All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "தழலாய் நின் நேசம்..!!" - கதை திரி

Status
Not open for further replies.

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இதோ அடுத்த கதைக்கான அறிவிப்போடு வந்துவிட்டேன்..

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக செய்ய நினைத்து தள்ளிப் போய் கொண்டே இருந்த ஒரு சிறு முயற்சி இது. இந்த முறை செய்தே தீருவது என்ற முடிவோடு வந்து விட்டேன்..

அதாவது நான் என்ன சொல்ல வரேன்னா.. அது வந்து.. அது வந்து நான் ஒரு சீரிஸ் எழுத போறேன்.. ஹிஹிஹி.. யாரும் அடிக்க வராதீங்க, அதற்கும் வழக்கம் போல் உங்களில் அன்பும் ஆதரவும் கிடைக்குமென நினைத்தே இந்த முயற்சியில் இறங்கி இருக்கேன்..

இதில் மொத்தம் ஆறு கதைகள் வரும்.. ஆறு கதைகளின் கதாபாத்திரங்களும் ஒருவரோடு ஒருவர் எப்படி தொடர்பு உடையவர்கள் என்பதை எல்லாம் கதையின் போக்கில் தெரிந்துக் கொள்ளுங்கள்..

இந்த கதைகள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று இழைந்து வருவதால் இழை என்ற பெயரிலேயே இவை வெளி வரும்..

இனி கதையை பற்றி பார்ப்போமா..?

முதல் கதை அதாவது இழை 1..

இதன் நாயகன் இதுவரை நான் என் கதைகளில் தொடாத ஒரு பின்னணியை கொண்டவன்.. யாரென ஏதாவது உங்களால் கணிக்க முடிகிறதா..?

1.. 2.. 3..

ஒகே நானே சொல்லி விடுகிறேன்.. இந்த கதையின் நாயகன் அரசியல் பின்னணியைக் கொண்டவன், கதையும் அரசியல் பின்புலத்தை கொண்டே நகரும்..

கதையின் தலைப்பு : தழலாய் நின் நேசம்..!!

34888

நாயகன் : நிமலன் நெடுஞ்செழியன்

நாயகி : தமயந்தி ஜெயதேவன்


ஏப்ரல் 12 முதல் நம் வழக்கமான நாட்களான வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் கதை தொடர்ந்து வரும்..

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..


இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
34889
தழல் – 1

கலியுக தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே
மூஷிக வாகனனே மூலப் பொருளோனே
ஸ்கந்தகுரு கவசத்தைக் கலிதோஷம் நீங்கிடவே

திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்

என்று எங்கோ ஒலித்துக் கொண்டிருக்க.. அந்த அதிகாலை அமைதியில் மெலிதாக அந்தப் பாடல் காற்றைக் கிழித்துக் கொண்டு காரில் பறந்து கொண்டிருந்த நிமலனின் செவியை வந்து தீண்டியது.

அதில் இனிமையான அந்த இசையை விழிமூடி ஒரு நொடி உள்வாங்கியவனுக்கு மனம் ஒருவித அமைதியை கொடுக்க.. இதே மனநிலையை நீடிக்க விரும்பி, காரில் இருந்த இசை தட்டில் பாடலை ஒலிக்க விட்டான் நிமலன் நெடுஞ்செழியன்.

அனைவரையும் போலவே நிமலனுக்கும் கார் பயணத்தின் போது இளையராஜாவையே கேட்க பிடிக்கும். மெல்லிய குரலில் அங்கு இசை வழிந்தோட.. அதை ரசித்தவாறே பயணித்துக் கொண்டிருந்தவனின் மனம் சற்று அமைதியானது.

கடந்த சில நாட்களாகவே அவன் மனம் ஒருவித அழுத்தத்தையும் வலியையும் உணர்ந்து கொண்டே இருந்தது. அதிலிருந்து வெளி வரும் வழியும் தெரியாமல், வெளி வரவும் முடியாமல் தவித்திருந்தவனுக்குத் தன் மனநிலையை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவும் முடியா ஒரு நிலை தான்.

அதனாலேயே ஒரு மாற்றத்திற்காக பெங்களூர் சென்று விட்டவனுக்கு இப்போதைக்கு இங்குத் திரும்பி வரும் எண்ணமே இல்லை. ஆனால் கட்சி மேலிடத்தில் இருந்து அவனுக்கு இன்று இங்கு வந்தேயாக வேண்டுமென்ற கட்டளை வந்திருக்க.. அதை மீற முடியாமல் கிளம்பி வந்து கொண்டிருந்தான் நிமலன்.

மனம் முழுக்க அவ்வளவு கோபமும் வெறுப்பும் இருந்தது. அதை மறைத்துக் கொண்டு ஊர் உலகத்திற்காக அங்குச் சென்று எதுவுமே நடக்காதது போல் புன்னகை முகமாக ஊடகங்கள் முன்பு நிற்க வேண்டிய சூழல்.

ஆனால் இதைத் தவிர்க்கவும் முடியாது என்று புரிந்தே நேற்றில் இருந்து எது நடந்தாலும் எத்ர்வினையாற்றவே கூடாது என்று தன் மனதை பெருமளவில் தயார் செய்து கொண்டே கிளம்பி வந்து கொண்டிருந்தான் நிமலன்.

நேற்று இரவு கிளம்பும் போதே தன் பாட்டி சூர்யகலாவுக்கு அழைத்து விவரம் சொல்லி இருந்தான் நிமலன். இல்லையெனில் அவர் அங்குச் செல்ல வேண்டாமெனப் பெரும் பிரச்சனை செய்ய வாய்ப்பிருப்பது அறிந்தே முதலில் இதைச் செய்திருந்தான் நிமலன்.

அப்போதும் அவன் எதிர்பார்த்தது போலவே, “அதெல்லாம் நீ அங்கே போகணும்னு அவசியமில்லை நிமலா.. அப்பறம் ஏதாவது காரணம் சொல்லிக்கலாம், நீயும் இப்போ ஊரில் இல்லை.. அதனால் இதையே கூட நீ காரணமா சொல்லிக்கலாம்..” என்று அவனை வர விடாமல் தடுக்கவே முயன்றார் சூர்யகலா.

அவனே விருப்பமில்லாமல் கிளம்பி வந்து கொண்டிருக்கும் நிலையில் இது வேறு அவனுக்கு எரிச்சலை தர.. அவரை எதிர்த்து பேச விரும்பாமல் “தலைவர் உத்தரவு பாட்டி..” என்று ஒருவித அழுத்தத்தோடு சொல்லி முடித்திருந்தான் நிமலன்.

இதுவே நிமலன் இனி இதைத் தட்ட மாட்டான் என்பதை அவருக்குப் புரிய வைக்கப் போதுமானதாக இருக்க.. அதோடு அமைதியாகிப் போனார் சூர்யகலா.

இதையெல்லாம் யோசித்தவாறே பயணித்துக் கொண்டிருந்தவனின் கவனத்தை கமலின் குரலில் வழிந்த பாடல் கலைக்க.. தன் கவனத்தை அந்தப் பக்கம் திருப்பினான் நிமலன்.

எந்தன் காதல் என்னவென்று…

சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது…
எந்தன் சோகம் உன்னைத் தாக்கும்…
என்றெண்ணும் போது வந்த அழுகை நின்றது…
மனிதர் உணர்ந்து கொள்ள…
இது மனிதக் காதலல்ல…

அதையும் தாண்டிப் புனிதமானது…

என கமல் காதலில் உருகி பாடிக் கொண்டிருக்க.. தன் மனநிலையை மாற்ற வேண்டி, அதனோடு சேர்ந்து மெல்ல முணுமுணுத்தவாறே ஸ்டேரிங்கில் தன் விரல்களால் லேசாக தாளமிட்டப்படியே மிதமான வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்தான் நிமலன்.

அந்த அதிகாலை மூன்று மணியளவில் ஊர் உலகமே அமைதியாக இருக்க.. அந்தத் தனிமையும் குளுமையும் மனதிற்குப் பிடித்த இசையுமாக ஆள் அரவமற்ற சாலையில் பயணித்துக் கொண்டிருந்தவனின் மனம் பல மாதங்களுக்குப் பின் எந்த ஒரு யோசனையோ இறுக்கமோ இல்லாமல் கொஞ்சமே கொஞ்சம் நிர்மலமாக இருந்தது.

பெங்களூர் நெடுஞ்சாலையின் வழியே சென்னையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தவன், இன்னும் ஒரு மணி நேரத்தில் சென்னையைச் சமீபிக்க இருந்த போது திடீரென அதீத வேகத்தில் வந்த கார் ஒரு திருப்பத்தில் நிமலனின் கார் மேல் மோதுவது போல் வந்து கடைசி நொடியில் சுதாரித்து விலகி ஒடித்துத் திரும்பியது.

அதே நேரம் தன் மேல் மோத வந்த காரில் இருந்து தப்பிப்பது போல் நிமலனும் காரை சடன் பிரேக்கிட்டு அந்தக் காருக்கு எதிர் பக்கமாகத் திருப்பி இருந்ததில் பெரும் விபத்து ஒன்று தவிர்க்கப்பட்டது.

அதில் உண்டான படபடப்போடு நிமிர்ந்து அந்தக் காரை பார்த்தவன், “ஏய் அறிவில்லை உனக்கு..? பார்த்து வர மாட்டே..? என்ன ரேஸிலேயா ஓட்டறே..?” என்றான் எரிச்சலோடு நிமலன்.

