All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிலா ஶ்ரீதரின் "என் காதல் பொய்யும் இல்லை" - கதை திரி

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் - 17

விக்ரமிற்கு சந்தியாவை திட்டவேண்டும் என்றெல்லாம் கிடையாது. எங்கே இவளது செயலால் இவளது வாழ்க்கையை இவளே வீணடித்து கொள்ள போகிறாளோ என்ற பயம். அதோடு கௌதமின் குடும்பம் பெரியது. அங்கே இருக்கும் மனிதர்களின் குணமும் வெவ்வேறாக இருக்கும். இப்படி தொட்டத்தற்கெல்லாம் சண்டையிட்டு கொண்டிருந்தால் நாளை அவள் நிம்மதி தான் குலையும். இவையனைத்தையும் கருத்தில் கொண்டே அவன் அவளிடம் அவ்வாறு நடந்துக் கொண்டான்.

தோழி அவ்வளவு பக்குவமில்லாதவள் இல்லை என்பது அவனுக்கு தெரியவில்லை. அவள் கௌதமிடம் மட்டுமே அப்படி நடந்துக் கொள்வாள். அதுவும் அவன் மீதுள்ள அளவுக்கடந்த அன்பே, அவன் மீது அவள் கொள்ளும் கோபம். மற்றபடி மற்றவர்களிடம் நன்முறையில் நடந்து நற்பெயரை வாங்க கூடியவளே.

இதில் எந்த தவறும் செய்யாமல் திட்டும் வாங்கி, பின் சந்தியாவை சமாதானமும் செய்தவன் கௌதமே. அவனுக்கு சந்தியா ஏன் அப்படி நடந்துக் கொண்டாள் என்று நன்றாகவே புரிந்தது. ஆம், அவளுக்கு மதுவருந்தினால் பிடிக்காதென்று அவனுக்கும் தெரியும். இருந்தும் அவனுடைய சந்தோசத்திற்காக அவன் கேட்கும் ஒவ்வொரு முறையும் அனுமதித்திருக்கிறாள் என்றும் தெரியும். அதனால் தான் விக்ரம் அவ்வளவு வற்புறுத்தியும் அவன் குடிக்கவில்லை. அவளும் காரணம் இல்லாமல் அப்படி நடந்து கொள்ளவில்லை. அவளது தந்தை முத்துகிருஷ்ணனே அதற்கு முழுமுதற் காரணம். அவர் நல்ல மனிதர் தான். மனைவி, மக்கள் மீது அதிக அன்பும் பாசமும் கொண்டவர் தான். ஆனால் இந்த ஒரு பழக்கத்தை மட்டும் அவரால் விட முடியவில்லை.

இந்த வயதிலும் மகளுக்கு, முத்து தன் கையால் தான் இரவு உணவு ஊட்டிவிடுவார். சந்தியாவும் எத்தனை மணி ஆனாலும் அவருக்காக காத்திருந்து அவர் ஊட்டிவிட்டால் தான் சாப்பிடுவாள். அதே நேரத்தில் மக்கள் இருவரும் சாப்பிட்டு படுத்ததும், வீட்டிலேயே மது அருந்துவார். இது மனைவி மீனாட்சிக்கு சுத்தமாக பிடிக்காது. மகளுக்கும் மகனுக்குமே பிடிக்காது. நிறைய முறை பேசாமல் இருந்தெல்லாம் பார்த்திருக்கின்றனர். சில நாட்களுக்கு சரியாக இருப்பார், பின் பழைய படி தொடங்கிவிடுவார்.

முத்துகிருஷ்ணன் விக்ரம் வீட்டு கார் ஓட்டுநர் என்று சொல்வதை விட அவனுடைய தனிப்பட்ட ஓட்டுநர் என்று தான் சொல்லவேண்டும். தான் வீட்டில் அதிகம் இருப்பதில்லை, தனியாக இருக்கும் மகன் வழித்தவறி சென்றுவிட கூடாதென்று வீட்டிலும் வெளியிலும் அவன் உடனிருக்க, ரவிப்பிரகாஷ் வைத்த வேலையாளும் ஓட்டுநரும் தான் மாரியப்பனும் முத்துகிருஷ்ணனும். அதுவும் முத்துகிருஷ்ணன் மீது தனிப்பட்ட முறையில் அபிமானம் வரவே அவரை அவர் குடும்பத்தோடு தன்னுடைய விருந்தினர் இல்லத்திலேயே தங்கி கொள்ளச் சொன்னார்.

அதனால் விக்ரமை பள்ளிக்கு அழைத்து சென்று வரும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் முத்து சரக்குவண்டி ஓட்டுவது, பிற வாடகை வண்டி ஓட்டுவதென்று வெளி வேலைகளை செய்வார். அதில் ஏற்படும் அசதியை போக்க இரவில் மதுவருந்தாமல் படுக்கமாட்டார். முன்பெல்லாம் இரவு வேலைகளையும் செய்திருந்தார். பிள்ளைகள் வளர்ந்ததும் அதற்கு தடைப்போட இப்போது பகல் வேலையை மட்டும் பார்க்கிறார். அதுவும் இப்போது விக்ரமே பெரும்பாலும் வண்டியை சுயமாக ஓட்டிச் செல்வதால் அவருக்கு வேலை குறைவு. அதுவே அவருக்கு வருமானத்தை எண்ணி ஒரு வித பயத்தை தந்திருக்க, அதைப் போக்க விக்ரமே சம்பளமும் தந்து வெளி வேலையும் செய்ய ஊக்குவித்து இருக்கிறான்.

சந்தியாவிற்கு தந்தையிடம் பிடிக்காத ஒன்றானால் அது மதுப்பழக்கமே. ஆனால், அவளால் அவரை தடுக்க முடியவில்லை. தந்தையிடம் முடியாததை தனக்கு நெருக்கமானவர்களிடம் செய்ய தொடங்கினாள். அதேநேரத்தில் என்ன செய்ய, கௌதமுக்கு அது பிடித்திருந்ததால் விட்டும் கொடுத்தாள். இப்போது விக்ரமும் உடன் சேர்ந்துவிட்டானா என்ற வருத்தம், கௌதம் காண்பித்த வழியில் இவன் செல்கிறானா என்ற கோபம், தன்னால் யாரையும் சரிச் செய்ய முடியாதா என்ற இயலாமை, இவையனைத்தும் அவளை கௌதமிடம் கோபத்தை காட்ட வைத்தது. அது புரிந்ததால் தான் அன்று அவள் பேசிய அனைத்திற்கும் கௌதம் பொறுமைக் காத்தான். இருப்பினும் அவன் பொறுமையை சோதித்து ஒன்றிரண்டு வார்த்தைகளை வரவழைக்க தான் செய்தாள் அவனுடைய சனு.

இருந்தும் அனைத்தையும் மறந்து அவள் மனதை நன்கு அறிந்தவன் அவளை சமாதானம் செய்தான். விக்ரமுடனும் அவளை சரியாகச் செய்தான்.

ஒரு மாதத்திற்கும் மேல் சென்றிருந்தது. அன்றொரு நாள் கௌதம் தன்னுடைய குத்துச்சண்டை பயிற்சியில் இருந்தான். சந்தியா அவனுக்கு விடாமல் அழைத்திருந்தாள். தன் கைபேசியை சைலண்ட்டில் வைத்திருந்ததால் அவன் அவளது அழைப்புக்களை கவனிக்கவில்லை.

பயிற்சி முடிந்து கைபேசியை பார்த்தவன், அவளிடமிருந்து இத்தனை அழைப்பு வந்திருப்பதை கண்டு என்னவாக இருக்குமென்று பதறிப்போய் திரும்ப அழைத்தான்.

“ஹலோ சனு. என்னடீ.. எதுக்கு இத்தனை கால் பண்ணிருக்க”

“யாரும் எங்கிட்ட பேச வேண்டாம். யாருக்கும் என் மேல பாசம் இல்ல. அவங்கவங்களுக்கு அவங்கவங்க வேலை தான் முக்கியம்” அவள் மூக்கை உறிஞ்சி கொண்டு சொன்னதை கேட்டு அவனுக்கு சிரிப்பு வர சத்தமாக சிரித்தான்.

“நான் இங்க ஃபீல் பண்ணி பேசிக்கிட்டு இருக்கேன் உனக்கு சிரிப்பு வருதுல கௌதம்” அவர்கள் அலைப்பேசியில் பேசினாலும் அவளது சிவந்த முகம் அவன் கண்முன் தெரிந்தது.

“பின்ன என்னடி. நித்தி தான் இப்படி பேசுவா. உனக்கும் அவளுக்கும் வித்தியாசமே இல்ல. சரி உனக்கு என்னாச்சு, எதுக்கு இப்படி ஓயாம ஃபோன் அடிச்சிட்டு இருக்க. எப்படியும் நைட் பேச தான போறோம்”

“உனக்கென்ன. ஹாஸ்ட்டல்லயும் உன்னை யாரும் கேட்கப் போறதில்ல. வீட்டுலயும் தனி ரூம். இங்க யாருக்கும் தெரியாம உங்கிட்ட பேச நான் படற கஷ்டம் எனக்குத் தான தெரியும். சக்தி வேற வளர்ந்துட்டே வரான். எப்பவும் பக்கத்துலயே இருக்கானா, எங்க கண்டுப் பிடிச்சிடுவானோனு பயமா இருக்கு. நீ என்னனா என் ஃபோன கூட எடுக்க மாட்ற”

“பாக்ஸிங் மேட்ச் வருதுடி. அதுக்கு ப்ராக்டீஸ் பண்ணிட்டு இருந்தனால ஃபோன் சைலண்ட்ல இருந்துச்சு”

“ஆமாமா, உனக்கு புட்பால் மேட்ச் வரும் அதுக்கு ப்ராக்டீஸ் பண்ணுவ. பாக்ஸிங் மேட்ச் வரும் அதுக்கு ப்ராக்டீஸ் பண்ணுவ. அப்புறம் மசில்ஸ் பில்ட் பண்ண ஜிம்மே கதினு இருப்ப. என்னைக்காவது உனக்கு என்மேல லவ் வருதா” அவள் கோபமாக சொன்னாலும் அவனுக்கு ரசிக்க தான் தோன்றியது.

“லவ் வராமயா உங்கிட்ட வந்து ப்ரொபோஸ் பண்ணேன்” கிறங்கி சொன்னான்.

“ப்ரொபோஸ் பண்ணதும் என் கடமை முடிஞ்சதுனு நீ பாட்டுக்கு உன் வேலைய செய்ய ஆரம்பிச்சிட்ட. நான் பாரு பைத்தியம் மாதிரி உன்னையே நினைச்சி சுத்திட்டு இருக்கேன்” அவள் குழந்தை தனம் மாறாது சொல்லிக் கொண்டிருந்தாள் “சரி பாக்ஸிங் மேட்ச் போற நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்குல. சர்ஜரி பண்ண கை வேற” குரலில் இப்போது கண்டிப்பு தெரிந்தது.

“நம்ப டாக்டர் ஓகே சொல்லி தான், நான் மேட்ச்சே போறேன். அப்புறம் எனக்கு எல்லாம் நல்லா ஞாபகம் இருக்கு. நீ கவலையே படாத சனு ஆப்போனென்ட்ட என்னை அடிக்கவே விடாம மொத்த அடியையும் நானே கொடுத்திடுறேன்” சொல்லிவிட்டு சிரித்தவனை “டேய் என்ன, என்னை கிண்டல் பண்றீயா. அப்புறம் நான் உங்கிட்ட பேசமாட்டேன் போ” மீண்டும் குழந்தையாக மாறினாள்.

“சரி சரி. பார்த்து நடத்துக்கறேன். ஆனா எனக்கும் அடிகள் விழத்தான் செய்யும். அதெல்லாம் பார்த்தா எப்படி போட்டியில கலந்துக்க முடியும். ஆனா எதுவும் சீரியஸ் ஆக்கிக்காம பார்த்துக்கறேன்” அவளிடம் பேசிக் கொண்டே தன் கைக்கடிகாரத்தில் மணி பார்த்தவன் “ஆமா இது நீ டான்ஸ் கிளாஸ் போற டைமாச்சே. கிளாஸ் போகாம என்னடி எங்கிட்ட பேசிட்டு இருக்க” சிறுவயதில் நிறுத்திய நாட்டிய வகுப்பிற்கு மறுபடியும் போக சொல்லி ஊக்குவித்து அவளும் சென்றுக் கொண்டிருந்தாள்.

“அது.. நான் போகல”

“ஏன் போகல” இப்போது இவனது குரலில் கண்டிப்பு தெரிந்தது.

“அது கௌதம்.. நான் அந்த சைடு போறப்பயெல்லாம் ரெண்டு பசங்க கிண்டல் பண்ணிக்கிட்டே இருக்கானுங்க. அதான் இனி போக போறதில்ல” பயத்தில் சொன்னவள் மீது அவனுக்கு கோபம் தான் வந்தது.

“என்னது.. இனி கிளாஸ் போக போறதில்லையா. அவனுங்க அப்படி தான் எதாவது பண்ணிட்டு இருப்பான்னுங்க. ஒண்ணு கண்டுக்காம போயிடனும் இல்ல டாலரேட்டே பண்ண முடியாத அளவுக்கு பண்ணா, கைய மடிச்சி ரெண்டு குத்து குத்துறத விட்டுட்டு டான்ஸ் கிளாஸ் போகமாட்டேனு சொல்ற. நீ கவலைபடாம அடி, என்ன பிரச்சனை வந்தாலும் நான் பார்த்துக்கறேன். நீ என் ஆளுன்னு தெரிஞ்சா யாருமே உங்கிட்ட வாலாட்ட மாட்டாங்க”

“என்னடா அடிக்க சொல்ற. எங்க அப்பா யார் வம்புக்கும் போகாதனு சொல்லுவாரு. நீ என்னனா கைய மடக்கி குத்த சொல்ற. நான் என்ன பாக்ஸிங்கா கத்துக்கறேன்”

“இதுக்கு கத்துக்கனுமெல்லாம் ஒண்ணுமில்ல. ஒருத்தன் உங்கிட்ட பிரச்சனை பண்ணா அந்த பிரச்சனைல இருந்து உன் தற்காத்துக்க உனக்கு தெரியணும். உன் டான்ஸ் கிளாஸே மூணு தெரு தள்ளி தான் இருக்கு. அவனுங்க என்ன உங்க ஏரியாவா. நமக்கு தெரிஞ்ச பசங்களா இருந்தா கூப்பிட்டு பேசினா திரும்ப பிரச்சனை பண்ணமாட்டானுங்க”

“ஆமா ஒரு ரௌடிக்கு தானே இன்னொரு ரௌடிய தெரியும்”

“என்னடி கொழுப்பா” அவளை செல்லமாக கடிந்துவிட்டு “சரி, ஒரு நிமிஷம் லைன்ல இரு விக்கிய கான்பெரன்ஸ்ல எடுக்கறேன்” என்று விக்ரமையும் அழைப்பில் இணைத்தவன் “ஹலோ விக்கி என்னடா எதோ ரெண்டுபசங்க என் பேபிய வம்பு பண்றாங்களாமே. அதை என்னனு பாருடா” விக்ரமிடம் கௌதம் சொல்ல

“சொன்னாடா. இன்னைக்கு கொஞ்சம் வேலையா வெளிய வந்திருக்கேன். தர்ஸ்டே போறப்போ நானே கூட இருந்து என்னனு பார்க்கறேன்” விக்ரமுக்கும் இது தெரிந்து தான் இருந்தது. அவர்கள் இருவர் இருக்க அவளுக்கென்ன பயம். ஆனால் கௌதம் அதை அத்தோடு விடவில்லை.

“விக்கி.. திங்கள், புதன், வெள்ளி பாட்டு கிளாஸ் போறா.. செவ்வாய், வியாழன் டான்ஸ் கிளாஸ் போறா.. சனி, ஞாயிறு ஃப்ரீயா தான இருக்கா, கராத்தே கிளாஸ் சேர்த்துவிடு டா”

“ஹான் இல்ல நான் மாட்டேன். நான் என்ன பாட்டு கத்துக்கிட்டு கச்சேரி பண்ணப் போறேனா இல்ல டான்ஸ் கத்துக்கிட்டு அரங்கேற்றம் பண்ணப் போறேனா. இதுல இந்த கிளாஸுக்கு போக தைரியம் வர கராத்தே வேற கத்துக்கணுமாம்” அதுவரை அமைதியாக கேட்டிருந்தவள் மறுப்பு சொல்ல

“என்ன நீ மாட்டேன். இது பாட்டு கிளாஸ், டான்ஸ் கிளாஸ்க்கு போறதுக்கு மட்டும் இல்ல பொதுவாவே நீ தைரியமா இருக்கனும் சனு”

“ரொம்ப கொடுமை பண்ற கௌதம். வாரத்துல ஏழு நாளும் எதாவது ஒரு கிளாஸ் போக சொன்னா, அப்புறம் வீட்ல உன் மாமியார் சொல்ற வேலைய யார் பார்க்கறது. இதுல இந்த சக்தி வேற ஒயிட் யூனிபார்மை மாடு மாதிரி பிரட்டி எடுத்துட்டு வரான். துவைக்கறதுக்குள்ள கையே விட்டு போயிடுது. அன்னைக்கு என்ன சொன்ன நான் போர்ட்டிங் ஸ்கூல் மாதிரி நடத்துறேனா, அப்ப இதுக்கு பேர் என்ன. எனக்கு என்னமோ நீதான் சர்க்கஸ்ல இருக்க ரிங்க் மாஸ்டர் மாதிரி தெரியற” சீறிக் கொண்டு பதிலளித்தாள்.

அதை கேட்ட கௌதம் “நான் வேணா வாசிங்மெசின் வாங்கி தரவா பேபி” என்று பாசமாக கேட்க, அவளுக்கோ அப்போதும் இந்த வகுப்புகள் வேண்டாமென சொல்லாத கோபத்தில் “எதுக்கு வீட்ல மாட்டவா” என்றவள் “எங்க அவன் நான் உன்னை எதாவது சொன்னா மட்டும், நீ பிரஷர் பண்ற, பிடிச்சி வைக்கறேனு எங்ககிட்ட சண்டை போட வந்திடுவான். இப்ப மட்டும் அமைதியா இருக்கான்” அடுத்து விக்ரமிடம் சீறத் தொடங்கினாள்.

“அவன் உன்னை இம்ப்ரூவைஸ் பண்ணனும்னு செய்யறான். நீ அவன் செஞ்சிட்டு இருக்கறத செய்யாதேனு கட்டுப்பாடு வைக்கற” கௌதமுக்கு பரிந்து விக்ரம் பேச கோபமானவள் “நீ ரொம்ப ஓவரா போயிட்டு இருக்க விக்ரம். அப்படி அவன் உனக்கு என்ன செஞ்சிட்டான்னு எப்பவும் அவனுக்கே சப்போர்ட் பண்ற” அவள் விக்ரமிடம் சண்டைப்போட்டு கொண்டிருக்க

“ஏன்டி எங்ககிட்ட இந்த எகிறு எகிறுறியே, அவனுங்ககிட்ட எகிறிருந்தா இப்ப கராத்தே கிளாஸ் போக வேண்டிய வேலை இருந்திருக்காதுல” விக்ரம் அவளிடம் நக்கலாக சொல்லிச் சிரிக்க

“அவங்க பேரு கௌதம் விக்ரமா இருந்திருக்காதுடா. கௌதம் விக்ரம்னு வந்துட்டா சாதாரண சந்தியாலஷ்மி, கோவில்பட்டி வீரலஷ்மியா மாறிடுவா. அதுவும் கௌதம் இன்னும் பாவம்பட்ட ஜென்மம்” என்றவனிடம் அவன் மனது ‘கொஞ்சம் ஓவரா தான் போயிட்டிருக்கமோ’ என்று வடிவேலு பாணியில் கேள்வியெழுப்ப ‘போவோம் நம்ம சனு தான, என்ன செஞ்சிட போறா’ என்று அதனை அடக்கி, தொடர்ந்து அவளை கேலிச் செய்தான்

“என் சனு, நம்ப ரெண்டுபேருகிட்ட மட்டும் புலி, மத்தவங்களுக்கு எல்லாம் எலி” அவளை சீண்டி பார்ப்பதென்று வந்துவிட்டால் கௌதமும் விக்ரமுடன் சேர்ந்து அவளை அழ வைத்துவிடுவான். இன்றும் சந்தியா கண்ணில் கண்ணீர் தயாராக நின்றிருந்தது.

“ரெண்டுபேரும் ஓவரா பேசறீங்கல, நான் ஃபோன வைக்கறேன்” அழாத குறையாக சொல்லிவிட்டு அழைப்பை துண்டிக்கப் போனாள்.

“சனு சனு.. நான் உன்னை டார்சர் பண்ண சொல்லலைடி. நீ கான்பிடென்ட்டா எல்லாத்தையும் ஹேண்டில் பண்ணனும். நாளைக்கே நான் உன் கூட இல்லனாலும், நீ பயப்படாம எல்லாத்தையும் தனியா கையாளனும்” கௌதம் சொன்ன அடுத்த நொடி அழைப்பை துண்டித்திருந்தாள்.

அவன் எப்படி நான் இல்லையென்றாலும் நீ தைரியமாக இருக்கவேண்டும் என்று சொல்லலாம், அவனுக்கு தெரியவேண்டாமா அவன் இல்லையென்றால் நானில்லை என்று என்ற கோபம் அவளை அவ்வாறு செய்ய வைத்தது.

பாவம் கௌதம் தான் அவள் அழைப்பில் இருப்பதாக நினைத்து “பேபி எங்க சத்தத்தை காணோம். உனக்கு புரியுதா இல்லையா. சனு.. சனு..னு...” திரும்ப திரும்ப அவளை அழைத்துவிட்டு பதில் வராமல் போக, தன்னுடைய கைபேசி திரையைப் பார்த்தவன்

“டேய் அவ கட் பண்ணிட்டு இருக்காடா. சரி, நான் அவளை அப்புறம் சமாதானம் பண்ணிக்கறேன். விக்கி நான் சொன்ன மாதிரி நல்ல கராத்தே கிளாஸ்ஸா பார்த்து சேர்த்துவிடு. ரெண்டு பசங்க கிண்டல் பண்ணதுக்கே டான்ஸ் கிளாஸ் போகலன்னிட்டா. கராத்தே கிளாஸுக்கு கண்டிப்பா கலாட்டா பண்ணுவா. நிறைய சமாளிக்கணும் அவளை” என்றான்.

“கௌதி இது உனக்கே ஆபத்தான விஷயமாச்சேடா. கராத்தே கத்துக்கிட்டு உன்னையே அடிச்சா என்னடா பண்ணுவ” நண்பன் பேசி முடிக்கும் வரை அமைதியாக இருந்த விக்ரம் நக்கலாக கேட்க

“அவ கராத்தேவே கத்துக்கலனாலும் என்னை அடிப்பாடா” சொல்லிவிட்டு சிரித்தவன் “அவளுக்கு கான்பிடென்ஸ் வரணும் விக்கி” என்றான்.

“ரியலி கௌதி, உன்னை நினைச்சா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. அவளை வேற யாராவது லவ் பண்ணிருந்தா கூட இவ்ளோ அவளுக்காக பார்த்து பார்த்து செய்வாங்களானு தெரியலை. நான் கூட அவளுக்கு பாதுகாப்பா அவக்கூட போவேன், வருவேன், கூடவே இருப்பேன். ஆனா நீ, எப்படி அவ, அவளை தனியா பாதுகாத்துகனும்னு சொல்லித்தர. ஐ ஆம் ப்ரௌட் ஆஃப் யு டா” விக்ரம் தன் மனதில் இருந்ததை அவனிடம் கொட்டினான்

“உன் சந்துக்காக இத கூட செய்யமாட்டேனா” எதையோ அறிந்தவன் போல் சொல்லிவிட்டு சத்தமாக சிரித்தவன் “ஏன்னா அவ என்னோட சனுவும்” என்க, கௌதமின் பேச்சு விக்ரமுக்கு தான் முழுதாக புரியவில்லை. ஏனோ அதன் விளக்கமும் கேட்க அவனுக்கு தோன்றவில்லை.

“அப்புறம் கிளாஸ்ல சேர்த்ததும் காசு எவ்ளோனு சொல்லு நான் நேர்ல வரப்போ தரேன்” என்றான்.

ஆம் கௌதம் தான் அவளுக்கு பணம் செலுத்தி, பாட்டு மற்றும் நாட்டிய வகுப்பில் சேர்த்து விட்டிருக்கிறான். அவள் இப்போது வைத்திருக்கும் தொடு கைபேசியும், கால் கொலுசும் அவன் அவளது பிறந்தநாளுக்கு வாங்கிக் கொடுத்ததே. ஆனால் அவள் வீட்டை பொறுத்தவரை இவையனைத்தும் விக்ரம் அவளுக்கு செய்வது. அதற்கே முத்துகிருஷ்ணன் சங்கடப்பட்டு, அவ்வப்போது பணம் வரும் நேரமெல்லாம் விக்ரமிடம் கொடுக்கச் சொல்லி சந்தியாவிடம் பணத்தை கொடுத்து அனுப்புவார். சந்தியாவிற்கு கௌதம் தான் செய்கிறான் என்று தெரியும் என்பதால், அவனை சந்திக்கும் நேரம் அதை அவனிடமே நேரடியாக தந்து திட்டும் வாங்கியிருக்கிறாள்.

இப்படி அவளை தைரியப்படுத்தி உலகின் முன் தனித்து நிற்க வைத்தவன், அறியாத ஒன்று அவன் வளர்த்த கெடா அவன் மார்பிலே பாயப் போகிறதென்று.

அந்த வருடத்தின் ஓணம் பண்டிகை வந்தது. வழக்கம் போல் அவர்கள் தஞ்சம் புகும் இடமாக விக்ரம் வீடு இருந்தது. கடந்த இரண்டு வருடமாக எப்படியோ அப்படியே தான் இந்த வருடமும் சந்தியா கேரியரில் கட்டி எடுத்து வந்துவிட்டாள்.

விக்ரம் உணவு மேசையில் அமர்ந்திருக்க கௌதம் அப்போதே வந்தான்.

“வா கௌதி. ஹாப்பி ஓணம் மச்சான்” விக்ரம் குறும்பாக சிரித்துக் கொண்டே சொன்னவன் “இப்ப எங்க வீட்ல வந்து சாப்பிடுற. உங்க கல்யாணத்துக்கு அப்புறம் உங்க வீட்டுக்கு கூப்பிட்டு எனக்கு ஓணம் சத்யா போடுவீங்களா, இல்ல ரெண்டுபேரும் நீ யாருனு கேப்பிங்களா” என்று அவனை கிண்டலடித்து கேட்க

“அதுக்கென்னடா போட்டுட்டா போச்சு” என்றவன், தன் வெட்கத்தை மறைத்து “சரி எங்க என்னோட ஓமணப் பெண்ணை காணோம். இன்னும் அவளும் அவ தம்பியும் கேரியரை தூக்கிட்டு வரலையா”

“டோன்ட் ஒர்ரி மச்சான். இன்னும் கொஞ்சம் சத்தமா சொன்னா கிச்சன்ல இருக்க அவளுக்கே கேட்டிடும்”

“டேய் சொல்லமாட்டியா அவ உள்ள இருக்கானு. ஆமா உள்ள என்ன பண்றா”

“தெரியல. எதையோ போட்டு உருட்டிட்டு இருக்கா. என்னை வரக்கூடாதுனு ஸ்ட்ரிக்ட்டா ரூல்ஸ் போட்டுட்டா” விக்ரம் சொல்லியிருந்த நேரம், சந்தியா சமையல் அறையிலிருந்து வெளியே வரும் சத்தம் கேட்டது.

வெளியே வந்தவளை இமைக்கொட்டாது பார்த்தான் கௌதம். அவள் நிறத்துக்கு அந்த கரும்பச்சை நிற பாவாடை, சட்டை பாந்தமாக இருந்தது. தன்னுடைய நீள கூந்தலை, பக்க வகுடெடுத்து பின்னால் ஒரு சிறிய கிளட்ச் கிளிப்பில் அடக்கியிருக்க, அது அருவி போல் விரிந்திருந்தது. அந்த நீளக் கூந்தலுக்கு சரம் சரமாக மல்லிப்பூவும் வைத்திருந்தாள். அவளது சங்கு கழுத்தில் மெல்லியதாக ஒரு நெக்லஸும் உடன் சார்ட் செயினும் அணிந்திருந்தாள். காதில் அழகான ஜிமிக்கி கம்மல் இருக்க, அது அங்கும் இங்குமாய் ஆடிக் கொண்டிருந்தது. இரு கைகளிலும் மெல்லியதாக இரண்டு வளையல்களும் இருந்தது. கண்மையை தவிர முகத்திற்கு வேறெந்த ஒப்பனையுமில்லாமல் அவனது தேவதையாகவே மிளிர்ந்தாள்.

அவளை தலையிலிருந்து பாதம் வரை கண்களால் அளந்தவன் சொக்கித் தான் போனான். இருந்தும் “என்னடா இவ இந்த வருஷமும் பாவாடை சட்டைல இருக்கா. எங்க நிரா கூட இப்போலாம் பாவாடை சட்டை போடுறதில்ல. இன்னும் இவளுக்கு சின்ன பொண்ணுன்னு நினைப்பா” விக்ரமை பார்த்து கௌதம் சொன்னதும் சந்தியாவிற்கு முகமே மாறிப்போனது. கண்களில் கண்ணீர் தயாராக நின்றது.

“இதுக்கு தான் விக்ரம், இவனை கூப்பிடவேண்டாம்னு சொன்னேன். இவன் கல்யாணமாகி அவங்க மாமியார் வீட்டுல போய் ஓணம் சத்யா சாப்பிட்டுக்கட்டும்” முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு சொன்னாள்.

“ஏன்டா வாய வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டியா. இதுக்கு தான காலேஜ் கட் அடிச்சிட்டு வந்த” விக்ரம் அவனுக்கு புத்திமதி சொன்னான்.

“பின்ன என்னடா. போன வருஷம் அதுக்கு முந்தன வருஷம் தான் பாவாடை சட்டைனா இந்த வருஷமுமா. எவரி இயர் கலர் தான் மாறுது” விக்ரமிடம் சொல்லிவிட்டு அவளிடம் திரும்பியவன் “வருஷா வருஷம் என்னை கடுப்பேத்தவே, பாவாடை சட்டையில வர்றியா. இதுவே பாவாடை தாவணி போட்டிருந்தா அம்சமா இருந்திருக்கும். அதுக் கூட தலையை சென்டர் வகுடெடுத்து, லூசா சடை பின்னி பூ வச்சிருந்தா அழகா இருந்திருக்கும். கூடவே கையில கண்ணாடி வளையல், கழுத்துல இந்த நெக்லஸ் கூட ஒரு டாலர் செயின் போட்டிருந்தா எப்படி இருந்திருக்கும் தெரியுமா, எங்க கடை ஆட்ல வர ஆக்டரஸ் ஹரிதாவை தூக்கிட்டு உன்னையே போட்டுடலாம்” அவன் சொல்ல சொல்ல, அவளுக்கு வெட்கம் தொற்றிக் கொள்ள தலைகுனிந்தாள் “பார்த்தியா நான் சொன்னதும் நீயே வெட்கப்படற” அவளை கரைக்கும் பார்வை பார்த்து சொன்னான்.

“அப்ப நீயே பாவாடை தாவணி வாங்கி தா” என்றாள் வெட்கம் குறையாமல்.

“கண்டிப்பா வாங்கி தரேன். கூட லாங் செயினும் கண்ணாடி வளையலும் வாங்கி தரேன்” அவன் தன் தேவதையை பாவாடை தாவணியில் பார்க்கவே ஆசைக் கொண்டான். அவளோ அந்த ஆசையை ஓவ்வொரு வருடமும் நிராசை ஆக்கிக் கொண்டு இருந்தாள். அதுவே அவனது கோபத்திற்கு காரணம்.

“லாங் செயினெல்லாம் வேணாம். வீட்டுல கேள்வி கேப்பாங்க. பாவாடை தாவணி மட்டும் போதும்” என்றுவிட்டு, இருவரும் கண்ணோடு கண் பார்த்துக் கொண்டிருக்க

“ஹ்ம்ம் ஹ்ம்ம்” கனைத்த விக்ரம் “சரி இப்ப சாப்பிடுவோமா” என்று இடைப்புகுந்தான்.

விக்ரம் மற்றும் கௌதம் உதவியோடு அனைத்தையும் எடுத்து வந்து உணவு மேசையில் வைத்து, வாழை இலையை விரித்து உணவு வகைகளை பரிமாறி, சாப்பிட சொல்லி கண்ஜாடை காட்டினாள்.

“என்ன அவ்ளோ தானா” கௌதம் கேள்வி எழுப்ப

“நீ இத சாப்பிட்டா போதாதா” விக்ரம் மீண்டும் இடைப்புகுந்தான்

“நான் அத சொல்லலைடா. சாப்பாட்ட வச்சா யாரு ஊட்டிவிடுவா” அவளை பார்த்து விஷம சிரிப்பு சிரித்துக் கொண்டே கேட்டான்.

“அதெல்லாம் ஒண்ணும் சத்யால கிடையாதே” சந்தியா அவனது குறும்பை அறிந்துச் சொன்னாள்.

“உங்க கேரளால வேணா அது பழக்கமா இல்லாம இருக்கலாம் எங்க தமிழ்நாட்டுல இப்படி இலை நிறைய சாப்பாட்ட போட்டு, காதலோட ஊட்டிவிடுவோம்” அவளது குறும்பு கண்ணன் சொல்லிவிட்டு கண்ணடித்தான்.

“டேய் இது என்னடா புது ரூல்ஸா இருக்கு. நான் எதுவும் அப்படி கேள்விபட்டதில்லயே” விக்ரம் சொல்ல

“அவன் ஆந்தரால, அதான் அங்க அந்த பழக்கம் இல்ல போல” அவளிடமிருந்து விழியகற்றாது விக்ரமை திரும்பியும் பார்க்காமல் சொன்னவன் “நான் ஊட்டிவிட்டா தான் சாப்பிடுவேன்” என்றான் திட்டவட்டமாக.

“வம்பு பண்ணாம ஒழுங்கா சாப்பிடு கௌதம். தோட்டத்துல மாரியப்பன் அண்ணன் வேற இருக்காரு. அச்சாவுக்கு தெரிஞ்சா அவ்ளோ தான்” அவனை கெஞ்சுதலாக பார்த்துச் சொன்னாள்.

“விக்கி. மாரியப்பன் அண்ணன் தான் பிரச்சனை. அவரை க்ளியர் பண்ணு” என்றான் இம்முறையும் அவளையே பார்த்துக் கொண்டே.

“அட்டகாசம் பண்றடா நீ” சொல்லிக்கொண்டே எழுந்துச் சென்ற விக்ரம், மாரியப்பன் அண்ணன் கையில் பணத்தைக் கொடுத்து அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தவன் “ஓகே அண்ணனை க்ளியர் பண்ணிட்டேன். இப்போ நடத்துங்க” கேலியாக கௌதமிடம் சொன்னான்.

“விளையாடாத கௌதம். இங்க நீயும் நானும் மட்டும் இருக்க மாதிரி ஊட்டிவிட சொல்ற” சந்தியாவிற்கு இப்போது கோபம் தான் வந்தது.

“ஓ இவனையும் க்ளியர் பண்ணனுமா” தொடர்ந்து அவளை பார்த்துக் கொண்டே சொன்னான்.

“அடப்பாவி டேய். உனக்கு இந்த சத்யாவே என் புண்ணியத்துல தான் கிடைச்சதுனு மறந்துடாதடா” பரிதாபமாக முகத்தை வைத்து சொன்னான் விக்ரம். கௌதம் அவனை பார்த்தால் தானே நண்பனது பரிதாபம் புரியும், அவன் தான் சந்தியாவையே பார்த்திருந்தானே.

“ஹேய் கேக்கறான்ல. ஊட்டி தொலையேன்டி. அப்புறம் என்னையே எங்க வீட்டை விட்டு துரத்திடுவான் போல” அவன் கஷ்டம் கௌதமுக்கு புரிவதாக தெரியவில்லை, நேரடியாக சந்தியாவிடமே முறையிட்டான்.

“நீ ரொம்ப ஓவரா பண்ற கௌதம்” முறைத்துக் கொண்டே சொல்லிவிட்டு சமையலறைக்குள் சென்றுவிட்டாள். கௌதமோ ஊட்டி விடமாட்டாளா என்று அவள் சென்ற வழியையே ஏக்கத்தோடு பார்க்க, விக்ரமோ இன்று சாப்பிட்டால் போல் தான் என்று தன் இலையை ஏக்கப்பார்வை பார்த்தான்.

சில நிமிடங்களில் வெளியே வந்தவள், கையில் எதையோ மறைத்து எடுத்து வந்து “கண்ணை மூடு” என்றாள்.

அவனும் கேள்வி கேட்காமல் கண்களை மூட கிண்ணத்தில் இருந்ததை ஸ்பூனில் எடுத்து அவன் வாயில் வைக்க, அதை ருசித்தவன் முகத்தில் பூரிப்பு. அவனுக்கு பிடிக்குமென்று கேசரி செய்திருக்கிறாள். அவன் சஸ்பெண்ட்டாகி விக்ரம் வீட்டிற்கு வந்தபோது செய்தாள். அப்போது அவன் சாப்பிடமாட்டேன் என்ற அடத்தில் இருந்தான். அத்தோடு இன்று தான் செய்கிறாள். பலமுறை அவன் செய்து தரும்படி கெஞ்சியும் கேட்டிருக்கிறான். அப்போதெல்லாம் அவள் சொல்லும் பதில் ‘உனக்கு தான் செஞ்சித் தர உன் அம்மா இருக்காங்களே’ என்பது தான். இன்று அவன் கேட்காமலே செய்திருக்கிறாள். அதை ருசித்தவன் கண்களில் காதலோடு அவளையும் ருசிக்க அந்த பார்வையை தாளமுடியாது தலைக்குனிந்தாள்.

“இத செய்ய தான் கிச்சன்ல போட்டு உருட்டிட்டு இருந்தியா. அது என்னடி ஓணம் சத்யால கேசரிலாமா வருது” விக்ரம் அவளை நக்கலடித்தான்.

“ஏன் பொங்கல் மட்டும் இருந்துச்சா. என் அம்மா உனக்காக செய்யறதில்ல” அவன் கேட்ட அடுத்த நொடி அவளுக்கு பதிலடி கொடுத்தாள்.

“பார்த்தியாடா பதில் எப்படி கன்ஷாட்டா வருது. பண்ணு பண்ணு நீ அவனுக்கு கேசரி பண்ணு, அத அவனுக்கு மடியில உட்கார வச்சு ஊட்டு, என்னவேனா பண்ணு. என்னையும் அப்படி பார்த்துக்க என் மீனுக்குட்டி இருக்காங்க” விக்ரமும் விடாமல் வம்பிழுத்தான்.

“சரி ரெண்டுபேரும் சாப்பிடுங்க” என்று அதட்டினாள்.

“என்னது சாப்பிடறதா. ஊட்டிவிடுனு சொன்னேனா இல்லையா” மறுபடியும் கௌதம் ஆரம்பித்தான்.

“இப்ப ஊட்டிவிட்டேன் தான” சந்தியா குழம்பிப் போய் கேட்க

“எது ஸ்பூன்ல ஊட்டிவிட்டதா. அதெல்லாம் போங்கு ஆட்டம். இதுக்கா நம்ம பையன் மாரியப்பன் அண்ணனை கிளம்பிவிட்டான். இலையில இருக்கறத கையில எடுத்து ஊட்டிவிடு” திட்டவட்டமாக கௌதம் சொல்லவும், சங்கடமாக சந்தியா விக்ரமை கண்களாலேயே காட்ட

“அம்மா தாயே. நான் வேணா கண்ணை மூடிக்கறேன், தயவுசெஞ்சி ஊட்டிவிட்டிடு. இல்லாட்டி என்னையே எங்க வீட்டை விட்டு துரத்துவானாம். அட்ராசிட்டி பண்றீங்க ரெண்டுபேரும்” பொங்கிவிட்டான் விக்ரம்.

விக்ரம் சொன்னபடி கையில் பருப்பு பாயசம் கிண்ணத்தோடு வேறுபக்கம் திரும்பிக் கொண்டு “பார்க்கலை பார்க்கலை ஸ்டார்ட் பண்ணுங்க” என்றான்.

சந்தியா கௌதமுக்கு காதலோடு ஊட்டிவிட்டாள். அவள் கை இலையில் இருந்து ஒன்வொன்றாக எடுத்து அவனுக்கு ஊட்டிவிட்டது. ஆனால் இருவரின் பார்வையும் ஒன்றோடு ஒன்று கலந்திருந்தது. கொஞ்சம் ஊட்டிவிட்டவள் விக்ரமை கண்களாலேயே காட்டி, அவன் பாவம் சாப்பிடட்டும் என்றுச் சொல்ல அதை புரிந்த கௌதம் “விக்கி திரும்பி சாப்பிடுடா” என்று கையில் எடுத்து உண்ண ஆரம்பித்தான்.

சாப்பிட்டு கொண்டிருந்தவன் திடீரென்று எதையோ யோசிக்க “என்னாச்சுடா” என்றான் விக்ரம்.

“இந்த ஓணம் சாப்பாடு, அப்புறம் இவளை இந்த பாவாடை சட்டைல பார்க்கறப்போலாம் பக்குனு இருக்கு. எங்கப்பா செல்வராஜ், இனி உனக்கும் இந்த வீட்டுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது, வீட்டை விட்டு வெளில போடானு சொல்லிடுவாரோனு பகீர்னு ஆகுது” கௌதம் சொன்னதும் சந்தியாவின் முகம் வாடியது. அதைவிட அதிகமாக கௌதம் மனதளவில் வாடியிருப்பதை உணர்ந்தவள் அவன் கன்னத்தில் கை வைத்து

“ஏன்டா எதாவது பிரச்சனையா” என்று அவனிடம் கேள்வி எழுப்பினாள்.

