All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "தழலாய் நின் நேசம்..!!" - கதை திரி

Status
Not open for further replies.

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
34915

தழல் – 5

நிமலன் அவளை இழுத்துக் கொண்டு வெளியே வர, அங்குக் கவலையான முகத்தோடு நின்றிருந்தான் நிகிலன். இதையெல்லாம் கண்டு அவனுக்கு என்ன எதிர்வினையாற்றுவது என்று கூடத் தெரியவில்லை.


ஆனால் அவனுக்கு நேர்மாறாக சூர்யகலா “ஐயோ.. எந்த நேரத்தில் இந்த வீட்டில் இவ காலை எடுத்து வெச்சாளோ தெரியலையே.. இப்படி என் குடும்பத்துக்குள்ளே எல்லாம் தப்பு தப்பா நடக்குதே.. என்னை எதிர்த்து பேசாத பிள்ளை என் பேச்சை கேட்காம இவளை கட்டிக்கப் போறானே..! நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன்..” என்று சத்தமாகப் புலம்பினார்.


அவர் பக்கமாக கூடத் திரும்பாமல் தமயாவை இழுத்துக் கொண்டு வெளியேறி இருந்தான் நிமலன். பதட்டத்தோடு அவர்களைப் பார்த்த நிகிலன், அவர்களைப் பின் தொடர்ந்து செல்ல முடியாமல் தயக்கத்துடன் திரும்பி சூர்யகலாவை பார்க்க.. அவரோ வெறுப்போடு எதுவெதுவோ பேசிக் கொண்டிருந்தார்.


இதில் செய்வதறியாது நிகிலன் இரு பக்கமும் தவிப்பாகப் பார்த்திருக்க.. அதே நேரம் தமயாவை தன் காரருகே இழுத்துச் சென்றிருந்த நிமலன், அவளைக் காருக்குள் ஏற்ற முயல.. அவளோ வீம்பாக உள்ளே ஏறாமல் அடமாக நின்றாள்.


அதில் அவளை அப்படியே திருப்பி இரு கைகளையும் தன் இரு கைகளால் அழுத்தி பிடித்து காரின் மேல் சாய்த்து தமயாவை நிறுத்தியவன், அவளை நெருங்கி நின்று முறைக்க.. அந்த நெருக்கத்திலும் பார்வையிலும் லேசாகப் பயம் உண்டாக.. அதை மறைத்துக் கொண்டு நின்றவள், அவனைப் பார்க்க தயங்கி முகத்தைத் திருப்பிக் கொண்டதோடு அவனிடம் இருந்து விலகவும் முயன்றாள் தமயா.


ஆனால் அவள் விலக, விலக இன்னும் தன் நெருக்கத்தையும், தன் கைகளில் சிறைப்பட்டிருந்த அவளின் கைகளில் அழுத்தத்தையும் கூட்டினான் நிமலன்.


இதில் வலியிலும், அந்த நெருக்கத்திலும் முகத்தைச் சுருக்கியவள், அசைவின்றி அப்படியே நிற்க.. இவ்வளவு நேரம் அவளிடம் இருந்த பிடிவாதம் லேசாகக் குறைவதை கண்டவன், “குட்.. இப்படியே அமைதியா நான் சொல்றதை கேட்டா உனக்கு நல்லது.. இல்லை, நான் என் வழியில் கேட்க வைப்பேன்.. காட் இட்..” என்று விட்டு தமயா எதிர்பார்க்காத நொடியில் அவளை அப்படியே காருக்குள் தள்ளி கதவை லாக் செய்திருந்தான் நிமலன்.


நொடியில் நடந்து முடிந்து விட்ட நிகழ்வில் இருந்து அவள் வெளி வருவதற்குள், அந்தப் பக்கம் வந்து காருக்குள் ஏறி இருந்த நிமலன் காரை வேகமாக எடுத்திருந்தான்.


அதில் உண்டான திகைப்போடு தமயா அவனைத் திரும்பி பார்த்து “இதெல்லாம் கொஞ்சம் கூடச் சரியில்லை.. இதுக்கு நீங்க என்னைக் காப்பாத்தாமலே இருந்து இருக்கலாம்.. நீங்க என்னைக் கட்டாயப்படுத்த முடியாது, நான்.. நான் போலீஸில் கம்ப்ளைண்ட் செய்வேன்..” என்றாள் கோபமும் அழுகையை அடக்கியதில் உண்டான திணறலுமாக தமயா.


அதில் கேலியாக அவளைத் திரும்பி பார்த்தவன், “எப்படிச் செய்வே..?” என்று ஒற்றைப் புருவத்தை உயர்த்தவும், “போன் செஞ்சா போதும் உடனே வருவாங்க.. எனக்கு நம்பர் கூடத் தெரியும், நூறு.. எஸ், எமர்ஜென்சி நம்பர் ஐ நோ..” என்று அவன் கேலியில் உண்டான கோபத்தோடு பேசியவளை மேலும் கிண்டலாகப் பார்த்தவன், “அதுக்குப் போன் வேணுமே..!” என்றான்.


“ஹாங்..” என்று அவசராமாகத் தன் அருகில் தேட முயன்றவளுக்கு அப்போதே அவளின் லைபேசி இங்கு இல்லாதது நினைவுக்கு வந்தது. அதில் தன்னையும் அறியாமல் அவளின் பார்வை அவன் சட்டை பையில் இருந்த அலைபேசியின் மேல் பதிய.. “ஓ, ரியலி.. என் மேல் கம்ப்ளைண்ட் செய்ய நான் என் போனையே கொடுப்பேன்னு வேற நினைக்கறியா நீ..?” என்றான் கிண்டலாக நிமலன்.


அதில் முகம் சோர்ந்து போக.. அவள் திரும்பிக் கொள்ள.. “டோன்ட் ஒர்ரி.. போன் இல்லைனா என்ன..? நேரில் போய்க் கம்ப்ளைண்ட் கொடுத்துட்டா போச்சு..” என்று இலகு குரலில் கூறியவனைக் கண்கள் மின்ன தமயா திரும்பி பார்க்க.. “ஹ்ம்ம், கல்யாணம் முடிஞ்சதும் நாம சேர்ந்து போய்க் கொடுத்துக்கலாம்.. இப்போ சமத்தா இருக்கணும் சரியா..” என்றான் வெறுப்பேற்றும் குரலில் நிமலன்.


அவன் தன்னைக் கேலி செய்வது புரிய.. முறைப்போடு முகத்தைத் திருப்பிக் கொண்டவளுக்கு மனமெங்கும் எப்படி இவனிடம் இருந்து தப்பிப்பது என்ற யோசனையே ஓடிக் கொண்டிருந்தது.


அதற்குள் நிகிலன் தன் பாட்டியை மற்றொரு காரில் ஏற்றிக் கொண்டு நிமலன் சொல்லி இருந்த இடத்திற்கு வந்து கொண்டிருந்தான். நிகிலனுக்கு மனதில் பல்வேறு குழப்பங்கள் போட்டிப் போட்டுக் கொண்டிருந்தது.


அதைப் பற்றி நிமலனிடம் பேசவும் அவனுக்குத் தயக்கமாக இருந்தது. இது திடீரென இப்படி மாறுமென அவனுமே எதிர்பார்த்திருக்கவில்லையே..! இதில் உண்டான கலக்கத்தோடும் குழப்பத்தோடும் நிகிலன் காரை ஒட்டிக் கொண்டிருக்க.. அவனருகில் அமர்ந்திருந்த சூர்யகலாவோ தமயாவின் குடும்பத்தையே வசைப்பாடிக் கொண்டிருந்தார்.


இது வேறு அவனுக்குக் கவலையானது. இப்போது இருக்கும் பிரச்சனையில் அங்குச் சென்றும் பாட்டி இப்படியே பேசிக் கொண்டிருந்தால் என்ன செய்வது என யோசனையானான் நிகிலன்.


அதே நேரம் சற்று நேரத்திற்கு முன் நடந்தது எல்லாம் நிமலனின் மனதில் ஓடியது..


**********


இன்றே இப்போதே திருமணம் என்று கோமகன் கூறிய உடன் மற்றவர்களுக்கு எப்படியோ நிமலன் பெரிதாக அதிர்ந்து நின்றான். என்ன காரணமாக இருந்தாலும் இந்தத் திருமணம் என்ற ஒன்றையே அவனால் அத்தனை எளிதாக ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கும் போது இப்படி உடனே என்றதில் அடுத்து பேச முடியாமல் நின்றான் நிமலன்.


அதற்குள் “உங்க வார்த்தையை மறுத்து பேசறேன்னு நினைக்காதீங்க தலைவரே.. இதுக்கு நிஜமாவே இதைத் தவிர வேற தீர்வு இல்லையா..?” என்றான் கிருபா.


அதில் நிமலன் முகம் இறுக திரும்பிக் கொள்ள.. நிமலனை ஒரு பார்வை பார்த்தவாறே கிருபாவின் பக்கம் திரும்பிய கோமகன், “எனக்குத் தெரியலை.. நீ தான் சொல்லேன் கிருபா..” என்றார்.


அதற்கு அவனாலும் சட்டென எதுவும் சொல்ல முடியாமல் தடுமாற.. “இங்கே பார் கிருபா.. இது எதற்காக எடுக்கப்பட்ட முடிவுன்னு தெரிஞ்சும் நீ இப்படி பேசறது சரியில்லை, ஒருவேளை எனக்குத் தெரியாத தீர்வு உனக்குத் தெரிஞ்சாலும் சொல்லேன்..” என்றார் கோமகன்.


அதில் தவிப்பாக கிருபா அவரைப் பார்க்கவும், “சும்மா இரு கிருபா..’ என்றார் கண்டிப்பான குரலில் ஜெயதேவ். “இல்லைப்பா..” என்று மீண்டும் அவன் துவங்கவும், “இங்கே பார் கிருபா.. நமக்கு நேரமில்லை, இப்போ உடனே இந்தப் பிரச்சனை பெருசாகாம தடுக்க மட்டுமில்லை, இனி எவனாவது இதைப் பெருசு செஞ்சாலும் யாரும் கண்டுக்காம இருக்கவும் எனக்குத் தெரிஞ்சு இது மட்டும் தான் சரியா இருக்கும்னு நினைச்சு தான் இந்த முடிவை நான் எடுத்தேன்.. அதோட நீங்க முடிவு செஞ்சு இருந்த மாப்பிள்ளை கார்த்திக் எழுதி வெச்சுட்டு போய் இருக்க லெட்டரும் நமக்கு ஒரு ஆதாரம்.. அதனால் கல்யாணத்தை நிறுத்த விரும்பாம ஜெயதேவ் நிமலன்கிட்டே பேசி இப்படி ஒரு முடிவுக்கு வந்ததா சொல்ல நமக்கும் வசதியா இருக்கும்.. அதுமட்டுமில்லை.. இது இவங்களைப் பற்றி வருஷ கணக்கா சுற்றி வர வதந்திக்கு முற்று புள்ளி வெச்சது போலவும் ஆகும்..” என்றார் விளக்கமாகக் கோமகன்.


“அதுக்கில்லை தலைவரே.. இதோ இங்கே வந்து இவ்வளவு நேரம் ஆகுது.. இத்தனை முக்கியமான பிரச்சனயை பற்றிப் பேசிட்டு இருக்கோம்.. ஆனா நிமல் பார்வை ஒருமுறை கூட என் பக்கமோ அப்பா பக்கமோ மறந்தும் கூட திரும்பலை.. கவனமா அவன் தவிர்க்கலை, ஆனா அவனறியாமலே அவனுள் ஊறி போய் இருக்க வெறுப்பு அவனை எங்க பக்கம் திரும்ப விடலை.. இப்படி ஒரு மனநிலையில் என் தங்கச்சியை அவன் கல்யாணம் செஞ்சு..” என்றவன் தயங்கி நிறுத்தி விட்டு கோமகன் தன் முகத்தையே கேள்வியாகப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு “எங்கே எங்க மேலே இருக்கக் கோபத்தை அவகிட்டே காட்டுவானோன்னு தான்.. அவ அதைத் தாங்க மாட்டா தலைவரே..” என்றான் பரிதவிப்பான குரலில் கிருபா.


அதில் அப்படி ஒரு வேகத்தோடு சென்று கிருபாவின் சட்டையைப் பிடித்து இருந்தான் நிமலன். இருவரின் முகமும் அருகருகே இருக்க.. “என்னைப் பார்த்தா எப்படி இருக்கு..? பொண்ணுங்ககிட்ட வீரத்தை காட்டுறது போலத் தெரியுதா..? இல்லை உங்களை ஒண்ணும் செய்ய முடியாத கையாலாகாதவனா தெரியுதா..?” என்றான் கிருபாவை முறைத்துக் கொண்டு நிமலன்.


அதில் எதுவும் பேச முடியாமல் லேசாக கிருபா தடுமாற.. “கையை எடு நிம;ஆ..” என்று லேசான அதட்டலோடு கூறியவர், அவன் விலகி நிற்கவும், “உனக்கு எப்படியோ எனக்கு நிமலன் மேலே நம்பிக்கை இருக்கு.. நீ என்ன சொல்றே ஜெயதேவ்..?” என்றார் கோமகன்.


அதற்குச் சோர்வாக நிமிர்ந்தவர், “நீங்க சொன்னா சரியா இருக்கும்னு நம்பறேன் தலைவரே..” என்றார். “இந்தப் பேச்சு எல்லாம் வேண்டாம்.. நிமலனுக்கு உன் பொண்ணைக் கொடுக்க உனக்கு விருப்பமா..! இல்லையா..? அதைத் தெளிவா சொல்லு..” என்றார் சற்று இறுக்கமான குரலில் கோமகன்.


இப்போதும் சற்று தயங்கினாலும் திடமான குரலில் “இதில் விருப்பம்ங்கறதை விட, தேவை, கட்டாயம்னு ஒண்ணு வருது தலைவரே.. இங்கே நாங்க மட்டுமில்லை நிமலனும் கூட வேற வழியில்லாம உங்க வார்த்தைக்காகத் தான் சம்மதிச்சு இருப்பான்.. ம்க்கும், இருப்பார்.. இந்தப் பொண்ணு எல்லாத்தையும் போல இதையும் விளையாட்டா பார்க்காம இருந்திருந்தா இதுக்கான அவசியமே வந்து இருக்காது.. இப்போ என்ன செய்யணுமோ அதைச் செஞ்சுடலாம் தலைவரே..” என்றார் ஜெயதேவ்.


அதற்கு மேல் எதுவும் பேச விரும்பாமல், இருவரையும் கிளம்பச் சொன்ன கோமகன், வேறு எந்த இடையூறும் இல்லாமல் இந்தத் திருமணம் நடந்து முடிய வேண்டும் என்பதில் மட்டும் கவனமாக இருக்குமாறும் சொல்லியே அனுப்பினார்.


அதில் அங்கிருந்து கிளம்பி நேராக வீட்டிற்கு வந்த நிமலனுக்குள் பல்வேறு உணர்வு போராட்டம். இதை எப்படி எதிர் கொள்வது என்று கூட அவனுக்குப் புரியவில்லை.


அவனின் மனதோடே நிமலன் போராடும் நிலையில் இருக்க.. இதில் வீட்டில் இருப்பவர்களை வேறு சமாளிக்க வேண்டும்..! அது வேறு இந்தச் சூழ்நிலையில் நிமலனுக்கு எரிச்சலை கொடுக்க.. அந்தக் கோபத்தையெல்லாம் தன் காரின் வேகத்தில் காண்பித்தான் நிமலன்.


கார் வந்து நின்ற வேகத்திலேயே வரவேற்பு அறையில் அமர்ந்திருந்த நிக்கி எழுந்து பதட்டத்தோடு வெளியில் வந்தான். அவனைக் கடந்து வேகமாக உள்ளே சென்ற நிமலனின் பார்வை ஒருமுறை நிகிலனை தொட்டு மீள.. அந்தப் பார்வையில் எதுவோ வித்தியாசமாக இருப்பதைக் கண்டு துணுக்குற்றான் நிகிலன்.


அதில் என்னவெனப் புரியாமல் நிமலனின் இந்த வழக்கத்திற்கு மாறான பார்வையில் குழம்பி அவனின் பின்னே சென்றான் நிகிலன். நேராக உள்ளே நுழைந்த நிமலன், சூர்யகலாவின் அறையை நோக்கி செல்ல.. அவனின் கால்கள் ஒரு நொடி தயங்கி தமயா இருந்த அறையின் பக்கம் பார்த்தான் நிமலன்.


அரை நொடிக்கும் குறைவான நேரம் அந்தப் பக்கம் பார்த்தவன், விருட்டென சூர்யகலாவின் அறைக்குள் நுழைய இருந்தவன், அப்படியே நின்று மீண்டும் திரும்பி நிகிலனை பார்த்தான்.


அவனின் பார்வையைக் கண்டு பதட்டமான நிகிலன், என்ன விஷயம் என்பது போல் தன் அண்ணனை பார்த்தான். அதில் ஒரு ஆழ்ந்த பெருமூச்சை வெளியேற்றியவன், “உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..” என்று துவங்கி அனைத்தையும் இரண்டு நிமிடத்தைச் செலவழித்து மொத்தமாகச் சொல்லி முடித்தான் நிமலன்.


இதைக் கேட்டு எதிர்வினையாற்ற கூட முடியா நிலையில் நின்றிருந்தான் நிகிலன். அவனின் அதிர்வை உள்வாங்கிக் கொண்டே.. லேசான தயக்கத்தோடு நெற்றியை கீறியவாறே “உனக்கு.. நா.. நான்.. அவளை.. கல்யாணம் செஞ்சுக்கறதில் எதுவும் பிரச்சனை இல்லையே..” என்றான் நிமலன்.


இதற்கு என்ன பதில் சொல்வதெனப் புரியாமல் நிகிலன் நின்றிருக்க.. “சூழ்நிலையை உனக்குத் தெளிவா சொல்லிட்டேன் நிக்கி.. இனி நீ தான் சொல்லணும்..” என்றான் நிமலன்.


அதில் நிகிலனின் தலை தயக்கமாக சரி என்பது போல் அசைய.. பொருள் விளங்கா பார்வையோடு அவனைப் பார்த்த நிமலன் ஒரு தலையசைப்போடு நிக்கியின் தோளில் தட்டி கொடுத்து விட்டு சூர்யகலாவை காண சென்றான்.


அங்கு நிமலன் சொன்னதையெல்லாம் கேட்ட சூர்யகலா ஆத்திரத்தோடு “இவ இந்த வீட்டுக்குள்ளே வந்ததையே என்னால் அனுமதிக்க முடியலை.. இதில் இந்த வீட்டு மருமகளா வேற வருவாளா..? முடியாது, இதுக்கு நான் ஒத்துக்கவே மாட்டேன்..” எனக் கத்த தொடங்கிவிட்டார்.