அதில் அந்தக் காரின் ஓட்டுனர் இருக்கைக்கு அருகில் அமர்ந்திருந்தவன், “சாரி சார்.. டிரைவர் திடீர்னு கண் அசந்துட்டான்.. நான் தான் காரை ஒடிச்சு திருப்பினேன்.. ரொம்பச் சாரி..” என்று மிகப் பணிவாகப் பேசவும், இரவு நேர பயணங்களில் சில சமயம் இதையெல்லாம் தவிர்க்க முடியாது என்று புரிந்து அப்படியே அமைதியானான் நிமலன்.

அதே நேரம் எதிரில் வந்த கார் ஒடித்துத் திருப்பி இருந்ததில் அங்கிருந்த சாலை தடுப்பில் மோதி முன் பக்கம் லேசாக இடித்து அதிலிருந்து புகை வர துவங்கி இருக்க.. அதை கண்டு நிமலன் தயங்கும் போதே, “நீங்க கிளம்புங்க சார்.. நாங்க பார்த்துக்கறோம்..” என்றான் அந்தக் காரில் வந்தவன்.

அதில் நிமலன் தன் காரை நகர்த்த முயல.. அதற்கு வாய்ப்பே இல்லாமல் நிமலனின் வழியைப் பாதிக்கு மேல் மறைத்துக் கொண்டிருந்தது அந்தக் கார்.

பின்னுக்கு நகர்த்தி எடுக்கவும் முடியாதவாறு அங்கு ஒரு பள்ளம் இருந்தது.
அவர்கள் நகர்ந்தால் மட்டுமே நிமலனால் காரை எடுக்க முடியும். இதில் உண்டான சலிப்போடு “எங்கே போறது..? நீங்க நகர்ந்தா தான் நான் போக முடியும்..” என்றான் நிமலன்.

அதற்கும் மிகப் பணிவாகவே “இதோ சார், நகர்த்திடறோம்..” என்றவன் டிரைவர் இருக்கையில் இருந்தவனைப் பார்த்து, “இறங்கி காரை தள்ளு பாபு.. அப்பறம் இதெல்லாம் பார்த்துக்கலாம்..” என்றான் சிறு கட்டளை குரலில்.

அதில் அவர்கள் இருவரும் இறங்கி காரை நகர்த்த முயல.. பின்னால் நிமலனின் கார் இருந்ததோடு முன் பக்கம் சாலை தடுப்பில் எக்குதப்பாக அந்தக் கார் மோதியும் இருந்ததால் காரை அத்தனை எளிதாக அவர்களால் நகர்த்தவே முடியவில்லை.

இதைக் கண்டு பொறுமை காணாமல் போக.. ஒரு உஷ்ண பெருமூச்சோடு அவர்களையே வெறித்திருந்தான் நிமலன்.

ஏற்கனவே பல நாட்களுக்குப் பின் கிடைத்த இந்த அதிகாலை நேரத்து அமைதியையும் நிம்மதியையும் கலைத்திருந்தவர்களின் மேல் உண்டான கோபத்தோடு காரையே எரிச்சலோடு பார்த்திருந்தவனுக்கு அப்போதே பின் இருக்கையில் ஒரு பெண்ணும் இரு ஆண்களும் அமர்ந்திருப்பது தெரிந்தது.

‘அவர்கள் உள்ளே அமர்ந்திருக்கும் போது காரை எப்படி எளிதாக நகர்த்த முடியும்..? அவர்களும் இறங்கி தள்ளினால் இன்னும் வேகமாக வேலை நடக்குமே..!’ என்று தோன்றவும், அவர்களையே பார்த்தவாறு, “இப்படியே இன்னும் எவ்வளவு நேரம் நான் காத்திருக்கிறது..? எனக்கு நேரமாகுது..” என்றான் நிமலன்.

சரியாக அதைக் கவனித்து விட்ட அந்தக் காருக்கு உரியவனும், “அது எல்லாரும் தூங்கிட்டு இருக்காங்க சார்.. அதான் இறங்கி வரலை, இதோ எழுப்பிடறேன்..” என்று அவசரமாகப் பின் பக்க கதவை திறந்து அங்கு அமர்ந்திருந்தவனிடம் எதுவோ சொல்ல.. அதற்கு அங்கிருந்தவன் ஏதோ பதிலளித்தான்.

இப்போது வார்த்தைகளால் இல்லாமல் விழியால் நிமலனை சுட்டி காண்பித்து வெளியே நின்றிருந்தவன் எதையோ புரிய வைக்க முயல.. அதில் உள்ளே இருந்தவனும் உடனே இறங்கி வந்தான்.

இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த நிமலனுக்கு இவர்களிடம் எதுவோ சரியில்லை என மனம் அடித்துக் கூறியது. பின்னால் இருக்கும் அவர்கள் இருவரையும் பார்த்தால் தூங்குவது போலும் தெரியவில்லை.

அங்கிருந்தவாறே அவர்கள் தன்னை இருமுறை திரும்பி பார்த்ததை நிமலனும் கவனித்து இருந்தான்.
அவர்களுக்கு நடுவில் அமர்ந்திருந்த பெண் மட்டும் தலை சாய்ந்து இருப்பதில் உறங்கிக் கொண்டிருப்பது புரிய.. ஆரம்பத்தில் இருந்தே அந்தக் காரில் இருந்தவன் காண்பித்த அதீத பணிவும், எந்தப் பிரச்சனையும் வேண்டாம் என்பது போல உடனே தணிந்து வருவதுமாக அவன் பேசியதிலேயே முரணை உணர்ந்திருந்தவன், இப்போதே அவர்களின் தோற்றத்தை நன்கு கவனிக்கத் தொடங்கினான்.

கடோத்கஜன் போல் இருந்த நால்வரும் அவர்களுக்குக் கொஞ்சமும் சம்பந்தமே இல்லா வகையில் பட்டு வேட்டி சட்டை அணிந்திருப்பதும், இத்தனை குளுமையிலும் வேர்த்து வடிய அவர்கள் நிற்பதோடு அவ்வபோதான அவர்களின் கள்ள பார்வை தன் மேல் படித்து விலகுவதும் என எல்லாம் சேர்ந்து நிமலனின் சந்தேகத்தை அதிகமாக்கியது.

அதற்கேற்றார் போல் இப்போதும் அவர்களில் ஒருவன் காரிலிருந்து இறங்காமலே இருக்க.. அவனுக்கு அருகில் அந்தப் பெண் இத்தனை நடந்தும் கொஞ்சமும் அசைவில்லாமல் உறங்கிக் கொண்டிருந்தது வேறு எதுவோ இங்குத் தவறாக இருப்பதை மீண்டும் உறுதியாக்க.. “என்ன நடக்குது இங்கே..?” என்றவாறே காரிலிருந்து கீழிறங்கி வந்தான் நிமலன்.

அதில் நிமலனை காருக்கு அருகில் வர விடாமல் செய்ய முயன்றவாறே முதலில் பேசியவன், “ஒண்ணுமில்லை சார்.. இப்போ காரை நகர்த்திடுவோம்.. நீங்க உள்ளே உட்காருங்க..” என்று நிமலனின் வழியை மறித்தது போல் வந்து நின்றான்.

இதில் கூர்மையாக நிமலன் அவனையே பார்த்துக் கொண்டிருக்க.. அதேநேரம் தன் வழியை மறித்தது போல் நின்றிருந்தவனின் அலைபேசி சிணுங்கியது..
அதை ஒரு பதட்டத்தோடே பார்த்தவன், அழைப்பை எடுக்காமல் தவிர்க்க.. அதே நேரம் அந்தக் காரை நோக்கி செல்ல இருந்த நிமலனை கண்டவனுக்கு ஆத்திரம் தலைக்கேற “ஏய் சொல்லிட்டே இருக்கேன்.. எங்கே போறே..?” என்று தன் பணிவு, மரியாதையை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு லேசான மிரட்டல் குரலில் கேட்டவாறே நிமலனின் தோளை பிடித்து நிறுத்தினான் அவன்.

அதில் தன் மேல் கை வைத்தவனை விழியை மட்டும் திருப்பி ஒரு பார்வை பார்த்தவன், அடுத்த நொடி ஒரே சுழற்றில் அவனைத் தூக்கி கீழே வீசி அவன் மார்பில் ஒற்றைக் காலை வைத்து நின்றிருந்தான் நிமலன்.

இதைக் கண்டு திகைத்த மற்றவர்களும் வேகமாக நிமலனை தாக்க வர.. மொத்தமாக ஒரு ஐந்து நிமிடத்திற்குள் மற்ற மூவரையும் கூடச் சுருண்டு கீழே விழ செய்திருந்தான் நிமலன்.

காரை சுற்றி விழுந்திருந்தவர்களைப் பார்த்தவாறே சென்று காரின் பின் பக்க கதவை நிமலன் திறக்கவும், நிமலன் தன்னைச் சேர்ந்தவர்களை அடிப்பதை கண்ட பதட்டத்தில் வேகமாக இறுதியாக இறங்கியவனின் செயலில், கிட்டத்தட்ட இருக்கையில் சரிந்த நிலையில் இருந்த அந்தப் பெண், இப்போது மொத்தமாகக் கதவை நோக்கி சரிய.. வெளியே வந்து விழ இருந்த அவளின் முகத்தைத் தன் வலது உள்ளங்கையில் தாங்கி பிடித்து நிறுத்தியிருந்தான் நிமலன்.

மணப்பெண் அலங்காரத்தில் அழகோவியமாகத் தேவதை போல் தன் கையில் சரிந்திருந்தவளையே சில நொடிகள் இமைக்காமல் பார்த்தவன், அவள் மயக்கத்தில் இருப்பதைப் பார்த்தவுடனே புரிந்து கொண்டிருந்தான்.

பின் என்ன செய்வது என்பது போல் ஒரு நொடி தயக்கத்தோடு அவளின் முகத்தையே பார்த்தப்படி யோசித்தவன், பின் சட்டென அவளைத் தன் கைகளில் ஏந்திக் கொள்ள.. அதற்காகவே காத்திருந்தது போல் நிமலனின் மார்பில் சாய்ந்தது தமயந்தியின் முகம்.

