All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
இன்னும் ஐந்து நாட்களில் ‘வதி ஃபார்மசியூடிகல்ஸ்’ நிறுவனத்தின் மீது ஐரா தொடுத்த வழக்கின் விசாரணை என்றிருக்க, வழக்கின் அடுத்தக்கட்ட நகர்வுகளைப் பற்றி கலந்தாலோசிக்க சஞ்சீவனின் அலுவலகத்திற்கு வந்திருந்தாள் ஐரா.
“மாடம் விஷயம் தெரியுமா???” சஞ்சீவன் கேட்டான்.
சில நாட்களில் அவளது வாழ்வில் எத்தனையோ விஷயங்கள் நிகழ்ந்தேறி இருக்க சஞ்சீவன் எதைப் பற்றிக் கேட்கின்றான் என அவளுக்குப் புரியவில்லை. ஐரா யோசிப்பதைக் கண்ட ஜீவா அவளின் முன் ஒரு பத்திரைகையை எடுத்து போட்டான். அதிலிருந்த தலைப்புச் செய்தியே,
‘மந்திரி புகழேந்தி திடீரென தன் மந்திரிப் பதவியை ராஜினாமா செய்ததோடு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியையும் துறந்தார்’ என்பதாகும்.
ஐரா அதிர்ந்து போய் சஞ்சீவனைப் பார்க்க,
“இன்னொன்னு தெரியுமா? நம்ம வழக்கோட அடுத்த முக்கியமான சாட்சி புகழேந்தி சார் தான்…”
“என்ன சொல்ற ஜீவா??” அடுத்த அதிர்ச்சி அவளுக்கு.
“ஆமா மாடம்… அநேகமா அவர் நமக்குச் சார்பா சாட்சி சொன்னா வழக்கு நமக்கு சாதகமா முடிஞ்சுடும்… ஆனா அவர் என்ன சொல்லப் போறார்னு தெரியலையே….” அதே கவலை ஐராவையும் தொற்றிக் கொண்டது. நாவுக்கரசின் வாதங்களை அனுமானித்து அவர் எப்படிப் பேசினால் நாம் எப்படி எதிர்வாதம் செய்யப் போகிறோம் என ஆலோசித்தவர்கள், அனைத்தும் திருப்தியாய் இருக்கவும் ஐரா விடைபெற்றுக் கொண்டாள்.
சஞ்சீவனின் அலுவலகத்தில் இருந்து அவள் நேரே சென்றது வைத்தியசாலைக்கு. அறையைத் திறந்து கொண்டு உள்ளே செல்லவும், கலகலத்த சிரிப்பு சட்டென நிற்க, அங்கிருந்த இருவரின் பார்வைகளும் ஐராவின் வரவை அவர்கள் அப்போது எதிர்பார்க்கவில்லை எனக் காட்டியது.
“அப்போ அப்பா கிளம்பறேன் ஷரா… நாளைக்கு வாறேன்…” என்கவும், கட்டிலில் படுத்திருந்த ஷராவின் முகம் தொங்கிப் போனது.
மகளின் வருத்தத்தைக் காணச் சகியாதவள், “அம்மா வெளியே இருக்கேன் ஷரா…” என்றவள் சட்டென வெளியே சென்று விட்டாள். தன்னைக் கண்டதும் நம்பி வெளியேறப் பார்த்ததும் அவளின் மனதை வெகுவாய்ப் பாதித்திருந்தது.
வெளியே சென்றவள் அங்கிருந்த ஒரு கதிரையில் அமர்ந்து பின்னால் இருந்த சுவற்றில் தலை சாய்த்து கண்களை மூடிக் கொண்டாள். மூடிய விழிகளினுள் அவளது சிந்தனை அன்று வைதேகியின் வீட்டில் நடந்த சம்பாஷணைக்குச் சென்றது.