“பாட்டி எனக்கு நேரமில்லை.. இதை நான் செஞ்சு தான் ஆகணும்.. புரிஞ்சுக்கோங்க..” என்றான் நிமலன். “அப்படி என்ன அவசியம் வந்தது..? இந்தக் கல்யாணம் நட்டக்கவே நடக்காது..” என்று அவர் பிடிவாதம் பிடிக்க.. நிமலன் புரிய வைக்க முயல எனத் தொடர்ந்த பேச்சின் இறுதியில் “போதும்.. நான் இங்கே உங்க சம்மதத்தைக் கேட்க வரலை.. என் முடிவை சொல்ல வந்தேன்.. யார் சம்மதித்தாலும் இல்லைனாலும் இந்தக் கல்யாணம் நடக்கும்.. இது அந்தப் பொண்ணுக்கும் சேர்த்து தான்..” என்றான் நிமலன்.


“நீ இப்படி எல்லாம் பேச மாட்டியே நிமலா..! அப்படி என்ன அவ என்னை விட முக்கியமா போயிட்டா.. யாரோ எதுவோ சொல்லி மிரட்டினா அதுக்கு நாம ஏன் பயப்படணும்..? எது வந்தாலும் நாம பார்த்துக்கலாம்..” என்றார் சூர்யகலா.


“நான் சொன்னது உங்களுக்குப் புரியலைன்னு நினைக்கறேன்.. இது என் முடிவு அவ்வளவு தான்.. இனி இதில் பேச எதுவுமில்லை.. எதுக்காகவும் ஏன் எவளுக்காகவும் என் அரசியல் வாழ்க்கையை என்னால் விட்டு தரவோ பணயம் வைக்கவோ முடியாது.. அதை வெச்சு நான் செய்ய வேண்டியது நிறைய இருக்கு..” என்று வேகத்தோடு துவங்கி ஒரு வித அழுத்தத்தோடு முடித்தான் நிமலன்.


இதைக் கேட்டுக் கொண்டிருந்த நிகிலனுக்குத் தான் மனம் என்னவோ போல் இருந்தது. நிமலனை பற்றி நன்கு அறிந்திருந்தவன் என்பதால் இதில் தலையிட்டு எதுவும் செய்யவும் முடியாமல் தள்ளி நின்று வேடிக்கை பார்க்கவும் முடியாமல் தவித்தான் நிகிலன்.


அதற்குள் சூர்யகலா மீண்டும் கோபமாகப் பேச துவங்க.. தன் முடிவை இறுதியாகச் சொல்லி விட்டு நேராக தமயாவை பார்க்க சென்று விட்டான் நிமலன்.


அங்கு அவளோ சூர்யகலாவுக்கும் மேல் அமர்க்களம் செய்தாள். அவனே ஒருவாறாக இதைச் செய்தே தீர வேண்டும் என்ற மனநிலையில் இதையெல்லாம் செய்து கொண்டிருக்க.. இப்படி ஒவ்வொருவரும் பிரச்சனை செய்ததில் உண்டான வெறுப்பில் சட்டென அவளை இழுத்துக் கொண்டு கிளம்பி விட்டிருந்தான் நிமலன்.


*******************


அந்தத் திருமண மண்டபத்திற்குள் கார் வேகமாக நுழைய.. ‘என்ன செய்து இவனிடமிருந்து தப்பிக்கலாம்..?’ என்ற யோசனையோடே அமர்ந்திருந்த தமயா சட்டென அந்த இடத்தைக் கண்கள் ஒளிர பார்த்தாள்.


இங்கு அவன் அழைத்து வருவான் என அவள் துளியும் எதிர்பார்க்கவில்லை. ‘இனி பிரச்சனை இல்லை.. எப்படியும் தன் அப்பாவிடம் பேசி இதை நிறுத்தி விடலாம்..!’ என்ற நம்பிக்கை அவளுக்கு வந்திருந்தது.


அதில் லேசான கள்ள புன்னகை அவள் முகத்தில் வர.. ஓர விழியில் நிமலனை பார்த்தாள் தமயா. இங்கே வந்ததில் இருந்து அவளிடம் உண்டான அத்தனை மாற்றத்தையும் கவனித்து இருந்தவன், எதுவும் பேசாமல் இறங்கி உள்ளே செல்ல.. கார் வந்ததைக் கண்டு வாயிலுக்கு வந்து நின்றார் ஜெயதேவ்.


அவருக்கு அருகில் கிருபாவும், தமயாவின் அன்னையுமான வளர்மதியும் நின்று இருந்தார்கள். கவலையும் கலக்கமுமான முகத்தோடு வரவேற்பாகக் கைகளைக் கூப்பியவாறு நின்றிருந்த ஜெயதேவ் மற்றும் கிருபாவை கடந்து வேகமாக உள்ளே செல்ல முயன்றவன், அழுது சிவந்திருந்த விழிகளும் முகமுமாக வளர்மதி நின்றிருந்த நிலையைக் கண்டவனின் நடை ஒரு நொடி தயங்கி பின் தொடர்ந்தது.


தமயா பாதுக்காப்பாக இருக்கிறாள் என்ற செய்தியை மட்டும் சொல்லி விட்டு மற்ற எந்த விவரமும் சொல்லாமல் ஜெயதேவ் மற்றும் கிருபா வெளியில் கிளம்பி சென்றதில் உண்டான பயத்தோடே அவர்களின் வருகைக்காக மனம் பதைக்கக் காத்திருந்தார் வளர்மதி.


ஆனால் அவர் எதிர்பார்த்ததற்கு மாறாகத் திரும்பி வந்தவர்கள் சொன்ன செய்தி அவருக்குக் கலவையான உணர்வையே கொடுத்தது எனலாம். இன்று நடக்கவிருந்த தன் பெண்ணின் திருமணம் நின்று விட்டது என்று நினைத்திருந்தவருக்கு அது எந்தத் தடங்களும் இல்லாமல் நடக்கப் போகிறது என்பதோடு அந்த திருமணம் நிமலனோடு நடக்கப் போகிறது என்ற செய்தியும் சேர்ந்து எப்படி எதிர்வினையாற்றுவது என்று புரியா ஒரு மனநிலையில் அவரை நிற்க செய்திருந்தது.


‘இது தமயா சிறு வயதில் இருந்த போது அவருள் இருந்த மிகப் பெரிய ஆசை.. வளர்மதிக்கு மட்டுமல்ல.. நிமலனின் அன்னை ரத்னமாலாவுக்குமே இந்த ஆசை இருந்தது. பிள்ளைகள் வளர்ந்ததும் சரியான நேரத்தில் சொல்லி இதை நிறைவேற்றிக் கொள்ள இருவரும் எண்ணி இருக்க.. அதற்குள் என்னென்னவோ அவர்களின் வாழ்வில் நடந்து விட்டிருந்தது.


இப்போதும் நிமலனின் வளர்ச்சியைப் பற்றிக் கேட்கும் போதும் ஊடகங்களில் பார்க்கும் போதும் அவருக்குள் அத்தனை சந்தோசம் உண்டாகும். ஆனால் வீட்டின் சூழ்நிலை அவரை அதை வெளிப்படுத்த விடாமல் செய்திருந்தது.


ஆனால் தன் ஆசைப்படியே நிமலனோடு தமயாவுக்கு திருமணம் நிகழ்வதை எண்ணி மகிழ்வதா..? இல்லை இந்தச் சூழ்நிலையில் இப்படிக் கட்டாயத்திற்காக நட்டப்பதை எண்ணி வருந்துவதா..? எனப் புரியாமல் அவர் நின்றிருக்க.. காரிலிருந்து இறங்கி வேகமாக அழுகையோடு ஓடி வந்து தன் தந்தை கட்டிக் கொண்டாள் தமயா.


“தேங் காட்.. இப்போ தான் எனக்கு நிம்மதியா இருக்கு, உங்களை நான் மறுபடியும் பார்ப்பேன்னு எதிர்பார்க்கவே இல்லை..” என்று இறுக்கமாக அணைத்துக் கொண்டவளை ஆதரவாகத் தட்டிக் கொண்டுத்தவர் எதுவும் பேசாமல் நின்றிருக்க.. “இங்கே இருந்து நீ யாருக்கும் தெரியாம வெளியே போகாம இருந்திருந்தா இப்படி யோசிக்க வேண்டிய அவசியமே வந்திருக்காது..” என்றான் இடக்காக கிருபா.


அதில் கோபமாக நிமிர்ந்து அவனைப் பார்த்தவள், “எனக்கு மட்டும் என்ன அப்படிச் செய்ய ஆசையா..? நீங்க மட்டும் இப்படித் திடீர்னு கல்யாணம் அது இதுன்னு பேசாம இருந்திருந்தா நான் ஏன் அப்படிச் செய்யப் போறேன்..!” என்றாள் சலுகையாகத் தன் தந்தையின் மேல் சாய்ந்தப்படியே தமயா.


“எதுக்கும் இப்படி ஒரு முடிவு தீர்வாகாது தமா.. எதுவா இருந்தாலும் நீ போராடி இருக்கணும்.. ஆனா இப்படி ஒரே நாளில் உன் தப்பை உணர்ந்து நீ பேசறது எனக்கு ஆச்சர்யமா இருக்கு..” என்றான் அவளின் இயல்பை அறிந்திருந்தவன் என்பதால் கிருபா.


அதற்குள் மகளைத் தன் கை வளைவில் வைத்தவாறே உள்ளே அழைத்து வந்திருந்தார் ஜெயதேவ். “ம்ப்ச்.. உனக்கென்ன நீ ஈஸியா சொல்லிடுவே.. எனக்கில்லை என் பிரச்சனை தெரியும்.. ஆமா ஒரே நாளில் ஏன்டா போனோம்னு அந்த லாம்ப் போஸ்ட் என்னை நினைக்க வெச்சுட்டான்.. ஹே, உனக்கு ஒண்ணு தெரியுமா..? அந்த லாம்ப் போஸ்ட் தான் நம்ம நிக்கியோட அண்ணன்..!” என்றாள் எரிச்சலோடு துவங்கி ஆச்சர்யமான குரலில் முடித்து தமயா.


“போதும் அப்பறம் பேசிக்கலாம்.. போய் முகம் கழுவி தயாராகி வா..” என்று மகளிடம் வளர்மதி சொல்ல.. “என்ன மதி ரொம்ப அமைதியா இருக்கே.. உன்னைச் சமாளிக்கறது தான் ரொம்பக் கஷ்டம்னு நினைச்சேன்.. பரவாயில்லை.. பொண்ணு காணாம போனதும் நீயும் கொஞ்சம் அமைதியாகிட்டே போல..” என்றாள் தன் அன்னையைப் பார்த்துக் கண்ணடித்து தமயா.


அதற்கும் அவர் அமைதியாகவே இருக்க.. “ப்பா.. உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்..” என்றாள் நிமலனின் மிரட்டலை பற்றிச் சொல்ல எண்ணி தமயா.


“எதுவா இருந்தாலும் அப்பறம் பேசிக்கலாம்.. இப்போ நேரமாகுது..” என்றார் ஜெயதேவ். “நேரமாகுதா எதுக்கு..?” என்று பார்வையைத் திருப்பியவள், அப்போதே மணமேடைக்கு அருகில் கோமகனிட்ம் எதுவோ பேசியவாறே நிமலன் நின்றிருப்பதைக் கண்டு சிறு திகைப்போடு திரும்பி தன் குடும்பத்தினரை பார்த்தாள் தமயா.


இவர்களிடம் வந்து சேர்ந்து விட்டோம் இனி தன்னை எந்தத் தீங்கும் நெருங்காமல் இவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்ற எண்ணமே இவ்வளவு நேரம் அவளை இயல்பாகப் பேசி சிரிக்க வைத்திருந்தது.


ஆனால் இவர்களும் அவனுக்கு உடன்படுவதைப் போல் நடக்கவும் உண்டான அதிர்வில், “ப்பாஆஆஆ..” என்றாள் காற்றாகிப் போன குரலில் தமயா.


“போம்மா.. அம்மா கூடப் போய் முகம் கழுவி தயாராகி வா..” என்றார் ஜெயதேவ். அதில் மறுப்பான தலையசைப்போடு “ப்பா.. நோ, இது வேண்டாம்.. பிளீஸ்..” என்று கெஞ்சினாள் தமயா.


அதற்கு ஜெயதேவ் பதில் சொல்வதற்குள் நிமலனின் உதவியாளன் பார்த்திபன் இவர்களை நெருங்கி “இதில் இருக்கறதை மட்டும் மேடம் போட்டுட்டு மேடைக்கு வரணும்னு சார் சொல்ல சொன்னார்..” என்று ஒரு பெரிய பையைக் கொடுத்தான்.


அதில் உங்களிடமிருந்து எனக்கு எதுவும் வேண்டாமென்று அவன் சொல்லுவது புரிந்து முகம் கசங்க ஜெயதேவ் நின்றிருக்க.. வேகமாக எதுவோ பேச முயன்ற கிருபாவை தடுத்து விட்டு “நிமல்கிட்ட நான் பேசி பார்க்கறேங்க.. தம்பி நான் சொன்னாப் புரிஞ்சுப்பார்..” என்றார் வளர்மதி.


இதற்கு மறுப்பாகத் தலையசைத்த ஜெயதேவ், அதை வாங்கிக் கொள்ளுமாறு தலையசைப்பில் கூற.. கவலையோடு அதை வாங்கிக் கொண்டவர் மகளை அறைக்குள் அழைத்துச் செல்ல முயல.. அவளோ தன் தந்தையின் கையை இறுக்கமாகப் பிடித்தப்படி, “ப்பா.. நோ, இது வேண்டாம்.. ப்ளீஸ், இதுக்கு நீங்க பிக்ஸ் செஞ்ச அந்தக் கல்யாணமே எனக்கு ஒகே..” என்று அழுதாள் தமயா.


“இதை நீ முன்பே யோசிச்சு இருக்கணும் தமா.. இனி இதை மாற்ற முடியாது..” என்றார் ஜெயதேவ். “ப்பா.. உங்களுக்கு எப்படிச் சொல்றதுன்னு தெரியலை.. என்னை வற்புறுத்தி நீங்க கல்யாணம் செய்யப் பார்த்த கோபம், அதோட எனக்கு இந்தப் பாலிடிக்ஸ் எல்லாம் வேண்டாம்.. நான் நிம்மதியா ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆக நினைச்சேன்.. போன மாசம் வரைக்கும் அதுக்குச் சரின்னு சொன்ன நீங்க இப்படித் திடீர்னு மாத்தி பேசவும் எனக்குக் கோபம் வந்து இப்படிச் செஞ்சுட்டேன்.. அதுக்காக இப்படி நீங்க என்னைப் பழி வாங்குவீங்களா..? நோ ப்பா.. எனக்கு அந்த லாம்ப் போஸ்ட்டை பார்த்தாலே பிடிக்கலை..” என்றாள் தமயா.


இதே நேரம் தன் பாட்டியோடு உள்ளே நுழைந்த நிகிலனின் செவிகளில் இவை அனைத்தும் விழ.. வலியோடு திரும்பி அவளைப் பார்த்தான் நிகிலன். உடன் வந்த சூர்யகலா வெறுப்பும் முகசுழிப்புமாக இவர்களைக் கண்டு உள்ளே வர மறுத்து அங்கேயே நின்றார்.


அதில் வேகமாக அவர்களை நெருங்கிய நிமலன், “உள்ளே வாங்க பாட்டி..” என்றான் பல்லை கடித்தப்படியே. இதில் அவர் வேண்டா வெறுப்பாக உள்ளே நுழைய.. முறைப்படி அவரை வரவேற்க முன்னே சென்றார் ஜெயதேவ்.


அவரைக் கண்டதும் உண்டான ஆத்திரத்தோடு முகத்தைத் திருப்பிக் கொண்டவர், தன் வயதுக்கும் மீறிய வேகத்தோடு நிகிலனோடு விலகி நடந்தார்.


அதில் உண்டான் பெருமூச்சோடு ஜெயதேவ் திரும்ப.. மகளை உள்ளே அழைத்துச் செல்ல போராடிக் கொண்டிருந்தார் வளர்மதி. இதைக் கண்டு இழுத்துப் பிடித்த பொறுமை எல்லாம் காணாமல் போக.. “போதும் தமயந்தி.. இதுவரை நீ எங்களுக்குச் செஞ்சது எல்லாம் போதும்.. இப்போவே எங்க மானம் காற்றில் மட்டுமில்லை, புயலில் சிக்கினது போல எங்கெங்கோ பறந்துட்டு இருக்கு.. உனக்கு இந்தக் கல்யாணம் வேணுமா வேண்டாமான்னு எல்லாம் இனி யோசிக்க இங்கே எதுவுமில்லை.. இது இப்போ இங்கே நடந்தே ஆகணும், அவ்வளவு தான்.. அப்படியும் நீ இதுக்கு ஒத்துக்க மாட்டேன்னு அமர்க்களம் செஞ்சா..” என்று சொல்லி சிறு இடைவெளி விட்டவர், தன்னையே சிறு அதிர்வோடு பார்த்துக் கொண்டிருந்த மகளின் முகத்தை வெறுப்போடு பார்த்து “நாங்க குடும்பத்தோடு தற்கொலை செஞ்சுக்கறதை தவிர எங்களுக்கு வேற வழியில்லை.. நான் இங்கே என் குடும்பம்னு சொன்னது நான், என் மனைவி, என் மகன்.. புரியுதா..?” என்றார் இறுக்கமான குரலில் ஜெயதேவ்.


அதில் உண்டான அதிர்வோடு அவரைப் பார்த்தவள், அந்த வார்த்தைகள் கொடுத்த தாக்கத்தில் எதுவும் பேசாமல் அழுகையை அடக்கிக் கொண்டு வளர்மதியின் கையில் இருந்த பையை வாங்கிக் கொண்டு அருகில் இருந்த அறைக்குள் நுழைந்து கதவை அடைத்தாள் தமயா.


அதைக் கண்டு பயந்துப் போன வளர்மதி, “என்னங்க.. அவ கோபத்தில் ஏதாவது செஞ்சுக்கப் போறா..” என்று பதறி அறையின் கதவை தட்ட முயல.. “அதெல்லாம் எதுவும் செஞ்சுக்க மாட்டா.. நீ சும்மா இரு..” என்று மனைவியிடம் எரிந்து விழுந்தார் ஜெயதேவ்.


“என்னப்பா இப்படிப் பேசிட்டீங்க..?” என்று ஆதங்கத்தோடு கேட்ட கிருபாவை திரும்பி பார்த்தவர் வேறு எதுவும் சொல்லாமல் கோமகனை நோக்கி செல்ல.. அடுத்தச் சில நிமிடங்களில் தயாராகி வந்த தமயாவின் விழிகள் எத்தனை முயன்றும் கண்ணீரை நிறுத்தவே இல்லை.


