உயிரை கொல்வது மட்டும்தான் கொலையா??? மனதை கொல்வதும் கொலைதானே.. அப்படி தமக்கைக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்காக ஒரு பாவிக்கு தண்டனை தர நாயகன் தேர்ந்தெடுக்கும் வழி அவனின் மகளான, தன்னுயிர் காதலியின் மனதை துடிக்க துடிக்க கொல்கிறது..! அப்படி கொன்ற தன்னவளின் மனதை உயிர்ப்பித்தானா?? ஒரு பாவிக்கு தண்டனை தர தெரிந்தே பாவம் செய்யும் நாயகனின் உணர்வுப் போராட்டங்கள் மற்றும் தந்தையின் பாவத்துக்கு பலியான நாயகியின் மனப்போராட்டங்களை உணர்வுப்பூர்வமாக உணர செய்திருக்கும் கதை..!
கனமான கதைக்களம்.. ஆரம்பம் முதல் இறுதி வரை அந்த அழுத்தம் குறையாமலேயே பயணிக்கிறது.. பெண்ணை பலாத்காரம் செய்யும் எவனும் அதற்குண்டான கொடுமையான தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது கதை..! இப்படி ஒரு கதைக்களத்தை எடுத்ததுக்கு பாராட்டுக்கள் நயனிமா.. உங்க எழுத்தின் மூலம் கதைக்கு நியாயம் செஞ்சிருக்கீங்க..!
அபயன்.. சகோதரிக்கு நல்ல சகோதரன், அவளுக்கும், அவளின் மகளுக்கும் தாயுமானவன், காலம் கடந்து சேர்ந்தாலும் தன் பிள்ளைகளுக்கு நல்ல தந்தையானவன்.. ஆனால் விதியால் மனைவிக்கு நல்ல கணவனாக இருக்க முடியாததின் வலியை இறுதிவரை அனுபவிப்பவன்.. அவனோட வலியையும், அவனுக்கான தண்டனையையும் உங்க எழுத்துக்களால் விவரிக்கும் போது மனம் ரொம்பவே கனக்கத்தான் செய்யுது..! பதினோரு வயது பிள்ளையின் மனநிலையை யோசிக்கும் போது அவன் மேல பரிதாபம்தான் வந்தது.. துள்ளி திரிந்த சிறுபிள்ளை அடையக்கூடாத துன்பங்களை எல்லாம் அவன் அடைஞ்சிட்டான்... எப்போ இவனோட வலிகள் எல்லாம் தீருமோன்னு ஒரு கட்டத்துல நினைக்கவே வச்சுடறான்..!
மிளிர் மீதான அவனோட காதல் அளப்பரியது.. அழகானது..! காதலியின் வேதனையை விட பலமடங்கு அதிகமான வேதனையை தான் அனுபவிக்க அவன் செய்யும் ஒவ்வொன்றும்.. அப்பப்பா.. அவனவள் மீதான அவனின் எல்லையில்லா காதலின் ஆழத்தை காட்டுகிறது.. ! அதையெல்லாம் மிளிர் உணரும் தருணம் அவ்ளோ ஆத்மார்த்தமாக இருந்தது..
மிளிர்.. பாதிப்புக்குள்ளான ஒரு பெண்ணின் தவிப்பையும், பயத்தையும், உணர்வுகளையும் தாங்கி கணவன் மீது பொங்கும் காதலையும் அடக்க முடியாமல் தவிக்கிறாள்..! காதலையும் மீறி தோன்றும் அவனின் மீதான நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தும் தருணங்களில் கணவனே ஆனாலும் பாதிக்கப்பட்ட பெண்ணால் அதிலிருந்து அவ்வளவு சீக்கிரம் வெளிவர முடியாது என்பதை உணர முடிகிறது..! கணவனின் காதலை உணர்ந்த பிறகும் "மன்னித்துவிட்டேன்.. ஆனால் மறக்கமுடியுமா தெரியலை.. மறக்க முயற்சி செய்கிறேன்..!" என அவள் சொல்வது இதுதான் யதார்த்தம் என தோன்றுகிறது.. காலமும், கணவனின் காதலும் அவள் காயத்தை ஆற்றும் என நம்புகிறோம்..!
காந்திமதி.. இன்னல்களை கடந்து நிமிர்ந்து நிற்கும் கம்பீரமான பெண்மணி... காதல் என நினைத்து காமத்துக்கு பலியான இவரின் நிலை எந்த பெண்ணுக்கும் வர கூடாதுன்னு வலியோடு நினைக்க வைக்கிறார்.. மனநலம் பாதிக்கப்பட்டு இவர் பட்ட துயரங்கள் கொஞ்சமா நஞ்சமா... தம்பியின் அன்பினால் தேறி வரும் இவர் மிளிர்க்கு சொல்லும் அறிவுரைகள் வாழ்க்கை பாடம்..!
ஆராதனா.. அரக்கனின் அட்டகாசத்தில் விளைந்த குட்டி தேவதை.. ஆத்வீகன், சாத்வீகன்.. அழகு குட்டி செல்லங்கள்.. அபயனோடு இவர்கள் போடும் ஆட்டங்கள் கொள்ளை அழகு...
விக்னேஷ்வரனை பத்தி நினைச்சாலே கோவம்தான் வருது.. அதனால அந்தாளை பத்தி நான் சொல்ல மாட்டேன்..
கடற்கரை பௌர்ணமி காட்சி செம அழகு.. அதை விவரிக்க வார்த்தைகள் இல்ல.. சுருக்கமா சொல்லணும்னா உங்களோட எழுத்து மயக்கிடுச்சி.. எழுதின உங்க கைக்கு பெரிய உம்மா
முடிவு இதுதான்னு சொல்லாம, எதிர்மறையாகவும் இல்லாம காலம் மாற்றும்னு கற்பனைக்கு விட்டது எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது.. வித்தியாசமான கதைக்கு ஏற்ற முடிவாகவே எனக்கு பட்டுச்சு...
காந்திமதி எந்த பாவமும் செய்யலை.. அதான் அவருக்கு பெண்குழந்தை பிறந்தா.. அதே போல மிளிரும் எந்த பாவமும் செய்யலை இல்லையா.. அதனால அவளுக்கும் பெண்குழந்தைகள் பிறக்கும்.. அபயனோட பாவத்தை அவள் காதலால் கழுவுவாள்னு என்னோட கற்பனைக்கு விட்டுட்டேன்..
இதே போல இன்னும் பல சிறப்பான கதைகளை படைக்க வாழ்த்துக்கள் நயனிமா!!