All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘Na உயிரே Nuvve!!!’ - இரண்டாம் பாகம் கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
தன்னைத் தேடி சிம்மஹாத்ரி சத்யநாராயணா வந்திருப்பதாகத் தகவல் அறிந்து ராணியம்மா ஓடி வந்தார். என்னவாக இருக்குமோ என்கிற பதைபதைப்பு, பயம் அவரிடம் காணப்பட்டது. அவர் வரவேற்பறைக்கு வந்த போது வீட்டினர் அனைவரும் அங்குத் தான் இருந்தனர். ஜெய்பிரகாஷ் அண்ணனிடம் மாட்டி கொண்ட தினுசில் முழித்தான். உதய்பிரகாஷ் எப்போதும் போல் அண்ணனிடம் பேசி கொண்டு இருந்தான். பூஜிதா அண்ணன்களுடன் அமர்ந்து இருந்தாள். ரச்சிதா சிம்மஹாத்ரி சத்யநாராயணாவை முறைத்தபடி தள்ளி அமர்ந்து இருந்தாள். அவளுடன் ஜெகதீஸ்வரியும் அமர்ந்து இருந்தாள். சிம்மஹாத்ரி சத்யநாராயணாவை அவளால் நேர்கொண்டு காண முடியவில்லை. காண முடியாத அளவிற்குத் தவறு அவள் பக்கம் இருந்தது.

"வா சத்யா..." ராணியம்மா அவனை வரவேற்க... அவனும் மரியாதை கொடுக்கும் பொருட்டு எழுந்து நின்றான்.

"உட்காருப்பா..." அவனை அமர சொன்னவர் தானும் அமர்ந்தார். அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாது அவர் அமைதியாக இருந்தார்.

"உங்களுக்குச் சேர வேண்டியதை உங்களிடம் கொடுக்க வந்தேன்." என்ற சிம்மஹாத்ரி சத்யநாராயணா ஒரு கோப்பை அவர் முன் நீட்டினான்.

"என்னது?" அவர் புரியாது கேட்க...

"தாத்தாவோட சொத்துகள் அனைத்தும்..." என்றவனை எல்லோரும் திகைப்பாய் பார்த்தனர்.

"நியாயப்படி இது உங்களுக்குச் சேர வேண்டியது. ஆனா நான் ஏன் திரும்ப அடைந்தேன்னு உங்களுக்குச் சந்தேகம் இருக்கும். தொழில் என்பது ஆணுக்கு கற்பு மாதிரி. அதை எல்லாம் இழக்கும் போது ஏற்படும் வலி அவனுக்கு மட்டும் தான் தெரியும். அந்த வலியின் பிரதிபலிப்பு தான் என்னோட சபதம். நிச்சயம் நான் தொழிலை நடத்தி இருந்தாலும் எல்லோருக்கும் நியாயமா என்ன சேரணுமோ, நிச்சயம் அதை எல்லாம் பிரித்துக் கொடுத்திருப்பேன். அதைத் தான் நான் இப்போது செய்து இருக்கிறேன். எல்லாவற்றையும் உங்க பெயருக்கு எழுதி வைத்து விட்டேன். உங்க காலத்துக்குப் பிறகு இவங்க மூணு பேருக்கும் போய்ச் சேரும்படி எழுதி இருக்கேன். இப்போது உங்களுக்குச் சந்தோசம் தானா?" அவனது பேச்சில் ராணியம்மா தனது சிறுபுத்தியினை எண்ணி தலைகுனிந்தார். ஜெய்பிரகாஷ் அண்ணனின் இந்த முடிவு கேட்டு திகைத்துப் போனான். பூஜிதா, உதய்பிரகாஷ் இருவரும் அண்ணனை பூரிப்புடன் பார்த்திருந்தனர்.

"என்னை நினைத்து எனக்கே அவமானமா இருக்கு சத்யா. நீ எல்லா விதத்திலும் உயர்ந்தவன்னு காட்டிட்ட. என் வயித்தில் நான் உன்னைச் சுமக்காது போனேனே." ராணியம்மா கண் கலங்கினார்.

"பெற்றால் தான் பிள்ளையா? நான் எப்பவுமே உங்க பிள்ளை தான். பத்து வயதில் உங்களுக்குச் சப்போர்ட் பண்ணி அப்பா கிட்ட சண்டை போட்டேனே. அதே சத்யா தான் இப்பவும் இருக்கிறேன். உங்களுக்கு ஒன்று என்றால்... முதலில் ஓடி வருவது நானாகத் தான் இருப்பேன்."

"உன்னோட குணமே உன் பிறப்பினை பற்றிச் சொல்லுது சத்யா. நிச்சயம் உன் அம்மா நல்ல குணவதியா தான் இருப்பார். எனக்கு உன் அம்மாவை பார்க்கணும் போலிருக்கு." என்றவரை கண்டு புன்னகைத்தவன்,

"அப்போ நீங்க கண்ணாடியை பாருங்க." என்று கூறி தானும் அவரது மகன் தான் என்று சொல்லாது சொன்னான். அதைக் கேட்டு அவர் மனம் நெகிழ்ந்து போனார்.

சிம்மஹாத்ரி சத்யநாராயணா மறந்தும் தனது தாய் பற்றி ராணியம்மாவிடம் கூறவில்லை. அப்படி அவன் கூறினால்... அது அவருக்கு வாழ்நாள் வலி என்று அவனுக்குத் தெரியும். பாவச்சின்னமான அவனைக் காணும் போது எல்லாம் அவர் துடிதுடித்துப் போவார். ஏற்கெனவே ஒரு அன்னை துடித்தது போதும். இவரும் வருந்த வேண்டாம் என்றே அவன் எண்ணினான்.

"எனக்காக இவ்வளவு செய்யும் உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போறேனோ?" ராணியம்மா கண்ணீருடன் சொல்ல...

"நீங்க என்னோட கல்யாணத்துக்கு வந்திருந்து ஆசிர்வாதம் பண்ணினால் போதும்." அவனுக்கு அது மட்டும் தானே வேண்டும்.

"நிச்சயமாய்... அது உன் கல்யாணம் மட்டுமல்ல. என் மகள் கல்யாணமும் கூட... நான் இல்லாமலா.. எனக்கு இரட்டிப்பு சந்தோசம்." ராணியம்மா சந்தோசம் அடைந்தார். ஆம், இரு திருமணங்களும் ஒரே மேடையில் நடக்கவிருக்கின்றது.

சிம்மஹாத்ரி சத்யநாராயணா எழுந்து ஜெய்பிரகாஷிடம் வர... அவன் தன்னையும் அறியாது எழுந்து நின்றவன் அண்ணனை கலவரத்துடன் பார்த்தான்.

"சொத்துகளை அடைய ஆசை இருக்கலாம் ஜெய். ஆனால் அதைக் கட்டி காக்கும் திறமை வேண்டும். இனி தவறு செய்ய மாட்டேன்னு நம்புறேன்." என்றவனைக் கண்டு ஜெய்பிரகாஷ் தலை தானாக ஆடியது.

சிம்மஹாத்ரி சத்யநாராயணா தனது கடமையை நிறைவேற்றிய மனநிறைவுடன் அங்கிருந்து விடைபெற்றான்.

ராணியம்மா உடனே இந்த விசயத்தைத் தனது அண்ணனிடம் சொல்ல... விசயம் அறிந்த வேங்கடபதி தேவாவும், கங்காதேவியும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்களது வளர்ப்புச் சோடை போகவில்லை என்கிற பெருமிதம் இருவருள்ளும்...

*************************

பெரிய விளையாட்டு மைதானத்தைத் தேர்ந்தெடுத்து திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அரச குடும்பத் திருமண விழா மற்றும் ஊரறிந்த புகழ் பெற்ற திரைப்படக் கதாநாயகனின் திருமணம்... சொல்லவும் வேண்டுமோ கூட்டம் அலை மோத... அப்படியிருந்தும் திருமணத்திற்கு விஐபிக்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டு இருந்தது. மற்றவர்களுக்குத் தனியே வரவேற்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இராஜராஜேஸ்வரி வைர நகைகள் மின்ன ராணி போன்று வலம் வந்தார். ஒரு வைர தோடுக்கு ஏற்பட்ட அக்கப்போரை சிம்மஹாத்ரி சத்யநாராயணா அவருக்கு வைர நகைகளை வாங்கிக் கொடுத்து தீர்த்துக் கொண்டான். இரண்டு மகள்களுக்கும் நல்ல வாழ்க்கை அமைந்து இருப்பதைக் கண்டு இராஜராஜேஸ்வரிக்குப் பூரிப்பு தான். ராணியம்மாவும் மகிழ்ச்சியாக வலம் வந்தார். ஒரு அண்ணனாகச் சிம்மஹாத்ரி சத்யநாராயணா தங்கைக்குப் பணத்தை வாரியிறைத்து அனைத்தையும் செய்திருந்தான். அதுவே அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

இதை எல்லாம் விட ஆதிசக்தீஸ்வரி வீட்டின் சார்பாக மதுரையில் இருந்து உறவினர்கள், நண்பர்கள் என்று அனைவரும் வந்திருந்தனர். மதுரையில் சோமசுந்தரம் பெரிய முக்கியஸ்தர் அல்லவா! இடையில் கதிர்வேலால் ஏற்பட்ட கசப்பு... சிம்மஹாத்ரி சத்யநாராயணா அரச பரம்பரையைச் சேர்ந்தவன் என்றதும் மறைந்து போனது. அவன் நேரில் சென்று எல்லோருக்கும் அழைப்பிதழ் கொடுத்ததும் அனைவரும் திருமணத்திற்கு வந்திறங்கி விட்டனர். விசாகப்பட்டிண அரச பரம்பரையினர் மதுரை உறவினர் கூட்டத்தைக் கண்டு அரண்டு போயினர். இதைக் கண்ட ராணியம்மாவுக்கு மிகவும் திருப்தியாக இருந்தது. அவன் எந்த இடத்திலும் ஆதிசக்தீஸ்வரியை விட்டு கொடுக்கவில்லை. எல்லா இடத்திலும் அவளின் மதிப்பை அவன் உயர்த்த தான் செய்தான்.

