All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"இலக்கணம் மாறுதோ! இலக்கியம் ஆகுமோ?" - கதை திரி

Status
Not open for further replies.

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 8



ஆர்த்தி மயங்கி விழுந்ததும் கௌதம் செல்வதற்குள்.. அங்கிருந்தவர்கள் ஆர்த்தியிடம் சென்றிருந்தார்கள். சில பெண்கள் ஆர்த்தியின் முகத்தில் நீரை தெளித்தும்.. உள்ளங்கால் மற்றும் உள்ளங்கைகளை பரபரவென தேய்த்து.. மரத்து போன உணர்வுகளை மீட்க முதலுதவிகளை செய்துக் கொண்டிருந்தார்கள். ஆம்புலன்ஸிற்கும் அழைக்க தவறவில்லை.


அதைக் கண்டு சிறிது நிம்மதியுற்ற.. கௌதமின் விழிகள் ப்ரணவ்வை தேடியது.


அப்பொழுது அவனது கரத்தை யாரோ தொடுவது போன்று தோன்றவும், குனிந்து பார்த்தான். ப்ரணவ் தயக்கத்துடன் கௌதமின் கரத்தை பற்ற முயன்றான்.


கௌதம் தன்னைப் பார்த்ததும்.. மயக்கத்தில் இருந்த தனது அன்னையை சுட்டிக்காட்டினான். ப்ரணவை பார்த்ததும்.. புன்னகையுடன் தூக்க முயன்றான்.


அப்பொழுது.. அவனுக்கு அருகே வந்த பெண் ஒருவர் “பயப்படாதே! அம்மாக்கு ஒண்ணுமில்லை.” என்று தூக்கவும், ப்ரணவ் அவர்களிடம் அமைதியாக சென்றான்.


அதற்குள் ஆம்புலன்ஸ் வந்திருக்கவும், அரை மயக்க நிலையில் இருந்த ஆர்த்தி ஏற்றப்பட்டாள். அதிலேயே அந்த பெண்.. ப்ரணவுடன் ஏறினாள்.


ஆம்புலன்ஸ் ஏறும் போது.. ப்ரணவ் ஏக்கத்துடன் கௌதமை திரும்பிப் பார்த்தான்.


கௌதம் ஒரு எட்டு வைப்பதற்குள்.. அந்த ஆம்புலன்ஸ் விரைவாக சென்றுவிட்டது.


அதன் பின்.. சூர்ய அஸ்தமானத்தின் அழகு அவனது கண்ணிலும் கருத்திலும் படவில்லை.


திரும்பி தனது ஃபிளெட்டிற்கு சென்றவனுக்கு.. உறக்கமும் கொள்ளவில்லை. ஆர்த்தியின் நினைவுகளே முழுவதும் ஆக்கிரமித்து இருந்தது. அவன் எடுத்த முடிவின்படி.. ஆர்த்தியை பார்த்தாலும் பேசாமல் வந்து விட்டதாக நினைத்தான். குறைந்த பட்சம் மயக்கி விழுந்தவளின் நலன் பற்றியாவது அறிந்து வந்திருக்கலாம் என்றுத் தற்பொழுது தோன்றியது. ஆனால் நலம் விசாரிப்பு அத்துடன் நிற்கவில்லை என்றால்.. என்ன செய்வது என்ற எண்ணமும் தோன்றி அவனை சங்கடப்படுத்தியது. அவளுக்கும் சங்கடம் கொடுக்க கூடாது என்று நினைத்தான்.


இந்த பத்து நாட்களில்.. ஆர்த்தியிடம் தோன்றிய சிறு சஞ்சலம்.. வரக் கூடாதா இடத்தில் வந்த சிறு ஈர்ப்பே.. இதற்கு இத்தனை முக்கியத்துவம் தர வேண்டியது இல்லை என்ற மனநிலைக்கு வந்திருந்தான்.


ஒருவேளை அவனது ஈர்ப்பால் ஆர்த்தியும் சஞ்சலப்பட்டிருந்தால்.. அவனை இந்த சமூகம் மன்னித்திராது.. அதனால் அவனது மனதில் ஆர்த்தியை பற்றி சிறு எண்ணம் கூட இருந்திருக்காது. அல்லது ஆர்த்தி கோபத்துடன் அறைந்திருந்தால்.. தன்னை வெறுப்பவளின் நிழலை கூட மிதித்திருக்க மாட்டான்.


ஆனால்.. ஆர்த்தி அவனை மதித்தாள். அவன் மீது நம்பிக்கை கொண்டிருந்தாள். இன்னொருவரின் மனைவியின் மேல் காதல் கொண்டு அலையும் கயவன் இல்லை என்று நம்பினாள்.


அதனால் அவனது மனதில் இருந்து முழுமையாக தனது முதல் ஈர்ப்பை அவனால் அகற்ற முடியவில்லை என்றுத் தெரிந்தது.


முடிவில்.. நாளைக்கு ஆர்த்தி அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு சென்று அவளறியாமல் நலம் விசாரித்து வர முடிவு செய்தான். அதன் பின்பே அவனால் நிம்மதியாக உறங்க முடிந்தது.


அங்கு மருத்துவமனையில் ஆர்த்தி கையில் ட்ரீப்ஸ் ஏற இன்னும் மயக்க நிலையில் படுத்திருந்தாள். அவளது அருகே இருந்த நீண்ட இருக்கையில்.. ப்ரணவ் உறங்கிக் கொண்டிருந்தான். சற்று தள்ளி கையில் ஆர்த்தியின் செல்பேசியுடன் அந்த பெண்மணி நின்றிருந்தாள்.


ஆர்த்தியின் கணவன் வந்துவிட்டால்.. அவனிடம் இவளை ஒப்படைத்துவிட்டு தனது குடும்பத்தை பார்க்க செல்ல வேண்டும். ஆனால் பல முறை அந்த பெண்மணி அழைத்தும்.. ஆர்த்தியின் கணவன் எடுக்கவில்லை.


ஒன்று தோன்ற.. தனது செல்பேசியில்.. ஆர்த்தியின் கணவனின் செல்பேசி எண்ணை அழுத்தி.. அழைப்பு விடுத்தாள். அடுத்த இரண்டாவது ரிங்கில் “ஹலோ” என்ற ஆர்த்தியின் கணவனின் குரல் கேட்டது.


அந்த பெண்மணி திகைப்புடன் மயக்க நிலையில் இருந்த ஆர்த்தியை பார்த்தாள்.


மயக்கத்தில் இருந்த ஆர்த்தி.. கண் ஓரத்தில் இருந்து வேண்டாத கனவின் காரணமாக சிறு கண்ணீர் துளி வழிந்தது.


பத்து நாட்களுக்கு முன்..


விமான நிலையத்தில் இருந்து.. வாடகை கார் பிடித்து.. தனது கணவன் தியாகு வசிக்கும் அப்பார்ட்மென்ட் இருக்கு இடத்திற்கு சென்றாள். வாடகை கட்டணம் செலுத்திவிட்டு ப்ரணவ்வுடனும் உடைமைகளுடனும் இறங்கியவள்.. மூன்று வருடங்களுக்கு முன் அவள் இங்கு வந்தது போது.. இருந்த நினைவுகளை கொண்டு வர முயன்று தோல்வியுற்றாள்.


தன்னையே திட்டிக் கொண்டவள், தனது கணவன் வசிக்கும் அப்பார்ட்மென்ட்டின் லிப்டில் ஏறினாள். ப்ரணவையும் அழைத்துக் கொண்டு.. இரண்டு சக்கர சூட்கேஸ்களையும்.. தோளில் ஒரு பையும்.. என்று எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு போவது.. ஆர்த்திக்கு சிரமமாக தான் இருந்தது.


வாடகை கார் பிடிக்கும் முன்.. ப்ரணவிற்கு உணவு வாங்கி கொடுத்து பசியை போக்கி விட்டாள். கார் பயணத்தில் ப்ரணவ் நன்கு உறங்கியும் விட்டான். புது இடத்திற்கு வந்ததில்.. சுற்றிலும் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறான். அதுவரைக்கும் பிரச்சினை இல்லை. ஆனால்.. ஆனால் அவனது ஆர்வம் போய் விட்டாலோ, பசியோ உறக்கமோ வந்து விட்டாலோ.. பிரச்சினை தான்! அழும் ப்ரணவை ஆர்த்தியால் சமாளிக்க முடியாது. எனவே அவர்களின் வீட்டை சீக்கிரம் சென்று விட நினைத்தாள்.


நேரம் மாலை நான்கை நெருங்கியிருந்தது.


ஒரு வாரத்திற்கு முன்.. அவளது கணவன் தியாகு அழைத்திருந்தான். முதலில் வாரத்திற்கு ஒரு முறை அழைப்பு விடுப்பவன், தற்பொழுது.. மாதங்களுக்கு இருமுறை.. இவர்களது நினைவு வந்தால் அழைத்து பேசுவான். அதுவும்.. கணவனின் பெற்றோர்கள் நினைவு படுத்துவதால் என்பது ஆர்த்தியின் கணிப்பு!


ஏனெனில் அவன் அழைத்த சிறிது நேரத்தில்.. தனது மாமனார் மற்றும் மாமியாரிடம் இருந்து ஆர்த்திக்கு அழைப்பு வரும். மகன்.. சொன்னபடி மருமகளை அழைத்து பேசினானா என்றுத் தெரிந்துக் கொள்வதற்காக!


சில நாட்களாக தான்.. ஆர்த்தி இதைக் கவனித்தாள். தனது கணவன் அவர்களுடன் ஒட்டாது போல் தோன்றியது. அதற்கு அவளும் காரணம்! அவளும் பெரிதாக அவனைப் பற்றிய அக்கறை கொண்டிருக்கவில்லை. எனவே குற்றவுணர்வு மேலோங்கவும்.. தான் கணவருடன் இருப்பது நல்லது என்று கிளம்பி வந்தாள்.