தன்னை நோக்கி வந்த வளர்மதியை விழிகளில் வழிந்த வலியோடு திரும்பி பார்த்தவள், எதுவும் பேசாமல் அவரோடு சேர்ந்து நடக்க.. அவளையே தீர்க்கமாகப் பார்த்தப்படி நின்றிருந்தான் நிமலன். இதையெல்லாம் கண்ட நிகிலன் தன் தயக்கத்தை எல்லாம் உதறி, நிமலனோடு பேச முடிவெடுத்து அவனை நோக்கி சென்றான்.

தொடரும்..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தை பதித்து விட்டேன்.. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்..

TNN - 5

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..


இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
34916

தழல் – 6

பன்னீர் ரோஜா நிறத்தில் வெள்ளி ஜரிகைகளால் இழைத்தது போல் இருந்த பட்டு சேலையும் அதற்குப் பொருத்தமாக நகைகளும் அணிந்து விழி முழுதும் கண்ணீர் தேங்கி நிற்க வந்து கொண்டிருந்தாள் தமயா.


கோமகனோடு பேசிக் கொண்டிருந்தாலும் நிமலனின் பார்வை அவள் மேலேயே கூர்மையாகப் பதிந்திருக்க.. முகம் இறுக அவன் நின்றிருந்தான். இருவரையும் கவலையோடு பார்த்த நிகிலன், தயக்கமும் யோசனையுமாக நிமலனை நெருங்கினான்.


அதில் நிமலன் பார்வையைத் திருப்பி நிகிலனை பார்க்க.. பேச வேண்டுமென வந்து விட்டாலும் சட்டெனப் பேச முடியா ஒரு தயக்கம் வந்து அவனை ஆட்கொள்ள.. லேசாகத் தடுமாறி நின்றான் நிகிலன்.


இதைக் கண்டு நெற்றியை சுருக்கியவன், கேள்வியாக நிகிலனை பார்க்க.. அவனோ சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்தான். அதில் சட்டென அருகில் இருந்தவர்களிடம் தலையசைப்பிலேயே சொல்லி விட்டுக் கொஞ்சம் நகர்ந்து வந்து நிகிலனை பார்த்து நின்றான் நிமலன்.


நிமலன் நகரத் துவங்கியதுமே அவனுடனே சேர்ந்து வந்திருந்த நிகிலன், “அது.. ண்ணா..” என்று வார்த்தை வராமல் தடுமாறவும், “எனக்கு நேரமில்லை நிக்கி.. சட்டுன்னு சொல்லு, ஏதாவது பிரச்சனையா..?” என்றான் நிமலன்.


“பிர.. பிரச்சனை எல்லாம் இல்லை, ஆனா ஆமா..” என்று நிகிலன் அப்போதும் தடுமாற.. “கமான் நிக்கி.. என்கிட்டே உனக்கு ஏன் இவ்வளவு தயக்கம்..?” என்றான் தங்களையே பார்த்துக் கொண்டிருந்த கோமகனை ஒருமுறை திரும்பி பார்த்தவாறே அவசரமான குரலில் நிமிலன்.


அதில் நேரமாவதை உணர்ந்த நிகிலனும் “அது.. அதில்லை ண்ணா.. இந்.. இந்தக் கல்யாணம் தேவை தானா..?” எனவும், சட்டென உண்டான கோபத்தோடு விழிகளைச் சுருக்கி “இதுக்கு என்ன அர்த்தம்..?” என்றான் நிமலன்.


நிமலனின் முகத்திலும் குரலிலும் உண்டான மாற்றத்தில் பதறியவன், “அதில்லை ண்ணா.. இப்படி இரண்டு பேருக்குமே பிடிக்காம ஒரு கல்யாணம் எதுக்குன்னு தான்..” என்று தயங்கி இழுத்தான் நிகிலன்.


இதில் அவனின் விழிகளை ஊடுருவியவாறே, “இதுக்காக மட்டும் தான் கேட்கறியா..? இல்லை வேற ஏதாவது காரணம் இருக்கா..?” என்றான் நிமலன்.


“ஹாங்..” என்று தடுமாறிய நிகிலன், “இல்லை, இதுக்காக மட்டும் தான் கேட்டேன்.. இது விளையாட்டு இல்லை, உங்க வாழ்க்கையும் இதில் இருக்கே..?” என்றதும், ஒரு மாதிரி இதழை யோசிப்பது போல் வளைத்தவன், “என்னைப் பற்றிக் கவலைப்படற அளவுக்கு என் குட்டி தம்பி வளர்ந்து நிற்கறதை நினைச்சா சந்தோஷமா தான் இருக்கு.. ஆனா நீ ஒண்ணை மறந்துட்டே, எனக்கு வேற எதையும் விட, அரசியலும் அதில் என் எதிர்காலமும் ரொம்ப முக்கியம்.. அதோட என்னைப் பார்த்துக்க எனக்குத் தெரியும், நீ கவலைப்படாதே..” என்று தம்பியின் தோளில் லேசாகத் தட்டிக் கொடுத்தான் நிமலன்.


இதற்கு மேல் எப்படி இதைப் பற்றிப் பேசுவது என்ற குழப்பத்தில் நிகிலன் நின்றிருக்க.. அவ்வளவு தான் பேசி முடித்தாகிற்று என்பது போல் நிமலன் அங்கிருந்து நகரத் துவங்க.. “தமயா.. ஆனா தமயா பாவம் ண்ணா..” என்றிருந்தான் நிமலன்.


அதில் தன் நடையை நிறுத்தி திரும்பி பார்த்தவன், “தமயா இல்லை.. அண்ணி, இனி அப்படிக் கூப்பிட்டு பழகு.. உங்களுக்குள்ளே முன்னே என்ன வேணும்னாலும் இருந்துட்டு போகட்டும்.. அதெல்லாம் இத்தனை வருஷம் போலவே முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும்.. இனி அவ ஜெயதேவ் பொண்ணு இல்லை.. உன் அண்ணி.. ஞாபகம் இருக்கட்டும்.. நிமலன் மனைவி பாவம்னு சொல்ற அளவுக்கு நான் இல்லைன்னு நினைக்கறேன்..” என்றான் அழுத்தமான குரலில் தீர்க்கமான பார்வையுடன் நிமலன்.


நிமலன் கொஞ்சமும் குரலை உயர்த்தவில்லை. நேர் பார்வையாக நிகிலனின் விழிகளைப் பார்த்து அவன் பேசிய விதத்திலும் அந்தக் குரலிலும் அடுத்து பேச முடியாமல் நிகிலன் தலைக் குனிய.. நேரமாகுது வா..” என்று விட்டுச் சென்றான் நிமலன்.


இங்கு வந்ததை விடவும் மனமும் முகமும் சோர்ந்து போக நின்றிருந்த நிகிலன், மெல்ல தளர்ந்த நடையோடு மண மேடையை நோக்கி வந்தான். சூர்யகலா இங்கு வந்ததுமே அவரை முன் வரிசையில் அமர வைத்திருந்தான் நிமலன்.


முதலில் இங்கு உட்காரவே ,மாட்டேன் எனச் சண்டித்தனம் செய்தவர், நிமலனின் முறைப்பில் முகத்தை தூக்கி வைத்து கொண்டு அமர்ந்து கொள்ள.. இப்போது அவருக்கு அருகில் வந்து அமர்ந்தான் நிகிலன். அவ்வளவு நேரம் இவர்களையே கவனித்துக் கொண்டிருந்த சூர்யகலா, “என்ன சொல்றான் உங்க அண்ணன்..?” என்றார்.


“ஹாங்.. எதைப் பற்றிக் கேட்கறீங்க பாட்டி..?” என்று நிகிலன் தடுமாற.. “இப்போ இரண்டு பேரும் போய் ஏதோ ரகசியம் பேசினீங்களே என்னவாம்..? மணமேடை வரை வந்து இந்தக் கல்யாணத்தை மறுபடியும் நிறுத்தி அந்த உருப்படாதவனைக் குடும்பத்தோட சேர்த்து அசிங்கப்படுத்த ஏதாவது திட்டம் வெச்சு இருக்கானா என் பேரன்..?” என்று ஆர்வமாகக் கேட்டவரை சிறு திடுக்கிடலோடு திரும்பி பார்த்தான் நிகிலன்.


அவனே இரு வேறு மனநிலையில் தவித்துக் கொண்டிருக்க.. இதில் இவர் வேறு இப்படிப் பேசுவது எரிச்சலை தந்தது. ஆனால் எப்போதுமே அவரிடம் மரியாதையாக மட்டுமே பேசி பழக்கப்பட்டவன் என்பதால் அமைதியாகவே நிகிலன் இருக்க.. “என்ன நிகிலா எதுவுமே சொல்லலாம இருக்கே..? எதையாவது சொல்லி என் எரியற வயிற்றில் பாலை ஊற்றேன்..” என்றார் தவிப்பான குரலில் சூர்யகலா.


அதில் அவரின் பக்கம் திரும்பியவன், சூர்யகலாவின் மனநிலை புரிந்தது போல் அவரின் கையைக் கோர்த்துக் கொள்ள.. அவனின் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டவரின் பதட்டம் அவர் கை வேர்த்து இருந்ததிலே தெரிந்தது.


அதைக் கண்டு கவலையாகத் தன் பாட்டியை பார்த்தான் நிகிலன். “ஆமாமா.. என் பேரன் அப்படி தான் ஏதாவது செய்வான்.. இல்லைனா இப்படி ஏன் பிடிவாதமா நிற்க போறான், காலையில் வரை அந்தக் குடும்பத்தை அவ்வளவு வெறுத்தவன் இப்படி ஒரு முடிவுக்கு வர வாய்ப்பே இல்லை.. என் நிமலன் என்னைக்கும் என் பேச்சை தட்டவே மாட்டான், நம்ம குடும்பத்துக்குத் தலைக்குனிவை கொடுக்க மாட்டான்..” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு அமர்ந்திருந்தார் சூர்யகலா.


இவரின் எதிர்பார்ப்பை கண்ட நிகிலனுக்கு நிஜமாகவே பயமாக இருந்தது. அது பொய்த்து போகும் போது பாட்டியின் எதிர்வினை எப்படி இருக்குமோ என்ற கவலையும் அவரின் கோபத்தின் அளவை அறிந்ததில் உன்டான பதட்டமுமாக அமர்ந்திருந்தான் நிகிலன்.


அதற்குள் மணமேடையில் நிமிலன் அமர வைக்கபட்டிருக்க.. அவனின் பார்வை மொத்தமும் நிகிலன் மேலேயே இருந்தது. அந்த முகத்தில் வந்து போன அத்தனை உணர்வுகளையும் கவனித்து உள்வாங்கிக் கொண்டிருந்தான் நிமலன்.


அதே நேரம் பார்வையை உயர்த்திய நிகிலன், நிமலன் தன்னையே பார்த்துக் கொண்ருப்பதைக் கண்டு முகத்தை இயல்பாக இருப்பது போல் வைத்துக் கொள்ள முயல.. அதற்குள் விழியசைவிலேயே ‘என்ன..?’ என்றிருந்தான் நிமலன்.


அதற்கு நொடியும் தாமதிக்காது எப்போதும் தன்னால் சமாளிக்க முடியாத விஷயமென்றால் நிமலனின் கவனத்துக்குக் கொண்டு சென்றே பழகி இருந்த நிகிலன் இப்போதும் பார்வையாலேயே சூர்யகலாவை காண்பித்தான்.


அதில் கூர்மையாகப் பாட்டியை பார்த்த நிமலன், அவர் எதையோ முணுமுணுத்துக் கொண்டு இருப்பதைக் கண்டு தம்பியின் பக்கம் திரும்பி ‘நான் பார்த்துக்கறேன்..!’ என்பது போல் விழியசைத்தான். இப்போதும் பதட்டம் முழுதும் குறைந்து விடவில்லை என்றாலும் ஒரளவு நிம்மதியானான் நிகிலன்.


அதற்குள் தமயாவை மேடைக்கு அழைத்து வந்த வளர்மதி, நிமலனுக்கு அருகில் அமர வைத்திருக்க.. இதைக் கண் கொண்டு பார்க்க முடியாமல் சட்டென ஆத்திரத்தோடு எழுந்து விட்டிருந்தார் சூர்யகலா.


இதில் அங்குச் சிறு சலசலப்பு உண்டாக.. பதட்டத்தோடு எழுந்து நின்றிருந்த நிகிலன் அவரைச் சமாதானம் செய்ய முயல.. “சூர்யா உட்கார் ம்மா..” என்றிருந்தார் அவருக்கு மற்றொரு பக்கம் அமர்ந்திருந்த கோமகன், அதில் “இல்லை ண்ணா..” என்று துயரத்தோடு துவங்கியவரை, பார்வையாலேயே எதுவும் பேசாதே என அமைதிப்படுத்தினார் கோமகன்.


அதில் சூர்யகலா விருப்பமில்லா வெறுப்பான முகப்பாவனையோடு அமர்ந்து கொள்ள.. ஜெயதேவ் தவிப்பும் கலக்கமுமாகக் கோமகனை பார்த்தார்.


‘இப்படி ஒரு கோபமும் வெறுப்பும் இருக்கும் இடத்தில் என் மகளின் வாழ்வு எப்படி இருக்குமோ..?’ என்ற கேள்வி அதில் தேங்கி நிற்க.. கவலைப்படாதே என்பது போல் விழியசைத்தவர், நடக்க வேண்டியதை பார் என்பது போல் கையசைத்தார்.


அப்போதும் முகம் தெளியாமலே நின்றிருந்தவர், புரோகிதர் சடங்குகளைத் துவங்குவதைக் கண்டு மேலே சென்றார். அடுத்தச் சில நிமிடங்களில் மாங்கல்யம் இருந்த தட்டு அங்கிருந்தவர்களின் ஆசிர்வாதத்திற்காகக் கொண்டு வரப்பட.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் அதைத் தொட்டு வணங்கினர்.


கோமகன் இருவரின் வாழ்வும் சிறக்க வேண்டுமென மனதார நினைக்க.. நிகிலன் அதைத் தொடும் போது அவனையும் அறியாமல் கவலையும் கலக்கமுமாக நிமிர்ந்து தமயாவை பார்த்தான். ஆனால் அவளோ மேடையில் சென்று அமர்ந்ததில் இருந்து தலையை உயர்த்தவும் இல்லை, யாரையும் பார்க்கவும் இல்லை.


அடுத்து தன் முன் நீட்டப்பட்ட தட்டை கண்ட சூர்யகலா அதில் இருந்த மாங்கல்யத்தை வேதனையோடு பார்த்து விட்டுக் கெஞ்சுதலாக நிமிர்ந்து நிமலனை பார்த்தார்.


அதுவரையும் அவர்கள் இருவரையே பார்த்திருந்த நிமலன், தன் பாட்டியை பார்வையாலேயே சமாதானம் செய்தான். ஆனால் அவருக்கு அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.


திருமணமே வேண்டாமென்ற பிடிவாதத்தோடு இருந்தவன் மனம் மாறி வந்ததற்காக மகிழ்வதா..? இல்லை இப்படி ஒரு குடும்பத்தில் இருந்து தன் வீட்டு மருமகளை அதுவும் மூத்த மருமகளாக அழைத்து வருவதற்காக வருந்துவதா..? என்ற தவிப்பு மனமெங்கும் நிறைந்து இருக்க.. அதைத் தொட கூட முடியாமல் கைகள் நடுங்க கரங்களை அருகில் கொண்டு செல்வதும் பின் இழுத்துக் கொள்வதுமாகத் தடுமாறிக் கொண்டிருந்தார் சூர்யகலா.


அவரைப் பார்த்திருந்த நிமலனுக்கும் அவரின் இந்தத் தவிப்புச் சரியாகப் புரிய.. இப்படி ஒரு நிலையில் அவரைக் கொண்டு வந்து நிறுத்திய தன்னையே அந்த நொடி வெறுத்தான் நிமலன்.


அதில் விழிகள் சிவக்க.. பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் நிமலன். தன்னால் அதை இயல்பாகத் தொட்டு ஆசிர்வதிக்க முடியாமல் போராடி தோற்ற சூர்யகலா வருத்தத்தோடு நிமிர்ந்து நிமலனை பார்க்க.. அவன் அமர்ந்திருந்த விதமே இதை அவனுமே விருப்பமே இல்லாமல் செய்வதை உணர்த்தியது.


இதில் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருக்க.. அங்கு ஒரு உணர்வு போராட்டம் சத்தமில்லாமல் நடந்து கொண்டிருந்தது. சில நொடிகள் இப்படியே கனமாகக் கழிய.. எப்போதும் தன்னால் முடிவெடுக்க முடியாமல் தடுமாறும் போதெல்லாம் மானசீகமாகத் தன் கணவனிடம் முடிவெடுக்கும் உரிமையைக் கொடுத்து விடுவார் சூர்யகலா.


இப்போதும் அதே போல் விழிமூடி மனதார அவரை நினைத்தவர், ‘எனக்கு இதில் உடன்பாடில்லை.. முடிவை உங்க கையில் கொடுக்கறேன்.. நீங்களே சொல்லுங்க..” என்று விட்டு விழிகளைத் திறந்தவர், அங்கிருந்த அலங்கார தோரணத்தில் இருந்த பூ உதிர்ந்து வந்து மாங்கல்யத்தின் மேல் விழுவதைக் கண்டு திகைத்தார்.


அதன் பின் நொடியும் யோசிக்காமல் ‘இது தான் உங்க முடிவுனா எனக்கும் சரி..’ என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டு அதைத் தொட்டு ஆசிர்வதித்தார் சூர்யகலா.


அதுவரை அவர் முன் கலக்கமாகத் தட்டை நீட்டிக் கொண்டிருந்த வளர்மதி லேசான நிம்மதியோடு அங்கிருந்து நகர்ந்தார். அதே நேரம் கோமகனை நெருங்கி இருந்த ஜெயதேவ் அவரை மேடைக்கு வருமாறு அழைக்க.. நிமலனின் விருப்பமும் அதுவே என்பதால் மறுக்காமல் மேலேறி சென்றார் கோமகன்.


ஆனால் சூர்யகலாவை விட்டு செல்ல மனமில்லாமல் அப்போதும் அவர் அழைக்க.. “இருக்கட்டும் ண்ணா.. நான் இங்கேயே இருக்கேன்..” என்று வெறுமையான குரலில் கூறினார் சூர்யகலா.


அதில் வேறு எதுவும் பேசி சூழ்நிலையைக் கடினமாக்க விரும்பாமல் கோமகன் மேலேறி சென்று விட.. இறுக்கமும் இழுத்து பிடித்த பொறுமைமையுமாக அமர்ந்திருந்தார் சூர்யகலா.


