பகுதி - 2
அதிகாலையில் போர்வையை தலை வரை இழுத்து போர்த்தி கொண்டு ஆழ்ந்த உறக்கத்தில் நிலா இருக்க, அவளை எழுப்ப அறைக்கு சென்றான் பகலன்..
"இவளை எழுப்பறதுக்கே ஒரு வேளை என்னைய பெத்துருப்பாங்களோ!" என்று தீவிரமாக யோசித்து கொண்டே, "நிலாமா எந்திரிமா வாக்கிங் போகனும் இல்லைனா உன்னைய பெத்தவரு வந்து கத்த ஆரம்பிச்சா இந்த நாள் உருப்பட்ட மாதிரி தான்" என்று பாவமாக சொல்லியபடி அவளை எழுப்ப, அவளோ இன்னும் போர்வையை தலை வரை இழுத்து போர்த்தி கொண்டு திரும்பி படுத்து கொண்டாள்..
பகலன் கடுப்புடன், "அடியேய் பிசாசே!! எந்திரிச்சு தொலை!! வாக்கிங் போகனும்" என்று அவளை போட்டு உலுக்கியதும், போர்வையை விலக்கி அவனை பார்த்த நிலா, "என்னைக்காவது நீ சிரிச்சுகிட்டே என்னைய எழுப்பிருக்கியா?? நீ இப்படி சிடுசிடுனு மூஞ்சியை வெச்சிட்டு என்னைய எழுப்பற நாளா தான் தினமும் இந்த ஹிட்லர்கிட்ட நான் திட்டு வாங்கறேன்!!" என்றபடி பாத்ரூமுக்குள் ஓடி விட்டாள்..
"இது என்னடா புது புரளியா இருக்கு.. நான் கத்தற நாளா தான் இவ தினமும் இந்த ஹிட்லர்கிட்ட திட்டு வாங்கறாளா??" என்று முழித்தபடி நின்றிருந்தான்...
தன்னை சுத்த படுத்தி கொண்டு வெளியில் வந்த நிலா, "பகலன் சார் வாக்கிங் போகனும் போலாமா??" என்று நல்ல பிள்ளையாய் கேட்க, அவளை முறைத்து விட்டு பகலன் வெளியில் செல்ல, சிரித்தபடி நிலாவும் அவன் பின்னே சென்றாள்..
இருவரும் தினமும் காலையில் வாக்கிங் செல்ல வேண்டும் என்பது ராசுவின் எழுதப்படாத கட்டளை.. தினமும் பகலன் தான் நிலாவை எழுப்பி வாக்கிங் அழைத்து கொண்டு செல்வதற்குள் ஓய்ந்து விடுவான்..
இருவரும் நடைபயிற்சி முடித்து விட்டு வீட்டிற்குள் நுழைய, அவசரமாக கிளம்பி கொண்டிருந்தார் ராசு.... யோசனையுடன் தன் அத்தையிடம் சென்ற நிலா மெதுவாக, "அத்தை இந்த ஹிட்லர் எதுக்கு இவ்வளவு அவசரமா கிளம்பிட்டு இருக்காங்க??" என்று கேட்க, " கட்சி அலுவலகத்துக்கு வர சொல்லிருக்காங்கனு சொன்னாங்கடா... அதுக்கு தான் இந்த அலப்பறை!!.." என்று சிறிது நக்கலுடன் வனிதா சொல்ல, பகலன் தான் இருவரையும் முறைத்து "நீங்க எல்லாம் திருந்தவே மாட்டிங்க" என்றபடி அறைக்கு செல்ல , "திருந்துனா என்ன அவார்டு தர போறீங்களோ???" என்றனர் இருவரும் நக்கலுடன்...
