட்டுக்குக் கிளம்ப சொல்லினர்.
“இல்ல இருக்கட்டும் அங்கிள்.. நான் பார்த்துட்டு சித்தார்த் கண் முழிக்கவும் போறேன்” என்றவள் அங்கேயே இருந்தாள். அதில் மகேஸ்வரனுக்கு வெகுதிருப்தி.
சிவநேசன் கூட மகளின் முகத்திலிருந்த அசதியில் மற்றவர்கள் அறியாமல் அவளை வீட்டுக்குக் கிளம்பச் சொல்ல, அவள் அதே பதிலைத் தான் தந்தைக்கும் சொன்னாள்.
“நீங்க வீட்டுக்குப் போங்கப்பா” என விதுர்ஷா வற்புறுத்த,
“உன்னை மட்டும் தனியாக விட்டுட்டு நான் எப்படிமா போறது?” என்று அங்கேயே இருந்தார் சிவநேசன்.
சுரேஷ் ஷர்மிளாவைக் கருத்தில் கொண்டு கிளம்ப, அங்கே மற்ற மூவரும் இருந்தனர்.
மணி பன்னிரென்டை நெருங்கும் போது சித்தார்த்திற்கு மீண்டும் சுயநினைவு வந்தது. போதை எல்லாம் இறங்கியிருந்தது.
செவிலிப்பெண் வந்து விஷயத்தைச் சொல்லவும் மகேஷ்வரன், “நீ முதல்ல போய் பாரும்மா” என, அவள் உள்ளே சென்று பார்த்தாள்.
தலையிலும் வலது கையிலும் கட்டு போடப்பட்டிருக்க, படுத்திருந்த சித்தார்த் அவள் உள்ளே வரவும், “நீ எப்படி இங்க?” என்று திகைக்க,
“நான், அப்பா, அங்கிள் எல்லாரும் இங்கே தான் இருக்கோம். உங்க மாமா இப்போ தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னே வீட்டுக்குப் போனாரு” என்று பதிலளித்தவளின் குரல் உள்ளே சென்றிருந்தது.
“பார்த்து ட்ரைவ் பண்ணியிருக்கலாம்ல?” என்று அவள் மெதுவான குரலில் கேட்க,
“சம்டைம்ஸ் இட் ஹேப்பன்ஸ்” என்றவாறே புன்னகைத்தவன் உடனே வலியில் முகத்தைச் சுருக்கினான்.
“வலி இப்போ எப்படி இருக்கு? பரவாலயா?”
“வலி இருக்கு தான். ஒரு வாரத்துல சரியாகுற காயம் தான்”
அவன் சொல்லவும் தலையாட்டியவள், எப்படி ஆரம்பிப்பது என்று குழம்பிப்போய் அவளுக்குள்ளாகவே யோசனையில் இருந்தாள்.
எப்படியோ, “சாரி” என்று மட்டும் சொல்லி முடிக்க, சித்தார்த் முகத்தில் எதையும் காட்டவில்லை.
அவளது மன்னிப்பு எதற்கு என்று அவனுக்குத் தெரியாதா என்ன? எங்கே போய்விடப் போகிறாள்? என்னுடன் தானே வாழ்ந்தாக வேண்டும். அப்போது இதற்கு எல்லாம் சேர்த்துக் கொடுத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் அவனுக்கு.
பரவாயில்லை, இருக்கட்டும், அதனாலென்ன இப்படி எந்தவித சம்பிரதாய வார்த்தைகளையும் விடாமல் அவன் வெறுமனே தலையசைத்தான்.
அடுத்து மகேஷ்வரனும் சிவநேசனும் உள்ளே வர அவள் ஒதுங்கி நின்று கொண்டாள். நேரம் நள்ளிரவைத் தாண்ட சிவநேசனும் விதுர்ஷாவும் கிளம்பினார்கள்.
இரண்டு நாளிலேயே சித்தார்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டான். விதுர்ஷா அதன்பின் மேகநாதனைப் பார்க்கவில்லை. அவனும் அவளைத் தொடர்பு கொள்ளவில்லை.
அவன் சித்தார்த்தை நெருங்க ஆரம்பித்திருந்தான்!
அவனது வழக்கத்தை அறிந்து கொள்வது தனக்கு ஏதோ ஒரு வகையில் பயன்படும் என்று எண்ணி, சித்தார்த்தின் அனைத்து செயல்பாடுகளையும் கண்காணிக்க ஆரம்பித்தான் மேகநாதன். அப்படி கண்காணிக்கும் போது தான் அவன் மீண்டும் பார் செல்வது தெரிந்து சித்தார்த் மேகநாதனின் அடுத்த சந்திப்பு அங்கே நிகழ்ந்தது.
அந்த சந்திப்புதான் மேகநாதன் அதுவரை எடுத்திருந்த முடிவுகளை அப்படியே மாற்றி எடுக்க வைத்தது.
எப்போதும் கலகலவென்று இருக்கும் வீடென்று சொல்லிவிட முடியாது தான். ஆனால், அன்று வழக்கத்திற்கு மாறாக அதீத அமைதியைச் சுமக்க, சோர்வாக உள்ளே வந்தான் பிரபாகரன். அவன் வந்த சத்தம் கேட்டு மேலிருந்து கீழே வந்த ரதி அவனுக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்துவிட்டு வேலையாள் செய்து வைத்த சிற்றுண்டியை எடுத்துப் போய் நீட்டினாள்.
அதை வாங்கியவன் உண்ணாமல் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். இதுவரை ரதிதேவி எந்த விஷயத்திற்கும் இந்த அளவிற்குப் பிடிவாதம் பிடித்து அவன் கண்டதில்லை. அவள் முகம் இறுகியிருந்தது. எதுவும் பேசவில்லை இருந்தாலும் அவனைக் கவனிக்கும் பொறுப்பையும் அவள் ஒதுக்கவில்லை. அதில் புன்னகையுடன் அவளைப் பார்த்தான் பிரபாகரன்.
“அம்மா எங்கே?”
அவன் அப்பா எப்போதும் வீட்டிற்குத் தாமதமாக வருவதுதான் வழக்கம் என்பதால் அம்மாவை விசாரித்தான் அவன்.
“என்கிட்ட சொல்லிட்டுப் போகல.. எனக்குத் தெரியாது”
“ஜெகா எங்க?”
“அவரோட ரூம்ல இருக்காரு”
பதில் சொல்லிவிட்டு மாடியேறப் போனவளைத் தடுத்தான் அவன்.
“ஏன்டி இப்படி பிடிவாதம் பிடிக்கிற?” என்று அவன் அலுத்துக் கொள்ள,
“இதுவரை உங்க விருப்பத்துக்கு மாறா நான் எதாவது செஞ்சிருக்கேனா?” என்று கேள்வி கேட்டாள் ரதி.
அவன் அமைதியாக இருக்கவும், அந்தக் கேள்விதான் உனக்கான பதில் என்பது போல பார்த்தவள் மேலே அவர்களது அறைக்குச் சென்றுவிட்டாள்.
அங்கே தொட்டிலில் அவளது ஆறு மாதக் குழந்தை இளமாறன் தூங்கிக் கொண்டிருந்தான். சிறிது நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் குனிந்து அவனைக் கொஞ்சிவிட்டு துணியை ஏதும் ஈரம் செய்திருக்கிறானா என்று சோதித்துவிட்டு கட்டிலில் படுத்துவிட்டாள். பிரபாகரனும் மேலே வந்தவன் குழந்தையைக் கொஞ்சும் சாக்கில் மனைவியைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
“பாருங்க குட்டிப் பாஸ்.. உங்க அம்மா அப்பா கூட பேசக்கூட மாட்டேங்குறா” என்று குழந்தையிடம் பேசுவது போல மனைவியிடம் பேச ஆரம்பித்தான்.
“உங்க அம்மாவும் தாத்தாவும் ரெண்டு பக்கமும் போட்டு என்னை வதைக்குறாங்கடா” என்று அவன் பாவமாகக் குழந்தையிடம் புகார் வாசித்துக் கொண்டிருக்க,
“ரெண்டு வருஷமா இந்தக் குடும்பமே சேர்ந்து என்னை வாட்டி வதைச்சுட்டு இருக்காங்க.. உங்க அப்பாவால ரெண்டு நாளா தாங்க முடியலயாம்” என்று குழந்தையிடமே பதில் பேசினாள் ரதி.
“இது மாதிரிலாம் நடக்கும்னு தெரிஞ்சு தான என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட?” அவனும் நேராக அவளிடமே கேட்க, அவள் எதுவும் பேசவில்லை.
அவனுக்கு முதுகு காட்டிப் படுத்துக் கொண்டு, ‘ஏன் இந்தக் கல்யாணத்தை நாம செஞ்சோம்' என்று தனக்குத் தானே கேட்டுக்கொண்டாள். அவளது எண்ண ஓட்டத்தை அறிந்தவனாக அவளருகே வந்து படுத்த பிரபாகரன் பின்னிருந்து அவளை அணைத்துக் கொண்டான்.
“ஏன்னா நாம லவ் பண்ணோம்டி”
அவனது அணைப்பிலும் பதிலிலும் அவனுக்கு முகம் காட்டித் திரும்பியவளது விழிகள் என்ன சொல்கிறது என்று அறியாதவனா அவன்? ஒரு காலத்தில் விழிகள் வழியாக மட்டும் தானே அவர்களது மொழிப்பரிமாற்றம் நடந்தது.
அந்தக் கேள்விக்கு அவனால் பதில் சொல்ல முடியவில்லை.
“நான் முடிஞ்சளவுக்கு முயற்சி பண்றேன் அப்பாகிட்ட பேச.. சரியா? நீ இப்படி வச்சுக்காத முகத்தை.. சகிக்கல” என்று அவன் கிண்டலாகக் கூற,
அந்தப் பதிலில் கொஞ்சம் இறுக்கம் தளர்ந்தவள் ஆசுவாசமாக உணர்ந்தாள். அவளது உடல் இறுக்கம் தளர்ந்தது அவளை அணைத்துப் பிடித்திருந்த பிரபாவிற்கு நன்றாகவே தெரிந்தது. அவனுக்கும் மனம் லேசானது.
“என்கூட இப்படி பேசாம கூட உன்னால இருக்க முடியுமாடி?”
ஆச்சரியம் போல வினவினாலும் அதில் வருத்தம் இருந்தது அவளுக்கா புரியாது?
“இதை விட்டா எனக்கு வேற வழி தெரியலங்க.. இப்போவும் விட்டுட்டா எனக்கு என் பிறந்த வீட்டு சொந்தமே இல்லாம போய்டும்.. எனக்கு கூடப்பிறந்த அண்ணன் இருக்கும் போது தாய்மாமன் முறையை வேற ஒருத்தரை வச்சு எப்படி செய்ய விடுவேன்? நியாயமே இல்லாத விஷயத்தை மாமா சொல்றாங்க நீங்களும் கேட்டுட்டு இருக்கீங்க” என்று முறுக்கிக் கொண்டாலும் அவனது அணைப்பில் தான் இருந்தாள் அவள்.
இதற்கு அவன் என்ன பதில் சொல்லிவிட முடியும்? மனைவியின் நியாயம் புரிந்தது. ஆனால், எப்படி அவர்களைச் சென்று அழைப்பது? அப்பாவின் தயக்கமும் நியாயம் தானே? அவனுக்குக் குழப்பமாக இருந்தது.
“ப்பா என்னமா கோபம் வருது என் பொண்டாட்டிக்கு” என்று அலுத்துக் கொண்டவனைப் போல அவன் நடிக்க, அவன் பேச்சை மாற்றுவது புரிந்து புன்னகைத்தாள் ரதி.
“ஹ்ம் இப்படித்தான் இருக்கணும்.. புரிஞ்சதா?” என்று அவன் சொல்ல,
அவர்கள் இருந்த நிலையைச் சுட்டிக்காட்டி, “இப்படியா?” என்று அவள் கேட்க, அவனின் புன்னகை விரிந்தது.
“எனக்கு டபுள் ஓகே” என்றவனும் கணவனாய் வேலைகளை ஆரம்பிக்க, அவன் கையைத் தட்டிவிட்டு பொய்க்கோபம் காட்டினாள் அவனது மனைவி.
“ஷ்ஷ்.. கதவு திறந்திருக்கு.. உங்க தம்பி கீழே இருக்காரு” என்று அவள் மறுக்க,
கதவைத் தாழிட்டு வந்தவன் தனக்குத் தேவையானதை வாங்கிவிட்டே விட்டான். பொய்யாக அலுத்துக் கொண்டாலும் அவளது முகமும் ரகசிய புன்னகையில் மலர்ந்தே இருந்தது.
சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த ஈஸ்வரிக்கு மருமகளின் கன்னச்சிவப்பு வேண்டிய கதை சொல்ல, எப்படியோ எல்லாம் சரியானால் போதுமென்று நினைத்துக் கொண்டார். ரத்தினவேல் மனதில் பகை இருக்கும் வரை எதுவும் சரியாகாது என்பதும் சேர்த்தே நினைவு வர, மீண்டும் சோர்ந்து போனார் அவர்.
“ஜெகா” என்றழைக்க, அம்மாவின் அழைப்பில் வெளியே வந்தவன் பிரபாகரனுக்கு அடுத்துப் பிறந்தவன். பக்கத்து ஊரில் உள்ள கல்லூரியில் காமர்ஸ் மூன்றாம் ஆண்டு படிக்கிறான்.
“சொல்லுங்கம்மா”
“கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வந்து குடு” என்றவர் அங்கிருந்த நாற்காலியில் அமர, அவன் எடுத்து வந்து கொடுத்தான்.
