பாகம் 20
நாட்கள் வேகமாக நகர்ந்தது. கிருஷ்ணா வேலை பளு காரணமாக வர ராதாவை பார்க்க வரவில்லை. போனில் உரையாடுவதும் குறைந்தது. இவை ராதாவின் மன ஏக்கத்தை அதிகரித்து அவளது முடிவு சரி தான், ஏதோ நிர்பந்தத்தில் தன்னை திருமணம் செய்து கொண்டான் தான் எங்காவது சென்று விட்டால், தன்னை பார்க்காமல் இருந்தால் தன் நினைவு மறந்து அவன் வேறொரு வாழ்க்கைக்கு தயாராகிவிடுவான் என்ற முடிவிற்கு வந்தாள்.
அன்று அவர்களது கல்லூரிக்கு ஒரு சிறிய நிறுவனத்தில் இருந்து காம்பஸ் இன்டர்வியூ செய்ய வந்தார்கள். திருப்பூரில் புதிதாக தொடங்கியுள்ள அவர்களது கார்மெண்ட்ஸ்காக ஆட்களை தேர்ந்தெடுக்க வந்தார்கள்.
வழக்கம்போல ராதா நன்றாகவே இன்டர்வியூ அட்டென்ட் செய்தாள்.
ஹெச் ஆர் “மேடம் உங்க டிசைன்ஸ் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு, ரொம்ப யுனிக்கா இருக்கு...கண்டிப்பா நீங்க சேர்ந்தீங்கன்னா கம்பெனி பெரிய அளவில் வரும்..அதோட பலன் உங்களுக்கும் இருக்கும். ஆனா??”
என்ன??? என்பது போல ராதா பார்க்க....
மேடம், இது இப்போதான் புதிதா ஆரம்பித்த கம்பெனி அதனால வேலை அதிகம் இருக்கும், நேரம் முன்ன பின்ன ஆகும், சரியா 9 டு 5 வேலை முடியாது, நீங்க கல்யாணம் ஆனவர், உங்க வீட்ல விடுவாங்களா??? உங்களால் உங்க குடும்பத்தை விட்டு வர முடியுமா??
அட இப்படி நாம நினைக்கலையே.....இது தான் நமக்கு வேண்டும் என்று நினைத்தவள் சரி என்று அவர்களது அணைத்து கண்டிஷன்களுக்கும் தலை ஆட்டியவள், தனக்கு பாதுகாப்பாக தங்க இடம் மட்டும் வேண்டும் என்று உறுதி படுத்தி கொண்டாள்.
அன்று இரவு டைரியில் வழக்கம் போல தன் மாமாவுடன் உரையாடி விட்டு தான் திருப்பூர் கம்பெனிக்கு வேலைக்கு செல்வதாக முடிவு எடுத்து இருப்பதை கூறி விட்டு படுத்தாள்.
அவள் இந்த கம்பெனியை தேர்ந்தெடுக்க காரணம் கிருஷ்ணாதான், ஒரு முறை ஏதோ விவாதத்தின் போது அவன், “பாப்பு எப்போவும் பெரிய கம்பெனி விட சின்ன கம்பெனில இருந்து தான் நாம நம்ம வேலைய தொடங்கணும்...ஏன் தெரியுமா???”
“ஏன்???”
“சிறிய கம்பெனில நீ நிறைய விஷயம் கத்துக்கலாம். உன்னோட வேலை மட்டும் இல்லாம முழுமையா அந்த நிறுவனத்தை பார்க்கலாம், உன்னுடைய வேலைக்கு முந்தின நிலை, நீ வேலை முடிச்ச பிறகு என்ன செய்றாங்க, உன்னோட டிசைன்ஸ் நிஜமாக என்னவெல்லாம் செய்றாங்க எல்லாம் தெரிஞ்சுக்கலாம். பெரிய நிறுவனம்னா அது முடியாது, கடிவாளம் கட்டின குதிரை மாதிரி உன்னோட வேலை மட்டும் முடிச்சுட்டு வந்துடலாம், அதுனால நீ வேலைக்கு போகணும்னு முடிவெடுத்தா முதல்ல ஒரு சின்ன கம்பெனில சேர்ந்தா இந்த மாமா சந்தோஷப்படுவேன் சரியா??”
“ம்ம் சரி..”
மாமா எப்பவும் நீங்க சந்தோஷப்படுற மாதிரி நான் நடந்துப்பேன்.
வைஷ்ணவியின் வரவேற்ப்பு மதுரையில் ஏற்பாடு செய்யப்பட்டது, அது முடித்து யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து கிளம்பி திருப்பூர் வேலையில் சேர ராதா திட்டம் தீட்டி கொண்டாள்.
வைஷுவின் திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பே ஊரிலிருந்து அனைவரும் வந்துவிட கிருஷ்ணா மட்டும் வரவில்லை.
லஷ்மி பாட்டி, சுமி, கவுசல்யா ராதாவுடன் தங்கி கொண்டனர்.