நிலா கிளம்பி வருவதற்குள் ராசு சென்று விட, "ஹப்பாடா!! இப்பதான் வீடு வீடு மாதிரி இருக்கு" என்று சத்தமாக கூறியபடி துள்ளி குதித்து கொண்டே கீழே வந்தாள்.. இதனை கேட்ட செல்வி, "அப்ப இத்தனை நாள் எப்படி இருந்துச்சாமா??" என்று முறைக்க, "தெரியாம தான் கேட்கறேன் வீட்டுக்குள்ள இருக்கறப்ப சத்தமா பேச கூடாது.. சிரிக்க கூடாது.. தூங்க கூடாது.. எதுவுமே பண்ண கூடாதுனு சொன்னா எப்படி?? அப்படியே பொம்மை மாதிரியே மனுசன் இருக்க முடியுமா?? உன் புருசன் தான் அப்படி இருக்காருனா நம்மளும் அப்படியே இருக்க முடியுமா??" என்றாள் சலித்து கொண்டே..
"ஆமா பாரு மாமா சொன்னதும் அப்படியே சரினு தலையாட்டி அமைதியா இருந்த மாதிரி பேசற?? மாமா இப்படி இருந்தும் உன்னைய சமாளிக்க முடில இதுல செல்லம் குடுத்தா உன்னைய கைல பிடிக்க முடியுமா??" என்றபடி சட்டை கையை மடித்து கொண்டு பகலன் கீழே வர, அவளோ குறும்பாக "கைல பிடிக்க முடிலனா காலுல பிடிச்சுக்கோங்க மாமா" என்று இழுக்க, அவளின் "மாமா" என்ற அழைப்பில் பகலனுக்கு புரை ஏறியது..
"அய்யோ இந்த லூசு ஒரு மார்க்கமா தான் சுத்துது போல! நம்மதான் தெரிய தனமா இவகிட்ட மாட்டிக்கிட்டோமோ??" என்று நொந்தவன் சாப்பிட்டு முடித்ததும் இருவரும் அலுவலகத்திற்கு கிளம்பினர்..
கட்சி அலுவலகத்தில் இந்த தடவை தேர்தலில் இந்த தொகுதியில் யார் நிற்பது என்று ஆலோசிக்கவே இந்த அவசர கூட்டம்.. இந்த தொகுதியில் வெற்றி பெற்றதே தங்களால் தான் அதனால் தங்களுள் ஒருவர் தான் நிற்க வேண்டும் என்று ராசுவின் தரப்பிலும், திறமையுள்ளவர்கள் தான் தான் நிற்க வேண்டும் என்று மற்றொரு தரப்பிலும் வாதம் செய்ய, அவர்களின் தலைவரோ இதையை யோசித்து முடிவு செய்து கொள்ளலாம் என்று அந்த வாதத்தை அப்போதைக்கு முடித்து வைத்தார்..
இருந்தும் ராசுவின் தரப்பினர் இந்த தடவையும் ராசு தான் இந்த தொகுதியில் நிற்பார் என்று மற்றொரு தரப்பினரிடமும் சண்டை இழுக்க, அவர்களும் இவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை போல் வாதம் செய்ய, வாய் சண்டை முற்றி ராசுவின் அடியாள் ஒருவர் எதிர் தரப்பினரை அடித்து விட, அவர்களும் இவர்களை அடிக்க, அங்கு ஒரு கலவரமே நடந்தது..
இதை அறிந்து இவர்களின் தலைவர் வந்து இருவரையும் பிரித்து விட்டு, "நான் இன்னும் எதுவுமே முடிவு பண்ணல! அதுக்குள்ள என்ன அவசரம் முதல்ல இங்க இருந்து போங்க!!" என்று கோவத்தில் கத்தியதும் தான் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் முறைத்து கொண்டே நகர்ந்தனர்..