வந்தனாவை அழைத்துக் கொண்டு நம்பி சென்று விட்டான். நடந்தவற்றை ஜீரணிக்க முயன்று கொண்டிருந்தாள் ஐரா. அன்று மட்டும் நம்பியும் புகழும் அங்கு வந்திருக்கா விட்டால் என்னென்னவோ நடந்தேறி இருக்கும். இருவரும் சரியாக எப்படி அங்கு வந்தனர் என்பதை எல்லாம் யோசிக்கும் மனநிலையில் அன்று ஐரா இருக்கவில்லை.
யோசிக்க யோசிக்க இத்தனை நாள் நம்பியின் மீதிருந்த அவளது பார்வையின் கோணம் மாற இப்போது நம்பி செய்தது அனைத்தும் சூழ்நிலையின் தாக்கம் எனப் புரிய, . நம்பியின் குற்றஞ்சாட்டும் பார்வைகளும் அவளைக் கூண்டிலேற்றி இருக்க, தன் முன்னே தானே குற்றவாளி ஆகிப் போனாள். ஆனாலும் அவளுக்கு இன்னும் விடை தெரியாத புதிராக இருந்தது நம்பி எதற்காக அவ்வளவு தீவிரமாய் அந்த ஏட்டினைத் தேடினான் என்பது தான். இதற்கு அவனே வந்து தான் பதில் கூற வேண்டும். அவன் கூறுவானா??
ஐரா இப்படி மறுகிக் கொண்டிருக்க, வைதேகியின் நிலைமையோ இன்னொரு வகையில் இருந்தது. தன் கணவன் இன்னொரு திருமணம் செய்திருக்கின்றான் என்பதை தன்னால் தாங்க முடியாமல் தான் தன்மானம் தலை தூக்க, புகழை விட்டுப் பிரியும் முடிவை எடுத்திருந்தார் வைதேகி. அப்படி இருக்க, தன் மகளுக்கு தான் செய்திருப்பதும் கொடுமையல்லவா?
புகழில் மீது தான் கொண்ட காதலை உணர்ந்த நிமிடம் தொட்டு அவரது மனது புகழின் நன்மையையே கருத்தில் கொண்டு தனக்கு அநியாயம் நடந்தாலும் அந்த அநியாயத்திலும் அவன் பால் உள்ள நியாயத்தை எண்ணித் திருப்தி கொண்ட வைதேகி, அன்றும் அந்த நிலையிலும் அவரது மனது புகழின் அரசியல் ஆசைக்கு சார்பாய் வாதாட அவனுக்கு நல்லது நினைப்பதாய் எண்ணி தன் மகளை அவனிடம் கொடுத்து ஒரு தாயாய் வைஷ்ணவிக்கு அநியாயம் செய்திருந்தார். அதன் பின் வைஷ்ணவியின் வாழ்வைச் சீர் செய்வதாய் எண்ணி புகழை அவளை மணம் செய்ய வைத்து இதோ வைதேகிக்கு அநியாயம் செய்து வைத்திருக்கிறார். நினைக்க நினைக்க வைதேகியினால் முடியவில்லை. குற்ற உணர்ச்சி அவரைக் கொன்று தின்றது.
இருவரும் தங்களைத் தாங்களே குற்றவாளியாக்கி மறுகிக் கொண்டிருக்க, சமைத்து வைத்து விட்டு இவர்கள் எப்போது சாப்பிடுவார்கள் என்ற கவலையில் உலன்று கொண்டிருந்தார் குறவஞ்சி.
இதில் இவர்கள் மூவருமே கவனிக்கத் தவறியது அக்ஷராவை. நம்பியின் பாராமுகம் அவளை வெகுவாய் பாதித்திருக்க, அன்று அவளுள் அடக்கி வைந்திருந்த தனிமை எண்ணம் இன்று தலை தூக்கி தாண்டவமாடத் தொடங்கி இருந்தது. ஆனால் அது யாரின் கண்ணிலும் படவில்லை.
எத்தனை நாள் நடந்ததையே நினைத்துக் கொண்டு நிகழ்காலத்தை பாழாக்குவது? ஐரா தான் முதலில் நடப்பிற்குவர அனைவரையும் அழைத்துக் கொண்டு ஊட்டிக்குச் சென்றாள். வரமாட்டேன் என்ற தாயையும் ஏதேனும் செய்து விடுவாரோ என்ற பயத்தில் வலிந்து அழைத்துச் சென்றிருந்தாள்.
