ஒரு மங்கையின் கனவு
கதிரவன் தன் செங்கதிர்கள் கொண்டு பூமியை தட்டி எழுப்பி அரவணைக்க தன் தாயின் தட்டலில் சிணுங்கலுடன் எழுந்தது பூமி மட்டுமல்ல அவளுள் இருக்கும் ஒவ்வொரு அனுக்களும் அதாவது மனிதர்கள்..
அக் காலை வேளையில் வேலைக்கு செல்வதெற்கென இளைஞர்களும் பெரியவர்களும் பம்பரம் போல் சுழன்று தம் காலை கடன்களை முடித்து இன்றாவது பஸ்ஸை நேரத்திற்கு பிடித்து முன் சீட்டில் அமர்ந்து விட வேண்டும் என்று விறுவிறுவென பஸ் தரிப்பிடத்திற்கு ஓட சொந்த வண்டி உள்ளவர்களோ 'இன்னைக்கு பெற்றோல் முடிஞ்சிராம இருக்கனும் ஆண்டவா..' என மனதில் புலம்பியவாறு தத்தமது வண்டிகளில் செல்ல, அம்மாவின் கை வண்ணத்தில் முதுகில் இரண்டு அடிகளை வாங்கி அழுது கொண்டே பாடசாலை சென்றனர் சின்னஞ்சிறு பூக்கள்.
இவ்வாறு அந்நாள் காலை அமைய, சூர்யனே எழுவதற்கு முன் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து இறைவனை வணங்கி விட்டு தன்னுடைய புத்தகத்தில் ஆர்வமாக எழுதிக் கொண்டிருந்தவள் சட்டென நிமிர்ந்து எதிரே சுற்றில் இருந்த மணியை பார்க்க அது எட்டு என காட்டியது.
"அச்சோ இவ்வளவு நேரமாவா எழுதிக்கிட்டு இருந்தோம்.. எழுத ஆரம்பிச்சா நேரம் போறதே தெரியுறது இல்லை.." என மானசீகமாக தலையிலடித்துக் கொண்டவள் தன் பேனாவை புத்தகத்தில் வைத்து மூடவும் அவள் அம்மா "மீரா.." என கத்தவும் சரியாக இருந்தது.
"இதோ வரேன் மா.." என கத்தியவள் மனதிலே 'இன்னைக்காவது அம்மாகிட்ட என் இலட்சியத்தை பத்தி சொல்லியாகனும்..' என நினைத்தவாறு விறுவிறுவென குளியலறைக்குள் புகுந்து குளித்து உடை மாற்றி வந்தாள் மீரா.தனக்கான அடையாளத்துக்காக போராடும் மங்கை.
ஹோலிற்கு வந்தவளை கண்ட அவள் பாட்டி முகத்தை சுழித்தவாறு,
"க்கும்.. எப்பவும் போல கொட்டிக்க வந்துட்டா.. பொம்பள பிள்ளையா வீட்டு வேலைய பன்னனும் அந்த எண்ணம் எல்லாம் இல்லை.. தண்டச்சோறாட்டாம் இருக்கா.. " என முணுமுணுக்க,
இதைக்கேட்டவளோ " இரண்டாயிரத்து இருநூற்றி இருபத்திரெண்டு" என அவர் இதை சொல்லும் தடவையை சொல்லி விட்டு செல்ல அவருக்கோ கோபம் ஏகத்துக்கும் எகிறியது.
கிட்ச்சனுக்கு சென்றவள் தன் அம்மா இருப்பதை பார்த்து "அம்மா.." என தயங்கியவாறு நிற்க, அவள் குரலில் திரும்பி பார்த்தவர்,
"மீரா உன்கிட்ட ஒன்னு சொல்லனும்.." என்று சொல்ல, இவளோ தான் சொல்ல வந்ததை விட்டுவிட்டு அவரையே கேள்வியாக பார்த்தாள்.
"என்னோட கபோர்ட்ல சாரி எடுத்து வச்சிருக்கேன்.. இன்னைக்கு உன்ன பொண்ணு பார்க்க வராங்க.. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரதுக்குள்ள சீக்கிரம் ரெடி ஆகிறு.." என்று விட்டு அவள் அம்மா வேலையில் கவனமாக இதைக்கேட்டவளுக்கு தான் தலையில் இடி இறங்கியது போன்று இருந்தது.
