வணக்கம் ப்ரெண்ட்ஸ் !
இதோ 'தர்ஷனா' கதையிலிருந்து ஒரு குட்டி இல்லை ஒரு பெரிய 'டீ'.....
கண்களை மூடி படுத்தவனின் நினைவுகளில் ‘அவளின்’ முகம் அவன் நினைவலைகளை தூண்டியது. முதன் முதலாக ‘அவளை’ அவன் சந்தித்த காட்சி கண்முன் விரிந்தது.
கடல் போல் விரிந்து கிடந்த அந்தக் கல்லூரியில் திருவிழா போல் பருவ வயதிலிருக்கும் ஆண்களும் பெண்களும் அங்கும் இங்கும் கூட்டம் கூட்டமாக அலை மோதினர்.
“ஹே தர்ஷூ” என்று டீனா ஓடி வந்து தர்ஷனாவை கட்டிக் கொண்டாள்.
“ஓ மை புருஷூ” என்று பதிலுக்கு இவளும் டீனாவை கட்டிப் பிடித்துக் கொண்டாள்.
கல்லூரி திறந்து ஒரு வாரம் ஆகிறது ஆனால் டீனா இன்றுதான் கல்லூரிக்கு வருகிறாள். தர்ஷூ என்கிற தர்ஷனாவும், டீனா என்கிற டீனா செபாஸ்டினும் மூன்றாம் ஆண்டு கல்லூரிப் படிப்பிற்கு அடியெடுத்து வைக்கும் கல்லூரி மாணவிகள்.
இவர்கள் இருவரின் நட்பைக் கண்டவர்கள் ‘வந்திட்டாங்க புருஷனும் பொண்டாட்டியும்’ என்று கேலி செய்வார்கள்.
இவர்கள் இருவரின் செயலைக் கண்ட ராதாவும், ஷ்ருதியும் ‘கருமம், கருமம்’ என்று தலையில் அடித்துக் கொண்டனர்.
“இதுங்க ரெண்டும் புருஷன் பொண்டாட்டின்னா நம்ம என்ன இவளுங்க குழந்தைகளா?” என்று ராதா கேலி செய்தாள்.
“என்ன பேபீஸ் பொறாமையா” என்று டீனாவின் கழுத்தை வளைத்துப் பிடித்தவாறே தர்ஷனா அவர்களை நோக்கி நடந்தாள்.
“ஒரு ஆமையும் இல்லை, இன்னைக்கு ஃப்ர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ட்ஸ் எல்லாம் வருவாங்க அவங்க முன்னாடியும் இப்படி நடந்து மானத்தை வாங்காதீங்க” என்று ஸ்ருதி எச்சரித்தாள்.
“ஓ மை காட், நம்ம ஸீனியர்ஸ் ஆயிட்டோம் இல்லை, நான் மறந்தே போனேன்” என்று டீனா வில்லனைப் போல் தாடையை சொரிந்தாள்.
“ஹ ஹ ஹ, நான் மறக்கலை பேபி” என்று டீனாவின் கண்ணத்தை கிள்ளினாள் தர்ஷனா.
“எதுவா இருந்தாலும் அடக்கி வாசிங்க, போன வருஷம் இதே மாதிரி ஸீனியர்ஸ் ஆயிட்டோம்னு ராகிங் செய்யலாம்னு ஆட்டம் கட்டி அந்த டெரர் கிட்ட மாட்டினது ஞாபகம் இருக்கும்னு நினைக்கிறேன்” என்று ராதா அவர்களுக்கு கடந்த காலத்தை நினைவூட்டினாள்.
“யெஸ் யெஸ், அதுதான் இந்த வருஷம் நம்ம லொகேஷனை மாத்திட்டேன்” என்ற தர்ஷனாவிடம் “எங்க?” என்று மற்ற மூவரும் ஒன்றுசேர கேட்டனர்.
“வெயிட் ஆண்ட் ஸீ, ஜஸ்ட் ஃபாலோ மீ” என்று அவள் முன்னே நடக்க மற்ற மூவரும் இவள் எங்கே அழைத்துச் செல்கிறாள் என்று ஆவலுடன் அவள் பின்னே சென்றனர்.
சிறிது தூரம் நடந்தவள் “திஸ் ஈஸ் அவர் லொகேஷன்” என்று வாகனம் நிறுத்தும் இடத்தை கை காட்டினாள்.