கடமைகள் அவளை அழைக்க அவள் எப்படியும் சென்னைக்குச் சென்றாக வேண்டும் என இருக்க, மகளையும் தன்னுடன் சென்னைக்கு கொண்டு வந்திருந்தாள். ஏற்கனவே இரண்டு தடவைகள் ஷரா கடத்தப்பட்டிருக்க, இனி அந்த நிலை வருவதற்கு இடமில்லை என அறிந்தும், ஏதோ ஒரு உறுத்தல் அவளிடம். ஷராவின் வழக்கத்திற்கு மாறான அசாதாரண அமைதியும் அவளை ஏதோ செய்ய மகளையும் தன்னுடன் கொண்டு சென்றிருந்தாள்.
தாயைப் பற்றி யோசித்தவள் மகளின் மன நிலையைக் கணிக்கத் தவறி விட்டாள். தன் மகள் தைரியமானவள் என்ற திடமான நம்பிக்கை அவளுக்கு.
மனிதர்களில் ஒரு வகுப்பினர் எது வந்தாலும் அழாது நெஞ்சை நிமிர்த்தி நின்று சமாளிப்பதாக காட்டிக் கொள்வர். இன்னொரு வகுப்பினர் சட்டென அழுது விடுவர். இரண்டாம் வகுப்பினரைக் கேலி செய்யும் சமூகம் முதல் வகுப்பினரையே எப்போதும் அதிசயித்துப் பார்க்கும். ஆனால் அவர்களுக்கு ஒன்று புரிவதில்லை. அந்த முதல் வகுப்பினர் கஷ்டங்களை மனதிற்குள் போட்டு அமுக்கி தன் பலவீனத்தை மறைக்க தைரியமாய் இருப்பதாய்க் காட்டிக் கொள்வர். என்றாவது ஒருநாள் அந்த முகமூடி கழன்று விழத்தான் செய்யும். அதே நேரம் இந்த இரண்டாம் வகுப்பினருக்கோ கண்ணீர் என்பது மனதின் அழுத்தங்களைக் கரைக்கும் ஒரு வடிகால் தான். கண்ணீரோடு மன அழுத்தங்களும் வடிந்து போக அடுத்து பிரச்சனையை சமாளிக்கும் தைரியம் தானாக உள்ளே வந்து விடும்.
இதில் ஐராவும் ஷராவும் முதல் ரகம். வயதும் அனுபவமும் ஐராவைப் புடம் போட்டிருக்க, அது இல்லாத ஷராவினால் நிகழ்ச்சிகளின் அழுத்தங்களைத் தாங்க முடியவில்லை. அது அவளை விபரீதமான முடிவில் தள்ளி இருந்தது.
ஐரா வைத்தியசாலைக்குச் சென்ற போது ஷரா வீட்டில் தனிமையில் தான் இருந்தாள். மதிய உணவிற்காய் ஐரா வீட்டிற்கு வந்த போது கண்ட்தோ அவளது உயிரையே உலுக்கி இருந்தது.
“ஐயோ!!!” என அலறிய படி சமையலறையினுள் தன் சக்கர நாற்காலியில் தொங்கிய கையிலிருந்து இரத்தம் வழிந்தோட தளர்ந்து போய் அமர்ந்திருந்தவளின் அருகே ஓடி வந்தாள்.
“அடிப்பாவி…. என்ன காரியம் பண்ணி வைசிருக்க….?” எனக் கத்தியபடி சட்டென தன் சேலைத் தலைப்பைக் கிழித்து அவளது காயத்தில் இருந்து இரத்தம் மேலும் வெளியேறாமல் இறுக்கிக் கட்டியவள், ஷராவின் மறு கையை எடுத்து அந்தக் கட்டின் மீது வைத்து, “இதை நல்லா அழுத்திப் பிடி இரத்தம் வாறது நிக்கும்...” என்றவள், சக்கர நாற்காலியில் இருந்த மகளைத் தூக்கிக் கொண்டாள்.