எப்போதும் போல் கேட்டுக் கொண்டே அன்னையின் மடியில் தலை வைத்துப் படுத்தவன் அவரோடு கதை பேச ஆரம்பித்துவிட்டான். ரதியும் அவர்களுடன் தான் அமர்ந்திருந்தாள்.
குழந்தை மாறன் சிணுங்க ஆரம்பிக்கவுமே, “ரதி” என்று பிரபாகரன் குரல் கொடுக்க, அவள் மேலே சென்றுவிட்டாள். குழந்தைக்குப் பசியாற்ற அவள் ஆரம்பித்ததும் பிரபாகரன் கீழே வந்தான்.
அன்னையுடன் கதை பேசிக் கொண்டிருந்த ஜெகதீஸ்வரன் அண்ணனைப் பார்த்ததும் எழுந்து அமர்ந்தான்.
பிரபாகரன் அன்னையின் முன் வந்து நின்று பாவமாக முகத்தை வைக்க, அவருக்கு மலைப்பாக இருந்தது.
“என்னடா தம்பி?”
“அப்பா கிட்ட பேசுங்க மா”
“எப்படிடா?” என்றவருக்கு அந்த தைரியம் எல்லாம் இல்லை.
“அண்ணி சொல்றது தான் கரெக்ட் மா.. அவங்க அண்ணன் இருக்கும் போது நாம அவங்கள விட்டுட்டு செய்றது முறை கிடையாது. எனக்கும் அந்தக் குடும்பம் பிடிக்காது தான் அதுக்காக நாம அண்ணியைப் பார்க்காம இருக்க முடியுமா?”
“எனக்கும் தெரியுது ஆனா இதை யாருடா உங்கப்பா கிட்ட சொல்லுவா?”
“நீங்க சொல்லணும்மா.. இன்னும் பழைய பஞ்சாங்கத்தையே பாடிட்டு இருக்காரு”
ஜெகதீஸ்வரன் இயல்பாகச் சொன்னாலும் அதை ஈஸ்வரியும் பிரபாகரனும் ரசிக்கவில்லை.
“டேய்.. பழைசு புதுசுனு என்ன? அப்பாவுக்கு ஒன்னுன்னா நமக்கும்தான் அது புரிஞ்சதா?” என்று பிரபா அதட்ட, ஜெகதீஸ்வரனோ அண்ணனை அலுப்பாகப் பார்த்தான்.
“டேய் நல்லவனே.. இதையெல்லாம் நீ அண்ணியைக் காதலிக்கிறதுக்கு முன்ன யோசிக்கணும்”
ஜெகதீஸ்வரனின் கிண்டல் வார்த்தைகளில் அமைதியாகிப் போன பிரபா மனதில்,
‘காதல் எல்லாம் உறவு பகை என்று பார்த்தா வருகிறது? இவன் என்னவோ நான் வேணும்னே போய் அவளைக் காதலித்து வைச்ச மாதிரி பேசுவான்’ என்று நினைத்துக் கொண்டான்.
“நான் முதல்ல சொன்னதை நீ கேட்கலயா? எனக்கும் அந்தக் குடும்பம் பிடிக்காதுனு சொல்லிட்டேனே.. முன்னாடி இருந்த நிலைமை வேற.. இப்போ இருக்க நிலைமை வேற.. அவங்களோட ஒட்டி உறவாடவும் வேணாம். வெட்டி எறியவும் வேணாம். ஜஸ்ட் நாம நம்ம எல்லைல நின்னுப்போம் அப்பாவுக்காக.. ஆனால், அண்ணியைத் தடுக்க வேணாம்”
“பெரியவனே இதெல்லாம் எனக்குப் புரியாம இல்லடா.. ரதி கேட்குறது நியாயமும் கூட.. உங்கப்பா என்ன நியாய தர்மம் தெரியாத ஆளா? அவருக்கு எல்லாம் தெரியும்டா.. ஆனாலும் அங்கே கூப்பிடாம விசேஷத்தை நடத்த நினைக்கிறாருனா நான் சொல்லி மட்டும் மாறிடவா போறாரு?”
ஈஸ்வரி குழப்பத்துடன் மகனிடம் கேட்டார்.
“பேசிப் பாருங்கம்மா.. அவர் மனசுல என்னதான் இருக்குனு தெரிஞ்சுக்கலாம்.. இல்ல அப்பா முடியாதுனு சொன்னால் விசேஷமா செய்யாம நம்ம குடும்பம் மட்டும் போய் கோவில்ல முடியெடுத்து காதுகுத்திட்டு வந்துடலாம்”
பிரபாகரன் முடிவாகச் சொல்ல,
“ரொம்ப நல்லாருக்குடா.. இந்த வீட்டோட முதல் வாரிசு.. விசேஷம் வைக்காம எப்படி?” என்று சத்தம் போட்டார் ஈஸ்வரி.
“அப்போ அப்பா கிட்ட பேசுங்க”
மீண்டும் பிரபாகரன் ஆரம்ப இடத்தில் வந்து நிற்க, ஜெகதீஸ்வரனும் அண்ணனைத் தாங்கியே பேச, ஈஸ்வரி யோசனையுடன் அமர்ந்திருந்தார்.
______________
அந்தப் பெரிய வீட்டின் அமைதியையும் தனிமையையும் ஜீரணிக்க முடியாமல் வேலையாளிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார் கல்யாணி.
ராசாத்தி மனம் அங்கலாய்த்துப் பேச, “பேரன் பொறந்து ரெண்டு வருஷம் ஆச்சுல்ல ராசி.. வேலையோட வேலையா வைச்சு விட வேண்டிதான?” என்றார் கல்யாணி.
“அவங்கப்பன் என்ன சொத்தா சேர்த்து வச்சிட்டுப் போயிருக்காருமா.. நானே வீட்டு வேலை செஞ்சு என் வயித்த கழுவிட்டு இருக்கேன்.. வாரிசுனு ஆம்பள புள்ள இருந்தாலாச்சும் உதவியா இருந்திருப்பான்.. என் விதி ஒத்த பொட்டையோட நின்னு போச்சு.. இவ நினைச்ச சுருக்குக்கு நாம ஆட முடியுங்களா தங்கம் விக்கிற விலைல”
“நானே இப்படி தானுங்கமா நெனச்சேன்.. ஆனா, எப்படியும் ஆறு மாசத்துல அறுவடை இருக்கு.. அப்போ சம்பளமும் எனக்கு நிறைய கிடைக்கும்.. அதான்மா பேசாம இரு ஒரு ஆறுமாசம் போகட்டும் வைக்கலாம்னு சொல்லிருக்கேன்”
ராசாத்தி சொல்ல சரியென்ற கல்யாணியின் நினைப்பெல்லாம் அவருடைய பேரன் மேல் சென்றிருந்தது.
'அவனுக்கு முறை செய்யக்கூட நம்மள கூப்பிட மாட்டாங்க அந்த வீட்ல.. இவரும் தகைஞ்சு போக மாட்டாரு.. பொண்ணு ஒன்னு ஆண் ஒன்னுன்னு ரெண்டு பிள்ளையைப் பெத்து எதுவுமே எனக்குனு இல்லாம போய்டுச்சு’
மனம் அவரது காயங்களைக் கீறிவிட ஆரம்பிக்க, அவரது முகம் கூம்பிவிட்டது. அவரது முகத்தைப் பார்த்த ராசாத்திக்கோ, ‘ம்ம் இப்போ யோசிச்சு என்ன பண்றது?’ என்பதாகவே எண்ணம் இருந்தது.
என்னதான் முழுப்பூசணியை அவர்கள் சோற்றில் மறைத்தாலும் அது தெரியத்தானே செய்யும்? பெரிய வீட்டு விஷயம் என்பதால் அதிகம் வெளிச்சத்தில் அரைபடாமல் இருக்கிறது. அவ்வளவுதான்!
“ம்மா.. நான் ஒன்னு சொன்னா என்னைத் திட்டிப்புட மாட்டீங்களே” என்று ராசாத்தி பீடிகை போட்டு ஆரம்பிக்க, கல்யாணி கேள்வியாகப் பார்த்தார்.
“இல்ல ரத்தினம் ஐயா வீட்ல கூட பையனுக்கு மொட்டை போட்டு காது குத்தணும்னு பேசிட்டு இருந்தாங்களாம்.. அங்க வேலை செய்ற பேச்சி சொன்னா”
ராசாத்தி சொல்லவும் அவளை முறைத்தவர், “அந்த வீட்டுப் பேச்சை இங்க எடுக்காதனு உனக்கு எத்தனை தரம் சொல்றது? இதுவே கடைசியா இருக்கட்டும் ஐயாவுக்குத் தெரிஞ்சதுனா உன்ன நிப்பாட்டிட்டு வேற ஆளு பார்க்க சொல்லிருவாங்க” எனப் பொரிய, ராசாத்தி கப்சிப் என்று வாய் மூடிக் கொண்டாள்.
'மனசு பூராவும் அங்கன தான் கெடக்கு.. இதுல நான் அந்த வீட்டுப் பேச்சைப் பேசுறது தான் தப்பாம்’ என சடைத்துக் கொண்டாலும் அதன் பின் ராசாத்தி எதுவும் பேசவில்லை.
சோமசுந்தரம் தோப்பிலிருந்து வந்தவர், “சாப்பாடு எடுத்து வை கல்யாணி” என்று சொல்லிவிட்டு முகம், கை, கால்களைக் கழுவி வந்தார்.
வீட்டில் அவர்கள் இருவர் மட்டும்தான்! இப்போதெல்லாம் அந்தத் தனிமை அவரையுமே அதிகம் பாதித்து இருந்தது. அவரது வயதில் பேத்தி பேரனைப் பார்த்துக்கொண்டு சிவன் விட்ட வழியென்று இருந்துவிடத் தான் அவருக்கும் ஆசை. ஆனால், வைராக்கியமாக இன்னும் உழைத்துக் கொண்டிருக்கிறார். சில ரணங்களை மறக்க, அந்த உழைப்பும் அது தரும் அசதியும் கண்டிப்பாக அவருக்கு வேண்டுமல்லவா? அப்போது தான் அவரால் நிம்மதியாய் உறங்க முடியும்.
ஏதேதோ நினைவுகளில் மூழ்கிக் கிடந்தவரை, “சாப்பிடுங்க” என்ற மனைவியின் குரல் நிகழ்காலத்தில் கொண்டு வந்து நிறுத்த, சாப்பாட்டில் கவனம் வைத்தார்.
“சாப்ட்டு தோப்புக்குப் போகணுமாங்க?”
“இல்ல கொஞ்ச நேரம் அசந்துட்டு அப்பறம் போகணும்.. என்ன விசயம்?”
“ஒரு விசயமும் இல்லீங்க.. சும்மாதான் கேட்டேன்”
மனைவியை வித்தியாசமாகப் பார்த்தவருக்கு எதுவுமில்லாமல் இப்படியெல்லாம் தன் மனைவி கேட்கமாட்டாள் என்பது நிச்சயம். சரி விஷயம் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தார்.
சாப்பாட்டு வேலையை முடித்துவிட்டு அவர் அறைக்குச் செல்ல, அவர் பின்னோடு சென்ற கல்யாணி உடனடியாகக் கதவைத் தாழிடவும்,
“யாருடி இவ.. கூறுகெட்டவளா இருக்க.. பகல்ல இப்படி கதவைச் சாத்திட்டு இருந்தா பார்க்குறவங்க என்ன நெனப்பாங்க” என்று சோமசுந்தரம் கேட்டு வைக்க, தலையில் அடித்துக் கொண்டார் கல்யாணி.
கல்யாணி தன்மையாகப் பேச, “எந்த வயசா இருந்தாலும் சோத்தை மட்டும்தான் தின்ன முடியும்.. வேறெதையும் இல்ல” என்றவர் முகம் கடுமையாக இருந்தது.
“நீ என்ன பேசணுமோ அதைப் பத்தி பேசு.. நீ மேகனைப் பத்திப் பேச வரலன்றது எனக்கு நிச்சயம்”
அவர் அப்படிச் சொல்லவும் சொல்லவா வேண்டாமா என்பது போல் யோசித்தவர் என்ன ஆனாலும் சொல்லிவிடுவதே நல்லது என்ற முடிவில் தயங்கி தயங்கி விசயத்தைச் சொன்னார்.
“பேரனுக்கு காதுகுத்து வைக்கப் போறாங்களாம்.. அங்க வேலை செய்யுற பேச்சி நம்ம ராசி கிட்ட சொல்லிருக்கு” என்று ஆரம்பித்ததுமே,
“யாருக்கு யாரு பேரன்? அந்த ஓடுகாளிக்குப் பொறந்தவன் எனக்குப் பேரனாம்ல.. அந்த வீட்டு சங்காத்தமே வேணாம்னு நான் இருந்தா நீ உன் நெனப்ப அங்கன வச்சுட்டு சுத்திட்டு இருக்கியா.. எம்பொண்டாட்டியா இருக்க முடிஞ்சா இரு.. இல்ல பொட்டியைக் கட்டிட்டு உங்க ஆத்தா வீட்டுக்குப் போயிரு” என்றவர் கத்திய கத்தலில் கல்யாணியின் கண்கள் தாரை தாரையாகக் கண்ணீரை வடித்தது.
