All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "தழலாய் நின் நேசம்..!!" - கதை திரி

Status
Not open for further replies.

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
34926
தழல் – 13 (a)

சாய்வு நாற்காலியில் விழிமூடி சாய்ந்திருந்தவனின் நினைவுகள் அறுப்படுவது போல் அலைபேசி அடித்துத் தன் இருப்பைக் காண்பித்தது. அதில் விழிகளைத் திறந்தவன் அழைப்பது பார்த்தி என்றதும் சட்டென எடுத்திருந்தான்.


“ஹலோ சார்..” என்ற பார்த்தியின் பதட்டமான குரலில் யோசனையானவன், “ஹ்ம்ம்.. சொல்லு..” என்று கூர்மையாகக் கேட்கவும், “துருவ் இருக்க இடம் தெரிய வந்திருக்கு சார்..” என்றான் பார்த்தி.


அதைக் கேட்டதும் சட்டென எழுந்து நின்றிருந்தவன், “எங்கே இருக்கான்..?” என்று பல்லைக் கடிக்க.. “அவன் டெல்லியில் இருக்கான் சார்..” என்றவன், சிறு இடைவெளி விட்டு “அவங்க கட்சி எம்பி வீட்டில் இருக்கான்..” என்றான் பார்த்தி.


அதில் யோசனையாகத் தன் நெற்றியை ஒற்றை விரலை கொண்டு தேய்த்து விட்டுக் கொண்டவன், “உள்ளே புகுந்து தூக்க முடியுமா..?” என்றான் கொஞ்சமும் தயக்கமில்லா குரலில் நிமலன்.


அதைக் கேட்டு அந்தப் பக்கம் திகைத்த பார்த்தி, “கொஞ்சம் கஷ்டம் சார்..” என்று இழுக்க.. “அப்போ அவனை வெளியில் வர வை பார்த்தி..” என்று கட்டளை குரலில் கூறி இருந்தான் நிமலன்.


இதில் செய்வதறியாது திகைத்தாலும், உடனே மறுத்து எதுவும் பேசி நிமலனின் கோபத்திற்கு ஆளாக விரும்பாமல் “சரிங்க சார்..” என்று பார்த்திச் சொல்லவும், அழைப்பை துண்டித்து இருந்தவனின் மனம் பல்வேறு உணர்வுகளின் கலவையாக இருந்தது.


அதில் அமைதி வேண்டி வேகமாகச் சென்று தன் கப்போர்ட்டை திறந்தவன், அதில் தனக்கே தனக்கென மறைத்து வைத்திருந்த ரகசியத்தை மெல்ல கையில் எடுத்தான் நிமலன்.


அந்தத் தங்க கொலுசு அவனுக்குப் பல நேரங்களில் மருந்தாகவும் சில நேரங்களில் முள்ளாகவும் இருந்திருக்கிறது. இன்றும் அதைக் கையில் எடுத்து பார்த்தவன், “நான் உன்னைப் பார்க்காம இருந்திருக்கணும்..” என்றவாறே விழியை மூடி தன் வேதனையைத் தனக்குள்ளேயே மறைக்க முயன்ற நொடி, அந்தத் தங்க கொலுசு அணிந்த இரு வெண் பாதங்கள் பட்டு சேலை சரசரக்க ஓடிய காட்சி நிமலனின் மனகண்ணில் வந்து நின்றது.


எத்தனை பொருத்தமாக அந்தக் காலில் இந்தக் கொலுசு பதிந்திருந்தது என்பதை நினைத்தவன், தன் கையில் இருந்த கொலுசை அப்படியே தன் நெஞ்சோடு சேர்த்துப் பிடித்துக் கொண்டான் நிமலன்.


மனதில் ஏதேதோ நினைவுகள், இனிமையும் ரணமுமாகப் பல காட்சிகள் மன கண்ணில் வந்து அவனை இம்சிக்க.. “ஏன் எனக்கு மட்டும் இத்தனை வேதனை..? நான் மட்டும் என்ன தப்பு செஞ்சேன்..? என் வாழ்க்கையில் மட்டும் எதுக்கு இத்தனை வலி..?” என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டான் நிமலன்.


இதையெல்லாம் நினைத்து பார்த்தவனின் மொத்த கோபமும் இப்போது தமயாவின் மேல் திரும்பியது. அதில் வேகமாகக் கதவை திறந்து கொண்டு வெளியில் வந்தவன், அந்த அறைக்கு நேரெதிரே தரையில் மடங்கி அமர்ந்து அழுதுக் கொண்டிருந்தவள், அப்படியே அருகில் இருந்த ஒற்றை இருக்கையின் மேல் தலை சாய்த்து உறங்கி விட்டிருப்பதைக் கண்டு அப்படியே நின்றான் நிமலன்.


இதற்கெல்லாம் காரணமான ஜெயதேவ்வின் மேலான கோபம் அப்படியே அவரின் மகளின் மேல் திரும்ப.. தன்னை நிம்மதியில்லாமல் தவிக்கச் செய்து விட்டு அவள் மட்டும் நிம்மதியாக உறங்கிவதை கண்டு உண்டான வெறுப்பில் அருகில் இருக்கும் எதையாவது எடுத்து அவளருகில் போட்டு உடைக்கும் அளவு கோபத்தோடு அவளை நெருங்கியவன், பின் ஒரு சலிப்போடு அங்கிருந்து வெளியேறி இருந்தான்.


நிம்லான் கதவை அடித்து மூடி விட்டுச் சென்ற சத்தத்தில் பதறி கண் விழித்தவள், உள் அறை திறந்திருப்பதைக் கண்டு வேகமாக அங்கு எழுந்து சென்று பார்க்க.. அங்கு யாருமே இல்லை. இதில் சோர்ந்து போனவளாக அந்த அறையின் வாயிலிலேயே மடங்கி அமர்ந்தவள், “என்ன தான் ப்பா நடந்தது..? ஏன் எல்லாரும் உங்களைக் குற்றவாளின்னு சொல்றாங்க..? நீங்க கதிர் மாமா மேலே எவ்வளவு அன்பும் மரியாதையும் வெச்சு இருந்தீங்கன்னு எனக்குத் தெரியும்..? நீங்க நிச்சயமா இதைச் செஞ்சு இருக்க மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும்..” என்று வாய் விட்டே புலம்பியவள், “நீங்க செய்யலை தானே ப்பா.. பிளீஸ் சொல்லுங்களேன், எனக்கு இவங்க கோபத்தைப் பார்த்தா ரொம்பப் பயமா இருக்கு..” என அழுதாள் தமயா.


அவளின் மனதில் திடீரென அன்று அவர்களின் வீட்டு சூழ்நிலை மாறிப் போனதும், வளர்மதியின் பெரியம்மா வீட்டில் இவர்களைக் கொண்டு சென்று ஜெயதேவ் விட்டு வந்ததும், வளர்மதி அங்கே அழுது கொண்டே இருந்ததும், கிருபா சோகமாக ஒரு மூலையில் சுருண்டு கிடந்ததும் என அனைத்தும் வந்து போனது.


அந்த விபரம் புரியா வயதில் ஏன் எதற்கு எனத் தெரியாமல் ஏதோ ஒரு ஊரில் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடப்பது படிக்காமல் ஜெயதேவ்வை பார்க்க வேண்டுமென அவள் அழுததும் வளர்மதியின் பெரியம்மா, ஏதேதோ காரணம் சொல்லி இவளை சமாதானம் செய்ததும் எனத் தெளிவில்லா காட்சிகளாக வலம் வந்தது.


அதன் பின் சில மாதங்களிலேயே அவசர அவசரமாக தமயாவை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார் ஜெயதேவ். இதையெல்லாம் இப்போது யோசித்துப் பார்த்தவளுக்கு மனம் பதறியது.


முன்பே இதைப் பற்றி எல்லாம் ஒரளவுக் கேள்விப்பட்டிருந்தாலும் அப்போது அப்படி நடக்க வாய்ப்பே இல்லை என்று உறுதியாக நம்பிய மனம். இன்று ஆங்காங்கே இருந்த புள்ளிகளை இணைத்து பார்த்து திடுக்கிட்டது.


அதற்கு முன்பும் பின்புமான தங்களின் வாழ்க்கை முறையும் தமயா’வின் மனதில் வந்து அவளின் சந்தேகத்தை அதிகப்படுத்தியது. இதில் தனக்குள்ளே’யே வாதாடி தோற்றுப் போனவளாக “அப்பா பிளீஸ் நீங்க இதைச் செய்யலைன்னு சொல்லுங்களேன்.. அது நீங்க இல்லை தானே..?” என்று தனக்குள்ளேயே கெஞ்சுதலாகக் கேட்டுக் கொண்டிருந்தாள் தமயா.


அவளுக்கு இப்போது நினைவு செல்லும் பாதையில் தொடர்ந்து யோசிக்கவே பயமாக இருந்தது. அது கனவிலும் நிஜமாக இருந்து விடவே கூடாது என்ற எண்ணத்தோடு கட்டுப்படுத்தவே முடியாமல் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள் தமயா.


**************


அதே நேரம் கீழே இறங்கி வந்த நிமலனை கண்ட வரதன், “என்ன இருந்தாலும் நீங்க இப்படி ஒரு கல்யாணத்தைச் செஞ்சுட்டு இருந்திருக்கக் கூடாது மாப்பிள்ளை..” என்று மீண்டும் துவங்கவும், “உங்க ஆலோசனையை எல்லாம் பிசினஸில் கொடுக்கறதோடு நிறுத்திக்கோங்க.. என் வாழ்க்கையில் தலையிடும் உரிமையை நான் இதுவரை யாருக்கும் கொடுத்ததில்லை..” என்று முகத்தில் அடித்தது போல் பதில் சொல்லி விட்டு வெளியேறி இருந்தான் நிமலன்.


அதைக் கண்டு அதிர்ந்து நின்ற வரதன், “பார்த்தீங்களா அத்தை மாப்பிள்ளை எப்படிப் பேசிட்டு போறார்னு..” என்று சூர்யகலாவிட்ம் சென்று புகார் வாசித்தார்.


ஆனால் அவரோ “சரியா தானே சொலிட்டு போறான்..” என்றவர், “ஆமா.. அந்த டெண்டர் என்னாச்சு..? வந்தது தான் வந்துட்டீங்க போன மாசம் வரவு செலவை பார்த்துடலாம் வாங்க..” என எழுந்து செல்ல.. இருபது நாட்களாக எதற்காக இந்தப் பக்கமே வராமல் பிசியாக இருப்பது போலவே காண்பித்துக் கொண்டிருந்தாரோ, அதில் தானே வந்து சிக்கிக் கொண்டதை உணர்ந்து திருதிருத்தார் வரதன்.


வெளியில் வந்த நிமலன் காரில் ஏறி அமரவும், பார்த்தியிடம் இருந்து அவனுக்கு அழைப்பு வந்தது. அதை நிமலன் உடனே ஏற்று இருக்க.. “சார்.. அன்னைக்குக் கடத்தலில் ஈடுபட்ட நாலு பேரில் ஒருத்தன் சிக்கி இருக்கான்..” என்றான் பார்த்தி.


அதில் ஆத்திரமானவன், “எங்கே இருக்கான்..?” என்று கை விரலை மடக்கியவாறே பல்லைக் கடித்துக் கொண்டு கேட்கவும், “நம்ம இடத்துக்குக் கொண்டு வந்துட்டேன் சார்..” என்றான் பார்த்தி.


“குட்..” என்று மட்டும் சொல்லி அழைப்பை துண்டித்து இருந்தவன், வேகமாகக் காரை அவனை அடைத்து வைத்திருக்கும் இடத்தை நோக்கி செலுத்த.. மனமெங்கும் அன்றைய நாளின் காட்சிகளே நிறைந்து நின்றது.


அதில் புயல் வேகத்தில் அங்குச் சென்று இறங்கியவன், அதே வேகத்தில் உள்ளே நுழைந்து அங்கு அமர்ந்திருந்தவனை எட்டி மிதிக்க.. வலியில் அலறியவாறே பின்னால் சரிந்தான் அவன்.


அப்போதே அவன் முகத்தைப் பார்த்த நிமலனுக்கு அன்று காரை ஒட்டியது இவன் தான் என்பது நினைவுக்கு வந்தது. அதில் உண்டான ஆத்திரத்தோடு அவனின் சட்டை காலரை பிடித்துத் தூக்கியவன், “சொல்லு உன் பாஸ் எங்கே இருக்கான்..?” என்று உலுக்கினான் நிமலன்.


“தெரியாது சாப்..” என்று உடைந்த தமிழில் இந்தி கலந்து பேசியவனை வெறுப்பாகப் பார்த்தவன், திரும்பி தன் ஆட்களிடம் “இவன் தோலை உரிச்சு தொங்க விடுங்க..” என்று கட்டளையிடவும், மேலும் அலறியவன், “நிஜமாவே அவங்க இப்போ எங்கே இருக்காங்கன்னு எனக்குத் தெரியாது சாப்..” என்றான் கெஞ்சுதலான குரலில் பாபு.