அடுத்து மந்திரங்கள் ஒலிக்க, ப்ரோகிதர் எடுத்துக் கொடுத்த மாங்கல்யத்தைக கோமகன் வாங்கி நிமலனிடம் கொடுக்க.. இறுக்கத்தோடு அதை வாங்கியவன் ஒரு தயக்கத்தோடே திரும்பி தன்னருகில் அமர்ந்திருந்தவளின் கழுத்தில் அணிவித்து அவளைத் தன் வாழ்வில் சரி பாதியாக்கிக் கொண்டான் நிமலன்.


இத்தனைக்குப் பிறகும் கூட தமயா தன் பார்வையை உயர்த்தவே இல்லை. ஆனால் அங்கிருந்தவர்கள் சொல்லும் அத்தனையையும் ஒரு பொம்மை போல் செய்து கொண்டிருந்தாள் தமயா. அவளின் இந்த நிலை வளர்மதியை கலங்க செய்தது.


தன் மகளைப் பற்றி நன்கு அறிந்திருந்தவர் என்பதால் ‘இந்தக் கோபத்தையும் வெறுப்பையும் நிமலனிடம் காண்பித்து வாழ்க்கையைப் பிரச்சனையாக்கி கொள்வாளோ..?’ என்ற பதட்டம் அவரைத் தவிக்கச் செய்தது.


அதே அளவு தவிப்போடு தான் மகளையே பார்த்தவாறு ஜெயதேவும் நின்றிருந்தார். அப்போது அவர் கடுமையாகப் பேசிய பின் அவர் முகத்தை அவள் நிமிர்ந்தும் பார்க்கவில்லை. ஒருமுறை பார்த்து விட மாட்டாளா..? என்ற ஏக்கமும், கிடைத்திருக்கும் வாழ்க்கையை அவள் கெடுத்துக் கொள்ளக் கூடாதே..! என்ற கலக்கமுமாகப் பார்த்திருந்தார் ஜெயதேவ்.


அதற்குள் அவளோடு சேர்ந்து கோமகனின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி இருந்த நிமலன், தமயாவின் கையைப் பற்றிக் கிட்டத்தட்ட இழுத்துக் கொண்டு சூர்யகலாவின் முன் சென்று நின்றான். அதில் அவன் பிடியிலும் இழுப்பிலும் உண்டான வேகத்தில் முகம் சுருக்கியவள், அப்போதும் யாரையும் எதற்கும் நிமிர்ந்து பார்க்கவே இல்லை.


சூர்யகலாவின் முன் வந்து நின்றவன், “உங்க மூத்த பேரன் நீங்க ரொம்ப நாள் ஆசைப்பட்டது போலவே கல்யாணம் செஞ்சுட்டு வந்து நிற்கறேன்.. ஆசிர்வாதம் செய்ங்க பாட்டி..” என்று அவரின் அனுமதியை எல்லாம் எதிர்பார்க்காமல் சட்டெனக் காலை தொட்டு வணங்கி இருந்தான்.


இதுவே அவன் அவரின் அனுமதி கேட்டு நின்றிருந்தால் எப்படியோ..? அவன் காலை தொட்ட பின் ஆசிர்வதிக்க முடியாது என்று சொல்ல முடியாமல் இது தன் கணவனின் சம்மதத்தோடு நடந்த திருமணம் என்ற ஒன்றை மட்டுமே மனதில் நிறுத்தி நிமலனின் தலையை மட்டும் தொட்டார் சூர்யகலா.


இது ஜெயதேவ் மற்றும் வளர்மதிக்கு ஏதோ போல் இருக்க.. ‘தன் மகளின் வாழ்க்கை இப்படியா தொடங்க வேண்டும் என்பது போல் வேதனையோடு இதைப் பார்த்திருந்தனர்.


கோமகனுக்கும் சூர்யகலாவின் இந்தச் செயல் வருத்தத்தைக் கொடுத்தாலும் அவரின் ஜெயதேவ் மேலான கோபத்தை அறிந்திருந்தவர் என்பதால் வேறு எந்தப் பிரச்சனையும் செய்யாமல் அவர் இருப்பதே போதும் என்பது போலான மனநிலையில் அமைதியாகவே இருந்தார்.


ஆனால் நிகிலனால் அப்படி அமைதியாக இருக்க முடியவில்லை. தன் முன் நிற்பவளை வருத்தத்தோடு அவன் பார்த்திருக்க.. அதே நேரம் நிமலனின் பார்வை கூர்மையாக நிகிலனின் மீது பதிந்திருந்தது.


அதே நேரம் தன் பார்வையைத் திருப்பிய நிகிலன் தன் அண்ணனை லேசாகப் புன்னகைத்தவாறே அணைத்து “வாழ்த்துக்கள் ண்ணா..” என்றான். அதற்கு விழியை மட்டும் ஒப்புதலாக அசைத்தான் நிமலன். அடுத்து தமயாவின் பக்கம் திரும்பி “வாழ்த்துக்கள்..” என்றான் நிகிலன். அப்போதும் அவள் நிமிர்ந்தும் பார்க்காமல், பதிலுக்குத் தலையை மட்டும் அசைத்தாள்.


அதில் ஒரு பெருமூச்சை வெளியேற்றிய நிகிலன் சற்று விலகி நின்று கொள்ள.. “ஹ்ம்ம், அடுத்து ஜெயதேவ்கிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கோங்க..” என்றார் கோமகன்.


இது தன் காதிலேயே விழாதது போல் இறுக்கமாக எங்கோ பார்த்தப்படி நிமலன் நின்று விட, தமயா மட்டும் அவர்களின் அருகில் செல்ல.. திருமணம் முடிந்து முதல்முறை ஆசிர்வதிக்கும் போது ஜோடியாக இல்லாமல் தனியே பெண்ணை ஆசிர்வதிக்க மனம் கொஞ்சம் நெருடலாக இருக்க.. “இருக்கட்டும் ம்மா..” என்று அவள் குனியும் முன்பே தடுத்து விட்டிருந்த ஜெயதேவ், திரும்பி கிருபாவை பார்த்து மேடையில் இருக்கும் அட்சதை தட்டை கொண்டு வர சொல்ல.. அவனும் உடனே அதைச் செய்திருந்தான்.


அதைக் கையில் எடுத்துக் கொண்ட இருவரும், தன் பக்கத்தில் நின்றிறுந்த மகளுக்கும் சற்று தள்ளி நின்றிருந்த மருமகனுக்கும் சேர்த்து ஒரே நேரத்தில் அதைத் தூவி மனமார அவர்கள் வாழ்க்கை சிறக்க வேண்டுமென ஆசிர்வதித்தார்கள்.


இதையெல்லாம் கண்டு கோமகனுக்குக் கொஞ்சம் மனம் நெருடினாலும் இப்போது நிமலனிடம் இதைப் பற்றி எதையும் பேசி இருக்கும் நிலையை மேலும் கெடுத்துக் கொள்ள விரும்பாமல் அமைதியாகவே இருந்தார். அவருக்குத் தான் நன்றாகத் தெரியுமே, அவன் முறுக்கிக் கொண்டால் மீண்டும் அவனை மலை இறக்குவது அத்தனை எளிதல்ல என்று.


அதில் “அடுத்து என்ன நிமலா..? பத்திரிகைக்காரங்க எல்லாம் வெளியே காத்திருக்காங்க, எப்படியோ கல்யாணம் நின்னுப் போன விஷயம் கசிஞ்சுடுச்சு.. அப்போவே முட்டி மோதி அத்தனை கேள்வி கேட்டு உள்ளே வர பார்த்தாங்க.. ஆனா காட்ஸ் விடலை.. இப்போ என்ன அவங்களைச் சந்திச்சு பேசிட்டு கிளம்புவோமா..? இல்லை ஈவ்னிங் ஒரு பார்மல் இண்டர்வ்யூ போலக் கூப்பிட்டு பேசிக்கலாமா..? ஈவ்னிங் பேசிக்கறதா இருந்தா, இப்போ உங்க திருமணப் படத்தை மட்டும் கொடுத்து மற்றதை மாலையில் பேசலாம்னு நான் சொல்லிடறேன்.. இல்லைனா தேவையில்லாத பேச்சு எல்லாம் எழும்..” என இயல்பான குரலிலேயே நிமலனை பார்த்துக் கேட்டிருந்தார் கோமகன்.


இதைக் கேட்டு முகத்தை வெறுப்பாகச் சுருக்கியவன், “இல்லை தலைவரே.. இன்னொருமுறை இந்த வேஷமெல்லாம் போட முடியாது.. இப்போவே இதையெல்லாம் முடிச்சுடுங்க..” என்றான் நிமலன்.


அவனின் வார்த்தை இரு வேறு வகையில் கோமகனையும் ஜெயதேவ்வையும் அதிர செய்திருந்தது. ‘எதை வேஷம் என்கிறான்..? எதை முடிக்கச் சொல்கிறான்..?’ என்பது போல் இருவரும் அவன் முகம் பார்க்க.. “அப்படியெல்லாம் பேசக் கூடாது கண்ணா.. விரும்பியோ விரும்பாமலோ இந்தக் கல்யாணம் நடந்தாச்சு.. என்ன காரணமா வேணும்னாலும் இருக்கட்டுமே நீயும் சம்மதிச்சு தான் இந்தக் கல்யாணம் நடந்து இருக்கு.. அதுக்கான மரியாதையை நீ கொடுத்து தான் ஆகணும்..” என்றார் நிமலனின் முகத்தை பிடித்து அன்போடு மாதவி.


இதற்குப் பதிலேதும் சொல்லாமல் அவன் அமைதியாகவே இருக்க.. ‘இப்படி ஒரு கல்யாணம் அவசியம் தானா..?’ என கிருபாவும் நிகிலனும் தன் உடன் பிறந்தவர்களின் நிலையை எண்ணி கவலையோடு நின்றிருந்தனர்.


“நிமலன் சொல்றதும் சரி தான்.. தனியா ஒரு இண்டர்வ்யூ வெச்சா தேவையில்லாத ஆயிரத்து எட்டுக் கேள்வி வரும்.. இப்போவே இதைச் சிம்பிளா முடிச்சுக்கலாம்..” என்றார் கோமகன்.


அடுத்து அவரின் உத்தரவின்படி பத்திரிக்கையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு வரிசையாக அமர வைக்கப்பட.. அவர்களுக்கு முன் சிறு மேஜையும் அதில் அத்தனை சேனல்களின் மைக்குகளும் அணிவகுத்து இருக்க.. நடுநாயகமாக கோமகனும், அவருக்கு வலப்புறம் நிமலனும் அவனுக்கு அடுத்து தமயாவும் அமர்ந்திருந்தனர்.


அதே போல் கோமகனுக்கு இடப்புறம் ஜெயதேவ் அமர, அவருக்கு அடுத்து கிருபா உட்கார்ந்தான். ஜெயதேவ் மகளுக்கு இன்று திருமணம் என முன்பே தெரிந்திருந்தாலும் பலத்த பாதுகாப்பின் காரணமாக உள்ளே பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி மறுக்கபட்டிருந்தது.


திருமணத்திற்கு என்று மிக நெருக்கமானவர்களே அழைக்கப்பட்டிருந்தார்கள், மற்றவர்களுக்கு எல்லாம் இன்று மாலை நடக்கவிருந்த வரவேற்புக்கே அழைப்புக் கொடுக்கபட்டிருந்தது.


அதில் திருமணப் புகைப்படங்கள் ஏதாவது கிடைக்காதா..? என்று முட்டி மோதிக் கொண்டிருந்தவர்களுக்கு மணமகன் வீட்டார் அழுகையும் கவலையுமாக வெளியேறியது லேசாகத் தெரிய வர.. ‘என்ன நடந்தது..? ஏன்..?’ எனத் தெரிந்து கொள்ள அவர்கள் முயன்றதெல்லாம் வீணானது.


ஏனெனில் திறமையான பாதுகாவலர்கள் இதற்கென வரவழைப்பட்டு மண்டபத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு வளையம் போல் நின்றிருந்தனர். அவர்களைக் கடந்து எட்டி பார்க்கவோ, எதையும் தெரிந்துக் கொள்ளவோ இவர்களால் முடியவில்லை.


மண்டபத்திலிருந்து சில அடி தொலைவிலேயே இவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர். மணமகன் வீட்டினர் கிளம்பி செல்வதையே கார் வெளியே வந்த பின் தான் பார்த்திருந்தனர்.


என்னவெனக் கேட்க கூட அவகாசமில்லாமல் கார் வேகமெடுத்து சென்று விட்டிருந்தது. இதில் குழம்பி போய் அவர்கள் நிற்கும் போதே, ஜெயதேவ் காரும் வெளியே வர.. அவரைப் பின் தொடர்ந்து செல்ல முயன்ற சிலரும் ஒரு திருப்பத்தில் பாதுகாவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.


இதில் இங்கு என்ன தான் நடக்கிறது..? கல்யாணம் நடக்குமா..? இல்லையா..? என்று எதுவும் தெரியாமல் குழம்பி எதையாவது தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்ற நிலையில் இருந்தவர்கள், யாரின் மூலமாவது ஏதாவது தகவல் கிடைக்குமா என்று பார்த்துக் கொண்டிருக்க.. மீண்டும் ஜெயதேவ் கார் உள்ளே வந்தது.


அடுத்து கோமகனின் காரும் வர, அதற்கடுத்த சில நிமிடங்களில் நிமலனின் கார் உள்ளே நுழைந்தது. இந்தக் காரை எல்லாம் அடையாளம் தெரிந்த அவர்களுக்கு உள்ளே யார் இருப்பது எனச் சரியாகக் கணிக்க முடியவில்லை.


இதில் பிரச்சனை எதுவுமில்லை போலும் என அவர்கள் அமைதியாக.. ‘ஜெயதேவ் பெண்ணின் திருமணம் நின்று விட்டது.. மணமகன் ஓடவிட்டான்.. காரணம் என்ன..? மணமகளைப் பற்றிய உண்மை எதுவும் அவருக்குத் தெரிய வந்ததா..? எனக் கண்டுபிடியுங்கள்’ என்று ஒரு குறுஞ்செய்தி முக்கியமான பத்திரிக்கையாளர்களுக்கு அறிமுகம் இல்லா எண்ணில் இருந்து வந்திருந்தது.


பெரும்பாலும் பிரபலங்களைப் பற்றிய தகவல்கள் எல்லாம் இப்படித் தான் வரும் என்பதால் அவர்களும் அதை பற்றித் தெரிந்து கொள்ள முயல.. அதற்குள் விடிவதற்கு முன்பே கோமகன் வீட்டில் ஒரு ரகசிய பேச்சு வார்த்தை நடந்தது சம்பந்தமான தகவல்களும் அவர்களுக்கு வந்து சேர்ந்திருந்தது.


அதற்கேற்றார் போல் திருமணம் முடிந்து புது மணத் தம்பதிகளாக நிமலனும் தமயந்தியும் கண் முன் அம்ர்ந்திருப்பதைக் கண்டு குழப்பமும் திகைப்புமாகப் பத்திரிக்கையாளர்கள் பார்த்திருந்தனர்.


ஏனெனில் ஜென்ம பகை என எண்ணி இருந்த இரு வீட்டினருக்கிடையே இப்படி ஒரு திருமணம். அதுவும் திடிரென மணமகனை மாற்றி, ஏன் எனப் புரியாமல் முதலில் திகைத்தவர்கள், பின் முண்டியடித்துக் கொண்டு கேள்வி கேட்க முயல.. “அமைதி.. அமைதி.. நானே உங்க எல்லாக் கேள்விக்கும் பதில் சொல்லிடறேன்..” என்று இரு கைகளையும் தூக்கி அனைவரையும் அமைதியாக இருக்குமாறு கூறினார் கோமகன்.


அதில் அங்கு அமைதி நிலவ.. முன்பே யோசித்து வைத்திருந்தது போல் கோர்வையாக கார்த்திக் கடிதம் எழுதி வைத்து விட்டு வெளியேறியதையும் அதன் பின் பெண்ணின் திருமணம் நிற்க வேண்டாமென எண்ணி ஜெயதேவ் தன்னிடம் நிமலனை பற்றிப் பேசியதையும், அடுத்து இருவரும் சேர்ந்து நிமலனை வரவழைத்து பேசியதையும் எல்லாம் தெளிவாக விளக்கியவர், “இதோ இப்போ உங்க முன்னே புது மணத் தம்பதிகள் இருக்காங்க.. அவங்களை மனமார ஆசிர்வதிங்க..” என்றார்.


“இல்லை சார்.. மாப்பிள்ளை ஏன் திடீர்னு ஓடணும்..? பொண்ணைப் பற்றி ஏதாவது தப்பா கேள்வி பட்டாரா..?” என்று எங்கும் என்ன வம்பு கிடைக்கும் என்றே அலையும் ஒருவர் கேட்டிருக்க.. கோமகன் அதற்குப் பதில் சொல்வதற்குள் “பார் யுவர் கைண்ட் இன்பர்மேஷன், மாப்பிள்ளை ஓடலை.. இதோ இங்கே தான் உட்கார்ந்து இருக்கேன்..’ என்றான் நிமலன்.


“அதில்லை சார்.. முதலில் முடிவு செஞ்சு இருந்த மாப்பிள்ளை..” என்று அவர் கூற, “அப்போ திருமணம் செய்ய இருந்தவர்னு கேட்டு பழகுங்க..” என்றான் நிமலன்.


“சரி, அவர் ஏன் ஓடினார்..?” என்று அவரும் வார்த்தையை மாற்றிக் கேட்க.. அந்த நிலையிலும் அவர்களை நிமலன் கையாண்ட விதத்தைக் கண்டு நிம்மதியானார் ஜெயதேவ்.


“யாரோ அவரை மிரட்டி இருக்காங்க.. அவர் எழுதி வைத்த கடிதத்தின் பிரதி உங்க பார்வைக்குக் கொடுக்கச் சொல்றேன்..” எனத் தன் கையில் இருந்த கடிதத்ததைக் காண்பித்துப் பேசினார் கோமகன்.


“சரிங்க ஐயா.. அவர் ஓடிட்டார், கல்யாணம் நிற்க கூடாது.. ஆனா அது ஏன் நிமலன் நெடுஞ்செழியன்..?” என்றவருக்கு “ஏன் கூடாது..?” என்று கேட்டிருந்தார் கோமகன். “அதில்லை அவங்களுக்குள்ளே தான் பிரச்சனை இருக்கே..?” என்று நான்கைந்து குரல்கள் ஒன்றாக எழுந்தது.


“அப்படின்னு யாரு நான் சொன்னேனா..? இல்லை அவர் சொன்னாரா..? நீங்களா தானே எழுதினீங்க..?” என்றான் நிமலன். “ஆனா அதை இல்லைன்னும் நீங்க சொல்லலையே..?” என்று ஒருவர் தெளிவாகக் கேட்டிருக்க.. “நீங்க உங்க இஷ்டத்துக்குக் கண்டதையும் எழுதுவீங்க.. அதுக்கெல்லாம் உட்கார்ந்து மறுப்புச் சொல்றது தான் என் வேலையா..? அப்படி நான் மறுப்பு சொல்ல தொடங்கினா..! தினம் நூறு விளக்கம் கொடுக்கணும் நான்..” என்றான் நிமலன்.