முதலில் சிம்மஹாத்ரி சத்யநாராயணா, ஆதிசக்தீஸ்வரி திருமணம் தான் நடக்கவிருந்தது. சுற்றிலும் சொந்தங்கள் சூழ்ந்திருந்தனர். வேங்கடபதி தேவா, கங்காதேவி, ரங்காராவ், அருந்ததி, சந்தோஷ், மயூரி என்று அனைவரும் அங்கு வந்திருந்தனர். மணமேடையில் ஆதிசக்தீஸ்வரியும், சிம்மஹாத்ரி சத்யநாராயணாவும் பூரண அலங்காரத்துடன் மணமக்களாய் அமர்ந்து இருந்தனர். ஆதிசக்தீஸ்வரி உடல்நிலையைக் கருத்தில் கொண்டு சிம்மஹாத்ரி சத்யநாராயணா சடங்கு, சம்பிரதாயங்கள் பெரிதாக இல்லாமல் எளிமையாகப் பார்த்துக் கொண்டான்.

சிம்மஹாத்ரி சத்யநாராயணா ஆதிசக்தீஸ்வரி கழுத்தில் மாங்கல்யத்தை அணிவிக்க வரும் போது அவள் அவனிடம், "மாமா, சர்ப்ரைஸ் இருக்கிறதா சொன்ன? இன்னும் அது என்னன்னு சொல்லையே?" என்று ஆர்வமாகக் கேட்க...

"நான் பிடித்திருக்கும் மஞ்சள் கயிறு எதுன்னு உனக்குத் தெரியுதா?" என்று அவன் கேட்க... அவள் யோசிக்க...

"நீ பத்திரப்படுத்தி வைத்திருந்த மீனாட்சி அம்மன் கோவில் மஞ்சள் கயிறு தான்." அவன் சொன்னதும் அவளது விழிகளில் விழிநீர் கோர்த்துக் கொண்டது. அந்த நிகழ்வு நடந்து கிட்டத்தட்ட ஆறு வருடங்களாகிறது. இன்னமும் அது கொடுத்த பாதிப்பு அதிகம் தான். அன்று அவன் இதை அவளிடம் கொடுத்த போது அவள் அவனையே தனது மணவாளனாக எண்ணி பூரித்தாளே. அப்படி நினைத்து தானே அவள் இதைப் பாதுகாத்து வந்தது.

"அந்த மஞ்சள் கயிற்றில் தான் மாங்கல்யம் கோர்த்து இருக்கிறேன். முதன்முதலில் நம்மைக் கணவன், மனைவியாக அங்கீகரித்த கயிறு இது." என்றவனைக் கண்டு அவள் ஆமென்பது போல் தலையசைத்தாள்.

"நாம கல்யாணம் பண்ணிக்கலாமா பொம்மாயி?" என்று விரிந்த புன்னகையுடன் கேட்டவனைக் கண்டு...

"எஸ், எஸ்..." என்று அவள் வேகமாகத் தலையாட்ட...

சிம்மஹாத்ரி சத்யநாராயணா மகிழ்ச்சியோடு தன்னவள் கழுத்தில் மாங்கல்யத்தை அணிவித்து அவளைத் தன்னில் பாதியாக ஏற்றுக் கொண்டான். திருமணம் முடிந்ததும் இருவருக்குமே மன நிறைவில் கண்கள் கலங்கியது. அவர்கள் இருவரும் மிகவும் எதிர்பார்த்த தருணம் இதுவல்லவா!

அடுத்து ராஜ்குமார், பூஜிதா திருமணம் நடைபெற இருந்தது. பூஜிதாவை பெற்றோர் ஸ்தானத்தில் இருந்து தாரைவார்த்துக் கொடுக்கக் குடும்பத்தில் அவளுக்குச் சித்தப்பா உறவுமுறை கொண்ட ஒருவரை தேர்ந்தெடுத்து வைத்திருந்தனர். ஆனால் பூஜிதாவோ அவர்களைத் தவிர்த்து விட்டு நேரே அண்ணனிடம் வந்து நின்றாள்.

"அண்ணய்யா, நீங்களும் வதினவும் தான் பெற்றோர் ஸ்தானத்தில் இருந்து எனக்கு எல்லாச் சடங்குகளும் செய்ய வேண்டும்." என்று கேட்டுக் கொள்ள...

சிம்மஹாத்ரி சத்யநாராயணா மனம் நெகிழ்ந்து தங்கையை அணைத்துக் கொண்டான். அன்று முறையில்லாது ஆதிசக்தீஸ்வரியை பேசிய பூஜிதா இன்று முறையோடு அவளைச் சடங்கு செய்ய அழைத்தாள். அதுவும் அன்னை ஸ்தானத்தில் வைத்து... அன்பு எல்லோர் மனதினையும் மாற்றும் போலும். இருவரும் சந்தோசமாய் இணைந்து நின்று பூஜிதாவிற்கான சடங்குகளைச் செய்ய ஆரம்பித்தனர். ராஜ்குமார் மகிழ்ச்சியோடு பூஜிதா கழுத்தில் தாலி கட்டி அவளைத் தன்னவளாக்கி கொண்டான். எங்கும் மகிழ்ச்சி நிலவியது.

திருமண மகிழ்ச்சியில் கலந்து கொள்ளாது விஷ்ணு மட்டும் அமைதியாக அமர்ந்து இருந்தான். அவனைக் கண்டு கொண்ட பவன்ராம் அவன் அருகே வந்தமர்ந்தான்.

"என்ன பிரெண்ட், ஏன் சோகமா இருக்க?" பவன்ராம் அவனைத் தூக்கி தனது மடியில் அமர்த்திக் கொள்ள...

"அம்மா பாவம் அங்கிள்." சின்னவன் சொன்னதும் பவன்ராமின் விழிகள் காயத்ரியை பார்த்தது. அவன் இங்கு வந்ததில் இருந்து அவளைத் தானே கவனித்துக் கொண்டு இருக்கின்றான்.

"ஏன் இப்படிச் சொல்ற?" பவன்ராம்க்கு ஒன்றும் புரியவில்லை.

"எல்லோரும் கலர், கலரா டிரெஸ் போட்டு, மேக்கப் எல்லாம் போட்டு இருக்காங்க. ஆனா பாவம் அம்மா... இது எல்லாம் போடவே இல்லை. அவங்க ரொம்பச் சோகமா இருக்காங்க. அப்பா இறந்ததில் இருந்து அவங்க இப்படித்தான் இருக்காங்க." சின்னவனின் வருத்தம் பவன்ராம்க்குப் புரிந்தது.

"அதுக்கு என்ன செய்யலாம் விஷ்ணு?"

"அம்மா பழையபடி மாறணும். அவங்க சந்தோசமா இருக்கணும்." என்ற விஷ்ணுவை கண்டு புன்னகைத்த பவன்ராம்,

"நிச்சயம் உங்கம்மா பழையபடி மாறுவாங்க. அவங்க சந்தோசமா இருப்பாங்க. அதுக்கு நான் கியாரண்ட்டி." என்றவனைக் கண்டு சிறுவனின் முகம் மலர்ந்தது.

"தேங்க்ஸ் அங்கிள்." என்ற விஷ்ணு பவன்ராமை அணைத்து அவனது கன்னத்தில் முத்தமிட்டான். பவன்ராமால் என்ன செய்துவிட முடியும் என்று கூட விஷ்ணு யோசிக்கவில்லை. ஆனால் அவன் பவன்ராமை நம்பினான். பவன்ராமின் அன்பு அவனுக்கு நம்பிக்கையைக் கொடுத்திருந்தது. இதே போன்று ஒருநாள் இல்லை ஒருநாள் அவனது அன்னையின் மனமும் மாறும்.