“இதை என்னை நம்பச் சொல்றியா..?” என்று நிமலன் ஓங்கி ஒரு அறை விட.. வலியில் கத்தியவன், “நீங்க அடிச்சாலும், இல்லை கொன்னே போட்டாலும் எனக்கு நிஜமாவே எதுவும் தெரியாது சாப்..” என்றதும், “இவன் இப்படி எல்லாம் கேட்டா சொல்ல மாட்டான்.. எனக்குத் தேவை பதில், அதை எப்படி வாங்குவீங்களோ.. வாங்குங்க..” என்று விட்டு அங்கிருந்து வெளியேற முயன்றான் நிமலன்.


“சாப்.. ஒரு நிமிஷம்..” என்ற பாபுவின் குரலில் நின்று திரும்பி பார்த்தவன், பாபு வேகமாகத் தன் சட்டையை அவிழ்த்து காண்பிக்கவும், புரியாமல் அவனைப் பார்த்தான் நிமலன்.


“இது அவங்க எனக்குக் கொடுத்த தண்டனை சாப்..” என்று தன் உடலில் இருந்த காயங்களைக் காண்பித்தான் பாபு. இப்போதும் எதுவும் கேட்காமல், நிமலன் அவனைக் கூர்மையாகப் பார்த்தான்.


“அன்னைக்குக் கார் ஒட்டினது நான் தான் சார்..” எனும் போதே தெரியும் என்பதாக அசைந்தது நிமலனின் தலை. “அன்னைக்கு நான் செஞ்ச சின்னத் தப்பு தான் இத்தனை பிரச்சனைக்கும் காரணம்னு என்னை அடிச்சு வேலையை விட்டே அனுப்பிட்டாங்க..” என்றவனை இப்போது நிமலன் நம்பாமல் பார்க்கவும், “நிஜமா தான் சொல்றேன் சாப்.. துருவ் சாருக்கு ரொம்பக் கோபம் சொன்னதைச் செய்யலைன்னு எங்க ஆளுங்க மேலே, அதில் ரொம்பப் பேசி அசிங்கப்படுத்திடார்.. எப்போவும் எடுத்த வேலையைப் பிசிறு தட்டாம செஞ்சே பழகின எங்க பாஸுக்கு இது பெரிய அவமானமா போச்சு.. இதுக்கெல்லாம் காரணம் நான் தான்னு என்னை அடிச்சு..” என்றவன் சொல்ல வருவது இப்போது நிமலனுக்குத் தெளிவாகப் புரிந்தது.


”சரி.. உங்க பாஸ் இப்போ எங்கே இருப்பான்..?” என்றவனுக்கு பாபுவிடம் இருந்து தெரியவில்லை என்ற பதிலே வந்தது. “பொய் சொல்லாதே.. இத்தனை வருஷமா கூடவே இருந்தவனுக்கு அவன் எங்கே இருப்பான்னு தெரியாதா..?” என்று நிமலன் மீண்டும் அடிக்க முயலவும், “நிஜமாவே தெரியாது சாப்.. அவர் ஒரே இடத்தில் இருக்கவே மாட்டார்.. இடத்தை மாத்திட்டே இருப்பார்.. எப்போ எங்கே இருப்பார்னு யாருக்குமே தெரியாது..” என்றான் பாபு.


“உங்க ஊர் எது..?” என்று நிமலன் அடுத்ததாகக் கேட்கவும், “உத்திரபிரதேஷ்..” என்றான் பாபு. “அங்கே அவன் வீடு எங்கே..?” என்றவனுக்கு ஒரு மறுப்பான தலையசைப்போடு “தெரியாது சாப்.. நான் தான் உத்திரபிரதேஷ்.. பாஸ் கல்கத்தா.. இப்படி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஊரிலிருந்து வந்திருந்தவங்க தான்..” என்றான் பாபு.


இது போன்ற ஆட்கள் எல்லாம் இப்படித் தான் இருப்பர்கள் என்று புரிய.. “அவனை பற்றி உருப்படியா ஏதாவது தகவல் தெரியுமா உனக்கு..? அவன் வீடு, குடும்பம் இப்படி..? என்றவனை மறுப்பாகப் பார்த்தவன், “அவர் எதையுமே யார்கிட்டேயும் சொல்ல மாட்டார் சாப்.. யாரையும் முழுசா நம்பவும் மாட்டார்..” என்றான் பாபு.


“ஊப்ப்ப்ப்..” என்று ஒரு நீண்ட பெருமூச்சை வெளியிட்ட நிமலன் எதுவோ சொல்ல வருவதற்குள், “ஆனா ஒண்ணு சாப்.. அவர் எடுத்த வேலையை இதுவரைக்கும் செய்யாம விட்டதே இல்லை.. இது தான் முதன்முறை அவர் கையில் வந்த பிராஜெக்ட் தட்டிப் போனது.. அந்தக் கோபம் அவருக்கு உங்க மேலே இருக்கு.. இதில் பேசின பணம் கைக்கு வரலைன்னு கூட அவருக்குக் கவலை இல்லை.. தொழில் வட்டாரத்தில் இவ்வளவு நாள் எடுத்த பேர் கேட்டு போச்சேன்னு தான் அவர் கோபமே.. அந்த வேலையை முடிச்சு தன் பேரை காப்பாத்திக்கற வரை அவர் இங்கே இருந்து போக மாட்டார்.. இந்த ஊரில் தான் இருப்பார், எனக்கு அவரைப் பற்றி நல்லாவே தெரியும்.. அந்தப் பொண்ணைத் தூக்காம விட மாட்டார்..” என்றான் உறுதியான குரலில் பாபு.


இதில் முகம் இறுகியவன், “தைரியம் இருந்தா கை வைக்கச் சொல்லுடா பார்க்கலாம்..?” என்றான் நிமலன்.


தொடரும்..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தை பதித்து விட்டேன்.. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்..

TNN - 13 (a)

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..


இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
34928
ஹாய் டியர்ஸ்

"அலைபாய்வதே மனமல்லவா..!!"

எங்கும் இது வரை பதிவிடாத நேரடி கதை.. இப்போது அமேசானில் நீங்கள் படிக்கலாம்..

ஏப்ரல் மாதம் பதிவிட நினைத்து எழுதிய கதை.. அதன் பின் அப்படியே நேரம் கிடைக்காமல் தள்ளி வைத்து இப்போது தான் எழுதி முடிக்க நேரம் வந்தது.

பதிவிட்டு இரண்டு நாட்கள் ஆகிறது.. லிங்க் கொடுக்கவே மறந்து விட்டேன்..









படித்து விட்டு உங்கள் கருத்துக்களை மறக்காமல் என்னோடு ரேட்டிங் மற்றும் ரிவ்யூ மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள்..

இப்போதைக்கு இந்த கதை ப்ரீ இல்லை..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
34930

தழல் – 13 (b)

காரை ஒட்டிக் கொண்டிருந்த நிமலனின் அலைபேசி ஒலி எழுப்பியது. அதை எடுத்து பார்த்தவன், மாதவி அழைப்பதை கண்டு “சொல்லுங்க மாதும்மா..” என உடனே அதை ஏற்று இருந்தான் நிமலன்.


“நம்ம வீட்டுக்கு எப்போ வரீங்க நிமலா..?” என்றவரின் குரலில் நெற்றியை சுருக்கியவன், “என்ன விஷயம் மாதும்மா..? நீங்க சொன்னா இப்போவே வரேன் நான்..” என்றான் நிமலன்.


“அடேய் கண்ணா.. நான் உங்களை வீட்டுக்கு விருந்துக்கு கூப்பிட்டேன்..” என்று அவர் புன்னகையோடு சொல்லவும், “ஓ..” என்றவனின் குரல் லேசாக உள்ளேச் சென்று இருந்தது.


அதில் அவன் மனநிலையை அறிந்தது போல் “கண்ணா நிமலா.. இது சரியில்லை ப்பா.. எல்லாருக்கும் நல்லவனா இருக்க நீ உன் கல்யாணத்துக்கும் நியாயம் செய்யணும்.. இல்லைனா அந்தப் பாவம் நமக்குத் தான்..” என்றார் வேதனையான குரலில் மாதவி.


இதில் ஸ்டேரிங்கில் பதித்திருந்த தன் கையை இறுக்கியவன், “நான் அந்தப் பொண்ணுக்கு நியாயம் செய்யலைன்னு சொல்றீங்களா மாதும்மா..?” என்றான் முயன்று வர வழைத்துக் கொண்ட இயல்பான குரலில் நிமலன்.


அதற்கு ஒரு கசப்பான புன்னகையைச் சிந்தியவர், “இப்போ கூட அந்தப் பொண்ணுன்னு தான் சொல்றே பார்.. அவ உன் பொண்டாட்டி கண்ணா.. உரிமையா பேர் சொல்லி கூப்பிடணும்.. அது இயல்பா உனக்கு வரலைன்னும் போதே உங்களுக்குள்ளே எதுவும் இன்னும் சரியாகலைன்னு அர்த்தம்..” என்றார் மாதவி.


அதில் ஆரம்பத்தில் தடுமாறினாலும் “அட மாதும்மா.. ரொம்ப யோசிச்சு கவலைப்படாதீங்க, நீங்க நினைக்கறது போல எல்லாம் எதுவுமில்லை..” என்று சமாளிக்க முயன்றான் நிமலன்.


“இல்லைனா சந்தோஷம் தான் கண்ணா..” என்று நீண்ட ஒரு பெருமூச்சை வெளியிட்டவர், “சரி, நாளைக்கு இரண்டு பேரும் விருந்துக்கு வந்துடுங்க.. ஆமா இரண்டு பேரும் சேர்ந்து கோவிலுக்குப் போனீங்களா..? நீ எங்கே போய் இருக்கப் போறீங்க..? ஜெயதேவ் மேலே இருக்கக் கோபத்தில் சூர்யா எதுவும் சொல்லி இருக்கக் கூட மாட்டா.. இரண்டு பேரும் முதலில் நாளைக்குக் கோவில் போயிட்டு வாங்க..” என்றார் மாதவி.


அதற்குச் சம்மதித்து, அவரிடம் சாதாரணமாகவே பேசி விட்டு அழைப்பை வைத்தவனுக்கு இந்தச் சூழ்நிலையை எப்படிக் கையாள்வது என்ற கவலை உண்டானது.


மாதவி ரொம்பவே சிறு விஷயத்தைக் கூடக் கவனித்து விடக் கூடியவர், அவர் முன்னே எல்லாம் இயல்பாக இருப்பது போல் நடிப்பது அவ்வளவு சுலபம் இல்லை.


அதனால் அங்குச் செல்லாமல் இருந்து விடலாம் என்றாலும் அதற்கும் வாய்ப்பில்லை. இவன் வாழ்வில் மிக முக்கியமானவர்கள் கோமகனும் மாதவியும்.. அவர் அழைப்பை நிராகரித்து மனதை நோகடிக்க விரும்பாமல் எப்படியும் சமாளித்து விடலாம் என்ற எண்ணத்தோடு வீட்டிற்குச் சென்றான் நிமலன்.


தமயாவை வீட்டில் எங்காவது கண்டாலே சூர்யகலா சிடுசிடுத்துக் கொண்டிருக்க.. அவர் பேசுவதை எல்லாம் கண்டு கொள்ளக் கூடாது என்ற முடிவில் அனைத்தையும் விளையாட்டாக எடுத்து கொண்டாலும் சில நேரங்களில் இது போன்ற செயல்கள் அவளின் மனதையும் பாதிக்கத் தான் செய்கிறது.


இப்போதும் அதே போல் தான் அறைக்குள்ளேயே அடைந்து கிடக்க விரும்பாமல் சமையலறையில் சரோஜாவுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவளை அங்கு எதற்கோ வந்த சூர்யகலா கண்டவுடன், வெறுப்பாகப் பேசி விரட்டி இருக்க.. அதில் அங்கிருந்து வந்து விட்டிருந்தவள், செய்வதறியாது அறைக்குள்ளேயே எங்கோ வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் தமயா.


அதே நேரம் அறைக்குள் நுழைந்த நிமலன், அவளின் இந்தத் தோற்றத்தை கேள்வியாகப் பார்த்தவாறே உடை மாற்ற செல்ல.. அவன் வந்த அரவம் உணர்ந்தும் கொஞ்சமும் திரும்பி பார்க்காமல் அமர்ந்திருந்தாள் தமயா.


உடை மாற்றிக் கொண்டு திரும்ப வந்தவன், அப்போதும் அதே இடத்தில் அப்படியே அசையாமல் அமர்ந்திருந்தவளை யோசனையாகப் பார்த்தவாறே, அவள் முன் வந்து நின்று “நாளைக்குக் காலையில் வெளியே போகணும்.. சீக்கிரம் ரெடியாகு..” என்றான் நிமலன்.


