அத்தியாயம் நான்கு:
"சாரி அத்தான்.."என்ற நிஷாந்தி தாலியை தூக்கி அவன் முன்பாக காட்டியவள் "இதைக் கட்ட தான் உங்களுக்கு உரிமை இருக்கு இதை கழற்ற உரிமை எனக்குத் தவிர வேறு யாருக்கும் இல்லை.. நீங்க எப்படி வேணும்னாலும் இந்த தாலியை கட்டி இருக்கலாம்.. கண்டிப்பா நீங்க சொல்ற மாதிரி எதையும் என்னால செய்ய முடியாது.."என்றவள் அவன் முகத்தை ஆழ்ந்து பார்த்துவிட்டு, நகர்ந்து செல்ல அவளைப் போக விடாமல் அவள் கைகளை பிடித்து தடுத்து நிறுத்தினான் கார்த்திகேயன்.
"தயவு செஞ்சு என்னை தொடாதீங்க அத்தான்.."
"ஆஹான்.."என்ற கார்த்திகேயன் அவளை மேலிருந்து கீழாக பார்த்துவிட்டு கைகளை விட்டவன் அவளுக்கு செல்வதற்கு நகர்ந்து வழி கொடுக்க, அவன் செயலில் அவளுக்கு ஒன்றும் புரியாவிட்டாலும் காரில் வெகு நேரம் பிரயாணம் செய்து வந்தது உடம்பிற்கு ஓய்வு தேவையாக இருக்கவும் அங்கிருந்த ஒரு அறைக்கு செல்ல அந்தரத்தில் மிதந்து அவள் கால்கள்.
"வெல்கம் டு மை ஹோம் மை டியர் பெட்டர் ஆப்.."என்ற கார்த்திகேயன் அவளை இரு கைகளிலும் தூக்கிக் கொண்டு மாடிப்படி ஏற, அவன் செயலில் ஸ்தம்பித்து எதுவும் செய்யத் தோன்றாமல் செயலிழந்த பாவையாக அவன் கைகளில் அமைதியாக இருந்தாள்.
அவளைத் தூக்கிக் கொண்டு வந்தவன் கட்டிலில் மென்மையாக அமர வைக்க, அப்பொழுதும் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள் பெண்ணவள்.
"கீச் கீச்"என்ற பறவையின் குரலுக்கு நிதானத்திற்கு வந்திருந்தாள் நிஷாந்தி.
முனிவரின் சாபத்தை வாங்கி கல்லாக சமைந்த அகலிகை போல கார்த்திகேயன் கைபட்டு கல்லாக சமைந்து போனாள் நிஷாந்தி.
கார்த்திகேயன் அவள் இருந்த நிலைமை எல்லாம் சிறிதும் பொருட்படுத்தாமல் அந்த அறையோடு பொருந்தியிருந்த மற்றொரு அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றவன் ஹீட்டரை ஆன் செய்து சுடுதண்ணீரை டப்பில் பிடித்தவன் கைத்தொடும் அளவிற்கு பச்சை தண்ணீரை கலந்து கொண்டு வெளியில் எடுத்து வந்தவன் நிஷாந்தி அருகில் வைத்துவிட்டு, அருகில் இருந்த கபோர்டை திறந்தவன் வெள்ளை நிற டவல் ஒன்றை எடுத்துக்கொண்டு அவள் கால் அருகே அமர்ந்தவன் இயல்பு போல் அவள் காலை தூக்கி தன் கால் மீது வைத்துக் கொண்டு புடவையை சற்று மேலே தூக்கி பிடித்து பயணம் செய்து வீங்கி போயிருந்த அவள் கால்களுக்கு சுடுதண்ணீரில் ஒத்தடம் கொடுக்க, அவன் செயல்களை எல்லாம் கண்டு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக நிஷாந்திக்கு இருக்க, அவள் கால்களை அவன் பிடித்தவுடன் தீட்சண்யன் ஞாபகம் வந்துவிட்டன.