மற்ற மூவரும் ஒன்று சேர்ந்து ‘அட ச்சீ’ என்று ஒன்றாக காரித் துப்பினர்.
“சில்லி கேர்ள்ஸ், மூன்று பேருக்கும் ஒன்னா கபம் கட்டிகிச்சா?அந்த பக்கம் போய் துப்பிட்டு வாங்க” என்று கிண்டலடித்தாள்.
“அறிவு கெட்ட தர்ஷூ, பார்க்கிங் ஏரியாவில் ராகிங்… முதல் நாளே வண்டியில் வருவது எல்லாம் சாத்தியமே இல்லை அதைவிட முக்கியம் முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசம் கண்டு ராகிங் செய்வதுதான். டூ மெனி சேலஞ்சஸ் யூ நோ” என்று ஏமாற்றத்தை வெளிப்படுத்தினாள் டீனா.
“கேர்ள்ஸ், இது தான் ரொம்ப சேஃப் ஆன இடம். ஓடவும் வேண்டாம், ஒளியவும் வேண்டாம்” என்று தர்ஷனா முடிப்பதற்குள் ”இந்த இடமே ஒளிஞ்சிருக்கிற மாதிரி தான் இருக்கு இதுல எங்க போய் ஓளியறது” என்று டீனா சலித்துக் கொண்டாள்.
“ஸீ, உங்க கேள்விகளுக்கு என்கிட்ட பதிலிருக்கு. நம்ம இப்ப மூன்றாவது வருடத்திற்கு அடி எடுத்து வெச்சிருக்கிறோம் அப்போ நம்ம ராகிங் கொஞ்சம் ஸ்டேண்ட்ர்டா இருக்கனும் சோ நம்ம வரவன் போரவளையெல்லாம் ராகிங் செய்யப் போவதில்லை. இவ்வளவு பெரிய காலேஜில் டீ வீலர், போர் வீலரில் குறைந்தது பத்து ஃபர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ட்ஸாவது வராமல் இருப்பாங்களா?” என்று மற்றவர்களைப் பார்த்தாள். அவர்களின் முகம் இன்னும் தெளிவடையவில்லை.
“ஓ.கே, ஃபர்ஸ்ட் இயர்னு எப்படி கண்டு பிடிப்பதுன்னு தானே உங்க சந்தேகம்”
‘ஆம்’ என்பது போல் மூவரும் தலையாட்டினர்.
“வெரி சிம்பிள், கழுத்தில் தாலி இல்லாமல் வரும் அனைவரையும் ஒரு ரவுண்டு கட்டறோம். எப்படி?” என்று இல்லாத காலரை தூக்கி விட்டுக் கொண்டாள் தர்ஷனா.
“ஒருவேளை சீனியர்ஸ் யாராவது தாலியை மறந்து வந்திருந்தால்?” என்று ராதா தன் சந்தேகத்தைக் கேட்டாள்.
“ஸீ, ஒன்னு ரெண்டு ட்ரை செய்து பார்ப்போம், சக்ஸ்ஸுன்னா கண்டின்யூ பண்ணுவோம் இல்லைன்னா வேற லொகேஷன்” என்று சாதாரணமாக சொல்லி முடித்தாள்.
’சரி’ என்பது போல் அனைவரும் சம்மதித்தனர்.
“சியர் அப் கேர்ள்ஸ், முயற்சி செய்து தோற்றால் அந்த தோல்விக்கு டேஸ்ட் ரொம்ப அதிகம்” என்று ஏதோ சொல்ல முயற்சித்தால் தர்ஷனா.
“இதுக்கொன்னும் குறைச்சல் இல்லை” என்று ஸ்ருதி தலையில் அடித்துக் கொண்டாள்.
“ஓ.கே பொஷிஷன்” என்றதும் மற்ற மூன்று பேரும் முழித்தனர்.
“சாரி கேர்ள்ஸ், நேற்று பார்த்த படத்தின் தாக்கம் நான் என்னை ஒரு கமேண்டோன்னு நினைச்சிட்டேன் ஹி ஹி ஹி..” என்று தனது முப்பத்திரண்டு பல்லையும் காட்டினாள்.