அடுத்து கேள்வியே கேட்க முடியாதது போல் ஒவ்வொன்றையும் அவன் தெளிவாக அடிக்க.. அங்குப் பெரிதாகக் கேள்விகள் இல்லாமல் போனது.


ஆனால் அப்போதும் வம்புக்கிழுப்பது போல் “பொண்ணு ஏன் சார் அழுது இருக்காங்க..? இந்தக் கல்யாணத்திலோ இல்லை இவரைக் கல்யாணம் செஞ்சுக்கறதிலோ இவங்களுக்குச் சம்மதம் இல்லையா..?” என்று தமயாவின் அழுது சிவந்து இருந்த விழிகளைக் கண்டு ஒருவர் வேண்டுமென்ற கேட்டிருந்தார்.


அவர் எதிர்கட்சிக்கு ஆதரவான பத்திரக்கையாளர், அதனால் வேண்டுமென்றே இப்படி அவர் பேசுவது புரிய.. “உங்க வீட்டு பொண்ணுக்குக் கல்யாணம் இப்படித் திடீர்னு நின்னுப் போனா என்ன செய்வாங்க..? அழாம சிரிப்பாங்களா..?” என்று எரிச்சலோடு கேட்டவாறே எழுந்து நின்றான் நிமலன்.


அதில் அங்கு ஒரு சலசலப்பு எழ.. “இதுக்குத் தான் நீங்க எல்லாம் என்ன நினைச்சா எனக்கு என்னன்னு நாங்க எங்கே வேலையைப் பார்த்துட்டு இருந்து இருக்கணும்.. மரியாதையா உங்களைக் கூப்பிட்டு என்ன நடந்ததுன்னு சொல்ல நினைச்சோம் இல்லை, அது எங்க தப்பு தான்.. போங்க, போய் உங்களுக்குத் தோணுறதை எழுதிக்கோங்க..” என்றான் எரிச்சலோடு நிமலன்.


அதன் பின் மற்றவர்கள் என்ன சமாதானம் செய்தும் அவன் அங்கு அமராமல் தமயாவையும் சேர்த்து இழுத்துக் கொண்டு சென்று விட.. அவர்களுக்கு வேண்டிய தகவல்களை எல்லாம் செய்தி தொடர்பாளர் மூலம் வந்து சேரும் என்று விட்டு கோமகனும் எழுந்து கொண்டார்.


அடுத்து அவர்களை எல்லாம் வெளியே அனுப்பி விட்டு பாதுகாவலர்கள் வாயிலிலேயே நின்று கொள்ள.. இதற்கு மேல் இங்கு என்ன வேலை என்பது போல் கிளம்பத் தயாரானான் நிமலன்.


அதுவரை எல்லாம் சரியாக நடந்து முடிய வேண்டுமே..! செய்தியாளர்களைச் சமாளிக்க வேண்டுமே..! என்ற பதட்டத்திலேயே இருந்த ஜெயதேவ், இப்போது மகளைப் பிரிவதை எண்ணி கலங்கினார்.


அதே நேரம் தமயாவை நெருங்கி இருந்த வளர்மதி, மகளிடம் அன்பாகப் பேசி புரிய வைக்க முயல.. அவளோ அதற்கு வாய்ப்பே தரவில்லை. வளர்மதிக்கு மட்டுமல்ல.. ஜெயதேவ் மற்றும் கிருபாவுக்குமே அப்படித் தான் செய்தாள் தமயா.


அவர்களை நிமிர்ந்தும் பார்க்காமல் அவர்கள் சொல்ல வருவதைக் கேட்காமல் ஒதுங்கியே நின்றவள், நிமலன் அழைக்கவும், அவனோடு சென்று காரில் ஏற.. ஒருமுறை தங்களைத் திரும்பி பார்ப்பாளா..? என்று ஏக்கத்தோடு பார்த்தவாறே வாயிலில் நின்றிருந்தார் ஜெயதேவ்.


எங்கே அமைதியாகப் புரிய வைக்க முயன்றால் அவளின் அடம் அதிகமாகுமோ என்று பயந்தே கடுமையாகப் பேசி இருந்த ஜெயதேவ், இப்போது மகள் தன் முகத்தைக் கூடப் பார்க்காமல் பிரிந்து செல்வதைக் கண்டு, மனம் கனக்க.. விழிகள் தளும்ப நின்றிருந்தார் ஜெயதேவ்.


வேறு யாரையாவது தமயா மணந்திருந்தாலும் இயல்பான ஒரு உறவு இவர்களுக்குள் தொடர்ந்திருக்கும். ஆனால் நிமலன் மனைவியான பின் அவளை இனி நினைத்த போது பார்க்கவோ பேசவோ கூட அவரால் முடியாது.


அவருக்குச் சற்றும் குறையா மனபாரத்தோடு கிருபாவும் வளர்மதியும் இங்கிருந்து வெளியேறும் நிமலனின் காரை பார்த்திருக்க..

மூங்கில் விட்டு சென்ற பின்னே


அந்தப் பாட்டோடு மூங்கிலுக்கு உறவு என்ன..?

பெற்ற மகள் பிரிகின்றாள்

அந்தப் பெண்ணோடு தந்தைக்கு உள்ள உரிமை என்ன..?

காற்றைப் போல் ரயில் ஒன்று கடந்து போன பின்

கைக்காட்டி மரம் கொள்ளும் தனிமை என்ன..?

மாயம் போல் கலைகின்ற மனித வாழ்க்கையில்

சொந்தங்கள் சொல்லி செல்லும் செய்தி என்ன..?

பாசத்தின் ஊடாக ஞானம் கொள்ள

படைத்தவன் புரிகின்ற சூழ்ச்சி என்ன..?

அவரின் மனதை உணர்த்ததைப் போல் எங்கிருந்தோ மெலிதாக ஒலித்துக் கொண்டிருந்தது பாடல்.

தொடரும்..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா


(ஒரு முக்கிய அறிவிப்பு : வரும் திங்கட்கிழமை முதல் இந்த கதையின் அத்தியாயங்கள் தினமும் இரவு 10 மணிக்கு பதிவிடப்படும்.. திங்கள் முதல் வெள்ளி வரை மட்டுமே ஐந்து நாட்களுக்கு அத்தியாயங்கள் வரும்.. சனி, ஞாயிறு பதிவுகள் கண்டிப்பாக வராது.. புரிதலுக்கு நன்றி)
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தை பதித்து விட்டேன்.. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்..

TNN - 6

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..


இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"உன்னை அமுதவிஷமென்பதா..!!"


கதையின் முதல் பாகத்தை முழு நாவலாக ஆடியோ வடிவில் கேட்க விரும்பினால் கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்ங்க 😍


 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
34917
ஹாய் டியர்ஸ்

"நிழலும் நிஜமானால்..!!"

இந்த மாத சுடர்க்கொடி வெளியீடு ❤❤

சென்ற மாதமே வந்திருக்க வேண்டிய நாவல்.. அப்போது வராததற்கான காரணம் உங்களுக்கு தெரிந்து இருக்கும்..

தாமதத்திற்கு மன்னிக்கவும்..

இதோ கதையில் இருந்து ஒரு குட்டி டீ..

*********

“கொஞ்சமாவது அறிவோ பொறுப்போ இருக்கா உனக்கு..? எத்தனைமுறை உனக்குக் கூப்பிடறது..? அப்படி என்ன செஞ்சுட்டு இருக்கே நீ..?” என ‘ஹலோ’ என்ற எந்தத் தேவையில்லாத வார்த்தைகளும் இல்லாமல் எடுத்ததும் வேகமாகப் பொரிய துவங்கினாள் மாயா.

அதில் உண்டான கோபத்தை ஒரு பெருமூச்சை வெளியிட்டு தன்னையே அமைதிப்படுத்தியவாறே, “என்ன விஷயம்..? எதுக்குக் கூப்பிட்டே..?” என்றார் நவநீதன்.

“ஹாங்.. நீ எவ்வளவு பொறுப்பில்லாதவன்னு மறுபடியும் ஒருமுறை நிரூபிச்சு இருக்கேன்னு சொல்ல தான் கூப்பிட்டேன்..” என்றாள் எரிச்சல் குரலில் மாயா.

“ம்ப்ச்.. என்னன்னு சொல்லு..” என்று நவநீதன் சலித்துக் கொள்ளவும், “ஓ காட்.. இன்னும் இந்த எதுவுமே தெரியாதது போல நடிக்கறதை நீ விடலையா நவநீத்..? உன் கூடப் பேசி டைம் வேஸ்ட் செய்ய எல்லாம் எனக்கு நேரமில்லை..” என்றிருந்தாள் வெறுப்பான குரலில் மாயா.

“எனக்கும் உன் கூடப் பேச விருப்பமில்லை.. ஏதாவது சொல்ல நினைச்சா நேரா சொல்லு, இப்படிச் சுத்தி வளைச்சா எனக்குப் பிடிக்காது.. போனை வெச்சுடு..” என்றார் நவநீத்.
“எனக்குக் கூடத் தான் நீங்க இரண்டு பேரும் இப்படி மொபலை ஆப் செஞ்சு வைக்கறது பிடிக்காதுன்னு எத்தனையோ முறை சொல்லி இருக்கேன்.. அதை எப்போவாவது நீங்க கேட்டு இருக்கீங்களா..? இதோ இப்போ கூட அதைத் தானே செஞ்சீங்க..?” என்றாள் இடக்காக மாயா.

“இப்படித் தலையும் புரியாம வாலும் புரியாம தான் பேச போறேனா நான் போனை வைக்கறேன்..” என்ற நவநீத்தின் வார்த்தைகளைக் கேட்டதும் உண்டான கோபத்தோடு, “தன்வி வந்துட்டான்னு ஒருவார்த்தை பொறுப்பா கால் செஞ்சு சொல்லணும்ன்ற அறிவு கூட உனக்கு இல்லை.. இதில் உனக்குக் கோபம் வேற வருதா..?” என்றிருந்தார் மாயா.

“குழந்தையா..? எங்கே வந்துட்டா..?” எனப் புரியாமல் நவநீத் நெற்றியை சுருக்க.. “ஊப்ஓ.. இரண்டு பேரும் மொபைலை ஆப் செஞ்சுட்டு ஆட்டம் போட்டதைச் சமாளிக்க என்ன எல்லாம் பேசறே நீ..?” என்றாள் எரிச்சலாக மாயா.
“மாயா போதும்..” என்று பொறுமையின்றி நவநீத் கூறவும், “எனக்கும் இதுக்கு மேலே உன் கூடப் பேச பொறுமையில்லை.. தன்விகிட்ட போனை கொடு..” என்றாள் மாயா.

அதில் “குழந்தைகிட்டேயா..?” என்று திகைப்போடு நவநீத் கேட்கவும், “இப்போ என்ன தன்வி உன் கூட இல்லைன்னு சொல்ல போறியா..? இங்கே பாரு நவநீத் நான் டிராவலுக்கு நடுவில் உன்கிட்ட பேசிட்டு இருக்கேன்.. இந்த விளையாட்டை எல்லாம் கொஞ்சம் நிறுத்தறியா..?” என்றாள் மாயா.

“விளையாடறது நானா..? இல்லை நீயா..? இன்னைக்கு எப்படிக் குழந்தை என் கூட இருப்பா..? வீக் எண்டில் தானே வருவா..!” என்று அவளை விட அதிகமான எரிச்சலோடு கேட்டிருந்தார் நவநீத்.

“எப்படினா..? நான் தான் அனுப்பி விட்டேனே..!” என்ற மாயாவின் வார்த்தைகளில் திகைத்தவர், “என்னது..? ஏன்..?” என்றார் நவநீத். “ஏன்னா..? நான் தர்ஷ் கூடக் கோவா வந்திருக்கேன்.. அதான்..” என்றதும் நவநீதனுக்கு எங்கிருந்து தான் அவ்வளவு கோபம் வந்ததோ..!
“அறிவில்லை உனக்கு..? இப்படித் தான் எனகென்னன்னு பொறுப்பில்லாம நடந்துப்பியா..?” என்று கோபமாகத் துவங்கியவரை இடையிட்டு இருந்த மாயா, “ஓவரா பேசாதே.. நான் என்ன பொறுப்பா நடந்துக்கலை..?” என்றாள்.

“குழந்தையை அனுப்ப போறேனா என்கிட்டே ஒரு வார்த்தை சொல்ல மாட்டியா..?” என்ற நவநீத் சொல்ல வருவதைப் புரிந்து கொள்ளாமல், “ஓஹோ, சார்கிட்ட பர்மிஷன் வாங்கிட்டு தான் அனுப்பணுமா..?” என்றாள் இடக்காக மாயா.

“ஷட்டப் மாயா.. எப்போவும் போலச் சொல்ல வருவதைப் புரிஞ்சுக்காமலே பேசு..” என்றார் ஆத்திரத்தோடு நவநீத். “ஷிட்.. ஹாலிடேக்கு வந்த இடத்தில் கூட உன்னால் மட்டும் தான் என் மூடை ஸ்பாயில் செய்ய முடியும்.. மாத்தி மாத்தி பேசாதே நவநீத், நீ தானே என்கிட்டே சொல்லாம ஏன் அனுப்பினேன்னு கேட்டே..?” என்றாள் கோபமாக மாயா.
அதற்கு நவநீத் பதில் சொல்வதற்குள், “இதில் குழந்தை மேலே எனக்குத் தான் அக்கறை அதிகம்.. குழந்தையை என்கிட்ட கொடுத்துடு நான் பார்த்துக்கறேன்னு எப்போ பார் சினிமா தனமா டையலாக் அடிக்க வேண்டியது..” என்றாள் கோபமாக மாயா.

அதில் உண்டான ஆத்திரத்தோடு “முட்டாள்.. முட்டாள், எதையுமே சரியா புரிஞ்சுக்கவே மாட்டியா நீ..? இதனால் தான் நீ இன்னைக்கு இப்படி இருக்கே..” என்று எரிச்சலோடு கத்திய நவநீத், “குழந்தையை ஏன் அனுப்பினேன்னு நான் கேட்கலை.. என்கிட்ட பர்மிஷன் வாங்கிட்டு அனுப்பவும் நான் சொல்லலை.. நீ அனுப்ப போறேன்னு எனக்கு ஏன் சொல்லலைன்னு தான் கேட்டேன்.. இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு, உனக்குப் புரியுதா..?” என்றார் நவநீத்.

*******

அதே நேரம் தன் கையில் இருந்த அலைபேசி ஒலி எழுப்பவும், அதில் தெரிந்த புது எண்ணை கண்டு நவநீதனாகத் தான் இருக்குமென நினைத்து கொஞ்சமும் யோசிக்காமல் அதை எடுத்திருந்தவள் அந்தப் பக்கம் கேட்ட குரலில் திகைத்து நின்று விட்டாள்.

“என்ன டியர் எப்படி இருக்கே..? என்கிட்டே இருந்து தப்பிச்சுட்டேன்னு நினைச்சிட்டு இருக்கியா..? இதோ உன் நம்பரை வெச்சே நீ இருக்க இடத்தைக் கண்டுப்பிடிச்சுட்டேன்.. உன்னைத் தேடி தான் வரேன்.. உன்னால் என்கிட்டே இருந்து ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.. தப்பிக்கக் கூட உனக்குத் திறமை பத்தலைடி.. இப்படியா போனை ஆன் செஞ்சு வைப்பே..?” என்று கேலியாகப் பேசினான் நிரஞ்சன்.

அந்தக் குரலை கேட்டதிலேயே சர்வமும் வருணாவுக்கு நடுங்கி போனது. அதில் அவன் பேசியது வேறு அவளை நடுங்க செய்ய.. கண்கள் கலங்க செய்வதறியாது பதறினாள் வருணா.

அவளுக்கு உடனடியாக இங்கிருந்து கிளம்பியாக வேண்டும்.. ‘நிரஞ்சன் எவ்வளவு தூரத்தில் இருக்கிறானோ..? எப்போது இங்கு வருவானோ..?’ என்ற பயமே அவளை அடுத்து எதையும் வேகமாகச் செய்ய விடாமல் நடுங்க செய்யப் போதுமானதாக இருக்க.. அவளுக்கு கை கால்கள் உதறல் எடுக்கத் துவங்கியது.

அதில் சில நிமிடங்கள் தடுமாறியவள், பின் வேகமாகத் தன் பையில் இருந்த சிறிய தண்ணீர் பாட்டிலை எடுத்துக் குடித்துத் தன்னைக் கொஞ்சம் நிலைப்படுத்திக் கொண்டு அவசரமாக யோசித்து அங்கிருந்து எங்குச் செல்வது என்ற முடிவுக்கு வந்தவள், வேக நடையோடு அங்கிருந்து வெளியேறினாள் வருணா.

அதற்குள் இங்கு எந்த வாகனமும் கிடைக்காமல் மலை பாதையில் வேக வேகமாகத் திரும்பி பார்த்தவாறே இறங்கிக் கொண்டிருந்தார் நவநீதன்.

இந்த வழியாக வரும் வாகனங்கள் எல்லாம் பெரும்பாலும் குடும்பத்தோடு பயணிப்பவர்களாகவே இருக்க.. இடையில் இப்படி நிறுத்தி ஒருவரை ஏற்றிக் கொள்ள அவர்கள் எல்லாம் வெகுவாகத் தயங்கினார்கள்.

இதில் ஊருக்குச் செல்லும் நேரம் மேலும் அதிகமாவது வேறு நவநீதனுக்கு எரிச்சலையும் பதட்டத்தையும் கொடுக்க.. அங்கு என்ன நிலைமை என அறிந்து கொள்ள எண்ணி வருணாவுக்கு அழைத்தார் நவநீதன்.

ஆனால் அவரின் அழைப்பை வருணா எடுக்கவே இல்லை. அவளுக்கு இருந்த பயத்தில் அதை எடுக்கத் தயங்கியவள், வேக வேகமாக எந்தப் பக்கம் சென்றால் பேரூந்து நிறுத்தம் வரும் என்று தெரியா குழப்பத்தோடு நடந்து கொண்டிருந்தாள்.

அதேநேரம் அலைபேசியும் தொடர்ந்து அழைத்துக் கொண்டிருக்க.. உண்டான வெறுப்போடு அதை எடுத்திருந்தவள் அழைப்பது நவநீத் என்று அறிந்து, “போதும் சார் எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு.. இன்னொருமுறை எனக்குக் கால் செய்யாதீங்க..” என்றிருந்தாள் கறார் குரலில் வருணா.