“பிரச்சனையெல்லாம் இல்ல. ஆனா நிறைய சந்திக்க வேண்டியிருக்கும். ஈசியா ஒத்துக்கவும் செய்யலாம் இல்ல ஒத்துக்காமலும் போகலாம்” என்றான். அவன் அவ்வாறு பேசுபவன் அல்ல. எதையும் பார்த்துக் கொள்ளலாம் என்றிருப்பவன். அவன் இப்படி பேசுவது சந்தியாவின் நம்பிக்கையை உடைக்க

“ஏன்டா, உங்க வீட்டுல என்னை ஒத்துக்க மாட்டாங்களா” கண்களில் கண்ணீரோடு கேட்டாள்.

அவள் கண்ணீரை பார்த்தவனுக்கு அவளை கலங்காமல் பார்த்துக் கொள்வது தன் பொறுப்பென தோன்ற “அது எப்படி ஒத்துக்காம போவாங்க. கண்டிப்பா ஒத்துக்குவாங்க” என்றான்.

அவள் மனது இன்னும் கலங்குவதை பார்த்து “உங்க பேமிலில புரட்சி பண்ண மாதிரியெல்லாம் எங்க குடும்பத்துல இதுவரைக்கும் நடந்ததே இல்ல. மாத்தி மாத்தி சொந்தத்துக்குள்ளயே கல்யாணம் பண்ணிப்பாங்க. ஆனா ஒண்ணும் கவலைப்படாத சனு. நான் எதுக்கு இருக்கேன். நாம பண்ணபோறது தான் புரட்சியே” சிறிதும் அஞ்சாது முகத்தில் சிரிப்புடன் சொன்னவனை இன்னமும் பதற்றம் குறையாமல் பார்த்திருந்தாள்.

“அதான் அவன் பார்த்துக்கறேன்னு சொல்றான்ல. நானும் உங்க கூட தான் இருப்பேன். கவலைப்படக்கூடாது. அப்புறம் கண்ணுல வச்ச மை கரைஞ்சி இறங்கி வந்திடும்” விக்ரம் அவளை சரி செய்ய கேலியை கையிலெடுத்தான். அதை புரிந்த கௌதமும் அவளது பழைய நண்பனாக மாறி அவளை ஓட்ட தொடங்கினான்.

அன்றிலிருந்து கௌதமுக்கு ஓணம் மிகவும் பிடித்த பண்டிகையாகி போனது. அவர்கள் ஒன்றாக இருந்தவரை வருடா வருடம், ஓணம் சத்யாவை சாப்பிட்டு அவளோடு பண்டிகையை கொண்டாட தவறாமல் வந்துவிடுவான். சந்தியா தான் ஊட்டிவிட வேண்டும் என்று வம்பும் செய்து, அவளை ஊட்டிவிடவும் வைப்பான்.

அந்த வீடெங்கும் சிரிப்பும், அரட்டை சத்தமும் நிறைந்திருந்தது. மூவரும் வீட்டை தலைகீழாக புரட்டிப் போட்டு கொண்டிருந்தனர். டிவியில் சத்தமாக பாட்டை ஒலிக்கவிட்டு கார்ட்ஸ் விளையாடினர். கௌதம் மனதில் மட்டும் அந்த எண்ணம் இன்னும் அகலவே இல்லை. மனது முழுக்க வீட்டில் ஏற்றுக் கொள்வார்கள் என்ற எண்ணம் இருந்தாலும், ஏதோ ஒரு மூலையில் ஒருவேளை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது என்ற எண்ணமும் அவ்வப்போது வந்து போக தான் செய்தது. வீட்டில் அவன் அடம் வெற்றிபெறும் என்பது திண்ணம். இருந்தும் இந்த விசயத்தில் எப்படி எடுத்துக் கொள்வார்கள், என்ன செய்வார்கள் என்று புரியாமல் தான் இருந்தான். அவனுக்கு இருந்த ஒரே நம்பிக்கை தந்தை மிகவும் நல்லவர். அவர் இதுவரை யாரிடமும் வித்தியாசம் பார்த்ததில்லை. தன்னிடம் வேலை பார்க்கும் வேலையாளையும் தன் குடும்பமாகவே பார்ப்பவர். சிரமமாக இருக்கும், ஆனால் வீட்டில் எப்படியும் சம்மதம் வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கையோடே இருந்தான்.


உண்மையாகும்..


உங்கள் கருத்துகளை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..
 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் - 18

ஓணம் பண்டிகையை கொண்டாடி முடித்து வீட்டிற்கு கிளம்பும்போது “இனி நான் உன்னை பாவாடை சட்டைல பார்க்கக்கூடாது” அவளுக்கு மட்டும் கேட்கும்படி அவள் காதருகே சொல்லிவிட்டு சென்றான் கௌதம்.

அவன் ஏன் அப்படி சொன்னான் என்று சந்தியாவிற்கு தெரியவில்லை. அவன் மட்டுமல்ல அவளும் அவன் சொன்ன சொல்லுக்கு மதிப்பளிப்பாள், அதனால் அமைதியாக கேட்டுக் கொண்டாள். இனி கண்டிப்பாக அதை அணியவும் மாட்டாள்.

கௌதமின் மனக் குழப்பத்திற்கு ஏற்றாற்போல் வீட்டில் அவனது காதலை தெரிந்துக் கொள்ள சிலர் ஆர்வம் காட்ட தொடங்கினர். அவர்கள் வேறு யாருமில்லை, அவனுடைய சகோதரிகள் அருந்ததி, தமயந்தி மற்றும் நித்திலாவே.

“என்ன வேணும் தமை. இப்ப எதுக்கு என் ஃபோன எடுத்த” தமயந்தி கையில் தன் கைபேசியை பார்த்துவிட்டு பதறியடித்து ஓடிவந்து வெடுக்கென அவள் கையிலிருந்து பிடுங்கினான் கௌதம்.

“ஏன் உன் ஃபோன என் கையில பார்த்ததும் இப்படி அலறி அடிச்சிட்டு ஓடி வர. என்ன எதாவது திருட்டுதனம் பண்றீயா” புருவத்தை உயர்த்தி கேட்டாள் தமயந்தி.

“நான் என்ன திருட்டுதனம் பண்ணப் போறேன். என் ஃபோன பார்க்கணுமா. இந்தா தரௌவ்வா செக் பண்ணிக்கோ. ஒண்ணும் இருக்காது” மனது படபடத்தாலும் தில்லாக சொல்லி தன் கைபேசியை அவளிடம் நீட்டினான்.

அவள் கைப்பேசியை வாங்கிய நேரத்தில் “ஒன் செகண்ட். அதுக்கு முன்னாடி உன் ஃபோன கொடு. நானும் செக் பண்ணனும்ல” அவள் கைபேசியை கேட்டு மற்றொரு கையை நீட்டினான்.

அந்த நொடி அவள் முகமே மாறியது “நான் ஏன் தரணும். எதுக்கு தரணும். அதெல்லாம் முடியாது. பெரிய ஃபோன். இந்தா உன் ஃபோன நீயே வச்சுக்கோ. யாருக்கு வேணும் உன் ஃபோன்” அவனது கைபேசியை அவன் கையில் ஓங்கி அழுத்தமாக வைத்தவள் அங்கிருந்து நகரப் பார்க்க

“தமை. நில்லு. உன் முகமே சரியில்லையே. எதோ தப்பு பண்றியோனு தோணுது. எங்க உன் ஃபோன கொடு” இம்முறை கறாராகக் கேட்டான் கௌதம்.

அவ்வளவு தான் அங்கிருந்து வேகமாக கிளம்பப் பார்த்தாள் தமயந்தி. கௌதமோ விடாமல் “தமை நில்லுனு சொன்னேன்” அவள் முன்போய் நின்றவன் “என்ன லவ் எதாவது பண்றீயா” என்றதும் எதுவும் சொல்லமுடியாமல் தலையை வேறுபக்கம் திரும்பினாள். “உன்னை தான் கேட்கறேன்” தம்பியாயினும் தமக்கையை அதட்டினான்.

வெகுநேரம் அமைதி காத்தவள் எதையோ சொல்ல வாயெடுக்க “என்ன. தம்பி தான இவனை ஏமாத்திடலாம்னு நினைக்காத. லவ்வு கிவ்வு அது இதுன்னு எதாவது கேள்விபட்டேன் தொலைச்சிடுவேன்” ஆளுமையோடு சொன்ன தம்பியை தமயந்தி ஆடிப் போய் பார்த்தாள்.

அவன் ஏன் அப்படி சொன்னான். உண்மையில் அவளிடம் விளையாடினான். ஆனால் அந்த முட்டாள் பெண்ணோ தம்பிக்கு உண்மையிலேயே காதல் பிடிக்காதென்றெண்ணி தன்னுடைய காதலை அவனிடம் சொல்லாமலே மறைத்துவிட்டாள். தன் காதலுக்கு இன்னுமொரு சிக்கலை கௌதமும் தன் வாயாலேயே ஏற்படுத்திக் கொண்டான். சொல்லப்போனால் இதுதான் அனைத்து பிரச்சனைகளுக்கும் முதல் புள்ளி ஆனது.

தமயந்தி இப்படியென்றால், நித்திலா வேறு ரகம். தமயந்தியாவது முயற்சிச் செய்து தோற்றாள் நித்திலாவோ முயலாமலே அண்ணனின் காதலை கண்டுப் பிடித்தாள்.

அன்றொரு நாள் நித்திலா, கௌதமின் அறையில் அமர்ந்து அவனது மடிக்கணினியில் தன்னுடைய சயின்ஸ் ப்ராஜெக்ட் செய்துக் கொண்டிருந்தாள். அவளுடைய மடிக்கணினியை கேட்டதால் அருந்ததி தான் கௌதமின் மடிக்கணினியில் கடவுச்சொல் போட்டுத் தந்து உபயோகிக்கச் சொன்னாள். நித்திலாவும் படிப்பை மட்டும் பார்க்காமல் அவனுடைய மடிக்கணினியில் இருந்த புகைப்படங்களை பார்க்கத் துவங்கினாள்.

ஒவ்வொரு ஃபோல்டராக சென்று பார்த்து கொண்டிருந்தவள், அந்த ஃபோல்டருக்குள்ளும் நுழைந்தாள். அதில் தான் அவன் மற்றும் சந்தியா இருக்கும் அனைத்து புகைப்படங்கள் மற்றும் காணொளியையும் சேமித்து வைத்திருந்தான் கௌதம். நித்திலா அதை திறந்து ஒவ்வொரு படமாக பார்க்கத் தொடங்கினாள்.

ஒரு படத்தில், மணல் திட்டில் இதயம் வரைந்து, அதில் ‘ஜி எஸ்’ என்று எழுதி புகைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. அதை பார்த்தவள் முதலில் குழம்பிப் போனாள் “ஜி அண்ணா எஸ் யாரு. அண்ணன் ஏன் கூட எஸ் போட்டிருக்காரு” தாடையில் விரல் வைத்து அதை தட்டிக் கொண்டே யோசித்தாள் “யாரா இருக்கும்.. ஐயோ எவ்ளோ லூசு நான். ‘ஜி எஸ்’னா கௌதம் செல்வராஜ். ‘எஸ்’ செல்வராஜ், நம்ப பெரியப்பா பேரு” பின் அவளே ஒரு முடிவுக்கும் வந்தாள்.

இன்னொரு படத்தில் கௌதம் தன் ஒரு கையை பாதி இதய வடிவாக வைத்திருக்க சந்தியா, தன் கை கொண்டு இன்னொரு பாதியை இணைக்க அது முழு இதயம் போல் தெரிந்தது. இதேபோல் அடுத்தடுத்து நான்கைந்து புகைப்படங்கள் வந்தது. நல்ல வேலையாக அவள் திறந்த புகைப்படங்கள் எதிலும் சந்தியா இல்லை. அவளது கை, கால் மட்டும் தான் தெரிந்தது.

அடுத்த புகைப்படத்தில், கௌதம் நிச்சயம் மாட்டியிருப்பான். அதில் சந்தியா கௌதம் இருவரும் இருந்தனர். அதுவும் கௌதம் அவளை நெஞ்சோடு சாய்த்து அணைத்திருந்தான். நித்திலா அந்த புகைப்படத்தை பார்க்க திறக்கவும். வேகமாக வந்து மடிக்கணினியை மூடினான் கௌதம். “நித்தி.. நீ இங்க என்ன பண்ணிட்டு இருக்க” அவளை உரத்த குரலில் அதட்டினான். அவளோ அண்ணனின் கோபத்தை பார்த்து அழத் தொடங்கிவிட்டாள்

“அ.. அண்.. அது ண்ணா. எனக்கு சயின்ஸ் ப்ராஜெக்ட் செய்யணும். அரு அக்காகிட்ட அவங்க லேப்டாப் கேட்டேன். அவங்க தான் உங்.. உங்க லேப்டாப்பை யூஸ் பண்ணிக்க சொல்லி எடுத்து தந்தாங்க” கண்ணை கசக்கிக் கொண்டே சொன்னாள். அதை பார்த்தவனுக்கு மனதிற்கு கஷ்டமாக போனது.

“சாரி நித்திக்குட்டி. பயந்துட்டியா. அண்ணன் வேற எதோ டென்ஷன்ல இருந்தேனா, அதை நான் பாப்பா மேல காட்டிட்டேன்” அவள் முன் மண்டியிட்டு அமர்ந்து சமாதானம் செய்தான். அவளும் சமாதானமாகி இருந்ததுபோல் தெரிய “சரி இப்போ நீ போய் விளையாடுவியாம் நான் உன்னை நாளைக்கு வெளில கூட்டிட்டு போய் உனக்கு பிடிச்சதெல்லாம் வாங்கித் தருவேனாம். ஓகேவா” தங்கையிடம் மென்மையாக சொல்லி அனுப்பினான்.

“இந்த அருவ... இவளுக்கு எப்படி என் பாஸ்வேர்ட் தெரிஞ்சது. இவளை... ச்சே.. அரு, தமை இவங்க ரெண்டுபேரோட தொல்லையை என்னால தாங்கமுடியல” பல்லை கடித்துக் கொண்டு திட்டினான்.

கௌதமின் அறையை விட்டு போன நித்திலா முதலில் சென்றது தன் பெரியப்பா பெரியம்மாவின் அறைக்கு “பெரியம்மா இப்படி இப்படி ரெண்டு கைய வச்சிருந்தா என்ன அர்த்தம்” என்று செல்வராணியிடம் கேட்டாள்.

அவரோ “இதெல்லாம் எனக்கு தெரியாது நித்திமா. போய் உங்க அக்காங்ககிட்ட கேளு. இல்ல உன் அண்ணன்கிட்ட கேளு” அண்ணனை பற்றி அண்ணனிடமேவா கேட்கமுடியும். அடுத்து அவள் சென்றது நிரஞ்சனாவிடத்தில்.

“நிரா அக்கா. அக்கா. நி..ர்ரா..” சத்தமாக அழைத்து கொண்டே நிரஞ்சாவின் அறைக்கு சென்றாள். நிரஞ்சனா நன்கு படிப்பவள். கௌதம் மற்றும் சகோதரிகள் என அறுவருமே படிப்பில் கெட்டி. இருந்தும் நிரஞ்சாவிற்கு படிப்பு மட்டும் தான் உலகம். அதை தாண்டி பெரியப்பா, பெரியம்மா, அவர்களது குடும்பம். அவள் அதிகம் பேசமாட்டாள். வேண்டியதற்கு மட்டுமே பேசுவாள்.

பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் தன் தமக்கையின் அறைக்குள் சென்று “அக்கா கைய இப்படி வச்சா என்ன அர்த்தம்” செல்வராணியிடம் கேட்ட அதே கேள்வியையே அவளிடமும் கேட்டாள்.

“டிஸ்டர்ப் பண்ணாத நித்தி, எனக்கு எக்ஸாம்ஸ் வருது நிறைய படிக்கணும்” என்று தங்கையை விரட்டிவிட்டாள்.

அங்கிருந்து வெளியே வந்தவள் தமயந்தியை தேடி ஓடினாள். அவளோ மருத்துவபடிப்பின் இறுதியாண்டில், ஹவுஸ்சர்ஜன் எனப்படும் பயிற்சி மருத்துவராக இருக்கிறாள். தமயந்தியே அப்போது தான் வீட்டிற்கு வந்து தன் அறையில் சோர்வாக அமர்ந்திருந்தாள்.

“தமையா அக்கா. இப்படி இப்படி” என்று கையை காட்டி சொல்ல ஆரம்பிக்கும் போதே “நித்தி நித்தி. தலை பயங்கரமா வலிக்குது குட்டி. அப்புறம் பேசலாமா” என்று தங்கையை அனுப்பிவிட்டாள்.

தமயந்தியும் கண்டுக் கொள்ளாத வருத்தத்துடன், நேராக அருந்ததி அறைக்குள் நுழைந்தவள் தன் அக்கா கைபேசியில் அவளது வருங்கால கணவர் கவியரசனிடம் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அவளருகில் கன்னத்தில் பாவமாக கை வைத்து அமர்ந்துவிட்டாள். அவளை கவனித்த அருந்ததி, தன்னவரிடம் சொல்லி அழைப்பை துண்டித்துவிட்டு “என்னாச்சு நித்தி” என்றாள்.

“இந்த வீட்டுல யாருக்குமே நித்திலா முக்கியம் இல்ல. எல்லாரும் பிசியா இருக்காங்க. நித்திகிட்ட பேசக் கூட யாருக்கும் டைம் இல்ல” அழாத குறையாக சொன்னவளை என்னவென்று விசாரித்தாள் அருந்ததி.

“இந்த ரெண்டு கைய இப்படி வச்சா என்னங்கக்கா அர்த்தம்” அருந்ததியிடம் கைகளை காட்டிக் கேட்க

“இப்படியா. இப்படி லவ் பண்ற ரெண்டு பேர் வைப்பாங்க” அருந்ததி சொன்ன பதிலில் நித்திலா கண்களை விரித்துப் பார்த்தாள். ‘அப்போ அண்ணா லவ் பண்றாரா’ தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டவள் வெளியே அமைதிக் காத்திருந்தாள்.

“சரி, நீ இத எங்க பார்த்த. இப்ப உனக்கு இதப்பத்தி ஏன் தெரியணும்” அருந்ததி நித்திலாவிடம் வினவ, அந்நேரத்தில் தன் மடிக்கணினியின் கடவுச்சொல் அவளுக்கு எப்படி தெரிந்தது என்று கேட்டுத் தெரிய அருந்ததியின் அறைக்கு வந்த கௌதம் அவர்கள் பேசிக் கொண்டிருப்பதை கேட்டு அதிர்ந்துப் போனான்.

“ஐயோ செத்தடா கௌதம். இவ வேற லாயராச்சே, ஏகப்பட்ட கேள்வி கேப்பாளே” முணுமுணுத்துக் கொண்டே அறையின் உள்ளே காலெடுத்து வைத்தான்.

“அதுவா அக்கா. டிவில பார்த்தேன்” அண்ணனை மாட்டிவிடாமல் சொன்னாள் அந்த சிறுப்பெண் நித்திலா.

“டிவிலயா. டிவில பார்த்துட்டா இவ்ளோ கேள்வி கேட்ட” அருந்ததி குறுக்கு விசாரணை நடத்த

“நித்தி..” அழைத்துக் கொண்டே உள்ளே வந்தவன் “வா நாம வெளில போகலாம். உனக்கு ஓவரால்ஸ் டிரஸ் வேணும்னு கேட்டல. வா போகலாம்” அவளை அங்கிருந்து அழைத்து செல்லப் பார்த்தான்.

“இப்ப எதுக்கு கௌதம் அவளை கூப்பிடுற. நான் தான் பேசிட்டு இருக்கேன்ல. சொல்லு நித்தி, நிஜமாவே டிவில தான் பார்த்தியா” விடாகண்ணியாக அருந்ததி கேள்வி எழுப்பினாள்.

“அவளை நீ என்ன கேட்கறது. முதல்ல நீ சொல்லு என் மேக்புக் பாஸ்வோர்ட் உனக்கு எப்படி தெரியும்” புருவத்தை உயர்த்தி முறைத்துக் கொண்டே கேட்டான்.

“பெரிய பாஸ்வோர்ட், ராணிசெல்வம்6065(Raniselvam6065) தான. அன்னைக்கு நீ போடறப்போ பார்த்தேன்” அவள் சர்வ சாதாரணமாக சொன்னதில் அவனுக்கு கோபம் வர

“இனி இப்படி பண்ணாத அரு.. அப்புறம் எனக்கு சரியா கோவம் வரும்” என்றுவிட்டு நித்திலாவையும் கையோடு பிடித்துக் கொண்டே அவள் அறையை விட்டு வெளியே வந்தவன்

“நித்தி அண்ணன்கிட்ட பொய் சொல்லக்கூடாது. நீ அந்த கைய காமிச்சு அரு அக்காகிட்ட மட்டும் தான கேட்ட. வேற யார்கிட்டயும் கேட்கல தான” அவளை கூர்மையாக பார்த்துக் கேட்டான்.

“இல்லண்ணா.. நான் பெரியம்மா, நிராக்கா, தமையாக்கானு எல்லார்கிட்டயும் கேட்டுட்டேனே ண்ணா” பாவமாக சொல்லும் அந்த சின்னப் பெண்ணை என்ன செய்யமுடியும்.

‘அடக் கடவுளே’ என்று மனதில் எண்ணியவன் “சரி பரவாயில்ல. இனி யார்கிட்டயும் கேட்கக் கூடாது. இதை இத்தோட மறந்திடனும். இப்ப நீ போய் அண்ணன் கூட வெளில போறேன்னு பெரியம்மாகிட்ட சொல்லிட்டு, அப்படியே டிரஸ் மாத்திட்டு வந்திடு. நான் கீழே வெயிட் பண்றேன்” தங்கையிடம் சொல்ல அவளும் புதுத்துணி வரப்போகும் மகிழ்ச்சியில் செல்வராணி இருக்கும் அறையை நோக்கி ஓடினாள்.

“ஷப்ப்பா. ஒரு லவ்வ பண்ணிட்டு நான் படற அவஸ்தை இருக்கே. அன்னைக்கு தமை என்னனா என் ஃபோன நோட்டம் போடறா. இன்னைக்கு அரு என் மேக்புக் பாஸ்வோர்டை போட்டு லாகின் பண்றா. அப்புறம் இந்த குட்டி நித்தி என்னோட போட்டோஸ் ஃபோல்டருகுள்ள போய் போட்டோஸ்ஸ பார்த்துட்டு எல்லார்கிட்டயும் கேட்டுட்டு இருக்கா. இன்னும் கார்த்தி அக்காவும், நிராவும் என்ன பண்ணக் காத்திருக்காங்களோ” தனியாக நின்று புலம்பிக் கொண்டிருந்தான். நல்லவேளை யாரும் கேட்கவில்லை.

“இவங்கள நம்பி எங்க போட்டோஸ்ஸ எங்கயும் வச்சிக்கமுடியாது போலயே. பேசாம ஒரு பென்டிரைவ் வாங்கி அதுல எல்லாத்தையும் ஏத்தி என் வாலெட்டிலேயே வச்சிக்கிறேன். அங்க போனா அவ இத பண்ணாத அத பண்ணாதனு ரூல்ஸ் போட்டு கொல்றா. இங்க இவங்க என் திங்ஸ்ஸ ரைட் விடறாங்க. டேய் கௌதம் என்னடா உன் நிலைமை இப்படி ஆயிடுச்சு. நீயெல்லாம் எப்படி வாழ்ந்தவன்” என்று தனக்குள் தானே நொந்துக் கொண்டான்.

இப்போது புரிகிறதா நித்திலா ஏன் அவளது ரபன்ஸலை, அதாவது சந்தியாவை மறந்தாள் என்று. அவள் அந்த புகைப்படத்தில் சந்தியாவை கௌதமுடன் பார்க்கவில்லை. அதற்குள் அவள் அண்ணன் மடிக்கணினியை மடக்கி அவளிடமிருந்து பிடுங்கிக் கொண்டான். அவள் பார்த்ததெல்லாம் சந்தியாவின் கையையே தான். அவளுக்கு தெரிந்ததெல்லாம் அண்ணன் யாரையோ விரும்புகிறான் என்பது மட்டுமே. அவளை பொறுத்தவரை சந்தியா தன் அண்ணனின் நண்பன் விக்ரமோடு வந்தவள், அத்துடன் அவளுக்கு தன் அண்ணனும் பழக்கம் என்பது மட்டுமே.

உண்மையில் நித்திலா பெரியன்னையிடம் கௌதமின் மடிக்கணினியில் புகைப்படம் பார்த்தேன் என்று சொன்னது இந்த நிகழ்வை வைத்துதான். ஆம், அது சந்தியாவின் புகைப்படம் அல்ல சந்தியாவும் கௌதமும் கைசேர்த்து இதயவடிவில் வைத்து எடுத்த புகைப்படத்தை பார்த்ததையே அவள் சொன்னாள்.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை, கௌதமின் காதலை அந்த வீட்டில் முதலில் தெரிந்துக் கொண்டது அவர்கள் வீட்டு கடைக்குட்டி நித்திலாவே.

“என்னால முடியலைடா. சிரிச்சு சிரிச்சு வயிறே வலிக்கிது” அடுத்த சந்திப்பில் சந்தியாவிடம் தமயந்தி செய்ததை சொன்னப் போது விழுந்து விழுந்து சிரித்தாள்.

இருவரும் ஒன்றாக கடற்கரைக்கு வந்திருந்தனர் “ஏன்டி என் பொழப்பு உனக்கு சிரிப்பா இருக்கா” தன் கையை பின் புறத்திலிருந்து அவள் கழுத்தை சுற்றி ஒரு நசுக்கு நசுக்கினான்.

“வலிக்குதுடா. பின்ன என்ன. உன்னை யாரு செல்போனை விட்டுட்டு போக சொன்னது. தம்பி மேல இருக்குற பாசத்துல எடுத்து பார்த்திருப்பாங்க” சந்தியா சிரித்துக் கொண்டே சொன்னாள்.

“ரொம்ப பாசம் தான். தமை எப்பவும் என்னை ஸ்பை பண்ணிட்டே இருப்பாடி. சின்ன வயசுல இருந்தே எனக்கும் அவளுக்கும் இதான் வேலையே. அவ மாட்டறாளானு நானும், நான் மாட்டறேனானு அவளும் கண்காணிச்சிட்டே இருப்போம்”

“இருந்தாலும் உனக்கு திமிருதான்டா. நீ லவ் பண்ணுவியாம், அவங்க பண்ணா மட்டும் தொலைச்சிடுவியா”

“அது அவ ஃபோன செக் பண்றத பார்த்ததும், எங்க நான் லவ் பண்றேனோனு டவுட் படறாளோனு தான் அப்படி சொன்னேன். மத்தபடி அவ லவ் பண்ணா நான் ஏன் அதுக்கு அகைன்ஸ்ட்டா போகப் போறேன். அந்த பையன் நல்லவரா மட்டும் பார்ப்பேன். ஓகேனா அவளுக்கு நான் இருக்கேன்” ஆயிரம் தான் இருந்தாலும் தம்பியாயிற்றே. அவனுக்கும் தமயந்தி மீது பாசம் அதிகம் தான், என்ன அதை வெளியில் காட்டிக் கொள்ள தான் இல்லை.

“இவ இப்படினா, அருவும் நித்தியும் அடுத்த லெவல் போயிட்டாங்க” அவன் சொன்ன உடனே சிரிக்கத் தொடங்கினாள்

“என்னடீ சொல்றதுக்கு முன்னாடியே சிரிக்க ஆரம்பிச்சிட்ட” அவன் பரிதாபமாக கேட்டான்.

“கண்டிப்பா ஃபன்னா இருக்கப் போகுது. சொல்லு சொல்லு” என்றவளை தன் கையால் அவள் தலையை அழுந்த அழுத்திவிட்டு நடந்ததை கூறினான் “ஹா.. ஹா.. ஹா.. இது அதைவிட சிறப்பா, சிரிப்பா இருக்கே” சத்தமாகச் சிரித்தாள். அவள் இப்படி உரக்க பேசுபவளோ சிரிப்பவளோ அல்ல. அதையவன் ரசித்தான்.

“ஒருத்தி என்னனா என் ஃபோன செக் பண்றா. இன்னொருத்தி என் மேக்புக் பாஸ்வோர்ட்டை அசால்ட்டா போடறா. இந்த நித்தி மேக்புக்ல போட்டோஸ்ஸ பார்த்துட்டு ஒவ்வொருத்தங்க கிட்டயா போய் கேட்டிட்டுருக்கா. நேத்து நைட் சாப்பிடறப்போ, நிரா, அரு தமை மூணுபேரும் பேசிக்கிறாங்க நித்தி வந்து இப்படி கேட்டானு. நல்லவேளை அப்போ அப்பா வீட்ல இல்ல”

“அவ அன்னைக்கு உனக்கு சப்போர்ட் பண்ணப்போ சந்தோசமா இருந்துச்சா. எப்படியெப்படி அண்ணா இந்த அக்காக்கு நீங்க நல்லவங்களானு டவுட் வந்துச்சாம்ண்ணா. எப்படி என்னை மாட்டிவிட்டா. அதுக்கு முன்னாடி தான் எங்கிட்ட உங்கள பிடிச்சிருக்கெல்லாம் சொல்லி முத்தம் தந்தா, அதுக்குள்ள அவ அண்ணனை பார்த்ததும் என்னை போட்டு கொடுத்தா” சந்தியா குழந்தைப் போல் நித்திலாவிடம் போட்டி போட்டுக் கொண்டு முதல்முறை அவளை சந்தித்தப் போது நிகழ்ந்ததை சொல்லி “இப்ப அவ அண்ணனையே போட்டு தந்தால” என்றுவிட்டு மறுபடியும் சத்தமாகச் சிரிக்க, அவளது சிரிப்பை தன் மனதில் புகைப்படம் எடுத்து சேமித்தவன்

“என் தங்கச்சி அப்படியெல்லாம் இல்ல. அரு எங்க பார்த்தனு கேட்டதும், டிவில பார்த்தேன்னு சொன்னாடி என் செல்லக்குட்டி நித்தி” தன் தங்கையை எண்ணி பெருமையாகச் சொன்னான்.

“இருந்தாலும் நீங்க பாவம் மிஸ்டர். கௌதம். உன் நிலைமைய பார்த்தா எனக்கு ரொம்ப சிரிப்பா இருக்கு” அவளால் நடந்த அனைத்தையும் கேட்டு சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

“ஹலோ மேடம், ஃபார் யுவர் கைன்ட் இன்ஃபர்மேஷன். என் கூட போஸ் கொடுத்துட்டு நின்னது நீங்களும் தான். மாட்டினா ரெண்டுபேரும் தான் மாட்டுவோம்” அவன் அவளை குறும்பாக பார்த்தபடி சொன்னான்.

அவளுக்கோ அதிலிருந்த உண்மை உரைக்க முகம் மாறியது. ஆம் இது சிரிக்கும் விசயமல்ல, மாட்டியிருந்தால் இன்று இவனோடு இப்படி சிரித்து பேசிக் கொண்டிருக்க முடியுமா என்று நினைத்தவளுக்கு மனது படபடத்து, இதயமே கனமானது.

அவளது முகமாற்றத்தை கவனித்தவன் “என்னடா குட்டி ஆச்சு” என்றான்

“மாட்டியிருந்தோம்னா”

“மாட்டியிருந்தோம்னா என்ன ஆகியிருக்கும், வீட்டுல எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். அப்புறம் என்ன ஆகிருக்கும்னே சொல்லமுடியாது. நான் ஒரு நல்ல ஜாப் போய் கொஞ்சம் செட்டில் ஆகறவரைக்கும் நம்ப விஷயம் வீட்ல தெரியக்கூடாதுனு நினைக்கறேன்டி” அவன் சொன்னதை கேட்டவளுக்கு முகம் இன்னும் வாடியது, கண்ணின் ஓரம் கண்ணீரும் நின்றது. அவள் முகம் இன்னும் வாடி போனதையும், விழிநீர் நிற்பதையும் பார்த்தவனையும் அது அசைத்திருந்தாலும் பேச்சை மாற்ற

“அரு, நித்தியாவது தெரியாம செஞ்சாங்க. ஆனா இந்த தமை இருக்காளே. சரியான ஆளுடி அவ. அவ எதாவது திருட்டுத்தனம் பண்ணுவா, கொத்தா பிடிக்கலாம்னு பார்த்தா எஸ்கேப் ஆகிடுறா”

“உன் தமை அக்காவ பார்த்தா அப்படியெல்லாம் தெரியவே இல்லயே. சாஃப்ட் நேச்சரா தான் தெரியறாங்க” சந்தியா சொன்னதில் அதிர்ச்சியானவன்

“எது அவளா. வந்து கூட இருந்து பாரு தெரியும். என்னை சீண்டலனா அவளுக்கு தூக்கம் வராது அவளை சீண்டலனா எனக்கும் சாப்பிட்ட சாப்பாடு உள்ள இறங்காது”

“அது ஏன் எல்லாம் தம்பியும் இப்படியே இருக்கீங்க. சக்தி கூட இப்படி தான் என்னை இம்சை பண்ணிக்கிட்டே இருப்பான்”

“தம்பினாலே அக்காங்களை வம்பிழுத்துட்டே இருந்தா தான் சந்தோசமா இருக்கும்” என்று சொன்னபோது அவன் முகத்தில் அப்படியோரு நிறைவு தெரிந்தது.

“ஆஹான். செம சண்டை நடக்கும் எனக்கும் சக்திக்கும். ரெஸ்லிங்கெல்லாம் பார்த்துட்டு என்னை அடிப்பான்டா. என் முடியை பிடிச்சு இழுத்து இழுத்து, முடி எப்படி கொட்டுது தெரியுமா. தூங்கிட்டு இருப்பேன், முடிய பிடிச்சு இழுத்துட்டு போயிடுவான். வலி உயிரைப் போகும். பேசாம நான் ஹேர் கட் பண்ணிடவா கௌதம்” சக்தி அவளை வீட்டில் செய்யும் கொடுமைகளைப் புலம்பி அவள் கேட்க

“என்னது ஹேர் கட்டா. உன் ஹேர் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதை என் பெர்மிஷன் இல்லாம வெட்டின உதை விழும் உனக்கு” அவளை செல்லமாக அதட்டியவன் “அப்படி பார்த்தா உன் தம்பி வயசுல இருக்கப்போ, நான் தமை, அருவ எவ்ளோ கொடுமை பண்ணுவேன் தெரியுமா”

“உனக்கு ஒண்ணு தெரியுமா கௌதம். அப்பா ஒரே பையன். அதனால என்னை மாதிரியே நாத்தனார் இல்லாத வீட்டுல தான் உன்னையும் கட்டிக் கொடுக்கணும், ஏன்னா உனக்கு அதிர்ந்து பேசி எதையும் கேட்கக் கூட தெரியாதுனு அம்மா எப்பவும் சொல்லுவாங்க. ஆனா இப்ப பாரு எனக்கு டிசெண்டிங் ஆர்டர்ல அஞ்சு நாத்தனாருங்க. நான் கூட முதல்ல பயந்தேன். நீ சொன்னதெல்லாம் கேட்டதுக்கு அப்புறம் வீடு ஃபுல்லா கேர்ல்ஸ் இருந்தா செம ஜாலியா இருக்கும்னு தோணுதுடா”

“ஜாலியா இருக்குமா” அவளை ஏற இறங்க பார்த்தவன் “அப்ப கல்யாணத்துக்கு அப்புறம் நாத்தனாருங்க கூட சண்டை போடமாட்ட” ஒரு புருவத்தை சுருக்கி கிறங்கி கேட்டான்.

“போட்டாலும் உங்கிட்ட வரமாட்டேன். எங்களுக்குள்ளயே முடிச்சிப்போம்” என்றவளை இரு கண்ணிலும் பெருமிதத்தோடு பார்த்தான் “சரி கௌதம். கார்த்தி அக்கா, தமை அக்கா, நித்தி குட்டி இவங்கள நான் பார்த்திருக்கேன். எப்ப எனக்கு அரு அக்காவையும், நிராவையும் காட்டப்போற” என்று ஆர்வமாக கேட்டாள்.

“அரு ரிசெப்ஷனுக்கு வா மொத்த குடும்பத்தையும் காட்டறேன். ஐ ஆம் சாரிடி” என்றான். எதற்கு இப்போது மன்னிப்பு கேட்கிறாய் என்பது அவளது பார்வையாய் இருக்க “என்ன தான் நீயும் பேமிலில ஒருத்தியா ஆகப்போறனாலும், திருநெல்வேலில நடக்கற மேரேஜுக்கு உன்னை கூப்பிட முடியாது. சொந்தகாரங்களை மட்டும் தான் கல்யாணத்துக்கு கூப்பிட்டிருக்கோம். இங்க சென்னைல ரிசெப்ஷன் இருக்கு நீ கண்டிப்பா வர”

“இல்லல்ல நான் வரல. ஐய்யயோ உன் பேமிலிய பார்த்தாலே எனக்கு படபடன்னு ஆகிடுது” இப்போதே பயம் அவளை தொற்றிக் கொண்டது.

“அப்புறம் நாளைக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு, உங்க வீட்டுல இருந்தே குடும்பம் நடந்த போறியா. என்னைக்கா இருந்தாலும் எங்க வீட்டுக்கு வந்து தானே ஆகணும்” அவளை கண்ணோடு கண் பார்த்து கேட்டான். எத்தனை உண்மையான வார்த்தைகள் அவன் வாயிலிருந்து வந்தது. அது உண்மையாக போவதை அறியாமலே அவன் சொன்னான்.

“தெரியல, ஆனா ரொம்ப பயமா இருக்கு. கெளதம் ப்ளீஸ் அத அப்ப பார்த்துக்கலாம் இப்ப உன் கூட இருக்க டைம்ல அத பேசினா நான் பயத்துல அழுதிடுவேன். ஆமாம் உங்க அரு அக்கா, தமை அக்கா ரெண்டுபேரும் டிவின்ஸ் தான. அப்புறம் அரு அக்காவுக்கு மட்டும் கல்யாணம் பண்றீங்க. அப்ப தமை அக்காவுக்கு”

“அவ படிக்கணும் சொல்லிட்டா. மேல எம்.எஸ் படிக்க போறாளாம். அவ படிக்கட்டும் அப்புறம் பண்ணிக்கலாம்னு அவளுக்கு பெர்மிஷன் வாங்கி தந்ததே நான் தான். இவ என்னனா என் ஃபோனயே நோட்டம் விடறா” கௌதம் நொந்துக் கொள்ள சந்தியாவிற்கு அவன் மாட்டிக் கொண்டு விழித்ததெல்லாம் நினைவிற்கு வர, மறுபடியும் சிரிக்கத் தொடங்கிவிட்டாள்.

“சரி வரியா சனு, கொஞ்சம் நேரம் தண்ணில போய் நிக்கலாம்” என்று அழைக்க

“அய்யோ எனக்கு பயம். நான் வரமாட்டேன்” என்றவளை ஏற இறங்க கூர்மையாக பார்த்தவன் “ரெண்டு வருஷமா உன்னை தண்ணில தூக்கி போட்டும் உனக்கு பயம் போகலை. இரு, இந்த வருஷ பர்த்டேக்கு நடுகடலுல கொண்டுப் போய் தள்ளறேன்”

“ஹேய் கௌதம் வேணா”

“இல்ல அதான் பண்ணப் போறேன். இல்லனா இப்ப வா. நான் கூட தான இருக்கேன்” வம்பு செய்து அவளை இழுத்துச் சென்றான்.

இரண்டு வருடங்கள் வேகமாக ஓடியது. இடையில் நிறைய விஷயங்களும் நடந்தது. அவன் சொன்னது போல் அருந்ததியின் வரவேற்பிற்கு, விக்ரமுடன் வந்தாள் சந்தியா. ஆனால் பயத்தில் அதிக நேரம் இல்லாமல் உடனே புறப்பட்டு விட்டாள். மகளின் வரவேற்பு என்பதால் செல்வராஜும், அங்கும் இங்குமாய் அலைந்து வந்த விருந்தினர்களை கவனித்துக் கொண்டிருந்ததால், அவரை மட்டும் அவளால் பார்க்க இயலவில்லை. நிரஞ்சனா பன்னிரெண்டாம் வகுப்பில் மாநிலத்தில் முதல் வந்திருந்தாள்.

கௌதம் சந்தியாவின் உறவும் நன்கு பலப்பட்டு இருந்தது. செல்வராஜிற்கு தன் மகனின் போக்கில் சிறியதாக சந்தேகம் வர, எதுவாயினும் அதை தொடக்கத்திலேயே சரிச்செய்ய எண்ணி அவனை கண்காணிக்க ஆள் வைத்தார். ஆனால் மகன் சாமர்த்தியமாக இருந்ததால், அவரின் அந்த முயற்சியில் தோல்வியுற்றார். ஏனென்றால் இப்போது அவர்கள் பெரும்பாலும் சந்திக்கும் இடம் இரண்டு. ஒன்று விக்ரமின் வீடு, இன்னொன்று அவர்களது செல்வராணி சில்க்ஸ்.

ஆம் சந்தியா அவனை பார்க்க கடைக்கு வந்துவிடுவாள் அவனும் கண்களாலேயே அவளை பின் தொடர்வான். இப்படியே இருவரும் படிப்பின் இறுதியாண்டை வந்தடைந்தனர். கௌதம் கல்லூரியிலேயே வரும் வேலைவாய்ப்பில் வேலைப் பெற அதிகக் கவனம் செலுத்தி அதற்காக தன்னை தயாரும் செய்துக் கொண்டிருந்தான்.

ஒருநாள் சந்தியா அழைத்து அவனை பார்க்க வேண்டுமென்று அழுதாள். அவனும் அடுத்த நாளே அடித்து பிடித்து ஓடிவந்தான். இருவரும் கடற்கரை மணல் திட்டில் அமர்ந்திருக்க, சந்தியா கடலையே வெறித்துக் கொண்டிருந்தாள். கௌதமும் வெகுநேரம் அவளே பேச்செடுப்பாள் என்று காத்திருந்து விட்டு, கடைசியாக அவள் தோளைத் தொட்டான்.