காயத்தைப் பார்த்தவளுக்கு அதிக நேரம் ஆகவில்லை என்பது தெரிந்தது. அதனால் சீக்கிரம் வைத்தியசாலைக்குச் சென்றால் hypovolemic shock எனும் அதிக குருதிப் போக்கினால் உண்டாகும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து மகளைக் காத்து விடலாம் என எண்ணி இயங்கினாள். ஆனால் ஷராவோ தாய் கையில் கட்டிய கட்டினை அவிழ்த்து எறியவும்,
“ஏன்டி இப்படி பண்ற??” ஓடிய நிலையிலேயே மகளின் செயலைக் கண்டு ஐரா கத்த,
“நீங்க எல்லாரும் ஒன்னாயிட்டிங்க…. இப்போ எனக்குன்னு யாருமே இல்லை… நான் தனிச்சு போயிட்டேன்… கடைசியில் நம்பி அங்கிளுக்கு கூட நான் ஒன்னுமே இல்லாம போயிட்டேன்… நான் இருக்கறதால தானே நீங்க அவர் கூட போகாம இருக்குறீங்க…” என முனகிய படி ஷரா கூறியவறே மயங்கிக் கொண்டும் சென்றாள்.
மகளின் வார்த்தைகளைக் கேட்டவளின் மனது, ‘கடைசியில நீயும் என்னைத் தான் குற்றவாளி ஆக்கிட்டல்ல….’ என ஓலமிட்டது.
ஐரா ஷராவைத் தூக்கிக் கொண்டு ஓடி ஒரு முச்சக்கரவண்டியினுள் ஏறி வைத்தியசாலைக்கு விரைந்தாள். நேரம் பற்றாமல் அவள் தவிக்கும் சமயத்தில் போக்குவரத்து நெரிசல் வேறு அவளைச் சோதனை செய்தது. கடைசியில் வழியில் இருந்த ஒரு நடுத்தர வைத்தியசாலையினுள் நுழைந்தால், அங்கே அவளின் கஷ்டகாலம் ஷராவின் வகை இரத்தம் அங்கு சேமிப்பில் இல்லை.
பதற்றமும் உயிருக்கோ போராடிக் கோண்டிருந்த மகளின் நிலைமையும் அவளைத் தானாக நம்பியை அழைக்க வைத்தது. அழைபேசியில் ஒரு மருத்துவமனையின் பெயரைச் சொல்லி அங்கு வருமாறு கூறியவளின் குரலில் இருந்த கலவரத்தில் அடித்துப் பிடித்துக் கொண்டு நம்பி விரைந்தான்.
தூரத்தில் ஓட்டமும் நடையுமாக வந்தவனைக் கண்டதும் மனதினுள் ஒரு நிம்மதி சட்டென வந்து குடியேற,
“அறிவு… அறிவு… தயவு செஞ்சு என் பொண்னைக் காப்பாத்துங்க… கையை அறுத்துகிட்டா…. நிறைய இரத்தம் போயிட்டு… என் இரத்தம் அவளுக்கு பொருந்தாது… இங்க அவ வகை இரத்தமும் சேமிப்புல இல்லைன்னுட்டாங்க…. உங்களால மட்டும் தான் அவளைக் காப்பாத்த முடியும்…” ஐரா கதறிக் கொண்டே செல்ல,
அவளின் தோள்களைப் பற்றி அவளை நிலை செய்தவன், “ஏன்???” என்ற ஒரே ஒரு கேள்வியைத் தான் அவளைப் பார்த்துக் கேட்டிருந்தான்.
உண்மையை எத்தனை நாள் தான் மறைக்க இயலும். அந்த ஒற்றைக் கேள்வியில் சகலமும் நிலைகுலைய, “ஏன்னா அவ உங்க பொண்ணு… உங்க வகை இரத்தம் தான் அவளுக்கும்…” என ஐரா கூறவும் அவனுக்கு வேண்டியது கிடைத்து விட்ட திருப்தியில் மகளைக் காப்பாற்ற ஓடினான்.