தயங்கியவாறு, "அம்மா இப்போவே கல்யாணம் பன்னனுமா.. இன்னும் இரண்டு வருஷம்.." என மீரா இழுக்க,
அவளை முறைத்தவர்,
"நீ பன்னி தான் ஆகனும்.. நீ அந்த பேனாவும் பேப்பருமா அலைறது என்னால பார்த்துகிட்டு இருக்க முடியாது.. அப்பா இல்லாத பொண்ணுன்னு நானும் விட்டா உனக்குன்னு ஒரு தங்கச்சி இருக்கா அவளையும் கட்டிக் கொடுக்கனும்னு ஒரு நினைப்பு இல்லாம அவ்வளவு பெரிய படிப்பு படிக்க யுனிவர்ஸ்ஸிடில வாய்ப்பு கிடைச்சும் முட்டாள்தனமா விட்டுட்டு எப்போ எழுத ஆரம்பிச்சியோ இதையே கட்டிக்கிட்டு அழுகுற.. அப்பிடி வெட்டியா அந்த பேப்பர்ல கிறுக்குறதுல உனக்கு என்ன தான் கிடைக்க போகுது.." என்று அவர் திட்ட,
"அம்மா புரிஞ்சிக்கோங்க மா.. எனக்கு அது படிக்க இன்ட்ரெஸ்ட் இல்லை.. பெரிய ரைட்டர் ஆகனும்னு தான் கனவு இருக்கு.. இப்போ நா சின்ன சின்ன கதையா தான் எழுதிக்கிட்டு இருக்கேன்.. இதை வாசிச்சு கொஞ்ச பேர் சொல்ற விமர்சனமே மனசுக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு மா.. நிறைய பேருக்கு என்னோட வார்த்தை புடிச்சிருக்கு மா.. இன்னும் ஒரு வருஷம் அதுக்குள்ள இந்த ஃபீல்ட்ல எனக்குன்னு ஒரு அடையாளத்தை உருவாக்கிகிறேன் மா.. கல்யாணம் ஆனா என்ன நடக்கும்னு சொல்ல முடியாது.. அவங்க இதை எக்ஸெப்ட் பன்னிக்காம இருக்க கூட வாய்ப்பிருக்கு.." என மீரா இதை புரிய வைக்க முயல,
"அவங்க ஏத்துக்கலன்னா விட்டுறு.. மாப்பிள்ளை என்ன சொல்றாரோ அது படி நடந்துக்கோ அது போதும்.. பெருசா அடையாளத்துக்காக போராட போறேன் கனவுக்காக போராட போறேன்னு சொல்லி புகுந்த வீட்ல எங்க மானத்தை வாங்கிராத.. இதுல நீ சாதிச்சு எங்கள பெருமைப்படுத்துற விட உன் புகுந்த வீட்ல நல்ல பேர் வாங்கி பொறந்த வீட்டு பெருமையை காப்பாத்து அது போதும்.. இனிமேலும் வெட்டியா பேப்பர் பேனான்னு சுத்திகிட்டு இருக்காதா.. அவ்வளவு தான் சொல்லிட்டேன்.. பொண்ணுங்கன்னா வீட்டு வேலைய பாத்துகிட்டு மாப்பிள்ளைக்கு சேவை செய்றது அவ்வளவு தான் கனவு காணுரதோட நிறுத்திக்கனும்.. அதை நிறைவேத்துறேன்னு பைத்தியக்காரத்தனமா நடந்துக்க கூடாது.. முதல்ல பொண்ணா புகுந்த வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி வீட்டு வேலை எல்லா கத்துக்கோ புரியுதா.. போ போய் வீட்ட கூட்டி பெருக்கு.." என அவர் நகர்ந்து செல்ல,
தரையையே வெறித்தவாறு கண்கலங்கி நின்றவள், 'அப்போ நம்மளால கனவு மட்டுமா காண முடியும்.. எனக்குன்னு ஒரு அடையாளத்தை உருவாக்க முடியாதா.." என மனதில் நினைத்தவாறு தன் கனவு கோட்டையில் விழுந்த முதல் அடியில் மொத்தமாக சிதைந்து போய் நின்றுக் கொண்டிருந்தாள் அந்த மங்கை. அறைக்கு வந்தவள் வெடித்து தொலைபேசியில் தன் நண்பியிடம் சொல்லி அழ அவளுக்கு என்றும் ஆறுதலாக இருக்கும் அவள் நண்பியால் கூட அன்று அவளை சமாதானம் செய்ய போதும் போதும் என்று ஆகிவிட்டது.
மாலை மாப்பிள்ளை வீட்டினர் வந்திருக்க மீராவை பார்த்த கதிருக்கு மிகவும் பிடித்து விட மாப்பிள்ளை வீட்டினர் தங்களது சம்மதத்தை தெரிவித்தனர். இங்கு மீரா தான் எதிலுமே ஈடுபாடு இல்லாமல் தன் தாயின் சந்தோஷத்திற்காக வரவழைக்கப்பட்ட கட்டாய புன்னகையுடன் பொம்மை போல் அமர்ந்திருந்தாள்.
கதிர் மீராவின் முகத்தில் உள்ள கலக்கத்தை புரிந்து கொண்டவன் போல் அவளிடம் தனியாக பேச ஆசைப்படுவதாக கூற மீராவின் தாயும் "போமா அதான் மாப்பிள்ளை பேசனும்னு கூப்பிடுறாருல.." என அனுப்பி வைக்க அவளும் அவன் பின்னாடி தயக்கமாகவே சென்றாள்.
வீட்டின் முன் புறத்திலுள்ள தோட்டத்தில் இருவரும் நின்றிருக்க கதிர் பேச கூப்பிட்டாலும் முதலில் பேச்சை ஆரம்பித்தது எனவோ மீரா தான்..
"நா உங்ககிட்ட ஒன்னு கேக்கனும்.." என மீரா ஆரம்பிக்க கதிரோ அமைதியாக அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
"எனக்கு வாழ்க்கைல எதாவது சாதிக்கனும்னு ரொம்ப ஆசை.. எனக்குன்னு ஒரு அடையாளத்தை உருவாக்கனும்..எழுதுறது எனக்கு ரொம்பவே புடிக்கும்.. பெரிய ரைட்டர் ஆகனும்னு ஒரு கனவு இருக்கு.. ஆனா உங்க வீட்ல அதை.." என்று அவள் சற்று தயங்கி நிறுத்த,
அவனோ சிரிப்புடன், "ஒத்துக்க மாட்டாங்கன்னு பயப்படுற.. அதனால கல்யாண வேணாம்னு முடிவு பன்னிருக்க.. சரிதானே.." என கதிர் கேட்க அவளும் தயக்கத்துடன் ஆம் என தலையாட்டினாள்.
