All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
எத்தனை எத்தனை இளம் வயதினரின் வாழ்க்கையை அழித்திருக்கிறான். ஆரம்பத்தில் வெறும் பணத்திற்காக மட்டுமே பிள்ளையை கடத்தியிருக்கின்றனர் என்று வெற்றி நினைத்து இருந்தான். ஆனால் எப்பொழுது ராயன் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறான் என்று அறிந்தானோ அப்பொழுதே இது பணத்திற்கான கடத்தல் இல்லை என்று தெரிந்து அதன் பின்புலத்தை ஆராய்ந்தான். அவனது அலுவலகத்தில் சோதனையிடும் பொழுது சில ஆவணங்கள் சிக்கி இருந்தன.
ராயனின் மனைவியாக தேவதர்ஷினியை கண்ட பொழுது அவளும் ஏதோ ஒரு சூழ்நிலையில் தான் அவனிடம் சிக்கி கொண்டிருப்பாள் என்று நினைத்து கொண்டே அவளின் பெற்றோரை விசாரணை என்ற பெயரில் சந்தித்தான்.
அவர்கள் கூறியதில் தேவதர்ஷினியின் விருப்பத்திலேயே இந்த திருமணம் நடந்தது, ஆனால் அவர்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்பதை தெரிந்து கொண்டு அவளின் வாய் மொழியாக என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமென்றே அவளை தூண்டும் விதமாக பேசினான். அது அவனுக்கு உதவியாக இருந்தது.
“சரி தேவதர்ஷினி எனக்கு ஒரு உதவி பண்ண முடியுமா???”
“சொல்லுங்க சார்..”
“எப்படியும் ராயன் தான் செய்யுற எல்லா கள்ள வேலைகளுக்கான ஆதாரம், அதை பத்தின விவரங்கள் அடங்கிய கோப்புகள் எல்லாம் இங்க வீட்டுல தான் வச்சுருப்பான். என்னால உங்க வீட்டுக்குள்ள நுழைஞ்சு சோதனை எல்லாம் போட முடியாது. ஆனா நீங்க செய்யலாம்.”
அவளோ யோசனையாக “ராயன் அப்படி இங்க ஏதும் வச்சிருக்கற மாதிரி தெரியல.. இருந்தாலும் நான் ஆராய்ந்து பார்க்கறேன் சார்.” என்றாள்.
“ம்… செய்யுங்க. எவ்வளவு சீக்கிரம் அதை முடிக்க முடியுமோ அதை செய்யுங்க ஏன்னா இன்னும் ரெண்டு நாள்ல அமைச்சர் வந்துடுவார். அதற்குள்ள எல்லாம் சேகரிச்சு வைங்க.”
“சரிங்க சார். ஆனா ராயன் வந்த பின்னாடி இதெல்லாம் தெரிஞ்சா என்னை உண்டு இல்லைனு பண்ணிடுவான்.”என்று பயந்து கொண்டே கூறினாள்.
“அத பத்தி கவலை படாதீங்க அவனுக்கு தெரிஞ்சாலும் ஏதும் உங்கள செய்ய மாட்டான். அதுக்கு நான் உறுதி அளிக்கிறேன்.”
ஏனோ அவனது வார்த்தைகளில் நம்பிக்கை பிறந்தது அவளுக்கு. அவளும் அடுத்த இரண்டு நாட்களில் அந்த வீட்டினை அலசி ஆராய்ந்தாள்.
அதன் பலனாக அவனிடம் அவள் திரட்டிய அத்தனை ஆதாரங்களையும் ஒப்படைத்தாள். இது எதுவும் அமைச்சருக்கு தெரியாமல் பார்த்து கொண்டான் வெற்றி.
அடுத்து அவன் நின்றது என்னவோ கமிஷனரிடம் ராயனை கைது செய்ய உத்தரவு தரும்படி கேட்டு தான்.
“சார் அவன் கல்லூரி நடத்திட்டு வருவதே பெரிய பணபலம் இல்லாத கூலி வேலைக்கு போகிற ஏழ்மையான மாணவர்களை தேர்ந்தெடுத்து அவங்களை போதை பழக்கத்துக்கு அடிமையாக்கி தான் சொல்லறத எல்லாம் செய்யறதுக்கு தான். பெண்கள், ஆண்கள் எல்லாரையும் பாலியல் ரீதியா பயன்படுத்திக்கறதுக்காக அவங்களை விலைக்கு வித்திடுவான், அதுமட்டுமில்லாம அவங்க உறுப்புகளை விற்பது தான் அவனோட மெயின் வேலையே. அப்பப்ப சின்ன குழந்தைகளையும் கடத்திட்டு இருந்திருக்கான். எல்லாரையுமே வெளிநாட்டில இருக்கறவங்களுக்கு தான் வித்திட்டு இருக்கான். அவங்களும் கோடி கோடியா இவனுக்கு கொட்டி கொடுப்பாங்க.”
“இவ்வளவு வேலை செஞ்சு இருக்கானா.. ம்… சரி..”என்று பெருமூச்சு விட்டவர் அவனை கைது செய்ய ஆணை பிறப்பித்தார்.
“தேங்க்யூ சார்..”என்றவன் அவரிடம் விரைப்பாக சல்யூட் அடித்து விட்டு சென்றான்.
கதவை திறக்க சென்றவனை “ஓரு நிமிடம் வெற்றி..”என்று அழைத்தார் கமிஷனர்.
அவரை கேள்வியாக நோக்கிய வெற்றியை பார்த்து “இவ்வளவு பெரிய அநியாயம் செஞ்சிருக்கான் அந்த ராயன். நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த ஆதாரங்களை எல்லாம் திரட்டியிருப்பீங்க. அவனை உள்ளே தள்ளிய பின்னாடி அவனோட பணபலத்தையும் அவன் அண்ணனோட அரசியல் வெல்வாக்கையும் பயன்படுத்தி வெளியே வந்துட்டானா இதுக்கெல்லாம் ஒரு அர்த்தமே இல்லாம போய்டுமே.. அதோட உங்களையும் சும்மா விடுவானுங்களா???” என்றார் அவனை பார்த்து வேதனையுடன்.
பணபலமும் பதவி பலமும் படைத்தவர்கள் இந்த காலத்தில் சட்டத்தை தங்களுக்கு ஏற்ற மாதிரி வளைத்து கொண்டிருகின்றனரே. எத்தனை வழக்குகளில் தங்களின் கண்முன்னே குற்றம் செய்தவர்கள் வெளியே சுதந்திரமாக உலவுவதை பார்த்திருக்கின்றார். தவறே செய்யாதவர்கள் தண்டனை அனுபவித்து கொண்டிருக்கின்றனர். இந்த வழக்கிலும் அதே போல் நடந்து விடுமோ என்ற வேதனையை அவனிடம் கூறினார்..
அவரின் வேதனை புரிந்தாலும் “எல்லா எதிர்வினையும் வரும்னு தெரிஞ்சு தான் இந்த வேலைக்கு வந்தது சார்.. பார்த்துக்கலாம் சார்..”என்றவன் அந்த அறையை விட்டு சென்றான்.
ராயனை கைது செய்யும் படி கமிஷனர் வெற்றிவேலிடம் கூறிய விசயம் அடுத்த அரை மணி நேரத்திற்குள் அமைச்சருக்கு சென்றிருந்தது.
“எவ்வளவு தைரியம் இருந்தா என் தம்பியவே கைது பண்ண முயற்சி பண்ணுவானுங்க. அவன் எங்க இருக்கானு நான் கண்டுபிடிக்க சொன்னா இவனுங்க வேண்டாத வேலை பண்ணிட்டு இருக்கானுங்க… அந்த கமிஷனருக்கு போனை போடு..” என்று தனது பி.ஏவிடம் எகிறி கொண்டிருந்தார் அமைச்சர்.
அடுத்த நிமிடம் கமிஷனரின் கைப்பேசி அலறியது.
“சொல்லுங்க சார்…”
“யோவ் என்னையா நினைச்சுகிட்டு இருக்கீங்க??? என் தம்பிய கைது செய்ய சொல்லி இருக்கயாமே???”
“சார்.. அவர் தப்பு செஞ்சதுக்கான எல்லா ஆதாரமும் இருக்கு சார் நான் என்ன செய்ய??? உங்க தம்பி என்ன சின்ன தப்பா செஞ்சு இருக்கார்??”
“ஏய்… அவன் என்ன தப்பு செஞ்சிருந்தாலும் நீ கைது செய்வயா??? என்ன நினைச்சுகிட்டு இருக்க??”
“ஸார்.. என்னைய என்ன செய்ய சொல்றீங்க?? ஆதாரம் ஸ்டராங்கா இருக்கு..”
“என் தம்பிக்கு எதிரா ஆதாரம் திரட்டுற அளவுக்கு எவனுக்கு தைரியம் இருக்கு.. சொல்லு??? இன்னும் ஒரு மணி நேரத்துல அவன் கைல இருக்கற எல்லா ஆதாரமும் எனக்கு வந்தாகணும்..”
“ஸார்... அது..” என்று இழுத்தார் அவர்.
“என்னயா???? உன் ஆஃபிஸ்ல உன் ரூம்ல நீ என் தம்பிய கைது செய்யறதுக்கு போட்ட ஆர்டரையே அரை மணி நேரத்துல எனக்கு சொல்லிட்டாங்க. யார் கிட்ட சொன்னேனு அவங்க சொல்றதுக்கு ரொம்ப நேரமாகாதுனு நினைக்குறேன். என்ன நீயா சொல்றியா?? இல்ல நானா கண்டுபிடிக்கட்டுமா??”