உயிர் கொடுத்து உருவமும் கொடுத்த தந்தை இன்று இரத்தமும் கொடுத்து தன் மகளை காப்பாற்றி இருக்க, மகள் காப்பாற்றப் பட்டு விட்டாள் என்ற ஒரே திருப்தியில் அமர்ந்திருந்தாள் ஐராவதி.
இரவுமாகி இருக்க ஷரா இன்னும் மயக்கத்திலேயே இருந்தாள். அவளின் ஒரு பக்கம் தாய் மறுபக்கம் தந்தை. நம்பியோ ஐராவை கோபமாய் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது கோபக்கனல் தன்னை எரிப்பது தெரிந்தும் அவனை நிமிர்ந்து பார்க்கமல் மகளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஐரா ராக்கையாவிற்கு அழைத்து தகவல் சொல்லியிருக்க, வைதேகி, வஞ்சி, ராக்கையா மூவரும் வந்திருந்தனர். பேத்தியை அந்த நிலையில் கண்டவரோ, “ஏன்டிம்மா இந்தப் பொண்ணு இப்படிப் பண்ணிகிட்டா….” என வைதேகி அழுகையுடன் கேட்க, வார்த்தைகளற்று நின்றிருந்தாள்.
“அப்பவே சொன்னேன்…. பொட்டைப் புள்ளையை அவ மூப்புக்கு வளர விடாதேன்னு… கேட்டியா??? நீ உன் மூப்புக்கு நடந்து புருஷனை விட்டுட்டு போன…. உன் பொண்ணு அவ மூப்புக்கு நடந்து இந்த உலகத்தை விட்டே போக முடிவு பண்ணிட்டா….” வஞ்சி பொரியவும், அவரினுள் புதைந்திருந்த கோபம் இன்று தான் வெளிவருகிறது என்பதைப் புரிந்து கொண்ட ஐரா அமைதியாய் நின்றிருந்தாள். ராக்கையா தான் வஞ்சியின் தோளில் தொட்டு அவரைச் சமாதானம் செய்ய விளையவும்.
“நீங்க என்னைப் பேச விடுங்க… பொண்ணுன்னா அடக்கம் வேணும் அமைதி வேணும்னு சொல்றதுக்கு பெயர் அடிமைத்தனம் இல்லை…. ஒரு குடும்பத்தையே கட்டியெழுப்பறது ஒரு பொண்ணு தான்... அடக்கமும் அமைதியும் தான் எங்களோட ஆயுதம்…” என வஞ்சி பேசவும், ஒரு தாதி வந்து, “கொஞ்சம் அமைதியா இருங்கம்மா…” என்கவும் வஞ்சியின் வாய் தற்காலிகமாக மூடிக் கொண்டது.
சிறிது நேரத்தில் ஷரா கண் விழித்தாள். தன்னைச் சுற்றி அனைவரும் நின்றிருக்க தாயின் பார்வையில் குற்றஉணர்ச்சியில் தன் பார்வையைத் தளர்த்திக் கொண்டாள்.
“எதுக்குடி சிறுக்கி இப்படிப் பண்ண?” அனைவரும் அமைதியாக இருக்கவும் வஞ்சியால் அப்படி இருக்க முடியவில்லை. ஷராவுக்கு ஆறு வயது இருக்கும் போது ஐரா அவர்களிடம் திரும்பி வந்திருந்தாள். வந்தவள் வைத்த ஒரே ஒரு கோரிக்கை நம்பிக்கு தங்களைப் பற்றி எதுவும் தெரியக் கூடாது என்பது மட்டுமே. சிவசாமிக்கும் ஐரா குழந்தையுடன் வந்திருக்க அந்தக் குழந்தை அவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு பாலமாய் அமைந்து விடும் என்ற எண்ணத்தில் நம்பியிடம் இருந்தும் அதனை மறைத்து விட்டார். ஊருக்கு வந்தால் ஐராவின் ஞாபகங்கள் அவனை அலைக்கலிக்க ஊருடன் இருந்த தொடர்பையே முறித்துக் கொண்டவனுக்கு ஐராவைப் பற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை.
