டீசர் 1
..............
வேலைகளை முடித்துவிட்டு அறைக்குள் வந்த காவ்யா தோழி வழக்கத்திற்கு மாறாக அமைதியாக இருப்பதை நினைத்து கவலை கொண்டாள். ஏன் இந்த அமைதி என்று அவளுக்குத் தெரியும்.. தொண்டையை செருமிக் கொண்டு அவளிடம் சென்றவள்..
“நிலா நாளைக்கு ஸார் கூட போகப் போறியா?” என்று கேட்டாள்.
மேற்கூரையைப் பார்த்தவாறு படுத்திருந்தவளிடம் “ம்” என்ற சத்தம் மட்டும் வந்தது.
அவளருகே அமர்ந்தவள் “நிலா என்னைப் பார்.. உனக்கு உண்மையாகவே வினோதனைப் பிடிச்சிருக்குத் தானே?” எனக் கேட்கவும், தோழியை நோக்கியவள்.. தலையை அவள் மடியில் வைத்து விழிகளை முடிக்கொண்டு.. “எனக்குப் பிடிச்சிருக்கா பிடிக்கலையான்னு சத்தியமா தெரியலை காவ்யா” என்று குழப்பமான மனநிலையில் பதிலளித்தாள்.
அவள் தலையை வருடியவாறு “எனக்கு உன்னைப் பற்றி நல்லாத் தெரியும்.. நீ அவர் கூட வெளியில் செல்ல சம்மதித்திருக்கன்னா நிச்சயம் உன் மனசில ஒரு ஓரத்தில் அவரைப் பற்றிய நல்ல எண்ணம் பதிந்திருக்கும்..” என்க..
சட்டென எழுந்து அமர்ந்து தோழியை முறைத்தவள் “உனக்காகத் தான் இதைச் செய்யறேன் மங்கி.. இல்லன்னா அந்த இடியட்டோட ஒரு நாள் முழுவதும் டைம் செய்யறதுக்கு யார் சம்மத்திப்பா..” என்று திட்ட ஆரம்பித்தாள்.
காவ்யா அசடுவழிந்தவாறு அவளைச் சமாளித்தவள் “அப்படிச் சொல்லாதே நிலா.. நீ வர்றன்னு சொல்லிட்டு இப்போ ஏன் அதை யோசிக்கிற..”
வெண்ணிலாவின் முகம் மாற “எனக்கு பயமா இருக்கு காவ்யா.. நான் காயப்பட விரும்பலை.. ஒருவேளை நான் அவரை விரும்ப ஆரம்பிச்சிட்டா.. ஒருவேளை அவர் என்னை ஏமாத்திட்டால்.. எனக்கு குழப்பமா இருக்கு காவ்யா.. அவர் பெரிய பணக்காரர்.. என்னைப் பார்.. நான் ஒன்னுமே இல்லை.. பேரண்ட்ஸ் கிடையாது.. பெரிய பேக்ரவ்ண்ட் கிடையாது.. நான் அவருக்கு என்ன கொடுக்க முடியும்.. அப்றம் அவர் என்னை ஏன் லவ் பண்ணனும்..? அவருக்கு இந்த ஒரு மாதத்தில் என்னைப் பற்றி என்ன தெரியும்..? எப்படி ஒருத்தரை ஒருத்தர் தெரிந்து கொள்ளாமல் லவ் பண்ண முடியும்..?” என்று படபடப்புடன் கேட்டாள்.
காவ்யாவோ அவளின் கரங்களைப் பிடித்துக் கொண்டு “என்னை மாதிரி தான்.. நானும் அருண்ணை பற்றித் தெரியாமல் தான் லவ் பண்ணினேன்.. காதல் எல்லாத்தையும் தெரிஞ்சிட்டு வர்றது இல்லை நிலா.. காதல் உன்னை அறியாமல் உன் இதயத்தில் உன் ஆத்மாவில் உணர்வது.. காதல் என்பது காதல் மட்டும் தான்.. நான் உன்னைக் கட்டாயப் படுத்தலை நிலா.. உன் மனசைக் கேள்.. உனக்கே தெளிவு கிடைக்கும்..” என்க.. நிலா மௌனமாக தலையசைத்தாள்.
*******
“நாம் எங்கே போறோம்” என்று ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தவளிடம் கேட்டாள்.
அவள் தானாக தன்னிடம் பேச உள்ளுக்குள் எழுந்த மகிழ்ச்சி முகத்தில் பிரதிபலிக்க “நான் உனக்காக சர்ப்ரைஸ் வைச்சிருக்கேன் நிலா..” என்றான்.
அவளோ நக்கலாக சிரித்து “நீங்க கொடுக்கிற சர்ப்ரைஸ் அன்ட் கிப்ட்டுக்காக எஸ் சொல்லுவேன்னு நினைக்கிறீங்களா” என்க..
“மே பி அது உனக்கு விலை மதிக்க முடியாத ஒன்றாகக் கூட இருக்கலாம்” என்று ரகசியமாகச் சிரித்தான்.
வெண்ணிலா “அப்படின்னா நீங்க என்னைத் தவறா புரிஞ்சிட்டு இருக்கீங்க.. உங்களோட காஸ்ட்லி கிப்ட்ஸுக்காக மயங்கிறவ நான் கிடையாது..” என்று கடுமையாக உரைத்தாள்.
வினோதன் மென்னகையுடன் “இது காஸ்ட்லி இல்லை.. பட் எனக்கு இது விலை மதிக்க முடியாத பொக்கிஷம்.. அதை ஏத்துக்கிறதும் மறுக்கிறதும் உன் விருப்பம்” என்றான்.
நம்பமுடியாமல் தலையை இடவலமாக அசைத்தவள் “இது தான் நான் முதலும் கடைசியுமாக உங்க கூட அவ்ட்டிங் வர்றது வினோத்..” என்றாள்.
அவன் ஒன்றும் சொல்லிவில்லை அவள் இன்று நிச்சயம் தன்னை ஏற்றுக் கொள்வாள் என உறுதியாக நம்பினான்.
சில வினாடிகளுக்குப் பிறகு கார் ஓரிடத்தில் நிற்க.. சுற்றிலும் பார்த்தவளுக்கு முதலில் திகைப்பாக இருந்தது. திகைப்பு பின் கோபமாக மாற அவன் பக்கம் திரும்பினாள்.
........................
முதல் டீசர் படித்துவிட்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.. நாளை முதல் அத்தியாயத்தில் சந்திப்போம்..
நன்றி.