“ஸார்.. அது வெற்றிவேல் தான்..” என்று கூறியதுமே நெற்றி சுருங்க ஒரு நிமிடம் யோசித்த ராமகிருஷ்ணன் “ஓ… என் தம்பிய கண்டுபிடிக்க வந்த அந்த கண்ணியமான ரோசமான போலீஸ்காரனா..” என்றவன் அடுத்த நிமிடம் இணைப்பை துண்டித்தார்.
இங்கோ கமிஷனருக்கு அப்பொழுது தான் மூச்சே வந்தது. அடுத்த நிமிடமே அழைத்தது என்னவோ வெற்றிக்கு தான்.
“சார்… சொல்லுங்க..”
“வெற்றி.. நாம ராயன கைது செய்ய போறோம்கிறது அந்த மினிஸ்டருக்கு தெரிஞ்சு போன் பண்ணினான். அவன் யார் என் தம்பிக்கு எதிரா ஆதாரம் கொடுத்ததுனு கேட்டு என்னை மிரட்டினான். நானும் வேற வழி இல்லாம உன் பெயரை சொல்ல வேண்டியதா போச்சு பா.. அதுமட்டுமில்லாம அந்த ஆதாரம் எல்லாம் அவன் கைக்கு இன்னும் ஒரு மணி நேரத்துல இருக்கனுமாம்.” என்று மூச்சு விடாமல் பேசினார்.
“சார்… கொஞ்சம் மூச்சு விடுங்க… அப்படியே அங்கே இருக்கற தண்ணிய கொஞ்சம் குடிங்க… ரிலாக்ஸா இருங்க.. இப்ப எதுக்கு இப்படி ஒரு பயம், பதட்டத்தோட பேசறீங்க…” என்று கேட்டான்.
“என்ன வெற்றி… இவனுங்க எல்லாம் ஈவு, இரக்கம் பார்க்க மாட்டாங்க.. அவங்க காரியம் நடக்க கொலை பண்ண கூட தயங்க மாட்டாங்க..”
“சார்.. இந்த வேலைல எல்லா ஆபத்தும் இருக்குதுனு தெரிஞ்சு தானே வந்தோம். அப்புறம் என்ன பயம்???”
“உன்ன மாதிரி வயசுல நானும் இப்படி தான் இருந்தேன். ஆனா கல்யாணம் பிள்ளைனு எல்லாம் வந்த பின்னாடி அவங்களுக்கு ஏதாவது ஆகிடுமோனு ஒரு பயம் தான். நமக்குனா என்ன வந்தாலும் எதிர் கொள்ளலாம்னு இருக்கற தைரியம் அவங்களுக்கு ஒன்னுனா பதறுது என்ன பண்ண??”
“அது உண்மை தான் சார். ஆனா அவங்களுக்கும் குடும்பம்னு ஒன்னு இருக்கறத மறந்துடாதீங்க.. நமக்கு வலிக்கற மாதிரி தானே அவங்களுக்கு வலிக்கும்.. அப்படி அவனுக்கு வலிச்சதால தான் உடனே பதறிட்டு கால் பண்ணியிருக்கான்.”
“சரி.. அதெல்லாம் விடு.. இப்ப என்ன பண்ண போற???”
“நான் நடத்தி முடிக்க நினைச்சதை செய்யாம விட மாட்டேன் சார்.. இதை நானே பார்த்துக்கிறேன்.” என்றவன் இணைப்பை துண்டித்திருக்க அடுத்த நிமிடம் அமைச்சரிடமிருந்து அழைப்பு வந்தது.
“சொல்லுங்க சார்..” என்ற அவனது தைரியமான பேச்சில்,
“பரவாயில்லையே… இந்நேரம் நான் கமிஷனருக்கு கூப்பிட்ட விசயம் உனக்கும் தெரிஞ்சு என் கால்ல அட்டெண் பண்ண மாட்டேனு நினைச்சேன்.” என்று கேலியாக சிரித்தான்.
“சார்.. உங்க கால்ல தான் எதிர்பார்த்து காத்துகிட்டு இருந்தேன்..” என்று கூறினான்.
வெற்றி கூறியதை கேட்டு வியப்பில் ஆழ்ந்தவர் புருவம் சுருங்க “அப்படியா???” என்று சந்தேகமாக வினவினான்.
“ஆமா… அப்புறம் முக்கியமான எல்லா ஆதாரமும் எங்கிட்ட இருக்கறப்போ எனக்கு தானே நீங்க போன் பண்ணனும். ஒன்னு என்னைய கூப்பிட்டு மிரட்டுவீங்க இல்ல பேரம் பேசுவீங்க..” என்றான்.
அவனின் பேச்சில் அயர்ந்தது என்னவோ ராமகிருஷ்ணன் தான்.
“பரவாயில்லையே தம்பி.. நான் கூட உன்ன என்னமோனு நினைச்சேன். நான் எதுக்கு கால் பண்ணுவேனு நீயே சொல்லிட்ட அதே மாதிரி நீ என்ன முடிவு பண்ணியிருக்கேனு அதையும் சொல்லிடு. ஏதா இருந்தாலும் எனக்கு ஒகே தான்..” என்றார் சிரிப்போடு.
அதை கேட்டு சிரித்த வெற்றியோ “சார்… உங்க தம்பிய கண்டுபிடிச்சு இந்த ஆதாரத்தை எல்லாம் கோர்ட்டுல கொண்டு போய் சப்மிட் பண்ணினா நீங்க எப்படியும் உங்க அரசியல் செல்வாக்கை யூஸ் பண்ணி வெளிய எடுத்துடுவீங்க… இதனால எனக்கு என்ன லாபம்.. சொல்லுங்க…” என்று உதட்டில் ஒரு வஞ்சம் தோய்ந்த புன்னகையுடன் கூறினான்.
“நீ இப்படினு நினைக்கவேயில்லை வெற்றி. அன்னைக்கு நீ பேசனத வச்சு ரொம்ப கண்ணியமான போலீஸ்னு நினைச்சேன்.. சரி சொல்லு.. எவ்வளவு வேணும் உனக்கு???”
“எனக்கு ஐம்பது லட்சம் வேணும்..”
“என்ன தம்பி உன் சர்வீஸ் மூலமா சம்பாதிக்க முடியாததை ஒரே கேஸ்ல சம்பாதிக்கனும்னு நினைக்குறயா???”
“சார்.. கிரைம் வேல்யூ அந்த மாதிரி.. உங்க தம்பி என்ன சின்ன தப்பா செஞ்சுருக்கார்.. ஒன்னும் பிரச்சனை இல்ல.. யோசிச்சு சொல்லுங்க..” என்று கூற,
“எனக்கு இந்த ஐம்பது லட்சம் எல்லாம் ஒரு பொருட்டே இல்ல.. ஆனா என் தம்பி எனக்கு இன்னும் கிடைக்கலயே..”
“ஸார்.. இதுவரைக்கும் அன் அஃபீஸியலா தான் தேடிகிட்டு இருந்தோம். இப்ப உங்க தம்பி மேல கேஸ் புக் ஆகியிருக்கு.. சோ தமிழ்நாட்டு போலீஸ் எங்க இருந்தாலும் கொண்டுட்டு வந்துடுவாங்க..”
“ஓ..” என்று கூறியவர் ஏதோ யோசனையில் இருந்த பொழுதே அவனது உதவியாளன் வந்து அவரது காதில் ஏதோ கூறினான்.
அதில் சட்டென கோபம் மூள “என்ன வெற்றி எங்கிட்ட ஆதாரத்துக்கு பேரம் பேசிட்டு அந்த பக்கம் நீயூஸ் சேனலுக்கு எல்லாம் என் தம்பிய பத்தி சொல்லிட்டயா??” என்றார்.
“என்ன அதுக்குள்ள நீயூஸ்ல வந்துருச்சா??? சார் சத்தியமா எனக்கு எதுவும் தெரியாது. காவல் துறையில இருக்கற ஏதோ ஒரு கருப்பு ஆடு உங்களுக்கு தகவல் கொடுத்த மாதிரி, சேனலுக்கும் சொல்லிடுச்சு போல… நான் என்ன பண்ண??? ஆனா ஆதாரம் எங்கிட்ட தான் சார் பத்திரமா இருக்கு.. அத பத்தி யாருக்கும் ஏதும் தெரியாது.. சந்தேகமா இருந்தா நீங்க வேணா நீயூஸ முழுசா பார்த்துட்டு வந்து எங்கிட்ட பேசுங்க..” என்றவன் சட்டென அலைபேசியை வைத்திருந்தான்.
அவர் உடனே தொலைபேசியை பார்க்க சென்றார். அங்கே அவர் தம்பி ராயனை பற்றிய செய்தி ஒலிபரப்பாகி கொண்டிருந்தது.
“பிரபல தொழிலதிபரும், மத்திய அமைச்சர் திரு.ராதாகிருஷ்ணன் அவர்களின் தம்பியுமான காலிங்கராயன் மேல் போலீஸார் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் ராயன் தனது கல்லூரியில் படிக்கும் மாணவர்களை போதை மருந்துக்கு அடிமையாக்கி அவர்களை வெளிநாட்டில் அடிமைகளாக விற்பது, அவர்களது உறுப்புகளை விற்பது இவ்வாறு பல தவறுகளை புரிந்துள்ளார் என்று குற்றச்சாட்டு பதிவாகி உள்ளது. இந்நிலையில் ராயன் தலைமறைவாகி விட்டார் என்றும், அவர் எங்கு உள்ளார் என்பது யாருக்கும் தெரியவில்லை என்ற செய்தியும் உலா வருகிறது..” என்ற செய்தியை அமைச்சரின் குடும்பத்தில் உள்ள அனைவரும் கேட்டு கொண்டிருந்தனர்.