திருமணம் முடிந்து ராஜ்குமார் தனது மனைவி பூஜிதாவுடன் ஊடகவியலாளர்களைச் சந்தித்துப் பேசினான். ஆனால் சிம்மஹாத்ரி சத்யநாராயணாவோ ஊடகங்களைச் சந்தித்துப் பேச விரும்பவில்லை. அன்று அவன் சொன்னது போல் ஊடகங்களுக்குத் திருமண அழைப்பிதழோடு சேர்த்துத் திருமணச் சான்றிதழின் நகலையும் சேர்த்து அனுப்பி வைத்தான். ஆனாலும் ஊடகங்களின் வாயை அடைக்க முடியுமா! அரச பரம்பரைக்கு ஏற்றவாறு கம்பீரத்துடன் ஆதிசக்தீஸ்வரி இல்லை என்று ஒரு ஊடகம் செய்தி வெளியிட்டது. இன்னொரு ஊடகமோ அவளது தோற்றத்தினை, தலைமுடியை கேலி செய்து செய்தி வெளியிட்டது. இதை எல்லாம் கண்ட சிம்மஹாத்ரி சத்யநாராயணாவுக்குக் கோபம் வந்தது. ஆதிசக்தீஸ்வரியோ இதை எல்லாம் மகிழ்ச்சியாய் அனுபவித்துக் கொண்டு இருந்தாள்.

"உனக்குக் கோபம் வரலையா?" என்று அவன் கேட்ட போது...

"பத்திரிக்கைகள் விற்கணும்ன்னா... அவங்க இப்படிச் செய்தி வெளியிட்டால் தான் உண்டு. பேசுற வாய் பேசிட்டு தான் இருக்கும். இதுக்கு எல்லாம் கோபப்பட்டால்... நாம வாழ்க்கை முழுவதும் கோபப்பட்டுக் கொண்டே தான் இருக்கணும். டேக் இட் ஈஸி மாமா." அவள் சாதாரணமாகச் சொல்லிவிட்டாள். அவனுக்குத் தான் மனம் கேட்கவில்லை. அதனால் தான் அவன் இப்போதும் ஊடகங்களைச் சந்திக்கத் தயங்கினான்.

ஆனால் அரசனான சிம்மஹாத்ரி சத்யநாராயணா பொதுமக்களைச் சந்திக்காது இருக்க முடியுமோ! அவன் தனது மனைவியுடன் சேர்ந்து பொதுமக்களைச் சந்திக்கச் சென்றான். அதையும் செய்தியாகச் சேகரிக்க ஊடகங்கள் அவர்களின் பின்னேயே வந்தது. இருவரும் எதையும் கண்டு கொள்ளாது மக்களைச் சந்தித்தனர். அப்போது ஒரு அழுக்கு குழந்தை, மூக்கு ஒழுகியபடி அன்னையிடம் இருந்து அவளிடம் தாவி வந்தது. அதன் அன்னை குழந்தையைத் தடுத்தாள். ஆனால் மணக்கோலத்தில் இருந்த ஆதிசக்தீஸ்வரி அந்தக் குழந்தையை வாங்கிக் கொண்டு தனது கைக்குட்டையை வைத்து அதன் மூக்கினை துடைத்துச் சுத்தம் செய்தாள். எல்லோரும் அவளை ஆச்சிரியத்துடன் பார்த்தனர். பிறகு அவள் அந்தக் குழந்தையைக் கொஞ்ச ஆரம்பிக்க... ஊடகங்கள் அந்த அழகான காட்சியைத் தங்களது புகைப்படக் கருவியில் பதிந்து கொண்டது.

இந்தச் செய்தி திருமண நிகழ்வுகளோடு சேர்த்து சுட சுட நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. ஆதிசக்தீஸ்வரியை கேலி செய்து கேலிச்சித்திரம் வெளியிட்ட எல்லா ஊடகங்களும் இப்போது அவளைப் பற்றிப் போற்றிப் புகழ்ந்து தள்ளியது. அக அழகு அழகாய் அங்கீகரிக்கப்பட்டது.

இந்த நிகழ்வை திருமண மண்டபத்தில் இருந்த பெரிய திரையில் கண்ட சிம்மஹாத்ரி சத்யநாராயணா தனது மனைவியை அணைத்துக் கொண்டு காதலோடு பார்க்க... அவளும் அவனுக்குச் சளைக்காத காதலோடு அவனைப் பதிலுக்குப் பார்த்தாள். இருவரது பார்வையும் ஒன்றை ஒன்று ஈர்த்து நின்றது. இந்த அன்பிற்காகத் தானே அவன் அவளை விரட்டி வந்து கரம்பிடித்தது. அவளது காதல் அவனுக்கு என்றுமே தனித்துவம் வாய்ந்தது தான்!

"மறுஜென்மம் எடுத்தால் கூட
உயிரே உன் கரம் பிடிப்பேனே
உன் கால் தடம் நான் தொடர்வேனே
அன்பே! அன்பே!
(ரன்ஞ்ஜா என்ற இந்தி பாடலின் தமிழ் பதிப்பு)"

நீயாகும்...!!!
 

ஶ்ரீகலா

Administrator
உயிர் : 43

வேலைக்கு வந்திருந்த காயத்ரியின் முகமே சரியில்லை. அருந்ததி என்னவென்று கேட்ட போதும் அவள் வாய் திறந்து சொன்னாள் இல்லை. அவள் அமைதியாகத் தனக்குள் யோசித்தபடி வேலை செய்து கொண்டு இருந்தாள். அவளைக் காண்பதற்காகவே பவன்ராம் தினமும் அங்கு வந்துவிடுவான். அது போல் இன்றும் அவன் இல்லத்திற்கு வந்தான். மகனது வருகையைக் கண்டதும் அருந்ததி,

"காயத்ரியை தேடி வந்துட்டியா? இதெல்லாம் என்ன பொழப்புடா?" என்று அவர் மகனை கேலி செய்ய... பவன்ராம் ஏற்கெனவே தனது பெற்றோரிடம் தனது காதலை சொல்லி சம்மதம் வாங்கி விட்டான். அதனால் தான் அருந்ததி மகனை கேலி செய்தது.

"என்ன பண்ணம்மா? அவள் மனசு மாறணுமே. அதுவரை பொறுமையா தான் இருக்கணும்."

"அதுக்கு நீ உன் காதலை, காத்திருப்பை அவளுக்குச் சொல்லணும் பவன். நீ சொல்லாம அவள் எப்படி உன்னைப் புரிந்து கொள்வாள்?" அன்னை சொன்னது கேட்டு திகைத்தவன் அவரது கூற்றில் இருந்த உண்மையை அறிந்து அமைதியாக இருந்தான்.

"சொல்லணும்ன்னு தான் நினைக்கிறேன்ம்மா. ஆனா இப்போ இருக்கும் நட்பும் இல்லாது போயிருமோன்னு பயமா இருக்கு."

"நட்பு போனால் என்ன? காதல் வரும், கணவன், மனைவி என்கிற உறவு வரும். நல்லதோ கெட்டதோ இரண்டில் ஒன்று பார்த்துவிடு பவன்."

"ம், முயற்சிக்கிறேன்." என்றவனைக் கண்டு,

"இன்னைக்கு என்னன்னு தெரியலை. காயத்ரி முகமே சரியில்லை. என்னன்னு போய்க் கேளு." என்றவர் தனது வேலையில் ஆழ்ந்து விட்டார்.

பவன்ராம் நேரே காயத்ரியை சென்று சந்தித்தான். அவனைக் கண்டதும் அவளது விழிகள் மலர்ந்தது. அவளுக்கு என்று இருக்கும் ஒரே நட்பு, ஒரே உறவு அவன் மட்டும் தான். அவள் அவனிடம் மட்டும் தான் மனம் விட்டு பேசுவாள்.

"என்ன காயூ, ஏன் முகம் ஒரு மாதிரியா இருக்கு? எதுவும் பிரச்சினையா?" அவன் கேட்கவும்...

"ஆமாங்க சார்." என்றவளை இடைமறித்தவன்,

"இன்னும் நீ இந்தச் சாரை விடலையா?" என்று அவன் கேட்க...

"நீங்க என்னை விட வயதில் மூத்தவர்." என்றவளை கண்டவன்,

"இந்த அசிங்கம் உனக்குத் தேவையா?" என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டான். அதைக் கண்டு அவள் கலகலவெனச் சிரித்தாள். அவளது சிரிப்பினை ரசித்தபடி, "என்ன பிரச்சினை?" என்று அவன் மீண்டும் கேட்க...

"எங்க வீட்டுக்குப் பக்கத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருத்தன் இருக்கான். நான் தனியே இருக்கிறதை பார்த்துட்டு அவன் என் கிட்ட ஒரு மாதிரியா பேசுறான். இன்னைக்கு அவன் என் கையைப் பிடிக்க வந்தான். நான் எப்படியோ தப்பிச்சு வந்துட்டேன்." என்றவளது விழிகள் கலங்கி இருந்தது.