அவளின் இந்தக் குரலிலும் பேச்சிலும் ஒரு நொடி அப்படியே திகைத்து நின்று விட்ட நவநீதன், பின் சட்டெனத் தன்னை மீட்டுக் கொண்டு “மேடம்.. அதில்லை..” எனும் போதே அவள் அழைப்பை துண்டித்து இருக்க.. மீண்டும் அவளை அழைக்க நவநீதன் முயல.. அத்தனையும் வீண் முயற்சியானது.

ஏனெனில் வருணா தன் அலைபேசியை அணைத்து வைத்திருந்தாள். இதில் பதட்டமும் பயமுமாக அந்தப் பக்கம் செய்வதறியாது தவித்தார் நவநீதன்.

***********
இந்த கதையை முழுமையாக படிக்க விரும்புபவர்கள் உங்கள் வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் கடைகளில் சுடர்க்கொடி மாத இதழை வாங்கி படிக்கலாம்..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
34919
தழல் – 7

நிமலன் மற்றும் நிகிலனின் கார் ஒரே நேரத்தில் அவர்கள் வீட்டிற்குள் அடுத்தடுத்து நுழைய.. முதலில் காரிலிருந்து இறங்கிய நிமலன் திரும்பி தமயாவை பார்க்க.. அவளோ சுற்றுப்புறம் மறந்து இறுகிப் போய் அமர்ந்திருந்தாள்.


அவளையே சில நொடிகள் பார்த்தவன், இப்போது வேறு எதுவும் பேச விரும்பாமல் வந்து அவள் பக்க கதவை திறந்து பிடிக்க.. அப்போதே அவன் பக்கம் திரும்பியவளுக்குக் கார் நின்று விட்டிருப்பதே புரிந்தது.


அதில் மெதுவாக தமயா இறங்கி நிற்க.. அதற்குள் நிகிலனின் காரில் இருந்து இறங்கி இருந்த சூர்யகலா வெறுப்போடு அவளைப் பார்த்தப்படியே உள்ளே சென்றிருந்தார்.


அதேநேரம் இவர்கள் வீட்டில் இரண்டு தலைமுறைகளாக வேலை செய்யும் சரோஜா பாட்டி, நிமலன் மணக்கோலத்தில் வருவதைக் கண்டு முதலில் திகைத்தவர், பின் இயல்பாக உள்ளே செல்ல முயன்ற நிமலனை “ஒரு நிமிஷம் தம்பி..” என்று நிறுத்தி இருந்தார்.


அதில் கேள்வியாகத் திரும்பி அவரை நிமலன் பார்க்க.. “கல்யாணம் முடிஞ்சு முதல்முறையா வீட்டுக்குள்ளே வரீங்க.. ஆரத்தி எடுக்காம..” என்று துவங்கியவரின் பார்வை பின் தயக்கமாக சூர்யகலாவின் மேல் படிந்து பேச்சு அப்படியே பாதியில் நின்றது.


ஏனெனில் வழக்கமாக இந்த வீட்டு விஷயங்களிலோ இல்லை தன் பேர பிள்ளைகளின் விஷயங்களிலோ எப்போதும் எந்தக் குறையும் இல்லாதவாறு பார்த்துக் கொள்வார் சூர்யகலா.


அப்படிப்பட்டவர் இன்று எதுவும் சொல்லாமல் உள்ளே சென்றதில் உண்டான தயக்கமே அவரை மேலும் எதுவும் பேசவிடாமல் தடுத்தது. அதில் அவரைக் கூர்மையாகப் பார்த்தவாறே “அது தான் ,முறைனா செஞ்சுடுங்க சரோம்மா..” என்றிருந்தான் ஒருவித அழுத்தத்தோடான குரலில் நிமலன்.


அதாவது அந்தக் குரல் இதை நீ செய்து தான் ஆக வேண்டும் என்பதை அவருக்குப் புரிய வைக்க.. அதேநேரம் சூர்யகலாவின் அனுமதி இல்லாமல் ஒன்றை இந்த வீட்டில் செய்து விட்டு அவரிடம் சிக்கிக் கொள்ள எண்ணி பயந்தவராக சரோஜாவின் பார்வை அவர் பக்கம் தயக்கமாகச் சென்றது.


அதுவரையும் எங்கே ‘இதை நீ என்னை மீறிச் செய்து விடுவாயா..?’ என்பது போல் சரோஜாவையே பார்த்திருந்த சூர்யகலா, அவரின் இந்த அனுமதிக்குக் காத்திருக்கும் செயலில் கொஞ்சமே கொஞ்சம் இறங்கி வந்தது போல் ‘என்னமோ செய்..!’ என்பதாகத் தலையசைத்து முகத்தைத் திருப்பிக் கொண்டார்.


இந்த அளவு அனுமதி கிடைத்ததே போதும் என்பது போல் வேகமாக உள்ளே சென்று ஆரத்தியை கரைத்துக் கொண்டு வந்த சரோஜா, இருவரையும் நிற்க வைத்து மனதார இருவரின் வாழ்வும் சிறக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு ஆரத்தி எடுத்து முடித்தார்.


அதுவரையும் வாயிலுக்கு நேரெதிரில் இருந்த நீள் இருக்கையில் அமர்ந்தவாறே அவர்கள் இருவரையும் அளவிடுவது போல் பார்த்திருந்தார் சூர்யகலா.


வீட்டிற்குள் வந்தவர்களை அடுத்து பூஜையறைக்கு அழைத்துச் சென்று விளகேற்ற சரோஜா சொல்லவும், அவர் சொன்னதை எல்லாம் பொம்மை போல் செய்தாள் தமயா.


இப்போதும் அவளையே பார்த்திருந்த சூர்யகலாவுக்குத் தமயா அணிந்திருந்த சேலை மற்றும் நகை கவனத்தில் பதிய.. திருமண மண்டபத்தில் பார்த்திபன் ஒரு பையைக் கொண்டு சென்று இவர்களிடம் கொடுத்தது சட்டென நினைவுக்கு வந்தது.


அங்கேயே அதைக் கவனித்து இருந்தாலும் அவர்கள் பொருள் என எதுவும் வேண்டாமெனத் தன் பேரன் உறுதியாக இருப்பது மட்டும் அந்த நொடி மனதில் பதிய.. அதிலுண்டான சிறு நிம்மதியோடு மேலும் அதைப் பற்றி எதையும் யோசிக்கவில்லை சூர்யகலா.


ஆனால் இப்போது இதையெல்லாம் கவனித்துப் பார்த்தவருக்கு அந்த மாபெரும் சந்தேகம் மனதில் வந்தது. அதில் திரும்பி சற்று தள்ளி நின்று இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நிகிலனை தன் அருகில் வருமாறு சைகை செய்தார் சூர்யகலா.


அவனும் எதற்கோ அழைக்கிறார் என அவருக்கு அருகில் வந்து அமர.. “ஏன் நிகிலா.. நிஜமாவே உங்க அண்ணன் இந்த அதிரூப சுந்தரியை பிடிக்காம தான் கல்யாணம் செஞ்சுகிட்டானா..?” என்றார் சூர்யகலா.


அதில் குழப்பமாக அவரைப் பார்த்தவன், “ஏன் கேட்கறீங்க பாட்டி..?’ எனவும், “ஹாங்.. இல்லை, அவ போட்டிருக்க நகையையும் கட்டியிருக்கச் சேலையையும் பார்த்தியா..? இதெல்லாம் அவசரத்தில் வாங்கினது போலவா இருக்கு..? திடீர்னு இதெல்லாம் எங்கிருந்து வந்தது..? இதுக்கு முன்னேயே அவன் வாங்கி வெச்சு இருந்திருப்பானோ..?” என்று அவர் சந்தேகமாகக் கேட்டுக் கொண்டே செல்ல.. பதில் சொல்ல முடியாமல் திகைத்தான் நிகிலன்.


அதற்குள் மணமக்கள் இருவரும் பூஜையறைக்கு அருகில் இருந்த மற்றொரு அறைக்குள் நுழைய.. அதைக் கண்டு வெறியான சூர்யகலா, அவரின் வயதையும் மீறி உண்டான வேகத்தோடு எழுந்து அவர்களை நோக்கி சென்றார்.


ஒரு பக்க சுவரை பாதிக்கு மேல் நிறைத்தது போல் தங்க சட்டமிட்டு மாட்டப்பட்டிருந்த தன் தாய் மற்றும் தந்தையின் படங்களுக்கு முன் சென்று நின்றவன், அந்தப் படத்தில் இருந்தவரை நேருக்கு நேர் காண முடியாமல் தடுமாறி பார்வையைத் தழைத்துக் கொண்டான் நிமலன்.


இதுவரை யாரின் முன்பும் இப்படி அவன் தடுமாறி நின்றதில்லை. யாரையும் எப்போதும் நேருக்கு நேர் பார்க்கவும், எதிர்க்கவும் அவனுக்குத் தைரியம் உண்டு.


ஆனால் முதன்முறையாகத் தன்னைப் பெற்றவர்கள் முன் அப்படி அவர்களை ஏறிட்டு பார்க்க முடியாமல் தடுமாறியவன், “நான் செஞ்சது எவ்வளவு பெரிய துரோகம்னு எனக்குப் புரியுது ப்பா, ஆனா..” என்றவன் பின் விழிமூடி தன்னை நிலைப்படுத்தி கொண்டு “முடிஞ்சா என்னை மன்னிச்சுடுங்க ப்பா..” என்று மனதோடே பேசிக் கொண்டிருந்தான் நிமலன்.


இவ்வளவு நேரம் உடன் யாரவது நின்று இதைச் செய், அதைச் செய் என்று சொல்லிக் கொண்டிருக்க.. அதையே சொன்னதைச் சொல்லும் கிளி பிள்ளை போல் அச்சு பிசகாமல் செய்து கொண்டிருந்த தமயா, இங்கு வந்ததிலிருந்து நிமலன் அப்படி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருப்பதைக் கண்டு விழிகளை உயர்த்த.. அவனோ புகைப்படத்தில் இருந்த தன் தந்தையின் காலை தொட்டவாறே நின்றிருந்தான்.


அதைக் கண்டு அவரிடமும் ஆசிர்வாதம் வாங்க சொல்கிறானோ என்று எண்ணி தானும் அவரின் பாதத்தைத் தொட தமயா முயன்ற நொடி, அவளின் கையைப் பிடித்து இழுத்து அந்த அறையில் இருந்து வெளியே தள்ளி இருந்தார் சூர்யகலா.


இதை எதிர்பாராமல் தடுமாறி அவள் கீழே சரிய போக.. அதே நேரம் திரும்பி அவளைப் பார்த்திருந்த நிமலனும், சூர்யகலாவின் வேகத்தைக் கண்டு பின்னேயே வந்திருந்த நிகிலனும் ஒரே நேரத்தில் அவளைக் கீழே விழாமல் தாங்கிப் பிடித்திருந்தனர்.


“உன்னை எல்லாம் வீட்டுக்குள்ளே விட்டதே தப்பு.. இதில் என்ன தைரியம் இருந்தா என் பையன் போட்டவை தொட நினைப்பே..” என்று ஆங்காரமாகக் கத்திக் கொண்டிருந்தார் சூர்யகலா.


இருவரும் ஒரே நேரத்தில் தாங்கி பிடித்ததில் விழாமல் சமாளித்து நின்று இருந்தவளுக்கு சூர்யகலாவின் இந்த செயல் பெரும் அவமானமாக இருந்தது. இதுவரை இப்படி அவளை யாரும் நடத்தியதே இல்லை. அதில் அவளுக்கு அழுகை வெடித்துக் கொண்டு கிளம்பியது.


அதேநேரம் “பாட்டிஈஈஈ..” என்று கண்டனமாக பல்லைக் கடித்துக் கொண்டு அழைத்தான் நிமலன். “போதும் நிமலா.. என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு, காலையில் இவ இந்த வீட்டுக்குள்ளே வந்ததையே என்னால் அனுமதிக்க முடியலை.. அடுத்து இந்த வீட்டு மருமகளாவே வந்து இருக்கா.. இதுக்கே உனக்காகப் பல்லை கடிச்சுட்டு பொறுமையா இருக்கேன்.. இப்போ என் பையன் போட்டோவை தொட போறா.. இதையும் அமைதியா வேடிக்கை பார்க்க சொல்றியா..?” என்றார் கொஞ்சமும் ஆத்திரம் குறையாத குரலில் சூர்யகலா.


“அதுக்காக இப்படியா நடந்துப்பீங்க..?’ என்று நிமலன் கோபமாகக் கேட்கவும், “வேற என்ன செய்யச் சொல்றே..? அவ தொட்டு, அந்தக் கைப்பட்டு என் பிள்ளை படம் கறையாகும் வரை வேடிக்கை பார்க்கணுமா நான்..? உனக்கு அவளைச் சகிச்சுக்க ஆயிரம் காரணம் இருக்கலாம் நிமலா.. ஆனா எனக்கு எப்படி எந்த அவசியமும் இல்லை.. என் பிள்ளையைத் தவிர எனக்கு இந்த உலகத்தில் வேற எதுவுமே முக்கியமும் இல்லை..” என்றார் வெறுப்பும் ஆத்திரமுமாக சூர்யகலா.


அதில் உச்சத்திற்குச் சென்ற தன் கோபத்தை அவரின் ஆத்திரத்திற்குப் பின் இருக்கும் நியாயமான காரணம் புரிந்து விழிமூடி கட்டுப்படுத்த முயன்றான் நிமலன்.


“என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு.. உனக்காக இவளை வீட்டுக்குள்ளே விட்டிருக்கேன், ஆனா அதுக்காக எல்லா விஷயத்திலும் அப்படியே சும்மா இருப்பேன்னு அர்த்தம் இல்லை.. அந்தப் பதவி வெறி பிடிச்ச ரத்த காட்டேரியோட பொண்ணுக்கும் அதே குணம் தான் இருக்கும், உன் கழுத்தை கடிச்சு ரத்தம் குடிக்கவும் அது தயங்காது.. பார்த்துக்கோ..” என்றார் சூர்யகலா.


அவரின் மன கொதிப்பு வார்த்தைகளாக வருவது புரிய.. வேறு எதுவும் பேசாமல் போதும் என்பது போல் கை காண்பித்தவன், அவளை அங்கிருந்து அழைத்துச் செல்ல முயல.. இத்தனை கடுமையான வார்த்தை பிரயோகங்களைத் தாங்க முடியாமல், அடிப்பட்ட பறவை போல் உடல் நடுங்க நின்றிருந்தாள் தமயா.


அவளின் கையைப் பிடித்துத் தன்னோடு அழைத்துச் செல்ல நிமலன் முயல.. “இனி இந்த ரூமுக்குள்ளே இவ வரவே கூடாது.. இதையெல்லாம் என்னால் அனுமதிக்கவும் முடியாது நிமலா..” என்றார் உறுதியான குரலில் சூர்யகலா.


அதில் பார்வையை மட்டும் திருப்பி அவரைப் பார்த்தவன், வேறு எதுவும் பேசாமல் தமயாவை இழுத்துக் கொண்டு சென்று விட்டான் நிமலன். அவர்கள் சென்ற திசையையே எரிச்சலும் வெறுப்புமாகப் பார்த்துக் கொண்டிருந்த சூர்யகலா, அறை வாயிலில் நின்றிருந்த நிகிலனை முறைத்தவாறே சென்று வரவேற்பறையில் அமர்ந்தார்.


மேலே தன் அறைக்குச் செல்ல நினைத்த நிமலன் அலைபேசி ஒலிக்கவும், அதை எடுத்து பேசியவாறே முன்பு தமயா இருந்த அறைக்குள் நுழைய.. சற்று நேரத்தில் நடந்து முடிந்திருந்த கலவரத்தில் உண்டான அதிர்வில் கால்கள் துவண்டு போக.. அங்கிருந்த இருக்கையில் அப்படியே அமர்ந்து விட்டாள் தமயா.


அவளை ஒரு பார்வை பார்த்தப்படியே ஜன்னலின் அருகே சென்று நின்று பேச துவங்கினான் நிமலன். அதே நேரம் நிகிலன் தமயாவின் மேல் காண்பிக்கும் கரிசனம் பிடிக்காமல் அவனையே முறைத்துக் கொண்டிருந்த சூர்யகலா, சட்டெனத் திரும்பி “பார்த்திபா..” என்று சத்தமாக அழைத்தார்.


அதில் நிமலனின் அலுவலக அறையில் ஏதோ வேலையாக இருந்த பார்த்திபன் அடித்துப் பிடித்து ஓடி வந்து பாட்டியின் முன் நின்றான். அவனையே முறைத்து பார்த்த சூர்யகலா “ஏன்டா நீ தானே அந்த அதிரூப சுந்தரி கட்டியிருக்கச் சேலை நகையை எல்லாம் அவளைப் பெத்தவங்ககிட்ட கொடுத்தே..?” என்றார்.


‘இதென்னடா வம்பா போச்சு நிமலன் சார் செய்யச் சொன்னதைத் தானே நான் செஞ்சேன்.. அதுக்கு ஏன் இவங்க என்னை முறைக்கறாங்க..?’ என்று மனதிற்குள் அலறியவாறே “ஆமா மேடம்..” என்றான் பணிவான குரலில் பார்த்தி.


“எங்கே இருந்துடா திடீர்னு அதெல்லாம் வந்தது..?” என்று கூர்மையாக அவனையே பார்த்தப்படி சூர்யகலா கேட்க.. “சார் தான், பிஆர் ஷோரூமுக்கு போய் என்னை வாங்கிட்டு வர சொன்னாங்க..” என்றான் பார்த்தி.


“இவ்வளவு காலையிலா..? அதெல்லாம் அப்போ நீ செலக்ட் செஞ்சதா..?” என்று அப்போதும் நம்பாமல் கேட்டவரை மறுப்பாகப் பார்த்தவன், “இல்லை மேடம்.. பிஆர் ஷோ ரூம் போ.. அங்கே அரவிந்த் சார் ஒரு பை கொடுப்பார் அதை வாங்கிட்டு வான்னு மட்டும் தான் சார் கால் செஞ்சார்.. நானும் போனேன், எல்லாம் தயாரா இருக்குன்னு சொல்லி அவர் பையை எடுத்து கொடுத்தார்.. நானும் வாங்கிட்டு வந்தேன்..” என்றான் பார்த்தி.


அதில் யோசனையாகத் தன் முகவாயை தேய்த்தவர், “யாருனே தெரியாம இவளை காலையில் ஒரு பிரச்சனைன்னு காப்பாத்தி கூட்டிட்டு வந்தான்.. அப்பறம் தலைவர் சொன்னாருன்னு கல்யாணம் செஞ்சுக்க முடிவு செஞ்சான்.. இதுக்கு நடுவில் இதெல்லாம் எப்படி..?” என்று வாய் விட்டே யோசித்தவர், சட்டெனத் திரும்பி நிகிலனை பார்த்து “இதைப் பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா..?” என்றார்.