“ஐயோ… என்னங்க இது நம்ம தம்பி மேல இப்படி அபாண்டமா பலியை போட்டுருக்கானுங்க. இவனுங்ககிட்ட நம்ம தம்பிய கண்டுபிடிக்க சொல்லி சொன்னா அதை செய்யாம நம்ம தம்பிக்கு எதிராவே இப்படி சதி செய்யறானுங்களே… இவனுங்க எல்லாம் நல்லா இருப்பானுகளா??? நாசமா தான் போயிடுவானுங்க..” என்று கத்தி கூச்சலிட்டு கொண்டிருந்தாள் ராதாகிருஷ்ணனின் மனைவி அகிலாண்டம்.
“ஏய்.. சும்மா கத்திட்டு இருக்காத.. இப்ப என்ன நடந்து போச்சு… இன்னும் ராயன் எங்கிருக்கானு கண்டுபிடிக்கலையல்ல… இதெல்லாம் நான் பார்த்துக்கறேன். நீ இதுல எல்லாம் தலையிடாம போய் வேலைய பாரு..” என்று ராதாகிருஷ்ணன் கூறி வெளியேறினார்.
அங்கே ஒரு ஓரத்தில் அமைதியாக நடப்பவைகளை பார்த்து கொண்டிருந்தாள் தேவதர்ஷினி.
ஏற்கனவே தேவதர்ஷினியை கண்டு ஆகாமல் இருந்த அகிலாண்டத்திற்கு மேலும் அவளை வாட்டி வதைக்க ஒரு வாய்ப்பு கிடைக்க அதை தவறாமல் பயன்படுத்தி கொண்டார்.
“ஏன்டி… உனக்கு கொஞ்சமாவது உன் புருஷன் மேல பாசம் இருக்கா.. இருந்திருந்தா அவன் தொலைஞ்சு போன பின்னாடியோ இல்ல அவன் மேல இப்ப கேஸ் போட்டிருக்கானு சொல்றாங்களே இதுக்காக எல்லாம் கொஞ்சமாவது வருத்தபடறியா??? பாரு உணர்ச்சியே இல்லாத ஜடம் மாதிரி இப்படி இருக்க.. விளங்காத மூஞ்சி.. உன்னையெல்லாம் கல்யாணம் பண்ணினா அவன் இந்த கதிக்கு தான் ஆளாவன்..” என்று உச்சஸ்தீயில் கத்தி கொண்டிருந்தார்.
எப்பொழுதாவது இந்த மாதிரி வார்த்தைகளை கேட்டால் அவள் சங்கடப்பட்டு அழுவாள். ஆனால் எப்பொழுதுமே இப்படி தான் என்ற பொழுது அவளுக்கு எல்லாமே பழகி உணர்வுகளே மறத்து விட்டது. அதனால் தனது முகத்தில் எந்த உணர்வுகளையும் காட்டி கொள்ளாமல் அமைதியாக நின்றிருந்தாள்.
அதே சமயம், ராதாகிருஷ்ணன் மற்றும் அகிலாண்டம் அவர்களின் தவப்புதல்வன் ராகேஷ் அன்னையின் வசவுகளை கேட்டு கொண்டு வந்து “அம்மா, இப்ப எதுக்கு இவங்கள திட்டுற… அவர் பண்ணின தப்புக்கு இவங்க என்ன பண்ணுவாங்க” என்று தேவதர்ஷினிக்காக வக்காலத்து வாங்கி பேசிக் கொண்டிருந்தான்.
அவனது பேச்சு தனது அன்னையிடம் இருந்தாலும் பார்வை முழுவதும் தர்ஷினியின் மேலேயே இருந்தது. அவளின் மேனியையே பார்வையாலயே துகிலுருத்தி கொண்டிருந்தான்.
அவனின் பார்வையை இனம் கண்டு கொண்டவளால் அதனால் ஏற்படும் அருவருப்பை தாங்கி கொள்ள முடியவில்லை.
ராயன் எப்பொழுதும் தனது அண்ணனுக்கு மட்டுமே அடங்கி போவான். அகிலாண்டத்திடம் அண்ணி என்ற சிறு மதிப்பு மட்டுமே. மற்றபடி அவளிடம் எப்பொழுதும் பேச்சு வார்த்தை வைத்து கொள்ள மாட்டான். அதே மாதிரி தான் அவளது பிள்ளைகளிடமும்.
அகிலாண்டத்திற்கும் ராயனை கண்டால் ஆகாது. தனது மாமனாரின் எல்லா சொத்துக்களும் தனக்கும் தான் பெற்ற பிள்ளைகளுக்கு மட்டுமே என்ற நினைப்போடு இருப்பவளுக்கு அவன் எங்கே பங்கு கேட்பானோ என்ற எண்ணம் அவளுக்கு இருக்கும். ஆனால் தனது கணவனின் முன்பு இதை வெளிப்படையாக கூற மாட்டாள். என்ன தான் தனது தந்தையின் இரண்டாவது மனைவியின் வாரிசாக இருந்தாலும் ஏனோ ராயனின் மேல் ராதாகிருஷ்ணணுக்கு பாசம் அதிகம் தான்.
பெண்களை கண்டாலே வெறுப்பவன் தேவதர்ஷினியை திருமணம் செய்து வந்தது, அவனுடைய சொத்தும் தன்னுடைய மகனுக்கு வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த அகிலாண்டத்திற்கு வெறுப்பையே தந்தது. அதனால் ராயன் இல்லாத சமயம் தர்ஷினியை தேள் கொட்டுவது போல் கொட்டி கொண்டே இருப்பாள்.
இந்த மாதிரி ஒருவளுக்கு பிறந்த பிள்ளை மட்டும் நல்லவனாகவா இருக்க போகிறான். பொம்மைக்கு சேலை கட்டி நிற்க வைத்தால் கூட வெறித்து பார்ப்பவன் தங்க சிலை போல இருந்த தர்ஷினியை எப்படி நெருங்குவது என்று புரியாமல் இருந்தான்.
இன்று ராயன் காணாமல் போனது அனைவருக்கும் சாதகமாகி போனது.
தர்ஷினிக்கு ஆதரவாக தனது மகன் பேசியதும் அகிலாண்டத்திற்கு பிடிக்காமல் போக அவனிடம் சண்டைக்கு நின்றாள்.
“என்னடா.. வெள்ளை தோல பார்த்து மயங்கிட்டயோ. அவளுக்கு சப்போர்ட் பண்ணி பேசிகிட்டு இருக்க.. செருப்பு பிஞ்சுடும் நாயே.. போ.. போய் உன் வேலைய பாரு..” என்று அவனை திட்டி அனுப்பி வைத்தாள்.
அவன் மேலிருந்த கோபத்தை தர்ஷினியிடமும் வெளிப்படுத்தினாள் பெண் உருவத்தில் இருந்த அந்த ராட்சஷி.
“என்னடி… எந்த பெண்ணையுமே ஏறெடுத்து பார்க்காத அந்த ராயன மயக்கி போட்டு இந்த வீட்டுக்குள்ள வந்த இப்ப அவன் போனதும் என் பையன மயக்க பார்க்குறயா??? அவன் தான் உன்ன கேவலமா பார்க்குறானல்ல இங்கிருந்து போறதுக்கு என்ன கேடாம் உனக்கு. ஏன் காணாம போன அந்த ஒருத்தன் பத்தலையா உனக்கு.. அதுக்குள்ள வேற ஒரு ஆம்பள சுகம் கேட்குதா.. “ என்று அவளது பெண்மையையே கலங்கப்படுத்தும் விதமாக பேசினாள்.
ஒழுக்கமே ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியம் என்று சிறு வயதிலிருந்தே சொல்லி வளர்க்கப்பட்டவளுக்கு தற்பொழுது அதை களங்கப்படுத்தும் விதமாக பேசியது மிகுந்த மனவருத்தத்தை கொடுத்தது. இந்த மாதிரி வார்த்தைகளை கேட்பதற்கு பதிலாக தனது உயிர் இப்பொழுதே போய் விட்டால் நன்றாக இருக்குமே என்று அவளது மனது தவித்தது. அதன் விளைவாக அவளது கண்கள் அருவியென கண்ணீரை பொழிந்தது.
அமைச்சரை காண வந்த வெற்றியோ வாசலில் நின்று இவ்வளவு நேரம் தர்ஷினியை அகிலாண்டம் வார்த்தை எனும் சாட்டையால் அவளை துன்புறுத்துவதை கேட்டு, கண்கள் சிவக்க கோபத்தை தனது உள்ளங்கையை மடித்து அடக்கி கொண்டிருந்தான்.
இப்பொழுதே அகிலாண்டத்தை பெண் எனும் பாராமல் அடித்து துவம்சம் செய்ய நினைத்தான். ஆனால் அதை செய்தால் தனது திட்டம் முழுவதும் பாழாகி விடுமே என்று கோபத்தை கட்டுபடுத்து இருந்தான்.
தொலைக்காட்சியில் வந்த செய்தியை கேட்டவுடன் அடுத்த நிமிடம் ராதாகிருஷ்ணன் வெற்றியை அழைத்து விட்டான் பேரம் பேச.