ராசு நகர்ந்ததும், அவரின் எதிர் தரப்பினர் கோபாலு தன் அடியாளிடம், "ஒவ்வொரு தடவையும் இந்த ராசு நம்மளைய அவமான படுத்தறதையே வேலையா வெச்சிருக்கான்.. இவன் கிட்ட பணம் இருக்குனு என்ன வேணாலும் செய்யலாம்னு நினைச்சிருக்கான் போல.. இவனை சும்மா விட கூடாது!!" என்று ஆத்திரத்தில் சொன்னவரை அமைதிபடுத்திய அடியாள், "தலைவரே நீங்க எப்ப இப்படி சொல்லுவீங்கனு தான் நாங்க எதிர்பார்த்துட்டு இருந்தோம் நம்ம யாருனு அவனுக்கு காட்டனும் உயிர் பயம்னா என்னனு அவனுக்கு தெரியும் இப்பவே நம்ம ஆளுகளை போக சொல்லட்டுமா??" என்று வெறியுடன் கேட்டதும், கோபாலும் தலையசைத்ததும் அடியாள் யாருக்கோ போன் செய்தபடி நகர்ந்தான்..
காரில் சென்று கொண்டிருந்த ராசுவும் தன் பக்கத்தில் அமர்ந்திருந்த தன் அடியாளிடம் கோபாலை திட்டி கொண்டே வர, அவரின் காரின் முன்னே இரண்டு கார்கள் புழுதியை கிளப்பி கொண்டு வந்து வழி மறித்தது.. உச்சகட்ட கோவத்தில் ராசுவோ "எவன்டா இது?? உனக்கு போகறதுக்கு வழியா இல்லை இப்படி கொண்டு வந்து நிறுத்திருக்க??" என்று கத்தியதும், "நீங்க அமைதியா இருங்க நாங்க பார்க்கறோம் டேய் என்னனு பாருங்கடா" என்று அவரின் அருகில் அமர்ந்திருந்த ஒருவன் தங்களின் அடியாட்களிடம் சொல்ல, அவர்களும் இறங்கினார்..
"யாருடா நீ?? தள்ளி போங்கடா" என்று ரவுடிகள் அவர்களை தள்ளி விட முயல, "முதல்ல நீ யாருடா?? உனக்கு உயிர் பயம்னு ஒன்னு இருந்தா இப்படியே திரும்பி பார்க்காம ஓடிரு" என்று கோபாலின் அடியாட்களும் அவர்களிடம் எகிறினர்..
எதற்கெடுத்தாலும் சண்டை சச்சரவில் தலையை நுழைத்து கொண்டிருந்த கோபாலின் அடியாட்களின் அடியை தாங்க முடியாமல் ராசுவின் அடியாட்கள் அவர்களின் அடியை வாங்கி கொண்டு கீழே கிடந்தனர்..
ராசுவை சுற்றி வளைத்தவர்கள் கிண்டலுடன், "கீழே இறங்குங்க தலைவரே!! இல்ல அப்படியே பெட்ரோல் ஊற்றி காரை எறிக்கட்டுமா??" என்று நக்கலாக கேட்டவனை, மூக்கு விடைப்புடன் முறைத்து கொண்டே கீழே இறங்கிய ராசு, "எவன்டா உங்களைய அனுப்புனது??" என்றார் தனக்கே உரிய கர்ஜனையுடன்..,
"ஹான் எங்க தாத்தா ஏன் அவருக்கு துணையா நீயும் மண்ணுக்குள்ள போறீங்களா??" என்று கேலியுடன் கேட்டவனை எட்டி உதைத்த ராசு, வேட்டியை மடித்து கட்டி கொண்டு நெஞ்சை நிமிர்த்தியபடி அவர்களை பார்த்தார்...
"என்னங்கடா இந்த பூச்சாண்டி வேலை எல்லாம் இந்த ராசு கிட்ட செல்லாது.. எவன் என்னைய கொல்ல அனுப்புனானோ அவன் கிட்ட போய் சொல்லுங்க இந்த ராசுவை யாரும் எதுவும் பண்ண முடியாதுனு" என்று கோவத்தில் கண்கள் சிவக்க கத்தியவரிடம், "அதையும் பார்ப்போம்.. நீங்க என்னடா இன்னும் வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க?? அவனை போட்டு தள்ளுங்கடா" என்று ராசுவிடம் உதை வாங்கியவன் கத்த, வந்திருந்த அடியாட்கள் அனைவரும் சுற்றி வளைத்து ராசுவை அடிக்க, தன்னால் முடிந்து வரை ராசுவும் அவர்களை சமாளித்தவர், ஒரு கட்டத்தில் அவர் அசந்த நேரம் பார்த்து அவர் தலையில் கட்டையால் ஒருவன் அடித்து விட, தலையை பிடித்து கொண்டு கீழே சரிந்தார் ராசு.. .