அவ்வாறு போன முறை அவளது கணவன் பேசிய பொழுது அடுத்த வாரம் ‘மார்னிங் ஷீப்ட்’ என்பதால்.. அடுத்த பத்து நாட்கள்.. பேசுவது கடினம் என்றுத் தெரிவித்திருந்தான். அதை வைத்து.. அவன் வேலைக்கு அதிகாலை மூன்று மணிக்கு வேலைக்கு சென்றுவிட்டு.. மதியம் வந்திருப்பான் என்று கணக்கிட்டு ஆர்த்தி வந்திருந்தாள்.


தியாகு வசிக்கும் பிளட்டின் முன் நின்ற ஆர்த்தியின் மனம் படபடத்தது.


படபடத்த மனதை அடக்கி கொண்டு அழைப்பு மணியை அடித்துவிட்டு காத்திருந்தாள். தியாகு கதவை திறக்கவில்லை. நேரத்தில் வேலைக்கு சென்றவன்.. இன்னும் உறங்குகிறான் போல.. என்று மீண்டும் அடித்தாள்.


அப்பொழுது மிஸ்டர் தியாகு அவுட் என்ற ஸ்டெட்ஸை அழைப்பு மணிக்கு கீழ் மாட்டப்பட்டிருப்பதை கவனித்தாள்.


அவன் வீட்டில் இல்லை. அது தெரியாமல் அழைப்பு மணி அடித்த தனது மதியீனத்தை திட்டிவிட்டு.. அவனது எண்ணிற்கு அழைப்பு விடுத்தாள்.


அவனது கண்முன் திடுமென சென்று நிற்க வேண்டும் என்ற தனது திட்டம் தோல்வியுற்றது.. அவளுக்கு வருத்தமளித்தது.


அந்த அழைப்பு ஏற்கப்பட்டது.


எடுத்த எடுப்பில் தியாகு “கொஞ்ச நாளுக்கு பிஸியாக இருப்பேன் என்றுச் சொல்லியிருந்தேனே!” என்றுவிட்டு “சரி எப்படியிருக்கீங்க! மாமா அத்தை நல்லாயிருக்காங்களா?” என்று சம்பிரதாயத்திற்கு கேள்வி கேட்டான்.


அதாவது கேட்டானே என்று திருப்திப்பட்டுக் கொண்டு “நாங்க எங்கே இருக்கோம் என்றுக் கேட்க மாட்டிங்களா?” என்றுக் கேட்டாள்.


அந்த பக்கம் தோளில் ஃபோனை வைத்துக் கொண்டு தலையை சாய்த்து காதை வைத்தவாறு கேட்டுக் கொண்டிருந்த தியாகுவின் விரல்கள் தன் போக்கில் கணிணியில் வேலையை செய்துக் கொண்டிருந்தன.


ஆர்த்தி கூறியதைக் கேட்ட தியாகு “வாட்! ஏன்? ஓ ட்ரீப் போயிருக்கீங்களா! என்சாய்! ஐம் லொட்ஸ் வித் வொர்க்! ஃபோனை கட் செய்கிறேன்.” என்றான்.


உடனே ஆர்த்தி அவசரமாக “நாங்க உங்க ஃபிளெட்டிற்கு முன்னாடி நிற்கிறோம்.” என்றாள்.


அதைக் கேட்டு திகைத்த தியாகு சாய்த்திருந்த தனது தலையை நிமிர்த்தான். உடனே செல்பேசி.. தோளில் இருந்து நழுவி விழப் போனது. சட்டென்று சுதாரித்து பிடித்த தியாகு சரியாக பிடித்து காதில் வைத்து “என்ன சொல்றீங்க!” என்றுக் கேட்டான்.


அந்த பக்கம் பதிலில்லை. ஆனால் ஆர்த்தியிடம் இருந்து குறுந்தகவல் ஒன்று வந்தது. அதை திறந்து பார்த்தான். அதில் அவனது வீட்டின் கதவு முன்.. ஆர்த்தி ப்ரணவுடன் செல்பி படம் எடுத்து அனுப்பியிருந்தாள்.


‘ஷெட்’ என்று சத்தமில்லாமல் வாயில் முணுமுணுத்த தியாகு “எதுக்கு இங்கே வந்தீங்க! நான்தான்.. இன்னும் ஒன் இயர் போகட்டும் என்று என் பெரெண்ட்ஸ் கிட்ட சொல்லியிருந்தேனே!” என்றுக் கூறிக் கொண்டே போனவன், திடுமென தோன்றிய சந்கேத்தில் “ஹெ வெயிட்! வெயிட்! உன் கூட என் பெரெண்ட்ஸும் வந்திருக்காங்களா?” என்றுக் கேட்டான்.


ஆர்த்தி மெல்லிய குரலில் “இல்லை! நாங்க மட்டும் தான் வந்திருக்கோம்.” என்றாள்.


உடனே தியாகுவின் வாயில் இருந்து அந்த வார்த்தை வந்தது‌.


“எதுக்கு?”


முகத்தில் அறைந்தாற் போன்ற வார்த்தையால் ஆர்த்தி ஸ்தம்பித்து நின்றாள்‌.


தனது வார்த்தையின் வீரியம் புரிந்த தியாகு “ஸாரி! நான் அந்த மீனிங்கில் கேட்கலை. ஐயம் ஜஸ்ட் சர்பரைஸ்டு..” என்று தணிந்த குரலில் கூறினான்.


பின் தொடர்ந்து “சரி அங்கேயே இருங்க.. டுவன்டி மினிட்ஸில் வந்திருவேன்‌.” என்றுவிட்டு அழைப்பை துண்டித்தான்.


அவசரமாக தனது உடைமைகளை பைக்குள் அள்ளி போட்டவன், கணிணியை அணைத்துவிட்டு நகர்ந்தான்.


அருகே இருந்த மேனேஜர் அறைக்கு சென்றவன் “ஸார்! மே ஐ டேக் மை.. மன்திலி அலவன்ஸ் லீவ் டுடே!” என்று விடுப்பு கேட்டான். அவர்கள் அனுமதித்ததும்‌‌.. அவனைப் பார்த்து சிரித்தவாறு எதிர்ப்பட்ட தனது சக ஊழியரிடம் நிதானமாக நின்று விளக்கம் சொல்ல நேரமில்லாது நடந்தவாறு..


“இந்த மன்த் நமக்கு ஒதுக்கியிருக்கிற லீவ்வை நான் இன்னைக்கு எடுத்துக்கிறேன். அதை யாருக்கும் சொல்லாதே!” என்றுவிட்டு வேகமாக நடந்தான்.


அவனது வலது பக்கம் இருக்கும் பிரிவை பார்த்தவாறு வேகமாக சென்றவன், யார் மேலோ இடித்து நின்றான்.


அவனைப் பார்த்தும் அதிர்ந்த தியாகு.. பின் தன்னைச் சமாளித்து கொண்டு “கொஞ்சம் அர்ஜென்ட் வொர்க்! நான் உடனே போகணும். என்ன விசயம் என்று வந்து சொல்றேன். அதுவரைக்கும் யார் கிட்டயும் சொல்லாதே!” என்றுவிட்டு லிப்ட்டை நோக்கி சென்றான்.


ஆனால் தியாகு இடித்து விட்டு வந்தவன், இரண்டே எட்டில் வந்து அவனது சட்டையை பற்றி உலுக்கி.. “அப்படியெல்லாம் உன்னை விட முடியாது. ஸாரி சொல்லு! இல்லைன்னா.. மிருது கிட்ட சொல்லி சாப்பிட்டில் உப்பையும் காரத்தையும் அள்ளி போடச் சொல்லிருவேன்.” என்று மிரட்டினான்.


அவன் கூறிய விதத்தில் சட்டென்று சிரித்த தியாகு “ஸாரி கௌதம்! ஸாரி! ஸாரி! ஸாரி! போதுமா.. ப்ளீஸ்டா உன் சிஸ்டர் கிட்ட உப்பை அள்ளி போட சொல்லிராதே! முதலிலேயே அவ அப்படித்தான் சமைக்கிறா..” என்றான்.


ஆம் கௌதம் தான்!


கௌதமின் தங்கை மிருதுளாவை தான் தியாகு மணந்திருக்கிறான். அதுவும் காதல் திருமணம்!


கௌதமிற்கு.. தியாகு ஏற்கனவே திருமணம் ஆனவன் என்று விசயம் தெரியாது. அதை மறைத்து தான் அவனது தங்கையை தனக்கு திருமணம் முடித்து தருமாறு தியாகு கௌதமிடம் அனுமதி கேட்டு சம்மதம் வாங்கினான்.


இருவரும் ஒரே அலுவலகத்தில் வெவ்வேறு பிரிவில் வேலை செய்கிறார்கள்.


கௌதமிற்கு தெரியாமல் இங்கிருந்து செல்ல தான்.. அவன் வேலை புரியும் பிரில் அவன் தென்படுகிறானா என்றுப் பார்த்தவாறு சென்றான். ஆனால் கௌதமின் மேலேயே இடித்து நின்றான்.


தியாகு மன்னிப்பு கேட்டதை கேட்ட கௌதம் “ஒகே அதைச் சொல்ல மாட்டேன். ஆனா இப்போ சொன்னியே.. அவளது சமையல் சரியில்லைனு.. அதைக் கண்டிப்பா சொல்வேன்.” என்றுச் சிரியாமல் கூறினான்.