வெற்றியும் அமைச்சரை சந்திக்க அவரது இல்லத்திற்கு வந்து வீட்டினுள் நுழையும் பொழுது அகிலாண்டம் தர்ஷினியை திட்டி கொண்டிருப்பது தெளிவாக கேட்டது. அவளை திட்டும் பொழுது ஏனோ இவனுக்கு கட்டுக்கடங்காமல் கோபம் வந்தது.
வார்த்தைகளால் அவளை வாட்டி வதைத்தற்கு போலீஸ் அடி எப்படி இருக்கும் என்று உணர்த்த வேண்டும் என்ற எண்ணம் வந்து அவனை வெறி கொள்ள செய்தது. ஆனால் அதை செய்ய முடியாத நிலையில் இருந்தான் வெற்றி.
கோபத்தை தன்னுள் அடக்கியவன் “மேடம்..” என்று கூறிக்கொண்டே உள்ளே நுழைந்தான். அவனின் வருகையை உணர்ந்த தர்ஷினியோ சட்டென்று தனது விழிகளை துடைத்து கொண்டு உள்ளே நுழைந்து விட்டாள். அதே சமயம் அகிலாண்டமும் தனது முகத்தில் புன்னகையை வரவழைத்து கொண்டு “வாங்க.. வாங்க சார். உட்காருங்க..” என்று வரவேற்றாள்.
“மேடம்.. சார் இல்லையா?? எங்களை வர சொல்லி இருந்தார்.”
“ஓ… வர சொன்னாரா.. இருங்க அவர்கிட்ட சொல்லி கூட்டிட்டு வர்ரேன்..” என்றவள் அங்கிருந்து நகர்ந்தாள்.
அவள் சென்றதும் வரவேற்பறையில் இருந்த நீள் இருக்கையில் வெற்றி அமர, சேகரோ அவனுக்கு பின் நின்று கொண்டிருந்தான்.
வெற்றி அந்த வீட்டினை சுற்றி பார்த்து கொண்டிருந்தான்.
“ஏன் சேகர்… இன்டீரியர் எல்லாம் நல்லா இருக்கல்ல… நாம எல்லாம் எப்ப இந்த மாதிரி ஒரு வீடு கட்டி வாழறது. ம்..” என்றவன் பெருமூச்சொன்றை விட்டான்.
“இவரோட வீடும் பெரிசு தானே..” என்று நினைத்த சேகரோ “ஸார்… உங்க வீடும் பெருசு தானே சார்..” என்றான்.
“ஏய்… எங்க வீடு இதுல எல்லாம் பாதி தான். அதுவுமில்லாம இந்த வீட்டோட ஆடம்பரத்த பாரு… சுவற்றுல தொங்குற அந்த ஓவியத்துல இருந்து தரையில போட்டுருக்குற கார்பெட் வரைக்கும் எவ்வளவு விலை உயர்ந்ததுனு தெரியலையா??? நம்ம வீட்டுல இருக்கறதெல்லாம் லோக்கல் மேட். இங்க இருக்கறது எல்லாம் அந்தந்த பொருளுக்கு உண்டான தனித்துவமான இடத்திலிருந்து வரவழைக்கப்பட்டதுனு தெரியுது. அப்ப எல்லாமே விலை அதிகமானதா தானே இருக்கும்..”
“நீங்களும் வாங்குங்க சார்…”
“என் சம்பளத்த வச்சுகிட்டு எப்படி இதெல்லாம் வாங்கறது சொல்லு..” என்று வெற்றி கூற அதே சமயம் ராதாகிருஷ்ணனும் வந்தார்.
சேகர் அதனோடு பேச்சை முடித்து கொண்டான். ஆனால் அவனது மனதினுள் பல சந்தேகங்கள் எழும்பியது.
“அமைச்சரை எதுக்கு பார்க்க வந்தோம்னு கேட்டா பதில் சொல்ல மாட்டேங்குறார். இத விட பெரிய பெரிய இடத்துல எல்லாம் போய் சர்ச் பண்ணி இருக்கோம் அப்ப எல்லாம் அங்க இருக்கற பொருளை பார்த்து மயங்காதவர் இப்ப என்னமோ இப்படி எல்லாம் பேசறார் சரியில்லையே..” என்று மனதிற்குள் நினைத்து கொண்டிருந்தவனை இருவரின் பேச்சும் நிகழ்வுலகிற்கு திருப்பியது.
“கொஞ்சம் நாம ரெண்டு பேரும் தனியா பேசலாமா???” என்ற ராதாகிருஷ்ணன் பின்னாலிருந்த சேகரை பார்த்து கொண்டே கூற, உடனே “சேகர்..” என்று வெற்றி அழைக்க “நான் வெளிய வெய்ட் பண்றேன் சார்..” என்றவன் வெளியே சென்று விட்டான்.
எப்பொழுதும் ராதாகிருஷ்ணனுடன் யாராவது பேச வந்தால் அங்கே வீட்டு உறுப்பினர்கள் முதற் கொண்டு வேலை செய்பவர்கள் வரை யாரும் இருக்க மாட்டார்கள். இருக்கவும் கூடாது. இது அந்த வீட்டின் எழுதப்படாத சட்டம் என்றே சொல்லலாம். அதே போல் இன்று வரவேற்பறையில் இருவரை தவிர யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட ராதா கிருஷ்ணன் பேச துவங்கும் முன் வெற்றி ஆரம்பித்து இருந்தான்.
“அப்புறம்.. சொல்லுங்க சார்.. என்ன முடிவு பண்ணியிருக்கீங்க..” என்று வெற்றி ராதாகிருஷ்ணனை பார்த்து கேட்டான்.
“பார்டா… ஒரு அமைச்சர் கிட்டயே பேரம் பேசுற பார்த்தயா??? உன் தைரியத்தை நான் பாராட்டுறேன்..” என்று இதழில் புன்னகையும், கண்களில் வஞ்சமும் உறைய அவனை பார்த்தார்.
எந்த பார்வைக்கும், எந்த மிரட்டலுக்கும் அஞ்சாது அந்த அமைச்சரின் பார்வையை சிரிப்புடனே எதிர் கொண்டவன் “சார்… எப்பவுமே நீங்களே பேரம் பேசினா நல்லா இருக்காதல்ல… என்னைக்காவது மத்தவங்க பேசி நீங்க கேட்டா தானே ஆட்டம் நல்லா இருக்கும்..” என்று அவனும் பதிலுக்கு பதில் பேசினான்.
“சரி.. நீ கேட்ட தொகையை நான் கொடுக்கறேன். எங்க ஆதாரம்…” என்று வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக பேசினார்.
“அதெப்படி சார் நீங்க கேட்ட உடனே கொடுத்தட முடியுமா.. எத்தனை அரசியல் வாதிகளை நாங்களும் பார்த்துட்டு தானே இருக்கோம்.. நீங்க காச ரெடி பண்ணிட்டு சொல்லுங்க நான் தர்ரேன்.”
“உங்கிட்ட ஆதாரம் இருக்குதுனு நான் எப்படி நம்புறது??”
“ஏன் சார் இவ்வளவு தூரம் அமைச்சர்கிட்டயே இப்படி பேரம் பேசிட்டு உட்கார்ந்து இருக்கேனா சரியான ஆதாரம் இல்லாமையா பேசுவேன். என்ன சார் இப்படி காமெடி பண்ணிட்டு இருக்கீங்க..” என்றவன், “எனக்கு இப்பவே எல்லா ஆதாரத்தையும் உங்க மெயிலுக்கோ இல்ல, உங்க போனுக்கோ அனுப்ப தெரியும். நீங்க அமைச்சர்.. உங்களோட போன், மெயில்னு எல்லாத்தையும் ஹேக் பண்ணி ஏதாவது பண்ணீட்டாங்கனா எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல… மாட்ட போறது நீங்க மட்டும் தான்..” என்று கூறி நிறுத்தினான்.
“அது உண்மை தான்.. என்னோட கட்சியிலயே என்னை காலி பண்ண ஆளுக நிறைய பேர் இருக்கானுங்க. எப்படானு எல்லாம் காத்துகிட்டு இருக்காங்க.. இனிமேல் நாம எது பேசறதா இருந்தாலும் நான் ஒரு போன் நம்பர் தர்ரேன் அதுல பேசுங்க..” என்றவர் சட்டவிரோத செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் ஒரு தனிப்பட்ட கைப்பபேசியின் எண்ணை வெற்றியிடம் கொடுத்தார்.
மேலும், “இந்த விஷயம் என்னை தவிர வேற எங்கேயும் போகாது. அதே சமயம் உங்கிட்ட இருந்தும் வெளிய போக கூடாது.” என்று வேளியே நின்று கொண்டிருந்த சேகரை பார்த்து கொண்டே கூறினார்.
ராதாகிருஷ்ணனின் பார்வையில் இருந்து புரிந்து கொண்டவன் “அவருக்கு ஒன்னும் தெரியாது சார். நான் எதுவும் சொல்லாம தான் கூட்டிட்டு வந்தேன். என்னை மீறி எந்த விசயமும் கசியாது. ஒகே சார்.. நான் கிளம்புறேன்..” என்று கூறிக்கொண்டே எழுந்து கொள்ள, அமைச்சரோ “ராயன பத்தி ஏதாவது நீயூஸ் கிடைச்சுதா??” என்று வினவினார்.