"நீ ஏன் உன் கனவ விட்டுக் கொடுக்கனும்.. கல்யாணத்துக்கப்றம் நீ தொடர்ந்து எழுது.. நா வீட்ல சொல்லிக்கிறேன்.. பொண்ணுங்க வாழ்க்கைலை சாதிச்சது இல்லையா அதுக்கு அவங்க கூட இருக்கிறவங்க அவங்களுக்கு துணையா தான் இருந்தது இல்லையா.. நீ கல்யாணத்துக்கு அப்றமும் உன் கனவ நிறைவேத்த போராடு.. நா கண்டிப்பா உனக்கு துணையா இருப்பேன்.. " என கதிர் சொல்ல தற்போது மீரா இருந்த மனநிலை சற்று விலகி மனதில் ஒரு இதம் பரவ மெல்லிய புன்னகையை சிந்தினாள்.
"சரி" என கதிரிடம் தலையாட்டியவள் கல்யாணத்துக்கும் "சம்மதம்" என தலையாட்டினாள்.
அடுத்த ஒரு மாதத்தில் கோவிலில் வைத்து மீராவின் கழுத்தில் மங்கள நாணை பூட்டி கதிர் அவளை தன்னவளாக்கிக் கொண்டான். நாட்களும் அழகாக நகர கணவனின் காதலில் திக்கு முக்காடி போனவள் மாமியார் வீட்டினருடன் நன்றாகவே ஒன்றிப் போனாள். மாமியாருடன் சேர்ந்து வேலை செய்வது, நாத்தனாருடனும் கதிரின் அண்ணண் மனைவி லேகாவுடனும் சேர்ந்து சிரித்து சிரித்து பேசுவதுமாக இருந்தவள் அடுத்த இரு மாதத்தில் கருவுற்றிருக்க கதிருக்கோ சந்தோஷம் தாளவில்லை.. தன் மனைவியை தூக்கி தட்ட மாலை சுற்றி விட்டான்.
மீராவை பார்க்க தன் சம்மந்தி வீட்டிற்கு வந்திருந்த மீராவின் தாய்,
"பாரு நா அப்பவே சொன்னேன்ல.. இது தான் பொண்ணுங்களுக்கான வாழ்க்கை.. கனவு கனவுன்னு கல்யாணத்துக்கு முன்னாடி சுத்திக்கிட்டு இருந்த..இப்போ பார்த்தியா நீ பெரிய ரைட்டர் ஆகியிருந்தா கூட இப்பிடி வாழ்ந்திருக்க மாட்ட.. மாப்பிள்ளை உன்னை ராணி மாதிரி பார்த்துக்குறாரு.." என்று தான் சொன்னது தான் சரி என்பது போல் மீராவின் தாய் பேச,
அவரை பார்த்து புன்னகையை சிந்தியவள்,
"என் புருஷன் என்னை ராணி மாதிரி பார்த்துக்குறாரு தான் மா.. அதுக்காக என் கனவ நா விட்டுட்டேன்னு நா சொல்லவே இல்லையே.. கொஞ்ச நாள் என் புருஷனுக்காகவும் என் மாமியார் குடும்பத்துக்காகவும் என் கனவ தள்ளி வச்சிருக்கேன் அவ்வளவு தான்.. அதுக்காக இது மட்டும் தான் பொண்ணுங்களுக்கான வாழ்க்கைன்னு என்னால ஏத்துக்க முடியாது மா.." என சொல்ல,
அவரோ, "க்கும்.. நீ திருந்த போறதில்லை.. எங்க மானத்தை வாங்கு அப்றம் இருக்கு உனக்கு.." என நொடிந்துக் கொண்டார் மீராவின் தாய்.
நாட்கள் நகர,
மீண்டும் தன் கனவை அடைய அடி எடுத்து வைத்தாள் மீரா.. இதுவரை சின்ன சின்ன கதைகளாக எழுதியவள் அன்று தன் முதல் நாவலை எழுத எண்ணி முதலிரவன்று தனக்காக கதிர் வாங்கி தந்த புத்தகத்தை எடுத்தவள் இதழில் உறைந்த புன்னகையுடன் மேசையில் புத்தகத்தை வைத்து எழுத ஆரம்பிக்க,
சரியாக அந்நேரம் அவள் அத்தை,
"மீரா சமையலுக்காக காய்கறி வச்சிருக்கேன்.. அதை கொஞ்சம் வெட்டி வச்சிரு மா.." என குரல் கொடுக்க புத்தகத்தை மூடி வைத்தவள் அவர் சொல்லி சென்ற வேலையை செய்து முடித்து வர,
லேகாவோ,
"மீரா எனக்கு கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு.. கோவிச்சிக்காம குழந்தைக்கு பாடம் சொல்லி கொடுக்குறியா மா.." என சொல்ல மறுப்பு கூறாமல் புன்னகை மாறா முகத்துடன் இரண்டு மணி நேமாக பாடம் சொல்லி கொடுக்க மதியம் இரண்டை தாண்டி விட்டது.
மதிய சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு எழுத ஆரம்பிக்கலாமென சாப்பிட்டு எழுத வந்தவளை எழுத விடாது பக்கத்திலிருந்து பேசி பேசி அவள் மாமியாரும் நாத்தனாரும் இருக்க மீராவால் ஒன்றும் சொல்ல முடியாத நிலை.
சரி இரவு எழுதலாம் என்று இருந்தவளுக்கு இரவு கணவன் வந்தவுடன் அவனுக்கான வேலைகளை செய்வதிலே நேரம் சரியாக இருந்தது. பதினொரு மணிக்கு மேல் எழுத போன மீராவை,
"மீரா இப்போ எழுத வேணாம்.. காலைல எழுது.. நைட் முழிச்சிருந்து எழுதனும்னு ஒன்னும் அவசியமில்லை.." என கதிர் சொல்ல ஒன்றும் பேசாமல் வந்து படுத்துக் கொண்டாள்.