அவ்வளவு தான் அழத் தொடங்கிவிட்டாள். கௌதமுக்கு அழுதால் பிடிக்காது ஆனால் சந்தியாவிற்கோ முதலில் அழுகை தான் வரும். “என்னாச்சு குட்டிம்மா. ஏன் அழற” முதலில் பொறுமையாக கேட்டவன், வெகுநேரம் அவளிடத்தில் இருந்து பதில் வராததில்

“இப்ப அழுகையை நிறுத்துறீயா இல்லயா சந்தியா. அது என்ன எல்லாத்துக்கும் அழற பழக்கம். நான் என்னைக்காவது அழுது பார்த்திருக்கியா” குரலை உயர்த்தி கடிந்தான். உண்மையில் இதுவரை கௌதம் கலங்கி அவள் பார்த்ததே இல்லை. எதையும் நடத்திவிடும் நெஞ்சு உரம் அவனுக்கு எப்போதும் உண்டு. அதேநேரத்தில் ஆண்பிள்ளைகள் அழக்கூடாது என்ற கூற்றையெல்லாம் ஆதரிப்பவனில்லை. அதுயென்ன ஆண்பிள்ளை, பெண்பிள்ளை.. யாருமே அழக்கூடாது. நடந்ததை ஏற்று அதை எதிர்கொள்ள வேண்டும் என்று நினைப்பவன்.

விக்ரம் கூட அவன் தாய் தந்தை விசயத்தில் மனம் தாங்காமல் அழுதிருக்கிறான். அதுவும் கௌதம் மற்றும் சந்தியாவின் முன்னிலையில் தான். ஆனால் சந்தியாவிற்கு அழையா விருந்தாளியாக முதலில் வருவது கண்ணீரே. இதை மட்டும் கௌதமால் எவ்வளவு முயற்சி செய்தும் மாற்ற முடியவில்லை. முதலில் அவள் அழ ஆரம்பித்தால், அவன் தாங்கமாட்டான். ஆனால் தொடர்ந்து அழுதால் அவனுக்கு எரிச்சல் தான் வரும். அதுவும் அவள் மீதுள்ள அன்பின் மறு உருவமே.

“ச..னு” என்று அழுத்தமாக அழைத்துகொண்டே அவளை தன் பக்கம் திருப்பியதிலேயே என்ன நடந்ததென்று சொல் என்ற பொருள் இருந்தது.

“விக்ரம்” என்றவளின் குரல் கமறியது. அவளை இமையகற்றாது பார்த்திருந்தவன் “விக்..கி” என்றான் புருவத்தை உயர்த்தி.

மறுபடியும் “விக்ரம்” என்று சொல்லுவிட்டு, அடுத்த வார்த்தையை சொல்லமுடியாமல் தடுமாறினாள்.

“என்ன சனுமா. விக்கிக்கு என்னாச்சு” தவிப்புடன் கேட்டவன், அவளிடம் பேசிக்கொண்டே நண்பனின் எண்ணுக்கு அழைக்க, அதுவும் உடனே உடனே துண்டிக்கப்பட, அவனுக்கும் இப்போது கிலிப் பற்றியிருந்தது.

“டென்ஷன் பண்ணாத சந்தியா. அவன் எங்க. ஃபோன் போட்டாலும் போக மாட்டேங்கிது. அவனுக்கு எதாவது பிரச்சனையா. இப்ப விக்கிக்கு என்ன” அவள் தோள்மீது கை வைத்து அவளை உலுக்கினான்.

“விக்ரம் என்னை லவ் பண்ணி இருக்கான் கௌதம்” அவளது குரலில் அத்தனை வலி இருந்தது. இது எப்படி நடந்தது என்ற பரிதவிப்பு அவள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. “எனக்கு நேத்து தான் தெரியும். ஏன் கௌதம் இப்படியாச்சு. எங்க கௌதம் தப்..” முழுதாக சொல்ல முடியாமல் ஆங்காங்கே நிறுத்தினாள்.

“நா... நான்.. நான் அவன்கிட்ட” பேசிக்கொண்டே கௌதமின் முகத்தை பார்த்தவளுக்கு அதிர்ச்சி. அவன் முகத்தில் இந்த விசயத்தை கேட்டு எந்த அதிர்ச்சியுமில்லை. எந்த பதற்றமுமில்லாமல் பொறுமையாக கேட்டிருந்தான். அவன் முகத்தில் நிலவியிருந்த அமைதி, அவனுடைய கண்களில் தெரிந்த நிதானம், அவனுக்கு இது முன்பே தெரியும் என்பதை சொல்லியது. தன் தோள்களில் இத்தனை நேரமாக இருந்த அவனது கையை தன் கைகளால் எடுத்துவிட்டவள் அந்த கேள்வியை கேட்டாள்.

“இது உனக்கு முன்னாடியே தெரியுமா கௌதம்” என்ற அவளது கேள்விக்கு, அவன் ஆமென்று தலையாட்ட, அவ்வளவே அங்கிருந்து விருட்டென எழுந்தவள் விறுவிறுவென நடக்கத் தொடங்கினாள்.

“சனு” என்று அவள் பின்னால் எழுந்து வந்தவன், அவள் கையைப் பிடிக்க, அதை வேகமாக உதறியவள்

“அப்ப அவன் லவ் பண்றான்னு தெரிஞ்சி, எங்க அவன் பர்ஸ்ட் சொல்லிடப் போறான்னு நீ முந்திக்கிட்டியா கௌதம்” இப்படியொரு கேள்வி அவளிடமிருந்து வருமென்று அவன் கனவிலும் எதிர்பார்த்திருக்கவில்லை “என் கௌதம் இவ்ளோ கேவலமானவனா. எங்க விக்ரம் எனக்கு ப்ரொபோஸ் பண்ணி, நான் அதை அக்ஸ்செப்ட் பண்ணிடுவேனோனு அவனுக்கு முன்னாடியே நீ எனக்கு ப்ரொபோஸ் பண்ணி, பிளான் பண்ணி என்னையும் யெஸ் சொல்ல வச்சிருக்க. அப்படியா கௌதம். சொல்லுடா அப்படி தான. உன்னால எப்படிடா இப்படி நடந்துக்க முடிஞ்சது. ஹவ் குட் யு டு திஸ் டூ போத் ஆப் யுவர் ப்ரண்ட்ஸ்?” அவளுக்கும் விக்ரமிற்கும் சேர்த்து நியாயம் கேட்டு அவன் சட்டையை பிடித்து உலுக்கினாள்.

பின் என்ன நினைத்தாளோ சட்டையை விடுத்தவள், அங்கிருந்து வேகமாகக் கிளம்பினாள். அவனுக்கோ, விசாரிக்காமல் தன்னை குற்றவாளி என முடிவுச் செய்துவிட்டு போகிறாள் என்ற எண்ணம் அவனை ஒருவார்த்தை கூட பேசவிடவில்லை.

அவள் செல்வதையே விழியகற்றாது வெறித்து பார்த்திருந்தான் கௌதம். நம்பிக்கை இல்லாத உறவில், மற்றது எது இருந்தும் என்ன பயன். அனைத்தும் வீண். அப்படி தான் அந்த கணம் அவனுக்கு தோன்றியது.

அவள் புள்ளியாக மாறி பின் அவன் பார்வையிலிருந்து மறைந்தே போனாள். இவனோ அவளை துரத்திப் பிடிக்க மனமில்லாமல் சிலைப்போல் நின்றிருந்தான்.

இது என்ன புதுவிதமான சந்தேகம் சந்தியாவிற்கு தன்னவன் மீது. ஒருவேளை அவளது சந்தேகம் உண்மை தானோ. அவள் சொன்னது போல், உண்மையில் கௌதமும் விக்ரம் சந்தியாவை காதலிக்கின்றான் என்று தெரிந்து தான் முந்திக் கொண்டானோ.

எது எப்படியோ அனைத்தையும் நொடிபொழுதில் சிதைத்துவிட்டாள். அவர்கள் உறவை நிர்கதியில் கொண்டு வந்து நிறுத்திவிட்டாள். இனி இவர்கள் நிலை என்ன. இவர்களுக்கு இடையில் அனைத்தும் முடிந்துவிட்டதா அதற்கு பதில் அவர்களிடத்திலும் இருக்கிறதா என்று தெரியவில்லை. இவையனைத்திற்கும் சாட்சியாக நின்றது அந்த வானும், மண்ணும், அதை சேர்த்துப் பிடித்திருக்கும் அந்த நீலக்கடலும். இவர்களை சேர்த்துப் பிடிக்க போவது யார்? ஆம் இவர்கள் இருவரையும் சேர்த்துப் பிடிக்க போவது யாரென்ற கேள்வி அவைகளில் மத்தியிலும் இருந்ததோ?


உண்மையாகும்..


உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..
 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் - 19

இவர்களை சேர்த்துப் பிடிக்க போவது யார் என்ற கேள்வி அந்த வானம், பூமி, நீலக்கடல், இவைகளுக்கு மத்தியிலும் இருக்க தான் செய்தது. அவை அத்தோடு தன் வேலை முடிந்ததென்று நினைக்காமல் இவர்களை இணைக்கும் பொறுப்பை தங்கள் கையில் எடுத்தன. கடல் தந்த நீரை மேக கூட்டங்களாய் சுமந்திருந்த வானம் அதை பூமியில் பொழிய செய்தது.

அங்கு சிலைபோல் பூமியில் வேரூன்றி நின்றிருந்த கௌதமின் முகத்திலும் அந்த மழைநீர் பட உயிர்பித்தவன் போல் வேகமாக ஓடினான். தன்னை நிரூபிப்பது அவசியமா என்று தோன்றியவனுக்கு, ஆம் அவசியம் தான் என்று ஏதோவொன்று சொன்னது. அவளது மனநிலை அவளை அப்படி பேச வைத்தது என்று அவனுக்கு புரியத் தொடங்கியது. அவனை கேவலமானவன் என்று நினைத்து அவள் பார்த்த அருவருப்பு பார்வையில் இது என்ன உறவு என்ற விரக்தியில் இருந்தவன், இப்போது அதை தாண்டி அவள் சொன்ன ‘என் கௌதம்’ என்ற வார்த்தையை திரும்ப திரும்ப காதுகளுக்குள் ஒலிக்கவிட்டு பார்த்தான்.

ஆம், நான் அவளது கௌதமே, அவளும் என் சனுவே, இது எங்கள் உறவு இதை நானே சரி செய்கிறேன் என்று தோன்ற அவளுக்கு என்மேல் இல்லாத நம்பிக்கையை நான் உண்டு செய்கிறேன் என்ற முடிவோடு வேகமாக ஓடினான். முன்னே வேகமாக சென்றவள் அதற்குமேல் கால்கள் செல்ல மறுக்க ஓர் இடத்தில் அப்படியே நின்றிருந்தாள். மழை வேறு ஏகப்பட்ட நினைவுகளை கொடுக்க மேலே செல்ல தோன்றாமல் மழையில் நனைத்தவாறே நின்றிருந்தாள்.

ஓடிவந்தவனுக்கு அவளை பார்த்ததும், அப்படியே அவளிடம் ஓடிவந்து அணைத்துக் கொள்ள தோன்றியது. அது பொதுயிடம் என்பதாலும் இப்போது முதலில் தன்னை புரிய வைப்பதும், தன் தரப்பை சொல்வதுமே மிக முக்கியமானது என்றுணர்ந்து அவள் கையை அழுத்தமாக பற்றி “வா” என்றான். அவளோ அவனிடமிருந்து கையை விடுவிக்க திமிறினாள்.

“நான் கேவலமானவன் தான. சரி, அப்படியே இருந்துட்டு போறேன். ஆனா அந்த கேவலமானவன் உன் கௌதம் சனு, அப்படி தான சொன்ன. உன் மனசுக்குள்ள எதோ ஒரு மூலைல உன் கௌதம் மேல சின்ன நம்பிக்கை இருந்தா என் கூட வா. நடந்தது என்னனு நான் சொல்றேன். எல்லாத்தையும் கேட்டுட்டு, அப்பவும் நான் உனக்கு கேவலமானவன்னு தோணினா நான் உன் கௌதம் இல்லனு நானே முடிவுப் பண்ணிட்டு உன்னை விட்டு போயிடுறேன். அதுவரைக்கும் எந்த முடிவுக்கும் வராத.. ஓகேவா” தன் வண்டியிருக்கும் இடம் வரை பிடித்திருந்த கையை விடாமல் அழைத்துச் சென்றான்.

கௌதம் வண்டியில் ஏறி அவளை திரும்பிப் பார்க்க அவளும் ஏறினாள். ஆனால் அவனை காயப்படுத்திவிட்டே வண்டியிலேறி அமர்ந்தாள். எப்போதும் அவன் தோளைப் பிடித்து வண்டியில் ஏறுபவள் இன்று பிடிப்பை பிடித்து ஏறினாள். ஏறிய பின்னும் இடைவெளி விட்டே அமர்ந்தாள். எது எப்படியோ தனக்கிருக்கும் இறுதி வாய்ப்பு, அதனால் எதையும் பெரிதுப்படுத்தாமல் வண்டியை கிளப்பினான்.

இருவரும் பள்ளியிலிருந்து வரும் வழியில், அவர்கள் எப்போதும் வண்டியை நிறுத்தி பேசும் இடத்திற்கு வந்தனர். இங்கே தான் அவன், அவளை பிடித்திருக்கிறது என்று சொன்னான். இதற்கு கொஞ்சம் தள்ளித் தான் அனைத்தையும் முடித்து கொள்ளலாமென்று அவளுக்கு ஆட்டோ பிடித்துக் கொடுத்தான். அதற்கு பிறகே, அவள் தன் காதலை உணர்ந்தாள். இன்னும் ஒரு அரை கிலோமீட்டர் பள்ளியை நோக்கி சென்றால், அங்கே தான் அவன் முதன்முதலில் விக்ரம் கோபம் கொண்ட போது, அவளை ஆட்டோவில் ஏற்றி அனுப்பியது. இப்படி அவர்களின் ஏகப்பட்ட நினைவுகளை அந்த இடங்கள் தாங்கியிருந்தது.

அவன் அந்த நினைவுகள் தந்த வலியில் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, அவளோ அவனை நிமிர்த்தும் பார்க்காமல் வேறெங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள்.

“பேச கூப்பிட்டனு நினைக்கிறேன் கௌதம். இல்ல இப்படியே தான் என்னை பார்த்துட்டு நிக்கப் போறேனா நான் கிளம்பறேன்” அந்த அமைதியை கலைத்து பேசியவள் அங்கிருந்து கிளம்பப் பார்க்க, அவன் அவளை தடுக்க எண்ணி, அவளருகில் சென்று அவள் கையை பிடிக்கப் போனான்.

அவளோ “தொடாத கௌதம். என்ன கதை சொல்ல கூட்டிட்டு வந்தியோ, அத அங்க இருந்தே சொல்லு” அவனை நோக்கி கைக்காட்டி தடுத்தவள் இன்னமும் அவன் முகத்தை பார்க்கவில்லை.

அவளது செயலிலும், வார்த்தையிலும் சுக்கு நூறாக உடைந்தவன் “கதையா. என்மேல உனக்கு இவ்ளோ தான் நம்பிக்கையா சனு” என்றவனின் கண்ணில் தெரிந்த வலியை ஏமாற்றத்தை அவள் கவனிக்க தவறிவிட்டாள்.

வேறுபக்கம் திரும்பி கண்களை மூடி ஒரு ஆழப் பெருமூச்சை உள்ளிழுத்து வெளியே விட்டு தன்னை ஆசுவாசப்படுத்தியவன், மறுபடியும் அவள் பக்கம் திரும்பி “விக்கி உன்னை லவ் பண்ணது எனக்கு தெரியுமானு கேட்ட, தெரியும் சொன்னேன். ஆனா எப்ப தெரிஞ்சிச்சுனு கேட்டியா. அதுக்குள்ள நீயே நான் உங்க ரெண்டுபேரையும் ஏமாத்தி உனக்கு ப்ரொபோஸ் பண்ணி உன்னையும் அக்ஸ்செப்ட் பண்ண வச்சிட்டேன்னு சொல்ற. அதுவும் பிளான் பண்ணி. இன்னுமா உனக்கு என்மேல நம்பிக்கை வரல சனு. வேற யாராவது என்னை தப்பா சொல்லிருந்தாலும், நான் அப்படியில்லனு நீ சொல்லிருக்கணும். ஆனா இங்க சந்தேக படறதே நீடி” தன் காலை தரையில் உதைத்தவன்

“அவனுக்கு உன்னை பிடிச்சிருக்குனு எனக்கே ஒன்றரை வருஷம் கழிச்சி தான் தெரியும். அதுக்குள்ள நீ தான் எனக்கு எல்லாமேனு முடிவுப் பண்ணி வாழவே ஆரம்பிச்சிட்டேன். என்னால உன்னை விட்டு விலகிப் போக முடியாதுங்கற அளவுக்கு உன்மேல உயிரையே வச்சிட்டேன்டி. விக்கி, உன்னை ஸ்கூல்ல இருந்து லவ் பண்றான்னு தெரிஞ்சப்போ அவன்கிட்டயும் கேட்க முடியாம, உங்கிட்டயும் சொல்ல முடியாம எல்லாத்தையும் மனசுல போட்டு நான் பட்ட வேதனை எனக்கு தான் தெரியும்” அதுவரை அவன் முகத்தை பார்க்காதவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் கண்களில் வேதனை வெளிப்படையாக தெரிந்தது. எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோம் என்பது அப்போதே அவளுக்கு உரைத்தது.

“அன்னைக்கு நீ பொறுக்கியாடானு என்னை பார்த்து கேட்ட. அப்பவே இவ்ளோ நாளா ப்ரண்ட்டா இருந்தும், நம்மள புரிஞ்சிக்கலயேனு வலிச்சிச்சு. ஆனா இன்னைக்கு அதை விட பல மடங்கு அதிகமா வலிக்குதுடி. இத்தனை நாள் லவ் பண்ணியும் உனக்கு என்மேல இவ்ளோ தான் நம்பிக்கையானு நினைக்கறப்போ கஷ்டமா இருக்கு. இது என்னடி லவ் இவ்ளோ நாள் பழகியும் இவன் தப்பு பண்ணிருப்பானா மாட்டானானு கூட புரிஞ்சிக்காத நம்பிக்கையில்லாத லவ். இதுல என்னை கேவலமா பார்த்ததும் இல்லாம என்னை தொடவும் இல்ல உன்னை தொட விடவும் இல்ல. வலிக்குது சனு. இதுக்கு மேல இது நமக்கு தேவையானு பர்ஸ்ட் டைம் தோண வச்சிட்டடி” தன் மனதை கொட்டித் தீர்த்தான். அவளோ விழிநீரோடு அவனையே பார்த்திருந்தாள்.

அந்நேரத்தில் அந்த பக்கம் வந்த ஆட்டோவை நிறுத்தி எங்கே இறங்க வேண்டுமென்று சொல்லி ஓட்டுனரிடம் பணத்தையும் தந்து அவளை ஏறும்படி கைக் காட்டினான். இவளும் அவனை பார்த்துக் கொண்டே ஏறியமர்ந்தாள். ஆட்டோ கிளம்ப, அவள் தலையை வெளியே நீட்டி எட்டிப் பார்த்தாள். கௌதம் அவள் செல்வதை பார்க்காது, எதிர்பக்கம் திரும்பி இடையில் கை வைத்து தரையைப் பார்த்து நின்றிருந்தான். ஆட்டோவை நிறுத்தி இறங்கி ஓடி வந்தவள் அது பொதுயிடம் என்றும் யோசிக்காமல், அவனை பின்புறத்திலிருந்தே இறுக அணைத்துக் கொண்டாள்.

“சாரி கௌதம். நான் தப்பு பண்ணிட்டேன். ஐ ஆம் சாரி கௌதம். சாரி..” அவனை அணைத்தப்படியே திரும்ப திரும்ப மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தாள். அவனோ அவளிடமிருந்து விலக முயன்றான். ஒருபுறம் அவள் மீது கோபம் இருந்தாலும், அது பொதுயிடம் அங்கு மக்கள் வந்துப் போகக்கூடும் என்பதால் அவளை முயற்சித்து விலக்கிவிட்டவன்

“இது பப்ளிக் ப்ளேஸ். எல்லாருக்கும் நீயும் நானும் பார்க்கும் பொருள் ஆகிடுவோம்” மெல்லிய குரலில் அழுத்தமாக சொன்னவன், அங்கே இரண்டு மூன்று நபர்கள் அவர்களை பார்த்து கொண்டிருப்பதை கவனித்து அவளை முறைத்து விட்டு வண்டியை எடுத்தான். தன்னை விட்டு விட்டு செல்லப் போகிறானோ, தான் தான் அவனை புரிந்துக் கொள்ளாமல் பேசிவிட்டோமே, அதற்கான வினைப்பயனை இப்போது திருப்பி தரப் போகிறானோ என்றெல்லாம் அந்த கணப் பொழுதில் யோசித்திருந்தாள். மறுபடியும் அவன் மேல் அவளுக்கு அவ்வளவு தானா நம்பிக்கை, நல்லவேளை அதை வாய்விட்டு கேட்காமல் போனாள்.

உண்மையில் அவன் அப்படிப்பட்டவன் இல்லை. எந்த சூழலிலும் அவளை அப்படி நடுத்தெருவில் விட்டு அவன் சென்றதில்லையே. இன்று மட்டும் சென்றுவிடுவானா என்ன. வண்டியை எடுத்தவன் “ஏறு” என்றான். அப்போது தான் அவளுக்கு போன உயிரே வந்தது. இம்முறை அவன் தோளை அழுத்திப் பிடித்து வண்டியில் ஏறியவள், அவன் முதுகில் அட்டைப் போல் ஒட்டிக் கொண்டாள். முன் அமர்ந்திருந்தவன் தான் எதற்கும் எதிர் செயலாற்றாமல் வண்டியை ஓட்டினான். வழக்கமாக அவள் அப்படி ஒட்டிக் கொண்டாள், தன் கையை பின்பக்கம் கொண்டு வந்து அவள் கன்னத்தை தடவிப் கொடுப்பான். இன்றோ அவன் எதுவும் செய்யாமலிருக்க அவனது வருடலுக்கு ஏங்கி தவித்தாள்.

மறுபடியும் வண்டி கடற்கரையை நோக்கி பறந்தது. கௌதமின் வேண்டுகோளை ஏற்று பாவம் விக்ரம் தான் சந்தியாவின் வீட்டில் எதை எதையோ சொல்லி சமாளித்திருந்தான். இரவு நேரமாகி இருந்ததால் கூட்டம் சற்று குறைந்திருந்து. ஆங்காங்கே ஒருவர், இருவர் அமர்ந்திருந்தனர். அந்த கடலலை முன் இருவரும் அமைதியாக அமர்ந்திருக்க

“சாரி கௌதம். விக்ரமுக்கு என்னை பிடிக்கும்னு நான் எதிர்பார்க்கல. ஏற்கனவே அந்த குழப்பத்துல இருந்தேனா, இதுல உனக்கு வேற முன்னாடியே தெரியும்னு தெரிஞ்சதும் பைத்தியம் மாதிரி பிகேவ் பண்ணிட்டேன். சாரிடா” அப்போதும் அவன் அமைதியாக இருக்க “வேணும்னா ரெண்டு அடி அடிச்சிக்கோ, இப்படி பேசாம மட்டும் இருக்காத” முகத்தை பாவமாக வைத்துச் சொன்னவள் மீது அதற்கு மேல் அவனது கோபம் பலிக்கவில்லை. தன் கையால் அவள் தோளை வளைத்து பிடித்து, அவளை தன்னருகே இழுத்து தன் தோளில் சாய்ந்துக் கொண்டான்.

“உனக்கு எப்படி தெரியும்” என்றாள். அவள் எதைப்பற்றி கேட்கிறாள் என்பதை நன்கு புரிந்தவன்

“ஒருநாள் உங்க ரெண்டுபேரையும் பார்க்க அவன் வீட்டுக்கு வந்தப்போ, நீ இல்ல. அவனே எனக்கு சாப்பிட கொண்டுவரேனு கீழ போனான். ரொம்ப நேரமாகியும் என்னடா வரலனு பார்த்தா, யாரோ ப்ரண்ட் கால் பண்ணிட்டாங்கனு பேசிட்டு இருந்தான். நீயும் இல்லையா, எனக்கு செம போர் அடிச்சிச்சு. அதான் எதாவது புக் படிக்கலாமேனு அவன் ரூம்ல தேடப் போய் என் கண்ணுல அந்த டைரி பட்டுச்சு. அப்ப கூட அது அவன் பெர்சனல்னு நான் திறந்து பார்க்கல. அந்த டைரிய திருப்பி அவன் செல்ஃப்ல வைக்க போனப்போ உன் போட்டோ உள்ள இருந்து வந்து விழுந்துச்சு. அது மூலமா தான் அவன் உன்னை லவ் பண்ணிருக்கான்னு தெரிஞ்சது” சொன்னவனை இமைக்கொட்டாது பார்த்திருந்தவள் அழத் தொடங்கிவிட்டாள்.

“எப்படி கௌதம்... விக்ரமுக்கு என்மேல எப்படி இப்படியொரு எண்ணம். நான் அவங்கிட்ட அந்த மாதிரி பழகலையே. அப்புறம் ஏன் அவனுக்கு அப்படியொரு எண்ணம் தோணுச்சு. எனக்கு நேத்துல இருந்து எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா, அவன் என் ப்ரண்ட் கௌதம். அவனுக்கு போய்.. அதை நான்.. என்னால நினை.. நினைச்சிக்கூட..” வார்த்தைகள் வராமல் தடுமாறினாள். அவளால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவள் வேதனையை பகிர, அவளுக்கு கௌதம் தேவைப்பட்டான். அதை உணர்ந்து தான் அவனும் கோயம்பத்தூரில் இருந்து கிளம்பி வந்தான். இடையில் தான் என்னென்னவோ நடந்துவிட்டது.

“இல்லடா.. இல்ல.. ஒண்ணுமில்ல. இதுல நீ எந்த தப்பும் பண்ணல. அவனும் பண்ணல. இந்த லவ்வெல்லாம் சொல்லிட்டா வரும், அவனுக்கும் உன்மேல அப்படியே வந்திடுச்சு. எதையும் யோசிக்கக்கூடாது. கண்ணை மூடு, அப்படியே டீப் ப்ரீத் எடு பார்ப்போம்” குழந்தையை போல் அவளை ஆசுவாசப்படுத்தினான். வெகுநேரம் அவன் தோளிலேயே சாய்த்தபடி அவனது அணைப்பிற்குள் இருந்தவள் திடீரென்று எழுந்து அவனை பார்த்தாள்.

அத்தோடு “நீ நல்லவன் கௌதம்” என்றாள். அதை கேட்டு கௌதம் மட்டுமல்ல அவர்களை இவ்வளவு நேரம் ரசித்துக் கொண்டிருந்த வானமும், பூமியும், நீலக்கடலுமே சிரித்தன.

அவள் என்ன என்பது போல் பார்க்க “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இதே பீச்ல வச்சி என்னை கேவலமானவன்னு சொன்ன. இப்போ நான் நல்லவனா” அவனால் அதை கேட்காமல் இருக்க முடியவில்லை. அவள் என்ன சொல்வதென்று தெரியாமல் அவனை பார்க்க..

“நீ என்னை நல்லவன்னு சொல்றதுக்காக இத சொல்லலை. விக்கிக்கு உன்னை பிடிச்சிருக்குனு முன்னாடியே தெரிஞ்சிருந்தா, கண்டிப்பா அவன் வழில கிராஸ் பண்ணிருக்க மாட்டேன். எனக்கு உன் மேல லவ்வே இருந்திருந்தாலும் சொல்லிருக்க மாட்டேன்டி. ஏன் சனு, எனக்கு அவன் கண்ணுல தெரிஞ்சது, உனக்கு எப்படி தெரியாம போச்சு” அவளை பார்த்து அவன் கேட்க அவள் வெம்பிக் கொண்டு இல்லையென்று தலையாட்டினாள்.

“அப்ப நீ கவனிக்காம விட்டுட்டு இருக்கடி. நான் கவனிச்சேன்” அவன் சொன்னதும் அவனை அப்படியா என்ற அழுத்தமான பார்வை பார்த்தாள் “ஆமாம்டி எனக்கு அவன் உன்னை பார்க்கறப்போ உங்கிட்ட பேசறப்போ அவன் கண்ணுல வித்தியாசம் தெரிஞ்சிது. இதை நான் அவங்கிட்ட பலமுறை கேட்டும் இருக்கேன். உன்னை பர்ஸ்ட் பர்ஸ்ட் நான் விக்கி வீட்டுல பார்த்தப்போ உன் குரலை மட்டும் தான் கேட்டேன். நீ வெளில நின்னு அவங்கிட்ட பேசிட்டு இருந்ததை பார்த்தே நீ அவனோட ஆளானு தான் கேட்டேன். அதுக்கு அவன் இல்லனு சொல்லிட்டான். அப்புறம் நம்ம ஸ்கூல்ல சேர்ந்ததும் அவனுடைய பார்வை உன்னை பார்க்கறப்போ வித்தியாசப்படுறத கவனிச்சிட்டு, அவன் உன்னை லவ் பண்றானானு ஓபனாவே கேட்டேன். அவன் தான் ‘அம்மா, அப்பா கூட இப்படி பார்த்துக்கிட்டதில்ல. சந்தியா எனக்கு எல்லாமும் செய்யறா. அவ எனக்கு இன்னொரு அம்மானு’ சொன்னான். அதை வச்சி அவனுக்கு உன்மேல எதுவும் இல்லனு முடிவுப் பண்ணிடேன்டி. அதோட ஒருவேளை எனக்கு உன்னை முன்னாடியே பிடிக்க ஆரம்பிச்சிடுச்சோ, அதனால தான் பொசஸ்ஸிவ்னெஸ்ல அவன் பார்வை எனக்கு தப்பா தெரியுதோனு நினைச்சுட்டேன்” சந்தியா முதலிலிருந்தே அவனுடைய தேவதை என்பதால் அவனுக்கு அவ்வாறு தோன்றுகிறது என்றெண்ணி விட்டான் கௌதம். அதை அவளிடம் வெளிப்படையாகவா சொல்லமுடியும், அதனால் பாதியை மறைத்து மீதியை கூறினான்.

“அந்த டைரிய பார்த்தப்போ தான் என் கெஸ் தப்பில்லனு புரிஞ்சது. ஆனா, அப்ப என்னால ஒண்ணுமே பண்ணமுடியாத ஒரு நிலை. நீ இல்லாம நான் இருக்கமாட்டேன்னு தெரியும், நான் இல்லாம நீயும் இருக்கமாட்டேனும் தெரியும். இதெல்லாம் தெரிஞ்சும் என்னை என்ன பண்ண சொல்ற” அதுவரை அவன் பேசியதை இமைக்காது கேட்டிருந்தவள்

“உண்மையாவே எனக்கு தெரியலடா. தெரிஞ்சிருந்தா நானும் நம்ப லவ்வுக்கு ஓகே சொல்லிருக்க மாட்டேன்” விக்ரமுக்காக ‘கௌதி’ என்று அழைப்பதை விட்டு ‘கௌதம்’ என்று அழைப்பவள், இதை செய்தாலும் செய்திருப்பாள் என்றே தோன்ற அவன் அவளை வெறித்துப் பார்த்தான்.

அவன் கைக்குள் தன் கையை விட்டு அவன் தோளில் சாய்ந்தவள் “சாரி கௌதம்” என்றாள். அந்த சாய்வில், அது முன்பு அப்படி சொல்லியிருப்பேன், இப்போது உனக்கும் மட்டுமல்ல எனக்கும் நீ தானடா உயிர் என்ற மறை பொருளிருந்தது. அது கௌதமுக்கும் புரிந்திருந்தது. அவனும் நண்பனின் காதலுக்காக தன் காதலை இழக்கக் கூட செய்திருப்பேன் என்று தானே சொன்னான். அதனால் காதலோடு அவள் கன்னத்தில் கைவைத்து வருடி கொடுத்துக் கொண்டிருந்தவனின் கையில் ஈரம் பட, அவள் முகத்தை நிமிர்த்திப் பார்த்தான்.

“உன்னைப் போய் தப்பா நினைச்சி என்னென்னமோ பேசிட்டேனே. ஐ ஆம் சாரி கௌதம்” கண்ணீரோடு மறுபடியும் மன்னிப்பை வேண்டினாள்.

அவள் கண்ணீரை துடைத்தவன் “விடுடி, அதெல்லாம் நீ ஹஃக் பண்ணதுலயே மறந்துட்டேன். இருந்தாலும் உனக்கு தைரியம் அதிகம்டி. பப்ளிக் ப்ளேஸ்ல கட்டிப் பிடிக்கற. யாராவது பார்த்தா என்ன ஆகுறது” என்றான்.

“பப்ளிக் ப்ளேஸ்ல கட்டிப் பிடிச்சாலும், என் ப்ராப்பெர்ட்டிய தான கட்டிப் பிடிச்சேன். யாராவது கேள்வி கேட்டா, அப்புறம் என் கௌதம் யாருனு பார்ப்பாங்க” என்றுவிட்டு கலகலவென சிரித்தாள்.

“உனக்கு திமிரு அதிகமாகிடுச்சுடி” அவன் சொல்லிக் கொண்டிருந்த வேளையில் “ஐயோ கௌதம், நான் மறந்தே போயிட்டேன்” என்று தலையில் கை வைத்தவளை என்னவென்று கண்களாலேயே வினவ “ஆட்டோக்கு நீ காசு கொடுத்தல. நான் அதை திருப்பி வாங்காமலே இறங்கி வந்துட்டேன்” என்றவளை பார்த்து அவனால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

“தமிழ் சினிமால ஹீரோயின்ங்க பொட்டியையே விட்டுட்டு ஹீரோக்காக இறங்கி ஓடி வருவாங்க. நீ ஆட்டோ காசை தான விட்ட. பரவாயில்ல போயிட்டு போகுது. அதுமட்டுமா அவருக்கு ப்ரீ ஷோ வேற காட்டியிருக்க. தலையில அடிச்சிக்கிட்டு போயிருப்பார்” என்றவனை செல்லமாக முறைத்தாள்.

“சனு, எனக்கு இதுக்கு பதில் தெரியும். இருந்தும் உன் வாயால கேட்கணும்னு ஆசைப்படறேன். சொல்லுவியா பேபி” புதிர் வைத்து அவன் கேட்க, என்னவென்று புரிந்தவள்

“உனக்கு முன்னாடி விக்ரம் எனக்கு ப்ரொபோஸ் பண்ணிருந்தாலும், எனக்கு அவன் மேல லவ் வந்திருக்காது கௌதம். நான் அதை அக்ஸ்செப்ட்டும் பண்ணிருக்க மாட்டேன்” என்றாள். அதைத்தானே அவன் கேட்க விரும்பினான். “ஏன்னா அவன் என் ப்ரண்ட் கௌதம். நான் அவனை அப்படி தான் சின்ன வயசுல இருந்து பார்க்கறேன். இனியும் அப்படி தான் பார்ப்பேன். எனக்கும் அவனுக்கும் நடுவுல இருக்க ப்ரண்ட்ஷிப் நம்ப ரிலேஷன்ஷிப்க்கு எந்த விதத்துலயும் குறைஞ்சதில்ல. நம்ப லவ்க்கு சமமானது கௌதம்” என்றவளை ஆழ்ந்து பார்த்தவன்

“அப்ப நம்ம ப்ரண்ட்ஷிப். அது உனக்கு பெருசா தெரியலையா. அதனால தான் எனக்கு ஓகே சொன்னியா” என்றான்

“சொன்னா எங்க கேட்ட” என்றுவிட்டு சிரித்தவளை அவன் முறைக்க, பேச ஆரம்பித்தாள் “உண்மைய சொல்லனும்னா நீ எனக்கு பர்ஸ்ட் கிளாஸ்மேட். அப்புறம் ப்ரண்ட். அப்புறம் பாய் ப்ரண்ட்” அவளதை கவிதைபோல் நிறுத்தி நிதானமாக சொல்லிக் கொண்டிருக்க, பொறுமை இழந்தவன்

“அடுத்து ஹஸ்பெண்ட், அதுக்கு அப்புறம் நம்ம பசங்களுக்கு அப்பா, அப்புறம் அவங்க பசங்களுக்கு நான் தாத்தா போதுமா, மேல சொல்லுடி” என்றான் நக்கலாக

“என்னடா” என்றவள் முறைக்க

‘ரொம்ப தான் மிரட்டுறா. பேசாம கிளாஸ்மேட்டாவே இருந்திருக்கலாம்’ என்று மனதில் நினைத்தவன் “சொல்லுங்க மேடம். குறுக்க பேசமாட்டேன்” என்று அவளிடம் சரணடைந்தான்.

“சோ இதான் எனக்கு கௌதம்னு கம்பிளீட்டா ரெஜிஸ்டர் ஆகறதுக்குள்ள, நீ என் பாய் ப்ரண்ட்டாகிட்ட. அத விட நீ பேசாம இருந்தப்போ, நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன்டா. அப்ப தான் எனக்கும் உன்னை பிடிக்கும்னு புரிஞ்சது” சொல்லி காதலோடு பார்த்தவளை வெகுநேரம் இமையகற்றாது பார்த்திருந்தவனுக்கு சட்டென்று ஒன்று ஞாபகத்திற்கு வர

“ஆமா சனு, உனக்கு எப்படி விக்கிக்கு உன்னை பிடிச்சி இருந்துச்சுனு தெரிஞ்சிது” என்று கேட்டான்.

“அதுவா, நீ படிச்ச அதே டைரிய தான் நானும் படிச்சேன். மேல் கப்போர்டு ரொம்ப நாளா க்ளின் பண்ணாம இருக்கு. அவனும் வீட்ல இல்ல சரி க்ளின் பண்ணலாமேனு அங்க இருந்த திங்ஸையெல்லாம் எடுத்தேன். அப்ப தான் அந்த டைரி கிடைச்சுது. விக்ரம் யாரையோ லவ் பண்றான்னு ஆர்வமா திறந்த எனக்கு, கடவுள் பெரிய இடியையே அதுக்குள்ள வச்சிருப்பாருனு நினைக்கலடா” இப்போது சொல்லும் போது கூட, அவள் கண்களில் கண்ணீர் வழிந்து வர, அதை துடைத்து சமாதானம் செய்தவன்

“ஆமா, இன்னுமா அந்த டைரிய வச்சிருக்கான்” கலக்கத்துடன் கேட்டவனை அவள் புரியாத பார்வை பார்க்க “உன்னை நினைச்சி உருகி உருகி கவிதையெல்லாம் எழுதி வச்சிருக்கான். அதை படிச்சிட்டு எனக்கே டச் ஆகிடுச்சு. ஒவ்வொரு கவிதையும் அப்படி இருந்துச்சு. நானே ரெண்டு கவிதையை சுட்டு உங்கிட்ட தந்திடலாம்னு பார்த்தேன்” அவன் பேசியதில் அவள் முறைக்க “சேச்சே காதலை உண்மையா பண்ண வேண்டாமா. அதனால நமக்கு என்ன வருமோ அத வச்சி இம்ப்ரெஸ் பண்ணிக்கலாம்னு விட்டுட்டேன். சரி அத விடு. இன்னுமா அந்த டைரிய இந்த விக்கி பக்கி கட்டி காப்பாத்துறான். இது எனக்கு ஆபத்தாச்சே. நீ என்னைக்காவது முழுசா படிச்சிட்டு என்னையும் கவிதை எழுத சொல்லிட்டா” என்று யோசிப்பது போல் பாவனை செய்தவன் அவள் கைகளை பிடித்து குரலை செருமி

“உன் கண், புது பட்டுப்புடவைய விரிக்கறப்போ மின்னுமே அது. உன் சிரிப்பு, தங்க கொலுசை குலுக்கறப்போ வருமோ ஓசை அது. உன் மனசு, எங்க கடை குவாலிட்டி மாதிரி சுத்தம். உன்னை மாதிரி அழகாய் பிறக்க தான் அந்த மேனிக்யூன்னெல்லாம் ஒரே இடத்துல நின்னு தவமிருக்கோ. மொத்தத்துல நீ ஒர் அழகின் சாம்ராஜ்யம்” என்று கவிதை சொல்ல “என்னடா.. கவிதை சொல்றேன்னு உங்க கடைய பிரமோட் பண்ணிட்டு இருக்கியா” என்று அவள் அவனை முறைக்க

“பின்ன விக்கி மாதிரி நான் என்ன கவிஞனா. காரிருளில் தொலைந்த எனை உன் கார்மேக கூந்தல் கொண்டு மீட்டிடுவாயா என் கார்குழல் காதலியேனு சொல்லணுமா” என்று சிரித்தவன் மீது கோபம் வர

“ப்ளீஸ் அந்த கவிதை வேண்டாம். எனக்கு நீ சொல்ற கவிதையே போதும்” என்று தன் நண்பன் தன்னை எண்ணி எழுதியிருப்பதை தாங்கவொண்ணாது எரிச்சலுற்றாள். அத்தோடு “டேய் உண்மையாவே உனக்கு கோவம் வரல. அவன் சந்துனு கூப்பிடப்போவே டென்ஷன் ஆனவன் தான நீ” தன்னவனை எண்ணி ஆச்சரியம் கொள்ள

“அது அடலசண்ட் ஏஜ்” அப்போதும் அவன் அப்படி அழைக்கக்கூடாது என்று சொல்லவில்லையே அப்படி அழைக்கும் போது தனக்கு ஒருமாதிரி இருக்கிறது என்று தானே சொன்னான். விக்ரமின் காதல் தெரிந்தும் இன்று வரையும் அவளை அவன் சந்துவென்று அழைப்பதை கௌதம் ஒன்றும் சொன்னதில்லையே.