“உங்க தம்பிய நாலா பக்கமும் வலை விரிச்சு தேடிகிட்டு இருக்காங்க சார்.. கூடிய சீக்கிரம் கண்டுபிடிச்சடலாம்.“ என்று கூறி அவனுக்கு சல்யூட் அடித்து விட்டு வெளியே சென்றான்.
வெளியே வந்தவன் தனது தொப்பியை மாட்டி கொண்டே கம்பீரமாக நடந்து சென்றான். அவனது இதழ்களில் ஒரு வெற்றி புன்னகை மலர்ந்தது.
அதே சமயம், வரவேற்பறைக்கு அருகே ஒரு அறையில் இருந்த தர்ஷினி வெற்றியும் ராதாகிருஷ்ணனும் பேசிய வார்த்தைகள் யாவையும் அச்சு பிசகாமல் கேட்டு கொண்டிருந்தாள்.
ராயனுடனான திருமணத்திற்கு பிறகு அவளது உலகமே சுருங்கி விட்டது. அவளிடமிருந்த துடுக்குதனம், அனைவரையும் நல்லவர்களாக நம்பி பழகும் ஒரு வெகுளித்தனம் அனைத்தும் மறைந்து இருந்தது.
தன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட பெரும் சறுக்கல் யாரையும் நம்ப மறுத்தது. ஆனால் ஏனோ வெற்றியை நம்பினால் அவள். அவனை நம்பி அனைத்தையும் கூறினாள். அவனிடம் அனைத்து ஆதாரங்களையும் கொடுத்தாள். ஆனால் அவனோ அந்த ஆதாரங்களை வைத்து அந்த ராதாகிருஷ்ணனிடம் இப்படி பேரம் பேசுவான் என்று நினைக்கவில்லை.
வெளிப்பார்வைக்கு நல்லவன் போல இருந்தவன், தன்னிடமும் நேர்மையான ஒரு போலீஸ் அதிகாரி போல தானே நடந்து கொண்டான். பின்பு எப்படி???
இடத்திற்கு இடம் நிறம் மாறும் பச்சோந்திகளை போல் இவனும் பணத்தை கண்டவுடன் மாறி விட்டானோ… இருக்கும் இவனும் மனித பிறவி தானே.. பேராசை பட்டு விட்டான்.
இந்த உலகத்தில் பணத்திற்கும், பொருளுக்கு விலைபோகாத ஆட்களே இல்லையா என்ன??? நேர்மையான ஒரு ஆளை பார்ப்பது ஏதோ உலகத்தில் எட்டாவது அதிசயம் போலவே..
இவ்வாறு அவனை பற்றிய தனது மனதில் எழுந்த நல்ல எண்ணங்கள் யாவற்றையும் அழித்து தவறான ஒரு பிம்பத்தை சித்தரித்து கொண்டாள் பெண்ணவள்.
தான் செய்த ஒரு வினையால், பெண்ணவள் ஒருத்தியின் மனதில் தனது நிலை கீழானதை அறியாத வெற்றியோ வாகனத்தை நோக்கி சென்றான். சேகரும் அவன் பின்னேயே நடந்து சென்று வாகனத்தை எடுத்தான்.
அலுவலகம் நோக்கி வாகனம் சென்று கொண்டிருக்க வெற்றியோ அடுத்து என்ன செய்வது என்ற தீவிர யோசனையில் இருக்க சேகரோ அவனின் முகத்தையே திரும்ப திரும்ப பார்த்து கொண்டிருந்தான்.
“என்ன சார் ரொம்ப தீவிரமான யோசனையா இருக்கு.. அமைச்சர் கிட்ட கூட ஏதோ தீவிரமா பேசிகிட்டு இருந்தீங்க..”
சேகரின் கேள்வியில் தனது நினைவுகளிலிருந்து வெளியே வந்தவன் “குள்ளநரிக்கு வலை ஒன்னு விரிச்சுருக்கேன் சேகர். இப்ப தான் லைட்டா நான் வலை விரிச்ச பக்கம் காலை எடுத்து வச்சுருக்கு.. மொத்தமா மாட்டிடுமா என்னனு யோசிச்சுகிட்டு இருக்கேன்.” என்றான்.
“ஸார் நீங்க குள்ளநரினு சொல்றது அந்த அமைச்சர தான்னு தெரியுது ஆனா எப்படி வலை விரிச்சீங்கனு தான் தெரியல..” என்றான் அவனும் யோசனையுடனே.
“சார்.. நீங்க ஏதோ பெரிய ரிஸ்க் எடுக்கறீங்கனு தோணுது… பார்த்து கேர்புல்லா இருங்க சார்.”
“தெரியுது சேகர்.. இதுல என் வாழ்க்கையும் சம்பந்தப்பட்டு இருக்கு அதனால பல தடவை யோசிச்சு தான் செய்வேன்.” என்றவன் வெளியே பார்த்து கொண்டே வந்தான்.
“சார் எதற்கும் துணிந்து தான் இந்த போலீஸ் வேலைக்கு வந்திருக்கேனு சொன்னீங்க அதுக்குள்ள வாழ்க்கையை பத்தி பயம் வந்திருச்சா..” என்று கொஞ்சம் கிண்டலாக கேட்டான்.
தான் கூறிய வார்த்தையை கேட்டு கோபப்படுவான் என்று எதிர்பார்த்த சேகரோ அவன் முகத்தில் தவழ்ந்த சிரிப்பை கண்டு ஏமாற்றமே மிஞ்சியது.
“சேகர்… என்னோட உயிரை பற்றி பயம் இல்லை தான் ஆனா என்னோட உயிரானவள பற்றின பயம் இது. அவங்கள என் வாழ்க்கையில் தக்க வச்சுகனும் அப்படிங்கற ஒரு ஏக்கம், அவங்களுக்கு வாழ்க்கை முழுக்க சந்தோஷத்தை கொடுக்கனும்ங்கற ஒரு ஆர்வம், வாழ்க்கை முழுக்க அவங்க கூட திகட்ட திகட்ட வாழனும் அப்படிங்கற ஆசை, ஒரு தடவை இழந்த சொர்க்கத்தை மறுபடியும் இழக்க கூடாது அப்படிங்கற ஒரு வெறி, இதெல்லாம் தான் என்னை ரொம்ப யோசிச்சு நிதானமா காய் நகர்த்த சொல்லுது..” என்றான் எங்கோ பார்த்து கொண்டே.
அவன் கூறிய அந்த ஆசை, ஏக்கம், ஆர்வம்,வெறி இதையெல்லாம் மீறி மற்றொரு உணர்ச்சியும் அவனது முகத்தில் தெரிந்தது. ஆனால் அதை சேகருக்கு தெரியாமல் மறைத்தான்.
“சார்.. வர வர ரொம்ப பேசறீங்க.. ஆனா என்ன பேசறீங்கனு தான் தெரியல எனக்கு…” என்று சேகர் சோகமாக கூற,
“ரொம்ப யோசிக்காதீங்க… ஆஃபிஸ்க்கு போங்க..” என்று சிரித்து கொண்டே அவனது முதுகில் தட்டி கொடுத்தான்.
அலுவலகம் வந்ததும் வாகனத்தில் இருந்து இறங்கி வேக எட்டுகள் வைத்து தனது அறைக்குள் சென்று அமர்ந்தான்.
சேகரும் அவன் பின்னேயே வர “மைக்கேல், அந்த செய்ன் ஸ்னாப்பிங்க் கேசுல ஒருத்தன் அரெஸ்ட் பண்ணினோமே, அவன் திருடுன நகையை பத்தி ஏதாவது சொன்னானா??” என்று கணீர் குரலில் அங்கே இருந்த மற்றொரு காவல் அதிகாரியை பார்த்து கேட்டான்.
“ஸார்… நாங்க எவ்வளவோ அடிச்சு கேட்டு பார்த்துட்டோம் அவன் சொல்லவே மாட்டேங்குறான்.” என்று மெதுவாக கூற,
பதிலளித்த அந்த காவல் அதிகாரியை தீப்பார்வை பார்த்தவன் “ஒரு கிரிமினல் கிட்ட இருந்து எப்படி உண்மைய வரவைக்கனும்னு கூட தெரியல.. நீங்க எல்லாம் போலீஸ் ட்ரெய்னிங்க்ல என்ன பண்ணுனீங்க???” என்று அவரை திட்டி கொண்டே அந்த கைதியை அடைத்து வைத்திருந்த அறை நோக்கி சென்றான்.
வாகனத்தில் வரும் பொழுது ஒருவித மோகன நிலையில், கண்களில் கனவுகள் மின்ன முகத்தில் சாந்தம் ஒளிர பேசிகொண்டு வந்த அந்த வெற்றிக்கும், இப்பொழுது சிவந்த கண்களில் கோபம் கொப்பளிக்க தவறு செய்தவனுக்கு காலனாக இருந்து தண்டிக்கும் இந்த வெற்றிக்கு ஓராயிரம் வித்தியாசம் கண்டு கொள்ளலாம்.
அதுவுமில்லாமல் எதிரிகளை கூட புன்னகை முகமாகவே எதிர்கொண்டு, பதுங்கி பாயும் வித்தை அறிந்தவன், தான் என்ன நினைக்கிறோம் என்பதை மற்றவர்கள் அறியா வண்ணம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாதவனின் தற்போதய கோப முகம் அனைவருக்கும் புதியது.
அந்த குற்றவாளியை அடி வெளுத்து விட்டு அவனிடம் பதில் வாங்கிய பின்பே அந்த அறையை விட்டு வெளியேறினான் வெற்றி.