அதற்கு தியாகு “நண்பா! ஏன் இந்த கொலவெறி!” என்றுச் சிரித்தவன், மெல்ல உதட்டில் இருந்து சிரிப்பு மறைய “நான் போகணும். கொஞ்சம் அர்ஜென்ட்!” என்றான்.


அப்பொழுதும் கௌதமின் முகத்தில் இருந்த யோசனையை கண்டு தியாகு “பெரெண்ட்ஸிற்கு.. தெரிந்த ரிலேட்டிவ்ஸ் வந்திருக்காங்க.. என் அப்பா என் அட்ரஸை கொடுத்து.. அவங்க வேலை முடிந்து போகிற வரை.. என் பையன் வீட்டில் தங்கிக்கோங்க.. அவன் பேச்சிலர் தனியாக தான் இருப்பான் என்றுச் சொல்லியிருக்கிறார். அவங்க கிளம்பும் முன் சொல்லியிருந்தா பரவாலை. இப்போ வீட்டிற்கு முன் வந்து நின்றுட்டு ஃபோன் போடறாங்க..” என்றதும்.. கௌதம் “ஸாரிடா! வழக்கம் போல் விளையாடிட்டேன். எமர்ஜென்ஸின்னா ப்ளீஸ் கோ க்விக்!” என்றான்.


தியாகு “அந்தளவிற்கு எமெர்ஜென்ஸி இல்ல. பட்..” என்று வேண்டுமென்றே நிறுத்தவும், கௌதம் “இன்னும் போகாம என்கிட்ட விளக்கம் சொல்லிட்டு இருக்கியா..” என்று அவனது முதுகில் கையை வைத்து தள்ளினான்.


கௌதமிடம் புன்னகையால் நன்றி கூறிவிட்டு வேகமாக சென்றவனின் மனதில்.. ‘கௌதமை சமாளித்தாகி விட்டது. கௌதம்.. இந்த விசயத்தை முந்திக் கொண்டு மிருதுளாவிடம் கூறும் பழக்கம் கொண்டவன் அல்ல! எனவே தானே பொறுமையாக மிருதுளாவிடம் கூறிக் கொள்ளலாம்.’ என்ற நிம்மதி தோன்றியது.


காரில் ஏறி.. தனது பழைய அப்பார்ட்மென்ட்டை நோக்கி சென்ற தியாகுவின் மனதில் ஆர்த்தியின் மீது அடங்கா கோபம் பொங்கி வழிந்தது.


‘இத்தனை வருடங்களாக கணவன் என்று ஒருவன் இருக்கிறானா இல்லையா என்ற அக்கறையும் அன்பும் இல்லாதவளுக்கு.. எதற்கு திடீர் என்று கணவன் மீது பாசம் வந்தது?’ என்று எரிச்சல் கொண்டான்.


ஆர்த்தி இந்தியாவில் இருக்கும் போது.. அழைத்து பேசவே அவனுக்கு விருப்பம் இருந்தது இல்லை. அவனது பெற்றோரின் வற்புறுத்தலின் காரணமாகவே சம்பிரதாயத்திற்கு அழைத்து பேசுவான். ஆனால் அதனால்.. தனது சுயமரியாதை போய் விட்டது என்றுப் புலம்புவான்.


தியாகுவிற்கு முதலிலேயே ஆர்த்தியை திருமணம் செய்துக் கொண்டதில் அவ்வளவு விருப்பமில்லை. இருபதைந்து வயதில் அப்பொழுது தான் கலிஃபோர்னியாவில் வேலைக்கு சேர்ந்து ஆறு மாதங்கள் ஆகிருந்தன.


அந்த நேரத்தில்.. அவனுக்கு திருமணத்திற்கு பெண் பார்ப்பதாக அவனது பெற்றோரிடம் இருந்து செய்தி வந்த போது.. மறுப்பு தெரிவித்தான். ஆனால் அவனது மறுப்பை அவர்கள் காதில் வாங்கிப் போட்டுக் கொள்ளாமல்.. தியாகுவிற்கு மும்மரமாக திருமணத்திற்கு பெண் பார்த்தார்கள்‌. அந்த நேரத்தில் ஆர்த்தியின் ஜாதகம் கிடைக்கவும்.. இருவருக்கும் மணம் முடிக்க தீர்மானித்தார்கள்.


தனது பெற்றோர்களின் பேச்சை தட்டி பழக்கமில்லாத தியாகு.. திருமண தேதி குறித்த சில நாட்களுக்கு முன் வந்து ஆர்த்தியை மணந்து கையோடு அழைத்து சென்றான்.


விருப்பமில்லாத திருமணம் என்பதால்.. ஏனோ முதலிலேயே ஆர்த்தி அவனை கவர்ந்து விடவில்லை. ஆர்த்தி அழகி தான், கலகலப்பாக பேசுவாள் தான்.. ஆனாலும் அவனால் அவளுடன் சகஜமாக பழக முடியவில்லை. ஏதோ ஒன்று தடுத்தது. அவனது விருப்பமில்லா திருமணம் ஒரு காரணம் என்றால்.. ஆர்த்தியின் படபடப்பான பேச்சு! கணவனை அடக்கி அடிமையாக வைத்துப் பழக வேண்டும் என்றுக் கூறி அனுப்பியிருப்பார்களோ என்ற சந்தேகம் அவனுக்கு உண்டு! ஏனெனில் எந்த விசயத்தை பற்றிப் பேசத் தொடங்கினாலும்.. அவளில் இருந்து தொடங்கி அவளில் முடிக்கிறது. அவளது கருத்தை நிலை நிறுத்துக்கிறாள்.


ஆர்த்தியிடம் பேசி பழக முயன்ற பொழுது.. தெரிந்து கொண்ட அவளது குணம்.. அவனது மனதில் வெறுப்பை ஏற்படுத்தியது.


ஆனால் அவளை கூட்டிக் கொண்டு ஊர் சுற்றினான். இரவின் தனிமை, மனைவி என்ற உரிமை ஆகியவை சேர்ந்து.. அவனது பிரம்மச்சாரி விரதத்தை உடைத்தது. உடனே ஆர்த்தி கருவுற்றாள். உடலில் அவ்வளவாக வலுவும் எதிர்ப்பு சக்தியும் இல்லாத ஆர்த்தி.. ஆரம்ப கர்ப்ப கால உபதைகளால் மிகவும் சிரமப்படவும்.. பயந்து போன தியாகு.. உடனே இந்தியாவிற்கு அனுப்பி வைத்தான்.


அதன் பின் அக்கறையாக சில நாட்கள் அழைத்து நலம் விசாரித்தவன்.. பின் கடமைக்காக அழைத்து நலம் விசாரித்தான். பின் அதுவும் நின்று விட்டது.


ஆர்த்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு ப்ரணவ் பிறந்ததும் உடனே வந்து பார்த்தவனின் மனதில் அழகான குழந்தை என்று நினைத்ததை தவிர.. ஏனோ அந்த சிசுவிடம் அவனுக்கு மனம் ஒன்றவில்லை.


ஒருவேளை ஆர்த்தியின் வயிற்றில்.. அவனது சிசு வளர்ச்சியை உடன் இருந்து பார்த்திருந்தாலோ.. ஆர்த்தியும் தியாகுவும்.. ஒருத்தருக்கு ஒருத்தர் கருத்துக்களை பகிர்ந்திருந்தாலோ.. மனம் ஒன்றியிருக்குமோ!


அவனது மனதில்.. புதிதாக கிளை திறக்கப்பட இருக்கும்.. அவனது நிறுவனத்தை பற்றியே எண்ணங்களே இருந்தது.


அவன் எதிர்பார்த்தது போல்.. புதிதாக தொடங்கிய கிளை நிறுவனத்தில் மேனேஜருக்கு அடுத்து இருந்த பிரிவுகளில் ஒன்றில் உயர்பதவி கிடைத்தது.


புது அலுவலகம் புது நண்பர்கள்.. என்று தியாகு தனக்கு புது வாழ்க்கை கிடைத்தது போன்று உணர்ந்தான். தனக்கு திருமணம் ஆனதை மறைத்தான்.


அங்கு அவனுக்கு இன்னொரு பிரிவில் உயர்பதவி வகிக்கும்.. கௌதமின் நட்பு கிடைத்தது. அப்பொழுது கௌதமின் தங்கையான மிருதுளாவின் அறிமுகம் கிடைத்தது.


மிருதுளா பெயருக்கு ஏற்ப பழகுவதற்கு மிருதுவாக இருந்தவளை பார்த்தவுடன் தியாகு பிடிப்பு தோன்றி விட்டது. எவ்வளவோ முயன்றும்.. அவளிடம் செல்லும் பார்வையையும்.. மனதையும் அவனால் அடக்க முடியவில்லை. அவனது பார்வையும் அவனது மனமும்.. அவளுக்கு புரிந்ததோ.. அவளே வந்து அவனிடம் தனது காதலை கூறினாள்.


திகைத்து போய் நின்றிருந்த தியாகுவிற்கு.. மிருதுளாவின் காதலை ஏற்க தயங்கினான். ஆனால் மறுத்து பேச மட்டும் வாய் வரவில்லை. ஆனால் அதுவே.. மிருதுளாவிற்கு.. வலியை ஏற்படுத்தவும், முகம் கசங்க திரும்பியவளின் தோள் பற்றி திருப்பிய தியாகு அவளை இழுத்து தன்னுடன் அணைத்தான்.


தனது வாழ்விலும் பிணைத்துக் கொண்டு.. காதலித்த இரண்டே மாதங்களில் நண்பர்களின் முன்னிலையில் மணந்து கொண்டான்.


வீட்டின் நிலைமை சரியில்லை. கண்டிப்பாக ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.. என்றுக் கூறி.. கௌதமிடம் தனக்கு திருமணம் ஆன விசயத்தை மறைத்தான்.