லஷ்மி பாட்டி, “கண்ணா எப்படிடா இருக்க??”
நல்லா இருக்கேன் பாட்டி...
ராதாவுக்கு கவுசல்யாவின் குழந்தையுடன் விளையாட நேரம் போதவில்லை, மூவரும் அவள் மீது அன்பை பொழிந்தனர், அதை பார்த்த தனம் பாட்டி அழ, அனைவரும் திகைத்தனர்.
ஏன் சம்பந்தி அழறீங்க??
இது மாதிரி ஒரு நாள் கூட என் பேத்திகிட்ட நாங்க அன்பா நடந்துக்கல, மனசுல இருந்த அன்பை வெளியில சொல்லல, நீங்க அவளை இப்படி நடத்தும் பொழுது மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று அவர் மேலும் கண்ணீர் விட, ராதாவும் கண் கலங்கினாள். “என்னை மன்னிச்சுடு பாட்டி என்னால் இதை முழுசா அனுபவிக்க முடியாது....இது மாதிரி அழுதுதான் என்னை மாமாவை கல்யாணம் பண்ணிக்க வச்சியா?? வேணாம் பாட்டி மாமா யாராவது நல்ல அழகான பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்கட்டும்.” மனதிற்குள் மறுகியவள் இவர்களை பிரிய போவதை எண்ணி மேலும் கண்ணீர் விட்டாள்.
“அடடா....பாசமா பேசுறது ஒரு குத்தம்மா??? எடுடா அரிவாளை போடுடா ஒரே போடு” என்று கவுசல்யா குரல் கொடுக்க நிலைமை சகஜமானது.
ராதாவிற்கு வைஷுவின் கல்யாணத்திற்க்கோ, வரவேற்பிற்க்கோ செல்ல துளியும் விருப்பம் இல்லை. எனினும் யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்கவும், தன் திட்டத்தை நிறைவேற்றி கொள்ளவும் இந்த நிகழ்ச்சியை உபயோகப்படுத்தி கொள்ள திட்டமிட்டாள்.
அதற்கு அவள் எடுத்த முதல் முடிவு யார் என்ன சொன்னாலும் ஒரு புன்னகையை மட்டும் சிந்துவது என்பது தான். என் மனதை வருத்தப்பட வைப்பவர்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அவர்களது சொல்லும் செயலும் என்னை எந்த விதத்திலும் பாதிக்காது.
கிருஷ்ணா திருமணத்திற்கு முந்தைய நாள் வந்தான், வந்தவன் ராதா தன் தாய், பாட்டி, அண்ணி, குழந்தை புடை சூழ இருப்பதை பார்த்து பல்லை கடித்தான். குண்டு பிசாசு மண்டைல மசாலா இருக்கா இல்லையா தெரியலையே....மாமா இத்தனை நாள் கழிச்சு வரானே தனியா இருப்போம்னு இருக்கா....எப்பவும் ஒரு கும்பலோட திரிய வேண்டியது....டேய் எல்லாரும் உங்க ஆளுங்கடா என்று அதட்டிய மனசாட்சியை, எல்லாம் எனக்கு தெரியும் என அதட்டியவன், “ராதா” என்றான் அன்பொழுக.
கண்ணில் ஒளியுடன் நிமிர்ந்தவள் “மாமா” என்று அருகில் வந்தவள் சுற்றி இருப்பவர்களை மனதில் கொண்டு அவன் கையில் இருந்த பையை வாங்கி கொண்டாள்.
“வாங்க மாமா”
“வந்துட்டேன், குளிக்க ரெடி பண்ணு” என்றான் சலிப்பாக
எப்பவும் இப்படி இருக்க மாட்டங்களே, என்னாச்சு ரொம்ப வேலையோ, என யோசிக்க
வா கண்ணா....சீக்கிரம் ரெடி ஆகு நாங்க பக்கத்து ரூம்ல ரெடி ஆகுறோம் நேரம் ஆகுது என்று பாட்டியும் மற்றவர்களும் அடுத்த அறைக்கு நகர்ந்தனர்.
இல்லை பாட்டி இங்கேயே இருங்க என்று ராதா தடுக்க, கவுசல்யாவிற்க்கு சிரிப்பு தாங்கவில்லை.
“ஏன் அக்கா சிரிக்கிறீங்க??”
“கடவுளே உன்னை வச்சுக்கிட்டு தம்பி என்ன செய்ய போறாரோ??”
“என்னை வச்சு என்ன செய்வாரு??”
“ஒண்ணுமில்லைமா ஒண்ணுமில்லை உன் பாடு தம்பி பாடு” சிரித்து கொண்டே ஓடி விட்டாள்.