சரி அம்மா வீட்டில் இருக்கும் போது அதிகாலை நான்கு மணிக்கு எழுதுவது போல் எழுதலாம் என நினைத்து எழுந்தவள் வெளிச்சம் வந்தால் கதிரின் தூக்கம் கெட்டுவிடும் என்று ஹோலிற்கு வந்தாள்.
அங்கோ கதிரின் பாட்டி,
"ஏம்மா இந்த நேரம் இங்க லைட்ட போட்டுகிட்டு என்ன பன்ற மா.. புள்ளதாச்சி பொண்ணு அங்க இங்க அலையாம லைட்ட அணைச்சிட்டு போய் தூங்கு மா.." என சொல்லி விட்டு செல்ல, மீராவுக்கு தான் 'என் கனவு அவ்வளவு தானா..' என நினைத்து கண்கள் கலங்கி விட்டது.
இறைவன் மேல் பாரத்தை போட்டு விட்டு ஒரு முடிவுடன் அறையில் அந்த சிறு வெளிச்த்தில் உட்கார்ந்திருந்தவள் காலையில் தன் மாமியாருடன் தனியாக பேசும் சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தாள்.
தன் அத்தையுடன் சமையல் செய்துக் கொண்டிருந்தவள்,
"அத்தை நா உங்க கிட்ட ஒன்னு சொல்லனும்.." என்று மெதுவாக பேச்சை ஆரம்பித்தவள்,
"எனக்கு நாவல் எழுதனும்னு ரொம்ப நாள் ஆசை.. என்னோட கனவும் அதான்.. நா வீட்டு வேலையும் பார்ப்பேன்.. அதே சமயம் நா எழுதுறதுக்கும் கொஞ்சம் டைம் வேணும் அத்தை.. அதான்.. இதுல உங்களுக்கு சம்மந்தமா.." என கேட்க,
அவரும் சமையலை கவனித்தவாறே,
"எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை மா.. நீ உனக்கு எப்போ தோணுதோ அப்போ எழுது.." என சாதாரணமாக கூறிவிட்டு வேலையை கவனிக்க மீராவுக்கோ உச்சகட்ட சந்தோஷம்.
"ரொம்ப நன்றி அத்தை.." என்று சொன்னவள் மதிய சாப்பாட்டிற்கு பிறகு எழுத ஆரம்பிக்க லேகாவிடம் அவள் அத்தை சொல்லியிருந்ததால் அவளும் மீராவிடம் எதுவும் கேட்காமல் இருக்க அன்று தான் தன் நாவலின் முதல் அத்தியாயத்தை எழுதி முடித்தாள் மீரா.
வீட்டு வேலையையும் பங்கு போட்டு செய்து அப்பப்போ கொஞ்சம் கொஞ்சமாக எழுதவும் செய்தவள் நாட்கள் சந்தோஷமாக நகர போக போக அவள் அத்தையிலிருந்து கதிரின் பாட்டி வரைக்கும் இவள் எழுதும் போது ஏதேதோ முணுமுணுத்தவாறு இருக்க முதலில் ஒரு மாதிரி சங்கடமாக உணர்ந்தவள் பிறகு தன் கனவை விட்டுக் கொடுக்க மனமில்லாது அவர்கள் முணங்கலை கண்டுக்காது கடந்து சென்றாள்.
மீரா அவள் அத்தை சொன்ன வேலையை முடித்து விட்டு எழுத உட்கார்ந்தால் கதிரின் பாட்டியோ,
"ஏம்மா அங்க அவ்வளவுமே போட்டது போட்ட படி கிடக்குது..நீ இங்க உட்கார்ந்து இதோடையே மல்லுகட்டிகிட்டு இருக்க.." என சொல்லி விட்டு செல்வார். அவளும் சரி என செய்து விட்டு வந்து மீண்டும் எழுத ஆரம்பித்தால் லேகா அவள் அறையில் அவள் குழந்தைகளை வைத்து விட்டு அவள் வேலையை பார்க்க சென்று விடுவாள்.
முதலில் எல்லாத்தையும் பொறுத்துக் கொண்டவள் பின் ஒரு கட்டத்திற்கு மேல்,
"எழுதி முடிச்சிட்டு வரேன்.." என்று சொல்லும் அளவிற்கு சென்று விட்டாள். அவளும் மனுஷி தானே.. அவளுக்கும் பொறுமை ஒரு அளவு தான்.. பொறுத்து பொறுத்து பார்த்தவள் இப்பிடி சொல்லி விட அதையும் குற்றமாக்கி அவர்களின் முணங்கல்கள் இன்னும் அதிகரித்ததே தவிர அவளுடைய இலட்சியத்திற்கு தாங்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர்கள் யோசிக்கவில்லை..