“அவ நம்ம மவங்க.. அப்படியெல்லாம் பேசாதீங்க”
“அவ எம்மவ இல்லனு நான் சொன்ன அப்புறம் கூட நீ அவளை மவன்னு சொல்லிட்டு இருக்கனா அதுக்கு என்ன அர்த்தமா இருக்க முடியும்னு யோசி.. என்னைத் தரங்கெட்டு பேச வைக்காத” என்று சோமசுந்தரம் சீற,
அவர் பேசிய பேச்சைக் கிரகித்து அதிர்ந்த கல்யாணி அதற்கு மேல் ஒன்றும் பேசவில்லை.
“ஹெலோ பாஸ்! இன்னும் நீங்க குடிக்குறதை விடலயா?” என்றவாறே சித்தார்த்தின் அருகில் வந்து அமர்ந்தான் மேகநாதன். மேகநாதனைப் பார்த்த சித்தார்த் புருவத்தைச் சுருக்கினான்.
“யார்னு தெரிலயா?” என்று மேகநாதன் ஆரம்பித்த போதே நினைவலைகள் அவன் யாரென்று சித்தார்த்திற்கு. நினைவுபடுத்தியிருந்தது.
“நல்லாவே ஞாபகம் இருக்கு.. தேங்க்ஸ் ஃபார் யுவர் டைம்லி ஹெல்ப் ப்ரோ”
“நன்றியெல்லாம் வேணாம்... ஆனா, இந்தக் குடிக்கிற பழக்கத்தை நிப்பாட்டலாமே பாஸ்”
“ஹய்யோ நீங்க நினைக்கிற அளவுக்கு மொடாக்குடிகாரன் இல்ல ப்ரோ.. அன்னைக்கு கொஞ்சம் அப்செட்.. அதான் அளவுக்கு மீறிடுச்சு.. மத்த நேரமெல்லாம் அளவோட தான்”
“அப்படி எந்த விசயத்தையும் நம்மளயும் நம்ம ஆரோக்கியத்தையும் பாதிக்கிற அளவுக்கு நாம நேசிக்கக் கூடாது பாஸ்”
மேகநாதன் சூசகமாகச் சொல்ல, அது மற்றவனுக்கும் புரிந்தது.
“அது அப்படியில்ல ப்ரோ.. இது வேற கதை.. இப்போ நல்ல மூட்ல இருக்கேன்.. இன்னொரு நாள் இதைப் பத்தி பேசுவோம்”
சித்தார்த் பேச்சை முடிக்க, மேகநாதனும் அவனிடம் அவன் போக்கில் பேச ஆரம்பித்தான்.
“நீங்க ட்ரிங்க் பண்ணுவீங்களா?” என்ற சித்தார்த்திடம்,
“இல்ல பாஸ்.. நமக்கு அந்தப் பழக்கம் இல்ல” என்று மேகநாதன் மறுக்க,
“ஓ நைஸ்.. ஆனால், ஆளே ஒரு வாரத்துல மாறிட்டீங்களே.. அன்னைக்கு வேஸ்டி சட்டைல பார்க்க அசல் கிராமத்தான் மாதிரி இருந்தீங்க.. இன்னைக்கு டெனிம் ஜீன்ஸ் டீ சர்ட்னு பயங்கரமா இருக்கீங்க.. எனக்கு அதான் சட்டுனு ரெககனைஸ் ஆகல” என்றவாறு புன்னகைத்தான் சித்தார்த்.
“இடத்துக்குத் தகுந்த மாதிரி மாறனும்ல”
உண்மையில் மேகநாதன் வேஸ்டி சட்டையில் தான் இருந்தான். அந்த உடையில் அவனை உள்ளே வாயில் காவலாளி அனுமதிக்கவில்லை. அவசரகதியில் பக்கத்திலிருந்த ஆண்களுக்கான ஷோரூமில் நுழைந்தவன் தன் புறத்தோற்றத்தை மாற்றிவிட்டு வந்திருந்தான். இதையெல்லாம் அவனிடம் சொல்லவா முடியும்?
அதன்பின் இருவருக்கும் பொதுவான விசயங்களைப் பேசியவர்கள் பின் அவரவர் வழியில் பிரிந்து சென்றனர்.
அவர்களது அந்த சந்திப்பிற்குப் பிறகு இரண்டு மூன்று முறை இயல்பாகச் சந்திப்பது போல் சித்தார்த்தைச் சந்தித்தான் மேகநாதன். அந்தச் சந்திப்பில் சித்தார்த்தின் நம்பிக்கையை அவன் பெற்றுவிட, அவர்களுக்குள் அவனுக்குத் தேவைப்பட்ட நெருக்கமும் வந்திருந்தது.
“ஏன் பாஸ்.. உங்க கல்யாணம் காதல் கல்யாணமா?”
மேகநாதன் ஆரம்பித்து வைக்க, சித்தார்த்தின் முகம் சுருங்கியது.
அதைப் பார்த்துவிட்டு, “சொல்ல வேணாம்னு தோனுச்சுனா வேண்டாம் விட்ருங்க” என்றான் அவன் நல்லபிள்ளையாய்.
சித்தார்த் சொல்லவும் கேள்வியாய்ப் பார்த்த மேகநாதன், “ஏன் உங்களுக்குப் பிடிக்கலனா கல்யாணம் பண்ணிக்க முடியாதுனு சொல்ல வேண்டியது தான?” என்றான்.
“சொல்ல முடியாத சூழ்நிலை.. வீட்ல அப்பா பிஸ்னெஸ்ல நிறைய லாஸ்.. மீண்டு வர முடியாத அளவுக்கு நிறைய பணம் போய்டுச்சு. இந்த நிலைமைல இப்படியொரு சம்பந்தம் தானாக வந்துச்சு தெரிஞ்சவங்க மூலமா.. அவங்க வீடு நல்ல வெல்த்தியான பேமிலி.. ஒரே பொண்ணு வேற.. என் மாமா இது தான் நாம மேல வர ஒரு சான்ஸ்னு சொன்னாரு.. எனக்கும் அதான் தோனிச்சு”
சித்தார்த் சொல்லச் சொல்ல மேகநாதனின் முகம் சட்டென்று மாறியது.
‘போயும் போயும் பணத்துக்காகவா இவன் அவளைக் கல்யாணம் பண்ணணும்?’
“அதைவிட எனக்கு இந்த வேலைக்குப் போய் குடும்பத்தைக் காப்பாத்துற அந்தப் பொறுப்பெல்லாம் சுத்தமா இல்ல ப்ரோ.. ஐ லவ் ட்ராவலிங்.. ஸ்டடீஸ் முடிச்சுட்டு என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வேலை, கல்யாணம்னு செட்டில் ஆகிட்டாங்க.. சோ, ஆல்வேஸ் சோலோ ட்ராவலிங் தான்.. ஒரு கட்டத்துல அதுவும் எனக்கு ரொம்ப பிடிச்சுருச்சு. இந்தப் பொண்ணும் கூட சேர்ந்து தான் அவங்கப்பா பிஸினெஸை பார்த்துக்குது.. சோ, நாம இப்படியே லைஃப் லாங் என்ஜாய் பண்ணலாம்”
மேகநாதன் கிராமத்தில் வளர்ந்தவன். அவனுக்கு உத்யோகம் புருஷலட்சணம் என்று சொல்லி தான் வளர்த்திருந்தார்கள். சித்தார்த் மனநிலை அவனுக்கு அதிருப்தியைத் தந்தது.
கல்யாணத்தை நிறுத்துவது பற்றிய எண்ணம் எழும் போதெல்லாம் சித்தார்த்தின் நினைவு அவ்வப்போது எழுந்தது. அவனைத் தெரியாத போதிலும் கூட முகமறியாத ஒருவன் இதனால் பாதிக்கப்படுவானே என்ற சஞ்சலம் இருந்து கொண்டே இருந்தது. இப்போது அது துளியும் இல்லை.
சஞ்சலம் மறைந்த நிம்மதியுடன் சித்தார்த்திடம் விடைபெற்றவன் அறைக்கு வந்ததுமே விதுர்ஷாவிற்கு தான் அழைத்தான். மணி அப்போது இரவு பத்தையும் தாண்டிக் கொண்டிருந்தது.
தூங்கியிருப்பாளோ என்ற எண்ணம் எழும்போதே அழைப்பு எடுக்கப்பட்டது. எடுத்தாலும் அவள் எதுவும் பேசவில்லை. அவன் ஹலோ ஹலோ என்று கத்த அப்படியும் அவள் பேசவில்லை. அவனுக்கும் பொறுமை போக, “விது” என்று அழுத்தமாக அழைக்க, எதற்கும் அவளிடமிருந்து பதிலில்லை.
“ச்ச” என்றவாறு அழைப்பைத் துண்டித்தவன் மீண்டும் முருங்கை மரம் ஏறிக் கொண்டான்.
‘தப்பு செஞ்சுட்டேன் தான்.. அதுக்காக அவ செஞ்சது மட்டும் இல்லைனு ஆகிடுமா? எனக்கும் தான் கோவமிருக்கு.. ஆனா அதையெல்லாம் தாண்டி அவ எனக்கு வேணும்னு மனசு கெடந்து அடிச்சுக்குதே.. இவ மட்டும் ஏன் இப்படி இருக்கா'
ஒரு பக்கம் அவள் மீதான கோபமும் வருத்தமும் அப்படியே இருந்தது. அது அப்படியே இருந்திருந்தாலும் அவள் எப்படியோ போகிறாள் என்று விட்டிருப்பான். திடீரென்று அவள் மீது முகிழ்த்த காதல் அவனைக் கோபத்திற்கும் பிடித்தத்திற்கும் இடையே அல்லாட வைத்துக் கொண்டிருந்தது.
______________
“ஏன் மீனா.. நான் வேணும்னா சென்னைக்குப் போய் ஒரு ரெண்டு நாள் தங்கிட்டு வரேனே.. அவன் மட்டும் தனியா கஷ்டப்படுவான்” என தயங்கித் தயங்கிக் கேட்டான் சுரேந்திரன்.
“கூறு இருக்க மாதிரி பேசு மாமா.. நீ போய்ட்டா எனக்கென்ன இங்க வேலை” என்று மீனா கேட்க,
“நீ உங்கம்மா வீட்டுக்குப் போய் இரேன்” என்றான் அவன் எளிதாக. அவனது பதிலில் அவனைத் தீயாய் முறைத்த மீனாவோ கை வேலையை விட்டுவிட்டு அவனது அருகில் வேகமாகப் போய் நின்றாள்.
“உனக்குப் பாவம் பார்த்து உன்னைக் கல்யாணம் பண்ணேன்ல.. என்னைச் சொல்லணும்”
மனைவியின் வார்த்தையில் சுரேந்திரன் வாய் தானாக மூடிக் கொண்டது.
அவள் சொல்வதும் உண்மை தான். சுரேந்திரனின் தாய்மாமா மகள் தான் மீனா. சுரேந்திரனின் தாய் கிருஷ்ணவேணி ஒரு வருடம் முன்பு இறந்து விட, தந்தையையும் சிறுவயதில் பறிகொடுத்திருந்தவன் ஒரேநாளில் யாருமில்லாதவன் ஆகிப்போனான்.
திருமண வயதிலிருந்த சுரேந்திரனுக்குத் திருமணம் முடித்து வைத்துவிட்டால் அவனுக்கு ஒரு துணையாகிப் போகும் என்று யோசித்த பெரியவர்கள் காரியம் முடிந்தவுடன் அந்தப் பேச்சைத் துவக்கி வைக்க, அவனது மாமா தங்கதுரை சபையில் வைத்தே தன் மகள் மீனாவைத் தன் மருமகனுக்குத் திருமணம் செய்து வைப்பதாகச் சொல்லிவிட்டார்.
அதுவரை பெரியவர்கள் பேசட்டும் என்றிருந்த சுரேந்திரனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவனுக்கு முப்பதின் தொடக்கம். மீனா அப்போது தான் பன்னிரெண்டாவது பொதுத் தேர்வை எழுதியிருந்தாள். மீனாவுக்கும் அது அதிர்ச்சி தான். அவள் அதிர்ந்து போய் தன் தாயைப் பார்க்க, அவருக்குப் பெரிதான அதிர்ச்சி எல்லாம் இல்லாததைப் போல் நின்றிருந்தார். உண்மையில் தனமும் தங்கதுரையும் சேர்ந்து பேசித்தான் அந்த முடிவை எடுத்திருந்தனர். அதனால் அவர் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
சபையில் வைத்து எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாலும் அடுத்துக் கிடைத்த தனிமையில் தங்கதுரையிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லிப் பார்த்தான் சுரேந்திரன்.
“மீனா சின்ன புள்ள.. அதுக்கு என்கூட கல்யாணமா? எனக்கு எம்புட்டு வயசுனு தெரியும்ல.. இதெல்லாம் சரிவராது மாமா.. உங்க விருப்பப்படியே கல்யாணம் பண்ணிக்கிறேன்.. ஆனா வேற புள்ளையா பாருங்க” என்று அவன் பேச, தங்கதுரை அவன் பேச்சைக் காது கொடுத்துக் கூடக் கேட்கவில்லை.
“இதுக்கு மொதல்ல மீனாவே சம்மதிக்காது மாமா”
அவனும் எப்படி எப்படியோ மறுப்பைச் சொல்ல, “அவ்வளவுதானா விசயம்.. இரு மாப்ள” என்றவர், “மீனாஆஆ” என்று குரல் கொடுத்தார்.
தாவணி பாவாடை சட்டையில் உயரமும் அதற்கேற்ற சதைப் பிடிப்புமாக இருந்தவளுக்குப் பதினேழு வயது என்று சொன்னால் நம்புவதற்கு கொஞ்சம் சிரமம் தான்.