அவள் கர்ப்பமாக இருக்கிறாள் என்பதை தெரிந்து கொண்டது முதல் அவளுக்கு அனைத்து சேவைகளையும் செய்பவன் அவனே.
அவளுடைய கால்கள் ஐந்து மாதத்திற்கு மேல் அடிக்கடி வீங்கும்போதெல்லாம் மாட்டேன் என்று அடம்பிடிப்பவளை வலுக்கட்டாயமாக அமர வைத்து கால்களை தூக்கி தன் மடியில் வைத்து சுடுதண்ணீரில் ஒத்தடம் கொடுத்து முடித்தவுடன் அவள் கால்களுக்கு மெல்லிய முத்தம் ஒன்றையும் பரிசாக கொடுப்பான்.
தீட்சண்யன் செய்வது போலவே கார்த்திகேயன் செய்யவும் வேறொருவரின் கரங்கள் தன் உடம்பில் படுவது கூட பாவம் என்று அவன் கைகளில் இருந்த பாதத்தை விடுவித்துக் கொண்டவள் எழுந்து நிற்க, அவள் எழுந்த வேகத்தில் கால்கள் தட்டி அருகில் இருந்த நீரை கொட்டி விட நொடியில் அந்த டைல்ஸ் முழுவதும் ஈரமாக அமர்ந்திருந்த கார்த்திகேயன் உடையும் நனைந்தது.
கண்களில் கண்ணீர் குளம் கட்ட அவனை பார்க்க கூட பிடிக்காமல் வேறு பக்கம் திரும்பி கொண்ட நிஷாந்தி என்ன முயற்சித்தும் அவன் தன்னை தொட்டதை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
அதே நேரம் அவனிடம் சண்டையிடவும் முடியவில்லை.
அவள் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த தாலி அவனுக்கான உரிமையை அவளிடம் பறைசாற்ற, அதை ஏற்றுக் கொள்ளவும் முடியாது
தீட்சண்யன் இழப்பை தாங்கிக் கொள்ளவும் முடியாமல் அவன் மீதான நினைவுகளையும் சுமந்து கொண்டு இருந்தவளுக்கு ஒரு கட்டத்தில் அனைத்தும் தாங்க முடியாத துன்பமாக மாற, கைகள் இரண்டையும் கொண்டு முகத்தை மூடிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.
"ஏய் இப்ப எதுக்கு அழுதுகிட்டு இருக்க..?"என்று தன் ஈரமான உடைகளை பொருட்படுத்தாமல் எழுந்து நின்ற கார்த்திகேயன் அவளிடம் காட்டமாக கேட்க, அவனுக்கு பதில் சொல்லாமல் அங்கிருந்து நிஷாந்தி நகர பார்க்க அவளை விடாமல் தடுத்து நிறுத்தினான்.
"தயவு செஞ்சு என் கையை விடுங்க ப்ளீஸ்.."
"எதுக்காக விடணும்? விடுவதற்காக பிடிக்கல்லையே.."
"இங்க பாருங்க அத்தான் நான் உங்ககிட்ட மறுபடியும் சொல்றேன் உங்களுக்கும் எனக்கும் நடந்த கல்யாணம் ஜஸ்ட் ஒரு ஆக்சிடென்ட் மாதிரிதான்.. என் மாமாவோட இடத்துல என்னால வேற ஒருத்தரை வச்சு எந்த காலத்திலும் பார்க்க முடியாது.. உங்க உயிரை காப்பாற்ற தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. ஆனா அந்த விஷயமே இப்ப போய்னு தெரிஞ்சதுக்கப்புறம் உங்க கூட இருக்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்ல நீங்க கட்டின இந்த தாலியை போட்டுக்கவும் எனக்கு தேவையில்லை.. ஆனா நான் பொறந்த குடும்பத்துல தாலிக்கு உண்டான மரியாதை எல்லம் சொல்லிக் கொடுத்து தான் வளர்த்தாங்க.. என் மாமாவும் எனக்கு நல்லது மட்டும் தான் சொல்லிக் கொடுத்திருக்காரு.. எந்த காலத்திலும் என்னோட வளத்தவங்க வளர்ப்பு தப்பா போகவே போகாது.. நீங்க ஏத்துக்கிட்டாலும் சரி இல்லை இப்படியே விட்டாலும் சரி நான் என்னைக்குமே நிஷாந்தினி தீட்சண்யன் தான்.. நீங்க கட்டின இந்த தாலிக்காக உங்களை என் வாழ்க்கையிலையும் சேர்த்துக்க மாட்டேன் உங்க பேர என் பெயருக்கு பின்னாடி கொடுக்கவும் மாட்டேன்.."என்றவள் கோபமாக சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேற, கார்த்திகேயன் கேட்ட கேள்வியில் சர்வமும் அதிர அப்படியே நின்று விட்டாள் மங்கை.