"என்ன சொன்னே இந்த ராசுவை எதுவும் பண்ண முடியாதா?? ஹஹஹஹ இப்ப உன்னையவே என் காலடியிலே விழுக வெச்சுட்டேன்" என்று அவரிடம் உதை வாங்கியவன் அவரை காலால் உதைத்தபடி நக்கலாக சொல்ல, தன்னால் முடிந்தவரை அவனை தள்ளிவிட்ட ராசு எழுந்து அமர்ந்து தன் தலையை தொட்டு பார்க்க ரத்தமாய் இருந்தது..
"நீ தனியா நின்னு என்னைய இப்படி அமர வெச்சிருந்தேனே நானே உன்னைய பாராட்டிருப்பேன்.. ஆனா நீ இத்தனை பேரு கூட நின்னு என்னைய ஜெயிச்சிருக்கீயே வெக்கமா இல்ல???" என்று திக்கி திணறி நக்கலுடன் கேட்டவரை, ஒருவன், "உன்னைய எல்லாம் இன்னும் உயிரோட விட்டு பேசிட்டு இருக்கேன் பாரு என்னைய சொல்லனும்.." என்று விட்டு மீண்டும் அவரை கட்டையால் அடிக்க போக, எங்கிருந்தோ இன்னொரு கட்டை பறந்து வந்து அவன் கையில் பிடித்திருந்த கட்டையை கீழே தள்ளியது...
இதில் அனைவரும் திரும்பி பார்க்க, முறுக்கேறிய உடம்புடன், கோவத்தில் நரம்புகள் புடைத்திருக்க, முறைப்பான பார்வையில் அவர்களை பார்த்து கொண்டிருந்தான் ஒரு இளைஞன்.. அவன் அருகில் மற்றொரு இளைஞனும் கெத்தாக நின்றிருப்பதாக நினைத்து கால்கள் நடுங்கியபடி நின்றிருக்க, இவன் யார்?? என்ற ரீதியில் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்...
"யாருடா நீ?? உனக்கு இங்க என்ன வேலை?? முதல்ல இங்க இருந்து கிளம்பு" என்று ஒரு ரவுடி அவனை தள்ளி விட நினைத்து நெஞ்சில் கைவைத்து தள்ள போக, அவன் கையை பிடித்த அந்த இளைஞன், , "ஹான் என்ன சொன்னே?? இங்க ஒருத்தரை நீங்க கொலை பண்ணுவீங்க நாங்க அப்படியே கண்டுக்காம போகனுமா?? அது எல்லாம் மனசாட்சி இல்லாத மிருகங்கள் பண்ற வேலை?? நாங்களும் இங்க மனுசங்கள் தான்.. என்னதான் ஒருத்தர் தப்பு பண்ணுனாலும் அவரை தண்டிக்கற உரிமையை உங்களுக்கு யாருடா குடுத்தது??" என்று கேட்டு கொண்டே அவன் கையை முறுக்கி பிடிக்க, அவனோ வலி தாங்க முடியாமல் கத்தினான்..
ராசுவை விட்டு விட்டு இவனை அடிக்க வர, பிடித்திருந்தவனை ஒரு மிதிமிதித்து தூக்கி எறிந்து விட்டு, தன்னை அடிக்க வந்தவர்களின் நெஞ்சிலயே எட்டி மிதிக்க அவர்கள் தூரமாய் சென்று விழுந்தனர்...
மற்றவர்களும் அவனை சுற்றி வளைத்து கையில் கட்டையுடன் அவனை தாக்க முயல, அந்த இளைஞனோ முறுக்கேறிய தன் உடம்பை லாவாக வளைத்து அவர்களிடம் இருந்து தப்பித்து அவர்களை பந்தாட , இவனின் அதிரடியில் ராசு கூட "இவன் யாருடா??" என்ற ரீதியில் கண்ணை இமைக்க கூட மறந்திருந்தார்..