இதையெல்லாம் கேட்டு அவனுமே குழம்பி போய்த் தான் நின்றிருந்தான். இதில் திடீரெனத் திரும்பி தன்னைச் சந்தேகத்தோடு பார்த்து சூர்யகலா கேட்கவும் உண்டான பதட்டத்தோடு மறுப்பாகத் தலையசைத்தான் நிகிலன்.


அதேநேரம் ஏதோ வேலையாக அலுவலக அறையை நோக்கி வந்த நிமலன், இவர்கள் எதையோ பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு விழிகளைச் சுருக்கினாலும் அங்கு நிற்காமல் அவன் உள்ளே சென்று விட்டான்.


மேலும் ஒரு மணி நேரம் செல்ல.. நிமலன் தன் வேலையில் மூழ்கிவிட.. அவனுக்கு உதவ பார்த்திபனும் சென்று விட்டான். சூர்யகலாவும் தன் அறைக்குள் சென்றுப் படுத்துக் கொண்டார். இதில் நிகிலன் தான் செய்வதறியாது அங்கேயே அமர்ந்திருந்தான்.


அவனுக்குச் சில மணி நேரங்களில் நடந்து முடிந்திருந்த எதையுமே நம்ப முடியவில்லை. அதைக் கிரகித்துக் கொள்ளவே நேரம் தேவையாய் இருக்க.. அடுத்து பாட்டி எழுப்பிய கேள்வி வேறு அவனுள் சுழன்று கொண்டே இருந்ததில் சோர்ந்து போய் அமர்ந்து விட்டான் நிகிலன்.


இதில் தமயாவை பற்றிய கவலை வேறு அவனை அலைக் கழித்துக் கொண்டிருந்தது. சூர்யகலா அவளை நடத்திய விதத்தைக் கண்டு நிகிலனுக்கு மனம் பாரமானது. ‘இவரை அவள் எப்படிச் சமாளிக்கப் போகிறாளோ..?’ என்ற கவலையோடு அமர்ந்து விட்டான் நிகிலன்பெரும் கவலை அவனுக்கு உண்டானது.


அவனும் இங்கு இருக்கப் போவதில்லை. நான்கு நாள்களில் ஊருக்கு திரும்பி சென்றாக வேண்டும். தனியே இங்குச் சிக்கிக் கொண்டு என்ன செய்வாளோ..? என்று யோசித்தவனுக்கு நிமலன் பார்த்துக் கொள்வான் என்ற எண்ணம் ஒரு நொடி கூடத் தோன்றவில்லை.


இதே யோசனையோடே நிகிலன் அமர்ந்திருக்கப் புயலை போல் உள்ளே நுழைந்தாள் தீக்ஷா. அவளைக் கண்டதும் நிகிலன் சிறு திகைப்போடு எழுந்து நிற்க.. “நீயும் இங்கே தான் இருக்கியா..? நீ இருந்தும் இதையெல்லாம் தடுக்காம வேடிக்கை பார்த்துட்டு இருந்து இருக்கே இல்லை..?” என்று எடுத்ததும் அவன் மேல் பாய்ந்தாள் தீக்ஷா.


அதில் லேசாகத் தடுமாறியவன், எதுவோ பேச வருவதற்குள் தீக்ஷாவின் குரல் கேட்டு எழுந்து வெளியில் வந்திருந்தார் சூர்யகலா. அவரைக் கண்டதும் “என்ன பாட்டி இது..? எப்படி அவளை இந்த வீட்டுக்குள்ளே நீங்க விட்டீங்க..?” என்றாள் மனம் தாங்காமல் தீக்ஷா.


“தீக்ஷு.. நான் எவ்வளவோ சொன்னேன்.. ஆனா யாருமே என் பேச்சை கேட்கலை.. இந்த வீட்டில் எனக்கு மரியாதையே இல்லாம போச்சுடா..” என்று அவரும் மனம் தாங்காமல் இவ்வளவு நேரம் அழுத்தி வைத்திருந்த தன் வேதனையை வெளியிட.. எப்போதும் அதிகாரமாகவே பார்த்துப் பழகியிருந்த தன் பாட்டியை இந்த நிலையில் கண்டதில் உண்டான ஆத்திரத்தோடு “எங்கே அவ..? எங்கே இருக்கா..?” என்று கொதித்தாள் தீக்ஷா.


“அங்கே இருக்கா மகாராணி..” என்றார் அவள் இருந்த அறையை காண்பித்து சூர்யகலா. அதற்குள் இந்தச் சத்தம் கேட்டு அறை வாயிலுக்கு வந்திருந்த தமயா, இவர்களைப் புரியாமல் பார்த்திருக்க.. உரிமையாய் அவள் நின்றிருந்த விதம் ஏற்கனவே கொதித்துக் கொண்டிருந்த தீக்ஷாவை மேலும் கொதிப்படைய செய்தது.


அதில் வேகமாக அவளை நெருங்கியவள், அவளின் கையைப் பிடித்துத் தரதரவென இழுத்துக் கொண்டு வர, இதைக் கண்டு பதறிய நிகிலன் “தீக்ஷு என்ன செய்யற நீ..? அவளை விடு..” என்று தீக்ஷாவைத் தடுக்க முயல.. “ஓ.. உனக்கு இன்னும் பழைய பாசம் மிச்சமிருக்கா.. அதான் இங்கே இருந்தும் நீ எதையும் தடுக்காம இருந்து இருக்கே இல்லை.. நமக்கு நடந்ததை எல்லாம் மறந்துட்டே இல்லை நீ..” என்று நிகிலனிடம் எரிந்து விழுந்தாள் தீக்ஷா.


அதேநேரம் தன் திகைப்பில் இருந்து மீண்டு தமயாவே “லீவ் மீ.. லீவ் மீ..” என்று தன்னை விடுவித்துக் கொள்ளப் போராட.. “ஒரு நிமிஷம் கூட நீ இங்கே இருக்க கூடாது.. வெளியே போ..” என்றாள் தீக்ஷா.


அவள் என்னவோ விருப்பப்பட்டு இங்கு வந்தது போல் தீக்ஷா பேசுவதை கேட்டு எரிச்சலானவள், ஆளாளுக்கு தன் வாழ்க்கையை தீர்மானிப்பதில் உண்டான எரிச்சலோடு, அதை சொல்லும் உரிமை உனக்கு இல்லை.. இதை என் கழுத்தில் கட்டியவரை வந்து சொல்ல சொல்லு..” என்று வேகமாக தன் கையை உதறிக் கொண்டு தள்ளி நின்றாள் தமயா.


அவளின் பேச்சிலும் செயலிலும் உண்டான கோபத்தில் எதுவோ சொல்ல திரும்பிய தீக்ஷாவுக்கு அப்போதே தமயா அணிந்திருந்த உடையும் நகையும் மனதில் பதிய.. “நீ போட்டுக்கவா..? உனக்காவா நான் இதையெல்லாம் பார்த்து பார்த்துச் செலக்ட் செஞ்சேன்..? நான் கிளம்பி வரேன்னு அத்தனை முறை கேட்டும், இல்லை இப்போ வேண்டாம்னு சொல்லும் போதே நான் யோசிச்சு இருக்கணும்..? தெரிஞ்சிருந்தா இதை நடக்கவே விட்டிருக்க மாட்டேன்..” என்றாள் வெறுப்பாக தமயாவை பார்த்து தீக்ஷா.


“இதெல்லாம் உன் வேலையா..? எனக்குத் தெரியாம இதெல்லாம் வேற செஞ்சியா நீ..?” என்றார் கோபமாக சூர்யகலா. “இதெல்லாம் இவளுக்காகன்னு எனகென்ன பாட்டி தெரியும்..? இதை எல்லாம் எதுவும் என்கிட்டே சொல்லவே இல்லையே..” என்று ஆதங்கமாகப் பேசியவள், “உங்க அப்பாவை போலவே நீயும் யார் எப்படிப் போனா எனக்கு என்னன்னு கிடைச்ச வாய்ப்பை பயன்படுத்தி இந்த வீட்டுக்குள்ளே நுழைஞ்சுட்டே இல்லை.. குடும்பமே இப்படி உங்க சுயநலத்துக்காக என்ன வேணும்னாலும் செய்வீங்களா..? ச்சீ..” என்றாள் உச்சபட்ச கோபத்திலும் எரிச்சலிலும் தீக்ஷா.


“ஓவரா பேசாதீங்க.. எனக்கும் இப்படி ஒரு கல்யாணத்தைச் செஞ்சுட்டு இங்கே வரணும்னு எந்த ஒரு அவசியமும் இல்லை.. அப்படி ஒரு ஆசையும் இல்லை..” என்று இதற்கு மேல் பொறுக்கவே முடியாது என்பது போலான குரலில் தமயா.


“ஓஹோ.. அப்போ என் பேரன் தான் உன்னைக் கட்டிக்கத் தவமா தவமிருந்தான்னு சொல்றியா..?” என்றார் ஆத்திரமாக சூர்யகலா. “ஆமா..” என்று கோபமாக தமயா சொல்லிய அடுத்த நொடி கொஞ்சமும் யோசிக்காமல் பளார் என தமயாவை அறைந்திருந்தாள் தீக்ஷா.


அதில் ஆத்திரமான தமயா திரும்ப தீக்ஷாவை அறைய முயன்ற நொடி அவள் கையை பிடித்து நிறுத்தியிருந்தான் நிமலன்.


தொடரும்..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தை பதித்து விட்டேன்.. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்..

TNN - 7

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..


இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
34920

தழல் – 8

தீக்ஷா கோபத்தில் தமயாவை அறைய.. “தீக்ஷு..” என்று ஒரே நேரத்தில் நிமலன் மற்றும் நிகிலன் குரல் கொடுத்திருந்தனர். அதே நேரம் சட்டெனத் தீக்ஷாவை திரும்ப அறைய தமயா கையை ஓங்கி இருக்க.. அவளின் கையை வந்து பிடித்து நிறுத்தியிருந்தான் நிமலன்.


அதில் அவனைக் கோபமாகத் திரும்பி முறைத்தவள், தன் கையை விடுவித்துக் கொள்ள முயல.. நிமலனின் பிடி மேலும் இறுகியது. “லீவ் மீ..” என்று ஆத்திரத்தோடு சொல்ல முயன்றும் அழுகை வெடித்துக் கொண்டு வர.. திணறலோடே பேசினாள் தமயா.


அதேநேரம் “ஏன் ண்ணா இப்படிச் செஞ்சே..?” என்ற தீக்ஷாவின் குரலில் திரும்பி அவளை முறைத்தவன், “முதலில் நீ செஞ்சது சரியா சொல்லு..?” என்றான் நிமலன்.


அதில் முகம் மாறினாலும் விழிகள் கலங்க அவனைப் பார்த்தவள், “இவங்க அப்பா நமக்குச் செஞ்சதுக்கு இது ஒன்னும் பெருசு இல்லை..” என்றாள் வீம்பாக தீக்ஷா.


“அவங்க அப்பா செஞ்சதுக்கு இவளுக்குத் தண்டனையா..?” என்றான் ஒரு மாதிரியான குரலில் நிகிலன். “ஆமா.. பெத்தவங்க சேர்த்த சொத்தில் மட்டும் பிள்ளைங்களுக்குப் பங்கு இருக்கும் போது அவங்க செஞ்ச பாவத்தில் பங்கு இல்லையா..?” என்றார் இடக்காக சூர்யகலா.


“உன்கிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கலை ண்ணா.. நீ கல்யாணம் செஞ்சுக்கப் போறேன்னு சொன்னதும் எவ்வளவு ஆசையா கிளம்பி ஓடி வந்தேன் தெரியுமா..? இதெல்லாம் இவளுக்காகத் தானா..?” என்று தீக்ஷா அழ துவங்க.. அவள் கையில் இருந்த ஆறு மாதக் குழந்தை லேசாகச் சிணுங்கியது.


சட்டென அதை வாங்கிச் சமாதானம் செய்து தன் தோளில் போட்டு நிமலன் தட்டிக் கொடுக்கவும், மீண்டும் உறக்கத்திற்குச் சென்றது குழந்தை. அதில் தீக்ஷா மறுபடியும் எதுவோ சொல்ல முயல.. அவளை ‘எதுவும் பேசாதே..!’ என்பது போல் ஒற்றை விரலை வாயில் வைத்து காண்பித்தவன், “நடந்து முடிஞ்சதை பற்றிப் பேசி எந்தப் பயனும் இல்லை தீக்ஷு..” என்றான் சற்று அழுத்தமான குரலில் நிமலன்.


“ஆனா ண்ணா..” என்று தீக்ஷா அப்போதும் துவங்க.. “போதும் தீக்ஷு.. உங்களுக்கு எப்படி இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இல்லையோ அப்படியே தான் எனக்கும்.. ஆனா எதுக்காக இத்தனை வருஷமும் ஒவ்வொரு அடியா எடுத்து வெச்சு திட்டமிட்டு காத்திருந்தேனோ.. அதுக்கே பிரச்சனை வரும்னா அதைத் தடுக்க என்ன வேணும்னாலும் நான் செய்வேன்.. அதுக்குச் சாட்சி தான் இவளும், இந்தக் கல்யாணமும்.. புரியுதா..? இதுக்கு மேலே இதைப் பற்றிப் பேச எதுவும் இல்லை..” என்றான் கண்டிப்பான குரலில் அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவாறே நிமலன்.


“ஆனா இதில் உன் வாழ்க்கை..” என்று சூர்யகலா துவங்கவும், “அப்படி ஒரு வாழ்க்கையே எனக்கு இல்லைன்னு நான் முடிவு செஞ்சு சில வருஷங்கள் ஆகுது பாட்டி..” என்றிருந்தான் முகமும் குரலும் இறுக நிமலன்.


அதில் மனம் தாங்காமல் “என்ன கண்ணா இப்படிப் பேசறே..?” என்று சூர்யகலா கவலையாகக் கேட்கவும், “வேற எப்படிப் பேச சொல்றீங்க பாட்டி..? இத்தனை வருஷத்தில் உங்களுக்கே புரிஞ்சு இருக்கும், எத்தனை முறை என் கல்யாண பேச்சை எடுத்து இருப்பீங்க..? அப்போ எல்லாம் அப்படி ஒரு எண்ணமே எனக்கு இல்லைன்னு சொன்ன நான்..! இன்னைக்கு இப்படி ஒரு கல்யாணத்தை அதுவும் சில மணி நேரத்தில் செஞ்சு இருக்கேனா ஏன்னு யோசிக்க மாட்டீங்களா..?


உங்களுக்கு இவளை இந்த வீட்டில் பார்க்கும் போது எப்படி இருக்கோ.. அப்படித் தான் எனக்கும் இருக்கு.. உங்களுக்கு உங்க பையன் மேலே இருக்கப் பாசமும் அன்பும் எனக்கு எங்க அப்பா மேலே இல்லைன்னு நினைக்கறீங்களா..?


இது தவிர்க்க முடியாம நடந்த ஒரு விஷயம்.. இதுவும் அந்த ஜெயதேவை அழிக்க எனக்குக் கிடைச்ச துருப்புச் சீட்டா தான் நான் பார்க்கறேன்.. இத்தனை வருஷமா நான் காத்திருந்தது எல்லாம் நடக்க போகும் நேரம் அதுக்கு தடையா எது வந்தாலும் நான் அதை பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டேன், கொஞ்சம் கொஞ்சமா அடியெடுத்து வெச்சு நம்ம இலக்கை அடைய நினைக்கும் நேரம் அதுக்கு இடையூறா எது வந்தாலும் அதைத் தகர்த்து எறிஞ்சுட்டு நம்ம இலக்கை நோக்கி போயிட்டே இருக்கணும்னு எங்க அப்பா அடிக்கடி சொல்லுவார்.. அவர் வார்த்தை தான் எப்போவும் எனக்கு வேதவாக்கு.. இன்னைக்கும் அதைத் தான் மனசில் வெச்சு இந்தக் கல்யாணத்துக்கு நான் சம்மதிச்சேன்..


நம்ம இந்த நிலைக்குக் காரணமானவனைச் சும்மா விட மாட்டேன்.. அவனை அடியோட அழிச்சு ஒண்ணுமில்லாம செய்யலை நான் நிமலன் இல்லை..” என்றான் ஆத்திரத்தில் விழிகள் சிவக்க நிமலன்.


இதில் அடுத்து பேச முடியாமல் அனைவரும் திகைப்பு மாறாமல் நின்றிருக்க.. தன் கையில் இருந்த குழந்தையை நிகிலனிடம் கொடுத்தவன், “உள்ளே கொண்டு போய்த் தூங்க வை..” என்று விட்டு மீண்டும் திரும்பி சூர்யகலாவை பார்த்தவன், “வெளியே இருக்கறவங்களைச் சமாளிக்கவே எனக்கு நேரமில்லை.. செஞ்சு முடிக்க வேண்டிய வேலை ஆயிரத்து எட்டு இருக்கு, இதில் நீங்க வேற என்னைப் போட்டு படுத்தாதீங்க.. உங்களுக்கும் எனக்கும் பிடிக்குதோ இல்லையோ, இவ இந்த வீட்டில் தான் இருந்தாகணும்.. இருப்பா..” என்றான் உறுதியான குரலில் நிமலன்.


இவ்வளவு நேரம் அவன் பேசியதை எல்லாம் கேட்டு திகைத்து போய் நின்றிருந்த தமயா, தன் அதிர்வில் இருந்து மீண்டு “அப்படி எல்லாம் யாரும் என்னைப் பிடிக்காம இங்கே வெச்சுக்க வேண்டிய அவசியமில்லை.. உங்களுக்கு எல்லாம் ஊர் உலகத்துக்குச் சொல்ல இந்தக் கல்யாணம் நடக்கணும் அவ்வளவு தானே..! அதான் நடந்தாச்சே.. இனி எதுக்கு நான் இங்கே இருக்கணும்..? நான் போறேன்..” என்றாள் தமயா.


“உன் கல்யாணமே உன் முடிவை கேட்டு நடக்கலை.. இதில் இனி நடக்கப் போறதை நீ முடிவு செய்ய முடியும்னு நினைக்கறியா..?” என்றான் வெறுப்பும் கேலியுமான குரலில் நிமலன்.


“உங்களால் என்னைக் கண்ட்ரோல் செய்ய முடியாது..” என்று வீம்பாகத் தமயா சொல்லவும், “உன்னால் என்னை மீறி இங்கே இருந்து ஒரு அடி வெளியே எடுத்து வைக்க முடியாது..” என்றான் அவளை விட வீம்பான குரலில் நிமலன்.