அதை நினைத்தவள், தன்னவனின் காதலில் நெகிழ்ந்து, அவன் தலையை வருடி கொடுத்து கொண்டே “நீ உண்மையிலேயே நல்லவன் கௌதம். நீ கிடைக்க நான் ரொம்ப ரொம்ப கொடுத்து வச்சிருக்கனும். உனக்கு விக்ரம் மேல சின்ன நெருடல் கூட இல்லையா” என்றவள் மீண்டும் தன் சந்தேகத்தை கேட்க

“அது எப்படி இல்லாம. கண்டிப்பா இருக்கு. அவன் இப்படி பண்ணுவான்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல” அவன் சொல்ல சொல்ல, அவளது முகமே மாறியது. சிறு இடைவேளை விட்டவன் “அவன் டேஸ்ட் இவ்ளோ மட்டமா இருக்கும்னு நான் நினைச்சே பார்க்கல. அதுல எனக்கு வருத்தம் தான்” முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு சொன்னவனின் வார்த்தைகளின் அர்த்தம் புரிய அவளுக்கு சில நொடிகள் பிடித்தது. அவனோ அதற்குள் எழுந்து ஓடுவதற்கு ஆயத்தமானான்.

அவளோ புரிந்ததும் “டேய் நில்லு. நில்லு கௌதம் ஓடாத. டேய் ஒழுங்கு மரியாதையா நில்லு” அவனை அடிக்க எழுந்தவள், முன்னே ஓடுபவனை துரத்திக் கொண்டு அவனுக்கு பின்னால் ஓடினாள்.

“டேய் நில்லுடா. என்ன கொழுப்பா. அடி கொடுக்கப் போறேன் நான் உனக்கு” என்று சத்தமிட்டு கொண்டே வருபவளை திரும்பி பார்த்து

“ஏன்டி, எவனாவது அடியை நின்னு வாங்குவாங்களா. வேற எதாவது கொடுக்கறதுனா சொல்லு தாராளமா வாங்கிக்கறேன்” என்று கன்னத்தை காட்டிவிட்டு ஓடினான்.

இருவரும் ஓடியே, அவர்கள் வண்டி நிறுத்தியிருந்த இடத்தை வந்தடைந்தனர். சந்தியா அப்போதும் விடுவதாக இல்லை.

“ஏன்டா அவன் டேஸ்ட் மோசமா. அப்ப சார் ஏன் அலை அலைனு என் பின்னாடி அலைஞ்சீங்க. இப்ப மட்டம்னா சொல்ற. திமிராடா உனக்கு” அவன் நெஞ்சில் குத்தி கொண்டே சொன்னாள்.

“ஹேய் அடிக்காதடி வலிக்குது. வேற எதாவது கொடுக்கறதுனா கொடு” என்றான் மீண்டும் கன்னத்தை காட்டி

“அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான். சரி முதல்ல சொல்லு நான் எந்த விதத்துலடா குறைச்சல். அவன் டேஸ்ட் மட்டம்ங்கற” இடுப்பில் கையை வைத்துக் கேட்டவளை ஏற இறங்க பார்த்தவன்

“ஒரு அடி தான். என்ன, ஒரு நாலே முக்கால் அடி இருப்பியா” என்று சத்தமாக சிரித்தவனை அவள் மறுபடியும் துரத்த, தன் பைக்கை சுற்றி சுற்றி ஓடினான்.

ஓடி ஓடி விளையாடி ஓய்ந்தவர்கள் வீட்டிற்கு செல்வதென்று முடிவெடுக்க “சரி டைம் ஆகிடுச்சு. நான் உன்னை வீட்ல ட்ராப் பண்ணா தேவையில்லாத கேள்விகள் வரும். பேசாம விக்கிக்கு ஃபோன் பண்ணி உன்னை கூப்பிட்டுக்க சொல்றேன்” அவன் சொன்ன அடுத்த வினாடி

“வேண்டாம் கௌதம் எனக்கு விக்ரமை பார்க்க ஒரு மாதிரி இருக்கு. கொஞ்சம் நாள் போகட்டும்” என்றாள்

“ஏன் ஒருமாதிரி இருக்கு. அவன் என்ன தப்பு பண்ணான். பிடிச்சி இருந்துச்சு லவ் பண்ணான். அதுக்கு ஏன் உனக்கு அவனை பார்க்க கஷ்டமா இருக்கு. எப்ப நம்ப லவ் அவனுக்கு தெரிஞ்சதோ, அப்போதிலிருந்து இந்த மூணு வருஷமா உங்கிட்ட சரியா தான நடந்துகிறான். நல்ல ப்ரண்ட்டா தான உனக்கு ஒண்ணு ஒண்ணும் பார்த்து செய்யறான். அவனை பார்க்கறதுல உனக்கு என்ன ஹெசிடேஷன். அவன் உன்னை ப்ரண்ட்டா தான் பார்க்கிறான். நீயும் அவன் ப்ரண்ட்ஷிப்பை எப்பவும் மறக்கக்கூடாது. நீ சொன்ன மாதிரி, நம்ப ரிலேஷன்ஷிப்பும் அவன் ப்ரண்ட்ஷிப்பும் உனக்கு ஒண்ணா தான் இருக்கணும்” கௌதம் பேசியதில் அவளுக்கு அவன் மீது காதல் தான் அதிகமானது.

இவனுடன் பேசாதே, ஆண்களை நிமிர்த்து பார்க்காதே என்று காதலை சொன்ன முதல் நாளே தன் காதலிக்கு வரம்புகளை வகுக்கும் ஆண்களுக்கு மத்தியில் அடிதடி சண்டைக்கு செல்லும் முரடன் தான், இருந்தும் தன்னவளையும் தன் நண்பனையும் எள்ளளவும் சந்தேகம் கொள்ளாத ஒருவன், எத்தனை பேருக்கு கிடைக்கும். அவன் கிடைத்ததில் தான் பாக்கியம் செய்தவள் என்றே எண்ணினாள்.

“அது இல்ல கௌதம். அவன் மேல எனக்கு எந்த கோவமும் இல்ல. நான் என்ன பண்ணேன் அவன் மனுசுல இப்படியொரு ஆசை வந்திருக்கேனு எனக்கு என் மேலயே கோவம். அதான் கொஞ்சநாளுக்கு அவனை பார்க்காம இருக்கலாம்னு” என்று இழுத்தவளை

“சரி டைம் எடுத்துக்கோ, ஆனா சீக்கிரம் சரியாகிடு. அதோட நமக்கு இது தெரியும்னு அவனுக்கு தெரியக்கூடாது. அப்புறம் சங்கடப்படுவான்” என்றவன் “இப்ப எப்படி போவ. சரி வா, என் பைக்லயே நாலு வீட்டுக்கு முன்னாடி இறக்கிவிடறேன். நீ அங்கிருந்து போயிடு” என்றான்.

“சாயந்திரம் ஆட்டோ பேசினல, இப்ப பேசு. கூடவே ஆட்டோவ ஃபாலோ பண்ணிட்டு எனக்கு எஸ்கார்ட்டா வா. இல்லனா உன் சனு பயந்துக்குவா” அவள் சொல்ல, அவனுக்கும் அது சரியென்று பட இருவரும் மகிழ்ச்சியாக அங்கிருந்து கிளம்பினர்.

ஒருபக்கம் இவர்களது காதல் ஆழமாக வளர்ந்துக் கொண்டே போக, இன்னொரு பக்கம் கௌதம் தன் காதலிக்காக நல்லவேளையில் சேர தன்னை தயார் படுத்திக் கொண்டிருக்க, செல்வராஜ் கௌதமை தங்களுடைய கடை வேலைகளில் அதிகமாக ஈடுபடுத்த தொடங்கினார். சனி, ஞாயிறுகளில் அவன் சென்னையில் இருந்தால் கடைக்கு வரச் சொல்லி சொன்னார். கடை சம்பந்தமாக அவர்கள் எடுக்கும் முடிவுகளில் அவனையும் இணைத்துக் கொள்ளவும் ஆரம்பித்தார்.

ஆகையால் இப்போது சந்தியாவிற்கு கிடைக்கும் அந்த சனி, ஞாயிறும் இல்லாமல் போனது. அது ஒரு சனிக்கிழமை, அவன் கடையில் இருக்க, அவனிடம் வெளியே அழைத்து செல்லும்படி வற்புறுத்திக் கேட்டாள். அவனும் நண்பர்களை பார்த்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு அவள் கேட்டுக் கொண்டதன் படி பெசன்ட் நகர் கடற்கரைக்கு அழைத்து சென்றுக் கொண்டிருந்தான்.

“எதுக்கு பேபி பெசன்ட் நகர் பீச் தான் போகணும்னு சொல்ற. எனி பர்ட்டிகுலர் ரீசன்” செல்லும் வழியில் கௌதம் கேட்க

“அதுவா மெரினா எனக்கு போர் அடிச்சு போச்சு” எங்கோ பார்த்துக் கொண்டு அவள் சொல்ல, அதை கண்ணாடி வழியாக பார்த்தவன்

“நான் என்னடீ பண்ண. மெரினா தான் நல்லா பெருசா கூட்டமா இருக்கு, நம்மள யாரும் பார்க்கமாட்டாங்க” இறுக்க அவனது வயிற்றை சுற்றி பிடித்திருந்த அவளது கையில் அழுத்தம் கொடுத்து சொன்னான்.

“சரி நாம அறுபடை முருகர் கோவில் போலாமா. என் ப்ரண்ட் அவ பாய் ப்ரண்ட்டோட போனேனு சொல்லிட்டிருந்தா. அதான் எனக்கும் உங்கூட போகணும்னு ஆசையா இருக்கு. கூட்டிட்டு போறியா”

“ஓ.. மன்டே அவகிட்ட சொல்லி சீன் போட தான், இப்ப என்னை இழுத்துட்டு போறீயா” அவன் நக்கலடிக்க அவள் முறைப்பது கண்ணாடியில் தெரிய “சரி சரி என் சனு ஆசைப்பட்டுட்டா.. போயிடலாம்” என்றான்.

“கௌதம் விருச்சிக ராசி, அனுஷம் நட்சத்திரம்.. சந்தியாலக்ஷ்மி, சிம்ம ராசி, மகம் நட்சத்திரம்” இருவரும் முருகர் சன்னிதானத்தில் நிற்க, சந்தியா அர்ச்சகரிடம் அர்ச்சனை தட்டை கொடுத்து பெயர் சொன்னாள்.

‘அடப்பாவமே இவ சிம்ம ராசியா. எதுவும் தெரியாம ஒரு பொண்ணு பின்னாடி சுத்தி லவ் பண்ணிட வேண்டியது. அவ தான் உன்னை அந்த பொள பொளக்கறாளே, அப்பவே தெரிய வேணாம். தம்பி, அப்பா சிம்ம ராசிப்பா, அவர் யார் சொல்றதையும் கேட்கமாட்டாருனு அம்மா சொல்றது இப்ப தான் புரியுது. எல்லாம் விதி. இனி தப்பிக்கவே முடியாது’ என்று மனதிற்குள் எண்ணினான். காதலிக்க ஆரம்பித்து இத்தனை வருடங்களுக்கு பிறகு கௌதமிற்கு எத்தனை பெரிய வருத்தம், அதுவும் முருகனின் சன்னிதானத்தின் முன் நின்று.

‘ஐயோ இப்ப நான் எப்படி பெர்மிஷன் வாங்கறது. முருகா நீதான் எப்படியாவது இந்த சிம்ம ராசிய ஓகே சொல்ல வைக்கணும். ச்சே இதெல்லாம் இந்த நேரம் பார்த்தா எனக்கு தெரியணும்’ தன் மனதிற்குள்ளேயே புலம்பிக் கொண்டிருக்க, அந்நேரத்தில் தீபாராதனை காட்டிய அர்ச்சகர் வெளியே வந்து, அவன் முன் தீபாராதனை தட்டை நீட்டினார்.

அவன் ஒன்றும், அவள் கோவிலுக்கு அழைத்து செல்ல சொல்லிவிட்டால் என்பதற்காக மட்டும் அழைத்து வரவில்லை. அவனுக்கும் அவளிடமிருந்து சில சம்மதங்கள் பெற வேண்டியிருந்தது. அதுவும் இம்முறை கேட்கப் போகிறது கொஞ்சம் பெரியது. அதை அவளிடம் சொல்லி அனுமதி வாங்கவேண்டாமா. அதற்காகவும் தான்.

“கௌதம் என்ன பார்த்துட்டு இருக்க” அவனை ஒரு இடி இடித்து, அவனுக்கு மட்டும் கேட்க சொல்லி முறைக்க ‘ஐயோ சிம்ம ராசி வேலை செய்யுதே’ என்றெண்ணிக் கொண்டே ஆரத்தியை எடுத்து கண்ணில் ஒத்தினான்.

அங்கிருந்து இருவரும் அருகிலிருந்த கடற்கரைக்கு செல்ல, அவள் கடலை ரசித்து பார்க்க கொண்டிருக்க, அவன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

“கடல் நல்லா இருக்குல கௌதம்” திடீரென்று அவள் கேட்க, அவன் அதிர்ந்து அவளை பார்த்தான்

‘இப்ப எதுக்கு திடிர்னு இப்படி கேக்கறா’ மனதிற்குள் நினைத்தவன் “ஆமாம்” என்றான்.

“அரு அக்காவோட குட்டி பொண்ணு எப்படி இருக்கா” அருந்ததிக்கு பூமகள் பிறந்து எட்டு மாதம் இருக்கும், அவள் அதைப்பற்றி கேட்க

“நல்லாயிருக்காடி குட்டி பொண்ணு” என்றான்.

“அப்புறம் தமை அக்கா” கடலை பார்த்துக் கொண்டே அடுத்த கேள்வியை வைக்க

‘இதை கேட்கவா என்னை வேலைய விட்டுட்டு வரச் சொன்னா. ஐயோ ஒருவேளை விஷயத்தை கண்டுபிடிச்சிட்டு தான் நானா சொல்லணும்னு மத்ததை பேசிட்டு இருக்காளோ’ ஒரு நிமிடம் படபடத்து போனவன், தன்னை நிதானப்படுத்தி கொண்டு “அவளுக்கென்ன நல்லா இருக்கா” என்றவனை இப்போதும் பார்க்காமல் கடலையே பார்த்திருந்தாள்.

“நித்தி கூட அடுத்த வருஷம் டென்த்ல. அப்புறம் கௌதம்” ஒவ்வொரு முறையும் அவள் எதையோ பேச வாயெடுக்கும் போது அவன் மனம் பக்குபக்கென்று அடித்து கொண்டது “ரொம்ப வருஷமாவே கேக்கணும் நினைச்சிருக்கேன். செல்வராஜ், செல்வராணி. எப்படி கௌதம் பேர் கூட இவ்ளோ பொருத்தமா அமைஞ்சிருக்கு” கடலின் பக்கமிருந்து தலையை திருப்பாமல் கேட்டாள்

அவள் விளையாடவில்லை. அவனிடமிருந்து ஏதோ உண்மையை வாங்க பேச்சும் கொடுக்கவில்லை. தன்னவன் மற்றும் அவனது குடும்பத்தை சுற்றியே இருக்கிறது அவளது சிந்தனைகள் அனைத்தும். அதுவே, அவளை அவன் குடும்ப நபர்களை சார்ந்த கேள்விகளையே மீண்டும் மீண்டும் கேட்க வைத்தது. அதை புரிந்தவனும் “ஏன்னா செல்வராணி செல்வராஜுக்காகவே பிறந்தவங்க” என்று சொல்ல, அவள் அவனை திரும்பி புரியாத பார்வை பார்த்தாள்.

“ஆமா, அம்மா அப்பாவோட மாமா பொண்ணு. அவங்க பொறந்தப்பவே அம்மா அப்பாவுக்கு தான்னு முடிவு பண்ணிட்டாங்க, அதான் செல்வராணினு பேரு வச்சங்களாம். அம்மாவுக்கு அப்பானா உயிர். அத்தான் ரெண்டாவது தான் படிச்சிருக்காங்க, அதனால நானும் ஸ்கூல் போகலனு சொல்லிட்டு நாலாவதோட ஸ்கூலை விட்டு நின்னுட்டாங்களாம். பதினைஞ்சு வயசுல அப்பாவ கல்யாணம் பண்ணிக்கிட்டு சென்னை வந்துட்டாங்க. அப்போ இந்த பெரிய கடையெல்லாம் இல்ல, அப்பாவே சென்னைக்கு வந்து வேலை கத்துக்கிட்டு ஒரு சின்னக்கடைய தான் வச்சிருந்தாராம். அவரையும் சும்மா சொல்லக்கூடாது அம்மாவ அப்படி பார்த்துக்குவாரு. அரேஞ்ச் மேரேஜ்னாலும் ரெண்டுபேர்கிட்டயும் அவ்ளோ லவ் இருக்கும்”

தன் தாய் தந்தையை பற்றி மிகுந்த பெருமிதத்துடன் சொன்னவனை உற்று நோக்கியவள் “அப்போ கௌதமுக்கு கூட எதாவது கௌதமி இருக்காங்களா” என்றவளை ஒரு நொடி திடுக்கிட்டு பார்த்தாலும், அடுத்த வினாடி அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.

அதை அடக்கிக் கொண்டவன் ‘திமிற பார்த்தியா இவளுக்கு. நான் என்ன சொல்றேன், இவ என்ன கேக்கறா. நில்லுடி உன்னை இன்னைக்கு கதற விடறேன்’ மனதில் சபதம் எடுத்தவன்

“இருக்காளே. என் அத்தை பொண்ணு. அது எப்படிடி அவ பேரைக் கூட கரெக்ட்டா கண்டுபிடிச்ச. புத்திசாலி தான் நீ. நான் பிறந்ததுக்கு அப்புறம் தான் அவ பிறந்தா. அவ பிறக்கறதுக்கு முன்னயே நான் பிறந்துட்டேன். அதுவுமில்லாம என்னை தூக்கி கொஞ்சி தான், அவ பிறந்தாளா, அதனால ஒருத்தனு.. ச்சீ.. சாரி ஒருத்திக்கு கௌதமினும் இன்னொருத்தனுக்கு கௌசிக்னும் கௌல ஆரம்பிக்கற மாதிரியே பேர் வச்சிட்டாங்க” அவள் முகத்தை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே சொல்ல, அவளுக்கோ கண்ணிலிருந்து கண்ணீர் இறங்கி வந்தது.

அதை துடைத்தவள் அங்கிருந்து எழுந்து வேகமாக நடக்க, அவள் பின்னால் ஓடியவன் “எங்கடி போற” என்றதும் “நான் எதுக்கு உனக்கு. நீ போய் அந்த கௌதமி கூடயே குடும்பம் நடத்து. நான் எதுக்கு உனக்கு” இப்போது அவளுக்கு ஆத்திரத்தில் கண்ணீர் வந்தது.

“சரி தான், அதுக்கு அந்த கௌதமி ஒத்துக்கணுமே. அவ தான் சண்டை கோழியாட்டம் சீறிட்டு கிளம்பறாளே” என்றவனை அவள் புரியாமல் பார்க்க “நான் என் அத்தை மகன் கௌதமை தான் சும்மா கௌதமினு சொன்னேன். என் அத்தைக்கு பொண்ணே கிடையாது. ரெண்டும் மகன்ங்க தான். கௌதம், கௌசிக். மாமா பொண்ணுங்க இருக்காங்க. பட் ஒண்ணு ரொம்ப பெரியவங்க, இல்ல ரொம்ப சின்னவங்க.. சோ செட் ஆகாது. சோ, நீ தான்டி என்னோட கௌதமி, நான் தான் உன்னோட அத்தான்” என்றவன் மீது இன்னமும் கோபம் போகவில்லை

“போடா எப்பவும் என்னை அழ வைக்க வேண்டியது” முகம் வாட அவள் சொல்ல

“பின்னே.. நீ மட்டும் என்னை பார்த்து அப்படி கேக்கலாமா” அவன் புருவத்தை உயர்த்தி கேட்டான்.

“அது நீ சொன்னதும், எனக்கு அப்படி தான் தோணுச்சு. அதுக்குன்னு என்னை கஷ்டப்படுத்துற மாதிரி பதில் சொல்லுவியா. இதுல வேற இவனை தூக்கி கொஞ்சி வளர்த்ததுனால, இவங்க அத்தை கௌ கௌனு பேர் வச்சாங்கலாம். நீயே கௌ(Cow) கௌ(Cow) கௌதம்(Cowtham) தான மாடு” ஆத்திரத்தில் அவனை கரித்து கொட்டிக் கொண்டிருந்தாள்

அதை எதையும் பொருட்படுத்தாதவன் “என்னை மாதிரி ஒரு பையன் இல்லனு எத்தனை பேர் ஃபீல் பண்றாங்க தெரியுமா. கௌதமுக்கு டிமாண்ட் அதிகம்டி” என்று கண்ணடித்துச் சொன்னான்.

“ஹான் ஹான் வச்சிக்கோ” என்றுவிட்டு திரும்பியவள் மீண்டும் கடலை ரசிக்க தொடங்கிவிட்டாள் “கடல், அப்புறம் இந்த அலையெல்லாம் எவ்ளோ அழகுல கௌதம். நீ மட்டும் என்னை வம்புப் பண்ணி தண்ணில போடல, நான் பயந்துட்டே தான் இருந்திருப்பேனே தவிர ரசிச்சிருக்கமாட்டேன். நீ சொன்னது உண்மை தான், உன்னை மாதிரி ஒரு பையன் எத்தனை பேருக்கு கிடைச்சிடும். நீ இல்லனா நான் ஒண்ணுமே இல்ல கௌதம்” என்று உணர்ந்து சொன்னாள்.

“போதும் இந்த சென்டி டாக்ஸ். நீ இல்லனா நான் இல்ல, அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. யார் இல்லனாலும் வாழணும். நம்ம வாழ்க்கை இந்த உலகத்துல இருக்கிறவரைக்கும் வாழணும்” என்றவன் அவளை தன் பக்கம் இழுத்து தோளில் சாய்த்துக் கொண்டான். அவளும் அலையை அளந்து அளந்து ரசிப்பதை தொடர்ந்தாள்.

கௌதம் தான் இந்நிலையில் தான் சொல்ல வந்தததை எப்படி சொல்வதென்று குழம்பி தவித்திருந்தான்.


உண்மையாகும்..


உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..
 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் - 20

தன்னவளிடம் அனுமதி பெற எப்படியும் சொல்லி தானே ஆகவேண்டுமென்று அவள் கரத்தை எடுத்து தன் கரங்களுக்குள் வைத்து அழுத்தமாக மூடிக் கொண்டவன் “ஐ லவ் யு சனு” என்றான்.

“என்னடா புதுசா ஐ லவ் யுனுயெல்லாம் சொல்ற” அவன் அன்பாக சொன்னதை எண்ணி சந்தோசப்படாமல், அவனை உற்று நோக்கியவள் “சரி சொல்லு என்ன காரியம் ஆகணும்” என்று நேரடியாக விசயத்திற்கு வந்தவளை அதிர்ந்துப் பார்த்தான். அவளும் தான் அவனை நன்குப் புரிந்து வைத்துள்ளாளே. அவன் காதலை வார்த்தையால் சொல்பவனல்ல, செயலில் காட்டுபவன். அதனால் திடீரென்று வந்த அந்த ‘ஐ லவ் யு’ அவளை சந்தேகிக்க வைத்தது.

“என்னடீ அசால்ட்டா கண்டுப்பிடிச்சிட்ட” அவளை அவன் ஆச்சர்யமாக பார்க்க “சரி சொல்லு” என்றாள் அவனது கைமீது அவளது மற்றொரு கையை வைத்து.

“அது.. அது. நெக்ஸ்ட் வீக் என் ப்ரண்ட் ஒரு பார்ட்டி கொடுக்கறான். அதுக்கு..” அவன் முழுதாக முடிப்பதற்குள்

“குடிக்க போறியா. சரி போய் குடிச்சு கெட்டுப்போ. பெர்மிஷன் கொடுத்துட்டேன்” என்றவளை ஓர் வெற்றுப் பார்வை பார்த்தவன் “அது இல்லடி. அவனுடைய கேர்ள் ப்ரண்ட்ட எங்க எல்லாருக்கும் இன்ரோடியூஸ் பண்ணத்தான் அந்த பார்ட்டியே தரான். அதனால எல்லாரையும் அவங்கவங்க பேரை(Pair) கூட்டிட்டு வர சொல்லிருக்கான். மத்தவங்களும் அவங்க ஆளுங்கள கூட்டிட்டு வர்றதா இருங்காங்க. என்னோட நீ வருவ தான சனு” இதுவரை நிறைய பேருக்கு அவர்களது காதல் விவகாரம் தெரியாது. சந்தியா அதை விரும்பாததால் கௌதமும் அதை யாரிடமும் சொல்லவில்லை. அப்படியிருக்க இன்று அவனே ஆசையாக அழைக்க, அவள் செய்வதறியாது அவனை வெறித்துப் நோக்கினாள்.

அவனோ அத்தோடும் விடாமல் “அந்த பார்ட்டிக்கு போக நான் உனக்காக பார்ட்டிவேர் டிரஸும் எடுத்து வச்சிருக்கேன்டி” அடுத்த குண்டையும் தூக்கிப் போட்டவன் “திடீர்னு கூப்பிட்டுட்டியா, அதான் இப்ப கைல இல்ல. விக்கியை கூட இன்வைட் பண்ணிருக்கான். உனக்கு எந்த டிஸ்கம்ஃபோர்ட்டும் இருக்காது. நாளைக்கு விக்கி வீட்ல கொண்டு வந்து டிரஸ்ஸ கொடுத்திடுறேன். நீ அதை போட்டுக்கிட்டு என் கூட வருவ தான சனு” ஒருபக்கம் மனதில் இருந்ததை சொல்லிவிட்டோம் என்ற நிம்மதி இருந்தாலும் இப்போது அவள் என்ன முடிவெடுப்பால் என்ற பதற்றத்துடனே கேட்டான்.

“என்ன கௌதம் விளையாடுறியா. நான் எப்படி வரமுடியும். உன் கூட சாதாரணமா வெளில வர்றதுக்கே அச்சா பார்த்திடுவாரா, அம்மா பார்த்திடுவாங்களானு பயந்து பயந்து செய்யறதா இருக்கு. இதுல நீ வேற பார்ட்டிக்கு வான்னு கூப்பிடுற. அதெல்லாம் முடியாது. நான் வரமாட்டேன். நீ போறதுன்னா போ. நான் வரல” திட்டவட்டமாக சொல்லிவிட்டாள்.

“ப்ளீஸ்டி. கொஞ்சம் யோசிச்சு பாரேன். எல்லாரும் அவங்க ஆளோட வரப்போ, நான் மட்டும் தனியா போனா நல்லவா இருக்கும்” அவளிடம் அவன் கெஞ்ச “ஏன் விக்ரம் எந்த கேர்ள் ப்ரண்ட்ட கூட்டிட்டு வரப் போறான். நீ பண்றது எனக்கு சுத்தமா பிடிக்கல கௌதம்” என்றுவிட்டாள்.

“ப்ளீஸ்டி. ப்ளீஸ். என் செல்லக்குட்டி சனுல. ப்ளீஸ்டி. இவன் எங்க பழைய ஸ்கூல்ல என்னோட க்ளோஸ் ப்ரண்ட். நோ சொல்லமுடியாதுடி. எத்தனை தடவை பார்ட்டிக்கு போயிருக்கேன். இதான பர்ஸ்ட் டைம் உன்னை கூட கூப்பிடுறேன்” என்றவனை

“இன்னும் ஒரு வாரம் இருக்குல அதை அப்ப பார்த்துக்கலாம். இது நாம ஹேப்பியா ஸ்பென்ட் பண்ண வேண்டிய டைம். நம்ப மூட் ஸ்பாயில் ஆகுற எதையும் பேசவேண்டாம்” அத்தோடு அந்த பேச்சையே நகர்த்திவிட்டவள் “சரி நாளைக்கு நாங்க வரப்போ நீ கடைல இருப்ப தான” என்று கேட்டாள்.

அடுத்த நாள் சந்தியாவும் அவளது அன்னையும் அவளுக்கு துணியும் நகையும் எடுக்க செல்வராணி சில்க்ஸ் மற்றும் வேணி பொன்மாளிகை செல்கின்றனர்.

“கொஞ்சம் கஷ்டம் தான்டி. நீ ஃபோன் பண்ணு, நான் ஃப்ரீயா இருந்தா வரேன்”

“எனக்கு கிடைக்கிறதே எதோ ஒரு சேட்டர்டே, சன்டே தான். அதுவும் இப்ப இல்ல. நீ மட்டும் வந்து செலக்ட் பண்ணி தரல, நான் வாங்காமலே வந்திடுவேன்” மறுபடியும் அடத்தை கையிலெடுத்தாள்.

“புரிஞ்சிக்கோ பேபி. முன்ன நான் சும்மா ஃப்ரீயா இருக்கப்போ கடைக்கு வருவேன். நீயும் கடைக்கு வந்தா நீ எங்க இருக்கியோ நானும் அங்கேயே இருப்பேன். உனக்கு வேண்டியதையும் செலக்ட் பண்ணித் தருவேன்” கண்களாலேயே பேசி அவளுக்கு தேர்வு செய்து தருவது அவர்களுக்குள் வழக்கமான ஒன்று.

“இப்ப அப்படியில்ல. அப்பா நிறைய மீட்டிங்ஸ்ல, டெஸின் மேக்கிங்ல என்னை இன்வால்வ் பண்றார். நான் அப்ப அங்க இல்லாம உன் பின்னாடி சுத்திட்டு இருக்கமுடியுமா. உங்க அம்மா தான உனக்கு சீட்டு போட்டு நகை எடுத்து தராங்க. அவங்களுக்கும் உனக்கும் பிடிச்ச மாதிரி வாங்கிக்கோ. அடுத்து நான் வாங்கித் தரப்போ, எனக்கு பிடிச்ச மாதிரி வாங்கிக்கோ” அவன் அத்தனை பொறுமையாக அவளுக்கு எடுத்து சொல்லியும்

“இல்லல்ல, நீ தான் செலக்ட் பண்ணி தரனும். எனக்கு நீ இல்லாம செலக்ட் பண்ண வராது கௌதம்” அவள் சமாதானம் ஆவதாக தெரியவில்லை.

“ப்ளீஸ் சனு. அடம் பிடிக்காதே. இவ்ளோ நாள் வரலைனா என்ன, இனி பழகிக்கோ” அவன் சொன்னதும் அவள் மிகவும் உடைந்துப் போனாள். அவனது பழகிக்கொள் என்ற வார்த்தை அவளை காயப்படுத்தினாலும் சரியென்று தலையை ஆட்டினாள். ஏனெனில் அவனுக்கு சொல்லியது தான் தனக்கும் என்று எண்ணினாள். அவர்களுடைய அழகான நேரத்தை பாழ் செய்ய அவள் விரும்பவில்லை. அத்தோடு அவளுடைய விசயத்தில் அவள் பெரும்பாலும் பொறுத்துப் போயும் விடுவாள். அவனை சார்ந்த விசயத்தில் தான் அவன் மேலுள்ள அதீத அன்பும் அக்கறையும் கோபமாக மாறி அவளை அவனிடத்தில் சத்தமிட செய்யும். அதை தாண்டி அவளுடைய தந்தைச் சார்ந்த விசயத்தில் அவளை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. மற்றதில் பொறுத்துப் போக தயாராகவே இருந்தாள்.

அதனால் அவளும் அவன் சொன்னதை போல் பழகிக் கொள்ள ஆயத்தமானாள். அவனும் வாழ்க்கையும் அவளை என்னவற்றுக்கெல்லாம் பழக்கப் போகிறது என்று அன்று அவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அன்று மதியம் சந்தியாவும் மீனாட்சியும் பொன்மாளிகையில் நகைகளை தேடி தேடி பார்த்து கொண்டிருந்தனர். செல்வராஜும் கார்த்தியின் கணவர் வெற்றிமாறனும் கடையில் இல்லாததால், ஒரு கலந்துரையாடலில் கௌதமை ஈடுப்பட சொல்லிவிட, அவனால் வர அங்கு முடியவில்லை. இவளுக்கு எதையும் தேர்வு செய்ய மனமில்லாமல் அமர்ந்திருக்க, மீனாட்சியே ஒன்றை தேர்வு செய்தார். சீட்டு பணத்தை விட நகை கூடுதலாக அமைந்து விட, அதற்கு பணம் செலுத்த இருவரும் பணம் செலுத்துமிடத்திற்கு சென்றபோது, அங்கே சுமார் ஐம்பது ஐம்பத்தைந்து வயதிருக்கும் ஒருவர் அந்த தள மேலாளரிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார். ஒன்றும் புரியாமல் அருகே சென்றபோது தான் அன்னைக்கும் மகளுக்கும் விசயம் புரிந்தது.

அந்த மனிதர் மகளின் திருமணத்திற்காக மாப்பிள்ளைக்கு நகையெடுக்க அங்கே குடும்பத்தோடு வந்திருக்கிறார். கடைக்கு நடந்து வரும் வழியில், யாரோ அவர் எடுத்து வந்த பணத்தை களவாடி விட்டிருக்கின்றனர். இது தெரியாத அந்த மனிதரும் நகைகளை தேர்வு செய்துவிட்டு பணத்தை தர பையை துழாவிய போது தான் பணம் இல்லை என்பதே அவருக்கு தெரிய வந்தது. இப்போது மாப்பிள்ளை வீட்டுக்காரர்களும் உடனிருக்க நகை எடுக்காவிட்டால் அதை அவர்கள் பெரிய பிரச்சனை ஆக்கிவிடுவார்கள் என்றும், மாப்பிள்ளை வீட்டார் முன் அசிங்கம் வேண்டாம் என்றும், இரண்டொரு நாளில் பணத்தை கொடுத்து விடுகிறேன், இப்போதைக்கு நகையை எடுத்து செல்ல அனுமதிக்குமாறு மேலாளரிடமும் உடனிருக்கும் காசாளரிடமும் இறைஞ்சு கொண்டிருந்தார். அவர்களோ விடாப்பிடியாக ஒன்று பணத்தை கொடுங்கள், இல்லையென்றால் நகையை வைத்துவிட்டு இங்கிருந்து கிளம்புங்கள், மீறினால் செக்யூரிட்டியை அழைப்பதாக மிரட்டிக் கொண்டிருந்தனர்.

அதைப் பார்த்த சந்தியாவிற்கு பெருத்த கோபம் வந்தது. என்னயிது மனிதாபிமானம் இல்லாமல் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று தோன்றியது. ஓரமாக வந்தவள், தன் கைபேசியை எடுத்து கௌதமுக்கு அழைத்தாள். அப்போதே கலந்துரையாடல் முடிந்திருக்க, அவளை பார்க்க அறையைவிட்டு வெளியே வரவும் இவளது அழைப்பு வர, கௌதம் அதை ஏற்றான்.

“கௌதம் நீ உடனே இங்க வா” பதற்றமான குரலில் அவனிடம் எங்கே இருக்கிறோம் என்று சொல்ல அவனும் அடித்து பிடித்து அந்த இடத்திற்கு வந்தான்.

கௌதமை பார்த்த அந்த நொடி அவளுக்கு எதுவும் கண்ணுக்கு தெரியவில்லை. அந்த நபருக்கு நிகழ்ந்த அநியாயத்தை அவனிடம் சொல்லவேண்டும் என்று ஓடினாள். அவனோ தொலைவிலேயே அவளது முகத்தில் தெரிந்த வேதனையை பார்த்து பயந்திருந்தவன், அவள் அவன் அருகில் வர வர இன்னும் வெடவெடத்து போனான். அவனிருப்பது அவர்கள் கடையில், அங்கே அவள் ஓடிவந்து அவனை அணைத்துக் கொண்டால் அவ்வளவே. இவளை எப்படி தடுப்பது என்று புரியாமல் தவித்து நின்றிருக்க, அவன் முன் வந்தவள் மிகவும் பக்குவமாக ஒரு அடி இடைவெளி விட்டே நின்றாள். அவளது வேதனை சூழ்ந்த முகத்தை மிக அருகில் பார்த்தவனுக்கு அவள் பக்குவத்தை எண்ணி முழுதாக நிம்மதி கூட பட்டுக்கொள்ள முடியவில்லை

“என்னாச்சு ச..” சனு என்று சொல்லவந்தவன் பாதியில் நிறுத்த, அவள் இன்னும் பக்குவப்பட்டவளாய் “சார்” என்று ஆரம்பித்து நடந்த அனைத்தையும் கூறினாள். அவனும் அவளுடன் சேர்ந்து அந்த மனிதரிடம் வந்தான்.

“அங்கிள். இவர் தான் ஓனர். இவர்கிட்ட சொல்லுங்க. அக்ஸ்செப்ட் பண்ணிக்க வாய்ப்பிருக்கு” என்றாள்.

அந்த மனிதரோ அவள் சொன்ன அடுத்த நொடி அவன் காலிலேயே விழப்போனார். அவரை தடுத்து நிறுத்தியவனிடம் “தம்பி, மாப்பிள்ளை வீட்டுகாரங்க மேலே பொண்ணுக்கு ஈடுக்கட்ட, நகை பார்த்துக்கிட்டு இருக்காங்க. அவங்க எல்லாத்துக்கும் சகுனம் பார்க்கறவங்க. இந்த விஷயம் மட்டும் அவங்களுக்கு தெரிஞ்சிது கல்யாணத்தை கூட நிறுத்திடுவாங்க. நான் பொறுப்பில்லாம பணத்தை தொலைச்சதுக்கு என் பொண்ணு வாழ்க்கை வீணா போயிடக்கூடாது தம்பி” என்றவருக்கு என்ன சொல்வதென்று புரியாமல் அவர் காலில் விழுவதிலிருந்து தடுக்க அவர் தோளில் பிடித்தக் கையோடு நின்றிருந்தான்.

“கடன் வாங்கிட்டு வந்த பணத்தை இப்படி தவறவிட்டேனே தம்பி. எனக்கு ஒரு நாள் அவகாசம் கொடுங்க. நான் எப்படியாவது பணத்தை தந்திடுறேன். என் வீட்டு விலாசத்தை கூட எழுதி தந்துட்டு போறேன். இப்ப மாப்பிள்ளை வீட்டுக்காரங்க முன்னாடி அவமானம் ஆகாம நகையை மட்டும் குடுத்து விட சொல்லுங்க தம்பி. நீங்க வயசுல சின்னவரா இருந்தாலும் உங்க காலுல கூட விழறேன் தம்பி” மறுபடியும் குனிய போனவரை நிமிர்த்தி

“என்ன நீங்க. உங்க வயசு என்ன, என் வயசு என்ன” அவரிடம் சொல்லிவிட்டு மேலாளர் பக்கம் திரும்பி

“கொடுத்து விடுங்க” என்றான்.

மேலாளருக்கு ஒருநிமிடம் தூக்கி வாரிப் போட்டது. பின் சுதாரித்தவர் “சார். இது ஐயாக்கு” என்று ஆரம்பிக்க

“அப்பா, அத்தான்கிட்ட நான் பேசிக்கறேன். ஐடி ப்ரூப் மட்டும் வாங்கிட்டு கொடுத்துவிடுங்க” ஆளுமையுடன் சொல்பவனிடம் மறுத்து பேச யாரால் முடியும்.

“அழாதீங்க அங்கிள். கண்டிப்பா உங்க பொண்ணு கல்யாணத்துல எந்த பிரச்சனையும் வராது. இனி கேர்ஃபுல்லா இருங்க” சந்தியா சொல்ல அந்த மனிதரோ கௌதமையே கைக்கூப்பி நின்றிருந்தார். அதெல்லாம் வேண்டாம் என்று கையை இறக்கிவிட்டு அங்கிருந்து நகரப் பார்த்தவனை அவள் குரல் நிறுத்தியது.

“ரொம்ப தேங்க்ஸ் சார்” கௌதமை பார்த்து சந்தியா சொன்ன நிமிடம், இவள் தன் விசயத்தில் சிறுப்பெண் போல நடந்துகொள்வதை வைத்து, இவளை எதுவும் தெரியாதவள் என்று எண்ணியது தன் தவறென்று புரிந்தது. தன்னுடைய சனுவின் பக்குவத்தை கண்டு கண்களில் பெருமிதத்தோடு அவளை மெச்சிக் கொண்டான்.

அந்த மனிதர் மேலாளருடன் செல்ல, கௌதமும் அங்கிருந்து சென்றுவிட்டான். பின் மீனாட்சியின் கேள்விக்கு தான், சந்தியாவால் பதில் சொல்ல முடியவில்லை.

“உனக்கு எப்படி சந்தியாம்மா அவர் தான் ஓனர்னு தெரியும்” குறுக்கு விசாரணை நடத்தும் அன்னையிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் திருதிருவென விழித்தவள்

“லாஸ்ட் டைம் இங்க வந்தப்போ, இவருடைய ஆட், மானிடர்ல போட்டு வச்சிருந்தாங்க. அப்ப பக்கத்துல இருந்த ஒருத்தங்க இவர் தான் ஓனர் பையன். இப்பயெல்லாம் ஓனருங்களே அவங்க கடை ஆட்ல நடிக்க ஆரம்பிச்சிடுறாங்கனு சொல்லிட்டு இருந்தாங்க”

“ஓ. அவர் இங்க வர்றத பார்த்துட்டு தான் நீ ஓடுனியா. நான் எதுக்கு இவ இப்படி ஓடுறானு என்னமோ ஏதோனு பயந்துட்டேன்” மீனாட்சி சொல்ல ‘நல்ல வேலை அம்மாவே பாயின்ட் எடுத்து தர்றாங்க இல்லனா சொதப்பியிருப்பேன்’ என்று எண்ணியவள், ஆம் என்று தலையை மட்டும் ஆட்டினாள்.

மீனாட்சியை பணம் செலுத்தி நகையை வாங்க சொல்லிவிட்டு, இதோ வருகிறேனென்று ஒரு ஓரமாக வந்தவள் கௌதமுக்கு அழைத்தாள். தந்தையின் அறையில் அமர்ந்து அவர் பார்க்க சொன்ன கோப்புகளை பார்த்துக் கொண்டிருந்தவன், அவளது பெயர் கைபேசி திரையில் தெரிந்ததும் ஆசையாக அழைப்பை ஏற்றான்.