ஆம், காயத்ரி கூறுவதும் உண்மை தான். இப்போது அந்த வீட்டில் அவளும், விஷ்ணுவும் மட்டுமே இருக்கின்றனர். இராஜராஜேஸ்வரி சிம்மஹாத்ரி சத்யநாராயணா, ஆதிசக்தீஸ்வரியுடன் மதுரைக்குச் சென்று விட்டார். ஆனால் காயத்ரி அங்கே செல்ல மறுத்து விட்டாள். அங்கே சென்றால் கணவனது ஞாபகத்தில் முடங்கி விடுவோமோ என்று அவள் பயந்தாள் போலும். அவளது தனிமை நிலையைப் பயன்படுத்திக் கொண்டு அந்தக் காவல்துறை அதிகாரி அவளிடம் வம்பிழுத்து இருக்கிறான். ஏதாவது பிரச்சினை என்றால் காவல்நிலையம் போகலாம். இங்குக் காவல்துறை அதிகாரியே பிரச்சினையாக இருந்தால்... அவளும் என்ன தான் செய்வாள்?

"சரி, இதுக்கு நான் என்ன பண்ண முடியும்?" ஆணவன் அப்படிக் கேட்டதும் அவள் திகைப்பாய் அவனைப் பார்த்தாள். பவன்ராமிடம் இருந்து இப்படியொரு வார்த்தைகளை அவள் எதிர்பார்க்கவில்லை.

"இங்கே பாரும்மா... எப்பவும் நானோ, வேறு யாரோ வந்து உன்னைக் காப்பாத்திட்டு இருக்க முடியாது. நீ தான் உன்னைக் காப்பாத்திக்கணும், பாதுகாத்துக்கணும். அதுக்கு நீ தைரியமா இருக்கணும்." என்றவனைக் கண்டு அவளுக்கு எதுவோ புரிவது போலிருந்தது.

"நீ வீட்டுக்கு போகும் போது பெப்பர் ஸ்பிரே வாங்கிட்டு போ... அவன் உன்னிடம் வம்பிழுக்க வரும் போது அதை அவன் கண்ணில் அடித்து ஊரை கூட்டிவிடு. அதுக்குப் பிறகு அவன் உன் கிட்ட ஜென்மத்துக்கும் வம்பிழுக்க மாட்டான்." தற்காலிக தீர்வு சொல்லாது நிரந்தரத் தீர்வு சொன்னவனை அவள் நன்றியோடு பார்த்தாள்.

இப்போது தனது காதலை சொல்லலாமா? என்று யோசித்த பவன்ராம் வாயை திறக்க போனவன் பின்பு ஏதோ நினைத்தவனாய் அமைதியாகி விட்டான்.

"ஏதாச்சும் சொல்லணுமா?" அவனது முகத்தை வைத்தே அவள் கேட்டாள்.

"ஒண்ணும் இல்லை. அடுத்த வாரம் சத்யா குடும்பத்துடன் வருகிறான் இல்லையா? அதைப் பத்தி பேச வந்தேன்." என்றவன் நண்பனை பற்றிப் பேசி பேச்சை மாற்றி விட்டான்.

பவன்ராம் சொன்னது போல் சிம்மஹாத்ரி சத்யநாராயணா மனைவி, மகள் பவதாரிணியுடன் விசாகப்பட்டிணம் வருகின்றான். லெக்ஷ்மி நரசிம்மர் கோவிலில் வைத்து மகளுக்கு மொட்டை போடுவதற்காக அவன் இங்கு வருகை தருகின்றான்.

அன்று மாலை காயத்ரி வீடு திரும்பும் போது அந்த அதிகாரி வேண்டுமென்றே அவளிடம் வந்து வம்பு வளர்க்க... அடுத்த நொடி அவள் தனது பையில் இருந்த பெப்பர் ஸ்பிரேயை எடுத்து அவனது கண்களில் அடித்து விட்டாள். அவன் எரிச்சல் தாங்காது அலற துவங்கினான். காயத்ரி அவனைத் திருப்தியுடன் பார்த்தவள் அங்கிருந்து அகன்றாள். அந்த நொடி அவள் பவன்ராமை நன்றியுடன் நினைத்து கொண்டாள்.

"பூனை போன்று சாதுவாக இருக்கும் காயத்ரிக்குள்ளும் தைரியமான புலி ஒன்று ஒளிந்து இருக்கிறதே." திடுமெனக் கேட்ட பவன்ராமின் குரலில் அவள் மகிழ்ச்சியுடன் திரும்பி பார்த்தாள்.

"வெல்டன் காயத்ரி. நல்ல காரியம் பண்ணின." அவன் கைத்தட்டி அவளைப் பாராட்டினான்.

"உங்களைத் தான் நினைத்துக் கொண்டு இருந்தேன்." என்றவளைக் கண்டு,

"அதிசயமா இருக்கு. நீ என்னை நினைத்தாயா?" அவன் ஆச்சிரியமாய்க் கேட்டான்.

"ஆமா, உங்களுக்கு நன்றி சொல்லத்தான். இந்த ஐடியா கொடுத்ததுக்கு உங்களுக்கு நன்றி." அவள் நன்றி கூற...

"நன்றி எல்லாம் வேண்டாம். இனி இல்லத்தில் நடக்கும் கராத்தே வகுப்புக்கு நீ கட்டாயம் போகிற. கராத்தே கத்துக்கிட்டு உன் கிட்ட வம்பிழுப்பவங்களை நீ அடிச்சுத் துவம்சம் பண்ற."

"அவ்வளவு காலையில் என்னால் முடியாது. விஷ்ணுவை ஸ்கூலுக்கு அனுப்பணும்." அவள் தயங்கினாள்.

"அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீ அவனை இல்லத்துக்குக் கூட்டிட்டு வந்திரு. அதுக்குப் பிறகு நான் அவனைப் பார்த்துக்கிறேன்." என்றவனைக் கண்டு அவளது விழிகள் கசிந்தது.

அவன் யாரோ? எவரோ? ஆனால் அவன் அவளுக்காக ஒவ்வொன்றையும் யோசித்து யோசித்துச் செய்கின்றான். அன்று ஒருநாள் அப்படித்தான் விஷ்ணுவுக்கு உடல்நிலை சரியில்லாது போனது. அவள் தனியே வேலை, வீடு, மருத்துவமனை என்று அல்லாடி கொண்டிருப்பதைக் கண்டு பவன்ராம் தான் ஓடி வந்தான். அவன் மருத்துவமனையில் விஷ்ணுவுடன் இருந்து அவனைக் கவனித்துக் கொண்டான். யாரும் இருவரையும் தவறாக நினைத்து விடக் கூடாது என்று அவன் பார்த்து பார்த்து நடந்து கொண்ட விதம் அவளது மனதில் இதத்தைப் பரப்பியது.

பவன்ராம் சொன்னது போல் மறுநாள் காயத்ரி நேரத்துடன் மகனை அழைத்துக் கொண்டு இல்லத்திற்கு வந்துவிட்டாள். அங்கு ஏற்கெனவே அவர்களுக்காகக் காத்திருந்த பவன்ராம் விஷ்ணுவின் பொறுப்பினை ஏற்றுக் கொண்டான். காயத்ரி வகுப்பு முடிந்து வரும் போது விஷ்ணு பவன்ராமுடன் பள்ளி செல்ல தயாராக இருந்தான்.

"பைம்மா..." என்ற விஷ்ணு அவளிடம் விடைபெற்று சென்று பவன்ராமின் காரிலேறி அமர்ந்தான். அவன் பவன்ராமின் கழுத்தை கட்டி கொண்டு இருக்கையில் நின்றபடி ஏதோ பேசி கொண்டிருக்க... பவன்ராமும் சிரித்தபடி பதில் சொல்லியவன் தனது காரை கிளப்பினான்.

காயத்ரி இந்தக் காட்சியைப் பார்த்தபடி நின்றிருந்தாள். அவள் எத்தனையோ முறை கணவனையும், மகனையும் இணைத்து கண்ட கனவு இது. கதிர்வேலன் ஒரு முறை கூட அதை நிறைவேற்றியது இல்லை. ஏனோ அந்தக் கனவு நிறைவேறியது போல் அவளுக்கு அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. அடுத்த நொடி நிதர்சனம் அவளைச் சுட... அவள் தலையைக் குலுக்கி கொண்டாள்.

*************************

அதேநேரம் மதுரையில் இராஜராஜேஸ்வரி தனது வீட்டில் வைர நகைகள் மின்ன ராணி போன்று அமர்ந்து இருந்தார். ஆதிசக்தீஸ்வரி அன்னையைப் பார்த்தபடி மகளுக்கு உணவு ஊட்டி கொண்டு இருந்தாள். பவதாரிணி பிறந்து ஒரு வருடம் முடிய போகிறது. அவளுக்கு மொட்டை போடுவதற்காகத் தான் அடுத்த வாரம் விசாகப்பட்டிணம் செல்கின்றனர்.

சிம்மஹாத்ரி சத்யநாராயணா தனது அன்னை சொத்துகள் எல்லாவற்றிலும் பவன்ராமை பங்குதாரராக்கி அனைத்தையும் அவனது பொறுப்பில் விட்டு விட்டு மதுரை வந்து விட்டான். அவனை உயிர்ப்புடன் வாழ செய்தது இந்த மதுரை மண் தானே. அதனால் அவன் மனைவியுடன் மதுரைக்கு வந்து விட்டான். இங்கு வந்த பிறகு தான் அவர்களது மகள் பிறந்தாள். அன்னையின் ஞாபகமாக அவளுக்குப் பவதாரிணி என்று அவன் பெயர் வைத்து விட்டான்.