சுரேந்திரன் சொன்ன அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறி, “நான் சொன்னா மாப்ள நம்ப மாட்டாரு.. நீயே சொல்லு.. உனக்கு சம்மதமா இல்லையாமா?” என்று கேட்க, அதுவரை சுரேந்திரனைத் தான் அவள் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவனது முகத்தில் தெரிந்த குழப்பமும் மறுப்பும் அவளது மனதை ஏதோ ஒரு விதத்தில் அசைத்தது.
“எனக்கு சம்மதம் ப்பா” என்றுவிட்டாள்.
சுரேந்திரன் ஆச்சரியமாக அவளைப் பார்க்க, “போதுமா மாப்ள.. இதுக்கா இவ்வளவு கூத்து பண்ணீங்க?” என்றவர் மனைவி எதற்கோ அழைக்கவும் அங்கிருந்து அகன்றார்.
“லூசா நீ? சின்ன புள்ள நீ.. எனக்கு எருமைமாடு வயசாகுது.. இதெல்லாம் யோசிக்காம சரினு சொல்ற” என்று அவன் மாமன் மகளைக் கடிய,
“என்னை நீ என்னைக்காச்சும் உருப்படியா பார்த்திருக்கியா? நான் வடக்குப்பக்கம் வந்தா நீ தெற்குப்பக்கமா ஓடிப் போய்டுவ.. பின்ன எப்படித் தெரியும்.. என்னைப் பார்த்தா உனக்கு சின்னப்புள்ள மாதிரியா இருக்கு?” என்றவள் சுரேந்திரனை முறைத்தாள்.
அவளது பேச்சில் அவளை ஊன்றிக் கவனித்தவன் சட்டென்று கண்களைத் திருப்பிக் கொண்டான். சிறு பெண் என ஒதுக்க முடியாதவாறு இருந்தவளின் வனப்பு சுரேந்திரனைப் பதட்டப்படுத்தியது. அவனது முகத் திருப்பலில் மீனாவின் இதழ்கள் ரகசியச் சிரிப்பில் விரிந்தன.
அவளுக்கு அவனை சிறுவயதிலிருந்தே பிடிக்கும். ஆனாலும் இப்போது திடீரென திருமணம் என்றபோது அவளே அதற்குத் தயாராய் இல்லை. பிடித்தம் இருந்தாலும் காதல் என்பது மாதிரியெல்லாம் அவளுக்கு அவனிடத்தில் தோன்றியதில்லை. அதனால் திருமணம் என்றபோது சற்று அதிர்ந்தாலும் சுரேந்திரன் இந்த நிலையை அவனுக்காகப் பயன்படுத்திக் கொள்ளாமல் அவளை முன்னிருத்தி யோசித்தது அவளைக் கொஞ்சம் இளகச் செய்திருந்தது.
“பெரிய புள்ள மாதிரி இருந்தா மட்டும் போதுமா? கல்யாண வயசு வர வேணாம்?”
“எனக்குப் பதினெட்டு முடிஞ்சிருச்சு மாமா.. மஞ்சக் காமாலை வந்து எட்டாவது முழுப்பரிட்சை எழுத முடியாம ரெண்டு தரம் படிச்சேனே.. மறந்துட்டியா?”
“அப்படி பார்த்தாலும் உனக்கும் எனக்கும் பத்து வருஷத்துக்கும் மேலே வித்தியாசம் மீனா”
“அது அந்தக்காலம் மீனா.. சரி வயசை விடு.. படிப்பு? படிக்கணும்னு எண்ணம் இல்லையா?” என்று அவன் கேட்க,
“யாரு சொன்னது இல்லைனு.. நீ தனியா இருக்கதை என்னால சகிச்சுக்க முடியாதுனு தான் கல்யாணத்துக்கு சரி சொல்றேன்.. கல்யாணத்துக்கு அப்றம் கண்டிப்பா படிப்பேன். நீ என்னைப் படிக்க வைப்ப தான?” என்று கேட்டாள் அவள்.
சுரேந்திரன் எதுவும் பேசாமல் சென்றுவிட்டான். அவளை மறுக்க அவனிடம் எந்தக் காரணமும் இல்லை. ஆனால், தன் நிலைக்காக சிறு பெண்ணை இழுத்து விடுகிறோமே என்ற எண்ணம் தான்.
பெரியவர்கள் கூடி அடுத்த மூன்று மாதத்தில் திருமணம் என்று முடிவு செய்திருந்தனர். உண்மையில் ஒரு மாதத்தைக் கூட சுரேந்திரனால் தனியாகச் சமாளிக்க முடியவில்லை.
பகல் முழுவதும் மேகநாதனுடன் பொழுதைக் கழிப்பவன் வீடடையும் போது யாருமற்ற தனிமை தான் அவனை வரவேற்கும். கிருஷ்ணவேணி இறந்த போது கூட அவன் சிறிது தைரியமாகத் தான் இறந்தான். அதன்பின் தான் அவரின் நினைவு அதிகம் வர ஆரம்பிக்க, ரொம்பவே தவித்துப் போனான்.
பத்து நாட்களில் தங்கதுரையின் வீட்டுக்குச் சென்றவன் மீனாவிடம் தனியாகப் பேசினான்.
“என்ன விசயம் மாமா?” என்ற அவளது கேள்விக்கு,
“அது.. நான் சொல்றேனு தப்பா நினைச்சுக்காத.. கல்யாணத்தைக் கொஞ்சம் முன்னவே வச்சுக்கலாமா?” என்று கேட்க, ஏன் என்றாள் அவள்.
“தனியா இருக்க முடியல”
முகம் சுருக்கித் தவிப்புடன் அவன் சொல்ல, அதன் பின் மீனாவுக்கு அங்கே இருக்க விருப்பமில்லை. தங்கதுரையிடம் சொல்லி திருமணத் தேதியை மாற்றி வைக்கச் சொல்ல, மூன்று மாத இடைவெளி ஒரு மாதமாகக் குறைந்தது.
அந்த ஒரு மாதமும் அவனைத் திருமண வேலையில் தங்கதுரை இழுத்துக் கொள்ள, இப்படியாகத்தான் அவர்கள் திருமணம் நடந்து முடிந்தது.
சொன்னபடியே மீனா திருமணத்திற்குப் பின் கல்லூரிக்குச் செல்ல ஆரம்பித்தாள். அவனுக்கு அவளும் அவளுக்கு அவனுமாய் வாழ்க்கையை ஆரம்பித்து இதோ ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிறது. மீனா இளநிலை கணிதம் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள்.
தங்கதுரைக்கும் தனத்திற்கும் மீனா கல்லூரிக்குச் செல்வதில் பிடித்தமில்லை. அடுத்து ஒரு பேரனோ பேத்தியோ என்று அவர்கள் ஆர்வமாயிருக்க, மீனா புத்தகப்பையை மாட்டியதில் அவ்வப்போது முணுமுணுப்புக்கள் வந்து போனது. அதையெல்லாம் சுரேந்திரன் பார்த்துக் கொள்கிறான்.
“நமக்கு ஒன்னுனா அவன்தானே வரான்.. அதான் சொன்னேன்” என்று சுரேந்திரன் மீண்டும் மெதுவாக மனைவியிடம் சென்னை செல்வதற்கு அடிபோட,
“எல்லாம் சரிதான்.. ஆனால், இப்போ நீ போக வேணாம்” என்று முடிவாகச் சொல்லிவிட்டாள்.
அதற்கு மேல் சுரேந்திரன் ஏன் வாயைத் திறக்கப் போகிறான்?
கல்லூரியின் அட்மிஷன் வேலைகளெல்லாம் ஓரளவிற்கு முடிந்து முதல் செமஸ்டர் தொடங்கியிருந்தது. கேண்டீன் கான்ட்ராக்ட்டிற்கு விளம்பரம் கொடுப்போம் என்ற எண்ணத்தில் இருந்தாள் விது. ஆனால், கவிதாவே தெரிந்த ஒருவரை அழைத்து வர, அவர்களுடனான பேச்சு வார்த்தையும் திருப்தியாக இருக்க, அவர்களுக்கே கொடுத்திருந்தாள் அவள்.
அன்று முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஓரியன்டேஷன் ப்ரோகிராம் இருந்தது. விதுர்ஷா உரையாற்றிக் கொண்டிருந்தாள்.
“மலாலா, மெக்லியோட்னு எத்தனையோ பெண்கள் கல்விக்காக போராடினதை பத்தி நம்ம படிச்சிருப்போம். இங்க இருக்க எல்லாருக்கும் அது ஈஸியா கிடைச்சிருச்சுனு நான் சொல்ல மாட்டேன். சிலர் ஈஸியாகவும் சிலர் சிரமப்பட்டும் தான் இங்க வந்திருப்பீங்க. இங்க வந்ததுக்கான காரணம் என்னவோ அதை நோக்கி போங்க.. உங்க வாழ்க்கையை நீங்களே நினைச்சுப் பார்க்க முடியாத அளவுக்கு அழகா மாத்துற சக்தி கல்விக்கு மட்டும் இருக்கு. Be passionate about your studies.. we are having a long time. நிறைய பேசலாம்”
விதுர்ஷாவின் உரை முடிவில் அரங்கம் முழுவதும் கரகோஷத்தின் சத்தம் கேட்டது. மேடையில் அமர்ந்திருந்த சிவநேசன் உள்ளம் பூரித்து அமர்ந்திருந்தார். இரண்டு வருடங்களுக்கு முன் விதுர்ஷாவிடம் இந்த பொறுப்பை ஒப்படைக்கும் போது சிறிய பெண்ணிடம் ஒப்படைக்கிறோமே என்ற சஞ்சலம் சிறிதளவு கூட அவருக்கு இல்லை. மகளின் மேல் அத்தனை நம்பிக்கை. அந்த நம்பிக்கையைக் காப்பாற்றி நிர்வாகத்தை திறம்பட நடத்திக் கொண்டிருக்கும் மகளைப் பார்த்து பூரிக்க அன்பரசிக்குக் கொடுத்து வைக்கவில்லையென நினைத்துக் கொண்டார்.
தொடர்ந்து அந்தக் கல்லூரியைப் பற்றிய விவரங்கள், மாணவ மாணவியர்களின் சாதனைகள் என்று அனைத்தும் அந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் சொல்லப்பட்டது. நிகழ்ச்சி முடிந்து பெற்றோர்கள் கிளம்பவும், மாணவர்கள் கேம்பஸ் டூர் முடிந்து வகுப்புகளுக்குச் சென்றனர். சிவநேசனும் விதுர்ஷாவும் பேசிக்கொண்டே ரவுண்ட்ஸ் சென்றனர்.
“கேன்டீன் செட் ஆகிடுச்சாமா?” என்று சிவநேசன் கேட்க,
“நல்லா தான் பண்றாங்க பா.. நம்மள பத்தி ரொம்பவும் சொல்லி கூப்பிட்டு வந்திருப்பாங்க போல கவிதாக்கா” என்று புன்னகைத்தாள் விது.
“அஃபீஷியலா இனி எல்லா பொறுப்பையும் உன்கிட்ட தந்துடலாம்னு இருக்கேன்மா.. என்னைவிட நீ இந்த காலேஜை நல்லபடியா பார்த்துப்பனு நம்பிக்கை இருக்கு” என்று சிவநேசன் ஆரம்பிக்க,
“இப்ப அதுக்கான அவசியம் எதுவும் இல்லப்பா.. உங்களுக்கு கீழே தான் நான் எப்பவும்..” என்றவள் அந்தப் பேச்சை விடுத்து வேற பேச்சிற்குத் தாவினாள்.
“லைப்ரரியை இன்னும் கொஞ்சம் எக்ஸ்பாண்ட் பண்ணலாம்னு தோனிட்டே இருக்குப்பா.. பக்கத்துல இருக்க A1 ப்ளாக்க லைப்ரரி கூட ஜாய்ன் பண்ணி விட்டுட்டு A1 ல இருக்க க்ளாஸஸ்க்கு தனியா வேற ப்ளாக் க்ரௌண்ட் பக்கத்துல கட்டிக்கலாம்னு நினைக்கிறேன். சரி வருமா ப்பா?”
சிவநேசன் தான் இப்போதும் அந்தக் கல்லூரியின் முதன்மை நிர்வாகி. விதுர்ஷா பொறுப்பு நிர்வாகி. அவள் அந்தக் கல்லூரிக்குள் நுழைந்ததில் இருந்து சிவநேசன் கல்லூரிக்கு வருவதை பெரும்பாலும் குறைத்துவிட்டார். இருந்தாலும் என்ன செய்தாலும் சிவநேசனிடம் ஒப்புதல் வாங்கிய பிறகு மட்டுமே செய்வாள். சில நேரங்களில் சில விஷயங்களுக்கு சிவநேசன் மாற்று ஏற்பாடு சொல்வார். அதனால் இப்போது வரையுமே கல்லூரி முழுவதும் சிவநேசன் கட்டுப்பாட்டில் தான் இருந்தது.
“செய்யலாம் மா.. நீ எப்போ ஸ்டார்ட் பண்ணலாம்னு ப்ளான் வச்சிருக்க?”
“உன் கல்யாணத்துக்கு இன்னும் ஒரு மாதம் தான் இருக்கு.. இப்போ இதைத் தொட வேணாம்.. மெதுவா பார்க்கலாம்”
“ப்பா.. நான் என்ன கல் சுமந்து மண் சுமந்து கட்டப் போறேனா? கல்யாணத்துக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? பேசாம இருங்க. நம்ம காம்ப்ளக்ஸ கட்டினாங்களே.. சிவம் பில்டர்ஸ்.. அவங்களையே ஃபிக்ஸ் பண்ணலாம்னு இருக்கேன்”
அவள் முடிவாகச் சொல்லிவிட, சிவநேசனும் சரியென்று சொல்லிவிட்டார். உடனே சிவம் பில்டர்ஸ்க்கு அழைத்து அவர்களுடன் அப்பாய்ண்மென்ட் ஃபிக்ஸ் செய்துவிட்டுத் தான் அடுத்த வேலையைக் கவனித்தாள் அவள்.