கதிரிடமும் இவள் அத்தை இவள் எழுதுவது பற்றி இல்லாதது பொல்லாதது சொல்லி பற்றி வைக்க அவனும் வேலை விட்டு வரும் டென்ஷனில் அம்மாவும் இப்பிடி பேச மீராவிடம்,
"எழுதுறது சரி மீரா.. ஆனா வீட்டு வேலையையும் பாரு.. வீட்டு வேலை பார்க்காம அப்படியே இருந்துகிட்டு எழுதிக்கிட்டு தான் இருப்பேன்னா இது எதுவும் தேவையில்லை.. இதோட நிறுத்திரு.." என கண்டிப்பாக சொல்ல,
"என்னங்க நா வீட்டு வேலையையும் பார்க்க தான் செய்றேன்.. செய்தாலும் செய்யல்லைன்னு சொல்றாங்க.. ப்ளீஸ் என்னையும் கொஞ்சம் புரிஞ்சிக்கோங்க.. இதை தான் நா கல்யாணத்துக்கு முன்னாடி சொன்னேன்.. அப்போ நா வீட்ல சொல்லிக்கிறேன்னு சொன்னிங்க இப்போ என்கிட்ட விட்டுடுன்னு சொல்லிகிட்டு இருக்கிங்க.." என மீராவும் பதிலுக்கு கேட்க,
"வீட்டு வேலையையும் பார்த்துகிட்டு அம்மாவுக்கு உதவியா இருந்து உன் சொந்த வேலையையும் பார்த்தா யாருக்கு என்ன பிரச்சினை வரப்போகுது.. பழைய புராணத்தை பாடாம சொன்னதை செய் மீரா.." என காட்டமாக சொன்னவன் தான் அவளுக்கு கொடுத்த வாக்கை இலகுவாக மறந்து போனான்.மீராவும் அதன் பிறகு எதுவும் பேசவில்லை பேசவும் அவளுக்கு தோன்றவில்லை..
இப்போது மீராவுக்கு நான்கு மாதம் ஆகியிருக்க அன்று இரவு,
அத்தையுடன் சேர்ந்து இரவு சமையலை முடித்து விட்டு பாத்திரங்களை விலக்கி வைத்தவள் அப்போது தான் அறைக்கு வந்து தன் நாவலின் இறுதி அத்தியாயத்தை எழுதி முடித்து நிமிர திடீரென லேகா அவள் ஒரு வயது குழந்தையை கொண்டு வந்து கட்டிலில் வைத்து,
"மீரா கொஞ்சம் குழந்தையை பார்த்துக்கோ.. ஒரு முக்கியமான கோல் பேசிட்டு வந்துடுறேன்.." என சொல்லியவள்
அவள் பதிலை கூட எதிர்ப்பார்க்காது போக
மீராவோ எழுதி முடித்து புத்தகத்தை மூடி குழந்தை அருகில் வந்து படுத்துக் கொண்டு குழந்தையை ரசித்துக் கொண்டிருந்தாள்.
அப்போது சரியாக வந்த கதிரின் பாட்டி,
"மீரா வெளில துணி இருக்கு எடுக்க மறந்துட்டேன்.. கொஞ்சம் எடுத்துட்டு வா மா.. உன் அத்தை வெளில போயிருக்கா இந்நேரம் பார்த்து மழை வேற வர்ற மாதிரி இருக்கு.." என்று சொல்ல,
அவளோ, " பாட்டி குழந்தை.." என தயங்க,
"நா பாத்துக்குறேன் மா.. " என்று சொன்ன பாட்டியை நம்பி குழந்தையை வைத்து விட்டு அவள் துணி எடுக்க செல்ல,
பாட்டியோ அறையை சுற்றி பார்த்து, "இந்த பொண்ணு அந்த பேப்பர் கையுமா இருக்கு.. அறையை சுத்தம் பன்னுவோம் அதெல்லாம் இல்லை.." என முணங்கிக் கொண்டிருந்தவருக்கு அப்போது தான் ஏதோ நினைவு வந்தவராக,
"ஆண்டவா.. துணிய ஊற போட்டிருந்தேன்.. அதையும் மறந்தே போயிட்டேன்.. இப்போ எல்லா நமக்கு மறதி ஜாஸ்தியாகிட்டு.." என வாய்விட்டே புலம்பியவாறு அவர் பாட்டிற்கு குழந்தையை மறந்து குளியலறை நோக்கி சென்று விட்டார்.
இங்கு குழந்தையோ உருண்டு வந்து கட்டிலிலிருந்து விழுந்து அழுது கொண்டிருந்தது. அந்த அறையிலிருந்து ஃபோன் பேசிக் கொண்டிருந்த லேகாவுக்கு குழந்தையின் அலறல் கேட்க, பதறி அடித்து ஓடி வந்தவள் குழந்தை விழுந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சியாகி உடனே குழந்தையை தூக்கியவள் குழந்தையின் தலையை தடவி ஆறுதல்படுத்த,
அப்போது தான் குழந்தையின் சத்தத்தில் மீராவும், கதிரின் பாட்டியும் கூட ஓடி வர சரியாக மீராவின் அத்தையும் வந்திருந்தார்.
வந்தவர்கள் பதறி குழந்தையின் அருகே வர குழந்தையை தொட வந்த மீராவை பார்த்து,
"தள்ளி போ.." என கத்தி விட்டாள் லேகா.
அவள் அத்தையோ, "லேகா ஏன் இப்பிடி அவளுக்கு கத்துற.. முதல்ல குழந்தையை பாரு.." என்று சொல்ல,
"இவளால தான் அத்தை என் குழந்தை விழுந்திருக்கா.. இவக்கிட்ட தான் பார்த்துக்க சொல்லிட்டு போனேன்.. ஆனால், இவ குழந்தையை மறந்துட்டு அவ வேலைல தான் அவ இருந்துருக்கா.." என லேகா கத்த,
"என்ன தான் மா உனக்கு கிடைக்குது அதுல.. ஒரு மருமகளா பொறுப்பா இருக்குறத விட்டுட்டு எப்ப பாரு எழுதிகிட்டு.. ச்சே, பாரு இப்போ உன்னால தான் குழந்தைக்கும் அடிபட்டிருச்சி.." என அவர் மீரா சொல்ல வருவதை கேட்காது புலம்ப, கதிரின் பாட்டிற்கும் அப்போது குழந்தையின் அழுகையே பெரிதாக தோன்ற அவர் குழந்தைக்கும் சமாளிப்பதாலே இருந்ததாலும் அவர் மீராவின் நிலையை அறியாது இருந்தார்.