அதில் பார்வையை மட்டும் திருப்பி அவனைப் பார்த்தவள், ‘சரி’ என்பது போல் தலையசைக்க.. அவளின் இந்த வழக்கத்திற்கு மாறான செயல்களில் நெற்றியை சுருக்கினான் நிமலன்.


வழக்கமாக இது போல் நிமலன் சொல்லி இருந்தால் “எங்கே போறோம்..? எதுக்குப் போறோம்..? எத்தனை மணிக்கு போறோம்..?” என்று ஆயிரத்து எட்டு கேள்விகளைக் கேட்டு இருக்கக் கூடியவளின் இந்த அமைதி புதிதாக இருக்க.. “என்னாச்சு..?” என்றான் நிமலன்.


அதில் வெறுமையாய் திரும்பி அவனைப் பார்த்தவள், “ஒண்ணுமில்லையே..” எனவும் அவளை நம்பாமல் பார்த்தவன், வேறு எதுவும் கேட்காமல் நகர்ந்து விட்டான்.


மறுநாள் காலை நிமலன் சொன்னது போலவே சீக்கிரமாகத் தயாராகி நின்றிருந்தாள் தமயா. அவளைக் கண்டவன் திகைத்து நிற்க.. என்னவென்பது போல அவனை புரியாமல் பார்த்தாள் தமயா.


கை இல்லாத ஒரு டீஷர்ட் மற்றும் முட்டி வரை தொட கூடிய பூக்களை வாரி இரைத்தது போலான ஸ்கர்ட் அணிந்து கூந்தலை கட்டுபாடின்றிக் காற்றில் அலைய விட்டு அவள் நின்றிருந்த விதத்தைக் கண்டவன், இந்த கோலத்தில் அவளை கண்டால் மாதவிக்கு நெஞ்சுவலியே வந்து விடும் என்று எண்ணியவன், சட்டென உண்டான கோபத்தை மாதவியை மனதில் வைத்து வெகு சிரமப்பட்டுத் தனக்குள்ளேயே மறைத்துக் கொண்டு அவளை நெருங்கினான் நிமலன்.


“நாம மாதும்மாவை பார்க்க போறோம்.. இப்படி இல்லை கொஞ்சம் டிரேடிஷ்னலா ரெடியாகு..” என்று வர வழைத்துக் கொண்ட பொறுமையோடு கூறவும், “யாருமா..?” என்று புரியாமல் நெற்றியை சுருக்கினாள் தமயா.


அதில் அவளை திரும்பி முறைத்தவன், “மாதும்மாவை தெரியாதா உனக்கு..?” எனவும், இதழ்களை இல்லை என்பது போல் பிதுக்கினாள் தமயா.


அவளின் அந்தச் செயலில் நம்பாமல் அவளை கூர்மையாகப் பார்த்தான் நிமலன். அதில் அவளும் சலிக்காமல் அவன் பார்வையைத் தாங்கி நிற்க.. “தலைவர் மனைவி பேர் தெரியாதா உனக்கு..?” என்றான் நிமலன்.


“ஓ.. அவங்களா..? தலைவர் வீட்டு அம்மான்னு தான் அப்பா சொல்லுவாங்க.. அதான் சட்டுன்னு பேர் ஞாபகம் வரலை..” என்றவள், “ஒகே நான் சேஞ்ச் செஞ்சுக்கறேன்..” என உள்ளே செல்ல போக.. மீண்டும் இதே போல் எதையாவது போட்டுக் கொண்டு வந்து நின்று விடக் கூடாதே என்று எண்ணியவன், “சேலை கட்டி, கொஞ்சம் டிரேடிஷ்னலா பூ, ஜூவல்ஸ்ன்னு கிளம்பு..” எனவும் உடை மாற்றும் அறையை நோக்கி நகர்ந்தவளின் கால்கள் அப்படியே நின்றது.


“என்னது சாரியா..?” என்று திடுக்கிட்டவளை ‘ஆம்’ என்பது போல அவன் பார்க்க.. “ஆனா எனக்குத் தான் சாரி கட்ட தெரியாதே..!” என்றாள் கொஞ்சமும் திகைப்பு மாறாக் குரலில் தமயா.


“இன்னும் எத்தனை நாள் இதையே சொல்லப் போறே..?” என்று சலிப்பாகக் கேட்டவனை எரிச்சலோடு பார்த்தவள், “தெரியலைனா தெரியலைன்னு தானே சொல்ல முடியும்..?” என்றாள் தமயா.


“இப்போ அதுக்கு என்ன செய்யச் சொல்றே..?” என்று நிமலன் இப்போது எரிச்சலாகக் கேட்கவும், ‘தெரியலை’ என்பது போல் தோள்களைக் குலுக்கினாள் தமயா.


“இரிட்டேட் செய்யாதே.. நேரமாகுது கிளம்பு..” என்றவனை முறைத்தவள், “கிளம்பு.. கிளம்புனா எப்படிக் கிளம்பறது..? எனக்குத் தான் சாரி கட்ட தெரியாதே..!” என்றாள் தமயா.


“அதுக்கு என்னைக் கட்டி விடச் சொல்றியா..?” என்று அவளின் செயலில் உண்டான எரிச்சலோடு நிமலன் கேட்டிருக்க.. “உங்களுக்கு ஓகேனா.. எனக்கு எந்தப் பிராப்ளமும் இல்லை..” என்றிருந்தாள் பட்டென தமயா.


அதில் நிமலன் தான் பதிலின்றித் திகைக்க வேண்டி இருந்தது. இதற்கு மேலும் இவளோடு பேசிக் கொண்டிருந்தால் தன் பொறுமை தான் காணாமல் போகும் என்று புரிந்து வேகமாக உடை மாற்றும் அறையை நோக்கி நகர்ந்தான் நிமலன்.


ஆனால் அப்போதும் ‘நீ போனால் மட்டும் உன்னை சும்மா விட்டு விடுவேனா..?’ என்பது போல் “நானும் வரவா..?” என்றிருந்தாள் தமயா. அதில் திகைத்து போய் நிமலன் திரும்பி பார்க்க.. “சாரி கட்டி விடறேன்னு சொன்னீங்களே..!” என்றாள் தமயா.


அதில் உண்டான கோபத்தோடு “ஷட்டப்..” என்று பல்லைக் கடித்தவன், அறைக்குள் செல்ல.. “அப்போ எனக்குச் சாரி..?” என்று அப்போதும் விடாமல் அவள் கேள்வி எழுப்ப.. “ஏதாவது ஏற்பாடு செய்யறேன்.. கொஞ்ச நேரம் உன் திருவாயை மூடிட்டு இரு..” என்ற நிமலனின் குரல் உள்ளே இருந்து வந்தது.


அதைக் கேட்டு “அப்போ சரி..” எனத் தோளை குலுக்கியவள், கன்னத்தில் கை வைத்தவாறு அங்கிருந்த சோபாவில் சென்று அமர்ந்து கொள்ள.. அடுத்தப் பத்து நிமிடத்தில் முழுதாகத் தயாராகி வெளியில் வந்தான் நிமலன்.


கதவை திறந்த சத்தத்தில் பார்வையை உயர்த்தியவள், பட்டு வேட்டி சட்டையில் இருந்தவனைக் கண்டு ஒரு நொடி இமைக்க மறந்தாள். அவனின் அதீத உயரத்திற்கு இந்த உடையும் அதை அவன் அணிந்திருந்த வீதமும் அத்தனை பொருத்தமாகவும் கம்பீரமாகவும் இருந்தது.


எப்போதும் அவனை இந்த உடையில் தான் பார்த்து இருக்கிறாள் என்றாலும் ஏனோ இன்று அதில் ஏதோ வித்தியாசம் இருப்பதாக அவளுக்குத் தோன்றியது. ஒருவேளை சாதாரண வேட்டி சட்டைக்கும் பட்டு வேட்டி சட்டைக்கும் உள்ள வித்தியாசமாக இருக்கும் என்று புரிந்தது.


அதில் அவனையே தமயா பார்த்திருக்க.. அவளின் பார்வையைக் கண்டு கொண்டவனும் “என்ன..?” என்பது போல் தமயாவை பார்த்துப் புருவத்தை உயர்த்தினான்.


அதற்கு ‘ஒன்றுமில்லை’ என்று தோள்களைக் குலுக்கியவளை யோசனையாகப் பார்த்தப்படியே நிமலன் அறையில் இருந்து வெளியேற முயல... “இது தான் இந்தப் பொலிடிஷியன்ஸ்கிட்ட இருக்கப் பிராப்ளம்.. என்னவோ இது தான் அவங்க யூனிபார்ம் போல எல்லாம் வெள்ளை வெளேர்னு டிரஸ் செஞ்சுட்டு ஆண் தேவதைங்களைப் போல அலைவாங்க.. எந்த நாட்டிலும் இந்த அமர்களம் இல்லைடா சாமி, இவங்க தான் இத்தனை அலைப்பறையையும் கொடுக்கறது.. விட்டா பாரதி ராஜா படத்தில் வருவது போலக் கும்பல் ஆப் கூர்க்காஸ் எல்லாம் ஒண்ணா சேர்ந்து லலலா லலலான்னு பாடுவாங்க போல..!” என்று சலித்துக் கொள்ளும் குரலில் கூறினாள் தமயா.


அறையில் இருந்து வெளியே வந்திருந்த நிமலனின் செவியிலும் இதெல்லாம் விழ.. தன்னையும் மீறி அவன் இதழ்கள் புன்னகைத்தது. அதை மறைப்பது போல் தன் இடக்கையைக் கொண்டு வலப் பக்க மீசையை நீவி விட்டுக் கொண்டவன் “இவ அடங்கவே மாட்டா போல..!” என்றவாறே கீழிறங்கி சென்றான் நிமலன்.

தொடரும்..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
34931

தழல் – 14 (a)

தமயாவின் அறை கதவை லேசாகத் தட்டி விட்டு உள்ளே வந்தார் சரோஜா. “வாங்க ரோஸ்.. நீங்க தான் வருவீங்கன்னு நினைச்சேன்..” என்று சிறு புன்னகையோடு அவரை தமயா வரவேற்க.. வியப்பாக அவளைப் பார்த்தபடியே நின்றவர் “நிஜமாகவே உங்களுக்குச் சேலை கட்ட தெரியாதா பாப்பா..?” என்று நம்ப முடியாத குரலில் கேட்டிருந்தார் சரோஜா.


கிராமத்து பெண்மணியான அவருக்குச் சேலை கட்ட தெரியாமல் ஒரு பெண் இருப்பதெல்லாம் வியப்பாக இருந்தது. அதில் உண்டான ஆச்சர்யத்தோடு அவர் கேட்டிருக்க.. “அட என்ன ரோஸ்.. என்னை பார்த்தா பொய் சொல்றது போலவா இருக்கு..?” என்றாள் தமயா.


“அச்சோ பொய் சொல்றீங்கன்னு சொல்லலை பாப்பா.. பெரிய தம்பிகிட்ட வம்பு செய்யறீங்களோன்னு தான்..?” என்று அவர் மீண்டும் இழுக்கவும், “நான் ஏன் பொய் சொல்ல போறேன் ரோஸ்..? நிஜமாவே எனக்குச் சேலை கட்ட தெரியாது..” என்ற சாதாரணக் குரலில் கூறியவள், சட்டென அவரைத் திரும்பிப் பார்த்து “ஓஹோ.. நீங்க கேக்கறதை பார்த்தா இப்படிச் சொல்லி உங்க பெரிய தம்பி கூட அப்படி இப்படின்னு ஏதாவது ரொமான்ஸ் செய்ய நினைச்சது போல இல்லை இருக்கு..” என்றாள் அவரை வம்பிழுக்கும் குரலில் தமயா.


“அட என்ன பாப்பா நீங்க இதையெல்லாம் என்கிட்ட பேசிட்டு..!” என வாயை பொத்திக் கொண்டு வெட்கத்தோடு புன்னகைத்தார் சரோஜா. “நான் ரொமான்ஸ் செய்யப் போறேனான்னு தானே கேட்டேன்..? உங்களையா ரொமான்ஸ் செய்யச் சொன்னேன்.. அதுக்கு ஏன் இவ்வளவு வெட்கம்..? எப்படித் தான்’ உங்களை வெச்சுட்டு சமாளிச்சாரோ நம்ம ஸ்மால் கிங்..” என்றவள், சட்டென நினைவு வந்தவளாக “ஆமா எங்கே நம்ம ஸ்மால் கிங்..? இரண்டு நாளா ஆளையே காணோம்..” என்றாள் கேள்வியாக அவர் முகம் பார்த்து தமயா.


“அது அவங்க தம்பி பேத்தி பெரிய மனுஷியாகி இருக்கு.. அதான் சடங்குக்கு ஊருக்கு போயிருக்காங்க, வழக்கமா நாங்க இரண்டு பேரும் சேர்ந்து தான் போவோம்.. ஆனா இப்போ இங்கே இருக்க நிலைமைக்கு இரண்டு பேரும் ஊருக்கு போகணும், லீவு வேணும்னு போயி கேட்டா மேடம் அவ்வளவு தான்.. ஒரு வழியாக்கிடுவாங்க, அதனால் அவரை மட்டும் போயிட்டு வரச் சொல்லி அனுப்பி வெச்சேன்..” என்று பேசிக் கொண்டே தமயா எடுத்து வைத்திருந்த சேலையைப் பிரித்து உதறினார் சரோஜா.