நாட்கள் காற்றுடன் போட்டியிட்டவாறே நகர்ந்து கொண்டிருக்க, புதிய கட்டிடம் கட்டுவதற்கான வேலை அவர்களது கல்லூரியில் தொடங்கப்பட்டிருந்தது. அந்த வேலையையும் விதுர்ஷா எடுத்துக்கொள்ள முன்வந்தாலும் சிவநேசன் விடவில்லை. அந்தக் கட்டிடத்தின் திறப்பு விழாவிற்கு மட்டுமே அந்தப்பக்கம் வர வேண்டும் என அவளிடம் கண்டிப்புடன் கூறிவிட்டார் அவர். என்னதான் சிவநேசன் அந்த வேலையை முழுவதுமாகக் கவனித்துக் கொண்டாலும் சிவநேசன் இல்லாத நேரம் அவ்வப்போது அங்கேயும் போய்ப் பார்த்துவிட்டுத் தான் வருவாள் விதுர்ஷா.
—-------------------------
அன்று சித்தார்த்-விதுர்ஷாவின் திருமணப் பத்திரிகை அச்சடித்து வந்துவிட்டது என சுரேஷ் வந்து கொடுத்திருந்தான்.
அன்று விதுர்ஷாவும் வீட்டில் இருந்தாள். சுரேஷ் வந்தது தெரிந்து வெளியே வந்து உபசரித்தவள் பத்திரிகை கட்டுக்களைப் பார்த்தவுடன், வேலை இருப்பதாக அறையில் அடைந்து கொண்டாள். சுரேஷ் அங்கிருந்து கிளம்பும் வரைக்கும் அவள் வெளியே வரவில்லை.
தவறு செய்வதைப் போன்ற குறுகுறுப்பு மனதில் ஒட்டிக்கொள்ள, அவளுக்கு அவளே சமாதானம் சொல்லிக் கொண்டாள். என்ன சமாதானம் சொன்னாலும் அவளது மனம் அதை ஏற்றுக் கொண்டபாடில்லை. மேகநாதன் நினைவில் நின்றுகொண்டு அனுதினமும் வதைத்துக் கொண்டிருந்தான். சிரமப்பட்டு மேகநாதனை ஒதுக்கிவிட்டு சிவநேசன் முகத்தைக் கண் முன்னே நிறுத்தி, அலைபேசிக்குள் தலையைக் கொடுத்துக் கொண்டாள்.
சுரேஷ் செல்லவும் சிவநேசன் பத்திரிகையை எடுத்து வந்து அவளுக்குக் காட்ட, இது நடக்கும் என்று தெரிந்தே அதுவரை அவள் உருப்போட்டிருந்த வார்த்தைகள் அவளுக்கு நன்கு உதவின.
“நல்லாருக்குப்பா”
“நம்ம கோவில்ல போய் சாமி பாதத்துல வச்சு வாங்கிட்டு வரணும் டா” என்று அவர் சொல்ல, அவள் எதுவும் பேசவில்லை.
அந்த நேரம் சிவநேசனும் கடந்த காலத்திற்குள் சென்று வந்தாரோ என்னவோ? அவரும் அமைதியானார். இருவர் மனமும் அங்கே இல்லாத ஒரு ஜீவனின் மடியில் ஆறுதல் வேண்டித் தலையைச் சாய்த்திருந்தன.
‘நம்ம பொண்ணு கூடவே இரு அன்பு’ என்று சிவநேசனும்,
'சாரி மா' என்று விதுர்ஷாவும் அன்பரசியிடம் மானசீகமாகப் பேசிக் கொண்டிருந்தனர். அன்பரசியின் இன்மை அவர்களை என்றைக்கும் இல்லாமல் அதிகம் பாதித்தது.
அதோ இதோ என்று நாட்கள் ஓட, அவர்களது திருமணம் இன்னும் இருபது நாட்களில் என்றானது. திருமணப்பட்டு இன்னும் எடுக்கவில்லை என்பதை விதுர்ஷாவிற்கு சிவநேசன் நினைவூட்ட அவள், “அவங்க கிட்ட கேட்டுட்டு டேட் ஃபிக்ஸ் பண்ணுங்கப்பா” என்றதோடு நிறுத்திக் கொண்டாள் அவள்.
“பேசியாச்சு மா.. நாளை மறுநாள் சொல்லிருக்காங்க”
“சரிப்பா.. போய்ட்டு வந்துடலாம்”
சிவநேசனிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே மேகநாதனின் நினைவு வந்தது.
'ரொம்ப நாளாக கண்ல படலயே.. ஊருக்கு கிளம்பிட்டானோ?’
'இல்ல.. எப்படியும் ஊருக்குப் போயிருக்க மாட்டான்'
'எதை வச்சு சொல்ற?’
'என்னவோ தோனுது'
‘எப்போ இருந்து அவனை இவ்ளோ நம்ப ஆரம்பிச்ச?’
அவளது மனதின் போராட்டம் கடைசியில் மேல்சொன்ன வினாவில் முடிய, விதுர்ஷா முகத்தைச் சுருக்கினாள்.
மகளின் முகமாறுதல்களை வித்தியாசமாகப் பார்த்தவர், “என்னம்மா யோசனை” என்று கேட்க,
“ஒன்னுமில்ல பா” என்று மழுப்பியவள், தந்தையுடன் கீழே சென்றாள்.
அவளது எண்ணத்தைப் பொய்யாக்காமல் அன்றே மேகநாதன் விதுர்ஷாவிற்கு அழைத்தான்.
யோசனையுடன் அதை உயிர்பித்தவளிடம், “என்ன கல்யாணத்துக்கு தீவிரமா ரெடியாகிட்டு இருக்க போல” என்றான் கிண்டலாக.
“ஆமா”
திமிராகச் சொல்ல வேண்டும் என்று தான் நினைத்தாள். ஆனால், அவளது குரல் கலங்கிப் போய் தான் ஒலித்தது. அதை அலைபேசி அவனுக்கு சரிவர கடத்தவில்லை.
“நீயும் உங்கப்பனும் என்ன ஜென்மங்க டி? எதையுமே யோசிச்சே செய்ய மாட்டியா?” என்று அவன் வார்த்தைகளைக் கடித்துத் துப்ப, அவள் அமைதியாக இருந்தாள்.
“பதில் சொல்லுடி.. என்ன பார்த்தா இளிச்சவாயன் மாதிரி இருக்கா? நான் வரமாட்டேன்ற நம்பிக்கை அந்தாளுக்கு எப்படி வந்துச்சு?” என்றவனின் குரல் அத்தனை கோபத்தை சுமந்திருந்தது.
இதே கேள்வியை அவளும் தந்தையிடம் கேட்டாளே!
“ரெண்டு வருஷமா வராதவனா இப்போ வரப் போறான்?” என்றார் அவர். விதுர்ஷாவால் அதற்கு பதில் பேச முடியவில்லை.
“என்ன பதில் சொல்ல சொல்றீங்க?” அவள் அமைதியாகக் கேட்க,
“பத்திரிகை உங்க வீட்டை விட்டு வெளிய போச்சு.. நான் மனுஷனா இருக்க மாட்டேன்” என்று கத்திவிட்டு அவன் அழைப்பைத் துண்டிக்க, அவனது வார்த்தைகள் மீண்டும் மீண்டும் தலைக்குள் ஓடிக்கொண்டே இருந்தன. முகூர்த்தப்பட்டு எடுக்க வேற நாள் குறித்திருக்க, அவளை இனம் புரியாத பயம் ஆட்கொண்டது.
_________________
ரத்தினவேல் அமைதியாய் இருந்தார். அவரது முகத்தில் இருந்து பிரபாகரனால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஈஸ்வரிக்கு கணவர் சொல்வது தான் வேதவாக்கு. அவருக்கென்று தனி அபிப்ராயம் இருந்தாலும் ரத்தினவேல் என்ன முடிவு எடுத்தாலும் அதற்குத் தான் அவர் கட்டுப்படுவார்.
பிரபாகரன் தந்தையைப் பார்ப்பதை முற்றிலும் தவிர்த்தான். ரதி கையில் குழந்தையை வைத்தபடி நின்று கொண்டிருந்தாள்.
“எதாவது சொல்லுங்கப்பா.. உங்க கிட்ட தானே அண்ணா கேட்குறான்”
ஜெகதீஸ்வரன் தான் அந்த அமைதியைக் கலைத்தது.
“உங்க அண்ணன் கேட்கலடா.. தகவல் சொல்றான்.. அவனுக்குனு ஒரு குடும்பம் ஆகிடுச்சு.. குடும்பத் தலைவன் ஆகிட்டான்ல.. அதான் முடிவையும் அவனா எடுக்கிறான்”
ரத்தினவேல் குரலில் வருத்தத்தைச் சுமந்து சொல்ல, பிரபாகரன் உடனே மறுத்தான்.
“அப்படிலாம் இல்லப்பா.. இந்தக் குடும்பத்துக்கு எப்பவும் நீங்க தான் தலைவன்.. நான் உங்க கிட்ட கேட்கத்தான் செய்றேன்”
“அண்ணி முகத்துக்காக நாம கொஞ்சம் இறங்கிப் போகலாமே அப்பா”
ரத்தினவேல் மருமகளைப் பார்த்தார். ரதி எதுவும் வாய் வார்த்தையாகப் பேசவில்லை தான். ஆனால், இப்போது நடக்கும் பேச்சுவார்த்தைக்கு ரதி தான் காரணம் என்பது அவர் அறியாதது இல்லை. உண்மையில் பிரபாகரன்-ரதியின் திருமணத்தையே அவர் மிகவும் சிரமப்பட்டு ஏற்றுக் கொண்டிருந்தார். இதில் அவர்களது வீட்டினரை அழைக்க வேண்டும் என்றால்??
“உனக்கு எதாவது சொல்லணுமா மா?”
ரதியைப் பார்த்து ரத்தினவேல் கேட்க, “இல்ல மாமா” என்றாள் மறுப்பாக. மனைவியின் முகத்தைப் பார்த்தார்.
“நீ என்ன ஈஸ்வரி சொல்ற?”
“உங்க முடிவு தாங்க.. நீங்க என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதம்”
எல்லோரும் முடிவிற்காக அவரது முகத்தைப் பார்த்தபடி நிற்க,
“நடக்கப் போறது உங்க பையன் காதுகுத்து. அதுக்கு யாரை அழைக்கணும் யாரை அழைக்கக் கூடாதுனு நீங்க தான்யா முடிவு பண்ணணும். நீங்க புருஷன் பொஞ்சாதி என்ன முடிவு எடுத்தாலும் சரி தான்.. நீங்க போய் அழைச்சுட்டு வாங்க” என்றார் அவர்.
“நீங்க இல்லாம நாங்க மட்டும் எப்படிப்பா போய் கூப்பிடுறது? அது முறையா?” என்று பிரபாகரன் தயங்க,
“கல்யாணம் முறையா பண்ணாதப்போ இது தெரியலயா?” என்றார் அவர் அழுத்தமாக.
ரதிக்கு சட்டென்று கண்கள் கலங்க, பிரபாகரன் அமைதியாகிப் போனான்.
“அப்பா இன்னும் பழசையே போட்டுத் தொங்காதீங்க ப்பா.. உங்க பகையும் சரி அவங்க கல்யாணமும் சரி நடந்து முடிஞ்ச ஒன்னு.. அதுக்காக அதையே நினைச்சு நினைச்சு வருத்தப்பட்டா சரியாகிடுமா?”
ஜெகதீஸ்வரன் கண்டிப்பாகக் கேட்க, ரத்தினவேல் அவனை முறைத்தார்.
“என்னடா வாய் நீளுது?” அவர் கோபமாகக் கேட்க,
“வாய் நீளவும் இல்ல குறையவும் இல்ல.. அதே சைஸ்ல தான் இருக்கு” என்று முணுமுணுத்தான் அவன்.
“என்ன முணுமுணுப்பு?”
“இத்தனை வருஷப் பகையை முடிச்சு விடுங்களேன் பா.. உங்களுக்கு அவங்கள பிடிக்கலனா நீங்க பேசாதீங்க.. ஆனா, பத்திரிகை வைக்க வர மாட்டேனு சொன்னா என்ன அர்த்தம்?” என்றவன்,
“அம்மாவுக்கு என்ன குறைச்சல்? நீங்க அம்மாவைக் கல்யாணம் செஞ்சத நினைச்சு இன்னுமா வருத்தப்படுறீங்க?” என்றும் கேட்டு வைக்க,
ரத்தினவேல் மகனின் கேள்வியில் வியப்பாக அவனைப் பார்த்தார். பின் மனைவியையும் பார்க்க, ஈஸ்வரியின் முகம் எதையும் காண்பிக்கவில்லை.
“என்னடா உளர்ற? நான் அப்படி சொன்னேனா?”
“அப்போ இன்னும் அந்தக் குடும்பத்தைப் பார்த்தா முறைச்சுட்டுத் திரியிறதுக்கு என்ன அர்த்தம்?”
ஜெகதீஸ்வரன் விடாமல் அவருடன் மல்லுக்கு நின்றான்.