அவன் “சனு பேபி” என்றது தான் தாமதம் “என்ன கௌதம் நடக்குது இங்க. கடை நடத்துறீங்களா, இல்ல வேற எதாவது செய்யறீங்களா. மனுஷனோட உணர்வுக்கு இங்க மதிப்பே கிடையாதுல. அவருக்கு எங்க அப்பா வயசு இருக்கும். அவர் காலுல விழாத குறையா கெஞ்சறாரு, உங்க கடைல இருக்கவங்க என்னனா அதெல்லாம் முடியாது ஒண்ணு பணத்தை கொடுங்க, இல்ல நகையை வச்சிட்டு கிளம்புங்க. இல்லனா செக்யூரிட்டிய கூப்பிடுவோம்னு ஈவு இரக்கமே இல்லாம சொல்றாங்க. உங்களுக்கெல்லாம் ஏழைங்கனா அவ்ளோ எளக்காரமா போச்சுல” தான் அவள் விரும்பிய படி நடந்து கொண்டதில், உச்சி குளிர்ந்து அழைத்திருப்பாள் என்று எண்ணியவனுக்கு இது பேரதிர்ச்சி.

“அவரை பார்த்தப்போ எங்க அச்சாவை பார்த்த மாதிரி இருந்துச்சு. எங்கள மாதிரி பெத்த பசங்களுக்காக ஓடி ஓடி ஓடா தேஞ்சு போயிருப்பாரு. அவர் தான் ரெண்டுநாளுல காசு தரேன்னு சொல்றாருல, அதுக்குள்ள உங்க கடை என்ன மூழ்கியா போயிடும். உங்கள மாதிரி பணக்காரங்களுக்கு மாச சம்பளத்துக்கு ஒவ்வொரு நாளும் ஓடுற எங்கள மாதிரி ஆளுங்களோட நிலைமை எப்படி புரியும்” அவளை பொறுத்தவரை அவன் பணக்காரன். அதை அவள் ஒருநாளும் மாற்றிக் கொள்ளவில்லை. இன்றும் மாற்றி கொள்ளாமல் அவனை வார்த்தைகளால் கொன்றாள்.

முதலில் அவள் வார்த்தைகளில் சுக்குநூறாக உடைந்தவன், தன்னை ஒன்று திரட்டிப் பேச தொடங்கினான். அதற்குள் அவனுக்கு கோபம் எரிமலையாக வெடித்திருக்க “போதும் நிறுத்து சந்தியா. என்ன சும்மா நீங்கலாம் மாச சம்பளம் வாங்கறவங்க, நாங்கெல்லாம் பணக்காரங்க. எங்களுக்கு மட்டும் பணம் என்ன, கடவுள் வானத்துல இருந்து கூரையை திறந்து கொட்டினாரா. எங்க அப்பாவும் மாச சம்பளத்துக்கு வேலை பார்த்து தான் இவ்ளோ தூரம் வந்திருக்காரு. அதுக்காக எல்லாரையும் நம்பி ஏமாந்துட முடியுமா. மேனேஜரும் கேஷீயரும் நகைய வச்சிட்டு கிளம்ப சொன்னாங்கனு சொல்றியே, அவங்க வேற என்ன சொல்லணும்னு எதிர்பார்க்கிற. உங்க அப்பா எப்படி மாச சம்பளம் வாங்கறாரோ, அதேமாதிரி தான் அங்க நின்னுட்டு இருந்த மேனேஜரும் கேஷீயரும் வாங்கறாங்க. அவங்க வீட்டுலயும் உன்னை மாதிரி பொண்ணோ பையனோ இருப்பாங்க. அப்படி இருக்கப்போ..” பல்லை கடித்துக் கொண்டு அவளிடம் தன் கோபத்தை காட்டினான். அதில் என்ன செய்தால் இவள் தன்னை பணக்காரன் என்ற பிம்பத்தை விடுத்துப் பார்ப்பாள் என்ற ஆதங்கமும் இருந்தது.

“அப்படி இருக்கப்போ யாரோ ஒருத்தர் வந்து பணத்தை தவறவிட்டுட்டேன்னு சொன்னா, உடனே அவங்க எடுத்துட்டு போங்கனு சொல்லமுடியுமா. இது பிசினஸ். இங்க எல்லாரையும் கண்ணை மூடிட்டு நம்பமுடியாது. அப்படி நம்பினா நம்பள ஏமாத்தி தலையில மிளகாய் அரைச்சிட்டு போயிடுவாங்க. இப்ப நான் அவரை நம்பி நகைய கொடுத்திருக்கேன். ஏமாத்துறவன் என்ன ஒரிஜினல் ஐடியா காட்டுவான். உண்மையிலேயே அவர் ஏமாத்துறவரா இருந்தா, அந்த அஞ்சு பவுனும் காலி. நான் தான் கொடுங்கனு சொன்னதுக்கு எங்க அப்பாகிட்டயும் அத்தான்கிட்டயும் வசை வாங்கணும். அதைப்பத்தி எனக்கு வருத்தமில்லை. ஏமாந்தா இதை ஒரு பாடம்னு நினைச்சிப்பேன். ஒருவேளை, உண்மையா இருந்து அவர் சொன்ன மாதிரி அவர் பொண்ணோட கல்யாணம் நின்னுட்டா. அதுக்கு தான் கொடுக்க சொன்னேன். அவர் காசை திருப்பி கொடுக்கலனா கூட ஒரு கல்யாணம் நடந்துச்சேனு சந்தோசம் தான் படுவேன். முதல்ல ஒரு விஷயத்தை பிராக்டிகலா பார்க்க கத்துக்கோ. எல்லாத்தையும் எமோஷனலா பார்த்து ஆச்சோ போச்சோனு கத்துறத நிறுத்து. இந்த அஞ்சு சவரன்ல எங்க கடை மூழ்கிடாது தான். ஆனா அதுல நாம தொழில் பண்ற லட்சணம் மத்தவங்களுக்கு தெரிஞ்சிடும். அப்புறம் இந்தமாதிரி ஆயிரம் பேர் வருவான். ஒரு ரூபாயில ஒண்ணும் கெட்டு போயிடமாட்டோம், ஆனா இந்த மாதிரி ஒவ்வொரு ரூபாயும் தான் ஒரு வியாபாரத்தை, ஒரு வியாபாரியை உருவாக்குது” அவன் பேச பேச புரிந்ததால் அமைதியானாளோ இல்லை எதனால் அமைதியானாள் என்று தெரியவில்லை, ஆனால் அமைதியாக கேட்டிருந்தாள். என்ன கேட்டு என்ன பயன் அவள் தான் கௌதமுக்கு கோபத்தை வரச் செய்து புலிவாலை பிடித்துவிட்டாளே.

“எனக்கு ஒண்ணுதான் புரியல. என்னை நீ லவ் பண்ற. அப்போ இது எங்க கடை இல்ல நம்ம கடை. அப்படியிருந்தும் என் மேலயும் இந்த கடை மேலயும் உனக்கு ஏன் இவ்ளோ தப்பான எண்ணங்கள்னு ஒவ்வொரு முறையும் புரியமாட்டேங்கிது சந்தியா. நம்பிக்கைய யார்கிட்டயும் கேட்டு வாங்க கூடாது அதுவே தானா வரணும். ஆனா கண்ணை மூடிக்கிட்டு நம்பமாட்டேனு இருக்கறவகிட்ட என்ன எதிர்பார்க்க முடியும்” என்ற அடுத்த நொடி சந்தியா கேட்டதெல்லாம் அவன் அழைப்பை துண்டித்துவிட்ட சத்தமே. அவன் கோபத்தில் கத்த அவள் எதுவும் எதிர்த்து பேசாமல் அமைதியாக அழைப்பில் தான் இருந்தாள். ஆனால் பாவம் கௌதம் தான் வேதனை தாளாமல் சத்தம் போட்டுவிட்டு வைத்துவிடுகிறேன் என்றும் கூட சொல்லாமல் அழைப்பை துண்டித்திருந்தான்.

தவறாக பேசி அவனை காயப்படுத்திவிட்டோம், இப்போது என்ன செய்வது என்று பதறிப்போய் மீண்டும் அழைத்து “சாரி கௌதம்” என்றாள்.

அவனோ பேசும் மனநிலையில் இல்லை. மீறி பேசினால் வார்த்தை பரிமாற்றங்கள் தவறாகவே போய்முடியும் என்பதை உணர்ந்தவன் “இங்க அத்தான் வந்துட்டாரு, நான் அப்புறம் பேசறேன்” என்றான். அச்சொற்கள் அவனிடமிருந்து வர, அவனுக்கு தன் மீது கோபமில்லை என்று எண்ணினாள்.

பாவம் அவனையும், அவனது சொற்களையும் பற்றி அவள் எண்ணியதெல்லாம் தவறே. கடும்கோபத்தில் இருந்தவனுக்கு என்ன காதல் இது, நம்பிக்கை இல்லாமல் இருக்கும் காதல் உயிரற்ற உடலாயிற்றே என்றே தோன்றியது. இப்போதெல்லாம் அடிக்கடி தோன்றும் எண்ணமே அது. இன்றோ அது கோபமாகவும் மாறியிருந்தது. அக்கோபம் அவன் நிதானத்தை குலைக்க எங்காவது சென்றால் தேவலாம் என்று இருக்க, விடுவிடுவென தந்தையின் அறையை விட்டு வெளியே வந்தவன், கடைலிருந்தே வெளியேறினான்.

இது தெரியாத சந்தியா, கௌதம் பேசியதில் அவன் தரப்பு நியாயம் புரிந்து, அவனிடம் மன்னிப்பும் கேட்டு விட்ட திருப்தியில் தாயுடன் துணிக்கடைக்கு சென்றாள். அங்கு, துணிகளை எடுத்து முடித்து, ஆடவர் தளத்தின் வழியாக படி இறங்கி வந்தாள். சொல்லப்போனால் அவள் வேண்டுமென்றே தான் அந்த வழியாக வந்தாள். ஏனென்றால் அங்கே தானே கௌதமின் மிகப் பெரிய படம் சுவற்றில் பதிக்க பெற்றிருக்கிறது. அதை எத்தனை முறை பார்த்தாலும், முதல் முறை பார்ப்பது போல் கண்களில் காதலோடு உருகிப் போய் காண்பாள். பின்னே இருக்காதா, அவள் கேட்டு கொண்டதற்காக தானே, அவன் தன் கடை விளம்பரப்படத்தில் நடித்தான். அதில் எடுத்த புகைப்படங்களை தானே, ஆடவர்கள் துணி எடுக்க, படியேறும் இறங்கும் என்று இரு இடங்களிலும் பளிங்கு கல்லில் பதித்திருந்தனர்.

“அம்மா அம்மா.. என்னை இங்க ஒரு போட்டோ எடுக்கறீயா” தன் கைபேசியை மீனாட்சியிடம் தந்து கேட்டாள் சந்தியா.

“இங்க ஏன் சந்தியாம்மா எடுக்கணும்னு சொல்ற. பின்னாடி நகைக்கடைல ஹெல்ப் பண்ண ஓனர் தம்பி தெரியறாரு. இங்க வேண்டாம் வேற எங்கயாவது எடுத்துக்கலாம்” என்று மீனாட்சி மறுக்க

‘ஐயோ அம்மா, என் ஹீரோ பக்கத்துல நின்னு எடுத்துக்க தான் எடுக்கவே சொல்றேன்’ தனக்குள்ளேயே முணுமுணுத்தாலும் மீனாட்சிக்கு அரைகுறையாக விழுந்து வைத்தது. கௌதம் செய்த செயலின் அருமை புரிந்து, அவன் இப்போது அவளுக்கு ஹீரோவாகவே தெரிந்தான். அதற்காக மட்டுமில்லை, அவளுக்கு அவன் எப்போதுமே ஹீரோ தான். அப்படி நிறைய முறை அழைத்தும் இருக்கிறாள்.

“என்ன ஹீரோ பக்கத்துலயா. என்ன சொல்ற நீ. எந்த ஹீரோ” மீனா மகளை குழம்பி பார்க்க

“அம்மா.. இன்னைக்கு எவ்ளோ பெரிய உதவி பண்ணார். அப்ப இவர் ஹீரோ தான. அதைத்தான் ஹீரோ பக்கத்துல எடுக்கணும்னு சொன்னேன். ப்ளீஸ்ம்மா, ஒரு போட்டோ மட்டும் எடுத்து தர்றீயா. அச்சாகிட்ட இந்த போட்டோவ காமிச்சு, இவர் செஞ்ச காரியத்தை சொல்லணும் அதுக்கு தான்” என்று மகள் சொல்ல, மீனாட்சிக்கு சரியாக புரியவில்லை என்றாலும், மகள் சொல்கிறாள், எடுத்து தந்துவிடுவோம் என்று எடுத்து கொடுத்துவிட்டார். உண்மையில் மகள் இவ்வளவு பெரிய காரியத்தை எல்லாம் செய்வாள் என்று அவர் நினைத்ததே இல்லை.

சந்தியா மீதிருந்த கோபத்தில் தன் வண்டியை கூட எடுக்காமல், சாலையில் வேகமாக எங்கோ நடந்து சென்று கொண்டிருந்தான் கௌதம். வழியில் மகன் வேகமாக நடந்து செல்வதை பார்த்த செல்வராஜ் “அது கௌதம் தான. ஏன் எங்கயோ நடந்து போயிட்டு இருக்கான். காருல போக வேண்டியது தான. அவனை கூப்பிடுங்க” என்றவர், மகனையும் காரில் உடன் ஏற்றி அழைத்து வந்தார்.

வாங்க வேண்டிய அனைத்தையும் வாங்கிவிட்டு, தாயும் மகளும் வெளியே செல்லவும், தந்தையும் மகனும் உள்ளே வரவும் சரியாக இருந்தது. அதுதான் சந்தியா, முதல்முறையாக செல்வராஜை நேரில் பார்ப்பது. சொன்னப்போனால், இதுவே முதலும் கடைசியுமாக அவள் அவரை பார்ப்பது. அதன்பின் அவரை சந்திக்கும் சந்தர்ப்பத்தை கடவுள் அவளுக்கு வழங்க போவதேயில்லை.

அந்த உயர்ந்த மனிதர், வெள்ளை வேட்டி சட்டையில் திடகாத்திரமாக உள்ளே நுழைந்தப்போது, எத்தனை கம்பீரம், ஆளுமை. அருகில் அவளவன் சற்றும் குறையாத கம்பீரத்துடன் உடன் நடந்து வந்தான். கௌதமின் கம்பீரமும் ஆளுமையும் தந்தையிடமிருந்து தான் வந்திருக்க வேண்டுமென்று சந்தியாவிற்கு தோன்றியது.

கௌதமுக்கு சந்தியா எதிரில் வருகிறாள் என்று தெரிந்தும் அவளை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. சந்தியாவிற்கு செல்வராஜை பார்த்த பதற்றத்தில் கால்கள் நடக்க மறுத்தது. மீனாட்சி தான் அவளை கைப்பிடித்து வெளியே அழைத்துச் சென்றார். அப்போது கடைக்கு வந்த யாரோ ஒரு பெண்ணென, செல்வராஜ் அவளை இயல்பாக பார்த்த பார்வையிலேயே படபடத்து போனாள். அவருக்கும் தான் அன்று தெரியாதே, இவள் தான் ஒருநாள் தன் வீட்டு மருமகளாக போகிறாள் என்று.

கௌதமை பார்த்த மீனாட்சியும் நல்லப்பிள்ளை, நல்லது செய்துள்ளான் என்ற எண்ணத்தில் நன்றாக இருக்கட்டுமென்று மனதிற்குள்ளேயே வாழ்த்திவிட்டே கடந்தார். பிள்ளைகள் ஆடும் காதல் விளையாட்டில், பெற்றவர்களின் பங்கு என்னவென்று தெரியாமலே செல்வராஜும் மீனாட்சியும் கடந்து சென்றனர்.

மூன்று மாதங்களுக்கும் மேல் ஓடியது. அன்றொரு நாள் கல்லூரிப் பேருந்தில் சன்னலோரம் அமர்ந்து சாலையை வெறித்துக் கொண்டிருந்தாள் சந்தியா. அருகில் இருந்த சாவித்ரி, அவள் தோளை சீண்டியதை உணரவே திரும்பினாள்.

இவள் என்ன என்பது போல் பார்க்க, சாவித்ரியோ தயங்கி தயங்கி அந்த கேள்வியை கேட்டாள்.

“நாமளும் ஒரே கிளாஸ், ஒரே பஸ்னு ஒண்ணாவே இருக்கும். இருந்தும் நீ கிளாஸ்லயும் சரி, பஸ்லயும் சரி, யார்கிட்டயும் ரொம்ப பேசி நான் பார்த்ததே இல்ல. கொஞ்ச நாளா, நீ பேசற ஒண்ணு ரெண்டு வார்த்தையும் குறைஞ்சிட்ட மாதிரி இருக்கு. வீட்டுல எதாவது பிரச்சனையா” என்றவளை சந்தியா வெறித்துப் பார்க்க “நீ யாரையாவது லவ் பண்றீயா சந்தியா” என்று கேட்டுவிட்டாள்.

அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல், சிறிதுநேரம் அவளை உணர்ச்சியற்று பார்த்தவள், பழைய படி சன்னல் பக்கம் திரும்பி சாலையை வெறிக்க தொடங்கிவிட்டாள்.

சாவித்ரிக்கு மேலே என்ன பேசுவதென்று தெரியாமல் அமைதியாக தன்னுடைய இயர்செட்டை காதில் பொருத்தி கைபேசியில் பாட்டு கேட்க ஆரம்பித்தாள். பின் அவள் சந்தியாவை எதேர்ச்சையாக திரும்பி பார்க்க, அவள் கண்ணின் ஓரம் ஈரம். அதை துடைத்தவள், கடும்முயற்சி செய்து கண்ணீரை அடக்கப் பார்த்தாள். ஆனால், அவளால் அது அது முடியாமல் போக, இப்போது தாரை தாரையாக கண்ணீர் இறங்கி வந்தது.

சாவித்ரிக்கோ ‘ஒண்ணு லவ் பண்ணா, பண்றேன்னு சொல்லணும். இல்ல, இல்லைனு சொல்லணும். அதவிட்டுட்டு இப்ப நான் என்ன கேட்டுட்டேன்னு இவ இப்படி அழறா’ என்று இருந்தது.

அவளுக்கு என்ன தெரியும், இது அவளது வழக்கமான கண்ணீர் அல்ல. அவள் மனதில் இருக்கும் வலியை என்ன சொல்லி அழித்து விடமுடியும். அவள் வேதனையை என்ன அழுது கரைத்து விடமுடியும். கௌதமும் அவளும் தான் பிரிந்து மூன்று மாதங்கள் ஆனதே. தினமும் நான்கைந்து முறை அழைப்பவன், இந்த மூன்று மாதத்தில் ஒருமுறை கூட அழைக்கவில்லையே.

விக்ரம் பயந்தது போல், தனக்காக மாறியவனை தன் செயல்களினால் இவளே இழந்துவிட்டாள். ஆம், கௌதம் அவளுக்காக மாறினான். இவளோ அவனை பழைய படி மாற்றிவிட்டாள். இனி அவன் திரும்பி வருவானா? இல்லை இவள் தான் அவனை தேடி போவாளா?


உண்மையாகும்..


உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..
 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் - 21

இத்தனை வருடங்களாக அவர்கள் ஆசை ஆசையாக கட்டிய கோட்டையை ஒரே நொடியில் தகர்த்தெறிந்து விட்டார்கள். இருவரில், ஒருவர் அமைதியாக போயிருந்தாலும் இத்தனையும் நடந்திருக்காது. விக்ரம் எவ்வளவோ தடுத்தும் அன்று இருவரிடமும் வார்த்தைகள் விளையாடியது. அதன் பலனாக அவர்கள் பிரிந்து மூன்று மாதங்கள் ஆகிப்போனது.

சிரமப்பட்டு மூன்று மாதங்களை கடத்தியிருந்தாலும், வலி மட்டும் அன்று இருந்தது போல் தான் இருக்கிறது. சொல்லப்போனால் அது நாளுக்கு நாளுக்கு அதிகரித்து கொண்டே போனது. இன்று வருவான், நாளை வருவான் என்று காத்திருப்பவளுக்கு நாட்கள் கூட கூட அவன் வரவே மாட்டானா என்ற உண்மை சுட்டெரிக்க தொடங்கியது. அவள் வேதனையை கூட்டும் கேள்வியை சாவித்ரியும் கேட்டுவிட, அவளுக்கு பதிலளிக்க முடியாமல் போன தன் நிலையை எண்ணி நொந்துக்கொண்டாள். எவ்வளவு கர்வமாக அவனை பற்றி அவளிடம் சொல்லியிருக்க வேண்டும். இன்றோ அவளிடம் சொல்ல இருவருக்கிடையில் ஒன்றுமே இல்லையே. இதையெல்லாம் நினைத்த சந்தியாவிற்கு மூன்று மாதத்திற்கு முன் நடந்தது கண்முன் வந்தது.

செல்வராஜை பார்த்த பதற்றத்தில் கௌதமின் பாராமுகத்தை அவள் கவனிக்க தவறியிருந்தாள். வீட்டிற்கு வந்ததும் கடையில் அவனுடைய நிழற்படத்துடன் எடுத்த தன் புகைப்படத்தை அவனுக்கு ‘மை ஹீரோ’ என்று குறிப்பிட்டு அனுப்பியிருந்தாள். உடன் அந்த மனிதருக்கு அவன் செய்த உதவியை பெருமையாக சொல்லி, அவள் அவனை எண்ணிப் பெருமை கொள்வதாகவும் குறுஞ்செய்தி ஒன்றை இணைத்திருந்தாள். அது அனைத்தையும் பார்த்தவன் எந்த பதிலும் அனுப்பவில்லை. இம்முறை கடும்கோபத்திலேயே இருந்தான்.

இவளும் கடையில் வேலையாக இருக்கக் கூடும் என்றெண்ணி அவனது அழைப்பிற்காக காத்திருந்தாள். வழக்கமாக இரவு அழைப்பவன், இன்று அழைக்கவில்லை. பின் கோயம்பத்தூர் கிளம்பும் முன்னும் அழைக்கவில்லை. அதன் பின்னே அவன் கோபமாக இருக்கிறான் என்பது அவளது புத்திக்கு எட்டியது.

கௌதம் மட்டுமல்ல, சந்தியாவும் அவனுக்காக எதையும் செய்யக் கூடியவளே. அவனுக்காக மலையை புரட்டவும் தயாரானவளே. கடும்முயற்சி செய்து உண்ணாமல், உறங்காமல் அவனிடம் கெஞ்சி, கொஞ்சி எப்படியோ கோபத்தை தணித்து அவனை அவளிடம் பேச வைத்துவிட்டாள். இருவருக்குள்ளும் அனைத்தும் சரியாகியும் இருந்தது. ஆனால், அந்த மகிழ்ச்சி மூன்று நாட்கள் கூட நிலைக்கவில்லை. மீண்டும் அவனை காயப்படுத்த வேண்டாமென்று அவனுக்காக அவன் சொன்ன பார்ட்டிக்கு வருகிறேன் என்று சொன்னாள். அது தான் பெரிய தவறாக முடிந்தது.

கௌதம் அவளை காத்திருக்க சொன்ன பேருந்து நிலையத்தில் காத்திருந்தாள் சந்தியா. தூரத்தில் அவளை பார்த்தவனுக்கு கடும்கோபம் வந்தது. அவன் அவளுக்கு எடுத்துக் கொடுத்த உடையை அணியாமல், அதிக வேலைப்பாடுகள் இல்லாமல் அதே நேரத்தில் வெளியிடங்களுக்கு அணியும் படி இருந்த கருப்பு குர்தாவும் லெக்கின்னும் அணிந்திருந்தாள். அதை பார்த்தவனுக்கு கோபம் தலைக்கு ஏறியது. அதே கோபத்துடன் காரை கொண்டுப் போய் அவள் முன் நிறுத்தி கதவை திறந்தான்.

அவளும் உள்ளே வந்தமர்ந்ததும் “செமையா இருக்க கௌதம் பாப்பா. இந்த டிரஸ்ல அப்படியே ஹீரோ மாதிரி இருக்க டா” என்றுவிட்டு பட்டென தலையில் அடித்துக் கொண்டவள் “ஹீரோ மாதிரி என்ன. ஹீரோவே தான். அதுவும் எனக்கே எனக்கான ஹீரோ” அவள் பேசிக் கொண்டிருக்க, அவன் அவள் பக்கம் கூட திரும்பாமல் வண்டியை இயக்கி கொண்டிருந்தான்.

“அப்புறம் ஞாபகம் இருக்குல. நான் உன் கூட இருக்கேன். அதனால, இன்னைக்கு ட்ரின்க் பண்ணமாட்டேனு சொல்லிருக்க” என்றதும் அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்தவன் மறுபடியும் முகத்தை திருப்பிக் கொண்டான்.

அவனது உணர்ச்சியற்ற முகத்தை கவனித்தவள் “என்னாச்சுடா. ஏன் ஒருமாதிரி இருக்க” அவனது தோளில் கை வைத்து கேட்டாள்.

அதை வேகமாக உதறிவிட்டு “இல்ல நான் சொல்ற எதையும் கேட்கக்கூடாதுனு இருக்கியா. இவன் என்ன சொல்றது நான் என்ன கேக்கறதுனு, இல்ல” கையை மடக்கி ஸ்டியரிங் விலீல் குத்தியவன் “இதுல இவ சொல்றத நான் கேக்கணுமாம். நீ உன் இஷ்டத்துக்கு தான இருக்க. அதேமாதிரி நானும் என் இஷ்டப்படி தான் இருப்பேன்” என்றவனை என்னவென்று புரியாமல் பார்த்தவள்

“என்னாச்சு கௌதம், ஏன் இப்படி நடந்துக்குற. எதுக்காக கையை போட்டு இப்படி குத்துற. எங்க கையை காட்டு. அடி எதாவது பட்டிருக்கப் போகுது” அவனது கையை பிடிக்கப் போனாள்.

அவனோ அவள் கையை தட்டிவிட்டவன் “ஒண்ணும் தேவையில்ல விடு. நான் ஏன் கோவமா இருக்கேன்னு கூட உனக்கு தெரியல இல்ல. என்ன டிரஸ் இது. நான் என்ன எடுத்து தந்தேன். வேணும்னே அத போடாம வேற எதயோ போட்டுட்டு வந்திருக்க” பல்லை கடித்துக் கொண்டு கேட்டான்.

“அதை நான் எப்படி கௌதம் போடமுடியும். எங்க வீட்டுல நான் என்ன சொல்லுவேன். இந்த டிரஸுக்கு என்ன, நல்லா தான இருக்கு. இதுவும் நீ எடுத்து தந்த டிரஸ் தானடா” உரத்தக்குரலில் ஆரம்பித்தவள் பின் கொஞ்சல் குரலிற்கு மாறி அவனுக்கு புரிய வைக்க முயற்சி செய்தாள். அவனதை புரிந்துக் கொள்ளும் நிலையில் இல்லை. அவள் சொன்னதை கேட்டும் அவன் அமைதியாக இருக்க, அதை கண்டு கோபம் கொண்டவள்

“இங்க பாரு கௌதம் உனக்கு இந்த டிரஸ்ல நான் வர்றது பிடிக்கலைன்னா, நான் வரல. இங்கயே இறங்கிக்கிறேன். நீ போய் பார்ட்டியை என்ஜாய் பண்ணு. உன் இஷ்டத்துக்கு ட்ரின்கும் பண்ணு” என்று அவள் சொன்னதும் வண்டியை ஓரமாக நிறுத்தி அவளை பார்த்தான். அவளும் இறங்க போன நேரத்தில், வண்டியை வேகமாக எடுக்க, அதில் நிலைதடுமாறி போனவள் “என்ன பண்ற கௌதம். நான் எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா” பதற்றத்தில் கத்தினாள்.

“ஸ்டாப் இட் சந்தியா. டோன்’ட் மேக் எ சீன். நீயும் நானும் வரோம்னு சொல்லிட்டேன். என்னால எல்லாருக்கும் பதில் சொல்லிட்டு இருக்கமுடியாது. சோ, நம்ப சண்டைய இத்தோட முடிச்சிக்கலாம். அங்க நார்மலா இருக்குற வழியப் பாரு. அதோட என்னை இப்ப பீஸ்ஃபுல்லா வண்டியை ஓட்டவிடு” கோபத்தில் கனன்றிருந்த மனதை கொட்டினான். அவளை தாங்குபவனின் இந்த பரிமாற்றத்தில் ஏமாற்றமுற்றவள்

“எனக்கும் சண்ட போடணும்னு ஆசை ஒண்ணும் இல்ல கௌதம். உன் கூட ஹேப்பியா ஸ்பென்ட் பண்ணனும் தான் நானும் நினைக்கறேன்” என்று அவள் சொன்னதோடு அந்த சண்டையை இருவரும் முடிவுக்கு கொண்டு வந்தனர். ஆனால் ஏதோ ஒன்று இருவருக்குள்ளும் புகைந்துக் கொண்டு தான் இருந்தது.

இருவரும் ஒன்றாக அந்த பப்பின் உள்ளே செல்ல, கௌதமை பார்த்ததும் அவனது நண்பர்கள் ஆர்ப்பரிக்க தொடங்கினர்.

“ஹே.. கௌதம். கம்.. கம்.. கம் மேன்” அவன் நண்பன் அழைக்க “ஹாய் மச்ஸ். ஹவ் ஆர் யூ, கைஸ்? ஹவ் இஸ் லைஃப் கோய்ங்?” என்று நலம் விசாரித்தவன் “கைஸ், மீட் மை கேர்ள்ப்ரண்ட் சந்தியா அண்ட் சனு, திஸ் இஸ் ராகேஷ், தரண், சுதீப் அண்ட் ஆலன்” என அனைத்து நண்பர்களையும் அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

“வேர் இஸ் விக்ரம் மேன்?” நண்பன் ஒருவன் கேட்க “ஹி ஆஸ் சம் ஒர்க். ஹி வில் பி ஜாய்னிங் அஸ் சம்டைம் லேடர்” அவன் நண்பனுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்க அந்நேரத்தில் ஒரு பெண் கௌதமை வந்து அணைக்க, சந்தியா அதை பார்த்து அதிர்ந்துப் போனாள்

அப்பெண்ணோ “ஹேய் கௌமி. ஹவ் ஆர் யூ, மேன்? பை தி வே, யு லுக் ஹாட்” என்றாள்

“சாஷ். ஹவ் ஆர் யு. ஐ திங்க், ஐ லுக் ஹாட், ஜஸ்ட் பிகாஸ் ஐ ஆம் ஸ்டாண்டிங் நெக்ஸ்ட் டு யு” என்று சொல்லி கண்ணடித்து சிரித்தான் கௌதம். உண்மையில் அவன் எதேர்ச்சையாக தான் சொன்னான். வேறெந்த எண்ணமும் அவனுக்கு இல்லை. அதை கேட்ட சந்தியாவிற்கு தான் கோபத்தில் முகம் சிவந்தது.

“அண்ட் சாஷ். திஸ் இஸ் மை கேர்ள்ப்ரண்ட் சந்தியா” கௌதம் சந்தியாவை அவளுக்கு அறிமுகம் செய்ய உடனே சாஷா “என்னடா அழகான பொண்ணை பார்த்ததும் தான் எனக்கு நோ சொன்னீயா” அவன் காதை கடித்தாள். இது சந்தியாவின் காதில் விழுந்து தொலைக்க, முடிந்தது கௌதமின் கதை. அதை உணர்ந்த கௌதமும் ‘இப்படி மாட்டிவிட்டுட்டாளே. இவ வேற சும்மாவே ஆடுவா’ என்று மனதிற்குள்ளேயே புலம்பிக் கொண்டான்.

நண்பர்கள் அவ்விடத்தை விட்டு நகர்த்ததும், சந்தியா ஆரம்பித்தாள் “யார் அது கௌதம். அவ ஹாட்ங்கறா, நீ என்னமோ அவ பக்கத்துல இருக்கனால தான் ஹாட்டா தெரியறேன்னு சொல்ற” என்று அவனிடம் சிவந்த முகத்தோடு கேள்வி கேட்க

அவனோ “ஹேய் ஜஸ்ட் ப்ரண்ட் டி. பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. அது அவ சும்மா சொன்னா நானும் பதிலுக்கு சொன்னேன். அவ்ளோ தான்” என்றான்

“பொய் சொல்லாத. நீ அவளுக்கு நோ சொன்னேன்னு சொல்றா” இப்போது சீறினாள்.

“அதுவா. இவங்க கேங்ல ஃபைவ் கேர்ல்ஸ். அஞ்சு பேரும் ட்ரை பண்ணாங்க. எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்ல. என்னை பொறுத்தவரைக்கும் எல்லாம் ப்ரண்ட்ஸ் தான். இதுல இவ மட்டும் ப்ரொபோஸும் பண்ணா. நான் ஐ ஆம் நாட் இன்ட்ரெஸ்டட். லேட்’ஸ் பி ப்ரண்ட்ஸ்னு சொல்லிட்டேன். அத தான் உளறிட்டு போறா. இதையெல்லாம் அவ எப்பவோ மறந்திருப்பாடி” என்று அவன் சொன்னதை அவள் அமைதியாக தான் கேட்டிருந்தாள். அவனுக்கு என்னமோ அது அவனை நம்பாதது போல் தோன்ற

“நாமளே ஸ்கூல்ல இருந்து லவ் பண்றோம். இதுல நான் யார் பின்னாடி போக போறேன்” விரக்தியில் சொன்னவன் “ஒரு லவ்வுக்கே இங்க முடியலயாம், இதுல இவளுக்கு டவுட் வேற வருது” அவன் யதார்த்தமாக அந்த வார்த்தைகளை விட, அது சந்தியாவின் கோபத்தை பன்மடங்கு உயர்த்தியது.

“ஏன் அவ்ளோ சலிச்சிக்கற. நான் இங்க வரலனு தான சொன்னேன். நான் இல்லாதப்போ நீ அவ கூட என்ஜாய் பண்ண வேண்டியது தான. நீயும் தான் அவ உன் பக்கத்துல இருந்தா ஹாட்டா தெரிவல” அவளும் பேசியதும் தான் அவள் கூறியதை தவறென்று உணர்ந்தாள். அவளது கௌதம் அப்படிப்பட்டவன் இல்லை என்று அவளுக்கும் தெரியாதா என்ன. இருந்தும் அவள் வாயிலிருந்து அப்படியொரு வார்த்தை வந்தது. அதற்கு காரணம், அவன் தனக்கு மட்டும் தான் என்ற எண்ணம். இது பெண்ணுக்கே உரிய குணம். தன்னவனை இன்னொருத்தி எப்படி அப்படி சொல்லலாம், அதற்கு இவனும் பதிலளிக்கிறானே என்ற கோபமே வார்த்தைகளாக வெளி வந்தது. சமீபமாக இருவருக்கும் இடையே புரிதல் குறைந்திருந்ததால் அவனும் அதை உணர மறந்தான்.

“ச்சே உன்னை திருத்தவே முடியாது சனு. உங்கிட்ட பேசறதே வேஸ்ட்” அங்கிருந்து கோபமாக கிளம்பியவன் மற்ற நண்பர்களுடன் தன்னை இணைத்துக் கொண்டான்.

அங்கிருந்த நண்பர்கள் மது அருந்திக் கொண்டிருந்தனர். இவன் வந்ததும் அவர்கள் இவனையும் மதுவருந்த சொன்னார்கள். இவன் முதலில் சந்தியா சொன்னதை மனதில் கொண்டு வேண்டாமென்றே மறுத்தான். பின் நண்பர்கள் இவனுடைய கெத்தை உயர்த்திச் சொல்லி உசுப்பேத்தினர். ஒருபுறம் ஆணவனுக்கு தன்னுடைய தன்மானம் அடிப்படக் கூடாதென்ற எண்ணம். இன்னொருபுறம், சந்தியா அவன் சொன்னதை கேட்காது வேறு உடையை அணிந்து வந்தது, இப்போது தன்னை புரிந்து கொள்ளாமல் சாஷாவை வைத்து தவறாக பேசியதெல்லாம் அவன் மனதை அரித்து கொண்டிருக்க, இவள் மட்டும் தன்னை புரிந்து கொள்ளமாட்டாள், தன் பேச்சை கேட்கமாட்டாள், சொல்வதை செய்யமாட்டாள், தான் மட்டும் எதற்கு அவளது வார்த்தைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு அவர்களுடைய இத்தனை வருட காதலில் முதன்முறையாக தோன்றியது. அத்துடன் மது அருந்தவும் செய்தான். ஒரு கட்டத்தில் எல்லையை மீறி குடித்திருந்தான்.

சந்தியா அங்கு தன்னந்தனியாக அமர்ந்திருந்தாள். சாஷா தான் சிறிதுநேரம் வந்து அவளிடம் பேசிவிட்டு சென்றாள். கௌதம் அவளை அப்படி தனியாக விட்டிருக்க மாட்டான். ஏனோ இப்போது ஒன்றாக இருந்தால், பிரச்சனை தான் அதிகமாகும் என்று தோன்றவே அவளிடமிருந்து விலகி நண்பர்களுடன் சேர்ந்து இப்போது மதுவும் அருந்திவிட்டான். வெகுநேரம் கழித்தே, அங்கே ஒரு ஓரமாக ஒடுங்கி அமர்ந்திருந்த சந்தியாவிடம் வந்தான். அவன், அவளருகில் வர வர அவன் நடையில் தெரிந்த தளர்வை வைத்தே நடந்தது என்னவென்று புரிந்துக் கொண்டாள்.

“குடிச்சிருக்கியா” கண்ணில் தீப்பறக்க அவள் கேட்க, கௌதமும் “ஆமா” என்றான். அவ்வளவே வேகமாக அங்கிருந்து கிளம்பினாள். நண்பனிடம் சொல்லிவிட்டு அவள் பின்னே சென்றவன், அவள் மின்தூக்கிக்குள் நுழைவதை பார்த்து தானும் அது மூடும் நேரத்தில் உள்ளே புகுந்தான்.

அவனை பார்த்த கோபத்தில், அவள் எந்த பொத்தானையும் அழுத்தாமல் விட, அது முன்பே அழுத்தப்பட்டிருந்த வண்டிகள் நிறுத்தும் அடித்தளத்திற்கு சென்றது. அங்கே தான் அவர்களும் வண்டியை நிறுத்தியிருந்தனர். அதனால் அவளை உடன் அழைத்துக் கொண்டு சென்றுவிடலாம் என்று மின்தூக்கியை விட்டு வெளியே வந்து விடுவிடுவென நடந்தவள் கையை பிடிக்க, அவள் அவன் கையை உதறிவிட்டாள்.

“சாரிடி. குடிக்கனும்னு செய்யல. எதோ ஒரு டென்ஷன்ல. ஐ ஆம் சாரி, நான் அப்படி செஞ்சிருக்க கூடாது தான்” என்று மீண்டும் அவள் கையை பிடித்தான்.

“கையை விடு கௌதம். நான் உன் கூட வந்திருக்கேன்னு தெரியும். என்னை நீதான் திரும்ப கூட்டிட்டு போகணும்னும் தெரியும். அப்படியிருந்தும் இப்படி குடிச்சிருக்க. எனக்கு குடிக்கறது பிடிக்காதுனு உனக்கே நல்லா தெரியும், இருந்தும் ஒவ்வொரு முறையும் உனக்கு பிடிக்கும்னு சைலண்ட்டா இருந்திருக்கேன். ஆனா, நீ இப்படி தான் நிதானம் இல்லாம குடிப்பியா கௌதம்” தன் கையை விடுவிக்க முயன்றுக் கொண்டே கேட்டாள்.

“அது.. அது இன்னைக்கு கொஞ்சம் லிமிட் மீறி போச்சு. ஐ ஆம் சாரிடி” அவன் சொல்ல “ச்சீ” அழுத்தமாக மறுபடியும் அவன் கையை உதறினாள்.

அந்நேரம் பார்த்து அங்கு வந்த விக்ரம், தன் வண்டியை நிறுத்த அடித்தளத்திற்கு வர, தூரத்திலிருந்து பார்த்தவனுக்கு நண்பர்கள் இருவரும் சண்டையிடுது போல் தெரிய, வண்டியை அவர்களுக்கு அருகே கொண்டு வந்து நிறுத்தியவன் இறங்கி ஓடிவந்தான்.

“டேய் என்னடா ஆச்சு. என்னாச்சு சந்து” விக்ரம் இருவரிடமும் கேட்டான். அவர்கள் தான் அவனுக்கு பதிலளிக்கும் நிலையில் இல்லை.

“சொல்லு கௌதம் இன்னும் என்னெல்லாம் கெட்ட பழக்கம் வச்சிருக்க. எல்லாத்தையும் சொல்லிடு, நான் பழகிக்கறேன். உன்னை கட்டிக்கிட்டு காலம் முழுக்க கஷ்டப்படனும்னு என் தலைல இருக்கு போல. சரி, பரவாயில்ல சொல்லு இப்போதிலிருந்தே பழகிக்க ஆரம்பிக்கறேன்” கண்ணீரை துடைத்துக் கொண்டு சொன்னவள் மீது கௌதமுக்கு கோபம் வந்தது.

“ஏன்டி, எதையும் நார்மலாவே பார்க்க மாட்டியா. நான் என்னமோ உன்னை கல்யாணம் பண்ணிட்டு கொடுமை பண்ணப் போற மாதிரி பழகிக்கறேன்னு சொல்ற. அவ வந்து எங்கிட்ட அப்படி பேசினா நான் எப்படி பொறுப்பாவேன். சொல்லப்போனா, நீ பண்ண டென்ஷன்ல தான் குடிச்சேனே”

“என்னது நான் உன்னை டென்ஷன் பண்ணேனா. நீயும் தான் என்னை டென்ஷன் பண்ற. நான் செய்யாதனு சொல்றத தான் செய்யற. நானும் போய் குடிக்கவா. வா பேசாம ஒண்ணா போய் டிரின்க் பண்ணலாம்” அவள் பேசியதில் அவன் அதிர்ந்துப் போனான். அத்தோடும் விடாமல், மீண்டும் உள்ளே செல்ல அவன் கையை பிடித்து இழுத்தாள்.