கால்கள் நடுங்கியபடி நின்றிருந்த இளைஞனையும் ஒருவன் அடிக்க வர, அவனோ அவனிடம் சிக்காமல் தள்ளி நின்றவன்,, "இங்க பாரு உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அப்பறம் எதுக்கு என்னைய நீ அடிக்க வர்றே??" என்று யோசனையுடன் கேட்டவனிடம், "நான் அடிக்க வர்றது இருக்கட்டும் இப்ப நீ ஏன் டேன்ஸ் ஆடிட்டு இருக்க?? ஒழுங்க நின்னு தொலை பரதேசி" என்று அடியாள் கடுப்புடன் சொல்ல, "ஹிஹிஹிஹி அதுவா?? நான் டேன்ஸ் கிளாஸுக்கு போய்ட்டு இருக்கேனா.. அதான் ப்ராட்டிக்கல் பண்ணிட்டு இருக்கேன் நீங்களும் வரீங்களா?? சேர்ந்தே ஆடலாம்" என்று ஆடி கொண்டே கேட்டவனை அந்த ரவுடி மேலிருந்து கீழே வரை பார்த்தான்..
"நீங்க அவன்கிட்டயே போய் சண்டை போடுங்க பாஸ்.. நான் பாட்டுக்கு வேடிக்கை பார்க்கறேன் உங்களுக்கும் அவனுக்கும் தானே இப்ப சண்டை" என்று கை கால்களை அசைத்தபடி கூறியவனை அடிக்க போக, அவனோ "அய்யோ காலுக்கடில என்னமோ பாருங்க" என்றான் பதறியபடி..
அதை உண்மை என்று நம்பிய ரவுடியும் கீழே குனிந்த சமயத்தில் மறைத்து வைத்திருந்த கட்டையால் அவன் மண்டையில் ஒரு போடுபோட்டு எட்டி உதைத்ததும் வெளுத்து வாங்கி கொண்டிருந்த இளைஞனின் காலடியில் விழுந்தான்..
அந்த இளைஞனும் காலடியில் விழுந்தவனை தூக்கி மறுபடியும் ஒரு உதை விட, முதலில் அடித்த இளைஞனின் காலடியில் நெஞ்சை பிடித்தபடி விழுந்தான்..
முறுக்கேறிய உடம்புடன் இருந்தவனை சமாளிக்க முடியாமல், கோபாலின் அடியாட்கள் எழுந்து ஓடி விட, இடுப்பில் கை வைத்தபடி ஓடிய அடியாட்களை பார்த்திருந்தவனின் தலையில் பின்னால் இருந்து ஒருவன் அடிக்க வருவதை பார்த்த மற்றொரு இளைஞன், "வேந்தா" என்று கத்தினான் பயத்தில்..
அவன் கத்தலில் திரும்பிய வேந்தன் தன்னை அடிக்க வந்தவனை கண்ணை சுருக்கி என்னவென்று பார்க்க, கட்டையை தூக்கி எறிந்து விட்டு விட்டால் போதும் என்று ஓடியே விட்டான்..
"என்னடா இங்க என்னமோ நாடகம் நடக்கற மாதிரி உக்காந்து பார்த்துட்டு இருக்கே??" என்று வேந்தனும் அவன் அருகில் கால்களை பிடித்து கொண்டு அமர, "அதுவா ப்ரோ எனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லையல்ல அதான்" என்று அவனுடன் ஒட்டி பிறந்த சகோதரனான செழியன் பல்லை காட்டி சமாளித்தவனை கண்டு கொள்ளாமல் ராசுவை ஆராய்ந்தான்..
அவரோ காரில் சாய்ந்தவாறு தலையை பிடித்து அமர்ந்திருக்க, வேகமாக அவரிடம் சென்ற வேந்தன் அவரை தூக்க போக, அவரோ கை நீட்டி தடுத்து, "நானே எந்திரிச்சுக்கறேன்" என்று விட்டு தட்டுதடுமாறி எழுந்தவர் கார் கதவை திறந்து அமர்ந்தார்.. அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து முகத்தை கழுவி, சிறிது குடித்து தன்னை மீட்டு கொண்டு வேந்தனை பார்த்தார்..