ஜெகதீஸ்வரன் சொல்லும் கோணத்தில் அவர் இதுவரை யோசித்தது இல்லை. யோசித்திருந்தாலும் அவரது மனதில் இருக்கும் துரோகத்தின் வடு அவரை இளகச் செய்திருக்காது. இதையெல்லாம் மகனே ஆனாலும் அவனிடம் சொல்லத் தயங்கினார் ரத்தினவேல்.
மகனிடம் தயங்கியவர் மனைவியிடம் தயங்கவில்லை. அந்தப் பேச்சு முடிந்து தனிமையில் மனைவியிடம்,
“ஈசு, ஜெகா சொன்ன மாதிரி எதுவும் உனக்கு எண்ணம் இருக்கா?” என்றார்.
“அப்படி எதுவும் இல்லங்க.. எனக்குத் தெரியும்.. உங்களால அந்த துரோகத்தைத் தான் தாங்க முடியல.. இதெல்லாம் நீங்க எனக்கு சொல்லிப் புரிய வைக்கணுமா என்ன?”
ஈஸ்வரியின் புரிதலான பேச்சில் ரத்தினவேல் மனம் நெகிழ்ந்தார். திருமணம் முடிந்த அன்று நினைத்ததை அவர் மீண்டும் நினைத்துக் கொண்டார்.
நகரின் பிரமாண்டமான துணிக்கடையில் திருமணப்பட்டு எடுக்க வந்திருந்தனர்.
சித்தார்த்தின் குடும்பமே ஜவுளி வியாபாரம் தான் என்பதால் அங்கு தான் ஜவுளி எடுப்பதாக முடிவாகி இருந்தது. முந்தைய தினம் சுரேஷ் சிவநேசனுக்கு அழைத்து சரக்கு புதியதாக வந்து கொண்டிருப்பதாகவும் ஒரு வாரம் கழித்து முகூர்த்தப் பட்டு எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூற, சிவநேசன் தான் தயங்கியவாறே இதைச் சொன்னார்.
“நல்ல நாள், நேரம்னு எல்லாம் பார்த்தாச்சு.. அது ஒரு தடங்கலா இருக்க வேணாமே” என்று தயக்கம் கலந்த குரலில் சிவநேசன் சொல்ல,
'இது தானே எங்களுக்கும் வேணும்' என்று ஆசுவாசப்பட்டான் சுரேஷ். அங்கு சென்றால் உண்மை நிலை எதுவும் தெரிந்துவிடுமோ என்ற தயக்கம் அவர்களுக்கும் இருந்தது. பெரிதான கலெக்ஷன் எதுவும் இல்லாமல் தான் அவர்களது கடை இயங்கிக் கொண்டிருந்தது. இப்போது சிவநேசன் வேறு கடை பற்றிப் பேசவும் தான் சுரேஷ் நிம்மதியானான்.
அதன்படி சிவநேசன், மகேஷ்வரன், சித்தார்த், விதுர்ஷா மட்டும் வந்திருந்தனர். சுரேஷ் ஷர்மிளாவை ஹாஸ்பிடல் செக்கப்பிற்கு அழைத்துச் சென்றிருந்தான். முதலில் நல்ல நேரத்தில் முகூர்த்தப்பட்டு எடுக்கட்டும். பிறகு வந்து சேர்ந்து கொள்வதாகச் சொல்லியிருந்தான்.
விதுர்ஷாவிற்கு மனம் அங்கே இல்லை. என்னவெல்லாமோ சமாதானம் சொல்லிப் பார்த்துவிட்டாள். ம்ஹூம்! கண்கள் அந்தக் கடையைச் சுற்றி அலைபாய்ந்து கொண்டே இருந்தது. மேகநாதன் கண்டிப்பாக இங்கு வருவான் என்பது அவளுக்கு நிச்சயம்.
பணிப்பெண் எடுத்துக் காட்டும் சேலைகளை கடமைக்கே எனப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு கட்டத்திற்கு மேல் சித்தார்த்திடம் திரும்பியவள், “நீங்களே செலக்ட் பண்ணுங்களேன்.. எனக்கு ரொம்ப கன்ஃப்யூஸிங்கா இருக்கு” என அவன் உச்சி குளிர்ந்து விட்டான்.
உண்மையில் அந்த விபத்து நடந்ததிலிருந்து அவள் அவனிடம் முன்பு மாதிரி முகம் திருப்புவதில்லை. விதுர்ஷா சொல்லவும் அவனே ஒரு சேலையைத் தேர்வு செய்ய,
“விதுர்ஷாவுக்கு இந்த கலர் நல்லா சூட் ஆகும்” என்று சிவநேசன் சிலாகித்துப் பேச,
“நல்லாருக்கு” என்றவள் புன்னகைக்க முயன்றாள்.
“நிச்சயத்துக்கு இதுக்கு அப்படியே கான்ட்ராஸ்ட்டா கலர் பார்க்கலாமா விது?” என்று கேட்டவாறே அவன் அதையும் பார்வையிட,
“நீங்க பார்த்துட்டு இருங்க சித்தார்த்.. நான் வாஷ்ரூம் யூஸ் பண்ணிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.
அதே தளத்தில் மற்றொரு மூலையில் இருந்த வாஷ்ரூமைப் பயன்படுத்திவிட்டு அவள் திரும்ப வரும் போது வலிய கரம் ஒன்று அங்கிருந்த தடுப்புக்குள் அவளை இழுக்க, கத்த வந்தவள் பின் அவன் முகம் பார்த்துவிட்டு அமைதியானாள்.
“என்னை இங்கே எதிர்பார்க்கலையா? உன் கல்யாணத்துக்கு ட்ரெஸ் எடுக்கலாம்னு வந்தேன்.. ரொம்ப குழப்பமா இருக்கு.. கொஞ்சம் செலக்ட் செஞ்சு தரியா?” என்று அவன் கேட்க, அவன் தன்னைக் கிண்டல் செய்கிறானா என்று அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் முகத்தில் இருந்து எதையும் அவளால் யூகிக்க முடியவில்லை.
அது மறைவான இடம் தான் என்றாலும் வெகுநேரம் அங்கே நின்றிருந்தால் மாட்டிக்கொள்ளும் அபாயம் இருப்பதால் யாருடைய கவனத்தையும் கவராது அவர்களுக்கு எதிரே இருந்த ட்ரையல் ரூமிற்கு அவளை அழைத்துச் சென்று கதவைத் தாழிட்டான் மேகநாதன்.
அவள் தெளிவான மனநிலையில் இல்லை என்பது அவன் இழுத்த இழுப்பிற்கு அவள் வந்ததிலிருந்தே அவனுக்குத் தெரிந்தது.
“கல்யாணத்துக்குப் புடவை எடுத்து முடிச்சாச்சா?” என்று அவனும் அமைதியாகவே கேட்க, அவள் எதுவும் பேசவில்லை.
‘இந்தக் கஷ்டம் இவளுக்குத் தேவையா?’
அவனிடமிருந்து ஒரு பெருமூச்சு கிளம்பியது.
“இப்போ ஏன்டி இப்படி முகத்தைத் தூக்கி வச்சிருக்க?”
அதற்கும் பதிலில்லை. நேரம் செல்லச் செல்ல அவளுக்குக் கண்கள் கலங்க ஆரம்பித்திருந்தது. அவளைப் பார்க்கும் முன் அவள் இங்கே வந்ததற்காக கோபத்தில் இருந்தவன் அவளது கலக்கத்தைப் பார்த்தவுடன் அவளுக்கு ஆதரவாக நின்று கொண்டான்.
“இந்தக் கஷ்டம் நீயா தேடிக்கிட்டது தான?”
அவள் உணர்வற்று அவனைப் பார்த்தாள். அந்தப் பார்வை ஏதோ சொல்லியது. அது என்ன என்று படிக்க முயன்றவன் தோற்றுப்போய் அவளிடமே கேட்டான்.
“ஏன் இப்படி பார்க்குற?”
“என் வாழ்க்கைல எனக்கு கஷ்டத்தைத் தர எதுவும் நான் விரும்பித் தேடிக்கிட்டது இல்ல”
அவள் சொன்ன பதிலில் அவன் முகமும் சேர்த்தே கன்றிப்போக,
“அவனும் நானும் ஒன்னு கிடையாது” என்றான் கடினமாக. அப்படி சொல்லும் போதே அவன் உள்ளம் கூசிப் போனான். இல்லை என்று அவனது மனமே சொல்ல, அந்த உண்மையில் முகம் கருத்துப் போனான் அவன்.
அவளுக்கு அவன் முன்பு நிற்கப் பிடிக்கவில்லை. ஆனால், வெளியே போனால் அங்கே சித்தார்த்தின் அருகே நின்றாக வேண்டுமே? அந்த ஒன்றிற்காகவே அவள் வெளியே செல்ல நினைக்கவில்லை.
அவள் முன்பு நின்று கொண்டிருப்பவன் இதோ கண்களில் அவளுக்கான காதலைச் சுமந்து கொண்டுதான் நிற்கிறான். ஆனால், இதற்கு நேர்மாறாக ஒரு புழுவைப் பார்ப்பது போல பார்த்தவனும் இவன் தான் அல்லவா? அந்தப் பார்வைகளை அவளால் மறக்கத்தான் முடியுமா?
அதிலும் அவனது வார்த்தைகள்! தீக்கங்குகள்! அவளை அவளது காதலை அரும்பும் முன் சாகடித்த வார்த்தைகள்!
“உங்களை விட அவன் மேல்னு சொல்றீங்களா?”
இடக்காக அவள் வினவ, வலித்தாலும் அதை அவன் காட்டிக்கொள்ளவில்லை.
அவளுக்கும் வலி அல்லவா? அவனது வலிகளை ஒதுக்கி, அவளுக்கு மருந்து போட நினைத்தான். இருவரது காயங்களுக்கும் மற்றொருவர் தான் மருந்து. அதை அவன் புரிந்து கொண்டான்.
“உனக்கு அப்படி தோனிச்சுனா அப்படியே வச்சுக்கோ”
சமாதானமாகவே அவன் பேச, அவள் இதழ்களைக் கிண்டலாக வளைத்தாள்.
“சிரிச்ச மாதிரி முகத்தை வச்சுக்கோ.. அழுது வடியாதே” என்று அவன் சொல்ல,
“நான் சிரிச்ச மாதிரி தான் இருக்கேன். அதை நீங்க சொல்லத் தேவையில்லை” என்று எகிறினாள் அவள்.
அவளது இதழ்களில் ஒற்றை விரலை வைத்தவன், “ஷ்ஷ்.. என்னைப் பிடிக்காதுனா எல்லா விஷயத்துக்கும் எதிர்த்துப் பேசித் தான் ஆகணும்னு இல்ல. எதுவும் பேசாத.. நான் சொல்றதைக் கவனி.. இந்தக் கல்யாணம் கண்டிப்பா நடக்காது. நீ இவ்வளவு கஷ்டப்பட வேணாம் புரியுதா? என்னை நம்பு.. நான் இருப்பேன் உன்கூட” என்றான் ஆழ்குரலில்.
அவன் குரல் ஏதோ மாயாஜால வித்தையை நிகழ்த்த, ஏனென்று தெரியாத ஓர் அமைதி அவளுள் பரவியது. இத்தனை நேரமிருந்த அலைப்புறுதல் அவளிடத்தில் அந்த நொடி இல்லை. அதை அவள் உணர்ந்த மாதிரியே அவனும் உணர்ந்தான்.
அவளது இதழ்களில் இருந்து விரலை எடுத்தவன் சுவரில் சாய்ந்து நிற்க, அதில் சுயத்திற்கு வந்தவள் அவனை நேர்கொண்டு பார்த்தாள்.
“ஏன் இந்தக் கல்யாணம் நடக்காது?”
அவளது பார்வையிலும் நிதானத்திலும் அவள் பழைய நிலைக்குத் திரும்பிவிட்டதை உணர்ந்தவன் மனதுக்குள், ‘இந்தக் கல்யாணம் நடந்தே ஆகும்’ என்று அவளை மாதிரியே பேசிக் காட்ட, அவளும் அதைத்தான் அடுத்து சொன்னாள்.
அதில் புன்னகையோடு அவளைப் பார்த்தவன், “என்னை மீறி எந்த ஆம்பளடி உன் கழுத்துல தாலி கட்ட முடியும்?” என்று கேட்க, அவனை முறைத்துப் பார்த்தவள் அடுத்துப் பேசும் முன்,
“கிளம்பு.. தேடப் போறாங்க” என்று அவளை அனுப்பி வைத்தான்.
என்னதான் அவள் அவனை சீண்டிவிடுமாறு பேசிவிட்டு வந்தாலும் அவளுக்கு அவனிடம் பேசிய பிறகு ஒரு தெளிவு வந்திருந்தது. அவள் அங்கே போனபோது சுரேஷும் ஷர்மிளாவும் கூட வந்திருந்தனர்.
“செக்கப் முடிஞ்சதா? டாக்டர் என்ன சொன்னாங்க?” என்று விதுர்ஷா சம்பிரதாயமாகக் கேட்க, ஷர்மிளா தலையை மட்டும் அசைத்தாள்.
விதுர்ஷாவிடம் பேசுவதற்கு அவள் ஆர்வம் காட்டவில்லை. பேறுகால சோர்வு மாதிரி தான் அதை எடுத்துக் கொண்டாள் விதுர்ஷா. சுரேஷைத் தவிர்த்து மற்றவர்களுக்கும் பெரிதாய்த் தோன்றவில்லை. ஷர்மிளாவிற்கு இன்னுமே இந்தத் திருமணத்தில் துளியும் விருப்பமில்லை. சுரேஷ் இன்னமும் அதற்காக அவளிடம் போராடிக் கொண்டுதான் இருக்கிறான்.