அவன் எப்போதும் போல் அதே எளிமையுடன் தான் இருந்தான். இப்போதும் அவன் இந்த வீட்டிற்குள் வர மாட்டான். பின்பக்கமாய்ச் சுற்றி சென்று நேரே தனது அறைக்குச் சென்று விடுவான். அது அவர்களது காதல் சின்னம் அல்லவா! இப்போது மனைவி, மகளுக்காக அந்த அறையைச் சற்று பெரிதாக்கி மாற்றியமைத்து இருக்கின்றான். இப்போதும் இராஜராஜேஸ்வரி அவனை ஏதாவது சொல்லி கொண்டு தான் இருப்பார். அவன் எதையும் கண்டு கொள்வது இல்லை. உண்மையைச் சொல்ல போனால்... அவர் இல்லை என்றால் பொழுதும் போகாது. ஆதிசக்தீஸ்வரி தான் எப்போதும் போல் அவனுக்காக அன்னையிடம் சண்டைக்குச் செல்வாள்.

மகளுக்கு ஊட்டி விட்டுக் கொண்டிருந்த ஆதிசக்தீஸ்வரி கணவனைக் கண்டதும் மகளைத் தூக்கி கொண்டு எழுந்து சென்றாள். மகளை அவனிடம் கொடுக்கும் முன்னே மகள் தாவி கொண்டு தந்தையிடம் சென்றாள். அவன் சிரித்தபடி மகளை வாங்கிக் கொண்டான்.
 

ஶ்ரீகலா

Administrator
"பத்து லட்ச ரூபாய் கொடுத்திருந்தேனே. அதை எடுத்து கொடு பொம்மாயி. சரக்கு வாங்க கொடுக்கணும்." என்றவன் அங்கேயே அமர்ந்து மகளைக் கொஞ்சி கொண்டிருக்க...

ஆதிசக்தீஸ்வரி உள்ளே சென்று பணத்தை எடுக்கப் போனவள் அங்குப் பணம் இல்லாதது கண்டு திகைத்தவள் நேரே அன்னையிடம் வந்தாள்.

"அம்மா, இங்கே இருந்த பணம் எங்கே?" அவள் சந்தேகத்துடன் கேட்க...

"நான் தான்டி எடுத்தேன். இதோ இங்கே பார்... வைர வளையல் நல்லா இருக்கா?" அவர் தனது கரத்தினைக் காட்ட...

"ஏன்ம்மா இப்படிப் பண்றீங்க? பிசினஸ்க்காக வைத்திருக்கும் பணத்தை எடுத்து இப்படித் தண்டச்செலவு பண்றீங்களே. உங்களுக்கே இது நியாயமா இருக்கா?" அவளுக்குக் கோபம் வந்தது.

"அதை அவனைச் சொல்ல சொல்லு பார்ப்போம்? அதை விட்டுட்டு நீ ஏன்டி அலட்டிக்கிற?" இராஜராஜேஸ்வரி மிதப்பாய் மருமகனை பார்த்தார்.

"மாமா, நீ வந்து சத்தம் போடு." ஆதிசக்தீஸ்வரி அவனைத் தேடி வந்தாள்.

"விடு பொம்மாயி... நான் பணத்துக்கு வேற ஏற்பாடு பண்றேன்." என்றவன் மகளை அவளிடம் கொடுத்து விட்டு கிளம்ப ஆயத்தமானான். இப்போது எல்லாம் அவன் அவரைக் கடிவது இல்லை. அவர் என்ன செய்தாலும் மறுத்து பேசுவது இல்லை. ஏனோ அவருக்குச் செய்வதில் அவனுக்கு ஆத்ம திருப்தி உண்டானது.

"ஆதி, சத்யாவை நிற்க சொல்லு." என்ற இராஜராஜேஸ்வரி உள்ளே சென்று எதையோ எடுத்து வந்தார். நேரே அவனிடம் வந்தவர்,

"இந்தா பத்து லட்சம்..." என்று கொடுக்க... அவன் புன்னகையுடன் பணத்தை வாங்கிக் கொண்டான். ஆதிசக்தீஸ்வரி திகைத்து விழித்தாள்.

"அப்போ இந்த வைர வளையல்?" அவள் புரியாது கேட்டாள்.

"சத்யா வாங்கிக் கொடுத்தது தான். உனக்குத் தான் ஞாபகம் இல்லை. வர வர இந்தப் பொண்ணுக்கு பொறுப்புங்கிறதே இல்லை. இவளை நம்பி பணத்தைக் கொடுக்காதே சத்யா. ஞாபகமறதியில் தொலைத்து விடுவாள்." என்ற மாமியாரை கண்டு அவன்,

"சரிங்க அத்தை." என்று புன்சிரிப்புடன் சொல்ல...

"என்னது?" மனைவி அவனை முறைத்தாள். அவன் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி விட்டான்.

"சத்யா எனக்கு மகன் மாதிரி. இனி அவனை நான் கஷ்டப்படுத்த மாட்டேன்." இராஜராஜேஸ்வரி உணர்ந்து சொன்னார். எந்த ஊரில் மதிப்பு, மரியாதை இழந்து நின்றாரோ... அதே ஊரில் இன்று அவரை மதிப்பும், மரியாதையுமாய் வாழ வைப்பது அவனல்லவா! அவரை வாழ வைக்கும் தெய்வம் அவன்!

மறுநாளே விசாகப்பட்டிணம் கிளம்பி சென்று குலதெய்வ கோவிலில் வேண்டுதலை நிறைவேற்றி விட்டு மகளுக்கும் மொட்டை அடித்து விட்டு அரண்மனைக்கு வந்தனர். ராணியம்மா மகிழ்ச்சியுடன் மகனையும் மருமகளையும் வரவேற்றவர் பேத்தியை தூக்கி கொஞ்சினார்.

"வாங்க..." என்று கேட்டபடி ஜெகதீஸ்வரி அங்கு வந்து நின்றாள். இப்போது அவள் ஆறு மாத கர்ப்பிணியாக இருக்கிறாள்.

கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனச்சுணக்கத்தைக் கண்ட சிம்மஹாத்ரி சத்யநாராயணா தான் உதய்பிரகாஷுக்கு அறிவுரை கூறித் திருத்தினான். உதய்பிரகாஷும் மனைவியைப் புரிந்து கொண்டு நல்லவிதமாக நடக்க ஆரம்பித்தான். மகளுக்கு இராஜராஜேஸ்வரி வேறு அறிவுரை கொடுத்திருந்தார். சின்ன மகளின் காதல் வாழ்க்கை கண்டு அவருக்குமே புத்தி தெளிந்து விட்டது. அன்னையின் அறிவுரையில் ஜெகதீஸ்வரி சற்று மனம் மாறினாள். கணவனைக் காதலோடு நேசித்தாள். அவர்களது காதலின் நம்பிக்கை அவளது வயிற்றில் மகவாக வளர்கிறது. ஜெகதீஸ்வரி சிம்மஹாத்ரி சத்யநாராயணாவுக்குச் செய்த துரோகம் இன்னமும் உதய்பிரகாஷுக்குத் தெரியாது. இனியும் அவனுக்குத் தெரிய போவதில்லை. யாரும் அதை அவனிடம் சொல்ல போவது இல்லை. மறப்போம், மன்னிப்போம்... அது தான் நல்ல வாழ்க்கைக்கு அடையாளம்!

"வாங்க அண்ணய்யா, வாங்க வதின." ஜெய்பிரகாஷ் இருவரையும் வரவேற்றான். உடன் நின்றிருந்த மனைவியையும் வரவேற்க சொல்லி வற்புறுத்தினான். ரச்சிதாவோ வந்தவர்களைக் கண்டு கொள்ளாது,

"பாவா, ஈவினிங் சீக்கிரமே வாங்க. வெளியில் போகணும்." என்று விட்டு உள்ளே சென்று விட்டாள்.

"ரச்சி பற்றி உங்களுக்குத் தெரியும் தானே." ஜெய்பிரகாஷ் வருத்தத்துடன் சொல்ல...

"நீயும், அவளும் சந்தோசமாய் இருந்தால்... அதுவே போதும் ஜெய்." சிம்மஹாத்ரி சத்யநாராயணா அவனைத் தட்டி கொடுத்தான்.

சொத்துகள் வந்த பிறகு ஜெய்பிரகாஷ் பழைய குரோதம் எல்லாம் மறைந்து பொறுப்புடன் நடந்து கொள்ள ஆரம்பித்தான். இதில் அண்ணனது அறிவுரை வேறு... அதனால் அவன் ரச்சிதாவின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்தான். அவளுக்கு என்று பெர்சனல் ஸ்பேஸ் கொடுத்து அதில் அவன் நுழையாது பார்த்துக் கொண்டான். இதை எல்லாம் விடப் பெண்ணுக்கு மரியாதை கொடுத்தான். எந்தவிதத்திலும் அவன் மனைவியை வற்புறுத்தவில்லை. இது எல்லாம் போதாதா? ஒரு பெண் ஆணிடம் வீழ்வதற்கு... ரச்சிதாவும் கணவன் மீது காதலில் விழுந்தாள். அவர்கள் இருவரும் இப்போது தான் வாழ்க்கையை வாழ ஆரம்பித்து இருக்கின்றனர். இப்போது தான் இருவரும் காதல் என்றால் என்ன? என்பதைக் கற்று தேர்ந்து கொண்டு இருக்கின்றனர். நிச்சயம் காதலில் தேர்ச்சி அடைந்து விடுவார்கள்.