“ஓ..” என்று அதை உள்வாங்கிக் கொண்டவள், வேறு எதுவும் பேசவில்லை. அதற்குள் தமயாவை நிமிர்ந்து பார்த்திருந்த சரோ “என்ன இருந்தாலும் உங்களுக்கு என்னை விட அவங்களைத் தான் ரொம்பப் பிடிக்கும் இல்லை பாப்பா..? அவங்கனாவே உங்களுக்குத் தனித் தான் இல்லை..” என்று லேசான குறைபட்டுக் கொள்ளும் குரலில் கேட்டார் சரோஜா.


“அச்சோ அப்படி எல்லாம் இல்லை ரோஸ்.. எனக்கு நீங்க இரண்டு பேருமே ஒண்ணு தான்.. உங்க இரண்டு பேரையுமே எனக்கு ரொம்பப் பிடிக்கும்..” என்ற தமயாவை அவர் நம்பாமல் பார்க்கவும், “எங்களுக்குச் சொந்தம்னு பெருசா யாரும் இல்லை ரோஸ்.. சின்ன வயசில் இருந்து எல்லாப் பசங்களையும் பார்க்கும் போது நமக்கு மட்டும் இப்படி யாரும் இல்லையேன்னு ரொம்ப ஏக்கமா இருக்கும்.. அப்போ எல்லாம் நான் இங்கே தான் வருவேன்.. மாலா அத்தை தான் என்னை அவ்வளவு பாசமா பார்த்துப்பாங்க.. ஆனாலும் தாத்தா பாட்டி உறவும் அந்த அன்பும் எனக்குக் கிடைக்காமலே இருந்தது..


இதில் இந்த நிக்கி பையனுக்கு மட்டும் மூணு தாத்தா மூணு பாட்டி.. எல்லாரும் சேர்ந்து அவனை அப்படியே தாங்கு தாங்குன்னு தாங்குவாங்க, அப்போ எல்லாம் எனக்கு ஏக்கமா இருக்கும், அப்பாவு’க்கு சொந்தம்னு யாரும் இல்லை, ஆனா அம்மா பக்க தாத்தா அம்மாவோட சின்ன வயசிலேயே இறந்துட்டாங்க.. பாட்டியும் கிராமத்தை விட்டு அதிகமா இங்கே வர மாட்டாங்க.. எங்களாலேயும் அங்கே போய் ரொம்ப நாள் இருக்க முடியாது, எப்போவாவது பண்டிகை விசேஷம்னு போனா கூட இரண்டு இல்லை மூணு நாள் தான் அம்மா எங்களை அங்கே தங்க விடுவாங்க..


அப்பா இங்கே சாப்பாட்டுக்கு கஷ்டப்படுவாங்கன்னு சொல்லி கூட்டிட்டு வந்துருவாங்க.. இதில் தாத்தா பாட்டியோட அன்பு, அக்கறை கண்டிப்பு இதெல்லாம் எப்படி இருக்கும்னே எனக்குத் தெரியாது ரோஸ்.. அப்போ அந்த அன்பை எனக்கு அளவில்லாம கொடுத்தது நீங்க இரண்டு பேரும் தான்.. உங்க இரண்டு பேரையுமே எனக்கு ரொம்பப் பிடிக்கும்..” என்றாள் விளக்கமாக தமயா.


இதைக் கேட்டு நெகிழ்ந்தவர், தமயாவின் கன்னத்தை அன்போடு பற்றி “நாங்க எப்போவும் உங்களுக்குத் தாத்தா பாட்டி தான் பாப்பா..” என்றார் அந்தக் குழந்தைகள் இல்லா முதிய பெண்மணி.


அதற்குப் புரிதலான ஒரு புன்னகையே பதிலாகக் கொடுத்தவள் “இப்படியே நாம பேசிட்டு இருந்தோம்னா, உங்க பெரிய தம்பி நம்ம இரண்டு பேரையும் பார்வையாலேயே எரிச்சுடுவார்.. சீக்கிரம் கிளம்புன்னு சொல்லிட்டுப் போனார், வேகமா எனக்குச் சாரி கட்டி விடுங்க..” என்றாள் தமயா.


அதில் அவசரமாக அவளுக்குச் சேலையைக் கட்டிவிடத் துவங்கியவர், “இன்னும் எத்தனை நாள் பாப்பா இப்படியே சேலை கட்ட கத்துக்காம இருக்கப் போறீங்க..? கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கோங்க, நேரம் கிடைக்கும் போது நானே வந்து சொல்லி தரேன்..” என்றார் சரோஜா.


“ஆமா இதைக் கட்ட கத்துக்கிட்டு எக்ஸாம் எழுதி பாஸ் செஞ்சு சர்டிபிகேட் வாங்க போறேனா நான்..? போங்க ரோஸ், என்னைக்கோ ஒரு நாள் கட்டப்போறேன், அதுக்கு ஏன் இவ்வளவு சீன்..” என்று சலித்துக் கொண்டாள் தமயா.


அதில் வேறு எதுவும் பேசாமல் சரோஜா சேலை கட்டி முடிக்கவும் நிமலன் அந்த அறைக்குள் மீண்டும் வரவும் சரியாக இருந்தது. அவர்கள் இப்படிப் படுக்கைக்கு அருகில் நின்று சேலை கட்டிக் கொண்டிருப்பார்கள் என அவன் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை.


அதில் ஒரு நொடி தடுமாறி நின்றவன், ‘நல்ல வேலையா ஐந்து நிமிடத்திற்கு முன்னே வரலை..!’ என்று எண்ணியவாறே தன் பார்வையைத் திருப்பிக் கொண்டு நகர.. “ஐயோ.. பேச்சுச் சுவாரஸ்யத்தில் அந்த ரூமுக்குள்ளே போக மறந்துட்டேனே..” என்று மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டாள் தமயா.


நிமலன் உள்ளே நுழைந்ததுமே “சரி பாப்பா, நான் வரேன்..” என்று அவசரமாகச் சொல்லிவிட்டு சரோ வேகமாக வெளியேறி இருக்க.. சலித்துக் கொண்டவாறே சென்று நிலைக் கண்ணாடியின் முன் நின்று நகைகளை எடுத்து அணிய துவங்கினாள் தமயா.


அதேநேரம் கிட்டத்தட்ட கிளம்புவதற்கு முழுதாகத் தயாராகி நின்றிருந்த நிமலன், அவளைக் கேள்வியாகத் திரும்பி பார்த்து “முடிஞ்சுதா..? கிளம்பலாமா..!” என்றான்.


அதில் சரியென்ற தலையசைப்போடு அவனைத் திரும்பிப் பார்த்தவாறே கம்மலை போட முயன்றவளின் திருகாணி கீழே விழுந்து எங்கோ சிதறியது.


இதில் பதறி தமயா கீழே குனிந்து தேட முயலவும், அதே நேரம் தன் காலருகில் வந்து விழுந்திருந்த திருகாணியை எடுத்து அவளிடம் நீட்டினான் நிமலன்.


அதை ஒரு பதட்டத்தோடே வாங்கியவள், அவனைத் தயக்கத்தோடு பார்த்தவாறே வேகமாக அதைப் போட்டு முடிக்க.. அடுத்து நெக்லஸை அணிய முயன்றவளின் கைகள் நிமலனின் பார்வையில் லேசாகத் தடுமாறியது. அதில் ஹுக்கை மாட்ட முடியாமல் அவள் திணற..


இதில் எங்கே அதையும் கீழே போட்டு விடுவாளோ என்று வேகமாக அவளை நெருங்கி அதைத் தன் கையில் வாங்கி இருந்த நிமலன், தன் போக்கில் அவளைத் திருப்பி நிற்க வைத்து அதை அணிவிக்க முயன்றான்.


அவனின் செயலில் உண்டான திகைப்பில் தமயா நின்றிருக்கும் போதே, அவளின் இடையைக் கடந்து அடர்த்தியாகப் படர்ந்திருந்த கூந்தலை தன் வலக்கரம் கொண்டு ஒதுக்கி விட்டவன், அதை அவளின் தோள் வழியே எடுத்து முன்னே போட்டான்.


இதில் கழுத்தில் அழுத்தமாக உரசிய அவனின் விரல்களின் ஸ்பரிசத்தில் அசைய மறந்து விழி விரிய நின்று விட்டவளின் இதயம் தடதடத்தது. ஆனால் அதையெல்லாம் கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் தன் வேலையிலேயே கவனமாக இருந்த நிமலன், ஆங்காங்கே ஒட்டிக் கொண்டிருந்த கூந்தலையும் தன் விரல் கொண்டு ஒதுக்கி விட்டுக் கொண்டிருந்தான்.


இதில் மனம் படபடக்க நின்றிருந்தவளின் கழுத்தில் நெக்லஸை அணிவித்து முடித்தவன், “ஹுக் ரொம்பச் சின்னதா இருக்கு.. கழட்டும் போது சொல்லு, நீயே கழட்டறேன்னு உடைச்சு வெச்சுடாதே..” என்றவன், வேகமாக வெளியேறி இருக்க.. அவன் சென்ற திசையையே கொஞ்சமும் திகைப்பு மாறா நிலையில் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் தமயா.


அவளுக்கு இப்போதும் கூடத் திடீரென நிமலன் அப்படி நடந்து கொண்டதில் உண்டான அதிர்வு கொஞ்சமும் குறையவில்லை. நேரமாவதை உணர்ந்து வேகமாகத் தயாராகி வந்தவளை முறைத்துக் கொண்டு வரவேற்பறையில் அமர்ந்திருந்தார் சூர்யகலா.


காலையில் தான் மாதவியின் வீட்டிற்கு விருந்துக்குச் செல்லும் விஷயத்தைப் பற்றி அவரிடம் சொல்லி இருந்தான் நிமலன். சூர்யகலாவுக்கு இதில் கொஞ்சமும் விருப்பமில்லை என்றாலும் தலைவர் வீட்டிற்கு வருவதாகச் சொல்லி விட்டு இப்போது மறுத்து பேசுவது சரியாக இருக்காது என்று புரிந்தே அமைதியாக இருந்தார்.


அதைப் புரிந்தார் போல் “வெளி உலகத்துக்கும் நாம இதை நிஜ கல்யாணம்னு காண்பிக்கணும் இல்லை பாட்டி.. தலைவர் வீட்டு விருந்துன்னு கண்டிப்பா நியூஸ் வரும்.. அது நமக்குத் தான் நல்லது..” என்றான் நிமலன்.


“என்னமோ சொல்றே.. ஆனா எனக்குத் தான் மனசு சமாதானம் ஆகலை.. சரி உன் விருப்பம்..” என்று அவர் முகத்தைத் திருப்பிக் கொண்டார். இதற்கு மேலும் இதைப் பற்றிப் பேசி நேரத்தை வீணாக்க விரும்பாத நிமலன் அமைதியாகக் கிளம்பி விட்டான்.


நிகிலன் ஊருக்கு கிளம்பி இரண்டு நாட்கள் ஆகிறது. அதில் வேறு யாரிடமும் புலம்பக் கூட முடியாமல் சூர்யகலா அமர்ந்திருக்கும் போது தான் மேலே இருந்து இறங்கி வந்தாள் தமயா.


அதில் அவளையே கோபமாக அவர் முறைத்துக் கொண்டிருக்க.. அந்தப் பார்வையில் லேசாகத் தயங்கினாலும், அவரைக் கண்டு கொள்ளாமல் சென்று விட்டாள் தமயா.


மாதவி சொல்லி இருந்தது போல் நேராகக் கோவிலுக்குத் தான் முதலில் சென்றான் நிமலன். அவனைக் கேள்வியாகப் பார்த்தவாறே இறங்கியவளை ‘உள்ளே வா..’ என்பது போல் சைகையில் சொல்லி விட்டு நிமலன் சென்று விட.. ‘இங்கே எதுக்கு..?’ என்பது போல் பார்த்தவாறே அவனைப் பின் தொடர்ந்தாள் தமயா.


அந்தக் கோவிலின் வாயிலில் வந்து நின்றவனுக்குள் பல்வேறு நினைவுகள் முட்டி மொத துவங்கியது. தங்க கொலுசு அணிந்த அந்தப் பாதங்கள் அவனைச் சுற்றி ஓடி வந்த காட்சி இன்றும் பசுமையாய் மனதில் வந்து நிற்க.. விழிகளை அழுந்தமூடி அந்த நினைவுகளை உதறியவாறே, கோவிலுக்குள் நுழைந்தான் நிமலன்.


அவன் மனவோட்டம் புரியாமலே நிமலனை பின் தொடர்ந்து உள்ளே சென்றாள் தமயா.

தொடரும்..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தை பதித்து விட்டேன்.. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்..