ஆர்த்திக்கு துரோகம் செய்கிறோம் என்ற எண்ணமே அவனுக்கு தோன்றவில்லை. அவளுக்கு கணவன் என்றுத் தான் இருப்பது தெரியவில்லை. அவளுக்கு நான் தேவையில்லை என்று நினைக்கிறாள்.. அதனால் தனக்கும் அவள் தேவையில்லை. அவளிடம் பேசி விவாகரத்து வாங்கிக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தான். ஆனால்.. விவாகரத்து வாங்கும் வரை.. காத்திருக்காமல்.. மிருதுளாவை மணந்துக் கொண்டான்.


எப்படியும் ஆர்த்தியிடம் விவாகரத்து வாங்க போவது உறுதி! விவாகரத்து வாங்கிக் கொண்டு இன்னொரு திருமணம் செய்தாலும்.. இன்னொரு திருமணம் செய்துக் கொண்டு பின் விவாகரத்து வாங்கினாலும் ஒன்று தான் என்று தவறாக எண்ணினான்.


அதன் பின்.. மிருதுளாவுடன் அவனது திருமண வாழ்க்கை.. அவனது வீட்டினர் மற்றும்.. அவனது மனைவி ஆர்த்திக்கு தெரியாமல் தொடங்கியது.


மிருதுளாவும்.. அவனது அண்ணன் கௌதமும் வாழ்ந்த வீட்டை கௌதம் புதுமண தம்பதிகளுக்கு கொடுத்துவிட்டு.. அப்பார்ட்மென்ட்டில் ஒன்றில் குடியேறினான்.


தியாகு.. தனது பழைய அப்பார்ட்மென்ட்டை காலி செய்யாமல் இருந்தான். ஏனெனில்.. அவனது பெற்றோர்களுக்கு அந்த முகவரி தெரியும். அதனால்.. அதை காலி செய்யாமல் இருந்தான்.


தற்பொழுது ஆர்த்தி அங்கு தான் இருக்கிறாள். தியாகு அந்த இடத்தை நோக்கி தான் சென்றுக் கொண்டிருக்கிறான்.


வாயிலில் வேகமாக காரில் நுழைந்த தியாகு.. தனது அப்பார்ட்மென்ட்டிற்கு கீழ் தளத்தில் இருக்கும்.. கார் பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு.. லிப்டில் மேலே சென்றான். அங்கு தனது பிளட் முன் ஆர்த்தியையும் ப்ரணவ்வையும் காணாது திகைத்தான்.


உடனே தனது செல்பேசியை எடுத்து அவளை அழைத்தான். உடனே அழைப்பை ஏற்ற.. ஆர்த்தியிடம் “எங்கே இருக்கீங்க! அப்போ இந்தியாவில் தான் இருக்கியா! பிரான்க் செய்தியா! பேக்ரவுண்ட் பிக்சர் எடுத்து மாக்கிங் செய்தியா!” என்று சராமாரியாக கேள்வி கேட்டவனின் குரலில் நிம்மதியும் கோபமும் ஒருங்கே இருந்தது.


அதை ஆர்த்தி கண்டுக் கொண்டாளோ.. அந்த பக்கம் ஒரு கணம் அமைதி நிலவியது.


பின் “உங்க பிளட் கதவின் பக்கத்தில் சுவரில் மாட்டியிருக்கிற பிளவர் வேஸ் பக்கத்துல இருக்கிற கண்ணாடி வழியாக பாருங்க! பிளே க்ரவுண்ட் தெரியும் தானே! அதுல மேரி கோ ரவுண்ட் பக்கத்துல ப்ரவுன் ஜாக்கெட் பிளெக் பான்ட் போட்டுட்டு போனி டெயிலோடு காதுல ஃபோன் வச்சுட்டு பேசிட்டு இருக்கிறது நான்தான்! ப்ரணவ் விளையாடிட்டு இருக்கான்.” என்றாள்.


ஆர்த்தி கூற கூற கண்ணாடியில் பார்த்த தியாகு எரிச்சலும்.. தர்மசங்கடமும் கொண்டான்.


பின் “ஒகே வா! வா!” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தவன், “ஆள் மாறவே இல்லை. அதே அடக்குமுறை சண்டிராணி மாதிரி பேசறா..” என்று முணுமுணுத்தான்.


அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் வந்த ஆர்த்தியையும்.. ப்ரணவ்வையும் பார்த்த தியாகுவின் மனதில்.. திக்கென்ற எண்ணம் தோன்றாமல் இல்லை. ஆர்த்தியிடம் சொல்லிவிட்டு மிருதுளாவை மணந்திருக்க வேண்டுமோ.. என்றும் தோன்றியது.


அதற்கு முன்.. அவர்களிடம் இருக்கும் வேறுபாட்டையும்.. மனம் ஒன்றாததையும் எடுத்து சொல்லி பிரிந்து விடலாம் என்றுக் கூறுவதற்காக ஒத்திகை பார்த்தது. தற்பொழுது கைக்கொட்டி சிரித்தது.


அவனது பெற்றோர், உறவினர் மற்றும் சமூகத்தின் முன்னிலையில் அவனது மனைவியான ஆர்த்திக்கு இருக்கும் சக்தியும்.. பலமும் அவனுக்கு புரிந்தது.


ஆனால் ஒன்றில் மட்டும் தியாகு உறுதியாக இருந்தான். ஆர்த்தியுடன் அவனால் வாழ முடியாது. மிருதுளாவை கைவிட முடியாது.












 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 9



ஆர்த்தியின் “எப்படியிருக்கீங்க?” என்ற கேள்வியில்.. சுயநிலை பெற்ற தியாகு.. இருவரையும் நன்றாக பார்த்து “ம்ம்! பைன்! நீங்க எப்படியிருக்கீங்க..” என்றுக் கேட்டவனின் பார்வை அழுத்தமாக ப்ரணவ்வின் மேல் படிந்தது.


பின் சிறு கேலி புன்னகையுடன் “உன் பையன் உன்னை மாதிரியே இருக்கிறான். கொஞ்சம் கூட என் சாயல்ல இல்ல..” என்றவாறு கதவை திறந்தான்.


அதற்கு ஆர்த்தி “ஆனா என் அம்மா உங்களை மாதிரி தான் ப்ரணவ் இருக்கிறான்னு சொல்வாங்க..” என்றவாறு அவனது பின்னோடு சென்றாள்.


ப்ரணவ்வை தூக்கி கொள்வான் என்று அவள் எதிர்பார்த்தாள்.


மனதில் தோன்றிய வலியை மறைத்துக் கொண்டு ப்ரணவ்விடம் “ப்ரணவ்! நீ சின்னதா இருக்கும் போது.. அப்பாவை பார்த்திருப்பே.. இப்போ அப்பாவை நேரில் பார்க்கிற தானே.. அப்பா கிட்ட போ..” என்று அனுப்பிவிட்டு பயத்துடன் பார்த்தாள்.


தயக்கமான நடையுடன் வரும் ப்ரணவை எப்படி எதிர்கொள்வது.. அவன் தனது மகன் தான்! ஆனால் மழலை மாறாத சிறுவன் என்பதைத் தவிர.. வேறு எதுவும் அவனுக்கு தோன்றவில்லை. ஆனால் என்ன ஆனாலும் அவன்தான் அந்த சிறுவனின் தந்தை அதை மாற்ற முடியாது. எனவே கையை நீட்டி அழைத்தான்.


ஆர்த்தி சொன்னதிற்கு இணங்க தயக்கத்துடன் சென்ற ப்ரணவ் புதியவனாய் தெரிந்த தனது தந்தையை பார்த்ததும்.. சட்டென்று திரும்பி ஓடி வந்து.. ஆர்த்தியிடம் ஒன்றிக் கொண்டான்.


தியாகு சிறு ஏமாற்றத்துடன் நிற்கவும், ஆர்த்தி தர்மசங்கடத்துடன் “ஸாரி! இவன் யார் கிட்டவும்.. அவ்வளவா மின்கிள் ஆக மாட்டான். என் கிட்ட கூட அதிக நேரம் இருக்க மாட்டான். கொஞ்ச நாள்.. ஆச்சுன்னா.. உங்க கிட்ட நல்லா பழகிருவான்.” என்று ப்ரணவிற்காக பேசினாள்.


தியாகுவிற்கு சரி என்றுப் பதில் கூற முடியவில்லை. வேண்டாம் என்றுக் கூற முடியவில்லை. எனவே திணறினான்.


அவனையே பார்த்த ஆர்த்தி “ஏன் ரொம்ப டென்ஷனா இருக்கீங்க?” என்றுக் கேட்டாள்.


அதற்கும் பதில் கூற முடியாமல் தியாகு திணறினான்.


அதைப் பார்த்த ஆர்த்தி “ஆக்சுவலி எனக்கும் கொஞ்சம் அன்ஈஸியா இருக்கு! ஹஸ்பென்ட் அன்ட வைஃப் ரொம்ப நெருக்கமான உறவு! ஆனா.. நாம் மேரிடு லைஃப் சரியா வாழலை. அதுனால திடீர் என்று விட்ட சேப்ட்டரை மறுபடியும் தொடங்கிற போது.. கொஞ்சம் அன்ஈஸியா டென்ஷா தான் இருக்கும். போக போக சரியாகிரும்.” என்றாள்.


உடனே தியாகு “எஸ்! நானும் அப்படித்தான் ஃபீல் செய்யறேன்.” என்று வேகமாக தலையை ஆட்டினான்.