காயத்ரியும் விஷ்ணுவும் கூட அங்கே தான் இருந்தனர். ராஜ்குமார் பூஜிதா என்று எல்லோரும் அங்கு வருகை தந்து விட்டனர்.

"என்னடா ராஜ், எதுவும் பிளானில் இருக்கியா?" சிம்மஹாத்ரி சத்யநாராயணா நண்பனை கண்டு கேட்க...

"ஆமாடா சத்யா... பூஜா மேலே படிக்கட்டும். படிச்சிட்டு வந்து என்னோட தொழில்களைக் கவனித்துக் கொள்ளட்டும். அதுக்குப் பிறகு குழந்தையைப் பத்தி யோசிக்கலாம்." புரிந்துணர்வோடு சொன்ன ராஜ்குமாரை கண்டு அவனுக்கு மகிழ்ச்தியாக இருந்தது.

"ஏன்டா உங்களுக்கு எல்லாம் என்னைய பார்த்தால் எப்படித் தெரியுது? ஏன்டா இப்படி எல்லாம் பேசி பிஞ்சு மனசை காயப்படுத்துறீங்க?" பவன்ராம் அழுவது போல் சொல்ல...

"பவன், நான் ஒரு ஐடியா கொடுக்கவா? பேசாம நீ காயத்ரி கழுத்தில் கட்டாயத் தாலி கட்டிரு. பிராப்ளம் சால்வ்ட்." ராஜ்குமார் திட்டம் வகுத்து கொடுக்க...

"சத்யா, நான் வாழ வழி கேட்டால்... இவன் எனக்குச் சாக வழி சொல்றான்டா." பவன்ராம் ராஜ்குமாரை முறைத்துப் பார்த்தான்.

சிம்மஹாத்ரி சத்யநாராயணாவுக்குமே காயத்ரி விசயத்தில் என்ன முடிவு எடுப்பது என்று தெரியாது விழித்தான். என்ன ஆனாலும் பரவாயில்லை இன்று காயத்ரியிடம் பேசிவிடுவது என்று அவன் முடிவு செய்தான். முடிவு செய்தபடி அவன் காயத்ரியை தனியே சந்தித்தான். பவன்ராமுடன் விளையாடி கொண்டிருக்கும் மகனை பார்த்தபடி நின்றிருந்தாள் காயத்ரி.

"காயூ..." என்று அவன் அழைக்க... அவள் புன்னகையுடன் திரும்பி பார்த்தாள்.

"பவனைப் பத்தி நீ என்ன நினைக்கிற?" அவன் திடுமென இப்படிக் கேட்டதும் அவள் திகைத்து விழித்தாள்.

"பவன் உன்னைக் காதலிக்கிறான். அதுவாவது உனக்குத் தெரியுமா?" அவன் சொன்னதும் அவள் திகைப்புடன் இல்லையென்று தலையசைத்தாள். அவனது அன்பு, அக்கறை அவளுக்குப் புரியத்தான் செய்கிறது. அது காதல் என்று அவள் இதுவரை நினைக்கவில்லை.

"அவன் கடைசி வரை தன்னோட காதலை உன் கிட்ட சொல்ல மாட்டான். ஏன்னா உன்னைக் கஷ்டப்படுத்துற எதையும் அவன் செய்ய மாட்டான். நீ சின்னப் பொண்ணு காயூ. நீ வாழ வேண்டிய பொண்ணு. உன் வாழ்க்கை இப்படியே போகணுமா? உன்னை விடு... விஷ்ணுவை பார். அவன் பவனோடு எவ்வளவு சந்தோசமா விளையாடி கொண்டு இருக்கிறான். அதில் தந்தை இல்லாத ஏக்கம் உனக்குத் தெரியலையா?" சிம்மஹாத்ரி சத்யநாராயணா கேட்கவும் அவள் கண்ணீரோடு அவனைப் பார்த்தாள்.

"கதிரோட மனைவியா யோசிச்ச நான்... என் மகனோட அம்மாவா இதுவரை யோசித்தது இல்லை. கதிரோட காதலை நான் புரிந்து இருக்கிறேன். ஆனால் உணர்ந்தது இல்லை. வாழ்ந்தது இல்லை. எனக்கே அப்படி இருக்கும் போது... விஷ்ணு சின்னப் பையன். அவன் பொறந்ததில் இருந்து அப்பா பாசத்தைக் கண்டது இல்லை. இப்போ பவன் சார் கூட அவனை நெருக்கமா பார்க்கும் போது எனக்கும் சந்தோசமா தான் இருக்கு. கதிரோட விஷ்ணு எப்படி இருக்கணும்ன்னு நினைச்சேனோ? அப்படி இருக்காங்க ரெண்டு பேரும்..."

"காயூ நீ சொல்ல வர்றது எனக்குப் புரியலை."

"விஷ்ணு பவன் சார் கூட விளையாடும் போதும், பழகும் போதும் நான் அவங்க ரெண்டு பேரையும் கதிர், விஷ்ணுவா தான் பார்த்தேன். அப்படிப் பார்த்து பார்த்து... இப்போ..." என்றவள் ஒரு கேவலோடு வாயை மூடி கொண்டாள். இப்போது சிம்மஹாத்ரி சத்யநாராயணாவுக்கு அவள் கூற வருவது புரிந்தது. அவன் சந்தோசம் அடைந்தான்.

"அவர்... அவர் என் மனசில் கதிரா பதிஞ்சு போயிட்டார். இப்போ கதிரை நினைச்சா கூட எனக்குப் பவன் சார் உருவம் தான் தோன்றுது. இது சரியா? தப்பா?ன்னு கூட எனக்குத் தெரியலை அண்ணா. இது என்ன உணர்வு? உறவு?ன்னு கூட எனக்குப் புரியலை. ஆனா மனசுக்கு சந்தோசமா இருக்கு."

"இதுக்கு நான் பதில் சொல்லவா காயூ?" என்றபடி அங்கு வந்தான் பவன்ராம். விஷ்ணு பவதாரிணியுடன் விளையாடி கொண்டு இருந்தான். எதிர்பாராது பவன்ராமை கண்டதும் காயத்ரியின் முகம் கூச்சத்தில் சிவந்து விட்டது.

"உன் உணர்வு சரியே... இந்த உணர்வுக்குப் பெயர் காதல். இந்த உறவுக்குப் பெயர் கணவன், மனைவி." என்ற பவன்ராமை கண்டு அவளது விழிகளில் கண்ணீர் கோர்த்துக் கொண்டது.

"ரெண்டு பேரும் பேசி நல்லதா முடிவு எடுங்க." இருவருக்கும் தனிமை கொடுத்துவிட்டு சிம்மஹாத்ரி சத்யநாராயணா அங்கிருந்து விலகி சென்றான்.

"நான் தப்பான பெண் இல்லை. சாரி." அவளுக்குத் தன் நிலை குறித்து அத்தனை அருவருப்பாக இருந்தது.

"அடிச்சு பல்லை கழட்டிருவேன். இனி இப்படி எல்லாம் பேச கூடாது." பவன்ராம் கோபத்தில் பல்லை கடித்தான்.

"உன்னைப் பத்தி கவலைப்படாம செத்து போனவனை நினைச்சு நீ எதுக்கு உன் வாழ்க்கையைக் கெடுத்துக்கணும்? சரி, அப்படியே நீ அவனை நினைச்சாலும்... அவனைத் தெய்வமா நினைச்சு கும்பிடு. அதுக்காக உன் வாழ்க்கையை அவனுக்காக அர்ப்பணிக்கத் தேவையில்லை." என்றவன், "உனக்கு என்னைப் பிடிச்சிருக்கு தானே? கதிரா என்னை நினைக்கிற தானே? இது போதும் எனக்கு... உன் மீது எந்தக் களங்கமும் வராது நான் பார்த்து கொள்கிறேன்." அவன் அவளுக்கு உறுதி அளித்தான்.


"நீ போ... நான் பார்த்து கொள்கிறேன்." அவன் சொன்னதும் அவள் விலகி வந்து விட்டாள்.
 

ஶ்ரீகலா

Administrator
காயத்ரியும் இளம் வயதினள் தானே. அவளுக்கு எத்தனையோ கனவுகள் இருந்தது. ஆனால் எதுவுமே நிறைவேறவில்லை. அந்தக் கனவுகளைப் பவன்ராம் நிறைவேற்றும் போது அவளது மனம் மெல்ல அவனிடம் சாய ஆரம்பித்தது. இது இயல்பே... அன்பு எங்கே இருந்தாலும் மனம் சாய்வது இயல்பே!