எல்லோரும் அவனது இந்த ருத்ர மூர்த்தி அவதாரத்தை கண்டு ஸ்தம்பித்து நின்றனர்.
“சார்.. நீங்க இவ்வளவு கோபப்பட்டு இன்னைக்கு தான் நான் பார்க்குறேன்.. என்ன சார் ஆச்சு…” என்று மெதுவாக சேகர் கேட்டான்.
அப்பொழுது தான் நிதானம் இழந்து செயல்பட்டு கொண்டிருப்பது வெற்றிக்கே உரைத்தது.
“ஒன்னுமில்ல சேகர்.. கொஞ்சம் டென்ஷன் அவ்வளவு தான். நான் வீட்டுக்கு கிளம்புறேன்.” என்று கூறி வெளியே செல்ல எத்தனித்தவன் “சேகர்..” என்று திரும்ப அவனை அழைத்தான்.
“சொல்லுங்க சார்.” என்று அருகில் வந்து நின்றவனிடம் ,“நான் ஒரு நம்பர் உங்களுக்கு அனுப்பி வைக்குறேன். நீங்க அந்த நம்பர பத்தின எல்லா டீடெய்ல்ஸும் எடுத்துட்டு அதை ட்ரேஸ் பண்ணுங்க. அதுல வர்ற கால்ஸ், மெசேஜ், வாட்ஸ் ஆப் நடவடிக்கைள் அதோட அந்த நம்பர் ட்ராவல் ஆகுற லொக்கேஷன் எல்லாத்த பத்தின டீடெய்ல்ஸும் எனக்கு வேணும். இத வேற யாரும் பண்ண கூடாது. நீங்க மட்டும் தான் பண்ணனும்..” என்று கூறி சென்றவன், மறுபடியும் அவனிடம் வந்து “இல்ல… இல்ல.. இந்த வேலைய நானே பார்த்துக்குறேன். நீங்க செய்ய வேண்டாம்.” என்று கூறி சென்று விட்டான்.
அவனை வினோதமாக பார்த்த சேகரோ “சரிங்க சார்..” என்று வெளியில் உரைத்து விட்டு “இவருக்கு என்ன ஆச்சு.. திடீர்னு ஏன் இப்படி எல்லாம் நடந்துக்கறாரு..” என்றவன் தனது வேலையை பார்க்க சென்று விட்டான்.
காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்தவன் நேராக வீடு நோக்கி சென்றான்.
வீட்டிற்கு வந்தவன் உள்ளே நுழையும் பொழுதே “அம்மா… அம்மா…” என்று கத்தி கொண்டே வந்தான்.
வரவேற்பறையில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்த தனது தந்தையை கண்டு கொள்ளாதவன் நடுவீட்டில் நின்று கொண்டு மறுபடியும் அவனது தாயை அழைத்தான்.
சமையலறையில் செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே விட்டுவிட்டு அவனது அலறலில் வந்து நின்று அவனை முறைத்தார்.
“ஏய்.. ஏன்டா இப்படி கத்துற.. என்ன ஆச்சு உனக்கு..” என்று அவனது அருகில் வர,
அவரை இழுத்து அங்கே இருந்த நீள் இருக்கையில் அமரவைத்து தானும் அருகே அமர்ந்தவன் அப்படியே அவரது மடியில் தலை சாய்ந்து படுத்து விட்டான்.
“டேய்…. இதுக்கு தான் இப்படி கத்துனயா??? இது என்ன விளையாட்டு??? கிச்சன்ல அடுப்புல குருமா வச்சுருக்கேன்..” என்று அவர் சத்தம் போட,
“அப்பா, கிச்சன் போய் அடுப்பை அணைச்சுடுங்க..” என்று தனது தந்தைக்கு கட்டளையிட்டவன் தனது தாயின் கரத்தை எடுத்து தனது தலை முடியினுள் வைத்தான்.
அதை புரிந்து கொண்ட அந்த பாசமிகு தாயோ அவனது தலைமுடியை கோதி விட்டார்.
தகப்பனோ தனது தனையன் சொல் தட்டாதவராக எழுந்து சென்று அடுப்பை அணைத்து விட்டு வந்து அவர்கள் இருவரையும் பார்த்தவாரே அமர்ந்தார்.
கணவன், மனைவி இருவரும் ஒருவரையொருவர் புரியாத பார்வை பார்த்து கொண்டனர்.
“ஏய் என்னடா ஆச்சு உனக்கு?? ஏன் இப்படி பண்ற??” என்றார் மெதுவாக.
“அம்மா… ப்ளீஸ்.. கொஞ்ச நேரம் இப்படியே இருங்களேன். எதுவும் பேசாதீங்க..” என்றவன் அப்படியே உறங்கி விட்டான்.
தனது மடியில் படுத்து உறங்கி கொண்டிருந்தவனை இருவரும் பார்த்து கொண்டிருந்தனர். கால நேரம் பார்க்காது வேலை வேலை என்று சுற்றுபவனுக்கு இன்று என்னவானது??? எப்பொழுதும் வீட்டிற்கு வந்தவுடன் முதல் வேலையாக தனது அறைக்கு சென்று குளித்து விட்டு வந்து தான் தனது தாய் தந்தையிடம் பேசுவான். மடியில் படுத்து உறங்குவது எல்லாம் அவன் பள்ளி படிப்பு வரைக்கும் தான். அதன் பிறகு அவன் இப்படி எல்லாம் நடந்து கொண்டதில்லை.
இன்று ஏன் இப்படி நடந்து கொண்டான். பணிச்சுமையா இல்லை மனஅழுத்தமா ஏன் என்று இருவர் மனதிலும் கவலை அறித்து கொண்டிருந்தது. அவனிடம் கேட்கலாம், ஆனாலும் அசதியில் தூங்கும் மகனை எழுப்ப அவர்களுக்கு மனமில்லை. அதனால் இருவரும் அவன் தூங்கி எழும் வரை அமைதி காத்தனர்.
சிறிது நேரம் கழித்து கண்விழித்தவன் அப்பொழுது தான் தனது தாயின் மடியில் தலை வைத்து படுத்திருப்பதை பார்த்து பதறி கொண்டு எழுந்தான்.
“ஐயோ… சாரி மா.. சாரி… சாரி..” என்று பலமுறை மன்னிப்பு கேட்டான்.
“டேய்.. டேய்.. எதுக்கு இப்ப இத்தனை தடவை சாரி கேட்குற??? என்ன நடந்துருச்சு???”
“அம்மா… ரொம்ப நேரம் உங்க மடியில படுத்து தூங்கிட்டேன் போல.. உங்களுக்கும் கால் வலிக்குமல்ல…”
“அதெல்லாம் ஒன்னுமில்ல.. நீ தூங்கி பத்து நிமிஷம் தான் ஆச்சு..”
“பொய் சொல்லாதீங்க.. நான் எத்தனை மணிக்கு வந்தேன்னு தெரியாதா என்ன??? வந்தவுடனே வேலை செய்யறவங்கள இழுத்து உட்கார வச்சு மடியில படுத்துகிட்டேன். உங்களுக்கு கால் வலி ஏதும் இல்லையேமா???” என்று அன்னையின் காலை அழுத்தி கொண்டே கேட்டான்.
“அதெல்லம் ஒன்னுமில்ல டா… சரி இப்ப சொல்லு உன்னோட பிரச்சனை என்ன??” என்று அவனது அன்னை கேட்டார்.
“அம்மா…” என்று இவருக்கு எப்படி தனக்கு பிரச்சனை உள்ளது தெரியும் என்பது போல் பார்க்க, அவனது தந்தை அவனின் அருகே அமர்ந்து அவனது தோள்களை தடவி கொண்டே “வெற்றி, நீ எங்களுக்கு மகன். நீ எப்ப எப்படி இருப்பேனு எனக்கு தெரியாதா??? மனசுல ஏதோ ஒரு விசயத்தை போட்டு யோசிச்சு, கவலைப்பட்டுட்டு இருக்க.. அதான் உனக்கு உன்னோட அம்மாவோட அரவணைப்பு தேவைப்பட்டு இருக்கு உடனே வந்து உங்க அம்மா மடிசாய்ஞ்சுட்ட… உன்னையும் அறியாம நீ தூங்கிட்ட..” என்று தனது மகனை பற்றி நன்கு அறிந்தவராக அவனது மனதினுள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார்.
அவர் அளித்த பதிலில் சிரித்தவன் “அப்பா, அப்பா உங்க கிட்ட இருந்து எந்த விசயத்தையும் மறைக்க முடியாது..” என்று கூறியவனின் முகத்தில் புன்னகை மறைந்து கலக்கம் உருவானது.
அவனின் முகத்தையே இருவரும் பார்த்து கொண்டிருந்தனர். தங்களது ஒரே செல்ல புதல்வனின் முகம் வாடுவதை கண்டு பொறுக்க முடியாமல் அவர்களது முகமும் கலங்கியது.
இருவரும் தனது பதிலுக்காக காத்திருப்பதை உணர்ந்து “அம்மா.. நான் என் வாழ்க்கையில முக்கியமான ஒரு கட்டத்துக்கு உங்களை கேட்காமலயே ஒரு முடிவு எடுத்திருக்கேன். நீங்க என் மேல நம்பிக்கை வச்சு அத நீங்க ஆதரிப்பீங்களா??” என்றான்.
அவன் எந்த விஷயத்தை பற்றி பேசுகிறான் என்று அவர்களுக்கு புரியவில்லை. ஆனாலும் ஏதோ ஒரு விசயத்தில் குழம்பி போய் நிற்கின்றான் அதில் அவனுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று எண்ணி கொண்டனர். ஆனாலும் அது என்ன விசயம் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருவருக்குமே இருந்தது.