இதில் லேசாக அதிர்ந்து அவளைப் பார்த்தவனின் நடை ஒரு நொடி தடைப்பட, பின் வேகமாகத் தன் காரை நோக்கி நகர்ந்தான் நிமலன்.

அதில் பலமாக அடிபட்டு விழுந்திருந்ததில் எழுத்துக் கொள்ள முடியாமல் இருந்த அவர்களில் தலைவன் போல் இருந்தவன், சட்டென இந்தக் காட்சியைப் படமெடுத்து தனக்கு இந்த வேலையைக் கொடுத்திருந்தவனுக்கு அனுப்பி வைத்தான்.

அதற்குள் தன் காரின் பின் இருக்கையில் அவளைக் கிடத்தி இருந்த நிமலன் சட்டென நிமிர.. அதற்கு வாய்ப்பளிக்காமல் அவளின் கழுத்தாரம் நிமலனின் சட்டை பட்டனில் சிக்கி இருந்தது.

இதை எதிர்பார்க்காமல் வேகமாக நிமிர்ந்தவன், இந்தச் சிக்கலில் தடுமாறி அவள் மேல் சாய இருந்த இறுதி நொடியில் சட்டெனத் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு நின்றான் நிமலன்.

அந்தத் தடுமாற்றத்தில் அவள் மேல் சரிய இருந்தவனின் முகம் தமயந்தியின் முகத்துக்கு வெகு அருகில் நெருங்கி இருக்க.. தன்னை மறந்து ஒரு நொடி அந்த அழகிய முகத்தைக் கண்டவன், பின் சட்டென அவளிடமிருந்து வேகமாக விலகி, முன் பக்கம் சென்று முகம் இறுக அமர்ந்தான்

நிமலன்.

******************

அதே நேரம் இங்குத் திருமண மண்டபமே அல்லோகலப்பட்டுக் கொண்டிருந்தது. “என்ன நடக்குது இங்கே..? செக்யூரிட்டின்னு இத்தனை பேர் இங்கே எதுக்கு இருக்கீங்க..? நம்ம இடத்துக்குள்ளேயே நுழைஞ்சு நம்ம பொண்ணையே தூக்கிட்டு போயிருக்காங்கனா என்ன அர்த்தம்..? ஒரு முன்னாள் முதல்வர் பொண்ணுக்கே இந்த நிலைமைனா அப்போ மத்தவங்க நிலை எல்லாம் என்னவாகும்..?” என்று ஆத்திரத்தில் கத்திக் கொண்டிருந்தான் கிருபாகரன்.

“இல்லை சார், செக்யூரிட்டி எல்லாம் ரொம்பவே டைட்டா தான் இருந்தது.. அப்பறமும் இது எப்படின்னு தான் தெரியலை..” என்றார் அந்தச் செக்யூரிட்டி ஏஜென்சியின் தலைமை அதிகாரி ஜோஷ்வா.

“இப்படிச் சொல்ல உங்களுக்கு வெட்கமா இல்லை.. உங்க மேலே இருக்க நம்பிக்கையில் தானே இவ்வளவு பெரிய வேலையையும் பொறுப்பையும் உங்ககிட்ட ஒப்படைச்சேன்..” எனச் சிடுசிடுத்தான் கிருபா.

அதில் சட்டென ஜோஷ்வா தலைக்குனிய.. “நான் கமிஷனர்கிட்ட பேசறேன் ப்பா.. அன்அபிஷியலா தேட சொல்றேன்..” என்று ஒரு வார்த்தை தன் தந்தையிடம் அனுமதிக்கு சொல்லி விட்டு வேகமாகக் கமிஷனர் புகழேந்திக்கு அழைத்தான் கிருபா.

அதற்கு ஒரு தலையசைப்பையே பதிலாகக் கொடுத்த ஜெயதேவின் மனம் முழுக்க வேதனை நிரம்பி இருக்க.. இருக்கையில் சாய்ந்திருந்தவரின் மனம் முழுக்க மகளையே சுற்றி வந்து கொண்டிருந்தது.

‘இப்போது எங்கு எப்படி இருக்கிறாளோ..?’ என்று எண்ணி தவித்தவருக்கு, “நீ நினைச்சதை எல்லாம் நடத்தின காலம் எப்போவோ மலையேறி போச்சு மிஸ்டர் ஜெயதேவ்.. இப்போ இது நிமலனோட காலம்.. நான் நினைச்சது மட்டும் தான் இனி இங்கே நடக்கும், நடத்தியும் காட்டுவேன், பார்க்கறியா..?” என்று சொடக்கிட்டு சவால் விட்ட நிமலனின் முகம் ஏனோ இப்போது அவரின் மன கண்ணில் வந்து நின்றது.

இதற்குப் பின் நிச்சயம் நிமலன் இருக்க வாய்ப்பில்லை என அவருக்குமே நன்றாகவே தெரியும். நிமலனுக்கு எதையுமே நேரடியாகச் செய்து தான் பழக்கம். அதிலும் வீட்டு பெண்கள் விஷயத்தில் அவன் தலையிடவே மாட்டான்.

தங்கள் எந்த ஒரு பிரச்சனையும் வீட்டில் உள்ள பெண்களைப் பாதிக்கக் கூடாது என்பதில் நிமலன் எப்போதும் தெளிவாக இருப்பான் என்று அறிந்திருந்தவர், கவலை, அசிங்கம், பயம், அவமானம், பதட்டம் என்று கலவையான மனநிலையில் அமர்ந்திருந்தார்.

வெளி தோற்றத்துக்குக் காண்பித்துக் கொள்ளவில்லை என்றாலும் ஜெயதேவனுக்கு மகளை எண்ணி மனம் பதைக்கத் தான் செய்தது. ஆனால் அப்படி அமைதியாக இருக்க முடியாமல் தமயந்தியின் அன்னை வளர்மதி அழுது கதறிக் கொண்டிருந்தார்.

‘இத்தனை அவசரமாக இந்தத் திருமண ஏற்பாட்டைச் செய்திருக்கக் கூடாதோ..?’ என்று யோசித்தவருக்கு துருவ்வின் நினைவு வரவும், “கிருபா..” என்று மகனை அவசரமாக அழைத்தார் ஜெயதேவன்.

அதில் யார் யாருக்கோ அழைத்துக் கட்டளைகளிட்டுக் கொண்டிருந்தவன், வேகமாக “சொல்லுங்க ப்பா..” என்று ஜெயதேவனை நெருங்கவும், “துருவ்..” என்று யோசனையாக நிறுத்தி மகனின் முகம் பார்த்தார் ஜெயதேவன்.

“அவனை தவிர வேற யாரு..? அவனா தான் இருக்கும், ஆளுங்களை விட்டு விசாரிக்கச் சொல்லி இருக்கேன்..” என்றான் கிருபா. அதற்குள் மணமகன் கார்த்திக்கின் தந்தை ராகவன் முகமெங்கும் கலவரத்தோடு இவர்களை நெருங்கினார்.

சற்று முன்பே தமயந்தி காணவில்லை எனத் தெரிய வந்ததும் அவர்களிடம் ஜெயதேவன் விவரம் சொல்லி மன்னிப்பும் அவகாசமும் கேட்டிருக்க.. முதலில் இதைக் கேட்டு கொந்தளித்த சில உறவினர்களையும் ராகவன் தான் அமைதிப்படுத்தினார்.

“பிரபலமா இருக்கறதே பிராப்ளம் தான் சம்பந்தி.. இதையெல்லாம் கண்டுக்காதீங்க.. நீங்க முதலில் பொண்ணுக்கு என்னாச்சு எங்கே இருக்கான்னு பாருங்க..” என்று ஆதரவாகப் பேசி இருந்தார் ராகவன்.

அதிலேயே கொஞ்சம் தைரியமாக இருந்த ஜெயதேவன், இப்போது ராகவன் பதட்டமாக வருவதைக் கண்டு அவரைப் பார்க்க.. “இதைப் படிச்சு பாருங்க..” என்று தன் கையில் இருந்த காகிதத்தை ஜெயதேவனிடம் நீட்டினார் ராகவன்.

அதை கிருபா வேகமாக வாங்கிப் படிக்க..

சாரி டேட்..

இந்தக் கல்யாணம் நடந்தா குடும்பத்தோட நம்மை வெச்சு கொளுத்திடுவேன்னு எனக்கு மிரட்டல் தொடர்ந்து வந்துட்டே இருக்கு.. மிரட்டினது வேற யாராவதா இருந்தா கூட நான் அதைப் பெருசா எடுத்துட்டு இருக்க மாட்டேன்.. ஆனா பணமும் பதவியும் கையில் இருக்க ஆள் சொல்லும் போது என்னால் அதை அப்படியே விட முடியலை டேட்..

கல்யாணம் நிச்சயமானதில் இருந்து போனில் நேரில்னு தினமும் அத்தனை மிரட்டல் வருது.. இதை உங்ககிட்ட நான் இத்தனை நாள் சொல்லாம மறைச்சுட்டேன் டேட், இப்போ என் வேலைக்கும் ஆபத்து வரும் போல் இருக்கு..

நான் லஞ்சம் வாங்கிட்டு ஒரு காப்ரேட் கம்பெனி ஆதரவா மக்களுக்கு எதிரா வேலை செய்யறதா என் மேலே போலியா ஒரு குற்றசாட்டை உருவாக்கி இருக்காங்க.. அதுக்குப் போலி ஆதரங்களையும் சாட்சிகளையும் கூடத் தயார் செஞ்சு இருக்காங்க..