அன்றே பவன்ராம், காயத்ரி திருமணம் பற்றிய பேச்சினை சிம்மஹாத்ரி சத்யநாராயணா ஆரம்பித்து விட்டான். எல்லோரும் அதை ஆதரித்தனர். இராஜராஜேஸ்வரி மட்டும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். காயத்ரி அவரது மருமகள், விஷ்ணு அவரது பேரன் என்று... அவரைச் சரிக்கட்ட தான் மிகவும் சிரமமாக இருந்தது. எப்படியோ சரிக்கட்டி திருமணத்திற்கான நாளை குறித்தனர்.

சரியாக ஒரு மாதம் கழித்துப் பவன்ராம், காயத்ரி திருமணம் மிகவும் எளிமையாகக் கோவிலில் வைத்து நடந்தது. அங்கேயே அன்னதானமும் வழங்கப்பட்டது. அன்னதானம் வாங்கி உண்பதற்காக அன்று சிம்மஹாத்ரி சத்யநாராயணாவால் நாக்கு அறுபட்டு, கைகள் உடைக்கப்பட்டவன் வந்திருந்தான். அழுக்கு உடைகளோடு அவன் பார்ப்பதற்குப் பைத்தியம் போலிருந்தான். அங்கு நின்றிருந்த ராஜ்குமாரை கண்டு அவன் விழிகள் பளபளக்க ஓடி வந்தான். அவன் ராஜ்குமாரிடம் சென்று அவனது தந்தையைக் கொலை செய்தது சிம்மஹாத்ரி சத்யநாராயணா என்று சைகையில் சொல்ல... அன்று புரியாத விசயம் இன்று ராஜ்குமாருக்கு நன்கு புரிந்தது. அவன் நண்பனை அருகில் அழைத்தான். சிம்மஹாத்ரி சத்யநாராயணா அங்கு வந்தவன் நண்பன் முன் நின்றிருந்தவனைக் கண்டு திடுக்கிட்டான்.

"நீ தான் எங்கப்பாவை கொலை செய்ததாய் இவன் சொல்கிறான். உண்மையா?" ராஜ்குமார் மிரட்டலாய் கேட்க... அதைக் கண்டு ஊமையானவனுக்குக் கொண்டாட்டமாக இருந்தது.

"ராஜ்..." சிம்மஹாத்ரி சத்யநாராயணா திகைப்புடன் நண்பனை பார்க்க...

"பைத்தியமா இவன்? என் நண்பன் நீ இந்தக் காரியத்தைச் செய்வாயா?" என்று ராஜ்குமார் கண்சிமிட்டியபடி கூறியபடி நண்பனை அணைத்துக் கொண்டான். சிம்மஹாத்ரி சத்யநாராயணாவும் சிரித்தபடி நண்பனை அணைத்துக் கொண்டான்.

இவர்கள் இருவரின் நட்பு கண்டு ஊமையானவனுக்கு உண்மையில் பைத்தியம் பிடித்து விட்டது. அவன் தலையில் அடித்துக் கொண்டே அங்கிருந்து ஓடினான். அதைக் கண்ட நண்பர்கள் இருவரும் வாய்விட்டு சிரித்தனர்.

அன்றிரவு பவன்ராம் அறைக்குக் காயத்ரியை அனுப்பி வைத்தனர். காயத்ரி சற்று திகிலுடன் தான் உள்ளே சென்றாள். அங்குப் படுக்கையில் பவன்ராம் கதை சொல்லி கொண்டிருக்க... விஷ்ணு அதைக் கேட்டபடி தூக்க கலக்கத்தில் இருந்தான். விஷ்ணுவுக்குப் பவன்ராம் தான் இனி தனக்குத் தந்தை என்று தெரிந்தவுடன் அவனுக்கு ஏக குஷி. அவன் பவன்ராமுடன் ஓட்டி கொண்டே திரிந்தான். இரவு வந்தும் விஷ்ணு பவன்ராமை விட்டு விலகவில்லை. தந்தைக்கு ஏங்கிய அவனது பாசம் கண்டு பவன்ராமும் அவனைத் தன்னுடன் வைத்துக் கொண்டான்.

காயத்ரி வந்ததை அறிந்து திரும்பி பார்த்த பவன்ராம், "நீயும் படு..." என்றுவிட்டு விஷ்ணு பக்கம் திரும்பி விட்டான்.

நடுவில் பவன்ராம் படுத்திருந்தான். காயத்ரி படுப்பதாக இருந்தால் பவன்ராம் அருகில் தான் படுக்க வேண்டும். அவள் அவனை விட்டு விலகி ஒருக்களித்துத் தன்னைக் குறுக்கி கொண்டு படுத்தாள். சிறிது நேரம் சென்று பவன்ராமின் கரம் அவளது இடையில் படர... அவள் பயத்தில் துள்ளி குதித்து எழும்பப் போக... அவளை எழ விடாது செய்தவன்,

"எதுவும் பண்ணும் ஐடியா இல்லை. அதேசமயம் இது மாதிரி சிறு சிறு தொடுகை வேண்டும். மறுக்காதே." என்றவனைக் கண்டு அவள் அமைதியாகி விட்டாள்.

பவன்ராம் அவளைத் தன்னுடன் அணைத்துக் கொண்டு படுக்க... முதலில் கூச்சத்தில் நெளிந்தவள் பிறகு அவனது அணைப்புக் கொடுத்த பாதுகாப்பில் அவள் நிம்மதியாக உறங்க ஆரம்பித்தாள். பவன்ராம் அவளது தலையை வருடி விட்டபடி தூங்காது அவளையே பார்த்திருந்தான். அவளது மனதின் ஏக்கம் அவனுக்குப் புரியாது இருக்குமா? இப்போதைக்கு அவளுக்கு வேண்டியது பாதுகாப்பு, நிம்மதி மட்டுமே. அதைக் கொடுக்க அவனுக்கு என்ன தடை! அவனுக்குமே அது மட்டும் போதும் என்றே தோன்றியது. அவனும் நிம்மதியுடன் கண் அயர்ந்தான்.

*******************************

நான்கு வருடங்கள் கழித்து...

பவன்ராம், காயத்ரியின் தம்பதிக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அதற்குப் பெயர் வைக்கும் வைபவத்திற்கு எல்லோரும் வந்திருந்தனர். ராஜ்குமார், பூஜிதா இருவரும் தங்களது மூன்று மாத மகனுடன் வந்திருந்தனர். அதே போன்று ஜெய்பிரகாஷ், ரச்சிதா தம்பதியருக்கும் ஒரு வயதில் மகன் இருந்தான். உதய்பிரகாஷ், ஜெகதீஸ்வரி தம்பதிக்கு நான்கரை வயதில் ஒரு மகள் இருந்தாள். சிம்மஹாத்ரி சத்யநாராயணா, ஆதிசக்தீஸ்வரி இருவரும் தங்களது ஐந்து வயது மகள் பவதாரிணியுடன் வந்திருந்தனர். எல்லோருக்குமே ஒரே ஒரு மகவு மட்டும். பவன்ராம்க்கு மட்டும் இரண்டு குழந்தைகள்.

பவன்ராம், காயத்ரி மகளுக்குப் பெயர் சூட்டும் வைபவம் இனிதே நடந்து முடிந்தது. பவதாரிணி பாப்பாவை கண்டு தனது அன்னையிடம், "ம்மா, எனக்கும் தங்கச்சி பாப்பா வேணும்." என்று கேட்க...

"அப்பா கிட்ட போய்க் கேளு." ஆதிசக்தீஸ்வரி மகளைக் கணவனிடம் துரத்தி விட்டாள்.

அவள் நேரே சென்று தந்தையிடம் அதே கேள்வியைக் கேட்க... சிம்மஹாத்ரி சத்யநாராயணா என்ன பதில் சொல்வது என்று தெரியாது விழித்தான். அப்போது இராஜராஜேஸ்வரி அவளை இழுத்துத் தன்னிடம் வைத்து கொண்டவர்,

"அதுக்கு நீ என் கூடத் தூங்கணும். உன் அம்மா முந்தானையைப் பிடிச்சிட்டு தூங்க கூடாது." என்க... அதைக் கேட்டு அனைவரும் சிரித்து விட்டனர்.

"போங்க பாட்டி... நீங்க சத்தமா குறட்டை விடுவீங்க. நான் உங்க கூடப் படுக்க மாட்டேன்." என்ற சின்னவள் அங்கிருந்து ஓடிவிட...

"அப்போ உனக்கு இந்த ஜென்மத்தில் தங்கச்சி பாப்பா கிடையாது." இராஜராஜேஸ்வரி உரத்த குரலில் சொல்ல...

"அம்மா, எங்கே என்ன பேசணும்ன்னு விவஸ்தை இல்லையா?" ஆதிசக்தீஸ்வரி அடக்கப்பட்ட கோபத்தில் பல்லை கடித்தாள்.