அதைப் பார்த்ததும் பக்கென்று சிரித்த ஆர்த்தி “என்ன பதில் சொல்றதுனு யோசிச்சுட்டு இருந்தீங்களா! நான் எனக்கான காரணத்தை சொன்னதும்.. அதை நீங்க ரிப்பிட் பண்ண மாதிரி இருக்கு..” என்றுக் கேலி செய்தாள்.


தியாகுவின் முகம் சுருங்கியது.


ஆர்த்தியிடம் அவனுக்கு பிடிக்காத மற்றொரு குணம் இது! எளிதாக கேலி செய்துவிடுவது. தன் கணவன் என்ற மதிப்பு இல்லை.. மரியாதை இல்லை.. அன்பும் இல்லை.


அவன் மீது மதிப்பும், மரியாதையும், அன்பும் வைத்திருப்பது மிருதுளா தான்! அவனுக்கு ஏற்ற துணை அவள் தான்.. என்று அவன் எடுத்த முடிவு சரி தான்.. என்று உறுதிப்படுத்திக் கொண்டான்.


தியாகுவின் முகம் சுருங்கியதைப் பார்த்த ஆர்த்தி.. அதை கவனியாதது போல்.. “ப்ரணவிற்கு சாப்பிட தருவதற்கு எதாவது இருக்கா.. என்றுப் பார்க்கிறேன்.” என்று சமையலறை இருந்த திசையை நோக்கி சென்றாள்.


அங்கு சுத்தமாக வரைந்த ஒவியம் போல் இருந்த சமையலறையை பார்த்து.. திகைத்தாள். சந்தேகத்துடன் சமான்கள் வைத்திருக்கும் அலமாரியை திறந்தாள். பின் குளிர்சாதனப்பெட்டியை திறந்தாள்.


பின் தியாகுவிடம் “வீட்டுல ஏன் ஒண்ணுமே இல்ல! எனக்கு தெரிந்து நீங்க நல்லா சமைப்பீங்க! வேலை காரணமா.. சமைக்கிறது இல்லை. சமைப்பதிற்கு நேரம் இல்லைன்னாலும்.. இப்படி துடைத்த வைத்த மாதிரி ஒண்ணுமே இல்லாமலா இருக்கும்.” என்றுத் திகைப்புடன் கேட்டவள், கடைசியில் முறையீடாக முடிந்தது.


தியாகு “நான் ஆபிஸில் தான் தங்கிப்பேன். இங்கே அவ்வளவா வருவதில்லை. அதுக்குள்ள.. எதுக்கு கேலி பேச்சு..” என்று முகத்தை சுளித்தான்.


அதைப் பார்த்த ஆர்த்தி “நான் ஒண்ணும்..” என்று மறுப்பு தெரிவிக்க வந்தவள், இங்கு வரும் முன் எடுத்துக் கொண்ட உறுதி நினைவிற்கு வரவும்.. “ஸாரி! இனி நானே ஒரு டிஷிஷனுக்கு வர மாட்டேன். என்ன எது ஏன்.. என்று உங்க கிட்ட கேட்பேன்.” என்றாள்.


ஆர்த்தி பணிந்து போகவும், தியாகு “சரி! நான் போய்.. சாப்பிடுவதற்கு எதாவது வாங்கிட்டு வரேன்.” என்று நிதானமாக கதவை திறந்துக் கொண்டு.. வெளியே வந்தவன், லிப்டிற்குள் நுழைந்ததும்.. அவசரமாக செல்பேசியை எடுத்தான்.


அதில் ‘மிருது டியர்’ என்று இருந்த எண்ணிற்கு அழைத்தான்.


அடுத்த கணமே அந்த பக்கம் அழைப்பு எடுக்கப்பட்டது.


“சொல்லுங்க.. தியாகு மாமா!” என்று மிருதுளாவின் குரல் கேட்டது.


எப்பொழுதும் போல்.. அவளது மாமா என்ற அழைப்பில் சிலிர்த்த மனதுடன் தியாது “மிருதுமா! நான்


இன்னைக்கு வர மாட்டேன். இந்தியாவில் இருந்து என் பெரெண்ட்ஸிற்கு தெரிந்த ரிலேசன்.. முக்கிய வேலையா இங்கே வந்திருக்காங்க.. என் அப்பா பெருமையா என் மகன் அங்கே தான் இருக்கிறான். அங்கே தங்கிக்கோங்க.. என்றுச் சொல்லிட்டராம். முதலிலேயே ஃபோன் போட்டு சொல்லியிருந்தா கூடப் பரவாலை. என் முன்னாடி வந்து நின்னுட்டு இதைச் சொல்றாங்க! என்னால தட்ட முடியலைடா! ப்ளீஸ்.. கொஞ்ச நாள் அட்ஜெஸ்ட் செய்துக்கோ! நான் இன்னைக்கு வீட்டுக்கு வர மாட்டேன்.” என்றான்.


மிருதுளா மெல்லிய குரலில் “அப்போ.. அவங்க இந்தியா போகிற வரை.. என்னைப் பார்க்க வர மாட்டிங்களா!” என்று அழுது விடுபவள் போல் கேட்டாள்.


அதற்கு தியாகு பதறியவாறு “உன்னைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியுமா மிருது டியர்! ஆனா உன் கூடவே இருக்க மாட்டேன் டியர்!” என்று அவன் வருத்தத்துடன் கூறினான்.


மிருதுளாவிடம் சில கணங்கள் அமைதி நிலவியது.


“பின் ஒகே தியாகு மாமா! எனக்கு புரியுது. அதுதான் நீங்களே சொல்றீங்களே! என்னைப் பார்க்காம இருக்க முடியாதுனு சொல்றீங்களே! எனக்கு அதுபோதும்.. எப்படியும் என்னைப் பார்க்க வந்துருவீங்க! எனக்கு நம்பிக்கை இருக்கு..” என்றாள்.


அதைக் கேட்டு சிரித்த தியாகு “நிஜமா எனக்கு டவுட்டா இருக்கு மிருது! நீ இங்கே பிறந்து வளர்ந்த பொண்ணா! உனக்கு அவ்வளவு பொறுமை, நிதானம், பக்குவம் எல்லாம் இருக்கு! அதுதான் உனக்கு அழகு! பார்க்கிறதுக்கே அழகி நீ! இந்த குணங்களும் சேர்ந்த நீ பேரழகி தெரியுமா..” என்றான்.


அந்த பக்கம் வெட்கத்துடன் சிரிக்கும் சத்தம் கேட்டது. அந்த சிரிப்பு சத்தம் தியாகுவின் நாடி நரம்புகளை தட்டியெழுப்பியது. உடனே மிருதுளாவை சென்றுப் பார்க்க வேண்டும் என்று உள்ளம் துடித்தது.


ஆனால்?!


போக முடியாத சூழ்நிலை அவனுக்கு கோபத்தை கிளப்பியது. அந்த சூழ்நிலையை ஏற்படுத்திய ஆர்த்தியின் மீது.. இன்னும் கோபம் எழுந்தது.. பின் மிருதுளாவிடம் பிறகு அழைக்கிறேன்.. அல்லது நேரில் வருகிறேன்.. என்றுக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.


பின் மூவரும் சாப்பிடுவதற்கு வாங்கிக் கொண்டு வந்தான்.


அரைமணி நேரத்தில் செய்து முடித்திருக்கிற வேலையை ஒரு மணி நேரம் தாமதப்படுத்திக்கிறான். ஆனால் மனதில் ஆர்வம் இருந்தால்.. அல்லவா செயலும் வேகம் பெறும். தியாகுவின் மனதில் முழுவதும் ஆர்த்தி இனி இங்கேயே தான் இருக்க போகிறாளா.. இனி என்ன செய்வது போன்ற எண்ணங்களே வலம் வந்துக் கொண்டிருந்தன.


ஆர்த்தியிடம் அவர்களது மனம் பொருத்தமின்மையை எடுத்துச் சொல்லி.. சுமூகமாக பிரிந்து விடலாம்.. என்று மட்டும் கூற வேண்டும். மிருதுளாவுடன் திருமணம் ஆனா விசயத்தை சொல்லக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். ஆர்த்தி போன்ற பெண்.. இதற்கு எளிதாக ஒத்துக் கொள்ளுவாள் என்றுத் தான் தியாகுவிற்கு தோன்றியது.


அவ்வாறு கணவனின் மேல் அன்பு கொண்டிருந்த பெண்ணாக இருந்திருந்தால்.. எப்பொழுதோ வந்திருப்பாள். தற்பொழுது கூட கண்டிப்பாக அவனது பெற்றோர்.. அல்லது அவளது பெற்றோரின் வற்புறுத்தலின் பெயரில் தான் வந்திருப்பாள். அதனால் தனது முடிவை கூறினால்.. கண்டிப்பாக ஒத்துக் கொள்ளுவாள் என்றுத் தான் தோன்றியது.


அவனது மனதில் இத்தனை எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தது.


லிப்டில் இருந்து வெளிப்பட்டவன், எவ்வாறு ஆர்த்தியிடம் கூறுவது என்ற யோசனையுடன் கதவை திறந்தான். அங்கு ஆர்த்தி ஹாலில் இருந்த ஷோபாவில் அமர்ந்துக் கொண்டு.. தியாகுவின் பெற்றோரிடம் வீடியோகாலில் பேசிக் கொண்டிருந்தாள்.


டிவியில் தெரிந்த அவர்களிடம் “இப்போ ஆவது நம்பறீங்களா! நான் இங்கே உங்க பையன் கூடத் தான் இருக்கேன். அவர் கடைக்கு..” என்ற போழுது.. தியாகு கதவை திறக்கவும், “இதோ அவரே வந்துட்டார்.” என்றவள், “சீக்கிரம் வாங்க! மிரர்காஸ்ட் போட்டு டிவில கனெக்ட் செய்திருக்கேன். அத்தை மாமா ரெண்டு பேரும் பேசிட்டு இருக்காங்க..” என்று அழைத்தாள்.