சுரேஷுக்கும் ஷர்மிளாவிற்கும் கூட அங்கேயே எடுக்கப்பட, அருகிலிருந்த உணவகத்தில் இரவு உணவை முடித்துவிட்டு அவரவர் வீட்டிற்குச் செல்லலாம் என்று முடிவாகியிருந்தது.
“இவளுக்கு இந்த நேரத்தில் அவுட்சைட் ஃபுட் வேணாம் மாமா.. நான் இவளை நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிடுறேன். நீங்க டின்னர் முடிச்சுட்டு வாங்க” என்று சுரேஷ் சொன்னதும் சரியாயிருக்க, அவர்கள் இருவரை விடுத்து மற்றவர்கள் உணவருந்தச் சென்றனர்.
உணவகத்திலும் மேகநாதன் இருந்தான். யாருடைய பார்வையிலும் படாதவாறு ஒதுங்கி அமர்ந்து கொண்டவன் விதுர்ஷாவின் முகத்தை மட்டும் அவ்வப்போது ஆராய்ந்து கொண்டிருந்தான். அதை கவனித்த விதுர்ஷாவின் இதழ்களில் கசப்பான புன்னகை ஒட்டிக்கொண்டது.
உணவை முடித்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்த கணமே, “விது.. ரெஃப்ரெஷ் ஆகிட்டு என் ரூம்க்கு வா” என்று சொல்லிவிட்டு சிவநேசன் நடக்க, முகம் சுருக்கியவளோ தோள்களைக் குலுக்கிக் கொண்டு தன் அறைக்குச் சென்றாள்.
சேலையிலிருந்து இலகுவான உடைக்கு மாறியவள் முகம் கழுவிவிட்டு தந்தையின் அறைக்குச் சென்றாள். சிவநேசன் முகத்தில் குழப்பமான பாவத்தை சுமந்தவாறு அமர்ந்திருந்தார்.
“எப்போ வந்தாரு? உன்னை மீட் பண்ணி பிரச்சனை எதுவும் பண்ணாரா?”
“கல்யாண விஷயம் தெரிஞ்சு வந்திருக்காரு”
“வாட்? எப்படித் தெரியும்?”
“ஐ டோண்ட் நோ ப்பா.. இந்தக் கல்யாணத்தை நிறுத்துறதா சொல்லிட்டு இருக்காரு”
விதுர்ஷா சாதாரணமாகச் சொல்ல, சிவநேசன் முகம் கோபத்தில் சிவந்தது.
“கல்யாணத்தை நிறுத்துவேனு சொல்ற அளவுக்கு அவன் உன்ட்ட பேசிருக்கான்.. என்கிட்ட இதையெல்லாம் முன்னாடியே சொல்லிருக்க வேணாமா விது?” என்று மகளைக் கடிய,
“சொல்லிருந்தா மட்டும் என்ன பண்ணியிருப்பீங்க?” என்றாள் அவள்.
“கமிஷனருக்கு ஒரு கால் பண்ணுனா போதும் மா.. உள்ளே தூக்கி வச்சு கம்பி எண்ண விட்டிருப்பாங்க”
“அடுத்த ஒரு மணி நேரத்துல லாயரோட உங்க பொண்ணு போலீஸ் ஸ்டேஷன் போய் நின்னுருப்பா”
மிகவும் சாதாரணமாக விதுர்ஷா சொன்ன செய்தியில் சிவநேசன் கூர்மையாக மகளைப் பார்த்தார்.
“என்ன சொல்ற விது?”
“யெஸ் ப்பா.. அவர் வேண்டாம்னு நான் சொன்னேன் தான். அவர் எனக்கு இப்பவும் வேணாம் தான். பட், என்னவோ ஆகட்டும்னு என்னால விட முடியாது. கொஞ்சமே கொஞ்சம் நன்றிக்கடன் இருக்கு”
“டூ யூ லவ் ஹிம்?”
சந்தேகமாக அவர் கேட்க, தந்தையைப் பார்த்துப் புன்னகைத்தாள் அவள்.
“டெஃபனெட்லி நோ..”
மகளிடம் பேசினால் தெளிவு கிடைக்கும் என்று எண்ணியவர் மேலும் குழம்பிப் போனார்.
“லுக் விது.. ஐ நோ யு ஆர் இன்டிபெண்டன்ட். உன்னுடைய முடிவு எப்பவும் சரியாகத்தான் இருக்கும்னு நானே அடிக்கடி நினைக்கிறதுண்டு. பட், இது சரி கிடையாது”
“எது?”
“நீ இன்னும் அவனோடு பேசுறது.. உன்கிட்ட வந்து பேச வரும்போதே நீ என்கிட்ட சொல்லியிருக்கணும்”
“நான் குழந்தை கிடையாதுப்பா.. ப்ளீஸ் லீவ் திஸ் மேட்டர்” என்று சலிப்பாகச் சொன்னவள் அவளது அறையை நோக்கிச் சென்றாள்.
‘படிப்பு, வேலை, காதல், கல்யாணம்னு எத்தனையோ பேரோட வாழ்க்கை எவ்ளோ ஸ்மூத்தா போகுது.. எனக்கும் தான் இருக்கே' என்று நினைத்தவள் பெருமூச்சோடு படுக்கையில் விழுந்தாள்.
தூக்கம் வருவேனா என்றது.. புரண்டு புரண்டு படுத்தவள் இது வேலைக்கு ஆகாது என்று எண்ணி பால்கனியில் போய் அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்து கொண்டாள்.
இருள் அப்பியிருந்த வானில் அங்கங்கே முத்துக்களைப் பதித்தது போல விண்மீன்கள் ஒட்டியிருந்தன. வளர்ந்து கொண்டிருந்த வெண்ணிலா ஒட்டு மொத்த வானத்திற்குமான சோபையைக் கூட்டிக் கொண்டிருந்தது.
சிறிது நேரம் எந்த நினைவையும் அவளை அண்டவிடாமல் நிலவையே பார்த்துக் கொண்டிருந்தவளின் மனம் கொஞ்சம் சமன்பட்டது.
அவள் நினைவில் மேகநாதனோ, சித்தார்த்தோ இல்லை. அன்பரசியின் நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக அவளை ஆக்ரமிக்க, அந்த நினைவுகளுடனே வெகுநேரம் அங்கேயே அமர்ந்திருந்தவள், அப்படியே தூங்கியும் போனாள்.
கல்லூரிக்குச் சென்ற விதுர்ஷாவிற்கு தாங்க முடியாத அளவிற்குத் தலை வலிக்க, மெது மெதுவாக உடலும் சூடாக, தாங்க முடியாமல் மீண்டும் வீட்டிற்கே திரும்பினாள். முதல் நாள் பனியில் அமர்ந்தது அவளுக்கு சேராமல் போயிருந்தது.
“வீட்டுக்குப் போங்க அண்ணா” என்று சொல்லிவிட்டு காரில் அவள் ஏறி அமர, டிரைவர் முத்து வேகமாக காரில் ஏறி அமர்ந்தார்.
அன்று பார்த்து மேகநாதன் சிவநேசனுடன் பேசுவதற்காக வந்திருந்தான். முதல் நாள் விதுர்ஷாவின் முகத்தில் அவன் கண்ட சோர்வில் அவன் இதற்குமேல் நேரம் தாழ்த்த வேண்டாமென்று சிவநேசனிடம் பேசுவதற்காக வீட்டிற்கே வந்திருருந்தான். மேகநாதனின் வருகையை சிவநேசன் எதிர்பார்த்திருக்கவில்லை.
வள்ளி அவசரமாக அவனது விருப்பமான ரஸ்க் அல்வாவையும் வெங்காய போண்டாவையும் செய்து இருவருக்கும் முன் வைக்க, சிவநேசன் பார்த்த பார்வையில் வள்ளிக்கு உள்ளே குளிரெடுத்தது.
மேகநாதன் சங்கடமாக வள்ளியைப் பார்த்து, “தண்ணி மட்டும் போதும் கா.. இதெல்லாம் எடுத்துட்டுப் போங்க” என்று கூற,
“அட.. உங்களுக்காகத் தான் தம்பி செஞ்சேன். உங்கள சாப்பிட வைக்காம சும்மா அனுப்புனா சாமியா போன எங்கம்மா கீழே வந்து என்னை அடிச்சாலும் அடிப்பாங்க” என்றார் அவர் விளையாட்டு போல.
அது சிவநேசனுக்கான செய்தி என்பது அவருக்குப் புரியாமலா போகும்? அவர் கடினமான முகத்துடன் அமைதியாக இருக்க, மேகநாதன் கண் அசைவில் வள்ளி அங்கிருந்து அகன்றார்.
“எதுக்கு இப்போ வந்திருக்கீங்க? அவளை நிம்மதியா இருக்க விடுறதா எண்ணமே இல்லையா?”
சிவநேசன் சுள்ளென்று கேட்க, மேகநாதன் முகம் கடினமானது. அவன் சாய்வாக அமர்ந்து கொண்டு கூர்மையாக சிவநேசனின் முகத்தைப் பார்த்தான்.
“யாரைக் கேட்டு எந்த நம்பிக்கைல இந்தக் கல்யாண ஏற்பாடெல்லாம் செய்றீங்க?”
“என் பொண்ணைக் கேட்டு, என் பொண்ணு சம்மதம் சொல்லிட்டான்ற நம்பிக்கைல பண்றேன்”
அவரும் அவன் கேள்விக்கு சளைக்காமல் பதில் சொல்ல, அவன் சிரித்தான்.
“அவளுக்கு சம்மதமா? இல்ல அதையும் இதையும் பேசி சம்மதம்னு சொல்ல வைச்சீங்களா?”
மேகநாதன் சரியாக நூல் பிடித்துவிட, சிவநேசன் அமைதியாக இருந்தார்.
“நீங்களா நிறுத்திட்டா உங்களுக்கு மரியாதை.. இல்ல நிறுத்த வைப்பேன்” என்று நிறுத்த,
“இப்போ தான் என் பொண்ணு வாழ ஆரம்பிக்கப் போறா... அதையும் எதாவது ப்ளே பண்ணி கெடுத்து விடாதீங்க”
“உங்க பொண்ணுக்கு நல்லது செய்றேனு ரொம்ப பெரிய தப்பு பண்றீங்க நீங்க”
“என்ன தப்பு பண்றாங்க?” என்ற குரலில் இருவரும் ஒருசேர வாயிலைப் பார்க்க, அங்கே விதுர்ஷா நின்றிருந்தாள்.
விதுர்ஷா மேகநாதன் வீடு வரை வருவான் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. வெளியே அவனுடைய புல்லட்டைப் பார்த்துவிட்டு அவசரமாக உள்ளே வந்தவளின் செவியில் மேகநாதனின் கடைசி வார்த்தைகள் மட்டுமே விழுந்தது.
மேகநாதன் முதலில் கவனித்தது அவளது சோர்ந்த முகத்தைத் தான்!
“என்னாச்சு உடம்புக்கு?”
அவளது கேள்வியை ஒதுக்கித் தள்ளிவிட்டு அவன் கேள்வி கேட்க, அதில் இன்னும் சூடானவள் தந்தையை முறைத்துப் பார்த்தாள்.
“என்னப்பா நடக்குது இங்க? ஏன் இவர் கூட உட்கார்ந்து பேசிட்டு இருக்கீங்க?” என்றவள் கண்ணில் அவன் முன்னிருந்த சிற்றுண்டி தட்டும் சேர்ந்து விழ, அது வள்ளியின் வேலை என்பது புரிந்தது.
“க்ளப் போகலாம்னு தான் கிளம்பினேன். திடீர்னு வந்து நிக்கிறாரு”
சிவநேசன் சொல்ல, மேகநாதனைப் பார்த்தாள் அவள்.
“என்ன வேணும்?” என்றாள் ஒற்றைச் சொல்லாய்.
'நீ தான் வேணும்னு சொன்னா வந்திருவ பாரு’ என்று அவனது மனம் அலுப்பாய் நினைத்துக் கொண்டது.
“எதுக்குடி இப்படி பிடிவாதம் பிடிக்கிற? நான் தப்பு செஞ்சேனு தான் ஒத்துக்கிறேனே.. மன்னிப்பும் கேட்டுட்டேன். இதுக்கு மேல என்ன எதிர்பார்க்குற? நீ தப்பே செய்யலயா? உன்னை மாதிரி எனக்கும் வலிக்குது.. அதெல்லாம் மீறி தானே நீ வேணும்னு வந்து நிற்கிறேன்”
விதுர்ஷா அழுத்தமாக அவனைப் பார்த்தாள். அவளது பார்வை என்ன செய்தி சொன்னதோ அது அச்சு மாறாமல் அவனுக்கு சென்றடைந்தது. அந்த செய்தியில் சட்டென்று உள்ளம் கூச, அவன் கண்களை மூடித் திறந்தான்.
பின் ஏதோ ஒரு முடிவில் விழிகளைத் திறந்தவன் அவளருகில் வந்து அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில், “சாரிடி.. நான் கோபத்துல தெரியாம..” என்று சொல்லும் போதே அவளது கண்கள் கலங்க ஆரம்பித்தது.
அவனது வார்த்தைகளை அவனாலே மன்னிக்க முடியாது எனும் போது அவளால் எப்படி முடியும்?
“சாரி சொன்னா சரியாகிடுமா? நீ சொல்லு.. சாரி சொன்னா சரியாகிடுமா?” என்றவள் முகத்தை மூடிக்கொண்டு அழ, சமையலறையிலிருந்து வள்ளி பதறிப்போய் வெளியே வந்தார். சிவநேசனுக்கும் மகளின் இந்த நிலை பதட்டத்தைத் தர, அவர் அருகில் செல்வதற்குள் மேகநாதன் அவளை இழுத்து இறுக்கமாக அணைத்திருந்தான்.