"உனக்கு கார் ஓட்ட தெரியுமா??" என்று ராசு கேட்டதும், "ம்ம்ம்ம் எங்க போகனும்னு சொல்லுங்க" என்று விட்டு அடுத்து என்ன சொல்ல வருகிறார் என்பதை கூட கேளாமல் டிரைவர் சீட்டில் ஏறி அமர்ந்தவன், "செழியா பைக்கை எடுத்துட்டு வந்துருடா.. " என்றதும் செழியனும் தலையசைத்தான்..
ராசுவுக்கு இது பிடிக்கவில்லை என்றாலும் இப்போதைக்கு வேறு வழியில்லை என்று அமைதியாகி தன் வீட்டு முகவரியை சொன்னார்.. வேகமாக காரை செலுத்திய வேந்தனும் அடுத்து பதினைந்து நிமிடத்தில் அவரின் வீட்டின் முன்னே காரை நிறுத்தினான்..
கீழே இறங்கிய வேந்தவன் ராசுவை தூக்க வர, இப்போதும் அவர் தடுத்து, "நீ போய் உள்ள இருக்கறவங்களைய வர சொல்லு" என்று மட்டும் கூற, ஏன் இப்படி சொல்கிறார் என்று புரியாமல் வேந்தனும் உள்ளே இருந்தவர்களிடம் விபரத்தை சொன்னதும் பதறி கொண்டு ஓடி வந்து ராசுவை கை தாங்கலாக அழைத்து சென்றனர்..
ராசு அடிப்பட்டு வருவதை பார்த்த செல்வி பதைபதைத்தவாறு அவரிடம் வந்து என்னவென்று கேட்க, அவரோ ஒன்றுமில்ல என்று ஷோபாவில் அமர்ந்தார்.. சிறிது நேரத்தில் அழைத்திருந்த மருத்துவரும் வந்து ராசுவை பரிசோதித்து விட்டு காயத்திற்கு மருந்து வைத்து கட்டு போட்டு விட்டு சென்றார்..
இதை அனைத்தையும் வனிதா பார்த்து கொண்டிருந்தாலும் அவரிடம் நலம் விசாரிக்கவில்லை.. வனிதா அவரிடம் திருமணத்திற்கு முன்பு பேசியது ஏதாவது அவரிடம் சொல்ல வேண்டுமென்றாலும் செல்வி மூலமாக தான் சொல்லுவார்... இப்போதும் கூட நடப்பதை மட்டுமே பார்வையாளராக பார்த்து கொண்டு நின்றிருந்தார்..
படுத்திருந்தவர் திடீரென்று எழுந்து தனக்கு துணையாக இருந்த தன் வேலையாளிடம், தன்னை அழைத்து வந்தவர்களை பற்றி விசாரிக்க சொல்ல, அவரும் "இதோ போறேன் ஐயா" என்றார் பவ்யமாக..
வெளியில் வந்தவர் இருவரையும் தேடி அவர்களிடம் சென்று "தம்பி" என்று அழைக்க, திரும்பிய வேந்தவன் என்னவென்று பார்த்தான்..
"நான் இங்க பத்து வருசத்துக்கு மேல வேலை செய்யறேன் என் பேரு மயில்சாமி தம்பி" என்று தன்னை அறிமுகப்படுத்தி கொண்டதும் வேந்தன் சிரித்து, "அவரு இப்ப எப்படி இருக்காங்க எந்த பிரச்சனையும் இல்ல தானே???" என்று கேட்டவனுக்கு இல்லையென்று தலையசைத்தவர், தயக்கத்துடன் "உங்களைய பத்தி ஐயா விசாரிச்சிட்டு வர சொன்னாங்க" என்றார்..