தியாகு அதிர்ந்து தான் போனான். அவன் பிரிவை பற்றிப் பேசலாம் என்று வந்தால்.. இவள் இன்னும் உறவை நீட்டிக்க வைத்து விடுவாள் போல.. என்று தர்மசங்கடத்திற்கு உள்ளானான்.


பின் அவர்களிடம் பேசிவிட்டு.. காணொளியை துண்டித்தாள்.


தியாகுவிடம் “நீங்க வருவீங்க என்று வெயிட் செய்தேன். ஆனா அவங்களே நான் இந்தியாவில் இருக்கேன் என்று நினைச்சுட்டு இப்போ தான் ஃபோன் போட்டாங்க.. அவங்களுக்கும் சர்பரைஸா இருக்கட்டும் என்று டிவில கனெக்ட் செய்துப் பேசினேன். அவங்க முகத்தை பார்த்தீங்களா.. ரொம்ப சந்தோஷமா இருந்தாங்க..” என்றாள்.


ஆனால் அவள் பேசியதிற்கு எவ்வித பிரிதிபலிப்பும் காட்டாது. அவனது முகம் யோசனையில் இருப்பதைப் பார்த்த ஆர்த்தி அமைதியானாள்.


மேசையில் தியாகு வைத்திருந்தவற்றை பார்த்த ஆர்த்தி சிறுச் சிரிப்புடன் “இன்னும் ஒரு மணி‌ நேரம் கழித்து வாங்கி வந்திருந்தா.. நைட் டின்னருக்கு சாப்பிட்டுக்கலாம். நோ பிராப்ளம் சூடு பண்ணிக்கிறேன்.” என்றாள்.


அதைக் கேட்ட தியாகு “என்ன நக்கலா!” என்று குரல் இறுக கேட்டான்.


ஆர்த்தி “வாட்! சின்ன டீஸிங்! சின்ன புல்லிங்! இதுல நீங்க இப்படி கோபப்படற அளவுக்கு என்ன இருக்கு! இல்ல ஒருவேளை என்கிட்ட கோபப்பட ரிஷன் தேடிட்டு இருந்தீங்களா!” என்று புருவத்தை உயர்த்தி கேட்டாள்.



உடனே தியாகு “இந்த திமிர் பேச்சு இன்னும் குறையவே இல்ல! நான்தான் மேதாவி என்கிற மாதிரி பேசுவது..” என்றவாறு எழுந்தான்.


அதைக் கேட்டு தானும் எழுந்த ஆர்த்தி “அதென்ன.. உங்க கோபத்திற்கு பதில் பேசினா.. திமிர் என்று பேசுவது! அப்போ நீங்களும் மாறலை இல்ல..” என்று மூச்சு வாங்க கூறினாள்.


ஆர்த்தியின் கோபத்தை கண்டு தியாகு தன்னையே கடிந்து கொண்டான்.


ஆர்த்தியின் சுமூகமாக பேசி.. விவாகரத்து வாங்காமல்.. இப்படிப்‌ பேசி கோபத்தை தூண்டி விடக் கூடாது. பிறகு சிக்கல் ஆகிவிடும் என்று அவனது அறிவுக்கு எட்டியது.


அங்கே ஆர்த்தியும் தன்னை கடிந்து கொண்டாள்.


அவள் இங்கே வந்த நோக்கத்தை நினைத்து பார்த்தாள். குடும்ப இணைப்பை பலப்படுத்த வந்திருக்கிறாள். ஆனால் இப்படி அவனிடம் ஏட்டிக்கு போட்டியாக பேசி.. அவனது கோபத்தை தூண்டி விட்டு.. அவளே ஒரு காரணத்தை உருவாக்கி விடக் கூடாது. எனவே தியாகுவிடம் மன்னிப்பு கேட்க திரும்பியவள் “ஸாரி” என்ற பொழுது அவனும் “ஸாரி” என்றான்.


சில நிமிடங்கள் இருவரிடமும் பேச்சில்லை. ஆளுக்கொரு பக்கம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.


தியாகு “பையன் எங்கே?” என்றுக் கேட்டான்.


“தூங்கிறான்…”


“எங்கே?”


“அந்த ரூமில்..” என்றுச் சுட்டிக் காட்டினாள்.


தியாகு “ஓ சரி!” என்றான்.


அது அவனது அறைக்கு அடுத்து இருந்த அறை!


ஆர்த்தி தொடர்ந்து “அவசரமா கிளம்பியதில் பெருசா.. எதையும் எடுத்துட்டு வரலை. என் தின்க்ஸூம் ப்ரணவ் தின்க்ஸூம் அங்கே தான் வச்சுருக்கேன்.” என்றாள்‌.


தியாகு “ம்ம் சரி!” என்றவாறு அவனது அறைக்கு சென்றான்.


‘பரவாலை! இனி வேண்டியதை இங்கே வாங்கலாம்.’ என்று அவன் கூறுவான் என்று எதிர்பார்த்தாள். ஆனால் அவன் அதைப் பேசாது அவனது அறைக்குள் நுழைந்ததும்.. தளர்ந்த மனதை பிடிவாதமாக உற்சாகப்படுத்தி விட்டு.. ப்ரணவ்வின் அறைக்குள் நுழைந்தாள்.


பின் ப்ரணவ் எழுந்து.. சாப்பிட்டு சிறிது நேரம் வீட்டை சுற்றிப் பார்த்து விளையாடி விட்டு “இனி இங்கு தான் இருப்போமா!” என்பது மாதிரி ஆயிரம் கேள்விகள் கேட்டுவிட்டு.. தாத்தா பாட்டியிடம் போகிறேன் என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்தான்.


கணவனின் அறையை பார்த்துவிட்டு.. ஆர்த்தியே அவனை கீழே அழைத்து சென்று வேடிக்கை காட்டி சமாதானப்படுத்தி விட்டு வந்தாள். அவர்கள் வந்த பொழுதும்.. தியாகு அறைக்குள் தான் இருந்தான்.


மூடியிருந்த கதவை பார்த்த ஆர்த்தி அப்படியொரு கோபம் வந்தது. ஓங்கி கதவை பலமாக தட்டி.. நீ கட்டின பொண்டாட்டியும்.. நீங்க பெற்ற மகனும் வந்திருக்கோம் என்ற அக்கறை கொஞ்சம் கூட இல்லையா.. என்று கத்த வேண்டும் போன்று இருந்தது.


ஆனால் அவளால் அதை செயலாற்ற முடியவில்லை.


ஏனெனில் அவன் பதிலுக்கு ‘உனக்கு கணவன் என்ற அக்கறை இருந்ததா! இத்தனை நாட்களாய் இல்லாத அக்கறை திடீர் என்று எப்படி வந்தது?’ என்றுக் கேட்டால்.. அவள் திணறிப் போவாள்.


எனவே அவன் இவ்வாறு இருப்பதற்கு.. தனது அலட்சியப்போக்கும் ஒரு காரணம் என்று சமாதானப்படுத்திக் கொண்டு.. தியாகு அப்பொழுது வாங்கியதை சூடு செய்துக் கொடுத்துவிட்டு.. தியாகுவின் அறையை தட்டலாம் என்று நினைத்தாள். ஆனால் அவளது ஈகோ அவளைத் தடுத்தது.


‘அதென்ன.. ஏதோ வேண்டா விருந்தாளியை பார்ப்பது போல் பழகுகிறான். அவனை நான் போய் அழைக்கணுமா..’


அப்பொழுது.. ப்ரணவ் உறங்குவதற்காக சிணுங்கவும்.. முதலில் அவனை உறங்க வைத்தாள்.


படுக்கையில் படுத்த ப்ரணவ் அடுத்து கேட்ட கேள்வியில் ஆர்த்தி பேச்சிழந்தாள்.


“அம்மா! அப்பா கூட ஜாலியா இருக்கணுனு அந்த அன்கிள் சொன்னாங்க! ஆனா இந்த அப்பா கூட ஜாலியா எப்படி இருக்கிறது?” என்றுக் கேட்டான்.


அவளது முன்னுச்சி முடியை நீவி விட்டவாறு “ஜாலியா இருக்கலாம் ப்ரணவ்! திடீருனு பார்த்ததும் அப்பா ஷாக் ஆகிட்டார்.” என்றாள்.


அதற்கு ப்ரணவ் கொட்டாவி விட்டவாறு “எனக்கு இந்த அப்பா வேண்டாம்மா..” என்றவாறு அன்னையை ஒட்டி இமைகளை மூடி உறங்கிப் போனான்.


அப்படியெல்லாம் சொல்லக் கூடாது.. என்றுப் பிடித்து உலுக்கி எழுப்பி.. சொல்ல முடியாமல் திணறினாள்.


ப்ரணவ் உறங்கும் வரை.. காத்திருந்தவள், அவன் உறங்கியதும்.. தனது ஈகோவை வீசியெறிந்து விட்டு.. ப்ரணவின் அறை கதவை தட்டினாள்.


மிருதுளாவிடம் இரவு வர மாட்டேன் என்று அழைத்துச் சொல்லிவிட்டு.. ஆர்த்தியிடம் எவ்வாறு விசயத்தை கூறுவது என்று யோசித்துக் கொண்டிருந்தவன், ஆர்த்தி பலமாக கதவை தட்டவும் சிறு எரிச்சலுடன் கதவை திறந்தான்.


தியாகு எரிச்சலை முகத்தில் நன்றாக காட்டியவாறு “என்ன விசயம்? அதுக்கு இப்படியா கதவை தட்டுவாங்க? மேனர்ஸ் இல்லையா?” என்று எரிந்து விழுந்தான்.