இதையெல்லாம் மீடியா முன்னே கொண்டு வந்து என் பெயர் பதவின்னு எல்லாத்தையும் அழிச்சுடுவேன்னு மிரட்டறாங்க.. உங்களுக்கே தெரியும் எனக்கு இந்தப் படிப்பும் வேலையும் எவ்வளவு பெரிய கனவுன்னு, அப்படி இருக்கும் போது இதையெல்லாம் இழந்து இப்படி ஒரு கல்யாணம் எனக்கு வேண்டவே வேண்டாம் டேட்.. ஒருமுறை பெயர் கெட்டுப் போனா போனது தான், அதை சரி செய்யவே முடியாது..

இந்தக் கல்யாணம் என்னால் நிற்பதன் மூலமா என்ன பிரச்சனைகள் வரும்னு தெரிஞ்சே இப்படி ஒரு முடிவுக்கு வரேனா ஏன்னு உங்களுக்கு புரியும்னு நினைக்கறேன்..
இதனால் என்ன பிரச்சனை வந்தாலும் நான் சமாளிச்சுக்கறேன்.. ஆனா வீம்பா இந்தக் கல்யாணத்தைச் செஞ்சுட்டு உங்களையும், வேலையையும், மரியாதையையும், கௌரவத்தையும் இழந்து என்னால் வாழ முடியாது டேட்..

ஜெயதேவ் அங்கிள்கிட்டேயும் தமயாகிட்டேயும் என் மனமார்ந்த மன்னிப்பை கேட்டுக்கறேன்.. இப்படி ஒரு லெட்டர் எழுதி வெச்சுட்டு ஒடறதால் என்னை எல்லாம் கோழைன்னு நினைச்சாலும் பரவாயில்லை..

நானும் எல்லாரையும் போல எந்தப் பிரச்சனையிலும் சிக்காம சாதாரண ஒரு வாழ்க்கை வாழ நினைக்கற கோழையாவே இருந்துட்டு போறேன்.. ஹோப் யூ அண்டர்ஸ்டாண்ட் இட்..

யூவர்ஸ்
கார்த்திக்

என்று எழுதியிருந்த கடிதத்தை வாய் விட்டே படித்து முடித்தான் கிருபா.

“இதைப் பார்த்தா கார்த்திக் நைட்டே இங்கே இருந்து கிளம்பி இருக்கணும்னு தோணுது.. இப்படி ஒரு முடிவுக்கு வந்தவன், முன்னேயே இதை பற்றி என்கிட்டே பேசி இருக்கலாம்.. ஆனா ஏனோ..” என்றவர், “சரி விடுங்க.. இப்போ உங்க பொண்ணு கடத்தலுக்குப் பின்னாலும் இதே ஆட்கள் இருக்க வாய்ப்பு அதிகம்னு நினைக்கறேன் சம்பந்தி..” என்றவர், “சாரி.. இனி அப்படிச் சொல்ல முடியாது இல்லையா..” என்றார் கவலை குரலில் ராகவன்.

அதே நேரம் அங்கு வந்த ஜோஷ்வா, “சார்.. இது ஒரு வெல் பிளான்ட் கிட்நாப் போலத் தெரியுது.. நம்ம இத்தனை செக்யூரிட்டியையும் மீறி, எந்தச் சிசிடிவியும் வொர்க் செய்யாம செஞ்சு கல்யாண பொண்ணை உள்ளே வந்தே தூக்கிட்டு போகணும்னா நிச்சயம் அதுக்கு இங்கே உள்ளே இருந்து யாரோ உதவி செஞ்சு இருக்கணும் சார்.. இல்லைனா இப்படி ஒரு விஷயம் நடக்க வாய்ப்பே இல்லை..” என்றார்.

இவ்வளவு நேரம் ஒருவேளை இதில் துருவ் ஏதாவது செய்திருக்கலாமோ என்ற சந்தேகத்தோடே இருந்த கிருபா மற்றும் ஜெயதேவனுக்கு இப்போது அது முழுக்க முழுக்க அவனின் வேலைதான் என்று உறுதியாகி இருந்தது.

“அவனை..” என்று ஆத்திரத்தோடு கிருபா அங்கிருந்து கிளம்பவும், “கிருபா.. இரு அவசரப்படாதே..!” என்றிருந்தார் ஜெயதேவன்.

“இதுக்கு மேலேயும் என்னை அமைதியா இருக்கச் சொல்றீங்களா ப்பா.. அப்போவே அவன் மிரட்டும் போதே இதை நான் என் வழியில் சரி செய்யறேன்னு சொன்னேன்.. அப்போவே நீங்க விட்டிருந்தா இது இன்னைக்கு இவ்வளவு தூரம் வந்து இருக்காது.. ஆனா அப்போவும் விடலை, இப்போவும் என்னை அமைதியா இருக்கத் தான் சொல்றீங்க இல்லையா.. சரி இன்னும் எவ்வளவு நாள் அமைதியா இருக்கணும் ப்பா..? அவனால் நம்ம தமயா வாழ்க்கை அழியற வரைக்குமா இல்லை அவளே இல்லாம போகற வரைக்குமா..?” என்றான் ஆத்திரத்தோடு கிருபா.

அதில் வேதனையோடு மகனை பார்த்தவர், “அவ எனக்கும் பொண்ணு தான் கிருபா, உனக்கும் மேலே எனக்குத் துடிக்குது.. ஆனா இது நம்ம பொண்ணு சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமில்லை, இது இரண்டு கட்சி சம்பந்தப்பட்ட விஷயம் கிருபா.. எடுத்தோம் கவிழ்த்தோம்னு எதுவும் செஞ்சுட கூடாதுன்னு தான் இத்தனை நாளா அமைதியா இருந்தேன்.. இந்த அவசர கல்யாணமே அதுக்காகத் தான்னு உனக்கே தெரியும்.. ஆனா இத்தனைக்குப் பிறகும் நான் அப்படி இருப்பேன்னு உனக்குத் தோணுதா..? இதை எப்படி முடிக்கணும்னு எனக்குத் தெரியும்..” என்றார் ஜெயதேவன்.

அதற்குள் அவரின் அலைபேசிக்கு ஏதோ மெசேஜ் வந்த ஒலி கேட்க.. தன் அலைபேசியை எடுத்து பார்த்த ஜெயதேவன் அப்படியே திகைத்து நின்றார்.

**************

அதேநேரம் காரிலிருந்து இறங்கி தமயந்தியை தன் கைகளில் ஏந்திக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான் நிமலன். அவனின் வருகைக்காகவே தன் அறையில் காத்திருந்த சூர்யகலா கார் வந்த சத்தம் கேட்டு வேகமாக எழுந்து வெளியில் வருவதற்குள், அங்கிருந்த விருந்தினர் அறைக்குள் அவளைத் தூக்கி சென்றிருந்தவன், தமயந்தியை படுக்கையில் கிடத்தி விட்டு நிமிர முயல.. அவளின் நெற்றி முடி கலைந்து தமயந்தியின் முகத்தில் வந்து விழுந்தது.
அதைத் தன் ஒற்றை விரல் கொண்டு ஒதுக்கி விட நிமலன் முயலவும், “யாரு நிமலா இது..?” என்று கேட்டப்படியே அங்கு வந்து நின்றார் சூர்யகலா.

அதில் சட்டெனத் தன் கையை மடக்கிக் கொண்டு நிமிர்ந்தவன், சுருக்கமாக நடந்ததை அவரிடம் சொன்னான். அதில் திரும்பி படுக்கையில் மயங்கிக் கிடந்தவளை கவலையோடு பார்த்த சூர்யகலா “என்ன நிமலா இது..? மணக் கோலத்தில் இருக்கப் பொண்ணை இப்படித் தூக்கிட்டு வந்து இருக்கே..?” என்றார்.

“என்னை என்ன செய்யச் சொல்றீங்க பாட்டி..? ஏதோ தப்பு நடக்குதுன்னு தெரிஞ்சும் அப்படியே விட்டுட்டு வர சொல்றீங்களா..?” என்றான் உணர்வற்ற குரலில் நிமலன்.

“அதுக்கில்லை ராஜா.. மணக்கோலத்தில் இருக்கப் பொண்ணு வேற.. நாளைக்கு நமக்கு ஏதாவது இதனால் பிரச்சனை வர கூடாது பாரு.. இவ யாரு..? என்னன்னு கூடத் தெரியலை..? மயக்கத்தில் வேற இருக்கா.. அதோட..” என்று மேலும் எதுவோ சொல்ல முயன்றவரின் பேச்சு அதே நேரம் அங்கு வந்த நிகிலனை கண்டு அப்படியே நின்றது.

அதற்குள் இந்த நேரத்தில் நிகிலனை இங்குக் கண்டதில் விழிகளைச் சுருக்கிய நிமலன், “நீ எப்போ வந்தே..?” என்றான்.

“கொஞ்சம் நேரம் ஆச்சு ண்ணா..” என்றான் நிகிலன்.
“அவனும் இப்போ தான் வந்தான் நிமலா.. நீயும் வந்துட்டு இருக்கேன்னு போன் செஞ்சியா.. அதான் உன்னைப் பார்த்துட்டு தூங்க போகலாம்னு காத்திருந்தான்..” என்றார் சூர்யகலா.

அதற்கு ஒரு தலையசைப்பையே பதிலாகக் கொடுத்தவன், “ஆல் ஒகே தானே..! எதுவும் பிராப்ளம் இல்லையே..?” என அக்கறையோடு தம்பியை பார்த்து ‘கேட்கவும், “நத்திங் ண்ணா.. ஒன் வீக் இங்கே ஒரு செமினார் இருக்கு.. அதுக்காகத் தான் வந்தேன்..” என்றதும் அதற்கும் ஒரு தலையசைப்பை மட்டுமே பதிலாகக் கொடுத்தான் நிமலன்.