“உன் மேல எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கு வெற்றி. ஆனாலும் அது என்ன விசயம்னு நாங்களும் தெரிஞ்சுக்கலாமா???” என்றார் அவனது தந்தை.
“அப்பா…இப்ப அதை சொல்ல நேரம் அமையல.. கண்டிப்பா தெரிய வேண்டிய நேரத்துல தெரிஞ்சுக்கோங்க.. ஆனா ஒன்னு எந்த நேரத்திலும் என் மேல வச்சுருக்கற நம்பிக்கையை மட்டும் இழந்துடாதீங்க.. நான் என்ன செய்தாலும் அதுக்கு பின்னாடி ஒரு காரணம் இருக்கும்னு புரிஞ்சுக்கோங்க… அதே சமயம் எதையும் யோசிக்காம செய்யவும் மாட்டேன்.” என்று நீண்ட விளக்கம் அளித்தவனை இதற்கு மேல் ஏதும் கேட்டு அவனை சங்கடப்படுத்த மனமில்லை இருவருக்கும்.
“சரி வெற்றி.. என்ன நடந்தாலும் நாங்க உன் பக்கம் இருப்போம். போ.. போய் குளிச்சுட்டு வா.. சிரிச்ச முகமா இரு.. எதையும் மனசுல ஏத்திகிட்டு இருக்காத..” என்று அவனது அன்னை பதிலளிக்க விரிந்த புன்னகையுடன் “தேங்கஸ் மா..” என்றவன் எழுந்து அவனது அறை நோக்கி சென்றான்.
புன்னகையுடன் செல்லும் மகனையே இருவரும் பார்த்து கொண்டிருக்க, “கடவுளே.. இந்த புன்னகை எப்பவும் என் மகனோட முகத்துல நீடிக்கனும். அவன் செய்யுற செயல் யாவும் வெற்றியா அமையணும். அதுக்கு உன்னோட அருள் அவனுக்கு வேணும்..” என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டது அந்த தாயுள்ளம்.
ராயன் காணாமல் போய் கிட்டத்தட்ட ஒரு மாதம் கழிந்தது. போலீஸாரால் அவன் எங்கே இருக்கிறான் என்று கண்டறிய முடியவில்லை.
அமைச்சரும் வெற்றியை தினமும் அழைத்து கேட்டு கொண்டிருக்கிறார். தனது தம்பியை பற்றி.
“சார்… ராயன நாம கோர்ட்டுல ஒப்படைச்சுடலாமே. ஏன் இன்னும் மறச்சு வச்சுருக்கனும்..”
“இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும் சேகர்..” என்று கூறியவனின் கைப்பேசி அலறியது.
அவன் எடுத்து யாரென்று பார்க்க கமிஷனர் அழைத்திருந்தார்.
அழைப்பை ஏற்றவன் “சார்… குட்மார்னிங்க்..” என்றான்.
“ஆஃபிஸ்க்கு வா.. உங்கூட கொஞ்சம் பேசனும்”
“ஒகே.. சார்..” என்றவன் கமிசனர் அலுவலகம் நோக்கி சென்றான்.
அறைக்கதவை தட்டி விட்டு “மே ஐ கம்மின் சார்..” என்று வெற்றி வினவ “எஸ்.. கம்மின்..” என்று குரலோசையை கேட்டு உள்ளே நுழைந்தான்.
அங்கே இருக்கையில் அமர்ந்திருந்த தியாகுவை கண்டு சல்யூட் அடித்தான்.
“வெற்றி… ராயன நீங்க இன்னும் கண்டுபிடிக்கலையானு எல்லா பக்கம் இருந்தும் ப்ரஷர் வருது.
ஒரு பக்கம் அந்த அமைச்சர், இன்னொரு பக்கம் பத்திரிக்கைகள் அவனுங்க இஷ்டத்துக்கு எழுதிகிட்டு இருக்கானுங்க. இதனால மக்கள் மத்தியில் ரொம்ப பரவலா ஆளுங்கட்சிய பத்தியும் நம்ம போலீஸ் டிபார்ட்மென்ட் பத்தியும் தப்பா பேசறாங்க. இதை எல்லாம் கேட்டு முதலமைச்சர் கிட்ட இருந்து போன். இதுல ராயன் படிக்கற பசங்களுக்கு ட்ரங்க்ஸ் கொடுக்கற விஷயம் வேற விஷ்வரூபம் எடுத்து இருக்கு.. எல்லாருக்கும் நான் தான் பதில் சொல்ல வேண்டி இருக்கு என்ன சொல்றது… அடுத்து உங்க ப்ளான் என்ன?? ராயன என்ன பண்ணலாம்னு இருக்கீங்க.. இப்படியே ஏதும் பண்ணாம விட்டா ராயன் கேஸ் சிபிஐக்கு போக கூட வாய்ப்பு இருக்கு..” என்று தனது புலம்பலை அவனிடம் கொட்டினார்.
“சார்.. உங்க ப்ராப்ளம் எனக்கு புரியுது. ப்ளீஸ் ஒரு ரெண்டு நாள் டைம் கொடுங்க. நான் இந்த கேஷுக்கு ஒரு முடிவு கட்டறேன். அதோட ராயனுக்கும்..” என்று கூறினான்.
“ம்… உங்க மேல எனக்கு ரொம்ப நம்பிக்கை இருக்கு வெற்றி. ஏதாவது செய்யுங்க.” என்றார் தியாகு.
“தேங்க்யூ சார்.. கண்டிப்பா உங்க நம்பிக்கைய காப்பாத்துவேன்.” என்று கூறி அவரை நோக்கி மீண்டும் சல்யூட் அடித்து விட்டு வெளியேறி விட்டான்.
கமிசனர் அலுவலகத்தில் இருந்து வெளியேறியவன் நேராக சென்றது ராயன் அடைத்து வைத்திருந்த வீட்டிற்கு தான்.
கதவை திறந்து வீட்டினுள் நுழைந்த பின்னர் எங்கோ ஒரு மூலையில் கேட்பது போல் ராயனின் குரல் கேட்டது.
மாடிப்படிக்கு அருகே உள்ள கதவின் அருகே செல்ல செல்ல சிறிது சிறிதாக அவன் கத்தும் சத்தமும் அதிகமானது.
அந்த கதவை திறந்தவுடன் “டேய்.. எங்கடா போய்ட்டீங்க.. வாங்கடா.. என்னால முடியலடா..” என்று கத்தினான்.
அந்த சத்தத்தை கேட்டு சிரித்த வெற்றியோ அவன் இருக்கும் அறைக்குள் நுழைந்து விளக்கை எரியவிட்டான்.
அந்த அறை முழுவதும் வெளிச்சம் பரவியதும் கண்கள் கூச யார் வந்திருக்கின்றனர் என்று பார்த்தான் ராயன்.
ஒரு மாதமாக வளர்ந்த தலை முடி மற்றும் தாடியுடன் கண்களை சுற்றிலும் கருவளையமாக இருக்க, ஒரு நேர உணவு மட்டுமே உட்கொண்டதன் விளைவாக ஒட்டியிருந்த கன்னமும், கழுத்து எலும்புகள் புடைத்து கொண்டு நிற்க மெலிந்த உடலாக இருந்தான் ராயன்.
அவன் தான் ராயன் என்று நன்றாக அவனது முகத்தை பார்த்தால் மட்டுமே தெரியும் அந்த அளவிற்கு அவனின் தோற்றம் மாறியிருந்தது.
“ஏய் எதுக்கு இப்ப இப்படி கத்தி சத்தம் போட்டுட்டு இருக்க??? என்ன பசிக்குதா??”
வெற்றியை கண்டவுடன் கண்கள் மினுமினுக்க அவனருகில் வந்தவன் “எனக்கு.. எனக்கு… சொர்க்கம் வேண்டும்.. சொர்க்கம்..” என்றான்.
“சொர்க்கமா???” என்றான் ஒரு புரியாத பார்வையில்..
“ஆமா.. ஆமா… ஏதோ ஒரு ஊசி போடுவியே.. அது வேண்டும் எனக்கு.. கொடு..”
“ஏன் காலைல நீ அத எடுத்துக்கலையா??”
“ஒருத்தன் வந்து போட்டான். ஆனா.. ஆனா அது எனக்கு பத்தலை… கொடு.. கொடு… இன்னும் வேண்டும்.. கொடு..” என்று கிட்டத்தட்ட பைத்தியம் நிலைக்கு கத்தினான்.
“சரி.. சரி.. கொடுக்கறேன்..” என்றவன் அருகில் அவனுக்கு வைத்திருந்த காலை உணவை கண்டு “ஏன்.. இன்னும் சாப்பிடாம இருக்க?? சாப்பிடு முதல்ல..” என்றான்.
“இல்ல.. இல்ல.. எனக்கு சாப்பாடு வேண்டாம்.. எனக்கு ஊசி தான் வேணும்.. போட்டு விடு..”
“உனக்கு ஊசி வேணும்னா முதல்ல சாப்பிடு..”
“இல்ல.. இல்ல.. ஊசி போட்டா தான் சாப்பிடுவேன்.”
“இங்க பாரு ஊசி போட்டா நீ சாப்பிட மாட்ட.. அதனால சாப்பிடு நான் உனக்கு ஊசி போட மருந்து கொண்டு வர சொல்றேன்.”