ஓஃபீஸில் எதோ பிரச்சினையாகி உச்ச கட்ட கோபத்தில் வந்திருந்த கதிருக்கும் இது அனைத்தும் கேட்டதில் மீரா தன்னிடம் பேச வந்ததை கூட காது கொடுத்து கேட்காது தன் மொத்த பலத்தையும் சேர்த்து அவள் தன் குழந்தையை வயிற்றில் சுமக்கிறாள் என்பதை கூட மறந்து மீராவை ஓங்கி அறைந்திருந்தான் கதிர்.
ஏற்கனவே லேகாவும் அவள் அத்தையும் பேசியதில் மனதளவில் சோர்விளந்து இருந்தவள் அவன் அறைந்த அறை தாங்காது அங்கிருந்த மேசையின் மேல் விழ அவள் விழுந்த வேகத்தில் அதன் நுனி பக்கத்தில் அவள் வயிறு நன்றாக அடிபட்டதில் 'ஆஆ..' என கத்தியவள் அறைந்த அறையில் அதிர்ச்சியிலே மயங்கி விட்டாள்.
"மீரா.." என பதறி அடித்துக் கொண்டு அவள் அத்தை அவள் அருகில் ஓட கதிரோ அப்போது தான் செய்த காரியத்தின் வீரியம் புரிந்து அதிர்ச்சியில் அடுத்து என்ன செய்வதென தெரியாமல் கண்கள்கலங்க கீழே விழுந்த மீராவையே பார்த்தவாறு நின்றுக் கொண்டிருந்தான்.
விழுந்து கிடந்த மீராவை அவள் அத்தை தூக்க அவள் அணிந்திருந்த சேலையின் பின் சொட்டு சொட்டாக இரத்தம் படிவதை கண்டவர் "கதிர்.." என அலறி விட்டார்.
அவர் கத்தலில் சுயவுணர்வு பெற்றவன் ஓடிச் சென்று தன் மனைவியை கைகளில் ஏந்திக் கொண்டு மருத்துவமனைக்கு தூக்கி சென்றவன் கன்னங்கள் போகும் வழியெங்கும் அவன் கண்களிலிருந்து வழிந்த கண்ணீராலே நனைத்திருந்தது.
மருத்துவமனையில் அவளை அனுமதித்து வெளியில் இவர்கள் காத்திருக்க வழியும் கண்ணீரை கூட துடைக்க மனமின்றி "மீரா..மீரா.." என புலம்பியவாறு இருந்த மகனை கண்ட அவன் அன்னைக்கு உலகமே இருண்டது போன்று ஆகி விட்டது.
அடுத்த பத்து நிமிடத்தில் அவளை பரிசோதித்து விட்டு வந்த டாக்டெர் கதிரிடம்,
"ஐ அம் சோரி மிஸ்டர் கதிர். வயித்துல அடி பலமா விழுந்ததால குழந்தை அபோர்ட் ஆகிறுச்சி.. அவங்க அதிர்ச்சியில தான் மயங்கி விழுந்திருக்காங்க..மயக்கம் தெளிஞ்சதுக்கு அப்றம் போய் பாருங்க..." என கதிரின் தலையில் ஒரு இடியை இறக்கி விட்டு நகர மொத்தமாக நொறுங்கி போய் இருந்தவன் நிற்க திராணியின்றி அந்த இடத்திலே முட்டி போட்டு அமர்ந்து விட்டான்.
அவள் கருவுற்ற சமயம் தன் உயிர் நீரில் உருவான குழந்தையை எதிர்ப்பார்த்து அவன் ஒவ்வொரு நிமிமிடமும் காத்திருக்க தன்னாலயே தன் குழந்தை இல்லாமல் போனதில் ஆண்மகன் அவன் இடம் பொருள் பார்க்காது,
"நானே என் குழந்தையை கொன்னுட்டேன்.." என கத்தியவாறு கதறி அழ ஆரம்பித்து விட்டான் கதிர்.
ஓடி வந்து அவனை அணைத்த அவன் தாய்,
"இல்ல பா.. இப்பிடி எல்லாம் நடக்கும்னு உனக்கு தெரியாதுல்ல கண்ணா.. நீயே அழுதா எப்படி பா.. மீராவுக்கு நீ தானே ஆறுதலா இருக்கனும்.." என அவர் சமாதானப்படுத்த முயல,
மீராவின் பெயரை கேட்டதும்,
"அய்யோ.. என்னால முடியாது மா.. அவ முகத்தை இனி எப்படி மா பார்ப்பேன்.. அவ குழந்தை மேல உயிரையே வச்சிருந்தா மா.. இப்போ இல்லைன்னு தெரிஞ்சா துடிச்சிறுவா மா.. என்னால முடியல மா.." என்று கதறியவனுக்கு தானே தெரியும் தன் மனைவி குழந்தையின் மேல் உயிரையே வைத்திருந்ததும் தன் மனைவி தினமும் இரவு அவள் வயிற்றை வருடியவாறு தன் குழந்தையுடன் பேசிவிட்டு உறங்குவதும்.