அப்போதே மற்ற இருவரின் முகத்தில் இருந்த பதட்டத்தைக் கவனித்த நிகிலன், “என்னாச்சு..?” எனும் போதே உள்ளே படுத்திருந்தவளின் மேல் நிகிலனின் பார்வை பதிய.. விழிகளைச் சுருக்கி அவளைப் பார்த்தவன், “தமயா..?” என்றான் நம்ப முடியா திகைப்போடான குரலில் நிகிலன்.

அதில் திகைப்போடு அவனைத் திரும்பி பார்த்து “யாரு..?” என்றார் அதிர்வும் ஆத்திரமுமான குரலில் பாட்டி. “தமயா பாட்டி.. தமயந்தி ஜெயதேவ..” என்றவனின் வார்த்தையைக் கூட முடிக்க விடாமல் “போதும்..” என்றிருந்தார் அந்தப் பெயரைக் கூடத் கேட்க விரும்பாத வெறுப்பான குரலில் பாட்டி.


நேச அலை வீசும்..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இதோ கதையின் முதல் அத்தியாயத்தை பதித்து விட்டேன்.. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்..

TNN - 1

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..


இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
34910
ஹாய் பிரண்ட்ஸ்..

எல்லாரும் எப்படி இருக்கீங்க..

நாங்கள் நலம் இப்போது ஓரளவு மனதை தேற்றிக் கொள்ள பழகி கொண்டிருக்கிறோம்.. எதிர்பாரா பெரிய இழப்பிலிருந்து மீண்டு வர முயன்று கொண்டிருக்கிறோம்..

நாங்கள் தேறி வர நேரம் கொடுத்து காத்திருந்ததோடு தொடர்ந்து என்னோடு பேசி எனக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..

வயதானவர் தான் என்றாலும் இயல்பாக நடமாடிக் கொண்டிருந்தவரின் இந்த திடீர் இழப்பு எங்கள் மொத்த குடும்பத்தையும் பெருமளவில் அசைத்துப் பார்த்திருக்கிறது..

எங்களுக்கே அதை ஏற்றுக்கொள்ள இவ்வளவு சிரமமாக இருக்கும்போது என் அத்தையின் நிலை எப்படி இருக்கும்..? அவரால் இதிலிருந்து வெளிவரவே முடியவில்லை..

அதோடு அவருக்கு பல உடல் உபாதைகள் வேறு இருக்கிறது.. கடந்த மூன்று வருடங்களாகவே இவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்..

அதனால் அவரை கவனித்து அவரைத் தேற்றி இதிலிருந்து மீட்டுக் கொண்டு வரவே எங்களுக்கு சில மாதங்கள் கூட ஆகலாம்..

ஆனால் எடுத்த வேலையை முடிக்காமல் விட்டு விட முடியாதே..! அதோடு முதல் அத்தியாயம் மட்டும் போட்டு விட்டு கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் இந்தப் பக்கமே நான் வரவில்லை..

எங்களின் குடும்ப சூழ்நிலையும் மனநிலையும் புரிந்து பொறுமை காத்த உங்களுக்காகவாவது அந்தக் கதையை நான் மீண்டும் தொடங்கி தானே ஆக வேண்டும்..

தொடர்ந்து எழுத வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் மீண்டும் ஆரம்பிக்கிறேன்.. இடையில் ஏதாவது இடையூறோ விடுமுறையோ எடுக்க வேண்டி வந்தால் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்..

என்னால் முடிந்த அளவுக்கு இதற்குப் பிறகு கதையை நிறுத்தாமல் கொடுக்க முயல்கிறேன்...

புரிதலுக்கு நன்றி🙏

நாளை முதல் நம் வழக்கமான நாட்களான வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் "தழலாய் நின் நேசம்..!!" கதை தொடர்ந்து வரும்..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
34911
தழல் – 2

அதற்குள் படுக்கையை வேகமாக நெருங்கி இருந்த நிகிலன் “என்னாச்சு இவளுக்கு..?” என்றான். “உனக்கு நல்லா தெரியுமா நிகிலா..? இது அவ தானா..?” என்று மீண்டும் பல்லைக் கடித்தவாறே கேட்டார் பாட்டி.


“ம்ப்ச்.. என் தமயாவை எனக்குத் தெரியாதா பாட்டி..?” என்று ஏதோ ஒரு வேகத்தில் சலிப்போடு துவங்கியவன், பின் சட்டென அப்படியே பேச்சை நிறுத்தவும், “போதும்.. என்ன பேச்சு இது..?” என்று முகத்தைச் சுழித்தார் பாட்டி.


அதேநேரம் இதையெல்லாம் கண்டு முகம் இறுக அந்த அறையின் ஜன்னல் அருகே சென்று நின்று கொண்டான் நிமலன். துவண்ட கொடி போல் கிடந்தவளை கண்ட நிகிலனால் அப்படியே எப்படியோ போகட்டுமென அவளை விட்டு செல்ல முடியவில்லை.


அதில் தன் கோபத்தை எல்லாம் தள்ளி வைத்து விட்டு, ஒரு மருத்துவனாக அவளருகில் இருந்த மோடாவில் அமர்ந்தவாறே தன் அண்ணனை பார்த்து “என்னாச்சு ண்ணா..? ஏன் இப்படி இருக்கா..?” என்றான் கவலைக் குரலில் நிகிலன்.


அதில் தன் தம்பியின் கேள்வியைத் தவிர்க்க முடியாமல் எங்கோ ஜன்னலுக்கு வெளியில் பார்வையைப் பதித்தப்படியே நடந்ததை எல்லாம் சொல்லி முடித்தான் நிமலன்.


“அப்போ இது கண்டிப்பா அவ தான்.. இன்னைக்கு இவளுக்குக் கல்யாணம் தானே..!” என்றார் சூர்யகலா. அதற்கு மற்ற இருவரும் எதுவும் பேசாமல் இருக்க.. “அந்த கேடு கேட்டவனுக்கு, நம்பிக்கை துரோகிக்கு இதுவும் வேணும்.. இன்னமும் வேணும்..” என்றார் வெறுப்பான குரலில் பாட்டி.


“மயக்கமாக்க ஏதாவது கொடுத்து இருப்பாங்க.. அதான் இப்படி இருக்கா, சீக்கிரம் கண் விழிச்சுடுவா..” என்று மேலோட்டமாக அவளைப் பரிசோத்தித்து விட்டுக் கூறினான் நிகிலன்.


விழிகளை மட்டும் திருப்பி அவனைப் பார்த்த நிமலனின் பார்வை தமயந்தியின் இடக் கரத்தை தன் இரு கரங்களுக்குள் பொத்தி வைத்தது போல் கவலையாக அவள் முகத்தையே பார்த்தவாறு அமர்ந்து பேசிக் கொண்டிருந்த நிகிலனின் கைகளில் படிந்தது.


“அவ எப்படி இருந்தா உனக்கு என்ன..? நீ அங்கே இருந்து எழுந்திரு..?” என்று கண்டிப்பான குரலில் பாட்டி சொல்லவும், “ஒரு டாக்டரா நான் என் கடமையைத் தான் செய்யறேன் பாட்டி..” என்றான் நிகிலன்.


“ஒரு டாக்டரா கூட நாம அந்தக் குடும்பத்துக்கு எதுவும் செய்யக் கூடாது..” என்றார் கட்டளைக் குரலில் பாட்டி. அதை மீறும் தைரியம் இல்லா நிகிலன் மனமே இல்லாமல் அங்கிருந்து எழுந்து கொண்டான்.


சூர்யகலாவின் கட்டுப்பாட்டிலும் பராமரிப்பிலுமே வளந்தவனுக்கு அவரின் வார்த்தையை மீறும் பழக்கமே இல்லை. அவர் சொல்வதில் உடன்பாடு இல்லையென்றால் நேராக நிமலனிடம் தான் சென்று நிற்பான் நிகிலன்.


சில நேரங்களில் வார்த்தைகளில் இல்லையென்றாலும் பாவமாக நிகிலன் ஒரு பார்வை பார்த்தாலே போதும் அவன் மனதை புரிந்து பாட்டியிடம் தம்பிக்காகப் பேசி பிரச்சனையைச் சரி செய்து விடுவான் நிமலன்.


இப்போதும் நிகிலன் தன் அண்ணனை தனக்குச் சாதகமாக எதுவும் சொல்வானா என்பது போல் பார்க்க.. அவனோ நிகிலனை பார்க்கவே இல்லை. பார்வையை எங்கோ பதித்து விரல்களை அழுந்த மூடி கைகளைப் பின்னால் கட்டியவாறு நின்றிருந்தவனின் தோற்றத்தை கண்டவனுக்கு சூர்யகலாவை போலவே நிமலனும் கோபத்தோடு இருப்பது புரிந்தது.


அதில் நிகிலன் அமைதியாகிப் போக.. பெரிய பேரனின் பக்கம் தன் பார்வையைத் திருப்பிய சூர்யகலா “இன்னும் எவ்வளவு நேரம் இவ இங்கே இருக்கப் போறா நிமலா..?” என்றார்.


அதில் பார்வையை மட்டும் திருப்பி அவரைப் பார்த்தவன், பதிலேதும் சொல்லாமல் திரும்பிக் கொள்ள.. “உன்னைத் தான் கேட்கறேன் நிமலா..? இப்படிப் பதில் பேசாம இருந்தா என்ன அர்த்தம்..?” என்றார் சற்று அழுத்தமான குரலில் பாட்டி.


அதில் ஒரு பெருமூச்சை வெளியேற்றியவன், “என்னை என்ன செய்யச் சொல்றீங்க பாட்டி..?” என்றான். “என்ன செய்யச் சொல்றீங்கனா..? இவளை எல்லாம் வீட்டுக்குள்ளே வெச்சு அழகா பார்க்க முடியும்..? தூக்கி இவளை வெளியே வீசு..” என்றார் வெறுப்பு மண்டிய குரலில் பாட்டி.