TNN - 13 (b) & 14 (a)

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..


இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
34932

தழல் – 14 (b)

நிமலன் வீட்டில் இருந்து கோமகனின் வீட்டிற்குச் செல்லும் வழிக்கு நேர் எதிர் திசையில் இருந்தது இந்தக் கோவில். கார் கோமகன் வீட்டிற்குச் செல்லும் பாதையில் திரும்பாமல் வேறு திசையில் செல்லும் போதே தமயா அதைப் பற்றிக் கேட்டிருந்தாள்.


ஆனால் அவளின் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல் காரை ஒட்டிக் கொண்டிருந்தவன் இப்போது கோவிலுக்கு முன்னே காரை நிறுத்தி விட்டு இறங்கி உள்ளே செல்ல.. ‘கோவிலுக்குத் தான் போகணும்னா வழியில் எத்தனையோ கோவில் இருக்கே.. இங்கே இவ்வளவு தூரம் ஏன்..?’ என்ற தோன்றிய கேள்வியோடே அவன் பின்னே சென்றாள் தமயா.


அது அந்தப் பகுதியில் கொஞ்சம் பிரபலமான கோவில். எப்போதுமே கூட்டம் அதிகமாக இருக்கும். இன்று விசேஷ நாள் எதுவுமில்லை என்பதால் கொஞ்சம் குறைவாகத் தான் கூட்டம் இருந்தது.


பூஜையை நிறைவாக நின்று பார்த்து முடித்த இருவரும் பிரகாரத்தைச் சுற்றி வரவும், அங்கிருந்த கோவில் குளத்திற்கு அருகில் வந்த நிமலனின் கால்கள் அப்படியே நின்றது. அவனின் நினைவுகள் முழுக்க, அந்தத் தங்க கொலுசு அணிந்த கால்களை இந்தக் குளத்துப் படிகளில் பார்த்ததையே சுற்றி வந்து கொண்டிருந்தது.


லேசாகத் தூக்கிப் பிடித்த பட்டு சேலையோடு கலகலவெனச் சிரித்துக் கொண்டே ஓடிக் கொண்டிருந்தவளின் சிரிப்பொலியை கேட்டே அன்று பார்வையைத் திருப்பியவனின் விழிகளில் முதலில் தென்பட்டதென்னவோ அந்தக் கொலுசு அணிந்த கால்கள் தான்.


வெண்ணெயில் கடைந்து எடுத்தது போலான அந்தக் கால்களில் தங்க கொலுசு அத்தனை பாந்தமாகப் பதிந்திருக்க.. அதைத் தன்னை மீறி உண்டான ஈர்ப்போடு பார்த்திருந்தவன், ஏதோ ஒரு உணர்வில் அந்தக் கால்களைப் பின் தொடர்ந்து செல்ல.. குளத்தின் படிகளில் துள்ளிக் குதித்து இறங்கியது அந்தப் பாதம்.


தன்னைச் சுற்றி இருக்கும் அனைத்தும் அந்த நொடி அவனுக்கு மறந்துப் போக, உலகமே மறந்தது போலான மோன நிலையில் அவனும் அந்தக் கால்களுமே இந்த உலகில் இருப்பது போலான மனநிலையோடு அந்தப் பாதத்தைப் பார்த்திருந்தான் நிமலன்.


ஒரு கட்டத்தில் ஓடுவதை நிறுத்தி குளத்தின் இறுதி படியில் நின்றவாறே குளத்தில் இருக்கும் மீனுக்குத் தன் கையில் இருந்த பொறியை அவள் தூவி கொண்டிருக்க.. அவளை நெருங்கி இருந்தான் நிமலன்.


அதேநேரம் பொறியை தூவி முடித்திருந்தவளும் மேலேறி செல்ல எண்ணி திரும்ப.. “என்னாச்சு ஏன் இங்கேயே நின்னுட்டீங்க..?” என்று லேசாக நிமலனின் தோளில் தட்டிக் கேட்டிருந்தாள் தமயா.


அதில் ஒரு நொடி எதுவும் புரியாமல் விழித்தவன், பின் தன் தலையை உதறிக் கொண்டு அவளைப் பார்த்தான். வழக்கத்திற்கு மாறான அவனின் இந்த பார்வையில் இருந்த அந்நிய தன்மையைக் கண்டு விழிகளைச் சுருக்கியவள், “ஆர் யூ ஒகே..?” என்றாள் தமயா.


அதற்குள் தன்னை நிலைப்படுத்திக் கொண்டிருந்தவன், அவளுக்கு பதிலேதும் சொல்லாமல் வேகமாக அங்கிருந்து வெளியேற.. “என்னாச்சு இந்த லேம்ப் போஸ்ட்டுக்கு..?” என்று அவன் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தவள், திரும்பி அந்தக் குளக்கரையை ஒருமுறை எட்டி பார்த்தாள்.


அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிறுவர்கள் அமர்ந்து மீனுக்குப் பொறி போட்டுக் கொண்டிருந்தனர். வித்தியாசமாக எதுவும் தெரியாததில் குழம்பி தமயா நிற்கும் போதே, நிமலன் கோவிலில் இருந்து வெளியே சென்று இருந்தான்.


அதே நேரம் அவனைத் திரும்பி பார்த்திருந்தவள், “அய்யய்யோ.. லேம்ப் போஸ்ட் விட்டு போனாலும் போயிடும்..” என்று சொல்லியவாறே அவனின் பின்னே ஓடினாள் தமயா.


கோமகனின் வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்த காரில் பேச விருப்பம் இல்லாமல் நிமலனும், பேசுவதற்கு ஆளில்லாமல் தமயாவும் அமர்ந்திருக்க.. அடுத்த ஒரு மணி நேர பயணம் அமைதியாகவேக் கழிந்தது.


கோமகனின் வீட்டிற்குள் கார் நுழைந்து நிற்கவும், இவர்களுக்காகவே காத்திருந்தது போல் ஆர்த்தித் தட்டுடன் வெளியில் வந்தார் மாதவி. அவரைக் கண்டதும் “ம்ப்ச்.. இதெல்லாம் எதுக்கு மாதும்மா..?” என்று சலிப்போடு நிமலன் கேட்கவும், “புது மணத் தம்பதிகளை வேற எப்படி வரவேற்பாங்கன்னு நீ தான் சொல்லேன்..” என்றார் லேசான கோபத்தோடு மாதவி.


அதில் சட்டெனத் தணிந்து வந்தவன், “சரி உங்க விருப்பம் போலச் செய்ங்க..” என்றதும் தன்னருகில் நின்றிருந்தவனை வியப்பாக நிமிர்ந்து பார்த்தாள் தமயா. அதேநேரம் அவளின் மனமோ ‘அட, இங்கே பாருடா.. நம்ம லேம்ப் போஸ்ட்டை அடக்கவும் ஒரு ஆள் இருக்கு போலிருக்கே..!” என்று எண்ணியது.


அதற்குள் இருவருக்கும் ஆரத்தி எடுத்து முடித்திருந்தவர், தமயாவின் இந்தத் திகைத்த நிலையைக் கண்டு “என்னடி பொண்ணே..? என்னை ஞாபகம் இருக்கா உனக்கு..?” என்றார் அன்போடான குரலில் மாதவி.


“அச்சோ.. எனக்கு அம்னீஷியான்னு உங்ககிட்ட யாரோ தப்பா சொல்லி இருக்காங்க..” என்றாள் துடுக்காக தமயா. அதைக் கேட்டு மாதவி புரியாமல் நெற்றியை சுருக்கவும், அவளைத் திரும்பி முறைத்தான் நிமலன்.


அதில் சட்டெனத் தன் முகத்தை அப்பாவியாக மாற்றிக் கொண்டவள், “ஓ.. நல்லா ஞாபகம் இருக்கு.. தலைவர் வீட்டம்மா..” என்றவளை கண்டனமாகப் பார்த்தவர், “நிமலனுக்கு நான் பாட்டி.. ஆனா அவன் மாதும்மான்னு தான் என்னைக் கூப்பிடுவான்.. நீயும் அப்படியே கூப்பிடு..” என்றார் மாதவி.


“ஹ்ம்ம்.. சரி..” என்று பவ்யமாக தமயா சொல்லவும், புன்னகையோடு இருவரையும் பார்த்துதவர், “சரி உள்ளே வாங்க..” என்றார் மாதவி. இவர்கள் வந்த போதே வாயிலுக்கு வந்து நின்றிருந்த கோமகன், திருமணம் முடிந்து முதன்முறையாகத் தன் வீட்டிற்கு வந்திருக்கும் நிமலனை நெகிழ்வோடு பார்த்தவர், அன்போடு அணைத்து “வா, கண்ணா.. உன்னை மட்டும் கதிரவன் இப்படிப் பார்த்திருந்தா..” என்று தன்னையும் மீறி சொல்லி விட்டவர், உடனே சட்டென அதை உணர்ந்து வார்த்தையை அப்படியே நிறுத்த.. அதற்குள் அவர் சொல்ல வந்ததை கணித்திருந்த நிமலனின் முகம் இறுகியது.


அதைக் கவனித்து விட்ட மாதவி “வயசு தான் ஆகுதே தவிரக் கொஞ்சம் கூட எங்கே எதைப் பேசணும்னு தெரியலை.. இதில் ஒரு கட்சிக்கு தலைவர் வேற..” என்று மெல்லிய குரலில் முணுமுணுத்தவாறே கோமகனை முறைத்துக் கொண்டு மாதவி இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றார்.


அதில் “ஊருக்கே ராஜாவா இருந்தாலும் வீட்டுக்கு அவன் உதவாக்கரை தான்டா..” என்றவாறே திரும்பியவர், தன் உதவியாளர் பாண்டியன் சிறு புன்னகையோடு அருகில் நிற்பதை கண்டு, “என்னடா..? உன் வீட்டில் உன்னைத் தலையில் தூக்கி வெச்சு கொண்டாடுவாங்களா என்ன..?” என்றார் கோமகன்.


அதற்கு மறுப்பாகத் தலையசைத்தவர், “இதை விட மோசமா திட்டுவாங்க தலைவரே..” என்றார் பாண்டியன். “அப்பறம் என்ன வா..” என அவரும் சிறு புன்னைகயோடே உள்ளே சென்றார் கோமகன்.


அதற்குள் இருவரையும் உட்கார வைத்து மாதவி பரிமாறிக் கொண்டிருக்க.. அங்குச் சென்று அமர்ந்தார் கோமகன். அத்தனையும் நிமலனுக்குப் பிடித்த ஐட்டங்களாக இருக்க.. அதையெல்லாம் எடுத்து வைத்தவாறே, “உனக்கு என்ன பிடிக்கும்னு தெரியலை தமயந்தி.. இதெல்லாம் சாப்பிடுவ தானே..?” என்றார் கவலைக் குரலில் மாதவி.


“அச்சோ மாதும்மா நான் சாப்பாடுன்னு எழுதிய் காட்டினாலே அதைச் சாப்பிடுவேன்.. நீங்க இதைப் பற்றி எல்லாம் கவலையேப்படாதீங்க..” என்றவளை கண்டு அவர் புன்னகைக்க.. கோமகனும் சிறு சிரிப்போடே அவளின் பேச்சை பார்த்திருந்தார்.


இப்படியே கலகலப்பாக அவர்களின் உணவு நேரம் செல்ல.. எதிலும் கலந்து கொள்ளாமல் ஒரு பார்வையாளனாக மட்டும் அங்கு அமர்ந்திருந்தான் நிமலன். ஆனால் அதற்கு நேர்மாறாக தமயா சில நிமிடங்களிலேயே அவர்களில் ஒருத்தியாக மாறி இருந்தாள்.


அத்தனை உரிமையாகக் கேலியும் கிண்டலுமாக அவள் பேசி கொண்டிருக்க.. ஒரு கட்டத்தில் கோமகன் ஏதோ வேலையாக எழுந்து சென்று விட்டிருக்க.. தன்னை மறந்து சிரித்துக் கொண்டிருந்த மாதவி, “மாலா ஏன் உன்னை நிமலனுக்குக் கல்யாணம் செய்ய நினைச்சான்னு இப்போ தான் புரியுது..” என்றிருந்தார்.


இதைக் கேட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்த நிமலனின் கைகள் அப்படியே நின்றது. அவன் சிறு அதிர்வோடு நிமிர்ந்து மாதவியைப் பார்க்க.. அதேநேரம் அவ்வளவு நேரம் வளவளத்துக் கொண்டிருந்த தமயாவின் பேச்சும் அப்படியே நின்றது.


இந்த வார்த்தைகளைக் கேட்டதில் அவளிடமுமே அப்படியொரு அதிர்வு. இதில் இருவருமே அசைவின்றி அப்படியே அமர்ந்திருக்க.. இவர்களின் அதிர்வை கவனிக்காமல் எப்போதோ சமையலறைக்குள் சென்று விட்டிருந்தார் மாதவி.