"அப்போ உன் வயித்துல வளர அந்த குழந்தைக்கு யார் அப்பான்னு சொல்லுவ..? உன்னோட குழந்தை பிறந்து இன்னும் கொஞ்சம் வருஷத்துல நீயும் நானும் ஒண்ணா இருக்குறதை பார்த்து உனக்கும் எனக்கும் என்ன உறவுன்னு கேட்கும்? அப்ப எதுக்கு நீ என்ன பதில் சொல்ல போற..?"என அவன் கேள்வியில் அவள் அதிர்ந்து நின்றது எல்லாம் ஒரு நிமிடம் தான்.
கண்களில் வழியும் கண்ணீரை துடைத்து விட்டு நிதானமாக திரும்பி அவனை பார்த்தவள் "உன்னோட அப்பா நீ என் வயித்துல இருக்கும்போதே நம்மளை விட்டு போயிட்டாருன்னு சொல்வேன்.. உங்க அடுத்த கேள்விக்கான பதில் உங்க கூட லைஃப் லாங் இருக்க போறேன்னு எப்ப சொன்னேன்..? அப்படி உங்ககிட்ட எதுவும் சொன்னதா எனக்கு ஞாபகம் இல்லை.. இன்னும் கொஞ்ச நாள்தான் உங்க வீட்ல இருப்பேன்.. அதுவும் எனக்கு ஒரு வேலை கிடைக்கிற வரை தான் எனக்கு ஏத்தது போல ஒரு வேலை கிடைச்சதும் இந்த வீட்டை விட்டு வெளியே போயிடுவேன்.. எந்த காலத்துலையும் யாரையும் அண்டி பிளைக்க வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது.. என்னோட சொந்த காலில் என்னால நிக்க முடியும்.."என்றவள் நிமிர்ந்து நிற்க, அவளை அசராமல் ஒரு பார்வை பார்த்தான் கார்த்திகேயன்.
"பைனலி இப்ப என்ன சொல்ல வர்ற..?"
"இதுக்கு மேல நான் எதுவும் உங்க கிட்ட சொல்றதுக்கு இல்லை மிஸ்டர் கார்த்திக்.."
"அப்படியா மிஸஸ் கார்த்திகேயன்.."