இதில் நிகிலன் முகம் கசங்க தவிப்போடு தன் அண்ணனின் முகத்தைப் பார்க்க.. “அப்படித் தூக்கி வீச, நான் அவங்ககிட்டே இருந்து காப்பாற்றாமலே இருந்திருக்கலாம்.. கொஞ்ச நேரம் இருங்க.. மயக்கம் தெளிஞ்சதும் அவளே போயிடுவா..” என்றான் வெற்றுக் குரலில் நிமலன்.


“அவளுக்கு எப்போ மயக்கம் தெளியறது..? அவ எப்போ இங்கே இருந்து போறது..? இதெல்லாம் சரிபட்டு வராது நிமலா, அவ இந்த வீட்டுக்குள்ளே ஒரு நிமிஷம் கூட இருக்கக் கூடாது.. அந்தத் தகுதியும் தரமும் இவளுக்கு மட்டுமில்லை, இவங்க குடும்பத்துக்கே கிடையாது..” என்றார் ஆத்திரத்தோடு சூர்யகலா.


இதற்கு நிமலன் ஏதாவது சொல்வான் எனக் காத்திருந்து பார்த்த நிகிலன், அவன் அமைதியாகவே நிற்கவும், “அவ என்ன இங்கேயேவா இருக்கப் போறா பாட்டி.. மயக்கம் தெளிஞ்சதும் போயிட போறா, இதுக்கு ஏன் நீங்க கத்தி உங்க உடம்பை கெடுத்துக்கறீங்க..? பொழுது விடிய போகுது பாருங்க.. போய்க் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க..” என்று அங்கிருந்து நகர மறுத்தவரை மெல்ல சமாதானம் செய்து அழைத்துச் சென்றான் நிகிலன்.


அந்த வீட்டின் கடைக் குட்டியான நிகிலனின் மேல் எப்போதுமே தனிப் பிரியம் சூர்யகலாவுக்கு உண்டு. அதிலும் தன் கைகளில் அதிகம் வளர்ந்தவன் என்பதோடு தன் பேச்சை தட்டாமல் கேட்பவன் என்பதும் சேர.. இப்போதும் அவனைக் குழந்தை போலவே பார்ப்பார் சூர்யகலா.


அதில் அவரும் அவனோடு பேசியவாறே வெளியேற.. அப்போதும் “இவளை கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளணும்.. அவ என்னவோ உரிமைப்பட்டவ போல ஒய்யாரமா படுத்து இருக்கா..” என்று பொருமிக் கொண்டே அவர் செல்ல.. இதையெல்லாம் முகமும் மனமும் இறுக வெற்று பார்வையோடு நிமலன் பார்த்துக் கொண்டிருக்க.. மெல்ல தமயந்தியிடம் அசைவு தெரிந்தது.


அதில் நன்றாகத் திரும்பி நின்று நிமலன் அவளைப் பார்க்கவும், மீண்டும் மயக்கத்தில் ஆழ்ந்தாள் தமயந்தி. அதில் கேள்வியாக அவளைப் பார்த்தவன், மெல்ல அவளருகில் வரவும், அவனின் அலைபேசி அடிக்கவும் சரியாக இருந்தது.


அதை எடுத்து பார்த்தவன், அழைப்பு துருவிடம் இருந்து வருவதைக் கெண்டு கேள்வியாகப் புருவத்தைச் சுருக்கியவன் யோசனையோடே அழைப்பை ஏற்று இருக்க.. “உனக்குத் தேவையில்லாத விஷயத்தில் இருந்து தள்ளியே இரு நிமலன், அது தான் உனக்கு நல்லது..” என்றான் ஆத்திரத்தோடான குரலில் துருவ்.


அதற்குக் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாத குரலில் “நான் உன் பக்கத்தில் வருவதே இல்லையே துருவ்..” என்றான் நிமலன். அதில் வெறியானவன், “ஏய் என்ன கொழுப்பா..?” என்று கத்த, “ஆமாடா.. நீயும் உங்க அப்பனும் கொள்ளையடிச்ச பணத்தில் சாப்பாடு போட்டு வளர்த்தீங்க இல்லை.. அதில் வளர்ந்த கொழுப்பு..” என்றான் நிமலன்.


அதில் சட்டென அமைதியான துருவ், முயன்று தன் குரலை மாற்றிக் கொண்டு, “அவ விஷயத்தில் தலையிடாதே நிமலன்..” என்றவனை இடையிட்டிருந்தவன் “எவ விஷயத்தில்..?” என்றான் வேண்டுமென்றே நிமலன்.


“எதுவும் தெரியாத மாதிரி நடிக்காதே நிமலன்.. அவ.. தமயா.. தமயந்தி எனக்கானவ.. அவளை என்கிட்டே கொடுத்துடு..” எனச் சீறினான் துருவ். “ஐயோ துருவ்.. இதையெல்லாம் நீ பேச வேண்டிய ஆளே வேற.. நீ தப்பான ஆள்கிட்டே பேசிட்டு இருக்கே..” என்றான் நிமலன்.


“அந்த விளக்கெண்ணையை எல்லாம் எனக்குத் தெரியும், நீ இதில் தலையிடாதே.. இது எங்களுக்கான பிரச்சனை, நான் பார்த்துக்கறேன்..” என்றான் ஆத்திரமான குரலில் துருவ்.


அப்போதும் கொஞ்சமும் குரலை உயர்த்தாமல், “உங்க விஷயம்னா ஏன் என்கிட்டே சொல்லி நேரத்தை வேஸ்ட் செஞ்சுட்டு இருக்கே..?” என்றான் நிமலன். அதற்கு அந்தப் பக்கம் பொறுமையற்று துருவ் வேக மூச்சுக்களை வெளியிடுவது நன்றாகத் தெரிந்தது.


நிமலனும் வேறு எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க.. “லுக் நிமலன், இது எங்க தனிப்பட்ட விஷயம்.. இதை நான் எங்க வழியில் தீர்த்துக்கறேன்.. அவளை என்கிட்டே கொடுத்துடு..” என்றான் துருவ்.


இதற்கு நொடியும் தாமதிக்காது “அது முடியாது..” என்று நிமலனிடம் இருந்து பதில் வரவும், “அவளை ஏன் உன் வீட்டுக்கு கூட்டிட்டு போனே..?” என்றான் துருவ்.


“அதை நான் ஏன் உன்கிட்டே சொல்லணும்..?” என்று வேண்டுமென்றே அவனை வெறுபேற்றுவது போலவே பேசிக் கொண்டிருந்தான் நிமலன். எப்போதுமே துருவ் அவசரக்காரன், பொறுமை என்றால் கிலோ என்ன விலை எனக் கேட்க கூடியவன், “நிமலன் மறுபடியும் சொல்றேன் இவ விஷயத்தில் தலையிடாதே.. அது தான் உனக்கு நல்லது.. இப்போவே இடையில் வந்து நீ ரொம்பப் பெரிய தப்பு செஞ்சுட்டே.. இனியும் நீ இதில் இருந்து விலகலைனா விளைவுகள் மோசமா இருக்கும்..” என்றான் மிரட்டலாகத் துருவ்.


“அச்சோ பயந்துட்டேன்..” என்று நிமலன் கேலி செய்யவும், உடனே தணிந்து வந்தவன், “நிமலன் இங்கே பார் நமக்குள்ளே வீணா பிரச்சனை வேண்டாம்.. உனக்கும் ஜெயதேவனுக்கு ஆயிரம் பஞ்சாயத்து இருக்கலாம்.. ஆனா அதை நீ இவ மூலமா தீர்த்துக்க நினைக்காதே.. இவ எனக்கானவ.. என்கிட்டே கொடுத்துடு..” என்றான் உன் திட்டத்தைக் கண்டுப்பிடித்து விட்டேன் என்பது போலான குரலில் துருவ்.


அதற்கு லேசான கேலி புன்னகையோடு “உன் அறிவை கண்டு நான் வியக்கேன்..” என்றான் ஒரு மாதிரியாக இழுத்து நிறுத்தி நிமலன்.


அதில் அந்தப் பக்கம் துருவ் யாரையோ வசைப்படுவது கேட்டது. அதற்குள் இடையிட்டிருந்த நிமலன், “டோன்ட் வேஸ்ட் மை டைம் துருவ்.. இனி இது விஷயமா எனக்குக் கால் செய்யாதே..” என்று அழைப்பை துண்டிக்க முயன்றான்.


“ஹே.. வெயிட், கட் செஞ்சுடாதே, அவளை என்கிட்டே கொடுத்துடு.. உனக்கு வேணும்னா நான் வேற பொண்ணுங்களை ஏற்பாடு செஞ்சு தரேன்..” என்றிருந்தான் துருவ்.


அதில் சட்டென முகம் இறுகி விட.. “சொல்லவே இல்லை பொண்ணுங்க ப்ரோக்கராடா நீ..? இதுக்கு உங்க அப்பனே பரவாயில்லை, ஆனா எனக்கு இந்தப் பழக்கமெல்லாம் இல்லை.. வேற யாருக்காவது தேவைப்ப்படுமான்னு பார்த்து பிசினஸை டெவலப் செய்..” என்று நக்கல் குரலில் கூறிய நிமலன் அழைப்பை துண்டித்து இருந்தான்.


இதில் செய்வதறியாது திகைத்து அந்தப் பக்கம் பல்லை கடித்த துருவ் அடுத்து தமயாவை பறிக் கொடுத்து விட்டு வந்து தன் முன் நின்றிருந்தவர்களை அருகில் இருந்த பொருட்களைத் தூக்கி வீசி, பீப் வார்த்தைகளால் வசைப் பாடினான்.


