நீயாகி போகிறேன் நான்
நீயா நானா 3
அனைத்து ஊடகங்களிலும் அமிழ்தினியையே கெட்டவளாக சித்தரித்து பேசிக் கொண்டிருந்தார்கள். வழக்கின் சாராம்சத்தை விட்டு அவளது சொந்த குணநலங்களை விவரித்துக் கொண்டிருந்தார்கள். குறிப்பாக பெண்கள் என்ன செய்ய வேண்டும் இவள் ஒரு சிறந்த பெண் இல்லை, ஏன் பெண் தன்மையே இல்லாதவள் என்பது போல தான் அவர்களின் முக்கால்வாசி பேச்சு இருந்தது.
நிலவன் எதிர்பார்த்ததும் இதே தானே! அமைதியாக அதைப் பார்த்துக் கொண்டே சாக்லேட் சாப்பிட்டுக் கொண்டு இருந்தான். கனடாவிலும் இந்த செய்தி தான் கதிர் வீட்டிலும் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.
அதை மாற்ற முயன்ற கதிரின் மனைவி சுடரின் கையை தடுத்த மீனாட்சி, “விடுமா என்ன தான் சொல்றாங்கன்னு பார்க்கணும் நல்ல காமெடியா இருக்குதுல. என் பொண்ணு பொண்ணே இல்லையாம், எப்படி எல்லாம் உருட்டுறாங்க பாரு. இன்னும் இவன்க 1960sல தான் இருக்கானுங்க போலயே. நல்ல சிரிப்பா வருது. எல்லாம் இந்த சீரியல் பாக்குறவைங்களா இருப்பாய்ங்க போல இருக்கு.”
அவரது பேச்சில் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்ட சுடர், “ஏன் ம்மா அப்படி சொல்றீங்க?”
“பின்ன என்ன மா? பொண்ணு இப்படி இருக்கணும் அப்படி இருக்கணும் இந்த சீரியல்ல எல்லாம் அப்படித்தானே காமிக்கிறாங்க, ஒரு பொண்ணு அவளுக்காக முடிவெடுத்தா அதை கொலை குத்தமாவும் அவள சுயநலமாவும் காமிக்கிறாங்க, அவளுக்கு அந்த குடும்பத்துல நான் முக்கியத்துவம் வேண்டும் என்று நினைத்தால் அவளை சிரிப்பா காமிக்கிறாங்க. காலைல எந்திரிக்கும் போதே ஏதோ வேலைக்கு நேர்ந்து விட்டது மாதிரி காமிக்கிறாங்க”
“அவளுக்குனு ஆசை இருந்தாலும் அதை கணவனுக்காகவும் வீட்டுக்காகவும் விட்டுக் கொடுத்தா தான் நல்ல பொண்ணாம்.கண்டிப்பா தியாகம் பண்ணியே ஆகணுமா? எப்படி தருதலையா இருந்தாலும் அவன திருத்தி மனுசனாக்கணுமா? அதுக்கு தான் பொண்ணு வளர்ந்து படிச்சு இருக்காம். இந்த மக்களும் அத பாத்துட்டு இன்னும் பின்னாடி தான் போயிட்டு இருக்குதுங்க. ஹ்ம்ம் எல்லா கால கொடுமை” என்று சொல்லிவிட்டு ,
“இன்னிக்கு கொஞ்சம் ஓவர் டோஸ் ஆயிடுச்சு, இதுக்கு மேல பேசினா பூமர் ஆன்ட்டி லிஸ்ட்ல சேர்த்துருவாங்க” என்று கையை வைத்து விசிறிக் கொண்டவர்,
“டேய் கிராண்ட் சன் நீயாவது பெரியவன் ஆகி நல்ல சீரியல் எடுடா, இந்த கிரானிய லீட் ரோல்ல போட்டு ஸ்வீட் கிரானினு ஒரு நல்ல கொரியன் சீரியல் எடுடா அதுக்கு தான் நம்ம ஊர்ல டிமாண்ட்” என்று இரண்டு மாதங்களில் பிறக்க போகும் குழந்தையிடம் பேசிக் கொண்டிருந்தார் மீனாட்சி.
“என்ன மீன்ஸ் எங்க பையன் சீரியல் டைரக்டரா வரணுமா?“ என்று கேட்டபடி அவர் மடியில் படுத்தான் கதிரவன்.
“ஏன்டா சீரியல் டைரக்டர்னா என்ன நெனச்ச? எனக்கு தெரிஞ்சு மூணு வருஷத்துக்கு கண்டிப்பா பணம் கிடைக்கும், அதுவும் டெய்லி சம்பளம். உன் பையன் கண்டெண்டுக்கு எல்லாம் வெளியில போகவே வேண்டாம், நம்ம வீட்டிலேயே நிறைய கன்டென்ட் கிடைக்கும் அதை வைத்து அவன் 7 வருஷம் கூட எபிசோட்ஸ் ஈஸியா கிரியேட் பண்ணிடலாம்.” என்று அவர் பேசிக் கொண்டிருந்தாலும் அவரது கைகள் கதிரவனின் தலையை கோதிக் கொண்டு தான் இருந்தது.