"சரி சரி நானும் டீனாவும் இடது பக்கம் போறோம், ராதாவும் ஸ்ருதியும் வலது பக்கம் போங்க. உங்களுக்கு யாராவது கிடைச்சா ஜஸ்ட் ஒரு கால், வி வில் பீ தேர் அண்டர்ஸ்டாண்ட்?”
“யெஸ் சார்” என்று சல்யூட் செய்துவிட்டு மற்ற இருவரும் நடக்கத் தொடங்கினர்.
“கண்டிப்பா ராகிங் செய்தே ஆகனுமா தர்ஷ்?” என்று டீனா கவலையாக கேட்டாள்.
”வாட் புருஷ், பீ போல்ட். ஒரு ராகிங் கூட லைஃப்ல உருப்படியா செய்யலைன்னா என் மனசு சமாதானம் ஆகாது. போன வருஷம் அந்த டெரர் கிட்ட மாட்டினது எனக்கு அவமானமா போச்சு. அப்பவே நான் ஒரு தீர்மானம் செய்தேன்” என்றவளை யோசனையாக டீனா பார்த்தாள்.
“இந்த வருஷம் அந்த டெரர் கிட்ட மாட்டாம ஒரு தரமான ராகிங் செய்யனும்னு. வெளியில் நமக்கு எதிரிங்க நிறைய அதான் இந்த அண்டர்கிரவுண்ட் ஆப்பரேஷனை தேர்ந்தெடுத்தேன்” என்று பரம்பரை அதோலோக தாதாவைப் போல பேசினாள்.
இதனைக் கண்ட டீனா, தாதாவை தாத்தா போன்று கற்பனை செய்து சிரித்தாள். டீனாவின் சிரிப்பிற்கான காரணத்தை கேட்டறிந்தவள் தாலி என்று சொல்லப்படும் ஐடி கார்டால் அடித்துக் கொண்டே “நான் தாத்தாவா…நான் தாத்தாவா…சொல்லுடி” என்று துரத்திக் கொண்டே நடந்தாள்.
டீனா திடீரென்று தன் நடையை நிறுத்தினாள். அடி வாங்கிக் கொண்டே நகராமல் நின்ற டீனாவைப் பார்த்த தர்ஷனா அவளின் பார்வை சென்ற திசையைப் பார்த்தாள்.
“வாவ், நமக்கு அடிமை சிக்கிடிச்சு, வெரி குட் டீனா” என்று அவளது கையை பிடித்து குளுக்கினாள்.
முன்னே செல்ல நினைத்த தர்ஷனாவை பின்னுக்கு இழுத்த டீனா “எனக்கு எதுவோ சரின்னு படலை, ஆளு வளர்ந்திருக்கிறான் பார்த்தால் முதலாம் ஆண்டு போல தெரியலை, எதுக்கும் விசாரிச்சுட்டு செய்வோம்” என்று எச்சரித்தாள்.
சுற்றி முற்றி பார்த்த தர்ஷனா “அவன் ஆளு சூப்பரா இருக்கான் புருஷ், என்னோட தரமான சம்பவத்துக்கு இவன் தான் சரி. அவன் கழுத்தில் தாலியைக் காணோம். இடத்துக்கு புதுசு மாதிரிதான் தெரியுது. அவனைப் பார் ஸ்டூடண்ட்ஸ் சைடு இந்த பக்கம் இருக்கு அவன் ஸ்டாஃப்க்கு ஒதுக்கி இருக்கிற இடத்தில வண்டியை நிறுத்தரான். காம்பிளான் பாய்னு நினைக்கிறேன்” என்றவளை புரியாமல் பார்த்தாள் டீனா.
“அதாண்டி, சின்ன வயசில் நிறைய காம்பிளான் குடிச்சு இப்படி வளர்ந்து கெட்டிருக்கான், வா நமது விளையாட்டை ஆரம்பிக்கலாம்” என்று டீனாவை இழுத்துக் கொண்டு வண்டியை நிறுத்திக் கொண்டிருக்கும் ‘அவன்’ இருக்கும் இடத்தை அடைந்தனர்.