“என்ன பண்ற சனு. ஏன்டி இப்படி என் உயிரை போட்டு வாங்கற” என்று கத்தி, அவளது கையை உதறிவிட்டவன் “என்னமோ நீ சொன்னத நான் செய்யலனு சொல்றியே. நான் சொன்னத மட்டும் நீ செஞ்சியா. ஒரு டிரஸ் வாங்கிக் கொடுத்து போட்டுட்டு வர சொன்னா, எதையோ போட்டுட்டு வர. கேட்டா இறக்கிவிடுனு சொல்ற. என் கேரக்டர் என்னனு தெரியுமாடி உனக்கு. எவ்ளோ தான் நானும் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போறது. உனக்காக நான் என்ன செஞ்சாலும், அது வீண் தான். உன்னை பொறுத்தவரைக்கும் என்னை தப்பா பார்க்கிறதையே வேலையா வச்சிருக்க. எனக்கு பிடிச்ச எதையும் செய்யவிட மாட்டேங்கிற. அப்படி செஞ்சாலும் ஆயிரத்தெட்டு ரெஸ்ட்ரிக்‌ஷன்ஸ். இருந்தாலும் உன் மேல வச்ச லவ்வுக்காக எல்லாத்தையும் பொறுத்துகிட்டு தான போறேன். கடைசில உனக்காக மாறி மாறி எங்க ஒருநாள், நான் என்னையே தொலைச்சிடுவேனோனு இருக்கு. சரி அப்படி செஞ்சும் உனக்கு என்னை புரியுதா, அதுவும் இல்லையே. நீ என்னை காயப்படுத்திக்கிட்டே தான இருக்க. ச்சே ஏன் தான் இந்த லவ்வ பண்ணேன்னு இருக்கு” அவனது வார்த்தைகளில் அவள் சுக்கு நூறாக உடைந்தாள்.

தன்னை மீறி அவளுக்கு அழுகை வர, அடக்கமுடியாமல் அழுது கரைந்தாள். கௌதமுக்கு அவன் என்ன பேசினான் என்பதே அப்போது தான் புரிந்தது. அவளை சமாதானம் செய்ய அவளருகில் வர, அவன் சட்டையை பிடித்தவள் “என்னடா சொன்ன. நான் உன் உயிரை வாங்கறேனா. சொல்லுடா உனக்கு ஏன் இந்த லவ்வ பண்ணோம்னு இருக்கா. சொல்லுடா. சொல்லு” அவனை போட்டு உலுக்கினாள். கௌதமும் எதுவும் செய்யாமல் அவள் பிடியிலேயே இருந்தான்.

அதை பார்த்த விக்ரம் “சந்தியா என்ன பண்ற. முதல்ல அவன் சட்டைல இருந்து கையை எடு” அவள் பிடியிலிருந்து அவனை விடுவித்தவன் “ரெண்டுபேரும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க. ஒழுங்கா வந்து கார்ல ஏறுங்க. எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம்” என்றான்.

“எனக்கு பேசணும் விக்ரம். நீ எங்க ரெண்டுபேருக்கு நடுவுல வராத” சந்தியா சொல்ல அதற்கு மேல் விக்ரமால் மட்டும் என்ன செய்யமுடியும், அமைதியாக அனைத்திற்கும் சாட்சியாக நின்றான்.

மீண்டும் கௌதம் பக்கம் திரும்பியவள் “நீ எடுக்குற ரிஸ்க்ல உனக்கு எதாவது ஆகிட்டா நான் என்ன பண்ணுவேன். அதுக்காக தான் ரெஸ்ட்ரிக்‌ஷன்ஸ் போட்டேன். சொல்லு என்னைக்காவது உனக்கு பிடிச்சதை செய்யாதேனு ஒரேடியா நிறுத்திருக்கேனா. இதுவரைக்கும் நீ நினைச்சதை செஞ்சிட்டு தான இருக்க. நான் உன்னை லவ் பண்றேன் கௌதம், உனக்கு எதாவதுனா நான் இருக்கமாட்டேன். அதுக்காக தான் நீ சொன்ன ஆயிரத்தெட்டு ரெஸ்ட்ரிக்‌ஷன்ஸ். ஆனா, எப்ப அது ஒருநாள் உன்னையே தொலைச்சிடும் தோணுச்சோ அப்பவே எதுக்கும் அர்த்தமில்லாம போயிடுச்சு” கண்ணில் வழிந்து வந்த கண்ணீரை அழுத்தமாக துடைத்தவள்

“முடிச்சிக்கலாம். இனி நீ உன்னை இழக்கவேணாம். என்னை இழந்திடு. எனக்கு உன் சந்தோசம் தான் எப்பவும் முக்கியம். பிகாஸ், ஐ ஸ்டில் லவ் யு கௌதம். ஆனா, இப்பவும் உன்னை லவ் பண்ற இந்த முட்டாள் மனசு மேல எனக்கே கோவம் வருது. உனக்கு மட்டுமில்ல எனக்கும் இப்ப, இந்த நிமிஷம், இந்த லவ்வ ஏன் பண்ணேன்னு தோணுது. ஏன்னா அது தான உனக்கு எதாவது ஆயிடுமோனு என் நிம்மதியை கெடுக்குது. அதே லவ் தான, தினம் தினம் நீ நல்லா இருக்கனும்னு கட்டுப்பாடு வைச்சு உன்னுடைய தனித்துவத்தையும் கெடுக்க வைக்குது. அப்படிபட்ட லவ் நமக்கு வேண்டாம் கௌதம். பிரிஞ்சிடலாம்” அவளது ஒவ்வொரு வார்த்தையும் அவன் மனதை குத்தி கிழித்தது. இருந்தும் கோபமாகவே இருவருக்கும் வலியை தரும் வார்த்தைகளை பேசினான்.

“ஹ்ம்ம். முடிச்சிக்கலாம். நீ சொன்ன மாதிரியே பிரிஞ்சிடலாம். உனக்கும் உன் நிம்மதி கெட தேவையில்ல, எனக்கும் என் சுயத்தை இழக்க தேவையில்ல. பிரிஞ்சிடலாம்” அவன் நிதானத்தில் இல்லை. எல்லையை மீறி குடித்திருந்தான். இப்போது அவளது வார்த்தைகள் தந்த வலி கோபமாக வேறு மாறியிருந்தது. அதிலும் அவள் சொன்ன பிரிந்துவிடலாம் என்ற வார்த்தை அவனுக்குள் வெறியை ஏற்றியது. அத்தோடு அவனை காதலித்த மனதை, முட்டாள் மனமென்று அவள் சொன்னதில் அவனது தன்மானம் அடிப்பட, அது அவள் மீது கோபத்தை தான் வரவழைத்தது. ஏனோ இன்று சனுவின் கௌதம் காணாமல் தான் போயிருந்தான். சொல்லப்போனால் சந்தியா தான் அவனை காணாமல் போக செய்திருந்தாள்.

“ரெண்டுபேரும் என்ன பேசறீங்க. பிரியப்போறீங்களா. ஒழுங்கா மரியாதையா போய் கார்ல ஏறுங்க. நீங்க இப்ப நிதானத்துல இல்ல. இந்த டைம்ல எடுக்குற முடிவு தப்பா தான் போகும். பிரியறதா இருந்தா நாளைக்கு பிரிஞ்சிக்கோங்க. இப்ப வந்து கார்ல ஏறுங்க” விக்ரமை அவள் தலையிடாதே என்று சொல்லியும் தலையிட்டு இருவரையும் அவ்விடத்தை விட்டு கிளப்பப் பார்த்தான்.

அவர்கள் தான் சந்தியா கௌதமாயிற்றே. பிரச்சனையை அத்தோடு விடுவார்களா என்ன. அதுவும் சந்தியா இருக்கும் பட்சத்தில் அப்படி நடக்க வாய்ப்பே இல்லை.

“வா சந்து. நீயும் வா கௌதி” விக்ரம் இருவரையும் அழைக்க “நீ அவனை கூட்டிட்டு போ விக்ரம். எனக்கு இவன் கூட வர விருப்பம் இல்ல. நான் தனியா போயிக்கறேன்” என்றாள் சந்தியா.

“ஷட் அப் சந்து. என்ன பேசற நீ. எனக்கு நீ மட்டும் ப்ரண்ட் இல்ல. அவனும் தான் என்னோட ப்ரண்ட். அவன் ஃபுல்லா குடிச்சிருக்கான். இந்த கன்டிஷன்ல அவனால டிரைவ் பண்ணமுடியாது. அவனை அப்படியே விட்டுட்டு போக சொல்றீயா. இப்ப உங்க ரெண்டுபேரையும் வீட்ல விடறது என் பொறுப்பு. ஹ்ம்ம், போய் கார்ல ஏறு” விக்ரம் அதட்டியதும் அவள் சற்று அமைதியாக, கௌதம் ஆரம்பித்தான்.

“இல்லடா நான் வரல. எனக்கு இப்ப ட்ரின்க் பண்ணனும் போல இருக்கு. நீ இவளை கூட்டிட்டு கிளம்பு. இவ்ளோ குடிச்சிட்டு வீட்டுக்கும் போகமுடியாது. நான் ப்ரண்ட்’ஸ் ப்ளேஸ்ல இல்ல எதாவது ரூம்ல தங்கிக்கறேன். நீ கிளம்பு” என்றது தான் தாமதம்

“பார்த்தியா விக்ரம். எனக்கு பிடிக்காதுனு தெரிஞ்சும் இப்பவும் குடிப்பேன்னு சொல்றான். எனக்கு குடிக்கறதும் பிடிக்காது இன்னொருத்தங்க வீட்ல தங்குறதும் பிடிக்காதுனு தெரியும் தான” என்று சீறினாள் சந்தியா.

“நீ யாருடி எனக்கு. நீ ஏன் ரூல்ஸ் போடுற. அதான் பிரிஞ்சிடலாம்னு சொல்லிட்டல. போய் உன் நிம்மதியை பாரு. அடுத்தவனை பத்தி உனக்கென்ன கவலை. எனக்கு யாரும் இத பண்ணாத அத பண்ணாதனு சொல்றது பிடிக்காது. கௌதம் வில் லிவ் ஹிஸ் லைஃப் பை ஹிஸ் ஓன் ரூல்ஸ். எவனும், சாரி எவளும் என்னை கேட்க முடியாது” கௌதமும் சீறிக் கொண்டு பதில் வாதம் செய்ய, விக்ரம் தலையில் கை வைத்துக் கொண்டான்.

“அதானே நான் யாரு உனக்கு. எதுவுமில்லையே. கிளம்பு விக்ரம் அவன் போயிப்பான். அவனுக்கு தான் ப்ரண்ட் வீடு இருக்கே. வா போலாம்” என்றவள் அவனை இன்னும் நேசிக்க தானே செய்கிறாள். அவனிடம் ‘பார்த்து போ கௌதம்’ என்று சொல்ல வாயெடுத்தவள், ஏனோ அதை சொல்லாமல் “நான் போறேன் கௌதம்” என்றாள்.

இதற்குமேல் பேசி என்னவாக போகிறது என்று இருவரையும் முறைத்த விக்ரம் “கௌதி. நீ இங்கயே இரு, நான் போய் சந்துவ விட்டுட்டு டக்குனு வந்துடறேன். நீயா வண்டிய எடுக்காத. இட்’ஸ் நாட் ஸ்சேப் அட் ஆல்” என்று சொல்ல “இல்லடா நான் ட்ரின்க் பண்ணப் போறேன். எனக்கு மறக்க வேண்டியது ஏகப்பட்டது இருக்கு. அதனால டைம் எடுக்கும். நீ அவளை கொண்டுப் போய் பத்திரமா வீட்ல விடு. கூடவே இரு” என்றான். அந்நிலையிலும் இருவருக்கும் காதலும் அக்கறையும் இருக்கத் தான் செய்தது. அதை உணரத்தான் இருவரும் மறந்தார்கள்.

இருவரையும் முறைப்பதை தவிர வேறொன்றும் செய்ய முடியாதனாய் அமைதியாக சென்று வண்டியை எடுத்த விக்ரம் அவளையும் ஏற்றிக் கொண்டான். அவன் காரை எடுக்க சென்ற போதே கௌதம் அவளெதிரிலேயே பப்பிற்குள் செல்ல படிக்கட்டில் வேக எட்டுக்கள் வைத்து ஏறினான். அதை பார்த்தவளுக்கு உண்மையில் இருந்தது அவனை தடுக்க முடியாத ஆதங்கமே. ஆனால், அதற்கு அவள் வைத்த பெயர் தான் கோபம்.

காரில் ஏறியதிலிருந்து அழுது கொண்டிருந்தாள் சந்தியா. அதை கண்ணாடி வழியாக பார்த்த விக்ரமுக்கு கோபம் தான் வந்தது.

“இப்ப உனக்கு சந்தோஷமா. நான் எத பண்ணாதனு சொன்னேனோ அத பண்ணி, பண்ணி எங்க வந்து ரெண்டுபேரும் நின்னிருக்கீங்க பார்த்தியா” அவளை கண்ணாடியில் பார்த்து பல்லைக் கடித்து கொண்டு திட்டினான்.

“எதுவும் பேசாம வண்டிய ஓட்டுறதுனா, ஓட்டு விக்ரம். இல்ல, என்னை கீழ இறக்கி விட்டிடு” என்றவள் மீது எல்லையை கடந்த கோபம் ஒருபுறம் இருந்தாலும், இவளை திருத்தமுடியாது என்ற எரிச்சல் தான் அவனுக்கு மேலோங்கி இருந்தது.
 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிஜத்திற்கு வந்த சந்தியா இன்னமும் அழுகையை நிறுத்தவில்லை. அவளை பார்த்த சாவித்ரிக்கு பயம் தொற்றிக் கொண்டது. “சந்தியா சாரிடி. தெரியாம ஒரு கேள்வியை கேட்டுட்டேன். அதுக்காக, ஏன்டி இப்படி அழற. இனி நான் உங்கிட்ட எதுவுமே பேசல, சரியா. ப்ளீஸ் அழாதே” என்று அவள் சொல்ல, அவளை வேறு எதற்கு சங்கடப்படுத்த வேண்டுமென்று முயற்சி செய்து அழுகையை நிறுத்தினாள் சந்தியா. அவள் இறங்கும் இடம் வந்து, சந்தியா இறங்கி போன போதும், சாவித்ரி அவளையே தான் புரியாது பார்த்திருந்தாள்.

இறங்கிய சந்தியா, தரையை பார்த்து நடந்துக் கொண்டிருந்தாள். அப்போது அவள் சற்றும் எதிர்பார்க்காத இல்லையில்லை அவள் எதிர்பார்த்திருந்த குரல் தான் அவள் காதில் விழுந்தது.

“சனு” என்றான் அவள் அங்கே தான் இறங்குவாள் என்பதை நன்கறிந்து, அவளுக்காக தன் பைக்கில் சாய்ந்து காத்திருந்த கௌதம். அந்த குரல் அவளுக்கு கொடுத்த சந்தோசத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவன் வந்துவிட்டான். அவளுக்காக வந்துவிட்டான். இதயம் வேகமாக துடிக்க, அவனை நிமிர்ந்து பார்த்தாள். ஆம் அவனே தான் சிரித்த முகத்துடன் அவள் எதிரில் நின்றிருந்தான்.

அது கௌதமின் விதியா என்று தெரியவில்லை, அவனை பார்க்கும் வரை ஒவ்வொரு நொடியும் அவனை பார்க்க வேண்டுமென்று துடித்தவள், பார்த்ததும் திமிறிக் கொண்டு கடந்துப் போனாள்.

“நில்லுடி என்ன கொழுப்பா. இங்க ஒருத்தன் நின்னுட்டு இருக்கேன். நீ பாட்டுக்கு போற” என்றவனை ஒரு உணர்வற்ற பார்வை பார்த்துவிட்டு “யார் நீ” என்றாள்.

அவனும் தான் அவளது சிவந்த கண்களை பார்க்கிறானே. அழுதிருக்கிறாள் என்று நன்கு தெரிந்தது.

அவளை அப்படி பார்த்ததில் துடித்துப் போனவன் “என்னை தெரியலையா. நான் தான் உன் கௌதம்” முகத்தில் புன்னகை மாறாது சொன்னான். அவனுக்கு தெரியும் அவளை சமாளிப்பது சிரமம் தான். இருந்தும் அதற்கு தயாராகவே வந்திருந்தான்.

“தெரியல டா” என்றவளை அவன் எதுவும் பேசாமல் பார்த்துக் கொண்டே இருக்க “அதான் பிரேக்அப்னு முடிவு பண்ணியாச்சுல. அப்புறம் ஏன் வந்த” என்று தெனாவட்டாக சொன்னாள்.

“சரி பிரேக்அப்னே வச்சிக்கோ. அதுக்கு முன்னாடி கொடுத்த சிலதை திருப்பிக் கொடுக்க வேணாமா” என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் நக்கலாக கேட்டான்.

எதை திருப்பி தரவேண்டும் என்று யோசித்துக் கொண்டே கையை பார்த்தவளுக்கு, தன் கைபேசி கண்ணில் பட “இந்தா நீ கொடுத்த ஃபோன்” என்று அவனிடம் நீட்டினாள்.

“அடிங்க. இதை வாங்கவா நான் கோயம்பத்தூர்ல இருந்து பிளைட் பிடிச்சு ஓடி வந்தேன்” இவள் நமக்கு நிச்சயம் கோபமேற்றுவாள் என்றெண்ணியவன் ஒரு ஆழ பெருமூச்சை வெளியே விட்டு பேச ஆரம்பித்தான் “நாம பிரேக்அப் பண்றதுக்கு முன்னாடி, நீ எனக்கு கொடுத்த ஹஃக்ஸ், நான் உனக்கு கொடுத்த ஹஃக்ஸ். அப்புறம் நீ எனக்கு கொடுத்த கிஸ்ஸஸ், நான் உனக்கு கொடுத்த கிஸ்ஸஸ், எல்லாத்தையும் திருப்பி தரணும்” என்று குறும்பு சிரிப்பு சிரித்தவன் மீது அவளுக்கு எரிச்சல் வர

“ச்சீ.. நாம என்னைக்கு டா கிஸ் பண்ணிக்கிட்டோம். என்ன பிரச்சனை பண்ண வந்திருக்கியா” என்று முகம் சிவக்க முறைத்துக் கொண்டே கேட்டாள்.

அதற்கெல்லாம் அஞ்சாதவன் “சரி இனி கொடுக்க போறத, இப்பவே திருப்பிக் கொடுத்து செட்டில் பண்ணிடுவோம். முதல்ல வண்டில ஏறு” என்று சொல்ல “வர முடியாதுடா” என்றாள் அவனுக்கு சற்றும் சளைக்காதவள்.

“திமிருப்பிடிச்சவளே. ரொம்ப தான்டி பண்ற. அது எப்படி ஊருக்கே வாய் திறக்காம இருக்க. எனக்குனு வந்தாமட்டும் இந்த பொள பொளக்கற. இப்ப, நீயா ஏறுறியா, இல்ல நானா என் கையால தூக்கி உட்கார வைக்கவா. ஆல்ரெடி மூணு மாசம் கஷ்டப்பட்டுட்டேன். இதுக்குமேலயும் உங்கிட்ட பேசாம இருக்கமுடியாது சனு. ப்ளீஸ் ஏறுடி” மிரட்டலையும் கெஞ்சுதலையும் ஒன்று சேரச் செய்தான்.

அவளுக்கும் இதற்கு மேல் அடத்தை காட்ட விருப்பமில்லை “அம்மா, அப்பா, இல்ல வேற யாருனா பார்த்திடுவாங்க கௌதம்” என்றாள்.

“அதெல்லாம் யாரும் பார்க்கமாட்டாங்க. உன் தம்பி டென்த்ங்கறனால மேத்ஸ் டியூஷன் போயிருக்கான். அம்மா கோயில் போயிருக்காங்க. சாவியை கூட விக்கி வீட்டு வாட்ச்மேன்கிட்ட தான் தந்துட்டு போயிருக்காங்க. அப்பாவை, விக்கி பாண்டிச்சேரி கூட்டிட்டு போயிருக்கான். இன்னைக்கு வீட்டுக்கு வரமாட்டாருனு உங்கிட்ட சொல்லலையா” என்றான் குறும்பாக சிரித்துக் கொண்டே.

அனைத்தையும் ஏற்பாடு செய்துவிட்டு தான் வந்திருக்கிறான் என்று தோன்றியவளுக்கு “பாவம் கௌதம், அவருக்கே அடிக்கடி உடம்பு முடியாம போகுது. நீ என்னனா உன்னோட சுயநலத்துக்காக விக்ரமை வச்சி பாண்டிச்சேரி கூட்டிட்டு போக சொல்லிருக்க” என்றவளை ஏற இறங்க பார்த்துவிட்டு “ஹலோ நான் யாரையும் அனுப்பல. விக்கி எதோ கசின் மேரேஜுக்கு லாஸ்ட் மினிட்ல போகலாம்னு முடிவு பண்ணி கிளம்பிருக்கான். அவன் அப்பா பாண்டிச்சேரின்னதும் அவ்ளோ தூரம் தனியா ட்ரைவ் வேண்டாம்னு உங்க அச்சனை கூட அனுப்பியிருக்காரு. அவன் போறான்னு தெரிஞ்சதும் நான் ஜஸ்ட் அந்த சிச்சுவேஷன யூஸ் பண்ணிக்கிட்டேன்” என்றான்.

அதன்பின் அவள் அவனது பைக்கில் ஏற, இருவரும் கடற்கரையை வந்தடைந்தனர்.

கடற்கரை மணலில், அவள் அமைதியாக அமர்ந்திருக்க “சாரி சனு. அன்னைக்கு நான்..” என்று அவன் பேச ஆரம்பிக்கும் போதே

“பேசாத. மூணு மாசமா உன்னால நான் இல்லாம இருக்க முடிஞ்சிதுல. ஆனா, என்னால முடியல கௌதம். எப்படி உடைஞ்சி போயிட்டேன் தெரியுமா. இன்னைக்கு என் ப்ரண்ட் சாவி கூட கேட்டா, நீ யாரையாவது லவ் பண்றியான்னு. என்னால எந்த பதிலும் சொல்ல முடியாம அழுகை தான் வந்துச்சு. நான் என்ன சொல்லுவேன், நீ ஒரேடியா வெறுத்துட்டேனு நினைச்சிட்டேன். நீ திரும்பி வரவே போறதில்லனு ஆகிட்ட போது நான் என்னனு சொல்லமுடியும். அழுதுகிட்டே பஸ்ஸை விட்டு இறங்கினா, நீ வந்து நிக்கற. ஏன் கௌதம் இப்படி பண்ண. நீ ஏன் என்னை தேடி வரல” அவள் பேச பேச அவனுக்கு ஏனோ கோபம் தான் வந்தது.

“உனக்கு எப்பவும் என்மேல நம்பிக்கை இருக்காதுல சனு. நான் திரும்பி வருவேன்னு உனக்கு எப்படி நம்பிக்கை இல்லாம போச்சு. இவ ப்ரண்ட் கேட்டாளாம், இவ நான் திரும்பி வரமாட்டேன்னு முடிவு பண்ணிட்டனால, இவளால ஒண்ணும் சொல்ல முடியலயாம். எப்ப தான்டி என்னை நம்புவ” அவன் அவளிடம் சீற

“அப்படியெல்லாம் இல்ல கௌதம்” மீண்டும் கோபப்பட்டு சென்றுவிட கூடாதென்று அவன் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.

அவனோ “நான் வருவேன்னு நீ நம்பல தான” சொல்லிவிட்டு முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டான்.

“இல்ல கௌதம். நான் பயந்துட்டேன்” அவன் முகத்தை தன்பக்கம் திருப்பி சொன்னாள்.

அப்போது அவள் கண்களில் கண்ணீரை பார்த்தவன் “உனக்கு எதுக்கு தான் பயம் இல்ல. எல்லாத்துக்கும் பயந்திடு, அழுதிடு” என்றான்.

அவன் சொன்னதில் அவள் மௌனமாக மணலை வெறிக்க “இங்க பாரு, நான் உன்னை எப்பவும் விட்டுட்டு போகமாட்டேன். எவ்ளோ நாள் ஆனாலும் சரி, திரும்ப வருவேன். ஆனா நான் திரும்ப வருவேன்ங்கற நம்பிக்கைய நீதான் வைக்கனும்” என்று அவன் சொல்ல அவனது தோளில் சாய்ந்து கொண்டவள்

“சாரி கௌதம் தப்பு என்மேல தான். எதோ ஒருநாள் ட்ரின்க் பண்றனு விடாம நான் தான் அத பெரிசாக்கிட்டேன். இதெல்லாம் எனக்கு ரொம்ப லேட்டா தான் புரிஞ்சிது. அதுமட்டுமில்ல சாஷா பிரச்சனையை நான் அப்பவே விட்டுட்டேன். ஒரு பொசஸிவ்னெஸ்ல உங்கிட்ட சண்டைப் போட்டது உண்மை தான். எனக்கு அது கொஞ்சநேரத்துலேயே தப்புனு புரிஞ்சிடுச்சு. அப்புறம் சாஷாவும், நான் தனியா இருந்தப்போ எங்கிட்ட அவளே வந்து பேசினா. நீ ரொம்ப நல்லவன், எல்லா கேர்ள்ஸ்கிட்டயும் நல்லா பழகுவ, ஆனா தப்பான எண்ணத்துல ஒருநாளும் யாரையும் பார்த்ததில்லனு சொன்னா. எப்பவோ பார்க்கற அவளுக்கு இருக்குற நம்பிக்கை ஏன் எனக்கு இல்லாம போயிடுச்சினு எனக்கே என்னை நினைச்சு அசிங்கமா இருந்துச்சு. எல்லாத்துக்கும் சேர்த்து உங்கிட்ட சாரி கேட்கலாம் தான் இருந்தேன். அதுக்குள்ள நீ ட்ரின்க் பண்ணிட்டு வந்தியா, அதோட மொத்த கதையும் மாறி போச்சு”

“அந்த டிரஸ்ஸும் நான் ஒண்ணும் வேணும்னு போடாம இல்ல. வீட்டுல அதை நான் போட்டா, தேவையில்லாத கேள்வி வரும். விக்ரம் வீட்டுலலாம் என்னால டிரஸ் மாத்தமுடியாது. நான் வேற எங்க மாத்துவேன். அதான் போடல. இத நானும் பொறுமையா சொல்லிருக்கணும் அங்க தான் தப்பு பண்ணிட்டேன். ஆனா, இந்த மூணு மாசம், நான் எவ்ளோ அழுதிருக்கேன் தெரியுமா. ப்ளீஸ் கௌதம், இன்னொரு டைம் என்னை விட்டுட்டு போயிடாத” என்றவளின் முகத்தை நிமிர்த்திப் பார்த்தான். இவளிடம் பேசாமல் இருந்து எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோம் என்பதை உணர்ந்தான்.

“சனு. நீ எந்த தப்பும் பண்ணலைடி. நான் அப்படி ட்ரின்க் பண்ணிருக்கக் கூடாது. அதுவும் உன்னை கூட கூட்டிட்டு போயிட்டு அப்படி நடந்திருக்கக் கூடாது. அன்னைக்கு ஏதோ கன்ட்ரோல் இல்லாம என்னன்னமோ நடந்திடுச்சு. சாரிடி” தன் செயலை எண்ணி வருந்துவது அவன் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.

“உனக்கு என் மேல கோவம் போக, மூணு மாசம் ஆச்சா கௌதம். அவ்ளோ நான் உன்னை படுத்திட்டேனா” என்றவளை பார்த்து சிரித்தவனை, ஏன் சிரிக்கிறாய் என்பதாய் பார்த்தாள் சந்தியா.

“அது கோவமெல்லாம் ரெண்டுநாளுல போயிடுச்சு. என்னமோ தெரியல, இந்த டைம் நீயா வரட்டும்னு ஒரு ஈகோ. நானும் என் சனு பேபி வருவா வருவானு மூணு மாசம் வெயிட் பண்ணிட்டேன். நீ வரவே இல்ல. இதுக்கு மேலயும் என்னால உன்னை பார்க்காம, பேசாம இருக்கமுடியாது. அதான் விக்கி சொன்னதும் ஓடி வந்துட்டேன்”

“ஓ.. எங்கிட்ட ஈகோலாம் பார்க்க ஆரம்பிச்சிட்டீங்களா கௌதம்” அவள் சொல்லி முறைக்க “ஐயோ முறைக்காதடி, இன்னொரு சண்டைய நான் தாங்கமாட்டேன்” அவளை கெஞ்சலாக பார்த்துச் சொன்னான்.

“இல்லல்ல. நான் தான் அன்னைக்கு ஓவரா நடந்துக்கிட்டேன். சொல்லப்போனா நான் தான் உன்னை சமாதானம் பண்ணிருக்கனும். ஐ ஆம் சாரிடா” மறுபடியும் அவன் தோளில் சாய்ந்தவள் “உனக்கு தான் தெரியும்ல, எனக்கு குடிச்சா பிடிக்காதுனு. இந்த ஒண்ண மட்டும் அச்சாகிட்ட என்னால மாத்தவே முடியல. அட்லீஸ்ட் உங்கிட்ட மாத்தலாம்னு நினைச்சா, நீ மொடா குடிகாரன் மாதிரி ஃபுல்லா குடிச்சிட்டு வந்து நின்னியா. அதுக்கப்புறம் நான் என்ன பண்னேன், என்ன பேசனேன்னு எதுவும் புரியல”

“ஏன்டி, என்னை இந்த திட்டு திட்டறீயே, அதே திட்டை உங்க அப்பாக்கு விட்டிருந்தா இந்நேரத்துக்கு குடிக்கறத விட்டிருப்பாருல. உன்னால முடியும் சனு. மை பேபி கேன் டூ இட். அவளுக்கு அந்த டேலன்ட் இருக்கு” அவன் தோளில் சாய்ந்திருந்தவளின் கன்னத்தை வருடியப்படியே அவளை கேலி செய்ய, அவனை எழுந்து முறைத்தவள்

“உங்கிட்ட செய்யறத அப்பாகிட்ட என்னால முடியாது கௌதம்” அவள் சொல்ல அது ஏன் என்ற பார்வையோடு அவன் அவளை பார்க்க “ஏன்னா எனக்கு என் அச்சாவை அவ்ளோ பிடிக்கும். அவர் அவருக்குன்னு வேறெதுக்கும் செலவு பண்ணிக்கிட்டது இல்ல. இது கூட அவரோட உடம்பு அசதிக்கு பழகிகிட்டது. அச்சா ரொம்ப கஷ்டப்பட்டுட்டாரு கௌதம். அவருக்கு நானும் சக்தியும் தான் உலகமே. அதுலயும் என்மேல இன்னும் அதிக பாசம். உனக்கு தெரியும் தான இன்னைக்கும் நைட்ல அவர் தான் எனக்கு ஊட்டிவிடுவார். அவருடைய மிகப் பெரிய சொத்தே நான் தான்னு எப்பவும் சொல்லுவார். அப்படி என் மேல உயிரையே வச்சிருக்கிறவர்கிட்ட என்னால கோபத்தை காட்டமுடியாது. அவருக்கு மட்டுமில்ல எனக்கும் அவர் தான் உயிர்” என்றாள்.

தந்தையென்று வந்துவிட்டால் அவளால் எதைப்பற்றியும் யோசிக்க முடியாது. அவர் தான் முதல், அவருக்கு பின் தான் மற்றதனைத்தும். அதில் கௌதமும் அடங்குவானா.?

“அது சரி. அப்பாவை பேச முடியாது, ஆனா என்னை பேசலாம். இவங்க அப்பா, அம்மா தான், இவளை சொத்தா நினைச்சி பெத்து இருக்காங்க. எங்க அப்பா, அம்மாலாம் சொத்து நிறைய கிடக்கே, அதை செலவு பண்ண ஆள் இல்லாம போயிடுச்சேனு என்னை பெத்து இருக்காங்க. அதனால் கௌதம் என்பவன் பேச்சு வாங்கலாம்” அவன் நையாண்டியாக சொல்வது போல் நொந்து கொள்ள, அதை கேட்டவளுக்கு சிரிப்பு தான் வந்தது.

“சரி நீ ரொம்ப சந்தோஷப்படற ஒண்ண நான் சொல்லவா” அவள் கையை பிடித்து கேட்டவனிடம், என்ன என்ற பார்வை அவள் பார்க்க “நான் குடிக்கிறத விட்டுட்டேன். அன்னைக்கு தான் லாஸ்ட்டா குடிச்சேன். அதுக்கு அப்புறம் மூணு மாசமா தொடக் கூட இல்ல. இனிமேலும் தொடமாட்டேன்” சொன்னவனை காதலோடு பார்த்தாள். தந்தையிடம் சாதிக்க முடியாததை அவனிடம் சாதித்துவிட்ட பெருமிதம் அவள் கண்ணில் தெரிந்தது, அதை அவனும் கண்டான்.

இருந்தும் அவன் தனக்காக பிடித்த ஒன்றை விட்டுவிட்டான் என்ற வருத்தமிருக்க “இல்ல கௌதம். நான் தான் விக்ரம் சொன்ன மாதிரி, உன்னை ரொம்ப பிரஷர் பண்ணிட்டேன். இனி அப்படி பண்ணமாட்டேன். இனி நீ ட்ரின்க் பண்றப்போ, எங்கிட்ட கேட்க கூட தேவையில்ல. ஆனா லிமிட்டா மட்டும் வச்சிக்கோ ப்ளீஸ்” என்று கூற

“இல்லல்ல என் சனுக்கு பிடிக்கலல. சோ, வேண்டாம். முதல்ல உனக்கு யார் சொன்னா, நீ என்னை பிரஷர் பண்றனு. அதெல்லாம் எனக்கு வேணும்னா அத நான் எப்படியாவது செய்வேன். இங்க பாரு, நீயா என் கைய உன் கைக்குள்ள வச்சிக்கிட்டு இல்ல. நானே தான் ஆசைப்பட்டு உன் கைக்குள்ள என் கையை வச்சிருக்கேன். அதுல எனக்கு சந்தோசம் தான். நம்ப லைஃப் மேல இருக்குற அக்கறைல தான், விக்கி அப்படி சொல்றான். நாமளும் அதுக்கேத்தா மாதிரி சண்டை போட்டுக்கிட்டே இருக்கோமா, அதான் அவன் பயந்து அப்படி சொல்லிருப்பான்” என்றவனை பார்த்தவளுக்கு, இவனுடனா பிரிந்துவிடலாம் என்ற முடிவை எடுத்தோம் என்று தன்னை தானே திட்டிக் கொண்டாள்.

“ஏன் சனு பேபி. இந்த சில்லுனு ஒரு காதல் மூவில வர மாதிரி நிஜத்துல கூட உட்கார்ந்து ஊத்தி குடுக்கற பொண்டாட்டிலாம் கிடைக்காதுல. அந்த கௌதம் கொடுத்து வச்சவன், குந்தவி ஊத்தி குடுத்து புருஷன் குடிக்கறத ரசிக்கறா. இந்த கௌதம் அதெல்லாம் ஆசைப்பட்டேன், என் சனு என்னை குனிய வச்சு குத்துவா” என்றவனை அவள் பார்த்த ஏமாற்ற பார்வையில் “ஹா ஹா. சும்மா சனு. ஜோக்ஸ் அபார்ட், மூணு மாசமா பசங்க எவ்ளோ டெம்ப்ட் பண்ணியும் குடிக்காம கன்ட்ரோலா இருக்கேன். லைஃப்லாங் உனக்கு கொடுத்த வார்த்தைய காப்பாத்திடுவேன்னு நம்பிக்கை இருக்கு. இருந்தும் உன் கௌதம் அவனை மீறி எதாவது தப்புப் பண்ணா, அவனை மன்னிப்ப தான பேபி” சொல்லிய தன்னவனை மெச்சிக் கொண்டாள் சந்தியா.

அத்தோடு “ஓ.. அதுக்கு தான் லாஸ்ட்டா குடிக்க திரும்ப போனியா” என்று அவனை நக்கலும் அடித்தாள்.

“அப்படியும் சொல்லலாம்” இன்னமும் கையை விடாமல் சொன்னான்.

அடித்தாலும் பிடித்தாலும் கோபப்பட்டாலும் காதல் கொண்டாலும், இனி இருவரும் எப்போதும் ஒன்றாகவே இருக்கும் முடிவை எடுத்தனர்.


உண்மையாகும்..


உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..
 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் - 22

முந்தைய நாள் நடந்ததை வைத்து அடுத்த நாள் வகுப்பில் சாவித்ரி சந்தியாவிடம் பேசவே பயந்தாள். சந்தியாவோ சாவித்ரியை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருந்தாள். மதியநேரம் வந்ததும் வேகமாக உணவருந்திவிட்ட சந்தியா, சாவித்ரியிடம் பேசுவதற்காக காத்திருக்க, அவளோ ரெகார்ட் நோட் எழுதிக் கொண்டிருந்தாள்.

பொறுமை இழந்த சந்தியா “சாவி.. சாவி..” என்று அவளது ரெகார்ட் நோட்டை மூடினாள்.

“சாரி சந்தியா, தெரியாம உன்னை பார்த்து அப்படியொரு கேள்வியை கேட்டுட்டேன். இனி நான் உன்னை எதுவும் கேட்கமாட்டேன். எதோ தெரியாம செஞ்சதுக்கு நேத்து ஃபுல்லா அழுத, இன்னைக்கு முறைக்கற” பாவம் சாவித்ரி பதற்றமாகி விட்டாள்.

“ஹேய் என்னது, நான் முறைச்சேனா. ஜஸ்ட் உன்னை பார்த்தேன்” சிரித்துக் கொண்டே சொன்னவளை சாவித்ரி ஆச்சர்யமாக பார்த்தாள். இத்தனை வருடங்களில் இது தான் முதல்முறை அவள் இவளிடம் இப்படி பேசுவது. “நேத்து நீ ஒரு கேள்வி கேட்டல. அதுக்கு பதில் சொல்லவேணாமா. கேன்டீன் போலாமா” என்று அடுத்த அதிர்ச்சியை சாவித்ரிக்கு தந்தாள். சாவித்ரிக்கு தெரியவில்லை அடுத்தது இதை விட பெரிய அதிர்ச்சியாக இருக்கப் போகிறதென்று.

கேன்டீனில் இருவரும் வெனிலா மில்க்‌ஷேக் வாங்கிக் கொண்டு வந்தமர்ந்ததும் “நேத்து யாரையாவது லவ் பண்றியானு கேட்டல” மறுபடியும் அதே கேள்வியை கேட்டாள் சந்தியா.

“ஆமா. தெரியாம கேட்டுடேன்டி. விட்டுடேன்” பாவமாக கெஞ்சினாள் சாவித்ரி.

“இல்லல்ல நீ கரெக்டா தான் கேட்ட. ஆமா லவ் பண்றேன். நான் கௌதமை லவ் பண்றேன்” சொன்னவளின் கண்களில் எத்தனை பெருமிதம், எத்தனை மகிழ்ச்சி.

அதை பார்த்த சாவித்ரிக்கு “நிஜமாவா சந்தியா. இல்லல்ல நிஜமா தான் இருக்கனும். நீயெல்லாம் வாயாலயே பேசமாட்ட. இன்னைக்கு கண்ணால பேசிட்டு இருக்கியே” என்றவளை செல்லமாக முறைத்தவள் “நீ இத என் கௌதம்கிட்ட சொல்லிருக்கணும். என்ன, உனக்கு பேச தெரியாதுனு உன் ப்ரண்ட் சொன்னாங்களானு ஷாக் ஆயிடுவான்” சொல்லிவிட்டு சிரித்த சந்தியா சாவித்ரிக்கு புதிதாக தெரிந்தாள்.

“சரி, எங்க அவங்க போட்டோ காட்டு” இப்போதே நிம்மதி அடைந்து மில்க்‌ஷேக்கை உறிஞ்சிக் கொண்டே சாவித்ரி கேட்க, தன்னுடைய வாலெட்டை திறந்து தாய் தந்தை புகைப்படத்தை தூக்கி, தன்னவன் புகைப்படத்தை வெளியே எடுத்துக் கொண்டே “அது ஃபோன்ல வச்சா என் தம்பி கண்டுபிடிச்சிடுவான்னு மத்ததெல்லாம் மெயில்ல இருக்கு” சொன்னவள் அவளிடம் அவன் புகைப்படத்தை காட்டினாள்.

“ஹேய் செம ஹாண்ட்சம்மா இருக்காங்கடி” சாவித்ரி சொன்ன நொடி அவளை முறைத்துவிட்டு அவளிடமிருந்து அவன் புகைப்படத்தை பிடுங்கினாள். அதற்கு சாவித்ரி “என்னடி இப்படி பிடுங்கற. நிஜமாவே நல்லா இருந்தாங்க, அதான் சொன்னேன். நான் தான் பிரேமை லவ் பண்றேன்ல. அப்புறம் என்ன” என்று சொல்ல மறுபடியும் அவளிடம் புகைப்படத்தை பார்க்கக் கொடுத்தாள்.

“இவங்கள நான் எங்கயோ பார்த்திருக்கேன் சந்தியா” சாவித்ரி நெற்றிப் பொட்டில் தட்டி யோசிக்க, சந்தியாவே “செல்வராணி சில்க்ஸ்” என்று குறும்பு சிரிப்போடு எடுத்துக் கொடுக்க

“ஹான் ஆமா ஆமா. அந்த ஆட்ல வருவாங்கல. ஞாபகம் வந்திடுச்சு. ஞாபகம் வந்திடுச்சு. என்னடி மாடல் பையனா பார்த்து பிடிச்சிட்ட போல. சைலண்ட்டா இருக்க பொண்ணை நம்ப கூடாதுப்பா” என்றவளை பார்த்து கலகலவென சிரித்தவள்

“ஐய்யே செல்வராணி சில்க்ஸே அவங்களுது தான். நான் தான் அவனை அவங்க கடை ஆட்ல நடிக்க சொன்னேன். அதுக்கு தான் அவனும் நடிச்சான்” தோளை குலுக்கி சாதாரணமாக சொன்னாள்.