பின் இருவரும் ஒருவரையொருவர் பார்க்க தயங்கி, பார்வையைத் திருப்பிக் கொள்ள.. திரும்பி அங்கே வந்த மாதவி இவர்களின் மனநிலை புரியாமல் பேசிக் கொண்டே சென்றார்.


அதன் பின் கோமகன் நிமலனை தன் அலுவலக அறைக்கு அழைத்துப் பேச துவங்கி விட.. இருவருக்கும் நேரம் சென்றதே தெரியவில்லை. மாலை இருள் கவிழ துவங்கிய பின்பே பேச்சை முடித்துக் கொண்டு வெளியில் வந்த நிமலன் அங்கிருந்து கிளம்பத் தயாராக.. வெளியில் பலத்த மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது.


அவனை ஆட்சேபமாகப் பார்த்த மாதவி, “இந்த மழையில் இந்த நேரத்தில் அவ்வளவு தூரம் போகப் போறீங்களா..? அதெல்லாம் வேண்டாம் இன்னைக்கு இரண்டு பேரும் இங்கேயே தங்கிடுங்க..” என்றார் கண்டிப்பான குரலில் மாதவி.


அதைக் கேட்டு திகைத்தவன், “என்னது..? இல்லையில்லை நாங்க கிளம்பறோம் மாதும்மா.. காரில் தானே போறோம்..” எனவும், “நியூஸ் பார்த்தியா நீ..? பலத்த காற்றுடன் மழை, ஆங்காங்கே மரம் வேற சாயுதாம்.. இந்த நேரத்தில் காரில் போறது கூட பாதுகாப்பு இல்லை.. அதெல்லாம் உங்களை எங்கேயும் அனுப்ப மாட்டேன்..” என்றார் முடிவான குரலில் மாதவி.


இதில் தனக்குச் சாதகமாகப் பேசுவார் என கோமகனை திரும்பி நிமலன் பார்க்கவும், அவரும் “மாது சொல்றது தான் சரி நிமலா.. இந்த நேரத்தில் போகாதீங்க.. நேற்று கூடப் பார்கிங்கில் நிறுத்தி இருந்த கார் மேலே நைட் அடிச்ச காற்றில் ஒரு மரம் சாஞ்சு இருக்கு..” என்றார்.


இதில் செய்வதறியாது பார்த்தவனால் சட்டெனத் தன் வழக்கம் போல் இவர்களை எதிர்த்து தன் முடிவை அங்குச் செயல்படுத்த முடியவில்லை. அவர்கள் மேல் வைத்திருந்த மரியாதை அவனைத் தடுக்க.. “என்ன சூர்யா ஏதாவது சொல்லுவான்னு யோசிக்கறியா..? நானே அவகிட்ட சொல்லிடறேன்..” என்று அப்போதே அலைபேசியை எடுத்து சூர்யகலாவுக்கு அழைத்து விட்டிருந்தார் மாதவி.


அடுத்து இவர் என்ன சொன்னாரோ..? பதிலுக்கு அவர் என்ன சொன்னாரோ..? எதுவும் இருவருக்கும் தெரியவில்லை. ஆனால் இவர்களிடம் வந்தவர், “அதெல்லாம் சொல்லிட்டேன்.. நீங்க இங்கே தான் தங்கறீங்க..” என்றார் மாதவி.


இதற்கு மேலும் அதை மறுக்க முடியாமல் சம்மதித்து இருந்தான் நிமலன். அதில் உண்டான சந்தோஷத்தோடு அழைத்துச் சென்று இருவருக்குமான அறையைக் காண்பித்தார் மாதவி. அதன் பின் இரவு உணவுக்குத் தயார் செய்ய அவர் சென்று விட.. நிமலனும் சூர்யாகலாவிடம் பேச எண்ணி வெளியே வந்தான் நிமலன்.


மழையின் காரணமாக வெளியில் செல்ல முடியாமல் வீட்டிற்கு முன் பக்கம் இருந்த சிட் அவுட்டில் சென்று நின்று அவன் பேசிக் கொண்டிருக்க.. அறைக்குள்ளேயே அமர்ந்திருக்க முடியாமல் மெல்ல எழுந்து வெளியில் வந்தவள், சமையல் செய்பவருக்கு என்ன செய்ய வேண்டுமெனச் சொல்லி விட்டு மாதவி வெளியில் வருவதைக் கண்டு அங்குச் சென்றாள்.


“வாம்மா.. என்ன போர் அடிக்குதா..? நிமலன் கூடப் பேசிட்டு இருக்க வேண்டியது தானே..?” எனவும், அதுவரை புன்னகை பூசி இருந்த அவள் முகம் இறுக்கமாக மாறியது.


அதைச் சரியாகக் கவனித்து விட்டவரும் “உன்கிட்ட கொஞ்சம் பேசலாமா தமயந்தி..?” என்றார். அதற்கு ஆமென அவளின் தலை அசையவும் சற்று தள்ளி அழைத்துச் சென்று அமர வைத்தவர், “உங்களுக்குள்ளே என்ன நடக்குது தமயந்தி..?” என்றவரை கேள்வியாக நிமிர்ந்து பார்த்தாள் தமயா.


“இன்னும் உங்க வாழ்க்கையில் எதுவும் சரியாகலைன்னு எனக்குத் தெரியும்..” எனவும், லேசான திகைப்போடு தமயா அவரைப் பார்க்க.. அதே நேரம் சூர்யகலாவோடு பேசி முடித்து உள்ளே வந்த நிமலனின் கால்கள் இந்த வார்த்தையைக் கேட்டு அப்படியே நின்றது.


“சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதே.. இது விளையாட்டு இல்லை, உங்க வாழ்க்கை.. நிமலனுக்கு வாழ்க்கையில் எத்தனையோ வலிகள், உன்னை இயல்பா ஏற்றுக்க முடியாம ஏதேதோ தயக்கங்கள் இருக்கலாம்.. அதை நீ நினைச்சா சரி செய்யலாம்..” என்றவரை ஆரம்பக்கட்ட அதிர்வில் இருந்து மீண்டு பார்த்தவள் “அச்சோ அப்படி எல்லாம் எதுவுமில்லை மாதும்மா..” என்றிருந்தாள் தமயா.


“இல்லைனா சந்தோசம் தான்.. சின்ன வயசில் உன்னைப் பார்த்தது.. அதுக்குப் பிறகு இப்போ தான் உன்னைப் பார்க்கறேன்.. முன்னே இந்தக் கல்யாணத்துக்கு ஜெயதேவ் பொண்ணுன்ற ஒரு காரணமே எனக்குப் போதுமானதா இருந்தது.. ஆனா இப்போ நிஜமாவே நீ ரொம்ப நல்ல பொண்ணா இருக்கே.. இப்படியே இரு.. சீக்கிரம் உன் வாழ்க்கையைச் சரி செஞ்சுக்கப் பார்.. கடந்த சில வருஷமாவே நிமலன் சந்தோஷமா இல்லை.. இனியாவது அவன் சந்தோஷமா இருக்கணும்.. நல்ல பிள்ளை அவன்.. அவனே கோபமா ஏதாவது நடந்துகிட்டாலும் கொஞ்சம் நீ விட்டு கொடுத்து போடா.. விட்டு கொடுத்தவங்க கெட்டு போக மாட்டாங்க.. புரியுதா நான் சொல்றது..?” என அவள் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சலாகக் கேட்டார் மாதவி.


“மாதும்மா உங்க கவலை எனக்குப் புரியுது.. ஆனா நிஜமாவே எங்களுக்குள்ளே எந்தப் பிரச்சனையும் இல்லை.. அவர் ஆரம்பத்தில் கொஞ்சம் கோபமா இருந்தது என்னவோ உண்மை தான்.. ஆனா சீக்கிரமே அதெல்லாம் மாறிப் போச்சு..” என்றாள் தமயா.


“இது மட்டும் உண்மையா இருந்தா எனக்குச் சந்தோஷம் தான்.. நீங்க வாழ வேண்டிய பிள்ளைங்க, எப்போவோ நடந்த எதையோ பிடிச்சுக் கோபத்தை வளர்த்துக்காம சந்தோஷமா வாழுங்க.. நிமலன் குணத்துக்கும் அறிவுக்கும் கூடிய சீக்கிரம் எங்கேயோ உயரத்தில் போய் உட்காருவான்..” என்றார் மாதவி.


“என்ன மாதும்மா நீங்க..? ஜெயதேவ் பொண்ணா இருக்கும் போதே என் மானத்தைக் காப்பாத்த இந்தக் கல்யாணத்துக்கு எதிரி வீட்டு பொண்ணுன்னு தெரிஞ்சும் சம்மதிச்சவர், அவர் பொண்டாட்டியை சரியா பார்த்துக்க மாட்டாரா..? அதெல்லாம் எப்போவோ என்னை ஜெயதேவ் பொண்ணுன்னு அவர் மறந்துட்டார்.. இப்போ நான் நிமலன் பொண்டாட்டியாக்கும்..” என்று சேலையில் இல்லாத காலரை தூக்கி விட்டுக் கொண்டே பேசியவளை புன்னகையோடு அவர் பார்த்திருக்க.. சற்று மறைவாக நின்று தமயாவையே தான் பார்த்திருந்தான் நிமலன்.

தொடரும்..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தை பதித்து விட்டேன்.. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்..

TNN - 14 (b)

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..


இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
34935

ஹாய் டியர்ஸ்


வணக்கம்.. ஒரு சிறு விளக்கம்..


“அலைபாய்வதே மனமல்லவா..!!” என்ற பெயரில் மூன்று நாட்களுக்கு முன் நான் ஒரு கதையை பதிவிட்டிருந்தேன்.. ஆனால் அதே பெயரில் வேறு ஒரு கதை இருப்பது என் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது..


எப்போதுமே ஒரு கதைக்கு தலைப்பை முடிவு செய்வதற்கு முன் கூகுளில் அந்த பெயரை போட்டு சர்ச் செய்து அப்படி வேறெதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டே நான் அந்த தலைப்பை வைப்பேன்..


அதே போல் இந்த முறையும் நான் செய்த போதும் எனக்கு அப்படி ஒரு தலைப்பு கூகுளில் காண்பிக்கவில்லை.


ஏனெனில் இரண்டு எழுத்துக்கள் வேறுபாடு அந்த தலைப்பில் இருந்தது தான் காரணம்..


ஆனாலும் தெரியாமல் வைப்பது வேறு தெரிந்த பின் அப்படியே விடுவது வேறு தானே.. அதனால் என் தலைப்பை மாற்ற நான் முடிவு செய்து விட்டேன்.. இதற்கு முன் “அலைபாய்வதே மனமல்லவா..!!” என்று பதிவிட்டிருந்த அதே கதையை இனி “சதிராடுதே மனமே..!!’ என்ற தலைப்பில் பதிவிடுகிறேன்..


முன்பு பதிவிட்டிருந்த கதையிலேயே தலைப்பை மட்டும் மாற்றி பதிவேற்றம் செய்ய தான் நான் நினைத்தேன்.. ஆனால் அமேசான் கிண்டில் அதற்கு அனுமதிக்கவில்லை. தலைப்பில் ஒரு சில மாற்றங்களை செய்யலாமே தவிர, முழுதாக தலைப்பையே மாற்றக் கூடாது என்று அவர்கள் சொல்வதால், புதிதாகவே மீண்டும் அந்த கதையை பதிவேற்றம் செய்கிறேன்..


















சிரமத்திற்கு மன்னிக்கவும், அதோடு முன்பு இந்த கதையை படித்து நீங்கள் கொடுத்திருந்த ரேட்டிங் அண்ட் ரிவ்யூ அனைத்தும் இப்போது அந்த கதையோடே இல்லாமல் போய் விட்டது..


உண்மையிலேயே இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் கொஞ்சம் சிரமம் பார்க்காமல் மீண்டும் ஒருமுறை ரேட்டிங் அண்ட் ரிவ்யூ கொடுத்து உதவுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..


இது ஒரு சின்ன கதை தான்.. கிட்டத்தட்ட ஆறு மாதமாக இதை எழுதி முடிக்க நேரம் கிடைக்காமல் ஒவ்வொரு எபியாக அவ்வப்போது எழுதி முடித்தேன்..


ஆனால் அப்போதும் கூட இந்தரும் யமுனாவும் உங்கள் மனதில் இப்படி ஒரு இடத்தை பிடிப்பார்கள் என நான் நினைக்கவில்லை..


முதல் இரண்டு நாட்களுக்குள் அத்தனை மெசேஜ் அண்ட் ரிவியூ கொடுத்து என்னை திக்கு முக்காட செய்து விட்டீர்கள்.. உங்கள் அன்புக்கு நன்றி❤


அப்படி நான்கு நாட்களுக்குள் வந்த 70+ ரேட்டிங் இப்போது இல்லாமல் போய் விட்டதை எண்ணி தான் கொஞ்சம் வருத்தமாக உள்ளது..


புரிதலுக்கு நன்றி.


இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
34938

தழல் – 15

தமயாவின் வார்த்தைகளில் உண்டான நிம்மதியோடு மாதவி அங்கிருந்து நகர்ந்து விட.. அவர் சென்ற பின் அதுவரை இழுத்து பிடித்திருந்த மூச்சை “ஊப்ப்ப்..” என்று வெளியிட்டாள் தமயா.


அவ்வளவு நேரம் மாதவி கேட்டதற்கு நிமலனை முன் நிறுத்தியே பேசியவள், தான் அதற்கு முயற்சிப்பதாக மறந்தும் கூறவில்லை என்பதை அறியாத மாதவி, இவர்கள் வாழ்க்கையைப் பற்றி இருந்த பெரும் கவலை நீங்கிய நிம்மதியோடு சென்றிருந்தார்.


ஆனால் அதற்கு நேர்மாறாக அவளையே யோசனையாகப் பார்த்துக் கொண்டிருந்தான் நிமலன். பின் இரவு உணவை முடித்துக் கொண்டு இருவரும் அறைக்குள் வர.. அடுத்தப் பிரச்சனையாக யார் எங்குப் படுப்பது என்ற கவலை இருவருக்கும் உண்டானது.


ஏனெனில் நிமலன் அறையில் படுக்கைக்குச் சற்று தள்ளி பெரிய சோபா ஒன்று இருக்கும். அங்கு அதில் தமயா படுத்துக் கொண்டாள். ஆனால் இங்கே அறைக்குள் படுக்கை மட்டுமே இருந்தது. அதோடு படுக்கையும் சற்றுச் சின்னதாக இருக்க.. இருவருமே செய்வதறியாது விழித்தனர்.


இறுவருக்குமே இதைப் பற்றிப் பேச சட்டென வார்த்தைகள் வரவில்லை. இதில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க தயங்கி நின்றிருக்க.. நிமலனின் அலைபேசி அழைத்தது.


அதை எடுத்து பார்த்தவன் அழைப்பு மஹேந்திர வர்மனிடம் என்றவுடன் லேசாகத் தடுமாறி எடுக்கத் தயங்க.. அவனையே புரியாமல் பார்த்தாள் தமயா. அழைப்பு நிற்க இருந்த கடைசி நொடியில் அதைச் சட்டென ஏற்று இருந்த நிமலன் வேகமாக அங்கிருந்து வெளியேற அவனைக் குழப்பமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் தமயா.


“ஹலோ..” என்ற நிமலனின் வழக்கத்திற்கு மாறான தயக்க குரலுக்கு நேர் மாறாக “வாழ்த்துகள் வருங்கால முதலமைச்சரே..” என்ற கம்பீரமான குரல் அந்தப் பக்கமிருந்து வந்தது.


“தேர்தலுக்கு இன்னும் ஒரு வருஷம் இருக்கு.. அப்படியே தேர்தல் நடந்து முடிஞ்சாலும் தலைவர் தான் முதலமைச்சர்..” என்றான் நிமலன்.


“ஓ.. அப்போ துணை முதலமைச்சர்னு வெச்சுக்கலாமா..?” என்று அந்தப் பக்கமிருந்து சிறு கேலியோடு கேள்வி வர.. “அதுக்கும் ஆல்ரெடி ஆள் இருக்கு..” என்றான் நிமலன்.


“யாரு..? அந்த ஜெய ஜெய தேவா..? அந்த ஆளுக்கு இன்னும் நீ பாயாசத்தைப் போடலையா..? அடடா.. இப்போ என்ன செய்யலாம்..? சரி, இரண்டு பேரில் யாரை தூக்கலாம்னு நீயே சொல்லிடேன்.. ஆமா உனக்கு எந்தப் பதவி வேணும்..?” என்று சிரித்துக் கொண்டே கேட்டான் மஹேந்திர வர்மன்.


அதில் பதறிய நிமலன் “அடேய்..” எனவும், “பின்னே என்னடா..? நான் என்னவோ உன் அரசியல் வாழ்க்கைக்கு வாழ்த்துச் சொன்னது போலவே எதுவும் புரியாதது போலப் பேசிட்டு இருக்கே..?” என்றான் எரிச்சலான குரலில் மஹேந்திர வர்மன்.


இதில் அவ்வளவு நேரம் வளவளத்துக் கொண்டிருந்த நிமலன், சட்டென அமைதியாகவும், “கல்யாணம் எல்லாம் நடந்து இருக்கு போல.. ஹ்ம்ம், நியூஸ் பார்த்து விஷயம் தெரிஞ்சுகிட்டோம்.. வாழ்த்துகள்..” என்றான் மீண்டும் ஒருமுறை சற்று அழுத்தமான குரலில் மஹேந்திர வர்மன்.


இதைக் கேட்டு சட்டென உடனே எதுவும் பேச முடியாமல் தடுமாறிய நிமலன் “அது.. வர்மா..” என்று இழுக்கவும், “கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டு இருந்த நீ மனசு மாறி இப்படிக் கல்யாணம் செஞ்சுகிட்டதை நினைச்சா சந்தோஷமா தான் இருக்கு.. ஆனா என்ன இப்படி மூன்றாவது மனுஷங்க போல நாங்களும் நியூஸில் பார்த்து தான் தெரிஞ்சுக்க வேண்டி இருக்கறதை நினைச்சா தான்..” என்றவன் அதற்கு மேல் பேசாது நிறுத்தினான்.


அதில் மனம் பாரமாக.. “உங்ககிட்ட மறைச்சு நான் என்ன செய்யப் போறேன் வர்மா..” என்று துவங்கி நிமலன் அன்று நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தான்.


“ஹ்ம்ம்.. ஓரளவு கெஸ் செஞ்சோம்.. சரி விடு.. அப்பறம் எப்படிப் போகுது உன் மேரேஜ் லைப்..?” என்று குறும்பாக வர்மா கேட்கவும், “அத்தனையையும் கேட்டு ராதைக்கு கிருஷ்ணன் தாத்தா முறையான்னு கேட்கறே பார்த்தியா..?” என்றான் குறைபட்டுக் கொள்ளும் குரலில் நிமலன்.


“ஹாஹாஹா.. சரி விடு மேன்.. இப்படிச் சோக கீதம் வாசிக்காதே, இந்த நிமலன் செட் ஆகலை.. நம்ம வழக்கமான நிமலனா வா..” என்றவன் சிறு இடைவெளி விட்டு, “அப்பறம் ஹனிமூன் எங்கே மேன் போகப் போறே..? அதைப் பற்றிய் எதுவும் நீ சொல்லவே இல்லை பார்த்தியா..?” என்று குறும்பாக கேட்டு விட்டு சட்டென நிமலனின் வசவுகளைக் கேட்க விரும்பாமல் அழைப்பை துண்டித்து இருந்தான் மஹேந்திர வர்மன்.


அவனின் பேச்சில் உண்டான கோபம், வர்மாவின் இந்தச் செயலில் புன்னகையாக மாற.. அவனை நினைத்து சிரித்தவாறே அறைக்குள் நுழைந்தான் நிமலன்.


அங்கு நன்றாக இழுத்துப் போர்த்திக் கொண்டு உறங்கி விட்டிருந்தாள் தமயா. அவளைக் கண்டு ஒரு நொடி தயங்கி நின்றவனுக்கும் வேறு வழி இல்லாமல் போக.. நிமலனும் அந்தப் பக்கமாக வந்து அவளுக்கு அருகில் சற்று ஒதுங்கியே படுத்துக் கொண்டான்.


மனமெங்கும் சற்று முன் மாதவியோடு அவள் பேசியதே ஓடிக் கொண்டிருந்தது. அவளின் பேச்சும் செயலும் முற்றிலும் முரணாக இருப்பதைக் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறான் நிமலன்.


அவள் மனதில் இருப்பதை அவனால் முழுதாகக் கணிக்கவே முடியவில்லை. அவளின் பிடித்தமில்லாமல் இந்தத் திருமணம் நடந்ததும், வேறு வழியில்லாமல் அவள் இங்கு இருப்பதும் புரிந்தாலும், எதைப் பற்றியும் கவலை இல்லாதது போலான பாவனையில் அவள் இருப்பது சற்று குழப்பத்தையே கொடுத்தது.


வழக்கமாக இது போலான விருப்பமில்லா திருமணங்களை ஏற்றுக் கொள்ள முடியாமல் சண்டையிடுவதும் அழுவதுமாக தான் பெண்கள் இருந்து அவன் பார்த்திருக்கிறான். ஆனால் அதற்கு எல்லாம் நேர்மாறாக ஏதோ விடுமுறைக்கு சுற்றுலா வந்தது போல எந்த கவலையும் இல்லாமல் அவள் இருப்பதே அவனுக்கு சந்தேகத்தை கொடுத்தது.


இன்று அவள் மாதவியோடு பேசியதை வைத்தெல்லாம் தன் மேல் அவளுக்கு நல்ல அபிப்ராயம் வந்து விட்டதென நம்பும் அளவுக்கு அவன் முட்டாள் இல்லை. இதுவே தன்னிடம் சற்று முன் கோமகன் அறையில் வைத்து லேசாக இவர்கள் வாழ்க்கையைப் பற்றி விசாரித்த போதும் இப்படியே தான் பேசி சமாளித்து இருந்தான் நிமலன்.


அதனால் அதைப் பற்றி யோசிக்காதவனுக்கு, அவளின் செயல்பாடுகளில் உள்ள முரண் தான் என்னவெனப் புரியவில்லை. விரைவில் அதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற முடிவோடு உறங்கிப் போனான் நிமலன்.


மறுநாள் காலை தன் வழக்கம் போல விரைவாகவே விழித்திருந்தவன், விழிகளைத் திறக்க.. அங்கு தமயாவின் முகம் அவனுக்கு வெகு அருகில் இருந்தது. இதை கண்டு ஒரு நொடி ஒன்றுமே புரியாமல் திகைத்தவனுக்குப் பின்பே அவர்கள் கோமகனின் வீட்டில் இருப்பது நினைவுக்கு வந்தது.


அதில் விழிகளை மூடி தலையை ஒருமுறை கோதி விட்டுக் கொண்டவன், மெல்ல எழுந்தமர.. அங்குப் பழக்கமே இல்லாத சேலையில் எக்குத்தப்பாக உறங்கிக் கொண்டிருந்தாள் தமயா. அவளை அந்த நிலையில் கண்டவனின் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது.


முந்தானை ஒரு பக்கம் சரிந்து கிடக்க.. முட்டி வரை சேலை விலகி இருக்க.. பளீரென்ற இடை காட்சியாக என்று அவள் இருந்த நிலையைக் கண்டவன், சட்டெனப் பார்வையைத் திருப்பிக் கொண்டான்.


ஆனால் அவன் மனமோ இன்னும் அந்தக் காட்சியின் தாக்கத்தில் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தது. ‘என்ன இப்படிப் படுத்துட்டு இருக்கா..?’ என்று எண்ணியவனுக்கு இப்படி ஒரு பெண்ணை இந்தக் கோலத்தில் பார்ப்பது இதுவே முதன்முறை என்பதால் அதன் தாக்கம் பெரிதாகவே இருந்தது.


அதில் உண்டான கோபத்தோடு ‘கொஞ்சம் கூட அறிவே இல்லையா இவளுக்கு..? இப்படித் தான் தூங்குவாளா..? அதுவும் என் முன்னே..?’ என மனதார அவளைத் திட்டி தீர்த்தவன், மெல்ல பார்வையைத் திருப்பிப் பார்க்க.. தமயாவோ இந்த உலகையே மறந்தது போல் உறங்கிக் கொண்டிருந்தாள்.


அதைக் கண்டு “ஊப்ப்ப்..” என்று நீண்ட ஒரு பெருமூச்சை வெளியிட்டவாறே ‘இவளை..!’ என்று பல்லைக் கடித்தான். பின் இதற்கு மேலும் இவளை இப்படியே விட்டால் சரி வராது என்று புரிய.. அவளின் காலுக்குக் கீழ் சிக்கி இருந்த போர்வையை எடுத்து மெல்ல அவள் மேல் போர்த்தி விட முயன்றான் நிமலன்.


அவளுக்கு அருகில் அமர்ந்தவாறே தமயாவின் கழுத்து வரை போர்த்தி விட முயன்றவன் லேசாக அவளை நோக்கி குனிய.. அதே நேரம் விழிகளைத் திறந்து அவனைப் பார்த்திருந்தாள் தமயா.


அவள் சட்டென இப்படி விழித்துப் பார்ப்பாள் என எதிர்பாக்காத நிமலன் அப்படியே திகைத்து பார்க்க.. அவளுக்கும் ஒரு நொடி எதுவுமே புரியவில்லை.


பின்பே தன்னை நோக்கி குனிந்திருப்பவனைக் கண்டு திகைத்தவள், “என்.. என்ன செய்.. செய்யறீங்க..?” என்றவாறே பதறி எழுந்து கொள்ள முயல.. அதில் அவள் நிலை முன்பை விட மோசமானது.