அப்போது அவரது தோளில் சாய்ந்த சுடர், “உங்களுக்கு கஷ்டமா இல்லையா அம்மா?” என்று கேட்க,
“எதுக்கு டா?”
“இல்ல இல்ல... அக்காவ பத்தி ஊரே தப்பா பேசுது, அது போக மாமாவும் அக்காவும் ஊர் பிரச்சனைக்காக முட்டிக்கிட்டு இருக்காங்க, எல்லாத்தையும் விட பெருசா அவங்க ரெண்டு பேரும் டைவர்ஸ் அப்ளை வேற பண்ணி வச்சிருக்காங்க. உங்களுக்கு அக்கா லைப் பற்றி கஷ்டமா இல்லையா அம்மா?” என்று தயக்கத்துடன் கேட்க,
“சே சே எனக்கென்னடா கஷ்டம், இந்த பப்பு வாய்ங்க பேசுறத பார்த்து நான் எதுக்கு கஷ்டப்படணும்? என் பொண்ணு சுதந்திரமா இருக்கா, அவ வேலைய அவ செய்றா, அவ வேலைக்கு குறுக்க கணவனே வந்தாலும் அதுக்காக எதிர்த்து நிற்கிறா இதைவிட என்ன பெருமை வேணும் எனக்கு!” என்று சொன்னவர் கண்ணில் பெருமிதம் தான் இருந்தது.
“இது என்ன என் பொண்ணு அவ சுயநலத்துக்கா கேஸ் போட்டு இருக்கா? அவகிட்ட இல்லாத சொத்தா? அவ இந்த மக்களுக்காக போராடுறா, மக்களா வாழ்க்கையானு வரும்போது அவ வாழ்க்கைய விட மக்கள் நலன் தான் முக்கியம்னு போராடிக்கிட்டு இருக்கா, ஆனால் அது இந்த மக்களுக்கே புரியல, ஒரு நாளைக்கு புரியும் புரியும் போது இப்ப பேசுற வாய் எல்லாம் அப்ப வேற மாதிரி பேசும்.”
“இன்னைக்கு அடங்காப்பிடாரி திமிரு புடிச்சவ அப்படின்னு பேசுற அதே வாய் நாளைக்கு தங்கத் தாரகை, சிங்கப்பெண் அப்படினு வாய் கூசாம பேசுவாங்க, இதுக்கெல்லாம் கவலைப்பட்டுக் கிட்டு இருக்க முடியுமா?”
“டைவர்ஸ்! இதுங்க ரெண்டுக்கும் ஆரம்பத்தில் இருந்து முட்டிக்கிச்சு, ரெண்டு பேருக்கும் தான் தான்ற எண்ணம் ரொம்ப ஜாஸ்தி, என்ன நீ ஒரு அடி அடிச்சிட்டியா இப்ப பாரு உன்னை நான் இரண்டு அடி அடிக்கிறேன் பாரு அப்படிங்கறது தான் இவங்க எண்ணம்”
“காதல் அப்படின்ற ஒன்று இருந்துச்சுன்னா இவங்க டைவர்ஸ் வாங்க மாட்டாங்க, இல்ல ‘நான்’ அப்படி என்ற எண்ணம் மட்டும் இருந்துச்சுன்னா சேர்ந்து வாழாமல் பிரிஞ்சு போறது நல்லது” என்று சொன்னவர்,
“ஏன்டா கதிர் நீ மாசமா இருக்கியா உன் பொண்டாட்டி மாசமா இருக்காளாடா? ஏதோ நீ மசக்க வந்தவன் மாதிரி வந்து படுத்துக்கிட்டு இருக்க எந்திரி டா முதல போயி நம்ம பேபிம்மாக்கும் எனக்கும் மாதுளை ஜூஸ் ரெண்டு எடுத்துட்டு வா போ, எனக்கு ஐஸ் போட்டு பேபிம்மாக்கு ஐஸ் போடாம” என்று அவனை மடியில் இருந்து தள்ளி விட்டார்.
“என்ன மீன்ஸ் எனக்கு வேலைய குறைப்பனு பார்த்தா எனக்கு ரெண்டு வேலை ஆக்குற? இதுக்கா நான் உன் ஊரில் இருந்து வர வச்சேன்?” என்று எழுந்தபடியே கதிரவன் புலம்ப.