“என்னடி இப்படி பொசுக்கு சொல்லிட்ட. நிஜமாவா. செல்வராணி சில்க்ஸா. ஹேய் பிடிச்சதும் தான் பிடிச்ச பெரிய புலியம் கொம்பா தான் பிடிச்சிருக்க”

“அதெல்லாம் நான் ஒண்ணும் பிடிக்கல. அவன் தான் என் பின்னாடியே சுத்தினான்” அவன் முதலில் பிடித்திருக்கிறது என்று சொன்னது உண்மை தான். ஆனால் அவனுக்காக இவளும் தானே தன்னந்தனியே செல்வராணி சில்க்ஸ் வரை சென்று, தனக்கு அவன் மீதுள்ள காதலை சொன்னாள். ஆனால் தோழியிடம் சொல்லும் போது அவளுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் சொல்கிறாள். இது பெண்ணிற்கே உரிய குணம். விருப்பத்தை தெரிப்பதில் அவர்களின் பங்களிப்பை எப்போதும் வெளியே சொல்ல விரும்பமாட்டார்கள். எது எப்படியோ இன்னமும் சாவித்ரி அவளை ஆச்சர்யம் குறையாமல் தான் பார்த்திருந்தாள்.

“ஒருநாள் அவங்கள கூட்டிட்டு வாடி. நானும் பிரேமை கூட்டிட்டு வரேன். எங்கயாவது வெளில போலாம்” என்ற சாவித்ரிக்கு பூம் பூம் மாடுப் போல் சரியென்று தலையாட்டினாள் சந்தியா.

சாவித்ரி சொன்னது போல் நால்வரும் ஒருநாள் பதினைந்தாவது மாடியில் அமைந்திருக்கும் திறந்தவெளி ரெஸ்ட்டாரண்ட்டுக்கு வந்திருந்தனர். சந்தியாவும் கௌதமும் ஒருபுறம் அமர எதிர்புறம் சாவித்ரியும் அவளது காதலன் பிரேமும் அமர்ந்திருந்தனர்.

கௌதம் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து சந்தியாவிற்கு செய்தான். சந்தியாவிற்கு அசைவ உணவு சாப்பிட பிடிக்காது. வீட்டில் முத்துகிருஷ்ணன் தான் உடம்புக்கு வலுத்தரும் என்று வற்புறுத்தி ஊட்டிவிடுவார். வெளியே கௌதம் அந்த பொறுப்பை ஏற்று அவளை வற்புறுத்தி சாப்பிட வைப்பான். சந்தியாவும் மற்றவர்களிடத்தில் சாப்பிடமாட்டேன் என்று ஒரே வார்த்தையில் மறுப்பதை சாவித்ரியும் பார்த்திருக்கிறாள். ஆனால் இன்று அவன் சொல்வதை இவள் கேட்பதும், இவளை அறிந்து அவன் இவளை அழகாக பார்த்துக் கொள்வதையும் பார்த்தவளுக்கு அவர்களது காதல் மிகவும் பிடித்த ஒன்றாகி போனது. அதன் பின் வந்த நாட்களிலும் சாவித்ரி, கௌதம் அவளை உள்ளங்கையில் வைத்து நன்றாக பார்த்து கொள்வதையும், சந்தியா அவன் பேச்சை மீறாமல் நடப்பதையும் பார்த்தும் இருக்கிறாள் ரசித்தும் இருக்கிறாள். அதனால் தான் கௌதமை பற்றி சந்தியாவிடம் அவளால் கேட்காமல் இருக்க முடியவில்லை.

நால்வரும் சாப்பிட்டு முடித்ததும், சாவித்ரியும் பிரேமையும் கிளம்ப ஆயத்தமாக, சந்தியாவின் முக மாற்றத்தை கவனித்த கௌதம், தாங்கள் சிறிதுநேரம் இருந்துவிட்டு வருகிறோம் என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தான்.

“என்னாச்சு பேபி ஏன் டல்லா இருக்க. உடம்பு எதாவது முடியலையா” அவன் சொன்னது தான் தாமதம், அவன் கையை பிடித்து “என் மேல இவ்ளோ பாசம் வச்சிருக்க. எனக்காக ஒவ்வொண்ணையும் பார்த்து பார்த்து செய்யற, அப்புறம் ஏன் கௌதம் என்னை மூணு மாசம் விட்டுட்டு போன” என்று கேட்டுக் கொண்டே அழ ஆரம்பித்துவிட, அவள் கண்ணீரை துடைத்தவன்

“அதான் சொன்னனேடி. உன் மேல கோவமில்லனாலும் எதோ ஒரு ஈகோ..” அவனுக்கு இந்நேரத்தில் அந்த பதிலை கூறவே அவமானமாக இருந்தது. இவளிடத்திலா தன் அகந்தையை காட்டிவிட்டோம் என்று வெட்கப்பட்டான்.

“எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா. நீ இனி வரவேமாட்டேனு தோணிடுச்சு. அதோட இதுக்கு மேல நான் ஏன் உயிரோட இருக்கனும், செத்து போயிடலாம்னு கூட தோணுச்சு. நீ மட்டும் இன்னும் லேட் பண்ணிருந்தா, நீ என்னை பார்த்திருக்கவே முடியாது கௌதம்” சொன்னவளை அதிர்ந்து பார்த்தவன் “என்ன பேசற சனு. இப்படிதான் பேசுவேனா இனி எப்பவும் நான் உன் கூட பேச போறதில்ல” கோபமாக தன் இருக்கையிலிருந்து எழுந்தான்.

அவனை இழுத்து அமர்த்தியவள் “இல்லல்ல இனி அப்படி பேசமாட்டேன். ஆனா அதுக்கு நீ எப்பவும் என் கூட இருக்கனும். நீ இல்லனா சொல்லமுடியாது” என்றவளை முறைத்தவன் “நான் எங்க போகப் போறேன். உங்கூட தான் இருப்பேன். ஆனா, இது என்ன தாட்ஸ் சனு. தைரியமா இருக்க வேண்டியதுக்கெல்லாம் இல்லாம உனக்கு எதுக்கு தைரியம் வருது பார்த்தியா. யாரு இருக்காங்க இல்லங்கறத தாண்டி நம்ம லைஃப்ப நாம வாழணும். அதான் வாழ்க்கை” என்றவன், அவள் அவ்வாறு சொன்ன நொடி அவன் ஜில்லிட்டு போயிருந்தான்.

“இல்லல்ல இது சரிப்பட்டு வராது. நான் இருக்கேன் இல்ல, என் சனு தைரியமான பொண்ணா அவ லைஃப்ப வாழ்வா, எப்பவும் தப்பான முடிவை நோக்கி போகவே மாட்டானு என் தலையில கை வச்சு சத்தியம் பண்ணு” அவனுடல் இன்னுமே நடுங்கியது. ஒருவேளை தான் இன்னும் சிறிது காலம் தாமதித்திருந்தால் என்னவாகி இருக்கும் என்று நினைக்கவே அவனுக்கு குலை நடுங்கியது. அதை வைத்தே அவளை அவன் மீது சத்தியம் செய்ய சொன்னான்.

முதலில் மறுத்தவள் பின் “சரி உன் மேல ப்ராமிஸ்” என்றவளை ஆழமாக பார்த்தவன் “என் மேல ப்ராமிஸ் பண்ணிருக்க. எதாவது தப்பா பண்ண, நீ போன அடுத்த நொடி நானும் உன் பின்னாடியே வந்திடுவேன். கௌதம் இருக்கறது சந்தியா இருக்கறத பொறுத்து தான் இருக்கு. எல்லாம் உன் கைல தான். பார்த்துக்கோ” கடுமையாக சொன்னவனுக்கு சரியென்று தலையை இடதும் வலதுமாய் ஆட்டினாள்.

அவனுக்கு இன்னும் அந்த பதற்றம் குறையவே இல்லை. அது கோபமாகவும் மாற “ஏன் நான் வரலனா என்ன, நீ வரமாட்டியா. ட்ரைன் ஏறி வருவேனு வாய் கிழிய சொன்ன தான. கிளம்பி வரவேண்டியது தான” அவளிடம் சீறியவனை நிதானமாக பார்த்தவள் “நீ தான் ஒருநாள் உன்னையே தொலைச்சிடுவேனோனு இருக்குனு சொன்னியே கௌதம். அதுக்கப்புறம் நான் எப்படி வருவேன்” என்றாள்.

அவளை நெஞ்சில் சாய்த்தவன் “சாரிடி.. நான் அன்னைக்கு அப்படியொரு வார்த்தையை சொல்லியிருக்க கூடாது. ஐ ஆம் சாரி பேபி. நான் உன்னை கஷ்டப்படுத்திட்டேன்ல” கௌதம் அவளை நெஞ்சில் தாங்கிக் கொண்டு சொல்ல “அதெல்லாம் இல்ல. ஆனா ஒண்ண மட்டும் மறந்துறாத கௌதம். நமக்குள்ள என்ன பிரச்சனை வந்தாலும் சரி, எத்தனை நாள், மாசம், வருஷம் ஆனாலும் சரி, நீயே தான் என்னை தேடி வரணும். நான் உனக்காக காதலோட காத்துக்கிட்டு மட்டும் தான் இருப்பேன். நானா வரமாட்டேன்” தீர்க்கமாக சொன்னவளை நிமிர்த்திப் பார்த்தான் கௌதம்.

அந்நேரத்தில் இருவரின் கைபேசியிலும் மணி அடித்தது. கௌதமுக்கு தாய் செல்வராணி அழைத்திருந்தார். சந்தியாவிற்கோ அலுவலகத்தில் இருந்து வந்த அழைப்பு அது. ஆம் இருவரையும் அந்த கைபேசி அழைப்பு நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது.

கௌதம் “அம்மா” என்றதும் “எங்க இருக்க தம்பி. காலைல போனவன், இன்னும் வீட்டுக்கு வரலையே. எப்பவும் ஆபீஸ் விட்டதும் ஆறு ஆறரை மணிக்கெல்லாம் வீட்டுல இருப்பியே” பரிதவித்து அன்னை கேட்டுக் கொண்டிருக்க, இவன் தன் கைக்கடிகாரத்தில் நேரம் பார்த்தான். அந்த அழகிய நினைவுகளில் மூழ்கிப் போனதில் இவ்வளவு நேரம் ஆகிவிட்டதா என்றெண்ணியவன்

“நான் ரொம்ப தொலைவு வந்துடேன்ம்மா. நீங்க தயாராகி இருங்க. நான் வந்ததும் நாம கோயில் போயிட்டு அப்படியே டின்னரை வெளியவே முடிச்சிடலாம்” அவர்களது திருமண நாளுக்கு இரவு உணவுக்கு வெளியே அழைத்துச் செல்வதாக சொல்லிவிட்டு தானே காலை அவரிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு கிளம்பினான். இப்போது வண்டியில் எங்கோ தொலைவில் இருந்தான். தூரத்தில் மட்டுமல்ல நினைவிலும் தான். உண்மையில் அவன் சொன்னது போல் நினைவுகளுடன் வெகுதூரம் பயணித்திருந்தான். ஆழ்ந்த மூச்சை எடுத்தவன் வண்டியை திருப்பி கொண்டு வீட்டிற்கு கிளம்பினான்.

இங்கே சந்தியாவும் “ஹலோ” என்றாள். அம்முனையிலிருந்து என்ன கேட்டார்கள் என்று தெரியவில்லை “நான் இன்னைக்கு லீவ் ராஜி. ஆமா உடம்பு சரியில்ல. எதுவா இருந்தாலும் விஷால்கிட்ட பேசிக்கோங்க. ஹி நோஸ் எவரிதிங்” என்றுவிட்டு அழைப்பை துண்டித்தவளுக்கு தொண்டை தழுதழுத்தது. அந்த நினைவுகள், அவன் தந்த ஏமாற்றம், அதனால் அவளுக்கு ஏற்பட்ட வலி, இதுவெல்லாம் அவள் கண்களில் கண்ணீர் வரச்செய்தது. மறுபடியும் அழத் தொடங்கினாள்.

அழுகை தான் அவள் விதியென்று ஆகியிருக்க அவளால் வேறென்ன செய்யக்கூடும். அவளை அழக்கூடாது என்று சொன்னவனே தைரியத்தை கொடுத்துவிட்டு, மற்றதனைத்தையும் பிடிங்கி கொண்டுப் போனால், அவளால் மட்டும் வேறென்ன செய்யமுடியும். அழுது கரைந்தாள். நேரமும் ஓடியது.

நேரம் சாயந்திரப் பொழுதை எட்டி கொண்டிருந்தது. சந்தியா இன்னமும் கதவை திறக்கவில்லை. காலை சிற்றுண்டிக்கு கீழே வந்தவளிடம், அன்னை திருமணத்தை பற்றிச் பேச சண்டையிட்டு மேலே வந்தவள், மதிய உணவும் உண்ணவில்லை, இப்போது மாலை நேரமும் நெருங்கி கொண்டிருக்கிறது. மீனாட்சிக்கு இதற்கு மேல் இருப்பு கொள்ளவில்லை. மகள் மேலே சாப்பிடாமல் இருக்கிறாள் என்ற வேதனை, பெற்றவர் வயிற்றை பிசைந்தது. அவர் இவ்வளவு நேரம் பொறுத்ததே பெரிய விசயம், பொறுமை இழந்து மேலே செல்லப் போனார்.

“நில்லுங்க மீனாம்மா, எங்க போறீங்க” விக்ரம் அவரை தடுத்து நிறுத்தினான்.

“காலைல ரூமுக்குள்ள போனவ, இன்னும் கதவை திறக்கலயே. மனசு பதறுது விக்ரம். நான் என்னனு பார்த்துட்டு வரேன்” சொல்லிக் கொண்டே படிகளை ஏற போக

“இருங்கம்மா. நீங்க வேண்டாம், நான் போறேன்” இடைப்புகுந்தான் சக்தி.

“வேண்டாம் சக்தி, நான் போறேன். வீட்ல பழம் இருந்தா ஜூஸ் போட்டு கொடுங்க. நான் அவளை குடிக்க வச்சி கீழ கூட்டிட்டு வரேன்” அவர்கள் இருவருக்கும் அவள் ஏன் இப்படியிருக்கிறாள் என்று தெரியாமல் தவித்திருந்தனர். ஆனால் விக்ரமோ அவள் ஏன் இப்படியிருக்கின்றாள் என்று தெரிந்ததாலே தவித்தான். இப்போது அவன் மேலே செல்வது தான் சரியென்று உணர்ந்தவன், அவரை செல்லவிடாமல் தடுத்து தானே சென்றான்.

“சந்து, டைம் அவுட், கதவை திற” சந்தியாவின் அறைக் கதவை தட்டிக் கொண்டே விக்ரம் சொன்னதற்கு அவளிடமிருந்து பதில் வராமல் போக “சந்து, இதுக்கு மேல நான் கேட்டுகிட்டு இருக்கமாட்டேன். நீ என் பேச்சுக்கு மரியாதை தருவியா மாட்டியா. நம்ப ப்ரண்ட்ஷிப்க்கு உண்மையிலேயே உனக்கு மதிப்பிருந்தா, கதவை திற. இல்ல வேண்டாம்” தீர்க்கமாக சொன்னான்.

ஒரு காலத்தில், அவள் இவனுக்கு பூஸ்ட்டும் மாலை சிற்றுண்டியும் ஒருநாள் தவறாமல் கொடுத்திருக்கிறாள். இவனது நண்பனும் இவனை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை தன் காதலியிடம் கொடுத்திருந்தான். இன்று அவனில்லாத போது, அவளை பார்த்துக் கொள்வது இவனது பொறுப்பல்லவா. அத்தோடு அவளும் தன்னை ஓர் அன்னை போல் பார்த்துக் கொண்ட தோழியாயிற்றே. அவளுக்காக தினமும் வரத் தொடங்கினான். அவள் இங்கே இருக்கும் ஒவ்வொரு நாளும் அவளை பார்ப்பதற்கும், அவள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவதற்கும் வசதியாக, தன் சொந்தவீட்டை விட்டு சந்தியா வீடிருக்கும் தெருவிலேயே இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் குடிப் பெயர்ந்தான். கௌதம் மீது எல்லை கடந்த கோபம் இருந்தாலும், ஒருநாள் அவன் வந்துவிட மாட்டானா, அவனிடம் அவளை சேர்த்துவிட மாட்டோமா என்ற ஆசை விக்ரம் மனதிலும் இருக்கத் தான் செய்தது.

அப்படிப்பட்ட நண்பன், அவனது நட்பை முன்னிறுத்தி கேட்கும்போது, அவளால் எப்படி திறக்காமல் இருக்க முடியும், கதவை திறந்தாள். அறை கதவை திறந்ததும் அதன் கோலத்தைப் பார்த்தவன் பதறிப் போனான். இந்நிலையில் அவளை மீனாட்சியோ, சக்தியோ பார்த்தால் துடித்துப் போவார்கள் என அவளையும் உள்ளிழுத்துக் கொண்டுக் கதவை அடைத்தான்.

“என்னடி இது, ரூமை இப்படி பண்ணி வச்சிருக்க. உன் முகத்தை பார்த்தியா. காலைல இருந்து அழுதுகிட்டே இருக்கியா. உடம்பை ஏன்டி இப்படி பண்ணிக்கிற. எதுக்குடி, உன்னையே இப்படி கஷ்டப்படுத்திக்கிற” விக்ரம் சொல்லும்போதே அவள் அழத் தொடங்கியிருந்தாள்.

“கௌதம் ஏன் என்னை விட்டுட்டு போனான் விக்ரம். இன்னும் அம்பது அறுவது வருஷம் எப்படிலாம் வாழணும்னு பேசிட்டு ஒரேடியா விட்டுட்டு போயிட்டானே விக்ரம். நான் இப்ப என்ன பண்ணுவேன். அவன் இல்லாம எனக்கு வாழ தெரியாதுனு அவனுக்கு தெரியும் தான. அப்படியிருந்தும் ஏன் விக்ரம் விட்டுட்டுப் போனான். என்னை இவ்ளோ மோசமா தண்டிக்கற அளவுக்கு, நான் என்ன விக்ரம் தப்பு பண்னேன்” துடித்துடித்து அழும் தோழியை என்ன சொல்லி தேற்றுவதென்று தெரியவில்லை. அவன் கண்ணிலும் நீர், அதை பொருட்படுத்தாது அவளை சமாதானம் செய்ய வார்த்தைகளை தேடி, அதை செய்யவும் தொடங்கினான் விக்ரம்.

“இல்லமா, நீ எந்த தப்பும் பண்ணல. அவனுக்கு உன்னை வச்சி வாழ தெரியல. உன்னை மாதிரி ஒரு பொண்ணு கிடைக்க அவன் கொடுத்து வச்சிருக்கனும். உன்னோட அருமை அவனுக்கு தெரியல” அவள் தொடர்ந்து அவன் கையைப் பிடித்து அழுதுக் கொண்டிருக்க அவள் கண்ணீரை துடைத்தவன்

“இந்தா இந்த ஜூஸை முதல்ல குடி. காலைல இருந்து எதுவும் சாப்பிடாம இருந்ததும் இல்லாம, எப்படி அழுது முகத்தை வீங்க வச்சிருக்க பார்த்தியா. ஏன்ம்மா போனவனை நினைச்சி உன்னையே நீ இப்படி தண்டிச்சிக்கிற” சந்தியாவை இந்த நிலையில் பார்க்க பார்க்க, அவனுக்கு கௌதம் மீது கோபம் அதிகம் தான் ஆனது.

“என்னால முடியல விக்ரம். வலிக்குது, ரொம்ப வலிக்குது. கௌதம் என்னை ஏன் இந்த இக்கட்டான நிலைமைல விட்டுட்டு போனான். என்னால வாழ முடியலையே, அதேநேரத்துல சந்தோசமா செத்துப் போகவும் முடியலையே. என்னை எதையும் செய்யவிடாம பண்ணிட்டானே. என்னால முடியல. ரொம்ப வலிக்குது” அவன் நெஞ்சில் சாய்ந்து அழுதவளை தேற்றமுடியாமல் விக்ரமும் கலங்கி நின்றிருந்தான். அழுதுக் கொண்டே இருந்தவள் குரல் திடீரென்று வராமல் போக அவளை நிமிர்த்தி பார்த்தவன் உறைந்துப் போனான்.

ஆம், சந்தியா மயங்கியிருந்தாள். அவளை சாய்த்துப் பிடித்தவாறே, தன் பேன்ட் பாக்கெட்டிலிருந்த கைபேசியை எடுத்து சக்திக்கு அழைத்தான்.

“டேய் நான் சொல்றத என்னனு மட்டும் கேட்டுக்கோ. சத்தம் போட்டு ரியாக்ட் பண்ணிடாத.. சந்து.. மயங்கிட்டா டா. எவ்ளோ தட்டிப் பார்த்தும் எழுந்துக்கல. ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகணும். மீனாம்மாவுக்கு தெரிஞ்சா பயந்திடுவாங்க” விக்ரம் பயத்தில் சொல்ல

“இப்ப நான் என்ன பண்ணனும்” மீனாட்சியும் தான் சற்று தள்ளி மகளின் கவலையில் கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருக்கிறாரே. அதனால் மனதளவில் அதிர்ந்து போயிருந்தாலும், விக்ரம் சொன்னதை கேட்டு எந்த உணர்ச்சியையும் முகத்தில் காட்டாமல் சாதாரணமாகவே கேட்டான் சக்தி.

“நீ அவங்கள எப்படியாவது, எதாவது ஒரு கோவிலுக்கு அனுப்பி வச்சிட்டு எனக்கு ஃபோன் பண்ணு. நான் அவளை கீழ தூக்கிட்டு வரேன்” சக்தியும் விக்ரம் சொன்னதை கேட்டு மீனாட்சியிடம் ஏதேதோ சொல்லி, சற்று தூரமான கோயிலுக்கு வண்டிப் பேசி அனுப்பி வைத்தான்.

பின் விக்ரமுக்கு தகவல் சொல்ல, தோழியை அவள் அறையிலிருந்து தூக்கி வந்தான் விக்ரம். அக்காவை அப்படி பார்த்த சக்தி துடித்துப் போனான். விக்ரம் இறங்கி வருவதற்கும் பொறுக்காமல், தானே பாதி படி ஏறியிருந்தான்.

“ஐயோ அக்கா. என்னாச்சுண்ணா அக்காக்கு. சந்தியாக்கா எழுந்திரு” தன் பங்கிற்கு கன்னத்தை தட்டிப் பார்த்தான் சக்தி. எந்த பலனுமில்லை.

“சக்தி, நான் எவ்வளவோ தண்ணி தெளிச்சு தட்டிப் பார்த்துட்டேன், எழுந்துக்கல. காலைலயிருந்து எதுவும் சாப்பிடாம அழுது அழுது மயங்கிட்டானு நினைக்கறேன்டா. சீக்கிரம் வண்டியை எடு, ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகணும்” சந்தியாவை கையில் ஏந்திய படியே சொன்ன விக்ரம், பின் என்ன யோசித்தானோ “இரு சக்தி. நான் தூக்கிட்டு போனா அக்கம் பக்கம் இருக்கிறவங்க தப்பா பேச வாய்ப்பிருக்கு. நீ தூக்கிட்டு வா, நான் போய் வண்டியை எடுக்கறேன்” என்று சக்தியிடம் அவளை கொடுத்தான்.

கௌதம் எவ்வளவு அழைத்தும் நேரமாகிவிட்டது என்று சொல்லி கோயிலுக்கு வேண்டாம் என்ற செல்வராணி, அத்தோடு வீட்டிலே, தான் சமைத்து வைத்திருப்பதையே சாப்பிடலாம் என்றும் சொல்லிவிட்டார். அவனுக்கும் மன அசதி அதிமாக இருந்ததால், குளித்து முடித்து வந்து, அமைதியாக உணவு மேசையில் அமர்ந்தான்.

“தம்பி இதை முதல்ல சாப்பிடுப்பா. உனக்கு பிடிக்குமேனு செஞ்சேன்” அவன் முன் கேசரி கிண்ணத்தை நீட்டினார். அதை பார்த்தவனுக்கு மனது துடித்தது. அவனது வாழ்வில் இருவரது கேசரியை தான், அவன் விரும்பி சாப்பிட்டிருக்கிறான். ஒன்று, தாய் செல்வராணி பாசத்துடன் செய்துக் கொடுப்பது. இன்னொன்று, அவனவள் சந்தியா காதலுடன் செய்து ஊட்டுவது. எப்போது சந்தியாவை விட்டு அவன் ஆஸ்திரேலியா வந்தானோ, அன்றிலிருந்து அவன் இந்த கேசரியை தொடுவதில்லை. இன்றோ தாய் அவர்களது திருமண நாளுக்கும், தனக்கு பிடிக்குமே என்றும் செய்திருக்கிறார். அதை மறுத்தால் அவர் மனதுடைத்து போவார். அதனால் பல வருடங்களுக்கு பிறகு, அந்த கேசரியை எடுத்து வாயில் வைக்க, தானாக அந்த நாட்களின் நினைவுகள் அவனை ஆட்கொண்டது. அவளே அவனுக்காக செய்து, ஊட்டியும் விடுவாள். அவளது கையை அவன் வாயருகே கொண்டு வரும் பொழுதெல்லாம், அவளின் வாசத்தை எத்தனை முறை முகர்ந்திருக்கிறான். இன்றோ அவளது வாசமில்லாத ஒரு கேசரி என்பதை தாண்டி, அவள் வாசத்தை இனி என்று சுவாசிப்பான் என்ற உண்மையே, அந்த இனிப்பை அவனுக்கு கசக்க வைத்தது.

அத்துடன் இன்று அவனுக்கு கேசரி உள்ளே இறங்காமல், தொண்டையிலேயே நின்று சித்திரவதை செய்தது. தனக்காக எதையும் செய்பவளை ஏமாற்றி விட்டு, இங்கே இனிப்பு சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருக்கிறாயா என்று அவனது மனசாட்சி அவனிடம் கேள்விகளை கேட்டுத் துளைத்தது.

பதில் சொல்லமுடியாமல் அந்த கேசரியை விஷமென்று எண்ணி விழுங்கினான். அதற்கு மேல் அதை சாப்பிட மனமில்லாமல் எடுத்து ஓரம் வைத்தவன் “நீங்க சாப்பிடுங்கம்மா. நான் பரிமாறுறேன்” என்று எழுந்தவனை

“ஆமா இங்க பத்துப் பேரு இருக்காங்க பாரு, பரிமாற. நீ உட்காரு. உனக்கு வச்சிட்டு நானும் உட்காரறேன்” அவன் அன்னை சொன்னார்.

தாய் சொல் கேட்டு அமர்ந்தவனின் மனதில் ஆயிரம் வலிகள் ‘ஏன் என் வாழ்க்கை மட்டும் இப்படி ஆச்சு. நான் யாருக்கு என்ன பாவம் பண்ணேன். நான் ஆசைப்பட்டதெல்லாம் என் தேவதை கூட ஒரு அழகான வாழ்க்கையை தான. அத கூட கடவுள் எனக்கு ஏன் தராம போனாரு. ஐ ஆம் சாரி சனு. யாருமே பண்ணக் கூடாத துரோகத்தை தான், நான் உனக்கு பண்ணேன். அந்த துரோகத்துக்கு தண்டனையா, நீ என்னை துண்டு துண்டா வெட்டி எறிஞ்சாலும் தப்பில்லை. ஆனா, அதை செஞ்சவன் உன் கௌதம்னு ஒரே ஒருமுறை என்னை மன்னிச்சிருக்க கூடாதா. அவனுக்கு என் வாழ்க்கைல இனி என்னைக்குமே இடமில்லனு சொல்லிட்டியே. நீ இல்லாம நான் எப்படி இருப்பேன்னு சொன்ன வாயால, என்னை பொறுத்தவரை கௌதம்ங்கற ஒருத்தன் என் லைஃப்வோட முடிஞ்சிப் போன ஒரு சாப்டர், அதை நான் புரட்டிப் பார்க்கக் கூட விரும்பலனு சொல்லிட்டியே. அதை தாங்கிக்க முடியாம தான், நான் இங்கயே இருந்துட்டேன். தப்பு தான், நான் பண்ணது மிகப்பெரிய பாவம் தான். ஒரு பொண்ணுக்கு ஒரு ஆண் பண்ணக் கூடாத பாவத்தை தான் பண்ணேன். இருந்தும் வெட்கத்தை விட்டு கேட்கறேன், நான் செஞ்சப் பாவத்துக்கு எனக்கு மன்னிப்பே கிடையாதா சனு. இப்படி விமோசனமே கிடைக்காம தான், நான் சாகப் போறேனா. நாம வாழ்ந்த அந்த வாழ்க்கையை ஒருநாளாவது திரும்ப வாழணும்னு தோணுதுடி. ஐ பேட்லி மிஸ் யுடி’ மனதிற்குள்ளே அவளிடம் சொல்லி, தன் பாவத்தை கரைக்க முயற்சி செய்துக் கொண்டிருந்தான்.

அந்நேரத்தில் ஏனோ அவனுக்கு நெஞ்சமெல்லாம் அடைக்க தொடங்கிற்று. அவன் மனதில் வைத்துள்ள சனுவிற்கு ஏதோ ஆனது போல் ஒரு உணர்வு. சந்தியாவை நேரில் பார்த்து பல வருடங்கள் ஆகியிருந்தாலும், அவனுக்கு ஆறுதல் தருவது அவனுள் இருக்கும் அவள் தான். இன்றோ மனதில் இருப்பவளின் உருவம் எரியத் தொடங்க, அதன் வெட்பம் மனமுழுக்க பரவி, அவனை மூச்சு திணற செய்துக் கொண்டிருந்து. அவையனைத்தும் அவளுக்கு ஏதோ ஆனதை உணர்த்த, செய்வதறியாது நெஞ்சை பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டான்.

மகன் சாப்பிடாமல் நெஞ்சை பிடித்திருப்பதை கவனித்த செல்வராணி “என்னாச்சு கௌதம்” என்றார்.

“அது ஒருமாதிரி வலிக்குதும்மா. எதுவோ என் நெஞ்சு மேல ஏறி அழுத்தற மாதிரி இருக்கு” அவளுக்கு உடல்நிலை சரியில்லை என்பதை இவன் எவ்வாறு உணர்ந்தான்? அவளை எண்ணி மனம் பதைத்தான்.

“என்னப்பா சொல்ற. உடம்புக்கு எதாவது பண்ணுதா. வா டாக்டர்கிட்ட போகலாம்” அவர் மகனுக்கு ஏதோ ஆகிவிட்டதென்று துடித்துப் போனார் செல்வராணி.

“அதெல்லாம் என் உடம்புக்கு ஒண்ணும் இல்லம்மா. எனக்கு ரொம்ப நெருக்கமானவங்க, என்னை தேடுறா மாதிரி மனசுக்கு தோணுது. அது ஒரு மாதிரி, அதிகமான வலியை தருதும்மா. யாருக்கும் எதுவும் ஆகியிருக்க கூடாதுனு பயமா இருக்கு ம்மா” மகன் சொன்னதை பொறுமையாக கேட்டவர்

“யாருக்கு கௌதம் சந்தியாவுக்கா” என்றதும் அவன் அதிர்ந்து தாயை நிமிர்ந்து பார்த்தான். அவனால் மேலே எதையும் சொல்ல முடியாத ஓர் சூழ்நிலை. அதனால் மௌனத்தை தேர்ந்தெடுந்தான்.

ஆனால், அவளுக்கான அவன் மனமோ, இன்னமும் பதைத்துக் கொண்டு தான் இருந்தது. இதற்கு மேலும் பொறுக்க முடியாமல் தன் கைபேசியை எடுத்து ‘இஸ் ஷி ஃபைன்’ என்ற குறுஞ்செய்தியை யாருக்கோ அனுப்பினான்.

அடுத்த இரண்டு மூன்று நிமிடங்களில் “யெஸ் ஷி இஸ்” என்று பதில் வர, அதை பார்த்ததும் தான் சிறிதேனும் நிம்மதியானான். இருந்தும் முழுவதுமாக இல்லை. அந்த குறுஞ்செய்தி சொல்கின்ற உண்மையை விட, அவன் மனம் தான் இன்னும் தெளிவாக சொல்கிறதே. இருப்பினும் அவள் மனதை கொன்ற தன் மனம் சொல்வதை உதாசீனப் படுத்திவிட்டு, அந்த குறுஞ்செய்தி சொல்வதையே ஏற்று, தாய் சாப்பிடும் வரை காத்திருந்தவன், சரியாக சாப்பிடவும் இல்லாமல் அறைக்குள் சென்று கதவடைத்தான்.

இங்கு சந்தியா கண் விழித்திருந்தாள். அவள் கடந்த இரண்டு நாட்களாக எதுவுமே சாப்பிடாததால் தான் மயங்கியிருக்கிறாள் என்று மருத்துவர் சொல்ல, அவள் எழுவதற்காக நண்பனும் தம்பியும் காத்திருந்தனர். அவள் இப்போது, மெதுவாக கண் திறக்கவும், விக்ரம் அவள் எதிரே முறைத்துக் கொண்டு நின்றிருந்தான். அருகில் சக்தி தன் திருமணப் பேச்சு தான் அனைத்திற்கும் காரணம் என்ற குற்றவுணர்வோடு நின்றிருந்தான்.

சந்தியா கண்களை சிமிட்டி சிமிட்டி முழுவதுமாக திறக்க, எதிரில் கடும்கோபத்திலிருந்த விக்ரம் “உனக்கு கொஞ்சமாச்சும் அறிவிருக்கா சந்து. நேத்து காலைல, மதியம் என்ன சாப்பிட்ட. எதுவும் இல்லல. நேத்து நைட்டும் சாப்பிடல. இன்னைக்கும் ஒண்ணுமில்ல. இப்படி ரெண்டுநாளா பட்டினி கிடக்கற அளவுக்கு, என்ன ஆகிடுச்சு. ஒருத்தனை லவ் பண்ண, அவன் உன்னை விட்டுட்டு போயிட்டான்” அது மருத்துவமணை என்றும் பராமல், அருகில் சக்தி இருக்கிறானென்றும் யோசிக்காமல் அவளை சத்தமிட்டான்.

“விக்ரம்” தம்பியின் எதிரில் தன் காதலை பற்றி நண்பன் சொல்ல, அதில் பதற்றமடைந்தவள் அவனை தெம்பில்லாத குரலில் தடுக்கப் பார்த்தாள்.

“அவனுக்கும் தெரியட்டும். அவன் அக்கா ஏன் இப்படி நடந்துக்கறனு தெரியாம பயந்துக்கிட்டு இருக்கறத விட, அவனும் தெரிஞ்சிக்கட்டும். நீ ஒருத்தனை லவ் பண்ண, அவன் உன்னை ஏமாத்தி விட்டுட்டு போயிட்டான். எட்டு வருஷமாக போகுது, அவன் இன்னும் வரல. அதனால தான் நீ கல்யாணத்துக்கு கூட ஒத்துக்க மாட்டங்கற. இப்படி உன்னையே கொஞ்ச கொஞ்சமா அழிச்சிக்கிறேனு சொல்லு. கூடவே அந்த துரோகியை விக்ரமுக்கும் நல்லா தெரியும். ஒரு காலத்துல அவன் விக்ரமோட க்ளோஸ் ப்ரண்ட்னும் சொல்லு. நல்லா பேசி நல்லா பழகி, உன்னை ஒருநாள் அம்போன்னு விட்டுட்டு போயிட்டான்னும் சொல்லு” அனைத்தையும் சக்தி முன் போட்டுடைத்தான்.

தன் காதில் விழுந்த அனைத்தும் உண்மையா என்ற அதிர்ச்சியிலிருந்த சக்தி, இடிந்துப் போய் அக்காவையே பார்த்துக் கொண்டிருக்க, அவளோ தம்பியிடம் முகம் காட்ட முடியாமல், யாரையும் எதிர்கொள்ள பிடிக்காமல், கண்களை மூடிக் கொண்டாள். இருந்தும் அவளது கண்களிலிருந்து வழிந்து வரும் கண்ணீர், அவையனைத்தும் உண்மையென்று சொல்லாமல் சொல்லி சென்றது.

கௌதம் சந்தியா இருவரும் அருகில் இல்லாமலே ஒருவரை ஒருவர் உணர்கின்றனர். இவ்வளவு அன்பும், நேசமும் இருந்தும் ஏன் பிரித்திருக்கிறார்கள் என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது. இதில் இப்போது செல்வராணிக்கும் சக்திக்கும் இவர்களது காதலைப் பற்றி தெரிய வந்துள்ளது. இனி இவர்களும் தான், கௌதம் சந்தியா விடயத்தில் என்ன செய்ய போகிறார்கள்.


உண்மையாகும்..


உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..

 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் - 23

சக்திக்கு முதல்முறையாக தன் தமக்கையின் காதலை பற்றித் தெரிந்தது. என்ன சொல்வது, எதை கேட்பது என எதுவும் புரியாமல் அதிர்ச்சியில் உறைந்திருந்தான். தன் அக்கா காதல் கொண்டாளா? அவள் ஆண்களுடன் பேசுவதே அபூர்வம், இதில் அவள் ஒருவனுடன் காதல் கொண்டு, இன்று அவனுக்காக தன்னையே வருத்திக் கொள்கிறாளா? ஒருவனை காதல் செய்தேன், அவன் விட்டுவிட்டு சென்றுவிட்டான் என்று சொல் என்ற விக்ரமின் வார்த்தைகள் இன்னமும் அவன் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

அந்த அதிர்வில் இருந்து மீளாதவன், தான் கேட்டது உண்மையா என்பதை உறுதிச் செய்ய “அண்ணா” என்றவனின் குரல் தழுதழுத்தது. அதை புரிந்த சந்தியாவின் மனமும் துடித்தது. அவனை தன் பிள்ளைப் போல் தான் அவள் எப்போதும் பாவிப்பாள். அந்த பிள்ளை இன்று தன்னால் வேதனையுறுவதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

“ஆமா சக்தி. அவ்ளோ லவ் பண்ணாடா அவனை. அவனும் அப்படி தான் இருந்த மாதிரி இருந்துச்சு. திடீர்னு ஒருநாள் போனவன், திரும்ப வரவே இல்ல. அவன் தான் துரோகம் பண்ணிட்டு போயிட்டான்ல, அவனை விடுடினா விடாம இன்னைக்கு வரைக்கும் அதையே நினைச்சி, ஸ்லோ பாய்சன் மாதிரி அவனோட ஞாபகத்துல கொஞ்சம் கொஞ்சமா செத்துக்கிட்டு இருக்கா. இப்ப தோணுது, அன்னைக்கே உன்னை அவனை லவ் பண்ணவிடாம தடுத்திருக்கனும்னு. அன்னைக்கு மூணுபேரும் ப்ரண்ட்ஸா இருப்போம்னு சொன்னது என் தப்பு. அவனை கோயம்பத்தூர் போகவிடுனு சொன்னது என் தப்பு. அன்னைக்கு ஏர்போர்ட்ல அவனை போகவிட்டதும் என் தப்பு. நீ சொன்ன மாதிரி, டிரைன் ஏறி போகமுடியாத தூரம் அவன் போகுற வரைக்கும், ஒவ்வொரு டைமும் அவன் சைடு நின்னதுனு எல்லாம் என் தப்பு. முதல்ல இருந்தே அவன் விஷயத்துல நீ சரியா தான் இருந்த சந்து. நான் தான் உனக்கு பெரிய அநியாயத்தை பண்ணிட்டேன். ஐ ஆம் சாரிடி. ஒரு ப்ரண்ட்டா உனக்கு நல்லது செய்யறதுக்கு பதிலா, நானே உன் வாழ்க்கைய அழிச்சிட்டேன்” என்று கலங்கினான் விக்ரம்.

“இல்ல விக்ரம். நீ இல்ல. இதுல உன் தப்பு எதுவும் இல்ல. நான் தான் அவனை நம்பி ஏமாந்துட்டேன்” சொன்னவளில் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்து வர, அதைப்பார்த்த சக்திக்கு, அக்கா இவ்வளவு தூரம் ஒருவரை நேசித்திருக்கிறாள், இதைக் கூட அறியாத தான் என்ன தம்பி என்றிருந்தது.

“இல்ல, நான் தான் தப்பு பண்ணிட்டேன். பக்கத்துல இருந்தவனை கை நழுவ விட்டுட்டேன். அவன் போனா, நான் என்ன பண்ணிருக்கனும், அவன் இருக்க இடத்தை தேடிப் போய் அவனை கூட்டிட்டு வந்து உன் முன்னாடி நிறுத்திருக்கனும். நான் அத செய்யலையே. என்னோட இன்கேபபிளிட்டிய நினைச்சா எனக்கே என் மேல கோவமா வருது. நான் என்னடி ப்ரண்ட் உனக்கு” விக்ரம் மனதிலும் ஆயிரம் வலிகள். தான் நினைத்திருந்தால் தோழிக்கு இந்த நிலை வந்திருக்காதே என்ற குற்றவுணர்வு அவனையும் அனுதினமும் கொன்று, தின்று கொண்டு இருக்கிறது.

“இல்ல விக்ரம். நீ என்ன பண்ணுவ. நான் தான உன்னை அவனை தேடிப் போகக்கூடாதுனு சொன்னேன். இதுல உன்மேல எந்த தப்பும் இல்ல. எல்லாம் தப்பும் அவன் மேல தான்”

“புரியுதுல, அவன் மேல தான் எல்லாம் தப்புன்னும். அப்புறம் ஏன் இப்படி இருக்க. அவனை தூக்கி போட்டுட்டு உன் வாழ்க்கைய வாழேன்டி” என்று அடுத்து எதையோ சொல்ல வாயெடுத்த விக்ரமை தடுத்தவள்..

“ப்ளீஸ்.. அத மட்டும் சொல்லிடாத. என்னால முடியாது விக்ரம். கண்டிப்பா முடியாது. என் வாழ்க்கைல கல்யாணம்ங்கற ஒண்ணு முடிஞ்சு போன ஒண்ணு. என்னை அதை செய்ய சொல்லிடாத” கதறியவளை என்ன சொல்வதென்று தெரியாமல், வேதனையாக பார்த்தான் விக்ரம். சக்திக்கோ இன்னும் அந்த அதிர்ச்சி அவனை விட்டு முழுவதுமாக அகலவில்லை. இவர்கள் பேசுவதை கேட்க கேட்க, தன் மீதே அவனுக்கு கோபம் வந்தது. அக்காவை பற்றி யோசிக்காமல், தன் திருமணத்தை பற்றி எண்ணியதை நினைத்து, அவனுக்கு இப்போது தன் மீதே அருவறுப்பாக இருந்தது.