"எனக்கு எல்லாம் விவஸ்தை இருக்கு. நீ முதல்ல உன் மகள் சொன்னதைச் செய். ஆனா பேத்தி வேண்டாம். உங்கப்பா மாதிரி ஒரு பேரனை பெத்து கொடு." என்று அவர் ஏக்கத்துடன் சொன்னார்.

ஆதிசக்தீஸ்வரி கணவனைக் கண்டு கண்களால் சம்மதம் கேட்க... அவனும் விழிகளால் சம்மதம் சொன்னான்.

"அப்போ சரி, இன்னைக்குப் பூ அலங்காரம் பண்ணிட வேண்டியது தான்." இருவரது சாடை பேச்சு கண்டு ராஜ்குமார் குரல் கொடுக்க...

"அப்படியே எனக்கும்..." உதய்பிரகாஷ் குரல் கொடுக்க... அதைக் கேட்டு ஜெகதீஸ்வரி முகம் சிவந்தாள்.

"நான் மட்டும் என்ன பாவப்பட்டவனா? எனக்கும்..." ஜெய்பிரகாஷும் வந்து நிற்க... ரச்சிதா அவனை முறைத்தாள். அவள் இன்னமும் யாருடனும் இணங்கி போவதில்லை. அதேபோல் யாரையும் கண்டு கொள்வதில்லை.

"எனக்கும்..." பவன்ராம் ஆளாய் பறக்க...

"மீசை நரைச்சாலும் ஆசை நரைக்கலை." காயத்ரி அவனைக் கேலி செய்ய...

"அதைச் சொல்லுங்க அண்ணி." ஆதிசக்தீஸ்வரி கணவனைக் கண்டு கண்சிமிட்டி சிரித்தாள்.

"உண்மை தான் அண்ணி." பூஜிதாவும் அவர்களுடன் கலந்து கொண்டாள்.

"பெண்கள் கூட்டணியா?" ஆண்கள் மூவரும் மீசையை முறுக்க...

"ஆமா, உண்மையைத் தானே சொல்றோம். எங்களை விட நீங்க எல்லோரும் வயசில் பெரியவங்க தானே. அதாவது நீங்க எல்லோரும் எங்களை விட வயசானவங்க, கிழவனுங்க..." ஆதிசக்தீஸ்வரி, காயத்ரி, பூஜிதா மூவரும் கோரசாகச் சொல்ல...

"அடிங்க..." ஆண்கள் மூவரும் தத்தம் மனைவியரை அடிக்க வர... மூன்றும் அங்கிருந்து சிட்டாகப் பறந்து விட்டது.

இவர்களது விளையாட்டினை பெரியவர்கள் நிறைவான மனதுடன் பார்த்திருந்தனர்.

*********************************

"அப்பா, தோப்புக்கரணம் போடுங்க." மகள் தந்தையைத் தோப்புக்கரணம் போட சொல்லி எண்ணி கொண்டிருக்க... சிம்மஹாத்ரி சத்யநாராயணா பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போட்டுக் கொண்டிருந்தான். அவர்கள் இன்னமும் விசாகப்பட்டிணத்தில் தான் இருந்தனர்.

"பொம்மாயி, நீயாவது சொல்ல கூடாதா?" அவன் மனைவியைக் கண்டு பரிதாபமாகக் கேட்க...

"நீங்க இன்னும் பந்தை உருட்டி விளையாடும் விளையாட்டை விடலைல்ல. நாங்க ரெண்டு பேரும் எவ்வளவு நேரம் உங்களுக்காகக் காத்திருக்கிறது? நான் தூங்கியே எழுந்துட்டேன்."

"உனக்குத் தூங்க சொல்லியா கொடுக்கணும் பொம்மாயி." அவன் சொன்னதும் மூடியிருந்த விழிகளைத் திறந்து அவனைத் தீயாய் முறைத்தவள்,

"அம்மு, உங்கப்பாவை இன்னும் நூறு தோப்புக்கரணம் எக்ஸ்ட்ராவா போட சொல்லு." என்று மகளிடம் சொல்லிவிட்டு அவள் திரும்பி படுத்து கொண்டாள்.

"அப்பா பாவம்... கால் வலிக்கும்." என்ற பவதாரிணி தந்தையை அணைத்து கொண்டாள்.

"நீ வாடா அம்மு... நாம ஹார்ஸ் ரைடிங் போகலாம்." என்றவன் மகளைத் தூக்கி கொண்டு நடக்க...

"நானும் வர்றேன்..." என்று கத்தியபடி ஆதிசக்தீஸ்வரி அவர்களை நோக்கி ஓடி வந்தாள்.

குதிரையேற்ற மைதானத்திற்கு மூவரும் வந்தனர். சிம்மஹாத்ரி சத்யநாராயணா விசிலடிக்கவும்... அவனது பிளாக்கி குதிரை ஓடிவந்து நாய்க்குட்டி போன்று அவன் அருகில் வந்து நின்றது.

"ம், ஏறு..." அவன் மனைவியிடம் சொல்ல...

இப்போது ஆதிசக்தீஸ்வரி எந்தவித பயமும் இல்லாது அதில் ஏறியமர்ந்தாள். உடன் மகளையும் ஏற்றி கொண்டாள். பிறகு அவள் குதிரையின் கடிவாளத்தைக் கழட்டி கீழே போட்டவள் அதன் காதில் ஏதோ இரகசியம் சொல்ல... எஜமானியின் கட்டளைக்கு இணங்க குதிரை காற்றாய் பறக்க ஆரம்பித்தது. அவ்வளவு வேகத்தில் குதிரை ஓடியும் அவளையும், மகளையும் கீழே தள்ளிவிடாது பத்திரமாக வைத்துக் கொண்டது. தலைமுடி பறக்க ஆதிசக்தீஸ்வரி ஒய்யாரமாகக் குதிரையில் பறந்த காட்சியை ரசித்தபடி சிம்மஹாத்ரி சத்யநாராயணா நின்றிருந்தான். அவளது காதலையும் மட்டும் அவன் ரசிக்கவில்லை. அவளது தைரியத்தையும், குறும்புத்தனத்தையும் சேர்த்தே அவன் ரசித்தான். என்றுமே அவன் அவளது ரசிகனே!

******************************

சிம்மஹாத்ரி சத்யநாராயணாவும், ஆதிசக்தீஸ்வரி இருவரும் மட்டும் லெக்ஷ்மி நரசிம்மர் கோவிலுக்கு வந்திருந்தனர். பவதாரிணி வரவில்லை. இருவரும் கடவுளை கும்பிட்டு விட்டு அங்கிருந்த மலையில் ஓய்வாக அமர்ந்தனர்.

"பொம்மாயி... நா ப்ரியசகி." என்று அவன் எப்போதும் போல் கத்தி சொன்னான்.

"மாமா, நா பிரேமா நுவ்வே..." அவள் தனது காதலை கத்தி சொல்ல... அது அப்படியே மலையில் எதிரொலித்தது.

"மாமா, நீயும் உன் காதலை சொல்லேன்." அவள் அவனிடம் கெஞ்ச...

"வேண்டாம் பொம்மாயி. நான் ராசி இல்லாதவன். காதலுக்கும், எனக்கும் ராசியில்லை." அவன் பயத்துடன் மறுத்தான்.

"யார் சொன்னா? நீ ராசி இல்லாதவன்னு... என்னோட லக்கி சார்மே நீ தான். தெரியுமா?" என்றவள், "போ மாமா... எவ்வளவு ஆசையா இருந்தேன் தெரியுமா?" என்று அவள் சலித்துக் கொள்ள...

மனைவி முகம் வாடுவதைக் காண சகிக்காது அவன், "நா உயிரே நுவ்வே!" என்று கத்தி சொல்ல... அவள் முகம் மலர்ந்து அவனைப் பார்த்தாள். காதலை விட உயிர் பெரிதல்லவா!

"மாமா..." என்றவள் மனம் மகிழ, உள்ளம் நெகிழ அவனது தோளில் சாய்ந்து கொண்டாள்.

"இந்தச் சிம்ஹாவோட சக்தியே நீதான்டி..." மனநிறைவுடன் கூறியவன் அவளைத் தனது தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

இரண்யகசிபுவை வதம் செய்த பிறகு நரசிம்மர் ஆக்ரோசம் அடங்காது மிகவும் உக்கிரமாக இருந்திருக்கிறார். அவரைச் சாந்தப்படுத்த மகாரெக்ஷ்மியால் மட்டுமே முடிந்தது. அதே போன்று தான் உறவுகளில் துரோகங்களில் சிக்கி சிம்மஹாத்ரி சத்யநாராயணாவும் ஆத்திரத்தின் பிடியில் இருந்தான். அப்படிப்பட்டவனைச் சாந்தமானவனாக, அன்பானவனாக மாற்றியது ஆதிசக்தீஸ்வரியின் காதலே! அவள் உடனிருக்கும் வரை அவன் என்றும் லெக்ஷ்மி நரசிம்மரே! சக்தி இல்லையேல் இந்தச் சிம்மன் இல்லை!

உலகில் காதல் இருக்கும் வரை இவர்களது காதலும் வாழும்!!!

சுபம் *_*
 
Status
Not open for further replies.
Top