கவுசல்யாவின் பேச்சை குளியலறையில் கேட்டு கொண்டு இருந்தவனுக்கு சிரிப்பு தாங்கவில்லை. “அண்ணி கொஞ்சமாவது உங்க தங்கச்சியை தேத்தி விடுங்க....என்ன சொன்னாலும் தேற மாட்டேங்குது, மக்கு என்கிட்டே பேசாம உங்க யார்கிட்டயும் பேச மாட்டேங்குது, இன்னும் என்னென்ன கலாட்டா பண்ணி வைக்க போகுதோ???” மனதிற்க்குள் நினைத்து கொண்டே சிரித்தான்.
வரவேற்ப்பு சிறப்பாக நடந்தது. ராதா ஒரு ஓரமாக இடம் பார்த்து அமர்ந்து கொண்டாள். கிருஷ்ணா சிறிது நேரம் அவள் அமர்ந்தவன் பிறகு மணப்பெண் வீட்டிற்க்கு உதவ சென்றான்.அவ்வப்பொழுது இவளை பார்த்து செல்வது பிறகு வேலை செய்வது என்று நேரத்தை செலவிட்டான்.
கவுசல்யா தங்கள் குடும்பத்தினருடன் பேச குழந்தையை இவள் வாங்கி வைத்து கொண்டாள்.
அடுத்த நாள் திருமணமும் சிறப்பாக நடந்து முடிந்தது. இவளை துன்புறுத்தும் சிவகாமி வைஷு இருவரும் பிஸியாக இருந்ததால் இவள் தப்பித்தாள். மணப்பெண்ணின் அறைக்கு செல்ல சொல்லி கிருஷ்ணா சொல்ல இதோ போகிறேன் என்று அவனுக்கு போக்கு காட்டி விட்டு ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டாள். வலிய சென்று வாங்கி கட்ட பைத்தியமா என்ன?? ராதா நீ சூப்பர் மா எப்படி எஸ்கேப் என்று அவளுக்கு அவளே பாராட்டு பத்திரம் வாசித்து கொண்டாள்.
திருமணம் முடிந்து அடுத்த நாள் மதுரையில் வரவேற்ப்பு அதன் பிறகு மற்ற சடங்குகள் எங்களது பாரம்பரிய வீட்டில் நடக்க வேண்டும் என்று முன்பே முடிவெடுத்து இருந்தனர். எனவே திருமணம் முடிந்து அன்று இரவே ரயிலில் முதல் வகுப்பில் ac கோச் முன்பதிவு செய்யப்பட்டது.
தாத்தா பாட்டி கிருஷ்ணா ராதா நால்வருக்கும் ஒரு கூபே ஒதுக்கப்பட்டு இருந்தது. தாத்தா பாட்டி இருவரும் கீழே படுத்து கொண்டனர். ராதாவும் கிருஷ்ணாவும் மேல படுக்க, மற்ற மூவரும் களைப்பில் உறங்க ராதா மட்டும் தான் மாமாவுடன் இருக்கும் நேரம் குறைந்து கொண்டே வருவதை நினைத்து தூக்கத்தை இழந்தாள்.
“மாமா என்னை மன்னிச்சுடுங்க, ஆனா மறந்துடாதீங்க..கொஞ்ச நாள் கழித்து உங்களை வந்து யாருக்கும் தெரியாமல் பார்த்துட்டு போய்டுவேன். உங்களை பற்றி யார் மூலமாவது எப்படியாவது தெரிஞ்சுக்குவேன். உங்க நன்மைக்காக தான் இந்த முடிவை எடுக்கிறேன்”, மனத்திற்குள் பேசியபடி கிருஷ்ணாவை கண்ணிற்குள் நிரப்பி கொண்டாள்.
மேலும் எதையும் நினைக்க முடியாமல் கண்ணில் கண்ணீர் பெருக எழுந்து கண் மூடி அமர்ந்து கொண்டாள். சிறிது நேரம் கழித்து கண் திறந்து பார்த்தால் அவளது அருகில் கிருஷ்ணா அமர்ந்து கொண்டு இருந்தான் இவளை துளைக்கும் பார்வையுடன்.
“பாப்பு என்னாச்சுடா ஏன்டா அழற??” என்று கிசுகிசுப்பான குரலில் கிருஷ்ணா கேட்க
“மாமா” என்று எதுவும் பேசாமல் அவனை கட்டி கொண்டு அதுவரை இருந்த அவளது மன பாரம் அனைத்தும் அழுத்த சேர்த்து வைத்து அழுதாள்.
என்னாச்சு குட்டிமாக்கு??
ஒண்ணுமில்லை???
அப்போ எதுக்கு இவ்ளோ அழுகை??
அவனாலும் அந்த நேரத்தில் கீழே பெரியவர்கள் இருக்க மேலும் கேட்க முடியாமல் போக ராதா கிருஷ்ணாவை கட்டி கொண்டு அழுதவள் கேவி கொண்டே உறங்கியும் விட்டாள்...இப்பொழுது உறக்கம் இழப்பது கிருஷ்ணாவின் முறை ஆனது.
தொடரும்.....