ஆர்த்தி “பொண்டாட்டியும் பிள்ளையும் வீட்டிற்கு வந்திருக்கும் போது.. இப்படி கதவை சாத்திட்டு உட்கார்ந்திருக்கீங்களே.. உங்களுக்கு சென்ஸ் இல்லையா!” என்று பதிலுக்கு கேட்டாள்.


தியாகு “என்ன நீ! என்னைப் பார்த்து அறிவு இருக்கா.. என்றுக் கேட்கிறே!” என்றுக் கோபப்பட்டான்.


அதற்கு ஆர்த்தி “நீங்க மட்டும் எனக்கு பாராட்டு பத்திரமா கொடுத்தீங்க..” என்று இளக்காரமாக கேட்டாள்.


உடனே சுள்ளென்று எழுந்த கோபத்துடன் “இப்படி சண்டை போடுவதற்காக தான் அங்கிருந்து வந்தாயா?” என்றுக் கேட்டான்.


அந்த கேள்வியில் நெருப்பில் ஊற்றிய நீரால் நெருப்பு அணைந்து விடுவது போல்.. ஆர்த்தியின் கோபமும் சட்டென்று மறைந்தது. உடனே அவளது வாயில் இருந்து பதிலும் வந்தது.


“கண்டிப்பா இல்லைங்க! சந்தோஷமா சேர்ந்து வாழலாம் என்று தான்ங்க வந்தேன்ங்க..” என்ற‌ அவளது குரல் இறைஞ்சியது.


அதில் அவனது மனதில் குற்றவுணர்வு மிக.. அவனும் அமைதியானான்.


ஆர்த்தி “நான் உள்ளே வரட்டுமா..” என்றுக் கேட்டாள்.


தியாகு தயக்கத்துடன் வழி விட்டான்.


உள்ளே சென்ற ஆர்த்தியும் தயக்கத்துடன் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.


பின் “நமக்குள்ள.. இயற்கையா சில பிரிவு.. நாமளே உருவாக்கிட்ட சில பிரிவு உண்டாகிருச்சு! நம்ம ரிலேஷன்ல இது நல்லதில்லை! அதுதான் நல்லபடியா ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுட்டு.. அனுசரிச்சுட்டு.. சந்தோஷமா வாழலானு வந்தேன்.” என்று அவளே தனது மனம் திறந்து கூறினாள்.


அவளிடம் பிரிவை பற்றி எவ்வாறு கூறலாம் என்று அவன் யோசித்து கொண்டிருக்க.. அவள் சேர்ந்து வாழ்வதைப் பற்றிப்‌ பேசவும் திகைத்தான்.


பின் “வந்த கொஞ்ச நேரத்திலேயே இத்தனை சண்டை‌‌.. நீ சொன்னது சாத்தியம் என்றா நினைக்கிறே..” என்றுக் கேட்டான்.


அதற்கு ஆர்த்தி உடனே “இப்போ எப்படி.. சண்டை பெருசாவதை நிறுத்திட்டோம். அந்த மாதிரி அனுசரணையா இருந்துட்டா.. கண்டிப்பா நாம் நல்லா இருக்கலாம்.” என்றாள்‌.


‘என்னால் அப்படியிருக்க முடியாது.. என்னை விரும்பும் பெண்ணுடன் எனக்கு கல்யாணம் ஆகிருச்சு’ என்று தியாகுவிற்கு கத்த வேண்டும்‌ போன்று இருந்தது.


எனவே அமைதியாக படுக்கையில் அமர்ந்தான்.


ஆர்த்தி “நான்தான் சொன்னேனே.. முதலில் கொஞ்சம் அன்ஈஸியா இருக்கும். அப்பறம் பழகிக்கலாம்.” என்றவாறு அவனருகே அமர்ந்தவள், மெல்ல கரத்தை உயர்த்தி அவனது தோளில் வைத்தாள்.


பலத்த மனக்குழப்பத்தில் இருந்த தியாகு அதை கவனிக்கவில்லை.


தனது கணவன் அமைதியாக இருப்பதைக் கண்டு தயக்கத்துடன் மற்றொரு கரத்தை உயர்த்தி அவனைக் கட்டிக் கொண்டாள்.


உடனே வெடுக்கென்று அவளை உதறிவிட்டு எழுந்த தியாகு “என்ன வளைச்சு போட வந்தியா?” என்று சிறிது யோசியாமல் கேட்டான்.


ஆர்த்தியும் வெடுக்கென்று “நான் என்ன இன்னொருத்தியோட புருஷனையா வளைச்சு போடப் பார்த்தேன்.” என்று நறுக்கென்று கேட்டாள்.


அவளை கண்கள் இடுக்க பார்த்த தியாகு “கல்யாணமான புதுசுல.. இந்த மேரேஜ் இஷ்டமில்லாம நடந்ததுனு ஓப்பனா சொன்னவ தானே நீ! இப்பவும் ஓப்பனா சொல்லிரு! எதுக்கு இப்படி திடீர்னு சொல்லாம கொள்ளாம வந்திருக்கே? ஏன் இணக்கமா வாழலாம்னு நடிக்கிறே?” என்றுக் கேட்டான்.


அதற்கு மார்புக்கு குறுக்கே கரங்களைக் கட்டிக் கொண்ட ஆர்த்தி “நான் கேட்டதிற்கு பதில் பொய்யா வந்துச்சுன்னா.. நான் கேட்டது தான் பொய்யா போகுமோனு பயமா இருக்கு..” என்றாள்.


தியாகு உதட்டில் இளக்காரமான சிரிப்பை தவழ விட்டவாறு “வார்த்தையால்.. விளையாடுவதில் கில்லாடி தான்..” என்றான்.


அவனைக் கூர்மையாக பார்த்த ஆர்த்தி “ஏன் என்கிட்ட ஒரு விரோதி கிட்ட பேசற மாதிரி பேசறீங்க? நான் வந்தது உங்களுக்கு ஷாக் மாதிரி தெரியுது. நான் வந்ததையும் விரும்பலை மாதிரி தெரியுது.” என்றுத் தீர்க்கமாக கேட்டாலும்.. அவளது கண்களில் இருந்து கண்ணீர் என்னேரமும் விழத் தயாராக இருந்தது.


தியாகு “நீயும்.. ஏதோ நோக்கத்தில் வந்த மாதிரி எனக்கு தெரியுது. பேமலியா ஒன்றா வாழலாம் சந்தோஷமா இருக்கலாம்.. என்பதெல்லாம்.. அந்த நோக்கத்திற்காக சொல்ற மாதிரி தெரியுது.” என்றான்.


அதற்கு ஆர்த்தி “நான் ஓப்பனா சொல்லிருவேன் தியாகு! ஆனா.. அதுக்கு வர பதில் நினைச்சா பயமா இருக்கு! பொய்யா பதில் வந்தாலும்.. உண்மையே பதிலா சொன்னாலும்.. இரண்டும் எனக்கு பயத்தை தான் கொடுக்குது. இரண்டுமே எனக்கு வேதனையை தான் தரும். அதுனால நான் வந்த காரணத்தை சொல்ல மாட்டேன். ஆனா ஒன்றில் மட்டும் நிச்சயம்.. என்னோட கல்யாண வாழ்க்கையை நான் விட மாட்டேன். என்னோட அறிவீனத்தில்.. கவனக்குறைவில்.. என் கையை விட்டு போக நான் விட மாட்டேன்.” என்றுவிட்டு பொங்கி வழிந்த கண்ணீரை துடைத்தவாறு அந்த அறையில் இருந்து அகன்றாள்.


ஆர்த்தி கூறியதைக் கேட்டு தியாகு அதிர்ந்து நின்றான்.


ஆர்த்திக்கு மிருதுளாவுடன் அவனுக்கு உறவு இருப்பது தெரியுமோ.. என்று ஐயம் கொண்டான்.


அடுத்து ஆர்த்தி அதற்கு அவள் விட மாட்டாள் என்றுக் கூறியது மேலும் சிக்கலை அதிகப்படுத்துவது தெரிந்தது.


இவ்வளவு துணிவாக பேசுபவள்.. அவனையும் மிருதுளாவையும் பிரிக்க நிச்சயம் நினைப்பாள். எனவே அவள் இதுவரை ஐயத்துடன் மறைமுகமாக பேசுகிறவளை நேரடியாக கேட்கும்படி வைத்துக் கொள்ள கூடாது. ஒருவேளை இந்த நேரத்தில்.. அவன் விவாகரத்து பற்றிப் பேசினால்.. அதைப் பிடித்துக் கொண்டு விவாகரத்து தர மறுத்துவிடுவாள்.


அதனால்.. அமைதியாக இருந்து விட வேண்டும். சில நாட்கள் கழித்து.. அவர்களுக்குள்.. இருக்கும் மனவேறுப்பாட்டை குறிப்பிட்டு.. அவளே அதற்கு ஒத்துக் கொள்வது போல் செய்து விட வேண்டும்.


மிருதுளாவிற்கும் அவனுக்கு இருக்கும் உறவை அவள் கண்டுப்பிடித்து விடக் கூடாது. அப்படிக் கண்டுப்பிடித்துவிட்டால்.. அவள் அவனது பெற்றோரையும்.. உறவினரையும் நாடி விடுவாள். அதுவரை கொண்டு செல்லக் கூடாது என்று முடிவு எடுத்தான்.


தியாகுவிடம் பேசிவிட்டு.. ப்ரணவ் இருக்கும் அறைக்கு வந்த ஆர்த்திக்கு.. அழுகையை அடக்க முடியவில்லை.