“ஒரு பொண்ணை ஒழுங்கா கடத்திட்டு வர துப்பில்லை.. இதில் உங்களுக்கு சில லட்சத்தில் சம்பளம்.. நீங்க அப்படி இப்படின்னு பில்டப் செய்ய ஒரு ஏஜென்ட்.. ச்சீ, போங்க போய்ச் சேலையைச் சுத்திட்டு கும்மி அடிங்க..” என்று ஆத்திரப்பட்டவன், யாருக்கோ அலைபேசியில் அழைத்தவாறே அங்கிருந்து எழுந்து சென்றான் துருவ்.


அதில் அவமானத்தில் முகம் கறுக்க நின்றிருந்த முதலில் நிமலனிடம் அடி வாங்கிய தலைவன் போல் இருந்தவன், தன் இத்தனை வருட செய்கையில் முதன்முறை தோற்று நிற்பதையும், இத்தனை பேச்சுக்களை வாங்க வேண்டி இருப்பதையும் எண்ணி “உன்னைச் சும்மா விட மாட்டேன்டா..” என ஆத்திரத்தில் பல்லை கடித்தான் டேனியல்.


*************


அலட்சியத்தோடு அலைபேசியைத் துண்டித்து இருந்த நிமலன், நெற்றியை யோசனையோடு கீறிக் கொள்ளவும், லேசான அசைவோடு விழிகளைத் திறந்தாள் தமயா.


அதில் அவள் பக்கம் நிமலன் கவனத்தைத் திருப்பினான். விழிகளை மெல்ல திறந்தவள், அருகில் நிற்பவனைக் குழப்பமாகப் பார்த்தவாறே, விழிகளைச் சுழற்றியப்படியே “நான் எங்கே இருக்கேன்..? எனக்கு என்னாச்சு..?” எனக் காலம் காலமாக மயக்கத்தில் இருந்தவர்கள் கண் விழிக்கும் போது கேட்கும் அதே கேள்வியையே ஒரு எழுத்து மாறாமல் கேட்டிருந்தாள் தமயந்தி.


அதில் அவளையே நிமலன் பதிலின்றி இறுக்கமான முகத்தோடு பார்த்திருக்க.. நெற்றியோடு சேர்த்து தலையையும் பிடித்துக் கொண்டவள், விழிமூடி தலையில் உண்டான வலியை பொறுத்துக் கொள்ள முயன்றாள் தமயா.


“என்ன செய்யுது உனக்கு..?” எனக் கேட்க முயன்றவாறே திரும்பி நிகிலனை அழைக்க முயன்ற நிமலன், சட்டென ஏதோ தோன்ற அப்படியே அவளை நோக்கி நீண்ட கையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டு அமைதியானான்.


அதற்குள் நிமிர்ந்து அவனைப் பார்த்திருந்தவள், “யார் நீங்க..? சார்ல்ஸ் எங்கே..?” என்றாள் கேள்வியாக அவனைப் பார்த்து தமயா. அதில் புருவத்தைச் சுருக்கியவன், பதிலேதும் சொல்லாமல் அவளைப் பார்க்க.. அவனை எரிச்சலோடு பார்த்தவள், தன்னைச் சுற்றி வேகமாகத் தேடி விட்டு “என் போன் எங்கே..? சார்ல்ஸ் எங்கே போனான்..?” என்றாள் மீண்டும் தமயா.


‘அவள் கடத்தி செல்லப்பட்டதே இவளுக்கு நினைவில்லையா..? இத்தனை இயல்பாகப் பேசுகிறாளே..? யாரை தேடுகிறாள்..?’ என அவளைப் பற்றிய யோசனையோடே நிமலன் நின்றிருக்க.. “ஹலோ.. ஹலோ மிஸ்டர் லேம்ப் போஸ்ட்.. உங்களைத் தான் கேட்கறேன் நான் எங்கே இருகேன்..?” என்று தன்னருகில் நின்டிருந்தவனின் முன் கையை அசைத்து அவனின் கவனத்தைத் தன் பக்கம் திருப்ப முயன்றாள் தமயா.


அதில் அவளின் விளிப்பில் உண்டான எரிச்சலோடு பல்லை கடித்தவன், “கான்ஷியஸ் வந்தாச்சு இல்லை.. கிளம்பு..” என்று ஒற்றை விரலை நீட்டி வெளியே போ எனும் தொனியில் நிமலன் சற்றே கடினமான குரலில் சொல்லவும், “வாட்..? போறதா எங்கே..? சார்ல்ஸ் வரட்டும், நெக்ஸ்ட் மூவ் என்னன்னு இன்னும் எனக்குச் சரியா தெரியலையே..” என்றாள் அவனை விட எரிச்சலான குரலில் நிமலனை பார்த்து தமயா.


“ஹேய்.. பைத்தியமா நீ..? ஆமா யார் அந்தச் சார்ல்ஸ்..? போனா போகுதுன்னு கடத்திட்டு போனவங்ககிட்டே இருந்து உன்னை காப்பாற்றிக் கூட்டிட்டு வந்தா, ஏதேதோ உளறிட்டு இருக்கே.. தலையில் ஏதாவது அடிபட்டு இருக்கா உனக்கு..?” என்று சிடுசிடுத்தான் நிமலன்.


இவள் யார் என்று தெரிந்த பின் சூர்யகலா பேசியது எல்லாம் நினைவுக்கு வர, இவள் விழித்து விட்டதைப் பார்த்து அவரே தமயாவை இழுத்து சென்று வெளியில் தள்ளும் முன் இவளை அனுப்பி விட நினைத்து இவன் பேசிக் கொண்டிருக்க.. அவளோ ஏதேதோ உளறிக் கொண்டிருந்ததில் உண்டான எரிச்சலில் பேசி இருந்தான் நிமலன்.


“ஹலோ யாரை பார்த்து பைத்தியமான்னு சொல்றீங்க..? இதில் என்னைக் கடத்தலில் இருந்து வேற காப்பாற்றினீங்களா..? நீங்க தான் பைத்தியம் போலப் பேசிட்டு இருக்கீங்க..? இது கடத்தலே இல்லை.. நான் தான் அப்படிச் செட்டப் செஞ்சுட்டு வெளியே வந்தேன்..” எனப் படபடவெனப் பொரிந்தாள் தமயா.


அதில் அவள் சொன்ன செய்தியில் ‘தன் காதில் சரியாகத் தான் விழுந்ததா..?’ என ஒரு நொடி திகைத்து அவளைப் பார்த்தவன், “வாட்..? கம் அகெய்ன்..” என்றான் நிமலன்.


“ஓப்ஹோ.. சார்ல்ஸ் எங்கே மேன்..?” என்று பொறுமையின்றி தமயா படபடக்கவும், “ஹு இஸ் தட் இடியட்..? எனக்கு அப்படி யாரையும் தெரியாது.. முதலில் இங்கே இருந்து கிளம்பு..” என்றான் வெறுப்பும் எரிச்சலுமாக நிமலன்.


“போ.. போன்னா நான் எங்கே போக..? நெக்ஸ்ட் பிளான் என்னன்னு சார்ல்ஸ் தான் சொல்லணும்.. அவன் எங்கே..? என் மொபைல் எங்கே..?” என்று கத்தினாள் தமயா.


“என்னைக் கேட்டா எனக்கு என்ன தெரியும்..? அந்தக் காரில் இருந்து உன்னை மட்டும் தான் கூட்டிட்டு வந்தேன்..” என்றான் நிமலன். அதில் நெற்றியை பிடித்துக் கொண்டவள், சட்டென நிமிர்ந்து நிமலனின் கையில் இருந்த அலைபேசியைப் பார்த்து விட்டு, “ஒரு போன் செஞ்சுக்கட்டுமா..? உங்க மொபைல் தரீங்களா..?” என்றாள் தமயா.


அதில் சுள்ளெனக் கோபம் உண்டானாலும் அதை மறைத்துக் கொண்டு தன் அலைபேசியை அவளிடம் நீட்டினான் நிமலன். வேகமாக வாங்கி யாருக்கோ அழைக்க முயன்றவள், அந்தப் பக்கம் அது எடுக்கப்படாமல் போனதில் பதட்டமாகி மீண்டும் முயற்சிக்க.. இந்த முறை அழைப்பு எடுக்கப்பட்டது.


அந்தப் பக்கமிருந்து கேட்ட குரலில் ஆத்திரமானவள் “ஹே சார்ல்ஸ் வேர் ஆர் யூ..? யூ இடியட் இப்படித் தான் முக்கியமான நேரத்தில் கூட இருக்காம விட்டு போவியா..? நீ அனுப்பின குண்டாஸ் உன்னை விட யூஸ்லெஸ்.. அவங்ககிட்டே இது ஒரு பேக் கிட்நாப்னு நீ சொல்லலையா.. தே ஹிட் மீ வெரி பேட்லி..” என்று தலையில் அடிப்பட்டிருந்த இடத்தை தடவிக் கொடுத்தப்படியே பொறிந்து தள்ளினாள் தமயா.


அதற்கு அந்தப் பக்கமிருந்து “பேப்.. பேப் லிசன் மீ..” என்று சோர்ந்த குரலில் சார்ல்ஸ் முணுகவும், கொஞ்சம் தணிந்தவள் “ஹே என்னாச்சு உனக்கு..?” என்றாள்.


அடுத்து அந்தப் பக்கமிருந்து அவன் சொல்வதைக் கேட்க, கேட்க பல வித பாவங்கள் அவளின் முகத்தில் வந்து போக.. “அப்போ இது நீ அனுப்பின ஆளுங்க இல்லையா..?” என்றாள் கலவரமான குரலில் தமயா.