அப்போது மீராவின் அன்னையும் வந்திருக்க அவரோ விஷயத்தை கேட்டு மொத்தமாக உடைந்து போய் விட்டார். தன் மகனையும் தன் மருமகனையும் சமாதானம் செய்ய முடியாது இரு தாயுள்ளங்களும் கண்கலங்கி நின்றிருக்க சிறிது நேரம் வந்த நர்ஸ் மீரா கண்விழித்ததாகவும் போய் பார்க்குமாறும் சொல்லி விட்டு செல்ல கதிருக்கோ குற்றவுணர்ச்சியில் சாவு வந்து விடாதா என்றிருந்தது.
இருந்தும் தன் மனைவியின் காலில் விழுந்தாவது மன்னிப்பை யாசிக்க எண்ணி உள்ளே செல்ல எதோ ஒரு இடத்தையே வெறித்தவாறு உணர்ச்சிகள் துடைக்கப்பட்டு இருந்த அவள் வதனத்தில் எதையுமே கண்டுபிடிக்க முடியவில்லை கதிரால்.
"மீ.. மீரா.. என்னை மன்னிச்சிறு மா.. ஏதோ கோபத்துல.." என கதிர் திக்கித்திணறி குரல் தழுதழுக்க தலை குனிந்தவாறு சொல்ல,
மீராவோ அவன்புறம் சற்றும் பார்வையை திருப்பாது அங்கு கலங்கிய கண்களோடு நின்றுக் கொண்டிருந்த தன் தாயிடம்,
"அம்மா நம்ம வீட்டுக்கு போகலாம் மா.." என சொன்னாள்.
இதைக் கேட்ட கதிர் அதிர்ச்சியில் அவளை பார்க்க மீராவின் அத்தையோ,
"அம்மா மீரா.. கதிர் ஏதோ கோபத்துல அப்பிடி பன்னிட்டான் மா.. தயவு செஞ்சு என் மகனை மன்னிச்சிறு மா.. வீட்டுக்கு வா மா.. இனி நாங்க எதுவுமே சொல்ல மாட்டோம் நீ ஆசைப்பட்டத பன்னு டா.." என்று அவர் அவளை சமாதானப்படுத்த முயல, அவர் அறியவில்லை இழந்த பிறகு பேசி பிரயோஜனம் இல்லை என்று..
"அம்மா நீ என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போறியா.. இல்ல.. என் குழந்தை போன இடத்துகே நானும் போகவா.." என மீரா கேட்டதில் பதறி விட்டார் அவள் தாய்.
"ப்ளீஸ் மீரா என்னை விட்டு போயிராத டி.. சத்தியமா இப்படி நடக்கும்னு நா எதிர்ப்பார்க்கல.. ஏதோ ஒரு கோபத்துல புத்தி மழுங்கி அப்பிடி நடந்துக்கிட்டேன்.. என் குழந்தை இல்லாம போக நானே காரணமாகிட்டேன்னு ரொம்ப குற்றவுணர்ச்சியா இருக்கு டி.. உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்க கூட தகுதி இல்ல நா பன்னது பாவம்.. ஆனா ப்ளீஸ் டி நீ இல்லாம என்னால இருக்க முடியாது மீரா.." என கதறியவனது வார்த்தைகள் அவளிடத்தில் காற்றில் கரைந்த கற்பூரமாக தான் போனது.
அடுத்த நாள் டிஸ்ச்சார்ஜ் செய்யப்பட்ட மீரா தன் அம்மாவுடன் தன் பிறந்த வீட்டிற்கே சென்றிருக்க அவளின் உடல்நிலை மனநிலை கருதி இப்போது கதிர் அவள் முன் இருந்தால் அவள் மேலும் உணர்ச்சிவப்படக் கூடும் என மீராவின் அத்தை கதிரை வீட்டிற்கு அழைத்து சென்று விட்டார்.
வீட்டிற்கு வந்தவன் எதுவும் செய்ய தோணாது இடிந்து போய் அமர்ந்திருக்க அவன் அருகில் அமர்ந்த அவன் பாட்டி அவன் தலையை வருடிய மறுநொடி வீட்டிற்கு வரும் வரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் உடைப்பெடுத்து வெளிவர பாட்டியின் மடியிலே படுத்து கதறி விட்டான் கதிர். அவன் தலையை வருடியவாறு அவனுக்கு ஆறுதல் கூறியவர் தன் மேல் தான் தவறு என்பதையும் நடந்ததையும் கூற அவனுக்கு மேலும் மேலும் குற்றவுணர்ச்சி தான் அதிகரித்தது.
மீராவின் வீட்டிலும் அவள் தாய் அன்று நடந்ததை பற்றி எதுவும் பேசாது அவள் தன் வயிற்றை வருடி அழும் போது அவளை ஆறுதல்படுத்தி சமாதானப்படுத்துவதிலே இருக்க இங்கு கதிரோ குழந்தையை இழந்த துயரத்திலும் மனைவி விட்டுச் சென்றதிலும் ஒரு வேலையும் செய்யாது கலையிழந்த முகமாக அலைந்து கொண்டிருந்தான்.
அன்று,
தன் அறையில் இருந்தவனுக்கு மேசை மீதிருந்த புத்தகம் தென்பட அதை எடுத்தவன் அதில் இருந்ததை வாசிக்க தொடங்க தன் மனைவி எழுதிய வார்த்தைகளை வாசிக்க வாசிக்க அவனுக்கோ அவள் கனவுக்கு தான் துணை நிற்பதாக கூறி அதை தானே தவற விட்டதில் தன்னை நினைத்தே மேலும் மேலும் வெறுப்பு அதிகரித்தது.