இதில் பார்வையை வேகமாகத் திருப்பிக் கொண்டவன், அங்கிருந்து எழுந்து கொள்ள முயல.. அவனை விட வேகமாக எழுந்து நின்றிருந்தவள், “இதெல்லாம் கொஞ்சம் கூடச் சரியில்லை.. இப்படித் தான் தூங்கிட்டு இருக்கப் பொண்ணுகிட்ட நடந்துப்பீங்களா..?” என்றாள் கோபமாக தமயா.


அதில் என்ன நடந்தது என தெரியாமலே தன் மேல் குற்றம் சுமத்துபவளின் மேல் உண்டான ஆத்திரத்தோடு திரும்பி அவளைப் பார்த்தவன், இப்போது வரை சேலையை அவள் சரி செய்யாமல் இருப்பதைக் கண்டு வேறு எதுவும் பேசாமல் வேகமாகத் திரும்பி அறையில் இருந்து வெளியில் செல்ல முயன்றான் நிமலன்.


“நான் கேட்டுட்டே இருக்கேன்.. நீங்க எங்கே போறீங்க..?” என்று அதற்கும் தமயா கத்த.. “ஹ்ம்ம்.. என் கண்ணியத்தைக் காப்பாத்திக்கப் போறேன்.. உனக்கு அது இல்லாம இருக்கலாம்.. ஆனா எனக்கு இருக்கு..” என்று எரிச்சலோடு சொல்லி விட்டு வேகமாகக் கதவை அடித்து மூடிக் கொண்டு வெளியேறி இருந்தான் நிமலன்.


“என்.. என்னது எனக்குக் கண்ணியம் இல்லையா..?” என்று கோபமாக மூடியிருந்த கதவை பார்த்து கத்தியப்படியே திரும்பியவள் அப்போதே அவள் நின்றிருந்த கோலத்தைக் கவனித்தாள். அதில் திடுக்கிட்டு அதைச் சரி செய்ய முயன்றவளுக்கு அப்போதே நிமலன் போர்வையோடு தன்னை நோக்கி குனிந்திருந்ததற்கான காரணம் புரிய.. தலையில் அடித்துக் கொண்டாள் தமயா.


வழக்கமாக அணியும் உடை போல் எண்ணி எக்குத்தப்பாக உறங்கியதை நினைத்து தன்னையே நொந்துக் கொண்டவள், ‘இப்படியே அவங்க முன்னே நின்னு பேசி இருக்கேன்.. என்னைப் பற்றி என்ன நினைப்பாங்க..?’ என்று எண்ணும் போதே தமயாவின் கன்னம் சூடாகியது.


அப்படியே சேலையைச் சரி செய்ய தமயா முயன்று கொண்டிருக்க.. அதே நேரம் லேசாகக் கதவை தட்டி விட்டு அறைக்குள் நுழைந்தார் மாதவி. அவரைக் கண்டு மேலும் திகைத்தவள் சேலையை வாறி சுருட்டி மேலே போட்டுக் கொள்ள முயல.. அவளின் இந்த நெகிழ்ந்திருந்த சேலையும் சிவந்திருந்த கன்னமும் வேறு கதையை அவருக்கு சொல்ல.. மனம் நிறைந்தார் மாதவி.


இதில் நேற்று அவர்கள் பேசியது எல்லாம் நிஜமென நம்பியவர், “நான் கூட நேற்று என்னைச் சமாதானம் செய்யத் தான் பேசறியோன்னு நினைச்சேன்.. நிஜமாவே உங்களுக்குள்ளே எல்லாம் சுமூகமா தான் இருக்கு.. நீங்க சந்தோஷமா தான் வாழறீங்கனா எனக்கு இதை விட வேற என்ன வேணும்..” என்று அவளின் கன்னம் வழித்துத் திருஷ்டி கழித்தார் மாதவி.


அதோடு அவளிடம் ஒரு புது உடையைக் கொடுத்தவர், “விருந்துக்கு வந்த உங்களுக்குத் தட்டில் வெச்சு கொடுக்கன்னு வாங்கி வெச்சேன்.. இப்போ இப்படிப் பயன்படுது, குளிச்சுட்டு இதைப் போட்டுக்க.. எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு, வரேன்..” என்று விட்டு வெளியேறினார்.


அதை கண்டு “ஹப்பாடா..” என்று நிம்மதி பெருமூச்சை வெளியிட்டவளுக்கு, எங்கே மறுபடியும் சேலையையே கொண்டு வந்து கொடுத்திருப்பார்களோ..! என்று திகைப்பானது. ஏனெனில் இங்கு அதைக் கட்டிவிட யாரை தேடுவாள் அவள்.


அதில் உண்டான பதட்டத்தோடு அந்தப் பையைப் பிரித்தவள், உள்ளே பாட்டியாலா வகைச் சுடிதார் இருப்பதைக் கண்டு நிம்மதியானாள். அடுத்தப் பத்து நிமிடத்தில் அவள் குளித்து தயாராகி விட.. சரியாக மீண்டும் அறைக்குள் நுழைந்தான் நிமலன்.


உள்ளே வரும் முன் இப்போது என்ன நிலையில் இருக்கிறாளோ என்று லேசாக அவனுக்குப் பதட்டமாகத் தான் இருந்தது. ஆனால் கதவை தட்டி விட்டும் உள்ளே வர முடியாத அளவிற்கு அங்கு அருகில் இருந்த வளைவு இருக்கையில் தான் அமர்ந்து பார்த்திபனிடம் எதுவோ பேசிக் கொண்டிருந்தார் கோமகன்.


இயல்பான வாழ்க்கையில் இருக்கும் கணவன் மனைவிக்கு இடையே இது போலான அனுமதிக்கு எல்லாம் அவசியம் இல்லையே..! அதனால் அவர் முன் எதையும் வெளிப்படுத்திக் கொள்ள முடியாமல் கொஞ்சம் தயங்கியே உள்ளே நுழைந்தவன், அவள் முழுதாகத் தயாராகி இருப்பதைக் கண்டு உண்டான நிம்மதியோடு குளிக்கச் சென்றான்.


அவனுக்கும் மாதவி சேர்த்தே உடையைக் கொடுத்திருந்தார். அதைப் பற்றிய தகவலையும் அவனிடம் மாதவி சொல்லி இருக்க.. வழக்கம் போல் வேட்டி சட்டையிலேயே தயாராகி வந்தவன், ஏதோ யோசனையாக நின்றிருந்த தமயாவை கேள்வியாகப் பார்த்தவாறே அவளைக் கடந்து செல்ல முயல.. நிமலனின் சட்டையைப் பிடித்துச் சட்டெனத் தன்னை நோக்கி இழுத்திருந்தாள் தமயா.


இதைக் கொஞ்சமும் எதிர்பாராதவன் அவள் மேலேயே சரிய.. அவனைத் தாங்கி பிடிக்க முடியாமல் தமயாவும் பின்னால் இருந்த சுவரில் சாய்ந்திருந்தாள். இப்போது தமயா சுவரில் சாய்ந்து நின்றிருக்க, அவளின் மேல் மொத்தமாகச் சாய்ந்து நின்றிருந்தான் நிமலன்.


தன் மார்பு பகுதியின் சட்டையை இரு புறமும் இரு கைகளால் பிடித்தப்படி நின்றிருந்தவளின் கைகளைக் குனிந்து ஒருமுறை பார்த்தவன், “என்ன செய்யறே நீ..?” என்றான் லேசான கரகரப்போடு கூடிய குரலில் நிமலன்.


“ஹ்ம்ம்.. பார்த்தா தெரியலை..? ரொமான்ஸ் செய்யறேன்..” என்றவளை ஒற்றை விழியை உயர்த்தி நம்பாமல் நிமலன் பார்க்கவும், “ஏன் செய்யக் கூடாதா..? எனக்கு அந்த உரிமை இல்லையா என்ன..? லைசன்ஸ் ஹோல்டர் நான்..” என்றவளின் குரலில் தெறித்த அப்பட்டமான காதலில் யோசனையானவன், சற்று நேரத்திற்கு முன் கூடத் தன்னோடு சண்டையிட்டவளின் இந்தத் திடீர் செயலில் உண்டான சந்தேகத்தோடு “ம்ஹும்..” என்றான் ஒரு மாதிரி குரலில் நிமலன்.


“ஹ்ம்ம்..” என்றவள் விழிகளில் தேங்கி நிற்கும் காதலோடு நிமலனை பார்க்க.. அவனும் அவளையே தான் பார்த்தப்படி நின்றிருந்தான். ஒரு கட்டத்தில் அவனின் பார்வை, கூர்மையைக் கை விட்டு உரிமையோடு அவள் முகத்தில் பதிந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கீழ் இறங்கி செல்ல.. அந்த விழிகளின் அத்துமீறலை தாங்க முடியாமல் தடுமாறி, தன் பார்வையைத் தழைத்துக் கொண்டாள் தமயா.


ஆனால் நிமலனை நேருக்கு நேர் பார்க்கவில்லை என்றாலும் அவன் விழிகளின் அத்துமீறல் அவளுக்குத் தெளிவாகப் புரிய.. அவ்வளவு நேரம் இருந்த தைரியம் எல்லாம் இப்போது காணாமல் போய் இருக்க.. மனம் தடதடக்க நின்றிருந்தாள் தமயா.


இதில் ஒரு கட்டத்திற்கு மேல் அந்தப் பார்வையைத் தாங்க முடியாமல் சட்டெனத் தன் வலக்கையைக் கொண்டு அவன் விழிகளைத் தமயா மூட.. அதைத் தன் மற்றொரு கையால் விளக்கி விட்டவன் “ஏன் எனக்கு உரிமை இல்லையா..? நான் பார்க்க கூடாதா..? லைசன்ஸ் ஹோல்டர் நான்..” என்றிருந்தான் அவளைப் போலான குரலிலேயே நிமலன்.


அதில் தமயா சங்கடமாக நெளிய.. அது அவள் மேல் சாய்ந்து நின்றிருந்தவனுக்கு மேலும் வசதியாகிப் போனது. அதைப் புரிந்தது போல் நாக்கை லேசாகக் கடித்தவாறே தமயா தன் முயற்சியைக் கைவிட.. இதில் உண்டான குறும்பு புன்னகையோடு அவளின் இந்த ஒவ்வொரு செயலையும் விழிகளால் அளந்தவன், தன் புறங்கையால் அவளின் கன்னத்தின் மென்மையை உணர முயன்று மெதுவாக வருட.. நிமலனின் நான்கு விரல்கள் மொத்தமாகக் கன்னத்தில் உரிமையாகப் படிந்ததில் உண்டான குறுகுறுப்பில் இயல்பாக நிற்க முடியாமல் தவித்துத் தடுமாறிப் போனாள் தமயா.


இதில் சட்டென அங்கிருந்து நகர முயன்றவளுக்கு அந்த வாய்ப்பை கொஞ்சமும் அளிக்காமல் சுவரில் சாய்ந்திருந்தவளின் மேல், மேலும் அழுத்தமாகச் சாய்ந்து அவளை அசைய விடாமல் தடுத்தான் நிமலன்.


அதில் பதட்டமானவள், தடுமாற்றத்தோடு பார்வையை உயர்த்தி அவனைப் பார்க்கவும், இப்போது நடந்த இந்த முயற்சியில் அவளின் ஒரு பக்க கூந்தல் நெற்றியில் இருந்து கன்னத்தில் வந்து விழுந்து உரிமையாக உறவாடிக் கொண்டிருக்க.. அதற்குக் கூட அவளின் கன்னத்தில் உறவாட அனுமதி இல்லை என்பது போல் சட்டென அதைத் தமயாவின் செவிகளுக்குப் பின்னால் ஒதுக்கி விட்டான் நிமலன்.


இப்படித் திடீரென்று நிமலனின் விரல்கள் உரிமையாகக் கன்னம், காது, கழுத்து என உறவாடிக் கொண்டிருக்க.. தமயா தான் செய்வதறியாது திகைத்து, விழிகளை இறுக மூடி எச்சிலை கூட்டி விழுங்க வேண்டி இருந்தது.


அத்தனை அருகில் தெரிந்த அவள் முகத்தில் விழிகளால் வலம் வந்தவன், தன்னிடம் வார்த்தையாடும் இதழ்களில் வந்து விழிகளை நிலைக்க விட.. அதே நேரம் அவனை நிமிர்ந்து பார்த்திருந்தாள் தமயா.


இருவரின் பார்வையும் ஒன்றை ஒன்று ஈர்த்துக் கொள்ள.. சில நொடிகளுக்கு இருவரிடமுமே அசைவில்லை. பின் தன்னை ஈர்த்த அவளின் மென்பட்டு இதழ்களில் பார்வையைப் பதித்தவன், அதை நோக்கி மெல்ல குனிய.. அவனைத் தடுக்கவும் முடியாமல் அனுமதிக்கவும் முடியாமல் தடுமாறி விழிகளை மூடிக் கொண்டவளின் கரங்கள் நிமலனின் சட்டையை இறுக்கியது.

தொடரும்..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 
Status
Not open for further replies.
Top