இதை கேட்டதும் வேந்தன் ஏதோ யோசிக்க, அவன் என்ன சொல்ல போகிறான் என்ற ஆர்வத்தில் செழியன் அவனை பார்த்திருந்தான்.. அவரை பார்த்த வேந்தன், "எங்களைய பத்தி சொல்ல அப்படி ஒன்னுமில்லை.. எங்களுக்கு தாத்தா மட்டும் தான்.. படிச்சிட்டு வேலை இல்லாம ஏதாவது வேலை கிடைக்குமோனு இங்க வந்து ரெண்டு மாசம் ஆகுது.. இன்னும் வேலைதான் கிடைச்ச பாடில்லை.." என்றவனை அதிர்ந்து பார்த்தான் செழியன்..
மயில்சாமியும் இதை ராசுவிடம் கூற, அவர் யோசித்து "அவங்களுக்கு வேலை நான் தர்றேன்.. இங்க வேலை பார்க்கறதுக்கு அவங்களுக்கு சம்மதமானு கேட்டு சொல்லு " என்றதும், மயில்சாமியும் அவர் சொன்னதை அப்படியே வேந்தனிடம் சொன்னார்..
"தம்பி ஐயாவுக்கு அந்தஸ்து ரொம்ப முக்கியம்பா.. அவரை விட உயர்வா இருக்கறவங்களைய மட்டும் தான் வீட்டுக்குள்ள விடுவாரு... மத்தவங்க யாரையும் தொட கூட விட மாட்டாரு.. அதனால தான் நீங்க அவரை தூக்க வந்தப்ப கூட உங்களைய தொட விடல.. இதைய சொல்றதுக்கு காரணமே யோசிச்சு வேலைக்கு வர்றதா?? வேணாமானு முடிவு பண்ணுங்க தம்பி.. " என்று மெதுவாக ராசுவை பற்றி சொன்னதும், செழியன் மீண்டும் அதிர்ச்சியோடு வேந்தனை பார்த்தான்..
"மத்தவங்களும் அவரை போல மனுசனுக தானே.. இதுல என்ன ஏழை, பணக்காரனு?? இப்ப கூட அவரை காப்பாத்துனது அவரு கட்டி சேர்த்துருக்கற பணமா?? இது எல்லாம் கொஞ்சம் கூட ஏத்துக்கற மாதிரி இல்ல" என்று சற்று குரலை ஏற்றி சொன்ன வேந்தனை அடக்கிய மயில்சாமி, "தம்பி தம்பி சத்தமா பேசாதீங்க.. என் வேலை போய்ரும்.. என்னைய நம்பிதான் என் குடும்பமே இருக்கு" என்று அவனை அடக்கியவர் சுத்தி சுத்தி பார்த்தார் யாரும் இதை கேட்கவில்லை தானே என்று!!!
இவர்கள் இப்படியிருக்க, ஸ்கூட்டியில் பகலனும் நிலாவும் உள்ளே வந்தனர்.. ஸ்கூட்டியை நிறுத்தியவளின் மனது ஏதோ போன்று இருக்க, சுற்றி பார்த்தவளின் கண்ணில் முதலில் சிக்கியது தோட்டத்தில் நின்றிருந்த செழியன் தான்.. யாரு இவன்?? என்ற யோசனையுடன் அவன் அருகில் நின்றிருந்த வேந்தனை பார்க்க முயல, அவனை மறைத்தபடி மயில்சாமி நின்று பேசியிருந்தார்..
கடுப்பாகிய நிலா, "இவரு ஒருத்தரு" என்று முணுமுணுக்க, "இங்க எல்லாரும் ஒருத்தரு தான் ரெட்டையா இல்லை" என்று நேரங்காலம் தெரியாமல் நக்கலடித்த பகலனை முறைத்த நிலா மீண்டும் தோட்டத்தை பார்த்தாள்.. இப்போது வேந்தன் நன்றாகவே நிலாவுக்கு தெரிய, அவனை பார்த்ததும் "வாவ்" என்று நிலாவின் உதடு தன்னிச்சையாக அசைந்தது..
தொடரும்...