இதில் அவனை முறைத்துக் கொண்டே வாயிலை நோக்கி நகர்ந்தவளின் வழியை மறிப்பது போல் இரண்டு பாதுகாவலர்கள் வந்து வாயிலில் நின்றனர். அதைக் கண்டு திகைத்தவள், கோபமாகத் திரும்பி நிமலனை பார்க்க.. ‘முடிந்தால் போ..!’ என்பது போலான முகபாவனையோடும் இதழில் நெளியும் நக்கல் புன்னகையோடும் நின்றிருந்தான் நிமலன்.


அதைக் கண்டு எரிச்சலான தமயா வேகமாக வெளியே செல்ல முயல.. மேலும் இருவர் அவளின் முன் வந்து கையைக் கட்டிக் கொண்டு நின்றனர்.


“உன் வீட்டை விட்டும் உங்க நொண்ணன் ஏற்பாடு செஞ்ச பாதுக்காப்பை விட்டும் வந்தது போல இவங்களையும் சுலபமா நினைச்சுடாதே.. இவங்களை மீறி உன்னால் இங்கே இருந்து ஓரு அடி கூட எடுத்து வைக்க முடியாது..” என்றான் கேலியான குரலில் நிமலன்.


அதில் அவனை தமயா முறைத்துக் கொண்டு நிற்க.. “இந்த வீட்டுக்குள்ளே நீ வர மட்டுமில்லை வெளியே போகவும் நான் தான் முடிவு செய்யணும்..” என்றவன், திரும்பி தீக்ஷாவை பார்த்து “போ.. போய் ரெஸ்ட் எடு.. இவ்வளவு காலையில் இத்தனை அவசரமா உன்னை யார் வர சொன்னா..? அதுவும் குழந்தையைத் தூக்கிட்டு.. நான் என்ன நிஜ கல்யாணமா செஞ்சு இருக்கேன்.. உன்னால் கலந்துக்க முடியலையேன்னு நீ கவலைப்பட..” என்றான் அக்கறை குரலில் நிமலன்.


இதைக் கேட்டு விழிகள் கலங்க நிமலனை நெருங்கி அணைத்துக் கொண்டவள், “உங்களுக்குக் கல்யாணம்னு தெரிஞ்சதும் அவ்வளவு சந்தோஷப்பட்டேன் ண்ணா.. ஆனா..” என்று அதற்கு மேல் பேச முடியாமல் தேம்ப.. “ம்ப்ச்..” என்று அவளைத் தட்டிக் கொடுத்தவன், “போ.. ரெஸ்ட் எடு..” என்றான் நிமலன்.


அவ்வளவு நேரமும் இந்தக் கல்யாணத்திற்குப் பின் வேறு எதுவும் காரணம் இருக்குமோ என்று மனம் கலங்க பார்த்திருந்த சூர்யகலா, இப்போது நிமலன் பேசியதில் உண்டான தெளிவோடு அங்கிருந்து நகர்ந்தார்.


அடுத்து தீக்ஷாவும் உள்ளே செல்ல.. இதையெல்லாம் கண்டு எதுவும் பேச முடியாமல் நின்றிருந்தான் நிகிலன். அவனை ‘என்ன..?’ என்பது போல் நிமலன் கேள்வியாகப் பார்க்கவும், ‘ஒண்ணுமில்லை’ என்ற தலையசைப்போடு, தமயாவின் பக்கம் பார்த்தவன், நீண்ட பெருமூச்சை வெளியேற்றி விட்டு வெளி பக்கம் சென்றான் நிகிலன்.


அப்போது வரைக்கும் நிமலனை முறைத்துக் கொண்டு தமயா நின்றிருக்க.. “இனி இங்கே தானே இருக்கப் போறே.. பொறுமையா முறைச்சுக்கலாம், இப்போ உள்ளே போ..” என்றான் நிமலன்.


அவன் கேலி அவளைச் சீண்டி விட.. “உங்களை மீறி போக முடியாதுன்னு அவ்வளவு தைரியம் இல்லை.. நான் இங்கே இருந்து போய்க் காண்பிக்கறேன்..” என்று சவால் விடும் குரலில் அவள் கூற.. “ஆல் தி பெஸ்ட்..” என்றிருந்தான் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாத குரலில் நிமலன்.


அதில் அதற்கு மேல் அங்கு நின்று அவனிடம் மல்லுக்கட்ட விரும்பாமல் வேகமாகத் தன் அறையை நோக்கி நகர முயன்றாள் தமயா. “அங்கே இல்லை மேலே..” என்ற நிமலனின் குரல் அவளின் நடையைத் தடை செய்ய.. திரும்பி அவனைக் குழப்பமாகப் பார்த்தாள் தமயா.


“இனி உன் ரூம் அது இல்லை.. என் ரூம் மேலே இருக்கு..” என்றவனை முறைத்தவள், திரும்பி கீழிருந்த அறையை நோக்கி நடக்க முயல.. அவளின் கையைப் பற்றித் தடுத்திருந்தவன், “மேலேன்னு சொன்னேன்..” என்றான் ஒரு வித அழுத்தத்தோடு நிமலன்.


அவன் பிடியிலிருந்து தன் கையை விடுவித்துக் கொள்ள முயன்றவள், அதன் இறுக்கம் அதிகரித்துக் கொண்டே செல்வதைக் கண்டு உண்டான வெறுப்பிலும் கோபத்திலும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் மாடி பக்கம் செல்ல.. அதன் பின் அவளின் பிடித்திருந்த கையை விடுவித்தவன், தமயாவின் பின்னால் சென்றான்.


நிமலனின் அறை மட்டுமல்லாமல் நிகிலன் மற்றும் தீக்ஷாவின் அறையும் அங்கு உண்டு என்பதால் தன் அறையைக் காண்பிக்க அவளோடே நிமலன் செல்ல.. தன் மேல் நம்பிக்கை இல்லாமல் நிமலன் உடன் வருவதாக எண்ணிக் கொண்டவள், அந்தக் கோபத்தையும் சேர்ந்து தன் நடையில் காண்பிக்க.. உயர்தரத் தேக்கு மரத்தில் இழைத்துக் கட்டபட்டிருந்த அந்த மாடிப்படிக்கு தமயாவின் கோபம் புரியாமல் போக.. ஒரு திருப்பத்தில் அவளின் காலை அது இடறி விட்டிருந்தது.


அதில் தடுமாறிப் பின்னால் சரிய இருந்தவளை அவளுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த நிமலன் “ஹே, கேர்புல்..” என்று இடையோடு சேர்த்து தாங்கி பிடிக்க.. அவனிடம் இருந்து வேகமாக விலகி நிற்க முயன்றவளின் கால் பிசகி இருந்ததால் தமயாவால் சரியாக நிற்க முடியாமல் போக.. தடுமாறி அருகில் இருந்த கைப்பிடியை பிடிக்க முயன்று மீண்டும் விழப் போனாள் தமயா.


அதில் சட்டென அவளைத் தன் கைகளில் ஏந்திக் கொண்டான் நிமலன். இதைக் கொஞ்சமும் எதிர்பாராமல் திகைத்தவள் வேகமாக அவனிடம் இருந்து விடுப்பட முயல.. வழக்கம் போல் நிமலன் அதற்கு அனுமதிக்காமல் தன் பிடியை இறுக்கினான்.


இதில் உண்டான தள்ளுமுள்ளில் இருவரின் முகமும் அருகருகே வந்திருக்க.. சில நிமிடங்களுக்குப் பிறகே இதைக் கவனித்த தமயா திகைத்து விழிக்க.. அதன் பிறகே இதை நிமலனும் கவனித்திருந்தான். சற்று வேகமாக அசைந்தாலும் இருவரின் இதழ்களும் உரசிக் கொள்ளும் தூரத்தில் இருந்தது.


இருவரும் அதில் உண்டான திகைப்பில் அப்படியே அசையாமல் சில நொடிகள் நின்று விட.. பின் வேகமாக அவனிடம் இருந்து முகத்தை திருப்பிக் கொண்டு இறங்க முயன்றாள் தமயா.


அதில் எழுந்த ஆத்திரத்தோடு சட்டென அவளை இறக்கி விட்டவன், “எங்கே நட பார்க்கலாம்..?” என்றான் எரிச்சலான குரலில் நிமலன். ஆனால் அவன் அப்படித் திடீரென இறக்கி விட்டதில் நிற்கவே முடியாமல் தடுமாறியவள் எங்கே நடப்பது..?


ஆனாலும் வீம்பாக அடிப்படாத ஒற்றைக் காலை ஊன்றி குதித்துக் குதித்து ஏற முயன்றவள் மீண்டும் தடுமாறி சரிய.. “நீ அப்பறம் தனியா இருக்கும் போது இப்படிக் கம்பி மேலே நடந்து வித்தை எல்லாம் காட்டு.. இப்போ என்னையும் சேர்த்து தள்ளாம இரு..” என்றவாறே மீண்டும் அவளை ஏந்திக் கொண்டவன், வேகமாக தன் அறைக்குள் நுழைந்தான்.


அவனிடம் இனி பேசி எந்தப் பயனும் இல்லை என்று புரிந்தது போல் தமயா முகத்தைத் திருப்பிக் கொண்டு அமைதியாகி விட.. அவளை உள்ளே அழைத்துச் சென்று அங்கிருந்த பெரிய குஷன் சோபாவில் இறக்கி விட்டவன், அதன் பின் அவளைக் கண்டு கொள்ளாமல் விலகி சென்று விட்டான்.


அதுவரை அவனிடம் காண்பித்துக் கொள்ளக் கூடாது என்று கட்டுப்படுத்திக் கொண்டிருந்தவள், அவன் விலகி சென்ற பின் வலி வின்னெனத் தெறிக்க காலை பிடித்துக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டாள்.


‘இன்னைக்கு நேரமே சரியில்லை போல.. காலையில் இருந்து பிரச்சனையாவே இருக்கு..’ என்று புலம்பியவளின் அருகில் பொத்தென எதுவோ விழ.. திடுக்கிட்டு நிமிர்ந்தவள், நிமலன் தான் காலுக்குப் போடுவதற்கான மருந்தை வீசி விட்டு செல்வதைக் கண்டு அவனை வெறித்தாள்.


அதேநேரம் கீழே இருந்த அறையில் “ஏன் தீக்ஷு நீ தான் அந்தச் சேலை, நகை எல்லாம் வாங்கினதா..? எப்போ வாங்கின..?” என்று விசாரணை நடத்திக் கொண்டிருந்தார் சூர்யகலா.


“ஆமா பாட்டி.. காலையில் தான் அண்ணா கால் செஞ்சு முழுசா எந்த விவரமும் சொல்லாம சட்டுன்னு கல்யாணம் செஞ்சுக்க வேண்டிய சூழ்நிலை, பொண்ணுக்கு பட்டு சேலையும் நகையும் எடுக்கணும், எனக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது.. நீ செலக்ட் செஞ்சு கொடு.. நம்ம பிஆர் ஷோ ரூம் ஓனர்கிட்ட பேசி இருக்கேன்.. அவங்க ஸ்டாப் உனக்கு வீடியோ காலில் எல்லாம் டிஸ்ப்ளே செய்வாங்க.. நீ செலக்ட் செய், அவங்க பேக் செஞ்சுடுவாங்கன்னு சொன்னார்.. நிறைய நேரமில்லை.. சீக்கிரமா எல்லாம் முடின்னு சொன்னாங்க, நானும் இத்தனை நாள் கல்யாணம் வேண்டாம்னு சொன்ன அண்ணனே மனசு மாறி வந்திருக்கேன்னு வேற எதைப் பற்றியும் யோசிக்காம பார்த்து பார்த்து எல்லாம் செலக்ட் செஞ்சேன்..” என்றாள் தீக்ஷா.


“இந்த அதிரூப சுந்தரியை தான் கல்யாணம் செஞ்சுக்கப் போறேன்னு சொல்லலையா அவன்..?” என்றார் அடுத்ததாக சூர்யகலா. “நிஜமாவே எனக்குத் தெரியாது பாட்டி.. தெரிஞ்சு இருந்தா எப்படியாவது கெஞ்சியாவது தடுக்க பார்த்திருப்பேன், எங்க அண்ணியை உடனே பார்க்கணும்னு அவ்வளவு ஆசையா கல்யாணம் நான் வருவதற்குள் முடிஞ்சு போகும்னு தெரிஞ்சே அடுத்தப் பிளைட்டில் டிக்கெட் போட சொல்லி கிளம்பி வந்தேன் தெரியுமா..? ஆனா அதெல்லாம் இதுக்காகவான்னு நினைக்கும் போது தான்..” என்றவள் தன் வார்த்தையை முடிக்காமல் அப்படியே நிறுத்தினாள் தீக்ஷா.


“அப்பறம் எப்படி வீட்டுக்குள்ளே வரும் போதே விஷயம் தெரிஞ்சு கத்திட்டு வந்தே..?” என்று சிறிது நேரம் தோட்டத்தில் உலாவி விட்டு அப்போதே அங்கு வந்த நிகிலன் கேட்டான்.


“ஹ்ம்ம், டாக்ஸியில் வரும் போது தான் எல்லாம் தெரிய வந்தது.. எப் எம் நியூஸ் கேட்டேன்.. அப்போவும் நம்பாம மொபைலில் நியூஸ் வெச்சு பார்த்தா.. எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து பிரஸ் மீட் கொடுக்கறாங்க.. அண்ணா எப்படி இப்படி ஒரு முடிவுக்கு வந்தாருன்னு எனக்குப் புரியவே இல்லை.. அப்போ தான் அந்தப் பொண்ணு கல்யாணம் நின்னுப் போன விஷயத்தைப் பற்றியும் சொன்னாங்களா.. அவங்க அப்பா தான் சுயநலத்தின் மொத்த உருவமாச்சே, அவர் தான் எதுவோ செஞ்சு இருக்கார்.. இதை இந்தப் பொண்ணும் சரியா பயன்படுத்திக்கிட்டு அண்ணனை கல்யாணம் செஞ்சுட்டு நம்ம வீட்டுக்குள்ளே உள்ளே வந்துட்டான்னு எனக்குக் கோபம், அதான் வந்ததும் அவகிட்டே அப்படி நடந்துக்கிட்டேன்.. என்ன இருந்தாலும் நான் அவளை அடிச்சு இருக்கக் கூடாது..” என்றாள் வருத்தமான குரலில் தீக்ஷா.


“அதெல்லாம் பரவாயில்லை.. அவ என்ன தியாகியோட மகளா..? நீ கவலைப்படற அளவுக்கு எல்லாம் அவ ஆளில்லை விடு..” என்றிருந்தார் அலட்சியமாக சூர்யகலா.


அதுவரை தீக்ஷாவின் இன்றைய செயலை கண்டு ‘தன் உடன்பிறந்தவளா இப்படி..?’ என்ற அதிர்வில் இருந்த நிகிலனுக்கு இப்போதே அவளின் புரிதலான பேச்சை கண்டு சற்று நிம்மதியானது.


எதிர்பாரா செய்தி சொடுத்த தாக்கமும் அதிர்வும் அவளை இப்படி எதிர்வினையாற்ற வைத்திருப்பதைப் புரிந்துக் கொண்டவன், “சரி விடு தீக்ஷு..” என்றான் சமாதானமான குரலில் நிகிலன்.


இங்கு தமயாவுக்கு மருந்தை கொடுத்து விட்டு உள் அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்ட நிமலனின் மனம் ஒரு நிலையில் இல்லை. தன்னைப் பெற்றவர்களுக்குப் பெரும் துரோகம் செய்து விட்டது போல் ஒரு எண்ணம் அவன் மனம் முழுக்க நிறைந்து அவனை நிம்மதியிழக்க செய்து கொண்டிருந்தது.


“இது ஜெயதேவ்வை கார்னர் செய்யவும், நான் நினைச்சதை செய்து முடிக்கவும், தான் இப்படி ஒரு முடிவை நான் எடுத்தேன் ப்பா.. இதை விட்டா தலைவர் சொன்னது போல என் அரசியல் எதிர்காலமே பாதிக்கபட்டா நான் என்ன செய்வேன்.. இதுக்கா இத்தனை வருஷம் நான் காத்திருந்தேன்.. உங்களுக்கு என்னைப் புரியுது இல்லை ப்பா..?” என்று அங்கிருந்த சாய்வு நாற்காலியில் விழிமூடி சாய்ந்திருந்தவன் தன் மனதோடு போராடிக் கொண்டிருந்தான்.


அவனாலேயே இப்போது அவன் செய்திருக்கும் செயலை மன்னிக்க முடியவில்லை. இதில் பாட்டி மற்றும் தீக்ஷாவின் கோபம் தவறென அவனால் எப்படிச் சொல்ல முடியும்..?


ஓரளவு நிமலனின் மனதை கணித்திருந்ததால் தான் அதைத் தடுக்க நிகிலனும் முயன்றான் என்று புரிந்தாலும் இப்போதும் தமயாவின் மீதான நிகிலனின் அக்கறை நிமலனுக்கு எரிச்சலையே தந்தது.


அதில் வெகுநேரம் அப்படியே விழிகள் சிவக்க அமர்ந்திருந்தவனுக்குச் சற்று முன் தன் வாழ்க்கையைப் பற்றி சூர்யகலா கவலைப்பட்டதும் அதற்கு அவன் அளித்த பதிலும் நினைவுக்கு வர.. வேதனையான முகப்பாவத்துக்கு மாறியவனின், நினைவுகள் எங்கெங்கோ பயணிக்க, மெல்ல எழுந்து சென்று அங்கிருந்த கப்போர்ட்டை திறந்தான்.


இரண்டாம் அடுக்கில் உள் பக்கமாக இருந்த ஒரு சேஃப்பை நம்பர் போட்டு திறந்தவன், அதில் பொக்கிஷமாக இத்தனை வருடங்களாகப் பாதுகாத்து வைத்திருந்த சிறு வெல்வெட் பெட்டியை எடுத்தான் நிமலன். அதை திறந்தவன், உள்ளே இருந்த அந்த ஒற்றைக் கால் தங்க கொலுசை மெல்ல மயிலிறகால் வருடுவது போல் தன் விரலால் வருடி விட்டவன், பின் எங்கே சற்று அழுத்தி எடுத்து விட்டால் கூட அதற்கு வலிக்குமோ என்பது போல் மெதுவாக அந்த கொலுசைக் கையில் எடுத்தான்.


தன் உள்ளங்கையில் வைத்து அதைப் பார்த்தவனுக்குச் சில வருடங்களுக்கு முன் இதை அணிந்து கொண்டு குதித்து ஓடி வந்த மென் பாதங்கள் மனகண்ணில் வந்து நிற்க.. விழிமூடி அந்த நினைவுகளோடு பயணிக்க முயன்றவன், தன் கையில் இருந்த கொலுசை உள்ளங்கையோடு சேர்த்து இறுக்கினான்.

தொடரும்..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தை பதித்து விட்டேன்.. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்..

TNN - 8

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..


இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 
Status
Not open for further replies.
Top