அவன் வண்டி நிறுத்துவதை தள்ளியிருந்து தனது மொபைலில் படம் பிடித்தாள். அருகிலிருந்த ஒரு வண்டியின் மேல் சாய்ந்து நின்று கொண்ட டீனாவும் தர்ஷனாவும் அவன் வண்டியை நிறுத்திவிட்டு வருவதற்காகக் காத்திருந்தனர். வண்டியை நிறுத்திவிட்டு கையில் புத்தகத்தை எடுத்துக் கொண்டு நடந்து வருபவனை சினிமாவில் வில்லன்கள் வழி மறித்து நிற்பது போல அவன் வழியில் குறுக்கே சென்று நின்றனர்.
யோசனையுடன் இவர்களைப் பார்த்தவனை “என்ன ஃபர்ஸ்ட் டே ஆ?” என்று தெனாவெட்டாக தர்ஷனா கேட்டாள்.
“ஆம்” என்று தலையாட்டியவனை கண்ட தர்ஷனாவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது, இத்தனை வாட்ட சாட்டமாக இருக்கும் ஒரு ஆண் தங்களிடம் இவ்வளவு பவ்யமாக பதிலளிப்பதை நினைத்து.
“அதான் பார்த்தாலே தெரியுது, எந்த டிபார்ட்மெண்ட்?” என்று மேலும் தொடர்ந்தாள்.
”ஐ.டி”
“ஓ நம்ம டிபார்ட்மெண்ட், எந்த ஊரு?”
“இதே ஊருதான்”
“ஊரும் நம்ம ஊரு, அப்ப வசதியாப் போச்சு”
“என்ன வசதி?”..
“அதெல்லாம் போகப் போக தெரியும், இந்த காலேஜின் முதல் சட்டம் என்னன்னு தெரியுமா?”
“தெரியாது”
“சீனியர்ஸை ஜூனியர்ஸ் கேள்வி கேட்கக்கூடாது”
“ஓ” என்றவனின் வளர்சியை கிண்டலடிக்கும் பொருட்டு
“சின்ன வயசில் நிறைய காம்ப்ளான் குடிச்சியா?”
“புரியலை”
“இப்படி ஏகத்துக்கும் வளர்ந்திருக்கியே அதான் கேட்டேன்” என்று கூறிவிட்டு டீனாவைப் பார்த்து சிரிக்கத் தொடங்கினாள்.
தர்ஷனா என்ன செய்ய நினைக்கிறாள் என்று புரியாமல் டீனா முழித்தாள். ராகிங் செய்யலாம் என்று பேசினார்கள் ஆனால் என்ன செய்வதென்று முடிவெடுக்கவில்லையே என்று யோசித்தாள்.
“நீங்க எந்த டிபார்ட்மெண்ட்?” என்று அவன் பதிலுக்கு கேட்டான்.
“தோ பாருடா, சீரியர்ஸ்தான் ஜூனியர்ஸை கேள்வி கேட்கனும்னு இப்பதானே சொன்னேன், நீ இன்னும் எங்களை கேள்வி கேட்கிற அளவிற்கு வளரலை, என்ன புரியுதா?” என்று அவனை மேலும் கீழும் பார்த்து வைத்தாள்.
“ஐ ஸீ” என்று இழுத்தான்.
அவனின் பதிலில் டீனாவிற்கு ஏதோ விபரீத விளையாட்டென்று தோன்றியது.
அவன் தனது கை கடிகாரத்தில் மணியைப் பார்த்தான். “என்ன சீனியர்ஸ் முன்னாடி நிக்கிறோம்னு பயமே இல்லாம டைம் பார்க்கிற”
“லேட் ஆச்சு, நீங்க கிளாஸுக்கு போகலையா?”
“பாருடா, மறுபடியும்….சரி சரி எங்களை எதிர்த்து மூன்று கேள்வி கேட்டிருக்க அதுக்கு தண்டனையா முட்டி போட்டு, இனிமேல் சீனியர்ஸை கேள்வி கேட்க மாட்டேன்னு மன்னிப்பு கேட்டுகிட்டு கிளம்பு” என்று நேரமாவதை உணர்ந்து சமாளித்தாள் தர்ஷனா.
டீனா தர்ஷனாவின் கையை அமர்த்தி வேண்டாம் என்று தலையாட்டினாள். தர்ஷனாவோ டீனாவிடம் திரும்பி ’எப்படி’ என்பது போல் தன்னைத்தானே மெச்சிக் கொள்ளும் பார்வை பார்த்தாள்.
“மன்னிப்பு கேட்கலைன்னா”
.........
கவிஸ்ரீ