“எதே! நீ வர வச்சியா? அடேய் என்னோட மாப்பி Mr.ஆதிநிலவன் சொன்னாருடா, என்ன தான் என்னோட பொண்ணு டைவர்ஸ் அப்ளை பண்ணாலும் இன்னும் அவர் தானே எனக்கு மாப்பி , அவர் சொன்னா கேக்கணும் தானே, அதான் என் பொண்ணு வாழ்க்கைக்காக தியாகம் பண்ணிட்டு இங்க வந்து உட்கார்ந்து இருக்கேன்” என்று மீனாட்சி வராத கண்ணீரை துடைத்துக் கொண்டு சொல்ல,
'அட சண்டாள பாவி! ஒரு வார்த்தை சொன்னியா டா நான் பேசும் போது மூச்சு கூட விடல, நான் சொல்லும் போது ஏதோ புதுசா கேள்விப்பட்ட மாதிரி பில்டப் பண்ணிட்டானே பாவி பையன், பாவம்டா உன் பொண்டாட்டி. நானே ஒரு டக்கால்டி என்னையவே இந்த பாடு படுத்துற அந்த பிள்ளையை மட்டும் விட்டா வச்சிருப்ப' என்று மனதில் ஆதிக்கு ஒரு அர்ச்சனை போட்டுவிட்டு மீனாட்சி சொன்ன மாதுளை ஜூஸ் போட போய்விட்டான்.
இங்கே ஈஸ்வரி அவரது அக்காவின் படத்திற்கு முன்னே அமர்ந்து அழுதுக் கொண்டிருந்தாள். “ஏன் அக்கா என்ன விட்டு போனீங்க? நீங்க இருக்கிற வரைக்கும் எனக்கு ஒண்ணும் தெரியல நீங்க போன பிறகு ரொம்ப தனியா இருக்கேன்.” என்று கூற
“அப்ப நான் யாரு ஈஸ்வரி?” என்று அவரது கணவர் வாசகம் பின்னாடி வந்து கேட்க அவரைக் கட்டிக் கொண்டு கதறிவிட்டார் ஈஸ்வரி.
“என்னால முடியலங்க,என்னோட பிள்ளைகளே என் கூட இல்லை. நான் பெத்த பிள்ளையே என்ன வெறுக்குறான், எனக்கு யாருமே இல்லாத மாதிரி தோணுதுங்க, நான் என்னங்க பாவம் பண்ணேன் எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது? நான் ஏங்க அன்னைக்கு அப்படி நடந்துக்கிட்டேன்? ஏதோ உணர்ச்சிவசத்துல அப்படி நடந்துக்கிட்டேன் ஆனா அதையே சாக்கா வச்சு என்னை இப்படி ஒதுக்கிட்டானே அவன்” என்று கலங்க,
“நம்ம பிள்ளை நம்மள பிரிஞ்சு போறதுக்கு நீ விட்ட வார்த்தைகள் மட்டும் தான் காரணம் ஈஸ்வரி. இத நானும் மறுக்க மாட்டேன். இது எல்லாத்துக்கும் விடிவு வரும் அது வரைக்கும் பொறுமையா இரு” என்று தன் மனைவியை சமாதானப்படுத்தியவர் ஈஸ்வரியையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்து விட்டார்.
அதே சமயம் மீனாட்சி மடியில் படுத்திருந்த சுடரோ, ”ஏன் ம்மா அன்னைக்கு மட்டும் அப்படி நடக்காம இருந்திருந்தா இன்னைக்கு எல்லாரும் சந்தோஷமா இருந்திருப்பாங்க இல்ல, இந்த எல்லா பிரச்சனைக்கும் நான் தானே காரணம்?” என்று வருந்த,
“ஏன் அதை பற்றி இன்னும் ஒரு பத்து வருஷம் கழிச்சு பேசேன்“ அவள் தலையில் செல்லமாக கொட்டிய மீனாட்சி, ”அப்படியெல்லாம் இல்லடா இதுதான் நடக்க வேண்டும் என்று இருந்தால் அதுதான் நடக்கும் நடந்து முடிஞ்சது பத்தி வருத்தப்படக்கூடாது இனி நடக்க போறது எப்படி சரியா நடக்க வைக்கணும் அது மட்டும் தான் யோசிக்கணும்” என்று கூறிய மீனாட்சி,
“இப்ப நீ யோசிக்க வேண்டியது இந்தப் பிள்ளையை நல்லபடியா பெற்று அவன நல்ல பிள்ளையா வளர்க்கணும், மத்ததை போட்டு குழப்பிக்காம இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சு என்ன ஜூஸ் குடிக்கலாம் என்று யோசி, நடக்கிறது நல்லபடியா நடந்தே தீரும்” என்று பேசி சுடரை திசை திருப்ப பார்த்தாலும் சுடரின் முகத்தில் இன்னும் குழப்பம் இருக்கத்தான் செய்தது.
சுடர்,ஈஸ்வரி என இருவரும் இப்போது நடக்கும் செயலுக்கு தாங்கள் தான் காரணம் என்று நம்பி மனதில் போட்டு வருந்திக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களுக்கு யார் சொல்வது? விதியின் கோரப் பிடியில் சிக்கி தவித்த பூ மகள்கள் இவர்கள். நடக்கும் நிகழ்வுகளுக்குப் பின் இருக்கும் சூத்திரதாரியின் முக்கிய பகடைகள் இவர்கள்தான். இவர்களை வைத்துதான் இந்த விளையாட்டு போய்க் கொண்டிருக்கிறது.