இதற்குமேலும் இதை பற்றி பேசினால் சந்தியாவின் உடல்நிலை தான் பாதிக்கும் என்பதை உணர்ந்த விக்ரம் “சக்தி, நீ வீட்டுக்கு கிளம்பு. டிரிப்ஸ் முடிஞ்சதும் நான் இவளை கூட்டிட்டு வரேன். மீனாம்மாவுக்கு இப்போதைக்கு இவளுடைய லவ், அதனால உடம்பு முடியாம போனதுனு எதுவும் தெரியவேணாம். புரியுதா. நீ கிளம்பு” என்றான்.

விக்ரம் சொன்ன எதுவும் அவன் காதில் விழ மறுத்தது. அப்படியே பித்துப் பிடித்தவன் போல் சந்தியாவை பார்த்து நின்றவனை, விக்ரம் தன் கைக்கொண்டு உலுக்க, அசந்து “என்ன ண்ணா” என்றான்.

“நீ வீட்டுக்கு கிளம்புனு சொன்னேன்” விக்ரம் மறுபடியும் சொல்ல “அக்கா ண்ணா” என்றான் சக்தி.

“அவளை நான் கூட்டிட்டு வரேன். மீனாம்மாவுக்கு எதுவும் தெரியவேணாம் சக்தி” மறுபடியும் உறுதிச் செய்ய சொன்னான் விக்ரம்.

சக்தி முதலில் வீட்டிற்கு வந்தான். சிறிது நேரத்தில் மீனாட்சியும் வந்தார். வரும்போதே மகளை பற்றி விசாரித்துக் கொண்டே தான் உள்ளே நுழைந்தார்.

“எனக்கு அங்க மனசே இல்ல சக்தி. சந்தியாம்மா கதவை திறந்தாளா. எதாவது சாப்பிட்டாளா. என்மேல இன்னமும் கோவமா தான் இருக்காளா. நான் அவளோட நல்லதுக்கு தான சொல்றேன். ஏன் இந்த பொண்ணுக்கு, அது புரியமாட்டேங்கிது” அன்னையவர் மனதாறாமல் புலம்ப “அம்மா அக்காக்கு ஒண்ணுமில்ல, ஜூஸ் குடிச்சிட்டு கீழே இறங்கி வந்தா..” என்றவனுக்கு அவளை கீழே தூக்கி வந்த காட்சி கண்முன் வர, கண்ணின் ஓரம் நீர் நின்றது.

“விக்ரம் அண்ணா தான் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணட்டும்னு வெளில கூட்டிட்டு போயிருக்கார். கொஞ்ச நேரத்துல வந்திடுவாங்க” உடைந்திருந்த தன்னை ஒன்று திரட்டிச் சொன்னான்.

அடுத்த ஒரு மணிநேரத்தில், விக்ரம் சந்தியாவுடன் வீட்டிற்குள் நுழைந்தான். மருத்துவமனை சென்று வந்ததற்கான அடையாளங்களை அகற்றிவிட்டே வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான். இருந்தும் சந்தியாவின் முகத்தை பார்த்த மீனாட்சி, துடித்துப் போய் மகளை நோக்கி வாசலுக்கு ஓடினார்.

“என்டே மோளே” மீனா அவளிடம் வர “எனக்கி ஒண்ணுமில்லா” என்ற சந்தியாவை அடக்கிய விக்ரம்,

“ஒண்ணுமில்ல மீனாம்மா. நான் தான் வெளில கூட்டிட்டு போயிட்டு வந்தேன். சக்தி, வா.. வந்து சந்துவ அவ ரூமுக்கு கூட்டிட்டு போ. அவளை நான் சாப்பிட வச்சி தான் கூட்டிட்டு வந்தேன். அவ நல்லா தூங்கட்டும் மீனாம்மா. டிஸ்டர்ப் பண்ணவேண்டாம்” அவளது அறையை கருத்தில் கொண்டே விக்ரம் சொல்ல, சக்தி சந்தியாவை கைத் தாங்கலாக பிடித்து மேலே அழைத்துச் சென்றான்.

அவள் செல்வதையே பார்த்திருந்த விக்ரம், மீனாவின் பக்கம் திரும்பி “மீனாம்மா கொஞ்சநாளுக்கு அவ கல்யாண பேச்சை தள்ளிப் போடலாம். நான் அவகிட்ட எல்லாம் பேசிட்டேன். அவளுக்கு இன்னும் கொஞ்சம் டைம் கொடுப்போம். என்ன வயசு ஆகிடுச்சு. இந்த காலத்துல முப்பது வயசெல்லாம் ஒரு வயசா. சக்தி லவ் பண்ற பொண்ணு வீட்லயும், நாம பேசலாம். சந்துவ கொஞ்சநாள் அவ போக்குல விடுவோம் ம்மா” என்றான்.

அவனை அவர் தன் மகனாக தான் பார்க்கிறார். பின் அவன் பேச்சை மறுத்துப் பேசுவாரா என்ன, சரியென்று தலையை ஆட்டினார் “அப்புறம் நாளைக்கு ஆபீஸ் அனுப்பாதீங்க. அவ நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும். அவ கேட்டா, விக்ரம் தான் போகக்கூடாதுனு சொன்னான்னு சொல்லுங்க. எதுவா இருந்தாலும் எனக்கு ஃபோன் பண்ணுங்கம்மா” என்றவன் அங்கிருந்து கிளம்பினான்.

சக்தி மேலே அவளது மெத்தையை சரிச் செய்து, அக்காவை படுக்க வைத்திருந்தான். சந்தியா மருந்தின் தாக்கத்தில் நன்கு உறங்க, அலங்கோலமாக இருந்த அறையை சுத்தம் செய்தவன், அக்காவை விட்டுப் போக மனமில்லாமல், அங்கேயே நாற்காலிப் போட்டு அவள் கையை பிடித்துக் கொண்டே அமர்ந்துவிட்டான்.

இரவு நன்றாக உறங்கிக் கொண்டிருந்தவளை, எதுவோ ஒன்று தொந்தரவுச் செய்ய, தூக்கத்திலேயே அனத்தினாள். கால்களை தூக்கி மெத்தையின் மீது வைத்து, நாற்காலியில் சாய்ந்தமர்ந்தபடியே உறங்கிக் கொண்டிருந்த சக்தி, அதிர்வை உணர உறக்கம் கலைந்தான்.

“சந்தியாக்கா என்னாச்சு” அவளது கைகளை பிடித்துக் கேட்க, அவளும் உறக்கத்திலேயே அவனது கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள். இருந்தும் அனத்துவது குறையவே இல்லை. இதைப் பார்த்த சக்திக்கு பயம் பற்றிக் கொண்டது. என்ன செய்வதென்று தெரியாமல், அவள் கையை இன்னமும் அழுத்தமாக பிடித்துக் கொண்டான்.

இவளோ உறக்கத்தில் தவித்தவள், திடீரென்று “கௌத..ம்ம்” என்று கத்திக் கொண்டே எழுந்தாள். இது அவளுக்கு புதிதல்ல, ஆனால் சக்திக்கு மிகவும் புதிது. தன் அக்கா படும் ஒவ்வொரு வேதனையையும் பார்த்தவனுக்கு, முகம் பார்க்காத அந்த கௌதமின் மீது கோபம் தான் வந்தது.

அலறியடித்து கொண்டு எழுந்தமர்ந்தவள், எதிரில் தம்பியிருப்பதை பார்த்து தலைக்குனிந்து கொண்டாள். சக்தி பதறியடித்துக் கொண்டு அருகிலிருந்த தண்ணீரை எடுத்து அவளுக்கு கொடுத்தான்.

அதை வாங்கி குடித்தவளிடம் “அக்கா.. யாரு கௌதம். அவன் எங்க இருக்கான். உன்னை இப்படி கஷ்டப்படுத்திட்டு போயிருக்கான், நீ இவ்ளோ நாளா எங்கிட்ட ஒண்ணும் சொல்லாம இருந்திருக்க. எனக்கு வர ஆத்திரத்துக்கு, அவன் எங்க இருந்தாலும் சரி, அவனை..” கோபத்தில் கொந்தளித்துப் பேசிக் கொண்டிருத்தவனை முறைத்தவள்

“மரியாதையா பேசு சக்தி” என்று அதட்டினாள். சக்திக்கோ இன்னமும் தமக்கை அவன் மீது இத்தனை காதலோடு இருக்கிறாளா என்று திகைப்பாக இருந்தது. அத்தோடு வலியை அனுபவிப்பவளே, அப்படி சொல்லும்போது அவனால் வேறென்ன செய்யமுடியும் “சரி சொல்லல. நீ சொல்லு, ரெண்டுபேருக்குள்ள என்ன தான் நடந்துச்சு. அவர் உன்னை ஏமாத்திட்டு போயிட்டார்னு விக்ரம் அண்ணா சொன்னாரு. இப்ப கௌதம் எங்க இருக்காரு” சந்தியாவிடம் கேள்விக்கு மேல் கேள்வியை வைத்தான் சக்தி.

“ப்ளீஸ் சக்தி, எதுவும் கேக்காத. என்னால எதையும் சொல்ல முடியாது” கட்டிலில் சாய்ந்தமர்ந்து கண்களை மூடிக் கொண்டாள். செய்வதறியாது அவளையே பார்த்திருந்த சக்தி, இம்முறை அவள் அருகில் அமர்ந்து, அவளது கையை ஆறுதலாய் பிடித்தப்படியே உறங்கினான்.

அதற்குமேல் சந்தியாவிடம் சக்தியால் எதையும் கேட்க முடியவில்லை. விக்ரமிடம் கேட்டாலும், அதற்கு மேல் சொல்ல தனக்கு அனுமதி இல்லையென்று சொல்லிவிட்டான். நாட்கள் ஒருபுறம் சென்றிருந்தது. அன்று அபிநயாவை சந்திக்க காஃபி டே வந்திருந்தான் சக்தி.

“ஹாய்டா. இப்ப சேச்சி எப்படி இருக்காங்க” அபிநயாவிடம் அனைத்தையும் பகிர்த்திருந்ததால், வந்தவுடனே சந்தியாவை பற்றி தான் விசாரித்தாள்.

“எனக்கு ஒண்ணுமே புரியல அபி. அக்கா இப்படி இருந்து நான் பார்த்ததே இல்ல. அச்சா போனதுல இருந்து அவ தான் பையன் மாதிரி எல்லாத்தையும் பார்த்துக்கிட்டா. அவளுக்குள்ள இப்படி ஒரு வலியா. என்னால தாங்கவே முடியல” தந்தையின் மறைவிற்கு பின் அவள் முன்பு போல் வீட்டில் இருப்பதில்லை, அன்னையிடமும் அவனிடமும் சரியாக பேசுவதுமில்லை. அக்கா மாறிவிட்டாள் என்றெண்ணி பலமுறை வருத்தப் பட்டிருக்கிறான். ஆனால் அன்று மருத்துவமனையில் விக்ரம் சொன்னதை கேட்டவனுக்கு, யாரோ ஒருவர் அவளை மாற்றியிருக்கிறார் என்பது புரிந்தது. இத்தனை வருடங்களாக இது எதுவும் தெரியாமல் இருந்த தன்னை எண்ணி அவனுக்கே அவன் மீது கோபம் வந்தது.

“ஃபீல் பண்ணாத சக்தி. நாம சேச்சியோட லைஃப்பை சரி பண்ணலாம். அவங்களுக்கு வேற பையனை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கலாம்” அபிநயா உண்மையில் நல்ல எண்ணத்தில் தான் கூறினாள். சக்திக்கு, ஏற்கனவே அக்காவின் திருமணப் பேச்செடுத்து நிகழ்ந்த பிரச்சனைகளும், அன்று அவள் கிடந்த கோலமும் நினைவிற்கு வர, அத்துடன் அபி சொன்னதை அவன் தவறான அர்த்தத்திலும் புரிந்திருந்தான்.

“என் அக்கா இந்த நிலைமையில இருக்கப்போ கூட உனக்கு உன் வேலை ஆகணும்ல. என் அக்கா பாட்டுக்கு நிம்மதியா இருந்தா. எப்ப நம்ப கல்யாணப் பேச்செடுத்தோமோ, அன்னைல இருந்து தான் வீட்டுல ஒரே பிரச்சனை. உன் அச்சா, வீட்டுல கல்யாணமாகாத பொண்ணு இருக்கானு ஆரம்பிச்ச பிரச்சனை, எங்க வந்து நின்னுருக்கு பார்த்தியா. அவருக்கு என் அக்கா எங்க வீட்ல இருக்குறதுல என்ன கஷ்டம். நாங்க இருக்க வீடு, நான் படிச்ச படிப்பு எல்லாம் என் அக்கா கொடுத்தது. அதெல்லாம் வேணும், என் அக்கா மட்டும் வேண்டாமா. அது எப்படி அபி, நீயும் உங்க அச்சாவும் இவ்ளோ செல்பிஷ்ஷா இருக்கீங்க” வாய்க்கு வந்ததெல்லாம் சொல்லி மலையாளத்தில் அவளை கடிந்துவிட்டான்.

அவன் பேசியதை கேட்டு ஆத்திரமானவள் “என்ன சொன்ன சக்தி, நானும் என் அச்சனும் செல்பிஷ்ஷா. என் அச்சா சொன்னது சரினு நான் சொல்லல. எனக்கும் அவர் அப்படி பேசினத கேட்டு ஷாக்கா தான் இருந்தது. ஆனா, அது முழுசா தப்பில்லையே சக்தி. ஒரு வீட்ல கல்யாணமாகாத பொண்ணு இருந்தா, சொல்லத்தான் செய்வாங்க. அதுவும் சேச்சி கல்யாண வயசை தாண்டி இருக்கப்போ, இந்த மாதிரி கேள்விகள் வரத்தான் செய்யும். என் அச்சன், அவர் பொண்ணுக்காக சொன்னா, அது செல்பிஷ்னெஸ். அப்புறம், நான் நல்ல எண்ணத்தோட சேச்சிக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு சொன்னதும் செல்பிஷ்னெஸ். அப்ப நீ பண்ணது என்ன சக்தி. உன் சேச்சி, நீ டுவெல்த் படிக்கறதுல இருந்து கஷ்டப்படறாங்க தான, பேசாம ஸ்கூலை விட்டு நின்னுட்டு, வேலைக்கு போய் பேமிலிய காப்பாத்திருக்க வேண்டியது தான” என்று அவள் கேட்டதற்கு பதில் சொல்லமுடியாமல் தலைக்குனிந்தான் சக்தி.

“உன் சேச்சி இயர்னிங்ல உன்னோட பேமிலி ஓடுச்சு சக்தி. இந்த படிப்பு தான் படிப்பேன்னு சொன்னதும், அவங்க கல்யாணத்துக்காக அச்சா வாங்கி வச்ச இடத்தை வித்து உன்னை படிக்க வச்சாங்க. இப்படி எல்லாத்தையும் நீ வாங்கிக்கிட்டு, என்னை செல்பிஷ்னு சொல்றீயா. உன்னை நான் ஸ்கூல்ல இருந்து லவ் பண்றேன், நீ எனக்கு ரெண்டு வருஷம் முன்னாடி தான் யெஸ் சொன்ன. அதுவரைக்கும் எந்த எக்ஸ்பெக்டேஷனும் இல்லாம உன் நல்லது தான் என் நல்லது, உன் கனவு தான் என் கனவுன்னு கமர்ஷியல் பைலட் கோர்ஸ் சேர்ந்த நான் செல்பிஷ்ல. சரி அப்படியே இருக்கட்டும். எனக்கும் அனியன்(தம்பி) இருக்கான். நான் சேச்சி மாதிரி கல்யாணம் கழிக்காம இருந்தா, நிச்சயமா அவன் வாழ்க்கைய மட்டும் பார்த்திருக்க மாட்டான். நீதான் செல்பிஷ் இல்லல, போய் அவர் யாருனு கண்டுப்பிடி. சேச்சிய அவரோட சேர்த்து வை. அப்புறம், நீ உன் சேச்சிய பத்தி யோசிக்கற நல்ல அனியன்னு நான் ஒத்துக்கறேன்” கடகடவென பேசிவிட்டு வேகமாக அங்கிருந்துக் சென்றுவிட்டாள் அபிநயா.

சக்திக்கு உண்மையில் தன்மீது தான் கோபம். அதை அபிநயாவிடம் காட்டி, தவறு செய்துவிட்டான். அவளும் பதிலுக்கு அவனை கோபத்தில் பேசிவிட்டாள். அங்கிருந்து வீட்டிற்கு வந்தவன், சந்தியாவின் அறைக்கு சென்றான். அலுவலகத்திலிருந்து சீக்கிரம் வீட்டிற்கு வந்திருந்தவள், சன்னல் வழியாக தெருவை வெறித்துக் கொண்டிருந்தாள்.

“எப்படிக்கா இருக்க” நாட்கள் சென்றிருந்தாலும், தினமும் நலன் விசாரிக்கும் தம்பியின் குரலுக்கு திரும்பிய சந்தியா “நான் நல்லாருக்கேன் சக்தி” என்றாள். அவள் சொல்வதை கேட்டுக் கொண்டே அறை கதவை தாளிட்டான்.

என்னவென்று புரியாத சந்தியா, அவனை பார்க்க “அபியை பார்த்துட்டு வரேன் சந்தியாக்கா. எனக்கும் அவளுக்கும் சண்டை. நான் அவளையும், அவ அச்சனையும் திட்டிட்டேன். பதிலுக்கு அவன் என்னை பார்த்து செல்பிஷ்னு சொல்லிட்டா” ஏன் இப்படி செய்தாய் என்ற பார்வை சந்தியாவிடமிருந்து வர

“இல்லக்கா எல்லாம் அவ அச்சன் உன் கல்யாணத்தை பத்தி பேசினதால தான்னு ஒரு கோவம். அந்த கோவத்தை அவமேல காட்டிட்டேன். உண்மையிலேயே எனக்கு அவ மேல எந்த கோவமும் இல்ல. சொல்லப்போனா, அவங்க அச்சன் மேல கோவம் இருக்கு, ஆனா அவரால தான பல உண்மைகள் வெளிய வந்திருக்கு. அதனால, அவரையும் போகட்டும்னு விட்டுடலாம். எனக்கு இப்ப கோவமெல்லாம் என் மேல தான்க்கா. அவ என்னை செல்பிஷ்னு சொன்னத பத்தி நான் வருத்தப்படல. ஆனா, எனக்கே என்னை பார்த்தா செல்பிஷ்னு தோணுது. நானெல்லாம் என்ன ஜென்மம். எப்படிக்கா, எதையுமே தெரிஞ்சிக்காம, என் லைஃப்ல மட்டும் எல்லாம் நடந்தா போதும்னு இருந்திருக்கேன்” அவள் கைப்பிடித்து குலுங்கி அழுத தம்பியை தேற்ற வார்த்தையில்லாமல், அவன் தலையை வருடிக் கொண்டிருந்தாள்.

“நீ அச்சா போனதும் நம்ம குடும்பத்துக்காக ஓட ஆரம்பிச்ச. அதுல உனக்கு கல்யாணத்து மேல பிடிப்பு இல்லாம போயிடுச்சினு நினைச்சிட்டேனே தவிர, உனக்குள்ள இப்படி ஒரு வலியிருக்கும்னு சத்தியமா எதிர்பார்க்கலக்கா. இப்ப எனக்கே என்னை நினைச்சா அசிங்கமா இருக்கு. அவ வாழ்க்கை இப்படி இருந்தா, அவ தம்பி என்னை மாதிரி சுயநலமா தன் வாழ்க்கைய பத்தி மட்டும் யோசிச்சிருக்கமாட்டானாம். நான் யோசிச்சிட்டேன்ல. சாரிக்கா” என்றான்.

அதுவரை அமைதியாக கேட்டிருந்த சந்தியா “நீ செல்பிஷ்னு அபி சொன்னா அது நிஜமாயிடுமா. என் வாழ்க்கைல வேற சிலர் தான் சக்தி, செல்பிஷ்ஷா முடிவெடுத்தாங்க. என்னை பத்தி, நீ என்ன யோசிச்சாலும், என் லைஃப்ப சரி பண்ணமுடியாது. சொல்லப்போனா உன்னோட கல்யாணம் எனக்கு பல விதத்துல விடிவை கொடுக்க போகுதுனு நினைச்சிருந்தேன். அதுக்குள்ள உனக்கு என் லவ் மேட்டர் தெரிஞ்சிடுச்சு. நீ இங்க சரிப் பண்ண, ஒண்ணுமே இல்ல சக்தி. இனி, எனக்காக அபிகிட்ட சண்டை போடாத. எப்படியாவது அவ வீட்ல பேசி, உங்க மேரேஜ்க்கு சம்மதிக்க வச்சிடலாம். விக்ரமும் வரேன்னு சொல்லிருக்கான். நீ ஒண்ணும் கவலைப்படாத, அவங்க வீட்ல நாங்க பேசறோம். எல்லாம் நல்லதே நடக்கும்” என்னமோ வாழ்க்கையை வாழ்ந்து முடித்தவள் போல், தம்பியின் கன்னம் தாங்கி பேசியவளின் மீது சக்திக்கு பெரும்கோபம் மூண்டது.

“நீ மட்டும் தான் என் லைஃப்ப பத்தி யோசிப்பீயா. எனக்கு உன் லைஃப்ப பத்தி கவலையே இல்லயா. எனக்கு இப்பவே தெரியணும். யார் அந்த கௌதம். என்ன நடந்துச்சு, உங்க ரெண்டுபேருக்கும் நடுவுல. எல்லாம் சொல்லு. நீ மட்டும் சொல்லலனா, நானே அபி வீட்டுக்கு போய், உங்க பொண்ணுக்கு வேற இடத்துல கல்யாணம் பார்த்துக்கோங்கனு சொல்லிட்டு வந்திடுவேன்” அக்காவிடமிருந்து எப்படி உண்மையை வாங்குவதென்று தெரியாதவன், தன் வாழ்க்கையை பணயம் வைக்க, சந்தியா துடித்துப் போனாள்.

தன்னால் தான் பெற்றோர்களுக்கு எந்த மகிழ்ச்சியையும் கொடுக்க முடியவில்லை. சக்தியாவது கொடுக்க வேண்டாமா? இப்போது தன் கதையை சொல்வதால் மட்டும் என்ன மாறிவிட போகிறது. இருந்தும், தம்பி அடம் பிடிக்கின்றானே. சொல்வதனால் எதுவும் ஆகிவிடாது என்றாலும், தம்பிக்காக சொல்லலாம் என்ற முடிவை எடுத்தாள்.

கௌதம் டேர் விளையாட்டில் அவளிடம் ‘ஐ லவ் யு’ சொன்னதில் ஆரம்பித்து, மூன்று மாதங்கள் பேசாமல் பிரிந்திருந்து, பின் சேர்ந்த வரை அனைத்தையும் சொல்லிமுடித்தாள்.

“இவ்ளோ நடந்திருக்கா க்கா. நான் அவங்கள பார்த்திருக்கேன், நீ அம்மாகிட்ட கூட ப்ரண்ட்னு சொல்லி கேட்டிருக்கேன். அப்புறம் அவங்க வர்றதில்லையா, நீ அவங்களோட பேசறத நிறுத்திட்டேன்னு நினைச்சிட்டேன். உங்களுக்குள்ள இப்படியொரு லவ் இருக்கும்னு நான் எதிர்பார்க்கல. அப்புறம் என்னாச்சுக்கா” சக்திக்கு அவர்களது காதலைப் பற்றி கேட்க கேட்க, வியப்பாக இருந்தது. அதிலும் யாரிடமும் அதிகம் பேசாத பயந்த சுபாவமுடைய தன் தமக்கை, ஒருவரிடம் இவ்வளவு அதிகாரமாக நடந்து கொண்டாளா என்ற ஆச்சர்யம் வேறு.

“அதுக்கப்புறம் நாங்க கொஞ்சம் மெச்சூர்ட்டா நடந்துக்க ஆரம்பிச்சோம். அதுக்காக சண்டையே போடாம இருந்தோம்னு சொல்லமாட்டோம். இந்த மாதிரி வேண்டாத சண்டைகள் எங்களுக்குள்ள வர்றது குறைஞ்சிடுச்சு. நான் அவனுக்கு ரெஸ்ட்ரிக்‌ஷன்ஸ் போடறத கம்மி பண்ணேன். அவனும் என்னை புரிஞ்சி, எனக்கு பிடிக்காததை செய்யல. அவனுக்கு பிடிச்சதையும், பார்த்து அளவா, கவனமா செஞ்சான். இனி எல்லாம் சந்தோசமா தான் இருக்கப்போகுதுனு நினைச்சோம். அப்ப தான் அவனுக்கு கேம்பஸ் இன்டெர்வியூல பெங்களூர்ல ஒரு பெரிய கம்பெனில வேலை கிடைச்சது. அதேநேரத்துல என்னால கேம்பஸ் இன்டெர்வியூல கிராக் பண்ண முடியல. நான் என்ன தான் ப்ரிப்பேர் பண்ணாலும், இன்டெர்வியூல டென்ஷனாகி சொதப்பிடுவேன். அது அப்படியே ஒரு தொடர்கதையாவே ஆகிடுச்சு. ரெண்டுபேரும் படிப்பை முடிச்சோம், கௌதம் பெங்களூரு கிளம்பினான்” என்றவளுக்கு அந்த நாள் இன்று நடந்தது போல் இருந்தது.

கௌதமை வழியனுப்ப விமானநிலையம் வந்திருந்த சந்தியாவிற்கு, அவனது விமானத்திற்கான நேரம் நெருங்க நெருங்க, அழுகை வந்துவிட, அதை பார்த்த கௌதம் “சனும்மா. ஏன்டா அழற” எனக் கேட்டான்.

“நீ கொஞ்ச கொஞ்சமா என்னை விட்டு, தள்ளி தள்ளி போறல கௌதம்” என்றவள் அவன் முறைப்பதைப் பார்த்து “இல்லல்ல நான் உங்கிட்ட சண்டையெல்லாம் போடல. நான் அழாம உன்னை சந்தோஷமா தான் வழியனுப்பி வைக்கணும்னு பார்க்கறேன். ஆனா, கண்ணுல தானா தண்ணி வருது” சந்தியா சொல்ல, அவள் விழிநீரை துடைத்தவன்

“நான் உன்னை விட்டுடமாட்டேன் சனு. நான் எங்கடா போறேன், இன்னும் கொஞ்சநாளுல திரும்ப வந்திடுவேன். அதுவரைக்கும் நாம ஃபோன்ல பேசி, வீடியோ கால்ல பார்த்து லவ் பண்ணிக்கிட்டே இருப்போமாம். ஓகேவா சனு, கொஞ்சம் சிரி” என்றவனின் அன்புமுகம் இன்றும் அவள் கண்களில் நிறைந்திருந்தது.

“அப்ப போனவங்க திரும்பி வரவே இல்லையாக்கா” சக்தி கேட்ட கேள்வியில் அவள் நிஜத்திற்கு வந்தாள்.

“இல்ல அதுக்கப்புறமும் எல்லாம் நல்லா தான் போயிட்டு இருந்துச்சு. ரெண்டுபேரும் இன்னும் நிறைய லவ்வ கொடுக்க ஆரம்பிச்சோம். எங்களுக்குள்ள நிறைய மறக்கமுடியாத நிகழ்வுகள் நடந்துச்சு. அப்புறம், ஒரு நாள்..” என்றவள் கண்களை மூடி அந்நாளுக்கு சென்றாள்.

அதே சென்னை விமானநிலையம். வித்தியாசம் என்னவோ, இம்முறை பன்னாட்டு முனையத்தில் காத்திருந்தவனிடம் சந்தியா ஓட “சொல்லாம போகலாம் தான் பார்த்தேன். ஆனா மனசு வரல. நான் கிளம்பறேன் சனு” என்றவனிடம் “போகாத கௌதம். ப்ளீஸ் கௌதம், போகாத. என்னால இங்க தனியா எதையுமே சமாளிக்க முடியாது. ப்ளீஸ் போகாத. கௌத..ம்ம்” அவன் காலில் விழாத குறையாக கெஞ்சினாள். இருந்தும் அவன் சென்றுவிட்டான். அவளது வாழ்க்கையையே திருப்பிப் போட்ட, அந்நாளின் வெட்பத்தை தாள முடியாமல் கண்களை திறந்தவளின் கால்கள் நிற்க முடியாமல் நடுங்க, தரையில் தொம் என்று விழுந்தவள் கதறி அழுதாள்.

சக்தியோ அக்காவை தாங்கிப் பிடித்து சமாதானம் செய்ய “லைஃப்ல எதை எதையோ கடந்து வந்துட்டேன் சக்தி. அந்த நாளை மட்டும், என்னால கடக்கவே முடியல. என் லைஃப்ல நான் தோத்துப் போன நாள். நான் எவ்ளோ முட்டாளா இருந்திருக்கேன்னு எனக்கு புரிய வச்ச நாள். அவனா வந்து லவ் பண்றேன்னு சொன்னான். எனக்கு வேணாம்னு சொன்னப்பவும், என்னால மாத்திக்க முடியாது உனக்காக காத்திருப்பேன்னும் சொன்னான். அப்புறம், கோயம்பத்தூர் போனான். பெங்களூரு போனான். இப்படி கொஞ்ச கொஞ்சமா என்னைவிட்டு தள்ளிப் போனவன், ஒருநாள் ஆஸ்திரேலியா போறேன்னு ஒரேடியா விட்டுட்டு போயிட்டான். எனக்கு அப்பவே தப்பா பட்டுச்சு. விக்ரம் தான், ஆன்சைட் தான போறான், அனுப்பிவை சீக்கிரம் திரும்பி வந்திடுவான்னு சொன்னான். கௌதம் திரும்பி வரவே இல்ல, சக்தி”

“எத்தனையோ முறை கேட்டிருக்கேன், உங்க வசதிக்கு ஏத்த மாதிரி தான் உனக்கு பொண்ணு பார்ப்பாங்க, அப்படி இருக்கப்போ இது சரிப்பட்டு வருமானு. அப்போலாம் எங்க வீட்ல வசதியான பொண்ணை பார்க்கலாம், அவங்கலாம் கௌதமுடைய சனுவாகிட முடியுமானு கேட்பான். அப்படிலாம் பேசிட்டு விட்டுட்டுப் போயிட்டான். நான் என்ன பண்ணேன், எதனால இப்படி ஓரேடியா விட்டுட்டுப் போனான்னு எனக்கு தெரியாது. ஆனா, போயிட்டான். எட்டு வருஷமாக போகுது. இப்ப அவன் மனசுலயும் வாழ்க்கைலயும் நான் இருக்கேனானு கூட எனக்கு தெரியாது. ஏன் சக்தி, எனக்கிந்த வேதனை” சந்தியா கதறி அழ, அவளை தேற்றமுடியாமல் கண்களில் கண்ணீரோடு அக்காவை அணைத்து பிடித்திருந்தான். ஒரு தம்பியாக துடித்துப் போனவன், அவள் கடந்து வந்ததை ஞாபகம் படுத்திவிட்டோமே என்று தன்னை தானே கடிந்தும் கொண்டான். அழுது, அழுது தெம்பிழந்தவள் அவன் மடியில் சாய, தாய் போல் அவளது தலையை வருடி கொடுத்துக் கொண்டிருந்தான்.

அவனுக்கு சந்தியாவை ஆசுவாசப்படுத்த வெகுநேரம் பிடித்தது. சற்று தெளிந்து எழுந்தமர்த்தவளிடம் அந்த கேள்வியை கேட்டான் சக்தி.

“அக்கா நான் ஒண்ணு கேட்டா, தப்பா எடுத்துக்க மாட்டீயே” சக்தி கேட்டதும், சந்தியா அவனை என்னவென்ற கேள்வியோடு பார்க்க..

“ஒவ்வொரு முறையும் அவங்களா தான் உன்னை தேடி வந்திருக்காங்க. ஒருவேளை, இந்த முறை நீயா வரணும்னு காத்துக்கிட்டு இருக்காங்களோ. எனக்கு உன் வாழ்க்கை தான்க்கா முக்கியம். யாருகிட்ட போய் பேசவும் நான் தயாரா இருக்கேன். நாம வேணா அவரை போய் பார்க்கலாமாக்கா” தம்பி சொன்னதை கேட்டு ஏனோ சந்தியாவிற்கு சிரிப்பு தான் வந்தது.

“என்னக்கா சிரிக்கிற” குழம்பிப் போய் கேட்டான் சக்தி.

“கௌதமை பத்தி உனக்கு தெரியாது சக்தி. அவனுக்கு ஒண்ணு வேணும்னா அவனாவே வருவான். இவ்ளோ வருஷம் என்னை தவிக்க விட்டிருக்க மாட்டான். நான் வேண்டாம், அதான் அவன் வரல” சொன்ன அக்காவின் கண்களில் தீர்க்கத்தையும் வார்த்தையில் திடத்தையும் கண்டவனுக்கு, அவரை இவ்வளவு சரியாக புரிந்து வைத்துள்ள தன் அக்காவை அவர் ஏன் விட்டுச்சென்றார் என்ற கேள்வி தான் இருந்தது.

‘நீ இன்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
வழி எங்கும் உந்தன் முகம் தான்
வலி கூட இங்கே சுகம் தான்’


சன்னலோர இருக்கையில் அமர்ந்து மேகக் கூட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தவனுக்கு விமானம் சென்னை பன்னாட்டு முனையத்தில் தரையிறங்க போவதை தெரிவிக்கும் அறிவிப்பே உணர்வை தந்தது. ஆம், சென்னை வந்து இறங்கினான் கௌதம்.

அவள் சொன்னது போல் இத்தனை வருடம் அவனுக்காக காத்திருந்து விட்டாள். ஆனால், அவளது காத்திருப்பில் இன்னமும் காதலும் நம்பிக்கையும் இருக்கிறதா என்று தான் தெரியவில்லை. அதேபோல், அவன் சொன்னது போல் இப்போது திரும்பி வந்துவிட்டான். ஆனால், அந்த வருகை அவனது காதலோடு வந்ததா, அவளது காதலை பெற வந்ததா என்று தான் தெரியவில்லை.

ஒருவாரம் சென்றிருக்க, சந்தியாவும் இப்போது மனம் தெளிந்திருந்தாள். தன் அலுவலகத்தில் வேலை செய்துக் கொண்டிருந்தவளுக்கு அழைத்தான் சக்தி.

“சொல்லு சக்தி” என்றவளிடம் “அக்கா நீ ஈவ்னிங் ஃபீரியா. ஒரு அஞ்சு மணிப் போல வெளில மீட் பண்ணலாமா” என்று சக்தி கேட்க

“எதுக்கு சக்தி” என்னவென்று புரியாமல் கேட்டாள் சந்தியா.

“இல்லக்கா, எனக்கு அபிக்கும் நடுவுல எதுவும் சரியாகல. இன்னும் பிரச்சனை போயிட்டு தான் இருக்கு. அதப்பத்தி உங்கிட்ட பேசணும். வீட்டுல அம்மா இருப்பாங்க, பேசமுடியாது. நாம எதாவது ரெஸ்டாரண்ட் போய் பேசலாமாக்கா” சக்தி சொல்லவும் சந்தியாவிற்கு அவன் மீது கோபம் தான் வந்தது.

“பாரு.. அவக்கூட எனக்காக சண்டைப் போட்டு, இப்ப சரி பண்ண முடியலைனு சொல்ற. இதெல்லாம் தேவையா சக்தி. இனி, இப்படி ஒரு சண்டை, உங்க ரெண்டுபேருக்கு நடுவுல வரக்கூடாது. அஞ்சு மணிக்கு முடியாது, ஒரு மீட்டிங் இருக்கு. நான் ஒரு ஆறு மணிக்கு ஆபீஸ்ல இருந்து கிளம்பறேன். நீ எங்க நிக்கறேனு சொல்லு, நான் உன்னை பிக்அப் பண்ணிக்கிறேன்” தம்பியிடம் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.

சந்தியாவின் காரை சக்தியே இயக்கியதால், அவன் எங்கு அழைத்துச் செல்கிறான் என்று அவளுக்கு தெரியவில்லை. அவன் சொன்னது போல், நான்காவது மாடியில் அமைந்திருக்கும் ஒரு உணவகத்திற்கு தான் அழைத்து வந்திருந்தான். இருவரும் உணவகத்தின் உள்ளே நுழைய, சந்தியாவிற்கு மனது முழுக்க குழப்பம்.

“என்ன சக்தி, யாருமே இல்ல” அவளது சந்தேகத்தை தம்பியிடம் கேட்டாள்.

“தெரியலைக்கா” உண்மையில் சக்தி பொய் சொன்னான். அங்கே யாரும் இருக்க கூடாது என்பதே அவர்களது திட்டம்.

வெற்று இருக்கைகளை பார்க்க பார்க்க, சந்தியாவின் மனதிற்கு எதுவோ தவறாகப்பட்டது. அவள் கணிப்பு தவறுமில்லை. தூரத்தில் ஒருவன் மட்டும் அவர்களுக்கு நேரெதிர்புறம் முதுகை காட்டி அமர்ந்திருந்தான்.

சக்தி தன் அக்காவை, அவனை நோக்கி கைப்பற்றி அழைத்து சென்றான். ஏனோ, அவளது கால்கள் வர மறுத்தது. அவன் அருகே செல்ல செல்ல, அவள் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. அது கண்மண் தெரியாமல் துடிப்பதை உணர்ந்தவளுக்கு, எங்கே அது வெளியே வந்து விழுந்துவிடுமோ என்றிருந்தது.

அவனும் அதுபோன்ற உணர்வில் அமைதியற்று, கைகளை பிசைந்து கொண்டிருந்தான். அவள் அவனருகில் வருவதை உணர்த்தவன், எழுந்து அவள் பக்கம் திரும்பினான். முதலில் அவள் பார்க்க ஏங்கிய முகம், நாளடைவில் அவள் பார்க்க விரும்பாத முகம், அவள் கண்முன் இருந்தது.

ஆம், கௌதம் தான் கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு பிறகு, அவள் முன் ஒரு குற்றவாளியாக நிற்கிறான்.

எட்டு வருடங்களுக்கு முன் எப்படி சென்றானோ, அதேபோல் தோற்றத்தில் பெரியமாற்றம் இல்லாமல் திரும்பி வந்திருந்தான். அதே கட்டுக்கோப்பான உடல் தோற்றம். தலைமுடி, தாடி என அனைத்தும் அவன் அதே கௌதமே. எட்டு வருடத்தில், ஆண்டொன்று போக வயதொன்று ஏறி இருந்தாலும், தோற்றத்தில் முப்பத்தியொரு வயதென்று சொல்லமுடியாத இளமை. இவ்வளவு ஏன், மனதில் ஆயிரம் வலிகளோடு வாழ்ந்திருந்தவனின் முகத்தில் கவலை இடம்பெற்றிருந்த அடையாளமே இல்லாமல் சரும பொலிவுடன் காணப்பட்டான்.

அவனுக்கு நேர்மாறாக சந்தியா. அவனும் கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு பிறகு இன்று தான் அவளை நேருக்கு நேர் காண்கிறான். நிறைய மாற்றங்கள் அவளிடத்தில். முன்பிற்கு இப்போது உடல் எடை போட்டிருந்தாள். அது, அவளது நிறத்தை இன்னும் வெண்மையாக காட்டியிருந்தாலும், பார்ப்பதற்க்கு இரத்தசோகை வந்தவள் போல் வெளுத்துத் தெரிந்தாள். இதில் பற்றாக்குறைக்கு, சில வாரங்களாக அவன் நினைவிலும், அவன் தந்த வலியிலும் அழுது கரைந்ததில், முகமெல்லாம் வாடி பார்க்க அவளா என்றிருந்தாள்.

அவள் தோற்றம் அவளது வலியை சொல்ல, அவளை எதிர்கொள்ள முடியாமல் குற்றவுணர்வில், கௌதம் வெட்கி தலைக்குனிய, சந்தியாவோ அதற்குமேல் அவனை பார்க்க முடியாமல் நடுங்கி அங்கிருந்து ஓடினாள். சக்தி அவள் பின்னால் ஓட, குற்றவாளி கூண்டில் நின்றவன் போல், கௌதமின் கால்கள் அந்த இடத்தை விட்டு நகர மறுத்தது. எவ்வளவு பெரிய பாவத்தை செய்துள்ளான். அவனால் எப்படி இயல்பாக இருக்க முடியும்.

“சந்தியாக்கா.. இருக்கா.. நீ அவர்கிட்ட பேசு” சொல்லிக் கொண்டே சக்தி அவள் பின்னால் ஓட, அவள் கதவருகே சென்று கதவை திறக்கவும் அவளெதிரில் விக்ரம் நின்றிருந்தான்.

தன்னை காப்பாற்ற அங்கு வந்த விக்ரமை கண்டதும், எட்டிப்பிடித்து அவன் நெஞ்சில் தஞ்சமடைந்தவள் “விக்ரம்.. அவன் விக்ரம்.. ப்ளீஸ் விக்ரம், என்னை இங்கிருந்து கூட்டிட்டு போயிடு. எனக்கு அவனை பார்க்க பிடிக்கல. போயிடலாம் விக்ரம்.. வா விக்ரம்” நண்பனின் சட்டையை இறுகப் பற்றி, அவனிடம் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தாள்.

வெளியே விக்ரம், தன் சந்துவை தேற்றமுடியாமல் அவளை நெஞ்சில் சாய்ந்திருந்தான். உள்ளிருந்து அவளை பார்த்திருந்த கௌதம், தன் சனுவை தேற்றக்கூட அவளருகில் செல்லமுடியாத தன் விதியை எண்ணி, வதைந்துக் கொண்டிருந்தான். இதில் அவள் படும் வேதனைக்கு காரணமே தான் தான் என்ற உண்மை வேறு, அவனை குத்தி கூறுப்போட்டுக் கொண்டிருந்தது.


உண்மையாகும்..


உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..
 
Top