ஒரு பெண்ணிற்கும் கனவு, ஆசை, தனக்கான அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்ற வெறி அவள் ஆழ்மனதில் எப்போதும் இருக்கும். சிலர் குடும்ப கஷ்டங்களிலாலும், சமூக கட்டுப்பாடுகளினாலும் அடைய முடியாது தங்களுக்குள்ளே கனவாக புதைத்து விடுகின்றனர். சில பேரே மொத்த கட்டுப்பாடுகளையும் தகர்த்தெறிந்து தங்கள் கனவுகளுக்காக போராடுகின்றனர்ர. அதற்கு அவர்களை சுற்றி இருப்பவர்களின் ஒத்துழைப்பும் ஒரு காரணம்..
தன் மனைவியின் இலட்சியத்தின் ஆழத்தை அன்று உணர்ந்தவன் ஒரு முடிவு எடுத்தவனாக எழுந்து அடுத்து தான் செய்ய வேண்டிய காரியத்தை நிறைவேற்ற அப்புத்தகத்துடன் வெளியே புறப்பட்டான்.
இரண்டு மாதங்கள் கழித்து,
இரண்டு மாதங்களாக தன் மனைவியை சென்று அவனும் பார்க்கவில்லை. மீராவும் நடந்ததிலிருந்து மீண்டு வந்திருக்க பழைய சிரிப்பு உதட்டில் இல்லாவிடினும் சாதாரணமாக வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டு இருந்தாள்.
வீட்டின் கோலிங் பெல் சத்தத்தில் கதவை திறந்த மீராவின் அன்னை தன் எதிரே நிற்பவனை பார்த்து "வாங்க மாப்பிள்ளை.." என்று கூறிவிட்டு உள்ளே செல்ல,
உள்ளே வந்த கதிர் கண்களை அங்கும் இங்கும் சுழலவிட்டவாறு இருந்தான். அவரோ அவன் தேடலை புரிந்து கொண்டவர் போல்,
"மீரா ரூம்ல இருக்கா மாப்பிள்ளை.." என்று கூறியவர் அப்போது தான் அவனை கவனித்தார்.
முகம் கலையிழந்து இரண்டு மாதங்களாக சிரைக்காத தாடி மீசை அடர்ந்து வளர்ந்து இருக்க மெலிந்து கண்களில் கருவளையம் என பொழிவிழந்து இருந்தான். இழப்பு மீராவுக்கு மட்டுமில்லையே அவனுக்கும் தானே..
அறையை தட்டி விட்டு உள்ளே வந்தவனை பார்த்த மீராவுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் நீண்ட நாட்கள் கழித்து தன் கணவனை பார்த்ததில் சந்தோஷம் ஒருபுறம் நான் என் குழந்தையை இழக்க இவன் தானே காரணம் என்ற கோபம் மறுபுறம் இருக்க முகத்தை திருப்பிக் கொண்டு கட்டிலில் தரையை வெறித்தவாறு அமர்ந்துக் கொண்டிருந்தாள்.
அவளருகில் வந்தவன் தரையில் முட்டிபோட்டு அமர்ந்து கட்டிலில் அமர்ந்திருந்த அவள் மடியில் தன் தலையை வைத்து படுத்து கண்கள் கலங்க,
"உன்கிட்ட நா மன்னிப்பு கேக்க கூட தகுதி இல்லை டி.. உனக்கு துணையா இருப்பேன்னு வாக்கு கொடுத்து உன் கனவ என் கனவா நினைக்காம விட்டு தப்பு பன்னிட்டேன்.. உன் மனச புரிஞ்சிக்காம உன் இலட்சியத்தை விட்டுறுன்னு சொல்லி உன்ன நோகடிச்சிட்டேன்.. அப்போ நீ சொல்ல வந்ததை கூட கேக்காம உன் வயித்துல நம்ம குழந்தை இருக்குறதையும் மறந்து உன்னை அடிச்சிட்டேன்.. என் கோபத்தால என் குழந்தைய நானே இழந்துட்டேன்.. என்னால தாங்க முடியல மீரா.." என கதறி அழுதவனை பார்த்தவளுக்கு அவன் அழுகை அவன் மேல் இருந்த கோபத்தை சற்று மட்டுப்படுத்த எதுவும் வாய் வார்த்தையாக ஆறுதல் சொல்லவில்லை என்றாலும் கண்களில் கண்ணீர் ஓட அவன் தலையை ஆறுதலாக வருடி விட்டாள் மீரா.
சற்று நேரத்தில் அவள் வருடலில் அழுகை மட்டுப்பட நிமிர்ந்து பார்த்தவன் தன் கையிலிருந்த ஒரு கவரை எடுத்து அவளிடம் நீட்டி,
"வாழ்க்கைல என்னால ஒன்ன இழந்துட்ட.. இழந்தத என்னால திருப்பி கொடுக்க முடியாது ஆனா நீ ஆசைப்பட்டதை அடைய உனக்கு துணையா இருக்க முடியும் மா.. " என கதிர் கூறி அவள் பக்கத்தில் அமர்ந்து கொள்ள,
புரியாமல் அந்த கவரை பிரித்து பார்த்தவள் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது. அவள் கையிலிருந்த புத்தகத்தின் அட்டையில்
"ஒரு மங்கையின் கனவு" என எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்க அதன் கீழ்
எழுத்தாளர் மீரா கதிர் என்ற பெயரை பார்த்தவள் விழிகளிலிருந்து இருசொட்டு கண்ணீர் அந்த அட்டையில் விழ அவள் இதழ்களோ நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தோஷத்தில் விரிந்து கொண்டதை கண்டதும் அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டான் கனவு கண்ட மங்கையின் மணாளன்..❤❤
❤
ZAKI❤
மறக்காமல் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் நண்பர்களே