“கண்டிப்பா தருவியா..”
“கண்டீப்பா.. முதல்ல நீ சாப்பிடு நான் மருந்து எடுத்துட்டு வர்ரேன்..” என்றவன் அந்த அறையை விட்டு நகர்ந்து மறக்காமல் அந்த அறையை பூட்டி சென்றான்.
அந்த வீட்டின் நீள் இருக்கையில் அமர்ந்தவன் அழைத்தது என்னவோ சேகருக்கு தான்.
“சேகர் ஆஃபிஸ்லயா???” என்றான் அவன் அழைப்பை ஏற்றவுடன்.
“எஸ் சார்..” என்றவனிடம்,
“நீங்க உடனே கிளம்பி ராயன அடைச்சு வச்சுருக்கற இடத்துக்கு வாங்க. அதோட அவனுக்கு தேவையான ட்ரங்க்ஸ் கொண்டு வாங்க..”
“சார்..” என்று ஏதோ கேட்க நினைத்தவன் உடனே கிளம்பினான்.
அடுத்த பதினைந்து நிமிடத்தில் அவன் அந்த வீட்டிற்கு வந்தான்.
அவனின் முன்னே வந்து நின்றவனிடம் “அவனுக்கு தேவையான அளவு காலைல கொடுத்தாச்சல்ல..” என்று வினவினான்.
வெற்றி எதை குறிப்பிடுகின்றான் என்பதை உணர்ந்த சேகரோ “சார் நான் காலைலயே எப்பவும் கொடுக்கற அளவு கொடுத்துட்டேன்..” என்று பதில் கூற..
“ம்.. இப்ப மறுபடியும் கேட்கறான். போதை ஏறலயாமா அவனுக்கு..”
“ஸார்.. இதுக்கு மேல கொடுத்தா உயிருக்கு ஏதாவது..” என்று சேகர் இழுக்க,
அவனது கேள்வியில் முகம் இறுக “எப்ப இருந்து குற்றவாளிகளுக்கு கருணை காட்ட ஆரம்பிச்சீங்க சேகர்..” என்றான் ஒரு வித அழுத்தத்துடன்.
“அதில்லை சார்.. நம்ம கஷ்டடியில இருக்கான். அவனுக்கு என்ன ஆனாலும் நாம தானே பொறுப்பு.. அதான் கேட்டேன்.” என்று தனது கேள்விக்கு விளக்கம் கொடுக்க..
“ம்.. அது எனக்கும் தெரியும்.. இந்த கண்ணாமூச்சி ஆட்டத்துக்கு ஒரு முடிவு கட்ட போறேன்.” என்றவன் பேசி கொண்டே ஊசியில் போதை மருந்தை ஏற்றி கொண்டிருந்தான்.
பிறகு ராயன் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறைக்கு சென்றான்.
அங்கே ராயனோ அவன் கூறியபடி உணவை உட்கொண்டு விட்டு காத்து கொண்டிருந்தான்.
உள்ளே நுழைந்தவனின் கைகளில் இருந்த ஊசியை கண்ட ராயனோ கண்கள் மின்ன “வா… வா… வந்து எனக்கு போடு” என்று அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்து கைகளை நீட்டி கொண்டான்.
“போடறேன்.. போட தானே எடுத்து வந்துருக்கேன்..” என்றவன் அவனுக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தான்.
அவனை நோக்கி வன்மசிரிப்பு சிரித்த வெற்றியோ அவனருகில் சென்று அவனது கைகளில் ஊசியை ஏற்றினான். அதிலிருந்த மருந்து கொஞ்சம் கொஞ்சமாக அவனது உடலில் உள்ள ரத்தத்தில் கலந்தது.
ரத்தத்தில் கலந்த அந்த போதை வஸ்து அதனுடைய வேலையை காட்ட துவங்கியது.
போதையில் ஏதேதோ உளறி கொண்டிருந்தான்.
அவனை பார்த்தபடியே அமர்ந்திருந்த வெற்றியின் அருகே சென்ற சேகர் “சார்.. இன்னைக்கு ஓவர் டோஸ் கொடுத்திருக்கோம்..” என்றான்.
“ம்… அதான் எனக்கும் வேணும் சேகர்.. அவன் ரொம்ப இந்த போதைக்கு அடிமையாகனும்..”
“அடுத்து உங்க ப்ளான் என்ன சார்..”
“ம்.. சொல்றேன். நான் இன்னைக்கு நைட் இங்க தான் ஸ்டே பண்ண போறேன். சாப்பிடறதுக்கு ஏதாவது வாங்கிட்டு வந்து கொடுத்துட்டு நீங்க வீட்டுக்கு கிளம்புங்க..” என்றான் அந்த அறையிலிருந்து வெளியேறி கொண்டே சேகரிடம் கூறினான்.
“ஒகே சார்.. இதோ வாங்கிட்டு வர்ரேன்..” என்றவன் உடனே கிளம்பி வெளியே சென்றான்.
ஊருக்கு ஒதுக்குபுறத்தில் உள்ள அந்த வீட்டை தனது இந்த மாதிரி அலுவல்களுக்கும், தனக்கே தனக்கான ஒரு தனிமை தேவைப்படும் பொழுது அதை அனுபவிப்பதற்காகவுமே அவன் இந்த வீட்டினை வாங்கியிருந்தான்.
அவனே சமைத்து உண்பதற்காக வீட்டில் எப்பொழுதும் சமையல் பொருட்கள் இருக்குமாறும் பார்த்து கொள்வான். இது அவனது தாய் தந்தையருக்கு கூட தெரியாது.
தாய், தந்தையருடனான நேரத்தை செலவிடுவதற்கும், நிம்மதியான வாழ்க்கைக்குமே அந்த வீட்டிற்கு செல்பவன் தனது துக்கம், கோபம் ஏன் அழுகை கூட தனது பெற்றோருக்கு தெரியக்கூடாது என்று நினைத்து இந்த ஏற்பாடு.
மாதத்தில் ஒரு நாளாவது இந்த வீட்டிற்கு வந்து தனிமையை அனுபவிப்பான்.
சேகருக்கு கூட தெரியாது இந்த வீடு வெற்றியுடையது என்று.
அங்கே அவனுக்கென்று இருந்த அறையில் நுழைந்து குளித்து விட்டு வேறு உடை மாற்றி கொண்டு வந்தவன் வரவேற்பறையில் அமர்ந்து அடுத்து எவ்வாறு செயல்படவேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தான்.
அதற்குள் சேகர் உணவுடன் வர, இருவரும் சேர்ந்து உண்டு கொண்டிருந்தனர்.
சாப்பிட்டு முடித்தவுடன் அவனின் எல்லா திட்டங்களையும் விளக்கமாக சேகரிடம் கூறினான்.
அதைக்கேட்டு ஓரு நிமிடம் கண்கள் மின்ன “சூப்பர் ப்ளான் சார்..” என்று கூறியவன் அடுத்த நிமிடம் நெற்றி சுருங்க “எல்லாம் சரி சார்… ஆனா அவன் எங்கேயாவது நம்ம பேரை சொல்லிட்டா, இல்ல முகத்தை பார்த்து நம்மகிட்டயே போதை மருந்து கொடுனு கேட்டுட்டா என்ன பண்றது???” என்று வினவினான்.
“பெயர் சொல்றதெல்லாம் பிரச்சனையே இல்ல வெற்றி.. அதுவும் இல்லாம அவன் எந்த நேரத்துல எப்படி பிஹேவ் பண்ணுவானு அவனுக்கே தெரியாது. ஆனா நம்மள பார்த்தா..” என்று தனது தாடையை தடவி சிறிது யோசித்தவன் “அதுக்கும் ஏதாவது ஏற்பாடு பண்ணிடலாம்.. நீங்க கவலைப்படாதீங்க..” என்றான்.
“சரி நீங்க கிளம்புங்க சேகர்.. ரொம்ப லேட் ஆகிடுச்சு..” என்று வெற்றி கூற, சேகரோ “சார்.. உங்கள எப்படி இங்க தனியா விட்டுட்டு கிளம்புறது.. நானும் உங்க கூடவே இருக்கறேன். “ என்று கூறினான்.
அதை கேட்டு சத்தமாக சிரித்த வெற்றியோ “ஓ.. எனக்கு நீங்க காவலா.. அது சரி… நீங்க உள்ள
இருக்கற ரூம வேணா எடுத்துக்குங்க.. நான் இங்க ஹால்லயே இருக்கேன்..” என்றான்.
சேகரோ சிறிது தயங்கியவன் “ஸார்… அது..” என்று இழுத்தான்.
“இங்க பாருங்க சேகர் இது உங்க வீடு மாதிரி.. சங்கடப்படாதீங்க.. போங்க போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க.. காலைல நாம நேரத்துல எழுந்திருக்கனும்… நான் தூங்க லேட் ஆகும்..” என்று அவனை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தான்.
“சரிங்க சார்..” என்றவன் அறைக்கு செல்ல “சேகர்.. அங்க கப்போர்டுல என்னொட ட்ரஸ் இருக்கு.. போட்டுக்கோங்க..” என்று கூற அவனும் “சரி..” என்று கூறி உள்ளே நுழைந்தான்.
மறுநாள் கமிஷனர் அலுவலகமே பரபரப்பாகியது என்றால் அதற்கு காரணம் ராயன் கிடைத்துவிட்டான் அவனுடைய தொலைப்பேசி இப்பொழுது எங்கிருக்கிறது என்ற இருப்பிடத்தை காட்டுகிறது என்பது தான்.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.