ஊர் ஊராய் திரிந்து ஐரா பொதுச் சேவையில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்க பூஞ்சோலைக்குறிச்சியை விட்டு வெளியே வரமாட்டேன் என வைதேகியும் பிடிவாதமாய் இருக்க ஷராவை வளர்த்தது முழுக்க வஞ்சியும் ராக்கையாவும் தான். அதனால் இவர்கள் அனைவரையும் விடவும் அவர்கள் இருவருக்கும் அவளின் மீது உரிமை அதிகம் தான்.
அந்த நிலையிலும் ஷரா வஞ்சியின் கேள்விக்கு பதி கூறாது உதட்டைக் கோணலாய் சுழிக்க,
அப்போது ஷராவின் அருகே நின்றிருந்த நம்பி அவளின் தலையைத் தடவவும்,
“நீங்க எல்லாரும் ஒன்னாயிட்டீங்க… கடைசியில எடுத்து வளர்த்த பிள்ளை தானே அதான் நான் தனிச்சு போயிட்டேன்…” என்றவள் நம்பியைப் பார்த்து, “நீங்க கூட என்னைத் தள்ளி வைச்சுட்டீங்க தானே அங்கிள்…” என்றவளுக்கு முனுக்கென கண்ணீர் கட்டிக் கொண்டது.
“இல்லைம்மா…. இதோ பாரும்மா… அங்கிள் எல்லாம் இல்லை… அப்பா… சொல்லு…” என்றவும், “நிஜமாவா???” ஷரா நம்ப முடியாமல் கேட்கவும்,
“ஆமா தங்கம்…. அப்பா தான்..” என்றவன் அவளின் நெற்றியில் வாஞ்சையாய் முத்தமிட்டான்…. “நீங்க ரெஸ்ட் எடுங்க என்ன… இனி எல்லாத்துக்கும் அப்பா இருக்கேன்… எதுக்கும் யோசிக்கக் கூடாது…. இந்த மாதிரி இனி பண்ணவும் கூடாது…” என்றவும் சரியெனத் தலையை ஆட்டினாள்.
“நீ வா வெளியே….” என ஐராவைப் பார்த்து கட்டளையாய் கூறியவன் அனைவரையும் முந்திக் கொண்டு தான் வெளியேறினான். அவனின் பின் ஐரா செல்ல, ஏதும் பிரச்சனை ஆகிவிடுமோ என வைதேகியும் பதற்றத்துடன் பின்னால் செல்ல, எஞ்சியிருந்ததோ வஞ்சியும் ராக்கையாவும் தான்.
“நீயும் போடி வெளியில…. இங்க இருந்து என் பிள்ளையை இன்னும் கரிச்சு கொட்ட போறியா??” என ராக்கையா கூற,
“எல்லாம் நீங்க கொடுத்த இடம் தான்….” என வஞ்சி அவரின் தோளில் இடித்து விட்டுப் போக,
வஞ்சி இடித்த இடியில் நிலை தடுமாறி கட்டிலைப் பிடித்து சமாளித்துக் கொண்டவர், “போடி… அடக்கத்தையும் அமைதியையும் பத்தி இவ பேசுறா…” என ஷராவைப் பார்க்க அவளோ இருவரின் கூத்தையும் பார்த்து எப்போதும் போல சிரித்துக் கொண்டிருந்தாள்.
“நீ ஏன் பாப்பா இப்படிப் பண்ண??? பாரு எவ்வளவு ரெத்தம் போயிட்டு… தாத்தா ஊட்டினது எல்லாம் ரெத்ததோட வெளியில போயிட்டு…” என ஷராவிடம் கதை கொடுக்கத் தொடங்கினார் ராக்கையா.
வணக்கம் மக்களே!!!
"தாபங்களே!!! ரூபங்களாய்!!!"
அத்தியாயம் 19, 20, 21 .
மக்களே இன்னும் என்ன கேள்விக்கெல்லாம் உங்களுக்கு பதில் வேணும்னு வந்து என் கிட்ட வரிசையா சொல்லிட்டு போங்க... நிறைய ட்விஸ்ட் வைச்சு மூளை குழம்பிட்டு...
நன்றி
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.