"சாரி ஐ அம் மிஸ்ஸஸ் நிஷாந்தினி தீ.."என்று சொல்ல வாய் எடுத்த நிஷாந்தி கார்த்திகேயனின் தீ பார்வையில் சொல்ல வந்ததை சொல்லாமல் பாதியோடு நிறுத்திக் கொள்ள, அவள் பக்கத்தில் வந்தவன் "எனக்கு எப்பவுமே ஒரு கெட்ட பழக்கம் இருக்கு நிஷா..யாராவது ஒரு விஷயம் என்னிடம் செய்யக் கூடாதுன்னு சொன்னா அப்பதான் அதை செய்ய தோணும்.. ஏன்னா அதுல அப்படி ஒரு கிக் இருக்கு அத சொல்லலாம் முடியாது.. இப்ப இந்த நிமிஷம் உன்கிட்ட சேலஞ்ச் பண்றேன் நீயே வந்து சொல்லுவ நீயும் நானும் ஒன்னா சேர்ந்து வாழலாம்னு நீயே சொல்லுவ.. உன் வயித்துல வளர குழந்தைக்கு அப்பா நான் தான்னு நீயே சொல்லுவ.. நீயும் சரி அந்த குழந்தையும் சரி வேற ஒருத்தனோட பிராப்பர்ட்டியா இதுவரைக்கும் இருந்தாலும் இந்த நிமிஷத்திலிருந்து நீங்க ரெண்டு பேரும் எனக்கு மட்டும்தான்.. உன்கிட்ட இருக்கிற உன் முன்னாள் புருஷன் நினைவுகள் அத்தனையும் அழித்து நான் தான் உன்னோட உலகம்னு நீயே சொல்ற நாள் வெகு தூரத்தில் இல்லை.."என்ற கார்த்திகேயன் தன் பாக்கெட்டில் வைத்திருந்த சுவிங்கம் ஒன்றை வாயில் எடுத்துப் போட்டுக் கொள்ள, அவன் சொன்னதை கேட்டு அவனை அருவருப்பாக பார்த்த நிஷாந்தி "நீங்க நினைக்கிறது ஒரு காலமும் நடக்காது கார்த்திகேயன்.. இதுவரைக்கும் நீங்க என்னோட மாமா மகன் என்னை விட வயசுல மூத்தவர் அதனால் தான் உங்களை அத்தான்னு மரியாதையா அழைச்சுக்கிட்டு இருந்தேன்.. இனிமே உங்களுக்கு அந்த மரியாதை எல்லாம் கிடையாது அதுக்கு எல்லாம் தகுதியான ஆளும் நீங்க கிடையாது.. நீங்க நினைக்கிறது ஒருபோதும் நடக்கவே நடக்காது அப்படி நடக்கும் போது என் உடம்புல உயிர் இருக்காது.."என அத்தனை நேரம் கண்களில் அணிந்திருந்த கண்ணாடி வழியாக அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் பேச்சை கேட்டு இதழ்களில் நக்கல் புன்னகையை பரவ விட்டு, அங்கிருந்து வெளியேறி சென்றான்.
அவன் அறையை விட்டு வெளியே சென்றதும் கதவை சாத்திவிட்டு உள்ளே வந்தவள் கவனமாக தண்ணீரில் கால் வைக்காமல் அறைக்கு பக்கத்தில் இருந்த பால்கனியில் சென்று நிற்க,சிறிது நேரத்தில் தனக்குள் பூகம்பத்தை உண்டு பண்ணி சென்றவன் மீது கடும் கோபம் கொண்டாள் காரிகையவள்.
'நீங்க நினைக்கிறது எதுவும் எப்பவும் நடக்காது..'என்று நிஷாந்தி வாய் முணுமுணுக்க அதை தடை செய்வது போல் எட்டி உதைத்தது அவள் வயிற்றில் வளரும் குழந்தை.
குழந்தை உதைத்ததும் தான் அவளுக்கு தான் இன்று முழுவதும் எதுவும் உண்ணவில்லை என்பது நினைவு வந்தது.
'இவன் கூட பேசிகிட்டு இருந்ததில்ல உனக்கு சாப்பாடு கொடுக்க மறந்துட்டேன் பாப்பா தயவு செஞ்சு அம்மாவை மன்னிச்சுடு..'என்றவள் புதிதாக வந்திருந்த அந்த வீட்டில் அதுவும் தனக்கு பிடிக்காத ஒருவனின் வீட்டில் சாப்பிடுவது எரிச்சலாக இருந்தாலும் வேறு வழி இல்லாமல் தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு உணவு கொடுக்க வேண்டும் என்பதற்காக கதவை திறந்து கொண்டு வெளியில் வர,"ஹே செல்லம் எனக்கு ஒரே ஒரு முத்தம் கொடுடி.."என்று ஹஸ்கி வாய்ஸில் கார்த்திக் சொல்வது அவள் காதுகளில் விழ,அதில் சாப்பிடும் எண்ணத்தை கைவிட்டவள் உள்ளே சென்று கதவை சாத்திக் கொண்டாள்.