அதற்கு அந்தப் பக்கமிருந்து எதுவோ சொல்லப்பட.. “இப்போ நீ எங்கே இருக்கே..?”


“ஓ, அடி பலமா..?”


“ஒகே.. சார்ல்ஸ் டேக் ரெஸ்ட்..” என்று சொல்லி அழைப்பை துண்டித்து இருந்தவளின் முகம் கலவரத்தை தத்து எடுத்திருந்தது.


அவளையே அதுவரை பார்த்திருந்தவனுக்கு ஏதோ புரிவது போல் இருக்க.. அவளிடம் எதுவும் கேட்டுக் கொள்ளாமல் அலைபேசிக்காக தமயாவின் முன் கையை நீட்டினான் நிமலன்.


அதில் தன் சிந்தனை கலைந்தவள், “சா.. சாரி..” என்றவாறே அவனிடம் அலைபேசியைக் கொடுக்கும் போது தன்னையுமறியாமல் “தேங்க்ஸ்..” என்றிருந்தாள் தமயா.


இது எதற்கு என்பது போல் லேசாகப் புருவத்தை உயர்த்தி நிமலன் அவளைப் பார்க்கவும், சற்று முன் சார்ல்ஸ் தன்னிடம் பகிர்ந்ததை நிமலனிடம் சொல்ல துவங்கினாள் தமயா.


இந்த அவசர திருமணத்தில் விருப்பமில்லை என்று எத்தனை முறை சொல்லியும் ஜெயதேவன் கேட்காமல் போன கோபத்தில் சார்ல்ஸோடு சேர்ந்து திட்டமிட்டவள், தானாகவே அதன் படி சார்ல்ஸ் மெசேஜ் செய்த பின் அங்கிருந்த அத்தனை சிசிடிவியையும் செயலிழக்க செய்து விட்டு வேகமாகத் திருமணப் பண்டபத்தின் பின் பக்கமாக இவளின் அறை பால்கனி வழியே பக்கத்தில் இருந்த மரத்தில் ஏறி வெளியே குதித்து வர.. அங்கு நான்கு பேர் சுவரேறி குதித்தவளை தலையில் அடித்துக் காருக்குள் ஏற்றினர்.


சார்ல்ஸும் கிட்டத்தட்ட இது போல் தான் திட்டமிட்டிருந்தான். ஒருவேளை அவள் வெளியேறுவதை யாராவது பார்த்து விட்டாலும் கூட யாரோ அவளைக் கடத்தி செல்வதாகத் தெரியட்டும், இவளாக வெளியேறுவதாகத் தெரியாமல் இருப்பதே சரி.


அப்போதே யார் எதற்கு இவளை கடத்தினார்கள் என அவர்கள் தேடிக் கொண்டிருக்கும் நேரத்தை பயன்படுத்தி, அனைவரின் கவனத்தையும் திசை திருப்பி விட்டு இரண்டு நாள்கள் எங்காவது தங்கி இருந்து விட்டு அவர்களின் கவனம் வேறு பக்கம் இருக்கும் போது இருவரும் ஆஸ்திரேலியாவுக்குக் கிளம்பி செல்ல சரியாக இருக்குமென சார்ல்ஸ் சொல்லி இருக்க.. அதை நம்பி அமைதியாக எந்த எதிர்ப்பும் இல்லாமல் அவர்கள் கையில் சிக்கி இருந்தாள் தமயா.


அப்போதே தமயாவுக்கு மெசேஜ் செய்து முடித்து விட்டு அவளுக்காக மண்டபத்துக்கு வெளியே காத்திருந்த சார்ல்ஸ் தன் திட்டத்தை மீண்டும் ஒருமுறை தன்னோடு அழைத்து வந்திருந்த ஆட்களுக்கு விளக்கிக் கொண்டிருக்க.. இதில் தமயா சம்பந்தபட்டிருப்பது தெரியாமல் அவளைக் கடத்தி செல்ல வேறு ஒரு குழுவும் வந்திருப்பதைக் கண்டு உஷாரான டேனியல் இவர்களைப் பலமாகத் தாக்கி இவர்கள் வந்திருந்த காரிலேயே போட்டிருந்தான்.


சில மணி நேரங்களுக்குப் பிறகே லேசாக நினைவு திரும்பிய அவர்களில் ஒருவன் ஆம்புலென்ஸ் உதவியோடு மற்றவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தான்.


இதில் சார்ல்ஸுக்குக் கொஞ்சம் அடி பலமாகவே விழுந்திருந்தது. மற்றொருவனுக்குக் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்க.. இதையெல்லாம் அறிந்த தமயாவுக்கு மனம் நடுங்கிப் போனது.


அவர்களையே இத்தனை மூர்க்கமாகத் தாக்கி இருப்பவர்களிடம் அவள் சிக்கிக் கொண்டிருந்தால் என்னவாகி இருப்பாள் என்று எண்ணும் போதே பதறியது.


இதைச் சொல்லி தமயா மீண்டும் நிமலனுக்கு நன்றி தெரிவிக்க.. “த்ரோ இட் யுவர் தேங்க்ஸ் இன் தி டிராஷ்..” என்று முகத்தைக் கடினமாக்கியவன், விபரீதம் புரியாமல் அவள் செய்திருந்த விளையாட்டில் தான் தேவையில்லாமல் தலையிட்டிருக்கக் கூடாது என்றெண்ணினான் நிமலன்.


அதில் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு அவனைப் பார்த்தவள், “ஒரு டூ டேஸ் நான் இங்கே இருந்துக்கட்டுமா..?” என்று கெஞ்சலாகக் கேட்கவும், அவளை ஆத்திரத்தோடு முறைத்தவன், “ஹே.. என்ன எல்லாம் உனக்கு விளையாட்டா போச்சா..? உன் இஷ்டத்துக்கு வந்து தங்கி போக இது என்ன ஹோட்டலா..? கெட் லாஸ்ட்..” என்றான் வாயில் பக்கம் கையை நீட்டி நிமலன்.


அதைக் கண்டு முகம் சுருங்க, “நான் ஒண்ணும் சும்மா தங்கறேன்னு சொல்லலை.. உனக்கு எவ்வளவு பணம் வேணுமோ கொடுத்துடறேன்.. நான் இங்கே இருந்து இப்போ வெளியே போனா மறுபடியும் என்னைப் பிடிச்சுக் கல்யாணம் செஞ்சு வெச்சுடுவாங்க.. சார்ல்ஸுக்குக் கொஞ்சம் சரியானதும் நாங்க ஆஸ்திரேலியா கிளம்பிடுவோம்..” என்றாள் முகத்தில் நூற்றியெட்டு பாவனைகளைக் காண்பித்து எப்படியாவது அவனைச் சம்மதிக்க வைத்து விடும் நோக்கில் தமயா.


அதில் அவள் பேச, பேச உண்டான ஆத்திரத்தில் அருகில் இருந்த மேஜையை அடித்து நொறுக்கும் அளவுக்கு உண்டான கோபத்தை வெகு சிரமப்பட்டு அடக்கியவன் விழிகள் சிவக்க, அவள் மேலும் எதுவும் பேசுவதற்கு முன், “ஷ்ஷ்ஷ்ஷ்..” என்றான் தன் வாயின் மேல் விரல் வைத்து பல்லை கடித்தவாறே முகமும் தாடையும் இறுக நிமலன்.


அவனின் விழிகளில் தெரிந்த கோபத்தில் மிரண்டு போய் தமயா அவனைப் பார்த்திருக்க.. அதே நேரம் நிமலனின் அலைபேசிக்கு ஏதோ குறுந்தகவல் வந்து இருப்பதற்கான ஒலி கேட்டது.


அதில் நிமலனின் பார்வை அலைபேசியில் பதிய.. அதில் வந்திருந்த புகைப்படத்தைக் கண்டு நெற்றியை சுருக்கினான் நிமலன். அவர்களை அடித்து போட்டு விட்டு, நிமலன் அவளைத் தூக்கிக் கொண்டு சென்று காரில் ஏற்றும் போது எடுத்த மூன்று புகைப்படங்களை அனுப்பி இருந்தான் துருவ். அதில் மற்றதெல்லாம் தெரியாமல் நிமலன் அவளை தூக்கிக் கொண்டிருக்கும் காட்சியும், அவளின் முகம் அவன் மார்பில் பதிந்திருப்பதும், காரில் ஏற்றும் காட்சியும் மட்டுமே பிரதானமாக இருந்தது.


அதனோடு “நான் சொல்லும் போதே கேட்டுடு நிமலன், அதான் உனக்கு நல்லது.. இல்லைனா சொந்த கட்சியிலேயே உனக்குப் பிரச்சனை வரும்.. உனக்கும் அவ அப்பனுக்கும் இருக்க விரோதம் எல்லாருக்கும் தெரியும்.. ஒழுங்கா நான் சொல்றதை கேட்டு உன் பெயரை காப்பாத்திக்கப் பார்.. இல்லைனா மீடியாவில் இதை லீக் செஞ்சேன்னா என்னாகும்னு யோசி..” என்று மிரட்டல் தொனியில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருந்தான் துருவ்.


அதைக் கண்டு பதட்டமாக வேண்டியவனோ, இகழ்ச்சியான இதழ் வளைவோடு “இந்த மாதிரி நேரத்தில் வீரனுங்க பேசற வார்த்தை என்னன்னு தெரியுமா..?” என்று கேட்டு ஒரு நொடி இடைவெளி விட்டு “**தா உன்னால் முடிஞ்சதை செய்டா..” என்று பதிலுக்கு நக்கல் தூக்கலாக இருக்கும் தன் குரலில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருந்தான் நிமலன்.

தொடரும்..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தை பதித்து விட்டேன்.. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்..

TNN - 2

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..


இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 
Status
Not open for further replies.
Top