மேகநாதனின் அணைப்புக்குள் எந்தவித எதிர்ப்பையும் காட்டாமல் அவள் இருந்ததைக் கண்டு சிவனேசன் யோசனையுடன் அவர்களைப் பார்த்தார்.
“நீ போய்டு.. நீ எனக்கு வேணாம்.. நீ போய்டு” என்று திரும்பத் திரும்ப அவள் சொல்லிக் கொண்டிருக்க, மேகநாதனின் கண்களும் சேர்த்தே கலங்கியது.
அவனது முன்கோபத்தால் எத்தனை பெரிய சிக்கலை இழுத்துக் கொண்டிருக்கிறான்?
அவனது அணைப்புக்குள் விதுர்ஷாவோ அப்போதுதான் தான் இருக்கும் நிலையறிந்து விலக, அவளது கண்களில் பதட்டத்துடன் சமையலறை வாயிலில் நின்றிருந்த வள்ளி தென்பட்டார்.
“நீங்க தான? நீங்க தானக்கா இவருக்குத் தகவல் சொன்னது? எனக்குத் தெரியும்” என்று அவள் சொல்ல, சிவநேசன் அதிர்வுடன் வள்ளியைப் பார்த்தார்.
“இல்ல பாப்பா” என்று அவர் வேகமாக மறுக்க,
“பொய் சொல்லாதீங்க.. உங்களுக்கு என்னை விட இவர் முக்கியமா போய்ட்டாரா?” என்றாள் ஆத்திரத்துடன்.
“என்ன பாப்பா இப்படி பேசுற? உன்னை விட யாரும் எனக்கு முக்கியமில்ல”
வள்ளியும் கண்ணீருடன் சொல்ல, சிவநேசன் தான் ஓய்ந்து போனார்.
வள்ளி அவருக்குத் தகவல் சொல்லியிருக்கிறார் என்பதே அவருக்கு அதிர்ச்சி. அதிலும் அது தெரிந்தே தன் மகள் இத்தனை நாள் அமைதியாக இருந்திருக்கிறாள் என்றால் என்னதான் விதுர்ஷாவின் மனதில் இருக்கிறது?
“விது..”
வள்ளியைக் காப்பாற்ற வேண்டி மேகநாதன் பேச்சை திசைமாற்ற, பெருங்கோபத்துடன் அவனை நோக்கித் திரும்பியவள், “வெளியே போங்க” என்று மட்டும் சொன்னாள்.
மனமும் உடலும் ஓய்ந்து கண்ணீர் தேங்கிய கண்களோடு தன் முன்னே நின்றவளைக் கண்டு என்ன நினைத்தானோ, “நீ மேல போ.. நான் இங்க இருந்து போய்டுறேன்.. அக்கா கூப்ட்டு போங்க” என்று குரலில் எவ்வித உணர்வையும் காட்டாமல் அவன் வள்ளியிடம் சொல்ல, வள்ளி விதுர்ஷாவை அங்கிருந்து அழைத்துச் சென்றார்.
“வீட்டை விட்டுப் போய்டுறேனு தான் சொல்லியிருக்கேன். சென்னையை விட்டுப் போறேனு சொல்லல.. இன்னும் நான் விவாகரத்துக்கு சம்மதிக்கல.. அது ஞாபகம் இருக்கட்டும்” என்று சிவநேசனிடம் கடுமையாகச் சொன்னவன் வெளியேறும் முன் அனிச்சையாய் மேலே பார்த்தான். விதுர்ஷாவின் அறையிலிருந்து வள்ளி வெளியே வருவது தெரிந்தது.
“காய்ச்சல் போல.. பார்த்துக்கோங்க” என்று வள்ளியிடம் கீழிருந்தவாறே கூறியவன் அங்கிருந்து விடுவிடுவென்று வெளியேறிவிட்டான்.
விதுர்ஷாவிற்கு காய்ச்சல் என்று அவன் கூறியதும் தான் சிவநேசன் தன் உணர்வுக்கு வந்தவர் மகளின் அறைக்கு விரைந்தார். வள்ளி பயத்துடன் சிவநேசன் முகம் பார்க்க, வள்ளியைக் கண்டுகொள்ளாமல் அவர் உள்ளே சென்றார். அங்கே விது சுவரில் மாட்டப்பட்டிருந்த ஓவியத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தாள்.
“உடம்புக்கு எதுவும் செய்யுதாமா? சீக்கிரமே வந்துட்டியே” என்றவாறு அவளது அருகில் அமர்ந்தவர், அவளது கைகளைப் பிடிக்க அது லேசான சூடாக இருந்தது.
“காய்ச்சல் அடிக்கிற மாதிரி இருக்கே.. வா எழுந்திரு ஹாஸ்பிடல் போகலாம்”
சிவநேசன் அவளை எழுப்ப, அவள் சோர்வுடன் அப்படியே படுத்துவிட்டாள்.
“வேணாம் பா.. தலைவலி தான் இருக்கு.. ரெஸ்ட் எடுத்தா சரியா போகும்”
உடல் சோர்வும் மனச்சோர்வும் சேர்ந்து அவளை வாட்ட, அவளால் அதற்கு மேல் முடியாமல் அப்படியே படுத்துவிட்டாள். மகளிடம் பேச வேண்டும் என்று நினைத்தவரும் அவளிருந்த நிலையில், முதலில் சரியாகட்டும் என எதுவும் பேசாமல் வந்துவிட்டார்.
வள்ளி தயங்கியபடியே சிவநேசன் முன் நிற்க,
“நீங்க இப்படி பண்ணுவீங்கனு நான் நினைக்கல வள்ளி” என்றார் சிவநேசன்.
“பாப்பாவுக்காக தான் அய்யா.. அதுவுமில்லாம நம்ம அம்மா ஆசை இது”
வள்ளியும் எல்லாவற்றையும் பேசிவிடுவது என்ற முடிவில் இருந்தார்.
வள்ளி தயக்கமில்லாமல் இதுதான் உண்மை என்று சொல்ல, சிவநேசனும் அதைத் தான் நினைத்துக் கொண்டிருந்தார்.
“நீங்க இதை என்கிட்ட தான சொல்லியிருக்கணும்?”
“மன்னிச்சிடுங்க ஐயா.. எனக்கு பாப்பா மனசுல என்ன நினைக்குதுனு அப்போ உறுதியா தெர்ல.. அதான் தம்பியை வரச் சொன்னேன்”
“போய் வேலைகளைக் கவனிங்க” என்று சொன்னவர் மன்னித்ததாகக் கூறவில்லை. நாளைக்கே விதுர்ஷாவும் மேகநாதனும் சேர்ந்து வாழ்ந்தால் அவரது மனக்கசப்பு மறைந்துவிடும் என்பதை உணர்ந்து வள்ளியும் அதற்கு மேல் அவரிடம் மன்னிப்பை யாசிக்காமல் சென்றுவிட்டார்.
___________
விதுர்ஷாவின் உணர்வுகள் அவனுக்கு நன்றாகவே புரிந்தன. அவன் பேசிவிட்ட வார்த்தைகளின் கணம் மிகப் பெரியது. அதை மன்னிப்பால் அவ்வளவு எளிதாகச் சரி செய்துவிட முடியாதுதான். சரிசெய்வதற்கான வாய்ப்பே இல்லையோ என்ற எண்ணம் எழும்போதே தலையை உலுக்கிக் கொண்டவன் எப்படியாயினும் சரி செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.
சிவநேசனுக்கு சித்தார்த்தைப் பற்றி சொல்ல வேண்டும் என்று போனவன் விதுர்ஷா திடீரென வந்ததால் அதைப் பற்றி பேசாமலே வந்திருந்தான். மனம் ஒரு மாதிரியாக இருக்க, சுரேந்திரனுக்கு அழைத்தவன் சிறிது நேரம் பேச, அவனிடம் இங்கு நடந்ததை எல்லாம் கூறினான். அதைக் கேட்ட சுரேந்திரனோ,
“மச்சான்.. பேசாம பொண்ணைத் தூக்குடா” என்க,
மேகநாதன், “ஹாஹா.. அவளை எல்லாம் தூக்கிட்டு நடக்க முடியாதுடா” என்று விளையாட்டாகச் சொன்னாலும் அதில் அவனது மறுப்பு தெரிந்தது.
“வேற என்ன தான்டா செய்றது?”
“தெரியல.. எந்தப் பேய் உன் தங்கச்சி உடம்புல ஏறி இருக்கோ.. அதுவா கொஞ்சம் வழிவிட்டா தான்” என்றவன் பெருமூச்சுவிட்டான்.
“சீக்கிரம் வேலையை முடிச்சுட்டு இந்தப்பக்கம் வா டா”
“ஏன்டா தனியா சமாளிக்க முடியலயா?”
“அப்படி இல்ல.. இப்போதைக்கு பஸ் எப்பவும் போல ட்ரிப் அடிக்குது.. கார் எல்லாம் லோக்கல் சவாரி தான்டா போகுது.. வெளில எங்கேயாவது கேட்டா ஆள் போட்டுத்தான் அனுப்பனும்”
“அதுக்கெல்லாம் யோசிக்காத.. லாபம் இல்லைனாலும் சரி.. ஆள் போட்டே செய்.. எல்லா வேலையையும் தலையில் போட்டுக்காத.. முக்கியமா கார் ட்ரிப்க்கு நீ போகவே கூடாது”
அவர்களின் ஊர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தது. அவர்களது பஸ் அங்கிருந்து மதுரைக்கு தினமும் நான்கு ட்ரிப் அடிக்கும். டிரைவர் கண்டக்டர் என அதற்குத் தனியாக ஆள் போட்டிருந்தான். அதுபோக நான்கு கார்கள் இருந்தன. பெரும்பாலும் மேகநாதனும் சுரேந்திரனும் அதை ஓட்டிக் கொள்வார்கள். நான்கு கார்களும் ஒரே நேரத்தில் புக் ஆவது அபூர்வம். அந்த மாதிரி சமயத்தில் மட்டும் ஆள் போட்டுக் கொள்வார்கள்.
“அப்புறம் மச்சான்.. நம்ம ட்ராவல்ஸ் கூட வேற எதாவது செய்யலாமாடா? இதைப் பத்தி நீயும் யோசி.. நானும் யோசிக்கிறேன்.. எதாவது க்ளிக் ஆச்சுனா மூவ் பண்ணலாம்”
“டேய்.. அங்க உன் வாழ்க்கையைப் பார்க்க அனுப்பி வைச்சா அங்க போய் பிஸினெஸ் யோசிப்பியா?” என்று சலித்தான் சுரேந்திரன்.
“உன் வியாக்கியானம்லா இங்க வந்து பேசுடா. அங்க எதுக்குப் போனியோ அதைப் பாரு.. தங்கச்சியை சமாதானம் பண்ணி இங்கே ஊருக்குக் கூட்டிட்டு வர வழியைப் பாரு”
“அதையெல்லாம் முருகன் பார்த்துப்பாரு”
‘முருகனுக்கு வேற வேலை இல்ல பாரு என்று நினைத்த சுரேந்திரன் அதை வெளியில் சொல்லவில்லை.
விதுர்ஷாவை சரிகட்டுவது அவ்வளவு சுலபம் இல்லை என்பது சுரேந்திரனின் எண்ணம். அதில் மேகநாதனுக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், சமாளிக்கலாம் என்று இருந்தான்.
சுரேந்திரனிடம் பேசிவிட்டு வைத்தவனை, அந்த நேரம் சித்தார்த் அழைக்க, யோசனையுடன் அழைப்பை எடுத்தான் அவன். சித்தார்த் அவனைச் சந்திக்கக் கேட்க, அவனும் சரி என்றான். வழக்கமான அவர்களது சந்திப்பு இடமான பாருக்குச் சென்றான் மேகநாதன்.
சித்தார்த்தின் முகம் கோபத்தையும் ஆத்திரத்தையும் சுமந்திருந்தது. அவன் வரிசையாக ஒவ்வொரு பெக்காக உள்ளே தள்ள, மேகநாதனுக்கோ பொறுமை பறந்தது.
“என்ன விஷயம் பாஸ்.. வந்ததுல இருந்து குடிச்சுட்டே இருக்கீங்க.. விசயத்தைச் சொல்ல மாட்டேங்குறீங்க” என்று அவன் பொறுமை பறந்து போய் கேட்க,
“எங்க வீட்ல என்ன ஏமாத்திட்டாங்க ப்ரோ” என்றவன் அடுத்து சொன்ன விஷயங்களில் மேகநாதன், மனதுக்குள் குத்தாட்டம் ஒன்று தான் போடவில்லை.
அவன் குழறியபடி கேட்க, “அதுக்குத் தானே ராஜா நான் இருக்கேன்” என்றவன் புன்னகைத்தான்.
‘ஒரே நாள்ல எல்லாத்தையும் தீர்த்து வச்சுட்டியே முருகா.. உன் கருணையே கருணை’ என்று அவசரமாகமாக நன்றியை வைத்தான்.
சித்தார்த் அளவுக்கு அதிகமாகவே அன்று குடித்திருந்ததால் மேகநாதனின் முகமாற்றங்களை கவனிக்கும் நிலையில் இல்லை. இன்னும்
ஒரு பாட்டிலை அவன் திறக்கப் போக, மேகநாதன் தடுத்து அவனது அறைக்கு அழைத்து வந்திருந்தான்.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.