ஐம்பது சதவீதமாக இருந்த அவளது சந்தேகம்.. அவளது வரவை விரும்பாதவனின் நடவடிக்கை ஏழுபது சதவீதமாக மாற்றியது. ஆனாலும்.. அப்படியிருக்காது என்ற முப்பது சதவீதத்திற்காக மீண்டும் நம்பிக்கை கொண்டாள்.


அவளது வாழ்வில்.. அதுவும் அவளுக்கு இம்மாதிரி நடக்கும் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை.


அவளுக்கு அன்றைய நாள் நன்றாக நினைவிற்கு வந்தது.


அன்று வீடியோஃகாலில் அழைத்திருந்தான். தியாகு மது அருந்திவிட்டு.. அவனிடம் பேச வந்திருப்பான் போல.. கண்கள் சொருக அமர்ந்திருந்தவன் மெல்ல வாய் குழற பேசத் தொடங்கினான்.


“எதுக்கு நமக்கு கல்யாணம் ஆச்சு ஆர்த்தி! ஆகியிருக்கவே கூடாது. ஆனா ஆகிடுச்சு! எனக்கு நீ செட் ஆக மாட்டேன்னு உன் கூட வாழ்ந்த இரண்டு மாசத்துலேயே தெரிஞ்சுருச்சு! ஆனா ஒருத்தங்க செட் ஆவாங்கனு தெரியறதுக்கு ஒரு நொடி போதும் தெரியுமா! அந்த நொடியை நான் மறக்கவே மாட்டேன். எனக்கு உன் கூடப் பேசவே பிடிக்கலை. ஆனா..” என்று முகத்தை சுளித்துக் கொண்டு நிமிர்ந்தவனின் கரம் எப்படியோ பட்டு.. வீடியோ முடிந்துவிட்டது.


ஆனால் ஆர்த்தி முடிவுறாத எண்ண அலைகளுடன் ஸ்தபித்து அமர்ந்துவிட்டாள்.


மதுவின் போதையில்.. அவளைப் பிடிக்கவில்லை என்றுக் கூறியதை விட.. ‘ஆனா ஒருத்தங்க செட் ஆவாங்கனு தெரியறதுக்கு ஒரு நொடி போதும் தெரியுமா! அந்த நொடியை நான் மறக்கவே மாட்டேன்.’ என்றுக் கூறியது மீண்டும் மீண்டும் வந்து சென்றன.


அதற்கு ஆயிரம் அர்த்தங்களைக் கண்டுப்பிடித்து.. அவளை உறக்க விடாமல் செய்தது. இதுவரை.. திருமண உறவில் துரோகம் போன்றவையை அவள் கதையாக தான் படித்திருக்கிறாள்.. அல்லது சினிமாவில் பார்த்திருக்கிறாள்.. இப்படித் தனக்கு நடக்கும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. ஏனோ அவளுக்கு வாழ்வில் தோற்றுவிட்டது போன்று உணர்வு தோன்றியது.


பிடிக்கவில்லை என்றால்.. போய் விடு.. என்று அவளால் நினைக்க முடியவில்லை. இயல்பிலேயே அவளது குணமோ.. பிடிக்காததை பிடிக்க செய்வேன். அவளது வாழ்வில் மற்றவர்கள்.. தோல்வியை ஏற்படுத்த அவள் விரும்பவில்லை. எனவே தனது கற்பனை எண்ணமோ.. அல்லது உண்மையோ.. என்னவென்று பார்த்துவிட முடிவு செய்தாள். அவளது கல்யாண வாழ்வு சிறக்க செய்துட வேண்டும். அது அவளது கடமை மட்டுமில்லாது உரிமையும் கூட என்ற முடிவு வந்தவள்.. இதோ திடுதிப்பென்று கிளம்பி இங்கு வந்துவிட்டாள்.


தியாகுவுடன் சுமூகமாக வாழ.. அவளால் முடிந்தளவிற்கு தனது வாய் துடுக்கை அடக்கிக் கொண்டு முயன்றாள். அவனின் சிறு வேலைகளை அவள் செய்ய முயன்றாள். ஆனால் அவன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. பகலில் வேலைக்கு செல்பவன்.. இரவில் மட்டும் தங்க வருவான்.


ப்ரணவ்வை அழைத்து வந்து.. மூவரும் அமர்ந்து பேசலாம்.. என்று அழைத்தாள். ஆனால்.. அவன் முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்றான். அதற்குள்.. அவர்களது அப்பார்ட்மென்ட்டில் வசிக்கும் இன்னொரு தமிழ் பெண்ணை சினேகம் பிடித்துக் கொண்டு.. கடைக்கு சென்றவள், அவனுக்கு பரிசுகளை வாங்கி வந்தாள். அதை அவன் தொட்டு கூடப் பார்க்காமல் சென்றான். அவள் சமைத்ததை அவன் வாயில் வைப்பதே இல்லை. இரவில்.. அறை கதவை தாழிட்டுவிட்டு படுத்தான்.


அவளிடம் பேசவும்.. பழவும் விருப்பமில்லை.. என்று முதலில் மறைமுகமாக கூறியவன், அவள் அங்கு வந்த ஐந்தாம் நாள்.. வெளிப்படையாக கூறினான்.


“நாம் பிரிந்து விடலாம்.. ஆர்த்தி! இப்படி ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டை போட்டுட்டு.. நீயும் ஏதோ சந்தேகப்படுவதும்.. நானும் உன்னோட குணம் பிடிக்காமல் வெறுப்பதும்.. இதெல்லாம் எதுக்கு! இருவரும் நிம்மதியாக இருக்கலாம். முறைப்படி விவாகரத்து வாங்கி விடலாம்.” என்றான்.


அதற்கு ஆர்த்தி “என்னைப் பிடிக்காதது மட்டும் தான் காரணமா..” கேட்டாள்.


தியாகு “ச்சைக்” என்றுவிட்டு எழுந்து சென்றான்.


அவளது நம்பிக்கை ஆட்டம் கண்டுவிட்டதை கண்டு அவள் சிலையென நின்றுவிட்டாள்.


இவ்வாறு அவள் வந்து ஏழு நாட்கள் கடந்திருந்த பொழுது அந்த தமிழ்பெண் மாதவி தயக்கத்துடன் அவளைப் பாா்க்கவும், ஆர்த்தி “சொல்லுங்க மாதவி அக்கா!” என்றாள்.


“இதை உன்கிட்ட சொல்லக் கூடாதுனு தான் நினைச்சேன். நீயும் வந்துட்டே.. நீயும் உன் ஹஸ்பென்ட் கூட சந்தோஷமா இருக்கே.. இதைச் சொல்லி.. உன் சந்தோஷத்தை கெடுக்க கூடாதுனு நினைச்சேன். ஆனா இன்னைக்கு காலையில் பார்க்கில் உன்னை அவர் திட்டிட்டு போறதைப் பார்த்த பொழுது.. இதை உனக்கு சொல்லியே ஆகணும் என்றுத் தோணுது.” என்றாள்.


ஆர்த்தியின் மனதில் திக்கென்று இருந்தது.


ஆனாலும் அதை சமாளித்துக் கொண்டு “சொல்லுங்க மாதவி அக்கா..” என்றாள்.


மாதவி “ஏழு மாசத்துக்கு முன்னாடி உன் ஹஸ்பென்ட் கூட ஒரு பெண்.. அடிக்கடி இங்கே வந்துட்டு இருந்தாள். அப்பறம் அவள் மட்டுமில்லை. உன் ஹஸ்பென்ட்ம் வருவதில்லை. அதுக்கு பிறகு எப்போ ஆவது அவர் மட்டும் வருவார். இப்போ நீ வந்த பிறகு தான்.. தொடர்ந்து இங்கே இருக்கிறார்.” என்றாள்.


ஆர்த்தி சிரித்தவாறு “பிரெண்டாக இருக்கலாம் மாதவி அக்கா..” என்றாள்.


அதற்கு மறுப்பு தெரிவிக்க ஆர்த்தியை பார்த்த மாதவி திகைத்து அமைதியாகி விட்டாள்.


ஏனெனில் ஆர்த்தியின் உதடு சிரித்துக் கொண்டிருந்தாலும்.. அவளது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது.


அதன் பின்.. இன்று காலையில்.. ப்ரணவ்வை அழைத்துக் கொண்டு.. அவனை சிறார் பள்ளியில் சேர்ப்பதற்காக மாதவியுடன் அலைந்துக் கொண்டிருந்த பொழுது.. தியாகுவை பார்த்தாள். சற்று தள்ளியிருந்த கார் பார்க்கிங்கில் அவன் நின்றிருந்தான். அவன் அவர்களைப் பார்க்கவில்லை.


அவனைப் பார்த்ததும்.. அவனை நோக்கி செல்ல முயன்ற பொழுது.. ஒரு பெண் ஓடி வந்து அவனது தோளில் தொற்றவும், அவனை அணைத்தவாறு காரில் அமர வைத்தவன், அவனும் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து காரை கிளப்பிக் கொண்டு சென்றான்.


மாதவி “ஆர்த்தி அவள்தான்..” என்றுக் கூறப் போனவள், அவள் நின்றிருந்த நிலையை கண்டு.. கைத்தாங்கலாக அழைத்து சென்றாள்.


குளிர்ந்த நீரை பலமுறை.. அள்ளி முகத்தில் தெளித்தும்.. அவளது உள்ளத்து குமறல் அடங்கவில்லை.


ஒரு நம்பிக்கை துரோகத்தை அவளால் ஜீரணிக்க முடியவில்லை.


அதைச் சுற்றியே அவளது எண்ணங்கள் சுழன்றுக் கொண்டிருக்க.. அது தாங்க முடியாமல் மயங்கி விழுந்தாள்.


இதோ.. மயக்க நிலையிலும்.. அந்த எண்ணங்கள் விடவில்லை.











 
Status
Not open for further replies.
Top